Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மலையகத்தின் 200 வருட அடிமை வாழ்விற்கு மாற்று அரசியலே இறுதித் தீர்வு - சு.நிஷாந்தன்


அந்நிய தேசத்தின் வளங்களைத் தம்முடைய தேசத்துக்கு சுரண்டுவதற்காக ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து கொத்தடிமைகளாக அழைத்துவரப்பட்ட தமிழர்கள்தான் மலையகத் தமிழர்கள். இலங்கையின் வரலாற்றில் நீண்ட ‡ நெடிய தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்ட மலையக சமூகம், இந்த நாட்டில் 200 வருடங்களாக  அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றதே. இதனைக் கேட்க உலகில் ஒரு நாதியில்லையா என எண்ணி மலையக சமூகத்தினர் ஏங்காத நாளில்லை.

அந்நிய தேசத்துக்குச் சென்று இத்தனையாண்டுகாலம் ஒரு சமூகம் அடிமையாக வாழ்கின்றது என்றால்,  அது எம் மலையகத் தமிழ் சமூகம் மாத்திரமே. உலகில் வேறெந்த  மூலையிலும் இவ்வாறாக இரண்டு நூற்றாண்டுகாலம் எச்சமூகமும் அடிமையாக வாழவில்லை; வாழ்ந்ததுமில்லை என்பதுதான் உண்மை.

இத்தனையாண்டுகால அடிமை வாழ்விற்கு ஒரு விடிவு ‡ விமோசனம் கிடைக்காதா என எண்ணித் தினம்தினம் கோடையிலும், குளிரிலும், வாடையிலும் தேயிலைத் தோட்டங்களில் கண்ணீர் சிந்தி கண் துடைக்க நாதியற்று தீராத பெருவலியுடன் வாழும் எம் மலையக சமூகத்தின் அடிமை வாழ்வுக்கு இந்த தசாப்தத்திலாவது விடுதலை கிடைக்கவேண்டுமென்பதே ஒட்டுமொத்த மலையகத் தமிழர்களினதும் எதிர்பார்ப்பு.

ஈழ மண்ணில் சிங்களவர்களால் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மலையக மண்ணில் தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக்காலத்திலிருந்து இன்றுவரை  மலையகத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் என்பது பந்தாடப்பட்டே வந்துள்ளன.1831 ஆம் ஆண்டு ஆங்கிலேயரினால் உருவாக்கப்பட்ட கோல் புருக் கமரன் அரசியல் சீர்திருத்தத்தில் ஒரு பிரதிநிதித்துவம் கூட மலையகத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. அதன்பின்னர் கொண்டுவரப்பட்ட குரு மக்கலம் சீர்திருத்தத்திலும் மலையகத் தமிழர்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவில்லை. 1924 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மனிங் சீர்திருத்தத்தில்தான் முதன்முதலில் மலையகத் தமிழர்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. மலையகத்தை சுரண்டிய ஆங்கிலேயர்கள் மலையக மக்களுக்கான அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தாததை  மலையக மண்  எத்தனையாண்டுகள் ஆனாலும்  மறக்கப்போவதில்லை.

ஆங்கிலேயரினால் மாத்திரமல்ல, இலங்கை சுதந்திரமடைந்தபின்னர் அதாவது, 1949 ஆம் ஆண்டு மலையக மக்களின் அடிப்படை குடியுரிமையும் சிங்களவர்களால் பறிக்கப்பட்டது. மலையகத் தமிழ் மக்களின் துன்பங்களைச் சொல்ல வரைவிலக்கணம் கூட இல்லாத அளவுக்கு  அடிமை வாழ்க்கையை இந்த 200 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

 மலையகப் பெருந்தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஈழத்தின் அரசியல் தந்தை செல்வநாயகம் போன்றோரின் தீராப் போராட்டத்தின் விளைவால் மலையக மக்களின் பிரஜாவுரிமை உறுதிப்படுத்தப்பட்டது. என்றாலும்,  இந்த நாட்டில் வாழ்ந்த பெருந்தொகையான மலையகத்தவர்கள் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பந்தாடப்பட்டனர்.

இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் பின்னர் இந்த நாட்டில் தம்முடைய உடைமைகள், சொத்துகள், நிலம் என அத்தனை வளங்களையும் இழந்து இந்தியாவுக்குத் திரும்பநேர்ந்தது. சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்துக்கெதிராகப் போராடிய பலபேர் அந்தக் காலகட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். குறிப்பாக, ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டம் அது. 1983 ஆம் ஆண்டு மூண்ட இனக்கலவரத்தினால் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் இடம்பெயர்ந்துகெண்டிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் தலைநகரிலும், நாட்டின் ஏனைய புறங்களிலும் மிகக்கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். 1983  ஆம் ஆண்டு மலையக மக்களின் மனங்களில் பதிந்த அந்த ஆறாத வடுக்கள் இன்னமும் மாறவில்லை. அதற்கு இலங்கை அரசு மருந்து போட்டதுமில்லை என்பதை மறந்துவிடக் கூடாது.

உண்மையில் 1950 ஆம்  ஆண்டுக்குப் பின்னர் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் உரிமைகளைக் கேட்ட அரசியல் தலைமைகள்போல் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த செளமியமூர்த்தி தொண்டமானை தவிர்த்து வேறு தலைமைகள் இருந்திருக்கவில்லை. இருந்தவர்களும் குரல்கொடுத்திருக்கவில்லை.

வரலாற்றில் மலையக அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய பெருந்தலைவர் என்றால் அவர் தொண்டமான் மாத்திரமே என்றுதான் சொல்லவேண்டும்.

மலையகத்தில் காலத்துக்குக் காலம் தோன்றிய அரசியல் தலைமைகள் தங்களுடைய சுயநலனை அடிப்படையாகக்கொண்டே செயற்பட்டு வந்துள்ளன. முதிர்ந்த அரசியல்  தலைமைகளின் வினைத்திறனற்ற பிற்போக்கான செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் நீண்ட போராட்டத்துக்கு மத்தியில் வாழும் மலையக மக்களின் அரசியல் அபிலாஷைகளை இன்றுவரை பூர்த்திசெய்ய முடியாதுள்ளது. அத்துடன், இவர்கள் தூரநோக்கான சிந்தனையில் செயற்பட்டதாக வரலாறுமில்லை.வருங்காலத்ததில் செயற்படுவார்களா என்பதும் கேள்விக்குறியே. 

 மலையகத்தில் மாற்று அரசியலுக்கான தேவை எழுந்துள்ளது.  இத்தனையாண்டுகள் ஆட்சி செய்தவர் மலையக மக்களின் வாழ்விலோ அல்லது அடிப்படை உரிமைகளிலோ பெரிதாக ஏதும் மாற்றத்தை ஏற்படுத்திவிடவில்லை. காலங்காலமாகத் தொழிற்சங்கங்கள் ரீதியாகவும், அரசியல் கட்சிகள் ரீதியாகவும் மலையக மக்களின் உரிமைகளை விலைபேசிய அரசியல் தலைமைகளை மாற்றவேண்டிய மாற்று அரசியல் தேவையே  மலையக மண்ணில் எழுந்துள்ளது.

மலையக மண்ணில் வாழும் படித்த சமூகம் மலையகத்தை வழிநடத்த வேண்டிய காலம் தற்பொழுது கனிந்துள்ளது. தொழிற்சங்க ரீதியாகப் பிரிந்துகிடக்கும் மலையக மக்களை ஒன்றுதிரட்டவேண்டிய மிகப்பெரிய கடப்பாடு இன்று எமது படித்த மலையகத் தமிழ் சமூகத்திற்கு எழுந்துள்ளது.

மாந்தர் போற்றும் மலையக மண்ணின் தனித்துவம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. முதிர்ந்த அரசியல் தலைமைகள் சுயநலன் கருதி மீண்டும் மீண்டும் மலையகத்தில்  ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்தி இளைய  சமுதாயத்தினரிடம் அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டும்.

ஜரோப்பிய நாடுகளில் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும்கூட இளைய தலைமுறை உருவெடுத்துள்ளது. இந்நிலைமை இலங்கையில் வர வேண்டும் என்பது அல்ல. மாறாக, மலையக மண்ணில் புத்துயிர் பெறவேண்டும்.

மஹிந்த ராஜபக்­ ஆட்சிக்காலத்தில் அவருடன் ஒட்டி உறவாடிய தலைமைகள் என்ன செய்தன? தற்பொழுது புதிய அரசில் அங்கம் வகிக்கும் தலைமைகள் ஓரளவு மக்கள் மத்தியில் தலைகாட்டினாலும் இவை கடந்த ஆட்சியில் அங்கம் வகித்தன என்பதையும் அன்று ஏதும் செய்யவில்லை என்பதையும் மறந்துவிடக் கூடாது.

 தொழிற்சங்கங்களாகப் பிளவுபட்டுக் கிடக்கும் மலையகத் தமிழ் சமூகத்தை  ஒன்றுதிரட்டி ஒரு மாற்று அரசியல் புரட்சியைக் கட்டியயழுப்பவேண்டிய காலகட்டத்தில் வாழும் மலையகத்தின் படித்த தமிழ் சமுதாயம் விழித்தெழவேண்டும். அப்போதுதான் மலையகத்தில் ஆதிக்கம் செலுத்தும் குடும்ப அரசியலையும், சிங்கள அரசியல்வாதிகளுக்கு விலைபோகும் அரசியல் கலாசாரத்தையும்  மாற்றமுடியும்.

7 பேச்சர்ஸ் காணி  மாத்திரம்தான் அவர்களின் சொத்து என்ற மமதையை உடைத்தெறிய வேண்டும். 200 வருடங்களாக இந்த நாட்டின்  பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மலையக மக்களின் எண்ணிலடங்காத பிரச்சினைகள் அவர்களின் வாழ்வில் தாண்டவம் ஆடுகின்றன.

கூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையகத் தொழிலாளர்களை விலைபேசிவரும் தொழிற்சங்க வாதிகளுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் ஒரு மாற்றுத் திட்டத்தை அமைக்கவேண்டும். கலாசாரம், பண்பாடு, சாதி என்ற ரீதியில் கிடப்பாரற்றுக்கிடக்கும் மலையகத்தின் தனித்தவத்தை தற்போதுள்ள அரசியல் தலைமைகள் ஒருபோதும் தீர்க்கப்போவதில்லை.

புரட்சி என்பது ஒரு நாளில் தோற்றம் பெறுவது அல்ல. மாறாக,  நாளுக்குநாள் மக்கள் மத்தியில் விதைக்கப்படுவதன் எதிரொலியாக எதிரொலிப்பதேயாகும்.  இதற்குத்  தக்க உதாரணம், ஆங்கிலேயர்கள் உகளாவிய ரீதியில் ஆதிகம் செலுத்திய காலத்தில் அந்தந்த நாடுகளில் மக்கள்  அவர்களுக்கெதிராக எழுச்சியடைந்த வரலாறுகள் என்பது உடன் தோற்றம் பெற்றது அல்ல. மாறாக, பல்வேறு காலகட்டங்களில் திணிக்கப்பட்ட போராட்ட உணர்வலைகளின் விளைவாகத் தோற்றம் பெற்றதே.

150 வருடங்களாக அடிமை வாழ்வை வாழ்ந்த மலையக மக்களை 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல் அடிமைகளாக மாற்றினர். 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொழிற்சங்க அடிமைகளாக மாற்றினர்.  மலையக மக்களை மாறி மாறி அடிமைகளாக நடத்தி வந்துள்ளனரே தவிர, அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக ஒருசில தலைமைகளே போராடியுள்ளன.

 கடந்த ஜனவரி எட்டாம் திகதியுடன் சர்வாதிகார ஆட்சிக்கு விடைகொடுத்து இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தி விட்டோம் என்பது வெறும் கனவு மாத்திரமே. ஆனால், இலங்கையில் இன்னமும் இனவாதம்தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. அத்துடன், மீண்டும் மஹிந்த ராஜபக்­ அதிகாரத்துக்கு வரத் துடிக்கின்றார். மஹிந்த மீண்டும் அதிகாரத்துக்கு வரத்துடிப்பதைத்  துடைத்தெறிய நினைப்பதுபோலவே நம் மலையகத் தமிழ்ச் சமூகமும் காலங்காலமாக மலையகத்தை ஆதிக்கம் செலுத்திவரும் ஒருசில குடும்ப அரசியலையும், பணம்படைத்தவர்களின் ஆதிக்கத்தையும், தொழிற்சங்க வாதிகளின் ஆதிக்கத்தையும் துடைத்தெறிய வேண்டும். அவர்களுக்கு விடைகொடுக்கும் வகையில் மலையக மண்வாசனையுள்ள  இளைய தலைமுறையினர் அரசியல் களத்தில் குதிக்கவேண்டும். கண்டிப்பாக தொழிற்சங்க ரீதியிலும் சாதிய அடிப்படையிலும் பிரிந்துகிடக்கும்  மலையக மக்களை மலையக மண்வாசனையுள்ள இளைய சமுதாயத்தின் மூலமே மாற்ற முடியும். எனவே, மாற்று அரசியல் ஒன்றே மலையகத்தின் இறுதித் தீர்வு.

65 வருடகாலமாக இனவாத ஆட்சியில் புரையோடிப்போய்க்கிடக்கும்  சிங்கள ஆதிக்கத்திலிருந்து மலையகத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்க மாயரும் புரட்சிக்கு இளைய தலைமுறையினர் மூலமே வித்திட முடியும். இதுவே இறுதித் தீர்வுமாகும்.

நன்றி - சுடரொளி - ஜூலை 08

வெண்கட்டி: மாற்று உரையாடலுக்கான தளம் - புஸ்பகுமார்

மனித சமூகத்தில் ஒவ்வாரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்பட்டுவருகின்ற தேவைகளுக்கும் மாற்றங்களுக்கும் அமைவாக அமைப்புகள் உருவாகின்றன. இவ்வாறு தோற்றம் கொண்ட அமைப்புகள் தமது அமைப்பு சார்ந்த உறுப்பினர்களிடையேயும், பொது மக்களிடமும் கருத்தியல் தொடர்பாடலை ஏற்படுத்திக் கொள்வதற்காக ஒவ்வொருவகையான முறைமைகளையும் கருவிகளையும் தோற்றுவித்துக் கொள்கின்றன. சிறுபத்திரிகைகள் இந்த பின்னணியிலேயே தோற்றம் கொள்கின்றன. அந்தவகையில் “வெண்கட்டி” இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் என்ற அமைப்பு சார்ந்து வெளிவந்த பத்திரிகையாகும். இப்பத்திரிகையின் ஆசிரியர் திரு. எம்.எஸ். இங்கர்சால்.

காலத்தின் தேவைகளை கவனத்திலெடுத்து தோற்றம் கொண்டதே இலங்கை கல்விச் சமூக சம்மேளம் என்ற அமைப்பாகும். இதன் தோற்றம் மலையகத்தை தளமாகக் கொண்டு  இருப்பினும், காலத்தின் தேவைகளையும் செல்நெறியையும் ஒட்டி மலையகத்தின் எல்லையை தாண்டி முழு இலங்கைத் தழுவிய அமைப்பாக இது பிரவாகம் கொண்டுள்ளது. வெண்கட்டி  கல்வித் துறைச் சார்ந்த அமைப்பொன்றின் வெளியீடு என்ற வகையில் அதில் இடம் பெறுகின்ற பெரும்பாலான ஆக்கங்கள் கல்விப் புலம் சார்ந்த்தாகவே இருக்கின்றன.

இவ்விடத்தில் முக்கியமானதோர் விடயம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கல்விச் சமூகத்தின் பிரத்திதித்துவத்தை மட்டும் வைத்துக் கொண்டு முழுமையான சமூக மாற்றத்தைக் கொண்டு வர முடியுமா என்பது சுவாரசியமான வினாதான். இருப்பினும் கல்விச் சமூகம் சார்ந்து, குறிப்பாக பின்தங்கிய சமூகத்தில் இருந்து பிறப்பெடுக்கின்ற முரண்பாடுகளும் அதனடியாக எழுகின்ற போராட்டங்களும் புறக்கணிக்கத்தக்கவை அல்ல. முக்கியமாக ஒவ்வாரு பண்பாட்டு அரசியல் போராட்டங்களும் சமூகத்தில் மற்றப் பிரிவினருடன் சேர்ந்து நடத்துகின்ற போராட்டங்களாகும். இத்தகைய முன்னெடுப்புகளுக்கான மானுட அறிவுத் தளத்தில்  மைய பகுதியின் ஒரு பன்முகப்பட்ட விவாத்த்திற்கான தேவையை இப்பத்திரிகை எந்தளவு சுமந்து வந்திருக்கின்றது என்பது குறித்து சிந்திக்க முனைவதே இக்கட்டுரையின் நோக்காகும்.

இப்பத்திரிகையில் இடம்பெறுகின்ற சில செய்திகள்(இவ்வமைப்பில் முக்கிய பொறுப்பேற்றுள்ளவர்களின் கருத்துக்கள்) முக்கிய கவனத்திற்குரியவையாகின்றன. 

சம்மேளனத்தின் தலைவர் திரு. லெனின் மதிவானம் “புதிய சவால்களை எதிர்நோக்க கூடிய இன்றைய சூழலில், அதன் புறப்பாட்டை சரியான திசையில் முன்னெடுத்துச் செல்லக் கூடிய ஆசிரியர் சார்ந்த தொழிற்சங்க அமைப்பு  ஒன்று உண்டா என்ற கேள்வியும் எழுகின்றது. நாம் திறந்த மனதோடு கூடி விவாதித்து ஜனநாயகத் தன்மை கொண்ட முடிவுகளையே முன்வைக்க முனைகின்றோம். ஜனநாயகம் மறுக்கப்பட்ட அமைப்பு எப்படி எதேச்சதிகாரத்திற்கு போகின்றது என்பதையும் அவ்வம்சம் எப்படி முற்றிலும் கீழ்படிந்த ஆளுமையற்ற சங்க உறுப்பினர்களை உருவாக்குகின்றது என்பதனையும் கடந்த கால அனுபங்கள் எமக்கு புதிய படிப்பினையாக அமைந்திருக்கின்றன”.

எனவும் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கர மணிவண்ணன் “”தனிநபர்களின் தனித்துவங்களையும் வேறுப்பாடுகளையும் கருத்திற் கொண்டு பொது இலக்கொன்றிக்காக ஒன்று சேர்வது எமது இலக்காகும். இவ்வமைப்பு ஜனநாயக தன்மைக் கொண்ட அமைப்பாகும். நாங்கள் நாடு தழுவிய கல்வி அபிவிருத்தியை நோக்கி பயணிக்கின்றோம்" எனவும், கல்விக் குழு தலைவர் திரு. எஸ். குமார் “”மக்களிடம் ஒரு கலாசார மாற்றம் ஏற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். தேவைப்படும் கலாசார மாற்றத்தை கல்வித் துறையினூடாக ஏற்படுத்துவதற்கான மக்கள் பங்கேற்க கூடிய வெளிகளை நோக்கி பயணிப்பதே எமது இலக்காகும்.ஒரு ஸ்தாபனத்தின் செயற்பாடுகள் ஜனநாயக தன்மைக் கொண்டதாக இருக்க வேண்டுமானால் உறுப்பினர்கள் விவாதிப்பதற்கும், தங்களது கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பதற்குமான திறந்த வெளிகளை உருவாக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஒருவகையில் இவ்வகையான செயலமர்வுகளின் ஊடாக இத்தகைய இலக்குகளை நோக்கி பயணிக்கின்றோம். எமது இத்தகைய செயற்பாடுகள்  நாகரிகமிக்க சமுதாயத்தின் ஒரு பகுதி தேவையையாவது உருவாக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது எனபதை ஒரு துளி கர்வமும் இல்லாமல் பிரகடனப்படுத்திக் கொள்கின்றோம் ". எனவும் குறிப்பிடுகின்றனர்.  

இக்கருத்துக்களை சிந்தனைகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகின்றபோது  கல்விச் சமூகத்தினரிடையே தோன்றிய அமைப்புகள் குறித்தும் அதன் தலைமைகள் குறித்தும் அதிருப்தி தோன்றியுள்ள அல்லது நம்பிக்கை இழந்துள்ள சூழலில், வெவ்வேறு ஆசிரிய தொழிற் சங்கங்களில் இயங்கியவர்களும் வெவ்வேறு அரசியல் பண்பாட்டு அமைப்புகளில் மற்றும் அமைப்பு சாராது இயங்கியவர்கள் மக்கள் நலனிலிருந்து அந்நியமுறாமல் பொது இலக்கொன்றிக்கான  ஒன்று சேரலே இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் என்ற அமைப்பு தோற்றத்திற்கான பின்னணி என்பதை அறிய முடிகின்றது. உறுப்பினர்களின் வேற்றுமைகளை மதிக்கின்ற அதே சமயம் ஒடுக்குமுறைகள், சுரண்டல், என்பவற்றிற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை ஒரு ஸ்தாபனமாக ஒழுங்கமைக்கும் செயற்பாடாக இவ்வமைப்பு செயற்படுகின்றது என்பதை உணர முடிகின்றது. அந்தவகையில் வெகுசன தளத்தில் பரந்துபட்ட மக்கள் பிரிவினர் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய வெளிகளை நோக்கிய பயணிப்பாகவும் இவ்வமைப்பின் செயற்பாடுகள் அமைந்திருப்பதனைக் காண முடிகிறது. தெளிவாக நோக்கின் பல்வேறுபட்ட ஜனநாயக முற்போக்கு சமூக சக்திகளின் தனித்தனிப் பண்புகளை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளல் என்பதே இதன் பொருளாகும். அந்தவகையில் பாரம்பரியமான கல்வி ஸ்தாபன முறைகளிலிருந்து சற்றே அந்நியப்பட்டு பரந்துபட்ட ஜனநாயகம் நோக்கிய அமைப்பாக இது கட்டியெழுப்ப படும் என நம்பிக்கை கொள்ள முடிகின்றது.


இதனை உறுதிபடுத்தும் வகையில் திரு. எம்.என். இங்கர்சால் எழுதியுள்ள “இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்: ஒரு மாற்று முகாம் உருவாக்கப்படுவதை நோக்கி” என்ற கட்டுரை அமைந்துள்ளது. இவ்விதழில் இடம் பெறுகின்ற காரல் மார்க்ஸின் கல்விச் சிந்தனைகள் என்ற கட்டுரை என்ற கட்டுரை முக்கியமானதொன்றாகும். காரல் மார்க்ஸின் கல்விச் சிந்தனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்ற இக்கட்டுரை வர்க்க சமூகவமைப்பில் “சகலருக்கும் கல்வி”, “கல்வி என்பது எல்லோருக்கும் பொதுவானது” என தத்துவம் பேசினாலும் கூர்ந்து நோக்கின் வர்க்க வேறுபாடுகள் கல்விப் புலத்திலும் தாக்கம் செலுத்துவதைக் காணலாம். மனிதன் வாழ்வதற்கான உரிமைகளில கல்வி முக்கியமானதோர் கூறாகும். கல்வியுரிமையை மறுப்பது என்பதும் அடிப்படை உரிமை மீறலாகும். இவ்வகையில் நோக்குகின்றபோது கல்வியில் தொடர்ந்துக்  கொண்டிருக்கும் ஏற்றதாழ்வுகளை இனங்கண்டு மனித குலத்திற்கு பொதுவான நாகரிகமான கல்விச் சிந்தனையை முன் வைத்தவர் காரல் மார்க்ஸ். அவரது கல்விச் சிந்தனைகளை அறிமுகப்படுத்துவது அவசியமானதொன்றாகும்.

மேலும், பேராசிரியர் மா. சின்னத்தம்பியின் ”மாற்று திறானாளிகளுக்குரிய கல்வி தேவைகளும் வளர்ச்சியும்” என்ற கட்டுரையும், கலாநிதி த. கலாமணியின் ‘ “முதியவர்களின் உளநலம் பேசப்பட வேண்டிய பொருள்களுக்கான முகவுரை” என்ற கட்டுரையும் முக்கிய கவனிப்புக்குரியவைகளாகும். சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டு விளிம்பு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் குறித்தும் முதியோர்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இக்கட்டுரைகள் வெளிபடுத்தியிருக்கின்றன. உலகலாவிய ரீதியில் உருப்பெற்று வருகின்ற தர்க்க ரீதியான சிந்தனைகளின் வெளிப்பாடாக இக்கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. கல்விப் புலத்தில் இத்தகைய மதிப்பீடுகள் ஆய்வுகள் விருத்தி பெற வேண்டியதன். அவசியத்தை இவை உணர்த்தி நிற்கின்றன.

அவ்வாறே, அன்பு ஜவஹார்ஷாவின் “புதிய ஆசிரியர்- அதிபர் சேவை பிரமாணக் குறிப்புகளும் பிரச்சனைகளும்” என்ற கட்டுரை ஆசிரியர் அதிபர் சேவை பிரமாணக் குறிப்புகள் பற்றிய அறிமுகத்துடன் அது தொடர்பில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் குறித்தும் விவாதிக்கின்றன. அதிபர் ஆசிரியர்கள் தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கும் மற்றும் அதனை வென்றெடுப்பதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் அவர் தம் சேவை பிரமாணக் குறிப்பு பற்றிய தெளிவு அவசியமாகின்றன. இவ்விடயத்தை இக்கட்டுரை கவனத்திலெடுத்திருக்கின்றது  எனலாம். இனிவரும் காலங்களில் பெண்களின் படைப்புகளையும் அவர்கள் பற்றிய பிரச்சனைகளையும் உள்ளடக்கி வெண்கட்டி வெளிவருமாயின் அவ்விதழ் முழுமைப் பெற்றதாக இருக்கும் எனத் தோன்றுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹட்டனில் நடைப்பெற்ற கூலித்தமிழ் நூல் வெளியீட்டில் திரு. மு. நித்தியானந்தன் குறிப்பிட்டது போல ” கல்வித் துறைச் சார்ந்து விவாதிக்க வேண்டிய காத்திரமான சிந்தனைகளை வெண்கட்டி பத்திரிகை தன்னகத்தே கொண்டுள்ளது” என்ற கூற்று மிக பொருத்தமானதாகவே தெரிகின்றது.

தனிமனித தாக்குதல்களுக்கும் புலம்பல்களுக்கும் அப்பால் - தன் காலத்து வேடிக்கை மனிதர்களிலிருந்து அந்நியப்பட்டு புதிய மனிதனுக்கான , புதிய வாழ்க்கைக்கான, புதிய கலாசாரத்திற்கான பயனத்தில் வெண்கட்டியும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என நம்பலாம். இவ்விதழ் தொடர்ந்து வெளிவர வேண்டியது அவசியமானதாகும்.

தேர்தல் விஞ்ஞாபனங்களும் மலையகமும் - சிவலிங்கம் சிவகுமாரன்


பொதுத்­தேர்­த­லுக்கு இன்­னமும் மூன்று வாரங் ­க­ளுக்கு குறை­வான காலமே இருக்கும் நிலையில் நாட்டின் பிர­தான கட்­சிகள் தமது தேர்தல் விஞ்­ஞா­பனங்­களை வெளியிட்­டுள்­ளன. முக்­கி­ய­மாக ஐ.தே.க மற்றும் ஐ.ம.சு.கூட்­ட­மைப்பு போன்ற பிர ­தான கட்­சி­களின் விஞ்­ஞா­ப­னங்­களில் நாட்டின் இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கு­ரிய எந்தவித நட ­வ­டிக்­கைகள் குறித்தும் தீர்­வுகள் முன்­வைக்­கப்பட ­வில்லை. இச்­சந்­தர்ப்­பத்தில் இந்­திய வம்­சா­வளி மக்கள் மற்றும் மலை­யக பெருந்­தோட்ட சமூகம் குறித்து ஆக்­க­பூர்­வ­மான எந்­த­வித வசனங்களும் அதில் இடம்­பெ­ற­வில்லை.

ஐ.தே.க தனது விஞ்­ஞா­ப­னத்தில் இந்­தியவம்சா­வளி மக்­களை சமூ­க­ம­ய­மாக்கல் மற்றும் தொழி ­லா­ளர்­க­ளுக்கு காணி,தனி வீடு குறித்து தெரி­வித் ­துள்­ளது. ஆக அடுத்த ஆறு வரு­டங்­க­ளுக்கு புதிய அர­சாங்­கத்­தினால் கிடைக்­க­வி­ருக்கும் வரப்­பி­ர­சாதம் இந்த அம்சம் மட்டும்தான் போலுள்­ளது.

இந்த மக்­களின் சமூக அடிப்­படை பிரச்­சினை என்­பது காணியும் வீடும் மட்­டும்­தானா என கேள்வி எழுப்­பத்­தோன்­று­கி­றது. தேசிய கட்­சிகள் சார்­பாக இன்று மலை­ய­கப்­ப­கு­தி­களில் போட்­டி­யி­டு­கின்ற பிர­தி­நி­திகள் குறித்த கட்­சி­களின் தேர்தல் விஞ்­ஞா­ப ­னங்­களை படித்­துப்­பார்த்­தார்­களோ தெரி­ய­வில்லை. ஏனெனில் விஞ்­ஞா­பனம் தயா­ரிக்­கப்­படும் போது தமது கட்­சிக்­காக இந்த மக்­களின் வாக்­கு­க­ளைப் ­பெற்­றுத்­த­ரு­கி­றார்­களே என இவர்­க­ளிடம் யோச ­னைகள் கேட்­கப்­பட்­டதா என்­பதே சந்­தேகம்தான்.

அந்த வகையில் பிர­தான இரண்டு கட்­சிகளும் வெளியிட்­டுள்ள தேர்தல் விஞ்­ஞா­பனம் தொடர்பில் இந்த மலை­யக வேட்­பா­ளர்கள் மக்­களிடம் கூறப் ­போ­வது என்ன? சுதந்­திரம் கிடைத்த வருடம் அன்றே ஒப்­பந்­தங்கள் மூலம் மலை­யக மக்­களின் பிரஜா உரி ­மைகள் பறிக்­கப்­பட்டு நாடற்­றவர் என்ற நிலைமை 2003 ஆம் ஆண்டு வரை நீடித்­தது. எனினும் பாரா ­ளு­மன்றில் கொண்டு வரப்­பட்ட சட்­டங்­களின் மூலமே தற்­போது இந்த மக்கள் இலங்கை பிர ­ஜைகள் என்ற அந்­தஸ்த்­தோடு வாழ்ந்து வரு­கின்­ற ­னரே ஒழிய அர­சி­ய­ல­மைப்­புக்குள் இந்த சமூ­கத்தின் உரி­மை­களை உள்­ள­டக்க கடந்த காலத்தில் எவ ­ருமே நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.கூறப்­போனால் இந்த மக்­க­ளுக்கு வழங்­கப்­பட் ­டுள்ள பிரஜா உரி ­மையில் சட்­டச்­சிக்­கல்கள் இல்­லா­ம­லில்லை.

மேலும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்குள் பெருந் ­தோட்­டப்­ப­கு­தி­களை உள்வாங்­கு­வ­தற்­கான நடவ ­­டிக்­கை­க­ளுக்­குக்­கூட பேரி­ன­வாத கட்­சி­களும் அர சாங்­கங்­களும் தடை­யாக இருக்­கின்­றன.இந்த சூழ்நி ­லையில் இந்த சமூ­கத்தின் எதிர்­கால வேலைத் ­திட்­டங்கள் குறித்த எந்த ஒரு சமூக பிரக்­ஞையும் இல்­லா­தி­ருக்கும் கட்­சி­க­ளுடன் கூட்டு வைத்து தேர்தல்­களில் போட்­டி­யி­டு­கின்­ற­வர்கள் தமது அரசியல் இருப்பையும் சுயநலத்தையும் மட்டுமே கருத்திற்கொண்டு செயற்படுகின்றவர்களாக இருக் கின்றனர்.

இன்று தேர்தல் மேடைகளில் முழங்கி வருகின்ற மலையக வேடப்பாளர்கள் தாம் இணைந்திருக்கும் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் மலையக மக்களுக்கான தீர்வு என்ன என்பது குறித்து பே சுவதற்கு தயாரா?

சிவலிங்கம் சிவகுமாரனின் முகநூலிலிருந்து நன்றியுடன்

நியாயமான சம்பள உயர்வு வழங்கப்படுவது எப்போது - சத்தியமூர்த்தி


நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கி வரும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கடந்த மார்ச் 31 ஆம் திகதி கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இரண்டு வருட சம்பள கூட்டு உடன்படிக்கை காலாவதியான நாளிலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுத் தருவதாகக் கூறிய 1000 ரூபா சம்பள உயர்விற்காகத் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.

உண்மையில், சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாவதற்கு சில நாட்களுக்கு முன்னரே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் நாள் ஒன்றுக்கு பெற்றுத் தரப்படும் என அறிவித்தது. இது முதலாளிமானர் சம்மேளனம் உடனடியாக இணங்கக் கூடிய சம்பள உயர்வாக இல்லாவிடினும் ஏனைய மலையக .தொழிற்சங்கங்களும் இ.தொ.கா. வின் இத்தீர்மானத்தை வரவேற்று அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்

கடந்த காலங்களில் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களின் எதிர்ப்பும், விமர்சனங்களும் கிளம்புவது வழமையாக இருந்தாலும் 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பாக அனைத்தும் வரவேற்பை தெரிவித்திருந்தனர்

இதன் காரணமாக, தான் ஏதோ ஒரு நோக்கத்திற்காக முன்வைத்த 1000 ரூபா சம்பள உயர்வை இ.தொ. கா. எப்படியாயினும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சம்பள உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இ.தொ.கா., இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பவை நடத்திய முதல் கட்ட பேச்சு வார்த்தையில் தொழிற்சங்கங்கள் முன்வைத்த 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் நிராகரித்திருந்தது

இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனம் வாரத்தில் 3 நாட்கள் வேலை வழங்குவதாகவும் அதற்காக நாள் ஒன்றுக்கு 550 ரூபா வழங்குவதாகவும், ஏனைய நாட்களில் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்திற்கு ஒரு கிலோ கிராமிற்கு 40 ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அறிவித்தது இதனை ஏற்கமறுத்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை மெதுவாகப் பணியில் ஈடுபடுமாறு கோரின.

தோட்டத் தொழிலாளர்களும் மெல்லப் பணி செய்யும் போராட்டத்தை, 11 நாட்களாக முன்னெடுத்த நிலையில், தொழில் அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தையும் இணக்கப்பாட்டினை எட்டாமல் தோல்வி கண்டது. மெதுவாக வேலை செய்யும் போராட்டம் இடம்பெற்ற போது தோட்ட நிர்வாகங்கள் தேயிலை தொழிற்சாலைகளையும், காரியாலயங்களை மூடியும் தமது கடமை மேற்பார்வை உத்தியோகத்தர்களை பணியிலிருந்து இடைநிறுத்தியும் இருந்தன.

இந்நாட்களில் தொழிலாளர்கள் பறித்த தேயிலை கொழுந்தை தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்கவில்லை. அவற்றை தொழிலாளாகள் தேயிலை தொழிற்சாலைகளுக்கு முன்பாக வைத்துவிட்டு வந்தனர் அவை அழுகி பழுதடைந்தமை காரணமாக தோட்ட நிர்வாகங்கள் இந் நாட்களில் பாரிய நட்டத்தை எதிர்நோக்கின என்பதை மறுப்பதற்கில்லை. கடந்த 15 ஆம் திகதி தொழிலமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் முதலாளிமார் சம்மேளனம் நடைமுறையில் உள்ள அடிப்படை சம்பளத்துடன் 60 ரூபாவை அதிகரித்து புதிய அடிப்படைச் சம்பளமாக 50 ரூபாவையும் இதர கொடுப்பனவுகள் 500ரூபாவையும் ஏனைய சகாய கொடுப்பனவுகளை சேர்த்து 660 ரூபாவை வழங்க முன்வந்தது இதை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததுடன் சம்பளப் பேச்சுவார்த்தையும் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மெதுவாகப் பணி செய்த நாட்களுக்குரிய சம்பளத்தை வழங்குமாறு தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தேர்தலின் பின்னரே வழங்கப்படுமென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் வேலாயுதம் குறிப்பிட்டுள்ளார் முதலாளிமார் சம்மேளனம், சம்பள கூட்டு உடன் படிக்கையின் படி மாதத்தில் 75 வீதமான நாட்கள் முழு நேர வேலை செய்திருந்தால் மாத்திரமே 700 ரூபா சம்பளத்தை வழங்க முடியுமென கூறி மெதுவாக வேலை செய்த நாட்களுக்கு கொடுப்பனவை வழங்காமல் கையை விரித்துள்ளது.

தேர்தல் காலமாக இருப்பதால் குறித்த சம்பள பிரச்சினையை முன்வைத்து தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் ஆதாயம் தேட முனைந்துள்ளதையும் கடந்த சில நாட்களாக அனைத்து தரப்பினரும் வெளியிடும் ஊடக அறிக்கைகள் வெளிப்படுத்தி நிற்கிள்றன.

தமது ஆதரவு தொழிற்சங்கங்கள் இழுக்கின்ற இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து வருகின்ற தோட்டத்தொழிலாளர்கள், சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தைகள் எவ்வித இணக்கப்பாட்டையும் எட்டாத நிலையில் மீண்டும் வழமையான கடமைக்குத் திரும்புமாறு பணிக்கப்பட்டுள்ளனர் தமது பணிப்போராட்டம் மூலம் நல்ல தீர்வு கிட்டுமென எதிர்பார்த்த அவர்களுக்கு இது பாரிய பின்னடைவாகும். மன வேதனையுடனும் விரக்தியுடனுமே அவர்கள் மீண்டும் தொழிலுக்குச் சென்றுள்ளனர்.

முதலாளிமார் சம்மேளனம் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்குவதில்லை என்ற தீர்மானத்தில் மிக உறுதியாக உள்ளது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கங்களான இ.தொ.க. மற்றும் இலங்கை தேசிய தோட்டதொழிலாளர் சங்கம் என்பவை தமக்கிடையே முரண்பாடுகளுடன் கூடிய கருத்துக்களை சம்பள உயர்வு விடயத்தில் கொண்டுள்ளன.

நன்றி - வீரகேசரி

‎மலையகமும்‬ ‪‎கல்வியும்‬



சிங்களவர்கள் நமக்காக தமிழ் பேசமாட்டர்கள். அது அவர்களுக்கு தேவையும் இல்லை. வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து வருபவர்கள் தாங்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அந்தரப்படும் வரையில் சிங்களம் படிக்க மாட்டார்கள். இன்று தலை நகரில் வந்து பெரிய பெரிய இடங்களில் எல்லாம் உத்தியோகம் பார்ப்பவர்கள் யார்? மூன்று மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடியவர்களாக வளர்ந்து வருபவர்கள் யார்? இதே போல் பெரும்பான்மையாக தலைநகரில் எங்கும் கூலிவேலைகளுக்கும் இதர வேலைகளுக்காகவும் அமர்த்தப்படுபவர்கள் யார்? ஒரு கணம் சிந்தித்தீர்களா? எல்லாம் மலையகப்பகுதியினர் தான். ஏன் இந்த வேறுபட்ட இரண்டு நிலை? அந்தக் காலத்தில் மலையக கல்விநிலை வீழ்ச்சியை அடைந்திருந்தன. இன்றும் ஏன் வீழ்ச்சி அடைகின்றது. குறித்த ஒரு பிரிவினர் மட்டும் தொடர்ந்து படித்து முன்னேறும் போதும் பலர் மலையகத்திலும் தலைநகரிலும் கூலி வேலையாட்களாக இருக்கக் காரணம் என்ன?

எங்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை எனது வேலை சரியாக நடந்தால் போதும், என்று நினைக்கும் அரசியல் தலைவர்கள் சிலராலும் தங்கள் ஆதாயத்திற்காக தொழில்பார்க்கும் சில அதிகாரிகளாலும் தான். இன்றைய மலையக சிறுவர்களின் கல்வி நிலைகுலைந்து காணப்படுவதற்கும் இவர்கள் தான் காரணம். சிறுவர்களுக்கான உரிமைகள் அவர்களுக்கான சட்டங்கள் என்பவை பலரும் அறிந்த விடயமே. அவர்கள் கல்வி கற்கும் உரிமையானது மறுக்கமுடியாத ஒன்று. அதனைக்கிடைக்க சரியானமுறையில் வழிவகைகள் செய்கின்றோமா? பல்வேறுபட்ட காரணங்களுக்காக சிறுவர்கள் இன்றும் வேலைக்கமர்த்தப் பட்டுக்கொண்டிருக்கிறர்கள். குடும்பத்தைக் காப்பாற்ற படிப்பை விடுத்து கனவுகளுடனும் கைநிறைய சம்பாதிக்கும் எண்ணத்துடனும் தலைநகர், வெளிநாடு என கையிலுள்ள காசைக்கூட கரைத்து சீரழிகிறார்கள். அவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுவர்களைப் பற்றி அவர்களின் பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ சிந்திப்பதில்லை. இவ்வளவு ஏன் அந்த பிள்ளைகளை வேலைக்கமர்த்தும் முதலாளிகள் கூட சிந்திப்பதில்லை. தங்கள் பிள்ளைகளை மட்டும் அவர்கள் சர்வதேச பாடசாலைகளில் சேர்ப்பார்கள். இவ்வாறான நிலமைகளினால் பிள்ளைகள் தொடர்ந்தும் மிகுந்த மன உலைச்சல்களுக்கு ஆளாகின்றார்கள்.

“நாங்க என்னா செய்றது? நாங்க பிறந்து வளந்த சூழ்நிழை அப்பிடி என்ன பண்றது மழைக்கு கூட ஸ்கூல்ல ஒதுங்கவிட்டது இல்ல. வறுமை எங்கள ஆட்டிப்படைச்சிருச்சி. நாங்க படிக்காத நிலையில என்ன வேலை செய்றது? எங்க போனாலும் என்ன படிச்சிருக்கிங்கனுதா கேக்குறாங்க அப்பிடி இருக்கையில வீட்டு வேலைதான் சரியாப் படுது” என்று என்று அங்கலாய்க்கிறார்கள் இன்றைய மலையக பெரும்பாலான பெண்கள். இப்படியான சந்ததியினருக்கு சரியான வழிகாட்டல் இல்லாமையே காரணம்.

பிள்ளையின் படிப்புக்கு மாதம் ஐயாயிரம் செலவு செய்யும் முதலாளிமார் ஒவ்வொருவரது வீட்டிலும் ஒரு சிறுவர் தொழிலாளி வீதம் இருக்கின்றார்கள். அவர்களது செலவில் ஒரு பகுதியையாவது இவர்களுக்கென செலவு செய்யலாமே என்ற எண்ணம் வந்தால் எப்படி இருக்கும்? உலகலாவிய ரீதியில் இலங்கை கல்வி நிலை முன்னேற்றம் கண்டுள்ளது. படித்தவர்களின் எண்ணிக்கை 92 சதவிகிதத்திலும் உயர்வாக உள்ளது. தற்போது இலவசக் கல்வி, சீருடை, பாடப்புத்தகம், என்பவற்றோடு காலை உணவு வழங்கும் திட்டமும் நடைமுறையிலுள்ளது. அனேகமாக அனைத்து அரச பாடசாலைகளிலும் இவை வழங்கப்படுகிற நிலையில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதது யாருடைய தவறு….?

மலையகத்தில் ஆண்பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் கல்வியில் முன்னிற்கிறார்கள். இருப்பினும் பொருளாதார பிரச்சினை ஏற்படும் போது பெண் பிள்ளைகளின் கல்வியே பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஏனெனில் மற்றவர்களின் சுகயீனம், தாய்மார்களின் பிள்ளைப்பேறு, விருந்தினர் வருகை, திருவிழாக்களின் போது சம்மந்தப்பட்டவர்களை கவனிப்பதற்காக பாடசாலை செல்ல அவர்கள் தடை 

செய்யப்படுகின்றனர். வீட்டு வேலைகள் அனைத்தையும் தாயாரோடு பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தப்படுவதால் வீட்டில் படிக்க நேரமில்லாமல் இருக்கின்றது. குறிப்பாக பெண்பிள்ளைகள் பருவமடைந்ததும் சடங்கு சம்ரதாயம் என்ற பேரில் மூன்று நான்கு மாதங்கள் வீட்டில் நிறுத்தி விடுவார்கள். இவ்வாறு மூன்று மாதத்திற்கு மேல் வீட்டில் நிறுத்தி வைக்குமிடத்து அவர்கள் பாடசாலையை விட்டு இடைநிறுத்தப்படுகின்றனர். பருவமடைந்ததற்குப் பிறகு ஏனைய ஆண் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க விடமாட்டார்கள். இது போன்ற விடயங்களாலும் கல்வி புறக்கணிக்கப்படுகிறது.

ஒரு சிலர் இவ்வாறான சம்பிரதாயங்களை தேவையற்றதாக கருதுகின்றார்கள்.

இவர்களுக்கு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவுகின்றன. சில கருத்தரங்குகளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளது. இருப்பினும் இவ்வாறான உதவிகள் ஒரு சிலரை அல்லது ஒரு பிரதேசத்தையே சென்றடைகிறது. மக்கள் மத்தியில் இவ்வாறான சம்பிரதாயங்கள் ஊறிக்கிடந்தாலும் காலப்போக்கில் அவை மாறுபடக்கூடியவை தான். பிள்ளைகளுக்கான கல்வி எந்தளவு முக்கியம் என்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தவரை படித்த சமூகம் அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிக்க வேண்டும்.

சிறுவர்களை பாதுகாக்க வேண்டியதும், அவர்களுக்கு குடும்பத்தை தவிர்ந்த இன்னுமொறு உலகம் இருப்பதை உணர்த்துவதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொறுப்பானவர்கள் எல்லோருடைய கடமையுமாகும். அவர்களது உரிமை சரியான முறையில் வழங்கப்பட வேண்டும். சற்று சிந்தியுங்கள்.. அவர்களுக்கே உரித்தான கல்வியை வழங்குவதற்கு முழு சமூகமும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

(வாசித்துவிட்டு பகிர்ந்துகொள்ளுங்கள் அனைவரும் விழிப்படையட்டும்)

நன்றி - அனைத்துப் பல்கலைக்கழக மலையக சமூக சம்மேளனம் இலங்கை - IUFMC (முகநூலிலிருந்து)

நட்டமென கூறும் பெருந்தோட்ட கம்பனிகள் வெளியேறுமா? - அருட்தந்தை. மா சத்திவேல்


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள மற்றும் நல விடயங்கள் தொடர்பில் இவ்வாண்டு செய்யப்பட வேண்டிய ஒப்பந்தம் காலம் தாழ்த்திய போதும் எப்போது செய்யப்படுமென தெரியாத நிலையில் முதலாளிமார் சம்மேளனம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு ரூபா வேனும் அதிகரிக்க முடியாது என கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத பொறுப்பற்ற அடாவடித்தனமாகும். இதனை மலையக சமூக ஆய்வு மையம் வன்மையாக கண்டிக்கின்றது.

ஆட்சியிலிருக்கும் புதிய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு மலையக மக்கள், குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், தலைவர்கள் என்று கூறிக் கொள்வோரின் வார்த்தைகளுக்கு கட்டுப்படாது தமது வாக்குகளை அளித்தனர். புதிய அரசாங்கம் தமக்கு வாக்களித்த அரசாங்க ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக சம்பள அதிகரிப்பை செய்துள்ளது. தனியார் துறையினருக்கும் அதிகரிக்க சொல்லியுள்ளது. ஆனால், முதலாளிமார் சம்மேளனம் ஒரு ரூபா ஏனும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்க முடியாது என்பது மைத்திரிக்கு வாக்களித்தமைக்கு பழிவாங்கவா? எனும் வினா எழுகின்றது. 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்றால் தொழிலாளர்கள் வேறு வழியின்றி உழைப்பிற்காக தோட்டங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு வெளியேறினால் ‘தேசிய பௌதிகவியல் திட்டம் - 2030 (National Physical Plan – 2030) எனும் மஹிந்த சிந்தனையை இலகுவில் நடைமுறைப்படுத்தலாம். வேறு தேவைகளுக்காகவும் மலையக நிலங்களை கையகப்படுத்தப்படுவதோடு, குறிப்பாக புதிய குடியேற்றங்களையும் உருவாக்கலாம். இத்தகைய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்படும் கூட்டு சதி முயற்சிகளில் சம்பளம் அதிகரிக்க முடியாது என்பதும் ஒன்று. இது பெருந்தோட்டத் தொழிலாளர்களை சுயமாக இடம் பெயர வைத்து மேற் கொள்ளப்படவிருக்கும் இன அழிப்புச் செயற்பாட்டுக்கு முன்னோடி எனலாம். 

இன்று பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பல்வேறு விதமான கடன் சுமையோடு வாழ்விற்காக தினமும் போராடுகின்றனர். அரசாங்கம் அறிவித்த ரூபா 2,500 சம்பள அதிகரிப்பும் இல்லை. நாட் சம்பள அதிகரிப்பும் இல்லையாயின் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிலாளர்கள் என்பதற்காகவும், தமிழா;கள் என்hதற்காகவும் பொருளாதார ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்றே நாம் கருதுகின்றோம்.

புதிதாக ஒப்பந்தம் செய்யப்படும் காலத்தில் மட்டுமே கம்பனிகளின் நட்டம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனம் கூறுகிறது. இலாபம் அடையும் காலத்தில் இலாபத்தை மக்களுக்கு கூறாதது ஏன்? இலாபம் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதில்லையே ஏன்? 

கம்பனிகள் நட்டமடைவதாயின் நிர்வாகச் சீர்கேடு, பயிற்சி பெற்ற நிர்வாகிகள்/உத்தியோகஸ்தா;கள் இன்மை, மீள் நடுகை இன்மை, முறையான பராமாpப்பின்மை, சுகபோக நிர்வாக செலவீனம் என்பவற்றோடு ஏல விற்பனை எனும் சதியினையும் குறிப்பிடலாம். இவற்றுக்கு எந்த வகையிலும் தொழிலாளர்கள் பொறுப்பில்லை. மேலும், கம்பனிகள் நட்டமடைவதாயின் நட்டத்தில் இயங்கும் வருவாய் தொழிலை விட்டு வெளியேறலாமே. இவர்கள் ஏன் வெளியேறுவதில்லை? இவர்கள் சமூக சேவையா செய்கின்றார்கள்? எனவே, தொழிலாளர்களுக்குரிய சம்பள அதிகரிப்பை காலம் தாழ்த்தாது செய்ய வேண்டும். இல்லையேன், தோட்டங்களை அரசிடம் கையளித்துவிட்டு வெளியேறலாம்.

இந்நிலையில், அரசாங்கம் கம்பனி தோட்டங்களை பொறுப்பேற்று தொழில் அனுபவமும், முதிர்ச்சியும், கடின உழைப்பிற்கும் சொந்தக்காரா;களான மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு கட்டவும், விவசாயம் செய்யவுமான காணியை உறுதிப்பத்திரத்துடன் கொடுப்பதோடு, மலையக தொழிலாளர்களையும் சிறுதோட்ட உரிமையாளர்கள் என்ற நிலைக்கு உயா;த்த வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டமே மலையகத்திற்கும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், அவர்களது வாழ்வு கலாசாரத்திற்கும், கூட்டு வாழ்விற்கும் பாதுகாப்பு கிடைப்பதோடு, பொருளாதார, சமூக அபிவிருத்தியும் ஏற்படும்.

இன்று சிறு தோட்ட உரிமையாளர்களே 70மூ தேயிலை உற்பத்தியை மேற் கொள்வதோடு, சமூக பாதுகாப்போடும், கௌரவத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய கௌரவத்தை மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அடைய வேண்டும். ஏனெனில், இவர்களும் இந்நாட்டின் பிரஜைகளே. 

இன்றைய இக்கட்டான அவசர கால கட்டத்தில் மலையக அரசியல் கட்சிகளும், அவற்றிற்கு துணை நிற்கும் தொழிற்சங்கங்களும் தமது மலட்டு அரசியலை கைவிட்டு முதலாளித்துவத்தின் எடுப்பிடிகளாக நின்று தொழிலாளர்களை ஒடுக்கும் வன்புணா;ச்சியில் ஈடுப்படாது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி சுதந்திர வாழ்வை அடிப்படையாக கொண்டு செயற்பட சமூக சக்திகளோடு கை கோர்க்க வேண்டும் என்பதோடு, மலையக மக்களின் விழிப்பே மலையகத்தின் எதிர்காலம் என மலையக சமூக ஆய்வு மையம் வலியுறுத்துகின்றது. 

மலையக சமூக ஆய்வு மையம்

கண்டி, பதுளையில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் காக்கப்பட வேண்டும்! - பானா. தங்கம்


தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கண்டி, பதுளை மாவட்டங்களும் பிரதான மாவட்டங்களாக உள்ளன. இங்கு கணிசமான தமிழ் வாக்காளர்கள் இருந்தும் கடந்த இரண்டு தசாப்த காலமாக தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் தமிழ் மக்கள் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் தயவை நாட வேண்டிய நிலையில் உள்ளார்கள். எனவே, இம்முறையாவது சிந்தித்துச் செயற்பட்டால் ஒவ்வொரு மாவட்டத்திலும் உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

கண்டி மாவட்டத்தில் கலகெதர, ஹரிஸ்பத்துவ, பாத்ததும்பர, உடதும்பர, தெல்தெனிய, குண்டசாலை, ஹேவாஹெட்ட, செங்கடகல, மஹநுவர, யட்டிநுவர, உடுநுவர, கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய 13 தேர்தல் தொகுதிகள் உள்ளன. மொத்தமாக 12 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள். இங்கு 2013 ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பின் அடிப்படையில் 10 இலட்சத்து 49 ஆயிரத்து 160 வாக்காளர்கள் உள்ளார்கள். கண்டி மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம், வரை இருந்த தமிழ் வாக்காளர் தொகை இம்முறை சுமார் ஒரு இலட்சம் வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2010 பொதுத் தேர்தலில்
கண்டி மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 3 இலட்சத்து 33 ஆயிரத்து 819 வாக்குகள் கிடைத்திருந்தன. 8 உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு இலட்சத்து 92 ஆயிரத்து 798 வாக்குகளும் 4 உறுப்பினர்களும் கிடைத்திருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் மனோ கணேசன், எஸ். இராஜரட்ணம் ஆகிய தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தார்கள், இவர்களில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் 23 ஆயிரத்து 33 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். எஸ்.இராஜரட்னம் 18 ஆயிரத்து 967 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். எனினும், தமிழ் உறுப்பினர்கள் எவரும் தெரிவாகக் கூடிய வாய்ப்புக் கிட்டவில்லை. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இ.தொ.கா. சார்பில் போட்டியிட்டு எஸ். இராஜரட்ணம் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருந்தார். இ.தொ.கா. விலிருந்து விலகிச் சென்ற அவர் சிறிது காலம் மலையக மக்கள் முன்னணியில் இருந்தார். அதன் பிறகு அமரர் சந்திரசேகரனின் காலத்தில் மலையக மக்கள் முன்னணியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட எஸ். இராஜரட்ணம் இரண்டாவது முறையாகவும் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2015 பொதுத் தேர்தலில்
இம்முறை நடைபெறும் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் .கட்சியின் சார்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் வேலுகுமார் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகின்றார்.
மேலும், கண்டி மாவட்டத்தில் இ.தொ.கா. தனித்துப் போட்டியிடுகின்றது. முன்னாள் தமிழ்க் கல்வியமைச்சர் எஸ். அருள்சாமி தலைமையில் 15 தமிழ் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளார்கள்.

ஒருவராவது தெரிவு செய்யப்படுவாரா?
கண்டி மாவட்டத்தில் இதுவரை காலமும் ஒரேயொரு தமிழ் உறுப்பினர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளார் என்பதை கடந்த கால தேர்தல் முடிவுகளில் காணக் கூடியதாக உள்ளது. எனினும், இம்முறை அந்த உறுப்பினர் தொகை இரண்டாக அதிகரிக்குமா அல்லது ஒருவரையும் தெரிவு செய்து கொள்ள முடியாமற் போய்விடுமா என்ற அச்சம் தலைதூக்கியுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.

இ.தொ.கா. தனித்துப் போட்டியிடுவதால் கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டால் ஒரு உறுப்பினரைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் களம் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விகிதாசார தேர்தல் முறை என்பதால் குறைந்த வாக்குகளை எடுத்தாலும் ஒருவர் தெரிவாகக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடும் வேலுகுமார் மத்திய மாகாண சபைத் தேர்தலில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கு மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் எத்தகைய செல்வாக்கு இருக்கின்றது என்பதை இந்தத் தேர்தல் எடுத்துக் காட்டும்.

எது எப்படியோ, ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் உறுப்பினர்கள் தெரிவானால் அதைவிட மகிழ்ச்சிகரமான விடயம் அரசியல் ரீதியில் இருக்க முடியாது என்றே சொல்ல வேண்டும். அது தமிழ் வாக்காளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

பதுளை மாவட்டத்தில்
பதுளை மாவட்டத்தில் 9 தேர்தல் தொகுதிகள் உள்ளன. அவை மஹியங்கனை, வியலுவ, பசறை, ஹாலி–எல, ஊவா பரணகம, வெலிமடை, பண்டாரவளை, அப்புத்தளை, பதுளை ஆகியவையாகும். பதுளை மாவட்டத்தில் இம்முறை 6 இலட்சத்து 20 ஆயிரத்து 486 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். இவர்களில் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் தமிழ் வாக்குகளும், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்குகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பதுளை மாவட்டத்தில் மொத்தமாக 8 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள்.

2010 இல் பதுளை மாவட்டத்தில்
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 இலட்சத்து 3 ஆயிரத்து 689 வாக்குகளோடு 6 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தார்கள். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 886 வாக்குகளோடு 2 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தார்கள்..

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வடிவேல் சுரேஷ், வீ.சென்னன், எஸ்.சந்திரமோகன் ஆகி யோர் போட்டியிட்டிருந்தார்கள். இவர்களில் வடிவேல் சுரேஷ் 27,695 விருப்பு வாக்குகளையும், வீ.சென்னன் 7,587 விருப்பு வாக்குகளையும், எஸ். சந்திரமோகன் 6,181 விருப்பு வாக்குகளையும் பெற்றிருந்தார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கே. வேலாயுதம் 25,056 விருப்பு வாக்குகளையும், எம்.சச்சிதானந்தன் 22,277 விருப்பு வாக்குகளையும் பெற்றிருந்தார்கள். எனினும், இரண்டு கட்சிகளிலிருந்தும் தமிழ் உறுப்பினர்கள் எவரும் தெரிவாகவில்லை. மேலும், மலையக மக்கள் முன்னணி தனித்து நின்று ஏ.அரவிந்தகுமார் தலைமையில் அதன் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டிருந்தது. இந்தக் கட்சிக்கு பதுளை மாவட்டத்தில் 11,481 வாக்குகள் மாத்திரம் கிடைத்திருந்தன.
பதுளை மாவட்டத்தில் தமிழ் உறுப்பினர்கள் எவரும் 2010ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்படாத நிலையில், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து ஊவா மாகாண முதலமைச்சரான பின்னர் அவருக்குப் பதிலாக கே. வேலாயுதம் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்று பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சரானார்.

2015 பாராளுமன்றத் தேர்தலில்
2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஏ.அரவிந்தகுமார் மற்றும் ஊவா மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ், எம். சச்சிதானந்தன் ஆகியோர் போட்டியிடுகின்றார்கள். கடந்த 2010 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டிருந்த வடிவேல் சுரேஷ், ஊவா மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வசம் இருந்த ஊவா மாகாண சபை ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சிக்கு கை மாறியதன் விளைவாக மாகாண அமைச்சராக நியமனம் பெற்றுக்கொண்டார்.

எனவே, வடிவேல் சுரேஷ் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுகின்றார். இவர் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி பிரதி அமைச்சராகவும் இருந்துள்ளார். மற்றுமொரு வேட்பாளரான எம். சச்சிதானந்தனும் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவும் பதவி வகித்தவராவார். இம்முறை இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. வேலாயுதம் தேசியப் பட்டியலில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, கண்டி மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவது போல, பதுளை மாவட்டத்திலும் இ.தொ.கா. தனித்து அதன் “சேவல்” சின்னத்தில் போட்டியிடுகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஜெகதீஸ்வரன், கே. மாரிமுத்து ஆகியோரோடு பல தேர்தல்களைச் சந்தித்த எஸ். கனகரத்தினம் போட்டியிடுகின்றார். மேலும் ஊடகத் துறையில் நன்கு அறியப்பட்ட வி. தேவராஜ் உட்பட மொத்தமாக 11 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.

பதுளை மாவட்டத்தில் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் சென்னன், சச்சிதானந்தன் ஆகிய இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளார்கள். இறுதியாக வடிவேல் சுரேஷ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். கடந்த தேர்தலில் ஒருவரும் தெரிவாகவில்லை.

பதுளை மாவட்டத்திலும் தனித்து நின்று ஒரு உறுப்பினரையாவது பெற்றுக் கொள்ள வேண்டும என்ற நோக்கத்தில் இ.தொ.கா. களமிறங்கியுள்ளது. இங்கு இ.தொ.கா. வேட்பாளர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தப் போட்டிக்கு மத்தியில் இரண்டு தரப்பிலிருந்தும் தலா ஒரு உறுப்பினராவது தெரிவாக வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். இங்கு தமிழ் வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளிலும், சுயேச்சைக் குழுக்களிலும் பெருமளவில் போட்டியிடுவதால் வாக்குகள் பல கூறுகளாகப் பிரிந்து செல்லக் கூடிய ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. எனினும், சமூக அக்கறையும், உணர்வும் இருந்தால் கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவங்களை நிச்சயமாக தக்க வைத்துக் கொள்ளமுடியும்

நன்றி - வீரகேசரி

மலையக அகதி மக்களுக்கு பிரசாவுரிமை பெற்றுக்கொடுத்த எஸ்.ஆர். அந்தனி - மல்லியப்புசந்தி திலகர்

தமிழ்நாட்டில் வாழும் மலையக அகதிகள், தேடல் ஆய்வில் என்னோடு ஒத்துழைப்பு தரும் அந்தனி மற்றும் பாலகிருஸ்ணன்
இந்தக் கட்டடுரை மலையக மக்களின் ஒரு வரலாற்றுப் பக்கத்தை திருப்பிபார்க்கிறது. மலையக மக்கள் என அழைக்கப்படும் இந்த மக்கள் இந்திய வம்வசாவளியினர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவர்களது பண்பாட்டு அடையாளம் இன்று ‘மலையக மக்களாக’ வியாபகம் பெற்றுள்ளது. இலங்கை மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதன் பின்னர், அவர்கள் தொடர்ச்சியாக இனவெறி தாக்குதல்களுக்கு உள்ளான போது அவர்களுக்கு இரண்டு மாற்றுத்தெரிவுகள் இருந்தன.

1. 1964 செய்யப்பட்ட ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியாவுக்கு திரும்புதல்

2. இலங்கைப் பூர்விகத்தமிழ் மக்கள் வாழும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் சென்று குடியேறல்.

1964 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் அப்போதே 10 லட்சமாக இருந்த இந்திய வம்சாவளி மலையக மக்களை கூறுபோட்டது. ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த 1970 களில் இருந்து 1990 களின் முற்பகுதி வரை 5 லட்சம் அளவான இலங்கை வாழ் மலையக மக்கள் இந்திய தமிழகம் நோக்கி திரும்பினார்கள். அங்கே அவர்கள்இன்றும்; ‘தாயகம் திரும்பியோர்’ என தாமாகவும் ‘தமிழ் நாட்டின் சிலோன்காரர்கள்’ என பூர்விகத் தமிழ்நாட்டு மக்களாலும் அறியப்படுகிறார்கள்.

இலங்கையின் வடக்கு பகுதிக்கு  குடியேறல், குறிப்பாக ‘வன்னி’ பெரு நிலப்பரப்பில் குடியேறல் என்பது 1970 களில் இடம்பெற்ற ஒரு போக்கு. மலையகத்தின்  நுவரெலியா, கண்டி, பதுளை, களுத்துறை, மாத்தளை, மாத்தறை, இரத்தினபுரி போன்ற  மாவட்டங்களில் இருந்து; வன்னிநோக்கி குடிபெயர்ந்தார்கள். உடல் உழைப்பை மட்டுமே நம்பி மலையகத் தோட்டங்களில் வாழ்ந்து வந்த இந்த மக்கள் வன்னி நிலப்பரப்பில் காடழிக்கவும், கமத்தொழில் தொழிலாளியாகவும் மட்டுமே பயன்பட்டார்கள். சிலர் வவுனியா, கிளிநொச்சி, மாங்குளம் போன்ற நகரங்களில் கடைச்சிப்பந்திகளாகவும் கைக்கூலி வேலை செய்பவர்களாகவும் மாறிப்போனார்கள். காடழித்த பிரதேசததில் ஒரு குடில், கமத்தொழில் பண்ணையில் அல்லது தனிப்பட்டவர்களிடம் கூலி வேலை என வாழ்ந்து வந்த, வாழ்ந்து வரும் இந்த மக்களை, கடந்த மூன்று தசாப்தத்திற்கு மேலாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் அதிகமாகவே பாதித்தது. வன்னியில் இருந்து அதிகளவு மக்கள் படகுகள் வழியாக தமிழ் நாட்டுக்குத் தப்பி சென்றார்கள்.

இவ்வாறு தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்று பல்வேறு அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கை அகதி மக்களிடத்தில் செய்யப்பட்ட ஆய்வின்படி ‘2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 திகதி உள்ளபடி தமிழ் நாட்டில் உள்ள 117 அகதி முகாம்களில் 95219 இலங்கை அகதிகள்வசித்து வருவதாகவும், அவர்களுள் 28489 பேர்கள் நாடற்றவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சென்னைக்கான இலங்கை பிரதி உயர்ஸ்தாணியகர்’ சாட்சியமளித்துள்ளார். (மூலம்: *)

இந்தியாவில் அகதி முகாம்களில் வசிப்போர் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் எனில் அங்கே ‘நாடற்றவர்’ இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் தனிநாடு கோரி போராட முன்வந்த இலங்கைப் பூர்விக தமிழ் மக்கள் இலங்கை நாட்டின் பிரஜைகள் என்ற அந்தஸ்து பெற்றவர்கள். எனவே, தமிழ் நாட்டில் அகதிகளாக சென்றவர்களிடையே நாடற்றவர்களாகவும் அகதிகளாகவும் வாழும் 28489 பேர், 1970 மற்றும் 1980 களில் மலையகத்தில் இருந்து வன்னிக்கு குடிபெயர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது தெளிவு. மலையக மக்கள்தான் இலங்கை நாட்டில் குடியுரிமை பறிக்கப்பட்ட தமிழர்கள். 

இப்போது நிலைமையை சற்று கூர்ந்து அவதானித்தால், நூறு வருடங்களுக்கு முன்பு (ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்தில்) இந்தியாவில் இருந்து வந்த மக்கள் இந்திய பிரஜைகள் என்ற பெயரில் இந்திய கடவுச்சீட்டு வழங்கப்பட்டு ‘தமிழ் நாட்டில் தாயகம் திரும்பியோர்’ ஆனார்கள். அதேநேரம் அதே அந்த ஒப்பந்தப்படி தமிழகம் செல்லாமல் மறவாழ்வு தேடி வன்னிக்கு சென்றோர் யுத்தத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி ‘தமிழ் நாட்டுக்கு தப்பியோடி அகதியானார்கள்’. ஒரு இந்திய வம்சாவளி இலங்கை மலையகத் தமிழன் இலங்கைப் பிரசையாகவும் இல்லாமல், இந்தியதமிழன் என சொல்லிக்கொண்டு இந்திய மண்ணில் நாடற்றவனாகவும் ‘அகதி’ பட்டத்துடன் வாழும் அவலம் இங்கே இடம்பெற்றுள்ளது. 
சிவகாசி வெம்பக்கோட்டை அகதி முகாமில் அந்தனி குடும்பத்தாருடன் கட்டுரையாளர்
அந்த அகதி மக்களில் ஒருவர்தான் எஸ்.ஆர்.அந்தனி. இலங்கையில், கொட்டகலை, பத்தன மவுன்ட்வேர்னன் தோட்டத்தில் கணக்குப்பிள்ளை வேலை செய்த அந்தனி ஓய்வு கொழும்பில் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டிருக்கையில் 1983ல்  இன வன்முறையில் அகப்பட்டு குடும்பத்தோடு வன்னிக்கு குடிபெயர்ந்தவர். வன்னியில் இடம்றெ;ற கோரயுத்தத்தில் தனது உடமைகளை இழந்து 1990 களில் பிற்பகுதியில் படகுமூலம் தமிழ் நாட்டுக்கு தப்பியோடியவர். (இவரது ஒரு மகன் இப்போதும் இலங்கை மலையகத்தில் வாழ்ந்துவருகிறார்). தமிழ்நாட்டில், சிவகாசி நகரில் இருந்து சற்று தொலைவில் உள்ள வெம்பக்கோட்டை அகதி முகாமில் வாழ்ந்து வந்த ‘நாடற்ற’ இந்திய வம்சாவளி தமிழன்’ எஸ்.ஆர். அந்தனி. இதுபோல 28489 பேர் (அன்றைய அறிக்கையின்படி) இந்தியாவில் நாடற்றவனாக வாழும் இலங்கையின் இந்தியத் தமிழர்கள். 

எஸ்.ஆர். அந்தனி, எண்பது வயது கடந்தபோதும் தன் லட்சியத்தை விடவில்லை ‘இலங்கை அகதிகள் ஐக்கிய முன்னணி’ எனும் அமைப்பை தனது தலைமையில் உருவாக்கி  தன்னோடு அகதியாக வாழ்ந்த பாலகிருஷ்ணன் எனும் தன் நண்பரை செயலாளராகக் கொண்டு  செயற்பட ஆரம்பித்தார். இவ்வாறு அகதி அமைப்புகளை உருவாக்கி தொண்டு நிறுவனங்களிடம் பணம் பெற்று அவலத்தை விற்றுபிழைக்கும் பல அமைப்புகள் அங்கு உண்டு. ஆனால், அந்தனி அய்யாவின் லட்சியம் ஒன்றே ஒன்றுதான். தான் மரணிப்பதற்கிடையில் ஒரு நாட்டின் பிரசையாக வாழ்ந்துவிடவேண்டும் என்பதுதான் அந்த லட்சியம். போராடினார். தனிமனிதனாக தன் குழுவோடு தமிழ்நாட்டின் பல தலைவர்களை சந்தித்தார். அவர்கள் கரைக்கு அப்பால் நடக்கும்; யுத்தத்திற்க தூபம் போட்டு;ககொண்டு இருந்தார்களே தவிர தன் முன்னே வந்து நிற்கும் ‘நாடற்ற இந்திய தமிழனை’ கண்டுகொள்ள தயாராக இருக்கவில்லை. அந்தனி ஐயா மனம் தளரவில்லை. ‘நான் நாடற்றவன். ஆனால் எனக்கு இரண்டு நாட்டு அடையாளம் உண்டு. இந்தியாவில் எனது நாடற்றவர் நிலைபோக்க யாருமில்லை. நான் இலங்கை போய் இலங்கை இலங்கை பிரசையாகவேனும்  அந்தஸ்து பெற்று வாழ்ந்து மடிகிறேன் என இலங்கை வந்தார். 

2008 ஆம் இலங்கை வந்த அந்தனி அய்யா பத்திரிகை காரியாலங்களுக்கும் சென்று தன்னுடைய நிலைமையை விளக்கினார். பத்திரிகைகளில் (தினக்குரல்) அவரது நேர்காணல்கள் வந்தன. அந்தனி அய்யா பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்தார். அந்த வகையில் கட்டுரையாளரான என்னையும் சந்தத்தார். அந்த நாட்களில்; இலங்கைப் பாராளுமன்றத்தில் 11 மலையகத் தமிழ் பிரதிநிதிகள் இருந்தனர். கட்டுரையாளரின் ஆலோசனையின் பேரில் மக்கள் விடுதலை முன்னணியில் அங்கம் வகித்த இராமலிங்கம் சந்திரசேகரிடம் சென்றார். ஏனைய மலையக அரசியல்வாதிகளிடம் சென்று அந்தனி அய்யா அரசியல் பகடைக் காயாக ஆகிவிடக்கூடாது என்பதற்கதான் இந்த எற்பாடு. திட்டமிடப்பட்டது போலவே காரியம் கை கூடியது. மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் பாராளுமன்ற குழு நியமனமானது. 

ஏற்கனவே 2003 ஆண்டின் 35 ஆம் இலக்கச் சட்டம் ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு விண்ணப்பித்தும் இந்தியா செல்லாமல் தங்கியிருந்த 84000 பேருக்கு பிரசாவுரிமை வழங்கியிருந்தது. இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு மேற்படி சட்டத்தை திருத்தி அந்தனி அய்யா உள்ளிட்ட அகதி மக்கள்   28;489 பேருக்கும (இப்போது 31000)  இலங்கை  பிரசாவுரிமை வழங்க ஏற்பாடு ஆனது.
அந்தனி - திலகர்- பாலகிருஸ்ணன்
‘தமிழ் நாட்டில் இலங்கையர்களுக்கான அகதி முகாம்களில் உள்ள இந்திய வம்சாவளியினரான ஆட்களுக்கு இலங்கைப்பிரசாவுரிமை வழங்கும் பொருட்டு 2003 ஆம் அண்டின் 35 ம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கும் எனைய வசதிகளுக்கு ஏற்பாடு செய்வதற்குமான பாராளுமன்ற தெரிவுக்குழு’ தனது பணிகளை முன்னெடுத்தது. 




இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான தெரிவுக்குழு பல்வேற தரப்பினரிடம் சாட்சியங்களைப் பதிவு செய்தது. அந்தப்பட்டில் இங்கே:

1. பி.எம். அம்சா (சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர்)
2. டபிள்யு.வீ.நிசங்க (இந்திய வம்சாவளி ஆட்களைப் பதிவு செய்வதற்கான பிரதி ஆணையாளர் - குடிவரவு குடியகல்வு திணைக்களம் )
3. ஏ.சி.எம் ராசிக் - (செயலாளர், மீள்கடியமர்த்துகை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு)
4. ஐ.எ.ஹமீட் (தவிசாளர் - ஆட்களையும் ஆதனங்களையும் கைத்தொழில்களையும் பதிவு செய்யும் அதிகார சபை (சுநிpயை)
5. திருமதி.திரிஸ் பெரேரா - (சட்டவரைஞர்)
6. ஏ.ஜி.தர்மதாச, (ஆணையாளர் நாயகம், அட்பதிவுத் திணைக்களம்)
7. ஈ.எம்.குணசேகர (பதிவாளர் நாயகம், பதிவாளர் திணைக்களம்)
8. திருமதி. எலிசபேத் ரென் (சிரேஷ்ட பாதுகாப்பு அலுவலர்- அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்தானிகர் ஆலயம்
9. செல்வி. சூரியகுமாரி (தலைவர் -  அகதிகளுக்கான  புனர்வாழவளிப்பு நிறுவனம்)
10. திரு.எஸ.ஆர்.அந்தனி, (தலைவர், இலங்கை அகதிகள் ஐக்கிய முன்னணி)

இந்தப்பட்டியலில் வரும் முதல் 9 சாட்சியாளர்களும் அதிகாரிகள். பிரச்சினைக்கு தீர்வு காண உதவுவோர். இறுதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை அகதிகள் ஐக்கிய முன்னணியின் தலைவர் திரு.எஸ.ஆர்.அந்தனி, நாடற்ற இந்திய தமிழன். அவரின் முயற்சியினால் இலங்கைப் பாராளுமன்ற குழு அறையிலே தனது மக்களின் அவலத்தை எடுத்துச் சொல்லிய வரலாற்றுத் தலைவன்.

இவரது வருகையின் பின்னர் ஆணைக்குழு உறுப்பினர்கள் தமிழகம் சென்று ஆய்வுகளைச் செய்தது. இறுதியில், 2008.09.23 அன்றும் 2009.01.08 ஆம் திகதியும் திருத்தங்களுடனான  இரண்டு சட்ட மூலங்கள் அங்கீகரிக்கப்பட்டது. 

‘தமிழ் நாட்டில் அகதி முகாம்களில் வாழும் எந்தவொரு  நரும் அவர் இலங்கையில் 1964ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதியில் இருந்து நிரந்தரமாக வசித்த இந்திய வம்சாவளியினராகப்பதை நிருபிப்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கக்கூடிவயராக இருப்பின் இச்சட்ட மூலங்களை சபாநாயகர் சான்றுபடுத்திய 2009.02.18 ஆம் திகதியில் இருந்து அவர் இலங்கைப் பிரசை என்ற அந்தஸ்தை தானாகவே பெற்றுக்கொள்வார்.’குடியிருப்பாளராக இருந்ததற்கான ஆதாரம்’ மிகவும் சாதாரணமான ஒன்றாக இருக்க வேண்டுமெனம் கருத்தினை குழு கொண்டுள்ளது. மேலும் அதற்காக சத்தியக்கடதாசியினை கூட ஏற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இணங்கியுள்ளனர். இச்சட்டங்கள் இயற்றப்பட்டதை தொடர்ந்து இந்திய வம்சாவளியினருக்கு பிரசாவுரிமை பிரச்சினை இனிமேலும் எழாது’ (*)

என குழு தனது இடைக்கால அறிக்கையிலே தெளிவாகக் குறிப்பிட்டது. 

‘Grant of Citizenship to person of Indian origin (amendment) act No.5 of 2009 

சட்டம் உருவானது. இப்போதும்,  இந்திய அகதி முகாம்களில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழன் நாற்றவர் இல்லை. அதற்கு அத்திவாரம் இட்டவர் அந்தனி அய்யா.

இலக்கை நிறைவ செய்துகொண்டு இந்தியா திரும்ப வெண்டும். இங்கே தன் ஒரு மகனோடு தங்கியிருந்த அந்தனி அய்யா நன்றி சொல்ல மீண்டும் வந்தார். ‘இலங்கை வரும் ஆர்வத்தில் அவசர அனுமதிப்பத்திரத்தில் Emergency Pass) வந்துவிட்டேன். இப்போது திரும்பிப்போக வழியில்லை. கடவுச்சீட்டு எடுக்க வேண்டும். அதற்கு பிறப்பு சான்றிதழ் இல்லை’ நீங்கள்;தான் உதவ வேண்டும்’ என வேண்டிநின்றார்.

இருபதெட்டாயிரம் தன் உறவுகளுக்கு பிரசாவுரிமை பெற்றுக்கொடுக்க முன்வந்த அந்த பெருமகன்  அந்தனி அய்யா ‘இலங்கை பிறப்புசான்றிதழை யுத்தத்தில் தொலைத்துவிட்ட நிலையில் எவ்வாறு இந்தியா திரும்பினார் என்பதை இன்னுமொரு கட்டுரையில் பார்க்கலாம். 

‘Grant of Citizenship to person of Indian origin (amendment) act No.6 of 2009 

எனும் சட்டம் எஸ்.ஆர் அந்தனி எனம் மலையகம் பெற்ற மைந்தனின் அறுவடை என்பதை நாம் அறிந்துகொள்வோம். அதே நேரம் ஒரு நிமிடம் அந்தனி அய்யாவுக்காய் அஞ்சலி செய்வோம். கடந்த சனி (11-07-2015) எஸ்.ஆர். அந்தனி சிவகாசி, வேம்பக்கோட்டை அகதி முகாமில் ‘நாடற்றவனாக அடைக்கலம் தேடிச் சென்று இலங்கைப் பிரசையாக வாழ்ந்து தனது எண்பதாவது வயதில் காலமாகியுள்ளார்.’. மலையகம் மறந்தவிடக்கக் கூடாத இலட்சிய மனிதர் எஸ்.ஆர்.அந்தனி.

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அந்தனி ஐயாவுக்கு துணையாக இருந்த பாலகிருஸ்ணன் அவர்கள் மறைவு செய்திகேட்டு அந்தனி அய்;யாவுக்கு ஆறுதல் சொல்ல முடிந்தது. தன் பெறாமகனாக நேசித்த அந்தனி அய்யாவுக்கு ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்தவே முடிந்தது!

* இடைக்;கால அறிக்கை - பாராளுமன்ற தெரிவுக்குழு 2009 ஜூன் 24 அச்சிடப்பட்டது.

தமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் சிந்தித்து வாக்களிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை - செழியன்


மலையகக் கட்சிகள் பொதுத்தேர்தல் பிரசாரப் பணிகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. எப்படியாவது வெற்றிக்கனியை பறித்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பிரசாரப்பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

இப்போதே சில கட்சிகள் வெற்றிபெறும் ஆசனங்களைப் பற்றி அறிவிக்கத் தொடங்கிவிட்டன. இது மட்டுமன்றி, எந்தெந்த அமைச்சுக்களை பெறவேண்டும், என்னென்ன திணைக்களங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது பற்றியெல்லாம் சிந்திக்கத் தொடங்கிவிட்டன.

தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் சில கட்சிகள் பெரும்பான்மைக் கட்சிகளான ஐ.தே.க.மற்றும் ஐ.ம.சு.கூ. என்பவற்றுடன் இணைந்து போட்டியிடுவதுடன் தனித்து சொந்த சின்னத்திலும் போட்டியிடுகின்றன. தமது வெற்றி வாய்ப்புக்களை கணிப்பீடு செய்தே பிரதான கட்சிகளுடன் இணைந் தும் தனித்தும் போட்டியிடுகின்றன.

நுவரெலியா மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக (52%) வாழ்கின்றனர். அதேவேளை, மொத்த வாக்காளர்களில் சுமார் 75 வீதமானோர் தமிழர்களாவர். வடக்கு, கிழக்குக்கு வெளியில் தமிழர்கள் அதிகமாக வாழும் மாவட்டமாக இந்த நுவரெலியா மாவட்டம் காணப்படுகின்றது.

இம்முறை பொதுத்தேர்தலில் 5 இலட்சத்து 34 ஆயிரத்து 150 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலின் போது 7 ஆக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இம்முறை தேர்தலில் 8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப ஒரு உறுப்பினர் அதிகரிக்கப்பட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் சகல கட்சிகளிலிருந்தும் மொத்தமாக 6 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டி ருந்த அதேவேளை, இரண்டு பெரும்பான்மையின உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். குறிப்பாக, மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் சிந்தித்து தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களித்ததன் காரணமாக 6 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வாக்களிப்பு ஏனைய மாவட்டத்தின் தமிழ் மக்களுக்கு ஒரு முன் மாதிரியாக அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலிலும் இரண்டு தமிழ் உறுப்பினர்கள் வெற்றி பெறக்கூடியதாக இருந்தது.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்ட மக்களின் அரசியல் ரீதியான தெளிவு அனைவராலும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருப்பதால் 5 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு சாத்தியம் என்று கூறப்பட்ட அதேவேளை, ஏனைய மாவட்டங்களில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் அது சாத்தியமில்லை என்றும் கூறப்பட்டது.

அதாவது, நுவரெலியா மாவட்டத் தமிழர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கே வாக்களித்து வந்தாலும் ஏனைய மாவட்ட தமிழ் மக்கள் பெரும்பான்மையின வாக்காளருக்கே வாக்களித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு அந்த மாவட்டங்களில் தமிழர் சிறுபான்மையினராக இருப்பதால் அவர்கள் அச்சம், சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

ஒரு காலத்தில் நுவரெலியா மாவட்டத்திலும் கூட இந்த நிலைமை காணப்பட்டது என்பதை எவரும் இலகுவில் மறந்தவிட முடியாது. ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை. தமிழ் வேட்பாளர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களித்து வருகின்றனர். எவ்வாறாயினும், தமிழர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களிக்கின்றமை இன ரீதியான செயற்பாடு என்று கூறப்படுமானால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ் மக்கள் தங்கள் பிரச்சினைகள், தேவைகள் என்பவற்றுக்கு தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்யவேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர். இரத்தினபுரி, கேகாலை, கண்டி, பதுளை, மாத்தளை, மாத்தறை மாவட்டங்களில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் இல்லாததால் அங்குள்ள தமிழ் மக்கள் படும்பாட்டை அவர்களிடம் கேட்டுப்பார்த்தால் புரியும்.

நுவரெலியா மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் எந்த பெரும்பான்மை கட்சியில் போட்டியிட்டாலும் வெற்றிபெறும் நிலைமை காணப்படுகின்றது. அதேவேளை, ம.ம.மு.யின் மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரன் தமது மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா மாவட்டத்தில் பிரதான கட்சிகளுடன் தமிழ் சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் ஏனைய மாவட்டங்களில் இது சற்று கடினமானதாகவே காணப்படுகிறது.

கொழும்பு, பதுளை, கண்டி, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் பிரதான கட்சிகளுடன் இணைந்து தமிழ் சிறுபான்மைக் கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றன.

இந்த சிறுபான்மை கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கும் அதேவேளை, தமது கட்சித் தலைவருக்கும் ஒரு (விருப்பு) வாக்கினை அளிக்குமாறு கேட்கின்றனர். கட்சித் தலைவர் பெரும்பான்மை இனத்தவராக இருந்தாலும் அவருக்கு வாக்களிக்குமாறு கோருகின்றனர். அது மட்டுமின்றி, பத்திரிகை விளம்பரங்களிலும், துண்டுப்பிரசுரங்களிலும் கூட இதனை வெளியிடுகின்றனர்.

குறித்த கட்சிகளின் தலைமைகளும் தமக்கு ஒரு வாக்கினை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும், கூறப்படுகின்றது. இது எந்தளவு உண்மையானது என்பது தெரியவில்லை.

ஒவ்வொரு பிரதான கட்சியும் குறித்த மாவட்டங்களில் இரண்டு தமிழ் வேட்பாளர்களை மட்டுமே வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொண்டுள்ளமை இதற்காகவே என்றும் கூறப்படுகிறது.

தவிர, பிரதான கட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடும் கட்சியின் தலைமைக்கு ஒரு வாக்கினை பெற்றுக்கொடுக்கும் போது அந்தத் தலைமை அதிக பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை, குறித்த வேட்பாளர்கள் குறைந்த வாக்கு வீதத்தை பெறுகின்றனர். இதனால் சிலவேளைகளில் அவர்கள் தெரிவுசெய்யப்படாமல் போகும் நிலைமையும் ஏற்படுகின்றது.

குறைந்தளவு தமிழ் வேட்பாளர்கள் இருக்கும் ஒரு மாவட்டத்தில் பிரதான கட்சியுடன் இணைந்து போட்டியிடும் ஒரு வேட்பாளர் சுமார் 40முதல் 50ஆயிரம் வரையான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து வேட்பாளர்கள் போட்டியிடுவதால் எல்லோரும் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக்கொள்வது சிரமமான காரியமாகும்.

அதேவேளை, தமிழ் சிறுபான்மைக் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் 25 முதல் 35 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதனூடாக குறைந்த பட்சம் ஒரு உறுப்பினரையாவது தெரிவுசெய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இதுவே சில மாவட்டங்களில் கணிசமான தமிழ் வாக்காளர்கள் இருந்தும் ஒரு தமிழ் உறுப்பினரைக் கூட தெரிவு செய்து கொள்ள முடியாமைக்கான காரணமாகும்.

பதுளை மாவட்டத்தில் 1,25,000 வாக்காளர்கள் இருந்தும் அங்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரையாவது தெரிவு செய்து கொள்ள முடியாமல் போனமைக்கு இது வும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது.

கண்டி மாவட்டத்தில் சுமார் 1,30,000 தமிழ் வாக்காளர்கள் இருந்தும் அங்கும் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்து கொள்ளமுடியாமலிருக்கிறது. இந்த நிலைமையே இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலும் காணப்படுகிறது.

எனவே, கட்சித் தலைமைகள் சிந்தித்து செயற்பட்டால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். அத்துடன் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களையும் அதிகரித்துக்கொள்ள முடியும்.

வாக்காளர்கள் சிந்தித்து முறையாக வாக்களிக்கவில்லை என்று மக்களை குறைகூறுவதை விடுத்து தலைவர்கள் சிந்தித்து தீர்க்கத்தரிசனமான முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார் ப்பு.

நன்றி - வீரகேசரி

மு. நித்தியானந்தனின் ‘கூலித்தமிழ்‘ விமர்சனமும் வெண்கட்டி பத்திரிகை வெளியீடும்

ஹட்டனில் மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் விமர்சன நிகழ்வையும் வெண்கட்டி பத்திரிகை வெளியீட்டையும் இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தினர் ஒழுங்கமைத்திருந்தனர். இந்நிகழ்வில் திரு. லெனின் மதிவானம் தலைமையுரையாற்றுவதையும் கலாநிதி. ந. இரவீந்திரன், சம்மேளனத்தின் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் பத்திராதிபர் எம். எஸ். இங்கர்சால், சூரிய காந்தி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமார்  ஆகியோர் உரையாற்றுவதையும் வெண்கட்டி பத்திரிகையை திரு. மு. நித்தியானந்தன் சீடா செயற்திட்ட இணைப்பாளர் திரு. வீ. விஜயானந்தனுக்கு வழங்குவதையும் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலரையும் படங்களில் காணலாம்.






யார் நமது தலைவர்? தீர்மானிக்கும் சக்தியாக மக்கள்


இலங்கையில் இப்போது இனங்களுக்கிடையே சக வாழ்விற்கான அடிப்படையை உணர்ந்துள்ள தலைமைத்துவம் அமைந்துள்ளதாகத் துணிந்து கூறலாம். இந்நிலையில் பல ஆண்டுகளாக இன மோதலில் சிக்குண்டு துயரங்களை அனுபவித்த மக்கள் இப்போது துணிந்து நின்று தமக்கான தலைவர்கள் யார் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய அரசியல் களம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அருமையான சந்தர்ப்பமாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை ஒரு களமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் காணப்படுகின்றது.

இன மோதல்களின்போது பெரும்பாலான தமிழர்கள் தமக்கான அரசியல் தலைமைத்துவத்தை தீர்மானிப்பதில் போதுமானளவு கரிசனையை செய்ய முடியாதவர்களாக காணப்பட்டனர். ஆனால் நிலைமை இப்போது மாற்றமடைந்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளை தீர்க்கமாக செயற்படுத்தக் கூடிய பண்பாளர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பது காலத்தின் தேவையாகும்.

இப்போது பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறுவற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பல்வேறு வகையிலான நபர்கள் தமக்குத்தான் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் தாங்களே தீர்க்கதரிசனமிக்க தலைவர்கள் என்றும் கூறிக் கொள்கின்றனர்.

இலங்கையில் தேர்தலில் வாக்குகளை கேட்கும் அரசியல் தலைவர்களை பின்வருமாறு வகுக்கலாம்.

1.நீண்ட காலம் மக்களுக்கு பல்வேறு வகையிலான சேவைகள் செய்து அத்தகைய சேவைகளால் பலன்பெற்ற மக்கள் விரும்பும் தலைவர்கள்.

2 . முதலில் எனக்கு தலைமை பதவியை தரவும்; பிறகு சேவை செய்கின்றேன் என்றவாறான தலைமைகள்.

3. தந்தை அரசியல் தலைவர் அதனால் மகனும் தலைவர்தான் என்று எண்ணும் தலைவர்கள். இதில் ஊர்க்காரர் என்ற வசைப்பாட்டிலும் தங்களை ஊரில் உள்ளவர்கள் மதிக்கிறார்கள் என்ற எண்ணமுள்ள தலைவர்களும் உள்ளடங்குகின்றனர்.

4. பத்திரிகை தொலைக்காட்சிகளில் கடமை புரிவதனால் அதனூடாக பிரபல்யமாகும் தமது பெயரை வைத்துக்கொண்டு தான் பிரபலமானவர். ஆகவே, நான் மக்களுக்கு தலைமை தாங்கலாம் என்ற எண்ணத்தில் வருகை தந்துள்ள தலைவர்கள்.

5. சட்டம், அரசியல் போன்ற துறைகளில் உயர்கல்வி தராதரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளவர்களும் சமூகம் பற்றிய போதுமான தூரநோக்கு உள்ள தலைவர்கள்.

மேலே வகைப்படுத்தப்பட்டது போல வேறுபட்ட பின்னணியில் தலைவர்கள் களம் இறங்கிய போதும் இறுதியில் மக்களின் தீர்மானமே நிதர்சனமாகும். இலங்கையில் இனமோதல்களின் போது இடம்பெற்ற மக்கள் தீர்ப்பு தொடர்ந்தும் நீடிக்கப் போவதில்லை.

மக்கள் தமக்கு சேவை செய்தவர்களை தலைவர்களாக கருதுவார்களா? அரசியல் குடும்பம் என்ற அந்தஸ்துக்கு மக்கள் தொடர்ந்தும் அங்கீகாரம் தருவார்களா? தொலைக்காட்சியும் பத்திரிகையிலும் தோன்றியவர்கள் பிரபல்யமானவர் என்ற வகையிலான அங்கீகாரத்திற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கலாமா? அல்லது கற்று உயர் பட்டங்களை பெற்றவர்கள்தான் தமக்குத் தலைமை தாங்க வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிப்பார்களா?

ஒரு கட்டத்தில் தமது பாதுகாப்பிற்காக வீர தீர மிக்க தலைவனை ஒரு அரசியல் பாதுகாவலன் என்றவாறும் தெரிவு செய்திருக்கலாம். ஆனால் இப்போதைய நிைலவரங்கள் அப்படி அல்ல. தேவைகள் மாற்றம் அடைந்துவிட்டன. அதற்கு ஏற்பவே புதிய அரசியல் தலைமைத்துவம் உருவாகும்.

உதாரணத்திற்கு பெருந்தோட்ட மக்களின் இப்போதைய இக்கட்டான நிலையை பார்க்கும்போது அவர்களின் வாழ்வாதாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையிலான திட்டங்கள் உள்ள அரசியல் தலைமைகள் மக்களிடம் பெருமளவு செல்வாக்கைப் பெற்றுக்கொள்ளலாம். தற்போதைய நிலையில் பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களுக்கு தோட்டங்களில் வேலை வழங்குவதையோ வருமானத்தை வழங்குவதையோ நிறுத்திவிட்டது போல தோன்றுகிறது. வாரத்தில் இரண்டு நாள் வேலைக்கு மட்டுமே சம்பளம் என்ற முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. இப்படியான நிலையில் அங்கு வாழ்பவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடக்க என்ன செய்ய வேண்டும் என்பதை களத்திலுள்ள தலைவர்கள் முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் மக்கள் தலைவர்கள் என்போர் யார்? மக்களில் இருந்து அவர்களில் வாழ்வாதாரத்திற்கு பணி செய்து அவர்களின் நன்மதிப்பைப் பெறுபவர்களாக இருக்க வேண்டும். இது ஒருவகை அயராத சேவை செய்து மக்கள் விரும்பிய தலைவர்களாகிறவர்கள்.

உலகில் பல உதாரணங்களை காணலாம். மோகன் தாஸ் காந்தி – மகாத்மா காந்தி என்றழைக்கப்படுவதற்கு ஏற்றாற்போல் வாழ்ந்து காட்டினார். அவர் மக்களுக்கு சேவை செய்கிறேன் என கூறியவர் அல்ல. அவர் இயல்பாகவே மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களுக்கு சேவை செய்தார். மக்களை திரட்டி விடுதலைக்காகப் போராடிய அவரிடம், அதிகார வெறி காணப்படவில்லை.

மக்கள் பிரதிநிதிகளிடம், மக்களின் தேவைகளை குறுங்கால ரீதியில் தீர்த்து வைப்பதற்கான ஏதாவது திட்டங்கள் வைத்துள்ளனரா? அத்துடன் , அவர்களிடம் நீண்டகால அபிவிருத்தி திட்டங்கள் ஏதேனும் உண்டா என்பது கேள்வியாக உள்ளது.

இங்கு தீர்க்கதரிசனமிக்க தலைவர்களின் பங்களிப்பு எவ்வாறு காணப்பட்டது என்பது பற்றியும் மேலோட்டமாக பார்ப்பது வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். உதாரணமாக இந்திய தலைவர் ஜவஹர்லால் நேரு மிகவும் பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தார். நேரு ஆசியாவின் குரலாகவும் ஆசியாவின் வழிகாட்டியாகவும் விளங்கினார்.

இந்து மதத்தின் பிறப்பிடமாக 80 வீதமான இந்துக்கள் வாழ்கின்ற நாட்டை மிகவும் தீர்க்க தரிசனத்துடன் இந்தியாவின் மதச்சார்பற்ற நாடு என்று பிரகடனப்படுத்தினார். இந்தியர்களும் இது மிகவும் பயனுள்ளவாறு சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதுடன் இந்தியாவின் புகழ் சர்வதேச ரீதியில் வியாபிப்பதற்கு இது உதவியது.

நேரு தமது வாழ்நாளில் இந்திய சமூகத்திற்கு மட்டுமன்றி ஆசியாவின் நலன்களுக்காகவும் தீர்மானங்களை முன் வைப்பதில் தீர்க்கதரிசியாகக் காணப்பட்டார்.

இலங்கையைப் பொறுத்தவகையில் அரசியல் தலைவர்களில் டி.எஸ்.சேனநாயக்க, ஆர். பிரேமதாச போன்றவர்களின் செயற்பாடுகளும் நாட்டிற்கு நல்ல பலன்களை கொண்டு வந்துள்ளன. அமரர் டி.எஸ்.சேனநாயக்க நாட்டின் தேவையை கருதி விவசாயத்தை விஸ்தரிக்கும் நோக்குடன் கல்லோயா நீர்த்தேக்கத்தை நிர்மாணித்தார். இதனால் இன்றளவும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டம் இலங்கையில் நெற்களஞ்சியமாக மாறியது. அங்கு ஆயிரக்கணக்கானோர் குடியேறினர். வருடம் மூன்று போகம் நெல் விளைவிக்கப்படுகின்றது. மக்கள் செறிவாக வாழ்கின்றனர். இங்கு ஏற்பட்ட வளர்ச்சியின் பெருமைகள் டி.எஸ்.சேனநாயக்கவை சென்றடைய வேண்டும்.

அதேபோல் இந்நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினை 'வீடு' என்பதை உணர்ந்து ஆர்.பிரேமதாச பத்து லட்சம் வீடமைப்புத் திட்டத்தை முன்வைத்தார்.

அவரது திட்டத்தில் 85 வீதம் பூர்த்தி செய்யப்பட்டது. கிராமத்தில் 94 வீதமானவர்கள் தமது வீடுகளின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். வீட்டுத்திட்டத்தை விஸ்தரிக்கப் போதுமான நிறுவனங்களையும் நிர்வாக அலுவலர்களையும் தம்மோடு சேர்த்துக் கொண்டு பணிபுரிந்தார்.

இவரது பணியை பாராட்டி, ஐக்கிய நாடுகள் சபை 'புகலிட' தினம் பரிந்துரை செய்து ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 10ஆம் திகதி உலக புகலிட தினமாக உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது.

1987ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படும், உலக புகலிடத்தின் நாயகனாக பிரேமதாசா காணப்படுகின்றார்.

இந்நிலையில் ஒரு பக்கம் தங்களை அரசியல் தலைவர்கள் என்று சொல்பவர்கள் மேற்கூறிய உதாரணங்களும் மற்றும் வேறு நாடுகளில் ஏற்பட்ட சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் அவதானித்து மக்களின் குறைகளை போக்க தீர்க்கதரிசனமாக செயற்பட வேண்டும். அன்று மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து அவர்களின் நலன் காக்கும் பணிகளுக்கு பொருத்தமான திட்டங்கள் வகுக்க வேண்டும். மக்கள் இதில் விழிப்புடனேயே இருப்பர்.

நன்றி - வீரகேசரி

மலையக மாணவர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனை கருத்தரங்குகளின் அவசியம் - இரா.சிவலிங்கம்


பாடசாலையில் ஆசிரியர்களின் கவனிப்பின்மை, ஆசிரியர்கள், பெற்றோர்களின் அணுகுமுறை, பெற்ேறார்களின் அன்பு, பாசம், அரவணைப்பு, பாதுகாப்பு கிடைக் காமை, அதிகமான வீட்டு வேலைகள் அதாவது அனைத்து பாடங்களிலும் பாட ஆசிரியர்கள் வீட்டில் பாடங்களை செய்து கொண்டு வரும்படி அடிக்கடி கூறுவதால் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் 

நாட்டில் இன்று 9,774 பாடசாலைகளில் 44,00,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 2,25,000 ஆசிரியர்கள் உள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கு மூன்று தேசியப் பரீட்சைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் மேற்கூறிய தேசிய பரீட்சைகளில் பல மாணவர்கள் சித்திபெறத் தவறிவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பரீட்சைகளில் சித்திபெறத் தவறுகின்ற சில மாணவர் கள் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். பரீட்சைகளில் சித்தியடைந்து உயர்கல்விக்கு செல்வது அல்லது பல்கலைக்கழகத்திற்கு செல்வது மட்டும்தான் வாழ்க்கை என்று நினைக்கின்றனர்.
இதனைவிட பாடசாலைக்கே போகாதவர்கள் எத்தனையோ பேர் இன்று வாழ்க்கையில் முன்னேறி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களுடைய தைரியம், நம்பிக்கை, கடின உழை ப்பு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி ஆகியன இவர்களை இந்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதை அவதானிக்க லாம்.

இன்று பாடசாலையில் கல்வி கற்பதைவிட டியூசன் வகுப்புகளுக்குச் சென்று அதிக பணத் தைச் செலவு செய்து படித்தால்தான் சிறப்பாக சித்தியெய்த முடியும் என மாணவர்களும், பெற்றோர்களும் நினைக்கின்றார்கள்.

இது தவறான விடயமாகும். மாணவர்கள் தினமும் பாடசாலைக்கு வந்து ஆசிரியர்கள் கற்பிப்பதை வகுப்பிலிருந்து கவனமாகப் படித்தால் திறமையாகச் சித்திபெறலாம்.

சில மாணவர்கள் (குறிப்பாக உயர்தர மாணவர்கள்) பாடசாலையை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. டியூசன் வகுப்பையே முழுமையாக நம்பி இருப்பதால் இம்மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். பெரும்பாலான மாணவர்கள் டியூசன் கல்வியை நம்பி தங்களுடைய தேசியப் பரீட்சைகளில் எப்படியாவது சித்தி பெற்றுவிட வேண்டும் எண்ணி தங்களுடைய உடல், உள தேவைகளையெல்லாம் ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு (உணவை கூட) ஏட்டுக் கல்வியை நம்பி தங்களுடைய வாழ்க்கையை இழந்து விடுகின்றார்கள்.

விளையாட்டு, ஓய்வு, பொழுதுபோக்கு, நித்திரை, சமய சம்பிரதாயங்கள் போன்றவற்றில் எல்லாம் ஈடுபடுவது மிகக்குறைவு. இதற்கெல்லாம் இலங்கையின் பரீட்சை மையக் கல்வியும் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றது.
மாணவர்களுக்கு உளநள நிலையங்களைக் கொ ண்டு ஆற்றுப்படுத்தல் நிகழ்வுகளை தொடர்ச்சியாக செய்ய வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்தத்துடன் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

குடும்ப வறுமை, பிரச்சினைகள், வாழும் லயத்து சூழல், பெற்றார் வெளிநாட்டில் இருத்தல், பெற்ேறார் பிரிந்து வாழ்தல், பிள்ளைகள் விடுதியில் தங்கிப்ப டித்தல், பிள்ளைகளின் உடல் உளத் தேவைகள் கவனிக்கப்படாமை அல்லது புறக்கணிக்கப்படல், பாடசா லையில் ஆசிரியர்களின் கவனிப்பின்மை, ஆசிரியர் கள், பெற்றார்களின் அணுகுமுறை, பெற்ேறார்களின் அன்பு, பாசம், அரவணைப்பு, பாதுகாப்பு கிடைக்காமை, அதிகமான வீட்டு வேலைகள் அதாவது அனைத்து பாடங்களிலும் பாட ஆசிரியர்கள் வீட்டில் பாடங்களை செய்து கொண்டு வரும்படி அடிக்கடி கூறுவதால் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். வீட்டு வேலைகளை முடிக்காத மாணவர்கள் பாடசாலைக்கு வருவதற்கு பயந்து ஏதாவது காரணங்களைக் கூறி வீட்டிலேயே இருப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். இவை அனைத்தும் மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் விடயங்களாகும்.

இன்றைய நாகரிக வளர்ச்சியில் முழ்கிப் போகும் சமூக கலாசாரங்கள், பண்புகள், பழக்கவழக்கங்கள், மனித விழுமியப் பண்புகள், மனித விழுமியங்கள் என்ற போர்வையில் மாறிக்கொண்டிருக்கும் போது இச்சூழ்நிலையில் மாணவர் சமூகமும் மாறிக்கொண்டிருப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

இக்கலாசாரம் தொடருமானால் பல பிரச்சினைகளை யும், பாதிப்புக்களையும், ஆபத்துக்களையும் மாணவர் சமூகம் எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதில் ஐயமில்லை.
சில மாணவர்களுக்கு சுயநம்பிக்கை, கட்டுப்பாடு, ஒழுக்கம், சுயமதிப்பீடு, கலாசாரம் போன்றன மாண வர் மத்தியில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.
இதற்கான காரணங்களை தேடிப்பார்த்தால் பல விடயங்கள் தெளிவாகின்றன. அதாவது, மாணவர்கள் கைத்தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுதல் தேவையற்ற விடயங்களுக்கு கைத்தொலை பேசியை பயன்படுத்தல் என நேரத்தை வீணடிக்கின்றனர். பேஸ்புக் பாவனையால் சீரழிந்த மாணவர் சமூகமே அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு கணனி, இணையத்தள வசதிகள், ஸ்மார்ட் போன்களை வாங்கி கொடுக்கும்போது அவர்களுடைய பாவனை முறையை அவதானிக்க வேண்டும். கணனியை வீட் டில் பொதுவான இடத்தில் வைக்க வேண்டும். என்னத் தான் தங்களுடைய பிள்ளைககளாயினும் அவர்களுடைய நடத்தைகளை கண்கானிக்க வேண்டும்.

அளவுக்கு அதிகமான பாசமோ, அளவுக்கதிகமாக செலவுக்கு காசை கொடுப்பதையோ பெற்றோர்கள் தவிர்த்துக் கொள்ளவேண்டும். பிள்ளைகளுடைய நண்பர்களை இனங்காண வேண்டும்.

பிள்ளைகள் கேட்பதையெல்லாம் உடனுக்குடன் வாங்கிக் கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். பிள்ளைகளின் உடைகள் குறிப்பாக பெண்பிள்ளைகளின் உடைகளில் பெற்றோர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

பிள்ளைகளுக்கு தியானப் பயிற்சி, யோகா, உடற்ப யிற்சி என்பவற்றை சொல்லிக் கொடுப்பதற்கு ஏற்பாடு களை செய்ய வேண்டும்.

ஆசிரியர்களுக்கு மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு பாரிய பொறுப்பும் கடமையும் காணப்படுகின்றது. எனவே ஆசிரியர்கள் முன்மாதிரியாக நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

பாடசாலையில் இணைப்பாட விதானச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலதிக வகுப்புக்களை பாடசாலையிலேயே நடத்துவதற்கு ஏற்பாடுகளை பாடசாலை நிர்வாகம் செய்ய வேண்டும்.

சாரணியம், கெடட், கூடைப்பந்தாட்டம், கிரிக்கெட், செஸ், கரப்பந்தாட்ட, வலைப்பந்தாட்டம், பெட்மிட் டன், கெரம், நூலாக்க குழு, முதலுதவிக் குழு, சுகாதா ரக் குழு, சுற்றாடல், இளம் கண்டுப்பிடிப்பாளர், இசைக்குழு, விளையாட்டுக் குழு, நலன்புரிக்குழு, நடனக்குழு போன்றவற்றை பாடசாலைகளில் ஏற்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க முயற்சிக்கவேண் டும்.

மாணவர்களுடைய திறமைகளையும், திறன்களை யும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இனங்கண்டு அதன்படி அவர்களை வழிநடத்தவேண்டும்.

நன்றி வீரகேசரி
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates