Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

பின்நவீனத்துவத்துவத்தின் செல்வாக்கின் பின்னான பின்புகலிட இலக்கிய, அரசியல் போக்கு! - என்.சரவணன்

(நன்றி - உயிர்நிழல் - 2000ஆம் ஆண்டு)


புகலிடச் சூழலில் இலக்கியச் சந்திப்பானது கடந்த 12 வருடங்களாகவே தமிழ்சூழலில் ஆற்றிவரும் முக்கியத்துவம் தமிழ்சூழல் அறியும்.

நடந்துமுடிந்த 26வது அமர்வில் முதற்தடவையாக பங்குபற்றியபோது கிடைத்த அனுபவங்கள் மற்றும் வரை அறியப்பட்டவை என்பன பல கேள்விகளை எம்முன் நிறுத்துகிறது.

புகலிடச் சூழலில் இன்றைய இலக்கிய ஆர்வலர்களாக படைப்பாளிகளாக ஆகியிருப்போரின், அல்லது ஆக்கப்பட்டோரின், பின்னணியியை எடுத்துக்கொண்டால் ஒன்றில் கந்த காலங்களில் ஈழத்தில் ஏதோ ஒரு அரசியல் சித்தாந்தத்தையோ அல்லது அரசியல் குழுவையோ பின்னணியாக கொண்டிருப்பவர்கள் பலர், ஏலவே இலக்கிய துறையில் பணியாற்றியவர்கள், மற்றும் இங்கு வந்து தான் இலக்கிய மற்றும் அரசியல் துறைகளோடு தங்களை இணைத்துக்கொண்டோர் என்கிற போக்கை கொண்டிருப்பதைக் காணலாம். இதில் அரசியல் பின்னணியைக் கொண்டிருந்தவர்கள் அல்லது கொண்டிருப்பவர்கள் தங்களது ஏக்கத்தின் அல்லது தங்களது தாகத்தின் வெளிப்பாடாக "எதையாவது செய்யவேண்டும்" என்கிற போக்கின் விளைவாகவும் அவர்களின் இலக்கிய கால்பதிப்பை நிகத்தியதாகக் கொள்ளலாம். இது அரசியலாகவும் வெளிப்பட்டிருக்கும். இவர்களின் தாகத்தின் நீட்சியாகவே இவ்வாறான இலக்கியச் சந்திப்புகளையும் தமக்கான வடிகாலாகப் பயன்படுத்த விளைந்தனர் எனலாம். அவர்களின் அரசியல் கருத்துக்களை, தமது நினைவுகளை, தமது துயரங்களை, எதிர்காலம் பற்றிய தேடல்களை வெளிப்படுத்தும் களமாக அவர்கள் இலக்கியச் சஞ்சிகைகள் தொடங்கி அரசியல் குழுக்களாக, இலக்கியச் சந்திப்புகளாக, பெண்கள் சந்திப்புகளாக அரசியல் கூட்டங்களாக, கலைஇலக்கிய நிகழ்வுகளுக்கூடாக வெளிப்படுத்திக்கொண்டே வந்திருக்கிறார்கள்.

இந்த "எதையாவது செய்வது" என்பது தன்னியல்பாக (அல்லது குறிப்பிட்ட இலட்சிய இலக்கின்றி) கணிசமானவை தொடர்ந்த போதும் கூட அதன் விளைபொருள் தமிழ் சமூகத்திற்கு கனதியாகவே கிடைத்திருக்கிறது. இன்று புகலிட இலக்கியத்தின் வீச்சும், கனதியும் ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய உலகமும் அக்கறை கொள்ளும் ஒரு விடயமாக வந்துவிட்டது. இதன் அரசியல் பணியானது அதன் படைப்பாளிகளே அறியாத வண்ணம் விளைவுகளை உண்டாக்கியும் விட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை எனலாம்.

இத்தகைய போக்கின் வழிநின்று பார்த்தால் இலக்கியச் சந்திப்பின் பாத்திரம் எத்தகையது என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

பெரும்பாலும் இலக்கியச் சந்திப்பானது பலவிதமான கருத்துக்களையும், பலவிதமான அரசியலையும் கொண்ட பலரையும் அவர்களின் வெளிப்பாடுகளையும் மையப்படுத்திய ஒரு இடமாக இருந்திருக்கிறது. இது "ஒரு" குறிப்பிட்ட அரசியலின் மேலாதிக்கத்திலிருந்து துண்டித்து பல அரசியல்களின் பன்முகத்தன்மையைப் பேண வழிவகுத்திருந்தது. ஒரு வகையில் சொல்லப்போனால் அமைப்பாகியும், அமைப்பாகாமலும் இருந்துவந்த ஒரு செயல்பாடாக இலக்கியச் சந்திப்பு இருந்திருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் விடுதலைப்புலிகளுக்கு சார்பல்லாத பலரை ஒன்று குவித்த இடமாகவும் இருந்தது. இது தமிழ்த்தேச அரசியலின் பிற்போக்குத்தன்மையை கண்டிப்பதாக, விமர்சிப்பதாக, அதன்மறுசீரமைப்பு தொடர்பான வாதங்களை எழுப்புவதாகவும், ஏன் தேடல்களை நோக்கியதாகவும் கூட அமைந்தன.
அதுவும் இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் சும்மா இருக்கமாட்டர்கள் என்பது வரலாறு. "எதையாவது செய்ய வேண்டும்" என்கிற மன நிலை எப்போதும் இருந்து கொண்டு இருக்கும். எனவே சமூக அக்கறையுள்ள திட்டவட்டமான ஒரு இலக்கு இருக்கிறதோ இல்லையோ எதையாவது செய்ய வேண்டும். புகழிடச் சூழலில் சுய அடையாளத்திற்கான அல்லது சுயவிளம்பரத்திற்கான போராட்டமும் கூடவே இருப்பதுவும் ஒரு காரணம். இந்த நிலைமைகள் தான் இப்படியான இலக்கியச் சந்திப்புகளை பிறப்பித்துள்ளன. நிச்சயமாக இவை நின்று போகாது. இந்த இலக்கியச் சந்திப்பு இல்லையென்றால் இன்னொன்று அல்லது இன்னொன்று தோன்றிக்கொண்டேயிருக்கும். அதன் வடிவத்திலும் வீச்சிலும் வௌ;வேறான மாற்றங்களைக்கொண்டிருப்பதே முன்னையதுக்கும், பின்னையதுக்கும் இடையிலான வித்தியாசங்களாக இருக்கும்.

அது தான் இயங்கியல். ஆனால் போராட்ட அவலங்களையும், தொடர்ச்சியான போராட்டத்தையும் எதிர்கொண்டிருக்கும் குறிப்பான தமிழ்ச் சூழலில் இந்த வகையான அரசியல் இலக்கிய சூழலை பலப்படுத்தியிருக்கிறது. முன்னால் அரசியல் செயற்பாட்டாளர்களை சும்மாயிருக்காமலிருக்கப் பண்ணியிருக்கிறது.

ஆனால் சமீப காலங்களில் புகலிடத்தில் தோன்றியிருக்கிற பிளவுகள், அரசியல் இலக்கிய வரட்சி இந்த இருப்பதும் இழக்கப்படுமோ என்கிற பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறைந்தபட்ச ஜனநாயக செயல்பாடுகளுக்காகக் கூட ஐக்கியப்பட்டு பணிபுரிவதை காண்பது அரிதாகி ஆகிவிட்டிருக்கிறது.

இன்னுமொருவகையில் இலக்கியச் சந்திப்பானது இலங்கையில் சொந்த மக்களின் விடுதலைக்காக் முன்னின்றவர்கள் பலரும் ஏனைய அல்லது சக இயக்கங்களால் பலம்கொண்ட அராஜக நசுக்குதலின் காரணமாக ஒருபுறம் சிங்கள அரசு மறுபுறம் சகதேசத்தில் இருந்த அராஜக அரசுகள் என்பனவற்றின் பிடியிலிருந்து தப்பி வேறுவழியின்றி நாட்டைவிட்டு வெளியேறி வந்தவர்கள் பலரையும் வெளித்தெரியாதவண்ணம் (virtually organize) ஒன்றுபடவைத்திருந்தது. இவர்களை சொந்த மக்களுக்காக சொந்த நாட்டில் இயங்கமுடியாமையை புகலிடச் சூழலில் ஓரளவு பாதுகாப்பாக இயங்கலாம் என்கிற ஒருவித நம்பிக்கையின் பேரில் அரசியலையோ அல்லது இலக்கியம் சார்ந்த அரசியலையோ முன்னெடுத்தார்கள். ஆனால் புகலிடச் சூழலிலும் தொடர்ந்த அராஜக நடவடிக்கைகளின் காரணமாக சிலரை இழந்தும் ,சிலரை இயக்கவிடாமல் பண்ணியுமாக ஆன சூழலில் காரணமாக பலரை ஏதோ ஒரு வகையில் மாற்று சக்திகளாக அணிதிரள வைத்திருந்தது. தெரிந்தோ தெரியாமலோ இலக்கியச் சந்திப்பு போன்றன இதற்கு ஒரு உருத்தெரியா நிறுவனவடிவத்தைக் கொடுத்தது என்றே நம்புகிறேன். அது சில வேளை இங்கு குறிப்படும் அளவுக்கு பெரிய வடிவத்தைக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அப்படி ஒன்று குறைந்தபட்சமேனும் இருந்தமையானது பலருக்கும் தைரியமளித்திருந்தமையை அறிந்திருக்கிறோம்.

ஆனால் கடந்த சில வருடங்களாக பலரிடம் காணப்படும் விரக்தி சோர்வு, செயலின்மை, சொந்த வாழ்க்கையோடு தம்மைக் குறுக்கிக்கொள்ளும் நிலைமை (அல்லது சிலர் புலிகளோடு தங்களை மெதுமெதுவாக இணைத்துக் கொள்வதையும்) ஒரு போக்காக ஆகிக்கொண்டிருப்பதை எம்மில் பலரும் ஒப்புக்கொள்வோம். இதற்குரிய காரணம் என்ன என்பதை கண்டறிவது இன்றைய நிலையில் முக்கியமானது. தேசத்தின் மீதான அடக்குமுறைகள் வலுக்கின்றன. ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும் தேசப்போராட்டத்தை ஒடுக்க எதிரியுடன் கைகோர்க்கின்றன. இன்று அரைகுறை சோசலிச நாடுகளாக ஆகியிருக்கும் முன்னால் சோசலிச நாடுகளும் இதில் விதிவிலக்கில்லை. நாட்டில் பாசிசத்தின் கையோங்குகின்றன. முன்னரைவிட புகலிடத்திலுள்ள சக்திகளுக்கான பொறுப்புகள், கடமைகள் அதிகரித்திருக்கின்ற நிலையில் துரதிருஸ்டவசமாக எதிர்மாறான வரட்சிநிலையொன்று உருவாகி, ஊடுறுவி, பரந்து, விரிந்து கைப்பற்றி நிலைப்பை உறுதிசெய்து கொண்டிருக்கின்றன. இது ஆபத்தானது.

இவ்வாறான நிலைமைகளின் விளைவாகத் தோன்றுகின்ற இடைவெளியை ஆதிக்க சக்திகள் கைப்பற்றிக்கொள்கின்றன. அவை மெதுமெதுவாக தலைதூக்கி நிறுவனமாகி கோலோச்சுகின்ற போது நாம் அனைத்தையும் இழந்து நிற்போம். ஐரோப்பாவில் கடந்தகாலங்களில் பாசிசம் வென்ற வரலாறு பற்றி நாம் அறிவோம். இடதுசாரிகளை எவ்வாறு அது படிப்படியாக களையெடுத்தது என்பது பற்றி இன்று மீண்டும் மறுவாசிப்புதான் செய்யவேண்டுமா என்ன? அரசியலில் இலக்கியத்தின் பணியும், இலக்கியத்தில், அரசியலின் பணியும் அனைத்துப் போராட்டங்களிலும் காத்திரமான பங்காற்றியிருக்கின்றன.

ஒரு புறம் எதிரிகள் மற்றும் பிற்போக்கு சக்திகள் அனைத்தும் நிறுவனமாகி, தெளிவாகத் திட்டமிட்டு இயங்கி வருகின்ற போது, மறுபுறம் ஜனநாயக சக்திகள் அனைத்தும் பலம் குன்றி, "கட்டுடைக்கப்பட்டு" துண்டாடப்பட்டு சிதறிடிக்கப்பட்டு வருகிறது. வேடிக்கை பார்ப்பதோடு எம்மில் பலர் மட்டுப்படுத்திக்கொள்கிறோம்.

சமகாலத்தில் தமிழ்ச்சூழலில் பின்நவீனத்துவச் சிந்தனைமுறையின் செல்வாக்கின் பங்களிப்பும் கணிசமானது. அமைப்பியல்வாதம் வழிவந்த சிந்தனைககளில் சில பகுதிகளை தூக்கிப்பிடித்துக்கொண்டு உருவாகிவிட்டிருக்கிற கருத்துக்களான அமைப்பாகக்கூடாது, மையப்படக்கூடாது, அதிகாரத்துவம் வந்துவிடும் என்கிற பார்வையும் ஜனநாயக சக்திகளின் குறைந்தபட்ச வேலைத்திட்டத்தின் கீழான ஒன்றிணைவை கூட மறுக்கின்ற போக்கு உருவாகி விட்டிருக்கிறது. அமைப்பாதலில் உள்ள பலத்தை, அவ்வாறு அமைப்பாதலின் பொறிமுறைகளில் காணப்படும் பலவீனங்களைக் கொண்டு மறுதலிக்கின்ற போக்கு ஆபத்தானது. இன்றைய முதலாளித்துவ சக்திகள் புரட்சிகர சக்திகளின் ஒன்றிணைவை இவ்வகையான புதிய சிந்தனைகளின் பகுதிகளைப் பரப்பித் தான் ஒன்றிணைய விடாமல் சதிசெய்கின்றன.

பின்நவீனத்துவ சிந்தனைகளின் பெறுமதிமிக்க விமர்சன முறையியலை ஒட்டுமொத்த அடக்கப்படும் மக்களின் போராட்டத்தையும் நசுக்க பயன்பட துணைபோவதை எந்த சமூக பிரக்ஞை உள்ள ஒருவரும் ஏற்றுக்கொள்ளமாட்டர்கள். அடக்குமுறையாளர்கள் ஒரு புறம் பலமான அணியை ஏற்படுத்திக்கொண்டு மறுபுறம் அடக்கப்படுவோர் அணிதிரளவிடாமல் இருப்பதற்கான முயற்சிகளுக்கு இத்தகைய விமர்சன முறையியலை மிகக் கவனமாக கையாண்டுவருகிறது.

இதன் விளைவுகளையும் தாக்கங்கங்களையும் சமீப காலமாக இலங்கையில் இடதுசாரி இளைஞர்கள் மத்தியிலும் தோன்றி வருவதையும் கண்டுவருகிறோம். குறிப்பாக "மாதொட்ட" எனும் சஞ்சிகையை நடாத்தி வரும் "X Group" அணியைக் குறிப்பிடலாம். பெருமளவு முன்னைநாள் ஜே.வி.பி.யை சேர்ந்த சிங்கள இளைஞர்களாக இருக்கும் இவ்வணியினரின் பின்நவீனத்துவ வகுப்புகளுக்கு நானும் வார நாட்களில் சென்று வந்திருக்கிறேன். வார நாட்களில் மூன்று அணிகளாக வகுப்புகளை நடத்துமளவுக்கு இளைஞர்களிடம் இதன் மீதான தாகம் இருந்தது. எந்த அதிகாரத்துவத்தை எதிர்த்து இடதுசாரிகட்சிகளில் இருந்து விலகினோமா அதே (எதிரிகளின்) அதிகாரத்துவத்தின் அணிதிரட்சிக்கு மாற்றாக அது இருக்காததும், மாறாக அணிதிரட்சியை மறுதலிக்கும் போக்கை எதிர்த்துமாக மீண்டும் அதிலிருந்து சிலர் மீண்டும் வெளியேற வேண்டிவந்தது.

இடதுசாரி சிந்தனையையுடைய சிங்கள இளைஞர்கள் மத்தியில் இதன் பாதிப்பு வேமாகிவருவதை நாம் காண்கிறோம். இது இலங்கையில் பலமாகி வரும் ஜே.வி.பி.க்கு கூட பெரும் தலையிடியாக வந்தது. கடந்த இரு வருடங்களாக ஜே.வி.பி.க்குள் நடக்கின்ற அரசியல் வகுப்புகளில் பின்நவீனத்துவம் பற்றிய தெளிவுபடுத்தலுக்கான வகுப்பை நடத்துமளவுக்கு இந்தபோக்கு நிர்ப்பந்தித்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. ஜே.பி.வி.க்குள் இளைஞாகள் பலர் எழுப்பிய கேள்விகளானது, ஜே.வி.பி.க்குள் இது ஒரு புரட்சிகர குணாம்சங்களை மழுங்கடிக்கின்ற, அல்லது போர்க்குணாம்சங்களை இழக்கச்செய்கின்ற போக்கொன்று வந்துவிடுமோ என்கிற பயத்தை ஏற்படுத்தியதே அரசியல் வகுப்பில் இப்படியான தலைப்புகளையும் புகுத்தியதற்கான காரணமெனலாம்.

இவ்வாறாக திறனாய்வுத்துறையில் பின்நவீனத்துவ முறையியலை கைகொள்வதென்பது அவசியமானது என்கிற போக்கு குன்றி, அடக்கப்படுபவர்களின் எழுச்சிக்கு வடிவம்கொடுப்பதற்கு எதிராக பின்நவீனத்துவ முறையியல் புகலிடத்திலும் பயன்படுத்தப்பட்டுவருவதை ஆங்காங்கு காணமுடிகிறது. தனிநபர் மீதான வசைபாடல்களை தமிழ்நாட்டிலும் சரி, இலங்கையிலும் சரி, புகலிடத்திலும் சரி இந்த பின்நவீனத்துவத்தின் பேரால் நடாத்தப்படும் போக்கைக்கண்டு பின்வாங்குவதும் இவ்வாறான போக்குகள் மேலோங்கக் காரணமாவதை காண முடிகிறது. இன்று தமிழ்ச்சூழலில் எழுத்து என்பது ஒருவகை வன்முறை வடிவத்தைப் பெற்றுவருவதையும் பின் நவீனத்துவத்தின் பாதிப்பு அதில் அடங்கியுள்ளதையும் பலர் ஒப்புக்கொள்வதை அவதானித்திருக்கிறேன். எந்த ஜனநாயகவிரோதங்களுக்கு எதிராக பேனை தூக்கப்பட்டதோ அதே பேனை இன்னொரு வன்முறை ஆயுதமாக ஆக்கப்படுவதும், கருத்துக்களின் மீதான விமர்சனங்கள் என்பது போய் நபர்களின் மீதான எழுத்து வன்முறை என்கிற வடிவத்தை அடைந்திருப்பது துரதிருஸ்டமானது.

இன்று பின்நவீனத்துவம் பற்றிய சொல்லாடல்கள் ஒருவகை மோஸ்தராக ((Fasion)ஆகிவிட்டிருக்கிறது. அது பற்றி தெரியாமல் இருப்பது ஒரு கௌரவப் பிரச்சினையாக ஆக்கிவிட்டிருக்கிறது. இலக்கிய, அரசியல் சக்திகளோ எப்பாடுபட்டாவது இது என்னவென்று அறியத்தான் வேண்டும் இல்லாவிட்டால் இதனை எதிர்கொள்ள முடியாமல் போய் விடும், தனித்துவிடுவோம் என்கிற பயத்தில் தேடித்தான் பார்க்கிறார்கள். பலருக்கும் களைப்பு மட்டும் தான் மிஞ்சுகிறது என்பதை ஒப்புக்கொண்டோர் பலர். ஒப்புக்கொள்ளாமல் தெரிந்ததை வைத்துக்கொண்டு பின்நவீனத்துவ பூசாரிகளானோர் சிலர். இந்த சிலரால், பலர் தாக்குப்பிடிக்க இயலாமல் போனதற்கு இலக்கிய உலகை கட்டுப்படுத்தும் எழுத்து வலிமையை "சிலர்" கொண்டிருந்ததும் ஒரு காரணம்.

இவ்வாறு இலக்கிய உலகில் "பெரும்போக்காகவே" தற்காக சூழலில் இப்போக்கின் தாக்கம் பாதிப்பை செலுத்துகின்ற அதே நேரம், சமூகமாற்றத்திற்கான முனைப்பின் நிகழ்ச்சி நிரலை மாற்றப்பட்டு பின்நவீனத்துக்கு பதில் சொல்ல கட்டாயப்படுத்தப்பட்டு விட்டுள்ளது. இப்போது புரட்சிகர சமூக மாற்றத்துக்கான நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பது எதிரிகளின் நடைமுறை அல்ல. பின்நவீனத்துவ சாராம்சங்களின் தத்துவமே.

அமைப்பாவதற்கு எதிரான கருத்தை இந்த சக்திகளிடம் காணப்பட்டாலும் அதே சக்திகள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு வகையில் அமைப்பாகித்தான் இருப்பதையும் அவதானிக்கலாம். ஆனால் அது ஒரு காலமும் மிஞ்சினால் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு மேல் கூட நீடிக்காமல் போன வரலாறையும் காண்கின்றோம். மேலும் இருக்கின்ற "அணி"கள் கூட துண்டாடப்படல் என்பது இங்கும் அதிகமாகக் காணமுடிகிறது. பன்முகத்தன்மை, பன்முகப்பார்வை என்கிற முறையியலை நேசிக்கும் அதேவேளை பன்முகசிந்தனைகளை ஏற்க மறுக்கும், அவற்றை அடித்து நொறுக்கும் போக்கையும் இத்தகையவர்கள் மத்தியில் பொதுவாகவே காண முடிகிறது. இந்த பொதுத்தன்மைதான் இதன் ஊற்று எங்கே இருக்கிறது என்கிற கேள்வியை எழுப்புகிறது.

இது பின்நவீனத்துவ சிந்தனையின் தவறான வழிநடத்தலா, அதாவது அது தத்துவத்தின் குறைபாடா? அல்லது தத்துவத்தின்பாலான அறிதலின் மீதுள்ள குறைபாடா? அல்லது தன்னியல்பின் தாக்கங்களோடு ஏற்பட்டிருக்கிற தனிநபர் மனமகிழ்வூட்டலோடு இயைந்த சேர்ப்பின் விளைவுகளா? இவை எதுவாக இருந்தாலும் இந்தப் போக்கு அடக்கப்படும் மக்களுக்கு ஆபத்தானது என்பதை மட்டும் கூறி வைக்கலாம்.

சமூக அக்கறை கொண்டு இயங்கும் எந்த சக்தியும் சமூக இயங்கியல் மீதான கேள்வியை மட்டும் எழுப்புவதன் மூலம் மட்டும் நின்றுவிடமுடியாது. அதற்கப்பால் அந்த கேள்விகளுக்கான பதிலையும் தேடுவதும் அதனை பொறுப்போடு விவாதத்துக்கு கொண்டுவருவதும் அதனடிப்படையில் இயங்குவதுமே சமூக பிரக்ஞையின் நேர்மை வடிவமாக இருக்க முடியும்.

இக்கியச்சந்திப்பை எடுத்தக்கொண்டால் அது புலிகளல்லாத சக்திகளை ஒன்று குவித்திருக்கிறது. எப்போதும் எந்தவொரு சமூக மாற்றத்தை உருவாக்கவும் நிறுவனம் முன்நிபந்தனையானது. அதிகாரத்துவம் குறித்த எச்சரிக்கைகளினூடு அந்த அதிகாரத்துவம் அகற்றக்கூடிய பொறிமுறைகளைக்கொண்ட அமைப்பு இலக்கியச்சந்திப்புக்கும் தேவைப்படுவது அவசியமானதே.

நாம் பின்னவீனத்துவ விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டிய இடம் இதுதான். அதிகாரம் மையப்படுவதை எதிர்ப்பது எனும் பெயரில் அதிகாரம் பரவலாக்கப்படுவதை மறுப்பதில் போய் நிற்பது இன்றைய சூழலில் பின்னநவீனத்தவத்தின் பெரும்போக்காக ஆகி வருவதாகவே எனக்குப் படுகிறது. அந்த வகையில் இலக்கியச் சந்திப்புக்கு ஒரு அமைப்பு வடிவம் தேவைப்படும். ஆனால் அதன் சாத்திப்பாடின்மைக்கான காரணம் பல்வேறு அரசியலைச் சார்ந்தவர்கள், பல்வேறு விதமான சக்திகள், பல கருத்துநிலைகளையும் சார்ந்தவர்கள் என பல நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்ற ஒரு இடத்தில் அமைப்பு வடிவம் ஒன்று உருவாக்கப்பட்டால், அது அமைக்கப்படும் அதே வேகத்தில் உதிர்ந்துவிடும் என்பது மிக எளிமையாக எவருக்கும் விளங்கும். ஏனென்றல் இவர்கள் ஒரு குறிப்பிட்ட "ஒரு" அரசியலுக்காக மையப்படுத்தப்படுபவர்கள் அல்ல. இது தான் அராஜக சக்திகளுக்கு சாதகமானதும். இவர்கள் "சேர்ந்து" தமது நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றும் பிடுங்கப் போவதில்லை என்பதை புலிகள் கூட நன்றாக அறிவார்கள். வேண்டுமென்றால் உதிரிகளாக அவ்வப்போது கத்திப்போட்டுக் கிடப்பார்கள். கொஞ்சம் பிரச்சார அளவில் சங்கடத்தைத் தருவார்கள் அவ்வளவு தான் என தமக்குள் நினைத்துக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.

சமீப காலமாக புலிகளின் பிரச்சாரங்களுக்கும், வெற்றிக்களிப்புகளுக்கும் பலியாகும் போக்கு புலிகளல்லாத அரசியல் சக்திகள் மத்தியில் தற்போது ஏற்பட்டிருப்பதாக எனக்குப் படுகிறது. இதற்கான காரணம் வெறும் தேசிய உணர்வுக்குப் பலியாவதாகக்கொள்ளமுடியாது. மாறாக புலிகளின் பிரச்சார உத்தி எந்தளவு வளர்ந்திருக்கிறது என்பதுவும், மாற்று சக்திகளுக்கு சரியான அரசியல் வழிகாட்டல் கிடைப்பதில் உள்ள பஞ்சத்தையும், கூடவே புகலிடத்தில் புலிகளற்ற அரசியல் நபர்களுக்கிடையிலான முறையான ஒருங்கிணைப்பு இல்லமையையுமே கொள்ளமுடியும். இது ஆபத்தானது. போகிற போக்கில் இது தொடர்வதற்கான அறிகுறிகள் அதிகளவில் தென்படுகின்றன. இதன் எதிர்காலம் என்ன?
முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்த போது
நான் எதுவும் பேசவில்லை
ஏனென்றால் நான் ஒரு யூதன் அல்ல
பிறகு அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்
நான் எதுவும் பேசவில்லை
ஏனென்றால் நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல
அதன்பிறகு அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடிவந்தார்கள்
நான் எதுவும் பேசவில்லை
ஏனென்றால் நான் ஒரு தொழிற்சங்கவாதி அல்ல
(பாஸ்டர் நியுமோலர்-நாசிச்சிறைகளிலிருந்து)

நமக்கு வெளியில் நமது நிகழ்ச்சி நிரல் - என்.சரவணனின் நேர்காணல் (ஆதவன்)


90களின் ஆரம்பத்தில் விடிவு சஞ்சிகையின் ஆசிரியல் குழவில் இணைந்து தனது  எழுத்துப் பணிகளை ஆரம்பித்த சரவணன் கடந்த 8 வருடங்களாக சரிநிகர் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றிவிட்டு தற்போது சுதந்திரப் பத்திரிகையாளராகவும், ஆய்வாளராகவும், விமர்சகராகவும் இருந்து வருகிறார். மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் மற்றும் தமிழ்த்தேசியம் சார்ந்த விடயங்களில் அதிகளவு படைப்புகளை வெளிப்படுத்தி வந்த இவர் செயற்பாட்டாளரும் கூட. தற்போது புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவரும் இவர் சமீபத்தில் தமிழகத்தில் நடந்த தமிழ் இனி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு இலங்கை வந்திருந்தார். இலங்கையில் ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டம் பாசிசத்தை நோக்கி எவ்வாறு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறித்த கருத்தாக்கங்களில் சமீப காலமாக அதிகளவு தேடல்களை செய்துவருபவர்.

புகலிடம் பற்றிய சிந்தனைப் போக்கின் இன்றைய வடிவத்தை எவ்வாறு விளக்குவீர்கள்?

தமிழ்த் தேசப் பிரச்சினை முனைப்பு பெற்று தமிழர்கள் இங்கு உயிர்வாழ்வுக்கு உத்தரவாதமில்லாமல் ஆக்கப்பட்டதன் பின்னரும், தமது அடிப்படைஉரிமைகளை சொந்த நாட்டில் அனுபவிக்க முடியாமல் ஏற்பட்டதன் காரணமாகவும், 80களில் தமிழர்களின் புலப்பெயர்வு அதிகரித்தது. அதன் இன்றைய நிலை வடக்கு கிழக்கின் மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இன்று புலம்பெயர்ந்துள்ளனர். இன்று தேசியம் பற்றிய பல்வேறு சிந்தனைகளின் போது உலகில் புகலிடம் என்பது தனித்து பார்க்கப்படவேண்டிய கருத்தாக்கமாக வளர்ந்துவிட்டிருக்கிறது. உலகில் உள்நாட்டு நெருக்கடி மிகுந்த நாடுகளிலிருந்தெல்லாம் இவ்வாறுபுலம் பெயர்ந்தவர்களில் எத்தனை பேர் திரும்பி தமது தாயகங்களுக்கு திருப்பிப் போகப் போகிறார்கள் என்கிற கேள்வியை மிகவும் அழுத்தமாக இன்று எழுப்பப்படுகின்றன. பிரச்சினை தீரும் பட்சத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களில் 5 வீதமாவது திருப்பிவருவார்களாஎன்கிற கேள்வி பலமாகவே இருக்கிறது. இந்த பின்னணியை வைத்துத் தான் புலம்பெயர்ந்தவர்களின் அரசியல் எதிர்காலம், அவர்களின் தனித்துவமான தேவைகள், பண்பாட்டு மாற்றங்கள், தேசத்துடனான உறவுகள் எல்லாமே பார்க்கப்படவேண்டும். எனவே தான் புகலிட இலக்கியங்கள், புகலிட அரசியல், புகலிட சிந்தனைப் போக்குகள் என்றெல்லாம் நவவடிவம்பெறும் தமிழியப் போக்கை காண்கிறோம்.

இவற்றின் விளைவுகளை எவ்வாறு இலக்கியத்தில் காண்கிறீர்கள்?
ஏலவே இலக்கியத்துறை சார்ந்திருந்தவர்களின் படைப்புகள் போக அங்கு போனதன் பின்னர் இலக்கியப் படைப்புருவாக்கங்களில் தங்களை இணைத்துக்கொண்டவர்கள் பலர். ஆரம்பத்தில் இந்த இலக்கியங்கள் அவர்களது தாயக நினைவுகளை அடியொற்றியதான படைப்புகளாக வந்துகொண்டிருந்தன. ஆனால் அதன் இன்றைய பரிமாணம் தாயக நினைவுகளுக்கு அப்பால் சென்று இன்றைய புகலிட வாழ்வு குறித்த அனுபவங்களையும், அவலங்களையும் வெளிப்படுத்துகின்ற படைப்புகளையே அதிகளவு காணக்கூடியதாக இருக்கின்றன. இன்று புகலிடத்தில் அடுத்த தலைமுறை தோன்றி விட்டது. அவர்களின் பெற்றோரின் தாயங்களை அறியாத, அதுகுறித்த பிரக்ஞைக்கு அப்பாற்பட்டு, புகலிடத்தையே தமது தாயகமாக்கிவிட்ட தலைமுறை அது. இவர்களிடமிருந்து தமிழில் இலக்கியங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் கற்ற அந்தந்த நாட்டு மொழிகளில் இலக்கிய ஈடுபாடுகளை காட்டுகின்ற போக்கு வளரத்தொடங்கியுள்ளது. தமிழிலிருந்தும் அந்தந்த மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்கின்ற முயற்சிகளும் கூட நடப்பதை அறிகிறோம். புகலிட இலக்கியம் என்பது ஒரு சர்வதேச அளவில் கருத்திற்கொள்கின்ற இலக்கியமாக ஆகிவிட்டது. ஐந்திணை பற்றிய கருத்தாக்கங்களை விரித்து ஆறாந்திணையாக தகவல் தொழில்நுட்ப வெட்டவெளி எனப்படும் சைபர் ஸ்பேசை குறிப்பிடுகிறோம். ஏழாந்திணையாக இன்று புகலிடத்தை குறிக்கின்ற கருத்தாக்கங்களும் வளர்ந்துவிட்டிருகின்றன என்பதை கருத்திற் கொள்ளவேண்டும்.

புகலிடத்தில் அரசியல் ஈடுபாடு பற்றி..?

புகலிடத்தினது தமிழர்களின் அரசியல் ஈடுபாடுகளை பெரிதாகக் காணமுடிவதில்லை. ஓரளவு மாற்று அரசியல் கருத்துடையவர்கள் அங்குள்ள அரசியல் செயற்பாடுகளுடன் இணைத்துக்கொண்டுள்ளார்கள். தமிழ்த் தேச அரசியலைப் பொருத்தளவில், இலங்கையில் உள்ளதை விட வேகமாக அரசியல்மயப்பட்டு வரும் விதத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழில் வேகமாக தகவல்கள் பெறக்கூடியவண்ணம் தகவல்தொழில்நுட்பத்தை அனுபவிக்கக்கூடியதாக இருக்கிறது. இலங்கை பற்றி இலங்கை சிவிலியன்கள் அறிவதைவிட வேகமாக அங்கு அறிந்து விடுகிறார்கள். அது தவிர வானொலிகளில் இங்கு போலல்லாது தொலைபேசி மூலம் அரசியல் கலந்துரையாடல்கள் நிறைய நடக்கின்றன. குறைந்த பட்ச தகவல்களை அறியாதிருந்தால் கௌரவப்பிரச்சினையாக பார்க்கப்படுகின்ற போக்கு வளர்ந்துவருகிறது. மேலும் வெறும் போர்வெற்றிக்களிப்புக்குள் மாத்திரம் வைத்திருக்கின்ற ஒரு ஆபத்தான நிலைமையும் இருக்கிறது. இதன் அரசியலை புரிந்துகொள்ளாத நிலையின் காரணமாக போர் தோல்விகளின் மீதான சகிப்பு இல்லாமல் போய் போராட்டத்தின் மீதே வெறுப்புறுகின்ற சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை. மக்களுக்கும் போராட்டத்துக்கும் இடையிலான இடைவெளியை சுருக்குவதில் போராட்ட சக்திகள் காட்டி வரும் அசட்டையின் விளைவுகளே இவை.

பாசிசம் பற்றிய எச்சரிக்கைகளை ஏற்படுத்தும் பல கட்டுரைகளை எழுதிவந்திருக்கிறீர்கள், இதன் அண்மைய வடிவம் பற்றிய உங்கள் புரிதல் என்ன?

வீரவிதான இயக்கம் 1995ஆம் ஆண்டு யூலை 7ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்ட போது அது வெறும் இயக்கமாகத் தான் பார்க்கப்பட்டது. ஆனால் அது எத்தனை பெரிய அபாயகரமான இயக்கம் என்பதை அதன் வியூகங்களும் திட்டங்களும், வேலைமுறைகளும் நிரூபித்துக்கொண்டு வந்தபோதுகூட பலரும் அதனை அசட்டைச் செய்தார்கள். ஒரு காலத்தில் சிங்களத் தேசியவாதம் என்கிற பதப் பிரயோகத்தைப் பாவித்தோம், அதன் பின் குறும்தேசியவாதம் என்கிற பதப்பிரயோகத்தை பாவித்தோம், அதன் பின் இனவாதம், அதன் பின் பேரினவாதம் என்றெல்லாம் பதங்களை பாவித்தோம், இந்த பதங்களுக்குப் பின்னால் அர்த்தங்களும், அந்தந்தக்கட்ட பாசிசத்தின் வளர்ச்சிக் கட்டங்களையும் சேர்த்தே உணர்த்தியது. ஆனால் இன்று அது முழு அளவிலான செயற்பாட்டுக்கு தன்னை பலப்படுத்திக்கொண்டுள்ள பாசிச இயக்கம், முழு சிங்கள மக்களையும் ஓரணிக்குள் திரட்டியுள்ள, திரட்டி வருகின்ற சிங்கள மக்களை பாசிசமயப்படுத்துவதில் மிகவும், நுணுக்கமாக செயற்பட்டு வருகின்ற இயக்கம்.

இதில் இடதுசாரி இயக்கங்களின் பங்கு..?
தேசியத்துக்கு பல முகங்கள் உள்ளன. பல சந்தர்ப்பங்களில் அது தேசிய சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கின்ற பண்புகளை உருவகப்படுத்திக் கொண்டுள்ள சித்தாந்தமாக இருந்தாலும், வேறு சந்தர்ப்பங்களில் அது சோசலிச முகமூடிகளையும் கூட அணிந்து வரும். ஹிட்லரின் பாசிச சித்தாந்தம் கூட தேசிய சோசலிசம் பற்றிய கருத்தாக்கத்துடன்தான் தன்னை அடையாளப்படுத்தியது. இன்று சிறி லங்காவில்; சிங்கள பாசிசத்துக்கு வடிவம் கொடுக்கும் சம்பிக்க ரணவக்கவின் சித்தாந்தமும் கூட தேசிய சோசலிசம் தான் என்பதை கவனியுங்கள். ஆரம்பத்தில் ஜே.வி.பி.யுடன் இணைந்து பணியாற்றிய சம்பிக்க ரணவக்க அதிலிருந்து விலகி ஜனத்தா மித்துரோ எனும் இயக்கத்தை ஆரம்பித்து இலங்கைக்கான சோசலிச பொருளாதார கட்டமைப்பு குறித்த ஆய்வுகளையும், கருத்துருவாக்கங்களையும் செய்து இயங்கிக்கொண்டிருந்த போது அதன் ஒரு கட்டத்தில் சோசலிச கோசம் சரிவராது என்கிற கருத்தையும், சோசலிசத்தை தேசிய சித்தாந்தத்தோடு இணைத்து புதுவகை சிங்கள பௌத்த சித்தாந்த மற்றும் அமைப்புத்துறைக்கான வேலைகளை தொடங்கினார். அதன் வடிவம் தான் 1995இல் சிங்கள வீரவிதானவின் தோற்றம்.

மிகவும் நுணுக்கமாக இயங்கி அது வரை சிங்கள பௌத்தம் பேசிய இயக்கங்களை தம்மோடு சுவீகரித்தும், சிலவற்றை நாசூக்காக இயங்கவிடாமல் பண்ணியும், ஒட்டுமொத்த சிங்கள பௌத்த அமைப்புகளையும் ஒரே இயக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பௌத்த மகா சங்கத்தினரை முழமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. சமூகத்தில் கருத்துருவாக்கங்களை பலப்படுத்தும் நிறுவனங்களான தொடர்பு+டகங்கள் அiனைத்திலும் ஊடுறுவியது. திவய்ன போன்றவற்றை தமது கைக்குள் போட்டுக்கொண்டது லங்காதீப, சண்டே டைம்ஸ் போன்றவற்றை அச்சுறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது, ஏனைய இலத்திரனியல் சாதனங்களுக்குள் சிங்கள தேசிய உணர்வுகொண்டவர்களை அடையாளம்கண்டு தமது வலைக்குள் சிக்கவைத்தது.

அரசியல் கட்சிகளுக்குள் ஊடுறுவி அதன் அதிகார மற்றும் நிறைவேற்று அங்கங்களுக்குள் சென்று அரசியல் முடிவுகளை எடுக்க வைத்தது. அவ்வாறு எடுக்க வைப்பதற்கு வெளியில் இருந்து அழுத்தங்களை பிரயோகிக்க பெருமளவான முன்னணி அமைப்புகளை உருவாக்கியது. ஒரு அரசை கொண்டுள்ள சிறிலங்கா கூட இணையத்தளம் உருவாக்காத காலத்தில் 96ஆம் ஆண்டே தமக்கான இணையத்தளத்தை வீரவிதான தோற்றுவித்தது. சிங்கள வர்த்தகர் சங்கத்தை ஆரம்பித்து குறுகிய காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கிளைகளை நாடளாவ ஏற்படுத்தியது. பெண்கள் அமைப்புகள், வேலைவாய்ப்பு அணி, என பல அமைப்புகளை உருவாக்கியது.

அரசியல்வாதிகள், கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள் என சமூகத்தில் உள்ள பிரமுகர் வட்டார சகத்களை குறுகிய காலத்தில் சுவீகரித்தது மட்டுமல்லாமல் இராணுவத்தில் சமகாலத்தில் பெரிய அதிகாரிகள் பலரையும் இணைத்துக்கொண்டது. தப்பியோடிய இராணுவத்தினரை உள்வாங்கி இரகசிய பயிற்சி முகாம்களை நடத்திவருவது பற்றிய செய்திகளை ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள்.

வரலாற்றில் இதற்கு முன்னரும் பல பேரினவாத இயக்கங்கள் இருந்திருக்கின்றன அல்லவா?

முன்னரெல்லாம் பல பெயர்களைக்கொண்ட பேரினவாத அமைப்புகள் நிறையவே இருந்தன. அவற்றுக்கு பொதுவான சித்தாந்த வடிவம் இருக்கவில்லை. பொதுவான அமைப்பு வடிவம் இருக்கவில்லை. பொதுவான அரசியல் வடிவம் இருக்கவில்லை. ஆனால் இன்று அப்படியல்ல சிங்கள சிவில் சமூகத்தில் ஆழமாக வேர்விடுகின்ற அளவுக்கு அணைத்தையும் மையப்படுத்துகின்ற பலமான சித்தாந்த வடிவம் அதற்கு உண்டு. உறுதியான அமைப்புவடிவம் உருவாக்கியாகிவிட்டது. அது போல அரசியல் வடிவமும் அதற்கு ஏற்படுத்தியாகிவிட்டது. இனி அது இராணுவ வடிவம் பெறவேண்டியதும், அரசை கைப்பற்றுகின்ற வேலையும் தான் பாக்கி என்று கூறிவந்தோம். அதற்கு இராணுவ வடிவம் இருப்பதை இராணுவ பயிற்சிகள் பற்றிய செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. சாதாரண தமிழ் சிவிலியன்களின் மீதான வன்முறைச் சம்பவங்கள் பல செய்திகளை நிரூபித்தன.

இப்பின்னணியில் பாசிசத்தின் இராணுவ மயத்தன்மையை மேலும் விளக்குவீர்களா?

உங்களுக்குத் தெரியும் குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்ட செய்தி. சிங்கள வீரவிதான ஹெலருவன எனும் பத்திரிகையொன்றை கடந்த மூன்று வருடங்களாக வெளியிட்டுக்கொண்டிருப்பதை அறிந்திருப்பீர்கள், இதனைத் தவிர அவர்கள் ஒரு செய்தி ஏடு நியுஸ்லெட்டர் ஒன்றை வெளியிட்டுவருகிறார்கள். வொய்ஸ் ஒப் த நேசன் எனும் பெயர்கொண்ட இந்த செய்தி ஏட்டின் கடந்த பெப்ரவரி இதழில் கடைசி பக்கத்தில் ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி கூறப்படுகிறது. -கொழும்பில் இருந்து கொண்டு கொஞ்சம் கூட அச்சமின்றி புலிக்குத் வால்பிடித்துக்கொண்டு இருந்த புள்ளிமாடு இனந்தெரியாத நபரால் புதைகுழிக்கு அனுப்பட்டதானது, நமது தேசத்தை பாதுகாக்க சிங்கள இனத்தைப் பாதுகாக்க தற்போது இருக்கின்ற சக்திகளுக்கு அப்பாலும் ஒரு அமைப்பு இருப்பதை உணர்த்தியதானது நம்மெல்லாருக்கும் தைரியமளிக்கின்றது.- என்று இருந்தது அந்தச் செய்தியில் இவ்வாறானவர்களுக்கு என்ன நேரும் என்கின்ற எச்சரிக்கையும், அவ்வாறான இயக்கமொன்று இருப்பதை பற்றிய சிங்கள மக்களுக்கு தைரியத்தையும் அளிக்கும் செய்தியாகவே அது இருந்தது. இதை விட முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் அதே பக்கத்தில் 7 கோசங்கள் இருந்தன. அந்த கோசத்தில் இறுதியானது என்ன தெரியுமா, நாட்டையே யுத்தத் தாயாரிப்புக்கு உட்படுத்துவோம், புலி எதிர்ப்பு தேசிய முன்னணியை கட்டியெழுப்புவோம் என்பது தான் அந்த கோசம். உங்களுக்குத் தெரியுமா குமார் பொன்னம்பலத்தின் கொலைக்கு உரிமை கோரிய இயக்கமும் இது தான். National Front Agaist Tigers இதனை நீங்கள் உன்னிப்பாக கவனியுங்கள். இந்த விடயம் எங்கும் கவனிக்கப்பட்டதாக இது வரை நான் அறியவில்லை.

அவர்களின் கொலைபட்டியல் அடுத்தது யார் என்கிற கேள்வி பல புத்திசீவிகள், அரசியலாளர்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்துள்ளன.

கடந்த 10ஆம் திகதி லக்பிம பத்திரிகையில் சம்பிக்கவின் பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது. அந்தப் பேட்டியில் ஒரு கேள்வி. இந்த குறுகிய காலத்தில் நீங்கள் கண்டடைந்த வெற்றிகள் என்ன? அதற்கு சம்பிக்கவின் பதில் இப்படி இருந்தது. இது வரைகாலம் செக்கியுலரிசம் பற்றி பேசிக்கொண்ருந்த ஐக்கிய தேசியக்கட்சி இன்று ரணில் தலைமையில் மகாசங்க்தினரை சந்தித்து பன்சில் எடுக்கிறார். இது வரைகாலம் மார்க்சியம், பேசிக்கொண்டிருந்த ஜே.வி.பி. தங்கள் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் பிரதியை மகாசங்கத்தினருக்கு கொடுத்து ஆசி பெற்று அடபிரி செய்கின்றனர். இது யார் கண்ட வெற்றி என்பதை நீங்கள் தீர்மானியுங்கள் என பதிலளிக்கிறார் சம்பிக்க.

இந்தப்புள்ளி தான் நாங்கள் அவதானிக்க வேண்டிய முக்கிய புள்ளி. இன்று ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டத்தையும் கட்டுப்படுத்தும் வலிமையை பாசிசம் பெற்றுவிட்டது. ஆயதப் புரட்சி பற்றி பேசிக் கொண்டிருந்த ஜே.வி.பி.யை சிங்களத் தேசியம் பற்றி பேசவும், அதற்கு எதிராக போகாமலும் பண்ணியிருக்கிறது. குறைந்தபட்சம் சமவாய்ப்புச் சட்டத்தைக் கூட பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாமல் போனது எவரது வெற்றி? தமிழர்களின் உரிமைகளுக்கே வேட்டு வைக்க இருந்த தீர்வுப்பொதியைக் கூட பாராளுமன்றத்தில் நிறைவேற்றவிடாமல் செய்தது யாரது வெற்றி. சிறிமா அம்மையாரை பதவி விலக்கி சிங்கள வீரவிதானவுக்கு நெருக்கமான ரத்னசிறி விக்கிரமநாயக்கவை பிரதமராக போட்டு மகாசங்கத்தினரை அணுக வைத்தது யாரது வெற்றி. தமிழ் கட்சிகள் மகா சங்கத்தினருடன் பேசி தீர்வு தொடர்பாக ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று ரத்னசிறி விக்கிரமநாயக்க கூறியது யாரது வெற்றி. இந்த நிலைமைகளை விளங்கிக்கொள்ளவும், அதற்கேற்ப தங்களை தயார்படுத்தவும் தமிழ்த் தேசம் அதிக அக்கறை செலுத்த வேண்டிய கட்டம் இது.

ஆக, முழு நாடும் பாசிசத்தின் நிகழ்ச்சிநிரலின் கீழ் கொண்டுசெல்லப்படுவதாகக் கூறுகிறீர்கள்..?

இன்று முழு சிவில் சமூகத்தையும், அரச கட்டமைப்பையும், பாசிசம் தான் வழிநடத்துகிறது என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள். இதற்குப் பின்னால் முதலாளித்துவ நலன்கள், பல்வேறு சக்திகளின் நலன்கள் கலந்திருக்கும் என்பது உண்மை. ஆனால் அவற்றின் அறுவடை அனைத்தும் பாசிசம் சுவீகரித்துக்கொள்கிறது. சிங்கள வீரவிதான இன்று ஒட்ட இருந்த சுவரொட்டியை நேற்றே ஜே.வி.பி.யினர் ஒட்டிவிடுகின்றனர். சிங்கள வீரவிதானவுக்கு வேலை மிச்சம். ஜே.வி.பி. மட்டுமல்ல சிங்கள கட்சிகள் அனைத்தினதும் இன்றைய நடவடிக்கையின் அறுவடை பாசிசத்துக்குரியவை என்பதை நினைவிற் கொள்வோம். 30களில் மேற்கில் சோசலிசத்தை பாசிசம் வெற்றிகண்ட வரலாற்றனுபவத்தை இன்னமும் இலங்கை இடதுசாரிகள் உணரவில்லையென்றே நான் கூறுவேன். இனி பாசிசத்துடனான கொடுக்கள் வாங்கல்களை செய்துகொள்ளாமல் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் சக்திகளும் இருப்பு கொள்ள முடியாது.

இனிவரப்போகும் காலம் அபாயகரமானது என்றா எச்சரிக்கிறீர்கள்..?

ஆம், வரப்போகும் ஒக்டோபர் 10ஆம் திகதிக்குப் பின் நாட்டின் நிலைமை மிகமிக மோசமடையப் போகிறது. திறைசேரியில் பணம் இல்லை என உத்தியோகபூர்வ அறிவித்தலும் வெளியாகிவிட்டது. எந்தநேரத்திலும் வெடிக்கக்கூடிய பண நெருக்கடியும், பஞ்சமும். தேர்தலை இலக்காகக் கொண்டு இதனை வெடிக்க விடாமல் அதிக முயற்சிசெய்து கொண்டிருக்கிறது அரசு. 94ஐப் போலல்லாது இம்முறை குறைந்த வித்தியாசத்தில் தான் அரசாங்கம் வெல்லும். ஆக, பாசிசத்தல் தங்கியிருப்பது மேலும் உறுதிப்படும். தேர்தல் முடிந்து விட்டால் அது வெடிப்பது பற்றி அரசுக்கு கவலை இல்லை. அவ்வாறு எதிரி நெருக்கடிக்குள் சிக்குகின்ற சந்தர்ப்பமானது போராட்டத்துக்கு சாதகமான அம்சமாக போராளிகள் நோக்குவார்கள. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போராட்ட சக்திகள் அரசை மேலும் பலவீனப்படுத்த முயற்சிக்கும். அந்த முயற்சிகளை எதிர்த்து பாசிசம் அரசை நிர்ப்பந்திக்கும். ஆனால் தேர்தலுக்காக குவித்திருக்கின்ற ஆயுததளபாடக் குவிப்புகள் மட்டும் தான் அரசின் கையிருப்பில் இருக்கும். அதன் பின்னர் இருப்பதை வைத்துக்கொண்டு தான் அரசு போருக்கு முகம்கொடுக்க வேண்டி வரும். அத்தகைய சூழலில் பாசிசமயப்பட்டுவரும் மக்களை திருப்திபடுத்த அரசு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைகளை காட்டவேண்டிவரும். அதற்கு தமிழ் மக்களின் மீதான குண்டுவீச்சுகள், அழித்தொழிப்புகள், கைதுகள் என்றெல்லாம் செய்து தான் பாசிசத்தை திருப்திபடுத்த முடியும். போராட்டம் அடுத்த கட்டத்தை நெருங்கும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ்மக்களுக்கு ஆதரவளிப்பதைக் காட்டிலும், சிறிலங்கா அரசுக்கு இந்திய மற்றும், ஏனைய வல்லரசு நாடுகள் உதவி வழங்க முயலும். எனவே தமிழ் தேச விடுதலையில் பிரக்ஞை உள்ள சக்திகள் தேசத்துக்குள் இது பற்றிய விழிப்பு+ட்டலையும், எச்சரிக்கவுமான வேலையை தொடங்க வேண்டிய பொறுப்பு உள்ளது. தேசத்துக்கு வெளியில் சிங்கள அரசுக்கு ஆதரவாக சர்வதேச சக்திகள் போக விடாமல் தடுப்பதற்கான வழிகளை கண்டாக வேண்டி வரும்.

தற்போதைய அரசியல் தீர்வு முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்புகள் பற்றி..?

அடிபபடையில் நோர்வே அமெரிக்காவின் பொம்மை. சமீபகாலமாக உலகில் தேசியப் பிரச்சினைகளின் மீதான தீர்வுகளுக்கு அமெரிக்கா நேரடியாக தலையீடாமல் நோர்வே மூலம் தமது நலன்களை நிறைவேற்றி வருவதை பார்க்கலாம். அடக்கப்படும் தேசங்களுக்கு தீர்வு தருவதைப் பார்க்க அடக்கப்படும் மக்களின் போராட்டங்களை சரணடையச்செய்கின்ற முயற்சியையே நோர்வே மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மேலும் உலகின் சமாதான தேவதையாக நோர்வே நோக்கப்படும் அதே நேரம் நோர்வே தனது நாட்டுக்குள் ஏனைய தேசங்களை எப்படி அடக்கிவைத்திருக்கிறது என்பதற்கு வரலாறு உண்டு. அங்குள்ள சாமிர் எனும் இனத்தவர்களின் தனியான பண்பாடு, மொழி, கலாசாரம் என்பனவற்றை சிதைத்தும், அவர்களின் இன அடையாளத்தை பேணவிடாமல் நுணக்கமாக இயங்கியும் வந்திருக்கிறது. நோர்வேயின் வடக்குப் பகுதியில் இந்த இனத்தவர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வரை நோர்வேயின் பிரதான வருமானமான எண்ணெய் வளங்களை அனுபவிக்கலாம். இப்படிப்பட்ட நோர்வேயின் தலையீட்டை சந்தேகத்தோடு நாங்கள் பார்க்கவேண்டும். மேலும் அடிப்படையில் தமிழ் மக்களின் எதிரிகளாகிவிட்டிருக்கிற அமெரிக்கா, இந்தியா போன்ற சண்டியர்களிடம் தான் இலங்கை பிரச்சனை தொடர்பாக யோசனைகளை நோர்வே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை கருத்திற்கொள்ளுங்கள். ஒரு புறம் குர்திஸ்தான் மக்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதாக வேடம்போட்டுக்கொண்டு. மறுபுறம் குர்திஸ்தான் மக்களின் போராட்டத்தை அடக்க துருக்கி அரசாங்கத்திற்கு ஆயத தளபாடங்களை விற்பனை செய்துவருகிறது. இது தான் நோர்வே. நோர்வேயை பேரினவாதிகள் எதிர்ப்பதற்கும், தமிழ் மக்கள் எதிர்ப்பதற்கும் அடிப்படையில் இது தான் வித்தியாசம்.

நேர்காணல் :எஸ்.ருக்க்ஷாந்தி

நன்றி - ஆதவன் 2000

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates