Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

அன்று குட்டிமணிக்கு கிடைக்காத நீதி சொக்கா மல்லிக்கு கிடைத்ததெப்படி - என்.சரவணன்

தேர்தலுக்குப் பின்னர் கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி பராளுமன்றம் முதற் தடவையாக கூடியபோது பாராளுமன்றத்தின் மொத்த 225 உறுப்பினர்களில் 222 பேர் மட்டுமே கலந்துகொண்டிருந்தனர். மூவரில் “அபே ஜாதிக பெரமுன” என்கிற கட்சியின் உறுப்பினர் (ஞானசார தேரர் தரப்பு) ஒருவர், அடுத்த இருவர் சிறைச்சாலையில் கைதிகளாக இருப்பவர்கள். ஒருவர் இரத்தினபுரி மாவட்டத்தில் இரண்டாவது அதிகப்படியான வாக்குகளைப் பெற்று தெரிவான மரண தண்டனைக் கைதி “சொக்கா மல்லி” என்று அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர. அடுத்தவர் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் ஐந்து வருடங்களாக சிறையில் இருந்தபடி இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகப்படியான விருப்புவாக்குகளைப் பெற்ற பிள்ளையான்.

இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக ஆகியிருப்பது உள்ளூர் செய்தியோடு மட்டுப்படவில்லை. அது சர்வதேச செய்தியாக இந்த நாட்களில் வளம் வந்துகொண்டிருக்கிறது. ஜனநாயக கட்டமைப்பொன்றில் இது ஒரு  பிழையான முன்மாதிரி என பல முனைகளிலும் இருந்தும் கருத்துக்கள் வெளிவந்தமுள்ளன. அப்படியென்றால் 1982இல் குட்டிமணிக்கு மட்டும் ஏன் அந்த சந்தர்ப்பம் வழங்கவில்லை என்கிற விவாதங்களும் இப்போது எழுப்பப்படுகின்றன. இதை சற்று விரிவாகவே பார்ப்போம்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தலில் நிறுத்தப்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சார கூட்டம் கஹாவத்த பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது அக்கூட்டத்தில் கலந்துகொண்ட மைத்திரிபாலாவின் ஆதரவாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டு இருவர் படுகாயமடைந்தனர். இதன் சூத்திரதாரியான பிரேமலால் மற்றும் அவருடன் இருந்த மூன்று பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ் வழக்கு விசாரணை, இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள உட்பட 59 பேரின் சாட்சியங்களும், 16 தடயப் பொருட்களும் அவர்களுக்கு எதிரான வழக்கில் சட்ட மா அதிபரால் முன்வைக்கப்பட்டன.

இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில் தான் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த விசாரணையின் போது பிணை கோரியிருந்த பிரேமலால் ஜயசேகர சந்தேக நபராக கருதப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இப்படியான நிலையில் தான் தேர்தலுக்கான வேட்பு மனுவை பிரேமலால் ஜயசேகர தாக்கல் செய்து, நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுவில் இடம்பிடித்தார்.

ஆனால் அவ்வழக்கில் பிரேமலால் ஜயசேகரவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் கடந்த ஜுலை மாதம் 31ஆம் தேதி பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை விதித்து இரத்தினபுரி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்க முடியுமா என்று தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான  ரத்னஜீவன் ஹூல்லிடம் வினவியிருந்தபோது அதற்கு அவர்

“இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ள 6 பிரதான விடயங்களில் வேட்பாளரொருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என்ன என்பது உள்ளடக்கப்படவில்லை. எனவே பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்று அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அதற்கான தீர்வு வழங்கப்பட்டால் மாத்திரமே இதற்கான தீர்வு கிடைக்கும்”

என்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க 2015 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது இரட்டை பிரஜாவுரிமையுடையவர் என்பதற்காக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இரு வருடங்களின் பின்னர் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என்ற தீர்ப்பினால் அவர் பதவி விலகினார். வழக்கு தொடர்ந்து இரண்டு வருடங்களின் பின்னரே தீர்ப்பு வழங்கப்பட்டது. எனவே அது வரையில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக அவர் பதவி வகித்தார். பாராளுமன்ற உறுப்பினராக அக முடியாத ஒருவர் வேட்பாளராக ஆக முடியும் என்கிற ஒரு விதி சட்டத்தில் உள்ள குறைபாடே. தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் மீது வழக்கு தொடர்ந்து தான் அவ்விதிக்கு சட்ட வலுவை உருவாக்க வேண்டுமா? ஒரு வகையில் அது ஒரு வேட்பாளருக்கு இழைக்கப்படும் அநீதி. அதுபோல அவரை தெரிவு செய்கிற மக்களுக்கும் ஏற்படும் அநீதி. இது சட்டத்தின் முக்கிய குறைபாடு.

பிரேமலால் ஜயசேகர 1997 ஆம் ஆண்டு பிரேதச சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டவர். 2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகி மகாவலி அபிவிருத்தி பிரதி அமைச்சாராக பதவி வகித்தவர். அதன் பின்னர் அவர் கிராமிய தொழிற்துறை, சுய தொழில் பிரதி அமைச்சராகவும் இருந்தவர். மகிந்த ராஜபக்ச அணியினரின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர்.

கடந்த 2015ஆம் ஆண்டு அரசாங்கத்தின் போது பாராளுமன்றம் கூடிய 213 நாட்களில் 39 நாட்கள் மட்டுமே கலந்துகொண்டவர்.  பாராளுமன்றத்தில் எழுத்துமூலமான கேள்விகளை இரண்டு தடவைகள் தான் சமர்பித்திருக்கிறார். பொது முறைப்பாடுகள் மூன்றை மட்டுமே முன்வைத்துள்ளார். பாரளுமன்ற உறுப்பினராக உருப்படியான எந்த வினைத்திறனையும் காட்டிய ஒருவராக அவர் இருக்கவில்லை. ஆனால் பெரும் வர்த்தக செல்வந்தரான பிரேமலால் ஜயசேகர நடந்து முடிந்த 2020 பொதுத் தேர்த்தலில் 104,237 விருப்பு வாக்குகளைப் பெற்று அம்மாவட்டத்தில் இரண்டாவது பெரும்பான்மை விருப்பு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

அதே வேளை மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிற பிரேமலால் ஜயசேகர; பாராளுமன்றத்தில் அமர்வதற்கோ, வாக்களிப்பில் பங்குபெறுவதற்கோ உரிமையற்றவர் என்று பாராளுமன்ற செயலாளருக்கும், நீதி அமைச்சுக்கும், சிறைச்சாலை ஆணையாளருக்கும் சட்ட மா அதிபரால் 19.08.2020 அன்று அறிவிக்கப்பட்டிருப்பதாக சட்ட மா அதிபர் காரியாலயத்தின் பேச்சாளரான நிஷார ஜயரத்ன தெரிவித்திருந்தார். இந்தச் செய்திகள் அடுத்த நாள் ஊடகங்களிலும் வெளியாகிருந்தன.

பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட ஒருவர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்காமல் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு சமூகமளிக்காதுவிட்டால் அவர் தனது ஆசனத்தை இழப்பார் என்பது அரசியலமைப்பு விதி. இதற்கு வரலாற்றில் பல உதாரணங்களும் உள்ளன.

83இல் தமிழர் இழந்த உறுப்புரிமை

1983 இனப்படுகொலை சம்பவங்கள் நிகழ்ந்து இரு மாதங்களில் ஓகஸ்ட் 5ஆம் திகதி அரசியலமைப்புக்கு 6வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இலங்கையிலோ அல்லது நாட்டிற்கு வெளியிலோ உள்ள எந்தவொரு நபரும் நாடு பிளவுபடுவதற்கு ஆதரவளிப்பது அல்லது ஊக்குவிப்பது அல்லது அத்தகைய முயற்சிகளுக்கு நிதி சேகரிப்பது தண்டனைக்குரிய குற்றமென்கிற விதி அந்த திருத்தச்சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது. அதுமட்டுமன்றி சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விதிகளை மீண்டும் ஒரு சத்தியப்பிரமாணமாக செய்துகொள்ள நேரிட்டது. சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள். ஆனால் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த எவரும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளாமல் பகிஷ்கரித்து வந்தார்கள். மூன்று மாதங்களாக பாராளுமன்றத்துக்கு உரிய அறிவித்தலை செய்யாது சமூகமளிக்காததால் அவர்கள் அனைவரும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தனர்.

எனவே இதே நிலை பிரேமலால் ஜயசேகரவுக்கும் நேரிடாதபடி அவசர அவசரமாக சிறைச்சாலை ஆணையகம், திணைக்களம், நீதிமன்றம், சட்ட மா அதிபர், சபாநாயகர் என்கிற சம்பந்தப்பட்ட தரப்புடன் ஆளுங்கட்சி அணுகியது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் மேன்முறையீடு செய்திருப்பதால் மாத்திரம் அவரை எந்தவிதத்திலும் பிணையில் விடுவிக்கும் சட்ட வாய்ப்புகள் இல்லை. அது மட்டுமன்றி குற்றவியல் சட்டத்தின் 333.4 விதிகளின்படி மேன்முறையீடு செய்துவிட்டதால் அந்த இடைக்காலத்தில் அவர் நிரபராதியாக கருதப்படமாட்டாது.

மேலும் அரசியலமைப்பின் 89 (ஈ) பிரிவின் படி பின்வரும் காரணிகளுக்கு உட்பட்டவர் எவரும் உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்று தெளிவாக சுட்டுகிறது.

(ஈ) இரண்டாண்டுகளுக்குக் குறையாதவொரு காலத்திற்கான மறியற்றண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய தவறொன்றுக்காக ஏதேனும் நீதிமன்றத்தினால் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னர் அதனால் விதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குக் குறையாத ஒரு காலத்திற்கான மறியற்றண்டனையை (அது எப்பெயரினால் அழைக்கப்படினுஞ் சரி) இப்போது அனுபவித்து வருபவராயிருந்தால், அல்லது நேர் முற்போந்த ஏழு ஆண்டுக் காலப்பகுதியின்போது அத்தகைய தண்டனை அனுபவித்து முடித்தவராயிருந்தால், அல்லது மரண தண்டனைத் தீர்ப்பளிக் கப்பட்டவராயிருந்தால், அல்லது அத்தகைய மரண தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அளிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்கு குறையாதவொரு காலத்துக்கான மறியற் றண்டனையை அனுபவிப்பராயிருந்தால், அல்லது நேர்முற் போந்த ஏழு ஆண்டுக் காலப்பகுதியின்போது அத்தகைய தண்டனையை அனுபவித்து முடித்தவராயிருந்தால்;

சட்ட மா அதிபரின் கருத்து வெளியானதும் மகிந்த ராஜபக்சவின் விசுவாசியும், புதிதாக நீர் வள அமைச்சராக பதவி எற்றுக்கொண்டவருமான வாசுதேவ நாணயக்கார; ஊடக மாநாட்டில் கருத்து கூறும்போது “பிரேமலால் ஜயசேகர பாராளுமன்றத்துக்கு முடியுமா, இல்லையா என்பதை சட்ட மா அதிபர் தீர்மானிக்க முடியாது” என்று வாதிட்டதையும் கவனித்திருப்பீர்கள்.

அதுபோல பிரேமலால் ஜயசேகர பாராளுமன்றத்துக்கு செல்வதற்கான வசதிகளை செய்துகொடுக்கும்படி சிறைச்சாலை திணைக்களத்துக்கு ஆணையிட்டதாக சபாநாயகராக ஆக்கப்பட்ட மகிந்த அணியைச் சேர்ந்த மகிந்த யாபா அபேவர்தன; பாராளுமன்றத்தில் அறிவித்தார். எதிர்வரும் காலங்களில் இந்த வழிமுறை பிழையான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்று பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

ஓகஸ்ட் 20 ஆம் திகதி முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளில் பிரேமலால் அங்கு கலந்து கொள்வதற்கு சிறைச்சாலை அதிகாரசபை அனுமதிக்கவில்லை. பிரேமலால் தரப்பில் நீதிமன்றத்துக்கு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அத் தீர்ப்பு குறித்து பல ஊடகங்களில் “பிரேமலால் ஜயசேகரவை சபை அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு நீதிமன்று உத்தரவு” என்றே செய்தி வெளியிட்டன. ஆனால் அத்தீர்ப்பில் அப்படி நேரடியாக எதுவும் கூறப்படவில்லை. பிரேமலால் பாராளுமன்ற உறுப்பினராக கருமமாற்றுவது குறித்து சபாநாயகர் முடிவெடுக்கலாம் என்றே தீர்ப்பில் உள்ளது. இந்தக் குறிப்பை ஆளுங்கட்சியினர் வசதியாக மறைக்க முற்பட்டபோதும், எதிர்க்கட்சியினர் அத்தீர்ப்பை பாராளுமன்றத்தில் வாசித்து காட்டி சபாநாயகருக்கு சுட்டிக்காட்டினர். அதாவது நீதிமன்றம் அனுமதித்துவிட்டதாக ஆளும் ராஜபக்ச தரப்பு கூறுவது சுத்தப்பொய்.

இறுதியில் பிரேமலால் ஜயசேகர செப்டம்பர் 8 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

இது ஒரு சட்ட விரோதமான செயல் என்று எதிர்க்கட்சிகள் அன்றைய தினம் கறுப்புப் பட்டி அணிந்தே வந்திருந்தனர். சத்தியப்பிரமாணம் செய்த போது அவர்கள் கறுப்பு பட்டிகளை சபைக்குள் வீசி எறிந்தவாறு சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


சரத் பொன்சேகாவுக்கு நேர்ந்தது.

அதுமட்டுமன்றி மஹிந்த ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் சரத் பொன்சேகாவை குற்றவாளியாக அறிவித்து சிறைக்கு அனுப்பியிருந்தது. சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்றத்திற்கு வருகை தர அப்போதைய அரசாங்கம் இடமளிக்காததை சபையில் எதிர்க்கட்சிகளும், சரத் பொன்சேகாவும் கூட நினைவு கூர்ந்தனர். 

சரத் பொன்சேகா இது குறித்து பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது

‘60 மாதங்கள் சிறைத்தண்டனை வகித்த காலப்பகுதியில் தன்னை பாராளுமன்றக் கூட்டங்களில் பங்குபற்ற அன்றைய சபாநாயகர் சமல் ராஜபக்ச (மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரர்) தனக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை.”

என்பதை நினைவுறுத்தினார்.

பின்னர் சரத் பொன்சேகாவை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவும் விடவில்லை, அதன் பின்னர் அவர் பாராளுமன்ற உறுப்புரிமையையும் இழந்தார்.

2009இல் யுத்தம் நிறைவடைந்ததும் ஓய்வுபெற்ற பொன்சேகா 2010 ஜனவரி 26 ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு எதிராக பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 18 லட்ச வாக்கு வித்தியாசத்தில் மகிந்த வென்றார். இரண்டே வாரத்தில் மகிந்த அரசு பொன்சேகாவை கைது செய்து சிறையில் அடைத்தது. ஏப்ரலில் நடந்த பொதுத் தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு கொழும்பு மாவட்டத்தில் 98,456 விருப்பு வாக்குகளைப் பெற்று வென்றார். ஆனால் இரு நீதிமன்றங்களில் அவருக்கு எதிரான வழக்குகள் இருந்தன. கூடவே இராணுவ நீதிமன்றத்தின் மூலம் அவருக்கு 30 மாதகால சிறைத்தண்டனை கிடைத்தது. அவரிடம் இருந்து சகல பதவிகளும், பட்டங்களும், சலுகைகளும் பறிக்கப்பட்டன. வெள்ளைக்கொடி விவகார வழக்கில் அவருக்கு மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனைகளின் காரணமாக அவர் பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டது. இறுதியில் அரசியலமைப்பின் 89 (அ),  91 ஆகிய பிரிவிகளின் படி பொன்சேகா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பதாக பாராளுமன்ற செயலாளரால் தேர்தல் ஆணையாளருக்கு ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது.

சரத் போன்செகாவுக்குப் பதிலாக பட்டியலில் அடுத்ததாக இருந்த லக்ஷ்மன் நிபுன ஆராச்சி பதவியேற்க மறுத்துவிட்டதால் ஜயந்த கெட்டகொட தெரிவானார்.

2012 இல் சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளிக்கப்பட்டு வெளியே வந்தார். 2015 தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவான மைத்திரிபால சிறிசேன சரத் பொன்சேகாவின் மீதான சகல வளகுகளில் இருந்தும் விடுவித்தார். தான் இழந்த எம்.பி பதவியை திருப்பித் தரும்படி கேட்டு மேன்முறையீடு செய்தார். அக்கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அதாவது அரசியலமைப்பின் 89 (அ),  91 பிரிவுகளின் படி ஒருவருக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டால் அத்தினத்திலிருந்து  அவர் மீதான தகுதிநீக்கமும் இல்லாமல் ஆக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் நீதிமன்றம் பொன்சேகாவின் கோரிக்கையை நிராகரித்தது.

மரண தண்டனைக் கைதியின் எல்லை

பிரேமலால் இப்போது சாதாரண கைதி அல்ல, ஒரு மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்ட ஒருவருக்கு எம்.பி பதவியேற்கும் வாய்ப்பை வழங்கியதானது, அரசியலமைப்புக்கு முரணானது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல.

ஆளுங்கட்சி தரப்பில் வாதிட்டபோது “மேன்முறையீடு செய்யப்பட்டுவிட்டதால் அதற்கு கீழ் உள்ள நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியற்றதாகிவிடுகிறது” என்று வாதிட்டனர். சட்டமியற்றும் பாராளுமன்றத்தில் இத்தகைய பிழையான அர்த்தப்படுத்தல்களை பாராளுமன்ற உறுப்பினர்களே முன்வைத்ததானது சட்டத்தை கேலி செய்யும் நிலைக்கு அவர்கள் ஆளாகியிருப்பதையே வெளிப்படுத்தியது.

இதில் இன்னொரு தகவலையும் இங்கு கூறியாகவேண்டும். சிலவேளை பிரேமலாலுக்கு பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்க முடியாது போயிருந்தால் அடுத்த சிக்கல் ஒன்று இருக்கிறது. இரத்தினபுரி மாவட்டத்தில், அதே கட்சியில் போட்டியிட்டவர்களில் பிரேமலுலுக்கு அடுத்தபடியாக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் உறுப்பினராக ஆவார். ஆனால் பிரேமலுலுக்கு அடுத்தபடியாக விருப்புவாக்குகளைப் பெற்றவர்கள் இருவர் இருக்கிறார்கள். ரஞ்சித் பண்டார, ரோஹன கொடிதுவக்கு ஆகிய இருவருமே 53,260 வாக்குகளை இருவருமே பெற்றிருக்கிறார்கள். இது தொடர்பில் தேர்தல் ஆணையகத்தின் நிர்வாக இயக்குனர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க கூறும்போது, நாணயத்தை சுண்டி எறிந்து தான் தீர்ப்பை வழங்க நேரிடும் என்கிற விசித்திர பதிலை தருகிறார். இப்படி ஒரு வழிமுறை இருக்கிற போதும் இதுவரை வரலாற்றில் இதற்கான சந்தர்ப்பம் நேர்ந்ததில்லை.

எப்படியோ 1976 க்குப் பின்னர் இலங்கையில் எவரும் மரணதண்டனைக்கு உள்ளாகவில்லை. மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் இன்னமும் அப்படியே தான் இருக்கிறார்கள். ஆனால் மரண தண்டனையை இனி நிறைவேற்றப் போவதாக கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்ததுடன் அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தார். தூக்குத் தண்டனைக்கான கயிறும் கூட வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

பிள்ளையானும்....


கொலைக்குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்ட பிரேமலால் மட்டுமல்ல பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். கூடவே முன்னாள் எம்.பி ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பிள்ளையான் என்று அழைக்கப்படுகிற சிவநேசத்துரை சந்திரகாந்தனும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார். அது மட்டுமன்றி பிள்ளையான் மட்டக்களப்பில் 54,198 விருப்பு வாக்குகளைப் பெற்றது மாத்திரமன்றி அம்மாவட்டத்திலேயே அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் பிள்ளையான் தான் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். பிள்ளையான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டாலும் பிள்ளையானும் மகிந்த ராஜபக்ச தரப்பின் செல்லப்பிள்ளை என்பதும் இத் தேர்தலில் TMVP சார்பாக போட்டியிட்டாலும் அது மகிந்த தரப்புக்கு நேரடியாக போகப்போகும் ஒரு ஆசனம் தான் என்பது வெளிப்படையான ஒன்று. ஆக இந்த இரு கொலைக்குற்றச்சாட்டு உள்ள கைதிகளும் ராஜபக்ச தரப்பினருக்காக சேவகம் செய்யப் போய் சிறையில் இருப்பவர்கள். ராஜபக்சவினரின் அவர்களை சட்ட இடையூறின்றி பாராளுமன்றத்தில் அமர வைக்கமாட்டார்களா என்ன?


சிறையிலிருந்து சந்திரசேகரன்

இந்த இடத்தில் இன்னொரு சம்பவத்தையும் உதாரணத்துக்கு கொண்டு வர வேண்டும். 06.04.1991 இல் கொழும்பு ஜே.ஒ.சி குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட வரதன் மலையகத்தில் தலைமறைவாக இருந்தபோது வரதனின் நடமாட்டத்தை அறிந்திருந்தும் தகவல் கொடுக்க தவறினார் என்று குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மலையாக மக்கள் முன்னணியின் தலைமையைச் சேர்ந்த சந்திரசேகரன், காதற், வி.ரி தர்மலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அக்கட்சியின் தலைவர் சந்திரசேகரன் 1994ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சிறையிலிருந்தே போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1994 தேர்தலில் சந்திரிகா ஆட்சியமைக்க ஒரே ஒரு ஆசனம் போதாமல் இருந்த நிலையில் சந்திரசேகரனின் அந்த ஒரு ஆசனம் இணைந்ததில் தான் ஆட்சியமைக்க முடிந்தது. சந்திரிகா அவர்களை சட்ட விரோதமாக சிறையிலிருந்து மீட்கவில்லை. ஏனென்றால் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்களே ஒழிய அவர்கள் மீது நீதிமன்றில் வழக்குகள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆக அவர்கள் குற்றவாளிகளாக இருந்ததில்லை. அவர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படாத நிலையில் அவர் மீதான குற்றத்தை விலக்கி சட்டமா அதிபர் திணைக்களம் அவரை விடுதலை செய்தது.

குட்டிமணிக்கு மறுக்கப்பட்ட நீதி

செப்டம்பர் 11 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முக்கிய கேள்வி ஒன்றை முன்வைத்தார்.

“சபாநாயகர் அவர்களே! அன்று ரெலோ இயக்கத்தின் தலைவராக இருந்த குட்டிமணியை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியால் 1982 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக பெயர் குறிப்பிடப்பட்டார். அப்போது தேர்தல் ஆணையாளர் அதை சட்ட ரீதியில் வர்த்தமானிப் பத்திரிகையில் அறிவிப்பையும் செய்தார். அதை பாராளுமன்ற செயலாளருக்கும் சட்டப்படி அறிவித்தார். குட்டிமணி அப்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர். குட்டிமணி அப்போது தன மீதி விதிக்கப்பட்ட மரணதண்டையை எதிர்த்து மேன்முறையீடு செய்திருந்தார். ஆனால் அன்றைய பாராளுமன்ற சபாநாயகர் பாக்கீர் மாக்கார்; குட்டிமணியை சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு கூட அனுமதிக்கவில்லை. அதற்கு அவர் அரசியலமைப்பின் 89, 91  ஆகிய விதிகளை சுட்டிக்காட்டினார். 

அரசியலமைப்பை பாதுகாப்பது சபாநாயகரான உங்கள் தலையாயக் கடமை. சபாநாயகர் பாக்கீர் மாக்கார் ஒரு முன்மாதிரியான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார். ஆனால் நீங்கள் அரசியலமைப்பின் அந்த விதிகளை மீறி இந்த முடிவை எடுத்திருப்பதா மூலம் அரசியலமைப்புக்கு முரணாக நடந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன்.”

சஜித் பிரேமதாசவின் இந்த உரைக்கு பதிலளித்த சபாநாயகர்

இந்த வாதத்தை இங்கல்ல நீங்கள் நீதிமன்றத்தில் முன்வைத்திருக்கவேண்டும். ஏனென்றால் நீதிமன்றம் இப்போது அனுமதியளித்திருக்கிறது.”  என்றார்.

சபாநாயகரின் இந்தக் கூற்றுக்கு மீண்டும் பதிலளித்த சஜித்,

“நீதிமன்றத்தினதோ, நீதிபதிகளினதோ தீர்ப்பையிட்டு நான் கருத்துச் சொல்வது அறமல்ல. சபாநாயகர் என்றவகையில் பாராளுமன்றத்தின் கெளரவம், சுயாதீனத்தை பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றதே தவிர ஜனநாயகத்தின் பிரதான தூண்களாக கருதப்படும் நீதிமன்றம் நிறைவேற்றுத்துறை, பாராளுமன்றம் என்ற மூன்று துறைகளில் ஏனைய இரண்டுக்கும் பொறுப்புக்கூற நீங்கள் கடமைப்பட்டில்லை. யாருக்கும் அடிமைப்படாமல், சுந்திரமாக தீர்மானம் எடுக்கலாம். சபாநாயகர் என்கிற வகையில் நீங்கள் முன்னாள் சபாநாயகர் அனுரா பண்டாரநாயக்கவின் தீர்ப்பை நீங்கள் முன்னுதாரணமாக கையாண்டிருக்கவேண்டும். அனுரா பண்டாரநாயக்க சபாநாயகராக இருந்து காட்டிய முன்மாதிரியை பார்க்கவேண்டும்.” 

இவ்வாறு சுட்டிக்காட்டிய சஜித் அரசியலமைப்பின் 89, 91 ஆகிய பகுதிகளையும் வாசித்துக் காட்டினார். “இந்த அரசியலமைப்பு விதிகளை விட இது தொடர்பில் வேறேதும் உயர்ந்தபட்ச விதிகள் உண்டா என்று உங்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்” என்று சபாநாயகரிடம் கேட்டார்.

ஆனால் இந்த கேள்விகளுக்கு சபாநாயகரால் ஒழுங்கான பதிலை சபையில் அளிக்க இயலாது போனது. அங்கு சபைத் தலைவராக இருந்த தினேஷ் குணவர்தன வழமைபோல ஆவேசமாக கத்தியபடி இந்த உரையை ஹன்சாட்டில் பதிவு செய்யக் கூடாது என்றார். “இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயத்தை உங்கள் விருப்பங்களின் பேரில் ஹன்சாட்டிலிருந்து நீக்குவதற்கு முடியாது” என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக பாராளுமன்றத்துக்குள் இடம்பெற்ற விசாரணையை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவொன்றை வழங்கியிருந்தது. அப்போது அந்த உத்தரவை சபாநாயகராக இருந்த சமல் ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.

செப்டம்பர் 08 அன்று ஜேவிபி தலைவர் அனுரா குமார திசாநாயக்க ஆளுங்கட்சியினரின் கடும் இடையூறுகளின் மத்தியில் இது குறித்து நீண்ட உரையை நிகழ்த்தினார். மிகவும் முக்கியமான பேச்சு அது.

“நமது சிறை விதிகளின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை எல்லா சிறையிலும் வைத்திருப்பதில்லை. அதற்கென்று போகம்பர, வெலிகட, அகுனகொலபெலஸ்ஸ என தனித்துவமான சிறைகளே ஒதுக்கப்பட்டுள்ளன. அதுபோல அவர்களை மற்ற கைதிகளில் இருந்து வேருபிரித்தறிவதற்கு என்று தனியான சீருடை வழங்கபடுகிறது. ஏனைய சிறைக் கைதிகளுடன் அவரை கலந்து வைப்பதில்லை. ஏன்? ஏனென்றால் அவருக்கு தண்டனையிலேயே உச்ச தண்டனை வழங்கப்பட்டிருகிறது. எனவே அக்கைதி தப்பிவிட வாய்ப்பிருக்கிறது என்கிற சந்தேகத்தால் பாதுகாப்பு குறைந்த இடத்தில் அவரை வைப்பதில்லை. ஒரு மரண தண்டனைக் கைதி அந்த மரணத்தை முன் கூட்டியே தனக்கு வரவழைத்துக்கொள்ளக் கூடிய வகையில் தற்கொலைக்கு கூட முயற்சிக்கலாம். அவர் தப்பிப்போக முயற்சித்தாலோ, அல்லது மேலும் ஏதேனும் குற்றங்களை இழைத்தாலோ, அது மட்டுமன்றி இன்னும் கொலைகளைச் செய்தாலோ கூட அக்கைதி பெறப்போவது அதே மரண தண்டனையைத் தான். அதற்கு மேல் ஒரு தண்டனை கிடையாது. எனவே தான் இவற்றுக்கு வாய்ப்பற்ற வகையில் அவரை கடும் பாதுகாப்புடன் வைத்திருப்பார்கள். பொது இடங்களில் அக்கைதியின் நடமாட்டத்தை தடுத்திருப்பார்கள். இப்படிப்பட்ட காரணங்களால் மேன்முறையீடு செய்த கைதிகளுக்கு சில நேரங்களில் பிணை வழங்கப்படும், ஆனால் மரண தண்டனைக் கைதிகளுக்கு ஒருபோதும் பிணை வழங்கப்படுவதில்லை. அதுமட்டுமன்றி மேன்முறையீட்டு காலப்பகுதியில் அவரை வேறு சாதாரண சிறைகளுக்கு மாற்றப்படுவதுமில்லை. அதே சிறைக்குள் தான் மீண்டும் தள்ளப்படுவார். சீருடை மட்டும் சற்று மாற்றப்படும்.”


குட்டிமணிக்கு மறுக்கப்பட்ட நீதி


டெலோ இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான குட்டிமணி என்று பலராலும் அறியப்பட்ட  செல்வராஜா யோகசந்திரன் பொலிசார் மீதான தாக்குதல், வங்கிக் கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் தேடப்பட்டு வந்த நிலையில் 01.04.1981அன்று படகொன்றில் தமிழகத்துக்கு செல்ல முயற்சிக்கும் போது தங்கத்துரை, தேவன் ஆகியோருடன் சேர்த்து கைது செய்யப்பட்டிருந்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பல குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடந்து கொண்டிருந்தது. பல்வேறு சித்திரவதைகளுக்கும் ஆளாகியிருந்தார்கள் அவர்கள். குட்டிமணி ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்ற 13.08.1982 அன்று தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்புக்கு முன்னரே 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் குட்டிமணியை கூட்டணியின் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்கிற அழுத்தம் கூட்டணிக்குள் எழுந்திருந்தது. 78 அரசியல் யாப்பை புறக்கணித்த கூட்டணி ஜனாதிபதித் தேர்தலையும் நிராகரித்துத் தான் ஆக வேண்டும் என்று அமிர்தலிங்கம் மறுப்பு தெரிவித்தார்.

இந்த நேரத்தில் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு இறந்துபோனார். வட்டுக்கோட்டை தொகுதியின்  அவரது வெற்றிடத்தை நிரப்புவதற்கு குட்டிமணியை தெரிவு செய்யும் முடிவை கூட்டணி 14.10.1982 அன்று எடுத்தத்துடன் அதை தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்தது.

குடிமணியை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தோம் என்பது தொடர்பில் கூட்டணி வெளியிட்ட நீண்ட அறிக்கையில்..

“...குட்டிமணியின் நியமனமானது நாடெங்கிலும் அவ்வப்போது அரசாங்க முகவர்களான பொலிஸாரினாலும் அரசாங்கப் படைகளினாலும் தமிழ் மக்கள் மீது, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அரச பயங்கரவாதத்துக்கு எதிரான எதிர்ப்புக்குரலாக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பார்க்கிறது.  

மேலும், எல்லா நியாயங்களுக்கும் முரணாக ஜூரி முறை வழக்காடலை நிராகரிக்கும், நீண்ட தடுத்துவைப்பை ஏற்படுத்தும், ஒப்புதல் வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளும், அதற்காக தமிழ் இளைஞர்களைப் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கும் கொடூரச் சட்டமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரானதொரு அடையாள நடவடிக்கையாக இந்நியமனத்தை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பார்க்கிறது.

அத்தோடு, குட்டிமணி மற்றும் ஜெகன் மீது விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிரான குரலாகவும் இந்நியமனத்தைப் பார்க்கிறோம். மேலும், ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுவதற்காக பனாகொடை இராணுவ முகாம், ஆனையிறவு இராணுவ முகாம் மற்றும் குருநகர் இராணுவ முகாம் ஆகியவற்றில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு ஆதரவாகவும் சித்திரவதைக்குள்ளாக்குபவர்களுக்கு எதிரான குரலாகவும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, இந்த நியமனத்தைக் காண்கிறது.

மேலும், தமிழ் இளைஞர்கள் அனைவரையும் அரசியல் நோக்கம் கொண்ட பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் போக்கை எதிர்த்து அரசாங்கத்துக்கு நாம் வழங்கும் அழுத்தமாகத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இந்நியமனத்தைக் காண்கிறது”

என்று அந்த அறிக்கையில் தெரிவித்தது.

ஆனால் மரண தண்டனைக் விதிக்கப்பட்ட கைதி நாடாளுமன்றம் சென்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு சிறைச்சாலை ஆணையாளர் அனுமது கொடுக்க மறுத்தார். மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தான் வர்த்தமானிப் பத்திரிகையில் குட்டிமணியின் நியமனம் வெளியிடப்பட்டிருந்தது என்றும், அது சட்ட ரீதியில் செல்லுபடியற்றது என்றும் சிறைச்சாலை ஆணையாளர் பிரியா தெல்கொட அறிவித்தார்.

குட்டிமணி நாடாளுமன்ற உறுப்பினராக தான் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு அனுமதி கோரி மேன்முறையீடு செய்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அது தொடர்பில் உத்தரவிடும் அதிகாரம் இல்லையென்று சிறைச்சாலை தரப்பில் வாதிடப்பட்டது. இறுதியில் குட்டிமணியின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

நியமனம் அறிவிக்கப்பட்டதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவேண்டும். அந்த மூன்று மாதங்கள் நிறைவடைவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் 24 ஜனவரி 1983 அன்று அந்த நியமனத்திலிருந்து விலகிக்கொள்வதாக குட்டிமணி அறிவித்தார். 1983 பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ஜே.ஆரால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் மூலம் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டது. ஆனால் அவரின் ஆயுள்  ஐந்தே மாதங்களில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் இனவெறியர்களால் குரூரமாக பறிக்கப்பட்ட கதையை நாம் அறிவோம்.

அன்று குட்டிமணி பாராளுமன்றத்துக்கு நுழைய தடுத்த அதே அரசியல் சட்டம் இன்று சொக்கா மல்லிக்கு அனுமதித்திருக்கிறதென்றால் அதன் பின்னணியில் இனவாதமும், அதிகாரத்துவ நலன்களுமே காரணமாக இருக்க முடியும். “ஒரே நாடு ஒரே நீதி” என்கிற ராஜபக்சவாத கோசம் வெறும் அரசியல் பம்மாத்து என்பதை நாமறிவோம். அது வெறும் ஆதிக்க அதிகார சக்திகளுக்கும், அதை வழிநடத்தும் சித்தாந்தங்களுக்கு மட்டுமே சலுகை செய்யும் என்பதையும் அறிய பெரிய ஆராய்ச்சிகள் எதுவும் நமக்கு தேவையில்லை.

நன்றி - தினக்குரல் 


பெண்களுக்காக போராடும் இந்திய ரோஸ் இயக்கம் - தமிழில் பவித்திரா

பெண்களை இரவு பகலாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துகொண்டு, அவர்களை அடிமைகளாக நடத்தும் சமூகத்தில் பெண்களே தங்களது கைகளில் தடிகளை  எடுத்துக் கொண்டு, பெண்களை துஷ்பிரயோகம் செய்தவர்களை ஓட ஓட விரட்டினால்....?

நிச்சயமாக துஷ்பிரயோகம் குறைந்து விடும்.

ஆம் இதை நாங்கள் சொல்லவில்லை. இந்தியாவின் “குலாபி கேங்” அல்லது “ரோஸ் இயக்கம்” என்று கூறப்படுகிற அமைப்பின் உறுப்பினர்கள்.

“ஆமாம் நாங்கள் துஷ்பிரயோகம் செய்தவர்களை அடிக்கிறோம்,  நாங்கள் அவர்களை கண்டுபிடித்து,  நீலம் பூக்குமளவுக்கு தடியால் அடிப்போம். அதன் பின் வேறு பெண்களிடம் அவர்கள் பிரச்சினை செய்வதற்கு சிந்தித்து கூட பார்க்க மாட்டார்கள்.”

இப்படி ரோஸ் இயக்க தலைவி குறிப்பிடுகிறார்.

குக்கிராமத்துப் புரட்சி

2006 ஆம் ஆண்டு இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில்  உள்ள புந்தல்கண்ட் என்னும் பிரதேசத்தில் பதவுசா என்கிற கிராமத்தில் குலாபி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு நான்கு தசாப்தங்களாக வாழ்ந்து கொண்டிருந்த,  பால்தேவி என்கிற பெண் தான் கிராமவாசிகளையும் சேர்த்துக்கொண்டு ஒரு சிறிய அமைப்பாக இதனை ஆரம்பித்தார்கள். சித்திரவதை, பால்ய விவாகம், பெண்களின் கருக்கலைப்பு, வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற பெண்களுக்கு  தினமும் நிகழ்கின்ற சித்திரவதைகளுக்கெதிராக குரல்கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாக அமைந்தது. வறுமையான, கல்வியறிவற்ற ஏராளமான பெண்கள் வசித்துவந்த  அக்கிராமத்தில் இத்தகைய சித்திரவதைகள் பெறுகின.

தங்களது பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக எங்கேயாவது அநீதி இழைக்கப்பட்டதாக அறிந்தால், அங்கு சென்று அப்பிரச்சினையில் தலையிட்டு  அமைதியாக பேச்சுவார்த்தை நடாத்தி நியாயம் கிடைக்கசெய்ய முயற்சிப்பார்கள். அது சாத்தியப்படாத பட்சத்தில் அச்சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு தடியால் அடித்து தண்டனை வழங்கும் ஒரு வழக்கத்தை உருவாக்கிக்கொண்டார்கள்.


ரோஸ் புடவையும், தடியும் 

அந்த இயக்கத்தின்  அங்கத்தவர்கள் ரோஸ் நிறத்திலான  புடைவைகளை அணிந்தாந்தால் அவர்கள்  “குலாபி” என்றோ அல்லது “ரோஸ் இயக்கம்”  என்றோ அழைக்கப்பட்டார்கள். அதுதவிர தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கும், துஷ்பிரயோகம் செய்யும் நபர்களை தாக்குவதற்கும் தாம் எங்கு சென்றாலும் நீண்ட பலமான தடியை உடன் கொண்டு செல்வது ஒரு வழக்கமாக அமைந்தது.

ஆரம்பத்தில் ஒரு சில பெண்களால் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில் இன்று 400,000 க்கும் அதிகமான இயக்க உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். இந்த இயக்கம் அந்த மாநிலம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்திய பணமதிப்பில் 500 ரூபாயை வருடாந்த சந்தாவாக செலுத்தி உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள முடியும். உறுப்பினருக்கு அடையாள அட்டை வழங்கும்போது மூங்கிளால் ஆன ஒரு தடியும் வழங்கப்படுகிறது.

இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இணையும் பெரும்பாலான பெண்கள்; மிகுந்த வறுமையினால் துன்பப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பது மாத்திரமல்ல; அவர்கள் இந்தியாவின் அடிமட்ட விளிம்புநிலை சாதியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். 


அநீதிக்கு எதிராக...

2006 ஆம்  ஆண்டு; உத்திர பிரதேசத்தில் உள்ள துஷ்கர என்கிற கிராமத்தில் வசித்து வந்த இளம்பெண்ணான ஜானகி தேவியும், அவரது காதலன் ஆன்ந்தகுமாரும் இருவீட்டாரின் எதிர்ப்புக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும் காதல் வாழ்க்கையை தொடங்கிய வேளை ஜானகிதேவி 15 வயதையும்,  ஆனந்தகுமார் இருபது வயதையும் தாண்டியுமிருந்தார். ஆனந்தகுமார் உயர்சாதியை சேர்ந்தவர் என்பதாலும், ஜானகி தேவியை விட வசதிபடைத்தவர் என்பதாலும் இக்காதலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

திருமணம் செய்துகொண்டு ஆனந்தகுமாரின் வீட்டில் வாழத் தொடங்கிய ஜானகிதேவி அங்கிருந்த உறவினர்களால் அதிகளவிலான சித்திரவதைகளையும் கொடுமைகளையும் சகித்தபடி வாழவேண்டியேற்பட்டது. இந்த சூழலில் அவள் கர்ப்பமடைந்ததால் நிலமை இன்னும் மோசமடைந்தது. இதன் உச்ச கட்டமாக ஆனந்த குமாரின் பெற்றோர்கள்  அவள்மீது பெற்றோலை ஊற்றி உயிரோடு தீ வைத்து கொன்றனர்.  அயலவர்கள் தீயை அணைத்து அவளை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றாலும் உயிர்தப்ப இயலவில்லை.

மிகுந்த வேதனையுடன் இருந்த ஜனாகிதேவியின் தந்தை காவல் நிலையத்திற்கு சென்று, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்  மீது புகார் அளித்திருந்தாலும், அவரின் புகாரை காவல் துறையினர் பதிவு செய்ய மறுத்துவிட்டனர். ஆனந்தகுமாரின் குடும்பம் வசதிபடைத்த உயர்சாதி பின்னணியைக் கொண்டிருந்ததே அதற்குக் காரணம். இறுதியில் ஜானகிதேவியின் தந்தையான தினேஷ் பிரசாத் பாண்டே அடுத்ததாக  குலாபி இயக்கத்திடம் சென்றார். 

சந்தேகமின்றி பிரச்சினையை உறுதிசெய்துகொண்ட பின்; பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்ட குலாபி இயக்கத்தின் தலைவி; தினேஷ் பாண்டேயின் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பெண்கள் பலருடன் வந்து போலீசை சுற்றிவளைப்பதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை எச்சரித்தார்.

“நாங்கள் வன்முறைக்கு ஆதரவு தருபவர்கள் அல்லர். ஆனாலும் சொல்லி விளக்க முடியாதவர்களும் இருக்கிறார்கள். என்று குலாபி இயக்கத்தவர்கள் கூறுகிறார்கள். 

குலாபி இயக்கம் ஏன் அவசியம்?

2013 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய குற்றபதிவுகள் திணைக்கள பதிவுகளின் படி  2013 ஆம் ஆண்டு மட்டும் 24,923 பாலியல் துஷ்பிரயோக குற்றங்கள் பதிவு செய்யபட்டுள்ளன. பதிவு செய்யப்படாத சம்பவங்களின் எண்ணிக்கை இதை விட அதிகமானதாக இருக்குமென அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதை விட தினசரி நடக்கின்ற ஆட்கடத்தல், அசீட் வீசுதல், தாக்குதல்கள், படுகொலைகள் என்பனவும் அதிகம். 

இந்தியாவில் மத, கலாச்சார வழக்கத்தில் ஆண்களை விட பெண்கள் கீழான இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாலும், இந்தியாவில்  தொலைதூர பின்தங்கிய கிராமங்களில் அறியாமையும், வறுமையும் அதிகமாக இருப்பதனாலும், பெண்கள் மீதான தாக்குதல்களும், துன்புறுத்தல்களும் அத்தனை கவனத்தில் எடுக்கப்படுவதில்லை. 

இதன் காரணமாக பெருமளவு பெண்கள் இந்த இயக்கத்திடம் உதவிகோரி வருகின்றனர். இத்தகைய பெண்களின் துயர்துடைக்க உருவான அமைப்புக்களில் ஒன்று தான் குலாபி இயக்கம்.

குற்றவாளிகளைத் தாக்கி வன்முறை ரீதியில் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதையும், அதற்கென்று நீதித்துறை இருக்கிறது என்றும் குலாபி இயக்கத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கிற பலர் கூறுவதுண்டு. 

ஆனாலும் சட்டத்திற்கும் பணியாமல், பெண்களை  சித்திரவதைகளுக்குட்படுத்துவதற்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள் அச்சட்டத்தை சரியாக நிறைவேற்றாத நிலையில், பெண்களே தமது சுயபாதுகாப்புக்காக தடிகளையும், பொல்லுகளையும் கையில் எடுப்பதை எதிர்க்க எவருக்கும் தார்மீக உரிமை இல்லை.

2012ஆம் ஆண்டு நிஷ்தா ஜைன்  என்கிற நோர்வேஜியரும், டேனிஸ் நாட்டு படைப்பாளி ஒருவரும் சேர்ந்து “குலாபி கேங்” (Gulabi Gang) என்கிற தலைப்பில் ஒரு ஆவணப்படத்தை உருவாக்கினார்கள். 2014இல் இந்தியா முழுதும் இந்த ஆவணப்படம்  காட்சிப்படுத்தப்பட்டதுடன் பல பல விருதுகளை வென்றது.

நன்றி - தினகரன் 27.09.2020

https://roar.media இணையத்தளத்துக்காக Amanda Abeysooriya எழுதிய இக்கட்டுரையை தமிழாக்கம் செய்தவர் பவித்திரா

சுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு! தேரர் புறக்கணிப்பு! - என்.சரவணன்

மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம். நீதிமன்றத்துக்கும் போகப்போவதில்லையாம்.

அவருக்கு அவரின் மொழியில் தான் அனுப்பியிருக்க வேண்டும். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. ஆனால் அதனால் நீதிமன்றத்துக்கு போகப்போவதில்லை உத்தரவை புறக்கணிக்கிறேன் என்று பொலிஸாரிடம் திருப்பிக்கொடுத்து அனுப்பும் உரிமையை இலங்கையில் ஏனைய பிரஜைகளுக்கும் உண்டா?

குறிப்பாக இத்தனை காலம் அரச நிறுவனங்களிலும் இருந்தும் தமிழர்களுக்கு கிடைக்கின்ற அறிவித்தல்கள், அரச கடிதங்கள் அனைத்தும் தமிழில் தான் கிடைக்கின்றனவா?

ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு எதிராக 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக அவரே சமீபத்தில் கூறியிருந்தார். நிச்சயம் அதற்கான கடிதங்கள் எதுவும் அவருக்கு தமிழில் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அப்படி கிடைத்திருந்தால் அவர் அப்போதே பொங்கி எழுந்திருப்பார். இப்போது இந்த விடயம் தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவின் கீழ் பல சிங்களவர்கள் கடுமையாக கொதித்தெழுந்து தமிழர்களை தூசனத்தால் திட்டித் தீர்ப்பதை அவதானிக்க முடிந்தது. சிங்கள பௌத்த நாடு இது என்பதை இவர்கள் அறிய மாட்டார்களா என்று ஆவேசமாக கருத்திட்டு வருகிறார்கள். இரண்டே மணித்தியாலத்துக்குள் ஆயிரக்கணக்கானோர் இதை பகிர்ந்துவிட்டார்கள்.

பௌத்தர்களே... சிங்கள பௌத்த மரபுகளை தேரர்கள் மட்டும்தான் காக்க வேண்டுமா...?

கிழக்கில் அழிக்கப்பட்டுவரும் பௌத்த மரபுகளை காக்க பாடுபடும் நமது ஆம்பிடியே தேரரை பலப்படுத்த 30 அன்று மட்டக்களப்பு ஸ்ரீ மங்கலாராமயவில் திறந்து தேரரைக் காத்திடுவோம்!

செப்டம்பர் 30ஆம் திகதி அவருக்கு ஆதரவாக மட்டக்களப்பில் சிங்கள பௌத்தர்களை அணிதிரளுமாறு போஸ்டர்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இதை வைத்து சிங்கள ஊடகங்களும்ம் பேரினவாதத் தரப்பும் அடுத்த இரு வாரங்களுக்கு அரசியல் செய்யத் தான் போகின்றன. தற்போதைய பேரினவாத அரசுக்கு பெருந்தீனியாகத் தான் போகின்றன. தமிழர்களை நசுக்க இதையும் ஒரு காரணமாக கையிலெடுக்கத்தான் போகின்றன.

ஆம்பிடியே சுமணரதன தேரர் இலங்கையின் சண்டித்தனமான பிரபல தேரராக அறியப்படுபவர். கடந்த வாரம் கிழக்கில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்க முயற்சித்ததுயும் அவர்களை ஒரு கொட்டிலுக்குள் தடுத்து வைத்திருந்ததும் காணொளி செய்தியாக வெளி வந்திருந்ததை கவனித்திருப்போம். அரச அதிகாரிகள், போலீசார் என பலரை இவ்வாறு இதற்கு முன் தாக்க முனைந்தையும் அறிந்திருக்கிறோம். ஆனால் அவருக்கு எதிராக நீதித்துறை முறையாக செயற்பட்டதில்லை என்பதையே அவர் இன்னமும் சுதந்திரமாகவும், அதை அடாவடித்தனத்துடனும் நடந்துகொள்வதை வைத்து கணிக்க முடிகிறது.

கடந்த 22ஆம் திகதியன்று ஆம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு அஸ்கிரிய, மல்வத்து மகாநாயக்க பீடாதிபதிகள் உடனடியாகப் புனர்வாழ்வளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார். 

அவரின் பௌத்த காவி உடை அவரின் அடாவடித்தனத்துக்கு வழங்கியிருக்கிற லைசன்ஸ் ஆக அவர் கருத்திக்கொண்டு இயங்கிக்கொண்டிருப்பதையே இவை காட்டுகிறது.

“ஒரு நாடு ஒரு சட்டம்” என்கிற ராஜபக்ஷ சித்தாந்தம்; சிங்களத்தையும், பௌத்தத்தையும், அராஜகத்தையும் அமுல்படுத்துவதை அல்லவா குறிக்கிறது.

நன்றி - தினக்குரல்

காரின் சக்கரத்தில் காற்று போனதால்; ஒரு அரசாங்கமே கவிழ்ந்த கதை! (தமிழில் பவித்ரா)

1960 ஜீலை மாதம் நடந்த பொதுதேர்தலின் பின்னர்  சிறிமா பண்டாரநாயக்காவின்  அரசு ஆட்சிக்கு வந்தநேரத்தில்   75 பாராளுமன்ற ஆசனங்களை வென்றது. அப்போது பாராளுமன்றில் பெரும்பான்மை  151 ஆசனங்கள் பெறுவதற்கு 76 ஆசனங்கள் தேவைப்பட்டது. சுதந்திர கட்சியிடம் அப்போது 75 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே  இருந்ததால், ஏதேனும் நிலைமையில் அரசு கவிழ்க்கக்கூடிய வாய்ப்பு எதிர்கட்சிக்கு இருந்தது.  ஆனால் 1964 ஆண்டில்  சிறிமா பண்டாரநாயக்க அரசை அப்போதைய முக்கியமான அமைச்சர் ஒருவரின் உதவியுடன் கவிழ்த்தனர்.

1963ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் அந்த நேரத்தில் அரசியல் அரங்கில் வலிமையானவர்களாக இருந்த மூன்று பெரும் இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் ஐக்கிய முண்ணனி ஆகியன இணைந்து ஒரு ஒப்பந்ததை செய்துகொண்டன. அதன் பின்னர் வரவிருக்கும் பொதுதேர்தலை முகம்கொடுப்பதற்காக இந்த கட்சிகள் இணைந்து இடதுசாரி ஐக்கிய முண்ணனி என்கிற புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கினர்.  1963 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 திகதி கொழும்பு நகரத்தில் இடதுசாரி ஐக்கிய முன்னணி  ஒன்றிணைந்து நாலா திசைகளிலிருந்தும் பெருமளவு மக்கள் கூடி பெரும் பேரணியுடன் ஆரம்பிக்கப்பட்டது. அன்று சுதந்திர சதுக்கத்தில் பெருமளவு மக்கள் கூடி இலங்கையின் இடதுசாரி அரசியலின் புதிய எழுச்சியை தோற்றுவித்தனர்.

கூட்டரசாங்கத்துக்கு வழிசெய்த பொரல்ல இடைத்தேர்தல்

1960 ஜீலையில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சிறிலங்கா சுதந்திரகட்சி உறுப்பினர் டொக்டர் டெனிஸ்டர் டி சில்வா பொரல்ல தொகுதியில் வெற்றிப்பெற்றார். 1963 நடுப்பகுதியில் அவரின் திடீர் இறப்பைத் தொடர்ந்து அவரின் ஆசனத்தை நிரப்புவதற்காக, 1964 ஆண்டு ஜனவரி 18 ம் திகதி மீண்டுமொரு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.  இந்தக் காலப்பகுதியில்  ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் எழுதியுற்றுக்கொண்டிருந்தது. ஐ.தே.க சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட ஆர்.பீ. லேநோரா இவ்இடைத்தேர்தலில் வெற்றிபெறுவார் என்கிற ஒரு பொது அப்பிராயம் நிலவியது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் பொரல்ல இடைத்தேர்தலில் இடதுசாரி ஐக்கிய முண்ணனியின் சார்பில் போட்டியிட்ட விவிலியன் குணவர்த்தன 423 மேலதிக வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். அப்போது ஆட்சியில் இருந்த சிறிலங்கா சுதந்திர கட்சி எந்த போட்டியாளரையும் இவ்இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தவில்லை. ஆனால் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டெனிஸ்டர் டி சில்வாவின் மனைவி  கமலா டி சில்வாவிற்கு சிறிலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்கியது. தேர்தல் முடிவில் கமலா டி சில்வா 1356 வாக்குகளைப் பெற்று படுதோல்வியடைந்தார்.  அப்போது பிரதமராக இருந்த சிறிமா பண்டாரநாயக்கவும் இத்தோல்வியால் அதிர்ச்சியடைந்தார்.

அரசாங்கமும் இடதுசாரி கட்சிகளும் இணைந்த கூட்டரசாங்கம்.

1964 ஆண்டு மார்ச் 21 ஆம் திகதி பலம்வாய்ந்த 14 தொழிற்சங்கங்கள் ஒன்றாக இணைந்து  என்.எம்.பெரேரா தலைமையின் கீழ் காலி முகத்திடலில் பாரிய பொது பேரணியை நடத்தியது. அன்றைய இடதுசாரி ஐக்கிய முன்னணி உள்ளிட்ட முக்கிய தரப்பினர் அரசாங்கத்திடம் 21 அம்ச கோரிக்கையை சமர்ப்பித்தது. 

இவ்வாறு இடதுசாரி ஐக்கிய முன்னணி பாரிய மக்கள் பலத்துடன் அரசியலில் முன்னிலைக்கு வருவது அத்தனை நல்ல சகுனமல்ல என்பதால் லங்கா சமசமாஜ கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிமா பண்டாரநாயக்க திட்டமிட்டார்.

அந்த நேரத்தில் அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த டி.பி. இலங்காரத்ன சமசமாஜ கட்சி தலைவர்களுடன் கலந்துரையாட நியமிக்கப்பட்டார். 

இறுதியில் சமசமாஜக் கட்சி அரசாங்கத்தில் இணைய முன்வந்த போதும் அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் அதை எதிர்த்தனர். அதனால் 1964 ஆண்டு மே 9ஆம் திகதி சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்தில் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டது. அந்த திட்டத்திற்கு ஆதரவாக 212 வாக்குகள் கிடைத்ததுடன் எதிராக 4 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.  அதேவேளை  லங்கா சமசமாஜ கட்சியில் எட்மண்ட் சமரகொடி தலைமையிலான தரப்பு அரசாங்கத்துடன் இணைவதை முற்றிலும் எதிர்த்தனர்.  அரசாங்கத்துடன் இணைவது தொடர்பாக லங்கா சமசமாஜ கட்சியின் மத்தியக்குழுவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மேலதிகமான ஒரு வாக்கால் தோற்றடிக்கப்பட்டது.

ஆனாலும் சற்றும் தளராத கட்சித் தலைவர் என்.என்.எம் பெரேரா 1964 ஆம் ஆண்டு ஜீன் 07ஆம் திகதி கட்சியின் பொதுச்சபையைக் கூட்டி இந்த யோசனையை வாக்கெடுப்புக்கு விட்டார். அந்தத் திட்டத்துக்கு  ஆதரவாக  507 வாக்குகள் கிடைத்ததுடன், எதிராக 176 வாக்குகள் அளிக்கப்பட்டன. அவ்வாறு அந்த யோசனை நிறைவேற்றப்பட்டதோடு,  ஜீன் 11ம் திகதி சமசமாஜ கட்சி அரசாங்கத்துடன்   சேர்ந்து கூட்டரசாங்கத்தை அமைத்தது. இதன் மூலம் சமசமாஜ கட்சிக்கு பின்வரும் வகையில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. 

என்.எம், பெரேரா _ நிதி அமைச்சர்

அனில் முணசிங்க – போக்குவரத்து அமைச்சர்

ஜமில் குணவர்த்தன – அரச தொழில் அமைச்சர் 

விவிலியன் குணவர்த்தன- வீடு மற்றும் உள்ளுராட்சி பிரதி அமைச்சர்

சந்திரா குணசேகர – கலாச்சார மற்றும் சமூக சேவை பிரதி அமைச்சர். 

புதிய கூட்டரசாங்கத்தால் நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்தது. 

லங்கா சமசமாஜ கட்சி; அரசாங்கத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டாலும் மக்கள் ஐக்கிய முண்ணனியும், கம்யூனிஸ்ட் கட்சியும் அரசாங்கத்துடன் ஒன்றிணையவில்லை. அன்று சமசமாஜ கட்சி வெளியேறியதோடு இடதுசாரி ஐக்கிய முன்னணி என்கிற சக்திவாய்ந்த கூட்டணியின் பலம் சரிந்தது. அது சிறிமா பண்டாரநாயக்க அரசாங்கம் எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்தது. இடதுசாரி ஐக்கிய முன்னணி வீழ்ந்த அதே வேளை கூட்டரசாங்கத்துக்குள்ளும் குழப்பங்கள் எழுந்தன. இதன் விளைவாக கூட்டரசாங்கத்தில் தபால் அமைச்சரசாக இருந்த மஹாநாம சமரவீர  அந்த பதவியில் இருந்து இராஜனாமா செய்தார். அதுபோல ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபலமான முன்னணித் தலைவராக இருந்த சீ.பீ.த. சில்வா தலைமையிலான அணியும் கூட்டரசாங்கம் பற்றி திருப்தியுடன் இருக்கவில்லை. இதன் விளைவாக அரசாங்கத்துக்குள்ளும் உட்கட்சி மோதல் உருவானதை உணர முடிந்தது.

சிம்மாசன உரைக்கு எதிராக 14 அரசாங்க உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

1964 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி அரசாங்கத்தின் சிம்மாசன உரைக்கான வாக்களிப்பு  இடம்பெற்றது. வாக்கெடுப்பு தொடங்கும்போதே சபைத் தலைவரான சீ.பீ.த.சில்வா எதிர்கட்சியின் இருக்ககைகளுக்கு சென்று அமர்ந்த போது எதிர்க்கட்சியினர் ஆரவாரமாக கரகோஷம் எழுப்பினர். அந்த சிம்மாசன உரை நடைபெற்ற போது அவ்வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்த அரசாங்க உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு :

1. சீ.பீ.த சில்வா – சபைத்தலைவர், நீர்ப்பாசன, நிலங்கள், விவசாய வேளாண்மை, மற்றும் மின்சார அமைச்சர்.

2. மஹாநாம சமரவீர- மாத்தறை உறுப்பினர் 

3. விஜேபாக்கு விபேசிங்க – மீரிகம உறுப்பினர்

4. இந்திர சேன டி சொய்சா – அம்பாறை உறுப்பினர் 

5. எஸ்.பீ. லேனவ- கெகிராவ உறுப்பினர் 

6. பீ.பீ. விக்ரமசூரிய – தெவிநுவர

7. சேர் ராசிக் பரீத் – மத்திய கொழும்பு உறுப்பினர் 

8. ஏ.எச் .டீ .சில்வா- பொலநறுவை உறுப்பினர்

9. என்டன் விபேசிங்க – மஸ்கெலிய உறுப்பினர்

10. சந்திரசேன முணசிங்க – ரத்தொட்ட உறுப்பினர்

11. டீ.ஈ.திலகரத்ன- ரத்கம உறுப்பினர்

12. லக்மன் டி சில்வா- பலபிட்டிய உறுப்பினர்

13. அல்பிரட் சில்வா – மொனராகல உறுப்பினர்

14. சிங்கல்டன் செமன் – நியமிக்கப்பட்ட உறுப்பினர்

ஒரு வாக்கினால் தோல்வியடைந்த அரசாங்கத்தின்  சிம்மாசன உரை 

அன்றைய வாக்கெடுப்பின் இறுதியில் அரசாங்கத்திற்கு ஆதரவாக 73 வாக்குகள் கிடைத்தபோதும் எதிராக 74 வாக்குகள் அளிக்கப்பட்டன. அங்கே சௌரியமூர்த்தி தொண்டமான் வாக்களிக்காதது முக்கிய ஒரு அம்சமாக காணப்பட்டது. அத்துடன் அந்த  வாக்கெடுப்பில் அரசாங்க உறுப்பினர்கள் மூவருக்கு வாக்களிக்க இயலாமல் போன நிலை ஏற்பட்டிருந்தது. அந்த நேரத்தில் லண்டன் நகர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த என்.எம்.பெரேராவும், கனடாவில் சுற்றுப்பயணத்தில் ஈடுப்பட்டிருந்த பெர்னாட் சொய்சாவுக்கும் வாக்களிப்பில் கலந்துக்கொள்ள முடியவில்லை. அத்துடன் அன்று பஸ்ஸர உறுப்பினராக இருந்த அமரானந்த ரத்னாயக பாராளுமன்றிற்கு வரும்போது அவரது காரின் சக்கரத்தில் காற்று போனதால் சரியான நேரத்திற்கு அங்கே வந்து சேர முடியவில்லை. அன்று சிலவேளை அமரானந்த ரத்னாயக்கவின் வாக்கு அரசாங்கத்துக்கு கிடைத்திருந்தால் இரு தரப்பும் 74 என்கிற விகிதத்தில் வாக்குகளைப் பெற்றிருப்பார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்தப் பாராளுமன்ற உறுப்பினரின் காரின் சக்கரத்தில் காற்று போனதால் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது; விசித்திரமான நிகழ்வாக கருத முடியும்.


https://roar.media/ இணையத்தளத்தில் Nadun Liyanagedara என்பவரால் சிங்கள மொழியில் எழுதப்பட்டது இக்கட்டுரை. இக்கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பை நமது மலையகம் இணையத்தளத்துக்காக செய்திருப்பவர் யாழ் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளராக பணியாற்றும் பவித்ரா அவர்கள். இது அவரின் முதல் மொழிபெயர்ப்பு கட்டுரையாகும்.

சொக்கா மல்லிக்கு வளைந்த நீதி! குட்டிமணிக்கு களைந்த நீதி! - என்.சரவணன்

தேர்தலுக்குப் பின்னர் கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி பராளுமன்றம் முதற் தடவையாக கூடியபோது பாராளுமன்றத்தின் மொத்த 225 உறுப்பினர்களில் 222 பேர் மட்டுமே கலந்துகொண்டிருந்தனர். மூவரில் “அபே ஜாதிக பெரமுன” என்கிற கட்சியின் உறுப்பினர் (ஞானசார தேரர் தரப்பு) ஒருவர், அடுத்த இருவர் சிறைச்சாலையில் கைதிகளாக இருப்பவர்கள். ஒருவர் இரத்தினபுரி மாவட்டத்தில் இரண்டாவது அதிகப்படியான வாக்குகளைப் பெற்று தெரிவான மரண தண்டனைக் கைதி “சொக்கா மல்லி” என்று அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர. அடுத்தவர் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் ஐந்து வருடங்களாக சிறையில் இருந்தபடி இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகப்படியான விருப்புவாக்குகளைப் பெற்ற பிள்ளையான்.

இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக ஆகியிருப்பது உள்ளூர் செய்தியோடு மட்டுப்படவில்லை. அது சர்வதேச செய்தியாக இந்த நாட்களில் வளம் வந்துகொண்டிருக்கிறது. ஜனநாயக கட்டமைப்பொன்றில் இது ஒரு  பிழையான முன்மாதிரி என பல முனைகளிலும் இருந்தும் கருத்துக்கள் வெளிவந்தமுள்ளன. அப்படியென்றால் 1982இல் குட்டிமணிக்கு மட்டும் ஏன் அந்த சந்தர்ப்பம் வழங்கவில்லை என்கிற விவாதங்களும் இப்போது எழுப்பப்படுகின்றன. இதை சற்று விரிவாகவே பார்ப்போம்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தலில் நிறுத்தப்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சார கூட்டம் கஹாவத்த பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது அக்கூட்டத்தில் கலந்துகொண்ட மைத்திரிபாலாவின் ஆதரவாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டு இருவர் படுகாயமடைந்தனர். இதன் சூத்திரதாரியான பிரேமலால் மற்றும் அவருடன் இருந்த மூன்று பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ் வழக்கு விசாரணை, இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள உட்பட 59 பேரின் சாட்சியங்களும், 16 தடயப் பொருட்களும் அவர்களுக்கு எதிரான வழக்கில் சட்ட மா அதிபரால் முன்வைக்கப்பட்டன.


இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில் தான் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த விசாரணையின் போது பிணை கோரியிருந்த பிரேமலால் ஜயசேகர சந்தேக நபராக கருதப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இப்படியான நிலையில் தான் தேர்தலுக்கான வேட்பு மனுவை பிரேமலால் ஜயசேகர தாக்கல் செய்து, நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுவில் இடம்பிடித்தார்.

ஆனால் அவ்வழக்கில் பிரேமலால் ஜயசேகரவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் கடந்த ஜுலை மாதம் 31ஆம் தேதி பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை விதித்து இரத்தினபுரி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்க முடியுமா என்று தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான  ரத்னஜீவன் ஹூல்லிடம் வினவியிருந்தபோது அதற்கு அவர்

“இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ள 6 பிரதான விடயங்களில் வேட்பாளரொருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என்ன என்பது உள்ளடக்கப்படவில்லை. எனவே பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்று அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அதற்கான தீர்வு வழங்கப்பட்டால் மாத்திரமே இதற்கான தீர்வு கிடைக்கும்” என்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க 2015 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது இரட்டை பிரஜாவுரிமையுடையவர் என்பதற்காக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இரு வருடங்களின் பின்னர் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என்ற தீர்ப்பினால் அவர் பதவி விலகினார். வழக்கு தொடர்ந்து இரண்டு வருடங்களின் பின்னரே தீர்ப்பு வழங்கப்பட்டது. எனவே அது வரையில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக அவர் பதவி வகித்தார். பாராளுமன்ற உறுப்பினராக அக முடியாத ஒருவர் வேட்பாளராக ஆக முடியும் என்கிற ஒரு விதி சட்டத்தில் உள்ள குறைபாடே. தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் மீது வழக்கு தொடர்ந்து தான் அவ்விதிக்கு சட்ட வலுவை உருவாக்க வேண்டுமா? ஒரு வகையில் அது ஒரு வேட்பாளருக்கு இழைக்கப்படும் அநீதி. அதுபோல அவரை தெரிவு செய்கிற மக்களுக்கும் ஏற்படும் அநீதி. இது சட்டத்தின் முக்கிய குறைபாடு.


பிரேமலால் ஜயசேகர 1997 ஆம் ஆண்டு பிரேதச சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டவர். 2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகி மகாவலி அபிவிருத்தி பிரதி அமைச்சாராக பதவி வகித்தவர். அதன் பின்னர் அவர் கிராமிய தொழிற்துறை, சுய தொழில் பிரதி அமைச்சராகவும் இருந்தவர். மகிந்த ராஜபக்ச அணியினரின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர்.

கடந்த 2015ஆம் ஆண்டு அரசாங்கத்தின் போது பாராளுமன்றம் கூடிய 213 நாட்களில் 39 நாட்கள் மட்டுமே கலந்துகொண்டவர்.  பாராளுமன்றத்தில் எழுத்துமூலமான கேள்விகளை இரண்டு தடவைகள் தான் சமர்பித்திருக்கிறார். பொது முறைப்பாடுகள் மூன்றை மட்டுமே முன்வைத்துள்ளார். பாரளுமன்ற உறுப்பினராக உருப்படியான எந்த வினைத்திறனையும் காட்டிய ஒருவராக அவர் இருக்கவில்லை. ஆனால் பெரும் வர்த்தக செல்வந்தரான பிரேமலால் ஜயசேகர நடந்து முடிந்த 2020 பொதுத் தேர்த்தலில் 104,237 விருப்பு வாக்குகளைப் பெற்று அம்மாவட்டத்தில் இரண்டாவது பெரும்பான்மை விருப்பு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

அதே வேளை மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிற பிரேமலால் ஜயசேகர; பாராளுமன்றத்தில் அமர்வதற்கோ, வாக்களிப்பில் பங்குபெறுவதற்கோ உரிமையற்றவர் என்று பாராளுமன்ற செயலாளருக்கும், நீதி அமைச்சுக்கும், சிறைச்சாலை ஆணையாளருக்கும் சட்ட மா அதிபரால் 19.08.2020 அன்று அறிவிக்கப்பட்டிருப்பதாக சட்ட மா அதிபர் காரியாலயத்தின் பேச்சாளரான நிஷார ஜயரத்ன தெரிவித்திருந்தார். இந்தச் செய்திகள் அடுத்த நாள் ஊடகங்களிலும் வெளியாகிருந்தன.


பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட ஒருவர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்காமல் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு சமூகமளிக்காதுவிட்டால் அவர் தனது ஆசனத்தை இழப்பார் என்பது அரசியலமைப்பு விதி. இதற்கு வரலாற்றில் பல உதாரணங்களும் உள்ளன.

83இல் தமிழர் இழந்த உறுப்புரிமை

1983 இனப்படுகொலை சம்பவங்கள் நிகழ்ந்து இரு மாதங்களில் ஓகஸ்ட் 5ஆம் திகதி அரசியலமைப்புக்கு 6வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இலங்கையிலோ அல்லது நாட்டிற்கு வெளியிலோ உள்ள எந்தவொரு நபரும் நாடு பிளவுபடுவதற்கு ஆதரவளிப்பது அல்லது ஊக்குவிப்பது அல்லது அத்தகைய முயற்சிகளுக்கு நிதி சேகரிப்பது தண்டனைக்குரிய குற்றமென்கிற விதி அந்த திருத்தச்சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது. அதுமட்டுமன்றி சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விதிகளை மீண்டும் ஒரு சத்தியப்பிரமாணமாக செய்துகொள்ள நேரிட்டது. சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள். ஆனால் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த எவரும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளாமல் பகிஷ்கரித்து வந்தார்கள். மூன்று மாதங்களாக பாராளுமன்றத்துக்கு உரிய அறிவித்தலை செய்யாது சமூகமளிக்காததால் அவர்கள் அனைவரும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தனர்.

எனவே இதே நிலை பிரேமலால் ஜயசேகரவுக்கும் நேரிடாதபடி அவசர அவசரமாக சிறைச்சாலை ஆணையகம், திணைக்களம், நீதிமன்றம், சட்ட மா அதிபர், சபாநாயகர் என்கிற சம்பந்தப்பட்ட தரப்புடன் ஆளுங்கட்சி அணுகியது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் மேன்முறையீடு செய்திருப்பதால் மாத்திரம் அவரை எந்தவிதத்திலும் பிணையில் விடுவிக்கும் சட்ட வாய்ப்புகள் இல்லை. அது மட்டுமன்றி குற்றவியல் சட்டத்தின் 333.4 விதிகளின்படி மேன்முறையீடு செய்துவிட்டதால் அந்த இடைக்காலத்தில் அவர் நிரபராதியாக கருதப்படமாட்டாது.

மேலும் அரசியலமைப்பின் 89 (ஈ) பிரிவின் படி பின்வரும் காரணிகளுக்கு உட்பட்டவர் எவரும் உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்று தெளிவாக சுட்டுகிறது.

(ஈ) இரண்டாண்டுகளுக்குக் குறையாதவொரு காலத்திற்கான மறியற்றண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய தவறொன்றுக்காக ஏதேனும் நீதிமன்றத்தினால் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னர் அதனால் விதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குக் குறையாத ஒரு காலத்திற்கான மறியற்றண்டனையை (அது எப்பெயரினால் அழைக்கப்படினுஞ் சரி) இப்போது அனுபவித்து வருப வராயிருந்தால், அல்லது நேர் முற்போந்த ஏழு ஆண்டுக் காலப்பகுதியின்போது அத்தகைய தண்டனை அனுபவித்து முடித்தவராயிருந்தால், அல்லது மரண தண்டனைத் தீர்ப்பளிக் கப்பட்டவராயிருந்தால், அல்லது அத்தகைய மரண தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அளிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்கு குறையாதவொரு காலத்துக்கான மறியற் றண்டனையை அனுபவிப்பராயிருந்தால், அல்லது நேர்முற் போந்த ஏழு ஆண்டுக் காலப்பகுதியின்போது அத்தகைய தண்டனையை அனுபவித்து முடித்தவராயிருந்தால்;

அடுத்த வாரம் முடியும்
நன்றி தினக்குரல்


இனவாதத்தின் Peak time | என்.சரவணன்

“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு”

என்று ஒரு பலமொழியை தமிழ் பேச்சுவழக்கில் பல இடங்களில் உபயோகிப்பதைக் கண்டிருப்போம். அது தமிழில் மட்டுமல்ல ஆய்வுத்துறையில் இந்த பழமொழியின் உள்ளடக்கத்தை சகலரும் இதனை மிகவும் நுணுக்கமாகப் பயன்படுத்துவார்கள். குறிப்பாக வர்த்தகம், வியாபாரம், முகாமைத்துவம் சார் கற்கைகளில் இதனை அதிகம் அறிந்துவைத்திருப்பார்கள்.

எதுவுமே நிலையில்லை. சகலதும் ஒரே சீராக இயங்குவதில்லை. மேலும் கீழுமாக “zigzag pattern” இல் ஏறி இறங்கி, இன்னும் ஏறி, இன்னும் இறங்கி என்று ஒரு அலையாகவே அனைத்தின் வளர்ச்சியும் பண்பாக இருக்கும். இவற்றை இன்னும் சொல்லபோனால் “peak” என்கிற உச்சத்தைக் கூட எதுவும் அடையும். ஆனால் அந்த “உச்சமும்” நிலையாக அங்கே தங்கி விடுவதில்லை. அது மீண்டும் இறங்கும். ஏறும் போது எப்படி uptrend / downtrend ஆக அது அலையாக உயர்ந்ததோ, அதுபோல இறங்கும் போது செங்குத்தாகவும் இறங்கக்கூடும் அல்லது மெதுவாக பள்ளத்தை நோக்கியும் இறங்கக் கூடும்.

சரி ஏன் இதை இங்கு குறிப்பிடுகிறோம். 2020 தேர்தலுக்கு பின்பான இலங்கைத் தேசத்தின் மையப் பிரச்சினைகள் என்ன? மைய அரசியலின் போக்கென்ன? அவற்றின் வெற்றியும், உச்சமும், நீட்சியும், வீழ்ச்சியும் பற்றி நாம் அலசும் போதும் இந்த “Peak” சூத்திரம் நமக்குத் தேவைப்படுகிறது.

இலங்கை என்கிற ஒரு தேசத்தை “இலங்கை” என்றோ அல்லது வேறு பெயர்களிலோ அடையாளம் காட்டியவர்கள் இலங்கையர்கள் அல்லர். அந்நியரே. குறிப்பாக மேற்கத்தேயவர்கள். அதுபோல இலங்கையில் உள்ள குழுமங்களை தேசிய இனங்களாக அடையாளம் காட்டியவர்களும் மேற்கத்தேயவர்கள் தான்.

இலங்கை காலனித்துவ செல்வாக்குக்குள் ஆட்படும் போது இலங்கை வெவ்வேறு ஆட்சிப் பரப்புகளைக் கொண்டிருந்தது. தமிழ் பேசும் மக்களைக் கொண்ட ஆட்சிப் பரப்புகளையும், சிங்களம் பேசும் மக்களை பெருவாரியாகக் கொண்ட ஆட்சிப் பிரதேசங்களையும் கொண்டிருந்தது. காலனித்துவம் காலப்போக்கில் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த அனைத்து ஆட்சிப்பரப்புகளையும் ஒன்றிணைத்து “இலங்கை அரசை” நிறுவியது. ஆங்கிலேய காலனித்துவ அரசை எதிர்த்துக் கிளம்பிய “சுதேசியத் தனம்” நாளடைவில் “சிங்கள – பௌத்த தேசியத் தனமாக” பரிமாணமுற்றது. அதன் பரிணாமம் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதமாகவும், நீட்சியில் பேரினவாதமாகவும் ஈற்றில் பாசிசமாகவும் உருவெடுத்தது.

இந்த தொடர் வடிவ மாற்றத்தை படிப்படியாக எட்டிய சிங்கள பௌத்த குறுந்தேசியத்துக்கு அரசும், அதிகாரமும் கைவரப்பெற்றிருந்தது. அதன் ஒடுக்குமுகளுக்கு தொடர்ச்சியாக ஆளான தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம், மலையக சமூகங்களின் சாத்வீக வழியிலான போராட்டங்கள் அனைத்தும் தோல்வியுற்ற நிலையில், தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஈற்றில் பல நாடுகளின் ஆதரவுடன் இரும்புக்கரம் கொண்டு அது மோசமான அழிவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

வர்த்தகத்துறையில் “அச்சம் அதிகரிக்கும்போது, அதிகமாக பேராசைப்படுங்கள்” என்கிற ஒரு கூற்று பயன்படுத்தப்படுவதுண்டு. அரசியலில் உச்ச அச்சத்துக்கு (Peak fear) ஆதிக்க சக்திகள் ஆட்படும்போது, அதன் விளைவுகளை அடக்கப்படும் சக்திகளும் எதிர்கொள்கின்ற நிலையை எட்டுகிறது. இன்னும் விளக்கமாகச் சொல்லப்போனால் பாசிசம் பிறருக்கான குழியைத் தோண்டும் அதே வேளை தனக்கான குழியையும் அருகிலேயே வெட்டிவிடுகிறது.

நாட்டின் பிரதான தேசிய இனத்தால் ஏனைய தேசிய இனங்கள் எப்போதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டிருப்பதும், ஏனைய தேசிய இனங்களை அச்சத்துடனேயே வாழப் பழக்குவதும் ஒரு போக்காக வளர்ந்து நிலைபெற்றிருக்கிறது. தமது பிறப்புரிமையையும், வாழ்வுரிமையையும் வேண்டி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன தமிழ், முஸ்லிம், மலையகத் தேசிய இனங்கள்.

உச்சத்துக்கு அடுத்து...?

கடந்த ஓராண்டுக்குள் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலின் பட்டியல் உள்ள அனைத்தும் ஒவ்வொன்றாக எட்டப்பட்டு வந்திருக்கிறது.

சிங்கள மொழி அரச கரும மொழி, அரச மதமாக பௌத்தம், என்பவற்றை கச்சிதமாக முடித்தன.

வடக்கு கிழக்கு சிங்களக் குடியேற்றம், அதன் மூலம் எல்லைகளை மறுசீரமைத்தல், அதன் வழியாக செயற்கையாக சிங்கள பெரும்பான்மை தொகுதிகளாக ஆக்குதல், அதன் நீட்சியாக தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்தல் / அதற்குப் பதிலாக சிங்களப் பிரதிநிதிகளை பிரதியீடு செய்தல். சிங்கள அரச அதிகாரமானது தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கு அதிகாரத்தையும், அபிவிருத்தியையும், அனுசரனையையும் வழங்குவதில் பாரபட்சம் காட்டி வந்ததன் விளைவாக இன்று சிங்கள சமூகம் வளமான சமூகமாகவும், பிற சமூககங்கள் வளம் குன்றிய சமூகமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போர் நிகழ்ந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களும், மலோகப் பிரதேசங்களும் அபிவிருத்தியில் பல மூன்று தசாப்தங்கள் பின்தங்கிப் போயுள்ளன.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகக் கோட்பாட்டை உடைப்பதற்காக வடக்கு கிழக்கை துண்டாடினர். “புலிகளுக்கு போர் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு” என்கிற சுலோகத்தை முன்வைத்தார்கள். யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளையும் தோற்கடித்தார்கள். யுத்தத்தை வென்றதும் “அரசியல் தீர்வு வாக்குறுதியை” நயவஞ்சகமாக கைவிட்டனர். இனி அரசியல் தீர்வே தேவை இல்லை என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தும் அளவுக்கு துணிவைப் பெற்றுள்ளனர்.

இப்படி சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சிநிரலை பூர்த்திசெய்யும் வகையில் அது கேட்டத்தை எல்லாம் சிங்கள அதிகார வர்க்கம் கொடுத்துக்கொண்டே இருந்தது. இந்த “Uptrend” மேலும் சில அம்சங்களை பூர்த்திசெய்தால் தான் பூரணப்படும் என்று வேட்கையுடன் இருந்தது.

அதாவது

  • தமிழ் பேசும் அரசியல் சக்திகளில் தங்கியிராத சிங்கள அரசாங்கத்தை அமைத்தல்.
  • அரசியலமைப்பை மாற்றக்கூடிய அளவுக்கு மூன்றில் பெரும்பான்மையைப் பெறுதல்.
  • சிங்கள பௌத்தர்களின் பெரும்பான்மை கொண்ட சிங்கள பௌத்த அரசாங்கத்தை உருவாக்குதல்
  • தமிழ் மக்களுக்கு இறுதியாக எஞ்சியுள்ள குறைந்த பட்ச அதிகார அலகான மாகாண சபைகளை (13 வது திருத்தச்சட்டத்தை) இல்லாமலாக்குதல் அல்லது மேலும் பலவீனப்படுத்துதல்.
  • பௌத்தமத பீடங்களின் ஆலோசனையுடன் ஆட்சியை முன்னெடுத்தல் (கோத்தபாய ஜனாதிபதியாக தெரிவானதும் முதலில் செய்தது மாதாந்தம் கூடக்கூடிய பௌத்த ஆலோசனைச் சபையை அமைத்தது தான்)

2020 தேர்தலின் மூலம் இவற்றையும் பூர்த்தி செய்தாகிவிட்டது.

இப்போதுள்ள சிக்கல் அடுத்தது என்ன என்பது தான். பேரினவாதத்தை திருப்திபடுத்த இதற்கு மேல் வேறென்ன அபிலாசைகள் உண்டு என்பது தான்.

ஆக இனவாதம் அதன் உச்சவெற்றியை அடைந்திருக்கிறது. இனவாதம் கேட்டதையெல்லாம் அவ்வினவாதத் தரப்பால் ஆட்சியிலேற்றப்பட்ட அரசாங்கம் கொடுத்திருக்கிறது. இனி என்ன? அந்த உச்ச Peak நிலையை எட்டியதன் பின்னர் இதனை எட்டுவதற்காக இதுவரை காலம் விட்டுக்கொடுத்த ஏனைய சமூகப் பிரச்சினைகளின் நிலை என்ன என்பது தான் இன்றைய கேள்வி.

போர் நிகழ்ந்துகொண்டிருந்த போது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை பொறுத்துகொள்ளும்படி போரின் பேரால் கேட்கப்பட்டது. போர் முடிந்ததன் பின்னர் தமிழ்த் தேசியவாதத்தின் எச்சசொச்சங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், டயஸ்போராவை தோற்கடிக்கவேண்டும் என்றும் அதற்கும் அதிகாரத்தைத் தரும் படியும் இன்னும் பொறுத்துக்கொள்ளும் கேட்கப்பட்டது.

தேசியத்தின் பேரால், பாதுகாப்பின் பேரால், பயங்கரவாத ஒழிப்பின் பேரால், நாட்டை துண்டாடுவதை தவிர்ப்பது என்கிற பேரால் அனைத்து அராஜகங்களும், அநீதிகளும் நியாயப்படுத்தப்படுகின்றன. அதற்கான அங்கீகாரம் கோரப்படுகின்றன.

“உன்னிடம் உள்ள குச்சியை பெரிதாகக் காட்ட அருகில் ஒரு சிறிய குச்சியை வை” என்பார்கள். அல்லது “உன்னிடம் உள்ள குச்சியை சிறிதாகக் காட்ட அருகிலொரு பெரியதொரு குச்சியை வை” என்பார்கள்.

இதை சுலபமாக அரசியல் தளத்தில் எப்படி விளங்கிக்கொள்ள முடியும் என்றால். பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம், இன்னோரன்ன பிரச்சினைகளால் ஆட்பட்டிருக்கிற மக்களிடம் தேசபக்தி, இனவாதம், மதவாதம் போன்றவற்றின் பக்கம் எண்ணங்களை திசைதிருப்பி அதில் கருத்தூன்ற வைக்கும் அரசியல் கைங்கரியக் கலையை புரிந்துகொண்டால் போதும். “மக்கள் அதை விட்டுவிட்டு இதைப் பார்ப்பார்கள்.”

2020 தேர்தல் இத்தகைய சித்தாந்தத்தின் மீது தான் நடந்து முடிந்தது. பேரினவாதம் வெற்றியீட்டியது இந்த கைங்கரியக் கலையின் வழிமூலம் தான்.

90களின் இறுதியில் ஜே.வி.பியின் பத்திரிகையொன்றில் வெளியான ஒரு கட்டுரையில் ஒரு அட்டவணையை காட்டியிருந்தார்கள். அதில் இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டுப போட்டிகள் நடந்த அதே நாட்களில் பாமர மக்களின் அன்றாட உணவான பாணின் விலை ஏற்றப்பட்ட்டிருப்பது பட்டியலிடப்பட்டிருந்தது. ஒரு பிரச்சினை தலை தூக்கியதென்றால் அதை சரிசெய்ய இயலாத போது வேறு ஒரு பிரச்சினையை கிளப்பி மக்களின் பார்வையை வேறு பக்கம் ஊன்றச் செய்வது ஆட்சியாளர்களின் நயவஞ்சகத் தந்திரோபாயமாக ஆகியிருப்பதை நாம் அறிவோம்.

போர் வெற்றி போதையிலேயே கடந்த ஒரு தசாப்தமாக சிங்கள பௌத்தர்களை தக்கவைத்திருந்த அரசாங்கம் இனி அம்மக்களின் பட்டினிப் பிரச்சினை, வேலையில்லாத் திண்டாட்டம், கடன் சுமை, வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு, தொழிலாளர்கள், விவசாயிகளின் பிரச்சினைகள் என்பவற்றுக்கு பதில் தட்டிக் கழிக்க முடியாத ஒரு இடத்தை இப்போது வந்தடைந்திருக்கிறது.

நாட்டின் பொருளாதாரம் வரலாற்றிலேயே மோசமான இடத்தைத் தொட்டிருகிறது. வெளிநாட்டுக் கடன் கடந்த யூன் மாதம் 6521 பில்லியன்களை எட்டியிருப்பதாக மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டிருந்தது. தவணைக் கடன்களைக் கட்ட முடியாமல் வட்டி செலுத்துவதை காலத்தள்ளுபடியையாவது செய்யும்படி முக்கிய கடன்வழங்கும் நாடுகளிடம் அரசு கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்படிருக்கிறது.

இந்த 2/3 ஐப் பெற்றுவிடலாம். சிங்கள பௌத்த அரசையும் நிறுவிவிடலாம். ஆனால் அவற்றைக் கொண்டு இலங்கையின் பொருளாதாரத்தையோ, ஜனநாயகத்தையோ, நிமிர்த்திவிட முடியாது. இலங்கையின் இறைமையையும், வளங்களையும் விற்றுத் தான் முயற்சிக்க வேண்டிவரும். பொருளாதார நெருக்கடி நாட்டில் குற்றச்செயல்களை அதிகரிக்க வைக்கும். எரியுர வீட்டில் பிடுங்குறது லாபம் என்பார்கள். கடனாளியாக்கி பின் அரசியல் தலையீடு செய்யும் நவகாலனித்துவ பிடியில் இலங்கை இலகுவாக சிக்கவைக்கப்படுகிறது. அப்போது சிங்கள பௌத்த தேசியவாதத்தையும் சேர்த்துத் தான் அடகுவைக்கவேண்டும்.

ராவய பத்திரிகை ஆசிரியரும் அரசியல் நிபுணருமான விக்ரர் ஐவன் சமீபத்தில் ஒரு கட்டுரையில்


“ஒரு தவணைக் கடனைக் கட்ட முடியாது போனாலும் நாடு கடன் தீர்க்க முடியாத “திவாலான” (bankrupt) நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுவிடும். அப்படி ஒரு நிலை நேர்ந்தால் இலங்கை மக்கள் கடும் நெருக்கடிகளை சுமக்க நேரிடும். கிரீஸ் நாட்டுக்கு 2008ஆம் ஆண்டு இப்படி ஒரு நேர்ந்தபோது அதை தூக்கிவிட உலகின் செல்வந்த நாடுகளைக் கொண்ட செல்வந்த அமைப்பான ஐரோப்பிய ஒன்றியம் இருந்தது. ஆனால் இலங்கை போன்ற நாட்டுக்கு அப்படி எந்தவித சக்தியும் கிடையாது.”

என்கிறார்

சில நாடுகள் இக்கடன்களுக்கு கைகொடுக்கும் என்கிற குறைந்தபட்ச நப்பாசை கூட யதார்த்தமற்றது. ஏனென்றால் அப்படியொரு நிலையை எந்தவொரு தனி நாட்டு உதவிகளாலும் சரிசெய்துவிடமுடியாது. மேலும் கடன்வழங்கும் சர்வதேச சட்டங்களின் படி அதற்கு பல தடைகள் உள்ளன. அப்படியும் ஒருவேளை உதவிகள் சாத்தியப்பட்டாலும் இலங்கையின் இறைமையையும், வளங்களையும் விற்றும் விட்டுக்கொடுத்தும் தான் மேற்கொள்ளவேண்டும். அது இலங்கையின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்கும் ஒன்றாக நிச்சயம் அமையும்.

உள்நாட்டுக்கு வருமானம் ஈட்டித்தந்த பல துறைகள் மோசமாக கீழே விழுந்திருக்கிறது. மத்திய கிழக்கு வேலைவாய்ப்புக்கு செல்வோர் நின்றிருக்கிறது. ஏற்கெனவே அங்கிருப்போர் வேலையின்றி திரும்புகின்றனர். பலர் வரமுடியாமல் அங்கேயே சிக்கியுள்ளனர். தேயிலை ஏற்றுமதியும் மோசமாக வீழ்ச்சியடைந்துந்துள்ளது. விவசாய உற்பத்திகள் வெளிநாட்டு இறக்குமதிகளால் உள்நாட்டில் சந்தைபடுத்தமுடியாமல் விவசாயிகள் விவசாயத்தையே கைவிட்டு வருவதை நாளாந்த செய்திகளின் மூலம் அறிய முடிகிறது. சமீப காலத்தில் புடவைக் கைத்தொழில் துறை பாதிக்கப்பட்டு பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

பிரதான வருமான மூலங்கள் தகர்ந்து வருகின்ற அதே நேரம் அதன் விளைவாக உருவான வேலையில்லாத் திண்டாட்டத்தை சரி செய்ய அரசுக்கு உரிய மாற்று வழிகள் கிடையாது. 

விக்ரர் ஐவன் கூறுவது போல

“முதலில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் இல்லாத நாட்டின் மீது வெளிநாடுகள் அக்கறை கொள்ளப்போவதில்லை. முதலீடுகளும் செய்யப்போவதில்லை. எனவே முதலில் இலங்கையின் மையப் பிரச்சினையான இனப்பிரச்சினையை நீதியாக தீர்ப்பதற்கு அரசு முன்வரவேண்டும். அதை செய்யாது கொஞ்சமும் நாட்டை முன்னேற்ற முடியாது” என்கிறார்.

இனவாத சித்தாந்தம் தமது பல சிவில் உரிமைகளை சில காலம் விட்டுக்கொடுக்கக் கூடும் எல்லா காலத்திலும் அப்படி இருக்கவே முடியாது. யுத்தத்தின் பேரால், சிங்கள பௌத்த தேசிய உயர்ச்சியின் பேரால் இத்தனை காலம் விட்டுக்கொடுத்த உரிமைகளை இனி வரும் காலங்களில் தொடர்ந்தும் விட்டுக்கொடுக்க யதார்த்தம் இடம் அளிக்கப்போவதில்லை.

ஆகவே தான் அந்த இனவாத peak இனி சரிந்து வீழ்வதற்கான வாய்ப்புகள் இலங்கையில் இருக்கிறது. இந்த அப்படி அதை சரியாய் வைப்பதில் ஏனைய தேசிய இனங்களின் வகிபாகம் என்ன? மீண்டும் இந்த இடைவெளியை சரியான அரைசியல் தந்திரோபாயத்துடன் கையாண்டு நீதியான அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பது எப்படி என்கிற திசைவழியில் தான் தமிழ் பேசும் மக்கள் செல்ல வேண்டிய பாதை.

சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தம், அதைக் கொண்டு நடத்தும் அரச அதிகார இயந்திரம். அதை வெகுஜனமயப்படுத்தும் சக்திகளையும் தோற்கடிக்கும் வாய்ப்பை இந்த வழியில் தான் இனி கண்டு பிடிக்கமுடியும்.

-தமிழ் முரசு (அவுஸ்திரேலியா) செப்டம்பர் 2020

இனவாதத்தின் Peak time - என... by SarawananNadarasa

"கள்ளத்தோணி" : வரலாற்றை கற்க முனைபவர்களுக்கு ஓர் சிறந்த உசாத்துணைகளில் ஒன்று - பிரகாஷ் சின்னராஜா

ஓர் எழுத்தாளர் ஓர் விடயத்தை தகுந்த மூல ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும்பொழுதே அது வலிமையான ஆவணமாக உருமாற்றம் பெறும். சமூக, அரசியல், வரலாற்று விடயங்களை எழுதுபவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டிய மிகமுக்கியமான விடயமாக இது உள்ளது.

அவ்வகையில் இலங்கையின் சமூக, அரசியல், வரலாற்றுத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு பேசாப் பொருளை பேசுபொருளாக்கிப் பல விடயங்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிக்கொணரும் சரவணன் அவ்வாறான வலுவான நூல்களை எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றார் என்றால் மிகையல்ல.

இவரது படைப்புகளில் "கண்டிக் கலவரம் 1915", "தலித்தின் குறிப்புகள்" வரிசையில் இந்த "கள்ளத்தோணி" நான் வாசித்த மூன்றாவது நூலாக இணைகின்றது.

மலையகத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர்கள் என்று இலங்கைக் கரையை அடைந்தனரோ அன்று தொடக்கம் இன்று வரை அவர்களிற்கு இழைக்கப்பட்டுவரும் சமூக அநீதிகளை இந்நூலில் பிரதானமாக கோடிட்டுக் காட்டியுள்ள நூலாசிரியர் அவற்றிற்கான நீதியையும் வேண்டி வலியுறுத்தி நிற்கின்றார். இதற்குப் பக்கபலமாக இறுதி அத்தியாயங்களில் தான் எதிர்கொள்ளும் இடர்பாடுகளையும் எழுதத் துணிந்தமை "எண்ணித் துணிக கருமம்....." எனும் குறள் வரிகளிற்கேற்ப ஆசிரியர் தனது கருத்தில் கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துரைக்கின்றது.

வலிமை மிக்கவன் தனது எதிரி தன்னைப் பற்றி ஏதாவது உரைக்கும்பொழுது தனது எதிரியை பழிவாங்குவதாக எண்ணி அவனது வலிமை குறைந்த அயலவனை பழிவாங்குவது போல் இலங்கையில் மலையகத் தமிழர்களிற்கெதிராக 1939ல் நாவலப்பிட்டியில் ஏற்பட்ட முதலாவது இனக்கலவரத்தையும் அதன்நீட்சியாக தொடர்ந்து வந்த அரசுகள் ஏற்படுத்திய சட்டங்கள், ஒப்பந்தங்கள், நடவடிக்கைகள் வரை பல விடயங்களை சுட்டிக்காட்டி அவற்றால் ஏதுமறியா அப்பாவி மக்கள் வஞ்சிக்கப்பட்ட விதத்தையும் வலியுடன் வெளிக்காட்டியுள்ளார்.


தேசங்கள் என்றும் தமது நலன்களுக்கே முன்னுரிமை வழங்கும் எனும் உண்மையை 'கச்சத்தீவு' இலங்கைக்கு வழங்கப்பட்ட வரலாற்றினூடாக இந்நூல் அழகாக வெளிக்காட்டியுள்ளது, வடக்கு கிழக்கை ஆதாரமாகக் கொண்ட மக்களும் வரலாற்றிலிருந்து எதிர்கால நகர்வு தொடர்பான பாடங்களைக் கற்க வேண்டுமென்பதனை இது வலியுறுத்துகின்றது.

இதற்கப்பால், தலைமுறை தலைமுறையாக உரிமைகள் மறுக்கப்பட்டு, இழக்கப்பட்டு,வாய்ப்புகளின்றி, தேசங்களாலும் தேசிய இனங்களாலும் பந்தாடப்பட்ட மக்கள் தங்களை ஏன் மலையகத் தமிழர் என ஓர் தனித்தன்மையுள்ள இனமாகக் காட்ட வேண்டிய அவசியமேற்பட்டதையும் அதற்கான காரணங்களையும் வெளிக்கொணரும் இந்நூல் வரலாற்றை கற்கத் தூண்டுபவர்களிற்கும் வரலாற்றினூடே பாடங்களை கற்க வேண்டிய அவசியமுள்ளவர்களிற்கும் ஓர் பிரதான உசாத்துணையாகவே உள்ளது என்றால் மிகையல்ல.

வரலாற்றில் மலையகத்தை தளமாகக் கொண்ட தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மறைக்கப்படக்கூடாதவை மட்டுமல்ல அது மன்னிக்கப்பட முடியாதவையுமாகும்.

குறிப்பு :- அனைவருக்கும் பயனுள்ள இந்நூலை இலங்கையிலுள்ள பல புத்தக நிலையங்களில் வாங்குவதற்குரிய வசதிகள் உள்ளன. அனைத்து விடயங்களையும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியுள்ள இந்நூலின் ஓர் பிரதியை தனிப்பட்ட வகையில் கொள்வனவு செய்வதன் மூலம் எம்மவரை நாமே ஊக்குவிக்க முதற்காரணியாக அமைவோம்.

அடெலின் மொலமூரே (1890 – 1977): - முதல் பெண் MP உருவான கதை | என்.சரவணன்

முதன் முறையாக இலங்கையின் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட பெண்; லேடி அடெலின் மொலமூரே (Adeline Molamure), இவரது தந்தையான 'ஜோன் ஹென்றி மீதெனிய அதிகாரம் என்பாரின் மரணத்தைத் தொடர்ந்து அவரது தொகுதியான 'ருவன்வெல்ல'வில் 1931 நவம்பரில் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் அவரது மகளான மொல மூரே அம்மணி போட்டியிட்டு அரச சபைக்குத் தெரிவு செய்யப்பட்டவர். 

1931 டொனமூர் திட்டத்தின் மூலம் சர்வஜன வாக்குரிமை கிடைப்பதற்கு முன்னரும் பெண்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கான தடை சட்ட ரீதியில் இருக்கவில்லை. அதேவேளை கல்வியறிவு, வசதியும், செல்வாக்கும் பெற்ற ஆண்களே அப்போது அரசியல் அதிகாரத்தில் இருந்தார்கள். பெண்களை அரசியல் அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்கு அந்த ஆணதிகார சக்திகள் நினைத்தும் பார்த்திருக்கவில்லை என்றே கூறவேண்டும்.

இலங்கையில் சாதாரண வெகுஜன மட்டத்தில் அரசியலைப் பற்றி பெண்களோ, பெண்களின் மீதோ அக்கறையற்ற அக்காலத்தில் அவர் தெரிவு செய்யப்பட்டமை பெண்கள் அரசியலில் பங்கு பற்றுவதற்கான துணிவையும், நல்லதொரு முன்னுதாரணத்தையும், சிறந்த தொடக்கத்தையும் கொடுத்தது.
டொனமூர்
டொனமூர் ஆணைக்குழு
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி காலத்தில், 1924 ஆம் ஆண்டின் மனிங் அரசியல் சீர்த்திருத்தத்தின் மூலம் அரசாங்க சபையின் உறுப்பினர்களை 49 ஆக உயர்த்தியது, உத்தியோகபற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரித்து உத்தியோகபற்றற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 37 ஆக உயர்த்தியது. உத்தியோகபற்றுள்ள 37 உறுப்பினர்களில், 23 பேரை பிராந்திய ரீதியிலான தேர்தலின் மூலமும் 8 பேரை இனவாரி ரீதியாகவும் 6 பேர் இன ரீதியிலும் தெரிவுசெய்யப்பட்டனர். 

அதன்படி, இலங்கை 23 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, சொத்துரிமை மற்றும் ஆங்கிலக் கல்வியின் அடிப்படையில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. அப்போது பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கவில்லை. சுதேசிகளுக்கான பிரநிதிதித்துவ அதிகரிப்பைக் கொண்ட சீர்திருத்தக் கோரிக்கை நாட்டில் எழுந்தது. இதன் விளைவாக, நவம்பர் 13, 1927 அன்று, டொனமூர் பிரபு தலைமையிலான மூன்று பேர் கொண்ட ஆணைக்குழு; நாட்டிற்கு பொருத்தமான அரசாங்க முறையை பரிந்துரைக்க இலங்கை வந்தது. 

இலங்கையில் 1928 ஜனவரி 18 வரை தங்கியிருந்து 34 தடவைகள் கூடி 141பிரமுகர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டு கலந்துரையாடி அரசியல் சிபாரிசை முன்வைத்தனர். அந்த டொனமூர் அறிக்கையே டொனமூர் அரசியல் திட்டமென்கிற பேரில் அமுலுக்கு வந்தது. 

டொனமூர் குழுவினர் இலங்கையை 09 மாகாணங்களாகப் பிரித்து 50 தேர்தல் தொகுதிகளை பரிந்துரைத்தனர். அந்த 50 தொகுதிகளுக்குமான உறுப்பினர்கள் சர்வஜன  வாக்குரிமையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. பாலினம், சொத்து அல்லது கல்வி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சர்வஜன வாக்குரிமையை வழங்கிய ஆசியாவின் முதல் நாடாக இலங்கை அமைந்தது. ஆளுநரால் நியமிக்கப்படும் 08 உறுப்பினர்களும், நாட்டின் மூன்று தலைமை அரச அதிகாரிகள் உட்பட 61 உறுப்பினர்களைக் கொண்டதாக அரசாங்க சபை அமைக்கப்பட்டது. சர்வஜன வாக்குரிமையின்படி முதல் பொதுத் தேர்தல் மே 1931 மாதம் நடைபெற்றது. இத் தேர்தலில் மொத்த 15,77,932 வாக்காளர்களில் 5,99,384 பெண்களாக இருந்தார்கள்.  ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வேட்பாளர்களுக்கு வெவ்வேறு வர்ணங்கள் வழங்கப்பட்டன. வேட்பாளர்களுக்கு உரிய அந்தந்த நிறங்களில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் தாம் விரும்பிய வேட்பாளருக்கு உரிய நிறத்தைக் கொண்ட வாக்குப் பெட்டியில் வாக்கை அளிப்பர். அத தேர்தலில் ருவன்வெல்ல தொகுதியில் ஜே.எச். மீதெனிய அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மீதெனிய அதிகாரம் தனது வேட்பு மனுக்களை மே 4, 1931 அன்று சமர்ப்பித்து, ருவன்வெல்ல வாக்காளர்களால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றாலும், மீதெனியா அதிகாரம் அரசாங்க சபை உறுப்பினராக நான்கு மாதங்களும் ஒரு நாளும் தான் அங்கத்தவராக இருக்க முடிந்தது. அவர் செப்டம்பர் 5, 1931 அன்று திடீரென இறந்தார். இதன் விளைவாக இடைத்தேர்தல் நடத்தி அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டியேற்பட்டது. சர்வஜன வாக்குரிமை கிடைத்தபின் இது தான் முதலாவது இடைத்தேர்தல்.

இறந்த தந்தையின் இடத்துக்கு
மீதெனியா அதிகாரம் இறந்து ஏழு நாட்களுக்குப் பிறகு, அவரது ஈமச்சடங்குகள் முடிந்ததன் பின் அவரது நெருங்கிய நண்பர்கள் மீதெனிய அதிகாரத்தின் மகள் அடெலின் மொலமுரே குமாரி ஹாமியிடம் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதாவது தகப்பனின் மரணத்தைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள ருவன்வெல்ல ஆசனத்தை தொடர்ந்தும் மீதெனிய பரம்பரையே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதே அது. 

சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கின்ற போதும் அரசாங்க சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் மேற்படி வேண்டுகோளுக்கிணங்க அடெலின் மொலமூரேவுக்கு சாத்தியமானது.

இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுவை அடெலின் மொலமூரே 1931 ஒக்டோபர் 5ம் திகதி சமர்ப்பித்தார் எட்லினுக்கு வழங்கப்பட்ட நிறம் வெள்ளை. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக பெண்ணொருவர் போட்டியிடுகின்றமையால் பெண்கள் வாக்குரிமை சங்கம் எட்லினுக்கு ஆதரவு வழங்கப் போவதாக ஒக்டோபர் 14ம் திகதியன்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அதற்கிணங்க எட்லினின் வெற்றிக்காக பெண்கள் வாக்குரிமைச் சங்கம் பெரும் பிரச்சார வேலைகளை மேற்கொண்டது.

இத்தேர்தலில் அடெலின் 9398 அதிகப்படியான வாக்குகளால் வென்றார். இலங்கை தேசிய காங்கிரஸின் முக்கிய அரசியல் பிரமுகரான ஆ.எஸ்.எஸ்.குணவர்த்தனவை இத்தேர்தலில் 9000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்றார் அடெலின். ஆர்.எஸ்.எஸ். குணவர்த்தனவின் மனைவியான சுமனா பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தில் மும்முரமாகச் செயற்பட்டவர். பெண்கள் வாக்குரிமைச் சங்கம் இடைத் தேர்தலில் அடெலின் மொலமுரேயை ஆதரிப்பதற்குத் தீர்மானித்த போது, சுமனா குணவர்த்தனா அடெலின் மொலமுரே பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தின் உறுப்பினர் அல்லவென்றும், அவரது கணவர் பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்படுவதற்கு எதிராக இயங்கியவர் என்றும், ஆனால் ஆர்.எஸ்.எஸ்.குணவர்த்தனவோ இதற்கு ஆதரவாக இருந்தவர் என்றும் வாதிட்டார். இப்பிரச்சினையும் பத்திரிகைகளிலும் விவாதிக்கப்பட்டன. 

இச்சந்தர்ப்பத்தில் இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அம்மணி டேஸி டயஸ் பண்டாரநாயக்கா; கணவனின் கருத்துக்களுக்காக அவரது மனைவி தண்டிக்கப்படக் கூடாதெனத் தெரிவித்தார். இத் தேர்தலில் டேஸி டயஸ் பண்டாரநாயக்கா தேர்தல் பிரச்சாரங்களுக்கு முன்நின்று உழைத்தார். டேஸி டயஸ் பண்டாரநாயக்கா; சொலமன் டயஸ் பண்டாரநாயக்காவின் மனைவியாவார். பிற்காலத்தில் இலங்கையின் பிரதமராகப் பதவி வகித்த S.W.R.D. பண்டாரநாயக்காவின் தாயார், அதுபோல உலகின் முதலாவது பெண் பிரதமர் சிறிமாவின் மாமியாரும், இலங்கையின் பிற்கால முதலாவது பெண் ஜனாதிபதி சந்திரிகாவின் பாட்டியார் தான்  டேஸி பண்டாரநாயக்கா என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். 

அடெலின் பெண்களின் வாக்குரிமை விஷயத்தில் பெரிதாகச் செயற்படாவிட்டாலும், அவர் தனது தந்தையின் தொகுதியில் போட்டியிட அனுமதி பெற்றார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின் திருமதி. அடெலின் மொலமூரேவுக்கு வாழ்த்துத் தெரிவிக்க வந்தவர்கள் மத்தியில் உறையாற்றிய அடெலின் பின்வருமாறு தெரிவித்தார். 
"அரசாங்க சபையில் பெண்ணொருவர் அங்கத்துவம் வகிக்கக் கிடைத்தது பெண் குலத்துக்கே பெருமையளிக்கிறது, நான் பழுத்த மூன்று சிங்கங்களுடன் போட்டியிட வேண்டியிருந்தது. எனவே எனது வெற்றி பெண்குலத்துக்கான பெரு வெற்றியாகக் கருதப்பட வேண்டும்." அடெலின் மொலமூரேவின் சத்தியப் பிரமாணம் 1931 நவம்பர் 29ம் திகதி அரசாங்க சபையில் நடைபெற்ற போது அரசாங்க சபை கலரியில் பெண்கள் நிரம்பிக் காணப்பட்டனர்.
தன்னோடு போட்டியிட்ட 3 ஆண் வேட்பாளர்களை இலகுவாக தோற்கடித்து வெற்றியீட்டிய அடெலின் இந்த வெற்றியைப் பெண்களின் உரிமைக் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகப் மட்டும் பார்ப்பது வெறும் மிகைப்படுத்தலே. அவருடைய வெற்றியானது அவருடைய தனிப்பட்ட கவர்ச்சிக்கும் மகளைத் தெரிவு செய்ததன் மூலம் காலஞ்சென்ற மீதெனிய அதிகாரியின் மேல் மக்கள் காட்டிய விசுவாசத்திற்கும் கிடைத்த வெற்றியாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது."

14.01.1931 இடைத்தேர்தல் முடிவுகள்

மேலும் அந்த ஆசிரிய தலையங்கம், "அடெலின் மொலமுரே பெண்கள் வாக்குரிமைப் போராளி அல்லவென்றும் அவர் பழமை பேண் பிரிவைச் சேர்ந்த மேல்வர்க்கத்துக்குரியவர் என்றும், எவ்வாறாயினும் அவர் சட்டசபைக்குத் தெரிவானது பெண்கள் இயக்கம் இலங்கையில் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் காட்டுகிறது" என்றும் எழுதியது Independent பத்திரிகை. அவர் அரசியல் அல்லது சமூக செயற்பாடுகளில் வெளிப்படையாக தெரியப்படாதவர் என்றும், பெண்கள் பொது வேலைகளில் தம்மை ஈடுபடுத்துவதை அவரது சமூகப்பிரிவைச் சேர்ந்தவர்கள் குறைவான ஒன்றாகவே பார்த்தனர் என்றும் கூறியதோடு, இன்னொரு சுவாரஸ்யமான எச்சரிக்கையை Independent பத்திரிகை "பழமை பேண்" முற்சாய்வு சம்பந்தமாகவும் பெண்களுக்கு முன்னிருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் எழுதிற்று:
பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட்டதன் பேறாக சட்டசபைக்கு ஒரு பிரதிநிதி வரப் பெற்றுள்ளார். அவர் மிக அண்மைக்காலம் வரை பழமை பேண் முற்சாய்வுகளால் கட்டப்பட்டவராய் இருந்த போதும், அவரது இவ்வருகை பெண்கள் வாக்குரிமையின் தாராளவாதத் தன்மையின் செல்வாக்கைக் காட்டுவதாய் இருக்கிறது. அவர் அரசியலுக்கு எவ்வளவு புதியவர் என்பதைப் பார்ப்பதிலிருந்து, இந்நாட்டுப் பெண்களின் நல்வாழ்வுக்கு உதவும் வகையில் நல்ல முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டங்களை அவர் கொண்டிருப்பார் என்று எதிர் பார்க்க முடியாது. ஆனால், டொனமூர் ஆணைக்குழுவினர் ஒரு பெண் சட்டசபையில் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என ஆவல் காட்டியதற்குரிய காரணம், தனியே ஆண்களால் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ள சட்டசபையில் பெண்களதும் பிள்ளைகளதும் நலன்கள் சிறந்த முறையில் கவனிக்கப்படாது விடப்படுகின்றன என்பதன் புரிதலே. அப்படியானால் திருமதி மொலமுரே வேலையில் ஈடுபடப் பணிக்கப்படும் பட்சத்தில் அவரது கையில் ஏகப்பட்ட வேலைகள் தயார் நிலையில் இருக்கும்.

டொக்டர் மேரி றட்ணம், ஃபுளொறின்டா விஜயக்கோன், மர்ஜோறி டி மெல், கரோலின் டி சில்வா ஆகிய பிரபலமான பெண்கள், அடெலின் மொலமுரே தேர்தலில் தெரிவானதையிட்டு பெரும் மகிழ்ச்சியை வெளிக்காட்டினர். வெற்றி பெற்ற தொகுதியில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. பல வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றில் ஒன்றாகப் பிஷப் கல்லூரி மாணவிகளினதும் நிகழ்ச்சி இருந்தது. இந்நிகழ்ச்சியில், 'நான் எல்லோருக்குமாக கதவைத் திறந்து விட்டுள்ளேன். இங்கிருக்கும் மாணவர்கள் என் வழியைப் பின்பற்றுவர் என நான் எதிர் பார்க்கிறேன்" என்று அடெலின் சொன்னார். (Wijesekera 1995:28)
நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் "பெண்களின் பிரஜா உரிமை" என்ற தனது கட்டுரையில் லீலாவதி அசெரப்பா, பெண்களின் பிரதிநிதிகள் பெண்கள் பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கு உதவுவர் என்று எதிர்பார்ப்பு குரல் கொடுத்தார். (Young Ceylon, May, 1932)

கடந்த சில மாதங்களில் பல பெரு மாற்றங்கள் இத் தீவில் நடந்தேறியுள்ளன. வரலாற்றில் முதல் முதலாக பெண்கள் தம் வாக்களிக்கும் உரிமையைப் பாவித்துள்ளனர். இன்னும் அண்மையில் தான் அவர்கள் தம்மைப் பிரதிநிதித்துவம் செய்ய ஒரு பெண்ணைச் சட்டசபைக்கு அனுப்பியுள்ளனர். இவ்வளவு வேகமாக முன்னேறியுள்ள நாம் எதிர்காலத்தில் பெண்களையும், பிள்ளைகளையும் பாதிக்கும் சகல விஷயங்களையும் புறந்தள்ளி முன்னேற்றமடைவதை எதிர்பார்க்கலாம். நாங்கள் விரும்பும் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை நாங்கள் எதிர்பார்க்கலாம். காரணம், எங்களுக்காக வேலை செய்யச் சட்டசபையில் எங்கள் பெண்பாலாரே உள்ளனர். நாங்கள் மட்டும் ஒன்றிணைந்து ஒரு கனதியான நடைமுறை ரீதியான வேலையில் ஈடுபடத் தீர்மானிப்போமானால் எமக்காக மாபெரும் எதிர்காலம் காத்திருக்கிறது.

அசெரப்பா, பெண்கள் வாக்குரிமை சம்பந்தமாக வெளிக்காட்டிய பல்வகை நிலைகளைப் பகுப்பாய்வு செய்து, அரசியலில் பங்கு பற்றுவதன் மூலம் தமக்குத் தரப்படும் புதிய பொறுப்புப் பற்றி விழிப்பாய் இருக்குமாறு பெண்களைக் கேட்டுக் கொண்டார்.

பரவலான நோக்கில் பார்க்கையில் இன்று வரை பெண்கள் இரு வர்க்கமாகப் பிரிந்துள்ளனர். அதாவது வாக்குரிமை வேண்டும் என்போரும், வாக்குரிமை வேண்டாமென்போருமான இரு வர்க்கம். மூன்றாவது பிரிவினர் வாக்குரிமையை விரும்பிய போதும் அதைப் பெறுவதற்கு முயலாதவர். ஆனால் இந்த எல்லாப் பிரிவினரும் ஒன்றிணைவதற்கான காலம் இப்போ வந்துள்ளது. "ஓ, நான் இதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. நான் வாக்களிக்க மாட்டேன்" என்று சொல்வது எங்களுக்கு நாடு தந்துள்ள பொறுப்பை வேண்டுமென்றே உதாசீனம் செய்வதாகும். இப்புதிய பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு இது பற்றித் தேவையான விபரங்களோடு தம்மை பரிச்சயப்படுத்திக் கொள்வது ஒவ்வொரு பெண்ணினதும் கடமையாகும்.

வறுமை போன்ற சமூக விஷயங்களில் பிரக்ஞைபூர்வமாக விழிப்பு உடையவராக இருந்த, திருமதி அசெரப்பா, பெண்கள் பிரதிநிதித்துவத்தின் நடைமுறை விளைவு என்ன என்னும் பொருத்தமான கேள்வியையும் கேட்டார்.

யாராவது ஒருவர் இயல்பாகவே கேட்கக் கூடும் இவையெல்லாவற்றினதும் நடைமுறைப் பெறுபேறு என்னவென்று. நாங்கள் சட்டவாக்கத்தால் வறுமையை ஒழித்து விட முடியுமா? இல்லை அப்படி முடியாது, இதற்கான காரணம் பல்வகையானது. ஆனால் இதற்கான பொறுப்பு அரசின் செயற்பாட்டின் மூலம் ஏற்படுத்தப்பட வேண்டும். பெண் வாக்காளர்கள் இந்த அரசின் செயற்பாட்டைத் தாண்டுவதற்கான செல்வாக்கைச் செலுத்த வேண்டும். சமூக சீர்திருத்தம் சம்பந்தப்படுகின்ற விஷயத்தில் வதிவிடப் பிரச்சினை முதலில் வர வேண்டும். சேரிகள் அகற்றப்பட வேண்டும். சேரிகள் சாபக்கேடானவையாக இருப்பதோடு, நல்ல வாழ்க்கைக்கு வழி விடும் கிராமப்புற நிலவரமும் சாத்தியமற்றுப் போயிற்று.

சபாநாயகராக இருந்த தனது கணவர் முன் சத்தியப்பிரமாணம் எடுத்து, 1931 நவம்பர் 20ஆம் திகதி அடெலின் மொலமுரே தனது சட்டசபை ஆசனத்தைப் பெற்றுக் கொண்டார். பொது மக்களின் பார்வைக்காக ஒதுக்கப்பட்ட இடம் ஆவலோடு இந்நிகழ்ச்சியைப் பார்க்க வந்த ஆண்களாலும், பெண்களாலும் நிரம்பி வழிந்தது. (Wijesekera 1995:29) சட்டசபையில் அவர் விவசாய நிறைவேற்று குழுவில் அதன் அமைச்சரான டி.எஸ்.சேனநாயக்காவோடு இருந்தார். அவர் விவசாயத்தில் குடியேற்றத் திட்டங்கள், குளங்கள் புனரமைத்தல், பிள்ளைப்பேற்று மருத்துவ நிலையங்கள், பெண்கள் சிவில் சேவையில் புகுதல் ஆகியவை உள்ளடங்கிய பல பிரச்சினைகளைக் கவனத்திற்கெடுத்தார். இவ் விஷயத்தில் அவர் ஆற்றிய உரை மிக உணர்வு பூர்வமாகவும் பலரைக் கவர்கின்ற மாதிரி அது அமைந்திருந்தது. (ஹன்சார்ட் 14 பெப், 1934:140)

பெண்களின் சார்பாக நான் எனது எதிர்ப்பை முன் வைக்க வேண்டும். ஆண்களால் தங்கள் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட பழைய சம்பிரதாயங்களாலும் விதிகளாலும் பெண்கள் ஒதுக்கி வைக்கப்படுவார்களானால் அத்தகைய பழைய விதிகளை மாற்றியமைக்க பெருந்தன்மை கொண்டு இச்சட்ட சபை முன்வர வேண்டும். பெண்கள் தாங்கள் ஆண்களோடு சமமாக வைத்துப் பார்க்கப்பட வல்லவர்கள் என்பதை நிரூபித்த இக்காலகட்டத்தில் பெண்கள் வெறும் சலுகைகளை கேட்கவில்லை. எங்களுக்கு தேவையானவை நீதியும், ஆண்கலோடான சம உரிமையுமே! 

இலங்கையின் வரலாற்றில் அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பெண்மணி எனும் ஸ்தானத்தை அடெலின் பெற்றுக் கொண்டார். மேற்சபைக்குத் தெரிவான முதற் பெண்ணும் இவர் தான். 

ருவன்வெல்ல தொகுதியில் நடந்த இடைத் தேர்தலின் மூலம் அடெலின் தனது தகப்பனின் அரசியல் செல்வாக்கு, தனது உயர்குடிச் செல்வாக்கு பெண்களின் பிரச்சாரம் காரணமாகவே அரசியலில் நுழைய முடிந்தது. 

இது பெண் பிரதிநிதித்துவத்தின் தொடக்கம் மட்டுமல்ல, ஆணுறவு முறைச் செல்வாக்குக்கு ஊடாக பெண்கள் நாடாளுமன்றத்துக்கு செல்லும் கலாசாரத்தின் தொடக்கமாகவும் இது முத்தாய்ப்பாக இருந்தது என்பதையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும்.

அடெலின்  மொலமூரே தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடத்துக்குள் தெரிவான நேசம் சரவணமுத்துவும் இதுபோல தகப்பனின் அரசியல் செல்வாக்குக்கு ஊடாக அரசிலில் பிரவேசித்தவர் தான்.

அடெலின் தனது பெற்றோர், சகோதரன் சகோதரியுடன் நடுவில்
பரம்பரைப் பின்னணி
அடெலின் மீதெனிய அதிகாரி மொலமுரே 1890ஆம் அண்டு செப்டம்பர் முதலாம் திகதி ருவன்வெல்ல மீதெனிய பரம்பரையில் பிறந்தவர். அதிகாரி மீதெனிய பழைய நிலமான்ய முறையில் வந்த நிலச்சுவாந்தராக இருந்ததோடு, சட்டசபையில் நியமன அங்கத்தவராக இருந்து வந்தார். 

மீதெனியாவினதும் (பௌத்தர்) எமிலி சேனநாயக்காவினதும் (மிகப்பற்றுடைய அங்கிலிக்கன் கிறிஸ்தவர்) மூத்த பிள்ளையாகிய அடெலின் பிஷப் கல்லூரியில் படித்ததோடு அவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவராக இருந்தார். அடெலின் இளைய சகோதரி அலிஸ் (Alice) லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் ஆரம்பகர்த்தாவும், பத்திரிகை உலக ஜாம்பவனாகவும் கருத்தடுகிற டி.ஆர்.விஜேயவர்தனவை விவாகம் செய்து கொண்டார். இதன் மூலம் நிலவுடைமை முதலாளித்துவ நலன்களும் பௌத்த கிறிஸ்தவ குடும்பங்களுக்கிடையேயான தொடர்புகளும் நெருக்கமுற்றன என்கிறார் குமாரி ஜெயவர்தன.

அலிஸ், விஜேவர்தன ஆகியோருக்கு பிறந்த நளினி விஜேவர்தன தான்; பிற்காலத்தில் இலங்கையின் பிரதமராக ஆனா ரணில் விக்கிரமசிங்கவின் தாயார்.

1912இல் பிரபல வழக்கறிஞர் பிரான்சிஸ் மொலமுரே என்பவரை விவாகம் புரிந்தார். கண்டி ராஜ்ஜிய காலத்தில் ஒரு அரச பிரதிநிதியாக இருந்த மீதேனிய மொலமூரே பரம்பரையைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மொலமூரே.  பிரிட்டிஷ் அரசால் சேர் பட்டம் பெற்றவர். இவ்விவாகம் அன்றைய தேசாதிபதியாகவிருந்த சேர் ஹென்றி எட்வர்ட் மெகலம் ஆகியோர் உட்பட பல உயர் மேட்டுக்குடி வர்க்கத்தைக் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட பெரும் ஆடம்பரத் திருமணமாக நடாத்தப்பட்டது.
பிரான்சிஸ் மொலமுரே ஒரு சட்டத்தரணியாக இருந்ததோடு, நிலமான்ய பூர்வீகமுடைய நிலச்சுவாந்தராக இருந்தார். மடுவன்வெல பரம்பரைச்சொத்து இறுதியில்  பிரான்சிஸ் மொலமுரேவுக்குத் தான் சொந்தமானது. இவர்களுக்கு சொந்தமான மடுவன்வெல “வலவ்வ” வுக்கு சொந்தமான காணிகள் 84,000 ஏக்கர்களைக் கொண்டது. அவர்களின் குடும்ப வைத்தியராக இங்கிலாந்திலிருந்து வைத்தியர் ஒருவரை வரவழைத்து சேவைக்கு வைத்திருந்தார்கள். அந்த வைத்தியரின் பெயர் ஸ்பிரிடல். அவர் ஒரு எழுத்தாளரும் கூட. அவர் இங்கிலாந்தின் பத்திரிகையொன்றுக்கு மடுவன்வெல பரம்பரையினர் பற்றி எழுதிய கட்டுரையைப் பார்த்துவிட்டு இங்கிலாந்து அரசு இலங்கையில் கருப்பு இளவரசர் என்று மடுவன்வெல “திசாவ”வவை அழைத்தார்கள்.

இவர் 1924இல் இருந்து 1931வரை கேகாலை மாவட்டத்தின் சட்டசபை அங்கத்தவராக இருந்ததோடு 1931இல் தெடிகம ஆசனத்திற்குப் போட்டியின்றித் தெரிவானவர், இலங்கை சட்டசபையின் முதல் சபாநாயகர் அவர் தான். இதன் பிரகாரம் சட்டசபையில் ஒரே நேரத்தில் இத்தம்பதியினர் அங்கம் வகித்தனர். பிரான்சிஸ் மொலமுரே அரசாங்க சபை அமர்வு நடந்துகொண்டிருக்கும் போதே 1951, சனவரி 24 அன்று சிம்மாசனத்தில் வைத்தே பக்கவாதம் வந்து சரிந்து விழுந்தார். அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் மரணமானார். அவர்  அன்றைய காலத்தில் பனாமுற என்கிற பகுதியில் ஒரு யானையை சுட்டுக்கொன்றதன் சாபத்தால் தான் அவர் மரணமானார் என்று பிரபலமாக பேசப்பட்டது.

அடெலின் மொலமுரே இரண்டாவது அரசாங்க சபை தேர்தலில் போட்டியிட்ட போதும் லங்கா சமசமாஜக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட கலாநிதி என்.எம்.பெரேராவுடன் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். அத்தேர்தலில் கலாநிதி என்.எம்.பெரேரா 15,275 வாக்குகளையும், திருமதி அடெலின் மொலமுரே 12,300 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தார். இதன்பின்பு அடெலின் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடவில்லை. 
வெளிநாட்டுக்கு பெண்கள் பிரதிநிதியாக கலந்துகொள்ளச் சென்றிருந்த அடெலின்
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதும் அதில் அங்கத்துவம் பெற்று சோல்பரி யாப்பு திட்டத்தின் கீழ் 1947இல் உருவாக்கப்பட்ட செனற்சபைக்கு நியமின உறுப்பினரானார். செனற் சபைக்கு தெரிவான முதற்பெண்ணும் அடெலின் மொலமுரே ஆவார். 1955இல் செனற்சபையின் உப தலைவராகவும் தெரிவானார். வரலாற்றில் அப்பதவி வகித்த ஒரே பெண்ணும் இவரேயாவார். 

1948 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் மகளிர் அணி உருவாக்கப்பட்ட போது அதன் முதல் தலைவியாக அடெலின் தெரிவானார். 1950 இல் சர்வதேச பெண்கள் அமைப்பின் இலங்கைக் கிளையின் தலைவியாகத் தெரிவாகி ஆறு வருடங்கள் அந்தப் பதவியில் வகித்தார்.

அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெற்றதன் பின்னர் எஞ்சிய வாழ்காலத்தில் சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தினார். அவர் கிறிஸ்தவ பெண்கள் சங்கம், லங்கா மஹிலா சமித்தி. ஐக்கிய தேசியக் கட்சியில் பெண்கள் பிரிவு போன்ற அமைப்புகளில் இருந்து செயற்பட்டிருந்தார்.

மகளும் அரசியலில்
அடெலின் மொலமூரேவின் ஒரே மகள் சீதா மொலமூரே செனவிரத்னவும் (1914 – 1998) பிற்காலத்தில் அரசியலில் இறங்கினார். தனது பாட்டனார், தந்தை, தாய் அனைவருமே அரசாங்க சபையில் அங்கத்துவம் வகித்து ஆட்சியில் பங்கு கொண்டவர்கள். எனவே 1965 தேர்தலில் சீதா போட்டியிட்ட போதும் தோல்வியைத் தழுவினார். 1967 ஆம் ஆண்டு பெல்மடுவ தொகுதியின் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியுற்றார். ஆனால் அதே 1967 ஆம் ஆண்டு அவரை செனற் சபைக்கு நியமன உறுப்பினராக நியமித்தது அப்போதைய டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க அரசாங்கம். சிறுவர்கள், இளைஞர்கள் துறைக்கான தேசிய சபையின் தலைவராக அவரை நியமித்தது அரசாங்கம். ஆனால் 1970 இல் செனற் சபை அங்கத்துவத்திலிருந்து இராஜினாமா செய்துவிட்டு அதே ஆண்டு நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் பலங்கொட தொகுதியில் ஐ.தே.க கட்சியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்தார். அவரோடு போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் ஒரு பெண். திருமதி மல்லிகா ரத்வத்த அத் தேர்தலில் வெற்றியடைந்தார். இலங்கையின் அரச அதிகாரத்தில் தாயும் மகளும் பங்காற்றிய முதலாவதாக பதிவுபெறுபவர்கள் அடெலினும் சீதாவும் தான்.  1989 ஆண்டு இலங்கை அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான தேசபந்து விருது சீதாவுக்கு வழங்கப்பட்டது. அவர் 1998 ஆம் ஆண்டு இறந்தார்.  அவரின் மகளின் கணவர் தான் இலங்கை தேயிலைச் சபையின் தலைவராகவும், மெக்வூட் எஸ்டேட்டின் நிர்வாக இயக்குனருமான சேபால இலங்ககூன்.

இத்தகைய பின்புலத்தைக் கொண்ட அடெலின் மொலமூரே 1977 ஆம் ஆண்டு யூலை 27ஆம் திகதி தனது 87ஆவது வயதில் மரணமடைந்தார்.

பரம்பரை – வர்க்கம் – சாதி போன்ற செல்வாக்குடன் தந்தை, கணவர் ஆகியோரின் அரசியல் செல்வாக்கும் தான் அடெலிநின் அன்றைய அரசியல் நுழைவை சாத்தியப்படுத்தியிருந்தது. 1931 இல் நடத்தப்பட்ட முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு பெண்ணும் தெரிவு செய்யப்படாத நிலையில் ஒரு மரணமும், அதன் வழியாக விளைந்த இடைதேர்தலும் தான் அந்த நுழைவை சாத்தியப்படுத்தியிருந்தது. ஆனாலும் அந்த ஆரம்ப சூழலில் பெண்கள் ஆரசியல் அதிகாரத்துக்கு வருவதற்கு பெரும் இடையூறுகள் இருந்த சூழலில் அடெலினின் வருகை பலருக்கும் வியப்பை மட்டும் தரவில்லை. பல பெண்களுக்கு ஒரு முன்னுதாரண வழிகாட்டியாக ஆனார் அடெலின். இலங்கைப் பெண்களின் அரசியல் வரலாற்றில் அடெலின் தொடக்கி வைத்த புள்ளி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

இது வரை தெரிவான பெண்களின் எண்ணிக்கை

* அரசியலில் பெண்களின் நுழைவுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த இலங்கை உலகிலேயே பெண்களின் பிரதிநிதித்துவத்தில் மோசமான முதல் பத்து நாடுகளில் ஒன்றாக ஆகியிருக்கிறது. இந்த அட்டவணையில் அதைப் பார்க்கலாம்

நன்றி - தினகரன்

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates