மலையக மக்கள் பிரதேச, மாகாண, பாராளுமன்ற அரசியலில் தத்தமது பிரதிநிதிகளை வெற்றி பெறச் செய்வதில் பிரிந்து நின்று செயற்பட்டிருந்தாலும், நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சிகளின் ஆணையைப் புறக்கணித்து, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பிரஜைகள் என்ற ரீதியில் சுயமாகச் சிந்தித்து செயற்பட வேண்டும் என பிரபல சமூக ஆய்வாளர் பெ. முத்துலிங்கம் நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நாடு பொதுவாக இன்று அரசியலில் ஒரு முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த நகர்வில், மலையக இந்திய வம்சாவளி மக்கள் எத்தகைய தீர்மானத்தை எடுக்கவுள்ளார்கள் என்பது முக்கியமான விடயமாகக் காணப்படுகின்றது. ஏனெனில், சர்வதேச ரீதியாக நோக்கும் போது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்பு நடைமுறையில் இருக்கும் அமெரிக்கா, பிரேஸில் உட்பட சில நாடுகளின் தலைவர்கள் ஆகக் குறைந்தது இரண்டு தடவைகள் மாத்திரமே தேர்தலில் பங்கேற்று ஆட்சி செய்யக் கூடியதாக உள்ளது.
ஆனால், இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் ஒருவர் இரண்டு முறை மாத்திரமே போட்டியிட முடியும் என்ற அரசியலமைப்பு மாற்றப்பட்டு, மூன்றாவது முறையாகவும் போட்டியிடலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்ட நேரத்திலிருந்தே நாட்டில் அரசியல் நெருக்கடி தோன்றியுள்ளது. அந்த வகையில், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு தேர்தலாகவே பெரும்பாலான மக்கள் கருதுகின்றார்கள்.
அதில், இந்த நாட்டின் பிரஜைகளாக இருக்கும் மலையக இந்திய வம்சாவளி மக்கள் இந்தத் தேர்தலில், பங்கு கொள்ளும் போது, இந்த அடிப்படை உண்மையை மனதில் இருத்திக் கொண்டே தமது வாக்குகளை எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
மலையக மக்களைப் பொறுத்த வரையில், தமது தலைமைகளின் வேண்டுகோளுக்கு இணங்கி, குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்கும் வழக்கத்தை 1980 களின் பின்னிறுதி வரை ஏற்றுக் கொண்டு வந்திருந்தார்கள். ஆனால், படித்த புதிய தலைமுறையினரின் தோற்றத்துடன் அது மாற்றமடையத் தொடங்கியது. அதன் விளைவாகவே இன்று மலையகத்தில் தனிப்பட்ட கட்சிகளின் பிரதிநிதித்துவத்துக்குப் பதிலாக பல்கட்சி பிரதிநிதித்துவம் உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபை மற்றும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது. இந்த, பல்கட்சி ஜனநாயகம் ஒரு ஆரோக்கியமான நிலையில் இருப்பதுடன் ஜனநாயகத்தை தேசிய அளவில் பாதுகாப்பதில், மலையக மக்களுக்குப் பாரிய பங்குண்டு என்பதையும் உணர்த்துகிறது.
அந்த வகையில், இன்று மலையகக் கட்சிகள் இந்த ஜனநாயகத் தன்மையைப் பாதுகாப்பதில் பாரிய பங்களிப்பைச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன. அவைக்கு ஒருதலைப் பட்சமாக செயற்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத் தேவையும் ஏற்பட்டுள்ளது. மலையகக் கட்சிகள் ஒருபக்கச் சார்பான நிலைப்பாட்டை தமது சுயநலத்தை முதன்மைப்படுத்தி மேற்கொள்ளாமல், மலையகத்தின் படித்த தலைமுறையினதும், மலையகத்தினது தலைவிதியையும், நாட்டின் ஜனநாயகத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகப் பரிணமிக்க வேண்டும்.
இந்த அடிப்படை யதார்த்தத்தை மலையகத்தின் படித்த மற்றும் அரசியல் போக்கின்பால் அக்கறை செலுத்தும் அறிவுஜீவிகளும், இளைஞர் யுவதிகளும் கருத்திற் கொண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு தமது வாக்கை அளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இந்த வரலாற்றுத் தேவையை இளந் தலைமுறையினர் செய்யத் தவறினால், அவர்கள் ஜனநாயகத்துக்கு விரோதமாகச் செயற்பட்டவர்கள் என்ற பழிச்சொல் வரலாற்றில் இடம்பெற்று விடும். மறுபுறத்தில், உரிமைகள் மறுக்கப்பட்ட மலையகம் தொடர்ந்து இன்னுமொரு தசாப்த காலத்துக்கு அதே நிலையிலேயே வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடும்.
எனவே, மலையக மக்கள் உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் தத்தமது பிரதிநிதிகளை வெற்றி பெறச் செய்வதற்கு பிரிந்து நின்று செயற்பட்டிருந்தாலும், நாட்டின் தலைவிதியையும், ஜனநாயகத்தையும் நிர்ணயிக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தலில், தமது கட்சிகளின் கருத்துகளுக்குச் செவிமடுக்காமல், இந்த நாட்டின் பிரஜை என்ற ரீதியில் ஒவ்வொருவரும் சுயமாகச் சிந்தித்து வாக்களித்து ஜனநாயகத்தின் பங்காளிகளாக மாற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நன்றி - http://www.eprlfnet.com/
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...