கிழக்குத் திமோர் முன்னாள் ஜனாதிபதி ஜோசே ராமோஸ் ஹோர்த்தா தமிழீழ விடுதலை குறித்து தெரிவித்த கருத்துக்கள் இந்த நாட்களில் உரையாடப்படுகின்றன.
கிழக்குத் திமோர் விடுதலை இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும் அதன் தலைவர்களில் ஒருவருமாக இருந்த அவர் 1996 ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்தார். அப்போதும் அவ்வியக்கம் விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்தது. இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான ஒரு பயிற்சிப்பட்டறையை சிங்கள இடதுசாரித் தோழர்கள் இலங்கை மன்றக் கல்லூரியில் ஒழுங்கு செய்தார்கள். அந்தப் பயிற்சிப் பட்டறையில் நானும் கலந்து கொண்ட போது அவரிடம் ஒரு நேர்காணலையும் சரிநிகர் பத்திரிகைக்காக செய்திருந்தேன்.
அவர் இலங்கையை விட்டு சென்று ஒரு வாரத்தின் பின் அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அப்போது எனக்களித்த பேட்டியில் கூறியவற்றைக் கொண்டு ஆக்கிய கட்டுரை இது.
"இந்தோனேசியாவை எதிர்த்துப் போராட பாரிய பலம் எமக்கு இல்லை . ஆகவே சர்வதேச மத்தியஸ்தத்துடன் கூடிய அரசியல் தீர்வே எமக்கு இறுதியான தீர்வாக அமைய முடியும்."
இப்படி ரிமோர் விடுதலை இயக்கத் தலைவர் ஜோசே ராமோஸ் ஹோர்தா அண்மையில் இலங்கை வந்திருந்த போது சரிநிகருடனான உரையாடலின் போது குறிப்பிட்டார்.
ஜோசே அவர்கள் இலங்கையை விட்டுச் சென்று இரு நாட்களின் பின் '96 ஆம் ஆண்டுக்கான சமாதானத்துக்கான நோபல் பரிசு" அவருக்கு கிடைத்தது. ஒரு விடுதலைப் போராளி 'நோபல் பரிசு பெற்றது குறித்து இப்போது சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் யார் இந்த ஜோசே? கிழக்கு ரிமோர் விடுதலைப் போராட்டத்தின் பின்னணி என்ன? 'நோபல் பரிசு" வழங்குனர்களான மேற்குலகு, மற்றும் அமெரிக்கா போன்றவற்றின் கிழக்கு ரிமோர் மீதான தேவை தான் என்ன? அவை செலுத்தி வரும் ஆதிக்கம் தான் என்ன? என்பதை சாராம்சமாகவேனும் மீள பார்ப்பது தமிழ் தேச போராட்ட வரலாற்றில் நடைமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை அவதானிக்கவும் அவசியப்படும். எச்சரிக்கையை ஏற்படுதவும் உதவும்.
போர்த்துக்கல் அன்றைய காலத்தில் தன்னைவிட 20 மடங்கு பெரிய நிலப்பகுதியை தனது குடியேற்ற நாடுகளாகக் கொண்டிருந்தது.
தன்னுடைய காலனித்துவத்துக்குட்பட்டிருந்த கிழக்கு ரிமோரில் 1974ம் ஆண்டு எற்பட்ட இரரணுவச் சதியைத் தொடர்ந்து போர்த்துக்கல் அங்கு சுதந்திரம் வழங்கியது. கிழக்கு ரிமோரின் பிரடிலின் அமைப்பு (FRETILIN) 1975ம் ஆண்டு நவம்பர் 28ம் திகதி கிழக்கு ரிமோரை சுதந்திர அரசாகப் பிரகடனம் செய்தது. எண்ணி 10வது நாளில் அண்டை நாடான இந்தோனேசியா கிழக்கு ரிமோரை ஆக்கிரமித்ததுடன் தன்னுடைய 27வது மாகாணமாகப் பிரகடனப்படுத்தியது. அன்று தொடங்கியது தான் ரிமோர் விடுதலைப் போராட்டம்.
இலங்கையைப் போலவே அங்கும் பல்வேறுபட்ட இயக்கங்கள் ரிமோர் விடுதலைக்காகப் போராடி வருகின்றன. பிரதானமாக சமூக ஜனநாயக அணி, கிறிஸ்தவ அணி, கம்யூனிச அணி என பல இயக்கங்கள் வேறுபட்டு நிற்கின்றன.
'தற்போது அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்து மௌபரி எதிர்ப்பியக்கத்தின் தேசிய சபை (National Council of Moulbere Resistance) எனும் அமைப்பை உருவாக்கி இயங்கி வருகிறோம் இவ்வமைப்பில் இயக்கங்களின் தனிப்பட்ட கொள்கைகளை பேசுவதை தவிர்த்துக் கொண்டு கிழக்கு ரிமோரின் விடுதலையையே முதன்மைப் படுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்." என்கிறார். ஜோசே.
இந்த ஐக்கிய முன்னணியின் தலைவர் குஸ்மாவோ 1992ம் ஆண்டு இந்தோனேசியாவில் பிடிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு பின் அத்தண்டனை மாற்றப்பட்டு 25 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வருபவர். இவரது கைதின் பின் ஐக்கிய முன்னணியின் சிறப்பு துதுவராகவே ஜோசே அவர்களே இயங்கி வருகிறார். இதை விட போர்த்துக்கேயரிடமிருந்து விடுதலை பெற்ற பின் குறுகிய காலம் ஆட்சியிலிருந்த அமைச்சரவையில் வெளிநாட்டமைச்சராக கடமையாற்றிய ஜோசே இந்தோனேசியா ஆக்கிரமித்த காலகட்டத்தில் நியுயோர்க்கில் ஒரு மாநாட்டுக்காக சென்றிருந்தார். பிரடிலின் அமைப்பைச் சேர்ந்த பலர் அதன் போது கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து இவர் தனது தாய் நாட்டுக்குப் போகவில்லை. நாட்டுக்கு வெளியிலிருந்தே தனது கடமைகளைச் செய்து வருகிறார். ஜோசேவின் நான்கு சகோதரர்களை இந்தோனேசிய அரச படையினர் கொலை செய்து விட்டனர்.
ரிமோர் விடுதலைப் போராட்டத்தை இலங்கையோடு ஒப்பிடுமாறு கேட்டபோது,
'இலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்தில் அமர்கின்ற அரசாங்கம் தமது இராணுவ பலத்தைக் கொண்டு அடக்கு முறையை மேற்கொள்கிறது. அது தெற்கிலும் சரி வடக்கிலும் சரி. எனவே இலங்கையைப் பொறுத்தவரை - சிவில் யுத்தமே நடைபெறுகிறது. ஆனால் நாங்கள் அந்நிய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி வருகிறோம்." என்கிறார்.
எதிரிகளை ஒன்றும் செய்வதில்லை
"விடுதலை அமைப்புகளினால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் பற்றி என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்ட போது
...அந்நிய இராணுவத்துக்கெதிரான போராட்டதின் போது ஏற்படும் மனித உரிமை மீறலை விட சிவில் யுத்தத்தின் போது ஏற்படும் மனித உரிமை மீறல்கள் மிகுந்த கவனத்துக்குரியன. ஒரு ஜனநாயக நாட்டில் அரசாங்கம் மக்கள் வாக்குகளினாலேயே பதவிக்கமர்கிறது. அதற்கு ஆதரவளிக்கும் பிரிவினரும் உள்ள நிலையில் அவர்களுக்கு ஆயுதப் போராட்டம் பற்றி போதியளவு விளக்கங்களை அளித்துக் கொண்டே செயல்பட வேண்டியுள்ளது." என்று தெரிவித்தார்.
'தமிழ் தேசப் போராட்டம் குறித்து என்ன விளங்கி வைத்துள்ளீர்கள்? என சரிநிகருடனான நேர்காணலில் கேட்டபோது, 'சிறிதே தெரிந்து வைத்துள்ளேன். தமிழ் மக்கள் நெடுங்காலமாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அதற்கு ஒரு வரலாற்றுப் போக்கு உண்டு. இரு தரப்பினதும் அடக்குமுறைக்கும் மக்கள் முகம் கொடுத்து வருகிறார்கள்.. புலிகள் சாதாரண சிங்கள, தமிழ் சிவில் மக்களுக்கு நெருக்கடி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். எதிரிகள் எப்படியிருந்த போதும் போராட்ட சக்தியொன்று இப்படி இயங்குகையில் மக்களிடம் கொண்டுள்ள தார்மீக பலத்தை இழந்து விடும் சிக்கலும் உண்டு. எனவே ஒரு சுய ஒழுக்கக் கோவையொன்றை பின்பற்றுவது அவசியமானது.
என்றாவது எமது அமைப்பு இந்தோனேசிய அல்லது ரிமோரிய அப்பாவி மக்களை கொன்றொழித்தால் அன்றே நான் அமைப்பிலிருந்து விலகுவேன்.
இந்தோனேசிய ராணுவத்திடம் எமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழக்கமாக பிடிபடுகின்ற போது நிச்சயமாக கொன்றுவிடும். நாங்கள் கொல்வதில்லை. சிறிது நாட்கள் வைத்திருந்துவிட்டு விடுதலை செய்து விடுவோம்.
எமது நாட்டிலும் இந்தோனேசிய இராணுவத்துக்கு எம்மைக் காட்டிக்கொடுக்கும் ரிமோரியர்கள் கூட உள்ளனர். ஆனால் நாங்கள் ஒரு போதும் அவர்களுக்கு எதிராக எதனையும் செய்ததில்லை.
இதன் மூலம் நாங்கள் எதிர்பார்ப்பது எதிரிகளை குறைத்துக் கொள்வதும் நண்பர்களை அதிகரித்துக் கொள்வதுமே" என்கிறார் ஜோசே.
இன அழிப்பின் முன்
ஜோசேவின் பதில் குறித்த சில வினாக்கள் எழுகின்றன. 'இந்தோனேசிய ஆக்கிரமிப்பு தொடங்கியபோது, முதல் மூன்று வருடங்களில் ரிமோரிய சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரை இந்தோனேசிய இராணுவத்தினர் கோரமாக கொற்றொழித்தது. இதைத் தவிர மக்கள் தொகையில் பாதிப் பேர் காணாமல் போய்விட்டதாக ரிமோர் கத்தோலிக்க திருச்சபை கூறுகிறது, தனது ஆக்கிரமிப்புக்கு எந்தவித நியாயங்களையும் முன்வைக்காத இந்தோனேசியா ரிமோர் மக்களை கைது செய்து பாதையில் குப்புறக் கிடத்தி இராணுவ வாகனங்களை ஏற்றிக் கொன்றது. நேபாம் குண்டுகள், பீப்பாய் குண்டுகள், என்பன விமானங்களின் மூலம் மலைப்பிரதேசங்களில் மீது போடப்பட்டு கொன்றொழிக்கப்பட்டனர். ஓடியொளிந்த இளம் பெண்கள் முகாம்களில் நிரந்த காமத்தீனிகளாகப் பயன்படுத்தப்பட்டனர். ரிமோரிய மக்களின் எண்ணிக்கை கூடாதபடி இராணுவமே கட்டாய கருத்தடையையும் புகுத்தியது.
1992ம் ஆண்டு ரிமோரின் தலைநகரான திலியில் சாந்தகுரூஸ் மயானத்தில் வைத்து அதுவரை கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தவெனக் கூடிய மக்கள் மீது இராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. அதன் போது 272 பேர் ஸ்தலத்திலேயே மரணமாயினர். அதில் காயங்களுக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்ட்டிருந்த பெண்களை அங்கேயே வைத்து இராணுவம் பாலியல் வல்லுறவு கொண்டது என சர்வதேச மன்னிப்புச் சபையும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜோசே , காட்டிக் கொடுப்பவர்களை நாம் ஒன்றும் செய்வதில்லை என்று சொல்கின்ற போதும் அது அவர்களது அமைப்பினை தற்கொலைக்கு இட்டுச் செல்லும் ஒரு செயலாக இருக்காதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை, இது குறித்த எமது கேள்விக்கு அவர் அளித் பதில் போதுமானதாக இருக்கவில்லை, ஜோசே 1992 யூனில் சரிநிகருக்கு அளித்த பேட்டியொன்றில் 'எங்களிடம் ஆயுதம் இல்லை , பலமான கெரில்லாப் படையும் இல்லை, மக்கள் ஆதரவும், அனைத்துலக அரவனைப்பும் தான் உள்ளது. என்கிறார். இன்னமும் அதையே சொல்லி வருகிறார். ஆனால் இந்த சர்வதேச அரவணைப்பு என்பது எதிரி நடத்தும் அடக்கு முறையை அங்கீகரிக்கும், ஆதரவு வழங்கும் சக்திகளே என்பதையும் எதிரிக்கு பக்கபலமானது என்பதை விழிப்புணர்வுடன் நோக்காமல் இருக்க முடியுமா? தம்மீதான இரங்கலின் அர்த்தம் அரவணைப்பல்ல வெறும் முதலைக் கண்ணீர் மட்டுமே என்பதை நோக்காமல் விட முடியுமா? அவர்களின் முதலைக் கண்ணீருக்கு பின்னணியில் உள்ள அவர்களின் தேவையை கண்டுங்காணாமல் விட்டுவிட முடியுமா?
யார் இந்த அரவணைப்பாளர்கள்?
ஜோசே அவர்கள் கிழக்கு ரிமோருக்கு வெளியில் நின்று கொண்டு (போராட்டத்தில் நேரடி பங்களிப்பின்றி) ஒரு பிரச்சாரகராக மட்டுமே செயல்படுபவராகவே இனங்காணப்படுகிறார். அதனாலேயோ என்னவோ இந்தோனேசிய ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆயுதப் போராட்டம் பற்றிய உணர்வை விட மனித உரிமையாளராக முன்னிற்பதில் கூடிய அக்கறை காட்டி வருகிறார். குறிப்பாக 'எமது பிரடிலின் அமைப்புக்குக் கீழ் தலைமறைவு மாணவ அமைப்பு இயங்கி வருகிறது." என்று கூற முயல்கிறாரேயொழிய தமது கெரில்லா அமைப்பு பற்றி பெரிதாக காட்டிக்கொள்ள விரும்புபவராக இருக்கவில்லை . ஒரு சமூக ஜனநாயகவாத சக்தியாக ஜோசே இருக்கின்ற போதும் முழு போராட்ட சக்தியையும் அவ்வாறுதான் எனக் காட்டிக் கொள்ளவே அதிகம் முயல்கிறார்.
கூடுதலாக - அவர் தாமும் ஏனையமுதலாளித்துவ சக்திகளின் நன்பன் தான் எனக் காட்டிக்கொள்ள முயல்கிறார் என்றும் கொள்ளலாம். ஏனெனில் ஜோசே அவர்கள் அமெரிக்காவினதும் மேற்குலகினதம் அவுஸ்திரேலியாவினதும் நண்பராகவே தொழிற்பட்டு வருகிறார். இந்நாடுகள் இந்தோனேசியாவினது நெருங்கிய கூட்டாளி என்பது தெரிந்திருந்தும் தமது போராட்டத்தை ஒடுக்க ஆயுத, பொருளாதார மற்றும் பிரச்சார நடவடிக்கைகளையும் இந்நாடுகள் இந்தோனேசியாவுக்கு வழங்கி வருகின்றன என்பது தெரிந்தும் ஜோசே இந்நாடுகளில் தங்கியிருப்பது மற்றும் நம்பியிருப்பது போராட்டதில் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
இந்நாடுகள் இவ்விடயம் குறித்த நிலைப்பட்டுக்கான பிரதான காரணிகள்,
- பசுபிக் பிராந்தியத்தில் வடக்கே சீனா, வியட்நாம், லாவோஸ், வடகொரியா என்பனவற்றின் செல்வாக்கினால் கிழக்காசிய மற்றும் அவுஸ்திரேலிய, நியுசிலாந்து போன்ற நாடுகளும் சோஷலிச நாடுகளாக ஆகிவிடுமோ என்கின்ற அச்சம், அதைத் தடுப்பதானால் இந்தோனேசியா ஒரு முதலாளித்துவ நாடாக இருந்து கொண்டு அப்பிராந்தியத்தில் ஒரு பிரிநிலைக்கோடாக இருக்கவேண்டும்.
- இந்தோனேசியாவில் காணப்படும் எண்ணெய் வளம், கனிப்பொருட் செறிவு, பணங்குவிக்கும் சந்தனக் காடு, கடல் வளம் என்பன மேற்படி நாடுகளின் முதலீட்டுக்கான வாய்ப்புக்களை ஊக்குவிப்பன.
இதன் காரணமாகவே இந்தோனேசியாவுக்கு இந்நாடுகள் 'அன்புக்கு அடிமையானவர்கள்." எனவே தான் 1975ம் ஆண்டு ஆக்கிரமிப்பின் போதே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிஸீங்சர் என்பவர் 'ஆக்கிரமிப்பை எப்படி நடத்துவது" என்கின்ற ஆலோசனையை இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்து அறிவுறுத்தியிருந்தார். இத்தகவல் மிகவும் பிற்காலத்திலேயே அம்பலமானது.
ஜோசே அவர்கள் கருத்து தெரிவிக்கையில் "அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நோர்வே, ஸ்வீடன், பிரான்ஸ், உள்ளிட்ட பல மேற்குல நாடுகளும் எமக்கு ஆதரவு வழங்கி வருகிறது." என்கிறார்.
'அவ்வாதரவு அந்நாடுகளின் தார்மீக ரீதியான ரிமோரிய விடுதலைக்கான ஆதரவா அல்லது தமது சுய உள் நோக்கங்களுக்கான ஆதரவா?" என்ற கேட்கையில்,
'இல்லை... இல்லை.... அந்நாடுகள் எமது போராட்டத்துக்கான ஆதரவை தார்மீக ரீதியல் வழங்கி வருகின்றன. உள்நோக்கங்கள் எதுவுமில்லை குறிப்பாக அமெரிக்காவில் கிளின்டன் ஆட்சிக்கு வந்ததன் பின் இந்தோனேசியாவுக்கான ஆயுத விநியோகத்தை குறைத்துக்கொண்டுள்ளார்." என்கிறார்.
ஆனால் அண்மைய செய்திகளின் படி கிளின்டன் அரசாங்கம் எப். 16 வர்க்க யுத்த விமானங்களை இந்தோனேசியாவுக்கு வழங்கியிருக்கிறது. தற்போது நடந்து வரும் அமரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் கிளின்டனுக்காக இந்தோனேசிய வர்த்தகர்கள், கோடீஸ்வரர்கள் பெருமளவு செலவு செய்து வருவதாக எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் பொப் டோல் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதுவும் இங்கு கவனிக்கத்தக்கது.
கிழக்கு ரிமோரை இந்தோனேசியா வாபஸ் பெற வேண்டும் என்கின்ற தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புச்சபை 1975, 1976 ஆகிய ஆண்டுகளில் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தது. இந்தோனேசியா அதனை கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. வழமையான பாதுகாப்புச் சபை கூட்டங்களின் போதெல்லாம் அத்தீர்மானம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எங்கே போயின இந்த மேற்குலகும், அமெரிக்காவும்? அவுஸ்திரேலியா கூட 1978ஆம் ஆண்டே இந்தோனேசியாவுடனான ரிமோர் இணைப்புக்கு அங்கீகாரம் வழங்கிவிட்டது. இன்றும் இந்தோனேசியாவுக்கு இராணுவப்பயிற்சியையும் அவுஸ்திரேலியா வழங்கி வருகிறது. இத்தனைக்கும் இரண்டாம் உலக க யுத்த காலத்தில் அவுஸ்திரேலியாவைப் பாதுகாப்பதற்காக 40,000 கிழக்கு ரிமோர் வீரர்கள் அவுஸ்திரேலிய மண்ணில் தமதுயிரைத் தியாகம் செய்தார்கள். அவுஸ்திரேலியாவுக்கோ தனக்கருகில் இன்னாரு 'கியுபா" உருவாகி விடக்கூடாது என்பதே.
கைகோர்த்துவிட ஓர் கிளின்டன்! இந்த மேற்கத்தேய முதலாளித்துவகிறிஸ்தவ நாடுகளுக்கு உள்ள இன்னுமொரு பிரதான பிரச்சினை தான், இந்தோனேசியாவை இஸ்லாமிய அடிப்படைவாதப் போக்குக்கு ஆளாக விடாமல் தடுப்பது என்பது, இந்தோனேசியா உலகின் சனத்தொகையில் ஐந்தாவது இடம் என்பதும் உலகிலுள்ள 10 வீதமான முஸ்லிம்கள் இங்கு தான் இருக்கிறார்கள் என்பதுவும் மேற்படி சக்திகளை அச்சுறுத்தும் காரணிகள், எனவே தான் கிழக்கு ரிமோரிலும் தமது காலை பதித்து வைத்துள்ளன. தேவையேற்படின் இரண்டையும் மாற்றி மாற்றி காய் நகர்த்தும் வேலையில் ஈடுபடும். இந்தியா தமிழ் தேசப் பிரச்சினையில் நடந்து வருவதைப்போல் இன்றும் அமெரிக்கா நடந்து வருவதைப்போல் அங்கு அவை. ஐ.நா.விலும் இந்நாடுகளின் கையோங்கிய நிலை இருப்பதன் காரணமாகவே அதன் தீர்மானத்தையும் கூட நடைமுறை சாத்தியமற்றதாக்கியுள்ளது. இல்லாவிட்டால். ரிமோரின் விடுதலை எப்போதோ கைகூடியிருக்கும்.
ஜோசேயின் சர்வதேச பிரச்சாரமும் இது வரை இந்த மேற்குலக நாடுகளின் ஏமாற்று வித்தையை அம்பலப்படுத்துவதற்கு மாறாக (அதாவது விடுதலைக்கு தடையாக இருக்கும் சக்திகளாக உலகுக்கும் தமது தேசத்துக்கும் இனங்காட்டுவதில்) இந்நாடுகளின் போக்கை உண்மைக்குப் புறம்பாக பிரச்சாரிப்பதற்கு உடந்தையாகி வந்துள்ளாரா என்று எண்ண தோன்றுகிறது. அவருக்கு கிடைத்த நோபல் பரிசு அதனை மெய்ப்பிப்பாற் போல் தெரிகிறது.
தென்னிலங்கை மாக்சீய அமைப்பொன்றைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ' ஜோசே நோபல் பரிசு வாங்கியது நல்லது. அது சர்வதேச பிரச்சாரத்துக்கு கைகொடுக்கும்" என்றார். இன்னொரு இளைஞரோ இல்லை... அதனை நிராகரித்திருந்தாலும் அதற்குக் கிட்டிய அல்லது அதனிலும் கூடிய சர்வதேச பிரச்சாரமான்று கிடைத்தே இருக்கும். நோபல் பரிசுடன் மெய்சிலிர்த்துப் போயிருக்கும் ஜோசே வெற்று மனித உரிமைப் பிரச்சாரத்துக்கு மாத்திரமே மேலும் இதன் மூலம் ஊக்குவிக்கப்படுவார்" என்கிறார்.
நன்றி - சரிநிகர் - 1996.11.07