Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

நினைவுகளையும் ஆயுதங்களாக்கும் பேரினவாதம் - என்.சரவணன்


சிங்கள பௌத்த வரலாற்று நாயகர்களை முன்னிறுத்தி நினைவு நாட்களை அனுஷ்டிக்கும் பழக்கம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதை சமீபகாலமாக கவனிக்க முடிகிறது. அதில் என்ன தவறு இருக்கிறது என்கிறீர்களா...

சிங்கள பௌத்த மேலாதிக்க உணர்வை வலுப்படுத்தவும், சிங்கள பௌத்த ராஜ்ய உருவாக்கத்துக்கும், சிங்கள பௌத்த நாடு இது, மற்றவர்கள் அந்நியர்கள் என்பதை நிறுவதற்கான சந்தர்ப்பமாகவும் இந்த நாளை ஆக்கிக்கொள்வதில் தான் ஆபத்து இருக்கிறது. புத்த ஜயந்தி தினத்தை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை என்பது தான் இதில் கொடுமையானது.

அநகாரிக்க தர்மபாலாவின் 150வது ஜனன தினத்தையொட்டி இந்த வருடம் ஏராளமான நிகழ்வுகளை சகல இனவாத அமைப்புகளும் பெரிய மற்றும் சிறிய அளவுகளில் நாடெங்கிலும் நடத்தி வருவதை கண்டிருப்பீர்கள். தனது பேச்சாலும், போதனைகளாலும், எழுத்தாலும் சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரையும் வெறுக்க கற்றுக்கொடுத்தவர் அவர். அவரது அந்த உரைகளை நாடளாவிய அளவில் இனவெறுப்பை வளர்ப்பதற்காக பாவிக்கப்பட்டு வருவதை அவர்களது பிரசுரங்களில் இருந்து காணலாம். குறிப்பாக பொதுபல சேனா பல பிரசுரங்களை வெளியிட்டிருக்கிறது. அவற்றில் சில நூல்களை அவர்களது இணையத்தளத்திலிருந்தும் தரவிறக்கிக்கொள்ளமுடியும்.

கடந்த 26ஆம் திகதி கெப்பட்டிபொலவின் நினைவு நாளையும் அப்படித்தான் இனவிஷம் பூசிய ஒரு நினைவு நாளாக ஆக்கியிருந்தார்கள். சிங்கள நாளிதழ்கள் அனைத்திலும் அதனை நினைவுகூரும் பல கட்டுரைகள், அறிக்கைகள் செய்திகள் பிரசுரமாகியிருந்தன.

வீர கெப்பட்டிபொல இலங்கையின் முதன்மை நிலையில் வைத்துப் போற்றப்படும் சிங்கள வீரன். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு சிங்கள பௌத்த ஆட்சியை நிறுவ முயன்ற விடுதலை வீரனாக சிங்கள வரலாறுகளில் குறிக்கப்படுகிறான். ஆனால்  “சிங்கள சமூக அமைப்பு”  (Sinhalese social organization – Ralph Pieris) என்கிற நூலில் மலபாரிலிருந்து இலங்கை வந்த ஒரு அரசரோடு வந்த கெப்பட்டிபொலல பரம்பரையைச் சேர்ந்தவர் தான் இந்த கெப்பட்டிபொல என்று நிறுவுகிறார். 

1948இல் கெப்பட்டிபொலவின் குடும்பத்தினரால் இலங்கை திருப்பி கொணரப்பட்ட மண்டையோடு தலதா மாளிகையில் மக்கள் பாரவைக்கு வைக்கப்பட்டிருந்தபோது
கண்டி அரசர் ஸ்ரீ விக்கிரமசிங்க ராஜசிங்கவின் கண்டி (திசாவ) பிரதானிகளில் ஒருவர் கெப்பட்டிபொல. தனது சகோதரியின் கணவரான எஹெல்லபொலவும் பிரதானிகளில் ஒருவர். ஏனைய பிரதானிகள் செய்த சதியின் காரணமாக எஹெல்லபொலவுக்கும் அரசருக்கும் இடையில் பகைமையை மூண்டுவிடுகிறது. அதன் விளைவு எஹெல்லேபொலவின் மனைவி குமாரிஹாமியும் பிள்ளைகளும் உரலில் போட்டு இடித்தும், சிரச்சேதம் செய்தும் கொல்லப்பட்டதாக கதைகள் கூறுகின்றன. (ஆனால் இப்படி கொன்றதற்கான எந்த ஆதாரமும் இல்லையென்று இன்றும் சிங்கள அறிஞர்கள் பலர் வாதிடுகிறார்கள் என்பது இன்னொரு கதை)

தன் சகோதரியையும் பிள்ளைகளையும் கொன்ற ஸ்ரீ விக்கிரமசிங்க அரசனுக்கு எதிராக தன் மைத்துனரான எஹெல்லபொலவுடன் சேர்ந்து கண்டி அரசரை ஆங்கிலேயர்களுக்கு காட்டிக்கொடுத்து கண்டி அரசை கவிழ்க்க உதவுகிறார்கள். ஸ்ரீ விக்கிரமசிங்க சிறைபிடிக்கப்பட்டு பின்னர் வேலூரில் இறந்துவிடுகிறார். ஏனைய பிரதானிகளின் அதிகாரங்கள் பாதுகாக்கப்படும் வகையில் “கண்டி ஒப்பந்தம்” 1815இல் செய்துகொள்ளப்பட்டது. அதன் படி அவர்கள் ஆங்கில அரசில் பதவியும் வகித்தார்கள். பின்னர் இரு தரப்பிலும் ஏற்பட்ட பரஸ்பர அதிருப்தி காரணமாக ஆங்கிலேயர்களை எதிர்த்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஊவா வெல்லஸ்ஸ மக்களுக்கு தலைமை கொடுத்தார் கெப்பட்டிபொல. இறுதியில் கெப்பட்டிபொலவை பிடித்து 1818 நவம்பர் 26 அன்று கண்டி போகம்பர சிறைச்சாலையில் தலையை துண்டித்து கொன்றது மட்டுமன்றி பின்னர் பரிசோதனைக்கென்று கெப்பட்டிபொலவின் தலையை இங்கிலாந்துக்கு கொண்டு சென்று வைத்திருந்தது ஆங்கிலேய அரசு. பின்னர் 1948இல் அந்த மண்டையோடு மீண்டும் இலங்கை கொண்டுவரப்பட்டது என்பது தான் சாராம்சம்.
எஹெலபொல குமாரிஹாமி திரைப்படத்தில் குடிகாரனாக மன்னன் ஸ்ரீ விக்கிரமராஜசிங்க

இப்போது இந்த கதையை சிறுபான்மையினருக்கு எதிராக திரித்து பயன்படுத்தி வருவதைத் தான் சமகால போக்கோடு வைத்து பார்க்க வேண்டியிருக்கிறது. கெப்பட்டிபொல ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ந்ததற்கான இன்னொரு காரணம் ஆங்கிலேயர்கள் அதிகாரங்களை முஸ்லிம்களுக்கு கொடுத்து சிங்களவர்களுக்கு துரோகம் இழைத்தார்கள் என்பது. கெப்பட்டிபொல இருந்த இடத்தைக் காட்டி கொடுத்தது முஸ்லிம்கள் தான் என்கிற பல சிங்கள கட்டுரைகளையும் இப்போது காணக்கிடைக்கிறது. 
இந்த வருடம் வெளியான “எஹெலபொல குமாரிஹாமி” என்கிற திரைப்படம் இந்த போக்குகெல்லாம் சிறந்த சாட்சி. இதுவரை கண்டி அரசன் ஸ்ரீ விக்கிரமசிங்கவை வணக்குத்துகுரிய ஒருவராகவே பாடப்புத்தகங்களிலும் வரலாறுகளிலும் கூறப்பட்டு வந்ததை மறுதலித்து, ஒரு குடிகாரனாகவும், ஒரு பெண்பொறுக்கியாகவும் சித்திரிக்கிறது அந்த திரைப்படம். எஹெலபொல, கெப்பட்டிபொல ஆகியோரை வீரர்களாக சித்தரிப்பதுடன் உரலில் இடித்து கொல்லப்பட்டதாக கூறப்படும் புனைவை இறுதி கிளைமேக்ஸ் காட்சியில் உணர்ச்சிததும்ப காட்டி ஸ்ரீ விக்கிரமசிங்கவை ஒரு கொடூர கொலைகாரனாக காட்டுகிறது அந்த திரைப்படம்.

இவை எல்லாமே பேரினவாதமயப்படுத்தலின் அங்கங்களாகவே காணவேண்டியிருக்கிறது.

கெப்பட்டிபொலவின் நினைவு நாளை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை சேர்ந்த பெருமளவு இளைஞர்களை கூட்டி 26 அன்று நடத்திய மாநாட்டில் பிரதான உரையாற்றியவர் விமல் வீரவங்ச. நீண்டதொரு உணர்ச்சிமிகு உரை அது. அன்றைய கெப்பட்டிபொல காலத்து காட்டிகொடுப்பையும் நடத்துமுடிந்த யுத்தத்திலும், சமகால ஜனாதிபதித் தேர்தலிலும் நிகழ்ந்த காட்டிக்கொடுப்புகளோடு ஒப்பிட்டு ஒரு வரலாற்று உரையை நிகழ்த்தியிருந்தார். துரதிஷ்டவசமாக இதுபோன்ற உரைகள் எதுவும் தமிழ் வாசகர்களுக்கு கிடைப்பதில்லை.

பொது பல சேனா

இனி இந்த வார பேரினவாத அணிகள் ஜனாதிபதித் தேர்தல் குறித்து எடுத்த நிலைப்பாடுகளை பார்ப்போம்.

பொதுபல சேனா என்பது ஜாதிக ஹெல உறுமயவோடு ஒப்பிடுகையில் அதுவொரு சாகசவாத சக்தியாகவே தம்மை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. அரசின் தொங்கு தசையாகவே மறைமுகமாக இயக்கப்பட்டதே அதற்கு அடிப்படையான காரணம். ஜாதிக ஹெல உறுமயவின் லட்சியவாத போக்குக்கு முன்னால் அதன் தள்ளாட்டம் அப்பட்டமாக தெரிகிறது. தேர்தல் சலசலப்புகள் மத்தியில் சிங்கள பௌத்த தரப்பு என்கிற வகையில் தமக்கு இருந்த செல்வாக்கு அடுத்தடுத்த நிலைக்கு தள்ளப்பட்டமை பொது பலசேனாவுக்கு பாரிய அரசியல் சங்கடத்தை கொடுத்திருகிறது.

ஜாதிக ஹெல உறுமயவுக்கும் பொதுபல சேனாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இரு தரப்பும் ஒப்புக்கொண்டிருந்தது. அதன் முடிவுகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் இரு சக்திகளும் நேரெதிர் நிலைபாட்டை ஒரே நாளில் ஊடக மாநாட்டின் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள்.

“ஜனாதிபதி தேர்தல் அறிவித்தலினால் அதிக சிக்கலுக்குள் தள்ளப்பட்டது நாங்கள் தான். சிங்களத்தில் புராண பழமொழி ஒன்று உண்டு “கெதர கியொத் அம்பு நசி! மக ரெந்துனொத்  தோ நசி! (வீடு போனால் மனைவி சாவாள். தரித்து நின்றால் நீ சாவாய்). எனவே நாங்கள் இப்போது முடிவுக்கு வந்துள்ளோம்.”

என்று கூறிய ஞானசார தேரர் அரசுக்கு ஏன் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான விளக்கத்தை அளித்தார். அவ்வமைப்பின் அமைப்பாளர் டிலந்த விதானகே ஒரு பவர்பொய்ன்ட் அறிக்கையொன்றின் மூலம்  புள்ளிவிபரங்களையும், தரவுகளையும் காட்டி ஊடகவியலாளர்களுக்கு விளக்கப்படுத்தினார். அதில் இது வரை ஆண்ட ஆட்சியாளர்களின் பட்டியலைக் காட்டி அவர்கள் அனைவரும் நிலப்பிரபுத்துவ வம்சத்தில் வந்தவர்கள். பிரேமதாசவும் மகிந்தவும் மட்டுமே அதற்கு வெளியில் இருந்து வந்தவர்கள். ஆகவே மகிந்தவை கவிழ்ப்பது என்பது “நிலப்பிரபுத்துவ மேலாதிக்க சதி” என்றார்.

மகிந்தவும் ஒரு நிலப்பிரபுத்துவ பின்னணியைக் கொண்டவர் தான் என்பதை வசதியாக மறைத்து மகிந்தவுக்கு ஆதரவு தேடும் முயற்சி இது என்பதை அறிந்தவர்கள் அறிவர்.

தமது பிரதான எதிரிகளாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகளின் கூட்டணியில் தான் பொதுபல சேனா இணைந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. ஹெல உறுமய கூட எவரையும் நிபந்தனைகளுடன் தான் ஆதரிப்போம் என்று கொள்கைப்பிடிப்புடன் அறிவித்தது. ஆனால் தமது நிபந்தனையை பிரதான தரப்புகள் எதுவும் கணக்கிலெடுக்கப்போவதில்லை என்பது பொதுபல சேனாவுக்கு நன்றாகத் தெரியும். பொதுபல சேனா எதிரணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக சில செய்திகள் கடந்தவாரம் வெளியான போது எதிரணி ஆதரவாளர்கள் பலர் திடுக்கிட்டுபோனார்கள். சிறுபான்மை இனங்களின் வாக்குகளை தமக்கு கிடைக்கவிடாமல் செய்வதற்கான அரசாங்கத்தின் சதியாக இது இருக்கும் என்று சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டார்கள். “நன்றி... ஆனால் தேவையில்லை” (Thanks! but no thanks!) என்று அவர்கள் கூறினார்கள். இப்போது அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த போது “அப்பாடா மைத்திரிபால தப்பினார்” என்ற குரல்களை எங்கும் கேட்க முடிந்தது.

எதிர்கால அரசியல் தலைமையை தாம் தான் தீர்மானிக்கப்போவதாக அறிவித்த பொதுபல சேனா... எவருக்கும் வேண்டாத ஒரு அமைப்பாக ஆனது ஒரு அரசியல் திருப்பம் தான். இறுதியில் தனது இருப்புக்காக தாமே தமது ஆதரவை நிபந்தனையின்றி தெரிவித்து தமது இருப்பை அறிவித்துக்கொள்ளும் நிலைக்கு இன்று அது தள்ளப்பட்டிருக்கிறது. ஒரு அழையா விருந்தாளியாக அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நிலையும் பரிதாபத்துக்குரியது.

பௌத்த தேசிய தலைவர் தம்மிடம் இருப்பதாகவும் தகுந்த சந்தர்ப்பத்தில் அவர் யார் என்பதை வெளிப்படுத்துவதாகவும் பயமுறுத்திக்கொண்டிருந்த பொதுபல சேனாவால் இறுதிவரை அப்படியொருவரை சுட்டிக்காட்ட முடியவில்லை. அப்படியொருவரை அறிவிப்பதற்காகவே ஒரு பாரிய மாநாட்டையும் நடத்தியது. ஆனால் சகலரும் எதிர்பார்த்திருந்த அந்த “சிங்கள பௌத்த தலைவரை” அன்றும் அறிவிக்க முடியவில்லை. இன்றும் அறிவிக்கமுடியவில்லை. அது வெறும் பூச்சாண்டி அறிவித்தல் என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது. 

மகாநாயக்கர்களினது ஆதரவையும் அவர்களால் பெறமுடியாது போய்விட்டது. கடந்தவாரம் முழுதும் சம்பிக்க தலைமையிலான ஹெல உறுமய குழுவினர் சகல மகா நாயக்கர்களையும் சந்தித்து தமது நிலைப்பாடுகளை தெரிவித்ததுடன் அவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு தெளிவாக விளக்கிய காணொளிகளை வெளியிட்டிருந்தனர். அந்த வகையில் பொதுபல சேனா கையறு நிலைக்கு தள்ளப்பட்டதேன்றே கூறவேண்டும். அதுபோல ஜாதிக ஹெல உறுமய தமது செல்வாக்கை மீண்டும் உறுதிசெய்திருக்கிறது என்றே கூறவேண்டும். அவர்களின் சாணக்கியத்துக்கு நிகராக இலங்கையில் எந்த ஒரு அரசியல் சக்தியையும் ஒப்பிட்டு விட முடியாது.

ஜாதிக ஹெல உறுமய

சம்பிக்க, ரதன தேரர், உதய கம்மன்பில உள்ளிட்ட ஹெல உறுமய அமைப்பு தலைவர்கள் உத்தியோகபூர்வமாக தமது நிலைப்பாட்டை 27 அன்று அறிவித்தார்கள். சம்பிக்க கூறும்போது

“நிறைவேற்று ஜானாதிபதி முறையை பாவித்து யுத்ததில் வென்றதாக கூறுகிறீர்களே. ஏன் வடக்கில் சிங்களவர்களை குடியேற்ற அந்த அதிகாரமுறையைப் பாவிக்கவில்லை. மேற்கின் சதி, என்.ஜீ.ஓ சதி, புகலிட புலிகளின் சதி (டயஸ்போறா) என்று எங்களை முத்திரை குத்தி பிரச்சாரப்படுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ‘புண்ணானால் ஈக்கள் மொய்க்கத்தானே செய்யும்’.

சந்திரிகாவை மீண்டும் பதவியில் அமர்த்தப்போகிறீர்களா என்று கேட்கிறார்கள் சிலர். சமஷ்டியை தோளில் வைத்துக்கொண்டு இருக்கும் சந்திரிகாவை ஒருபோதும் நாங்கள் பதவியில் அமர்த்தப்போவதில்லை.

சிலர் கேட்கிறார்கள் ஹகீமோடு இணையப்போகிறீர்கள் அல்லவா என்று. ஹக்கீமோடு ஒரே அமைச்சரவையில் நாங்கள் பணியாற்றியிருக்கிறோம். பொது விடயங்களில் சேர்ந்து பணியாற்றலாம். ஆனால் ஹக்கீமோ, சம்பந்தனோ பிரிவினைவாத சதித்திட்டத்துடன் எந்த முயற்சிகளை மேற்கொண்டாலும் எப்போதும் போல அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். எந்த ஒரு அரசியல் பலமில்லாத காலத்திலேயே நாங்கள் பின்புலத்திலிருந்து சமஷ்டியை தோற்கடித்தவர்கள் நாங்கள். ஏன் எங்களால் இப்போது முடியாது.

மாகாணசபையின் அதிகாரங்களை குறைத்ததன் பின்னர் வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்தும்படி அரசாங்கத்திடம் கேட்டோம் ஆனால் அந்த தேர்தலை நடத்தி பிரிவினைவாதிகளிடம் அதிகாரத்தை ஒப்படைத்து  பிரிவினைவாதத்தை சாத்தியப்படுத்த வழி திறந்து விட்டிருக்கிறார்கள்

எங்கள் இறுதி முன்மொழிவை நாங்கள் அரசாங்கத்திடம் கொடுத்தோம். எங்களுக்கு பதிலும் கிடைத்தது ஆனால் வழமைபோல அது வெறும் வழவழா மட்டும்தான். கேட்ட கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் அதில் இருக்கவில்லை. எங்களுக்கு “செய்யலாம்” என்கிற பதில் தேவையில்லை. அதனை நிறைவேற்றுவதற்கான காலவரையத்றை திட்டங்களை அறிவிக்கும்படி கோரியிருந்தோம். தற்காலிகமாக எங்கள் வாயை மூடுவதற்கான கைங்கரியமாக “ஆம்” என்கிற பதிலில் எமக்கு எந்த பிரயோசனமும் இல்லை.” என்றார்

எவரை ஆதரிப்பது என்கிற முடிவை தெளிவாக அறிவிக்காத போதும் மகிந்தவை எதிர்ப்பது என்கிற முடிவை அறிவித்திருக்கிறார்கள். கூடவே எதிரணியினரிடம் தமது கோரிக்கைகளை வைத்திருக்கிறோம் என்கிற அறிவித்தலும் எதிரணிக்கு சாதகமாக இருப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதே பாணியில் தான் ஜே.வி.பி.யும் அறிவித்திருந்தது. தாம் இதுவரை எதிர்த்து வரும் ரணிலோடும், சந்திரிகாவோடும் தம்மை முடிச்சுபோட்டு தம்மை ஓரங்கட்ட முனைவார்கள் என்கிற பயம் இரண்டு கட்சிகளுக்கும் தெளிவாகவே இருக்கிறது என்றே புரிய வேண்டியிருக்கிறது. அடிப்படையில் தமது சிங்கள பௌத்த தனத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்கிற பயமேயன்றி வேறில்லை.

இனி பொதுபல சேனாவுக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இடையில் ஒரு பனிப்போரை எதிர்பார்க்கலாம்.

நிறுவனமயப்பட்ட பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரல் என்பது நேரடியாகவும், திரைமறைவிலும் சிறிதாகவும், பெரிதாகவும் முன்னெடுக்கப்பட்டு வருபவை. நாளுக்கு நாள் அதன் பலம் அதிகரித்து வருவதுடன். ஏனைய இனங்களுடனான சகவாழ்வுக்கான வாய்ப்புகள் அரிதாகிக்கொண்டே செல்கின்றது. ஒருபுறம் சிறுபான்மை தரப்பு தமது நியாயமான அரசியல் அதிகாரங்களை வேண்டி ஜனநாயக கட்டமைப்பிற்குள் போராடிக்கொண்டிருக்கும் போது; இன்னொருபுறம்; “இருக்கும் அதிகாரங்களையும் பறி” என்கிற உயர்மட்ட அழுத்தம் பலமாக பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது எடுபடவும் செய்கிறது. இதனை புரிந்து செயல்படாத எந்த சிறுபான்மை அரசியலும் கிஞ்சித்தும் அடுத்த கட்டம் நகரமுடியாது என்பது மட்டும் நிஜம்.

நன்றி - தினக்குரல்


முகம்மது சமீம் : ஒரு பண்பாட்டுப் போராளி லெனின் மதிவானம்


முகம்மது சமீம் (1932-2013) இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களுள் முக்கியமான கணிப்புக்குரிய ஒருவர். அவர் விமர்சகர், கல்வியியலாளர், செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆளுமைகளைக் கொண்டவர். சமீம் முற்போக்கு இலக்கியத்தின் தலைமகன்களாக விளங்கிய பேராசிரியர்கள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோருடன் இணைந்து முற்போக்கு அணியில் இயங்கியவர். இலங்கை முற்போக்கு இலக்கிய வரலாற்றிலே விரல்விட்டு எண்ணக் கூடிய புருஷர்களிரொருவரான சமீம் மறைந்து ஒரு வருட நிறைவை எதிர்நோக்கியிருக்கின்ற இவ்வேளையில் அவர் பற்றிய அறிமுகங்கள்,  விமர்சனங்கள், மதிப்பீடுகள், நினைவுக் குறிப்புகள் அவசியமானவையாகின்றன.
இவ்வாறானதோர் சூழலில் முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தினர்; பற்றி வெளியிட்ட 'முற்போக்கு இலக்கியவாதி முகம்மது சமீம் என்ற நூல் சமீம் பற்றிய தேடலுக்கான பல தகவல்களைத் தருகின்றது. நுணுக்க விபரங்களின் முக்கியத்துவத்தை இந்நூல் வெளிப்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் சமீம் பொறுத்து இனிவெளிவருகின்ற எழுத்துக்கள் முற்கூறிய ஆதாரங்களையும் வாய்ப்பு நலன்களையும் ஆதாரமாகக்கொண்டு அவர் பற்றிய பன்முக ஆய்வொன்று வெளிக் கொணர முயல்வதே அறிவுக்குகந்த நடவடிக்கையாகும். அதற்கான அறிமுகத்தை வழங்க முயல்வதே இக்கட்டுரையின் நோக்காகும்.
சமீம் பதுளையில் ஒரு மத்தியதர வர்க்க பின்னணியில் தோன்றியவர். இவர்களின் மூதாதையர்கள் தென்னிந்தியாவில் கீழக்கரை என்ற பிரதேசத்திலிருந்து வந்தவர்கள். இவரது தந்தை பெயர் ஜனாப் அகமதுபிள்ளை. இவர் புகையிரத பாதைகளில் வேலை செய்த ஆங்கிலயேரிடம்; பொறியியல் தொழில் கற்று ஒப்பந்த வேலைகள் செய்தவர் (ஊழவெசயஉவள). பதுளையில் அமைந்திருக்கும் பெரும்பாலான முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் இவரது கை வண்ணத்தினால் செய்யப்பட்டவை என தமது தந்தைக் குறித்து சமீம் நினைவுகூருவார். இவரது தாய் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என்பதையும் அறிய முடிகின்றது. அவர் பெயர் ஜனாபா நாச்சியார் உம்மா. அவரும் பதுளையில் புடவை வர்த்தகத்  தொழிலில் ஈடுப்பட்டிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.


இவர் தனது ஆரம்ப கல்வியை பதுளை சரஸ்வதி வித்தியாசாலையிலே (இப்போது இப்பாடசாலை சரஸ்வதி தேசிய மத்திய கல்லூரி என்று அழைக்கப்படுகின்றது) பெற்றார்.  அதன்பின் தமது இடைநிலைக் கல்வியை பதுளை தாம்ஜதூதக் கல்லூரியில் பெற்றார். 1950 ஆண்டு நடைபெற்ற எஸ். எஸ். சி, பரீட்சையில் விசேட  சித்தியடைந்து  லண்டன் சர்வ கலாசாலைக்கு சேர்வதற்கு தகுதி பெற்றார். பின் புலமைப் பரிசில் பெற்று கொழும்பு சாகிராக் கல்லூரியில் கற்றார். பின் பேராதனை பல்கலைக்கழத்தில் வரலாற்றுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார்.
இதன் பின் அவர் சாகிராக் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்து பின்னர் அக்கல்லூரியின் அதிபராக பதவி உயர்வு பெற்றார். அடுத்து வந்த காலங்களில் அவர் கல்வி அதிகாரியாகவும் , பிரதான கல்வி அதிகாரியாகவும், முதலாந்தர கல்விப் பணிப்பாளராகவும் வௌ;வேறு பிரதேசங்களில் கடமையாற்றியுள்ளார். தமது ஓய்வுக்கு உரிய காலத்திற்கு முன்னரே ஓய்வு பெற்ற அவர் சவூதி அரேபியாவில் தனியார் பாடசாலையொன்றில் பணிப்பாளராக கடமையாற்றியிருக்கின்றார். நாடு திரும்பிய பின்னரும் தமது அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு தனியார் பாடசாலையொன்றினை உருவாக்கி செயற்பட்டுள்ளார். இவர் கல்வித் துறையில் பணியாற்றிய காலங்களில் அவரால் ஆற்றப்பட்ட முக்கிய பங்களிப்புகள், செயற்பாடுகள் பற்றிக் குறித்துக்காட்ட வேண்டியதும் அவசியமானதாகும்.

சாகிராக் கல்லூரியில் அசிரியராக, உப அதிபராக, அதிபராக கடமையாற்றிய காலங்களில் பல முற்போக்கு இலக்கிய நண்பர்களுடன் தொடர்பு கொண்டிருந்த அவர் அக்கருத்துக்களை மாணவர் மத்தியில் முன்னெடுத்துச் செல்வதிலும் முக்கிய கரிசனைக் காட்டியிருந்தார் என்பதை பலர் பதிவாக்கியுள்ளனர். அத்துடன் அக்கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றியிருக்கின்றார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறிப்பாக 1961 ஆண்டு அவர் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு உள்வாங்கப்பட்டதுடன் பின் பல நண்பர்களின் ஆவோசனைக்கிணங்கவும், குறிப்பாக மூதூரில் முதல்வராகவும் தகவல் ஒலிப்பரப்பு பிரதி அமைச்சருமான அப்துல் மஜீத் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மூதூர் பகுதிக்கு சேவையாற்ற அழைக்கப்பட்டிருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது. கல்வி, கலை கலாசார ரீதியாக மிகவும் பின்னடைந்திருந்த இப்பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றார்.
இக்காலச் சூழலில் தான் பல புதிய பாடசாலைகள் தோற்றம் பெற்றன. கட்டடிட அபிவிருத்திகள், பௌதிக வளங்கள் என்பன அதிகரிக்கப்பட்டன. அத்துடன் 'முற்போக்கு வாலிபர் மன்றம்' என்தொரு அமைப்பை உருவாக்கி கிண்ணியா, மூதூர், தோப்பூர் போன்ற பிரதேசங்களில் கலை இலக்கியம் சார்ந்த வளர்ச்சி ஏற்படக் காரணமாக அமைந்தார் என மஹ்ரூப் கரீம் (முற்போக்கு இலக்கிய முன்னோடி முகமது சமீம், 2009, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம். ப.34) பதிவாக்கியிருக்கின்றார். சமீம் 1969 ஆம் ஆண்டு பிரதம கல்வி அதிகாரியாக கிழக்கு மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். இவர் இங்கு கடமையாற்றிய காலங்களில் (1970-1974) பல பாடசாலைகளை தரமுயர்த்தவும் செயற்பட்டிருக்கின்றார். காத்தான்குடி அல்ஹிறா ம.வி, காங்கேயனோடை ம.வி, மகிழடித்தீவு, கிரான் ம.வி, முதலிய பாடசாலைகளைக் குறிப்பிடுவர். கிழக்கு மாகாணத்தில் சாதிய முரண்பாடுகள் பிதான முரண்பாடுகளாக இல்லாவிடினும் அதன் தாக்கங்களையும் ஒடுக்குமுறைகளையும் அங்கும் காணக் கூடியதாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்பில் அவர் மேற்கொண்ட கல்விசார் செயற்பாடுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். பேராசிரியர் சி. மௌகுருவின் ஆலோசனையுடன் குறுமண்வெளி, பங்குடாவெளி, சந்திவெளி, படுவான்கரைப் பிரதேசங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் பல புதிய பாடசாலைகள் தோன்றுவதற்கு துணையாக நின்றுள்ளார் என்பதை மஹ்ரூப் கரீம் மேலும் நினைவுகூருவார்.
அவ்வாறே காலிப் பிரதேசத்திற்கும் (1975) சென்று சேவையாற்றியிருக்கின்றார். மிக குறுகிய காலத்தில் அப்பிரதேசம் சார்ந்த பெரும்பான்மையான சிங்கள மக்களின் கல்வி வளர்ச்சியிலும் சிறுப்பான்மையினராக தமிழ் முஸ்லிம் மக்களினதும் கல்வி வளர்ச்சிக்காக செயற்பட்டுள்ளதை ஏ. இக்பால் போன்ற இலக்கிய நண்பர்கள் நினைவுகூருவர். கிழக்கு மாகாணத்தில் அவர் ஆற்றிய பணிகளுடன் ஒப்பிடுகின்ற போது காலிப்பகுதியில் அவர் ஆற்றிய பங்களிப்பு குறைவாகவே காணப்படுகின்றது என்றே கூற வேண்டும். அன்றைய அரசியல் சூழ்நிலை அதற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.
1978 ஆம் ஆண்டளவில் அகில இலங்கை  கல்விப் பணிப்பாளராக பதவியுயர்த்தப்பட்ட பின்னர் கல்வி அமைச்சில் முஸ்லிம் பிரிவை உருவாக்க முயன்றுள்ளார். அவ்வாறு உருவாக்கப்பட்ட முஸ்லிம் பிரிவும் முதலாவது பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்று செயற்பட்டிருக்கின்றார். அவரது முயற்சியால் இலங்கையில் 539 ஆக இருந்த முஸ்லிம் பாடசாலைகள் 759 ஆக அதிகரித்தது என்பதை அறிய முடிகின்றது (மே.கு.நூ. ப. 36). 1989 இல் சவுதி அரேபியாவிற்கு சென்றபோது இன்டநெஷனல் இஸ்லாமிக் அகடமியில் (ஐவெநசயெவழையெட  ஐளடயஅiஉ யுஉயனநஅல ) பணிப்பாளராக கடமையாற்றி 1990 இல் இலங்கைக்கு திரும்புகின்றார். பின் ஹறோ இன்டநெஷனல் ஆங்கிலக் கல்லூரியை ஆரம்பித்து தான் இறக்கும்வரை செயற்பட்டு வந்தார். கல்வித் துறையில் செயற்படுகின்ற காலத்தில் தாம் மேற்கொண்ட தொழிலை ஏதோ ஊதியம் பெறும் ஒரு விடயமாக மட்டும் கருதாமல் மிக நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட்டு வந்துள்ளதையும் தனது கடினமான உழைப்பின் ஊடாகவே பல பதவி உயர்வுகளையும் பெற்றிருக்கின்றார் என்பதனையும் அறிய முடிகின்றது. அதே சமயம், தான் பல பிரதேசங்களில் பணிபுரிந்த காலங்களில் அப்பிரதேசத்தில் நடைபெறும் பண்பாட்டு இலக்கியக் கூட்டங்களில் ஆர்வத்துடன் பங்கு பற்றி தமது பங்களிப்பை வழங்கியுள்ளார் என்பதை அவருடன் பழகிய இலக்கிய நண்பர்கள் இன்றும் நினைவுகூருவர்.
வரலாற்றுத் துறையில் புலமைத்துவம் பெற்றிருந்த சமீம் இலக்கிய பண்பாட்டுத்துறையிலே அதிகம் ஆர்வம் காட்டி வந்தார். தர்மதூதன் கல்லூரியில் 'தர்மதூதன்' என்ற சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்ததுடன் முகுந்தன் என்ற பெயரில் பல சிறுகதைகளையும் ஏழுதியுள்ளதாக அறிய முடிகின்றது. இவையெல்லாம் இளமைக்காலத்து இலக்கிய முயற்சிகளாகவே காணப்படுகின்றன என சமீம் அவர்களே கூறக் கேட்டிருக்கின்றேன். காலப்போக்கில் பேராசிரியர்கள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி,  கவிஞர் சில்லைய+ர் செல்வராசன், திரு. இர. சிவலிங்கம், திரு. என்.கே. ரகுநாதன், திரு. செ. கணேசலிங்கன், திரு. நீர்வை பொன்னையன், திரு. எஸ்.எம். கார்மேகம், கவிஞர் எம்.ஸி.எம். ஸ{பைர், மருதூர்க்கனி, ஹனிபா, திரு. காவலூர் இராசதுரை, ஜனாப். எச்.எம்.பி. முகையதீன், கவிஞர் புரட்சிக் கமால், ஸாலிஹ், பிரேம்ஜி, அ.ஸ. அப்துஸ்ஸமது, இளங்கீரன் சுபைர், டொமினிக் ஜீவா, அண்ணல் சாலி, கவிஞர் ஏ. இக்பால் இன்னும் இது போன்ற நண்பர்களுடன் ஏற்பட்ட தொடர்புகளும், அவர்களுடன் இணைந்து கருத்தாடல்களும் அவரது கருத்துக்களை செழுமைப்படுத்த உதவியிருக்கின்றன. இத்தகைய சூழலே இவரை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை (இ.மு.எ.ச) நோக்கி ஆகர்சித்திருந்தது.
இ.மு.எ.ச இலங்கையின் இலக்கிய வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. தேசிய இலக்கியம், மண்வாசனை இலக்கியம் என்பனவற்றுக்கான போராட்டத்தை கோட்பாட்டடிப்படையில் முன்னெடுத்தனர். பொது மக்கள் சார்ந்த இலக்கியக் கோட்பாட்டை வலியுறுத்திய இவர்கள் நமது பண்பாட்டுச் சூழலுக்கான கோட்பாட்டுருவாக்கத்தையும் செய்தனர். மக்களுடன் இணங்கி செயற்பட்டதுடன் மக்களின் சுக துக்கங்களில் பங்கேற்று அம்மக்களின் நல்வாழ்வுக்காக இலக்கியம் படைத்தனர். முற்போக்கு இயக்கத்தை சார்ந்த பலர் இலக்கியக்காரர்களாக மட்டுமன்றி அரசியல் களத்திலும் செயற்பட்டவர்களாக காணப்பட்டனர். இ.மு.எ.ச முன்னோடிகளாக கே.கணேஷ், கே. ராமநாதன் (தேசாபிமானி ஆசிரியர்) அ.ந. கந்தசாமி, எம்.பி பாரதி, போன்றோர் செயற்பட்டுள்ளனர். தொடர்ந்து பிரேம்ஜி, க.கைலாசபதி, கா. சிவத்தம்பி, செ. கணேசலிங்கம், ஏச்.எம்.பி. மொஹிதீன், என.கே. ரகுநாதன், டானியல், சுபைர் இளங்கீரன், சில்லைய+ர் செல்வராசன், காவலூர் ராஜதுரை, எஸ். அகஸ்தியர் முதலானோர் இரண்டாவது கட்டத்தில் இணைந்து செயற்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து செ. யோகநாதன், யோ. பெனடிக்பாலன், செ. கதிர்காமநாதன், திக்குவலை கமால், எம். ஏ. நுஃமான, சாருமதி, மு. கனகராஜன் போன்றோர் செயற்பட்டுள்ளனர். குறிப்பாக ஐம்பதுகளிலிருந்து இவ்வியக்கத்தில் செயற்பட்ட சமீம் ஸ்தாபனம் சார்ந்த முக்கியமான செயற்பாடுகள் இரண்டை பதிவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இ.மு.எ.சங்கத்தின் தலைமைக்குழு உறுப்பினராக செயற்பட்டு வந்தவர்களிலொருவரான சமீம் இ.மு.எ.ச நடாத்திய பாரதி நூற்றாண்டு விழா, சோமசுந்தரப் புலவர் விழா, நாவலர் விழா போன்ற நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதிலும் அதனை வெற்றிகரமாக நடாத்துவதிலும் பங்களிப்பை நல்கியுள்ளார் என நீர்வை பொன்னையன் நினைவுகூருவார். (மே.கு.நூ. ப.121).

அவ்வாறே இந்தியாவிலிருந்து வந்து குவிந்துக் கொண்டிருந்த வணிக இலக்கிய படைப்புகளுக்கு இலங்கை களமாக இருக்க முடியாது என்ற வகையில் அதன் இறக்குமதிக்கு எதிராக குரல் கொடுத்த இ.மு.எ.ச எழுத்தாளர்களில் சமீம் முக்கியமானவர். அப்போது இலங்கைக்கு வருகைத் தந்திருந்த தமிழக எழுத்தாளர்- பகிரதன்; ' இலங்கை எழுத்தாளர்கள் தமிழக எழுத்தாளரை விட பத்து ஆண்டுகள் பின் தங்கியுள்ளனர்' எனக் குறிப்பிட்டார். அதே சமகாலத்தில் இலங்கைக்கு வந்திருந்த கி.வா ஜெகநாதன் அவர்களும் இலங்கை எழுத்தாளர்களின் கதைகளுக்கு அடிக்குறிப்பு வேண்டும் எனக்; குறிப்பிட்டார். இலக்கியத்தில் உள்ளடக்கத்தை விட அழகியலே முதன்மையானது என்ற நிலைப்பாட்டில் நின்று இலக்கியத்தை சமூக யதார்த்தத்திலிருந்து பிரித்துப்பார்க்க முனைந்ததன் வெளிப்பாடாகவே அவரது கூற்று அமைந்திருந்தது. அதற்கு எதிரான தத்துவப் போராட்டத்தை முற்போக்கு அணியினர் மிக பலமாகவே முன்வைத்தனர். அவர்களில் சமீமின் பங்கு குறித்துக்காட்டத் தக்கதொன்றாகும். காலப்போக்கில் இ.மு.எ.ச சிந்தாந்த ரீதியிலும் இயக்க ரீதியிலும் சிதைவடைந்து இயங்க முடியாமல் முடங்கியபோது சமீமும் அவருடன் கருத்தொற்றுமை கொண்டிருந்த தோழர்கள் சிலரும் ஒன்றிணைந்து இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் என்றதொரு அமைப்பை உருவாக்கி செயற்பட்டனர். அவர் இறக்கும் வரை இவ்வமைப்பின் உறுப்பினராக இருந்தார் என்பதும் மனங்கொள்ளத்தக்கது.
சமீமின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாக குறிப்பிட வேண்டியது அவர் சாஹித்திய மண்டலத்தில் உறுப்பினராக இருந்த காலத்தில் பழமைவாதிகளுக்கும் பிற்போக்குவாதிகளுக்கு எதிரான நடத்திய போராட்டமாகும். மக்கள் இலக்கியத்தை இழிசனர் வழக்கு என புறக்கணித்த பழமைவாதிகளிடையே மக்கள் இலக்கியத்திற்கான சாஹித்திய அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக சமீம் தீவிரமாக செயற்பட்டவர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாஹித்திய விழாவில் அழைப்பிதழ் இல்லாமேலே கலந்துகொண்டதுடன் முற்போக்கு இலக்கிய கர்த்தாக்கள் சார்ந்து பல கேள்விகளை முன்வைத்திருக்கின்றார் என்பதை முற்போக்காளர் பலர் நன்றியுடன் நினைவுகூருவர். யாவற்றுக்கும் மேலாக பழமைவாதிகளும் பிற்போக்காளர்களும் முற்போக்கு இலக்கியத்தை நிராகரித்து கூட்டத்தை நடாத்த முற்பட்டபோது அவர்களுக்கு எதிராக கூழ் முட்டை அடிக்கும் சம்பவமும் இந்நிகழ்வில் தான் இடம் பெற்றது. முற்போக்கு இலக்கிய வரலாற்றில் பிற்போக்காளர்களுக்கு அவர்களின் மொழியில் பதிலடி கொடுத்த முற்போக்காளர்களின் பங்கும் பணியும் பொன்னெழுத்துக்களால் பதிய வேண்டியவை. காலப்போக்கில் முற்போக்காளர் சிலரில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் சிதைவுகள் இந்த செயலுக்காக மன்னிப்புக் கோர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். சமீம் இறுதிவரை இது குறித்த தெளிவான நிலைப்பாட்டினையே கொண்டிருந்தார். இழிசனர் வழக்கென ஒதுக்கிய மக்கள் இலக்கியம் மகுடமேற வைத்த சம்பவம் இச்சந்தர்ப்பத்தில் தான் நடந்தது. அதற்கு கதாநாயகன் எம். சமீம் அவர்கள் தான் என்பதால் முற்போக்கு இலக்கியத்தின் முடிசூடா மன்னராகின்றார் என கவிஞர் ஏ. இக்பால் குறிப்பிடுகின்றார். 


முற்போக்கு சிந்தனையாளராகிய இவர்; தமிழ் இலக்கியத்தில்  மிகுந்த ஈடுபாடுள்ளவராக இருந்தது போன்று வரலாற்றுத் துறையிலும் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கின்றார். தமிழிலும் ஆங்கிலத்திலும்; பல நூல்களை எழுதியுள்ளார். அவரது இஸ்லாமிய கலாசாரம், இலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் Pசழடிடநஅள ழக ய ஆiழெசவைல ஊழஅஅரnவைலஇ ஆயசசயைபந ஊரளவழஅள ழக வாந ஆரளடiஅள ழக ளுசi டுயமெய போன்ற நூல்கள் வெளிவந்த போதும் ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் (நான்கு பாகங்களாக வெளிவந்த அரசியல், சமூக வரலாற்று நூல், 1997-1998;) என்ற நூலே  அவரது முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாக கூறப்படுகின்றது. இந்நூலுக்கு இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசு வழங்கப்பட்டது. தமிழ் நாட்டில் நடைபெற்ற அகில உலக இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் தமிழ்நாட்டு கல்வியமைச்சரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். விமர்சனக் கட்டுரைகள்(2005), எனது இலக்கியத் தேடல(2006);, கைலாசபதி : சில்லைய+ர் செல்வராசன் விமர்சன நோக்கு(2007) ஆகிய மூன்று நூல்களிலும் உள்ள கட்டுரைகள் இவரது பல்துறைக் கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் காட்டுகின்றது.
ஒரு புறம்பான பேரினவாதம் முஸ்லிம் மக்களை எதிரியாக பார்த்ததுடன் கேவலமானதோர் அரசியலின் பின்னணியில் மோசமான இன வன்முறைகளை தோற்றுவித்திருந்தன. முஸ்லிம் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்களுக்கென சுய நிர்ணய உரிமை உண்டு என்பதையும் மறுத்து அவர்களின் வாழ்வை சிதைப்பதாகவே அவ் அரசியல் முன்னெடுப்புகள் அமைந்திருந்தன என்பதை அவரது ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் என்ற நூல் எடுத்துக்காட்டுகின்றது. இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்தும் சிந்தித்தல் காலத்தின் தேவையாகும். முஸ்லிம் மக்களின் தேசிய சுய நிர்ணய உரிமைக்கான முன்னெடுப்புகளானது குறுகிய இனவாதமாகவோ அல்லது ஏனைய சமூகங்களுக்கு எதிரானதாகவோ (சந்தர்ப்பவாத அரசியல் அதனையே செய்ய முனைகிறது) முன்னெடுக்கப்படாமல் இலங்கையில் ஏனைய  அடக்கப்பட்ட மக்களின் அரசியல் முன்னெடுப்புகளுடன் இணைக்கப்படல் வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும். இந்தப் புள்ளியிலிருந்தே தேசிய சிறுபான்மை இனங்களின் அரசியல் புறப்பாடு செல்ல வேண்டியுள்ளது. சமீமின் ஆய்வினைப் பொறுத்தமட்டில் பேரினவாதம் எந்தளவு மக்கள் விரேதமாக செயற்பட்ட அதே சமயம் முஸ்லிம் இனவாதம் மக்கள் விரோத நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தது என்பதனையும் எடுத்துக் காட்டியமை அவரது தன்முனைப்பற்ற நாகரிகத்தை எடுத்துக் காட்டுகின்றது. இது குறித்து திரு. இர சிவலிங்கம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
'அரசியல் தலைவர்கள் எவ்வாறு இன உறவுகளைப் பாதித்துள்ளார்கள். ஒரு நாட்டின் வரலாற்றுப் போக்கையே நிர்ணயித்துள்ளார்கள் என்பதையும் உதாரணங்களோடு நிறுவியுள்ளார். அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும், மதத் தலைவர்களும் எவ்வாறு மக்களின் உணர்வுகளைத் தாம் விரும்பிய வழியில் தட்டி எழுப்பி சமுதாய அலங்கோலங்களை ஏற்படுத்துகின்றனர் என்பதை இலங்கையின் தற்கால வரலாற்று நிகழ்வுகளை ஆதாரமாக வைத்து நிலைநாட்டியுள்ளார்'(சிவல்ங்கம்.இர.1998, ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் என்ற நூலின் முன்னுரையில்).
அதே சமயம், இந்நாட்டில் குமிழிட்டு மேற்கிளம்பிய இன வன்முறையின் புதிய பரிமாணங்கள் -அதனடியாக தோன்றிய தமிழ் தேசிய இயக்கம், அவை தரிசித்திருந்த பாஸிச வழிமுறைகள், மேற்கொண்ட வன்முறைகள், மனிதவுரிமை மீறல்கள் யாவும் முஸ்லிம் மக்களின் வாழ்வை பல்வேறு விதங்களில் தாக்கியிருந்தன. இந்த வாழ்க்கை அலைக்கழிப்புகளினூடே மனிதர்கள், அவர்கள் எங்கு வாழ்ந்து கொண்டிருந்தாலும் அல்லது இன்றைய இலங்கையின் நசிவுத் தரும் வடகிழக்கு சூழலில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் அச்சிதைவுக்கு எதிரான, அச்சமூகங்களிலே இருக்கக்கூடிய ஆத்மார்த்த சிந்தனைகள் எப்படியாக வெளிப்படுத்தியிருந்தார்கள் என்பதையெல்லாம் இந்நூல் எந்தளவு தொடுகின்றது என்பது சுவாரசியமானதோர் வினா தான்.
ஒரு புறம்பான சிங்கள பெருந்தேசியவாதமும் மறுபுறமான குறுந்தமிழ் தேசியமும் முஸ்லிம் மக்களை எதிரியாக பார்த்ததுடன் கேவலமானதோர் அரசியலின் பின்னணியில் மோசமான இன வன்முறைகளை தோற்றுவித்திருந்தன. முஸ்லிம் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்களுக்கென சுய நிர்ணய உரிமை உண்டு என்பதையும் மறுத்து அவர்களின் வாழ்வை சிதைப்பதாகவே அவ் அரசியல் முன்னெடுப்புகள் அமைந்திருந்தன. இவ்வாறான சூழலில் தென்பகுதி முஸ்லிம் மக்கள் பற்றி சிந்தித்த சமீம் தன் காலத்தில் முனைப்புற்றிருந்த வட பகுதி முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் பாஸிச சக்திகள் மேற்கொண்ட வன்முறைகள் குறித்து கவனிக்க தவறிவிட்டமை துரதிஸ்டவசமானதொன்றாகும். அவ்வாறே கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் தீவிரவாதத்தை முன்னெடுத்த ஜிஹாத் இயக்கம் குறித்த விமர்சனங்களையும் அவர் முன்வைக்கத் தவறியிருக்கின்றார் என்பது அவரது எழுத்துக்கள் மீதான விமர்சனமாகும். சமீம் அவரது பார்வைகளும் நோக்குகளும் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு முரணானது என்ற போதினும் அவர் தமது ஆய்வு நூலில் அதனனை பிரித்துப்பார்க்கத் தவறுவதாகவே படுகின்றது. கிழக்கு மாகாண முஸ்லிம் பற்றி தமது எழுத்துக்களில் பதிவு செய்திருந்தாலும் அவர் அரேபிய முஸ்லிம் அடிப்படை நிலை நின்றே  நோக்க முற்பட்டமை அவரது பார்வையின் பலவீனமாக வெளிப்பட்டது எனலாம். இன்று இஸ்லாம்-கலாசாரம் குறித்து காத்திரமான ஆய்வுகளை முன்னெடுத்து வரும் ஏ.பி. எம் இத்திரிஸ், சமீம் போன்று மார்க்சிஸ்ட்டாக இல்லாத போதினும் இஸ்லாத்தை பொதுமக்களின் நலனுடன் இணைத்துப் பார்ப்பதில் முக்கியமான ஆய்வுகளை முன் வைத்துள்ளார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இவ்விடயம் பரந்து விரிந்த ஒப்பியல் நோக்கில் ஆய்வு செய்யப் பட வேண்டியதோர் விடயமாகும். இவ்விடம் அதற்கு ஏற்றதல்ல.  
அவ்வாறே நூலாசிரியர் ஒரு தேசிய நாளிதழில் எழுதிய கட்டுரைகளே இங்கு நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டுரையின் பரிமாணமும், தாக்கமும் வேறுபட்டவையாகும். கட்டுரைகளை நூலாக்குவதில் இந்தக் குறைபாடு இருக்கவே செய்யும். இந்தக் குறையை நீக்கினால் இந்த நூலின் தரம் மேலும் பொலிவுறும் (சிவலிங்கம் இர. மே.கு.நூ).
பொது மக்கள் சார்ந்து ஒரு கலாசார பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்த முனைவது ஜனநாயகத்திற்கு தேவையாகும். அத்தகைய பண்பாட்டு மாற்றத்தை நடைமுறையில் நிகழ்த்துபவர்களான மக்களுக்காக மக்கள் பங்கேற்கக்கூடிய வெளிகளை உருவாக்குவது முற்போக்கு சமூக செயற்பாட்டாளர்களின் கடமையாகும். ஒரு பொது நோக்கத்திற்கான இயங்கத் தயாராகவுள்ளவர்கள் அனைவரையும் சந்திக்கும் வெளிகளை உருவாக்குதன் மூலம் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நிலையை மாற்றி ஒற்றுமையை வலுப்படுத்த முடியும் என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது. மனிதாபிமானமுள்ள ஒற்றுமை நிறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க முனைகின்ற போராட்டத்தில் சமீம் போன்ற பண்பாட்டு செயற்பாட்டாளர்களின் வாழ்வும் வளமும் எமக்கு ஆதர்சனமாக அமைந்நிருக்கின்றது என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை.
முகமது சமீம் வாழ்க்கைப் பற்றியும் அவரது சமூக பங்களிப்பு பற்றியும் ஒரு சில வார்த்தைகளே இவை. எனினும் அவர் காலமும் வாழ்க்கையும் பங்களிப்பும் இன்னும் சரியான முறையில் ஆராய வேண்டிருக்கின்றது. 

மலையக வீட்டுத்திட்டத்திற்கு அடிகல் நாட்டப்பட்ட இடம் வாழ்வு பூமியா மக்களின் எதிர்கால மையான இடமா?


இலங்கையில்ன் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவழியை சேர்ந்த மக்களின் லயன் அறை வாழ்க்கைக்கு முடிவு கட்டவும் அம்மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக கடந்த காலங்களில் இந்திய அரசாங்கம் இலங்கையரசின் ஊடாக பல உதவிகளை செய்து வருவதனைக் காணலாம். அந்தவகையில் இந்திய அரசின் நிதியுதவியின் ஊடாக இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட மமைலயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 50000 வீடுகளுக்கான வீடமைப்புத் திட்டத்தினை அறிமுகம் செய்திருந்ததது. இந்த வகையில் மலையகத்தில் நுவரெலியா,ஹட்டன், மஸ்கெலியா. தலவாக்கலை, போன்ற பிரதான நகரங்களை அண்மித்தப்பகுதிகளில் உள்ள பெருந்தோட்டப்பகுதிகளில் இவ்வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக இடம்பெற்றிருந்தது.

சிலர் மத்தியில் இவ்வீடமைப்புத்திட்டமானது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படுமென்ற வதந்தியும்? மறுப்புரம் அவ்வாறு வழங்கப்பட மாட்டாது, இவ்வீடமைப்புத்திட்டத்தில் எவ்விதமான அரசியல் தலையீடும் இருக்காது என்ற விவாதங்களிலும் பல மலையத் தலைவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தமை மகிழ்ச்சியை மக்கள் மனங்களில் வாரியிறைத்திருந்தது? ஆனால் இவ்வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் புற்கள் வளர்ந்துள்ளதே தவிர வீடுகள் அமைக்கப்படுவதற்கான எவ்விதமான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

தற்போது மலையகம் எங்கும் வீட்டு உரிமை காணியுரிமை பிரச்சினை தலைத்துக்கியுள்ளதுடன் இந்த வீடமைப்புத்திட்டத்திற்கான அடிகல்லை நாட்டிய கௌரவ அமைச்சர் ஆறுமுகதொண்டமான் எவ்விதமான கருத்தையும் வெளியிடவில்லை அடிகல் நாட்டப்பட்ட இடம் மலையக மக்களுக்கு வீடுகளை பெற்றுகொடுக்குமா அல்லது மக்களின் மையான பூமிக்கு ஒதுக்கப்படுமா இதற்கான விடை யாது?

வெருமனே மக்களை ஏய்ச்சி பிளைப்பு நடாத்தும் மலையகத்தலைவர்களினால் இதற்கான அழுத்தங்களை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வெளிப்படுத்தவில்லை, ஏற்கனவே லயன் வாழ்க்கைமுறையின் சுவடுகள் 180 ஆண்டுகள் கழிந்தும் மாறாத நிலையில் சபிக்கப்பட்ட வாழ்க்கை வாழும் இம்மக்களின் வாழ்க்கை மீட்சிக்காக தலைவனென்று கூறிக்கொள்ளும் எவரும் தம் மக்களுக்காக முன்வருவதில்லை. இவ்வாரான வீடமைப்பு திட்டத்திற்கான ஏற்பாடுகள் வடகிழக்குப்பகுதிகளில் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மலையகத்தில் மாத்திரம் இன்னும் வீடமைப்பிற்கான அத்திவாரம் கூட இடப்படாத நிலையி இருக்கின்றமை கவளையளிக்கின்றது.

அவ்வாரான அலட்சியப்போக்கினை பார்க்கும் போது கொஸ்லாந்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிரந்தர வீடுகளை அமைத்து கொடுப்பதில் எவ்வாரான இழுபரி நிலை ஏற்படுமோ மலையக தலைவர்களுக்கே வெளிச்சம். அத்தோடு தமது உறவுகள் லயன் அறைக்குள் இருந்து படும் துன்பத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் இந்திய அரசும் இதில் தமது முழுமையான கவனத்தினை செலுத்த மலையக அரசியல் தலைமைகள் வலியுறுத்த வேண்டும்.
குறிப்பாக இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் வாடும் போது முதலைக்கண்ணீர் வடிக்கும் தமிழக கட்சிகளும், இந்திய அரசும் 180 வருடங்களாக மலைமுடுக்குகளில் சிறைவாசம் அனுபவிக்கும் தமது தொப்புல்கொடி உறவுகளுக்காக தமது ஆதரவினை தந்து மேற்படி வீடமைப்புத்திட்டத்தினை முன்னெடுக்க வழிசமைத்து தருவது போற்றத்தக்கது.

ஆகவே மலையகத்தில் தடைப்பட்டுக்கிடக்கும் இந்திய வீடமைப்புத்திட்டம் ஆரம்பிக்கலும், அதனூடாக மக்களின் வீட்டுரிமை பிரச்சினைகள் தீரவும் மலையகத்தலைவர்கள் தமது தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான வழித்தெரியாவிட்டால் வடகிழக்கு அரசியல் தலைவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வது நல்லது. ஏனென்றால் வடகிழக்கு தழிழர்கள் தலை நிமிர்ந்து வாழவும். எம் தலைவர்கள் வாள் பிடித்து வாழவும் இவர்களின் மனங்களே காரணம். எனவே மக்கள் வெருமனே அரசியல் தலைவர்களை மட்டும் நம்பியிராது தாமும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமது அழுத்தங்களை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு வேற்றுமைகள் களைந்து ஒன்றுபட்டால் எம் மக்களின் வாழ்க்கை வலம் பெரும் 
நன்றி

அன்புடன் பசுமை தாயக மைந்தன்

பெருந்தோட்ட முன்பள்ளி கல்வித்துறையில் ஒரு புதிய திருப்பம் - எஸ்.வடிவழகி


நாட்டில் கல்வித்துறையில் மிகவும் பின்தங்கியுள்ள மக்களாக பெருந்தோட்டத்துறை மக்களே கணிப்பீடு செய்யப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். நாட்டில் மலையக மக்களின் தொகை ஆறு அல்லது ஏழு விகிதமாக இருந்தாலும் ஆண்டுதோறும் பல்கலைக்கழகங்களில் அனுமதிபெறும் மாணவர் எண்ணிக்கை இன்னும் 05% விகிதத்தை விடவும் அதிகரிக்காமல் இருப்பது பெருந்தோட்ட மக்கள் கல்வியில் எவ்வளவு பின்தங்கியுள்ளார்கள் என்பதற்கு தெளிவான சாட்சியமாகும். கடந்த காலங்களில் மலையக கல்வித்துறையில் படிப்படியாக மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டுவந்துள்ளன என்பது உண்மை. ஆனா லும் நாம் கல்வி அபிவிருத்தியில் மற்றைய துறையினரை எட்டிப்பிடிக்க இன்னும் பல ஆண்டுகள் செல்லும்.

பிள்ளையின் கல்வி முன்னேற்றத்திற்கு முன்பள்ளிக் கல்வி அத்தியாவசியமானதாகும். இன்றைய நவீன கல்விமுறையில் பிள்ளை பாடசாலையில் எதிர்நோக்கும் சவால்களை சமாளிக்க வேண்டுமானால் பாடசாலைக்கு செல்லும் முன்னர் பிள்ளை, முன்பள்ளியில் நன்கு ஆயத்தப்படுத்தப்பட வேண்டும். நகர, கிராம பகுதிகளில் பெற்றார்கள் தங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும் முன்னர் முன்பள்ளிக்கு அனுப்புகிறார்கள். இன்று இது ஒரு கட்டாய தேவையாகிவிட்டது. ஆனால், பெரும்பான்மை யான பெருந்தோட்டங்களில் முன்பள்ளிக் கல்வி என்பது இன்னும் கூட முற்றிலும் அறியப்படாத ஒன்றாகவே உள்ளது. முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தை பல்லாயிரக்கணக்கான பெருந்தோட்ட பெற்றார் கள் அறிந்திருந்தாலும் பெருந்தோட்ட பகுதிகளில் முன்பள்ளிகள் இல்லாமையால் தமது பிள்ளைகளுக்கு இந்த வசதியை பெற்றுத்தர முடியாத நிலையில் உள்ளனர்.

பெருந்தோட்டக் கல்வி எதிர்பார்த்த அளவுக்கு முன்னேறாமைக்கு முன்பள்ளிக் கல்வி வசதியில்லாமை முக்கிய காரணமாகும். இந்த பின்னணியில் பிரிடோ நிறுவனம் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் முன்பள்ளிசாலைகளை நடத்தி வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் இந்த நிறுவனத்தால் முன்பள்ளிகள் நடத்தப்படும் பகுதிகளில் பிள்ளைகளின் அடைவு மட்டமும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவோர் எண்ணிக்கையும் முன்பள்ளிகள் இல்லாத பகுதிகளோடு ஒப்பிடும்போது மிகவும் அதிகமாகவுள்ளது என்பதை நுவரெலியா மாவட்ட கல்வி அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். ஆயினும் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முன்பள்ளிக் கல்வியை பெருந்தோட்ட பிள்ளைகள் பெறுவதற்கு மலையக அரசியல்வாதிகள் எவரும் இதுவரை உதவியதும் இல்லை. அதைப்பற்றி பேசியதும் இல்லை. அதற்காக வளங்கள் ஒதுக்கியதும் இல்லை.

முன்பள்ளிகள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில்வாய்ப்பைத் தருகிறது
முன்பள்ளிக்கல்வி மலையக கல்வி முன்னேற்றத்துக்கு இன்றியமையாதது என்பதைவிட, இலங்கையிலுள்ள எல்லா பெருந்தோட்டங்களிலும் சகல பிள்ளைகளுக்கும் முன்பள்ளிக் கல்வி கிடைக்க செய்வதானால் ஆயிரக்கணக்கான முன்பள்ளிகளை அமைக்க வேண்டிய தேவையுள்ளது. இவ்வாறு முன்பள்ளிகள் அமைக்கப்படும்போது ஆயிரக்கணக்கான பெருந்தோட்ட இளம் பெண்களுக்கு சமூக அங்கீகாரம் பெற்ற தொழில்வாய்ப்பு கிடைக்கும். பெருந்தோட்ட முன்பள்ளிக் கல்வி ஆயிரக்கணக்கான யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை தரும் ஒரு கெளரவான தொழிற்றுறை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆயினும் முன்பள்ளிகளை எவரும் தாம் நினைத்தபடி நடத்திவிட முடியாது. முன்பள்ளி ஆசிரியர்கள் தரமான பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். முன்பள்ளி ஆசிரியைகளுக்கு தரமான பயிற்சி வழங்குவதற்கு பெருந்தோட்டப் பகுதிகளில் அண்மைக்காலம்வரை வாய்ப்புக்கள் எதுவும் இல்லாத நிலையில் பெருந்தோட்ட பகுதியில் திறந்த பல்கலைக்கழங்களில் முன்பள்ளி ஆசிரி யைகளுக்கான கற்கைநெறி ஆரம்பிக்க வேண்டும் என்ற பரிந்துரை ஐந்து ஆண்டு களுக்கு முன்னரே முன்வைக்கப்பட்டது. ஆனால் மலையக அரசியல்வாதிகள் எவ ரும் அந்த முயற்சிக்கு உதவியளிக்கவுமி ல்லை. ஊக்கப்படுத்தவுமில்லை. தனியொரு நிறுவனமாகப் போராடியே ஹட்டன், கண்டி போன்ற பெருந்தோட்ட பகுதிகளில் திறந்த பல்கலைக்கழங்களில் தமிழ்மொழி யில் முன்பள்ளி ஆசிரியைகளுக்கான பயி ற்சி நெறியை ஆரம்பிப்பதில் பிரிடோ நிறுவனம் வெற்றிகண்டது.

இந்த பின்னணியில் வரவு – செலவுத் திட்டத்தின் கல்வி மற்றும் கல்விச் சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய பிரதியமைச்சர் பி.திகாம்பரம் பெருந் தோட்டங்களில் முன்பள்ளிக்கல்வி பரவ லான முறையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் அரசு, முன்பள்ளி ஆசிரியைகளுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ள 2500ரூபா கொடுப்பனவு பெருந்தோட்டப் பகுதி ஆசிரியை களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். தற்போது மாகாண சபை, பிரதேச சபை, நகர சபைகள் மூலம் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்திருந்தாலும் பெருந் தோட்ட முன்பள்ளி ஆசிரியைகளுக்கு இந் தக் கொடுப்பனவு ஒருபோதும் கிடைத்ததி ல்லை. அதுபற்றி எந்த வொரு மலையக அரசியல்வாதியும் பேசியதுமில்லை. இந்தப் பின்னணியில் பிரதியமைச்சரின் முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற உரை பெருந்தோட்ட முன்பள்ளிகளுக்கும் ஆசிரியைகளுக்கும் அங்கீகாரமும், அவர்க ளும் பாடசாலை ஆசிரியைகளுக்கு சமமான முறையில் மதிக்கப்படவும், கொடுப்பனவு களை பெறவும் வாய்ப்பை ஏற்படுத்தியுள் ளது.

நன்றி - வீரகேசரி - 23.11.2014

மலையகத்தில் வெளிச்சத்திற்கு வராமல் இடம்பெற்றுவரும் கருத்தடைச் சம்பவங்கள்!


இலங்கையின் வட கிழக்கு பகுதியில் இடம்பெற்ற நேரடி தமிழ் இன அழிப்பு சம்பவங்கள் இன்று சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறி சர்வதேச அரசியல், மற்றும் மனித உரிமை அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் மத்திய மலைநாட்டின் மலையகப் பகுதிகளிலும் தமிழ் இன அழிப்புக்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

ஆனால் இவை மறைமுகமாக இடம்பெற்று வருகின்றன. மத்திய அரசாங்கத்தின் உதவி ஒத்துழைப்புடன் இந்த இன அழிப்பு இடம்பெற்று வருகின்றமை அதிர்ச்சிக்குரியதாகும்.

மலையகத்தில் கட்டாய கருத்தடை மூலம் இந்த இன அழிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்தக் கட்டாய கருக்கலைப்பு குறித்து மலைய சிவில் அமைப்புக்கள் பல தடவைகள் வலியுறுத்தி வருகின்ற போதும் அதனை அரசியல் தலைவர்கள் கண்டுகொள்வதாக இல்லை.

குறிப்பாக கல்வி அறிவு அற்ற தோட்டப் புறங்களில் இந்த கட்டாய கருத்தடை அதி வேகமாக இடம்பெற்று வருகிறது. இரண்டு பிள்ளைகள் பெற்ற பெண் ஏதோ ஒரு காரணத்தை காட்டி கருத்தடைக்கு உட்படுத்தப்படு இருக்கிறார்.

இந்த கட்டாய கருக்கலைப்பை உறுதி செய்யும் வகையிலான சம்பவமொன்று அண்மையில் நுவரெலியா மாவட்டத்தின் கந்தப்பளை – கோட்லொட்ஜ் தோட்டத்தில் பதிவாகியுள்ளது.

கந்தப்பளை கோட்லோட்ஜ் தோட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 30ம் திகதி தோட்ட நலன்புரி உத்தியோகத்தரால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒக்டோபர் 1ம் திகதி நுவரெலியாவில் இருந்து டெங்கு பரிசோதனைக்கு உடல் நல வைத்திய அதிகாரி வருகிறார். அதனால் அனைவரும் தவறாது சமுகமளிக்க வேண்டும். குறிப்பாக 18 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் கட்டாயம் சமுகமளிக்க வேண்டும் என்பதே அந்த அறிவிப்பாகும்.

அதன்படி. ஒக்டோபர் முதலாம் திகதி கோட்லொட்ஜ் தோட்ட சுகாதார நிலையத்திற்கு நுவரெலியாவில் இருந்து உடல் நல வைத்திய அதிகாரி, தோட்ட நலன்புரி உத்தியோகத்தர், குடும்ப நல மருத்துவ மாது ஆகியோர் சென்றுள்ளனர்.

காலையில் இருந்து நடைபெற்ற இந்த மருத்துவ சிகிச்சையில் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கந்தப்பளை கோட்லோஜ் தோட்டத்தைச் சேர்ந்த கோட்டை புஸ்பராணி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயும் சிகிச்சைக்கு சென்றிருந்தார்.

அங்கு குறித்த பெண்ணுக்கு கட்டாய கருததடை செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் மாதவிடாய் காலத்தில் இருந்துள்ள போதும் அதனையும் கருத்திற் கொள்ளாது கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

மாலை 3 மணிக்கும் 4 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதன் பின் வீடு திரும்பிய புஸ்பராணிக்கு விடாது இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. வந்த அனைவருக்கும் சிறுநீர் பரிசோதனையின் பின் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால் புஸ்பராணிக்கு சிறுநீர் பரிசோதனை செய்யப்படவில்லை.

அதிக இரத்த ஓட்டம் காரணமாக புஸ்பராணி தனது கணவர் மற்றும் உறவினர்களால் அன்றைய தினம் மாலை நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் நினைவிழந்து மயக்கமடைந்துள்ளார்.

நுவரெலியா வைத்தியசாலையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட பின் இரவே அவர் கண் விழித்துள்ளார். கடந்த 5ம் திகதியே குறித்த பெண் வீடு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து கொதிப்படைந்த குறித்த பெண்ணின் கணவர் முதலில் அஞ்சிய போதும் பின்னர் கந்தப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அந்த முறைப்பாட்டின் பொலிஸ் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.

தனது மனைவிக்கு நேர்ந்த அசாதாரண நிலைக்கு நியாயம் வேண்டி கணவர் நீதிமன்றம் செல்ல முயற்சித்தார்.

எனினும் கந்தப்பளை பொலி;ஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்றைய தினம் புஸ்பராணி மற்றும் அவரது கணவரை அழைத்து பலவாறு மிரட்டல் விடுத்து நீதிமன்றம் செல்லாது சமரசமாக செல்லுமாறு கோரியுள்ளனர். மேலும் தோட்டத் தலைவர்கள் மூலமும் இவ்விருவரும் அச்சுறுத்தப்பட்டு உள்ளனர்.

எனவே இந்த விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மலையக அரசியல்வாதிகள் எவரும் இதுவரை முன்வரவில்லை. இது குறித்து பல அரசியல் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர், பாராளுமன்ற உறுப்பினருமான வி.இராதாகிருஸ்ணனின் பிறந்த ஊர் கந்தப்பளை – கோட்லோட்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மலையகத்தில் வெளிச்சத்திற்கு வராமல் பல கருத்தடைச் சம்பவவங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த முறை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் மலையக மக்களின் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டமைக்கு இந்த கட்டாயத் கருத் தடையும் ஒரு மறைமுக காரணம் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்த வண்ணமுள்ளது. இது தொடர்ந்தால் வட கிழக்கிற்கு ஏற்பட்ட நிலை மலையகத்திலும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை என்ற அபாய செய்தி காத்திருக்கிறது.

நன்றி - தமிழ்வின்

”இன்னொரு மீரியபெத்த வேண்டாம்” நியுபேர்க் தோட்ட மக்கள் செங்கொடிப் போராட்டம்


”இன்னொரு மீரியபெத்த வேண்டாம்” நியுபேர்க் தோட்ட மக்கள் செங்கொடிப் போராட்டம்
தமக்கான குடியிருப்புக்களை வழங்குமாறு கோரி பண்டாரவளை எல்ல நியூபேர்க் தோட்ட மக்கள் இன்று செங்கொடிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து நாட்டிற்கு வந்து தமது வாழ்க்கையை பெருந்தோட்டத் துறையின் வளர்ச்சிக்காய் உழைத்த தாம் இன்று நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

எப்பொழுதும் சரிந்து வீழ்ந்து விடலாம் எனும் அபாயம் நிறைந்த மலைகளில் போதிய இட வசதியற்ற லயன் அறைகளில் வாழையடி வாழையாய் தமது வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இன்னொரு மீரியபெத்த வேண்டாம் என்பதை சங்கேதமாக உணர்த்தும் வண்ணம் எல்ல மண்சரிவு அபாயப் பகுதியிலுள்ள நியூபேர்க் தோட்ட மக்கள் தமது இல்லங்களில் செங்கொடியை பறக்கவிட்டுள்ளனர்.

மண்சரிவு அபாயப் பகுதியிலிருந்து தாம் மீட்கப்பட்டுள்ள போதிலும் பாதுகாப்பான குடியிருப்புக்கள் தமக்கு நிர்மாணித்துக்கொடுக்கப்பட வேண்டுமென்பதே இந்த மக்களின் ஏகோபித்த கோரிக்கையாகும்.

மக்கள் பிரதிநிதிகள் தமது செங்கொடிப் போராட்டத்திற்கு செவிசாய்த்து  தமக்கான குடியிருப்புகளை நிர்மாணித்துக் கொடுக்க வேண்டுமெனவும் எல்ல நியூபேர்க் தோட்ட மக்கள் வேண்டுகின்றனர்.

பாதுகாப்பு மற்றும் நிரந்தர குடியிருப்பினை வேண்டி எல்ல நியூபேர்க் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த செங்கொடிப் போராட்டத்திற்கு அரசியல் தலைமைகள் செவிசாய்க்குமா?

எல்ல நியூபேர்க் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த செங்கொடிப் போராட்டம் மலையக மக்களுக்கு நிரந்தர குடியிருப்பை நிர்மாணிப்பதற்கான மறுமலர்ச்சிக்கு வழிவகுக்குமா?

நன்றி - news1st

கூலித் தமிழ் : மு. நித்தியானந்தன்


கூலித் தமிழ் : மு. நித்தியானந்தன்
ரூ.400

அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம்...
இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 8489401887.
VPP அல்லது Professional Couriers'யில் அனுப்பி வைக்கப்படும்

'கூலித் தமிழ்' நூலின் உள்ளடக்கம் பற்றிச் சுருங்கக்கூறின் பின்வருமாறு கூறலாம்!

  • 19ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளுக்குக் 'கூலி'களாகக் கொண்டுசெல்லப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களின் மத்தியில் எழுந்த முதல் எழுத்து முயற்சிகளை இந்நூல் பதிவுசெய்கிறது.
  • நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் மலையகத் தமிழர்கள்மீது இடம்பெற்ற கொடூர துரைத்தன அடக்குமுறையையும், ஆங்கிலத் துரைமார் தமிழ் பேச உபயோகித்த 'கூலித் தமிழ்' போதினிகளில் இந்த அடக்குமுறை எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையும் ஆராயும் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
  • இந்திய வம்சாவளித் தமிழர்கள் மோசமாக நடத்தப்படுவதற்கு எதிராகக் கருமுத்து தியாகராசர் எழுப்பிய கண்டனங்கள் முதல்முறையாக இந்நூலில் பதிவுபெறுகின்றன.
  • மலையகத்தில் எழுந்த முதல் இரண்டு நாவல்கள் பற்றிய ஆய்வுகள் மலையக இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பவை.
  • அஞ்சுகம் என்ற கணிகையர்குலப் பெண் ஆளுமையை மலையகத்தின் முதல் பெண் புலமையாளராக இந்நூல் அடையாளப்படுத்துகிறது.
  • ஐரோப்பிய நூலகங்களில் மேற்கொள்ளப்பட்ட விரிவான தேடல்கள் இந்நூல் ஆய்விற்குப் பலம் சேர்த்துள்ளன.


கொஸ்லாந்த மீரியபெத்த துயரத்தின் வயது ஒரு மாதம்…….?


கடந்த மாதம் 29.10.2014 அன்று மலையக வரலாற்றில் கண்ணீராலும் மனத்துயரங்களாலும் செதுக்கப்பட்ட அத்தியாயங்கள் உருப்பெற்றன.

தேயிலை செடிக்கடியில் தமது வாழ்வை தினந்தோறும் தேடி தேடி துயரப்படும் எம் மலையக சமூக உறவுகளில் ஒரு பகுதியினர் வாழும் பதுளை மாவட்டத்திற்கு உட்பட்ட கொஸ்லந்தை மீறியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு, 300 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, இருக்க இடமின்றி அநாதரவாக தமது உறவுகளை பிரிந்து கதறிய சோகம் இன்னும் அந்த மலைமுடுக்குகளில் ஓங்கி ஒழிக்கத்தான் செய்கின்றன.

இச்சோகம் இலங்கை வாழ் மக்களை மட்டுமல்ல முழு உலக மக்களினதும் அனுதாபத்தினையும், ஆதரவினையும் பெற்றுக் கொண்டது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை புனரமைக்க இந்தியா, அமெரிக்கா உட்பட பல மேற்கு தேச அரசுகள் இம் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டின. அவ்வாறு உதவிக்கரம் நீட்டிய போதும் இழந்த எம் உறவுகள் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் அம் மக்களின் நினைவுகளோடு மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த எம் உடன்பிறப்புகளுக்கு (29.11.2014) நாளை எமது துயரத்துடன் கூடிய அஞ்சலியை செலுத்துகின்றோம்.

மனிதர்கள் இறந்த பின்னரே மண்ணில் புதைக்கப்படுகின்றனர் ஆனால் எம் உறவுகள் அன்று உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டு விட்டனர். இவ்வனர்த்தத்தில் 75 ற்கும் மேற்பட்ட குழந்தைகள் தமது பெற்றோரை இழந்து அநாதைகளாக மாற்றப்பட்டடுள்ளனர். அவர்களின் வாழ்க்கைக்கு இலங்கை அரசாங்கம் பெறுப்பேற்க வேண்டும். இந்நாளில் நாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும், மலையகத்தின் ஏனைய அனர்த்த  பிரதேசங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியேற்றப்பட வேண்டும், மலையகத் தலைவர்களின் கையாலாகாதத்தனம் நீங்கி மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும், எம் சமூகத்திற்கு சிறந்த கல்வி சிறப்பான சுகாதாரம், நியாயமான சம்பளம், காப்புறுதி போன்ற இன்னோரன்ன தேவைகளை வென்றெடுப்பதே எமது நோக்கமாக அமைய வேண்டும்.

அந்தவகையில் வரலாற்றில் நாம் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம், ஏமாற்றப்படுகின்றோம். இவற்றை உணராமையாலேயே இன்று எம் மலையக சமூகத்தின் ஒரு பகுதி சுவடுகள் இன்றி அழிக்கப்பட்டுள்ளது. இயற்கை இவர்களை அழிக்கவில்லை. திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளனர். எமது வளர்ச்சியை கண்டு மனம் பொறுக்காத தேசிய தலைவர்களால் வரலாறுகளில் நாம் அழிக்கப்பட்டோம். ஆனால் நாம் இன்று புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளோம்.

இவ்வனர்த்தம் இடம்பெற்று நாளைய தினத்துடன் ஒரு மாதம் நிறைவுறும் நேரத்தில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் உரிய வாழ்வாதார வசதிகள் செய்துக்கொடுக்கப்படவில்லை. அதேவேளை இவ்வனர்த்தத்தினால் உயிரிழந்த மக்களுக்கு குறித்த இடத்திலேயே நினைவுத்தூபிகள் அமைக்கப்படும் என்று அரசாங்கத் தரப்பிலிருந்தும் மலையக தலைவர்களிடமிருந்தும் வாக்குறுதிகள் வந்து குவிந்த போதும் இதுவரையில் இறந்தவர்களுக்காக ஒரு செங்கல்கூட நடப்படவில்லை. இது எமது மக்களின் மீதுள்ள அலட்சிய போக்கா? அல்லது காலத்தின் சாபமா? தெரியவில்லை.

இப்பேரனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகள் ஒரு பக்கம், அதேவேளை உயிருடன் பாதிக்கப்பட்ட மக்கள் மறுபுறமிருக்க. அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு பணயக் கைதிகள் போல் மாற்றப்பட்டடுள்ளனர். அவர்களுக்கும் உரியதொரு விடிவு தினமாக இந்த அஞ்சலி தினம் அமைய வேண்டும்.

அனர்த்தம் ஏற்பட்டபோது குறித்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் இதுவரையில் அவ்வாறே வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் அனர்த்தம் ஏற்பட்டதை அறிந்து எம் தொப்புள்கொடி உறவுகளுக்காக முழு மலையக சமூகமும் வீதியில் திரண்டது மலையக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் இனிவரும் காலங்களில் பதியப்படும்.

அத்தோடு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களுக்காக இம்மாத ஆரம்ப பகுதிகளில் பல தொழிளாலர்கள் தமது உறவுகளின் அவலத்தை ஆர்ப்பாட்ட பேரணிகள் மூலமாக உலகறியச் செய்தனர். இவ்வனர்த்தம் ஏற்பட்ட தினத்தினை மலையக வரலாற்றில் துக்க தினமாக ஒவ்வொரு வருடமும் அனுஸ்டிக்க வேண்டும். அன்றைய தினம் மலையக தியாகிகளின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்க வேண்டும்.

உறவுகளே நீங்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளீர்கள். அது வளர்ந்து விருட்சகமாகும் என்பது திண்ணம்.

நாளைய தினம் மலையகம் முழுவதும் மீரியபெத்த அவலத்தை நினைவு கூறும் நிகழ்வுகளில் மக்கள் ஈடுபடுவது எம்மை வாழவைத்த மலையக அன்னைக்கு செய்யும் எமது நன்றிக்கடனாக அமையும். இத்தினத்தில் ஆலயங்கள், வீடுகள், பொது இடங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றில் கூட்டுப்பிரார்த்தனைகளில் மக்கள் ஈடுபட வேண்டும்.

அத்தோடு வீடுகளுக்கு முன்னால் விளக்குகளை ஏற்றி இறந்த எம் உடன்பிறப்புகளுக்கு எண்ணங்களால் உயிர்கொடுப்போம்.

இத்தினத்தில் எமது அடிமை வாழ்வகன்றிட, எம் கைகள் உயர்ந்திட, எஞ்சியிருக்கும் எம் சமூகம் மீட்சி பெற, இறந்து அமரத்துவம் பெற்ற உறவுகள் எம்மை ஆசிர்வதிக்கட்டும். மலையக சமூகத்திற்கு விடிவு வெகு தொலைவில் இல்லை. அடுத்த வருடம் இந்நாளில் (29.10.2015) எமக்குரிய உரிமைகளை வென்றெடுப்பதே இழந்த எம் உறவுகளுக்க செலுத்தும் காணிக்கையாகும்.

நன்றி.

துயரில் வாடும்
மலையக பேரிடர் கண்காணிப்பு குழு

தெளிவுடன் இருக்கும் மக்கள் குழம்பிப் போயுள்ள தலைமைகள் - என்னென்ஸி


சொந்தமான காணி, அதில் தனிவீடு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் மலையக மக்கள் மிகவும் தெளிவுடன் இருக்கின்றனர். அதற்காகக் குரல் கொடுப்ப தற்கும் போராடுவதற்கும் தயாராகி விட்ட னர். ஆனால், மலையகத் தலைமைகள் தான் குழம்பிப்போய் கிடக்கின்றன.

தமக்கெனத் தனியாகக் காணிகள் வழங்கப்பட்டு, அதில் தனித்தனி வீடுகள் அமை த்துக் கொடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி மலையக மக்கள் சுயமாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரத்தில் கூட ஹட்டன் மற்றும் பதுளை ஆகிய இடங்களில் இதற்கான போராட்டங்கள் இடம்பெற்றன.

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதுடன், அவர்களின் தேவைகளை பூர் த்திசெய்து அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொடுத்து வழிகாட்ட வேண்டிய மலையகத் தலைமை கள் இன்று குழம்பிப்போயுள்ளன என்பது தெளிவாகிறது. மக்களின் கோரிக்கைகளு க்கு எவ்வாறு பதிலளிப்பது என்று தடுமாறிக்கொண்டிருக்கின்றன.

மக்கள் தமக்கான காணியுரிமை, வீட்டுரிமை என்பவற்றுக்காக தமக்கிடையிலான குரோதங்கள், கட்சி பேதங்கள் அனைத்தையும் துறந்து ஒன்றுபட்டு குரல் கொடுக்கின்றனர். போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த ஒற்றுமை மலையகத் தலைமைகளிடம் இல்லாமலிருப்பது வேதனைக்குரியது.

தொழில் பிரச்சினை தொடங்கி சம்பள உயர்வு கோரிப் போராடுவது வரை ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு திசையிலேயே பயணிக்கின்றன. ஒரு கட்சி ஒரு தொகையைக் கேட்டால் இன்னொரு கட்சி வேறொரு தொகையைக் கோருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஏட்டிக்குப் போட்டியாக நடப்பதால் கோரிக்கைகள், போராட்டங்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகின்றன. இதனால் பாதி க்கப்படுவது அப்பாவித் தோட்டத் தொழிலாளர்கள்தான்.

தற்போது தோட்டப்பகுதி மக்கள் முன்வைத்திருக்கும் காணியுரிமை, வீட்டுரிமை கோரிக்கைகளிலும் மலையகத் தலைமை களிடம் ஒத்த கருத்தோ அல்லது ஒரு பொதுத் திட்டமோ இல்லை. ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கருத்தினைக் கொண்டிருக்கின்றன.

ஒரு கட்சி தோட்டத் தொழிலாளருக்கு மாடி வீட்டுக் குடியிருப்பு முறையே சிறந்ததென்று தெரிவிக்கிறது. ஆனால் தோட்டத் தொழிலாளருக்கு மாடிவீட்டுத் திட்டம் பொருத்தமற்றது. தனித்தனி வீடுகளே அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று ஏனைய கட்சிகளும் பொதுமக்களும் கூறுகின்றனர்.

மற்றொரு கட்சியோ தொழிலாளருக்கு 7 பேர்ச் காணி வழங்கப்பட்டு அதில் தனித்தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டுமென்று கூறுகிறது.
இன்னொரு கட்சியோ 7 பேர்ச் காணி போதாது 10 பேர்ச் காணியும் அதில் தனியான வீடும் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கிறது.

இந்த நிலையில் பிறிதொரு கட்சியோ 7 பேர்ச் நிலமோ அல்லது 10 பேர்ச் நிலமோ போதாது. 20 பேர்ச் காணி வழங்கப்படுவதுடன் அதில் தனி வீடு அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். அதுவே தற்போதைய தேவை என்கிறது.

எத்தனை பேர்ச் காணி வழங்கப்பட வேண்டும். அதில் எவ்வாறான வீடு அமை க்கப்பட வேண்டும் என்பதில் கூட மலையகத் தலைவர்களிடம் ஒரு பொதுவான திட்டமோ, கொள்கையோ கிடையாது. அவரவர் விருப்பப்படி ஒரு குறிப்பிட்ட அளவை வழங்க வேண்டுமென்று கூறுகின்றனர். ஏட்டிக்குப் போட்டி என்பார்களே அதுதான் இங்கும் நடைபெறுகிறது.

சில வாரங்களுக்கு முன்னர் மலையகத் தின் பிரதான கட்சியொன்றின் அரசியல்வாதி ஒருவர் அறிக்கை ஒன்றை விடுத்தி ருந்தார். அந்த அறிக்கையில் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் தொழிற்சங்கங்கள் செய்து கொண்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்கள் வீடமைத்துக் கொள்வதற்காக 7 பேர்ச் காணி வழங்குவதற்கான விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

கூட்டு ஒப்பந்தத்தில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன என்பதையெல்லாம் அறிந்திராத ஒருவர் தான் அந்தப் பிரதான கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். விளக்கமில்லாத தலைவர்கள் முதலில் குறித்த விடயம் தொடர்பாக தாங்கள் விளக்கம் பெற்றுக்கொண்ட பின்னர், அதுபற்றி மற்றவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். அதை விடுத்து எதையாவது சொல்லி மக்களை ஏமாற்றி விடலாம் என்று மட்டும் நினைத்துவிடக் கூடாது. ஏமாற்ற நினைத்தால் ஏமாந்து போய்விடுவீர்கள் என்பதே உண்மை.

எனவே, ஒரு குடும்பத்துக்கு எத்தனை பேர்ச் காணி வழங்கப்பட வேண்டும்? அதில் எவ்வாறான வீடு அமைய வேண் டும்? என்ற ஒரு பொதுத் தீர்மானத்துக்கு வரவேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள், மலையக சமூக அமைப்புக்கள் என்பன ஒன்றிணைந்து தீர்மானிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

மலையக மக்கள் தற்போது என்றுமில்லா தவாறு தமது உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப் போராடுவதற்குத் தயாராகி விட்டனர். இது சமூகத்தின் உரிமைக்கான ஒரு எழுச்சியாகும். எனவே, மலையத்தலைமைகள் ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்து செயற்பட வேண்டும்.

அரசாங்கம் ஏற்கனவே அறிவித்த தரிசு காணி பகிர்ந்தளிப்பு மற்றும் 50 ஆயிரம் மாடி வீடுகள் என்பன நடைமுறைக்கு வராமைக்கு காரணம் யார்? அரசாங்கமா? அல்லது மலையக மக்களா? இல்லை, மலையக அரசியல் தலைமைதான் காரணம்!

மலையக பிரதான கட்சிகள் மட்டுமன்றி, ஏனைய சிறிய கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்திலேயே அங்கம் வகிக்கின்றன. அமைச்சர், பிரதியமைச்சர்கள், மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், பிரதேச சபை, நகர சபை தலைவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர்.

இவ்வாறு அரசாங்கத்துடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள கட்சிகள் தரிசு நில பகிர்ந்தளிப்பு, வீடமைப்பு என்பவற்றை விரைவுபடுத்துமாறு அரசை வலியுறுத்தியிருக்க வேண்டும். பாராளுமன்றத்திலும் அமைச்சரவைக் கூட்டங்களிலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால், இதனை எந்தவொரு கட்சியுமே செய்யவில்லை. தானுண்டு, தமது குடும்பம் உண்டு, தொழில் உண்டு என்று இருந்து விட்டனர். ஒருவர் தருகிறேன் என்று கூறினால் அதனை அவ்வப்போது கேட்டுப் பெற வேண்டும் சும்மா இருந் தால் கிடைக்காது.

இந்த நிலையிலேயே தற்போது மலையக மக்கள் மலையகத் தலைமைகளை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் சுயமாகவே போராடத் தொடங்கி விட்டனர் என்பதே உண்மை. எனவே, இனியாவது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுப்பதாகத் தெரிவித்த ஐந்தாயிரம் வீடுகளுக்கும் என்ன நடந்தது? மலையக தொழிற்சங்கங்களின் தலையீடு, போட்டி, சண்டை என்பவற்றால் அதுவும் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

யாருக்குக் கிடைத்தாலும் அது மலையக மக்களுக்குத்தானே என்ற பரந்த மனப்பான்மையின்றி, குறுகிய மனப்பான்மையுடன் நடந்து கொண்டதால் அநியாயமாக ஐயாயிரம் வீடுகள் யாருக்கும் கிடைக்காமல் போயுள்ளன.

இது ஒரு நல்ல சந்தர்ப்பம்! ஜனாதிபதி தேர்தல் நடைபெறப் போகின்றது.
தரிசு காணியை பகிர்ந்தளிப்பதாகவும் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்துத் தருவதா கவும் அறிவித்த ஜனாதிபதி அதனை நிறை வேற்றுவதற்குத் தயங்கமாட்டார் என்பது மலையக மக்களின் நம்பிக்கை.

ஒட்டுமொத்த மலையகக் கட்சிகளும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கே ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளன. இந்த மலையகக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து (தமக்குள் உள்ள வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு) மேற்படி திட்டத்தை நிறை வேற்றித்தருமாறு ஒரு கோரிக்கையை முன்வைக்கலாமல்லவா? இந்தக் கோரிக்கையை முன்வைத்து செயற்பட்டால் நிச்சயமாக மக்கள் தங்களது ஆதரவை வழங்குவார்கள்!

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது என்பதையும் மலையகத் தலைவர்கள் மறந்துவிடக் கூடாது!

நன்றி - வீரகேசரி 23.11.2014

தோழர் கே. ஏ. சுப்பிரமணியத்தின் 25வது நினைவு தினம்(27-11-2014) லெனின் மதிவானம்


ஒடுக்கப்பட்ட மக்களின் 
அடிமை இருட்டை அகற்ற புறப்பட்ட
தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் 
காலத்தின் தோற்றுவாயாக மட்டுமன்று
அக்காலத்தின் வழிக்காட்டியாகவும் திகழ்ந்தவர்.

ஓர் உழைக்கும் மக்கள் நலனிலிருந்து அந்நியப்படாமல்
அவ்வாழ்க்கையை புஷ்பிக்க முனைந்த அவரது வரலாற்றை 
கற்கும்  எந்த மனிதனும் இதயமுள்ளவனாக மாறுவான்.

எலிப்பொறியில் பூனையும் ஒன்பது விருதுகளும் - ப.விஜயகாந்தன்

“நாம் பாக்கடிமை செய்திடோம்” என்ற ஒரு உணர்ச்சித் ததும்பும் நாடகம். பிரதான பாத்திரமேற்று நடித்துக்கொண்டிருக்கின்றான் ஒரு பதினைந்து வயது சிறுவன். சபையோரின் கைதட்டல்களும் கூக்குரல்களும் பாடசாலையின் மண்டபத்தினை அதிர வைக்கின்றன. இந்தச் சிறுவன் இலங்கையின் தேசிய நாடக விழாவில் ஒன்பது விருதுகளை வெல்வான் என்று அன்று யாரேனும் நினைத்திருப்பார்களோ தெரியாது. 

பொகவந்தலாவை லெட்சுமி தோட்டத்தில் பிறந்த தியாகராஜா சிவனேசன் எனும் அரங்கக் கலைஞனின் தயாரிப்பில் இலங்கையின் தேசிய நாடகவிழாவில் அரங்கேற்றப்பட்ட “எலிப்பொறியில் பூனை” எனும் சிறுவர் நாடகம் 2014ஆம் ஆண்டு முதலிடத்தினையும் ஒன்பது விருதுகளையும் வெற்றிக் கொண்டுள்ளது. அந்த வெற்றிக் கலைஞனின் பின்னணி என்ன?

பொகவந்தலாவ கெர்கஸ்வோல் இல.2 தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர் திரு தி.சிவனேசன். பள்ளிக்காலத்தில் “புதிய பண்பாட்டு அமைப்பு” எனும் கலை இலக்கிய, மக்கள்மயப்பட்ட அமைப்புடன் அரங்கியல் தொடர்பினை பெறுகின்றான். அதன் விளைவாக திரு பொன்.பிரபாகரன் தயாரித்த “நாம் பாக்கடிமை செய்திடோம்” எனும் நாடகத்தில் தனது முதலாவது நடிப்பு திறனை வெளிக்காட்டுகின்றான். சமகாலத்தில் திரு அ.ஜெகன்தாசன் தாயரிப்பில் வெளிவந்த “எங்க ஊரு மத்துச்சண்ட” எனும் நாடகத்திலும் முக்கி பாத்திரம் ஏற்கின்றான். அன்றிலிருந்து அவ்வமைப்பின் அரங்க அறிவியல் பிரிவில் இக்கலைஞன் அரங்கச் செயற்பாட்டாளனாக வளர்த்தெடுக்கப்படுகின்றான். திரு பொன்.பிரபாகரன், திரு அ.ஜெகன்தாசன், திரு சு.பிரேம்குமார், திரு வீ.கதிர்காமநாதன் ஆகிய அரங்கச் செயற்பாட்டாளர்களிடம் தனது ஆரம்ப பயிற்சிகளை பெற்றுக்கொள்கின்றான்.

2001ஆம் இலங்கையின் கிழக்குப் பல்கலை கழகத்தின் உலக நாடக விழாவில் கலை அரங்கேற்ற நிகழ்வில் புதிய பண்பாட்டு அமைப்பின் ஊடாக பங்கெடுத்தமையானது அவனது கலைப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைகின்றது.

இக் கலையனுபவங்கள் 2004ஆம் இக்கலைஞனை “மக்கள் களரி” எனும் இலங்கையின் முன்னணி நாடகக் குழுவில் கொண்டு சேர்க்கின்றன. இங்கிவன் தொழில் முறையான கலைஞனாகவும் முழுநேர அரங்கச் செயற்பாட்டாளனாகவும் தன் வாழ்க்கைப் பாங்கை மாற்றிக்கொள்கின்றான். இவ்வரிய பணியின் பின்னணியில் இலங்கையின் தலைசிறந்த நாடகக் கலைஞர்களும் மக்கள் களரியின் நிறுவனர்களுமான திரு பராக்கிரம நிரியெல்ல, திரு எச்.ஏ.பெரேரா, கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் மௌனகுரு, இங்கிலாந்து மென்ஜஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் தொம்சன், இங்கிலாந்து மென்ஜஸ்டர் பல்கலைக்கழக விரிவுரையாளர் சாலட் முதலான பலர் அமைந்திருந்து ஆற்றுப்படுத்தியமை பெருமிதமானதொன்றாகும்.

அண்மைக் காலமாக இலங்கையின் புகழ்பூத்த நாடகங்களான “எருக்களம் பூ” (2004), “மாயப்பட்டாடை”(2004), “மகரராக்ச”(2004), “சரண்தாஸ்”(2006ஆம் ஆண்டு தேசிய நாடக விழாவில் ஒன்பது விருதுகளை வென்ற நாடகம்), “மிருச்சக்கடிகம்”(2011ஆம் ஆண்டு தேசிய நாடக விழாவில் விருது பெற்ற நாடகம்), “குருடனும் நொண்டியும்”(2011ஆம் ஆண்டு தேசிய நாடகவிழாவில் பல விருதுகளை வென்ற நாடகம்), “உனுவெட்டய கத்தாவ” (ஜேர்மனிய நாடகக் கலைஞரான பேர்டொல்ஃபிரட் என்பவரின் “The Chak Circle” எனும் நாடகத்தை இலங்கையின் பிரபல நாடக நெறியாளர் பராக்கிரம நிரியெல்ல சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்து அரங்கேற்றி 2013ஆம் ஆண்டு இலங்கையின் தேசிய நாடகவிழாவில் விருது வென்ற நாடகம்) முதலான பல நாடகங்களில் பிரதான பாத்திரமாகவும் துணைப்பாத்திரமாகவும் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கலக்கிய நாடறிந்த (நாடறிய வேண்டிய) ஒரு கலைஞன் என்று கூறி வைப்பதில் தவறிருக்காது.





இந்தியாவில் புதுடில்லி, கேரளா, தமிழநாடு பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், ஆரம்பக்கம், கோடம்பக்கம், புருஷை ஆகிய இடங்களிலும் கிறிகிஸ்தான் நாட்டிலும் மக்கள் களரி நாடக குழுவின் சார்பாக பல நாடகங்களில் நடிக்கின்றான். விசேடமான கிறிகிஸ்தான் நாட்டில் மலையகத்தின் பாரம்பரிய கலையம்சமான காமன் கூத்தினை ஐந்து நிமிடத்தில் அளிக்கை செய்து ஒரு விவாதத்தை தொடங்கி வைக்கின்றான். பல வெளிநாட்டவர்களுடனும் பலவித கலையனுபவம் கொண்டவர்களுடனும், இலங்கையின் பல இனத்தவர்களுடனும் கலை சார்ந்து பல மட்ட கலந்துரையாடல்களுக்கு முகம் கொடுக்கின்றான். இவை அத்தனையும் ஒன்று  திரண்டு இக்கலைஞன் மனதில் “நான் என் சமூக்திற்கு என்ன செய்தேன்?” என்ற ஒரு பெரும் வினாவினை முன்நிறுத்துகின்றது. இதன் விளைவே “எலிப்பொறியில் பூனை”யும் ஒன்பது விருது வெல்லப்பட்டமையுமாகும்.

இலங்கையின் மூத்த கல்விமான் (மிக்க அன்புடைய) பேராசிரியர் கா.சிவதம்பியின் மரண அஞ்சலி கூட்டத்தின் போது ப.திருச்செல்வம், சு.கமலதாசன் ஆகிய இரு நண்பர்களோடு ஒரு ஓரமாக நின்று பேராசிரியருக்கு அஞ்சலி தெரிவிக்க வேண்டும். அதனை ஒரு இரங்கல் கவியாக தெரிவிக்கலாம். ஆனால் அதை எந்த பெயரில் வெளியிடுவது என சம்பாசித்தப்போது தான் “சங்கு கலைக்கழகம்” எனும் சிறுபிள்ளை வெள்ளாமை உதயமானது. பேராசிரியருக்கு அஞ்சலி தெரிவித்த இக்கழகம் அடுத்து ஒன்பது விருதுகளை பெறும்வரை காத்திருந்தது.

மேலே சொன்ன பெரும் வினாவுக்கு விடை காண கலைஞம் முற்படுகின்றான். பொகவந்தலாவை டியன்சின் தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது ஆசானும் நண்பனுமாகிய திரு வீ.கதிர்காமநாதனுடன் இணைகின்றான். பாடசாலையின் அதிபரின் அனமதியுடன் 13மாணவர்களை கொண்ட ஒரு நாடகக் குழுவினை அமைக்கின்றான். 17.05.2014 முதல் 23.10.2014 வரை கடுமையாக உழைக்கின்றான். கலைஞனின் உழைப்புக்காக பாடசாலையின் நிர்வாகமும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், திரு வீ.கதிர்காமநாதனும் அவரது பாரியார் திருமதி சுகந்தாவும், கலைஞனின் பாரியார் திருமதி சாந்தினிமல்காந்தியும் இன்னும் பல நண்பர்களும் பின் நின்று ஊக்கப்படுத்தினர். நாடகம் அரங்கேற்றி முடிப்பதற்கிடையில் 170,000 ரூபாய் செலவாகின்றது (அரச சார்பற்ற நிறுவனங்கள் சிறு தொகையை வழங்கின).

நாடகம் எதைச் சொல்கின்றது?
ஒரு வீட்டில் எலிகளின் தொல்லை அதிகரிக்கின்றது. எலிகளின் தொல்லை தாங்காது வீட்டார் எலிகளுக்கு பொறி வைக்கின்றனர். வைக்கப்பட்ட பொறியில் அதே வீட்டின் பூனையார் மாட்டிக் கொள்கின்றார். பின்னர் எலிகளின் தயவால் பூனை உயிர் பிழைக்கின்றது.

சிறுவர் உலகத்தில் பகைமை உணர்வினை நீக்குதல், ஒற்றுமையை வளர்த்தல், சமூகம் சார்ந்த உணர்வுகளை சிறுவர்களிடம் ஏற்படுத்துதல் போன்றனவே நாடகத்தின் நோக்கமாக அமைந்துள்ளது. அரங்கேற்றத்தில் அத்தனையும் அம்பலமானது மட்டுமன்றி இந்நாடகம் மாணவர்களுக்கு உணவுச் சங்கிலியை போதிக்கின்றது, மாணவர்களுக்கு சுகாதார பழக்கவழக்கங்களை போதிக்கின்றது என்றெல்லாம் புகழப்பட்டு (மொத்தம் 12 விருதுகள்) ஒன்பது விருதுகள் வழங்கப்பட்டன. அவை வருமாறு:

1. சிறந்த நாடகம்
2. சிறந்த பிரதியாக்கம்
3. சிறந்த இசையமைப்பு
4. சிறந்த மேடையலங்காரம்
5. சிறந்த ஆடையலங்காரம்
6. சிறந்த நடிகை
7. சிறந்த துனை நடிகை
8. சிறந்த மேடை முகாமைத்துவம்
9. சிறந்த ஒளியமைப்பு

எலிப்பொறியில் பூனைக்கு மட்டுமல்லாது நாடக தயாரிப்பாளர் தி.சிவனேசனுக்கும் இப்போது கிராக்கி அதிகரித்துள்ளது. நண்பர்களின் தொடர்புகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் வாய்ப்புக்கள், பாடசாலைகளில் அரங்கேற்றுவதற்கான அழைப்புக்கள், யார் இவர்? சங்கு கலைக்கழகம் எங்குள்ளது? என்ற வினாக்கள் எல்லாமே அதிகரித்துள்ளது.




கலையும் அரங்கும் எல்லா வகையிலும் சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும்.

மீரியபெத்தையில் உயிரிழந்தவர்களின் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை தேவை - விண்மணி


மீரியபெத்த மண்சரிவில் குடும்பத்தை, உற்றார், உறவினர்களை, உடைமைகளை இழந்தவர்கள் இப்போது தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புதிய இடங்களிலே குடியிருப்பு அமைக்கப்பட்டு தங்க வைக்கப்படுவார்கள் என நிச்சயமாக நம்பலாம். இழப்பீடுகளும் வழங்கப்பட லாம்.

பெற்றோர்களை இழந்த குழந்தைகளை அரசே பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

இந்த அளவில் பொறுப்பு வாய்ந்தவர்கள் இவர்கள் தொடர்பில் தமக்குள்ள கடமைகளை முடித்து விட்டதாகத் திருப்தியுடன் ஓய்ந்து விடக்கூடும்.

ஆனால், இவர்கள் தொடர்பில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விடயம் இருக்கிறது. மண் சரிவில் புதையுண்டு உயிரி ழந்த தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் சேவைக்கால பணம் ஆகியவற்றை அவர்களின் சட்டபூர்வமான வாரிசுகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே அது.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோரின் கொடுப்பனவுகள் வங்கியிலிடப்பட்டு உரிய பராயத்தை அடைந்த தும் அதை அவர்கள் பெற்றுக் கொள்ள வழி வகை செய்யப்பட வேண்டும்.

எல்லாவற்றையும் இழந்து விட்டதாகச் சொல்லப்பட்ட போதும் இறந்து போனவர் கள் இந்தக் கொடுப்பனவுகளை தமது வாரிசுகளுக்கு விட்டுச் சென்றிருக்கின்றார்கள். இக் கொடுப்பனவுகள் உயிரிழந்தவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததும் சட்டப்படி உரி மை உடையனவும் ஆகும். இதன் காரணமாக அவர்களின் சட்டப்படியான வாரிசுகளுக்கு உரித்துடையதுமாகும்.

இப்போது இது பற்றிக் கவனிக்காதிருந்து விட்டு பின்னர் இதற்காக முயல்வது பெரும் சிரமமான காரியமாகி விடும். பல்வேறு சட்டப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். இப்போதே இவர்கள் மேலுள்ள அனுதாபம் சில ஆண்டுகளின் பின்பு மங்கி மறைந்து போய்விட்டிருக்கும்.

சாதாரணமாகவே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றை பெறுவத ற்கு பெரும் பாடுபடுவது நாமனைவரும் அறிந்த விடயம். பிறப்புச் சான்றிதழ் இரு க்காது, பிறப்புச் சான்றிதழ் இருந்தால் அடை யாள அட்டை இருக்காது, இரண்டும் இருந் தால் இரண்டிலும் பெயர் வித்தியாமாக் இருந் தால் இரண்டிலும் பெயர் வித்தியாமாக இரு க்கும், இவையிரண்டும் இருந்தால் திரும ணப் பதிவுச் சான்றிதழ் இருக்காது, அல்லது பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்களில் பெயர் வித்தியாசமாக இருக்கும், வெவ்வேறு தோட்டங்களில் பணி புரிந்திருந்தால் ஒவ்வொரு தோட்டத்திலும் பெயர் ஒவ்வொரு விதமாக எழுதப்பட்டிருக்கும்.

இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. சாதாரணமானவர்கள் ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் போது இந்த சிக்கல்களைப் பயன்படுத்தியே இது தொடர்பில் தோட்டத் தொழிலாளர் களிடம் சில தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் இடைத்தரகர்களும் பெரும் பணம் கறந்து விடுகிறார்கள்.

இதைவிட சிலர் ஆள் மாறாட்டம் செய்தும் பணத்தைச் சுருட்டிக் கொள்கிறார் கள். தொடர்ச்சியாக பணிபுரிந்து வந்த பல்வேறு ஆவணங்களைக் கைவசம் வைத்திருக்கின்றவர்களுக்கே இந்நிலையானால், எந்தவித ஆவணங்களுமின்றி திடீரென இறந்து போனவர்களின் வாரிசு கள் பயன்களைப் பெற்றுக் கொள்வதற்கு எவ்வளவு சிரமங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் ?

இந்த விடயத்தில் காலம் தாழ்த்தினால் இந்தக் கொடுப்பனவுகள் பெரும்பாலும் முற்றாக கிடைக்காமல் போய்விடக் கூடிய வாய்ப்பு உண்டு.
ஆகவே, இந்த ஏதிலிகளுக்கு செய்கின்ற ஏனைய உதவிகளோடும் இந்த உதவியை யும் செய்து கொடுக்க பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்வர வேண்டும்.
வழமையான வழிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு அமைய இந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொடுக்க சாத்திய மில்லாதிருக்கலாம். அதனால் சட்ட திட்ட ங்களை சற்று தளர்த்தி விசேட ஏற்பாடுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும். இதற்காக இவ்விடயத்தை ஜனாதிபதியின் நேரடிக் கவனத்திற்குக் கொண்டு வருதல் அவசியம்.

இப்போது நிலவி வரும் பதற்ற நிலையின் காரணமாக தோட்ட அலுவலகத்திலிருந்து போதிய விவரங்களையும் ஆவணங்க ளையும் பெற்றுக் கொள்வது சிரமமாக இருக்கலாம். ஆனால் தொழில் திணைக்களத்திலிருந்து ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி உறுப்பினர்களின் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதனடிப்படையில் முறையான விசாரணைகளை மேற்கொண்டால் முகாம்களில் இருப்பவர்களிடையே இறந்து போனவர்களின் சட்டபூர்வமான வாரிசுகள் யார் என்பதை நிரூபணம் செய்து கொள்ளலாம்.

உண்மையில் இவை பற்றியெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாத நிலையில்தான் இப்போது இந்தத் தொழிலாளர்கள் இருப்பார்கள் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. எல்லாமே போன பின் இந்த காசு மட் டம் எதற்கு? என்று விரக்தியில் பேசவும் கூடும். ஆனால், அவர்கள் எப்போதும் இதே நிலையில் இருக்கப்போவதில்லை. இது தற் காலிகமானதுதான். காலம் காயங்களை ஆற்றிவிடும். அவர்கள் அறிவு பூர்வமாக சிந்தி த்து தமது வாழ்வை சீரமைத்துக் கொள்ள முற்படும் போது இந்தக் காசு அவர்களுக்கு உதவியாக இருக்கும். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பேருதவியாக இருக்கும்.

இதில் 14 நாள் சல்லி என்று தோட்டத் தொழிலாளர்களின் பேச்சு வழக்கில் வழங் கும் சேவைக்காலக் கொடுப்பனவு (Work Mens (corporation) தோட்ட நிர்வாகம் செலுத்த வேண்டியதாகும். பெரும்பாலும் தோட்ட நிர்வாகம் இதனைக் கொடுக்காதிருக்கவே முயற்சிக்கும். இதனைப் பெற்றுக் கொள்ள தொழில் திணைக்களத்தின் தலையீடு அவசியமாகலாம்.

மண்சரிவில் புதையுண்டு போனவர்களின் எண்ணிக்கை என்ன என்பது இதுவரை சரியாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் 300– 400 பேர் வரை இருக்கலாம் என்று சொல் லப்பட்டது. படிப்படியாகக் குறைந்து இப்போது 45 பேர் வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எண்ணிக்கை சந்தேகத்தை ஏற்படுத் துவதாகவுள்ளது. முகாம்களில் தங்கியிருப்பவர்களிடம் முறையான தகவல்களைப் பெற்றால் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணி க்கையை மிகச் சரியாகக் கணக்கிட்டு விட லாம்.

உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை யையும் பெயர் விபரங்களையும் வெளி யிடுவது அரசின் பொறுப்பு ஆகும். அத் துடன் உயிரிழந்தவர்களுடைய இறப்புச் சான்றிதழ்கள் காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும். இச் சான்றிதழ்கள் அவர்களின் உறவினர்களுக்கு மேற்படி கொடுப்பனவுக ளைப் பெற்றுக் கொள்ள உதவும் என்பது டன் வங்கிக் கணக்குகளில் உள்ள காசு அடவு நகைகள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளவும் பின்னர் எழக்கூடிய பல்வேறு சட்டப் பிரச்சினைகளுக்கும் உதவும்.

ஆக்கபூர்வமாகச் சிந்தித்து செயற்பட்டு உயிரிழந்தவர்களுக்கு உரித்தான கொடுப்ப னவுகளை சட்டபூர்வமான உரிமையுடைய உறவினர்களுக்கு பெற்றுக் கொடுக்க பொறு ப்பு வாய்ந்தவர்கள் முன்வரா விட்டால் தெரிந்தே கோடிக் கணக்கான ரூபாக்களை அதே மண்ணில் போட்டு புதைத்ததிற்கு சமம் ஆகும்.

நன்றி - வீரகேசரி 23.11.2014
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates