Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மத்திய- ஊவா மாகாணங்களை ஐக்கிய நிர்வாக அலகுகளாக மாற்ற முடியுமா? - அருள் கார்க்கி

மலையக மக்கள் என்ற தேசிய இனமானது இலங்கையில் மிக முக்கிய வரலாற்று பதிவுகளை கடந்து வந்திருக்கின்றது. அண்மைய ஆய்வுகளின்படி மலையக மக்களின் சனத்தொகையானது 10 இலட்சம் என மதிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த புள்ளிவிபரத்தின் படி இந்த 10 இலட்சம் சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் ஊவா மற்றும் மத்திய மாகாணத்திலேயே வாழ்கின்றனர். 

மூலம் : இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் 2012.
இலங்கை புள்ளிவிபர மதிப்பீடு திணைக்களத்தின் இத்தரவுகளின் படி மொத்த இந்திய வம்சாவளி மலையகத்தமிழர்கள் ஊவா மற்றும் மத்திய மாகாணத்தில் 75.46% சதவீதம் நிரந்தரமாக வாழ்கின்றனர். எனவே இவ்விரு மாகாணங்களையும் மையப்படுத்தி மலையக தமிழர்களின் அரசியல், சமூக, கலாசார,பொருளாதார, பண்பாட்டு நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்விகிதாசாரத்தின் அடிப்படையில் பாதாளத்தை நோக்கிச் செல்லும் ஒரு இனத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் நிலமும் மொழியுமே ஆதாரங்கள். அந்த ஆதாரங்களைப் பற்றி இனத்தை ஸ்தீரப்படுத்துவதில் காணப்படும் விரிசல்களை அடையாளம் காண வேண்டும். குறிப்பாக, ஊவாவும் மத்தியும் நிர்வாக ரீதியாக ஐக்கியப்படுத்தப்பட வேண்டும். இதன்மூலம் பிரதிநிதித்துவ அரசியலை தக்கவைப்பதோடு, நிர்வாக ஸ்தீர தன்மையையும் இறுக்கமாக்கலாம். ஈழத்தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கையில் இணைந்த வடக்கு கிழக்கு கோட்பாடு செல்வாக்குச் செலுத்துவதையும் நிலம் சார்ந்து ஒதுக்கீடுகளைக் கோருவதையும் இங்கு உதாரணமாகக் கொள்ளலாம். 

ஆனால், இங்கு நாம் பிரஸ்தாபிப்பது அப்படியல்ல. இதை தனிநாட்டு கோரிக்கையோடு எவரும் ஒப்பிட்டு பார்த்து விடல் கூடாது. மலையக மக்களின் பிரச்சினைகள் தனித்துவமானவை என்ற அடிப்படையில் அதை ஐக்கியப்படுத்தப்பட்ட அரசியல் நிர்வாக முறை மூலம் தீர்க்க முடியுமா என்ற ஒரு தேடலின் விளைவாகவே இக்கட்டுரை வரையப்படுகிறது. 

இவ்விரு மாகாணங்களுக்கும் புறம்பாக மலையக மக்கள் கொழும்பு (3.2%), களுத்துறை (2.8%), இரத்தினபுரி (7.5%) கேகாலை (4.9%) என்றவாறான இனப்பரம்பலைக் கொண்டுள்ளனர். 

அதேபோல் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் சிறியளவில் பரந்து வாழ்கின்றனர். இவ்வனைவரையும் ஒரு புள்ளியில் குவிமையம் கொள்ளச் செய்வதற்கு உறுதியான கட்டமைப்பு ஒன்று ஊவா மற்றும் மத்திய மாகாணத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட வேண்டும். மேலோட்டமான தொடர்புகளும் சுயநல அரசியல் கலாசாரமும் மக்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கின்றன. குறிப்பாக, பிழையான அரசியல் அணுகுமுறைகளால் பிரதேசவாதமும் இளைய தலைமுறையினரிடம் விதைக்கப்பட்டிருக்கின்றது. வாக்கு அரசியலிலும் சுரண்டல் போக்குடைய தொழிற்சங்க கட்டமைப்புகளாலும் மக்களை ஐக்கியப்படுத்த முடியாது என்பது மலையக அரசியல் வரலாறு எமக்கு கற்றுத்தந்த பாடமாகும். இன்று நிலைமை இளைஞர்களை இலக்காக வைத்து நுண்ணரசியலாகவும் சலுகைகளை வழங்குவதாகவும் பரிணாமம் பெற்றிருக்கின்றது. 

ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள் இரண்டும் எவ்வாறான தொடர்புகளை சமகாலத்தில் பேணுகின்றன என்ற கருத்தியல் விமர்சன ரீதியாக நோக்கப்பட வேண்டியது. அதே போன்று காத்திரமான ஒருமைப்பாட்டுக்கு இடையூறான காரணிகளும் விவாதிக்கப்பட வேண்டும். 

அரசியல் தொழிற்சங்க உறவுகள் 
முக்கியமாக அரசியல் பிரதிநிதித்துவம் சார்ந்த இரு மாகாணங்களும் எவ்வாறான பரிமாற்றங்களை செய்கின்றன என்பது குறிப்பிட்டுக்கூற வேண்டியது அவசியம். உதாரணமாக மலையக அரசியல் கட்சிகள் பெரும்பாலும் மத்திய மாகாணத்தையே தளமாகக் கொண்டுள்ளன. வாரிசு அரசியல், குடும்ப அரசியலுக்கு பேர் போன மலையக அரசியல் வரலாற்றில் ஊவா மாகாணம் வாக்காளர்களையும் சந்தாதாரர்களையும் மட்டுமே வழங்கி வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வேட்பாளர் தெரிவு பதுளை மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்படுகிறது. இவ்விடத்தில் இனப்பரம்பல் குறைந்த மொனராகலை (0.5%) மாவட்டம் அநாதையாகவே உள்ளது. 

ஊவா மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்ட கட்சிகள் திட்டமிட்டு சிதைக்கப்பட்டும் பலவீனப்படுத்தப்பட்டும் இருக்கின்றன. குறிப்பாக மத்திய மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட கட்சிகள் மற்றும் நபர்களால் ஊவா கட்சிகள் மீது அதிகமாக ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது. அத்துடன் மத்திய மாகாண தொழிற் சங்கங்களுக்கும் ஊவா மாகாண சந்தாதாரர்களும் கணிசமாக பங்களிப்புச் செய்திருக்கின்றார்கள். இவ்வாறு ஆட்சேர்ப்பில் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்ட ஊவாவுக்கு அண்மைக்காலமாகவே அபிவிருத்திப்பணிகள் விரிவடைந்திருக்கின்றன. 

தேர்தல் காலங்களில் ஊவாவுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வேட்பாளர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றனர். இது எதேச்சதிகார அரசியலின் மற்றொரு முகம். ஊவாவில் அரசியல் ஆளுமைகளை கட்டியெழுப்ப மலையக கட்சிகள் காத்திரமான பங்களிப்பை வழங்கவில்லை என்பதும் ஊவாவில் தோன்றிய அரசியல் தலைவர்கள் நாயக பக்தி, சுயநலபோக்கு காரணமாக கட்சிகளின் தலைமைகளிடம் ஊவா மக்களுக்காக போராடவில்லை என்பதும் வெளிப்படை.

நிர்வாக உறவு

அரச நிர்வாக கட்டமைப்பில் ஊவாவும் மத்திய மாகாணமும் இரு வேறுபட்ட நிர்வாக அலகுகள். ஐந்து (05) மாவட்டங்களையும் பொதுவாக உள்ளடக்கி இப்பெரு நிலப்பரப்புக்கு இதுவரை எந்தவொரு தேசிய வேலைத்திட்டமும் பரிந்துரைக்கப்படவில்லை. இதன் பிரதான காரணம் வாக்குகளை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்திப்பணிகள் ஆகும். நுவரெலியா மாவட்ட தமிழர்களுக்கு கிடைக்கும் அபிவிருத்திகள் மொனராகலை மாவட்டத்தில் உள்ள ஒருவருக்குக் கிடைப்பதில்லை. 

தேர்தல் காலங்களில் மட்டும் பேசப்படும் மலையக தேசியம் கருத்து ரீதியாக மட்டுமே உள்ளமையும் நிலங்களை ஐக்கியப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படாமையும் இதற்குக் காரணிகள். அண்மையில் அரசியலமைப்பு திருத்தத்திற்கான முன்மொழிவுகள் வழங்கப்பட்டபோது அவை பெரும்பாலும் மத்திய மாகாணத்தை தழுவியே இருந்தமை கவனிக்கத்தக்கது. பதுளை மற்றும் மொனராகலைக்கான நிர்வாக இலகுப்படுத்தல்கள் சார்ந்த முன்மொழிவுகள் குறைவாகவே சிவில் அமைப்புகளால் முன்வைக்கப்பட்டன. 

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளை அதிகரிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. அது போன்று பதுளை மாவட்டத்திற்கும் நிர்வாக விரிவுப்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லைப் பிரதேச செயலாளர் பிரிவு சுமார் 50,000 சனத்தொகையை கொண்டது. இது போன்ற பாரிய சனத்தொகையை ஒரு பிரதேச செயலகத்தினால் நிர்வகிக்கும் போது ஏற்படும் அசாத்திய தன்மை பாரதூரமானது. எனவே இவை தொடர்பான தீர்வுக்கு கூட்டுமுயற்சிகள் அவசியம். 

கல்வி இலக்கியம் தொழில் உறவுகள் 
ஊவா மாணவர்கள் பாடசாலைக் கல்விக்காகவும் உயர்கல்விக்காகவும் மத்திய மாகாணத்தை தெரிவு செய்வது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இது ஒரு பிரச்சினையாக உருவெடுத்து ஓய்ந்திருக்கின்றது. காரணம் மத்திய மாகாணத்தில் பெரும்பாலான தமிழ் பாடசாலைகள் கல்வியில் உயர்நிலையை அடைந்திருப்பதும் ஊவா தமிழ்க்கல்வி பின்னடைந்திருப்பதுமே ஆகும். இதற்கு அரசியல் சுயநலமும் அசமந்தப்போக்குமே அடிப்படைகள். ஊவாவையும் மத்தியையும் ஒன்றிணைத்து கல்வி அபிவிருத்திகளை வகுக்க கட்டமைப்பு ஒன்று இல்லாததே இங்குள்ள இடைவெளியாகும். 

குறிப்பாக இரு மாகாணங்களிலும் உள்ள பாடசாலைகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து திட்டங்களை வகுப்பதற்கான முயற்சிகள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி, கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை,பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையம், பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழக கண்டி பிராந்திய நிலையம் மற்றும் அட்டன் கற்கை நிலையம், நுவரெலியா தொழிநுட்ப கல்லூரி போன்ற குறிப்பிடத்தக்க உயர்கல்வி / தொழிற்கல்வி நிறுவனங்களின் வகிபாகத்தை மேம்படுத்த தேசிய வேலைத்திட்டங்கள் அவசியம். அதனை இணைந்த ஊவா மத்தியை தளமாகக் கொண்டு முன்னகர்த்த வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் இருக்கின்றது. நிர்வாக வரையறைகளுக்கு அப்பாற்பட்டு விஷேட வேலைத்திட்டங்கள் மூலம் அரச அனுசரணையில் இதனைச் சாத்தியமாக்குவதே முக்கியமானது. இதற்கு மாகாண சபைகளையும் உள்ளூராட்சி சபைகளையும் முதற்கட்டமாக ஒருங்கிணைக்கலாம். அதே போன்று விகிதாசார ஒதுக்கீடுகளையும் முன்வைத்து கொள்கை ரீதியாக கூட்டமைப்புகளையும் உருவாக்குதல் சிறந்தது. 

மேலும் இலக்கிய பண்பாட்டு ரீதியாகவும் இரு மாகாணங்களையும் உள்ளடக்கி வேலைத்திட்டங்களை சாத்தியமாக்குவதும் இனத்தின் எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தைச் செலுத்தும். இவ்வாறான நகர்வுகள் மூலம் வெளிமாவட்ட மலையக மக்களும் நம்பிக்கையுடன் தமது பிரதேசத்தில் ஸ்தீரமாவதற்கு வாய்ப்பு ஏற்படும். 

கொள்கை ரீதியாக ஒன்றிணைந்த இளைஞர்கள் சிவில் அமைப்புகளாக நிறுவனமயப்படுத்தப்பட்டு விவாதிக்க வேண்டியது இதன் சாராம்சமாகும். மேலோட்டமான பார்வைகள், அரசியல் தொடர்புகள் மட்டுமே மலையக தேசியத்தை கட்டியெழுப்பி விடாது. அதற்காக அனைத்து துறைகளிலும் முயற்சிப்பதே மலையக தேசியத்தை வலுப்படுத்தும். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூக ஒருங்கிணைப்புகள் ஏற்படுத்தப்படுவது அவசியம். அது இவ்விரு மாகாணங்களையும் தழுவி அமைவது பலம்மிக்கதாகவும் சமூக அபிவிருத்தியில் தாக்கத்தைச் செலுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

இவ் யோசனை குறித்து அரசியலுக்கு அப்பாற்பட்டு புத்தி ஜீவிகளும் கொள்கை வகுப்பாளர்களும் சிந்திக்க வேண்டும்.

நன்றி - வீரகேசரி

பிரச்சினையை தீர்க்காத அரசியல் அணுகுமுறை - அருள்கார்க்கி


முதலாளித்துவ அரசியல் கட்டமைப்பில் மக்களுக்கான இடம் உழைப்பாளிகளாக மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. உழைக்கும் இனத்தினால் கிடைக்கும் அனுகூலங்களை முதலாளிகள அனுபவிப்பதோடு உழைக்கும் வர்க்கத்தை காலகாலமாக தக்கவைத்துக் கொள்ளும் ஏற்பாடுகளை உறுதியாக வடிவமைத்துக்கொள்வர். காரணம் தொழில் உலகின் இயக்கத்திற்கும் முதலாளித்துவத்தின் தொழிற்சாலைகளை இயக்குவதற்கும் மனித உழைப்புத் தேவை. அவர்களின் அன்றாட தேவைகளை முதலாளிகள் பொறுப்பு எடுத்துக்கொள்வதால் மக்கள் அவர்களில் தங்கி வாழ்வதற்கு இலகுவாக இருக்கின்றது. இலங்கைக்கு சர்வதேச அடையாளம் கொடுக்கும் மலையக பெருந்தோட்டச் சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவிலிருந்து தொழிலுக்காக மட்டும் எம்மவர்கள் இடம்பெயரவில்லை. உணவு உடை பாதுகாப்பு போன்ற அடிப்படை தேவைகளின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு அவர்களுக்கு ஒரு நிறுவன கட்டமைப்புத் தேவைப்பட்டது. அதுவே மலையக பெருந்தோட்டங்கள். 

அன்று எம்மவர்களுக்கான இருப்பிடமாக லயன்களும் பிரதான உணவுப்பொருளாக கோதுமையும் வழங்கப்பட்டன. இவற்றுக்கு மேலதிகமாக ஊழியமும் இதர தேவைகளும் தோட்ட நிர்வாகத்தினராலேயே வழங்கப்பட்டது. குறிப்பாக போர்வைக் கம்பளிக்கூட தோட்ட நிர்வாகமே வழங்கி வைத்தது. இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால் தமது தேவைகளை தாமே பூர்த்திச் செய்துக்கொள்ளும் வாய்ப்பை கம்பனிகளில் எம்மக்களுக்கு வழங்கவில்லை. அனைத்து தேவைகளுக்கும் அவர்களையே சார்ந்து சிறைப்பட்டிருக்கும் நிலையில் மக்களை வைத்திருந்தனர். 

இன்றைய நிலைமை என்னவென்றால் தொழிற்சங்க அரசியல் கட்டமைப்புகளும் பெருந்தோட்ட கம்பனிகளும் மலையக மக்களை தம்மில் தங்கியிருப்பதற்கான அனைத்து சட்டரீதியான அனுமதிகளையும் கொண்டிருக்கின்றனர். வடகிழக்கு தமிழர்களின் நிலையையும்  இங்கு நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அண்மையில் மத்திய வங்கியின் பொருளாதாரப் புள்ளி விபரங்களை எடுத்து நோக்கினால் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வறுமை நிலை உயர்வாகக் காணப்படுகின்றன. 

மாகாண அடிப்படையில் எடுத்து நோக்கும் இடத்து வடமாகாணத்தில் 7.7% சதவீதமாகவும் கிழக்கில் 7.3% சதவீதமாகவும் வறுமை தொடர்கின்றது. மலையக மக்கள் அடர்த்தியாக வாழும் மத்திய மாகாணத்தில் 5.4ம% வீதமாகவும் ஊவா மாகாணத்தில் 6.5% வீதமாகவும் சப்ரகமுவ மாகாணத்தில் 6.7% வீதமாகவும் உயர்ந்துக் காணப்படுகின்றது. மேல் (1.7%) தென் (3.1%) மாகாணங்களுடன் ஒப்பிடும்போது இது மிக உயர்வான வறுமை நிலையாகும். 
இலங்கையைப் பொருத்தவரையில் பெருந்தோட்ட கைத்தொழிலே மிகப் பாரிய தொழில் துறையாகவும் தொழிலாளர் படையைக் கொண்டதுமாகும். பெருந்தோட்ட கைத்தொழிலுக்கு என்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கூடாக இத்தொழிற்துறை அபிவிருத்திச் செய்யப்படுகின்றது. பிரதான ஏற்றுமதி உற்பத்தியாக தேயிலை காணப்படுகி;றது. எனினும் அது சார்ந்து இயங்கும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கான தேசிய பாராபட்சம் காட்டப்படுவது மேற்குறித்த புள்ளிவிபரங்களில் வெளிப்படையாக புரிந்துக்கொள்ள முடிகிறது. 

அடிப்படைத் தேவைகளுக்காக தோட்ட கம்பனிகளும் பொதுத்தேவைகளுக்காக தொழிற்சங்க அரசியல் முதலாளிகளிடமும் இருபத்தோறாம் நூற்றாண்டிலும் மலையக சமூகம் கையேந்தி நிறுத்தப்பட்டிருக்கின்றது. இது திட்டமிட்ட சிறைப்படுத்தல் நுட்பமாகும். நேரடியாக அரச நன்மைகளை எம்மவர்கள் அனுபவிக்க முடியாமல் அதனை தொழிற்சங்க அரசியல் முகவர்களுக்கு ஊடாக வழங்கி வைப்பதன் மூலம் முதலாளித்துவ கட்டமைப்பை இறுக்கமாக்கும் ஏற்பாடுகள் அன்றாடம் இடம்பெறுகின்றன. 

தமது தேவைகளுக்காக அரசியல்வாதிகளை நம்பி பாமரன் முதல் பட்டதாரி வரை வரிசையில் காத்திருக்கின்றார். அவ்வாறான நிர்ப்பந்தத்தை முதலாளித்துவ அரசியல் கட்டமைப்பு ஏற்படுத்தி வைத்திருக்கின்றது. பெருந்தோட்ட மக்களின் ஊதிய பிரச்சினை இதன் தீவிரத்தை புரிந்துக்கொள்ள சரியான ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. எவ்வாறு உழைக்கும் வர்க்கமும் இளைஞர்களும் கையாளப்பட்டார்கள் என்பதும் போராட்டங்கள் விலைப்பேசி வாங்கப்பட்டன என்பதும் இங்கு கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டியது. 

மலையக மக்களின் சம்பளப் பிரச்சினை நேற்று இன்று உருவானது அல்ல. ஒரே பிரச்சினையை காலங்காலமாக அரசியல்வாதிகள் தீர்த்து வைத்திருக்கின்றனர். அதற்கேற்றவாறு பிரச்சினைகளின் ஆயுட்காலமும் அமைந்திருப்பது அவர்களுக்கு மிக வாய்ப்பான ஒன்றே. மக்களும் அதற்கு இசைவாக்கமடைந்து வருவதையும் இங்கு அடையாளப்படுத்த வேண்டும். உதாரணமாக தோட்டப்பகுதிகளில் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரே பாதையை மீண்டும் மீண்டும் செப்பனிடும் அரசியல் நுட்பத்தை நாம் இங்கு பொருத்திப்பார்க்க வேண்டும். நிரந்தரமான முடிவை மக்களுக்கு பெற்றுத்தந்து விட்டால் அரசியல்வாதிகளின் தேவை அற்றுப்போய்விடும் என்பதால் குறுகிய கால சலுகைகளும் பிரச்சினை தீர்த்துவைக்கப்படாத நுட்பமும் அவர்களுக்கு சாதகமான தன்மையை தோற்றுவிக்கின்றன. மாற்று அரசியல் என்று முன்வருவோர் அதிகாரத்தை தக்கவைப்பதற்காக சுயநலமாக சில தீர்மானங்களை மேற்கொள்வதும் தம்மை மீட்பர்களாக காட்டிக்கொள்வதும் மலையகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. சாதாரண மக்கள் மட்டுமின்றி மலையக பட்டதாரிகளும் இலகுவில் ஏமாற்றப்படுகின்றமை விசித்திரமானது. 

இம்முறை சம்பளப் பிரச்சினையை சமூக மயப்படுத்துவதில் சிவில் சமூகமும் இளைஞர்களும் அதிகளவில் பங்களிப்புச் செய்திருந்தனர். எனினும் பிரச்சினையை அணுகுவதிலும் அதனை அடுத்த தளத்திற்கு நிலைமாற்றுவதும் சற்று சவாலான விடயமாகவே இருந்தது. சில தனிநபர்களும் குழுக்களும் தாம் யாருக்கு எதிராக போராடுகின்றோம் என்ற புரிதல் இன்றி வெறுமனே கூவினர் என்பதே உண்மை. 

பிரச்சினையின் வேரறியாமல் அதனை முழுமையாகக் களைவது சாத்தியம் இல்லை. உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து போராடுவதைக் காட்டிலும் சரியான தெளிவுடனும் அறிவார்ந்து அணுகுவது அவசியம். அரசியல்வாதிகளை கொண்டாடுவதும் சில சமயங்களில் திட்டித்தீர்ப்பதும் மறுபடியும் கொண்டாடுவதும் உழைக்கும் மக்களின் குணம். எனவே படித்தவனும் பாமரனும் தெளிவுப்படுத்தப்பட வேண்டும். அதனையே அறிவார்ந்த நுட்பம் எனக்கூறலாம். எல்லாவற்றுக்கும் மேலாக கொடும்பாவிகள் எறியூட்டப்பட்ட பல அரசியல்வாதிகளுக்கு எதிர்காலத்தில் ஆளுயர கொழுந்து மாலைகள் காத்திருப்பது காலக்கொடுமை. 

09.01.2019 சூரியகாந்தியில் பிரசுரமானது. 

மீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்

இலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது.

இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக் கொள்ளப்படுவது 1883ஆம் ஆண்டு நடந்த கொட்டாஞ்சேனைக் கலவரத்தைத் தான். அது போல இலங்கையின் முதலாவது இனக்கலவரமாகக் கொள்ளப்படுவது 1915 கண்டிக் கலவரத்தைத் தான். மேலும் இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த முதலாவது இனக்கலவரமாகக் அறியப்படுவது 1939இல் நாவலப்பிட்டியில் தொடங்கியக் கலவரத்தைத் தான்.

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சி என்பது தமிழர்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை விட பழமையானது என்று நாம் கருதமுடியும். அதன் நீட்சியை தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் இடைக்காலத்தில் தணிக்கச் செய்திருந்தது. அப்போராட்டமும் இரும்புக் கரம் கொண்டு இன அழிப்பை நடத்தி முடிக்கப்பட்டது. ஆக அது தணிக்க வைக்கப்பட்டதன் பின் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு தூசு தட்டி வெளியில் கிளப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் நீண்டகாலமாக கோலோச்சிய தமிழர் – சிங்கள பிரச்சினை என்பது இரு இனங்களுக்கு இடையிலான பிரச்சினைதான். ஆக அதனை இனப் பிரச்சினையாகத் தான் வரையறுத்தோம். பௌத்த – இந்து பிரச்சினையாக தலைதூக்கவில்லை. மேலும் சிங்கள – தமிழ் இனங்களில் சிங்கள கத்தோலிக்கர்களும் இருந்தார்கள். தமிழ் கத்தோலிக்கர்களும் இருந்தார்கள். பௌத்த – இந்து முறுகல் என்பது பெரிதாக பேசுமளவுக்கு மேலெழுந்ததில்லை. பௌத்தர்கள் இந்து மதத்தை வழிபடும் மரபைக் கொண்டிருக்கிறார்கள். பௌத்த விகாரைகள் இந்து மதக் கடவுள்களை வணங்க தனியான ஏற்பாடுகளையும் கொண்டிருக்கின்றன.

ஆனால் முஸ்லிம் சமூகத்துடனான சிங்கள பௌத்தர்களின் சமர் வெறுமனே இனத்துவ சண்டை அல்ல. இனத்தால் முஸ்லிம்களாகவும், மதத்தால் இஸ்லாமியர்களாகவும் இருக்கும் அச் சமூகத்துடனான முறுகல் என்பது இரண்டு வழியிலும் மோதலுக்கு உள்ளாபவை. முஸ்லிம்கள் இன ரீதியிலும் மத ரீதியிலும் சிங்கள பௌத்தர்களின் எதிர் தரப்பாகி விடுகிறார்கள். அதாவது முஸ்லிம்களுக்கு இது இரட்டிப்பு பிரச்சினை.

இலங்கையின் கலவரங்களை பட்டியலிடும்போது நாம் மறந்துவிட்ட ஒரு கலவரம் வரலாற்றுப் பதிவுகளில் உள்ளது அது 1870 இல் மருதானையில் தொடங்கியது. சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் அது நிகழ்ந்தது. இந்தக் கலவரத்தையே இலங்கையின் முதலாவது கலவரமாகக் கொள்பவர்களும் உள்ளார்கள். நாட்டின் பல பகுதிகளிலும் இது இடம்பெறாவிட்டாலும் கொழும்பு, பாணந்துறை பகுதிகளில் இது தாக்குதல்களையும் பதட்டத்தத்தையும் சில காலம் தக்கவைத்திருந்திருக்கிறது.

மீனாட்சியின் காதல்
சிங்கள கத்தோலிக்க இளைஞருக்கும் மீனாட்சி எனப்படும் முஸ்லிம் பெண்ணுக்கும் இடையிலான காதலே இந்த பிரச்சினையின் மையம்.

14 வயதுடைய மீனாட்சியின் குடும்பம் முஸ்லிம் மதத்துக்கு மாறிய குடும்பம். மீனாட்சி ஒரு விதவைத் தாய். மொரட்டுவை கராவ சமூகத்தைச் சேர்ந்த  24 வயதுடைய செல்லஞ்சி அப்பு எனும் கத்தோலிக்க இளைஞன் மீனாட்சியின் வீட்டுக்கு வீட்டு தச்சுத் தொழிலுக்காக வந்திருந்தார்.  செல்லஞ்சி அப்பு மீனாட்சியுடன் காதல்கொண்டு கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார். மீனாட்சியின் தாயார் தனது மகளை மீட்பதற்கு முஸ்லிம் சமூக பெரியவர்களை அணுகியிருக்கிறார். மீனாட்சியை மீட்டெடுத்து வருவதற்காக அவர்கள் தங்கியிருந்த மொரட்டுவ பிரதேசத்துக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழு கம்பு பொல்லுகளுடன் சென்றது.

அங்கு சென்ற அந்த கும்பலுக்கும் மொரட்டுவ பிரதேசத்து சிங்களவர்களுக்கும் இடையில் கலகம் மூண்டு இரு தரப்பிலும் பலர் பலத்த காயத்துக்கு உள்ளாகியுள்ளனர். மொரட்டுவக்கு போன முஸ்லிம் குழு காயங்களுடன் ஓடி தப்பித்து வந்துவிட்டது. வந்ததும் அவர்கள் மருதானை பள்ளிவாசலின் ஆலோசனையின்படி தமது பெண்ணை மீட்கச் சென்ற இடத்தில் தம்மை காயப்படுத்தியதாக பொலிசில் மீனாட்சியின் தாயார் சார்பில் முறைப்பாட்டை செய்தனர். அதன்படி ஆட்கடத்தல், கொள்ளையடித்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற பிடியாணை விடுக்கப்பட்டது.

பொலிஸ் மா அதிபர் ஒரு பொலிஸ் குழுவை அனுப்பினார். செல்லஞ்சி அப்புவின் உறவினர்களையும், ஊரார்களையும் சந்தித்து எடுத்துச் சொல்லி அந்த சோடியை கைது செய்து கொழும்புக்கு கொண்டுவந்து மருதானை பொலிஸ் தலைமையகத்தில் தனித்தியாக தடுத்து வைத்தனர். மீனாட்சியின் தாயாரும் மாமனாரும் வந்து பார்த்தபோதும் அவர்களுடன் போக மறுத்துவிட்டார் மீனாட்சி. இவர்களின் மீது விசாரணையும் நீதிமன்றத்தில் பல நாட்கள் தொடர்ந்தது. ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்த மீனாட்சியின் தாயார் மீனாட்சியின் உண்மை வயதைத் தெரிவித்ததும் நீதிமன்றம் மீனாட்சியை விடுவித்தத்துடன் சுதந்திரமாக மீனாட்சி முடிவெடுக்க முடியும் என்று அறிவித்தது. முஸ்லிம் சட்டத்தின் பிரகாரம் 14வயது பெண்ணைத் திருமணம் முடித்தது சட்டபூர்வமானதே என்று தீர்ப்பளித்தது.

மருதானை கலகம்
இப்போது மருதானை பொலிஸ் நிலையத்துக்கு நேரெதிரில் உள்ள மருதானை சாஹிரா கல்லூரி தான் அப்போது மருதானை பள்ளிவாசலாக இருந்தது. சாஹிரா கல்லூரி 1892இல் தான் ஆரம்பிக்கப்பட்டது. 1867ஆம் ஆண்டு தான் இலங்கையின் பொலிஸ் தலைமையகம் மருதானை மருதானையில் உருவாக்கப்பட்டது.

நாள் 28.02.1870. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 200-300 பேர் மருதானை பொலிஸ் தலைமையகத்தின் வாசலில் மீனாட்சியை தம்மிடம் ஒப்படைப்பார்கள் என்று குவிந்தனர். அன்றைய பொலிஸ் மா அதிபர் ரொபர்ட் கெம்பல் (William Robert Campbell – இலங்கையின் முதலாவது பொலிஸ் மா அதிபர்) வாசலுக்குச் சென்று சத்தமிட வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார். பிற்பகல் 3 மணியளவில் கூட்டம் மேலும் அதிகரித்ததுடன் சத்தமும் கூடியது. அமைதியற்ற சூழல் அதிகரித்தது. மீண்டும் கெம்பல் வாசலுக்குச் சென்று இப்படிப்பட்ட சூழலில் பெண்ணை வெளியில் விட முடியாது என்பதை அறிவுறுத்தினார். இதனால் குழப்பமடைந்த கூட்டத்திலிருந்து கற்கள் சரமாரியாக வந்து விழுந்தன. அதில் பொலிஸ் மா அதிபரின் முகமும் காயத்துக்கு உள்ளானது. பல பொலிசார் இரத்தக் காயங்களுடன் அதனைக் கட்டுப்படுத்த முயற்சித்தார்கள். பொலிஸ் நிலையமும் சேதத்துக்கு உள்ளானது.

பொலிஸ் மா அதிபர் கலகத்தை அடக்குவதற்காக ஏராளமான பொலிசாருடன் கட்டுப்படுத்த முயற்சித்தும் கூட பல பொலிசார் காயங்களுக்கு உள்ளானார்கள். அதுபோல தாக்குதல் நடத்திய 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் மீது கடும் தடியடிப் பிரயோகம் நடத்தி காயத்துக்குள்ளாக்கினர். இந்தத் தாக்குதலுக்கு அப்போதைய அரசாங்க சபை உறுப்பினராக இருந்த அப்துல் ரஹ்மானின் சகோதரர் அப்துல் அசீஸ் தலைமை தாங்கியிருப்பதை ரொபர்ட் கெம்பல் பதிவு செய்திருக்கிறார். அப்துல் அசீஸ் ஒரு கையில் கல்லும் மறு கையில் குர் ஆனும் தாங்கியபடி கலகத்தில் ஈடுபட்டார் என்று கெம்பல் அறிக்கையில் குறிப்பிட்டார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தேடி பொலிசார் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்தவற்றை சேதப்படுத்தினார்கள். அங்கு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பள்ளிவாசலும் சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டது. அதன் பின்னர் பாதுகாப்பைப் பலப்படுத்த இராணுவப் படைப் பிரிவும் இறக்கப்பட்டது.

இதற்கிடையில் கெம்பல் 73வது படைப்பிரிவை அவசரமாக உதவிக்கு அழைத்தார். முஸ்லிம்களின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாக ஒரு வதந்தி காட்டுத் தீ போல் பரவிக்கொண்டிருந்தது. பெரும் கலவரமாக உருவாகக் கூடிய சாத்தியமிருந்ததால் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். பொலிசாரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுப்பதற்காக அன்றைய மகா முதலி டயஸ் முதலியார், அன்ரூ பெர்னாண்டோ முதலியார், சமாதான அதிகாரி கோமஸ் உள்ளிட்ட பிரமுகர்களும் ஆதரவாளர்களுடன் களத்தில் இறங்கினார்கள். அருகில் குடியிருந்த மக்களும் கூடினர். பொலிசார் இந்த கலகத்தை அடக்க தடிகள், பொல்லுகள், வாள்களைக் கூட பயன்படுத்தியிருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டது. 30 பேர் குற்றவாளிகளென தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளானார்கள். அது போல பள்ளிவாசலில் இருந்த புனித குர் ஆன் சேதப்படுத்தப்பட்டதாக பொலிசாருக்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பினரால் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அது மீண்டும் மேன்முறையீடு செய்யப்பட்ட போதும் அந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

கலகத்தில் ஐரோப்பியர்
இந்த கலகம் குறித்த விசாரணை அறிக்கையை பொலிஸ் மா அதிபர் கெம்பல் 7.05.1870 அன்று காலனித்துவ செயலாருக்கு அனுப்பி வைத்தார். இந்த ரவுடிக் கும்பலின் உருவாக்கத்தின் பின்னால் ஐரோப்பிய தீய சக்திகளும் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஐரோப்பிய முஸ்லிம்கள் காணப்பட்டார்கள். அதில் ஒருவர் ஜெர்மனைச் சேர்ந்த யூதர். ஏனைய ஒருவரும் தீயவர்கள். வயதான ஹோகன் என்பவர் இராணியின் (Majesty's XV Regiment) படையில் இருந்து பின்னர் இலங்கை பொலிசில் கான்ஸ்டபிளாக இணைந்துகொண்டு பின்னர் நீக்கப்பட்டவர். அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் முஸ்லிமாக மாறியிருக்கிறார்.
ஒருவர் முஸ்லிமாக மாறியிருந்த ஸ்கொட்லாண்டைச் சேர்ந்த ஜோன் மெக்டோனால்ட் என்கிற தடித்த இளைஞர். என்னைக் காயப்படுத்தியது இவர்கள் தான்.”
இந்தச் சம்பவத்தின் விளைவாகத் தான் இலங்கையில் முதல் தடவையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அதே 1870ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கலகத்தைக் கட்டுப்படுத்துவதில் பிரதான பங்கு வகித்த இலங்கையின் முதலாவது பொலிஸ் மா அதிபரான ரொபர்ட் கெம்பலின் பெயரை பொரல்லையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் உள்ள பெரிய மைதானத்துக்கு சூட்டினார்கள். கெம்பல் பார்க் என்று இன்றும் அழைக்கப்படும் கொழும்பிலுள்ள பிரபலமான மைதானம் அது.

மரக்கல ஹட்டன
இந்த சம்பவத்தைப் பற்றிய ஒரு முக்கிய நூல் 1891இல் “மரக்கல ஹட்டன” என்கிற பெயரில் ஒரு நூல் 72 கவிதைகளைக் கொண்டதாக செய்யுள் வடிவில் சிங்களத்தில் வெளியாகியிருக்கிறது. எழுதியவரின் பெயர் உறுதியாக கூற முடியாதபோதும் அதை வெளியிட்டது வீ.கரோலிஸ் அப்புஹாமி நிறுவனம் என்கிற குறிப்பு மட்டும் காணக்கிடைக்கிறது. சிங்கள பண்பாட்டு இலக்கியங்களை வரிசைப்படுத்தும்போது இந்த “மரக்கல ஹட்டன” என்கிற நூலும் அதில் ஒன்றாக முக்கியப்படுத்துவப்படுத்தப்படுகிறது.

சமீபத்தில் “மரக்கல ஹட்டன” என்கிற தலைப்பில் மீண்டும் நிமேஷ திவங்கர செனவிபால என்பவர் ஒரு நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். ஆனால் அந்த நூலில் உள்ள விபரங்களை வேறு பல இடங்களில் ஒப்பிட்டு பார்க்கும் போது பல தகவல் பிழைகளைக் காண முடிகிறது. அது மட்டுமன்றி மோசமான முஸ்லிம் வெறுப்புணர்ச்சியைக் கக்குவதாக அது காணப்படுகிறது. நிமேஷ எழுதியிருக்கும் ஏனைய நூல்களைப் பார்க்கும் போது அப்படி அவர் எழுதியிருப்பதில் ஆச்சரியமும் இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு இடத்தில் இப்படி தொடங்குகிறது...

“தமிழ் சமூகத்தில் சாதிப் பிரச்சினையால் பீடிக்கப்பட்ட சக்கிலி சாதி என்கிற குறைந்த சாதியைச் சேர்ந்த தமிழர்கள் மத மாற்றம் செய்து கொண்டதன் மூலம் தான் இலங்கையின் முஸ்லிம் இனம் பெருக்கமடைந்தது” என்கிறார்.

இந்தக் கருத்தை ஏற்கனவே சேர் பொன் இராமநாதன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததும் இந்த இடத்தில் நினைவுகூறத் தக்கது. “இலங்கைச் சோனகர் இன வரலாறு” என்கிற தலைப்பில் 1888 ஆம் ஆண்டு ஒரு ஆய்வுக் கட்டுரையை அவர் ராஜரீக  ஆசிய கழகம் - இலங்கைக் கிளையால் (Royal Asiatic society - CEYLON BRANCH) வெளியான சஞ்சிகையில் எழுதியிருந்தார். அதில் அவர்; ஆரம்பத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினருடனான ஒன்று கலப்பின் மூலமே முஸ்லிம் இனம் பெருகியதாக கூறிய கருத்து பெரும் சர்ச்சைகளுக்கும் விவாதத்துக்குள் உள்ளாகியிருந்தது. அதற்கு அப்போதைய ‘முஸ்லிம் காடியன்’ ஆசிரியர் ஐ. எல். ஏம். அப்துல் அஸீஸ் ஒரு விரிவான பதிலை வெளியிட்டிருந்தார்.

இந்தக் கலகம் முஸ்லிம்களுக்கும் சிங்கள கத்தோலிக்கர்களுக்கும் இடையில் தொடங்கப்பட்டாலும் கூட பின்னர் பொலிசாருக்கும் முஸ்லிம் சமூகத்தவருக்குமாக பரிணமித்தது. கொலைகள் பதிவாகவில்லை ஆனால் பலரின் மீதான படுகாய சம்பவங்கள் பதிவானது. பொலிசாருடன் நடந்த மோதல்களால் வரலாற்று அரச ஆவணங்களிலும் இடம்பெற்றது. கவிதை வடிவில் சிங்கள இலக்கிய நூலாக பதிவானதால் சிங்கள சமூகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான முதல் இலக்கிய வடிவமாக பதிவு பெற்றது. 1915ஆம் ஆண்டு கண்டியில் தொடங்கிய சிங்கள முஸ்லிம் கலவரம்; காலப்போக்கில் உண்மைகள் எப்படி திரிக்கப்பட்டு முஸ்லிம்களின் மீது பழி போடப்பட்டதோ அது போல இந்த கலகமும்  பிற்காலத்தில் மேலும் திரிபுபடுத்தப்பட்டு முஸ்லிம் வெறுப்புக்கு பயன்பட்டது.மலையகத்தின் உயர்கல்வியில் அரசியல் (அழகப்பா முதல் அல்முஸ்தப்பா வரை) - அருள்கார்க்கி

பாடசாலைக் கல்வியை தொடர்ந்து மாணவர்கள் நிறுவனமயப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் தமது கல்வியை தொடர்வது வழமை. மலையகத்தைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழகங்களுக்கும்இ கல்வியல் கல்லூரிகளுக்கும் உள்வாங்கப்படும் மாணவர்களுக்கு புறம்பாக பெருந்தொகையானவர்கள் தனியார் உயர்கல்வி நிறுவனங்களையும்இ தொழிற்கல்வியையும் தெரிவு செய்கின்றனர். குறிப்பாக பொருளாதார காரணங்களை மையமாக கொண்டு இன்று பெரும்பாலான  மாணவர்கள் தொலைக்கல்வி மற்றும் பகுதி நேர பாடநெறிகளை பின்பற்றுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதனை ஒரு வரையறைக்குள் கொண்டுவருவதும் புள்ளிவிபரமிடுவதும் சற்று நடைமுறை சார்ந்து சவாலான விடயமாகும். காரணம் எவ்வித நிறுவன கட்டமைப்பிற்குள்ளும் அடங்காத உயர்கல்வியை வழங்கும் கடைகள் இன்று மலிந்து காணப்படுகின்றது.  

முன்னர் தேசிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படும் மாணவர்கள் தவிர்ந்த ஏனைய உயர்தரம் சித்திபெற்றோரின் நிலை கேள்விக்குறியாக இருந்தமையும் உண்டு. ஆனால் சமகாலத்தில் போட்டித்தன்மையும் மாணவர்களின் கற்றல் ஆர்வமும் அதிகரித்ததன் காரணமாக அவ்வார்வத்தைக் காசாக்குவதற்கு தனியார் பல்கலைக்கழகங்கள் வாய்ப்புகளை வழங்கின. 

அரச பல்கலைக்கழகங்களின் வரையறைஇ பௌதீக வளங்கள்இ ஆளணி மற்றும் கற்கை நெறிகளை அடிப்படையாக வைத்து நோக்கும் போது நாட்டின் பட்டதாரிகளின் தேவையை ஈடு வெய்வாற்கு அரச பல்கலைக்கழகங்களுக்கு புறம்பாக தனியார் பல்கலைக்கழகங்களின் அவசியம் ஏற்பட்டது. இந்நோக்கத்திற்காக நாட்டினுள் நுழைந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் தாக்கம் அண்மைக்காலமாக அதிகம் பேசப்படுகின்றது. கடந்த காலங்களில் மலையகத்திலும் இந்திய பல்கலைக்கழகங்கள் பட்டப்படிப்புகளை வழங்கின. குறிப்பாக அழகப்பா பல்கலைக்கழகம்இ மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்இ இந்திரா காந்தி பல்கலைக்கழகம்  என்பன முக்கியமானவைகளாகும். இப்பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளை தொடர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் இன்று ஆசிரியர் நியமனங்கள் பெற்றுள்ளனர். 

தேசிய பல்கலைக்கழகங்களுடன் தொடர்பான புள்ளிவிபரங்களை ஆய்வு செய்யும் போது சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். அதில் மலையக மாணவர்களின் பங்களிப்பு 1.5மூ சதவீதமாக உள்ளது. இவ்வாறான நிலையில் இந்திய பல்கலைக்கழகங்கள் ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்பட்டன. குறிப்பாக ரூ.60000.00 கட்டணத்துடன் ஒரு பட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில் பெரும்பாலான மலையக மாணவர்கள் இந்தியப் பல்கலைகழகங்களை நாடினர். 

ஆரம்பத்தில் இப்பல்கலைக்கழகங்களின் தரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டாலும்இ பின்னர் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி பெற்றவை என அறிவிக்கப்பட்டது. மலையக அரசியல்வாதிகளும் இது தொடர்பாக ஊடக அறிக்கைகளை வெளியிட்டு தமது பங்களிப்பை சமூகத்துக்கு வழங்கினர். எனினும் நடைமுறையில் அவற்றின் கற்கைநெறிகள்இ கற்பித்தல் முறைகள்இ பரீட்சை நடைமுறைகள் தொடர்பாக விமர்சனங்கள் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டன. 

அரச பாடசாலை ஆசிரியர்கள் விரிவுரைகளை நகரங்களில் தனியார் வகுப்புகளில் நடத்தினர். பரீட்சைகளும் அவ்வாறே நடத்தப்பட்டன. எவ்வாறாயினும் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்கள் ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக் கொண்டனர். இவ்விடத்தில் அரசியல்வாதிகள் முக்கியப்பங்கினை நியமனங்களின் போது வழங்கினர். அரசியல் தலையீடுகள் மூலம் நியமனம் பெறும் பாடசாலைகள் தீர்மானிக்கப்பட்டன. 

தேசிய பல்கலைக்கழகங்களில் சுமார் 03 வருடங்கள் என்ற காலப்பகுதியில் 06 செமஸ்டர்கள் என்று சொல்லப்படும் கற்கை உபபிரிவுகள் இந்திய பல்கலைகழகங்களில் பெறும் 02 இரண்டே வருடங்களில் முடிக்கப்பட்டன். எது எவ்வாறோ எமது சமூகத்துக்கு ஒரு நன்மை கிடைக்கிறது என்று அனேகர் இது தொடர்பாக மறை விமர்சனங்களை முன்வைக்கவில்லை. எனினும் ஆசிரியர் நியமனங்களைத் தவிர்ந்துஇ அபிவிருத்திஇ பொது நிர்வாகம் போன்ற எவ்வித ஏனைய துறைகளுக்கும் அழகப்பா பட்டதாரிகள் உள்வாங்கப்படவில்லை. இது பெரும்பான்மை இனத்தின் குறுகிய சிந்தனையையும் சிறுபான்மையினர் மீதான ஏற்றத்தாழ்வையும் காட்டுகின்றது. 

அரச பல்கலைக்கழகங்களுக்கு இணையான பட்டப்படிப்பு எனின் அனைத்து துறைகளுக்கும் செல்வதற்கும் தகுதி இருக்க வேண்டும் அல்லவா. எனினும் இவ்வாறு நியமனம் பெற்றுக் கொண்டவர்கள் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களாகவே உள்ளமை சற்று வருத்தமானது. எனினும் அவர்கள் இளங்கலைமானி (டீ.யு) விஞ்ஞானமானி (டீ.ளஉ)இ வர்த்தக முகாமைத்துவமானி (டீ.உழஅ) கல்விமானி (டீ.நுன) போன்ற உயரிய அடைவுகளை கொண்டவர்கள் என்பது அபத்தமானது. 

மலையகத்துக்கு மட்டுமே இவ்வாறான கேலிக்கூத்துகள் அரசியல்வாதிகளால் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. தேசிய கல்வித்திட்டத்தின் தராதரத்துக்கு ஈடுகொடுக்க கூடிய பாடசாலை கல்வியை தரமுயர்த்துவதை விட்டுவிட்டு தரம் குறைந்த சலுகை அடிப்படையிலான உயர்கல்வி வாய்ப்புகளை கேட்டு பெறுகின்றனர். இதன் மூலம் சில வரையரைகளை எம்மவர்களுக்கு கடக்கமுடிவதில்லை. தமிழர்களின் கல்வியை திட்டமிட்டே தரம் குன்றியதாக வைத்திருப்பதன் மூலம் ஏனைய இனங்களுக்கு கீழேயே மலையக சமூகத்தை வைத்து அடக்கியாளும் நுண்ணரசியல் இது என்பது மலையக தலைமைகளுக்கு நன்கு தெரியும். அவர்களின் எதிர்பார்ப்பும் அதுதான். 

அண்மையில் ஊவாமாகாணத்தில் அரசியல்வாதி ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட ஈரானிய சர்வதேசப் பல்கலைகழகமான அல் - முஸ்தபா பல்கலைகழகம் தொடர்பான சலசலப்பு சூடுபிடித்திருந்தது. சுமார் 500 மாணவர்களின் பட்டப்படிப்பு நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபடுத்தப்பட்டு பிரிதொரு அரசியல்வாதியால் தேசத்துரோகத்துக்கு எதிராக முன்னெடுப்புகள் இடம்பெற்றது. இங்கு அரசியல்வாதிகளின் வாக்குச்சேகரிப்பில் 500 மாணவர்கள் பலிகடாவாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதே நிதர்சனம். 

அல்-முஸ்தபா பல்கலைக்கழகமானது ஒரு சர்வதேச பல்கலைக்கழகமாகும். ஈரான் நாட்டை தலைமையகமாகக் கொண்டு பல்வேறு நாடுகளின் பட்டப்படிப்புகளை வழங்கிவருகின்றது. இலங்கையில் இலவசமாக 500 மாணவர்களுக்கு பட்டப்படிப்பை வழங்க முன்வந்ததையும் அவ்வாறான ஒரு நடைமுறையே. எனினும் எந்த ஒரு பல்கலைகழகமும் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு (ளழஎநசநபைn) உட்பட்டே இயங்க வேண்டும். அடிப்படைவாதத்தையோ அல்லது பிரிவினைவாதத்தையோ வளர்க்கும் வகையிலும் அல்லது குறிப்பிட்ட மதசார்பான கருத்துக்களை திணிப்பதையோ செய்யமுடியாது. 

சாதாரணமாக ஒரு உணவுப்பண்டம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டாலே அதன் தரம்இ விலைஇ பெறுமானங்கள் என்பன பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் நிர்ணயம் செய்யப்படுகின்றன. எனவே ஒரு பல்கலைக்கழகம் தன்னிச்சையாக நாட்டினுள் வரமுடியுமா? பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனைத்து பொறுப்புகளையும் ஏற்க வேண்டும். 

ஒரு அரசியல்வாதி முன்மொழிகின்ற காரணத்தினால் மாணவர்கள் குழு நம்பிக்கையுடன் இப்பல்கலைக்கழகத்தில் இணைந்தனர். அரச பாடசாலை அதிபர்இ ஆசிரியர்கள்இ விரிவுரைகளை நடத்தினர். எனவே இது நிச்சயம் அரச அங்கீகாரம் பெற்றது என அனைவரும் நம்புவது சரளமானதே. எனினும் இதனை பிரிதொருவர் கேள்விக்கு உட்படுத்தி அங்கீகாரம் இல்லை என நிராகரிக்கும்போது சமூகம் முட்டாளாக்கப்படுகின்றது. தம்மை புத்திசாலிகளாக காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள் தமக்கு இடையிலான போட்டிகளை முன்வைப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். அதற்கு அவர்கள் தமக்குச் சார்பாக ஆதாரங்கள் என சில தரவுகளையும் முன்வைக்கின்றனர். 

அல்-முஸ்தபா பல்கலைக்கழகம் எவ்வாறான நடைமுறைகளுக்கு உட்பட்டு வந்தது அல்லது எவ்வாறு சட்டவிரோதமானது என்றோ அரசியல்வாதிகள் விளக்கம் கொடுக்க தேவையில்லை. அது அரச நிர்வாக கட்டமைப்பின் அடிப்படையில் மானிய ஆணைக்குழு தான் விளக்கமளிக்க வேண்டும். அது நியதிகளின் படி கொண்டுவரப்பட்டது எனின் கொண்டு வந்த அரசியல்வாதி வீதி வீதியாக விளக்கமளிக்க தேவையில்லை. அது சட்டவிரோதமானது எனின் அதனை குறிப்பிடும் அரசியல்வாதி மானிய ஆணைக்குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாகாண சபையிலும் பிரேரணை கொண்டு வருவதும்இ மாணவர்கள் சூழ செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துவதும் மக்களை ஏமாற்றுவதற்கு என்று தெளிவாக புலப்படுகிறது. மலையகத்துக்கு மட்டுமே இவ்வாறான சாபக்கேடுகள் இடம்பெறுகின்றன. தேயிலை தொழில்துறை தொழிலாளர்கள் குறைவடைவதால் இப்போது மாணவர்களின் மீது கைவைத்துள்ளனர் அரசியல்வாதிகள். இவை எதிர்கால அரசியல் இருப்புக்களின் அத்திவாரங்கள். 
மானிய ஆணைக்குழு கட்டுப்பாடுகளையும் ஒழுக்கக்கோவைகளையும்இ தொடர் கண்காணிப்புகளையும் வெளிநாட்டு பல்கலைகழகங்கள் மீது செலுத்தியிருக்க வேண்டும். அது அவ்வாறு இடம்பெற்றிருந்தால் இம்மாணவர்கள் நடுவீதியல் நிற்கவோஇ அரசியல்வாதிகளை நம்பியிருக்கவோ தேவையில்லை. ஆனால் இது மலையகத்துக்கான விடயமாகையால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளமை புலனாகின்றது.

உண்மையில் அரசியல் நோக்கங்களுக்காக சமூகத்தை கூறுபோடுவதை எவ்வாறும் ஏற்க முடியாது. மாணவர்கள் தெளிவாக இருக்க வேண்டும். சிவில் அமைப்புகளும் கல்விச்சமூகமும் இவ்வாறான விடயங்களை அவதானிப்பு செய்ய வேண்டும். மலையகத்தைப் பொருத்தவரை இலவசமாக தகரம் கொடுக்கப்படுவதையும் பட்டம் கொடுக்கப்படுவதையும் சமாந்தரமாகவே நோக்கவேண்டியுள்ளது. 

"ஸ்ரீலங்கா இராணுவமே எங்கள் எதிரி! தமிழீழமே எங்கள் இலக்கு" புளொட் மாணிக்கதாசனின் இறுதிப் பேட்டி


மாணிக்கதாசன் 02.09.1999 அன்று கொல்லப்படுவதற்கு முன்  எடுக்கப்பட்ட இறுதி நேர்காணல் இது. நான் தமிழீழ மக்கள் கட்சியில் தலைமறைவுப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம் அது. மாணிக்கதாசன் உள்ளிட்ட புளொட் தலைவர்களால் எமது அமைப்பின் தலைமை உயிரச்சுறுத்தலை எதிகொண்டிருந்த காலம். மாணிக்கதாசன் அரசோடு இணைந்து பல தமிழ் இளைஞர்களை காணாமல் ஆக்கிக்கொண்டிருந்த காலம். மாணிக்கதாசன் மீது பொதுவாக இருந்த பயமும் முன்னெச்சரிக்கையும் எனக்கும் இருந்தது. அரசுடன் சேர்ந்திருந்த நிலையிலும் “தமிழீழமே எமது இலக்கு” என்று கொடுத்த பேட்டி பலரையும் கவனிக்கச் செய்தது. இந்தப் பேட்டிக்கு சரியாக 20 வயது. - என்.சரவணன் (ஆனந்தன் என்கிற பெயரில் மே 1999 - சரிநிகரில் வெளிவந்தது.)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் துறைப் பொறுப்பாளராக மாணிக்க தாசன் சொல்லப்படுகின்ற போதும் இன்று அவ்வியக்கத்தின் முழுக் கட்டுப்பாடும் இவரின் கீழேயே இருப்பது இரகசியமல்ல. புளொட் இயக்கம் குறித்த பல்வேறு விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பளின்றன, அடிப்படையில் அவ்விமர்சனங்களின் சாராம்;சம். எதிரியோடு சேர்ந்து செயற்படுவது, மற்றும் மக்களுக்கு துரோமிழைத்து வருவது, இவ்விமர்சனங்கள் குறித்து சம்பவங்களாக வினாக்களைத் தொடுக்காது அடிப்படையான அரசியல் கேள்விகளாகவே இந்த பேட்டி தயாரிக்கப்பட்டது. கேள்விகளைக் கேட்பது எங்களின் கடமை. அதற்கு பதில் தருவது அவரின் பொறுப்பு. மற்றவை வாசகர்களின் சுதந்திரம்.
கழகம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து தற்போதைய அதன் நடவடிக்கைகள் தலைகீழாக மாறி இருப்பதாகவும், அது இன்று துரோகக் கும்பலாக ஆகியிருக்கிறது என்றும் எழுந்துள்ளற பரவலான குற்றச்சாட்டுக்  குறித்து உத்தியோக பூர்வமாக என்ன கூறுவீர்கள்?

எமது அரசியல் மற்றும் இராணுவச்  செயற்பாட்டில் எதை  எடுத்துக் கொண்டாலும் நாங்கள் அரசோடு இணைந்தது கிடையாது. ஒரு பரந்த வெகுஜன அமைப்பாக ஒருகாலத்தில் நாங்கள் இருந்தது உண்மை தான். தவிர்க்க முடியாமல் ஆயுதம் தரித்துப்  போராட நிர்ப்பந்திக்கப்பட்டோம். எமது ஆயுதமயமாக்கலில்  ஏற்பட்ட தாமதம் புலிகளுக்கு வெற்றியை ஏற்படுத்தி விட்டது. போராட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு இயக்கமும் பலம்பெற்று முன்னுக்கு வந்த வரலாற்றைக் காண்கின்றோம். புளொட் ஒரு கட்டத்திலும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஒரு கட்டத்திலும்  இன்னொரு கட்டத்தில் டெலோ என்றும் ஏன் ஒரு கட்டத்தில் புலியுமாக இந்த வகையான செல்வாக்கு, ஆதரவு பெறுதல் தளப்பிரதேசங்களை கொண்டிருத்தல் போன்றவற்றைக் காணலாம். இந்தக் காலகட்டத்தில் புலிகள் தங்களின் பாசிசத்தைப் பயன்படுத்தி ஏனைய இயக்கங்களை நசுக்கி தம்மைத் தாமே தலைமைக்குக்  கொண்டு வந்து விட்டனர்.  சுழற்சிமுறையில் இந்தத்  தலைமைகள் மாறிய நிலை போய் ஒரு கட்டத்தில் புலிகள் தம்மை நிரந்தரமாக்கிக் கொண்டனர்.    இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மக்கள் ஆதரவும் இருக்கத் தான் செய்யும். ஆனால் அதன் அர்த்தம் மக்களின் உண்மையான தலைமை அது தான்  என்பதோ அல்லது அவர்களின் வழிமுறை தான் சரியென்பதோ ஏனைய இயக்கங்கள் தவறானவை, தமிழின விடுதலைக்கு எதிரானவை  என்பதோ அல்ல.

எமது போராட்டத்தைப் பொறுத்த வரை ஆயுதந் தாங்கிய எதிர்ப்புகளை போர் என்றும் அரசியல் ரீதியான போராட்டத்தை போராட்டம் என்றும் தான் நாங்கள் அழைக்கிறோம். இன்றைய நிலையில் பாசிசத்தின் உச்சக் கட்டத்துக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும்  நிலையில், புலிகளும் நிலை கொண்டுள்ள பகுதியில் இருந்து கொண்டு புலி உறுப்பினர்கள் எவரையும் விமர்சிக்க முடியாத சூழலில் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் மாறாக தென்னிலங்கையில் ஆசை தீருமட்டும் ஜனாதிபதியையோ ஏனைய அரசியல் வாதிகளையோ கடுமையா கத் தாக்கி விமர்சிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எந்த வழிமுறைக்கூடாக வடகிழக்குப் பிரதேசத்தில் நாங்கள் காலூன்றி நிற்க முடியுமோ அந்த வழிமுறையைப் பாவித்தே நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கிறோம்.

இந்திய இராணுவம் இருக்கும் போது புலிகள் அரசுடன் நெருக்கமாக இருந்த போது நாங்கள் கொழும்பில் கூட சுதந்திரமாக உலாவ முடியாத நிலையில் தான் இருந்தோம். எமது உறுப்பினர்கள் வத்தளையில் ரயர் போட்டு புலிகளால் எரிக்கப்பட்டனர். எம்மில் பலர் இந்தியாவை நோக்கிப் பின்வாங்க நேரிட்டது. ஆனால் என்றோ ஒரு நாள் இந்தியாவும் புலிகளும் மோதிக் கொள்வார்கள் என்பதை உணர்ந்தோம். கிழக்கும் கிழக்கும், அல்லது மைனசும் மைனசும் ஒன்று சேருவதில்லை அல்லவா? இரு தரப்பும் மோதல் ஏற்பட்ட போது நாங்கள் இராணுவ உயர் அதிகாரி களுடன் தொடர்பு கொண்டு பேசி திரும்பி வந்து எமது பிரதேசங்களில் செயற்பட ஆரம்பித்தோம்.

அதிலிருந்து எமக்கான தனித்து வமான போக்கைத் தான் கடைப் பிடித்து வருகிறோம். இன்று அரசும் புலிகளை எதிர்க்கிறது. நாங்களும் புலிகளை எதிர்க்கிறோம். ஆனால் இவை இரண்டுக்குமிடையில் அடிப் படையில் வித்தியாசம் உண்டு. புலிகள் எங்களை எதிர்ப்பதால் தான் நாங்களும் எதிர்த்து நிற்க வேண்டி யேற்பட்டுள்ளது. எனவே தான் வெளிப் பார்வைக்கு தோன்றுவதை வைத்துக் கொண்டு நாங்கள் படையுடன் சேர்ந்து செயற்படுகிறோம் என்று கூறுவது பிரச்சார ரீதியில் எவருக்கும் வசதியாக இருக்கும். ஆனால் அரசுடன் எவ்வளவு முரண்பட்டு செயற்படுகிறோம் என்பது வெளிக் கொணரப் படுவதில்லை. நாங்கள் எத்தனையோ தடவைகள் பொலிசுக்கு அடித்திருக்;கி றோம். இராணுவத்துக்கு அடித்திருக்கி றோம். அப்படி அடித்த எத்தனையோ எங்களின் உறுப்பினர்கள் இன்னமும் சிறைகளில் இருந்து வருகிறார்கள். புலிகளின் செய்திகளுக்கு முக்கியத்து வம் கொடுக்கும் தொடர்பூடகங்கள் எங்களின் இந்தச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அரசாங்கத்துக்கு எதிராக எத்த னையோ போராட்டங்களை முன்னெ டுத்திருக்கிறோம். 1952க்குப் பின்னர் பாராளுமன்றத்துக்கு முன்னால் இருந்து உண்ணாவிரதம் மேற் கொண்ட கட்சி நாங்கள் தான். வவுனியாவில் எல்லைப்புறங்களில் அரசாங்கத்தால் செய்ய முனைந்த எத்தனையோ  குடியேற்றங்களைத் தடுத்து அந்த இடங்களிலேயே நிறுத்தி விட்டுள்ளோம்.  ஆனால் புலிகளின் பலமான பிரச்சார இயந்திரங்களால் தான்  இவை மறைக்கப்பட்டு விட்டன. 

புலிகள் ஒரு கட்டத்தில் தங்களை பலப்படுத்தி அதனையே நிரந்தரமாக்கிக் கொண்டதாகக் கூறினீர்கள். அந்நிலைமை புலிகளின் பலத்தால் ஏற்பட்டதா அல்லது கழகத்தின் பலவீனத்தால் ஏற்பட்டதா?

ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு இயக்கமும் பலம் பெற்றபோதும் அவை சக இயக்கங்களுக்கு எதிராக பாசிசத்தைப் பாவித்து இருப்பை உறுதி செய்யவில்லை. அதைச் செய்தவர்கள் புலிகள் தான். அதன் மூலம் தான் அவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடிந்தது.

உங்களின் கருத்து இராணுவ ரீதியிலான விடயத்தில் பொருந்தக் கூடும். ஆனால் அரசியல் ரீதியில் உங்கள் பலம் நிரூபிக்கப்படவில்லையே?

புலிகள் மட்டுமென்ன அரசியல் ரீதியில் பலம் பெற்றவர்களா? அவர்களின் பலமும் இராணுவப் பலம் தான். அவர்களின் உறுப்பினர்கள் அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேச மக்கள் அரசியல் மயப்படுத்தப் பட்டவர்களா என்ன? போராட்டத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே மக்களை அரசியல் மயப்படுத்துவதில் புளொட், ஈ.பி.ஆர்எல்.ப்., ஓரளவில் ஈரோஸ் ஆகியவை தான் அக்கறைகாட்டி வந்துள்ளன. புலிகள் ஒரு கட்டத்துக்கு மேல் வளரமுடியாமலிருப்பதும் இந்தக் குறைபாட்டால் தான்.

அரசியல் ரீதியில் கழகம் மற்றும் தமிழ் இயக்கங்களுக்கு இருக்கும் ஆதரவுக்கும் புலிகளின் மீது இருக்கும் ஆதரவுக்கு மிடையில் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?

புலிகள் தங்களின் இராணுவப் பலத்தை தமிழ் இயக்கங்கள் மீது திருப்பி விட்டார்கள். ஏனைய இயக்கங்கள் அவ்வாறு செய்து தங்களை நிலை நிறுத்திக் கொண்டதில்லை.

சரி, இப்படிக் கேட்டால், இன்று கழகத்தில் உள்ள உறுப்பினர்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டவர்களா?

எல்லோரும் அரசியல் மயப்படுத்தப் பட்டவர்கள் என்று கூறமுடியாது. ஆனால் இராணுவப் பிரிவில் உள்ளவர்களுக்கு தேவையான அரசியல் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஆயுதம் ஏந்துவதன் நோக்கம்? யாருக்கு எதிராக அதனைப் பயன்படுத்த வேண்டும்? போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கல்வி வழங்கப் பட்டுள்ளது.

அரசியல் துறைக்கும், இராணுவத் துறைக்குமிடையிலான உறவு எப்படிப் பட்டதாக இருக்க வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

இரண்டையும் வேறுவேறாகப்  பிரிக்க முடியாது. அரசியல் இலக்குகளுக்கு அமையத் தான் இராணுவ வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இராணுவ ரீதியான செயற்பாட்டை நியாயப்படுத்தும் நோக்குடன் அரசியல் பிரிவை நடாத்த முடியாது.  இவை இரண்டுக்கு மிடையிலான உறவுகள் ஒன்றுடன் ஒன்று விட்டுப் பிரியாததாக இருப்பது அவசியம். ஆனால் இன்றைய யுத்தசூழ்நிலையின் காரணமாக இராணுவ  ரீதியான அலோசனைக்கிணங்க அரசியல் வியூகங்கள் உருவாக்கப்பட வேண்டுமென்பதும் அத்தியாவசிய மானது. இன்று இதே போன்ற முறையைத் தான் இலங்கை இராணுவத்திலும் கடைப்பிடிக்கிறார்கள்.  பிரிகேடியர் மட்டத்திலுள்ள ஒருவர்  இணைப்பாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏனைய சிவில் நிலைமைகளின் சாதக பாதகங்களைக் கருத்திற்கொண்டே இராணுவ விவகாரங்களை நகர்த்துகின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏனைய இயக்கங்களோடு ஒப்பிடுகையில் கழகத்தில், அரசியல் துறையைவிட இராணுவத்துறைக்கே அதிகம் முக்கியத்துவம் வழங்கப் படுவதாக  கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக்  குறித்து...?

நேரடியாக பாசிசத்துக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் இராணுவத்துறையின் செயற்பாடுகள் அதிகரிக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் அரசியற்துறை அதனைக் கட்டுப்படுத்த முடியாது. அரசியல் ரீதியான செல்வாக்குக்கு எவ்வளவு தூரம் அனுமதிப்பது என்பதை அப்படிப்பட்ட நடைமுறைதான் தீர்மானிக்க முடியும்.

சமீபத்தில் கூட கழகத்தின் இராணுவ செயற்பாடுகள் குறித்து அரசியல் பிரிவிடம் கேள்வி கேட்க வேண்டாமென கழகத்தின் அரசியற் பிரமுகர் கூறியிருக்கிறார். அப்படியென்றால் இராணுவச் செயற்பாடு குறித்து அரசியல் ரீதியில் பொறுப்பு கூற மாட்டோம் என்றல்லவா அர்த்தம்?

அப்படியில்லை. கட்டுப்பாடும், இறுக்கமும் கொண்ட இராணுவமாக இருக்கும் பட்சத்தில் அவ்வாறு ஏற்பட வாய்ப்பில்லை. இன்று பிரபாகரனுக்கு இருக்கின்ற தலையிடியை விட எமக்குத் தான் அதிகம். ஏனென்றால் நாங்கள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறோம். மக்களுக்கும், சிவில் அமைப்புகளுக்கும் பதில் கூறிவருகிறோம். வருஷத்துக்கு ஒரு தடவை கதைக்கும் புலிகளுக்கு இந்தசிரமங்கள் தெரியாது.

சரி, கடந்த ஒரு தசாப்த காலமாக நீங்கள் எவ்வாறான  அரசியல் வெற்றிகளை அடைந்திருக்கிறீர்கள்?

அரசாங்கம் செய்ய முயற்சித்த குடியேற்றங்கள் பலவற்றைத் தடுத் திருக்கிறோம். ஜெனரல் கொப்பேகடு வவுக்கூடாகவும் இந்த முயற்சிகள் இகசியமாக செய்யப்பட்ட வேளை நாங்கள் கடுமையாக எதிர்த்து நின்று அதனை செய்ய விடவில்லை. அதில் எங்களுக்குப் பெரும் திருப்தி. அவ்வாறான தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் சின்ன வயசு கல்வியறிவற்ற பெடியன்களே சமயோசிதமாக மேற்கொண்டனர். அதேவேளை நாங்கள் ஏறத்தாழ 12 தமிழ் குடியேற்றங்களை எல்லைப்புறங்களில் நிறுவியிருக்கிறோம். அவற்றுக்கூடாக கிராமங்கள் சிலவற்றை உருவாக்கி யிருக்கிறோம்.

வேறு...?

வேறு... சிரமதானங்கள், கணவர் இழந்தவர்கள் மற்றும் அகதிகளுக்கான புனர்வாழ்வுத்  திட்டங்கள், நோயாளர் களுக்கான உதவிகள், வசதியிழந்தவர்கள் தங்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு உதவி , மாரி காலங்களில் அடிமட்ட மக்களுக்கு ஆயிரக்கணக்கான கிடுகுகளை விநியோகித்து வருகிறோம். மக்கள் கடைகள் சிலவற்றை அமைத்து வருகிறோம்.

ஒரு தசாப்த காலமாக நீங்கள் செய்ததாகக் கூறிய மேற்படி செயற் பாடுகள் குறித்து நீங்கள் திருப்தி காண்கிறீர்களா?

திருப்தி கண்டதால் தான் மக்கள் எங்களிடம் பிரதேச சபையையும் மூன்று பாரளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் தந்திருக்கிறார்கள். மக்கள் திரும்பிக் கொண்டிருப்பதன் சமிக்ஞை தான் அவை.

நீங்கள் செய்ததாக் கூறிய சில சீர்திருத்த நடவடிக்கைகளை கருத்திற் கொள்ளும் போது ஒரு போராளி இயக்கத்தின் கொள்ளளவு இவ்வளவு தானா என்கின்ற கேள்வி எழுகிறது அல்லவா?

அவ்வளவு மட்டுமல்ல. ஜனநாயக வழிக்கு வந்த ஏனைய இயக்கங்களோடு ஒப்பிடுகையில் நாங்கள் தான் மக்களின் பல பிரச்சினைகள் குறித்து ஜனநாயக ரீதியில் போராடியிருக்கிறோம். உண்ணாவிரதங்கள், கடையடைப்புகள் என எங்களின் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வந்திருக்கிறோம். சர்வதேச ரீதியில் இடம் பெற்று வரும் ஏகாதிபத்திய நடவடிக்கைகளை எதிர்த்தும் நாங்கள் ஆர்ப்பாட்டங்கள் பல நடத்தியிருக்கி றோம். போரில் நாங்கள் ஈடுபட முடியா விட்டாலும் போராட்டத்தில் நின்று கொண்டு தான் இருக்கிறோம். சுழற்சி அடிப்படையில் மீண்டும் நாங்கள் போருக்கும் தள்ளப்படலாம். அந்த சுழற்சியின் அடிப்படையில் நாங்களும் புலிகளும் ஒன்றாக செயற்படும் நிலைமையும் ஏற்படலாம். ஒரு சுழற்சி முறையில் இராணுவத்துடன் இருக்கத் தள்ளப்பட்டுள்ளோம். 

ஏன் பழைய நிலைக்குப் போக முடியாது?

 அந் நிலைமைக்கு போதிய வாய்ப்பு கிடைத்தால் நாங்கள் போருக்கும், போராட்டத்துக்கும் தயாராக இருப்போம்.

இன்று ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற இயக்கங்கள் இராணுவ ரீதியில் தயாராவதற்கு இருக்கக்கூடிய பிரச்சினை எமக்கு இல்லை. எமக்கு நிறைந்த அனுபவம், தளப்பிரதேசம், வழிநடத்தல், இராணுவத்துறை சார்ந்த அறிவு என்பவை உண்டு. எங்களுக்கு அது இலகுவானது.

சரி, கழகத்தின் ஆரம்ப கால அரசியல் இலக்கான "தமிழீழம், சோஷலிசம்" என்பவை இன்றும் செல்லுபடியானவை தானா?

"பெரியவரின்" உண்மையான நோக்கம் வர்க்க ரீதியானது தான். சோஷலிசத் தமிழீழத்தை அடைய வேண்டுமென்பது தான் அவரின் இறுதி லட்சியமாக இருந்தது. அவர் இருந்த போது அதற்கேற்றவகையில் தான் கட்சியை வழிநடத்தினார். தென்னாசியா வில் ஒரு மோசமான ஏகாதிபத்திய சக்தியாகவே இந்தியாவையும் அவர் அடையாளம் கண்டார். அதன் அடிப்படையில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எதிர்க்காத அதே வேளை அதனை ஏற்கவும்  மறுத்தார். அது இரு நாடுகளின் வர்க்க நலன் சார்ந்த ஒப்பந்தம் என்பது அவரது கருத்தாக இருந்தது. அவரது கருத்துக்களின் வளர்ச்சியாகத் தான்  தமக்கு எதிர்காலத்தில் ஒரு சாத்தியமான, சாதகமான நாடு தேவையென்பதால் மாலைத்தீவுப் புரட்சியை மேற்கொண்டோம்.

தமிழீழத்துக்கு ஆதரவான ஒரு நாட்டுக்கு தமிழீழம் பிரிவதால் அந் நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகள் ஸ்திரத்தன்மைகள்  குழப்பமடையாத பின்தளம் ஒன்று தேவையென்பதால் தான் மாலைதீவுப் புரட்சி மேற்கொள்ளப்பட்டது.

தமிழீழப் போராட்டம் குறித்த மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் ஜே.வி.பி.யுடன் கூட உறவுகளை வளர்த்து பரஸ்பர உதவிகளைப் பரிமாறிக் கொண்டதும் இந்த வர்க்க நோக்கத்துடன் தான். அந்த நோக்கிலிருந்து நாங்கள் விலகவில்லை. அந்த அடிப்படையில் தான் நாங்கள் இன்னமும் வவுனியாவில் பல இடங்களில் கூட்டுறவுப் பண்ணை களை நடாத்தி வருகிறோம்.

தமிழீழ இலக்கில் இன்றைய உத்தியோபூர்வ நிலைப்பாடு என்ன?

அந்தப் பதத்தை நேரடியாகப் பாவித்து அரசியல் செய்ய முடியாத, ஆயுதம் தாங்கிப் போராட முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு ஆயுதம் தரிப்பது அவசியம். பிரச்சினை தீர்க்கப்படும் வரை ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாதது தான். அதற்காகத் தான் படைப் பிரிவினை நாங்கள் தொடர்ந்து வைத்திருக்கிறோம்.

சரி இப்படிக் கேட்கிறேன். இன்று கழகம் என்கின்ற ஒரு இயக்கம் ஏன் தேவை? 

முன்னர் கூறியதைப் போல சுழற்சி அடிப்படையில் மீண்டும் நாங்கள் போர்புரியும் காலம் ஏற்படலாம். இன்றைய நிலையில் நிரந்தரமான ஒரு இலக்கைத் தீர்மானிக்க முடியாது.

அப்படியென்றால் தமிழீழம் இலக்காக இருக்க முடியாது...?

தமிமீழம் தானே எங்கள் நோக்கம். அதற்காகத் தான் நாங்கள் புறப்பட்டோம். அர்ப்பணிப்பு, தியாகம் எல்லாமே அதற்காகத் தானே. பிரபாகரன் சில வேளை செத்தால் அப்போது ஏற்படும் இடைவெளி, அலலது போராட்டத்தில்  ஒரு மந்தகதியான நிலைமை தோன்றினால்   நாங்கள் முழுமையாக இறங்கும் முயற்சி தோன்றலாம். இன்று போராட்டம் திசை திரும்பிய நிலையில் அதனை நிறுத்தி விட்டுத் தான் திருப்பி சரியான வழியில் இயக்க வேண்டும்.

அப்படியென்றால் இன்றுகூட உங்களின் பொது எதிரியாக...?

என்றென்றைக்கும் எங்களின் பொது எதிரி ஸ்ரீ லங்கா இராணுவம் தான்.

இராணுவமா? அரசா?

அரசு தான். 

ஆனால் இன்று அந்த அரசுக்கும் இராணுவத்துக்கும் அல்லவா ஆதரவு வழங்கி வருகிறீர்கள்?

இலங்கை பாராளுமன்றத்தில் இருப்பதால் நாங்கள் அரசு சார்பானவர்களா?

ஆனால் அதன் மூலம் இந்த கட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள் என்று கூறினால்?

நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதில்  ஒன்றும் தவறில்லை. அந்த ஆசனங்களைப் பயன்படுத்துவதில் தான் எங்களின் வெற்றி தங்கியுள்ளது. அதனை எமது உரிமைக் குரலெழுப்பு வதற்காகப்  பயன்படுத்துவதை விட்டு விட்டுத் தமது சொந்த மகிழ்ச்சிக்காகவும் சுயலாபங்களுக்காகவும் பயன்படுத்துவது தான் பிரச்சினைக்குரியது. எங்களுக்கு இருக்கிற இரத்தக்கொதிப்போ உணர்வோ எமது பாராளுமன்ற ஆசனங்களில் உள்ளவர்களுக்கு இல்லைத்தான். அது குறித்து எமது கட்சியில் பிரச்சினைகள் உண்டு.

நீங்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பியதன் பின்...?

இல்லை, நாங்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பவில்லை. ஜனநாயக வழிக்கு வந்தால் நாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு ஜனநாயக ரீதியில் செயற்பட வேண்டும். இந்திய இராணுவம் இருந்த காலத்தில் நாங்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பியதாகக் கூறியபோது பழைய ஆயுதங்களை வேண்டிக் கொண்டு புதிய ஆயுதங்களை ட்ரக்டர் ட்ரக்டராக அள்ளித் திணித்தார்கள். இலங்கை அரசாங்கத்திடம் ஜனநாயக வழிக்கு வந்துவிட்டதாகக் கூறியபோது அவர்களும் ஆயுதங்களை அள்ளித் தந்தார்கள். பின் எப்படி ஜனநாயக வழிக்கு வந்ததாகக் கூற முடியும். நாங்கள் விரும்பினாலும் இந்த அரசுகள் எங்களை விடப்போவதில்லை. இன்று ஆயுதங்களை பாசிசத்துக்கு எதிராகவும், அதே வேளை பொது எதிரியுடன் தந்திரோபாய ரீதியிலான உறவையும் கொண்டியங்கி வருகிறோம்.

அவ் ஆயதங்கள் நீங்கள் குறிப்பிடும் எதிரிக்கு எதிராகத் திருப்பப்படாமல் போராட்டத்துக்கு எதிராக திருப்பப்படுவதாக அல்லவா குற்றம் சுமத்தப்படுகிறது?

எங்களை இந்த நிலைமைக்குத் தள்ளிய பொறுப்பை புலிகள் ஏற்க வேண்டும். அப்படிக் கொண்டு வந்து விட்டு அரசோடு நிற்கிறாhகள்; என்கின்ற குற்றச்சாட்டை சுமத்துவதற்கு புலிகளுக்கு தார்மீக உரிமை கிடையாது.மீண்டும் தமது பிரதேசங்களில் சென்று போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தமிழ் இயக்கங்கள் தயாரானால் அதனைப் புலிகள் அனுமதிப்பார்களா? தம்மால் துரத்தப்பட்ட முஸ்லிம்களையே திருப்பி அழைக்காத புலிகள் எப்படி ஏனைய இயக்கங்களை அனுமதிப்பர்?  டெலோவை புலிகள் வேட்டையாடத் தொடங்கிய போது டெலோ அரசோடு இருக்க வில்லை. மக்களோடு இருந்த காலத்தில் தான் புலிகள் நசுக்கத் தொடங்கினர். ஈ.பி.ஆர்.எல்.எப்க்கும் அதே நிலைமை தான். இந்த நிலைமையில் நாங்கள் மக்களோடு நிற்பதற்கு ஒரு பிரதேசம் வேண்டியிருக்கிறது. தற்காலிகமாக இராணுவம் நிலை கொண்டிருக்கிற பிரதேசத்தில் நாங்கள் நிலை கொண்டிருக்கிறோம் . அவ்வளவு தான்.

சரி, புலிகளின் மீதான அழித் தொழிப்பு நடவடிக்கைகளில் கழகமும் ஈடுபட்டு வருவதாகச் சொன்னால்..?

நாங்கள் புலிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி அழித்தொழிப்பில் ஈடுபட்டதில்லை. அவர்களிடம் இருந்து எங்களை தற்காத்துக் கொள்வதற்கான சந்தர்ப் பங்களில் மாத்திரம் தான் அவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கப்பட்டுள்ளது.

இராணுவ சோதனை நடவடிக்கை களில் சேர்;ந்து கூட்டாக செயற்படுகிறீhகள் அல்லவா?

சுற்றி வளைப்புகளுக்கு ஒரு போதும் கழகம் போவது கிடையாது. ஆனால் நொச்சிமோட்டை, தாண்டிக்குளம் போன்ற பிரதான இராணுவ சோதனை சாவடிகளில் கழக உறுப்பினர்கள் இருத்தப்பட்டுள்ளனர்.  அதற்கான காரணம் மக்களை உறுதிப்படுத்தி மக்களுக்கு சிரமமேற்படாமல் அனுப்ப வேண்டியுள்ளது. அவர்கள் புலிகளின் பிரதேசத்திலிருந்து வரும் எல்லோரையும் சந்தேகப்படுகிறார்கள். புலி வருது புலி வருது என்று தான் பார்க்கிறார்கள். சில வேளைகளில் புலிகளும் வந்திருக் கிறார்கள். பிடிபட்ட எத்தனையோ புலிகளைக் கூட நாங்கள் வெளியில் எடுத்து விட்டிருக்கிறோம். அதனைச் சொன்னால் வெளியுலகம் நம்பாது. புலிகள் எங்களை துரோகிகள் என்று தான் முத்திரை குத்தி வைத்துள்ளது.

உங்கள் இலக்கு எனக் கூறும் தமிழீழத்தை பாராளுமன்ற வழிமுறைக் கூடாக அடைய முடியுமென்கின்ற நம்பிக்கை உங்களுக்கு உண்டா?

பாராளுமன்றங்களுக்கூடாகவும் இணக்கங்கள் காணப்படலாம். அதற்கு உலகில் ஏகப்பட்ட விடுதலைப் போராட்ட அனுபவங்களும் உண்டு. ஆனால் ஆசியச் சூழலில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. அனைத்து உரிமைகளையும் கொண்ட தமிழீழத்தை இந்தப் பாராளுமன்ற வழிமுறைக்கூடாகப் பெறமுடியாது.

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்ற சந்தேகம், கைது, தடுப்பு, சித்திரவதை என்பனவற்றுக்கு காரணமாகவுள்ள அவசரகால சட்டத்துக்கு உங்கள் இயக்கம் ஆதரவு அளித்து வந்தது  பற்றி...?

எந்தக் காலத்திலும் ஆதரவு வழங்கவில்லை. ஈபி.டி.பி. மட்டும் தான் தமிழ் இயக்கங்களில் அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவளித்து வருகிறது. மற்றும்படி கூட்டணி எதிர்த்து வாக்களிக்கிறது.

அவசரகாலச் சட்டம் தொடர்பான கழகத்தின் நிலைப்பாடு என்ன?

தமிழ் மக்களை நசுக்கப் பாவிக்கப்படும் இந்தச் சட்டத்துக்கு தமிழ் எம்பி.க்கள் ஆதரவளிப்பது பெரும் முட்டாள்தனம்.

இந்த அரசாங்கம் பதவியேற்ற முதல் இருவருடங்களாக கழகம் ஆதரவளித்துத் தானே வந்திருக்கிறது?

கழகத்திலுள்ள சில மிதவாதப் போக்கின் விளைவாகவும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

அந்தளவுக்கு கழகத்தின் அரசியல் சீரழிந்துள்ளதாகக் கூறலாமா?

அரசியல் பிரிவுக்குள் சில முரண்பாடுகள் உண்டு தான். ஆனால் அவை குறித்து மேலதிகமாகப் பேச விரும்பவில்லை.

சம்பவமாகக் கூறாமல் சிக்கலை மாத்திரம் கூறுங்களேன்?

நாங்கள் பாசிச இயக்கம் இல்லையே. ஜனநாயக இயக்கம். அந்த விதத்தில். மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம் எமது இயக்கத்தில் இருக்கிறது. அந்த வகையில் ஏற்படுகின்ற வாக்குவாதங்கள் சில முரண்பாடுகளை தோற்றுவித்து விடுகின்றன.

இயக்கத்தில் அரசியல் விவாதங் களுக்கான வழிகள் இருக்கின்றன அப்படியா?

ஆம், அதன் காரணமாகத் தான் சில பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக வெளியில் பேசப்படுகிறது.

வடகிழக்கில் சிவில் நிர்வாகம் தான் இருக்கிறது என உலகத்துக்கு பறை சாற்றவென வடகிழக்கில் பொதுவாக தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கம். இந் நிலைமையில் எதிர்வரும் உள்;ராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிட இருக்கிறீர்களே?

சகல தேர்தல்களும் தவறானவை என்பதல்ல. அதனை நாங்கள் ஏன் பயன்படுத்தக்கூடாது. அரசு எங்கும் சிவில் நிர்வாகத்தை அப்படியே நடத்தப்போவதில்லை. அதனை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

வடகிழக்கில் சிவில் நிர்வாகம் இல்லையென்பது ஒரு போதும் கழகத்தால் அம்பலப்படுத்தப்பட்டதில்லையே?

நாங்கள் இருக்கின்ற பகுதிகளில் மாத்திரம் தான் நாங்கள் பதில் சொல்லலாம்.

ஆனால் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் என அழைக்கப்படும் உங்கள் இயக்கம் வவுனியாவுக்கு மட்டும் தான் பொறுப்பு சொல்லுமா?

மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களிலும் எமக்குச் சேவை செய்ய அனுமதி கேட்டோம் அனுமதி தரவில்லை. ஆனால் வவுனியா மக்கள் தந்திருக்கி றார்கள். அங்கும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களிலும்  மக்களுக்குச் சேவை செய்கிறோம்.

அரசின் தீர்வு யோசனை தொடர்பாக..?

வரலாற்றில் பல தலைவர்களைப் போல சந்திரிகாவும் பொதி எனும் பேரில் ஏற்க முடியாத யோசனையை முன்வைத்திருக்கிறார்.

ஆனால் நீங்கள் ஆதரவளிப்பதாக பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருந்தனவே?

தீர்வு முயற்சிக்குத் தான் ஆதரவளித்தோமேயொழிய தீர்வுப் பொதிக்கு அல்ல. அதற்கு நாம் ஆதரவளிக்கவில்லை.

நன்றி - சரிநிகர் (மே 1999)


"சாதி" சொல்லும் சேதி - கவிஞர் காசி ஆனந்தன்

"சாதிய வசைபாடல்" என்கிற தலைப்பில் என்.சரவணன் எழுதிய கட்டுரை இரு பகுதிகளாக "காக்கைச் சிறகினிலே" சஞ்சிகையில் வெளிவந்தது. அக்கட்டுரை சமீபத்தில் வெளியான என்.சரவணனின் "தலித்தின் குறிப்புகள்" நூலிலும் இடம்பெற்றிருக்கிறது. யூன் மாத "காக்கைச் சிறகினிலே" இதழில் அக்கட்டுரையின் மீதான தனது கருத்துக்களை இப்போது பதிவு செய்துள்ளார் கவிஞர் காசி ஆனந்தன்.
'காக்கைச் சிறகினிலே ' இதழில் தொடர்ந்து இரண்டு வாரங்கள் வெளிவந்த 'சாதியம்' குறித்த சரவணனின் எழுத்தாக்கம் காட்டமானது.

'சக்கிலியன்' என இழிவுபடுத்தப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் போர்க்களக் குரலாய் வெடித்த சங்கொலி.

மறைமலையடிகள் வேதகாலத்தில் ஆரியரால் உருவாக்கப்பட்டது சாதியம் என்பதை மறுக்கிறார். வியாசர். விசுவாமித்திரர் போன்ற தமிழர்களான முனிவர்களும் இணைந்து உருவாக்கிய மறையே வேதங்கள்' என்கிறார் அவர்.

'சாதியம் ' ஆரியர்களின் உருவாக்கம் என்பதை ஆய்வறிஞர் குணாவும் ஏற்பதாயில்லை. சாதியம் பழங்குடிகளான தமிழரிடமே தோன் றிற்று என்கிறார் குணா.

ஆரியர்கள் இந்தியாவில் கால்வைத்த காலம் கி.மு. 1500. வேதங்கள் தோன்றிய காலம் கி.மு. 1200. கி.மு. 1000இல் 'பிராமணங்கள்' ஆக்கப்படுகின்றன. 500 ஆண்டுகளின் பின்பு கி.மு. 500இல் வாழ்ந்த புத்தர் பிராமணங்களில் நால்வகைச் சாதிப் பிரிவினை இருப்பதை எதிர்த்தார் எனப் பேரறிஞர் அம்பேத்கர் தனது 'புத்தரும் அவர் தம்மமும்' எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

ஆனால் - இதே காலத்தில் ஒரு பழந்தமிழர் வழித் தோன்றலான புத்தரின் தந்தையார் சுத்தோதனர் 'பிராமணர்களை அரவணைத்து வாழ்ந்தார் என அதே நூலில் பெருந்தகை அம்பேத்கர் அவர்கள் கூறுவது ஆய்வுக்குரிய செய்தி ஆகிறது.

இந்தியாவை (பழைய நாவலந்தேயம்) இரு பிரிவுகளாக்கி ஆய்வு நிகழ்த்தப்பட வேண்டும்.

வடஇந்தியாவையே ஆரியர்கள் ஆரியமய மாக்கினார்கள். அப்பகுதி 'ஆரியவர்த்தம்' என அழைக்கப்பட்டது. அங்கேதான் நால்வகைச் சாதிநெறி பற்றிப் பேசப்பட்டது. வட நாவலந் தேயத்தில் வாழ்ந்த பழந்தமிழர்கள் ஆரியர்களின் மொழியோடு கலந்து வடதிராவிடர்களானதுடன் சாதியத்தை வடிவமைப்பதிலும் இவர்களே பெரும் பங்காற்றினார்கள்.

'நான்கு வருணங்கள் - பலவகையான கலப்படச் சாதிகள் பற்றியெல்லாம் கூறப்படுபவை ஏட்டுச் சுரைக்காயே அன்றி வேறில்லை. ஆரிய வர்த்தத்தில் மட்டுமே நால்வருணம் இருந்தது. தென் இந்தியாவில் நால்வருணம் சாஸ்திரத்தில் எழுதப்பட்டிருந்ததே ஒழிய நடைமுறையில் இல்லை ; என்கிறார் ஆய்வறிஞர் பி.டி.சீனிவாச ஐயங்கார்.

ஒரு பிராமணன் கி.பி. 70இல் சத்திரியன் ஆகிறான். நால்வருண விதிகளின் படி அவன் சத்திரியன் ஆவது அவனைத் தாழ்வுபடுத்துவ தாகும். இருப்பினும் புஷ்ய மித்திர சுங்கன் அரசனாகிறான். அவன் காலத்தில்தான் தமிழர்கள் பெரிதும் வெறுத்துப் பேசுகின்ற மனு தனது மனுதரும சாஸ்திரத்தை எழுதுகிறான். இந்நூலில் மனு தமிழர்களைச் 'சத்திரியர்' என்கிறான். (மனு 10.4333) மனுவே தமிழன்தான் என்கிறது பாகவத புராணம்.

கி.பி. 1ஆம் நூற்றாண்டில் ஆரியர்கள் மெல்லமெல்ல இந்தியாவின் (நாவலந் தேயம்) தென்பகுதியான தெக்காணத்திலும் நுழையலா யினர். கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் தென்னாட்டின் இருண்ட காலமாகவே கருதப்படு கிறது. இக்காலத்தில் தெற்கில் வாழ்ந்த தமிழரில் பலரும், வடநாவலந்தேயத்தின் பழந்தமிழர் மொழிமாறி இனம்மாறி வடதிராவிடராய் மாறியதுபோல் தெலுங்கராயும், கன்னடராயும், மலையாளியராயும் மொழி-இனம் மாறித் தென் திராவிடராயினர்.

சங்க காலத்தில் 'சாதியம்' இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியத்தில் இல்லை. காப்பிய காலத்திலும் அதைத் தொடர்ந்த தேவார காலத்திலும் கூடச் சாதியம் இருந்ததில்லை .

பிரமன் பிறப்புக்குரியவன் என்பதால் அவனை வைத்து ஓர் உடலமைப்பில் 'சாதியம்' தோன்றிய நான்கு இடங்கள் பற்றிக் கதை பண்ணி னார்கள். தலையில் இருந்து பிராமணனும் தோளில் இருந்து சத்திரியனும் இடுப்பில் இருந்து வைசியனும் காலில் இருந்து சூத்திரனும் பிறந்த தாகக் கதை.

தேவாரகாலத்தில் சிவனுடைய தலையில் ஒரு சூத்திரனான வேடன் கண்ணப்பன் காலை வைத்து சிவனின் கண் இருந்த இடத்தை அடை யாளம் கண்டதாகப் பெரிய புராணம் கூறுகிறது. தேவாரத்தில் வரும் இந்நிகழ்வினை சாதியத்துக்கு எதிரான ஒரு பெரும் வெடிப்பாகவே நான் பார்க்கிறேன்.

தமிழ் காத்த நாயன்மாரின் தேவார காலத்தை ஒட்டிய பல்லவர்முடியாட்சியின் போதே சாதியம் தமிழ் நாட்டில் தழைத்தோங் கிற்று.

உலகப் புகழ்கொண்டு வாழ்ந்த பழந்தமிழ் மன்னர்கள் நினைத்திருந்தால் 'சாதியத்தை' உடைத்து நொறுக்கிப் போட்டிருக்க முடியும். தமிழனைத் தமிழனே காலின் கீழ் மிதித்துக் கொண்டிருந்த காலத்தில் ராஜராஜனும் ராஜேந்திர னும் உலகை வென்றார்கள் எனத் தோள் தட்டுவதில் எந்தப் பெருமையும் இல்லை.

மராத்திய மக்களும் பழைய தமிழர்களே. இந்தியாவின் வடதிசை அனைத்தும் வாழ்ந்தவர் கள் பழைய தமிழர்களே எனக் கூறியவர் மதிப்புக்குரிய பேரறிஞர் அம்பேத்கர் ஆவார். ஆனால் அவர் காலத்தில் மகர் என்னும் தாழ்த்தப் பட்ட மக்களின் அவலம் கண்டு மதம்மாறிப் புத்தசமயத்தினர் ஆனார் அவர்.

மராத்தியத்தை ஆண்ட வீரசிவாஜி சூத்திரர் ஆவார். அவரும் பழைய தமிழரே. அவர் ஆட்சிக் காலத்தில் சாதியத்தை வேரோடு பிடுங்கி எறிய அவர் மறந்தார். விளைவை மாந்தநேய மாமறவர் அம்பேத்கர் சுமக்கவேண்டியதாயிற்று.

சாதியத்தின் உருவாக்கத்திலும் அதை வேலியிட்டுக் காத்ததிலும் தமிழர்களுக்குப் பெரும் பங்குண்டு என்பதற்கான சான்றுகள் வரலாறு நெடுகிலும் பரவிக் கிடக்கின்றன.

மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகள் காலம் ஆரியர்கள் தமிழர் வரலாற்றில் அவ்வப்போது நிகழ்த்திய கொடுமைகளை நான் மூடிமறைக்க வில்லை .

ஆனால் -

இறுமாப்போடு மேடைகளில் ஆரியத்தை எதிர்த்து இடிமுழக்கமிடும் தமிழர்களைப் பார்த்து நான் கேட்பது இதுதான்.

தமிழ்நாட்டில் தமிழன் சேரிக்கு நெருப்பு வைப்பவன் ஆரியனா? தமிழனா? என்னுடைய சுடுகாட்டில் தாழ்த்தப்பட்டவனைப் புதைக்க விடமாட்டேன் என்று எகிறிக் குதிக்கிறவன் ஆரியனா? தமிழனா? தேநீர்க் கடையில் தாழ்த்தப்பட்டவனுக்குத் தனிக்கோப்பை தருகிறவன் ஆரியனா? தமிழனா? திருவிழாவில் கோயில் தேரின் வடத்தைத் தாழ்த்தப்பட்டவன் தொடக் கூடாதென்ற வீச்சரிவாளோடு திமிறி வெறியாடு கிறவன் ஆரியனா? தமிழனா?

இனி,

'சக்கிலியன்' எனத் தாழ்த்தப்பட்டோரில் ஒரு பிரிவினர் இன்றும் தாழ்வாக அழைக்கப்படு வது பற்றி 'காக்கைச் சிறகினிலே' இதழில் வந்த சரவணன் கட்டுரைக்கு வருகிறேன்.

செருப்புத் தைக்கும் தொழிலாளிகளாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்த இவர்களை 'அருந்ததியர்' என வரலாறு செப்புகிறது.

ஆந்திராவைச் சேர்ந்த இவ்வகுப்பினரில் ஒரு சிறு குழுவினர் தூய்மைப்பணியாளராக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

வாளிகளில் மலம் கழிக்கும் கழிப்பறைகள் இருந்த காலத்தில் தெலுங்கு பேசிய இத்தொழி லாளரிடமே அவ்வாளிகளையும் கழிப்பறையை யும் தூய்மைப்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. இவர்களில் இருபது குடும்பங்கள் மட்டக்களப்பில் இப்பணியில் ஈடுபட்டிருந்த போது இவர்களோடு நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

தோழர் விக்கிரமசிங்க, தோழர் பீட்டர் கௌமன் ஆகியோர் தலைமையில் இயங்கிய இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியின் மட்டக் களப்புக் கிளைப் பொறுப்பாளராக இருந்த, இன்றும் நான் நெஞ்சில் வைத்துப் போற்றும் ஒரு மலையாளியான மறைந்த தோழர் கிருஷ்ணக் குட்டி, மட்டக்களப்பில் தங்கி வாழ்ந்த இத் தூய்மைப்பணியாளரின் குடியிருப்பில் ஒரு விருந்துக்கு என்னை அழைத்துச் சென்றது நினைவிருக்கிறது.

ராமன் தான் அவர் களுக்கெல்லாம் அப்போது தலைவனாக இருந்தான். அவன் வாயில் எப்போதும் கள் வாடை வீசிக்கொண்டே இருக்கும். பணி முடித்து அவன் வீடு திரும்பும் வழியில் எங்காவது அவனைப் பார்க்க நேர்ந்தால் ஆங்காங்கே அவன் உடையில் அப்பியிருக்கும் மலத்தின் வாடையும் கூடவே இருக்கும்.

ஊரைத் தூய்மைப்படுத்தும் உயரிய பணியை மேற்கொண்டிருந்த ராமன் வீட்டில் உணவுண்டு மகிழ்ந்த நாள் இனியது. இன்றும் அந்த நினைவில் ஊறித் திளைக்கிறேன்.

ஆயிரம் பேர் கழித்த மலத்தை வாளியில் அள்ளிச் சுமப்பதும் - அந்த வாளிகளைக் கழுவித் தூய்மைப்படுத்துவதும் 'கொடுமையான தொழில் என்னும் உணர்வு ராமனோடு பழகிய காலத்தில் என் நெஞ்சில் ஆழப்பதிந்தது.

சிங்களச் சிறைச்சாலைகளில் ஐந்து ஆண்டு கள் நான் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் வெளி யே யாழ்ப்பாணத்தில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலின் உள்ளே தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதை அன்றிருந்த தமிழர்களின் தலைவர்களில் ஒருவரான சுந்தரலிங்கம் அவர்கள் முன்னின்று தடுத்ததாக வெளிவந்த செய்தி எனக்குச் சினமூட்டியது.

'அடங்காத் தமிழர் முன்னணி' என்னும் அமைப்பின் தலைவராக இருந்த சுந்தரலிங்கனார் பெரிய படிப்பாளி. இன்று பிரித்தானியாவின் பேரரசியாக விளங்கும் எலிசபெத் அரசியாருக்கு கணிதம் கற்றுத்தந்த ஆசிரியர். தமிழீழம் தனி நாடாக வேண்டும் என்னும் கருத்தினை வரலாற்றில் முதன்முதல் விதைத்தவர் சுந்தரலிங்கம் அவர்களே என்பதையும் மறப்பதற்கில்லை.

ஆனால் -

சாதி வெறிகொண்டு அவர் கூத்தாடிய போது மோதி எதிர் நின்று அவரைச் சாட வேண்டும் என்று நான் கருதினேன். சாட்டை அடியாகச் சிறைச் சாலையில் இருந்தே அவருக்கு ஓர் அஞ்சலட்டை அனுப்பிவைத்தேன்.

இறத்தல் - அந்தர் - தொன் என்பதெல்லாம் பழைய நிறை அளவுகள் என்பதை இன்றிருப்போர் அறிந்திருக்க வாய்ப்பில்லை . 112 இருத்தல் ஓர் அந்தர் ஆகும். சாதி வெறியாடிய சுந்தரலிங்கனா ருக்கு இப்படித்தான் நான் என் வயிற்றெரிச்சலை அள்ளிக் கொட்டினேன்:
'சுந்தர்
உன் மண்டையில்
கல்வி
ஒரு அந்தர்;
களிமண்
ஒரு அந்தர்;
உன்னைச்
சும்மாவிடமாட்டார்
மாவிட்டபுரக்
கந்தர்!'
பின்பு ஒருநாள் சுந்தரலிங்கனாரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது 'உங்கள் தமிழ் நன்றாக இருந்தது' என்று சிரித்துக்கொண்டே அவர் கூறியது நினைவிருக் கிறது.

சிங்களச் சிறைச்சாலைகளில் வாழ்ந்த காலத்தில், விடுதலையானதும் யாழ்ப்பாணத்தில் வாழும் சாதி வெறியர் சிலருக்கு உறைக்கும் வகை யிலான ஒரு போராட்டத்தை நடத்தவேண்டும் என்னும் முடிவோடு சிறைக் கதவுகள் திறக்கும் நாளுக்காகக் காத்திருந்தேன்.

என் வாழ்வில் மறக்க முடியாத அந்த நாள் என் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி யாழ்ப்பாணம் சென்று சாவகச் சேரியில் தூய்மைப்பணியாளரோடு இணைந்து வீடுவீடாகக் கழிப்பறைத் தூய்மைத் தொண்டில் வெறிகொண்டு நான் ஈடுபட்டேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் களிலேயே சிலர் மறைவாக என்னை எதிர்த்து, இப்போராட்டத்தின் போது தங்களுக்குள் பேசிக்கொண்டது எனக்குத் தெரியும்.

குழிக் கழிப்பறைகள் வந்த பின்பு மலவாளி தூக்கும் - தூய்மைப்படுத்தும் கொடுமை இப்போது இல்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

மலவாளி கழுவித் தூய்மைப் படுத்தும் போராட்டத்தில் நேரில் ஈடுபட்டபோதுதான் அது எத்தனை துன்பமான தொழில் என்பதை என்னால் உணர நேர்ந்தது.

பிடி இல்லாத பழைய வாளிகளைச் சில வீடுகளில் கழிப்பறையில் வைத்திருந்தார்கள். வாளியின் விளிம்பில் கையை வைத்துத்தான் அந்த வாளிகளைத் தூக்கவேண்டும். வாளியின் விளிம்பைப் பற்றியிருக்கும் கைவிரல்கள் சில வேளைகளில் அவ்வாளியின் உள்ளே நிரம்பி இருக்கும் மலத்தில் தோய்ந்துவரும். தூய்மைப் பணியாளன் இப்படித்தான் அந்தத் தொழிலில் ஈடுபடுகிறான். போராட்டத்தில் ஈடுபடும் நான் கையுறை போட்டுக் கொண்டா வாளியைத் தூக்கமுடியும்? அவனைப் போலவே - அந்த உயரிய தொழிலாளியைப் போலவே மலவாளி களைத் தூக்கினேன். கழுவினேன். தூய்மைப்பணி யாற்றினேன்.

சரவணன் 'காக்கைச் சிறகினிலே' இதழில் எழுதிய கட்டுரை தந்த உந்துதலால் இச்சாதி எதிர்ப்புச் சமரை இங்கே பதிவு செய்கிறேன்.

தமிழீழத்தில் மட்டக்களப்பிலோ திருகோணமலையிலோ - மன்னாரிலோ வவுனியாவிலோ - அம்பாறையிலோ சாதி வெறி எந்தக் காலத்திலும் பெரிய அளவில் தலைவிரித் தாடியதில்லை. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு சிலரிடம் மட்டுமே தறிகெட்ட இக்கொடுமை நின்று நிலவிற்று.

எழுத்தாளர் டானியேல் 'பஞ்சமர்' நாவலில் எழுதிய பழையகால வாழ்க்கை என்றோ தொலைந்துபோன பழைய கதை என்பதையும் - மாபெரும் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வருகைக்குப் பின்பு தமிழீழத்தில் 'சாதியம்' முற்றுமுழுதாய் எரிந்து சாம்பலாயிற்று என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடிய வில்லை .

முன்பே தமிழீழம் சாதியத்தை ஓரளவு முறித்துப் போட்டிருந்தது என்பதே உண்மை.

தமிழ் நாட்டில் 'சாதிக்கட்சி' என்று வெளியே சொல்லிக்கொள்ளாவிட்டாலும் 'சாதிக் கட்சிகள் உண்டு. தமிழீழத்தில் சாதியின் அடிப்படையில் கட்சிகள் இல்லை. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் தலைவர்களின் பெயர்களே சாதியைச் சமந்து நின்றதைப் பார்த்தோம். காமராஜ நாடார், ராஜகோபாலாச்சாரியார், ராஜா அண்ணாமலைச் செட்டியார், ராமசாமிப் படை யாட்சி, முத்தையா முதலியார், ம.பொ.சிவஞான கிராமணியார் என்றுதான் தொடக்க காலத்தில் தமிழ்நாட்டின் தலைவர்கள் அழைக்கப்பட்டார் கள். பெரியார் அவர்களே இராமசாமி நாயக்கர் என்று தன் பெயரைப் பயன்படுத்திய காலமும் இருந்தது. இன்றுகூடத் தமிழ் நாட்டில் ஓர் அமைப்பின் தலைவர் தன் பெயரைப் பெரிய எழுத்துக்களில் சுவரில் மதிப்பறையனார் என்று எழுதச் செய்து மகிழ்கிறார். இந்த நிலை தமிழீழத்தில் என்றும் இருந்ததில்லை.

தமிழ்நாட்டில் 339 சாதிகள் உள்ளன. சிங்கள சிறீலங்காவில் - சிங்களவரிடையே 39 சாதிகள் உள்ளன. தமிழீழத்தில் 15 சாதிகளே உள்ளன. தமிழீழத்தில் நிலைகொண்டிருந்த சாதிகள் இன்று தரையில் வேரறுந்து வீழ்ந்த பட்டமரங்களாகவே உயிரிழந்து கிடப்பதைப் பார்க்கிறோம்.

குமுறிச் சினந்து புத்தர் சாதியத்தை எதிர்த்தார் என்று பேரறிஞர் அம்பேத்கர் அவர்கள் தன் நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இன்று சிங்கள பௌத்த சிறீலங்காவில் புத்த மதத்தின் உயர்ந்த மூன்று சங்கங்களான மல்வத்தை பீடத்திலும், அஸ்கிரிய பீடத்திலும், களனி பீடத்திலும் தாழ்த்தப்பட்டவர் எவரும் மகாதேர ராக (தலைமைத் துறவி) வரமுடியாது என்னும் கொடுமையை இக்கட்டுரையில் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை .

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களைச் சிங்கள இனவெறியர் கள் 'சக்கிலியப் பிரபாகரன்' என்று வசைபாடிய தாகச் சரவணன் தன் கட்டுரையில் எழுதியிருக் கிறார். புத்த சிங்கள இனவெறியருக்குச் சாதிவெறி புதியதல்ல. தமிழனை இன்றும் பொதுக்கூட்ட மேடைகளில் 'பறைத் தமிழன்' என்றே அவர்கள் அழைக்கிறார்கள்.

அண்மைக்காலத்தில், தமிழீழ விடுதலை உணர்வைக் களங்கப்படுத்தும் நோக்கோடு தமிழ்நாட்டின் இலக்கிய வார- மாத இதழ்களில் சிலர் தமிழீழ மண்ணில் சாதிவெறி ஆழமாக நிலைகொண்டுள்ளதைப் போல் அவ்வப்போது கட்டுரைகள் எழுதுவதைக் கவனித்து வருகிறேன்.

உடைந்து நொறுங்கிய சாதியத்தின் துண்டுகள் தமிழீழத்தில் எங்கேனும் உங்கள் கண்களில் காணப்படலாம். அதைப் பெரிதுபடுத்தி உளறுவதை நிறுத்துங்கள்.

'சக்கிலியன்' என்னும் சொற்பயன்பாடு தவறானதென்றும் 'அருந்ததியர்' என்னும் அவர்களின் சமூகப்பெயர் ஒதுக்கப்படுவதாகவும் எழுத்தாளர் சரவணன் கொண்டுள்ள நிலைப்பாட்டில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை என்பதைச் சற்று உரிமையோடு பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை - சக்கிலியன் என்றோ அருந்ததியர் என்றோ பறையன் என்றோ தலித் என்றோ எந்தச் சாதியின் பெயரிலும் எவன் அழைக்கப்படுவதையும் நான் எதிர்க்கிறேன்.

தொழிலின் பெயரைச் சொல்லுங்கள். சாதி பெயரைத் தொலையுங்கள்.

நன்றி - காக்கைச் சிறகினிலே

“பண்டா விடுவித்த நாய்” - என்.சரவணன்

நீதிமன்ற அவதூறு வழக்கில் 19 ஆண்டுகால சிறைத்தண்டனை (6 வருடங்களில் முடியக் கூடிய வகையில்) பெற்று கடந்த வருடம் ஓகஸ்ட் தொடக்கம் சிறையில் இருந்த ஞானசார தேரருக்கு எட்டு மாதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கினார். 23ஆம் திகதி மாலை வெலிக்கடை சிறைச்சாலை வாசலில் ஆதரவாளர்கள் பல மணி நேரமாக வெய்யிலில் வரவேற்க காத்திருந்த நிலையில் ஞானசார தேரர் வேறு வழியால் இத்தபானே தம்மாலங்கார தேரரின் வாகனத்தில் எவருக்கும் தெரியாமல் வெளியேறினார்.

கடந்த மாதம் வெசாக் தினத்தையொட்டி  மே 18 அன்று 762 கைதிகள் ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள். சிறு குற்றங்களுக்கு தண்டனை பெற்ற கைதிகள் ஒரே நாளில் இத்தனை பேர் விடுவிக்கப்பட்டது சிறைச்சாலை வரலாற்றில் இதுவே முதற்தடவை.

வெசாக் தினத்துக்கு முன்னர் ஞானசாரரை விடுவிக்கும்படி சிங்கள பௌத்த தரப்பில் இருந்து தொடர்ச்சியாக கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. ஞானசார தேரரை மே 4 அன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்து விட்டு வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் (முன்னாள் பௌத்த விவகார அமைச்சர்) விஜேதாச ராஜபக்ச “எதிர்வரும் வெசாக் தினத்துக்கு முன்னர் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி விடுதலை செய்தாக வேண்டும்.” என்றார்.

அவரை விடுவிக்கக்கோரி இந்த 8 மாதங்களுக்குள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் கூட்டங்களும் கூட நடத்தப்பட்டிருக்கின்றன ஆனால் ஞானசாரை அன்றே விடுவிக்காமல் அன்றைய தினம் ஞானசாரருடன் சிறையில் நிகழ்ந்த 45 நிமிட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவரை விடுவிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஐ.எஸ். தீவிரவாதத்தைப் பற்றியல்ல கதைக்கப்பட்டிருக்கிறது. மாறாக எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஞானசாரர் எந்தத் தரப்பின் பக்கம் இருக்க வேண்டும் என்பது பற்றியே பேசப்பட்டிருக்கிறது.

சிறிசேனவின் யுக்தி
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கட்சி ரீதியில் பிளவுபட்டிருந்த சிங்கள பௌத்தர்களை ஐக்கியப்படுத்தியிருக்கிறது. இதன் எதிரொலி எதிர்வரும் தேர்தல்களில் தெரியவரும். சிங்கள பௌத்த நிகழ்ச்சிநிரலுக்கு ஆதரவு கொடுப்போருக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்கிற சேதி தற்போதைய கள நிலை உறுதிசெய்துகொண்டிருக்கிறது. ஞானசாரரின் விடுதலை அந்த வாய்ப்புகளை பலப்படுத்தியுள்ளது. சிறிசேனவின் மன்னிப்பு ஒரு அரசியல் தீர்மானம் தான். அரசியல் வியூகம் தான். ஈஸ்டர் தாக்குதல்கள் ஜனாதிபதியின் மன்னிப்பை எதிர்க்கும் வல்லமையை யாருக்கும் வழங்கவில்லை. அந்த துணிச்சலை ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கிறது. இத்தனைக்கும் 2015க்குப்பின்னர் ஞானசாரரால் அசிங்கமான திட்டல்களுக்கு உள்ளானவர் ஜனாதிபதி சிறிசேன.

நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை ஜனாதிபதி தனது அதிகாரத்தின் பேரில் விடுவிக்கிறார் என்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நீதியை இந்த அரசு உறுதிசெய்யப்போகிறது. நூற்றுக்கணக்கான வழக்குகளில் இருந்து தப்பி. நீதிமன்ற அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டவர் ஞானசாரர். நீதிமன்றத்தின் இறைமையில், கௌரவத்தில் கை வைத்திருக்கிறார் ஜனாதிபதி. சஹ்ரான் போன்றவர்கள் உருவாக காரணமாக இருந்தவர்களில் முதன்மையானவர் ஞானசாரர். அதுபோல முஸ்லிம்களுக்கு எதிரான சமீபத்தேய வன்முறைகளுக்கு கடந்த 7 ஆண்டுகளாக அத்திரவாரமிட்டவர் ஞானசாரர். இப்படி நெருக்கடி நேரத்தில் அவரை விடுவிப்பதன் உள்நோக்கம் என்ன?

குறைந்தபட்சம் நீதிமன்றத்தால் பிணையில் விடுக்கப்பட்டால் கூட நிபந்தனைகள் உண்டு. ஆனால் குற்றவாளி ஒருவர் ஜனாதிபதி சலுகையுடன் நேரடியாக தப்பவைக்கப்படுவது அராஜக செயற்பாட்டுக்கு உத்தரவாதமளிக்கும் செயல். 19வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் "ஜனாதிபதி மன்னிப்பு" தொடர்பான அதிகாரம் என்பது நீதிமன்றத்தின் ஒப்புதலுக்குப் பின்னர் நிகழ வேண்டியது என்று பிரபல சட்ட நிபுணர் ஜே.சி.வெலிஅமுன குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்த அரசியலமைப்பு மீறலை எதிர்த்து வழக்கு தொடுக்கும் துணிச்சல் யாருக்கும் வரவில்லை.

இந்த விடுதலையை எதிர்த்து விமர்சித்திருந்தார் சந்தியா எக்னேலிகொட. அவர் தொடுத்திருந்த வழக்குக்கு ஆஜாராக வந்திருந்த போது தான் ஞானசாரர் நீதிமன்றத்தை அவமதித்து கருத்து வெளியிட்டிருந்தார். “இப்படி ஞானசாரர் நீதிமன்றத்தையே மிரட்டி விட்டு விடுதலையடைய முடியுமென்றால் நீதிமன்றத்திடம் நீதி கோரி வரும் சாதாரணர்களுக்கு என்ன பாதுகாப்பு” என்கிறார் சந்தியா.

அதிகரித்துள்ள ஆதரவு
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முன்னரை விட அதிகளவு வரவேற்பு ஞானசாரருக்கு கிடைத்துள்ளது. தான் கூறியவை எல்லாமே நிகழ்ந்துவிட்டது என்கிற பிரச்சாரம் இலகுவாக எடுபட்டிருக்கிறது. அவரின் விடுதலையை எதிர்த்து எந்த அரசியல் சக்திகளோ, ஏன்: அவரை எதிர்த்து வந்த சிவில் அமைப்புகள் கூட ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை, ஊர்வலத்தைக், கூட்டத்தை நடத்த இயலவில்லை. அவரின் விடுதலை நியாயப்படுத்தப்பட்டுள்ளது. 

அவரை எதிர்க்காமலிருக்கும் கூட்டு மனநிலை உருவாகுமளவுக்கு ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னான இலங்கையின் அரசியல் சமூகச் சூழல் உருவாகியுள்ளது. உருவாக்கப்பட்டுள்ளது.

அவர்  ஒரு தீர்க்கதரிசியாக ஆக்கப்பட்டுள்ளார். சிங்கள பேரினவாத அமைப்புகள் அவரை முன்னரை விட அதிகமாக கொண்டாடத் தொடங்கியுள்ளார்கள். பலவீனமுற்றிருந்த இனவாத அமைப்புகளுக்கு புதுத்தெம்பு பாய்ச்சப்பட்டிருக்கிறது. ஞானசாரர் சிறையிலிருந்து வெளியேறப் போகும் அந்த நாள் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு வெளியில் வரவேற்கக் காத்திருந்த ஆயிரக்கணக்கானோர் ஞானசாரருக்கு இருக்கும் பலத்தைக் காட்டியிருந்தது. பல பிரதேசங்களில் அவரின் விடுதலையைக் கொண்டாடும் முகமாக வெடி கொழுத்தி பால் சாறு பரிமாறப்பட்டதை செய்திகளில் காட்டினார்கள்.

ஈஸ்டர் தாக்குதலின் பின் அதிக புகழ் அவருக்கே உரித்தாக்கப்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகளிடம் பெரும் மரியாதை உருவாகியிருக்கிறது. விடுதலையாகி அடுத்த நாளே அவரை அழைத்து விருந்துகள் கொடுக்கின்றனர். பிரதான சிங்கள ஊடகங்கள் அனைத்துமே அவரின் செய்திகளுக்கும், அவர் புகழ் பாடும் கருத்துகளுக்கும், கட்டுரைகளுக்கும் அதி முக்கியத்துவம் கொடுத்து வெளிவிடுகின்றன.

ஏனைய வழக்குகளிலும் விடுதலை?
ஞானசாரர் ஏனைய வழக்குகளில் இருந்து கூட விடுவிக்கப்பட வாய்ப்புகள் உருவாகியுள்ளன. 2008ஆம் ஆண்டு தலங்கம – அரலிய உயன என்கிற பிரதேசத்தில் “கல்வாரி” தேவாலயத்துக்குள் நுழைந்து அடாவடித்தனம் செய்து அங்குள்ளவற்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஞானசாரர் உட்பட 13 பேர் மீது வழக்கொன்று இருந்தது. அந்த வழக்கில் இருந்து அவர்களை விடுவித்ததால் சட்ட மா அதிபரால் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி சிறிசேனவால் கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்ட புதிய சட்டமா அதிபரால் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டு மே 30 ஆம் திகதியன்று கொழும்பு உயர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து ஞானசாரரையும் 13 பேரையும் விடுவித்தது.

ஞானசாரர் முஸ்லிம்களுக்கு எதிராகவும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் தான் முதலில் தீவிரமாக இயங்கத் தொடங்கினார். போது பல சேனா உள்ளிட்ட பௌத்த இயக்கங்களால் கருகிய காலத்தில் சேதப்படுத்தப்பட்ட தேவாலயங்கள் பற்றிய ஒரு பட்டியலைக் கூட ஒரு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறது.

ஞானசாரரின் மீதான பரிவும், சலுகையும், வாய்ப்பும், அதிகாரமும், இன்று அரச இயந்திரங்களாலும், தனியார் நிறுவனங்களாலும், சிவில் அமைப்புகளாலும் வழங்கப்பட்டிருக்கும் போக்கு நல்ல சகுனமல்ல.

இத்தகைய  போக்கின் விளைவு என்னவென்றார் ஞானசாரர் முன்னரை விட வீரியத்துடன் இயங்க வைத்திருக்கிறது. ஆனால் ஞானசாரர் விடுதலையானவுடன் ஊடகங்களுக்கு  சொன்னது என்ன?

“இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பவற்றைப் பற்றி அப்போதே மேடைகளிலும், கூட்டங்களிலும் சத்தமாக எடுத்துச் சொன்னோம். அதற்காக பல துன்பங்களையும் அனுபவித்துவிட்டோம். நாங்கள் எச்சரித்தவை அனைத்தும் இப்போது நிரூபனமாகியிருக்கின்றன. இனி அடிப்படைவாதத்தை தோற்கடிக்க நாங்கள் பொறுமையுடனும், தூரநோக்குடனும் செயலாற்ற வேண்டியிருக்கிறது. நான் களைத்துப் போய்விட்டேன். இதன் பின்னர் அமைதியாக தியானம், ஆன்மீகம் என்பவற்றில் தான் ஈடுபடுவேன். இந்த நாட்டுக்காக நாங்கள் செய்தது போதும். நாட்டுக்காக உயிரைக் கொடுத்து எதுவும் செய்யலாம் ஆனால் முதலில் எதை செய்வதற்கும் நாடென்று ஒன்று இருக்க வேண்டும்.” என்கிறார்.

“சலகுன” நேர்காணல்
பலரும் நினைத்தார்கள் ஞானசாரர் சில நிபந்தனையில் வந்திருக்கிறார் எனவே தான் இனி இயங்க மாட்டேன் என்கிற கருத்துப்பட கூறியிருக்கிறார் என்று. ஆனால் அதன் பின்னர் வேகவேகமாக ஊடக நேர்காணல்கள், அறிக்கைகள், எல்லாம் பழையபடி காண முடிந்தது. அப்படிப்பட்ட நேர்காணலில் முக்கியமானது  27.05.2019 ஹிரு “சலகுன” நிகழ்ச்சியில் ஞானசார தேரருடன் நள்ளிரவில் நிகழ்ந்த உரையாடல். அது  2 மணித்தியாலங்களும் 11 நிமிடங்களும் நிகழ்ந்தன. துமிந்த டீ சில்வாவுக்கும் ஜனாதிபதி மன்னிப்பை வழங்கவேண்டும் என்கிற கோரிக்கை உள்ள நிலையில் சிறிசேனவின் எந்த கோரிக்கையும் ஏற்க தயாராக உள்ளது ஹிரு. ஹிரு தொலைகாட்சி மகிந்த ஆதரவு தொலைகாட்சி என்கிற நிலையில் மகிந்தவின் எதிர்ப்பின் மத்தியில் தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஞானசாரருக்கு ஹிரு தொலைக்காட்சியை விட பிரபலமாக இருக்கும் தெரண தொலைக்காட்சியில் தில்கா நடத்தும் “360” என்கிற நிகழ்ச்சியில் ஞானசாரரரை உரையாட வைத்திருக்க முடியும். ஆனால் ஏற்கெனவே அந்த நிகழ்ச்சியில் ஞானசாரரை அழைத்து குடிபோதையில் வாகனம் ஒட்டியது பற்றியெல்லாம் கேள்வி கேட்டு துளைத்தவர். எனவே தான் ஞானசாரரை நேர்காண உரிய நிகழ்ச்சியாக “சலகுன” நிகழ்ச்சி தெரிவு செய்யப்பட்டிருந்தது.

ஏப்ரல் 29 அன்று ரிசாத் பதியுதீனுடன் நிகழ்ந்த“சலகுன” நிகழ்ச்சி பெரும் சர்ச்சையில் போய் முடிந்தது. ஒரு கட்டத்தில் “இந்த சேனல் போதைவஸ்து வியாபாரம் செய்கிறது” என்றெல்லாம் ரிசாத் பதியுதீன் கத்தும் நிலைக்கு கொண்டு சென்றார்கள் நடத்துனர்கள். ரிசாத் பதியுதீனை அதிகம் ஆத்திரம் கொள்ளச் செய்த விடயம் நடத்துனர்கள் அவரிடம் கேள்வி கேட்டுவிட்டு அதற்கு பதில் சொல்லவிடாமல் தொடர்ந்து மாறி மாறி அடுத்ததவர் கேள்வி கேட்டு திணறடித்து அவரின் முழு பதிலையும் வழங்க சந்தர்ப்பம் அளிக்காதது தான். மிகக் கேவலமாக வகையில் ஊடக அறமற்று அந்த நிகழ்ச்சியை நடத்தியதாக சமூக அறிஞர்கள் பலரும் குற்றம் சாட்டினார்கள்.

ஆனால் ஞானசாரரின் இந்தப் பேட்டியில் அவரைக் குறுக்கிடாமல் முழுமையாக அவரின் உளறலையும், மிரட்டலையும், வெறுப்பு கக்கும் கருத்துக்களையும் பேச இடமளித்தார்கள். ஞானசாரர் இதோ ஆதாரம் என்று காட்டிய பல ஆவணங்களையிட்டு எந்தக் குறுக்குக் கேள்வியையும் கேட்கவில்லை.

“துருக்கியிடமிருந்து 40 மில்லியன் பணம் இந்த நாட்டுக்குள் ஏன் வந்தது? இவர்களின் சித்தாந்தத்தின் மீதான எதிர்ப்பை எதிர்த்து இயங்குகின்ற வானொலி, தொலைகாட்சி, ஊடகவியலாளர்களை சரி கட்டுவதற்காகவே இந்த பணம் வந்து சேர்ந்தது. என்னிடம் ஆதாரங்கள் உள்ளன” என்றார்.

துருக்கி இதனை கடுமையான தொனியில் மறுத்து “ஆதாரமற்ற அவதூறு” ( ‘The embassy of republic of Turkey wishes to place on record that the allegations made by  Ven Gnanasara are  utterly false and baseless’) என்று அறிக்கை வெளியிட்டது.

அதுபோல சவூதி புலனாய்வுப் பிரிவின் மீதும் குற்றங்களைச் சுமத்தினார். இவை ராஜதந்திர சிக்கலை ஏற்படுத்த வல்லவை.

நான் தருகிறேன் தீர்ப்பு!
இந்த நிகழ்ச்சியில் அவர் தொடங்கும் போதே 
நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்மா சம்புத்தஸ்ஸ!
அந்த பாக்கியமுள்ள அரஹத் சம்மா சம்புத்த பகவானுக்கு எனது நமஸ்காரமாகட்டும். என்று தொடங்குகிறார். இதற்கு முன்னர் அவர் மட்டுமல்ல வேறெந்த பௌத்த பிக்குமாரும் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹீ” என்று விளித்ததைக் கண்டதில்லை.

இந்தப் பேட்டியில் இதற்கு முன்னர் அவர் கூறியவை வெளியான பத்திரிகைகளைக் கொண்டு வந்து அவை அனைத்தும் இன்று நிரூபணமாகியிருக்கிறது என்று வரிசையாக வாசித்து காட்டினார்.

எனக்கு பணம் இருந்திருந்தால் பெரிய வழக்கறிஞர்களைக் கொண்டு இதனை முகம் கொடுத்திருந்திருக்க முடியும். எனக்கு எதிராக ஒரு வழக்கல்ல பல வழக்குகள் உள்ளன. நண்பர்களையும், எதிரிகளையும் இந்த சிறைக்காலத்தில் அடையாளம் கண்டுகொண்டேன்.

நீங்கள் தியானம், ஆன்மிகம் என்பவற்றோடு நிற்கப்போவதாக அறிவித்திருந்தீர்களே என்கிற கேள்விக்கு 
“...உண்மை தான் நான் விரக்தியுற்று இருந்தேன். எனவே தான் இவற்றிலிருந்து ஒதுங்குவதாக மகாநாயக்க தேரரிடம் அறிவித்தேன். ஆனால் அவரை சந்தித்து விட்டு வெளியே வந்தபோது எனது பேச்சைக் கேட்டிருந்த இளைஞர்கள் பலர் வந்து கதறி அழுது புரண்டு “ஹாமதுருவே! உங்களைப் பார்த்ததும் எங்கள் தந்தை வீட்டுக்கு வந்தது போல மகிழ்ச்சி. இதைக் கைவிடாதீர்கள். எதிர்காலத்துக்காக நீங்கள் செய்ய வேண்டியது நிறைய உண்டு என்று வேண்டினார்கள். நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். ஒரு உத்வேகம் வந்தது. எப்படியோ எனது உயிர் அச்சுறுத்தலில் தான் இருக்கிறது. நாங்கள் உயிரை அர்ப்பணித்துத் தான் பிக்குவாக ஆனோம். எமது லட்சியத்துக்காக இந்தப் பணிகளை செய்து முடிப்போம் என்று முடிவெடுத்தேன்....
....தற்போதைய ஜனாதிபதி தவறென்றால் தவறு என்று நடவடிக்கை எடுக்கக் கூடியவர். தன்னை ஜனாதிபதியாக ஆக்கிய அந்த பிரதமருக்கு எதிராக என்ன செய்தார் என்று நாம் கண்டோம் அல்லவா? மகிந்தவுக்கு கூட அந்தளவு துணிச்சல் இருந்திருக்காது. ஆளுமை வேண்டும். அது இவரிடம் இருக்கிறது. பிழையானவர்களை விமர்சித்தார். வண்ணத்துப் பூச்சுகள் என்றார். நான் எனது தாயாரையும் அருகில் வைத்துக் கொண்டு ஒன்றைச் சொன்னேன். ஜனாதிபதி அவர்களே இந்த மன்னிப்பால் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடிய வகையில் பலரும் குற்றம் சுமத்துவார்கள். ஆனால் நான் உங்கள் பெயருக்கு கௌரவம் எற்படக்கூடியவகையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வைத் தேடித் தருவேன் என்றேன்....”
இந்தியாவின் நரேந்திர மோடியின் வழிமுறையை ஆதர்சமாகக் கொள்ளுங்கள். என்கிறார். அதன் உள்ளர்த்தம் மோடி இந்துத்துவத்தின் பேரால் மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான முஸ்லிம் எதிர்ப்பு வழிமுறைகளை இங்கும் பின்பற்றுங்கள் என்பது தான்.
“...இவர்களால் சரியாக தீர்க்க முடியாமல் போனால் நாங்கள் அதனை கையிலெடுக்க வேண்டி வரும். நாங்கள் அரசர்களாக ஆகவேண்டியதில்லை. அதற்கு தேவையான மார்க்கங்களை எங்களால் உருவாக்க இயலும்....” என்கிறார் ஞானசாரர்.
உண்மை தான் ஞானசார தேரர், போதுபல சேனா இயக்கம் என்பவை அதிகாரத்தை இலக்கு வைத்த அமைப்புகள் அல்ல. ஆனால் பேரினவாத சித்தாந்தந்த நிகழ்ச்சிநிரலை சதா உருவாக்கிக்கொண்டும், அதை நிரல்படுத்திக்கொண்டும், இருப்பவை. அந்த நிகழ்ச்சிநிரலை சிவில் தளத்தில் இயக்குபவை. அது போல அரச அதிகாரத்தை தமது நிகழ்ச்சிநிரலின் கீழ் கட்டுப்படுத்த எத்தனிப்பவை.


இந்தப் பேட்டியில் அவர் அதிகளவு நேரம் இஸ்லாமிய சித்தாந்தம், வஹாபிசம், ஜிகாத், அல்டக்கியா போன்றவை எப்படி முஸ்லிம்கள் மத்தியில் இயங்குகின்றன. பிரதான அமைப்புகள் எவை அவற்றுக்கு ஆதரவு கொடுக்கும் அரசியல்வாதிகள், இவற்றுக்காக அரபு நாடுகளில் இருந்து வந்து சேரும் பணம் என்பவை குறித்துத் தான் பேசுகிறார். இக்கட்டுரையின் அளவைக் கருத்திற்கொண்டு விரிவாக பேட்டியில் உள்ளடக்கத்தைப் பற்றிப் பேச இயலாது.

இன ஒடுக்கலின் நவ வடிவம்
இப்போதெல்லாம் ஒரு கலவரத்தை நடத்தக் கூடிய அளவுக்கு அரசு தயாராக இல்லை. இனவாதமும் தயாராக இல்லை. 83க்குப் பின்னர் பேரினவாதம் பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளது. இனியும் அப்படி நடந்தால் அதன் நட்டம் தமக்குத் தான் என்பதை அறிந்து வைத்திருக்கிறது. ஆகவே தான் அதன் செயல்வடிவத்தை மாற்றிக்கொண்டுள்ளது. இனி நேரடியாக தாக்காது., பௌதீக ரீதியான அழிவுகளை நேரடியாகத் தராது. அது இப்போது நிருவனமயப்பட்டுள்ளது. நின்று நிதானமாக அதன் ஒடுக்குமுறையையும், இன அழிப்பையும், இனச்சுத்திகரிப்பையும் நுணுக்கமாக செய்யும் கட்டமைப்பை வளர்த்து வைத்திருக்கிறது. நிறுவனமயப்பட்ட கட்டமைப்புக்கு சித்தாந்த பின்புலத்தையும், நிகழ்ச்சிநிரல் தயாரிப்பையும் விநியோகிக்கும் பணியை செய்ய பொதுபலசேனா போன்ற அமைப்புகள் காலத்துக்கு காலம் வந்து மேற்கொள்ளும். ஞானசாரர் வினைத்திறனும், வீரியமும் உள்ள சமகால பேரினவாதத் தலைமை.

“பஞ்சசீலத்தை காக்காத பிக்குமாரின் குண்டியில் தார் அடிக்க வேண்டும்” என்று ஒரு முறை சேர் ஜோன் கொத்தலாவல கூறினார். அதுபோல சோமராம என்கிற பிக்குவால் பிரதமர் பண்டாரநாயக்க கொல்லப்பட்ட வேளை “நான் கட்டி வைத்த நாய்களை பண்டா அவிழ்த்துவிட்டார். இறுதியில் பண்டாவைக் குதறியது அந்த நாய் தான்” என்றார்.

இன்று சட்டத்தால் கட்டிவைக்கப்பட்ட ஒருவரை சுதந்திரமாக விடுவித்ததன் விளைவை இந்த நாடு இனி அனுபவிக்கப் போகிறது.


 

இணைந்திருங்கள்


Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates