Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

சமூகத்திற்கு விடிவெள்ளியாக மலையக அதிகார சபை உருவாக வேண்டும் - சிவலிங்கம் சிவகுமாரன்


மலையக மக்களுக்கான அபிவிருத்தியானது கடந்த காலங்களில் பல தடங்கல்களுக்கும், இழுபறிகளுக்கும் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வந்தமைக்கு பிரதான காரணம் சட்டரீதியாகவும், தனிநபர்கள் மற்றும் அரசியல் தலையீடின்றியும் அவற்றை முன்னெடுத்துச்செல்ல ஒரு அதிகார அமைப்பு இல்லாததாகும். அந்த வகையில் நல்லாட்சியில் அவர்களுக்கு கிடைத்திருக்கும் முக்கிய அம்சமே பெருந்தோட்டப்பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை. ஆனால் இதை சட்டமாக்கி பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் பல தடைகளை கடக்க வேண்டியதாயிற்று. இதை யார் கொண்டு வந்தார் என்பதை விட எதற்காக கொண்டு வரப்பட்டது, எதிர்காலத்தில் மலையக பெருந்தோட்டப்பகுதிகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித்திட்டங்களில் எந்தளவிற்கு இது தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது? என்பன குறித்து ஆராய்தல் அவசியம். ஏனெனில் இந்த அதிகார சபையானது எந்த அரசாங்கம் வந்தாலும் நிலைத்து நிற்கக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளதோடு, மலையக மக்களின் அபிவிருத்தி எண்ணக்கருக்களை தேசிய நீரோட்டத்தோடு இணைக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

கடந்த 18 ஆம் திகதி புதன்கிழமை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அமைச்சர் பி.திகாம்பரம் மூலம் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பல கட்ட முயற்சிகளுக்குப்பிறகு ஜுன் மாதம் 25 ஆம் திகதி இத்திட்டமானது மசோதாவாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டமையும் முக்கிய விடயம். சட்டரீதியான விடயங்களை உள்ளடக்கி சட்டமா அதிபரின் அங்கீகாரம் பெறப்பட்டே இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாயினும் தற்போது இச்சட்டமூலத்திற்கு முன் உள்ள பிரதான சவால் என்றால் பாராளுமன்றில் இதற்கு சட்டரீதியான எதிர்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இது உயரிய மன்றத்தின் சட்டமாகும். அப்படியான எதிர்ப்புகளைத் தெரிவிக்க ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக பண்புகளில் ஒன்றாக இருக்கின்ற காரணத்தினால் அதை தவிர்த்து செயற்பட முடியாது.

தேவைக்கான காரணம்

மலையகப்பெருந்தோட்டப்பகுதிகளில் நலன்புரி விடயங்களை முன்னெடுக்க பல திட்டங்கள் அவ்வப்போது அமுல்படுத்தப்படுகின்றன.குறிப்பாக வீடமைப்புத்திட்டங்கள் கூட நலன்புரி விடயமாகவே பார்க்கப்படுவதற்குக்காரணம் குடியிருப்புகள் இல்லாதவர்களுக்கு அதை அமைத்துக்கொடுப்பது ஓர் அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் அபிவிருத்தி திட்டங்கள் என்பன வேறுபட்டது. முதலில் நலன்புரி திட்டங்கள்,சலுகைகள் ,அபிவிருத்தித்திட்டங்கள் போன்றவற்றிற்கிடையேயான வித்தியாசங்களை மக்கள் புரிந்து கொள்ளல் அவசியம். வீடமைப்பு என்றால் குடியிருப்புகளை மட்டும் அமைத்துக்கொடுத்தல் என்ற விடயத்தில் மட்டுமே அக்கறை செலுத்துவதாக அமைகிறது. அக்குடியிருப்பில் வாழ்ந்து வருவோரின் தேவைகள் ,எதிர்காலம் குறித்த அக்கறை இத்திட்டத்துக்குள் அடங்குவதில்லை. ஆனால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதிகார சபையானது பல விதங்களில் செல்வாக்கு செலுத்துகிறது.  

பெருந்தோட்டப்பகுதி குறித்த அக்கறை

1997 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் இப்பிரதேசம் மற்றும் இம்மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்றை உருவாக்கியிருந்தார். ஏனெனில் அது வரை இம்மக்களின் நலன்புரி விடயங்களும் சலுகைகளுமே மாறி மாறி வந்த அரசாங்கங்களால் வழங்கப்பட்டிருந்தன.

இம்மக்களின் உண்மையான பிரச்சினைகள் பற்றி பெரும்பான்மை சமூகத்தினர் கூட அறியாதிருந்த நிலைமைகளே இருந்தன. இந்தக்குழுவினரின் சிபாரிசுகளுக்கு அமையவே இம்மக்களின் அபிவிருத்தியை அடிப்படையாக வைத்து அமைச்சொன்று உருவாக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் வீடமைப்பு, சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும் இந்த திட்டங்களை கிரமமாக முன்னெடுத்துச்செல்ல ஒரு பொறி முறை இருக்கவில்லை. இதன் காரணமாக திட்டங்கள் தாமதமடைந்தன. பல இடையூறுகளும் ஏற்பட்டன. இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனையில் முதன் முறையாக அதிகார சபை என்ற விடயம் உள்ளடக்கப்பட்டது.

அதில் ‘பெருந்தோட்ட பகுதிகளுக்காக உட்கட்டமைப்பு,அபிவிருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்திக்காக ஒரு உயர் சக்திமிக்க அதிகார சபை ஒன்று நிறுவப்படும் என கூறப்பட்டிருந்தது ஆனால் மஹிந்த தலைமையிலான அரசாங்கம் 2005ஆம் ஆண்டு உருவான பின்னர் இந்த அதிகார சபையை உருவாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மட்டுமன்றி அப்போதைய மஹிந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய மலையக பிரதிநிதிகளும் இது குறித்து அக்கறை கொள்ளவில்லை. அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் உருவான பின்னரே மீண்டும் இந்த அதிகார சபை விடயம் பற்றி அக்கறை செலுத்தப்பட்டது. ஏற்கனவே மலையக அபிவிருத்திக்கென தயாரிக்கப்பட்ட பத்தாண்டு திட்டத்தில் பங்காற்றியிருந்த மலையகத்தைச்சேர்ந்த புத்திஜீவிகள், அமைச்சு ஆலோசகர்கள் இவ்விடயத்தில் அக்கறை காட்டி செயற்பட்டனர். இவர்களால் தயாரிக்கப்பட்ட ஆரம்ப வரைபுக்கு அமைச்சரவையானது 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அங்கீகாரம் வழங்கியமை ஒரு மைல்கல்லாக அமைந்தது. எனினும் வரைபு குறித்த தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் காணி அமைச்சு,நிதி அமைச்சு மற்றும் பெருந்தோட்ட அமைச்சு என்பன வழங்கியிருந்தன. ஆகவே அவற்றையும் உள்ளடக்கி மீண்டும் ஒரு முழுமையான மசோதாவை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பித்து அதன் அங்கீகாரத்தைப் பெற இரண்டு வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. எனினும் இடைவிடாத முயற்சி மற்றும் சமூக நோக்கம் கருதிய அழுத்தங்களால் தற்போது அதற்கான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

என்ன கிடைக்கப்போகின்றது?

இந்த அதிகார சபையின் மூலம் பெருந்தோட்டப்பகுதிகளின் உட்கட்டமைப்பானது குடியிருப்பு,சுகாதாரம்,கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பல விடயங்கள் ஆராயப்படவுள்ளன. மட்டுமன்றி தீர்வுகளும் கிடைக்க வழிவகுக்கின்றன. இந்த அதிகார சபையின் மூலம் அடையக்கூடிய பிரதான இலக்குகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டு குறிக்கோள்கள்

1) இச்சமுதாயத்தினரை சமூக பொருளாதார கலாசார உட்கட்டமைப்பு அபிவிருத்தி மூலம் சமூக நீரோட்டத்தினுள் சேர்ப்பதினை உறுதிப்படுத்தல்.

2 ) மலையக சமூகத்தினரை தேசிய அபிவிருத்தி செயன்முறைக்கு பங்களிப்பதற்காக சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வலுப்படுத்தல்

 இந்தநோக்கங்களை அடைவதற்காக இந்த அதிகாரசபையினுடைய பணிகள் இம்மசோதாவிலே எடுத்துக்கூறப்பட்டுள்ளன. முதலாவது மலைநாட்டின் புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டங்களையும் கருத்திட்டங்களையும் அமுலாக்குதலாகும்.

இந்த அமைச்சு வீடுகளை அமைப்பதை பிரதான பணியாக மேற்கொண்டு வருகிறது. இந்த வீடுகளை மையமாகக் கொண்டு அவற்றை புதிய கிராமங்களாக மாற்றியமைக்கக்கூடிய பொறுப்பு இந்த அதிகாரசபையை சார்ந்த ஒன்றாக இருக்கும்.இதற்காக இந்த அதிகாரசபை தேசிய மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களிலுள்ள நிறுவனங்களோடு ஒருங்கிணைந்து செயற்படும்.

அத்தோடு சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் இது பங்குபற்றுதலையும் உறுதிப்படுத்தும். இன்று அரசாங்கத்தின் கொள்கையாக இருப்பது இந்த மக்களுக்கான வீட்டுரிமையை வழங்குதலாகும். இந்த உரிமையை உறுதிப்படுத்துவதற்காக தோட்டங்களில் வாழும் சட்டரீதியான குடியிருப்பாளர்களுக்கு தெளிவான காணி உறுதிகளை வழங்கலை இந்த அதிகாரசபை வசதிப்படுத்தும்.

கல்வி மற்றும் வாழ்வாதார வசதிகள்

அத்தோடுதோட்டத்துறை இளைஞர்களுக்கு கல்வி முன்னேற்றத்துக்காக மூன்றாம்நிலை உயர்கல்வி நிறுவனங்களுக்கான அனுமதியை அதிகரிப்பதற்கு உதவிகளை வழங்கும். தோட்ட சமுதாயத்தினருக்கு மாற்று வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் அது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் இந்த அதிகாரசபை கவனம் செலுத்தும். அத்தோடு பலவீனமானகுழுக்களாகஅடையாளப்படுத்தப்பட்டுள்ள பெண்கள் சிறுவர்கள் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்தி அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சட்டரீதியாக தோட்டங்களில் வாழுகின்ற குடியிருப்பாளர்களுக்கு எல்லா வசதிகளையும் உறுதிப்படுத்தும். இந்தப் பிராந்தியங்களில் சூழலை பாதுகாப்பதற்கு எல்லா நடவடிக்கைகளையும் இதுமேற்கொள்ளும். இடர் பாதுகாப்பு தோட்டப்பகுதிகளில் ஏற்படும் மண்சரிவு போன்ற அபாயங்களை அடையாளம் கண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு மாற்று நோக்கங்களுக்காக அவற்றை பயன்படுத்துவதற்கு முயற்சிகள்செய்யும்.

மேலும் பிரதான பிரச்சினையாக காணப்படும் வறுமை ,வேலையின்மை போன்ற விடயங்களுக்கு தீர்வு காணும் ஓர் அதிகாரமிக்க அமைப்பாகவும் இது விளங்கும். ஆகவே மலையக சமூகத்தை வலுப்படுத்த கிடைத்திருக்கும் இவ் வரப்பிரசாதத்தை பயன்படுத்திக்கொள்வதிலேயே இதன் வெற்றி தங்கியுள்ளது. 

நன்றி - வீரகேசரி

கொலம்பியா : செம்பனை மாபியாக்களின் தேசம் - என்.சரவணன்

செம்பனை: உயிர்க்கொல்லி! உலகக்கொல்லி! – 7

கொலம்பியா லத்தீன் அமெரிக்காவின் வடமேற்கில் இருக்கும் ஒரு பெரிய நாடு. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக உள்நாட்டு கிளர்ச்சியில் ஸ்தம்பிதமற்ற அரசாட்சிப் போக்கைக் கொண்ட ஒரு நாடாக ஆகியிருக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகவும் காணப்படுகிறது. அந்நாட்டின் பன்முக நிலவியல் தோற்றம் பல இனக்குழுமங்களைக் கொண்ட பன்முக அடையாளங்களைக் கொண்ட நாடாக திகழ்கிறது. 

அமேசன் காட்டின் ஒரு பகுதி கொலம்பியாவுக்குள் இருப்பதால் அமேசன் மீதான உலக கரிசனையின் போது கொலம்பியா கடும் விமர்சனங்களுக்கு உள்ளாவதைத் தவிர்க்க முடியாது. கொலம்பியாவின் பெரிய வளமே அது கொண்டிருக்கும் காடு தான். உலகில் 2600 வகையான செம்பனைகள் இருப்பதாக அறியப்படுகிறது. அவற்றில் அதிகமான வகைகள் கொலம்பியாவில் தான் இருக்கிறது. கொலம்பியாவின் தேசிய மரமே மெழுகு பனை (wax palm) தான். தென்னை மரம்போல மெல்லிய - உயரமானதாக அது இருக்கும். பனை வகையிலேயே உயரமானதும் அது தான். 200 அடிகள் வரை வளரக் கூடிய அது 100 வருடங்கள் வரை கூட வாழக் கூடியது.

மாபியாக்களின் தேசம்

இடதுசாரிகளின் வலுவான போராட்டம், அரசாங்கத்தின் ஆயுத அடாவடித்தனம், துணை இராணுவக் குழுக்கள், அரசாங்கத்தின் அனுசரணை பெற்ற வலதுசாரி ஆயுதக் குழுக்கள், மாபியா குழுக்கள் என பல்வகைப்பட்ட வன்முறைகள் அதிகரித்த நாடாக அது இருக்கிறது. இந்தப் பின்னணியில் இருந்துதான் அங்குள்ள பசுமைக் காடுகளின் பாதுகாப்பு, அதன் மீதான கரிசனை, செம்பனை உற்பத்தியில் செலுத்தும் தாக்கம் என்பனவற்றை நோக்க வேண்டும். எரியும் வீட்டில் பிடுங்குவது லாபம் என்பார்கள். இங்கு இந்த சூழலை பயன்படுத்தி உலக கார்ப்பரேட் மாபியா நிறுவனங்கள் தாராளமாக கடைவிரித்துள்ளன. ஒரு தரப்பு ஆதரிக்காவிட்டால் மறுதரப்பிடம் இருந்தாவது லாபம் சம்பாதிக்கும் கைங்கரியத்தை தாராளமாக கைகொள்கிறார்கள். உலக நாடுகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து சுற்றுச் சூழல் அமைச்சு செம்பனை எண்ணெய் உற்பத்தி செய்யும் 21 பிரதான கம்பனிகளுடன் காடழிப்பைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை செய்துகொண்டது. ஆனால் அது வெறும் கண் துடைப்பே என்று சூழலியலாளர்கள் பலர் விமர்சிக்கின்றனர்.


போராட்டக் குழுக்கள் இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களைப் போலவே தமது கட்டுப்பாட்டில் பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்து போர் புரிந்து வந்தது. அரசுக்கும் பிரதான இடதுசாரிப் போராளிக் குழுவுக்கும் இடையில் (Armed Forces of Colombia-People’s Army -FARC-EP) 2016ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதன் மூலம் ஐந்து தசாப்த கால போர் முடிவுக்கு வந்தது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு நோர்வேயும் கியூபாவும் அனுசரணை வழகியிருந்தன. அதுவரைகால போரில் 220.000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

உலக போதைப்பொருள் உற்பத்தியிலும், வர்த்தகத்திலும் பெரிய இடம் கொலம்பியாவுக்கு உண்டு. உலக போதைப்பொருள் உற்பத்தியில் 75% சதவீதம் கொலம்பியாவில் இருந்து தான் வெளிச்செல்கிறது.  தீவிரவாத இயக்கங்களும் கூட தமது நிதித் தேவையை ஈடுசெய்ய போதைப்பொருள் உற்பத்தியில் இறங்கியிருப்பது உலகளவில் அறிந்த விடயம்.

உலகில் அதிகளவு சூழலியலாளர்கள் கொல்லப்படுவது லத்தின் அமெரிக்க நாடுகளில் தான். 2017இல் மாத்திரம் உலகம் முழுவதும் 207 பேர் கொல்லப்பட்டனர். பிரேசில் பிலிப்பைன்ஸ், கொலம்பியா ஆகிய நாடுகள் மிகவும் ஆபத்தான நாடுகளாக அறிவிக்கப்பட்டன. கொலம்பியாவில் கடந்த வருடம் 27 சூழலியலாளர்கள் கொல்லப்பட்டனர். 

கடந்த மாதம் ஒஸ்லோவில் நிகழ்ந்த காடழிப்புக்கு எதிரான மாநாட்டில் கொலம்பியாவைச் சேர்ந்த இராணுவத் தளபதியொருவர் தான் அந்நாட்டுப் பிரதிநிதியாக வந்திருந்தார். அங்கு வந்திருந்த கொலம்பிய சூழலியல் செயற்பாட்டாளர்கள் கொலம்பியாவின் இராணுவவாத போக்கு பற்றி பகிரங்கமாக கருத்துவெளியிட்டார்கள்.

கொலம்பியாவில் செம்பனை உற்பத்தியை 1945 ஆம் ஆண்டு தொடக்கி வைத்ததே ஒரு அமெரிக்க கார்ப்பரேட் கம்பனி தான். ஏற்கெனவே இருந்த பாரிய வாழைமரத் தோட்டங்களை அழித்துத்தான் பதிலாக செம்பனை செய்கை தொடங்கப்பட்டது.

செம்பனை உற்பத்தியில் லத்தின் அமெரிக்க நாடுகளிலேயே முதன்மை இடத்தையும் உலகில் நான்காவது இடத்தையும் வகிக்கிறது கொலம்பியா. செம்பனை எண்ணெய் உற்பத்தி பெரும் இலாபமீட்டும் துறையாக இருந்ததால் மேலதிக இலாபமீட்டுவதற்கென எந்தவிதமான தீமைகளையும் கணக்கிற் எடுக்காமல் குருகுவளிகளைக் கையாண்டு வருகின்றன. அதன் விளைவு காடழிப்பு, பறவைகள் - விலங்குகளின் அழிவு, வளிமாசடைய செய்தல், பழங்குடி மக்களின் இருப்பையும் வாழ்வாதாரத்தையும் நாசமாக்குதல், பெருமளவு கார்பன்டை ஆக்சைட் வெளியீடு என பாரிய தீமைகளை ஏற்படுத்திக் கொண்டு செல்கிறது.


யுத்த நிறுத்தம், அமைதிப் பேச்சுவார்த்தை என்பவற்றின் ஒரு அங்கமாக போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தின் அபிவிருத்திக்காக புதிய பொருளாதாரத் திட்டங்கள், விவசாயத் திட்டத்தை விரிவாக்குவது என்பன அறிவிக்கப்பட்டன. இந்த புதிய மறுசீரமைப்புத் திட்டத்தின் படி சட்டவிரோத செம்பனை உற்பத்திக்கெல்லாம் சட்டபூர்வ அங்கீகாரம் கொடுத்து விசாலிப்பதற்கு வழி சமைத்தது. சுற்றுச் சூழல் விடயத்தில் எந்தவித ஆரோக்கியமான மாற்றத்தையும் இந்த அமைதி முயற்சியால் மேற்கொள்ள முடியவில்லை.

பேச்சுவார்த்தை முடிந்ததும் ஒரே வருடத்தில் 42% வீதத்தால் செம்பனை எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பனையோடு தொடர்புடைய ஏற்றுமதியால் மாத்திரம் 414 மில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருவாயாக 2017இல் கொலம்பியா பெற்றுக்கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கே அதன் பெருமளவு செம்பனை எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மேலும் கொலம்பியாவின் உள்நாட்டு எரிபொருள் தேவையை கணிசமான அளவு ஈடுசெய்கிறது செம்பனை எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் உயிரி எண்ணெய் (Bio fuel).

கடந்த ஆண்டு (2017) கொலம்பிய விவசாயத்துறை, காணித்திட்டமிடல் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கொலம்பிய நிலத்தில் 16 மில்லியன் ஹெக்ரெயர் நிலம் செம்பனை உற்பத்திக்கு தகுதியான நிலமாக கணிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியிட்டது. அது மொத்த கொலம்பிய நிலப்பரப்பில் 14% சதவீதமாகும்.


இலங்கை கற்க வேண்டிய பாடம்

உள்நாட்டு யுத்தம், அதில் குளிர்காய வந்த செம்பனை கார்ப்பரேட் கம்பனிகள், அதற்குப் போட்டியாக வளர்ந்திருக்கும் மாபியா வர்த்தகம், எதிர்க்கும் மக்கள் மீது ஏவப்படும் படுகொலைகள் மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அக்கிரமக்காரர்களுக்கு சலுகை செய்யும் மக்கள் விரோத அரசு என்கிற நிலைமையை ஒரு கணம் இலங்கையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஏறத்தாழ இலங்கையின் நிலைமையும் ஏறக்குறைய இதற்கு ஒத்ததாக பயணிப்பதைக் காணலாம். இலங்கையில் செம்பனை உற்பத்தியில் நேரடி ஆயுததாரிகள் நுழையாவிட்டாலும் நாகரிக போர்வையில் கார்ப்பரேட் கம்பனிகள் கோலோச்சுவத்தையும் அவற்றுக்கு அரசே போதிய காணிகளை வழங்கி அரச அனுசரணை வழங்கி ஊக்குவிப்பதும் நடக்கிறது. 

இன்னமும் இலங்கை மக்கள் இது தொடர்பில் போதியஅளவு விழிப்படையவில்லை என்கிற தைரியத்தில் தான் அது நிகழ்கிறது. செம்பனை பற்றிய இலங்கை மக்களின் அறியாமை நிலை தற்போது கணிசமான அளவு மாறிக்கொண்டுவருவதை இப்போதெல்லாம் காண முடிகிறது. செம்பனை உற்பத்தியாளர்கள் கதிகலங்கிப் போய் தற்போது எதிர்ப் பிரசாரத்துக்கென பெருமளவு பணத்தைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ஊடக செய்திகளின் வாயிலாக அறிய முடிகிறது. ஆக, நமக்கு எதிர்ப்பிரச்சாரத்தை எதிர்த்து நிற்கும் பலம் தேவைப்படுகிறது. விழிப்புணர்வுக்கான பணியே அதன் முதன் படியாக இருக்க முடியும். இக்கட்டுரைத் தொடரின் இலக்கும் அது தான்.ஜே.வி.பி: 83 கலவரத்தின் பலிக்கடா - என்.சரவணன்


83 கலவரம் ஒரு கலவரத்தை மாத்திரம் நடத்தவில்லை. இன்னும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இன்னொமொரு பேரழிவுக்கான அத்திவாரத்தயும் இட்டது. இங்கு வடக்கைக் குறிப்பிடவில்லை. தெற்கைத் தான் குறிப்பிடுகிறேன்.

83 இனப்படுகொலை தொடர்பாக உலகக் கண்டனங்களிலிருந்து தப்புவதற்கு ஜே.ஆருக்கு ஒரே வழி வேறு சக்திகளிடம் பழியைப் போட்டுவிடுவதே. இதன் மூலம் அரசாங்கம் தமது அரசியல் எதிரிகளை நசுக்கி ஓரங்கட்டி, அரசியல் எதிரிகளை அரசியல் அரங்கிலிருந்து துடைத்தெறிய முயற்சித்தார்.

77க்குப் பின் அப்போது தான் மீளவும் ஜனநாயக அரசியலுக்கு பிரவேசித்து மக்கள் மத்தியில் பணியாற்றத் தொடங்கிய ஜே.வி.பியையும், பலவீனமுற்றுகொண்டிருந்த பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளான இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் வெறும் சின்னக் கட்சியாக இருந்த ந.ச.ச.கவையும் சேர்த்து தடை செய்தது அரசாங்கம்.

83 காலப்பகுதியை எடுத்துக் கொண்டால் இடதுசாரிக் கட்சிகளின் பொதுப் போக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிரானதாகவும், தமிழ் மக்களின் உரிமைகளைப் புரிந்துகொள்ளாத போக்கும் தலை தூக்கியிருந்த போதும் நேரடியாக தமிழர் எதிர்ப்பு போக்கை அவர்கள் கைகொள்ளவில்லை. அப்படியிருக்க இந்தக் கலவரத்திற்கு அக்கட்சிகள் தான் காரணமென பழிபோடுமளவுக்கு சான்றுகள் இல்லாதபோதும் ஜே.ஆர் அதைச் செய்யத் துணிந்தார் என்றால் 83 கலவரம் அவரை எந்தளவு அரசியல் குருட்டுத் தனத்துக்கு இட்டுச் சென்றிருந்தது என்பதை விளங்கிக் கொள்ளலாம். அரசாங்கத்தால் எந்த சாட்சியத்தையும் முன்வைக்க முடியவில்லை. எழுந்தமானமான குற்றச்சாட்டை சுமத்தி ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகளின் மீது இன அழிப்புப் பழியைப் போட்டு தாம் தப்புவிக்கும் முடிவுக்கு வந்தது ஜூலை 29ஆம் திகதி தான்.

தடை அறிவிப்பு

1983 யூலை 30 அன்று வெளியான வரத்தமானியின் மூலம் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), நவ சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுமே, நடைபெற்ற கலவரங்களுக்குக் காரணமென்றும், அவற்றை அவசரகால நிலை நிறைவடையும் வரை, தடை செய்வதாகவும், குறித்த கட்சிகளோடு எவ்வகையான தொடர்பையேனும் பேணுவோர் அல்லது குறித்த கட்சியினர் பற்றித் தகவல் வழங்காது மறைப்போர், மரண தண்டனை, ஆயுள் தண்டனை, சிவில் உரிமைகளைப் பறித்தல் உள்ளிட்ட கடுந்தண்டனைகளுக்கு ஆளாவார்கள் என்று அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்தது.

இந்தத் தடை வெளியானதோடு அன்றைய அமைச்சரவை பேச்சாளரான ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் அறிவித்தலை விடுத்தார். அதன் படி

யூலை கலவரத்திற்கு சிங்கள தமிழ் கலவரத்தை விட பாரதூரமான சதித்திட்டம் பின்னணியில் இருந்தது என்றும் நான்கு கட்டங்களாக அவை நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டிருந்தது என்றும் அறிவித்தார். முதலாவது கட்டம்; தமிழ் – சிங்கள மக்களுக்கிடையில் இனக்கலவரத்தை உண்டுபண்ணி பரஸ்பர ஆத்திர உணர்ச்சியை ஏற்படுத்துவது. இரண்டாவது கட்டமாக சிங்கள-முஸ்லிம் மக்களுக்கிடையே கலவரத்தை உண்டுபண்ணுவது,  மொன்றாவது கட்டம் பௌத்த – கிறிஸ்தவ முரண்பாடுகளை விளைவித்து சிங்கள மக்களுக்குள்ளேயே சிக்கலை ஏற்படுத்துவது, நான்காவது கட்டம் பாதுகாப்புத் துறைக்குள் பிளவுகளை உருவாக்கி அதிகாரத்தைக் கைப்பற்றுவது. இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் அந்நிய நாட்டுச் சதியும் உண்டு என்றும், அவர்கள் வடக்கிலுள்ள தமிழ் பயங்கரவாதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்றும் அவரது ஊடகப் பேச்சில் வெளிப்படுத்தினார். வதந்திகளை நம்பாமல், பரப்பாமல், இந்த நேரத்தில் அரசாங்கத்தை ஆதரித்து நிற்குமாறு நாட்டு மக்களை கேட்டுக் கொள்வதாக இறுதியில் வேண்டுகோள் விடுத்தார் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ்.

அரச பயங்கரவாத வன்செயலை மூடி மறைத்து கற்பனா பூர்வமான குற்றச்சாட்டுக்களையும், வதந்திகளையும் பரப்பிய அரசு வதந்திகளை பரப்புவதையும், அட்டூழியங்களையும் புறச்சக்திகள் மீது சுமத்திவிட்டு பொறுப்புள்ள அரசாங்கமாக காட்ட பிரயத்தனப்பட்டது.

அதுவரை சுதந்திரக் கட்சிக்கு ஆரம்பத்திலிருந்தே பக்க துணையாக இருந்து வந்த இடதுசாரிக் கட்சிகளையும் அதே போல ஏதாவது வழியைக் கையாண்டு அழிக்க சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்தது அரசாங்கம். 83 கலவரத்தை அதற்காகப் பயன்படுத்திக் கொண்டது. அந்த வகையில் கொம்யூனிஸ்ட் கட்சியையும் ஒரு வழி பண்ணியது.

அன்றைய கெடுபிடிப்போரில் அமெரிக்க மற்றும் மேற்குல முதலாளித்துவ சார்பை வெளிக்காட்டுவதற்காகவும், சர்வதேச ரீதியில் தம்மை ரஷ்ய சார்பு சக்தியில்லை என்பதைக் காண்பிப்பதற்கான வாய்ப்பாகவும் இதனைப் பயன்படுத்திக் கொண்டது அரசாங்கம். இடது சாரிக் கட்சிகளின் மீதான தடையைக் காண்பித்து அமெரிக்கா, பிரித்தானியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற ஏகாதிபத்திய முகாமிடம் உதவி கோரியதும் இந்த வகைப்பட்டது தான். இடதுசாரிகள் மீது நெடுங்காலமாக ஜே.ஆருக்கு இருந்து வந்த ஒவ்வாமைக்கு (அலர்ஜி) உடனடி-தற்காலிக மருந்தாக இந்தத் தடையைப் பயன்படுத்திக் கொண்டார் என்றே இன்னொருவகையில் கூறவேண்டும்.


ஜே.வி.பி நிரபராதி!?

குறைந்தபட்சம் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து பழி சுமத்தப்பட்டிருந்த அந்த மூன்று இடது சாரிக் கட்சிகளின் மீதாவது முறைப்படி விசாரணை செய்து சாட்சியங்களுடன் அம்பலப்படுத்தியிருக்க வேண்டும் ஆனால் அதெப்படி செய்ய முடியும்.

இடதுசாரிக் கட்சிகளை தடை செய்ததோடு கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என்று 31 பேரின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டதுடன், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியது அரசாங்கம். ஜே.வி.பி.யின் அன்றைய பொதுச் செயலாளர் லயனல் போபகே, உட்பட 30 பேர் கைதானார்கள். கொம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் கைதானார்கள். ரோகண விஜேவீர, கமநாயக்க போன்றரின் தலைகளுக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த கட்சிகளின் தலைவர்கள் பலர் சரணடைந்தனர். இந்த நடவடிக்கை இந்த மூன்று கட்சிகளும் தலைமறைவு அரசியலுக்குத் தள்ளப்பட்டது. 6 மாதங்களின் பின்னர் ந.ச.ச.க., கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சரணடைந்தார்கள். வாசுதேவ நாணயக்கார, விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் தலைமறைவாக மறைந்து வாழ்ந்து பின்னர் விஜய குமாரதுங்கவுடன் சென்று பொலிசில் சரணடைந்தார்கள்.

இந்தத்  தடை பற்றிய அரசின் நியாயங்கள் வெற்றியளிக்காது போகவே ந.ச.ச.க. மற்றும் கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியன மீதான தடைகள் நீக்கப்பட்டன. அப்படி நீக்கப்பட்டமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது அக் அக்கட்சிகளுக்கு கலவரத்துடன் தொடர்பில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பது போலவும் ஜே.வி.பிக்கு நிரூபிக்கப்படவில்லை என்பது போலவும் அரசாங்கம் காட்டிக்கொண்டது. ஆகவே ஜே.வி.பி. மீதான தடையை மட்டும் அரசாங்கம் நீக்கவில்லை. 

தமது கட்சியின் மீதான தடையை நீக்கக் கோரி விஜேவீர பல முறை ஜே.ஆருக்கு கடிதம் எழுதியிருந்த போதும் அது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக ஜே.வி.பி தலைமறைவு அரசியலுக்கு தள்ளப்பட்டது. காலப் போக்கில் ஜே.வி.பியினர் மீதான அடக்குமுறையும் கட்டவிழ்க்கப்பட்டது. இதன் காரணமாக ஜே.வி.பி.யினர் தமது தற்காப்புக்காக ஆயுதபாணிகளாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டனர்.

சர்வஜன வாக்கெடுப்பு முறைகேடானது என்று ஜேவிபி தொடுத்த வழக்கு ஜே.வி.பிக்கு சாதகமாக சென்று கொண்டிருந்தது. அந்த வழக்கில் ஜே.வி.பி வெற்றிபெற்றால் அரசாங்கத்துக்கு அது மிகப் பெரும் அவமானமாகவும், தோல்வியாகவும் முடியும். அரசாங்கம் கலைக்கப்பட்டு மீண்டும் பொதுத்தேர்தலுக்குப் போக நேரிடும். ஆக, ஜே.வி.பி தடை செய்யப்பட்டதன் மூலம் அவர்களை தலைமறைவுக்கு அனுப்பி வழக்கிலிருந்து தப்பியது அரசாங்கம்.

ஒரு வருடத்துக்குப் பின்னர் அத்தேர்தல் பற்றி தேர்தல் ஆணையாளரால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் விஜேவீர முன்வைத்திருந்த பல குற்றச்சாட்டுக்கள் உறுதிசெய்யப்பட்டிருந்தன என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இறுதியில் இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சிக்கு வித்திட்டு 60,000கும் மேற்பட்ட இளைஞர்களை காவு கொடுத்தது அரசாங்கம்.

நன்றி - அரங்கம்


நாகரீகத்திற்காக 20வது திருத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் !


கெளரவ மதத் தலைவர்களே, அன்பார்ந்த தாய், தந்தையரே, சகோதர, சகோதரிகளே,

1978ம் ஆண்டு ஏகாதிபத்தியத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஜே.ஆர். ஜயவர்தனாவினால் கொண்டுவரப்பட்ட எதேச்சதிகார ஜனாதிபதி அதிகாரத்தை கடந்த 40 வருட காலமாக பெரும்பாலும் நாட்டுக்கும் மக்களுக்கும் சாதகமாக இல்லாமல் பாதகமானதாகவே செயற்படுத்தியுள்ளது.

இதனாலேயே இந்த ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற ஆணித்தரமான கருத்தியல் சமூகத்தில் எழும்பி வந்தது. ஆரம்பத்திலிருந்தே மக்கள் விடுதலை முன்னணி இக்கருத்தியலில் இருந்தது. 1994 ஜனாதிபதியாக பதவியேற்ற சந்திரிக்கா குமாரதுங்க அவர்களும் அதன்பின் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷ அவர்களும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக எல்லா ஜனாதிபதித் தேர்தல்களிலும் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அவ் வாக்குறுதிகள் ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை . 2015 ஜனாதிபதியான மைத்திரிபால சிரிசேனா அவர்களின் பிரதான வாக்குறுதியானதும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வேன் என்றாகும், எனவே வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழ், முஸ்லிம் மக்களின் கனிசமானோர் அவருக்கு வாக்களித்தனர். ஆனால் அவரும் அவ்வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற அறிகுறியேனும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை .

மக்கள் விடுதலை முன்னணி இந்த எதேச்சதிகார ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்காக பாராளுமன்றத்துக்கு 20வது அரசியலமைப்பு திருத்தத்தை சமர்பித்தது இவ்வாறான சூழலிலாகும். ஆனால் இப்போது கடந்த காலங்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்தவர்களும் சில தமிழ், முஸ்லிம் தலைவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களை திசைதிருப்ப முயற்சி செய்து வருகின்றனர். ஆகவே மக்கள் 20வது திருத்தம் தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டியது சாலப்பொறுத்தமானதாகும்.

நிறைவேற்று அதிகாரத்தின் கரும் புள்ளிகள்
இலங்கையில் பதவிக்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளும் தமது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்துக்கு எதிராக பலமுறை செயல்பட்டுள்ளனர். அவற்றுள் சில முக்கியமான சந்தர்ப்பங்கள் கீழ்வருமாறு,

ஜனாதிபதி ஜே.ஆர், ஜயவர்தனா அவர்களின் காலகட்டத்தில் 1980 ஜூலை வேலை நிறுத்தம் ஆகிய இந்த நியாயமான போராட்டத்தை அடக்கு முறைக்குட்படுத்தி ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அத் தொழில்களிலிருந்து விலக்கப்பட்டனர். 1981ல் யாழ்ப்பாணத்தில் நடந்த மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலின் போது கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்ட காடையர்களை ஏவிவிட்டு அத்தேர்தலை குழப்பியடித்ததோடு ஆசியாவிலேயே அறிவுப் பொக்கிஷங்களில் ஒன்றான யாழ் நுாலகசாலையை தீயிட்டுக் கொழுத்தினர். 1983ல் இந்நாட்டில் அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய இனக்கலவரத்தை மூட்டி ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்து. உடமைகளை தீக்கிரையாக்கியதோடு அதன் திரைமறைவில் நின்று மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட 13 கட்சிகளை அன்று தடைசெய்யப்பட்டது, இந்நாட்டு வரலாற்றில் பாரிய அழிவை ஏற்படுத்திய இலட்சக் கணக்கான உயிர்களை பலியெடுத்து இன்றும் அதன் தாக்கம் பல தாய்மார்களின் முன் எதிரொலிக்கும் 30 வருட யுத்தத்துக்கு வித்திட்டதும், அதன்பின் பயங்கரவாத ஒழிப்புச் சட்டம் போன்ற அடக்குமுறை சட்டங்களை கொண்டு வந்ததும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியே ஆகும். அதன்பின் ஜனாதிபதி ஜயவர்தனா அவர்கள் 1987ல் தான்தோன்றித் தனமாக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் விளைவாக இந்திய இராணுவம் வடக்கு, கிழக்குக்கு வந்திரங்கியதோடு அவர்களால் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதும் பல இளைஞர்களை கொள்ளப்பட்டதும் எவராலும் மறந்துவிட முடியாது.

ஜனாதிபதி பிரேமதாசவின் காலகட்டத்தில் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி புலிகளின் தலைவர்களை கொழும்புக்கு வரவழைத்து ஹில்டன் ஹோட்டலில் தங்கவைத்து ஆயுதங்கள் மற்றும் நிதி வழங்கப்பட்டமையும், 1990ம் ஆண்டு காலகட்டத்தில் அப்பாவி தமிழ் இளைஞர், யுவதிகளை கைது செய்து கொலை செய்யப்பட்டதோடு பலர் காணாமலாக்கப்பட்டதால் அவர்களின் பெற்றோர்கள் இன்றும் கண்ணீர் சிந்திக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களின் காலகட்டத்தில் நாட்டுக்கு பாதகமான முறையில் அரசு நிறுவனங்களை வெளிநாடுகளுக்கு தாரைவார்த்தல், நி. யாயமான வேலைநிறுத்த போராட்டங்களை அடக்குமுறை செய்து அன்சல் லங்கா நிறுவனத்தின் தொழிலாளரை சுட்டுக்கொலை செய்தமை, அளவுக்கு மீறிய அமைச்சரவையை நியமித்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத் தி 18வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து குடும்ப ஆட்சிக் கு வழிவகுத்தது, யுத்தம் நிறைவடைந்தாலும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவ ஆட்சியை நடத்தி ஜனநாயக ரீதியில் செயற்பட்ட அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்தி வன்முறையை கட்டவிழ்த்தியதோடு நின்று விடாமல் வெள்ளைவான் கடத்தல் போன்ற நிகழ்வுகளும் நடந்தது மறந்துவிட முடியாது. அதேபோன்று அலுத்கம, தர்காநகர் போன்ற பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறை யை கட்டவிழ்த்து விட்டு பல கடைகளையும் வீடுகளையும் தீக்கிரையாக்கப்பட்டதும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை யின் கீழ் ஆகும், நீதியரசர் சிரானி பண்டா ரநாயக்க அவர்களை விலக்கியமை, ஊடகவியலாளர்களை தாக்கியமை, ஊடக நிறுவனங்களை தீக்கிரையாக்கியமை, நிராயுதபாணி மக்களை சுட்டுக் கொலை செய்தமை, ஜனாதிபதி மன்னிப்பு வழங்களுக்கு ஏற்ப குற்றவாளிகளை, கொலை காரர்களை விடுதலை செய்தமை போன்றவற்றை நிறைவேற்று ஜனாதிபதி முறையை பயன்படுத்தியே செய்தனர். எனவே தனிநபர் ஒருவர் வசமுள்ள இந்த எதேச்சதிகார நிறைவேற்று அதிகாரத்தை தோற்கடிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

20வது திருத்தம் என்றால் என்ன?
20வது திருத்தம் என்பது ஜனாதிபதி முறையை முற்றாக இல்லாதொழிப்பதற்கு கொண்டுவரப்பட்ட யோசனைகள் அல்ல. ஜனாதிபதி பதவியில் உள்ள எதேச்சதி காரத்தை கட்டுப்படுத்துவதற்கு கொண்டுவரப்படுகின்ற யோசனைகளாகும். தொடர்ந்தும் ஜனாதிபதி அரசத்துறை பிரதானியும், நிறைவேற்றின் பிரதானியும், ஆயுதப்படைகளின் தளபதியுமாவார். ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது பாராளுமன்றத்தினாலாகும். ஒரு நாட்டின் ஆட்சித்துறையில் சட்டவாக்க, நிறைவேற்று, நீதி மன்றம் ஆகிய 03 பிரதானமான துறைகள் காணப்படும். இதில் அரசாங்கத்தின் பிரதானி பிரதமராவார். சட்டவாக்க துறை, சட்டங்களை தீட்டும் முழு உரிமையும் பிரதமர் உள்ளிட்ட பாராளுமன்றத்துக்கு கிடைக்கும். 20வது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றின் அதிகாரம் தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் உள்ளது. ஆனால் ஜனாதி பதி எப்பொழுதும் பாராளுமன்றத்தின் மற்றும் அமைச்சரவையின் கவனத்தின்கீழ் இருப்பதே இப்போதிருக்கும் நிலையைவிட மாற்றமானதாகும். எனவே ஜனாதிபதி. க்கு எதேச்சதிகாரமாக ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்த முடியாது.

20வது திருத்தம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகுமா?
20வது திருத்தத்துக்கு அமைய அரசத்துறையின் பிரதானி ஜனாதிபதியாவார். அதேபோன்று ஜனாதிபதி நிறைவேற்றின் பிரதானியும், ஆயுதப்படையின் தளபதியுமாவார். இதற்கேற்ப அரசின் பாதுகாப்பு முக்கியமாக ஜனாதிபதியிடம் தங்கியிருக்கும். அரசுக்கு எதிராக ஜனாதிபதிக்கு தடையின்றி தலையிட முடியும். அவருக்கு தொடாந்தும் யுத்தத்தை பிரகடனப்படுத்துவற்கோ அல்லது சமாதானத்தை பிரகடனப்படுத் துவற்கோ உரிமையுள்ளது. எனவே 20வது திருத்தத்தின் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்தியுள்ளது.

20வது திருத்தத்தால் பிரதமர் எதேச்சதிகாரமாக நடப்பாரா?
20வது திருத்தத்திற்கு அமைய அரசத்துறையின் பிரதானி ஜனாதிபதியாவார். அரசாங்கத்தின் பிரதானி பிரதமராவார். பிரதமருக்கு இன்றைய ஜனாதிபதியைப் போன்று எதேச்சதிகாரமாக செயல்படுவதற்கு பாராளுமன்ற முறையில் ஒருபோதும் முடியாது. எனவே அவருக்கு எதேச்சதிகாரமான அதிகாரங்கள் கிடைக்காது.

இத்தருணத்தில் இன்னமும் இத்திருத்தங்கள் சட்டவரைவாக காணப்படுவதால் இதன் உள்ளடக்கத்தின் அடிப்படை விடயங்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் ஆரோக்கியமான திருத்தங்களை கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது.

இன்று பொருளாதார, சமூக, அரசியல் ஆகிய துறைகளில் பாரிய சரிவி னை நாடு எதிர்கொண்டுள்ளமை நாம் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். மக்கள் முகம் கொடுத்துவரும் எந்தப்பிரச்சினைக்கும் தீர்வு வழங்குவதற்கு அதிக காரத்திலுள்ள எந்த குழுவுக்கும் முடியாது என்பது இன்று நன்கு உறுதியாகியுள்ளது. கடந்த 70 வருட ஆட்சி காலம் இதற்கு சிறந்த சாட்சியாகும். தீர்வுகளை கொடுக்க முடியாத ஆட்சியாளர்கள் சர்வாதிகார எதேச்சதிகாரத்தின் நிழலை தேடுவது வியக்கத்தக்க ஒன்றல்ல. எதேச்சதிகாரத்துக்கு செய்ய முடிவது, உரிமைகளை கோரி போராடும் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதும், பிரமாண்டமான நிதி மோசடிகளை செய்தாலும் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதும், குடும்ப ஆட்சியை ஏற்படுத்தலும், இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்பி மக்களை பிளவுபடுத்தலும், நாட்டை இன்னும் இன்னும் அதள பாதாளத்தில் தள்ளுவதுமாகும். எனவே நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடிவது ஹிட்லர் பாணியிலான ஆட்சியாளனை தேர்ந்தெடுப்பதால் அல்ல. பிரச்சினைகளை தீர்க்க முடிவது உண்மையான மக்கள்மய வேலைத்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதால் ஆகும். அதற்காக ஜனநாயக அவகாசம் மிகமுக்கியமானதாகும். இதனாலேயே 20வது திருத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டியது இச்சமயத்தில் சமூக பொறுப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  • நாகரீகமான சமூகத்திற்காக எதேச்சதிகார நிறைவேற்று முறையை தோற்கடிப்போம்!
  • ஜனநாயகத்திற்காக போராடுவோம்!
  • 20வது திருத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்!


2018.07.02
மக்கள் விடுதலை முன்னணி
இனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்

இலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம்


83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தினார்கள் இனவாதிகள். இலங்கையின் சிங்களத் திரைப்படத்துறையை (இலங்கைக்கே திரைப்படத்துறையை) உருவாக்கி அறிமுகப்படுத்தியது சிங்களவர்கள் அல்லர். தமிழர்களே. சிங்கள சினிமாத்துறையை ஆரம்பித்து வைத்தது மட்டுமன்றி அதனை ஆரம்பத்தில் வளர்ப்பதிலும் முக்கிய இடத்தை தமிழர்கள் வகித்தார்கள். இலங்கையின் முதலாவது பேசும் திரைப்படமான “கடவுனு பொரொந்துவ” (உடைந்த வாக்குறுதி) 1947 ஜனவரியில் வெளிவந்தது. அதில் நடிகர்கள் பலர் சிங்களவர்களாக இருந்தாலும் அதனை உருவாக்கியவர்கள் தமிழர்களே. அதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்தி, தமிழ் திரைப்படங்களே ஆக்கிரமித்திருந்தன.

வரலாறு

“கடவுனு பொரொந்துவ” திரைப்படத்தைத் தயாரித்த எஸ்.எம்.நாயகம் (சுந்தரம் மதுரநாயகம்) மதுரையில் சோப்பு கம்பனி வைத்திருந்த வர்த்தகர். அவருக்கு தனியான திரைப்பட ஸ்டூடியோவும் திருப்பரங்குன்றத்தில் இருந்தது. அதில் அவர் ஏற்கெனவே திரைப்படங்களை உருவாக்கியிருந்தார். அவரின் தயாரிப்பில் 1946இல் உருவான “குமரகுரு” என்கிற திரைப்படத்தை இயக்கியவர் பெங்காலியரான ஜோதிஸ் சின்ஹா. அத் திரைப்படம் இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஓகஸ்ட் 15 அன்று வெளியானது.

உலகின் முதலாவது திரைப்படம் 1895 இல் திரையிடப்பட்டது. அது பேசாத் திரைப்படமாகத்தான் (Silent movie) வெளிவந்தது. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பின்னர் தான் இலங்கையில் பேசும் பேசும் படத்தை மக்கள் கண்ணுற்றார்கள். 

ஆனால் 1925 இல் இலங்கையில் முதலாவது பேசாத் திரைப்படம் உருவாக்கப்பட்டது. அத்திரைப்படத்தின் பிரதான கதாநாயக பாத்திரத்தை ஏற்று நடித்தவர் கலாநிதி என்.எம்.பெரேரா (பிற்காலத்தில் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராக இருந்தவர்). அவருக்கு அப்போது 20 வயது தான். இலங்கையின் முதலாவது திரைப்படக் கதாநாயகன் அவர் தான். “ராஜகீய விக்ரமய” (ராஜரீக சாகசம் - Royal Adventure) என்கிற தலைப்பிலான அந்தத் திரைப்படத்தை இயக்கியவரும் தமிழகத்தைச் சேர்ந்த குப்தா என்கிற தமிழர் தான். அதனைத் தயாரித்தவர் டி.ஏ.நூர்பாய் என்கிற போரா சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர். நூர்பாய் அதுவரை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரைப்படங்களை தருவித்து திரையரங்குகளுக்கு விநியோகித்து வந்த வர்த்தகர். இதில் உள்ள விசித்திரம் என்னெவென்றால் இலங்கையில் உருவாக்கப்பட்ட அந்த முதல் திரைப்படம் இலங்கையர் எவரும் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. அது 1925 இல் பம்பாயிலும், சிங்கப்பூரிலும் காண்பிக்கப்பட்டது. இலங்கையில் திரையிடுவதற்காக கொணர்வதற்காக இருந்த வேளையில் வியாபார போட்டியின் காரணமாக அது பம்பாயில் எரிக்கப்பட்டுவிட்டது.

1901இலேயே முதன்முதலாக இலங்கையில் திரைப்படம் தனிப்பட்ட ரீதியில் காண்பிக்கப்பட்டது. அன்றைய ஆளுநர் வெஸ்ட்  ரிஜ்வே மற்றும் “இரண்டாவது போவர் யுத்த” கைதிகளுக்காகவும் காண்பிக்கப்பட்ட குறுந்திரைப்படம் அது. அதன் பின்னர் குறும் ஆவணப்படங்களாக போவர் யுத்த வெற்றி பற்றியும் விக்டோரியா இராணியின் மரணச்சடங்கு என்பவை இலங்கையில் வாழ்ந்த பிரிட்டிஷ்காரர்களுக்காக காண்பிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் சினிமாக்கொட்டகை அமைத்து “பயஸ்கோப்” காட்டும் முறை அறிமுகமானது. 1903 இலேயே நிலையான தியட்டர் “மதன் தியட்டர்” பேரில் உருவாக்கப்பட்டு இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டது.

கெப்பிட்டல் தியாட்டரின் உரிமையாளர் அன்றைய பிரபல முஸ்லிம் வர்த்தகரான எப்.டீ.பாரூக். சிங்களத் திரைப்படமொன்றை தயாரிக்கும் நோக்கில் பாம்பே பைனியர் பில்ம்ஸ் கொம்பனி என்கிற ஒன்றை 1938இல் உருவாக்கி ஷாந்தா என்கிற பெயரில் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அத்திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்வதற்காக சிங்கள மேடை நாடக நடிகர்களை  பம்பாய்க்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தார். அதற்கிடையில் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்து அந்த முயற்சி கைகூடாமல் போய்விட்டது.

1946இல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.துரைசிங்கத்தின் முயற்சியில் “லைலா மஜுனு” கதையைத் தழுவி “திவ்ய பிரேமய” என்கிற ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக படக்குழுவுடன் மெட்ராஸ் புறப்பட்டார். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது இடைநடுவில் நிதித்தட்டுப்பாடு ஏற்பட்டு அனைத்தும் ஸ்தம்பிதமானது. படக்குழுவினரும் சில நாட்களில் இலங்கை திரும்பிவிட்டனர். அத்தோடு அந்த முயற்சியும் நின்றுபோனது. அது அப்போதே வெளிவந்திருந்தால் அது தான் இலங்கையின் முதலாவது பேசும் சினிமாவாக இருந்திருக்கும். ஆனால் அது பின்னர் 1948 இல் வெளியானது.
தமிழர்களால் உருவாக்கப்பட்ட சிங்கள சினிமாத் துறை

எஸ்.எம்.நாயகத்தின் சிங்கள நண்பர்களின் பரிந்துரைக்கிணங்க அவர் 1947இல் “கடவுனு பொரொந்துவ” திரைப்படத்தை சித்திரகலா மூவிடோன் (Chitrakala Movietone) என்கிற திரைப்பட நிறுவனத்தின் பேரில் திருப்பரங்குன்றத்தில் இருந்த அவரது ஸ்டூடியோவிலேயே  முழுவதும் படமாக்கினார். இலங்கையில் இருந்து படக்குழுவினரை அவர் கப்பலில் ஏற்றிக்கொண்டு சென்றார்.  “கடவுனு பொரொந்துவ” திரைப்படத்தை ஜோதிஸ் சின்ஹாவைக் கொண்டு தான் எஸ்.எம்.நாயகம் தயாரித்தார். ஒளிப்பதிவை கே. பிரபாகர் செய்தார். மொகிதீன் பேக் மற்றும் தென்னிந்தியத் திரைப்படப் பாடகர்களான ஏ. எம். ராஜா, ஜிக்கி, ஜமுனாராணி, என். சி. கிருஷ்ணன் (என்.எஸ்.கிருஷ்ணன் தானா என்பதை உறுதிசெய்துகொள்ள முடியவில்லை) ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர். 12 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

திரைப்படத்திற்கு ஆர். நாரயண ஐயர் இசையமைத்திருந்தார். அவருக்கு உதவியாளராக ஆர்.முத்துசாமி பணியாற்றினார். (ஆர்.முத்துசாமி அப்சராஸ் இசைக்குழுவின் தலைவர் மோகன்ராஜின் தகப்பனாவார்.) ஆர்.முத்துசாமி பின்னர் இலங்கையில் வெளியான பல சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.

இந்தத் திரைப்படத்தின் முதலாவது காட்சி கிங்ஸ்லி தியட்டரில் காண்பிக்கப்பட்டபோது அன்றைய முதன்மை அமைச்சராகவும் பிற்காலத்தில் இலங்கையின் முதலாவது பிரதமராகவும் ஆன டீ.எஸ்.சேனநாயக்கவின் தலைமையில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

கிங்க்ஸ்லி தியட்டரில் "கடவுனு பொரொந்துவ" முதற் காட்சிக்குப் பின் எஸ்.எம்.நாயகம் அவர்களுடன் கலைஞர்கள் - 21.01.1947
கிங்ஸ்லி தியேட்டரில் அப்போது 127 நாட்கள் ஓடியது. அதுபோல ஜிந்துப்பிட்டி டோக்கீஸ் (பிற்காலத்தில் முருகன் தியட்டர் என்று பெயர் மாற்றம் பெற்றது) தியட்டரில் 42 நாட்கள் ஓடியிருக்கிறது. மைலன் தியட்டரில் 28 நாளும், மருதானை நியூ ஒலிம்பியா மற்றும் நாடெங்கிலும் அப்போது இருந்த பல தியட்டர்களிலும் காண்பிக்கப்பட்டிருக்கிறது.

எஸ்.எம்.நாயகம் ஆரம்பத்தில் குமரகுரு (1946), தாய் நாடு (1947) இரு தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்ததன் பின்னர் எந்தவொரு தமிழ்த் திரைப்படங்களையும் தயாரிக்கவில்லை. ஆனால் 1960 ஆம் ஆண்டுக்கிடையில் மிகவும் பிரபலமான 8 சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார். 

இந்தத் திரைப்படத்தில் நடித்த பலர் முதலாவது என்கிற பெருமைக்கு உள்ளானார்கள். ருக்மணி தேவி இலங்கையின் முதலாவது திரைப்பட கதாநாயகி என்று அறியபடுவதை நீங்கள் அறிவீர்கள்.

சிங்கள சினிமாத்துறை நெடுங்காலமாக இந்தியாவின் தயவிலேயே இருந்துவந்தது. தொழில்நுட்பத்துறை ஸ்டூடியோ பின்னணி என அனைத்துக்கும் இந்தியாவுக்கு சென்றுதான் படத்தை முடித்தக் கொண்டுவந்தார்கள். பின்னணி இசை, இசைக்கலவை, படத்தொகுப்பு கூட அங்கேயே மேற்கொள்ளப்பட்டதால் தமிழ்நாட்டிலிருந்த பாடகர்களையே சிங்களத்தில் பாட கற்பித்து பாடவைத்தார்கள்.

முதலாவது திரைப்படம் தோன்றி முதல் 9 வருடங்கள் இந்தியாவில் தங்கியிருந்த சிங்கள சினிமாத்துறையை மாற்றினார் சமீபத்தில் மறைந்த லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ். 1956 இல் அவர் இயக்கிய “ரேகாவ” என்கிற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முறையாக இந்திய ஸ்டூடியோவை விட்டு விலகி இலங்கைக்கான சுதேசிய திரைப்படம் உருவாக்கப்பட்டது. 1956 என்பது “சுதேசியம்” என்கிற பேரில் நிகழ்ந்த இனத்துவ- மதத்துவஅரசியல் மாற்றங்களை இந்த இடத்தில் பொருத்திப் பாருங்கள்.

ஏற்கெனவே இலங்கையின் திரையரங்குகளில் ஆக்கிரமித்திருந்த தமிழ், இந்தி திரைப்படங்களால் கவரப்பட்டிருந்த நிலையில் தென்னிந்தியாவில் தயாரான சிங்களத் திரைப்படங்கள் சிங்கள மக்களின் இரசனையிலிருந்து அந்நியமாக இருக்கவில்லை. ஆனால் காலப்போக்கில் அவர்கள் தமது சுயத்தை அங்கு காணவில்லை என்பதை உணரத் தொடங்கினார்கள். தமது பண்பாட்டிலிருந்து விலகியிருப்பதை கண்டுகொண்டார்கள். அப்போது அவர்கள் சுதந்திரத்தையும் அடைந்திருந்தார்கள். தமக்கான சிங்கள அரசை நிறுவிக்கொண்ட சிங்கள சமூகம் தமது கலை - பண்பாட்டு அம்சங்களை மீள்கண்டுபிடிப்புக்கும், மீளுருவாக்கத்துக்கும் உள்ளாக்கினார்கள். சிங்கள சினிமாத்துறை நிமிர்வதற்கு சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு அனுசரணையாக இருந்தது. அது உள் நாட்டில் தமிழ் திரைப்படத்துறையொன்றின் தேவையையும் கண்டுகொள்ளவில்லை. சுதேசிய சினிமாத்துறை என்பது சிங்கள சினிமாத்துறை தான் என்கிற மனநிலை சர்வ சாதாரணமாக குடியிருந்தது.

மறுபுறம் சிங்கள சினிமாவைப் போலவே தமிழ் சினிமாத்துறைக்கான முயற்சியும் இராட்சத இந்திய சினிமாத்துறையின் உறபத்தியால் விழுங்கப்பட்டுக்கொண்டிருந்தது. உள்நாட்டு உற்பத்திச் செலவைக் கருத்திற்கொள்ளும்போது சந்தையில் ஏற்கெனவே விற்பனைக்கு விடப்பட்ட இந்திய திரைப்படங்களை திரையிடுவது எளிமையாகவும், இலாபகரமாகவும் இருந்தது. 70களில் சிறிமா அரசாங்கத்தால் இந்திய திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தான் ஈழத்து தமிழ் சினிமா கூட சற்று தலைநிமிர வாய்ப்புகளைத் திறந்தன. சிங்களத் திரைப்படங்களுக்கும் தான்.

முதலாவது தமிழ் திரைப்படம்

ஈழத்து தமிழ் சினிமாவுக்கான தேவையை உணர்ந்தபோது தமிழர் தரப்பில் அதற்கான பலமும், வளமும், அனுசரணையும் இருக்கவில்லை. இலங்கையின் முதலாவது சிங்கள சினிமாவை தயாரித்தவர் தமிழர் என்பதுபோல முதலாவது தமிழ்ப்படத்தை கிறேஷன் ஜெயமான்ன என்கிற சிங்களவர் ஒருவரே இயக்கினார். 1947 இல் வெளியான  “செங்கவுனு பிலிதுரு” (மறைந்திருக்கும் விடை), என்கிற அந்த திரைப்படம் தமிழ் மொழிமாற்று திரைப்படமாக “குசுமலதா” என்கிற பெயரில் 1951இல் வெளியானது. மொழிமாற்று என்பதால் அதை முதலாவது தமிழ் திரைப்படமாக பலர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் அறிஞர் அண்ணா எழுதிய “வேலைக்காரி” நாவலைத் தழுவி “சமுதாயம்” என்கிற பெயரில் 1962இல் வெளிவந்த திரைப்படத்தையே இலங்கையில் வெளியான முதல் தமிழ் திரைப்படமாக கொள்ளப்படுகிறது. அதை இயக்கியவரும் ஹென்றி சந்திரவன்ச என்கிற சிங்களவர் தான்.

சுதந்திரத்துக்கு முன்னர் சிங்களத்திரைப்படத்துறை தென்னிந்திய தமிழ் திரைப்படத்துறையில் தங்கியிருந்தது போல பிற்காலத்தில் சுதந்திரமடைந்ததன் பின்னர் தமிழ் திரைப்பட உருவாக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் சிங்கள சினிமாத்துறையில் தங்கிருக்கும் நிலை ஏற்பட்டது.  தமிழ், முஸ்லிம் கலைஞர்கள் ஈழத்து சினிமாவில் பெரும்பங்கு வகித்த போதும் ஈழத்து திரைப்படங்கள் எதுவும் சிங்களத் திரைப்படத்துறையினரின் தயவின்றி வெளிவரவில்லையென்றே  கூற முடியும்.

இனப்பிரச்சினை கூர்மைபெற்று தமிழர் கலைகள், பண்பாட்டு வெளிப்பாடுகள் நசுக்கப்பட்ட காணாமால் ஆக்கப்பட்டதன் வரிசையில் முக்கிய இடத்தை ஈழத்து சினிமா அடைந்தது. அதன் மீளுருவாக்கத்துக்கு எந்த நாதியும் இல்லாமல் போனபோது அதை ஒரு பொருட்டாக கருதுவதற்கு சிங்களத் திரைப்படத்துறையோ, அரசோ தயாராக இருக்கவில்லை. இலங்கை சினிமா என்பது இன்றும் சிங்கள சினிமா என்கிற கருதுகோள் தான் நிறுவப்பட்டுள்ளது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

எந்த திரைப்பட உருவாக்கமும் பல இனத்தவர்களின் பங்களிப்போடு தான் வெளிவரமுடியும் என்கிற கருத்தை இங்கு கேள்விக்குட்படுத்தவில்லை. மையப்பிரச்சினையாக இனப்பிரச்சினை கூர்மையடைந்த நாட்டில் இனத்துவம் கலக்காத எதுவும் இல்லை என்பதால் இலங்கை சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, எழுச்சி, வீழ்ச்சி என்பவற்றை இனத்துவ கண்ணாடிக்கூடாகக் காண்பதைத் தவிர்க்க முடியாது.

புறக்கோட்டை போதிமரச் சந்தி - 83
83 ஏற்படுத்திய அழிவு

சிங்கள சினிமாத்துறைக்கு பலத்த அடி 83 கருப்பு ஜூலை சம்பவம் என்கிறார் எழுத்தாளர் நாரத நிஷ்ஷங்க. சிங்கள – தமிழ் திரைப்படங்களின் விநியோகஸ்தகராக அறியப்பட்ட காலோ பொன்னம்பலத்தின் பொரல்லை காரியாலயம் எரிக்கப்பட்டபோது நான் கையறு நிலையில் துரதிர்ஷ்டமானவனாக இருந்தேன். அந்த வீதியில் எறியப்பட்டிருந்த ஆரம்பகால அரிய சினிமா ரீல்களையும், போஸ்டர்களையும் என்னால் முடிந்த அளவு சேர்த்துக் கொடுத்தேன். சிங்கள திரைப்படத்துறையை ஆரம்பித்து, வளர்த்துவிட்டவர்கள் தமிழர்களே. ஆனால் நாடு பூராவும் உள்ள திரையரங்குகள் பல இனவாதத் தீயால் நாசமாக்கப்பட்டன. வெள்ளவத்தை சப்பாயர், தெஹிவள ட்ரியோ, நீர்கொழும்பு ராஜ், நாரஹென்பிட்டிய கல்பனா போன்ற திரையரங்குகளும் எரிக்கப்பட்டன” என்கிறார் அவர்.

சினிமாஸ் உரிமையாளர் கே.குணரத்தினம் தனது மகள் விஜயாவின் பெயரில் ஹெந்தலயில் நடத்தி வந்த பிரபல விஜயா தியட்டர் சிங்களத் திரைப்படங்கள் பலவற்றை காட்சிப்படுத்திய தியட்டர் அதை தீயிட்டு அளித்தது மாத்திரமல்ல அங்கே இருந்த “சங்தேசய”, “தீவரயோ”, “சண்டியா”, “சூர சௌரயா” போன்ற ரீல்கள் அழிக்கப்பட்டு இன்றைய சந்ததிக்கு மீண்டும் அதனைக் காணும் வாய்ப்பை இல்லாமல் செய்தார்கள் இந்தக் கலவரத்தில். இந்தத் திரைப்படங்களில் நடித்த காமினி பொன்சேகா பின்னொருகாலத்தில் ஒரு நேர்காணலில் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்ட செய்தியையும் நாம் காண்கிறோம். விஜயா திரையரங்கு எரிந்து கொண்டிருந்தபோது அங்கு விரைந்த சிநிமாதுரயைச் சேர்ந்த விஜயகுமாரதுங்க, நீள் ரூபசிங்க, சரத் ரூபசிங்க, பெப்டிஸ் பெர்னாண்டோ, ரவீந்திர ரந்தெனிய போன்றோர் எஞ்சியவற்றை மீட்கப் போராடியிருக்கிறார்கள்.

83 இனப்படுகொலையின் போது சினிமாத்துறையும் எப்படி பாதிக்கப்பட்டது என்பதைப் பற்றி பல சிங்கள கலைஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். “சிரிபத்துல” என்றால் “புத்தரின் பாதச்சுவடு” பொருள்.  (சிவனொளிபாதமலைக்கு சென்று வணங்குவது புத்தரின் பாதச்சுவடு என்று நம்பப்படும் "சிரிபத்துல" வைத் தான்)

"சிரிபத்துல" என்கிற பெயரில் 1978இல் சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு சிறந்த படத்தை இயக்கியவர் கே.வெங்கட். 83 கலவரத்தில் உயிருடன் கொளுத்தி கொல்லப்பட்டார். நிஷ்ஷங்க திவயின பத்திரிகையில் (19.03.2013) எழுதிய கட்டுரையில் “சக சினிமாத்துறை நண்பரான பாலித்த யசபால கே.வெங்கட்டை பாதுகாப்பாக தனது வீட்டில் வைத்திருந்தார். ஆனால் யசபால இல்லாத சந்தர்ப்பமொன்றில் கே.வெங்கட் வெளியே சென்ற சந்தர்ப்பத்திலேயே கொல்லப்பட்டார் என்கிறார் அவர்.

பிரபல சினிமாத்துறை அறிஞரான பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தனது “காந்தர்வ அபதான” என்கிற சிங்கள நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.
“1983 கலவரத்தில் ரொக்சாமி வசித்துவந்த ஹெந்தல வீட்டை சண்டியர்கள் தீயிட்டு அழித்தார்கள். பல சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ரொக்சாமி. சிரிபத்துல என்கிற பௌத்த திரைப்படம் உள்ளிட்ட மஹா ரே ஹமுவு ஸ்திரீய, நிலூகா, தமயந்தி, ஷீலா, கொப்பலு ஹன்ட போன்ற திரைப்பாங்களை இயக்கிய கே.வெங்கட் தெஹிவளயில் எரித்துக்கொல்லப்பட்டார். கலவரக்காரர்களிடமிருந்து உயிர்தப்பிய ரொக்சாமி தனது குடும்பத்தினரைக் காப்பாற்றிக்கொண்டு அகதி முகாம் வாழ்க்கையை அனுபவித்தார். அவரின் துறையைச் சேர்ந்த சிங்கள நண்பர்கள் அவரை மீட்டார்கள். சாமபலாகிப்போன அவரின் வீட்டை மீள கட்டி குடியேற்றினார்கள். ஆனால் அவர் இறக்கும்வரை அவரால் அந்த சம்பவத்தின் நினைவுகளில் இருந்து மீள முடியவில்லை”

பேராசிரியர் சுனில் ஆரியரத்ன “ரொக்சாமி – முத்துசாமி” என்கிற தலைப்பில் சிங்கள நூலையும் வெளியிட்டவர்.

பல சக தமிழ் சினிமாக் கலைஞர்களை காமினி பொன்சேகா காப்பாற்றிருக்கிறார். நாடெங்கிலும் இனவாதிகளால் அழிக்கப்பட்ட திரையரங்குகள் பலவற்றை மீள மீட்கப்படவில்லை. சில திரைப்பட உரிமையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். சிலர் சகலதையும் இழந்து வேதனையுடன் இறந்தே போனார்கள். சிலர் கையறு நிலையில் இந்தத் துறையில் இருந்து நீங்கினார்கள்.

83 இனப்படுகொலையின் போது சினிமாத்துறைக்கு ஏற்படுத்திய சேதமானது சினிமா என்கிற கலைக்கு ஊடாக இணைந்திருந்த மக்களையும் பிரித்து சின்னாபின்னமாக்கியது.

போதிமர நிழலில் எரிக்கப்பட்ட கே.வெங்கட்

அன்றைய நாள் பெரும் சலசலப்புடன் தான் ஆரம்பமானது. அவனின் வீட்டின் எதிரில் உள்ள வீதியில் இருந்தே அந்த சத்தங்கள் ஒலித்தன. எழுந்ததுமே அவனின் தாயார் வெளியில் போகவேண்டாம் என்று எச்சரித்தாள். ஆனாலும் கிட்டத்தட்ட 15 வயதையுடைய சிறுவனாக தாயாரின் சொல்லைக்கேளாமல் வீதியை நோக்கிச் சென்றான் அவன். அந்த வீதியில் பொல்லுகளையும், போத்தில்களையும் ஏந்திய மனிதக் கூட்டத்தினரை அவன் கண்டான். களுபோவிலை பகுதியைச் சேர்ந்த சண்டியர்கள் பலர் பௌத்த விகாரைக்கருகில் இருந்த அரச மர நிழலில் கூடியிருந்தார்கள். அவனது வீட்டில் இருந்து அந்த அரசமரம் கிட்டத்தட்ட 25-30 மீட்டர் தூரம் தான் இருக்கும். அந்த சண்டியர்கள் அந்த இடத்தைக் கடந்து சென்ற அனைவரையும் பரிசோதித்தார்கள். வாகனங்களையும் நிறுத்தி பரிசோதித்தார்கள். சிலரைத் தாக்கவும் செய்தார்கள். சிலரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடித்தார்கள். அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை தெளிவாக அறிய முடியாத அளவுக்கு அங்கே சலசலப்பு மிக்க சத்தம் அந்த சூழலை நிறைத்திருந்தது.

அங்கே என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக அவன் அந்த அரசமரத்தினருகில் சென்றான். பலரை கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். தமிழராக இருந்தார் தாக்கினார்கள். வாகனத்தையும் சேதப்படுத்தினார்கள். சிலர் அவர்களைக் கும்பிட்டுக். கெஞ்சினார்கள். தங்களுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் என்று வேண்டினார்கள். ஆனால் அப்படி வேண்டுபவர்களை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை. சிறுவனான அவனுக்கு நடப்பது என்னவென்று புரிந்தது. ஆனால் கையறு நிலையில் அவதானித்துக் கொண்டிருந்தான்.

பின்னேரம் தெஹிவள பக்கமிருந்து ஒரு வான் அங்கே வந்துகொண்டிருந்தது. அந்த வானில் ஒரு சாரதி மட்டுமே காணப்பட்டார். அந்த சாரதி குழப்பமடைந்திருந்தார். அந்த அரசமரத்திற்கு அருகிலுள்ள சிறு பாதைக்குள் வாகனத்தைத் திருப்பினார். அங்கேயும் சண்டியர்கள் குவிந்திருந்தனர். மீண்டும் அங்கிருந்து பிரதான பாதையை நோக்கி அவர் வாகனத்தைத் திருப்பினார். இத்தனையும் அந்த சிறுவனின் கண் முன்னால் நிகழ்ந்துகொண்டிருந்தது. அந்த சாரதி ஒரு தமிழர். வெள்ளை சட்டையும், வெள்ளை வேஷ்டியும் அணித்திருந்தார். நெற்றியில் திருநீறும் இருந்தது. சண்டியர்கள் இறங்கினார்கள். சாரதியை வண்டியில் இருந்து வெளியில் இழுத்துப் போட்டார்கள். அந்த சாரதி நடுத்தர வயதைத் தாண்டியவர். சண்டியர்களோ இளைஞர்கள். சாரதிக்கு இனி தப்பிக்க வழியில்லை. அவரைக் காப்பாற்றவும் அங்கு எவரும் வரப்போவதில்லை. அந்த சாரதி தன்னை விட பத்து இருபது வயது சிறியவர்களிடம் மன்றாடியதைக் அருகில் இருந்து கண்டான் அந்த சிறுவன்.

அந்த சாரதி நடுங்கியபடி தன்னை அறிமுகப்படுத்தினார். தான் தான் வெங்கட் என்றும் சினிமா இயக்குனர் என்றும் கூறினார். அந்த சண்டியர்கள் எதையும் காதில் உள்வாங்கவில்லை. வெங்கட் “சிரிபத்துல” திரைப்படத்தை இயக்கியது தான் தான் என்றும் கூறினார். அந்த திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய கசட் கூட வாகனத்தில் இருக்கிறது என்றும் கெஞ்சிப்பார்த்தார். ஆனால் அவரால் அதற்கு மேல் பேச வாய்ப்பெதுவும் இருக்கவில்லை. பெரிய கல்லொன்று அவரின் தலையை வேகமாக வந்து தாக்கியது. அவர் இரத்தவெள்ளத்துடன் அந்த போதி மரநிழலில் சுருண்டு விழுந்தார். அவரின் வெள்ளை ஆடை இரத்தத்தால் துவைந்திருந்தது. அந்தக் கொலைகாரர்கள் அவரின் மீது எண்ணெயை ஊற்றினார்கள். அது மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோலாக இருக்கலாம். தடிகளையும், எரியக்கூடியவற்றையும் அவரின் மேலே போட்டு  தீயிட்டார்கள்.

அந்த உடல் தீயில் வெந்துகொண்டிருந்தது. சிறிதுநேரத்தில் அவரின் கைகள் வெந்த தடிகளைப் போல ஆகிக்கொண்டிருப்பதை அந்த சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான். இரவானதும் அந்த பாதகர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

தொடர்ந்தும் எரிந்துகொண்டிருந்த அந்த உடலின் அருகில் சென்ற அந்த சிறுவன் அதனை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அன்று இரவு நித்திரை வரவில்லை. தன் கண்முன்னே ஒரு உயிர் மன்றாடியதையும், துடிதுடிக்கச் சாகடிக்கப்பட்டதையும், உயிருடன் கருகி பொசுங்கியதையும் கண்டு பாதிக்கப்பட்டிருந்தான். அங்கிருந்த எவருக்கும் எந்தவித தீங்கும் இழைக்காத ஒருவருக்கு நேர்ந்த கொடுமையை அவனால் மறக்கவோ ஜீரணிக்க முடியவில்லை.

அடுத்த நாள் காலையில் அந்த போதி மர நிழலை நோக்கிச் சென்றான். அங்கே சாம்பலைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை.  அந்த கொலைக்காக வருந்திய ஒரே ஒருவனாக அவன் மட்டுமே அங்கு எஞ்சியிருந்தான்.

அப்படி கொல்லப்பட்ட வெங்கட் இயக்கிய சிரிபத்துல திரைப்படத்தில் வெளிவந்த ஒரு பாடல் சிங்களவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது. அதைப் பாடியவர் மொகிதீன் பேக். அந்த பாடல் வரிகள் இப்படி தொடங்கும்...

“மினிசாமய் லொவ தெவியன் வன்னே மினிசாமய் லொவ திரிசன் வன்னே!”
(“மனிதனே உலகின் தெய்வமாகிறான் ... மனிதனே உலகின் மிருகமும் ஆகிறான்”)

அந்த சம்பவத்தின் நேரடி சாட்சி வேறு யாருமல்ல பிற்காலத்தில் சரிநிகர் பத்திரிகையின் கேலிச்சித்திரங்களை வரைந்தவரும், இன்றைய ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான டபிள்யு ஜனரஞ்சன. இந்தக் கதையை அவர் சொல்ல இன்னொரு எழுத்தாளர் எழுதி சிங்களப் பத்திரிகையில் வெளிவந்தது.

உலக அழிவில் இந்தோனேசியாவின் வகிபாகம் - என்.சரவணன்

செம்பனை: உயிர்க்கொல்லி! உலகக்கொல்லி! – 6 

உலக செம்பனை எண்ணெய் சந்தையில் முதலிடம் வகிக்கிறது இந்தோனேசியா. உலகில் அதிகளவு செம்பனை எண்ணெயை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது இந்தோனேசியா.

அங்கு 1870இல் ஒல்லாந்து முதலீட்டாளர்கள் நிலங்களை குத்தகைக்கு எடுத்து செய்றிய அளவில் மேலுக்கு தயாரிப்பை மேற்கொண்டனர். ஆனால் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளில் 1911இல் தான் முதன் முதலாக வர்த்தக நோக்கத்துக்காக இறப்பர் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பெல்ஜியத்தைச் சேர்ந்த அத்ரியன் ஹல்லட் (Adrien Hallet) என்பவரால் செம்பனை எண்ணெய் உற்பத்திச் செய்கை ஆரம்பிக்கப்பட்டது.

இந்தோனேசியாவில் செம்பனைத் தொழிலை நம்பி 50 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு மாத்திரம் 18.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நிய செலாவணியாக இந்தோனேசியா பெற்றிருக்கிறது. இந்தோனேசியாவிலிருந்து செம்பனை எண்ணெயைக் கொள்வனவு செய்யும் நாடுகளின் பட்டியலில்முதலிடம் வகிப்பது இந்தியா. அடுத்ததாக ஐரோப்பிய நாடுகள், சீனா, பாகிஸ்தான் என்கிற வரிசையில் இறக்குமதி இடங்களை வகிக்கின்றன. உலக சமையல் எண்ணெயில் 30% வீதத்தை செம்பனை எண்ணெய் வகிக்கிறது.

உலகின் எச்சரிக்கை

உலக சுற்றுச்சூழல் நிறுவனமான கிரீன் பீஸ் அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில் மேகாகார்யா ஜெயராயா (Megakarya Jaya Raya) என்கிற பகுதியில் மாத்திரம் 4000 ஹெக்ராயர் பசுமைக் காடு 2015-2017க்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் செம்பனை உற்பத்திக்காக அழிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியது. இதுபோன்ற கண்டங்களின் போதெல்லாம் இந்தோனேசியா மறுத்துவந்த அனுபவத்தின் காரணமாக கிரீன்பீஸ் அமைப்பு செட்டலைட் படங்களையும் ஆதாரங்களாக வெளியிட்டிருந்தது. உலகிலேயே காடழிப்புக்கும் முதன்மை காரணமாக எண்ணெய் உற்பத்தித்துறை ஆகியிருக்கிறது என்று கிரீன்பீஸ் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி சர்வதேச நிறுவனங்களும், பல உலக நாடுகளும் இந்தோனேசியாவை நிலைபேறான முறையில் செம்பனை உற்பத்தியை மேற்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டதுடன் நிபந்தனைகளையும் விதித்தன. அப்படி மேற்கொள்ளாவிட்டால் இறக்குமதியை நிறுத்துவோம் என்றும் எச்சரித்தன. அப்படியான எச்சரிக்கைகளை கண்டித்து முதலில் இந்தோனேசியா கருத்து வெளியிட்டாலும் பின்னர் ஏற்றுக்கொண்டது. ஆனால் அதன்படி செய்யவில்லை. மாறாக வழமையான உறபத்தியை மேற்கொள்வதும், அதனை பெருப்பிப்பதும், காடழிப்பு போன்றவற்றைத் தொடர்வதுமாக இருந்தது. இந்த போக்குதான் இறுதியில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றுகூடி ஐரோபிய பாராளுமன்றமும், ஐரோப்பிய ஒன்றியமும் 2020 இலிருந்து மட்டுப்படுத்தப்போவதாக முடிவுசெய்தது.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள பலசரக்குக் கடைகளில் ஏற்கெனவே 50% வீதமான பொருட்கள் பாமாயில் கலந்த பொருட்களாகவே இருக்கின்றன. அந்தளவு பாமாயிலில் தங்கியுள்ள நிலையில் பாமாயில் இல்லாத ஐரோப்பா என்பது பெரும் சவாலுக்குரிய ஒன்றே.

கூடவே சமீபத்தில் எரிபொருளுக்காக தயாரிக்கப்படும் செம்பனை எண்ணெயின் கழிவுகள் புதைக்கப்பட்டும், கடல்களில் கொட்டப்படும் போக்கையும் எதிர்த்த ஐரோப்பிய யூனியன் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பெரும் வரியை அறிவித்தது. ஆனால் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இந்தோனேசியா அதற்கான தீர்வையை குறைத்துக்கொண்டது. அது இந்தோனேசியாவுக்கு கிடைத்த வெற்றி ஆனால் சூழலியலாலர்களுக்கு கிடைத்த தோல்வி.

உலக நாடுகளின் நிபந்தனைகளை இந்தோனேசியாவுடன் ஒப்பிடுகையில் மலேசியா கணிசமான அளவு ஏற்றுக்கொண்டதுடன் நடைமுறையிலும் ஓரளவு செய்து காட்டியிருக்கிறது. செம்பனை விடயத்தில் நிலைபேறான உற்பத்தியில் ஒப்பீட்டு ரீதியில் மலேசியா முதன்மை இடம் வகிக்கிறது என்றே கூறலாம்.

உலக அழிவில் இந்தோனேசியாவின் பங்கு

ஒவ்வொரு 25 செகண்டுகளுக்கும் ஒரு உதைப்பந்தாட்ட மைதானத்தின் அளவுக்கு செம்பனைக்காக காடுகள் அழிக்கப்படுகின்றன. 1990 - 2015 க்கும் இடைப்பட்ட 25 வருட காலத்துக்குள் இந்தோனேசியாவில்  மாத்திரம் 24 மில்லியன் ஹெக்ராயர் பசுமைக் காடு அழிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இலங்கை போன்று நான்கு மடங்கு பரப்பளவு அது.

இந்தோனேசியாவின் 84 சதவீத பசுமைக் காடுகளைக் கொண்ட நாடாக 1900 இல் இருந்தது. அதாவது கிட்டத்தட்ட 170 மில்லியன் ஹெக்ராயர் நிலம். நூறு ஆண்டுகளில் அது 100 மில்லியன் ஹெக்ரயர்களாக சுருங்கியிருக்கிறது.


செம்பனை உற்பத்திக்காக மட்டும் இந்தக் காடுகள் அழிக்கப்படவில்லை கடுதாசி உற்பத்திக்காகவும் கடந்த காலங்களில் பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டன. உலக கடுதாசி உற்பத்தியில் 11 இடத்தில் இந்தோனேசியா திகழ்கிறது.

மேலும் அதிக அளவில் காட்டுத்தீ நிகழும் நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. செம்பனை செய்கைக்காக காடுகளை அழிப்பதற்கும் இப்படி தீயிடுவது சர்வசாதாரணமாக இருக்கிறது. அதைவிட இந்த செம்பனை செய்கை நிகழும் இடங்களில் பெருமளவு தீ பரவி பெரும் சூழல் நாசத்தை எற்படுத்தியிருக்கிறது.


1997-1998 ஆண்டுகளில் இந்தோனேசியாவில் சுமாத்திரா, களிமந்தன் பகுதிகளில் ஏற்பட்ட தீ உலகிலேயே ஏற்பட்ட மிகப்பெரும் காட்டுத்தீயாகக் கருதப்படுகிறது. அருகில் இருந்த நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், புருனே, தாய்லாந்து, சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் கூட இதன் தாக்கத்தை அனுபவித்தன. புகைமண்டலம் பல மாதங்கள் சுற்றிலும் இருந்தன. மலேசியாவும் இத்தீயை அணைக்க தமது படைகளை அனுப்பி உதவியது. மலேசியாவின் பொருளாதாரத்திலும் அது பாதிப்பை செலுத்தியது. இறுதியில் 8 மில்லியன் ஹெக்ராயர் பகுதி தீக்கு இரையாகியது. இலங்கையின் பரப்பளவை விட அது அதிகம் என்பதைக் கவனித்திற்கொள்க. அப்படியென்றால் அது சூழலுக்கு ஏற்படுத்தியிருக்கக் கூடிய பன்முக விளைவுகளை எண்ணிப் பாருங்கள். 2.57 ஜிகா தொன் கார்பனை அந்தத் தீ இந்தச் சுற்றுச் சூழலில் விட்டுச் சென்றது என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு நிகழ்ந்தும் தற்போதைய செம்பனை உற்பத்தியை 2050 ஆகும் போது மூன்று மடங்காக பெருக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கிறது இந்தோனேசியா என்பது தான் கவலைக்கிடமான செய்தி. இது இந்தோனேசியாவை விட உலகைத் தான் பெரும் பாதிப்புக்கு கொண்டு செல்லப் போகிறது என்பது தான் முக்கிய சமிக்ஞை.

வருடாந்தம் இந்தோனேசியா எதிர்கொள்ளும் காட்டுத்தீ பற்றி “பற்றியெரியும் பருவகாலம்” (The Burning Season 2008) என்கிற ஒரு ஆவணப்படம் வெளியாகி பல சர்வதேச விருதுகளைக் குவித்தது.


காடழிப்பினால் உராங்உட்டான் குரங்குகளின் எண்ணிக்கை வேகமாக சரிபாதியாகக் குறைந்திருக்கிறது. 'உராங்உட்டான்’ என்றால் காடுகளின் மனிதன் என அர்த்தம். ஏனென்றால், இதன் 97 சதவிகித செயல்பாடுகள் அப்படியே மனிதனைப்போலவே இருக்கும். பாலூட்டுவதில் இருந்து கூட்டுக்குடும்பமாக வாழ்வது வரை அப்படியே மனிதனைப்போலவே வாழும். குரங்கு வகையிலேயே அதிக புத்திசாலி இனமாக கருதப்படுகிறது. காடுகளில் தீ வைப்பதால் வருடத்துக்கு 2,000 குரங்குகள் அழிந்துவிடுகின்றன. சுமாத்திரா தீவில் உராங்உட்டான் மொத்தமே 6,300 தான் இருக்கின்றன. அது வருடத்துக்கு 1,000 என்ற அளவில் அழிந்துவருகின்றன. இதே வேகத்தில் போனால், இன்னும் 10 ஆண்டுகளில் உரான்உட்டான் குரங்குகளே இருக்காது’ என்று அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.


இந்த காடழிப்பில் பிரதான பாத்திரத்தை வகித்தவர்கள் சுதேசிகள் அல்லர், மாறாக செம்பனை உற்பத்தியில் முதலிட்ட பல்தேசிய கொம்பனிகளே. அரசின் அனுசரணை மறைமுகமாக இதில் இருந்தாலும் சட்டவிரோதமாகவே பெரும்பாலும் காடழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறிக்கைகள் விளக்குகின்றன.

இந்தோனேசியா வேகமாக ஜனத்தொகை பெருகும் நாடுகளில் ஒன்று, இன்னொரு பக்கம் காடழிப்புசார் பக்க விளைவுகள், எண்ணைக்கிணறுகள், நீர் மாசடைந்திருப்பது போன்ற பல்வேறு சிக்கல்களுக்கும் அந்நாடு முகம் கொடுக்கும் நிலையில் இந்த செம்பனைப் பணம் தான் நிலைமையை சமப்படுத்தும் என்று நம்புகிறது.

உலகில் அரிய உயிரினங்கள் வாழ்ந்த காடுகள் எரிக்கப்பட்டதால் பல உயிரினங்கள் அழிந்து போயின. அந்த உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டதன் காரணமாக அங்கே சமநிலை பாதிக்கப்பட்டு பெருமளவு விலங்குகள் இடம்பெயர்ந்தன. அதுபோல அழிந்தும் போயின. செம்பனைக்கு எதிரான குரல்களில் இப்படி விலங்குகளின் அழிவு முக்கிய இடத்தை வகிக்கின்றன. இந்தோனேசியா இந்த விடயத்தில் அதிக கண்டனத்துக்கு உள்ளாகிவரும் நாடு.

நன்றி - தினக்குரல்

தமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்


தமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இலங்கையின் ஊடகங்கள் இனத்துவ ஊடகங்களாகத் தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இலங்கையிள் வெளிவரும் சிங்கள – தமிழ் தினசரிகளை எடுத்துப் பாருங்கள். ஒரே நாட்டில், அதே நாளில் வெளிவரும் பத்திரிகையின் செய்திகள் கட்டுரைகள் 90 சதவீதமாவது வேறுபட்டு இருப்பதைக் கவனிப்பீர்கள். இது ஒரு விசித்திரமாக இல்லையா? இரு வகை சிந்தனைப் போக்கையும், இரு வகை இரசனையையும், இருவகைத் தேவைகளையும், இரு வகை அபிலாசைகளையும் கொண்டதாக அவை இருப்பதை நீங்கள் காண முடியும்.

இனத்துவ கருத்தேற்ற விற்கும் செய்திகளுக்கும், கட்டுரைகளுக்குமே அந்தந்த இனம் சார்ந்த மொழிப் பத்திரிகைக்கு சந்தையில் கிராக்கி உண்டு என்கிற நிலை தோன்றி நெடுங்காலமாகிவிட்டன. ஆக தேசியவாதம், இனவாதமாகவும், பேரினவாதமாகவும், சமயத்தில் பாசிசமாகவும் கையாள்வதே சந்தையில் போட்டிமிக்க விற்பனை உபாயமாக ஆகியிருக்கிறது.

இலங்கையின் சிங்கள தேசிய தினசரி – வாரப் பத்திரிகைகளை தவிர்த்துப் பார்த்தால் மாற்றுப்பத்திரிகைகள் இதிலிருந்து சற்று விலகி இருப்பதைக் கவனிக்க முடியும்.

அந்த வகையில் ஆரம்பத்தில் ராவய, யுக்திய, லக்திவ, ஹிரு போன்ற பத்திரிகளின் தோற்றம் மாற்று சிந்தனைகளுக்கான களத்தையும், தேசிய நாளிதழ்கள் பேசாத விடயங்களை துணிச்சலுடன் பேசும் பத்திரிகைகளாக வெளிவந்தன. அவை இடதுசாரி பின்னணியைக் கொண்டவர்களால் நடத்தப்பட்டதும் அதன் சமூக பிரக்ஞைத்தனத்திற்கு காரணம் எனலாம். இதில் ஹிரு பத்திரிகையின் தோற்றத்தைப் பற்றி மாத்திரம் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அதற்கு இன்னொரு காரணமுமுண்டு ராவய, யுக்திய ஆகியவை ஆரம்பத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களால் தோற்றுவிக்கப்பட்டவை. லக்திவ போன்றவை ஊடக முதலாளிகளால் நடத்தப்பட்டவை. ஹிரு பத்திரிகை மக்களால் உருவாக்கப்பட்டது.

90 களில் தென்னிலங்கையில் வெளியான "லக்திவ" பத்திரிகை ஒரு சிறந்த சிங்கள மாற்றுப்பத்திரிகையாக வெளிவந்துகொண்டிருந்தது. பல நல்ல இடதுசாரி பத்திரிகையாளர்கள் அதில் இயங்கினார்கள். 1987-1989 காலபகுதியில் ஜே.வி.பி அழிக்கப்பட்ட நிலையில் அதிலிருந்த தலைமறைவுகுள்ளான ஜேவிபி தோழர்கள் இதில் இயங்கினார்கள். இதற்கூடாகத் தான் விமலசிறி கம்லத் என்று அன்று அழைக்கப்பட்ட இன்றைய விமல் வீரவன்சவும் இருந்தார். “லக்திவ”வை வெளியிட்டது ஒரு வியாபார நிறுவனம். பிரேமதாசவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த அந்த பத்திரிகையின் முதலாளிக்கு பிரேமதாசவின் பினாமிகளுக்கு ஊடாக அழுத்தம் கொடுக்கப்பட்டது.

ஆசிரியர் குழுவில் இருந்தவர்கள் சளைக்காமல் அந்த முதலாளியோடு முரண்பட்டுக்கொண்டு பத்திரிகையைத் தொடர்ந்தார்கள். திடீரென்று ஒரு நாள் ஆசிரியர் குழுவுக்குத் தெரியாமல் அச்சகத்தில் வைத்து முக்கிய சில அரசியல் பக்கங்களை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக விளம்பரப் பக்கங்களை நிரப்பி வெளியிட்டு விட்டார். அடுத்த நாள் அந்த ஆசிரியர் குழு முழுவதுமாக வெளியேறியது. இலங்கையின் வரலாற்றில் முழு ஆசிரியர் குழுவும் ஒரேயடியாக அவ்வாறு வெளியேறி முதல் சந்தர்ப்பம் என்று தான் கூற வேண்டும். சில மாதங்களில் அப்பத்திரிகையை வேறு வழியின்றி முதலாளி மூடிவிட்டார்.

வெளியேறியவர்கள் இலட்சியவாதிகளாக மட்டுமன்றி ஏழ்மைக்குப் பழக்கப்பட்ட பத்திரிகையாளர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் சம்பளத்துக்காக பணியாற்றும் பத்திரிகையாளர்களாக இருக்கவில்லை. மாறாக பத்திரிகை என்பது அவர்களின் அரசியல் ஆயுதமாக வரித்துக்கொண்டார்கள். வேறொரு பத்திரிகையை தொடக்குவதர்காக அவர்கள் மக்கள் முன் சென்றார்கள். வீதி வீதியாக உண்டியலில் பணம் சேர்த்தார்கள். மக்கள் கலைவிழா என்கிற மாபெரும் நிகழ்ச்சியொன்றை பெரும் மைதானமொன்றில் நடத்தினார்கள். பல மக்கள் இயக்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இடது சாரி இயக்கங்கள் பல பூரண ஆதரவு வழங்கின. அது மாபெரும் விழாவாக அமைந்தது.

நம்புங்கள் அந்த உண்டியல் பணத்தைக் கொண்டு 1993 செப்டம்பர் 26 அன்று "ஹிரு" என்கிற பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார்கள். அந்தப் பத்திரிகை தான் தலைமறைவு ஜேவிபியின் தளமாக இருந்தது. அப்போது இரகசியமாகவும், தலைமறைவாகவும் இருந்த பலர் சந்திக்கும் இடமாகவும், ஜேவிபியை மீள கட்டியெழுப்பும் தளமாகவும் அந்த அலுவலகம் இயங்கியது. பின்னாளில் ஜேவிபியின் தலைவர்களாக அறியப்பட்டவர்கள் ஆரம்பத்தில் சந்தித்துக்கொள்ளும் இடமாக அது இருந்தது. அந்த அலுவகத்துக்குத் தேவையான தளபாடங்களை பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் செய்து அனுப்பினார்கள்.

எங்கள் “சரிநிகர்” பத்திரிகையின் அலுவலகம் அமைந்திருந்த கொள்ளுப்பிட்டி அலோ அவனியுவுக்கு அடுத்தத் தெருவில் தான் ஹிரு அலுவலகம் இருந்தது. பின்னேரங்களில் நான் அங்கே போய் விடுவேன். அங்கே வரும் ஆதரவாளர்கள் பலர் என்னைப் போலவே போகும் போது அரிசி, பால்மா, சீனி, பருப்பு, கருவாடு, தேயிலை போன்றவற்றை கொண்டுசென்று வழங்குவார்கள். அங்கேயே சமையலை முடித்துக்கொண்டு அங்கேயே தங்கி வாழ்ந்த பத்திரிகையாளர்கள் இருந்தார்கள். விமல் வீரவன்சவும் அங்கே தான் தங்கினார். பின்னேரங்களில் புரட்சிகர பாடல்கள் மட்டுமன்றி ஜனரஞ்சக பாடல்களையும் பாடி மகிழ்வோம். விமல் வீரவன்ச தமிழ் பாடல் பாடுவார் என்று கூறினால் இன்று பலர் வியப்பார்கள். நான் அதை அருகில் அமர்ந்து கேட்டு லயித்திருக்கிறேன். ரோஹித்த பாஷன கிட்டார் இசைப்பார். இரவு எங்களுக்கு பத்திரிகைகள் பாயாகும். பத்திரிகைக் கட்டுகள் தலையணையாகும். சில நாட்கள் கொள்ளுப்பிட்டி காலிவீதியில் நடந்தே திரிந்து வீதியோர மலிவு விலை மதிய உணவைக் கண்டுபிடித்து வேண்டி வந்து பலரும் பங்குபோட்டு உண்டிருக்கிறோம். நானும் விமல் வீரவன்சவும் சேர்ந்து எழுதிய தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சினைகள், கைது, காணாமல் போதள் பற்றிய கட்டுரை ஒரு முறை இரண்டு பக்க நடுக்கட்டுரையாக வெளிவந்தது.

ஹிரு பத்திரிகை தான் ஜேவிபியை 1993இல் அரசியலுக்கு மீண்டும் இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தது. ஜே.வி.பிக்குள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பிரச்சினை பற்றிய விவாதம் நடந்தது. கொள்கை ரீதியாக எடுத்து முடிக்க வேண்டிய முக்கிய விவாதமாக அது இருந்தது.

சுயநிர்ணய உரிமைக்கு எதிராகவும், ஆதரவாகவும் அணிகள் பிரிந்தன. எதிரான அணியில் விமல் வீரவன்ச போன்றோர் இருந்தார்கள். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக இருந்த அணி கட்சியில் இருந்து வெளியேறியது. வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் "ஹிரு" ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

“தமிழ் மக்களின் விடுதலையின்றி இலங்கையில் புரட்சிகர மாற்றம் சாத்தியமில்லை” என்கிற முடிவில் அவர்கள் இருந்தார்கள். ஜே.வி.பிக்கு இருந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பகுதியினர் "ஹிரு"வுடன் கைகோர்த்து இயங்கினார்கள்.

1996இல் நிதி நிருக்கடி காரணமாக சில மாதங்கள் நின்றுபோனது. பின்னர் சஞ்சிகையாக வெளிவந்தது. சஞ்சிகையாக வெளிவந்த போது அது ஒரு தத்துவார்த்த விவாதங்களை நிகழ்த்தும் முக்கிய பத்திரிகையாக வடிவமெடுத்தது. குறிப்பாக மாக்சியத்தை இன்றைய நிலையில் எப்படி கையாள்வது என்பது பற்றிய சர்வதேச விவாதங்களை இலங்கை உதாரணங்களோடு உரையாடினார்கள்.

93க்குப் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அதிகமாக சிங்கள மக்களுக்கு வெளிக்கொணர்ந்த பத்திரிகையாக "ஹிரு" விளங்கியது. தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் அடிமட்ட மக்களின்  பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்தார்கள். அவர்கள் பல மக்கள் இயக்கங்களையும், முன்னணிகளையும் உருவாக்கினார்கள். பத்திரிகையாளர்களின் உரிமைக்காக பூஷிக் பரம்பரை (Fucik Generation) என்கிற அமைப்பை உருவாக்கினார்கள். (ஜூலியஸ் பூசிக் செக்கோஸ்லோவேகியா கொம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். நாசிகளால் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்.) சந்திரிகா அரசாங்கத்தின் போது ஊடகவியலாளர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதியை எதிர்த்து “ஊடக சுதந்திரம்” கொல்லப்பட்டதை குறியீடாகக் கொண்டு ஒரு சவ ஊர்வலத்தை இந்த அமைப்பு நடத்தியது. ஊடக சுதந்திரத்திற்கான அப்படியொரு பெரிய ஊர்வலத்தை நான் இலங்கையில் கண்டதில்லை. அந்த ஊர்வல முடிவில் பொதுநூலக மண்டபத்தில் நிகழ்ந்த கூட்டத்தில் ஒரு பேச்சாளர்களில் ஒருவனாக நானும் இருந்தேன். என்னுடைய உரை மாத்திரம் தமிழில் இருந்தது. 

காணாமல் போனோருக்கான ஒரு அமைப்பு, மனித உரிமைகளுக்கு, மாணவர்களுக்கு, எம்பிலிபிட்டிய பெற்றோருக்கு (புதைகுழி சம்பவம்), என பல அமைப்புகளை இயக்கினார்கள். அவர்களை புலனாய்வுத்துறை துரத்திக்கொண்டே இருந்தது. அவர்கள் தமது செயல்பாடுகளை இரகசியமான இடங்களில் நடத்தும் நிலைக்கு உள்ளானார்கள். தமிழ் மக்களுக்காக அவர்கள் கொடுத்த குரல்; அவர்களை புலிகளின் ஆதரவாளர்களாக அரசு சந்தேகம் கொண்டது. இறுதியில் அவர்கள் உண்மையிலேயே விடுதலைப் புலிகளுக்காக இயங்கத் தொடங்கினார்கள். தமிழ் மக்களின் விடுதலைக்கு இலங்கையின் இடதுசாரிக் கட்சிகள் எப்போதோ தலைமை கொடுத்திருக்க வேண்டும் என்றார்கள். இனியாவது இருக்கின்ற உறுதியான ஒரு அமைப்புக்கு தமது ஆதரவை வழங்கும் நோக்கில் விடுதலைப் புலிகளுக்கு தமது ஆதரவை அளித்தார்கள்.

 அவர்கள் எத்தனை தீவிரமாக இருந்தார்கள் என்றால் இறுதியில் அவர்கள் விடுதலைப் புலிகளால் வெளிக்கொணர்ந்த சிங்களப் பத்திரிகையான "தேதுன்ன" என்கிற பத்திரிகையை தலைமறைவாக நடத்துமளவுக்கு தீவிரம் பெற்றிருந்தார்கள். அவர்களைத் தான் மகிந்த அரசாங்கத்தில் “சிங்கள கொட்டி” என்று பெயர் சூட்டியது.


சமாதானக் காலத்தில் 2003 ஒக்டோபர் 29 அன்று கொழும்பில் நிகழ்த்தப்பட்ட தமிழ் - சிங்கள கலைக்கூடலை முன்னின்று நடத்தியவர்கள் இவர்கள். சிங்கள இனவாதிகள் வந்து அந்த கூட்டத்தை அடாவடித்தனத்துடன் களைத்தார்கள். அந்த கூட்டத்தில் நிகழ்ந்த சண்டையில் இரு தரப்பினரும் மோதி பலத்த காயங்களுக்கும் உள்ளானார்கள். இந்தக் கூட்டத்தில் பேராசிரியர் சிவத்தம்பி, புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட பிரமாண்டமான கூட்டம். அப்படி ஒரு கூட்டம் அதற்கு முன்னரும் நடக்கவில்லை. பின்னரும் நடந்ததில்லை. மேடையேறி தாக்குதல் நிகழ்த்தியவர்களில் ஒருவர் ஞானசார தேரர். அடியும் வாங்கினார். அவர் அப்போது ஜாதிக ஹெல உறுமயவின் செயற்பாட்டாளர். அந்தக் கூட்டத்தில் தான் அவர் அறியப்பட்டார்.

மகிந்த ஆட்சியில் கோத்தபாயவின் வேட்டையில் இருந்து தப்பி அவர்கள் நாலா திசைகளுகுக்கும் தப்பியோட நேரிட்டது. இன்று அவர்களில் பெரும்பாலானோர் நாட்டில் இல்லை.


வெளிநாடுகளில் இருந்துகொண்டும் தமிழ் மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருகிறார்கள். இன்று ஜெனிவாவில் போர்க்குற்றச்சாட்டு பற்றிய விவாதங்களும் அதன் மூலம் இலங்கைக்கு இனப்பிரசினைக்கு அரசியல் தீர்வு காணும் படி அழுத்தமும் கொடுக்கப்படுகிறது என்றால் அதற்கு முதன்முதற் காரணம் இவர்களே. “சனல் 4”க்கு ஊடாக போரில் நிகழ்ந்த அநீதிகள் தொடர்பான வீடியோக்களை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தவர்கள் இவர்களே. அதன் பின்னரும் தொடர்ந்தும் பல ஆதாரங்களை வெளியிட்டு ஜெனிவாவுக்கு அழுத்தம் கொடுத்த முக்கிய சக்திகள் அவர்கள் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த சிங்களத் தோழர்கள் இப்படி பலர் தமிழர்களால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார்கள்.
பிற்குறிப்பு:மேலே முகப்பு படம் பொரளையில் இருந்த “லக்திவ” அலுவலகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். நின்று கொண்டிருப்பவர்களில் முகத்தைப் பொத்திக்கொண்டு இருப்பது விமல் வீரவன்ச, பின்னர் தர்மசிறி காரியவசம், வினி ஹெட்டிகொட (சிறந்த கேலிச்சித்திர ஊடகர், சிங்கள ஊடகங்களில் மதிக்கப்படுபவர்), சுனில் மாதவ பிரேமதிலக்க (இன்றும் சிங்கள பத்திரிகை உலகம் பெரிதும் மதிக்கும் ஒருவர், பல புரட்சிகரமான நூல்களை சிங்களத்துக்கு மொழிபெயர்த்தவர்), டலஸ் அலஹப்பெரும (தற்போது மகிந்த அணியின் முக்கிய பேச்சாளராக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்.), சுதத் கஹதிவுல்வெவ,
அமர்ந்திருப்பவர்கள்: ரோஹித்த பாஷன (ஹிரு குழுவின் பிரதான பாத்திரம், நாட்டிலிருந்து தப்பி ஐரோப்பிய நாடொன்றில் வசித்து வருகிறார்.), மெனுவல் ஜயசேகர, திம்பிரியாகம பண்டார. 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates