மலையகத்தின் கலைப் பணபாட்டு விழுமியங்களை உலகிற்கு எடுத்துக்காட்டும் முகமாக மலையக கலை வடிவத்தின் ஊற்றாக விளங்கும் புதிய பண்பாட்டு அமைப்பு பல அறிய சாதனையை நிலைநாட்டி வந்துள்ளது.. இப்புதிய பண்பாட்டு அமைப்பினுடைய ஆரம்ப கருத்தாக்களாக 1997 ஆண்டு பொகவந்தலாவ பெரிய எலிப்படை தோட்டத்தை சேர்ந்த திரு. பொன்.பிரபாகரன், திரு. ஆண்டி அரிச்சந்திரன் ஆகிய இருவரின் நீண்ட நாள் கலந்துரையாடலின் பின் மலையகத்தின் கலைப்பாரம்பரியத்தை வெளிகொணர்வதற்கு இப்புதிய பண்பாட்டு அமைப்பு ஒரு ஆரம்ப மைல்கல்லாக அமைந்தது.
இவ்வமைப்பின் முக்கிய செயற்பாடுகளாக பல்வேறு சமூக, கலைப்பண்பாட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பகாலம் முதல் இன்று வரை முன்னெடுத்து வருகின்றது. ஆரம்பத்தில் பொகவந்தலாவ எலிப்படை, லெச்சுமித்தோட்டம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலைகளின் மணவர்களின் கலையம்சங்களை வெளிகொணர்வதற்கு பல போட்டிகளையும், பரிட்சாத்தங்களையும் இவ்வமைப்பு மேற்கொண்டு திறமையான கலைஞர்களை இணங்கண்டு அவர்களை வெளிக்கொணர்வதற்கு முண்ணுதாரணமாக செயற்பட்டது.
1997 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 14 ஆம் திகதி சித்திரை புத்தாண்டு தினத்தன்று லெட்சுமி தோட்ட மைதானத்தில் அரச சாகித்திய விழாவிற்கான அடித்தளமாக புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்தி கலையம்சங்களை வெளிகாட்டியிருந்தது. ஆயினும் தேசிய சாகித்திய விழாவிற்கு இவ்வாரான முன்னெடுப்புகளை செய்திருந்த போதும் மலையக பாரம்பரிய கலைகளையும், கலாசார விழுமியங்களையும் பரைசாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை சில வெளி சக்திகளின் தடைகளினால் அவற்றை வெளிக்கொணர முடியாமல் போயிருந்தது.
அதனைத் தொடர்ந்து பொகவந்தலாவ எலிப்படை தோட்டத்தில் கலாசார விழாவொன்றின் மூலம் இப்புதிய பண்பாட்டமைப்பு கலையம்சங்களை வெளிக்காட்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து நுவரெலியா சினிசிட்டா மைதான மண்டபத்தில் “மேட்டு நிலக்கண்ணீர்” என்ற மலையக யதார்த்த வாழ்வினை வெளிப்படுத்தும் முகமாக நாடகத்தினை திரு.க.கனகராஜ் அவர்களினால் அரங்கேற்றப்பட்ட போது பல எதிர்ப்புகளின் மத்தியில் அது கைவிடப்பட்டது.இதே போன்று சென்மேரிஸ் மத்திய கல்லூரியில் “வெளிச்சம் வெளியே இல்லை” என்ற நாடகத்திற்கும் உரிய அங்கிகாரம் கிடைக்காத போதும் அவற்றை ஈடுசெய்யும் முகமாகவே இக்கலாசார விழாவை புதிய பண்பாட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இப்புதிய பண்பாட்டமைப்பின் கலை அர்ப்பணிப்பு இத்துடன் நின்றுவிடாமல் இலங்கை முழுவதுமாக மலையக கலையம்சத்தை வெளிக்காட்டுவதற்கு புறப்பட்டது. அதன் ஒரு கட்டமாக 2001 ஆம் ஆண்டு இலங்கையின் தேசிய பல்கலைக்கழகமான கிழக்கு பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் பல்வேறு சிறந்த கல்விப்புலமையாளர்கள், நாடகத்துறை விற்பனர்கள் குறிப்பாக பேராசிரியர் மௌனகுரு, சிரேஸ்ட விரிவுரையாளர் ஜெயசங்கர் என்போரின் ஒத்துழைப்புடன் மலையகத்தின் பாரம்பரிய கூத்துகளான அருச்சுண தபசு, பொன்னர் சங்கர், காமன் கூத்து உட்பட ஏனைய கலையம்சங்களையும் அப்பல்கலைக்கலகத்தில் பறைசாற்றியது. இதில் குறிப்பிட்டுக்கூற வேண்டிய விடயம் 30 ற்கும் மேற்பட்ட மலையக கலைஞர்களை உலக நாடக விழாவில் பங்குபெற வைத்து அக்கலைஞசர்களின் திறமைகளை வெளிக்காட்ட உதவியது. இதேயாண்டில் ஹட்டன் மாணிக்க பிள்ளையார் மண்டபத்தில் மாபெரும் கலாசார விழா ஒன்றினையும் நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக 27 ற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள்,கல்வி புலமையாளர்கள்,சமூக ஆய்வாளர்கள் என்போரை கொண்டு முதலாவது “மலையக கல்வி மாநாடு” ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இவை மட்டுமல்லாது பல சமூக ஆய்வு முன்னோடிகளையும் வெளியிட்டிருந்தது.
குறிப்பாக செங்கீற்று, நாடோடிகள்,மேல்கொத்மலை தொடர்பான ஆய்வு என்பன முக்கியம் பெறுகின்றன. தொடர்ந்து விவல்வத்த சுதந்திர பொன்விழாவையும் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மற்றும் மக்களுக்கெதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த அமைப்பாகவும் இப்புதிய பண்பாட்டு அமைப்பு விளங்கியது.
2009 ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை பிரஞ்சு கல்வியகம், வன்னார் பேட்டை லோயலா கல்லூரி போன்ற இடங்களுக்கு சென்று மலையக கலைப்பண்பாட்டு அம்சம் தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தது.
அத்தோடு நின்றுவிடாமல் மலையக “சமூக நாடக விழா” ஒன்றில் கலாநிதி திரு.ஜெயசங்கர் அவர்களின் பங்குபற்றலோடு நுவரெலியாவில் மலையக கலையம்சங்களை அரங்கேற்றியது. தொடர்ந்து சமாதான சூழ்நிலையில் ஈழத்துக்கூத்து விழாவில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து கலாநிதி.மரிய சேவியர் அடிகளார், ஜோர்ஜ் ராஜ்குமார் என்போரின் ஒத்துழைப்போடும், பல புலமையாளர்களின் மத்தியில் தன் மலையக கலைப்பண்பாட்டம்சங்களை அங்கும் அரங்கேற்றியது.
இப்புதிய பண்பாட்டமைப்பின் இக்கலைப்பயணத்தின் தொடர்ச்சியாக சர்வதேச சமூதாய விழாவில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.மௌனகுரு மற்றும் கலாநிதி.திரு ஜெயசங்கர் ஆகிய கல்வி புலமையாளர்களின் மத்தியில் மலையக கலைஞர்களை ஊக்குவிக்கும் செயற்பாட்டை செய்திருந்தது. தொடர்ச்சியாக 2014 ஆம் ஆண்டு தைப்பொங்கள் தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவ பெரிய எலிப்படை தோட்டத்தில் இலங்கையில் எங்கும் செய்திராத “லவகுசா” நாடகத்தின் தோற்றுவாய்க்கு இப்புதிய பண்பாட்டமைப்பே புத்துயிரளித்தது.
தொடர்ந்து இலங்கையின் நாடக கலைஞர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் மக்கள் களரி என்ற அமைப்போடு இணைந்து பல மலையக கலைஞர்களுக்கு ஊக்கமளித்து அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியதில் இதன் பங்குஅளப்பரியதாகும். அதில் ஒரு கட்டமாகவே இவ்வமைப்பினால் பயிற்றுவிக்கப்பட்டு தேர்ச்சிப்பெற்ற நாடக கலைஞரும்,சிறந்த நடிகருமான தியாகராஜா சிவநேசன், மற்றும் வீரபத்திர கதிர்காமநாதன் ஆகியோரின் நெறிப்படுததலின் கீழ் “எலிப்பொறியில் பூனை” என்ற சிறுவர் நாடகம் தேசிய மட்டத்தில் 09 தேசிய விருதுகளை பெற்று சாதனைப்படைத்தது.
இந்நாடகம் முழு மலையக கலை கலாசார பாரம்பரியங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைகின்றது. அத்துடன் தலைசிறந்த கலைஞர்கள்,இயக்குனர்கள், ஊடகத்துறையினர், ஆசிரியர்கள், என்போரை உருவாக்கிய பெருமை இப்புதிய பண்பாட்டமைப்புக்கு உண்டு. ஆயினும் சில அகப்புற காரணிகளால் இவ்வமைப்பின் செயற்பாடுகள் சிறிது காலம் தடைப்பட்டிருந்தது. ஆனாலும் மீண்டும் புத்தெழுச்சிப் பெற்று இச்சிறுவர் நாடக விழாவில் 09 விருதுகளை வென்ற கலைஞர்களையும், அதன் ஆசிரியர்களையும் கௌரவிக்கும் முகமாக கொழும்பு தமிழ் சங்கத்தில் பல்வேறு புலமையாளர்களின் மத்தியில் நாடகத்தை அரங்கேற்றம’; செய்ததோடு மட்டுமல்லாது அவர்களை ஊக்குவிக்கும் முகமாக பாராட்டு விழாவையும் செய்திருந்தது. இப்புதிய பண்பாட்டமைப்பு மலையக கலையம்சங்களை வெளிக்காட்டி உலகரிய செய்வதில் முக்கிய பங்கு வகிப்பதோடு மலையக கலைவடிவத்தின் ஒரு மைல் கல்லாகும்.
நன்றி : பசுமைத்தாயகம் கொழும்பு ஊடகவியலாளர்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...