Headlines News :

காணொளி

சுவடி

ஜே,வி.பி யும் நானும்! சுனிலா அபேசேகரவுடன் நேர்காணல் (நேர்காணல் -என்.சரவணன்)

சுனிலாவின் ஐந்தாண்டு நினைவாக 20 ஆண்டுகளுக்கு முன் சரிநிகரில் வெளியான இந்த நேர்காணல் மீண்டும் உங்களுடன் பகிரப்படுகிறது.
சோசலிஸ பெண்ணிலை வாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சுனிலா ஒரு மனித உரிமையாளரும் கூட. முன்னர் ஜே.வி.பி. இயக்கத்தில் தீவிர செயற்பாட்­டாளராக இருந்தவர். தற்போது பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பு (Women & Media Collective), இன்போர்ம் (Inform) என்பவற்றின் இயக்குனர்­களில் ஒருவராக இருந்து வருகிறார். நான்கு பிள்ளைகளின் தாயாரான சுனிலா தனியொருவராக பிள்ளைகளை வளர்த்து வருபவர். இலங்கையின் பெண்ணிலைவாதிகளில் மிகவும் தீவிர செயற்பாட்டாளராக இருந்துவரும் இவர் தனது வாழ்க்கையிலும் பெண்ணிலைவாதி யாகவும் மாதிரிப் பெண்ணாகவும் வாழ்ந்து வருபவர். இவரை தவிர்த்து விட்டு செய்யப்படும் இலங்கையின் பெண்ணிய சூழலைப் பற்றிய எந்த ஆய்வும் பூரணமாகாது. சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு சரிநிகர் பத்திரிகைக்காக அவரிடமிருந்து பெறப்பட்ட நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது.

பெண்கள் அமைப்புகளின் போராட்டங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் நகர்வதில்லை. இருக்கின்ற பெண்கள் அமைப்புகள் எல்லாமே அரசு சார்பற்ற நிறுவனங்களாகக் காணப்படுகின்றன. அதற்கு வெளியில் சுயாதீனமான பெண்கள் அமைப்புகள் எதுவுமே இல்லை. அப்படி தோன்றினால் கூட என்.ஜீ.ஓ.க்கள் அவற்றை உள்வாங்கி ஏப்பமிடுவதற்கூடாக அவற்றின் தீவிரத் தன்மையைக் கூர்மங்கச் செய்வது ஒரு காரணமாக இருக்க முடியாதா?

இது பெண்கள் அமைப்புகளுக்கு மட்டுமல்ல பொதுவாகவே இந்த போக்கு நிலவுகிறது. சிவில் சமூக செயற்பாடுகளில் காணப்பட்டு வரும் மாற்றங்­களையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். 90களைப் பார்த்தோமானால் சிவில் சமூக செயற்பா­டானது மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே உள்ளது. 30களிலிருந்து தீவிரப்பட்ட தொழிற்சங்க நடவடிக்­கைகளுக்கும், இடதுசாரி செயற்பாடுகளுக்கும் கூட இந்த நிலைமை தோன்றியுள்ளன எனலாம். சித்தாந்த வீழ்ச்சியும் காணப்படு­கிறதல்­லவா? சமூக மாற்றத்துக்கான சித்தாந்த சூத்திரங்களை எம்மால் மாற்றத்துக்குள்­ளாக்க நேரிட்டதல்லவா? இதன் காரணமா­கவே தீவிரமடைதலுக்கும் பீதி நிலவுகிறது. சிவில் சமூகத்தில் செயற்பாட்டுச் சக்திக­ளாகவும் நிர்ப்பந்தச் சக்திகளாக பத்திரிகையாளர்களும், கருத்துச் சுதந்திரத்திற்­காக போராடுபவர்களுமே காணப்படுகின்­றனர் என்றே நான் கருதுகிறேன்.

நீங்கள் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக இருந்துள்ளீர்கள். அதில் நீங்கள் கண்ட அனுபவங்கள் மற்றும் பெண்கள் பிரச்சினை குறித்த அவதானங்களைப் பகிர முடியுமா?

ஜே.வி.பி.யினர் இன்றும் நான் ஒரு உறுப்பினராக ஒருபோதும் இருந்ததில்லை என்றே கூறி வருகின்ற­னர். நான் ஒரு தீவிர செயற்பாட்டாளராக இருந்து வந்திருக்கி­றேன். சோஷலிச கலைச் சங்கத்தின் கீழ் 1977இல் தோற்றுவிக்கப்பட்ட விமுக்தி கீ (விடுதலை கீதம்) குழுவில் பாடல்கள் பாடி வந்தேன்.

நீங்கள் ஜே.வி.பி.யின் சோஷலிச மகளிர் சங்கத்தில் இருக்கவில்லையா?

இல்லை, நான் அதில் அங்கம் வகிக்கவில்லை. ஆனால் அப்போது அதன் கூட்டங்களில் உரையாற்­றியிருக்கிறேன். ஆரம்பத்தில் நான் ஜே.வி.பி. ஆங்கில மொழியில் வெளியிட்டு வந்த Red Power பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்தேன். தொகுத்துமிருக்கிறேன். அதற்­குப் பொறுப்பாக சில காலம் இருந்திருக்கி­றேன். ஆங்கில மொழியிலான விடயங்கள் பலவற்றை நானே செய்ய நேரிட்டது. கொழும்பு கிழக்கின் அமைப்பாளராக செயற்பட்டிரு­க்கிறேன். நான் விஜேவீர, கெலி சேனநாயக்க உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அப்போது கியுபாவில் நடந்த சர்வதேச மாநாட்டுக்கும் சென்று வந்தோம். அப்போது ஜே.வி.பி.க்கு அங்கு நல்ல வரவேற்பி­ருந்தது. அதனைத் தவிர அப்போது ஜே.வி.பி.யின் மனித உரிமைகள் பிரிவு தோற்றுவிக்கப்பட்ட போது அதன் தலைமைப் பொறுப்பையும் நானே வகித்து வந்தேன்.


ஜே.வி.பி.யுடன் இணைவதற்கு உந்துதலாக இருந்த சூழலை விளக்குவீர்களா?

நான் இன்றும் நம்புகிறேன். இலங்கை­யில் தீவிர இடதுசாரித்துவத்திற்கான தேவை தொடர்ந்துமி­ருக்கிறது. 1976இல் தான் நான் மார்க்சிய அரசியலில் அக்கறை காட்டினேன். நாட்டில் ஒரு சமூக மாற்றமெ­ன்றை உருவாக்கும் ஆற்றல் ஜே.வி.பி.க்கு இருப்பதாக நம்பினேன். அன்று 71 கிளர்ச்சி­யில் பங்கு பற்றியவர்கள் தொடர்பான விசாரணை ஆணைக்­குழுவின் விசாரணை­களின் போது நானும் சென்று ஆர்வமாக அவதானித்து வந்தேன். இதற்கூடாகவே ஜே.வி.பி.யுடனான தொடர்பு ஏற்பட்டது. ஜே.வி.பி. தோழர்கள் என்னை அடையாளம் கண்டு தொடர்பு கொண்டனர். அவர்களின் வேலைகளில் நானும் பங்கேற்றேன். 78இல் தோழர் விஜேவீர விடுதலை­யான பின் 71 கிளர்ச்சியில் படுகொலை செய்யப்பட்ட பிரேமவதி மனம்பேரி நினைவாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியின் போது தோழர் விஜேவீர என்னைச் சந்தித்து உரையாடினார் அதன் பின் ஜே.வி.பி.யுடன் இணைந்து செயற்படத் தொடங்கினேன்.

ஜே.வி.பி.யில் இருந்து ஏன் விலகினீர்கள்?

ஒரு விதத்தில் என் தனிப்பட்ட பிரச்சி­னைகளும் எனது விலகலுக்குக் காரணமா­கியிருந்தன. அதை விட தொடர்ந்தும் பல கருத்துப் பிரச்சினைகள் இருந்து வந்தன. குறிப்பாக பெண்கள் விடயம் தொடர்பா­னது. சோஷலிச மகளிர் சங்கம் சுயாதீன­மாக இயங்க முடியாதிருந்தது. ஆண் தோழர்க­ளின் வழிநடத்தலிலேயே, அவர்­கள் இடும் ஆணைகளே சோ.ம.ச.வை இயக்கின. இது தொடர்பாக கட்சிக்குள் தொடர்ச்சியாக விவாதங்கள் நடந்தன. சோ.ம.ச. வின் தலைவியாக செயற்பட்ட நந்தசீலி சகோதரியின் பிரசவ விடுமுறை கூட அன்று வழங்க மறுக்கப்பட்டது. இது தொடர்பான பிரச்சினைகள் கிளப்பப்பட்ட போது. என் மீது மத்திய தர வர்க்க முத்தி­ரை குத்தப்பட்­டது. நான் ஆங்கில மொழி மூல விடயங்கள் பெருமளவு செய்து வந்த­தால் இது இம்முத்­திரை குத்தலுக்கு சாதகமாகப் போனது. இந்த நிலைமையை சமாளித்து நீடித்திரு­க்க முடியாது போனது. படிப்படியாக அதிலிருந்து அந்நியப்பட வேண்டி வந்தது. இன்று கூட நான் கெலி சேனநாயக்கவுடன் தொடர்பு வைத்திருந்­ததன் காரணமாகவே விலகினேன் என பிரச்சாரப்படுத்தி வருகிறது. கியூபாவுக்கு சென்றி­ருந்த வேளையில் அங்கு நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு போவதற்கு எம்மோடு வந்த சில தோழர்­களை அழைத்­திருந்தேன். ஆனால் எல்லோரும் மறுக்கவே என்னோடு கெலி மட்டுமே வரத் தயாராக இருந்தார்.

அங்கு போனதைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் கண்டிக்கப்பட்டோம். கெலியையும் என்னையும் சம்பந்தப்படு­த்தி அபாண்­டமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்­பட்டன. அது இறுதியில் எங்கள் இருவரை­யும் உண்மையிலேயே ஒன்று சேர நிர்ப்பந்தித்­திருந்தது. அக் குற்றச் சாட்டையே இன்றும் கூறி வருகிறது. இன்று வரை என்னால் எழுப்பப்பட்ட கருத்து ரீதியான பிரச்சினை­களை மூடிமறைத்துக் கொண்டே வருகி­றது. பெண்கள் பிரச்சினை போலவே ஜனநாயகம் பற்றிய பிரச்சினையும் கட்சிக்­குள் எழுந்தது. குறிப்பாக 1979ஆக இருக்கும் கம்போடியாவில் பொல்பொட் அரசாங்கம் பற்றிய சிக்கல்கள் எழுந்தன. கம்போ­டியப் போராட்டத்தை ஒரு புரட்சிகர எழுச்சியாக கருத முடியுமா என்ற விவாதம் நடைபெற்றது. ஜே.வி.பி.யின் நியமுவா பத்திரிகையில் பொல்பொட் அரசாங்கம் ஒரு புரட்சிகர அரசாங்கம் என்றே வாழ்த்தி வந்தது. ஆனால் பொல்பொட் அரசாங்கம் ஒரு கொலைகார அரசாங்கம் என்ற கருத்து என்னி­டம் இருந்தது. சீ.ஐ.ஏ.வின் செய்தி ஸ்தாபனங்கள் பரப்பி வரும் பிரச்சாரங்க­ளைக் கொண்டே நான் வாதிடுவதாகவும் பொல்பொட் அப்படியான கொலைகளைச் செய்யவில்லை என்றும் விஜேவீர தோழரும் எதிர்த்தார். நான் சீ.ஐ.ஏ. ஏஜன்ட் என்றும் பிரச்சாரப்படுத்­தினர். ஆனால் இன்று பொல்பொட் யார் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. இப்படி­யான கருத்து ரீதியான பிரச்சினைகளை சரியான பொறிமுறைக் கூடாக முகம்கொ­டுக்க ஜே.வி.பி. தயாராக இருக்கவில்லை.

இன்றும் கூட சமூக மாற்றமொன்றுக்­காக தொடர்ச்சியாக முயற்சி செய்கின்ற ஜே.வி.பி.யின் மீது எனக்கு அக்கறை உள்ளது. ஆனால் இன்றும் பெண்கள் தொடர்பான விடயம் உள்ளிட்ட பல விடயங்­களில் கருத்து ரீதியான வளர்ச்சி காணப்ப­டுவதாகத் தெரியவில்லை. பொரு­ளாதார விடுதலை­யிலேயே பெண்களின் விடுதலை தங்கியிருக்கிறது என்கின்ற கருத்துட­னேயே இன்றும் இருப்பதாகத் தெரிகிறது. நவீன பெண்ணிய சிந்தனை தொடர்பான கருத்தாடல் கட்சிக்குள் தற்போது இருப்ப­தாகத் தெரியவில்லை.

நன்றி - சரிநிகர்

தனிவீட்டுத்திட்டங்களும் மேலதிக வருமானமும் - அருள்கார்க்கி


மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக தனிவீட்டுத்திட்டங்கள் மலையகமெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை நாம் அறிந்ததே.

07 பேர்ச்சஸ் காணி என மட்டுப்படுத்தப்பட்ட நிலவுரிமையுடன் பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றன. சுமார் 198 வருட லயன் வாழ்க்கை முறைக்கு விடுதலை அளித்து கௌரவமான வாழ்க்கை முறைக்கு எம்மக்கள் முன்னேறும் காலமிது.

பெருந்தோட்ட பொருளாதாரத்தின் அடிப்படையாக தேயிலையை மட்டுமே நம்பியிருந்தது போக எம்மவர்களின் பொருளாதாரத்தை லயன்களைச் சுற்றியிருந்த நிலங்களே தீர்மானித்தன. விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுயதொழில்கள் என எம்மவர்களின் பொருளாதாரம் சற்று ஸ்திரமானது. குறிப்பாக விவசாயம் மூலம் மேலதிக நேரத்தை பயனுடைய வகையில் எம்மக்கள் இன்றும் மாற்றியமைத்து நன்மையடைகின்றனர்.

பெருந்தோட்டத்தில் வேலை நாட்கள் குறையும் சந்தர்ப்பங்கள், போதிய சம்பளம் கிடைக்காத நிலைமைகளில் இவ்வாறான மேலதிக வருமானங்கள் குடும்பங்களின் வாழ்க்கைச் சுமையை சமாளிக்க இன்றியமையாதவையாகும். தோட்டங்களில் வேலை செய்யாதோரும், ஓய்வு பெற்றவர்களும் முழு நேரமாக மரக்கறி, கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களின் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர்.

அதாவது காடாகிக் கிடந்த நிலங்களை பணத்தை முதலீடு செய்து விளைநிலங்களாக ஆக்கி வருமானம் தேடுகின்றனர். குறிப்பாக வடிகால் வசதிகள், பாத்தி அமைப்பு போன்றவற்றுக்கு அதிகமான பணம் முதலீடுச் செய்யப்பட்டுள்ளது. அதைப்போல் கால்நடை வளர்ப்புக்கு தொழுவங்கள் அமைத்தல், பாதுகாப்பு சுகாதாரம் தொடர்பான தேவைகளுக்கும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் பால் உற்பத்தி, (மிருகக்கழிவுகள்) சேதனப்பசளை உற்பத்தி போன்ற செயற்பாடுகள் மூலம் சாதகமான வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டுள்ளனர்.

இவையனைத்தும் லயன் குடியிருப்புகளை அண்டியே அமைந்திருந்தமையால் சாதகமாக இருக்கின்றது. மறுபுறம் தனிவீட்டுத்திட்டங்கள் மூலம் நிலப்பரப்பு மட்டுப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான தொழில்களை செய்வது சாத்தியமற்றதாக மாறலாம். குறிப்பாக தனிவீட்டுத்திட்டங்களுக்கான காணிகளை ஒதுக்கும் போது பெருந்தோட்டக் கம்பனிகள் தேயிலை விளைச்சல் குறைவாக அல்லது தரிசாக காணப்படும் நிலங்களே வழங்கப்படுகின்றன. இவ்வாறான பிரதேசங்களில் குடியிருப்பு தொகுதிகளை அமைக்கும் போது வீதி, குடிநீர், பாதுகாப்பு போன்ற விடயங்களுக்காக அதிகமாகச் செலவு செய்ய வேண்டியேற்படுகின்றது.

தனிவீட்டுத்திட்டங்களை காரணம் காட்டி பெரும்பாலான தோட்டக்கம்பனிகள் மக்களை தோட்டங்களினுள், மட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மட்டும் கட்டுப்படுத்தி வைக்க முற்படுகின்றன.

லயன்களையும் அது சார்ந்த நிலங்களையும் விட்டு வெளியேறும் தொழிலாளர்களின் விவசாய நிலங்களையும் பெரும்பான்மை இனத்தவர்கள் ஆக்கிரமித்துக்கொள்ளும் விபரீதமும் ஏற்பட வாய்ப்புண்டு.

சில பெருந்தோட்டக்கம்பனிகள் மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசங்களில் காணப்படும் லயன்கள் மற்றும் விவசாய நிலங்களில் நெடுங்கால மரங்களை பயிரிட திட்டமிட்டு வருகின்றன. இது மண்சரிவுக்கு மாற்றீடான யோசனையாக இருப்பினும் கூட, தேயிலை மலைகளைப்போலவே விவசாய நிலங்களிலும் எம்மவர்களின் உழைப்பு உண்டு என்பதை உணர வேண்டும். எனவே எம்மவர்களின் மேலதிக வருமானத்துக்கான அடிப்படைகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.

நிச்சயத்தன்மை அற்ற பொருளாதாரமாக இன்று பெருந்தோட்டத் தொழில் துறை பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. பெரும்பாலான தோட்டங்கள் மூடப்பட்டும், திட்டமிட்டு காடாக்கப்பட்டும் வருகின்றன. தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மாற்றுப்பொருளாதார வாய்ப்புகள் மிகவும் அவசியமாகும். அதேபோல் நாட்டின் உணவு உற்பத்தி, பசும்பால் சார்ந்த உற்பத்திகளுக்கும் மலையக மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கி வருவதால் அவர்களின் முயற்சிகள் அரசினால் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

அதே போல் சுயதொழில்கள் மூலமும் எம்மவர்கள் வருமானம் ஈட்டுகின்றனர்.

அதற்கு நிலமும், நீர் போன்ற அடிப்படைத் தேவைகளும் இன்றியமையாததாகும். மட்டுப்படுத்தப்பட்ட நிலப்பரப்பில் (தனிவீடு) இவ்வாறான சுயதொழில்களை செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே. கிராமப்புறங்களை எடுத்துக்கொண்டால் அங்கு அவர்களுக்கு சுயதொழில் மானியமும், உதவுத்தொகைகளும் இழப்பீடுகள், காப்புறுதி என்பனவும் வழங்கப்படுகின்றன. ஆனால் எம் இளைஞர் யுவதிகளுக்கு அவ்வாறான எந்த சலுகைகளும் இதுவரை வழங்கப்பட்டதில்லை. இதற்கு சிறந்த உதாரணமாக மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் மட்டுமே வழங்கப்பட்டன. சுயதொழில்களில் ஈடுபட்டவர்களுக்கான எவ்வித இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை. இவ்வாறான நடைமுறைகள் மூலம் எம் பொருளாதாரம் ஸ்திரமற்று காணப்படுவது குறித்து எம் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். பெருந்தோட்ட கம்பனிகள் எம்மை வந்தேறு குடிகளாகவே இன்னும் வைத்திருக்க முனைவது இதன் மூலம் புலப்படும். வெளியாரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிய பெருந்தோட்ட நிலங்களை மீட்பதும் கடினமானது. எனவே நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

தனிவீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவற்றுக்கு பிரத்தியேகமான நிலம் வழங்கப்பட வேண்டும். லயன்களை இடித்து தள்ளுவதற்கு புறம்பாக கால்நடை வளர்ப்புக்கு அவற்றை உபயோகப்படுத்தலாம். கிராம அபிவிருத்தி எண்ணக்கரு மூலம் சுயதொழில் புரியும் இளைஞர் யுவதிகளுக்கு தனியான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும்.

மலையகம் என்பது வெறுமனே மக்களை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. அது எம் நிலத்துடனான உரிமையையும் இருப்பையும் வெளிக்காட்டுகின்றது. எம் தேவை வாழ்வதற்கு 07 பேர்ச்சஸ் நிலம் மட்டுமல்ல. எம் சொந்த நிலத்தில் நாம் சுதந்திரமாக சமூக பொருளாதார ரீதியாக ஸ்திரமான இருப்பை உறுதி செய்யும் உரிமையாகும்.

நன்றி - வீரகேசரி

நம் காலத்து நாயகி : சுனிலா அபேசேகர (1952-2013) - என்.சரவணன்

பட்டறிவு
சுனிலாவின் ஐந்தாண்டு நினைவாக கொழும்பில் சில நிகழ்வுகள் இந்த வாரம் ஏற்பாடாகியுள்ளன. அவரின் நினைவாக இந்தக் கட்டுரை
90களின் நடுப்பகுதியில் ஒரு நாள் நடந்த சம்பவம் இது.... திம்பிரிகஸ்யாயவிலுள்ள எமது சரிநிகர் அலுவலகமும் சுனிலாவின் இன்போர்ம் நிறுவனமும் எதிரெதிரில் அலுவலகங்கள் இருந்தன. எமது சகோதர நிறுவனமும் கூட.

சக தமிழ் பணியாளர்களின் பாதுகாப்பில் அனைத்து சிங்கள நண்பர்களும் மிகுந்த அக்கறை எடுப்பார்கள். அப்படி பல சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. அது இருக்கட்டும். எனக்கு ஒரு நாள் நேர்ந்தத்தை பதிய வேண்டும்.

ஒரு நாள் காலியில் உள்ள ஒரு தோழர் ஒருவரை சந்திப்பதற்காக சென்ற இடத்தில் திரும்பி வர இரவு பஸ்சும் இன்றி நான் சிக்கிவிட்டேன். அது ஒரு கிராமம் அங்கிருந்து தொலைபேசியில் அறிவிக்கக் கூட வசதி இல்லை. இருட்டிய பின்னர் அவர்கள் என்னையும் வெளியில் அனுப்புவதாக இல்லை. வழமையாக நான் எங்கு சென்றாலும் இரவில் தங்கும் நிலை ஏற்பட்டால் நான் பத்திரமாக இருப்பதை வீட்டுக்குத் தெரிவித்து விடுவேன். அன்று அதற்கு வழியில்லை என்றாகிவிட்டது. விடிந்ததும் கிளம்பத் தயாராக இருந்தேன்.

சுனிலாவின் குரலில் அமைந்த பாட்டுப் பின்னணியுடன் இந்த காணொளி செய்யப்பட்டிருக்கிறது.

அன்று விடியவே அந்த கிராமத்திலிருந்து ஒரு மாட்டு வண்டிலை பிடித்து சந்திவரை வந்து இன்னொரு ட்ரக்டரில் என்னை ஏற்றிவிட்டார் தோழர். அங்கிருந்து டவுனுக்கு வந்து காத்திருந்து பஸ் பிடித்து கொழும்பு வந்து, கொழும்பில் இருந்து நேராக அலுவகத்திற்கு வந்து சேர்ந்தேன். சற்று பின்னேரமாகியிருந்து.

அங்கு அலுவலகம் அல்லோல கல்லோலமாக இருந்தது. என்னைத் தூரத்தில் கண்டவுடன் அங்கு அலுவலக பணியாளர் அதோ சரா வருகிறார் என்று சிங்களத்தில் கத்திய சத்தம் கேட்டதும் அலுவலகத்தின் உள்ளிருந்து சக நண்பர்கள் பதட்டத்துடன் வெளியே வந்தார்கள். அருகில் உள்ள இன்போர்ம் அலுவலகத்திலிருந்தும் நண்பர்கள் வந்து என்ன நடந்தது என்று பதட்டமாக கேட்டார்கள்.

அவர்களைப் பார்த்து நானும் பதட்டமடைந்தேன். எங்கு போயிருந்தாய் உன்னை காணவில்லை என்று ஊடக செய்திகள் வரை போய் விட்டது. நான் நடந்ததைக் கூறினேன். சுனிலா அங்கிருந்து வந்து என் மண்டையில் ஒரு அடி அடித்தார்.

“வீட்டுக்கு நீ நேற்று வரவில்லை என்று அம்மா காலையில் தொடர்பு கொண்டு கூறினார். நாங்கள் பதட்டப்பட்டு மங்களவுக்கு தெரிவித்தோம் (மங்கள சமரவீர: ஒரு சமயத்தில் நம்முடன் நட்புடன் இருந்த இன்றைய அமைச்சர், அன்றைய ஊடக அமைச்சர்). உன்னைக் கடத்திக் கொண்டு போயிருக்கலாம் என்ற பயத்தில் சற்று கடுமையாகவே நாங்கள் உரையாடினோம். பொலிஸ் நிலையங்களில் அப்படி ஒருவர் உள்ளே இல்லை என்றும் பொலிஸ் மா அதிபரும் கூறிவிட்டார். அப்படி கண்டு பிடித்தால் அறிவிப்பதாக கூறியிருக்கிறார். இங்கே நாங்கள் ஏனைய ஊடகங்களுடனும் தொடர்புகொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம். நீ ஹாயாக வந்து இருக்கிறாய்...”

மற்ற நண்பர்கள் சூழ இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் இடைக்கிடை என்னை திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தார்கள். குற்றவாளியாக அதிர்ச்சியடைந்து இருந்தேன்.

ஏதாவது ஒரு வழியில் எமக்கு நீ தகவல் தந்திருக்க வேண்டும் என்பதே அனைவரது ஆத்திரத்திலும் இருந்த சாராம்சம். நான் காலி டவுனில் அதை செய்திருக்கலாம். எனது தவறை நினைத்து வெட்கித்தும், என்னிலே ஆத்திரமும் கொண்ட தருணம் அது. இவ்வளவு அசட்டையாக நான் பாதுகாப்பு விடயத்தில் பொதுவாக இருந்ததில்லை. அன்று எனக்கு பெரிய பாடம் கிடைத்தது. என்னில் அக்கறை கொண்டவர்களை நான் இப்படி பதட்டத்துக்கும், பயத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறேன். குறிப்பாக என்னை எந்த இடத்திலும் தன் தத்துப் பிள்ளையாக அறிமுகப்படுத்தும் சுனிலாவை நான் காயப்படுத்திவிட்டேன் என்று மிகுந்த வேதனைப்பட்ட நாள் அது.

சுனிலா உலகறிந்த ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர். அவரின் கருத்துக்களை அசட்டை செய்ய மாட்டார்கள். எனவே சுனிலா மீண்டும் உரிய இடங்களுக்கு நான் பத்திரமாக இருப்பதை அறிவித்தார்.

சுனிலா இறப்பதற்கு சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் 2012 ஒக்டோபர் மாதம் ஒஸ்லோ வந்திருந்தார். ஒஸ்லோவில் மனித உரிமை குறித்த ஒரு கலந்துரையாடலை எனது நிறுவனத்தில் ஒழுங்கு செய்தேன். அப்போது பல இடங்களில் இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார், ஏற்கெனவே திட்டமிட்டபடி என்னையும் அங்கெல்லாம் அழைத்துச் சென்றார். சுனிலா தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அழைத்துக் கொண்டு வெளியே வரும்போது வெளியில் மழைத்தூரலும், குளிருமாக இருந்தது. நான் எப்போதும் போல எனது ஜெக்கட்டை மூடாமல் அனாயசமாக குடையை அவருக்குப் பிடித்தேன். என் தலையில் அதே குட்டு விழுந்தது.

“முதலில் ஜெக்கட் சிப்பை இழுத்து மூடு. குளிராக இருக்கிறது. விளையாடுகிறாயா... வியாதியை இழுத்துக்கொள்....”

அன்று தான் நான் அந்த இறுதிக் குட்டை வாங்கினேன். அது தான் நான் அவரை சந்திக்கும் இறுதி நாள் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை.

சுனிலா புற்றுநோயால் போராடிக்கொண்டிருந்தார். ஆனால் அவரை இறுதியாக சந்தித்த வேளை தான் மிகவும் தேறிவிட்டதாகவும், ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டுவிட்டதாகவும் கூறினார். அப்போது அவர் நெதர்லாந்தில் சிறிது காலம் வாழ்ந்து வந்தார். நோயுற்று இருந்த நிலையிலும் இலங்கை திரும்பமுடியாத படி அவருக்கு உயிரச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருந்தது. தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் அக்கிரமங்களை உலகெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததால் மகிந்த அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி நாடு திரும்ப முடியாத நிலையில் இருந்தார். அவரை கிட்ட இருந்து கவனிக்க என்று முமுதினி சாமுவேல், சேபாலி இன்னும் சில சக தோழிகள் இலங்கையில் இருந்து மாறி மாறி நெதர்லாந்து வந்து தங்கியிருந்து அவரைக் கவனித்துச் சென்றார்கள்.

“நான் ஒரு அகதியைப் போல நாட்டுக்கு நாடு திரிந்து அலைந்து என்னைத் துரத்திய எமனிடமிருந்து தப்ப முயற்சித்தேன். ஆனால் எமன் எனது உடலுக்குள்ளேயே ஒளிந்திருந்தான். என்று அவர் இன்னொரு நண்பியிடம் தெரிவித்திருந்தார்.

சுனிலாவின் வீடு புற்றுநோயாளும் வேறு உடல் உபாதைகளாலும் பாதிக்கப்பட்ட பல நட்புகளுக்கு உறைவிடமாக ஒரு காலத்தில் இருந்ததை நான் அறிவேன். பேராசிரியர் மௌனகுருவுக்கு இதய சத்திரிசிகிச்சை செய்து சுனிலாவின் வீட்டில் இருந்தபோது அவர் அங்கு தான் இருக்கிறார் என்பதை அவரின் வீட்டுக்கு அருகிலேயே இருந்த எங்கள் அலுவலகத்தில் எவருக்கும் தெரியாதிருந்தது. பார்க்க வருபவர்களால் அவருக்கு இடைஞ்சல் ஏற்படக்கூடும் என்று கவனமாக இருந்தார்.

எங்கள் சரிநிகர் பத்திரிகையை வெளியிட்ட மேர்ஜ் நிறுவனத்தின் ஸ்தாபகரும், நீண்ட காலமாக தன தலைவராகவும் இருந்த பிரபல மனித உரிமையாளர் சார்ள்ஸ் அபேசேகரவின் மகள் தான் சுனிலா.

இலங்கையில் அவரோடு சேர்ந்து பணியாற்றிய காலம் மிகவும் பசுமையானது. நகைச்சுவை உணர்வை எப்போதும் பேணுபவர். அவருடன் நிறைய பயணம் செய்திருக்கிறேன். பல்வேறு விடயங்களை விவாதித்து, உரையாடியிருக்கிறேன். பெண்ணியம், மனித உரிமைகள் சார்ந்த கூட்டங்கள் பலவற்றில் அவரின் மொழிபெயர்ப்பாளராக நான் இயங்கியிருக்கிறேன். எங்கும் என்னை தனது தத்துப் பிள்ளை என அறிமுகப்படுத்துவது அவரது வழக்கம்.

உயிரச்சுறுத்தல் காரணமாக இலங்கையை விட்டு பலரும் தப்பிப் போவதற்கு தனிப்பட்ட ரீதியில் நூற்றுக்கணக்கானோருக்கு அவர் உதவி செய்திருக்கிறார். அது மட்டுமன்றி பின்னர் அவர்கள் தஞ்சமடைந்த நாடுகளில் அகதி அந்தஸ்து பெறுவதற்கு சுனிலா காரணமாக இருந்திருக்கிறார்.


மனித நேயம் மிக்கவராக மட்டுமல்ல சிறந்த மனித உரிமையாளராகவும் உலகளவில் அறியப்பட்டிருந்தார் சுனிலா. 1999ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை சிறந்த மனித உரிமையாளருக்கான விருது அவருக்கு அன்றைய செயலாளர் நாயகம் கொபி அனானால் வழங்கப்பட்டது.

அவர் போன்ற ஒரு பெண் ஆளுமையை நான் இதுவரை இலங்கையில் கண்டதில்லை. 70களின் இறுதியில் புரட்சிகர மேடைகளில் அவரின் குரல் மிகவும் பிரசித்தம். ஜே.வி.பியின் செயற்பாடுகளில் தீவிரமாக செயற்பட்ட அந்த காலப்பகுதியில் “விமுக்தி கீ” (விடுதலை கீதம்) என்கிற பிரச்சாரக் குழுவில் முக்கிய பாடகி. மனித உரிமையாளர், பெண்ணுரிமையாளர், தமிழர்களின் உரிமைக்காகவும் இறுதிவரை குரல்கொடுத்தவர். ஒட்டுமொத்தத்தில் சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் சகல தளங்களிலும் போராடியவர் அவர். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பின்னணிப் பாடகியாகவும் குரல் கொடுத்திருக்கிறார்.

அவர் நம்மை விட்டுப் பிரிந்து செப்டம்பர் 9ஆம் திகதியோடு சரியாக ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அவர் நம் காலத்து நாயகி. நம் காலத்து வீராங்கனை.

நன்றி - அரங்கம்


"மாற்றுத்தொழில்கள் பற்றி மலையகம் சிந்திக்க வேண்டிய தருணம்" பேராசிரியர் மு.சின்னத்தம்பி (நேர்காணல்)

பொருளாதார ரீதியாக மலையக பெருந்தோட்டப்பகுதி மக்கள் இன்னும் பின்தங்கி இருப்பதற்கான பிரதான காரணம் அவர்களின் வாழ்வாதாரம் கொழுந்து பறித்தல் தொழிலில் மட்டும் தங்கி இருப்பதாகும். தேயிலை தொழில் துறையானது வருடந்தோறும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இதன் காரணமாகவே சில மாதங்கள் அவர்களுக்கு வேலை நாட்கள் குறைவாகவும் வருமானம் கீழ் மட்டத்திலும் இருக்கின்றன. ஆகவே அவர்கள் மாற்றுத்தொழில்களில் ஈடுபாடு காட்டுவது அவசியம். அதாவது இத்தொழிலை பிரதானமாகக்கொண்டு ஏனைய உப தொழில்களில் ஈடுபடல் அவசியம். அதற்கு அரசியல் தொழிற்சங்க பிரதிநிதிகளும் தோட்ட நிர்வாகங்களும் கைகொடுக்க வேண்டும் என்கிறார் பேராதனை பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசிரியரும், பொருளாதார ஆய்வாளருமான மு.சின்னத்தம்பி. கேசரி வாரவெளியீட்டுக்கு அவர் வழங்கிய செவ்வியின் முழு வடிவம் வருமாறு.

கேள்வி: இந்திய வம்சாவளி மலையக சமூகத்தின் மிகவும் மதிக்கப்படும் கல்வியியலாளரான உங்களைப்பற்றி…?

பதில்: நான் கண்டி மாவட்டம் ரங்கல எனும் பிரதேசத்தில் பிறந்தேன். அங்குள்ள தோட்டப்பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத்தொடர்ந்தேன். தந்தை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர். 1948 ஆம் ஆண்டு குடும்பம் தலவாக்கலைக்கு இடம்பெயர்ந்தபோது அங்கு அரச சிரேஷ்ட பாடசாலையில் சாதாரண தரம் வரை பயின்றேன். இப்பாடசாலை தற்போதுள்ள பொலிஸ் நிலைய கட்டிடத்துக்கு அருகில் அமைந்திருந்தது. பின்பு 1959 இல் தெல்லிப்பளை மகஜன கல்லூரியில் உயர்தரம் பயின்று 1961 இல் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி பொருளியலை விசேட பாடமாக தொடர்ந்தேன். 1965 இல் உதவி விரிவுரையாளராகும் சந்தர்ப்பம் கிடைத்தது. இரண்டு வருடங்களில் நிரந்தர விரிவுரையாளராகி பின்பு 1969 இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணி பட்டத்தைப்பெற்றேன். 1974 இல் பேராதனைப்பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகி கடமையாற்றி வந்தேன். 1993 இல் பொருளியல்துறை பேராசிரியராகவும் 1997 இல் துறைத்தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டேன். 2006 இல் ஓய்வு பெற்றேன்.

கேள்வி: வளங்கள் குறைவாக இருந்த அக்காலகட்டத்தில் கல்வி நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்தன?

பதில்: வளங்கள் குறைவு என்பது உண்மை தான் ஆனால் முயற்சி என ஒன்றுள்ளதே? நான் சிறுவயதிலிருந்தே வாசிப்பிலும் கற்றலிலும் திறமையாக விளங்கினேன். அதுவே எனது வளர்ச்சிக்குக்காரணம். பெற்றோரின் ஆதரவும் கூறப்போனால் கடவுளின் கடாட்சமும் எனக்குக் கிடைத்தது.

கேள்வி: மலையக பெருந்தோட்ட சமூகம் பற்றிய பல பொருளாதார ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றீர்கள் இன்னும் ஏன் இந்த சமூகம் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளது?

பதில்: பல காரணங்கள் இருந்தாலும் பிரதானமாக இச்சமூகத்துக்கு அனைத்தும் தாமதமாகியே கிடைத்ததைக்கூறலாம். 1980 களுக்குப்பிறகு தான் கல்வி வளர்ச்சியைப்பற்றி பேச முடியும். அதே நேரம் அரசியலிலும் குறித்த காலப்பகுதிக்குப்பின்னரே உரிமைகளைக்கேட்டுப்பெறும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இச்சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அமரர் தொண்டமான் பெருந்தோட்டப்பகுதிகளில் பல கல்விக் கூடங்கள் உருவாக வழிவகுத்தார். இது ஆரம்ப கால வரலாறு. தற்போது வரை ஏன் இச்சமூகம் இப்படி இருக்கின்றது என்றால் இம்மக்களின் ஒரே வாழ்வாதாரத் தெரிவாக கொழுந்து பறித்தல் மட்டுமே காணப்படுவதேயாகும்.இவர்கள் ஒரே தொழிலில் மட்டும் தங்கி வாழும் குழுவாக இருக்கின்றனர். மாற்றுத்தொழில் குறித்த எவ்வித விழிப்புணர்வும் இவர்களிடையே இல்லை என்பதோடு அதை அவர்களுக்குத்தெளிவு படுத்தும் பணிகளை அரசியல் தொழிற்சங்க ரீதியாக முன்னெடுக்கும் செயற்பாடுகளும் மந்த கதியிலேயே உள்ளன. மாற்றுத்தொழில்கள் என்றால் இவர்கள் தோட்டங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கின்றனர்.அப்படிக் கருதியதாலேயே தொழிலாளர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

கேள்வி : என்ன மாற்றுத்தொழில்களை நீங்கள் சிபாரிசு செய்கின்றீர்கள்?

பதில்: இப்பகுதியின் புவியியல் அமைப்பின் படி கால்நடை வளர்ப்பு சிறந்த மாற்றுத்தொழிலாக இருக்கின்றது அடுத்ததாக விவசாயத்தைக்கூறலாம். இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் தேயிலை மலைகளைத் தவிர தரிசுநிலங்கள் காணப்படுகின்றன. கால் நடை வளர்ப்புக்குரிய தோதான காலநிலை உள்ளது. பண்ணைகளை அமைத்துக் கொடுத்து தொழிலாளர்களுக்கு வழிகாட்டினால் அவர்கள் மேலதிக வருவாயைப்பெறலாம். கால்நடைகளுக்கான உணவுத்தேவைக்கு வேறு எங்கும் செல்லத்தேவையில்லை. மேலும் ஒவ்வொரு மாதமும் வருவாயை நிரந்தரமாகப்பெற்றுக்கொள்ளக்கூடிய தொழிலாக இது உள்ளது. அடுத்ததாக காய்கறி செய்கை. இதற்கும் இங்கு நிலம் தாராளமாகவே உள்ளது. ஆனால் எல்லா தொழிலாளர்களும் இதில் ஈடுபாடு காட்டுவதில்லை ஏனெனில் இதற்கு முதலீடு அவசியம். இதற்கு இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அரசியல் பிரமுகர்கள் மட்டுமல்லாது தோட்ட நிர்வாகங்களும் இவ்வாறான தொழில்களில் இவர்களை ஊக்குவித்து அவர்களை தன்னிறைவு அடையச்செய்யும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும். கால்நடை பண்ணைகளை தோட்ட நிர்வாகங்களே அமைத்துக்கொடுக்கலாம். கடன் வசதிகள் ஏற்படுத்திக்கொடுப்பது அல்லது கிடைக்கும் இலாபத்தில் ஒரு தொகையை பெற்றுக்கொள்வது போன்ற விடயங்கள் தோட்ட நிர்வாகங்களுக்கு சாதகமான அம்சத்தை தரும். அதாவது தொழிலாளர் வெளியேற்றத்தை இச்செயன்முறைகள் கட்டுப்படுத்தும்.

கேள்வி: தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாகத்தான் தேயிலை தொழிற் துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக கம்பனிகள் கூறுகின்றனவே?

பதில்: ஓரளவிற்கே அதில் உண்மையுள்ளது.

 இங்கு வீழ்ச்சியடைந்திருப்பது உற்பத்தி அளவு மட்டுமே ஒரேடியாக தொழில் துறையைக்கூறமுடியாது. அதாவது ஒரு தொழிலாளி கொழுந்து பறிக்கும் அளவில் ஏற்பட்ட வீழ்ச்சியே அது. பராமரிப்பு ,தேயிலை கன்றுகளை நடல் போன்றவற்றில் கம்பனிகள் அக்கறை காட்டுவதில்லை. உதாரணமாக போட்டி நாடுகளோடு ஒப்பிடும் போது இலங்கையில் ஒரு தொழிலாளி பறிக்கும் கொழுந்தின் அளவு மிகக்குறைவு. கென்யாவில் 3035 கிலோவாகவும் ,இந்தியாவில் 25 கிலோவாகவும் வியட்நாமில் 30 கிலோவாகவும் இருக்கும் அதே வேளை இலங்கையில் அது 1220 கிலோவாக உள்ளது. நிலத்தினதும் ஊழியத்தினதும் குறைந்த உற்பத்தித்திறன் காரணமாகவே ஒரு கிலோ தேயிலைக்கான உற்பத்தி செலவு இங்கு அதிகமாக உள்ளது. ஒரு ஹெக்டேயருக்கான தேயிலை விளைச்சல் கென்யா மற்றும் இந்தியாவில் 2300 கிலோவாக இருக்க இலங்கையில் 1688 கிலோவாகவே உள்ளது. இது தொடர்பான தகவல்களை ‘இலங்கையின் பொருளாதார அபிவிருத்திப் போக்குகள் என்ற ‘எனது புதிய நூலில் பெற்றுக்கொள்ளலாம். இந்த நூல் இம்மாதம் 8 ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. 

கேள்வி: அண்மையில் நீங்கள் மேற்கொண்ட ஆய்வில் தற்போதைய சூழலில் தொழிலாளி ஒருவரின் நாட்சம்பளம் 1200 ரூபா வரை இருத்தல் வேண்டும் என்று கூறியிருந்தீர்களே?

பதில்: உண்மை அது தான். ஆனால் அத்தொகையை வழங்குவதற்கு கம்பனிகள் முன்வருவதில்லை. அவர்கள் நட்டக்கணக்கை காட்டுகின்றனர். தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதே தவிர அத்துறை நட்டமடையவில்லை. அப்படி நட்டம் ஏற்பட்டால் கம்பனிகள் இப்படி இயங்க முடியாது. தோட்டத்தை விட்டுச் செல்ல வேண்டுமே? மேலும் ஆய்வு ரீதியான தரவுகள் கூட்டு ஒப்பந்தப் பேச்சு வார்த்தைக்கு கொண்டு செல்லப்படல் வேண்டும். அப்போது தான் வாதம் புரிய முடியும். 1984 ஆம் ஆண்டு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு தோட்டத்தொழிலாளர்களின் ஊதியம் பற்றிய ஒரு அறிக்கையை நாம் தயாரித்து வழங்கியிருந்தோம். அதை சிறப்பாக முன்னெடுத்தார் அவர். இறுதியில் அரசாங்கமும் அதை ஏற்றுக்கொண்டது.

கேள்வி: தற்போது ஏன் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதில்லை?

பதில்: அக்காலகட்டத்தில் தொழிற்சங்க செயற்பாடுகள் அதிகம். அதற்கு அரசாங்கமும் ஏனையோரும் பயங்கொண்டிருந்தனர். தொழிலாளர்கள் மத்தியில் ஒரு வேகம் இருந்தது. தற்போது அரசியல் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றது. தொழிற்சங்க அணுகுமுறைகள் முற்றாக இல்லாது போய்விட்டன அல்லது அவை பற்றி இப்போதுள்ளவர்களுக்கு தெரிய வில்லை எனலாம்..இதை அரசாங்கமும் கம்பனிகளும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

கேள்வி: மாதச் சம்பள முறை சாத்தியமாகாதா?

பதில்: இல்லை அது சாத்தியமில்லை. ஒவ்வொரு மாதமும் ஒரே தொகை சம்பளத்தை வழங்க தோட்ட நிர்வாகங்களால் முடியாது அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மாதமும் உற்பத்தி ஒரே அளவில் இருப்பதில்லை. அது தோட்ட நிர்வாகங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.

கேள்வி: தேசிய வருமானத்துக்கு பங்களிப்புச் செய்யும் இச்சமூகத்தை ஏன் அரசாங்கங்களும் கண்டு கொள்வதில்லை?

பதில்: முதலில் இம்மக்களின் பிரச்சினைகளை இங்குள்ள அரசியல் தொழிற்சங்க பிரமுகர்கள் கண்டு கொள்ள வேண்டும்.அதாவது அக்கறை குறைவாகவே உள்ளது. நாம் ஒரேடியாக இவர்களை பின்தங்கிய சமூகம் என்று அடையாளப்படுத்த முடியாது. மெதுவாக முன்னேறி வரும் சமூகம் எனலாம். இங்கிருந்து கல்வியியலாளர்கள் தற்போது உருவாகி வருகின்றனர். ஆனால் அரசியலில் கற்றவர்களின் செயற்பாடுகள் அவசியம். அல்லது அவ்வாறானவர்களின் ஆலோசனைகளைப்பெற்றுக்கொள்ளல் மிக முக்கியம். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலகட்டத்தில் இப்பணியை அவர் சிறப்பாக முன்னெடுத்திருந்தார். எனினும் இப்போது எவரையும் இவ்விடயத்தில் நான் குறை கூறவில்லை. ஏனெனில் காலமாற்றங்கள் அனைத்தையும் மாற்றுவனவாக உள்ளன. ஆனால் கல்விமான்கள் ,கொள்கை வகுப்பாளர்களை நிச்சயமாக அரசியல்வாதிகள் அரவணைத்துச் செல்லல் வேண்டும். அதற்கும் அப்பாற்பட்டு சிறுபான்மையினர் என்ற காரணத்தினால் அரசாங்கம் கண்டு கொள்வதில்லை என்பதை விட வேறு என்ன தான் கூற முடியும்?

கேள்வி:கல்விப் புலத்திலுள்ளோர் சமூக மாற்றத்துக்கு வித்திட முடியாதா?

பதில்: நிச்சயமாக முடியும் ஆனால் இப்போதுள்ள கல்விச் சமூகத்தினர் அனைவரும் அது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளதே? தற்போதைய சூழலில் பல ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்பு மிகவும் குறைவாகவே உள்ளன. எல்லோரையும் இதில் அடக்க முடியாது ஆனால் ஒரு கல்விக்கூடத்தில் அனைவரும் ஒரே மாதிரி சிந்தித்தால் மட்டுமே பெறுபேறுகளை அடைய முடியும். இதை ஒரு வருமானம் தரும் தொழிலாக என்று இவர்கள் நினைக்க ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து சேவை மனப்பான்மையும், சமூகத்தை வளர்க்க கல்வி அவசியம் என்ற சிந்தனையும் இவர்களுக்கு இல்லாது போய்விட்டது. எமது காலத்தில் அது சாத்தியப்படலாம் இப்போது அப்படி முடியாது என்று சிலர் கூறலாம். ஆனால் அப்படியல்ல. இன்று மலையக கல்விப்புலத்திலுள்ளோர் சிலர் தனித்தனியாக அமைப்புகளை நிறுவி சமூக உயர்வுக்கு பாடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசியல் ஆதரவு கிடைப்பதில்லை அல்லது கட்சி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டால் மட்டுமே ஆதரவு கிடைக்கும் நிலைமை உள்ளது. இதுவே இங்குள்ள பிரச்சினை. இவற்றையெல்லாம் தாண்டி சில நல்ல ஆசிரியர்களும் அதிபர்களும் பாடு பட வேண்டியுள்ளது.

கேள்வி: தனி வீட்டுத்திட்டங்களை வரவேற்கின்றீர்களா?

பதில்: வரவேற்கின்றேன் ஆனால் 7 பேர்ச் காணி என்பது அவர்களுக்கு போதாது. நான் ஆரம்பத்தில் கூறியதைப்போன்று தொழிலாளர்கள் மாற்றுத்தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென்றால் அவர்களுக்கு அதற்கான சூழல் அமைய வேண்டும். வீட்டின் சுற்றுப்புறத்தில் அவர்களுக்கு மேலதிக நிலம் ஒதுக்கப்படல் வேண்டும். கால் நடை வளர்ப்புக்கு இல்லாவிட்டாலும் உப உணவுப்பயிர்ச்செய்கைகள் சிறிய அளவிலான பண்ணைகள், சிறு தொழில் முயற்சிகளுக்கு உரிய இடம் அவர்களுக்கு வேண்டுமே?

கேள்வி: பெருந்தோட்டங்களும் அங்கு வாழ்ந்து வரும் மக்களும் அபிவிருத்தியடைய அரசியல் ரீதியாக என்ன நகர்வுகளை மேற்கொள்ளலாம்?

பதில்: பெருந்தோட்டங்கள் உள்ளூராட்சி சபைகளுக்குள் உள்வாங்கப்படல் வேண்டும். இச்சபைகளுக்கு வாக்களிக்கும் மக்களாக இவர்கள் இருந்தாலும் அரசாங்கத்தின் நலன்புரி சேவைகள் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. மக்களை திருப்திப் படுத்துவதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்துவதை விட இம்மக்களின் நீண்ட காலத்தேவையை கருத்திற்கொண்டு திட்டங்களை வகுப்பதில் அரசியல்வாதிகள் முனைப்போடு செயற்படல் அவசியம்.

நேர்காணல் : சிவலிங்கம் சிவகுமாரன்

நன்றி - வீரகேசரி

சிங்கள சமூக அமைப்பில் கன்னிப் பரிசோதனை சடங்கு (பகுதி -3) - என்.சரவணன்


சிங்கள சமூக அமைப்பில் நிலவிய கன்னித்தன்மையை பரிசோதிக்கும் இந்த சம்பிரதாயம் இலங்கையில் சில பிரதேசங்களில் முஸ்லிம்களிடமும் பரவி புழக்கத்தில் இருந்தது என்கிறார் வினோதினி டி சில்வா (Cultural Rhapsody: Ceremonial food and Rituals of Sri Lanka, Vinodini De Silva, 2000). இந்த இந்த பழக்கம் சிலவேளை அரபு நாடுகளில் இருந்து 17 நூற்றாண்டில் வந்து சேர்ந்திருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. அரபு தேசங்கள் சிலவற்றில் இந்தப் பழக்கம் இருந்திருக்கிறது என்கிற கதையாடல்களையும் காண முடிகிறது முஸ்லிம் சமூகத்தில் இது எவ்வாறு இருந்திருக்கிறது என்பது பற்றி “இரு உலகங்களுக்கு இடையில்”  தலைப்பில் “முஸ்லிம் பெண்கள் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையொன்றில் விளக்கப்பட்டுள்ளது. (Between Two Worlds, published by the Muslim Women’s Research and Action Forum in 1999). அதில் இப்படி குறிப்பிடப்படுகிறது.
“முதலிரவின் போது படுக்கையில் விரிப்பதற்காக மணப்பெண்ணிடம் ஒரு வெள்ளைத்துணி கொடுக்கப்படும். மணமக்கள் பொதுவாக மணப்பெண்ணின் வீட்டில் தான் முதலிரவைக் கழிப்பார்கள். அதற்கடுத்தநாள் மணமகன் வீட்டார் கொழும்பிலுள்ள மணமகளின் வீட்டுக்கு காலை உணவுக்கு அழைக்கப்பட்டார்கள். சிகப்புப் பூக்களும் மஞ்சளும் மணமகனின் வீட்டுக்கு அனுப்பப்பட்டது. மணமகள் “கற்புள்ளவள்” என்பதே அதன் பொருள். அம்பாறை போன்ற பிரதேசங்களில் “கற்புத்தன்மை” நிரூபிக்கப்பட்டதன் குறியீடாக மணமகளுக்கு தங்க நகைகள் பரிசளிக்கப்படும்.”
இப்படி திருமணத்தின் போது கன்னித்தன்மை நிரூபிக்கப்படுகையில் தாளம் இசைத்து கொண்டாடுவது மொரோக்கோ, துருக்கி, அசர்பைஜான் என பல நாடுகளிலும் இருந்திருக்கிறது (Encyclopedia of Islam, 1934). உலகப் பிரசித்திபெற்ற அரபுக் கதைகளின் தொகுப்பான “ஆயிரத்தொரு இரவுகள்” என்கிற இலக்கியத்திலும் இது பற்றி மறைமுகமாக குறிப்பிடப்படுகிறது. மணமகளின் தாயார் தனது மகள் கற்புள்ளவர் என்பதை தெரிவிக்க அந்த இரத்தக் கரைகளை அங்கு வந்திருக்கும் பெண் விருந்தினர்களுக்கு கொண்டு சென்று காட்டுவது அந்த நாடுகளில் சம்பிரதாயமாகவும் இருந்திருக்கிறது. பண்டைய யூதர்களிடமும் இப்படி வழக்கம் இருந்திருப்பதை வேதாகம “பழைய ஏற்பாட்டின்” மூலம் அறிய முடிகிறது. இது தண்டனை வழங்கக் கூடிய ஒன்று என்றும் அறிய முடிகிறது.


பைபிள் - உபாகமம்,  அதிகாரம் 22
15. அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.

17. நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.

20. அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லையென்னும் சங்கதி மெய்ப்பட்டதேயானால்,

21. அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம் பண்ணினபடியினாலே, அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
இது நீண்ட கால மரபாக சிங்கள சமூகத்தில் நிலவியிருக்கிறதா அல்லது இடைக்காலத்தில் புழக்கத்துக்கு வந்த பழக்கமா என்பது பற்றிய கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. 17 ஆம் நூற்றாண்டின் இலங்கையின் சமூக பண்பாடு குறித்து அறிய ரொபர்ட் நொக்ஸ்ஸின் நூலைப் பயன்படுத்துவது வழக்கம். அவரது நூலில் இத்தகையை சம்பிரதாயங்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. அதேவேளை அவரது நூலில் இதற்கு எதிர்மாறான விபரங்கள் காணக்கிடைக்கின்றன. அதாவது திருமணம் செய்துகொள்ளும் பெண்ணானவள்; அதற்கு முன் இன்னொருவரின் துணைவியாக இருந்தாரா இல்லையா என்பது முக்கியமான ஒன்றல்ல என்று ரொபர்ட் நொக்ஸ் பதிவிட்டிருக்கிறார்.

சிங்கள திருமண விளம்பரங்களைப் பார்க்கையில் பெரும்பாலான விளம்பரங்கள் தமது ”தூய்மையான”, ”கன்னித்தன்மையுள்ள மகளுக்கு” போன்ற விடயங்கள் மணமகன் தேவை விளம்பரங்களின் போது மணமகள் தரப்பு விளம்பரங்களில் காணலாம். ஆனால் மணமகள் கோரி விடுக்கப்படும் விளம்பரங்களில் மணமகன் கற்பொழுக்கமுள்ளவன் என்று குறிப்பிடப்படுவதில்லை. அதேவேளை, அதே விளம்பரத்தில் கற்புள்ள பெண் கோரப்படும்.

அது போல சிங்கள சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்பவற்றில் மருத்துவ மற்றும் பாலியல் குறித்த பிரச்சினைகளை வாசகர்கள் மத்தியில் இருந்து கேள்வி பதில் பகுதிக்கு கிடைக்கப்பெறுபவற்றில் பெருமளவானவை மணமாகாத பெண்களிடமிருந்து என்பதும், அவர்களிடமிருந்து அதிகம் எழுப்பப்படும் கேள்வி கன்னித்தன்மையுடன் தொடர்புடையவை என்றும் டொக்டர். சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

“கன்னி” என வழக்கில் உள்ள அர்த்தப்படுத்தப்பட்டுள்ள கருத்து:- திருமணமாகாத இளம்பெண், கன்னிகழியாத பெண், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவள் போன்றன. ஆனால் இதை விட இன்னொன்றும் மேற்படி நிலைமைகளின்படி தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அது தான் “முதலாவது பாலுறவின் போது இரத்தம் வெளியேறும் பெண்ணே கன்னித்தன்மையுடையவள்” என்பது.

எனவேதான் திருமணத்திற்கு முன் இளம் பெண்கள் மத்தியில் கன்னித்தன்மை பரிசோதனையில் தாம் தோற்றுவிடுவோமோ என்கிற அச்சமும், பீதியுமாக கடும் உளச்சிக்கலுக்கு ஆட்பட்டு வாழ நேரிட்டுள்ளது. குறிப்பாக கன்னிச்சவ்வு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற அவர்களின் அச்சம் அப்பெண்களுக்கு தொற்றிகொண்டிருக்கும். இது விளையாட்டின் போது அல்லது சைக்கிள் ஓட்டும் போது, கடினமான வேலைகளின் போது, அல்லது ஏதாவது ஒரு வழியில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக இது ஏற்பட வாய்ப்புண்டு. இப்படியான சந்தர்ப்பங்களால் தான் சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது பெற்றோர்களோ இது இன்ன காரணத்தினால் ஏற்பட்டது எனும் மருத்துவ சான்றிதழைப் பெற முனைகிறார்கள். சிறியாணி பஸ்நாயக்க தனது கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
”ஒரு நாள் தாயொருத்தி தனது மூன்று வயதுடைய மகளை என்னிடம் கொண்டு வந்து மகளின் கன்னித்தன்மை அழிந்து விட்டதா எனப்பரிசோதித்தப் பார்க்கும்படி அழுதவாறு கெஞ்சினாள். தாய் சமயலறையில் கீழே உட்கார்ந்திருந்து கத்தியால் காலால் அழுத்தியபடி கீரை அரிந்திருக்கிறாள். சிறுமி அவ்வழியாக ஓடும் போது கத்தியின் மெல் விழுந்து பிட்டத்தை வெட்டிக் கொண்டாள். காயத்தினால் குழந்தையின் எதிர்காலத்திற்கு எதுவித திங்கும் நேராது என நான் கூறியபோது அந்தத் தாயின் முகத்தில் ஏற்பட்ட ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அதைப் பார்த்த ஒருவரால் தான் நம்ப முடியும். அதன் பின்னர் தனது குழந்தை கன்னி தான் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் தரமுடியுமா என்று கேட்டாள். இவ்வாறான கன்னித்தன்மை சான்றிதழ்கள் இருப்பதாக எனக்கு தெரியாது. என்றாலும் இவ்வாறான சான்றிதழ் கோரப்படாமல் எனக்கு ஒரு வாரம் கழிவது அபூர்வமானது.” என்கிறார்.

இலங்கையில் நிலவும் பல்வேறு கொடிய பிரச்சினைகளுக்கு முன்னாள் இத்தகைய மோசமான சம்பிரதாயங்களும் நடைமுறையில் நிலவத்தானே செய்கிறது. புனிதம், தூய்மை, தீட்டு, துடக்கு போன்ற ஐதீகங்களும், மூடநம்பிக்கைகளும் புனைவுகளாக ஆக்கி அவற்றுக்கு நிறுவன வடிவம் கொடுத்து அதன் தொடர்ச்சியைப் பேணுவதில் வெற்றி கண்டு வந்துள்ள ஆணாதிக்க சமூக அமைப்பை வெறும் வர்க்க சமூக அமைப்பால் தலைகீழாக புரட்டிவிடமுடியாது. அதற்கு போதிய சித்தாந்த பலம்பொருந்திய பண்பாட்டுப் புரட்சியும் அவசியமானது.

இறுதியாக சிறியாணி பஸ்நாயக்க கூறிய கூற்றோடு முடிக்கலாம். 
"ஆய்வுகளின்படி 76வீதமான ஆண்கள் கன்னிப் பெண்களையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். திருமணத்தின் போது இந்த அத்தனை ஆண்களுக்கும் கன்னிப்பரிசோதனை நடாத்தப்பட்டால் எத்தனை பேர் சித்தியடைவார்கள்?”

உசாத்துணை:
 1. என்.சரவணன் - சிங்கள சாதியமைப்பு பற்றி 1999 ஒக்டோபர், டிசம்பரில் வெளிவந்த சரிநிகர்.
 2. The Island 2000 மே,யூன் பத்திரிகைகள்.
 3. Virginity test — The young woman’s nightmare –  Zanita Careem - The Island  04.11.2001
 4. Virginity – the facts - Dr. (Mrs.) Sriani Basnayake – The Island – 26.11.2000
 5. பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே - பெண்கள் அபிவிருத்தி நிலைய வெளியீடு
 6. உபுல் ராஜித்த - கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை கற்கைக்காக சமர்ப்பிக்கப்பட்ட சிங்கள மொழி ஆய்வுக்கட்டுரை
 7. காலிங்க டியுடர் சில்வா - சாதியம், வர்க்கம் மற்றம் மாறிவரும் இலங்கைச் சமூகம் - மூலம் சிங்களம்
 8. க்ரியா தற்கால தமிழ் அகராதி.
 9. http://www.suntimes.co.za/1998/05/17/news/nets05.htm
 10. Along the Pricked Line  by  Durga de Silva - Thesis submitted to the Faculty of Graduate Studies of The University of Manitoba – 2012
 11. Between Two Worlds, published by the Muslim Women’s Research and Action Forum in 1999

நன்றி - அரங்கம்


அனர்த்த காலத்தில் புறக்கணிக்கப்படும் பெருந்தோட்டப்பகுதி - சிவலிங்கம் சிவகுமாரன்


2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் இடம்பெற்ற மண் சரிவு அனர்த்தம் இலங்கையையே திரும்பிப்பார்க்க வைத்தது. பெருந்தோட்டப்பகுதிகளிலும் இயற்கை அனர்த்தம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவமாக அது பதிவானது.

இலங்கையின் பல பாகங்கள் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு வந்தாலும் நிரந்தரமாக இயற்கை அனர்த்த அச்சுறுத்தல்கள் கொண்ட அபாய வலயங்களாக பெருந்தோட்டப்பகுதிகள் இன்னும் விளங்கி வருகின்றன. இதில் நூற்றுக்கு நூறு வீதம் பாதிப்பை எதிர்நோக்கும் மக்களாக தோட்டத்தொழிலாளர்களே விளங்குகின்றனர். காரணம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட குடியிருப்புகளில் தொடர்ந்தும் இவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இரண்டாவது விடயம் அக்காலத்தில் இயற்கை அனர்த்தம் தொடர்பான எந்தப் பாதுகாப்பு வழிமுறைகளும் இல்லாது மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் அமைக்கப்பட்ட இவர்களது குடியிருப்புகள். பலத்த மழை , காற்றினால் நூறு வருடங்கள் பழைமையான இவர்களது குடியிருப்புகள் சேதமுறும் அதே வேளை அபாயகரமான மண் சரிவு பிரதேசங்களிலும் தமது உயிரை பணயம் வைத்து இன்று வரை இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மீரியபெத்த அனர்த்தம் இடம்பெற்றபிறகே பெருந்தோட்டங்களையும் தாண்டி நகர்ப்புறங்களிலும் பாதுகாப்பற்ற குடியிருப்புகள் கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றனவா என அரசாங்கம் கவனத்தை திருப்பியது. கடைத்தொகுதிகளோ அல்லது குடியிருப்புகளோ அமைப்பதற்கு முன்னர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்ற நியதி கட்டாயமாக்கப்பட்டது. இதே நிறுவனத்தினால் மீரியபெத்த பிரதேசம் அனர்த்த வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் அங்கிருந்தவர்கள் வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு வேறோர் இடத்தில் குடியிருப்புகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன. ஆனால், இங்கு எழும் கேள்வி என்னவெனில், மீரியபெத்த போன்றே மண்சரிவு அபாய வலயங்களில் வாழ்ந்து வரும் மலையகத்தின் ஏனைய பகுதிகள் குறித்து ஏன் எவரும் அக்கறை கொள்ளவில்லை என்பதாகும்.

அரசியல் பிரமுகர்கள் பேசுகிறார்களா?

அனர்த்தங்கள் இடம்பெற்றவுடன் அவ்விடத்துக்குச் சென்று பார்வையிடுவதுடன் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்து உலர் நிவாரணப்பொருட்களை வழங்கி அதை படங்களாக எடுத்து பத்திரிகைகளில் போட்டு விடுவதுடன் சிலர் தமது பணிகள் முடிந்து விடுகின்றன என்று நினைக்கின்றனர். இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் குடியிருப்புகளை அமைத்துக்கொடுப்பதை உறுதி செய்தல் , அனர்த்தம் இடம்பெற்ற இடத்தில் வாழ்ந்து வரும் ஏனையோரை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கைளை எடுத்தல், குறித்த பிரதேசத்தில் வேறு எங்கேயாவது அனர்த்தம் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் உள்ள இடங்களை இனங்காணுதல் போன்ற விடயங்களை இவர்கள் சீர்தூக்கிப்பார்ப்பதில்லை. அதாவது இம்மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து எவரும் அக்கறை கொள்வதில்லை. ஏனெனில் பாதுகாப்பு வலயங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டால் மாற்றிடத்தைப்பெற்றுக்கொள்வதில் இழுபறிநிலைகள் உருவாகும் என்பதால் அது குறித்து கதைப்பதற்கு இவர்கள் விரும்புவதில்லை. அரசாங்கத்திடம் இம்மக்கள் எதிர்கொள்ளும் இயற்கை அனர்த்த விவகாரங்கள் குறித்து எவரும் பேசுவதில்லை. இதற்கு சிறந்த உதாரணம் கொஸ்லாந்தை சம்பவம்.

அனர்த்தம் இடம்பெற்ற பிறகு அக்கறை

கொஸ்லாந்தை மீரியபெத்த சம்பவத்துக்குப்பிறகு அங்கு படையெடுத்த அத்தனை அரசியல் பிரமுகர்களும் ஒரு மாதத்தில் அனைத்தையும் மறந்து விட்டனர். இதன் காரணமாக அங்கிருந்து வெளியேறியவர்கள் மாற்று குடியிருப்புகள் அமைத்துக்கொடுக்கும் வரை சுமார் இரண்டு வருட காலம் வரை முகாம்களிலேயே தங்கியிருந்தனர்.

அவர்களுக்கான குடியிருப்புக்களை அமைத்துக்கொடுப்பதிலும் பாதுகாப்பான காணியை பெற்றுக்கொடுப்பதிலும் ஏற்பட்ட இழுபறி நிலைகளே அதற்குக்காரணம். பல உயிர்களைக் காவு கொண்ட அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பலர் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து மனஉளைச்சலுக்குள்ளாகி முகாம்களிலேயே முடங்கிக்கிடந்ததை அப்பிரதேசத்தில் உள்ளவர்களைத் தவிர வேறு எவரும் அறிய சாத்தியமிருக்கவில்லை.

விசேட வேலைத்திட்டம்

இது இவ்வாறிருக்கையில் கடந்த மூன்று மாதங்களாக மலையகப்பகுதிகளில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் இப்பகுதி வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றாகப் பாதித்திருந்தது. பெருந்தோட்டப் பகுதி வாழ் மக்கள் பணிக்கு செல்ல முடியாத நிலைமைகள் ஏற்பட்டதோடு அவர்களின் குடியிருப்புகளும் மண் சரிவு பாதிப்புக்குள்ளாகின. இந்நிலையில் அனர்த்த காலத்தில் இம்மக்களை பாதுகாக்கவென மலையக மக்களுக்கென விசேட வேலைத்திட்டம் ஒன்றை பிரதமர் ஜனாதிபதியூடாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த வாரம் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் முன்வைத்திருந்தார். பருவகால மாற்றத்தின் போது அனர்த்தங்கள் ஏற்படுவதும் பாதிப்புகள் குறித்து அறிக்கைகளைப்பெற்று நடவடிக்கை எடுப்பதும் ஒரு தற்காலிக நடவடிக்கைகளாகவே பார்க்கப்படுகின்றன.

மழை விட்டதும் அனைவருக்கும் எல்லாம் மறந்து போய்விடும். ஆனால் நாம் பாதிப்புக்கு முகங்கொடுத்தவர்களின் எதிர்காலத்தை கவனத்திற்கொள்ள வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களே இன்று மலையகத்துக்கு அவசியமாகவுள்ளன.

ஆய்வுகள் அவசியம்

சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயர்களால் தொழிலாளர்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட குடியிருப்புகளில் பல அனர்த்த வலயங்களிலேயே அமைந்திருக்கின்றன. அந்த காலகட்டத்தில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் போன்ற அமைப்பு இருக்கவில்லை. மேலும் தொழிலாளர்களைப்பொறுத்தவரை அவர்களிடமிருந்து உழைப்பை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. ஆகவே, மனிதாபிமானம் என்ற ஒன்று அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. அதனால் தான் 10X10 அடி என்ற அறையாக லயன் குடியிருப்புக்களை அவர்கள் தொழிலாளர்களுக்கு அமைத்துக்கொடுத்தனர். ஆனால், இன்று அப்படியல்ல தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் காரியாலயங்கள் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கின்றன. இவர்களுக்கு உரிய கோரிக்கைகளை விடுப்பதன் மூலம் மாவட்டத்தில் குறிப்பாக பெருந்தோட்டப்பகுதிகளில் அனர்த்த வலயங்கள் குறித்து அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

பிரதேச செயலகங்கள் ஊடாக

இது குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கேசரி வார வெளியீட்டுக்குக் கருத்துத்தெரிவிக்கையில் குறித்த ஒரு பிரதேசத்தில் அனர்த்த வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்கள் குறித்த தகவல்களை. எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் எங்கு அனர்த்தம் இடம்பெறப்போகின்றது என்பது குறித்து எமக்கு ஆரம்பத்தில் கூற முடியாது. தொடர்ச்சியான மழை காரணமாக ஒரு சில இடங்களில் நில வெடிப்புகள் மண் சரிவுகள் ஏற்பட்டால் அவ்விடத்திற்கு நாம் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவ்விடம் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதா இல்லையா என்பது குறித்த அறிக்கைகளை வழங்குவோம். மற்றும் படி பெருந்தோட்டப்பகுதிகளில் அதிகம் மண் சரிவு அபாயங்கள் இடம்பெறுகின்றன. சில நேரங்களில் பிரதேச செயலகங்களில் உள்ள அனர்த்த நிவாரணப்பிரிவினர் அவ்விடங்களுக்குச்சென்று தகவல்களை சேகரித்து எமக்குத் தருவர். ஆனால் பெருந்தோட்டப்பகுதிகளில் அனர்த்த வலயங்களைத் தேடி அறிவது கடினம் எனினும் பிரதேச செயலகங்கள் ஊடாக எமக்கு அவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அது குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.

செய்வார்களா?

இன்று மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டங்கள் இடம்பெறுகின்றன. இதில் மாவட்டத்தைப்பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள்,எம்.பிக்கள் ,மாகாண அமைச்சர்கள் ,உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். அரசாங்க அதிபரும் பிரதான இடத்தை வகிக்கிறார். ஆகவே பிரதிநிதிகள் இவ் அனர்த்தம் தொடர்பான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் படி பிரதேச செயலகங்களுக்கு ஏன் அறிவுறுத்த முடியாது? மட்டுமன்றி பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள அனர்த்தம் இடம்பெறும் பகுதிகள் பற்றிய தகவல்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடாகப் பெற்று அதன் அறிக்கைகளை நேரடியாகவே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வரலாமே? தற்போது மலையகத்தின் சகல விதமான அபிவிருத்திக்கும் மலையக அதிகார சபை ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் பிரதிநிதிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஆகவே இந்த அனர்த்த முகாமைத்துவ செயற் திட்டத்தையும் குறித்த மலையக அதிகார சபையின் ஊடாகவே கொண்டு வருவதற்கு முயற்சித்தால் நேரடி பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளனவே அவை குறித்து பிரதிநிதிகள் செயற்படுவார்களா?

நன்றி - வீரகேசரி

மகாவம்சம் இன்றும் எழுதப்படுகிறது! - என்.சரவணன்


மகாவம்சத்தின் ஆறாம் தொகுதி கடந்த 16.08.2018 அன்று உயர்கல்வி அமைச்சர் கலாநிதி வியஜதாச ராஜபக்சவினால் வெளியிடப்பட்டிருக்கிறது. பல பௌத்த பிக்குமார்களும், அரசியல் தலைவர்களும், சிங்கள பௌத்த கல்வியியலாளர்களும் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம உரையாற்றுகையில் இதுவரை கண்டெடுக்கப்பட்டு வரும் பல்வேறு தொல்பொருள் சான்றுகள் மகாவம்சத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொண்டே வருகின்றன என்கிறார்.

அன்றைய தினம் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச “மகாவம்ச விவகாரங்களைக் கவனிக்கவென தனியான நிறுவனத்தை அமைக்கப்போவதாக உறுதிமொழியளித்தார்.
கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகள் மகாவம்சத்தை உறுதிபடுத்திவருகிறதா அல்லது மகாவம்சத்தில் எழுதப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த தொல்பொருள் சான்றுகளைக் கொண்டு நிறுவ முயற்சிக்கிறார்களா என்கிற கேள்வி நமக்குள் எழும். ஏனென்றால் இலங்கையின் இனப்பிரச்சினையில்  மகாவம்சத்தின் வகிபாகம் அப்படி. மகாவம்சம் ஏராளமான புனைகதைகளையும், நம்பமுடியாத புரட்டுகளையும் கொண்டிருகிறது என்பதை பல்வேறு ஆய்வாளர்களும் உரியமுறையில் அம்பலப்படுத்தியே வந்திருக்கிறார்கள்.

விஜயனிலிருந்தே சிங்கள சமூகம் இலங்கையில் தோன்றியது என்று கூறுகிற மகாவசம்சத்தை ஏற்றுக்கொண்ட பலர் இன்று “இல்லை இல்லை விஜயனுக்கு முந்திய இராவணன் பரம்பரை நாங்கள். இராவணன் சிங்களவர்களின் தலைவர்” என்று இன்று நிறுவ முயற்சிப்பதையும் நாம் காண முடிகிறது. அதற்கான காரணங்களில் ஒன்று விஜயனின் வழித்தோன்றல் பற்றியது. உதாரணத்திற்கு விஜயனின் தந்தை சிங்கபாகு சிங்கத்துக்குப் பிறந்தவர் என்கிற கதையும், சிங்கள இனத்தின் தோற்றம் பற்றிய விபரங்களும். அடுத்தது “விஜயனுக்கு முன்னரே இலங்கையில் வாழ்ந்த இராவணன் என்கிற பேரரசனின் வழித்தோன்றலே நாங்கள், நாமே மூத்த மண்ணின் மைந்தர்கள், மற்றவரெல்லாம் அந்நியர்” என்கிற கருத்துருவாக்கத்தை விதைப்பதற்கும் அது இன்று தேவைப்படுகிறது.

மகாவம்சத்தின் தோற்றம்

இலங்கையின் நவீன வரலாற்றாசிரியர்கள் கூட கணிசமான அளவிற்கு மகாவம்சத்தில் தங்கியிருக்கிறார்கள். இதனை அடிப்படையாக வைத்தே இலங்கை வரலாறு தொடர்பான வெகுஜன மட்டத்திலான உரையாடல்களும் நிகழ்த்தப்படுகின்றன. பாடசாலை வரலாற்றுப் பாடங்களும் இதனை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. வெகுஜன சொல்லாடல்களிலும் அரசியல் சொல்லாடல்களிலும் கூட மகாவம்சம் பாத்திரம் செலுத்துகிறது. மகாவம்சம் சித்திரிக்கும் இனவாத கருத்தேற்றப்பட்ட துட்டகைமுனுவின் கதையானது பாடசாலையில் பயன்படுத்தப்படும் சிங்கள மொழிப் பாட நூல்களிலும் பௌத்த சமய பாட நூல்களிலும் சிங்கள நாடக அரங்கிலும் ஜனரஞ்சக இலக்கியங்களிலும் பிரயோகிக்கப்படுகின்றன.

சிங்கள பௌத்தத்தின் சித்தாந்த பலத்துக்கு துணையாக அது வைத்திருக்கும் முக்கிய ஆயுதம் தான் “மகாவம்சம்” என்கிற "புனித" சிங்கள வரலாற்று காவியம். எப்படி இந்தியாவில் இந்துத்துவ பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தும் ஆயுதமாக கற்பனாபூர்வமான புனைவுப் புனித காவியமான இராமாயணத்தை எவ்வாறு பயன்படுத்திவருகிறதோ, அது போல இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதமும் தமது உண்மையான வரலாறு என்பது புனைவுக் காவியமான “மகாவம்சம்” தான் என்று நம்புகிறது. தமிழின விரோதப் பிரசாரங்களுக்கு பூடகமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் வரலாற்று ஆவணம் மகாவம்சம்.

கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3ஆம் நூற்றாண்டு வரையிலான கிட்டத்தட்ட 900ஆம் ஆண்டுகளுக்கிடையில் நிகழ்ந்த நிகழ்வின் தொகுப்பாக கி.பி 5ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் எழுதியிருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 1100 ஆண்டுகள் வழிவழியாக வாய்மொழியாக பேசப்பட்டு வந்த தகவல்கள் என்கிற போது அதன் நம்பகத் தன்மை எப்படி இருக்கும் என்பதை நாம் உணர முடியும்.

அதில் கூறப்படும் பல கதைகள் விஞ்ஞானத்துக்கு புறம்பான வரலாற்றுக் குளறுபடிகளைக் கொண்ட புனைகதைகள் என்பதை உணராலாம். அது மட்டுமன்றி ஆட்சிசெய்த அரசர்களின் வயது, ஆட்சி காலம் என்பன பல இடங்களில் நம்பத்தகுந்தவை அல்ல. அவை பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளன.

எழுதிய மகாநாம தேரர் அவருக்கு முன்னர் எழுதப்பட்ட தீபவம்சம் என்கிற வரலாற்று நூலைத் தழுவியே தான் எழுதினாலும் கூட மக்களின் வாய்மொழி வரலாறுகளை கேட்டுணர்ந்தே தான் எழுதியதாகவே மகாவம்சத்தில் குறிப்பிடுகிறார். மகாநாம தேரர் இருந்த காலத்தில் வரலாற்றை ஆய்வு ரீதியாக எழுதும் புலமையும் அவருக்கு இருக்கவில்லை, அதற்கான வசதிகளும் அன்று இருக்கவில்லை. இல்லையென்றால்  சிங்கத்துக்குப் பிறந்தவர்களே சிங்களவர்கள் என்று சாரப்பட அவர் எழுதியிருக்கமாட்டார்.

இந்த பின்னணியில் வைத்தே மகாவம்சத்தை நாம் காணவேண்டியிருக்கிறது. இலங்கையின் சிங்கள பௌத்த பண்பாட்டு வரலாறு என்பது “மகாவம்ச” புனைவுகளால் கட்டப்பட்டது என்பதை எவரும் அறிவர்.

மொழியாக்கம்

கி.மு 543ம் ஆண்டு இந்தியாவிலிருந்து விஜயன் என்கிற இளவரசனின் வருகை தொடக்கம், கி.பி 361ம் ஆண்டு மகாசேனனின் காலம் வரையான பதிவுகளை மகாவம்ச மூல நூல் கொண்டிருக்கிறது.

மகாவம்சம் எழுதப்பட்டு 13 நூற்றாண்டுகளாக அது சிங்கள சாதாரண மக்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்தது. மேலும் இன்று கூட மகாவம்சத்தின் முதல் ஆங்கில பிரதி பற்றி குறிப்பிடுகிற போது கெய்கரைத் (Wilhelm Ludwig Geiger) தான்  குறிப்பிடுவது வழக்கம். உண்மையில் அதற்கு முன்னரே குறைபாடுகளுடனேனும் மொழியாக்கம் நடந்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியின் போது இலங்கையின் பிரதம நீதியரசராக இருந்த சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் (Sir Alexander Johnston) மகாவம்சத்தின் ஓலைச்சுவடிகளை ஆங்கிலத்தில் வெளியிடுவதற்காக ஐரோப்பாவுக்கு 1809 ஆம் ஆண்டு அனுப்பிவைத்தார். 1826 ஆம் ஆண்டு ஒரு தோராயமான மொழியாக்கம்  லத்தீன் மொழியில் யூகேன் பூர்னோப் என்பவரால் (Eugène Burnouf ) வெளியிடப்பட்டது. ஆனால் அதில் பல குறிப்புகளுக்கு பிழையான விளக்கம் கொடுக்கப்பட்டது. உதாரணத்திற்கு புத்தர் இலங்கையில் பிறந்தார் என்று கூட இருந்தது.

இலங்கையின் முதலாவது மதக் கலவரமான கொட்டாஞ்சேனைக் கலவரம் நிகழ்ந்த 1883 இல் தொன் அன்திரிஸ் த சில்வா பட்டுவந்துடாவ (DON ANDRIS DE SILVA BATUWANTUDAWA)  என்பவரைக் கொண்டு மொழிபெயர்த்த பிரதியொன்றை அன்றைய ஆங்கிலேய அரசாங்கமே வெளியிட்டிருக்கிறது. அதில் அன்றைய தேசாதிபதி சேர் வில்லியம் ஹென்றி ஜோர்ஜின் ஆணையின் பேரில் வெளியிடப்பட்டதாக குறிப்பு காணப்படுகிறது.

இவற்றிலெல்லாம் மொழிபெயர்ப்பு குறைபாடுகள் இருந்த நிலையில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தகாலத்தில் இருந்த, சிவில் சேவைத்துறையில் பணியாற்றியவரும் வரலாற்றாசிரியருமான ஜோர்ஜ் டேனர் (George Turnour) என்பவர் முதலியார் எல்.சீ.விஜேசிங்கவுடன் இணைந்து 1889 இல் பாளியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். முதலியார் விஜேசிங்கவுடன் சேர்ந்து மொழியாக்கத்தில் உதவியவர் தான் ஜோர்ஜ் டேர்னர். 1889இல் அது வெளிவந்த போது அன்றைய இலங்கை தேசாதிபதி ஆர்தர் ஹமில்டன் கோர்டன் (Arthur Hamilton Gordon) இன் ஒப்புதலுடன் வெளியிடுவதாக முதல் பிரதியில் மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிட்டிருப்பதைக் காண முடிகிறது. அதிலும் 

அந்த மொழிபெயர்ப்பிலும் போதாமை இருந்ததை சுட்டிக்காட்டித் தான் 1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் (Wilhelm Ludwig Geiger) ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார். மாபெல் ஹெய்னஸ் போட் என்பவரின் உதவியுடன் அது ஆங்கில மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. வில்ஹெய்ம் கெய்கர் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை சரி பார்த்து வெளியிட்டார். கெய்கர் மகாவம்சத்தை பாளி மொழியிலிருந்து வெளிக்கொணர்ந்தவர் என்று மட்டும் தான் பலர் அறிந்திருப்பார்கள். ஆனால் அது மட்டுமன்றி சூளவம்சம் (ஜெர்மன், ஆங்கிலம் இரு மொழிகளிலும்), ரசவாகினி, சங்யுக்த நிக்காய, சிங்கள அகராதி உட்பட இன்னும் பல மொழிபெயர்ப்புகளையும், நூல்களையும் கொண்டுவந்திருகிறார். இன்றும் கெய்கரின் மொழிபெயர்ப்பையே ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பிரதியாக காண முடிகிறது. வெறும் மொழிபெயர்ப்பாளராக மட்டுமன்றி அவர் ஒரு வரலாற்று ஆசிரியராக அதனை விமர்சனபூர்வமாகவும் ஆய்வுபூர்வமாகவும் அணுகியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மகாவம்சம் இன்றும் எழுதப்படுகிறது.

மகாவம்சம் தொடர்ச்சியாக இலங்கையின் வரலாறாக எழுதப்படவேண்டும் என்கிற சிங்கள பௌத்தத் தரப்பின் வேண்டுகோளுக்கிணங்க அரசு உத்தியோகபூர்வமாகவே அந்த பணியை முன்னெடுக்க முடிவு செய்தது. அதன்படி மகாவம்சம் இன்றும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கான நிரந்தர அரசப் பணியகம் இயங்கிவருகிறது.


பேராசிரியர் சந்திர விக்கிரமகமகே திருத்திய "மகாவம்சம்" பதிப்பு 2016 ஜூன் மாதம் 14 அன்று பிரதமர் ரணிலிடம் ஒப்படைக்கும் வைபவத்தில் ரணில் கூறினார் "மகாவம்சம் இன்றேல் இந்தியாவுக்கும் வரலாறு இல்லை. இந்தியக் கொடியில் அசோக சக்கரமும் இருந்திருக்காது, அசோக சக்கரவர்த்தியை யார் என்று அவர்கள் அடையாளம் கண்டதே நமது மகாவம்சத் தகவல்களைக் கொண்டு தான்." என்றார். அன்றைய தினம் பிக்குமார்களை அழைத்து பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த நிகழ்வை நடத்தியபோது மகாவசத்தின் பிந்திய அத்தனை தொகுதிகளும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதற்கான குழுவொன்றை ஏற்படுத்தும்படியும் அதற்கு நிதியொதுக்குவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் இதுவரை மகாவம்சம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறதா? என்பதைத் தேடிப்பார்த்ததும் இல்லை அதைச் செய்யச் சொல்லி கட்டளை இட்டதுமில்லை. அதில் அக்கறை காட்டியதுமில்லை.

அந்த பதிப்பானது ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட தகவல் பிழைகள் திருத்தபட்டதாகவும் அங்கு குறிப்பிடப்பட்டது. குறிப்பாக புதிய ஆராய்ச்சிகளின் படி “சிஹல தீப”, “சிஹலே” போன்ற பெயர்களில் இலங்கை அழைக்கப்பட்ட விடயங்களை சேர்க்கப்பட்டிருப்பது பற்றியும் விபரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவ்வப்போது மகாவம்சத்தை திருத்தும் (திரித்தும்) பணிகளும் கூட நிகழ்கிறது என்பதைத் தான் இதன் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது.


இலங்கையின் சிங்கள பௌத்த மேலாதிக்க உணர்வுக்கு “மகாவம்ச மனநிலை” முக்கிய வகிபாகத்தை கொண்டிருக்கிறது. அதனை விதைத்ததில் இலங்கையின் கல்வித்துறைக்கும் முக்கிய பாத்திரமுண்டு.  மேற்படி கூட்டத்தில் வைத்து ரணிலைப் பாராட்டி பேராசிரியர் எஸ்.பீ.ஹெட்டிஆராச்சி இப்படி கூறினார்.
“மகாவம்சத்தைப் போற்றி பல இடங்களில் நீங்கள் கருத்து வெளியிட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதோ தெரியவில்லை 2001 ஆம் ஆண்டு நீங்கள் மத்திய கலாசார நிதியத்துக்கு தலைவராக இருந்த போது தான் மகாவம்சத்தின் சிங்கள, பாளி பிரதிகள் உடனடியாக தயாரிக்கப்படவேண்டும் என்கிற யோசனையைச் செய்தீர்கள். இப்போது இதோ நம்மிடம் அவை இருக்கின்றன. 1972 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வரலாற்றுப் பாடம் கல்வித்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது. ஆனால் நீங்கள் 1983 இல் கல்வி அமைச்சராக இருந்தபோது மீண்டும் வரலாற்றுப் பாடத்திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தீர்கள். அப்போது ஒரு பத்திரிகை “இனத்துக்காக ரணில் எடுத்த தீர்மானம்” என்று தலைப்பிட்டது. இன்னொரு பத்திரிக்கை “சாவின் விளிம்பில் இருந்த வரலாறுக்கு உயிரளித்த ரணில்” என்று தலைப்பிட்டது. என்றார்.
ரணில் இனவாதமற்ற ஒரு தலைவர் என்கிற பொது அப்பிராயம் இருக்கவே செய்கிறது. ஆனால் இந்த மகாவம்ச மனநிலையால் பீடிக்கப்பட்ட பலருக்கு அப்படி தாம் பீடிக்கப்பட்டதே தெரியாது இருப்பதும் அந்த நோயின் அறிகுறிகளில் ஒன்று தான். இல்லையென்றார் ரணில்; மகாவம்சத்துக்கும் இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கும் உள்ள உறவென்ன என்பதை அறிந்திருப்பார்.

புறமொதுக்கப்பட்ட தமிழர்கள்

மகாவம்சத்தின் மூலப் பிரதி தான் பல புனைவுகளைக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குப் பின்னர் இதுவரை 6 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன என்பாத்து கவனிக்கத்தக்கது. 2010ஆம் ஆண்டு மகாவம்சத்தின் ஐந்தாவது தொகுதி (1956 - 1978) முடிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஆறாவது தொகுதிக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையின் உத்தியோகபூர்வ வரலாறு இது தான் என்கிற அரச ஆவணமாகவும், புனித நூலாகவும் கூறப்படும் மகாவம்சம் இலங்கையின் ஓரினத்துக்கு மட்டுமே இன்றுவரை மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம். வலுக்கட்டாயமாக இலங்கைக்குள் இணைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள்; தம்மைப் பற்றி “அரசு” எத்தகைய வரலாறைப் புரிந்து வைத்திருக்கிறது? என்ன வரலாற்றை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி வந்திருக்கிறது என்பது பற்றி அறிய எந்த வாய்ப்புமில்லை. இன்று வரை தமிழ் மொழியாக்கம் பற்றி தமிழர் தரப்பில் இருந்து கூட எவரும் நிர்ப்பந்தித்ததாகவோ, கோரியதாகக் கூட தகவல்கள் இல்லை.


இன்றுவரை தமிழில் கிடைக்கப்படும் மகாவம்ச மொழிபெயர்ப்புகள் தனியாரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே. அதே வேளை அரச அனுசரணையுடன் மகாவம்சம் (தொகுதி 1,2), தீபவம்சம் உள்ளிட்ட ஐந்து பௌத்த இதிகாச நூல்கள் ஜப்பான் மொழியில் கடந்த 14 யூலை 2017 அன்று புத்த சாசன, நீதித்துறை அமைச்சரான விஜயதாச ராஜபக்சவினால் அவரது அமைச்சில்  வெளியிடப்பட்டது. அம்பாறையிலுள்ள ஒரு விகாரையின் விகாராதிபதியாக இருந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜி.அசாமி என்கிற ஒரு பௌத்தத் துறவி தான் இவற்றை மொழிபெயர்த்து முடித்திருக்கிறார். மகாவம்சத்தை மேலும் 8 மொழிகளில் வெளியிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிங்கள மொழியில் மகாவம்சத்துக்கு பலர் உரை எழுதியிருக்கிறார்கள். சிங்கள நூல் விற்பனை நிலையங்களில் அத்தகைய  பல நூல்கள் காணக் கிடைக்கின்றன.

ஈழப்போராட்டம் பற்றி மகாவம்சம்?
மகாவம்சத்தை எழுதவதற்காகவே அரச கலாசார அமைச்சின் கீழ் ஒரு தனித்துறை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதற்கான வலுவான குழுவும் இதில் ஈடுபட்டு வருகிறது. அந்த குழுவில் அங்கம் வகிக்கும் 15 புலமையாளர்களைக் கொண்ட பட்டியலில் உள்ளவர்களைப் பற்றி தேடிப்பார்த்தபோது சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த எவரும் அந்தக் குழுவில் இல்லை என்பதை அறிய முடிகிறது. ஏன் சிங்கள கத்தோலிக்கர்கள் கூட கிடையாது. இலங்கையில் ஆட்சி செய்தவர்கள், அந்த ஆட்சிகாலங்களின் போது அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, கலை இலக்கிய, விஞ்ஞான, கல்வி, மத  நிலைமைகளை பதிவு செய்வது அந்தக் குழுவின் பணி. 

இதைத் தவிர மகாவசத்தை “மஹாவம்ச கீதய” என்கிற தலைப்பில் செய்யுள் வடிவிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது வரை 1815 வரையான காலப்பகுதி வரை பாளி, சிங்கள ஆகிய மொழிகளில் செய்யுளாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய தொகுதிகளுக்கான பணிகள் பேராசிரியர் மென்டிஸ் ரோஹனதீர என்பவரின் தலைமையில் தனியான குழு மேற்கொண்டு வருகிறது.


2015 ஜனவரி ரணில் – மைத்திரிபால அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மகாவம்ச உருவாக்கப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு கலாசார விவகார திணைக்களம் தமது புதிய திட்டத்ததை பாராளுமன்றத்தில் சமர்பித்தது. அதில் மகாவம்ச உருவாக்கத்தை துரிதப்படுத்தும் பரிந்துரைகள் காணப்படுகின்றன. அதன் விளைவாகவே இப்போது 6வது தொகுதி வெளியிடப்பட்டிருக்கிறது.

இதுவரை தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் குறித்து அரசாங்கங்களின் கருத்துக்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் “இலங்கை அரசின்” உத்தியோகபூர்வ விளக்கத்தை அறிந்துகொள்ள தற்போது வெளிவந்திருக்கும் 2010 வரையிலான மகாவம்சத்தின் 6வது தொகுதியை நாம் கவனத்துக்கு எடுப்பது அவசியம்.

சிங்கள பௌத்தர்களால் வரலாற்றைத் திரித்து, தமிழ் மக்களை புறமொதுக்கி, புனைவுகளை தொகுத்து சிங்கள மக்களுக்கு மட்டுமே ஊட்டிவரும் ஆபத்தான சிங்கள பௌத்த ஆயுதம் தான் மகாவம்சம். அது இலங்கையில் இதுவரை ஏற்படுத்திய நாசம் போதும். இதற்கு மேல் தாங்காது. தமிழ் அரசியல் சக்திகள் இதற்கு உரிய முறையில் வினையாற்றுவது முக்கியம்.

இதுவரை சிங்களத்திலும் பாளி மொழியிலும் மட்டுமே அரசால் வெளியிடப்பட்டுள்ள மகாவம்ச தொகுதிகள்.
 • தொகுதி  1 -  இலங்கையின் பண்டைய இதிகாசம் கி.பி 301 வரை - மகாநாம தேரரால் எழுதப்பட்டது
 • தொகுதி  2 -  கி.பி  301 முதல் கி.பி 1815 வரையான ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரை
 • தொகுதி  3 -  1815 முதல் 1936 வரை
 • தொகுதி  4 -  1936 முதல் 1956 பண்டாரநாயக்க ஆட்சியேரும் வரை
 • தொகுதி  5 -  1956 முதல் 1978 ஜே ஆரின் இரண்டாவது குடியரசு ஆட்சி தொடங்கும் வரை
 • தொகுதி  6 – 1978 முதல் 2010 தமிழீழ விடுதலைப் போராட்டம்  முடிந்து மகிந்த மீண்டும் ஆட்சியேரும் வரை
 1. ஜே, ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலப்பகுதி (1978-1989)
 2. ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க ஆட்சிக் காலப்பகுதி (1989-1994)
 3. சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சி காலப்பகுதி (1994-2005)
 4. மகிந்த ராஜபக்ச ஆட்சிகாலப்பகுதி (2005-2010)
 நன்றி - தினக்குரல் - 1
 நன்றி - தினக்குரல் - 2

சிங்கள சமூக அமைப்பில் கன்னிப் பரிசோதனை சடங்கு (பகுதி -2) - என்.சரவணன்

பட்டறிவு
சிங்கள சமூகத்தில் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை முறையானது சிங்கள சாதியமைப்பை மறுதலித்துவிட்டு பாhக்க முடியாது. கன்னித்தன்மை பரிசோதனையில் இன்றும் இலங்கையில் கொவிகம (சிங்கள சாதியப் படிநிலையில் முதலாவது சாதியாக இருத்தப்பட்டுள்ள இந்த சாதி தமிழ்ச்சமூகத்தில் வெள்ளாருக்கு சமமான விவசாயத்தை சார்ந்த சாதி) சாதியிலும், அதன் கிளைச்சாதிகளான ரதல, கொவி, பட்டி போன்ற சாதிகளே அக்கறை காட்டி வருவதாக சிங்கள சாதியம் பற்றி ஆய்வு செய்பவர்கள் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக உயர் மத்தியதர வர்க்கத்தினரிடம் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. சம்பிரதாயபூர்வமாக கோலாகலமான முறையில் திருமணத்தை நடத்த தகுதியுள்ள சிங்கள பௌத்தர் உயர் மத்திய தரவர்க்த்தினரிடமே திருமணச்சடங்குகளில் ஒன்றாக இந்த கன்னித்தன்மை பரிசோதனை நடக்கிறது.

இந்த கன்னித்தன்மை பரிசோதனையை மேற்கொள்வதும் சிங்கள சாதியமைப்பில் பிற்படுத்தப்பட்ட சாதியான ஹேன எனும் சாதியைச் சேர்ந்தவர்களே. இச்சாதியினர் தமிழ்ச் சமூகத்தில் வணணார் சாதிக்கு ஒப்பான சலவைத் தொழிலை மேற்கொள்ளும் சாதியாக இருத்தப்பட்டுள்ளது. இந்த சாதியினர் எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும் நாட்டில் பல பாகங்களில் பரந்து சுருங்கி வாழும் சாதியினர். இவர்களுக்கு அரச மற்றும் நிலப்பிரபுத்துவ பரம்பரையினருக்கு மாத்திரமே உடுதுணி துவைப்பது சாதித் தொழிலாக வைக்கப்பட்டது. ஆண் பெண் என இருபாலாரும் குறிப்பிட்ட உயர் சாதியினரின் வீடுகளுக்குச் சென்று துணிகளைச் சேகரித்து துணிகளில் கட்டி தலையில் சுமந்துகொண்டு சென்று துவைப்பர். ஏனைய தாழ்த்தப்பட்ட சாதியினரின் உடுதுணிகளை இவர்கள் துவைக்க மாட்டர்கள். அதற்குக் கீழ் உள்ள சாதியினரின் உடைகளைத் துவைக்க “பலி” எனும் சாதியினரே அதனை செய்வரென பேராசிரியர் ருல்ப் பீரிஸ் குறிப்பிடுவார்.

இந்த உடுதுணி துவைப்பதை விடவும் உயர் சாதியினருக்கு இவர்களின் தேவை வேறு வழிகளில் இருந்தன. பிறப்பு, பூப்படைதல், திருமணம், மரணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ஹேன மாமாவின் அல்லது ”றெதி நெந்தா” (துணிமாமி) ஆகியோரது உதவி தேவைப்படுகிறது. இவர்களின் இந்த சேவை பற்றி சமூகத்தில் பொதுவாக கேலி செய்யும் போக்கும் நிலவுவதாக கொள்ளப்படுகிறது.

திருமண முதலிரவின் போது திருமணக் கட்டிலில் விரிப்பதற்காக வெள்ளை விரிப்பொன்று மணமக்களுக்கு வழங்கப்படும். முதல் பாலுறவின் போது மணப்பெண்ணிடமிருந்து சிறிதளவு இரத்தம் கசிந்து இந்த வெள்ளை விரிப்பில் காணப்படுவதன் மூலம் அவள் கன்னி என நிரூபிக்க அதுவே மிகச் சரியான சான்றென கருதப்படும்.

எனது சிங்கள நன்பி ஒருவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தன்னோடு பயின்றவரை திருமணம் முடித்த போது கன்னித்தன்மை பரிசோதனை முறையிலிருந்து தப்ப செயற்கையாகவே இரத்தக்கறையை வெள்ளைத் துணியில் படவைத்தார்கள். இன்று ஒரு சிங்களச் சூழலில் பெண்ணிய எழுத்தாளராக இருக்கும் இவர், சம்பிரதாயங்கள் எப்படி விடயமறிந்தவர்களையும் இழுத்துவைத்துக் கொள்கிறது என்பதை அடிக்கடி குறிப்பிடுவார். இவ்வாறு மணமகன் கன்னித்தன்மையை எதிர்பார்க்கிறானோ இல்லையோ, தமது மகள் கன்னித்தன்மையைக் கொண்டவள் என்று பெண்வீட்டாரும், தனது மகன் கன்னித்தன்மையுள்ள பெண்ணைத்தான் திருமணமுடித்தார் என்பதை மாப்பிள்ளை வீட்டாரும் பெருமிதம்கொள்ளும் சடங்காகவும் இது இருக்கிறது. இந்தச் சடங்கை செய்யாவிட்டால் சமூகத்தில் கௌரவத்திற்கு இழுக்கு நேரிடும் என்று பயம்கொள்வதையும் காணமுடிகிறது.

கன்னிப்பரிசோதனை சடங்கு

கன்னிப்பரிசோதனை மேற்கொள்ளும் சடங்கை “இச திய மங்கல்ய” என்று அழைப்பார்கள். ஆனால் அந்த சடங்கின் உண்மையான பொருள் “தலையில் நீர் வார்த்தல்” என்று கூறலாம். சில பிரதேசங்களில் “இச திய பலன்ட யாம”  என்றும் கூறுவார்கள். அதாவது “தலையில் நீர் பார்த்தல்” என்று தமிழில் அதனை மொழியாக்கம் செய்யலாம். சம்பிரதாய பூர்வமான குடும்பங்களில் வெள்ளைத்துணியை பரிசோதித்துப் பார்க்கும் நிகழ்ச்சி திருமணத்திற்கு அடுத்த நாள் நடக்கும். “றெதி நெந்தா” சென்று அந்த விரிப்பை பார்வையிடுவார் அல்லது மணமகனின் தாயாரோ, மூத்த பெண்ணொருவரோ கூட அதனைச் சென்று பார்வையிடமுடியும்.   இறுதியும் உறுதியுமான முடிவைத் தெரிவிக்க விபரங்களுடன் முடிவு கூறுவதற்காக, திருமணத் தம்பதியரின் உறவினப் பெண்களுடன் “றெதி நெந்தா” அழைத்துச் செல்லப்படுவார். சில சந்தர்ப்பங்களில் இரண்டாம் பயணம் எனப்படும் “தெவனி கமன” வின் போது (அதாவது தேனிலவு கழிப்பதை முதல் நாளும் வெள்ளைத்துணி பார்ப்பது மறுநாளைக்கு மாற்றப்படும்.) அந்த வெள்ளைத்துணியை இதற்குரிய சம்பிரதாயங்கள் பின்வருமாறு மெற்கொள்ளப்படும்.
 • மணமகள் இரண்டாம் பயணத்திற்கு சிவப்பு ஆடையால் அலங்கரிக்கப்படுவாள்.
 • மணமகனின் தாயார் சிவப்பு மலர்ச் செண்டு கொடுத்து மணமகளை வரவேற்பார்.
 • மணமகனின் குடும்பத்தினர், மணப் பெண்ணின் பெற்றோருக்கு சிவப்பு பூக்கொத்தை அனுப்பி வைப்பார்.
 • மணப்பெண், மணமகள் வீட்டுக்கு வரும்போது றபான் அடித்து பட்டாசு கொளுத்தப்படும்.
 • மணமகனின் தயார், விசேட பரிசுகளைக் கொடுத்து மணப்பெண்ணை வரவேற்பாள்.
 • “றபான்’ தாளம் இசைக்கப்படாவிட்டால் அந்தப் பெண் “கற்பற்றவள்’ என்கிற செய்தியை ஊர் வாசிகளும் அங்கு கூடியிருப்பவர்களும் அறிந்துகொள்வார்கள்.

குறிப்பிட்ட அந்த வெள்ளைத்துணியை “கிரிகடஹெலய” என்று அழைப்பார்கள். அந்த வெள்ளை விரிப்பில் இரத்தக்கறை காணப்படாவிடில், அதாவது மணப்பெண் பரீட்சையில் தோல்வியடைந்தவளென்றால், அந்த அப்பாவிப்பெண் பகிரங்கமாகவே அவமதிப்புக்குள்ளாவாள். அத்தகைய தருணத்தில் மணப்பெண் நடாத்தப்படும் விதமானது இரண்டாம் பயணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திலும், குறிப்பிட்ட குடும்பங்களினதும் பிரதேசங்களதும் சம்பிரதாயங்களைப் பொறுத்தம் வேறுபடும். இரண்டாம் பயணத்தின்போது “பரிட்சையில் தேறாத” மணப்பெண் தொடர்பாக கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் சில..
 • இரண்டாம் பயணத்திற்கு ஆடம்பரமற்ற வெள்ளைச் சேலை உடுத்தும்படி மணப்பெண்ணை வற்புறுத்துதல்.
 • மணமகனின் தாயார் வெள்ளை மலர்களுடன் மணமகளை எதிர்கொள்வாள்.
 • வரவேற்காமல் மணமகனின் தந்தை அல்லது யாரும் ஒரு ஆணைக்கொண்டு மணமகளை வரவேற்பது.
 • சுவரில் மாட்டியிருக்கும் படங்களை மறபக்கமாகத் திருப்பித் தொங்கவிடல்.
 • மணமகனின் உறவினர் மணப்பெண்ணின் உறவினர்களை உபசரிக்க மாட்டர்கள். அவர்களை அவமதிக்கும் விதமாக திருமண அலங்கார மேசையைத் தவிர்த்து ஓரமாகப் போடப்பட்டிருக்கும் மேசையில் உணவருந்தும்படி அவர்களுக்குத் தெரிவிப்பது.
 • உபசரிப்பதற்கு முன் கொண்டைப் பலகாரங்களின் கொண்டையை உடைத்து விடுவது.
 • அனைத்து விருந்தினர்களின் முன்நிலையிலும் மணமகனின் தாயார் ஐசிங் சீனியினால் செய்யப்பட்ட வெள்ளை றோசாப்பூவொன்றை கேக்கிள் வைப்பாள்.
 • வாழைப்பழத்தை அடியியிலிருந்து தோலுரித்தல்.
 • விருந்தினர்கள் முன்னிலையில் மணமகன் குடும்பத்தார் தமது அதிருப்தியை தெரிவிக்கும் விதமாக சிறு சொற்பொழிவை நடாத்துதல். (இது மிக அரிதாகவே நடக்கும்.)

“தூய்மை”யான மணப்பெண் கிடைக்காததையிட்டு தமது வருத்தத்தைத் தெரிவிக்கும் சொற்பொழிவை ஆற்றிவிட்டு அவர்களை வரவேற்பதும் நிகழும். மணப்பெண் “கன்னி” இல்லை என்று கூறி மீளவும் மணப்பெண்ணின் பெற்றோரிடம் ஒப்டைக்கும் நிகழ்ச்சிகளும் இதன் போது நிகழ்ந்துள்ளன. இந்த சம்பிரதாயங்களை மேற்கொள்ளாத இடங்ளில் கூட முதலிரவின் போது இரத்தம் வெளியேறாவிட்டால் கடந்தகால ஒழுக்கத்தை சந்தேகித்து மனைவியின் மீது வன்மம்கொள்ளும் நிலைமையும் இருந்திருக்கிறது.

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தில் எப்படி நிலவியது என்பது பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்

தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் பிளவா? - மலையகத்தான்


தேர்தல் நெருங்கும் காலங்களில் தேசிய அரசியலிலும், மலையக அரசியலிலும் காட்சி மாற்றங்கள் கட்சித் தாவல்கள் என்பன மிகவும் சாதாரணமாக நடைபெறுகின்ற ஒரு சூழலில் இலங்கையின் அரசியல் களம் உள்ளது. மாகாண சபைத் தேர்தல் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் இருக்கின்ற இந்த நேரத்தில் மலையக அரசியல் கடந்த சில வாரங்களாக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையும் தமிழ் முற்போக்குக்கூட்டணிக்குள் பிளவா என்ற கேள்வியைக்கேட்கத்தூண்டுகிறது.

கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல்கள் ஒரு சில கருத்து முரண்பாடுகள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

இந்த முரண்பாடுகள் அல்லது கசப்புகளுக்கு பிரதான காரணமாக அனைவரும் தற்போது கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் பக்கம் கை நீட்டியுள்ளனர். கடந்த சில மாதங்களாக அவரின் செயற்பாடுகள் அப்படி அமைந்து விட்டனவாக அனைவரும் தெரிவிக்கின்றனர். சரி அவர் அப்படி என்னதான் செய்து விட்டார்?

இ.தொ.காவின் உதவியைக் கோரல் 

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மலையக கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய ஊவா மாகாண கல்வி அமைச்சர்கள் தங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வர வேண்டும், அதற்கு ஆறுமுகன் தொண்டமான் அனுமதி வழங்க வேண்டும் என்று நிகழ்வொன்றில் பேசியிருந்தார். அது குறித்த செய்திகளும் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன.

இந்தச் செய்தி வெளிவந்த ஒரு சில நாட்களிலேயே ஆறுமுகன் தொண்டமான் தான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அதற்குப் பதில் அளிக்கும் வகையில் இந்த இரண்டு மாகாண சபை அமைச்சர்களும் ஏன் இதுவரை இணைந்து செயற்பட வில்லை என கேள்வி எழுப்பியதுடன், அவர்களை இணைந்து செயற்படுவதற்கும் பணிப்புரைவிடுத்தார். அதுவும் பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்திருந்தது.

இந்தச் செயற்பாடுகள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் மத்தியில் ஒரு வித சலசலப்பை ஏற்படுத்தியமை என்னவோ உண்மை தான். ஆரம்ப காலத்திலிருந்து மலையக அரசியலானது எதிர்ப்பு அரசியல் செய்தே பழக்கப்பட்டு வந்ததால் இணக்க அரசியல் செய்வது எப்படி என்ற கேள்வி எழுந்ததே இதற்குக்காரணம். கல்வி இராஜாங்க அமைச்சர் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை செய்தால் என்ன? ஏனிவர் இ.தொ.காவின் உதவியைக் கேட்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

எனினும் மத்திய அரசாங்கத்திலிருந்து தனது அமைச்சுக்கு ஒதுக்கப்படும் கோடிக்காணக்கான நிதியை ஏனைய சமூகங்கள் அரசியல் பேதம் மறந்து ஒன்றிணைந்து பெற்றுக்கொள்ளும் அதே வேளை, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் நுவரெலியா மாவட்டம் மட்டும் இதில் பின் நிற்கின்றதே என்ற ஆதங்கத்திலும் நுவரெலியாவிற்கு அடுத்து அதிக பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகள் உள்ள ஊவா மாகாணமும் தன்னை பயன்படுத்திக்கொள்வதில்லை என்ற அர்த்தத்திலும் கல்வி இராஜாங்க அமைச்சர் அவ்வாறு கூறியிருந்தார்.

குறித்த இரு பிரதேசங்களிலும் என்ன காரணங்களுக்காக தன்னை எவரும் இவ்விடயத்தில் அணுகவில்லை என்பதை அமைச்சர் இராதாகிருஷ்ணன் நன்கறிவார். ஆகையால் தான் தனது பேச்சில் அவர் இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து ஊவா மற்றும் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு சார்பில் மாகாண அமைச்சர்களான ராமேஷ்வரன் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோருடனான சந்திப்பு ஒன்றும் ஏற்பாடாகி இருந்தது.

இதுவும் தமிழ் முற்போக்குக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களான அமைச்சர்கள் திகாம்பரம் மற்றும் மனோ கணேசன் உட்பட ஆதரவாளர்களிடையேயும் புகைச்சலை ஏற்படுத்தியது.வே.இராதாகிருஷ்ணன் இ.தொ.கா பக்கம் இணைவதற்கே பேச்சு நடத்தப்படுகின்றது என்றும் கதைகள் பரவலாயின. ஒரு கட்டத்தில் மலையக கல்வி அபிவிருத்திக்கே இந்தச் சந்திப்பு என காரணம் கூறப்பட்டதால் மௌனம் காக்கப்பட்டது.

ஆனால் அடுத்தடுத்து இடம்பெற்ற நிகழ்வுகள் மேலும் பல விமர்சனங்களை எழுப்பியது.

பாராட்டு விழாவில் மாயமான தலைவர்கள்

கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கு இலண்டன் பல்கலைக்கழகத்தினால் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டமைக்கு மலையக மக்கள் முன்னணி பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கட்சி பேதம் இன்றி அனைவரும் அழைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் கலந்து கொண்டார்.அவருடன் இ.தொ.கா வின் இன்னும் சில உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.இதன் காரணமாக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அமைச்சர் பழனி திகாம்பரம் இடையில் திரும்பிச் சென்றதுடன் தனது கட்சியின் எந்த ஒரு உறுப்பினரும் கலந்து கொள்ளக் கூடாது என அறிவுறுத்தல் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் காரணமாக நிகழ்ச்சி மேடைக்கு அருகில் வந்த மாகாண சபை உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் உட்பட அந்தக் கட்சியின் அங்கத்தினர்களும் திரும்பி சென்றுள்ளனர்.கூட்டணியின் தலைவர் மனோகணேசனும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.அவர் சார்பாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கலந்து கொண்டார்.இவருடன் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கோடீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.இதே வேளை மலையக மக்கள் முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அரவிந்தகுமாரும் கலந்து கொள்ளவில்லை.மேற்குறித்த சம்பவங்களுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் கட்சிக்குள் உட்கட்சி பூசல் இருப்பதை இவை வெளிப்படையாக்கின. இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராமும் கலந்து கொள்ளவில்லை என்பது முக்கிய விடயம். கட்சியில் தனக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டமை தொடர்பாக அறிவிக்கப்படவில்லை என்றும் அதனால் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் சார்பாக கூறப்பட்டது.

வீடமைப்பு திட்ட நிகழ்வை புறக்கணித்த தலைவர்கள்

முன்னைய நிகழ்வு கட்சி ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டது என்றாலும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட மலையக வீடமைப்புத்திட்ட நிகழ்விலும் இந்த புறக்கணிப்புகள் இடம்பெற்றுள்ளன. 12.08.2018 அன்று நடைபெற்ற பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட 404 வீடுகள் திறப்பு விழாவில் கூட்டணியின் தலைவர் மனோகணேசன்,பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் கலந்து கொள்ளவில்லை இதற்கும் பல காரணங்கள் கூறப்பட்டாலும் கூட்டணிக்குள் பூசல்கள் இருப்பதை உணர்த்துவதாகவே உள்ளது. மலையகப்பகுதிகளில் எந்த தேசிய நிகழ்வுகள் இடம்பெற்றாலும் அதில் தமிழ் முற்போக்குக்கூட்டணிக்குள் அங்கம் வகிக்கும் மூன்று அமைப்பின் தலைவர்களும் கூடவே அக்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வதை வழக்காகக்கொண்டிருந்தனர். ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாகி விட்டது போன்றுள்ளது. இந்தக் குழப்பங்கள் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பாதிக்கும் என கூட்டணியின் ஆதரவாளர்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர். கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள் தனி வழியில் செல்வார்களா? அல்லது மீண்டும் ஒரு புதிய கூட்டணி உருவாகுமா?அது தேர்தல் கூட்டணியாக மட்டுமே இருக்குமா?இப்படி பல கேள்விகள் மக்கள் முன் எழுந்திருக்கின்றது.

தேர்தலை மையப்படுத்திய கூட்டணியா?
தமிழ் முற்போக்கு கூட்டணியும் தனியாக தேர்தலை மையப்படுத்தி அமைக்கப்பட்ட கூட்டணியாகவே செயற்படுவதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.அதற்கு பல காரணங்களும் இருக்கின்றன. இதுவரை காலமும் கூட்டணியின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு காத்திரமான செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை.மாதாந்த கூட்டமோ கூட்டணியின் எதிர்கால செயற்பாடுகள் அல்லது முன்னெடுப்புகள் தொடர்பாக தலைவர்கள் இணைந்து கலந்துரையாடியதாக எந்தவிதமான தகவல்களும் இல்லை.கூட்டணியாக செயற்பட்ட ஒரு சம்பவம் கலைஞரின் மறைவுக்கு அனைவரும் சென்று வந்தது மாத்திரமே தவிர வேறு எதனையும் காண முடியவில்லை.பிரதமருடன் அல்லது ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் இடம்பெற்றால் தனியே தலைவர் மனோகணேசன் மாத்திரம் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கருத்து தெரிவிக்கின்றார் என்ற விமர்சனங்களும் இருக்கின்றன.அப்படியானால் மற்ற பிரதி தலைவர்கள் கூட்டணியின் ஏனைய உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்படுவதில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாகக் கூட இதுவரையில் எந்தவிதமான கருத்தும் கூட்டணி சார்பாக விடுக்கப்படவில்லை.தனியே அந்தந்தக்கட்சிகள் மட்டும் தமது கருத்துகளை தெரிவித்து வருகின்றன. கடந்த ஜனாதிபதி தேர்தலிலிருந்து வெற்றிக்கூட்டணியாக வலம் வந்துக கொண்டிருக்கும் தமிழ் முற்போக்குக்கூட்டணிக்குள்ளே நிலவும் பூசல்கள் தீர்க்கப்படல் வேண்டும் என்பதே அதன் ஆதரவாளர்களின் கருத்தாக இருக்கின்றது. இவர்கள் பிளவு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டமாகப் போய் விடும் என்பதே உண்மை.

நன்றி - வீரகேசரி
 

இணைந்திருங்கள்


Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates