Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மலையகத் தலைமைகள் - அன்றும் இன்றும் - சட்டத்தரணி ச. ஜேசுநேசன், எல்எல்.பி.


மலையக மக்கள் எனும் போது பொதுவாக அது தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களையும் தொழிலாளர்களாக இல்லாது விட்டாலும் அவர்கள் வழிவந்தவர்களையும் இளைஞர்களையும் குறிக்கும். இன்று அவர்களுக்கு குடியுரிமை, வாக்குரிமை என்பன உண்டு. இதனால் அவர்கள் அவ்வப்போது இடம்பெறும் தேர்தல்களில் வாக்களித்து தமது உரிமையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்குக் கிடைத்த அரசியல் உரிமைகளில் இதை விட வேறெதுவும் அதிகமாகக் கிடைத்து விட்டதாகக் கூற முடியாது. தேர்தல் காலங்களில் இவர்களைத் தேடிவரும் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தேர்தல் முடிந்தபின் அடுத்த தேர்தல் வரும்வரை இவர்கள் இருக்கும் தோட்டப் பகுதிபக்கம் தலைவைத்துப் படுப்பதேயில்லை. இன்று இரத்தினபுரி மாவட்டத்தில் குக்குலேகம போன்ற இடங்களில் இடம்பெறும் சம்பவங்கள் தாம் பெற்ற அரசியல் உரிமைகளால் தோட்ட மக்கள் எந்தளவு பயன் பெறுகிறார்கள் என்பதைக் காட்டி நிற்கின்றன.

தோட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் எவ்வளவு தான் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்தாலும் அரசும் அவர்களிடம் வாக்குவாங்குவதற்கு வரிசையில் நிற்பவர்களும் அவர்களைக் குடிமக்களாகக் கருதுவதில்லை. அவர்களைத் தொழிலாளர்களாகவே பார்க்கின்றார்கள். எனவே வாக்குகளை வாங்கிய பின் அவர்களது பிரச்சினைகளைத் தோட்ட நிர்வாகம் கவனித்துக் கொள்ளட்டும் என்று வாளாவிருந்து விடுக்கின்றனர். ஆனால் தொழிலாளர்களோ தம்மைத் தொழிலாளர் என்று தாம் நினைப்பதைக் கூடத் தவிர்க்கப் பார்க்கிறார்கள். இதனால் அவர்களுக்கு ஏற்படும் இழப்போ மிகப் பெரியது.

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக மலையகத்தில் வாழ்ந்து வரும் தமிழ்த் தொழிலாளர் சமூகத்துக்கு நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் மிகப் பலமான அமைப்புகள் இருந்தன. அவர்களது நலன்களை சுதந்திரத்திற்கு முன்பு அவைதான் கவனித்தன.

சுதந்திரத்திற்குப் பிறகு ஒட்டுமொத்தமாக அவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து நாற்பதாண்டுகளுக்கு மேல் அவர்களது நலன்களை அவைதான் கவனித்தன. இன்று பச்சை, நீலமென்று கலர்கலராக வரும் அரசியல் கட்சிகள் அவர்களின் வாக்குகளைக் கேட்டுப் பிச்சையெடுக்கும் கட்சிகள் அவர்கள் நாடற்றவர்களாக இருந்த காலத்தில் அவர்களை நாய்களாகக் கூட நினைக்கவில்லை. மலையகத் தோட்ட தொழிலாளர்களின் அன்றைய அமைப்புகள் மாபெரும் சக்தியாகத் திகழ்ந்தன. மலையகத்தின் எந்தப் பகுதியிலாவது தொழிலாளர்களுக்கு இன்னல் ஏற்படும் போது ஒன்றாகக் கிளர்ந்தெழுந்தன. அவர்களுக்கு அபயக்கரம் நீட்டின.

அவைதான் அன்று மலையகத்தில் மிகப் பலம் பொருந்தியவைகளாகத் திகழ்ந்த தோட்டத் தொழிற்சங்கங்கள். மலையகத்தில் ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து, பெரியவனாகி பிறகு வயது முதிர்ந்து சுடுகாட்டிற்குச் செல்லும் வரை சென்ற பின்பும் கூட அதன் எல்லா நலன்களையும் கவனித்தவை தோட்டத் தொழிற்சங்கங்களே.

அன்றைய மலையகத்தில் பல தொழிற்சங்கங்கள் இருந்தாலும் சில வேளை அவை ஒன்றுக்கொன்று முட்டி மோதிக்கொண்டாலும் தொழிலாளர்களுக்கு அவை துரோகம் செய்தன, தொழிலாளரை ஏமாற்றின என்று ஒட்டு மொத்தமாகக் கூறமுடியாது. ஏனெனில் அன்றைய தொழிற்சங்கங்கள் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்டவையாக இருந்தன. தொழிற்சங்கத் தலைவர்கள் பல தியாகங்களைச் செய்து தொழிலாளருக்கு வழிகாட்டினர். ஆரம்பகாலத் தொழிற்சங்கத் தலைவர்களாக கோ. நடேசையர், ஏ. அஸீஸ், கே. இராஜலிங்கம், எஸ். சோமசுந்தரம், எஸ். தொண்டமான் ஸி. வி. வேலுப்பிள்ளை, வீ. கே. வெள்ளையன், வி.பி. கணேசன், எம்.எஸ். செல்லச்சாமி, என். சண்முகதாசன், என். எம் பெரேரா, டாக்டர் எஸ். ஏ.விக்ரமசிங்க போன்ற மாபெரும் தொழிற் சங்கத் தலைவர்கள் தோட்டத் தொழிலாளருக்கு செய்த சேவையை மறக்கவோ மறுக்கவோ முடியாது. (செல்லச்சாமி மட்டும் இன்றும் உயிர் வாழ்கிறார்) அவர்களது காலத்தில் தோட்டத் தொழிலாளருக்கு ஒரு தெம்பு இருந்தது. தொண்டமான் இருக்கிறார். அஸீஸ் இருக்கிறார். சண் இருக்கிறார். வெள்ளையன் இருக்கிறார். என். எம். இருக்கிறார். நம்மைக் காப்பாற்றுவர் என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள்.

1948 க்கு முன்பு தேர்தல் காலங்களில் தமது வாக்குகளை அவர்களுக்கு அள்ளிக் கொடுத்தார்கள். தொழிற் சங்கத் தலைவர்கள் மீதும் தொழிற் சங்கங்கள் மீதும் ஒரு மதிப்பு இருந்தது. தொழிற் சங்கங்களையும் தொழிற் சங்கத் தலைவர்களையும் தமது ஆபத்பாந்தவர்களாக மலையக மக்கள் துதித்தனர். மலையக மக்கள் தமக்கு குடியுரிமை இல்லாவிட்டாலும் வாக்குரிமை இல்லாவிட்டாலும் ஒழுங்கான கல்வி வாய்ப்பு இல்லாவிட்டாலும் தொழில் வாய்ப்பு இல்லாவிட்டாலும் தாம் தொழிலாளர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். தொழிலாளர்கள், சுரண்டிப் பிழைப்பவர்கள் அல்லர். உழைத்துப் பிழைப்பவர்கள் என்று பெருமைப்பட்டவர்கள் இன்று அந்த மதிப்பிற்குரிய தலைவர்கள் யாவரும் மறைந்து விட்டார்கள். அவர்களை நினைவு கூருவதற்கு கூட யாரும் இல்லை. உயிரோடிருக்கும் செல்லச்சாமி போன்றவர்கள் கூட நேரடி தொழிற் சங்க ஈடுபாட்டிலிருந்து முதுமை காரணமாக ஒதுங்கி விட்டார்கள் அல்லது ஒதுக்கப்பட்டு விட்டார்கள்.

இன்று மலையகத் தொழிற் சங்கங்களின் நிலை என்ன? தலைவர்மாரின் தகைமை என்ன? அவர்களின் சேவை என்ன? அவர்களால் தோட்டத் தொழிலாளருக்கு ஏற்பட்ட நன்மை என்ன? என்றெல்லாம் ஒவ்வொன்றாக ஆராயும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது. அன்றைய தலைவர்மாரின் செயல்கள் அவர்களை நாம் ஆராதிக்கச் செய்தன. இன்றையவர்களின் செயல்கள் அருவருப்பைத் தருகின்றன.

இன்று மலையகத்தில் புற்றீசல்கள் போல தொழிற் சங்கங்கள் தோன்றி விட்டன. மலையகத்தின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களாக வருகிறவர்கள் எதைச் சாதிக்காவிட்டாலும் இரண்டைச் சாதித்து விடுகின்றனர். முதலாவது மலையகத்தின் மூலைமுடுக்கெல்லாம் அவர்களின் பினாமிகள் பெயரில் சாராயக் கடைகளைத் திறந்து விடுகின்றனர். இரண்டாவது தமது தலைமையில் ஒரு தோட்டத் தொழிற் சங்கத்தை ஆரம்பித்து விடுகிறார்கள். அரசியல் பதவிகள் பறிபோனாலும் தொழிற் சங்கம் அவர்களுக்குச் சோறு போடும். மதுபானச்சாலைகள் பணம் சேர்க்கவும் தேர்தல் காலத்தில் வாக்காளப் பெருங்குடி மக்களுக்குப் போத்தல் போத்தல்களாக திறந்து வார்க்கவும் கைகொடுக்கின்றன. தாம் ஆரம்பித்த தொழிற் சங்கங்கள் தமது வாக்கு வங்கியைக் கொஞ்சமாவது பாதுகாக்கத் துணை புரிகின்றன.

முன்பு அர்ப்பணிப்புடனும் தூர நோக்குடனும் செயல்பட்ட கௌரவமிக்க தலைவர்களால் வழி நடத்தப்பட்ட பலம் வாய்ந்த தொழிற் சங்கங்கள் இன்று மானாப்புதூர் மைனர்களாலும் நாலாங் குறுக்குத் தெரு நாட்டாமைகளாலும் விலைக்கு வாங்கப்பட்டு விட்டன. அவர்கள் மலையக மக்களை கட்டி மேய்க்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் தமது தொழிற் சங்கப் பலத்தைக் காட்டி தொழிலாளருக்கும் தேவையானதைப் பேரம் பேசி அல்லது போராடிப் பெற்றுக் கொள்வதாக இருப்பதில்லை. அதைவிடுத்து ஆள்வோருக்கு ஆலவட்டம் வீசி அடிபணிந்து தொழிலாளர் வாக்குகளால் தாம் பெற்றுள்ள எம்.பி.பதவியை அடகுவைத்து அரசுப் பதவிகள், ஆலோசகர் பதவிகள் போன்றவற்றைப் பெற்று ஜமீன்தார் வாழ்வதற்காகத்தான் இடம் பெறுகின்றன. எஜமானின் எச்சில் தட்டில் எஞ்சிக் கிடக்கும் எலும்புத் தூண்டுக்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் நாயின் நிலையை விட கேவலமானதாக இருக்கின்றது இவர்களின் நிலை. இவர்களோடு மின்னலாய் வந்து மலையக மக்களின் வாக்குகளைக் கன்னமிட்டவர்களும் சேர்ந்து மலையக மக்களைக் கன்னத்தில் கைவைத்து நிற்கச் செய்து விட்டார்கள்.

ஆளவந்தோருக்கு அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்த இவர்களால் அல்லல் படும் தோட்ட மக்களின் அவல நிலையைத் தீர்க்கமுடியாது. குக்குலேகமயில் மட்டுமல்லாது கொட்டகலையிலும் தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டாலும் இவர்களால் ஆவேசமாகக் கிளர்ந்தெழ முடியாது. ஏனெனில் இவர்கள் ஆளவந்தாரின் அடிமைகள். தொழிற்சங்கத் தலைவர்களாக இருப்பது தொழிலாளருக்கு நன்மை செய்வதற்கல்ல. மாறாக அவர்களை வைத்துப் பணம் பண்ணுவதற்குதான். ஏனெனில் இவர்கள் அடிப்படையில் வர்த்தகர்கள்.

மலையகத்தில் தமிழில் நிர்வாகமும் மலையக இளைஞர் வேலை வாய்ப்பும்

-சட்டத்தரணி ச. ஜேசுநேசன், எல்எல்.பி..
வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாவட்டம் நுவரெலிய மாவட்டமாகும்.இங்கு 59.76 விழுக்காட்டினர் தமிழர்களாவர்.நுவரெலியா மாவட்டத்தை அடுத்துள்ள பதுளை மாவட்டத்திலும் 27.59 விழுக்காட்டினர் தமிழர். கண்டி மாவட்டத்தில் 25.51 விழுக்காட்டினரும் தமிழர்களே.மாத்தளை மாவட்டத்தில் 19.48,கேகாலை மாவட்டத்தில் 14.30 மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 13.27 விழுக்காட்டினர் தமிழர்.முஸ்லிம் மக்களும் இத்தமிழ் பேசும் மக்களில் அடங்குவர்.இம்மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களில் 95 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்கள் இந்தியவம்சாவளித் தமிழர்களாவர்.அவர்கள் சமீபகாலம் வரை இந்தியத் தமிழர்கள் அல்லது இந்தியர்கள் என்று அழைக்கப்பட்டுவந்தனர்.அரசியல் அடிப்படையிலும் அவர்கள் இந்தியத் தமிழர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.

ஆனால் படித்த இளைஞர் சமூகம் அவர்கள் மத்தியில் இன்று பலம் பெற்று வருகின்றது.இந்தச் சமூகத்துக்கு இந்தியா பற்றிய அக்கறை இல்லை.அவர்கள் எல்லோரும் இலங்கையில் பிறந்தவர்களாகவும் இலங்கைக் குடியுரிமை உள்ளவர்களாகவும் இருப்பதால் தம்மை இந்தியத் தமிழர்கள் என்று அழைப்பதை அவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை.அவர்கள் தம்மை இலங்கைத் தமிழர் என்றே அழைக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஆனால் இலங்கைத் தமிழர் என்றொரு பிரிவு இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்துவருவதால் மத்திய மலை நாட்டில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களாக தம்மை "மலையகத் தமிழர்' என்று அழைக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.

அது நியாயமாகவேபடுகின்றது.தாம் வாழும் பிரதேசத்தை மையப்படுத்தி தம்மை அப்பிரதேசத்தின் மக்களாகவே பார்க்கின்றனர்.இது இயல்பானதே. இதனால் தாம் வாழும் பிரதேசத்திற்கு ஏற்ப தம்மை "மலையகத்தமிழர்'என்று அழைக்கின்றனர்.மலையகத்தில் கற்றோர்,கல்லாதோர் யாவருமே தம்மை மலையகத் தமிழர் என்றே கடந்த அரை நுற்றாண்டுக்கும் மேலாக அழைத்துவருகின்றனர்.சிங்களவரில் கண்டிச் சிங்களவர் என்ற பிரிவு இருக்கின்றது.அதுபோல தமிழரில் மலையகத் தமிழர் என்ற பிரிவு இருப்பதில் எந்தவித தவறும் பின்னடைவும் இருக்க முடியாது.

அதனை ஏற்றுக்கொள்வதில் அரசுக்கு எந்தத் தயக்கமும் ஏற்பட வேண்டியதில்லை.

மலையகத் தமிழரின் வரலாறு இங்கு 150 ஆண்டுகளுக்கு மேற்பட்டது.ஆனால் 1815 இல் ஆங்கிலேயரிடம் வீழ்ந்த கண்டி இராச்சியத்தில் தமிழரின் வரலாறு 300 ஆண்டுகளுக்கு மேற்பட்டது.

இவர்களின் வரலாறு இந்த இடத்தில் தேவைப்படாததால் அதனை இத்துடன் நிறுத்திவிடுவோம்.

அமெரிக்க,அவுஸ்திரேலியக் கண்டங்களில் புகுந்த ஐரோப்பியர் 200 ஆண்டுகளுக்கு அக்கண்டங்களையே தமதாக்கிக் கொண்டனர்.ஆனால் இலங்கையில் மலையகத்திற்கு வந்த தமிழர்கள் 150 ஆண்டுகளுக்கு மேலாகியும் தம்மை இங்கு நிலைநிறுத்திக்கொள்ளமுடியாமல் இருக்கின்றார்கள்.அதற்கு முக்கிய காரணம் அவர்கள் நாடுபிடிக்கும் எண்ணத்தோடு இங்கு வரவில்லை.பிழைப்புக்காகத்தான் வந்தார்கள் என்பதைவிட அழைத்து வரப்பட்டார்கள் அல்லது இழுத்து வரப்பட்டார்கள் என்பது தான் பொருத்தமாக இருக்கும். பிழைப்புக்காக வந்ததால் பிழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.அதுவும் மந்தைகளைப்போல நடத்தப்படுகின்றார்கள்.குதிரைகளைக் கட்டிவைக்கும் இடம் குதிரைலாயம் எனப்படும்.இவை வரிசையாக இருக்கும். இதைப்போன்ற லயங்களில்தான் (ஃஐNஉகு) மலையக மக்களும் வாழ்கிறார்கள்.

இந்த 150 ஆண்டு வரலாற்றில் அவர்களின் லயத்து (ஃஐNஉ ஃஐஊஉ) வாழ்க்கை முறை இன்னும் மாறாவிட்டாலும் பல வித முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை.1948 ஆம் ஆண்டு வரை இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சி நடைபெற்றதால் இலங்கையின் ஏனைய மக்களோடு பிரித்தானிய குடிமக்கள் இருந்தார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை அரசினால் அவர்கள் குடியுரிமை மற்றும் வாக்குரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக்கப்பட்டனர்.அவர்களின் மரபுவழித் தாயகமான தமிழ் நாட்டினரும் அவர்களை நாடற்றவர்களாகக் கருதினர். அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.மிகப் பெரிய வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் முற்போக்கு வாதியும் என்று கருதப்பட்ட அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு கூட அவர்களை நாடற்றவர்களாகவே கருதினார். அவர்கள் தமது மரபுவழித்தாயகமான தமிழ்நாட்டுக்குத் திரும்பி வருவதை தான் 1964 மே 27 இல் இறக்கும் வரை அவர் அனுமதிக்கவில்லை.அவர் அதற்குப் பல காரணங்களை முன்வைத்தார். அவற்றில் மனிதாபிமானம் உள்ளடக்கப்படவில்லை. எங்கோ 2000 மைல்களுக்கு அப்பால் உள்ள காஷ்மீரின் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு,தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்றோர் திரும்பிவருவதை அனுமதிக்காதிருந்ததும்,அவரைத் தட்டிக்கேட்கத் திராணியற்று தமிழகத் தலைமைகள் இருந்ததும் இன்றும் அது போலவே நடந்துகொள்வதும் தமிழரின் "விதி' என்றே கூறலாம்.

நேருவின் பரம்பரையினர் தான் இன்றும் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கின்றனர்.அவர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள் என்பதை மலையகத் தமிழர்கள் என்றோ மறந்துவிட்டனர். ஆனால் என்ன புதுமை! இந்திய ஆட்சியாளர்கள் தம்மைக் காப்பாற்றுவார்கள் என்று வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். புதுமையான குருட்டு நம்பிக்கை!.

சரியோ தவறோ நேருவின் மறைவிற்குப் பிறகு இந்தியப் பிரதமராக வந்த லால்பகதுர் சாஸ்திரியினால் தான் இலங்கையில் நாடற்றவர்கள் எனப்பட்ட மக்களுக்கு விடிவு காலம் பிறந்தது.  1964 டிசம்பரில் அவர்களை 7:4 (ஏழிற்கு நான்கு) என்ற விகிதத்தில் பங்கு போட்டுக்கொள்ள அவரோடு அன்றைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க ஒப்பந்தம் செய்தார்.

உண்மையில் அடிப்படை உரிமை,மனித உரிமை போன்ற அனைத்துலகக் கோட்பாடுகள் இவ் ஒப்பந்தத்தின் போது கவனிக்கப்படவில்லை.17ஆம் 18ஆம் நுற்றாண்டுகளில் ஆபிரிக்க மக்களைப் பொருட்களாகக் (பண்டம்) கணித்து அமெரிக்காவுக்கு பண்டமாற்றம் செய்தது போல சிறிமாவும் சாஸ்திரியும் மலையக மக்களைப் பண்டங்களாகக் கருதிதொகையை நிர்ணயித்துக்கொண்டனர்.எதுவாயினும் இவ்வொப்பந்தம் ஒரு முடிவின் ஆரம்பமாக அமைந்தது.

1948 இல் ஆரம்பமான நாடற்றவர் பிரச்சினை ஓரளவு திருப்தியுடன் முடிவடைய 40 ஆண்டுகள் சென்றன.எனவே மலையகத் தமிழ் மக்கள் நாட்டின் ஏனைய சமூகத்தினைவிட 40 ஆண்டுகள் பின்தங்கி நிற்கின்றனர்.(வடக்குகிழக்கில் ஏற்பட்டிருந்த விடுதலைப் போர் காரணமாக அவர்களுக்கு 30 ஆண்டுகள் பின்தங்கி நிற்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.)

இன்று மலையகத் தமிழ் மக்கள் பலவழிகளிலும் முன்னேறி வருகின்றனர். 1970 களில் விரல் விட்டு எண்ணக் கூடியதாக இருந்த அவர்கள் ஆசிரிய சமூகம் இன்று ஆயிரக்கணக்கானோராக வளர்ந்திருக்கின்றது. ஆசிரியத்துறை தவிர்ந்த வேறு அரசதுறைகளில் அவர்களில் விழுக்காடு மிக மிகக்குறைவு.

இதற்கான காரணம் மலையகத்தில் பெரும்பாலான பிரதேச சபைகளில் சிங்களத்தோடு தமிழும் சரிநிகரான நிர்வாக மொழியாக அரசாங்க வர்த்தமானிகள் ஊடாகப் பிரகடனப்படுத்தப்பட்டும் இன்று வரை அவற்றில் எதிலுமே தமிழிலும் நிர்வாகம் நடைபெறுவதில்லை.

இதில் அக்கறை கொள்ளவேண்டிய மலையகத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மலையகத் தொழிற்சங்கங்கள், அரசியற்கட்சிகள் அத்துடன் மலையக சமூகப் பணி நிறுவனங்கள் ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள், தலைவர்கள் ஆகியோரின் வசதிக்காக குறிப்பிட்ட அரசாங்க வர்த்தமானிகளின் விபரங்களைக் கீழே தருகின்றேன்.

1. அரசாங்க வர்த்தமானி இல.1105/25 திகதி 12.11.1999

டி) நுவரெலியா மாவட்டம் முழுதும்: அதாவது இம்மாவட்டத்தினுள் அடங்கும் அனைத்து அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் சகல நிர்வாக நடவடிக்கைகளும் தமிழிலும் இடம்பெறவேண்டும்.

அரச நிறுவனங்கள் எனும்போது மாவட்ட செயலகம், அதன் உபபிரிவுகள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், கிராம அலுவலர் பிரிவு என்பனவற்றையும் அரச சார்பு நிறுவனங்கள் என்னும் போது அரசு கூட்டுத்தாபனங்கள், அரசாங்க வங்கிகள் போன்றவற்றைக் குறிக்கும்.

டிடி) பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, எல்லை, அல்துமுல்லை, அப்புத்தளை, ஆலிஎலை, மீசாகியுள மற்றும் பசறைப் பிரதேச செயலகப் பிரிவுகள்.

2. அரசாங்க வர்த்தமானி இல.1283/3 திகதி 07.04.2003.
டி) பதுளை மாவட்டத்தில் பதுளை, லுணுகலை, வெலிமடை மற்றும் சொரணதோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகள்.

டிடி) கண்டி மாவட்டத்தில் அக்குறணை, தெல்தோட்டை, பன்விலை, பஸ்பாகே, கோராளை மற்றும் உடபலாத்த பிரதேச சபைப் பிரிவுகள்.

அத்துடன் அதே வர்த்தமானிக்கமைய காலி மாவட்டத்தில் நான்கு கிராவெட்ஸ் (ஊணிதணூ எணூச்திஞுtண்), களுத்துறை மாவட்டத்தில் பேருவளை, புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி, முந்தல், புத்தளம், வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேச சபைப் பிரிவுகளிலும் தமிழில் அரச நிர்வாகம் நடைபெறல்வேண்டும்.

14.02.2001 திகதி 1171/18 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானிப்படி கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச சபைப் பிரிவுகளிலும் தமிழில் அரச கருமங்கள் நடைபெறல் வேண்டும். ஆனால், என்ன பரிதாபம்! வடக்கு, கிழக்கிற்கு வெளியேயுள்ள இந்த 29 பிரதேச சபைப் பிரிவுகளில் ஒன்றிலாவது தமிழிலும் அரச நிர்வாகம் நடைபெறுவதில்லை. தமிழ் பேசும் மக்கள் என்ன பாவம் செய்தார்கள். தமிழில் நிர்வாகம் நடத்தாமல் இருப்பது சட்ட முரணானது என்று முறையிட்டு யாருமே இன்று வரை நீதிகேட்டு நீதிமன்றம் செல்லவில்லை. 1956 இற்குப் பிறகு இன்று வரை ஒரு "கோடீஸ்வரனாவது' பிறக்கவில்லை.

மேலே குறிப்பிட்ட பிரதேசச் செயலகங்களிலும் அவற்றினை உள்ளடக்கும் மாவட்டச் செயலகங்களிலும் சிங்களத்தோடு தமிழிலும் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இதற்கான நடவடிக்கையை மேலே குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதிகள் எடுக்கவேண்டும். ஏனெனில் இது "உரிமை' பற்றியது. இவ்வாறான உரிமைகளைக் காக்கவும் இவற்றுக்காகப் போராடவும், போராடிப் பெற்றவைகளை நடைமுறைப்படுத்தவுமே இவர்களை மக்கள் தெரிவு செய்கிறார்கள். அதனைவிடுத்து தமக்குக் கிடைக்கும் பன்முக வரவுசெலவுத்திட்ட நிதியிலிருந்து கலாசார மண்டபம், பாடசாலைக் கட்டிடம், நினைவுத்தூபிகள் கட்டுவதும் கோவில் மணிகள், வாத்தியக் கருவிகள், கூரைத்தகரங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை வழங்குவதும் தாம் தமது கடமையென்று மக்கள் பிரதிநிதிகள் திருப்தியடைந்து விடமுடியாது.

இவை அவர்களது இயலாமைக்கும் ஏமாற்றுத் தனத்துக்கும் சாட்சிகளாகவே அமைகின்றன.

மேலே குறிப்பிட்ட அலுவலகங்களில் தமிழிலும் நிர்வாகம் நடைபெறுமானால் ஆயிரக்கணக்கான படித்த மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் பிள்ளைகளுக்குத் தொழில்வாய்ப்பு கிடைக்கும்.

ஆசிரியத் தொழிலை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க முடியாது. அஃது எல்லோருக்கும் கிடைத்து விடவும் மாட்டாது.

மலையக மக்கள் என்பவர்கள் யார்?



இந்தியாவும் இலங்கையும் பிரிட்டிசாரின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தபொழுது இலங்கை மலைப் பகுதியில் கோப்பி, தேயிலை, இரப்பர் போன்ற பணப்பயிர்கள் உற்பத்தி செய்வதற்காக, ஐரோப்பிய முதலாளிகளால், தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள்தான் மலையக தோட்டத் தொழிலாளர்கள்.

தமிழகத்திலிருந்து இம்மக்கள் அழைத்துச் செல்லப்படக் காரணமாக இருந்த அன்றைய தமிழகச் சூழல்
கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து பருவ மழை பெய்யவில்லை, இதனால் விவசாயத்துக்கான நீர் ஆதாரம் இல்லாமல் போனது. உணவு உற்பத்தியில் தேக்க நிலை தொடர்ந்ததால், பஞ்சத்தின் பிடியில் இருந்து விடுபட மாற்று வழியின்றித் தவித்த நிலை. இத்தோடு பிரிட்டிஸ் ஆட்சியாளர்களின் நிலவரி, பாசனவரி போன்ற வரி விதிப்புகளைக் கட்ட இயலாமல் தங்கள் நிலங்களை இழக்க நேரிடும் நிலை; ஐரோப்பிய ஆட்சியாளர்கள் இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பிரிட்டிஸ் காலனிய நாடுகளுக்குக் குறைந்த கூலிக்குப் பணியாற்ற இக்காலப்பகுதியில் தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்பது வரலாறாகும்.

இந்திய வம்சாவழித் தமிழர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் 
இந்திய வம்சாவழித் தமிழர்கள் எண்ணிக்கை இன்று முப்பது இலட்சமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் 1964 இல் நிகழ்ந்த சிரிமாவோசாஸ்திரி உடன்படிக்கையால் இன்று இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் பதினைந்து இலட்சம்தான் இருக்கும். இன்று இம்மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினை என்பதை விட இருநூறு ஆண்டுகளாக இவர்களின் முன்னோர்களும், இன்று வரை இவர்களும் பிரச்சினைகளை மட்டுமே சந்தித்து வருகிறார்கள் என்றே கூற வேண்டும். 1817ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் துவங்கிய பயணம், பின் கங்காணி மற்றும் தரகர்கள் அழைத்துச் சென்று பெருந்தோட்ட உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டதற்குப் பின், தாயகம் திரும்ப முடியாத நிலை; மலேரியாக் காய்ச்சலாலும், உணவின்றியும் பல்லாயிரக் கணக்கானோர் மாண்டு போனார்கள். தோட்டங்கள் சிறைக்கூடங்களாக ஆக்கப்பட்டு, முழுமையான கொத்தடிமைகளாக ஆனதும், எல்லாவிதமான மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளாக்கப்பட்டதும் வரலாறு ஆகும்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டு உழைத்த இம்மக்களின் சந்ததிகள் இன்று எதிர் கொள்ளும் பிரச்சினைகள் என்பது ஒன்றா, இரண்டா என்று கூற இயலாது. இலங்கையின் அந்நிய வருவாயில்(1 ). 26 % ஈட்டித்தரும் இம்மக்கள், இன்றும் இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்தப்படும் நிலை, (2). 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைமை வாய்ந்த குடியிருப்பு , (3). ஏனைய சமூக மக்களின் வாழ்க்கைத் தரத்தோடு ஒப்பிடுகையில், போசாக்கற்ற உணவும் தரமற்ற குடியிருப்புகளும், (4). குறைந்த நாள்கூலி, உத்தரவாதமற்ற வாழ்க்கை,(5). கல்வியில் பாகுபாடு, (6). அரசு வேலை வாய்ப்பில் பாகுபாடு, (7). பெருந்தோட்டங்கள் துண்டாடல், சிங்களக் குடியேற்றங்கள், தமிழ்ப்பகுதியில் புத்தகோயில்கள்,(8). பால்வாடி(குழந்தை பராமாரிப்பு) நிலையங்களில் தமிழ்க் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகத் தமிழ்த் தெரியாத சிங்களப் பணியாளர்கள் நியமனம்,( 9). தகுதி வாய்ந்த மாணவர்களுக்கும் உயர்கல்வி பெற முடியாத நிலை, (10). பலவந்தக் கருத்தடை, (11). சுகாதாரச் சீர்கேடு, போதிய மருத்துவ வசதியின்மை, (12). நில உரிமை மறுப்பு, கொத்தடிமைத் தொழில்முறை, தோட்டப்பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் உருவாக மறுப்பது, படித்த இளைஞர்களையும் தோட்டத் தொழில் செய்ய நிர்பந்திக்கும் அவலம், (13). இரண்டு நூற்றாண்டுகளாகத் தக்க வைத்து வந்த மொழி, பண்பாட்டை இழக்கும் நிலை., (14). பெருந்தோட்டங்கள் பராமரிப்பின்மை, (15). மறுக்கப்பட்டுவரும் சனநாயக உரிமைகள், (16). இனக்கலப்புத் திருமணங்கள், (17). தொழிலாளர்களுக்கான வேலை நாள் குறைப்பு போன்ற பிரச்சினைகளை இன்றும் எதிர்நோக்கியுள்ளார்கள். மேலும் மலையகத் தமிழ் மாணவர்களுக்கென தனிப் பல்கலைக்கழகத்தை உருவாக்க மறுப்பது போன்ற அடிப்படையான கல்விப் பிரச்சனைகளும் தொடர்வதைக் காணலாம்.

நில உரிமை, மொழி உரிமைகள்  மறுக்கப்படுவது பற்றி
கடந்த 1972இல் பெருந்தோட்டங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன. இத்தோட்டங்களில் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக மூன்று, நான்கு தலைமுறைகள் வாழ்ந்து வந்தவர்கள் அம்மண்ணில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டனர். துரத்தப்பட்டவர்கள் நிற்கதியாக்கப்பட்டனர். வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித்தரும் இவர்களின் உழைப்பு ஏனைய சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தச் சகல துறைகளுக்கும் பயன்படுத்தப்பட்டபொழுது இவர்கள் தெருக்களில் அவலக்கோலத்தில் ஒரு வேலை உணவிற்குக் கையேந்தி நின்றார்கள். அரசு கையகப்படுத்திய பல தேயிலைத் தோட்டங்கள் துண்டாடப்பட்டுச் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. இப்படி வழங்கப்பட்ட நிலங்களில் தமிழ்த் தொழிலாளியான ஒரு தோட்டத் தொழிலாளிக்குக் கூட நிலம் வழங்கப்படவில்லை. இம்மக்கள் நில உரிமை பெறுவதையே பெருந்தேசிய ஆதிக்கவாதம் அனுமதிக்கவில்லை. இதுவும் ஒருவகைப் பெருந்தேசிய இன ஒடுக்குமுறை என்றே கூறலாம்.

மொழி உரிமை என்பது கடந்த 1956இலேயே பறிக்கப்பட்டுச் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக்கப்பட்டது. பூர்வீகத் தமிழர்களின் தொடர் போராட்டங்கள், வடக்கு, கிழக்கில் தமிழ் இளைஞர்கள் முன்னெடுத்த ஆயுதப்போராட்டங்கள் ஆகியவற்றின் விளைவாக 2006ம் ஆண்டு இலங்கை அமைச்சரவை தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளையும் ஆட்சி மொழியாக அங்கீகாரம் அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள அரசுத் துறைகளில் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. மலையகத்தமிழர்கள் 62% வாழும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிவோர்களில் 80% சிங்களவர்களாகும். பதுளை நகரமக்கள் தொகையில் 26.3% தமிழர்களாகும். ஆனால் பதுளை மாநகரச் சபையில் பணியாற்றுவோர்களில் 450 பேரில் ஒருவர் மட்டுமே தமிழ்த் தெரிந்தவராகும். கண்டி, இரத்தினபுரி, மாத்தளை, பதுளை அப்புத்தளை போன்ற தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கின்றது. ஒரு மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையில் 12% தமிழர்கள் வாழ்வோர்களானால் நிர்வாக மொழியாகத் தமிழும் இருக்கவேண்டுமென இலங்கை அரசியல் அமைப்பு உறுதி செய்துள்ளது. ஆனால் பெருந்தேசிய இன ஆதிக்க ஆட்சியாளர்களால் எழுதப்பட்ட சட்டங்கள் அனைத்தும் எழுத்து வடிவில் மட்டுமே பதிவுகளாகியுள்ளனவே தவிர நடை முறைப் பயன்பாட்டுக்கு உதவாத ஒன்றாகவே உள்ளதை அறியலாம்.
மலையகத் தமிழர்கள் எவ்வாறான அமைப்புகளின் கீழ் அணி திரட்டப்பட்டுள்ளார்கள்?

பெருந்தோட்ட உருவாக்கத்துக்குப் பல்லும், சில்லுமாக இருந்த இம்மக்களைக் கொத்தடிமைகளாகவே தோட்ட, நிர்வாகம் வைத்துக் கொண்டது. தோட்டங்களில் வாழும் இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கம் தோன்ற நூறு ஆண்டுகளுக்கும் மேலானது. நாட்டில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருந்த போதும் இவர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க இன்று வரையும் இவர்களுக்கான அரசியல் கட்சி உருவாகவில்லை. மாறாக, எழுபது ஆண்டுகளுக்கு முன் உருவான தொழிற்சங்கங்களின் கீழும் இந்தத் தொழிற்சங்கத் தலைமையோடு முரண்பட்டு வெளியேறும் தலைமைகள் உருவாக்கும் தொழிற்சங்கங்களின் தலைமையின் கீழுமே இம்மக்கள் அணிதிரட்டப்பட்டுள்ளார்கள்.                                             

மலையகத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக அரசியல் கட்சி ஒன்றை உருவாக்காமல் இருப்பதற் கான காரணம என்ன ?
இம்மக்கள் பணியாற்றும் பெருந்தோட்டத் தொழில் என்பது, தோட்ட நிர்வாகத்தோடு எழும் பிரச்சினைகளோடு சம்பந்தப்பட்டதாகும் . இப்பிரச்சினைகளைக் கையாள்வது தொழிற்சங்கங்கள்தான். தொழிற்சங்கங்களோடு இணைந்த இவர்களின் வாழ்க்கையில் மாற்றுச் சிந்தனைகள் உருவாக, அல்லது உருவாக்க முயல்வோர்களால் தொழிற்சங்கத் தலைமைக்கு ஆபத்து நேரிடும் எனச் சங்கத் தலைமைகள் எண்ணுகின்றன. இத்தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகள் போலவே தங்களை எண்ணுகின்றன. தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் போலவே செயல்பட்டுவருகின்றன. இம்மக்களின் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக முன்னெடுக்கும் அமைப்புகள் உருவாகாமல் இருப்பதற்கு இத்தொழிற் சங்கத்தலைமைகளே தடையாக இருந்து வருகின்றன. 1980களுக்குப் பின் உருவான சில அரசியல் கட்சிகளும் மலையக மக்களை முழுமையாக அடையாளப்படுத்துவதாக இல்லை.

மலையகத் தமிழர்கள் வாழும் மாவட்டங்கள் அங்குள்ள நிலைமைகள் 
பெருந்தோட்டத்தைச் சார்ந்தவர்கள் பதினொரு மாவட்டங்களில் வாழ்கிறார்கள். கொழும்பிலும், நுவரெலியாவைத் தவிர இதர மாவட்டங்களிலும் சிறிய அளவிலும் 1958க்குப்பின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் குடியேறிய இம்மக்கள் வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலும் வாழ்கிறார்கள். மலையகப் பகுதி என்பது , சிங்களக் கிராமங்களால் சுற்றி வளைக்கப்பட்ட பகுதிகளாகும். சில பகுதிகளில் உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிங்களக் கிராமங்களை கடந்தே நகரங்களுக்குச் செல்ல வேண்டும்

1964 இல் சிரிமா சாஸ்திரி உடன்படிக்கை உருவானதற்கான வரலாற்றுக் காரணம் 
1920இல் சர்வசன வாக்குரிமை வழங்கும் அரசியல் சட்டச் சீர்திருத்தங்கள் பற்றிய விவாதங்கள் நடைபெறத் தொடங்கியவுடனே, இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கெதிரான நிலைப்பாட்டை சிங்கள ஆட்சியாளர்களே தீர்மானித்தனர். “தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு இன்றியமையாதவர்கள்; ஆனால் அரசியல் செயல்பாட்டுக்கு அல்ல” என்ற பிரச்சாரத்தை முன்வைத்தவர்கள், “இவர்கள். உழைப்பதற்காக மட்டுமே உள்ள அடிமைகள்” என்ற கருத்தோட்டத்தைக் கொண்டிருந்தனர். ஆனால், பிரிட்டிஸ் ஆளுமைக்குக் கீழ் இலங்கை இருந்தபடியால் சர்வசன வாக்குரிமை இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கும் கிடைத்தது. நாட்டுவிடுதலைக்கு முன் நடைபெற்ற 1931ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தல்களில் இரண்டு உறுப்பினர்களை மலையகத் தமிழர்கள் தெரிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அடுத்து வந்த தேர்தலிலும் இரு இந்தியர்களான எஸ். பி. வைத்திலிங்கம், கே. நடேச ஐய்யர் ஆகியவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

1947இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் இருந்து ஏழு தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். 1948இல் நாடு விடுதலை அடைந்தது. இதைத் தொடர்ந்து இந்தியத் தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை மேற் கொண்டவர்களில் ஒருவரான டி.எஸ். சேனநாயக்காவைப் பிரதமராகக் கொண்டு மந்திரிசபை உருவானது. சிறுபான்மைப் பலத்தோடு அதிகாரத்துக்கு வந்த சேனநாயக்கா அதிகாரத்துக்கு வந்த ஆறுமாதத்திலேயே குடியுரிமை பறிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தச் சட்டத்தை எதிர்த்து 35 அங்கத்தினர்களும், ஆதரித்து 55 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம் பத்து இலட்சம் இந்திய வம்சாவழித் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. முழுமையான மனித உரிமை மீறலான இச்சட்டத்தைத் திரும்பப் பெறப் போராட்டங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். அது நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து முறையாக இம்மக்களைத் தலைமைகள் வழி நடத்தாத காரணமும், பெருந்தேசிய இன ஆதிக்கத்தின் செயல்பாடுகளும்தான் இவ்வொப்பந்தம் உருவாகக் காரணங்களாகும்.

குடியுரிமை பறிக்கப்பட்டபோது தோட்டப்பகுதிகளில் பலம் வாய்ந்த தொழிற்சங்கங்களாக இருந்தவைகள்
தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் நூறு ஆண்டுகளுக்குப் பின் கோ. நடேச ஐயரால் முதல் தொழிற்சங்கமான இந்தியத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் தொடங்கப்பட்டது. தோட்டங்கள் உள்ளே வெளியார் யாரும் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்த காலம். அத்து மீறி யாரும் சென்றால், சிறைத் தண்டனை விதிக்கப்படும் அளவில் சட்டங்கள் இருந்தன. விற்பனைப் பொருள்களைத் தலையில் சுமந்து செல்லும் சிறு வியாபாரிகளுக்கு இச்சட்டத்தைத் தோட்ட நிர்வாகம் பயன்படுத்துவதில்லை. இந்நிலையில் துணி வியாபாரியைப் போல் தன்னை மாற்றிக் கொண்ட நடேச ஐய்யர், துணிமூட்டையைச் சுமந்து கொண்டு, தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கத்தின் தேவையைப் பற்றி பிரச்சாரத்தைத் தொடங்கினார். தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறைகளையும் சட்ட மீறல்களையும் துண்டறிக்கைகள் மூலம் படிப்படியாக வெளியில் கொண்டு வந்த முதல் மனிதர் அவரே ஆவார்.

இதைத் தொடர்ந்து தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் 1935இல் செயல்படத் தொடங்கிய இடது சாரிகளின் தொழிற்சங்கம் இரண்டாவது தொழிற் சங்கமாகும். இச்சங்கத்தின் தலைமைகள் தோட்ட நிர்வாகத்தின் அடக்கு முறைக்கெதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தின. இப்போராட்டங்களில், வரலாற்றுப் பதிவாயிருப்பது முல்லோயா போராட்டமாகும். ஆங்கிலேயத் தோட்ட நிர்வாகத்துக்கெதிராக நடைபெற்ற இப்போராட்டத்தில், கோவிந்தன் என்ற தொழிலாளி காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். முல்லோயாவில் நடைபெற்ற இப்போராட்டம் இடதுசாரிகளைப்பற்றிய அச்சத்தை ஐரோப்பியத் தோட்ட முதலாளிகள் மத்தியில் உருவாக்கியது.

1930ல் நகரப்பகுதிகளில் குறிப்பாக இலங்கைத் தலைநகர் கொழும்பு நகரத்தில் பணியாற்றிய இந்தியத் தமிழ், மற்றும் மலையாளிகளுக்கெதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றும்படியான நிலை உருவானது. இக்காலப் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் இந்தியர்கள் நாடு திரும்பினார்கள். இந்தியர்களுக்கெதிரான பிரச்சாரங்களை, ஏ.ஈ.குண சிங்க போன்ற தொழிற்சங்கத் தலைவர்களும், சிங்கள பூர்ஷ்வாக்களும் இணைந்து மேற்கொண்டார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் 1939இல் ஜவஹர்லால் நேரு அவர்கள் இலங்கைப் பயணத்தை மேற் கொண்டார்.

இலங்கையில் நடைபெற்று வந்த சில்லறை வணிகத்திலும், மொத்த வியாபாரம், மற்றும் ஏற்றுமதியிலும் இந்திய முதலாளிகளின் மூலதனம் 90% இருந்த காலம் அது. மார்வாடிகளின் தொழில் நிறுவனங்கள் கனிசமான செல்வாக்கைச் செலுத்தியது. குண்டன் மால்ஸ் போன்ற துணி ஆலைகள், மார்வாடிகளுக்குச் சொந்தமானவைகளாக இருந்தன. இவ்வணிகர்களை ஒட்டுமொத்தமாக இணைக்கும் அமைப்புகள் எதுவும் இருக்கவில்லை. சிங்களவர் மத்தியில் உருவான இந்தியர் எதிர்ப்பு நிலையை எதிர்கொள்ள வேண்டுமென்றால் இந்தியர்கள் அமைப்பு ரீதியாக அணிதிரட்டப்பட வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு அவர்கள் எண்ணி இருக்க வேண்டும். ஆகவேதான் கொழும்பு நகரத்தில் இருந்த வணிகர்களான லெட்சுமணன் செட்டியார், அசீஸ், தேசாய், வோரா போன்றவர்களை உள்ளடக்கிய இலங்கை இந்தியக் காங்கிரஸ் என்ற அமைப்பு உருவானது. இதுவே 1940இல் இலங்கை இந்தியர் தொழிலாளர் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் செல்லத் தொடங்கியது.

மேலே தெரிவித்துள்ளதைப் போல 1947இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு ஏழு உறுப்பினர்கள் இத்தொழிற்சங்கத்தின் மூலமாகத் தெரிவாகிச் சென்றார்கள். இத்தேர்தலில் இலங்கை இந்தியக் காங்கிரஸ் போட்டியிடாத தொகுதிகளில் இம்மக்களின் வாக்குகள் இடதுசாரிக் கட்சியில் பதினான்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய உதவியது. ஆக மலையகத்தின் பலம் வாய்ந்த தொழிற்சங்கமாக அன்று முதலிடத்தை வகித்த சங்கம் இலங்கை இந்தியர் தொழிற்சங்கமாகும், இரண்டாம் இடத்தில் இடதுசாரிக் கட்சியின் தொழிற்சங்கம் இருந்தது.

இலங்கையின் வெளிநாட்டு வருவாயில் 60% மேல் ஈட்டித் தருவதில் முதுகெலும்பாக உள்ள மக்களின் குடியுரிமைப் பறிப்புக்கெதிரான போராட்டம் 
தோட்டப் பொருளாதாரத்தைக் கொண்டுதான் நாட்டின் பெரும்பகுதியான தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். இப்பொருளாதார வருவாயில் தேக்கநிலை ஏற்பட்டால், நாட்டை ஆளும் தலைமை, பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துத் தன் ஆட்சியை இழக்க நேரிடும். அத்தோடு பெரும்பாலான பெருந்தோட்டங்கள் ஐரோப்பியக் கம்பனிகளுக்குச் சொந்தமானதாக இருந்தன. தேயிலை பறிப்பதில் நாள்கள் தாமதமானாலே தேயிலைத் தளிர்களைப் பறிக்க இயலாமல் போய்விடும். இதனால் பெரும் இழப்புகளை நிர்வாகம் சந்திக்கும். அரசு இயங்குவதிலும் நெருக்கடிகள் உருவாகும். இப்படியான சூழ்நிலை இருந்தும், இலங்கை இந்தியக் காங்கிரஸ் ஒரு வலுவான போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. இடதுசாரிகள் தங்கள் பங்கிற்கு 1952 இல் ஒரு கண்டனக் கூட்டத்தோடு தங்கள் எதிர்ப்பை நிறுத்திக் கொண்டனர்.

பத்து இலட்சம் மக்கள் மீது திணிக்கப்பட்ட மனித உரிமை மீறல் சட்டத்தையும் இதன் விளைவால் பத்து இலட்சம் பேர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதையும் எவ்வளவு சாதாரண விடையமாக இத்தலைமை எண்ணியது. இப்படி எண்ணக் காரணமென்ன என்பது இன்றும் கேள்வி வடிவத்திலே உள்ளதால்தான் இலங்கை மலையகத்தில் இன்றும் அது தனது வாரிசுச் சங்கக்கொடியை உயரப் பறக்க வைத்துள்ளதை அறியலாம். இத்தலைமையின் துரோகத்தனத்தை வெளிப்படுத்தாத வரை இந்திய வம்சா வழித் தமிழர்கள் சரியான தலைமையைத் தெரிவு செய்வதில் இன்னும் பல ஆண்டுகளைக் கடக்க நேரிடும்.

இம்மக்களின் குடியுரிமைப் பறிப்பின் போது பூர்வீகத் தமிழ்த் தலைவர்களின் நிலைப்பாடு 
பூர்வீகத் தமிழர்களை முன்னிலைப்படுத்திய தமிழ்க் காங்கிரஸ் கட்சித் தலைமை என்பது நில உடைமைச் சமூக அமைப்பின் சிந்தனையைக் கொண்டவர்களாகவே (பெரும்பாலானோர்) இருந்தது. இவர்கள் தமிழ் உணர்வாளர்களா என்றால் அது ஆய்வுக்குரியது. மலைநாட்டுத் தமிழர்களைக் கூலிகளாகவும் அந்நியர்களாகவும் பார்த்த பார்வையின் விளைவுதான், சுந்தரலிங்கம், சிற்றம்பலம் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியுரிமைப் பறிப்பை ஆதரித்து வாக்களித்தது. ஜி. ஜி. பொன்னம்பலம் தலைமையிலிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். ஆனால், இந்தியர் குடியிருப்போர் சட்டத்தைப் பொன்னம்பலம் ஆதரித்து வாக்களித்தார். தந்தை செல்வா அவர்கள் எதிர்த்து வாக்களித்தார். தந்தை செல்வா அவர்கள் இந்நிகழ்வைக் கண்டித்துத் தமிழ்க் காங்கிரசிலிருந்து வெளியேறினார் என்பதெல்லாம் வரலாறாகும்.

வாக்குரிமைப் பறிப்புக்குப் பின் மலையகத் தமிழர்கள் மத்தியில் பூர்வீகத் தமிழர்களுக்கெதிரான கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. இதில் உண்மை எதுவாக இருக்க முடியும்? சுந்தரலிங்கமும் ,சிற்றம் பலமும், ஆளும்கட்சியில் அமைச்சர்களாக இருந் தார்கள். ஐக்கிய தேசியக் கட்சி தலைமை கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த பின், ஆளும்கட்சியில் இருந்து சுந்தரலிங்கம் வெளியேறினார். ஜி.ஜி.பொன்னம்பலம் அமைச்சரானார். குடியுரிமைப் பறிப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து விவாதம் நடந்தபொழுது, தொண்டமான் அவர்கள் நாடாளுமன்றத்துக்கே செல்லவில்லை. இரண்டு வடக்குத் தமிழ் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித் ததும் ஜி.ஜி.பொன்னம்பலம் ஆதரித்து வாக்களித் ததும் ஏற்கத்தக்கதல்ல.

ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் தலைவராகத் திகழ்ந்த திரு. தொண்டமான் அவர்கள், நாடாளுமன்றத்திற்குச் செல்லாதிருந்தது எந்த வகையில் சரியாகும்? குடியுரிமைப் பறிப்புச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி இலங்கையின் பொருளாதாரத்தை முடக்கும் போராட்டத்தை அப்பொழுது மேற்கொண்டிருந்திருக்க வேண்டும். பிரிட்டிஸ் ஆட்சியாளர்களால் அழைத்துச் செல்லப்பட்ட இம்மக்கள் குடியுரிமை இழக்கும் பிரச்சினையில் பிரிட்டிஸ் ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்க வேண்டிய நேரத்தில், அதனைச் செய்யாமல் இத்தலைமை நழுவ விட்டதேன்?

இப்படியான ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருந்தால், ஐரோப்பிய முதலாளிகளின் கைகள் பிரிட்டிஸ் நாட்டின் ஆட்சிக் கதவைத் தட்டியிருக்கும். இந்திய அரசும் இம்மக்கள் சம்பந்தமான பொறுப்பும் கடமையும் இருப்பதை உணர்ந்து, இதில் சம்பந்தபட்டிருக்கும். இடதுசாரிகள், இப்போராட்டத்திற்கு முழுமையான ஆக்கப்பூர்வமான ஆதரவை தந்திருப்பார்கள். மறுபுறம் புத்த மதத் துறவிகள் மத்தியில் இருந்து, சிறு அளவிலான ஆதரவு கிடைக்கும் வாய்ப்பும் இருந்தது. பூர்வீகத் தமிழ்த் தலைவர்களில் பலர் இப்போராட்டத்திற்கு ஆதரவை வழங்கி இருப்பார்கள். புற நிலைமைகள் சாதகமாக இருந்தபோதும், மலையகத் தமிழ் தலைமை ஏன் இதைச் செய்யவில்லை? மலையகத்தில் உள்ள அறிவு ஜீவிகள் இதை எண்ணிப் பார்க்க மறுப்பதேன் ? பூர்வீகத் தமிழ்த் தலைவர்கள் செய்த தவறுகளை மட்டும் பேசும் இவர்கள் தங்களை வழி நடத்திச் சென்ற இத்தலைமையின் மாபெரும் தவறின் விளைவுகள் பெரும் பாதிப்புகளை உருவாக்கி விட்டன என்பதை இவர்கள் இன்றும் ஏற்க மறுப்பதேன்? தாயகம் திரும்பியோர்களில் சிலரிடம் இன்றும் இந்நோய் தொத்திக் கொண்டிருப்பதைக் காணலாம். தவறுகள் எல்லாப் பக்கங்களிலும் நிகழ்ந்துள்ளன. அதைச் சற்று அளவீடு செய்து பார்ப்பதன் மூலம் நமது கருத்து நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் கிட்டும்.

பாட்டாளி மக்கள் விடுதலைக்குக் குரல் கொடுக்கும் இடது சாரிகள் தலைமை இப்போராட்டத்தை முன்னெடுக்காமை பற்றி
இடதுசாரிக் கட்சிகள், பூர்வீகத் தமிழர்களின் உரிமைகளுக்கும், இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரச்சினைகளுக்கும் பின்வரும் தீர்வுகளை 1940களில் முன் வைத்தனர்: பூர்வீகத் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை உள்ள அரசியல் அதிகாரத்தைப் பெறுவது, இந்திய வம்சாவழித்தமிழர்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது. குடியுரிமைப் பறிப்பு வரை இக்கொள்கைகளில் அவர்கள் உறுதிபட இருந்தவர்கள்.

குடியுரிமைப் பறிப்புக்குப்பின் வாக்கு வங்கி அரசியல் காற்று வீசத் தொடங்கியது. வடக்கு கிழக்கில் உள்ள தமிழர் அமைப்புகள் மொழியை முன்னிலைப்படுத்தினார்கள். இதனால், வர்க்க அரசியல் எடுபட மறுத்தது. மலையகப் பகுதிகளில் தொழிற்சங்கத்தின் தேவைகள் அதிகரித்து வந்தகாலம். இலங்கைத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமை தமிழராக இருந்ததால், அதிக எண்ணிக்கையில், மலையகத் தமிழர்கள் இத்தலைமையின் கீழ் அணிதிரண்டார்கள். இந்நிலையில் வாக்குரிமைப் பறிப்புக்குப்பின், வாக்குரிமை அற்ற மக்களிடம், வாக்கு வங்கி அரசியல் பயன்படாது என்ற எண்ணம் கருக்கொண்டது. அத்தோடு, இம்மக்கள் கோரிக்கைகளை ஆதரித்தால், பெரும்பான்மை மக்களாக இருக்கும் சிங்களவர்களிடம் தாங்கள் தனிமைப்பட நேரிடும் என இவர்கள் எண்ணி இருக்க வேண்டும். 194 தொடக்கம் 1952 வரை தன் குரலை உயர்த்தியவர்கள், 1952 தேர்தலுக்குப் பின் இம்மக்களின் உரிமைக்காகப் போராடுவதிலிருந்து தங்களைப் படிப்படியாக விலக்கிக் கொண்டார்கள் என்றே கூறலாம். ஆக மலையகத் தமிழர்களும் இடதுசாரிகள் தலைமையை முழுமையாக ஏற்கவில்லை. பூர்வீகத்தமிழர்களும், இத்தலைமையை முழுமையாக ஏற்கவில்லை. ஒரு வேளை இந்த இரண்டு பகுதிகளில் உள்ள தமிழர்கள் இடதுசாரித் தலைமையின் கீழ் அணிதிரட்டப்பட்டிருந்து, இடது தலைமை இனவாத பக்கம் சாயாது இருந்திருப்பின் 1940 காலப்பகுதிகளில் எடுத்த தீர்மானம் நடை முறைப்படுத்தப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கலாம். இப்பொழுது நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கும், துயரங்களைத் தமிழ்ச் சமூகம் சந்திக்காமல் இருந்திருக்கலாம்.

அதே வேளை இரண்டு தமிழ்ச் சமூகங்கள் மத்தியிலும் தங்களுக்கு முழுமையான ஆதரவு இல்லை என்பதால் இடது தலைமைகள் எடுத்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை எந்த வகையிலும் நியாயப்படுத்த இயலாது. வாக்குவங்கி அரசியல் இவ்வாறான சந்தர்ப்பவாத அரசியலுக்கு வழிவகுக்கும். அத்தோடு நாட்டுமக்கள் மத்தியிலிருந்து தனிமை படுத்தப்படும் அவலத்திற்கும் தள்ளப்படுவார்கள் என்பது வரலாறு கற்றுத்தரும் படிப்பினையாகும் .இதை இடது தலைவர்கள் உணர்வார்களா என்றால் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

சண்முகதாசன் தலைமையில் 1967 காலங்களில் மலையகப் பகுதியைக் குலுக்கிய செங்கொடிச் சங்கத்தின் செயல்பாடுகள் 
ஏனைய சங்கங்களின் செயல்பாட்டைவிட மாறான செயல்பாட்டை அது மேற்கொண்டது. மார்க்கீயச் சிந்தனையைத் தோட்ட இளைஞர்கள் மத்தியில் கொண்டு சென்றது. “மலையக மக்கள் பிரச்சினைக்கு புரட்சி ஒன்றே தீர்வு” என்ற முழக்கத்தை முன்வைத்தது தொழிற்சங்க அரங்கக் கூட்டங்களில் இக்கருத்தை அது வலியுறுத்தியது. ஆனால் இலங்கையில் உள்ள ஏனைய சமூகங்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இடையே நிலவும் அரசியல் உரிமை சம்பந்தமான வேறுபாடுகள் என்ன என்பதை அது காணத் தவறியது. குடியுரிமைப் பிரச்சினை தீராதநிலை, வாக்குரிமை இல்லாமல் இருப்பவர்கள், கல்வி, மருத்துவம், தொழில் சமூக வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு, நிரந்தரக் குடியிருப்பு, நில உரிமை மறுப்பு, நாடற்றோர் பிரச்சினையில் தள்ளாட்டம், இப்படிப் பல பிரச்சினைகளைச் சுமந்து நிற்கும் இவர்கள் மத்தியில் “புரட்சி ஒன்றே தீர்வு” என்ற முழக்கம் எவ்வளவு அபத்தமானது! இம்மக்களை இந்நாடு முழுமையாக ஏற்காத காலம், சிங்களப் பெருந்தேசிய இனவாதம் தங்கு தடையின்றி வேரூன்றி முன்னெடுக்க இயக்கங்கள் புதிய வடிவம் (ஜே.வி.பி.) பெற்றுச் செயல்பட்ட காலத்தில் இம்முழக்கம் எவ்வாறு நடைமுறைச் சாத்தியம்? அதுமட்டுமல்ல, புரட்சி என்ற சொல்லாடல் மட்டுமே மலையகப் பகுதிகளில் உலாவந்தனவே தவிர, புரட்சிக்கான தயாரிப்புகள் அல்ல.

1971 இல் மக்கள் விடுதலை முன்ணணி (ஜே.வி.பி.) நடத்திய ஆயுதக் கிளர்ச்சியின் போது ஜே.வி.பி. இயக்கத்தில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத மலையக இளைஞர்கள் காவல் துறையினரால் சித்திரவதைப் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள், அதே வேளை இச்சங்கம் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுப்பதில் ஏனைய சங்கங்களை விட முன்மாதிரியாக இருந்தது என்று கூறலாம்.

பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களுடனான கருத்தாடல் நிகழ்வு


இன்றைய பண்பாட்டு நெருக்கடிகளும் சமூகமாற்றத்திற்கான வேலைமுறைகளும் என்ற தலைப்பில், பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களுடனான கருத்தாடல் நிகழ்வை புதிய பண்பாட்டுக்கான வெகுஜன தளத்தினர் ஒழுங்கமைத்துள்ளனர். இந்நிகழ்வு எதிர்வரும் 11-02-2013(திங்கட்கிழமை) அன்று மாலை 3.00 மணிக்கு ஹட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் பொழில் மண்டபத்தில் நடைப்பெறும்.  திரு. வ. செல்வராஜா தலைமையில் நடைப்பெறவிருக்கும் இந்நிகழ்வில் வரவேற்புரையை திரு. மு. இராமசந்திரன் வழங்குவார். சிறப்புரையை பேராசிரியர் அ. மார்க்ஸ் வழங்க கருத்துரைகளை கலாநிதி. ந. இரவீந்திரன், திருவாளர்கள். மோகன் சுப்பிரமணியம், எம். ஜெயகுமார், எஸ். தவச்செல்வன் ஆகியோர் வழங்குவர். நன்றியுரையை திரு. எம். எஸ். இங்கர்சால் வழங்குவார்.  

தோட்டத் தொழிலாளருக்கு இம்முறை நிவாரணமளிக்குமா கூட்டு ஒப்பந்தம்?



விலைவாசி உயர்வால் திண்டாடும் தோட்டத் தொழிலாளருக்கு இம்முறை நிவாரணமளிக்குமா கூட்டு ஒப்பந்தம்? -

அத்தியாவசியப் பொருட்­கள் உள்ளிட்ட அனைத்துவித பொருட்களின் விலைகளும் தொடர்ச்சியாக ‘ஜெட்’ வேகத்­தில் அதிகரித்து வருவதால் நாட்டு மக்களின் வாழ்க்கைச்­சுமையும் உச்சத்தைத் தொட்டுள்­ளது.


குறிப்பாக, தற்போதைய விலைப்பொறிமுறையானது பெருந்தோட்டத் தொழிலாளர்­களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாழ்க்கையைக் கொண்டு­நடத்துவதில் அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்­கின்றனர்.

பெருந்தோட்டத்துறைத் தொழி­லாளர்களின் சம்பளமா­னது கூட்டு ஒப்பந்தத்தின் பிர­காரம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையே தீர்மானிக்கப்படுகின்றது.

அந்த இரண்டு வருடங்களுக்­குள் விலைவாசி உட்பட இதர காரணிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்திற்­கொண்டு அதற்கேற்ப சம்பள உயர்வை வழங்குவதற்காகவே மேற்படி கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒரு­முறை புதுப்பிக்கப்படுகின்றது.

எனினும், ஒப்பந்தம் கைச்­சாத்­திடப்படும்போது மேற்­கூறப்பட்ட காரணிகள் கவனத்­தில் எடுத்துக்கொள்ளப்ப­டுவ­தில்லை என்று குற்றஞ்சாட்டும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்­திடாத தொழிற்சங்கங்கள், இனி­யும் இவ்வாறு தவறிழைக்கக்­கூடாது என்று சுட்டிக்காட்டுகின்றன.

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தமானது மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அந்த அடிப்படையில் அதன் பின்னர் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

அவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்போது தற்போதைய பொருளாதார நிலைமைகளுக்கேற்ப பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றன தொழிற்சங்கங்கள். நியாயமான சம்பள உயர்வுக்கு வலியுறுத்தப்படும் என்கின்றன கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களும். தோட்டத் தொழிலாளர்களும் இதே கோரிக்கையைத்தான் முன்வைத்துள்ளனர். ஆனால், முதலாளிமார் சம்மேளனம் எவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாளாந்த சம்பளமாக சுமார் 575 ரூபா வழங்கப்படுகின்றது. 390 ரூபா அடிப்படைச் சம்பளம் உட்பட இதர கொடுப்பனவும் இதில் உள்ளடங்கும். எனினும், 75 சதவீத வரவு இருந்தால் மாத்திரமே 575 ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது. இல்லையேல் அடிப்படைச் சம்பளம் மட்டும்தான் என்ற அவல நிலையும் உள்ளது.

அத்துடன், சில தோட்டங்களில் கொழுந்து பறிப்பதற்கான நிபந்தனைகளும் முன்வைக்கப்படுகின்றன. இதனால் தோட்டப்புற மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இந்தக் காரணி குறித்தும் கூட்டு ஒப்பந்தத்தின்போது பேசப்பட்டு தொழிற்சங்கங்கள் தீர்வைப் பெற்றுத்தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர் மக்கள்.

அதேவேளை, கடந்த இரண்டு வருடங்களுக்குள் பல தடவைகள் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. பல பொருட்களின் விலைகள் அதிகரிப்பானது எம்மைப் பெரிதும் பாதித்துள்ளது. எனவே, இம்முறை நாம் 800 ரூபாவுக்கு மேல் சம்பள அதிகரிப்பை எதிர்பார்க்கின்றோம்" - என்று ‘சுடர் ஒளி’யிடம் கூறினார் மடுல்கலைத் தோட்டத்தைச் சேர்ந்த தங்கையா சுபாகரன்.

எம்மிடமுள்ள தங்க நகைகளையெல்லாம் அடகு வைத்துத்தான் நாம் குடும்பம் நடத்துகிறோம். இந்தத் தடவை எங்களுக்கு சம்பள உயர்வில் நிதி கிடைக்கவேண்டும்" - எனத் தெரிவித்தார் அதே தோட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் மனோமணி.

இதற்கிடையில், சம்பளம் மட்டுமல்ல, எங்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய வசதிகள் செய்துகொடுக்கப்படுவதில்லை" - என்ற குற்றச்சாட்டை முன்வைத்த புரட்டொல் பூச்சிக்கொடைத் தோட்டத்தைச் சேர்ந்த கட்டயன் எனப்படும் ராசமாணிக்கம், இதுகுறித்து தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்தவேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தார்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இம்முறை ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும்" - எனக் குறிப்பிட்டு அதற்கான காரணிகளை முன்வைத்தார் புசல்லாவை மெல்ப்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள்.

எனவே, மக்களின் கோரிக்கைக்கிணங்கவும், தற்போதைய பொருளாதார நிலைவரத்துக்கமையவும் நியாயமான சம்பள உயர்வு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டும். இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தாம் தயார் என்று தோட்டத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி - வீரகேசரி
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates