Headlines News :
முகப்பு » » மறைக்கப்பட்ட ஆளுமைகளையும் மலையக நேசசக்திகளையும் அடையாளம் காட்டும் நூல் - பழனி விஜயகுமார்

மறைக்கப்பட்ட ஆளுமைகளையும் மலையக நேசசக்திகளையும் அடையாளம் காட்டும் நூல் - பழனி விஜயகுமார்

லெனின் மதிவானத்தின் ‘சமூக இலக்கிய தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும்’ எனும் நூல் அறிமுக, விமர்சன நிகழ்வு கடந்த சனிக்கிழமை கொழும்பு வெள்ளவத்தை பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் நடைபெற்றது. புதிய பண்பாட்டுத் தளத்தினரின் ஏற்பாட்டில் பேராசிரியர் தை.தனராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த இலக்கிய நிகழ்வில் நூல்குறித்த விமர்சன அரங்குடன் சிறப்பு நிகழ்வாக கே.ஏ.சுப்பிரமணியத்தின் 25 ஆண்டு நிறைவினை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை காட்டும் விவரணத்திரைப்படமும் காண்பிக்கப்பட்டது.

பேராசிரியர் தை.தனராஜ் தனது தலைமையுரையில் லெனின் மதிவானத்தின் எழுத்துலகப்பணிகள் பற்றியும் அதில் கடந்த இருபது வருடகாலமாக இடையறாது அவர் இயங்கி வருவது பற்றியும் குறிப்பிட்டார். தன்னை ஒரு வட்டத்திற்குள் குறுக்கிக் கொள்ளாது எண்ணிம உலகத்தில் தன்னை இணைத்து சர்வதேச ரீதியாக தமது எழுத்துக்களை கொண்டு செல்லும் ஒருவராக லெனின் மதிவானம் அவர்களைப்பார்க்க முடியும். கலாசாரம், பண்பாடு முதலான விடயங்கள் காலத்திற்கு காலம் வௌ;வேறு அர்த்தங்களில் வரையறை செய்யப்படுகிறது. லெனின் மதிவானம் மார்க்சிய சிந்தனைகளை தனது பண்பாட்டுத்தளமாகக் கொண்டு எழுதியும் இயங்கியும் வருகின்றமை சிறப்பு எனக் குறிப்பிட்டார்.
சிறப்புரையாற்றிய இலங்கைக் கல்விச்சமூக சம்மேளனத்தின் செயலாளர் ஆர்.சங்கரமணிவண்ணன் லெனின் மதிவானம் தனியாக எழுதுவதோடு நின்று விடாமல் செயற்தளத்திலும் இருப்பவர். சிலர் எழுதுவதோடு பேசவதோடு தங்களை மட்டுப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் லெனின் மதிவானம் இலக்கிய பண்பாட்டுத்தளத்தில் செயற்படுவதோடு இலங்கைக் கல்விச் சமூக சம்மேளனம் எனும் தொழிற்சங்கத்தின் தலைவராகவும் செயற்படுகின்றார் எனக்குறிப்பிட்டார்.

நூலின் அறிமுகவுரையை ஆற்றிய பாக்யா பதிப்பக நிறுவுனர் மல்லியப்புசந்தி திலகர், நோர்வேயை தளமாகக் கொண்டு இயங்கும் தோழர் தமயந்தி சைமன் மற்றும் கிளிநொச்சியை தளமாகக் கொண்டு இயங்கும் கவிஞர் கருணாகரன் ஆகியோரின் முயற்சியில் இந்த நூல் வெளிவருகின்றது. 10 கட்டுரைகளையும் ஒரு நேர்காணலையும் கொண்டுள்ள இந்த நூல் ஐந்து மலையகக் கட்டுரைகளையும் ஐந்து வடபுலம் சார் கட்டுரைகளையும் உள்ளடக்கியுள்ளது. மலையகம் சார்ந்த கட்டுரையொன்று தாயகம் திரும்பியவராக தமிழகத்தில் வாழும் கவிஞர் மு.சி கந்தையாவின் கவிதை நூல் பற்றிய விமர்சனம் ஆகும். இந்த மலையகம், வடபுலம் இணைப்பில் தாயகம் திரும்பியோர் பற்றிய பார்வை பலரின் கவனயீர்ப்புக்கு உள்ளாகக் கூடியது. ஏனெனில் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் செய்யப்பட்டு மலையக மக்கள் கூறுபோடப்படாமல்  இருந்திருக்கும் பட்சத்தில் இலங்கை அரசியலில் சிறுபான்மை தமிழ் மக்களின் அரசியல் நிலைமை வேறுமாதிரியானதாக இருந்திருக்கும். அதனை நினைவுப்படுத்தும் தளமாக இந்த பதிவு அமைந்துள்ளது. மலையக தேசியம் பற்றிய விரிவான பதிவும் மலையகத்தின் சமூகப்போராளிகள் மற்றும் வடபுலத்து சமூக கலை இலக்கிய போராளிகள் குறித்தும் ஒருசேர பதிவு செய்யும் நூல் இது எனவும் குறிப்பிட்டார்.
நூல் விமர்சனவுரை ஆற்றிய ஆய்வாளர் எம். வாமதேவன் மறைக்கப்பட்ட ஆளுமைகளையும்  மலையக நேச சக்திகளையும் அடையாளம் காட்டும் நூலாக லெனின் மதிவானம் இந்த நூலைத் தந்துள்ளார். குறிப்பாக வடபுலத்தில் இடதுசாரி செயற்பாட்டாளராக செயற்பட்ட புதிய ஜனநாயகக் கட்சியின் ஸ்தாபகரான கே.ஏ.சுப்பிரமணியம் பற்றிய பதிவுகளும் தலைநகரிலும் மலையகத்திலும் சுயமரியாதைச் சிந்தனையாளராக செயற்பட்ட ஏ.இளஞ்செழியன் பற்றிய பதிவுகளும் பிரேம்ஜீ ஞானசுந்தரம் பற்றிய பதிவுகளும் மறைக்கப்பட்ட ஆளுமைகளை மீள நினைவுறுத்துவதாக உள்ளது. அதேபோல ஒடுக்கப்பட்ட தேசிய இனமான மலையக தேசிய இனத்தை வடபுலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைத்து நோக்கும் பார்வையும் முக்கியமானது. அதேபோல மலையக தொழிற்சங்க போராட்டங்கள் வழியாக ஏபிரஹாம் சிங்கோ, சிவனு லட்சுமணன் போன்றவர்கள் நினைவூட்டப்படுகிறார்கள். காரணம் மலையக வரலாற்றில் தொழிற்சங்க போராட்டங்களே பல உரிமைகளை வென்றெடுத்துள்ளது. ஆனால், இன்று தொழிற்சங்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன. ஆனால் தொழிற்சங்கங்களிலேயே மலையகம் தங்கியிருப்பதனை தவிர்க்கமுடியாது. 91 வயதாகப்போகும் முன்னாள் தொழிற்சங்க செயலாளர் ஒருவரும் தொலைக்காட்சியிலே மின்னும் ஒருவரும் தொழிற்சங்கம் ஆரம்பிக்க அழைப்பு விடுப்பதை இன்றும் பார்க்கிறோம். மலையக தேசிய முன்னெடுத்தலில் மலையக மக்களை இந்திய விஸ்தரிப்புவாத அடையாளமாக பார்க்கும் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைபாட்டில் இருந்து லெனின் மதிவானம் எவ்வாறு அதனை வேறுபடுத்தி இந்திய விஸ்தரிப்புவாதத்தின் அடையாளமாக பார்க்கின்றார் என்பதை இன்னும் விரிவாக விளக்க வேண்டியிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

விமர்சனவுரையாற்றிய கலாநிதி ந.இரவீந்திரன் இந்தியா இலங்கையை தனது தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்துக்கொள்ள எவ்வாறு இலங்கையிலுள்ள மலையக மற்றும் வடகிழக்கு மக்களை கையாள்கிறது என்பதை லெனின் மதிவானம் சரியாகவே அடையாளம் கண்டுகொண்டுள்ளார். கோ.நடேசய்யர் மலையகம் நமது மண் என்ற நிலைபாட்டில் இருந்த நிலைமையை இந்தியாவுக்கு தாரைவார்த்தது இலங்கை இந்திய காங்கிரஸின் தொடக்கமே. அதனை ஜவகர்லால் நேரு தலைமையிலான அரசாங்கம் சாமர்த்தியமாக செய்து முடித்தது. இன்று நமக்குள்ள பாரிய பிரச்சினை ஊடகங்கள்தான். நமக்கானது எது தேவை என்பதை தீர்மானித்துவிடுகின்ற ஆக்கிரமிப்பு சக்தியாக ஊடகங்கள் திகழ்கின்றன. அதற்கு உதாரணம்தான் ‘மின்னல்’. எவ்வித அடிப்படையும் இல்லாது மலையக மக்களைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதனாலேயே ஒரு தனிநபர் அங்கிருந்து நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு அந்த ஊடக ஆக்கிரமிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுபோல நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆக்கிரமுப்புகளுக்கு மத்தியில் மலையக தேசியம் பற்றிய முன்னெடுப்பைச் செய்ய வேண்டியுள்ளது. மலையக தேசியம் பற்றிய நீண்டதும் விரிவானதுமான கட்டுரை ஒன்றை லெனின் மதிவானம் இந்த நூலில் பதிவு செய்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.

லெனின் மதிவானம் ஏற்புரையாற்றினார். மறைந்த இடதுசாரி தலைவர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் துணைவியார் அன்றைய நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்ததுடன் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் நிழற்படம் தாங்கிய நினைவுச்சின்னம் ஒன்றும் அவருக்கு வழங்கி கௌரவம் செய்யப்பட்டது. குறித்த நூல் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates