Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மலையகக் கவிதை இலக்கிய செல்நெறி 04 - மல்லியப்புசந்தி திலகர்


நடே­சய்யர் தம்­ப­திகள் தொடங்­கி­வைத்த துண்­டுப்­பி­ர­சுர இலக்­கிய இயக்கம் பின்னர் பெரும்­பா­லான மலை­ய­கக்­க­வி­ஞர்­களால் தொட­ரப்­பட்டு வந்­துள்­ளது. நாவ­லப்­பிட்­டியைச் சேர்ந்த பிறவிக் கவிஞர் பெரி­யாம்­பிள்ளை, எட்­டி­யாந்­தோட்டை எஸ்.கோவிந்­த­சாமி தேவர், பி.ஆர் பெரி­ய­சாமி. கா.சி.ரெங்­க­நாதன், சீனி­வா­சகம், ‘தொண்டன்’ ஆசி­ரியர் எஸ்.எஸ்.நாதன், ஜில் ஜில் சுல்தான், சிட்­டுக்­கு­ரு­வியார், பதுளை ஞானப்­பண்­டிதன், பாவலர் வேல்­சாமி தாசன் முத­லானோர் இவ்­வாறு துண்­டுப்­பி­ர­சு­ர­மாக அச்­சிட்டு தோட்டம் தோட்­ட­மாக பாடி விற்­றுள்­ளனர் என அந்­த­னி­ஜீவா தனது ‘மலை­யகம் வளர்த்த கவிதை’ (மலை­யக கலை இலக்­கிய ஒன்­றியம் வெளி­யீடு 2002) நூலில் ஒரு பட்­டி­யலைத் தரு­கின்றார்.

பாவலர் வேல்­சா­மி­தாசன் எழுதி தனது கணீ­ரென்ற குரலில் பாடும் வல்­ல­மை­யையும் பெற்­றி­ருந்தார் என சொல்­லப்­ப­டு­கின்­றது. அவ­ரது பாடல் ஒன்று பின்­வ­ரு­மாறு அமை­கி­றது.

‘காலை­மணி ஐந்­துக்­கெல்லாம் 
தப்­ப­டிப்­பாங்கோ
கணக்கு புள்ளை ஆறுக்­கெல்லாம் 
பெரட்­டெ­டுப்­பாங்கோ
வேலை­யிலே ஏழுக்­கெல்லாம் 
இல்­லா­விட்­டாங்கோ
வேலை இல்லை என்று 
சொல்லி விரட்­டி­டு­வாங்கோ’

இதில் வரும் சொல்­லாட்­சியும் சந்­தமும் மக்­களை கவர்­வ­ன­வாக உள்­ள­துடன் மக்­களின் வாழ்­வி­ய­லையும் காட்டி நிற்­கின்­றன.

திரு­மதி மீனாட்­சியம்மாள் ‘இந்­தியத் தொழி­லாளர் துய­ரச்­சிந்து’-1931 சகோ­தரி அச்­சகம் ஹட்டன்). என்று பாடி­யதன் தாக்கம் பின்­னாளில் வேல்­சா­மி­தாசன் அவர்­களை ‘இலங்கை தொழி­லாளர் இம்­சைக்­குரல்’ என்ற பாடற் தொகுப்பை எழுதத் தூண்­டி­யுள்­ளது.

1930களில் கண்­டியில் வாழ்ந்து பின்னர் தமி­ழகம் சென்­று­விட்ட கவிஞர் சிதம்­ப­ர­நாத பாவ­லரை மலை­யகக் கவிதை ஆளு­மை­களில் முக்­கி­ய­மா­ன­வ­ராக பேரா­சி­ரியர் கா.சிவத்­தம்பி அடை­யாளம் காட்­டு­கிறார். ‘மலை­ய­கத்­திலே இன்றும் வாய்­மொழிப் பாடல்­க­ளுக்கு இட­முண்டு. இந்த பாரம்­ப­ரி­யத்­தி­லேயே இது­வரை வந்த பல மலை­ய­கத்து கவி­ஞர்­களை இனம்­கண்டு சொல்­ல­வேண்டும் போல தெரி­கி­றது. சக்தீ பால ஐயா, குறிஞ்­சித்­தென்­னவன், சிதம்­ப­ர­நாத பாவலர்  போன்­றோரின் ஊடே ஒரு வாய்­மொ­ழிப்­பா­ரம்­ப­ரியம் உணர்த்­தப்­ப­டு­கின்­றது என்றே கூற­வேண்டும்’ (தில­கரின் ‘மல்­லி­யப்பு சந்தி’ பின்­னுரை பேரா­சி­ரியர் கா.சிவத்­தம்பி (பக்­xxiv)– பாக்யா வெளி­யீடு 2007).

மலை­யகக் காந்தி என போற்­றப்­படும் மறைந்த தொழிற்­சங்­க­வா­தியும் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் ஸ்தாப­கத்­த­லை­வ­ரு­மான ஆர் ராஜ­லிங்கம் பற்றி பாவலர் சிதம்­ப­ர­நாதன் எழு­தி­யி­ருக்கும் கவி­தையின் ஒரு பகுதி இவ்­வாறு அமை­கி­றது.

மலை­யாத உள்­ளத்திற் கெடுத்துக் காட்டாம்
மனி­தர்­களின் பண்­பாட்டிற் கவனே சான்று
நிலை­யான கொள்­கை­யிலே வழுவல் இன்றி
நிற்­ப­திலே இமயம் என்றால் மிகையே அல்ல
பல­நாடும் சென்­றா­யந்தான் மக்கள் வாழ்வும் 
பரி­ண­மிக்க சேவை செய்யும் 
விரதம் பூண்டான்
விலை­ய­டங்கா நல­முத்தாம் ராஜ­லிங்க
வித்­த­கனின் திரு நாமம்  என்றும் வாழும்
 (‘மாவலி’ - தொழி­லாளர் தேசிய சங்க வெளி­யீடு- 1973 ஆகஸ்ட்)

மலை­யக மக்­களை நாடற்­ற­வ­ராக்­கிய இலங்கை சட்­ட­வாக்க ஏற்­பா­டுகள் பற்றி தனது கவி­தையில் குறிப்­பிடும் பாவலர் சிதம்­ப­ர­நாதன் அதனை இவ்­வாறு எழு­து­கின்றார்.

பிறந்­ததும் இங்கே  /வளர்ந்­ததும் இங்கே போவது மெங்கே வெளி­யேறி/ இறந்­தவர் போலே நடை­பி­ண­மாகி /இழிவு செய்­வதம் முறை­தானோ
புத்­த­கச்சட்டம் எதைப்­ப­கர்ந்­தாலும் / 
பிறந்த பொன்­னாடே தாய்­நாடு
எத்­தனை ஆட்சி இயற்­றிய போதும்/எழும்­ப­தற்­கில்லை குடி­நீங்கி… (சங்கு 1962 ஜீன்) 
என இலங்கை நாட்டை விட்டு மலை­யக மக்கள் வெளி­யேற வேண்­டிய அவ­சி­ய­மில்லை என பாடி­வைத்­துள்ளார்.

நாட்டார் பாடல் வடி­வத்தில் இருந்து தமக்­கே­யு­ரிய சுய­பா­டல்­களை எழுதத் தொடங்­கிய மலை­யக கவிதை இலக்­கிய வர­லாற்றில் அவை கவி­தை­களா? பாடல்­களா? என்ற கருத்து மயக்கம் இருந்தே வந்­துள்­ளது. பாடல் மரபில் இருந்து ஊற்­றெ­டுத்த மலை­யகக் கவிதை இலக்­கிய பாரம்­ப­ரியம் அந்த பாடல் மரபில் இருந்து முழு­மை­யான கவிதை வடி­வத்­துக்குள் வரு­வ­தற்கு மூன்று தலை­மு­றை­களை கடக்­க­வேண்­டி­யி­ருந்­தது உண்­மையே.

அந்த வகையில் பாடல்­க­ளாக தமது படைப்­பு­களை எழுதி அச்­சிட்டு விநி­யோகம் செய்த எட்­டி­யாந்­தொட்டை கோவிந்­த­சாமி தேவர், கா.சி.ரெங்­க­நாதன். ஜில்.ஜில், கே.கே.ஜபார், முத­லா­னோரின் பாடல் படைப்­புகள் மிகுந்த முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. இதே போல 1954 ஆம் ஆண்டு ‘இசைத்தேன்’ எனும் கவிதைத் தொகு­தியை கி.மு.நல்­ல­தம்பி பாவலர் வெளி­யிட்­டுள்ளார். கம்­பளைப் பிர­தே­சத்தைச் சேர்ந்த இவ­ரது ‘இசைத்தேன்’ 200 ஆம் ஆண்டு அவ­ரது மகன் ஹைதர் அலி யினால் மறு­பி­ர­சுரம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அந்­த­னி­ஜீவாவின் மலை­யகம் வளர்த்த கவிதை (பக்.20) குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அ.செ.வெள்­ள­சாமியினால் எழு­தப்­பட்ட பல­வர்ண ஒப்­பா­ரியும் பாரத நாட்டுப் பய­ணச்­சிந்தும், மற்றும் பாட்­டா­ளியின் பாடலும், ராசுவின் கணவன் பழ­னியின் மரண தண்­ட­னையும் போன்ற படைப்­பு­களும் இந்த வகை­யினைச் சார்ந்­தன.

பதுளை யூரி பகு­தியைச் சேர்ந்த பெண் தொழி­லா­ளி­யான (1960களில்) எம்.எஸ்.கிருஸ்­ணம்மாள் மலை­ய­க­மெங்கும் தொழி­லாளர் உரிமை மற்றும் பெண்­வி­டு­த­லையை வலி­யு­றுத்தும் பாடல்­களை எழுதி பாடி­யுள்ளார். இவர் ஜன­நா­யக தொழி­லாளர் காங்­கிரஸ் தொழிற்­சங்க தலை­வி­யா­கவும் இருந்­துள்ளார். இவ­ரது பாடல் ஒன்று இவ்­வாறு அமை­கி­றது. 
நாம் வசிக்கும் இலங்­கை­யிலே

நாடு போகும் வேகத்­திலே
நாலு பேர்க்கும் நடு­வி­னிலே
நசிங்­கி­டுறோம் ஈழத்­திலே
கரு­ணை­யற்ற முத­லா­ளிமார் காட்­டு­கிறார் குரோத­மதை
கங்­கா­ணி­மா­ருக்கு அடங்கி….கணக்­குப்­பிள்­ளைக்கு நடுங்கி.. கண்­டிப்­பாக வேலை­செய்தும் கரு­ணை­யில்லை முத­லா­ளிக்கு… (அவ­ரது சிந்­தையை கவரும் சீர்­தி­ருத்த பாடல் தொகுப்­பி­லி­ருந்து – 

(மூலம்: ‘சபதம்’ (சன-மார்ச் 2013) உழைக்கும் பெண்­களின் முன்­ன­ணியின் செய்தி ஏடு) இந்­தப்­பாடல் மூலம் ஒரு தொழி­லாளி தனக்­கெ­தி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் அனைத்­து­வித அடக்­கு­மு­றை­க­ளையும் வெளிக்­காட்­டு­கின்றார்.

இன்றும் வட்­ட­கொடை பிர­தே­சத்தில் வாழ்ந்­த­வரும் கபாலி செல்லன்  என்­ப­வரும் தோட்­டப்­புற பாடல்­களில் அதிக நாட்டம் கொண்­டவர். மலை­யகத் தோட்­டங்­க­ளுக்கு திரு­விழா காலங்­களில் பிர­தம பாட­க­ராக அழைத்­து­வ­ரப்­படும் அவர் அந்த தோட்­டத்தின் இயல்­பு­களை வைத்து பாடல்­களை உட­ன­டி­யாக இயற்­றிப்­பாடும் வல்­லமை பெற்­றவர் (கட்­டு­ரை­யாளர் இவ­ரது பாடல்­களை நேர­டி­யாக கேட்­டி­ருக்­கிறார்). மட்­டக்­க­ளப்பில் இருந்து திரு.மைக்கல் கொலினை ஆசி­ரி­ய­ராகக் கொண்டு வெளி­வரும்  மகுடம் சிற்­றி­தழின் மலை­யகச் சிறப்­பி­தழில்  (2012 ஒக்-­டிசம்) பேரா­சி­ரியர்.செ.யோக­ராசா கவிஞர் கபாலி செல்லன் கவி­தைகள் - சில குறிப்­புகள் எனும் பதி­வினைச் செய்­துள்­ளமை இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. கவிஞர்.கபாலி செல்­ல­னது நம்ப படும் பாடு…­சொல்­லவே வெக்கக் கேடு எனும் பாடல் 1980 களில் தோட்­டத்­தி­ரு­வி­ழாக்­களில் கொடி­கட்­டிப்­ப­றந்த பாடல்.
எந்த நாடு நம்ப நாடு
நம்பி வாழ சொந்த நாடு
அந்­த­ரத்­திலே வாழச்­சொல்லி 
அனுப்­பி­யி­ருக்கான் சிட்­டிசன் காடு … 

எனும் பாடல் இன்றும் கூட மலை
யக தேசியம் குறித்து முன்வைக்கப்படும் ‘வாக்குரிமை’ –‘பிரஜாவுரிமை’ வேறுபாட்டை நான்கே வரிகளில் சொல்லி காட்டிய வலிமை கொண்டது. ‘ஓட்டுரிமை ஒன்று மட்டும் கிடைச்சிருக்கு… ஓட்டு போட்ட மறு கிழமை பம்பர மாட்டம்…நம்ம கதி பம்பரமாட்டம்’……. சட்டம் போட்டு நசுக்கிறாங்க திட்டம் போட்டு வதைக்கிறாங்க… என ஆளும் வர்க்கத்தினர் மலையக மக்களுக்கு தமது நலனுக்காக வாக்குரிமையை மாத்திரம் வழங்கியிருப்பதையும் மக்கள் நலனுக்கான பிரஜாவுரிமை வழங்கப்படாததையும் எளிய பாடல் மூலம் பாடி வைத்தவர் கபாலி செல்லன். இவரது பாடல்கள் முழுமையாக நூலுருப் பெறவெண்டியதன் தேவை யை பேராசிரியர்.செ.யோகராசா தனது குறிப்பிலே வலியுறுத்தியுள்ளார்.

புறக்கணிக்கப்படும் பெருந்தோட்ட தமிழ்த் தொழிலாளர்கள் - தா. மனோகரன்மலையகப் பெருந்தோட்ட இந்திய வம்சாவளித் தமிழ்த் தொழிலாளரை ஒரு தனித் தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டுமென்று ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு தனித் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டால் அத் தொழிலாளர் சமூகம் நாட்டின் சமவுரிமையுள்ள, சகல வளங்களும் பெற்ற சமூகமாக நிலைநிறுத்தப்பட்டுவிடுமா என்பது விடைக்குரிய வினாவாகும்.


அரசியல் மற்றும் தொழிற்சங்கப் போர்வையால் மூடப்பட்டிருக்கும் மலையகப் பெருந்தோட்ட இந்திய வம்சாவளித் தமிழ்த் தொழிலாளர்களின் நிலையை, அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை, நிறைவு செய்யப்பட வேண்டிய தேவைகளை மனிதாபிமானத்துடன் சிந்திக்க வேண்டிய பொறுப்பை நாகரிக சிந்தனை கொண்டவர்கள் கொண்டுள்ளார்கள்.


இந்நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட அயராது உழைத்தவர்கள் பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளர்களே என்பது வரலாறு. காடுகளை அழித்து பெருந்தோட்டங்களை உருவாக்கியவர்கள், புகையிரதப் பாதைகளை, பெருந்தெருக்களை அமைக்க காடுகளையும் மேடுகளையும் செம்மைப்படுத்தியவர்கள் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் நிறைவேற்ற உழைத்தவர்கள், இந்திய வம்சாவளித் தமிழ்த் தொழிலாளர்களேயன்றி வேறொருவருமில்லை. இந்த இலங்கை நாட்டிற்காக உழைத்தவர்கள், நாட்டை வளப்படுத்தி உயர்த்தியவர்கள் இந்திய வம்சாவளித் தமிழ்த் தொழிலாளர்களே என்பதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை.


நாட்டின் வளத்திற்குப் பாடுபட்ட அம்மக்களின் பரம்பரைக்கு இந்நாடு இருபெரும் பரிசுகளை வழங்கித் தன்னைச் சிறுமைப்படுத்திக் கொண்டமையும் வரலாற்றில் பதிவேற்றப்பட்டுள்ளது.


ஆம். முதலாவது பரிசு அம்மக்களை நாடற்றவர்களாக்கி அவர்களது குடியுரிமை மற்றும் வாக்குரிமையை பறித்தது. மற்றைய பெரும் பரிசு அவர்களில் ஆறு இலட்சம் பேரை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது. நாட்டின் நலனுக்கும் வளத்திற்கும் உழைத்த மக்கள் கூட்டத்திற்கு உலகில் எங்குமே கிடைக்காத பரிசை இலங்கை வழங்கித் தன்னை இழிவுபடுத்திக் கொண்டது.


நடந்தது நடந்துவிட்டது. மலையகப் பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளரின் இன்றைய பொதுவான நிலையை நோக்க வேண்டியது நமது கடமை. வேதனையாக இருப்பினும், அதை வெளிக்கொண்டுவருவது சமுதாய கடமை. உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு.

அத்துடன் அம்மக்களுக்காகத் தாமே தலைமை தாங்குவதாக தம்பட்டமடிக்கும் தொழிற்சங்கத் தலைமைகளும், அரசியல் அரங்காடிகளும் தமது பொறுப்பை உணர்ந்து மேடைப் பேச்சுகளுக்கும்அறிக்கைகளுக்கும் அப்பால் செயற்பட வேண்டிய பொறுப்பு கொண்டவர்கள்.


முதலிலே பெருந்தோட்டத் தொழிலாளரின் குடியிருப்பு பற்றிக் கவனிப்போம். தோட்டங்களின் நடுவே வரிக்குடில்கள் எனப்படும் லயன் அறைகளே பெரும்பாலும் அவர்களது குடியிருப்புகள். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு நூறாண்டுகள் கடந்துவிட்ட அக்குடியிருப்புகள் பழுதுபார்க்கப்படாதவையா, கூரைகள் ஒழுங்கற்றவையாயுள்ளமையும், மின்சார ஒழுக்கால் பெருந்தொகை குடியிருப்புகள் தீக்கிரையாகியதால் அங்கு வாழ்ந்த மக்கள் பல ஆண்டுகளாகியும் இன்றும் அனாதரவான நிலையில் அகதிகளாக வாழ்வதையும் எவரும் பொறுப்புடன் நோக்கவில்லை.


மழைக்கும் வெயிலுக்கும் தாக்குப்பிடிக்க முடியாத கூரைகளே பெரும்பாலான வரிக்குடில்களின் கூரைகளாயுள்ளன. மழைநீர் உட்புகவும் சூரிய ஒளி உட்புகவும் காற்றில் பறக்கவும் கூடியதாயுள்ள கூரைகளைத் திருத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பைத் தோட்ட நிர்வாகங்களோ, அரசோ மேற்கொண்டதாகத் தெரியவில்லை. அதுபற்றிய கவலை அம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொள்ளும் தலைமைகளிடமும் காணப்படவில்லை.


நாட்டுக்கே வீதிகளை அமைத்த பரம்பரையினரான தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களது குடியிருப்புகளுக்குச் செல்லும் வீதிகள் செப்பனிடப்படுவதில்லையென்பது பெரும்குறையாகும். அவசர தேவைகளுக்கு பயணிப்பதற்கோ, பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்வதற்கோ வீதிச்சீரின்மை தோட்டப்பகுதிகளில் பெரும்பாதிப்பாயுள்ளது.


மருத்துவ வசதிகளும் சீரற்றேயுள்ளன. பல மைல்கள் சென்று மருத்துவமனைகளை அடையவேண்டிய நிலையும் மருத்துவமனைகளில் வைத்தியர்கள் குறைபாடும் மருந்துத் தட்டுப்பாடும் அறிக்கையிடப்பட்டுள்ளன.


பொருளாதார நிலை பெருந்தோட்டத் தொழிலாளரை வாட்டி வதைக்கின்றது. நாட்கூலித் தொழிலாளர்களான அவர்களே இந்நாட்டில் மிகக் குறைந்த சம்பளம் பெறுபவர்களாயுள்ளனர். வேலைசெய்யும் நாட்களுக்கு மட்டும் கூலி பெறும் அவர்களுக்குப் போதிய நாட்கள் வேலை வழங்கப்படுவதில்லை.

வேலை வழங்கப்படும் ஒருநாளின் அடிப்படைச் சம்பளம்460 ரூபாவாகவும் மேலதிக கொடுப்பனவு 20 ரூபாவாகவும் வரையறுக்கப்பட்டுள்ளதுடன் வேலை வழங்கப்பட்ட நாட்களில் எழுபத்தைந்து வீத நாட்களுக்கு மேல் வேலை செய்தால் மட்டுமே மேலதிகமாக ஒரு நாளுக்கு 140 ரூபா வழங்கப்படுகின்றது.


வேலை வழங்கப்பட்ட நாட்களில் எழுபத்தைந்து வீத நாட்களுக்கு மேல் வேலை செய்த தொழிலாளியின் நாட்சம்பளம் 620 ரூபாவாக இருக்க எழுபத்தைந்து வீத நாட்களுக்கு ஒருநாள் குறைவாக வேலை செய்த தொழிலாளியின் நாட்சம்பளம் 480 ரூபா மட்டுமே. ஒரே உழைப்பிலும் சம்பளம் வழங்கப்படுவதில் வேறெந்த தொழிற்றுறையிலும் இல்லாத பாகுபாட்டிற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுத்துள்ளனர். இது உழைப்பை, உழைப்பாளிகளை அவமதிக்கும் செயல். 


திட்டமிட்ட முறையில் கருத்தடை செய்யப்படுவதாகக் கூறப்படுகின்றது. இது இன்று நேற்றல்ல, 1960 காலப்பகுதிகளில் வெளிநாட்டு நிதியுதவியுடன் கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தோட்டப் பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது.

குடும்பக் கட்டுப்பாட்டிற்கு வெளிநாடுகள் வழங்கிய நிதி பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளரின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவே பயன்படுத்தப்பட்டது. இன்று அரசுசாரா நிறுவனங்களும் இந்த இனவொழிப்பு கீழ்த்தரமான செயற்பாட்டில் ஈடுபடுவது வெறுப்புக்குரியது. கண்டனத்துக்குரியது.


பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வறுமையின் பாதிப்பால் சிறுநீரகம் போன்ற உறுப்புகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளவர்களென்றால் அவர்களது வறுமை நிலையை உணரமுடிகின்றது. இலங்கையில் உயிர்வாழும் வயதெல்லையில் குறைந்தவர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களே என்று புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.


மருத்துவமனைகளோ, பாடசாலைகளோ, நூல் நிலையங்களோ, பொழுது போக்கு வசதிகளோ மலையக தோட்டப்பகுதிகளில் உருவாக்குவதைவிட மதுபானசாலைகள் உருவாக்கப்படுகின்றன. அதற்கு ஒத்துழைக்கும் அம்மக்களின் பிரதிநிதிகளென்று மார்தட்டும் புள்ளிகளும் அவமானத்தின் பங்குதாரராவது அசிங்கமாயுள்ளது. குடி குடியைக் கெடுக்கும் என்று கூறிக் கொண்டு பெருந்தோட்ட தொழிலாளரின் குடிகளை நாமமாக்கும் மது விற்பனைக்கு ஊக்கமும், ஒத்துழைப்பும் வழங்கப்படுகின்றது.


மனிதவாழ்வுக்கு ஆதாரமானது நீர். அதுவும் குடிநீர். பல தோட்டங்களில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. குடிநீருக்காகவும், குளிப்பதற்காகவும் நீண்டதூரம் மலைகளில் ஏறியிறங்கும் நிலைக்கும் பெருந்தோட்ட மக்கள் ஆளாகியுள்ளமை தினமும் செய்திகளாக வெளிப்படுகின்றன.


கல்வியைப் பொறுத்தவரை நாட்டின் ஏனைய சமூகங்களை விட மிகவும் பின்தங்கிய சமூகமாகவே பெருந்தோட்டத்துறை சமூகமுள்ளது. அரச தொழில்வாய்ப்புகளும் உரியபடி கிடைப்பதில்லை. கிடைப்பவையும் தட்டிப்பறிக்கப்படுவதைக் காணமுடிகிறது.


பிரதேச சபைகளுக்கு வாக்களிக்கும் உரிமை இன்று பெருந்தோட்டத் தொழிலாளருக்குள்ளது. ஆனால் உள்ளூராட்சி சபைகளால் மேற்கொள்ளப்படும் எந்த அபிவிருத்தியையும் அனுபவிக்கும் உரிமை அவர்களுக்கில்லை.


கிடைக்கும் நாட்சம்பளத்தில் உணவுக்கும், உடைக்கும் மருத்துவத்திற்கும், போக்குவரத்துக்கும் கல்விக்கும் பிள்ளைகளின் தேவைக்கும் ஏனைய அத்தியாவசியத் தேவைகளுக்கும் ஒரு தோட்டத் தொழிலாளி பெற்றுக் கொள்ளும் சம்பளம் போதுமா என்பதை எவரும் சிந்திப்பதில்லை. சிந்திக்கும் நாகரிக எண்ணமும் இல்லையெனலாம்.

எத்தனை நாள் வேலை செய்தாலும், எவ்வளவு சம்பளம் பெற்றாலும் தொழிற்சங்கங்களுக்குரிய உறுப்புரிமை சந்தா சம்பளப் பட்டியலிலிருந்து அறவிடப்படுவது மட்டும் நிச்சயம். குறைந்த சம்பளம் பெறும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாட்டிலுள்ள அதுவும் தமிழ்த் தொழிலாளரது நலன்களுக்கெதிராகச் செயற்படும் அரசியல்வாதிகளுக்கு தங்கச் சுரங்கமாயுள்ளனர். எது எப்படியிருந்தாலும் சந்தா அறவீட்டில் கண்ணும் கருத்துமாயுள்ளனர்.


மலையகப் பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளர்கள் படும் இன்னல்களை, எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை, பெற்றுக் கொள்ள வேண்டிய தேவைகளை நாமறிந்து கொள்ள வேண்டும். நாடறிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டில் எமது இனத்தவர்களில் ஒருபகுதியினர் புறக்கணிக்கப்பட்டும், புறந்தள்ளப்பட்டும் வேதனை அனுபவிக்கிறார்கள் என்பதை நாட்டில் எப்பகுதியிலிருந்தாலும் ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும்.


இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவளித் தமிழர் அனைவரும் ஒரே இனத்தவர்கள். அதைப் பிளவுபடுத்தவோ, சிதைக்கவோ, அதன்மூலம் இலாபம் பெறவோ எவரும் முயலக்கூடாது. இன்றைய தேவை மலையகப் பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளரின் வாழ்வை வளப்படுத்தி, வலுப்படுத்தி அவர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்த சீர் செய்யும் வழிகளைக் காண்பதாகும். வெறும் அறிக்கைகளாலும் மேடைப் பேச்சுகளாலும் அம்மக்கள் வாழ்வை உயர்த்தி விடமுடியாது.

நன்றி - தினக்குரல்

பற்றிய தீக்கு எண்ணெய் ஊற்றிய பொலிசார்! (1915 கண்டி கலகம் –22) - என்.சரவணன்


இந்தக் கலவரம் மதப்பதட்ட நிலை, தீர்க்கப்படாமல் இழுபறிபட்டுக்கொண்டிருந்த கண்டி மதக்கெடுபிடிகள், அதன் பின்னர் கொள்ளையர்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் போன்றன கலவவரத்தை வெகு வேகமாக அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது.

இலங்கை சட்ட சபையில் ஐரோப்பிய பிரதிநிதியாக இருந்த ஹர்ரி க்ரீசி (Harry Creasy) போன்றோர் கலவரம் விடயத்தில் பிரித்தானிய ஆட்சியின் செயலுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தார்கள். வெளிப்படையாக விமர்சித்தார்கள். ஹர்ரி க்ரீசி இராமநாதன் கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவாக பல இடங்களில் பக்கபலமாக இருந்தார். இலங்கையில் அனைத்து சமூகங்களின் நன்மதிப்பை பெற்றவர் அவர். 11.081919 அன்று ஹர்ரி க்ரீசி சட்டசபையில் ஆளுநரையும் அதிகாரிகளையும் கடுமையாக விமர்சித்து உரையாற்றினார்.

“இத்தனை கலவரமும், உயிர் சேதம், சொத்து சேதங்களும் ஏற்படுவதற்கு காரணம் கண் முன் நடந்துகொண்டிருந்தபோது பொலிசார் வெறும் கம்புகளை மட்டும் வைத்துக்கொண்டிருந்தது தான்” என்றார்.

இந்த கலவரம் குறித்து எழுதிய அனைவரும் பொலிசாரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சிக்காத எவரும் இருக்கமாட்டார்கள் என்றே சொல்லலாம். கலவரம் உச்ச நிலையை அடைந்த பின்னர் மிக மோசமான அராஜகத்தில் ஈடுபட்ட பொலிசார் அதன் ஆரம்பத்தில் அனைத்தையும் கண்டும் காணாமலே இருந்தார்கள். அவர்கள் விழிப்பாகவும், முன்னெச்சரிக்கையுடனும், கண்டிப்பாகவும் நடந்து கொண்டிருந்தால்  இந்த கலவரமே தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம்.

இந்த கலவரத்தை அடக்க மோசமான வழிகளைப் பின்பற்றிய ஆளுநர் சேர் ரொபர்ட் சார்மஸ் இப்படி கூறினார்.

“யாராலும் மறுக்க முடியாத உண்மை என்னவெனில், சாம்ராஜ்யத்தின் காலனித்துவத்தின் கீழ் இருந்த மக்கள் கூட்டம் இன்னொரு கூட்டத்தை தாக்கியது. தாக்கியவர்கள் சிங்களவர்கள். தாக்கப்பட்டவர்கள் அமைதியான முஸ்லிம்கள்.”

சார்மசின் கருத்தை விமர்சித்து சூசா மறுத்து வெளியிட்ட கருத்தின்படி “இது மறுக்க முடியாத உண்மை எனில், முதலாவது துப்பாக்கி சூடு முஸ்லிம் ஒருவரால் சிங்கள ஒருவர் தாக்கப்பட்டார். முதலாவது கத்திக்குத்து முஸ்லிம் ஒருவரால் சிங்களவருக்கு நிகழ்ந்தது. பௌத்த பெரஹரவை நிறுத்தும் வகையில் தொடர்ச்சியாக நடந்து கொண்டார்கள் அவர்கள். குருநாகலிலும் பெரஹர தாக்கப்பட்டது. கண்டியில் பொலிசாரை தமக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டு பெரஹரவை கட்டுப்படுத்தும் ஆணையைப் பெற்றுக்கொண்டார்கள். இப்படி ஒரு நிலைமை இதற்கு முன்னர் இந்த நாட்டில் வேறெந்த மதத்தவருக்கு ஏற்பட்டதில்லை. பொலிசாரின் விதிகளை ஏற்றுக்கொண்டு விதிகளை பின்பற்றிய சிங்களவர்களை குழப்பியவர்களும் அவர்கள் தான்.

பொலிசாரின் அங்கவீனத்தனம் தான் உயிர், உடமை சேதத்துக்கு காரணமென்று கலவரத்தை ஆய்வு செய்து ஐரோப்பிய ஆய்வாளர்கலும் தெரிவித்தார்கள்.

இதே காலப்பகுதியில் இந்தியாவிலும் பல்வேறு மதச் சண்டைகள் நிகழ்ந்துள்ளன. 1911 இல் கல்கத்தாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு கலவரம் நிகழ்ந்தது. அதனை அந்த பிரதேசத்து அரசர் மதத்தலைவர்களை அழைத்து சுமுகமாக பேசித் தீர்த்திருக்கிறார். 1914இல் ஏரா எனும் இடத்தில் திடீரென்று தோன்றிய கலவரத்தின் போது ஆளுநர் நேரடியாக களத்தில் இறங்கி தேவையான ஆணைகளை பிறப்பித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த செய்திகள் பதிவாகியுள்ளன. ஆனால் இலங்கையில் ஆளுநரோ இந்த கலவரம் பற்றியெறிந்து, பரவி சின்னாபின்னமாகும் வரை வெளியில் எவரையும் சந்திக்கவில்லை. அன்றைய கண்டி மாவட்ட அரசாங்க அதிபரை சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கி தலைவர்கள் ஒன்று சேர்ந்து  சந்தித்து இது குறித்து விசாரணை செய்வதாக ஒரு வார்த்தை சொல்லுங்கள் இது அடங்கிவிடும் என்று கோரனர். ஆனால் அக்கோரிக்கை அலட்சியமாக நிராகரிக்கப்பட்டது. கண்டி பொலிசாருக்கு அசம்பாவிதம் நடக்கப் போவது தெரிந்திருந்தும் கணக்கில் எடுக்கவில்லை. கலவரத்தை அடக்குவதற்கு அப்போது அங்கிருந்தவர் ஒரு பொலிஸ் அத்தியட்சகரும், சாஜன்ட் ஒருவர், கான்ஸ்டபிள் ஒருவர் ஆகிய மூவர் மட்டுமே.

ஓகஸ்ட் 11 அன்று சட்டசபையின் இலங்கைப் பிரதிநிதியாக இருந்த பொன்னம்பலம் இராமநாதன்  ஆற்றிய நீண்ட உரையில்...

“கொழும்பில் கலவரம் தொடங்கியபோது கொழும்பில் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் மாத்திரமே இருந்தார். கொழும்பில் இருந்த 674 பொலிசாரில் 180 பொலிசாரும், பொறுப்பதிகாரியும் கண்டிக்கு அனுப்பப்பட்டிருந்தனர். கொழும்பு பாதுகாப்பை அவர் மேற்கொண்டிருக்க வேண்டும். பொலிசார் எங்கும் அனுப்பபடாமல் அவஇவர் இடங்களில் நிலைத்து இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது...”

ஹர்ரி க்ரீசி வெளியிட்ட கருத்துக்களும் பிரசித்தமானவை. “கலவரம் நிகழ்ந்துகொண்டிருந்த வேளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவர் மட்டுமே கடமையில் ஈடுபட்டிருந்தார்கள். யூன் 1ஆம் திகதியன்று கலகக் காரர்கள் படுகொலைகளை நிகழ்த்தியபடி, கொள்ளயடித்தபடி கையில் கனமான ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தபோது, பொலிசாரோ வெறும் கட்டைகளை வைத்துக்கொண்டு வீதியுலா வந்தார்கள். அவர்கள் ஆயுதம் தரித்திருந்தால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். ஒரு கட்டத்தில் நான் பாதுகாப்பு தேடினேன். வீதிகளில் இப்படி கொள்ளையடித்துக்கொண்டு அடாவடித்தனம் செய்கிறார்களே அவர்களை விரட்டியடிக்க வேண்டாமா என்று நான் பொலிசாரிடம் கேட்ட போது தமக்கு அதற்கான ஆணை பிறப்பிக்கப்படவில்லை என்று சர்வ சாதரணமாக கூறினார்கள்.”

கொழும்பில் கலவரத்தை தொடக்கியவர்கள் இரயில் திணைக்கள ஊழியர்கள். அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டபோதும் சிலர் பொலிசாருடன் இருந்த நட்பின் காரணமாக விடுவிக்கப்பட்டனர். பாணந்துறையில் பொலிசார் கைது செய்திருந்தவர்களை இன்னொரு குழு வந்து மிரட்டி விடுவித்துச் சென்றது. பொலிசாரின் அலட்சியமான போக்கும், கண்டிப்பின்மையும் கலகக்காரர்களுக்கு சாதகமாக அமைந்தன.

இலங்கையின் தேசப்பிதாவாக அழைக்கப்படும் டீ.எஸ்.சேனநாயக்கவின் சகோதரர் எப்.ஆர்.சேனநாயக்க பொலிஸ் தலைமையகத்தோடு சேர்ந்து பணியாற்றினார். அவர் இப்படி குறிப்பிடுகிறார்.

“...கலகக் காரர்கள் மேலும் பெருகி வருகிறார்கள் என்றும் மேலும் மோசமடைந்து பரவி வருவதாகவும் தகவல் கிடைத்ததும் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று எனது ஒத்துழைப்பையும் வழங்கினேன். கலகக் காரர்களை அடக்கவோ, அவர்களை கைது செய்யவோ பொலிசார் எந்தவித முயற்சியையும் எடுக்காதது குறித்து சினமடைந்தேன். ஒன்றரை மைல் தூரம் நான் நடந்து சென்று கொண்டிருந்த போது பொலிசாரின் முன்னிலையில் கடையுடைப்புகள் நிகழ்வதைக் கண்டேன். பொலிஸ் பொறுப்பதிகாரி எங்கே என்று கேட்டபோது அவர் கொழும்பில் இல்லை என்று பதில் வந்தது. இணைப்பொலிஸ் அதிகாரி எங்கே என்றபோது அவரைப் பற்றி ஒரு தகவலும் இல்லை என்று பதில் வந்தது. பொலிஸ் அத்தியட்சகர் எண்டன் டோரப் என்பவரை சந்தித்து நான் எனது ஒத்துழைப்பை வழங்க விருப்பம் தெரிவித்தபோது தமக்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து எந்த ஆலோசனையும் வழங்கப்படவில்லை என்று பதில் வந்தது. இதே நாளில் பாணந்துறை, வேயங்கோடை கொன்ற இடங்களிலிருந்து உதவி கேட்டு பொலிஸ் நிலையங்கள் அவசர செய்தி அனுப்பின...”

கலவரத்தின் காரணமாக முஸ்லிம் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. பொலிசார் வெறும் பார்வையாளர்களாகவே இருந்தார்கள். பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் தன்னால் தூக்க முடியாத ஒரு இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு வந்து ஒரு கடையை உடைக்கிறான். அவனுடன் கூட வந்த அவனின் வயதையொத்த சிறுவர்கள் அந்த கடைக்குள் இருக்கும் பொருட்களை அள்ளிக்கொண்டு வெளியே வருகிறார்கள். கூட்டமாக வந்த சில பெண்களும், வயது முதிர்ந்தவர்களும்  இப்படி கடைக்குள் நுழைந்து தம்மால் கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு தூக்கிக்கொண்டு வருகிறார்கள். ஒரு அரிசி மூட்டையை கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தவர் வெளியிலிருந்த பொலிசாரை உரசிக்கொண்டு கடந்து செல்கிறார். துணிக்கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட துணி ரோல்களை சுமந்துகொண்டு பாதையில் செல்லும் கொள்ளையர்களையும் காணக் கூடியதாக இருந்தது. பொலிசாரைக் கண்ட சிலர் பொருட்களுடன் நின்று பார்த்தபடி இருக்க.

“எடுத்தாச்சு தானே.. போ..” என்று போலிசார் கத்தினர்.

பொலிசார் கையறு நிலையில் இருந்தனர். நடவடிக்கை எடுக்குமளவுக்கு பொலிசார் பலமாகவும் இருக்கவில்லை. கொள்ளையர்களுக்கு சாதகமாகவும் முஸ்லிம்களுக்கு பாதகமாகவும் இருந்தனர் பொலிசார்.

சாதாரண சட்டத்தின் படி தேவையேற்படின் பொலிசாருக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் அதிகாரம் கூட அன்று இருந்தது. ஆனால் இத்தனை பெரிய கலவரத்தின் போது கூட அவர்கள் அதனை செய்யவில்லை. தேவையேற்படின் இராணுவத்தை அழைத்திருக்க முடியும் அப்போதும் செய்யவில்லை. கண்டி நிகழ்வுகளில் போதும் இராணுவம் காலம் தாழ்ந்தே வந்தது. கண்டி நிகழ்வுகளில் போது முஸ்லிம்களுக்கு சாதகமாக பொலிசார் இருந்தார்கள் என்கிற குற்றச்சாட்டை கொழும்பில் வைக்கமுடியவில்லை. கொழும்பில் ஆரம்பத்தில் சிங்களவர்களுக்கே சாதகமாக இருந்தார்கள் பொலிசார். 

இதேவேளை இந்த நிலைமையை பயன்படுத்தி சில தனிப்பட்ட பழிவாங்கல்களும் நிகழ்ந்தன. களுத்துறையில் இப்படியான சம்பவங்கள் பதிவாகின. அங்கிருந்த ஆங்கில பொலிஸ் அதிகாரி பௌத்த விகாரைகளுக்கு சென்று பௌத்த மதகுருமாரிடம் ‘விகாரைகளை உடைப்பதற்காக முஸ்லிம்கள் வந்துகொண்டிருக்கின்றனர் உங்களை ஆயுதங்கள் சகிதம் தயார் நிலையில் பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறி பயமுறுத்தி இருக்கிறார். இந்த செய்திய வதந்தியாகவும் பரவவிடப்பட்டுள்ளது. கொழும்பை சேர்ந்த வழக்கறிஞர் ஈ.ஏ.பி.விஜேரத்ன இப்படி பொலிசார் அனாவசியமான வதந்திகளை பரவ விட்டிருப்பது குறித்து பொலிஸ் உயரதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். அது போல மட்டக்குளியில் பொலிஸ் சாஜன்ட் ஒருவர் துப்பாக்கியுடன் “மரக்கல”காரர்கள் வருகிறார்கள் என்று கத்திக்கொண்டு ஓடிச்சென்றுள்ளார். இவற்றின் போது பீதியடைந்த மக்கள் ஆயுதங்களுடன் காத்திருந்தது தான் மிச்சம். அனைத்தும் வெற்று வதந்திகள் என்பது நேரம் செல்லத் தான் தெரியவந்தது. அதேவேளை இந்த கூட்டங்களில் காத்திருந்தவர்கள் கொதிப்படைந்த நிலையில் அருகில் தென்பட்ட முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துக்களை உடைத்து ஆத்திரத்தை தீர்த்துகொண்டனர் என்று கொழும்பு வழக்கறிஞர் டபிள்யு,ஜே.சீ.பெர்னாண்டோ தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

100 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கலவரம் நடந்திருக்கிறது. அதன் பின்னர் இலங்கையில் பல்வேறு கலவரங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1915 கலவரத்தின் காட்சிகள் அப்படியே அதன் பின்னர் நிகழ்ந்த கலவரங்களின் போது நம் கண் முன்னே நிகழ்ந்ததை அப்படியே காட்சிப்படுத்தியத்தை காண முடிகிறது.

இன-மத வெறுப்புணர்ச்சி படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டு, பரப்பப்பட்டு,  ஸ்தூலமாக நிறுவிய பின்னர் பரஸ்பரம் மூட்டிவிடப்படும் சண்டைகள் இலகுவாக ஒப்பேற்றப்பட்டுவிடுகின்றன. இந்த சண்டைகளுக்கு இடையில் பல்வேறு சக்திகள் தமது நலன்களை அனுபவிப்பதற்காக பற்றியெறியும் தீயை பூதாகரப்படுத்தி சமூகங்களுக்கிடையே பாரிய இடைவெளியையும், பிளவையும் ஏற்படுத்தி துருவ நிலைகளுக்குள் தள்ளி விடுகின்றனர். இலங்கையில் இனங்களுக்கு இடையில் இன்று பலமாக வேரூன்றியிருக்கும், அச்சவுணர்வு, பகையுணர்வு , சந்தேகவுணர்வு என்பனவற்றின் அடிப்படை அது தான்.

தொடரும்..


இக்கட்டுரையாக்கத்துக்கு உசாத்துணைக்கு பயன்பட்டவை
 • Memorandum upon recent disturbances in Ceylon - Perera, Edward Walter – (London, E. Hughes & co., 1915)
 • Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
 • A History of Sri Lanka - K. M. De Silva – (University of California Press - 1981)
 • The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
 • Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
 • “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
 • “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
 • “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
 • ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
 • ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)

சாதித் திமிராளர்களின் கடைந்தெடுத்த ஆயுதம்: "சாதியைச் சாடல்!" - என்.சரவணன்


சாதியச் சாடல்  என்பது எங்கெங்கும் மலிந்து விரவிக்கிடக்கிறது. தோழர் ரவிக்குமாரின் மீது இரா. துரைரட்ணம் நிகழ்த்தியுள்ள சாதிய வசவைக் கண்டிப்பது நம்மெல்லோருடைய கடமை. இத்தகைய சாதிய வசவுகளை பயன்படுத்துவோருக்கான பாடமாக இது இருக்கவேண்டும்.

ஏற்கெனவே எனக்கும் இத்தகைய வசவு நிகழ்ந்தபோது பலர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. என் போன்றவர்களை பாதுகாப்பதை விட அத்தகைய வசவாலர்களைப் பாதுகாப்பது வசதியாக பலர் கருதினார்கள். ஓடி ஒளிந்தார்கள். இப்படி தனிமைப்படுத்தலுக்கு ஆளாவது நம் போன்ற தலித்துகளுக்கு புதியதல்ல. பழகிவிட்டது. ஆனால் அந்த சூழலையும்  எனது தனிமையையும் மறக்க இயலாது.

இன்று தோழர் ரவிக்குமாருக்கு நிகழ்ந்திருக்கிறது. இப்படி ஆயிரம் ஆயிரம் பேருக்கு பொதுத்தளங்களில் தினசரி நிகழ்கிறது. தோழர் ரவிக்குமார் போன்றோர் பிரமுகர்களாக இருப்பதால் உடனடியாக கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது வெறும் ரவிக்குமார் சம்பந்தப்பட்ட விடயம் இல்லையென்பதாலும், ரவிக்குமாரோடு நின்றுவிடப்போவதில்லை  என்பதாலும் நாம் இது விடயத்தில் நமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிடுவது முக்கியமானது.

ரவிக்குமார் முகநூலில் பதிவு செய்திருந்த “இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம்” என்கிற பதிவொன்றிற்கு கீழ் நடந்த உரையாடலில் பின்னூட்டமிட்ட துரைரட்னம் “பற நாயே” என்று மோசமாக சாதியத்தை கக்கியிருக்கிறார்.

ஒருவரையோ அல்லது ஒரு சமூகக் குழுவையோ சொல்லால் அதி கூடியபட்சம் புண்படுத்த வேண்டுமென்றால் உச்ச  ஆயுதமாக சாதிய வசவு இருக்கிறது. இன்று அது மேலும் மேலோங்கி வளர்ந்துமிருக்கிறது. அப்படிப்பட்ட வசவுகளில் பெண்ணுருப்பயையும், தாயையும் சாடி புண்படுத்தும் வசவுகள் தூசனங்களாக ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன. அதற்கடுத்தபடியாக பெரும் பாத்திரம் வகிப்பது சாதிய அடையாள வசவுகள் தான். எப்படி நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள பெண்ணாதிக்க சொல்லாடல்கள் ஆணாதிக்கத்துக்கான கருவிகளில் ஒன்றாக இருக்கிறதோ அது போல தான் சாதியாதிக்கத்தின் நிலைப்புக்கும் சாதிய வசவுகள் ஒரு முக்கியமான காரணியாக இருக்கின்றது.

தமது வெறுப்பையும், சகிப்பின்மையையும், ஆத்திரத்தையும், எதிர்ப்பையும் வெளிக்காட்ட இந்த சாதியச் சாடல் இன்று ஊன்றி நிலைபெற்றிருக்கிறது. ஒருவரை, அல்லது ஒரு குழுவை/குழுமத்தை உணர்வு ரீதியில் கீழிறக்கி அகமகிழ வேண்டுமென்றால் இன்று இதோ சாதி இருக்கிறது.

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த சாதிய சாடலுக்கு ஆளாபவர் சம்பந்தப்பட்ட சாதியாகவோ ஏன், ஒடுக்கப்பட்ட சாதியாகவோ கூட இருக்கவேண்டியதில்லை. யாராகவும் இருக்கலாம். ஆக எந்த ஒருவரையும் இலகுவாக உச்சபட்சமாக உணர்வுரீதியில் தாக்குதலை நிகழ்த்த வேண்டுமென்றால் அது சாதிய வசவால் தான் முடியும் என்று உயர்சாதி மனம் சொல்கிறது. இதிலும் உள்ள வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே சாதிய அவமானங்களுக்கும், சாதிய சாடலுக்கும் ஆளாகிய சாதியினர் கூட இன்னொரு ஒடுக்கப்பட்ட சாதியின் மீது அதே அளவான வசவை நிகழ்த்துவது தான்.

மேல்சாதி ஆண்மனம் என்பது மேலதிகமாக பெண்பாலுறுப்பை, அல்லது பெண் பாலுறவை சாடுகின்ற தூஷணத்தையும் இந்த சாதிய சாடலுடன் கோர்த்து சொல்லும் போது அதற்கு மேலதிக பலம் கிடைப்பதாக நம்புகிறது. அதையே நிறைவேற்றியும்விடுகிறது.

"கீழ்சாதி வெறுப்பு" கட்டமைக்கப்பட்டதென்பது வெறும் தற்செயல் நிகழ்வல்ல. சாதி இருப்புக்கு அது தேவைப்படுகிறது. உயர்சாதி கட்டுக்கோப்புக்கும், அது புனைந்துள்ள அகமண உறுதிக்கும் அது அத்தியாவசியமானது. அடுத்த தலைமுறையின் சாதிமீறளுக்கு எல்லைபோட இந்த புனைவு மிக அவசியமானது. கூடவே... ஒன்று கீழானது என்று சொல்வதற்கூடாக இன்னொன்று (நம்மது) மேலானது என்று நம்பிக்கையூட்டவேண்டும்.  “அவங்கள் நல்ல ஆக்கள் இல்ல...” என்கிற உரையாடலை நானே கூட எத்தனையோ சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறேன். இந்த போக்கை பலமூட்டவேண்டும் என்றால் அதனை திரும்ப திரும்ப செய்தும் திரும்பத் திரும்ப செய்தும், புனைந்தும் நிலைநாட்ட வேண்டும். கீழ்சாதி, இழிசாதி, எளியசாதி, குறைந்தசாதி, இழிசனர் என்று தான் சமூகத்தில் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்சமூகத்தில் மனைவி கூட “பெண்சாதி” தான். யாழ்ப்பாண பேச்சு வழக்கில் சாதாரண பொருட்களின் தர நிர்ணயம் கூட சாதியாகத் தான் பார்க்கப்படுகிறது. “உது என்ன சாதி” என்பதை புழக்கத்தில் இருப்பதை நாம் கண்டிருக்கிறோம்.

உயர்சாதிகளையும், அது கட்டமைத்துள்ள கருத்தாக்கங்களையும்,  அது சமூகத்தில் திணித்திருக்கிற புனைவுகளையும், ஐதீகங்களையும், மீண்டும் மீண்டும் திரும்பக்கூரலுக்கூடாக எற்படுத்திவிடிருக்கிற கற்பிதங்களையும் இனங்கண்டுகொள்வது அவசியமாகிறது. இந்த புனிதங்களை உடைத்தல் (De-canonization)  என்கிற அரசியல் செயற்பாட்டில் ஒரு அங்கமாக ஒடுக்கப்படும் சாதியினர் மீதான வசவுகளையும், இழிவு செய்யும் போக்கையும் களையும் ஒரு பணியும் நம்முன் உள்ளது.

சாதிமறுப்பு, சாதியெதிர்ப்பு, சாதியுடைப்பு ஆகிய செயற்பாட்டின் முன்நிபந்தனையாக இரண்டு காரியங்கள் நம்முன் உள்ளன. ஒன்று ஒன்று இந்த கட்டமைப்பை கட்டவிழ்ப்பது மற்றது கட்டுவது. அதாவது நமக்கான விடுதலை கருத்தமைவை கட்டுவது. இந்த கருத்துடைப்பதும், கருத்தமைப்பதும் வெவ்வேறாகவோ, ஒன்றன்பின் ஒன்றாகவோ பயனிக்கவேண்டியவை அல்ல. இணைந்தே மேற்கொள்வது, தலித் விடுதலைக்கு வழிவகுக்கும்.

எனவே சாதியாக அனைத்தையும் நிர்ணயிக்கும் போக்குக்கு சமூகம் பழக்கப்படுத்தப்பட்டிருப்பதும் வெறும் தற்செயல் அல்ல. நிறுவனமயப்பட்ட சாதியமைப்பின் உறுதிக்கு எப்போதும் இது அவசியப்பட்டுகொண்டேயிருக்கும். சாதியத்தின் நவீன வடிவம் நேரடி தீண்டாமையில் தங்கியிருக்கவில்லை. நவீன சாதியம் இந்த சாதி வசவுகள், சாதியச் சாடல்கள், அகமணமுறை, சாதியப் பெருமிதம் போன்ற வடிவங்களில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது தோழர்களே.

இதில் உள்ள மிக அவலகரமான நிலை என்னவென்றால் சமூக மாற்றத்துக்காக பணிபுரியும், முற்போக்கு பேசும் பலரும் கூட இந்த சாதிய வசவுகளை தெரிந்தோ தெரியாமலோ கையாண்டு வருகிறார்கள். ஆழப்புரையோடிபோயுள்ள இந்த “சாதிய வசவு கற்பிதம்” அவ்வளவு ஆழமாக நம்மை சூழ இருக்கும் செயற்பாட்டாளர்கள் வரைக்கும் தலையில் ஏற்றப்பட்டுள்ளது என்பது மறுப்பதற்கில்லை. சாதியத்தின் இந்த நுண்ணரசியலை மிகத் தெளிவாக புரிந்தவர்களால் மாத்திரமே பிரக்ஞைபூர்வமாக இதிலிருந்து விடுபட முடிகிறது. 

சக்கிலியர், பறையர் பள்ளர், நளவர் போன்ற சாதிய அடையாளங்கள் இன்று மற்றவர்களை இகழத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

துரைரத்தினத்தை மன்னிப்பு கோரச்சொல்லி சேரன் போன்றவர்கள் வேண்டுகோள் விடுத்தும் கூட சற்றும் குற்ற உணர்வில்லாமல் துணிச்சலுடன் தொடர்ந்து வம்பிழுதத்தை குறித்த விவாதத்திலிருந்து காணக் கூடியதாக இருந்தது. அப்படி என்றால் அவருக்கு போதிய அளவு நமது எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் கட்டாயம் பதிவு செய்து அவரை புறக்கணிப்பதும் புறக்கணிக்கச் செய்வதும் தேவையாக இருக்கிறது தோழர்களே.

"அரசுக்கு தலைமைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் " ஏ. லோரன்ஸ்


அதிகாரப் பகிர்வு விடயம் தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அதிகாரப் பகிர்வின் ஊடாக நிலத்துடன் தொடர்புடைய பிராந்தியம் ஒன்றினை மலையக மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க மலையக அரசியல்வாதிகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ. லோரன்ஸ் தெரிவித்தார்.

அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் மூலமான அதிகாரப் பகிர்வு நடவடிக்கைகளை மலையக மக்கள் எவ்வாறு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கருத்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் லோரன்ஸ் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

இலங்கை பல்லின மக்கள் வாழுகின்ற ஒரு நாடாகும். பன்மைக் கலாசாரம் இங்கு காணப்படுகின்றது. எனவே பல்லின மக்கள் அல்லது பன்மை சமூகங்கள் வாழுகின்ற இலங்கை போன்ற நாடுகளில் ஆட்சி அதிகாரங்களை உரியவாறு பகிர்ந்தளிப்பதற்கு ஒற்றையாட்சி என்பது பொருத்தமுடையதல்ல. உலகின் சில நாடுகளில் ஒற்றையாட்சி நிலவுகின்றது.

இந்நாடுகளில் அதிகாரங்களை பிரித்துக் கொடுக்கும் முனைப்புகளும் இடம்பெற்று வருகின்றன. எனினும் அதிகாரப் பகிர்வு என்று வெளிச் சொல்லப்படுகின்ற போதும் உண்மையில் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்களை பிரித்துக் கொடுப்பதில் இடர்பாடுகள் உள்ளன என்பதனையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். என்னதான் நியாயங்களை கூறியபோதும் ஒற்றையாட்சி அதிகாரப் பகிர்விற்கு உகந்ததாக அமையாது.

எனினும் சமஷ்டி என்பது மாறுபட்ட ஒரு விடயமாகும். சமஷ்டியாட்சியின் மூலம் பிராந்தியங்களுக்கு கூடுதலான நன்மை உள்ளது. தேசிய ரீதியில் தலைவர்களை தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு மக்களுக்கு கிடைப்பதோடு பிராந்திய ரீதியிலும் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பும் கிடைக்கின்றது. அதிகாரம் என்பது ஓரிடத்தில் குவிந்து காணப்படுவதில்லை.

அதிகாரக் குவிவு ஓரிடத்தில் குவிந்து காணப்பட்டதன் விளைவுகளை நாமும் உலகமும் நன்றாகவே அறிந்திருக்கின்றோம். சமஷ்டியின் மூலமாக அதிகாரப் பகிர்வு சிறந்த முறையில் இடம்பெறும். சமஷ்டி ஆட்சியமைப்பின் கீழ் மத்திய அரசிடம் ஒரு தொகை அதிகாரங்கள் காணப்படுகின்றன. அதேவேளையில் மாகாண அல்லது பிராந்திய அரசுகளிடமும் குறிப்பிட்ட அதிகாரங்கள் காணப்படும். இது தொடர்பில் தெளிவான வலியுறுத்தல்கள் இடம்பெற்றிருக்கும்.

உலகளாவிய ரீதியில் சமஷ்டிக்கு பெரும் வரவேற்பு காணப்படுகின்றது. சுமார் 52 சதவீதமான உலக நாடுகளில் சமஷ்டி ஆட்சிமுறையே காணப்படுகின்றது என்பதனையும் நீங்கள் நன்கறிவீர்கள். உலகின் இன்னும் சில நாடுகளில் இரண்டு நாடுகள் ஒன்றாக சேர்ந்திருப்பதனைப் போன்றும் அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதனையும் கூறியாக வேண்டும். மத்திய அரசாங்கத்திற்கு சமாந்தரமாக பல அரசாங்கங்கள் இருக்கின்ற நிலைமையும் பல இடங்களில் காணப்படுகின்றது.

அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்கள் குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில், மலையக அரசியல் தலைமைகளும் இது தொடர்பில் கூடுதலான கரிசனையுடன் செயற்படுதல் வேண்டும். மலையக மக்கள் சுமார் 15 இலட்சம் பேர் வரையில் இருந்து வருகின்றனர். இவர்களில் சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் நுவரெலியா பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

பதுளை, கண்டி போன்ற இடங்களில் ஆறு இலட்சம் பேர்வரை மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே ஏறக்குறைய பத்து இலட்சம் மக்களை ஒன்றிணைக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் காணப்படுகின்றது. எனவே இதன் அடிப்படையில் மலையக மக்களுக்குரிய அதிகாரத்தை நிலத்துடன் தொடர்புபட்ட வகையில் அம்மக்களுக்கு வழங்க முடியும். நிலத் தொடர்பு இல்லாத முறையிலும் அதிகாரத்தை வழங்கலாம் என்பதனையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

ஒரு பிரதேசம் ஒரு கலாசாரம் என்ற சில வரையறைகளும் இருக்கின்றன. எனினும் இந்த வரையறைகளையும் மீறி இன்று ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய நிலைமையும் காணப்படுகின்றது. இந்த நிலையில் மலையக மக்கள் ஏதேனும் ஒரு வகையில் தமக்கே உரிய பிராந்தியம் ஒன்றினை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

இந்த நிலைமையை வெற்றிகொள்ள மலையகத் தலைமைகள் தம்மிடையே உள்ள முரண்பாடுகளையும் கருத்துபேதங்களையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். சமுதாய நலனுக்கே இது மிகவும் வலுசேர்ப்பதாக அமையும்.

எல்லை மீள் நிர்ணயம் செய்து எல்லைகளுடன் தொடர்புடைய ஒரு பிராந்தியமே மிகப் பொருத்தமாகும் என்று நான் கருதுகின்றேன் மலையக தலைமைகள் இது தொடர்பில் அரசுக்கு உரிய அந்தஸ்தை வழங்குதல் வேண்டும் என்றார்.

நன்றி veerakesari  -  கொத்மலை நிருபர்


"போராட்டத் திலகங்கள்" - சு.இராஜசேகரன்


பெப்ரவரி மாதம் 27ம் 28ம் திகதிகளை மலையக மக்களுக்கு நினைவு படுத்த வேண்டிய ஒரு துர்பாக்கியம், இது இன்றைய தலைமுறைகளில் ஒரு சிலரைத்தவிரப் பலருக்குத் தெரியாது.

1940ம் ஆண்டு முள்ளோயாவில் கோவிந்தன் கொலைக்கு பின் நடந்த ஒன்று. முள்ளோயா தோட்டத்தொழிலாளர்கள் மட்டுமல்ல அதனை அண்டிய பலதோட்டங்களிலும் சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்க பிரி வான 'அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கம்' பரவத் தொடங்கி யது. அதன் காரனமாக முள்ளோயாத் தோட்டத்திற்கு அருகே உள்ள 'கந்தலா ' எனப்படும் 'ஸ்டேலன் பேர்க்' தோட்டத்திலும் இக்கட்சியினை நிறுவுவதற்கு தொழிலாளி மெய்யப்பன் முன்வந்தபோது, அவருக்கு உரு துணையாக தொழிலாளர்கள் இராச கவுண்டன், குப்புசாமி, வீராசாமி, வேலாயுதம் போன்றவர்கள் துணையாக இருந்துள்ளனர்

இக்கட்சியினை தோட்டத்தில் அமைக்க ,அந்த தோட்டத்தின் வெள்ளை க்காரதுரையான 'சி.ஏ.ஜி.போப்' கடும்போக்கினை கைக்கொண்டார். அதன்படி துரையான போப், 1941ம் ஆண்டு ஜனவரியில் மெய்யப்பனை வேலையிலிருந்து நீக்கியதோடு பற்றுச் சீட்டையும் கொடுத்து தோட்டத் தைவிட்டு உடனடியாக போய்விடும்படியும் எச்சரித்த்ளார்..

இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் கண்டி மாநில செயலாளரோ இதனை கண்டித்து, 1941 ஏப்ரல் மாதம் 26ம் திகதி துரைக்கு கடிதம் அனுப் பினார். இதனை மறுத்த பேப் துரையோ "தோட்டத்தில் அத்துமீறியிருக்கு ம் மெய்யப்பனை கைது செய்ய கம்பளை நீதிமன்றத்திலே ஆணையை பெற்றதனால் 1941 மே 7ம் திகதி பொலீசார் ஸ்டேலன் பேர்க் தோட்டத்தி ற்குச்சென்றனர். அங்கு மெய்யப்பனை கைது செய்ய முடியவில்லை. ஆனாலும் அவர் 9ம் திகதி நீதி மன்றத்திலே சரணடைந்ததுடன் பிணையு ம் வழங்கப்பட்டது.

9ம்திகதி அன்றே மாலையில் கலஹா வில் இருக்கு ம் 'லெவலென் தோட்டத்துரையான ஆர்.டி.பிளேக்கின் பங்களாவிற்கு இரா ப்போசனத் திற்கு சென்றுவிட்டு இரவில் வரும்போது , கார் போகாதபடி மரங்கள் வெட்டி குறுக்காகப் போட்டு போப் துரையை வெட்டி அடித்து கொலை செய்யப் பட்டார். கொலைப் பழி வீராசாமி, வேலாயுதம் மேல் விழுந் தது. அதன் படி 1942ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி திரு.வேலா யுதமும். மருநாளான 28ம் திகதி வீராசாமியும் தூக்குக் கயிற்றை முத்த மி ட்டனர். உண்மையான ஒரு போராட்டத்தினால் எத்தனை உயிர்களை மலையகம் பழி கொடுத்துள்ளது.

புகைப்படத்தில் முதலில் வேலாயுதம் அடுத்தவர் வீராசாமி இந்த மலையக வீரர்களை இன்றைய சமூகமும், அரசியலாரும் மறந்து விடக் கூடாது.
.
நன்றி - "போராட்டத் திலகங்கள்" - சு.இராஜசேகரன் 

மலையக மக்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதியில் X எழுத்து குறியீட்டின் அர்த்தம் என்ன? திலகர் எம்.பி கேள்வி

மலையக மக்களின் பெரும்பாலானோரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதியில் X எழுத்து குறியீட்டின் அர்த்தம் என்ன?
அரசியலமைப்பு சபை விவாதத்தில்  திலகர் எம்.பி கேள்வி


மலையக மக்களின் பிரச்சினைகளை நாங்கள் இந்த சபையிலே முன்வைத்து உரையாற்றுகின்றபோது சக ஆளும்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் உங்கள் மக்களுக்கு இந்தளவு பிரச்சினை இருக்கிறதா என எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர். மலையக மக்களின் பேசப்படாத பல விடயங்கள் உண்டு. குறிப்பாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதியில் நாட்டின் ஏனைய மக்களுக்கு 'V' எழுத்து குறிப்பிடப்படும்போது மலையக மக்களின் பெரும்பாலானோரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதியில் 'X' எழுத்து இடப்படுவதன் அர்த்தம் என்ன? இவைதான் மலையக மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை அரசியல் உரிமைப் பிரச்சினைகள். இவ்வாறான பிரச்சினைகளுக்கான தீர்வினை அரசியலமைப்பு ரீதியாக உறுதிபடுத்துவதற்கான வாய்ப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை நாங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்குதற்காக தற்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார். 

புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான பொறிமுறையாக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாகவும் மாற்றியமைக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
1947ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த, பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த அரசியலமைப்பில் தமது வாக்குகளைப் பயன்படுத்தி பிரதிநிதிகளைத் தெரிவு செய்த மலையக மக்கள், 1948 ஆம் ஆண்டு சுதேச அரசாங்கத்தினால் சட்டம் இயற்றப்பட்டு வாக்குரிமை பறிப்புக்கு உள்ளானார்கள். எனவே தற்போதைய நிலையில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான பொறி முறைகளில் ஒன்றாக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாகவும் மாற்றும் பொறிமுறையின் ஊடாக மலையக மக்களுக்கு அவசியமான உரிமைகளை அரசியலமைப்பு ஊடாக உறுதிபடுத்தும் வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றது. இலங்கையில் இதற்கு முன்னதான அரசியலமைப்பு உருவாக்கங்களின்போது அதில் பங்கேற்பதற்கல்ல, ஜனநாயக ரீதியாக நடைபெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு கூட வாய்ப்பற்றிருந்த மலையக மக்களுக்கு இது கிடைத்தற்கரிய வாய்ப்பாகும். 

குறிப்பாக இன்று மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சபையிலே அங்கம் வகிக்கின்றோம். இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையே என்னைப் போன்றவர்கள் இந்த பாராளுமன்றத்தில் எமது மக்களுக்காக குரல் எழுப்ப வழிசெய்துள்ளது. எனவே இலங்கையில் பரவலாக, குறிப்பாக தென்னிலங்கை மற்றும் மலையக பகுதியில் வசிக்கும் 15 லட்சம் அளவான இந்திய வம்சாவளியினரான மலையக மக்களின் உரிமைகளை, பாராளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ள அரசியலமைப்பு சபையின் ஊடாக உறுதி செய்யும் பொறுப்பு இந்த ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிடைக்கின்றது. ஏற்கனவே, மக்கள் கருத்தறியும் குழுவினர் மாவட்டம் தோறும் கருத்தறிந்து வருகின்ற நிலையில் மலையக மக்கள் தாமாக முன்வந்து அரசியலமைப்பில் நிலைநிறுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்து தமது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதேபோல இந்த பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுகின்ற போது அந்த மக்களின் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது மக்களின் கோரிக்கைகளை பிரதிபலிப்பவர்களாக செயற்பட்டு மலையக மக்கள் வேண்டி நிற்கும் அரசியல் உரிமைகளை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தக் கூடிய வாய்ப்பினை இந்த பிரேரணை வழங்குகின்றது. அந்த வாய்ப்பினை பொறுப்புடன், கடப்பாட்டுடன் ஆற்றவேண்டியவர்களாக நாம் உள்ளோம். 

தவிரவும் மலையக மக்களின் அடிப்படை உரிமை பிரச்சினைகள் குறித்து இந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சக பாராளுமன்ற உறுப்பினர்களும் முழுமையாக அறியாதவர்களாகவே உள்ளனர். நாங்கள் உரையாற்றுகின்றபோதோ அல்லது சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைகளைக் கொண்டு வரும்போதோ உங்கள் மக்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் காணப்படுகின்றவா என கோரும் நிலைமையே காணப்படுகின்றது. உங்கள் மக்களுக்கு பிறப்புசான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை கிடைப்பதில் கூட பிரச்சினை இருக்கின்றதா எனக் கேட்கின்றனர். நாட்டில் ஏனைய சமூகத்தினருக்கு பிறப்பு பதிவாளரினால் வழங்கப்படுகின்ற பிறப்பு சான்றிதழ் மாத்திரமே உள்ள நிலையில் மலையகப் பெருந்தோட்ட மக்கள் தோட்ட அதிகாரிகள் வழங்கும் பிறப்பு பதிவு அட்டையை பெறும் நிலைமை நீண்டகாலமாக இருந்து வந்தது. இன்றும் கூட அதனை மாத்திரம் கொண்டவர்கள் எமது மக்களிடையே உள்ளனர். நான் கூட க.பொ.த (சாஃத) பரீட்சைக்கு தோற்றும் போதுதான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழைப் பெற்றேன். அதேபோல தேசிய அடையாள அட்டை என்று வரும்போது இந்த நாட்டில் வாழும் ஏனைய இன மக்களுக்கு அடையாள அட்டையின் இலக்கத்தின் இறுதியில் வரும் எழுத்து ''V' எனக் காணப்பட மலையக மக்களில் பெரும்பாலானவர்களுக்கு 'X' எனும் எழுத்து குறியிடப்படுவதன் அர்த்தம் என்ன? இதுதான் மலையக மக்களுக்கு உள்ள அடிப்படை உரிமைப் பிரச்சினைகள். இதனை சக எதிர்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் புரிந்துகொளவதற்கான வாய்ப்பினை பாராளுமன்றம் அரசிலமைப்பு சபையாகவும் மாறுகின்றபோது ஏற்படும்.

எனவே இந்த நாட்டின் ஏனைய இன மக்களுக்கு கிடைக்கும் சம உரிமைகள் எவ்வித பேதப்படுத்தல்களும் இன்றி மலையக மக்களுக்கும் கிடைக்கப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை நாம் கலந்தரையாடமுடியும். அதற்கான வாய்ப்பு பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும்போது கிடைக்கப்பெறுகின்றது.  எனவே இந்த பிரேரணையை நாம் ஆதரிக்க வேண்டியவர்களாக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

பதுளை மாவட்ட மக்கள் தமக்கான தேர்தல் தொகுதிகளைக் கோரவேண்டும் - திலகர் எம்.பி

எஸ்.எம்.சுப்பையாபுரம் வீடைமைப்பு திறப்புவிழா நிகழ்வில்


நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமல்ல பதுளை மாவட்டத்திலும் மலையக மக்கள் செறிவாக வாழ்கிறார்கள். எங்கெல்லாம் மலையக மக்கள் செறிவாக வாழ்கிறார்களோ அங்கே ஒரு பிரதிநிதியைத் தெரிவு செய்யும் பொறுப்பு நமக்கு உள்ளது. அத்தகைய தொகுதிகளை அடையாளம் காணும் கடப்பாடு நமக்கு உள்ளது. எனவே தான் 1947 ஆம் நாடாளுமன்றத்தில் பதுளைத் தொகுதியில் இருந்து தெரிவாகி மலையக மக்களின் பிரதிநிதியாக குரல் கொடுத்த எஸ்.எம். சுப்பையாவின் பெயரை நிவ்பேர்க் வீடமைப்புத்திட்டத்திற்கு சூட்டி நினைவுபடுத்தியுள்ளோம். பதுளை மாவட்ட மக்கள் இந்த வரலாற்றை உள்வாங்கி புதிய அரசியலைமைப்பு உருவாக்கத்தின்போது தமக்கான தேர்தல் தொகுதிகளைக் கோரவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். 

பதுளை மாவட்டம் எல்ல பிரதேசத்திற்கு உட்பட்ட நிவ்பேர்க் தோட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சின் முன்னெடுப்பில் அமைக்கப்பட்டுள்ள 42 வீடுகளைக்கொண்ட புதிய கிராமத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவரும் பதுளை மாவட்ட இணைப்பாளருமான எஸ்.இராஜமாணிக்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சு முன்பு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சாக செயற்பட்ட காலத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.  அப்போது அமைச்சின் இணைப்புச் செயலாளராக பணயாற்றிய நான் இந்த வீடமைப்புத் திட்டத்தை இங்கே அமைப்பதற்காக வருகைதந்திருந்தேன். இங்கே வாழும் மக்கள் மண்சரிவு வெள்ள அபாயத்தினை எதிர்கொண்டவர்களாக முகாம்களிலே வாழந்து வந்தார்கள.; இவர்களைச் சந்திக்கும்போது இரவு நேரத்திலேயே கூட்டத்திலேயே நடாத்தினோம். அப்போது மீரியபெத்தை மக்களுக்கான வீடமைப்பு காணித்தெரிவினை செய்வதற்காக மலை மலையாக ஏறி இறங்கிவிட்டு வந்தோம். அந்த இடத்தில்தான் இப்போது அங்கே வீடுகள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த கட்டுமானப்பணிகள் அரசியல் காரணங்களினால் இப்போது இடர் முகாமைத்துவ அமைச்சின் பொறுப்பில் கட்டப்பட்டு வருகின்றது.

எமது அமைச்சர் திகாம்பரத்தின் பொறுப்பிலேயே தொடர்ந்தும் நடைபெற்றிருந்தால் இப்போது அந்த மக்கள் புதிய வீட்டில் குடியமர்த்தப்பட்டிருப்பார்கள். அதே காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டம்தான் இன்று இங்கே யைளிக்கப்படுகின்றது. நாம் வீடமைப்புத் திட்டங்களை உருவாக்குவதில் மிகுந்த அக்கறையோடு செய்றபட்டு வருகின்றோம். சிலர் தமது அரசியல் லாபத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத விடயங்களில் தலையிட்டு மீரியபெத்தை வீடமைப்பினை தாமதாக்கியுள்ளார்கள். அதேநேரம் அங்கே நான்கு வீடுகளே கட்டப்பட்டதாக பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள். அமைச்சர் திகாம்பரத்தின் பொறுப்பில் அங்கே வேகமாக 15 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. அதன் பின்னர் அமைச்சு கைமாற்றத்திற்கு அந்த திட்டம் உள்ளானதால் இன்று தாமதமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. 

எனினும் நாம் பாராளுமன்றத்தில் பிரேரணைடியான்றை கொண்டு வந்து குரல் கொடுத்து அந்த வீடமைப்புத்திட்டத்தை கட்டி முடிப்பதில் இடர் முகாமைத்துவ அமைச்சின் பொறுப்பினை வலியுறுத்தியுள்ளோம். ஆனால் மீரியபெத்தை வீடமைப்பு விடயத்துடன் எவ்வித பணியையும் செய்யாதவர்கள் அதனை வெறுமனே சென்று பார்வையிட்டுவிட்டு தங்களது முயற்சியில் நடைபெறுவதுபோன்று பாவனைக்காட்டி அரசியல் செய்ய முற்படுகிறார்கள் இ;ங்கேயும் அப்படி வரலாம். அப்படி வந்தால் அவர்களது கறுப்பு கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு பார்க்கச் சொல்லுங்கள். அப்போதுதான் 42 வீடுகள் தெரியும். இல்லாவிட்டால் 100 நாள் வேலைத்திட்டத்தில் அமைக்கப்பட்ட அதிகளவான வீடுகளைக் கொண்ட இந்த திட்டத்திலும் 4 வீடுகளே கட்டப்பட்டுள்ளதாக பொய் சொல்லுவார்கள். 

நாங்கள் தனியே வீடுகளை மாத்திரம் கட்டிக்கொண்டு செல்லவில்லை. அதனை ஒரு உரிமைக்கோரிக்கையாக முன்வைத்துள்ளோம். அவ்வாறு கட்டப்படுகின்ற வீட்டுத்திட்டங்களுக்கு நமது முன்னோடிகளின் பெயர்களைச் சூட்டுவதன் மூலம் நமது வரலாற்றை மீளுருவாக்கம் செய்கின்றோம். வீடமைப்புத்திட்டங்களுக்கு முன்னைய தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கவாதிகள், தியாகிகள் பெயரைச் சூட்டி மலையக மண்மீதான நமது உறவை அரசுக்கும் சக சமூகங்களுக்கும் நினைவுபடுத்தி வருகின்றோம். அதில் அரசியல் பேதங்களோ, இன மத முரண்பாடுகளோ பார்ப்பதில்லை. அக்கரப்பத்தைன டொரிங்கடன் வீடமைப்புத்திட்டத்திற்கு ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாப். அப்துல் அஸீஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது. டயகம வீடமைப்பிற்கு சிங்கள தொழிலாளியான தியாகி ஆபிரகாம் சிங்ஞோ வின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல மலையக மக்கள் முன்னணி ஸ்தாபக தலைவர் சந்திரசேகரன் மற்றும் உபதலைவர் வி.டி.தர்மலிங்கம் ஆகியோரின் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன.

அதேபோலத்தன் இன்று எஸ்.எம். சுப்பையாபுரம் இன்று திறந்துவைக்கப்படுகின்றது. எஸ்.எம்.சுப்பையா   1947ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த 7 மலையக உறுப்பினர்களில்  ஒருவராக பதுளை தொகுதியைப் பிரதிநிதித்துவம் செய்தவர். அவரது துணைவியார் கோகிலம் சுப்பையா ‘தூரத்துப்பச்சை’ நாவல் மூலம் மலையக வாழ்வியலை எழுத்தில் பதிவு செய்தவர். இந்த தூரத்துப்பச்சை நாவல் தொடர்பாக பதுளை மண்ணின் மைந்தரான மு.நித்தியானந்தன் அண்மையில் கூட ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். நாம் வரலாற்றைப் படிக்கும்போதுதான் அதனை படைக்கவும் முடியும்.

புதிய அரசியலமைப்பு மாற்றத்திற்காக மக்கள் கருத்தறியும் குழு பதுளை மாவட்டத்திற்கு வரவள்ளது. அதில் பதுளை மண்ணின் மைந்தரான சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்விஜேசந்திரனை தமிழ் முற்போக்கு கூட்டணி பிரேரித்துள்ளது. எனவே நம்மவரும் அங்கம் வகிக்கும் அந்தக் குழுவில் நம்மவர்கள் தயக்கமின்றி சென்று அரசியலமைப்பில் தமக்கான தேவைப்பாடுகள் குறித்து பிரேரணைகளை முன்வைக்க வேண்டும். அதன்போது பதுளை மாவட்டத்தில் மலையக மக்களுக்கான தனியான தேர்தல் தொகுதிகள் அவசியம் என்பதை வலியுறுத்த வேண்டும். அதறகாக எஸ்.எம். சுப்பையாவை நினைவுபடுத்த வேண்டும். இந்த வீடமைப்பு ஒரு வரலாற்று அடையாளம். நமது முகவரிகள் மாறுவதனைக்குறிக்கிறது. இங்குவாழும் மக்கள் இனிமேல் மக்கள் எஸ்.எம். சுப்பையாபுர கிராமத்தின் மக்கள் எனவும் தெரிவித்தார்.

அரச தோட்டங்களில் அடிப்படை வசதியின்றி வாழும் மக்கள் - பி திருஞானம்


பெருந்தோட்டங்களை கையேற்கும் திட்டத்தின் கீழ் 1992 ஆம் ஆண்டு சுமார் 26 தனியார் கம்பனிகளுக்கு தோட்டங்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டன.

மிகுதியானவை அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வரப்பட்டன. அவை பெருந்தோட்ட மக்கள் அபிவிருத்தி சபை (JEDB) மற்றும் அரச பெருந்தோட்ட யாக்கம் SPC போன்ற அரச நிறுவனங்களின் கீழ் முகாமைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான தோட்டங்கள் தற்போது மிகவும் பின்னடைந்த நிலையில் இயங்கிவரும் அதேவேளை, நஷ்டத்தையும் கண்டு வருகின்றன. இதனால் இங்கு வாழும் மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

அவ்வாறான அரச தோட்டங்களில் ஒன்றே புப்புரஸ்ஸ லெவலன் தோட்டம். இத்தோட்டம் 7 பிரிவுகளைக் கொண்டது. இந்த தோட்டத்தின் புப்புரஸ்ஸ மேற்பிரிவு மக்கள் தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

இந்தத்தோட்டத்தொழிலாளர்களுக்கு தேவையான வேலை நாட்கள் வழங்கப்படுவதில்லை. தோட்டம் முறையாக பராமரிக்கப்படாததால் புல் வளர்ந்து பற்றையாகக் காணப்படுகிறது. தேயிலைச் செடிகளுக்கு உரம் போடுவதில்லை. மருந்தும் தெளிப்பதில்லை. இதன் காரணமாக அநேகமான தேயிலை மலைகள் காடாகக் காட்சியளிக்கின்றன. கொழுந்தின் வளர்ச்சியும் குறைவாகும். எனவே, தோட்டத்தில் வேலை வழங்கப்படுவது குறைவாகும். வேலை நாட்கள் குறைவடைந்து காணப்படுவதால் தொழிலாளர்களுக்கான வருமானமும் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது.

இந்தத் தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி வழங்கப்படுவதாகத் தெரிவித்து அண்மையில் சில பத்திரங்கள் வழங்கப்பட்டன. அவை நடைமுறைக்கு வரவில்லையென்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வழங்கப்பட்ட காணியும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. வீடமைப்புத்திட்டங்கள் தற்போது அமைக்கப்பட்டு வந்த போதும் அவையும் முறையாக செயற்படவில்லை. அநேகமானோர் தற்காலிக வீடுகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இருக்கும் வீடுகள் மழைக்காலத்தில் ஒழுகுகின்றன. பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

இதனால் அவர்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

தற்போது அங்கு ஒரு மருந்துச்சாலை காணப்படுகின்றது. அதுவும் கைவிடப்பட்டு குடியிருப்பாக மாற்றப்பட்டுள்ளது. வைத்தியசாலை இல்லை. அவசர தேவையின் பொருட்டு கலஹா போன்ற பிரதேசங்களுக்கே செல்ல வேண்டியுள்ளது. தோட்டத்தில் அம்புலன்ஸ் வசதி காணப்பட்ட போதும் அவை சில நேரங்களில் கிடைப்பதில்லை. அம்புலன்ஸ் இந்திய தூதரகத்தினால் வழங்கப்பட்டதாகும். தற்போது காணப்படும் மருந்தகத்தில் தேவையான மருந்துகள் இல்லை. மருந்துகள் தேவைப்படுமிடத்து பணம் கொடுத்து பிரத்தியேகமாகவே பெறவேண்டும்.

மலசலகூடம், சுத்தமான நீர் விநியோகம், நோய்த்தடுப்பு வசதிகள் மற்றும் சுகாதார வசதிகளின்றி தோட்ட மக்கள் அவதிப்படுகின்றனர்.

இத்தோட்டம் 7 பிரிவுகளைக் கொண்டது. LEWALON, HERMITAGE, COLGRAIN, GALLOWAY KNOWE, NEW FOREST, POPRASSIE TOP, POOPRASIE L/D என்பனவே அவையாகும். இந்தத் தோட்டப்பிரிவுகளில் மொத்தமாக சுமார் 4,000 பேர் வசிக்கின்றனர். இவர்களில் தோட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 1000 ஆகும். ஆண் தொழிலாளர்கள் சுமார் 400 பேராகவும் பெண் தொழிலாளர்கள் சுமார் 600 பேராகவும் காணப்படுகின்றனர். மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 1,500 ஆகும். தற்காலிக குடியிருப்புக்களில் சுமார் 300 குடும்பங்கள் வாழ்கின்றன.

இந்தத் தோட்டங்கள் 3 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாகும். அவற்றில் பிட்டவல கிராம சேவகர் பிரிவு, உனுகல கிராம சேவகர் பிரிவு, புபுரஸ்ஸ கிராம சேவகர் பிரிவு போன்றவை அடங்கும். இங்கு தோட்ட வேலையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்குரிய ஓய்வூதிய கொடுப்பனவுகள் முழுமையாக வழங்கப்படாமல் இருக்கின்றதாகவும் ஓய்வு பெற்ற தோட்டத்தொழிலாளர்கள் கூறுகின்றனர். பல வருடங்கள் ஆகியும் சிலருக்கு ETF மற்றும் EPF கிடைக்கவில்லை. சிலர் தினமும் நாள் சம்பளத்துக்கு வேலை செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல், பெரும்பாலானோர் வெளி இடங்களிலேயே தொழில் செய்து வருகின்றனர்.

க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரம்வரை படித்தவர்கள் சுமார் 150க்கும் மேல் உள்ளனர்.

இவர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் இல்லை. இந்நிலையில், என்ன செய்வது என்று அறியாத இவர்கள் தோட்டத்தில் கைக்காசுக்கு தொழில் செய்து வருகின்றனர். க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெற்றவர்கள் உயர்தர கல்விக்காக கலஹாவிற்கு நீண்ட தூரம் பஸ்ஸில் செல்ல வேண்டும். பஸ்ஸும் முறையாக இல்லை. பஸ் போக்குவரத்துக் குறைவு காரணமாக மாணவர்களினதும் கல்வி நிலையிலும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

அதேவேளை, இப்பிரதேசத்தில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு தொழிற்சாலைகளை அமைத்தால் தொழில் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடியதாக இருக்குமென்று தோட்ட மக்கள் கூறுகின்றனர். இதற்கும் அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும்.

தொழிலாளர்களின் நலன் சார்பான விடயங்களில் தோட்ட நிர்வாகம் அக்கறை காட்டாததால் அவர்களின் சந்ததியினரும் பாதிப்படையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். மேற்படி தோட்ட மக்களின் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், தொழிலாளர்கள் சார்பாக தொழில் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மலையக தோட்ட தொழிலாளர்களின் உரிமையை பொறுத்தவரையில் எதையும் போராடியே பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அது தோட்டத்திற்கு தோட்டம் வித்தியாசமாகவே காணப்படுகின்றது. தோட்டங்களோ இலாபத்தையே முக்கியமாகக் கருதுகின்றன.

தொழிலாளர்களின் உரிமை தொடர்பில் அக்கறை செலுத்துவதில்லை. இந்நிலை தொடருமாயின் தொடர்ந்தும் இவர்களின் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். எனவே, இந்தப் பிரச்சினைக்கு மலையக தலைவர்கள் உடனடியாகத் தீர்வினைப்பெற்றுக்கொடுக்க வேண்டும்.

நன்றி - veerakesari

மலையகக் கவிதை இலக்கிய செல்நெறி (பாகம் -3) - மல்லியப்புசந்தி திலகர்


மலையக கவிதை இலக்கிய செல்நெறியில் கடந்து செல்ல வேண்டிய ஒருவர் ஆபிரஹாம் ஜோசப் என்பவர். இவர் எழுதிய பாடல்கள் ‘கோப்பிக்கிருஸி கும்மி’ எனும் நூலாக வெளிவந்துள்ளது. கோப்பித்தோட்டங்களில் தொழிலாளர்கள் சலுகைகளை அனுபவிப்பவர்களாகவும் மகிழ்ச்சியுடன் வாழ்பவர்களாகவும் இங்கு வருமுன் தாய் நாட்டில் மோசமான வாழ்க்கையை அனுபவித்தவர்கள் தற்போது சந்தேஷமாக வாழ்வதாக கோப்பித் தோட்ட எசமானர்களுக்கு விசுவாசமாகவே இந்த பாடல்கள் படைக்கப்பட்டுள்ளன. காரணம் ஆபிரஹாம் ஜோசப் ஒரு காப்பித்தோட்ட கண்டக்டர், ஆகவே அவருடைய பணி எசமானர்களுக்காக பாடல் இயற்றுவதாக இருந்துள்ளது. எனினும். ‘தோட்டத்தொழிலாளரக்ள் பாடித்திரியும் ஆட்சேபகரமான நாட்டார் பாடல்களுக்கு  மாற்றீடாக இந்தப்பாடல்களை எழுதியுள்ளதாக தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த ‘கோப்பிக்கிருஸி கும்மிபாஉத்திகள் டல்கள்’ நாட்டார் பாடல்களிடம் மண்டியிட்டு மறைந்து போகிறது. ஆனாலும் ‘1869 ல் மலையகத்தில் இருந்து வந்த முதல் நூல் என்ற பெருமையை இந்த கோப்பிக்கிருஸிகும்மி’ பெறுகின்றது. 145 ஆண்டுகளுக்கு முன் எழுந்த மலையகத்தின் முதல் நூல் கோப்பிக்கிருஸி கும்மி என தனது தொடர்கட்டுரையில் ஒரு விரிவான ஆய்வினைத்தந்துள்ளார் ஆய்வறிஞர் மு.நித்தியானந்தன் அவர்கள். இந்நூலின் தலைப்பு (Cummi poem on coffee plantation) என ஆங்கிலத்திலேயே அச்சிடப்பட்டுள்ளதாகவும் குறித்துச்சொல்கின்றார் நித்தியானந்தன்’ (மூலம்: மலையகம் எனும் அடையாளம்: மலையக இலக்கியத்தின் வகிபங்கு தெளிவத்தை ஜோசப் அமரர் இர.சிவலிங்கம் நினைவப்பேருரை 2011). மலையக இலக்கியத்தின் முதல் நூலாக மலையகத்தில் அச்சு கூடங்கள் ஏதும் இல்லாத நிலையில் யாழ்ப்பாணம் ஸ்ட்ரோங் அன்ட ஆள்பரி பிரிண்டர்ஸ் எனும் அச்சகத்தில் இந்த நூல் நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்ட்டுள்ளது. அந்த வகையில் அந்த முதல் நூல் ஒரு கவிதை ஊருஆஆஐ Pழுநுஆ அமைந்திருப்பது மலையக கவிதை இலக்கிய வரலாற்றில் பதிவு பெறவேண்டிய அம்சமாகிறது. இந்த ஆபிரகாம் ஜோசப் பின் பாடல்கள் மட்டுமின்றி அவரது பிற செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராய்கிறது மு.நித்தியானந்தன் எழுதியுள்ள ஆய்வு நூலான 'கூலித்தமிழ்). 

1916ல் அச்சேற்றம் பெற்ற தங்கப்பாட்டு மாலை தந்தவர் கோட்டாற பாவா புலவர். இவரது 17 கவிதை நுல்கள் வெளிவந்துள்ளதாக அந்தனிஜீவா அவர்கள் தனது 'மலையக இலக்கியத்துக்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு' எனும் தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே இந்தியாவில் பிறந்து இங்கு வந்த வாழ்ந்த சதக்கத்தம்பி புலவரையும் நாம் இந்த பட்டியலில் பார்க்கலாம்.

நடேசய்யர் தம்பதிகளின் வருகை

1920களில் பின்னரே மலையகக் கவிதை முயற்சிகள் மலையக பிரதேசங்களிலே பரவலாக வரத்தொடங்கின. அதுவும் இந்தியாவில் இருந்து வருகைதரும் இந்த மக்கள் சார்ந்த இன்னுமொரு செயற்பாட்டாளர்களோடு ஆரம்பிக்கிறது எனலாம். அவர்கள் நடேசய்யர் தம்பதிகள். பத்திரிகையாளரும் இந்திய சுதந்திர போராட்ட ஆர்வலருமான நடேசய்யர் அவர்கள் ஒரு பத்திரிகையாளராக இலங்கைவந்து பின்னர் மலையக மக்களோடு தொழிற்சங்கம், இலக்கியம், அரசியல் என இரண்டரக் கலந்தவர். அன்றைய மலையக மக்களின் நிலை கண்டு இந்த தம்பதியர் பல சமூக விழிப்புணர்வு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அதில் பிரதானமானது துண்டு பிரசுரங்கள் மற்றும் வாய்மொழி பாடல்கள். பெரிதும் தொழிலாளர்களாகவும் பாமரர்களாகவும் இருந்த இந்த மக்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த இவர்கள் இலக்கியத்தை கருவியாகக் கையாண்டுள்ளனர். 

‘இந்து மக்கள்

சிந்தும் வேர்வை

ரெத்தக்காசு தானே அடா

இரவு பகல் உறக்கமின்றி 

ஏய்த்துப்பறிக்கலாமா..?


என மக்களது வாழ்நிலை குறித்த பாடியுள்ளனர்.

இவர்களது பாடல்கள் ‘இந்தியர்களது, இலங்கை வாழ்க்கை நிலைமை’ (1940 கணேஸ் பிரஸ் ஹட்டன்), என்ற தலைப்பில் தொகுதியாக வந்துள்ளது. இவர்களது எழுத்துநடை ஏற்கனவே இந்த மக்களிடத்தில் பழக்கப்பட்டிருந்த நாட்டுப்பற பாடல்களுடன் ஒத்துப்போனமை அவற்றின் பிரபலத்திற்கு காரணமாகியது. இத்தம்பதியருள் திரு நடேசய்யர் தொழிற்சங்க பணிகளிலும், திருமதி நடேசய்யர் மக்கள் பாடல்களைப்பாடி அவற்றை துண்டு பிரசுரங்களையும் வெளியிடுவதிலும் அதிகம் ஈடுபட்டுள்ளதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

அந்த வகையில் திருமதி மீனாட்சியம்மாள் எழுதிய வரிகள் பின்வருமாறு அமைகின்றன.

சிங்கள மந்திரிகள் செய்திடும் சூழ்ச்சி

சேதியில்லாமல் வேறில்லை காட்சி

போங்கவே தொழிலாளர் ஒற்றுமைக் மாட்சி

பொலிவு கொண்டாடுவர் அடைகுவர் தாட்சிசிங்கள மந்திரிகள் கூற்று மிக 

சீருகெட்டதென்று சாற்று

சங்கடமே நேருமென தோற்று சிந்திய 

சமூகம் நெருப்பாய் வரும் காற்றுநன்றி கெட்டுப் பேசும் மந்திரிமாரே உங்கள்

நியாயமென்ன சொல்வீரே

இன்றியமையாதவொரு பேரே செய்ய

இடமுன் மாக்கின்றீர் நீரே


அந்த வகையில் இலங்கை அரசியல்வரலாற்றில் பேரினவாதத்திற்கு எதிரான பார்வையை அரசியல் தளத்தில் முதன் முதலில் முன்னெடுத்தவர்கள் நடேசய்யர் மீனாட்சிம்மாள் தம்பதிகளாவர் என்கிறார் திறனாய்வாளர் லெனின் மதிவானம். (‘ஊற்றுக்களும் ஓட்டங்களும்’  பாக்யா பதிப்பக வெளியீடு 2012) திறனாய்வு நூல் பக்38)

மலையக ஆய்வு எழுத்தாளர் சாரல் நாடன், இலக்கிய செயற்பாட்டாளர் அந்தனிஜீவா முதலானோர் திருமதி மீனாட்சியம்மாள் குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளனர். திருமதி சித்திரலேகா மௌனகுரு தனது பெண் ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளில் மீனாட்சியம்மாள் நடேசய்யரைப்பற்றி எழுதியுள்ளார். புலம் பெயர்ந்து வாழும் மலையகப் பேராசிரியர் மு.நித்தியானந்தன் ‘மீனாட்சிம்மாளும் மேடைப்பாடல்களும்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியள்ளார்.

பேராசிரியர் செ.யோகராசா திருமதி மினாட்சியம்மையை ‘ஈழத்த முதல் பெண் கவிஞர்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளதாக திறனாய்வாளர் லெனின் மதிவானம் அவர்கள் தனது ‘ஊற்றுக்களும் ஓட்டங்களும்’ திறனாய்வு நூலில் (பக்31) குறிப்பிட்டுள்ளார். பேராசியரியர் செ.யோகராசாவின் கூற்றுப்படி ஈழத்தின் முதல் பெண் கவிஞராகவே ஒரு மலையகக் கவிஞரை அடையாளம் காட்டியிருப்பது மலையகக் கவிதை இலக்கியத்தின் ஒரு சிறப்பம்சமாகக் கொள்ளலாம். இதன் மூலம் மலையக நாட்டார் பாடல் வடிவங்கள் தாம் மலையக கவிதை இலக்கியத்தின் தோற்றுவாய் என்பதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம்.

தொடரும்

மலையகக் கவிதை இலக்கிய செல்நெறி (பாகம் -2) - மல்லியப்புசந்தி திலகர்


மலையகக் கவிதைப்பாரம்பரியத்தில் நாட்டார் பாடல்களின் சாயல் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்கின்ற குற்றச்சாட்டு அல்லது சிறப்புப்பண்பு அதன் வேர் அதுவாகவே அமைந்துவிடுவதனாலாகும் என கொள்ளலாம். இந்த மக்கள் எவ்வாறு எந்த அடிப்படையில் இலங்கை நாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் என்பது பலரும் அறிந்த செய்தி. கட்டுரையின் விரிவஞ்சி அது பற்றி இங்கு பேசாமல் விடலாம். எனினும் பாமரர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக, பஞ்சம் பிளைக்க வருகை தந்த இந்த மக்கள் கனவுகளை மட்டுமே தமது நெஞ்சில் சுமந்து வந்துள்ளனர். முழுக்க முழுக்க உடலுழைப்பை விற்று வருவாய்தேடி வாழ்க்கையில் சுபீட்சம் காண நாடுகடந்து, கடல் கடந்து, காடுகடந்து அவர்கள் வந்து சேர்ந்த அந்த பயணத்தொடக்கத்திலேயே தமது தோள்களில் கனவுகளையும் மனதினில் தமது வாய் மொழிக்கலைகளையுமே சுமந்து வந்துள்ளனர்.

 19ம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு காலப்பகுதியிலேயே இலங்கை நோக்கி (அப்போதைய சிலோன்) பயணித்த தனது மகளை வழியனுப்பும் ஒரு தாயின் புலம்பலே முதல்கவிதை என்று கொள்ளலாம்.

சீமைக்கு போறமுன்னு சிணுங்காத எம்மவளே

கடல்தாண்டி போறமுனு கலங்காதடி ராசாத்தி

சிங்களவேன் ஊர்போயி சீக்கிரமா வாருமடி

இந்த நாட்டார் பாடல் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மக்கள் வருவதில் இருந்தே ஆரம்பிக்கிறது. இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் கூட ‘எது கவிதை? அதன் யாப்பு இலக்கணம் என்ன? புதுக்கவிதைகள் என எழுதப்படுபவை கவிதைகள் தானா? என்றெல்லாம் வாத, விவாதங்கள் நடைபெற்று வருகின்ற சூழலில் 19ம் நூற்றாண்டிலேயே தன் மண்ணைவிட்டு வாழ்வைத் தேடி தமது புலப்பெயர்வை ஆரம்பித்தவைத்த மக்கள் கூட்டம் பாடிவைத்த சந்தம் மிகு இப்பாடலை கவிதை என்று கொள்வதில் பின்னிற்க தேவையில்லை.

அவ்வாறு புறப்பட்டு வந்த இம்மக்கள் வருகின்ற வழியில் கடலிலும் காடுகளிலும் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தனர் என்பது வரலாற்று உண்மை. மரணத்திலேயே தம் வாழ்வைத் தொடங்கிய இந்த மக்கள் கூட்டம் அதனை இவ்வாறு பதிவு செய்கின்றது.


பொளைக்கத்தான் நாம வந்து  இன்னும்

பூமி போய் சேரலையே 

கடன்கட்ட வந்து நாம கண்டிபோய் சேரலையே

பாதி வழியில ஏ ராசாவே பரலோகம் போயிட்டீங்க 

இனி நான போயி என்ன செய்ய

ஏ ..ராசாவே ... என்னையும் அழைச்சுபோங்க….


எனும் ஒப்பாரிப்பாடல் இந்த மக்களின் வாழ்க்கைப் வருகையின் இன்னுமொரு பரிமாணத்தினை பதிவு செய்கிறது. இன்னுமொரு பாடல் இவ்வாறு அமைகிறது..

மாத்தள போறமுன்னு மகிழ்ச்சியா நாம வந்தோம்

கண்டிக்கு போறமுனு கடல தாண்டிவந்தோம்

கண்டியும் போகலையே காலும் நடக்கலையே 

என்ன பெத்த அப்பா உசிரோட உன்ன விட்டு ஓடி நா போவேனா…


இந்த பாடல்கள் மலையக மக்களின் வருகையையும் அவர்களின் வாய்மொழி இலக்கியத்தின் வருகையையும் பதிவு செய்கின்றமையை காணலாம். இவ்வாறு மலையகக் கவிதை இலக்கியத்தின் தோற்றுவாயாக அமைந்த நாட்டார் பாடல்கள், ஒப்பாரி பாடல்கள், கூத்துப்பாடல்கள் இன்றும் கூட மலையகத்தில் வழக்கில் உள்ளது.

மலையகத்தின் முக்கிய இலக்கிய ஆளுமைகளுள் ஒருவராகிய சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் தனது கவிதைகள் உள்ளிட்ட இலக்கிய படைப்புகளுக்கு அப்பால் ‘மலைநாட்டு மக்கள் பாட்டு’ (கலைஞன் பதிப்பகம் சென்னை 1983) எனும் ஒரு தொகுப்பினை சேகரித்து வெளியிட்டமை இந்தப்பாடல்களின் வரலாற்று முக்கியவத்துக்கான ஒரு சான்று. அதேபோல எழுத்தாளர் மு.சிவலிங்கம் அவர்களும் ‘மலையக நாட்டுப்புற பாடல்களை’ தொகுப்பாக வெளியிட்டுள்ளார். திறனாய்வாளர் லெனின் மதிவானம் இந்த நாட்டார் பாடல்களின் முக்கியத்துவம் குறித்த கட்டுரைகளை எழுதியுள்ளார். (ஊற்றுக்களும் ஓட்டங்களும் (2012) பாக்யா வெளியீடு பக்.01). இந்த நாட்டுப்புற பாடல்கள் மலையக மக்களின் வாழ்க்கைக்கோலத்தை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்றது என்கின்றதன் அடிப்படையில் இந்த பாடல் வழி வந்த மலையக கவிதை இலக்கிய மரபு இன்று புதிய செல்நெறிகளை அடைந்துகொண்டுள்ள போதும் நாட்டார் பாடல்களின் தொடர்வடிவத்திற்கு இன்றும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.

பதுளையை தளமாகக் கொண்டு சமூக, இலக்கிய, தொழிற்சங்க பணிகளில் ஈடுபட்டு வரும் பசறையூர் கே.வேலாயுதம் தன்வசம் பல பாடல் தொகுப்புகளை வைத்துள்ளார். இதேபோல இன்றைய சூழலில் மலையக நாட்டார் பாடல்களை ஆய்வு செய்து நடைமுறை சூழலில் எவ்வாறு அது புதிய வடிவம் கண்டுள்ளது என்பதனை ‘தோட்டப்புற பாடல்கள்’ எனும் வாய்மொழி இலக்கியமாக பதுளையை தளமாகக்கொண்டு ‘ஊவா வானொலியில்’ பதுளை விமலநாதன் எனும் கலைஞர் பாடிவருகின்றார். மண்வாசனை எனும் நிகழ்ச்சி மூலம் இந்த ‘தோட்டப்புற’ பாடல்களினை அவர் பாடி விளக்கமளிப்பது நாட்டுப்புற பாடல் செல்நெறியிலும் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. பசறையூர் கே.வேலாயுதம், மண்வாசனை விமலநாதன் போன்றவர்களது பாடல், தேடல் மற்றும் ஆய்வு முயற்சிகள் எழுத்துரு பெற்று நூலாக்கம் பெறவேண்டியதன் அவசியம் நிலவுகின்றது.

இந்த நாட்டார் பாடல் அதன் வழிவந்த கிராமிய பாடல்கள், நாடோடிப்பாடல்கள், தெம்மாங்குப்பாடல்கள் ஒப்பாரி பாடல்கள் முதல் இன்றைய தோட்டப்புற பாடல்கள் வரையான மலையகக் கவிதை பாரம்பரியத்தின் வேர்களை அடையாளப்படுத்தி விட்டு மலையகக் கவிதை இலக்கியம் என மக்கள் பாடல்கள் என்ற பொது நிலையில் இருந்த தனிப்பட்டவர்களின் படைப்பிலக்கியமாக பார்க்கின்றபோது நம்முன் நிற்பவர் அருள்வாக்கி அப்துல் காதிருப் புலவர். இவ்வாறு இவர் அடையாளப்படுத்தப்படுவது அவரது பெற்றோரது வருகை மற்றும் அவரது பிறப்பு மலையகத்தோடு தொடர்பு பெற்ற வகையில் அமைவதனாலாகும். இவர் 30.06.1866 ல் கண்டி போப்பிட்டிய எனும் இடத்தில் பிறந்தார் என்பதுவும் இவரது தந்தையார் இந்தியாவின் திருப்பெருந்துறையினை பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும் இவர் சிறு கோப்பித்தோட்டச் செய்கைக்காக இலங்கை வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. (சில பதிவுகள் அருள்வாக்கி அப்துல் காதிருப்புலவரே இந்தியாவில் திருப்பெருந்துரையில்தான் பிறந்தார் என்றும் எழுதப்பட்டுள்ளதாம் (மூலம்: இறைவாக்கப்பெற்ற அருள்வாக்கி பாவலர் சாந்தி முகைதீன் இலக்கியம் விஷேட மலர் 2011 கலாசார மற்றும் கலை அலவல்கள் அமைச்சு). இவரது பிறப்பு தொடர்பான பின்னணி மலையக சமூக உருவாக்கத்தின் ஆரம்ப கட்டமான கோப்பி பயிர்ச்செய்கை, மற்றும் தென்னிந்திய வருகையோடு தொடர்புபடுவதனால் இவர் மலையக இலக்கிய கவிதைப்பாரம்பரியத்துக்குள் வைத்து பேசப்படும் கவிஞராக பார்க்கப்படுகின்றாரே அன்றி அக்கால நாட்டார் பாடல்கள் போன்று மலையக மக்களின் வாழ்வியலை இவரது படைப்புகளில் தரிசிக்க கிடைத்தாக எந்தக்குறிப்புகளும் இல்லை. மற்றபடி இவர் சிறு பராயத்திலேயே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு கவியரங்கில் தமிழ்நாட்டின் கவிஞர் வித்துவ சிரோன்மணி அம்பலவாணக் கவிராயர் தலைமையில் கவிபாடிய புலமை மிக்கவர் எனும் குறிப்புகள் உள்ளன. கண்டி மாநகருக்கு அருகாமையிலுள்ள ‘குன்று மலைப்பூங்காவுக்குள் உலவிவரும்போது திடீரென மயக்கம் ஏற்பட்டதாகவும் அந்த மயக்கநிலையில் தாம் வியக்கும் காட்சிகளை கண்டதாகவும் அது முதல் தனது நாவில் இருந்து கவிதையூற்று பெருக்கெடுத்து ஒடுவதாகவும்’ புலவர் அவர்கள் தனது கவித்துவ ஆளுமைக்கு விளக்கமளித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இதில் வரும் கண்டி மலைக்குன்று பெருமையே அருள்வாக்கி அவர்களை மலையகக்கவிதை வரலாற்றோடு இணைத்துப்பார்க்கச் செய்துள்ளது எனலாம்.

மலையகத் தோட்டத்தொழிலாளர்களிடையே இடம்பெறும் விழாக்களிலும் சடங்கு வைபவங்களிலும் பொதுவிழாக்களிலும் வகிதை பொழிவார், கும்மி, நொண்டிச்சிந்து முதலான பாடல்களைப்பாடுவார்’ என அந்தனிஜீவா தனது ‘மலையகமும் இலக்கியமும்’ (மலையகம் வெளியீட்டகம் 1995) நூலில் குறிப்பிட்டுள்ளார். பின்னாளில் மீண்டும் இந்தியா சென்று கற்றுத்தேர்ந்த புலவர் அவர்கள் 1918ம் ஆண்டு கண்டியிலேயே காலமானார்.


(செல்நெறி தொடரும்)


நாடு பரவிய கலவரம் (1915 கண்டி கலகம் –21) - என்.சரவணன்


இலங்கையின் வரலாற்றில் நிகழ்ந்த அத்தனை கலவரங்களின் போதும் ஒரு கட்டத்துக்கு அப்பால் அக்கலவரத்தை பெரிதாக வளர்த்துச் சென்றவர்கள் கொள்ளையர்களும், காடையர் கூட்டமும் தான். 1915 கலவரமும் இதில் விதிவிலக்கல்ல. அன்று விடியற் காலை வேலையிலிருந்து திரும்பிய தொழிலாளர்கள் முஸ்லிம் கடைகளின் மீது சிறிதாக தொடங்கிய கள் வீச்சுக்களும், உடைப்புகளும் இந்த கொள்ளையர் கூட்டத்திற்கு சாதகமாக அமைந்தன. 2000 க்கும் மேற்பட்டவர்கள் புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம், சிங்கள, தமிழ் கடைகளை சூறையாடினர். கலவரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. கையில் கிடைத்த கன ஆயுதங்களுடன் வீதிகளில் நிறைந்தார்கள் கொள்ளையர்கள். புதுக்கடை, வாழைத்தோட்டம், பழைய சோனகத் தெரு. போன்ற முஸ்லிம்கள் அதிகம் வாழும் இடங்களில் இரு இனங்களைச் சேர்ந்தவர்களும் பரஸ்பரம் தாக்கிக்கொண்டதில் இரு தரப்பிலும் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் காயங்களுக்கும் உள்ளானார்கள். உயர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள கடைகள் கூட கொள்ளையிடப்பட்டன.

உலகப்போரின் காரணமாக இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிப்புக்கும் விரக்திக்கும் ஆளாகியிருந்த சாதாரண அடித்தட்டு மக்கள் அதிகமாக இந்தக் கொள்ளைகளில் சம்பந்தப்பட்டது ஒன்றும் ஆச்சரியமானது அல்ல.

முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பிரதேசங்களில் கடைகள் சேதமாகின. அவர்கள் சேதப்படுத்திய கடைகளை கொள்ளையர்கள் சூறையாடினர். பொலிசார் செய்வதறியாது இருந்தனர். காடையர் கூட்டத்திற்கு இது சாதகமாக அமைந்தது. எந்த தடையுமின்றி அவர்கள் புறக்கோட்டையில் பெருமளவு கடைகளை நாசம் செய்தனர். கலவரத்தை அடக்க வாய்ப்பு இருந்தும் கூட பொலிசார் எதையும் கணக்கில் எடுக்கவில்லை. பெண்களும் சிறுவர்களும், முதியவர்களும் கூட பொலிசார் மற்றும் இராணுவத்தினருக்கு முன்னால் இந்த கொள்ளைகளில் ஈடுபட்டார்கள். எதனால் பொலிசார் இத்தனை அலட்சியமாக இருந்தார்கள் என்பது பலருக்கும் ஆச்சரியமளித்தன. முஸ்லிம்களுக்கு சாதகமாக இருப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது என்கிற கருத்தும் பரவலாக பரவியிருந்தது.

கலவரம் சிறிது சிறிதாக பல்வேறு இடங்களுக்கும் பரவியது. முஸ்லிம்கள் தமது வீடுகளில் பணிபுரியும் பெண்களை பாலியல் வல்லுறவு புரிந்து வெட்டிக்கொலை செய்கிறார்கள் என்கிற பொய் வதந்தியால் மேலும் ஆத்திரத்துக்குள்ளானார்கள் சிங்களவர்கள். பௌத்தர்களதும், கிறிஸ்தவர்களினதும் மதஸ்தலங்களை தாக்கியழித்தபடி சிங்களவர்களை பழிவாங்கும் வெறியுடன் முஸ்லிம்கள் இப்போது அடுத்த இலக்குகளை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றும் வதந்தி பரவியது. இன்று போல் அன்று தூர இடங்களில் என்ன நடக்கின்றன என்பதை உடனடியாக உறுதி செய்துகொள்ளும் வாய்ப்பு இருக்கவில்லை. எனவே தலதா மாளிகை தாக்கி தரைமட்டமாகிவிட்டது, புனித லூசியாஸ் தேவாலயம் டைனமைட் வைத்து தகர்த்து விட்டார்கள், முஸ்லிம்கள் பேரழிவை நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகிறார்கள் போன்ற வதந்திகள் எங்கெங்கும் இலகுவாகப் பரவி வந்தன (The Ceylon Morning Leader – 01.06.1915). அப்போது கரையோர முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான பல துப்பாக்கி ரவைக்கான தூள் விற்கும் கடைகளில் டைனமைட்டும் துப்பாக்கிகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தன என்பதும் இந்த வதந்தி நம்பப்படுவதற்கு காரணமாக இருந்தன. 

சாதாரண மக்கள் இந்த வதந்திகளால் பீதியுற்று ஒன்றாக கூடி குழுமியிருந்தார்கள். சில வெளிப் பிரதேசங்களில் தமக்கு அருகாமையிலுள்ள காடுகளுக்கு சென்று பாதுகாப்பு தேடிக்கொண்டார்கள். வெறும் கரையோர முஸ்லிம்கள் மாத்திரம் அல்ல உள்நாட்டு முஸ்லிம்களின் சொத்துக்கள், வீடுகள் கூட சண்டியர்களால் சேதத்துக்குள்ளாக்கப்பட்டன. முஸ்லிம்களின் சொத்துக்களை பாதுகாக்க முடியாத பல இடங்களில் அந்த குடும்பங்களை சிங்களவர்கள் தமது வீடுகளில் பாதுகாத்த சம்பவங்களும் நிகழ்ந்தன.

அம்பிட்டிய பகுதியில் முஸ்லிம்களால் கொள்ளை சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று வழக்கறிஞர்களால் நீதவானுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு போலீசார் அனுப்பப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர். இதுவும் அதே பத்திரிகையில் வெளியாகியிருந்தது.

யூன் 3ஆம் திகதி வெளியான “The Ceylon Morning Leader” பத்திரிகையில் இப்படி ஒரு செய்தி வெளியாகியிருந்தது. “...மருதானை, பொரல்லை - கொட்டா வீதி, வெலிக்கடை பிரதேசங்களில் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்திக்கொண்டு வந்த கூட்டத்தினரிடம் இருந்தது தப்ப பெண்களும், சிறுவர்களும் பல்வேறு இடங்களில் அடைக்கலம் புகுந்தனர். கொட்டா வீதியிலுள்ள பிரபல முஸ்லிம் பிரமுகரான அபுபக்கரின் வீட்டைத் தாக்கி கொள்ளையிட்டபோதும் அங்கிருந்த காவலாளியால் எதிர்க்க முடியவில்லை. வீட்டிலிருந்த தளபாடங்களையும், பொருட்களையும் சேதப்படுத்தி இழுத்து வெளியில் வீசினார்கள். அங்கு வந்து சேர்ந்த பொலிசார் அந்த கூட்டத்தை நோக்கி சுட்டதில் காயப்பட்டவர்கள் உயிர் ஊசலாடிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சூட்டின் போது என்ன நடக்கிறது என்பதை பார்க்க தனது வாசல் கதவை திறந்து வெளியே வந்த ஆர்.ஏ.மிரண்டோ என்பவரும் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகி பலியானார்...”

புதுக்கடை பகுதியில் சிங்களப் பெண்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள் என்று பரவிய வதந்தியால் அந்த பகுதியிலும் சண்டைகள் நடந்து இரத்தக் கறைகள் இருந்தன என்று The Ceylonese (03.06.1915)  பத்திரிகை செய்தி வெளியிட்டது. அதே பத்திரிகையில் அடுத்த நாள் செய்தியில் இப்பிடி இருந்தது.

“முஸ்லிம்கள் கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் தேவாலயத்தை தாக்க வந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற வதந்திபரவியதைத் தொடர்ந்து பல இளைஞர்களும், வயதானவர்களும் சந்திக்கு சந்திக்கு குழுமி நின்று அதனை எதிர்கொள்ளத் தயார் நிலையில் காத்திருந்தார்கள். பல மணி நேரங்கள் காத்திருந்ததில் அது வெறும் வதந்தி என்று உணர்ந்துகொண்டார்கள்”

யூன் 4 ஆம் திகதி வெளியான அதே பத்திரிகையில் அதுவரை “நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டும், காயப்பட்டும் இருக்கிறார்கள். கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் மட்டுமல்ல படையினரால் கொல்லப்பட்டவர்களும் இதில் அடக்கம்” என்றிருந்தது. 

கலவரத்தில் இணைந்து கொள்வதற்காக 700 பேரளவில் வெள்ளவத்தை விக்டோரியா பாலத்தை கடந்து வர முயற்சிக்கையில் எச்சரிக்கை செய்தும் நிற்காததால் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் காயப்பட்டனர். பலர் ஆற்றில் குதித்து நீந்தி தப்பித்தனர்.

பதட்ட நிலையிலிருந்த பல நகரங்களில் இராணுவ அரண்கள் நிறுவப்பட்டன. நகரக் காவல் படையில் இருந்த பஞ்சாபியர்கள் அந்த படையில் இருந்தனர்.
கொழும்பு மெயின் வீதியிலிருந்து கொட்டாஞ்சேனை, முகத்துவாரம் பகுதியில் 4 ஆம் திகதி நூறு நூறாக அணிவகுத்து வந்த படைப்பிரிவினர் வீடு வீடாக சென்று சோதனையிட்டு சில வீடுகளில் கத்தி, வாள்கள் ஆயுதங்கள் போன்றவற்றையும் கைப்பற்றினர். மூடியிருந்த வீடுகளை உடைத்து சென்றனர். கொட்டாஞ்சேனைக்கும் ஊறுகொடவத்தை பகுதிக்கும் இடையில் சண்டியர்களின் அடாவடித்தனத்தால் பதட்ட நிலை நிலவியது.

இறுதியில் இந்த கலவரம் உச்ச கட்டத்தை அடைந்தபோது கலவரத்தில் ஈடுபடுவோரை சுட்டுத்தள்ளுவதற்கான ஆணை கிடைக்கப்பெற்றது. பொலிசாரும் இராணுவமும் வீதிகளில் குவியத் தொடங்கினார்கள். கலவரமும் அதன் பின்னர் தான் சிறிது சிறிதாக அடங்கத் தொடங்கிற்று. கண்ட இடத்தில் சுட்டுத்தள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்கிற செய்தி பரவியது தான் அதற்கான காரணம்.

நகர்ப் பாதுகாப்பு படை கொழும்பு கோட்டை, புறக்கோட்டைப் பகுதிகளில் சுற்றிவளைத்து மேற்கொண்ட நடவடிக்கைகளில் சில சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள். 

இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக கண்டியிலும் அடங்கியது. இரண்டு தினங்களில் கொழும்பும் அடங்கியது. யூன் 5ஆம் திகதியளவில் பெருமளவு பிரதேசங்களில் அடங்கியது. முஸ்லிம்களுக்கு அரசு ஆதரவழித்து பாதுகாப்பளிக்கிறது என்கிற ஒரு நம்பிக்கை  பரவலாக நிலவியதும் இதற்கு இன்னொரு காரணம்.

இப்படி ஒரு நம்பிக்கை நிலவுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. பல இடங்களில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் பலர் சிங்களவர்கள். கைது செய்யப்பட்டவர்களும் சிங்களவர்கள்.
மிகப் பழமையான கம்பளை – கலதெனிய விகாரைச் சேர்ந்த தலைமை பஸ்நாயக்க நிலமே  எப்.பி.வல்கம்பஹா பஞ்சாப் படையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது இறந்த உடல் கண்டியில் கண்டெடுக்கப்பட்டது.

யூன் 5 ஆம் திகதியளவில் நிலைமை சீராக வந்து கொண்டிருந்தது. இராணுவச் சட்டம் முதன் முதலில் யூன் 2 ஆம் திகதி மேல் மாகாணத்தில் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. 3 ஆம் திகதி சப்பிரகமுவா, மத்திய, வட மேல் மாகாணங்களிலும், ஊவா, வட-மத்திய மாகாணங்களில் 17 ஆம் திகதி அதாவது எதுவித அசம்பாவிதங்களும் நடக்காத காலத்தில் இராணுவச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசியமில்லாத காலத்தில், அவசியப்படாத பிரதேசத்தில் கொண்டுவரப்பட்டமை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது தவிர இராணுவச் சட்டத்தின் பேரால் அரங்கேற்றப்பட்ட படுகொலைகளும், இராணுவ அராஜகமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள்.

பெரேராவின் நூல்
இவை குறித்த விலாவாரியான தகவல்கள் “இலங்கையில் சமீபத்தேயே குழப்பங்கள் பற்றிய குறிப்புகள்”  (Memorandum Upon Recent Disturbances in Ceylon) எனும் 75 பக்கங்ககளைக் கொண்ட நூலில் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது. எட்வர்ட் டபிள்யு பெரேரா எழுதிய இந்த நூல் காலனித்துவ செயலாளருக்கு 1915 ஆம் ஆண்டு எழுதிய பரிந்துரை என்று தெரிய வருகிறது. பெரேரா பரிஸ்டர் பட்டம்பெற்ற வழக்கறிஞர்.  பொன்னம்பலம் இராமநாதனும் பெரேராவும் சேர்ந்து இரகசியமாக தீட்டிய திட்டத்தின் பிரகாரம் தான் இங்கிலாந்துக்கு இருவரும் சென்று உண்மையை எடுத்துக் கூறினார்கள். அந்த கதை மிகவும் சுவாரசியமானதும் கூட. தனியாக அவரைப் பற்றி பின்னர் தெரிந்துகொள்வோம்.

கண்டி கலவரம் பற்றிய வழக்குகளில் பலரை விடுவிப்பதற்காக வாதிட்டு போராடியவர் பெரேரா.  கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும், நடந்த சம்பவங்கள் பற்றிய நீதி விசாரணை கோரியும் அவர் தொகுத்த நூல் இது. சட்டவிரோதமாக அரங்கேற்றிய  “இராணுவச் சட்டம்” குறித்து விலாவரியாக எழுதியிருக்கிறார். பலருக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளின் விபரங்கள், முறைப்பாடுகள், கடிதங்கள் என்பன பற்றிய விபரங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதே அடிப்படையில் தான் பொன்னம்பலம் இராமநாதன், மற்றும் ஆர்மண்ட் டி சூசா ஆகியோர் எழுதிய நூலும் வெளிவந்திருந்தது. இந்த மூன்றும் 1915 இல் தான் வெளிவந்துள்ளது. மூன்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டதுடன் ஏறத்தாழ பரஸ்பரம் பெருமளவு ஒற்றுமைகள் நிறைந்த நூல்கள் இவை. பெரேரா எழுதிய இந்த நூலில் திகதிவாரியாக அன்றைய நாளிதழ்களை ஆதாரம் காட்டி சம்பவங்கள் தொகுக்கப்பட்டது ஒரு சிறப்பு.

தொடரும்...


இக்கட்டுரையாக்கத்துக்கு உசாத்துணைக்கு பயன்பட்டவை
 • Memorandum upon recent disturbances in Ceylon - Perera, Edward Walter – (London, E. Hughes & co., 1915)
 • Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
 • The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
 • Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
 • Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
 • “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
 • “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
 • ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
 • ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates