Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு ஊவா தமிழர்களுக்கு விமோசனம் தருமா? - எஸ். செல்வராஜா


ஊவா மாகாண சபையிலிருந்து முதலமைச்சர் மற்றும் மூன்று அமைச்சர்கள் உட்பட ஆறு பேர் புதிய பாராளுமன்றத்திற்கு பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களிலிருந்தும் தெரிவாகியுள்ளனர்.

மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ 200806 வாக்குகளையும், ஊவா மாகாண அமைச்சர்களான ரவி சமரவீர 58 ஆயிரத்து 507 வாக்குகளையும், வடிவேல் சுரேஸ் 52 ஆயிரத்து 378 வாக்குகளும் ஆனந்த குமாரசிரி 44 ஆயிரத்து ஏழு வாக்குகளும், ஊவா மாகாண சபை உறுப்பினர்களான பத்ம உதய சாந்த குணசேகர 57 ஆயிரத்து 356 வாக்குகளும் சாமர சம்பத் தசநாயக்க 64 ஆயிரத்து 418 வாக்குகளும் பெற்று புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

மேலும், பண்டாரவளை மாநகர மேயராக இருந்த சமிந்த விஜயசிரி ஐ.தே.க. சார்பாக 58 ஆயிரத்து 291 வாக்குகளை பெற்று பதுளை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

மத்திய அரசின் முன்னாள் அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 406 வாக்குகளையும், சுமேத ஜி. ஜயசேன 69 ஆயிரத்து 82 வாக்குகளையும் ரன்ஜித் மத்தும பண்டார 82 ஆயிரத்து 316 வாக்குகளையும், பெற்று பதுளை மற்றும் மொனராகலை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

முன்னாள் பதுளை மாவட்ட எம்.பி. தேனுக்க விதானகமகே 43 ஆயிரத்து 517 பெற்று இம்முறையும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

முன்னாள் பதுளை மாவட்ட எம்.பி.க்களான ரோகன புஸ்பகுமார உதித்த லொக்குபண்டார ஆகியோரும் முன்னாள் அமைச்சர்களான லக்ஸ்மன் செனவிரட்ன, ஜகத் புஸ்பகுமார, விஜித் விஜய முனி சொய்ஸா ஆகியோர் இம்முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளனர்.

இப் பாராளுமன்ற தேர்தலையடுத்து ஊவா மாகாண சபையில் முதலமைச்சர் மற்றும் மூன்று மாகாண அமைச்சர்கள் இரண்டு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கான ஆறு வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இவ் ஆறு வெற்றிடங்களும் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக மூன்று பேரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக மூன்று பேரும் அடங்குவர்.
ஊவா மாகாண புதிய முதலமைச்சராக மாகாண அமைச்சர் அநுர விதானகமகே நியமிக்கப்படுவாரென்றும் அத்துடன் வெற்றிடமாகவுள்ள மாகாண சபை உறுப்பினர் பதவிகளுக்கு மாகாண சபையின் பட்டியலில் அடுத்தபடியாகவுள்ள மானெல் ரட்ணாயக்க சுமித் சமயதாஸ பிரகத்தி ஆகியோர் நியமிக்கப்படுவரென்றும் மாகாண முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

ஊவா மாகாண சபையில் ஆட்சி மாற்றம்
ஊவா மாகாண சபையிலிருந்து அறுவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியதையடுத்து ஊவா மாகாண சபையின் ஆட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு கட்சிக்கு மாற்றமடையவுள்ளது.

அக்கட்சியின் மாகாண தமிழ்க்கல்வி அமைச்சராக முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.

மேலும், ஊவா மாகாண சபை உறுப்பினரான ஆறுமுகம் கணேசமூர்த்தி இ.தொ.கா. சார்பில் சேவல் சின்னத்தில் பதுளை மாவட்ட பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட போதிலும் அவர் தோல்வியடைந்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக அவன் உபதலைவர் அ. அரவிந்தகுமார் பதுளை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு 53 ஆயிரத்து 741 வாக்குகளை பெற்று தெரிவாகியுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் மலையக மக்கள் முன்னணிக்கும் பதுளை மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அங்கீகாரமும் மேற்படி வெற்றியாகுமென்று கருதப்படுகின்றது.

பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களின்றி அரசியல் அனாதைகளாக இருந்து வந்த பதுளை மாவட்ட தமிழ் மக்கள் சார்பாக இம்முறை இரு தமிழர் பிரதி நிதித்துவங்கள் கிடைத்துள்ளமை விசேடம்சமாகும்.

பதுளை மாவட்டம் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்ட போதிலும் இம்முறை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் படுதோல்வியை எதிர்கொண்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 10259 வாக்குகளை மட்டுமே பதுளை மாவட்டத்தின் பெற்றிருந்தது.

மக்கள் விடுதலை முன்னணி பதுளை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 445 வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் எந்தவொரு ஆசனத்தையும் பெற முடியவில்லை.

சரத்பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக்கட்சி பதுளை மாவட்டத்தில் 500 வாக்குகளைப் பெற்று படுதோல்வியை அடைந்துள்ளது.

பதுளை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருக்கும் வடிவேல் சுரேஸ், அ.அரவிந்தகுமார் ஆகிய இருவருக்கும் பதுளை மாவட்ட தமிழ் மக்கள் விடயத்தில் பெரும் பொறுப்புக்கள் இருக்கின்றன.

இவர்கள் எவ்வகையிலும் அப்பொறுப்புக்களிலிருந்து விலகி செல்ல முடியாது.

இத்தேர்தலை முன்னிலைப்படுத்தி ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சராக இருந்த வடிவேல் சுரேஸ், 176 தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு அரச திணைக்களங்களில் ஊழியர் நியமனங்களைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.

ஆனால் இந் நியமனங்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்பட்டிருக்கின்றன.

இதனை அவர் நிரந்தர நியமனங்களாக மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும். அத்துடன் 405 பேருக்கு ஊழியர் நியமனங்களை வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தார். தேர்தல் முடிந்து வெற்றி பெற்றதும் அந்நியமனங்களை பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார். அவ் உறுதி நிறைவேற்றப்படல் வேண்டும்.

பதுளை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான அ. அரவிந்தகுமாரும், தேர்தலில் வெற்றி பெற்றதுடன் பதுளை மாவட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை நிவர்த்தி செய்து வைப்பதாக உறுதியளித்திருந்தார். அவ் உறுதிகளும் நிறைவேற்றப்படல் வேண்டும்.

பதுளை மாவட்ட தமிழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலேயே இரு தமிழர்களை ஆகக்கூடிய விருப்பு வாக்குகளினால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளனர். தெரிவு செய்யப்பட்ட இருவரும் தமக்குரிய பொறுப்புக்களை உணர்ந்து மக்களின் தேவைகள், அபிலாஷைகள், விருப்புக்கள் ஆகியவற்றிற்கேற்ப செயற்பட்டு அவற்றின் நிவர்த்தி செய்ய முன் வரவேண்டும். அதற்கு சான்று அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளாகும்.
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டம் சார்பாக போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் விபரம் இவ்வேட்பாளர்கள் எவருமே பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை. இ.தொ.கா. “சேவல்” சின்னத்தில் தனித்து போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

சிங்கமுத்து அசோக்குமார் 5479 வாக்குகள், அ.க. கனரத்தினம் 4710 வாக்குகள், ஆறுமுகம் கணேசமூர்த்தி 2418 வாக்குகள், வேலு ரவி 1489 வாக்குகள், செல்லையா சகாதேவன் 1384 வாக்குகள், பெருமாள் மாணிக்கராஜா 1358 வாக்குகள், சவுந்திர மணி கோபிநாதன் 1114 வாக்குகள், காத் தான் மாரிமுத்து 926 வாக்குகள், சண்முகம் ஜெகதீஸ்வரன் 856 வாக்குகள், நடராஜா ரகுபதி 664 வாக்குகள், வடிவேல் தேவராஜ் 630 வாக்குகள்.

நன்றி - வீரகேசரி

பெண்களின் அரசியல் கோரிக்கையும் பருவகால வாக்குறுதிகளும் - என்.சரவணன்


2015 தேர்தல்
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பெண்கள் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தளவில் கறைபடிந்த ஒரு தேர்தல் என்றே கூறவேண்டும். பெண்கள் அமைப்புகள் 40 பெண்களாவது இம்முறை அங்கம் வகிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். வேட்பாளர் பட்டியலில் பெண்களின் எண்ணிக்கையை அதிகருப்பது, தேசியப் பட்டியலில் உள்ளடக்குவது போன்ற கோரிக்கைகளை நிர்பந்தித்து வந்தார்கள்.

225 பேரை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக 6,151 பேர் போட்டியிட்டனர். அதில் 556 பெண்வேட்பாளர்கள். அதாவது இது மொத்த வேட்பாளர்களில் 9.2% வீதம். அதிக பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்த மாவட்டம் கொழும்பு. கொழும்பில் 147 பெண்கள் போட்டியிட்டனர். அதேவேளை குறைந்தளவு பெண்கள் போட்டியிட்ட மாவட்டம் பதுளை . அங்கு 3 பெண்கள் மாத்திரமே போட்டியிட்டனர்.

சனத்தொகையில் 52% வீதத்துக்கும் அதிகமாக கொண்ட பெண்கள் தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதற்கு குறைந்தது 30% வீதத்தினரையாவது தமது வேட்பாளர் பட்டியலில் சேர்க்கும்படி தொடர்ச்சியாக போராடிப் பார்த்தனர். இம்முறையும் அதனை எந்த கட்சியும் மேற்கொள்ளவில்லை.  இத்தனைக்கும் பிரதான கட்சிகள் உட்பட பல கட்சிகள் கொள்கையளவில் இணங்கியிருந்தபோதும் நடைமுறையில் அதனை செய்யவில்லை. பிரஜைகள் முன்னணி போன்ற கட்சி நுவரெலியா மாவட்டத்தில் பெண்களை மட்டுமே வேட்பாளர்களாக இறக்கியிருப்பதாக தெரிவித்துக்கொண்ட போதும் அது பிரக்ஞையுடன் மேற்கொள்ளப்படவில்லை. கூடவே பாமர தோட்டப் பெண்களை மோசமாக வழிநடத்தும் கும்பலிடம் அந்த பெண்கள் அகப்பட்டிருந்தார்கள்.

இறுதியில் இம்முறைத் தேர்தலில் 11 பெண்கள் மாத்திரமே தேர்தலில் தெரிவானார்கள். தேசியப்பட்டியலில் இரண்டு ஆசனங்களையும் சேர்த்து சென்ற தடவை போல் இம்முறையும் 13 பெண் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இது மொத்த உறுப்பினர் தொகையில் 5.8% வீதமே. தற்போது இலங்கையின் மாகாணசபைகளில் மொத்தம் 4.1% வீதமும், உள்ளூராட்சி சபைகளில் 2.3 வீதமுமே பெண்களின் பிரதிநிதித்துவமுமே உள்ளது.

1931இல் இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏக காலத்தில் வழங்கப்பட்டது. ஆங்கிலேயே காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில் முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு இலங்கை. வளர்ச்சியடைந்த பல நாடுகளில் கூட அப்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. இத்தனை பழமையான வரலாறு இருந்தும் கூட இலங்கையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6.5 ஐ இது வரைத் தாண்டியதில்லை.

தென்னாசியாவிலேயே குறைந்தளவு பெண்களின் பிரதிநிதித்துவம் கொண்ட ஒரே நாடு இலங்கை மட்டுமே. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற தென்னாசிய நாடுகள் பெண்களை நாட்டின் அரச தலைவர்களாக உருவாக்கிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. “சர்வதேச பாராளுமன்ற நிறுவனம்” (IPU -international organization of Parliaments) உலக நாடுகளில் பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறித்த தர வரிசையை அட்டவணையாக இந்த மாதம் வெளியிட்டுள்ளது. அதன் படி ருவாண்டா அதிக பெண்களை பாராளுமன்றத்தில் கொண்டுள்ளது. மொத்தம் 63.8% பெண்கள் அங்கு பாராளுமன்றத்தில் உள்ளார்கள். அந்த அட்டவணையின்படி இலங்கை 5.8%வீதத்தையே கொண்டுள்ளது. ஆகவே இலங்கை 131வது இடத்தில் உள்ளது.

பெண்களின் அரசியல் பிரதிதித்துவத்தை அதிகரிப்பதற்கான பெண்கள் அமைப்புகளின் தொடர்ச்சியான போராட்டம் தொடர்ந்தும் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக கடந்த ஒரு தசாப்த்ததிற்குள் இதற்காகவே பல பெண்கள் அமைப்புகள் தோற்றம் பெற்று முனைப்புடன் தொழிற்பட்டு வந்துள்ளன. அந்த அமைப்புகள் அரசியல் விழிப்புணர்வை ஊட்டுவதற்காக சாதாரண பெண்கள் மற்றும் அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகள் மத்தியிலும் இயங்கி வந்துள்ளன. அதன் விளைவாக இந்த அமைப்புகளின் கணிசமான கோரிக்கைகளுக்கும் இணங்கினர். குறிப்பாக பல முக்கிய கட்சிகள் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக தமது வேட்பாளர் பட்டியலில் 25% பெண் பிரதிநிதிகளை உள்ளடக்குவதாக உறுதியளித்தன. ஆனால் அது நடக்கவில்லை. 20வது திருத்தச்சட்டத்திலும் அந்த கோரிக்கையை உள்ளடக்குவதாக தற்போதைய ஆளும்கட்சி ஒப்புக்கொண்டது.

புதிய பாராளுமன்றம் ஆட்சிக்கமர்ந்ததும் 100 நாட்களில் 20 வது திருத்தச்சட்டத்தை கொண்டுவருவதாக அறிவித்து இருக்கிறார்கள். அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூட அதனை உள்ளடக்கியிருந்தன. இனி அது நிகழ்ந்தால் தான் நம்பலாம்.


2015 பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்
பெண்களின் அரசியல் பிரதிநித்துவம் குறித்து எந்தவொரு உத்தரவாதத்தையும் ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டணி வழங்கவில்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்
“உள்ளூராட்சி மட்டங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஒதுக்குவதற்கூடாகவும் தேர்தல்களின் போது வேட்பாளர் பட்டியலில் குறைந்தபட்சம் 25%வீத பெண்கலுக்கு இடல் ஒதுக்குவதர்கூடாகவும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது. (3 -உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கை)

மனசாட்சியின் உறுத்தல் எனும் பெயரில் ஜேவிபி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் (பக்கம் - 84) தேசிய அளவில் பெண்களின் அரசியல் பிரதிநித்திவம் பற்றி எதுவும் கூறவில்லை மாறாக அது கிராம மட்டங்களை மாத்திரம் குறிப்பிடுகிறது.

“ஒவ்வொரு கிராமத்திற்கும் பாராளுமன்றச் சட்டத்தினால் அதிகாரத்தத்துவங்களை உரித்தளிக்கும் பொறுப்புகளைக் கொண்ட ஒரு கிராம சபையை “இந்தியாவின் பஞ்சாயத்து முறை” தாபித்து, அதற்கு சுயவிருப்பத்தில் மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு முறைமையை உருவாக்குதல்' அதில் 50% வீதமான பெண்கள் பிரதிநிதித்துவத்தை உள்ளீர்த்தல்.”

வடக்கு கிழக்கில் 90,000கும் மேற்பட்ட கணவரை இலனதவர்கள் உள்ளார்கள். யுத்தத்தின் பின்னர் பெண்களின் மீதான இரட்டைச் சுமை அதிகரித்திருக்கிறது. பெண்கள், சிறுவர்கள் மீதான் பாலியல் பிரச்சினைகள் மோசமாகிவருகிறது. தீர்மானமெடுக்கும் அங்கங்கங்களில் பெண்களின் பங்களிப்பு அத்தியாவசியமாகியுள்ள நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெண்களின் பிரச்சினைகள் குறித்து ஒரு சொல் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில சிறப்புகள்
இம்முறை தேர்தலில் குறிப்பிட்டு கூறக்கூடியவை சில நிகழ்ந்துள்ளன. 1989இல் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட சுமேத ஜயசேன இலங்கையின் வரலாற்றில் கால் நூற்றாண்டுக்கும் மேல் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வரும் பெண்.

30 வருடங்களின் பின்னர் இம்முறை தம்பதிகள் தெரிவாகியுள்ளனர். தயா கமகே (அம்பாறை மாவட்டம்) மற்றும் அவரின் மனைவி அனோமா கமகே. இறுதியாக இதற்கு முன்னர் 1984இல் ஆர்.பி.விஜேசிறியும் அவரின் மனைவி லோகினி விஜேசிரியும் தெரிவாகியிருந்தனர். இதற்கு முன்னர் 1956, 1960, 1970 காலங்களில் இவ்வாறு தம்பதிகள் அங்கம் வகித்த வரலாறு இலங்கை பாராளுமன்றத்துக்கு உண்டு.

இம்முறை அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் தலதா அத்துகோரல. இரத்தினபுரி மாவட்டத்தில் அவர் 1,45,828 எடுத்த விருப்பு வாக்குகளைப் பெற்று ஐ.தே.க பட்டியலில் முதன்மை ஸ்தானத்தில் உள்ளார்.

சென்ற தடவை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இம்முறை தோல்வியுற்றார் ரோஸி சேனநாயக்க. பெண்கள்-குழந்தைகள் குறித்த விடயங்களில் அதிகம் தன்னை ஈடுபடுத்தி செயலாற்றியவர் ரோஸி. பல பெண்கள் அமைப்புகள் அவரை ஒரு நாயகியாகவே நோக்குகின்றனர். குறிப்பாக பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்த அவரால் தன் சொந்த பாராளுமன்ற கதிரையை காக்க முடியாது போனது. விருப்பு வாக்கு எண்ணுவதில் மோசடி நிகழ்ந்திருப்பதாக முறையீடு செய்திருக்கிறார். பல பெண்கள் அமைப்புகள் அவரை தேசியப் பட்டியலின் மூலமேனும் அங்கத்துவம் வழங்கும் படி மகஜர் கொடுத்ததுடன் போராட்டத்திலும் இறங்க தயாரானார்கள். ஆனால் கட்சியின் கட்டுப்பாடுகளை தான் மதிக்க வேண்டும் என்றும் இதனை விருப்பு குறித்த முறையீட்டை சட்டப்படி செய்கிறேன் வீதிப் போராட்டங்கள் எதுவும் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

காலி மாவட்டத்தில் தெரிவான பிரபல நடிகை கீதா குமாரசிங்க தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் நிலை தோன்றியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிகின்றன. அவர் ஏற்கெனவே சுவிஸ்சர்லாந்து பிரஜையாகவும் இருப்பது இந்த சட்ட சிக்கலை கொண்டுவந்துள்ளது. சட்டத்துக்கு அமைய இரட்டை பிரஜாவுரிமை உள்ள ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது விதி. இனி பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இம்முறை தெரிவாகியிருக்கும் பெண்களில் ஆண் உறவுமுறை அரசியல் செல்வாக்கு பின்னணியுடையோர் 9 பேர். புதிதாக 4 பேர் பாராளுமன்றம் தெரிவாகியுள்ளனர். ஏனைய 9 பேரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள். ஐ.தே.க சார்பில் தெரிவானோர் 6 பேர். ஐ.சு.ம.மு சார்பில் 5 பேரும், தமிழரசுக் கட்சி சார்பில் இருவரும் தெரிவாகியுள்ளனர். தமிழர்கள் இருவர். ஏனைய 11 பேரும் சிங்களவர்கள்.
(பார்க்க அட்டவணை)

தமிழ் பெண்கள்
நேசம் சரவணமுத்து 1932இல் கொழும்பு வடக்கு தொகுதியிலிருந்து தேசிய சபைக்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் முதலாவது தமிழ் பெண். அது மட்டுமல்ல நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது பெண்ணும் அவர் தான். தொடர்ந்து 10ஆண்டுகள் அவர் அங்கம் வகித்தார். அவருக்கு பின்னர் சுமார் அரை நூற்றாண்டு காலம் எந்த ஒரு தமிழ் பெண்ணும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை. 1980இல் ரங்கநாயகி பத்மநாதன் அவரது சகோதரன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பொத்துவில் தொகுதியிலிருந்து தெரிவானார். அதன் பின்னர் ராஜமனோகரி புலேந்திரனின் அவரது கணவர் 1983ஆம் ஆண்டு கொல்லப்பட்டதன் பின்னர் 1989இல் அவரை ஐ.தே.க வன்னி மாவட்டத்தில் போட்டியிடவைத்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக இரு தடவைகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி 11 வருடங்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.

சிவகாமி ஒபயசேகர என்பவர் 1965இல் மீரிகம தொகுதியில் தெரிவாகியிருக்கிறார். ஆனால் அவர் தமிழர் அல்ல. சிவகாமி என்கிற பெயர் தமிழ் அடையாள மயக்கத்தைத் தந்தபோதும் அவர் சிங்கள நிலப்பிரபுத்துவ பின்னணியைக் கொண்ட ஒரு மேட்டுக்குடி பெண்.

2004ஆம் ஆண்டு தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பத்மினி சிதம்பரநாதனும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தங்கேஸ்வரி கதிராமனும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தெரிவானார்கள். யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் நடந்த 2010 தேர்தலின் போது கூட்டமைப்பு இவர்கள் இருவருக்கும் வேட்பு பட்டியலில் இடம் கொடுக்கவில்லை. ஆகவே தங்கேஸ்வரி மகிந்தவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சேர்ந்து போட்டியிட்டார். பத்மினி சிதம்பரநாதன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்டார். இருவரும் அத்தேர்தலில் தோல்வியுற்றனர். ஆனால் அந்த தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐ.தே.க சார்பில் போட்டியிட்ட விஜயகலா மகேஸ்வரன் வெற்றி பெற்றார். விஜயகலாவின் கணவர் மகேஸ்வரன் (பா.உ) 2008ஆம் ஆண்டு துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டவர்.

இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை தமிழரசு கட்சியின் பெயரில் போட்டியிட்டது. யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தலா ஒரு பெண் வீதம் நான்கு பெண் வேட்பாளர்களை களமிறக்கியது. அனால் எவரும் தெரிவாகவில்லை. கூட்டமைப்புக்கு கிடைத்த இரு தேசிய பட்டியல் உறுப்பினர்களில் ஒன்றை ஒரு பெண்ணுக்கு வழங்கும்படி நிர்பந்தங்கள் வளர்ந்தன. தேசியப் பட்டியல் குறித்த உட்கட்சி பூசலில் அது சாத்தியமாகுமா என்கிற நிலையே இருந்தது. இறுதியில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இலங்கை நிர்வாக சேவையசை் சேர்ந்தவர்... உதவி திட்டமிடல் பணிப்பாளரான இவர். 1980களில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் புளொட் அமைப்பின் தொழற்சங்கப் பொறுப்பாளராக இருந்த வரதன் என்ற சிறீஸ்காந்தராஜாவின் மனைவி. மேலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்.

மலையகத்திலிருந்தோ, பறங்கி, மலே இனத்திலிருந்தோ இதுவரை எவரும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை. முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த இருவர் மட்டுமே தெரிவாகியுள்ளார்கள்.

முஸ்லிம் பெண்கள்
இலங்கையில் முஸ்லிம் பெண்களின் அரசியல் பங்களிப்பு வெகு குறைவாகவே இருக்கிறது. 1949 இல் ஆயேஷா ரவுப் கொழும்பு மாநகரசபைக்கு போட்டியிட்டு தெரிவானார். அத்தோடு அவர் 1952 இல் பிரதி மேயராகவும் தெரிவானார். முஸ்லிம் பெண்கள் கல்லூரியின் அதிபராகவும் அவர் அதே காலத்தில் கடமையாற்றி வந்த நிலையில் அவரின் அதிபர் பணியை மேற்கொள்வதற்காக அரசியலிலிருந்து ஒதுங்கினார்.

அஞ்ஞான் உம்மா 1999 இல் மாகாண சபையின் முதல் முஸ்லிம் பெண்ணாக ஜே.வி.பி சார்பில் தெரிவுசெய்யப்பட்டவர். அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு ஜேவிபியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு தெரிவானார். விமல் வீரவன்ச குழுவோடு சேர்ந்து ஜேவிபியிலிருந்து வெளியேறினார். பின்னர் 2012 இல் அவர் ஐ.தே.கவில் இணைந்துகொண்டார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் ஹெலிகொப்டர் விபத்தில் மரணமானதன் பின்னர் 2000 தேர்தலில் போட்டியிட்டு தெரிவானார் பேரியல் அஷ்ரப். பின்னர் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். முஸ்லிம் காங்கிரசின் இணைத்தலைவர் பதவியை சில காலம் வகித்தார். அஷ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கிய கூட்டமைப்பின் தலைமை பாத்திரத்தையும் ஆற்றினர். அதன் பின்னர் சிங்கப்பூருக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். இன்றைய நிலையில் உள்ளூராட்சி அங்கங்களுக்கு அப்பால் முஸ்லிம் பெண்களின் வகிபாகம் இல்லாமல் போயுள்ளது.

மலையகப் பெண்கள்
இதுவரை மலையகத்திலிருந்து எந்த ஒரு பெண்ணும் தெரிவானதில்லை. மாகாண சபை உள்ளூராட்சி மட்டத்தில் உறுப்பினர்களைக் காணக் கூடியதாக இருந்தாலும் அது திருப்தியளிக்கக்கூடியதல்ல. மலையகத்தில் தொழிற்சங்க செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க அளவு பெண்களின் பங்குபற்றல் இருந்தாலும் கூட அரசியல் விழிப்புணர்ச்சியை நோக்கி போதிய அளவு முன்னேறவில்லை.

பெண் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது பருவகால கோஷங்களாகிவிட்டுள்ளன. தேர்தல் காலங்களிலும், அரசியல் கோரிக்கைகளாக முனைப்பு பெரும் போதும் அவை பருவ கால வாக்குறுதிகளாக பரிமாணம் பெறுகிறது. அதன் பின்னர் காணாமல் போய்விடுகிறது. இதற்காக போராடும் சிவில் அமைப்புகள் புதிய தந்திரோபாயங்களை வகுப்பது அவசியம்.

அதிகார அசமத்துவத்தை சரி செய்வதற்காக குறிப்பிட்ட வகுப்பினருக்கோ, பாலினருக்கோ கோட்டா முறையினை பயன்படுத்தி வரும் பல நாடுகள் உலகில் உள்ளன. பெண்களின் பிரதிநித்துவத்தையும் அப்படித்தான் சரி செய்து வருகிறார்கள். ஆனால் இலங்கையில் பெண்களுக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்து 80 ஆண்டுகளின் பின்பும் அப்படிப்பட்ட குறைந்தபட்ச கோட்டாவுக்காக பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. தேர்தலின் பின்னர் ஏற்படும் இந்த போதாமைகளை சரி செய்வதற்காக தேசியப் பட்டியல் முறையை பயன்படுத்தும்படி கெஃபே போன்ற அமைப்புகள் தற்போது குரல் கொடுத்து வருகின்றன.

ஐ.நா வினால் 1979இல் கொணரப்பட்ட “பெண்களுக்கு எதிரான அனைத்து பாரபட்சங்களையும் இல்லாதொழிப்பதற்கான பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டிருக்கிறது. 1993 இல் பெண்கள் பிரகடனத்தை கொண்டுவந்தது. 2005இலும் பெண்களுக்கான சில சிறப்பு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அனைத்தும் கண் துடைப்பே. இதில் எதுவும் நடைமுறைப் படுத்தப்படவில்லை என்பதே யதார்த்தம்.

நன்றி - தினக்குரல்

பாராளுமன்றத்துக்கு இதுவரை தெரிவான பெண்களின் பட்டியல்

முதலாவது அரசுப்பேரவை (1931 - 1935)
  • திருமதி அட்லின் மொலமுறே (றுவன்வெல்ல) இடைத்தேர்தல்
  • திருமதி நேசம் சரவணமுத்து (கொழும்பு - வடக்கு)      இடைத்தேர்தல்

(திருமதி மொலமுறே சட்டமன்றத்துக்குத் தெரிவான முதலாவது பெண் ஆவார்)

இரண்டாவது அரசுப்பேரவை (1936 - 1947)
  • திருமதி நேசம் சரவணமுத்து (கொழும்பு - வடக்கு)     
முதலாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை)     (1947 - 1952)
  • திருமதி புளோரன்ஸ் சேனநாயக்க (கிரியெல்ல)     
  • திருமதி குசுமசிறி குணவர்தன (அவிசாவளை) இடைத்தேர்தல்
  • திருமதி தமறா குமாரி இலங்கரத்ன (கண்டி) இடைத்தேர்தல்
இரண்டாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை)  (1952 - 1956)

  • திருமதி குசுமசிறி குணவர்தன (அவிசாவளை)     
  • திருமதி டொரீன் விக்கிரமசிங்க (அக்குரஸ்ஸ)     
மூன்றாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை)     (1956 - 1959)
  • திருமதி விவியன் குணவர்தன (கொழும்பு - வடக்கு)     
  • திருமதி குசுமசிறி குணவர்தன (கிரியெல்ல)     
  • திருமதி விமலா விஜேவர்தன (மீரிகம)     
  • திருமதி குசுமா ராஜரத்ன (வெலிமட) இடைத்தேர்தல்

நான்காவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (மார்ச் - ஏப்ரல் 1960)
  • திருமதி விமலா கன்னங்கர (கலிகமுவ)     
  • திருமதி குசுமா ராஜரத்ன (ஊவா - பரணகம)     
  • திருமதி சோமா விக்கிரமநாயக்க (தெஹியோவிட்ட)     

ஐந்தாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (ஜூலை 1960 - 1964)
  • திருமதி குசுமா ராஜரத்ன (ஊவா - பரணகம)     
  • திருமதி சோமா விக்ரமநாயக்க (தெஹியோவிட்ட)     
  • திருமதி விவியன் குணவர்தன (பொரல்ல) இடைத்தேர்தல்

ஆறாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (1965 - 1970)
  • திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க (அத்தனகல்ல)     
  • திருமதி சிவகாமி ஒபேசேகர (மீரிகம)     
  • திருமதி விமலா கன்னங்கர (கலிகமுவ)     
  • திருமதி குசுமா ராஜரத்ன (ஊவா - பரணகம)     
  • திருமதி லிற்றீசியா ராஜபக்‍ஷ (தொடங்கஸ்லந்த)      இடைத்தேர்தல்
  • திருமதி மல்லிகா ரத்வத்த (பலாங்கொட) இடைத்தேர்தல்

ஏழாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபையும் முதலாவது தேசிய அரசுப்பேரவையும்     (1970 - 1972) / (1972 - 1977)
  • திருமதி குசலா அபயவர்தன (பொரல்ல)     
  • திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க (அத்தனகல்ல)     
  • திருமதி விவியன் குணவர்தன (தெஹிவளை - கல்கிஸ்ஸ)     
  • திருமதி தமறா குமாரி இலங்கரத்ன (கலகெதர)     
  • திருமதி சிவகாமி ஒபேசேகர (மீரிகம)     
  • திருமதி மல்லிகா ரத்தவத்த (பலாங்கொடை)     
இரண்டாவது தேசிய அரசுப்பேரவையும் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம்     (1977 - 1978) / (1978 - 1989)
  • திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க (அத்தனகல்ல)     
  • செல்வி ரேணுகா ஹேரத் (வலப்பன)     
  • திருமதி விமலா கன்னங்கர (கலிகமுவ)     
  • திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க (வாரியப்பொல)     
  • திருமதி சுனேத்ரா ரணசிங்க (தெஹிவளை)     இடைத்தேர்தல்
  • செல்வி சிறியாணி டேனியல் (ஹேவாஹெட்ட)      நியமனம்
  • திருமதி ரங்கநாயகி பத்மநாதன் (பொத்துவில் - 2வது)      நியமனம்
  • திருமதி தயா சேபாலி சேனாதீர (கரந்தெனிய)      நியமனம்
  • திருமதி லோகினி விஜேசிறி (ஹரிஸ்பத்து - 2 வது)      நியமனம்
  • செல்வி கீர்த்திலதா அபேவிக்கிரம (தெனியாய)      நியமனம்
  • திருமதி சமந்தா கருணாரத்ன (ரம்புக்கன)      நியமனம்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம்      1989 - 1994
  • திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க* - ஸ்ரீ.ல.சு.க. (கம்பஹா)
  • செல்வி சுமிதா பிரியங்கணி அபேவீர* - ஸ்ரீ.ல.சு.க. (களுத்துறை)     
  • திருமதி சுஜாதா தர்மவர்த்தன* - ஐ.தே.க. (புத்தளம்)     
  • திருமதி ரேணுகா ஹேரத்* - ஐ.தே.க. (நுவரெலிய)     
  • திருமதி சுமேதா ஜீ. ஜயசேன* - ஸ்ரீ.ல.சு.க. (மொனராகல)     
  • திருமதி சந்திரா கருணாரத்ன* - ஐ.தே.க. (பதுளை)     
  • திருமதி சமந்தா கருணாரத்ன* - ஐ.தே.க. (கேகாலை)     
  • திருமதி ஆர். எம். புலேந்திரன்* - ஐ.தே.க. (வன்னி)     
  • திருமதி சுனேத்ரா ரணசிங்க* - ஐ.தே.க. (கொழும்பு)     
  • திருமதி ஹேமா ரத்நாயக்க* - ஸ்ரீ.ல.சு.க. (பதுளை)     
  • திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க* - ஐ.தே.க. (குருணாகல)     
  • திருமதி ரூபா சிறியாணி டேனியல்** - ஐ.தே.க. (தேசியப்பட்டியல்)     
  • திருமதி தயா அமரகீர்த்தி*** - ஸ்ரீ.ல.சு.க. (காலி)     
* 15.02.1989 முதல்
** 13.12.1989 முதல்
*** 22.04.1993 முதல்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம்      1994 - 2000
  • திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க - பொ.ஐ.மு. (தேசியப்பட்டியல்)
  • திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க* - பொ.ஐ.மு. (கம்பஹா)
  • திருமதி சுமேதா ஜீ. ஜயசேன - பொ.ஐ.மு. (மொனராகலை)     
  • திருமதி. சுமித்ரா பிரியங்கணி அபயவீர - பொ.ஐ.மு. (களுத்துறை)     
  • திருமதி நிரூபமா ராஜபக்‍ஷ - பொ.ஐ.மு. (ஹம்பாந்தோட்டை)     
  • திருமதி பவித்ரா வன்னியாரச்சி - பொ.ஐ.மு. (இரத்தினபுரி)     
  • திருமதி சிறிமணி அதுலத்முதலி - பொ.ஐ.மு. (கொழும்பு)     
  • திருமதி அமரா பத்ரா திசாநாயக்க - ஐ.தே.க. (தேசியப்பட்டியல்)     
  • திருமதி ரேணுகா ஹேரத் - ஐ.தே.க. (நுவரெலிய)     
  • திருமதி ஆர். எம். புலேந்திரன் - ஐ.தே.க. (வன்னி)     
  • திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க - ஐ.தே.க. (குருணாகல)     
  • திருமதி ஹேமா ரத்நாயக்க - ஐ.தே.க. (பதுளை)     

* 1994 நவம்பர் 12 ஆந் தேதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிப் பதவிக்குத் தெரிவானார்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம்      2000 - 2001
  • கௌரவ (திருமதி) சுமேதா ஜீ. ஜயசேன - பொ.ஐ.மு. (மொனராகலை)     
  • கௌரவ பவித்ரா வன்னியாரச்சி - பொ.ஐ.மு. (இரத்தினபுரி)     
  • கௌரவ (திருமதி) பேரியல் அஷ்ரஃப் - பொ.ஐ.மு. (திகாமடுல்ல)     
  • திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க - ஐ.தே.க. (குருணாகல)     
  • திருமதி சுரங்கனி எல்லாவல - பொ.ஐ.மு. (இரத்தினபுரி)     
  • திருமதி சோமகுமாரி தென்னக்கூன் - பொ.ஐ.மு. (குருநணாகல்)     
  • திருமதி யுவோன் சிறியாணி பெர்னாண்டோ - பொ.ஐ.மு. (புத்தளம்)     
  • திருமதி சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க. (அநுராதபுரம்)     
  • திருமதி ஏ. டி. அன்ஜான் உம்மா - ம.வி.மு. (தேசியப்பட்டியல்)     

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம்      2001 - 2004
  • கௌரவ (திருமதி) அமரா பியசீலி ரத்நாயக்க - ஐ.தே.க. (குருணாகல்)     
  • திருமதி சுமேதா ஜி. ஜயசேன - பொ.ஐ.மு. (மொனராகலை)     
  • திருமதி பவித்திரா வன்னிஆரச்சி - பொ.ஐ.மு. (இரத்தினபுரி)     
  • திருமதி பேரியல் அஹ்ரப் - பொ.ஐ.மு. (திகாமடுல்ல)     
  • திருமதி ஏ. டி. அன்ஜான் உம்மா - ம.வி.மு. (கம்பஹா)     
  • திருமதி சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க. (அநுராதபுரம்)     
  • திருமதி சோமகுமாரி தென்னக்கூன் - பொ.ஐ.மு. (குருணாகல்)     
  • திருமதி மேரி லெரின் பெரேரா - ஐ.தே.க. (புத்தளம்)     
  • திருமதி மல்லிகா டி மெல் - பொ.ஐ.மு. (மாத்தறை)     
  • திருமதி சித்திரா சிறிமதி மந்திலக்க - ஐ.தே.க. (மஹநுவர)

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம்      2004 - 2010
  • கௌரவ (திருமதி.) சுமேதா ஜி. ஜயசேன - ஐ.ம.சு.மு (மொனராகலை)
  • கௌரவ (திருமதி.) பவித்திரா வன்னியாரச்சி - ஐ.ம.சு.மு (இரத்தினபுரி)
  • கௌரவ (திருமதி.) பேரியல் அக்ஷ்ரப் - ஐ.ம.சு.மு ( திகாமடுல்ல)     
  • திருமதி. அமாரா பியசீலி ரத்னாயக்க - ஐ.தே.க. (குருணாகல்)     
  • திருமதி. மேரி லெரின் பெரேரா - ஐ.தே.க. (புத்தளம்)     
  • திருமதி. சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க. (அநுராதபுரம்)     
  • திருமதி. சுஜாதா அழகக்கூன் - ஐ.ம.சு.மு (மாத்தளை)     
  • திருமதி. தளதா அத்துகொறளை - ஐ.தே.க. (இரத்தினபுரி)     
  • திருமதி. பத்மினி சிதம்பரநாதன் இ.த.க யாழ்ப்பாணம்)     
  • செல்வி.தங்கேஸ்வரி கதிர்காமன் இ.த.க (மட்டக்களப்பு)     
  • திருமதி. ஏ. டி. அன்ஜான் உம்மா - ஐ.ம.சு.மு (கம்பஹா)     
  • திருமதி. நிரூபமா ராஜபக்ச - ஐ.ம.சு.மு (அம்பாந்தோட்டை) (நவம்பர் 25 2005 இலிருந்து)
  • திருமதி ரேணுகா ஹேரத் - ஐ.தே.க. (நுவரெலிய) 30 ஜனவரி 2006 இலிருந்து

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் 2010 
  • கௌரவ (திருமதி.) சுமேதா ஜி. ஜயசேன - ஐ.ம.சு.மு (மொனராகலை)
  • கௌரவ (திருமதி.) பவித்ரா தேவி வன்னிஆரச்சி - ஐ.ம.சு.மு (இரத்தினபுரி)     
  • திருமதி. நிரூபமா ராஜபக்ஷ - ஐ.ம.சு.மு (அம்பாந்தோட்டை)     
  • திருமதி. சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க. (அநுராதபுரம்)     
  • திருமதி. தலதா அதுகோரள - ஐ.தே.க. (இரத்தினபுரி)     
  • திருமதி. (டாக்டர்) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே - ஐ.ம.சு.மு (கம்பஹா)     
  • திருமதி. ஸ்ரீயாணி விஜேவிக்கிரம - ஐ.ம.சு.மு (திகாமடுல்ல)     
  • திருமதி. ரோஸி சேனாநாயக்க - ஐ.தே.க. (கொழும்பு)     
  • திருமதி. உபேக்ஷா சுவர்ணமாலி - ஐ.தே.க. (கம்பஹா)     
  • திருமதி. விஜயகலா மகேஸ்வரன் - ஐ.தே.க. (யாழ்ப்பாணம்)     
  • திருமதி. மாலினீ பொன்சேக்கா - ஐ.ம.சு.மு
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் 2015 
  • சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளை - கம்பஹா (UPFA)
  • விஜயகலா மகேஸ்வரன் - யாழ்ப்பாணம் (UNP)
  • ஹிருனிக்கா பிரேமச்சந்திர - கொழும்பு (UNP)
  • சுமேத குணவதி ஜயசேன - மொனராகலை (UPFA)
  • கீதா குமாரசிங்க - காலி (UPFA)
  • ரோகினி குமாரி கவிரத்ன - மாத்தளை (UNP)
  • தலதா அத்துகொரலை - இரத்தினபுரி (UNP)
  • பவித்ரா வன்னியாராச்சி - இரத்தினபுரி (UPFA)
  • துசித்தா விஜேமான்ன - கேகாலை (UNP)
  • சிறியானி விஜேவிக்கிரம - அம்பாறை (UPFA)
  • சந்திராணி பண்டார - அனுராதபுரம் (UPFA)
  • சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா - யாழ்ப்பாணம் (ITAK)
  • அனோமா கமகே - அம்பாறை (UNP)

பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற மலையக தமிழ் பிரதிநிதிகள்


எட்டாவது பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலில் மலையகத்திலிருந்து மொத்தமாக எட்டு தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள னர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரான பி.திகாம்பரம், அதே கட்சியைச் சேர்ந்த எம். திலகராஜ், மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் வே.இராதா கிருஷ்ணன் ஆகிய மூவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட ஊவா மாகாண தமிழ்க் கல்வியமைச்சர் வடிவேல் சுரேஷ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உபதலைவர் அ.அரவிந்தகுமார் ஆகியோரும் கண்டி மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணி உபதலைவர் வேலுகுமார் ஆகியோரும் இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மலையக தமிழ் உறுப்பினர்களாவர்.

நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட பி. திகாம்பரம் 1,01,528 விருப்பு வாக்குகளை பெற்று முதலிடத்துக்கு வந்துள்ளார். வே. இராதாகிருஷ்ணன் 87,375 விருப்பு வாக்குகளையும் எம். திலகராஜ் 67, 761 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஐ.ம.சு.கூ. சார்பில் போட்டியிட்ட இ.தொ.கா. பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் 61,897 வாக்குகளையும் அதன் தலைவர் முத்து சிவலிங்கம் 45,352 வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர்.

பதுளை மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட அ.அரவிந்தகுமார் 53,741 வாக்குகளையும் வடிவேல் சுரேஷ் 52,378 வாக்குகளையும் கண்டி மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட வேலுகுமார் 52,556 வாக்குகளையும் பெற்று வெற்றியடைந்துள்ளனர்.

வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பற்றிய சிறு குறிப்பு வருமாறு:

பழனி திகாம்பரம்
(தலைவர் தொ.தே.ச) (பிறப்பு 10.01.1967) மலையக மக்கள் முன்னணியினூடாக 2004 ஆம் ஆண்டு மத்திய மாகாண சபையின் உறுப்பினரான இவர், 2009 ஆம் ஆண்டு ஐ.தே.க. மூலம் மீண்டும் மத்திய மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார். மலையகத்தின் பழம்பெரும் தொழிற்சங்கங்கமான தொழிலாளர் தேசிய சங்கத்தைப் பொறுப்பேற்று அதனை மீண்டும் கட்டியெழுப்பினார்.

அதன் தலைவராக தொடர்ந்து செயற்பட்டு வரும் அவர் 2010 ஆம் ஆண்டு ஐ.தே.க. வினூடாக பாராளுமன்றத்துக்குச் சென்றார். அதன் பின்னர் கடந்த மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் இணைந்து கொண்ட அவர், சிறிது காலம் பிரதியமைச்சராகவும் பணியாற்றினார். கடந்த வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினார். அதன் பின்னர் அமைந்த தேசிய அரசில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவியேற்றார்.

வேலுசாமி இராதாகிருஷ்ணன்
(அரசியல் பிரிவு தலைவர் ம.ம.மு) பிறப்பு: 01–08–1952 இ.தொ.கா. வினூடாக அரசியலில் பிரவேசித்த இவர், 1991 ஆம் ஆண்டு நுவரெலியா பிரதேச சபைக்கு தெரிவாகி அதன் தலைவராக செயற்பட்டார். 2004 ஆம் ஆண்டு மத்திய மாகாண சபை உறுப்பினராக தெரிவானதுடன், 2005 முதல் மத்திய மாகாண அமைச்சராக பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு ஐ.ம.சு. கூ ஊடாக மத்திய மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டதுடன், மீண்டும் தமிழ்க் கல்வியமைச்சராக நியமனம் பெற்றார். 2010இல் பாராளுமன்ற உறுப்பினரானார். பின்னர் அவர் இ.தொ.கா. விலிருந்து வெளியேறியதுடன், மலையக மக்கள் முன்னணியில் இணைந்து அதன் அரசியல் பிரிவு தலைவரானார். பின்னர் ஜனாதிபதி மைத்திரிபாலவின் நல்லாட்சியில் இணைந்து கொண்ட அவர் கல்வி இராஜாங்க அமைச்சரானார்.

மயில்வாகனம் திலகராஜ்
(தொ.தே.ச) பிறப்பு: 29–09–1973 தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பிரிவான தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர். கவிஞ ரும் சமூக செயற்பட்டாளருமான இவர் ஒரு பட்டதாரி ஆவார். ஆசிரியரும் வணிக நிறுவனங்களின் ஆலோசகருமாவார்.

ஆறுமுகன் இராமநாதன் தொண்டமான்
(பொதுச்செயலாளர் இ.தொ.கா.) பிறப்பு: 29–05–1964
1994 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற பிரவேசம். தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சரவை அமைச்சராகவும் பணியாற்றியவர். 1996 இல் சௌமியமூர்த்தி தொண்டமான் காலமான பின்னர் இ.தொ.கா. வின் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டு செயற்பட்டு வருகிறார்.

முத்து சிவலிங்கம்
(தலைவர் இ.தொ.கா.) பிறப்பு: 20–07–1943 இ.தொ.கா. வின் சிரேஷ்ட உறுப்பினரான இவர் தற்போது இ.தொ.கா. வின் தலைவராக செயற்பட்டு வருகிறார். 1994 ஆம் ஆண்டு முதல் 2008 வரை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர். அமைச்சராகவும் சேவையாற்றினார்.
2010 ஆம் ஆண்டு தேசிய பட்டியல் எம்.பி. யாக நியமிக்கப்பட்டு பிரதியமைச்சராகவும் கடமையாற்றியவர்.

வடிவேல் சுரேஷ்
பிறப்பு: 12–05–1971
இ.தொ.கா. வினூடாகவே அரசியல் பிரவேசம். 2004 இல் ஐ.தே.க. மூலம் பதுளையிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான இவர், சுகாதார பிரதியமைச்சராக பதவி வகித்தார். 2014 இல் ஐ.ம.சு.கூ. ஊடாக ஊவா மாகாண சபைக்கு தெரிவான இவர், அம்மாகாணத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட ஐ.தே.க. அரசில் மாகாண தமிழ் கல்வியமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அருணாசலம் அரவிந்தகுமார்
(பொருளாளர் ம.ம.மு) பிறப்பு: 17.11.1954
மலையக மக்கள் முன் னணியின் பொருளாளர். ஊவா மாகாண சபையின் உறுப்பினராக 2004 இல் தெரிவு செய்யப்பட்டார். கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போதும் வெற்றி கிடைக்கவில்லை.

வேலுகுமார்
(உபதலைவர் ஜ.ம.மு)
ஆசிரியரான இவர் மலை யக மாணவர்களுடன் கல்வி மற்றும் சமூக விடய ங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஜனநாயக மக் கள் முன்னணியின் உபத லைவரான இவர் கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - வீரகேசரி

பெருந்தோட்ட பாடசாலைக்கான ஆசிரியர் நியமனத்தில் பல குளறுபடிகள் மக்கள் ஆசிரியர் சங்கம்


பெருந்தோட்ட பாடசாலைக்கு வழங்கப்பட இருந்த 3026 ஆசிரியர் உதவியாளர்கள் நியமனங்களில் 1688 நியமனங்கள் மாத்திரமே 08.05.2015ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளன. இதில் மீதமுள்ள நியமனங்கள் வழங்கப்படுமா, அப்படி வழங்கப்படுமாயின் எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பில் கல்வி அமைச்சோ கல்வி இராஜாங்க அமைச்சோ உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. அத்தோடு போட்டிப் பரீட்சையில் சித்தியெய்தி நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகள் பரீட்சையில் பெற்ற புள்ளிகள் இதுவரை வெளியிடப்படாமை நியமனங்களின் வெளிப்படைத் தன்மை பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளது. நியமனங்கள் வழங்குவதற்கு முன்னர் புள்ளிகள் வழங்கப்படும் என்று கூறியிருந்த போதும் அதுவும் இடம்பெறவில்லை. ஆசிரிய உதவியாளர்கள் என்ற பேரில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு வெறும் ரூபா. 6000ஃஸ்ரீ மாத்திரமே மொத்த மாத கொடுப்பனவாக வழங்குகின்றமை எவ்வகையிலும் ஏற்று கொள்ளப்பட முடியாது. ஆசிரியர் உதவியாளர்கள் என்ற இந்த நியமனமானது ஆசிரியர் சேவை பிரமாண குறிப்பின்படி ஆசிரியர் சேவையின் தரம் 3-iறை;கு தேவையான தகைமைகள் கொண்டவர்களுக்கு ஆட்சேர்ப்பிற்கு விதிக்கப்பட்ட முறைகளை பின்பற்றியே வழங்கப்படுகிறது பொதுவாக ஆசிரியர்கள் செய்யும் அதே பணிகளையும் கடமைகளையுமே இவர்களும் செய்ய போகின்றனர். எனினும் அவர்களுக்கான தொழில் கௌரவம் மறுக்கப்பட்டுள்ளது. எனவே நியமனம் பெறுபவர்கள் ஆசிரியர் சேவை தரம் 3- ஐஐற்கு உள்ளீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு இடம்பெறாவிடின் அது சட்ட விரோதமானதும் பாரபட்சமானதுமாகும். எனவே இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க நியமனம் பெற்றவர்களும் நியமனம் பெற இருப்பவர்களும் ஆசிரியர்களும் தயாராக வேண்டும் என்று மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். நெல்சன் மோகன்ராஜ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட தமிழ் மொழிமூல பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட நியமனம் தொடர்பாக வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

கல்வியில் பின்தங்கியுள்ள சமூகம் என்ற வகையில் விசேட எற்பாடுகளின் அடிப்படையில் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்படும் ஆசிரியர் நியமனங்கள் மலையக அரசியல் தலைவர்கள் என்போரால் தாம் பெற்றுக் கொடுத்ததாக கூறப்பட்டு வருகின்றது. எனினும் பெருந்தோட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நீண்டகால நோக்கில் தீர்க்கும் விதமாமான ஏற்பாடுகளுடன் ஆட்சேர்ப்பிற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முடியாத நிலையிலேயே அரசியல் தலைமைகளின் வழிகாட்டலும் அதிகாரிகளின் செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன. பெருந்தோட்ட பாடசாலைகளுக்க நியமனம் பெறுவதில் அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கும் அதேநேரம் பெருந்தோட்டங்களில் உள்ள தகுதியுடையோருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான விளக்கமும் அறிவும் அற்றவர்களாகவே இந்த நியமனம் எங்கள் ஆட்சி காலத்தில் வந்தது என மார்தட்டிக் கொள்ளும் மலையக தலைமைகள் அன்று இருந்தனர். அத்தோடு ஆசிரியர்களுக்கான உரிய கௌரவத்தை வழங்கும் வகையில் சம்பள உரிமைகளை உறுதி செய்யவும் அவர்கள் செயற்படவில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் மலையக அரசியல் தலைமைகளும் இதில் அசமந்தமாகவே செயற்பட்டு வருகின்றனர்.

எனவே, பெருந்தோட்ட தமிழ் பாடசாலைகளுக்கு வழங்கப்பட வேண்டிய மிகுதி ஆசிரியர் நியமனங்களை எவருக்கும் பாரபட்சம் இன்றியும் பெருந்தோட்ட தமிழ் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நீண்ட கால அடிப்படையில் நிவர்த்திக்கும் வகையில் வழங்க உரிய நடவடிக்கையை கல்வி மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சு எடுக்க வேண்டும். ஆசிரிய உதவியாளர்கள் என்றிலாமல் நியமனம் வழங்கப்பட்டுள்ள, வழங்கப்படவுள்ள அனைவரையும், 2007ஆம் ஆண்டு நியமனம் போன்று ஆசிரியர் சேவை தரம் 3-iறை;கு அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கந்தையா ஆஷோக்கின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன்

மலையக மக்களின் வெற்றியும் வெறுப்பும் - கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்


மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மீண்டும் ஒரு முறை காத்திரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாகத் தெரிவாகியுள்ள 8 பேர்களில் மல்லிகைப்பூ திலகரின் வருகை ஒரு புதிய வரவாகும். மலையக மக்கள் தாம் எந்தளவில் விவேகமாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் நடந்து கொண்டனரோ அதைவிட ஒருபடி முன்னோக்கிச் சென்று தாங்கள் யார் என்பதை 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளனர். ஒரு பக்கம் தமது முழுமையான விருப்பை பதிவு செய்துள்ள மலையக மக்கள் வெறுக்கத்தக்கவர்கள் யார் என்பதையும் யாருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு "விருப்பு, வெறுப்பு" எத்தகைய பின்னணியில் உருவாகியது என்பது பற்றிய சில விடயங்கள் உள்ளடங்கலாக இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலில் என்னென்ன விடயங்களில் மக்கள் விருப்பமுடையவர்களாக காணப்பட்டனர் என்பதனை அவதானிக்கலாம். விருப்பம் காட்டிய முதலாவது விடயம், அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு தனித்தனி வீடுகள் கட்டுவதற்கு காணிகள் வழங்குவதை அங்கீகரித்தமையாகும். அமைச்சர் திகாம்பரம் கடந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் சுமார் 400 வீடுகள் வரையில் கட்டி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தனி வீடுகள் அமைத்துக்கொடுப்பதற்கான ஆரம்ப முயற்சிகள் மேற்கொண்டமை மக்களின் மகிழ்ச்சிக்கான முதன்மைக் காரணமாகும்.

இரண்டாவது, கட்சி மற்றும் தொழிற்சங்க வேறுபாடுகள் இருந்தாலும் இவர்கள் யாவரும் தமிழர் முற்போக்கு கூட்டணி என்ற அமைப்பில் ஒரு சமூகமாக செயற்பட்டனர். தமக்கிடையேயான வேறுபாடுகளை மறந்து மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்திருப்பது மக்களிடம் பெருவரவேற்பை ஏற்படுத்தியது. இவர்கள் தாம் ஒன்றிணைந்திருந்ததுடன் மக்களிடம் நெருங்கி உறவாடியவர்களாகவும் காணப்பட்டனர். இதுபற்றி மலையகத்திலுள்ள பலரிடம் விசாரித்தபோது தமிழர் முற்போக்குக் கூட்டணியினரை தமக்குரிய பலமான அமைப்பாகக் கருதுவதாக அறியக்கிடைத்தது. இதன் உறுப்பினர்கள் வழக்கத்திற்கு மாறாக மக்கள் நட்புடனான உறவுகளில் அக்கறை காட்டியதுடன் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர் என்பதும் முக்கியமாக எடுத்துக்கூறப்பட்டது.

மூன்றாவது விடயம், 1000 ரூபா சம்பள போராட்டத்தில் ஏற்பட்ட ஏமாற்றமும் அதனாலான பாதிப்புமாகும். 1000 ரூபா சம்பளம் கேட்டு துரைமார் சங்கத்துடன் பேரம் பேசிக் கொள்ள முடியாத நிலையில் மக்களை சம்பள அதிகரிப்பு போராட்டத்திற்கு தூண்டி விட்டனர். மெதுவாக வேலை புரியும்படி தூண்டப்பட்டனர். இரண்டு வாரங்களாக நீடித்த இந்தப் போராட்டம் எந்தவிதமான பயனையும் தரவில்லை. மாறாக மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தில் இறங்கி வேலை செய்தவர்களுக்கு சம நாட் சம்பளம் வழங்கப்படவில்லை. இதன் விளைவாக கடந்த மாதம் கிடைக்கப்பெற்ற சம்பளத்தில் சுமார் 6000 ரூபா முதல் 10000 ரூபா வரையிலான சம்பளத்தை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இழந்தனர். இத்தகைய நடவடிக்கைகள் மக்களிடம் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது. கம்பனிகளின் போக்கு, தொழிலாளர்களின் வாழ்க்கை என்பனவற்றை துச்சமாகக் கருதி அவர்களின் வாழ்வாதாரத்துடன் விளையாட முயல்வது இனிமேலும் ஒரு வழக்கமான நிகழ்ச்சியாக மலையகத்தில் இருக்க கூடாது என்பது மக்களின் முடிவாகவும் காணப்பட்டது.

மலையக மக்களிடையே ஒரு புதிய அரசியல் கலாசாரம் வளர்ச்சியடைந்துள்ளது என்பதையும் அவதானிக்க முடிந்தது. பொதுவாக தொலைக்காட்சி மூலம் மக்களிடம் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதையும், அதிகாரத் தொனியில் உரையாடுபவர்களுக்கே மக்கள் தமது தலைமைப்பதவியை வழங்குவர் என்ற முடிவு மலையக மக்கள் மத்தியில் பிரயோகப்படுத்தப்பட்டதாக இல்லை. இப்போது வளர்ந்துள்ள தொலைத்தொடர்புகள், தொலைக்காட்சிகளில் "ஒளி” மற்றும் "ஒலி” பரப்பப்படும் விடயங்களே மக்களிடம் செல்வாக்கு செலுத்தும். அதன்படியே மக்கள் தமது நாளாந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்வர் என்பன நடைமுறையில் இல்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் தெளிவாகப் புலப்படுத்தின. மக்கள் தாம் கலந்துரையாடி நேரில் கண்டு அனுபவித்த துயரங்களையும் அனுபவங்களையும் கொண்ட ஒரு திரட்சியாக தமது வாக்குப்பலத்தை பயன்படுத்தியுள்ளனர்.

ஒரு புறத்தில் மக்கள் மிகவும் பொறுப்புடன் "யுத்த காலத்திற்கான பாதுகாப்பான நிலைவரம் என்ன?” என்பதை வலியுறுத்திய மக்கள் இப்போது வாழ்வாதாரம் அபிவிருத்தி என்ற விடயத்திற்கு மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் இனிமேலும் நாளாந்தம் தோட்டங்களில் வேர் கொள்ளும் தொழில்களை நம்பியதாக இருக்க முடியாது. அவர்கள் சுயதொழில் நாடி விடுதலை பெற வேண்டும். காலம் உருவாகி விட்டது. இப்போதைய அரசியலில் இவர்களிடம் பொருளாதார விடுதலைக்குத் தேவையான திட்டங்களை வகுத்து அரசாங்கத்திடம் சமர்ப்பித்து மலையக மக்களும் இந்நாட்டில் வாழ்கின்ற சராசரி பொருளாதார மனிதர்கள் என்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டிய கடமை ஆர்வமுள்ள யாவரிடமும் காணப்பட வேண்டும்.

வீடுகளுக்கு PHDIஐ நம்பியும், சம்பளம் என்றால் கூட்டு ஒப்பந்தம், பேச்சுவார்த்தை வரும் வரை காத்திருக்க வேண்டும் என்பதும், சுகாதார நலன்களுக்கு "தோட்டத்துரை" என்ற நிலைவரத்தில் மக்கள் முன்னேற் றம் கண்டவர்களாக இல்லை. தேசிய வீடமைப்பு திட்டத்தில் தொழிலாளர்களுக்கான வீடுகள், தேசிய வரவு செலவு திட்டத்தில் தொழிலாளர்களின் சம்பளம் என்ற நிலைக்கு மக்களை நடத்திச் செல்லும் யுகம் ஒன்றை உருவாக்கும் பணியில் யாவரும் ஈடுபடுவதே மலையக மக்களின் மறுமலர்ச்சிக்கான அடிப்படை வேலைத்திட்டமாக அமையும்.

தேசிய திட்டத்தில் உள்வாங்கப்படாத எந்தவொரு அபிவிருத்தி வேலைத்திட்டமும் மலையக மக்களுக்கு எவ்வித பயனையும் தந்துவிடப் போவதில்லை என் பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

நன்றி - வீரகேசரி

இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் மத்திய குழு கூட்டம்


இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டு ஆறுமாதங்கள் கடந்துவிட்ட வரலாற்றுப் பயணத்தின் இடைவெளியில் ‘‘சம்மேளனத்தின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வும் - எதிர்காலத் திட்டங்களை வகுத்தலும்” என்ற தொனிப்பொருளிலான மத்திய குழு கூட்டம் 29/08/2015 அன்று ஹட்டன் டைனி (Dinie Restaurant) உணவகத்தில், திரு. லெனின் மதிவானத்தின் தலைமையில் நடைப்பெறவுள்ளது. கூட்ட அறிக்கையை பொதுச் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன் வாசிப்பார். நிதி விடயங்கள் குறித்த விடயங்களை பொருளாளர் எஸ். மணாளன் சமர்ப்பிப்பார். இந்நிகழ்வில் சம்மேளனத்தின் ஆலோசகர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். 

சிங்கள பௌத்த மேனியாவும், சமஷ்டி போபியாவும் - என்.சரவணன்


ஏறத்தாழ சகல பிரதான தேர்தல் பிரசார மேடைகளிலும் தவறாத பேசுபொருளாக சமஷ்டி குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்திருந்தத்தை கண்டிருப்பீர்கள்.

சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு சமஷ்டி குறித்த பேரச்ச வெருண்ட உணர்வு (phobia) இனவாதிகளால் வளர்க்கப்பட்டு இன்று தாமும் அதற்குள் அகப்பட்டு அந்த நோய்க்கு இலக்காகி உள்ளனர் என்றே கூறவேண்டும். வெறித்தனமான சிங்கள பௌத்த மேலாதிக்க உணர்வென்பது (mania) ஏனைய இனங்களின் மீதான வெறுப்புணர்ச்சியையும், காழ்ப்புணர்ச்சியையும் மிகையாக வளர்த்தெடுத்து அதுவும் ஒரு தீரா நோயாகவும், பரப்பும் நோயாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

சமஷ்டி பற்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுட்டியிருந்ததைத்தான் சர்ச்சைக்குள்ளாக்கியிருந்தது பேரினவாத தரப்பு. முக்கிய சிங்கள தலைவர்களின் கருத்துக்களைக் கவனியுங்கள்.
பண்டாரநாயக, சோல்பரி பிரபு, டட்லி சேனநாயக்க

சமஷ்டியின் வரலாறு
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது அது தொடங்கப்பட்ட 2001ஆண்டிலிருந்தே சமஸ்டியை விட அதிகமான சுயாட்சி உள்ளடக்கத்தைக் கொண்ட சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தித்தான் வந்துள்ளது. கூட்டமைப்பானது இந்த தேர்தலிலும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேரிலேயே அதே வீடு சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. தமிழரசுக் கட்சியை எடுத்துக்கொண்டால் ஆரம்பம் தொட்டே அதன் தலையாய சுயாட்சி தீர்வாக சமஷ்டியை வலியுறுத்தி வந்திருக்கிறது. தமிழில் இலங்கை “தமிழ்+அரசு” கட்சி என்று அழைக்கப்படும் அதே வேளை ஆங்கிலத்தில் «Federal party» (சமஸ்டிக் கட்சி) என்றே எப்போதும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. 1970 ஆண்டு பொதுத் தேர்தலில் கூட சமஷ்டி அரசியலமைப்பை முன்வைத்தே போட்டியிட்டது.  1977இல் வடக்கு கிழக்கு பகுதிகளில் தனித் தமிழீழத்துக்கான மக்கள் ஆணை பெறப்பட்டது. 

1925 இலேயே இலங்கைக்கு ஏற்ற சரியான அரசியல் முறைமை சமஷ்டி தான் என்று முதன்முறை அறிவித்தவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க. “முற்போக்கு தேசிய கட்சி” (Progressive national party) என்கிற ஒரு கட்சியையும் ஆரம்பித்து அந்த கட்சியின் கொள்கையாக சமஷ்டி எப்படி அமைய வேண்டும் என்பதையும் அறிவித்தவர் அவர். “நமது நாட்டில் வாழும் வெவ்வேறு இனங்களை கருத்திற்கொள்கின்ற போது அதற்குரிய தீர்வு சமஷ்டி அரசியலமைப்பு முறையே” என்று அந்த கட்சியின் திட்டத்திலும் கூறப்பட்டிருந்தது.

டொனமூர் ஆணைக்குழுவுக்கும் அதன் பின்னர் சோல்பரி ஆணைக்குழுவுக்கும் கூட பல அமைப்புகள், சமஷ்டியை முன்மொழிந்திருக்கின்றன. பண்டாரநாயக்கவின் “முற்போக்கு தேசிய கட்சி”  “மலைநாட்டு தேசிய சபை” (உடரட்ட ஜாதிக்க சபாவ) போன்ற கட்சிகள் சமஷ்டியை வலியுறுத்திய வேளை தமிழர் தரப்பிலிருந்து சமஷ்டிக்கு எதிர்ப்பு தான் கிளர்ந்தன. அப்போது ஹன்டி பேரின்பநாயகத்தின் தலைமையிலான “யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்” கூட சமஷ்டியை எதிர்த்ததுடன் ஐக்கிய இலங்கையை வலியுறுத்தியது.

தமிழ் காங்கிரஸ் அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்த மயில்வாகனம் நாகரத்தினம் என்பவர் சோல்பரி ஆணைக்குழுவுக்கு சமஷ்டி திட்டம் பற்றி 30.01.1945 அன்று மனு கொடுத்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரை பணி நீக்கம் செய்த மூவரில் இருவர் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் மற்றவர் தந்தை செல்வா. ஆனால் அதே தந்தை செல்வா காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று 18.12.1949 அன்று புதிய கட்சி தோற்றுவித்தபோது அக்கட்சிக்கு சமஷ்டி கட்சியென்றே ஆங்கிலத்தில் பெயரிட்டார்.

பண்டாரநாயக்கவும்  செல்வநாயகமும் கைகுளுக்கிக்கொள்கின்றனர்
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும்  இடையில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையின் போது இனவாத சலசலபுக்களுக்கும் மத்தியில் சமஷ்டி முறைமைக்கு இணக்கம் எட்டப்பட்டிருந்தது. அது  முழு வரைபை எட்டுவதற்கு முன்னர் பேச்சுவார்த்தை தோல்வி கண்டது.

2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூட மேலும் வலிமையான சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இப்படி குறிப்பிடப்பட்டிருந்தது

“தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம் – தேசியம் – தன்னாட்சி - சுயநிர்ணய உரிமை - ஆகிய மூலாதாரக் கொள்கைகளை ஏற்று அவற்றின் அடிப்படையில் தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.”

2005இல் வவுனியாவில் நடத்தப்பட்ட பேராளர் மாநாட்டிலும் அதே வரி அப்படியே பிரகடனப்படுத்தப்பட்டது.

யுத்தத்தின் பின்னர் கூட்டமைப்பு அந்த வரிகளை அப்படியே கைவிட்ட போதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது தமிழ் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கைகளில் அப்படியே அந்த வரிகளை தொடர்வதை காணக்கூடியதாக இருக்கிறது. ஆனாலும் தென்னிலங்கை இனவாதிகளின் கண்காணிப்புக்குள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பே இலக்கு வைக்கப்பட்டிருப்பதால். அவர்களின் மீது தான் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஆகவே “சமஷ்டி” என்கிற பேசுபோருளோ, அந்த பதமோ இலங்கையின் அரசியலுக்குள் இன்று நேற்று வந்ததல்ல. ஆனால் யுத்தத்தின் பின்னர் அது பேசப்படக்கூடாத ஏறத்தாள தடை செய்யப்பட்ட சொல்லைப் போல ஆக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞாபனம் என்ன சொல்கிறது
கூட்டமைப்பு சமஷ்டி விடயத்தில் பிரக்ஞையுடன்தான் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியிருக்கிறதா என்பது தனியான ஆய்வுக்குரிய ஒன்று. ஆனால் 1977 சொற்களைக் கொண்ட அந்த விஞ்ஞாபனத்தில் இரண்டே இடத்தில் மட்டுமே சமஷ்டி குறித்து பேசப்படுகிறது. அதில் ஒன்று ஒஸ்லோ உடன்படிக்கையை நினைவூட்டுவது. இரண்டாவது தமது நிலைப்பாட்டை அறிவிப்பது. அந்த நிலைப்பாடு இது தான்.


இவ்வளவு தான். “முன்னர் இருந்தவாறு” என்று முன்னர் இருந்திராத ஒன்றை ஏன் குறிப்பிடுகிறார்கள் என்பதில் தெளிவில்லை. ஆனால் “தொடர்ந்து” என்பது போன்ற பதப்பிரயோகங்களைக் கவனித்தால் அது அழுத்தமான ஒரு சமஷ்டிக் கோரிக்கை அல்ல என்பது புலப்படும். ஆனால் தென்னிலங்கை சிங்களக் கட்சிகள் இதைத்தான் ஊதிப்பெருப்பித்து இனவாத பிரசாரத்துக்கு திசை திருப்பப்பட்டுள்ளது.

உஷ்... தணிக்கை!
யுத்தத்தின் பின்னர் தமிழர் அரசியலின் பேரம் பேசும் ஆற்றல் குரல்வளை நெரிக்கப்பட்ட நிலைக்கு உள்ளானது. தமிழர் அரசியல் அதற்குரிய தகுதியை இழந்துவிட்டதாகவும், ஓட்ட நறுக்கப்பட்டுவிட்டதாகவும் நம்புகிறது பேரினவாதம். அரசியல் உரிமைகள் பற்றி ஆகக் குறைந்த பட்ச விடயங்களைகூட செவிசாய்க்க மறுக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளது. அதுமட்டுமன்றி இன உரிமை குறித்த சொல்லாடல்களைக்கூட கடும் தொனியில் எதிர்த்து, எச்சரித்து வாயை மூடச்செய்யும் நடவடிக்கை தொடர்கிறது. அப்படியான சொல்லாடல்கள் தமிழ் இனவாத சொல்லாடல்களாகவும், தேசதுத்ரோக சொல்லாடலாகவும் புனையப்பட்டு ஈற்றில் பயங்கரவாத முயற்சியாக சித்தரிக்கப்பட்டு விடுகிறது. எனவே இந்த “பயங்கரவாத” சொல்லாடல்களை தமிழர் அரசியல் போக்கு சுயதணிக்கைக்கு உள்ளாக்கிவிடுகிறது. அடக்கி வாசிக்க எத்தனிக்கிறது. அந்த பதங்களுக்கான மாற்றுப் பதங்களை தேடியலைய விளைகிறது. அல்லது அவற்றை தவிர்த்து “ராஜதந்திர” சொல்லாடல்களை கையாள நிப்பந்திக்கப்படுகிறது.

இனி அப்படி செய்ய மாட்டோம் பேச மாட்டோம் என்று சிறுபிள்ளை மன்றாட வேண்டியிருக்கிறது, சாமி சத்தியம் செய்ய வேண்டியிருக்கிறது. இரங்கி ஒப்புவிக்க வேண்டியிருக்கிறது. நிரூபிக்க வேண்டியிருக்கிறது.

ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் போது தமிழீழத்துக்கு மாற்றாக சமஸ்டியை ஒப்புக்கொண்ட சிங்கள அரசு இன்று அந்த சொல்லை விபத்தாகக் கூடப் பாவித்து விடாதீர்கள் என்று மிரட்டும் நிலை தற்செயல் நிகழ்வல்ல.

தாம் பிரிவினைவாதத்தையோ (“அதிகாரப்பரவலாக்கம்”), பயங்கரவாத்தையோ (“உரிமைபோராட்டம்”), இனவாதத்தையோ (“தேசியவாதம்”) ஆதரிப்பதில்லை என்று பேரினவாதச் சூழலிடம் சத்தியம் செய்து கொடுக்கும் அவல நிலை தமிழர் அரசியலுக்கு உருவாகியுள்ளது. இது ஒரு கையறு நிலை மாத்திரமல்ல. அரசியல் தற்கொலைக்கு ஒப்பான பயங்கர நிலை.

அதிகாரத்தைப் பகிர்வதற்கோ, பரவலாக்குவதற்கோ தென்னிலங்கை கிஞ்சித்தும் தயாராக இல்லை என்பது தெட்டதெளிவானது. தாம் விரும்புவதை மட்டுமே கொடுக்கும் பிச்சை என்றே புரிந்துவைத்துள்ளது சிங்களப் பேரினவாதம். சமஷ்டியே தனிநாட்டுக்கான முதற்படி என்று சிங்கள பெரும்பான்மை மக்களிடம் திரித்து புனையப்பட்டுள்ளது.

இந்த நிலைமை தமிழர் அரசியலுக்கு மட்டுமல்ல மலையக, முஸ்லிம் மக்களுக்கும் அதே கதி நேர்ந்துள்ளது. கடந்த காலங்களில் "மலையகத்துக்கான தனியான அதிகார அலகு", "முஸ்லிம்களுக்கான தென்கிழக்கு மாகாண அலகு" போன்ற சொல்லாடல்களும் அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. "மலையக தேசியம்", "முஸ்லிம் தேசியம்" போன்ற பதங்கள் கூட சுய தணிக்கைக்கு உள்ளாகியுள்ளன. அவை பேசுபொருளாக அரசியல் தளத்தில் இன்று இல்லை என்பதை கவனமாக நோக்க வேண்டும்.

புலி, ஈழக்கொடி, ஈழக்கோரிக்கை, பிரிவினைவாதம், பயங்கரவாதம், டயஸ்போரா, சதி, சர்வதேச தலையீடு, போர்க்குற்ற விசாரணை போன்ற பதங்கள் தான் இனவாத மேடைகளை அலங்கரித்து வருகின்றன. மகிந்தவின் பிரசார மேடைகள் அனைத்தும் அப்படித்தான் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

பெரும்பாலான சிங்கள இணையத்தளங்களிலும், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பாரிய அளவு சமஷ்டி சர்ச்சைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இது ஒரு நாட்டை துண்டாடுவதற்கான திட்டம் என்கிற கோணத்திலேயே செய்தியிடல்களும், ஆய்வுகளும் அமைந்திருக்கின்றன. சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி விட்டுள்ளன. அதற்கு உரம் சேர்க்கும் வகையில் பிரதான கட்சியான மகிந்த தரப்பின் அனைத்து கூடங்களிலும் முக்கிய பேசுபொருளாக ஆனது. தேசிய இனங்களை ஒடுக்குவதற்காக பேரினவாதம் கைகொள்ளும் புதிய வடிவம் இவ்வாறு தான் பிரயோகிக்கப்படுகிறது என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.

சுயநிர்ணய உரிமை, தன்னாட்சியுரிமை, தாயகம், வடக்கு கிழக்கு இணைப்பு, தனி நாட்டுக் கோரிக்கை, ஈழம், தனியான அதிகார அலகு, அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப் பகிர்வு போன்ற பதங்கள் அரசியல் உரையாடலில் காணாமல் போயுள்ளன. அது தற்செயலல்ல.

சமஷ்டி என்ற சொல்லுக்கு சிங்கள மக்கள் பயப்படுகிறார்கள். எனவே அந்த சொல்லை பயன்படுத்தாமல் உள்ளர்த்தம் சிதையாதபடி வேறு ஒரு பதத்தைப் பாவிக்கலாம் என்று இலங்கையின் முன்னணி அரச சார்பற்ற நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வாகி ஒருவர் சமீபத்தில் கூறினார். இந்த நிறுவனம் அதிகார பகிர்வு, சமஷ்டி குறித்து பல வருட காலமாக இயங்கி வரும் முக்கிய அமைப்பு. இதே கருத்துப்பட பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் பல இடங்களில் கூறிவந்தார். திஸ்ஸ விதானகே முன்னாள் அமைச்சர் மாத்திரமல்ல. அவர் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் அது போல இனப்பிரச்சினைத் தீர்வுக்காக நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அவர்.

“..கூட்டமைப்பு இந்த நேரத்தில் இப்படி அறிவித்திருக்கத் தேவையில்லை. தென்னிலங்கை இனவாதிகளை அனாவசியமாக உசுப்பிவிட்டார்கள்..” என்று பல தென்னிலங்கை சிங்கள ஜனநாயக தரப்பினர் சிலர் புலம்புவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அவர்கள் கூட சுயதணிக்கையைத் தான் முன்மொழிகிறார்கள்.

இலங்கையில் பாசிசத்தின் இருப்பானது இனவாதத்தை கொதிநிலையில் வைத்திருத்தலிலேயே தங்கியிருக்கிறது. சமஷ்டியை பூதமாக சிருஷ்டித்து உலவ விடுவது அந்த நிகழ்ச்சிநிரலின் அடிப்படையிலேயே.

27.07.1926 அன்று யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டமொன்றில் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க ஆற்றிய உரையின் ஒரு பகுதி இன்றைய சமஷ்டி போபியா உள்ள இனவாதிகளுக்கு முன் வைப்பது பொருந்தும் என்று நினைக்கிறேன்.
“இந்த முறைமையை ஆயிரக்கணக்கானோர் எதிர்க்கக்கூடும். அந்த எதிர்ப்பு தனிந்ததன் பின்னர்; இலங்கைக்கு பொருத்தமான ஒரே தீர்வு ஏதோ ஒரு வடிவத்திலான சமஷ்டி முறையே என்பதில் சந்தேகமிருக்காது.”


சமஷ்டிக்கு எதிரான வெளிப்பாடுகள்
மகிந்த ராஜபக்ஷ – முன்னாள் ஜனாதிபதி
“முதலில் இந்த நாட்டை பிரித்து, சமஸ்டியை உருவாக்கி அடுத்த கட்டமாக ஈழம் அமைக்கும் சதித்திட்டத்துக்கு நான் எதிர்வரும் 17 அன்று முற்றுப்புள்ளி வைப்பேன்”
12.08.2015 பிலியந்தல பிரசார கூட்டத்தில்
“ரணில் தலைமையிலான ஆட்சி அமைந்தால் அவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேவையை நிறைவுசெய்து சமஷ்டியையோ, ஈழத்தையோ உருவாக்கிவிடுவார்கள். அதன் பின்னர் வடக்கு கிழக்குக்கு நாம் விசா எடுத்துத்தான் செல்ல வேண்டும்.”
(06.08.2015 சிலாபம் பிரசார கூட்டத்தில்)
தினேஷ் குணவர்தன – மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர்
கூட்டமைப்பின் விஞ்ஞாபனமானது நாட்டின் தாய்நாட்டை துண்டாடும் ஆபத்தும், தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலையும் உருவாக்கியுள்ளது.
(10.08.2015 திவய்ன பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில்)
முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க 
“சமஷ்டியா..? ஒற்றையாட்சியா..? தீர்ப்பு 17 அன்று”
(08.08.2015 ஸ்ரீ.ல.சு.க அலுவலகத்தில் நடந்த ஊடக மாநாட்டில்)
பிரதமர் ரணில் 
அவர்கள் 1952 இலிருந்தே கேட்கிறார்கள். அதில் ஒன்றும் ஆச்சரியமல்ல. அப்போதும் கிடைக்கவில்லை அல்லவா...? நாங்கள் ஐக்கிய இலங்கைக்குள் இதனை தீர்ப்போம் என்கிறோம். 13 விட அடுத்த கட்டத்திற்கு போகலாம் என்று மகிந்த தான் கூறினார். மன்மோகன் சிங்கிடம் ஒப்புக்கொண்டார் அவர். இந்தியாவில் அது எழுத்திலேயே இருக்கிறது.
(தெரண தொலைக்காட்சிக்கு ஒக.11 வழங்கிய நீண்ட பேட்டியின் போது)
தமிழத் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்படப்பட்டிருக்கும் சமஷ்டியை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவர்களுடன் அது குறித்த எந்த ஒப்பந்தமும் நாங்கள் செய்துகொள்ளவுமில்லை.
(13,08.2015 ஊடக மாநாட்டில்)
உதய கம்மன்பில (பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர்)
ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பகிர்வது என்பது கடன் கொடுப்பது போன்றது. நீங்கள் கொடுக்கலாம் அதுபோல திருப்பிப் பெறலாம். ஆனால் சமஷ்டி என்பது பரிசைக் கொடுப்பது போன்றது. நீங்கள் பரிசைக் கொடுக்கலாம் திருப்பிப் பெற முடியாது. அப்படியும் திருப்பி பெற வேண்டுமென்றால் பரிசை வாங்கிக் கொண்டவர் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும். அது பயங்கரமானது. ரணில் ஆட்சிக்கு வந்தால் சமஷ்டி கட்டாயம் கொடுக்கப்படும். இந்தியாவும், அமெரிக்காவும் இதன் பின்னணியில் இருக்கின்றன.
(திவய்ன 02.08.2015 நேர்காணல்)
அனுர குமார திசாநாயக (தலைவர் –ஜே.வி.பி)
சமஷ்டி முறையை நாங்கள் எதிர்க்கிறோம். 1977இல் தனிநாட்டுக்காக வாக்களிக்கும்படி கேட்டவர்கள். அவர்கள் உசுப்பிவிட்ட விடயம் அவர்களின் கைமீறி ஆயுதக்குழுக்களுக்கு இறுதியில் கைமாறியது. வடக்கில் இப்போது இனவாத போக்கு வளரத் தொடங்கியுள்ளது. இந்த இனவாதப் போக்குக்கு இடமளிக்கக்கூடாது. பிரிந்து போகவோ, துண்டாடி பிரிக்கப்படவோ, அரசியல் ரீதியில் பிரிக்கப்படவோ ஜேவிபி இடமளிக்காது.
(13.08.2015 சிங்கள பி.பி.சி சேவைக்கு வழங்கிய நேர்காணல்)
டில்வின் டி சில்வா (செயலாளர் – ஜே.வி.பி)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது இயலாமையை மூடிமறைக்க இனவாதத்தைத் தூண்டி தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறது.
(02.08.2015 ஊடக மாநாட்டில்)
பேராசிரியர் நளின் டீ சில்வா
18.05.2009 க்குப் பின்னர் சுயநிர்ணய உரிமை, சமஷ்டி, அதிகாரப் பகிர்வு போன்றவை காலாவதியாகிவிட்டன. போலி சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அவை நிராகரிக்கப்பட்டு நந்திக்கடலில் அவை முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இவையெல்லாம் பிரச்சினையை தீர்ப்பதக்கான யோசனைகளை அல்ல. சிங்கள பௌத்த பண்பாட்டை இல்லாதொழிப்பதற்கும், பலவீனப்படுத்துவதற்கும் கொணரப்பட்ட யோசனைகள்.
(நளின் டீ சில்வாவின் உத்தியோகபூர்வ இணையத்தளமாண காலய – 06.08.2015)
அஜித் பீ.பெரேரா (பிரதி வெளிவிவகார அமைச்சர்)
கூட்டமைப்பின் சமஷ்டி தீர்வு யோசனையை ஐ.தே.க கண்டிக்கிறது.
(29.07.2015 ஐ,தே.க தலைமையகத்தில் நடந்த ஊடக மாநாட்டில்)
முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும
“வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கு நிகரானது இது. நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்,பிரிவினைவாதத்தைத் தூண்டும்”
(28.07.2015 ஊடக மாநாட்டில்)
முன்னாள் வடகிழக்கு மாகாண அமைச்சர் தயான் ஜயதிலக்க
“கார்ல் மார்க்ஸ் சமஸ்டியை எதிர்த்தார். ஒற்றயாட்சித்தன்மைக்கே தனது ஆதரவை வழங்கினார். அந்த அடிப்படையிலேயே நானும் இந்த சமஸ்டியை எதிர்க்கிறேன். சமஷ்டி என்பது அதிகாரங்களை மீளப்பெறமுடியாத அமைப்புமுறை. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் புதிய அரசியலமைக்கு ஊடாக இந்த ஒற்றையாட்சிமுறைமை இல்லாமலாக்கப்படும். கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகும். 13வது திருத்தச்சட்டம் ஒற்றயாட்சித்தன்மையின் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே 13க்கு மேல் போகலாம் என்பதன் அர்த்தம் ஒற்றயாட்சித்தன்மையை அழிக்கும் செயல். ஐக்கிய இலங்கைக்குள் என்பது சுத்த பம்மாத்து.”
(தொலைகாட்சி பேட்டியில்)

“சமஷ்டி எனும் துருப்பிடித்த ஈழகோரிக்கை” எனும் தலைப்பில் திவய்ன பத்திரிகையில் வெளியான ஆசிரியர் தலையங்கம் இப்படி முடிகிறது (02.08.2015)
“...தங்கையை காட்டி அக்காளை மணமுடித்து வைப்பதற்கு எத்தனிப்பவர்கள் இன்னமும் பிரபாகரனின் ஈழக்குப்பை கூலத்தில் தான் வாழ்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்...”
“குரகுல போன்றோரின் சமஷ்டி வலிப்பு” எனும் தலைப்பில் வெளியான திவய்ன ஆசிரியர் தலையங்கம் இப்படி கூறுகிறது (13.08.2015)
“இந்த சமஷ்டி கதையா
டல்கள் சும்மா வெற்று வதந்தி அல்ல. தேர்தலில் வாக்குகளை பெறுவதை இலக்கு வைக்கப்பட்டதுமல்ல. இதன் மூலம் சர்வதேச சதிவலை ஒன்றைப் பின்னுவதற்காக நாடிபிடித்தறியும் முயற்சி. நாட்டை துண்டாடும் அவசியம் இல்லை என்று சுமந்திரன் கூறினாலும் கூட குருகுலராஜா, சிவாஜிலிங்கம் போறோர் மேடைகளில் தெளிவாக தமது சமஷ்டி இலக்கை கூறி வருகின்றனர். சிங்களத்தில் ஒரு பல மொழி உண்டு. “வாய் போய் கூறினாலும் நா பொய்யுரைக்காது” என்பார்கள்.”

மலையக அரசியலை சிந்திக்க வைத்த புதுமுகம்


கல்விகற்ற சமூகம் தலை நிமிர்ந்தால் மலையகத்தின் தலையெழுத்தையே மாற்றியமைக்கலாம் என்ற இளைய சமூகத்தினரின் எதிர்ப்பார்ப்புகளை நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. ஆம்! சுமார் 200 நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட  மலையக அரசியலில் நடந்து முடிவடைந்த  நாடாளுமன்ற  தேர்தல்  ஒரு  பெரும்  திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்றே கூற வேண்டும்.  தொழிற்சங்க அரசியலில் மாத்திரம் இவ்வளவு காலமும் பழக்கப்பட்டு வந்த மலையக மக்கள் இந்த 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சற்று சிந்திக்க தொடங்கியுள்ளனர் போலும். இதுவரை காலமும் நடைமுறையில்  இருந்த மலையக அரசியல் கலாசாரத்தில் இருந்து புதிய அரசியல் செல்நெறியொன்றில் மலையக அரசியல் புறப்பட்டை வலியறுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.  

'அவமானத்தை தாங்கிக் கொண்டால் அரசியல்" என்ற அழகான வரிகளில் வித்தியாசமான தொனிப்பொருளுடன் அரசியலில் காலடி எடுத்து வைத்து இன்று மலையக மக்களிடம் விஷேடமாக  எமது இளைய சமூகத்தினரினது மனதில் நீங்கா இடம்பிடித்து  வித்தியாசமான அரசியல் அணுகுமுறையைக் கையாண்டு ஆறுமுகங்களையும் முந்தியடித்துள்ளார் இளம் இலக்கிய அரசியல்வாதி.  ஆம்! பாட்டு பாடி வாக்கு கேட்கும் வேட்பாளர் என்று ஊடகங்கள் மற்றும் பல தரப்பினரிடையே விமர்சிக்கப்பட்டு வந்த  மல்லியப்பு சந்தி திலகர் என்று தன்னை அறிமுகப்படுத்திய திலகராஜ் மயில்வாகனம் அனைத்து அவமானங்களையும் தாங்கிக்கொண்டு அரசியலுக்குள் வந்துவிட்டார்.  

'அவமானத்தை தாங்கிக்கொண்டால் அரசியல்” எனும் தொடர் விளம்பரத்தின் மூலம் வித்தியாசமான  கோணத்தில்  மலையக மக்களை சிந்திக்க தூண்டி, மலையக மண்ணில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இன்று மலையக மக்கள் பலரையும் தனது பேச்சு மற்றும் அனுபவத்தினூடான அறிவுத்திறமையினால் மலையக அரசியலை சிந்திக்க வைத்துள்ளார திலகர். பண்முக ஆளுமைக்கொண்ட இளம் இலக்கிய அரசியல்வாதி திலகர்  மடக்கும்பொரை மண்ணின் மைந்தன் திலகர் வருகிறார் ... என திரில்லான பாடல் ... வரிகளை கொண்டு தென்னிந்திய சினிமா பாணியில் தன்னை அறிமுகப்படுத்தி 67,761 எண்ணிக்கையிலான மலையக மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் என்பது ஆச்சரியத்தக்க விடயமே. அது மாத்திரமா? மேற்படி எண்ணிக்கை என்பது எண்கள் அல்ல அது எமது மலையக மக்களின் எண்ணங்கள் என்று தனது நன்றி உணர்வையும் அழகாக கவி வரிகளில் வெளிபடுத்தி தன்னை ஒரு அரசியல் கவிஞராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.  

ஆம் விடயத்துக்கு வருவோம்!  
பொதுவாக மலையகத்தில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் பிரதிநிதிகள்  இதுவரைக்காலமும் அபிவிருத்தி அரசியலை மாத்திரம் முன்வைத்தே தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு  வெற்றி பெற்றிருக்கின்றார்கள். இது மலையகத்தில் வழமையாக நடந்து வரும் ஒரு விடயம். (கூரைத்தகடுகள், நாட்காலிகள் வாங்கி தருவோம்னு பேசாட்டி ஓட்டு தர மாட்டாங்க என்ற நிலைமையும் இருப்பது வேற கத) அவ்வாறு அபிவிருத்தி அரசியல் பற்றி பேசி வந்தாலும் தேர்தல் வெற்றியின் பின்னர்  இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படுகின்றதா? என்பது இங்கு சிந்திக்க வேண்டிய விடயமாகும். சில நேரங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்கு இன்னும் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிர்பந்தத்திற்கும் தோட்டப்பகுதி மக்கள் ஆளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இது காலம் காலமாக இடம்பெற்று வரும் விடயம்...
இவ்வாறானதொரு நிலையில்  தான் ஒரு பட்டதாரி, சுயாதீன ஊடகவியலாளர், சிறந்ததொரு எழுத்தாளர், இலக்கியவாதி என தன்னை வெளிகாட்டி வந்த திலகராஜ் மயில்வாகனம் கடந்த பல வருடங்களாக தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்து மேடை பிரசாரம் அல்லாத அரசியலை நடாத்தி வந்துள்ளார். தான் அரசியலில் புதியவர் அல்ல என்று தன்னை அறிமுகப்படுத்திய இவர் தனது மலையக மக்கள் இந்த 200 வருடகாலமாக தமக்கென தனியானதொரு அடையாளம் இல்லாமல் இருக்கின்றனர் என்பதையே தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது மலையக மக்களுக்கு நினைவுபடுத்தி வந்தார். வெறுமனே தோட்டப்புறங்கள் அபிவிருத்தி அடைந்து விட்டால் மாத்திரம் தமது மலையக மக்களுக்கு அடையாளம் கிடைத்து விடும் என்ற எண்ணத்தை மலையக மக்கள் மனதில் இருந்து தகர்த்து அடையாளம் இல்லாத மக்களை தான் அடையாளப்படுத்த வேண்டும் என்பதை உறுதியாகக் கொண்டு இறுதி வரை பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றியும் தேர்தலில் பெற்றுள்ளார். தான் வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக மாத்திரம் இந்த வார்த்தைகளை அள்ளி வீசியிருப்பார் என்று கூட சந்தேகபட முடியாது. ஏனெனில் அவரது ஒவ்வொரு உரைகளும் உணர்வுப+ர்மாக மலையகத்தமிழர்கள் தங்களை முதலில் அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் இருந்தது மறுப்பதற்கில்லை. 

 உண்மைதான் இன்றும் கூட மலையக மக்கள் இந்தியா தமிழர் என்று கூறப்படுகின்றனரே தவிர இலங்கைப்பிரஜை என்று அடையாளப்படுத்தப்படவில்லை. அடையாளம் இல்லாத எமது மலையக மக்களுக்கு முதலில் அடையளம் கிடைக்க வேண்டும். இந்தியாவில் இந்நிதியப்பிரஜை என்றொரு அடையாளம் இல்லாத போது  இலங்கையில் உள்ள மலைநாட்டு தமிழர்களை இந்திய வம்சாவழியினர் என்று அழைக்கப்படுவதானது எமது மலையக மக்கள் இன்றும் இலங்கை தேசத்துக்கு உரியவர்களாக  ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை தெளிவாக புலப்படுத்துகின்றது. ஒரு நாடோ அல்லது ஒரு குறித்த பிரதேசமோ கல்வி உட்பட முழுமையான அபிவிருத்தியை பெறவேண்டுமாயின் அந்நாட்டு தேசத்திற்குரியவர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.  அதேவேளை உணரவும் வேண்டும். ஆனால், மலையகத்தைப்பொறுத்தவரையில் அது இன்னும் இடம்பெறாததாகவே உள்ளது.

கல்வி உரிமை தவிர்ந்த பிற உரிமைகள் ஏதேனும் அரச நிர்வாக கட்டமைப்போடு மலையக மக்களை இதுவரைக்காலமும் சென்று சேர வில்லை என்பது அவர்கள் இலங்கை  தேசத்திற்குள் உள்வாங்கப்படவில்லை என்பது தெளிவாக புலப்படுகின்றது. ஏனெனில் ஏனைய அனைத்து உரிமைகளுக்காகவும் தனியார் நிறுவனங்களிடம் தங்கியிருக்கும் நிலைமை துரதிஸ்;டமானது. அபிவிருத்தி அரசியலை விடுத்து தமக்கான உரிமை அரசியளுக்குள் மலையக மக்கள் உள்வாங்கப்பட வேண்டும். என்பதை தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது திலகர் வலியுறுத்தி வந்தார். ஆம்! எமது எதிர்ப்பார்பும் அதுவாகத்தான் இருக்கின்றது. எனவே மலையக மக்களின் இன அடையாளம் அரசியல் ரீதியாக முறையாக அடையாளப்படுத்தப்பட்டு அது சட்டரீதியான அந்தஸ்துடன் பிரகடனப்படுத்தப்பட்டு   இந்த மக்கள் இந்த தேசத்திற்குரியவர்களாக அங்கீகரிக்கப்பட்டால் பின்வரும் சகல விடயங்களும் தானாகவே இடம்பெறும் என்பதில் ஐயமில்லை. 

பண்முக அளுமை கொண்ட திலகர் வருகிறார்... என்று அறிவித்தபோது இவர் வந்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்தது என்பது மறுப்பதற்கில்லை... ஆனால், திலகர்; வந்துவிட்டார் என்று அவரின் வருகையின் பின்னர் மலையக இளம் சமூகத்தினர் மனதில் பெரும் மாற்றம் எழுந்துள்ள அதேவேளை பெரும் எதிர்ப்பார்ப்புக்களையும் உருவாக்கியுள்ளது. அவர்களிடம் பல கேள்விகளையும் எழச் செய்துள்ளது. இது வரை காலமும் இருந்த தற்போது இருக்கின்ற அரசியல் தலைவர்கள் மலையக சமூகத்தின் எதிர்காலத்தை எவ்வாறு சிந்தித்தார்கள்! சிந்திக்கின்றார்கள்  என்ற தமது தெளிவான கருத்தை முன்வைத்திருக்கவில்லை. சொல்லப்போனால் அவர்களை பற்றி வெளியிடங்களில் பேசும்போது 'அவங்க காசுக்காக கட்சி மாறுபவர்கள்" என்று கருத்து நிலவி வந்தது. இவ்வாறானதொரு நிலைமையில்  எதிர்வரும் காலத்தில மாற்றம் ஏற்படும் என்று நம்புகின்றோம். 

அபிவிருத்தி என்ற பெயரில் மலையகத்தில் இடம்பெற்று அரசியலில் தற்போது அறிவு ப+ர்வமாக சிந்திக்க கூடிய நிலைமை மலையகம் சிறந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. மலையக தோட்டப் பகுதிகளில் படித்த இளைஞர், யுவதிகள் பெரும் எண்ணிக்கையிலானோர் இருந்தாலும் கூட அவர்கள் தாம்  அரசியல் நீரோட்டத்தில் தங்களை கொண்டு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றார்கள். இதற்கெல்லாம் மலையக மக்களை குறிப்பாக இளம் சந்ததியினரை சிந்திக்க வைக்கக்கூடிய ஒரு அரசியல் தலைவரின் வருகை இல்லாமை கூட காரணமாக இருக்கக்கூடும். ஆனால், தற்போது அவ்வாறானதொரு வெற்றிடமும் நிரப்பப்பட்டுள்ளது உணரக்கூடியதாக இருக்கின்றது. 

மலையக குறிப்பாக லயத்தில் பிறந்தவர்களுக்கு சாதிக்க முடியுமா?  என்ற கேள்வி... பல இடங்களிலும் தற்போதும் எழுகின்றது. அர்ப்பணிப்புடன் தன்னை சகல துறைகளிலும் விருத்தி செய்துக்கொண்டு நேர்மையாக செயல்பட்டால் லயத்து புயலும்  பாராளுமன்றத்திலும் வீச முடியும் என்று இளம் சமூகத்தினரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள திலகரின் சேவைகள் மலையக எழுச்சிக்காக தொடர வேண்டும் என்பதே சகலரது எதிர்ப்பார்ப்பாகும். இதில் ஒரேயொரு சிக்கல் என்னவென்றால் திலகராஜாவின் பார்வைச் செம்மையும் மண்பற்றிய ஸ்திரப்பாட்டையும் எவ்வளவு காலம் சமநிலையாக இணைத்துப்பேணப்போகிறார் என்பது தான் அரசியலில் இவரது சவாலாக உள்ளது. உங்கள் இலட்சியம் நிறைவேறட்டும்  வாழ்த்துக்கள். 

கபில்நாத் 
(நன்றி தினக்குரல்)

மீண்டும் முருங்கை மரம் ஏறி விடக்கூடாது - ஜே.ஜி.ஸ்டீபன்


அம்புலிமாமா எனும் சிறுவர் சித்திரக் கதைப்புத்தகத்தில் விக்கிரமாதித்தன் என்னும் பாத்திரமொன்றை உருவகித்து சிறுவர்களை மட்டுமல்லாது பெரியோரையும் குஷிப்படுத்தும் ஒரு முடிவில்லாத் தொடர் கதையொன்று பற்றி புதிதாகக் கூறுவதற்கில்லை. யாவரும் அதுபற்றி அறிவர். இதில் என்ன புதினம் என்றால் கதை கூறும் வேதாளம் எல்லா சந்தர்ப்பங்களிலுமே பொடிவைத்து விடுகதை கூறி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வதைப் போன்று முடிந்திருக்கும். ஆனால் அது முற்றுப்பெற்றிருக்காது. இன்று வரையில் அந்தக் கதையின் இறுதியில் முற்றும் என்ற வார்த்தை பிரசுரமானதே கிடையாது.

இந்தக் குட்டிக் கதைக்கும் நமது மலையகத்தின் அரசியல் வரலாற்றுக்கும் மிக நெருக்கமான உறவு இருக்கிறது என்பது எல்லோருக்கும் புலனாகிவிடும். இங்கு கூறவருவது என்னவென்றால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிடக்கூடாது என்பதாகவே இருக்கின்றது. இங்கு சுட்டி நிற்கின்ற சொற்றொடரானது கதையில் வருகின்ற வேதாளமானாலும் சரி நமது மலையக அரசியலானாலும் சரி இரு தரப்புக்குமே பொருந்த வேண்டியது தான். சரி இனி விடயத்துக்கு வருவோம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதாவது கடந்த 17 ஆம் திகதி திங்கட்கிழமையைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை வரையான காலப்பகுதி வரையில் நாடு முழுதும் இருந்து வந்த படபடப்பு, பதற்றம் எல்லாமே நிறைவுக்கு வந்துவிட்டன.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலம் முதலே உஷாரான மலையகத் தலைமைகள் அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு தம்மைத் தயார்படுத்திக் கொண்டன. இவ்வாறு தயார்படுத்தல்களின் பயனாக அமைந்ததே ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியாகும். மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை வீழ்த்துவதற்காகவே உருவாக்கப்பட்டதாக அமைந்து விட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி மறுபுறத்தில் மலையகத்தின் சார்பிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டமையை பாராட்டாமல் அல்லது வரவேற்காமல் இருந்துவிடமுடியாது.

நுவரெலியா, பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட கூட்டணி கொழும்பில் ஒரு பிரதிநிதித்துவம் என்ற வகையில் ஆறு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

இங்கு சுயநலம் ஒன்று புதைந்து கிடந்தாலும் கூட பாராளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் பாராளுமன்றத்துக்குள் மலையகத்தின் குரலை ஓங்கச் செய்வதற்கும் இத்திட்டம் வழிவகுத்துள்ளது என்றே கூற வேண்டும்.

அது மாத்திரமின்றி சரியான வழியில் சந்தர்ப்பங்களை உருவாக்கி தொழிலாளர் தேசிய சங்கம் மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய முத்தரப்புக்களும் தங்களது கட்சி அரசியலையும் அதன் இருப்புக்களையும் பலப்படுத்திக் கொண்டுள்ளன என்று கூறுவது பொருத்தமாகிறது.

எனினும் மலையகத்தின் நீண்ட தொழிற்சங்க, அரசியல் வரலாற்றினைக் கொண்டு இயங்கி வருகின்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சாணக்கியமான தீர்மானங்களை மலையகத்திலும் மத்திய அரசிலும் காய் நகர்த்தி வந்தமை கண்கூடாக இருந்த போதிலும் அண்மைக்காலத் தீர்மானங்கள் அக்கட்சியின் அல்லது அத்தொழிற்சங்கத்தின் முன்நோக்கிய பயணங்களுக்கு பெரிதாக பாதையமைக்கவில்லை. இதனால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வெற்றிப் பயணத்தில் தடங்கல் ஏற்பட்டிருப்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். நிலைமை இவ்வாறு அமைந்துவிட்டதால் எதிர்காலம் இன்னுமின்னுமாய் சவால்கள் நிறைந்தனவாகவே இருக்கப் போகின்றது. எனவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸைப் பொறுத்த வரையில் தலைமை முதல் கீழ்மட்டம் வரையிலானோர் தவறுகளை தேடி அறிந்து அவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

மலையகத்தை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தி வருகின்ற மலையகத்தை சாராத சந்தர்ப்பவாத அரசியல்வாதி ஒருவர் முன்னொரு காலத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையும் அதன் தலைமைகளையும் சீண்டிப்பார்த்து அரசியல் செய்தார். ஊடகம் எனும் புனித ஆயுதத்தைக் கொண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையும் தன்னையும் கீரியும் பாம்புமாக உருவகித்துக் கொண்டவர். 2010 காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் புண்ணியத்தில் பாராளுமன்றம் வருவதற்கே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை கடுமையாக சாடிவந்தார்.

இம்முறை அவரது சந்தர்ப்பவாத அரசியல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் படம் பிடித்துக்காட்டப்பட்டு விட்டதால் அங்கு அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது.

இதனால் பச்சோந்தியைப் போன்று உடனடியாகவே நிறம் மாறி ஆறுமுகம் தொண்டமானின் காலில் விழ அவரும் ஒரு புறத்தில் மனமுருகி மறுபுறத்தில் தனது சுயநலம் கருதியவாறு அதாவது குறித்த ஊடகத்தின் மூலம் தனது கட்சிக்கு பிரசாரம் கிடைக்குமே என்ற நப்பாசையில் காலில் விழுந்த அந்த சந்தர்ப்பவாதியை தலையில் தொட்டு ஆசிர்வதித்துள்ளார்.

இவ்வாறு ஒரு சந்தர்ப்பவாதியுடனான அரசியல் உறவு அதன் பின்னர் அந்த சந்தர்ப்பவாதியால் நடத்தப்பட்ட ஊடக நாடகம் அனைத்தும் நுவரெலிய மாவட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்திற்கும் அதே நேரம் மலையக மக்கள் முன்னணிக்கும் சாதகமாய் அமைந்து விட்டன.

அது மாத்திரமின்றி தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு விவகாரப் போராட்டங்கள் என்று எல்லா அம்சங்களுமே கைகொடுக்காது போய் விட்டன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு இதுவே முடிவல்ல. நிச்சயமாக மீண்டும் வர முடியும். மக்களின் மனங்களில் குடிகொள்வதற்கு இ.தொ.கா. இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. செயற்பட வேண்டியுள்ளது. சிறந்த சிந்தனையுடன் செயற்பட்டு அதனை வெற்றி கொள்ள வேண்டுமானால் அக்கட்சியின் உயர் மட்டத்தினர் தமது வறட்டுக் கௌரவங்களை சற்று ஓரம் கட்டி அனைத்து தரப்பினரதும் உள்ளங்களை வெல்வதற்கு செயற்பாட்டு ரீதியில் காய்களை நகர்த்துவது அவசியம். இது ஒரு புறம் இருக்க இரண்டு உறுப்பினர்களை மாத்திரமே பெற்றுக் கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாற்றுத் தரப்புக்கள் மீது பொறாமை கொள்வதையோ அல்லது மலையகத்தில் ஐந்து உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டு விட்டோமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் இறுமாப்புக் கொண்டு செயற்படுவதையோ தவிர்த்துக் கொள்வது மக்களுக்கு நன்மை பயப்பதாய் இருக்கும்.

சரி தேர்தல்கள் முடிவுற்றுள்ளன. இதில் வெற்றி தோல்வி ஏற்றுக் கொள்ளச் கூடியவைதான் என்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஆர்.யோகராஜன், பி.இராஜதுரை, எம்.உதயகுமார், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட அனுஷியா சிவராஜா, மற்றும் எஸ்.சதாசிவம் ஆகியோர் தோல்வியடைந்தமை, மலையக மக்களின் பின்னடைவை சுட்டி நிற்கிறது எனலாம். எப்படி இருப்பினும் இன்று மலையகத்தில் எட்டு தமிழ் உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். இவர்களுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் தெரிவாகியுள்ள நிலையில் கூட்டணிக்கு கிடைத்துள்ள உறுப்பினரூடாக பத்து உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையுடன் மலையக மக்களின் தமிழ் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் 9 பேர் இணைந்திருப்பர். இது மலையக மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது.

8 மாதகால போராட்டத்தின் பின்னர் கிடைக்கப்பெற்றுள்ள பாராளுமன்ற பிரதிநிதிகள் அனைவரும் அடுத்துவரும் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் செய்யப்போவது என்ன என்பது பாரிய எதிர்பார்ப்பாக உள்ளது. தேர்தல் காலங்களில் தோட்டத் தொழிலாளர்களின் காதுகள் குளிரவும் நுனி நாக்கில் எச்சில் ஊறுமளவிற்கும் கதை கூறி வாக்குறுதிகளை அள்ளி வீசியவர்கள் அதனை சரியாக நிறைவேற்ற வேண்டும்.

கொடுத்த வாக்குறுதிகள் என்னவென்றும் உறுதிமொழிகள் எத்தகையவை என்றும் வாக்களித்த மக்கள் அறியாமல் இல்லை. மக்கள் அறிந்து புரிந்து வைத்துள்ளார்களோ இல்லையோ மலையக இளைஞர், யுவதிகளும் மலையகத்தினின்று தொழில் நிமித்தம் தூரப்பிரதேசங்களில் தங்கி வாழும் இளைஞர், யுவதிகளும் மலையத்தின் புத்திஜீவிகள் சமூகமும் மிக அழுத்தமாக பதிந்து வைத்துள்ளனர். போதாதற்கு ஊடகங்களும் முறையாக பட்டியலிட்டு பதிவு செய்து வைத்திருக்கின்றன. ஆகையால் வாக்குறுதி அளித்தவர்கள் எவராக இருந்தாலும் அவற்றை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளனர். இதிலிருந்து கடந்து சென்றுவிட முடியாது.

இதனைக் குறிப்பிட்டு கோடிட்டுக் கூறுவதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள விவகாரமாகும். இப்படியொரு அதிகரித்த சம்பளத் தொகையை தேர்தலின் பின்னர் பெற்றுத் தருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியிருப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்து வந்த அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களியுங்கள், நல்லாட்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தோட்டத் தொழிலாளர்களுக்கு மேற்கண்டவாறு சம்பள அதிகரிப்பினைப் பெற்றுத் தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என தமிழ் முற்போக்கு கூட்டணியினரும் கூறி வாக்கு கேட்டனர். அரசியல் தலைவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மக்களும் வாக்களித்துள்ளனர். அப்படியானால் இந்த முதலாவது வாக்குறுதி நியாயமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களின் மிகுந்த எதிர்பார்ப்பான 1000ரூபா சம்பளம் கிடைக்கப் பெறுமாயின் இன்றைய மலையக தலைமைகள் மீது தோட்டத் தொழிலாளர்களின் நம்பிக்கையும் மரியாதையும் அதிகரிக்கும். அடுத்ததாக 7 பேர்ச் காணியுடனான தனிவீட்டுத் திட்டம், பல்கலைக்கழகம், விஞ்ஞானக் கல்லூரிகள், ஐம்பதாயிரம் வேலைவாய்ப்பு என அடுக்கிச் செல்ல முடியும்.
தேர்தல் முடிந்த கையோடு இவற்றையெல்லாம் செய்துவிட முடியுமா என்ற கேள்வியை கேட்டு எவரும் தப்பித்துச் செல்ல முற்பட கூடாது. இன்னும் ஒரு மாதமளவிலான காலத்தை செலவிட்டேனும் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு எனும் வாக்குறுதி நிறைவேற்றியாகப்பட வேண்டும். இதற்கு எந்தவிதமான காரணங்களையும் கூற முடியாது.

சம்பளப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றாலோ அல்லது தோல்வியடைந்தாலோ எதிரும் புதிருமாக இருக்கின்ற இரு சாராருக்குமே பாதிப்பு என்ற காரணத்தினாலேயே அது தேர்தல் முடியும் வரையில் பிற்போடப்பட்டது. அத்தகைய கால அவகாசம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இவ்விடயத்தில் தாமதத்துக்கும் இழுத்தடிப்புகளுக்கும் இடமளிக்க முடியாது.

வீடமைப்புத் திட்டம், காணி உறுதி, வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதிகளும் நினைவில் நிறுத்தப்பட வேண்டியவை. இவை உடனடியாக மேற் கொள்ளப்படக் கூடியவையல்ல என்பதால் அதற்கான முன்னெடுப்புகள், காய்நகர்த்தல்கள் குறித்தேனும் வாக்குறு தியளித்தவர்கள் சிந்திப்பது சிறந் தது. மொத்தத்தில் மக்களின் எதிர் பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண் டும்.
கடந்த கால அரசியல் களம் வேறு, சமகால அரசியல் களம் வேறு என்பதை மக்கள் இன்று நன்கு உணர்ந்து விட்டனர். எனவே மக்களை மடையர்களாக நினைத்து ஏமாற்றி விடலாம் என்று எவராவது நினைத்தால் இறுதியில் மக்கள் ஒன்றிணைந்து ஏமாற்றிவிடுவார்கள் என்பது திண்ணம்.

மேலும் தற்போது தேசிய அரசாங்கம் எனும் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. தனிக்கட்சியொன்றினால் அமைக்கப்படும் அரசாங்கத்துக்கும் தேசிய அரசாங்கத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றமையால் மலையக அரசியல்வாதிக ளால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்தளவில் சாத்தியமாகப் போகின்றன என்றதொரு கேள்வியும் எழுகின்றது. ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்களின் அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்ளும் பட்சத்தில் அது மலையகத்தில் எத்த கைய தாக்கத்தினை ஏற்படுத்தப் போகிறது என்பதும் அச்சத்துக்குரியதாகவே உள்ளது.

எப்படியிருப்பினும் நுவரெலியா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத் துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர் கள் மலையகம் சார் தேவைப்பாடுகள் தொடர்பில் ஒன்றிணைந்து ஒரே நிலைப்பாட்டில் இருப்பார்களாயின் சாதிப்பது இலகுவாகிவிடும்.

பாராளுமன்றத்துக்கு வெளியே கட்சி, தொழிற்சங்க அரசியலை எப்படி வேண்டுமானாலும் மலையகத் தலைமைகள் நடத்திக் கொள்ளட்டும். ஆனால், பாராளுமன்றத்திற்குள் தாம் அனைவரும் மலையக மக்களின் பிரதிநிதிகள் என்பதை நிரூபிக்கத் தவறக்கூடாது. அப்படியொரு எண்ணத்தை விதைத்துக் கொள்வதற்கு மலையகத் தலைவர்கள், பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குள் தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பினதும் முஸ்லிம்களினதும் சிங் களவர்களினதும் செயற்காரியங்களை உதாரணங்களாக கைக்கொள்வது நன்மையாக இருக்கும்.

இதேவேளை பதுளை மாவட்ட த்தில் ஐக்கிய தேசியக்கட்சியில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் தான் பாரா ளுமன்றத்துக்கு செல்வதா அல்லது மாகாண சபையிலேயே அமைச்சராக நீடிப்பதா என்ற தோரணையில் தெரி வித்துள்ளார்.

பாராளுமன்றத்துக்கு சென்று எம்.பி.யாக அமர்ந்திருப்பதை விடுத்து மாகாண சபையில் அமைச்சராக இருக் கலாமே என்பது அவரது கணக்கு. எனினும் பாராளுமன்றத்துக்கு தெரி வாகிய அவர் அங்கு செல்லாது அதனை தவிர்த்து விடுவாரேயானால் பாராளுமன்றத்தில் மலையகப் பிரதி நிதியொருவர் குறைவடைவதாக ஆகிவிடும்.

அது மாத்திரமன்றி வடிவேல் சுரேஷ் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் பட்சத்தில் பட்டி யலில் உள்ள சிங்கள உறுப்பினர் ஒருவரே பாராளுமன்றம் செல்வதற்கு ஏதுவாகிறது.

பதுளை வாழ் தமிழ் மக்களின் வாக் குகளைப் பெற்று பாராளு மன்றத் துக்குக் தெரிவானதன் பின் னர் அதனை சிங்கள உறுப்பினர் ஒரு வருக்கு தாரைவார்ப்பது சவால்களை எதிர்கொண்டு வாக்களித்த மக்களு க்கு இழைக்கும் அநீதி மட்டுமல்லாது துரோகமாகவும் ஆகிவிடும்.

அவ்வாறு இடம்பெற்று விடக் கூடாது. தாம் செல்ல விரும்பாத பாரா ளுமன்றத்துக்கு பட்டியலின் அடிப் படையில் தமிழ்ப்பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்படுவாரேயானால் அதில் எந்தத் தவறும் இருக்க முடி யாது. எனினும் தமிழ் மக்களின் வாக்குகளால் கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவி சிங்களவர் ஒருவருக்கு தாரை வார்க்கப்படுவது பதுளை மண்ணில் இழைக்கப்பட்ட வரலாற்றுத் தவறா கிவிடும். எனவே இது குறித்து தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் இன்னும் ஆழமாக சிந்திப்பது மக்களிடத்தில் செல்வாக்கை மேலும் அதிகரிக்கச் செய்யும். மேலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்தளவு அதிகரித்த வாக்குகளைப் பெற்ற நான் தலைக்கணமாக செயற்படப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கூற்றினை ஏனைய உறுப்பினர்களும் ஏற்று கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.

20 வருடகங்களின் பின்னர் கண்டி மாவட்டத்துக்கு கிடைக்கப்பெற்றிருக் கும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பதுளையில் கிடைக்கப்பெற்றுள்ள இரு பிரதிநிதித்துவங்கள் உள்ளிட்ட பிரதிநிதித்துவங்களுக்கு சொந்தமானவர்கள் காலத்துக்கு ஏற்றவாறு செயற்பட வேண்டும்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இரண்டு இடங்களையே பெற்றுக் கொண்டுள்ளது என்றும் தாம் அதிகமான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளோம் என்றும் மலையத்தில் எவரும் பெருமை பேசமுடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகள் அதிகமாகக் கிடைத்துள்ளனவே தவிர இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வாக்கு வங்கியில் வீழ்ச்சி எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இது ஒரு புறமிருக்க ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கு அரும்பாடுபட்டவர்களில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் பிரதான பாத்திரத்தினை வகித்தவராவார்.

பதுளை மாவட்டத்தில் அவருக்கான செல்வாக்கு அதிகரித்திருந்த நிலையிலேயே அவரது பசறை தேர்தல் தொகுதியும் வெற்றி பெற்றுள்ளது. தனது தொகுதியை ஐ.தே.க.வுக்கு பெற்றுக் கொடுத்த கே.வேலாயுதம் தேசியப் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்த போதிலும் இறுதியில் அவரது பெயர் நீக்கப்பட்டிருப்பது பதுளை வாழ் தமிழ் மக்களுக்கும் பசறை தொகுதி மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தேசிய பட்டியலில் இடம்வழங்குவது என்ற உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே வேலாயுதம் பதுளை மாவட்டத்தின் வேட்பாளர் பட்டியலில் தவிர்க்கப்பட்டிருந்தார்.

பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் போட்டியிட்ட ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் தேர்தலில் தோல்வியடையும் பட்சத்தில் வேலாயுதத்தை தேசியப்பட்டியலில் இணைத்துக் கொள்வதே ஐ.தே.க. தலைமையின் எண்ணமாக இருந்தது.
வேலாயுதம் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்திருப்பின் அவரை தேசிய பட்டியலில் இணைத்துக் கொள்ள முடியாது. அதேவேளை வடிவேல் சுரேஷ் தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் அவருக்கு மாகாண அமைச்சுப்பதவி உள்ளவாறே இருத்திருக்கும். எனினும் தமிழ்க் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால் அனைத்துக் கணக்குகளும் தற்போது தப்பாகிப் போய் விட்டன.

இன்றைய நிலையில் பதுளை மாவட்டத்திலிருந்து இரு தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாலேயே மேலும் ஒரு தமிழ் உறுப்பினரை உட்சேர்ப்பதில் இழுத்தடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது இப்படி இருக்க தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தேசியப்பட்டியில் ஆசனம் ஒன்று கிடைக்கப் பெறவிருந்த போதிலும் கூட்டணியின் தவறான அணுகுமுறைகளினாலேயே அந்த சந்தர்ப்பமும் கைநழுவிப் போயுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாறாக பதுளையில் அ.அரவிந்தகுமார் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருப்பதாலேயோ அல்லது வேறு காரணங்களாலேயோ தேசியப்பட்டியல் உறுப்பினர் இடம் கைநழுவிப் போய்விடவில்லை. எப்படியிருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசியப்பட்டியலில் 13 இடங்கள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் சிறுபான்மையினருக்கென 5 இடங்களையேனும் ஒதுக்கியிருப்பின் வரவேற்கத்தக்கதாக இருந்திருக்கும். ஆனாலும் தவிர்க்கப்பட்டுள்ளமையானது தமிழ் மக்கள் மத்தியில் ஆதங்கத்தையும் கவலையையும் அதிகரிக்கச் செய்திருக்கின்றது. இதன் விளைவுகள் எவ்வாறு அமையப் போகின்றன என் பதை பொறுத்திருந்தே பார்க்க வேண் டியுள்ளது.

எது எப்படியோ ஒட்டுமொத்த மலை யகமும் இன்று உற்று நோக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை சகல தரப்பினரும் உணர்ந்து கொண்டால் சரி.

நன்றி - வீரகேசரி
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates