Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

1956: தமிழர்களுக்கு செய்த கூட்டுத் துரோகம் - என்.சரவணன்

19ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதிய சுதேசிய குட்டிமுதலாளித்துவ வர்க்கம் அதுவரை உள்நாட்டில் காலனித்துவ சீர்த்திருத்தமே போதும் சுதந்திரம் தேவையற்றது என்று எண்ணிக்கொண்டிருந்தது. தமது வர்க்க நலன்களை சமரசத்துடன் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் பேணிக்கொள்ள முடியும் என்று நம்பியிருந்தார்கள். அந்த நம்பிக்கையை எல்லாம் தவிடுபொடியாக்கியது 1915 கலவர நிகழ்வுகள்.

1915 கலவரமும் அதன் பின் விளைவுகளும் உள்ளூர் அரசியல் தலைவர்களின் அரசியல் அசட்டைத்தனத்துக்கு கிடைத்த பெருத்த அடி. இந்த படித்த மேற்தட்டு பூர்ஷுவா வர்க்கம் இன, மத, அரசியல், சாதி பேதமின்றி ஆங்கிலேயர்களின் இராணுவச் சட்ட நடவடிக்கைகளையும், அதன் தண்டனைகளையும் எதிர்த்து நின்றதுடன் பரஸ்பரம் ஆதரவையும், உதவிகளையும் செய்து உணர்வுபூர்வமாக கைகோர்த்துக்கொண்டார்கள். இந்த கலவரம் அனைவரையும் இலங்கையர்களாக ஒன்றிணைவதன் அவசியத்தை உண்டுபண்ணியது.

இதுபோலவே 1919 ஆம் ஆண்டு இந்தியாவில் அமிர்தரஸில் ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் ஆங்கில அரசால் மிலேச்சத்தனமாக மேற்கொண்டதில் சுதந்திரப் போராட்டத்திற்கான அணிதிரள்வு நாடளாவியரீதியில் நிகழ்ந்தது. இந்திய தேசிய இயக்கத்துக்கு அது எப்படி உந்துதலைக் கொடுத்ததோ இலங்கையில் 1915 பெரும் உந்துதலைக் கொடுத்திருந்தது.

மேலும் இலங்கைத் தீவு முழுமையாக காலனித்துவத்தின் கட்டுப்பாட்டில் 1815 ஆம் ஆண்டு போனதன் நூற்றாண்டும் 1915 இல் நினைவு கூற உந்தப்பட்டனர்.

முதற் தடவையாக இனத்தலைமைகள் ஐக்கியப்பட்டன. இலங்கையின் அரசியல் எதிர்காலத்துக்காக ஒன்றுபட்ட தேசிய அரசியல் இயக்கத்தின் தேவையை வலுவாக உணர்த்தியது.

சேர் பொன் அருணாச்சலம் சட்ட நிரூபண சபையில் சேர் பொன் இராமநாதனுக்குப் பின் அங்கத்துவம் வகித்தார். அரசாங்க சேவையில் பணியாற்றும் காலத்திலேயே சுயராஜ்ய உணர்வால் உந்தப்பெற்றார். சிவில் சேவையிலிருந்து அவர் 1913 ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெற்ற பின் அரசியல், சமூக, கல்விப் பண்பாட்டுத் துறைகளிலே ஈடுபட்டார். 1915 ஆம் ஆண்டு அவர் இலங்கை சமூக சேவை கழகம் (Ceylon Social Service League) என்கிற அமைப்பை நிறுவினார். 

இலங்கை தேசிய காங்கிரஸ்
1917 ஆம் ஆண்டு அவர் இலங்கை சீர்திருத்தக் கழகத்தை (Ceylon Reform League) ஆரம்பித்தார். இலங்கை சட்ட நூல் நிலையத்தில் நிகழ்ந்த அதற்கான கூட்டத்தில் 19 உறுப்பினர்களால் (அதாவது 19 வழக்கறிஞர்களைக் கொண்ட) சீர்திருத்தக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. “எமது அரசியல் தேவை” என்கிற தலைப்பில் அருணாசலம் ஆற்றிய உரையில்..

“இலங்கை பிச்சை கேட்கும் வரிய நாடல்ல எமது பாரம்பரிய சொத்தைத் தான் கேட்கிறோம்” என்றார் (02.04.1917) 

1919 ஆம் ஆண்டு இலங்கை தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress - CNC) எனும் இயக்கத்தை அமைத்துக் கொள்வதற்காக பின்வரும் முக்கிய மூன்று அமைப்புகளும் ஒன்றிணைந்தன
  • இலங்கை தேசிய சங்கம் (Ceylon National Association). 
  • இலங்கை சீர்திருத்தச் சங்கம் (Ceylon Reform League)
  • யாழ்ப்பாண சங்கம் (Jaffna Association)
இதில் இலங்கை தேசிய சங்கம் 1880 இல் சேர். பொன் இராமநாதன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டதுடன் அதன் முதலாவது தலைவராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். இலங்கைக்கான அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாக இருந்தது. அரசியல் சீர்திருத்த கோரிக்கைகளுக்காக அவர் லண்டனுக்கும் இந்த அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி பயணம் செய்திருக்கிறார். இடையில் நீண்ட காலம் செயலற்று இருந்தது பின்னர் 1915 கலவரத்தைத் தொடர்ந்து அது மீண்டும் களத்தில் இறங்கி அரசியல் பணிகளை முன்னெடுக்கத் தொடங்கியது.

இலங்கை தேசிய காங்கிரசை ஆரம்பிப்பதில் முன்னின்ற எப்,ஆர்,சேனநாயக்க, ஜேம்ஸ் பீரிஸ் போன்றோர் இனரீதியிலான பிரதிநிதித்துவத்தை நீக்குவதையும் தமது நிகழ்ச்சிநிரலில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். தம்முடன் இணைந்த யாழ்ப்பாண சங்கம் மாத்திரம் இந்த விடயத்தில் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தது. யாழ்ப்பாண சங்கம் அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் குடியேற்ற நாடுகளின் மந்திரிக்கு “எந்த சந்தர்ப்பத்திலும் இன ரீதியிலான பிரதிநிதித்துவம் நீக்கப்படலாகாது” என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

1905ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாண சங்கம் வடக்கு பகுதிகளில் ஆங்கிலம் கற்ற யாழ்ப்பாணத் தமிழர்களைக் கொண்டு இயங்கி வந்தது.

15.12.1917 இல் தேசிய காங்கிரசை உருவாக்குவதற்காக கூடிய முதாலவது ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட 144 பேரில் 17 பேர் மட்டுமே தமிழர்கள். அதுவும் யாழ்ப்பாண சங்கத்தின் பிரதிநிதிகள் இருவர் மாத்திரமே. இன ரீதியான பிரதிநிதித்துவம் நீக்கப்படக்கூடாது என்கிற அவர்களின் கோரிக்கையை  பெரும்பாலான பெரும்பான்மை சிங்களவர்கள் எதிர்த்தனர். இந்த நிலைமையை சரி கட்டுவதற்கு அருணாசலத்தை அணுகினார்கள்.

தமிழர்களுக்கு செய்த துரோகம்
இலங்கை தேசிய சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் பீரிஸ், இலங்கை சீர்திருத்தக் கழகத் தலைவர் ஈ.ஜே.சமரவிக்கிரம, யாழ்பாண சங்கத் தலைவர் ஏ.சபாபதி ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்றை ஏற்படுத்தினார் அருணாசலம். அந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்படாத நிலையில் அருணாசலம் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறைக்குள் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை பேணுவது எப்படி என்று ஆராய்ந்தார். அதன் விளைவாக மேல் மாகாணத்தில் தமிழர்களுக்கு ஒரு தொகுதியை ஒதுக்க சிங்களத் தலைவர்கள் ஒப்புக் கொண்டார்கள். இதன் அடிப்படையில் தான் இலங்கை தேசிய காங்கிரஸ் உதயம் பெற்றது. அந்த வகையில் இலங்கை சீர்திருத்தக் கழகத்தின் ஆயுள் இரண்டே வருடங்கள் தான். 

07.12.1918 அருணாசலத்துக்கு எழுதிய கடிதத்தின் மூலம் ஜேம்ஸ் பீரிசும், சமரவிக்கிரமவும் அந்த வாக்குறுதியை அளித்தார்கள். இக்கடிதம் சேர் பொன் இராமநாதனின் சரிதத்தை எழுதிய எம்.வைத்திலங்கத்தின் நூலில் “சேர் பொன் அருணாச்சலம்” பற்றிய தனியான அத்தியாயத்தில் முழுமையாக இந்தக் கடிதப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அருணாச்சலத்துக்கு எழுதிய கடிதத்தின் முடிவு இப்படி இருக்கிறது.
“...இலங்கை தேசிய சங்கம் மற்றும் இலங்கை சீர்திருத்த கழகம் என்பவற்றின் தலைவர்கள் என்ற வகையில், யாழ்ப்பாணச் சங்கம் முன்வைக்கும் திட்டத்தையும் நாங்கள் அறிவோம், அந்த யோசனைகளை எந்தவகையிலும் எமது  கொள்கைகளுக்கு முரணாக இல்லை. யாழ்ப்பாண சங்கத்தின் யோசனைகளை எதுவும் நியாயமற்றது என்று நாங்கள் கருதவில்லை. மேல் மாகாணத்தில் தமிழர்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதியாக ஆதரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மேல் மாகாணத்தில் தமிழர்கள் நீண்டகாலமாகவே குறிப்பிடத்தக்களவு வாக்காளர்களாக இருந்து வருகிறார்கள்.
யாழ்ப்பாணச் சங்கத்தின் இந்த தீர்மானத்தை எந்த மாற்றமும் இன்றி நாங்கள் ஏற்றுக்கொள்வதோடு இது தொடர்பாக மேலதிகமாக இந்திய, பறங்கி, ஐரோப்பிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பை எங்களிடம் விட்டுவிடும்படியும் பரிந்துரைக்கிறோம்.”
இங்ஙனம்
கையெழுத்து – ஜேம்ஸ் பீரிஸ் (தலைவர் – இலங்கை தேசிய சங்கம்)
கையெழுத்து- ஈ.ஜே.சமரவிக்கிரம (தலைவர் – இலங்கை சீர்திருத்தக் கழகம்)
அதே டிசம்பர் ஏழாம் திகதி அருணாசலம் அச்செய்தியை சபாபதிக்கு வேகமாக அறிவித்தார்.
“...ஜேம்ஸ் பீரிசும், ஈ.ஜே.சமவிக்கிரவும் உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள்... வடக்குக்கு மூன்று, கிழக்குக்கு இரண்டு, மேல் மாகாணத்துக்கு ஒன்று என்கிற வகையில் அவர்கள் அந்த உத்தரவாதத்தை அளித்திருகிறார்கள்... மேல் மாகாணத்தில் இந்தியத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்த அரசாங்கம் நிச்சயம் வழிகளை ஏற்படுத்தும்... நமது சிங்கள நண்பர்கள் மேல்மாகாணத்தில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவக் கோரிக்கைக்கும் நிச்சயம் ஆதரவு வழங்குவார்கள்... முஸ்லிம்கள் அந்தக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்...
யாழ்ப்பாணத்திலிருந்து போதுமானளவு பிரதிநிதிகளுடன் நீங்களும் (சபாபதி), ஏ.கனகசபையும் இந்தத் தீவின் முக்கிய பொதுப் பிரச்சினையை தீர்ப்பதற்கான இந்த மாநாட்டில்  கலந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். 15ஆம் திகதி ஆளுநர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகிறார் என்பதை நான் அறிவேன். நீங்களும் கனகசபையும் 14 பின்னேரமோ அல்லது 13ஆம் திகதி கூட்டத் தீர்மானங்களை நிறைவேற்றியதும் இரயில் ஏறி சென்றுவிடலாம்...”
இப்படிக்கு அருணாச்சலம்
ஜேம்ஸ் பீரிஸ், சமரவிக்கிரம ஆகியோர் கொடுத்த உத்தரவாதத்தை நம்பி அந்த உத்தரவாதத்தை அருணாச்சலம் யாழ்ப்பாணச் சங்கத்துக்கு வழங்குகிறார். இந்த உத்தரவாதங்களை நம்பி யாழ்ப்பாணச் சங்கம் தேசிய காங்கிரஸ் உருவாவதற்காக கைகோர்த்தது.

அந்த உறுதிமொழியின் பேரில் யாழ்ப்பாண சங்கமும் இன ரீதியிலான பிரதிநிதித்துவத்தைக் கைவிட்டு 13.12.1919 இல் நடந்த இலங்கை தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டது. அதன் தலைவராக அருணாசலம் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையேற்றதும் ஆற்றிய முதலாவது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்.
“சிறுபான்மையினருக்கான சிறப்பு பிரதிநிதித்துவம் ஒரு தற்காலிக பயனை மட்டுமே வழங்கும் நான் நம்புகிறேன், இறுதியில் புதிய முறையின் நடைமுறையானது சிறுபான்மையினரையும் இந்த முழுத் தீவையும் ஒரே தேர்தல் தொகுதியாகக் கருதி தீவினதும் பொது நலனுக்காக உழைப்பாளர்கள் என்று நம்புகிறேன்....”
துரதிர்டவசமாக குறுகிய காலத்தில் யாழ்ப்பாணச் சங்கம் மட்டுமல்ல அருணாச்சலமும் சேர்த்து ஏமாற்றப்பட்டார்கள். தமிழர்களை சமரசத்துக்கு அழைத்து தமது தேவை கைகூடியபின், கைவிடுவது என்பது இங்கிருந்து தான் தொடங்குகிறது.

மனிங் சீர்திருத்தத்திற்கான முயற்சிகளை ஆங்கிலேய அரசு மேற்கொண்டிருந்தபோது தமிழ் பிரதிதிநிதித்துவம் குறைக்கப்படுவது குறித்து இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்த தலைவர்கள் கண்மூடித்தனமாக இருப்பதைக் கண்ட அருணாசலம் முரண்படத்தொடங்கினார். தேர்தல் கிட்டிய நேரத்தில் கொழும்பு தொகுதிக்கான வேட்பு மனுவை அருணாசலம் அவர்கள் தயார் செய்துகொண்டிருந்தபோது அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டு ஜேம்ஸ் பீரிசை அப்பதவிக்கு நியமித்தார்கள். இந்த சதியின் சூத்திரதாரியாக செயல்பட்டவர்கள் எப்.ஆர்.சேனநாயக்கா, டீ.எஸ்.சேனநாயக்கா ஆகிய இரு சகோதரர்களுமே. இவர்கள் இருவரும் அப்போது அநகாரிக தர்மபாலாவின் சிங்கள பௌத்த செயற்பாடுகளுடன் இணைந்து பணிபுரிய ஆரம்பித்திருந்தார்கள்.

1921சட்டசபைத் தேர்தல் நெருங்கிய வேளை கொழும்பு நகர் ஆசனம் ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி தமக்கு வழங்கப்படவேண்டும் என்பதை நினைவுருத்திய வேளை 

“இலங்கை சீர்திருத்த சங்கத்தின் தலைவராக இருந்த போது நான் கொடுத்த வாக்குறுதி இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவராக உள்ள என்னைக் கட்டுப்படுத்தாது”  என்று ஜேம்ஸ் பீரிஸ் அறிவித்தார். 

மேல் மாகாணத் தேர்தலில் அவர் போட்டியிட இருந்த அருணாச்சலத்துக்கு தேசிய காங்கிரஸ் ஆதரவு வழங்குமென நம்பியிருந்தார். ஆனால் தனக்கு உருதிமொழியளித்த அதே ஜேம்ஸ் பீரிஸ் வாக்குறுதியை மேரி அத் தேர்தலில் தன்னை விலத்திவிட்டு தானே போட்டியில் இறங்கியதும் அருணாச்சலம் வாபஸ் வாங்கினார்.  

எப்.ஆர்.சேனநாயக்கா இந்த சதியின் பின்னணியில் இருந்தார். இந்த ஆசனம் ஒரு தூய சிங்களவருக்கே வழங்கப்படவேண்டும் என்று தனது சகாக்களுக்கு கூறினார். இறுதியில் அந்த தொகுதிக்கு ஜேம்ஸ் பீரிசை தெரிவு செய்தார்கள். அதுவே சிங்களத் தரப்பினரால் நம்பி மோசம் போன முதலாவது நிகழ்வாக பதியப்படுகிறது.

இந்த துரோகத்தை எதிர்கொண்ட வேளை அருணாசலம் 70 வயதை எட்டிக்கொண்டிருந்தார்.  ஏமாற்றத்தால் துவண்டு போன அருணாசலம் இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து விலகி யாழ்ப்பாணத்துக்கு சென்றுவிட்டார். கனகசபை, சபாபதி உள்ளிட்ட சகல தமிழ் உறுப்பினர்களும் காங்கிரசிலிருந்து விலகினர். இலங்கை தேசிய காங்கிரஸ் அதன் பின்னர் ஒரு தூய சிங்கள அமைப்பாகவே மிஞ்சியது.

தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்தில் அதாவது அடுத்த வருடமே அவர்கள் ஆங்கிலேய அரசுக்கு கொடுத்த அழுத்தம் வெற்றிபெற்றது.

இலங்கை தேசிய காங்கிரசின் தலைமைப் பொறுப்பிலிருந்தவேளை சேர் பொன் அருணாச்சலம் தலைமையிலான குழு இங்கிலாந்துக்கு சென்று காலனித்துவ செயலாளரைச் சந்தித்து அரசியல் சீர்திருத்த யோசனைகளை முன்வைத்திருந்தனர். இதன் முதலாவது வெற்றியாகத் தான் மனிங் சீர்திருத்தம் உருவானது. அச்சீர்த்திருத்ததின் மூலம் சுதேசிய பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. அதுவே படிப்படியாக அடுத்தடுத்த சீர்த்திருத்தங்களையும் நோக்கி நகர்த்தியது. சுதேசிகளின் பேரம் பேசும் ஆற்றலை வளர்த்தெடுத்தது. ஈற்றில் காலனித்துவத்திலிருந்து இலங்கையின் விடுதலையை இலகுபடுத்தியது.

இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த இந்திய தேசிய காங்கிரசை முன்மாதிரியாகக் கொண்டு தான் இலங்கையிலும் “இலங்கை தேசிய காங்கிரஸ்” என்கிற அதற்கு நிகரான பெயரை சூட்டிக்கொண்டனர். ஆனால் இந்த இரண்டு இயக்கங்களுக்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் சீர்திருத்தக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடவில்லை. மாறாக பூரண சுதந்திரத்துக்காகப் போராடியது. ஆனால் இலங்கையின் தேசியத் தலைவர்களாக இன்றும் கொண்டாடப்படும் இந்தத் தலைவர்கள் சீர்திருத்ததுக்காகவே இயக்கம் கட்டினர்.

தேசிய காங்கிரசின் தலைவர்களாக ஆண்டுதோறும் புதியவரை தெரிவு செய்தார்கள். 1919-1920 சேர் பொன் அருணாச்சலம், இரண்டாவது தலைவராக 1921இல் ஜேம்ஸ் பீரிஸ் தெரிவு செய்யப்பட்டார் (ஜேம்ஸ் பீரிஸ் தலைவராக இருந்தபோது தேசிய காங்கிரசின் செயலாளராக இருந்தவர் அருணாச்சலத்தின் மகன் ஏ.மகாதேவா). 1922 ஆம் ஆண்டு மூன்றாவது தலைவராக தெரிவு செய்யப்பட்டவர் எச்.ஜே.சீ.பெரைரா.

எச்.ஜே.சீ.பெரேரா தலைவராக இருந்தபடி இப்படி ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.
“இந்தச் சங்கத்தின் இறுதி இலக்கு பிரித்தானிய கொடியின் கீழ் சுயாட்சியை அமைப்பதே. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அதற்கு நாங்கள் சுதந்திரமடைதல் என்று கூறப்போவதில்லை. நாங்கள் ஒரு போதும் அதைக் கோரியதுமில்லை. சுதந்திரத்தைக் கேட்குமளவுக்கு நாங்கள் முட்டாள்களுமில்லை.”

ஹிருனிகா பிரேமச்சந்திர பாராளுமன்றத்தில் ஆற்றிய முழு உரையின் தமிழ் வடிவம்

21. ஜனவரி அன்று ஹிருனிகா பிரேமச்சந்திரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஆவேசமான உரை இது. உரையின்இறுதியில் "நான் எனது புரண்ட் சைட் - பேக் சைட் இரண்டையும் என் கணவருக்கு மட்டுமே கொடுத்துள்ளேன். ஆனால் வருத்தமான உண்மை ..... இங்குள்ள அநேகர் இவர்களது பேக் சைட்டை ரேண சில்வாவுக்கு கொடுக்கிறார்கள்."
என்று கூறியது மட்டும் ஊடங்கங்களால் முக்கியத்துவப்படுத்தி காட்டப்பட்டது. ஒரு பெண்ணாக அவர் எந்தளவு சிக்கல்களையும், அவதூறுகளையும் சுமக்க வேண்டியிருக்கிறது அதையும் மீறி போராடியபடி அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை இந்த உரையில் நாம் காணலாம்.
சமீப காலத்தில் ஆற்றப்பட்ட சிறந்த பாராளுமன்ற உரையாக இதை கருத முடியும். ஹிருணிகா என்கிற பெண் ஆளுமைக்கு சிரம் தாழ்த்தி வாழ்த்தவேண்டும். இப்பேர்பட்ட துணிச்சல் மிக்க ஒரு உரையை வரலாற்றில் வேறெவரும் ஆற்றியிருக்க முடியுமா என்று என்று தோன்றுகிறது.
இந்த உரையை தமிழுக்கு கொண்டுவந்தவர் - ஜீவன் (சுவிஸ்)

இன்றைய பாராளுமன்ற விவாதம் குறித்து நான் பேசப் போவதில்லை. ரஞ்சன் ராமநாயக்கவின் புதிய திரை நாடகமான பிரிசின் பிரேக் 2 (சிறை உடைப்பு 2) குறித்தே பேசப் போகிறேன்.

ஒரு சகோதரன் , சிறையிலுள்ள இன்னொரு சகோதரனை சிறையிலிருந்து விடுவிப்பதற்காக சில ஒளி நாடாக்களை களத்தில் இறக்கியுள்ளார்.

எடிட் செய்யப்பட்ட ஒலி வடிவங்கள். வேறு குரல்களை திணித்த ஒலி வடிவங்கள் என பல வெளிவந்துள்ளன. இவை குறித்தே பேச உள்ளேன். இந்த தூள்காரர்கள் , தூள் ஊடகங்கள் முழு நாட்டுக்கும் ஹிருணிகா குறித்து தவறான ஒரு கருத்தை பரப்புரை செய்துள்ளது.

நான் அரசியலில் இருந்தாலும் ஒன்று - இல்லாவிட்டாலும் ஒன்று. ஒரு பெண்ணாக நடப்பவை குறித்த அனைத்து தகவல்களையும் இங்கு பகிர உள்ளேன். யாரும் எனக்காக பேச முன்வராத போது நானே எனக்காக நானே பேசி, வாதாடி உண்மைகளை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

இன்று எல்லோரும் என்னை நோக்கி கற்களை எறிகிறார்கள். இரவு குடித்து விட்டு வந்து அவர்களது மனைவிமாரைத் தாக்கும் , மனைவியரது முகத்தை சுவரில் மோத வைக்கும் சிலரும் , தங்களது கணவன்மாரின் பாலியல் இயலாமை குறித்து பேசுவோரும், நான் எனது கணவரை ஏமாற்றியதாக சொல்கிறார்கள். தவிர ஆண்களுடன் கும்மாளம் போடும் சில பெண்களும் கூட சேர்ந்து எனக்கு ரஞ்சனோடு தொடர்பு என சொல்கிறார்கள்.

நான் இங்குள்ளோரைப் பார்த்து கேட்கிறேன். இங்குள்ள அனைவரும் பரிசுத்தமானவர்களா? இந்த கறுப்பு மனிதர்கள்தான் , அடுத்தவர்களது வெண்மையை - பரிசுத்தத்தை தேடுகிறார்கள். இங்கிருக்கும் கரும் புள்ளிகள் இப்போது பரிசுத்தமானவர்களாகிவிட்டனர். இவர்கள் எல்லோரும் தனி ஒரு பெண்ணை வளைத்து நின்று கல்லெறிகிறார்கள்.இப்படி 1 - 2 அல்ல, ஒலி நாடாக்கள் 100 வந்தாலும் நான் இறந்த பின்தான் என் வாயை மூட முடியும். அதுவரை என் வாயை அடக்க முடியாது.

இந்த தூள்காரருக்கு எதிராக , இந்த அரசின் குற்றவாளிகளுக்கு எதிராக , வெளியில் விடுதலை செய்து எடுக்கப் போகும் துமிந்த சில்வாவுக்கு எதிராக , அவரின் அண்ணன் ரெனோ சில்வாவுக்கு எதிராக , அன்று பலமே இல்லாது மோதிய எனக்கு ...... மகிந்த ராஜபக்சகளோடு மோதிய எனக்கு .... அன்று பலமில்லா காலத்தில் துமிந்த சில்வாவை சிறைக்கு அனுப்ப முடிந்த அதே முதுகு பலம் இன்றும் என்னிடம் உள்ளது.

எனக்கு ஏன் சேறடிக்கிறீர்கள்? நான் திருடினேனா? நான் தூள் விற்றேனா? மணல் கடத்தினேனா? விபச்சார விடுதி நடத்தினேனா? எதுக்காக சேறடிக்கிறீர்கள்?

எனது சம வயதையுடைய ஒரு நண்பனோடு தொலைபேசியில் விவாதித்திருக்கிறேன். நாங்கள் பேசியதை எடிட் செய்து - இடை குரல் சொருகல்களைச் செய்து, அவற்றை பகிரங்கமாக வெளியிட்டு எனக்கு சேறடிக்கிறார்கள். அப்படியில்லாமல் நான் திருடியதோ , கொலை செய்ததோ , தூள் விற்றோதோ இல்லையே?

நாட்டில் உள்ள மக்கள் சாப்பாடு இல்லாமல் இருக்கும் நேரத்தில் , இந்த ஒலி நாடாக்களை ரசித்து ரசித்து கேட்கிறார்கள். அவற்றை கேட்டுதான் பசியை தணித்துக் கொள்கிறார்கள்.

நான் நேற்று சீஐடியினரிடம் புகார் அளித்தேன். 2007ல் பிறப்பிக்கப்பட்ட கணனி குற்றவியல் சட்டத்துக்கு அமைய 27/4ல் இருவரது தொலைபேசி உரையாடலை அவர்களது அனுமதியின்றி பதிவு செய்வது அல்லது வைத்திருப்பது அல்லது விற்பது அல்லது வெளியிடுவது குற்றச் செயல் என உள்ளது.

இன்று ஹிரு - தெரண - ரூபவாஹினி - ஐடிஎன் எனும் இந்த தொலைக்காட்சிகளுக்கு எதிராக நான் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளேன். இந்த ஊடகங்களிடம் 1 பிலியன் கேட்டு வழக்கு தொடுக்க உள்ளேன். முடிந்தால் மோதிப் பாருங்கள். யார் வெல்வது என பார்ப்போம். இவை அனைத்தும் எடிட் செய்யப்பட்டவை என நான் ஒப்புவிப்பேன். 1 பிலியன் நஸ்ட்ட ஈடு கேட்பேன். அவர்களிடமுள்ள பணம் தூள் விற்ற பணம். அதை வாங்கி ஏழைகளுக்கு பகிர்வேன். எனக்கு ஒரு சதமும் தேவையில்லை.

இவை எப்படி வெளிவந்தது என சொல்கிறேன். போலிசார் ரெனொவிடம் கொடுத்தார்கள். ரெனோவுக்கு போலீசார் விற்றார்கள். இராஜ் என ஒரு உதவாக்கரைக்கு உல்லாச பயணத்துறையை மேம்படுத்தும் டைரக்டர் பதவியொன்றை கொடுத்துள்ளார்கள். அவனிடம் ரெனொ அதையெல்லாம் கொடுத்தான். அவனோடு 15 பேர் வரை உள்ளார்கள். அவனது நொயிஸ் டிவீ செய்யும் அறைகளிலிருந்து கொண்டு , இப்போது கூட ....... 24 மணி நேரமும் அந்த ஒலிகளை எடிட் செய்து சமூக வலைத்தலங்களில் பரப்பி வருகிறார்கள்.

ரஞ்சன் என்னோடு மட்டுமல்ல , இங்குள்ள 225 ல் பாதிக்கு மேற்பட்டோரோடு ரஞ்சன் பேசியுள்ளார். வெளியே வருவது என்னுடையவை , வெளியே வருவது ஷானியுடையவை , பத்மினி ரணவக்கவினுடையவை. ஏன் ?

இப்போது நடக்கும் பிரிசின் பிரேக் 2 எனும் நாடகத்தின் பிரதான கதாபாத்திரங்கள் நாங்கள் ........ இவற்றை வெளியிட்டு மக்களிடம் ஒரு மன நிலை மாற்றத்தைக் கொண்டு வர முயல்கிறார்கள். துமிந்த பேபி. துமிந்த அப்பாவி. துமிந்த நடந்து போகும் போது எனது அப்பா தானே தனக்கு வெடி வைத்துக் கொண்டார். அப்படி ஒரு கதையை சோடிக்கப் பார்க்கிறார்கள். இங்கே பிரதான கதாபாத்திரங்கள் நாங்கள் ....... எனக்கு ஏதாவது வழக்கு இருக்கிறதா என பார்க்கிறார்கள். கைது செய்ய வழி தேடுகிறார்கள். அப்படி ஒன்றும் இல்லை.

பெண்களை அடக்குவதற்கு அந்த பெண்ணின் ஒழுக்கத்தை கீழ் தரமாக விமர்சிப்பதால் வீழ்த்த முடியும் . எனது ஒழுக்கத்தை விமர்சித்து என்னை வீழ்த்தப் பார்க்கிறார்கள் . நான் அரசியலுக்கு வந்த காலத்தில் நாமலுடன் உறவு என கதை பரப்பினார்கள். இந்த பாராளுமன்றத்தில் இருக்கும் அநேக ஆண்களோடு என்னை இணைத்து கதை பரப்பினார்கள் . நான் வீழ்ந்தேனா? நாமலிடம் கேளுங்கள் எனக்கும் அவருக்கும் உறவு இருந்ததா என்று ...... அவரது காதலிகளின் தூதாக உதவியுள்ளேன் . நாங்கள் நண்பர்கள் . ஒரு நாளாவது அவரோடு உறவு வைத்துக் கொண்டேனா என கேளுங்கள் ...... ஒரு பெண் பாராளுமன்றம் வரும் போது இப்படியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது . இதற்கெல்லாம் நானா வீழ்வது! எனக்கு பக்க பலமாக முதுகு பலமுள்ள ஒரு ஆம்பிளை - திடமான மனிதர் உள்ளார். இந்த சேறடிப்புகளுக்கு எதிராக நிமிர்ந்து நிற்க அவர் எனக்கு பக்க பலமாக இருக்கிறார்.

இந்த நொய் டிவியில் நடக்கும் எடிட்டிங் வேலை எப்படி ...... ஒரு தொலைபேசி உரையாடலில் ரஞ்சன் ஹலோ என்கிறார். இந்த ஹலோவுடன் வேறெங்கோ பேசியதை கொண்டு வந்து இதோடு சொருகுகிறார்கள். இதோ ரஞ்சன் இருக்கிறார். நான் திலிப் (தெரண உரிமையாளர்) தூள் கொண்டு வருவதாக எப்போதாவது பேசியுள்ளேனா? இல்லை. இந்த நாட்டுக்குள் தூள் கொண்டு வருவது திலிப்பா என எனக்கு தெரியாது. ஆனால் இந்த நாட்டுக்கு தூள் கொண்டு வருவது துமிந்தவும் அவரது அண்ணனும் என முழு நாட்டுக்கும் தெரியும். திலிப் குறித்து ரஞ்சன் ஒரு போதும் என்னோடு பேசியதேயில்லை. நாங்கள் தூள் குறித்து - ரேன குறித்து - துமிந்த குறித்து பேசியுள்ளோம். ஏன் அதெல்லாம் வெளிவரவில்லை?

நாங்கள் பேசியதிலிருந்து அவர்களுக்கு சார்பானதை மட்டும் போட்டு சார்பு இல்லாதவற்றை வெட்டியுள்ளார்கள். இவை தொடர்ந்தும் வரும்.

இதன் பாரதூர விளைவுகளை உணர வேண்டும். அக் காலத்தில் தயாசிரி ஜெசேகர போன்றோர் ..... திலங்க சுமத்திபால போன்றோர் ...... எனது அப்பா கொலையான போது தூள்காரனென துமிந்துவை வசை பாடினார்கள். இப்போது திலங்க , துமிந்த தூள் விற்கவில்லை என்கிறார். தயாசிரி , துமிந்த அப்பாவி. அவரை விடுதலை செய்ய வேண்டும் என்கிறார். ஏன் இப்படி?
இன்று நாட்டின் பிரதானி - நாட்டை நடத்திச் செல்வது கோட்டாபய ராஜபக்ச அல்ல. இன்று அரசியல் பலம் மகிந்த ராஜபக்சவிடம் இல்லை. முழு நாட்டையும் ரேண ஆட்டிப்படைக்கிறார். ரேணவிடம் இவர்களது கடிவாளமான தகவல்கள் உள்ளன. நாளைக்கோ அல்லது மறுநாளோ ரேணவுக்கு ஒரு சிறு வேலை மட்டும்தான் செய்ய உள்ளது. ரேணவின் தம்பி சார்பாக நீங்கள் பேசாது போனால் இங்கிருக்கும் யாருடையதாவது ஒரு கிளிப்பை ( ஒலி - ஒளி) வெளியிட்டால் இவர்கள் நாய்க் குட்டி போல வாலை ஆட்டிக் கொண்டு ரேணவிடம் சரணடைவார்கள்.
நாளை ரேண பாராளுமன்றம் போக வேண்டும் என நினைத்தால் மகிந்தவிடம் போய் சொல்வார் தெரியும்தானே என்னிடம் உள்ள தகவல்கள். எனக்கு தேர்தலில் நிற்க டிக்கட் தாருங்க என்றால் மகிந்த தேர்தலில் நிற்க அனுமதிப்பார். விமல் - கம்மன்பிலவுக்கு சொல்வார் நீங்க ரெண்டு பேரும் ஒதுங்கியிருங்க . நான் கொழும்பில் முதலாவது தேர்வாக வர வேண்டும். நாய் மாதிரி இருங்கடா என்பார். ரேணவுக்கு பாராளுமன்ற பெரும்பான்யை பெற்று பிரதமராகவும் முடியும்.
ரேணவிடம் சாமான்கள் ( தகவல்கள் ) உள்ளன. ரேண பிரதமராகலாம். ஒரு தூள்காரன் பிரதமராவான். அது எப்படி ? இப்போது ரேணவிடம் பலம் உள்ளது. அதனால் இங்கிருக்கும் எல்லோரும் வெட்கப்பட வேண்டும். இங்கிருக்கும் அநேகர் என் அப்பா இறந்த போது வருந்தினார்கள். துமிந்தவை திட்டித் தீர்த்தார்கள். இவனை சிறைக்கு அனுப்ப வேண்டும் எனச் சொன்னவர்கள். இன்று துமிந்த அப்பாவி என்கிறார்கள்.

துமிந்த அப்பாவி இல்லை. நான் எங்குமே துமிந்த எனது அப்பாவை சுட்டதாக சொன்னதில்லை. ஷானியும் சொல்லவில்லை. ஷானி பெற்ற சாட்சிகளில் துமிந்த என் அப்பாவுக்கு வெடி வைத்ததாக இல்லை. துமிந்தவுக்கு முதல் சூடு விழுந்தது என உள்ளது. அதுவும் உண்மை. ஆனால் இப்படியான ஒரு சம்பவத்தை உருவாக்க துமிந்த காலை முதல் கொலை நடக்கும் வரை அங்கிருந்தவர்களை கிளர்ந்தெழ வைத்தார். அதற்கான வியூகத்தை வகுத்தார். இது பிளான் செய்த திட்டுமிட்ட கொலை. சாவு!

இந்த கொலைக்காக ஒரு வாகனத்தில் இருந்த ஆயுதங்களை இன்னோர் வாகனத்துக்கு மாற்றினர்கள். அதற்கான உத்தரவை துமிந்த பிறப்பித்தார். இவை அத்தனையையும் துமிந்த செய்தார். அந்த கொலையை செய்ய , ஆரம்பம் முதல் திட்டமிட்டு செயல்படுத்தியதற்காகத்தான் துமிந்தவுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. காரணம் அந்த திட்டம் , ஒரு படு கொலையில் முடிவுறுவுதால்தான் ...... இதுவே உண்மை.

இங்கே மறைப்பதற்கு ஒன்றுமில்லை. அப்படியில்லாமல் துமிந்த ஒன்றுமறியா பாலகனா? என் அப்பாவும் 3 பேரும் தங்களுக்கு தாங்களே தலையில் சுட்டுக் கொண்டார்களா? இங்கிருக்கும் அனைவருக்கும் அத்தனை உண்மையும் தெரியும். சொல்லவே வெட்கமாக உள்ளது . எல்லோரும் இப்போது வாலை சுருட்டி உள்ளே ஓட்டிக் கொண்டு ஒதுங்கியிருக்கிறார்கள்.

ஏன்? இவர்களது கள்ள பொண்டாட்டிமார் பற்றி ...... வெளிநாடுகளுக்கு போய் யார் யாரோடு இருந்தார்கள்? எப்படி பணம் சுரண்டி உழைத்தார்கள் எனும் அனைத்து விபரங்களும் ரெணோவுக்கு தெரியும். யாரை கொலை செய்தார்கள் - யார் உத்தரவிட்டது .....என அனைத்து விபரங்களும் ரெணோவுக்கு தெரியும்.

உண்மையாகவே வருத்தமாக உள்ளது. அச்சப்பட வேண்டியது எதிர்க் கட்சியில் இருக்கும் நாங்கள் அல்ல .... எமது நற்பெயருக்கு சேறடிப்பதை விட வேறெதுவும் இவர்களால் செய்ய முடியாது. ரேண , எங்களுக்கு சேறடிக்கும் அதே நேரம் உங்களுக்கு இன்னோர் உண்மை முகத்தை ரேண காட்டுகிறார். இனி ரேண தட்டும் தாளத்துக்கு நீங்கள் எல்லோரும் ஆட வேண்டி வரும். போய் மகிந்த ஐயாவிடம் சொல்லுங்க . அவரையும் ரேண கையில் வைத்து ஆட்டுவார் என ..... அது இப்போதே நடக்கிறது. இல்லாவிட்டால் துமிந்தவுக்கு தூக்கு தண்டனை கொடுத்தவர்களை தூக்கிலிட வேண்டும் என நேற்று மகிந்த சொல்வாரா? கொலையாளி பத்மினி ரணவக்கவை தூக்கிலிட வேண்டும் என கொழும்பு முழுவதும் போஸ்ட்டர் ஒட்டியுள்ளார்கள். அவர் செய்த குற்றம் அவர் நீதிபதியாக நீதி வழங்கியதற்காகவா?

ரஞ்சன் ராமநாயக்க எங்காவது அந்த வேலையை இப்படி செய்யுங்கள் என நீதிபதி பத்மினி ரணவக்க அவர்களுக்கு எங்கே அழுத்தம் கொடுத்துள்ளார்? சொல்லுங்க பார்ப்போம். என்ன நடக்கிறது என மட்டுமே கேட்கிறார். அதனால் இந்த பிரசின் பிரேக் 2க்காக மக்களை முட்டாள்கள் ஆக்க முடியாது. இந்த நாட்டில் உள்ள மக்களுக்கு தெரியும். துமிந்த சில்வாவை சில நாட்களுக்குள் விடுவிக்க உள்ளார்கள் என்பது......

இல்லாமல் போனது என்னுடைய அப்பாதான்...... இங்குள்ள எவனுடைய அப்பாவும் இல்லாமல் போகவில்லை. அந்த வேதனை எனக்கு மட்டும்தான் இருக்கிறது. அந்த வேதனை இங்குள்ள எவனுக்குமே இல்லை. துமிந்த சில்வாவை வெளியில் விடப் போவதாக சொல்லும் போது அதற்கு எதிராக குரல் கொடுக்க இருப்பது நான் மட்டும்தான். எனது வாயை அடக்கி, இந்த பெண் ஒரு மோசமான கேடு கெட்ட பெண் என என்னை வெளியில் தூக்கி எறிந்த பின்னர் இவங்களுக்கு இவங்களுடைய வேலையை செய்து கொள்வது மிக சுலபம்.

ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த ஒன்றாலும் என்னை வீழ்த்த முடியாது. யாராவது இவளை வீழ்த்தலாம் என நினைத்துக் கொண்டிருந்தால் , இந்த மனுசி இப்படி , இவளுடைய நடத்தை இப்படி , இவளுக்கு இவரோடு உறவு ,இப்படி - அப்படி என கதை கட்ட நினைத்தால் , இதைவிட பெரிய பிரச்சனைகளுக்கு நான் முகம் கொடுத்துள்ளேன். இந்த தொலைபேசி உரையாடல் வழி நான் மோதுவது தூள்காரர்களோடு ...... கொலையாளிகளோடு ... நாட்டின் ஜனாதிபதிமாரோடு ...... இவர்களை போன்றவர்களோடு முட்டி மோதிய எனக்கு , இந்த தொலைபேசி உரையாடல்கள் எந்த மூலைக்கு ... ரேணோ என்றால் , எவன்டா அவன்? இராஜ் என்பவன் யார்? அவன் மதம் - கலாச்சாரம் குறித்து பேசுகிறான். மதம் - கலாச்சாரம் பேசுறவன் படையினர் குறித்தும் பேசினான். பாதிக்கப்பட்ட படையினரோடு போய் உட்கார்ந்து கொண்டு இராஜ் எங்கள் அரசு, படையினர் சார்பாக பேசவே இல்லை எனச் சொன்னார். ஒரு கதை சொல்லட்டுமா .....இராஜ் படையினர் குறித்து அன்று எப்படி பேசினார் என்று ..... பிரிகேடியர் ஒருவர் இருக்கிறார்.......

சனத் : (குறுக்கிட்டு) இது மீனவ பிரச்சனை குறித்து பேசும் நேரம். இது அவரது தனிப்பட்ட கதை பேசும் நேரமல்ல. இங்கில்லாதோர் பெயர்களை குறிப்பிட்டு இவர் பேசுகிறார். இது முடியாது. பாராளுமன்ற வரப்பிரசாதத்தின்படி இவரை பேச விட முடியாது..

தலைமை தாங்கும் சபாநாயகருக்கு பதிலாக அமர்ந்திருப்பவர் : அவரது பெயர் இங்கே குறிப்பிடப்பட்டதால் அவருக்கு பேச வாய்பளிக்கப்படுகிறது.

ஹிருணிகா: எனக்கு முடியும். எனக்கு அந்த உரிமை உள்ளது. நீங்கள் துப்பாக்கியை காட்டியதெல்லாம் அங்கே இருக்கிறது. ரொம்ப அன்பிலதான் இருக்கறீங்க. அப்படி சும்மா இருங்க. இப்ப நான் சொல்ல வருவது ... ரவீந்ர மீகம ஆரச்சி பற்றி...... அவர் ஒரு பிரிகேடியர். கோட்டாபய ராஜபக்ச அவர்கள் சார்பாக தொடர்ந்து பேசி , அவருக்கு ஆதரவளித்து வந்த ஒருவர்..... இராஜ் என்பவர் கட்சி ஒன்றில் இருப்பவர் கூட இல்லை. நல்லாட்சி வந்ததும் இராஜ் , அவரது லெப்டொப்பை எடுத்துக் கொண்டு வேலை ஒன்று தேடி மைத்ரிபால சிரிசேன ஜனாதிபதியை சந்திக்க போனார். அங்கிருக்கும் வேலைகளை செய்து தர என சொல்லிக் கொண்டு நுழைந்தார். அங்கு போனதும் இராஜ் செய்தது என்ன .... கோட்டாபய அவர்களோடு இருந்த இராணுவ வீரர் ரவீந்திரவை பாதுகாப்பு அமைச்சிலிருந்து கிளிநொச்சிக்கு மாற்றினார். இதுதான் இராஜின் வேலை. அப்படி மாற்றிய போது மைத்ரிபால ஜனாதிபதி அவர்கள் நல்லதொரு வேலை செய்தார். அப்படி செய்த மாற்றத்தை மைத்ரி அவர்கள் தடுத்து இவரை துரத்திவிட்டார். அதனால்தான் இராஜூக்கு நல்லாட்சி வேண்டாதாகிறது. அதனால் அவருக்கு தேவையான வியாபாரங்களை, அன்றைய அந்த அரசுக்குள் செய்ய முடியாமல் போகிறது. அதனால்தான் அவர் திரும்பி கோட்டாவிடம் போனார். அப்படியில்லாமல் இராஜ் நாட்டுக்கு இருந்த நேசத்தினால் கோட்டாவிடம் போகவில்லை.

இராஜ் , அவர் வாயால் இப்படிச் சொல்லியுள்ளார் " நான் கலாச்சாரத்தை அழிக்கிறேன். எனக்கு இந்த கலாச்சாரத்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை. எமது நாட்டிலுள்ள மக்கள் மோட்டு தனமான மக்கள் " என இராஜ் சொல்லியுள்ளார். இப்படிச் சொன்ன இவரைத்தான் நீங்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள். இவர்தான் கலாச்சார - உல்லாச பயணத்துறையை மேம்படுத்தும் இயக்குனர்...... இராஜ் பெண்களை நிர்வாணப்படுத்தி , எந்த அளவு யூடியுப்பில் காட்டியுள்ளார். ஓரினச் சேர்க்கை குறித்து யூடிப்பில் காட்டியுள்ளார். நாங்கள் விக்டர் ரத்னாக்க அவர்களுடைய பாடல்களை எப்படியெல்லாம் ரசித்து கேட்கிறோம். அவருடைய தனிப்பட்ட வாழ்கையை எடுத்து யூடிப்பில் வீடியோ ஒன்று போட்டார். இவரா நாட்டையும் - கலாச்சாரத்தையும் நேசிப்பவர்? தனது தேவைக்கும் - தான் பணம் சம்பாதிக்கவும் வீடியோ செய்த ஒரு ஊதாரி. இவனுகளை வைத்தா இலங்கையின் உல்லாசத் துறையை மேம்படுத்தப் போகிறீர்கள்? இன்னும் அதிகம் உள்ளது.

எங்களுக்கு எடிட் செய்து சேறடிக்கிறார். இராஜ் பொடியனுக்கு சொல்றேன் .... உன் அம்மாவும் - தங்கையும் கிளப்களுக்கு போய் விடிய 1 -2 மணிக்குதான் வீட்டுக்கே வருகிறார்கள். ஆகக் குறைந்தது இரவு 10 மணிக்காவது அவர்களுக்கு வீட்டுக்கு வரச் சொல்லவும் ..... எப்படியும் அவர்களும் பெண்கள்தானே? இராஜூக்கு சொல்ல சொல்லுங்க. அதுபோல இராஜின் அப்பா பிரீத்திராஜ் வீரரத்னவும் - மல்ராஜ் வீரரத்னவும் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார்கள்? ஏன்? அந்த கதையெல்லாம் எனக்கு தெரியும்!

கடைசியா சொல்றன். தூள்காரனை வெளியே விட்டாலும் சரி. உள்ளே வைத்தாலும் சரி. இங்கு இருக்கிற நீங்களெல்லொம் ரேணவின் கை அசைவுக்கு ஒருநாள் ஆடப் போறீர்கள் என வெட்கப்படுங்கள். நான் ஒரு மகளாக எனது கடமையை செய்து முடித்து விட்டேன். அதனால் இந்த நாட்டு மக்களுக்கு சொல்கிறேன். இரண்டு நண்பர்கள் பேசிய ஒரு விடயத்தை எடுத்து வைத்துக் கொண்டு, என் நடத்தை சரியில்லை என தோலுரிக்க நினைத்தால், இங்கிருக்கிற எல்லோரும் போய் கண்ணடியில் உங்கள் முகங்களை பாருங்கள் எனச் சொல்கிறேன். பணத்துக்கும் - தொலைக்காட்சியில் வந்து போகவும் கொலையாளிகள் முன் உங்களது மரியாதையை இழக்காதீர்கள். உங்கள் நிர்வாணம் உங்களுக்கே கண்ணாடியில் தெரியும் எனச் சொல்வதோடு , கடைசியா ஒன்றை சொல்ல வேண்டும்.

ரஞ்சன் ராமநாயக்க அவர்களே! நீங்கள் செய்த வேலையால் .... நீங்கள் தவறான ஒரு வேலையை செய்தீர்கள். என்னோடு பேசிய தொலைபேசி உரையாடல்களை , எனக்கு சொல்லாமல் ரெக்கோட் பண்ணியுள்ளீர்கள். ஆனால் ரஞ்சன் எனக்கு ஒரு சகோதரன். ஒரு நண்பன். இங்கு உள்ள அனைவரும் என் சகோதரர்கள். நண்பர்கள். நாங்கள் பெண்களாக அரசியலில் ஈடுபடும் போது அதிகமாக ஆண்களோடுதான் பழகுகிறோம். இல்லாமல் ...... இங்கு பெண்கள் அதிகமாக இருக்கிறார்களா? இல்லை! ஆண்களோடுதான் பழக வேண்டியுள்ளது. ஆண்களோடுதான் பேச வேண்டியுள்ளது. அவர்களோடு இணைந்து மகிழ்கிறோம். பேசுகிறோம். நாங்கள் வேறெதுவும் செய்யப் போகவில்லை. எங்கள் குடும்ப வாழ்கையையும் நன்றாக கவனித்துக் கொள்கிறோம். அதனால் ரஞ்சன் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இங்கு வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்களுக்கு எங்கள் நட்பு என்ன? நாங்கள் பேசியவை என்ன ..... என உங்கள் வாயை திறந்தே சொல்லுங்கள். இப்படி எடிட் செய்த ஒலிகளை வெளியிட நினைத்துக் கொண்டிருப்போருக்கு நான் இறுதியாக ஒன்றை சொல்கிறேன்.

நான் எனது புரண்ட் சைட் - பெக் சைட் இரண்டையும் என் கணவருக்கு மட்டுமே கொடுத்துள்ளேன். ஆனால் வருத்தமான உண்மை ..... இங்குள்ள அநேகர் இவர்களது பேக் சைட்டை ரேண சில்வாவுக்கு கொடுக்கிறார்கள். அது குறித்து எனக்கு மிக வருத்தமாக உள்ளது.

"கள்ளத்தோணி" நூலுக்கு அணிந்துரை - வி. முத்தையா


கள்ளத்தோணி என்கிற இந்த நூல், மலையக மக்களின் துயரம் தோய்ந்த வாழ்வியலைப் பதிவு செய்து வெளியாகியுள்ள நூல்களிலேயே தனிச்சிறப்பு வாய்ந்தது எனக் குறிப்பிட முடியும்.

நூலைப் பற்றிச் சொல்வதற்கு முன்னர் நூலாசிரியரைப் பற்றியும் கொஞ்சம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

நூலாசிரியர் சரவணன், ஆழ்ந்த படிப்பறியும் தோய்ந்த ஆய்வியல் சிந்தனையும் கொண்டவர். நூறாண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறுகளையும், சான்றாதாரங்களையும், கிடைத்தற்கரிய  ஆவணங்களையும் தேடித்தேடிச் சேகரித்துத் தருவதில் சளைக்காத ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்.  மலையக மக்களின் வரலாற்றையும் அவர்கள் எதிர்கொண்ட வாழ்வியல் துயரங்களையும் குறித்து காக்கை இதழில் அவர் தொடர்ந்து எழுதிவரும் பதிவுகள் புதிய வெளிச்சம் பாய்ச்சக் கூடியவை.  வாதப் பிரதிவாதங்களை முன்வைத்து அவர் சொல்லாடல் செய்யும் பாங்கு கிறுகிறுக்க வைக்கும். ஈழம் குறித்தும் ஈழப்போராட்டம் குறித்தும், போராட்ட வாழ்வியலில் மலையக மக்களின் வரலாறு குறித்தும் எழுதி வரும் இளம் எழுத்தாளர்களில் கிழக்கின் தொடுவானமாக உயர்ந்து நிற்பவர் மட்டுமல்ல.  காக்கைக்குக் கிடைத்த அரிய செல்வம் சரவணன்.   

இவர் எழுதியுள்ள கள்ளத்தோணி என்கிற இந்நூலில், "எந்த சிங்கள பௌத்தத்தின் பேரால் ஏனையோரை அந்நியர்கள் என்கிறார்களோ அந்த சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் இலங்கையுடன் எந்தவிதப் பூர்வீகத் தொடர்புமில்லை.  பௌத்தமும் இந்தியாவில் இருந்துதான் வந்தது.  சிங்கள மொழி உருவாக்கத்தின் உள்ளடக்கமாக இருக்கும் பாளியும், சமஸ்கிருதமும் இந்தியாவில் இருந்துதான் வந்தது. சிங்கள இனமும் இந்தியாவில் இருந்துதான் வந்தது என்பதை சிங்கள பௌத்த புனித வரலாற்று நூல்களில் இருந்தே முன்வைக்க முடியும்"  என நெஞ்சை நிமிர்த்துகிற போது மலையக மக்களின் வாழ்வுரிமையையும் வரலாற்றுத் தொடர்ச்சியையும் சொடுக்கிக் காட்டுகிறார்.

மாதத்தில் 26 நாட்கள் பணி செய்யாவிட்டால் மொத்த மாதச் சம்பளமும் ரத்து செய்யப்படும் என்றிருந்த 1930 களில், சுதந்திரமும் நீதியும் நிறத்தினால் தீர்மானிக்கப்படக் கூடாது’ என இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களிடையே முழங்கி அவர்களிடையே விழிப்புணர்ச்சி மிக்க கருத்துகளைப் பரப்பி வந்த இடதுசாரி இயக்கச் சிந்தனையாளரான ‘பிரஸ் கேர்டல்’ பற்றி விரிவான பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.  குறிப்பாக, நாட்டு மக்களிடையே ப்ரஸ்கேர்டல் குழப்பத்தை விளைவிப்பதாகக் கருதி நாடு கடத்த முடிவெடுத்து அரச சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது 34 உறுப்பினர்களில் 27 பேர் எதிர்த்தும் 7 பேர் ஆதரித்தும் வாக்களித்த விவரத்தைச் சொல்லி அந்த ஏழுபேரில் ஒருவர் ஜி.ஜி. பொன்னம்பலம் என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.

காலனித்துவத்தின் காலத்தில் இலங்கை வாழ் தமிழர்களை 1880 வரை மலபாரிகள் என்றே அழைத்து வந்ததாக The Blue book of Ceylon என்கிற இலங்கையின் ஆவணத்தை மேற்கோள்காட்டி இந்தியாவிலிருந்து தமிழர்கள் தோட்டத் தொழிலுக்காக இறக்குமதி செய்த காலத்தில் அவர்களை அடையாளப்படுத்த "மலபார் கூலிகள்" என்று அழைத்ததையும் சுட்டி, தோட்டத் தொழிலைத் தவிர துறைமுகம், ரயில் சேவை, சுத்திகரிப்புத் தொழில் போன்ற பணிகளுக்கும் இந்தியர்களே இறக்கப்பட்டதால் "இந்தியக் கூலிகள்" என்று பெயரிட்டு அழைத்ததையும் அவர்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள்கூட கூலிச் சட்டங்கள் என்றே அழைக்கப்பட்டதையும் மிக அழகாக விவரித்துள்ளார்.

1881 இல் வெளியான குடித்தொகை கணக்கெடுப்பு அறிக்கையில்தான்  இறக்குமதி செய்யப்பட்ட தமிழர்களை "இந்தியத்தமிழர்" என்று அரசாங்கம் பதிவு செய்துள்ளது. "தோட்டகாட்டான்", "கள்ளத்தோணி" என்கிற இழிச்சொற்களால் அழைக்கப்பட்டு வந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் சனத்தொகை இலங்கைவாழ் தமிழர்களின் சனத்தொகையைவிட அதிகரித்த காலத்தில் தான் அதாவது ஒரு நூற்றாண்டு கடந்த பின்னர்தான் இந்திய வம்சாவளியினர் என்கிற பெயர் பெற முடிந்தது என்றும் சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டை விட்டுத் துரத்தும் அவலம் நேரிட்ட               போதுதான் இனி இந்தியாவுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையெனக்கூறி "மலையகத் தமிழர்" என்ற அடையாளத்தை நிறுவிக் கொண்டதாகவும் இந்த நிலையில்தான் இலங்கையில் சிங்களர்கள், தமிழர்கள், இசுலாமியர்கள் போல மலையக மக்களும் தனியான தேசிய இனம் என்கிற கருத்தாக்கம் கடந்த கால் நூற்றாண்டு காலமாக மலையக மக்களிடையே பேசுபொருளாகி இருப்பதாகவும் பதிவிட்டிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது. 

1983 ஆம் ஆண்டு ஜுலை கலவரத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் பலர் இலங்கையில் பல பகுதிகளுக்கு அகதிகளாகச் சென்றார்கள்.  1983 கலவரத்திற்காக மலையகத்தை அச்சுறுத்தியதின் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலிருந்து அந்த மக்களை விலகி இருக்கச் செய்துவிட முடியும் என சிங்களப் பேரினவாதம் கருதியது என்றும் ஆனாலும் கணிசமானோர் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஈழப்போராட்டக்களத்தில் நின்றதைத் தடுக்க இயலவில்லை என்றும் செய்துள்ள பதிவு முக்கியத்துவம் வாய்ந்த பதிவு.

நாடற்றவர்களாகக் கணக்கிடப்பட்ட  9,75,000 பேரில் 5,25,000 மேல் இந்தியாவும் 3,00,000 பேருக்கு இலங்கையும் குடியுரிமை வழங்குவது மீதமுள்ள 1,50,000 லட்சம் பேருக்கு பிற்பாடு முடிவெடுப்பது என்பது தான் சிரிமாவோ - சாஸ்திரி  ஒப்பந்தத்தின் முக்கியச்சாரம். அதன் மூலம் உயிரும் உணர்வும் மிக்க மனிதர்கள் வெறும் எண்களாகப் பார்க்கப்பட்டதாகவும் 1967 முதல் அமலாகத் தொடர்ந்த இந்த ஒப்பந்தம் இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கைக் குடியுரிமை பெறுவோர், நாடற்றவர்கள் என்று முக்கூறாகப் பிரித்து வீசியதாகவும் துயரம் தோய்ந்த பதிவு ஒன்றையும் இந்நூலில் தந்திருக்கிறார். 

1947 ஆம் ஆண்டின் குடியுரிமை பறிப்பு, 1948 ஆம் ஆண்டின் வாக்குரிமை பறிப்பு, 1964 ஆம் ஆண்டின் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம், 1974 ஆம் ஆண்டின் சிரிமா - இந்திரா ஒப்பந்தம் எல்லாமே மலையக மக்களுக்கு தீராத் துயரத்தையும் ஆறாத வடுவையும் ஏற்படுத்தியது என்பதை கனத்த இதயத்தோடு சுட்டிக் காட்டுகிறார்.

1974 மே 18இல் தார் பாலைவனத்திலுள்ள பொக்ரைன் என்னுமிடத்தில் அணுகுண்டு பரிசோதனை செய்த இந்தியாவைத் தனிமைப்படுத்த பாகிஸ்தான் பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒன்றாக, இந்தியாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானத்தை முறியடிக்க உதவிய இலங்கைக்கு பிரதி உபகாரமாகத்தான் கச்சத்தீவு இந்தியாவால் தாரை வார்க்கப்பட்டது என்பதையும் ஆவண ஆதாரங்களோடு உடைத்திருக்கிறார்.

சிங்களத்தவரின் கொடூரங்களையும் மலையகப் பெருவெளியின் புவியியலையும்  தொட்டுக்காட்டி இந்நூலின் வழியே ஒரு புதிய சிந்தனையை விதைக்க முயன்றுள்ளார் நூலாசிரியர்.  வரலாற்றுத் தரவுகளை சிங்களர்கள் கட்டிக்காக்கும் ஆவணங்களிலிருந்தே வெளிப்படுத்த முயன்றுள்ளதன் மூலம் சிங்களர்களின் கட்டுக்கதைகளை சுக்குநூறாக உடைத்தெறிகிறார்.  

காலத்தை நிறுத்திக் கேள்வி கேட்கும் வலிமையும் வல்லமையும் கொண்ட சரவணனின் எழுத்து வல்லூறுகளின் உறக்கத்தைத் தொலைக்கும்.

தோழமையுடன்,
வி. முத்தையா
(ஆசிரியர் - காக்கைச் சிறகினிலே)
14-12-2019

மன்னாரில் தமிழ்ப் பெயர்பலகை வீரவன்சவின் ஆணையால் மீண்டும் சிங்களத்துக்கு மாற்றம்

இன்று மாற்றப்பட்டிருக்கும் பலகை -
கடந்த சனிக்கிழமையன்று அமைச்சர் விமல் வீரவன்சவால் மன்னார் செல்வாரியில் பனை அபிவிருத்திச் சபையின் ‘ பனந்தும்பு உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அப்படி திறக்கப்பட்டது பெயர்ப்பலகையைத் தான்.

அதன் பெயர்ப்பலகை தமிழில் முதலிலும் இரண்டாவது சிங்களத்திலும் மூன்றாவது ஆங்கிலத்திலும் இடப்பட்டிருந்தது.

அந்தப் பெயர்ப்பலகையில் தமிழுக்கு கொடுக்கப்பட்டிருந்த முன்னுரிமையைக் கண்டு கடுப்பேறிய விமல் வீரவன்ச கடும் ஆவேசத்துடன் அதனை திறக்கப்பட்ட அந்த பலகையை கழற்றி எறிந்து விட்டு உடனேயே சிங்களத்தில் முதலாவதும் தமிழில் அடுததாகவும் வரும் வகையில் மாற்றும்படி அதிகாரிகளுக்கு ஆணையிட்டு அதை மாற்றியே விட்டார்.

அவ்வாறு மாற்றப்பட்டதை வெற்றிப் பெருமிதத்துடன் தான் அதை மாற்றிவிட்டதாக சிங்களவர்களுக்கு இன்று அவரின் முகநூல் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். மாற்றப்பட்ட புகைப்படத்தையும் ஆதாரத்துக்கு வெளியிட்டிருக்கிறார். இதை வரவேற்று சிங்களவர்கள் பலர் அவரை வாழ்த்தி பதிவிட்டு வருகிறார்கள்.

ஏற்கெனவே விமல் வீரவன்ச கடந்த ஆண்டு யாழ் விமான நிலையம் தொடக்கப்பட்ட போது அங்கே பெயர்ப்பலகையில் தமிழில் முதலாவதாக எழுதியிருந்ததை கடுமயாக விமர்சித்து கூட்டங்களில் பேசியதுடன், பத்திரிகை மாநாடு நடத்தி கண்டித்ததும் நினைவிருக்கலாம்.

சிறுபான்மையினருக்கு எதிராக ஏதாவது அரச மட்டத்தில் ஏதாவது ஒரு அதிர்ச்சியை நாளாந்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
சனிக்கிழமை திறந்துவைத்த நிலையத்தின் பெயர்ப்பலகையில் இருந்த குறையை அந்த நேரத்திலேயே அதன் தலைவருக்கு நான் ஆனயீட்டதைத் தொடர்ந்து அது சரி செய்யப்பட்டிருக்கிறது. என்று இட்ட முகநூல் பதிவு. இதனை வெளியிட்ட இரண்டு மணித்தியாலத்தில் 3400 பேருக்கும் மேல் பகிர்ந்திருக்கிறார்கள். 1300 பேர் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். அதை வரவேற்றே அக்கருத்துக்கள் காணப்படுகின்றன.
இலங்கையிலுள்ள ஏனைய பகுதிகளில் சிங்கள மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விமான நிலைய பெயர்ப் பலகைகள் அனைத்திலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதில் எந்த மொழி மீறலுமில்லை, சட்ட மீறலுமில்லை.

அரசியலமைப்பில்
அரசியலமைப்பின் 4வது அத்தியாயத்தின் பிரகாரம் அரசகருமமொழி, தேசிய மொழிகள், கல்வி மொழி, நிர்வாக மொழிகள், சட்டவாக்க மொழி, நீதிமன்றங்களின் மொழிகள் என்றெல்லாம் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளன.

1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையின் அரசகருமமொழியென சிங்களத்தை குறிப்பிட்ட போதும். 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் இந்த விதிகள் மாற்றப்பட்டன. அதன் பிரகாரம் “தமிழும் அரசகரும மொழிகளில் ஒன்றாதல் வேண்டும்” என்று 18.(2) பிரிவு திருத்தப்பட்டது.

அதுபோல 17.12.1988 அன்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 16வது திருத்தத்தின் மூலம் மொழி பற்றிய முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிரகாரம் அரசியலமைப்பின் பிரிவு 22 (1) நிர்வாக மொழி குறித்து இப்படி கூறுகிறது.
''சிங்களமும், தமிழும் இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டும். அத்துடன், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம் நிருவாக மொழியாக இருத்தல் வேண்டுமென்பதுடன், பொதுப் பதிவேடுகளைப் பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடாத்தப்படுவதற்காகவும் சிங்கள மொழி பயன்படுத்தப்படுதலும் வேண்டும். வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மொழி அவ்வாறு பயன்படுத்தப்படுதல் வேண்டும். மொத்தச் சனத் தொகைக்குச் சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மைச் சனத் தொகை என்ன விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ளதோ அதனைக் கருத்திற்கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும், அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக்கூடியதான மாகாணத்தில் நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படுதல் மொழி தவிர்ந்த அத்தகைய இடப்பரப்பிற்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படலாம் எனச் சனாதிபதி பணிக்கலாம்"
என அரசியலமைப்பு கூறுகிறது. 

தென்னிலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற சகல பிரதேசங்களிலும் சிங்களம் நிர்வாக மொழியாகவும் சிங்கள மொழிக்கே முன்னுரிமையும் வழங்கப்பட்டுவருகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில்  தமிழுக்கு சமவுரிமை வழங்கப்படுவது கூட கிடையாது. அதற்காகத் தான் அதனை அமுல்படுத்துவதற்கென்றே “அரச கரும மொழிகள் திணைக்களம், அமைச்சு மட்டுமன்றி அதற்கென்று ஆணைக்குழுகூட கூட ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தென்னிலங்கையில் அரச பதாகைகளில், வெளியீடுகளில் ஏன் முதலாவது சிங்களத்தில் இடப்படுகிறது என்று தமிழர்கள் எவரும் கேள்வி கேட்டதில்லை. மாறாக தமிழிலும் வெளியாடாத போதும், தமிழ் மொழியில் பிழையாக எழுதப்படுகின்ற வேளைகளில் மட்டும் தான் முறைப்பாடு செய்கின்றனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை அங்குள்ள “நிர்வாக மொழி” தொடர்பான சட்டவிதிகளுக்கு உட்பட்ட நடைமுறையே.

1956: (2) - "மத மறுமலர்ச்சிகளின் வகிபாகம்" - என்.சரவணன்


1956 நிலைமைகளை விளங்கிக் கொள்வதாயின் சில வரலாற்றின் பக்கங்களை மீளப் புரட்டிப் பார்த்தால் இலகுவாகிவிடும் என்பதால் சற்று சுருக்கமாக காலனித்துவக் காலத்திள் இருந்து வந்த வளர்ச்சியை வகமாக பார்த்து விடுவோம்.

இலங்கைக்கான தேசியவாதம் இன்று தனித்த இனத் தேசியவாதமாகவோ அல்லது தனித்த மதத் தேசியவாதமாகவோ வளர்ந்து நிற்கவில்லை. மாறாக அது சிங்கள இன + பௌத்த மத + சிங்கள மொழி ஆகியவை கூட்டாக இணைக்கப்பட்டு ஆதிக்கம் செலுத்துகிற தேசியவாதமாக வளர்ந்து நிற்கிறது.

ஆக, இனமும், மொழியும் தேசிய இனத்தின் அடையாளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்பதை புரிந்துகொள்ள கடினம் இருக்கமுடியாது. ஆனால் மதம் இதில் சேர்த்துக் கொண்டதற்குப் பின்னால்; மகாவம்ச கால நீட்சியுடைய வரலாறொன்று இருக்கிறது. அதுவும் இலங்கைத் தீவின் ராஜ்ஜியங்கள் ஆங்கிலேயர்களால் இணைக்கப்பட்டு இலங்கை என்கிற வடிவம் கொடுக்கப்பட்டு பிற் காலத்தில் ஆங்கிலேயர்களால் கைவிடப்பட்டபோது அது “சிங்கள - பௌத்த” தேசியமாக பெரும்பான்மை மக்களால் புனையப்பட்டு அதே ஐதீகம் வளர்த்தெடுக்கப்பட்டு விட்டது.

5000 ஆண்டுகளுக்கு இலங்கைத் தீவு தான் பௌத்தத்தை காக்கப் போகிறது என்று புத்தர் கூறி விட்டு இறந்ததாக புனையப்பட்ட மகாவம்சக் கட்டுக்கதையின் வகிபாகம் குறைத்து மதிக்கத்தக்கதல்ல. 

“சிங்கபாகுவின் மகன் விஜயன் 700 பேர்களுடன் வந்திருக்கிறார், தேவர்களின் தலைவனே! இலங்கையில் என்னுடைய மதம் நிலைநிறுத்துவதற்காக அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் இலங்கையையும் கவனமாகப் பாதுகாத்து வருவாயாக” என்று புத்தர் இந்திரனிடம்வேண்டுகிறார்.

அதாவது புத்தரால் தெரிவு செய்யப்பட்ட நாடு இலங்கை, பௌத்தத்தைக் காக்க தெரிவு செய்யப்பட்ட இனம் சிங்களவர் என்கிற  (Choosen country, Choosen Nation) ஐதீகமே பிறர் மீதான வெறுப்பையும், எதிர்ப்பையும் ஆழமாக விதைத்து வைத்திருக்கிறது.

காலனித்துவத்தின் மதம்
இலங்கையின் சரித்திரத்தைப் புரட்டிப்போட்ட இரண்டு தற்செயல் கரையொதுங்கள் நிகழ்ந்துள்ளன.
  • கி.மு 543 இல் தம்பபன்னியில் கரையொதுங்கிய கப்பலில் வந்த விஜயன் (மகாவம்சத்தின் படி)
  • இந்து சமுத்திரப் புயலால் 1505 ஆம் ஆண்டு காலியில் கரையொதுங்கிய கப்பலில் வந்திறங்கிய போர்த்துகேய கப்டன் லோரன்ஸ் அல்மேதா.
இருவருமே 2000 ஆண்டுகள் இடைவெளியில் தற்செயலாக கரையொதுங்கியவர்கள்.

1505 ஆம் ஆண்டு காலி கரையோரத்தில் ஒதுங்கிய கப்பலின் கப்டன் லோரன்ஸ் அல்மேதாவின் வரவே இலங்கையை அடுத்த நான்கரை நூற்றாண்டுகளுக்கு காலனித்துவத்தின் பிடிக்குள் சிக்குற வைத்தது.

இந்தக் காலப்பகுதியில் முதலில் போர்த்துக்கேயர் 1505-1640 வரையும் ஒல்லாந்தர் 1640-1796 வரையும்  ஆங்கிலேயர்கள் 1796–1948 வரையும் ஆண்டார்கள் என்பதை நாமறிவோம். போர்த்துகேயர் இலங்கையில் மத மாற்றத்தில் காட்டிய அக்கறை அளவுக்கு ஒல்லாந்தர் காட்டவில்லை. கத்தோலிக்க மதத்துக்குப் பதிலாக ஒல்லாந்தர் புரட்டஸ்தாந்து மதத்துக்கு இலங்கையின் பௌத்தர்ர்களையும், இந்துக்களையும் மட்டுமன்றி கத்தோலிக்கர்களையும் மாற்றுவதில் அக்கறை காட்டிய போதும் முன்னர் இருந்த இறுக்கம் இருக்கவில்லை. ஆனால் இலங்கை ஆங்கிலயர்களின் பிடிக்குள் போனதும் மீண்டும் கத்தோலிக்க மதம் செல்வாக்கு பெறத் தொடங்கியது.

1815 இல் செய்து கொள்ளப்பட்ட கண்டி ஒப்பந்தத்தில் ஐந்தாவது பிரிவின்படி பௌத்தத்தை பேணிப் பாதுகாப்பதாக ஆங்கிலேயர்கள் உத்தரவாதமளித்தாலும் 1818 கிளர்ச்சியை அடக்கிய பின்னர் இலங்கை தரப்பினருக்கு வழங்கிய உடன்பாடுகளை இலகுவாக மீறினார்கள். 

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் நேரடி மதத் தலையீடாக கிறிஸ்தவ மிஷனரிகளின் வருகை இருக்கவில்லை. ஆனால் கிறிஸ்தவ மிஷனரி சபைகளின் வருகைக்கு ஆங்கிலேய அரசு அனுசரணை வழங்கவே செய்தது. சுதேசிய மக்களிடம் மதத்தை மட்டும் பரப்பாது கல்வியையும் சமூக சீர்திருத்தப் பணிகளையும் முன்னெடுத்ததானது ஆங்கிலேயர்களுக்கு சாதகமாகவே இருந்தது. அதற்கு முன்னர் போர்த்துகேயரும், ஒல்லாந்தரும் தமது நேரடி மத போதகர்களைக் கொண்டே தேவாலயங்களை உருவாக்கி இயக்கியது.

அந்த வகையில் ஆங்கிலேயர்கள் இலங்கையை பூரண கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்னரே மிஷனரி அமைப்புகள் உள்நுழையத் தொடங்கி விட்டன. 1804-1818 வரையான 13 ஆண்டுகளுக்குள் அப்படி வந்த ஐந்து கிறிஸ்தவ மிஷனரி சபைகள் முக்கியமானவை.
இந்த சபைகளின் செயற்பாடுகளால் இலங்கையில் நாடாளாவிய ரீதியில் கிறிஸ்தவ மதப் பரப்பல் தீவிரம் பெற்றது. கிறிஸ்தவ பிரச்சாரம் அதன் பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. மாறாக ஒரு கட்டத்தில் சுதேசிய மதங்களின் மீதான புனைவுகளைப் பரப்பி, வெறுப்புணர்வையும் ஆங்காங்கு பரப்பத் தவறவில்லை.

தமது பிரசங்கங்களிலும், மதப்பரப்பு கூட்டங்களிலும், தமது பிரச்சார பிரசுரங்களிலும் பௌத்தத்துக்கும், இந்து மதத்துக்கும் எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்தார்கள். 

இதன் விளைவே சுதேசிய மதங்களின் மீளெழுச்சி. பௌத்த மறுமலர்ச்சியும், சைவ மறுமலர்ச்சியும் இதன் விளைவே.

மிஷனரிகள் ஆங்கிலப் பாடசாலையை நடத்திய அதே வேளை, தங்களது நோக்கத்தையடைய சிங்களத்தையும், தமிழையும் போதனா மொழியாக்கினர் என்பார் பேராசிரியர் சிவத்தம்பி. அதாவது ஆங்கில மொழியை நிர்ப்பந்திக்கும் பணியை அவர்கள் முன்னெடுக்கவில்லை. அறிவுக்காக ஆங்கில மொழியை கற்பிக்கத் தொடங்கிய அதே வேளை சுதேசிய மொழியை வளப்படுத்துவதிலும், பலப்படுத்துவதிலும் அவர்கள் காட்டிய அக்கறை சந்தேகமற்றது.  ஆங்கிலேயர்கள் சுதேசிய பாடசாலைகளை உருவாக்கும் திட்டத்தை கோல்புறூக் அரசியல் திட்டக் காலத்தில் கொண்டுவர எத்தனித்த காலத்தில் மிஷனரி பாடசாலைகள் பலமாக இருந்தன. அவற்றுடன் போட்டி போடுவதற்குப் பதிலாக அச்சபைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு அரசாங்கமே மானியம் வழங்கத் தொடங்கியது. 

இலங்கையில் ஆங்கில மொழி, கத்தோலிக்க மதம், ஆங்கிலேய பண்பாட்டு முறைகள் என்பவற்றால் சுதேசிய பாரம்பரிய பண்பாடு நலிந்து ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவந்த காலத்தில் தான் அவற்றுக்கு எதிரான கலகக் குரல்கள் எழத் தொடங்கின.
பௌத்த மறுமலர்ச்சி
1800 களின் நடுப்பகுதிக்குப் பின்னர் கிறிஸ்தவர்களின் பிரச்சாரங்களை எதிர்த்து எதிர்வினையாற்றும் போக்கு தெற்கிலும், வடக்கிலும் எழுச்சியுற்றது. தெற்கில் மிகெட்டுவே குணானந்த தேரர், ஹிக்கடுவே சுமங்கள தேரர், வெலிகம சுமங்கள தேரர் போன்றோர் பௌத்த மறுமலர்ச்சிக்கு தலை கொடுத்தார்கள்.

பௌத்த மத மறுமலர்ச்சியின் போது நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகளை குறிப்பிடலாம்
  • புதிய பௌத்த விகாரைகளை அமைத்து விஸ்தரித்தல்.
  • மிஷனரி கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு மாற்றாக பௌத்த பாடசாலைகளை நிறுவியது
  • தமது பௌத்த மத பிரச்சாரத்துக்கும், மிஷனரி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் அச்சகங்களை உருவாக்கி பல நூல்களையும், பத்திரிகைகளையும் துண்டுபிரசுரங்கள் போன்ற வெளியீடுகளை தொடர்ச்சியாக வெளியிட தொடங்கியமை.
இலங்கையில் 1862இல் வெளியான முதலாவது சிங்கள பத்திரிகை "லங்காலோக". கிறிஸ்தவ பிரச்சாரங்களை எதிர்கொள்வதற்கு அந்த பத்திரிகையை பயன்படுத்தினார்கள். அந்த அச்சு இயந்திரத்தை  ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்ய பண உதவி செய்தவர் அன்றைய சீயம் நாட்டு (தாய்லாந்து) மன்னர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொவிகம சாதியல்லாதோருக்காக சீயம் நிக்காயவை தோற்றுவிப்பதற்கு மூல காரணமாக இருந்தவர் அவர்.

இதன் பின்னர் திகதியையும், இடத்தையும் குறித்து போது மக்கள் மத்தியில் பகிரங்கமாக கிறிஸ்தவ பாதிரியார்களுடன் விவாதங்களை நடத்தினார்கள். இலங்கையின் வரலாற்றில் “பஞ்சமகா விவாதம்” என்கிற பெயர் கொண்டு அழைக்கப்படும் பிரபலமான விவாதம் அது.

சைவ மறுமலர்ச்சி
வடக்கில் சைவத்துக்கு எதிராக பிரச்சாரங்கள் செய்த கிறிஸ்தவ சக்திகளுக்கு எதிர்வினையற்றும் பணிகளும் தொடங்கப்பட்டன. மேற்படி பணிகளைப் போலவே அச்சு இயந்திரம் கொண்டுவருதல், பிரசுரங்களை வெளியிடுதல், சைவ பாடசாலைகளை நிறுவுதல், சைவக் கோவில்களை நிறுவுதல், புனரமைத்தல் போன்றன நிகழ்ந்தன.

ஆறுமுகநாவலர் இந்தப் பணிகளுக்கு தலைமை கொடுத்தார். 1849 இலேயே அவர் அச்சு இயந்தரத்தை வாங்குவதற்காக  சதாசிவம்பிள்ளையுடன் சென்னைக்கு சென்றார். அந்த பயணத்தில் தான் அவருக்கு “நாவலர்” என்கிற பட்டமும் சூட்டப்பட்டது. அவர் சென்னையிலேயே தங்கியிருந்து சூடாமணி நிகண்டுரை, சௌந்தரியலங்கரி போன்ற நூல்களை அச்சிற் பதிப்பித்தார். அதன் பின்னர் தான் இலங்கைக்கு அச்சு இயந்திரத்தைக் கொண்டு வந்து சேர்த்தார்.

ஆனால் நாவலரின் ஆரம்பகால பதிப்புகள் தமிழ், சைவ சமயம் என்கிற வரையறைக்குள் தான் இருந்தது. அச்சகம் தொடங்கப்பட்டதன் இலக்கும் ஆங்கிலேயே எதிர்ப்பைக் கொண்டதல்ல. ஆனால் பிற்காலத்தில் தான் அவர் சைவ சமயத்துக்கு எதிரான கிறிஸ்தவ போதகர்களின் பிரச்சாரத்தை எதிர்த்து எழுதிய பலரின் எழுத்துக்களை பதிப்பிக்கத் தொடங்கினார்.

அவற்றில் ஞானக்கும்மி, யேசுமத பரிகாரம், (முத்துக்குமாரகவிராசர்), அஞ்ஞானக் கும்மி (சிலம்புநாதபிள்ளை), வச்சிரதண்டம், சைவ தூஷண பரிகாரம், மித்தியாவாத நிதர்சனம், சுப்பிர போதம் போன்றவை முக்கியமானவை. 

இதில் உள்ள முக்கிய அம்சம் என்னவென்றால் வடக்கிலும், தெற்கிலும் நிகழ்ந்த இந்த கிறிஸ்தவ எதிர்வினைப் பணிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாததாகவும், சம்பந்தப்படாததாகவும், ஒன்றையொன்று அதிகம் அறியாததாகவும் ஏக காலத்தில் நிகழ்ந்தது தான்.

தெற்கில் பஞ்ச மகா விவாதத்தைத் தொடர்ந்து பௌத்த எழுச்சியொன்று உருவானது. அந்த வழியில் உருவானவர்கள் தான் அநகாரிக்க தர்மபால போன்றோர். இந்த விவாதத்தால் கவரப்பட்டு அமெரிக்காவிலிருந்து வந்து கேர்னல் ஒல்கொட் பௌத்த மறுமலர்ச்சி நடவடிக்கைகளுக்கு பெரும் உந்துதலைக் கொடுத்தார். அவரும் பிளாவுட்ஸ்கியும் சேர்ந்து பிரம்மஞான சங்கத்தை ஆரம்பித்து பௌத்த மிஷனரி பாடசாலைகளுக்கு மாற்றாக பௌத்த பாடசாலைகளை நிறுவினார்கள். அடிமட்டத்திலிருந்து, வசதி படைத்த மேட்டுக்குடியினர் வரை இந்த பௌத்த மறுமலர்ச்சிப் பணிகளில் தம்மை இணைத்துக் கொள்ள ஏதுவானது. அப்படி இணைத்துக் கொண்டவர்கள் தான் இலங்கைக்கு சுதந்திரம் கோரும் சக்திகளாகவும் நாளடைவில் ஆனார்கள்.

1883 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தனத்தன்று கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்கர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் ஒரு கலவரம் நிகழ்ந்தது. ஒரு உயிரும் பலியானது. நாடளாவிய ரீதியில் ஆங்காங்கு அந்த கலவரம் பரவியிருந்தது. சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதுடன், பலர் காயப்பட்டனர். இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக் கொள்ளப்படுவது அது. "Kotahena Riots" என்கிற ஒரு விசாரணை அறிக்கையையும் ஆங்கிலேய அரசு பின்னர் வெளியிட்டது.

இந்தக் கலவரத்தைப் பற்றி முறைப்பாடு செய்வதற்காகவும் ஒல்கொட் இங்கிலாந்து சென்று பல முக்கிய வெற்றிகளை பௌத்த தரப்புக்கு ஏற்படுத்திக் கொண்டு வந்தார்.

அதன்படி வெசாக் தினத்தை விடுமுறை நாட்களாக 27.03.1887 அன்று அறிவித்தது அரசு. 1770 இல் இருந்து வெசாக் விடுமுறை காலனித்துவ ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்டிருந்தது. முதலாவது தடவையாக தீபதுத்தாமாறாம  விகாரையில் குணானந்த தேரர் தலைமையில் பௌத்த கொடி உருவாக்கப்பட்டு 1885 ஏப்ரல் 28 அன்று கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமவில் முதல் தடவை ஏற்றப்பட்டது. இந்தக் கொடியே 1956ஆண்டிலிருந்து சர்வதேச பௌத்த கொடியானது. 1956 பண்டாரநாயக்க ஆட்சியில் இலங்கையில் நடந்த உலக பௌத்த மாநாட்டின் போது உலக பௌத்த கொடியாக ஏகமானதாக அங்கீகரிக்கப்பட்டது.

நன்றி - தினக்குரல்

மூடப்படும் அபாயத்தில் பெருந்தோட்டப் பாடசாலைகள் - க.பிரசன்னா

  • மத்திய மாகாணத்தில் 240
  • சப்ரகமுவ மாகாணத்தில் 230
  • ஊவா மாகாணத்தில் 158
நாடுமுழுவதும் தற்போது 13 வருட கட்டாயக் கல்வியானது நடைமுறையில் இருந்துவருவதால் சகலருக்கும் கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் நாடுமுவதுமுள்ள பாடசாலைகளுக்கு வளங்களை பகிர்ந்தளிப்பதில் சமமான முறை பின்பற்றப்படவில்லையென்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுவருகின்ற நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1486 பாடசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக 2017 ஆம் ஆண்டின் கல்வியமைச்சின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் மூடப்பட்டுள்ள பாடசாலை விபரங்களை கோரி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி கல்வி அமைச்சிடம் கோரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் (ED/RTI/1907/316) நாடளாவிய ரீதியில் 50 மாணவர்களுக்கும் குறைந்த 1444 பாடசாலைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள பாடசாலைகளில் 275 பாடசாலைகள் வட மாகாணத்திலும் 240 பாடசாலைகள் மத்திய மாகாணத்திலும் 230 பாடசாலைகள் சப்ரகமுவ மாகாணத்திலும் 158 பாடசாலைகள் ஊவா மாகாணத்திலும் மாவட்ட அடிப்படையில் ஆகக்கூடுதலாக கேகாலை மாவட்டத்தில் 119 பாடசாலைகள் மூடப்படவேண்டிய நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவ்வாறு அதிகமாக மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள பாடசாலைகள் பெருந்தோட்ட மாணவர்களை அதிகமாக கொண்ட பாடசாலைகளாகும். அதனால் புதிய பாடசாலைகள் அவர்களுக்கு பொருத்தமான சூழலில் காணப்படுமா என்பதும் ஆராயப்படவேண்டிய விடயமாகும். தற்போது நாடளாவிய ரீதியில் 10,194 பாடசாலைகள் காணப்படுவதுடன், இவற்றில் மத்திய மாகாணத்தில் 1519 பாடசாலைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் 1129 பாடசாலைகளும் ஊவா மாகாணத்தில் 900 பாடசாலைகளும் காணப்படுகின்றன. 2018 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் 101 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் 50 மாணவர்களுக்கும் குறைவான 1458 பாடசாலைகள் காணப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இலங்கையில் நிரந்தரமாக மூடப்பட்ட பாடசாலைகள் தொடர்பான விபரங்கள் கல்வி அமைச்சிடம் இல்லையென தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமான கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டிருந்தன. ஆனால் பாடசாலைகள் நிரந்தரமாக மூடப்படுவதற்கு மாணவர்களின் வீழ்ச்சி, நாட்டில் ஏற்படுகின்ற குழப்ப நிலைகள், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள், நகர்புற பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லுதல், தரம் ஒன்று அனுமதிக்கு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாமை, பாடசாலைகளை ஒருங்கிணைத்தல் என்பனவே காரணமாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல 50 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட 1444 பாடசாலைகள் காணப்படுவதாகவும் அப்பாடசாலைகளில் 9171 பேர் அதிபர் மற்றும் ஆசிரியர்களாக கடமையாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மூடப்படுகின்ற பாடசாலைகளிலுள்ள மாணவர்கள் கல்விக்கற்கக்கூடிய புதிய பாடசாலைகளை வலயக்கல்விப்பணிப்பாளர் பெற்றுக்கொடுக்கவேண்டுமெனவும் மூடப்படும் பாடசாலைக்கட்டிடங்களை மூன்று மாதங்களுக்குள் வலயக் கல்விப்பணிமனையானது இன்னுமொரு வலய கல்வி அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது 353 தேசிய பாடசாலைகளும் 9841 மாகாண பாடசாலைகளும் காணப்படுகின்றன. இப்பாடசாலைகளுக்கிடையில் வளங்கள் சமமாக பகிரப்படாமையும் தூர கடப்பிரதேசங்களாகவும் காணப்படுகின்றமை, கட்டாய கல்வி தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லாமை, வறுமை, மாணவர்களை பரீட்சைகளுக்குத் தோற்றவிடாமல் தடுத்தல் போன்ற பல காரணிகள் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதில் தடையை ஏற்படுத்துகின்றன. அதேவேளை ஒரு ஆசிரியருடன் இயங்குகின்ற 54 பாடசாலைகளும் இரண்டு ஆசிரியர்களை கொண்ட 97 பாடசாலைகளும் 3  5 ஆசிரியர்களை கொண்ட 723 பாடசாலைகளும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வரவு  செலவுத்திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் கல்விக்கு 6 வீதம் நிதி ஒதுக்கிடப்படுவதாக கூறப்பட்டாலும் 1.7 வீதமே ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. அதேவேளை ஒதுக்கப்படும் நிதியும் பாடசாலைகளுக்கு சென்றடையாத நிலை மற்றும் செலவளிக்கப்படாத நிதி என்பவையும் மற்றுமொரு பிரச்சினையாக இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி 75 பில்லியன்களாக இருக்கின்ற நிலையில் அவற்றில் 36 பில்லியனே செலவழிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி 83 பில்லியன்களாக இருக்கின்ற நிலையில் அவற்றில் 40 பில்லியனே செலவழிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி 103 பில்லியன்களாக இருக்கின்ற நிலையில் அவற்றில் 76 பில்லியனே செலவழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்தினால்கூட பாடசாலைகளின் வளங்களை சீராக்கி தரமுயர்த்த முடிவதுடன் மாணவர்களின் தேவைகளையும் நிறைவேற்றமுடியும் இதனால் பாடசாலைகளை அநாவசியமாக மூட வேண்டிய தேவை ஏற்படாது.
அதேவேளை இலங்கையில் விஞ்ஞான பாடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களில் 45 வீதமானவர்களே அதற்கான தகுதியை பெற்றவர்களெனவும் கணித ஆசிரியர்களில் 15 வீதமானோரே அதற்கான தகுதியை பெற்றவர்களாகவும் புள்ளிவிபரங்களில் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஒருவேளை இதனால்கூட மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியிருக்கலாம் அல்லது வேறு பாடசாலைகளை தெரிவு செய்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகின்றது.

இலங்கையில் அடிமட்ட மக்களில் 10 வீதமானவர்கள் மட்டுமே உயர்கல்வியை தொடர்வதாகவும் உயரிய சமூகத்தில் 73 வீதமானோர் உயர் கல்வியை பெறுவதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் உயர் கல்வி கற்கும் ஒரு மாணவருக்கு ஒரு வருடத்துக்கு 12,500 ரூபா பிரத்தியேக வகுப்பிற்காக ஒதுக்கப்பட வேண்டிய தேவை இலங்கையில் இருக்கின்றது. கல்விக்காக சாதாரண மாணவர்கள் கடுமையாக போராட வேண்டிய தேவை இருக்கின்றது. அதனால் பாடசாலைக்கான மாணவர்களின் வருகை குறைவதும் பாடசாலைகளை மூடவேண்டியதும் தேவையாக மாறிவிடுகின்றது. எனவே இவ்வாறான அசாதாரண சூழ்நிலைகளிலிருந்து மாணவர்களையும் கல்வியையும் விடுவிக்கவேண்டிய தேவை இருக்கின்றது.

ஒருசில பாடசாலைகள் நிரந்தரமாக மூடப்படுவதனால் வேறு தரமான பாடசாலைகள் கிடைக்குமென பலரும் கருத முடியும். ஆனால் தற்போது மூடப்படும் அபாயத்தில் இருக்கும் பாடசாலைகள் தூர பிரதேசங்களிலோ அல்லது கஷ்டப் பிரதேசங்களிலோ இருந்தால் புதிதாக கிடைக்கும் பாடசாலைகள் இன்னும் தூரமாகவே இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே அவை இன்னும் மாணவர்களை சிக்கலுக்குள் கொண்டுசெல்ல வாய்ப்பிருக்கின்றது. எனவே இவை தொடர்பாக கல்வி அமைச்சும் மாகாண கல்வி அமைச்சும் நடவடிக்கையெடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதுடன் பாடசாலைகளையும் அவற்றின் வளங்களையும் பாதுகாப்பதற்கு கல்விச் சமூகமும் பொதுமக்களும் முன்வர வேண்டும்.

நன்றி - தினக்குரல்

கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி - என்.சரவணன்

இலங்கைத் தமிழ் முஸ்லிம் மக்களின்
முதலாவது நாடாளுமன்றப் பிரதிநிதி

இலங்கையை ஆங்கிலேயர்கள் 1815 இல் முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இலங்கையை ஆள்வதற்கென்று ஆங்கிலேயர்களுக்கு ஒரு அரசியல் அமைப்புமுறையும் நாடாளுமன்ற நிர்வாக முறையும் தேவைப்பட்டது. இதற்காக ஒழுங்குகளை ஆராய்வதற்காக 1829 ஆம் ஆண்டு வில்லியம் கோல்புறூக், சார்ல்ஸ் கமரூன் ஆகியோரின் தலைமையில் ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அவர்கள் பிரேரித்த அமைப்புமுறையைத் தான் கோல்புறூக் - கமரூன் சீர்திருத்தம் என்கிறோம்.

முதலாவது சுதேசிய பிரதிநிதிகள்
கோல்புறூக் சீர்திருத்தத்தின்படி அமைக்கப்பட்ட 15 அங்கத்தவர்களைக் கொண்ட சட்டநிரூபன சபையில் உத்தியோகபற்றுள்ள 9 உறுப்பினர்களும், உத்தியோக பற்றற்ற உறுப்பினர்களாக 6 பேரையும் கொண்டதாக அது அமைக்கப்பட்டது. அதன்படி உத்தியோகபற்றற்ற அறுவரில் ஐரோப்பியர் மூவரும், சிங்களவர் -1, தமிழர் -1, பறங்கியர் – 1. என்கிற அடிப்படையில் அங்கத்துவம் வகித்தார்கள். அதன் அடிப்படையில் இலங்கையின் சட்டசபை மரபில் முதலாவது தமிழ் பிரதிநிதியாக ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியும், முதலாவது சிங்கள அங்கத்தினராக ஜே.ஜி.பிலிப்ஸ் பண்டிதரத்ன (J.G. Philipsz Panditharatne)  என்பவரும், ஜே.சீ.ஹீலபிரான்ட் (J.G. Philipsz) முதலாவது பறங்கி இனத்து உறுப்பினராகவும் தெரிவானார்கள்.

இவர்களில் ஜே.ஜி.பிலிப்ஸ் பண்டிதரத்னவின் பரம்பரையில் வர்ந்தவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க என்பது இன்னொரு அரசியல் கிளைக்கதை.

தேர்தல் அறிமுகமில்லாத இந்தக் காலப்பகுதியில் ஆளுநர் தான் விரும்பிய ஒருவரை தன்னிச்சையாக தெரிவு செய்யும் வழக்கமே இருந்தது. ஆளுநர் சேர் ரொபர்ட் வில்மட் ஹோர்ட்டனுக்கு 9 உத்தியோகபற்றுள்ள உறுப்பினர்களை நியமிப்பது இலகுவாக இருந்தது. ஆனால் உத்தியோகபற்றற்ற 6 பேரைத் தேடிபிடிப்பதும் தெரிவு செய்வதும் சிரமமாக இருந்தது. ஐரோப்பியர் மூவரையும் பறங்கியர் ஒருவரையும் கண்டு இலகுவாக கண்டு பிடித்துவிட்டார். 

எஞ்சிய இரு பிரதிநிதிகள் இருவரையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தான் முதலாவது கூட்டம் 01.10.1833 அன்று இலங்கை சுதேசிகள் எவரும் இல்லாமலே கூடியது. இதை அன்றைய குடியேற்றக் காரியதரிசி கண்டித்தார். அதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக தனது பிரதான மொழிபெயர்ப்பாளர்களாக இருந்த ஆறுமுகம்பிள்ளை, பிலிப்ஸ் பண்டிதரத்ன ஆகிய இருவரையும் முழுச் சம்பளத்தோடு இளைப்பாறச் செய்துவிட்டு 30.05.1835 இல் உத்தியோகபற்றற்றவர் வரிசையில் இருத்தினார் ஆளுநர். இவர்களில் ஆறுமுகம்பிள்ளை மகா முதலியாக இருந்தார். பிலிப்ஸ் பண்டிதரத்ன முதலியாராக இருந்தார். 

இதன்படி இலங்கைத் தமிழர்களின், முஸ்லிம்களின் முதலாவது பிரதிநிதியும் அவர் தான். இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் முதலாவது சுதேசிய அங்கத்தவரும் அவர் தான் எனலாம். 

அப்போதெல்லாம் தமிழ், முஸ்லிம் சமூகத்தை தமிழர் என்கிற அடையாளத்தின் கீழேயே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதால் முஸ்லிம்களின் பிரதிநிதியாக ஆறுமுகம்பிள்ளை இருந்தார். பிற்காலத்தில் இதே வம்சாவளியில் வந்த சேர்.பொன்.இராமநாதன் முஸ்லிம்களின் தனிப் பிரதிநிதித்துவக் கோரிக்கையை எதிர்த்து வாதிட்டது இன்னொரு தனிக்கதை.

பெயர் குழப்பம்
அவரின் பெயரை பலரும் பல குழப்பகரமான பெயர்களைக் கொண்டு அழைப்பதை அவதானிக்க முடிகிறது. க.சி.குலரத்தினம் எழுதிய பிரபல நூலான “நோர்த் முதல் கோபல்லாவரை” (1966) என்கிற நூலில் ஆறுமுகத்தா பிள்ளை என்று அழைக்கிறார். சேர் பொன் இராமநாதனின் சரிதையை (The life of Sir Ponnambalam Ramanathan - 1971) எழுதிய எம்.வைத்திலிங்கம் “ஆறுமுகநாதப்பிள்ளை” என்று பல இடங்களில் குறிப்பிடுகிறார். ஏ.ஜே.வில்சனின் நூல்களிலும் “ஆறுமுகநாதப்பிள்ளை” என்றே அழைக்கப்படுகிறார்.  எஸ்.ஆறுமுகம் தொகுத்த இலங்கைத் தமிழர் சரிதை அகராதி (DICTIONARY OF BIOGRAPHY of the Tamils of Ceylon -1997) நூலில் ஆறுமுகம்பிள்ளை என்றே குறிப்பிடுகிறார். வி.முத்துக்குமாரசுவாமி எழுதிய “Founders of Modern Ceylon eminent Tamils” (1973) என்கிற நூலிலும் ஆறுமுகம்பிள்ளை என்றே ஒரு அத்தியாயத்தை எழுதியிருக்கிறார். நாமும் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி என்றே அழைப்போம்.

வாழ்க்கைக் குறிப்பு
கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி (Arumugampillai Coomaraswamy) 1783 இல் இலங்கையின் பருத்தித்துறையில் கெருடாவில் என்ற ஊரில் ஆறுமுகம்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார். மூத்த சகோதரன் வாரித்தம்பி கொழும்பு செக்கட்டித் தெரு பகுதியில் வந்து குடியேறி வர்த்தகப் பிரமுகரானார். அங்கிருந்து முகத்துவாரத்தில் ஆமைத்தோட்டம் பிரதேசத்தில் வீடு வாங்கி வாழ்ந்தார்.  பொன்னம்பலம் குடும்பத்தினர் பிற்காலத்தில் கொழும்பை மையப்படுத்திய அரசியல் தலைவர்களானது இங்கிருந்து தான் ஆரம்பமானது. இலங்கையின் பெரிய மேட்டுக்குடி பிரமுகர்களும், வர்த்தகர்களும் குழுமியிருந்த மையமாக அப்போது கோட்டை, மத்திய கொழும்பு, கொழும்பு வடக்கு போன்ற பிரதேசங்கள் இருந்தன. பிற காலத்தில் தான் கறுவாத் தோட்டப் பகுதியான இன்றைய கொழும்பு 7 பகுதி உயர் வர்க்க செல்வாக்குள்ள மேட்டுக்குடியினரின் மையமாக மாறியது. பொன்னம்பலம் குடும்பத்தினரும் கொழும்பு 7க்கு குடிபெயர்ந்தார்கள்.

1795 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் வசமிருந்து திருகோணமலைக் கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள். யாழ்ப்பாணம், கல்பிட்டி, நீர்கொழும்பு ஆகிய கோட்டைகளும் சரணடைந்தன. அதனைத் தொடர்ந்து அன்றைய டச்சு கவர்னர் களுத்துறை, காலி. மாத்தறை கோட்டைகளையும் பிரித்தானியரிடம் ஒப்படைக்க முன்வந்தார். 1796 இல் இறுதியில் கொழும்பும் இயல்பாகவே ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது. இலங்கையில் பூரண ஆட்சியை நிலைநாட்டும் வரையான காலப்பகுதியில் மெட்ராசில் இருந்து கவர்னர் தான் இலங்கையின் நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார்.

நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான கணிசமான பணியாளர்களை அடையாளம் கண்டு தென்னிந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் வாரித்தம்பி.13 வயதேயான குமாரசுவாமியையும் அவர் தான் கொழும்புக்கு அழைத்து கவனித்து வந்தார்.

இங்கிலாந்து அரசரின் ஆணைப்படி இலங்கையும் தனியான காலனி நாடாக நிர்வகிப்பதற்காக தனியான ஒரு ஆளுநரை நியமிக்க முடிவு செய்தது. அதன்படி முதலாவது ஆளுநராக பிரெடெரிக் நோர்த் 1798 ஒக்டோபரில் அரசரால் நியமிக்கப்பட்டார். ஆனாலும் 1802 ஆம் ஆண்டு உறுதியாக இலங்கை பிரித்தானிய முடியின் கீழ் உத்தியோகபூர்வமாக வந்துவிட்டதை உறுதிசெய்யும் வரை இலங்கை இந்தியாவில் இருந்த ஆளுநரின் பணிப்பின் கீழ் தான் இயங்கியது.

பிரெடெரிக் நோர்த் வந்த வேகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார். பிரபுக்களினதும், ஆங்கிலேய நிர்வாகிகளதும் பிள்ளைகளின் கல்விக்காக பாடசாலையொன்றை உடனடியாக அமைக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது. 28.10.1799 அன்று கொழும்பில் அப்பாடசாலை நிறுவப்பட்டது. அதே வேளை தமது நிர்வாகத் தேவைக்காக உள்ளூரிலிருந்தே பலரை உருவாக்கும் நீண்ட காலத் தேவையை ஆங்கிலேயர்கள் உணர்ந்தார்கள். கொழும்பு வுல்பெண்டால் தேவாலயத்தின் வடகிழக்கு மூலையில் 18 சிங்கள மாணவர்களைக் கொண்டு ஒரு பிரிவும் உருவாக்கப்பட்டது. Schroter  பாதிரியாரால் தமிழ் பிரிவு உருவாக்கப்பட்ட போதும் சிலரே கற்றனர். அது தொடங்கப்பட்டு ஒரு வருடத்தில் தான் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியும் அப்பாடசாலையில் சேர்க்கப்பட்டார். குமாரசுவாமியின் அபாரமான ஆற்றல் அவரை வேகமாக அடுத்தடுத்த வளர்ச்சிக்கு கொண்டு சென்றது.

ஆற்றிய சேவை
1805 ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். மூன்று வருடங்களின் பின்னர் அன்றைய அரசாங்கத்தின் பிரதிச் செயலாளராக இருந்த ரிச்சட் பிலாஸ்கட் (Richard Plasket) குமாரசுவாமி தேர்ந்த திறமையாளர் என்று சான்று பகர்ந்தார். 1808 ஆம் ஆண்டு குமாரசுவாமி ஆளுநர் தோமஸ் மெயிற்லான்ட் க்கு மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1810 மே மாதம் அவர் ஆளுநரின் தலைமை தமிழ் மொழிபெயர்ப்பாளராக ஆக்கப்பட்டு முதலியார் பட்டமும் வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு 26 வயது மட்டும் தான் ஆகியிருந்தது.

இந்தக் காலப்பகுதியில் தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறிய செட்டிமார் சமூகத்துக்கும், யாழ் சைவ வேளாள சமூகத்துக்கும் இடையில் ஒரு நிழல் யுத்தம் நடந்துகொண்டிருந்ததை பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். சேர் பொன் இராமநாதனின் சரிதையை எழுதிய எம்.வைத்திலிங்கம் அந்நூலில் இந்த கெடுபிடியில் வெள்ளாளர் சமூகத்தின் ஆதரவுடன் குமாரசுவாமி எப்படி தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டார் என்கிற செய்திகளையும் பதிவு செய்கிறார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கும் மேல் குமராசாமி பரம்பரையினர் கொழும்பில் இருந்தபடி தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்தியிருந்தனர். சிங்களத் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு மீண்டும் தமது மூத்த குடிகளின் மண்ணான யாழ்ப்பாணத்துக்கே போய் சேர்ந்தது ஒரு நூற்றாண்டின் பின்னர் தான். அது ஏறத்தாழ 1920களில் நிகழ்ந்த இன்னொரு கதை.

1800களின் ஆரம்பத்தில் கொழும்பில் வர்த்தகச் சமூகமாக இருந்த செட்டி சமூகத்தின் செல்வாக்கும் வளர்ந்திருந்தது. 1830 ஆம் ஆண்டு தலைநகர் கொழும்பில் :கிறிஸ்தவரல்லாத தமிழர்”களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் குமாரசுவாமி. மேல்மாகாண கச்சேரியில் இதற்கான தேர்தல் நடந்தது. சாராய உற்பத்தித் தொழிலில் புகழ்பெற்றவரான தியாகப்பா குமாரசுவாமியோடு போட்டியிட்டார். அவர் செட்டி சமூகத்தைச் சேர்ந்த பெரும்புள்ளி. அத்தேர்தல் ஒரு வகையில் சைவ வெள்ளாளருக்கும், சைவ செட்டிமாருக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு அமைதியான மோதல் என்று தான் கூறவேண்டும்.

1815 ஆம் ஆண்டில் கண்டி அரசன் விக்கிரம ராஜசிங்கன் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்ட நிகழ்வில் குமாரசுவாமி பிரித்தானியர்களுக்காக மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி முக்கிய பங்கு வகித்திருக்கிறார். ஆளுநரின் நேரடி உத்தியோகத்தரராக இருந்த இந்தக் காலப்பகுதியில் கண்டியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பப்பட்ட படையோடு ஆறுமுகம் பிள்ளையும் அனுப்பப்பட்டிருக்கிறார். 1815 பெப்ரவரி மாதம் கொழும்பில் இருந்து 14 நாட்களாக படையுடன் அவர் சென்றிருக்கிறார். கண்டி மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் படிக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பட்ட வேளை அவரையும் அவரின் உறவினர்களையும் வேலூருக்கு நாடு கடத்தும் பணிகளில் அரசருக்கு உதவ பணிக்கப்பட்டிருந்தார்.

அடிமையொழிப்பு
ஏற்கெனவே போர்த்துகேய, ஒல்லாந்து காலத்தில் தொடரப்பட்ட அடிமைமுறை ஆங்கிலேயரின் ஆட்சியிலும் ஆரம்பப்பகுதியில் தொடர்ந்தது. அடிமைகளை உரிமையாகக் கொண்டிருந்தோர் கணிசமானோர் நாட்டில் இருக்கவே செய்தார்கள். அவர்கள் குடும்பம் குடும்பமாக விற்கப்பட்டார்கள். அல்லது தந்தையிடம் இருந்தி பிள்ளைகளைப் பிரித்து, தாயிடம் இருந்து பிள்ளைகளைப் பிரித்து, மனைவி, கணவனை தனியாக பிரித்தோ விற்ற கொடுமை தொடர்ந்தது. இந்த காலப்பகுதியில் இலங்கைத் தீவில் மாத்திரம் மொத்தம் 28,000 அடிமைகள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் 22,000 அடிமைகள் யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இருந்திருக்கிறார்கள். ஒரு ஆண் அடிமையின் விலை 17 ரூபாய், ஒரு பெண் அடிமையின் விலை 34 ரூபாய்கள். மொரிசியசிலும், மேற்கிந்தியாவிலும் அடிமை முறை 1833 இல் தான் இல்லாது செய்யப்பட்டது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

இங்கிலாந்தின் இளவரசர் ரெஜென்ட் (Regent) இன் பிறந்த நாளின் நினைவையொட்டி 12.08.1816 அன்று அடிமையொழிப்புக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அன்றைய இலங்கைப் பிரமுகர்களின் பெரும் பட்டியலொன்றை (Ceylon Ordinances - 1853) காண முடிகிறது.  இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அவ்வாறு கையெழுத்திட்டவர்கள் அனைவரும் சாதி ரீதியாக பிரிந்து கையெழுத்திட்டிருப்பது தான். வெள்ளாளர், கரையார், வண்ணார், செட்டியார் என நீள்கின்றன அந்த குழுமங்கள். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் அளவில் கையெழுத்திட்டிருக்கும் இந்தப் பட்டியல் பிரதேசவாரியாகவும், சாதி மற்றும் இனவாரியாக பிரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  கையெழுத்திட்ட கொழும்பு மலபாரிகள் (கொழும்புத் தமிழர்கள்) பட்டியலில் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியின் பெயரும் அடங்கும்.

அடிமைமுறையிலிருந்து பகுதி பகுதியாக வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து மீட்கப்பட்ட விபரங்களையும் வெளியிட்டிருக்கிறது. யாழ்ப்பாணம், திருகோணமலை பகுதிகளில் இருந்து 1819 இன் இறுதிப் பகுதிகளில் பள்ளர், கோவியர், நளவர் சமூகங்களைச் சேர்ந்த அடிமைகளை அன்றைய நீதிமன்றம் தலையிட்டு மீட்ட விபரங்களை மேற்படி அறிக்கையில் பக்கங்களில் விளக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலேயரின் பாராட்டு
ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியின் சேவையைப் பாராட்டி 1819 ஆம் ஆண்டு ஆளுநர் ரொபர்ட் பிரவுன்றிக்  பதக்கமொன்றை தங்க மாலையுடன் சேர்த்து பரிசாக அளித்தார். அந்த பதக்கத்தில் இப்படி பொறிக்கப்பட்டிருந்தது.
“இந்தப் பதக்கம் கௌரவ சேர் ரொபர்ட் பிரவுன்றிக் அவர்களால் ஆளுநர் தனது பதவிக் காலத்தில் முதன்மைச் சேவையாளரும் அரசாங்கத்தின் தலைமை மொழிபெயர்ப்பாளராகவும் திருப்திகரமான சிறந்த பொதுச் சேவையாற்றியதைப் பாராட்டி ஆறுமுகநாதப்பிள்ளை குமாரசுவாமி முதலியார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.” 
குமாரசுவாமி விசாலாட்சி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு முத்து குமாரசுவாமி, செல்லாச்சி என இரண்டு பிள்ளைகள். முத்து குமாரசுவாமிக்குப் பிறந்தவர் சேர் ஆனந்த குமாரசுவாமி. செல்லாச்சிக்குப் பிறந்தவர்கள் பொன்னம்பலம் குமாரசுவாமி, சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோராவர்.

ஆறுமுகம்பிள்ளை  ஆளுநர் சேர் எட்வர்ட் பேகட் (Sir Edward Paget - 1822-1824), ஆளுநர்  சேர் எட்வர்ட் பார்ன்ஸ் (Sir Edward Barnes 1824- 1831) ஆகியோரிடமும்\ சேவையாற்றியிருக்கிறார்.
குமாரசுவாமி குடும்பத்திலிருந்து வந்தவர்கள்
காலம் ஆதல்
ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி 1835 ஆம் ஆண்டு சட்டநிரூபன சபைக்கு தெரிவானபோதும் அதற்குப் பின்னர் அடுத்த கூட்டத் தொடருக்கு கூட அவரால் செல்ல இயலவில்லை. அதற்குள் அவர் 07.11.1836 அன்று இறந்து போனார்.  அதாவது ஏறத்தாழ அவர் ஒன்றரை வருடத்துக்குட்பட்ட காலம் தான் அப்பதவியில் இருந்திருக்கிறார். ஒரு அரசியல் பிரதிநிதியாக அந்த முதல் சட்ட நிரூபன சபையில் குறிப்படத்தக்க வகிபாகத்தை எந்த அங்கத்தவரும் ஆற்றவுமில்லை ஆற்றியிருக்கவும் முடியாது என்பதையே அன்றைய அரசியல் அதிகார கட்டமைப்பின் வரலாறு மெய்ப்பிக்கிறது. ஆனால் முதலாவது சுதேசிய அங்கத்தவர் என்கிற பெருமையையும், பதிவையும் அவர் கொண்டிருக்கிறார். சிவில் சேவையில் அவரின் வகிபாகம் குறிப்பிடத்தக்கது. வரலாற்று முக்கியத்துவமும் பெற்றது. அதுபோல அவரின் அடுத்த சந்தியினர் அவரின் இடத்தை நிரப்பினார்கள்.

அவரின் இறப்பையடுத்து ஆளுநர் ரொபர்ட் ஹோர்ட்டன் அவருக்காக உணர்வுபூர்வமான அஞ்சலியுரையை 07.11.1836 அன்று ஆற்றினார்.  அவருடைய இடத்துக்கு இன்னொருவரை தெரிவு செய்வதில் ஆளுநருக்கு மீண்டும் சிரமமானது. ஒன்றரை வருடம் வரை குமாரசுவாமியின் இடத்தை ஆளுனரால் நிரப்ப முடியவில்லை. இறுதியில் கற்பிட்டியைச் சேர்ந்த சிறந்த சிவில் சேவை உத்தியோகத்தரும், கல்விமானாகிய சைமன் காசிச் செட்டியை உத்தியோகத்திலிருந்து இளைப்பாறச் செய்து உத்தியோகபற்றற்ற தமிழர் பிரதிநிதியாக நியமித்தார் ஆளுநர். 

குமாரசுவாமிக்குப் பின் சைமன் காசிச் செட்டியும் பின் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியின் மருமகன் எதிர்மன்ன சிங்க முதலியாரும் அவருக்குப் பின் ஆறுமுகம்பிள்ளையின் மகன் முத்துகுமாரசுவாமியும் அவருக்குப் பின்னர் அவரின் மருமகன் இராமநாதனும், அவருக்குப் பின்னர் குமாரசுவாமியும் நியமிக்கபட்டார்கள். குமாரசுவாமி குடும்பத்தவர்கள் இலங்கையின் முதலாவது அரசியல் சீர்திருத்தமான கோல்புறுக் கமரூன் அரசியல் சீர்திருத்தக் காலத்தில் இருந்து டொனமூர் சீர்திருத்தக் காலம் வரை அரசியலில் பிரதிநிதித்துவம் வழங்கி வந்திருக்கிறார்கள்.

இலங்கையில் தமிழர் அரசியல் வரலாற்றில் குமாரசுவாமி போட்ட விதை என்பது எப்பேர்பட்டது என்பதை கடந்த ஒன்றரை நூற்றாண்டு அரசியல் நீரோட்டத்தில் அக்குடும்பத்தினரின் செல்வாக்கு ஏற்படுத்திய அரசியல் திருப்புமுனைகளை அவதானித்தால்  வியப்பாக இருக்கும். அவருக்கு பின் வந்தோரைப் பற்றி நாம் அறிந்த அளவுக்கு அவரை அறிந்ததில்லை.

உசாத்துணைக்குப் பயன்பட்டவை
  1. Lakshmi Kiran Daniel - PRIVILEGE AND POLICY: THE INDIGENOUS ELITE AND THE COLONIAL EDUCATION SYSTEM IN CEYLON, 1912-1948 - Faculty of Modern History, Michaelmas Term, 1992
  2. க.சி.குலரத்தினம் - “நோர்த் முதல் கொபல்லா வரை” ஆசீர்வாதம் அச்சகம் – புத்தகசாலை - யாழ்ப்பாணம் 1966
  3. T.Duraisingam - Politics and life in our times - Vol - II - Printed in the Democratic Socialist Republic of Sri Lanka at Unie Arts (Pvt) Limited – 2000
  4. JOHN H. MARTYN - NOTES ON JAFFNA- Chronological, Historical, Biographical - etc. - American Ceylon Mission Press Tellippalai Ceylon - 1923
  5. A. J. Wilson - Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in the Nineteenth and Twentieth Centuries - 2000)
  6. V.Muttucumaraswamy - Founders of Modern Ceylon (Sri Lanka) EMINENT TAMILS - Vol I. Parts I & II THE PIONEERS - THE FOUNDERS
  7. M. VYTHILINGAM -THE LIFE OF SIR PONNAMBALAM RAMANATHAN Vol.I, RAMANATHAN COMMEMORATION SOCIETY - COLOMBO 1971
  8. A COLLECTION OF LEGISLATIVE ACTS OF THE CEYLON GOVERNMENT FROM 1796: Colombo - William Skeen, Goverment printer, Ceylon - 1853
  9. S.Arumugam - Dictionary of Biography of the tamils of Sri Lanka – London - 1996
நன்றி - தினக்குரல்


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates