நீராவியடியில் புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்காரகித்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கடந்த 23 அன்று அடாவடித்தனமாகவும், அராஜகத்தனமாகவும் தகனம் செய்ததை அனைவரும் கவனித்தோம். ஏற்கெனவே அந்த பிரதேசத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட விகாரை குறித்த சர்ச்சை இன்னமும் தீராத நிலையில் இந்த அக்கிரமம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை நீராவியடி சர்ச்சையோடு பிக்குகளின் சண்டித்தன வரலாற்று நீட்சியையும் சுருக்கமாக பதிவு செய்கிறது.
நீராவியடியில் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரத்தைக் கொண்ட வீடியோ காட்சியொன்றைக் காணக் கிடைத்தது. ஞானசார தேரர் தரப்பில் எடுக்கப்பட்டது. அவர்கள் தரப்பில் செய்யப்பட்டிருந்த பதிவொன்று என்றபடியால் தமிழ் ஊடகங்கள், சமூகவலைத்தளங்களில் அது வெளியாகியிருக்கவில்லை. அங்கு நிகழ்ந்தது என்பதை மேலும் தெட்டத் தெளிவாக விளக்கும் வீடியோ அது.
ஞாயிற்றுக்கிழமை 22ம் திகதி முல்லை பொலிஸ் தலைமையக பரிசோதகர் மற்றும் பொறுப்பதிகாரி செனவிரட்ன ஆகியோர் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்துக்கு சென்று சட்டப்படி இடைக்கால தடை உத்தரவை பெற்றிருந்தும் அடுத்த நாள் திங்கட்கிழமை 23ம் திகதி நீதவான் மாற்று இடத்தை பரிந்துரைத்திருந்தும் தமக்கு நீதிமன்ற உத்தரவு கிடைக்கவில்லை என்று கூறி, அவசர, அவசரமாக விகாரை தரப்பினர் தேரரின் கிரியைகளை செய்து முடித்தனர். அந்த இடத்துக்கு ஞானசாரர் பெருமளவான கும்பல்களை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வந்திருந்தார்.
23 செப்டம்பர்
மேற்படி வீடியோவில் ஞானசார தேரர் கொட்டும் மழையில் சிங்கள கும்பல்களுடன் அங்கு நேரடியாக குழிகளைத் தோண்டச் சொல்லியும், தகனத்துக்கு தேவையான மரங்களை வெட்டிக் கொண்டு வந்து சேர்த்து அடுக்கி கட்டி ஒழுங்கு செய்வதையும் கட்டளையிடுவதையும், இளைஞர்களை அவசரப்படுத்துவத்தையும் காண முடிகிறது.
மேதாலங்காரகித்தி தேரரின் உடலுக்கு பௌத்த பிரித் நடவடிக்கைகளை பல பிக்குமார்களும் சேர்ந்து ஒரு கொட்டிலுக்குள் நடத்திக் கொண்டிருக்கும் போதே ஞானசார தேரர் அங்கிருப்பவர்களுக்கு மெதுவாக கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு காதில் வந்து இரகசியமாக ஏதோ கூறப்படுகிறது. அவர் இன்னொரு மூத்த பிக்குவுக்கு ஆசனத்தைக் கொடுத்துவிட்டு இளைஞர் படைசூழ அங்கிருந்து அவசர அவசரமாக சிங்களவர்கள் குழுமியிருந்த தகன இடத்துக்கு ஆரவாரமாக சத்தமிட்டபடி விரைகிறார். அவரைக் கண்டதும் அங்கிருந்த மக்கள் ஆரவாரமாக வரவேற்கிறார்கள். கட்டைகளை அடுக்கிக் கொண்டிருப்பவர்களை அவர் “வேகப்படுத்துங்கள் பிள்ளைகளே” என்று கூறிவிட்டு மீண்டும் சடலம் இருக்கும் இடத்துக்கு செல்கிறார்.
அங்கு உள்ள பிக்குமார் பௌத்த அனுட்டானம் என்கிற பெயரில் ஆக்கிரமிப்பு அரசியலைப் பற்றி பேசுகிறார்கள். புத்தரின் தாதுப்பல் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டிருந்த இடம் அதுவென்றும், புராதன பாரம்பரிய சிங்கள பௌத்த பிரதேசம் என்றும் அங்கு கூறப்படுகிறது. அமர்ந்திருந்த ஞானசார தேரர் அவரிடம் வந்து அடிக்கடி காதுகளில் குசுகுசுக்கும் பலருக்கு தீவிரமாக கட்டளைகளைப் பிறப்பிக்கிறார்.
அங்கு பொலன்னறுவை திலகாலங்கர தேரர் இப்படி முழங்குகிறார்.
“...இந்தப் பிரதேசம் 2007இல் 59ஆம் படைப்பிரிவு இந்தப் பகுதியைக் கைப்பற்றியவுடன் நாங்கள் ஆரம்பித்த விகாரை இது. அதற்கு முன்னர் எந்தவொரு கோவிலும் இங்கு இருக்கவுமில்லை. அப்படி இருந்தது என்பதை நிரூபித்தால் நான் எனது காவி உடையை விட்டெறிவேன்... இது நமது பாரம்பரிய பூமி. “கொட்டியாரம்பத்துவ” என்று இந்தப் பிரதேசத்துக்கு பெயர் இருந்தது. அதாவது கோடிக்கணக்கான பௌத்த “ஆரம்” இருந்தன என்பது பொருள். பௌத்த சிலைகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டார்கள்.
இந்த நாட்டின் அரசர் என்பது பௌத்தரே. அப்படியென்றால் பௌத்த மதத்துக்கு இப்படி நேர இடம் கொடுக்கலாமா? பௌத்தர்கள் எழுச்சியடைவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்....”
இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கே வந்த ஞானசாரர் மைக்கை கையிலெடுத்து. "முதலில் தகனத்தை முடித்துக்கொண்டு வந்து மீண்டும் இதனைத் தொடங்குவோம். இந்த வரலாற்றுத் தகவல்களை எல்லாம் நம் மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்” என்கிறார்.
பிரேதப்பெட்டியை ஞானசாரர் முன்னே பிடித்தபடி “சாது... சாது... சா...” என்றபடி வீதியில் இறங்கிச் செல்கிறார்கள். இந்த இடையில் தான் தமிழ் மக்கள் தரப்பில் குழுமியிருக்கும் பகுதியை கடக்கவிருந்த இடத்தில் பிக்குமார் முன்னின்று அவர்களைத் தள்ளிக்கொண்டு விரைகிறார்கள். அங்கிருக்கும் பொலிசார் தமிழ் வழக்கறிஞர்களையும் பொதுமக்களையும் தள்ளி பாதையில் வழியமைத்து இடம் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.
அவசர அவசரமாகக்கொண்டு செல்லப்பட்டு உரிய இடத்தில் வைத்து வேகமாக தீயையும் மூட்டிவிடுகிறார்கள். ஞானசாரரின் பரிவாரப் படைகள் மேலதிக கட்டைகளை அதற்குமேல் வைக்கிறார்கள். எரித்துவிடுகிறார்கள். வழமையாக பிக்குமாரின் தகனம் இத்தனை வேகமாக தகனம் செய்யப்படுவதில்லை. அதற்கு முன்னர் சில அனுட்டானங்கள் தகன இடத்தில் நிகழும்.
தகனத்தைச் சுற்றி இருந்த கும்பல் இறைச்சலிட்ட்டபடி ஞானசாரரிடன் தூரத்தில் குழுமியிருக்கும் தமிழர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். “அவர்களுக்கு அடிக்கவேண்டாமா” என்கிறார். இது எங்கள் நாடு என்கிறார்கள் அங்கிருந்த சிங்களவர்கள்.
இங்கு சிங்களவர்கள் வாழ வழி செய்யவேண்டும் என்கிறார்கள். “அதற்கான தலைமையை நாங்கள் உருவாக்குகிறோம் எங்களுக்கு ஆதரவு தாருங்கள்... நாங்கள் இங்கு நிருவனமயப்படவேண்டும், நமக்கான பிரதிகளை இங்கு உருவாக்கவேண்டும். பல அணிகளாக பிரிந்து போகாமல் ‘சிங்களத்தனத்தை’ மட்டுமே கவனத்திற்கொண்டு செயல்படுங்கள்... இந்த சம்பவத்தையும் பாருங்கள்... ஒரு சிங்களத் தலைவராவது கதைக்கிறார்களா? அனைத்தையும் நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள். நாளை பாருங்கள்! இதற்காகவும் எங்களை நீதிமன்றத்துக்கு அழைப்பார்கள். ” என்கிறார் ஞானசாரர்.
சவாலும் எச்சரிக்கையும்
நீதிமன்றம் குறிப்பிட்ட இடத்தில் தகனம் செய்வதில் எந்த நடைமுறை சிக்கலும் இல்லை. ஆனால் தமது சிங்கள பௌத்த மேலாதிக்க உணர்வுக்கு இழுக்காகவே அவர்கள் பார்த்தார்கள். முடிந்தால் செய்துபார் என்பதே அவர்கள் இதன் மூலம் தெரிவிக்கும் செய்தி.
25ஆம் திகதி “வடக்கில் உள்ள பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக தான் முல்லைத்தீவில் போய் குடியிருக்கப் போகிறேன்” என்று ஊடகங்களிடம் எச்சரித்திருந்தார் ஞானசாரர்.
வடக்கில் புத்தர் சிலைகளின் பெருக்கம் என்பது சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பின் வடிவங்களே. அரச மரத்தைக் கூட பௌத்தத்தின் பேரால் அப்புறப்படுத்த விடாதவர்கள் அங்கு ஒரு சிறு புத்தர் சிலை வைக்கப்பட்டுவிட்டாலும் அந்தப் பகுதியை மீளப் பெற முடியாது என்பதே நிலை. நீராவியடியில் பௌத்த பிக்கு ஒருவர் தமிழர் ஒருவருடன் சண்டித்தனத்துடன் கையை நீட்டிச் சொன்ன விடயம் “இலங்கையில் பிக்குமாருக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா...?” என்கிறார்.
இதைத் தான் ஞானசாரரும் கூறுகிறார் அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது இந்த நீதிமன்றங்களுக்குத் தெரியாதா என்கிறார். நீராவியடி பிரச்சினையைப் பற்றி சிங்கள ஊடகங்கள் அனைத்துமே தமிழர்களின் அத்துமீறலாகவும், ஒரு பௌத்த தேரரின் இறுதிச் சடங்கை கூட செய்ய விடாத தமிழர்கள் என்கிற பாணியிலேயுமே செய்தி வெளியிட்டன.
நீராவியடி பற்றி வடக்கு மாகாண கவர்னர் சுரேன் ராகவன் “பௌத்த பிக்குமார் தமது புத்த தர்மக் கடமைகளை செய்யுங்கள். சட்ட மீறலுக்கு நீதித்துறை வினையாற்றும்” என்று அறிக்கை விடுத்ததற்கு, பொதுபலசேனா வின் செயலாளர் திழந்த விதானகே தனது முகநூலில் இப்படி வினயாற்றியிருந்தார்.
“பிக்குமாரின் பாரம்பரியத்தைப் பற்றி வகுப்பெடுப்பதற்கு முன்னர் பிச்சையாக கிடைத்த அந்த தற்காலிக கவர்னர் பதவியைத் தக்கவைத்துக்கொள். நீங்கள் எவரும் இனவாதத்தை தூண்ட இனியும் அனுமதிக்கமாட்டோம்...” என்கிறார்.
சுதந்திரத்துக்குப் பின்னர் குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்கள் யுத்த காலத்தில் இராணுவ முற்றுகைக்கும், இராணுவ ஆக்கிரமிப்புக்கும் இலக்காகி பல நிலங்களைப் பறிகொடுத்த பின்னர். இப்போது பௌத்தத்தின் பேரால் அத்துமீறல்களும் ஆக்கிரமிப்புகளும் புதுப்புது வடிவங்களில் உருவெடுத்து வருகின்றன. நீராவியடி பிரச்சினை புதிய அத்துமீறல்களுக்கான நிர்ப்பந்தங்களையும், பாதையையும் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு திறந்துவிட்டுள்ளன.
நீராவியடி சர்ச்சையை தமிழர் தரப்பு இந்துத்துவ தீட்டு துடக்கு போன்றவற்றுடன் குறுக்கிவிடாமல் இதன் ஆக்கிரமிப்பு அரசியலை அம்பலப்படுத்தி எதிர்வினையாற்றுவதே அரசியல் வினைப்பயனைத் தரும்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் பிக்குமார் தமது அத்துமீறல்களையும், அடாவடித்தனங்களையும் பிரயோகித்து வந்தமைக்கு ஒரு வரலாறு உண்டு. பௌத்தத்தின் பேரால் அதனை நியாயப்படுத்த முடியாவிட்டாலும், “சிங்கள பௌத்த” வியாக்கியானங்களால் அதனை நியாயப்படுத்த முனைவதை அவதானிக்க முடியும்.
மதமும் அரசும்
இலங்கையின் வரலாற்றில் இலங்கையை காலனித்துவ சக்திகளால் கைப்பற்றபட முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் பௌத்தம் அரசிலிருந்து ஒதுக்கப்பட்டிருப்பத்தை அறிய முடிகிறது. முதலாவது 4ஆம் நூற்றாண்டில் மகாசேனன் மன்னன் அன்றைய பௌத்த மத மையமாக விளங்கிய மகாவிகாரைக்கு எதிராக இயங்கியது. அடுத்ததாக 16ஆம் நூற்றாண்டில் கோட்டை ராஜ்ஜியத்தில் மன்னர் தர்மபால கத்தோலிக்க மதத்தைத் தழுவிக் கொண்ட சமயம், அடுத்தது முதலாம் ராஜசிங்கன் சிவாகம வழிபாட்டைப் பின்பற்றி பிக்குமார்களுக்கு எதிராக இயங்கியதையும் குறிப்பிடலாம். இந்தக் காலப்பகுதியில் பௌத்த துறவிகள் அரச தலையீட்டிலிருந்து தள்ளி வைக்கப்பட்டதுடன், அரசின் அனுசரணையும் பௌத்த துறவிகளுக்கும், விகாரைகளுக்கும் கிடைக்கவில்லை.
1505 இலிருந்து காலனித்துவ காலம் முழுவதும் பௌத்த மதம் நெருக்கடிக்குள் தான் இருந்தது. கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராக 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடங்கிய பௌத்த எழுச்சி படிப்படியாக மீண்டும் அரசியல் தலைவர்களை பௌத்த தலைமை உள்ளிழுத்துக் கொண்டது. அரசியல் தலைமைக்கு வருபவர்கள் பௌத்த சங்கங்களின் ஆசீர்வாதத்தையும், அனுசரணையையும் பெறாமல் மைய அரசியலில் ஈடுகொடுக்க முடியாத நிலை தலைநீட்டிக்கொண்டது. அதுபோல சிங்கள பௌத்த சக்திகளும் படிப்படியாக அரசியல் அதிகாரத்தை மறைமுகமாக கட்டுப்படுத்தும் சக்திகளாக மாற்றிக்கொண்டே வந்தார்கள்.
1956 பண்டாரநாயக்க தலைமையிலான ஆட்சி மாற்றம் சிங்கள பௌத்த தேசியவாதமாக உருவெடுக்க பெரும் துணைபுரிந்தது. சுதந்திரக் கட்சியின் ஆரம்ப ஆட்சியின் போது சிங்கள – பௌத்த – தேசியவாதத்துக்கு ஒருவகையில் இடதுசாரித்துவ முகத்தையும் கொடுக்கத் தவறவில்லை. அதுவே பிற்காலத்தில் ஐ.தே.க ஆட்சியில் அதே சிங்கள-பௌத்த-தேசியவாதத்துக்கு வலதுசாரி முகத்தைக் கொடுத்தது. இந்த வலதுசாரி முகம் ஒரு தாராளவாத முகத்தையும் கொண்டிருந்ததால் அது பாசிசம் அளவுக்கு கொண்டு சென்று நிறுத்தவில்லை. ஆனால் ஈற்றில் இந்த இரு சக்திகளுமே தீவீர சிங்கள – பௌத்த – தேசியவாத பௌத்த சங்கங்களின் நிகழ்ச்சிநிரலில் சிக்குண்டார்கள். இன்று அந்த சக்திகளின் ஆசீர்வாதமின்றி எந்த ஆட்சியையும் நடத்த முடியாத நிலை இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கள பௌத்த தேசியவாத சிந்தனையானது நிருவனமயப்படுத்தப்பட்டிருகிறது. அது மோசமான இனவாதமாகவும், பேரினவாதமாகவும் வடிவமெடுத்து அரச கட்டமைப்பில் மாத்திரமின்றி சாதாரண பெரும்போக்கு அமைப்புகளையும் கட்டுப்படுத்தும் வல்லமையை சுவீகரித்துக் கொண்டுள்ளது.
1972ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அரசியலமைப்பு ஏற்பாடானது இலங்கை ஒரு மதசார்பற்ற பல்லின பல்மத நாடு என்கிற அந்தஸ்தை இல்லாமல் செய்தது. பௌத்தத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை என்பது பௌத்த சங்கங்கள் “சிங்கள தேசியவாதத்தையும்” இணைத்துக்கொண்டு அரறு வழங்கிய அதிகாரத்தையும், அந்தஸ்தையும், சலுகைகளையும் துஷ்பிரயோகம் செய்யும் நிலைக்கு கொண்டுசென்று நிறுத்தியிருக்கிறது.
இதன் நீட்சி தான் சிங்கள பௌத்த பிக்குமாரின் அடாவடித்தனமான நடவடிக்கைகள். இலங்கையின் வரலாற்றில் சகல போர்களிலும், போராட்டங்களிலும், அரச அதிகாரத்துக்கான சண்டைகளிலும் பிக்குமாரின் பாத்திரம் பாரிய அளவில் இருந்திருக்கிறது. இதை மகாவம்சம், தீபவம்சம், ராஜாவலிய போன்ற வரலாற்று நூல்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது. எல்லாளனுக்கு எதிரான போரில் கூட துட்டகைமுனுவின் படையில் பிக்குமார் எத்தகைய பாத்திரத்தை ஆற்றியிருக்கின்றனர் என்பது குறித்த கதைகளை மகாவம்சத்தில் காணலாம்.
இலங்கைக்கு பௌத்தத்தைப் பரப்பிய அசோகன் கூட யுத்தத்தின் கொடூரம் கண்டு பௌத்தத்துக்கு மாறியவன். ஆனால் அசோகனிடம் இருந்து பௌத்தத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை தேசம் யுத்தத்தின் அங்கமாக பிக்குமார் ஆக்கப்பட்டதை இங்கு குறிப்பிட வேண்டும்.
உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு பல பௌத்த பிக்குமார் வசதிபடைத்த வியாபாரிகளாகவும், சொத்து சுகங்களை அனுபவிப்பவர்களாகவும் இலங்கையில் இருக்கின்றனர்.
1959 இல் பண்டாரநாயக்கவை கொலையின் பிரதான சூத்திரதாரியான களனி பன்சலையின் விகாராதிபதி புத்தரக்கித்த தேரர் பணம் படைத்த செல்வாக்குமிக்க ஒரு வர்த்தகராக இருந்தார். 1956ஆம் ஆண்டு தேர்தலுக்கான செலவுகளில் பெருமளவு பங்கேடுத்துக்கொண்டவர் புத்தரக்கித்த தேரர். அதுமட்டுமன்றி தனது வர்த்தக நடவடிக்கைகளுக்கு பண்டாரநாயக்க போதிய அளவு உதவி செய்யவில்லை என்பதாலும், முட்டுக்கட்டையாக இருந்ததாலும் பிரதம் பண்டாரநாயக்கவை கொன்றதாக வழக்கு விசாரணையில் தகவல்கள் வெளியாகின.
சிங்கள பௌத்த தேசியவாதிகள் சண்டித்தனமாக தமது காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முற்படும் வேளைகளில் எல்லாம் பிக்குமார்களையும் தம்முடன் சேர்த்துக்கொண்டு முன்னரங்க போராளிகளைப் போல பயன்படுத்தும் ஒரு உபாயத்தை மரபாகாவே கையாண்டு வருவதை அவதானித்திருப்பீர்கள்.
அப்படி முன்னே சென்று போராடும் போதெல்லாம் பிக்குமார் அரச பாதுகாப்பு துறையினரை வம்புக்கு இழுத்திருக்கின்றனர். அவர்களின் கடமைக்கு குந்தகமாக இருந்திருக்கின்றனர். அந்த பாதுகாப்பு தரப்பினருடன் மோதியிருக்கின்றனர். தொழிலாளர்களின், சிவில் சமூகத்தின் அகிம்சைப் போராட்டங்களை மூர்க்கத்தனமாக அடக்கும் படையினர்; பிக்குமார்கள் தலைமை ஏற்கும் போராட்டங்களை கை கட்டி வேடிக்கை பார்த்து பின்வாங்கும் காட்சிகளையே நாம் கண்டு கடந்து வந்திருக்கிறோம்.
பௌத்த சீருடை சண்டித்தனத்துக்கும், அடாவடித்தனங்களுக்குமான லைசன்ஸாகவே இலங்கையில் ஆக்கப்பட்டுள்ளது. பண்டாரநாயக்கவை கொல்வதற்கான கைத்துப்பாக்கியை மறைத்துக் கொண்டுவர காவிச் சீருடை தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அப்பேர்பட்ட சீருடை மீது கைவைத்தால் அது பெரும் சிவில் பதட்டநிலையை உருவாக்கி, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையையும் பாதித்துவிடும் என்கிற அச்சம் சகல அரசாங்கங்களிடமும் இருந்துவந்திருக்கிறது.
மட்டக்களப்பு மங்களாராமய பன்சலையின் அம்பிட்டியே சுமன தேரர் காவியுடை போர்த்திய சண்டியராக மேற்கொண்டுவரும் சட்டவிரோத நடவடிக்கைகளையும், அராஜகங்களையும், அடாவடித்தனங்களையும் ஊடகங்கள் போதியளவு பதிவு செய்திருக்கின்றன.
இலங்கை பிக்குமார் இதுவரை பௌத்த மதப் போதனைகளுக்காக உருவாக்கிய அமைப்புகளை விட அரசியல் தலையீடு செய்யும் அழுத்தக்குழுக்களை உருவாக்கியது தான் அதிகம்
இலங்கையில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக 1919 தொடக்கம் இன்று வரையான நூற்றாண்டு காலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட சகல தீர்வு முயற்சிகளையும் தோற்கடிக்கப்பட்டதில் பிரதான பாத்திரத்தை பௌத்த சக்திகளே ஆற்றியிருக்கின்றனர் என்பது மறைப்பதற்கில்லை. முக்கியமாக பண்டா-செல்வா ஒப்பந்தத்தை கிழிக்கச் செய்ததிலிருந்து, 1965 ஆம் ஆண்டு டட்லி – செல்வா ஒப்பந்தத்தை கைவிடவைத்தது, இறுதியாக 2000ங்களில் அரசு-புலிகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களை தோல்வியடையச் செய்தது என்பவற்றில் பிரதான பாத்திரம் வகித்தவர்கள் பௌத்த பிக்குமார்களே. புத்த தர்மத்துக்குப் பதிலாக யுத்த தர்மத்தை அவர்கள் போதித்தே வந்திருக்கிறார்கள். புத்தம் சரணம் கச்சாமி என்கிற தம்மபதம் “யுத்தம் தர்மம் கச்சாமி” என்கிற முழக்கமாகவே கடந்த நான்கு தசாப்தகாலமாக இருந்து வந்திருக்கிறது.
யுத்தத்தில் பிக்குமார்
1983 கருப்பு யூலை படுகொலைகளின் போது புறக்கோட்டையிலிருந்த தமிழ்கடைகளுக்கு தீ வைப்பதில் பிரதானமாக தலைமை ஏற்றவர் பிரபல எல்லே குணவன்ச தேரர்.
மகிந்தவின் ஆட்சியில் பெல்லன்வில தேரர் தலைமையிலான பிக்குமார் குழு மகிந்தவை சந்தித்து யுத்தத்துக்கான நன்கொடையைத் திரட்டிக் கொடுத்தது.
கடந்த 20.06.2018 அன்று கோட்டபாய தனது பிறந்தநாளுக்கு ஆசீர்வாதம் பெறுவதற்காக அஸ்கிரி பீட பிக்குமாரை அழைத்திருந்தார். அதில் கலந்துகொண்ட அஸ்கிரி பீடத்தின் உப தலைவர் “ஹிட்லரைப் போல நீங்கள் வந்து நாட்டை ஆளவேண்டும்” என்று தனது ஆசீர்வாத உரையில் கூறியிருந்தது நினைவிருக்கலாம். அந்த உரை பெரும் அரசியல் சலசலப்புக்கும் உள்ளானது.
1988-1989 காலப்பகுதியில் ஜே.வி.பி.யின் தேசபக்த மக்கள் இயக்கத்தில் (தேசப்பிரேமி ஜனதா வியாபாறய) அதிகமான பிக்குமார் இயங்கினார்கள். பல கொலைகளிலும் சம்பந்தப்பட்டார்கள் என்பது நிதர்சனம். அதுபோல பல பிக்குமார்களும் படையினரால் அப்போது கொல்லப்பட்டார்கள். அந்தக் காலப்பகுதியில் அரசாங்கத்தின் கொலைக்கும்பல்களால் 681 பிக்குமார் கொல்லப்பட்டதாக ஜே.வி.பி பற்றி பிரபல ஆய்வுநூலை சமீபத்தில் எழுதி வெளியிட்ட தர்மன் விக்ரமரத்னவின் நூலில் குறிப்பிடுகிறார். பிக்குமாரை அப்படி ஈவிரக்கமின்றி கொல்வதற்கு அரசு துணிந்த ஒரே சந்தர்ப்பமாக அந்த ஈராண்டுகளைத் தான் குறிப்பிட முடியும். ஜே.வி.பியுடன் தொடர்புடைய பிக்குமாரின் மீதான அரச ஒடுக்குமுறை மிகவும் மோசமாக இருந்த காலம் அது.
தற்போது பல்வேறு குற்றங்களுக்காக பல பிக்குமார் சிறைக்குள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
லண்டனிலுள்ள பௌத்த விகாரையில் வைத்து 9 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்தார் என்கிற குற்றம் சாட்டப்பட்டு இங்கிலாந்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு பஹலகம சோமரதன (65 வயது) என்கிற பௌத்த பிக்குவுக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இத்தனைக்கும் அவர் அந்த விகாரையின் விகாராதிபதி, பிரித்தானிய மகாநாயக்கர், ஸ்ரீ கல்யாணி சமகிதர்ம மகா சங்கத்தின் பொதுச்செயலாளர். “கம்பஹா பௌத்த பிரிவென்” கல்வியகத்தின் வேந்தர்.
2014 இல் ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல செனாவால் முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கமவில் நிகழ்ந்த கலவரத்தை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். 1990களில் சிங்கள வீர விதான அமைப்பு பௌத்த பிக்குமார்களை முன்னிறுத்தி சிங்கள பௌத்த தேசியவாத இயக்கத்தை முன்னெடுத்த வேளை பல மறைமுக தீவிரவாதப் பணிகளை எப்படி முன்னெடுத்தது என்பது பற்றி அன்றைய சரிநிகர் பத்திரிகை நிறைய வெளிக்கொணர்ந்திருந்தது. அந்த இயக்கம் போட்ட குட்டிகளில் ஒன்று தான் “பொது பல சேனா” 2010க்குப் பின்னர் ராவணா பலய, சிஹல ராவய, சிங்ஹலே போன்ற பல இயக்கங்கள் இன்றைய “பிக்கு மாஃபியா!”க்களாக இயங்குகின்றன.
யுத்தத்துக்கு பின்னரான காவியுடை மாபியா என்பது முஸ்லிம்களுக்கு எதிராக சமகாலத்தில் திரும்பியிருந்தாலும் கூட சிங்கள பௌத்தர்கள் அல்லாதார் மீது நிரந்தரமாக மேற்கொள்ளப்படும் வன்மம் தீர்க்கும் நடவடிக்கையின் அங்கமாகவே நோக்க முடிகிறது.
காவியுடைக்கு வழங்கப்பட்டிருக்கிற கௌரவத்தை பிரயோகித்து அரசியல் துஷ்பிரயோகம் செய்யும் இந்தவழிமுறை இலங்கையின் இனத்துவ, மதத்துவ அமைதியின் ஸ்திரத்தன்மையை மோசமாக பாதிக்கச் செய்திருக்கிறது. பௌத்தத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையானது பிக்குமார்களையும், பௌத்த சங்கங்களையும் அரசியல் இயந்திரத்துக்குள் தீர்மானிக்கின்ற இடத்துக்கு இழுத்துவிட்டிருக்கிறது. மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்றம் போன்ற ஜனநாயக நிறுவனங்களின் செயற்பாடுகளை மக்களால் தெரிவு செய்யப்படாத “மத நிறுவனங்களும் – மதத் தலைவர்களும்” கட்டுப்படுத்துகின்ற நிலை தொன்றிவிட்டுள்ளது. இது ஜனநாயக விழுமியங்களுக்கும், அரசின் இறைமைக்கும், மக்களின் நம்பிக்கைக்கும் இழுக்கானது.
நன்றி - தினக்குரல்