Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

பேட்டை – புறக்கோட்டையான கதை (கொழும்பின் கதை - 9) - என்.சரவணன்

இலங்கையின் இதயம் கொழும்பு என்போம். கொழும்பின் இதயமாகத் திகழ்வது கோட்டையும், புறக்கோட்டையும் தான். ஆட்சித் தலைமையக மையமாகவும், இலங்கையின் பொருளாதார மையமாகவும்  நிமிர்ந்து நிற்கும் இடங்கள் இவை.

டச்சு காலத்தில் அவர்களின் மொழியில் புறக்கோட்டையை “oude stadt” என்றார்கள். ஆங்கில அர்த்தத்தில் “outside the fort” எனலாம். ஆங்கிலேயர்கள் அதன் பின்னர் “பெட்டா” (Pettah) என்று அழைத்தார்கள்.

பேட்டை என்று தமிழ் பேச்சு வழக்கு சொல்லில் இருந்து தான் ஆங்கில “பெட்டா” வந்தது. பேட்டை” என்பது “ஆங்கிலோ இந்திய” தமிழில் இருந்து மருவிய சொல்லாகும். ஆங்கிலேயர்கள் இந்தியத் துணைக்கண்டத்து பெண்களை மணமுடித்து உருவான கலப்பின மக்களின் வழிவந்தவர்களையே ஆங்கிலோ இந்தியர்கள் என்று நாம் அழைப்போம். பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய சார்பட்டா பரம்பரை படத்தில் “ஜான் விஜய்” ஆங்கிலமும் அல்லாத தமிழும் அல்லாத ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவார் அல்லவா அது தான். ஆங்கிலேயர்கள் “பேட்” என்பார்கள் அதுவே காலபோக்கில் பேட்டை என்று ஆனது. இலங்கையில் பேட்டை என்பது பெட்டா என்று ஆனது.

பேட்டை என்பது தொழில் மற்றும் தொழிற்சந்தைகள் நிறைந்திருந்த இடங்களைக் குறிப்பதாகும். சிறுவணிகர்களும், அதிகளவு நுகர்வோரும் ஒன்றுகூடித் தொழில் செய்யும் இடமென்றும் கூறலாம்.

அதே வேளை பெட்டா என்று டச்சுக் காரர்களும், ஆங்கிலேயர்களும் அழைத்த அந்த இடத்தை சிங்களத்தில் “பிட்டகொட்டுவ” (கோட்டைக்கு வெளியில்) என்றும் தமிழில் “புறக்கோட்டை” என்றும் அழைத்தார்கள். அதற்கான காரணம் அன்று கொழும்பு கோட்டை இருந்த மதிலுக்கு வெளியில் இருந்த பிரதேசம் இது. எனவே கோட்டைக்கு புறமாக (வெளியில்) இருந்ததால் அதை புறக்கோட்டை என்றே அழைத்ததில் அர்த்தம் இருக்கவே செய்கிறது.

பால்தேயுஸ் (Philippus Baldaeus) 1600 களின் நடுப்பகுதியில் அவரின் நூலில் வெளியிட்டிருந்த ஓவியம் இது. இதில் வலது புறத்தில் கொழும்பு கோட்டைப் பகுதியையும் புறக்கோட்டயையும் பிரிக்கும் ஆறும், புறக்கோட்டையின் ஒரு பகுதி மரங்கள் செறிந்த இடமாக இருப்பதையும், புதிய குடியிருப்புத் தொகுதியையும் பார்க்கலாம். (மேலதிக விபரத்துக்கு பிற்குரிப்பைப் பார்க்கவும்)

ஒல்லாந்தர்கள் உலகில் பல நாடுகளைக் கைப்பற்றி கிழக்கிந்தியக் கம்பனி Dutch East Indian Company (VOC)  மேற்கிந்தியக் கம்பனி Dutch West Indian Company (WIC) என்று நிர்வகித்து காலனித்துவ ஏகபோகத்தில் கோலோச்சிய காலத்தில் அவர்கள் நகரங்களையும், அங்கே குடியிருப்புகளையும் அழகுற வடிவமைத்தார்கள். அவர்கள் அந்த நாடுகளை விட்டுவிட்டுப் போவதற்காக அதனை செய்யவில்லை. மாறாக அவர்களின் நாடுகளாக ஆகிவிட்டதாக எண்ணி நிரந்தர டச்சு காலனித்துவ நாடுகளாகத் தான் பலப்படுத்தினார்கள்.

கொழும்பை ஒரு நகரமாக உருவாக்கிய டச்சுக்காரர்கள் (Dutch East India Company VOC) ஒரு காலத்தில் தென்னாசியாவின் தலைமையகமாக கொழும்பைப் பயன்படுத்தி வந்தார்கள். அன்றிலிருந்தே புறக்கோட்டையை ஒரு நகர மையமாக இயங்கத் தொடங்கிவிட்டது.

போர்த்துக்கேயர்கள் 1518 இல் முதன் முதலாக கொழும்பில் முக்கோண வடிவத்தில் கோட்டையை வடிவமைத்த போது அதற்கு Senhora das Vutudes என்று பெயரிட்டார்கள். ஒல்லாந்தர் காலத்தில் கோட்டைப் பகுதியை காலப்போக்கில் அபிவிருத்தி செய்தபோது நடுவில் செல்லும் ஆறு பிரிக்கக் கூடிய வகையில் கோட்டையையும், புறக்கோட்டையையும் வடிவமைத்தார்கள். இன்றைய சுங்கத் திணைக்கள தலைமையகத்தோடு ஓட்டிச் சென்று துறைமுகத்தில் விழும் ஆறு தான் அது.  குறிப்பாக அவர்களுக்கான குடியிருப்புகள் உள்ள வீதிக் கட்டமைப்பை கோட்டைக்கு வெளியில் அமைத்தார்கள்.

1600 களில் கொழும்பு - புறக்கோட்டையும், கோட்டையும்

1600 களில் கொழும்பு - புறக்கோட்டையும், கோட்டையும்

Baldaeus,-Philippus (பால்தேயுஸ் - 1632-1672.) எழுதிய Naauwkeurige-beschryvinge-van-Malabar-en-Choromandel நூலில் இருந்து...

1659 இல் கோட்டை அப்போதைய டச்சு ஆளுநர் ரிக்கோப் வான் கொயன்ஸ் (Ryckloff van Goens) வழிகாட்டலில் மறுகட்டுமானத்துக்கு உள்ளான போது டச்சு கிழக்கிந்திய கம்பனியினரின் குடியிருப்புகள் கோட்டைக்கு உள்ளேயும், ஏனைய ஐரோப்பியர்கள் மற்றும் வர்த்தகர் – வியாபாரிகளுக்கான குடியிருப்புகளை கோட்டைக்கு வெளியில் புறக்கோட்டையிலும் அமைத்தனர்.

புறக்கோட்டை குடியிருப்பு பகுதி 1658-1796 காலப்பகுதியில் டச்சு கட்டிடக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. போர்த்துகேய – ஒல்லாந்தர்களின் சந்ததியினர் அங்கே அங்கிலேயர் காலத்திலும் வாழ்ந்தார்கள். பல அழகான வீடுகள், அழகான தோட்டங்கள், நிழலான நடைபாதைகள் பல அங்கிருந்தன. ஒரே மாதிரியான பிரகாசமான மஞ்சள், சிவப்பு, ஒரஞ்சு நிற கோடுகள் உள்ள கதவுகளையும்ம் ஜன்னல்களையும் கொண்ட வீடமைப்பைக் கொண்டிருந்தன, பாதைகள் நேராகவும், கிடையாகவும், இருந்த அந்த வீதிகள் தான் இன்று முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் குறுக்குத் தெருக்களாகவும், அவை ஒல்கொட் மாவத்தையில் சேருவதாகவும் இருக்கிறது. கிடையில் மெயின் வீதி, கெய்சர் வீதி (டச்சு ஆளுநர் Kaiser என்பவரின் பெயர்), பிரின்ஸ் வீதி, மெலிபன் வீதி என இருக்கும் அமைப்பைக் கற்பனை செய்து பாருங்கள். இது தான் படிப்படியாக வியாபார, வர்த்தக, விற்பனை கடைகளாக அப்படியே பரிமாற்றமடைந்தது. இன்றும் பழைய கட்டிடங்களின் எச்சங்களை சில இடங்களில் காணலாம்.

இன்றைய கெய்சர் வீதியிலுள்ள புறக்கோட்டை பொலிஸ் இருந்த பகுதி இந்தக் குடியிருப்பில் இருந்தவர்களுக்கான மயானமாக இருந்தது. Pettah Cemetery என்றும், Pettah Burial Ground என்றும் அது அழைக்கப்பட்டது. அங்கே புதைக்கப்பட்ட டச்சு அதிகாரிகளின் விபரங்களை tombstones and monuments in Ceylon என்கிற நூலில் பென்ரி லூயிஸ் (J. Penry Lewis) விபரித்திருக்கிறார். 

அன்று இருந்த கொழும்பு கோட்டையை இணைக்கும் பாதையாக விளங்கிய இன்றைய மெயின் வீதி டச்சு காலத்தில் “King’s Street” (அரச வீதி) என்று அழைத்தார்கள்.


முதலில் இருப்பது கொழும்பு மையத்தின் புதிய தோற்றம். கீழே இருப்பது 1756 இன் தோற்றம். மேற்படி இரண்டு வரைபடங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

மொத்தத்தில் இது சுதேசிகளின் குடியிருப்புகளாக இருக்கவில்லை. வுல்பெண்டல் பகுதி வரை புறக்கோட்டையை அபிவிருத்தி செய்திருந்தார்கள். 1796 இல் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பின்னர் தான் இது ஐரோப்பியர் அல்லாதவர்களும் வாழும் பகுதியாக ஆனது. கோட்டையும், புறக்கோட்டையும் (Fort, Pettah) இப்படித்தான் பின்னர் பெயரிடப்பட்டன.  ஆங்கிலேயர்கள் தான் புறக்கோட்டையை ஒரு வர்த்தக – வியாபாரத் தளமாக மாற்றியெடுத்தார்கள்.

1885 அளவில் கொழும்புத் துறைமுகச் சுற்றாடல் பெருந்தோட்டத்துறையின் வளர்ச்சியின் காரணமாக சந்தைக்கான இடமாகவும், ஏற்றுமதித் தளமாகவும் வளர்ச்சியுற்றது. 1900 களின் ஆரம்பத்தில் சிறு வணிகர்கள், சில்லறைக் கடைகள் இல்லாமல் போய் மொத்த விற்பனை வணிகஸ்தளமாக அது மாற்றம் கண்டது.  

டச்சுக் காலத்திலேயே தமிழ், முஸ்லிம்கள் இந்தப் பகுதியில் வியாபாரத்தில் ஆளுமை செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். 

ஆங்கிலேயர் காலத்தில் இங்கே உள்ள சில வீதிகளின் பெயர்கள் அங்கே வாழ்ந்த சில சமூகக் குழுவினரின் பெயர்கள் சூட்டப்பட்டன. பார்பர் தெரு, செட்டியார் தெரு, சோனகர் தெரு, மலே வீதி, சைனா வீதி, போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். மெசேஞ்சர் வீதி என்பது அன்று தகவல்களை கொண்டு சென்று சேர்க்கும் பணி நிகழ்ந்த இடம். டச்சுக்காரர்கள் அவ்வீதியை “Rue de massang” என்று அழைத்தார்கள். அப்பணியில் ஈடுபட்ட  இளைஞர்கள் வாழ்ந்த பகுதி அது. இன்னும் சொல்லபோனால் அவர்கள் அன்றைய தபால்கார்கள்.

புறக்கோட்டை

கொழும்பின் வடகிழக்குப் பகுதியில் களனி நதி வந்து விழும் பகுதி தான் ஒரு வர்த்தக துறைமுகமாக பதினோராம் நூற்றாண்டில் தொற்றம்பெறத் தொடங்கியது. தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காகவே அந்த பகுதி தெரிவானது. அங்கே இந்திய முஸ்லிம் வர்த்தகர்களின் குடியிருப்புகள் அப்போது அமைந்தன. இலங்கையில் ஐரோப்பிய காலனித்துவம் காலூன்றுவதற்கு முன்னரே வெளிநாட்டு முஸ்லிம் வர்த்தகர்கள் கொழும்புக்கு பரீட்சயப்பட்டுவிட்டார்கள்.

1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையின் பின்னர் புறக்கோட்டையின் தோற்றம் பெரும் மாற்றம் கண்டது எனலாம்.

கொழும்பின் நகராக்க வளர்ச்சி, வர்த்தக – வியாபார வியாபகத்தின் காரணமாக நகரத்தில் தொழிலாளர்கள்  குடியேற்றப்பட்டார்கள். நகரத்தை நோக்கி குடிபெயர்வோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது.  பல்லின, பன்மொழி, பன்மதங்களைச் சேர்ந்த சகல வர்க்கத்தினரும் புழங்கி வாழும் பகுதியாக இப்பகுதி மாற்றம் பெற்றதுடன் காலப்புக்கில்  சனப்பெருக்கத்தோடு, சன நெரிசல்மிக்க பகுதியாக வளர்ச்சி கண்டது. அதனால் ஆங்கிலேயர் காலத்திலேயே இப்பகுதியில் சன நெரிசல் உள்ள குடியிருப்புகள், தோட்டங்கள் (வத்த), என்றும், முடுக்கு என்றும் அழைக்கப்படத் தொடங்கின. புறக்கோட்டையில் உள்ள காப்பிரி முடுக்கு (Kafari Muduku) 18 ஆம் ஆண்டிலிருந்தே அழைக்கப்படத் தொடங்கிவிட்டதாக பேராசிரியர் ஷுஜி பூனோ (Shuji FUNO) கூறுகிறார்.

டச்சு கால கட்டிடத்துக்கு சாட்சி கூறும் முழு உருவமாக “புறக்கோட்டை”யில் எஞ்சியிருக்கும் இரு கட்டிடங்களைக் கூறலாம். ஒன்று; 1600களில் கட்டப்பட்ட டச்சு கவர்னராக இருந்த தோமஸ் வான் ரீ(Thomas van Rhee 1692-1697) என்பவரின் வாசஸ்தலம். அது இன்று பிரின்ஸ் வீதியில் உள்ள டச்சு மியூசியமாக திகழ்கிறது. இரண்டாவது 1757 இல் கட்டப்பட்ட வுல்பெண்டால் சேர்ச் என்று அழைக்கப்படும் டச்சு சீர்திருத்த தேவாலயம்.

கொழும்புக்கு செல்பவர்களும், கொழும்பில் இருப்பவர்களும் பிரின்ஸ் வீதியில் உள்ள டச்சு மியூசியத்தை ஒரு தடவையாவது சென்று பாருங்கள். அது உருவான கதையை தனியாக எழுதுகிறேன்.

கொழும்பு கோட்டைக்கு என்ன ஆனதென பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

அடிக்குறிப்புகள்

  1. Brohier, RI., Changing Face of Colombo,(Covering the portuguese, Dutch and British Period) A Visidunu Publication, 2007
  2. Kyouta YAMADA, Masahiro MAEDA, Shuji FUNO, "Considerations on Spatial Formation and Transformation in Pettah (Colombo, Sri Lanka)" Journal of Architecture and Planning (Transactions of AIJ) April 2007

தினகரன் - 26.12.2021

பிற்குறிப்பு
சுமார் 350 ஆண்டுகளுக்கு முற்பட்ட கொழும்பின் பல அரிய வரைபடங்களில் முக்கியமானது பால்தேயுஸ் 1672 இல் பல ஓவியங்களுடனும், வரைபடங்களுடனும் வெளியிட்ட  Naauwkeurige beschryvinge van Malabar en Choromandel என்கிற டச்சு மொழி நூலில் வெளியிடப்பட்டிருந்த வரைபடம். அந்த நூல் நாற்பது ஆண்டுகளின் பின்னர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு A true and exact description of the most celebrated East-India coasts of Malabar and Coromandel; as also of the isle of Ceylon என வெளிவந்தது. அன்றைய கோட்டையையும், அதற்கு வெளியில் உள்ள புறக்கோட்டையையும் பிரிக்கப்பட்டிருப்பதை தெளிவாக விளக்கும் வரைபடங்களில் அது முக்கியமானது.
ஆரம்பத்தில் மட்டுக்குளிக்கு அப்பால் களனி கங்கை கடலில் வந்து விழும் இடம் வரை கோட்டை மதில்கள் கட்டப்பட்டிருந்தன. அதை இந்த வரைபடத்தில் காணலாம்.
டச்சு, ஆங்கில நூல்களில் வெளியான அந்த வரைபடத்தை பிற்காலத்தில் ப்ரோஹியர் (R.L.Brohier) வெளியிட்ட Changing Face of  Colombo என்கிற நூலின் அட்டைப் படத்துக்கு உள் அட்டையில் முழுமையாக பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அவ்வரைப்படத்தில் பால்தேயுஸ் குறிப்பிட்ட இடங்கள் பற்றிய அதி முக்கிய விபரங்களின் பட்டியலை ப்ரோஹியர் வெளியிடாதது ஏன் எனத் தெரியவில்லை.

முகத்துவாரம் விஸ்ட்வைக் பங்களாவில்: வுயிஸ்டின் ஆவி! (கொழும்பின் கதை - 8) என்.சரவணன்

ஆளுநர் வுயிஸ்ட் இலங்கையில் மேற்கொண்ட குற்றங்களுக்காக டச்சு இராணுவ நீதிமன்றம் (Heeren XVII) நிறைவேற்றிய கொடூரமான மரண தண்டனையைப் பற்றிப் பார்த்தோம்.

வுயிஸ்ட் காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரின் மனைவி பார்பரா வுயிஸ்டைக் காப்பாற்றுவதற்காக ஒல்லாந்திலிருந்த Heeren XVII இடம் சென்று உதவி கோரினார். ஆனால் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.  யொஹான் (Johan de Mauregnauld) என்பவர் தலைமையில் விசாரித்து முடிக்கப்பட்ட இந்த வழக்கின் அறிக்கை 400 பக்கங்களை விட அதிகமானது.

சட்டவிரோதமாக இராணுவ நீதிமன்றத்தை அமைத்தது, அதற்குத் தன்னைத் தானே தலைவராக நியமித்துக்கொண்டது, தண்டனை நிறைவேற்றுபவராக தன்னை ஆக்கிக்கொண்டது, அதன் மூலம் அப்பாவிகள் 19 பேரை ஈவிரக்கமின்றி கொன்றது போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டிருந்தன.

இந்த வழக்கு அன்றைய டச்சு நீதித்துறைக்கு ஒரு பெருமதிப்பைக் கொடுத்தது. இதைப் பற்றி 1735 இல் ஒல்லாந்திலுள்ள ரோட்டர்டாமில் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. "ஆளுநர் பெட்ரஸ் வுயிஸ்ட் இலங்கையில் சட்டவிரோதமாக நீதியைக் கையாண்டார். அப்படிப்பட்ட ஆளுநருக்கு பத்தாவியா நீதித்துறை தகுந்த தண்டனையை வழங்கி நீதியை நிலைநாட்டியது.” 

இந்த வழக்கின் விளைவாக இனிமேல் எந்தவொரு நாட்டு டச்சு ஆளுநரும், தளபதியும் நீதிச்சபையின் கூட்டங்களில் பங்குபற்றக்கூடாது என்றும், நீதித்துறை விவகாரங்கள் உயர் அதிகார தலையீடு இன்றி இயங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கையில் வுயிஸ்டின் அக்கிரமங்களுக்கு ஆதரவளித்த இராணுவ நீதிமன்றத்தைச் சேர்ந்த பதினைந்து பெரும் தண்டிக்கப்பட்டார்கள். அவர்களின் குடும்பங்கள் அவர்களை விடுவிக்கக் கோரி போராடிய போதும் அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டார்கள். சிலர் சிறையிலேயே இறந்துபோனார்கள். சிலர் தொடர்ந்தும் சிறையில் சில வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அரசின் பொது மன்னிப்பு பெற்று 1736 ஆம் ஆண்டு எஞ்சிய ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

வுயிஸ்டின் மனைவி பார்பராவும், மகள்மாரும் 1733 ஆம் ஆண்டு வுயிஸ்டின் சொந்த இடமான ஒல்லாந்திலுள்ள ஹார்லம் (Haarlem) திரும்பினார்கள். பார்பரா 1746ஆம் ஆண்டு அவரின் 53 வது வயதில் இறந்தார். 

பொதுவாக ஆளுநர்கள் இடமாற்றம் பெற்று இன்னும் சில நாடுகளை ஆளும் தகுதியையும் பெற்று ஆள்வார்கள். ஆனால் வுயிஸ்ட் இளம் வயதிலேயே தனது கொடுங்கோல் ஆட்சியின் காரணமாக தண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுவிட்டார். அவ்வளவு ஆஸ்தியும், அந்தஸ்தும் இருந்தும் தனது குற்றங்களால் அவர் 41 வயதிலேயே அவர் கொல்லப்பட்டுவிட்டார்.இலங்கையை அவர் மூன்றே மூன்று ஆண்டுகள் மட்டும் ஆளுநராக வாழ்ந்தார். வுயிஸ்டின் ஆட்சிக் காலத்தை டச்சு ஆட்சிக்காலத்தின் கறைபடிந்த பக்கம் என்று குறிப்பிடுவார்கள். 

இலங்கையின் சரித்திரத்தில் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய ஆளுநர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆட்சிசெய்துள்ளனர். அவர்களே அதிகாரம் படைத்த முதன்மை ஆட்சியாளர்களாக இருந்திருக்கின்றனர். அவர்களில்; இப்படி விசாரணை செய்யப்பட்டு, மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, கொல்லப்பட்ட ஒரேயொருவர் பேத்ருஸ் வுயிஸ்ட் தான். இலங்கையில் பல ஆளுநர்கள் கொடுங்கோலர்களாக இருந்திருகின்றனர். ஆனால் இங்கே தமது அதிகார வரம்புகளை மீறியதற்காவும், சொந்த அதிகாரிகளையே துன்புறுத்திக் கொன்றமைக்காகவும் அதிகமாக அவர் சிறப்பு நீதிமன்றத்தின் கவனத்துக்கு உள்ளானார்.

Kasteel Batavia - வுயிஸ்ட் சிறை வைக்கப்பட்டிருந்த அன்றைய பத்தாவியா கோட்டை.

வுய்ஸ்ட் விக் ஆவி

வுய்ஸ்ட் தனது ஆட்சிக் காலத்தில் காலத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்மாவத்தை வழியாக மட்டுக்குளி சென்றடையும் பாதையை வுயிஸ்ட் தான் அமைத்தார். 1720களில் அமைக்கப்பட்ட அந்த வீதியின் வரலாறு இப்போது முன்னூறு ஆண்டுகளை எட்டுகிறது. கொழும்பின் நீளமான  வீதிகளில் ஒன்று அது. இன்று அது ஒரு முக்கியமான பாதையாக ஆகியிருப்பதை அறிவீர்கள். கொழும்பு - மட்டக்குளியில் காக்கைத்தீவு வழியாக களனி கங்கையின் முகப்பு வரை செல்லுகிறது வுய்ஸ்ட்விக் வீதி (Vuystwyk Road).  வுயிஸ்ட் அளுத்மாவத்தை முடிவில் தனக்கான ஒரு பங்களாவைக் கட்டினார். நீச்சல் தடாகத்துடன் அமைக்கப்பட்ட அந்த பங்களாவில் உல்லாசமாக களித்தார் அவர். அதற்கு  Vuystwijk என்கிற பெயரைச் சூட்டியிருந்தார். வுய்ஸ்ட் கிராமம் என்று அதற்குப் பொருள். அந்த பங்களாவுக்கு குதிரை வண்டிலில் செல்வதற்கு சரியான பாதை இருக்கவில்லை. அதற்காகவே போடப்பட்ட வீதி தான் அது.

முகத்துவாரத்தில் (Mutwal) அழகான காட்சி அமைப்புடன் கூடிய இடமாக அப்போது அவருக்கு பிடித்திருந்த இடத்தில் தான் அவர் அந்த பங்களாவைக் கட்டினார். கோட்டையிலிருந்து முகத்துவாரம் வரையிலான பாதையை உருவாக்குவதற்காக கற்களை கைமாற்றி கைமாற்றி இரு மருங்கிலும் பாதையோரங்கள் அமைக்கப்பட்டது. இன்றும் கொழும்பில் விஸ்ட்வைக் பார்க்கை (பூங்கா) அறியாதவர்கள் வெகு சிலராகத் தான் இருப்பார்கள். ரசமுன கந்த என்கிற மேட்டில் தான் வுயிஸ்டின் பங்களா அன்று அமைக்கப்பட்டிருந்தது. இன்று பல வீடுகளும், கடைகளும், தொழிற்சாலைகளும் நிறைந்த சூழல் அது.

வான் டோர்ட் (Van Dort) இலங்கையின் முக்கியமான ஓவியர்களில் ஒருவர். இலங்கையின் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் வெளிவந்த கேலிச்சித்திர சஞ்சிகையான “முனியாண்டி” சஞ்சிகையில் அவர் வரைந்த ஓவியங்களும் கட்டுரைகளும் இன்று பேசப்படுகின்றன. அதில் அவர் எழுதிய கட்டுரையில் 

பதினாறு வயதையுடைய கொழும்பு அக்காடமி மாணவன் வுயிஸ்ட் முன்னர் வாழ்ந்த வீட்டிலிருந்து சுமார் 300 யார் தூரத்தில் அமைந்திருந்த நீச்சல் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தார்.

"இரவும் பகலும் புலம்பல்களும் பெருமூச்சுகளும், அழுகையும் கேட்கின்றன" என்று உள்ளூர்வாசிகள் அந்த இளைஞனுக்குத் தெரிவித்ததை வான் டோர்ட்திடம் தெரிவித்திருக்கிறார். தனிமையும், கடற் காற்றின் சலசலப்பும் குளத்தைச் சுற்றி வளரும் மூங்கில்களால் உருவாகும் சத்தமாக அது இருக்கக்கூடும் என்று வான் டோர்ட் எண்ணினார். அவர் 1894 இல் Vuyst Wyk ஐ சென்று பார்வையிட்டபோது, கிணறும் குளமும் சிதைந்து கிடப்பதைக் கண்டார், மேலும் மூங்கில்கள் கூட எப்போதோ இல்லாமல் போயுள்ளன. அப்படியிருக்க எவ்வாறு இந்த சத்தம் வருகின்றன என்று சற்று வியப்புற்றார்,

உள்ளூர்வாசிகள் சிலர் அவரிடம், கவர்னர் வுயிஸ்ட்டின் ஆவி எழுப்புகின்ற சந்தம் தான் அவை என்றும் உறுதியாக நம்புகின்றனர். வுயிஸ்ட் அங்கே தனது  மலே நாட்டு சமையல்காரருடன் சேர்ந்து மனித இறைச்சிகளை உண்டதாக அதற்கு முன்னர் ஒரு கதையும் நிலவிருக்கிறது. அது உண்மையோ பொய்யோ. ஆனால் அவரின் காணியில் இருந்து மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதை வான் டோர்ட் பதிவு செய்திருக்கிறார்.

வுய்ஸ்ட் வைக் பகுதியில் ஆவிக் கதைகளை நம்புபவர்கள் இன்றும் உள்ளார்கள்.

அவர் கண்மூடித்தனமாக செய்த அராஜகங்களின் இன்னொரு உதாரணத்தையும் குறிப்பிட வேண்டும்.

1738 இல் சிங்களத்தில் வெளிவந்த முதலாவது நூல் Singaleesch belydenis boek - 

சிங்கள எழுத்துருவாக்கத்துக்கு தடை

இலங்கையில் முதன் முதலில் சிங்கள எழுத்துக்களை உருவாக்கும் பணி குறித்து இதற்கு முன்னர் விரிவாக  எழுதியிருக்கிறேன். கிழக்கிந்திய கம்பனியின் ஆயுதப் பொறுப்பாளராக இருந்த கேபிரியேல் ஷாட் (Gabriel Schade) என்பவரிடம் தான் சிங்கள எழுத்துக்களை உருவாக்கும் பணியை ஆளுநர் ஜாகோப் (Jacob Christian Peilat) 1725 ஆம் ஆண்டு கேபிரியேல் ஷாட்டிடம் ஒப்படைத்திருந்தார். நுணுக்கமான உலோக வேலைகள் செய்வதில் கைதேர்ந்தவராக இருந்தார் ஷாட்.

1726 இல் வுயிஸ்ட் ஆளுனராக பதவியேற்றதும் இலங்கைக்கு அப்படியொரு அச்சுப்பணிகள் தேவையில்லை என்று கூறி ஷாட்டை சிறையில் அடைத்துவிட்டார். சுதேச மொழி எழுத்துவார்ப்புப் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டன. பல சித்திரவதைகளுக்கும் உள்ளானர் ஷாட். அந்தப் பணிகள் நின்று விடுகின்றன. வுயிஸ்டுக்குப் பின் ஆளுநர் Gustafi Willem Baron Van Imhoff பதவியேற்றதன் பின்னர் தான் ஷாட் விடுதலையானார். சிறை-சித்திரவதையை அனுபவித்துவிட்டு விடுதலையான ஷாட் அதன் பின் வந்து உருவாக்கிய எழுத்து வார்ப்புக்களைக் கொண்டு தான் 1737 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சிங்கள நூல் (“The Singaleesch Gebeede-Boek”) வெளியானது.  இன்னும் சொல்லப்போனால் அது தான் இலங்கையின் முதலாவது சுதேச மொழி நூல் எனலாம். சில வேளை வுயிஸ்ட் ஷாட்டை சிறையிடாமல் இருந்திருந்தால் இலங்கையின் முதலாவது சுதேசிய மொழி நூல் 1720களிலேயே வெளிவந்திருக்கக் கூடும். கேபிரியேல் ஷாட் தான் இலங்கையில் முதலாவது அசையும் சிங்கள எழுத்துக்களின் பிதா என்று தான் கூற வேண்டும். பின்னாட்களில் இதைப் பற்றிய விபரங்களை பதிவு செய்த Dutch Burgher Union வெளியிட்ட சஞ்சிகையில் வுயிஸ்ட் ஒரு பயங்கரவாத ஆட்சியாளன் என்று வர்ணித்தது.

அடுத்த இதழில் கொழும்பின் புதிய கதை.

நன்றி - தினகரன் - 19.12.2021

ஆளுநர் வுயிஸ்ட்டுக்கு வழங்கப்பட்ட கொடூரமான மரண தண்டனை (கொழும்பின் கதை - 7) - என்.சரவணன்

வுயிஸ்ட்டை கைது செய்வதற்காக ஒல்லாந்திலிருந்து ஒரு குழு இலங்கைக்கு வந்தது.  அவர் 3ஆம் திகதி மே, 1729இல் கொழும்பில் சிறைபிடிக்கப்பட்டு பத்தாவியாவுக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு அவர் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டு தொடர் விசாரணைகள் நடந்தன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விசாரணை அது. மே 1729 இல் உச்சநீதிமன்றம் மூன்றாண்டுகாலம் ஆளுநர் பதவி பதவி வகித்த வுயிஸ்டை அப்பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டது. 1730 பெப்ரவரி 28 அன்று வுயிஸ்ட் 19 பேர் கொல்லப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு இலங்கையில் இருந்து விசாரணைக்காக பத்தாவியாவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவரின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

பிரபல ஓவியர் Simon Fokke இந்த தண்டனை பற்றி அன்றே வரைந்த ஓவியம் இது.

இரண்டு ஆண்டுகள் வுயிஸ்ட் இரும்பு விலங்குகளால் கட்டப்பட்டு அடைக்கப்பட்டிருந்தார். வுயிஸ்ட் மீது நடந்த விசாரணை பற்றிய நான்கு விரிவான ஆவணங்களை டச்சு அரசாங்கம் வெளியிட்டது. தமது கண்டிப்பான நீதித்துறைக்கு முன்னுதாரணமாக டச்சு அரசாங்கம் இந்த வழக்கு பற்றியும், அதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு, நிறைவேற்றப்பட்ட தண்டனை என்பவற்றை உள்ளடக்கிய ஆவணத்தைத் தயாரித்து வெளியிட்டது. சிறு நூல் வடிவில் அமைந்த அறிக்கைகள்; பல விபரங்களை உள்ளடக்கியது. அந்த மூல ஆவணங்களை இந்தக் கட்டுரைக்கான ஆய்வின் போது தேடிக் கண்டெடுக்க முடிந்தது. (1, 2, 3) 

1. Sententie gewezen by den wel ed: RAADE van india, tegens den heere en mr. Petrus Vuyst, gewezene gouverneur van Ceylon. Geëxecuteert tot Batavia, den 19 mey, 1732. Waar agter gevoegt is de lyst der opontboden en particuliere perzoonen, die met deze in den jare 1733. Ingekomene elf Oost-Indische retourschepen zyn gerepatriëert., 1733. – என்கிற தலைப்பைக் கொண்ட ஆவணம் இது. மே 19, 1732 அன்று பேத்ருஸ் வுய்ஸ்டுக்கு எதிரான மரணதண்டனைத் தீர்ப்பு, பத்தாவியா நீதி மன்றத்தால் அறிவிக்கப்பட்டது. வூயிஸ்ட் 19 அப்பாவி மக்களுக்கு மரண தண்டனை விதித்தது, இன்னும் பலரைத் தவறாக நடத்தியது, பலரை சித்திரவதை செய்தது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக அவர் விசாரணையை எதிர்கொண்டார், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அதன் விளைவாக 3 ஜூன், 1732 அன்று பத்தாவியாவின் கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

தீர்ப்பை வழங்கிய எட்டு ஜூரிகளின் பெயர்களும் இறுதியில் உள்ளன.

  • Mr.Gualter Schutten.
  • Mr. Jacob Van Den Bosch.
  • Mr. Jan Blaaukamer.
  • Mr. Jan Rudolph Sappius
  • Mr. Jacob Lakeman.
  • Mr. Bernard Jacob De Lavaille.
  • Mr. David Joan Bake, 
  • Mr. Joan Sautyn.

2. De onregveerdige justitie, uytgevoert door den gouverneur petrus vuyst, tot Ceylon, nevens het regtveerdig vonnis en regt, aan hem gouverneur gedaan, door den achtbaren Raad van Justitie, des casteels Batavia. (gedrukt naar de origineele copye), 1733. – அநீதி வழங்கிய இலங்கை ஆளுநர் பேத்ருஸ் வுயிஸ்ட் தொடர்பாக பத்தாவியா கோட்டையில் கனம்பொருந்திய நீதிக்கவுன்சில் வழங்கிய தீர்ப்பு. – 1733

3. Sententie gepronuncieert ende geëxecuteert op ende jegens mr. Petrus Vuyst op dingsdag den 3. Juny 1732. Tot Batavia in Oost-Indien. (na een origineel copy van Batavia zoo ende gelyk het den gevange is voorgelese, getrouwelyk gedrukt 1733.), 1733. – என்கிற தலைப்பைக் கொண்ட ஆவணம் இது. பேத்ருஸ் வுய்ஸ்டுக்கு எதிரான மரணதண்டனைத் தீர்ப்பை, பத்தாவியா நீதி மன்றத்தில் அறிவிக்கப்பட்டது பற்றியும் வூயிஸ்ட் 19 அப்பாவி மக்களுக்கு மரண தண்டனை விதித்தது, இன்னும் பலரைத் கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக அவர் விசாரணையை எதிர்கொண்டு குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு பின்னர் 3 ஜூன், 1732 அன்று பத்தாவியாவின் கோட்டையில் தூக்கிலிடப்பட்டது பற்றியது.

4. Kort en naauwkeurig verhaal, van ’t leven en opkomst van den heer en mr. Petrus Vuyst. Gewezene gouverneur op ’t eiland Ceilon. Als mede een waaragtig berigt, van alle zyne gepleegde gruwelstukken : als ook de namen van die geene die door hem onschuldig ter dood zyn gebragt, 1732. இலங்கைத் தீவின் முன்னாள் ஆளுநர் பேத்ருஸ் வுயிட்ஸ் வாழ்க்கை வரலாறும், அவர் நடத்திய கொடூரங்கள் பற்றியும் விளக்கும் நூல். – 1732 (டச்சு தேசிய நூலகம்) (4)


இறுதியில் மூன்றாண்டுகளின் பின் நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று கண்டறிந்து 1732 மே 22ஆம் திகதி அவரின் குற்றங்களை தேசத்துரோகக் குற்றமாக அறிவித்து அவருக்கு மரண தண்டனை விதித்தது. அந்தத் தண்டனை மிகக் கொடூரமான தண்டனையாக இருந்தது. மேற்படி மூன்றாவது அறிக்கையில் வுயிஸ்டுக்கு எப்படிப்பட்ட மரண தண்டனை வழங்கப்பட்டது என்பது பற்றி விபரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அந்த 19 அப்பாவிகள் மீது அவர் மேற்கொண்ட சித்திரவதைகள், மரணதண்டனைகள் பற்றிய தீர்ப்பு இது.(5) இலங்கைத் தீவு அவரின் ஆட்சியின் கீழ் மோசமான கொடுங்கோன்மைக்கு உட்பட்டது என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.(6)

வுயிஸ்டுக்கு அளிக்கப்பட்ட அந்த மரண தண்டனையை நேரில் கண்ட சாட்சியொருவரின் பதிவை பிற்காலத்தில் E.C.Buultjens மொழிபெயர்த்தார்.(7)  1732 யூன் 3 ஆம் திகதி பத்தாவிய நகரத்தில் குழுமியிருந்த பொது மக்கள் முன்னிலையில் இந்த மரண தண்டனையை நிறைவேற்ற பிரேத்தியேகமாக செய்யப்பட்டிருந்த மேடையில் ஒரு நாற்காலி வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை நான்கு மணியிலிருந்து இதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இறுதி நேரத்தில் வுயிஸ்ட் தான் செய்த அத்தனையும் கம்பனியின் பாதுகாப்புக்காகவும், நலனுக்காக்கவுமே செய்தேன் என்று தெரிவித்தார். காலம் கடந்துவிட்ட அறிவிப்புகளாக அவை இருந்தன. மதப் பிரார்த்தனை முதலில் நிகழ்ந்தது. அது முடிந்ததும். ஜூரிகளும், மக்களும் பார்த்திருக்க அவரை நிர்வாணப்படுத்தி, மேடையில் இருந்த கதிரையில் அமர்த்தி இறுகக் கட்டினார்கள். பின்னர் கத்தியுடன் வந்த தண்டனை நிறைவேற்றுபவர் வுயிஸ்டின் தலையை பின்புறமாக இழுத்துப் பிடித்து தொண்டையை அறுத்தார். வுயிஸ்ட் துடித்து இறந்தார். அதன்பின் அப்படியே கழுத்தெலும்போடு அறுத்து துண்டித்தார். அதன் பின் உடல் ஒரு பலகையின் மேல் எறியப்பட்டது. உடல் பாகங்களை வெட்டி கீழே வைக்கப்பட்டிருந்த ஒரு வாளியில் அப்பாகங்களை இட்டார். 

அப்பாகங்கள் அங்கிருந்த அடிமைகளிடம் கொடுக்கப்பட்டன. அவர்கள் அங்கே எரிந்துகொண்டிருந்த தீயில் அவற்றை எறிந்தனர். அதே தீயில் அக்கதிரையும், பலகையும் உடைத்து போடப்பட்டன. வுயிஸ்டின் உடைகளும் அதிலேயே போட்டு எரிக்கப்பட்டன. இவையணைத்தும் காலை எட்டு மணிக்கு முன்னர் முடிந்துவிட்டன. மதியம் வுயிஸ்ட் இருந்த இடமும் தெரியாமல் சாம்பலாகிப் போயிருந்தார். எரித்த அஸ்தி கூட ஒல்லாந்துக்கு போகக்கூடாது என்று அந்த அஸ்தியை அள்ளிக்கொண்டு சென்று அன்றே பத்தாவியா கடலில் கொட்டினார்கள். அவரின் மனைவி பிள்ளைகளும் பத்தாவியாவில் தான் தங்கியிருந்தனர். கிறிஸ்தவ முறைப்படி வுயிஸ்தை அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு அவரின் சாம்பலைக் கூடக் கொடுக்கவில்லை. (8)

தொடரும்

அடிக்குறிப்புகள் :
  1. Sententie, gewezen by den Wel Ed: Raade van India, tegens den Heere en Mr. Petrus Vuyst, gewezene gouveneur van Ceylon, Geexecuteert tot BATAVIA, den 19 mey, 1732. – Netherland, 1732
  2. De onregtveerde justitie, uytgevoert door den Gouverneur Petrus Vuyst, tot Ceylon, nevens het regtveerdig vonnis en regt, aan hem Gouverneur gedaan, door den Achtbaren Raad van Justitie des Casteels Batavia, Samperman -1733
  3. Kort en naauwkeurig verhaal van ʹt leven en opkomst van... Petrus Vuyst, gewezen Gouverneur op ʹt Eiland Ceilon: alsmede een waaragtig berigt, van alle zijne gepleegde gruwelstukken, Volume 1, 1732
  4. இந்த மூன்று நூல்களும் அன்றைய பழைய டச்சு மொழியைக் கொண்டவை. இன்று புழக்கத்தில் இல்லாதவை. அவற்றை இன்றைய நெதர்லாந்து மக்கள் புரிந்துகொள்ளக் கடினப்படுவார்கள். இதனை நெதர்லாந்திலிருந்து எனக்காக நாட்கணக்காக கடின உழைப்புடன் பொறுமையாக வாசித்து விளக்கம் பல தந்த Cornolis Broers அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
  5. வுயிஸ்டுக்கு வழங்கப்பட்ட தண்டனையை சித்திரிக்கின்ற ஒரு ஓவியத்தை அதே காலத்தில் வரைந்தார் பிரபல ஓவியர் சிமோன் பொக்க (Simon Fokke - 1712–1784). பத்தாவியாவில் கிழக்கிந்திய டச்சுக் கம்பனியினர் 1729-1739 இடப்பட்ட பத்தாண்டு காலப்பகுதிக்குள் பொதுவெளியில் மேற்கொண்ட தண்டனைகள் பற்றிய ஒரு ஆய்வை A Distant Mirror: Violent Public Punishment in the VOC Batavia, 1729-1739” என்கிற தலைப்பில் Leiden பல்கலைக்கழகத்திற்காக Muhammad Asyrafi என்பவர் 2020 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் சிமோன் பொக்கவின் ஓவியங்கள் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன. 
  6. இந்த ஆவணங்கள் எல்லாமே டச்சு ஆவணக் காப்பகத்தில் தொகுக்கப்பட்டிருப்பதையும், அவை எந்தெந்த இலக்கங்களைக் கொண்டு அங்கு வைக்கப்பட்டிக்கின்றன என்பது பற்றி ஒரு தொகுப்பை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். அதில் இலங்கை தொடர்பான பல ஆவணங்களின் பட்டியல் உள்ளன. அங்கே செல்ல வாய்ப்புள்ளவர்கள் சென்று அவற்றைப் பார்வையிடலாம். - Inventaris van het archief van de Verenigde Oost-Indische Compagnie (VOC), 1602-1795 (1811) Versie: 25-09-2018 -
  7. P.E.Pieris, sinhale and the Patriots, 1815-1818, Sri Lanka Apothecaries Company, Limited, colombo, 1950.
  8. Henry Charles Sirr, Ceylon and the Cingalese, Vol. 1: Their History, Government, and Religion, the Antiquities, Institutions, Produce, Revenue, and Capabilities of the Island, London, William Shoberl Publisher, 1850.
நன்றி - தினகரன் 12.12.21


கொழும்பு பெய்லி வீதியின் ஒரு டச்சுகால சோகக் கதை! (கொழும்பின் கதை - 6) என்.சரவணன்

நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1601 மே 05 ஒல்லாந்தைச் சேர்ந்த கடற்படை அட்மிரல் ஜோரிஸ் வான் ஸ்பில்பெர்கன் (Joris van Spilbergen) தனது நீண்டகால கடற் பயணத்தில் இலங்கைத் தீவை வந்தடைந்தார். இலங்கையின் முதலாவது டச்சு தூதுவரும் அவர் தான். உயர் தரம் மிக்க கருவா இலங்கையில் அவர் கண்ட பின்னர் அன்றைய கண்டி மன்னன் முதலாம் விமலதர்மசூரியவுடன் 1602 இல் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டது பற்றிய வரலாற்றுப் பதிவை அறிவீர்கள்.

ஸ்பில்பெர்கன் அவரின் நெடும் பயணம் பற்றி ஏராளமான குறிப்புகள் எழுதிவைத்திருக்கிறார். அவை சிங்களத்தில் நூலாகவும் இப்போது கிடைக்கிறது. அவரின் குறிப்பில் அந்த அற்புதத் தீவுக்கு செல்வது தனது வாழ்க்கையின் அதிசிறந்த பாக்கியம் என்று குறிப்பிடுகிறார். அவர் இலங்கை வந்த காலத்தில் டச்சு கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பித்திருக்கவில்லை. அவர் டச்சு நாட்டுக்கு திரும்பியதும் இலங்கை பற்றி அவர் வெளியிட்ட கருத்துக்களால் கவரப்பட்ட வியாபாரிகள் இலங்கைத் தீவுக்குச் செல்ல ஆர்வம் காட்டினர்.

அவர் இலங்கை வந்திருந்தபோது போர்த்துக்கேயர் கரையோரங்களை ஆண்டுகொண்டிருந்தார்கள். அதன் பின் நான்கு தசாப்தங்களின் பின்னர் டச்சுக்காரர்கள் போர்த்துகேயருடன் சண்டையிட்டு இலங்கையைக் கைப்பற்றிய கதையும் அறிவீர்கள்.

அன்று டச்சு கிழக்கிந்திய கம்பனியின் மத்திய நிர்வாகத்தை மேற்கொள்கின்ற நிறுவனமாக Heeren XVII (பதினேழு கனவான்கள்) என்கிற அமைப்பு இயங்கியது. தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கான பதிலை நேரடியாக தன் தரப்பு நியாயங்களை வுயிஸ்ட் அனுப்பினார். சதி பற்றிய வுயிஸ்டின் பிரம்மையை கவுன்சிலும் நம்பவில்லை.

இலங்கையில் இருந்த போர்த்துக்கேய வம்சாவளியினரும், மக்களும் ஒன்று சேர்ந்து தன்னைக் கொன்றுவிட்டு கொழும்பு கோட்டையை கோவாவில் தரித்திருக்கின்ற போர்த்துக்கேயரிடம் ஒப்படைப்பதற்கு சதித்திட்டம் தீட்டுவதாக ஒரு மாயைக்குள் சிக்கினார். மலபாரில் இருந்த தளபதி ஜேக்கப் டி ஜாங் ஒரு கடிதத்தின் மூலம்; அப்படிபோர்த்துகேயர்களின் கப்பல்கள் எங்கும் காணப்படவில்லை என்றும், கோவாவில் ஒரே ஒரு கப்பல் மட்டுமே இருப்பதையும் மார்ச் மாதம் அறிவித்தார். தனக்கு எதிரான சதியில் இருந்து தப்பிச் செல்வதற்காக கப்பலில் தனது பொருட்களையும் ஏற்றி முடித்திருந்தார்.



ஆனால் வுயிஸ்ட் சந்தேகநபர்களை அடைத்து வைத்து சித்திரவதை செய்தார். அதே மார்ச் மாதம் அவர் பலரைக் கைது செய்து மேற்கொண்ட அட்டூழியங்களை எதிர்க்க எவரும் துணியவில்லை. மார்ச் ஏப்ரல் மாதங்களில் பலர் தூக்கிலிடப்பட்டனர். 

அவர்கள் மோசமாக சித்திரவதை செய்யப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானோர் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். அவரது குண்டர்கள் சந்தேகத்திற்குரிய குடிமக்களின் வீடுகளுக்குச் சென்று 19 பிரதேச அதிகாரிகள் கைது செய்தனர், அவர் அளித்த மரணதண்டையின் குரூரத்தால் நிர்வாகமே நடுநடுங்கிப் போயிருந்தது. 1929ஆம் ஆண்டு பெப்ரவரி 11 க்கும் ஏப்ரல் 30க்கும் இடையில் மொத்தம் 19 பேர் இவ்வாறு இந்த விசாரணையின் குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டார்கள்.  இவர்களில் ஆறு பேர் தூக்குமேடையில் தூக்கிடப்பட்டார்கள். ஆனால் எட்டு பேர் மரத்தில் தூக்கிலிடப்பட்டார்கள். சிலரது கைகால்கள் உடைக்கப்பட்டு பின்னர் தலை துண்டிக்கப்பட்டன. அப்படிப் பலியானவர்களில் ஒருவரின் மார்பு பிளக்கப்பட்டு அவரின் இதயம் நீக்கப்பட்டது. மூவர் அடித்து எலும்புகள் நொறுக்கப்பட்டு தலைகள் தனியாக வெட்டப்பட்டு அத்தலைகளை ஈட்டிகளில் வைத்து நடப்பட்டன. அதாவது கழுவேற்றம் செய்யப்பட்டனர்.

நூறாண்டுகளுக்கு முன்னர் (1907) கொழும்பு இல் கொழும்பு அரசாங்க சுவடிகூடத் திணைக்களம் வெளியிட்ட The dutch Records என்கிற டச்சு ஆவணத் தொகுப்பில் இப்படி குறிப்பிடப்படுகிறது.

“ஆனால் அவர்களில் மூன்று பேருக்கு, ஃபிரடெரிக் ஆண்ட்ரிஸ் (Frederick Andriesz,), ஜான் டி காவ் (Jan de Cauw), பேரன்ட் ஷூர்மன் (Barent Schuurman), ஆகிய மூவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை இந்த அனைத்து படுகொலையிலும் அதி கொடூரமான காட்டுமிராண்டித்தனமாக இருந்தது.  அவர்களின் எலும்புகள் உடைக்கப்பட்டு, அவற்றின் சதை கிழிந்து, அவர்களின் தலைகள் கோடரியால் கொத்தப்பட்டு பிறகு, உடல் பகுதிகள் கிழித்து இழுக்கப்பட்டு, அவர்களின் தலைகள் கொய்யப்பட்டு இருப்புக் கம்பிகளில் குத்தி நிறுத்தப்பட்டன .  இந்த அட்டூழியங்கள் பற்றிய செய்தி தொடர்ச்சியாக பதாவியாவை எட்டின. மேலும் ஒரு புதிய ஆளுநரை  அங்கே அனுப்பிவதற்கு காலம் தாமதிக்கவில்லை. அந்தக் கொடுங்கோலரைக் கைது செய்து பத்தாவியாவுக்கு சங்கிலியால் பிணைத்து கொண்டுவர உத்தரவிடப்பட்டது. டச்சு ஆட்சியிலேயே இது தான் இருண்ட காலம்.” (Anthonisz, R. G)

டச்சு லெப்டினன்ட் பெஞ்சமின் பகலொட்டி (Lieutenant Benjamin Pegalotty), லெப்டினன்ட் அந்திரிஸ் ஸ்வார்ட்ஸ் (Lieutenant Andries Swarts) ஆகியோர் பெயிலிஸ் வீதி கட்டிடத்தில் வசித்து வந்தார்கள். அவர்கள் இருவரும் சதிகாரர்களாக குற்றம்சாட்டப்பட்டார்கள். 12 மார்ச் 1729 அன்று லெப்டினன்ட் அந்திரிஸ் ஸ்வார்ட்ஸ்  மிக மோசமாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார். அவரின் நெஞ்சைக் குத்திக் கிழித்து  இதயத்தை வெளியே எடுத்து அவரின் முகத்திலேயே எறிந்தார். அதன் பின்னர்  ஆளுநர் வுய்ஸ்ட்டால் “இரத்த நீதிமன்றம்” (Blood Council) என்று அழைக்கப்பட்ட அவரின் கொண்டுங்கோன்மைச் சபையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு  தண்டனை விதிக்கப்பட்டவர்.  பின்னர் சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார் பெஞ்சமின். இந்த தண்டனைக்குப் பிறகும் ஆளுநர் திருப்தியடையவில்லை. இந்த தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றார். அவர் தன்னிஷ்டமாக உருவாக்கிய அரசியல் சபையில் தீர்மானம் கொண்டு வந்து அந்த கட்டிடத்தை இடிக்கத் தீர்மானம் நிறைவேற்றினார். 

அது பற்றிய தீர்மானம் இப்படித்தான்  நிறைவேற்றப்பட்டது

வியாழன் மதியம்,

ஜூன் 23, 1729

இன்றைய தினம்:

ஆளுநர் த Petrus Vuyst

ஹூயிட் நிர்வாகி, டிர்க் பைரன்ஸ்.

திசாவ, பீட்டர் கார்னெலிஸ் டி பாடோட்.

செயலாளர், ருடால்ப் பைசெலார்.

நிதிப் பொறுப்பாளர், ஜோஹன் பெர்னார்ட் வெயிட்னாவ்.

முதன்மை கிடங்கு காப்பாளர், கார்னெலிஸ் வான் ஏர்டன்.

இரண்டு பரம துரோகிகளான அந்திரிஸ் ஸ்வார்ட்ஸ் மற்றும் பெஞ்சமின் பெகலோட்டி ஆகியோருக்கு எதிராக கடந்த மார்ச் 11 ஆம் தேதி இங்குள்ள இராணுவ நீதிமன்றம் வழங்கிய தண்டனையின் மூலம், குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் வீட்டையும் இடித்து தரைமட்டமாக்குவது மட்டுமல்லாமல், ஏனைய தண்டனைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டைக்குள் உள்ள “கோர்னொன்தே ஸ்ட்ராட்” (பெய்லி தெரு) என்று அழைக்கப்படும் முதலில் பெயரிடப்பட்டவருக்குச் சொந்தமானது. அடுத்தது நகரத்தில் (பெட்டா (இன்றைய புறக்கோட்டை)) இரண்டாவது குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சொந்தமானது; அவை இடிக்கப்பட்டு இந்த இரண்டு கட்டிடங்கள் உள்ள இடத்தில் ஒரு கல்வெட்டு வைக்கப்பட வேண்டும், அது கவர்னர் அது எங்கு வைக்கப்பட வேண்டும் என்று கணிப்பார். மாண்புமிகு ஆளுநர் ஏழு அடியுள்ள நான்கு பக்க கல் தூண்கள் தயார் செய்து, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தலைகளை இரும்பு ஈட்டியில் குத்தி நிறுத்த வேண்டும். அதில் பின் வரும் வாசகம் கல்வெட்டாகப் பொறிக்கப்பட வேண்டும். 

1729 ஆம் ஆண்டில், தூக்கிலிடப்பட்ட துரோகி ஆண்ட்ரீஸ் ஸ்வார்ட்ஸின் சபிக்கப்பட்ட நினைவாக இந்த நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது - அவர் இடிக்கப்பட்ட வசிப்பிடத்தின் தளத்தில் - நீதிமான்களுக்கு கடவுள் அவருடைய நலனுக்காக இடைவிடாத நன்றியின் அடையாளமாகவும், துன்மார்க்கருக்கும், தீமைக்கு எதிராகவும் நிரந்தர எச்சரிக்கையாகவும் இருக்கும்.

“மேற்கூறிய இரண்டு இடங்களிலும், மற்ற தேசத் துரோகி பெஞ்சமின் பெகலோட்டியின் பெயருக்கான கல்வெட்டில் தேவையான மாற்றங்களுடன் இரண்டு தூண்களை அமைக்கின்ற வகையில் அமைப்பது தொடர்பாக அவையின் உறுப்பினர்களுக்கு ஆளுநர் முன் வைத்தார். டச்சு, சிங்களம் மற்றும் மலபார் (தமிழ்) மொழிகளில் உள்ள கல்வெட்டு, அனைவரும் படித்து புரிந்து கொள்ளக் கூடிய வகையில் மும்முமொழியிலும் அது வைக்கப்படவேண்டும்

"மேற்கூறியவை அனைத்தும் உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு, மாண்புமிகு ஆளுநரின் நோக்கத்துடன் அவர்கள் தங்கள் முழு உடன்பாட்டையும் அறிவித்து, ஒவ்வொரு மொழியிலும் மேற்கூறிய மூன்று மொழிகளிலும் மேற்கூறிய கல்வெட்டுடன் அத்தகைய தூணை அமைக்க தீர்மானிக்கப்படுகிறது. தேசத் துரோகி பெஞ்சமின் பெகலோட்டியின் பெயர்களில் தேவையான மாற்றங்களுடன் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.” (1)

இந்தத் தீர்மானத்தின் படி அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு அவர்கள் வசித்த பகுதியில் கல்வெட்டை நிறுவி மரணதண்டைக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் தலைகள் அங்கே ஈட்டியில் குத்தி காட்சிக்கு வைக்கப்பட்டதுடன். வாசகம் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் நிறுவப்பட்டது.

இக்கட்டிடம் பற்றி ஓரளவு அறிந்தவர்கள் கூட ஆளுநர் வுய்ஸ்ட்டால் அழிக்கப்பட்டு பின்னர் மீள கட்டப்பட்டது என்கிற சாராம்சக் கதையை மட்டும் தான் பெரும்பாலும் அறிந்திருப்பார்கள். ஆனால் அதை விட குரூரமான நிகழ்வுடன் தொடர்புபட்டது இக் கட்டிடம்.

இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் எங்கே என்று கேட்கிறீர்களா?

பெஞ்சமின், அந்திரிஸ் இருவரும் வசித்த அந்தக் கட்டிடம் பின்னர் கட்டப்பட்டது. அதைக் கொழும்பில் இப்போதும் காணலாம். அது கொழும்பு கோட்டையில் பெயிலிஸ் வீதி (Baillie Street) அமைந்திருந்ததாக பல ஆவணங்களில் காணக் கிடைக்கின்றன. இன்று அப்படி ஒரு வீதி இல்லை. ஆம் அந்த வீதி இன்று முதலிகே மாவத்தை என்கிற பெயரில் காணலாம். இன்றைய ஜனாதிபதி மாளிகைக்கு எதிரில் இந்த வீதி அமைந்துள்ளது. அதில் 41 வது இலக்கக் கட்டிடம் இன்றும் அப்படியே உள்ளது.

வூயிஸ்டை பதவி நீக்கம் செய்த பிறகு, அவரின் கொடுங்கோல் சட்டத்திற்குப் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் நடவடிக்கையை அதன் பின்னர் வந்த ஆளுநரும் அதிகாரிகளும் மேற்கொண்டார்கள். 

அதன்படி அதற்கு முன் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்வது,  அவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டுக்கொடுப்பது என்பன மேற்கொள்ளப்பட்டன. 

வுயிஸ்டுக்குப் பின் பெஞ்சமின், அந்திரிஸ் ஆகியோர் வாழ்ந்த வந்த பெயிலிஸ் வீதி கட்டிடம் புதிய ஆளுனரால் அந்தக் காணி உரிமையாளருக்கே திருப்பி அளிக்கப்பட்டது. அதை அவர் முன்னர் இருந்த அதே வடிவத்தில் அதைக் கட்டி முடித்தார். அக்கட்டிடத்தின் வாயிலில் இப்படி ஒரு கல்வெட்டை பதித்தார்.

‘DOOR GEWELT GEVELT,

DOOR’T REGT HERSTELT’

(அநீதியால் அழிக்கப்பட்டது... நீதியால் மீண்டும் எழுப்பப்பட்டது)

இன்றும் முதலிகே மாவத்தையில் அக்கட்டிடத்தையும் இந்த வாசகத்தையும் அப்படியே நம்மால் காணமுடியும். சுமார் முன்னூறு வருட கால பழமைவாய்ந்த டச்சு கல்வெட்டு அது என்று கூட நாம் கூறலாம். இன்றும் அந்த வாசகத்துடன் அக்கட்டிடத்தைப் பார்க்கலாம். இப்போது கடற்படையினர் அக்கட்டிடத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்று அவர்களிடம் கேட்டால் கூட இதற்கு பின்னால் இருக்கும் முக்கிய வரலாறு பற்றி அறிந்திருக்க மாட்டார்கள் என்றே கூறலாம்.

இறுதியில் வுய்ஸ்டுக்கு கொடூரகரமான மரண தண்டனை எப்படி எங்கே நிறைவேற்றப்பட்டது என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்

தொடரும்


அடிக்குறிப்புகள்
(1) Anthonisz, R. G (Government Archivist), Report on the Dutch records in the government archives at Colombo. With appendices, Colombo Govenment Printer, 1907.


நம்பிக்கைத் துரோக வரலாற்றின் நூற்றாண்டு நினைவு – 1921 2021 - என்.சரவணன்

இவ்வாண்டு தமிழ் மக்கள் சிங்கள தலைமைகளால் முதற் தடவையாக ஏமாற்றப்பட்டு நூறு ஆண்டுகளை எட்டியிருக்கிறது. 1921 ஆம் ஆண்டு சேர் பொன் அருணாச்சலம் இலங்கை தேசிய காங்கிரஸ் செய்த துரோகத்தினால் அதிலிருந்து வெளியேறினார். இனப்பாரபட்சத்தையும், நம்பவைத்து கழுத்தறுக்கும் போக்கையும், நம்பிக்கைத் துரோகத்தையும் முதற்தடவை அடையாளப்படுத்திய நிகழ்வு இது தான்.

பெரும்பாலும் தமிழ் மக்களின் போராட்டத்துக்கான அவசியங்கள் உருவான காலமாக 1956 க்குப் பிந்திய காலத்தைப் பார்க்கும் போக்கே நம்மில் நீடித்து வந்திருக்கிறது. சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு இரண்டு நூற்றாண்டுக்கும் கூடிய வயதென நிரூபிக்க முடியும். அதேவேளை இலங்கைக்கான தேசாபிமானம் சிங்கள தேசாபிமானமாக வெகுஜன அரசியல் களத்தில் பரிமாற்றமுற்று நிறுவனமயப்படத் தொடங்கியது 20 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியில் தான்.

இந்த ஒரு நூற்றாண்டுக்குள் தமிழ் அரசியல் தலைமைகளுடன் சிங்களத் தலைமைகளும், அரசும் செய்துகொண்ட ஒரு தொகை ஒப்பந்தங்கள், உடன்பாடுகள், ஏற்பாடுகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் உத்தரவாதங்கள் மீறப்படும் போதும் தமிழ் தரப்பு ஏமாற்றத்துக்கு ஆளானது மட்டுமன்றி புதிய வழிகளைத் தேடத் தள்ளப்பட்டது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் திடீர் என்று எழுச்சியுற்ற ஒன்றல்ல. இனி அடுத்தவர் மீது நம் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பை அடுத்தவரிடம் கொடுக்கத் தேவையில்லை என்கிற நிலைக்குத் தான்  இந்த ஏமாற்றங்கள் தள்ளின. ஒவ்வொரு தடவையும் அப்போதைய அவசர அரசியல் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக மட்டுமே சிங்களத் தரப்பு பேச்சுவார்த்தைக்கும், உடன்பாட்டுக்கும் வந்திருக்கிறது. தேவை முடிந்ததும் நடுத்தெருவில் விட்டுவிட்டு உடன்பாடாவது மண்ணாங்கட்டியாவது என்கிற தொனியில் தான் ஏமாற்றிவந்தது.

அத்தகைய ஏமாற்றங்களுக்கு முதைப்பாக முதன்முதலில் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றி தான் நாம் இங்கு பேசப்போகிறோம். போராட்ட வரலாற்றை இந்த கோணத்தில் இருந்து தொகுத்துப் பார்த்தால் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்துக்கான தேவை அன்றும், இன்றும் இருந்துவருவதை நம்மால் உணர முடியும்.

1987 கொடுத்த மாகாணசபையையும் பறிக்கும் முடிவில் தீவிரமாக தற்போதைய கோட்டபாய அரசாங்கள் இறங்கியிருப்பதை இந்த நாட்களில் வெளியாகின்ற அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் பலரும் கண்டுகொள்ளாமல் போன இந்த நூற்றாண்டு நினைவை நாம் இங்கு நினைவு கூருவோம்

அதிகாரம் கைமாற்றப்பட்ட பின் சிங்கள பௌத்த அதிகார சக்திகள், கொடுக்கும் தரப்பாகவும் ஏனைய தரப்பினர் கையேந்தி தமதுரிமைகளைக் பிச்சை கேட்கும் தரப்பினராகவும் மாறினர். தொடர்ச்சியாக இரங்கிப் போய் உரிமைகளைக் கோரினர். தமது சந்தர்ப்பவாத நலன்களின் போது மட்டும் (அதாவது தமிழ் தலைமைகளினால் அரசியல் லாபம் கிடைக்கக்கூடிய நிலைகளில் மட்டும்) தமிழ்த் தலைமைகளுடன் பேச முற்படுவது, வாக்குறுதிகள் வழங்குவது, ஒப்பந்தம் செய்து கொள்வது, தங்கள் நலன்கள் முடிந்ததும் தூக்கியெறிந்து விட்டு தமது வேலையைப் பார்ப்பது என்பதே வரலாறாகப் பதியப்பட்டுள்ளது.

இவை ஒன்றும் வரலாற்றில் ஒரு முறை ஏற்பட்டதல்ல. அந்த நம்பிக்கைத் துரோகங்களின் வரலாறு நீண்டது. தமக்கான உரிமைகள் சிங்கள பௌத்த அதிகாரத் தரப்பினால் ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை என்பது ஸ்தூலமாக நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழ் மக்கள் தமது விடுதலை என்பது கேட்டுக் கெஞ்சிப் பெறுவது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டு வந்திருக்கிறது. சிங்கள அதிகாரத் தரப்பினால் அடுத்தடுத்து வழங்கப்படும் எந்த உத்தரவாதத்தையும் சந்தேகிக்க, மறுக்க, எதிர்க்க, எச்சரிக்கை கொள்ள வைத்து விட்டிருக்கிறது.

நூற்றாண்டு கால வரலாறு என்பது சிங்கள பொளத்த சக்திகளினால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட வரலாறு தான். அது சுதந்தித்தின் போது அதிகாரம் கைமாறப்பட்ட 72 வருடங்களுக்குள் மட்டுப்பட்டதல்ல. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலந்தொட்டு சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தொடக்கப்பட்டாகி விட்டது. அதனை இங்கு பார்ப்போம்...

தமிழ் பிரதிநிதிகள்

1879 இல் அவர் அரசாங்க சபைக்கு தெரிவு செய்யப்பட்டு ஓராண்டுக்குள் சேர் பொன் இராமநாதன் இலங்கை தேசிய சங்கம் (Ceylon National Association) என்கிற ஒரு தேசிய அமைப்பை நிறுவினார். அதுவே இலங்கையர்களின் தேசிய அரசியல் இயக்கத்துக்கெல்லாம் முன்னோடி இயக்கம் என்று கூறலாம். அதன் முதல் தலைவராக அவர் தெரிவானார். இலங்கையர்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கைகளை அச்சங்கத்தின் மூலமே முன்னெடுத்தார். இந்த சங்கத்தின் அடுத்த கட்டப் படிநிலை தான் முப்பது ஆண்டுகளில் தோன்றிய இலங்கை தேசிய காங்கிரஸ். இலங்கை தேசிய காங்கிரசை ஏற்படுத்துவதற்காக இணைந்த பிரதான சங்கங்களில் பெரிய சங்கமாக இலங்கை தேசிய சங்கம் இருந்தது.

இராமநாதன் இப்பதவியை வகித்த காலத்தில் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் ஒரு வகையில் அரசியல் அனாதைகளாகவே இருந்தார்கள் என்று கூற முடியும். அவர் தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி, அதிகாரப் பரவலாக்கம், பிரதிநிதித்துவம் என்பன குறித்து குறிப்பாக எதையும் செய்யவில்லை.

உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் ஐந்து வருடங்கள் மட்டுமே அப்பதவியில் இருக்கமுடியும் என்கிற விதியை அரசாங்கம் கொண்டுவரும்வரை சுமார் தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் இராமநாதன் அரசாங்க சபையில் உத்தியோகபற்றற்ற அங்கத்தவராக பதவி வகித்தார்.(1)  1893 இல் அவரின் சகோதரர் பொ.குமாரசுவாமி அதன் பின்னர் நியமிக்கப்பட்ட போது இராமநாதனை விட அதிகமாக வடக்கு கிழக்குக்கு செய்தார் எனலாம். அரசாங்கத்துக்கும் தமிழ் மக்களுக்குமான ஒரு பாலமாகவே இருந்தார். அதனால் தான் அவர் தனது ஐந்தாண்டு பதவியை நிறைவு செய்யும் போது அவரையே மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கும்படி சாதி மத பேதமின்றி தமிழ் மக்கள் அரசை வற்புறுத்தினர். 

ஆனால் அக்கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை அதற்குப் பதிலாக கொழும்பைத் தளமாகக் கொண்டிருந்த கிறிஸ்தவ தமிழரான டாக்டர் றொக்வூட்டை நியமித்தார். அவரை தமிழ்ச் சமுதாயம் அறியாதபோதும் குடியேற்ற அதிகாரவர்க்கத்தின் மத்தியில் அவர் செல்வாக்குபெற்றவராக இருந்தார். இதற்கு தமிழர்கள் மத்தியில் பெரும் வெறுப்பும், எதிர்ப்பும் கிளம்பியிருந்தது. அதுமட்டுமன்றி அவரின் ஐந்தாண்டு கால பதவி முடிகையில் மீண்டும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவரை மீளவும் நியமித்தனர். ஐந்தாண்டு மட்டுமே ஒருவருக்கு பதவி என்கிற விதியையும் மீறி அதைச் செய்ததன் மூலம் தமிழ் மக்களின் வெறுப்பை அதிகரித்துக்கொண்டார் ஆளுநர். அவர் நோய்வாய்ப்பட்டு நான்கு மாதங்கள் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த காலத்தில் அவரின் இடத்துக்கு அசரப்பாவை நியமித்து தமிழர் அதிருப்தியை சம்பாதித்துக்கொண்டார்.

அந்த நிலைமை 1904 இல் தான் ஏ.கனகசபை நியமிக்கப்பட்டதன் மூலம் சரிசெய்யப்பட்டது. கொழும்பைத் தளமாகக் கொண்டிராத; அதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் அது தான். இலங்கையின் சுதேசிய தேசியவாதிகள்; சிங்கள - பௌத்த - கொவிகம நலன்களின்பாற்பட்டு எழுசியடையத் தொடக்கிய காலம் இது தான். அதுவே தமிழ் இனத்துவ அரசியலை நோக்கி தமிழ் மக்களையும் தள்ளியது.

முதலாவது நம்பிக்கைத் துரோகம்

1915ஆம் ஆண்டு இனக்கலவரமானது சுதேசிய தேசாபிமான அரசியல் போக்குக்கான நியாயங்களை ஏற்படுத்தியிருந்தது. அன்று பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து இயங்கும் இயக்கமாக மதுவொழிப்பியக்கம் வளர்ச்சியுற்று வந்தது. முதலாவது உலக யுத்த காலமாததால் உள்ளூரில் சுதேசியர்களின் நெருக்கடிகளை ஆபத்தாகவே பார்த்தது. கண்டியில் தொடங்கிய சிங்கள – முஸ்லிம் கலவரம் நாடளாவிய ரீதியில் பரவிய போது அதை முதலாம் யுத்தத்தில் எதிரி நாடுகளின் சதியாக சந்தேகித்தது அரசு. இரும்புக் கரம்கொண்டு அடக்கிய பிட்டிஷ் அரசு மதுவொழிப்பியக்கத்தின் சிங்களத் தலைவர்களை சிறையில் அடைத்தது. சிலர் கொல்லப்பட்டனர். அவர்களை விடுவிப்பதற்காக இராணியுடன் பேசுவதற்கு இராமநாதன் லண்டன் சென்று வெற்றியுடன் திரும்பினார். இந்த நிகழ்வுகள் சகல இனங்களும் இணைந்த தேசிய இயக்கத்தின் அவசியத்தை உணர்த்தியது. அன்றைய ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்த விளைந்த இலங்கைக்கான புதிய அரசியல் யாப்புக்காகவும் சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஒரு உறுதியானதொரு அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்க முடிவு செய்தனர்.

அதன்படி இலங்கை சீர்திருத்தக் கழகம் என்கிற அமைப்பை 1917 மே மாதம் உருவாக்கியபோது அதன் ஸ்தாபகர்களில் ஒருவரான சேர் பொன் அருணாச்சலத்தைத் தலைவராக நியமித்தனர். இலங்கை சட்ட நூல் நிலையத்தில் 19 உறுப்பினர்களால் (அதாவது 19 வழக்கறிஞர்களைக் கொண்ட) சீர்திருத்தக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. "எமது அரசியல் தேவை" என்கிற தலைப்பில் அருணாசலம் ஆற்றிய உரையில்..

"இலங்கை பிச்சை கேட்கும் வறிய நாடல்ல எமது பாரம்பரிய சொத்தைத் தான் கேட்கிறோம்" என்றார் (02.04.1917)

வெகு விரைவில் அப்போது இலங்கையில் இயங்கிய ஏனைய சங்கங்களான இலங்கை தேசிய சங்கம், சிலாபம் சங்கம், யாழ்ப்பாண சங்கம் ஆகிய சங்கங்களையும் இணைத்து இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த இந்தியத் தேசிய காங்கிரஸ் போலவே இலங்கையிலும் இலங்கை தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress - CNC) எனும் இயக்கத்தை அமைத்துக் கொண்டனர். இதனை ஆரம்பிப்பதில் முன்னின்ற எப்.ஆர்.சேனநாயக்க, ஜேம்ஸ் பீரிஸ் போன்றோர் இன ரீதியிலான பிரதிநிதித்துவத்தை நீக்குவதையும் தமது நிகழ்ச்சிநிரலில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். தம்முடன் இணைந்த யாழ்ப்பாண சங்கம் மாத்திரம் இந்த விடயத்தில் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தது. யாழ்ப்பாண சங்கத்தினர் அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் குடியேற்ற நாடுகளின் மந்திரியிடம் "எந்த சந்தர்ப்பத்திலும் இன ரீதியிலான பிரதிநிதித்துவம் நீக்கப்படலாகாது" என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

15.12.1917 இல் தேசிய காங்கிரசை உருவாக்குவதற்காகக் கூடிய முதலாவது ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட 144 பேரில் 17 பேர் மட்டுமே தமிழர்கள். அதுவும் யாழ்ப்பாண சங்கத்தின் பிரதிநிதிகள் இருவர் மாத்திரமே. இன ரீதியான பிரதிநிதித்துவம் நீக்கப்படக் கூடாது என்கிற அவர்களின் கோரிக்கையை பெரும்பாலான பெரும்பான்மை சிங்களவர்கள் எதிர்த்தனர். இந்த நிலைமையைச் சரிக்கட்டுவதற்கு அருணாசலத்தை அணுகினார்கள்.

ஜேம்ஸ் பீரிஸ்

இலங்கை தேசிய சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் பீரிஸ், இலங்கை சீர்திருத்தக் கழகத் தலைவர் ஈ.ஜே.சமரவிக்கிரம, யாழ்ப்பாண சங்கத் தலைவர் அ.சபாபதி ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்றை ஏற்படுத்தினார் அருணாசலம். அந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்படாத நிலையில் அருணாசலம் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறைக்குள் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைப் பேணுவது எப்படி என்று ஆராய்ந்தார். அதன் விளைவாக மேல் மாகாணத்தில் தமிழர்களுக்கு ஒரு தொகுதியை ஒதுக்க சிங்களத் தலைவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

இந்த உடன்படிக்கை பற்றிய கடிதங்களை பிற்காலத்தில் இராமநாதனின் வாழ்க்கை சரிதத்தை இரண்டு பெரிய தொகுதி நூல்களாக தொகுத்த எம்.வைத்திலிங்கம் அந்நூலில் வெளியிட்டிருக்கிறார்.(2)

07.12.1918 திகதியிடப்பட்டு அருணாசலத்துக்கு எழுதிய கடிதத்தின் மூலம் ஜேம்ஸ் பீரிசும், சமரவிக்கிரமவும் அந்த வாக்குறுதியை அளித்தார்கள்.

"....இலங்கை தேசிய சங்கம், இலங்கை சீர்திருத்தச் சங்கம் என்பவற்றின் தலைவர்கள் என்ற முறையில், யாழ்ப்பாணச் சங்கத்தால் முன் வைக்கப்படும் எந்தவொரு திட்டத்தையும், அது தீர்மானங்கள் உள்ளடக்கும் பல்வேறு கொள்கைகளிலிருந்தும் வேறுபடாத பட்சத்தில், நாம் ஏற்றுக்கொள்வோம் என உறுதிமொழி அளிக்கிறோம். யாழ்ப்பாணச் சங்கம் உண்மையில் நியாயமற்ற எதனையும் வற்புறுத்தாது என நாம் நிச்சயமாக நம்புகிறோம், அத்தேர்தல்  தொகுதி, பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் வரையில், மேல் மாகாணத்தில் தமிழருக்கென ஆசனத்தை ஒதுக்குவதற்காண ஏற்பாட்டை நாம் முனைப்புடன் ஆதரிப்போம் என உறுதியளிக்கத் தயாராய் உள்ளோம்...”

உங்கள் உண்மையுள்ள

ஜேம்ஸ் பீரிஸ் (தலைவர் - இலங்கை தேசிய சங்கம்)

ஈ.ஜே.சமரவிக்கிரம (தலைவர் – இலங்கை சீர்திருத்தக் கழகம்)

அப்போது சட்ட நிரூபன சபையின் தமிழ்ப் பிரதிநிதியாக இருந்த அ.சபாபதிக்கும் இதுபோன்ற வாக்குறுதியை அளித்திருந்தார்கள்.

“இந்த வாக்குருதியினால், உங்களுக்கு வட மாகாணத்தில் மூன்று ஆசனங்களும், கிழக்கு மாகாணத்தில் இரு ஆசனங்களும் (உங்களால் முடிந்தால் இவ் எண்ணிக்கையை நீங்கள் அதிகரிக்கலாம்), தமிழருக்கு ஏனைய மாகாணங்களிலும், கொழும்பு மாநகர சபையிலும் இருக்கின்ற சந்தர்ப்பங்களுடன், மேல் மாகாணத்தில் பிரதேச தொகுதி அடிப்படையில் ஓர் ஆசனம் ஒதுக்கப்படவும் சாத்தியமாகின்றது.”

மேல் மாகாணத்தில் தமிழருக்கு ஒரு தொகுதியை ஒதுக்குவதற்கு எமது ஆதரவைத் தருவோம் என்று வாக்குறுதியளிக்கிறோம்" என்றார்கள்.

அன்றே அருணாசலம் அச்செய்தியை சபாபதிக்கு அறிவித்தார்.

“...ஜேம்ஸ் பீரிசும், ஈ.ஜே.சமவிக்கிரவும் உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள்... வடக்குக்கு மூன்று, கிழக்குக்கு இரண்டு, மேல் மாகாணத்துக்கு ஒன்று என்கிற வகையில் அவர்கள் அந்த உத்தரவாதத்தை அளித்திருகிறார்கள்... மேல் மாகாணத்தில் இந்தியத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்த அரசாங்கம் நிச்சயம் வழிகளை ஏற்படுத்தும்... நமது சிங்கள நண்பர்கள் மேல்மாகாணத்தில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவக் கோரிக்கைக்கும் நிச்சயம் ஆதரவு வழங்குவார்கள்... முஸ்லிம்கள் அந்தக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்...

யாழ்ப்பாணத்திலிருந்து போதுமானளவு பிரதிநிதிகளுடன் நீங்களும் (சபாபதி), ஏ.கனகசபையும் இந்தத் தீவின் முக்கிய பொதுப் பிரச்சினையை தீர்ப்பதற்கான இந்த மாநாட்டில்  கலந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். 15ஆம் திகதி ஆளுநர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகிறார் என்பதை நான் அறிவேன். நீங்களும் கனகசபையும் 14 பின்னேரமோ அல்லது 13ஆம் திகதி கூட்டத் தீர்மானங்களை நிறைவேற்றியதும் இரயில் ஏறி சென்றுவிடலாம்...”

இப்படிக்கு அருணாச்சலம்

சேர் பொன் அருணாச்சலம்

ஜேம்ஸ் பீரிஸ், சமரவிக்கிரம ஆகியோர் கொடுத்த உத்தரவாதத்தை நம்பி அந்த உத்தரவாதத்தை அருணாச்சலம் யாழ்ப்பாணச் சங்கத்துக்கு வழங்குகிறார். இந்த உத்தரவாதங்களை நம்பி யாழ்ப்பாணச் சங்கம் தேசிய காங்கிரஸ் உருவாவதற்காக கைகோர்த்தது.

மேற்படி உறுதிமொழியின் பேரில் யாழ்ப்பாணச் சங்கமும் இன ரீதியான பிரதிநிதித்துவத்தைக் கைவிட்டு 11.12.1919 இல் நடந்த இலங்கை தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டது. அதன் தலைவராக அருணாசலம் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையேற்றதும் ஆற்றிய முதலாவது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்.

“சிறுபான்மையினருக்கான சிறப்பு பிரதிநிதித்துவம் ஒரு தற்காலிக பயனை மட்டுமே வழங்கும் நான் நம்புகிறேன், இறுதியில் புதிய முறையின் நடைமுறையானது சிறுபான்மையினரையும் இந்த முழுத் தீவையும் ஒரே தேர்தல் தொகுதியாகக் கருதி தீவினதும் பொது நலனுக்காக உழைப்பாளர்கள் என்று நம்புகிறேன்....”

இந்த உடன்பாட்டின் விளைவாகத் தான் இலங்கை வரலாற்றில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் இயக்கமான இலங்கை தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress - CNC) தோன்றியது. அவ் இயக்கத்தை அமைத்துக் கொள்வதற்காக பின்வரும் முக்கிய மூன்று அமைப்புகளும் ஒன்றிணைந்தன

  1. இலங்கை தேசிய சங்கம் (Ceylon National Association). 
  2. இலங்கை சீர்திருத்தச் சங்கம் (Ceylon Reform League)
  3. யாழ்ப்பாண சங்கம் (Jaffna Association)

துரதிர்ஸ்டவசமாக குறுகிய காலத்தில் யாழ்ப்பாணச் சங்கம் மட்டுமல்ல அருணாச்சலமும் சேர்த்து ஏமாற்றப்பட்டார்கள். தமிழர்களை சமரசத்துக்கு அழைத்து தமது தேவை கைகூடியபின், கைவிடுவது என்பது இங்கிருந்து தான் தொடங்குகிறது.

தமிழர்களை சமரசத்துக்கு அழைத்து தமது தேவை கைகூடியபின், கைவிடுவது என்பது இங்கிருந்து தான் தொடங்குகிறது.

“வாக்குறுதி இனி செல்லாது”

மனிங் சீர்திருத்தத்திற்கான முயற்சிகளை ஆங்கிலேய அரசு மேற்கொண்டிருந்தபோது தமிழ் பிரதிதிநிதித்துவம் குறைக்கப்படுவது குறித்து இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்த தலைவர்கள் கண்மூடித்தனமாக இருப்பதைக் கண்ட அருணாசலம் முரண்படத்தொடங்கினார். தேர்தல் கிட்டிய நேரத்தில் கொழும்பு தொகுதிக்கான வேட்பு மனுவை அருணாசலம் அவர்கள் தயார் செய்துகொண்டிருந்தபோது அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டு ஜேம்ஸ் பீரிசை அப்பதவிக்கு நியமித்தார்கள். இந்த சதியின் சூத்திரதாரியாகச் செயல்பட்டவர்கள் எப்.ஆர்.சேனநாயக்க, டீ.எஸ்.சேனநாயக்கா ஆகிய இரு சகோதரர்களுமே. இவர்கள் இருவரும் அப்போது அநகாரிக தர்மபாலவின் சிங்கள பௌத்த செயற்பாடுகளுடன் இணைந்து பணிபுரிய ஆரம்பித்திருந்தார்கள்.

1921 அரசாங்க சபைத் தேர்தல் நெருங்கிய வேளை கொழும்பு நகர் ஆசனம் ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி தமக்கு வழங்கப்படவேண்டும் என்பதை நினைவுறுத்திய வேளை;

"இலங்கை சீர்திருத்தச் சங்கத்தின் தலைவராக இருந்த போது நான் கொடுத்த வாக்குறுதி இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவராக உள்ள என்னைக் கட்டுப்படுத்தாது" என்று ஜேம்ஸ் பீரிஸ் அறிவித்தார்.

எப்.ஆர்.சேனநாயக்க இந்த சதியின் பின்னணியில் இருந்தார். அருணாச்சலம் தனது வேட்புமனுவைக் கையளித்துவிட்ட வேளையில், அதைப் பொருட்படுத்தாது ஜேம்ஸ் பீரிஸ் அதே ஆசனத்துக்கு எப்.ஆர்.சேனநாயக்கவின் ஆதரவுடன் தனது வேட்புமனுவையும் கையளித்தார்.(3) இந்த ஆசனம் ஒரு தூய சிங்களவருக்கே வழங்கப்படவேண்டும் என்று தனது சகாக்களுக்கு கூறினார்.

அருணாச்சலம் மனம் உடைந்தவராக தனது வேட்புமனுவை மீளப் பெற்றுக்கொண்டு கூடவே இலங்கை தேசிய காங்கிரசின் பதிவகளில் மட்டுமன்றி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்து வெளியேறினார். அதுவே சிங்களத் தரப்பினரால் நம்பி மோசம் போன முதலாவது நிகழ்வாகப் பதியப்படுகிறது.

எப்.ஆர்.சேனநாயக்க

அருணாச்சலம் இந்த துரோகத்தைப் பற்றி தனது ஆதங்கத்தை எப்படி வெளியிட்டார் என்பதை அப்போது வெளிவந்த சிலோன் ஒப்சேவர் பத்திரிகையில் இப்படி வெளியானது.

"சிங்கள தமிழ் சிங்கள தமிழ் அரசியல் பிரச்சினை தற்போது இலங்கையர் மத்தியில் பெருமளவு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது வாக்குறுதியில் ஞானத்தையோ, சாத்தியத்தையோ அதற்கு மற்றவர்கள் கட்டுப்பட்டவர்களோ அல்லவோ என்பவற்றையிட்டு எமக்கு தகவல் தருபவர் என்னதான் கருத்தைக் கொண்டிருந்தாலும் இந்த இரு கனவான்களும் தமது வாக்குறுதிகளுக்கு கட்டப்பட்டவர்கள் என்பதும் அவற்றை அவர்கள் மதிப்பதுடன் தம்மை பின்பற்றியவர்களையும் அதை மதிக்கும்படி தமது செல்வாக்கை பிரயோகிக்க வேண்டுமென்பதிலும் அவசியமென்பதிலும் கேள்விக்கு இடமேயில்லை என்பது ஒரு சாதாரண மனதுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் அவற்றை மறுதலித்து விட்டனர் இனிமேலும் இந்த சிங்கள தலைவர்களை நம்புவதற்குத் தமிழர் மறுத்து, தமது நலன்களைப் பாதுகாப்பதற்காக சுதந்திரமான நடவடிக்கை எடுக்க தீர்மானித்ததில் ஏதாவது ஆச்சரியம் உண்டா?... எனது சொந்த கடமை தெளிவாக உள்ளது. நான் வாக்குறுதியைக் கைகொள்ளத்தான் வேண்டும்.."

(27.08.1921 Ceylon Observer)

இந்தத் துரோகத்தை எதிர்கொண்ட வேளை அருணாசலம் 70 வயதை எட்டிக்கொண்டிருந்தார். ஏமாற்றத்தால் துவண்டு போன அருணாசலம் இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து விலகி யாழ்ப்பாணத்துக்குச் சென்றுவிட்டார். கனகசபை, சபாபதி உள்ளிட்ட சகல தமிழ் உறுப்பினர்களும் காங்கிரசிலிருந்து விலகினர். இலங்கை தேசிய காங்கிரஸின் ஆவணங்களையெல்லாம் தொகுத்து ஒரு சிறந்த பெரிய தொகுப்புகளை வெளிக்கொணர்ந்தவர்  மைக்கல் ரொபர்ட்ஸ். அரசியல் வரலாறு பற்றிய ஆர்வமுடையவர்கள் எல்லோரும் வைத்திருக்க வேண்டிய முக்கிய நூல் தொகுதிகள் அவை என்பேன். தேசிய சுவடிக்கூடம் அதை பல ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. அதன் முதலாவது தொகுதியில் ஓரிடத்தில் இந்த விலகல் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.

“சேர் பொன் அருணாச்சலம் உள்ளிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் விலகிவிட்டதால் 1921 – 1922 காலப்பகுதியில் இலங்கை தேசிய காங்கிரஸ் மிகவும் பலவீனப்பட்டுப் போனது. அதன் பின்னர் தேசிய காங்கிரசில் எஞ்சியவர்கள் சிலர் மட்டும் தான். அவர்களில் எம்.ஏ.அருளானந்தன், டபிள்யு சதாசிவம், டொக்டர் ஈ.வி.ரத்னம், டொக்டர் எஸ்.முத்தையா, சீ.எஸ்.ராஜரத்தினம் போறோரைக் குறிப்பிடலாம்.இவர்களும் கூட கொழும்பு கண்டி பகுதிகளில் பணிபுரிந்தவர்கள். இலங்கைத் தமிழர்களின் தாயகமான யாழ்ப்பாணத்தில் இருந்தோ அல்லது கொழும்பு, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்களிடம் இருந்து இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவர்களுக்கு எந்தவித மன்னிப்பும் இருக்கவில்லை. 1922 – 1944 வரையான காலப்பகுதிகளில் அவர்களுக்கும், தேசிய காங்கிரசுக்குக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இருக்கவில்லை.இரு தரப்புக்கும் இடையிலான உறவு அந்தளவு விரிசலடைந்திருந்தது...” (4)

இந்த பிளவுக்குப் பின்னர் இலங்கை தேசிய காங்கிரஸ் அதன் பின்னர் ஒரு தூய சிங்கள அமைப்பாகவே மிஞ்சியது. சிங்களத் தரப்பு தமிழர்களுக்குச் செய்த துரோக ஒப்பந்த வரலாறு அங்கிருந்து தான் தொடங்கிற்று. முதல் ஒப்பந்த மீறல் அங்கிருந்து தான் ஆரம்பமானது. சிங்கள தலைவர்களிடம் முதலில் நம்பிக்கை இழந்துபோன சந்தர்ப்பமும் அது தான்.

வடக்கு கிழக்கு – மலையகம் ஆகியவற்றுக்கு வெளியில் அதிகமான தமிழர்கள் வாழும் பிரதேசம் மேல் மாகாணம். கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. கொழும்பின் மையப் பகுதியில் இன்னும் சொல்லப் போனால் மாநகர மையப் பகுதியில் அதிகம் தமிழ் பேசும் மக்கள் தான் கடந்த ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேல் வாழ்ந்து வருகிறார்கள். அதிகமாக இந்திய வம்சாவளிப் பின்னணியைக் கொண்ட வர்த்தகர்களாக, வியாபாரிகளாக, தொழிலாளர்களாக அதிகமானோர் வாழும் இடம் அது. வடக்கில் இருந்தும் தெற்குக்கு வர்த்தகம், சிவில் சேவை போன்றவற்றுக்காக குடியேறி வாழ்ந்து வந்தவர்களும் கணிசமானவர்கள். இராமநாதன் குடும்பமும் அந்த வழித்தடத்தில் வந்தவர்கள் தான்.

எனவே கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவத்தின் அவசியம் அதிகமாகவே அப்போது இருந்தது.

இது மேல்மாகாண தமிழர்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான கோரிக்கையாக குறுக்கிப் பார்த்ததால் என்னவோ தமிழர் அரசியல் வரலாற்றில் பலர் இந்த 1918 உடன்பாட்டைக் கண்டுகொள்ளாமலே விட்டுவிடுகிறார்கள்.

ஆனால் வடக்கில் இருந்து கொழும்பில் குடியேறி ஒட்டுமொத்த இலங்கையர்களுக்குமாக தலைமை வகித்து வந்த தலைவர்கள் ஒரு கட்டத்தில் பிரதிநிதித்துவத்தில் இனப் பாரபட்சம் காட்டப்படுவதை அடையாளம் கண்டு அதை சரி செய்ய எடுக்கப்பட்ட முயற்சியே அது என்பதை இங்கு விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழர் அரசியல் வரலாறு முழுவதும் அரசியல் பிரதிநிதித்துவம், அரசியல் அதிகாரம், அதிகாரப் பரவலாக்கம் என்பன தான் போராட்டத்தின் அடிப்படை மையமாக இருந்து வந்திருக்கிறது.

அந்த வகையில் முதலாவது பிரதிநிதித்துவக் கோரிக்கையும், அதற்கான பேச்சுவார்த்தையும், அதில் கண்ட உடன்பாடும், பின்னர் அதனை வெளிப்படையாக மீறியதையும் நாம் முக்கியமாக கணக்கில் எடுத்தாக வேண்டும்.

சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாச்சலம், பொன்னம்பலம் குமாரசுவாமி ஆகிய மூன்று சகோதரர்கள் மூவரும் அரசாங்க சபையில் அங்கம் வகித்தார்கள். யாழ்ப்பாணப் பின்னணியைச் சேர்ந்த அவர்கள் கொழும்பை உறைவிடமாகக் கொண்டிருந்ததால் அங்கேயே அரசாங்கத்தில் சிவில் துறையிலும் பணியாற்றி பின்னர் அரசியலிலும் ஈடுபட்டார்கள். தேசியத் தலைவர்களாகவும் கொண்டாடப்பட்டார்கள். இனத்துவ அடையாள அரசியலுக்கான தேவை இருப்பதாக ஆரம்பத்தில் அவர்கள் நினைக்கவில்லை. ஆனால் அவர்களின் இறுதிக் கால அரசியல் நடவடிக்கைகள் கொழும்பில் இருக்கவில்லை. மூவருமே மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு சென்று தமது பொதுத்தொண்டுகளையும், அரசியல் பணிகளையும் மேற்கொண்டார்கள். அவர்கள் மூவருமே அவ்வாறு தமது பணிகளைத் தொடங்கிய குறுகிய காலத்தில் இறந்தும் போனார்கள். அவர்களை யாழ்ப்பாணத்துக்கு தள்ளியதும், அடையாள அரசியலுக்குள் தள்ளியதும் தென்னிலங்கை சிங்கள அரசியல் தலைமைகளின் துரோகங்கள் தான் என்பதையும் இங்கே நினைவுறுத்த வேண்டும்.

அருணாச்சலமும் கூட தனது ஆயுளின் இறுதி மூன்று ஆண்டுகள் தான் தமிழர்களுக்கு தலைமை கொடுக்க விரைந்தார். அதாவது தேசிய காங்கிரசில் இருந்து விலகி தமிழர் மகா சபையை அவர் அமைத்தார்.

நளின் த சில்வா போன்றோர் இன்றும் இலங்கையின் இனத்தேசிய சங்கத்தை நிறுவியவர் அருணாச்சலம் என்று நிறுவ பகீரதப் பிரயத்தனம் எடுத்து வருகிறார். ஆனால் அதற்கு முன்னரே சிங்கள மகாஜன சபை, பறங்கியர் ஐக்கிய சங்கம், முஸ்லிம் சங்கம் என்றெல்லாம் இருந்ததையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்

'உதயதாரகை' பத்திரிகையில் 'தமிழ் மகாசன சபை என்ற ஆசிரியர் தலையங்கத்தை வெளியிட்டது.

“இம்முகவுரை நாமங்கொண்ட ஓர் சங்கத்தை ஸ்தாபிப்பது அவசியம் என்னும் கருத்து இலங்கைத் தமிழ்ப் பிரபுக்கள் பலரது மனதிலே எழுந்திருக்கின்றதென்பதை முன்னர் கூறியிருக்கின்றோம். இவ் விஷயம் இந்நாட்களிலே சாதியபிமானமும், தேசாபிமானமும் உடைய இலங்கைத் தமிழரின் மனதில் அதிகமாய் கிரியை செய்து கொண்டிருக்கிறது. நாம் சென்ற வாரச் சஞ்சிகையில் எடுத்துக் காட்டியபடி சிங்கள மகாசன சபை, பறங்கிகள் ஐக்கிய சங்கம், முஸ்லிம் சமூகம் முதலாம் பல சங்கங்கள் இலங்கை மறு சாகியத் தவர்க்குள் ஏலவே ஸ்தாபிக்கப்பட்டு அவ்வச்சாகியத்தவரின் தேர்ச் சிக்கும் விருத்திற்கும் ஏதுக்களாய் இருக்கின்றனவென்பதையும் அறிவோம். இப்படிப்பட்ட ஓர் சங்கம் தமிழராகிய நம்மவர்க் குள்ளும் ஸ்தாபிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை ஏலவே நம் சனத் தலைவர்கள் பலர் உணர்ந்திருந்தும் போதிய ஐக்கியமும் உற்சாகமும் உண்டாகாமையால் காலம் பின்னிட வேண்டிய தாயிற்று..” 

இங்கே குறிப்பிடப்படுகிற “சிங்கள மகாஜன சபை”யும் பண்டரநாயக்கவால் உருவாக்கப்பட்ட சிங்கள மகா சபையும் ஒன்றல்ல. “சிங்கள மகாஜன சபை” 1919இல் உருவாக்கப்பட்ட அமைப்பு.  அது கிறிஸ்தவர்களுக்கு எதிரான அமைப்பாக ஆரம்பத்தில் அடையாளப்படுத்தபட்டாலும் நாளடைவில் இலங்கை தேசிய காங்கிரசுக்கு ஊடாக தமிழர்களின் அபிலாஷைகளை மறுக்கின்ற அழுத்தக் குழுவாகவும் இயங்கியது.  ஆனால் பண்டாரநாயக்க 1930 இல் ஆரம்பித்தது “சிங்கள மகா சபை”. ஆகவே “மகாஜன”, “மகா” என்கிற இரண்டையும் நாம் குழப்பிடவிடக் கூடாது.

தமிழர் மகா சபையை போது அவருக்கு வயது 68. அடுத்த மூன்றாடுகளில் தனது 71வது வயதில்  அவர் இறந்துவிடுகிறார். தனது 68 வது வயது வரை இன அரசியலின் தேவையை அவர் உணர்ந்திருக்கவில்லை. சிங்கள – தமிழ் – முஸ்லிம் – மலையக – பறங்கி மக்கள் அனைவருக்குமாக ஒரு தேசியத் தலைவராகவே செயற்பட்டார்.


இந்த முதலாவது துரோகத்தனத்தைத் தொடர்ந்து இலங்கை தேசிய காங்கிரசினர் சமரசத்துக்கு முயற்சி செய்தாலும் கூட தமிழர்களின் நியாயமான கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இந்த சமரச முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தன.

கண்டி சிங்களவர்களும் இதே காலப்பகுதியில் தம்மைத் தனித்துவமான மக்கள் பிரிவினராக அங்கீகரித்து தமது உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று கோரினார்கள். கண்டியிலுள்ள 7 தொகுதிகளிலும் கண்டியைச் சேர்ந்தவர்களே போட்டியிடவேண்டும் என்று கோரினார்கள். தேசிய காங்கிரஸ் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டிருந்த போதும் நான்கு தொகுதிகளில் கீழ் நாட்டு சிங்களவர்களைக் (கரையோரச் சிங்களவர் என்றும் அழைக்கலாம்) கண்டியில் போட்டியிடச் செய்து நான்கு தொகுதிகளைக் கைப்பற்றினார்கள். கீழ் நாட்டு சிங்களவர்கள் மீது நம்பிக்கையிழந்த கண்டியச் சிங்களவர்கள் இதன் போதுதான் சமஷ்டி கோரிக்கையை முவைத்தார்கள். அதனை ஆதரித்த எஸ்.டபிள்யு.பண்டாரநாயக்க இந்தக் காலப்பகுதியில்தான் சமஷ்டி பற்றிய தனது உறுதியான கொள்கையை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். கண்டியச் சிங்களவர், கீழ்நாட்டு சிங்களவர், தமிழர்களுக்குமாக இந்த சமஷ்டி அமைப்பு பிரிக்கப்பட்டு ஆளப்பட வேண்டும் என்றும் "சமஷ்டியே இலங்கைக்கு உகந்த ஒரேயொரு தீர்வு" என்று யாழ்ப்பாணத்தில் வைத்து 1926 இல் உரையாற்றியிருந்தார். வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் பிரதேசத்தை அவர் அதில் முன்மொழிந்தார். அந்த உரை விரிவான கட்டுரையாக "த சிலோன் மோர்னிங் லீடர்" பத்திரிகையில் 17.07.1926 அன்று வெளியானது.(5) (பிற்குறிப்பை காண்க)

அ.சபாபதி

முதற் தடவையாக தமிழீழம்

அதுவரை கொழும்பை மையமாகக் கொண்டு அரசியல் பணியாற்றி வந்த அருணாச்சலம் யாழ்ப்பாணம் சென்று புதிய அரசியல் அத்தியாயத்தை தொடக்கி வைத்தார். தமிழ் மகாஜன சபையை 1921 ஓகஸ்ட் 15 கொழும்பில் வைத்து அன்று ஆரம்பித்தார். அவரோடு யாழ்ப்பாண சங்கத் தலைவர் அ.சபாபதியும் இணைந்து கொண்டு உபதலைவராகப் பொறுப்பேற்றார்.

அந்தக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையை அன்றைய ஒப்சேர்வர் பத்திரிகை வெளியிட்டிருந்தது.

“இலங்கைத் தமிழரின் சமூக, பொருளாதார நலனைப் பாதுகாப்பதை இலக்காகக் கொண்ட ஒரு தமிழ் மகாஜன உருவாக்க, இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலிருந்த தமிழ்ப் பிரதிநிதிகளைக் கொண்ட மாநாடு ஒன்று. திங்கட்கிழமை 4.30 மணிக்கு றிட்ஜ்வே மண்டபத்தில் நடைபெற்றது. மக்கள் அதிக தொகையில் காணப்பட்டதால் கூட்டத்தைத் திறந்த வெளியில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. சேர் பொன் அருணாசலம், சேர் ஏ. கனகசபை ஆகியோர் வருகையின் போது, குறிப்பிடக் கூடிய அளவுக்கு உற்சாகம் கரைபுரண்டது. கனகசபை தலைமை வகிப்பதற்கு ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நன்கு கிரகிக்கப்பட்ட, உணர்ச்சியூட்டும் உரையை ஆற்றினார். கௌரவ டபிள்யூ. துரைசாமி முதலாவது தீர்மானத்தைப் பின்வருமாறு முன்மொழிந்தார்.”

“தமிழரின் அரசியல், சமூகம், கல்வி, பொருளாதாரம், பொது நலன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு தமிழ் மகாஜன சபை என அழைக்கப்படும் ஒரு சங்கம், இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் அதன் கிளைகளுடன் உருவாக்கப்படல் வேண்டுமென, இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வந்து கலந்துகொண்ட, தமிழரின் இந்தப் பொதுக்கூட்டம் தீர்மானிக் கிறது.” 

(17.08.1921 Ceylon Observer)

ஏன் அவருக்கு இந்த அமைப்பை உடனடியாக ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது? அப்போது மனிங் சீர்திருத்தத்துக்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இலங்கை தேசிய காங்கிரசை இனி நம்ப முடியாது என்கிற நிலை வந்து விட்டது. அதே வேளை மனிங் அரசியல் திட்ட சீர்திருத்தத்துக்கான முன்மொழிவுகளை அவர் செய்தாக வேண்டும் அது தனி நபராக இல்லாமல் ஒரு மக்கள் கூட்டத்தின் பிரதிநிதியாகவும், ஒரு அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அமைவதே அக்கோரிக்கைகளுக்கு பலம் சேர்க்கும். எனவே அவர் 1921 ஓகஸ்ட் 15 அன்று தமிழர் மகாஜன சபையின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களையும்(6), முன்மொழிவுகளையும் தான் பேச்சுவார்த்தையிலும், மனிங் சீர்திருத்தக் குழுவினரிடமும் பரிந்துரைத்தார் அருணாச்சலம்.(7)

அதன் பின்னர் ஈராண்டுகளின் பின்னர் இலங்கை தமிழ் மக்கள் சங்கம் (Ceylon Tamil League) என்கிற  ஒரு பண்பாட்டு அமைப்பை 1923 இல் உருவாக்கினார். அதன் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் வைத்துத்தான் தமிழ் ஈழம் என்ற சொற்றொடரை முதன் முதலில் உபயோகித்தார். அவரின் பேச்சு மிகவும் சுருக்கமானது தான். “நான் இங்கே அதிகமாக உரையாற்றவில்லை...” என்று தான் தனது பேச்சில் குறிப்பிட்டு மிகவும் இரத்தினச் சுருக்கமாக சில விடயங்களை அந்த உரையில் தெரிவிக்கிறார். தமிழர் நிலம், தமிழகம் என்கிற சொற்றொடர்களையெல்லாம் பயன்படுத்துகிறார்.

அவரின் உரையில்...

“லீக்கின் செயல்கள், நோக்கம், இலட்சியங்கள் என்பவற்றையிட்டுச் செயற்குழு அறிக்கை பூரணமாக விளக்குவதனால் அவற்றையிட்டு நான் நீண்டநேரம் பேசவேண்டிய தேவையில்லை. அரசியற் தேவையினாற்றான் இந்த லீக் உருவானது. ஆனால் அரசியல்தான் அதன் இருப்புக்கான ஒரே காரணம் அல்ல. என்னைப் பொறுத்தவரை அதனுடைய இலட்சியங்கள் பன்மடங்கு உயர்ந்தவையாகும். காலங்காலமாகத் தமிழரைத் தமிழராக்கிய அத் தமிழ் இலட்சியங்களை வாழவைத்து, வளர்க்க வேண்டுமென்பதும், முன்னையதான இந்த இலட்சியங்களை, “ தமிழ் அகம்” என்னும் தமிழ்த் தேசத்தின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் மேம்படுத்துவதற்காக, இலங்கை, தென்னிந்தியா, தமிழ் குடியேற்ற நாடுகள் முழுவதிலும் வாழவைத்து , வளர்ப்பதும் முக்கியமாகும். ஆனால் எல்லா இனங்களையும், சமயங்களையும் சேர்ந்த எமது சகோதரருக்குச் சேவைசெய்யும் வாய்ப்பையும், பெருமைமிகு கடமையையும் தமிழர் கைவிடப் போவதில்லை.

ஆனால் எவராலும் நாம் கொடுமைப்படுத்தப்படுவதையோ (Terrorised), அச்சுறுத்தப்படுவதையோ நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் . எவருக்குமே அடிமையாக இருப்பதை நாம் வெறுக்கின்றோம் . எம்மை நாமே  பாதுகாப்பதற்காக எம்மைப் பலப்படுத்துவது எமது எண்ணம் . ஐரோப்பியர், ஏற்கெனவே அவர்கள் அதிகாரம், பெருமை என்பவற்றையெல்லாம்  ஈட்டியிருந்தும், அவர்களுடைய இலங்கை வர்த்தக சங்கம் பெருந்தோட்டக்காரர் சங்கம், ஐரோப்பியர் சங்கம், இலங்கைச் சங்கம் என்பவை மேலும் சீர்திருத்தப்படவேண்டிய தேவையுண்டு இலங்கையில் தமிழர் உணர்கின்றனர். அவர்களைவிட நாம் அதிகமாக உணர்தல் அவசியம். நாம் இனியும் அலட்சியமாக இருக்க முடியாது. உள்ளூர் தேசாபிமானத்தையும், உள்ளூர் ஆர்வங்களையும் மேம்படுத்துவதற்கு யாழ்ப்பாணச் சங்கமும், இலங்கை முழுவதும் பரந்துபட்டுக் காணப்படும் ஏனைய சிறிய சங்கங்களும், பாராட்டப்படும் வகையில் பொருத்தமானவையாகும். இவை எல்லாவற்றையும் கொண்டு சினேகபூர்வமாகவும், முழுமனதோடும் செயலாற்றுவதே எமது குறிக்கோளாகும்."

(16.09.1923) என்றார்.

ஒரு சில மாதங்களில் அவர் இந்தியாவுக்கு யாத்திரை சென்றிருந்த வேளை நோயுற்று இறந்து போனார் (09.01.1924).

இலங்கைத் தேசியத்திலிருந்து - தமிழ்த் தேசியத்துக்கு

இலங்கை ஜேம்ஸ் பீரிஸோடு இணைந்து பல அரசியல் பணிகளில் அருணாச்சலம் ஈடுபட்டிருக்கிறார். 1915 ஜனவர் 15 அன்று தோற்றுவிக்கப்பட்ட இலங்கை சமூகசேவைகள் கழகத்தை (Ceylon social Service League) அவர்கள் இருவரும் சேர்ந்து தான் உருவாக்கினார்கள். அந்த அமைப்பின் முதல் தலைவராகவும் அருணாச்சலம் தான் தெரிவு செய்யப்பட்டார். 1917 இல் சீர்திருத்தக் கழகம் (Ceylon Reform League) உருவாக்கப்பட்டபோது அதன் தலைவராகவும் அருணாச்சலம் தான் நியமிக்கப்பட்டார். அதுபோல 1919 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட போது அதன் தலைவராகவும் ஏகோபித்த ஆதரவுடன் அருணாச்சலம் நியமிக்கப்பட்டார்.

1919 யூன் 25 ஆம் திகதி இலங்கையின் முதலாவது தொழிற்சங்கமான “இலங்கை தொழிலாளர் நலன்புரிக் கழகம்” (Ceylon Workers' Welfare League) என்கிற சங்கத்தைத் தொடங்கி அதனையும் தலைமை தாங்கினார் அருணாச்சலம். அதன் செயலாளராக மலையகத்தைச் சேர்ந்த பெரி சுந்தரம் தெரிவானார். அதற்கு முன்னர் அவரால் மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் நல நடவடிக்கைகளை எல்லாம் அவர் தலைமை தாங்கிய “இலங்கை சமூகசேவைகள் கழகம்” தான் மேற்கொண்டு வந்தது.(8) அடுத்த ஆண்டே இந்த தொழிற்சங்கத்தை பெருப்பித்து அதன் இலங்கை தொழிலாளர் சம்மேளனம் (Ceylon Worker’s Federation) என்கிற தொழிற்சங்கத்தை நிறுவினார். (James T Rutnam)

அருணாச்சலத்தை “இலங்கையின் பல்கலைக்கழகங்களின் தந்தை” என்று அழைப்பார்கள். அவர் உருவாக்கிய Ceylon University Movement என்கிற அமைப்பின் முயற்சியால் தான் இலங்கைக்கு பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தப்பட்டது. என்று அழைக்கப்படுகிறார் அருணாச்சலம். இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகத்தை உருவாக்கக் காரணமாக இருந்தவர் அவர் தான். அதுமட்டுமின்றி இதே காலத்தில் வேறு பல சிங்களத் தலைவர்களால் உருவாக்கப்பட்ட பல தேசிய அமைப்புகளிலும் இணைந்து தோளோடு தோள் கொடுத்து அதன் நிர்வாகப் பணிகளிலும் பணியாற்றினார். 1919 இல் F. R. சேனனாயக்காவால் உருவாக்கப்பட்ட “இலங்கை மகாஜன சபை” (Lanka Maha Jana Sabha), அன்றைய பிரபல மதுவொழிப்பியக்கம்  என்பவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். இலங்கையர்களுக்கான சர்வஜன வாக்குரிமைக்காக குரல் கொடுத்த முன்னோடி அமைப்பு இலங்கை மகாஜன சபை. சர்வஜன வாக்குரிமை விடயத்தில் தனது சகோதரர் இராமநாதனுக்கு நேரெதிர் கொள்கையுடன் இயங்கியிருந்தார் அருணாச்சலம்.

இன்னும் சிலவற்றைக் குறிப்பிட வேண்டும். அவர் இலங்கையின் “சுயபாஷாவின் தந்தை” என்றும் அழைக்கப்படுகிறார். ஆங்கிலத்தில் கல்வி, ஆங்கிலத்தில் நிர்வாகம் என்றிருந்தால் எப்படி சுதேச மக்கள் முன்னேற முடியும், “இங்கிலாந்து பாடசாலைகளில்; கற்பித்தல் மொழியாக ஜேர்மன் மொழியும், ஆங்கில மொழி இணைப்பு மொழியாக இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்”. பொதுத்துறை பணிப்பாளராக (Director of Public Instruction) இருந்த எஸ்.எம்.பர்ரோவ்ஸ் (S.M.Burrows) என்பவருக்கு 08.07.1900 இல் எழுதிய கடிதத்திலேயே அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். சுதேச, கல்வி, உயர்கல்வி என்பவற்றை நிறுவதற்காக அவர் தீவிரமாக இயங்கி வந்த காலத்தில்; ஏக காலத்தில் அது சுதேசிய மொழியில் அமைய வேண்டும் என்று போராடினார். அதை சிங்கள ஆய்வாளர்கள் கூட  பெரிதாக இன்றும் மெச்சுகின்றனர். (James T Rutnam). அதுமட்டுமன்றி இலங்கையின் முதலாவதாக (1875) சிவில் சேவைத் துறைக்குள் நுழைந்த முதலாவது சுதேசியர் அருணாச்சலம்.

“சுயபாஷா இயக்கம்” கூட பிற்காலத்தில்; அதாவது சுமார் 1920 அளவில் தான் உருவானது. அதுவும் குறுகிய காலத்தில்  தமிழைத தட்டிக்கழித்து “சுயபாஷா” என்பதன் அர்த்தம் “சிங்கள மொழிக்கு முன்னுரிமை”யே என்கிற அர்த்தத்தில் சிங்களத் தலைவர்கள் முன்னெடுத்துச் சென்றார்கள். சுயபாஷைக் கோரிக்கைக்கு முன்னோடியாக அருணாச்சலமே இருந்தார். அவர் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிக்கும் அந்தஸ்தை பெறுவதற்காகவே போராடினார். இத்தனைக்கும் ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப்பட்டம் பெற்றவர் அருணாச்சலம். ஆனால் பின்னர் சிங்களத் தலைவர்கள் தமிழை புறக்கணித்தும், தவிர்த்தும், தட்டிக்கழித்தும், தனிமைப்படுத்தியும் செய்த அட்டூழியங்கள் இன்று வரை தொடங்குகிறது.

அவரின் இத்தகைய சேவைகள் பலவற்றை இன்னும் நீட்டிக்கொண்டே போகலாம். ஏன் இதைச் குறிப்பிடுகிறேன் என்றால் இந்தக் காலப் பகுதியில் அவர் அளவுக்கு இலங்கைத் தேசியத்தை நேசித்தவர் வேறெவர் இருந்திருக்க முடியும்? அவர் ஒட்டுமொத்த இலங்கையர்களின் தலைவராகத் தான் செயற்பட்டார். ஒரு சமூக மாற்றத்துக்கான அரசியலைத் தான் முன்னெடுத்தார். அவரின் கல்வி, அவரின் தகைமை, அவரின் சிவில் உத்தியோக அதிகாரம், அவரின் அரசியல் அதிகாரம், அவரின் வளங்கள் எல்லாவற்றையும் அந்த சமூக மாற்றத்துக்காகவே பிரயோகித்தார். மலையகத்துக்கான முதலாவது தொழிற்சங்கத்தை உருவாக்கிவரும் அவர் தான். இலங்கையின் புத்திஜீவிகளின் சங்கமாக இலங்கையின் சமூக ஆய்வுகளுக்கெல்லாம் முன்னோடி இயக்கமான “ராஜரீக ஆசிய கழகத்தின்” (Royal Asiatic Society) முதலாவது சுதேசிய தலைவரும் அவர் தான். அவர் தமிழ், சிங்களம் என்று இன பாகுபாட்டையோ, மத, மொழி, வர்க்க, சாதி வேறுபாடுகளையோ கூட காட்டியதில்லை. ஒரு கட்டத்தில் இலங்கையில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் என்கிற ஒன்று எழுச்சியுற்றிருப்பதையும், அது ஏனைய சமூகங்களை ஒடுக்க வல்லது என்பதை நேரடியாக இனங்கண்டதன் பின்னர் தான் அவர் ஒடுக்கப்படும் தரப்பை சென்றடைகிறார் என்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.

ஒட்டு மொத்த இலங்கையின் விமோசனத்துக்காகவும், இலங்கையர்களின் நல்வாழ்வுக்காகவும் ஓயாது உழைத்துக்கொண்டிருந்த மனிதர் அவர். அப்படிப்பட்ட ஒருவர் இனத்துவ அரசியலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறார் என்றால் அது ஒரு திடீர் நிகழ்வாக இருந்திருக்க வாய்ப்புண்டா. நிச்சயம் இல்லை. நிச்சயம் தொடர்ச்சியான பல இனத்துவ பாரபட்சங்களையும், கசப்புகளையும் அவர் அனுபவித்திருந்திருக்க வேண்டும்.

அவருக்குத் துரோகமிழைப்பதில் முன்னின்ற அதே ஜேம்ஸ் பீரிஸ் பின்னர் அருணாச்சலத்துக்காக பாராளுமன்றத்துக்கு முன்னாள் வெண்கலச் சிலை அமைப்பதற்கான கமிட்டிக்கு தலைமை தாங்கி தனது பாவத்தை கழுவ முற்பட்டார். 23.04.1930 அன்று திறக்கப்பட்ட அந்த சிலை இன்றும் பழைய பாராளுமன்றத்துக்கு முன்னால் காணலாம். அந்தச் சிலையில் இப்படி வாசகம் எழுதப்பட்டிருக்கிறது.

Sir Ponnambalam' Arunachalam (1853-1924)

Scholar-Statesman-Administrator Patriot

Erected by a grateful people in testimony-of a life nobly spent in the service of his country and in recognition of his pre-eminent and signal services as the champion of a reformed legislature and of his matchless devotion and steadfastness in the cause of the ceylon university.

இறுதியில் இலங்கையின் தேசிய அரசியலுக்கு வித்திட்டு தலைமை தாங்கிய அதே அருணாசலம் தான் தமிழ் இன அரசியலுக்கும் பாதை திறந்தவர்.

துரோகங்களின் வரலாறு அங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது அந்த வரிசையில் ஏமாற்றப்பட்ட உடன்படிக்கைகளை இப்படி வரிசைப்படுத்தலாம்.

  • ஜேம்ஸ் பீரிஸ்/சமரவிக்கிரம – அருணாச்சலம் - 1918
  • மகேந்திரா ஒப்பந்தம் - 1921
  • பண்டா செல்வா ஒப்பந்தம் - 1957
  • டட்லி – செல்வா ஒப்பந்தம் - 1965
  • மாவட்ட சபைகள் வெள்ளை அறிக்கை - 1968
  • இணைப்பு சீ திட்டம் - 1983
  • திம்பு பேச்சுவார்த்தை - 1985
  • இலங்கை இந்திய ஒப்பந்தம் – 1987 
  • பிரேமதாச - புலிகள் பேச்சுவார்த்தை – 1989/90
  • சந்திரிகா  - புலிகள் பேச்சுவார்த்தை – 1994/95
  • சந்திரிகா, ரணில், மகிந்த – புலிகள் – 2000 - 2006

1921 அரசாங்க சபைத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை மீறி முதற் தடவையாக சிங்களத் தரப்பு இனத்துவ அடையாள அரசியலின் தேவையை உருவாக்கியது. இலங்கைக்கான தேசியவாதத்துக்கு சிங்களத் தரப்பு கொடுத்த மரண அடி அது. சிங்களத் தரப்பின் அந்தத் துரோகத்துக்கு நூறு வயது.

அடிக்குறிப்புகள்

  1. இராமநாதன் அதன் பின்னர் மீண்டும் அரசாங்க சபையில் தேர்தலில் போட்டியிட்டு 1911–1930 ஆம் ஆண்டு வரை அங்கம் வகித்தார்.  
  2. M. Vythilingam, Ceylon: The Life of Sir Ponnambalam Ramanathan - (vol 2)– 1 Jan. 1971)
  3. වික්ටර් අයිවන් - ලංකාව ගලවාගැනීම (இலங்கையை மீட்பது – வீரர் ஐவன்), ராவய பதிப்பகம், 2011. 
  4. Michael Roberts; Ceylon National Congress.; Publisher: Colombo : Dept of National Archives, 1977
  5. இக்கட்டுரைகள் வெளியான திகதிகள் - 19.05.1926 (P.6-7), 27.05.1926 (P.3), 02.06.1926 (P.6-7), 09.06.1926 (P.6), 23.06.1926 (P.6-7), 30.06.1926
  6. K. M. de Silva, 'The Ceylon National Congress in Disarray, I920-I; Sir Ponnambalam, Arunachalam leaves the Congress', Ceylon Journal of Historical and Social, Studies, new series, Vol. II, No. 2 (1972)
  7. “தமிழர் மகா சபை” தான் இலங்கையில் தோன்றிய முதலாவது இனவாத அமைப்பு என்கிறார் பிரபல இனவாத பேராசிரியரான நளின் த சில்வா. அவர் 1995 இல் எழுதி பல பதிப்புகளைக் கண்ட “பிரபாகரனும், அவரின் சித்தப்பா, மச்சான்மாரும்” என்கிற நூலில் அவ்வாறு புனைகிறார்.
  8. James T Rutnam, sir ponnambalam Arunachalam – Scholar and Statesman, Colombo, 1988.

மேலதிக உசாத்துணை

  • K. M. DE Silva  - The Ceylon National Nongress in disarray, 1920-1; sir Ponnambalam Arunachalam leaves the congress" - - The Ceylon Journal of Historical and Social studies, 1972, Vol. 2 No. 2 pp. 97-117
  • Ariyaratne, R. A, Communal Conflict and the Formation of the Ceylon National Congress - Ceylon Historical and Social Studies Publication Board. The Ceylon Journal of Historical and Social Studies, 1977 Vol. VII No. 1 , pp. 57-82
  • K. M. De Silva, Elite conflict and the Ceylon national congress 1921-1928, a history of Sri Lanka, - 1981, c. Hurst & Company - London University of California press.
  • M.Thirunavukkarasu, Broken promises of Sinhala leaders - 2012, Tamil Marumalarchi Sangam
  • நளின் சுபசிங்க, “පොන්නම්බලම්-කුමාරස්වාමි පවුල සහ වෙල්ලාල දේශපාලනය (பொன்னம்பலம் - குமாரசுவாமி குடும்பமும் வெள்ளாள அரசியலும் - 30.01.2014)  30.01.2014) http://www.yuthukama.com/2015/09/WellalaDeshapalanaya.html
  • Doyen of FP, uncompromising on Tamil National question - Interview with Mr. V. Navaratnam - 06.10.2005, https://www.tamilnet.com/art.html?catid=79&artid=16023

பிற்குறிப்பு

இலங்கைக்கு சிறந்த  அரசியல் முறைமை சமஷ்டி தான் என்று பண்டாரநாயக்க தீவிரமாக கருத்து வெளியிட்ட காலம் அது. சிலோன் மோர்னிங் லீடர் பத்திரிகையில் அவர் 1926 மே மாதம்  தொடர் கட்டுரைகளை (மொத்தம் 6 கட்டுரைகள் மே The Ceylon Morning Leader, May 19-June 30, 1926) எழுதி அதற்கான காரணங்களை நிறுவினார். அது மட்டுமன்றி இந்தியாவின் சேர்ந்து கூட்டாட்சியாகக் கூட இருப்பது இலங்கைக்கு பாதுகாப்பானது என்றார். ஆனால் இந்த கருத்தை தமிழர் தரப்பில் இருந்து ஜேம்ஸ் டீ ரத்னம் கடுமையாக எதிர்த்து வாதிட்டார். ஜேம்ஸ் டீ ரத்னம் இலங்கையின் தேர்ந்த அரசியல், வரலாற்று புலமையாளர். தொழிற்சங்கவாதி. பண்டாரநாயக்கவின் நெருங்கிய நண்பரும் கூட பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து  அரசியல்  முற்போக்கு தேசியவாதிகள் கட்சி (Progressive Nationalist Party) என்ற கட்சியை ஆரம்பித்தார். சமஷ்டி விடயத்தில் அக் கட்சியின் அங்கீகாரம் கூட கிடைத்தது ரத்னம் போன்ற தமிழ் தலைவர்கள் தவிர.  அப்பேர்பட்ட இருவரும் இந்த விடயத்தில் முரண்பட்டு நின்றார்கள். அதுமட்டுமன்றி புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்காக அனுப்பப்பட்ட டொனமூர் தலைமையிலான ஆணைக்குழுவின் முன் கண்டி தேசிய சங்கம் சமஷ்டி கோரிக்கையை வலியுறுத்தியது. அப்போதும் கூட தமிழர் தரப்பில் அதனை ஆதரித்து இருக்கவில்லை.

ஆனால் சரியாக 30 வருடங்களில் பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்ததும் அவர் யாழ்ப்பாணத்தில் அன்று வெளியிட்ட சமஸ்டிக் கொள்கையை எஸ்.ஜே.வி செல்வநாயகம் கோரியபோது. முற்றாக நிராகரிக்கும் அளவுக்கு மாறியிருந்தார்.


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates