Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

இஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்

இது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்டு இந்த ஆண்டு. அவரின் “புத்தம் சரணம் கச்சாமி” பாடலை கேட்காத இலங்கையர் அரிது. இந்த நாட்களில் முஸ்லிம்கள் எதிர்கொள்கிற நெருக்கடிகள் மத்தியில் மொகிதீன் பெக்கை நினைவுக்கு கொண்டுவருவது காலப்பொருத்தம்.

புத்தங் சரணம் கச்சாமி...
இந்தியாவின் ஸ்டூடியோ ஒன்றில் தொங்கிக்கொண்டிருந்த மைக்குகளுக்கு முன் ஒரு புறம் 25 இளம் ஆண்களும், மறுபுறம் 25 பெண்களுமாக தயாராக இருந்தனர். அவர்கள் பாடிக்கொண்டிருக்கும் போதே இசையமைப்பாளர் அனில் பிஸ்வாஸ் அதனை சற்று நிறுத்திவிட்டு,

“மிஸ்டர் மொகிதீன் பதினான்கரை நிமிடங்களைக் கொண்டது இந்தப் பாடல். நிச்சயமாக ஒரே டேக்கில் உங்களால் பாட முடியுமா?” என்று கேட்டார்.

“இந்தப் பாடலை நான் பாடுவேன்... இல்லையேல் செத்துவிடுவேன்” என்றார் மொகிதீன் பெக். அப்படி உருவானது தான் புத்தங் சரணங் கச்சாமி பாடல்.  இன்று இன, மத, மொழி பேதமின்றி சகலரும் கொண்டாடும் பாடல் அது.

1960 இல் “அங்குலிமாலா” என்கிற பெயரில் ஹிந்தியில் வெளிவந்த திரைப்படத்தை சிங்களத்திலும் வெளியிடுவதற்கான டப்பிங் இந்தியாவில் செய்தபோது நடந்த சம்பவம் அது.
அதில் “புத்தம் சரணம் கச்சாமி” பாடல்; திரைப்படம் தொடங்கும் போது டைட்டில் பாட்டாக வைக்கப்பட்டிருக்கும். அத்திரைப்படம் தமிழில் “புயலுக்குப்பின்” (1961) என்று வெளிவந்தது. கே.குணரத்தினத்தின் தயாரிப்பில் 1963 ஆம் ஆண்டு மே மாதம் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது “அங்குலிமாலா” என்கிறபெயரில் வெளியானது. (1988 ஆம் ஆண்டு மீண்டும் சிங்களத்திலேயே சிங்களக் கலைஞர்களைக் கொண்டு அங்குலிமாலா படம் எடுக்கப்பட்டது வேறுகதை. அதில் பிரதான கதாபத்திரத்தில் ரவீந்திர ரந்தெனிய நடித்திருந்தார்) ஹிந்திப் பாடலை விட சிங்களத்தில் புத்தங் “சரணங் பாடல்” மொஹிதீன் பெக்கின் கம்பீரக் குரலில் சிறப்பாக அமைந்தது. அதன்பின்னர் பௌத்தர்களின் உற்சவங்களில் பிரதான இடம்பிடிக்கும் பாடலாக அந்தப்பாடல் ஆனது. மொஹிதீன் பெக் சிங்களத்தில் ஏராளமான காலத்தால் அழியாத பௌத்த பாடல்களைப் பாடியிருக்கிறார்.
இந்தியாவிலிருந்து வருகை
தென்னிந்தியாவில் சேலத்தில் 05.12.1919 இல் பிறந்து 1932ஆம் ஆண்டு இலங்கை வந்து பின்னர் 1934 இல் பொலிஸில் இணைந்து சேவையாற்றத் தொடங்கிய மொஹிதீன். ஆனால் அவர் பேர்சியாவிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த படான் என்கிற சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஹைதராபாத்தில் இருந்து பின்னர் சென்னையில் வாழ்ந்து வந்தது அந்தக் குடும்பம். 14 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாமவர் மொகிதீன் பெக். கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிசில் பணியாற்றிய தனது சகோதரன் அசீஸ் பெக் 1931இல் மரணமானவேளை இலங்கை வந்தவர். வந்த இடத்தில் அப்படியே தங்கியவர் தான் மொகிதீன் பெக்.

பம்பலப்பிட்டி பொலிசில் பணியாற்றிய அவரது மாமனாருடன் தங்கிக்கொண்டு அன்று மிகவும் பிரசித்தம் பெற்றிருந்த இசைக்கலைஞர் கவுஸ் மாஸ்டருடன் தொடர்புகளைக் பேணிக்கொண்டு அவரின் மேடைகளில் பாடத் தொடங்கினார். கவுஸ் மாஸ்டர் அப்போது கொலொம்பிய இசை நிறுவனத்தில் நிரந்தரப் பாடகராகப் பணியாற்றிய காலம். அப்போது வெளிவந்த ஹிந்தி திரைப்படப் பாடல்களின் சாயலில் சிங்களப் பாடல்களை இயற்றி தனக்குத் தெரிந்த உருது மொழியில் எழுதிப் பாடினார் மொகிதீன் பெக். அப்படிப் பாடிய பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுக்கள் பத்தாயிரம் எண்ணிக்கை வரை விற்பனையாகியிருக்கிறது. அதன் பின்னர் மொகிதீன் பெக்கும் கொலம்பியா நிறுவனத்தின் நிரந்தப் பாடகராக ஆனார்.

தனது உறவுமுறைப் பெண்ணான சகீனா என்பவரைத் திருமணம் முடித்து ஐந்து ஆண் பிள்ளைகளும் மூன்று பெண் பிள்ளைகளும் அவருக்கு உள்ளார்கள்.
யமுனா ராணியுடன் பாடிய பாடல்களில் இரண்டு இங்கே
திரைப்படங்களில்
1934 இல் கே.கே.ராஜலக்ஷ்மியுடன் இணைந்து பாடிய “கருணா முஹுது நாமு கிலிலா...” என்கிற சோடிப் பாடலின் மூலம் இசைத்துறைக்கு அறிமுகமானார். அதிலிருந்து அரை நூற்றாண்டுக்கும் மேல் இலங்கையின் இசைத்துறையில் கொடிகட்டிப் பறந்தவர். சிங்களம் அல்லாத வேறொருவர் இந்தளவு நீண்டகாலம் இசைத்துறையில் வேறெவரும் இருந்ததில்லை என்று தான் கூற வேண்டும்.

இலங்கையின் இரண்டாவது திரைப்படம் “அசோகமாலா”. 1947 இல் வெளியான அந்த சிங்கள சரித்திரத் திரைப்படத்தின் மூலம் தனக்கான தனி இடத்தை ஏற்படுத்திக்கொண்டார். லதா மன்கேஷ்காருடன் சோடியாக பாடிய ஒரே இலங்கைப் பாடகரும் அவர் தான். ஜமுனா ராணி, இலங்கையின் முன்னணிப் பாடகர்களான எச்.ஆர்.ஜோதிபால, ராணி பெரேரா, லதா வல்பொல, சுஜாதா அத்தநாயக்க  போன்றோருடன் எல்லாம் திரைப்படங்களுக்காக பல பாடல்களைப் பாடியுள்ளார். ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடியிருப்பதாக இலங்கையின் கல்வி அமைச்சின் இணையத்தள பதிவொன்று கூறுகிறது. 350 மேற்பட்ட திரைப்படங்களில் பாடியிருக்கிறார். தமிழில் சில பாடல்களையும், ஒருசில இஸ்லாமிய பாடல்களையும் பாடியிருக்கிறார்.

சிறப்புப் பிரஜாவுரிமை பரிசு
1956ஆம் ஆண்டு S.W.R.D.பண்டாரநாயக்க ஆட்சியில் புத்த ஜெயந்தி 2500ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. அதன் போது “இரண்டாயிரத்தையாயிரம் புத்த ஜெயந்தியால் ஜொலிக்கட்டும் இலங்கை...” என்கிற பாடலை சிங்களத்தில் பாடினார். இந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த கருணாரத்ன ஒபேசேகர மெதுவாகப் போய் பிரதமரின் காதுகளில் இரகசியமாக மொகிதீன் பெக்குக்கு இன்னமும் குடியுரிமை அற்றவர் என்பதைக் கூறியுள்ளார்.

இதன்போதுதான் பிரதமர் பண்டாரநாயக்க மொகிதீன் பெக்குக்கு இலங்கையின் சிறப்புக் குடியுரிமையை பரிசாக வழங்கினார். இந்தக் காலப்பகுதியில் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையை பறிப்பதற்காகவும், கட்டுப்படுத்துவதற்காகவும் கடுமையான சட்டங்கள் அமுலில் இருந்த காலம் என்பதால் அது வரை மொகிதீன் பெக்கும் குடியுரிமை பெறாதவராகவே இருந்துவந்தார். பிரேமதாசவின் ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷியா உள் ஹக் இலங்கை வந்திருந்த போது உருது மொழியில் அல்லாவைப் புகழ்ந்து மொகிதீன் பெக் பாடிய பாடலைக் கேட்டு ஆகர்சிக்கப்பட்டு அவருக்குப் பரிசாக மக்காவுக்கு போய் வருவதற்கான முழு வசதிகளையும் செய்து கொடுத்தார் ஷியா உல் ஹக். கூடவே அவரை பாகிஸ்தானுக்கு நிரந்தரக் குடியாக வரும்படியும் கோரியிருக்கிறார். மக்காவுக்கான பயணத்தின் பின்னர் அல்ஹாஜ் மொகிதீன் பெக் என்று அழைக்கப்பட்டார்.

1974 ஆம் ஆண்டு தீபக்ஷிகா விருது விழாவில் அதிக சிங்களத் திரைப்படங்களில் பாடிய பாடகருக்கான விருதைப் பெற்றார். இலங்கையில் கலாசூரி விருது 1982இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்படி கலாசூரி விருதைப் பெற்றுக்கொண்ட முதல் 8பேரில் ஒருவர் மொகிதீன் பெக்.

ஆயுபோவேவா!
மொகிதீன் பெக் ஒரு பாட்டுக் கலைஞனாக இலங்கை மக்களை மகிழ்விப்பதில் காட்டிய அக்கறையை பணமீட்டுவதில் காட்டவில்லை என்பது உண்மை.

ஒரு தடவை வருமானவரித் துறையினர் அவரை கைது செய்துகொண்டு போய் நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டனர். அவரின் மகன் இலியாஸ் அவரை நீதிமன்றத்திலிருந்து விடுவித்து அழைத்து வந்தார். அழுகுரலில் அவர் “வருமானமின்றி இந்த சிறு குடிலில் குடும்பத்தை நடத்திக் கொண்டு இருக்கும் என்னிடம் வரி கட்டுமளவுக்கு என்ன தான் இருக்கிறது. மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிவிடலாம் போலிருக்கிறது..." என்று அழுதிருக்கிறார்.

மருதானை ஸ்ரீ வஜிராராம மாவத்தையில் இலக்கம் 50 அவரின் வீட்டு இலக்கம். 16 பேர்களைக் கொண்ட குடும்பமும் வாழ்ந்து வந்த ஒன்றரை பேர்ச்சஸ் நிலத்தில் மட்டுமே அமைந்த வீடு அது. பிரேமதாச காலத்தில் கலைஞர்கள் பலருக்கு வீடுகள் வழங்கிய போதும், அவர் கொடுக்க முன் வந்த தொடர்மாடி வீடு இருந்த வீட்டை விட சிறியதாக இருந்ததால் அதை அவர் பெறவில்லை. மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று நம்பியிருந்தார்.



யுத்த வெற்றியின் போது மகிந்த ராஜபக்சவுக்காக பாடப்பட்டு நாடெங்கிலும் பிரச்சாரப்படுத்தப்பட்ட “ஆயுபோவேவா மஹா ரஜானனி” (வணக்கம் மகாராஜா) என்கிற பாடலைப் பாடிய பாடகி சஹேளி கமகே என்பவருக்கு பரிசாக ஏக்கர் கணக்கில் நிலங்களையும் கொடுத்தார் மகிந்த. சைட்டம் மருத்துவ கல்லூரியில் படிக்க அடிப்படைத் தகுதியில்லாமலேயே அனுமதியை வழங்கினார். அப்பெண்ணின் பெயரில் “சஹேளி கமகே மாவத்தை” என்று மஹரகமையில் ஒரு வீதிக்கும் சூட்டினார். ஆனால் கலாசூரி அல்ஹாஜ் மொகிதீன் பெக் வறுமையில் இறந்தார். அவரின் நாமத்தை எங்கும் சூட்டவில்லை எந்த அரசும்.

83இல் வெங்கட் கொலையின் போது
83 கருப்பு யூலையின் போது பாணந்துரையில் வைத்து பிரபல சிங்கள சினிமா இயக்குனரும் தமிழருமான கே.வெங்கட் தனது வாகனத்தில் பாணந்துறை நகரைக் கடந்து கொண்டிருந்தார். இனவாதக் கும்பல் அவரை காரிலிருந்து இறக்கித் தாக்கியபோது அவர்; தான் “சிரிபதுல” (1978) என்கிற பிரபல சிங்கள திரைப்படத்தின் இயக்குனர்” என்றும் கூறி பார்த்தார். அத்திரைப்படத்தின் மூலம் பிரபலமான பாடல் கசற்றையும் காரில் இருப்பதைக் காட்டி கெஞ்சினார். அவரை அடித்து அந்தக் காரில் வைத்து எரித்தார்கள். அந்த புகழ் பெற்ற பாடல் “மினிசாமய் லொவ தெவியன் வன்னே மினிசாமய் லொவ திரிசன் வன்னே!” (“மனிதனே உலகின் தெய்வமாகிறான் மனிதனே உலகின் மிருகமும் ஆகிறான்”). அதைப் பாடியவர் “மொஹிதீன் பெக்”. 

ஈழத்து தமிழ் சினிமாவில் இருந்த அளவுக்கு முஸ்லிம்களின் பங்கு இலங்கையின் சிங்கள சினிமாத்துறைக்குள் ஏன் குறைந்திருந்தது என்பதை இலங்கையின் இனத்துவ அரசியலுடன் சேர்த்துத் தான் பார்க்கவேண்டும். சிங்கள சினிமாவின் ஆரம்பகாலங்களில் நட்சத்திரமாக இருந்த பரீனா லாய் என்கிற முஸ்லிம் நடிகையின் பாத்திரம் இன்றும் இருட்டடிப்பு செய்யப்பட்டே இருக்கிறது.

ஒரு காலகட்டத்தில் பல சிங்களத் சிங்களத் திரைப்படங்களில் கதாநாயகனாக  கொடிகட்டிப்பறந்த ஷசி விஜேந்திர என்கிற நடிகர் முஸ்லிம் என்றும் அவரின் இயற்பெயர் அவுப் ஹனிபா என்கிற உண்மை சமீபத்தில் வெளிவந்த போது அதை ஒரு மோசடி என்று சிங்களப் பேரினவாதம் துள்ளியது. முஸ்லிம் ஒருவர் இத்துறையில் முஸ்லிம் அல்லாத அடையாளமொன்றின் மூலம் தான் தனது நிலையைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

மொகிதீன் பெக் போலவே இன்னுமொருவர் இந்தக் காலப்பகுதியில் இருந்தார் அவர் ஏ.ஆர்,.எம்.இப்ராகிம் (1920-1966) இப்ராகிம் மாஸ்டர் பாடிய அதிக பாடல்கள் பௌத்த பாடல்கள் தான். இலங்கையில் கிரமோபோன் காலத்தில் பௌத்த பாடல்களை அதிகமாக பாடியவர் மொகிதீன் பெக் என்றால் அதற்கடுத்ததாக அதிகமாக பௌத்த பாடல்களை பாடியிருப்பவர் இப்ராகிம் மாஸ்டர் தான்.

இவர்களின் காலத்துக்கு முன்னரும், அவர்களின் காலத்திலும் ஏன் அவரைப்போன்ற முஸ்லிம் கலைஞர்கள் சிங்களச் சூழலில் உருவாக்கப்படவில்லை. எம்.எம்.ஏ.ஹக் மாஸ்டர் கூட ஐந்து திரைப்படங்களுக்கு கிட்டத்தட்ட முப்பது பாடல்களை இசையமைத்திருக்கிறார். அவை பௌத்த பாடல்கள் என்கிற வகையறாவில் வராவிட்டாலும் அவர் இசையமைத்த திரைப்பட பாடல்கள் பல மிகவும் பிரசித்திபெற்றவை.

மொகிதீன் பெக்கின் புதல்வர் இஷாக் பெக் இன்று மேடை நிகழ்ச்சிகளில் பாடிவருகிறார். ஆனால் அவரது தந்தையின் பாடல்களைப் பாடுவதற்குத் தான் அவர் அழைக்கப்படுகிறார். கவிஞர் நிலார் எம். காசீம் சில திரைப்படங்களுக்கு பாடல் அமைத்தாலும் அதை ஒரு போக்காக நம்மால் பார்க்க முடியாது. எண்ணிக்கையில் தமிழர்களை விட அதிகமான முஸ்லிம்கள் சிங்களம் கற்ற குழாமினராக வளர்ந்திருக்கிறார்கள் என்கிற போதும் இத்தகைய துறைகளில் ஏன் உரிய இடமில்லை என்பது சற்று ஆராயப்பட வேண்டிய ஒன்று.

மேலும் சிங்கள பௌத்த பாடல்களைப் பாடிய அதே மொகிதீன் பெக்; இஸ்லாமிய பாடலொன்றை சிங்களத்தில் பாடி வரவேற்பைப் பெறும் கலாசாரம் இலங்கையில் இருக்கிறதா? டிக்கிரி மெனிக்கே - கொவி ரால காதல் பாடலை கொண்டாடிய சூழலால் ஒரு ஹமீதுனுடயதும், பாத்திமாவுடையதும் காதல் வெளிப்பாட்டை சிங்களத்தில் சகிக்கும் கலாசாரம் வளர்க்கப்பட்டிருக்கிறதா?

இலங்கையின் வரலாற்றில் அதிக அளவிலான பௌத்த பாடல்களைப் பாடியவர் ஒரு இஸ்லாமியர் என்பதை மறுத்துவிடமுடியாது. சிங்கள பௌத்த மக்களுக்காக அவர் விட்டுச் சென்ற பாடல்கள் மொகிதீன் பெக்கை நீண்ட காலத்துக்கு உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பது நிச்சயம். சிங்கள – முஸ்லிம் உறவுக்கான ஒரு நினைவுப் பாலமாகவும் அவரின் வகிபாகம் உறுத்திக்கொண்டே இருக்கும். எப்படியென்றாலும் ஒவ்வொரு வெசாக்குக்கும் அவர் நிச்சயம் உயிர்ப்பிக்கப்பட்டுக்கொண்டிருப்பார்.

04.11.1991 இல் தனது 71வது வயதில் காலம் ஆனார். அவரது உடல் கோப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

மொகிதீன் பெக்கின் புதல்வர் இஷாக் பெக்கின் தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் வெளியிட்ட கருத்துக்கள் இவை.
“அப்பா இருக்கும் வரை எங்களைப் பாடவிடவில்லை. “எனது பெயரைக் கெடுக்கவேண்டும் என்று தீர்மானித்தல் நீ பாடு..” என்றார் அவர். அவரின் இறப்பின் பின்னர் தான் அவரின் பாடல்களைப் பாடத் தொடங்கினேன்....”
“அப்பா நோய்வாய்ப்பட்டு சத்திரசிகிச்சைக்காக ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்ட அந்த நாள் அவர் கூடவே இருந்தேன். இரவானதும் ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பும் முன் “எங்கே வா மகனே.. என்று அழைத்தார். “நான் மீண்டும் வீடு திரும்புவேனோ தெரியவில்லை” என்று கூறியபோது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. எங்கள் வீடு சிறியது. அப்பா உட்பட குடும்பத்தில் எல்லோரும் வரிசையாக பாயில் ஒன்றாகத் தான் உறங்குவோம். அப்பா இல்லாத வீட்டை கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை....”
வீட்டுக்கு போய்விடுவோமா அப்பா..? என்று கேட்டேன்.. அவர் ‘நான் கூறுவதை நன்றாகக் கேட்டுக்கொள் நான் பாரத தேசத்திலிருந்து இந்த நாட்டுக்கு வந்தேன். சிங்கள சமூகம் என்னைச் சுற்றியிருந்து ஆதரவு தந்தார்கள். நான் பாடிய பாடல்களை நீ பாதுகாக்கவேண்டும்... நான் நாளை இறந்து போனாலும் கடைசி சிங்களவர் இருக்கும் வரை உங்கள் எவரையும் பட்டினியில் இருக்கவிட மாட்டார்கள்..” என்றார்.
நான் அழுதபடி விடைபெற்றுவந்தேன். அடுத்த நாள் காலையில் அங்கு சென்ற போது அப்பா இறந்துவிட்டதை மருத்துவர் உறுதிபடுத்தினார். அவரது மரணத்தின் போது அதிக அளவில் பௌத்த பிக்குமார் கலந்துகொண்டார்கள். அவர்கள் அழுதார்கள். பிக்குமார்கள் ஒரு சிங்கள மரணவீட்டில் கூட அழுததை நான் ஒரு போதும் கண்டதில்லை. சில பிக்குமார் அவரைப் புதைத்த இடத்தில் இருந்து மண்ணை எடுத்து பையில் எடுத்துச் சென்றார்கள். அது ஏன் என்று கேட்டேன். இன்னும் ஐந்து வருடத்திற்குப் பின் என்னிடம் கேள் நான் பதில் சொல்கிறேன் என்றார் ஒரு பௌத்த துறவி.
அப்பாவின் இறுதிக் காலத்தில் கலைஞர்களுக்கு வீடுகள் வழங்கிய சமயத்தில் அப்பா தனக்கென ஒரு வீட்டுக்காக விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. அவர் இறந்து இரண்டு வருடங்களுக்குள் எங்கள் சிறு வீட்டையும் வீதி அதிகார சபை உடைத்து எங்களை அகற்றினார்கள். அதன் பின்னரும் நாங்கள் வறுமையுடன் வாடகை வீடுகளில் மாறிக்கொண்டிருக்கிறோம். அப்பாவின் 100வது வருட நினைவிற்குப் பின் நானும் பாடுவதை நிறுத்திவிட்டு வேறேதாவது தொழிலைத் தேடி வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவேன்....” என்கிறார்.
நன்றி - தினக்குரல்


மொகிதீன் பெக்கின் மிகப் பிரலமான பாடல்களை தெரிவு செய்து இங்கு தொகுத்திருக்கிறேன். இடதுபுற மேல் மூலையில் உள்ள playlist ஐ அழுத்தி அப்பாடல்களை தெரிவு செய்து நீங்கள் கேட்கமுடியும்.

வதந்திகளால் சிதைக்கப்பட்ட தீவு - என்.சரவணன்


உலகையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலைஇலங்கை முகம் கொடுத்த முதல் தடவை இதுவல்ல. 1883ஆம் ஆண்டு இதே உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இதே கொட்டாஞ்சேனைப் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல்களும் கலவரங்களையும் கூட நாம் நினைவுக்கு கொண்டுவரவேண்டியிருக்கிறது. அது முதலாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மாத்திரமல்ல இலங்கையின் முதலாவது மதக் கலவரமும் அது தான். கொட்டாஞ்சேனைக் கலவரம் என்று அன்றைய ஆங்கிலேயர்கள் அதற்குப் பெயரிட்டார்கள்.

கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் ஆலயத்தில் ஈஸ்டர் தின பூஜைகள் 1883 மார்ச் 25 நிகழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் கொட்டாஞ்சேனை தீபதுத்தாறாமய பன்சலையின் பெரஹரவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பொலிசாரின் எச்சரிக்கையும் மீறி நிகழ்ந்த இந்த ஊர்வலம் இறுதியில் பெரும் கலவரத்தை உண்டுபண்ணி நாட்டின் பரவலான பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

இதனை விசாரிப்பதற்காக ஆங்கிலேய அரசினால் அமைக்கப்பட்ட குழு “The Kotahena Riots” என்கிற ஒரு அறிக்கையையும் இறுதியில் வெளியிட்டது.

இது கலவரமாக வெடிப்பதற்கு அடிப்படைக் காரணம் அன்றே சிங்கள பௌத்தர்கள் மத்தியிலும், கத்தோலிக்கர்கள் மத்தியிலும் பரஸ்பரம் வளர்த்தெடுக்கப்பட்டிருந்த வெறுப்புணர்ச்சியும், பீதியும் தான். அதேவேளை உடனடிக் காரணி என்ன என்பதைத் தான் இங்கு நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய புள்ளி. அந்தக் காரணி வதந்தியைத் தவிர வேறொன்றுமில்லை.

எரிக்க ஒரு தீப்பொறி போதும்! அணைக்க?
மருதானையிலிருந்து கொட்டாஞ்சேனையை நோக்கி வந்து கொண்டிருந்த பெரஹரவில்  கொண்டுவரப்பட்டபெரிய உருவப்பொம்மை குறித்து மின்னல் வேகத்தில் ஒரு வதந்தி பரவியது. அதாவது ஒரு குரங்கொன்றை சிலுவையில் அறைந்து ஊர்வலமாக கொண்டு வருகிறார்கள் என்பதே அது. அன்னை மரியாளைக் கேலி செய்யும் பொம்மைகள் உள்ளன என்றும் பிழையான வதந்தி பரப்பட்டிருந்தது. அதுபோல மறுபக்கம் பெரஹரவைத் தாக்குவதற்காக கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்கர்கள் தயாராக நிற்கிறார்கள் என்று பெரஹர ஊர்வலத்தில் ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டிருந்தது. பெரஹரவில் இருந்து பெண்களும் சிறுவர்களும் அகற்றப்பட்டார்கள். ஊர்வலத்தில் கற்களையும். பொல்லுகளையும் தாங்கியவர்கள் இடையில் இணைந்து கொண்டார்கள்.

பெரஹர கொட்டாஞ்சேனையை நெருங்கியபோது திடீரென்று புனித லூசியாஸ் ஆலயத்தின் மணிகள் பலமாக அடிக்கத் தொடங்கியதும் அனைவரும் குழம்பிப்போனார்கள். பலர் தேவாலயத்தை சூழ்ந்தனர். அந்த ஒலி ஒரு பெரிய கலவரத்தையே உண்டு பண்ணியிருந்தது. பரஸ்பர சந்தேகங்கள், ஊகங்கள், வதந்திகள், பய உணர்ச்சி, தூண்டுதல், எதிர்பாரா திடீர் சம்பவங்கள் எல்லாம் சேர்ந்து ஆளையால் கொலைவெறிகொண்டு தாக்கி பெரும் கலவரத்தை உண்டு பண்ணினர். மேலும் தொடர் வதந்திகளால் நாட்டில் வேறு பகுதிகளிலும் கலவரங்கள் நிகழ்ந்தன.

136 ஆண்டுகள் கழித்து அதே குருத்தோலை ஞாயிறண்டு 21/4/2019 இலங்கையைக் கலங்கடிக்க வைத்திருக்கிறது isis தாக்குதல்கள்.

1915ஆம் ஆண்டு சிங்கள – முஸ்லிம் கலவரத்தின் போது தலதா மாளிகையை முஸ்லிம்கள் தாக்கி தகர்த்துவிட்டார்கள், பௌத்த, கிறிஸ்தவ வணக்கஸ்தளங்களை தாக்கிக்கொண்டு வருகிறார்கள்,  கொழும்பில் புனித லூசியாஸ் தேவாலயம் டைனமைட் வைத்து தகர்த்துவிட்டார்கள், முஸ்லிம்கள் தமது வீடுகளில் பணிபுரிந்த பெண்களை பாலியல் வல்லுவரவு செய்து கொன்றுவிட்டார்கள் என்பது போன்ற வதந்திகள் வேகமாக பரப்பட்டன. இந்த வதந்திகளை உறுதிசெய்வதற்கு எந்த வழிகளும் இல்லாத அந்த காலத்தில் உறுதிசெய்வதற்கான தேவையும் இல்லை என்று நம்புமளவுக்கு மக்களிடம் இனவெறுப்புணர்ச்சி ஏலவே ஏற்படுத்தப்பட்டிருந்தது.

வதந்திகளின் வரலாறு
தமிழர்களும், சிங்களவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த முதலாவது கலவரமாக கொள்ளப்படுவது 1939 ஆம் ஆண்டு கலவரம். நாவலப்பிட்டியில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆற்றிய வீராவேச உரையின் போது "சிங்களவர்கள் எல்லோரும் இனக்கலப்பின் வழித்தோன்றல்... விஜயன், காசியப்பன், பராக்கிரமபாகு உட்பட பல அரசர்கள் தமிழர்களே" எனக் கூறியதோடு மகாவசத்தையும் விமர்சித்திருந்தார். தமது பிறப்பையும் இனத்தூய்மையையும் அசிங்கப்படுத்திவிட்டார் என்றும் தமது புனித நூலான மகாவம்சத்தை கேலி செய்து விட்டார் என்கிற வதந்தியுடன் நாடளாவிய ரீதியில் தமிழர்களுக்கு எதிரான துவேச பிரச்சாரங்களின் விளைவு அந்தக் கலவரம்.

1977ஆம் ஆண்டு கலவரத்தின் பின் அதை ஆராய்ந்து விசாரித்து வெளியிடப்பட்ட சன்சோனி அறிக்கையில் வதந்திகளும், காவற்றுறையின் பொறுப்புணர்ச்சியற்ற போக்கும், அரசியல்வாதிகளின் பேச்சுக்களுமே காரணமென்பதை 336 பக்கங்களில் விளக்கப்படுத்தியிருந்தார்.

1981இல் யாழ் நூலக எரிப்பும், தமிழர்களின் மீதான அழித்தொழிப்பின் பின்னணியில் சிறில் மெத்தியுவின் வகிபாகத்தை அறிந்திருப்போம். நேரடியாம அறைச்யல்வாதிகளும், அரச படைகளும் தான் அதனை மேற்கொண்டிருந்து என்று தோன்றினாலும் கூட அதற்கான கருத்துவாக்கத்தை விதைத்து பெரு வதந்தியையும், புனைவுகளையும் வளர்த்தெடுத்து பரப்பியிருந்தவர் சிறில் மெத்தியு. அவர் எழுதிய “கவுத கொட்டியா?” (புலிகள் யார்? - 1980), “சிஹளுனி! புதுசசுன  பேராகனிவ்” (சிங்களவர்களே பௌத்தத்தைக் காத்திடுங்கள்!) போன்ற தமிழர்களை மோசமாக சித்திரிக்கும் நூல்கள் அப்போது சிங்களவர்கள் மத்தியில் பிரபல்யம்.

1983 இல் யூலை 23 அன்று யாழ் – திருநெல்வேலி பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதலால் 13 பேர் கொல்லப்பட்டார்கள். ஆத்திரமுற்ற இராணுவமும் பின்னர் வெறித்தனமாக அந்தப் பகுதியில் நடத்திய சூட்டில் அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டார்கள். ஆனால் இந்தத் தாக்குதலை ஊதிப்பெருப்பித்து, குரூரமான கதைகளுடன் தென்னிலங்கையில் வதந்திகளை பரப்பிவிட்டனர்.


இராணுவத்தினரின் பிய்ந்த உடல்களை துண்டுதுண்டாக பொலித்தீன் பேக்குகளில் விமானம் மூலம் இரத்மலானை விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன என்கிற வதந்தியால் சிங்களவர்கள் மத்தியில் வெறித்தனமான ஆத்திரம் கொள்ளவைத்தது. பொரளை கனத்தைக்கு அடக்கம் செய்ய வருமென காத்திருந்த கூட்டம் உரிய நேரத்தில் வராமல் நேரம் கடந்துகொண்டிருந்தது. இந்த கொஞ்ச நேர இடைவெளிக்குள் கூடியிருந்தவர்கள் மத்தியில் பல கட்டுக்கதைகளால் ஆத்திரமேறியிருந்தார்கள். சடலங்களை குடும்பத்தினரிடமே கையளிப்பதற்காக நேராக இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்படுவதாக பரவிய செய்தியால் ஆத்திரத்தின் உச்சத்தை அடைந்திருந்த கூட்டத்தினர் பொரளை பகுதியில் இருந்த தமிழர்களின் கடைகள், வீடுகள், சொத்துக்களை தாக்கி துவம்சம் செய்ததில் ஆரம்பித்தது தான் 83 கலவரத்தின் ஆரம்பம்.

இலங்கையில் நிகழ்ந்த 1883, 1915, 1939, 1953, 1956, 1958, 1977, 1981, 1983 போன்ற காலங்களில் நிகழ்ந்த பிரதான கலவரங்களிலும், ஏனைய கலவரங்களிலும் உடனடிக் காரணமாக இருந்தவை வதந்திகள் தான். பல்லாண்டுகாலமாக வளர்த்தெடுக்கப்பட்டிக்கிற பரஸ்பர வெறுப்புணர்ச்சியும், புனைவுகளும் சந்தேகங்களும் வதந்திகளை வந்த வேகத்தில் நம்பவைத்துள்ளன.

முதல் மூன்று வாரங்களாக எந்த கலவரத்துக்கும் இட்டுச் செல்லாமல் மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் காத்த போதும் இலங்கையின் இனப்பீதி கட்டமைப்பு அதற்கு மேலும் தாக்குகொள்ள இயலவில்லை. எங்கெங்கு ஆத்திரமூட்டக்கூடிய கதைகளும், இனவெறுப்புணர்ச்சிக்கும் வழிகள் திறக்கிறதோ அங்கெல்லாம் தாக்குதல்களுக்கான வாய்ப்புகளும் திறக்கப்படுகின்றன. 12,13,14 ஆம் திகதி தாக்குதல்கள் தற்செயல் நிகழ்வுகள் அல்ல.

ஹஸ்மர் சம்பவம் உதாரணம்
அப்துல் ஹமீத் மொஹமத் ஹஸ்மர் என்பவர் தனது முகநூல் சுவரில் "சிரிக்காதீர்கள், ஒரு நாள் நீங்கள் அழ‌ வேண்டி இருக்கும்" (Don’t laugh more 1 day you will cry) என்று பதிவிட்டதை சிங்கள இனவாத சக்திகள் அதனை திரித்து சமூக வலைத்தளங்களில் “உங்களுக்கு இன்று மட்டும் தான் சிரிக்க முடியும் நாளை அழப் போகிறீர்கள்” என்று பிரச்சாரம் செய்துவிட்டார்கள். தாக்குவதற்கு திட்டமிட்டிருக்கிறான், இவர் is என்றெல்லாம் பிரச்சாரங்கள் நடந்தன. அப்படி முகநூலில் நடந்த பிரச்சாரங்களையும் அதற்கு இடப்பட்ட வெறித்தனமான, துவேஷ கருத்துக்களை இக்கட்டுரைக்காக சேகரித்து வைத்திருக்கிறேன்.

முகநூல் பிரச்சாரங்களைத் தொடர்ந்து முதலில் கத்தோலிக்கர்களை திரட்டிக்கொண்டு ஒரு பாதிரியாரையும் அழைத்துக்கொண்டு போய் சிலாபம் பொலிசில் அது குறித்து முறையிடச் சென்றுள்ளனர். குறித்த முறைப்பாட்டை பெற்றுக்கொள்வதற்கு பொலிசார் மருத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆட்களைத் திரட்டிக்கொண்டு கூட்டமாக கூடிச் சென்று ஹமீத்தின் உடைகள் விற்கும் கடைக்குச் சென்று உடைத்து நொறுக்கியுள்ளனர். ஹமீத்தையும் தாக்கி படுகாயமடையச் செய்துள்ளனர்.

இதன்போது கலவரத்தில் ஈடுபட்ட எவரையும் பொலிசார் கைது செய்யவில்லை. மாறாக தாக்கப்பட்ட ஹஸ்மரை கைது செய்து சிறையில் அடைத்தனர் பொலிசார். இனங்களுக்கு இடையிலான பதட்டத்தை உருவாக்கக்கூடிய கருத்துக்களை ஸ்மோக்க வலைத்தளத்தில் வெளியிட்டார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். முகநூலில் வெளியான கருத்தை அதே முகநூலில் திரித்து வேகமாக பரப்பி, ஆட்களைத் திரட்டுக்கொண்டு ஹஸ்மரின் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து தாக்குதளை நடத்துமளவுக்கு வெற்றிபெற்றுள்ளனர் என்றால் இந்த வகை போக்கின் ஆபத்தை நாம் அலட்சியம் செய்து விட முடியாது.
  • அதே முகநூலில் அந்தக் கருத்தின் சரியான அர்த்தத்தை எவரும் சரி செய்து கட்டுப்படுத்த முடியவில்லை.
  • முகநூல் வதந்தியை நம்பி வேகமாக அணிதிரண்டு ஒரு அட்டூழியத்தை மேற்கொள்ள சாத்தியங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.
  • அரச இயந்திரம் காடையர்களுக்கு பாதுகாப்பையும், பாதிக்கப்பட்டவருக்கு மேலும் அநீதியை இழைத்திருக்கிறது.



இந்த சிலாபம் சம்வத்திலிருந்து தான் வட மேல் மாகாணத்திற்கு தாக்குதல்கள் பரவின. அவற்றில் சில பல இடங்களில் பொலிசார்/படையினரின் உதவியுடன் வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன. அதுவும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போதே தாக்குதல் நிகழ்கின்றன. வேறு சில இடங்களில் சிறிய எண்ணிக்கையான பொலிசார்; அளவில் பெரிய காடையர் கும்பலை கட்டுப்படுத்த முடியாத கையறு நிலையில் இருக்கின்றனர்.

மூன்று வாரங்களுக்குப் பின்னர் சிங்களவர்களின் தாக்குதல்களில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் ஈஸ்டர் படுகொலை நிகழ்ந்த சுற்றுவட்டத்தில் நிகழவுமில்லை, அதில் பாதிக்கப்பட்ட சமூகத்தவராலும் நிகழவில்லை. எங்கோ ஒரு தொலைவில் - பாதிப்பை எற்படுத்தாதவர்கள் மீது – பாதிப்புக்கு உள்ளாகாதவர்களால் இது நிகழ்ந்தது என்பதன் அரசியல் பின்னணி என்பதையும் ஆராய வேண்டும்.

சிவிலியன்களிடம் அதிகாரம்
13 அன்று நிக்கவரெட்டிய பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் கடையை துவம்சம் செய்துவிட்டு அதன் உரிமையாளர் அப்துல் என்பவரை அடித்து காயப்படுத்துகின்றனர். பொலிசார் அவரைக் காப்பாற்ற தூக்கிக்கொண்டு வாகனங்களைத் தேடி ஓடுகின்றனர். அந்த இடையிலும் தாக்குகின்றனர். அவனை அடி... அடி என்று கத்துகிற குரல்களையும் கேட்கமுடிகிறது. இப்படி நடந்துகொள்பவர்களுக்கு பிணைமறுக்கப்பட்ட 10 ஆண்டுகால சிறைத் தண்டனை அளிக்கப்போவதாக அரசு அறிவித்திருந்தும் அப்படி எல்லா இடங்களிலும் கைதுகள் நிகழவில்லை. வழமைபோல கண்துடைப்புக்கு சில கைதுகள் நிகழ்ந்துள்ளன. சிவில் மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுத்து செயற்படுவதை தடுத்து நிறுத்த அரசு கடும் சட்டங்களை பிரயோகிக்க வேண்டும். வெறும் அறிக்கையோடு கடமையை முடித்துக்கொள்கிறது அரசு.

சக பொதுசனத்தை விசாரணை செய்யும் அதிகாரம் இன்னொரு குடிமகனுக்கு இல்லை என்பதை அரசு அறிவித்தல் வேண்டும். சாதாரண சிவில் மக்கள் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு அடாவடித்தங்களில் ஈடுபடுவது தாம் “சிங்கள பௌத்தர்கள்” என்றும் உண்மையான தேசபக்தர்களான தமக்கு அந்த அதிகாரம் இருக்கிறது என்கிற கோதா தான். இலங்கையில் நிகழ்ந்த கடந்தகால கலவரவங்களில் அது தான் அதிக பங்கு வகித்தது.

இந்த போலி புனைவுச் செய்தியைப் பரப்பி இனவாதத்தைத் தூண்டிய பல முகநூல் பக்கங்களைப் பார்த்தால் பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கர்கள் இல்லை என்பதையும் அவதானிக்க முடிந்தது.

பெரும்பாலான தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்ட சிங்கள கத்தோலிக்கர்கள் அல்லர். இந்த அடாவடித்தனங்களில் அதிகம் ஈடுபடுவோர் சிங்கள பௌத்தர்கள். குறிப்பாக மகிந்தவாதிகள். இந்த வெசாக் மாதத்தில் சிங்கள பௌத்தர்கள் எப்படி ஆசி பெறமுடியும்? எப்படி விமோசனம் பெற முடியும்?

வதந்தி புரியும் ஆட்சி
இந்த நாட்டை கொஞ்ச காலத்துக்கு ஆளப்போவது வதந்திகள் தான். Isis என்பது நேரடியாக தெரியாத எதிரி. நாடளாவிய வலைப்பின்னல், சர்வதேச பயங்கரவாதத்துடன் கைகோர்த்தது. ஆனால் கோரிக்கைகள் இல்லை, சமரசங்கள் இல்லை, யாரோடு தான் பேசுவது என்பதும் தெரியாது. அவர்கள் தொடர்ந்து தாக்குவார்கள் என்கிற பீதி மட்டும் தான் நம்மிடம் உண்டு.

இலங்கையில் யுத்தத்தை முடித்து புலிகளின் நிலப்பகுதியைக் கைப்பற்றி அதன் தலைவர்களைக் கொன்றதுடன் கதை முடிந்துவிட்டது என்கிற முடிவுக்கு இலங்கை அரசு வரமுடிந்தது. ஆனால் isis இயக்கத்தை அப்படி முடித்துவிட்டதாக அரசால் கூறத் தான் முடியுமா? இந்தப் பீதியே சகல முஸ்லிம்களின் மீதும் சந்தகத்தையும், பதட்டத்தையும், வெறுப்புணர்ச்சியையும் ஏற்படுத்த இனவாதிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால் இனி இந்த நாட்டை கொஞ்ச காலத்துக்கு ஆளப்போவது வதந்திகள் தான். இந்த வதந்திகளே பல்வேறு இடங்களில் பதட்டங்களையும், கெடுபிடிகளையும், சிறிய-பெரிய சண்டைகளையும், கலவரங்களையும் உருவாக்க வல்லவை.

35வருட கால யுத்த காலத்தில் இந்த சந்தேக சூழலை சிங்கள இனவாதிகள் பயன்படுத்திக்கொண்டு அதிகாரத்தை கையிலெடுத்திருந்தார்கள். சாதாரண சிவிலியன்களும் வீதிகளில் தமிழர்களை தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்தார்கள். அடையாள அட்டைகளை, பொலிஸ் பதிவுகளைக் கேட்டார்கள். கொள்ளையும் அடித்தார்கள். மாட்டிவிடாமல் இருக்க கப்பம் கேட்டார்கள். சந்தேகத்தின் பேரின் மாட்டி விடுவதற்கும், விடுவிப்பதற்கும் என்று ஒரு தொழிலே இயங்கியது. இதற்கென்று இடைத்தரகர்கள் பலர் உருவாகி இருந்தார்கள். அந்த நிலைமை இப்போது முஸ்லிம்களுக்கு எதிராகவும் உருவாகத் தொடங்கியிருக்கிறது.


முஸ்லிம்களின் பொறுப்பு
மற்றவர்கள் தலையிடும் வரை ஏன் காத்திருந்தீர்கள் என்று கேட்கத் தோன்றுகிறது. இஸ்லாத்தை பிழையாக வியாக்கியானம் செய்கிறார்கள் என்றால் அதை சொல்லவைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு பயங்கரம் வரும்வரை காத்திருக்க வந்தது ஏன்? இத்தனை காலம் அதை செய்யாததன் விளைவை பொறுப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட கண்டனத்தையும், எதிர்ப்பையும், விமர்சனத்தையும் வெளியார் செய்யுமளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியது முஸ்லிம் தலைவர்களின் தவறு. அதை வெளியார் செய்யவும் கூடாது, வெளியாருக்கு அப்படி செய்ய தார்மீகமும் இல்லை.
  • ஜிகாத்தை பிழையாக விளங்கி வைத்திருக்கிறார்கள்
  • ஷரியா சட்டத்தை பிழையாக வியாக்கியானம் செய்திருக்கிறார்கள்.
  • தவ்ஹீத்தை தவறாக போதித்து வந்திருக்கிறார்கள்
  • குர்ஆனுக்கு பிழையான வரைவிலக்கணம் கொடுத்து வந்திருக்கிறார்கள்
என்றெல்லாம் இப்போது கூறுபவர்கள்; இத்தனை காலம் பொறுத்திருந்ததன் விளைவு

முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்குதல்களைக் காரணம் காட்டி சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தவர்கள் அனைவரும் முஸ்லிம் சமூகத்தை நசுக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்யத் துணிந்திருக்கின்றனர். இது இலங்கையில் மாத்திரமல்ல உலக அளவில் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த அட்டூழியங்களுக்கான முன்கூட்டிய நியாயத்தையும், அனுமதியையும் இந்த isis பயங்கரவாதம் உருவாக்கி விட்டிருக்கிறது என்று தான் கூறவேண்டும். இந்த பயங்கரவாதத்துக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்று தாண்டிச் செல்வதோடு மாத்திரம் முஸ்லிம்களின் பொறுப்பு முடிந்துவிடக்கூடாது. அவற்றுக்கு எதிராக வெளிப்படையாக எதிர்வினையாற்றி அவர்களின் மதச் சகிப்பற்ற போக்கையும், காட்டுமிராண்டித்தனத்தை இஸ்லாத்துக்கு ஊடாக நியாயப்படுத்தும் போக்கையும் எதிர்த்து இயங்குவது முக்கிய கடமை.

பிரபல அரசியல் விமர்சகரும் சரவதேச பயங்கரவாத ஒழிப்பு நிபுணருமான ஜோனா பிளங்க் (Jonah Blank) என்பவர் சமீபத்தில் ஸ்ரீ லங்கா கார்டியனுக்கு அளித்த பேட்டியில் இப்படிக் கூறுகிறார், “isis இலங்கையைத் தெரிவு செய்யவில்லை. இலங்கையில் இருந்த இயக்கம் தான் isisஐ தெரிவு செய்திருக்கிறது.” என்கிறார். கூடவே

“தமிழ் மக்கள் மீது நிகழ்த்திய மோசமான நடவடிக்கைகளால் புலிகளைப் பலப்படுத்தியது போல, முஸ்லிம் சமூகத்திடமும் அதே தவறை பிரயோகித்து பயங்கரவாதிகளைப் பலப்படுத்திவிடக் கூடாது” என்கிறார் அவர்.
சிங்களவர்களே! இலங்கையில் இருக்கும் எந்தவொரு முஸ்லிம் கடைகளிலும் உணவையோ, பொருள்களையோ வாங்காதீர்கள். பெப்ரவரி மாத முற்பகுதியில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அதி விஷம் கலந்த கருத்தடை மருந்துகளை நாடு முழுவதுமுள்ள பள்ளிவாசல்களின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மகளிர் பாடசாலை வாசல்களில் தள்ளு வண்டில்களில் வைத்து வடை, பெட்டிஸ் போன்றவற்றை குறைந்த விலையில் சிங்களவர்களுக்கு விற்கிறார்கள். எச்சரிக்கைகொள்ளுங்கள்! உங்கள் குழந்தைகளுக்கும் அறிவுறுத்துங்கள்.
பௌத்தத்தை பரப்புவதற்காக சிங்கள பௌத்தர்கள் யுத்தம் செய்ய மாட்டார்கள். ஆனால் பௌத்தத்துக்கு ஒரு நெருக்கடி வந்துவிட்டால் பௌத்த போதனைகளைக் கூட புறக்கணிப்பார்கள்.
புர்காவை அணிந்துகொண்டு இந்த பிரதேசத்துக்குள் பிரவேசிக்கத் தடை.!
முஸ்லிம்களுக்கு எதிரான புனைவுகள்
உலகில் பாசிச எழுச்சிகளைக் கவனித்தால் “அந்நியர்”கள் (வந்தேறு குடிகள்) மீதான மண்ணின் மைந்தர்களது (தேச பக்தர்கள்) சகிப்பற்ற வெறுப்புணர்ச்சியின் பால் எழுந்ததைக் கவனிக்கலாம். இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் பாசிச வடிவத்தை எட்டுவதும் இந்த அர்த்தத்திலேயே புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. 1900களின் ஆரம்பத்தில் வெள்ளையர்களுக்கு எதிரான சுலோகமாக “அந்நியர்கள்” என்று பயன்படுத்தப்பட்டபோதும் ஏக காலத்தில் இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் சமாந்திரமாக பயன்படுத்தப்பட்டது. அதுவே வளர்த்தெடுக்கவும்பட்டது. ஆக இந்த மூன்று சக்திகளுக்கும் எதிராக பயன்படுத்தப்பட்ட இனவாத கருத்தாக்கம் காலப்போக்கில் ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்பு தமிழர்களுக்கும் (அதாவது ஈழத் தமிழர் - இந்திய வம்சாவளியினர்) மற்றும் முஸ்லிம்களுக்கும் எதிராக மையம்கொண்டது.

பின் வந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தாக்கங்கள் வரிசையாக புதியன சேர்க்கப்பட்டாலும் கூட 1900ஆரம்ப காலப்பகுதியில் சேர்த்துக்கொள்ளப்பட்டவை ஒரு நூற்றாண்டு சென்ற பின்பும் கூட இன்றும் அந்த வரிசையிலிருந்து நீங்கவில்லை. அப்படிப்பட்ட ஐதீகங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
  • வந்தேறி குடிகள், புலால் உண்பவர்கள், மாடு அறுப்பவர்கள்,
  • சிங்களக் கடைகளிலேயே பொருட்களை வாங்குங்கள், முஸ்லிம் கடைகளைப் புறக்கணியுங்கள்
  • புர்காவை தடை செய்யுங்கள்
  • ஹலால் முறையை நிறுத்துங்கள்
  • மதரசா பள்ளிக்கூடங்களை தடை செய்யுங்கள்
  • அரபு கற்கைகளை நிறுத்துங்கள்
  • மத மாற்றம் செய்கிறார்கள்
  • இனப்பெருக்க வேகத்தை திட்டமிட்டு அதிகரிக்கிறார்கள்
  • கருத்தடை மருந்துகளை முஸ்லிம் அல்லாதவர்கள் மீது பிரயோகிக்கிறார்கள்.
  • மாட்டிறைச்சி வெட்டுவதை தடை செய்யுங்கள்
  • வாள்கள் வைத்திருகிறார்கள்
  • இலங்கையின் போதைப்பொருள் ஏகபோக சந்தை முஸ்லிம்களிடம் தான் இருக்கிறது.
  • Isis தீவிரவாதத்துடன் தொடர்பு

முஸ்லிம் கடைகளை புறக்கணியுங்கள் என்கிற பிரச்சாரங்களின் விளைவு தான் அவர்களின் வியாபாரஸ்தளங்களை தேடித்தேடி நாசம் செய்வது.
ஷரியா தொடர்பான சகலவற்றையும் தடை செய்யாக கோரும் பட்டியல்
முஸ்லிம் கடைகளை பகிஸ்கரிப்பவர்கள் இலங்கையை இயக்கிக் கொண்டிருக்கும் எண்ணெயில் 65% வீதமானவை முஸ்லிம்/அரபு நாடுகளில் இருந்து வரும் எண்ணையை நிராகரிப்பார்களா? வெளிநாடுகளில் பணிபுரிவோரில் 85% வீதத்தினர் மத்திய கிழக்கிலேயே பணிபுரிகின்றனர். பிரதான வருவாயில் ஒன்றாக மாறியுள்ள அதைப் பகிஸ்கரிக்கத் தான் முடியுமா? இலங்கையின் வருவாயில் முக்கிய இடமான தேயிலையை அதிக அளவு கொள்வனவு செய்கின்ற அரபு நாடுகளில் இருந்து கிடைக்கும் அந்நிய செலாவணியை வேண்டாம் என்று நிறுத்திக் கொள்வீர்களா? அனைத்தையும் விடுங்கள் இந்த மாதம் வெசாக் மாதம். மொகிதீன் பேக்கின் பாடல் இல்லாத ஒரு வெசாக்கை நினைத்துத் தான் பார்க்க முடியுமா?

முஸ்லிம்களுக்கு எதிரான பெருங்கதையாடல்களையும், கற்பிதங்களையும், போலிப் பிரச்சாரங்களையும் சமூகத்தில் புனைந்து, பரப்பி, அதன் பேரில் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளைத் தான் நாம் இப்போது எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. இதில் விளைவுகளுக்கு பதில் கொடுக்க முனையாமல் இந்த வெறுப்புணர்ச்சி சித்தாந்தத்தை பிரக்ஞைபூர்வமாக கட்டுடைக்கும் வழியைத் தான் நாம் தேட வேண்டும்.

எதிரிக்கு தோல்வியைக் கொடுங்கள்
முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களையும் கட்டுகதைகளையும் கடந்த 7 ஆண்டுகளுக்குள் வதந்திகளாக சிங்கள சமூகத்தில் ஆழ வேரூன்றவைத்தவர்கள் பொதுபல சேனா, சிஹல ராவய, இராவணா பலய, சிங்களே இயக்கம் போன்ற அமைப்புகள் தான். அந்த அமைப்பின் கருத்துக்களால வளர்க்கப்பட்டு அவற்றின் முன்னணிப் படையணிகளுக்கு தலைமை தாங்கிய டன் பிரசாத், அமீத் வீரசிங்க, நாமல் குமார ஆகியோரை தற்போது கைது செய்து சிறையில் வைத்திருக்கிறது. இவர்களால் இனவெறியூட்டப்பட்ட சிங்களவர்கள் உசுப்பேற்றப்பட்டு அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடலாம் என்று தான் அந்த கைது நிகழ்ந்தது என்கிறது அரசு.


சஹ்ரானுக்கு தேவைப்பட்டது அழிவு. அழிவு மட்டுமே. சஹ்ரானுக்கு அந்த வெற்றியை பேரினவாதிகள் இலகுவாக கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். isis பயங்கரவாதிகள் ஒரு நாள் தான் தாக்கி அழிவை ஏற்படுத்தினார்கள். இப்போது ஒவ்வொரு நாளும் பல இடங்களில் தாக்கி அந்தப் பயங்கரவாதிகளுக்கு இலகுவான வெற்றியை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறது பேரினவாதம்.

ஏற்கெனவே கூறியதுபோல isis தாக்குதல் சிலவேளைகளில் நின்றே போயிருக்கலாம். ஆனால் இனியும் எப்போதும் தாக்குவார்கள் என்கிற பீதியே பதட்டத்தையும், சந்தகங்களையும். பரஸ்பர வெறுப்புணர்ச்சியையும் அதன் நீட்சியாக கெடுபிடிகளையும், கலவரங்களையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கப் போகிறது. கலவரத்தை செய்து எதிரிக்கு வெற்றியை அளிக்கப் போகிறோமா? அல்லது அழிவுகளுடன் சம்பந்தமில்லாத மக்களுக்கு அன்பைப் பகிர்ந்து எதிரிக்கு தோல்வியைக் கொடுக்கப் போகிறோமா?

நன்றி - தினக்குரல்

கோத்தாவதாரம் - என்.சரவணன்


ஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் அதிக அரசியல் லாபமீட்டக்கூடியவர்கள் மகிந்தவாதிகள் தான். எந்த ஒரு நிலைமையையும் தமக்கு சாதகமாக திசைதிருப்பிக்கொள்ளும் அரசியல் வியூகத்தை வடிவமைப்பதில் இலங்கையில் வல்லவர்களாக இருப்பவர்கள் மகிந்தவாதிகள் தான்.

ஈஸ்டர் படுகொலையில் அதிக அரசியல் லாபம் ஈட்ட முயற்சித்துக்கொண்டிருப்பவர் கோத்தபாய. அதிக அரசியல் லாபம் அடையக் கூடியவரும் அவர் தான்.

பிரதான கட்சிகள் இன்னமும் ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதிலும், வெளிப்படையாக பகிரங்கப்படுத்துவதிலும் ராஜதந்திரத்துடன் அணுகுவதாக அக்கட்சிகள் நம்பிக்கொண்டிருக்கின்றன. எதிரி தமது வேட்பாளரை அறிவித்ததும் அதற்குரிய சரியான சதுரங்கக் காயை தாம் நகர்த்துவோம் என்கிற வகையில் தான் மூன்று பிரதான சக்திகளும் அணுகிவருகின்றன. ஐ.தே.க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பொது ஜன பெரமுன ஆகிய பிரதான அரசியல் சக்திகள் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அறிவிப்பதில் தயக்கம் காட்டுகின்றன என்றால் அதன் அர்த்தம் மூன்று கட்சிகளும் தத்தமது வெற்றியில் சந்தேகம் கொண்டிருப்பது தான் காரணம்.

இன்னொரு வகையில் கூறப்போனால் எவருக்குமே தமது வேட்பாளர் குறித்த முழு நம்பிக்கை இல்லை என்பது தான். தமது பலத்திலும் நம்பிக்கையில்லை. எதிரியின் பலவீனத்திலும் நம்பிக்கையில்லை என்கிற கதை தான் இது.

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ராஜபக்சவாதிகளின் தெரிவு கோத்தபாயவாக இருக்குமென்று தெரிகிறது. நீண்ட காலத்துக்கு ராஜபக்ச குடும்பத்தினர் இலங்கையை ஆண்டுகொண்டிருக்கலாம் என்கிற கனவு  2015இல் கலைந்தது.


ராஜபக்ச குடும்பத்துக்கு ஆப்பு
19வது திருத்தச்சட்டத்தில் முக்கிய மூன்று திருத்தங்கள் ராஜபக்ச குடும்பத்தின் எதிர்கால கனவை நாசமாக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டு உண்டு.
  • ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் தடவை ஜனாதிபதியாக ஆக முடியாது. அதாவது மகிந்தவால் மீண்டும் ஜனாதிபதியாக முடியாது.
  • இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது. அதாவது கோத்தபாய, பசில் ஆகிய மகிந்தவின் இரு சகோதர்களும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.
  • மகிந்தவின் மகனை ஜனாதிபதித் தேர்தலில் நிற்கவைக்கவும் முடியாது. ஏனென்றால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் 35 வயதைத் தாண்டியிருக்கவேண்டும் என்பது அரசியலமைப்பு விதி. 2015 வரை வயதெல்லை 30ஆக இருந்தது. 1986இல் பிறந்த நாமல் ராஜபக்ச 35 வயதைக் கடக்க 2021 ஆக வேண்டும். 2019 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் பங்குபெறமுடியாது. அதாவது 2024 ஆம் ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தான் பங்குபெறலாம். அல்லது 2021குப் பின்னர் ஜனாதிபதி பதவி வெற்றிடம் ஏற்படவேண்டும் வேண்டும். இந்த இடைக்காலத்துக்குள் “ராஜபக்சவாத”த்துக்கான மக்கள் மவுசுக்கு என்ன நிகழும் என்றும் தெரியாது.
புதிய அரசியலமைப்பு விதிகள் ராஜபக்சவாதிகளின் அந்த கலைந்த கனவை சட்ட ரீதியில் உறுதிசெய்தது. நாமல் போட்டியிடும் வரையாவது இலங்கையின் அரசியலில் பெரும்போக்கு சக்தியாக தம்மை தக்கவைத்துக்கொள்ள பல தந்திரோபாயங்களை இயக்கியாகவேண்டும். அதுமட்டுமல்ல நாமலை மகிந்த அளவுக்கு வசீகரமான (Charismatic) தலைவராக மாற்றிவிட முடியுமா என்பதெல்லாம் அரசியல் களத்தில் நடக்கின்ற விவாதங்கள்.

மகிந்தவுக்கு பசில், சமல் ஆகியவர்களிடம் இருக்கின்ற நம்பிக்கை கோத்தபாயவின் மீது இல்லை என்பதை சிங்கள ஊடகங்கள் சுட்டிக்காட்டியே வந்துள்ளன. ஆனாலும் ராஜபஷ குடும்பத்தினருக்கு எதிரான பல்வேறு சட்ட சிக்கல்களில் இருந்தாவது தப்பியிருந்தால் போதுமானது என்பதே அவர்களின் குறைந்தபட்சத் தேவை. பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்கிற கதை தான்.
வாசுதேவவின் பல்டியின் பின்னால்
மகிந்த முகாமின் மூத்த முக்கியஸ்தராக கருதப்படும் வாசுதேவ நாணயக்காரவின் நேர்காணல் ஒன்று கடந்த ஏப்ரல் 20 அன்று லங்காதீப பத்திரிகையில் வெளியாகியிருந்தது. அந்த நேர்காணலில் பெரும்பகுதி கோத்தபாயவின் வருகை பற்றியதாகவே அமைந்திருந்தது. வாசுதேவ நாணயக்கார ஆரம்பத்திலிருந்தே கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக ஆக்குவதற்கு பகிரங்கமாக மேடைகளிலும், ஊடகங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து வந்த முக்கியமானவர்.

ஆனால் அந்த நிலைப்பாட்டில் இப்போது மாற்றம் கண்டிருப்பது தெரிவிக்கிறது. மகிந்த தரப்பின் கட்சியான பொதுஜன முன்னணியின் முக்கிய பேச்சாளரான அவர் “நான் சார்ந்த முகாம் எடுக்கும் தீர்மானத்துக்கு நானும் இணங்க வேண்டியிருக்கிறது.” ஆனால் கோத்தபாய பற்றிய எனது கருத்தில் மாற்றமில்லை என்கிறார்.
“நான் ஆரம்பத்திலிருந்தே கூறுகிறேன். கோத்தபாய என்பவர் மக்கள் மத்தியில் இருந்து உருவான ஒரு தலைவர் இல்லை. மக்களோடு இருந்தவரும் இல்லை. மக்களின் உணர்வுகளை அந்தளவு புரிந்தவரும் இல்லை. ஒருவகை இராணுவத்தனம் தான் அவரிடம் இருக்கிறது. அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் அவர் எப்படி இராணுவத்தனத்துடன் இயங்கினார் என்பதை கண்டிருக்கிறேன். பரந்துபட்ட மக்கள் அபிலாஷையின் பாத்திரமாக அவரால் ஆக முடியாது....” என்கிறார்.
“கோத்தபாயவுடன் நேரடியாகவே இது பற்றி தெரிவித்திருக்கிறேன், அப்போது அவர்; முன்னர் நீண்ட காலமாக இராணுவச் சேவையில் இருந்த காலத்தில் உருவான உணர்வுநிலையும், அரச அதிகாரியாக இயங்கிய விதத்திலும் பார்க்க தற்போது மாற வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டார். புதிய பாத்திரத்துக்கு ஏற்றார்போல அவர் மாறுவதாக ஒப்புக்கொண்டார்.”
“உங்கள் மச்சானும் போட்டியாளராக வாய்ப்பு உண்டல்லவா?” என்கிற கேள்விக்கு
“ஆம். என் மச்சான் விக்கினேஸ்வரனின் பெயரும் பேசப்படுகிறது. ஆனால் நாங்கள் அவர்களுக்கு எதிரானவர்கள் அல்லவா. மச்சான் உறவு வேறு பக்கம் இருக்கட்டும். ஆனால் நாங்கள் இரு எதிர் பக்கங்களில் இருக்கிறோம்.” என்றார்.
சமல் ராஜபக்சவையே வாசுதேவ நாணயக்காரவின் தனிப்பட விரும்புகிறார். அந்தப் பேட்டியில் கூறியது போல. “சமல் என்னிடம் கற்ற மாணவன். நமது கருத்தோடு ஒன்றி இருக்கும் இடதுசாரி குணமுடையவர்.” என்கிறார் வாசுதேவ.
“கோத்தபாயாவைப் போலவே ஜனாதிபதி வேட்பாளராக வாய்ப்புள்ள சமல் ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன ஆகியோருடனும் நாங்கள் தொடர்ந்து கலந்துரையாடலை நடத்தப் போகிறோம்” என்கிறார்.
தெரண நேர்காணல்
29.04.2019 அன்று இரவு தெரண தொலைகாட்சி சேவையில் 360 நிகழ்ச்சியில் ஒன்றரை மணித்தியாலம் கோத்தபாயவின் நேர்காணலொன்றை ஒளிபரப்பினார்கள். நேர்கண்டவர் தில்கா.

இந்த நேர்காணலில் தான் முதன்முதலில் கோத்தபாய அமெரிக்க குடியுரிமையை திருப்பிக்கொடுக்கும் பணிகள் 99வீதம் முடிந்துவிட்டதென்றும், இனி தான் இலங்கைப் பிரஜை என்றும் கூறினார்.

இந்த நேர்காணலில் ஒரு அரசியல் தலைவரைப்போல அவரால் பதிலளிக்க இயலாமல் போனது உண்மை. அதிக எச்சரிக்கையுனும் ராஜதந்திரத்துடனும் பதிலளிப்பதாக எண்ணிக்கொண்டு ஆறுதலாகவே பதிளிக்க முடிந்தது. கேட்கும் கேள்விகளுக்கு வேகமாக பதிலளிக்க முடியவில்லை. சில கேள்விகளுக்கு ஆத்திரப்பட்டத்தையும் அவதானிக்க முடிந்தது.
“உங்கள் ஆட்சிகாலத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட இன்னும் சில இனவாத அமைப்புகளுக்கு ஆதரவளித்து வளர்த்து வந்ததாக குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றவே?”
என்கிற கேள்வியின் போது அவரது உண்மை ஆத்திர முகத்தை அடக்கிக்கொள்ள அவர் முயற்சித்ததை கண்ணுற முடிந்தது.
“இப்படியான நிகழ்ச்சியில் இந்தளவு கீழ்த்தரமான நபர்களின் மோட்டுத்தனமான குற்றச்சாட்டுக்களில் கவனத்தை செலுத்தாமல் பிரயோசனமாவற்றில் செலவழியுங்கள்”
என்றார் தில்காவிடம்.
“புலிப் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது என்று உலகமே கூறியபோது எங்கள் திறமையாலும், திட்டமிடலாலும் குறுகியகாலத்தில் முழுமையாக அழித்தொழித்தோம்.” என்கிறார்.
கோத்தபாயாவுக்கு எதிரான ஊழல், ஆட்கடத்தல், படுகொலை போன்ற விசாரணைகளில் இருந்து தப்ப தனக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பம் இந்த ஜனாதிபதித் தேர்தல் என்று கருதப்படுவதால் தனக்கான தந்திரோபாய வியூகத்தை வினைத்திறனுடன் வகுத்துத் தான் ஆகவேண்டும். 

ராஜபக்ச முகாமில் உள்ளவர்களிலேயே சிங்கள பௌத்த சக்திகளின் ஆதரவையும், பலத்த எதிர்பார்ப்பையும் கொண்டிருப்பவர் கோத்தபாய ராஜபக்ச தான். போர்வெற்றி போதையில் இருந்து இன்னும் மீளாதவர்கள் அனைவரும் கோத்தபாயவை எதிர்கால மீட்பராகவும் கருதுவதில் ஆச்சரியமில்லை.

சுதந்திரக் கட்சியை காலப்போக்கில் தமது நிகழ்ச்சிநிரலின் கீழ் சரணடைய வைத்துவிடலாம் என்று மகிந்த முகாமினர் கருதுவது போல; சுதந்திரக் கட்சியினரும் தாம் ஒரு நீண்ட வரலாற்றை உடைய பிரதான கட்சியென்றும் தம்மிடம் இருந்து வெளியேறி இயங்கும் அதிருப்தியாளர்களின் நிகழ்ச்சிநிரலுக்குக் கீழ் இணங்குவதானது தமது கட்சியின் இறைமையையும், கௌரவத்தையும் பாதிக்கும் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். தமது வேட்பாளரை கட்சி தான் தீர்மானிக்கும் என்று கூறி வருகின்றனர்.

கோத்தாவின் புலனாய்வு
இந்த நிலையில் தான் ஈஸ்டர் படுகொலைகள் அரசாங்கத்தை நன்றாக பலவீனப்படுத்தியிருப்பதுடன் நாட்டின் எதிர்கால பாதுகாப்பு குறித்த உரையாடல் தேசத்தின் பிரதான மைய பேசுபொருளாக ஆக்கப்பட்டிருக்கிறது. கோத்தபாயவின் இராணுவவாத நிர்வாகத் திறமையால் தான் இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரலாம் என்கிற பிரச்சாரத்தை ராஜபக்சவாதிகள் மட்டுமல்ல ராஜபக்சவாதிகளின் நேரடி/மறைமுக ஆதரவு ஊடகங்கள் அனைத்துமே மேற்கொண்டு வருகின்றன. பௌத்த சங்கங்களும் அதையே வெளிப்படையாக கூற ஆரம்பித்துள்ளன. கோத்தபாயவை சுற்றி மீண்டும் ஒரு அலை உருவாக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பைப் பற்றிய கடும் விமர்சனங்களை ஒரு அனுபவஸ்தர் என்கிற பந்தாவுடன் வெளிப்படுத்திவருகிறார்.

ஏப்ரல்  28 அன்று திவயின பத்திரிகையில் வெளியான கோத்தபாயவின் நேர்காணலில் ஈஸ்டர் தாக்குதல் குறித்தும், புலனாய்வுப் பிரிவை புணரமைப்பது பற்றியும் பலவற்றை விபரிக்கிறார்.

ரணில், மைத்திரி மீது பழியை போட்டு அரசியல் லாபம் தேட முயற்சிக்கும் கோத்தபாய; தான் இப்போது ஆட்சியில் இல்லாததால் இலகுவாக  இப்படியான பழிகளைப் போட முடிகிறது. புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தர்களை எல்லாம் சிறையில் தள்ளிவிட்டு எப்படி பாதுகாப்பை நிலைநாட்டலாம் என்று பகிரங்கமாக அந்தப் பேட்டியில் கோத்தபாய விமர்சிக்கிறார்.

இலங்கையின் புலனாய்வுத் துறையில் கிட்டத்தட்ட 12,000 பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. வேறு சில மூலாதாரங்கள் 20,000பேர் என்கின்றன. கடந்தகாலத்தில் குற்றங்கள் புரிந்தமை தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தவர்களில் 48 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அல்லது தொடர்ந்து விசாரணையின் கீழ் இருக்கின்றனர். சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் 7 பேர் மாத்திரம் தான். அப்படி இருக்கும்போது பெருந்தொகை புலனாய்வாளர்கள் சிறையில் இடப்பட்டிருக்கிறார்கள் என்கிற தர்க்கம் யாரை திசைதிருப்ப முற்படுகிறது.

இப்போது சிறையில் வைக்கப்பட்டிருக்கும் 7 பேரும் 11 மாணவர்களை  கப்பத்துக்காக கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் இருப்பவர்களே தவிர நாட்டுக்கு சேவைசெய்ததால் தண்டனை அனுபவிப்பவர்கள் அல்லர்.

மேலும் சிறைக்கு வெளியில் விசாரணையின் கீழ் இருக்கும் 48 பேரும் யார்? லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தது, பிரகீத் எக்னேளிகொடவை காணாமல் ஆக்கியது, ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்தது, உப்பாலி தென்னகோனைத் தாக்கியது, பொத்தல ஜயந்தவை கடத்திச் சென்று கை கால்களை உடைத்தது, ரத்துபஸ்வல போராட்டத்தின் போது படுகொலை செய்தது, வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் 27 பேரை கொலை செய்தது போன்ற சம்பவங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அவர்கள்.

புலனாய்வுப் பிரிவை பலப்படுத்தவேண்டும் என்கிற பேரில் இந்த குற்றவாளிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பதா கோத்தபாயவின் கோரிக்கை. மேற்படி சம்பவங்கள் சிலவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கோத்தபாயவும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிட வேண்டும்.

தன்மீதான வழக்குகளில் இருந்து தன்னைத் தப்பவைக்க இப்போது கோத்தாவுக்கு அதிகாரம் அவசியப்படுகிறது. ‘மகிந்த குடும்ப’ ஆட்சியில் தம்மால் குறுக்குவழியில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பாதுகாக்க வேண்டியிருக்கிறது.

மேற்படி 48 பேரும் கைது செய்யப்பட்டிருந்த காலப்பகுதியில் கூட சம்பளம் பெற்றவர்கள். பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள். பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டவர்கள். இந்த வழக்குகளில் அரச தரப்பு சாட்சிகளாக மாறிய புலனாய்வுத் துறை உறுப்பினர்கள் எவருக்கும் அப்படி எந்தவொரு பதவியுயர்வும் வளங்கப்படாதவர்கள் என்கிறார் சிங்கள அறிஞரான காமினி வியங்கோட.

விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் இருந்து கோத்தபாய தப்பியது புலனாய்வுப் பிரிவின் திறமையால் அல்ல. ஜேர்மன் தயாரிப்பான குண்டு துளைக்காத BMW வாகனத்தால் தான் என்பதை வசதியாக மறந்துவிட்டார். இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை இராணுவத் தலைமையகத்தில் வைத்தே தற்கொலை தாக்குதல் நடத்திய போது கோத்தபாயவின் புலனாய்வுப் பிரிவு தான் இருந்தது. ஒரு நாட்டின் இராணுவத் தளபதியை இராணுவத் தலைமையகத்தில் வைத்தே தாக்கிய சம்பவம் இலங்கையில் மட்டும் தான் நிகழ்ந்திருந்தது.

இதைவிட கோத்தபாயவின் அன்றைய புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்தவர் மேஜர் ஜெனரல் கப்பில ஹெந்தவிதாரண. அவர் ஒரு தலைசிறந்த புலனாய்வாளர் என்கிறார் கோத்தபாய. கோத்தபாய இராணுவத் தலைமையகக் காணியை ஷங்கிரிலா ஹோட்டலை அமைப்பதற்காக விற்றபின்னர் அங்கு உருவான ஷங்கிரிலா ஹோட்டலின் பாதுகாப்புக்கு பொறுப்பாக மிகப் பெரிய சமபளத்துடன் நியமிக்கப்பட்டவர் மேஜர் ஜெனரல் கப்பில ஹெந்தவிதாரண. அப்பேர்பட்ட ஹோட்டலில் தான் ஈஸ்டர் தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது என்றால் கோத்தபாயவின் வாய்ச்சவடாலை என்னவென்பது. ஹோட்டல்களில் பாதுகாப்புக்கு இராணுவத்தினர் பொறுப்பில்லை மாறாக அவர்களின் சொந்தத் தனியார் பாதுகாப்பு பிரிவினரே என்பதை நாமறிவோம்.

சிங்கள பௌத்த வாக்கு வங்கி
கோத்தபாய தன்னை ஒரு புது அவதாரமாக உருவெடுத்தாலும் சிறுபான்மை இனங்களின் வாக்குகளை தன்னால் வெல்ல முடியாது என்பதை கணித்தே வைத்திருக்கிறார். எனவே குறைந்தது ஏனைய பிரதான கட்சிகளுக்கு செல்லக்கூடிய சிங்கள பௌத்த வாக்குகளை வென்றெடுப்பதே முக்கிய இலக்காக வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. எனவே சிங்கள பௌத்த வாக்கு வங்கியை திருப்திபடுத்தக் கூடிய முழக்கங்களையும், வாக்குறுதிகளையும் தான் கோத்தபாய வைக்க முடியும். 

கோத்தபாய சமீபத்தில் ஒரு நேர்காணலில் “எனது வெற்றிக்கு சிங்கள வாக்குகளே போதுமானது” என்கிற ஒரு கருத்தை வெளியிட்டிருந்ததையும் கவனிக்க வேண்டும். அதாவது சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் வகையில் தனது வாக்குறுதிகளோ, முழக்கங்களோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தான் அவர் இன்னொரு வடிவத்தில் வெளியிட்டிருந்தார் எனலாம்.


சம்பிக்கவின் கணிப்பு
பாட்டலி சம்பிக்க ரணவக்க எப்போதும் அரசியலிலும், நிர்வாகத்திலும் கணித சூத்திரங்களை பிரயோகித்துக்கொண்டிருப்பவர் நாம் கண்டிருப்போம்.  அவரின் கணிப்பின் படி ஜனாதிபதித் தேர்தலில் சராசரியாக 65-70 லட்ச வாக்குகளைப் பெரும் ஒருவர் தான் வெல்ல முடியும் என்றும் போது ஜன பெரமுன 49 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறுவது கடினம் என்றும் கூறுகிறார். 

அவர் இரு பிரதான வேட்பாளர்களை மனதில் இருத்தியே கணித்திருக்கிறார். இறுதியாக நடந்த  உள்ளூராட்சித் தேர்தலில் எந்தக் கட்சியும் 50 வீதத்துக்கு கிட்டிய மொத்த வாக்குகளைப் பெறவில்லை. வெற்றி பெற்ற பொதுஜன பெரமுன கூட 40.47%வீத வாக்குகளைத் தான் பெற்றது. ஐ.தே.க. 29.42% ஐ மட்டும் தான் பெற்றது.

செல்லுபடியாகும் 135-140 லட்ச வாக்குகளில் 50% வீதத்துக்கு அதிகமான வாக்குகளை எவரும் பெறப்போவதில்லை என்பது தெரிகிறது. அப்படி நேரும் போது முதல் வாக்கெடுப்பின் பின் போது அதிக வாக்குகளைப் பெற்ற முதல் இருவரை மட்டும் எடுத்து அவர்களுக்கு அளிக்கப்பட வாக்குகளின் இரண்டாம் தெரிவை தனியாக எண்ணினால் அது மகிந்த அணிக்கே சாதகமாக அமையக் கூடும் என்று சிங்கள ஊடகங்கள் கணிக்கின்றன. சுதந்திரக் கட்சியும், மகிந்த அணியினரும் இரண்டாம் தெரிவை ஐ.தே.க வுக்கு போகாதபடி பார்த்துக்கொள்வதில் உடன்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி நேரும் பட்சத்தில் ஐ.தே.க.வுக்கு வெற்றி வாய்ப்புகள் குறைவு என்றே கணிக்க முடிகிறது. அதாவது கோத்தபாய களத்தில் இறங்கும்பட்சத்தில் வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கருத இடமுண்டு. இந்த தைரியத்தில் தான் தனது வெற்றிக்கு சிங்கள வாக்குகள் போதுமானது என்று கோத்தபாய துணிச்சலாக கொக்கரிப்பதை காண்கிறோம்.

கோத்தாவின் புதிய உடல்மொழி
இப்போதெல்லாம் கோத்தபாய செயற்கையான புன்னகையுடனேயே எங்கெங்கும் போஸ் கொடுப்பதை நாம் கண்டிருப்போம். அதிகமாக பன்சலைகளுக்கு போய் பௌத்த பிக்குமார்களின் ஆசியை பெறுவதை ஊடகங்கள் பெருப்பித்துக் காட்டி வருகின்றன. உடைகள் கூட வெளிர் நிற ஆடைகளைத் தெரிவு செய்கிறார். கடுமையான கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளிக்க முயல்கிறார். கொடுங்கோலன் என்கிற உருவகத்தை நீக்க அதிக பிரயத்தனத்தை மேற்கொள்வதை அவரை தொடர்ந்து அவதானித்து வந்தவர்களால் உணர முடியும்.

அமெரிக்க பிரஜையாகிப்போன ஒருவர், குடும்பத்தோடு அமெரிக்காவில் இடம்பெயர்த்தவர், சொத்துக்களை அமெரிக்காவுக்கே கொண்டுபோய் சேர்த்துவிட்டவர் கோத்தபாய. அப்பேர்பட்ட ஒருவரின் தேசப்பற்றை எந்த கேள்வியுமில்லாமல் சிங்கள பௌத்தர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் அத்தனைக்கு மேலும் கோத்தபாய தன்னை சிங்கள பௌத்தர்களின் நம்பகமான சக்தியென்கிற புனைவில் வெற்றிபெற்றிருக்கிறார் என்று தான் அர்த்தம். பத்தாண்டாகியும் யுத்த வெற்றிக் களிப்பின் போதையில் இருந்து மீளவில்லை என்று தான் அர்த்தம்.
கோத்தாவின் இராணுவவாதம், அராஜகம், ஊழல், குடும்ப அரசியல் என்பவற்றை இந்த நாடு ஏற்கெனவே கண்டு அனுபவித்துவிட்டது. பெரும்பான்மை சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் “யுத்தத்தை வெற்றிகொண்ட” நவீன துட்டகைமுனுவாக கொண்டாடி மேற்படி தவறுகளை மன்னிக்கவோ, கண்டும்காணாதுவிடவோ கூடும். சிறுபான்மை மக்களுக்கு அப்படி என்ன தேவை இருக்க முடியும்.

இலங்கையின் ஊடகச் சந்தை என்பது தேசியவாதத்தை சந்தைபடுத்தும் துறையாகத் தான் வளர்ந்துவிட்டிருக்கிறது. தேசியவாதத்தை எந்தளவு இனவாதம் கலந்தோ, அல்லது பாசிசம் கலந்தோ விற்பது என்பதைப் பொறுத்து அவர்களின் மூலதனம் காக்கப்படுகிறது. பன்மடங்கு பெருப்பிக்கப்படுகிறது. மக்களின் சிந்தனையை வழிநடத்துவதில் ஊடகத்தின் வகிபாகத்தை அறிந்த ஆதிக்க சக்திகள் எந்த ஊடகத்தையும் விட்டுவைப்பதாகத் தெரியவில்லை.

இந்த ஊடகங்கள் அனைத்துமே கோத்தபாயவை பாதுகாக்கும் அரண்களாக மட்டுமல்லாது, கோத்தபாயவை ஒரு மீட்பராக உருவகித்து வருகின்றன. இவை அனைத்துமே இனவாத சக்திகளின் புகலிடமாக இருப்பது ஒன்றும் தற்செயலல்ல.

கோத்தபாயவின் இன்றைய எழுச்சி கோத்தபாயவின் பலம் அல்ல. அது ஆளுங்கட்சியின் பலவீனம். அந்த பலவீனத்தை அப்பட்டமாக அம்மனப்படுத்தியிருக்கிறது ஈஸ்டர் தாக்குதல்கள். அந்த பாதிப்புகள் தான் கோத்தபாயவுக்கு சிறந்த அவகாசத்தையும், வசதியையும், வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது.

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் சிங்கள பௌத்த சூழலைப் பொறுத்தளவில் கோட்டபாய மீட்பராகிறார், மகிந்த இரட்சகராகிறார், ஞானசாரர் ராஜகுருவாகிறார், சரத் பொன்சேகா தீர்க்கதரிசியாகிறார். கோத்தபாயவை மையப்படுத்திய கோத்தாவதாரம் கட்டமைக்கப்பட்டு உயிர்கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஆபத்தை பலரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

நன்றி - தினக்குரல்


இலங்கையுள் இன்னொரு சமூக வன்முறை பேராசிரியர் - வீ.அரசு

என்.சரவணன் எழுதிய தலித்திய கட்டுரைகளின் தொகுப்பு "தலித்தின் குறிப்புகள்" என்கிற தலைப்பில் இப்போது நூலாக வெளியிட்டிருக்கிறது  "எழிலினி பதிப்பகம்". அந்த நூலில் பேராசிரியர் வீ.அரசு எழுதிய ஆய்வுரை இது. இதனை தற்போது வெளிவந்துள்ள "காக்கைச் சிறகினிலே" அந்த ஆய்வுரையின் முக்கியத்துவம் கருதி மீள் பிரசுரம் செய்திருக்கிறது.
குடியேற்றம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பெரும் அவலமாகவே அமைந்து விடுகிறது. சொத்து எனும் கருத்துநிலை உருவான காலம் முதல், சொத்துடையவர், சொத்து இல்லாதவர் எனும் சமூகப்பிரிவு, மனித சமூகத்தில் பல்வேறு பரிமாணங்களில் செயல்படுகிறது. சொத்து என்பதில் அந்த மனிதர்கள் வாழுமிடமே முதன்மையாக அமைகிறது. இயற்கையான நிலப்பகுதி குறிப்பிட்டப் பிரிவு மக்களுக்கு உரிமையானது இல்லை எனும் நிலை உருவாகும்போது, அம்மக்கள் மனரீதியில் அந்நியமாகி விடுகிறார்கள். தங்களது அடிப்படைத் தேவைகளுக்காக குடிபெயர்தலை மேற்கொள்கிறார்கள். இவ் வகையான நிலமற்றவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினர்தாம்  பெரும் பான்மையினராக உள்ளனர். தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை பள்ளர், பறையர், சக்கிலியர் மற்றும் பல்வேறு  சிறுகுழுவினர் பெரும்பகுதி நிலமற்றவர்கள். அவர்கள் குடிசை கட்டி வாழுமிடங்கள் அவர்களுக்குரியது இல்லை.

ஐரோப்பிய காலனியம் அதிகார சக்தியாக பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி காலம் முதல் உருவானது. இவர்களது ஆதிக்கம் தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பல்வேறு சிறுதீவுகளில் உருவானது. இவ்விடங்களில் ரப்பர், காப்பி, தேயிலை மற்றும் கரும்புத் தோட்டங்களை உருவாக்கிய ஐரோப்பிய காலனிய முதலாளிகள், அத்தோட்டங்களில் உழைப்பதற்கான மனித சக்திகளை அடிமைகளாகப் பெற்றனர். 1834இல் இங்கிலாந்து அரசால் கொண்டுவரப்பட்ட அடிமை ஒழிப்புச் சட்டம், மனித சக்திகளைப் பயன்படுத்துவதில் புதிய முறைகளை உருவாக்கிற்று. அடிமைகள் என்பதற்குப் பதிலாக ‘கூலிகள்’ இவர்களுக்குக் கிடைத்தார்கள். பெயர் மாற்றம் ஏற்பட்டதேயொழிய அடிப்படையான ஒடுக்குமுறைகளில் எவ்வகையான மாற்றமும் இல்லை. இந்த வகையில் தமிழகத்திலிருந்து இலங்கைத் தீவுக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்குறித்த சாதியினரும், குறைந்த எண்ணிக்கையில் வேறு சாதியைச் சேர்ந்தவர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் இந்திய வம்சா வளியினர், மலையக மக்கள் எனும் பெயர்களில் அழைக்கப்பட்டனர். இவர்களது வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள கீழ்க்காணும் மேற்கோள் உதவும்.

“தொழிலாளர்கள் பல்வேறு உடல் ரீதியான தண்டனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர், (Klass. 1961). உதாரணமாக மொறிசியஸில் 1867க்கும் 1872 க்குமிடையே 50 இந்தியத் தொழிலாளர்கள் கசையடியினால் மண்ணீரல் சிதறி மரணமடைந்ததாக ஒரு ஆணைக்குழு கூறுகின்றது (Thinker 1974). இந்தியப் பெருந்தோட்டங்களில் பல தொழிலாளர்கள் கசையடியினால் இறந்ததாகவும் இவ்வித குற்றச் செயல்களுக்கான தண்டனைகள் வெறுமனே தண்டப் பணம் செலுத்துவிதமாகவே இருந்ததாகவும் கூறப்படுகின்றது (Moldrich. 1986). மலேசியாவில் ஒரு தொழிலாளி மனிதக் கழிவை உண்ணுமாறு பலவந்தப் படுத்தப்பட்டதால் அவன் வயிற்றோட்டத்தினால் மரணமானன். அதனை விசாரித்த வைத்தியர் அவன் உண்ட மலத்தில் தொற்று நோய்க் கிருமிகள் இருந்ததாக நிரூபிக்க முடியவில்லை என தீர்ப்புக் கூறினார்” (மு. சின்னத்தம்பி. 1997)

மேற்குறித்த கொடுமைகளைக் கூறும் எண்ணற்ற வாய்மொழி வழக்காறுகள் அண்மைக்காலங்களில் அச்சு வடிவம் பெற்றுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் குடியேற்றப்பட்ட மக்கள் குறித்த விரிவான பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் பெரும்பான்மையினர் தலித் மக்கள் என்பதும், பதிவாகியுள்ளது. அதில் சிறிய அளவில் சக்கிலியர் என்று இழிவாக அழைக்கப்படும் அருந்ததியினர் சமூகத்தினரும் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் மலையகச் சமூகத்தில் வாழுமிடம் சார்ந்து பெரிதாக அறியப்படவில்லை. பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் அவர்கள் உள்ளடங்கிப் போயினர். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து வருவிக்கப்பட்ட அருந்ததியினர் சமூகம் தொடர்பான உரையாடலை இந்த நூலில் நண்பர் சரவணன் முன்னெடுக்கிறார். இது இதுவரை பேசாப் பொருள். இதனை பேசுபொருளாக்குவதே `தலித்தியக்குறிப்புகள்` எனும் இவ்வாக்கத்தின் முதன்மையான உரையாடல். அவர் நிகழ்த்தியுள்ள உரையாடலைப் பின் கண்டவாறு தொகுத்துக் கொள்ள இயலும்.
  • இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நகரசுத்தித் தொழிலாளர்கள் எனும் பெயரில், இலங்கை முழுவதும் குடியேற்றப்பட்ட அருந்ததி சமூகத்தினர், எண்ணிக்கையில் குறைவானர்கள். இவர்கள் குறிப்பிட்ட இடங்களில் குடியேற்றப்பட்டனர். இவர்களது வாழ்க்கை என்பது உதிரிப்பாட்டாளிகள் வாழ்க்கையைப் போல் அடையாளமற்றதாக அமைந்தது. இவ்வகையான வாழ்முறையில் அம்மக்கள் எதிர்கொண்ட கொடுமைகள் குறித்த உரையாடல் நிகழ்த்துவது அவசியம்.
  • சாதிய ஒடுக்குமுறையில், அடுக்கடுக்காக அமைந்துள்ள நிலையில், இவர்கள் அடிமட்டத்தின் அடுக்குகளுக்கு  கீழாகவே இருந்தனர். பஞ்சமவர் என்ற மக்களுக்கும் கீழாகவே அருந்ததியினர் கருதப்பட்டனர். இன்றும் நடைமுறையில் அந்நிலை பெரிதும் மாறியதாகக் கூறமுடியாது. குடியேற்றம் செய்யப்பட்ட வாழ்முறையில் இத்தன்மைகள் எவ்வாறெல்லாம் தொடர்ந்து கொண்டுள்ளன என்பதையும் விவாதப் பொருளாக்குவது அவசியம்.
  • சக்கிலியர்’ எனும் சொல் இழிசொல்லாகவே பொதுவெளியில் புழங்கப்படுகிறது. குறிப்பாக நவீன சமூக ஊடகங்கள், பண்டைய அகராதிகள் ஆகிய பிறவற்றில் இச்சொல் இடம்பெறுவது இழிநிலை சார்ந்த தன்மையதாகவே உள்ளது. இத்தன்மையின் உளவியல் கூறுகள் எத்தகையது என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.
  • அருந்ததியினர் சமூகம், அதன் வாழ்முறை சார்ந்து அகமணமுறைக்கே தள்ளப்படுவதும் அதன் மூலம் சாதித் தகர்ப்பு சாத்தியப்படாமல் போகிறது. வேறு எந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் விட அருந்ததியினரிடத்தில் இத்தன்மை ஆழமானதாக இடம்பெற்றிருப்பது குறித்தப் பேச்சும் தேவைப்படுகிறது.
  • பண்பாட்டுத் தளத்தில் வாழிடம், மொழி இழப்பு, இன அடையாளம் இழப்பு, பண்பாட்டுச் சடங்குகள் இழப்பு மற்றும் மாற்றம் ஆகிய பிற இவ்வின மக்களை அடையாளமற்றவர்களாகக் கட்டமைக்கும் தன்மை குறித்தும் உரையாடும் தேவையுண்டு.
  • மலையகத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்தப் புரிதலும் நகரசுத்தித் தொழிலாளர்களாக வாழும் இவர்கள் வாழ்க்கையும் சந்திக்கும் மற்றும் வேறுபடும் புள்ளிகள் எவையெவை என்ற புரிதலும் தேவைப்படுகிறது.
பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டில் குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ் மக்களில், அருந்ததியினர் சமூகம் மட்டும் பல்வேறு கூறுகளில் தனித்திருப்பதைக் கண்கிறோம். இவர்கள் குறித்தப் பதிவுகள் பொதுவெளியில் ஏறக்குறைய இல்லை என்றே கூற முடியும். ஆங்கில நூல்களில் மிகக் குறைந்த பதிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. தமிழ் அறிஞர்கள் எனக் கருதும் பலரும் மலையகத் தமிழர் பற்றிய பதிவைச் செய்திருப்பதைக் காண்கிறோம். ஆனால் இவர்களைப் பற்றிய பதிவுகள் இல்லை. பொதுவெளியில் செயல்படும் அறிஞர்கள் கண்ணோட்டத்தில் இம்மக்கள் பற்றிய பதிவுகள் ஏன் இல்லை? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் சரவணன் இந்நூலில் குறிப்பிடும் கீழ்க்குறித்துள்ள பதிவின் மூலம், இம்மக்களைச் சமூகம் எதிர்க்கொண்ட வரலாற்றை அறிய முடிகிறது.
“நாடாளாவி பரந்துபட்ட உதிரிகளாக வாழ்ந்து வருவதால், தேசிய கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழ் அரசியல் சக்திகளுக்கும் கூட இவர்கள் ஒரு வாக்கு வங்கி அல்ல. சாதியக் காரணங்களால் இவர்களை இணைக்கும் வகையிலான ஒரு அரசியல் இயக்கம்கூட இல்லை. எனவே எவருக்கும் வேண்டப்படாத சமூகம் இச்சமூகம்” (ப. 4). சொந்த நாட்டில் வாழும் மக்களுக்கு இவ்வகையான தன்மை எதார்த்தமாக உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 1990ஆம் ஆண்டுகளுக்கு முன் ஒடுக்கப் பட்டவர்கள், தனித்த அணிச்சேர்க்கைக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் அதற்குப்பின் உருப்பெற்றுவரும் ஒடுக்கப்பட்டோர் அணிசேர்க்கை என்பது, அவர்களை அடையாளப்படுத்துவதாக அமைகிறது. இதனை எதிர்கொள்ளும் நடுத்தர சாதிகள், ஒடுக்குதல் என்பதை முதன்மைப்படுத்தாத சாதியக் கட்சிகளாக, தேர்தல் முறையால் தமிழகத்தில் வடிவம்பெற்றுள்ளது. தங்கள் உரிமைக்காக போராடும் உணர்வுத்தன்மை உருப்பெறுவதற்காக சமூகப்புறச்சூழல் இல்லாது வாழ்கின்றனர். இத்தன்மை குறித்த விரிவான பதிவுகளை சரவணன் இந்த நூலில் விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்.

நிலையாக வாழ்வதில் வாழ்வதற்கு ஓரடி நிலம் கூட இல்லாதவர்கள் இம்மக்கள். சாதியக் கொடுமையின் உச்சத்தை நிலவுடைமைச் சமூகத்தினரால் அனுபவித்தவர்கள் இவர்கள். ஒவ்வொரு மணித்துளியும் கூனிக்குறுகி வாழும் மனநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். இவர்கள் குடியேற்றம் செய்யப்படும்போது, மேற்குறித்த தன்மைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும். இலங்கையில் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் விடுதலை பெற முடியவில்லை. மாறாக பலமடங்கு கூடுதலான சாதியக் கொடுமைகள், நிறுவனமயமாக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு நிகழ்த்தப்படுகின்றன. இவ்வகையான கொடுமை நிகழ்வது குறித்தப் பதிவும் கூட இல்லை. இவ்வகையில், இந்த நூல் குறிப்பிட்டுச் சொல்லும் பதிவாக அமைகிறது.

“நமக்குத் தாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணுவதே அடிமை மனப்பான்மைக்கு அஸ்திவாரம் என்றும், நமக்குக் கீழ் ஒருவரில்லை என்று உண்மையாய் நினைப்போமானால் நமக்கு மேலாக ஒருவன் இருக்கவே மாட்டான் என்றும் நாம் அவற்றைக் கவனியாமல் நமக்கு உதவி செய்பவர்களையும் பல வழிகளிலும் நன்மை செய்கிறவர்களையும் நம்மை பரிசுத்தமான காற்றை சுவாசிக்கும்படி செய்பவர்களையும் சாதுக்களையும் நமக்குக் கீழானவர்கள் என்று எண்ணின குற்றத்தின் கருமபலன், தத்துவத்தில் நம்மைவிட ஒருவிதத்திலும் மேலான யோக்கிரதை இல்லாதவர்களும் கீழ்மக்களும் நமது இரத்தத்தை உறிஞ்சி ஜீவனம் செய்ய வேண்டியவர்களும், நமக்கு மேலான ஜாதியாரென்றும் அவர்களை வணங்க வேண்டியது நமது மோட்சவதனமென்றும் நினைக்கும்படி செய்துவிட்டது. இக்குறைகள் நீங்கின நிலைதான் சமத்துவமென்றும், சமூக முன்னேற்றமென்பதும் என்பதாக நினைக்கிறேன். (பெரியார். குடியரசு. 10.1.1926)
பெரியார் குறிப்பிடும் நமக்குக் கீழ் ஒருவன், நமக்குமேல் ஒருவன் என்ற சாதிய மனநிலை, சாதிய இருப்புகளுக்கு அடிப்படையாக அமைகிறது. இதில் அருந்ததியினர் சமூகம் என்பது அவர்களுக்கு கீழே ஒருவருமில்லை. அவர்களே அடுக்கு நிலையில் கீழ்மட்டம். இதனால் இம்மக்கள் குறித்த சமூக மனநிலை என்பது அவர்களை முற்று முழுதாக தனிமைப்படுத்துகிறது. பிற சாதியான் ஒருவன் தனக்குக் கீழ் ஒருவன் இருப்பது குறித்த மனநிலையோடு இருக்கிறான். அப்படியான மனநிலை சாத்தியப்படாத மக்கள் கூட்டத்தின் உளவியல் குறித்து நாம் புரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் அந்த மக்கள் நொறுங்கிப் போனவர்கள். நகர வளர்ச்சியில் இவர்களது உழைப்பு சுரண்டப்படுகிறது. அவர்கள் செய்யும் உழைப்பும்கூட மிகக் கேவலமான மதிப்பீட்டிற்குள்ளாகிறது. இவ்வகையான கொடுமை வேறு எந்தச் சாதிப் பிரிவினருக்கும் உண்டா? என்ற கேள்வி இங்கு முதன்மையாகிறது. இந்த நிலையில், இலங்கைத் தீவு முழுவதும் நகரங்களின் ஒதுக்கப்பட்ட இடங்களில் குடியிருப்பு அமைக்கப்பட்டு சேரியிலும் கீழான சேரி என்னும் மதிப்பீட்டில் அவர்கள் வாழுமிடம் அமைகிறது. அவ்விடங்களில் வாழ்வதிலிருந்து விடுதலை அடைய அவர்கள் விரும்புகிறார்கள். எதார்த்தத்தில் அது சாத்தியமில்லை. இத்தன்மைகள் குறித்த கள ஆய்வு சார்ந்த பல்வேறு தரவுகளை இந்நூலில் சரவணன் பதிவு செய்கின்றார். சனாதன வருணாசிரமத்தில் உருவான சாதியம், நிலவுடைமைப் பண்பாட்டில் வேரூன்றியது. ஆனால் நகரிய வளர்ச்சி சார்ந்த முதலாளித்துவ அமைப்பில், முன்னிருந்த நிலைகளை விட மேலும் மோசமான மதிப்பீடுகளும் வாழ்முறையும் அருந்ததியினர் மக்களுக்கு வாய்த்திருக்கும் கொடுமை, இலங்கையில் இன்றும் நடைமுறையில் இருப்பதைக் கண்டு நாம் வெட்கமடைய வேண்டும். அதற்கான உரிய பதிவுகளை இந்நூல் கொண்டிருக்கிறது.
கண்டி கண்டி எங்காதீங்க
கண்டி பேச்சு பேசாதீங்க
சாதிகெட்ட கண்டியிலே
சக்கிலியன் கங்காணி
(ஸி.வி. வேலுப்பிள்ளை: 1987. 24)
‘நாடற்றவர் கதை‘ எனும் சிறிய நூலில் இப்பாடல் வரிகள் சக்கிலியன் என்ற சொல் கங்காணியைத் திட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ள இழிசொல். மலையகத் தமிழர்களின் ஒடுக்குமுறையைப் பேசும் இந்நூலில்கூட ‘சக்கிலியன்‘ எனும் சொல் இழிவழக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், பொதுவெளியில் அச்சொல் புழக்கம் பற்றி நாம் புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பிட்ட மனிதர்கள் கூட்டத்தை அடையாளப்படுத்தும் சொல் இழிசொல் என்பதன் மூலம், அம்மக்களையே இழிந்தவர்களாகக் கருதும் சமூக உளவியலைப் புரிந்து கொள்கிறோம். அந்த மக்கள் எந்த வகையில் இழிந்தவர்கள் என்பதற்கான மூல காரணங்கள் ஏதுமில்லை. ஒட்டுமொத்த சமூகத்தின் மதிப்பீடு சார்ந்து அந்த சொல் அவ்வாறு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சமூக உளவியல் என்பது அம்மக்களை இழிந்தவர்களாகவே பதிவுசெய்கிறது. இத்தன்மை மிகப்பெரிய சமூக வன்முறை. இந்த வன்முறை அன்றாட நடைமுறை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சமூக ஊடகங்களில் இந்த வன்முறை எவ்வாறெல்லாம் தொழிற்படுகிறது என்பதை சரவணன் மிகச் சிறப்பாக கணக்கீடு செய்து இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். பழைய அகராதிகள், சொலவடைகள் ஆகிய பிறவற்றில் இவ்வழக்காறு அங்கீகரிக்கப்பட்ட மனப்பாங்கில் பதிவாகியுள்ள சாதிவெறி குறித்தும் இந்நூல் விரிவான பதிவுகளைச் செய்திருப்பதைக் காண்கிறோம்.

இவ்வகையான சமூகவன்முறை மிக இயல்பாக நடைமுறையில் இருப்பதற்கு எதிரான கண்டனக்குரல் தேவை. ஆனால், எதார்த்தத்தில் அத்தன்மை பெரிதும் நடைமுறையில் இல்லை. சரவணன் போன்ற ஒருசில தோழர்கள் இதனைக் கவனப்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டுச் சூழலில் இவ்வகை நடைமுறை, பொதுவெளிப் பதிவுகளில் அதிகம் இடம்பெறுவதில்லை. பெரியார் உருவாக்கிய சமூகம் குறித்த பார்வையின் விளைவாக சாதிப் பெயர்களை இழிவுத்தொனியில் பயன்படுத்துவது பொது ஊடகங்களில் இடம்பெறுவது இல்லை. ஆனால் இலங்கையின் காட்சி ஊடகங்கள், பாராளுமன்ற உரைகள், செய்தித் தாட்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் சொல்லாட்சிகள் ஆகிய பிறவற்றில் சாதாரணமாக இடம்பெறுவதை சரவணன் கவனப்படுத்தியுளளார். இதன் மூலம் உதிரி மக்களாக இலங்கையில் வாழும் நகர சுத்தித் தொழிலாளர்களான அருந்ததியர்கள் குறித்த மதிப்பீடு பொதுவெளியில் எவ்வாறு உள்ளது என்பதை உணரமுடிகிறது. இந்த வன்முறைக்கு எதிராக என்ன செய்யப்போகிறோம்? என்ற கேள்வியே எஞ்சுகிறது.

சாதி ஒழிப்புக்கு அடிப்படையான எடுகோளாக பல தரப்பிலும் ஏற்றுக்கொண்ட வாதம் அகமணமுறையை தடைசெய்ய வேண்டும் என்பதே. பெரியார் தொடக்கக்காலம் முதல் அகமணமுறைத் தடைச்சட்டம் கொண்டுவரவேண்டும் என்று பதிவுசெய்துள்ளார். அதற்காக அவர் சாதிமறுப்புத் திருமணங்களை நடத்துவதை தமது முதன்மையான வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தினார். தமிழகத்தில் உருவான சமூக நீதி இயக்கத்தில், சாதிமறுப்பு, சீர்திருத்த திருமணங்கள் நடந்துவருவதைக் காணமுடியும். அருந்ததி சமூகத்தினர், இவ்வகையான திருமணங்களை நிகழ்த்த இயலாத புறச்சூழலை இச்சமூகம் உருவாக்கியுள்ளது. அச்சமூகத்தில் உள்ள இளையோர் அவ்வகையான விருப்பம் கொண்டு நடைமுறைபடுத்த விரும்பினால்கூட, அவர்களைத் திருமணம் செய்துகொள்ள பிற சாதியினர் எவரும் முன்வருவதில்லை. இச்சாதி குறித்து சமூகம் உருவாக்கியுள்ள சமூக மனநிலை என்பது, அவர்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்கிறது. தீண்டாமைக் கொடுமை சார்ந்து இச்சமூகத்தினர் பிற சாதியில் திருமணம் புரிந்து, சாதி ஒழிப்பிற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள இயலாத நிலை உருவாகியிருப்பது, பிற சாதிகளிலிருந்து இவர்களை வேறுபடுத்திப் புரிந்துகொள்ள உதவுகிறது. இத்தன்மை மிகப்பெரும் சமூக அவலம். அகமணமுறைக்குள் தான் அந்த சமூகம் செயல்பட வேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்குகிறது அவர்களது சாதிய அடையாளம். சாதி ஒழிப்பின் அடிப்படையே சாத்தியமில்லாமல் போவது என்பது, இச்சாதி குறித்த வெகுசன உளவியல் உருவாக்கும் கொடுமையான வன்முறை. இந்தக் கோணத்தில் இச்சிக்கலை இதுவரை நாம் அணுகியதில்லை. சரவணன் இத்தன்மையைக் கவனப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வாழும் அருந்ததி மக்கள் தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளையும் பேசி வருகின்றனர். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் தமிழக நிலப்பகுதிகளில், பல்மொழி சார்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். குறிப்பாக, திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழிகள் இந்தியாவின் தென் மாநிலங்களில் பரவலாக இடம்பெற்றிருப்பதைக் காணமுடியும். இந்த மக்கள் தெலுங்கு பேசுவதால் தெலுங்கு மக்கள் எனக்கருதும் அவலம் நிகழ்கிறது. அவர்கள் அந்த மொழியைப் பேசினாலும், சுமார் 800 ஆண்டுகள் அவர்கள் வாழும் நிலம் தமிழகமே. அவர்களுக்கு வேறு நிலம் இல்லை. இவ்கையான மக்கள் இலங்கைக்கு குடியேற்றம் செய்யப்படும் போது மொழி சார்ந்த அந்நியப்படுத்தல் அங்கு முன்னெடுக்கப்படுகிறது. அரசு ஆவணங்களில் அவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள். மொழிசார்ந்த பண்பாட்டுப் புரிதலில் அவர்கள் தெலுங்கர்கள். இந்த முரண் இலங்கையில் உள்ள பூர்வீகத் தமிழர்கள், மலையினத் தமிழர்கள் ஆகியோரிடமிருந்து அந்நியப்படும் அவலம் அருந்ததியர் மக்களுக்கு உருவாகிறது. அவர்கள் அந்தரத்தில் தொங்குகிறார்கள். மொழி இல்லை; நிலம் இல்லை; பண்பாடு இல்லை; எவ்வகையான அடையாளமும் இல்லை. இதன் மூலம் அவர்கள் போராடும் சமூகக் குழுக்களாக வடிவம் பெறும் புறச்சூழலை இழக்கிறார்கள். இது ஆளும் வர்க்கத்திற்கு அவர்களை ஒடுக்குவதற்கான அரிய வாய்ப்பாக அமைகிறது. அது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நாளடைவில் மொழி இழந்து சிங்களவர்களாக தங்களை ஆக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் வசிக்கும் இடங்களில் உள்ள நாட்டார் சாமிகள் அப்புறப்படுத்தப்பட்டு பெருமதம் சார்ந்த கடவுள்கள் கோவில்களுக்குள் குடியேறுகிறார்கள். அவர்கள் மிக எளிதாக மதம் மாறுகிறார்கள். சாதிய இழிவை மதம் மாற்றம் மூலம் சரி செய்யலாம் என்ற கனவு நடைமுறையாகிறது. இவ்வகையான தன்மைகளை அம்மக்கள் செய்து கொள்ளும் தற்கொலை என்று சரவணன் வரையறை செய்கின்றார். ஆம்... பண்பாடு சார்ந்து, மொழிசார்ந்து, இனம் சார்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். இவ்வகையான தன்மை பிற சாதிக் குழுக்களில், ‘மேல்நிலை ஆக்கும்‘ எனும் பாங்கில் நிகழும்.  ஆனால் இவர்கள் தங்கள் நிலைகள் அனைத்தையும் இழக்கிறார்கள். இந்த இழப்பு வேறு எவருக்கும் பெரிதும் நிகழாத சமூக வன்முறை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் குடியேற்றம் செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் சாதியைக் குறிக்கும் ஒரு நாட்டார் பாடல் இவ்வாறு அமைகிறது.
கள்ளனுக்கு பவர் இருக்கு
வெள்ளானுக்கு பணம் இருக்கு
கவுண்டனுக்கு செருக்கு இருக்கு
பள்ளனுக்கு பழி இருக்கு
பறையனுக்கு பாட்டு இருக்கு
சக்கிலியருக்கு சண்டையிருக்கு (2009: 90)
இந்தப் பாடல் மலையகத்தின் சாதி இருப்பினைப் பதிவு செய்கிறது. மலையகத்தில் குடியேற்றப்பட்ட அருந்ததி மக்கள் இழிவானவர்களாகவே கருதப்பட்டதைக் காண்கிறோம். அவர்கள் சண்டைக் கோழிகள். மனிதப் பண்பு இல்லாதவர்கள் என்பதைக் காண்கிறோம். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையின் அனைத்து நகரங்களிலும் குடியேற்றப்பட்ட நகரசுத்தித் தொழிலாளர்களாகிய அருந்ததி இனமக்கள், மேற்குறித்த இழிவு நிலையில் மேலும் இழிவானவர்களாகவே பதிவு செய்யப்பட்டனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு கட்டித் தரப்பட்ட வரிசை வீடுகள் மாட்டுத் தொழுவங்களைவிட மோசமானவை. அதேபோல் நகரங்களின் ஒதுக்குப் புறத்தில் அருந்ததியர்களுக்கு கட்டப்பட்ட வீடுகள் புறாக் கூடுகள். நகர் முழுதும் சுத்தம் செய்யும் அவர்கள், மிகவும் மோசமான சுற்றுச்சூழல் உள்ள சிறிய சிறிய வீடுகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். சுகாதாரக் கேடு மிகுதி. மிக நெருக்கமான மக்கள் தொகை. ஒரு வீட்டில் குறைந்தது பத்து பேருக்கு மேல் குடியமர்த்தம் செய்யப்பட்டனர். எதார்த்தத்தில் கொட்டகைகளில் அடைக்கப்பட்டனர். மலையகத் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டன. அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பொதுவெளியில் பதிவானது. ஆனால் நகரசுத்தித் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பொதுவெளியில், குறிப்பாகத் தமிழ் ஊடகங்களில் மிகமிகக் குறைவாகவே பதிவாகியது. அந்த வகையில் சரவணன் அவர்களின் இந்தப் பதிவு புதிய வெடிப்பு. என்னைப் போன்றவர்கள் இப்படியான ஒருவிடயம் இலங்கைக்குள் இருக்கிறது என்பதை அறிந்து துக்கமடைய வழிகண்டுள்ளது. இப்பதிவு அம்மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட என்றாவது ஒருநாள் உதவும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

இலங்கைத் தீவிற்குள் பேரினவாதக் கொடுமை சார்ந்து வடக்கு, கிழக்கு மற்றும் பிற பகுதிகளில் வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் இனப்படுகொலையாக வடிவம் பெற்றது. போராறடிய இயக்கங்களையும் மக்களையும் அழித்தொழித்து பேரினவாத பாசிசம் தற்போது ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. இன்னொரு புறத்தில் நாடற்ற மக்களாக மலையக மக்கள் இருக்கிறார்கள். சிறுபான்மை மதங்களும் இனங்களும் ஒடுக்கப்படுவதைக் காண்கிறோம்; ஆனால் இவற்றின் எதற்குள்ளும் அடையாளப்படுத்தப்படாத இலங்கைப் பெருநகரங்கள் அனைத்திலும் வாழும் நகரசுத்தித் தொழிலாளர்களான, தமிழ் வம்சாவளியான அருந்ததி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்முறையை தலித்திய அரசியல் புரிதலோடு இந்நூல் முன்வைக்கிறது.

நண்பர் சரவணன், இந்நூலில் தொகுத்துள்ள கட்டுரைகள் அனைத்தும் அவரது நேரடி அநுபவப் பகிர்வாகவே உள்ளன. சொந்த வாழ்க்கையை, எப்படியான அரசியல் சொல்லாடல்களில் பதிவு செய்வது என்பதற்கான ஆவணமாக இந்நூல் அமைகிறது. சுயசரிதை வடிவில் இந்த ஆக்கம் உள்ளது. பல்வேறு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நூற்றாண்டாக இலங்கையில் வாழும் அருந்ததி இன சமூக மக்களின் வாழ்க்கைச் சாட்சியமாகவும் சரவணன் இருக்கிறார். இவரது இந்தப் பதிவுகள் சுயசரிதையாக மட்டும் அமையாது அந்த மக்களின் எதார்த்த வாழ்கை சார்ந்த ஆவணமாகவும் அமைகிறது.

தமிழகத்தில் நொறுக்கப்படும், ஒடுக்கப்படும் மக்களை தலித்துக்கள் என அடையாளப்படுத்தும் சொல்லாடல் 1980களில் உருவானது. 1990களில் அம்பேத்கர் நூற்றாண்டு சார்ந்து, அவ்விதச் சொல்லாடல் சமூக இயக்கமாகவே வடிவம் பெற்றுள்ளது. இந்தியாவில் மகாராட்டிரம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலச் செயல்பாடுகளின் தொடர்ச்சியாக தமிழகத்திலும் நடைபெற்றது. இதன் விளைவு தலித் எனும் பண்பாடு அடையாளம், விடுதலைக்காண அடையாளமாக இன்று கருதப்படுகிறது. கலை இலக்கியத் துறையில் தலித் அடையாளம் என்பது தமிழ்ச்சூழலில் நிலைபேறு கொண்டுள்ளது. அதுவொரு புறக்கணிக்க இயலாத சக்தியாகவும் பேசுபெருளாகவும் வடிவம் பெற்றுள்ளது.

நண்பர் சரவணன், இந்நூலில் தொகுத்துள்ள கட்டுரைகள் அனைத்தும் அவரது நேரடி அநுபவப் பகிர்வாகவே உள்ளன. சொந்த வாழ்க்கையை, எப்படியான அரசியல் சொல்லாடல்களில் பதிவு செய்வது என்பதற்கான ஆவணமாக இந்நூல் அமைகிறது. சுயசரிதை வடிவில் இந்த ஆக்கம் உள்ளது. பல்வேறு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நூற்றாண்டாக இலங்கையில் வாழும் அருந்ததிய இன சமூக மக்களின் வாழ்க்கைச் சாட்சியமாகவும் சரவணன் இருக்கிறார். இவரது இந்தப் பதிவுகள் சுயசரிதையாக மட்டும் அமையாது அந்த மக்களின் எதார்த்த வாழ்க்கை சார்ந்த ஆவணமாகவும் அமைகிறது.

மேற்குறித்த தன்மை இலங்கைச் சூழலில் என்ன முறைமையில் புரிந்துகொள்ளப்படுகிறது? அதில் அருந்ததியினர் போன்ற மக்களை எவ்வாறு உள்வாங்குவது என்பது போன்ற உரையாடலை நண்பர் சரவணன் ‘சரிநிகர்‘ இதழ்களில் முன்னெடுத்தபோது, அதனை இலங்கையைச் சார்ந்த புலமைத்துவ சமூகம் அங்கீகரித்தது என்று சொல்லமுடியாது. நான் மிகவும் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்த புலமையாளர்கள்கூட, தமிழக நிகழ்வை இலங்கையில் இணைத்துப் பார்க்கவேண்டாம் என்ற தொனியில் பேசினார்கள். இலங்கையில் உள்ள தமிழ்ப் புலமைச் சமூகத்தினரோடு உரையாடல் நிகழ்த்தும் வாய்ப்பு அப்போதே எனக்குக் கிடைத்தது. இப்போது தொகுப்பாக சரவணன் அவர்களின் பதிவுகளை சுமார் இருபது ஆண்டுகள் கழிந்த இடைவெளியில் வாசிக்கும் போது, அறியப்படாது இருந்த ஒரு பக்கம், அருந்ததியர் வாழ் முறை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பெழுதிய தலித்திய குறிப்புகளையும் பின்னர் தான் தொடர்ந்து அத்துறை சார்ந்த எழுதிய கட்டுரைகளையும் இணைத்துள்ள இத்தொகுப்பு, இலங்கையில் பேசப்படாதிருந்த ஒரு பொருளை பேசுபொருளாக்கியுள்ளது. ‘சரிநிகர்‘ இதழில் பணிபுரிந்த நண்பர்கள் ஏறக்குறைய அனைவரையும் நான் அறிவேன். அவர்களின் அரசியல் புரிதல், சமூகத்திற்கு தங்களை அற்பணித்த வாழ்முறை ஆகியவை ஓரளவு எனக்குப் பரிச்சயமானவை. அந்தப் பின்புலத்திலிருந்து சரவணன் செய்த இந்த உழைப்பு, இன்றைக்கு திருப்பிப் பார்க்கும்போது, வரலாறு சரியாகவே பதிவாகியுள்ளது என்பதைப் புரிந்து கொள்கிறேன். இலங்கையில் வாழும் தமிழகத்திலிருந்து குடியேறியவர்களின் வரலாறு எழுதும்போது, அருந்ததியர் மக்களைப் பதிவு செய்யாமல் வரலாறு நிறைவுப் பெறாது. அந்தப் பணியைச் செய்துள்ள தோழர் சரவணன் அவர்களுக்கு எனது அன்பும் வணக்கங்களும் என்றும் உரியது.

அன்போடு
வீ. அரசு
‘கல்மரம்‘, பெருங்குடி
சென்னை-600096

சான்றாதார நூல்கள்
  1. 1984 - மோகன்ராஜ் க. இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத் தனம். (மலையக மக்கள் வரலாறு) ஈழ ஆய்வு நிறுவனம், சென்னை 24.
  2. 1987 - வேலுப்பிள்ளை ஸி.வி. நாடற்றவர் கதை. ஐலண்ட் அறக்கட்டளை வெளியீடு, சென்னை-4
  3. 1995 - மார்க்ஸ் அ. குறிஞ்சி, ஏகலைவன், அதியமான், ஞானி, கருணா மனோகரன். தலித் அரசியல் அறிக்கையும் விவாதமும். விடியல் பதிப்பகம், கோவை.
  4. 1997 - மலர், மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு 1996-1997, ஆய்வுக் கட்டுரைகள். (பன்னிரன்டு ஆய்வுக் கட்டுரைகள் பலரால் எழுதப்பட்டவை).
  5. 2001 - மாற்கு அருந்ததியர் வாழும் வரலாறு. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை.
  6. 2003 - ராஜ்கௌதமன், தலித்திய விமர்சனக் கட்டுரைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
  7. 2007 - மதிவண்ணன் ம. உள் ஒதுக்கீடு: சில பார்வைகள், கருப்புப்பிரதிகள். சென்னை -5.
  8. 2008 - இளங்கோவன், எழில். அருந்ததியினர் இயக்க வரலாறு. கலகம், சென்னை – 2.
  9. 2009 - Kalinga Tudor silva, P.P. Sivappragasam, Paramsothy Thanges. (Editors), International Dalit Solidarity Network, Copennhagen, Indian Institute of dalit Studies, Newdelhi, Kumaran Books, Colombo.
  10. 2012 - முத்துலிங்கம், பெ, (தொகுப்பு) பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள், (மலையக முச்சந்தி இலக்கியத் தொகுப்பு), ஆவணப்பதிப்பு. கயல்கவின், சென்னை-41.
  11. 2014 – அம்பேத்கர். ஜாதியை அழித்தொழிக்கும் வழி. தலித்முரசு கருப்புப்பிரதிகள், டாக்டர் அம்பேத்கர் சமூக கல்வி பொருளாதார அறக்கட்டளை. முதற்பதிப்பு 2010, இரண்டாம் பதிப்பு 2014, சென்னை-34.

  12. 2014 - நித்தியானந்தன். மு, கூலித்தமிழ். க்ரியா, சென்னை 41.
  13. 2015 - கந்தையா மு.சி. சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள், விடியல் பதிப்பகம், கோவை.
  14. 2018 - சுபகுணராஜன், வீ.எம்.எஸ். சாதியும்... நிலமும் காலனியமும் மூலதனமும்... கயில்கவின், சென்னை 41.
  15. 2018 - சுபகுணராஜன் வீ.எம்.எஸ். (தொகுப்பு), நமக்கு ஏன் இந்த இழிநிலை? ஜாதி மாநாடுகளிலும் ஜாதி ஒழிப்பு மாநாடுகளிலும் பெரியார். கயில்கவின், சென்னை, 41.

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates