Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

1883 : கொட்டாஞ்சேனையில் இலங்கையின் முதல் மதக் கலவரம் ( கொழும்பின் கதை - 11) - என்.சரவணன்

கொட்டாஞ்சேனையின் வரலாற்றைப் பேசும்போது “கொட்டாஞ்சேனை கலவரம்” பற்றி பேசாமல் இருக்க முடியாது.

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் அதாவது 1883இல் இலங்கையில் முதலாவது வகுப்புவாத கலவரம் நடந்தது. முதலாவது மதக் கலவரமாகவும் அதனைக் குறிப்பிடுவார்கள்.

“கொட்டாஞ்சேனை கலவரம்” ஆங்கிலேய ஆட்சி கால அரச பதிவுகளில் “Kotahena Riots” என்றே அழைக்கப்படுகிறது. இந்த கலவரம் நிகழ்ந்து முடிந்த பின்னர் இதனை விசாரிப்பதற்காக ஆங்கிலேய அரசினால் அமைக்கப்பட்ட குழு “The Kotahena Riots” என்கிற ஒரு அறிக்கையையும் வெளியிட்டது.

19 ஆம் நூற்றாண்டில் வடக்கில் சைவசமயத்தினரும் தெற்கில் பௌத்த சமயத்தினரும் தமக்கெதிரான கிறிஸ்தவ பிரச்சாரங்களை எதிர்த்து எதிர்ப்ப்ரச்சாரங்களிலும், பகிரங்க விவாதங்களிலும் ஈடுபட்டார்கள். அப்படி தென்னிலங்கையில் நடந்த பஞ்சமகா விவாதங்கள் மிகவும் பிரசித்தி வாய்ந்தவை. அவற்றில் ஒன்று 1873 இல் பாணந்துறை நகரத்தில் நடந்த விவாதம். . இந்த விவாதம் பிரபல பௌத்த பிக்கு மீகெட்டுவத்தே குணானந்த தேரரின் (மொஹட்டிவத்தே குணானந்த என்றும் அழைப்பார்கள்) தலைமையில் ஹிக்கடுவ சிறீ சுமங்கல தேரர் போன்றோரும் இணைந்து கிறிஸ்தவ மதப் போதகர்களுடன் நடந்தது. அந்த விவாதத்தின் உள்ளடக்கம் பல நூல்களாக வெளிவந்துள்ளன. மிசனரி மதமாற்ற நடவடிக்கையை முறியடிக்க பௌத்த பாடசாலை இல்லாததும் பெரிய குறைபாடாக பௌத்தர்கள் கருதினர். 1880 இல் பிரம்மஞான சங்கத்தைச் (Theosophical Society) சேர்ந்த கேர்ணல் ஒல்கொட் இலங்கைக்கு வரும் வரையில் இந்த நிலைமைகளில் அதிகம் மாற்றம் ஏற்படவில்லை. "1873 இல் பாணந்துறையில் நடைபெற்ற பிரபலமான பகிரங்க விவாதமே கேர்ணல் ஒல்கொட் இலங்கை வருவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. அவர் இலங்கை வந்ததும் நேராக கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமய விகாரை வந்து குணானந்த தேரரை சந்தித்தார். கூடவே அவர் பௌத்த மதத்தை தழுவவும் செய்தார்.

கிறிஸ்தவ சக்திகளை எதிர்கின்ற எதிர்ப்பியக்கங்கள் ஒருபுறம் பலமடையத் தொடங்கியது. ஆரம்பத்தில் காலனித்துவ எதிரிப்பின் சாயலைக் கொண்டிருந்தாலும் அதன் உள்ளடக்கம் பௌத்த மறுமலர்ச்சியும் கிறிஸ்தவ எதிர்ப்புமே என்று குமாரி ஜெயவர்த்தனா தனது நூலில் குறிப்பிடுகிறார். மேலும் தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்கள், மது ஒழிப்பு உட்பட பல்வேறு பொது பிரச்சினைகளையும் கையில் எடுத்தார்கள். சில இடங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளும் இடம்பெற்றன.

இலங்கையின் போக்கை இனவாத திசையில் வழிநடத்தியதில் அநகாரிக தர்மபாலாவின் வகிபாகம் என்னவென்பது அனைவரும் அறிந்ததே. அந்த அநகாரிகவை உருவாக்கிய சம்பவம் இந்த கொட்டாஞ்சேனைக் கலவரமாகும்.

இத்தகைய பின்னணியில் வளர்ச்சியடைந்த பௌத்த மறுமலர்ச்சியின் உந்துதலால் பௌத்தர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் விரிசல் அதிகரித்ததுடன், பரஸ்பர சந்தேக உணர்வும், ஆங்காங்கு முறுகல் நிலையும் வளரத் தொடங்கின. பௌத்த வணிகர்கள், அரச உத்தியோகத்தர்கள், எழுத்தாளர்கள் போன்றோர் பௌத்த எழுச்சியை ஆதரிக்கத் தொடங்கியதுடன் கிறிஸ்தவ மேலாதிக்கத்துக்கு எதிர்த்து செயல்பட்டனர்.

கொட்டாஞ்சேனை தீபதுத்தாமாறாமயவில் தலைமை மதகுருவாக இருந்த மீகெட்டுவத்தே குணானந்த தேரர் அந்த விகாரையில் உள்ள புத்தர் சிலைக்கு கண்களை வைப்பதற்கான வைபவத்தை 1883 பெப்ரவரி மாதம் நடத்த திட்டமிருந்தபோது பிரதான அரச வைத்திய அதிகாரி ஒரு அறிக்கையை அனுப்பி வைத்திருந்தார். அதன்படி கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பரவி வரும் நோயொன்றின் காரணமாக இந்த வைபவத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்பதற்கு குணானந்த தேரர் ஒப்புக்கொண்டபோதும் இந்த செய்தியின் பின்னணியில் சதி இருப்பதாக சந்தேகித்தார்.

இதற்கு முன்னரும் 1872இல் கொச்சிக்கடையிலும் 1880இல் மாதம்பிட்டியிலும் பௌத்த பெரஹரவின் போது கல் எறிந்து குழப்ப முயற்சித்ததையும் முகத்துவாரத்தில் பாதையை மறித்த சம்பவத்தையும் அவர் நினைவுபடுத்தினார். சிலைகளுக்கு கண் வைக்கும் வைபவத்துக்கு ஊர்வலமாக வந்து பூஜைகளை செய்யும்படி பெளத்தர்களைக் கேட்டுக்கொண்ட குணானந்த ஹிமி அதற்கான போலிஸ் ஒப்புதலையும் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து பலர் தீபதுத்தமாறாமய விகாரைக்கு சென்றார்கள். அந்த விகாரையின் ஒரு பகுதியில் கந்தசுவாமி கோவில் ஒன்று இருந்ததாகவும் அதற்கும் பௌத்த துறவிகள்  திருவிழா நடத்தியதாகவும் 1887இல் வெளிவந்த ரிவிரெச பத்திரிகை  கூறுகிறது.

பெளத்தர்கள் இவ்வாறு அணிதிரள்வது தம்மை சீண்டும் நடவடிக்கையாக சந்தேகித்தனர். ஏற்கெனவே பாணந்துறை விவாதத்தில் குணானந்த தேரர் தலைமையிலான பௌத்த தரப்பே வென்றிருந்ததும் அதிருப்தி நிலையை உருவாக்கியிருந்தது.

கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயம் கட்டப்பட்டுகொண்டிருந்த காலம் அது. தீபதுத்தமாறாமய விகாரைக்கும் புனித லூசியாஸ் தேவாலயத்திற்கும் ஏறத்தாழ ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரமே உள்ளது.

அன்றைய மிசனரி திருத்தூதர் ஜே.மாசிலாமணி இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு 6ஆம் திகதியே சில எச்சரிக்கையை எழுத்து மூலம் செய்திருந்தார்.  ஈஸ்டர் பண்டிகைக் காலத்தில் பெரிய வெள்ளி மற்றும் குருத்து ஞாயிறு ஆகிய தினங்களில் பௌத்த பெரஹரவுக்கு அனுமதி வழங்குவது முறுகலை ஏற்படுத்தும் என்றும் சில அசம்பாவிதங்கள் நடக்கவிருப்பதாக கதைகள் உலவுவதாகவும், வழமைபோல ஈஸ்டர் காலத்து புனித ஊர்வலத்தை இடையூறு இல்லாமல் நடத்திமுடிக்க ஒத்துழைக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடித விபரங்கள் “The Kotahena Riots” அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறன.

பெரிய வெள்ளிக்கு முன்னர் நடந்த பெரஹர நிகழ்வுகளுக்கு போலீசார் பந்தோபஸ்து வழங்கியிருக்கிறார்கள். சில கத்தோலிக்கர்கள் கல்லெறிந்தார்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் கைதும் செய்யப்பட்டிருகிறார்கள். இதனைத் தொடர்ந்து பெரிய வெள்ளியன்று நடத்தப்படவிருந்த புனித ஊர்வலத்துக்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. மார்ச் 25 குருத்து ஞாயிறன்று மதியம் 12 வரை தேவாலய பூஜைகளுக்குப் பின்னர் பெரஹரவுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

இந்த சமயத்தில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டிருந்தன. இலங்கையில் எந்த மூலையிலும் எந்த நேரத்திலும் பௌத்த பெரஹர நடத்துவதற்கான அனுமதியை பிரித்தானிய இராணியிடமிருந்து குணானந்த தேரர் பெற்று வந்திருப்பதாகவும் நாடு முழுதும் வதந்தி பரப்பப்பட்டதுடன் அது பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறது.

கலவரம்

அன்று இரவு பொலிஸ் பந்தோபஸ்துடன் பெரஹர பொரல்லையிலிருந்தும் கொள்ளுப்பிட்டியிலிருந்தும் வந்த ஊர்வலம் மருதானையில் இணைந்துகொண்டு கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமய விகாரையை நோக்கி நகர்ந்தது. இதனை தடுத்து நிறுத்த கத்தோலிக்க தரப்பு மேற்கொண்ட சகல முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஊர்வலத்தில் இருந்துள்ளனர்.

குணானந்த தேரர் இந்த பெரஹரவில் பல வித ஆட்டங்களை சேர்த்துக்கொண்டார். தாள வாத்திய அணி, சாட்டையடி, புலியாட்டம், மரபான பேயாட்டம், தீ விளையாட்டு, வில் அம்பு தரித்தவர்கள், பெரிய உருவப்பொம்மை என பலதும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. 

இதற்கிடையில் பெரிய உருவப்பொம்மை குறித்து மின்னல் வேகத்தில் ஒரு வதந்தி பரவியது. அதாவது ஒரு குரங்கொன்றை சிலுவையில் அறைந்து ஊர்வலமாக கொண்டு வருகிறார்கள் என்பதே அது. அன்னை மரியாளைக் கேலி செய்யும் பொம்மைகள் உள்ளன என்றும் பிழையான வதந்தி பரப்பட்டிருந்தது. அதுபோல மறுபக்கம் பெரஹரவைத் தாக்குவதற்காக கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்கர்கள் தயாராக நிற்கிறார்கள் என்று ஊர்வலத்தில் ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டிருந்தது. பெரஹரவில் இருந்து பெண்களும் சிறுவர்களும் அகற்றப்பட்டார்கள். ஊர்வலத்தில் கற்களையும். பொல்லுகளையும் தாங்கியவர்கள் இடையில் இணைந்து கொண்டார்கள்.

பெரஹர கொட்டாஞ்சேனையை நெருங்கியபோது திடீரென்று புனித லூசியாஸ் ஆலயத்தின் மணிகள் பலமாக அடிக்கத் தொடங்கியதும் அனைவரும் குழம்பிப்போனார்கள். பலர் தேவாலயத்தை சூழ்ந்தனர். அந்த மணியை யார் எதற்காக அடித்தார்கள் என்பது பற்றி போலீசாரால் இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அனால் அந்த ஒலி ஒரு பெரிய கலவரத்தையே உண்டு பண்ணியிருந்தது. பரஸ்பர சந்தேகங்கள், ஊகங்கள், வதந்திகள், பய உணர்ச்சி, தூண்டுதல், எதிர்பாரா திடீர் சம்பவங்கள் எல்லாம் சேர்ந்து ஆளையால் கொலைவெறிகொண்டு தாக்கிக்கொண்டனர். கட்டுப்படுத்துவதர்க்காக அழைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் வந்து சேர்ந்தபோது அனைத்தும் ஓய்ந்திருந்தது.

இந்த கலவரத்தில் பௌத்த தரப்பை சேர்ந்த ஜூவன் நைதே என்பவர் கொல்லப்பட்டார். 12 உட்பட 30 பேர் மோசமான காயத்துக்கு உள்ளானார்கள். அதே நாள் பலங்கொட, கண்டி போன்ற இடங்களிலும் அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன. அன்றைய தேசாதிபதி கொட்டாஞ்சேனை விகாரைக்கு விரைந்து குனானனந்த தேரருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக தொடர்ந்தும் 30ஆம் திகதி வரை பெரஹர நடத்த அனுமதி வழங்கினார்.  

சம்பவம் நடந்து அடுத்தடுத்த நாட்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்த சிறு தேவாலயங்கள் தீயிடப்பட்டன. அதுபோல பௌத்த பெரஹரக்களும் குழப்பப்பட்டன. தீபதுத்தமாறாமய விகாரையை கொளுத்தி குணானந்த தேரரை கொல்வதற்காக நீர்கொழும்பிலிருந்து 3000 பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற வதந்தியும் வேகமாக பரப்பபட்டிருந்தது. இந்த சம்பவத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கையை வெளியிட்டதோடு சரி. இந்த சம்பவத்துக்காக எவரும் கைது செய்யப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை. குணானந்த தேரர் பௌத்தர்களை மத ரீதியில் தூண்டுவதற்கு எப்படிப்பட்ட பிரசாரங்களை எல்லாம் மேற்கொண்டார் என்பதற்கு அதன் பின் வெளிவந்த அவரது வெளியீடுகள் சாட்சி. 

கொட்டாஞ்சேனை சந்தியில் சில வருடங்களுக்கு முன்னர் குணானந்த தேரருக்கு சிலை கட்டப்பட்டது.

நன்றி - தினகரன் 16-012022


சைவதூஷண பரிகாரம் : யூதர்கள் சைவர்களான கதை - சச்சிதானந்தன் சுகிர்தராஜா

 ஜனவரி, ஆண்டு 1856. காலனிய யாழ்ப்பாணத்தில் ஊழியம் செய்தமெதடிஸ்த பாதிரியார் ஒருவருக்கும் காலனியாக்கப்பட்ட குழப்படிக்காரர் ஒருவருக்கும் கடுப்பான கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. உடனடித் தூண்டுதலான காரணம் இந்த குழப்படிக்காரர் பதிப்பித்த சிறு நூல். இறையியல் எறிகுண்டான இந்தப் பிரசுரம் பாதிரியாரின் மதப்பரப்பலுக்குத் தடையாகவிருந்தது; அதுமட்டுமல்ல கிறிஸ்தவத்தின் அடிப்படைச் சித்தாந்தக்கூறுகளை விசாரித்தது. பாதிரிகளின் இரட்டைத்தனத்தை அம்பலப்படுத்தியது. ஆண்டைகளுக்கு வரும் ஆணவத்துடனும் ஆத்திரத்துடனும் எழுதிய கடிதம், மேலோர் கீழோரிடத்தினருக்குக் காட்டும் பொய்யான பாசம், மிரட்டல், மன்றாட்டம் கொண்ட ஒரு கலவை. அந்தப் பாதிரியாரின் ஆங்கில வார்த்தைகள் மெலிதான மொழிபெயர்ப்பில்: 'இந்தத் துண்டு பிரசுரத்தை எழுதியவன் நீ. உண்மையைச்சொல்லிவிடு. அல்லா விட்டால் உன்னைப் பற்றி ஊராருக்கு அறிவிப்பேன்'.

அந்த அனாமதேயக் காலனியக் குழப்படிக்காரர் ஆறுமுக நாவலர் (1823 - 1879). மதப் பரப்பாளருக்குத் தலையிடியைக் கொடுத்த பிரதி ஏதோ ஒரு பரியாரியாரின் வைத்தியக் கைநூல் போன்ற தலைப்பைக்கொண்ட நாவலரின் சைவதூஷணபரிகாரம். ஆறுமுக நாவலரை ஆக்கினைப்படுத்திய அந்தப் பாதிரியார் ஜான் வால்டன்.

19ஆம் நூற்றாண்டில் காலனிய யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலரை ஒரு பெரிய ஆளுமை என்று சொல்வது தண்ணீர் ஈரமானது என்று சொல்வதைப் போன்றது. நாவலர் சம அளவில் ஆராதிப்பையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தக்கூடியவர். சர் முத்துகுமாரசாமி (The Dance of Shiva புகழ் ஆனந்த குமாரசாமியின் தந்தையார்) நாவலரை 'இந்துக்களின் இந்து' என்றார். அவருடைய எதிரிகள் அவரைப் 'பொய்யர்,' 'நா - அலர்', 'வித்தையில்லாதவன்' என்றார்கள். ஆனால் எல்லாரும் ஒத்துக்கொண்டது - சிலர் ஆர்வத்துடனும் சிலர் எரிச்சலுடனும் - 'சைவ சமயம் யாழ்ப்பாணத்தில் தொடர்வதற்குக் காரணம் நாவலர்.'

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி சமயக் கண்டன இலக்கியத்தின் வளமான நாட்கள். கிறிஸ்தவர்களும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒருவரையொருவர் இகழ்ந்தும் தாக்கியும் பகடி செய்தும் துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். இவற்றுக்கெல்லாம் உச்சம் நாவலரின் சைவதூஷணபரிகாரம்.

பிரதிகள், யாழ்ப்பாணப் பனைமரம் போல் தனித்து நிற்பவை அல்ல. அவற்றுக்குப் பின்னாலும் முன்னாலும் கதைகள் உண்டு. அவை சட்டென்று உதிப்பதில்லை. சைவதூஷண பரிகாரம் தனித்திருக்கும், தனிப்பட்ட பிரதி அன்று. அதற்குப் பின்னால் ஒரு கதை உண்டு. நாவலர் அவரின் வீட்டு விராந்தையிலிருந்து திடீரென எழுதி முடித்ததுமல்ல. முதலில் அதன் பின்புலனைச் சொல்லிவிட்டு இந்தக் கட்டுரையின் பிரதான விஷயத்திற்கு வருகிறேன்.

ஆறுமுக நாவலர் சைவதூஷணபரிகாரம் எழுதுவதற்கு முன் 1843இல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த உதயதாரகை பத்திரிகையில் சைவகுமாரன் நன்மதரபேசன் என்ற பெயரில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அப்போது அவர் பீட்டர் பெர்சிவல் பாதிரியாரோடு தமிழ் கிறிஸ்தவ வேத தமிழ் திருப்புதலில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு வயது 21. சைவதூஷணபரிகாரத்தில் நாவலர் எழுதிய பொருளடக்கத்தின் சில பொதுக் கருத்துப் படிவங்களையும் சைவ, கிறிஸ்தவ திருமறைகளிலிருந்து எடுத்துக்காட்டிய உதாரணங்களையும் அவரின் உள் எண்ணங்களையும் இந்தக் கடிதத்தில் காணலாம். சைவதூஷணபரிகாரம் நாவலரின் இந்த எண்ணங்கள் நீட்டப்பட்ட ஒரு தொடர்பகம் ஆகும்.

காலனிய நாட்களில் ஆங்கில ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்துடன் கீழை நாடுகளுக்கு வந்த கிறிஸ்தவ குருமார்களின் முக்கியப் பணி நற்செய்தி பரப்புவதுதான். அதில் அவர்கள் உக்கிரமாக ஈடுபட்டிருந்தார்கள். அதை நிறைவேற்ற இந்து மதத்தைப் பழித்தும், சைவ தெய்வங்களைக் கேவலமாக - முக்கியமாக சைவ கோயில் வழிபாட்டை வீணான, கீழ்நிலையான கடவுள் வணக்கம் என்று கூறியும் நூல்கள், பிரசங்கங்கள் மூலமாகப் பரப்புரை செய்துவந்தார்கள். நாவலர் அக்கடிதத்தில் தானும் அவரின் ஊரவர்கள் போல் சைவத்தை அனுசரித்து வந்தவர்களென்றும் மதப்பரப்பாளர்களின் தாக்குதலால் மனம் உணர்ச்சியடைந்து கிறிஸ்தவ மதத்தை ஆராய வேண்டும் என்ற ஆர்வத்துடன் வேதத்தை வாசித்ததினால் ஏற்பட்ட சமூச்சியங்களை (நாவலரின் வார்த்தை , அதன் அர்த்தம் 'சந்தேகங்கள்') அகற்றும் பொருட்டு இக் கடிதத்தை எழுதியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

உதயதாரகைக்குக் கடிதம் எழுதிய பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நாவலர் சைவதூஷணபரிகாரத்தை எழுதினார். அதற்கான காரணத்தையும் அந்த நூலிலேயே எழுதியிருந்தார். சிவன் பிசாசு என்றும், சைவ வேதங்கள் பொய் என்றும், சைவ மார்க்கம் துர்மார்க்கம் என்றும், சைவர்கள் பிசாசுக்கு அடிமைகளென்றும் கிறிஸ்தவர்கள் எழுதியும் பிரசங்கம் பண்ணியும் வந்தார்கள். இவற்றில் சில சைவசமயத்தை நிந்தித்த நூற்கள் 'குருட்டு வழி', மும்மூர்த்திலட்சணம்.' இவை பிரதிகளின் கொச்சிக்காய்ச் சம்பல்; இறையியல் காரமானவை.

சைவதூஷணபரிகாரம் இரு பாகங்களைக் கொண்டது. முதல் பகுதி சக சைவர்களுக்கும் இரண்டாவது பகுதி யாழ்ப்பாணத்தில் சுவிஷேச வேலை செய்த கிறிஸ்தவ குருமாருக்கும் எழுதப்பட்டது. சைவர்கள் எப்படி விழிப்பாக இருக்க வேண்டும், எப்படி மனங்கசிந்துருக - உரோமஞ்சிலிர்க்க - கண்ணீர் சொரிய தியானம் செய்யவேண்டும், எந்த நூல்களை வாசிக்க வேண்டும், பாதிரிமார்கள் சைவர்களின் மதத்தைப் பரிசித்தால் அவர்களின் வாயை எப்படி மூட வேண்டும் என்றெல்லாம் நாவலர் ஆலோசனை கொடுத்திருந்தார்.

இரண்டாம் பகுதியின் சூசீபத்திரத்தில் (பொருளடக்கம்) , 22 பிரகரணங்கள் (அத்தியாயங்கள்) பட்டியல்படுத்தப்பட்டிருக்கின்றன. நடுவிலும் இறுதியிலும் இரண்டு இடையிட்டுரைகளைப் புகுத்தியிருந்தார். நாவலர் உபயோகித்த பதம் விவேசனம் (உண்மை பொய் பிரித்துணர்தல்). இந்த இருபத்திரண்டு அத்தியாயங்களில் முதல் பதினான்கு ஆகம ஆலயவழிபாடு பற்றியது. மிகுதி சைவ வாழ்க்கை பாணி பற்றியது.

நாவலர் கையாண்ட இலக்கிய வழி, ஒப்பிடல் முறைமையாகும். கிறிஸ்தவ குருமார் எந்த சைவ ஆலய வழிபாடுகளை ஏளனம் செய்தார்களோ அவற்றுக்கு இணையான சம்பவங்களைக் கிறிஸ்தவ வேதத்திலிருந்து உதாரணங்களாக எடுத்துக்காட்டினார் அவர். பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களான யாத்திரகாமம் (25 & 37) லேவியராகமம் (17 & 24) எண்ணாகமம் (16, 19, 21) சங்கீதப்புத்தகம் (80). சாமுவேல் (6) போன்றவற்றில் நிறையவே விவரிக்கப்பட்டிருக்கும் யூத ஆலய வழிபாடுகளுக்கும் நல்லூர் கந்தசாமி கோயில் வழிபாட்டுக்கும் என்ன வித்தியாசமென்று கேட்டார். எங்களுக்கு இலிங்கம், உங்களுக்குத் தேவனைத் தொழுதுகொள்ளும் உடன்படிக்கைப் பேழை. சிவன் இலிங்கத்தில் அடித்திருத்தல் (நாவலர் தமிழ்ப் படுத்திய சமஸ்கிற சொல் adhi-stha) போல் உடன்படிக்கை பேழையில் எகோவா பிரசன்னமாகியிருக்கிறார். இலிங்கத்துக்கு முன் நாங்கள் சாஷ்டாங்கம் செய்வது போல் யோசுவா, தாவீது போன்றோர் அந்தப் பேழை முன் பிரதிட்டை பண்ணவில்லையா என்றார். நாங்கள் விக்கிரகத்திற்குத் தீபம் காட்டுகிறோம். அவ்வாறே வெள்ளைப்போளம், கலப்பில்லாச் சாம்பிராணி கடவுளுக்குப் பரிசுத்தத் தூபமாக்குவாயாக என்று யூதர்களுக்கு மோசஸ் சொல்லவில்லையா என்று வினவினார். சந்திப்புக் கூடாரத்தில் உடன்படிக்கைத் திரைக்கு வெளியே, மாலைமுதல் காலைவரை எப்போதும் ஆண்டவருக்கு முன் தீபம் எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்று லேவியராகம வசனத்தையும் எடுத்துக்காட்டினார். சிவன் கோயில்களில் நடக்கும் நடனங்களைக் கிறிஸ்தவர்கள் கேலி செய்தபோது தாவீது அரசன் கடவுளின் சன்னிதியில் நடனமாடியதை உதாரணம் காட்டினார். பூசை, உற்சவங்களின்போது சிவ சன்னிதியில் பலவகை வாத்தியங்கள் முழங்குவதை இகழ்ச்சியாகக் கருதியபோது தாவீது தம்புரு, சுரமண்டலம், கைத்தாளம் ஆகிய கருவிகளை இசைத்து மகிழ்ச்சி ஒலி எழுப்பக்கூடிய பாடகரை நியமிக்கக் கட்டளை இட்டதை நினைவூட்டினார். புண்ணிய காலங்கள், விரதங்கள், திருவிழாக்களை அனுசரிப்பது வீண்செய்கைகள் என்று கிறிஸ்தவ குருமார்கள் கணித்தபோது நாவலர் லேவிராகமம் 23 இலிருந்து இவற்றை யூதர்கள் கடைப்பிடித்ததைச் சித்தரித்தார். யூதரின் புனித நாள், புண்ணிய காலங்களும் பண்டிகைகள் இந்த அத்தியாயத்தில் விபரிக்கப்படிருக்கின்றன. சிவாலய சேவைக்குச் சரீர சுத்தி செய்து 'தௌத' (தளர்ச்சியான) வஸ்திரம் தரிக்க வேண்டும். அதையே ஆரோனும் அவனுடைய புத்திரர்களும் சலத்தினால் ஸ்நானம் செய்து பரிசுத்த வஸ்திரங்களை அணிந்தார்கள். சரீரசுத்தி அவசியம் என்று உங்கள் சமய நூல் சொல்லும்போது எப்படி நாங்கள் செய்வது மட்டும் மடமையாகும் என்று கேட்டார்.

சைவர்கள் முண்டனம் (தலைசிரைக்கை) செய்வதையும், காவி வாஸ்திரம் தரிப்பதையும், சடைவளர்ப்பதையும் இகழ்ந்தபோது நாவலர் பவுல் நேர்த்திக் கடனை நிறைவேற்ற முடிவெட்டியதை நினைவூட்டினார். அர்ப்பணம் செய்துகொண்ட காலம் முழுதும் சவரக்கத்தி அவன் தலையில் படக்கூடாது; ஆண்டவருக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காலம் முடியுமட்டும் அவன் தன் தலைமுடியை நீளமாக வளரவிடுவான் என்ற பழைய ஏற்பாட்டு வசனத்தை ஞாபகப்படுத்தினார்.

இஸ்ரவேல் சந்ததியினர் இறையாட்சி சமீபிக்கும்போது மனம் திருந்துவதற்கு முரட்டுத்துணி உடுத்திச் சாம்பலில் உட்காரவேண்டியதை எடுத்துக்காட்டினார்.

சைவ கிறிஸ்தவ சமயங்களிடையே காணப்படும் ஒப்பீடுகளை எடுத்துக்காட்டிச் சில கேள்விகளை நாவலர் எழுப்பினார். "ஆலய வழிபாட்டில் சைவத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் என்ன வித்தியாசம், இவ்வளவு ஒற்றுமை இருக்கும்போது ஏன் எங்களுடைய மதத்தைப் பரிகாசம் செய்கிறீர்கள். எபிரேய மறையில் காணப்படும் இந்த ஆலய ஒழுங்குகளெல்லாம் யூதருடைய கடவுளினால் விதிக்கப்பட்ட நித்திய நியமங்கள், தலைமுறை தலைமுறையகாகக் கடைப்பிடிக்க வேண்டியவை. இவற்றை எவ்வாறு நீங்கள் கைவிடமுடியும்? உங்களுடைய வழிபாடுகள் இடுகுறியானவை என்று சொல்கிறீர்கள். அதே மதிப்பை ஏன் எங்களின் சமய முறைமைகளுக்குத் தருவதில்லை. அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் இயேசுவின் சரீரத்துக்கும் இரத்தத்துக்கும் அடையாளங்கள் என்கிறீர்கள். ஆனால் நாங்கள் கல்லையையும் புல்லையும் வணங்குகிறோம் என்று நேர் பொருளில் எடுத்துக்கொள்கிறீர்கள். எங்கள் கடவுளுக்கும் கல்லுக்கும் புல்லுக்கும் வித்தியாசம் எங்களுக்குத் தெரியாதா என்று கேட்டார்.

நாவலரும் கிறிஸ்தவ மதப்பரப்பாளர்களும் இரண்டு விதமான மொழிகளில் பேசினார்கள். நாவலருக்கு ஆலயச் சடங்குகள் முக்கியமாகப் பட்டன. கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு மதக் கோட்பாடும் கொள்கைகளும் பிரதானமாயின. நாவலருடைய வாதம் மதப்பரப்பாளர்கள் பரப்பிய கிறிஸ்தவம், திருமறை போதித்த மதமல்ல; நிறுவனமாக்கப்பட்ட திருச்சபையால் உருவான மதம். மதப்பரப்பாளர்கள் உருவாக்கிய மதம். வழமையான கிறிஸ்தவர்களின் எண்ணம் சைவர்கள் அவர்களுடைய வழியிலிருந்து சறுக்கிவிட்டார்கள் என்பது. இதற்குமாறாக நாவலர் கிறிஸ்தவர்கள் தான் அவர்களுடைய உண்மையான பாதையிலிருந்து வழுக்கிவிட்டார்கள் என்றார்.

சைவதூஷணபரிகாரத்தில் நாவலருடைய சரியான எரிச்சலும் கோபமும் தெரிகின்றன. அவரின் நடை நயமற்றது. மோதல் போக்கானது. மதகுருமாரை 'நீ', 'நுமது' என்றுதான் அழைத்தார். 'அதிபாதகர்', 'பணச்செருக்குடையவர்கள்', 'புல்லர்கள்', 'மதிமயக்கமானவர்கள்' என்றும் சொன்னார். அவரின் சினத்திலும் வசைத் திறன் இருந்தது. இலிங்கத்துக்குப் படைத்த பால், பழம், மோதகத்தை உங்கள் கடவுள் எப்போது புசிக்கவருவார் என்று கிறிஸ்தவர்கள் ஏளனம் செய்து சிரித்தபோது, எபிரேயப் புத்தகமான எண்ணாகமத்தை எடுத்துக்காட்டி, நீங்கள் சமாதானப் பலியாகச் செலுத்திய ஆட்டுக்கடாவையும் அதிரசத்தையும் அடையையும் புளிப்பில்லா அப்பத்தையும் உங்கள் எகோவா சாப்பிட வரும்போது என்றார். ஆனால் ஒன்று பவுத்த மதத்திற்குப் புத்துயிர் கொடுத்த அனகாரிக தர்மபாலா போல் கிறிஸ்துவைப் பற்றியோ, விவிலிய நாயகர்களாகிய பேதுரு, பவுல் போன்றவர்கள் பற்றியோ நாவலர் இழிவாகச் சொல்லவில்லை. தர்மபாலா, விவிலிய எகோவாவைக் காட்டுமிராண்டிக் கடவுள் என்றார். இயேசுவின் நற்செய்தி தாறுமாறான ஒரு இறையியல் குவியல் என்றார்.

நாவலருடைய உதயதாரகை கடிதத்திற்கு யாழ்ப்பாணக் கிறிஸ்தவக் குருமார் மூன்று இதழ்களில் தொடர்ந்து பதில் எழுதினார்கள். திருச்சபை தொடங்கிய காலம் முதல் வழக்கமாகக் கைப்பிடித்த கிறிஸ்தவ நிலைப்பாட்டையே மீண்டும் தொகுத்துரைத்தார்கள். அதில் முக்கியமானது. இயேசுவின் வருகையினால் பழைய ஏற்பாட்டில் மோசே நியமித்த நியாயப் பிரமாணங்கள் முற்றுப்பெற்று விட்டன. ஆகையினால் அவை இனிச் செல்லுபடியாகாது என்றார்கள். நாவலர் ஒத்துக்கொள்ளவில்லை. அப்படியானால் ஏன் இயேசுவிற்குச் சுன்னத்துச் செய்யப்பட்டது, பவுல் எதற்காகத் தீமோத்தேயுவுக்கு விருத்தசேதனம் பண்ணினார் என்று கேட்டார். பவுல் ஆலயவழிபாடுகளை அனுசரித்ததை நினைவுபடுத்தினார். பவுல் அவருடைய நிரூபங்களில் பலியையும் விருத்தசேதனத்தையுமே தவிர்க்கச் சொன்னார். ஆலய வழிபாடுகளை நீட்டிக்கச்செய்தார் என்று பவுலின் எழுத்துக்களிலிருந்து மேற்கோள் காட்டினார். அத்துடன் விடவில்லை. இயேசு அவருடைய வருகையால் பழைய உடன்படிக்கை விருதா என்று சொன்னதாகப் புதிய ஏற்பாட்டில் வசனங்கள் இல்லை என்றார். இன்னுமொரு இறையியல் குண்டையும் தூக்கிப்போட்டார். "பழையவைகள் ஒழிந்தன என்று கட்டளையிட இயேசு என்ன கடவுளா? அப்படியானால் நீங்கள் இரு தெய்வங்களை வணக்கம் செய்கிறீர்களா,” என்றும் கேட்டார்.

யாழ்ப்பாணக் கிறிஸ்தவ குருமார் அவர்களுடைய பதிலின் இறுதியில் இரு எச்சரிக்கைகளையும் விடுத்திருந்தார்கள். யாத்திரகாமம் 32 இல் விக்கிரகங்களையும் பலதெய்வங்களையும் வணங்குகிறவர்களைக் கடவுள் வேருடன் பிடுங்கி அந்த நாட்டைத் தன் ஜனங்களுக்குக் கொடுப்பார். இந்த வசனத்தின் உப செய்தி: சைவ நாடுகள் அஞ்ஞானப் பழக்கங்களான பல கடவுள் கொள்கையைக் கைவிடாவிட்டால் இந்த நாடுகள் புதிய இஸ்ரவேலரான யாழ்ப்பாணக் கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்படும். அதுமட்டுமல்ல மதம் மாறிய சைவர்களை மறுபடியும் இந்து சமயத்திற்கு இழுக்கிறவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று ஒரு வேத வசனத்தைக் காட்டியிருந்தார்கள்: “உன் தேவனாகிய கர்த்தரை விட்டு விலகும்படி அவன் உன்னை ஏவினபடியினால், அவன் சாகும்படி அவன்மேல் கல்லெறியக் கடவாய்.” (உபகாமம் 13.10) இந்த வசனத்தின் உட்கோள் நாவலர் போன்ற வம்புக்காரர்களைத் தண்டிக்கத் தயங்கவேண்டாம் என்பது. நாவலர் விடவில்லை. தன் சண்டித்தனத்தைக் காட்டினார். சண்டியர் அல்லாத யாழ்ப்பாணத்தான் யார்? சைவத்தை நிந்திக்கும் கிறிஸ்தவக் குருமாருக்கு என்ன நடக்கும் என்று சொன்னார். மறைஞான சம்பந்தரின் சிவதருமோத்தரத்தை எடுத்துக்காட்டி சிவன் அருளிச்செய்த வேத ஆகமங்களுக்கு ஒப்பாகவேனும் உயர்வாகவேனும் பிறிதொரு நூலைச் சொல்வோர், சிவ ஆகமங்களை நிந்தை செய்வோரும் வெம்மையுடைய எரி நகரத்தில் கிடந்து துயரடைவார்கள். எப்போது கரை ஏறுவோம் என்று வாடி ஏக்கமடைவார்கள் என்று பாதிரிமார்களுக்குப் பயம் காட்டினார்.

நாவலருடைய கிறிஸ்தவ திருமறை வாசிப்பில் யூதர்களைச் சைவர்கள் போல் ஆக்கினார். சைவர்களைப் பார்க்க திருமறை யூதர்கள் தான் "ஆசார அநாசாரங்களை அதிகமாகக் கவனித்தார்கள்” என்று சொன்னார். கிறிஸ்தவத் திருமறை நாவலரின் வாசிப்பில் ஏதோ ஆலயவழிபாட்டை அங்கீகரிக்கும் சைவ ஆகமம் போல் தென்பட்டது.

அன்றைய கால இந்துச் சீர்திருத்தவாதிகளான ராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, கேசவ் சுந்தர் சென் போன்றவர்களிடையே கிறிஸ்தவர்களைவிட இந்துக்களே அதிகம் துலக்கமாக, தெளிவாக கிறிஸ்துவத்தை விளங்கிக்கொண்டார்கள் என்ற ஆணவமும் அகந்தையும் இருந்தது. அந்த இறுமாப்பும் நாவலரிடம் இருந்தது.

நாவலரை இந்திய இந்து மதச் சீர்திருத்தாளர் தயானந்த சரஸ்வதியுடன் ஒப்பிடலாம் என்று க. கைலாசபதி ஒருமுறை சொன்னார். எனக்கு ஏதோ ராம் மோகன் ராய்தான் சரி என்று படுகிறது. வங்காளியான ராய் வைஷ்ணவர். தமிழரான நாவலர் சைவர். இருவரும் பள்ளிக்கூடங்கள், பத்திரிகைகள் நடத்தினார்கள். ராய் சமஸ்கிருத வேதங்களைத் தன் மக்கள் புரிந்துகொள்ளும்படி வங்காளத்தில் மொழிபெயர்த்தார். நாவலர் கவிதை வடிவில் எழுதப்பட்ட வேதாகமங்களைச் சைவர்கள் எளிதாகப் படிக்க உரைநடையில் எழுதினார். இருவருமே கிறிஸ்தவத் திருமறை மொழிபெயர்ப்பில் ஈடுபட்டவர்கள். ராய் 'கிறிஸ்தவர்களின் திருமறை மனித இயலுணர்வை அவமதிக்கிறது' என்றார். நாவலர் விவிலியம் ஒரு பொய் நூல், தூஷணப்புத்தகம்' என்றார். நாவலரைப் பொறுத்தவகையில் தேவாரம், திருவாசகம் 'திராவிட வேதங்கள்.' சிவஞானபோதம், சிவஞானசித்தியார் 'திராவிட சித்தாந்தங்கள்'. ஆலய வழிபாடு பற்றி அறிந்திருந்ததால், கிறிஸ்தவ மதப் பரப்பாளர்களைவிட தனக்கு கிறிஸ்தவத் திருமறையை விளங்கிக்கொள்ள முடிகிறதென்றார் நாவலர். எந்த இறையியல் முன்னீடுபாட்டுடனும் திருமறையை அணுகாததால், மதப்பரப்பாளர்களைவிட வேதத்தின் வகைநுணுக்கங்களை, விபரங்களைத் தன்னால் அறியமுடியும் என்றார் ராய். இருவருமே பாரபட்சமற்ற சமய குருமார் வசையாளர்கள். சமயங்களிடையே வித்தியாசம் காட்டவில்லை. ராய் வைஷ்ணவ குருக்கள் அர்த்தம் தெரியாமல் சுலோகங்களை அசைபோடுகிறார்கள் என்றார். நாவலர் சைவ குருக்கள் அந்திரேட்டி என்று எழுதத் தெரியாத காளை மாடுகள்' என்றார். இருவரும் மதமாற்றத்தை முழுமையாய் எதிர்த்தார்கள். அன்னிய மதப்பரப்பாளர்கள் அஞ் ஞானிகள் என்ற பதத்தை இவர்களுக்குப் பாவித்தபோது அதைத் திருப்பிப் பாதிரியார்களுக்கே உபயோகித்தார்கள். அற்புதங்களில் நம்பிக்கை வைக்கும் நீங்கள் தான் அஞ் ஞானிகள் என்றார் ராய். திருத்துவத்தை ஆராதிக்கும் நீங்கள் தான் அஞ்ஞானிகள் என்றார் நாவலர்.

இவர்களிடையே பெரிய வித்தியாசம். நாவலர் விக்கிரக ஆராதனையை ஆதரித்தார். ராய் முதலில் வெறுத்தார். பிற்காலத்தில் இது ஒரு பக்தனின் முதல்படி என்றார். ராய் உலக அளவில் தெரிந்திருக்கக் காரணம் அவர் ஆங்கிலத்திலும் எழுதினார். நாவலரின் எழுத்துக்கள் எல்லாமே தமிழில். நாவலருக்கு ஆங்கிலமும் நன்றாகத் தெரியும் ஆனால் ஏனோ எழுதவில்லை . அவருடைய அருந்திறனான ஆங்கிலத்திற்கு அவர் வால்டன் பாதிரியாருடன் பரிமாற்றம் செய்த நிருபங்களைப் படியுங்கள்.

நாவலரின் சாதி எல்லாருக்கும் தெரியும். அவருடைய சைவ வினாவிடையைப் படியுங்கள், அறிந்துகொள்வீர்கள். சமய சீர்திருத்தக்காரர்கள் பரிசுத்தவான்கள் அல்லர். அவர்களுக்குக் களிமண் கால்கள் உண்டு. அவர்களின் எண்ணப்பாட்டில் கறைகள் உண்டு. மார்டீன் லூதருக்கு யூத வெறுப்பு; நாவலருக்குச் சாதி பார்ப்பு.

கடைசியாக, சைவதூஷண பரிகாரம் அந்தக் காலத்துக்குத் தேவையான பிரதி. சைவக் காவலன் என்ற பத்திரிகை 'நாவலரின் இந்த எழுத்து அந்தக் காலத்துக்கும் மட்டும் உரியது அல்ல அவற்றின் சேவைக்கு இப்போதும் போதிய இடம் இருக்கிறது, இனியும் இருக்கும்' என்று எழுதியிருந்தது. ஆனால் நாவலர் சைவதூஷண பரிகாரம் எழுதிய சமய, அரசியல், சமுதாயப் பின்னணி இப்போது இல்லை. காலனிய நாட்களில் கிறிஸ்தவர்களுக்கிருந்த ஆதிக்கம் இப்போது அருகி இருக்கிறது. பிரதான மதமாற்றக் கருவியாக அவர்கள் நடத்திய பள்ளிக்கூடங்கள் இன்று அவர்கள் கையில் இல்லை. கிறிஸ்தவ வேதமும் இன்று திராணியற்றிருக்கிறது. கிறிஸ்தவர்களிடையே முன்பிருந்த ஆன்மீக அட்டகாசம் அரிதாயிருக்கிறது. இன்றைய மேலாண்மை கிறிஸ்தவம் அல்ல; கோத்தபாயாவின் பவுத்த சிங்கள இனப் பேரினவாதம். இந்த உக்கிரமான வீறுருவை எதிர்நோக்கப் புதிய பிரதி வேண்டும். நாவலரும் இதை ஒத்துக்கொள்வார்.

மின்னஞ்சல்: rssugi@blueyonder.co.uk

நன்றி காலச்சுவடு

நூறாண்டுக்கு முன் தமிழர் மகா சபையின் பத்திரிகை முயற்சிக்கு என்ன ஆனது? - என்.சரவணன்

சேர் பொன் அருணாச்சலம் லண்டனில் கல்வி கற்ற இளமைக்காலத்தில் எடுக்கப்பட்ட  அரிய படம்.

தமிழர் மகா சபையை தொடக்கியதும் அதற்கென்று ஒரு பத்திரிகையின் அவசியத்தையும், அவசரத்தையும் உணர்ந்தார் அருணாச்சலம் ஆனால் அதைத் திட்டமிட்டு ஒருசில மாதங்களில் அவர் இறந்துவிட்டார்.

இராமநாதன்; ஆரம்பத்திலேயே கொழும்பில் The Ceylonese என்கிற பத்திரிகையை ஆரம்பித்தார். முதல் பத்திரிகை 1913 ஆம் ஆண்டு மார்ச் 05 அன்று வெளியானது அதன் முதலாவது ஆசிரியர்  அமெரிக்கரான தொம்ரைட் (Tom Wright) என்பவர். மருதானையில் இதன் அலுவலகம் இயங்கியது.. அதில் அருணாச்சலம் முக்கிய பங்கையும் வகித்தார். இராமநாதன் படித்த இலங்கையராக அரசாங்க சபைக்கு தெரிவான காலத்தில் சுதேசிய ஆங்கில ஊடகத்தின் அவசியத்தை கருத்திற்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப்பத்திரிகையை ஆரம்பிப்பதற்கு அவரோடு தோள்கொடுத்தவர்கள் வழக்கறிஞர் ஹெக்ரர் ஜெயவர்த்தன, கர்னல் டீ.ஜீ.ஜெயவர்த்தன, டொக்டர் ஈ.வீ.ரத்னம், வழக்கறிஞர் பிரான்சிஸ் த சொய்சா ஆகியோர்.

1911 - கொவிகம – வெள்ளாளக் கூட்டு 

இந்தப் பத்திரிகை உருவாவதற்கு வித்திட்ட சில சுவாரசியமான அரசியல் காரணங்கள் இருந்தன. இராமநாதன் 1879 ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்தார். அதிலிருந்து 1892 வரையான 13 ஆண்டுகள் தொடர்ச்சியாக அரசாங்க சபையில் அங்கம் வகித்தார். ஆனால் அவர் இவ்வாறு அங்கம் வகித்தது தேர்தலில் போட்டியிட்டல்ல. ஒரு நியமன உறுப்பினராகவே அங்கம் வகித்தார். 1892 இல் அவரின் பதவிக் காலம் முடிந்ததும். அவர் இலங்கையின் சட்ட மா அதிபராக நியமனம் பெற்றார். எட்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்து 1906 ஆம் ஆண்டு அதிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அடுத்த ஆண்டு 1907 ஆம் ஆண்டு அவர் தேசிய சீர்திருத்தக் கலகத்தை ஆரம்பித்து அரசியல் பணிகளில் ஈடுபட்டாலும் அவர் இந்தக் காலப்பகுதியில் ஆன்மீகக் கடமைகளிலேயே அதிகம் மூழ்கியிருந்தார். இந்த வேளையில் 1910 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது. இவர்களில் 11 பேர் உத்தியோகபூர்வ உறுப்பினர்களும், 10 உத்தியோக பூர்வமற்ற முறையிலும் தெரிவாகும் வகையில் அந்த சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

உத்தியோக பூர்வமற்ற 11 பேரில் ஐரோப்பியர், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பரங்கியர், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட படித்த இலங்கையர், இரண்டு நியமனம் பெற்ற கரையோர சிங்களவர், இரண்டு நியமனம் பெற்ற தமிழர், ஒரு நியமனம் பெற்ற கண்டிச் சிங்களவர், ஒரு நியமனம் பெற்ற சோனகர் என்கிற அடிப்படையில் அமைக்கப்பட்டன.

ஆக இவர்களில் நாடு முழுவதும் படித்த இலங்கையருக்கான ஒருவரை தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தினார்கள். ஒரு வகையில் தேர்தலின் மூலம் இலங்கையர் ஒருவரை தெரிவு செய்யும் முதலாவது சந்தர்ப்பம் அதுவென்றும் கூறலாம். அதேவேளை படித்த இலங்கையரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் படித்தவர்கள் மட்டுமே வாக்களிக்கும் தகுதியையும் பெற்றார்கள். அதன் பிரகாரம் சுமார் மூவாயிரத்துக்கும் குறைவான; அதாவது 4% வீத இலங்கையர்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வைத்திய கலாநிதி மாக்கஸ் பெர்னாண்டோ முன்வந்தார். ஆனால் அந்தத் தேர்தலில் அவர் போட்டியிடுவதை சிங்கள – பௌத்த – கொவிகம சாதி - படித்த –வசதிபடைத்த மேட்டுக்குடியினர் விரும்பவில்லை. ஏனென்றால் மாக்கஸ் பெர்னாண்டோ சிங்கள சமூகத்தின் உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் அல்லர். மார்க்ஸ் பெர்னாண்டோ சிங்களவராக இருந்தபோதும் அவர் ஒரு சிங்கள கராவ (தமிழில் கரையார் சமூகம்) சாதியைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவர் தெரிவாவதை பொறுக்க முடியாதவர்களாக இருந்தார்கள்.

மார்கஸ் பெர்னாண்டோ 

அந்த நேரத்தில் ஆங்கில ஆட்சியாளர்கள் மத்தியிலும் செல்வாக்குள்ள ஒரு கொவிகம சாதி அல்லது அதற்கு நிகரான சாதியைச் சேர்ந்த ஒருவரை முன்னிறுத்த அந்த மேட்டுக்குடியினர் ஓடித்திருந்தார்கள். அவர்களின் முதல் தெரிவாக இருந்தவர் இராமநாதன் தான். அவர் தான் சிங்கள கொவிகம சாதிக்கு நிகரான தமிழ் “கொவிகம” (வேளாள) சாதி. இராமநாதனும் அதனை ஒத்துக்கொண்டார். ஆக இந்த நேரத்தில் அவர்களுக்கு இனம், மதம், மொழி என்பவற்றால் வேறுபட்டாலும் பரவாயில்லை. சாதியால் சமமான ஒருவரே அதிகாரத்துக்கு வர வேண்டும் என்கிற சாதியாதிக்கச் சிந்தனையே அவர்களுக்கு முதன்மையாக இருந்தது. இனத்துவத்தை விட சாதி அடையாளத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த காலமது.

அப்படித்தான் மாக்கஸ் பெர்னாண்டோவைத் தோற்கடித்தார்கள்.

1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தல் நடந்தபோது முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். மார்கஸ் பெர்னாண்டோவை சிங்கள மேட்டுக்குடியினர் தோற்கடித்து இராமநாதனை வெல்லச் செய்ததன் தலையாய காரணம் “சாதியில் குறைந்த” ஒருவர் தமது பிரதிநிதியாக வந்து விடக்கூடாது என்பதாலும், அந்த இடத்துக்கு இராமநாதன் ஒரு தமிழராக இருந்தாலும் ஒரு உயர்த்தப்பட்ட வெள்ளாள சாதியைச் சேர்ந்தவரே தெரிவாக வேண்டும் என்கிற விடயம் தான். 

மீண்டும் பத்திரிகை விடயத்துக்கு வருவோம். 

1911 ஆம் ஆண்டு தேர்தலின் போது இராமநாதனையும் அவரின் தரப்பையும் விமர்சித்து எழுதிய பத்திரிகை அன்றைய The Morning Leader. இப்பத்திரிகையை நடத்தியவர்கள் அன்றைய சொய்சா குடும்பத்தினர். சொய்சா குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் மார்க்கஸ் பெர்னாண்டோ. எனவே மாக்கஸ் பெர்னாண்டோவின் வெற்றிக்காகவும் அப்பத்திரிகை உழைத்தது. ஆனால் அத்தேர்தலில் படித்த சிங்கள பௌத்த - கொவிகம சாதி – உயர் வர்க்கக் கூட்டு அவரை திட்டமிட்டு தோற்கடித்தது. இராமநாதன் 1645வாக்குகளை பெற்று வெற்றிபெற்றதுடன் மாக்கஸ் பெர்னாண்டோ  981 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

இராமநாதன் புதிய சட்டசபைப் பிதிநிதிகளோடு சேர்ந்து 16 ஜனவரி 1912 அன்று தான் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதிலிருந்து அவர் ஒரு பத்திரிகையின் அவசியத்தை உணர்ந்தார். அதன் விளைவு தான் சிலோனீஸ் பத்திரிகையின் உருவாக்கம்.

ஆனால் இராமநாதன் அப்பத்திரிகையின் நிறைவேற்றுச் சபையில் இருந்து பின்னர் விலக நேரிட்டது.(1) அதில் பங்குதாரர்களாக இருந்த சபை உறுப்பினர்களுக்கும் இராமநாதனுக்கும் ஏற்பட்ட பிணக்கின் இறுதியில் அவர் விலகினார். முதலாம் உலக யுத்தமும் தொடங்கிவிட்ட காலம் இது. கடதாசி, மை என்பவற்றின் விலை அதிகரிப்பும, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் சகல துறைகளையும் பாதித்தது போலவே சிலோனீஸ் பத்திரிகையையும் பாதித்தது. மேலும் பத்திரிகைகளின் மீது கடும் தணிக்கை பிரயோகிக்கப்பட்ட காலமும் கூட எனவே சிலோனீஸ் பத்திரிகையும் பாதிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் பத்திரிகையை விற்பதற்கு முடிவு செய்தார்கள் அன்று அதன் சபையில் இருந்த சேனநாயக்க சகோதரர்கள். 1917ஆம் ஆண்டு பலத்த நஷ்டத்தின் மத்தியில் எப்.ஆர்.சேனநாயக்க 21,000 ஆயிரம் ரூபா கடனை அடைபதற்காக ஏலத்தில் விற்பதாக அறிவித்தார்.(2) 

அதை வாங்குவதற்கு முன் வந்தார் அவர்களின் நண்பர் பிற்காலத்தில் பத்திரிகை உலா ஜாம்பவனாக எழுச்சியடைந்த டீ.ஆர்.விஜயவர்தன. ஆனால் 1917 ஆம் டிசம்பர் நடந்த அந்த ஏலம் அவர்களின் இலக்கான 21,000 ஆயிரம் ரூபா வரை செல்லவில்லை. அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு அதை பொறுப்பேற்கும்படி விஜேவர்தனவிடன் கோரிப் பார்த்தார்கள். ஆனால் விஜேவர்தன ஏலத்தின் போக்கில் சென்றார். அந்த ஏலமும் மெதுவாகவே நகர்ந்தது. 15,000 ரூபாவுக்கு விஜேவர்தன கேட்டதற்குப் பின்னர் எவரும் கேட்கவில்லை. இறுதியில் 16,000.00 ரூபாவை அவர்களுக்கு நல்லெண்ணத்தின் அடிப்படையில் வழங்கிவிட்டு  டீ.ஆர்.விஜேவர்தன அப்பத்திரிகையை வாங்கினார்.

இலங்கை பத்திரிகை உலகின் ஜாம்பவானாக அறியப்பட்ட டீ.ஆர்.விஜயவர்தன அப்பத்திரிகையை வாங்கி The Ceylon Daily News  (சிலோன் டெய்லி நியூஸ்) எனப் பெயரிட்டு புதிய தோற்றத்துடன் வெளியிடவும் தொடங்கினார். 03 ஜனவரி 1918 ஆண்டு  அதன் முதலாவது பத்திரிக்கை வெளியானது. முதல் பத்திரிகையில் சேர்.பொன் அருணாச்சலத்தின் உரையோடு வெளியிடப்பட்டது. இப்பத்திரிகை தான் இன்றும் தொடர்ச்சியாக வெளிவரும் Daily News (டெயிலி நியூஸ் ஆனது).

இலங்கை தேசிய காங்கிரஸ் தோற்றம் பெற்று இயங்கிய காலம் தான் இது. எனவே அப்போது இந்த ஆங்கிலப் பத்திரிகையின் தேவை நிறைவே உணரப்பட்டது. சுதேசிகளுக்கும், ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குமான உரையாடலுக்கான ஒரு பாலமாக இந்த பத்திரிகை முயற்சிகள் இருந்தன. இதே காலத்தில் சிங்களப் பத்திரிகைகள் மனிங் சீர்திருத்தத்துக்கு தமிழர் தரப்பில் மேற்கொண்ட முன்மொழிவுகளையிட்டு கடும் எதிர்ப்பையும், இனவாத விஷமங்களையும் வெளியிட்டன. அநகாரிக தர்மபால அருணாச்சலம் போன்றோரின் முன் மொழிவுகளை எதிர்த்து இனவாதம் கக்கியதுடன் “சிங்கள நாடு சிங்களவருக்கே” என்று கோஷம் எழுப்பினார். (3)

அருணாச்சலம் 1921 ஆம் ஆண்டு சிங்களத் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு அதே ஆண்டு தமிழர் மகா சபையை ஆரம்பித்தபோது தமிழர் தரப்புக்கென ஒரு பத்திரிகை அவசியம் என்று உணர்ந்தார். 1923.09.20 அன்று வெளியான “இந்து சாதனம்” பத்திரிகையில் இது பற்றிய செய்தி ஒன்று வெளிவந்திருக்கிறது. அதில்;

இலங்கைத் தமிழர் மகா சபை: - சென்ற சனிக்கிழமையன்று கொழும்பிலே சேர் பொ.அருணாசலமவர்களின் அக்கிறாசனாதிபதித்தியத்தின் கீழ் இலங்கைத் தமிழர் மகாசன சபைக் கூட்டமொன்று கூட்டப்பட்டது. மேற்படி சபையின் நோக்கங்களையும் முயற்சிகளையுங் கொண்ட ஒரு அறிக்கைப் பத்திரம் வாசித்த பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிப் பிரதமாசிரியர் மிஸ்டர் நெவின்ஸ் செல்வத்துரையாவர்களும், பிறக்டர் ஸ்ரீ க.சிதம்பரநாதனவர்களும் சிறந்த உபந்நியாசங்கள் செய்தனர். பல நிர்ணயங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கொழும்பிலே தமிழர் பொருட்டு ஒரு தினசரிப் பத்திரிக்கை ஆரம்பித்து நடத்தப்படுதல் வேண்டுமென்பதே அவற்றுள் விசேஷமான நிர்ணயமாகும்.”

என்று அந்தச் செய்தியில் காணப்படுகிறது. அதன்படி அக்கூட்டம் 15.09.1923 அன்று நிகழ்ந்திருக்கிறது என்று கணிக்க முடிகிறது.

இதில் இன்னொரு விசேடமும் உண்டு. அதே பத்திரிகையில் “உலகம் பலவிதம்” என்கிற தலைப்பில் வெளியான கட்டுரையில் அப்படி ஒரு தினசரிப் பத்திரிகையின் தேவையை உணர்த்தி ஒரு விரிவான கட்டுரை வெளியாகியிருக்கிறது. (4) 

இந்த செய்தி வெளிவந்து நான்கே மாதங்களில் 1924 ஆண்டு 9 ஜனவரி  அருணாச்சலம் மறைந்துவிட்டார். 

முதலில் அக்கட்டுரையை விரிவாகப் பார்ப்போம்...

உலகம் பலவிதம்.

சென்ற வாரம் கொழும்பிலே ஸேர் பொ. அருணாசலமவர்களை அக்கிராசன ராகக்கொண்டு கூடிய தமிழர் மகாசபை யில், தமிழர் சட்கென ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒவ்வொரு தினசரிப்பத்திரிகை ஆவசியகம் தலைநகரில் ஈடாத்தப்படல் வேண்டுமென்றவிஷயமும் பேசப்பட்டது. தமிழர்களாகிய நாம் சனத் தொகையிலன்றி வேறு எவ்வாற்றானும் சிங்களரிற் குறைந்தவர்களல்லே மெனவும், எங்க ளுக்கு அரசியற் சலாக்கியங்கள் பல வேண்டுமெனவும் பேசிக் கொண்டும் மற்றுஞ் சாதியினருடனும் அரசினருடனும் வாதாடிக்கொண்டுத் திரிகின்றேம். ஆனால் பத்திரிகை நடாத்தும் ஒரு விஷயத்தில் 'மாத்திரம் நாங்கள் எல்லாச் சாதியாரிலுக் கடையான நிலையிலிருக்கின்றேம், கொழும்பில தமிழரைத் தவிர மற்றுஞ் சாதியாரெல்லாராலும் தத்தம் குறை முறைகளையெடுத்து அரசினருக்கு விண்ணப்பஞ் செய்தற்கும் தங்கள் குறைகளை நீக்கிக்கொள்வதற்கும் தங்களைப் புகழ்தற்கும் மற்றுஞ் சாதியினரை யிகழ்தற்கும் சாதனமாகப் பத்திரிகைகள் நடத்தப்படுகின்றன. ஆனால் தமிழர்களுக்கென ஆங்கிலத்திலாயினும் தமிழிலாயினும் கொழும்பில் இப்பொழுது ஒரு பத்திரிகை இல்லாதிருத்தல் பெரிதும் வெட்கமான விஷயமாகும். கொழும்பிலே தமிழ்ப் பாஷையிலும் ஆங்கில பாஷையிலும் எத்தனையோ பத்திரிகைகள் தமிழரால் ஆரம்பித்துச் சிலகாலம் மாத்திரம் நடத்தப்பட்டுப் பின்னர் இடையில் நின்றுவிட்டன. இதற்குக் காரணம் என்ன? இவர்களிடத்திற் பொருளில்லையா? விவேகமில்லையா? மற்றவில்லையா? ஏற்று வாசிக்கச் சனங்களில்லையா? இவைகளெல்லாமுண்டு; மற்றுஞ் சாதியாரால் நடத்தப்படும் பத்திரிகைகளிற் பலவற்றை ஆதரித்து வருபவர்கள் நந்தமிழ் மக்களேயாவர். பணம் கொடுத்துத் தங்கள் சாதியாரை ஓயாது வையும் பத்திரிகைகளைப் போஷித்து வருபவர் தந்தமிழ் மக்களேயாவர், கோடாலிக் காம்பு போல், சிங்களருடனும் மற்றுஞ் சாதியாருடனுஞ் சேர்ந்து கொண்டு நந்தமிழரை வையும் சில தமிழ் நன்மக்களும் நம்மவருள்ளே இருக்கின்றார்கள். பின்னர், தமிழர்களிடத்தில் என்ன இல்லையென்று கேட்டால், சாதியபிமானமில்லை; ஐக்கியமில்லை! நியதியில்லை. இவைகள் நந்தமிழரிடத்திலுண்டாகுமேல் கொழும்பிலே ஒன்றல்ல, பல தமிழ்ப் பத்திரிகைகளையும் ஆங்கில பத்திரிகைகளையும் தமிழர் வைத்து நடத்தல் முடியும்.

கொழும்பிலே சிங்களராலும் மற்றுஞ் சாதியினராலும் பல தினசரிப் பத்திரிகைகள் நெடுங்காலமாக நடத்தப்பட்டுவருதலும் தமிழர்களால் மாத்திரம் பத்திரிகை தொடர்புத் தொடங்கி இடையிடையே வெளிவராது நின்று விடுதலும் எவரும் அறிந்த விஷயம். பத்திரிகைகள் இப்படி யிடையில் நின்றுவிடுதற்கு பத்திரிகைகளை நடத்துபவர் ஏற்று வாசிப்பவர் என்றும் இருபாலாரும் காரணராகவிருக்கின்றார்கள். நம் தமிழ் மக்கள் பெரும்பான்மையும் பாதிரிகளை ஆரம்பிக்கும் போது பொதுவாகத் தமிழரின் அபிவிருத்தியை நோக்கி உழைத்தலை விடுத்து கட்சி பிரித்து ஒருகட்சியாரை இகழ்வதும் ஒருகட்சியாரைப் புகழ்வதுமாகத் தங்களுக்குள்ளேயே பிரிவினைகளை உண்டாக்கிக்கொள்ளுகின்றார்கள். ஒரு சங்கமாகக்கூடி ஒரு பத்திரிகையை நடத்தும் பொழுது சங்க அங்கத்தவர்களுக்கிடையேயுள்ள அந்தரங்க பகைமையை ஒருவரோடு ஒருவர் பத்திரிகை வாயிலாகச் சாதிக்க முயன்று பத்திராசிரியரை இடர்ப்படுத்த தொடங்குகின்றார்கள், பத்திரிகாசிரியர் எறச்சொன்னாள் எருதிற்குக் கோபம் இறங்கச்சொன்னால் முடவனுக்குக் கோபம் என்ற பிரகாரம் இருபக்கத்தாரையும் பிரியப்படுத்தவேனும் பகைக்க வேனும் முடியாதவராய், இருதலைக் கொள்ளியெறும்பு போல் இடர்ப்பட்டு ஈற்றில் பிச்சைவேண்டாந்தாயே, நாயைப் பிடி" என்ற யாசகன் சீலமாய் தமது உத்தியோகத்தையும் விட்டு அதில் தப்பிக்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. பேராசையென்னும் பெருங்காற்றும் தமிழர்களாகிய எங்களுக்கிடையே சாடையாக வீசி, இப்படிப்பட்ட நற்கருமங்களையெல்லாம் கீழே வீழ்த்திவிடுவது வழக்கம். சிங்களர் முதலிய மற்றுஞ்சாதியாரெனிலோ, தங்களுக்குள் எவ்வகையான உள்விரோதமிருந்தாலும் பொதுக்கருமங்களில் ஒத்துழைக்குங்குணம் பூண்டவர் களாயிருக்கின்றார்கள். இதனாலேயே அவர்கள் எக்கருமத்திலும் அனுகூலமுற இஃதின்மையாலேயே நாங்கள் எக்கருமத்திலும் பிரதிகூலமடைகின்றோம்.

*** 

சிலபத்திரிகைகள் ஒருவரை ஏசுவதற்கென்றே ஆரம்பிக்கப்படுகின்றன. குறித்தவரை ஏசியொழிந்தபின், எழுத வேறு விஷயமில்லானடியாற் சில சமையங்களில் நின்று விடுகின்றன. நெடுங்காலமாக நடைபெற்று வந்த ஒருபத்திரிகை பொருள் முட்டினாற் சிறிது தளர்வுறக்கண்டும், சில அபிமானிகள் அப்பத்திரிகைக்குத் தம்மாலியன்ற சகாயஞ்செய்து அதனை நன்னிலைக்குக் கொண்டுவர முயலாமல் தனித்தனி ஒவ்வொரு பத்திரிகையைச் சிலநாட்களுக்கு கடத்திவிட்டுப் பின்னர் நடவாதொழிந்த பத்திரிகாசியர் என்ற பேரோடு திருப்தியடைந்து இருந்துவிடுகிறார்,

இனி, பத்திரிகைகளை ஏற்று வாசிக்குந் தமிழபிமானிகளைப்பற்றிச் சில கூறுதும், கூறும் விஷயம் அனுபவசித்தமாதலின் நண்பர்கள் அவ்விஷயமாக எம்மைக் குறை கூறாரென நினைக்கின்றேம். உண்மையான அபிமானம் வைத்துப் பத்திரிகைகளை ஏற்று வாசித்து வருவோர் நந்தமிழ் மக்களுட் சிலரேயாவர். அநேகர் பத்திரிகைகளை ஏற்றுப் படித்தலும் இக்காலத்து நாகரிகத்திலொன்றாகும் என்றெண்ணிப் பத்திரிகைகளை வரவழைத்துப் படிக்கின்றார்கள். அநேகர் முகமனுக்காகப் பத்திரிகையேற்று வாசிக்கின்றார்கள். வேறு பலர் தம்மனைவி மக்கள் சுற்றத்தவர் பொருட்டுப் பத்திரிகைகளை வரவழைக்கின்றார்கள். சிலர் தாங்களும் பத்திரிகை எடுத்தாற்றான் தங்கள் பகுதியில் நிகழும் விவாகம் மரணம் வேலை மாற்றம் உத்தியோக உயர்வு என்னுமிவைகள் வேண்டிய காலத்திலே அப்பத்திரிகைகளில் வெளியிடப்படுமென்ற எண்ணத்தினாற் பத்திரிகையை ஆதரிக்கின்றார்கள். இன்னுஞ் சிலர் "பணங்கட்டுவது தவறப் போகின்றதா" இப்பொழுது பத்திரிகையை அழைப்பிப்போம், பணம் கேட்டால் வேண்டாம் என்று சொல்லுவோம் என்ற நோக்கத்துடன் பத்திரிகையை அழைப்பிக்கின்றார்கள். இப்படிப்பட்ட நோக்கங்களுடன் பத்திரிகை எடுப்போருடன் பத்திரிகை மானேஜரும் ஆசிரியரும் ஊடாடிக் கொள்வது வெகு கஷ்மாயிருக்கின்றது. பத்திரக் கிரயத்தைப் பாக்கியின்றி அனுப்பும்படி இவர்களுட் சிலருக்கு எழுதினால், உடனே "உமது பத்திரிகையை அனுப்புவதை நிறுத்தும்." என்று ஒரே வாக்கியத்திற் கருமத்தை முடித்துவிடுகின்றார்கள். பத்திரிகை எடுக்கும் ஒருவர் பகுதியில் ஒரு மணமேனும் மரணமேனும் நிகழ்ந்துவிட அதனைப் பத்திரிகாசிரியர் தரமாக விசாரணை செய்து பத்திரிகையில் வெளியிடத் தவறினால், "உமது பத்திரிகை வேண்டாம்' என்று தெரிவித்து விடுகின்றார்கள்; ஒரு பத்திரிகாபிமானி செய்த தானசதருமத்தை நாம் பத்திரிகையில் வெளியிடத் தவறினால் உடனே அவர் உங்கள் பத்திரிகையை ஏற்றுவாசித்தென்ன, அதில் ஒரு புதினமுமில்லை, பத்திரிகை அனுப்பவேண்டாம்' என்று விடுகின்றார். வேறு சிலர் தங்கள் கொள்கைக்கு மாறாகப் பத்திரிகையில் ஏதும் எழுதினால் அதனை நிராகரித்து எழுதுவதை விடுத்துப் பத்திரிகை வேண்டாமென்று விடுகிறார்கள். பத்திரிகைக்கு விஷயதானஞ் செய்வோர் சிலர் பிறரை வரைவின்றிக் கண்டித்து, குதர்க்கம்களை யெழுதியும், திருத்துதற்கரிய பிழைகளைப் பொதிந்தும் கடிதங்கள் அனுப்ப பத்திராசிரியர் அவற்றைப் போடப் பின் விற்க, உடனே பத்திரிகை வேண்டாம், என்று நிறுத்திவிடுவார்கள் ; ஒழிந்தசிலர் பத்திரிகாசிரியர் பொதுவாக ஒருவியாசத்தை யெழுதவும், அந்தக்குறைகள் தம்மிடத்திற் காணப்படின் தம்மைக்குறித்தே அப்படி எழுதப்பட்டதென நினைத்துப் பத்திரிகாசிரியரோடு விரோதம் பாராட்டுகின்றார்கள். இவ்வாறான பல வசதியீனங்கள் இன்னமும் பத்திரிகாசிரியருக் குண்டு. அவற்றையெல்லாம் இங்கே வெளியிடின் பெரும் கசப்புண்டாகும்.

*** 

இவைகளை தமிழ்மக்களாகிய நாங்கள் பத்திரிகைகளைக் கிரமமாக நடத்துவதற்கு இடையூறாகவுள்ள காரணங்களாம். யானும் ஒரு தமிழகத்தான் என்னும் அபிமானம் பற்றி இக்குறைகளை எடுத்துக் காட்டியுள்ளேனாதலின் என்னை ஒருவரும் குறைகூறார். மேலே சொல்லப்பட்ட இக் குறைகளையெல்லாம் நாம் இனியேனும் அகற்றிவிடல்வேண்டும். உண்மையான அபிமானத்தை வகிக்கவேண்டும் சாதிய பிமானம் பெரிதும் தலைப்படுதல் வேண்டுமே. எங்கள் ஐக்கியஞ் சிறிதுமில்லயெனக் கண்டே சிங்களவர் எங்கள் சனத் தலைவர்களைத் தங்கள் பத்திரிகைகளில் வரைவின்றி வைது வருகின்றார்கள். ஒரு தமிழனை அந்நியர் காரணமின்றி வைதால் மற்றும் தமிழர்களும் தனித் தனி தம்மை வைததாககமதித்து, அங்ஙனம் வைவாரைக் காரணங்காட்டி அடக்க முயலல் வேண்டும். இல்லையேல் அன்னார் தொடர்பை அறவே அகற்றிவிடுதல் வேண்டும். ஸேர் பொ. இராமநாதனவர்கள் , ஸேர். அருணாசலமவர்கள் முதலிய சனத்தலைவர்களையும் தமிழ்ச் சாதியினரையும் கொழும்பிலுள்ள சிங்களப்பத்திரிகைகள் கண்டபடி வைதுவரவும் நமது தமிழ் மக்கள் அப்பத்திரிகைகளை வரவழைத்து நானமின்றிப் படித்து வருகின்றார்கள். லோகமானிய திலகர் தேகவியோகமானகாலத்து இறந்த அம்மகானைக் குறித்து ஆங்கிலேயரால் நடத்தப்பட்ட இந்திய பத்திரிகை ஒன்று குறை கூறியதனிமித்தம், இந்துக்கள் பலர் அந்தப் பத்திரிகைப் பிரதிகளைத் தகனஞ்செய்து கங்கைக்கரையிற் காடாற்றிப் பிரஷ்டஞ்செய்து விட்டனரென்பதை முன்னர் பத்திரிகை வாயிலாக அறிந்துள்ளோம், அப்பத்திரிகை அரைபக்கச் சந்திரன் போற் குன்றிவிட்டது. அவ்விதமான அபிமானம் இலங்கைத் தமிழ்மக்களிடத்தில் ஏன் உதிக்க வொண்ணாது. கோடரிக் காம்பு போல்வார் எங்குமுண்டு. அவரை நாம் பொருட்படுத்தாமல், இனியேலும் எங்களிடத்துள்ள குறைகளை அகற்றி, கூடிய விரைவில் கொழும்புமாநகரிலே ஒரு தினசரி ஆங்கிலப்பத்திரிகையும் தமிழ்ப் பத்திரிகையும் நின்று நிலவும்படி செய்தல் வேண்டும், முதல் இந்தக் குறையை நீக்கிவிட்டுப் பின்னரே தமிழ் மக்கள் சுதந்திரங்களின் பொருட்டு வாதாடல் வேண்டும்.

திருஞானசம்பந்தப்பிள்ளை

இதில் திருஞானசம்பந்தப்பிள்ளை

 • தென்னிலங்கையின் சிங்களவர்கள் ஏனைய சமூகங்களுடன் சேர்ந்து சிங்களப் பத்திரிகைகளினூடாக தமிழ்த் தலைவர்களையும், தமிழர் நலனையும் எதிர்த்து பத்திரிகைளில் வெளியிடுகிறார்கள் என்றும் அதை எதிர்கொள்ள வழிகள் வேண்டும் என்கிறார். அவர்களின் பலம் ஒற்றுமையென்றும், நமது பலவீனம் ஐக்கியமில்லாதது என்கிறார். அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதை விடுத்து குழு குழுவாகப் பிரிந்து ஒருவரையொருவர் தாக்குகிறார்கள் என்கிறார்.
 • சிங்களவர்களுடன் சேர்ந்து நம் தமிழ் மக்களை எதிர்த்து இயங்குகிறார்கள் என்கிறார்.
 • இந்தியாவில் திலகர் இறந்தபோது ஆங்கிலேயப் பத்திரிகை அவரைத் தூற்றி எழுதியதற்காக மக்கள் அப்பத்திரிகையை தெருவில் வைத்து தீயிட்டதை சுட்டிக்காட்டி ஏன் நாம் அப்படிச் செய்வதில்லை என்கிறார். 
 • தமிழிலும் ஆங்கிலத்திலும் தமிழர்களின் குரல் ஒலிக்கக் கூடிய பத்திரிகைக்கான முன்மொழிவை வரவேற்று, அதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். ஒன்றல்ல பல பத்திரிகைகளை நடத்தும் பலம் தமிழர்களுக்கு உள்ளதென்கிறார்.
 • தமிழ்ப் பத்திரிகைகள் நடாத்துவதில் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினை குறித்து விளக்குகிறார்.
 • சந்தாதாரர்கள் தமது சொந்த விருப்பு வெறுப்புகளால் பத்திரிகைகளை வேண்டாம் என்கிறார்கள் என்று தமிழ்ச் சமூகத்தின் பொதுப்புத்தி எப்படி இயங்குகிறது என்பதை விளக்குகிறார்.
 • அது தலைநகர் கொழும்பில் வரவேண்டும் என்றும் விதந்துரைக்கிறார்.

இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றம் 19 ஆம் நூற்றாண்டிலிருந்தே ஆரம்பித்து விட்டன. உதயதாரகைப் பத்திரிகை முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை. அது ஒரு தினசரி பத்திரிகை அல்ல. அது கிறிஸ்தவ மிஷனரிகளால், கிறிஸ்தவ பிரச்சார வழிமுறைகளோடு வெகுஜன விடயங்களையும் தாங்கி வந்தப் பத்திரிகையாக இருந்தது. அதன் பின்னர் வெளிவந்த பத்திரிகைளும் கூட ஒன்றில் கிறிஸ்தவ மத சார்பாகவே அல்லது அதற்குப் போட்டியாக சைவப் பிரச்சார – சைவ தரப்பினரால் வெளியிடப்பட்டவையாகவும் தான் வெளிவந்தன. இதுவே நீண்ட காலம் நிலைத்து நின்ற நிலை.

1900 இலிருந்து 1930 வரையான காலத்தை எடுத்துக்கொண்டால் 1915 – 1930 க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த பத்திரிகைகளை விட 1900 – 1915 க்கு இடைப்பட்ட காலத்தில் தான் அதிகப் பத்திரிகைகள் வெளிவந்துள்ளன.(5) குறிப்பாக இந்தக் காலப்பகுதியில் அதிகம் செல்வாக்கு செலுத்திய பத்திரிகையாக இந்து சாதனம் பத்திரிகையே இருந்திருக்கிறது. மேலும் உதயதாரகை பத்திரிகையும் இறங்குமுகமாக போய்க்கொண்டிருந்த காலம். எனவே ஒரு செல்வாக்கு பெற்ற பத்திரிகையான “இந்து சாதனம்” பத்திரிகையிலிருந்து செல்வாக்கு பெற்ற அனுபவசாலிப் பத்திரிகையாளரான திருஞானசம்பந்தப்பிள்ளை கொழும்பில் தமிழ் பத்திரிகை தொடக்குவதில் என்ன கஷ்டம் என்று வினவியதில் நியாயம் இருக்கவே செய்கிறது.

கொழும்பில் 1902 இல் வெளிவந்த “திராவிட கோகிலம்” பத்திரிகை சென்னையை முகவரியாகக் கொண்டு தான் வந்தது. அதிகம் தமிழக விவகாரங்களைத் தாங்கி வந்தது. அதன் பின்னர் “திராவிடன்”, “ஆதி திராவிடன்” “திராவிட மித்திரன்”, போன்ற தலைப்புகளைத் தாங்கிய பத்திரிகைகள் உட்பட இன்னும் சில பத்திரிகைகள் கொழும்பில் இருந்து இந்திய வம்சாவளி வாசகர்களை இலக்கு வைத்து வெளிவந்தாலும் அதிகமாக அவை தமிழக விடயங்களைத் தாங்கித் தான் வெளிவந்தன.(6) இப்படி கொழும்பில் இருந்து சில பத்திரிகைகள் வெளிவந்தாலும்  1930 ஆம் ஆண்டு வீரகேசரி என்கிற பத்திரிகை வெளிவரும் வரை ஒரு நிலையான வெகுஜன நாளிதழ் வரவில்லை என்றே கூறலாம். இலங்கையில் முதலாவது பத்திரிகை Colombo Journal வெளியாகி சுமார் நூறாண்டுகளில் தான் வீரகேசரி தோன்றியது. ஈழகேசரியும் இதே ஆண்டு தான் தோன்றியது என்றாலும் அது ஒரு நாடளாவிய தேசிய பத்திரிகையாக திகழவில்லை. அதுவரை சிங்களத் தரப்பு பத்திரிகைகள் மூலம் தொடுத்துவந்த தாக்குதல்களை எதிர்கொள்ள குறிப்பான பத்திரிகைகள் வெளிவரவில்லை என்றே கூறவேண்டும்.

கீழ் வரும் பட்டியலின் மூலம் இந்தக் காலப் பகுதியில் வெளிவந்த சிங்களப் பத்திரிகைகளின் தொகையை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.(7) இவற்றில் கணிசமான பத்திரிகைகள் சிங்களத் தேசியவாத உணர்வைத் தூண்டுகிற பத்திரிகைகளாகவும், அதுவே நாளடைவில் சிங்கள பௌத்தரல்லாத சமூகங்களின் அபிலாஷைகளை மறுக்கிற/எதிர்க்கிற பத்திரிகைகளாகவும் இயங்கின. அப்படிப் பார்க்கும் போது அவற்றுக்கு எதிர்வினையாற்றும் பலமான தமிழ்ப் பத்திரிகை கொழும்பில் இருக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அருணாச்சலத்தினதும், தமிழர் மகாசபையினதும் தமிழ் பத்திரிகை தொடக்குவதற்கான முயற்சிக்கு அதிக அளவு தேவைகளும், நியாயங்களும் இருந்திருக்கிறது. ஆனால் அது நிறைவேறவில்லை. அருணாச்சலத்தின் மறைவைத் தொடர்ந்து இந்த முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது. அவருக்குப் பின் தமிழர் மகாசபையும் தேய்ந்து, மறைந்து அழிந்தது போலவே இந்த பத்திரிகை முயற்சியும் அப்படியே காற்றோடு கரைந்துவிட்டது.

தமிழர் மகா சபை இலங்கை முழுவதற்குமான இயக்கமாக அவர் தொடங்கினாலும், வடக்குத் தமிழர்களே அதில் அதிகம் ஈடுபாடு காட்டினர். ஆனால் அதன் தொடக்கக் கூட்டம் கொழும்பில் தான் நிகழ்ந்தது. அதுபோல பத்திரிகையையும் கொழும்பில் இருந்து வெளியிடுவதற்குத் தான் திட்டமிடப்பட்டிருந்தது. அதுவும் ஆங்கிலத்திலும், தமிழுலும் வெளியிடத் திட்டமிடப்பட்டிருகிறது. இதன் மூலம் ஒன்று உறுதியாகத் தெரிகிறது. தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வுக்காக தமிழுலும், சிங்கள, ஆங்கில சக்திகளுக்கு வினையாற்ற ஆங்கிலத்திலும் கொண்டுவர இந்த முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகவும் நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. அது நிகழ்ந்திருந்தால் சிலவேளை இருபக்க உரையாடலுக்கான நல்லதொரு சந்தர்ப்பமாகவும், ஆரம்பமாகவும் அன்றே அது இருந்திருக்கும். பரஸ்பர அரசியல் தெளிவை எட்டுவதற்கும், சக சமூகங்களுக்கு இடையில் கருத்துப்பறிமாறலையும் அன்று ஏற்படுத்தியிருக்கும். அதுவே சிலவேளைகளில் சிக்கல்களை தணித்திருக்கும், ஏன் தீர்த்தும் கூட இருந்திருக்கும். ஆரம்பத்திலேயே அது நிகழ்ந்திருந்தால் சிலவேளை அதன் பிறகு இனப்பிரச்சினை “தேசியப் பிரச்சினையாக” எழுச்சியடையாமலும் கூட இருந்திருக்கும்.

1860 க்கும் 1916 க்கும் இடையில் வெளிவந்த சிங்களப் பத்திரிகைகள்.

 • ලංකාලෝකය - 1860, 1886 - லங்கா லோகய 
 • ලක්මිණි පහණ - 1862,1864,1865,1881, 1883 - லக்மினி பஹானா 
 • ලක්රිවි කිරණ - 1883 - லக்ரிவி கிறன
 • අරුණෝදය - 1863, 1895 - அருணோதய
 • රුවත් මල්දම  - 1866. 1889 - ருவத் மல்தம
 • ඥානාර්ථ පදීපය - 1866 - ஞானார்த்த ப்ரதீபய
 • සත්‍ය විනිශ්චය - 1867 - சத்ய வினிஷ்வய
 • සත්‍ය මාර්ගය - 1867 - சத்ய மார்கய
 • කවට කතිකයා - 1872 - கவட்ட கத்திகயா
 • සත්‍යලංකාරය - 1873 - சத்யலங்கார
 • සත්‍ය සමුච්චය - 1873, 1887 - சத்ய சமுச்சய
 • සත්‍යලංකාරය - 1874 - சத்யாலங்காரய
 • කනමැදිරියා - 1876 - கனமெதிரிய
 • සිතුමිණි රුවත - 1876 - சிதுமினி றுவத
 • ලංකා කවටයා - 1880, 1883 - லங்கா கவட்டயா
 • සරසවි සඳරැස - 1880 - சரசவி சந்தரெச
 • ලක්මිණි කිරුළ  - 1881 - லக்மினி கிருல
 • ලංකෝපකාරය - 1881 - லங்கோபகாறய
 • සත්‍යාලෝකය. - 1881, 1893 - சத்யாலோகய
 • සත්‍යාර්ථ ප්‍රකාශය  - 1881 - சத்யார்த்த பிரகாஷய
 • සිංහල මාණවකයා - 1881 - சிங்ஹல மானவகயா
 • ක්‍රිස්තියානිවාද විහාතතිය  - 1882 - கிரிஸ்தியானிவாத விபாதனிய
 • කසය - 1883 - கசய
 • කවට දක්ෂයා - 1883 - கவட்ட தக்ஷயா
 • කවට සංග්‍රහය  - 1883 - கவட்ட சங்கிராய
 • ලක් විදුරවිය - 1883 - லக் விதுரவிய
 • වෙළඳ මිත්‍රයා - 1884 - வெலந்த மித்றயா
 • සත්‍ය සම්‍ය දර්ශනය - 1884 - சத்யா சம்ய தர்ஷனய
 • සත් සිළුමිණ - 1884 - சத் சிலுமினி
 • දිනකර ප්‍රකාශය  - 1885 - தினகர பிரகாஷய
 • දැනුමැති කවටයා - 1885, 1895 - தெனுமதி கவட்டயா
 • දිනාලංකාරේ  - 1886 - தினாலங்காரே
 • කවට අඤජනම - 1886 - கவட்ட அக்ஞஜனம
 • ප්‍රවෘත්ති සංග්‍රහව  - 1886 - ப்ரோர்த்தி சங்கிராவ
 • ලක්නුබමිණ - 1887 - லக்னுபமின
 • රිවිරැස - 1888, 1893, 1897 - ரிவிரெச
 • පියමුතුහර - 1888 - பியமுதுஹர
 • හෙළදිවී රුවත  - 1888 - ஹெலதிவி றுவத
 • කවට මිත්‍රයා - 1889 - கவட்ட மித்றயா
 • සත්‍යලෝකය - 1889 - சத்யலோகய
 • කවට දූතයා - 1889, 1890 - கவட்ட தூதயா
 • කවට දක්ෂයා - 1889 - கவட்ட தக்ஷயா
 • ක්‍රිස්තියානි මිත්‍රයා - 1889 - கிறிஸ்தியானி மித்றயா
 • ලංකා කවට පත්‍රය  - 1890 - லங்கா கவட்ட பத்றய
 • ලංකා කවට මිත්‍රයා  - 1891 - லங்கா கவட்ட மித்றயா
 • කවට නරේන්ද්‍රයා - 1891 - கவட்ட நரேந்திறயா
 • හිරුරැස - 1892 - ஹிருரெச
 • සිරිලක සිතුමිණ  - 1893, 1894 - சிரிலக சிதுமின
 • කල්‍යානෝදය  - 1893 - கல்யாநோதய
 • කවට රාළහාමි - 1893 - கவட்ட ராலஹாமி
 • කල්‍යාණශීය - 1893 - கல்யாணஷீய
 • පවුලේ මිත්‍රය - 1893 - பவுலே மித்றயா
 • කවටයා - 1894 - கவட்டயா
 • සත්‍යප්‍රිය - 1894 - சத்யபிரிய
 • සත්සිළුමිණිරැස - 1894 - சத்சிலுமினிரெச
 • කවිමිණිනිදන - 1894 - கவிமினிநிதன
 • වෛද්‍ය ශාස්ත්‍රාලංකාරය  - 1894 - வைத்ய ஷாஸ்திராலங்கார
 • සත්‍යප්‍රදීපය - 1895 - சத்யப்ரதீபய
 • සතෙයාදය - 1895 - சதயாதய
 • දිනපතා ප්‍රවෘත්ති  - 1895, 1900 - தின்பதா ப்ரோர்தி
 • ලංකා ප්‍රදීපය - 1895, 1909 - லங்கா பிரதீபய
 • දුදන බැටේ - 1895, 1902 - தூதன பெடே
 • ශ්‍රී ලංකොනතංසය  - 1895 - ஸ்ரீ லங்கொனதங்சய
 • සත්මිණ කිරුළ - 1895 - சதமின கிருல
 • ලංකා මිත්‍රයා - 1895 - லங்கா மித்றயா
 • කවට කතුර - 1895 - கவட்ட கத்துற
 • බැප්ටිස්ට් ප්‍රවෘත්ති  - 1895 - பெப்டிஸ்ட் ப்ரோர்தி
 • සත් සරසවිය - 1896 - சத் சரசவிய
 • විද්‍යා ප්‍රදීපය - 1897 - வித்யா ப்ரதீபய
 • චූළාලංකාර - 1897 - சூலாலங்கார
 • ශ්‍රී ලංකොදය - 1897 - ஸ்ரீ லங்கொதய
 • කල්‍යාණාලෝකය - 1898 - கல்யாணாலோகய
 • සත්බස - 1899 - சத்பச
 • සුවරිතොදය - 1899 - சுவரிதொதய
 • භක්ති ප්‍රබෝධනය  - 1899 - பக்தி பிரபோதய
 • මොරටු තරේන්ද්‍රයා  - 1899 - மொரட்டு நரேந்திறயா
 • මෙතොදිස්ත ප්‍රවෘත්ති  - 1900 - மெதொதிஸ்த ப்ரோர்தி
 • යුධ ඝෝෂාව - 1900, 1904 - யுத கோஷாவ
 • සිතුමිණ - 1900 - சிதுமினி
 • සිම්ල සමය - 1901 - சிம்ல சமய
 • සරසවිය - 1902 - சரசவிய
 • කවට අඟණ - 1902 - கவட்ட அங்கன
 • කවට රජා - 1903 - கவட்ட ரஜா
 • ලංකා පුංචිහේවායා - 1903 - லங்கா புஞ்சிஹேவாயா
 • අභිනව කවට අඟන - 1903, 1910 - அபிநவ கவட்ட அங்கன
 • විදුමිණිරැස - 1904 - விதுமினிரெச
 • සිංහල බෞද්ධයා  - 1906 - சிங்ஹல பௌத்தயா
 • විදුලිය - 1907 - விதுலிய
 • රිවි කිරණ - 1907 - ரிவி கிறன
 • විද්‍යාහරණය - 1907 - வித்யாஹரணய
 • සිංහලයා - 1908 - சிங்ஹலயா
 • ලංකාතාදය - 1908 - லங்காதாதய
 • ඉර උදාව - 1908 - இர உதாவ
 • කවට අන්දරේ  - 1908 - கவட்ட அந்தரே
 • සත්සඳකිරණ - 1908 - சத்சந்தகிறன
 • සිරි අනුරාපුර පුවත  - 1909 - சிறி அனுராபுர புவத்த
 • හිතවාදී - 1909 - ஹிதவாதி
 • කවට තරුණයා - 1909 - கவட்ட தருனயா
 • දිනමිණ - 1909, 1915 - தினமின
 • සිංහල කවටයා - 1910, 1913 - சிங்ஹல
 • කවට රාළ - 1910 - கவட்ட றால
 • සිංහල ජාතිය - 1910 - சிங்ஹல ஜாதிய
 • ආර්ය සිංහල වංශය - 1912 - ஆர்ய சிங்ஹல வங்ஷய
 • ලක්මිණ - 1912, 1915 - லக்மினி
 • කවට තිලක - 1912 - கவட்ட திலக்க
 • ලක් රුවත - 1914 - லக் றுவத
 • සිහල කුළඟන - 1916 - சிஹல குலங்கன
 • සරසවි සඳරැස සහ සිහල සමය - 1916 - சரசவி சந்தரெச சஹா சிஹல சமய
 • ශ්‍රී ලංකා කවටයා - 1916 - ஸ்ரீ லங்கா கவட்டயா

உசாத்துணை :

 1. M.Vythilingam, “Ramanathan of Ceylon: The Life of Sir Ponnambalam Ramanathan”, Volume II, 1977.
 2. පී.එම්.සේනාරත්න, ලංකා දේශපාලනයේ සේනානායකවරු (இலங்கையின் அரசியலில் சேனாநாயக்கர்கள்),  சூரிய பதிப்பகம், 2013
 3. T. Sabaratnam, The Sri Lankan Tamil Struggle, Chapter 16: The Arunachalam Factor, , November 26, 2010 (A journalist who reported Sri Lankan ethnic crisis for over 50 year)
 4. அக்கட்டுரையை எழுதியவர் (ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை) அவர் இந்து சாதனம் பத்திரிகையில் நாற்பது  ஆண்டுகள் முதலில் உதவி ஆசிரியராகவும் பின்னர் ஆசிரியராகவும் கடமையாற்றியவர். “உலகம் பலவிதம்” என்கிற தலைப்பில் அவர் தொடர்ச்சியாக பல கட்டுரைகளை எழுதிவந்தார். ஆனால் அக்கட்டுரைகளை யார் எழுதினார்கள் என்பதை அப்போது வெளியிடவில்லை.
 5. றமீஸ் அப்துல்லா, இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் (1841 - 1950), குமரன் புத்தக இல்லம், கொழும்பு – சென்னை - 2012.
 6. சோமேசுந்தரி கிருஷ்ணகுமார், யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகள் (1900 - 1915), குமரன் புத்தக இல்லம், கொழும்பு – சென்னை - 2016.
 7. නිහාල් රන්ජිත් ජයතිලක, සිංහල පුවත්පත් සහ වෙළඳ දැන්වීම්කරණය (சிங்கள பத்திரிகைகளும், வர்த்தக விளம்பரங்களும்), 1860-1916, PHD Media research paper, University of Sri Jayawardenapura, 2005.

நோர்வேஜிய இலக்கிய வழித்தடம் பற்றிய ஓர் அறிமுகம் - என்.சரவணன்

கோவை - பாரதியார் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்காக இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலில் நடத்தப்பட்டு வரும் தொடர் Refresher Course இல். “நோர்வேஜிய இலக்கிய செல்நெறி” என்கிற தலைப்பில் 20.09.2021 அன்று ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட எழுத்து வடிவம் இது.

நோர்வேயின் இலக்கியத்தைப் பற்றி அறிய வேண்டுமென்றால் அதன் அமைவிடம், புவியியல், வளங்கள், பண்பாட்டு வளர்ச்சி, அரசியல் வரலாறு என்பவற்றை சற்றென்றாலும் பார்த்தாகவேண்டும். 

இங்கு பேசுகளம், கதைமாந்தர், பேசுபொருள், கதைக்குரிய பண்பாட்டுப் பின்புலம், அனைத்தையும் தீர்மானிப்பவை இம்மக்கள் கொண்டிருக்கிற வளங்கள், அதன் வரலாறு, அதன்பாற்பட்ட பண்பாட்டுத் தொடர்ச்சி, மொழியும், மொழிவழிச் சிந்தனையின் பன்முகப்பட்ட வழித்தடம் என பலவற்றைக் குறிப்பிட முடியும்.

சமீப காலமாக இலங்கையின் அரசியல் வரலாறு பற்றி பல அரிய தகவல்களைக் தேடிக் கண்டுபிடித்து தமிழ் மொழியில் மானுடவியல்சார் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறேன். பொதுவாக தமிழில் அப்பணி மேற்கொள்ளப்படுவதில்லை என்பதால் நான் அதனை அதிகம் செய்ய நேரிட்டிருக்கிறது. அப்படி கடந்த மூன்று நூற்றாண்டுகால ஆவணங்கள் பலவற்றை சேகரிப்பது எனது வாடிக்கையாக இருக்கிறது. அப்படி தேடிக்கொண்டிருக்கும் வேளை காலனித்துவ காலத்தில் இலங்கையில் டானிஷ்காரர்களின் வகிபாகம் பற்றிய தகவல்கள் ஆங்காங்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் நோர்வேஜியர்களாக இருந்ததையும் அறிய முடிகிறது. அந்தக் காலப்பகுதியைப் பார்த்தால் அது நோர்வே டென்மார்க்கோடு இணைந்திருந்த காலப்பகுதி.

அந்த டேனிஷ்காரர்களின் பாத்திரம் என்பது நோர்வேக்காரர்களின் பாத்திரமுமாகத் தான் காண வேண்டும். இது ஓர் உதாரணம் .

வட துருவ நாடான நோர்வே இந்தியாவை விட பத்தில் ஒரு மடங்கு பரப்பளவைக் கொண்ட நாடு தான். ஆனால் உலகில் கனடாவுக்கு அடுத்ததாக நீண்ட கரையோரத்தைக் கொண்ட நாடு நோர்வே. சுமார் 83,281 கிலோ மீட்டர்களைக் கொண்டது. இந்தியாவின் கரையோரப்பகுதி 7000 கிலோ மீட்டர் தான். இந்தத் தீவுகளை அண்டி ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான தீவுகள் உள்ளன. இதைப் புரிந்துகொண்டால் நோர்வே மீன் ஏற்றுமதியில் இரண்டாவது நாடாகவும், எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய நாடுகளில் ஒன்றாகவும் இருப்பதை இலகுவில் புரிந்துகொள்ள முடியும். 1969 ஆம் ஆண்டு நோர்வேயில் எண்ணெய், எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் அதன் பொருளாதாரம் வேகமான வளர்ச்சி கண்டு பின்னர் இன்று உலகின் நான்காவது பணக்கார நாடாக வளர்ந்து நிற்கின்றது. உலகின் அதிகமாக மகிழ்ச்சியாக வாழும் முதல்நிலை நாடாகவும் கணிக்கப்படுகிறது.

நோர்வேயின் வடதுருவப் பகுதியில் சாமிர் என்கிற பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கென்று தனி மொழி, தனிப் பாராளுமன்றம் உள்ளது. அதுபோல நோர்வேயில் பிரதேசத்துக்கு பிரதேசம் வெவ்வேறு பேச்சு வழக்கைக் கொண்ட மக்கள் உள்ளனர். அண்டைய அயல் சகோதர நாடுகளான டென்மார்க், சுவீடன், பின்லாந்து போன்ற நாடுகளின் மொழிகளில் வித்தியாசம் இருந்தாலும் பரஸ்பரம் புரிந்துகொள்ளக் கூடிய அளவுக்கு நெருக்கமானவை. எனவே இங்குள்ள இலக்கியங்கள் மொழியால் மட்டுமல்ல, பண்பாட்டாலும், கலாசாரத்தாலும் மிகவும் நெருக்கமான தொடர்பையும், பரஸ்பர ஊடாட்டங்களைக் கொண்டவை.

நோர்வே அதிக காலம் பனியையும், குளிரையும், இருளையும் கொண்ட நாடு. இது ஆக்டிக் கண்டத்துக்கு அருகாமையில் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நோர்வேயின் ஒரு பகுதி ஆக்டிக் கண்டத்தில் தான் இருக்கிறது.

ஆண்டுக்கு வெறுமனே இரண்டு மூன்று மாதங்களுக்கு மட்டுமே தலைகாட்டும் வசந்தகாலத்துக்காக எஞ்சிய ஒன்பது மாதங்களும் ஏங்கிக் காத்திருக்கும் மக்கள். கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் எனத் தமிழ் கூறும் ஆறுவகை பருவக் காலத்தையும் அனுபவிக்கும் மக்கள். இந்த ஒவ்வொரு பருவ காலத்திலும் எப்பேர்ப்பட்ட உடைகளை அணிவது, எப்பேர்ப்பட்ட உணவுகளை உண்பது, எப்பேர்ப்பட்ட உணவுகளை சேகரிப்பது, சேமிப்பது, எப்பேர்ப்பட்ட விளையாட்டுக்களை, கலைகளை பயன்படுத்திக்கொள்வது என்பதெல்லாம் தீர்மானிக்கப்படுகின்றன. இதற்கு கீழ் ஐரோப்பிய நாடுகளுடன் நிலத்தொடர்ச்சி இல்லை. வடக்கில் பின்லாந்து, ரஷ்யா, கிழக்கில் சுவீடன் என்பவற்றுடன் தான் அதன் நிலத்தொடர்ச்சி இருக்கிறது. மற்றும்படி கடல்வழிப் பயணத்தின் மூலம் தான் ஏனைய நாடுகளுடன் தொடர்பை வைத்திருக்கவேண்டும்.

எனவே நீண்ட காலமாக அவர்கள் உலகத்தில் இத்தனை நாடுகள் உள்ளதையும், இத்தனை மக்கள் கூட்டமும், பண்பாடுகளும் உள்ளன என்பதையும் அறியாதிருந்தனர். இங்கிலாந்தைக் கூட அவர்கள் கடற்கொள்ளை காலப்பகுதியில் தான் கி.பி 860 ஆம் ஆண்டளவில் கண்டுபிடித்து அங்கு கொள்ளைகளை அடித்து, அன்றைய சில ஆட்சியாளர்களை அடிபணிய வைத்து வரிகளை கொடுக்கச் செய்து அங்கு குடியேற்றங்களையும் செய்தனர்.

வீக்கிங் என்கிற கடற்கொள்ளைக் காலம்

ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தைத் தான் வீக்கிங் காலம் எனப்படுகிறது.

இவர்கள் கடற்கொள்ளயர்களின் தெய்வங்களாக Odin, Thor, Freyja, Loki போன்ற தெய்வங்களை வணங்கினார்கள். இவர்கள் வணங்கிய அந்த மதத்தை “Nor Norse” (நூர் நோர்ஸ்)  என்றழைத்தார்கள். இவர்கள் பேசிய மொழியையும் Nor Norse மொழியென்றே அழைத்தார்கள். அது தான் பின்னர் நொர்ஸ்க் என்கிற நோர்வேஜிய மொழியாக ஆனது. அவர்களின் காவல் தெய்வங்களாக இவர்களைப் பேணுவதற்காக தமக்குள் ஒருவரையோ, பலரையோ பலி கொடுக்கும் வழக்கம்  அவர்களிடம் இருந்தது. அப்படிக் கத்தியால் நெஞ்சில் குத்தி கிழித்துப் பலிகொடுக்க அப்போது பலர் விரும்பி முன்வந்திருக்கிறார்கள். அதன்மூலம் Valhalla என்கிற அவர்களின் சொர்க்கத்துக்கு இலகுவாக சென்றுவிடலாம் என்கிற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. இந்தக் கடவுளர்களைத் தவிர வேறெந்தத் தெய்வ நம்பிக்கைகளையும் கொண்டவர்களை அவர்கள் தண்டித்தார்கள். ஆனால் காலப்போக்கில் இங்கிலாந்தைக் கண்டுபிடித்ததன் பின்னர் அங்கிருந்து கத்தோலிக்க மதம் மெதுமெதுவாக நோர்வேக்குள் பரவியது. பின்னர் நோர்வே ஒரு புரட்டஸ்தாந்து செல்வாக்குள்ள மதநாடாக மாறியது. அதுமட்டுமன்றி ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போலவே நோர்வேயின் மத நிறுவனங்கள் அதிகாரம் படைத்த நிறுவனங்களாக மாறின. சில பிஷப்மார்கள் போருக்கு கூட தலைமை வகித்துள்ளனர்.

Viking என்கிற ஒரு தொடர் நாடகம் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பட்டு வருகின்றது. நெட்பிளிக்ஸ்ஸில் அதைப் பார்க்கலாம். இப்போது ஆறு சீசன்கள் முடிந்துள்ளன. நோர்வே மக்களின் கடற்கொள்ளைக் கால வாழ்க்கையையும், ஸ்கண்டிநேவிய நாடுகளின் வளர்ச்சியையும் உணர்ந்துகொள்வதற்கு அந்த நாடகத்தை பரிந்துரைக்கிறேன். மிகவும் அருமையாக எடுக்கப்பட்டிருக்கிறது.

நோர்வே 1349 இல் ஏற்பட்ட கொள்ளை நோயால் நோர்வேயின் சனத்தொகையில் 50% -60% வீதமான மக்கள் அழிந்தார்கள். 1379 இலிருந்து நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகியவை 1523 வரை கல்மார் ஒப்பந்தத்தின் மூலம் ஐக்கியப்பட்ட நாடுகளாக இயங்கின. ஆனால் 1521 இல் அதில் இருந்து சுவீடன் விலகியது. 1814 வரை டென்மார்க்குடன் நோர்வே சேர்ந்து ஒரே நாடாக இயங்கிவந்தது. இந்த இடைக்காலப்பகுதியில் பிரித்தானியாவின் காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு நோர்வே, டென்மார்க் ஆகிய நாடுகளும் இலக்காகின. 

ஒரு சமூகம் மொழியின்றியும் கலை இலக்கியங்கள் உருவாக்கலாம், ஆனால் அது தன் மொழியால் மாத்திரமே அதனை அடுத்த நிலைகளுக்கு வளர்த்துச் செல்லலாம். ஏனைய சமூகங்களின் தரத்துக்கு நிகராக நின்று பிடிக்கலாம். ஐரோப்பாவைப் பொறுத்தளவில் கலை இலக்கியங்களின் வளர்ச்சியில் கிறஸ்தவ மதப் பிரச்சாரமும், பைபிளின் வகிபாகமும் முக்கியமானது. எப்போது பைபிளுக்கூடாக மதம் வளர்ந்ததோ அப்போதிருந்து அது சென்றடைந்த அந்தந்த மொழிகளும் செழிப்படைந்தன. அம்மொழிகளுக்கூடாக பன்முக கலை இலக்கிய வடிவங்களும் வளர்ந்து விரிந்தன.

நோர்வே பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து டென்மாக்கின் கீழ் இருந்த சுமார் மூன்று நூற்றாண்டுகள் ஐரோப்பாவில் மிகப்பெரிய தொழிற்புரட்சி, சமூகப்புரட்சிகள், இலக்கியங்கள் வளர்ந்த காலம். ஆனால் நோர்வே தமக்கான சுயத்தை வளர்த்தெடுக்க முடியாமல் போன காலம். ஏனென்றால் டேனிஷ் பண்பாடு நோர்வேக்குரிய தனித்துவமான பண்பாட்டை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தது. நோர்வேஜிய இலக்கியங்கள் எல்லாமே அந்தக் காலப்பகுதியில் டேனிஷ் மொழியில் தான் எழுதப்பட்டன. அப்படி டேனிஷ்  மொழியில் எழுத்தப்பட்டதால் சில முக்கியமான படைப்புகளை நோர்வேஜிய இலக்கியங்களுக்குள் வகைப்படுத்துவதா, அல்லது டேனிஷ் இலக்கியத்துக்குள் வகைப்படுத்துவதா என்கிற சர்ச்சை இன்றும் அவ்வப்போது எழுவதுண்டு. அக்காலத்து அவ்விலக்கியங்களை “டேனிஷ் - நோர்வேஜிய பொது இலக்கியம்” (den dansk-norske felleslitteraturen) என்றும் அழைக்கபடுகிறது. நோர்வேஜிய மொழியில் ஒரு பைபிளைக் கூட உருவாக்கிக்கொள்ள டானிஷ்காரர்கள் அன்று வழிசெய்யவில்லை என்கிற விமர்சனங்களை இன்றும் கூறுவார்கள். குறிப்பாக ஐரோப்பாவில் ஒவ்வொரு நாடும் தமது பரவலான பேச்சுவழக்கு மொழியைக் கூட பொதுமைப்படுத்தி நிலைநிறுத்தியதில் பைபிளுக்கு பெரும் பங்களிப்பு உண்டு. டானிஷ் மொழி பைபிளைத் தான் அதுவரை நோர்வேஜியர்கள் பயன்படுத்தி வந்தார்கள். Old norse என்கிற பழைய நோர்வேஜிய மொழியில் பைபிளின் சில பகுதிகள் அப்போது கிடைத்தபோதும் 1862இல் அது நோர்வேஜிய மொழியில் மொழிபெயர்க்கப்படும் வரை பைபிள் இருக்கவில்லை. நினைத்துப் பாருங்கள் இதே காலத்தில் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் கூட பைபிள் மொழிபெயர்ப்புகள் கிடைக்க ஆரம்பித்துவிட்டிருந்தன. 

வீக்கிங் காலத்தில் காணப்பட்ட old norse மொழி பதினைந்தாம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்தது. வட ஜேர்மனின் - டச்சு மொழியின் செல்வாக்கால் ஸ்கண்டிநேவிய நாடுகளில் புழக்கத்துக்கு வந்த மொழி இது. அதேவேளைநோர்வேயில் வழக்கில் இருந்த எழுத்து வடிவத்தை ரூனஸ் என்பார்கள் (Runes). அவ்வெழுத்து வடிவம் கி.பி. 100 ஆம் ஆண்டுகளில் உருவானவை. வீக்கிங் காலம் வரை அதைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். பழைய கல்வெட்டுக்கள், நாணயங்கள், நகைகள், ஆயுதங்கள் என்பவற்றில் பொறிக்கப்பட்டுள்ள இவ்வெழுத்துக்களைக் காண முடியும். லத்தீன் – ரோமன் எழுத்துக்களின் சாயலில் தான் அவ்வெழுத்துக்கள் இருந்தன. ஆனால் அதற்கென்று வளமான ஒரு இலக்கண யாப்பு இருக்கவில்லை. கி.பி 1000க்குப் பின் தான், இன்னும் சொல்லப்போனால் வீக்கிங் காலத்தில் தான் லத்தீன் எழுத்துக்கள் நோர்வேக்கு வந்து சேர்ந்தன. கிறிஸ்தவ மதத்தின் நுழைவோடு தான் அது நிகழ்ந்தது. குறிப்பாக கிறஸ்தவ தேவாலயங்களில் தான் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டன. நோர்வேயில் மட்டுமல்ல ஸ்கண்டிநேவிய நாடுகள் முழுவதும் இப்படித்தான் நிகழ்ந்தன. பெரும்பாலான ஐரோப்பிய மொழிகள் லத்தின் எழுத்துக்களைக் கொண்டு தான் ஏறக்குறைய சில வித்தியாசங்களுடன் அம்மொழிகளுக்கான எழுத்துக்கள் நிறுவப்பட்டன. ஆங்கில எழுத்துக்கள் 26 உடன் சேர்த்து மேலதிகமாக மூன்று எழுத்துக்கள் நோர்வேஜிய மொழியில் இன்று உள்ளன. அம்மொழியில் உள்ள சில விசேட ஒலி உச்சரிப்புகளை வெளிப்படுத்தப் பயன்படுபவை அவை.

தொரதி (Dorothe Engelbretsdatter)

தொரதி

நோர்வேயின் முதலாவது எழுத்தாளராகவும், முதலாவது பெண்ணியவாதியாகவும் அறியப்படுபவர் தொரதி (Dorothe Engelbretsdatter). 1634 இல் பிறந்த அவர் பல சிறந்த கவிதைகளுக்கு சொந்தக்காரர். குறிப்பாக அவர் சமயம் சார்ந்தே அதிகம் எழுதியிருக்கிறார்.

பேர்கன் நகரத்தில் உள்ள பாடசாலையின் அதிபரின் மகள் தான் தொரதி. தந்தை பின்னர் பேர்கன் பெரிய தேவாலயத்தின் டீனாக நியமிக்கப்பட்டார். தனது இளம் வயதிலேயே சிறிது காலம் கொப்பன்ஹேகனில் வசித்து வந்த தொரதி அன்று பிரபலமான ஓர் இறையியல் எழுத்தாளரான அம்போரியஸ் என்பவரை திருமணம் முடிக்கிறார்.

1968 இல் தான் தொரதியின் முதலாவது கவிதை நூல் கொப்பன்ஹேகனில் வெளியானது. அதன் பின்னர் அவர் எழுதிய கவிதை நூல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்தன. டென்மார்க் கவிதைப் பாரம்பரியத்தின் தந்தை என்று அறியப்படும் தோமஸ் ஹன்சனுக்கு அறிமுகமாகி அவரின் இலக்கியத் தரமும் செல்வாக்கும் பெருகுகிறது. தொரதியின் கவிதைகளால் கவரப்பட்ட அரசர் ஐந்தாவது கிறிஸ்தியான் அவருக்கு வாழ்நாள் முவுவதற்குமான வரிவிலக்கு அளிக்கிறார்.

1683இல் அவரின் கணவர் இறந்து விடுகிறார். தொரதிக்கு பிறந்த ஒன்பது பிள்ளைகளில் இரண்டு குழந்தைகள் மட்டுமே தப்புகின்றனர். ஏனையோர் இறந்துவிடுகின்றனர். 1702 பேர்கனில் ஏற்பட்ட பெருந்தீயால் 90 வீதமான நகரம் எரிந்து நாசமாகிறது. தொரதியின் வீடும் அதில் அழிந்துவிடுகிறது. அதன்பின் பத்து வருடங்களாகிறது அவருக்கென்று ஒரு வீடு உருவாவதற்கு. அதற்கடுத்த நான்காண்டுகளில் தனது 82 வது வயதில் அவர் இறந்து விடுகிறார்.

தொரதி தான் நோர்வேயின் முதலாவது தொழில்முறை எழுத்தாளராக அறியப்படுகிறார்.

அடுத்த முக்கியமான இலக்கியவாதியாக கருதபடுபவர் பெத்தர் தாஸ் Petter Dass

1647 இல் பிறந்த பெத்தர் தாஸ் தொரதியைப் போலவே பேர்கன் நகரில் வளர்ந்தவர். பின்னர் கொப்பன்ஹெகன் சென்று தன்னை வளர்த்துக்கொண்டவர். அதன் பின்னர் ஒரு பாதிரியாராகி பல கவிதை இலக்கியங்களைப் புனைந்தவர். அதுமட்டுமன்றி நிலவியல் உள்ளிட்ட பல அபுனைவு நூல்களையும் எழுதினார். அந்த நூல்கள் எல்லாம் அவர் உயிரோடு இருக்கும் வரை வெளியாகவில்லை. அவரின் இறப்பின் பின்னர் தான் அவர் கொண்டாடப்பட்டார். இன்றும் அவர் நினைவாக அவரின் பெயரில் ஆண்டு தோறும் இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது.

அவரின் “The Trumpet of Nordland” என்கிற நூல் வட துருவ நோர்வேஜிய மக்களின் வாழ்வியலை சித்திரிக்கின்ற படைப்பு. அங்கிருக்கும் காலநிலை, இயற்கை, விலங்குகள், பறவைகள், மரங்கள், சாமீர் இனத்தவர்கள், மீனவ வாழ்க்கைமுறை என பல விபரங்களை உயர் கவித்துவத்தோடு பேசுகின்ற நூல். இன்றும் கொண்டாடப்படுகிற நூல்.


இதன் பின்னர் பல இலக்கியவாதிகள் உருவானார்கள். ஆனாலும் நோர்வேக்கு உரிய தனித்துவமான இலக்கியம் இருந்ததா? தமது சொந்த மொழியால் வளர்க்கப்பட்டு பதிவுசெய்ய வாய்ப்பில்லாமல் போன ஒரு சமூகமாக இருந்ததால் அப்படிப்பட்ட இலக்கியங்கள் வாய்மொழியில் தான் இருக்கும் என்பதை உணர்ந்த Asbjørnsen and Moe என்கிற இரு நண்பர்கள் நாடு முழுவதும் அலைந்து திரிந்து வாய்மொழி இலக்கியங்களைப் பதிவு செய்வதற்கு கிளம்பினார்கள். அவர்கள் பதினைந்து வருடங்களாக தேடித் திரிந்து கண்டடைந்தவற்றை பின்னர் (Norske folkeeventyr) “நோர்வேஜிய நாட்டுப்புறக் கதைகள்” என்கிற நூலை 1841 இல் வெளிக்கொணர்ந்தார்கள். இங்கே டென்மார்க்கிடம் இருந்து விடுதலை பெற்று சுயாதீனமான நாடாக ஆனதன் பின்னர் தான் இது அவர்களுக்கு சாத்தியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

இந்த நாட்டுப்புறக் கதைகள் பல தொகுதிகளாக, பல கதைகளாக வெளிவந்தன. அதுமட்டுமன்றி பல மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட்டன. அவர்களின் காலத்திலேயே பல பதிப்புகள் கண்டன. அவை அன்றே சித்திரங்களுடன் வெளிவந்தன. இவை பரந்துபட்ட மிகப்பெரிய நாடான நோர்வேயின் பல்வேறு பகுதிகளில் உள்ள கதைக்களங்களையும், அந்தப் பண்பாட்டு எண்ணங்களையும், சூழலையும் பிரதிபலித்தன. வடக்கில் சூனியக்காரிகள் பற்றிய கதைகளும் இதில் அடங்கும்.

இலக்கியங்களுக்கும் விவசாயத்துக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். வரலாறு நெடுகிலும் விவசாயம் வளம்பெற்ற இடங்களில் சிறந்த இலக்கியங்களும் கிடைத்துள்ளன.

பதினெட்டாம் நூற்றாண்டில் நோர்வேயில் விவசாயம் வளரத்தொடங்கியதன் பின்னர் இந்த மாற்றங்களைக் கவனிக்கலாம்.


18 ஆம் நூற்றாண்டில், அறிவொளிக் கருத்துக்களை அதிகம் எழுதிய “டேனிஷ்-நோர்வே இலக்கியத்தில்” செல்வாக்கு செலுத்திய லுட்விக் ஹோல்பெர்க் (Ludvig Holberg) நோர்வேஜிய தேசிய உணர்வை உந்துவதற்கு வழிகோலிய முக்கிய எழுத்தாளர். அவரும் நோர்வே பேர்கன் நகரில் பிறந்தவர். அவர் நாவல், கவிதைகள், நாடகங்கள் (குறிப்பாக நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு நாடகங்கள்) மட்டுமன்றி பல வரலாற்று நூல்களையும், கட்டுரைகளையும் எழுதினார். ஒரு தத்துவவாதியாகவும், வரலாற்றாசிரியராகவும் கருதப்படுகிறார். அவர் எழுதிய சட்ட நூல்களைத் தான்  1736 – 1936 வரையான சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு டேனிஷ் சட்டக்கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தினார்கள்.

இதன் பின்னர் வரிசையாக இலக்கியத்தில் மாற்றம் ஏற்படுத்தியவர்களில் நோர்வேயின் முதலாவது தேசிய கீதத்தை எழுதிய  யோஹான் நூர்டால் (Johan Nordahl Brun), அதன் பின்னர் ஹென்றிக் வெஜிலன்ட் (Henrik Wergeland),  யோஹான் செபஸ்தியான் (Johan Sebastian Welhaven), ஈவார்  ஆசன் (Ivar Aasen) என வரிசையாகப் பட்டியலிட முடியும்.


1850 களின் நடுப்பகுதியில், ஒரு புதிய தலைமுறைக் கவிஞர்கள் தோன்றினர், அவர்களில் ஹென்றிக் இப்சன், பியோன்சன்,  மற்றும் கமில்லா (Camilla Collett utga), ஆகியோர் முன்னணியில் இருந்தனர். 1854/1855 ஆம் ஆண்டில் நோர்வேயின் முதல் சமூக விமர்சன நாவலான “அம்ட்மண்ட் மகள்” கமிலா கோலெட் வெளியிட்டார், அதே நேரத்தில் ஓஸ்மண்ட்ஊலாஃப்சன் வின்ஜே புதிய தேசிய மொழியில் எழுதிய முதல் கவிஞர் - டோலன் 1858 இதழில் மற்றும் 1861 முதல் ஃபெர்டாமின் கட்டுரையின் சிறப்பம்சமாக. ஜார்ன்சன் 1857 முதல் சினேவ் சூல்பாக்கன் வேறும் பிற விவசாயக் கதைகளுடன் நோர்வேயின் உரைநடைகளைப் புதுப்பித்தார். அதற்கு சமகால நாடகமான A Fallit உடன் 1875 முதல் அவர் ஐரோப்பாவில் நோர்வே நாடகத்திற்கு வழி வகுத்தார். அத்தோடு இப்சன் 1879 இலிருந்து “ஏ டோல்ஸ் ஹவுஸ்”, 1881 இலிருந்து “கோஸ்ட்ஸ்” போன்ற தலைசிறந்த படைப்புகளுடன் இலக்கிய உலகின் ஒரு நட்சத்திரமாக ஆனார் .

அது போல அன்று கிரிஸ்தானியா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஒஸ்லோவில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. ஒரு புது தொழிற்படை உருவானது. இந்தப் புது தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கை நிலை பற்றி பேசுகின்ற படைப்புகள் வளர்ந்தெழுந்தன.

இப்சன்

இதன் பின்னர் கிறிஸ்தியான் குரோக் (Christian Krohg) என்கிற மாபெரும் படிப்பாளியின் படைப்புகள் முக்கியமானவை.  அவர் ஒரு பன்முக கலைஞராக இருந்தார். மிகவும் பிரபலமான ஓவியராகவும், எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், சிந்தனையாளராகவும் அறியப்படுகிறார். 1852 - 1925 காலப்பகுதியில் வாழ்ந்த அவர் அன்று ஐரோப்பாவில் தோன்றியிருந்த யதார்த்தவாதம் கலை இயக்க சிந்தனைகளைக் கவர்ந்திருந்தார். எனவே அவரின் படைப்புகளில் சமூக யதார்த்தம் தொனித்திருந்தது. குறிப்பாக அவர் அன்றைய காலத்து ஒஸ்லோவில் இருந்த பாலியல் தொழிலை வெறுத்தார். அதை பற்றி தனது ஓவியங்களில் வரைந்தார். கட்டுரைகளில் எழுதினார். அவர் வரைந்த Albertine i politilægens venteværelse (Albertine at the Police Doctor's Waiting Room என்கிற ஓவியம் மிகவும் புகழ்பெற்றது. இன்றும் ஒஸ்லோ தேசிய மியூசியத்தில் அது வைக்கப்பட்டிருக்கிறது. ஒஸ்லோ பாராளுமன்றத்தின் இடதுபுறமாக இன்றும் பெரிய உருவமாக அவரின் சிலை கம்பீரமாக இருப்பதைக் காணலாம்.

இந்த வரிசையில் Bjørnstjerne Bjørnson பியோன்ஷியான பியோன்சனின் படைப்புகளும் நாடகங்களும் முக்கியமானவை. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் நோர்வேஜியர் இவர் தான்.

Bjørnstjerne Bjørnson பியோன்ஷியான பியோன்சன்

இந்த வரிசையில் இப்சனை நாம் அறிவோம். அவரின் நாடகப் படைப்புகள் நோர்வேயில் செல்வாக்கு பெறுமுன்பே இத்தாலியிலும், ஜெர்மனியிலும் புகழ் பெறத் தொடங்கிவிட்டன. அதன் பின்னர் தான் நோர்வேஜியர்களால் கண்டுகொள்ள முடிந்தது என்றால் அது மிகையில்லை. அவரை மீண்டும் நோர்வேக்கு அழைத்தெடுத்து நோர்வேயில் இருந்தபடி படைப்பிலக்கியங்களை உருவாக்கச் செய்தவர்  பியோன்ஷியான பியோன்சன் தான். உலகப் புகழ்பெற்ற அவரின் படைப்புகள் மொழிபெயர்க்கப்படாத மொழிகளே இல்லையெனலாம்.  இப்சன் காலத்தில் 1902, 1903, 1904 ஆகிய ஆண்டுகளில் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு அது வழங்கப்படவில்லை. இப்சன் அப்போது வயது முதிர்ந்திருந்தார். நோபல் பரிசுக் கமிட்டியும் ஒரு இளம் எழுத்தாளருக்கு வழங்குவதில் ஆர்வமாக இருந்தது. இறுதிவரை இப்சன் நோபல் பரிசைப் பெறவில்லை. அடுத்த இரண்டாவது ஆண்டு 1906 ஆம் ஆண்டு தனது 78 வது வயதில் அவர் மரணமானார். ஆனால் இன்றும் கொண்டாடப்படுகின்ற மாபெரும் உலக இலக்கிய ஆளுமையாக அவர் கருதப்படுகிறார். ஒவ்வொரு நாளும் அவரின் நாடகங்கள் உலகின் ஏதோ ஓரிடத்தில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

இந்த வரிசையில் எட்வர்ட் முங்க் என்கிற உலகப் புகழ்பெற்ற ஓவியரையும் அறிவீர்கள்.

சூனியக்காரிகள்

உலகில் அதிகமான சூனியக்காரிகள் கொல்லப்பட்ட நாடாகவும் நோர்வே திகழ்கிறது. குறிப்பாக பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அதிகமான பெண்கள் சூனியைக்காரிகளாக அடையாளம் காணப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட Vardø என்கிற இடத்துக்குச் சென்று அந்த நினைவிடங்களை ஐந்தாண்டுகளுக்கு முன் நான் போய்ப் பார்த்தேன். நோர்வேயின் சூனியக்காரிகள் பற்றிய ஆய்வுகளின் ஒரேயொரு நிபுணராக கருதப்படும்  பிரபல ஆய்வாளர் ட்ரோம்சோ பல்கலைகழக பேராசிரியர் Liv Helene Willumsen யும் எங்களோடு வந்து அவற்றைப் பற்றிய விளக்கங்களைத் தந்தார். சூனியக்காரிகளைக் கொன்றொழித்த நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்தாறு நாடுகளில் நோர்வேயும் இருக்கிறது என்பதை இங்கே சொல்லியாக வேண்டும். பெண்கள் மட்டுமல்ல 8, 12 வயது சிறுமிகள் பலரும் கூட கொல்லப்பட்டார்கள். 

சூனியக்காரிகள் என்கிற பேரில் கொல்லப்பட்ட பல நூறு பெண்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் நெருப்புத் தூபி. 

நோர்வேயின் சூனியக்காரிகள் பற்றிய ஆய்வுகளின் ஒரேயொரு நிபுணராக கருதப்படும்  பிரபல ஆய்வாளர் ட்ரோம்சோ பல்கலைகழக பேராசிரியர் Liv Helene Willumsen.


பின்னணியில் தெரிவது கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் பதியப்பட்ட Vardøவில் உள்ள  நூதனசாலை. இப்புகைப்படங்கள் 2013 யூனில் பத்திரிகையாளர்கள் குழுவாக சென்றபோது எடுக்கப்பட்டவை.

வாய்மொழிக் கதைகளையும், நம்பிக்கைகளையும் மரபாகப் பல தலைமுறைகளுக்கு கடத்தி வந்த நம்பிக்கைகளைக் கொண்டு சூனியக்காரிகளைக் கண்டுபிடிக்க சில குறியீடுகளை வைத்திருந்தனர். ‘அவளைத் தனியாக இருட்டில் கண்டேன்’, ‘அவளிடம் மீன் கவிச்சி வாடை வந்தது’, ‘அவர் தனியாக பேசிக்கொண்டிருந்ததைக் கண்டேன்’, இப்படி ஏதோ ஒரு சந்தேகத்தை ஊர் பெரியவர்களிடம் கூறிவிட்டால் ஒர் உரிய காலத்தில் ஊரைக் கூட்டி அப்பெண்ணை விசாரிப்பார்கள், சாட்சியளிப்பவர் இப்படி ஒரு குற்றச்சாட்டைச் சொன்னதும் பெரிய விசாரணை, ஆராய்ச்சி எல்லாம் தேவைப்படாது, ஊர்க்காரர்களும் சேர்ந்து அவள் சூனியக்காரியேதான் என்று கத்தத் தொடங்குவார்கள். அதன்பின் அவளை நிமிர்த்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு மரக்கட்டையில் கட்டி வைத்து அதைச் சூழ மரக்கட்டைகளை அடுக்கி வைத்து எரித்து விடுவார்கள். 

இவற்றைப் பற்றி பல புனைகதை இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் ஒரு சாத்தானின் கிறிஸ்மஸ் நாள் “En satans julekveld “ என்கிற நாவல் மிகவும் முக்கியமானது. 

குறிப்பாக நோர்வேயின் வடக்குப் பகுதிக்குச் செல்ல குளிரும், பனியும், இருளும் அதிகமோ அதிகம். எனவே அவர்கள் உணவாக அதிகம் உட்கொள்வது மீனைத்தான். வசந்த காலங்களில் மீனைக் காயவைத்து கருவாடாக்கி சேமித்து வைப்பது வழக்கம். பல விலங்குகள் வாழும் நாடல்ல நோர்வே. மான், கரடி போன்ற வெகு சில மிருகங்களே இந்த பனி நாட்டில் வாழ்கின்றன. மான்களில் பல வகையான இராட்சத மான் வகைகள் இங்குள்ளன. அவற்றைத் தான் வேட்டையாடி வெட்டி உலர்த்தி, புகையடித்து, காயவைத்து பனிக்காலத்தில் உணவாக உண்பார்கள். எனவே இவர்களின் ஆயுட்காலம் அத்தனை அதிகமானதல்ல. 

நோர்வேக்கு கிழங்கு அறிமுகமானது 1750 களில் தான். காலனித்துவ காலத்தில் கிழங்கை லத்தீன் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு கொண்டு வந்து சேர்த்தவர்கள் போர்த்தேக்கேயர் தான். நோர்வேக்கு அது அறிமுகமானதன் பின்னர் அவர்களின் உணவுப் பண்பாட்டில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. வசந்த காலத்தில் தமக்குத் தேவையான கிழங்குகளை உற்பத்தி செய்தார்கள். மிகவும் வேகமாக கிழங்கை உணவாக நுகர்வு அதிகரித்தது. சராசரியாக ஓராண்டுக்கு ஒரு ஆள் 88 கிலோ கிழங்கை சமீபகாலம் வரை உண்டார்கள். ஆனால் இப்போது அதிகமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் உண்ணத் தொடங்கியதன் பின்னர் கிழங்குப் பயன்பாடு குறைந்திருக்கிறது. வசந்த காலத்தில் விவசாயம் செய்து மரக்கறிகளையும், பழங்களையும் உற்பத்தி செய்துகொள்கிறபோதும் அது தன்னிறைவுக்கு போதாது. ஆனாலும் இன்றும் அவர்களின் தேசிய கலாச்சார உணவாக கிழங்கு உள்ளது. எந்த மாமிச உணவோடும் அவித்த கிழங்குகளையும் சேர்த்து உண்பது உணவுப் பயன்பாட்டின் அம்சம். நோர்வேஜியர்களை “கிழங்கர்கள்” என்று (Potatos) எனக் கேலி செய்வது இன்றும் பேச்சுவழக்கில் உள்ளது.

வீகிங் காலத்தில் பிரித்தானியாவுக்குச் சென்று அங்குள்ள அரசர்களுடன் தாங்கள் போர்புரியாமல் இருக்க வேண்டுமென்றால் எங்களுக்கு விவசாயம் செய்ய நிலங்களைத் தாருங்கள் என்று ஒப்பந்தம் செய்துகொண்டு பல நோர்வேஜியர்கள் குடியேறிய வரலாறும் உண்டு. நோர்வே தாராளமான நிலப்பகுதியைக் கொண்டிருந்தபோதும், விவசாயத்துக்கு உகந்த மண்ணையும், காலநிலையையும், பருவ காலத்தையும், சீதோஸ்ண நிலையையும் கொண்டதல்ல. இன்று இருப்பதை விட மோசமான குளிர்க்காலநிலை அப்போது இருந்தது.

நோர்வேஜியர்களின் ஆயுட்காலம் இன்று சராசரி 82 வயதை விட அதிகரித்திருக்கிறது. ஆனால் சுமார் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை இவர்களின் ஆயுட்காலம் முப்பதைந்தைக் கடந்ததில்லை. அதிலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடற்கொள்ளையர் காலத்தில் 25-30 வயதுக்கு மேல் வாழ்ந்ததில்லை. அதற்கு காரணமாக நிதமும் சமர்களை எதிர்கொண்டதாலும் இருக்கலாம். கூடுதலாக சுகாதாரமின்மை (Hygiens) காரணமாக அதிகமாக இறந்தார்கள் என்கிறார்கள். குறிப்பாக ஆண்களை விட அதிகமாக பெண்களே இருந்திருக்கிறார்கள். இலகுவில் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள். எந்த நோயினால் அதிகமாக இறந்தார்கள் என்பதற்கான பதிவுகள் இல்லை. எனவே இந்த இருபது முப்பது வருடத்துக்குள் தான் அவர்களின் மொத்த வாழ்காலமும் அடங்கிவிடுகின்றன. நாற்பது வயதை எட்டியவர் முதியவராக, மூத்தவராக ஆகிவிடுகிறார். காதல் திருமணம், சேர்ந்து வாழ்தல் எல்லாமே மிகவும் இளம் வயதுகளிலேயே நிகழ்ந்து விடுகின்றன.

நோர்வேஜிய மொழியானது Bokmål (புக்மோல்), Nynorsk (நியூ நோர்ஸ்க்) என இரு மொழி வழக்குகள் உள்ளன. இரண்டுக்கும் அதிக பெரிய வித்தியாசங்கள் இல்லை. நோர்வேயின் 27 மாநகரங்களில் Nynorsk அரசகரும மொழியாக பயன்படுத்தப்படுகிறது. ஜென்மானிய மொழிக் குடும்பத்தின் செல்வாக்கையொட்டி வளர்ந்தது இது. அதேவேளை அது நோர்வேயின் சனத்தொகையில் 12 வீதமானோர் மட்டுமே பயன்படுத்தும் மொழி. அதேவேளை புக்மோல் ஆனது டானிஷ் மொழியின் பாதிப்பைக் கொண்டது. அதுவே நோர்வே முழுவதும் அதிகம் பயன்படுத்தபடுகிற மொழியாக இருக்கிறது. எனவே புக்மோல் வடிவத்திலேயே அதிக இலக்கியங்களும், வெளியீடுகளும், படைப்புகளும் வெளியாவதில் ஆச்சரியம் இருக்காது.

நோர்வேஜிய இலக்கியத்தின் தோற்றுவாய் என்பது ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் தான் தோன்றுகின்றன. Eddaic, Skaldic ஆகியோர் நோர்வேஜிய கவிதை இலக்கியத்தின் முன்னோடிகளாக கொண்டாடப்படுகின்றனர். 

சோபியாவின் உலகம் (Sofies verden) என்கிற நூல் தத்துவத்தின் வரலாறு பற்றிய நாவல். அபுனைவின் புனைவு என்றும் கூறலாம்.நோர்வே நவீன இலக்கியத்தின் ஒரு மைல்கல் என்றே கூறவேண்டும். அது உலகில் அதிக விற்பனையான நூல்களில் ஒன்றாக இருக்கிறது. தமிழ் உட்பட 59 சர்வதேச மொழிகளில் அது மொழிபெயர்க்கப்பட்டிருகிறது. அதுமட்டுமன்றி திரைப்படமாகவும், நாடக வடிவத்திலும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் அது வெளியிடப்பட்டிருக்கிறது.

இன்றைய நிலையில் நோர்வேயிடம் ஏராளமான பணம் இருக்கிறது. கலை இலக்கியங்களை கொண்டாடும் தேசமாக வளர்ந்து நிற்கின்றது. வாசிப்பறிவற்றவர்கள் இல்லாத தேசமாக வளர்ந்து நிற்கிறது. ஆனால் உலகமயமாக்கலுடனான ஒரு சவால் நிலை நோர்வேக்கு இருக்கிறது தற்கால சூழலில் அது இன்னும் பல நாடுகளுக்கும் இருப்பது தான்.

நோர்வே மொழியில் ஒரு திரைப்படத்தை, நாடகத்தை, பாடலைத் தயாரித்தால் அது நோர்வேக்குள் மட்டும் தான் நுகர முடிகிறது. நோர்வே வாழ்க்கைச் செலவு மிகுந்த நாடு. கடையில் ஒரு சாதாரண காப்பியின் விலை இருபது குரோனர்களில் இருந்து தான் தொடங்குகிறது. இந்திய விலையில் இருநூற்றைம்பது ரூபாய் எனலாம்.

இப்படியிருக்கும் போது கலை இலக்கிய படைப்புகளுக்கான தயாரிப்புச் செலவுகள் சாதாரணமானதல்ல. நோர்வேயின் இலக்கியச் சந்தை என்பது நோர்வேக்குள் மட்டும்தான் இருக்கிறது. எனவே ஒரு புறம் தரத்தையும், மறுபுறம் நட்டமின்றியும் அதை தயாரித்தெடுத்து மக்களிடம் கொண்டு போய் சேர்த்தல் என்பது நோர்வேக்கு மிகவும் சவாலான விடயம். கலை இலக்கியங்களுக்கு நோர்வே மக்களின் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும்  அதிகரிக்காமல் அதை உள்ளகச் சந்தையில் வெற்றிபெறச் செய்ய முடியாது என்பதை அறிந்தே வைத்திருக்கிறார்கள். 

சர்வதேச சந்தையில் அமெரிக்க ஹோலிவூட் தயாரிப்புகளை மலிவாக வாங்கி வெளியிடும் நிலைமையே நோர்வேயிலும் தொடர்கிறது. அந்தப் படைப்புகளை தொலைக்காட்சிகளில், தியேட்டர்களில் காட்சிப்படுத்துவது மலிவாக இருக்கிறது. நோர்வேயில் அப்படியான படைப்புகளை லாபகரமாக நிச்சயமாக தயாரிக்க முடிவதில்லை. எனவே அவற்றை அழிந்துவிடாமல் தடுப்பதற்காக அப்படியான படைப்புகளுக்கு அரசு மானியம் வழங்குகிறது. பல ஊடகங்கள் கூட மானியத்தில் தான் இயங்குகின்றன. இங்கு இயங்குகிற அரச எதிர்ப்பு பத்திரிகைகள் அரச மானியத்தில் தான் வெளிவருகின்றன என்பதை இங்கு நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஆண்டுதோறும் இலாபமில்லாத கலை இலக்கியப் பணிகளுக்காக பில்லியன் கணக்கில் அரசு செலவிடுகிறது. பாரம்பரியக் கலைகளையும், இலக்கியங்களையும் மீட்டெடுப்பதற்கு அதிக பங்களிப்பை அரசு செய்து வருகிறது.

ஐரோப்பிய இலக்கிய பரப்பில் ஸ்கண்டிநேவிய இலக்கியங்கள் தனித்து நிற்பவை. அதன் புவிசார் தனித்துவம் அதன் இலக்கிய உள்ளடக்கத்தை ஏனைய ஐரோப்பிய இலக்கியங்களில் இருந்து தன்னை வேறுபடுத்தியிருக்கிறது என்கிற புரிதலில் இருந்தே நோர்வேஜிய இலக்கியத்தையும் நாம் ஆராய வேண்டும். அதற்கான ஒரு ஆரம்பப் புரிதலே இது.

நன்றி - காக்கைச் சிறகினிலே 2022 - ஜனவரி

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates