Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நாள் மே 31? யூன் 1? - என்.சரவணன்

யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம் பற்றிய சர்ச்சை இன்றும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. என்னிடமும் சில ஆண்டுகளாக பலர் தொடர்புகொண்டு விசாரித்திருகிறார்கள்.

அது நிகழ்ந்தது மே முப்பத்தொன்றாம் திகதியா? அல்லது ஜூன் முதலாம் திகதியா?

பல ஆயிரக்கணக்கான ஆங்கில - தமிழ் கட்டுரைகளிலும், நூல்களிலும் குறிப்புகளிலும் மே 31 என்றே பதிவு செய்திருக்கிறார்கள். பிரபலமான பதிவொன்றில், அல்லது நம்பகமிக்க ஒருவரின் பதிவில் ஒரு பிழை வந்தாலும் அதையே பிழையென்று அறியாமல் பலரும் அதையே பின்தொடர்வதன் விளைவே இது. அது நிகழ்ந்தது யூன் 1 தான்.

இந்த குழப்பம் எனக்கும் இருந்திருக்கிறது. அளவில் அதிகமான பதிவுகளில் அப்படி மே 31 என்று குரிப்ப்டப்பட்டிருந்ததால் எனது கட்டுரைகளிலும் அப்படியே பயன்படுத்தியுமிருக்கிறேன். நூலாக வெளிவரும் போது அவற்றை நான் சரி செய்து கொள்வேன்.

ஆனால் இந்த நாளை ஒரு தேசிய துக்க நாள் என்கிற ஒரு பிரகடனத்தை செய்வதாயின் உறுதியான நாள் எது என்பதை உறுதிசெய்து கொள்வது அவசியம்.

இந்தளவு குழப்பம் நேர்ந்தமைக்கு இன்னொரு முக்கிய காரணம் அன்றுவடக்கில் அச் சம்பவங்களை பதிவு செய்ய வேண்டிய பத்திரிகைக் காரியாலயங்கள் தீக்கிரையையாக்கப்பட்டிருந்ததும், தணிக்கையும், ஊரடங்கும், தென்னிலங்கையில் அது அன்று இருட்டடிப்பு செய்யப்பட்டமையும் தான்.

பிற்காலங்களில் இத்துயரச் சமபவத்தை பதிவு செய்தவர்கள் இந்த திகதிக் குழப்பத்தை எவரும் பொருட்படுத்தவில்லை. அச்சம்பவத்தின் உள்ளடக்கத்துக்குள் தான் அதிக சிரத்தை எடுத்தார்கள்.

யாழ் நூலக எரிப்பு பற்றி நூல்களாகவே ஏறத்தாள பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவதுவிட்டன. அவற்றிலும் இந்தக் குழப்பம் உள்ளன. அவற்றில் நம்பகத்தன்மை அதிகம் உள்ள நூலாகக் கொள்ளக் கூடியது. மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது! என்கிற நூல்.


செங்கை ஆழியான் என்று அறியப்பட்ட  க.குணராசா இன்னும் பல புனைபெயர்களில் பல படைப்புகளை எழுதியிருப்பவர். அவர் “நீலவண்ணன்” என்கிற பெயரில் எழுதியவற்றில் ஒன்று தான் இந்த “மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது” என்கிற நூல். நீலவண்ணன் என்கிற பெயரில் அதற்கு முன்னர் அவர் “12 மணி நேரம்” என்கிற தலைப்பில் 1978இல் கிழக்கில் ஏற்பட்ட கோரமான சூறாவளி பற்றியா ஒரு நூலையும், “24 மணி நேரம்” என்கிற தலைப்பில் 1978 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனகலவரம் பற்றிய நூலையும் எழுதிருக்கிறார்.

யாழ்  நூலக எரிப்பு சம்பந்தமாக இந்த நூலுக்கு இருக்கிற சிறப்பு என்னவென்றால் இந்த நூல் தான் அந்த சம்பவத்தை வெளிக்கொணர்ந்த முதல் நூல். அதுவும் சம்பவம் நிகழ்ந்து ஒரே மாதத்தில் வெளிவந்தது.

1981 யூலை முதலாம் தகதி இந்த நூல் வெளிவந்தது. (இரண்டாம் பதிப்பும் ஓகஸ்ட் மாதமே வெளிவந்து விட்டது. அதன் பின்னர் 2003 இல் மீண்டும் அதன்) எனவே நேரடி சாட்சியமாக அவர் கண்ணுற்ற, சேகரித்தவற்றை எல்லாம் தொகுத்து அவசரமாக வெளிக்கொணர்ந்த நூல். இந்த நூலில் அவர் மே 31 நாள் தொடங்கிய அரச பயங்கரவாத அட்டூழியங்கள் ஒரு வாரமாக எப்படி தொடர்ந்தன என்பதை பட்டியலிட்டு விரிவாக அதில் எழுதியிருக்கிறார். அதில் தான் அவர் யூன் முதலாம் தகதி இரவு யாழ்ப்பாணம் எரிக்கப்பட்ட நிகழ்வை ஆதாரப்படுத்துகிறார். ஆனால் அப்போதும் இந்த எரிப்பில் சம்பந்தப்பட்டவர்களை அவரால் உறுதியாக எழுதுமளவுக்கு போதாமை இருந்திருக்க வேண்டும் எனவே எரித்தவர்கள் பொலிசார் என்கிற தகவல்களோடு அவர் நிறுத்துகிறார்.

இதோ அந்த நூலில் யாழ் நூலக எரிப்பு பற்றி எழுதிய குறிப்புகள்:

 ஐயகோ, நூலகம் எரிக்கப்பட்டதே!


'பொலீஸ்மா அதிபரும், பிரிகேடியர் வீரதுங்காவும் யாழ்ப்பாணத்தில் இருக்கத்தக்கதாக, யூன் 1 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் கொடூரமானவையும் வியப்பானவையுமாகும் அதே பொலீசார் அன்று இரவு யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்குத் தீயிட்டனர். . ஏறத்தாழ 97000 பெறுமதி மிக்க நூல்கள் எரிந்து கருகிப்போயின. உலகில் எங்கிருந்தும் இனிமேல் பெறுவதற்கரிய நூல்கள் பல எரிந்து போயின, அந்த நூல் நிலை யம் நீண்ட காலமாகக் கட்டி எழுப்பப்பட்டது அதனை எரித்து முடித் தனர். இந்த நாட்டில் வாழ்கின்ற ஒரு சில மக்களின் மன நிலையை புரிவதற்கு இந்தச் சம்பவம் தக்க குறிகாட்டி ஆகும். இரண்டாம் உலக மாயுத்தத்தின் போது பிரித்தானியாவின் மீது குண்டுகளை வீசச் சென்ற விமானப்படை விமானிகளுக்கு ஓக்ஸ்போட் பல் கலைக் கழகத்திற்குக் குண்டுகளை வீசி அழித்துவிடக்கூடாது என ஹிட் லர் உத்தரவிட்டான். அதே போல யேர்மனியின் ஹைடல்பேர்க் பல்கலைக்கழகத்தைத் தவிர்க்கும்படி பிரித்தானியா தனது விமா னப்படைக்குப் பணிப்புரை வழங்கியது. அறிவுத் தளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் பகைவர்களுக்குக் கூட இருந்தது ஆனால், யாழ்ப்பாணத்தில் கண்மூடித்தனமாக நடந்துகொண்ட பொலீசார் அங்கிருந்த நூல் நிலையத்தைக் கூட விட்டுவைக்கவில்லை!" என எதிர்க்கட்சித் தலைவர் திரு அ. அமிர்தலிங்கம் நாடாளுமன்றத் தில் கவலையுடன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு எதிரே 700 யார் தூரத்தில் யாழ் பொதுசன நூலகம் அமைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் பாதுகாப்பு. நடவடிக்கைகளுக்காகத் தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த விசேஷ பொலிசார் தங்கியிருந்த துரையப்பா விளையாட்டு அரங்கும் யாழ் நூலகத்துக்கு நேர் எதிரேதான் இருந்தது இவ்வளவு ' பாதுகாப்பு இருந்தும் திங்கள் இரவு, பொதுசன நூலகம் தீ பிடித்து எரிந்தது.

அன்று இரவு 10 மணிபோல, நூலகத்துக்குள் நுழைந்த கொடியவர்கள், காவலாளியைத் துரத்திவிட்டு நூலகக்கதவை கொத்தித் திறந்து. உள்ளே நுழைந்து அட்டூழியங்கள் புரிந்தனர். 97 ஆயிரம் கிடைத்தற்கரிய நூல்களுக்குப் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தி அழித்தனர், 'லெண்டிங் செக்கன்' முற்றாக எரிந்து சாம்பலாகிவிட்டது. உருக்கு பீரோவுக்குள் இருந்த நூல்கள் கூட, எரிந்து சாம்பலாகிப் போயின 'றெபறன்ஸ் செக்சனில்' இருந்த சேகரிக்க முடியாத அற்புத நூல்கள் யாவும் தீயவர்களால் தீ வைத்துப் பொசுக்கப்பட்டது. சிறுவர் நூலகப் பிரிவிலுள்ள நூல்கள் யாவும் அழிவுற்றன. தளபாடங்கள் யாவும் ஒன்றாகக் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டன: சுவர்கள் வெப்பத்தால் வெடித்து உதிர்ந்திருந்தன : யன்னல்கள் சிதறிப்போயின. நூலகத்துள்ளே சாம்பல் குவியல்களே எஞ்சிக்கிடந்தன. அந்தச் சாம்பல் குவியல்களுள் ஏதாவது நூல்கள் எரியாது எஞ்சிக் கிடக்குமோ என்ற நப்பாசையில் நூலக உதவியாளர்கள் திரு, சு.ம.இமனுவேலும், திரு.அ.டொன்பொஸ் கோவும், திரு.ச.ந்தையாவும் சாம்பலைக் கிளறிக்கொண்டிருக்கின்ற நிலையைக் காண முடிந்தது.


நூலகம் கருகிக் காரைபெயர்ந்து கிடக்கின்றது. நூல் நிலையத்தின் விளம்பரப் பலகையில் நூலகம் அபிவிருத்தியின் அடித்தளம்- இலங்கை நூலகச் சங்கம்'' என்ற விளம்பரம் எஞ்சி நிற்கிறது; உண்மையில் அடித் தளம் மாத்திரமே எஞ்சிக்கிடக்கின்றது; ' புகைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது' என்ற அறிவித்தலும் நூலக வாசலில் இருக்கிறது. கயவர்கள் நூலகத்தையே புகைத்து விட்டார்கள்.

தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மிகச் சிறந்த நூலகங்களில் ஒன்று எனக் கருதப்படுவது யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் ஆகும். 97 ஆயிரம் பல்துறை சார்ந்த நூல்கள் எரிந்து போயின ஏறத்தாழ 19 ஆயிரம் அங்கத்தவர்கள் இந்த நூலகத்திலிருந்து நூல்களைப் பெற்று வாசித்துப் பயனடைவார்கள். மருத்துவம் இலக்கியம், ஜோதிடம் சம்பந்தமான ஓலைச் சுவடிகள் நூற்றுக்கணக்கானவை எரிந்து சாம்பலாகின.

நூல்நிலையம் அழிந்தது யாழ்ப்பாண மக்களுக்கு ஏற்பட்ட பேரிடியாகும். வணக்கத்துக்குரிய தாவிது அடிகள் மரணமாக நேர்ந்தது கவலைக்குரியதாகும். அவர். சுவாமி ஞானப்பிரகாசரின் மாணவர். ஓப்பியல் ஆய்வாளர். பொது நூல் நிலையம் எரிகிறது என்ற தகவல் கிடைத்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். அந்த அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். புத்தகங்களின் பெறுமதி அவருக்குத் தெரியும்' (எதிர்க்கட்சித் தலைவர் திரு எ.அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் பேசியவை: தினபதி -11.6.81, வீரகேசரி - 11.6.81, சிலோன் டெயிலி நியூஸ் - 11.6.81) யாழ்ப்பாண நூலகத்தில் ஊழியராக வேலை செய்துவரும் திரு! பற்குணம் என்பர் நூல் நிலையம் எரிந்த நிலையைக் கண்டு பிரமை பிடித்தவரானார். அவர் ஒரு நாடகக் கலைஞராவர். மூன்று நான்கு நாட்கள் அவர் சித்தம் குழம்பிய நிலையில் காணப்பட்டார்.

'நூல் நிலையம் தீப்பற்றி எரிவதாக அன்றிரவு 10-15 மணியளவில், மாநகரசபை ஆணையாளர் திரு. க. சிவஞானம் அறிய நேர்ந்தது. உடனே மாநகரசபை பவுசர்களையும், மாநகரசபை ஊழியர்களையும் பொதுசன நூலகத்தில் ஏற்பட்ட தீயை மேலும் பரவாது அணைக்குமாறு பணித்தார். தீயை அணைக்கச் சென்றவர்களை துரையப்பா விளையாட்டு அரங்கில் தங்கியிருந்த பொலீசார் தடுத்தனர் என்பதைக் காவலாளர்கள் கூறி அறிந்தார்' (மாநகரசபை ஆணையாளர் திரு க.சிவஞானம் போலிஸ் விசாரணைக் குழுவிடம் கூறியவை – “ஈழநாடு”, “தினபதி”)

“யாழ் விளையாட்டரங்கில் தங்கியிருந்த பொலிசாரே யாழ் நூல் நிலையத்துக்குத் தீ வைத்திருக்கவேண்டும்'' என மாநகரசபை ஆணையாளர் திரு! சிவஞானம் விசேஷ பொலிஸ் விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளார்''

மேலும் யூன் 1ஆம் திகதி வெளியான ஈழநாடு பத்திரிகையில் ஒரு செய்தியையும் இங்கே கவனிக்க வேண்டும். அச்செய்தியின் தொடர்ச்சி 8 ம் பக்கம் செல்கிறது அதில்

"பொலிஸ்மா அதிபரும் இராணுவத் தளபதியும் இன்று அதிகாலை விசேஷ விமானத்தில் யாழ்ப்பாணம் வரவிருக்கிறார்கள்..."

என்கிறது.

செங்கை ஆழியானின் இந்த பதிவில் "பொலீஸ்மா அதிபரும், பிரிகேடியர் வீரதுங்காவும் யாழ்ப்பாணத்தில் இருக்கத்தக்கதாக, யூன் 1 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சம்பவங்கள்.." என்கிறார். ஆக அவர்கள் முதலாம் திகதி காலை வந்து சேர்ந்த செய்தியும், உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலதிகமாக அவர்களின் அனுசரணையுடனோ, ஆதரவுடனோ இது நிறைவேறியிருக்க வாய்ப்பும் உண்டு. குறைந்தபட்சம் கண்டும் காணாது விட்டிருக்கிறார்கள் என்றும் நம்மால் ஊகிக்க முடியும். 

செங்கை ஆழியானின் நூலை நூலகம் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய இணைப்பு இங்கே...

மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது


"தோழர்" பத்தேகம சமித்த தேரருக்கு செவ்வணக்கம் - என்.சரவணன்

பத்தேகம சமித்த தேரர் நம்மை விட்டு மறைந்துவிட்டார்.  கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு நலமாக இருந்தவர் திடீர் சுகவீனமுற்று இறந்துபோனார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் சபித்த தேரர் முக்கியமான பாத்திரமாக கொள்ளலாம். இலங்கையின் வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பௌத்த பிக்கு பத்தேகம சமித தேரர். அவர் 2001ஆம் ஆண்டு லங்கா சம சமாஜ கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்டார். ஆரம்பத்தில் நவ சம சமாஜ கட்சியிலிருந்த அவர் அக்கட்சியிலிருந்து வாசுதேவ நாணயக்கார பிரிந்து சென்ற போது அவரோடு சமித்த தேரோவும் வெளியேறினார்.

தமிழ் மக்களுக்காகவும், மலையக, முஸ்லிம் மக்களுக்காகவும் அவர் எப்போதும் குரல் கொடுத்து வந்தவர். ஒரு இடதுசாரி பிக்குவாக அவர் ஏனைய பௌத்த பிக்குகளிடமிருந்து வேறுபடுகிறார்.

அவர் எப்போதும் இனவாதத்துக்கு எதிராக இருந்தார் ஆனால் துரதிஷ்டவசமாக அவர் பாதுகாத்த இராஜபக்ச அணி இனவாத அணியாக இருந்தது. அவர் அந்த அணியை பாதுகாத்து நிற்கும் சூழ்நிலைக் கைதியாகவே இருந்தார். அவரை அறிந்த எங்களைப் போன்றோருக்கு அவர் மீது இருந்த சீற்றம் அது தான். வாசுதேவ நாணயக்காரரைப் போலவே அரசை பாதுகாத்து நின்றது அவரின் புரட்சிகர பாத்திரத்தையெல்லாம் மறந்துவிடச் செய்யும் ஒன்றாகவே இருந்தது.

எனக்கு தோழர் ஜெயராமன் (லெனின் மதிவாணனின் தந்தை) 91 ஆம் ஆண்டு நவசமசமாஜக் கட்சியின் காரியாலயத்துக்கு அழைத்துச் சென்று சமித்த தேரரை அறிமுகப்படுத்தினார். அப்போது அங்கே முன்னணித் தலைவர்களின் ஒருவராக அவர் இருந்தார். அதன் பின் அக்கட்சிப் பணிகளில் ஈடுபட்டபோதெல்லாம் அவரை ஒரு கிளர்ச்சியாளராக அங்கெல்லாம் காண முடிந்தது.

அவர் 91 ஆம் ஆண்டு ஒரு கூட்டுறவுச் சங்கம் ஒன்றை சமித்த தேரர் ஆரம்பித்தார். என்னை அதில் கொண்டுபோய் இணைத்துவிட்டவர் தோழர் ஜெயராமன். முதலாவது கூட்டத்தில் அதன் தலைவராக சமித்த தேரர் தெரிவு செய்யப்பட்டதுடன் அதன் பொருளாளராக தோழர் ஜெயராமன் தெரிவானார். அதன் நிர்வாகக் குழுவில் அவர்கள் என்னையும் இணைத்துக் கொண்டார்கள். எனவே அடிக்கடி அவருடன் இரு தளங்களில் ஒன்றாக பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் நவ சமசமாஜக் கட்சியில் இருந்து நீங்கியதன் பின்னரும் கூட்டுறவு சங்கத்தின் பணிகளில் அவருடன் ஒன்றாக பயணிக்க முடிந்தது. 93ஆம் ஆண்டு மே தினத்தன்று நவசமசமாஜக் கட்சியின் ஊர்வலத்தில் நாங்கள் டவுன்ஹோலுக்கு அருகாமையில் சென்று கொண்டிருந்த போது தான் ஜனாதிபதி பிரேமதாச தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்பட்ட செய்தி எங்களை வந்தடைந்தது. அன்றைய அரசியல் சூழலில் நாங்கள் எல்லோருமே துள்ளிக்குதித்துக் அதைக் கொண்டாடினோம். ஊரடங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு சகல மே தினக் கூட்டங்களும் தடை செய்யப்பட்டன. ஆனால் விக்கிரமபாகு கருணாரத்ன, வாசுதேவ நாணயக்கார ஆகியோருடன் சபித்த தேரரும் சேர்ந்து அன்றைய கூட்டத்தை ஊரடங்கையும் மீறி நடத்துவோம் என்று தோழர்களுக்கு தைரியம் கொடுத்தார்கள். இறுதியில் அக்கூட்டம் கண்ணீர்ப்புகை வீசித் தான் கலைத்தார்கள். அன்றைய எதிர்ப்புக் கூட்டங்களில் பொலிசாரின் அடிதடிகளின் போதெல்லாம் ஏனைய தோழர்களையெல்லாம் முந்திக்கொண்டு அரணாக வீரத்துடன் எதிர்கொள்பவர் சமித்த தேரர். 

சரிநிகரில் பணியாற்றத் தொடங்கியதும் பல பொது விடயங்களில் இருந்து தள்ளி நின்று முழுநேர ஊடக, அரசியல் வேலைகளில் மட்டுமே கவன செலுத்த வேண்டியதாயிற்று. சமித்த தேரரோடு இருந்த உறவும் அப்படியே விடுபட்டுப் போனது. பிக்கு அரசியல் குறித்து எனது பல்வேறு கட்டுரைகளில் அவரைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன்.

அவர் அரசியல் விடயங்களை விட வெகுஜன சீர்திருத்தப் பணிகளில் அதிகம் தீவிரம் செலுத்தி வந்தார் என்றே கூறவேண்டும். அதற்கு அவரிடம் ஒரு பார்வை இருந்தது. துரதிர்ஷ்ட வசமாக அந்த பார்வையில் குருட்டுத் தனம் இருந்தது அந்த அரசியல் குருட்டுத்தனம் இனவாதத்தையும், இனவாதிகளையும் அடையாளம் காண விடவில்லை.

தோழர் பத்தேகம தேரருக்கு செவ்வஞ்சலி





சர்வஜன வாக்குரிமைக்கு வயது 90 - என்.சரவணன்

இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்து இம்மாதத்துடன்\ 90 ஆண்டுகள் பூர்த்தியாக்கின்றன. இலங்கையில் இன்று நாம் அனுபவிக்கிற வாக்குரிமை, தேர்தல், ஜனநாயகத் தெரிவு, வெகுஜன அரசாங்கத்தை தெரிவு செய்யும் சுதந்திரம் என்பவற்றுக்கெல்லாம் தொடக்கமாக அமைந்தது 1931 இல் நாம் பெற்ற சர்வஜன வாக்குரிமை.

இலங்கையின் அரசியல் கலாசாரத்தை ஒரு பெரும் பிரட்டு பிரட்டிய ஒரு நிகழ்வு தான் 1931 டொனமூர் திட்டத்தின் அறிமுகம்.டொனமூர் அரசியல் திட்டத்தில் போதாமைகள் இருந்தபோதும். அதற்கு முன்னிருந்த அரசியல் திட்டங்களைவிட அது ஒரு முன்னேறிய அரசியல் திட்டம் என்பதில் சந்தகம் கிடையாது. இத்திட்டத்தில் தான் ஆண்களுக்கும்பெண்களுக்கும் சேர்த்தே ஏக காலத்தில் ஒரே தடவையில் சர்வஜன வாக்குரிமையும் கிடைத்தது. மட்டக்களப்பு பிரதிநிதி E.R.தம்பிமுத்துவைத் தவிர ஏனைய அனைத்து 9 தமிழ் பிரதிநிதிகளும் எதிர்த்தார்கள். அதன் பின்னணி பற்றிய கட்டுரை தான் இது.

1920 களில் இலங்கையில் அரசியல் சீர்த்திருத்த ஆலோசனைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து 1927ஆம் ஆண்டு பிரித்தானியா ஓர் ஆணைக்குழுவை இலங்கைக்கு அனுப்பியது. அவ்வாறு அனுப்பப்பட்ட டொனமூர் குழுவினர் இரண்டு மாதங்கள் மட்டுமே இலங்கையில் தங்கியிருந்து விசாரணைகளை முடித்துக்கொண்டு திரும்பினர். டொனமூர் அறிக்கையில் கூறுவது போல,

“27.10.1927 அன்று நாங்கள் இங்கிலாந்தை விட்டு புறப்பட்டோம். நவம்பர் 13 அன்று இலங்கையை சென்றடைந்தோம். 18.01.1928 வரை அங்கு தங்கியிருந்த நாங்கள் பெப்ரவரி 04 அன்று இங்கிலாந்து சேர்ந்தோம்.” என்கிறது.

சாட்சிகளைப் பதிவிடும் பணிகள் 34 தடவைகள் நிகழ்ந்திருக்கின்றன. 141பிரமுகர்களின் அபிப்பிராயங்களைப் பதிவு செய்தார்கள். கொழும்பில் அதிகமாகவும் கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, காலி மற்றும் மலையகத்திலும் பொதுமக்கள், மற்றும் பொது அமைப்புகளின் சாட்சியங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். கூடவே இலங்கையைப் பற்றிய அறிதலுக்காக பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் பிரயாணம் செய்ததும் இந்த இரண்டு மாதங்களுக்குள் தான். 12-14 டிசம்பர் 1927 வரையான மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறார்கள். அடுத்த இரு நாட்கள் மட்டக்களப்பில் சந்திப்புகளை நடத்தியிருக்கிறார்கள். தமது பரிந்துரைகளை ஆணைக்குழு அறிக்கையாக ஐந்து மாதங்களின் பின்னர் 26.06.1928 அன்று காலனித்துவ செயலாளரிடம் ஒப்படைத்தார்கள்.

டொனமூர் காலம் வரை இலங்கையில் 4% வீதத்தினருக்கு மாத்திரமே வாக்களிக்கும் உரிமை இருந்தது. படித்த, வசதி படைத்த ஆண்களிடமே அந்த உரிமை இருந்தது.

டொனமூர் அரசியல் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தவர்கள் ஆளாளுக்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தபோதும் சர்வஜன வாக்குரிமைக்கு எதிரான வாக்குகளும் இதில் அடக்கம் என்பது இதில் கவனிக்கத்தக்கது.

வாக்குரிமையை எதிர்த்தவர்கள் யார்?

இலங்கையில் சர்வஜன வாக்குரிமை எளிமையாக கிடைத்த ஒன்றல்ல. அதற்கான கோரிக்கையை அன்றைய அரசாங்க சபையில் இருந்த இலங்கை பிரதிநிதிகள் கூட அவ்வளவு பெரிதாக அழுத்தியது இல்லை. அரசாங்க சபைக்கு வெளியில் தான் சர்வஜன வாக்குரிமைக்கான போராட்டமும், கோரிக்கைகளும், அழுத்தங்களும் வலுவாக இருந்தன.

சேர் பொன்னம்பலம் இராமநாதன்

சர்வஜன வாக்குரிமை பற்றிய யாழ்ப்பாணத் தமிழர் மத்தியில் இருந்த பொதுப்புரிதல் என்ன என்பதை கீழே பகிரப்பட்டுள்ள இந்து சாதனம் பத்திரிகையில் அன்று வெளியான ஆசிரியர் தலையங்கப் பத்தியில் நீங்கள் காணலாம். அதுமட்டுமன்றி பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்று தொடர்ச்சியாக செய்திகளையும், கட்டுரைகளையும், ஆசிரியர் பத்திகளையும் பெண்களின் வாக்குரிமைக்கு எதிரான வெகுஜன அபிப்பிராயத்தை உருவாக்கிவந்தது.

டொனமூர் குழுவினர் 1927 நவம்பர் 13 அன்று இலங்கை வந்தடைந்தனர். சரியாக அதற்கு முதல் நாள் வம்பர் 12 அன்று மகாத்மா காந்தி இலங்கை வந்தடைந்தார் என்பதையும் இங்கே கருத்திற் கொள்ள வேண்டும். சுமார் மூன்று வாரங்கள் அவர் தங்கியிருந்து கொழும்பு, கண்டி, மாத்தளை, பதுளை, நுவரெலிய, பாணந்துறை, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, சிலாபம், குருநாகல் என பல இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கூட்டங்களை நடத்தினார். இந்த பயணத்தின் போது அவரின் பிரச்சாரங்கள் அந்த சமயத்தில் டொனமூர் குழுவின் செயற்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தின என்பது மறுப்பதற்கில்லை.

இந்த விபரங்களை மகாவம்சத்தின் மூன்றாவது பாகம் (1815-1936) குறிப்பிடத் தவறவுமில்லை.

சர்வஜன வாக்குரிமைக்கு எதிரான உணர்வுநிலை அன்றைய யாழ் – சைவ – வேளாள – ஆணாதிக்க அதிகார வர்க்கத்தினரின் வெகுஜன அபிப்பிராயமாக இருந்திருக்கிறது. அந்த தரப்பின் ஊதுகுழலாக இருந்த இந்து சாதனம் பத்திரிகை அன்றைய அந்த மனநிலையை நாடிபிடித்தறிய முக்கிய சாதனமாக நமக்கு ஆதாரமாக இருக்கிறது. சேர் பொன் இராமநாதனை எப்போதும் ஆதரித்து அனுசரித்து வந்த முக்கிய பத்திரிகையும் கூட. அதில் வெளிவந்துள்ள அக்கால பல்வேறு செய்திகள் கட்டுரைகளிலிருந்து நாம் அதனை அறிந்துகொள்ள முடியும்.

இராமநாதன் ஏன் சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தார் என்பதை நாமறிவோம். அவர் 30.11.1927 அன்று தமிழர் மகாசபை சார்பிலும் 02.01.1928 அன்று மீண்டும் தனிப்பட்ட ரீதியிலும் டொனமூர் குழுவை கொழும்பில் சந்தித்து தனது பரிந்துரைகளை தெரிவித்தார்.

அதேவேளை இனவாத தரப்பில் வேறு ஒரு அர்த்தத்தை தொடர்ந்தும் பதிவு செய்து வந்திருப்பதை பல்வேறு நூல்களிலும் காண முடிகிறது. சிங்களத்தில் பல அரசியல் நூல்களை எழுதிய W.A.அபேசிங்க தனது “டொனமூர் அரசியலமைப்பு” என்கிற நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.

“படித்தவர்களுக்கு வாக்குரிமையை மட்டுப்படுத்த வேண்டும் என்று பொன்னம்பலம் கருதியதற்குப் பின்னால் தமிழர்களுக்கு சாதகமான அரசியல் நலனே இருந்திருக்கிறது. ஏனென்றால் தெட்டத்தெளிவாக அன்றைய நிலையில் கல்வியில் சிங்களவர்களை விட முன்னேறிய நிலையிலேயே தமிழர்கள் இருந்தார்கள்.”

அன்றைய இலங்கையில் கல்வி கற்றோர் சிங்களவர்களை விட தமிழர்களே அதிகமாக இருந்தார்கள். எனவே சிங்களவர்களை அரசியல் அதிகாரத்துக்கு வர விடாமல் தடுக்க எடுத்த முயற்சியைத் தான் இராமநாதன் செய்தார் என்கிற குற்றச்சாட்டை சிங்களத் தர்ப்பு இன்றும் பிரச்சாரம் செய்து வருகிறது.

சரி; 22.11.1928 அன்று வெளியான “இந்து சாதனம்” பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரையின் உள்ளடக்கத்தை சற்று கூர்ந்து கவனிப்போம்.

பிரதிநிதிகளை தெரிவு செய்தல்

ஒருவர் பிரதிநிதியாக வர விரும்பி தாமே சென்று தம்மை பிரதிநிதியாக தெரிவு செய்யும்படி ஊரவரை இரத்தல் ஒரு ஆடவன் ஒரு கன்னிகையிடம் போய் “அய்யோ நீ என்னை கல்யாணம் முடி” என்று இரந்து நிற்றல் போல் அவமரியாதை ஆகும். சென்ற சனிக்கிழமை நடந்த பட்டின பரிபாலன சங்கம் அங்கத்தவர்களை தெரிவு செய்யும் விஷயத்தில் அங்கத்தினர் ஆய்வதற்கு முற்பட்டு நின்று வரும் வட்டார வாசிகளும் பலரும் செய்த முயற்சிகளும் நடந்து கொண்ட விதமும் அவமதித்தற்கேதுவானவையாகும். அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக காலம் வர வட்டார வாசிகள் யாரை தெரிவு செய்யலாம் என்று யோசித்து அதற்குதானும் நேரம் விடாமல் “என்னைத் தெரி, அய்யோ என்னைத்தெரி” என்று பலர் எவரும் கேளாதிருப்ப தாமாகவே மழைக்காலத்தில் புறப்படும் புற்றீசல் போலப் புறப்பட்டு வருகின்றனர் முந்தி இரண்டு மூன்று முறை தொடர்பாக அங்கத்துவம் வைத்திருந்த பழைய அங்கத்தவர்கள் செத்தாலும் நாம் இந்த பதவியை விட மாட்டோம் என்றவராய் பதவியை விட பிரியம் இல்லாமல் இருக்கின்றார்கள்.

01.11.1928 அன்று அரச சபையில் நிகழ்ந்த விவாதத்தின் போது பெண்களுக்கும், படிக்காதவர்களும், வசதிபடைக்காதவர்களுக்கும் வாக்குரிமை அளிப்பது முட்டாள்தனம் என்றார் சேர் பொன் இராமநாதன்.  அதுமட்டுமன்றி அவர் டொனமூர் கமிஷன் முன் தமிழர் மகா சபை சார்பில் சாட்சியளிக்கையில் இலங்கைக்கு தன்னாட்சி அளிப்பதை தான் எதிர்ப்பதாகக் கூறினார். இலங்கை சுயாட்சியை அனுபவிக்குமளவுக்கு முதிர்ச்சிபெறவில்லை என்றார். 

“பன்றிகளின் முன்னாள் முத்துக்களை வீசுவதைப் போன்றது தான் வாக்குரிமையின் அருமை தெரியாத பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பது” 

என்றார் அவர்.

அதே நாள் விவாதத்தில் ஈ.ஆர்.தம்பிமுத்துவும் படிக்காதவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படக்கூடாது என்று விவாதித்தார். ஆனால் இறுதியில் அத்திட்டத்துக்கு ஆதரவளித்து வாக்களித்த ஒரே ஒரு தமிழர் அவர் தான்.

அதேவேளை இராமநாதன் வாக்குரிமையை எதிர்த்து சட்டசபையில் உரையாற்றியதோடு நில்லாமல் கட்டுரைகளை எழுதினர். கூட்டங்களை நடத்தினார். பலரையும் பேசி சரிகட்ட முயற்சித்தார். இறுதியில் டொனமூர் திட்டம் நிறைவேற்றப்பட்டு சர்வஜன வாக்குரிமையும் அதில் அங்கீகரிக்கப்பட்டதனால் அவர் ஏமாற்றமடைந்தார். குடியேற்ற அமைச்சருக்கு மேலதிக அதிகாரம் இருந்ததால் இங்கிலாந்து சென்று முறையிட்டு இதனை மாற்றலாம் என்று நம்பினார். அவர் விரிவாக ஒரு முறைப்பாட்டு அறிக்கையை தயாரித்துக் கொண்டு 10.05.1930 அன்று இங்கிலாந்தை நோக்கிப் புறப்பட்டார். அதனை 27.06.1930 அன்று அங்கு சமர்பித்தார்.  அந்த அறிக்கையை  (Memorandum of Sir Ponnambalam Ramanathan on the recommendations of the Donoughmore Commission) இன்றும் பல அரசியல் விமர்சகர்கள் பயன்படுத்துவதைக் காணலாம்.

“It would be ruinous to introduce Universal Suffrage in Ceylon at that stage.”

“இந்த சமயத்தில் வாக்குரிமையை அறிமுகப்படுத்துவது இலங்கைக்கு கேடு விளைவிக்கும்” என்று அதில் வலியுறுத்தினார்.

ஜேன் ரஸ்ஸல் தனது “டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் இலங்கையின் இனத்துவ அரசியல்” என்கிற நூலில் இராமநாதனின் அந்த டொனமூர் திட்டத்துக்கான பரிந்துரைகளைப் பற்றி குறிப்பிடும் போது...

“ராமநாதன் மற்றும் பெரும்பாலான "பழமைவாதிகள்" (செல்வதுரை, ஸ்ரீ பத்மநாதன், மற்றும் ஈ.ஆர்.தம்பிமுத்து  விதிவிலக்குகள்) வெள்ளாளர் அல்லாத சாதியினருக்கும் பெண்களுக்கும் வாக்களிப்பது ஒரு பெரிய தவறு மட்டுமல்ல, இது "கும்பல் ஆட்சிக்கு" வழிவகுத்துவிடும் என்று நம்பியது மட்டுமன்றி வாதிட்டனர். ஆனால் ராமநாதன் குறிப்பாக இது இந்துக்களின் வாழ்க்கை முறைக்கு கேடானது என்று பரிந்துரைத்தார்”

என்கிறார். சேர் பொன் இராமநாதன் வசதிபடைத்த, உயர்சாதி, ஆண்களுக்கே வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்பதையே வலியுறுத்தினார் என்பதே அதன் சாரம்.

தொகுதிவாரி பிரதிநிதித்துவத்துக்காக பெரும்பான்மை சிறுபான்மை கட்சிகளுக்குள் சர்ச்சை தலை தூக்கியிருந்த சமயம் அது.

நிறைவேற்றம்

12.12.1929 அன்று அரச சபையில் இறுதி வாக்கெடுப்பு நிகழ்ந்தபோது நூலிலையில் டொனமூர் திட்டம் தப்பித்தது.  டொனமூர் அரசியல் திட்டம் வெறும் 2 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. 19வாக்குகள் ஆதரவாகவும், 17வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. ஆதரவளித்தவர்களில் 13 சிங்களவர்கள் இருந்தார்கள். ஒரே ஒரு தமிழர் தான் ஆதரித்திருந்தார். எதிர்த்த 17 பேரில் இரண்டு சிங்களவர்கள், எட்டு இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் இருவர், மூன்று முஸ்லிம்கள், இரு பறங்கியர் ஆவர்.

எதிர்த்து வாக்களித்த இரு சிங்களவர்களும் சுதேசிகளுக்கு போதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்கிற நிலைப்பாட்டில் இருந்து எதிர்த்திருந்தார்கள். ஒருவர் ஈ.டபிள்யு பெரேரா, அடுத்தவர் சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர.

டொனமூர் பரிந்துரைகளை எதிர்த்து அதிகம் அன்று பேசியவரான சேர் பொன் இராமநாதன் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து மணிக்கணக்காக உரையாற்றியிருக்கிறார்.

“நான் 1879இலிருந்து இன்று வரை சட்டசபையில் இருந்து வருகிறேன். இது வரை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பாதகமாக இருந்ததில்லை. நான் தமிழ் சைவர்களுக்கும், தமிழ் கிறிஸ்தவர்களுக்கும், சோனகருக்கும், மலாயருக்கும் பிரதிநிதித்துவம் வகித்திருக்கிறேன்”

என்றார். 

பண்டாரநாயக்கா டொனமூர் திட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்தார் என்கிற தொணியில் பல்வேறு சிங்கள கட்டுரைகளைக் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது. இறுதி வாக்கெடுப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பது தான் உண்மை. ஆனால் ஆணைக்குழுவை சந்தித்து வாக்குரிமையானது கல்வி, சொத்து, பால்நிலை என்பவற்றின் அடிப்படையில் மட்டுப்படுத்தத் தான் வேண்டும் என்றே அவரும் கோரிக்கை விடுத்தார்.

டொனமூர் ஆணைக்குழு அறிக்கையின் மீதான விவாதம் தொடர்ந்து பல நாட்கள் பல தலைப்புகளில் அரச சபையில் நிகழ்ந்தன. ஒவ்வொரு தனித் தனி விவாகரங்களின் மீதும் தனித் தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டன. ஆனால் இடைநடுவில் குறிக்கிட்ட குடியேற்றச் செயலாளர் முர்ச்சிசன் பிளாட்ச்சர் (Murchison Fletcher) அன்றைய குடியேற்ற அமைச்சரின் செய்தியொன்றை அங்கு படித்துக் காட்டினார். அதன் படி 

“டொனமூரின் அறிக்கையில் திருத்தங்களோ, மாற்றங்களோ செய்யப்படக்கூடாது என்றும், அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது பற்றி மட்டுமே தீர்மானம் எடுக்க வேண்டும்”

என்று அதில் ஆணையிடப்பட்டிருந்தது.

அதுவரை ஆராய்ந்து நிறைவேற்றப்பட்ட தீமானங்களை எடுத்துக்காட்டி விளக்கினால் குடியேற்ற அமைச்சர் நிராகரிக்கமாட்டார் என்று சேர் பொன்னம்பலம் இராமநாதன் 05.12.1929 தொடர்ந்தும் வாதிட்டார். இறுதியில்  டொனமூர் திட்டத்திற்கு இருந்த எதிர்ப்புகள் குறித்து ஆளுநர் ஸ்டான்லி குடியேற்ற அமைச்சர் பஸ்வீல்ட் பிரபுக்கு (Lord Passfield) தெரிவித்தார். அவற்றை ஆராய்ந்த பஸ்வீல்ட் டொனமூர் திட்டத்தில் சில மாற்றங்களை மட்டும் செய்தார்.

அந்த டொனமூர் மசோதா மாற்றங்களின் படி

  • 1. பெண்களின் வாக்குரிமை வயது 30 இலிருந்து 21 ஆக மாற்றப்பட்டது. (ஆண்களுக்கு வழங்கப்பட்டது போலவே)
  • 2. மொத்த அங்கத்தவர்கள் எண்ணிக்கை 65 என்பதை மாற்றி 61ஆகக் குறைத்து 50 பேர் தேர்தலின் மூலம் தெரிவாவதாகவும், நியமன உறுப்பினர்கள் 12 பேரின் எண்ணிகையை 8 ஆகவும் குறைத்தார்.

அரசாங்க சபைக் கூட்டங்களை கொழும்பில் மட்டுமன்றி கண்டி மற்றும்  யாழ்ப்பாணத்திலும் நடத்தலாம் என்கிற பரிந்துரையையும் நடைமுறைப்படுத்தலாம் என்று மாற்றினார்.

இதில் மூன்றாவதாகக் கூறிய காரணி முன்னைய இராஜதானிகள் இருந்த இடங்களில் அரசாங்க சபைக் கூட்டங்களைக் கூட்டுவதன் மூலம் இனத்துவ கெடுபிடி நிலைமையை சமநிலைப்படுத்தலாம் என்று அவர் கருதினார் எனலாம்.

டொனமூர் திட்டத்தை எப்படியும் இலங்கையர் தலையில் திணித்துவிடுவதற்கு ஆளுநர் பல்வேறு வழிகளிலும் முயற்சித்தார். அதற்கு இருக்கும் எதிர்ப்பு நிலையை உணர்ந்த அவர் அது தோற்கடிப்பட்டுவிடும் ஆபத்தை உணர்ந்தார். அதற்காக அரசாங்க சபை உறுப்பினர்களை தனிப்பட அழைத்து சந்தித்து நட்புடன் சரிகட்ட முயற்சித்தார். தனது அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்று குடியேற்ற அமைச்சருக்கும் எழுதினார்.

கோ.நடேசய்யர்

இந்திய வம்சாவளியினரின் தலைவிதி

இந்திய வம்சாவழித் தமிழரின் வாக்குரிமையை கட்டுப்படுத்துவதாக உடன்பட்டால்; சிங்களப் பிரமுகர்கள் சர்வசன வாக்குரிமையுடன் சேர்த்து டொனமூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார்கள்.

அதுபோல இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரதிநிதித்துவமும் சுதேசிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தயிருந்தது. சவரஜன வாக்குரிமையின் பலன்களை அவர்களும் அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை அவர்களால் சகிக்க முடியாதிருந்தது.

டொனமூர் குழுவினரை சந்தித்த இந்திய வம்சாவளிப் பிரதிநிதிகள்

  • 24 நவம்பர் 1927 - ஐ.எக்ஸ்.பெரேரா உள்ளிட்டோர் - இலங்கை இந்தியர் சபை
  • 07.டிசம்பர் 1927  - நடேச ஐயர், டி.சி.மணி, பெரி சுந்தரம், ஐ. தாவீது
  • 20.டிசம்பர் 1927  - நடேச ஐயரும் பிறரும் – இந்தியர் சபை

தொழிற் கட்சியின் தலைவர் ஏ.ஈ.குணசிங்க டொனமூர் திட்டத்தை எதிர்த்து நின்ற போதும் சர்வஜன வாக்குரிமையை ஆதரித்திருந்தார். இலங்கை தேசிய காங்கிரசைச் சேர்ந்தவர்களோ சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தே நின்றார்கள். பெரும்பாலான சிங்கள உறுப்பினர்கள் இந்திய வம்சாவளியினர் வாக்குரிமை அனுபவிக்க முடியாதபடி செய்தால் சர்வஜன வாக்குரிமையை ஆதரிக்கத் தயாராக இருந்தார்கள் என்பதை பல வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடவே செய்திருக்கிறார்கள்.

டொனமூர் திட்டத்துக்கு ஆதரவு தேடுவதற்காக சிங்களப் பிரதிநிதிகளை சரிகட்ட முடிவு செய்தார்கள். அதன் பிரகாரம் வாக்குரிமை பெறுபவர் 5 வருடங்கள் தொடர்ச்சியாக இலங்கையில் வசித்தவராகவும், தொடர்ந்தும் வசிக்க விருப்பபவராகவும் இருத்தல் வேண்டும் என விதித்தார்கள்.

1931 டொனமூர் திட்டத்துடன் நிலைமை மாறியது. அதுவரை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சுதேச உறுப்பினர்களையும் கொண்டிருந்த சட்ட சட்டசபையில் சுதேசிகள் ஆட்சியதிகாரமற்று விளங்கியதால் இந்தியர்களுக்கு பிரதிநிதிதிதுவம் இல்லாத போதும் அதுவொரு பெரிய பாதிப்பாக இந்திய வம்சாவளியினர் உணரவில்லை. எப்போது சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டு சுதேசிகள் போதியளவு பிரதிநிதித்துவம் பெறத் தொடங்கினார்களோ அப்போதிருந்து இந்திய வம்சாவளியினருக்கு அநியாயம் தொடங்கியது. டொனமூர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வாக்குரிமையின் விளைவாக இந்தியாவம்சவளியினரும் தேர்தலில் போட்டியிட்டு அப்போது நிரந்தரமாக வசித்து வந்த 7 லட்சம் இந்திய வம்சாவளியினர் தமக்கான பிரதிநிதித்துவத்தை பெற்றுகொண்டது தான்; புதிதாகத் தோன்றிய சுதேசிய மேட்டுக்குடி அரசியல் குழாமினருக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தியது.

டொனமூர் திட்டம் பற்றிய சட்டசபை விவாதத்தில் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக்கூடாது என்று சிங்களத் தலைவர்கள் பலர் கடுமையாக வாதிட்டனர். இறுதியில் இந்திய வம்சாவளியினர்  வாக்குரிமை பெறுவதற்கென்று சில மேலதிக தகுதிகள் கட்டாயமாக்கப்பட்டன. சட்டபூர்வமான நிரந்தரக் குடியுரிமைச் சான்றிதழ், எழுத்தறிவு, சொத்து, வருமானத் தகுதி என நிபந்தனைகள் விதிக்கப்பட்டதில். ஏறத்தாழ ஒரு லட்சம் இதியர்கள் மாத்திரமே வாக்குரிமைக்கு தகுதி பெற்றனர். இந்த சிங்களத் தலைவர்களுடன் சமரசம் செய்து தான் அந்த வாக்குரிமை கிடைத்தது.

1931ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை கிடைக்கப்பெற்றபோதும் 1936 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு வாக்களிப்பதற்கு மலையக மக்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனமூர்

பெண்கள் 

பாலினம், சொத்து அல்லது கல்வி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சர்வஜன வாக்குரிமையை வழங்கிய ஆசியாவின் முதல் நாடாக இலங்கை அமைந்தது. அப்போது அவுஸ்திரேலியா, நியூசீலாந்து கூட சர்வஜன வாக்குரிமையை அறிமுகப்படுத்தியிருக்கவில்லை. மேலும் இந்த சர்வஜன வாக்குரிமையை அறிமுகப்படுத்திய பிரித்தானியா கூட டொனமூர் திட்டம் குறித்த விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்த 1928 இல் தான் தமது சொந்த நாட்டில் ஆண்களுக்கும் – பெண்களுக்குமாக சம சர்வஜன வாக்குரிமையை வழங்கியிருந்தது  (Representation of the People (Equal Franchise) Act 1928) என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். 

ஆளுநரால் நியமிக்கப்படும் 08 உறுப்பினர்களும், நாட்டின் மூன்று தலைமை அரச அதிகாரிகள் உட்பட 61 உறுப்பினர்களைக் கொண்டதாக அரசாங்க சபை அமைக்கப்பட்டது.

1931 ஏப்ரல் 15 அன்று, புதிய  அரசாங்க சபை பற்றிய கட்டளைச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. சட்டமன்றம்  1931 ஏப்ரல் 17இல் அதுவரையான அரசாங்கசபை கலைக்கப்பட்டது. மே 04 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சர்வஜன வாக்குரிமையின்படி முதல் பொதுத் தேர்தல் மே 1931 யூன் மாதம் 13இலிருந்து 20 வரையான ஒரு வார காலம் நடைபெற்றது. இத் தேர்தலில் மொத்த 15,77,932 வாக்காளர்களில் 5,99,384 பெண்களாக இருந்தார்கள்.  ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வேட்பாளர்களுக்கு வெவ்வேறு வர்ணங்கள் வழங்கப்பட்டன. வேட்பாளர்களுக்கு உரிய அந்தந்த நிறங்களில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் தாம் விரும்பிய வேட்பாளருக்கு உரிய நிறத்தைக் கொண்ட வாக்குப் பெட்டியில் வாக்கை அளிப்பர். அத் தேர்தலில் ருவன்வெல்ல தொகுதியில் ஜே.எச். மீதெனிய அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1931 இல் டொனமூர் சீர்த்திருத்தத்தின் மூலம் இலங்கையின் சர்வஜன வாக்குரிமை அளிக்கப்பட்டபோது பெண்களும் ஆண்களுக்கு நிகராக வாக்குரிமையைப் பெற்றுக்கொண்டார்கள். 14.01.1928 அன்று கொழும்பில் வைத்து டொனமூர் குழுவைச் சந்தித்த இந்த சங்கத்தைச் சேர்ந்த மேரி ரட்னம் உள்ளிட்ட பல பெண்கள் அளித்த சாட்சியம் வரலாற்றுப் பதிவுமிக்க கருத்துக்கள். டொனமூர் குழுவினரின் இறுதி சந்திப்பு அது தான். இதன் விளைவாக 1931 இல் நடந்த தேர்தலில் எடலின் மொலமூரே, நேசம் சரவணமுத்து ஆகியோர் சட்டசபைக்கு முதலாவது பெண்களாக தெரிவானார்கள்.

டொனமூர் குழுவை சந்தித்த வாக்குரிமைச் சங்க உறுபினர்களில் ஒருவர் அக்னஸ் த சில்வா அவர் ஒரு நேர்காணலில் இப்படி கூறுகிறார். "சமூக அநீதிக்கு எதிராக வீரமாக போராடியவர்களின் உற்சாகத்துடன் நாங்கள் அங்கு சென்றோம். அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையாக பதிலளித்தோம். “தோட்டங்களில் பணிபுரியும் இந்திய தமிழ் பெண் தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதை நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று டொனமூர் பிரபு எங்களிடம் வினவினார். "அவர்களும் பெண்கள். சகல பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்."

இந்த இயக்கத்தின் சார்பாக சென்றிருந்த மற்றொரு முக்கிய நபர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் தாயார் - டெய்ஸி பண்டாரநாயக்க. எந்தவொரு சாதி, இன, மத, வர்க்க வேறுபாடுகளும் இன்றி சகலருக்கும் சமமான சர்வஜன வாக்குரிமையை வலியுறுத்திய ஒரே தரப்பாக இவ்வியக்கத்தைத் தான் கூறவேண்டும். எனவே இந்த நேரத்தில் அந்த பெண்கள் இயக்கம் நினைவுகூரப்பட்டு கௌரவிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக...

இந்தத் தேர்தலில் டீ.பி.ஜயதிலக்க (களனி), எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்க (வேயன்கொட), டீ.எஸ்.சேனநாயக்க (மினுவன்கொட), பெரி சுந்தரம் (ஹட்டன்), டீ.எச்.கொத்தலாவல (பதுளை), ஜி.சீ.ரம்புக்பொத (பிபிலே), ஏ.எப்.மொலமூரே (தெடிகம), எச்.மீதேனிய அதிகாரம் (ருவன்வெல்ல),சீ.ரத்வத்த (பலங்கொட) ஆகிய 9 பேரும் போட்டியின்றி தெரிவானார்கள். அதே வேளை வடக்கில் மக்களின் எதிர்ப்பின் காரணமாக ஐந்து தொகுதிகளில் நான்கு அதாவது ஊர்காவற்துறை, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆகிய தொகுதிகளில் இருந்து எவரும் போட்டியிட முன்வரவில்லை. மன்னார், முல்லைத்தீவு தொகுதியில் போட்டியிட்ட எம்.ஆனந்தன் அதிக வாக்கு வித்தியாசத்தில் தெரிவானார்.

1934 வடக்கில் நடந்த இடைத்தேர்தல்

பின்னர் 1934இல் மீண்டும் வட மாகாணத் தமிழர்கள் பிரித்தானிய அரசைகேட்டுக்கொண்டதற்கிணங்க 1934 இல் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதன்படி ஜீ.ஜீ.பொன்னம்பலம் (பருத்தித்துறை), அருணாச்சலம் மகாதேவா (யாழ்ப்பாணம்), நெவின்ஸ் செல்வதுரை (ஊர்காவற்துறை), எஸ்.நடேசன் (காங்கேசன்துறை) ஆகியோர் தெரிவானார்கள். ஆனால் அரசாங்க சபையில் எஞ்சிய ஒரு வருடத்திற்கு தான் அவர்களால் பிரதிநிதித்துவம் வகிக்க முடிந்தது.  டொனமூர் திட்டத்தின் கீழ் 1936 இல் நடந்த இரண்டாவது அரசாங்க சபைத் தேர்தலில் உருவான அரசாங்கத்தில் அமைச்சரவையானது தனிச்சிங்கள அமைச்சரவையாக ஆக்கப்பட்டதையும் இங்கே குறித்துக்கொள்வோம்.

ஆக, டொனமூர் திட்டத்தின் கீழ் நடந்த முதலாவது தேர்தலில் 46 பேர் மட்டுமே தெரிவாகியிருந்தார்கள். அரசியல் கட்சிகள் காலத்துக்கு வராத காலமது. எனவே 1931 தேர்தலில் ஏ.ஈ.குணசிங்கவின் இலங்கை தொழிற்கட்சி  மாத்திரமே கட்சியாக களமிறங்கியது. கொம்யூனிஸ்ட் தலைவரான டொக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க மொரவக்க தொகுதியில் வெற்றியிட்ட போதும் அவர் ஒரு கட்சியை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. 1935 டிசம்பர் 18 இல் தான்  லங்கா சமசமாஜக் கட்சி உருவாக்கப்பட்டது.

முதலாவது அரசாங்க சபை 07.07.1931 அன்று கூடியவேளை ஆங்கிலேய தரப்பு முதலாவது தடவையே தோல்வியை சந்திக்க நேரிட்டது. அது சபாநாயகர் தெரிவின் போது. ஏனென்றால் இப்போது சுதேசிகள் பெரும்பான்மை வகிக்கின்ற ஒரு அரசாங்க சபையை ஆங்கிலேயர்கள் எதிர்கொள்கிறார்கள். சபாநாயகராக பிரான்சிஸ் மொலமூரேவை தெரிவு செய்வதற்காக டபிள்யு .ஏ.த.சில்வா முன்மொழிந்தார். அதனை டீ.பீ.கரலியத்த அமோதித்தார். அதே வேளை சேர் ஸ்டுவர்ட் ஸ்னைதரை; டீ.எல்.விலியஸ் முன்மொழிய, எச்.ஐ.மாகர் அமோதித்தார். இறுதியில் மொலமூரேவுக்கு 35வாக்குகளும் ஸ்னைதருக்கு 18 வாக்குகளும் மட்டுமே கிடைத்ததன. மொலமூரே இலங்கையின் முதலாவது சபாநாயகராக தெரிவானார்.

1931 யூலை 10 அன்று முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பமானபோது ஆளுநரின் உரையைத் தொடர்ந்து பிரதி சபாநாயகராக போஸ்டர் ஒபேசேகரவும், குழுத்தலைவராக எம்.சுப்பிரமணியமும் அதிக வாக்குகளால் தெரிவானார்கள்.

டொனமூர் அரசியல் அமைப்பானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும் சுதந்திரத்திற்குமிடையே ஏற்படுத்தப்பட்ட ஒரு இணைப்புப் பாலம் என்ற கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியும். ஏனென்றால் இந்த யாப்பில் சுதந்திரத்தை அடைவதற்கான ஒரு வழிமுறையையும், பயிற்சியும் சுதேசிகளுக்கு ஏற்படுத்தியது. சுதந்திரத்தை எதிர்கொள்வதற்கான ஆயத்தத்தைக் கொண்டுத்தது என்றும் கூறலாம்.

சுதந்திர நிலைக்கான அம்சங்களாகப் பின்வருவனவற்றைத் தொகுத்துநோக்கலாம்.

  1. இனரீதியான தெரிவு முறை ஒழிக்கப்பட்டு பிரதேச ரீதியான தெரிவுமுறை ஏற்படுத்தப்பட்டது.
  2. நிர்வாகக்குழு முறையினூடாக உள்நாட்டு நிர்வாகப்பொறுப்புக்கள் சுதேசிகளிடம் கையளிக்கப்பட்டமை
  3. சர்வஜன வாக்குரிமை மூலமாக ஜனநாயக தெரிவு உரிமையை இலங்கை மக்கள் பெற்றுக்கொண்டார்கள்.

இனவாரி – பிரதேசவாரி 

டொனமூர் யாப்பிற்கு முன்னைய குறு மெக்கலம்-(1910) தற்காலிக மனிங் - (1921) மனிங் - (1924) ஆகிய யாப்புக்களின் பிரகாரம் சட்ட நிரூபணசபைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கையில் இனரீதியான தெரிவு முறையும் பின்பற்றப்பட்டது.

இனவாரித் தெரிவுமுரையை நீக்கக்கோரி இலங்கை தேசிய காங்கிரஸ் உட்பட அனைத்து தேசிய தலைவர்களும் நீண்ட நாட்களாக குரலெழுப்பி வந்தனர். இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இனரீதியான தெரிவு முறையானது இனப்பிரிவினைக்கு வித்திட்டதென்கிற விமர்சனம் பலமாக முன்வைக்கப்பட்டிருந்தன.

டொனமூர் ஆணைக்குழுவின் பிரதான சிபாரிசுகளாகளில் சர்வஜன வாக்குரிமையைப் போல தனி அங்கத்துவ தேர்தல் முறையையும் முன்வைத்தது. இலங்கையை 09 மாகாணங்களாகப் பிரித்து 50 தேர்தல் தொகுதிகளை பரிந்துரைத்தனர். அந்த 50 தொகுதிகளுக்குமான உறுப்பினர்கள் சர்வஜன  வாக்குரிமையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது.

டொனமூர் யாப்பின் இனரீதியான தெரிவுமுறை ஒழிக்கப்பட்டு; பிரதேச ரீதியான தெரிவின் மூலம் அமைக்கப்பட்ட அரசாங்க சபையில் மொத்தம் 61 உறுப்பினர்களில் 50 உறுப்பினர்கள் தொகுதி வாரியாக சர்வஜன தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். 08 உறுப்பினர்கள் சிறுபான்மையினரின் நல உரிமைகளைப் பாதுகாக்க தேசாதிபதியினால் நியமிக்கப்பட்டனர். தேர்தலின் மூலம் போட்டியிட்டு வெற்றியீட்ட முடியாத சிறுபான்மை இனத்தவரின் நலனுக்காகவே இந்த நியமனமுறை தொடர்ந்தும் இடம் பெற்றது. (இது இனரீதியில் அமைந்த தெரிவுமுறையல்ல, நியமன முறையே. அதைத்தவிர உத்தியோக சார்புடைய அங்கத்தவர்களாக 03 உறுப்பினர்களும் தெரிவானார்கள்.

சுயாட்சியை நோக்கிய வழி, அல்லது சுதந்திரத்துக்கான இன்னொரு அத்திவாரம் என்றுகூட இதனைக் கொள்ளலாம். டொனமூர் யாப்புக்கு முந்திய யாப்புக்களை எடுத்துக்கொண்டால் சுதேசிய பிரதிநிதிகளுக்கு நிர்வாக விடயங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. 

தற்காலிக மனிங் யாப்பில் மூன்று சுதேசியருக்கும், மனிங் யாப்பில் நான்கு சுதேசியருக்கும் நிர்வாக வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும்கூட நிர்வாகத்தில் எவ்விதத்திலும் இவர்களால் வினைத்திறனை ஏற்படுத்த முடியவில்லை.

ஆனால் டொனமூர் யாப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உள்நாட்டு நிர்வாக விடயங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

அவ்வாறு ஒரு சுயாட்சியை நோக்கிய வழியில் ஏற்பாடு என்ற ரீதியிலும் சர்வஜன வாக்குரிமையை கூறலாம்.

 ஏ.ஈ.குணசிங்க, டீ.எஸ்.சேனநாயக்க

சர்வஜன வாக்குரிமை

ஒரு நாட்டிற்குரிய தகைமை பெற்ற சகல பிரஜைக்கும் இனம், மதம், மொழி, சாதி, குலம், கல்வி, சொத்துரிமை, பிறப்பு, பிறப்பிடம், ஆண், பெண் ஆகிய எதுவித பேதங்களும் அற்ற வகையில் நாட்டின் அதிகார நிருவாகத்தில் பங்கேற்கும் உரிமையும், அத்துடன் தங்களுக்கென ஒரு பிரதிநிதியை நியமிப்பதற்கான உரிமையும் கொண்டதுவே சர்வஜன வாக்குரிமை என்போம்.

1910 குறு - மெக்கலம் திட்டத்தின்படி பத்து உத்தியோகபற்றற்ற உறுப்பினர்களில் நான்கு பேர் மட்டுமே வரையறுக்கப்பட்ட வாக்களிப்பின் பிரகாரம் தெரிவு செய்யும் உரிமை பெற்றவர்கள் என்பதை இங்கு சுட்டியாகவேண்டும். வரையறுக்கப்பட்ட எனும் போது படித்த, 1500 ரூபாவுக்கு குறையாத ஆண்டு வருமானமுடைய, 21 வயதுக்கு மேற்பட்ட, அதுவும் ஆண்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இருந்தது. அதன் பிரகாரம் இரு ஐரோப்பியர்களும், ஒரு பறங்கியரும், படித்த இலங்கையர் ஒரே ஒருவர் மாத்திரமே தெரிவானார். அந்த ஒருவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன்.

நவீன உலகில் சனத்தொகையின் பெருக்கம், பரம்பல், குடிமக்களுக்குள் இருக்கிற பிரிவினைகள், குடிசனங்களின் தேவைகள் எல்லாவற்றையும் கையாள அதிகாரப்பரவலாகமும், அதற்கான ஜனநாயகப் பொறிமுறையும் இன்றிமையாததாக ஆகியிருக்கிறது. அந்த வகையில் பிரதிநிதித்துவ ஜனநாயக அம்சம் என்பதே அதற்கான எளிமையானதும், தவிர்க்க இயலாததுமான பொறிமுறை. அந்த ஜனநாயக அம்சத்தின் இன்றிமையாத வழிமுறையாக சர்வஜன வாக்குரிமை கொள்ளப்படுகிறது. 1931இல் அவ்வுரிமையை டொனமூர் யாப்பின் மூலம் தான் முதன் முதலில் பெற்றுக்கொண்டார்கள். 

டொனமூர் யாப்புக்கு முன்னர் இலங்கையில் வழங்கப்பட்டிருந்த வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை என அழைக்கப்படுகின்றது. 1910-ம் ஆண்டில் குரு-மெகலம் யாப்பினால்அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையைக் கற்ற சொத்துள்ள ஆண்கள் மாத்திரமே பெற்றிருந்தனர்.

1924ம் ஆண்டில் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையின் கீழ் மொத்த சனத்தொகையில் சுமார் 4% மக்கள் மாத்திரமே (204,996 பேர்) வாக்களிக்கும் தகுதியினைப் பெற்றிருந்தனர். ஆனால் டொனமூர் யாப்பின் கீழ் 21 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இத்தகைய வாக்குரிமையை வழங்கப்பட்டமையினால் வாக்காளர் தொகை சுமார் 18 1/2 இலட்சமாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்பட்டது. இது ஜனநாயக சக்தியின் கட்டவிழ்ப்பாகும்.

டொனமூர் திட்டத்தின் கீழ் இரு தேர்தல்கள் மட்டும் தான் நிகழ்ந்தன. 1931, 1936 ஆகிய வருடங்களில் அவை நடந்தன. இரண்டாம் உலகப் போரின் காரணமாக அடுத்த தேர்தல் உரிய காலத்தில் நடக்கவில்லை. எனவே 1936 இல் அமைக்கப்பட்ட அதே அரசாங்கம் 1947 தேர்தல் வரை நீடித்தது. ஆனால் அத்தேர்தல் சோல்பரி அரசியல் திட்டத்தின் நடந்தது. டொனமூர் திட்டத்தின் உள்ளடக்கம் தான் அடுத்த நிலையான சோல்பரி திட்டத்தின் விரிவாக்கத்துக்கு வழிவகுத்தது என்பதை சொல்லித்தேரியத் தேவையில்லை.

இரண்டே வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட டொனமூர் திட்டமானது அதனை எதிர்த்த தமிழர்களால் மட்டுமல்ல அதனை வெறுத்த ஏனைய இனத்தவர்களாலும் அதன் நடைமுறைப்படுத்தலை தடுக்க முடியவில்லை.

சர்வஜன வாக்குரிமையை பெற்று 90 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்ட போதும் அதை உரிய வகையில் பயன்படுத்தும் அரசியல் ஜனநாயகப் பண்பாட்டுக்கு பழகிவிட்டோமோ என்றால் நமக்கு திருப்தியான பதில் கிடைக்கபோவதில்லை.ஆனால் இலங்கையில் இன்று நாம் அனுபவிக்கிற வாக்குரிமை, தேர்தல், ஜனநாயகத் தெரிவு, வெகுஜன அரசாங்கத்தை தெரிவு செய்யும் சுதந்திரம் என்பவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக அமைந்தது 1931 இல் நாம் பெற்ற சர்வஜன வாக்குரிமை

நன்றி - தினக்குரல்



மாகாண சபையும், உள்ளூராட்சியும் அவசியமும் விமர்சனமும் - அருள்கார்க்கி

அதிகாரப்பரவலாக்கத்தின் ஆரம்பகட்டமே இலங்கை போன்ற பல்லின நாடுகளில் பாரிய விமர்சனங்களுக்குள்ளானது. இலங்கையில் வாழும் அனைத்து இன, மத, மொழிப் பிரிவினரையும் கருத்தியல் ரீதியாக ஒன்றிணைக்கும் முயற்சிகள் இன்றுவரை சாத்தியப்படாத ஒரு சூழலில் அதற்கான முயற்சிகள் வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் இலங்கையின் இனப்பிரச்சினையானது இலங்கைத் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலானதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் மலையக மக்கள் குறித்த தேசிய கவனம் செலுத்தப்படாமையும் அம்மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகள் குறித்த சட்டரீதியான முன்னெடுப்புகள் குறித்தும் இதுவரை எவ்வித பொறிமுறையும் வகுக்கப்படவில்லை. நாட்டுக்குள்ளேயே அடிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாகவும், அரசியல், தொழிற்சங்க ரீதியாக சுரண்டப்பட்டு கொண்டிருக்கும் ஒரு தேசிய இனமாகவும் மலையக சமூகத்தை இன்றும் அடையாளப்படுத்தலாம்.

காலனித்துவ ஆட்சியாளர்களின் காலத்திலிருந்து பெருந்தோட்ட மக்களின் அரசியல் அபிலாசைகளை மழுங்கடித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளை காலனித்துவவாதிகளின் பின்னர் வந்த கம்பனிகளிடம் அடகு வைக்கப்பட்டது. எனவே மலையக மக்கள் தமது கல்வி, கலாசாரம், சுகாதாரம், இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் பெருந்தோட்ட கம்பனிகளிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்றுவரை இந்நிலைமையிலிருந்து மீள முடியாமல் இருக்கும் சந்தர்ப்பத்தில் சிறுபான்மை மக்களுக்குச் சாதகமான சொற்ப சலுகைகளான மாகாண சபை முறை, உள்ளூராட்சி முறை என்பவற்றை கேள்விக்குட்படுத்தும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய சாதகமான நுழைவாயில்களை பயன்படுத்தி மலையக மக்களையும் அரசியல் ரீதியாக பலப்படுத்தும் முயற்சிக்கு இது பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும். எனவே நடைமுறையிலுள்ள சிறுபான்மையினர் காப்பீடுகளான மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற கட்டமைப்பை பலப்படுத்துவதனூடாக மலையக மக்களையும் அதனுள் ஒருங்கிணைக்கும் நகர்வுகள் இடம்பெற வேண்டியது அவசியமாகும். ஆனாலும் இன்று எந்தவொரு மாகாண சபையும் ஆட்சியில் இல்லாத சந்தர்ப்பத்தில் அதிகாரத்தை மத்திய அரசை நோக்கி குவிமையப்படுத்தும் செயற்பாடுகள் கொவிட் - 19 பெருந்தொற்றை தொடர்ந்து வேகமெடுத்துள்ளன.

1987 ஜூலை 29 ஆம் திகதி ஜே.ஆர். ஜெயவர்தனாவிற்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் இடம்பெற்ற இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13 வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தினூடாக கொண்டு வரப்பட்டதே மாகாண சபை முறையாகும். இந்தியாவின் முழுமையான அழுத்தத்துக்கு மத்தியில் இடம்பெற்ற ஒப்பந்தமாக இது அமைந்தாலும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறித்த எந்தவொரு ஏற்பாடுகளும் 13 வது திருத்தத்தில் உள்வாங்கப்படவில்லை. இதை ஒரு வரலாற்று தவறாகவே அணுக வேண்டியுள்ளது. மலையகத்தமிழர்கள் அதிகமாக வாழும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களை மையப்படுத்தி மாகாண சபை முறையில் சிறப்பு ஏற்பாடுகளும் விகிதாசார ஒதுக்கீடுகளும் அவசியம்.    

மாகாண சபைகளின் அங்கத்துவத்தை பொறுத்தவரை ஒவ்வொரு மாகாணத்தினதும் சனத்தொகை, பரப்பளவு என்பவற்றின் அடிப்படையிலேயே மாகாண சபைகளுக்கான அங்கத்துவ எண்ணிக்கை வரையறுக்கப்படும். இதன் அடிப்படையில் மாகாண சபைகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்பதுடன் அங்கத்தவர்கள் விகிதாசார தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே தெரிவுச் செய்யப்பட்டார்கள். இவ்விடத்தில் வடகிழக்குக்கு வெளியில் வாழும் சிறுபான்மையின மக்களின் அரசியல் தேவைகளை éர்த்திச் செய்யும் விதமாக ஒப்பீட்டு அடிப்படையில் மத்திய, ஊவா, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளை வலுப்படுத்துவது இன்றுவரை சாத்தியப்படவில்லை.

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறைத்தல், நிதிவளங்களை குறைத்தல், தேர்தலை பிற்போடுதல் போன்ற விடயங்கள் மாகாண சபை முறையை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளாகவே பார்க்கப்பட வேண்டும். மாகாண சபைகளில் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை விடவும் மேலான அதிகாரங்கள் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுனருக்கே வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தனித்த விருப்பத்துக்கு அமைவாக நியமிக்கப்படும் ஆளனர் ஒவ்வொரு மாகாண சபையினதும் நிர்வாக அலுவல்களுக்கு தலைவராக இருப்பார். அவரின் அதிகாரங்களை அவரால் நியமிக்கப்பட்ட மாகாண முதலமைச்சர் மற்றும் நான்கு மாகாண அமைச்சர்கள் மூலம் செயற்படுத்துவார்.

இவ்விடத்தில் காலங்காலமாக அரசுடன் இணைந்திருந்த மலையக கட்சிகள் ஆளுனருக்கூடாகவும் மாகாண சபைகளை மலையக மக்களுக்கு சாதகமாக பயன்படுத்த தவறியுள்ளனர். இதன் காரணமாக இன்று மாகாண சபைகள் மலையக மக்களுக்கு பிரயோசனம் அற்றவை என்ற தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. மறுபுறம் மாகாண மட்டத்தில் முகங்கொடுக்கும் சிறுபான்மையினர் சார் பிரச்சினைகளை ஆளுனருக்கு ஊடாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வாய்ப்புகளையும் பாராளுமன்றத்தில் சாத்தியமாகாத பிரேரணைகளை மாகாண மட்டத்தில் கொண்டு வந்து பிராந்திய ரீதியாக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய வாய்ப்புகளையும் மலையக பிரதிநிதிகள் சரியாக பயன்படுத்தவில்லை.

மாகாண சபை முறையின் அவசியம் குறித்து நீண்டகால பொதுத்துறை அனுபவங்களை கொண்டு வரும் முன்னாள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம். வாமதேவன் அவர்களின் கூற்றுப்படி மாகாண சபைகள் என்பது ஒரு பயிற்சிக்காலமாகும். சிறுபான்மை இனத்தவர்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படை இந்த மாகாண சபை முறைமையாகும். தேசிய அமைச்சுகள் மூலமாக சமூகத்தின் அடிமட்டம் வரை ஊடுருவி பொதுச்சேவைகளை பரவலடைய செய்ய முடியாது. எனவே உள்ளூராட்சி மன்றங்களும் மாகாண சபையும் பொதுச்சேவை சமூகத்தின் கீழ்மட்டம் வரை கொண்டு செல்கின்றன. ஆனால் அதனை எவ்வளவுத் தூரம் சாதகமாக பயன்படுத்தியுள்ளோம் என்பது ஆதாயப்பட வேண்டியுள்ளது.

கல்வி, சுகாதாரம், விவசாயம், கைத்தொழில், வீதி, நீர்ப்பாசனம் உள்ளிட்ட விடயங்களில் மாகாண சபைகள் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையே கொண்டுள்ளன. முழுமையான அதிகாரம் தரப்படவில்லை. நிதி வளத்துக்காக மத்திய அரசாங்கத்தையே தங்கியிருக்கும் நிலை காணப்படுகின்றது என்கின்றார். அரசியலமைப்பின் 154 A உறுப்புரையின் கீழ் தாபிக்கப்பட்ட நிதி ஆணைக்குழுவே மாகாண சபைகளுக்கான வருடாந்த அபிவிருத்தி திட்டத்தினையும் தயாரிப்பதற்கான வழிகாட்டல்களை வழங்குகின்றது. அரச அபிவிருத்தி கொள்கைக்கு ஏற்பவும், பொருளாதார உபாயத்துக்கு அடித்தளமாகவும் மாகாண நிதி, திட்டமிடல் என்பவை இடம்பெற வேண்டியது அவசியமாகும்.

ஆயினும் மாகாண சபைகளின் நிர்’வாகத்தின் கீழ் வரும் பரப்பு, சனத்தொகை, இன விகிதாசாரம் உள்ளிட்ட விசேட காரணிகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாகாணசபையும் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் முழுமையான அதிகாரம் கொண்ட தமிழ்க்கல்வி அமைச்சுகள் இருக்கவேண்டும். ஆனாலும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள தமிழ்க்கல்வி அமைச்சு இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாகாண அமைச்சு அதிகாரத்தை தவறாக பிரயோகித்தமை காரணமாக பல்வேறு முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன என்கின்றார்.

மேலும் பெருந்தோட்டங்களுக்கான பிரத்தியேக அமைச்சு மூலம் மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நிதிசார் உதவிகளை வழங்க நாம் முயற்சிகளை  மேற்கொண்ட போது மாகாணசபைக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையில் முறைமைப்படுத்தப்பட்ட உறவு இல்லாத காரணத்தினால் அரசியல் ரீதியாக முரண்பாடுகள் தோற்றம் பெற்றன. அதேபோல் மாகாண அமைச்சு பதவியை பயன்படுத்தி அதிகார துஸ்பிரயோகங்களும் இடம்பெற்றன. எனவே இவ்வாறான அனுபவங்கள் மலையக மக்களுக்கு மாகாண சபைகளின் அவசியத்தை எதிர்மறையான விளைவுகளாக கட்டமைக்கின்றன. ஆனால் இவற்றை மட்டும் வைத்து மாகாண சபை முறையை வலுவிழக்க செய்யவோ இல்லாதொழிக்கவோ முடியாது. இம்முறை சிறுபான்மை இனங்களுக்கு எவ்விதத்திலும் பிரயோசனமற்றதாக அமையாது என்கின்றார்.

 மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டதிலிருந்து மாகாண சபைகளின் பிரதான கடமை மாகாண அரசாங்கங்களுக்குரிய சட்டங்களை இயற்றுவதாகும். இந்த வகையில் மாகாண சபை பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பாக சட்டங்களை இயற்றும் அதிகாரம் இச்சபைக்கு உண்டு. இவ்வாறு 37 விடயங்களில் மாகாண சபைகள் சட்டங்களை இயற்றலாம். அவ்வாறானவை.

1. உள்ளூராட்சி சட்டமும் ஒழுங்கும்

2. காணியும் காணி அமர்வும்

3. விவசாயமும் கைத்தொழிலும்

4. கல்வியும் கலாசாரமும்

ஆகும். ஆனால் இவற்றிற்குட்பட்டு மலையக மக்களுக்கான அரசியல் அபிலாசைகளை பெற்றுக் கொள்வதற்கு போதிய முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்பது புலனாகின்றது. அதேபோல் திரு. வாமதேவன் அவர்கள் கூறுவது போல் மாகாண சபை முறையில் காணப்பட்ட குறைபாடுகள் அரசியல் ரீதியானதாகவும், கட்சிகள் சார்ந்ததாகவுமே உணரப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசுடன் நேர்மறையான உறவுகளை கட்டியெழுப்புவதன் கூலம் அபிவிருத்திகளை துரிதப்படுத்தலாம். என்றும் கூறுகின்றார். உதாரணமாக வீதி அபிவிருத்தியை கூறலாம். A,B ஆகிய வீதி அபிவிருத்தி அதிகார சபையே பராமரிப்பு, அபிவிருத்தி என்பவற்றை மேற்கொள்ளும். C,D ஆகிய தரங்களை உடைய பாதைகள் மாகாண சபையின் பொறுப்பாகும். அதேபோல் E தர வீதிகள் பிரதேச சபையின் பொறுப்பாகும்.

எனவே பெருந்தோட்ட உட்கட்டமைப்பில் முக்கிய இடம் பிடிக்கும் வீதி அபிவிருத்தியை மாகாண சபையின் நிதி மூலம் சாத்தியமாக்குவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் மத்திய, ஊவா மாகாண சபைகளில் நெடுங்காலமாக மலையகப் பிரதிநிதிகள் அங்கம் வகித்திருந்தாலும் வீதி அபிவிருத்தி இன்னும் தன்னிறைவு அடையாத ஒரு துறையாகவே இன்றும் இருப்பது கவனிக்கத்தக்கது. எனவே திரு. வாமதேவன் அவர்களின் கருத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது மாகாண சபை முறைமையானது மலையக மக்களுக்கு அத்தியாவசியமானதாகவே காணப்படுகின்றது. எனினும் ஆட்சிமுறையில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு மாகாண சபை முறைமை பலப்படுத்தப்பட வேண்டியது சிறுபான்மை மக்களின் உரிமையாகும் என்பது திரு. வாமதேவனின் சாராம்சமாகவுள்ளது.

அதேபோல் இருமொழிக் கொள்கையை ஆட்சித்துறையில் நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண சபை முறை மற்றும் உள்ளூராட்சி பொறிமுறைகள் ஒரு காலமாக காணப்படுகின்றது. அதாவது வடகிழக்கை பொறுத்தவரையில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக இருந்தாலும் வடகிழக்குக்கு வெளியில் தேசிய மொழிக் கொள்கையை அரச நிர்வாக துறைக்குள் கொண்டு வருகின்ற வேலையை மாகாண சபைகள் செய்வதை காணக்கூடியதாக உள்ளது. இது மலையக மக்கள் தமது சொந்த மொழியில் அரச நிர்வாக செயற்பாடுகள் நுகர்கின்ற வாய்ப்பை ஏற்படுத்துகிறது. எனவே அதிகாரப்பரவலாக்கத்தின் பிரதான விடயமான மொழி சமவாய்ப்பு பேணப்படுவதற்கும் இது அடிப்படையாக உள்ளமை உணரப்பட வேண்டும்.

இவ்விடயங்கள் தொடர்பாக அரசியல ஆய்வாளரும் தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி.எஸ். கருணாகரன் அவர்களிடம் வினவப்பட்ட போது அவர் இவ்வாறு தனது அபிப்பிராயத்தை பகிர்ந்துக் கொண்டார். மாகாண சபைகள் என்பவை வளர்ச்சியடைந்த ஒரு அதிகாரப்பரவலாக்கல் வடிவமாக பார்க்கப்பட முடியாவிட்டாலும் இலங்கையை பொறுத்தவரையில் முக்கியத்துவம் மிக்கதான துணை ஆட்சி முறையாகும். 13 வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையானது நீண்ட காலமாக இலங்கையில் வேரூன்றியிருந்த இன முரண்பாட்டுக்கு தீர்வாக இந்தியாவின் தலையீட்டின் மூலம் கொண்டு வரப்பட்ட ஒரு வடிவமாகும். மாகாணங்களுக்கு அதிகார பரவலை விஸ்தரிக்கும் முகமாக ஆட்சி நிர்வாகத்தை கையளித்தல் இதன் மூலம் இடம்பெறுகின்றது. குறிப்பாக வடகிழக்கை மையப்படுத்தி இந்த மாகாண சபை முறை கொண்டு வரப்பட்டாலும் வடகிழக்குக்கு வெளியில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். முக்கியமாக மலையக மக்கள் செறிந்து வாழும் மாகாணங்களில் தமிழ் மொழிக்கு ஆட்சி கருமங்களில் இடம் கிடைப்பதற்கும், மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் மலையக பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுவதற்கும் இந்த முறைமை வாய்ப்பளித்துள்ளது. ஒப்பீட்டளவில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படும் அதிகாரப்பரவலாக்கல் முறைக்கு ஈடானது என்று சொல்லப்பட முடியாவிட்டாலும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது முக்கியத்துவமிக்கதாகின்றது.

மேலும் ஒற்றையாட்சிக்குள் ஒரு அதிகாரப்பகிர்வான மாகாண சபை முறையானது பிரதேச அபிவிருத்திக்கு இன்றியமையாத ஒரு அலகாகும். தேசிய அரசால் அணுக முடியாத பிரதேச ரீதியான அபிவிருத்திகளை மாகாண சபையும் உள்ளூராட்சி முறையும் சாத்தியப்படுத்துகின்றன. இது அபிவிருத்தியடைந்து வரும் மலையக சமூகத்துக்கு அவசியமான ஒரு காரணியாகும் என்கின்றார்.

அதேபோல் அரசியல் ரீதியாக மக்களை அணி திரட்டுவதற்கு மாகாண சபை முறையானது அடிப்படையானது. பிராந்திய ரீதியில் மக்களின் அரசயல், சமூக, பொருளாதார அபிவிருத்திகளுக்கும் ஆட்சிமாற்றங்களுக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாகாண சபைகள் அடிப்படையாக இருந்திருக்கின்றன. அதாவது ஆட்சிமாற்றங்களுக்கான காள்கோளாகவும் மாகாண சபைகள் இருந்திருக்கின்றன. எடுத்துகாட்டாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை வசப்படுத்தியதை தொடர்ந்து நாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கும் இது காரணமாக அமைந்தது. இதில் முக்கியமான விடயம் ஊவா மாகாணத்தில் பெருவாரியான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பெருந்தோட்ட தமிழ் மக்களே. அவர்களின் அதிகப்படியான வாக்குகளே ஊவா மாகாண  சபையில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைப்பதற்கு காரணமாக இருந்தமை அவதானிக்கத்தக்கது.

கலாநிதி கருணாகரன் அவர்களின் கூற்றுப்படி பிராந்திய கட்சிகளின் வளர்ச்சிக்கும் மாகாண சபை முறையே தளமாகும். அதாவது பெரும்பாலான மலையக கட்சிகள் மாகாண சபை தேர்தல்களிலேயே தமது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்தன. இது அம்மக்களின் அரசியல் பயணத்துக்கு இலகுவான வழியாக அமைந்தது. பிராந்திய ரீதியில் அரசியல் கட்சிகள் மக்களின் வாக்குகளை பெற்று தேசிய நீரோட்டத்தில் இணைவதற்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் மாகாண சபை முறைமை வழிகோலியது. இது மலையக கட்சிகள் தேசிய அடையாளம் பெறுவதற்கு அடிப்படையாக அமைந்தது. மக்களின் ஜனநாயக பயிற்சிக்கு பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதி

தேர்தல் போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் மாகாண சபைத் தேர்தல் மிகவும் நெருக்கமானது. மாவட்ட ரீதியில் பெரும்பான்மையினர் செல்வாக்கு செலுத்தும் பொதுத்தேர்தலுடன் ஒப்பிடுகையில் சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருந்து இளைஞர்கள் பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடுவதற்கு மாகாண சபைகளே வழியேற்படுத்தின. எனவே மலையக சமூகத்துக்கு இம்முறையினால் நன்மையில்லை எனும் வாதங்களை ஏற்க்கொள்ள முடியாது. மலையக மக்களின் அதிகார வரம்புக்குள் அவர்கள் மாகாண ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக ஊவா, மற்றும் மத்திய மாகாணத்தில் உள்ளனர் என்கின்றார்.

எனவே இவற்றை தொகுத்து நோக்கும் போது அதிகாரப்பரவலாக்கத்தின் எளிய வடிவமான மாகாண சபை முறை பரவலாக்கப்பட வேண்டும். தேர்தல் ஜனநாயம் மீறப்படாமல் இருப்பதும் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மாகாண மற்றும் உள்ளூராட்சி பொறிமுறையை சிதைக்காமல் இருப்பதும் அவசியம். நாட்டில் இன்று மாகாண சபைகள் கலைக்கப்பட்டு தேர்தல் காலந்தாழ்த்தப்படுகின்றமை கூட ஒரு விதத்தில் இம்முறையை மீது ஆட்சியாளர்களுக்கு உள்ள உடன்பாடின்மையையே காட்டுகின்றது. அதேபோல் தேர்தல் முறை மாற்றத்தினூடு சிறுபான்மை சமூகங்களிடம் வழங்கப்படுகின்ற சொற்ப அதிகாரங்களையும் பறிக்கும் செயற்பாடுகளே இடம்பெறுகின்றன.

மலையக மக்கயை பொறுத்தவரையில் ஒரு தனித் தேசிய இனமாக அதிகாரப்பரவலாக்கத்துக்கு உட்பட வேண்டிய நியாயமான காரணம் உண்டு. எனவே அதனை அடைந்துக் கொள்வதற்கான வழிமுறையாக மாகாண சபை முறையை முழுமையாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் திறக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் கோரிக்கையாக இருக்கின்றது. எனவே இம்முறையிலுள்ள குறைபாடுகள் களையப்பட்டு மாகாண சபை முறைமை வலுப்படுத்தபட வேண்டும்.

மலையகத்தில் சுகாதார சேவைகளில் பாரபட்சம் : ஒரு மனிதவுரிமை நோக்கு - அருள்கார்க்கி

காலனித்துவ ஆட்சிக் காலப்பகுதியில் மலையக மக்களின் சுகாதார நிலைமைகளில் ஏற்பட்ட சில முன்னேற்றங்கள் சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலங்களில் கட்டம் கட்டமாக வீழ்ச்சி அடையத் தொடங்கின. மலையக சுகாதார சேவைகளின் இன்றைய நிலைக்கு அடிப்படையாக அமைந்த இந்த காலப்பகுதியானது இந்திய வம்சாவளி தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமை பாதிக்கப்பட்டதன் பின்னர் இவர்களது சுகாதார தேவைகளை தேசிய திட்டங்களில் உள்வாங்கப்படுவதற்கு முடியாத ஒரு நிலைமை உருவாவதற்கான காலமாகும். இந்நிலைமை இன்று இவர்கள் அனுபவிக்கும் சுகாதார நிலைகளின் அடைவு வீழ்ச்சிக்கு அடிப்படையாக அமைந்ததாகும். இது இந்நாட்டில் வாக்குரிமை கிடைக்கப்பெற்ற பின்னரும் கூட மலையக மக்கள் கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கு தடையாக அமைந்த காரணிகளாகும். ஏனைய இனங்களோடு ஒப்பிடுகையில் இன்னும் மோசமான சுகாதார சேவைகளை மலையக மக்களே அனுபவிக்கின்றனர்.

1930 களில் இலங்கையின் பெரும்பான்மை மக்கள் பிரதேசங்களை விடவும் ஒப்பீட்டளவில் சிறந்த சுகாதார சேவைகளை உடையவர்களாக பெருந்தோட்ட மக்கள் காணப்பட்டனர். அந்நிலைமை 1970 இற்கு பிற்பட்ட காலப்பகுதியில் தலைகீழாக மாற்றமடைந்தது. சிசு மரண வீதம், தொற்று நோய் பரவல் என்பன மலையகத்தில் அதிகரித்தது. ஆனால் அவர்களுக்கான குடியுரிமை மற்றும் வாக்குரிமை என்பவை உறுதி செய்யப்பட்ட பின்னரும், 1972 ஆம் ஆண்டில் பெருந்தோட்டங்கள் இலங்கை அரச பெருந்தோட்டயாக்கம், மற்றும் ஜனதா எஸ்டேட் அபிவிருத்தி சபை என்பனவற்றின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னரும் பெருந்தோட்ட சுகாதார சேவைகள் பாரிய அபிவிருத்தியை அடையவில்லை. ஆனால் அதற்கான ஆரம்பம் அக்காலப்பகுதியில் இடப்பட்டது. அன்றைய காலப்பகுதியில் பெருந்தோட்டத் தமிழர்கள் பிரஜாவுரிமை அற்றவர்களாக இருந்தும் கூட ளுடுளுPஊஇ  மற்றும் துநுனுடீ  ஆகிய நிறுவனங்கள் பெருந்தோட்ட மக்களின் சுகாதார சேவைகளை பகுதியளவில் பொறுப்பேற்றுக் கொண்டன. அதன் தொடர்ச்சியாக அக்காலத்தில் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கிய குடும்ப சுகாதார பணியகம் பெருந்தோட்ட மக்களின் சுகாதார திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் தொடர்பான நடவடிக்கைகளை பொறுப்பேற்று நடாத்தியது.

1990 களின் ஆரம்பத்தில் பெருந்தோட்டங்கள் 23 பெருந்தோட்ட பிராந்தியக் கம்பனிகளின் கீழ் கொண்டுவரப்பட்டதன் ஊடாக தனியார் மயமாக்கப்பட்டதன் விளைவாக அந்த தோட்டங்களின் சுகாதார நலத் தேவைகள் தோட்ட நிர்வாகங்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டன. இவ்வாறு பெருந்தோட்ட சுகாதாரத்துறை பிராந்திய கம்பனிகளுக்கு வழங்கப்பட்டதன் விளைவாக மீண்டும் பெருந்தோட்ட சுகாதாரத்துறை குறிகாட்டிகள் வீழ்ச்சியேற்பட ஆரம்பித்தது. பின்னர் அரசின் பங்களிப்புடன் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி நிதியத்தை (Pர்ளுறுவு) 1993 ஆம் ஆண்டு ஸ்தாபித்து பிராந்திய கம்பனிகளின் பங்களிப்புடன் பெருந்தோட்ட சுகாதார சேவைகளை வழங்க வழியேற்படுத்தியது. முக்கியமாக இந்நிதியம் பெருந்தோட்ட நிறுவனங்களின் கட்;டுப்பாட்டிலேயே இருக்கின்றமையால் பெருந்தோட்ட சுகாதார சேவைகள் இன்னும் முழுமையான வளர்ச்சியடையவில்லை. அதன் பின்னர் இம்மக்களது குடியுரிமை உறுதிசெய்யப்பட்ட பின்னரும் மூன்றாம் தரப்பான கம்பனிகளின் பொறுப்பிலேயே தொடர்ந்து இவர்களின் சுகாதாரம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. எனவே இது ஒரு மனிதவுரிமை மீறலாகவே அவதானிக்கப்பட வேண்டும்.

எனவே பெருந்தோட்ட மக்கள் எவ்வளவுத் தூரம் இந்நிலைமையில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது இன்றுவரை அவர்கள் அனுபவிக்கும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மூலம் புலனாகின்றது. பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொண்ட கள விஜயத்தின் போது சுகாதார சேவைகள் மிகவும் அரிதான ஒரு தோட்டப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றினூடாக பல்வேறு விடயங்களை அறிந்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

இத்தோட்டத்தில் உள்ள பிள்ளைகள் அதிகமானோர் போசணைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமையானது தாய் சேய் நலம், போசாக்கான உணவு, கர்ப்பிணித் தாய் சுகாதாரம், அவசர மருத்துவ வசதிகள், குடும்ப பொருளாதாரம் என்பவற்றுடன் நேரடியான தொடர்புள்ளது. கர்ப்பிணித் தாய்மாரின் சுகாதார வழிகாட்டல்கள் தொடக்கம் அவர்கள் பிள்ளை பெறும் வரை தேவையான சுகாதார சேவைகள் இப்பிரதேச மக்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. அச்சேவைகளை பெற்றுக் கொள்ள நகரங்களை நோக்கி செல்வதற்கும் பாதை கட்டமைப்புகள், போக்குவரத்து வசதிகள், பொருளாதாரம் என்பன சவாலாக இருந்ததாக எம்மோடு உரையாடிய பெண் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் தமது சொந்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட அப்பெண்மணி தனது ஊரில் பலருக்கும் தேவையான ஆரம்பகட்ட மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் மிகுந்த சிரமத்துடனும், பொருட்செலவிலும் நகரங்களை நோக்கி தாம் சென்று வருவதாகவும் தெரிவித்தார். தமக்குக் கிடைக்கும் சொற்ப ஊதியத்தில் மருத்துவ தேவைகளை பெற்றுக் கொள்ள அதிகளவு தூரம் பிரயாணம் செய்ய வேண்டியிருப்பதும், சீரற்ற பாதைகளினூடு சென்று வருகையில் வயதானவர்களும், கர்ப்பிணித் தாய்மாரும் மிகுந்த கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அப்பிரதேசத்திலும் தோட்ட வைத்தியசாலை ஒன்று இருக்கின்றது. இருப்பினும் தகுதியுடைய ஆளணியினரோ, அடிப்படை வசதிகளோ இல்லை. பிராந்திய தோட்டக் கம்பனிகளின் கீழ் சுகாதார முறைமை காணப்படும் பல்வேறு தோட்டங்களிலுள்ள நிலைமை இவ்வாறுதான் இருக்கின்றது. இங்கு பணியிலிருக்கும் ஒரு சிலரும் எவ்வித பயிற்சியோ தகைமைகளோ அற்றவர்களாகவே பெரும்பாலும் காணப்படுகின்றனர். ஒரு சில தோட்டங்களில் இவை மூடப்பட்டும் உள்ளன. எனவே அவசர தேவைகளான சிறியளவிலான நோய்களுக்கு கூட இவர்கள் நகரங்களை நோக்கியே செல்ல வேண்டியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தோட்ட வைத்தியசாலைகள் உரிய இடம் மற்றும் மருத்துவ வசதிகள் போதியளவில் காணப்படாமை, ஆளணியினரின் பற்றாக்குறை, மேலதிக சிகிச்சை வசதிகள் இல்லாமை, போக்குவரத்துக்கு தோட்ட நிர்வாகங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை, தோட்டத்தில் வேலை செய்யாதோர் புறக்கணிக்கப்படுகின்றமை, பொருளாதார போதாமை, நகரங்களுக்கு செல்வதற்கான செலவீனங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை போன்ற காரணிகளை இன்றளவும் தோட்டங்களில் காணமுடியும்.

அதேபோல் இவர்கள் அரச வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெறுவதாயினும் கூட அதற்காக தமது ஒருநாள் வேலையையும் அதற்கான சம்பளத்தையும் இழக்க வேண்டியுள்ளது. நகரங்களில் அமைந்துள்ள அரச வைத்தியசாலைகளில் இம்மக்கள் எதிர்நோக்கும் மொழிப்பிரச்சினை மற்றும் பெரும்பான்மை சமூகத்தவர்கள் மத்தியில் காணப்படும் பாரபட்சம் என்பன இவர்களை மனவுளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. அங்கு இவர்கள் நடாத்தப்படும் முறையில் அதிருப்திக்குள்ளாகும் இவர்கள் அங்குச் செல்வதற்கான தயக்கத்தைக் கொண்டுள்ளனர் என்பதையும் இவர்களின் கூற்றுக்கள் மூலமாக அறியக் கூடியதாயுள்ளது.

மேலும், குடும்பத்திட்டமிடல், கர்ப்பக்கால சுகாதார சேவைகள், தேசிய சுகாதார சேவை ஏற்பாடுகளுக்கு ஈடாக பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கப் பெறாமை மற்றுமொரு பாரிய பிரச்சினையாகும். இதனால் அண்மைக்காலம் வரையில் தோட்டப்பகுதிகளில் சிசுமரண வீதம் அதிகளவில் காணப்பட்டது. தொடர்ச்சியாக மகப்பேற்று தாதியரின் சேவைகளை பெற்றுக் கொள்வதில் பாரிய பின்னடைவுகள் காணப்படுகின்றன. குறிப்பாக தோட்டப்பகுதிகளில் தொழில் புரியும் மகப்பேற்று தாதியரில் பெரும்பாலானோர் உரிய தகைமைகள் அற்றவர்களாக காணப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. அதேப்போல் தோட்டங்களில் பணியாற்றும் அனேகமான மகப்பேற்று தாதியர்களும் குடும்பநல உத்தியோகத்தர்களும் பெரும்பான்மை சிங்கள இனத்தினராகவே காணப்படுகின்றனர். இதன் காரணமாக மொழிப்பிரச்சினையையும் எதிர் கொள்ளுகின்றனர். இது இவர்கள் அடிப்படை மருத்துவ தேவைகளை பெற்றுக் கொள்வதில் அவர்களுக்கு கடினத்தன்மையை உருவாக்குகின்றது. எனவே கர்ப்பக்கால ஆலோசனைகள், குழந்தை பராமரிப்பு ஆலோசனைகள் என்பன இவர்களுக்கு கிடைக்கப் பெறுவதில்லை. இதன் பிரதிபலனாக குறைபோசணையுடைய பிள்ளைகள் நாம் ஆய்வு செய்த பிரதேசத்தில் ஒப்பீட்டளவில் அதிகமாகவே காணப்பட்டார்கள். எனவே அவர்களின் எதிர்காலத்திலும் இதன் பாதிப்புகள் இருப்பதை உணர முடியும்.

இப்பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலை ஆசிரியர் ஒருவரை நேர்கண்ட போது அவரின் கூற்றுக்கள் இவ்வாறமைந்தன. அதாவது குழந்தைப் பருவத்தில் போதிய போசணை, ஊட்டச்சத்துக்கள் என்பவை வழங்கப்படாத பிள்ளைகள் கல்வியிலும், விளையாட்டிலும் பின்தங்கியவர்களாக இருக்கின்றனர். அதேப்போல் அவர்கள் சோர்வு, இலகுவில் நோய்வாய்ப்படல் போன்றவற்றுக்கும் ஆளாகின்றனர். எனவே இது ஒரு சமூகப் பிரச்சினையாக அவதானிக்கப்பட வேண்டும். இம்மக்களின் வாக்குகளும், வரிப்பணமும் இந்த நாட்டிற்கே வழங்கப்படுகின்றன. எனினும் பெருந்தோட்ட மக்களின் மீது மட்டும் வெளிப்படுத்தப்படும் இவ்வாறான பாரபட்சமானது ஒரு அடிப்படை உரிமை மீறலாகும்.

மேலும் அரசியல் பாரபட்சங்கள் மற்றும் இனரீதியான வேறுபாடுகள் காரணமாகவும் பெருந்தோட்ட மக்கள் அண்மைக்காலமாக நுணுக்கமான சுகாதார அச்சுறுத்தல்களை அனுபவிக்கின்றனர். எடுத்துக்காட்டாக பெருந்தோட்ட பெண்கள் மத்தியில் அரசியல் நோக்கோடு செய்யப்படும் கட்டாய கருக்கலைப்புக்கள், கருத்தடைகள் போன்றவை இன்று பெருந்தோட்டங்களில் அதிகரித்து வரும் ஒரு சமூகப்பிரச்சினையாகும். இது மலையகத் தமிழரின் அரசியல் பிரதிநிதித்துவத்திலும், சனத்தொகையிலும் நேரடியான தாக்கங்களை உண்டு பண்ணும் காரணிகளாகும்.

குறைêட்டத்துடன் பிள்ளைகள் பிறப்பதற்கும் இவ்வாறான அலட்சியப் போக்கே காரணமாக அமைந்துள்ளது. எனவே இது இம்மக்கள் மீது திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் ஒரு மனிதவுரிமை மீறலாகும். அதேப்போல் பெருந்தோட்ட மக்களின் பொருளாதார பின்னடைவானது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடியாக தாக்கம் செலுத்துகின்றது. அதாவது அவர்களின் உணவு, போசாக்கு, உள்ளிட்ட விடயங்களுடன் இது பாரியளவில் தாக்கத்தை உண்டாக்குகின்றமை எமக்கு குறித்த பிரதேசத்தில் உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து தெரிய வருகின்றது.

அவர்களின் அன்றாட உணவாக கோதுமை ரொட்டியும், அரிசிச்சோறுமே பிரதான இடம் வகிக்கின்றது. இது எவ்விதத்திலும் பிள்ளைகளுக்கோ தாய்மாருக்கோ போதுமான போசணையை வழங்கப்போவதில்லை. அவர்களின் பொருளாதாரம் நாளாந்த உணவு வேளையை போக்கான உணவாக அமைத்துக்கொள்ளவும் போதுமானதாக இல்லை. எனவே பிள்ளைகளின் வளர்ச்சியும், ஆரோக்கியமும் நேரடியாக பாதிக்கின்றது. மறுபுறம் தோட்டங்களில் காணப்படும் ஆரோக்கியமான கீரை வகை, பழங்கள், மரக்கறிகள் போன்றவற்றை அவர்கள் எவ்வாறு உணவு வேளையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு அவர்களுக்கு அறிëட்டல் தேவைப்படுகின்றது.

அவ்வாறான அறிëட்டல் சேவைகளையும் தொடர் கண்காணிப்புக்களையும் வழங்க வேண்டியது மருத்துவ சேவையினரின் கடமையாகும். அது இல்லாததன் காரணமாக அவர்கள் போதிய விளக்கமின்றி உள்ளனர். இதன் காரணமாகவே  தேசிய ரீதியில் ஒப்பிடும்போது பெருந்தோட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. இது சுகாதார சேவைகளின் வழங்கலில் சமமின்மையையே காட்டுகின்றது.

பொதுமக்களின் சுகாதார சேவைகளிற்கான பொறுப்பு ஒரு பரவலாக்கப்பட்ட விடயமாகும். எனவே தேசிய சுகாதார அமைச்சிற்கு மேலதிகமாக மேலும் ஒன்பது மாகாண சுகாதார அமைச்சுக்களும், ஆயர்வேத மருத்துவ வழங்கலிற்கு பொறுப்பான சுதேச மருத்துவ அமைச்சும் உள்ளது. இதில் 90 மூ – 95 மூ சதவீதமான மக்கள் அரச சுகாதார சேவைகளையே நுகர்பவர்களாக உள்ளனர். தேசிய ரீதியில் 50 மூ சதவீதமான மக்கள் தனியார் சுகாதார சேவைகளை பெறுவதாக ஒரு ஆய்வு கூறுகின்றது. தேசிய ரீதியில் அரசாங்கம் குணப்படுத்தல் மற்றும் தடுப்பு போன்ற சுகாதார சேவைகளை இலவசமாக வழங்கினாலும் குடும்பங்களின் சுகவீனங்கள், அவசர நிலைமைகள் போன்றவற்றுக்கான செலவீனங்கள் அதிகரித்தே காணப்படுகின்றன.

சமீபகாலமாக அதிகரித்துவரும் தொற்றுநோய்கள் மற்றும் நீண்டகால நோய்கள், போக்குவரத்து செலவுகள் தொடர்பாகவும் போக்குவரத்து அடிப்படை தேவைகள் தொடர்பான உடனடி செலவீனங்களையும் மக்களே சுமக்க வேண்டும். இது பெருந்தோட்டங்களில் அவர்களின் வருமானத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது மிகவும் சவாலானதாகும். எமது ஆய்வுப்பிரதேசத்தில் நீண்டகாலமாக பக்கவாதத்தால் அவதியுறும் 78 வயதான நபரொருவர் அரச வைத்தியசாலைக்கு செல்ல வேண்டுமானால் பிரத்தியேகமான வாகனம், உதவியாள் செலவுகள் என்பவற்றை தயார்படுத்த வேண்டும். மாதாந்த பரிசோதனைகளுக்குச் செல்ல வேண்டும். இவ்வாறான அதிகரித்த செலவுகளால் அவரால் மருத்துவ வசதிகளை அணுக முடியாத நிலைமை காணப்படுவதாக அவர் தெரிவித்தார். கர்ப்பிணித்தாய்மார் மாதாந்த சிகிச்சைகளுக்கு செல்வதற்கும் தோட்டங்களில் உள்ள லொறிகளிலேயே செல்வதாக அறிய முடிகின்றது. இங்கு அம்புலன்ஸ் வசதிகளோ, அல்லது மருத்துவ குழு தோட்டங்களுக்கு விஜயம் செய்யும் நடைமுறையோ சமீபகாலம் வரை இருக்கவில்லை. எனவே இப்பிரதேச மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை பெருந்தோட்டங்களில் காணப்படுகின்றது.

இலங்கையில் 2007 இன் இறுதியில் 608 வைத்தியசாலைகள் இருந்ததாக கணிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு வீட்டிலிருந்தும் 4.8 மஅ தூரத்துக்குள் இலவச ஆங்கில மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்ள முடியுமெனவும் குறித்த ஆய்வில் கணிப்பிடப்பட்டுள்ளது. 2000 முதல் 2007 வரையான காலப்பகுதியில் 100 000 பேரிற்கான மருத்துவ அதிகாரிகளின் எண்ணிக்கை 41.4 முதல் 55.1 வரை அதிகரித்துள்ளதுடன் இதே காலப்பகுதியில் 100 000 பேரிற்கான தாதிகளின் எண்ணிக்கையும் 78 இலிருந்து 157.3 வரை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தின்  ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பல்வேறு புவியியல் பிரதேசங்களிற்கும் இவ்வமைப்பு பரம்பலடையவில்லை. குறித்த விடயத்தில் ஒப்பீட்டளவில் அபிவிருத்தி காணப்படுகின்ற போதிலும் அண்மைக்காலத்தில் மேல் மாகாணத்துடன் ஒப்பிடும் போது மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் குறைந்தளவு அரச வைத்தியசாலைகளே இருந்ததாக இலங்கை மனித அபிவிருத்தி அறிக்கை தெரிவிக்கின்றது. இதில் இவ்விரு மாகாணங்களி;ல் உள்ள பெருந்தோட்டப் பிரதேசங்களே அதிகமாகும். எனவே மேற்குறித்த புள்ளிவிபரங்கள் பெருந்தோட்ட மக்களுக்கு ஏற்புடையதல்ல என்பது புலனாகின்றது.

சுகாதார சேவைகள் வழங்கலில் காலத்துக்குக் காலம் அதிகரித்துள்ள அரச முதலீடுகளில் சீரமைப்பு இருப்பினும் தொடர்ந்து பல்வேறு சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. மந்த போசணை, வயதானோர் குடித்தொகை போக்குவரத்து சேவைகள் என்பவற்றையும் மையப்படுத்தி பெருந்தோட்ட சுகாதார கட்டமைப்பை சீரமைக்க வேண்டியதும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதும் மலையகத்துக்கான அவசர தேவைகளாகும். இது மலையக மக்களின் அரசியல் பிரதிநிதிகளின் கடமையாகும். குறிப்பாக தேர்தல்கால வாக்குறுதிகளில் இவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்படுவதில்லை. மாறாக சொற்ப சலுகைகளையே அவர்கள் உள்ளடக்குகின்றனர். எனவே இது ஒரு அலட்சியமான போக்காக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. ஆட்சியமைக்கும் ஒவ்வொரு அரசும் கூட இவ்விடயத்தை பெருந்தோட்ட மக்கள் மீதான ஒரு பாரபட்சமாகவே கொண்டு நடாத்துகின்றன. அடிப்படையான விடயங்களான போசாக்கு, மற்றும் அவசர மருத்துவ சேவைகளிலும் கூட இம்மக்கள் தொடர்ந்து பின்தங்கியவர்களாகவே இருக்கின்றனர். எனவே இது அரசியல் ரீதியான ஒரு பாரபட்சமாகும். பல்வேறு ஆய்வுகளும் ஆதாரங்களும் அதற்கு சான்று பகர்கின்றன.

உதாரணமாக பெருந்தோட்டத்துறை சிறுவர்கள் மோசமான நிலையில் உள்ளதுடன் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் 41 மூ மற்றும் 35 மூ ஆன ஐந்து வயதிற்கு கீழான சிறுவர்கள் குறைந்த நிறையுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல் போசணைக் குறைபாடானது வீட்டு வருமானம், தாய்மார் போசணை நிலை மற்றும் தாய்மார் கல்வி மட்டத்துடனும் நேரடியான தொடர்புடையதாக உள்ளது.

                             

இவ்வாறான நிலையில் பெருந்தோட்ட சுகாதார துறையை கட்டம் கட்டமாக அரசுடமையாக்கும் வேலைத்திட்டங்கள் பல்வேறு காலப்பகுதியிலும் இடம்பெற்றுள்ளன. ஆனால் அதற்கான முக்கியத்துவமும், நிதி வளங்களும் முறையாக வழங்கப்படவில்லை. சமீபத்தில் அதிகரித்துள்ள கொவிட் - 19 தொற்றுநோயுடன் தொடர்புபடுத்தி பெருந்தோட்ட சுகாதாரத்துறையை முழுமையாக அரசுமயப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அனைத்து துறைகளையும் உள்ளடக்கி தேசிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். அதன் முதல் கட்டமாக வறுமை ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகும். நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் முறையே 21 மூ , 7.6 மூ சதவீதமாக இருக்கும் வறுமையானது சமீபகால ஆய்வு வரை 10.9 மூ சதவீதமாக காணப்பட்டது. எனவே நாட்டின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தில் பெருந்தோட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அதேபோல் சுகாதார சேவைகளை அணுகுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதலோடு பெருந்தோட்ட மக்களுக்கான விழிப்புணர்வுகளையும் வழங்குவதே நிலைபேறான சுகாதார  அபிவிருத்தியை அடைவதற்கான வழிமுறையாகும். அதன் முதல் கட்டமாக சுகாதார சேவைகள் மறுசீரமைப்பு ஒன்று தேவைப்படுகின்றது. பெருந்தோட்ட பிராந்தியங்களை மையப்படுத்தி முன்மொழியப்பட்டுள்ள சுகாதார தேவைகள் சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வரல் அவசியம்.

2016 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால் கொண்டுவரப்பட்ட சுகாதார தேவைகள் சட்டத்தை திருத்துதலும், அச்சட்டத்தினூடாக உருவாக்கப்பட்ட சுகாதார தேவைகள் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் அவசியம். அதேபோல் சுகாதார அமைச்சினால் கொண்டு வரப்பட்ட தோட்ட சுகாதார கொள்கையை (2016) அவசியம் கருதியும் விரைவாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும். தேசிய சுகாதார நியமங்களை பின்பற்றி பெருந்தோட்ட சுகாதார சேவைகளை அரசுடைமையாக்குவதற்கான மூலோபாய கொள்கை வகுப்பு செய்வதும் தேசிய ரீதியான தரத்துக்கு ஒப்பாக பெருந்தோட்ட சுகாதார அடைவுகளை கொண்டு வருவதும் முக்கியமாகும்.

1980  ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மருத்துவ பதிவுச்சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள தோட்ட வைத்திய உதவியாளர்கள் பயிற்சி தொடர்பான சட்டத்திருத்தத்தை கொண்டு வந்து பெருந்தோட்ட மக்கள் தகுதியுடைய மருத்துவ சேவையாளர்களிடம் சேவைகளை பெற்றுக்கொள்ள வழி செய்ய வேண்டும். எனவே இவற்றினூடாக 2016 – 2020 தேசிய சுகாதார மூலோபாய திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி தோட்ட சுகாதார பாதுகாப்பு தேசிய கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கப்படல் வேண்டும். இது பெருந்தோட்ட மக்களின் அடிப்படை மனிதவுரிமையாக அணுகி இவ்விடயம் நடைமுறைப்படுத்த வேண்டும். 

ஓவியங்களின் மூலம் காலக்கண்ணாடியை நமக்கு விட்டுச் சென்ற யான் பிராண்டஸ் (1743-1808) - என்.சரவணன்

இலங்கையின் அரசியல், சமூக, பண்பாட்டு, வரலாற்று விபரங்களை பதிவு செய்தவர்களில் வெளிநாட்டு அறிஞர்களுக்கே அதிக பங்குண்டு என்று நிச்சயம் கூறிவிடலாம். குறிப்பாக காலனித்துவ காலத்தில் இந்த பதிவுகள் அதிகமாகவே நிகழ்ந்தன. ஏறத்தாள சுதந்திரத்திற்கு முற்பட்ட நான்கரை நூற்றாண்டுகளாக இந்த நிலையே நீடித்தன. அவற்றைப் பதிவு செய்யும் போது ஆதார பூர்வமாகவும், தொல்லியல் சான்றுகளுடனும், விஞ்ஞான பூர்வமாகவும், ஆய்வு முறையியலுக்கூடாகவும் அவர்கள் பதிவு செய்தார்கள். இலங்கையர்கள் அதன்பின் அவற்றை தொடர்வதற்கான முன்னோடிகளாகவும், முன்னுதாரணர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். அதற்கென்று ஒரு மரபையும், ஆய்வுப் பண்பாட்டையும் அறிமுகப்படுத்தி, கற்பித்துச் சென்றார்கள் என்றால் அது மிகையில்லை. அவர்கள் நமக்கான கல்விப் பண்பாட்டை ஜனநாயகப்படுத்தி, நவீனப்படுத்தி, வெகுஜனப்படுத்திச் சென்றதைப் போலவே நம்மையும், நம் நாட்டையும் பற்றிய பதிவுகளையும் நமக்குத் தந்துவிட்டுச் சென்றார்கள்.

அச்சுப் பண்பாட்டின் அறிமுகம் அதற்கு ஒரு பெரும் பாய்ச்சலைக் கொடுத்தது. அந்த வழியில் பல வெளிநாட்டவர்கள்; ஓவியங்களின் மூலமும், புகைப்படங்களின் மூலமும் கூட நம்மையும், நம் வாழ்வியலையும், வாழ்விடங்களையும் பதிவு செய்தமை இன்றும் நமக்கும் பெரும் ஆதாரங்களை எடுத்துத் தந்து சென்றிருக்கிறார்கள்.

பெரும்பாலும் ஆரம்பத்தில் இலங்கையைப் பற்றி நூல்கள் எழுதியவர்கள்; அவர்களே ஓவியங்களையும் வரைந்து அவ் ஓவியங்களின் மூலம் பதிவுகளை செய்திருக்கிறார்கள். 1672இல் பிலிப்பு பால்டேஸ்  (Philippus Baldaeus)  “Description of East India Coasts of Malabar and Coromandel and Also of the Isle of Ceylon” என்கிற நூலில் வரைந்திருந்த ஓவியங்கள் இன்றும் வியப்பான கதைகளை சொல்வனவாக இருப்பதைக் காண முடியும். அது போல ரொபர்ட் நொக்ஸ் போன்றோரும் இலங்கையைப் பற்றிய அறிய தகவல்களை பதிவு செய்த அதே வேளை பல ஓவியங்களின் மூலமும் அவர்களின் நூல்களில் அவற்றை விளக்கிச் சென்றுள்ளனர். இன்னும் பலர் இலங்கை பற்றிய புவியியல் வரைபடங்களை பலர் வரைந்திருக்கிறார்கள்.

அந்த வரிசையில் இலங்கையை ஓவியங்களின் மூலம் பதிவு செய்த Charlotte Gudmundsson, James Stephanoff,  Cornelis Steiger, Johannes Rach, Johann Wolfgang Heydt, Samuel Daniel,  James Cordiner,  போன்றோரின் வரிசையில் முக்கியமானவராக நாம் யான் பிராண்டஸ் (Jan Brandes) ஐக் குறிப்பிடலாம்.

யான் பிராண்டஸ்

யான் பிராண்டஸ் நெதர்லாந்தின் போதகிரேவன் (Bodegraven) என்கிற இடத்தில் 1743இல் பிறந்தார் அங்கு தான் அவரது தந்தை ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார். அவர்  1770 இல் ஒரு போதகராக நியமிக்கப்படுவதற்கு முன்பு லெய்டன், கிரீஃப்ஸ்வால்ட் ஆகிய கல்லூரிகளில் இறையியல் படித்தார்.  1778 இல் அவர் பதாவியாவில் உள்ள Lutheran parish தேவாலயத்தின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 1778 இல் அவர் திருமணமானார். 1779 ஜனவரியில் அவருக்கு ஒரு மகன் பிறந்தார். ஆனால் அதே ஆண்டு யூன் மாதம் அவரின் மனைவி அன்னா கிரப்பர் (Anna Geertruyd Krebber) மரணமானார். குறுகிய காலத்திலேயே தனது மனைவியை இழந்து நிம்மதியில்லாது வாழ்க்கையை களித்த அவர் தனது பதவியையும் இராஜினாமா ராஜினாமா செய்துவிட்டு பயணங்களில் ஆர்வம் காட்டினார்.

1785 இல் அவர் தனது பயணத்தை தொடங்கினார்  இரண்டு ஆண்டுகள் பயணங்கள் மேற்கொண்ட போது தான் 1785 ஆம் ஆண்டு தனது மகனுடன் இலங்கை வந்தடைந்தார். தனது மகனுடன் இலங்கையில் நான்கு மாதங்கள் மட்டுமே வசித்தார். அதாவது ஜனவரி 1786 வரை மாத்திரமே வசித்தார். அங்கிருந்து அவர்கள் கிழக்காசிய நாடுகளுக்கும் பயணித்து விட்டு 1787 இல் நெதர்லாந்திற்கே மீண்டும் வந்தடைந்தனர். அங்கே தனக்கு வாய்ப்புகள் மோசமாக இருப்பதை உணர்ந்துகொண்ட அவர் ஸ்வீடனுக்கு பயணம் செய்தார்,  1788 இல் அங்கே  Skälsebo தோட்டத்தை வாங்கினார். மரியா சார்லொட்ட (Maria Charlotte) எனும் பெண்ணை அங்கே மணந்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தன. ஆனால் 1792 ஆம் ஆண்டு அவரின் மகன் இறந்து போனது மட்டுமன்றி 1802இல் அவரின் இரண்டாவது மனைவியும் இறந்து போனார். தனது இழப்புகளை மறப்பதற்காகவும் அவருக்கு துணையாக இருந்தது ஓவியம் தான். சுவீடனில் அவர் சுவீடிஷ் மொழியையும் கற்றுக்கொண்டு ஒரு கௌரவமான பிரஜையாக வாழ்ந்து 1808 இல் அவரின் 65வது வயதில் அங்கேயே இறந்து போனார்.

இலங்கையில்...

இலங்கையில் அவர் தங்கியிருந்த அந்த ஒரு சில மாதங்கள் Lutheranஐச் சேர்ந்த பிரபல வணிகரான Van Randzouwஇன் விருந்தினராக அவர் இருந்தார். அவரின் துணையுடன் தென்னிலங்கையில் பல இடங்களுக்கு பிரயாணம் செய்தார். அப்படி கொழும்பில் இருந்த போது தான் ஒரு ஓவியரிடமிருந்து ஓவியத்தை வெகு விரைவில் கற்றுக்கொண்டார் என்று அவரைப் பற்றிய பல கட்டுரைகளில் காணக் கிடைக்கின்றன.(1) ஆனால் அவர் அதற்கு முன்னரே 1784இல் வரைந்த ஓவியங்களையும் நமக்கு காணக் கிடைக்கின்றன. இலங்கையிலும் அவர் ஓவியத்தை மேலதிகமாகக் கற்றுக்கொண்டார். நான்கே மாதங்களில் அவர் பதிவு செய்திருக்கிற ஓவியங்களின் எண்ணிக்கையையும், அதில் உள்ள நுட்பங்களையும் பார்க்கும் போது அவர் நிச்சயம் ஏற்கெனவே ஒரு அனுபவமுள்ள ஓவியர் என்று உணர முடிகிறது. அது மட்டுமன்றி இலங்கையில் அவர் கண்டவற்றை பதிவு செய்த ஓவியங்கள் பலவற்றை நகல் ஓவியமாகவும் படி எடுத்துக்கொண்டார்.

அன்றைய கால மிஷனரிகளைப் போலவே யான் பிராண்டசும் பன்மொழித் தேர்ச்சியைக் கொண்டவராக இருந்தார். இறையியல் பற்றிய ஆழ்ந்த தேடல் கொண்டவராக இருந்ததால் அவர் அந்தந்த மதங்கள் பற்றி அறிவதற்காக அம்மதங்கள் சார்ந்த மொழிகளையும் கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். 

பிராண்டஸ் அப்போதைய இலங்கையின் டச்சு ஆளுநரான வில்லெம் ஜேக்கப் டி கிராஃப் (Willem Jacob van de Graaff 1737 - 1804) அவரது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு விருந்துக்கு வரவழைக்கப்பட்டு உபசரிக்கப்பட்டார். பிராண்டஸ் இலங்கைக்கு வந்த அதே ஆண்டு தான் ஆளுநர் வில்லம் ஆளுனர் பொறுப்பையும் ஏற்றிருந்தார். வில்லம் ஆளுநர் பதவியில் இருந்து விலகி (1794) இரு ஆண்டுகளில் தான் டச்சு வசம் இருந்து ஆங்கிலேயர்களின் கைகளுக்கு இலங்கை போனது என்பதையும் இங்கே நினைவூட்டுவது இந்தக் காலப்பகுதியை புரிந்துகொள்ள வாசகர்களுக்கு உதவும்.


ஆளுநரின் ஒத்துழைப்புடன் அன்றைய கண்டி அரசர் ராஜாதி ராஜாசிங்கனை வருடாந்தம் சந்திக்கின்ற நிகழ்வைக் காணும் வாய்ப்பையும் பெற்றார் யான் பிராண்டஸ். அந்த சந்திப்பைப் பற்றிய சில ஓவியங்களை அவர் வரைந்தார். இன்றும் ராஜாதி ராஜசிங்கனை காட்சிப்படுத்த பலரும் தமது நூல்களிலும், கட்டுரைகளிலும் பிராண்டஸ் வரைந்த அந்த ஓவியத்தைப் பயன்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது.

அதுபோல பிராண்டஸுக்கு திசாவ ஒருவரும் கொழும்பில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். அந்த திசாவவின் மூலம் யாணைகளுக்கு பயிற்சியளிக்கும் இடங்களைக் காணும் வாய்ப்பைப் பெற்றார். கொழும்பை அண்டிய ஜாஎல பகுதியில் அவர் வியக்கத்தக்க அளவில் யானைகளின் எண்ணிக்கையையும், அவற்றை காடுகளில் கையாள எடுக்கப்பட்டிருந்த நுட்பங்களையும், காட்டு யானைகளுக்கு பயிற்சியளித்து மனிதத்தேவைகளுக்கு பயன்படுத்த தயார் படுத்தும் விதங்களையும் கண்டு பிரமித்தார்.

இந்த நிகழ்வின் தனித்துவமான ஓவியப் பதிவை பிராண்டஸ் 22  நீர்வண்ண (Watercolor) ஓவியங்களை வரைந்திருக்கிறார். சுமார் ஒன்றைரை நூற்றாண்டுக்கு முன்னர் யானைகளை இவ்வாறு தயார்படுத்தியமை பற்றி காட்சிகளாக நமக்கு கிடைத்திருக்கும் பதிவுகள் இவை.












காட்டு யானைகளை சிக்க வைத்தல், அவற்றை அடக்குதல், அவற்றைக் காவல் செய்தல், பாதுகாத்து பேணுதல், பயிற்சியளித்தல் என்பவற்றை விளக்கங்களுடன் அந்த ஓவியங்களில் பதிவு செய்திருக்கிறார் பிராண்டஸ். காட்டில் பெரும் நிலப்பரப்பில் மரங்களால் நீள்முக்கோண வடிவில் வேலியமைத்து, அவற்றின் நடுவில் மூன்று கட்டங்களாக யானைகளை வேறுபடுத்தி ஓரிடத்துக்கு வரச்செய்யும் வகையில் மரத்தால் மதில்களையும் அமைத்து; இறுதியில் யானைகள் ஒவ்வொன்றாக வந்து சேரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் வடிவத்தை அவர் வரைந்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு நுட்பமான வடிவம் இருந்திருப்பது அந்த ஓவியத்தின் மூலம் தான் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

பிடிக்கப்பட்ட யானைகளுக்கு அவர்கள் இட்ட பெயர்கள், அவற்றின் வகைகள் போன்ற விபரங்களையும் அவர் அந்த ஓவியங்களில் பதிவு செய்தார். அந்த ஓவியங்கள் மிகவும் உயிர்ப்புள்ளதாக இருப்பதைக் காண்பீர்கள். யானைகளின் இந்த காட்சிகளை அவர் கொழும்புக்கு அருகாமையில் உள்ள ஜாஎல பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பதிவு செய்திருக்கிறார். ஜாஎல பகுதி அன்று இப்பேர்பட்ட யானைகளின் பெரும் பிரதேசமாக இருந்திருக்கிறது என்பது நமக்கு ஆச்சரியம் அளிக்கின்ற விபரம்.

யானைகள் பற்றிய அவரின் ஓவியங்களே என்னை அதிகம் கவர்ந்த ஓவியங்கள். இக்கட்டுரைக்கு என்னை உந்தியது  கூட இலங்கையில் இன்று பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள யானைகளின் பிரச்சினை குறித்த ஒரு வரலாற்று கட்டுரைக்காக தகவல்களை தேடிக்கொண்டிருக்கும் கிடைத்த யான் பிராண்டஸ்ஸின் ஓவியங்கள் தான். இந்த இரு விடயங்களையும் ஒரே கட்டுரையில் முடிக்க திட்டமிட்டிருந்தபோதும்; அப்படி செய்தால் யான் பிராண்டஸ் என்கிற கலைஞனின் தனித்துவமான பெறுமதியை அது குழப்பிவிடும் என்பதற்காக யானைகள் பற்றிய கட்டுரையை தனியாக பிரித்துவிட்டேன்.

அதுமட்டுமன்றி அவர் அதன் பின்னர் அவர் இலங்கையில் கண்ட தாவரங்கள், மரங்கள். பறவைகள், விலங்குகள், பூச்சிகள் போன்ற உயிரினங்கலின் தோற்றங்களையும் பெரிய அளவிலான நுணுக்கமான ஓவியங்களாக வரைந்து விளக்கம் எழுதியிருக்கிறார்.







மேலும் அவர் கொழும்பின் சுற்றுப்புறச் சூழல், கடலில் இருந்து கொழும்பு நகரை நோக்கக் கூடிய ஓவியம், வரைபடம் என்பவற்றையும் தனது ஓவியத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறார்.

நகரம் அதன் சுற்றுப்புறங்களின் காட்சிகள், தெரு, குடும்பங்கள், தனவந்தர்களை பல்லக்கில் சுமந்துசெல்லும் காட்சிகளையும் சில ஓவியங்களில் காண முடிகிறது. அவர் தங்கியிருந்த காலத்தில் தமிழ் பிரதேசங்களுக்கு செல்லவில்லை எனத் தெரிகிறது. ஆனால் அவர் “Plankein” என்று அவ்வோவியத்தில் குறிப்பிட்டுள்ளார். “பல்லக்கு” என்கிற தமிழ்ச் சொல்லுக்கு அது நிகராக இருக்கிறது. ஆங்கிலத்தில் “Palanquin” என்று குறிப்பிடுவதைத் தான் குறிப்பிடுகிறாரா? அல்லது அன்று அதை பல்லக்கு என்று அழைத்திருந்ததைக் குறிப்பிடுகிறாரா தெரியவில்லை. இலங்கை மீனவர்கள் பயன்படுத்திய சிறிய வள்ளங்களை அவர் தோணி (Toni) என்றே அழைக்கிறார். இந்த இரண்டு சொற்களும் சிங்கள மொழியைச் சார்ந்ததல்ல என்பதை அறிவீர்கள்.


சிதைந்த புராதன விகாரைகள், பார்வையிழந்த யாசக இசைக்கலைஞர், மார்புகளை மறைக்கும் உரிமையற்ற ரொடியோ சாதிப் பெண்கள், அடிமைகள், அன்றைய டச்சுக் காலத்தில் Lascorijns எனப்படுகின்ற வெள்ளை வேட்டி மட்டுமே அணிந்த உள்ளூர் பொலிஸ் என யான் பிராண்டஸ் பதிவு செய்துள்ள முக்கிய வாழ்வியல் பதிவுகள் அன்றைய காலக்கண்ணாடி எனலாம். அந்த ஓவியங்களின் அருகில் அவர் விளக்கமாகத் தந்துள்ள விபரங்களை வாசித்தறிவது கடினமானது. ஆனால் Max de Bruijn, Remco Raben ஆகியோர் எழுதிய யான் பிராண்டசின் உலகம் (The world of jan Brandes, 1743-1808) என்கிற நூலில் இந்த ஓவியங்கள் பற்றிய விபரமான குறிப்புகளைக் காண முடிகிறது. அந்த விபரங்கள் யான் பிராண்டஸ் எழுதிய குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை.


இப்படிப்பட்ட ஓவியங்கள் தான்; இன்று அந்த காலத்தை உருவகப்படுத்த முனையும் நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், திரைப்படங்கள், ஓவியங்கள் மட்டுமன்றி ஆய்வுகளுக்கும் கூட பேருதவியாக இருக்கின்றன.

திசாவ, முதலி போன்றார் டச்சு அதிகாரிகளைச் சந்திக்கும் காட்சிகள் என்பவற்றின் ஓவியங்களையும் காண முடிகிறது. அதுபோல ஆண்கள் வெள்ளை வேட்டியை கட்டையாக உடுத்திருக்கும் வெவ்வேறு கோணங்களிலான காட்சிகள், முழுமையாக வெள்ளை ஆடை அணிந்துள்ள பெண்கள், அவர்கள் தலையில் கொண்டையை முடிந்து கட்டி அதனை அப்படியே வைப்பதற்கு பயன்படுத்திய நுட்பங்கள் என்பவற்றையும் வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்கிறார்.

இந்த ஓவியங்களை அவர் தனித்தனியாக பிரேத்தியமாக வரைந்து வைத்திருக்கவில்லை. தடித்த தாள்களைக் கொண்ட பெரிய புத்தகத்தில் இவ் ஓவியங்களை வரைந்திருக்கிறார் என்பதைக் காண முடிகிறது. சில ஓவியங்கள் அடுத்த பக்கத்துக்கு தொடர்கிறது. நடு மடிப்பையும் மீறி அதன் தொடர்ச்சி அடுத்த பக்கத்துக்கு தொடர்கிறது. 

பிராண்டஸ் இலங்கை பயணத்தின் பின்னர் இந்தோனேசியாவில் ஜகார்த்தாவுக்கும் பயணித்தார். அங்கும் இலங்கையைப் போலவே பல ஓவியங்களின் மூலம் அங்குள்ள வாழ்வியலைப் பதிவு செய்தார். அவர் நெதர்லாந்துக்கு திரும்பிய பின்னரும் அங்கும் தான் காண்பவற்றை ஓவியங்களாக வரைவதை தீவிரமான பழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் தான் அவர் ஒரு முக்கிய ஓவியராக பலராலும் கவனிக்கப்படுகிறார். ஆராயப்படுகிறார்.

அவரது ஓவியங்கள் முதலில் பென்சிலால் கோட்டோவியமாக வரையப்பட்டு பின்னர் நீர்வண்ணம் தீட்டப்பட்டனவாகக் காண முடிகிறது. அவரது ஓவியத் திரட்டுப் புத்தகத்தில் பல பக்கங்கள் வெறும் வர்ணம் தீட்டப்படாத கோட்டோவியங்களாக மட்டுமே முடிக்கப்படாமல் மிச்சம் வைக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

1785 டிசம்பரில் ஒரு மாத காலம் அவர் காலி நகரத்தில் தங்கிருந்தார். அந்த நினைவுகளின் சிறந்த பரிசாக அவர் தந்திருப்பது காலி கோட்டையின் ஓவியமும், காலியை கடலில் இருந்து பார்வையிட்டால் தெரியக் கூடிய நீளமான ஒரு ஓவியம். அந்த ஓவியத்தை அகலப் பரப்புக் காட்சியாக (Panoramic) குறிப்பிடலாம். கொழும்பையும் இதே அகலப் பரப்புக் காட்சியாக வரைந்திருக்கிறார். 

அவர் ஒரு தொழில்முறை ஓவியராக இராத போதும் ஒரு பொழுதுபோக்கு ஓவியராக (Amateure) இருந்த போதும் அவரின் ஓவியங்களில் பொதிந்திருக்கிற பண்பாட்டுப் பதிவுகள், மதச் சடங்குகள், தாவரவியல், பூச்சியியல், அண்டவியல்  போன்ற துறைகளுக்கு அன்று பயன்படக்கூடிய அளவுக்கு அவரின் கலைநேர்த்தி இருந்திருக்கிறது.

இன்று அவரின் ஓவியங்கள் டச்சு வரலாற்று ஆவணங்களை தொகுத்து வைத்திருக்கும் Rijksmuseum மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இலங்கை தொடர்பாக அவர் வரைந்த ஓவியங்கள் இரண்டு புத்தகங்களாக அங்கே உண்டு. நீர்வண்ணங்களில் வரையப்பட்ட இலங்கையின் ஐந்துவித நில அமைப்புக் காட்சிகள் காணப்படுகின்றன. கண்டி அரசரை சந்திப்பதற்கு டச்சு இந்தியக் கம்பனியைச் சேர்ந்தவர்கள் சென்றது பற்றிய ஓவியம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படமாக கருதப்படுகிறது. அதை பிராண்டஸ் நேரில் பார்த்தவரா அல்லது வேறு ஒருவரின் விபரங்களில் இருந்து உருவகப்படுத்தி வரைந்தாரா என்பது தெரியவில்லை. 1778 இலிருந்து அவர் மேற்கொண்ட பயணங்களின் போது வரையப்பட்ட ஓவியங்கள் தொடக்கம் இறுதியில் அவர் சுவீடனில் வாழ்ந்த காலம் வரைக்குமான சுமார் 200 வரையான ஓவியங்கள் அந்த காட்சியகத்தில் உள்ளன.(2) அவரின் ஓவியத்தைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல அதன் பின்னர் வெளியாகியுள்ளன.

1786  இல் இலங்கையில் வைத்து அவர் தன்னைத் தானே வரைந்த சுயவரை (Self portrait) ஓவியம் தான் அவரின் உருவத்தை நாம் அறிவதற்கு விட்டுச் செல்லப்பட்டுள்ள ஒரே உருவப்படமாக இருக்கிறது.

யான் பிராண்டஸ் இலங்கை வரும்வழியில் தமிழகத்தில் நாகப்பட்டினத்திலும் தரையிறங்கி ஒரு சில நாட்கள் இருந்திருக்கிறார். அங்கே அவர் கண்ட பெரிய வழிபாட்டுச் சிலையையும் ஓவியமாக வரைந்திருக்கிறார்.


தனது வாழ்நாளில் அவர் வரைந்த எந்த ஓவியத்துக்கும் தனது பெயரை ஓவியத்தின் அடியில் குறித்ததில்லை. அந்தளவுக்கு தேர்ந்த ஒரு ஓவியராக அவர் தன்னைக் கருதியதில்லை. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டின் உலக ஓவியர்களை வரிசைப்படுத்தும் போது தவிர்க்க முடியாத ஒரு ஓவியராக யான் பிராண்டஸ் வரலாற்றில் பதிவாகிவிட்டார்.

அவரின் ஓவியங்கள் பற்றி வேறு மொழிகளில் செய்திருப்பதைப் போலவே தமிழிலும்  தனித்தனியாக நுணுக்கமான ஆய்வுகளையும், கட்டுடைப்புகளையும் செய்ய முடியும். யான் பிராண்டஸ் நமக்கு ஓவியங்களை விட்டுவிட்டுச் செல்லவில்லை. இழந்தகாலங்களின் காலக்கண்ணாடியை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.

அடிக்குறிப்பு:

  1. W.G.M. BEUMER, R.K. DE SILVA ஆகியோர் தொகுத்த “Illustrations and Views of Dutch Ceylon 1602-1796” என்கிற பிரபலமான நூலிலும் கூட பிராண்டஸ் இலங்கையில் தான் ஓவியத்தைக் கற்றுக்கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அத்தகவல் பிழை. Bulletin van het Rijksmuseum, Jaarg. 34, Nr. 2 (1986) என்கிற நூலில் யான் பிராண்டஸ் பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரை 123-127 பக்கங்களில் வெளியாகியுள்ளது. அதில் பிராண்டஸ் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே வரைந்த ஓவியங்கள் பற்றிய குறிப்புகளைப்  பதிவு செய்துள்ளனர். இறந்துபோன  பூச்சிகளையும், வேறு சிறிய உயிரினங்களையும் பூதக்கண்ணாடியின் உதவியுடன் பார்த்து வரைந்தது பற்றியும் அதில் குறிப்பிடப்படுகிறது.
  2. Stichting Ons Erfdeel, The Low countries : Arts and society in Flanders and the Netherlands -13, The Flemish netherlands foundation, 2005

உசாத்துணை :

  • 2004 The world of Jan Brandes 1743-1808; Drawings of a Dutch traveller in  Batavia, Ceylon and Southern Africa. Zwolle: Waanders, Amsterdam: Rijksmuseum
  • Groot Hans, Van Batavia naar Weltevreden; Het Bataviaasch Genootschap van Kunsten en Wetenschappan, 1778-1867, KITLV Uitgeverij, 2009
நன்றி - தாய்வீடு - மே - 2021

ஓவியங்களின் மூலம் காலக்கண்ணாடியை நமக்கு விட்டுச் சென்ற யான் பிராண்டஸ் (1743-1808) - என்.சரவணன் by SarawananNadarasa on Scribd

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates