தன் வாழ்க்கையனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் எம்.வாமதேவன்
‘அப்போது நான் பேராதனைப்பல்கலைக்கழத்தில் மாணவனாக இருந்தேன். கொஸ்லந்த பிரதேசத்தில் தற்போது பாரிய மண்சரிவு இடம்பெற்றிருக்கும் அதே கொஸ்லந்த பிரதேசத்தில் பெரகல எனும் இடத்தில் நாங்கள் வசித்தோம். எனது தந்தையார் அந்தத் தோட்டத்தின் கணக்கப்பிள்ளை. 1966 நவம்பர் மாதம் 12 ஆம் திகதி. அது ஒரு தீபாவளி நாளும் கூட. இப்போது போன்ற போக்குவரத்து வசதிகள் இல்லாததனால் என்னால் தீபாவளிக்கு வீட்டுக்கு வரமுடியவில்லை. ஆனால் அன்று மாலை வந்த மழையும் அதனோடு வந்த மண்சரிவும் எங்களது வீட்டை முழுமையாக மண்ணுள் புதையச் செய்த கோரச் சம்பவம் இடம்பெற்றது. என்னுடைய அம்மா தெய்வாதீனமாக தப்பி;த்தாலும் எனது தந்தைiயையும் எனது மூன்று சகோதரிகளையும் அந்த மண்சரிவில் ஒரே நாளில் இழக்க நேரிட்டது. அன்றைய தினமே அருகே பத்கொட எனும் இடத்தில் ஒருவர் மண்சரிவில் மரணமானார். அந்த நான்கு உயிர்களும் பலியானபோது இன்றுபோல் ஒரு பாரிய சமூக அதிர்வு ஏற்படவில்லை. ஒரு சம்பவமாகவே பார்க்கப்பட்டது. தொழிற்சங்க தலைமைகள் தொழிலாளர்களின் தொழில் பிணக்குகளை மாத்திரமே கவனம் செலுத்தினர். தோட்ட உத்தியோத்தரின் விடயங்களில் கவனம் செலுத்தவில்லை. அதேபோல் இத்தகைய பிரச்சினைகளை அரசில் ரீதியாக அணுகவுமில்லை. அன்றே இது அரசியல் ரீதியாக அணுகப்பட்டு நமது மக்களுக்கான பாதுகாப்பான வீடுகள் பற்றி சிந்திக்கப்பட்டிருக்குமானால் இன்று மீரியபெத்தை மண்சரிவில் நாம் பல உயிர்களையும் உடமைகளையும் இழக்க நேரிட்டிருக்காது. இன்று போல் ஊடகங்களும் அன்று பலமானதாக இல்லை. நான் பல்கலைக்கழகத்தில் இருந்த காரணத்தால் பலரும் எனக்கு ஆறுதலாகவும் உந்துததலாகவும் இருந்தார்கள். என்னால் அத்தகையதொரு துன்பத்தில் இருந்து மீண்டு எழ முடிந்தது’ என 48 வருடங்களுக்கு முன் தன் வாழ்வில் இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தையும் அனபவங்களையும் எம். வாமதேவன் பகிர்ந்துகொண்டார்.
கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் நடாத்தும் ‘அற்றைத்திங்கள்’ ஆளுமைகளின் நினைவுப்பகிர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது மேற்படி நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தலைவர் ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் எம்.வாமதேவன் பகிர்ந்துகொண்ட நினைவுகள் இன்று மீரியபெத்தையில் பாதிப்புற்றிருக்கும் மாணவர்களின் ஆற்றுப்படுத்தலுக்கான ஆதாரமாக அமையும்.
கொட்டகலையை பிறப்பிடமாகக் கொண்டவரான எம.வாமதேவன், தரம் 1 முதல் 13 வரை ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கல்விகற்றவர். ஹைலன்ஸ் கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகம் சென்ற முதல் தொகுதி மாணவர்களில் ஒருவர். பல்கலைக்கழகக் கல்வியினைத் தொடர்ந்து ஆசிரியராகவும் பின்னர் அரசஅதிகாரியாக பல உயர் பதவிகளில் தேசிய திட்டமிடல் துறையில் 35 வருடங்கள் பணியாற்றி பின்னர் தோட்ட உட்கட்டமைப்பு, வீடமைப்பு மற்று சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் பணிhற்றியவர். மலையகத்தில் இருந்து அமைச்சுச் செயலாளர் பணியாற்றியுள்ள இருவரில் ஒருவர்.
அண்மையில் தனது காலத்தில் எழுதிய மலையக அபிவிருத்தி மற்றும் இலக்கியம் குறித்து எழுதிய கட்டுரைகளைத் தொகத்து ‘மலையகம் - சமத்துவ அபிவிருத்தியை நோக்கி’ எனும் நூலாக வெளிக்கொணர்ந்திருந்தார். அரச அதிகாரியாக மட்டுமன்றி ஒரு புனைகதை எழுத்தாளராக ஆய்வாளராக இலக்கிய சுவைஞராக தன்னை சமூகத்தோடும் இணைத்திருப்பவர். அவரது ஆசிரியரான இர.சிவலிங்கம் அவர்களின் மறைவுக்குப்பின் ‘இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழு’ எனும் அமைப்பினை நிறுவி தனது நண்பர்களுடன் இணைந்து ஆண்டுதோறும் மலையக ஆய்வுசார் நினைவுப்பேருரைகளை நடாத்தி வருபவர். இதன் மூலம் பல ஆளுமைகளை அறிமுகப்படுத்தயவர். தற்போது ஓய்வு தொழில் ரீதியாக பெற்றாலும் கைத்தொழில் அமைச்சரின் ஆலோசகராகவும் எழுத்தாளராகவும் இயங்கிக்கொண்டிருப்பவர். அவரது அனுபவங்கள் இளம் மலையக செயற்பாட்டாளர்களுக்கு ஆதர்ஷமாகத் திகழ்வன.
1966 மண்சரிவு தனது தந்தையையும் சகோதரிகளையும் பலியெடுத்த அதேநேரம் தனது மனைவி பிள்ளைகளுடன் தொழில் நிமித்தமாக கொழும்பில் தங்கியிருந்த காலத்தில் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் அவரது இல்லத்தை முழுமையாக காவு கொண்டுள்ளது. இது பற்றிய விபரிக்கையில் : ‘அப்போது திட்டமிடல் திணைக்களத்தில் பணிப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். லன்டன் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டத்தை நிறைவு செய்திருந்த அதேநேரம் என்னுடைய கலாநிதி பட்டப்படிப்புக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தேன். மலையகத் தோட்டப்பகதிகளில் கள அய்வு செய்து பல்வெறு தகவல்களுடன் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அதனை நிறைவு செய்ய எல்லா ஆவணங்களும் தயார் செய்திருந்த நிலையில் தொழில் ரீதியான மாநாடு ஒன்றுக்காக பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மாநட்டு மண்டபத்திற்கு சென்றிருந்த நான் அங்கிருந்து வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது.
1983 கலவரத்தில் எனது குடும்பத்துக்கு என்ன நடந்தது என தெரியாமல் தவித்த நாட்கள் அவை. மூன்று நாட்களின் பின்னர் எனக்கு பொலிஸ் மூலமாக தகவல் கிடைத்தது. உங்கள் குடும்பத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் உங்கள் உங்கள் வீடு முற்று முழுதாக சேதமடைந்துவிட்டது என அறிவித்தார்கள். அப்போது எனது குடும்பம் எங்கே என அறிந்து கொண்டு சென்றபோது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பாடசாலையில் அமைக்ப்பட்ட முகாமில் அவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். சுமார் இருபது குடும்பங்கள் அங்கே இருந்தார்கள். நான் அங்கு சென்றபோது மூன்றுநாளாக அணிந்திருந்த அதிகாரி உடையிலேயே செல்ல வேண்டியிருந்தது. எனவே அந்த முகாமுக்கு பொறுப்பான அதிகாரியாகவும் என்னையே நியமித்து விட்டார்கள். எனது உடமைகளையெல்லாம் இழந்து நிர்க்கதியாய் நின்ற அந்த நேரத்திலும் அந்த முகாமுகு பொறுப்பாளியாக வேண்டியிருந்தது. இரண்டொரு நாட்களில் அங்கிருந்தவர்களின் எண்ணிக்கை 2000 அளவில் அதிகரிக்க அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் பதிலளிக்கும் தகவலாளராக நான் ஆக்கப்பட்டேன். ஆனால் எனது கைக்குழந்தைகள் குடும்பம் இழப்பு பற்றி யாரும் அக்கறை காட்டியதாக தெரியவில்லை. இந்த மன அழுத்தங்களால் நான் அங்கிருந்து வெளியேற நேரிட்டது. எனது இழப்பீடு பற்றிய அறிக்கையினைத் தயாரிக்க பொலிஸார் விபரம் கேட்டபோது எனது நூல்களின் பட்டியலையே என்னால் கொடுக்க முடிந்தது. எனது கலாநிதி பட்ட ஆய்வு முயற்சிகள் அத்தனையும் புத்தகங்களும் சாம்பல் மேடாகி கிடந்த காட்சி என்னை பெருமளவில் பாதித்தது. எனது ஆய்வினையும் தொடர முடியாமல் போனது.
ஆனாலும் அதன் பிறகு இரண்டொரு மாதங்களில் இந்த இனக்கலரவத்தின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் நோர்வே ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் இலங்கைவாழ் இந்தியவம்வாளி மக்களின் நிலைமை குறித்து ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதேநேரம் பிரிட்டிஷ் கயானா நாட்டில் உயர்கல்வியைத் தொடரவும் வாய்ப்பு கிடைத்து. ஆனாலும் இத்தனை இன்னல்களுக்கு மத்தியில் குடும்பத்தை பிரிந்து செல்ல விரும்பாத நான் குடும்பத்துடன் இந்தியாவுக்கு சென்று வாழ நேர்ந்தது. அந்த காலத்தில் ஜவகர்கால் நேரு பல்கலைக்கழகத்தில் இணைப்பல்கலைக்கம் அமைந்திருந்த திருவனந்தபுரத்தில் தத்துவமாணி (M.Phill) பட்டப்படிப்பை நிறைவு செய்ய முடிந்தது. அதற்காக நான் தெரிவு செய்துகொண்ட தலைப்பு 1964 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் காரணமாக தாயகம் திரும்பிய மக்களாக தமிழ் நாட்டிற்கு புலம்பெயர்ந்த மக்களின் வாழ்வுநிலை குறித்த ஆய்வாக அமைந்தது. அதன் முடிவில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையை ஆங்கிலத்தில் ஒரு நூலாகவும் வெளிக்கொணர்ந்திருந்தேன். அதுவே எனது முதலாவது நூல். அந்த நூலின் கூறப்பட்டுள்ள விடயங்களின் சுருக்கக் குறிப்பாக ஒரு கட்டுரை தமிழில் எனது இரண்டாவது நூலாக அண்மையில் வெளிவந்த நூலில் இடம்பெற்றுள்ளது’ எனவும் தெரிவித்தார்.
மாணவ காலத்தில் இருந்தே பேச்சு> மற்றும் கட்டுரைப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியராக இருந்த அதேவேளை உதைப்பந்தாட்டம் மற்றும் மரதன் ஓட்டம் போன்ற விளையாட்டுக்களிலும் பல பரிசுகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
‘நாவலர் நினைவு கட்டுரைப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றமை பாடசாலை காலத்தில் இருந்தே எழுத்துத் துறைக்கு வருவதற்கு ஆர்வம் ஏற்படுத்தியது. கல்லூரி உதைப்பந்தாட்ட அணியில் அங்கம் வகித்ததோடு கொழும்பு கேரி கல்லூரியுடனான போட்டியொன்றுக்காகவோ முதன் முதலாக கொழும்பு வந்தேன். பின்னாளில் மலையகம் குறித்து உரையாற்ற எமது ஆசிரியர் இர.சிவிலிங்கம் அவர்களின் பணிப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு உரையாற்ற சென்றதுவே யாழ்ப்பாணத்திற்கான முதல் பயணமாக அமைந்தது. ஆனால் அங்கு சென்ற பின்னர்தான் அது மு.சிவசிதம்பரம் அவர்களுக்கான தேர்தல் பிரச்சார கூட்டம் என்பது தெரியவந்தது. இது ஒரு சவாரஸ்யமான நிகழ்வு. அங்கு நாங்கள் மலையகப் பிரதிநிதிகளாக வரவேற்பளிக்கப்பட்டு மலையக மக்களின் உரிமைகளுக்காக தமிழ் காங்கிரஸ் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டது. மலையக மக்களின் வாக்குரிமை பறிப்புக்கு தாம் துணைபோகவில்லை என்பதற்கான ஆதாரங்க்ள எல்லாம் முன்வைக்கப்பட்டமை நினைவிருக்கிறது. ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். பின்னர்> பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் சண்முகதாசன் தலைமையிலான சீனசார்பு கொம்யுனிஸ்ட் கட்சிமீது ஆர்வம் எற்பட்டு வடமாகாணம் எங்கும் பரவலாகபேசப்பட்ட ‘சாதி எதிர்ப்புப் போராட்டத்தில்’ கலந்து கொண்டு 14 மைல்கள் நடந்து சென்றதும் அந்த கூட்டத்தில் உரையாற்றியதும் மறக்கமுடியாத நினைவுகள்’ எனவும் தெரிவத்தார்.
தொழில் ரீதியாக ‘ஐந்தாண்டுத்திட்டம்’ ‘மூன்றாண்டுத்திட்டம்’ என அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்படும். அப்படி ‘யாழ்ப்பாணத்திட்டம்’ தயாரித்ததிலும் மலையக அபிவிருத்திக்;கான பத்தாண்டுத் திட்டத்தயாரிப்பிலும் எனது பங்களிப்பு கணிசமானதாக இருந்தது. ஆனாலும் மலையக அபிவிருத்திக்கான பத்தாண்டுத் திட்டம் எவ்வித கரிசணையும் இல்லாது கிடப்பில் இருப்பது வேதனைக்குரியது எனவும் தெரிவித்தார்.
06-12-2014 அன்று இடம்பெற்ற இந்த உரைபோன்றே அன்றைய தினம் வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற துவானம் - ‘பட்டறை’ நிகழ்ச்சியிலும் எம்.வாமதேவன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவரது அனுபவங்கள் எழுத்தில் பதிவுசெய்யப்பட்டு நூல்வடிவில் வெளிவரவேண்டியது எதிர்கால சந்ததியினருக்கு அவசியமானதாகும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...