Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

விக்கிப்பீடியா – நூலகம் இணைந்து ஹட்டனில் பயிற்சிப் பட்டறை - ப.விஜயகாந்தன்


விக்கிப்பீடியா, நூலகம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மலையகத்தில் 28.08.2017 திங்கட்கிழமையன்று பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்தினர். இப்பயிற்சிப்பட்டறை ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலக நிறுவனம் இணைந்து முன்னெடுக்கும் ''இலங்கையின் கிழக்கு – வடக்கு – மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்'' எனும் செயற்திட்டத்தின் ஓர் அங்கமாகவே மேற்படி பயிற்சி பட்டறை மலையகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், புகைப்படக்கலைஞர்கள், ஆவணப்படுத்துனர்கள், கணிணித்துறை நிபுணர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளடங்களாக பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலிய, காசஸ்றீ, ஹட்டன், கொட்டகலை, லிந்துலை, வட்டகொடை, தலவாக்கலை, பத்தனை, நாவலபிட்டிய, நுரரெலியா, ஆலிஎல, பதுளை, கொழும்பு  முதலான இடங்களிலிருந்து 36பேர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

உலகில் பல்வேறு மொழிகளை பேசும் மக்களின் அறிவுத் திரட்சியை ஒன்றிணைக்கும் இலாப நோக்கற்ற கட்டற்ற கலைக்களஞ்சியமாக விக்கிப்பீடியா (www.wikipedia.org) பார்க்கப்படுகின்றது. உலகின் 285 மொழிகளில் இயங்கும் விக்கிப்பீடியாவின் ஓர் அலகே தமிழ் விக்கிப்பீடியா (www.ta.wikipedia.org)  ஆகும். தமிழ் விக்கிப்பீடியாவை 2003ஆம் ஆண்டு இலங்கை தமிழராகிய மயூரநாதன் என்பவர் தொடங்கினார். ''தமிழ் விக்கிப்பீடியா உலகளாவிய தமிழ்ச் சமூகத்துக்கு தேவையான அறிவை கூட்டாக உருவாக்கிப் பகிர்வதற்கான தளம்'' ஆகும்.

தமிழ் விக்கிப்பீடியாவில் 1,20,000 இற்கு மேற்பட்ட கட்டுரைகளும் 8,000 இற்கு மேற்பட்ட படங்களும் இதுவரை பதிவேற்றப்பட்டுள்ளன. இவற்றுள் மலையக சமூகம் சார்ந்தவை எத்தனை? பதிவு செய்த பயனர்கள் 1,30,000 பேர். இதில் எத்தனைப்பேர் மலையகத்தவர்? நாளொன்றுக்கு தமிழ் விக்கிப்பீடியா 90,000 முறை பார்க்கப்படுகின்றது. இதில் மலையகத்தவர்கள் நாளொன்றுக்கு எத்தனை முறை பார்க்கின்றனர்? இக்கேள்விகளுக்கு விடை தேட முற்படும் போதே மேற்குறித்த பயிற்சிப் பட்டறை முக்கியத்துவம் பெறுகின்றது. மலையக சமூகத்துக்கு இத்துறை தொடர்பில் போதிய விழிப்புணர்வை ஊட்டுவதாகவும் பயிற்சிகளை வழங்குவதுமாகவே இப்பட்டறை அமைந்திருந்தது.

முதலாம் அமர்வில் தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகக் குழு உறுப்பினர் சஞ்ஜீவி சிவக்குமார் அவர்கள் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய முழுமையான விளக்கங்களை அளித்தார். விக்கியில் பயனர் கணக்கினை தொடங்குதல், (மணல் தொட்டி பகுதியில்) கட்டுரை எழுதி பதிவேற்றிப் பழகுதல், விக்கியில் கட்டுரை ஒன்றினை எழுதுதல், ஏலவே இருக்கும் கட்டுரைகள் தொடர்பான எமது கருத்துக்களை தெரிவிக்கும் முறை, பிழைகளை திருத்தும் முறை, விக்கியில் படம் ஒன்றினை பதிவேற்றுதல், அவற்றின் காப்புரிமைகள் (Creative Commons License)  முதலான விடயங்கள் தொடர்பான செயற்பயிற்சிகள் வழங்கப்பட்டன. பங்கேற்பாளர்களில் முப்பது பேர் தமிழ் விக்கிப்பீடியாவில் புதிதாக பயனர் கணக்கினை தொடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஆர்வமுள்ளவர்கள் விக்கிப்பீடியாவில் ''மலையக தமிழர் தலைப்புக்கள் பட்டியல்'' எனும் பக்கத்தினை ஆராய்ந்து புதிய கட்டுரைகளை எழுதலாம்.

இரண்டாம் அமர்வில் நூலக நிறுவனம் மற்றும் அதன் ஆவணக செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. விக்கிப்பீடியாவில் முன்மொழியப்பட்டிருக்கும் ''இலங்கையின் கிழக்கு – வடக்கு – மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்'' செயற்திட்டம் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டன. மலையகத்தில் காணப்படும் தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி கலந்துரையாடப்பட்டதோடு, பதுளை ஊவாஹைலன்ஸில் இருந்து வருகை தந்திருந்த மலையக நாட்டாரியல் ஆய்வாளர் விமலநாதனின் வாய்மொழிப்பாடல்கள் பல்லூடக முறையில் பதிவுசெய்யப்பட்டு செயற்பயிற்சி வழங்கப்பட்டது. இத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலக நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு ஆவணப்படுத்தலில் ஈடுபடலாம்.

மூன்றாம் அமர்வில் எண்ணிம கற்றல் வளங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இதனை SERVE Foundation (www.servelearn.info) நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் செந்தில்குமரன் தொகுத்தளித்தார். மாணவர்களின் கற்றலுக்கு இந்நிறுவனத்தின் உதவிகள், இணையத்தில் - குறிப்பாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் - கற்றலுக்கு கிடைக்கக்கூடிய இலவச மென்பொருட்கள் மற்றும் இணைய வளங்கள் தொடர்பாக விரிவான விளக்கத்தினை வழங்கினார். அதற்கான செயற்பயிற்சியும் வழங்கப்பட்டது. இதன்போது இலங்கையின் கல்வித்திட்டத்திற்கேற்ப கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் கற்பதற்கான எட்டு இருவட்டுக்கள் அடங்கிய 25 இருவட்டுத் தொகுதிகள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. இவை மென்பொருளாக கணிணியில் நிறுவி பயனபடுத்துவதற்கும் அதேவேளை காணொளியாக மாணவர்கள் பார்த்து கற்பதற்கும், பயிற்சிகளை செய்து பார்ப்பதற்கு ஏற்வகையிலும் வடிவமைக்கப்பட்டிருந்தன.

மேற்படி பட்டறையானது மலையகத்தில் ஒரு முன்னோடி முயற்சியாகும். இதனை முழு மலையகத்திற்கும் பரவலாக்கம் செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. எனவே ஆர்வலர்கள் இதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும்.

'காலனியத்தால் சிதைக்கப்பட்டத் தமிழர்கள் இயக்கம்' மாநாட்டுக்கான கட்டுரைகளைக் கோருகிறது


தமிழகத்திலிருந்து காலனித்துவவாதிகளால் பல்வேறு நாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்ட தமிழர்களின் இருநூறு ஆண்டு (1817 – 2017) நிறைவை ஒட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் சிறப்பு நிகழ்வும், அதையொட்டிய சிறப்பு மலர் வெளியீடும் இந்தியா - தமிழகத்தில் இடம்பெறவுள்ளது. இந்தியா, இலங்கை, மலேசியா, பர்மா, தென்னாபிரிக்கா, மொரிசியஸ் மற்றும் காலனித்துவவாதிகளால் தமிழர்கள் குடியேற்றப்பட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை 'காலனியத்தால் சிதைக்கப்பட்டத் தமிழர்கள் இயக்கம்' செய்கின்றது. தமிழகத்தில் இயங்கும் 'மலையக மக்களுக்கான ஜனநாயக இயக்கம்' இதன் பிரதான இணைப்பு பாத்திரத்தை வகிக்கின்றது. இலங்கையில் இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டாளராக 'மலையக சமூக ஆய்வு மையம்' செயற்படுகின்றது.

இந்நிகழ்வுக்காக வெளியிடப்படவுள்ள சிறப்பு மலருக்கு இலங்கையில் வதிவோரிடமிருந்து ஆக்கங்கள் கோரப்படுகின்றன. ஆக்கங்கள் கீழ்வரும் ஏதாவது ஓரு தலைப்பில் எழுதப்பட வேண்டும். ஆக்கங்கள் 2,500 சொற்களுக்கு மேற்படாது இருத்தல் வேண்டும். நிபுணத்துவக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் ஆக்கங்கள் வெளியிடப்படவிருக்கும் சிறப்பு மலரில் பிரசுரிக்கப்படும். ஆக்கங்களுக்கான தலைப்புகள் கீழ்வருமாறு,
  
1.   இணையமும் இன்றைய மலையகமும் 
2.   உலகமயமாக்கலும்  தேசிய இன உரிமைகளும்
3.   காலனிய வருகையும், புலம்பெயர்வும், விளைவுகளும்
4.   உழைக்கும் பெண்களும் மலையகமும் 
5.   தேசியவாதத்தின்  மறுபக்கம்
6.   நாடாளுமன்ற ஜனநாயகத்தில் தேசிய இனம் குறித்தப் பார்வை
7.   குடியேற்றப்பட்ட தமிழர்களின் மொழி, பண்பாடு, தேசியம்
8.   பெருந்தோட்ட உற்பத்தியும், கொத்தடிமைத் தொழில் முறையும்          
9.   தமிழ் சமூகத்தில் சாதியம்
10.  உடன்படிக்கையும் விளைவுகளும்
11.  தாயகம் திரும்பியோர் நிலை குறித்து
12.  மலையகமும் தொழிற்சங்கமும் 

ஆக்கங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக கீழ்வரும் முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பப்படல் வேண்டும்.

இணைப்பாளர்
மலையக சமூக ஆய்வு மையம்
இல.09, மாதம்பிட்டிய பாதை
மோதர 
கொழும்பு - 15

தகவல் - ப.விஜயகாந்தன்

நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு நீண்ட நாள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி


நுவ‍ரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டுமென்று மலையகக் கட்சிகள் விடுத்துவந்த கோரிக்கைகளுக்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளன. கடந்த திங்கள் கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலிருந்து அமைச்சர் மனோ கணேசன் வெளிநடப்பு செய்ததும், அதன்பின்னர் அமைச்சர் திகாம்பரம், ஜனாதிபதி, பிரதமர், மற்றும் கட்சித் தலைவர்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டியதன் அவசியம்பற்றி எடுத்துக்கூறியதன் விளைவாக இந்தக் கோரிக்கை வெற்றிபெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.

இதனிடையே, கடந்த 21ஆம் திகதி (திங்கள்) இரவு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அமைச்சர்களான லக் ஷ்மன் கிரியெல்ல, மங்கள சமரவீர, மலிக் சமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், ப.திகாம்பரம், கபீர் ஹாசிம், ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதன் பிரதான நோக்கம் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு ஏற்பாடாகியிருந்த உள்ளூராட்சி திருத்தச் சட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காகவே ஆகும். உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் 60வீதம் தொகுதி முறையிலும், 40வீதம் விகிதாசார முறையில் பிரதிநிதிகளை தெரிவு செய்வதும், ஒவ்வொரு கட்சியும் தத்தமது வேட்பாளர்கள் பட்டியலில் 25வீதம் பெண்களுக்கு இடங்களை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் போன்ற திருத்தங்களே இந்தத் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.

ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் பேசியபோது, தேர்தலுக்கு முன்னர் புதிய உள்ளூராட்சி சபைகளை அமைக்க முடியாதெனவும், நாடு முழுவதிலுமிருந்து புதிய பிரதேச சபைகளை அமைக்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் வந்துள்ளதால் அதனை தற்போது செய்ய முடியாதென்று கூறியதாகவும் தெரியவருகிறது.

அப்போது இடைமறித்து பேசிய தேசிய சகவாழ்வு, நல்லிணக்க அமைச்சர் மனோகணேசன், நாட்டின் ஏனைய சபைகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம். நுவரெலியாவில் மட்டும் புதிய சபைகளை தேர்தலுக்கு முன்னர் அமைத்துத் தருவோம் என்று உறுதியளித்தபடி செய்து தாருங்கள் என்றும், ஒவ்வொன்றும் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட இரண்டு சபைகள் (நுவரெலியா, அம்பகமுவ) உள்ளன. ஆனால், 10,000 பேருக்கு ஒரு பிரதேச சபை இருக்கும்போது மலையக மக்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி என்று கூறியுள்ளார்.

பிரதமரின் உறுதிமொழியை நம்பி, மலையக தமிழ் மக்களுக்கு உறுதியளித்துள்ளதாக அங்கு அவர் சுட்டிக்காட்டியதோடு, கூட்டத்திலிருந்து வெளிநடப்பும் செய்துள்ளார். தமது நிலைப்பாட்டுக்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மட்டும் ஆதரவு தெரிவித்ததாகவும் அமைச்சர் மனோகணேசன் கூறியிருந்தார்.

அவர் வெளியேறிய பின்பும், தொடர்ந்து கூட்டம் நடைபெற்றதுடன், அமைச்சர் பழனி திகாம்பரம் அதில் இறுதிவரை கலந்துகொண்டிருந்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் புதிய உள்ளூராட்சி சபைகளை அமைக்க வேண்டியதன் கட்டாயத்தையும், அங்குள்ள மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள படும் துயரங்களையும் தான் விபரமாக அங்கிருந்தவர்களுக்கு எடுத்துக்கூறியதாக அமைச்சர் பழனி திகாம்பரம் கூறினார்.

இரண்டு இலட்சம் மக்களுக்கு ஒரு பிரதேச சபை மாத்திரமன்றி, பிரதேச சபையில் ஒரு தேவையை செய்து கொள்ள வேண்டுமானால், ஒருவர் சுமார் 60 கிலோ மீற்றர் தூரம் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளதையும், அதனால் அங்குள்ள மக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் எடுத்துக் கூறியதையடுத்து அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

அத்துடன், தேர்தலுக்கு முன்னர் நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் அமைக்கப்படுவது உறுதி என்று மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். அமைச்சர் மனோகணேசன் கொடுத்த அழுத்தமும், வெளிநடப்பும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதும், புதிய பிரதேச சபைகளை அமைக்க மேற்படி கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டமைக்கு ஒரு காரணமாகும். 

நுவரெலியா மாவட்டத்தில் குறிப்பாக, நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டிய தேவை கட்டாயமாகும். 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ஒரு பிரதேச சபை என்ற அடிப்படையில் நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகள் அமைந்திருக்கின்றன. இதன் மூலம் தூர இடங்களிலுள்ள மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் எந்தளவு சிறமப்படுவார்கள் என்பதை இங்கு வந்து பார்த்தால்தான் புரியும்.

இதனடிப்படையில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்று சகல மலையக கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி போன்ற பல கட்சிகள் அரசாங்கத்திடம் இது தொடர்பான சாட்சியங்களை முன்வைத்து வலியுறுத்தி வந்துள்ளன. அந்த வகையில் இவ்விடயத்தில் சகல மலையகக் கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுத்திருக்கின்றன என்பதை மறுதலிக்க முடியாது.

ஆனால், தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் இவ்விடயம் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி வந்தனர். குறிப்பாக, அமைச்சர் மனோகணேசன் நுவரெலியா மாவட்டத்தில் 10 புதிய பிரதேச சபைகள் அமைக்கப்படும் அதேவேளை, ஹட்டன் – டிக்கோயா மற்றும் தலவாக்கலை – லிந்துலை நகர சபைகளை மாநகர சபைகளாக உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதிப்பட தெரிவித்திருந்தார். அவரது முயற்சி வரவேற்கத்தக்கது.

எவ்வாறாயினும், இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு இதுவே தகுந்த தருணமாகும். இதனை தவறவிட்டால் இனிவரும் காலங்களில் ஒருபோதும் இவ்வாறான சந்தர்ப்பம் கிடைக்காது. நல்லாட்சி அரசு அமைவதற்கு மலையக மக்கள் வழங்கிய பூரண ஒத்துழைப்புக்கு நல்லாட்சி அரசு செய்யப்போகும் கைமாறாக இது அமைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை எவ்வளவு விரைவில் நடத்த முடியுமோ, அவ்வளவு விரைவாக நடத்த வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு சுமார் இரண்டு வருடங்களாகின்றன. ஜனநாயக அரசின் அடிப்படை அமைப்புக்களான உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகள் தெரிவை வருடக்கணக்கில் பிற்போடுவது ஜனநாயக மரபுகளை மீறும் செயலாகும்.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கொடுத்துவரும் அழுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்பனவும் மற்றைய காரணங்களாகும். எதிர்க்கட்சியோ அல்லது ஆளும் கட்சியோ என்றில்லாமல் ஜனநாயகத்தை விரும்பும் அனைவருமே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை பிற்போடப்படுவதை விரும்பாதவர்களாகவே உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக தேர்தல் பற்றி அவ்வப்போது, 3 மாதங்களில் நடைபெறும், வருட இறுதியில், அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறும் என்றெல்லாம் அரசியல் தலைவர்கள் கூறிவந்தனர். இப்போதும்கூட இவ்வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருட முற்பகுதியிலோ நடைபெறுமென்று தெரிவித்து வந்துள்ளனர்.

இதில் ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டாலும்கூட ‘இவ்வருட இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்றும், தேர்தல் ஆணையகம் எதிர்நோக்கியுள்ள நடைமுறைப் பிரச்சினைகளே இதற்கு காரணமென்றும்’ தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி 271 பிரதேச சபைகள், 41 நகரசபைகள் மற்றும் 23 மாநகர சபைகள் என மொத்தமாக 335 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான திருத்தச் சட்டமூலம் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அந்த சட்டத்திருத்தம் சபையில் நிறைவேற்றப்பட்டு, தேர்கல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு குறைந்தபட்சம் 3 மாத காலமாகலாம். அதன் பின்னரே தேர்தல் குறித்து ஒரு திகதியை தேர்தல் திணைக்களத்தினால் அறிவிக்க முடியும். அதுமட்டுமன்றி, தேர்தல் நடைபெறும் தினத்தைத் தீர்மானிப்பதிலும் (க.பொ.த. சாதாரண தர பரீட்சை காரணமாக) தேர்தல் திணைக்களத்துக்கு சிக்கல் நிலை ஏற்படலாம்.

இதுபோன்ற பல நடைமுறை பிரச்சினைகள் காரணமாகவே இந்த வருட இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி காலை தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்துப் பேச்சவார்த்தை நடத்திள்ளனர் இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான யோசனைத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இதற்கமைய உள்ளூ‍ராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிக‍ரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் பைசர் முஸ்தபா உறுதியளித்ததாக தெரியவந்துள்ளது.

- செழியன் நல்லதம்பி

நன்றி - வீரகேசரி

மலையக மக்களின் வரலாற்றுக் காவியம் - ஜேயார்



இலங்கை மலையக மக்களின் வரலாற்றை ஒரு காவியமாக்கி அதற்குத் தேயிலைப் பூக்கள் என்று பெயரிட்டிருக்கின்றார் மலையகத்தின் கண்டி மாவட்டத்தின் இறங்கலை கொற்றகங்கைத் தோட்ட மண் தந்த படைப்பாளி   சி. பன்னீர்செல்வம்.

தஞ்சை அகரம் பதிப்பகம் டிசம்பர் 2016 இல் வெளியிட்டிருக்கும் நூல் இந்தக் காவியம். அறுபதுகளில்  மலையகத்தின் எழுந்த சினம் கொண்ட எழுத்தாளர் பரம்பரையின் ஒரு அங்கம்  இவர். சிறுகதையும் கவிதையும் இவரது ஆளுமைக்குட்பட்ட இலக்கிய வடிவங்கள்.

எழுபதுகளின் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் பன்னீர் செல்வத்தை ஒப்பாரிக் கோச்சியில் ஏற்றி ஊர் போய்ச் சேர வைத்தது. 'என் வாழ்க்கையை மட்டுமல்ல அன்று பத்து இலட்சமாக இருந்த மலையக மக்களின் வாழ்க்கையையும் திசைக்கொன்றாய் விசிரி அடித்து சிதைத்த ஒப்பந்தம் அது. நான் ஒரு படைப்பாளியாக உருவாகிக் கொண்டிருந்த காலம் அது.

மலையகமும் அதன் மக்களும் எனது படைப்புலகத்தின் உயிர் நாடியாகத் திகழ்ந்தார்கள். அம் மக்கள் குறித்து நீண்டதொரு காவியம் படைக்க வேண்டும் என்ற அவா என்னை உந்திக் கொண்டே இருந்தது. 1973 மார்ச்சில் என் குடும்பத்தினருடன் தமிழ்நாடு வந்துவிட்டேன். ஆயினும் இன்றுவரை மனக்குதிரை அந்த மண்ணிலேயே பாய்ச்சலிட்டுக் கொண்டிருக்கிறது' என்று கூறுகின்றார் கவிஞர் பன்னீர்செல்வம். (என்னுரை) 

இலங்கையிலேயே 1964  இல் தனது தந்தையை இழந்த இவர் குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய நிலைமையும் பிறகு தமிழகப் புலம்பெயர்வுச் சூழலும் ஏற்பட்டது. புதிய இடம், புதிய வாழ்வு முறைகள், கூடியபொறுப்புகள் ஆகியவற்றுடன் தனது எழுத்துப் பணிகளையும் ஒரு சமூக கடமையாக ஏற்று இங்கும் அங்குமாக ஏறத்தாழ அரை நூற்றாண்டு கால எழுத்துப் பணியாளர் இவர்.

ஒரு சிறுகதையாசிரியராகவே தனது எழுத்துப் பயணத்தை ஆரம்பித்த பன்னீர்செல்வத்தின் முதல் கதை கல்லூரி மாணவர்களுக்காக சாகித்திய மண்டலம் நடத்திய சிறு கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. 1965 நவம்பரில் வீரகேசரியில் வெளிவந்தது. இந்தியா செல்வதற்கு முன்பான இவருடைய பெரும்பாலான கதைகள் வீரகேசரியிலேயே வெளிவந்துள்மை குறிப்பிடக்கூடியதே.

துயரம் சுமந்து மலையக மக்களது இன வரலாற்றுக்காவியமான இந்தத் தேயிலைப் பூக்கள் 1990 களிலேயே எழுதி முடிக்கப்பட்டும் பிரசுரத்துக்கான களம் தமிழ்நாட்டில் கிடைக்காத நிலையில் அந்தனி ஜீவாவின் இலக்கியத் துணையால் வீரகேசரியின் மலையக சஞ்சிகையான சூரியகாந்தியில் 2014 ஆம் ஆண்டிலிருந்து 54 வாரங்கள் தொடராக வெளிவந்தது 2016 இல் நூலாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

கலைமகள் இதழின் கிவாஜ நூற்றாண்டு விழா நாவல் போட்டியில் இவருடைய 'விரல்கள்' என்னும் நாவல் முதல் பரிசு பெற்று 2007 ஜனவரி முதல் தொடர் கதையாக வெளிவந்து 2016 இல் நூலுரு பெற்றுள்ளது. சிறுகதை, நாவல் என்று உரைநடைப் புனைவிலக்கியத்தில் தனது ஆளுமையை நிரூபித்துள்ள இவர் தனது மக்களின் சோக வரலாற்றை ஒரு காவிய வடிவிலேயே தந்துள்ளார்.

200 பக்கங்களில் 52  உப தலைப்புகளுடன் வெளிவந்திருக்கும் இந்த நூலுக்கான முன்னுரையில் மு. நித்தியானந்தன் அவர்கள் மலையக மக்களின் முக்கிய அரசியல் சமூகக் கட்டங்களை, தொழிற்சங்க இயக்கங்களை, இன வன்முறையை, சிறிமாவோ –சாஸ்திரி ஒப்பந்தத்தினை எல்லாம் தனது காவியத்தில் விபரித்திருக்கின்றார்.

விடை காணாக் கேள்விகள் அவரது காவியத்தில் எதிரொலிக்கின்றன. வார்த்தைகள் அவருக்கு வசப்பட்டு நிற்கின்றன. ஆற்றொழுக்கு போன்ற அசலான நடை அவரது காவியத்துக்கு உயிர்ப்பூட்டுகிறது' என்று குறிக்கின்றார்.

'புதுக்கவிதை மரபுகளை உள்வாங்கி ஒரு காவியத்தைப் படைக்க முடியும் என்பதை மலையகக் கலை இலக்கிய வரலாற்றில் தேயிலைப் பூக்கள் முதல் பதிவாக்கிக் கொள்கிறது. மலையக இலக்கியத் தளத்தில் இது ஒரு சாதனை' என்று பதிவிடுகின்றது. மு.சி. கந்தையாவின் அணிந்துரை. 

சி. பன்னீர்செல்வத்தின் நூல்கள் கீழ் வருபவை:
  • திறந்தவெளிச் சிறைகள்
  • ஜென்ம பூமி
  • அகதிகள் தெரு
  • இவை சிறுகதைத் தொகுதிகள்
  • ஒரு சாலையின் திருப்பம்
  • திறந்தே கிடக்கும் வீடு
  • இரண்டும் கவிதை நூல்கள்
  • விரல்கள்– நாவல்
  • தேயிலைப் பூக்கள் –காவியம்

நன்றி வீரகேசரி, சங்கமம்

மாவட்ட சபைகள்! ஆனைப் பசிக்கு சோளப்பொரி! - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 26

ஒரு தொடர் துரோகத்துக்கும், ஏமாற்றத்துக்கும் ஆளாகிவந்த ஒரு சமூகம் தமக்கான தலைவிதியை தாமே தீர்மானித்துக்கொள்ளும் முடிவுக்கு வந்திருந்த ஒரு காலப்பகுதி அது. இன்னொருவகையில் சொல்லப்போனால் தனிநாட்டுக் கோரிக்கைக்கு அம்மக்களை தள்ளிக்கொண்டு வந்து நிறுத்திய காலம் அது. பிரிவினையே ஒரு தீர்வு ஒற்றையாட்சிக்குள் இனி தீர்வு சாத்தியமில்லை என்கிற முடிவுக்கு வந்த அம்மக்களை மீண்டும் ஒரு தடவை தீர்வு என்கிற பெயரில் திசை திருப்பிவிடலாம் என்கிற நப்பாசை தென்னிலங்கை சிங்களத் தலைமைகளுக்கு.

அதை சமாளிப்பதற்கான பொறிமுறையாகவே அன்று மாவட்ட அபிவிருத்தி சபைகள் (DDC) உருவாக்கப்பட்டன. மாவட்ட சபை தீர்வு என்பது ஒரு காலம் கடந்த ஞானம். யானைப் பசிக்கு சோளப்பொரி. இதுவே 50களில் முன்வைக்கப்பட்டிருந்தால் கூட சிலவேளை அது தமிழர் தரப்பில் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும்.

1978 அக்டோபர் மாதம் மாவட்ட அமைச்சர் என்ற புதிய பதவியை அறிமுகப்படுத்தினார். மாவட்ட அமைச்சுப் பதவிகளைத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு அவர் வழங்கத் தயாராக இருந்தபோதும், கூட்டணி அதனை ஏற்க மறுத்தது. ஜே.ஆர். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான முன்மொழிவாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்கிற முறைமையை முன்வைத்தார். இது ஏற்கெனவே முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்க ஆட்சியின் போது உரையாடப்பட்ட எண்ணக்கரு தான்.

தன் கையாலேயே கண்களை குருடாக்கள்
மாவட்ட சபைக்கான சாத்தியங்களை ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை 1979 ஓகஸ்ட் மாதம் ஜே.ஆர் நியமித்தார். அதை தென்னகோன் ஆணைக்குழு என்றும் அழைப்பார்கள். குற்ற விசாரணை ஆணைக்குழு சட்டம் என்கிற ஒன்றை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர் விக்டர் தென்னகோன். 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது அவர்களை தனித்து விசாரிப்பதற்கான பொறிமுறையாக அந்த சட்டத்தை 1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கொண்டுவந்தார். இன்றைய அரசாங்கத்தில் நிதி மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு அந்த ஆணைக்குழு தான் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆணைக்குழு விக்டர் தென்னக்கோன் தலைமையில் ஏ.சீ.எம்.அமீர், பேராசிரியர் ஏ.ஜே.வில்சன், கலாநிதி நீலன் திருச்செல்வம், என்.ஜீ.பீ.பண்டிதரட்ண, எம்.ஆர்.தாஸிம், கலாநிதி ஜே.ஏ.எல்.குரே, கணபதிப்பிள்ளை நவரட்ணராஜா, பேராசிரியர் கே.எம். டி சில்வா மற்றும் எம்.ஏ.அஸீஸ் ஆகியோர் ஆணைக் குழுவில் நியமிக்கப்பட்டார்கள்.

நீலன் திருச்செல்வம் - ஏ.ஜே.வில்சன்
வழமைபோல தமிழர்களின் கரங்களைக் கொண்டே தமிழர்களின் கண்களை நோண்டும் கைங்கரியத்தை லாவகமாக நிறைவேற்றினார்கள். தமிழ் மக்களின் நீதியான அரசியல் உரிமைக்காகவே வாழ்ந்து மடிந்த செல்வநாயகத்தின் மருமகன் ஏ.ஜே.வில்சன், தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த முருகேசன் திருச்செல்வத்தின் மகன் நீலன் திருச்செல்வம் போன்றோர் இந்த மாவட்ட சபை முறைமையை உருவாக்குவதில் பிரதான பங்கை வகித்தார்கள் என்பது நம்பத்தான் முடிகிறதா? ஆனால் அது தான் நடந்தது. கூட்டணி சார்பில் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளிலும் இவர்கள் இருவரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால் அந்த ஆணைக்குழுவுக்கு நீலன் திருச்செல்வத்தை ஜனாதிபதி ஜே.ஆருக்கு பரிந்துரைத்ததே அமிர்தலிங்கம் தான். இதனை பிற் காலத்தில் நீலன் திருச்செல்வம் எழுதி ICES வெளியிட்ட “சிவில் ஒத்துழையாமையும் ஏனைய கட்டுரைகளும்” என்கிற நூலில் அவர் விபரிக்கிறார். ஜே.ஆர்.பற்றி அந்த நூலில் எழுதிய கட்டுரையொன்றில் ஜே.ஆரை மிகவும் புகழ்கிறார். ஓரிடத்தில்

“தமிழ் அரசியல் தலைமைத்துவத்தில் புதிய பரம்பரை பிரவேசித்த போது அவர்களோடு இயைபாக செயலாற்றுவதற்கு ஜெயவர்த்தனாவுக்கு கஷ்டமாக இருந்தது. அவரது தனிப்பட்ட தொடர்புகள் மூன்று பிரத்தியட்சமான தலைவர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், எம்.திருச்செல்வம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஆகியோருடன் இருந்தன. இவர்கள் மூவருமே தேர்தலுக்கு முந்திய 6 மாத இடைவெளிக்குள் இறந்து போனார்கள்.” என்று குறிப்பிடுகிறார்.

படிப்பினைகள் போதாதா
விக்டர் தென்னகோன்
அதுபோல இந்த மாவட்ட அபிவிருத்திச் சபை யோசனைக்கு தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை இணங்கச் செய்வதில் தான் பிரதான பாத்திரம் வகித்தத்தை ஏ.ஜே.வில்சன் எழுதிய “The Break-up of Sri Lanka: The Sinhalese-Tamil Conflict” (இலங்கையின் உடைவு) நூலில் ஒப்புக்கொள்கிறார். இந்த ஆணைக்குழுவுக்குத் தலைவராக வில்சனைத் தான் ஜே.ஆர். நியமிக்க இருந்தார். செல்வநாயகத்தின் மருமகனை நியமிப்பதால் அன்றைய இனவாத சக்திகள் சந்தேகிக்கும் என்பதால் அந்த எண்ணம் கைவிடப்பட்டது. என்.ஜீ.பீ.பண்டிதரத்ன நீதியான தீர்வுக்கு முட்டுக்கட்டையாக இருந்ததாகவும் ஏ.சீ.எம்.அமீர் மற்றும் எம்.ஏ.அஸீஸ் ஆகியோரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும் வில்சன் அந்த நூலில் தெரிவிக்கிறார். இதன் உச்சமாக ஆணையாளர் தென்னகோன் இனப்பிரச்சினை தீர்வுத் திட்டத்தை வகுப்பதில் பெருந்தடயாகவே இருந்தார் என்றும் அதில் குறிப்பிடுகிறார். நீதியரசர் விக்டர் தென்னகோன் ஜே.ஆரின் உறவினர் என்பதும் இத இடத்தில் சுட்டிக் காட்டவேண்டும்.

1980 பெப்ரவரி நடுப்பகுதியில் அறிக்கை வெளியானது. ஏற்கெனவே நடைமுறையிலுள்ள உள்ளூராட்சி முறையை ஆராய்வதுடன், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஸ்தாபித்தல், அதன் அமைப்பு, அதிகாரங்கள், இயங்குமுறை உள்ளிட்ட அனைத்து விடயங்கள் பற்றியும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது அந்த ஆணைக்குழு. தொடர்பிலும் விரிவானதொரு அறிக்கையை அளிப்பதாக இருந்தது.

1979ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட தென்னகோன் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் 1980ஆண்டின் 35ஆம் இலக்க மாவட்ட அபிவிருத்திச் சபை சட்டமாக பிரதமர் ரணசிங்க பிரமதாசவால் பாராளுமன்றத்தில் ஓகஸ்ட் 8 சமர்ப்பிக்கப்பட்ட மசோதா 20 அன்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.  சுதந்திரக் கட்சி இந்த மாவட்ட சபையை பகிஸ்கரித்து அந்த விவாதத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. தேர்தலையும் பகிஸ்கரிப்பதாக அறிவித்தது. வழமைபோல சிங்கள பௌத்த இனவாத சக்திகளின் பலத்த எதிர்ப்பு பிரச்சாரங்கள், ஆர்ப்பாட்டங்கள் மத்தியில் இது நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் 24 சபைகள் உருவாக்கப்பட்டன.

கூட்டணி எதிரியாக ஆனது
அமிர்தலிங்கத்துக்கும், கூட்டணிக்கும் எதிராக பலமான எதிர்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் உருவெடுத்தது. அமிர்தலிங்கத்தின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது. அன்றைய தமிழ் இளைஞர் முன்னணியின் தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா அப்போது தான் அவரசகால சட்டத்தின் கீழ் சிறை சென்று விடுதலையாகியிருந்தார். தமிழரசுக் கட்சியின் சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் கோவை மகேசன் கூட்டணியின் இந்தப் போக்கை விமர்சித்ததற்காக பத்திரிகையிலிருந்து நீக்கப்பட்டார். கூடவே எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசன், டொக்டர்.தர்மலிங்கம், ஈழவேந்தன் ஆகியோரும் விலகினார்கள். அவர்கள் தமிழீழ விடுதலை முன்னணி (TELF) என்கிற அமைப்பையும் தொடங்கினார்கள். இப்படித்தான் கூட்டணியின் மீது நம்பிக்கையிழந்து, ஆத்திரம் மேலெழுந்து, கூட்டணியின் மீதான எதிர்ப்புநிலையும் வளர்ந்து; தீவிரப் போக்கு மிக்க மாற்று அரசியல் தலையெடுத்தது.

கூட்டணி இந்த எதிர்ப்புகளை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. அமிர்தலிங்கம்; நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதனை நடைமுறைப்படுத்தத் தான் போகிறார்கள் என்றும் இதன் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்கிற தொனியில் தமிழ் மக்களை ஆசுவாசப்படுத்த முயன்றபோதும் அது எடுபடவில்லை.

1970கள் வரை நடைமுறையிலிருந்த கிராமிய சபைகள், சிறு நகர சபைகள், மாநகர சபைகள் அத்தனையும் 1980 ஆண்டின் மாவட்ட அபிவிருத்திச் சட்டத்தின் கீழான திருத்தத்திற்கு உட்பட்டது. அவை உப காரியாலயங்களாக ஆக்கப்பட்டு அபிவிருத்திச் சபைக்குக் கீழ் கொண்டுவரப்பட்டது. 1988ஆம் ஆண்டு மாவட்ட சபைகள் முறைமை நீக்கப்பட்டு சிறு நகர சபைகளும், கிராமிய சபைகளும் நீக்கப்பட்டு பிரதேச சபை முறை கொண்டுவரப்பட்டது. 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் அந்த பிரதேச சபைகள் அத்தனையும் மாகாண சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 83 நகர சபைகளும் 549 கிராமிய சபைகளும் கலைக்கப்பட்டு 1981 ஆம்ஆண்டு ஜூலை 1 இலிருந்து இயங்கத் தொடங்கின

வெற்று மாவட்ட சபை
மாவட்ட அபிவிருத்தி சபையும் அதிகாரமில்லாத வெற்றாகவே இருந்தது. அது ஒவ்வொரு மாவட்ட அமைச்சரின் கிழ் இயங்கும். மாவட்ட அமைச்சருக்கு உதவியாக செயலாளர் காணப்படுவார். மாவட்ட அமைச்சரையும், செயலாளரினையும் ஜனாதிபதி நியமிப்பார். இவ் மாவட்ட அமைச்சர் பாராளுமன்ற குழுவிலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் எனும் நியதி பின்பற்றப்பட்டது. மேலும் இம் மாவட்ட அபிவிருத்தி சபைகள் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டோர் ஆகிய உறுப்பினர்களை கொண்டு காணப்படும்.

முதலாவது தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்து வந்த வடக்கு கிழக்குக்கான சமஷ்டி கோரிக்கையை அரசியல் தீர்வாக தமிழ் மக்கள் முன்மொழிந்து வந்திருந்த சூழலில் மாவட்டங்களாக கூறுபோட்டது இதன் முதலாவது தோல்வி. அடுத்ததாக இச் சபை அதிகாரப்பரவலாக்கத்துக்கான பொறிமுறையாக கூறப்பட்டபோதும் இது முழு அதிகாரத்தையும் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கபட விதிகளையே கொண்டிருந்தது.இந்த சபையில் ஆண்கம் வகிக்கும் மாவட்ட அமைச்சரையும், செயலாளரையும் ஜனாதிபதியே நியமிப்பார். ஆக அவர்கள் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குக்கு உரியவர்களே. நடைமுறையிலும் அது தான் நிகழ்ந்தது.


இம் மாவட்ட அமைச்சர் தமது செயற்பாடுகள் தொடர்பாக பாராளுமன்றத்திற்கு பெறுப்பு கூற வேண்டியவராகவும் காணப்பட்டார். இக் கட்டுப்பாடுகள் அனைத்தும் மாவட்ட அமைச்சரின் சுதந்திரமான செயற்பாட்டிற்கு இயல்பாகவே கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருந்தன. பாராளுமன்ற குழுவிலிருந்து மாவட்ட அமைச்சர் தெரிவு செய்யப்பட்டாலும் அவர் அமைச்சரவை சாராத அமைச்சர்களில் இருந்தே தெரிவு செய்யப்பட்டார். ஆனால் அபிவிருத்தி தொடர்பான சகல அதிகாரங்களும் அமைச்சரவை சார்ந்த அமைச்சர்களிடமே காணப்பட்டது. இதனால் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விடயங்களுக்கு மாவட்ட அமைச்சர் அமைச்சரவை சார்ந்த அமைச்சர்களில் தங்கியிருக்க வேண்டிய நிலையே இருந்தது. அதாவது எந்தவொரு அபிவிருத்தி செயற்பாடுகளையும் மாவட்ட அமைச்சர் தான் திட்டமிடும் விடயங்களை கூட மேற்கொள்ள முடியாது இருந்தன. மொத்தத்தில் மக்களால் தெரிவு செய்யப்படாதவர்கள் கைகளிலேயே ஒட்டுமொத்த அதிகாரங்களும் குவிக்கப்பட்டிருந்தன. அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதற்குப் பதிலாக, அதிகாரங்கள் அனைத்தையும் பிடுங்கி மையப்படுத்தி தன்னகத்தே குவித்துவைத்துக் கொண்டது. அதை இனப்பிரச்சினைக்கு தீர்வு என்றது.

ஜே.ஆர். 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை பற்றி கூறும்போது “ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர மற்றெல்லா அதிகாரங்களையும் ஜனாதிபதியாகிய தனக்கு இந்த அரசியலமைப்பு வழங்கியுள்ளது” என்று தெரிவித்திருந்ததை இங்கு நினைவு படுத்த வேண்டும் ஜே.ஆரின் அதிகார வெறி நிறைவேற்று அதிகாரத்தை தன்னகத்தே ஏற்படுத்திக் கொண்டதுடன் மட்டும் தணியவில்லை. கூடவே மாவட்ட சபை விடயத்திலும் மொத்த அதிகாரத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டார்.

மாவட்ட அபிவிருத்தி சபைக்கான தேர்தலை 1981 ஜூன் 4 அன்று நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

தமிழர்க்கு வேறு தெரிவில்லை.
வடக்கில் அபிவிருத்தி சபையின் அதிகாரத்தை அம்மக்களுக்கு வழங்காது பலாத்காரமாக கைப்பற்றிவிட அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி விபரீதத்தில் தான் முடிந்தது. பெருமளவு தேர்தல் முறைகேடுகளை செய்தும், யாழ்ப்பாண நூல் நிலையத்தைக் கொழுத்தியும் தான் சாதித்தது. அதன் விளைவு ஆளும் அரசாங்க கட்சியை தோற்கடிப்பதற்காக வடக்கு கிழக்கு பகுதிகளில் கூட்டணியை வெற்றி பெறச் செய்தார்கள் மக்கள்.  

கூட்டணி 263,369 வாக்குகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் 10ஆசனங்களைக் கைப்பற்றியது. அத்தனை தேர்தல் மோசடிகளை செய்தும் கூட ஐ.தே.க 23,302 மட்டுமே பெற்றுக்கொண்டது. குமார் பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ் 21,682 வாக்குகளைப் பெற்றது.

தாம் விரும்பாத மாவட்ட சபைக்கு நடைமுறை வடிவம் கொடுத்தார்கள். வரலாறு முழுவதும் இந்தபோக்கை காணலாம். தமக்கெதிரான கட்சியைத் தோற்கடிப்பதற்காக தாம் விருப்பப்படாத  கட்சியை ஆதரிப்பதே ஒரே தெரிவாக கொண்டார்கள். பேயிலேயே எது மோசமான் பேய், எது சுமாரான பேய் என்பதை அளந்து வாக்கிடும் மரபு மிதவாத ஜனநாயகப் போக்கின் அம்சமாகவே காலங்காலமாக தொடர்ந்து வருகிறது.

ஐ.தே.க மிகவும் மோசமான தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டது.  பல வாக்குப் பெட்டிகள் காணாமல் போயின. ஆனால் அந்த தேர்தல் செல்லுபடியானது என்று தேர்தல் ஆணையகம் அறிவித்தது. தேர்தலுக்காக தமிழ் பிரதேசங்களுக்கு அனுப்பட்டிருந்த தேர்தல் ஊழியர்கள் ஐ.தே.கவின் ஆதரவாளர்களாக இருந்தார்கள்.

ஐ.தே.க. அம்பாறையில் மாத்திரம் வென்றது. இந்தத் தேர்தலில் ஐ.தே.க யாழ் மாவட்டத்தில் களமிறக்கிய அ.தியாகராஜா 24.05.1981இல் துவிச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1970 இல் வட்டுக்கோட்டைத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அமிர்தலிங்கத்தையே தோற்கடித்து வென்றவர் தியாகராஜா. அதன் பின்னர் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு கொடுத்து 1972 அரசியலமைப்புக்கும் ஆதரவளித்த அவர் தமிழ் மக்களின் அதிருப்தியையும், தமிழ் போராளிகளின் இலக்குக்கும் ஆளாகியிருந்தார்.

ஏற்கெனவே 1977 பொதுத் தேர்தலில் கூட்டணியால் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் புதல்வர் குமார் பொன்னம்பலம் அத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியித்திருந்தார். அதன் பின்னர் அகில இலங்கைதமிழ் காங்கிரசை 1978இல் ஆரம்பித்திருந்தார். அதே கட்சியின் கீழ்  மாவட்ட சபைத் தேர்தலில் அவர் போட்டியிட்டார்.

தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) முதற்தடவையாக பொதுமக்கள் முன்னிலையில் வாக்கு கேட்டு வந்தது இந்தத் தேர்தலில் தான். ஜே.வி.பியை ஒரு கட்சியாக தேர்தல் திணைக்களம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் சுயாதீன குழுவாகவே போட்டியிட்டனர். சுதந்திரக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சிஆகியன தேர்தலை பகிஸ்கரித்த நிலையில் நாடளாவிய ரீதியில் ஐ.தே.க வுக்கு சவாலாக இருந்த ஒரே கட்சி ஜே.வி.பி தான். மொத்த வாக்குகளில் 10 வீதத்தை அவர்கள் கைப்பற்றினார்கள். முதல் தடவையாக தேர்தல் அரசியலுக்கு இந்த மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலின் மூலம் அவர்கள் பிரவேசித்து மொத்தமாக 13 உறுப்பினர்களை பெற்றுகொண்டார்கள். 

நம்ப நட! நம்பி நடாதே!
இந்த சபை எப்படி ஒரு கேலிக்கூத்தாக முடிவடைந்தது என்பதைப் பற்றி மகிந்த தீகல்ல எழுதிய “நவீன இலங்கையில் பௌத்தமும், பிணக்கும், வன்முறையும்” என்கிற நூலில் விளக்குகிறார்.

ஏ.ஜே.வில்சன் இது பற்றி தனது கட்டுரைகளிலும், நூல்களிலும் விளக்கியிருக்கிறார். ஜே.ஆரை நம்பி தாமும் மோசம் போனதாகவே அவரது தொனியில் எதிரொலித்தன. மாவட்ட சபையைக் கூட நடைமுறைப்படுத்தும் எண்ணம் ஜே.ஆருக்கு இருக்கவில்லை என்றும், கூட்டணியை அரசியல் அரங்கில் தணித்து வைத்திருப்பதே ஜே.ஆரின் உள்நோக்கமென்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மாவட்ட அபிவிருத்திச் சபை எனும் கேலிக்கூத்து நாடகம் அரசாங்கத்தால் அரங்கேற்றப்பட்டது இப்படித்தான். இந்த வரலாறு மீண்டும் இன்று 2017இல் நினைவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. கண்துடைப்புக்காக ஒரு தீர்வு, அதே எதிர்க்கட்சி தலைமை பதவியில் தமிழர், வெற்றுத் தீர்வு யோசனை, அந்த வெற்றுத் தீர்வில் தமிழ் தலைமையும் நேரடி பங்கேற்பு. 37 வருடங்களின் பின்னர் வரலாறு சுழற்சிமுறையில் அதே புள்ளியில் வந்து நிற்கின்றது. இந்த இடைக்காலத்தில் பெரும் இழப்பை விலையாகக் கொடுத்த ஒரு சமூகத்தால் இதனை சகிக்கத் தான் முடிகிறதா?

இந்தத் தேர்தல் எப்பேர்பட்ட அழிவுகளை ஏற்படுத்தியது என்பதை தனியாக பார்ப்போம்

துரோகங்கள் தொடரும்..

நன்றி - தினக்குரல்


ஆர்தர் சி. கிளார்க்: அறிபுனை எழுத்துலகின் ஜாம்பவான் - என்.சரவணன்

“அறிந்தவர்களும் அறியாதவையும்” 25

ஆர்தர் சி. கிளார்க் (Arthur Charles Clarke 1917 - 2008) உலகின் தலைசிறந்த அறிபுனை எழுத்தாளராக அறியப்படுபவர். இங்கிலாந்தில் பிறந்து 50 ஆண்டுகளாக இலங்கையிலேயே வாழ்ந்து தனது கண்டுபிடிப்புகளை உலகுக்கு தந்து விட்டு இலங்கையிலேயே மரணமெய்தியவர். இந்த ஆண்டு அவரது பிறந்த தின நூற்றாண்டு எட்டுகிறது. 

16.12.1917ஆம் ஆண்டு  கிளார்க் இங்கிலாந்தில் சொம்மர்செட் எனும் இடத்தில் பிறந்த தனது 13வது வயதிலேயே தந்தையை இழந்தவர். 4 குழந்தைகளை கொண்ட குடும்பத்தில் மூத்தவரான இவரின் தந்தை உழவராகவும், தாய் அஞ்சல் நிலையத்தில் தந்தி அனுப்புனராகவும் பணிபுரிந்தனர்.  சிறு வயதிலேயே கற்பனை வளம் நிறைந்த கிளார்க் வானியலில் மிகுந்த ஆர்வும் ஈடுபாடும் கொண்டவர். அவரது சிறு வயதில் அமெரிக்க அறிவியல் நூல்களை விரும்பி படித்துவருவார். பல்கலைக்கழகக் கல்வியைத் தொடருமளவுக்கு குடும்ப வசதி போதாமையால் 19 வயதிலேயே கல்வித் திணைக்களத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கி விட்டார்.

17ஆவது வயதிலேயே இங்கிலாந்தின் கோள்களியல் கழகத்தில் சேர்ந்து பிற்காலங்களில் அதன் பொருளாளராகவும் பின்னர் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். 2ஆம் உலக யுத்தக் காலத்தில் தனது பணியிலிருந்து விலகி ரோயல் வான் படையில் சேர்ந்து அங்கு இலத்திரனியல் துறையில் பயிற்சிபெற்று அத்துறையிலேயே பயிற்றுவிப்பாளரானார். இங்கிலாந்தில் அப்போது இருந்த அமெரிக்க தரைக் கட்டுப்பாட்டுப் ராடார் பிரிவில் பணியாற்றியதில் கிடைத்த அனுபவம் அவரை புதினங்கள் எழுதுவதிலிருந்து அறிவியல் விடயத்தில் ஆர்வம் கொள்ள வைத்தது. அங்கிருந்தும் விலகி லண்டன் கிங்க்ஸ் கல்லூரியில் இயற்பியல், கணக்கியல் துறையில் கற்று பின்னர் வானவியல் கற்கையை முடித்தார்.

இலங்கையரானார்
புதினங்களை எழுதுவதும் அதனை அறிவியலோடு இணைத்து எழுதும் “அறிபுனை” துறைக்குள் ஈடுபாடு காட்டத் தொடங்கிய அவர் “சயன்ஸ் எப்ஸ்ட்றேக்ட்” (Science Abstracts) எனும் சஞ்சிகையில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். அந்தத் துறைதான் தனது கற்பனையையும், சிந்தனையையும், அறிவியல் ஆற்றலையும் ஒன்று சேர பிரயோகித்து எழுத போதுமான வாய்ப்பை வழங்கிற்று. 1951இல் அவர் முழு நேர எழுத்தாளரானார்.

1953இல் அவர் திருமணமாகி 10 ஆண்டுகளில் மணமுறிவு செய்துகொண்டார். தனது சிந்தனையையும், கற்பனையையும் எழுதத் தேர்ந்த அமைதியான இடமாக இலங்கையைத் தேர்வு செய்து 39 வருட தாய்நாட்டு வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு 1956 இலிருந்து வாழத் தொடங்கி விட்டார். 1962இல் அவர் போலியோ நோய்க்கு ஆளாகி பின்னர் தனது எஞ்சிய வாழ்க்கையை அவர் நாற்காலி வண்டிலிலேயே கழித்தார்.

கிளார்க் இருபதாம் நூற்றாண்டு அறிபுனை எழுத்துலகின் (science fiction writers) மூன்று திரிமூர்த்திகளில் ஒருவராகக் அறியப்படுகிறார். மற்ற இருவர்கள் ஐஸாக் அசிமாவ் (Isaac Asimov), ராபர்ட் ஹைன்லைன் (Robert Heinlein).

தகவல் பரிமாற்றத்துக்காக செயற்கைக்கோள்களை உச்ச அளவில் இன்று பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருகிற போதும் அந்த சிந்தனையின் பிதாமகராக அழைக்கப்படுபவர் கிளார்க் செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி  உலகின் தகவல் பரிமாற்றத்தை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பரிமாற்றலாம் என்கிற கோட்பாட்டினை அப்போதே, 40களிலேயே எதிர்வு கூறியவர் அவர்.

பூமியிலிருந்து பார்க்கும்பொழுது வானில் ஒரே இடத்தில் இருக்குமாறு செய்மதி எனப்படும் செயற்கைக்கோள்களை அமைத்து, உலகளாவிய பரப்பில் தொலைத்தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தலாம் என்ற புகழ்பெற்ற அறிவியல் கருத்தை 1945-இல் முன்வைத்துவிட்டார் கிளார்க். எனவே அவரின் நினைவாக, (புவிநிலை வலயம் -Geostationary orbit) புவியிடமிருந்து மாறாச் சுற்றுப்பாதைகளை கிளார்க் வலயம் என்றும் அழைப்பர்.

மனித இனம் அழிந்துவிடும் எனும் கருத்தில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. மனித இனம் தப்பிப் பிழைத்திட வழியைக் கண்டு பிடித்து விடும் என்பதை உறுதியாக நம்புபவர். பிரபஞ்சம் பற்றிய அவரின் கற்பனைகளை விஞ்ஞான நோக்கில் முன்வைத்ததையே அவர் செய்தார்.

விண்வெளி, வேற்றுக்கிரக வாசிகள் போன்றன பற்றி அவர் ஏராளமான அறிபுனை கதைகளை ஆக்கியிருக்கிறார். அவற்றில் கணிசமானவை திரைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன. 

100 புத்தகங்களுக்கு ஆசிரியரான ஆர்தர் சி. கிளார்க், அறிவியல் பூர்வமான ஆதாரத்தையும், அறிவியல் கோட்பாட்டையுமே தமது எழுத்துத்துறைக்கு அதிகளவு பயன்படுத்தியவர். அவற்றில் பல தூரதிருஸ்டிமிக்க அறிவியல் எதிர்வுகூரல்கள். அவை வெறுமனே கற்பனையுடன் சுருங்கிவிடாது நடைமுறை சாத்தியமாக்கப்பட்டுள்ளன. அவை குறித்து ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார். அவரது எழுத்துக்கள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கிளார்க்கின் சிறுகதைகளும், சில நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

1945ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வெளியான வயர்லஸ் வேர்ல்ட் என்கிற பத்திரிகையில் கிளார்க் எழுதிய கட்டுரையில் “பூமியின் குறித்த உயரத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோள்கள் சுற்றிவரும்” என்று எழுதினார்.

“சந்திரன் பூமியை சுற்றிவருவதைப் போல மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களும் ஒரு நாள் பூமியைச் சுற்றி வரும்” என்றார். இன்று உலக தொடர்பாடல் வலைப்பின்னலே செயற்கைக் கோள்களில் தங்கியிருக்கும் அளவுக்கு அந்த எதிர்வுகூறல் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

நாம் வாழும் பூமியின் எல்லைகளுக்கு அப்பாலும் மனிதனின் தலைவிதி விரிந்துள்ளது என்ற தூரநோக்குமிக்க கருத்தை  உறுதியாக முன்னிறுத்தியவர். 1968 இல் கிளார்க் எழுதிய 'எ ஸ்பேஸ் ஒடிசி' (A Space Odyssey) என்ற புதினமும் அதே பெயரில் ஸ்டான்லி கூப்ரிக் என்பவரால் இயக்கி இவரால் தயாரிக்கப்பட்ட '2001: எ ஸ்பேஸ் ஒடிசி' என்ற திரைப்படமும் கிளார்க்கின் இந்தத் தொலைநோக்குப் பார்வைக்குச் சான்றுகளாக உள்ளன. ஹொலிவூடின் தலையாய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது. 1968ஆம் ஆண்டுக்கான 4 ஒஸ்கார் விருதுகளுக்காக அது தெரிவு செய்யப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான விருதுக்கும், சிறந்த இயக்குனருக்கான விருதுக்காகவும் அந்த திரைப்படத்துக்காக கிளார்க் தெரிவாகியிருந்தார். அந்த நூலில் அவர் வெளியிட்டிருந்த தீர்க்கதரிசன எதிர்வுகூறல்களை தனியான பட்டியல்களாக பலரது ஆய்வுக்கட்டுரைகளில் வெளியிட்டிருக்கின்றனர்.

அந்த நூலில் எழுதிய எதிர்வுகூரல்களில் ஒன்று 2016 ஆம் ஆண்டு உலகத்தின் எல்லா பண நோட்டுகளும் செல்லுபடியற்றதாக ஆகி “மணி மெகாவாட்” (Megawatt Hour) புதிய பணமாகும்...” என்கிறார். இன்று பணப்புழக்கம் இலத்திரனியல் செயல்பாடாக ஆகியிருப்பதை ஏறத்தாள அரை நூற்றாண்டுக்கு முன்னரே அறிவித்திருக்கிறார் என்பது ஆச்சரியப்படுத்துகிறது. 2020இல் செயற்கை நுண்ணறிவு  (Artificial Intelligence) மனித அறிவை மேவும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

உலகப் புகழ் பெற்ற தொலைக்காட்சித் தொடரான “ஸ்டார் ட்ரெக்” (Star Trek) உருவாவதற்கான கதைக்கருவுக்கு கிளார்க் 1964இல் எழுதிய “Profiles of the Future” என்கிற நூலையே ஆதாரமாக இருந்தது என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

கற்பனைகள் திரைப்படங்களாக
லெனார்ட் வுல்ப் எழுதிய “Village in the jungle” நூல் 1980இல் “பெத்தேகம” எனும் சிங்களத் திரைப்படமாக வெளிவந்த போது லெனார்ட் வுல்ப்பின் பாத்திரத்தில் (ஆங்கிலேய நீதிபதியாக) நடித்தவர் ஆதர் சீ கிளார்க்.

திரைப்படங்களாக வெளியான ஆதர் சீ கிளார்க்கின் கதைகள் பற்றிய பட்டியலை பிரபல  http://www.imdb.com இணையத்தளத்தில் காணலாம். மூன்று திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.  அவர் எழுதி வெளியான திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர் நாடகங்களுகளின் பட்டியலையும் அதில் காணலாம். 42 விவரணத் திரைப்படங்களில் அவர் பங்குபற்றியிருக்கிறார். அவற்றில் “Arthur C. Clarke: The Man Who Saw the Future” (ஆதர் சீ கிளார்க்: எதிர்காலத்தைக் கண்ட மனிதன்) என்கிற திரைப்படம் குறிப்பிடத்தக்கது. அவரது அண்டசாகச, வெற்று கிரக கதைகளை மையப்படுத்திய வீடியோ விளையாட்டுகள் ஆரம்பத்திலேயே வெளிவரத் தொடங்கிவிட்டன. 

1951 இல் கிளார்க் எழுதிய வேற்றுலக கண்டுபிடிப்பு (The Exploration of Space)  என்கிற நூல் பூமியிலிருந்து வேற்றுக் கிரகங்களுக்கான மனிதர்கள் பயணம் பற்றிய கற்பனைகளை உள்ளடக்கியது. ஆனால் 1969இல் சந்திரனில் மனிதன் கால்பதித்து அது சாத்தியமென உண்மையிலேயே நிரூபிக்கப்பட்டது. 1969 யூலை 20ஆம் திகதி அப்பொல்லோ விண்வெளி சந்திரனில் தரையிறங்குவதை அமெரிக்க CBS தொலைகாட்சியில் ஆர்தர் சீ கிளார்க்கு வர்ணனை வழங்கினார். சாதாரண மக்கள் சந்திரனுக்கு மட்டுமல்ல அதற்கப்பாலும் பயணிப்பார்கள் என்றும் எப்போதோ எழுதினார். வேற்றுக் கிரகவாசிகளின் சாத்தியப்பாடு குறித்த ஆய்வுகளுக்கு அவரது எழுத்துக்கள் நிறையவே தூண்டியிருக்கின்றன.

எப்போதும் சோராத வாசிப்புப் பழக்கமும், முறிவுறாத தேடலும், இடைவிடாத சிந்தனா திறனும் அவரது கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக விளங்கின.

கிளார்க் ஆழ்கடல் நீச்சலில் (Scuba diving) அனுபவமும் ஆர்வமும் மிக்கவர். அவரது போலியோ நோயினால் அதனை தொடர முடியாதிருந்தபோதும் ஹிக்கடுவவில் “ஆர்தர் சீ கிளார்க் முக்குளிப்பு பயிற்சியகம்” ஒன்றையும் இயக்கி வந்தார். சுனாமியின் போது அது முற்றாக அழிந்து போனது. சுனாமி அழிவின் போது இலங்கைக்கு உதவும்படி உலகம் முழுவதும் வேண்டினார்.

1957 ஆம் ஆண்டு அவர் எழுதிய “ஆழ எல்லை” (The deep range) என்கிற நூலில் அவர் இப்படி எழுதுகிறார்.

“இது 2050ஆம் ஆண்டு. இப்போது கடவுளைப் போதிக்கும் சகல மதங்களும் காலாவதியாகின்றன. பௌத்தத்துடன் போட்டியிட்ட ஏனைய மதங்களும் வெற்றிபெறவில்லை. பலவீனமடைந்தன. இனிமேலும் மனிதகுலத்தை ஆசுவாசப்படுத்தக் கூடிய ஒரே மார்க்கமாக பௌத்தம் நிலைபெறுகிறது.” இந்த கருத்து பல மதத்தவர்களுக்கும் கடுப்பை ஏற்படுத்திய போதும் இலங்கை பௌத்தர்களை குளிரச் செய்தது என்பது உண்மையே. 

முதல் வர்ண திரைப்படம் – “ரன்முதுதுவ”
கிளார்க் இலங்கையில் வாழ தீர்மானித்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் ஆழ்கடல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் திட்டங்களே.

1956 ஆம் ஆண்டு ஆர்தர் சி. கிளார்க் தனது நண்பர்களான மைக் வில்சன், ரொட்னி ஜோங்கல்ஸ் ஆகியோரின் உதவியுடன் திருக்கோணேஸ்வரக் கடலினடியில் செய்த ஆராய்ச்சியின் பயனாக 3000 வருடங்களுக்கும் மேற்பட்ட மிகப் பழமை வாய்ந்த ஆலயம் கடலுக்கடியில் இருப்பதைக் கண்டுபிடித்தார். கோவிலின் தூண்களும், பிரமாண்டமான மணிகளும், விளக்குகளும், கோயிலின் தளங்களும் தெரிவதை உறுதிப்படுத்தினார். அதுமட்டுமன்றி அந்த பகுதியில் இருக்கும் நீரோட்டம் குறித்தும் பல குறிப்புகளை எழுதினார். இலங்கையின் கடல் வளங்களை பாதுகாக்கும் பல திட்டங்களை ஆதர சீ கிளார்க்கின் யோசனைகளின் காரணமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.


அந்த ஆழ்கடலில் இராவணன் வணங்கியதாக கருதப்படும் சுயம்புலிங்கத்தை  மைக் வில்சன் கண்டெடுத்தார். இந்த விபரங்களை பற்றி ஆதர் சீ கிளார்க் எழுதிய “The Reefs of Taprobane” (இலங்கையின் ஆழ்கடல்) என்கிற நூல் என்கிற நூல் உலகளவில் பிரசித்தம் பெற்றது. இந்த ஆய்வுகளை மேலும் விஸ்தரிப்பதற்கு அவர்களிடம் போதிய பணம் இருக்கவில்லை எனவே ஒரு திரைப்படத்தை எடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இந்த ஆய்வை மேற்கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்தனர். அதன் விளைவு தான் “ரன் முது துவ” என்கிற பெயரில் 1960 இல் ஒரு சிங்கள மொழி திரைப்படத்தை உருவாக்கினர். ஆதர் சீ கிளார்க்கும்  மற்றும் சேஷா பலியக்கார என்கிற சிங்கள தயாரிப்பாளரும் அதனைத் தயாரிக்க அவரின் நண்பர் மைக் வில்சன் இயக்கினார். காமினி பொன்சேகா, ஜோ அபேவிக்கிரம போன்ற பிரபல நடிகர்கள் நடித்த மிகவும் பிரபலமான ஒரு திரைப்படம். அதுமட்டுமன்றி சிங்கள சினிமாவின் முக்கிய திருப்பம் அது. இலங்கையின் முதலாவது வர்ண திரைப்படமும் அது தான். அதை தயாரித்தவர் ஆதர் சீ கிளார்க்.

திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வருமானமும் அவர்களுக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி அவர்கள் திருகோணமலை இராவணன் வெட்டு பகுதியைச் சூழ ஆள் கடலில் தமது ஆய்வை தொடர்ந்தனர். மேலும் பல உண்மைகளை அறிந்தனர். அவர் புதைந்துபோயிருந்த கோவில் பொருட்களை வெளிக்கொணர்ந்த அடுத்ததடுத்த நாட்களில் அவர் போலியோ நோய்க்கு இலக்காகி சக்கர நாற்காலியின் துணையிலேயே வாழ் நாள் முழுதும்  கழித்தார். பின்னர் தாம் அறிந்தவற்றை “The Treasure of the Great Reef” (மாபெரும் ஆழ்கடல் புதையல்) என்கிற பெயரில் இன்னொரு நூலையும் எழுதி அதை ஒரு விவரணத் திரைப்படமாகவும் கிளார்க் உருவாக்கினார். 

1989 இல் இங்கிலாந்து மகாராணியின் பிறந்த தினத்தின் போது “பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் கட்டளைத் தளபதி” ( Commander of the Order of the British Empire (CBE)) என்கிற உயரிய விருது கிளார்க்குக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டு உலக விண்வெளிப் பல்கலைக்கழகத்தின் முதன்மை வேந்தராக பதவி கிடைத்தது. 1979 – 2002 வரை இலங்கையில் கொழும்பு மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பதவி வகித்தார். அவர் கையால் பட்டம் பெற்ற பட்டதாரிகள் இன்னமும் அதனை தமது பெரும்பேறாக பெருமைகொள்கின்றனர். விஞ்ஞானத்துக்கான இவரின் சேவையை பாராட்டி 2000ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் உயரிய பட்டமான 'நயிட்' பட்டம் வழங்கி கௌரவித்தார். 1994ஆம் ஆண்டு சர்வதேச நோபல் சமாதானப் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.


இலங்கையில் அவருக்கு 1986 இல் வித்யாஜோதி ஜனாதிபதி விருதும், 2005ஆம் ஆண்டு சாகித்திய ரத்னா விருதும் அதே ஆண்டு “ஸ்ரீலங்காபிமணி” என்கிற உயரிய அரச விருதும் வழங்கப்பட்டது.

அவரது இறுதிக் காலத்தில் பாலியல் துஷ்பிரயோக அவதூறு குற்றச்சாட்டை சுமத்தி கிளார்க்கின் பெயருக்கு களங்கம் விளைவித்த ஊடகங்கள் அவரிடம் பின்னர் தமது தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.

அவருக்கு கிடைத்த பரிசுப் பணத்தைக் கொண்டு அவர் ஆதர் சீ கிளார்க் நிலையத்தை இலங்கையில் (கட்டுபெத்தவில்) உருவாக்கி நவீன விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக அதனை கையளித்தார். இன்று அது விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயக்கபடுகிறது.

1990களின் இறுதியில் அவர் தனது தலைமயிர் இழைகளை விண்வெளியில் சேர்ப்பிப்பதற்காக ஆராய்ச்சி நிறுவனமொன்றுக்கு (AERO Astro Corporation) வழங்கியிருந்தார். மில்லியன் வருடங்களுக்குப் பின்னராயினும் ஒரு சூப்பர் நாகரிகம் தோன்றுகையில் அவர்களுக்கு இது கிடைத்து நவீன மரபியல் ஆய்வு முயற்சிக்கு உதவக் கூடும் என்று நம்பினார்.


“விடைபெறுகிறேன்”
2007ஆம் ஆண்டு நடுப்பகுதியில் கிளார்க் தான் சீக்கிரம் இறக்கப்போவதை அறிந்திருந்தார். அந்த ஆண்டு தனது 90வது வயது பிறந்த நாளின் போது தனது அபிமானிகளுக்கும், மாணவர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் “விடைபெறுகிறேன்” (Good bye) என்று வீடியோ ஒலிப்பதிவின் மூலம் வெளிப்படுத்தினார். தனது பிறந்த நாள் செய்தியாக இனமோதல் வன்முறைகளினால் அல்லலுறும் இலங்கைத்தீவில் நிரந்தர சமாதானம் மலரவேண்டுமென்பதே தனது இறுதி ஆசைகளில் ஒன்று என்று தனது ஆதங்கத்தினை வெளியிட்டிருந்தார். அவரின் அந்த இறுதி பிறந்த நாள் விழாவின் போது சிறப்பு அதிதியாக வந்தவர் 1965 ஆம் ஆண்டு முதன் முதலில் விண்வெளியில் இறங்கி நடந்த புகழ்பெற்ற ரஷ்ய வானியல் விஞ்ஞானியான டாக்டர் அலெக்சி லியோனொவ். கிளார்க் அதற்கு முன்னர் அவரது “ஒடிஸ்ஸி” நூலை லியோனொவுக்குத் தான் அர்ப்பணித்திருந்தார்.


அதன் பின் ஒரு சில மாதங்களிலேயே; உலகின் நவீன வளர்ச்சியை மெய்ப்பிப்பதற்காக தனது கற்பனைகளை வழங்கிய அவர் தனது கனவுகளை 19.03.2008 அன்று நிறுத்திக்கொண்டார். அவரது போலியோ நோயினால் ஏற்கெனவே பக்கவிளைவாக இருந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டு கொழும்பில் மரணமானார். இலங்கை வழக்கப்படி அவரின் இறுதி விருப்பப்படி மதச்சார்பற்ற ரீதியில் அவர் வழியனுப்பப்பட்டார். இலங்கைக்கு தொலைக்காட்சியை அறிமுகப்படுத்துவதில் அதீத பிரயத்தனம் செய்த அவருக்காக சகல தொலைக்காட்சி, மற்றும் வானொலிச் சேவைகள் 3 நிமிடங்கள் அமைதியாக நிறுத்தி கௌரவம் செலுத்தின. 



இலங்கையை உலுக்கிய “ப்ரஸ்கேர்டல்” சம்பவம்! - என்.சரவணன்

“அறிந்தவர்களும் அறியாதவையும்” 18

இலங்கையை உலுக்கிய ப்ரஸ்கேர்டல் சம்பவம் நிகழ்ந்து 80 வருடங்கள் ஆகிவிட்டன.

மார்க் அந்தனி ப்ரஸ்கேர்டல் (Mark Anthony Bracegirdle)  இலங்கையின் வரலாற்றிலும், இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றிலும் பதியப்பட்ட முக்கிய போராளி.

ப்ரஸ்கேர்டல் 10.09.1912 ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தவர். ஆனால் வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாக  1928 ஆம் ஆண்டு தனது தாயாருடன் அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்து வாழத் தொடங்கிவிட்டார்கள். தாயார் இனா (Ina Marjorie Lyster) லண்டனில் பெண்கள் வாக்குரிமைக்கான இயக்கத்தின் தீவிர செயற்ப்பாட்டளராக இருந்ததுடன் அதன் காரணமாக சில தடவைகள் சிறை சென்றவர். 1925 ஆம் ஆண்டு தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் வேட்பாளராக இருந்தவர்.

ப்ரஸ்கேர்டல் 8 வருடகாலமாக அவுஸ்திரேலியாவில் இருந்தார். அந்த இடைக்காலத்தில் அவர் உயர்கல்வியையும் கற்று பின்னர் கலைப்பைடைப்புகளை விற்பனை செய்யும் ஒரு கடையொன்றின் முகாமையாளராக பணியாற்றினார். பின்னர் விவசாயத் துறையில் பயிற்சிபெற்றார். 1935 இல் அவர் அவுஸ்திரேலிய இளம் கொம்யூனிஸ்ட் லீக் எனும் இயக்கத்தில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார். சிட்னியிலிருந்து ஒரு கப்பல் மூலம் இலங்கைக்கு அவர் 11.03.1936 இல் புறப்பட்டார். ஏப்ரல் 4 அன்று இலங்கை வந்தடைந்தார்.

தேயிலை உற்பத்தி, வர்த்தகம் பற்றிய அறிவைப் பெறுவதற்காகவே அவர் வந்தார். மாத்தளையில் மடுல்கெல்லே என்கிற தோட்டத்திற்கு வந்து சேர்ந்த அவர் அங்கு தோட்டங்களில் தொழிற்புரிந்த இந்திய கூலித் தொழிலாளர்களின் மீதான மனிதாபினாமற்ற சுரண்டல், பாரபட்சம், அநீதியை நேரடியாக கண்ணுற்றார். இங்கிலாந்திலுள்ள மாட்டுக்கொட்டகையை விட மோசமான இடங்களில் ஒரே குட்ம்பத்தைச் சேர்ந்த பலர்  தங்கவைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சுகாதார வசதி குறைந்த அந்த சூழலில் பல வித நோய்களுக்கு இலக்கானார்கள். மலேரியா நோயினால் ஏற்பட்ட இழப்புகளை ப்ரஸ்கேர்டல் நேரில் கண்ணுற்றார். மந்த போசனம், போசாக்கின்மை, சுகாதாரக் கேடு, முறையான மருத்துவ உதவியின்மை காரணமாக தோட்டங்களில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 200 குழைந்தைகள் தோட்ட மண்ணுக்கே உரமானார்கள்.

1937ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த கூலி 43 சதங்கள் மட்டுமே. 26 நாட்களும் பணிபுரியாவிட்டால் மொத்த மாத சம்பளமும் ரத்துசெய்யப்படும். இது ஒரு தண்டனையாக மேற்கொள்ளப்பட்டது. தொழிலாளர்களுக்கான ஒரு புசல் அரிசியை மாதாந்தம் (1 bushel rough rice = 45 lb = 20.41 kg) தோட்ட முகாமையே வழங்கும் அதற்கான கட்டணமாக 4.80 சதத்தை சம்பளத்தில் கழித்துக்கொள்வார்கள். அன்றைய சந்தை விலை கூட ஒரு புசல் அரிசி இரண்டு ரூபாய் தான். வெள்ளைத் துரைமாரின் கொடூரமான உழைப்புச் சுரண்டலை நேரடியாக கண்ணுற்றார் அவர்.

1915 ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த பத்திரிகையாளர் நடேச ஐயர் தொழிற்சங்கத்தையும் ஆரம்பித்து 1931 இலும், 1936 இலும் அரசாங்க சபைக்கு தெரிவாகியிருந்தார். அவரின் தொழிற்சங்கத்தோடு சேர்ந்து பணிபுரிந்தார் ப்ரஸ்கேர்டல். நாவலப்பிட்டி, ஹட்டன் பகுதிகளுக்கான பொறுப்பை நடேச ஐயர் ப்ரஸ்கேர்டளிடம் ஒப்படைத்தார். நடேசய்யரின் தொழிற்சங்கத்தில் முழுநேர ஊழியராக ப்ரஸ்கேர்டல் இயங்கியிருக்கிறார்.

வேலையிலிருந்து நீக்கம்
தோட்டத் தொழிலாளர்களிடம் எப்படி வேலை வாங்குவது என்பது ப்ரஸ்கேர்டலுக்குத் தெரியாது என்றும் அவர் இந்த தொழிலுக்குத் தகுதியற்றவர் என்றும் கூறி தோட்ட நிர்வாகம் அவரை அவுஸ்திரேலியாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தது.

டிசம்பர் 12 அன்று புறப்படும் கப்பலில் அவரை அனுப்புவதற்கான பயணச்சீட்டையும் கையில் 100 ரூபாவையும் கொடுத்து விடைகொடுத்தது தோட்ட நிர்வாகம்.

ஆனால் அந்த முடிவை ஏற்காத ப்ரஸ்கேர்டல் தோட்டத்தை விட்டு வெளியேறி நவ சமாஜக் கட்சியின் பணிகளில் இணைத்துக்கொண்டு தோட்டத் தொழிலாளர்களுக்காக சேவை செய்யப்போவதாக முடிவெடுத்தார்.

p.n.banks
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பேங்க்ஸ் (p.n..banks) தற்செயலாக ப்ரஸ்கேர்டலை சந்தித்து கதைத்தபோது தான் 12 அன்று புறப்படப்போவதில்லை என்றும் தான் ஒரு ஓவியன் என்றும் இலங்கை குறித்த ஓவியங்கள் சிலவற்றைசெய்ய விருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ப்ரஸ்கேர்டல் ஒரு அகதியாக இருக்காதவரை இலங்கையில் இருப்பதில் ஆட்சேபனை இல்லை பேங்க்ஸ் பதிலளித்து விட்டு கடந்துள்ளார்.

இதே காலத்தில் பொலிஸ் மா அதிபராக இருந்த டவ்பிகின் ஓய்வுபெற்று திரும்புவதை கொண்டாடுமுகமாக போஸ்டர் ஒட்டியதற்காக ப்ரஸ்கேர்டளுக்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்பட்டு ப்ரஸ்கேர்டலுக்கு ஒரு ரூபாய் ஐம்பது சதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டது. 1915 கலவரத்தின் போது இராணுவச்சட்டத்தைப் பயன்படுத்தி பல உயிர்களை பலியாக்கியவர் டவ்பிகின். டவ்பிகின் மீது இலங்கை மக்களுக்கு மிகப் பெரிய ஆத்திரம் இருந்து வந்தது. டவ்பிகினின் இடத்துக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டவர் தான் பேங்க்ஸ்.

நடேசய்யருடன்
பேங்க்ஸ் பதவியேற்றதும் ப்ரஸ்கேர்டல் பற்றிய பல விபரங்களை அவுஸ்திரேலியாவிலிருந்து திரட்டியிருந்தார். குறிப்பாக அவுஸ்திரேலியாவில் ப்ரஸ்கேர்டல் கொம்யூனிஸ்ட் கட்சியின் பணிகளில் ப்ரைஸ் என்கிற புனைபெயரில் செயற்பட்டுவந்தார் என்பது போன்ற விபரங்களையும் 1937 மார்ச் 3ஆம் திகதி சிட்னியில் இருந்து பெறப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ப்ரஸ்கேர்டலை தங்க வைப்பதற்கான ஒழுங்குகளை பிரபல தொழிற்சங்கவாதியும் அன்றைய சட்டசபை உறுப்பினருமான நடேசய்யர் மேற்கொண்டிருந்தார்.

நடேச ஐயர் ப்ரஸ்கேர்டலை தங்க வைப்பதற்காக ஹட்டன், நாவலப்பிட்டி போன்ற இடங்களில் வீடொன்றை வாடகைக்கு பெற எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றன. ப்ரஸ்கேர்டலுக்காகத்தான் என்பதை அறிந்த கொழும்பைச் சேர்ந்த டொக்டர் ஒருவர் ஹட்டனில் உள்ள தனது வீட்டை ப்ரஸ்கேர்டலுக்கு வாடகைக்கு தரமுடியாதென கூறி நடேச ஐயருக்கு செக்கை திருப்பி அனுப்பிய சம்பவமும் நிகழ்ந்தது.

ப்ரஸ்கேர்டல் நாடு திரும்பாமல் வெள்ளையர்களுக்கு எதிராக பணியாற்றிக் கொண்டிருப்பதால் அவரை மீண்டும் அழைத்து எப்படியாவது சரிகட்டி அவுஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்ப முயற்சித்த மடுல்கெலே தோட்ட நிர்வாகம் தோட்ட உரிமையாளர் சங்கத்துக்கு ஊடாக பண ஆசை காட்டி அனுப்ப முயன்றது. அதனை கேலி செய்து நிராகரித்தார் ப்ரஸ்கேர்டல். பயணச் செலவுடன் மேலதிகமாக கொடுப்பனவுகளை கொடுத்து மகிழ்ச்சியாக அவரை அனுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தன.

நடேச ஐயருடன் பணிபுரியும் சந்தர்ப்பம் அற்றுப் போன நிலையில் அப்போது தொழிற்சங்கமாகவும், கட்சியாகவும் அப்போது தீவிரம் பெற்றுவந்த லங்கா சமசமாஜக் கட்சியில் ப்ரஸ்கேர்டல்  இணைந்தார்.

இடதுசாரித்தளைவர்கள்:
பிலிப் குணவர்தன, என்.எம்.பெரேரா, லெஸ்லி குணவர்தன, வர்ணன் குணசேகர, கொல்வின் ஆர் டி சில்வா, எட்மன்ட் சமரக்கொடி, ரொபர்ட் குணவர்தன, எஸ்.ஏ.விக்கிரமசிங்க
இடதுசாரி இயக்கத்தில்
ப்ரஸ்கேர்டலை நாட்டை விட்டு வெளியேற்ற தோட்டத் துரைமார் வெள்ளையின பொலிசாரை அணுகினர். புலனாய்வுத்துறை அவரை கண்காணிக்கத் தொடங்கியது, பின் தொடர்ந்தது, அவரை விசாரணை செய்து நாட்டை விட்டு வெளியேறும்படி நிர்பந்தித்தது. ப்ரஸ்கேர்டல் சற்றும் சளைக்காமல் ல.ச.ச.க கூட்டங்களில் தோன்றி பகிரங்கமாக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையும், சுரண்டலையும் எதிர்த்து உரையாற்றினார்.

1937 மார்ச், ஏப்ரல் மாதங்களில் கமலாதேவி சட்டோபாத்யாய (இந்தியாவிலிருந்து வந்திருந்த சுதந்திப் போராட்ட வீராங்கனை) இலங்கை விஜயம் செய்ததுடன் மொத்தம் 20 பெரும் கூட்டங்களில் நாடெங்கிலும் உரையாற்றினார். இதனை ஏற்பாடு செய்ததில் ல.ச.ச.க முக்கியமான பங்கை வகித்திருந்தது. பெரும்பாலான கூட்டங்களில் ப்ரஸ்கேர்டலும் கலந்துகொண்டார்.


ஆனால் அவர் உரையாற்றியது 04.04.1937 நாவலப்பிட்டியில் நடந்த கூட்டத்தில் தான்.  அக்கட்சியின் தலைவர் கொல்வின் ஆர்.டீ.சில்வா ப்ரஸ்கேர்டலை அறிமுகப்படுத்தி “முதற் தடவையாக ஒரு வெள்ளை இனத் தோழர் எமது கட்சியின் கட்சிக் கூட்டத்தில் பங்குகொள்கிறார்” என்றார். இலங்கையில் ப்ரஸ்கேர்டலின் முதலாவது உரை நிகழ்த்தப்பட்டது. 2000 தொழிலாளர்கள் முன்னிலையில் என்.எம்.பெரேரா, ஆகியோரும் ப்ரஸ்கேர்டலும் உரையாற்றினார்கள்.  அவரது உரை தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. அவரைத் தொடர்ந்த  புலனாய்வுப் பொலிசார் அவரது உரையைப் பற்றியும் அவரது உருவ அமைப்பு, அவரது நடத்தை என்பது பற்றி விலாவாரியாக அறிக்கையிட்டது.

நாவலப்பிட்டி உரை
இளம் ப்ரஸ்கேர்டல் ஆற்றிய உரையின் போது பல இடங்களில் சாமி... சாமீ என்று உணர்ச்சிவசப்பட்டு அழுதார்கள் தொழிலாளர்கள்.
“நீங்கள் அந்த வெள்ளை மலையினை பாருங்கள். அங்குள்ள வெள்ளை மாளிகையிலே வெள்ளையர்கள் சொகுசாக வாழ்கின்றார்கள். அவர்கள் உங்கள் இரத்தத்தினை உறிஞ்சுகின்றனர். நீங்கள் 9 மணித்தியாலம் வேலை வாங்கும் சட்டம் இருந்தபோதும் 12 மணித்தியாலங்கள் கட்டாய வேலை வாங்கப்படுகிறீர்கள். அதற்காக எந்தவித மேலதிக கொடுப்பனவும் உங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை....
தோழர்களே! சுதந்திரமும் நீதியும் நிறத்தினால் தீர்மானிக்கப்படக் கூடாது என நான் நம்புவதனால் உங்கள் பக்கத்தில் இருக்கின்றேன். என்னுடைய நண்பர்களே, நீங்கள் கறுப்பு நிறத்தோல் உடையவர்களாக இருந்தாலும் வெள்ளை இதயத்தினை கொண்டிருக்கின்றிர்கள். ஆனால் என்னுடைய நாட்டவர்களோ வெள்ளை நிறத் தோலை கொண்டிருந்தாலும் கறுப்பு சூழ்ச்சிகள் நிறைந்த உள்ளத்தினை கொண்டுள்ளனர்.
எழுங்கள் தோழர்களே எழுங்கள் உங்கள் சுதந்திரத்துக்காகவும், உரிமைக்காகவும் எழுங்கள். உங்கள் உரிமைக்காக உயிரையும் தர தயாராக இருக்கிறேன். ” என்றார்.
ப்ரஸ்கேர்டல் எச்.டி. தோமஸ் என்ற பெரிய துரையினைப் பற்றி தனது அனுபவத்தை இப்படி கூறுகிறார். "எச். டி. தோமஸ் தன்னுடைய வேலையாட்களை கடுமையாக நடத்தினார். தொழிலாளர்களின் லயக்காம்பிராக்களுக்கு சென்று அவர்களை வேலைக்கு செல்லும் படி வற்புறுத்தினார். பல தொழிலாளர்கள் மலேரியா நோயினால் வருந்திய போதும் அவர்களை தேயிலை பறிக்கும் படி கூறினார். மேலும் அவர் தோட்ட பாடசாலைக்குச் சென்று சிறுவர்களையும் தேயிலை பறிக்க செல்லும் படி கட்டாயப்படுத்தினர். அவர்கள் படிப்பதைவிட தேயிலை பறிப்பதே நல்லது என்றார். எழுத வாசிக்க அவர்கள் படிப்பதானது; பின்னர் அவர்களுக்கு அவர்களுடைய வாழ்நிலையைப்பற்றிய சிந்தனையினை தந்துவிடும்.

நாடுகடத்தும் உத்தரவு
அந்த நீண்ட உரையை விலாவாரியாக அன்றைய புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை எடுத்து அனுப்பினர். இதனை ஆதாரமாக வைத்துத் தான் அன்றைய ஆளுநர் எட்வர்ட் ஸ்டப்சை (Sir Edward Stubbs) ப்ரஸ்கேர்டலை வெளியேற்றும் ஆணையைப் பிறப்பிக்கும்படி உதவி பொலிஸ் மா அதிபர் பெர்கியுசன் பிரதம செயலாளருக்கு அனுப்புமுன் உள்துறை அமைச்சருக்கு அனுப்ப முடிவு செய்தார். அதன்படி உள்துறை அமைச்சர் சேர் பாரன் ஜெயதிலக்கவுக்கு அனுப்பிய அறிக்கையில் 1896 ஆம் ஆண்டின் அரசவைப் பிரகடனத்தின் 3 வது பிரிவின் கீழ் அவரை நாடு கடத்த ஏதுவான காரணங்களை விளக்கி நாட்டின் அமைதியைக் கருத்திற்கொண்டு நாடு கடத்தவேண்டும் என்று தான் கருதுவதாகவும் முடியுமானவரை விரைவில் பிரதம செயலாளருக்கு அவற்றை கிடைக்கச் செய்யும்படி பரிதுரைப்பதாக கூறினார்.

இந்த அறிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்த ஆளுநர் ஆர்.ஏ.ஸ்டப்ஸ் 1937 ஏப்ரல் 20 அன்று ஒரு ஆணையை பிறப்பித்தார்.
“மறைந்த விக்டோரியா மகாராணியினால் அரச சபையில் 1896 ஒக்டோபர் 26 பிறப்பித்திருந்த ஆணையின் 3வது பிரிவின் 3வது சரத்தின் பிரகாரம் எனக்கு அளிக்கப்பட அதிகாரத்தின் படி ஆளுநரான நான் மார்க் அந்தனி லிஸ்டர் ப்ரஸ்கேர்டலாகிய உம்மை 24  ஏப்ரல் 1937 அன்று மாலை 6க்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறும்படி இத்தால் ஆணையிடுகிறேன்.”
21.04.1937 – நுவரெலியா
ஆர்.ஈ.ஸ்டப்ஸ் – ஆளுநர்

இந்த ஆணை ப்ரஸ்கேர்டலிடம் 21ஆம் திகதியன்றே ஒப்படைக்கப்பட்டுவிட்டது. 

ப்ரஸ்கேர்டல் தலைமறைவு
இந்த ஆணையை மீறுவது என்று லங்கா சம சமாஜக் கட்சி தீர்மானித்தது. அதன் தலைவர்கள் லண்டனில் சட்டம் கற்ற நிபுணர்களாக இருந்தனர். இந்த அநீதியை எதிர்த்து மக்கள் முன் பிரச்சாரமாக முன்னெடுப்பது என்றும் அடுத்ததாக சட்ட ரீதியில் அணுகுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


இந்த ஆணை 21ஆம் திகதி ப்ரஸ்கேர்டலிடம் சேர்க்கப்பட்டது. 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் பெர்கியுசனை சந்தித்து உரையாடியபோது தான் இந்த ஆணையை நிராகரித்தால் என்ன ஆகும்” என்று வினவினார். உடனடியாக கைது செய்யபடுவீர்கள் என்று பெர்கியுசன் கூறினார். அங்கிருந்து வெளியேறிய ப்ரஸ்கேர்டலை புலனாய்வுப் பிரிவினர் இரகசியமாக பின்தொடர்ந்து கொண்டே இருந்தனர்.

ஏப்ரல் 24 அன்று அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட இருந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்தது. அவரை ப்ரஸ்கேர்டலை வழியனுப்புவதற்காக கூடியிருந்த பெருமளவு மக்கள் அவருக்காக கோஷமெழுப்பியபடி இருந்தனர். மாலை 6.20க்கு அக்கப்பல் புறப்பட்டது ப்ரஸ்கேர்டல் அங்கு வரவேயில்லை. அனைவரும் களைந்து சென்றனர். ப்ரஸ்கேர்டலை கைது செய்வதற்கான ஆணையை ஆளுநரிடம் பெற்றுக்கொண்டார் பெர்கியுசன். ப்ரஸ்கேர்டலை தேடிக்கொண்டிருந்தார்கள்.

இதன் காரணமாக ப்ரஸ்கேர்டலை சமசமாஜித் தலைவர்கள் தலைமறைவாக பாதுகாத்தனர். நாடு கடத்துவதற்கு எதிராகவும் பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். மே தினத்தின் போது பிரதான தொனிப்பொருளாக “ப்ரஸ்கேர்டலை நாடு கடத்தாதே. எங்களுக்கு வேண்டும் ப்ரஸ்கேர்டல்” என்கிற கோஷம் அமைந்தது.
"தோழர் ப்ரஸ்கேர்டல் ஐம்பதினாயிரம் மக்கள் மத்தியில் தோன்றினார்."
(சமசமாஜ பத்திரிகையின் தலைப்புச் செய்தியில்)

ப்ரஸ்கேர்டலை நாடு கடத்துவதற்கு எதிராக  மே 5 ஆம் திகதி காலி முகத்திடலில் மாபெரும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கூட்டத்திற்கு ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரள் அப்போது கலந்துகொண்டார்கள் என பதிவானது. அந்தக் கூட்டத்தில் பெரும் கரகோசத்துடன் ப்ரஸ்கேர்டல் திடீரென மக்கள் முன் தோன்றி ஏகாதிபத்தியத்துக்கும், தோட்டத் துரைமார்களுக்கும் எதிராக உணர்ச்சி ததும்ப உரையாற்றிவிட்டு பொலிசாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பத்திரமாக மீண்டும் அங்கிருந்து மறைந்து தலைமறைவானார்.

பல தலைவர்கள் கலந்து கொண்டார்கள். ஜோர்ஜ் ஆர்.டீ.சில்வா, என்.எம்.பெரேரா, ஏ.ஈ.குணசிங்க, டீ.எம்.ராஜபக்ஷ, எஸ்.டபிள்யு.ஆர்.டீ பண்டாரநாயக்க, உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ஹன்டி பேரின்பநாயகம் மற்றும் மீனாட்சியம்மாள் நடேசய்யர் இந்தக் கூட்டத்தில் தமிழில் உரையாற்றியிருந்தனர்.

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் துரோகம்
மே மாதம் 4, 5 ஆகிய இரு நாட்கள் அரசாங்க சபையில் ப்ரஸ்கேர்டலை நாடு கடத்துவது பற்றிய ஆணை குறித்து விவாதம் இடம்பெற்றது. இந்த முழு விவாதமும் ல.ச.ச.க வெளியிட்ட “ப்ரஸ்கேர்டல் விவகாரம்” (The Bracegirdle Affair) என்கிற 576 பக்கங்களைக் கொண்ட ஆவணத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அந்த நூலில் ப்ரஸ்கேர்டல் விவகாரம் தொடர்பாக அரசாங்க உயர்மட்டங்களில் பரிமாறப்பட்ட கடிதங்கள், ஆவணங்கள், அரசாங்க சபை விவாதங்கள், அறிக்கைகள், அன்றைய பத்திரிகை செய்திகள், வழக்கு விபரங்கள், தீர்ப்பு, விசாரணைக்குழு அறிக்கை என அத்தனையும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

ஜீ.ஜீ.பொன்னம்பலம்
அரசாங்க சபையில் காரசாரமாக நடந்த இந்த விவாதத்தின் இறுதியில் நாடுகடத்துவதற்கு எதிராக 34 பேரும் நாடுகடத்துவதற்கு ஆதரவாக 7 பெரும் வாக்களித்தார்கள். 27 வாக்குகளினால் அரசாங்கத்தின் அந்த ஆணை தோற்கடிக்கப்பட்டது. ப்ரஸ்கேர்டலை நாடுகடத்தவேண்டும் என்று வாக்களித்த 7 கயவர்களில் ஒருவர் ஜி.ஜி.பொன்னம்பலம் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் 1939இல் நாவலப்பிட்டியில் ஜி.ஜி.பொன்னம்பலம் பேசிய பேச்சால் உருவான இனக்கலவரமும் அதனால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய கதை இன்னொரு உபகதை.

ப்ரஸ்கேர்டலை நாடுகடத்தக் கூடாது என்ற தீர்மானத்தின் மீது நிகழ்ந்த வாக்களிப்பு.
இதற்கிடையில் இதற்கெதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு தயாரான நிலையில் இருந்தது ல.ச.ச.க. மே 7 அன்று புதுக்கடை வழக்கறிஞர் காரியாலயத்தில் ப்ரஸ்கேர்டல் கைதாவதற்கு ஏதுவாக தயாராக இருந்தார்கள். எதிர்பார்த்தபடி அன்று மாலை ப்ரஸ்கேர்டலை பொலிசார் கைது செய்தார்கள். சில நாட்கள் தலைமறைவு வாழ்க்கையின் பின்னர் ஆட்கொணர் எழுத்தாணை கோரி இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ப்ரஸ்கேர்டல் கைது செய்யப்பட்டார் என்பதைவிட தன்னை கைது செய்ய வழிவிட்டார் என்றே கூறவேண்டும். ல.ச.ச.க அவரை விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கை எடுத்தது. ஹேபியஸ் கோபஸ் வழக்கு தொடரப்பட்டது. கைது செய்யும்போது அவரை கைது செய்வதற்கான பிடியாணை ஏற்கெனவே 10 நாட்களைக் கடந்திருந்தது. இந்த இடைக்காலத்தில் ப்ரஸ்கேர்டல் பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்தார்.

“ப்ரஸ்கேர்டல் வழக்கு”
ஆளுநர் ஸ்டப்ஸின் உத்தரவுக்கு எதிரான மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் ல.ச.ச.க செயலாளரும் பிரபல வழக்கறிஞருமான வேர்ணன் குணசேகர. அந்த மனுவில் சட்ட மீறல்களை வரிசைப்படுத்தியிருந்தார் அவர். 

இந்த வழக்கு Abrahams, C. (பிரதம நீதியரசர்) Maartensz. Soert S.J ஆகிய நீதியரசர்கள் அப்போதிருந்த சட்ட நிலைமைகளை கவனமாக ஆய்வு செய்ததன் பின்னர் அவருக்கு இருக்கும் கருத்து கூறும் உரிமையினை குறிப்பிட்டு ப்ரஸ்கேர்டலின் கைதும் அவரை நாட்டில் இருந்து வெளியேற்றுவதற்கான கவர்னரின் கட்டளையும் சட்டமுரணானது எனத் 18.05.1937 அன்று தீர்ப்பளித்து சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ப்ரஸ்கேர்டலை  உடனடியாக விடுவிக்கும்படியும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆளுநரின் உத்தரவு சட்ட விரோதமானது என்றும், ப்ரஸ்கேர்டலை நாடுகடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட சட்ட விதிகள் யுத்த காலத்திலோ அல்லது முழு நாடும் கிளர்ச்சிச் சூழலுக்குள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டியவை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒருவரை நாடு கடத்தும் அதிகாரம் அவசரகால நிலைமையின் போது மட்டும்தான் ஆளுநருக்கு முடியும். அப்படிப்பட்ட ஒரு நிலை இராணுவ சட்டம் அமுலில் இருக்கும்போதோ உள்நாட்டு நெருக்கடி வரும்போது தான் ஏற்படுகிறது. 1937 ஏப்ரல் 20 அன்று பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு அப்படிப்பட்ட ஒரு நிலையின் கீழ் பிறபிக்கப்பட்ட ஒன்றில்லை. 

மேலும், ப்ரஸ்கேர்டலை நாடுகடத்துவதற்கான காரணம் மக்கள் நலனுக்காகவே என்பது இங்கு சம்பந்தமில்லாதது என்றும், அப்படியும் ஒரு வெளிநாட்டவர் என்றால் அது தீர்க்கப்படவேண்டியது 1917ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க வெளிநாட்டவர் விசாரணைச் சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழேயே. ஆனால் ப்ரஸ்கேர்டல் ஒரு வெளிநாட்டவர் அல்லர். அவர் ஒரு பிரித்தானிய பிரஜை என்கிற அடிப்படையிலேயே அணுகியிருக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

இந்தத் தீர்ப்பின் விளைவாக ஒரு வரலாற்று நிகழ்வும் நீதித்துறையில் நிகழ்ந்தது. அதாவது 1896 ஆம் ஆண்டு மகாராணியின் ஆணையான “நாடுகடத்துவது தொடர்பில் ஆளுநருக்கு இருந்த அதிகாரம்” சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதுடன் இந்தத் தீர்ப்பின் பின்னர் அந்த சட்டம் நீக்கப்பட்டது.

கூடவே இன்ஸ்பெக்டர் ஜெனரல் பீ.என்.பேங்க்ஸ் பதவியில் இருந்த நீக்கப்பட வேண்டும் என்று அரச சபையில் பிலிப் குணவர்த்தன கொண்டு வந்த பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜூலை 30 அன்று அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்புத் தோல்வி, அரசாங்க சபையிலும் பிரேரணை தோற்கடிப்பட்டமை என்பவற்றால் ப்ரஸ்கேர்டலை நாடுகடத்தும் உத்தரவுக்கு கையெழுத்திட்ட ஆளுநர் ஸ்டப்ஸ் பதவிதுறந்து ஜூன் 30 நாட்டை விட்டு வெளியேறினார்.

ஜூலை 12 அன்று பிரதி செயலாளரிடமிருந்து ஒரு கடிதம் ப்ரஸ்கேர்டலுக்கு அனுப்பப்பட்டது. அதன்படி “உங்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்த பிரயாண அனுமதிப் பத்திரம் காலாவதியாகிவிட்டது. அவுஸ்திரேலியாவுக்கோ அல்லது இங்கிலாந்துக்கோ பயணிக்கத் தேவையேற்படின் பிரயாண அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்துத் தருவதற்கு பிரதம செயலாளர் காரியாலயத்துக்கு வாருங்கள்” என்று இருந்தது.

ஆனால் ப்ரஸ்கேர்டல் அவுஸ்திரேலியாவுக்கோ, இங்கிலாந்துக்கோ புறப்படவில்லை. மாறாக சமசமாஜக் கட்சியுடன் சேர்ந்து நாடளாவிய அரசியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்தினார்.

ஆணைக்குழுவின் தோல்வி
இதே வேளை அரசாங்க சபை விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் பாரன் ஜயதிலக்க இந்த நாடு கடத்தும் உத்தரவு பற்றி எதுவும் தனக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இதனை விசாரணை செய்வதற்காக 23.11.1937 அன்று பிரதம நீதியரசர் சேர் சிட்னி ஏப்ரகாம் தலைமையிலான ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. சரியாக ஒரு வருடம் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. 01.11.1938 அன்று “ப்ரஸ்கேர்டல் ஆணைக்குழு” பற்றிய தனது அறிக்கையை வெளியிட்டது.

அந்த ஆணைக்குழு அறிக்கையின் மீதான விவாதம் அரசாங்க சபையில் 1938 நவம்பர் 22,23,29,30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய திகதிகளில் நடந்தது. அதில் உரையாற்றிய பிலிப் குணவர்த்தன இது தவறை மூடிமறைக்கும் பிழையான ஆவணம் இது என்றார்.

டிசம்பர் 1 அன்று இந்த ஆணைக்குழு அறிக்கையை கண்டிப்பதாவும், நிராகரிப்பதாகவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 34 பெரும் எதிராக 14 பேரும் வாக்களித்தனர். இருவர் நடுநிலை வகித்தனர்.

ஆங்கிலேய அரசு தன்னை நியாயப்படுத்த இந்த ஆணைக்குழுவைப் பயன்படுத்த முயன்றது. ப்ரஸ்கேர்டலுக்கு விடயத்தில் இழைக்கப்பட்ட அநீதியில் சந்தேகம் எழுப்பப்படவில்லை. அதேவேளை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பேங்க்ஸ்ஸின் பதவி நீக்கம் சரியானது தானா? உள்துறை அமைச்சர் பாரன் ஜயதிலக்கவின் பாத்திரம் பற்றியதாகவே விவாதங்கள் தொடர்ந்தன. பிரித்தானிய அரசுக்கு ஆதரவாக பாரன் ஜயதிலக்கவின் சாட்சியங்கள் அமையாததால் அவரை பொய்யராக்கவே ஆணைக்குழுவும், ஆட்சியாளர்களும் முயற்சி செய்தனர்.

சேர் பாரன் ஜயதிலக்க அப்போது சிங்கள மகா சபையின் பிரதிநிதியாக இருந்தார். சிங்கள மகா சபையின் சார்பில் அமைச்சரவையில் அங்கம் வகித்த பாரன் ஜயதிலக்க உட்பட அனைவரும் அமைச்சரவையில் இருந்து விழ வேண்டும் என்று டெசம்பர் 8 அன்று தீர்மானம் நிறைவேற்றியது. அதே போன்ற ஒரு தீர்மானத்தை இலங்கை தேசிய காங்கிரசும் தீர்மானம் நிறைவேற்றியது.

ஆணைக்குழு அறிக்கை சவ ஊர்வலமாக
ஏ.ஈ.குனசிங்கவின் தலைமையில் ஹேமபால முனிதாசவின் ஏற்பாட்டில் கொழும்பு டவர் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பாரன் ஜயதிலக்க மற்றும் அமைச்சரவையின் மீது நம்பிக்கை தெரிவிக்குமுகமாகவும், “ப்ரஸ்கேர்டல் ஆணைக்குழு அறிக்கையை” கண்டிக்கும் யோசனையும் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டத்தின் இறுதியில் ஒரு சவப்பெட்டியில் வைக்கப்பட்ட “ப்ரஸ்கேர்டல் அறிக்கையை” வைத்து ஏ.ஈ.குணசிங்க மற்றும் முனிதாச ஆகியோர் ஊர்வலமாக அங்கிருந்து தூக்கிச் சென்றனர். அந்த சவ ஊர்வலத்துக்கு “தொழிலாளர் வாத்தியக் குழு” சவ வாத்தியம் இசைத்தபடி கொம்பனி வீதியினூடாக காலி முகத் திடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு அந்த மைதானத்தில் சிறிது நேரம் வைத்து இருந்து, பலரது உரையின் பின்னர் அந்த “ப்ரஸ்கேர்டல் ஆணைக்குழு அறிக்கை”யை ஏந்திய சவப்பெட்டியை கடலில் அனுப்பி வைத்தனர்.

ப்ரஸ்கேர்டல் இலங்கையின் வரலாற்றில் மறக்க முடியாத, தவிர்க்க முடியாத பாத்திரம். ப்ரஸ்கேர்டல் சம்பவம் இலங்கையின் சட்ட, ஆட்சி, நிர்வாக விடயத்தில் மாத்திரம் அதிர்வை உருவாக்கவில்லை. கூடவே இலங்கையின் இடதுசாரி எழுச்சிக்கும் பெரிதும் வித்திட்டது. தொழிலாளர் வர்க்கத்துக்கு புத்துயிர்ப்பைத் தந்து இடதுசாரி வேலைத்திட்டத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தியது. மேலும் இலங்கையின் சுதந்திரக் கோரிக்கைக்கான உந்துதலையும் சூழலையும் கூட உருவாக்குவதில் இந்த சம்பவம் பெரும் வகிபாகத்தைக் கொடுத்தது.

பிரஸ்கேர்டல் 84 வது வயதில் - “The Bracegirdle Affaire” நூலிலிருந்து
ப்ரஸ்கேர்டல் ஆணைக்குழு அறிக்கை வெளிவந்த வேளை ப்ரஸ்கேர்டல் நாட்டில் இருக்கவில்லை. 31.10.1937 அவர் நாட்டிலிருந்து நிரபராதியாகவே Ander Labon எனும் கப்பலில் நாட்டை விட்டு  வெளியேறினார். அவர் அவுஸ்திரேலிய செல்லவில்லை அதே தான் பிறந்த அதே இங்கிலாந்துக்குச் சென்று அங்குள்ள கொம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தனது போராட்டங்களை முன்னெடுத்தார். தொல்லியல் துறையில் கற்று லண்டன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையாகி பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்தார். 22.06.1999 அன்று 87 வது வயதில் மரணமானார்.

இலங்கையை விட்டு அவர் வெளியேறுமுன் இலங்கை தொழிலாளர் வர்க்கத்துக்கு அவர் எழுதிய கடிதத்தை “சமசமாஜ” பத்திரிகை 05.11.1937 அன்று வெளியிட்டது. கடிதத்தின் இப்படி முடிக்கப்பட்டிருந்தது.

இலங்கை தொழிலாளர் வர்க்கத்தின் நிலையை ஆங்கிலேய தொழிலாளர் வர்க்கத்துக்கு விளங்கப்படுத்துவேன். ஆங்கில தொழிலாளர் வர்க்கத்தின் ஆதரவை உங்களுக்கு கிடைக்கச் செய்ய இங்கிலாந்து சென்று நான் சகல விதத்திலும் பாடுபடுவேன். உலகத் தொழிலாளர் வர்க்கத்தையும் இலங்கை தொழிலாளர் உலகையும் இணைத்து பணியாற்ற திடசங்கற்பம் கொள்வோம்!
இலங்கை தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!ஏகாதிபத்தியத்தை ஒழிப்போம்!
உலகத் தொழிலாளர் வர்க்கத்தை ஆட்சியிலமர்த்துவோம்!

உசாத்துணை
  1. “The Bracegirdle Affair”  by Wesley S.Muthiah and Sydney Wanasinghe - AYoung Socialist Publications, Colombo -1997 page 1998.
  2. The rise of the labor movement in Ceylon. Author, Kumari Jayawardena. Publisher, Duke University Press, 1972
  3. ලාංකේය නිදහස් සටනේ කතා පුවතක් - බ්‍රේස්‌ගර්ඩ්ල් - නිමල් හොරණ -Godage Publication ,1967
  4. බ්‍රේස්‌ ගර්ඩ්ල් සහ ගෝවින්දන් - මලල්ගොඩ බන්ධුතිලක - Lahiru Publication, 2001
  5. Bracegirdle: The Young Anglo-Australian Behind Sri Lanka’s Independence Struggle, Vinod Moonesinghe
  6. The Bracegirdle Saga: 60 Years After - T. Perera
  7. The Bracegirdle Incident By Laksiri Fernando –
  8. http://www.namathumalayagam.com/2016/11/1915-57.html


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates