Headlines News :
முகப்பு » » மலையகத் தமிழர் தம்மை "கண்டித் தமிழர்" என அடையாளப்படுத்திக் கொள்ளலாமா? – பெ.முத்துலிங்கம்

மலையகத் தமிழர் தம்மை "கண்டித் தமிழர்" என அடையாளப்படுத்திக் கொள்ளலாமா? – பெ.முத்துலிங்கம்


அண்மைய இந்திய வம்சாவழியினரான மலையக மக்களை “கண்டியத் தமிழர்” என அழைத்துக்கொள்ளுங்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். இதனையடுத்து, இதுதொடர்பாக இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புக்கள் பற்றி இக்கட்டுரையாளர் தனது மனப்பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

தனித்துவ வரலாறு மற்றும் கலாசாரத் தைக் கொண்ட தமிழ் மக்களாக தென்னிலங்கையில் வாழும் அண்மைய இந்திய வம்சாவளியினரே ஜூலைக் கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஜூலைக் கல ஒவரத்தின் பின்னர் தோன்றிய அரசியல் சூழல் அண்மைய இந்திய வம்சாவளித் தமிழர் தம்மை எவ்வாறு அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற பிரச்சினையைத் தோற்றுவித்தது. ஜூலைக் கலவரத்தின் பின்னர் நவம்பர் மாதத்தில் மறைந்த தோழர் ஏ. இளஞ்செழியன் தலைமையில் கட்டுரையாளர் உட்பட மறைந்த தோழர் ஓ.ஏ. இராமையா உள்ளிட்ட பலர் ஒன்றுகூடி இந்திய வம்சாவளி மலையகத் தமிழரின் தனித்துவ அடையாளத்தை வெளிப்படுத்தவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

அச்சந்தர்ப்பத்தில் ஓ.ஏ. இராமையா எம்மை இந்திய வம்சாவளி தமிழர் என அடையாளப்படுத்துவதே சரியெனக்கூறினார். அவ்வாறு செய்வதன் மூலமே இலங்கை வாழ் அனைத்து இந்திய வம்சாவளியினரையும் பாதுகாக்கவும் ஒன்றிணைக்கவும் அதேவேளை இந்தியாவின் ஆதரவினையும் பெறமுடியும் எனக்கூறினார். கட்டுரையாளர் மற்றும் இளஞ்செழியன் ஆகியோர் மலையகத் தமிழர் என அடையாளப்படுவதே சரியெனக் கூறினர். ஈற்றில் ஏனைய தோழர்களின் கருத்திற்கமைய இந்திய வம்சாவளி என்ற அடையாளத்தை ஏற்று இந்திய வம்சாவளி முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இப்பின்புலத்தில் 1984ஆம் ஆண்டு முதல் 1988 ஆண்டு வரை கட்டுரையாள ருக்கு இலங்கையை விட்டகழ நேர்ந்தது. 1989ஆம் ஆண்டு மீண்டும் அவர் இலங்கையை வந்தடைந்து தோழர் இளஞ்செழியனுடன் இணைந்து செயற்பட வாய்ப்பேற்பட்டது. இந்நிலையில் 1989ஆம் ஆண்டு தனித்துவம் பேணப்படவேண்டும் என்ற தலைப்பில் கட்டுரையாளர் வீரகேசரியில் கட்டுரை எழுதியதனூடாக இக்கருத்தாடல் மீண்டும் முன்னெடுக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் மனோகணேசன் அதில் இணைந்துகொண்டார்.

இக்காலக்கட்டத்தில் இடதுசாரி தலைவர்களை சந்தித்து மலையக மக்களின் அடையாளப் பிரச்சினை முன்வைக்கப்பட்டது. அவ்வாறு ஒரு சந்தர்ப்பத்தில் கட்டுரையாளர் உள்ளடங்கலாக மனோகணேசன், இளஞ்செழியன், சாந்தகுமார் உள்ளிட்டோர் விக்கிரமபாகுவை அவரது பணிமனையில் சந்தித்து அடையாளப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

அச்சந்தர்ப்பத்தில் விக்கிரமபாகு மலையகத் தமிழர் என்று அழைப்பதற்கு பதிலாக நீங்கள் உங்களை கண்டியத் தமிழராக அடையாளப்படுத்துங்கள் எனக் கூறினார். இலங்கையில் கரையோர சிங்களவர், கண்டிய சிங்களவர் என சிங்களவருக்கு இரு அடையாளங்கள் உண்டு. அதேபோல சிங்களவர் என்ற பொது அடையாளமும் ஆகும் என்றார். அதேபோல் யாழ்ப்பாணத் தமிழர், கண்டித் தமிழர் எனும் இரு அடையாளங்களும் இலங்கைத் தமிழர் எனும் பொது அடையாளமும் தமிழருக்கு இருக்கலாமே எனக்கூறினார். அக்கருத்தினைக்கேட்ட அனைவரும் யோசிக்கலாம் எனக் கூறினர்.

இன்று ஜனாதிபதி மஹிந்தவும் அக்கருத்தினை முன்வைத்துள்ளமை ஒருபுறமிருக்க, நாட்டிலும் குறிப்பாக, மலையக மக்கள் மத்தியில் தோன்றியுள்ள மனோரீதியான வளர்ச்சி நிலையை நோக்குகையில் ஏன் அண்மைய இந்திய வம்சாவழியினரான மலையக மக்கள் தம்மை கண்டியத் தமிழராக அடையாளப்படுத்தக் கூடாது என்ற கேள்வி எழுகின்றது.

இன்று மலைநாட்டு தோட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் 1824ஆம் ஆண்டி ற்குப்பின்னர் வந்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்டிருந்த போதிலும் 1815இல் பிரித்தானியர் கண்டியை கைப்பற்ற முன்னேரே கண்டி இராச்சியத் தில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். பிரித்தானியர் கண்டியை கைப்பற்ற முன்னர் தொடர்ச்சியாக 74 நான்கு ஆண்டுகள் இந்திய தமிழரே (தமிழ் பேசும் தெலு ங்கர்) கண்டி இராச்சியத்தை ஆட்சி செய்துள்ளனர். கண்டி கைப்பற்றப்பட்ட பின் பிரித்தானியருடன் செய்துகொண்ட கண்டி ஒப்பந்தத்தில் கண்டிய திசாவைகளில் (பிராந்திய ஆட்சியாளர்கள்) ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் தமிழிலேயே கையொப்பமிட்டுள்ளனர்.

மேலும் பொலன்னறுவை யுகத்தில் சோழ மன்னர்களே ஆட்சி செய்துள்ளனர். அவ்வாறாயின், இன்றைய மலைநாட்டுத் தமிழர்களில் பெரும்பான்மையோர் பிரித்தானியர்களால் கொண்டுவரப்பட்டாலும் இந்தியத் தமிழர்கள் இம்மண்ணில் வாழ்ந்தும் ஆட்சி செய்தும் உள்ளனர். இவ்வகையில் கண்டியத் தமிழராக தென்னிந்தியத் தமிழர் வாழ்ந்துள்ளனர். ஆட்சி செய்துள்ளனர். 74 வருடம் ஆட்சி செய்த கண்டி மன்னர்களின் மனைவியரும் உறவினர்களும் தமிழராகவே இருந்துள்ளனர். அப்படியாயின் அம்மரபுரிமையை ஏன் அண்மைய இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் தமதாக்கிக் கொள்ள முடியாது.

கண்டி கைப்பற்றப்பட்டப் பின்னர் பிரி த்தானியருக்கெதிராக ஊவா பிரதேசத்தில் மேற்கொண்ட கிளர்ச்சியின்போது சிங்களவர்கள் கண்டிய மன்னன் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனின் உறவினர்கள் என்று கூறியே சிங்கள மக்களை அணிதிரட்டி னர். எனவே கண்டித் தமிழர் எனின் சிங்களவரும் எம்மை வேறுபடுத்தி பார்க்க முடியாது.இந்தியானு தெமழ (இந்தியத் தமிழர்) என சிங்களத்தில் கூறும் போது சிங்களவர் இன்றும் எம்மை அந்நியர் என்றே கருதுகின்றனர். இந்தியானு தெமழ (இந்தியத் தமிழர்) என்ற இச்சொற்பதம் தொடர்ந்து பிரயோகிக்கப்படுமாயின், இன்றைய தலைமுறையினர் மட் டுமல்லாது அடுத்த சிங்களத் தலைமுறை யினரும் எம்மை அந்நியர் எனக்கருத நேரி டும். அதேவேளை மலையக மக்கள் மத்தியிலும் அந்நியமாதல் ஏற்படலாம்.

2011ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட் டின் போது மலையகத் தமிழர் தம்மை இந்தியத் தமிழர் என அடையாளப்படுத்தவேண்டும் என மலையகத்தின் அனை த்து கட்சிகளும் சிவில் அமைப்புகளும் மலையக மக்களுக்கு அழைப்பு விடுத்தன. ஆனால் இக்கருத்தொருமித்த வேண்டுகோளை புறக்கணித்த மலையகத்தின் படித்த பிரிவினர் தம்மை இலங்கைத்தமிழர் என்றே பதிவு செய்துள்ளனர். இதேவேளை குடிசன மதிப்பீட்டுக் கணிப்பு உத்தியோகத்தர்களான சிங்களவரும் தமிழரும் மலையகத் தமிழர்களை இலங்கைத் தமிழர் என்றே பதிவு செய்துள்ளனர். தமிழ் உத்தியோகத்தர் அனைவரும் மலையகத் தமிழர்களாவர். எனவே இம்மனோ நிலை வளர்ச்சியை கருத்திற்கொள்வோமாயின் மலையகத்தமிழர் என்ற அடையாளத்தைவிட கண்டியத் தமிழர் என்ற அடையாளம் ஏற்புடையதாக அமைய லாம்.

ஏனெனில் மலையகத் தமிழர் எனும்போது இந்தியாவிற்போல் மலைவாழ் மக்களாக அடையாளப்படுத்துவதாக சிலர் கருதுகின்றனர். அதனை சிங்களத்தில் கூறும் போது மேலும் கொச்சைப்படுத்துவதாக உணர்கின்றனர். ஆகையால் மனோரீதியான கணிப்பினை கருத்திற்கொள்கை யில் கண்டியத் தழிழர் எனக் கூறின் அது தாழ்வான மனோபாவத்தை ஏற்படுத்தாது என்றே தோன்றுகின்றது. அடுத்த குடிசன மதிப்பீட்டின்போது இலங்கைத் தமிழர் என்று பதிவு செய்தல் மேலும் அதிகரிக்கலாம்.

இனிவரும் மலையகத் தலைமுறையினர் தம்மை இந்தியத் தமிழராக அடையாளம் காட்ட விரும்பமாட்டார்கள் என்பதையே குடிசன மதிப்பீட்டு தகவல் வெளிப்படு த்தி நிற்கின்றது. இந்தியத் தமிழர் எனக்கூறுகையில் தாம் இந்நாட்டு மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதாக உணர்கின் றனர். அதேவேளை, சிங்களவர்களும் இந்தியத் தமிழர் என்று கூறுகையில் இவர்கள் எம்நாட்டவர் இல்லை என்ற மனோநிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆகையால் இருநூறு வருட வரலாற்றை அண்மிக்கும் அண்மைய இந்திய வம்சா வளி மக்கள் கண்டியத் தமிழர் என்ற அடையாளத்தை ஏற்றுக்கொள்வது யதார் த்தமாகத் தோன்றுகின்றது.

எவ்வாறு வடகிழக்குத் தமிழர்களை பொதுவில் இலங்கைத் தமிழர், ஈழத் தமிழர் என்றும் சிறப்பாக யாழ்ப்பா ணத் தமிழர் என்றும் அடையாளப்படுத் தபடுகின்றனரோ அவ்வாறே மலை நாட்டுப்பகுதியில் வாழும் அனைத்து தமிழர்களும் பொதுவில் இலங்கைத் தமிழர், ஈழத்தமிழர் எனவும் சிறப்பாக கண்டித் தமிழர் என்றும் அடையாளப் படுத்த முடியும். மறுபுறம் இந்தியாவும் யாழ்ப்பாணத் தமிழர் என்றால் வட கிழக்கு வாழ் தமிழர் என்றும் கண்டியத் தமிழர் என்றால் தென்னிலங்கை வாழ் தமிழர் என்றும் அடையாளம் காணலாம். இக்கருத்துருவாக்கம் விவாதத்திற்குரிய தும் மலையக அறிவுஜீவிகள் இக்கரு த்து நிலைபால் அக்கறை செலுத்துவதும் அவசியமாகும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates