Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

பாட நூலை மாற்றவைத்த தோழர் லெனின் மதிவானம் - என்.சரவணன்


இலங்கை அரசாங்கத்தின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட “தமிழ் இலக்கியத் தொகுப்பு தரம் 10-11” என்கிற பாடசாலைகளுக்கான பாடநூலில் கண்டதை ஒரு பெரியவர் எனது வீட்டுக்கு வந்து தனது வேதனையைத் தெரிவித்தார். அந்த நூலின் போட்டோ பிரதியொன்றைக் கொண்டு வந்து காட்டினார். அதில் உள்ளதைக் காட்டி பாடசாலை மாணவர்களிடமும் இப்படியான சாதிய வசவுச் சொல்களை அறிமுகப்படுத்துகிறார்களே என்று நொந்துகொண்டார். நான் அந்த மூல நூலைக் கண்டெடுத்தேன். இது நடந்தது 2012இல்.

கல்வி வெளியீட்டுத் திணைக்கள பிரதி ஆணையாளராக எனது நெருங்கிய தோழர் லெனின் மதிவானம் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவரிடம் நான் “என்ன தோழர் நீங்கள் எல்லாம் இருந்தும்கூட இப்படி நடந்திருக்கிறதே. எப்படி உங்கள் பார்வையை மீறி இது நிகழ்ந்திருக்க முடியும்” என்று அவரிடம் தொலைபேசிமூலம் ஆதங்கமாக கூறினேன்.

அவர் அந்த நூலை என்னுடன் உரையாடிக்கொண்டே பார்வையிட்டார்.

"உண்மை தான் தோழர். வீராசாமி செட்டியார் எழுதிய “ஒரு பதிவிரதையின் சரித்திரம்” என்கிற கதை தானே. அதில் ‘செருப்பு தைக்கும் சக்கிலியன்’ என்கிற ஒரு வசனம் வருகிறது ” என்றார்.

ஆம் என்றேன். நூலுருவாக்கத்தின் போது தொகுப்பாளர் குழுவுடன் எதிர்கொள்ளும் ஆதிக்க சித்தாந்த சிக்கல்களைப் பற்றி நீண்ட நேரம் உரையாடினார்.

“இதை உடனடியாக மாற்ற வேண்டும் தோழர். எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? இதை உடனடியாக செய்வதற்கு ஒரு முறைப்பாடு தேவைப்படுகிறது. உடனடியாக அப்படியொன்றை எழுதி எனக்கு இன்றே அனுப்புவீர்களா” என்றார் லெனின்.

நான் ஒரு தூரப்பயணத்தில் இருந்தேன். உடனடியாக செய்வதில் சிரமங்கள் இருந்தன. நிலைமையை விளக்கி பின்னேரத்துக்குள் அனுப்பி வைக்கிறேன் என்று விடைபெற்றேன்.

பின்னேரம் அவரிடமிருந்தே தொலைபேசி அழைப்பு வந்தது.

“தோழர்! வேறொருவரைக் கொண்டு அந்த முறைப்பாட்டை எடுத்துக்கொண்டேன். நூல் விநியோகத்தை நிறுத்திவிட்டேன். புதிய பதிப்பில் மாற்றங்களை செய்ய வழி செய்திருக்கிறேன் தோழர்.” என்றார்.

தோழர் லெனின் மதிவானம் இவ்வளவு வேகமாக இயங்கியதை அதற்கு முன் நான் கண்டதில்லை. அவரின் சமூக பிரக்ஞை தான் எங்களை இணைத்தும் வைத்திருந்தது.

அதே வருடம் ஒரு சில மாதங்களில் புதிய பதிப்பை வெளியிட்டு எனக்கும் அதன் பிரதியைக் கிடைக்கச் செய்தார். அதில் “செருப்பு தைக்கும் தொழிலாளி” என்று மாற்றப்பட்டிருந்தது.

ஆக வெகுஜன சூழலில் இலங்கையில் அனைத்து சமூகங்களின் மத்தியிலும் ஜனரஞ்சகப்படுத்தப்பட்ட தூஷண சொல் சக்கிலி என்கிற சொல். எவரையும் பயமுறுத்தக்கூடிய சொல் அது. எவரையும் புண்படுத்த பயன்படுத்தக்கூடிய ஒன்றாக வலுப்பெற்றிருக்கிறது. இழிவுணர்வை ஏற்படுத்தக்கூடியதும், யாரையும் ஆத்திரப்படுத்தக்கூடிய சொல்லும் கூட. ஜாதி, இன, மத, வர்க்க, வேறுபாடுகளையும் கடந்து அனைவரதும் ஆயுதம் சக்கிலி என்கிற ஆயுதம்.

ஒருவரையோ அல்லது ஒரு சமூகக் குழுவையோ சொல்லால் கூடியபட்சம் புண்படுத்த வேண்டுமென்றால் உச்ச  ஆயுதமாக சாதிய வசவு இருக்கிறது. இன்று அது மேலும் மேலோங்கி வளர்ந்துமிருக்கிறது.

தமது வெறுப்பையும், சகிப்பின்மையையும், ஆத்திரத்தையும், எதிர்ப்பையும் வெளிக்காட்ட இந்த சாதியச் சாடல் ஊன்றி நிலைபெற்றிருக்கிறது. ஒருவரை, அல்லது ஒரு குழுவை/குழுமத்தை உணர்வு ரீதியில் கீழிறக்கி அகமகிழ வேண்டுமென்றால் இன்று இதோ சாதி இருக்கிறது.

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த சாதிய சாடலுக்கு ஆளாபவர் சம்பந்தப்பட்ட சாதியாகவோ ஏன், ஒடுக்கப்பட்ட சாதியாகவோ கூட இருக்கவேண்டியதில்லை. யாராகவும் இருக்கலாம். ஆக எந்த ஒருவரையும் இலகுவாக உச்சபட்சமாக உணர்வுரீதியில் தாக்குதலை நிகழ்த்த வேண்டுமென்றால் அது சாதிய வசவால் தான் முடியும் என்று உயர்சாதி மனம் சொல்கிறது. இதிலும் உள்ள வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே சாதிய அவமானங்களுக்கும், சாதிய சாடலுக்கும் ஆளாகிய சாதியினர் கூட  இன்னொரு ஒடுக்கப்பட்ட சாதியின் மீது அதே அளவான வசவை நிகழ்த்துவது தான்.

சாதியச் சாடல் என்பது ஒடுக்கபட்ட சமூகம் குறித்து மோசமான ஒன்றாக புனைந்து, பரப்பி, ஜனரஞ்சகப்படுத்தி அந்த சமூகத்துக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை அதீதமாக விதைத்து வந்திருக்கிறது. நாமும் அதற்கு துணை போக வேண்டாமே.

இது பற்றிய விரிவான கட்டுரை என்.சரவணன் எழுதிய "தலித்தின் குறிப்புகள்" நூலில் வெளிவந்துள்ளது.

அமைச்சரவை அந்தஸ்தும் எம்.பி பதவிகளும் எம்மவர்களுக்கு தேவை தானா? - விக்கிரமசிங்கபுரத்தான்


எமக்கு வாக்களித்தவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே பதவிகளை பயன்படுத்துகிறோம்.

அதையும் விட்டுக்கொடுத்தால் எப்படி பேசுவது என்கிறார்கள் மலையக அரசியல்வாதிகள். சரி பதவிகளை வைத்துக்கொண்டு ஏதாவது உருப்படியாக பேசுகிறார்களா என்றால் அதுவும் இல்லை, பின்பு எதற்கு இவர்களுக்கு இந்தப் பதவிகள்? தம்மை பாராளுமன்றுக்கு தெரிவு செய்து அந்தஸ்து வழங்கிய மக்கள் கூட்டம் நடுத்தெருவில் நிற்கும் போது இவர்களுக்கு இந்தப் பதவி அந்தஸ்து தேவையா? தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் மலையகத்தின் எந்தக் கட்சிகளும் உருப்படியான யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைக்கவில்லை.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் என்ற அந்தஸ்து மட்டுமே இ.தொ.கா, தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் மற்றும் கூட்டு கமிட்டி ஆகிய மூன்று அமைப்புகளுக்கும் உள்ளன.

மற்றும் படி இவர்களால் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய எந்த தீர்க்கதரிசனங்களும் இல்லை. கேட்டால் வாக்குரிமை வாங்கித்தந்தோம் ,பெரும்பான்மையின சமூகத்தினரிடம் இருந்து இத்தனை காலமும் காப்பாற்றி வந்திருக்கிறோம் என்ற பழைய பல்லவிகளையே இவர்கள் பாடுகிறார்கள். அவர்கள் பாடாவிட்டாலும் கூட அவர்களின் தொண்டர்களும் உதவியாளர்களும் கச்சிதமாக அதை முகநூல் ஊடாக செய்து வருகின்றனர்.

அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்கிறேன், எம்.பி பதவியை விட்டு வீசுகிறேன் என்று மார்தட்டியவர்கள் இன்று தொழிலாளர்களின் முன் சென்று நிற்க முடியாது. இன்னும் அதிக வேகமாக தமது வாகனங்களால் அவர்களை கடந்து செல்கின்றனர். தொழிலாளர்களை நேருக்கு நேர் நின்று சந்திக்க முடியாத திராணியற்று மாவட்ட தலைவர்களை அழைத்து இரகசிய சந்திப்புகளை நடத்துகிறார்கள்.

முதலாளிமார் சம்மேளனம் கூறிய சம்பளத்தொகைக்கு ஒத்து வர முடியுமா? இதை தொழிலாளர்களிடம் கேட்டுச்சொல்லுங்கள் எனக் கெஞ்சுகிறார்கள். இது இப்படி என்றால் மற்றொரு பக்கம் வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

பதவியை இராஜினாமா செய்தால் தொழிலாளர்களுக்கு வீடு கிடைக்காது என்றும் தனி வீட்டுரிமை இல்லாது போய் விடும் என்றும் கூறுகிறார்கள். புதிய வீடுகள் இந்த மக்களின் பட்டினியை தீர்த்து விடுமா என்று கேட்கத்தோன்றுகிறது. எங்களுக்கு கொடுத்த பணி, வீடு கட்டிக் கொடுப்பதே. ஆகையால் அதை செய்து வருகிறோம். சம்பளத்தை வாங்கிக்கொடுப்பது அவர்களுடைய வேலை. ஆகவே அதை அவர்கள் பார்க்கட்டும் என்று சமாளிப்பது தான் இவர்களின் அரசியலா?

ஆனால், இவை எல்லாவற்றையும் ஏன் இவர்களால் பாராளுமன்றில் பேச முடியாதுள்ளது? ஒவ்வொரு வருடமும் பாராளுமன்ற அமர்வுகள் எத்தனைக்கு இவர்கள் சமுகமளித்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தாலே உண்மை வெட்ட வெளிச்சமாகி விடும்.

தமது விடிவுக்காக பிரதிநிதிகளை பாராளுமன்றுக்கு தொழிலாளர்கள் அனுப்பி வைத்தால் இவர்கள் தமது சொந்த தேவைகளுக்காக நாட்களை கடத்திக்கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினாலேயே ஒவ்வொருவரும் இன்று வெளியே வந்து தொழிலாளர்களுக்காக போராடி வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் இப்போராட்டம் வியாபித்துள்ளது. நாட்டின் எங்கோ ஒரு மூலையிலிருந்து கூட தொழிலாளர்களுக்காக குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

ஆனால், மலையகப் பிரதிநிதிகளோ ஒன்றுமே நடவாதது போன்று நாட்களை கடத்துகின்றனர்.

அநேகமாக தேர்தல் ஒன்றின் அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருந்து இந்த விவகாரத்தை தேர்தல் பிரசாரமாக்க தயாராகின்றனரோ தெரியவில்லை.

சிந்தித்துப்பார்க்கும் போது இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைமைகள் தொழிலாளர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றனரேயொழிய, இவர்களில் எத்தனை பேர் வீதியில் அமர்ந்து ஒரு போராட்டம் செய்யவோ அல்லது உண்ணா விரதத்தை ஆரம்பிக்கவோ தயார்? அல்லது எத்தனை பேர் இவர்களில் அமைச்சுப்பதவியையோ பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளையோ இராஜினாமா செய்யத்தயார்?

மக்கள் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தானது அந்த மக்களுக்கு ஆற்றிய சேவைகளை அடிப்படையாக வைத்தே பார்க்கப்படுகின்றது. என்ன தான் வாக்குரிமை பெற்றுக்கொடுத்து ,வீதிகள் அமைத்து வீடுகள் கட்டிக்கொடுத்தாலும் அடிப்படை பிரச்சினையான ஊதியப்பிரச்சினை இந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இன்னும் தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது.

இன்று நாடங்கினும் உள்ள எல்லா சமூக மக்களும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை கையிலெடுத்துள்ளனர். தாம் ஆதரவு தரும் தேசிய தலைவருக்கு வாக்களித்தால் மட்டுமே, அவரால் மட்டுமே தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்று மலையகப் பிரதிநிதிகள் நினைத்தார்களேயானால், இவர்களுக்கு எதற்கு அமைச்சுப்பதவியும் பாராளுமன்ற உறுப்புரிமையும்? பேசாமல் மக்கள் அந்த தேசிய தலைவர்களுக்கே வாக்களித்து விட்டு அவர்களையே பிரச்சினைகளை தீர்க்கும்படி கூறலாமே?. அந்தஸ்து என்பது தமது அமைச்சுப்பதவிகளிலா அல்லது தமக்கு வாக்களித்த மக்களை எங்ஙனம் அவர்கள் வைத்திருக்கின்றார்கள் என்பதிலா இருக்கின்றது என்பது குறித்து பிரதிநிதிகள் இனியேனும் சிந்திப்பார்களா?

நன்றி - வீரகேசரி

40% நிகர லாபத்தை சம்பாதிப்பவர்களால் அடிப்படை சம்பளத்தை கூட்ட ஏன் முடியாது - பீ.ஏ.காதர் (நேர்காணல்)

1000 சம்பள உயர்வு துரோகத்தில் சம்பந்தப்பட்ட சக்திகளை அம்பலப்படுத்தும் தோழர் பீ.ஏ.காதர்.

மீண்டும் பாரிய துரோகத்தை செய்யும் வகையில் கூட்டு ஒப்பந்தம் செய்யப்படக்கூடாது - இ. தம்பையா


மக்கள் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 500/= வில் இருந்து 700/=வாக உயர்த்த இருப்பதாகவும், அதற்கு அப்பால் விலைக்கேற்ற படி 50/=வும், ஓய்வுதிய கொடுப்பனவாக சட்டரீதியாக தொழில்தருநனர்களை நிர்ப்பந்திக்கும் கொடுப்பனவையும் சம்பள உயர்வு எனக் கூறி அதன் அடிப்படையில் 105/=வும், சேர்த்து நாளாந்த மொத்த சம்பளமாக 855/= என கம்பனிகளும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி என்பனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் நாளை சம்பள கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பள அதிகரிப்பை எந்த வகையிலும் பெருந்தோட்டத் தொழிலாளர் ஏற்றுக் கொள்ளப்பபோவதில்லை என்பதால் இதனை மக்கள் தொழிலாளர் சங்கம் எதிர்ப்பதுடன் அதற்கு எதிராக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. எனவே இந்தவிதமான கபடத்தனமான முன்மொழிவுகளுக்கு இசைந்து தொழிலாளர்களை ஏமாற்றலாம் என நினைத்துக் கொண்டு குறித்த தொழிற்சங்கங்கள் கையெழுத்திடுவதானது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டும் ஒரு முறை பாரிய வரலாற்று துரோகத்தை இளைப்பதாகும். அதனால் இந்த தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக்கூடாது என்பதை வலியுறுத்துவதுடன் அனைத்து தொழிலாளர்களும், தொழிலாளர்களுக்கு சார்பான அமைப்புக்களும், தனிநபர்களும் குறித்த சங்கங்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக்கூடாது என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற சம்பள சூத்திரம் மோசடியானது. ஊ.சே.நி. (EPF)/ ஊ.ந.நி. (ETF) கொடுப்பனவு 105/= மற்றும் மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவான 40/= என்பன எந்த விதத்திலும் நாட்சம்பளத்தில் அடங்குபவை அல்ல. ஊ.சே.நி. (EPF)/ ஊ.ந.நி. (ETF) என்பது ஒரு நியதிச் சட்டக் கொடுப்பனவு. இது ஒரு ஓய்வூதிய கொடுப்பனவு. இது அனைத்து தனியார் தொழிலாளர்களுக்கும் தொழில் வழங்குநர்கள் வழங்கும் நியதிச் சட்டக் கடப்பாடு. அவ்வாறான கொடுப்பனவு வேறு எந்த தொழிலாளர்களுக்கும் சம்பளம் என்று காட்டப்படுவதில்லை. அதனை சம்பளத்தில் சேர்த்து சொல்லப்படுவது வேடிக்கையானது. தொழிலாளர்கள் 2016 ஆண்டில் இருந்து 720/= மொத்த சம்பளமாக பெற்று வந்த நிலையில் இந்த இணக்கப்பாடு ஒப்பந்தமாக மாறும் போது வெறும் 30/= சம்பள அதிகரிப்பையே பெற்றுக் கொள்வார்கள். இதற்கு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் எப்படி உடன்பட முடியும்? அவர்கள் உடன்படுவார்களாயின் அது மலையக வரலாற்றில் முதன்மை துரோகம்.

வெறும் 30/= சம்பள அதிகரிப்பு என்பதை மறைக்க மொத்த சம்பளம் 855/= என கணக்கிடப்பட்டு 3 மாதங்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க பெருந்தோட்ட அமைச்சர் தேயிலைச் சபையின் (வுநய டீழயசன) நிதியில் இருந்து கம்பனிகளுக்கு சலுகை வழங்க முன்வந்துள்ளார். அதனூடாக மொத்தச் சம்பளம் 855/= என்ற ஒரு மாயையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே, மிகவும் சூட்சுமமான முறையில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கம்பனிகளாலும் அரசாங்கத்தின் தலையீட்டாலும் மறுக்கப்பட்டுள்ளது. கம்பனிகள் சம்பளத்தை எவ்வாறு குறைக்கலாம் என்ற நோக்கத்தில் தமது சம்பள சூத்திரத்தை வகுத்து அதற்கு தொழிற்சங்கங்களின் இணக்கப்பாட்டை பெற்றுள்ளதையே காண முடிகிறது. ஏற்கனவே, மொத்த சம்பளமாக 940/= வரை வழங்க கம்பனிகள் உடன்பட்டிருந்த நிலையில் வெறும் 30/= மொத்தச் சம்பள அதிகரிப்புக்கு எவ்வாறு தொழிற்சங்கங்கள் இணங்க முடியும்? இது பாரிய சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. தொழிலாளர்களின் கோரிக்கை 1000/= அடிப்படை சம்பளம். அடிப்படை சம்பளம் 700/= என்பது ஏற்றுக் கொள்ளப்படமுடியாத நிலையில் மொத்தமாகவே 30/= அதிகரிப்புடனான மொத்தச் சம்பளம் அதிகரிப்பை தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

குறித்த தொழிற்சங்கங்களுக்கு இந்த சம்பள சூத்திரத்திற்கு இணங்கும்படி அழுத்தங்கள் விதிக்கப்பட்டிருக்குமாயின் அதனை அவர்கள் மக்களுக்கு பகிரங்கப்படுத்தி மக்களின் ஒத்துழைப்புடன் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். இல்லை நாங்கள் இதய சுத்தியுடன் செய்தோம் என அத்தொழிற்சங்கங்கள் நியாயங்கள் சொல்வார்களாயின் அவர்களின் அடிப்படை கணக்கு பற்றிய அறிவீனத்தை கம்பனிகள் மற்றும் அரசாங்கமும் பயன்படுத்தியுள்ளன என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதாகவும், மிகவும் இலகுவாக ஏமாற்றக்கூடிய தொழிற்சங்கங்கள் தாங்களே என்பதை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அமையும். இப்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படும் சம்பள சூத்திரம் ஏற்றுக் கொள்ளப்படுமாயின் குறித்த சங்கங்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு துளியளவும் நன்மையை எதிர்காலத்தில் பெற்றுக் கொடுக்கப்போவதில்லை என்பது உறுதி செய்யப்படும்.

எனவே, குறித்த தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக்கூடாது என்பதை வலியுறுத்தி தொழிலாளர்களையும், தொழிலாளர்களுக்கு சார்பான அமைப்புக்களையும், தனிநபர்களையும் தொடர் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மத்திய குழு சார்பாக 
பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா 
071-4302909/ 071-8971406

சிங்களவர்களாக மாறும் தமிழர்கள் - நிர்ஷன் இராமானுஜம்


சிங்களவர்களாக மாறும் தமிழர்கள்
கொழும்பு மாவட்ட பெருந்தோட்டமொன்றில் ஒலிக்கும் அவலக் குரல்கள்
* பெரும்பாலும் நாளொன்றுக்கு 250 ரூபா சம்பளம்
* 1983 ஆம் ஆண்டுதான் லயன் கூரைகள் சீரமைக்கப்பட்டன
* 75 வீதமானோர் சிங்கள மொழியைப் பேசுகிறார்கள்
* பெரும்பாலான சிறுவர்கள் சிங்கள பாடசாலைக்குச் செல்கிறார்கள்
“நாம காலம் முழுக்க கம்பனிக்கும் நாட்டுக்கும் உழைச்சுக் கொடுத்திட்டு, தலைவர்களுக்கு அடிமையாக இருக்கனும்னு தான் எல்லாரும் நெனைக்கிறாங்க. இந்த இறப்பர் மரங்கள எங்க சொந்தங்களா நெனச்சு எல்லா சோகங்களையும் மரங்களுக்குத் தான் சொல்றோம். எங்க உசுரு போகும் வரைக்கும் ஏழையாவே வாழனும்னுதான் கடவுளுக்கும் ஆசை போல” -

இப்படிப் பேசுகிறார் வேரகொல தோட்டத்தில் 17 வயதிலிருந்து இறப்பர் பால்வெட்டுத் தொழிலில் ஈடுபட்டுவரும் என். கலைச்செல்வராணி (37).

கொழும்பு – அவிசாவளை வீதியில் பாதுக்கை நகருக்குச் செல்லும் வழியில் இருக்கிறது வேரகொல தோட்டம். எலிஸ்டன் தோட்டத்துக்குச் சொந்தமான பிரிவாக இருந்தாலும் பொதுவாக வேரகொல என்றே அழைக்கப்படுகிறது. சுற்றிலும் சிங்களக் கிராமங்களுக்கு மத்தியில் மிகவும் மோசமான லயன் அறைகளில் வசிக்கும் அவர்களை நாம் சந்தித்தோம்.

ஆம்! கலைச்செல்வராணியின் ஆதங்கம் இவ்வாறு தொடர்கிறது, “தலைவர்கள் எல்லாரும் தேயிலைய பத்தி மட்டுந்தான் பேசுறாங்க. இறப்பர் தொழிலாளிய பத்தி பேசுறதே இல்ல. நாங்க படுற கஷ்டத்த யார்கிட்ட, எப்படி சொல்றதுனே புரியல்ல”.

“ஒரு நாளைக்கு 7 கிலோ பால் எடுக்கனும். ஆனா, அந்தளவு பால் எடுக்க முடியாது. மரங்களுக்கு ஒருவகையான மருந்து அடிக்கிறாங்க. அதனால வாரத்தில ரெண்டு நாளைக்கு மட்டுந்தான் அந்தளவு பால் எடுக்கலாம். மத்த நாளில 5 கிலோவுக்குக் குறைவா தான் பால் வெட்டுறோம். அப்போ அரை நாள் பேர போட்டு 250 ரூவா தான் சம்பளம் போடுவாங்க”.

“நாங்க ரொம்ப வேதனையோடு வாழுறோம். தொழிற்சங்கங்கள் எல்லாமே நம்மல ஏமாத்துறதுக்குத்தான் இருக்காங்க. சந்தாவ நிறுத்திட்டு, இவங்களுக்கு வோட்டுப் போடுறதையும் நிறுத்தனும். நம்ம உசுரு இன்னும் கொஞ்ச காலம் தானே இந்த ஒடம்ப தாங்கிகிட்டு இருக்கப்போகுது. ஏதோ பிறந்ததுக்காக வாழ்ந்திடுவோம் என்கிற நிலையில தான் இப்போ நாங்க இருக்கிறோம்” என்றார்.


கொழும்பு மாவட்டத்தில் உள்ள மக்களா இந்தளவு இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு கவனிப்பாரற்றிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. லயன் குடியிருப்புகள் இடிந்து வீழ்ந்துள்ளதால் வீடுகளுக்கு மத்தியில் மாடுகள் வசிக்கும் நிலைதான் அங்கு காணப்படுகிறது. கடும் மழைபெய்யும் காலங்களில் உறவினர் வீடுகளில் தங்கியிருக்கும் அவலச் சூழலுக்கு இவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இங்குள்ள மக்கள் சொல்லும் மற்றுமொரு ஆச்சரியத் தகவல் என்னவென்றால், இதுவரை எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் தங்களது குடியிருப்புப் பக்கம் காலடி எடுத்து வைத்ததில்லை என்பதுதான்.

இவர்கள் வாழும் லயன் குடியிருப்புகள் 1983 ஆம் ஆண்டுதான் இறுதியாக சீர்செய்யப்பட்டுள்ளன. அதன் பிறகு தமக்கு இயலுமான வகையில் கூரைத்தகடுகளைப் பொறுத்தி வாழ்ந்து வருகிறார்கள்.
தங்களுடைய வாழ்க்கைச் சூழல் குறித்து பி.எஸ். காந்தி (48) இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“நாங்க காலையில அஞ்சர மணிக்கு வெட்டுக்கு வருவோம். காலையில தான் பால் அதிகமா சுறக்கும், அதோட வெய்யிலும் குறைவா இருக்கும். ஆளுக்கு 300 மரங்கள் பார்க்கனும். கால வெட்டு முடிஞ்சு அந்தி வெட்டுக்கும் போகனும்னு சொன்னாங்கனா, ஒரு மரத்துகிட்ட 2 தடவ படி 600 தடவ வேல பார்க்கணும்”.

மழைக்காலங்கள்ல வெட்டு எதுவும் இல்ல. தொடர்ச்சியா மழை பெய்தா எங்க நிலை ரொம்ப மோசமாகிடும். ஒருசில மாதங்கள்ல மாசம் 5ஆயிரம் ரூவா சம்பளம் எடுத்ததும் உண்டு. எங்களோட சிரிப்புக்கு எல்லாம் சந்தோஷம்னு அர்த்தம்; இல்ல. வெளியில் சொல்ல முடியாத ஏராளமான பிரச்சினைகள ஒவ்வொரு நாளும் எதிர்நோக்குறோம்”.

இந்தத் தோட்டத்தில் உள்ளவர்களில் 75 வீதமானோர் சிங்கள மொழியைப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதுமாத்திரமல்லாது பெரும்பாலான மாணவர்கள் சிங்கள பாடசாலைகளிலேயே தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடருகிறார்கள்.

இது குறித்து மரியசூசை இந்திரா (52) கூறுகையில், இங்க சுற்றிவர சிங்கள ஆட்கள்தான் இருக்காங்க. நாம இங்க வந்து குடியேறிய நாள் தொடக்கம் அவங்களோடதான் உறவு இருக்குது. தமிழர்கள் பலர் சிங்களப் பெண்களைத் திருமணம் செய்திருக்காங்க. வீட்டிலயும் சிங்களத்தில பேசிப்பேசியே பழக்கமாகிடுச்சி. பக்தில சிங்கள ஸ்கூல் இருக்கதால பிள்ளைகளும் அங்கேயே படிக்கிறாங்க” என்றார்.

இந்தத் தோட்டத்தில் இறப்பர் தொழிற்துறை எதிர்நோக்கியிருக்கும் சவால்கள் பற்றி எஸ். இராஜரத்தினம் (35) பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
“இறப்பர் மரங்களுக்கு ஒரு வகையான இரசாயனப் பதார்த்தம் பூசப்படுது. இப்படியொரு செயற்பாடு கடந்த ஒரு வருஷமா தான் நடக்குது. அப்படி இரசாயனப் பதார்த்தம் பூசின பிறகு பால் ரொம்ப கிடைக்குது. ஆனாலும் மரம் கூடிய சீக்கிரத்திலேயே பால் தரும் சக்திய இழந்திருது. அதாவது வாரத்தில 3 நாளைக்கு பால கறக்க முடியும் நேரத்தில மிகுதி 4 நாளைக்கு பால் கிடைக்காது. திரும்பவும் மறு வாரம் அந்த இரசாயனப் பதார்த்தம் பூசுவதற்கு உத்தரவிடுறாங்க”.


“அது தவிர ஒரு கப் ஒன்றை வச்சி கேஸ் ஒன்றை மரத்துக்கு உட் செலுத்துறாங்க. இந்தமாதிரி செய்றதுனால 15 வருஷத்துக்கு பால் கொடுக்கிற மரங்கள் எல்லாம் 5 வருஷத்திலேயே காய்ந்து போகும் நிலைதான் இருக்குது”.

“நெறய சக்தி மிக்க நல்ல மரங்கள் எல்லாம் உடைஞ்சு விழும் நிலையில இருக்குது. முன்னர் நிர்வகிச்ச கம்பனியில இப்படியெல்லாம் செய்யல்ல. இப்போ பொறுப்பெடுத்திருக்கிற கம்பனிக்காரங்க தான் இப்படி மோசமான வேலைகளை முன்னெடுக்கிறாங்க” எனத் தனது மன உளைச்சலை கோபத்தோடு கூறினார்.

தொழிற்சங்கங்கள் மீது தாம் வைத்திருக்கும் நம்பிக்கை குறையவில்லை என்றும் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக்கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அந்த மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

கூட்டு ஒப்பந்தம் மூன்று வருடங்களுக்கு நீடிக்கப்படுவதாக வெளியாகும் தகவல்களுக்கு தமது முழுமையான எதிர்ப்பையும் இந்த மக்கள் வெளியிடுகிறார்கள். நாட்டின் முதுகெலும்பாக இருப்பதாகக் கூறப்பட்டாலும் தோட்டங்களில் முதுகெலும்பற்றவர்களாக நடத்தப்படுவதாகவும் தொழிற்சங்கங்கள், சம்பளப் விடயத்துடன் நிர்வாகமுறைகேடுகள் குறித்தும் பேச வேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பெரும்பாலும் நாளொன்றுக்கு 250 ரூபா அடிப்படைச் சம்பளமே கிடைக்கப்பெறுவதாக கூறுகிறார் எம். ரோஸ்மேரி (27). இவ்வாறானதொரு நிலையில் தமது 3 பிள்ளைகளினதும் கல்விச் செலவு உள்ளிட்ட இதர அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் ஒவ்வொரு நாளையும் சவாலுடன் எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.


மலையகம் என்றால் பெரும்பாலும் மத்திய, ஊவா மாகாணங்கள் மாத்திரமே தலைவர்களின் கண்களுக்குத் தெரிவதாக பொதுவான குற்றச்சாட்டுகள் உண்டு. குறிப்பாக இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெருந்தோட்ட மலையக மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கே கொழும்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் கூட கவனிப்பாரற்றிருக்கிறார்கள் என்றால், எந்தளவுக்கு எமது மக்கள் மீதான முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதை புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.

எமது அடிப்படையை விட்டு, முற்றுமுழுதான கலாசார வேறுபாட்டுக்குள் இந்த மக்கள் பயணிக்கும் நிலை ஒருபுறம் இருக்க வறுமையின் கோரப்பிடிக்குள் நிர்வாகத்தின் சீர்கேடுகளுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் தொழிற்சங்கங்களும் கைவிடுமாக இருந்தால் மக்களின் வாழ்க்கையின் கறுப்புப் பக்கங்களாகவே எதிர்காலம் அமைந்துவிடும். ஆதலால் பேதங்களைத் தவிர்த்து தலைமைகள் தமது கடமையைச் செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

நன்றி ஞாயிறு தினக்குரல் 20.01.2019

தமிழரசுக் கட்சித்தலைவர்களின் மலையகப் பிரவேசமும் இ.தி.மு.க. தடையும் (எழுதாத வரலாறு-4) - பெ.முத்துலிங்கம்

மலையகத்தின் பிரதான அரசியல் சக்திகளால் நெடுங்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்தவர் தோழர் இளஞ்செழியன். நீண்டகலாமாக அவர் எழுதத் தலைப்பட்ட மலையகத்தின் வரலாறு முழுமையாக சாத்தியப்ப்படுமுன்னரே அவர் மரணித்து விட்டார். அதனை அவர் எழுதுவதற்காக சேகரித்து வைத்திருந்த ஆவணங்கள் மிகப் பெறுமதியானவை. அவற்றின் உதவியுடன் தோழர் பே.முத்துலிங்கம் எழுதி முடித்த "எழுதாத வரலாறு" நூல் மலையக வரலாற்றில் பேசப்படாத இன்னொரு பக்கத்தை வெளிக்கொணர்ந்தது. குறிப்பாக இலங்கையில் திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்பவற்றின் வரலாற்றுப் பாத்திரம் இதில் பதிவானது. அந்த நூலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றாக இங்கே "நமது மலையகம்" வாசகர்களுக்காக வெளியிடுகிறோம். 
தமிழரசுக் கட்சியுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்ட இ.தி.மு.க . 1962 எப்ரல் 21, 22ல் இரண்டாவது மாநில மாநாட்டை ஹற்றனில் நடாத்த திட்டமிட்டது. இம்மாநாட்டின் சிறப்பு விருந்தினராகப் பங்குகொள்ளும்படி, தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கும் ஏனைய மலையக தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தது. மலையக மக்களின் குடியுரிமையும், மொழியுரிமையும் இம்மாநாட்டின் பிரதான கோரிக்கையாக அமைந்தது. இம்மாநாட்டில் தமிழரசுக்கட்சித் தலைவர்கள் பங்கு கொண்டதுடன், மலையகத்தைச் சார்ந்த தொழிற்சங்கங்களில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசை சார்ந்த அதன் தலைவர் ஜனாப் ஏ. அஸீஸை தவிர எந்தவொரு தொழிற்சங்கத் தலைவரும் பங்கு கொள்ளவில்லை மாறாக வாழ்த்துச்செய்தி அனுப்பினர். இவ்விரண்டு நாள் மநாட்டின் இறுதி அங்கமாக ஹட்டன் டன் பார் மைதானத்தில் மாநாட்டின் பொதுக்கூட்டமொன்று நடாத்தப்பட்டதுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகைதந் திருந்த தமிழரசுக் கட்சித் தலைவர் திரு.எஸ். ஜே. வி. செல்வநாயகம் உட்பட ஏனைய தலைவர்கள் இ.தி.மு.க  தலைவர் திரு. ஏ. இளஞ்செழியன் அவர்களுடன் திறந்த ஊர்தியில் ஹற்றன் மல்லிகைப்பூ பசாரிலிருந்து டன்பார் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடும் மழையினையும் பொருட்படுத்தாது திறந்த ஊர்தியில் செல்லும் தலைவர்களுக்குப் பின்னால் ஆயிரக்கணக்கான இ.தி.மு.க  தொண்டர்கள் மலையக குடியுரிமைப் பிரச்சினையையும். மொழியுரிமைப் பிரச்சினையையும் முன்வைத்து கோசமெழுப்பி சென்றமை நாட்டின் அனைத்து சிங்களச் சக்திகளினதும் கவனத்தை ஈர்த்தது.

வடகிழக்கில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியொன்று மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சீர்த்திருத்த இயக்கமொன்றின் அழைப்பினை ஏற்று மலையகத் தலைநகரில் மொழியுரிமை, குடியுரிமை என்பவற்றிற்காக இணைந்து போராடுவோம் என சூளுரைத்தமை தென்னிலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் பீதியை உருவாக்கலாயிற்று. இ.தி.மு.க.வினது இச்செயற்பாட்டினைப் பற்றி சிங்கள அரசியல்வாதிகள் கேள்வியெழுப்ப ஆரம்பித்ததுடன் திராவிட நாடொன்றினை உருவாக்க முயலும் தமிழக தி.மு.க செயற்பாட்டின் ஓர் அங்கமே இ.தி.மு.க வின் இந்நடவடிக்கையெனக் கூறினர்.

நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைக் கருத்திற்கொண்டு இ.தி.மு.க வினை தடை செய்யுமாறு சிங்கள அரசியல் கட்சிகள் கோரின.

இக்காலகட்டத்தில் பேரினவாதத்தின் சின்னமாக விளங்கிய வெலிமடை பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய விடுதலை முன்னணி கட்சியின் தலைவருமான கே.எம்.பி.ராஜரத்தின, தம்பதெனிய பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.ஜீ.சேனாநாயக்க போன்றோர் இ.தி.மு.க ஓர் இனவாதகட்சியெனவும் மற்றும் அது இலங்கையை தமிழகத்துடன் இணைக்க முயலும் தமிழக தி.மு.க வின் கிளை அமைப்பு எனக்கூறி அதனை தடை செய்யும்படி பாராளுமன்றத்தில் கோரினர். இவர்களுடன் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறான இனவாதக் கருத்தினை முன்வைக்கலாயினர்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேர்சி விக்ரமரத்ன உரையாற்றுகையில்
පසු ගිය දිනවල ආණ්ඩු පකෂයේ රැස්වීමකදී ඩී.එම්.කේ. හෙවත් ද්‍රවිඩ මු න්ට කසාගම් නැමැති සංවිධානය පිළිබඳව සාකච්ඡාවු බවත් අපට දැනගන්න තිබෙනවා. ඒ තමයි තවත් කුමන්ත්‍රන සංවිධානයක්
මේ සංවිධානයට අයත් මුලිකයන් අත් අඩංගුවට ගෙන වහාම මේ සංවිධානය තහනම් කිරීමට රජයට බැරී මදැයි මම අහනවා. ඉන්දියාවේ ඇති මේ සංවිධානයේ ශාකාවක් කඳුකරයේ පිහිටු වීමෙන් මොන විධියේ වපාර ඔවුන් ගෙන ගොස් අපට මොන ප‍්‍රශ්න වලට මුහුණ පාන්න සිදුවේදැයි කාට කියන්න පුළුවන්ද? ඒ ගැන එයට වඩා දිඝ වශයෙන් මා කථා කරන්නට යන්නේ නැහැ (19)
- கடந்த சில தினங்களில் ஆளும்கட்சி கூட்டத்தில் டி. எம். கே. அல்லது திராவிட முன் னேற்றக் கழகம் எனும் அமைப் பினைப் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளமை எமக்கு தெரியவந்துள்ளது. இதுதான் இன்னுமொரு சதிகார அமைப்பாகும். இவ்வைமப்பினை சார்ந்த முன்னணியாளர்களை கைது செய்து உடனடியாக இவ்வமைப்பினை ஏன் தடைசெய்ய அரசிற்கு முடியாது என நான் கேட்கிறேன் . இந்தியாவிலிருக்கும் இவ்வமைப்பின் கிளையை மலைநாட்டில் அமைப்பதன் மூலம் எவ்வாறான நடவடிக்கையை இவர்கள் கொண்டுசென்று எமக்கு எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என யாருக்கு சொல்ல முடியும்? இதனைப் பற்றி இதை விட அதிக மாக நான் பேசப்போவதில்லை (தமிழாக்கம் ஆ-ர்)

- பாராளுமன்ற உறுப்பினர்கள் கே.எம்.பி ராஜரத்தின. பேர்சிவிக் கிரமரத்ன உட்பட அனைத்து சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் இ.தி.மு.க வை தடை செய்யக்கோரிய வேளையில் இ.தி.மு.க தடையுடன் மலையக மக்களின் பிரஜாவுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் அவசியமென ஒரு சில இடதுசாரிக்கட்சி அங்கத்தினர்கள் கூறினர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான திரு. பீட்டர் கெனமன்
I see that the hon.members of the Government Parliamentry party are very worried about these D. M. K. 'S springing up. You are terribly worried about it and I too thoroughly condemn these D. M. K. 's But it is your total inactivity on this subject that is breeding D. M. K.'s in Ceylon and keeping the Federal Party alive when its prestige among the tamil pepole is slipping
.......... It is quit clear now that the citizenship act of 1948 did not solve this problein, It left over an enormous residue of persons who are stateless but live in Ceylon.
............ Now we are going to have discussions between the two prime min isters again. I do not want to prejudice these discussion by making any statements. But I must say that the aim of these discussions should to be end the sitution of statelessness once for all. (20)
இ.தி.மு.க. வினை தடைசெய்யக்கோரி பாராளுமன்றத்தில் சிங்கள பிரதிநிதிகள் குரலெழுப்புகையில் பாராளுமன்றத்தில் மலையக மக்கள் சார்பாக நியமிக்கப்பட்டிருந்த நியமன உறுப்பினரான திரு. எஸ். தொண்டமானும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் மௌனிகளாக இருந்தனர். இ.தி.மு.க  தலைவர் திரு. ஏ. இளஞ்செழியன் திரு. எம். திருச் செல்வம், கியூ. சி அவர்களுடன் தலைவர் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கைளச் சந்தித்து தமிழரசுக் கட்சியினரை மலையகத்திற்கு அழைத்துச் சென்றமையே இனவாத சக்திகள் கொதித்தெழுந்து இ.தி.மு.கவை தடைசெய்யக் கோருவதற்கான பிரதானக் காரணமாயிருக்கையில் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ஏன் மெளனமாக இருக்கின்றனர் என திரு. ஏ. இளஞ்செழியன் வினவினார். இதற்கு செவிமடுத்த திரு. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் தாம் இ.தி.மு.க தொடர்பாக குரலெழுப்பும்படி தமது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துவதாகக் கூறினார்.

- இதன் பின்னர் தமிழரசுக் கட்சியினர் இவ்விடயம் தொடர்பாக உரையாற்றிய போதிலும் அவர்கள் உரையாற்றுவதற்கு முன்பதாக இ.தி.மு.க அரசினால் தடை செய்யப்பட்டது.

இக்காலகட்டத்தில் திரு.ஏ.இளஞ்செழியனின் அரசியற் நடவடிக்கைகளுடன் முரண்பட்ட இ.தி.மு.க உறுப்பினர் சிலர் இரண்டு குழுவினர்களாக தனித்து செயற்பட்டனர். இலங்கை திராவிடர் முன்னேற்றக்கழகம் எனும் பெயரிலேயே திரு. இரா. அதிமணி தலைமையின் கீழ் ஒரு பிரிவினரும் திரு. ஏ. எம். அந்தோணிமுத்துவின் தலைமையின் கீழ் ஒரு பிரிவினரும் செயற்பட்டுவந்தனர்.

1962 ஜூலை 22ம் திகதி நள்ளிரவுடன் அவசரகால சட்டத்தினைப் பயன்படுத்தி பிரதமர் ஸ்ரீ மா பண்டாரநாயக்கா இ.தி.மு.க . வினை தடைசெய்தார்.
Premier Proscribed the DMK. The three dravida munnetre kazham organi sations have been banned in Ceylon by the prime minister Mrs. Sirima Bandaranayake from midnight last night under the Emergency regulations.... The parties have been proscribed. They cannot hold meetings any where in ceylon invite or collect monies for the organisation communicate with persons or Organi sation or solicit suport print or distribute any matter (21)
இவ்வறிவித்தலுடன் திரு, ஏ.எம்.அந்தோணிமுத்து தமது தலைமையிலான தி.மு.க கலைக்கப்பட்டு விட்டதாக பிரதமருக்கு தந்தி மூலம் அறிவித்ததுடன் திரு. இரா. அதிமணி தலைமையிலான தி.மு.கவும் தமது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டது. தடையின் பின்னர் இத்தடையினைக் கண்டித்து பாராளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகள் பேசலாயினர். இத் தடை தொடர்பாக நீண்ட உரையாற்றிய திரு. அ. அமிர்தலிங்கம்; இந்த நாட்டில் மலைநாட்டுத் தமிழ் மக்கள் மத்தியில் மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்து சாதிபேதங்களை அகற்றி அவர்களுடைய மொழி குடி உரிமைகளைப் பெற்று அவர்களும் இந்நாட்டில் மனிதர்களாக தன்மானத்தோடு வாழவேண்டும் என்ற ஒரே இலட்சியத்திற்காக உழைத்து வருகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை அரசாங்கம் தடைசெய்தது ஜனநாயத்திற்கு முரணானது மனித உரிமைக்கு மாறானது என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். உண்மையில் இந்த ஸ்தாபனம் எடுத்த எந்த நடவடிக்கைக்காக இந்தத் தடை போடப்பட்டிருக்கிறது என்பதை அரசாங்கத்திடம் நான் கேட்க விரும்புகிறேன்......

இந்தக் கெளரவம் மிக்க சபையிலே சிம்மாசனப் பிரசங்க விவாதத்தில் பேசிய பல்வேறு அங்கத்தினர்களும் இந்தத் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். கெளரவ அவிசாவலைப் பிரதிநிதி (திரு பிலிப். குணவர்தன) அவர்களும் கெளரவ காலி பிரதிநிதி (திரு. டபிள்யூ. தஹநாயக்கா) அவர்களும் இந்தத் திராவிட முன்னேற்றக் கழகம் பற்றி குறிப்பிட்டார்கள். எனக்கு முன் பேசிய மட்டக்களப்பு இரண்டாவது பிரதிநிதி (ஐனாப் ஏ. ஏச் மாக்கான் மாக்கார்) அவர்களும் குறிப்பிட்டார்கள் நுவெரலியா பிரதிநிதி (திரு. ரி. வில்லியம் பெர்னாண்டோ ) அவர்களும் குறிப்பிட்டார்கள்.

வெலி மடைப் பிரதிநிதி கே.எம்.பி. ராஜரத்தினாவும் அவரது பாரியார் குசுமா ராஜரத்தினவும் இந்தத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராகத் கர்ச்சித்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் கம்புறுப் பிட்டடியாப் பிரதிநிதி (திரு.பேர்ளி விக்கிரமசிங்க ) அவர்களும் பிரஸ்தாபித்தார்கள். இவர்கள் எல்லோரும் குறிப்பிடும் இந்தப் பூதம் என்ன என்பதை நான் குறிப்பிட வேண்டி இருக்கிறது. இந்த திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இன்று நேற்று தோன்றிய ஒரு இயக்கமல்ல. நான் இலங்கை சர்வகலாசாலையில் 1946-47ம் ஆண்டளவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே இலங்கை திராவிடர் கழகம் இருந்தது. கடந்த பதினாறு ஆண்டுகளாக இந்த கழகம் இந்த நாட்டில் இயங்கி வருகின்றது. அவர்களது நோக்கம் இலங்கையில் வாழ்கின்ற மலைநாட்டுத் தமிழர்கள் மத்தியில் முக்கியமாகச் சாதியின் பெயரால் காணப்படும் பேதங்கைள ஒழித்துக்கட்ட வேண்டுமென்பதாகும். மூடநம்பிக்கையில் சிக்கி காடனையும் மாடனையும் வணங்கி பலியிட்டு கூத்தாடி வாழும் மூடநம்பிக்கையில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டுமென்பதாகும் மலைநாட்டுத் தமிழ் மக்கள் தன்மானம் பெற்றவர்களாகப் பகுத்தறிவு பாதையில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இலங்கையில் திராவிட முன்னேற்றக்கழகம் இயங்கி வருகிறது. பெயரளவில் தான் தென்னிந்தியாவில் இயங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இலங்கை திராவிட முன்னேற்றக் கழக்கத்திற்கும் ஒற்றுமை இருக்கிறதே தவிர ஸ்தாபன ரீதியாகத் தொடர்பு எதுவும் இல்லை என்பதைத் தெட்டத் தெளிவாகக் கூறவேண்டியது" உண்மை. இந்திய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. அண்ணாத்துரை அவர்களும் செயலாளர் திரு. நெடுஞ்செழியன் அவர்களும் இலங்கைத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தங்களுக்கும் எது விதமான தொடர்பும் கிடையாதென்பதை எல்லோருக்கும் கூறியிருக்கிறார்கள்.

இலங்கைத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் மூன்று ஸ்தாபனங்கள் இருந்தாலும் இரண்டு ஸ்தாபனங்கள் கொழும்பில்தான் இருந்து வருகின்றன. தோட்டப் பகுதியிலிருக்கும் மற்றொரு ஸ்தாபனம் திருவாளர் இளஞ்செழியன் என்பவரைச் செயலாளராகக் கொண்டது. அவர்களுடைய நோக்கம் நாட்டைப் பிரிப்பதல்ல. இவ்ஸ்தாபனத்தின் நோக்கம் நாட்டைப் பிரிப்பதுதான் என்று யாரும் நிரூபிப்பார்களேயானால் நான் என்னுடைய பதவியை ராஜினாமாச் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன். அப்படி உண்மையென்று யாராலாவது ருசுப்படுத்த முடியுமா? அப்படி ருசுப்படுத்த ஒருவராலும் முடியாது.

அவர்களுடைய நோக்கம் மலைநாட்டுத் தமிழ் தொழிலாளர்களைச் சாதி பேதத்திலிருந்து மீட்டு அவர்களை ஒரேயின மக்களாக ஒன்றுபடச் செய்வதேயாகும். ஒருவரையொருவர் தொடக்கூடாது என்றும் அவர் அந்தச்சாதி. இவர் இந்தச்சாதி என்றும் பிளவு படத்தப்பட்டிருக்கும் மக்களிடையேயுள்ள பேதத்தை அகற்றுவது அவர்களை ஒன்று படுத்துவது பிழையா? அரசாங்கக் கட்சியில் உள்ளவர்களானாலும் சரி, எதிர்க் கட்சிகளில் உள்ளவர்களானாலும் சரி, கெளரவ அவிசாவலைப் பிரதிநிதி அவர்களானாலும் சரி இந்த நோக்கம் பிழையானது எனக் கூறுவார்களா?

மதத்தின் பெயரால் எத்தனை எத்தனை யோ மூடநம்பிக்கைகளுக்குட்பட்டு கிடக்கிறார்கள். மற்றவர்களிலும் பார்க்க கூடுதலாக அந்தப் படிப்பற்ற தோட்டத் தொழிலாளர்கள் தான் மூடநம்பிக்கைளின் கோரப்பிடியில் சிக்கிக்கிடக்கிறார்கள். கடவுள் ஒருவர் உண்டு. ஆனால் அதற்காகப் பலியிடத் தேவையில்லையெனக் கூறுவது பிழையா? இலங்கை திராவிட முன்னேற்றக்கழகம் நிறுவப்பட்டதன் நோக்கமே இதுதான். அடுத்தது அரசாங்கம் செய்த அக்கிரமான செயல்களால் ஒடுக்கப்பட்ட மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் இழந்தவைகளைப் பெற்றுக் கொடுப்பது, அதுதான் அவர்களை நாடற்றவர்களாக்கி மொழியுரிமையைப் பிடுங்கி. இந்நாட்டில் அவர்களை எந்த விதமான உரிமையும் அற்றவர்களாக ஆக்கிவைத் திருக்கும் அநியாயத்தை எதிர்த்து அவர்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுப்பது அவர்களுக்குத் தொழிலுமில்லை, துணையுமில்லை. கல்வியும் இனிமேல் புதுக்கல்வித்திட்டத்தின்படி சிங்களத்தில் தான். அவர்களுக்கு இந்நாட்டில் பிரஜாவுரிமையில்லை. வாக்குரிமையில்லை. அவர்கள் துரத்தப்பட்டால் தங்கியிருப்பதற்கு ஒரு இடந்தானுமில்லை. மிருகங்களுக்குக்கூடக் காட்டில் இடமுண்டு. எறும்புகளுக்குக்கூடப் புற்றுக்கள் இருக்கின்றன. அந்தத் தொழிலாளர்கள் - இந்த நாட்டின் வளத்துக்காக உழைத்த அந்தத் தொழிலாளர்கள் - இன்று நேற்று வந்தவர்களல்ல. எத்தனை எத்தனையோ தலைமுறைகளாக இந்நாட்டில் வாழ்ந்து வருபவர்கள். (22)

திரு. அ.அமிர்தலிங்கம் உட்பட பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.தி.மு.க தடை செய்யப்பட்ட பின்னர் அதன் சமூகசீர்த்திருத்த நடவடிக்கைகளையையும், ஏனைய செயற்பாடுகளையும் எடுத்துக்கூறி இ.தி.மு.க  மீதான தடை நியாயமற்றதெனக் கூறினர். அதேவேளை இ.தி.மு.க மீதான தடையை வரவேற்ற ஒரு சில கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் மற்றும் இ.தி.மு.க மீதான தடையை கண்டித்த சமசமாஜக் கட்சி உறுப்பினர்களும் தமது உரைகளில் ஒருவிடயத்தைத் தெளிவாக முன் வைத்தனர். அதாவது மலையக மக்களின் அடிப்படை உரிமையான பிரஜாவுரிமை பிரச்சினையை தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தினர். பிரஜாவுரிமை மறுக்கப்பட்டமையே இ.தி.மு.க  வின் வளர்ச்சிக்கான பிரதானக் காரணமெனக் கூறினர்.

இ.தி.மு.க தடை செய்யப்பட்டதுடன் பொதுச் செயலாளர் ஏ.இளஞ்செழியன் உட்பட அதன் தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டதுடன் இரண்டாவது தலைமையினைக் கொண்டு தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தாம் முன்னெடுத்த சீர்த்திருத்த நடவடிக்கைகளை பல்வேறு மன்றங்களை உருவாக்கி அதன் ஊடாக செயற்படுத்தினர். வள்ளுவர் மன்றம். பகுத்தறிவு மன்றம், அண்ணா மன்றம், பாரதிதாசன் மன்றம் போன்ற மன்றங்களை மலையகப் பகுதிகளில் அமைத்து செயற்பட்டதுடன் கொழும்பில் அகில இலங்கை வாலிப முன்னணி என்ற பெயரில் செயற்படலாயின. இதன் தலைவராக பி. நடராஜ செயற்பட்டதுடன் இன்றைய மலையக இலக்கிய கர்த்தாக்களான அந்தனிஜீவா, இரா. மலைத்தம்பி எஸ். மயில்வாகனம் போன்றோர் இவ் வாலிப முன்னணியில் முக்கிய பங்கேற்று செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

இ.தி.மு.க.வின் செயற்பாடு காரணமாக கழகம் எனும் சொல் மலையக மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது. இ.தி.மு.க தடை செய்யப்பட்டதுடன் இ.தி.மு.க வுடனான தொடர்பினை குறைத்துக் கொண்ட தமிழரசுக் கட்சியினர் இ.தி.மு.க. வின் துணையுடன் மலையகத்தில் பெற்றுக் கொண்ட அறிமுகத்தினை பயன்படுத்த முனையலாயினர். இ.தி.மு.க தடைசெய்யப்பட்ட வேளையில் இலங்கை தொழிலாளர் கழகம் எனும் தொழிற் சங்கத்தை உருவாக்கி தோட்டத் தொழிலாளர்களை அங்கத்தினர்களாகச் சேர்த்தனர். இ.தி.மு.க தடை செய்யப்பட்ட வேளையில் அவ்வியக்கம் சிதறி விழாது காப்பாற்ற வேண்டிய தமிழரசுக் கட்சியினர் தோழமைக்கு முரணாக பிறிதொரு தொழிற் சங்கத்தையமைத்து மலையகத்த்தில் செயற்பட ஆரம்பித்தமையை தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த இ.தி.மு.க தலைமையினர் வன்மையாகக் கண்டித்தனர். தமது மாற்று அமைப்புகளான மன்றங்கள் ஊடாக இதற்கெதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். தமிழரசுக் கட்சியின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தில் இணைய வேண்டாம் என மன்றங்கள் ஊடாகக் கோரினர்.

மலையக வீடமைப்புத்திட்டம் : சப்ரகமுவ மாகாணத்திற்கும் விஸ்தரிக்க வேண்டும் - கேகாலை கல்கி


இருநூறு வருடகாலமாக தமது உழைப்பை நாட்டுக்காக வழங்கி நாட்டின் அபிவிருத்திக்காக பெரிதும் பாடுபட்ட மலையக பெருந்தோட்ட சமூகம் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளில் சிக்குண்டு தொடர்ந்து இன்னல்களையும் வேதனைகளையும் அனுபவித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.

இவ்வாறான பெருந்தோட்ட சமூகம் கல்வியின் மூலம் மெல்லமெல்ல இன்று அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு அபிவிருத்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. எனினும் அம்மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் குடியிருப்பு என்ற அம்சம் மிகவும் மோசமான நிலையிலேயே இன்றும் காணப்பட்டு வருகின்றது என்பது வேதனைக்குரியவிடயமே. லய வாழ்க்கையின் அவலநிலையை மீரியபெத்தை இயற்கை சீற்றம் உணர்த்தியதோடு அதனைத் தொடந்து மலையகம் முழுவதும் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின் கோரத்தாண்டவம்,மண்சரிவு அபாயம் என்பன மலையகத்தில் தனி வீட்டுத்திட்டத்திற்கான தேவையை வலுப்படுத்தியிருந்தன.

இந்திய வீடமைப்புத்திட்டம்

கடந்த அரசாங்கத்தினால் மலையக மக்களுக்காக 50,000 வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக வரவு செலவுத் திட்டத்தில் கூறியிருந்தும் அதற்கான நிதி ஒதுக்கப்படாது அது வெறும் வாய்வார்த்தையாகவே அமைந்துவிட்டது. இன்றைய நல்லாட்சி அரசாங்கம் மலையக மக்களுக்கான 7 பேர்ச்சஸ் காணியுடனான வீடு கட்டித்தரப்படும் என உறுதி கூறி அதனை நடைமுறைப்படுத்திவருகின்றது.

அதில் முன்னின்று செயற்படுபவர்களாக தமிழ்முற்போக்கு கூட்டணி காணப்படுகின்றது. மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தில் இந்திய அரசினால் மலையக மக்களுக்கு 4000 வீடுகள் வழங்கப்பட்டிருந்தன. அப்பொழுது மலையகத்தில் அதிகாரம் செலுத்தியிருந்த இ.தொ.கா, அந்த வீடுகளை பகிர்ந்தளிக்கும் ஆரம்பகட்ட செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. இருப்பினும் அந்த 4000 வீடுகளும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு மாத்திரமே பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. அதில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை,காலி, குருநாகல், ஆகிய மாவட்டங்களில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.

அதன்பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் நல்லாட்சி அரசாங்கத்தில் 100 நாள் வேலைத்திட்டதிலே அந்த 4000 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு வீடுகள் உருவாக்கப்பட்டன. அதன்பின் இந்திய குடியரசின் பிரதமர் மோடி மலையக விஜயத்தின் போது மேலதிகமாக 10,000 வீடுகளை மலையக மக்களுக்கு தருவதாக தெரிவித்திருந்தார்.

இதற்கான ஒப்பந்தம் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்திய அரசுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் கைச்சாத்திடப்பட்டது. இவ்வீடமைப்புத் திட்டமும் முழுக்கமுழுக்க தற்போது நுவரெலியா,பதுளை,பண்டாரவளை ஆகிய மாவட்ட தோட்டப்புறங்களில் மாத்திரமே நடைமுறைப்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளும் கிராமங்கள் கையளிக்கும் நிகழ்வுகளும் செய்திகளாக அடிக்கடி ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படல் வேண்டும்

இருப்பினும் இந்த அடிக்கல் நாட்டல் நிகழ்வுகள் ஏன் மலையகத்தின் ஏனைய மாவட்டங்களான இரத்தினபுரி,கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விஸ்தரிப்பு செய்யப்படவில்லை என்ற இயல்பான கேள்வி எழுகின்றது.அடிக்கல் நாட்டலில் முக்கியமாக நுவரெலியா மாவட்டத்தினை மாத்திரம் பிரதானமான களமாகக் கொண்டு வீடமைப் புதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதானது இவர்களின் அடுத்த இலக்கு பாராளுமன்றத் தேர்தலில் அதிகவாக்குகளைப் பெற்றுமீண்டும் பாராளுமன்ற ஆசனங்களை அலங்கரிக்கவேண்டும் என்பதாலா என்ற கேள்வியும் எழுகிறது. . அதேநேரம் தமக்கு வாக்கு அளிக்கப்படாத ஏனைய மாவட்டங்களுக்கு இவர்களது பணிகளை முன்னெடுத்துச்செல்வதில் அர்த்தம் இல்லையென கருதுகிறார்களா? எது எவ்வாறு இருப்பினும் தோட்டமக்களுக்கு நன்மை கிடைக்கும் போது அதனை வரவேற்க வேண்டியதும் ஊக்குவிக்கப்பட வேண்டியதும் மறுப்பதற்கில்லை எனலாம்.

இருந்த போதிலும் இந்த சமூக செயற்றிட்டமும் அக்கறையும் மலையகத்தில் ஒட்டமொத்த மாவட்டத்திற்கும் அது செல்லுமானால் அது மேலும் வரவேற்கதக்கதாக இருக்கும். இன்று இரத்தினபுரி,கேகாலை மாவட்ட பெருந்தோட்ட வாழ் மக்களும் மலையகத்தின் ஏனைய மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சந்தித்துவருவதோடு, இவர்கள் பெரும்பான்மை சமூகத்தின் அடாவடித்தனம், ஆக்கிரமிப்பு போன்றவற்றுக்கும் அடிக்கடி ஆளாகி வருகின்றார்கள். எனவே மலையகத்தின் அதிக பிரச்சினைகளை தாங்கியவர்களாக சப்ரகமுவ வாழ் தோட்டப்புறமக்களை குறிப்பிட முடியும்.

ஆகவே மலையகத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்ற வீடமைப்புத் திட்டத்தினை சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த பெருந்தோட்டபுறங்களுக்கும் விஸ்தரிக்குமாறு மலையக ஆளும் கட்சியைச் சார்ந்த அமைச்சர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது. இவர்களின் தொழிற்சங்க கட்சியைப் பொறுத்தவரையில் மத்திய,ஊவா மாகாணத்தினை விட இம்மாகாணத்தில் அவர்களுக்கான உறுப்பினர்கள் மிகவும் குறைவுதான். இருப்பினும் தொழிற்சங்கபேதம் பார்க்கப்படாது இவர்களுக்கும் தனிவீட்டுக் கனவினை பெற்றுத் தருமாறு சப்ரகமுவ வாழ் தமிழ் மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.நுவரெலியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மலைநாட்டு கிராமங்கள் போன்று இங்கும் கிராமங்கள் அவசியம். அப்படியான ஒரு கிராமம் கூட ஆரம்பிக்கப்படாமை வேதனையே.

கேகாலை மாவட்டம்

கேகாலை மாவட்டத்தில் இதுவரை மண்சரிவு அபாயத்திற்குள்ளானவர்களுக்கு மாத்திரமே வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 2016ஆம் ஆண்டு டெனிஸ்வர்த் மற்றும் களுப்பான தோட்டங்களில் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட 64 குடும்பங்களுக்கும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இதிலும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. மக்கள் தற்காலிக கூடாரங்களில் தொடர்ந்து வசிக்கமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் விரும்பியோ விரும்பாமலோ புதிய வீடுகளில் வசித்து வரலாயினர். அமைக்கப்பட்ட வீடுகள் தரமின்மை,பொருத்தமான உட்கட்டமைப்பு இன்மை போன்ற இன்னோரன்ன குறைபாடுகள் அந்த வீடமைப்பில் காணப்படுகின்ற. அத்தோடு களுப்பான தோட்டத்தில் மேலும் 40 வீடுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்னும் வீடுகள் முழுமைப்பெறவில்லை. இன்று இரண்டு வருடங்களை தாண்டியும் வீடுகள் முழுமைப்பெறவில்லை என்பதும் வேதனைக்குரியவிடமாகும். மேலும் டெனடின் தோட்டத்தில் 19 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கேகாலை மாவட்டத்திற்கு மொத்தமாக இதுவரை 123 வீடுகள் மாத்திரமே அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன என்பது முக்கிய விடயம்.

இரத்தினப்புரி மாவட்டம்

இரத்தினபுரி மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மண் சரிவில் பாதிக்கப்பட்ட கொலம்பகம தோட்டத்தில் 17வீடுகளும்,மரம் விழுந்துபாதிப்புக்குள்ளான ஹவுப்பே தோட்டத்தில் 16 வீடுகளும் மீண்டும் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன. மண் சரிவில் பாதிக்கப்பட்ட மாதம்பை இல 3 இல் 25 வீடுகளும், ஸ்பிரிங்வூட் தோட்டத்தில் 20 வீடுகளும் மற்றும் பெட்டிகல தோட்டத்தில் 32 வீடுகளும், ஹேஸ் தோட்டத்தில் 20 வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் திறப்புவிழாக்கள் நடைபெறவில்லை. அதேநேரம் அப்புகஸ்தன்ன வேவெல்கெட்டிய (31),நிவித்தியகல கிரிபத்கல (18),பலாங்கொடை இழுக்கும்புர (12), உனுவல் இல 4 (20) வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன.இதனடிப்டையில் நோக்கும்போது பொதுவாக கேகாலை, இரத்தினப்புரி மாவட்டங்களுக்கு மிகச்குறைவான வீடுகளே கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அதுவும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டதாலேயே புதிய வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்பதையும் இங்கு சுட்டிக்காட்டல் அவசியம்.

இன்று பொதுவாக சப்ரகமுவ மாகாண பெருந்தோட்ட மக்கள் பெரும்பான்மை இனத்தோடு கலந்திருப்பதனால் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்தின் அபிவிருத்திப்பணிகள் தோட்டப்புறங்களுக்கு உரிய முறையில் செல்வதில்லை. தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளை பெரும்பான்மையின அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறமுடியாத துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது. அடிப்படை பிரச்சினைகளையும் போராடியே பெறவேண்டியுள்ளது.

அடிக்கடி மலையகத் தலைவர்களால் தனிவீட்டுத்திட்டம் மலையகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படும் எனவும்,கட்சிபேதம்,தொழிற்சங்கபேதம் பார்க்கப்படாது அனைவருக்கும் தனி வீடு கிடைக்கும் வண்ணம் வழிசெய்யப்படும் எனவும் பிரதிநிதிகளால் கூறப்பட்டு வருகிறது. நுவரெலியா மாவட்டம் தவிர்ந்த கேகாலை ,இரத்தினபுரி மாவட்டங்களில் இதை எவ்வாறு முன்னெடுப்பது அல்லது அதற்குரிய திட்டம் என்ன என்பதை தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கூற வேண்டும் மலையக தலைமைகள் சப்ரகமுவ மாகாண மக்களை மாற்றாந் தாய் பிள்ளைகளாக கருதுவது போன்றே உள்ளது. அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் ஊடகங்களில் கவனம் தம் மீது செலுத்தப்படும் என்பதற்காக சேவைகளை வழங்காது மக்களின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டியது அவசியம்.

நன்றி - வீரகேசரி

இந்திய, இலங்கைப் பிரச்சினைகள் (சச்சிதானந்தம் பழனிச்சாமியின் பதிவுகள்)


திரு சச்சிதானந்தம் பழனிச்சாமி அவர்கள் தன்னிடம் இருக்கும் முக்கிய பல தகவல்களையும், ஆவணங்களையும் பதிவு செய்துவருகிறார். அவரது மூத்த சகோதரி சிவபாக்கியம் அண்மையில் தான் மறைந்தார். சிவபாக்கியம் அவர்கள் மீனாட்சியம்மைக்குப் பின் அன்றே முக்கிய மலையக ஆளுமையாக அறியப்பட்டவர். இலங்கை இந்திய மாதர் ஐக்கிய சங்கத்தின் தலைவியாக செயற்பட்டவர். அவர் விட்டுச் சென்ற ஆவணங்கள் பலவற்ரில் உள்ள தகவல்கள் பலவற்றை சச்சிதானந்தம் அவர்கள் வெளிக்கொணர்ந்துகொண்டிருக்கிறார். இங்கு தொடராக அவரது பதிவுகளைப் பகிர்கிறோம்.
07--12--1941ல் திரு பழனிசாமியின் ஆலோசனையோடு சிவபாக்கியம் மாதர் சங்கம் அங்குரார்ப்பணம் செய்தபோது அவரைத் தலைவியாக பிரேரிக்கபட்டபோதும் அவர் தனக்கு மூத்த சட்ட ஆலோசகராக உதவிய அட்வகேட் திருமதி லட்சுமி ராஜரட்ணத்தை தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி கேட்டுக்கொண்டார்.

வலதுபுறம் அட்வகேட் ராஜலட்சுமி,சிவபாக்கியத்துக்குப் பின்னால் சி வி வேலுப்பிள்ளை, அதற்கடுத்து ராஜலட்சுமியின் பின்னே பெரி சுந்தரம் என்ற பெரியண்ணன் சுந்தரம்! மற்றும் ஏனைய தலைவர்கள்.
குறிப்பு:
பின்னர் சிவபாக்கியம் தலைமை பொறுப்பை ஏற்றார்.
**அடுத்து.... மாதர் காங்கிரஸ் தனது இரண்டாவது மாநாட்டைக் கண்டியில் நடத்தியபோது...
**தோட்டத் தொழிலாள மகளிரிடையே முதன்முதலாக...
பெண் தொண்டர் அணியொன்றைத் திரட்டி, கண்டி அசோகா ஹாஸ்டலில் (பி டி ராஜனின் அசோகா வித்தியாலயம்) இரண்டு வாரங்கள் அவர்களுக்கு தீவிர பயிற்சியளித்தனர்.
**இதில் திருமதி ஜெயமேரிதாசன் இவர்களுக்குப் பெரும் ஒத்தாசையாக இருந்தார்.
**பெண்கள் அனைவரும் தூய வெள்ளை கதராடை அணிந்துதனிப் பெண்கள் படையணியாய் ஊர்வலத்திலும் மாநாட்டிலும் பங்குபற்றியது....
வெள்ளையருக்கு மட்டுமல்லாது 
**தீவிர சிங்கள சுதேசிகள் மத்தியிலும் கடுப்பைஏற்படுத்தியது.
1943 ல் மாதர் சங்க பொதுக்கூட்டம் கலகாவில் நடந்து அதன்பிறகு..
கம்பளை கதிரேசன் ஆலயத்தில்
இந்தியாவில் காந்தியின் விடுதலைக்காக சிவபாக்கியம்,திருமதி ராமசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் 35 பேர் பங்குபற்றினர்.
13--03--45 ல் பெரி சுந்தரம் தலைமையில் ஒரு தூதுகோஷ்டி மலையக மக்களின் பிரச்சினை பற்றி பேச சென்றபோது அதில் மகளிர் பிரிவின் சிவபாக்கியமும் இணைக்கப்பட்டது அந்த பெண்கள் அமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.
**சோல்பரி கமிசனுக்கு கையளித்த அறிக்கை பின்வருமாறு கூறியது.
அது...
"சோல்பரி கமிசன் எங்களுக்கு அநீதி இழைக்கிறது.இந்த நாட்டையே நிரந்தரமாக தாயகமாகக் கொண்டு வாழும் எமக்குஅரசியல் உரிமை,பிரஜா உரிமை, வாக்குரிமைமறுக்கப்படல் பெரும் அநீதியாகும்.
இலங்கைவாழ் இந்திய வம்சாவளியினர் தெளிவில்லா வெள்ளையரின் நிபந்தனைச் சட்டமானது கூடிய விரைவிலேயே தளர்ந்து இந்நாட்டுப் பிரஜைகளாக எல்லா உரிமையோடு வாழ்வதற்கு வழிவகை செய்யப்படுமென எதிர்பார்க்கிறோம்.
இலங்கை இந்தியா இரு நாடுகளும் நேசமாக வாழ்வதே எமது அவாவாகும்"

குறிப்பு:
ஆணாதிக்கம் என்று கூறப்பட்ட அன்றைய இந்தியத் தமிழரிடையே பெண்களை முன்னிலைபடுத்தியதான பல நடவடிக்கைகள்,இராப்பகல்
போராட்ட சேவையில் இவர்கள் எந்தவித ஊதியத்தையும் பெறாமல் முழு தொண்டராகவே பணியாற்றினர்.
**இவர்களுக்கு தொழிற்சங்கவாதியும்,அரசியல்வாதியுமான கவிமணி சி வி வேலுப்பிள்ளை பெரும் ஒத்தாசையாக இருந்தார்.
**இத்தகைய அர்ப்பணிப்புகளால் இந்திய இலங்கை காங்கிரஸ்...
28--04--46 ல் கூடிய தனது 5 வது மாநாட்டு செயற்குழுவில் ஒரே பெண் அங்கத்தவராக சிவபாக்கியத்தை இணைத்துக்கொண்டனர்.
** 1949 ல் மலையக மக்களின் குடியுரிமையைப் பறிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது நடந்த கொழும்பு கால்பேஸ் சத்தியாகிரகப் போராட்டத்தில் மகளிர் பிரிவும் பங்கேற்றது.
**அதில்...
அன்றைய நாளில் மாதர் காங்கிரஸ் செயற்குழுவின் அங்கத்தினராக சிவபாக்கியத்தால் இணைத்துக்கொள்ளப்பட்ட கொழும்பு உப மேயரான ஆங்கில பட்டதாரியான
☆☆ திருமதி.ஆயிஷா ரவூப் சத்தியாக்கிரகத்தில் தனது பெரும் ஒத்துழைப்பை வழங்கினார்.
**பின்னாளில் சிவபாக்கியத்தோடு தோட்டக்கமிட்டி கூட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு தனது பேச்சாற்றல் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
**அதேபோன்று பன்விலை கெங்கையம்மாளும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார்.

குறிப்பு:
1.அன்றைய நாளில் தமிழரோடு முஸ்லிம் பெண்களும்கூட கைகோர்த்திருந்தனர் என்பதை பெருமையோடு நினைவு கூறுவோம்.
2. இங்கே நான் இந்த பெண்கள் அமைப்பை முன்னிலைபடுத்தும் விசேட காரணம்....
(அ) இந்தியத் தமிழர் ஆணாதிக்கத்தினர் என்ற முத்திரை இருந்த அந்த நாளிலேயே பெண்களுக்கு சமஉரிமையைத் தந்தனர்.
(ஆ) தமிழ் பெண்களின் இந்த புரட்சிகர துணிவு நடவடிக்கைகள்கூட ஆங்கிலேயரது மனதில் மட்டுமன்றி சிங்கள தீவிரவாதிகள் மத்தியிலும் கடுப்பையும்,வெறுப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியதுடன்..அதன் தாக்கம்/மறைமுகமாக இன்றளவும்கூட ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளிலும்கூட தொடர்வதாகும்.!

காக்கைச் சிறகினிலே நடாத்தும் - "குறும்படத் திரைக் கதைப் போட்டி"

காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் முன்னெடுக்கும்
நான்காவது ஆண்டு கிபி அரவிந்தன் நினைவு  இலக்கியப் பரிசு  2019 (வள்ளுவராண்டு 2050)

குறும்படத் திரைக் கதைப் போட்டி : ‘இலங்கைத் தமிழர் வாழ்க்கை’ : பூர்வீகம்  - இடப்பெயர்வு  – புலப்பெயர்வு - இதனோடான தொடர்ச்சியும் நீட்சியும்

காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் தமிழ் இலக்கிய போட்டியாக முதல் முறையாக « குறும்படத் திரைக் கதைப் போட்டி » நடாத்துகிறது. இந்த முதற் போட்டியின் கதைக் களத் தெரிவாக « இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கை » எனும் தலைப்பு தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. உலகப் பெரு வெளியில் அளப்பெரிய அனுபவங்களைச் செறிவாகப் பெற்றுள்ள ஓர் இனக்குழுமாக இந்த இலங்கைத் தமிழர்களது வாழ்வு அமைந்திருக்கிறது.
  • முதல் பரிசு 10 000 இந்திய ரூபாய் மற்றும் சான்றிதழ்
  • இரண்டாவது பரிசு 7 500 இந்திய ரூபாய் மற்றும் சான்றிதழ்
  • மூன்றாவது பரிசு 5 000 இந்திய ரூபாய் மற்றும் சான்றிதழ்
  • மூன்று ஆறுதல் பரிசுகள்  - காக்கை ஓர் ஆண்டுச் சந்தா மற்றும் சான்றிதழ்
1. இத்தகைய எழுத்துப் போட்டி தமிழ் இலக்கிய வெளியில் முதற் தடவையாக நடைபெறுகிறது. எனவே தகைசார் ஆற்றலாளர்களான தங்களது எண்ண வெளிப்பாடுகளை தகுந்த முறையில் தொகுத்து ஊடக - சமூக ஊடகப் பரப்பில் பகிர பெருவிருப்பம் கொள்கிறது காக்கை இதழ்க் குழுமம்..

2. முதல் பரிசு பெற்ற திரைக் கதையின் படமாக்கலின்போது சிறப்பு ஊக்குவிப்புப் பரிசு 30000 இந்திய ருபாய்கள்:
இதனை A Gun & Ring திரைப்படம் தயாரித்த நிறுவனம் Eyecatch Multimedia Inc வழங்கவுள்ளது!
முதற் பரிசுபெறும் குறும்படத் திரைக் கதையின் திரையாக்கலின் போது சிறப்பு ஊக்கப் பரிசாக 30000 இந்திய ரூபாய்கள் Eyecatch Multimedia Inc நிறுவனரின் மகனது நினைவாக வழங்கப்படும்.
இதற்கமைவாக இப்பாட்டியின் கடைசிநாள் 31.01.2019 வரை நீட்டிக்கப்படுகிறது.

3. போட்டி தொடர்பான மதிப்புக்குரிய திரைச் செயற்பாட்டாளர் அம்ஷன் குமார் பகிர்ந்துள்ள காணொலி விபரணம்


போட்டி விபரம் :

இலங்கைத் தமிழர்கள் உலகப் பெருவெளியில் அளப்பெரிய அனுபவங்களைச் செறிவாகப் பெற்றவாறு வாழும் ஓர் இனக்குழுமம். இந்த ‘இலங்கைத் தமிழர் வாழ்வு’ தொடர்பாக பூர்வீகம் – இடப்பெயர்வு – புலப்பெயர்வு – இதனோடான தொடர்ச்சியும் நீட்சியுமான கதைக் களத்தை முன்வைத்து உலகமெங்குமிருந்தும் இந்தக் குறும்படத் திரைக்கதைப் போட்டியில் பங்குபெற அழைக்கிறது காக்கை குழுமம். இதற்கேற்ப 15 நிமிடங்களுக்குட்பட்ட குறும்படத் திரைக் கதைகளை உலகத் தமிழ் எழுத்தாளர்களிடம் கோரப்படுகிறது.

உலகளாவிய சுயாதீனப் படைப்புகளை  வழங்கும் ஆற்றலாளர்களைக் கௌரவிக்கும் முகமாக இந்தப் போட்டி அமைகிறது.
  1. இலங்கைத் தமிழர் வாழ்க்கை : பூர்வீகம் –இடப்பெயர்வு – புலம்பெயர்வு - வாழ்வின் தொடர்ச்சியும் நீட்சியும் கொண்ட கதைக் களம்.
  2. போட்டியாளர் உலகமெங்கிருந்தும் பங்கு பற்றலாம்.
  3. போட்டியாளர்கள் தமது நிழற்படம் கொண்ட சுயவிபரக் கோவையை தமது பிரதியுடன் தனியாக இணைத்திருத்தல்.
  4. பிரதிகள் குறுந்திரைக் கதை வடிவில் (சர்வதேச நியமம்) அமைந்திருத்தல்.
  5. ஏற்கனவே வெளிவராத திரைக் கதை என்பதை தமது மடல் மூலம் உறுதி செய்தல்.
  6. குறும்படத்தின் திரைக் கதையாடல் அதிகபட்ச நேரம் 15 நிமிடங்கள்.
  7. பிரதிகள் படைப்பாளியின் அனுமதி இல்லாமல் வெளியிடப்படாது.
  8. மின்னஞ்சல் வழியில் ஒருங்குறி  (யுனிக்கோட்) எழுத்துருவில் ஆக்கங்கள் எதிர்வரும் 31.01.2019 இற்கு முன் கிடைகப்பெறல்
  9.  முடிவுகள் 2019 மார்ச்சு மாத இறுதியில் முறைப்படி வெளியிடப்படும்.
  10. காக்கைக் குழுமத்தினரால் முன்னெடுக்கப்படும் நடுவர்களது முடிவே இறுதியானது
நெறியாளர் : மதிப்புக்குரிய பத்மநாப ஐயர் (இங்கிலாந்து)

நடுவர் குழு :
  1. மதிப்புக்குரிய திரைத்துறைப் பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் (அமெரிக்கா)
  2. மதிப்புக்குரிய திரைச் செயற்பாட்டாளர் அம்ஷன் குமார் (இந்தியா)
  3. மதிப்பிற்குரிய குறுந்திரைச் செயற்பாட்டாளர் ஞானதாஸ் காசிநாதர் (இலங்கை)
போட்டித் தொடர்புகளுக்கு 

காக்கைச் சிறகினிலே : kipian2019kaakkaicirakinile@gmail.com

போராட்டம் எதற்கு? - சனத்


மலையகத்தை தாண்டி தொழிலை தேடி வந்த நாம் இன்று நம் சமூகத்திற்காக தலைநகரில் போராடி வருகிறோம் இன்று தொழிலாளி என்பதைவிட மலையக தாயின் பிள்ளைகளாக போரடிக்கொண்டிருக்கின்றோம்

களமிறங்குவோமா அல்லது கைகட்டி வேடிக்கை பார்ப்போமா? என்ற குழப்பத்தில் மூழ்கியிருப்பவர்களுக்காக....கட்டாயம் படிக்கவும்....!

கறுப்பாடுகளை களையெடுத்துவிட்டோம்
இனி கா(கூ)ட்டிக்கொடுப்புகளுக்கு இடமில்லை
களமாட துணிந்து வாருங்கள் தோழர்களே....!

ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் '1000' ஐ முன்னிலைப்படுத்தி - ஏனையவற்றையும் தேசிய மயப்படுத்துவோம்.

தேயிலை தேசத்துக்குள் முடங்கியிருந்த - மட்டுப்படுத்தப்பட்டிருந்த பெருந்தோட்டத்தொழிலாளர்களின் உரிமைக்குரல் இன்று சர்வதேசம்வரை ஓங்கி ஒலிக்கின்றது.
தொழிலாளர்களின் பிரச்சினையை தேசியமயப்படுத்தியதன் முதல் வெற்றி.

இலங்கையில் முதல் தடவையாக 36 அமைப்புகள், பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்காக தலைநகரில் களமிறங்குகின்றன.( அரசியல் நோக்கங்களுக்கு அப்பால்) நாம் ஓதுங்கி நின்று வேடிக்பை பார்க்கலாமா தோழர்களே?

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் நேசக்கரம் நீட்டியுள்ளனர். எனவே, ' 1000' கிடைக்குமா, கிடைக்காதா? என மனதுக்குள் முணுமுணுப்பதைவிடுத்து, களத்துக்குவந்து உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்துங்கள்!

போராட்டம் வெற்றிபெரும், தோல்வியடையும், பயனற்றதா என மனதுக்குள்ளேயே நீங்கள் நடத்தும் கருத்துக் கணிப்பால் சமூகத்துக்கு நடக்கப்போவது என்ன?

எம் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அதற்காக தென்னிலங்கை சக்திகளின் ஆதரவு எமக்கு அவசியம். அதற்கான ஆரம்ப புள்ளியாக இந்த போராட்டத்தை பாருங்கள். ( ப்ளீஸ் இலக்கங்களில் தொங்கிநிற்கவேண்டாம்)

கூட்டு ஒப்பந்தம் மறுசீரமைக்கப்பட வேண்டும். அந்த அடிமை சாசனத்துக்கு பதிலாக மாற்று பொறிமுறையொன்றை முன்வைக்க வேண்டும். புத்தி ஜீவிகளுடன் இணைந்து மாற்று பொறிமுறையையும் தயாரிப்பதும் எம் கடமையாகும். அதற்கான களமாக இதை பயன்படுத்துவோம்.

மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகள் தொழிற்சங்கங்களுக்கு எதிரான போராட்டம் அல்ல இது. மக்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையிலும், அவர்களின் பிரச்சினையை தேசிய மயப்படுத்தும் நோக்கிலும் முன்னெடுக்கப்படும் போராட்டமாகும்.

உங்களுக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். அதில் இந்த '1000' மும் ஒன்று, எனவே, விமர்சனங்களை ஒதுக்கி வையுங்கள். அல்லது சந்தேகங்கள் இருந்தால் களத்தில் வந்து துணிந்து கேட்குமாறு வேண்டுகின்றேன்.

இந்த போராட்டம் குறித்து மாற்று கருத்து இருப்பின், பகிரங்க விவாதமொன்றை ஏற்பாடு செய்வோம். ஆரோக்கியமான முறையில் கருத்தாடலில் ஈடுபடுவோம். அதற்கு களம் அமைத்துக்கொடுக்க நான் தயார்.

எனவே, வீழ்ந்தே வாழ்ந்து மாண்டதுபோதும் விடியலுக்காக கைகோர்க்கவும் தோழர்களே.
மலையக இளைஞர்கள் நினைத்தால் ஒரு நாள் கொழும்பை முடக்கிவிட முடியும் என்ற சிந்தனை எல்லோருக்கும் உண்டு அதற்கான நாளாக ஜனவரி 23ஆம் திகதி நாளை உறுதிப்படுத்துவோம்.

ஊடகவியலாளர் சனத்

நன்றி - மலைநாடு

சிங்கள மொழிச்சட்ட அமுலாக்கலும் தமிழ் தேசியவாதமும் - (எழுதாத வரலாறு - 3) - பெ.முத்துலிங்கம்


1956ல் சிங்கள மொழியை அரச கரும மொழியாக காலஞ்சென்ற எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி அரசு அமுலாக்கிய போது அதுநாள் வரை தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சமஷ்டி ஆட்சியைக் கோரி வந்த தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் காங்கிரஸ் உட்பட வடகிழக்கு வாழ் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரலெழுப்பி வந்த தமிழ் அமைப்புகள் அனைத்தும் இவ் அநீதியான சட்டத்திற்கெதிராக போர்க்கொடி உயர்த்தலாயின. தமிழகத்தில் ஹிந்தி மொழியை அமுலாக்குவதற்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம் செய்த இ.தி.மு.க. இலங்கைத் தேசியப் பிரச்சினைகளுடன் தம்மை இணைத்துக் கொள்ள ஆரம்பித்த வேளையிலேயே சிங்கள மொழியை மட்டும் அரச கரும மொழியாக இலங்கை அரசு அமுலாக்கியது. இலங்கை அரசின் இவ் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக மொழியுரிமைப் போராட்டத்தையும் இ.தி.மு.க. தமது ஏனைய நடவடிக்கைகளுடன் ஒன்றிணைத்துக் கொண்டது.

தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து கொடுக்க வேண்டுமெனும் பிரச்சாரத்தை முன்னெடுத்த இ.தி.மு க. மலையகத்தில் மட்டுமல்லாது. வடகிழக்கு மற்றும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரங்களிலும் மொழியுரிமைக்கான பிரச்சாரக்கூட்டங்களை நடாத்தியது. தமிழரசுக் கட்சியினரும் ஏனைய தமிழ் அமைப்புகளும் மொழி உரிமைக் கான போராட்டங்களை முன் னெடுத் த மையால் தமிழ் மக்களுக் கெதிரான இன வாதமும் தென்னிலங்கையில் தழைத்தோங்கலாயின. இவ்வாறான பின்னணியின் கீழ் இ.தி.மு.க. துணிந்து தென்னிலங்கையில் மொழி உரிமைக்கோரிக் கூட்டங்களை நடாத்தியது.

தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து கோரும் பிரச்சாரக் கூட்டத்தை தமது முதலாவது மாநாட்டுடன் 1956 மே 15ம் திகதி பண்டாரவளை சீவலி வித்தியாலயத்தில் நடாத்தியது. இம்மாநாட்டிற்கு முன்னோடியாக நடாத்தப்பட்ட ஊர்வலத்தில் இ. தி. மு. க. உறுப்பினர்கள் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து கொடு! இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்கு! நாட்டை சோசலிச பாதைக்கு கொண்டு செல்வோம் போன்ற பதாகைளை தூக்கிச் சென்றனர். இவ் ஊர்வலத்தை சிங்கள இனவாதிகள் சீர்குலைத்து கலகம் ஏற்படுத்தமுனைந்த வேளை இலங்கை சமசமாஜக் கட்சியின் சிங்களத் தோழர்கள் இவ்வூர்வலத்தில் கலந்து கொண்டு ஊர்வலத்திற்கு பாதுகாப்பு அளித்தமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை சமசமாஜக் கட்சி தமிழும் சிங்களமும் ஆட்சி மொழி எனும் கொள்கையை இக்காலகட்டத்தில் கடைப்பிடித்ததுடன் இக்கொள்கை தொடர்பாக தமது அங்கத்தினர் மத்தியில் அரசியல் கல்வியூட்டியமை இதற்கான காரணமாகும். பண்டாரவளையில் நடாத்தப்பட்ட இம் மாநாட்டில் நடிகர் எம்.ஆர்.ராதாவின் "கீமாயணம்" என்ற நாடகம் மேடையேற்றப்பட்டதுடன் இந்நாடகத்தில் பிரதான வேடமேற்று நடித்த திரு. லடிஸ் வீரமணிக்கு நடிகவேள் என்ற பட்டம் திரு. ஏ. இளஞ்செழியனால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இம்மாநாட்டைத் தொடர்ந்து நாட்டின் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரேதசங்களான வட கிழக்கிலும் பிரச்சாரக் கூட்டங்களை மேற்கொண்ட இ. தி. மு. க. மூன்று பிரதான குறிக்கோள்களை இலக்காகக் கொண்டது அவையாவன சாதி ஒழிப்பு, இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை, மற்றும் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து எனவாக அமைந்ததுடன் ஏலவே தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரலெழுப்பி வந்த அமைப்புகளுக்கு இது சவாலாக அமைந்தது. 1956 ஆகஸ்ட் 15ம் திகதி யாழ், அரியாலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடந்த கூட்டத்துடன் தமது காலை வடக்கில் பதித்த திரு. ஏ. இளஞ்செழியன் வடக்கில் இ. தி. மு. க. கிளைகளை அமைப்பதிலும் செயற்படலானார். அது நாள் வரை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தாம் வாழும் பகுதிகளில் பகுத்தறிவு மன்றம், திருக்குறள் மன்றம், போன்ற மன்றங்களை அமைத்து செயற்பட்ட யாழ்ப்பாண அறிவுஜீவிகள் பிரிவினர் இ. தி. மு. க. வுடன் இணைந்து செயற்படலாயினர். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினர் எனக்கூறப்படும் மக்கள் வாழும் பிரதேசங்களில் இ. தி. மு. க. மிக விரைவில் வேரூன்றலாயிற்று.

பருத்தித்துறை, வட்டுக்கோட்டை, பலாலி, நெல்லியடி, வேலணை. தொண்டமானாறு, உடுப்பிட்டி, கரவெட்டி, கரணவாய், இமயாணன், கரணவாய் தெற்கு, கொடிகாமம், சாவகச்சேரி, வல்வெட்டித்துறை, புலோலி போன்ற பகுதிகளில் ஒரு வருடத்திற்குள் இ. தி. மு. க. கிளைகள் அமைக்கப்பட்டன. மேலும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை போன்ற நகரங்களிலும் சிற்றூர்களிலும் தமது கால்களைப் பதித்த இ.தி.மு.க. தமிழ் மொழிப்பிரச்சினையுடன் நாடு தழுவிய ஸ்தாபனமாகப் பரிணமித்தது.

இ. தி. மு. க. இவ்வாறாக இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக எழு ந் த பிரச்சினைகளுக்காக குரலெழுப் பிய வேளை த மிழக திராவிட முன்னேற்றக்கழகம் பாராளுமன்ற அரசியலில் ஈடுபடுவதற்கான தீர்மானத்தை மேற் கொண்டது. பெரியாரினால் ஆரம்பிக்கப்பட்ட திராவிடக்கழகம் (சுயமரியாதை) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய திராவிட மொழிகளைப் பேசுகின்ற மாநிலங்களை உள்ளடக்கிய திராவிட நாட்டினை பெறுவதை குறிக்கோளாகக் கொண்டிருந்தபோதிலும் பிரித்தானியரால் அறிமுகப் படுத்திய சட்டசபை தேர்தல் களில் பங்குபெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக தமது கொள்கைக்கு சார்பானவர்கள் எனும் கட்சிக்கு, தனிநபர்களுக்கு தேர்தல் காலங்களின் போது ஆதரவு வழங்கியது. கழக அங்கத்தவர்கள் இவ்வாறான அரசியலில் ஈடுபட்டால் லஞ்ச ஊழல்களுக்கு பலியாகி விடுவர் என்னும் கருத்தினை பெரியார் கொண்டிருந்தார். இதே கொள்கையினையே திரு. சி. என். அண்ணாத்துரை தலைமையிலான திராவிட முன் னேற்றக் கழகமும் பின் பற்றியது. ஆயினும் இக்கொள்கையிலிருந்து அந்நியமாகி 1957ல் நடந்த பொதுத்தேர்தலில் பங்கு கொண்டது.

தேர்தலில் பங்கு கொள்வதை நியாயப்படுத்துவதற்காக தமிழக தி. மு. க. 1957-ல் சிறப்பு மாநாட்டை கூட்டியது. 10-02-1957ல் கூடிய இச் சிறப்பு மாநாட்டில் தேர்தலில் ஈடுபட்டுத்தான் அந்தஸ்து தேடிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் அறிமுகம் இல்லாதவர்களல்ல தி. மு. கழகத்தில் இருப்பவர்கள். நாட்டிற்குப் புதியதோர் அந்தஸ்து தேடித் தருவதற்காகவே தி. மு. கழகம் தேர்தலில் ஈடுபடுகிறது (14) எனும் கருத்தினை முன்வைத்து தமிழக தி. மு. க. சட்டசபைத் தேர்தலில் பங்குபற்றியது.

இச் சந்தர்ப்பத்தில் திரு. ஏ. இளஞ்செழியனின் தலைமையில் இலங்கைத் தி. மு. க. சிறப்புக் கூட்டமொன்றினை நடாத்தி தமிழக தி. மு. க. வின் நிலையினைப்பற்றி ஆராய்ந்ததுடன் ஈற்றில் அம்முடிவினைப் பற் றி நடுநிலைப் பாட்டை மேற் கொண்டது. பின் னர் தமிழக தி. மு. க வுடனான தொடர்பினை கைவிட்டு தனித்து சுயமரியாதை இயக்கக் கொள்கையினை முன்னெடுப்பது என்னும் தீர்மானத்தை மேற் கொண்டது. இத் தீர்மானத்துடன் இ.தி.மு.க இலங்கைப் பிரச்சனைகளுடன் மட்டும் தம்மை வரையறுத்துக்கொண்டது.

1957-ன் இறுதிகளில் யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வடக்கின் ஏனைய பிரதேசங்களிலும் கிளைகளை அமைத்த இ. தி. மு. க. சாதி அமைப்பு முறைக்கெதிராக கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டது. 1957 டிசெம்பர் 28, 29 ஆகிய தினங்களில் இ. தி. மு. க. சமூக சீர்திருத்த மாநாடொன்றினை யாழ்ப்பாணத்தில் நடாத்த திட்டமிட்டபோதிலும் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக இம் மாநாடு பிற்போடப்பட்டதுடன் இதன் பிரதி விளைவாக பருத்தித்துறை கடற் கரையில் பொதுக்கூட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. தமிழகத்தைச் சார்ந்த தி. மு. க., பிரமுகர்களான நாவலர் நெடுஞ்செழியன், ஈ. வி. கே சம்பத், பேராசிரியர் க. அன்பழகன் போன்றோர் வருகை தரவுள்ளனர் என அறிவிக்கப்பட்டிருந்தமையினால் பெருந்திரளான மக்கள் பருத்தித்துறை கடற்கரை மைதானத்தை வந்தடைந்திருந்தனர். இவ்வாறு கூடிய மக்கள் மத்தியிலே ஓர் கயிறு கட்டப் பட்டிருந்ததுடன் இக் கயிற் றின் இருமருங்கிலும் மக்கள் கூடியிருந்தனர்.

தமிழகத்தைச் சார்ந்த பேச்சாளர்களுக்கு இந்திய அரசு இலங்கை வர அனுமதி அளிக்கவில்லை . எனினும் இ.தி.மு.க பொதுச் செயலாளரை பிரதானப் பேச்சாளராகக் கொண்டு கூட்டம் நடாத்தப் பட்ட து. பெருந் திரளான மக்கள் இள ஞ் செழியனின் உரையை கேட்க, கூடியிருந்ததுடன் கட்டத்தின் நடுவே கயிறு கட்டப்பட்டு மக்கள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். பிரதான உரையை ஆற்றவிருந்த திரு. ஏ. இள ஞ் செழியன் கூட்டத் தின் நடுவே கயிறு கட்டப்பட்டிருப்பதற்கான காரணத்தை அமைப்பாளரிடம் கேட்டறிந்தார். சாதிரீதியாக மேல் சாதியினர் கீழ் சாதியினருடன் இரண்டறக்கலக்க விரும்பாததன் காரணமாகவே கயிறு கட்டப்பட்டிருந்தது. இதனை அறிந்து கொண்ட திரு. இளஞ்செழியன் தமது உரையின் போது சாதிப் பிரிவிற்கு காரணமாயுள்ள வர்ணாசிரமத்தையும் இந்து மதக் கடவுள்களையும் கடுமையாக விமர்சித்தார். இதனால் வெகுண்டெழுந்த சாதியவாதிகளும் மதவாதிகளும் கடவுளை திட்டாதே இந்து மதத்தை சாடாதே என கோசங்களை எழுப்பி மேடையை நோக்கி கற்களை வீசினர். இதனால் மேடையிலிருந்த யாழ் மாவட்ட தி. மு. க .செயலாளரும் கட்ட அமைப்பாளருமான இரா. திருமறவன் (மாணிக்கம்) காயத்திற்குள்ளானார். இதனால் வெகுண்டெழுந்த கீழ்சாதியினர் எனக்கூறப் படுவோர் மேல் சாதியினர் நின்ற பகுதியை நோக்கி கற்களை எறிந்ததுடன் இரு பிரிவினருக்கும் இடையில் கலகம் மூண்டது. இக்கைகலப்பு சம்பவம் வடக்கு வாழ் தாழ்த்தப்பட்டோர் எனக் கூறப்படும் மக்கள் மத்தியில் ஓர் உத்வேகத்தை அளித்ததுடன் வடகிழக்கு வாழ் மக்கள் மத்தியில் இ.. தி. மு. க. பற்றிய நம்பிக்கையையும் ஒங்கச் செய்தது. இதேவேளை அதுநாள்வரை வடகிழக்கு வாழ் மக்கள் மத்தியில் செயற்பட்டு வந்து, இயக்கங்களும் அமைப்புக்களும் இ.தி.மு.க.விற்கு எதிரான துஷ்பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் ஊக்குவித்தது,

பிற்போடப்பட்ட சமூக சீர்த்திருத்த மாநாடு 1958 மே 24, 25 ஆகிய தினங்களில் யாழ்நகர மண்டபத்தில் நடைபெறும் எனும் பிரச்சாரத்தை இ. தி. மு. க. மேற்கொண்டது. இக்காலக் கட்டத்தில் யாழ்வாழ் மக்கள் மத்தியில் பெருமதிப்பைப் பெற்றிருந்த தென் புலோலி புலவர் கந்தமுருகேசனார் இம்மாநாட்டை நடாத்துவதற்கான பொறுப்பினை ஏற்றிருந்தார். இதனால் இ. தி. மு. க.வின் செல்வாக்கு மேலும் உயர்ந்தது! இச் செல்வாக்கு அதிகரிப்புடன் இ. தி. மு. க.விற்கெதிரான பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. தமிழரசுக்கட்சி சார்பான “சுதந்திரன்" பத்திரிகை இ. தி. மு. க. ஒழுங்கு செய்திருக்கும் மாநாட்டிற்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தது. இதனை மறுத்து இ. தி. மு. க. வெளியிட்ட துண்டு பிரசுரமொன்றில் இம்மாநாட்டினைப்பற்றிய செய்தியினையும் மறுபுறத்தில் பின்வரும் செய்தியினையும் வெளியிட்டிருந்தது.

இலங் கை திராவிடர் முன் னேற்றக் கழகத்தின் வேகமான வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டு அதை தடுத்து நிறுத்தி விடலாம் என்ற நோக்கோடு சுதந்திரன் பத்திரிகை அடிக்கடி பொய்யும் புனையும் கலந்து மயானக்குரல் எழுப்பி வருகின்றது. அதன் பிரதிபலிப்பாக 22. 12. 1957ல் வெளியான சுதந்திரனில் யாழ்நகரில் கூடும் மாநாட்டை குழப்பும் வகையில் சூதுச் செய்தியை வாரி வீசி இருக்கிறது. அப்போலிச் செய்திகளை நம்பி இயக்கத் தோழர்களும் ஆதரவாளர்களும் தங்கள் பணியினின்றும் கொஞ்சமும் நழுவாமல் முன்னிலும் வேகமாக பணியாற்றி யாழ் நகர மாநாட்டை சிறப்பிக்க வேண்டுகிறோம் வெற்றி நமதே! இ. தி. மு. க. (15)

இவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தியில், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற இ. தி. மு. க. இக்காலக் கட்டத்தில் நாட்டின் அனைத்து தமிழ் மக்களையும் தம் வசம் இழுக்கும் வகையிலான தமது கொள்கைத் திட்டத்தை முன்வைத்தது. பொதுச் செயலாளர் மு. அ. வேலழகன் பெயரில் வெளியிடப்பட்ட இக்கொள்கை விளக்கம் பின்வரும் விடயங்களை உள்ளடக்கியிருந்தன.
இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகக் கொள்கை விளக்கம்
இலங்கையைத் தாயகமாகக் கொண்ட திராவிட மக்கள் (தமிழ் பேசும் மக்களின்) நலன் பேணிக் காப்பதே இ. தி. மு. க. கவின் குறிக்கோள்.

1. அடிப்படை நோக்கங்கள் பன்னெடுங் காலமாக அனுபவித்து வந்த உரிமைகளையிழந்து சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டுள்ள இலங்கை திராவிட மக்களது (தமிழ் பேசும் மக்கள்) இழிவை மாற்றவும் இழந்த உரிமைகளை மீண்டும் பெற்று சகல துறைகளிலும் சமவாய்ப்பும் சமசந்தர்ப்பமும் கிடைக்கச் செய்யவும் மதவேறுபாடற்ற முறையில் தமிழ்ப் பேசும் மக்களை ஓரணியிற் திரட்டுதலும்.

2. நாடற்றவர் பன்னுாறு ஆண்டுகளுக்கு முன்பதாக இந்நாட்டின் நிலத்தைப் பண்படுத்தவும் பொருள்வளத்தைப் பெருக்கவும் கொண்டு வரப்பட்டு அந்த நாள் முதல் இந்த நாள்வரை வாழையடி வாழையாக இந்நாட்டின் உயிர்நாடியான பொருள் வளத்தைப் பெருக்கும் பெருந்தொழிலில் ஈடுபட்டு பிறப்பாலும் வாழ் நாள் அளவாலும் இலங் கைக் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டிய மலையகத் திராவிடத்தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கி இந்நாட்டு மக்களோடு கூடி வாழும் நிலையை சீரழித்து இலங்கை தமிழ் பேசும் இனத்தின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ள போக்கை மாற்றி குடியுரிமை வாக்குரிமை பெற்ற இலங்கைக் குடிமக்களாக வாழ வகை செய்வது.

3. மொழி தமிழ் மொழியை இரண்டாவது தேசிய இனமான திராவிட (தமிழ்த் தேசிய ) இனத் தின் தேசிய அரசியல் மொழியாக அங்கீகரிக்கப்போராடுதல்.

4. சமுதாயம் மொழி, கலை, பண்பாடு, மனோநிலை ஒரு குடிமக்கள் என்ற உணர்ச்சி வரலாற்று பாந்தத்துவம் போன்ற இயல்புகளால் ஓரின மக்களென்ற தேசிய உணர்வோடு வாழ்ந்த திராவிட மக்களின் வாழ்வின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கவும், சீரழிக்கவும் இடையிற் புகுத்தப்பட்ட சாதிப்பிரிவினைகள் அவற்றை நம்ப உண்டு பண்ணிய புராணங்கள், இதிகாசங்கள், சம்பிரதாயங்கள் சடங்குகள் திராவிட மக்களின் சிந்தனையைக் குழப்பவும் நிதானத்தையிழக்கவும் அறியாமையில் ஆழ்த்தவும் கற்பிக்கப்பட்ட கற்பனைக்கதைகள், முறைகள், ஏற்பாடுகள் போன்றவைகளை இயலால், இசையால், கூத் தால், எழுத்தால் களைந்தெறிதல். பிறப்பால் தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்ற மனப் பான்மையை அகற்றி ஒரே இனமக்களென்ற பழங்கால திராவிட மக்களது தேசிய வாழ்க்கை முறையை நிலைநாட்டுவதும் திராவிட மக்களுடைய சிந் தனையை பகுத்தறிவு அடிப்படையில் முறைப் படுத்தி விரிவு படுத்துவதும்.

5. அரசியல் பொருளாதாரம் - பொருளாதார ஏற்றத் தாழ்வற்ற இன. சாதி, சமயப் பேதமற்ற ஒரு சமதர்மக் குடியரசு அமைவு பெறுவதற்கு துணை செய்தல். இவை இலங்கை தி. மு. க. பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை கொள்கைகளாகும். (16)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியினால் சிங்கள அரசகருமம் மொழிச்சட்டம் அமுலாக்கப்பட்டபின் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பலைக்கு மத்தியில் இ.தி.மு.க வின் இப் புதிய கொள்கைத் திட்டம் பெரும் வரவேற்பை பெறலாயிற்று. இதன் காரண மாக இ.தி.மு.க வை துசித் த அமைப் புகளும் அதனை அங்கீகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. எனினும் மொழிப்பிரச்சினை மற்றும் அதிகாரப் பரவல் தொடர்பாக தமிழரசுக் கட்சித் தலைவர் திரு. செல்வநாயகம் அவர்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைவர் திரு. எஸ். டபிள்யு. ஆர். டி பண்டாரநாயக்க அவர்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மொழி அமுலாக்கல் மற்றும் அதிகாரப் பரவல் தொடர்பாக ஓர் இணக்கார் காணப்பட்டது. இதன் விளைவாக இவ் விடயத்தை உள்ளடக்கிய மசோதாவொன்றினை திரு. எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கவின் அரசு 1957-மே-17ந் திகதி அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. தமிழர்களுக்கு நாடு காட்டிக்கொடுக்கப்படுகிறது என பேரினவாத சக்திகள் இம்மசோதாவிற்கு எதிராகக் கிளம்பியதுடன் இம்மசோதாவிற்கு எதிராக கண்டிக்கு பாதயாத்தி ரை மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் ஐக்கியா தேசியக் கட்சியைச் சார்ந்த திரு. ஜே. ஆர். ஜயவர்தன அவர்கள் ஈடு பட் 11 ருந்தார். இவ் வேளையில் தமிழரசுக் கட்சியினரும் இ. தி. மு .க வினரும் தமிழ் மக்கள் மத்தியில் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர்.


இதேவேளை பிற்போடப்பட்ட யாழ்நகர மாநாட்டினை இ. தி. மு. க. 1958மே 24, 25 களில் நடாத்த தீர்மானித்ததுடன் தமிழரசுக்கட்சியினர் 1958 மே 25ம் திகதி வவுனியாவில் சிறப்பு மாநாடு ஒன்றினை நடாத்த தீர்மானித்திருந்தனர். மொழிப்பிரச்சினையில் தீவிரமாக இய ங் கிய இரு அமைப்புகளும் முறையே யாழ்பாணத்திலும் வவுனியாவிலும் கூட்டங்களை நடாத்த முனைந்தமையை கண்ணுற்ற) பேரினவாத சக்திகள் தமிழரசுக் கட்சியினர் வவுனியாவில் அணிதிரண்டு தென்னிலங்கையை ஆக்கிரமிக்கப் போகின்றனர் எனும் வதந்தியை பரப்பினர். குறிப்பாக கே. எம். பி. ராஜரட்ன தலைமையில் இயங்கிய ஜாதிக விமுக்தி பெரமுன (தேசிய விடுதலை முன்னணி) இப்பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதன் விளைவாக இனக் கலவரம் தெ ன் னிலங் கையில் தோற்றுவிக்கப்பட்டதுடன் பல நுாறுதமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டன.

இச் சந்தர்ப் பத்தில் யாழ் பாணத்தில் மாநாட்டை நடாத்தி திரு. இளஞ்செழியனின் தலைமையின் கீழ் தென்னிலங்கை திரும்பிய இ. தி. மு. க. உறுப்பினர்கள் சிங்கள மொழிச் சட்டத்தின் படி பேரூந்துகளில் சிங்கள எழுத்தான 5 யை பொறுத்த வேண்டும் எனும் கட்டளையை மீறி தமது தமிழ் ஸ்ரீ எழுத்தினையையும் சிங்கள 6 எழுத்தினையும் பொறுத்தி தென்னிலங்கை திரும்பிய வேளை கண்டி முல்கம்பளை என்னுமிடத்தில் சிங்கள இன வெறியர்களால் வழிமறிக்கப் பட்டு தாக்கப்பட்டனர். அவ்விடத்தில் வாழ்ந்த சமசமாஜக் கட்சியினர் இதனைக் கேள்வியுற்று தாக்கப்பட்டவர்களை வைத்தியசாலையில் அனுமதித்து சிங்கள இனவெறியர்களை பிடித்து பொலீசிடம் ஒப்படைக்கலாயினர். இவ் வின வெறியர்களுக் கு மூன் று வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதேவேளை தென்னிலங்கையின் கொழும்பு நகரம் உட்பட பல நகரங் களில் சமசமாஜக் கட்சி உறுப் பினர்கள் இனவெறியர்களை அடித்து துரத்தி தமிழ் மக்களை காப்பாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் மக்களுக்கெதிராக தென்னிலங்கை பகுதிகளில் சிங்கள இன வெறியர்களால் மேற் கொள் ளப் பட்ட படுகொலைகளு ம் , தாக்குதல்களும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய வாதம் மேலும் ஆழமாக வேரூன்ற வழிசமைத்தது. இவ்வினக்கலவரத்துடன் தமது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாத தமிழரசுக்கட்சியினரும் இ.தி.மு.க னரும் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து மற்றும் அதிகாரப்பரவல் முதலிய கோரிக்கைகள் தொடர்பான பிரச்சாரக்கூட்டங்களை தொடர்ந்து முன் னெடுத்தனர். தமிழரசுக் கட்சியினரும் ஏனைய வடகிழக்கு அமைப்புகளும் வடகிழக்கு பகுதிக்குள் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் இவ்வினக்கலவரத்தின் பின்னரும் மலையகம் மற்றும் சிங்கள பகுதிகளில் மேற்கூறிய கோரிக்கைகளுடன் மலையக மக்களின் பிரஜாவுரிமைக் கோரிக்கையையும் முன்வைத்து தமது பிரச்சாரக் கூட்டங்களை இ.தி.மு.க.வினர் அச்சமின்றி நடாத்தலாயினர். இ.தி.மு.க. தென்னிலங்கை நகரங்களில் துணிந்து மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டங்கள் சிங்கள இனவாதிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. தமிழக தி. மு. க. வுடன் இணைத்து வடகிழக்கையும் மலையகத்தையும் தமிழ் நாட்டுடன் இணைத்து தனியான தமிழ் நாட்டினை உரு வாக்கப் போகின் றனர் எனும் கருத்து வளர்ந் தோங்கியது. இ.தி.மு.க வை தமிழக தி. மு. க வின் கிளை மற்றும் நாம் தமிழர் இயக்கம் என பெயர்சூட்டி இ தி. மு. க விற்கு எதிரான இனவாத பிரச்சாரத்தை இனவாதிகள் மேற்கொள்ளலாயினர். தமிழக நாம் தமிழர் இயக்கத் தலைவர் ஆதித்தனார் தமிழகம், இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் என்ற நாடுகளை உள்ளடக்கி அகண்ட தமிழ் இராச்சியம் கொள்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் கொழுந்து விட்டெரியும் இனவாத சூழலுக்கு மத்தியில் இ.தி.மு.க மிக சாதுரியமாகவும் யதார்த்தமாகவும் சிங்கள மக்களை அரவணைத்துச் செல்லும் வகையில் போராட்டத்தை முன்னெடுத்தது.

இடதுசாரி அரசியல் கருத்துக்களை தம் சீர்திருத்த கருத்துக்களுடனும் தமிழ் தேசியவாதக் கருத்துக்களுடன் இணைத்துக் கொண்டமையே இதற்கான பிரதான காரணமாகும். குறிப்பாக இ.தி.மு.கவின் தலைவர் ஏ. இளஞ்செழியனும் முன்னணி உறுப்பினர்களும் இலங்கை சமசமாஜக் கட்சியினருடன் கொண்டிருந்த தொடர்பு மற்றும் இக்காலகட்டத்தில் இலங்கை சமசமாஜக் கட்சி தமிழ் மொழி அமுலாக்கல் தொடர்பாகவும் அதிகார பரவல் தொடர்பாகவும் சரியான நிலைப் பாட்டினைக் கொண்டிருந்தமை என்பன இதற்கான காரணங்களாகும்.

1959ம் ஆண்டு அக்டோபர் 25ம் திகதி கொழும்பு நாராயண குருமண்டபத்தில் இ.தி.மு.க ஓர் பிரச்சாரக்கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தது. இக்கூட்டத்திற்காக வெளியிட்ட துண்டு பிரசுரத்தில்

வகுப்பு வாதம் ஒழிக! வெல்க தமிழ்!!

தேசிய ஐக்கியம் மலர்க!! ஐக்கிய இலங்கைக்காக! சிங்களவர் தமிழர் ஒற்றுமைக்காக! சமதர்ம குடியரசு அமைப்புக்காக!!! (17) என குறிப்பிட்டுள்ளதுடன் பிரதான பேச்சாளர்கள் இக்குறிக்கோள்களை தமது சொற்பொழிவுகளின் போது வலியுறுத்தி வந்தமையினால் கூட்டம் நடாத்தப்படும் சிங்களப்பகுதிகளின் கீழ்மட்ட சிங்களப் பொதுமக்களின் ஆதரவை இ. தி. மு. க. வினர் பெறக்கூடியதாக இருந்தது. இதே ஆண்டு இ.தி.மு.க வின் நீர்கொழும்பு மாவட்டச் செயலாளர் திரு. கே. பி குணசீலர் பொதுக்கூட்டமொன்றையும், ஊர்வலம் ஒன்றினையும் நீர் கொழும்பில் ஒழுங்கு செய்திருந்தார். இவ் வூர் வலத் தையும் கூட்டத் தையும் நடாத் த விடாது சுற்றி வளைத் துக் கொண்ட சிங் களக் காடையர்களுக்கு மேற் படி இ.தி.மு.க வின் கொள்கையை திரு. ஏ. இளஞ்செழியன் விளக்கியதுடன் அவர்களும் கூட்டத்தில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும், இவ்வாறு தென்னிலங்கை மக்களின் பிரச்சினைகளுடன் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்கான போராட்டத்தை இ.தி.மு.க வினர் முன் னெடுத்த போதிலும் இவ்வியக்கத்தினை ஓர் தமிழ் இனவாத இயக்கமாகப் பிரச்சாரம் செய்வதினை சிங்கள இனவாத சக்திகள் நிறுத்திக் கொள்ளவில்லை.

இனக்கலவரத்தின் பின்னரும் தமிழ் மக்களது உரிமைப் போராட்டம் வலுவடைந் து வந்தமையினாலும் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்த திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க தமிழரசுக் கட்சித்தலைவர் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீண்டும் அமுல்படுத்த முனைந்தார். இம்முயற்சியின் ஓர் விளைவாக திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க அவர்கள் தம் கட்சி அங்கத்தினர்கள் மத்தியில் தமிழ் மக்களின் நியாயமான உரிமையை ஏற்கச்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார். படம்

இனக்கலவரத்திற்குப் பின்னர் 1959 மே 17ம் திகதி அன்று குருநாகல் நகர மண்டபத்தில் நடந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 7வது அமர்வில், கடந்த வருடம் நாடு கடுமையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருந்தது. சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வளரும் இன வாத பதற்ற நிலை பரந்த கட்டுப் பாடற்ற தன் மையுடன் வெடிப்புற்றதுடன் மே மாத இறுதிவரை பரவியது. இது அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்தப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. நிலைமை மிக விரைவில் நியாய மான ரீதியில் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன் இக்காலகட்டத்தின் துன்பகரமான சம்பவங்கள் ஆகக் குறைந்தது சில நன்மைகளைத் தரும். இனவாத வித்தியாசங்களை பெருமளவு கொண்டு சென்றதன் மூலம் கடும் பிரதிபலனை உருவாக்கிய தீவிரவாதிகள் உட்பட அனைவருக்கும் இது ஞாபகத்திலிருக்கச்செய்யும். இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் உருவாகும் என நான் நினைக்கவில்லை. (18) என உரையாற்றி தாம் முன்வைத்த இரு மசோதாக்களை நிறைவேற்றுவற்கான ஆணையை தமது கட்சி அங்கத்தவர்களிடம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆயினும் திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க இனவாத சக்தியினால் ஒரு சில மாதங்களின் பின்னர் படுகொலை செய்யப்பட்டார். 1959 செப்டம்பர் 25ம் திகதி திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டதுடன் பண்டா-செல்வா ஒப்பந்தமும் கைவிடப்பட்டது.

திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கவின் மறைவுடன் அவரால் முன்வைக்கப்பட்ட மசோதாக்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி கைவிட்டதுடன் நாடு ஓர் பொதுத்தேர்தலை சந்தித்தது. இச் சந்தர்ப்பத்தில் பொதுத்தேர்தலின் போது எப்பிரிவினரை ஆதரிப்பது என்ற பிரச்சினை இ.தி.மு.க வினர் மத்தியில் எழுந்தது. இது தொடர்பாக 1959 டிசெம்பர் 17ம் திகதி திரு. ஏ. இளஞ்செழியனின் தலைமையில் கூடிய இ.தி.மு.க பொதுச்சபை தமிழ் மொழிக்கு சம அந்தஸ்தினை வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மற்றும் சமதர்ம ஆட்சியினை உருவாக்குவதற்கான கொள்கையை முன் வைத்துள்ள இலங்கை சமசமாஜக் கட்சியினை ஆதரிப்பதென தீர்மானித்தது. இதன்படி 1960 மார்ச்சில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சமசமாஜ கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரக்கூட்டங்களை நடாத்திய து. போதியளவு பெரும்பான்மையை ஸ்ரீ. ல சு. க. கொண்டிராமையினால் 1960 ஜூலையில் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டது.

1960 ஜூலையில் நடந்த பொதுத்தேர்தலின் போது இ. தி. மு. க. சமசமாஜ கட்சியினருக்கு ஆதரவு வழங்காது தமிழரசுக் கட்சியினருக்கு ஆதரவு நல்கியது. இலங்கை சமசமாஜ கட்சியினர் 1960 மார்ச் பொதுத்தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கெதிராக 120 தொகுதிகளில் போட்டியிட்டதுடன் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக கடைப்பிடிக்கும் இனவாத நிலைப்பாட்டினை வன்மையாகக் கண்டித்தது. ஆனால் 1960 ஜூலையில் நடந்த பொதுத்தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றினை செய்து கொண்டது. சமதர்மக் கொள்கைக்காகவும் மொழி சம அந்தஸ்திற்காகவும் முன் நின்ற சமசமாஜக் கட்சியினர் நான் கு மாதங்களுக் கு ள் அக் கொள்கைகளுக்கு எதிரான நிலைப் பாட்டினைக் கொண்ட ஸ்ரீ ல. சு. க. யுடன் போட்டித் தவிர்ப்பினை மேற் கொண்டமை அக்கொள்கைகளின் காரணமாக நட்புறவைப் பேணிய இ.தி.மு.க வினை சிக்கலுக்குள்ளாக்கியது.

| லங்கா சமசமாஜக் கட்சியின் இந் நிலைப்பாட்டினை கண்டித்த இ. தி. மு. க. மொழிக்கொள்கைக்காகவும் அதே நேரத்தில் மலையக மக்களின் பிரஜாவுரிமைக்காகவும் குரலெழுப்பும் தமிழரசுக் கட்சிக்கு வடகிழக்கு பகுதிகளில் ஆதரவு வழங்குவது எனத் தீர்மானித்தது. அத்துடன் ஏனைய மாகாணங்களில் இ.தி.மு.க கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதெனவும் தீர்மானித்தது. இ. தி. மு. க. வின் இந்நடவடிக்கை நாளடைவில் இ.தி.மு.க தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட வழிசமைத்தது.

வடகிழக்கு வாழ் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் "குரலெழுப்பிய தமிழரசுக் கட்சியினர் மலையக மக்களின் குடியுரிமைக்காகவும் குரலெழுப்பி வருவதால் அக்கட்சியினருடன் கூட்டுச்சேர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இலகுவில் இப்பிரச்சினைக்கும் தீர்வு காணக்கூடிய நிர்ப்பந்தத்தினை அரசுக்கு ஏற்படுத்தலாம் எனும் நிலைப்பாட்டினை இ.தி.மு.க அறுபதுகளின் இறுதியில் மேற்கொண்டது. இந்நிலைப்பாட்டினை அமுல் படுத்தும் வகையில் 1960 டிசெம்பர் 17ம், 18ம் திகதிகளில் கூடிய இ.தி.மு.க பொதுச் சபை மேற் கூறிய நிலைப் பாட்டி னை ஏக மான தாக ஏற்றுக் கொண்டதுடன் 1961 ஜனவரி 20ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழரசுக்கட்சியினர் நடாத்தவுள் ள சத்தியாகிரகப் போராட்டத்தில் இ.தி.மு.க உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனும் தீர்மானத்தையும் மேற்கொண்டது.

இச் சத்தியாகிரகப் போராட்டத்தைப் பற்றியும் மலையகத்தவர்கள் இப்போராட்டத்தில் பங்கு பற்றுவதன் அவசியத்தை அறிவுறுத்தும் வகையில் இ.தி.மு.க 10-12-1960 அன்று கலாசார மாநாடு ஒன்றினை பண்டாரவளை நகர மண்டபத்தில் நடாத்தியது. இம்மாநாட்டில் தமிழரசுக் கட்சி தலைவர்களான மட்டக்களப் பினைச் சார்ந்த மறைந்த சாம் தம்பிமுத்து. எம். திருச்செல்வம், கியூ.சி மு.மாணிக்கம் என்போர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தின் போது திரு. ஏ. இளஞ்செழியன் மலையகத் தமிழர் இப்போராட்டத் தில் இணைவதற்கான அவசியத்தைப்பற்றி வலி யுறுத்தலானார். இதன் விளைவாக மலையக இளைஞர்கள் திரு. இளஞ்செழியன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

அது நாள்வரை வடகிழக்கு மக்களால் தனித்து முன்னெடுத்த போராட்டங்களை போலல்லாது இச்சத்தியாக்கிரகப் போராட்டத்தில் மலையக மக்களும் பங்கு கொண்டமை அன்றைய ஆட்சியாளர்களைத் திணற வைத்தது. இச்சத்தியாக்கிரகம் இராணுவத்தினைக் கொண்டு முறியடிக்கப்பட்டதுடன் மலையகப் பிரேதசங்களுக்கும் இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது. இச்சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கின் தலைவர்கள் கைது செய் யப் பட்டு தடுப் புக்காவலில் 10 வைக்கப்பட்டனர்.

இ.தி.மு.க. வின் பிரவேசம் காரணமாக மலையகத்தின் பாரிய தொழிற்சங்கங்களான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், ஜனநாயக தொழிலாளர் காங்கிரசும் ஓர் நிலைப்பாட்டினை மேற்கொள்ள நேர்ந்தது. இ.தி.மு.க. வின் ஆதரவுடன் தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள நெருக்கடி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கொழும்பு புல்லர்ஸ் வீதியில் உள்ள ஈழநாடு பத்திரிகையைச் சார்ந்த கே. எஸ். தங்கராசாவின் இல்லத்தில் ஓழுங்கு செய்யப்பட்டது. தமிழ் காங்கிரசைச் சார்ந்த எம். சிவசிதம்பரம் கம்யூனி ஸ்ட் கட்சியைச் சார்ந்த தொழிற்சங்கத் தலைவர்களான எஸ். நடேசன் , ரொசாரியோ பர்ணான்டோ , இலங்கைத் தொழிலாளர் காங்கிரசைச்சார்ந்த கே. இராஜலிங்கம், இ தி. மு. க வைச்சார்ந்த ஏ. இளஞ்செழியன், மு. அ. வேலழகன் மற்றும் தமிழ் அபிமானிகளான சேர். கந்தையா வைத்தியநாதன், டாக்டர் பொன்னையா என்போர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் தலைவர்களை விடுதலை செய்யும் வரை மற்றும் மலையக மக்களின் குடியுரிமை உட்பட தமிழ் மக்களின் உரிமைகளை பெறும் வரை பொது வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவேண்டுமெனும் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் மலையகத்தில் போராட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பினை முறையே ஏ. இளஞ்செழியன், மு.அ. வேலழகன் எஸ். நடேசன், ரொசாரியோ பர்ணாந்து என்போரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெற்றியீட்டும் வரை வேலைநிறுத்தத்தைத் தொடருவோம் என சபதமெடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேலை நிறுத்தத்தை மேற் கொண்ட மறுதினமே அரசின் நிர்ப்பந்தத்திற்கு இணங் கி வேலைநிறுத்தத்திலிருந்து வாபஸ் பெற்றுக் கொண்டது. ஓர் நீண்ட பொது வேலை நிறுத்தத்திற்கு தம்மை தயார் செய்திருந்த தோட்டத் தொழிலாளர்கள் இதனால் பெரும் ஏமாற்றத்திற்கும் கடன் சுமைக்கும் ஆ ளான துடன் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தினையும் தவறவிட்டனர்.

சத்தியாக்கிரகப் போராட்டத்துடன் இ. தி. மு. க. விற்கும் தமிழரசுக் கட்சிக்கும் நல்லுறவு மேலும் வலுவடைந்து இ. தொ. கா, ஜ.தொ.கா.. என்பவற்றிற்கு மாற்று சக்தியாக இ.தி.மு.க. வை தமிழரசுக் கட்சியினர் கணிக்கலாயினர். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சித் தலைவர்கள் இ. தி. மு. க. வுடன் உத்தியோக பூர்வமாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள முனைந்தனர். தமிழீழத்தின் சுபாஷ் சந்திரபோஸ் என் அழைக்கப்பட்ட அரசு ஊழியரான திரு. இராசரத்தினம் இ.தி.மு.க பொதுச் செயலாளர் திரு. ஏ. இளஞ்செழியனை தடுப்புக் காவலிலுள்ள திரு. அ. அமிர்தலிங்கத்தின் உறவினர் எனக்கூறி சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு எஸ். எம். இராசமாணிக்கம், அ. அமிர்தலிங்கம், டாக்டர் இ. வி. எம். நாகநாதன் ஆகியோருடன் திரு. ஏ. இளஞ்செழியன் கலந்துரையாடலை மேற்கொண்டார். இக்கலந்துரையாடலின் போது மொழியுரிமைக் கோரிக்கையுடன், மலையக மக்களின் குடியுரிமைக் கோரிக்கையும் தமிழரசுக்கட்சி முன்வைக்கின்றமையினால் இ.தி.மு.க. தமிழரசுக் கட்சியுடன் கூட்டிணைந்து செயற் படுவது பற்றி கலந்துரையாடப்பட்டது.

தமிழரசுக்கட்சியுடன் கூட்டிணைந்து செயற்படுவது தொடர்பாக கலந்துரையாட இ.தி.மு.க இதேயாண்டு பண்டாரவளை மாவட்ட கிளை சார்பாக கூட்டமொன்றினை நடாத்தியது, தமிழரசுக் கட்சியின் சார்பாக திரு. திருச்செல்வம் கியூ. சி. அக்கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், சமஷ்டி ஆட்சி கிடைத்தால் மலையகத்திற்கு எவ்வாறான நன்மை கிடைக்குமென இ.தி.மு.க உறுப்பினர் கேள்வியெழுப்பினர். தடுப்புக்காவலிலுள்ள தலைவர்கள் விடுதலை பெற்று வந்தவுடன் மற்றும் லண்டனில் சிகிச்சை பெற்றுவரும் தந்தை செல்வா நாடு திரும்பியதும் இக்கேள்விகளுக்கு பதிலளிப்பார் என திரு. திருச்செல்வம் கூறியதுடன் இதனையொத்த பிறிதொரு கூட்டம் நுவரெலி யா நகரில் ஒழுங்கு செய்யப்பட்டதுடன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றும் நடாத்தப்பட்டது.

நுவரெலியாவில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் தடுப்புக் காவலிலிருந்து விடுதலை பெற்ற திரு. அ.அமிர்தலிங்கம் எம். சிவசிதம்பரம், திருமதி. மங்கையர்க்கரசி முதலியோர் கலந்து கொண் டதுடன் பங்கு பற்றுநர்களின் கேள்விகளுக்கு இவர்கள் விடையளித்தனர். இவ்விரு கூட்டங்களின் பின்னர் தமிழரசுக்கட்சியினருடன் கூட்டிணைந்து செயற்படும் தீர்மானத்தை இதிமுக. வினர் மேற்கொண்டனர்.

சான்றாதாரங்கள்:

14. மு. கருணாநிதி-நெஞ்சுக்கு நீதி முதல் பாகம் ப.291-92
15. இ.தி.மு.க துண்டு பிரசுரம் 20-12-1957
16. இ. தி. மு. க கொள்கை விளக்கம் 1957
17. துண்டுப் பிரசுரம் 1959 
18. D. M. Monnekulame, The Abrogation of 9 Pact Daily News 26-04-1993

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates