Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

ஆதிக்க சாதி எதிர்ப்பார்ப்புகளுடன் கணக்குத் தீர்த்தல் - என்.சரவணன்

இந்தக் கட்டுரை லண்டனில் நிகழ்ந்த விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல் திருமாவளவனின் “அமைப்பாய்த் திரள்வோம்” நூல் வெளியீட்டு நிகழ்வுக்காக வெளியிடப்பட்ட சிறப்பு நூலுக்காக ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க எழுதிக்கொடுத்த கட்டுரை. ஆனால் அதில் முழுக் கட்டுரையும் வெளிவரவில்லை. என் அனுமதியின்றியே சில பகுதிகள் நீக்கப்பட்டு வெளியாகியிருந்தது. இந்தக் கட்டுரையின் முழு வடிவம் தமிழகத்தில் இருந்து வெளிவரும் “வெள்ளைக் குதிரை” என்கிற தலித்திய சஞ்சிகையில் இப்போது வெளிவந்திருக்கிறது.
சாதியத்தின் உட்கிடக்கையே ஆதிக்கபடிநிலை சாதிகளின் மனவெதிர்ப்பார்ப்புகள் தான். அதில் தான் ஆதிக்க சாதியம் கோலோச்சுகிறது. அதில் தான் இருப்பு கொண்டுள்ளது. அதில் தான் சுகம் கண்டுகொண்டிருக்கிறது. அதில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

நிறுவனமயப்பட்ட இந்த சாதிய அமைப்புமுறையானது அது நடைமுறையில் தனது ஆதிக்கத்தனத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரயோகித்துவருவதை நாம் கண்டு - கடந்து – எதிர்கொண்டு வருகிறோம். அதேவேளை இன்றைய நவீன காலத்தில் இந்த சாதிய ஆதிக்கத்தின் வடிவமானது சூட்சுமமாகவும்,  இயங்கிவருவதே அதன் புதிய நுண்ணரசியல் வடிவம். அந்த செயல் வடிவம் அந்த ஆதிக்க சாதிகளின் சாதிய “எதிர்பார்ப்புகளால்” கட்டமைக்கப்படுகின்றன.

தனக்கு கீழ் இருக்கும் சாதி எப்படிப்பட்ட நடத்தைக் கொண்டிருக்கவேண்டும், கொண்டியங்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் சற்று பிசிறு ஏற்பட்டாலும் அதைத் தாங்கிக்கொள்ளும் நிலையில் ஆதிக்க மனநிலை இல்லை. அப்படி அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது வலிந்த வன்முறைகளால் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொண்ட காலத்தைக் எதிர்கொண்டு கடந்து வந்திருக்கிறோம். இன்றும் அதன் எச்சசொச்சங்களை வெவ்வேறு வடிவங்களில் எதிர்கொண்டபடி இருக்கிறோம்.

ஒருவர் என்ன பண்பாட்டுக் கூறுகளை கொண்டிருக்கவேண்டும்? என்ன நடத்தையைப் பின்பற்றவேண்டும்? எந்தளவு வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும்? எந்தளவு தகுதிகளைக் கொண்டிருக்கவேண்டும்? எந்த கருத்தை வெளிப்படுத்தலாம்? அதை எந்த அளவுக்கு வெளிப்படுத்தலாம்? எந்த முறையில் வினயாற்றவேண்டும்? எந்த வடிவத்தில் வெளிப்படுத்தலாம்? மீறலின் எல்லை என்ன?  என அனைத்துமே ஆதிக்க சாதிய எதிர்பார்ப்பில் உள்ள பட்டியல் தான்.

இந்த ஆதிக்க மனவெதிர்ப்பார்ப்பு என்பது வெறுமனே ஆதிக்க சாதிகளுக்கு உரிய குணம் மட்டுமில்லை. இதை சகல ஆதிக்க வடிவங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். பெண்களின் மீதான ஆணாதிக்க எதிர்ப்பார்ப்பு, மூன்றாம் பாலினர் மீதான முதலாம் பாலினரின் எதிர்பார்ப்பு, வர்க்கத்தால் உயர்ந்தவர்கள் படிநிலையில் அடுத்துள்ள வர்க்கத்திடம் எதிர்பார்ப்பது, கருப்பு நிறத்தவர் மீதான வெள்ளை நிறத்தவரின் எதிர்பார்ப்பு, பெரும்பான்மை சமூகமொன்று சிறுபான்மை சமூகத்திடம் எதிர்ப்பார்ப்பது, நகர்ப்புறத்தில் உள்ளவர் கிராமப்புறத்தவரிடம் (அல்லது சேரிவாழ் மக்களிடம்) இருந்து எதிர்பார்ப்பது,  வயதில் கூடியவர் வயதில் குறைந்தவரிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்பு, சுகதேகியொருவர் அங்கவீனரிடம் எதிர்பார்ப்பது என இப்படி இனம், பால், வர்க்கம், வயதுத்துவம், நிறம், பெரும்பான்மைத்துவம் என அடுக்கிக்கொண்டே போக முடியும். குறிப்பாக விளிம்புநிலையினரிடம் எதிர்பார்க்கப்படும் ஆதிக்கசக்திகளின் எதிர்பார்ப்புகளை ஈடு செய்வது அவர்களின் கடமையாக ஆதிக்க சக்திகள் எதிர்பார்க்கின்ற அதே வேளை; அவ்வெதிர்பார்ப்புகளை ஈடுசெய்வது தமது பொறுப்பாக அடக்கப்படும் சக்திகள் கருதும் போக்கும் இல்லாமலில்லை.

இந்த சமூகப் பிரிவினரில் மேற்குறிப்பிட்ட அடையாளங்களில் அதிகமான அடையாளங்களை ஒரு சேர இருப்பவர்களே அதிக பாதிப்புக்கு உள்ளாவர் என்பதை சொல்லித் தெரியத் தேவையில்லை. உதாரணத்திற்கு வர்க்கம், இனம், பால், நிறம், சாதி, பிரதேசம், குறை வயது போன்ற அத்தனையும் ஒரு சேர இருப்பவர்கள் அதிக எதிர்பார்ப்புகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாவார் என்பதை நாம் உணர முடியும்.

இந்த எடுகோளின் அடிப்படையில் ஆதிக்க சாதி எதிர்பார்ப்புகளை நான் தனிப்பட்ட ரீதியில் மிகவும் நுணுக்கமாகவே அனுபவித்திருக்கிறேன். அவை நுணுக்கமானது என்பதை பகிரங்கமாக கூறக் கூடிய சமூகத்தில் நாம் வாழவில்லை. அப்படி சொன்னால் நிச்சயம் இலகுவாக கேலிக்குள்ளாவது நாமாகத் தான் இருக்க முடியும். ஒரு தலித்திய செயற்பாட்டாளனாக இதை வெளிப்படுத்த சரியான தளம் கிடைத்தால் மட்டும்தான் உண்டு. அந்த வகையில் இவ்விடயம் பேசுபொருளாக வேண்டிய ஒன்று. நான் இங்கு எதைச் சொல்ல வருகிறேன் என்பதை அத்தகைய எதிர்கொண்ட ஒடுக்கப்பட்டோரால் மாத்திரம் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.

இலங்கைச் சூழலில் நான் ஒரு தமிழனாக, “இந்து சமயத்தவனாக”, கருப்பனாக, சக்கிலியனாக, விளம்புநிலை வர்க்கத்தவனாக, சேரிவாழ் காரனாக இவ்வடையாளங்கள் எனக்கு பல அனுபவங்களைத் தந்தாலும், ஐரோப்பாவுக்கு புலம் பெயர்ந்ததன் பின் இவ்வடையாளங்கள் மறுவடிவம் பெற்றுவிட்டன, இங்கு சக தமிழ் சமூகத்துடன் உறவாடுகையில் மேற்படி அடையாளங்களில் சில தொடரவே செய்கின்றன அதேவேளை இந்த வெள்ளையின நாட்டில் நிறத்துவமும், அந்நியன் என்கிற அடையாளமும், மொழியும், கலாசாரமும் கூட நம்மை இரண்டாந்தர, மூன்றாந்தர நிலைக்கு தள்ளி அங்கும் ஆதிக்க மனவெதிர்பார்ப்புகளை புதிய வடிவத்தில் எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது.

சில குறிப்பான அனுபவச் சம்பவங்களை மாத்திரம் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
0-0-0
இலங்கையில் இடதுசாரி இயக்கச் செயற்பாடுகளின் போது பெரும்பான்மை சிங்களத் தோழர்களுடன் அந்த இயக்கங்களில் பணியாற்றிய வேளைகளில் அவர்களின் அன்பும், அக்கறையும் அதிகமாகவே இருக்கும். ஏனென்றால் “தமிழ் தோழர்” என்பதால். ஆனால் பல இடங்களில் அவர்களின் எதிர்பார்ப்பு நான் ஒரு அதிக குரல் உயர்த்தாதவனாக, கடும் வாதங்களில் ஈடுபடாதவனாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததை பல இடங்களில் எதிர்கொண்டிருக்கிறேன். அவர்களைப் பொறுத்தளவில் அவர்கள் அறிமுகப்படுத்தும் இடங்களில் மிகவும் அடங்கிய, பணிவுள்ளவனாக இருந்துவிடவேண்டும். அப்படியிருந்தால் அங்கு எனது இருப்பு சாத்தியம். ஆக, அங்கெல்லாம் மிகவும் கவனமாக அரசியல் பேச சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. அவர்களின் பச்சாதாபத்தின் எல்லை இனவெதிர்பார்ப்புடன் நின்றுவிடுவதை கவனித்திருக்கிறேன். இதைப் பொதுமைப்படுத்தவில்லை. ஆனால் இதே அனுபவத்தை நான் பணியாற்றிய பல சிங்கள சூழலிலும் எதிர்கொண்டிருக்கிறேன். இதைத் தான் ஆதிக்க சாதிய எதிர்பார்ப்புகளும் நினைவு படுத்துகின்றன.
0-0-0
எனது சிறு வயதில் ஒரு நிகழ்ந்த சம்பவம்:
எங்கள் தோட்டத்திற்குள் (கொழுப்பில் சேரிகளுக்கு மறுபெயர் தோட்டங்கள்) நுழையும்போது வாசலில் இருந்த ஒரே ஒரு பிராமண வீடொன்று இருந்தது. அங்கிருந்த அய்யர் கோயிலில் உடைக்கப்பட்ட தேங்காய்களைக் கொண்டுவந்து குறைந்த விலைக்கு விற்பார். அங்கு நாங்கள் தேங்காய் வாங்குவது வழக்கம். ஒரு முறை என்னை வழக்கம் போல அம்மா தேங்காய் வாங்க அனுப்பியிருந்தார். கதவு மூடப்பட்டிருந்தது. மூடியிருந்த வீட்டை

"அக்கா... அக்கா..."

எனத் தட்டிக் குரல்கொடுத்த போது, அந்த பிராமணர் வேகமாக வந்து கதவைத் திறந்து பளீரென்று எனது கன்னத்தில் அறைந்தார்.

"எவள்டா உனக்கு அக்கா...? உனக்கு நாங்கள் எப்ப சொந்தமானமடா நாயே...?"

என ஆத்திரத்துடன் கொதித்தார். நான் என் கன்னங்களை பிடித்தபடி அழுதுக்கொண்டே அவரைப் பார்த்தபடி நின்றேன். கதவை வேகமாக அடித்து மூடிவிட்டு அவர் உள்ளே சென்று விட்டார். நானும் திகைத்துப்போய் கண்ணீர் விட்டபடி வீடு வந்து சேர்ந்ததும் அம்மாவிடம் சொல்லி அழுதேன். அம்மாவுக்கு வந்த ஆத்திரத்தாள் அம்மாவால் என்ன செய்துவிட முடியும். கடந்துவிட்டோம். நான் அவர்களை எப்படி அழைக்கவேண்டும் / எப்படி அழைக்கக்கூடாது என்பது பற்றிய அவர்களின் எதிர்பார்ப்பை நான் மீறியதே என் குற்றம்.
0-0-0
முகநூலில் நிகழ்ந்த ஒரு அரசியல் உரையாடலின் போது ஒரு கட்டத்தில் ஒருவர் எனது வாதத்தை எதிர்கொள்ள முடியாமல் போனதும் அவர் என்னை அடுத்த நாள் காலையில் தொலைபேசியில் அழைத்து “சக்கிலியன்” என்று திட்டினார். அரசியல் ரீதியில் தனது தர்க்கம் தோற்றுப்போன நிலையில்; என்னைக் காயப்படுத்த சாதிய வசவு தான் அவருக்கு கிடைத்த பேராயுதம். (இத்தனைக்கும் திட்டியவரும் மலையகத்தைச் சேர்ந்தவர்.)  அதனை பொதுவெளியில் நான் வெளிப்படுத்தி கண்டித்தேன். எனக்காக எவரும் இருக்கவில்லை. தலித்தியம் பேசியோர் கூட ஒதுங்கியே இருந்தனர். அது மட்டுமன்றி சம்பந்தப்பட்ட நபர்; அவர் பணியாற்றிய அரச நிறுவனத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து எனக்கு உதவுமாறு நான் கேட்டதாகவும், அதனை அவர் மறுத்ததால் நான் இப்படி குற்றம் சுமத்துவதாகவும் என் மீது அபாண்டமான அவதூறைப் பரப்பிவிட்டார். நான் தனிமைப்படுத்தப்பட்டேன். அவரின் நண்பர்களாக இருந்த எனது தோழர்களும் என்னோடு இருக்கவில்லை.
0-0-0
பத்து வருடங்களுக்கு முன்னர் என்னை “புலி எதிர்ப்பாளன்” என்கிற முத்திரையைக் குத்தி விடுதலைப் புலிகளின் முக்கிய ஆதரவாளர் ஒருவர் கிளாசால் தாக்கியதில் என் முகம் கடும் காயங்களுக்கு உள்ளானது. இடதுபுற காதுக்கு கீழுள்ள கன்னத்தில் 6 தையல்கள் இடுமளவுக்கு தோல் கிழிந்து தொங்கியிருந்தது. அந்த சம்பவத்தைக் கண்டித்து தோழர்கள் தமயந்தி, முரளி போன்றோர் பிரசுரமொன்றை வெளியிட்டார்கள். இந்த சம்பவத்துக்குப் பின்னால் இருந்த நுட்பமான சாதியத்தை அவர்கள் சாடினார்கள். குறிப்பாக எனக்காக குரல்கொடுக்க முன்வராத  ஒஸ்லோவில் இருந்த“முற்போக்கு” பேசிய தோழர்களின் சாதிய நுண்ணரசியலை அவர்கள் கண்டித்தார்கள்.

சம்பந்தப்பட்ட நான்; இந்த விடயத்தில் நேரடியாக சாதிய காரணங்களைச் சுட்டிக்காட்டத் தயக்கமிருந்தது. நான் அதைச் செய்திருந்தால் அது தற்சார்பு சாய்வைக்கொண்ட குற்றச்சாட்டாகப் பார்க்கப்பட்டிருக்கும்.
0-0-0
ஐரோப்பாவில் இலக்கிய சந்திப்புகள், பல கூட்டங்கள், மாநாடுகள் என்பவற்றுக்கு நான் அழைக்கப்பட்டால் சாதியம் குறித்தே அதிகம் பேச அழைக்கப்பட்டிருக்கிறேன். பல சந்தர்ப்பங்களில் சாதிய தலைப்பை நானே கேட்டுப்பெற்றிருக்கிறேன். 90களின் ஆரம்பத்திலிருந்து அரசியல், ஊடக, சமூக செயற்பாடுகளில் நான் ஈடுபட்டாலும் வேறு அரசியல் தலைப்புகளில் உரையாற்றுவதை விட சாதிய தலைப்பை தெரிவு செய்ததற்கு காரணம்; தலித்திய அரசியலைப் பேசுவதற்கான தளங்கள் மற்றும்படி கிடையாது. கிடைக்கின்ற தளங்களை சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்றும், பேசாப்பொருளை, பேச வேண்டிய பொருளை பேசியே ஆகவேண்டும் என்பதற்காகத் தான்.

இடையூறின்றி நமது விளக்கத்தை முழுமையாக ஒப்புவிக்க கிடைக்கின்ற அரிய சந்தர்ப்பங்கள் அவை. எனவே அக் கூட்டங்கள், கருத்தரங்குகளை நான் பயன்படுத்திக்கொள்வேன். 

சாதியத்தை விட்டால் எனக்கு வேறு பேசுவதற்கு ஒன்றும் தெரியாது என்கிற கேலிகளையும் தாண்டி சாதியத் தலைப்புகளில் தொடர்ந்தும் பேசியிருக்கிறேன்.

அதேவேளை இலங்கையில் நடக்கும் ஏனைய பிரச்சினைகளை குறிப்பாக இன ஒடுக்குமுறைக்கு எதிராக பேசியவேளைகளில் என்னை ஒரு தேசியவாதியாக குறுக்கும் செயலில் சக தோழர்கள் ஈடுபட்டார்கள். கேலி செய்தார்கள். அவர்களுக்கு என்று ஒரு அரசியல் பார்வையும், அரசியல் போக்கும் இருக்கும் போது அவர்களின் போக்கு குறித்து நமக்கு விமர்சனங்கள் இருந்தாலும் ஏன் அந்த அரசியல் பார்வை என்று கேள்வி கேட்டதில்லை. ஆனால் அவர்களுக்கு என் மீது கேள்வி எழுவதன் பின்னால் உள்ள நுண்ணரசியலை புரிந்துகொள்ள பெரிய ஆராய்ச்சி தேவைப்படவில்லை.

இத்தனைக்கும் “நமக்குள் அரசியல் ரீதியில் முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால் அதை தள்ளிவைத்துவிட்டு நமக்குள் இருக்கும் பொது உடன்பாடுகளான “தலித் அரசியல்” விடயத்தில் ஒன்றாக இருப்போம் என்கிற உடன்பாட்டைக் கண்டிருக்கிறோம். அந்த உடன்பாட்டை நான் மீறியதில்லை. நான் அவர்கள் கொண்டிருந்த அரசியலுடன் முரண்பட்டு மோதச் சென்றதில்லை. ஆனால் அவர்கள் என்னைத் தொடர்ச்சியாக வம்பிலுத்த போது அவர்களின் சகிப்பின்மை எங்கிருந்து ஊற்றெடுக்கின்றது என்கிற கேள்வியே மீண்டும் மீண்டும் என்னுள் எழுந்தது.

சமீபகாலமாக இலங்கை அரசியல் – வரலாறு சார்ந்து நிறையவே எழுதிவருகிறேன். அவை இத்தகையவர்களின் ஆதிக்க மனவெதிர்ப்பார்ப்பை திருப்திபடுத்தவில்லையோ என்று தான் எனக்கு எண்ணத் தோன்றியது. சமூக வலைத்தளங்களில் நான் இடும் பதிவுகளின் கீழ் எனக்கு நெருக்கமானவர்களாக நான் நம்பியிருந்த  தோழர்கள் பகிரங்கமாக என்னை சீண்டுவதன் உள்ளார்த்தத்தை நான் உணர்ந்து கொண்டேன். நான் இடும் பதில்கள் அவர்களால் சகிக்க இயலவில்லை. என்னிடம் மட்டும் அந்த சகிப்பை அவர்கள் எதிர்பாத்தார்கள். அவர்கள் என்னிடம் எதிர்பார்க்கின்ற பணிவை நான் தரமுடியாது போவதை சகிக்க முடியாதவர்களாகவே என்னால் இனங்கான முடிந்தது. எனது கட்டுரைகளின் ஆழமும், சீற்றமும் எனது சாதிய அடையாளத்துக்கு தகுந்ததல்ல என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றே உணர முடிந்தது.

அந்த உரையாடலை பதிவு செய்தே வைத்திருக்கிறேன். பல தடவைகள் பார்த்து மீளுறுதிசெய்துகொண்டேன். 

மேற்படி நிகழ்வை இங்கு நான் விளக்குகையில் நான் நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தாத காரணம் இது “ஒரு” சாதாரண நிகழ்வு என்று என்னால் தட்டிக்கழிக்க முடியவில்லை. இது ஒரு எடுகோள் மட்டுமே. நம்மைச் சூழ இத்தகைய சகிப்பின்மைகளுக்குப் பின்னால் உள்ள சாதிய நுண்ணரசியலின் பன்முகப்பட்ட வடிவங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது ஒற்றை நிகழ்வல்ல. ஒரு சமூகப் போக்கு.

இலங்கைப் பொறுத்தளவில் வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் தலித்துகளுக்கு இந்தியவம்சாவளி தலித்துகளும் படிநிலையில் அவர்களுக்கு கீழானவர்களாகவே கருதப்படுவதை இங்கு நான் பதிவு செய்தாகவேண்டும். இதை மறுப்பவர்களை நான் எதிர்கொள்ள விரும்புகிறேன். அதாவது மலையக தலித்துகள்; தலித்துகளிலும் தலித்துகள் தான்.

தலித்தியம் பற்றி பேசும்போதெல்லாம் சொந்த அனுபவங்களுக்கு ஊடாகத் தான் அதை சொல்ல வேண்டிய துர்ப்பாக்கியம் நமக்கு.

நாம் எந்த விதத்திலும் கொண்டாடப்படுபவர்களாக ஆகிவிடக்கூடாது என்பதில் ஆதிக்க தரப்பு விழிப்பாக இருக்கிறது, எதிர்க்கிறது, இயங்குகிறது. ஆனால் நம்மோடு தோழமை பாராட்டுபவர்கள் கூட அப்படித்தான் இருக்கிறார்கள் என்றால் அதன் சூட்சுமத்தை கண்டறிய வேண்டியிருகிறது.

சென்ற வருடம் நான் எழுதிய “1915 : கண்டி கலவரம்” நூலுக்கு இலங்கையில் அரச சாகித்திய விருது கிடைத்தது. அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதன் முதல் கிடைக்கப்பெற்ற சாகித்திய விருது அது. அப்போதும் கூட அதை வரவேற்றவர்களின் எண்ணிக்கையை பத்துவிரல்களுக்குள் அடக்கிவிடலாம். போதாதற்கு ஏன் அரச விருதொன்றை நான் பெற்றேன் என்கிற வசவுக்கும் இன்னொரு பக்கம் ஆளாகினேன். நமக்கான அங்கீகாரத்தையும் வரவேற்பையும் நாம் மட்டுமே கொண்டாடும் அவல நிலை எல்லோருக்கும் நேர்வதில்லை என்பதை சொல்லித் தெரியத் தேவையில்லை. சாகித்திய விருது என்பது என் மக்களுக்கு தேவைப்பட்டது. என் சமூகம் அதை தூக்கி வைத்து கொண்டாடியது. அவர்களின் களிப்பில் நான் கலந்தேன். அதற்கு மேல் எதுவும் இல்லை. சமூகத்தில் நமது எழுத்துக்கும், கடமைகளுக்கும் கிடைக்கும் வரவேற்பு என்பது நமது உழைப்பால் கிடைப்பவை. தப்பித்தவறி நமக்கு கிடைக்கும் அந்த சொற்ப சந்தோசத்தையும் கூட சகிக்க முடியாத சமூகத்தை நாளாந்தம் கவனிக்க முடிகிறது. மேலே சொன்னது போல் இதை பகிரங்கமாகக் கூறினால் அதை செருக்காகவும், சுயவிளம்பரமாகவும் குறுக்கிவிடும் ஆபத்து இருப்பதால் அமைதிகொள்ள வேண்டியிருக்கிறது. ஏனென்றால் தொடர்ந்து ஆற்ற வேண்டிய சமூகக் கடமைகளுக்கு இந்த வகை குறுக்கல்கள் குந்தகமாக ஆகி விடக்கூடாது என்பதால் கண்ணும் கருத்துமாக இயங்க வேண்டிய நிலை.

இந்த நிலையில் தான் என்னுடைய தலித்தியக் கட்டுரைகளின் தொகுப்பான “தலித்தின் குறிப்புகள்” நூலை காலம் தாழ்த்தக்கூடாது என்று வெளிக்கொணர்ந்தேன். 90களில் சரிநிகரில் எழுதி வந்த “தலித்தியக் குறிப்புகள்” முதல் தடவையாக பத்திரிகையொன்றில் அருந்ததிய மக்களின் பிரச்சினைகளக் வெளிக்கொணர்ந்த தொடர் பத்தி அது. அதை வெளிக்கொணரும் படி இரண்டு தசாப்தத்துக்கும் மேலாக பலரும் கோரி வந்ததால் இடையில் அந்த இரண்டு தசாப்தத்துக்குள் எழுதப்பட்ட அருந்ததிய மக்கள் சார்ந்த கட்டுரைகளையும் இணைத்து அந் நூல் வெளிவந்தது. வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் நிலவுகின்ற சாதிப் பிரச்சினைகள் குறித்து வெளிவந்த முதல் நூல் இது. அது வெளிவந்து 8 மாதங்களாகி விட்டன. ஆனால் போதிய அளவு அது பற்றிய விபரங்களை அறியவைத்த போதும் இது வரை என்னிடம் ஒருவர் கூட நூலைக் கோரியதில்லை. அந்த நூலின் முக்கியத்துவம் குறித்து ஆதவன் தீட்சண்யா, பேராசிரியர் அரசு போன்றோர் ஆழமாக எழுதியிருக்கிறார்கள். ஆனால் தலித்தியம் பேசும் சக்திகளாலோ, ஆதரவாளர்களோ கூட அதனை வரவேற்றதாக இல்லை. இதற்கு பின்னால் உள்ள காரணிகளை கூட்டிக் கழித்து அளவிடவே முடிகிறது. நமக்கு எட்டும் விடை அனைவருக்கும் எட்டுமா என்ன? எட்ட வேண்டுமா என்ன?

தலித்தின் குறிப்புகள் நூல் நிறைய சிக்கல்களுக்கும், சங்கடங்களுக்கும் மத்தியில் தான் வெளிக்கொணர்ந்திருக்கிறேன். அந்த நூல் வெளிவந்ததும் உலகிலேயே எனது நெருங்கிய நட்பான எனது சொந்தத் தங்கை தனது முதல் எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளியிட்டாள். “ஏதோ நாம் இனியாவது சாதியை மறைத்து வாழ்ந்து தப்பிப்போம் என்று மிகப் பெரும் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கும் போது எல்லோரையும் இன்னார்தான் என்று காட்டிக்கொடுப்பதை அல்லவா இந்த நூல் செய்யப் போகிறது” என்று கதறினாள். “புதிய நட்புகள், புதிய உறவுகள் என ஒரு புதிய உலகம் உருவாகியிருக்கும் நிலையில் அவர்களிடம் போய் வலிந்து நான் யார் எனச் சொல்வது முறையா” என்பது தங்கையின் வாதம்.

தலித்தியம் பேசுவது என்பது அவ்வளவு இலகுவானதுமில்லை, இன்பமானதுமில்லை. உயர்த்தப்பட்டவர்கள் பேசும்போது அவர்களுக்கு ஒரு மதிப்பும் கிடைத்துவிடுகிறது. ஒடுக்கப்பட்டவர்கள் பேசும்போது அவர்களின் அடையாளம் வெளிப்பட்டு அவமானப் பார்வைக்கு உள்ளாக்கப்படுவிடுகிறார்கள். என்னை யார் என்று அறிந்ததும் என்னை ஒருபடி மேலே வைத்து எவரும் பார்க்கப்போவதில்லை. மாறாக என்னை ஒரு புழுவைப் போலத்தான் பார்க்கப் போகிறார்கள். அப்படித்தான் பார்த்து வந்திருக்கிறார்கள்.

தலித்தியம் பற்றி பேசுவதை நிறுத்தச் சொல்லி எனது குடும்பத்தினரும், உறவினர்களும், சில நண்பர்களும் கேட்டுக்கொண்டபோதெல்லாம் அதையும் மீறி மறுபுறம் அவமானங்களை எதிர்கொண்டபடி எனது அடையாளத்தை பெருமிதமாகக் கூறிக்கொண்டு நான் தலித்திய அரசியல் பேசியது அந்த பாவப்பட்ட மக்களுக்காகத்தான். நான் தலித்தியம் பேசுவதாலேயே என்னை விட்டு தூரம் விலகிய என் உறவினர்கள் உள்ளார்கள். நான் அவர்களின் உறவினர் என்று தெரிந்தால் அவர்களின் அடையாளம் அம்பலப்பட்டுவிடும் என்கிற பீதியை நான் உணர்ந்துகொள்கிறேன். அந்த நூல் இனி எஞ்சியிருக்கிற எத்தனை உறவுகளை என்னிடம் இருந்து பிடுங்கப் போகிறதோ தெரியாது. அனால் அம்மக்களுக்காக யாராவது தம்மை இலக்கத் துணியத் தான் வேண்டும். பெரியார் கூறியது போல "நான் அதை மேற்போட்டுக்கொண்டு" செய்யத் துணிந்திருக்கிறேன். எனது பின்னணியைத் தெரியாதவர்களுக்கும் என்னை தெரியப்படுத்துவதன் மூலம் நான் சுமக்கப்போகும் அவமானங்கள் எனது குழந்தைகளுக்கும் சேரப்போகிறதே என்கிற பீதி அவ்வப்போது தொற்றிக்கொள்ளவே செய்கிறது.

இந்தளவு தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே நமது தலித்திய அரசியலை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. எனது பணிகளுக்குப் பின்னால் எந்த தலித்திய அமைப்போ, சக்தியோ நபர்களோ இன்றி தான் பயணித்து வந்திருக்கிறேன். இந்த தனிமைப்படுத்தல் தற்செயல் இல்லை என்பதை உணர உங்களுக்கு பெரிய ஆராய்ச்சி தேவைப்படப் போவதில்லை.

சாதி ஆணவக்காரர்களுக்கு சாதி எதிர்ப்பார்ப்புகள்; தமது சாதி மேனிலை உறுதிபடுத்துவதற்கான வழி மட்டுமே. ஆனால் எமக்கோ இது அன்றாட வாழ்க்கை. எமது எதிர்காலச் சந்ததியை விடுவிப்பதற்கான அவமானம் நிறைந்த போராட்டம். இந்த அவமானங்களுக்கு நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம். இந்த அவமானங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் நாங்கள் எங்களை விலைகொடுக்க எப்போதோ உறுதியெடுத்துக் கொண்டுதான் இந்தப்பணியில் இறங்கியிருக்கிறோம். இந்த வசவுகளுக்கும், ஏளனத்துக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் எங்களைப் பலியாக்குவதாக என்றோ நாங்கள் உறுதியெடுத்துக்கொண்டுதான் இந்தப்பணியில் இறங்கியிருக்கிறோம். இந்தப்பணி எங்களுக்கு வசதியானது இல்லை தோழர்களே!.... 

ஆதிக்க சாதியினர் பெருமிதத்துடன் தமது சாதியைஅறிவித்துக்கொண்டு பணியாற்றுவதைப்போல அல்ல எங்கள் பணி. ஒடுக்கும் சாதியொன்று தன்னை அறிவித்துப் பணியாற்றுவதும், ஒடுக்கப்படும் சாதி தன்னை அறிவித்துப் பணியாற்றுவதும் ஒன்றுக்கொண்டு நேரெதிரான மிகப்பெரிய வேறுபாடு உடையவை. துருவமயமான சிக்கல் நிறைந்தவை.

நேர்மையான ஆதரவு சக்திகளிடம் நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் “என்னிடம் பச்சாதாபம் காட்டாதீர்கள்! கருணை காட்டாதீர்கள்! சிறுமையாக ஆக்காதீர்கள்! முக்கியமாக என்னிடம் இருந்து அப்பாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். நான் எப்படி என்னை வெளிப்படுத்தவேண்டும், என் அரசியல் நடத்தை எப்படி இருக்கவேண்டும் என்கிற அவர்களின் எதிர்பார்ப்பே எமக்கு எதிரான மனநிலையை அவர்களிடம் உருவாக்கி விடுவதாகவே உணருகிறேன். சமூக நீதியை அதன் உள்ளார்த்தத்திலேயே இயங்க வழி விடுங்கள்.

(படம் : சாந்தன் - லண்டன்)

கட்சி அரசியலே மலையக கல்வி வளர்ச்சிக்கு தடையாக உள்ளது - பேராசிரியர் தனராஜ்

கட்சி அரசியல் செயற்பாடுகளே மலையக கல்வி வளர்ச்சிக்கு  தடையாக இருக்கின்றன. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பல அதிபர்கள் நியமனம் பெற்றுள்ளார்கள். பலர் பழிவாங்கப்பட்டுள்ளார்கள்.
தற்போதும் கூட மலையக கல்வி நிகழ்வுகளில் அரசியல் செல்வாக்கு காணப்படுகின்றது என ஓய்வு நிலை பேராசிரியர் த. தனராஜ் தெரிவித்தார். ஒரு சமூகத்தின் மேம்பாட்டுக்கு மட்டுமே அரசியல் பயன்பட வேண்டுமே தவிர ஒரு சமூகத்தை மட்டம் தட்டுவதற்கும், அழிப்பதற்கும், ஒடுக்குவதற்கும் பயன்பட கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
மலையகத்தின் சமகால அரசியல் ,பொருளாதார ,கல்வி நிலைமைகள் பற்றி அவர் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு, 
கேள்வி: மலையகத்திலுள்ள முக்கிய கல்வியியலாளர்கள் என்ற வகையில் மலையகத்தின் தற்போதைய கல்வி வளர்ச்சி எவ்வாறுள்ளது?
பதில்: மலையகத்தின் கல்வி வளர்ச்சியை ஒரு வரலாற்று ரீதியாக பார்ப்பது முக்கியமானதாகும். தற்போதைய நிலையில் மலையகத்தின் கல்வி நிலைமை சார்பளவில் உயர்வடைந்துள்ளது. 1968 ஆம் ஆண்டு முதன் முறையாக மலையகத்தை சேர்ந்த 50 பேருக்கு மாணவ ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. 

இது வரலாற்று சம்பவம். இன்று மலையகத்தில் 12 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக இருக்கின்றனர். இவர்கள் நியாயமான பட்டதாரிகளாவர். மலையகத்தில் ஓரிரு பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அனைத்திலும் மலையகத்தை சேர்ந்தவர்களே அதிபர்களாக இருக்கின்றனர். 

இதேவேளை 50 வருட காலத்தில் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது மலையக கல்வி வளர்ச்சியடைந்துள்ளது என சொல்ல முடியாது. ஆனால் ஒப்பீட்டு அளவிலேயே மலையக கல்வி நியாயமான வளர்ச்சியை கண்டுள்ளது.
கேள்வி: அண்மைக்காலமாக  மலையகத்திற்கான தனிப் பல்கலைக்கழகம் தொடர்பாக பேசப்பட்டு வருகின்றதே? 
பதில்: மலையகத்திற்கு தனிப் பல்கலைக்கழகம் வேண்டும் என அண்மைக்காலமாக பேசப்படவில்லை. கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக பேராசிரியர் சந்திரசேகரன் மலையகத்திற்கான தனிப் பல்கலைக்கழகம் தொடர்பாக கட்டுரை ஒன்றை வீரகேசரி பத்திரிகையின் ஊடாக வெளிப்படுத்தியிருந்தார். 

இதன் பின்னர் நானும் பல ஊடகவியலாளர்களும் இவ்விடயம் தொடர்பாக கட்டுரைகளை எழுதியிருந்தோம். இதனைத் தொடர்ந்து பேராசிரியர்களான சின்னத்தம்பி, மூக்கையா, கலாநிதி சந்திரபோஸ் மற்றும் மொழிவரதன் போன்றோர் மலையகத்திற்கான தனிப் பல்கலைக்கழகம் தொடர்பாக பல கட்டுரைகளை எழுதினார்கள். 

இதேவேளை, மலையக பல்கலைக்கழகம் என்பது பொருத்தமான ஒரு சொற்பிரயோகம் அல்ல. ஏற்கனவே இந்நாட்டில் 14 தேசிய பல்கலைக்கழகங்கள் இருந்தன. திறந்த பல்கலைக் கழகத்தையும் இணைத்துக்கொண்டால் 15 ஆகும். மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் தற்போது தேசிய பல்கலைக்கழகமாக ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. ஆக மொத்தமாக நாட்டில் 16 தேசிய பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்நிலையிலேயே 17 ஆவது தேசிய பல்கலைக்கழகமாக மலையகத்திற்கான பல்கலைக்கழகம் கோரப்படுகின்றது. மலையகத்துக்கான பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நாம் முதலில் கைவிட வேண்டும். மலையகம் என்பது ஒரு பிரதேசம் மாத்திரம் அல்ல. அதுவொரு கலாசார அடையாளம். ஆனால் மலையக மக்களுக்காக மாத்திரம் பல்கலைக்கழகம் உருவாக்க முடியாது.

குறிப்பாக, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொண்டால் அதுவொரு தேசிய பல்கலைக்கழகமாகும். அங்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூவினத்தவர்களும் கல்வி கற்கின்றனர். 

ஆனாலும் முஸ்லிம் மக்களின் கலாசார மேம்பாடு, சமூக மேம்பாட்டின் அடித்தளமாகவும் முஸ்லிம் சமூகத்தின் உந்து விசையாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் செயற்படுவதை யாரும் மறுக்க முடியாது. 

இதன் அடிப்படையிலேயே மலையகத்திலும் தேசிய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும். அதாவது புதிதாக உருவாக்கப்படவுள்ள பல்கலைக்கழகம் மலையக மக்களின் கலாசாரம், மலையக மக்களின் வரலாறு, அம் மக்களின் பொருளாதார மேம்பாடு போன்ற விடயங்களில் ஆழமாக செயற்படுத்த கூடியதாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகம் மலையகத்தில் அமையப்பெற உள்ளதால் அம் மக்களின் மேம்பாட்டிற்கான உந்து விசையாக அது இருக்கலாம். 

மலையகத்தில் பல்கலைக்கழகத்தின் தேவை தொடர்பாக ஒரு ஆய்வை செய்து அதுதொடர்பான ஆவணங்களை அமைச்சர் மனோ கணேசனிடம் கையளித்தோம். அவரும் பல நடவடிக்கைகளை எடுத்தார். கடந்த 12 வருடங்களாக மலையகத்திற்கான பல்கலைக்கழகம் ஒரு பேசுப்பொருளாக மாத்திரமே இருந்து வருகின்றது.
கேள்வி: மலையகத்திற்காக உருவாக்கப்பட்ட தேசிய கல்வியற் கல்லூரியே இன்று பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றதே? 
பதில்: தேசிய கல்வியற் கல்லூரி ஊடாக நூற்றுக்கணக்கானவர்கள் மாணவ ஆசிரியர்களாக உருவாகி இருக்கின்றார்கள். அதன் பங்களிப்பை குறை கூறமுடியாது. இந்த கல்வியற் கல்லூரியில் பெரும்பாலான மாணவர்கள் தமிழ் மொழி பேசுபவர்களாக காணப்படுகின்றனர். 

ஆனால் அங்கு பெரும்பான்மை மொழியை அடிப்படையாக கொண்ட நிர்வாக சேவையே காணப்படுகின்றது. பீடாதிபதிகள் சிங்களவர்களாகவே இருக்கின்றார்கள். இதனால் பல பிரச்சினைகள் பதிவாகி வருகின்றன. 

இதன் அடிப்படையில் அந்த கல்வியற் கல்லூரி முக்கியமற்றது என்றும் தேவையற்றது எனவும் கூறி விடமுடியாது. அதில் உள்ள குறைபாடுகளை களைந்து கல்லூரியை மேம்படுத்த வேண்டியது முக்கியமானதாகும். 

ஆனால் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியுடன் மலையகத்திற்கான தேசிய பல்கலைக்கழகத்தை தொடர்புபடுத்த வேண்டிய தேவை கிடையாது. வரலாற்று ரீதியாக பார்க்கும் போது பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மலையக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.. மேலும் தொழிலாளியின் பிள்ளை பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் போது அவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பொருளாதார ரீதியாக பாரிய பிரச்சினைகளை முகம் கொடுக்கின்றார்கள். சில மாணவர்கள் பகுதிநேரமாக தொழில் செய்து கொண்டும் படிக்கும் நிலைமை காணப்படுகின்றது. இதனால் தனது படிப்பில் கூடுதல் அவதானம் செலுத்த முடியாமல் போகின்றது. மேலும் பல்கலைக்கழகத்தில் இவர்களால் திறமை சித்தி பெறமுடியாத நிலையும் ஏற்படுகின்றது. ஆனால் மலையகத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் போது அந்த மாணவர்கள் இலகுவாக சென்று கல்வி கற்கும் நிலைமை உருவாகும்.
கேள்வி: மலையகத்தில் தேசிய பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டாலும் அந்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மலையக மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படும் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?
பதில்: இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் நாட்டில் அண்மையில் உருவான எந்த பல்கலைக்கழகமும் முழுமையான பல்கலைக்கழகமான உருவாக்கப்படவில்லை. குறிப்பாக யாழ். பல்கலைக்கழகம் பரமேஸ்வரா கல்லூரியின் ஒரு வளாகமாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. இதேபோன்று தான் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் வந்தாறுமுல்லை மகாவித்தியாலயத்தின் ஒரு வளாகமாக ஆரம்பிக்கப்பட்டது. பிற்காலத்திலேயே இவை தேசிய பல்கலைக்கழகங்களாக மாற்றம் பெற்றன. எடுத்த எடுப்பில் ஒரு இடத்தில் முழுமையான பல்கலைக்கழகத்தை அமைக்க முடியாது.

மேலும் மலையகத்திலும் முதலாவதாக பேராதெனிய பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமாக அட்டன் அல்லது வேறுஒரு பகுதியில் வளாகத்தை ஆரம்பிக்கலாம். இவ்வாறு ஆரம்பிக்கப்படும் வளாகத்தில் கலைப்பீடம், வர்த்தகம் தொடர்பாக கற்கைநெறிகளை முதலில் ஆரம்பிக்கலாம். இவற்றை கற்பிக்க கூடியவர்கள் மலையகத்தில் நிறைய பேர் இருக்கின்றார்கள். இந்த நடவடிக்கையானது பிற்காலத்தில் மலையகத்தில் தேசிய பல்கலைக்கழகம் உருவாகுவதற்கு ஒரு அதடித்தளமாக காணப்படும். இங்கு மாணவரின் தொகை போதுமானதாக இருக்கின்றதா என்பது முக்கியத்துவம் இல்லை. பல்கலைக்கழகம் உருவான பின்னர் மாணவர்களின் எண்ணிக்கை இயல்பாகவே அதிகரிக்கும். இந்த விடயத்தில் சமூக, அரசியல், கட்சி வேற்றுமையின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
கேள்வி : மலையக மாணவர்களிடையே பல்கலைக்கழக அனுமயை அதிகரிப்பதற்கான திட்டமிடல்கள் எவ்வாறானதாக இருக்க வேண்டும்?
பதில்: மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் அதிமாக உள்வாங்கப்பட வேண்டுமென்றால் ஒவ்வொரு பாடசாலையின் ஆசிரியர்களும்,அதிபர்களுடன் அர்ப்பணிப்புடனும், பொறுப்புடனும் செயற்பட வேண்டும். மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்கும் போது மலையக மாணவர்களுக்கு விசேட அனுமதி வழங்கலாம். பெரும்பான்மையின மாணவர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படும் போது 30 வருடங்கள் பின்தங்கிய எமது மலையக மாணவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பான கோரிக்கைகளை எமது அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன்வைக்க வேண்டும். ஆனாலும் இவர்கள் மலையக மக்களின் நன்மை கருதி தொழிற்சங்க அரசியல் பிரச்சினைக்கு அப்பால் நின்று செயற்படுவார்களா என்ற சந்தேகமும் இருக்கின்றது.
கேள்வி: மலையக கல்வி வளர்ச்சியில் அரசியல் குறுக்கீடுகள் எந்த வகையில் உள்ளன? 
பதில்: மலையகத்தில் பல அதிபர்கள் அரசியல் செல்வாக்கில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். பல அதிபர்கள் அரசியல் செல்வாக்குடன் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அரசியல் தலையீடு என்பது மலையகத்தில் பாரதூரமான விடயமாகும். அதாவது பின்தங்கிய மலையக சமூகத்தில் அரசியல் தலையீடு என்பது ஒரு சமூகத்தை மேம்படுத்தும் வகையில் அமைய வேண்டும். ஆனால் மலையகத்தில் அரசியல் ரீதியாக பழிவாங்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இது பரிதாபமான நிலையாகும். பாடசாலை வைபவங்களில் கூட அரசியல் கட்சிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.
கேள்வி: ஊவா மாகாணத்தில் இயங்கிவரும் அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் அண்மையில் தேசிய ரீதியில் பல சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது. உண்மையில் இந்த பல்கலைக்கழகம் மலையக சமூகத்துக்கு ஏற்புடையதா?
பதில்: அல் முஸ்தபா பல்கலைக்கழகம் தொடர்பில் பெரிய வரலாறு உள்ளது. இது பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்கள் சங்கம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல் முஸ்தபா பல்கலைக்கழகம் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். இதன் அரசியல் பின்னணி பற்றி தெரியாது. ஆனால் 520 மாணவர்களில் 30 மாணவர்களே முஸ்லிம் மாணவர்களாவர். 3 வருடங்களில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்தவர்களாகியிருப்பார்கள். இதுவொரு நல்ல விடயமாக இருந்திருக்கும். 

ஆனால் இங்கு அரபு மொழி படிப்பிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. இந்த பல்கலைக்கழகத்தில் 32 துறைசார் பாடங்கள் காணப்படுகின்றன. அதில் இரண்டு பிரிவுகளே குர்ஆன் மற்றும் அரபு. இவை மேலதிக பாடங்களாகவே கருதப்படுகின்றன. இவற்றில் சித்தியடைய வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இல்லை. குர்ஆனையும் அரபியையும் கற்றுக்கொள்வதால் யாரும் தீவிரவாதிகளாக மாறிவிட மாட்டார்கள். 

இந்நிலையில் அண்மையில் ஏற்பட்ட பிரச்சினையின் பின்னர் குர்ஆன் மற்றும் அரபு கற்பிக்கக் கூடாது என உத்தியோகபூர்வ கடிதம் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்பின்னரும் அந்த மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு தடை விதிக்கக் கூடாது. இன்னும் இரண்டு வருடங்களில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டதாரிகளாகப் போகின்றார்கள். இது அந்த மாணவர்களின் வாழ்க்கை பிரச்சினையாகும். 
கேள்வி: பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிக்கை பற்றி ?
பதில்: மலையக பெருந்தோட்ட சமூகத்தில் மிக முக்கிய பிரச்சினையாக இந்த சம்பளப் பிரச்சினை காணப்படுகின்றது. ஆயிரம் ரூபா சம்பள கோரிக்கை மிக நெடுங்காலமாக இருந்து வருகின்றது. அரசியல் ரீதியான முரண்பாடு மற்றும் தொழிற்சங்க போட்டி காரணமாக இந்த சிரிய தொகையை கூட பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. இந்த கூட்டு ஒப்பந்தம் தற்போது தேவை தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர்கள் ஒன்றாக கூடி ஒரு நாள் முழுதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

எனினும் இந்த கோரிக்கை தோல்வியே கண்டது. தமது சமூகத்துக்காக அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து போராடி இருந்து இந்த சம்பள கோரிக்கையை வென்றிருக்கலாம். வருமானமின்றி அம் மக்கள் எவ்வாறு தமது பிள்ளைகளை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியும். எவ்வாறு சமூக நகர் நோக்கி செல்ல முடியும். இதற்கு முட்டுக் கட்டையாக அவர்களது பொருளாதாரம் காணப்படுகின்றது. இந்த அரசியல்வாதிகள் மலையக சமூகத்தை பலவீனமாக்கியுள்ளார்கள். இந்த அரசியல் வாதிகளின் அவர்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமாக இருந்தால் அந்த சமூகத்தின் மேம்பாட்டுக்காக ஒன்றுபட்டு செயற்பட்டேயாக வேண்டும்.
கேள்வி : எதிர்வரும்  தேர்தல்களில் மலையக மக்களின் பங்கு எவ்வாறானதாக இருக்குமென நீங்கள் மதிப்பிடுகின்றீர்கள்?
பதில்: இன்று மலையகத்தின் விழிப்புணர்வு அரசியல் ரீதியாகவும் அதிகரிக்கும் என்றால் மலையக சமூகமும் ஏனைய சமூகங்களை போன்று முன்னேறக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. மலையகத்தில் உள்ள தொழிற்சங்கவாதிகள், அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் இவர்களை ஒன்றுபடுத்தக் கூடிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். கட்சி, இன பேதமின்றி இவ்வாறு ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டால் எதிர்கால தேர்தலை தீர்மானிக்கும் சக்திகளாக நாம் இருக்க முடியும். 

இதேவேளை மலையக மக்களின் நன்மை கருதி நடைமுறையில் சாத்தியப்படக் கூடிய கோரிக்கைகளை அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து முன்வைக்க வேண்டும் என்பதும் முக்கிய விடயமாகும்.

நேர்காணல் : செ. லோகேஸ்வரன்

பசுமை அரசியல் இன்றைய தவிர்க்க முடியாத தேவை! நோர்வே உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் - என்.சரவணன்

பத்திரிகையாளரும் ஆய்வாளருமான என்.சரவணன் தற்போது நடந்துகொண்டிருக்கும் நோர்வே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  குரூருட் தொகுதியில் போட்டியிடுகிறார். சர்வதேச அளவில் அறியப்பட்ட பசுமைக் கட்சியின் சார்பாக அவர் போட்டியிடுகிறார். சூழலியல் செயற்பாட்டாளரான சரவணன் எழுதிய “இலங்கையில் செம்பனையின் ஆபத்து” என்கிற தொடர் கட்டுரை தினக்குரலில் கடந்த ஆண்டு வெளிவந்தது; வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.  தினக்குரலுக்காக அவர் அளித்த நேர்காணல் இது.
(ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த பேட்டி)
அங்கு தேர்தல் ஆரவாரங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது?
நோர்வேயில் தேர்தல்கள் மிகவும் அமைதியாக நடந்து முடிந்துவிடும். எங்கும் போஸ்டர்கள் இல்லை. பிரச்சாரக் கூட்டங்கள் இல்லை. சத்தங்கள் இல்லை. சண்டைகள் இல்லை. வேட்பாளர்களின் பந்தா இல்லை. தேர்தல் எப்போது தொடங்கியது எப்போது முடிகிறது, முடிந்தது என்பது கூட தெரியாதபடி முடிந்துவிடும். தேர்தல் முடிவுகள் அன்று மாத்திரம் அதுவும் கட்சியின் தீவிர அக்கறையாளர்கள் மாத்திரம் ஒன்றுகூடி ஆரவாரமாக இரவிரவாக கவனித்துக்கொண்டிருப்பார்கள். வழமைபோல கழிந்த அடுத்த நாளில் மக்கள் முடிவுகளை அறிந்துகொள்வார்கள். நமது நாட்டை விட நிறைய வித்தியாசங்கள் இங்கு.

உங்கள் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?
இப்போது ஒஸ்லோ உள்ளூராட்சி சபைகளில் தொழிற்கட்சி, பசுமைக் கட்சி போன்றவற்றின் கூட்டே ஆட்சியில் உள்ளது. இனி வரப்போகும் ஆட்சியிலும் அதே கூட்டு தொடரப் போகிறது. இதனை சிகப்பு பச்சை கூட்டு என்று பிரபலமாக நோர்வே அரசியலில் கூறுவது வழக்கம். இதற்கு முன்னிருந்த நிலையை விட பசுமைக் கட்சி அதிகப்படியான மக்கள் ஆதரவை பெற்றுள்ளது என்று ஊடக கணிப்புகள் சொல்கின்றன. நான் எனக்கான தனிப்பட்ட பிரச்சாரம் எதையும் முன்னிலைப்படுத்தவில்லை. எனது வெற்றியை விட கட்சியின் வெற்றியும், பசுமை அரசியலின் வெற்றியும் தான் முக்கியம். தீமானங்களை நிறைவேற்றுகின்ற அதிகார மையங்களில் அழுத்தும்கொடுக்கக் கூடிய பலம் அதிகரித்தால் அதுவே போதும்.

தேசிய அரசியலோடு பார்க்கையில் உள்ளூராட்சி அரசியல் அதிகாரம் எந்தளவு வித்தியாசப்படுகிறது?
தேசிய அரசியலைப் பொறுத்தளவில் மோசமான வலதுசாரி, தேசியவாதக் கூட்டு தான் கடந்த இரண்டு தடவைகளும் ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. முதலாளித்துவ கொள்கைகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளர் வர்க்கத்தினருக்கு எதிரானதாகவும், வெளிநாட்டவர்களின் உரிமைகளை நசுக்குகின்ற அரசாகத் தான் தற்போதைய அரசாங்கத்தைப் பார்க்க முடியும். இப்படியான சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றினால் நாட்டுக்கு என்ன நேரும் என்பதை தற்போது மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக அரச சேவைகளை வேகமாக தனியார்மயப்படுத்தி வருவதனால் மக்களின் சமூக நலன்கள் மோசமாக பாதித்துள்ளன.

அப்படியென்றால் எதிர்ப்பரசியலின் வீரியம் எப்படி இருக்கிறது?
அதிகாரத்தை அரசியல்வாதிகளிடம் கொடுத்துவிட்டால் அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்கிற எண்ணப்பாங்கு வளர்ந்துவிட்டிருக்கிறது. மக்களின் விருப்பு வெறுப்புகளையும், அபிலாஷைகளையும் ஓர்மத்துடன் வெளிப்படுத்தும் மரபு இவர்களிடத்தில் இல்லை. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இங்கு இல்லை. பெரிய அளவிலான கோரிக்கைகளை மையப்படுத்தி எதிர்ப்பார்ப்பட்டம் நடந்தால் கூட அதில் பங்களிப்போரின் தொகை வெகு குறைவு. இதனால் இந்த எதிர்ப்பரசியல்; அதிகாரத் தரப்பால் அவ்வளவாக கண்டு கொள்ளப்படுவதில்லை. இடதுசாரிக் கட்சிகள் கூட சிறு குழுக்களாகவே எஞ்சியிருக்கின்றன. பல சந்தர்ப்பங்களில் பொழுதுபோக்கு, சாகச ஒன்றுகூடலாக சுருங்கிவிடுவதையும் பார்த்து கவலைகொண்டிருக்கிறேன். தொழிற்சங்கங்கள் தனியார் கம்பனிகளைப் போல இயங்குகின்றன. OL எனப்படும் தொழிற்சங்கம் ஒரு ஏகபோக கம்பனியைப் போல வளர்ந்து தொழிலாளர்களின் நலன்களில் இருந்து அந்நியப்பட்டே இருக்கிறது. இலங்கை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுவிட்டு நோர்வே போன்ற நாட்டில் அரசியலில் ஈடுபடுகையில் அரசியல் செயற்பாடுகளில் பாரிய வித்தியாசத்தை அவதானிக்க முடிகிறது.

தமிழர்களின் அரசியல் பங்குபற்றல் எப்படி இருக்கிறது?
ஒஸ்லோவில் மட்டும் இம்முறை வெவ்வேறு கட்சிகளில் வெவ்வேறு தொகுதிகள் 6 தமிழர்கள் போட்டியிருகிறார்கள். தமிழர்களின் அரசியல் பங்குபற்றல் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது என்று நோர்வேஜியர்கள் கருதுகிறார்கள். அதேவேளை வாக்களிப்பதில் வெளிநாட்டவர்களின் அதிகரிப்பு குறித்தும், வெளிநாட்டவர்களின் பங்குபற்றல் குறித்தும் நோர்வேஜியர்கள் அச்சம் கொள்வதையும் காணமுடிகிறது. குறிப்பாக வலதுசாரிகளிடம் இந்த அச்சத்தை அவதானிக்க முடிகிறது. வாக்களிப்பில் நோர்வேஜியர்களின் ஆர்வம் ஒரு புறம் குறைந்திருக்கிற நிலையில் வெளிநாட்டவர்களின் வாக்களிப்பு வீதம் கூடும் போது அரசியல் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தம்மிடம் இருந்து கைநழுவிப் போவதையிட்டு நோர்வேஜியர்களிடம் விவாதங்கள் நடக்கின்றன. இங்கு வாழும் இலங்கையர்களின் இரண்டாவது சந்ததி எதிர்காலத்தில் இப்போதைய நிலைமையை விட அதிகமாக தேர்தலில் போட்டியிடுவதிலும், வாக்களிப்பதிலும் அக்கறை காட்டுவார்கள் என்று உணர முடிகிறது. இப்போதே அரசியல் அதிகாரத்துக்கான கல்வியில் தமது அடித்தளத்தை போடும் புதிய தலைமுறையினரைக் காண முடிகிறது.

பசுமை அரசியலைப் பற்றி சற்று விளக்குங்கள்.
முதலில் உலகம் என்கிற ஒன்று வாழ்வதற்கு மிச்சம் இருந்தால் தான் எஞ்சிய அனைத்தையும் பற்றி பேச முடியும். வெப்பம் வேகமாக அதிகரித்து வருகிறது, உலகின் காடுகளின் அளவு குறைந்து வருகிறது, சுத்தமாக சுவாசிக்கவும், சுத்தமாக அருந்தும் நீரும் வேகமாக குறைந்துவருகிறது. வேகமாக அழிந்து கொண்டிருக்கும் உலகைப் பற்றியோ. இப்போது நிகழும் ஆபத்தைப் பற்றியோ கண்டுகொள்ளாத உலகம் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. இவற்றைக் கொண்டுகொள்ளாதபடி நமது நாளாந்த கவனம் வேறு பக்கம் திசைதிருப்பப்பட்டிருக்கிறது. எதிர்கால உலகு குறித்த எந்த பிரக்ஞையும் அற்ற, அக்கறையற்ற உலகொன்று உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலைமையை தம்மால் இயன்றளவு மாற்றத்துக்கு உள்ளாக்கவென உருவாக்கப்பட்டது பசுமைக் கட்சி. உலக அளவில் சுற்றுச் சூழல் விடயங்களில் தீவிரமாக செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டது இது. “கிறீன் பார்ட்டி” என்று உலகளவில் பல நாடுகளில் இயங்கிக்கொண்டிருக்கும் சர்வதேச கட்சி அது. ஒவ்வொரு நாட்டிலும் சுயாதீனமாகவும், தனித்துவமாகவும் இயங்கினாலும் கூட சர்வதேச வலைப்பின்னலைக் கொண்டது இக்கட்சி. தீர்மானங்கள் நிறைவேற்றும் அரசியல் அதிகார மையங்களில் இருந்தால் தான் சூழலியல் சார்ந்த முடிவுகளை எடுக்கின்ற அழுத்தக் குழுக்களாக இயங்கலாம் என்பதே இககட்சியின் அரசியல் நோக்கம். இலங்கைக்கு இப்படியானதொரு கட்சி அவசியம்.

நேர்காணல் - பவித்திரன்
நன்றி - தினக்குரல்


முகநூலை ஆட்டுவிக்கும் ராஜபக்சவாதிகள் - என்.சரவணன்


உலகில் அதிகளவு பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 2.7 பில்லியன் பாவனையார்களை கொண்டிருக்கிறது. உலகின் மொத்த சனத்தொகையே 7.7 பில்லியன் தான்.

தனிநபர்கள் மட்டுமல்ல வர்த்தக நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மட்டுமன்றி அரசாங்க நிறுவனங்கள் கூட முக நூல் பக்கங்களை வைத்திருக்கும் கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கின்றன. முகநூல் என்பது ஒரு அடையாளமாகவும், தகவல் பரப்பும்/பகிரும் தளமாகவும், பிரச்சார ஊடகமாகாவும், விளம்பர உத்திக்காகவும் இன்று அதிகம் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

நோமோபோபியாவுக்கு (நோ மொபைல் போன் போபியா - Nomophobia -"no-mobile-phone phobia”) உளப் பீதி நோய்க்கு பெருமளவு ஆளாகியிருப்பவர்கள் முகநூல் பாவனையாளர்களே என்கிற எச்சரிக்கையையும் உலகம் முழுவதும் விடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதை இன்னொரு விதமாக கூறினால் “முகநூல்” இன்று உலகை ஆண்டு கொண்டிருக்கிறது. உலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருகிறது. கருத்தாதிக்கத்தை தன்னகத்தே கொண்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. முகநூலின் தயவின்றி அரசியல் பணிகளையோ, வர்த்தகப் பணிகளையோ முன்னெடுக்க முடியாது என்கிற நிலை வளர்ந்துவிட்டிருகிறது. முகநூலின் பலமின்றி எதிர்த் தரப்பை எதிர்கொள்ள முடியாது என்கிற நிலை நிறுவப்பட்டிருக்கிறது. மரபு ஊடகங்களை விட இன்றைய அரசியல் சக்திகள் தமது பிரச்சாரத்துக்கும், எதிரிகளை எதிர்கொள்வதற்கும் இத்தகைய சமூக வலைத்தளங்களையே நம்பியிருக்கின்றன.

இந்த சூழலை வைத்து சமகால இலங்கை அரசியலில் நேர்ந்திருக்கிற குறிப்பிட்ட சில சம்பவங்களை இங்கு பார்க்கலாம்.

தேர்தல் காலம் வந்திவிட்டால் சமூக வலைத்தளங்களைக் கையாள்வதற்காக தனியான கைதேர்ந்த ஒரு குழுவை வாடகைக்கு அமர்த்துவது நீவீனகால  தேர்தல் வேலைத்திட்டத்தின் இன்றிமையாத ஒரு உத்தியாக ஆகியிருக்கிறது. இதற்கென்றே நிபுணத்துவ சேவையை வழங்கவென பல வர்த்தக ஏஜென்சி நிறுவனங்கள் (Political Campaign Management Companies) உலகம் முழுவதும் உருவாகியிருக்கின்றன. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றி, இந்தியாவில் நரேந்திர மோடியின் வெற்றி என்பன சமீபத்தேய சிறந்த உதாரணங்கள்.

அதாவது இன்னொரு அர்த்தத்தில் சொல்லப்போனால் பணம் படைத்தவர்கள் மட்டுமே தேர்தல்களில் அதிகமாக வெல்லும் வாய்ப்பை உருவாக்கிவிட்டுள்ளன. வசதியற்ற அடித்தட்டு வர்க்க - நலிந்தவர்களால் இன்றைய தேர்தல்களில் ஈடுகொடுப்பது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. அதுமட்டுமின்றி எந்த புனைவுகளையும் இதன் மூலம் சாதாரண மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும் என்பதோடு எந்த உண்மையையும் இருட்டடிப்பு செய்யும் வலிமை இந்த வகை ஏஜென்சிகளுக்கு உண்டு.

இந்த தகவல் தொழில் நுட்ப ஏஜென்சிகள் எப்படி இயங்குகின்றன என்பது தனியாக விளக்கப்படவேண்டிய கட்டுரை.

2018 ஒக்டோபர் 26 இல் மைத்திரிபால-மகிந்த மேற்கொண்ட அரசியல் சதிமுயற்சியைத் தோற்கடித்ததில் சமூக வலைத்தளங்களுக்கு முக்கிய பத்திரம் உண்டு. சமூக வலைத்தளங்களே மக்களின் எதிர்ப்பையும், கண்டனங்களையும் பதிவு செய்தன.

இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக வன்மத்துடன் அதிகம் கதைத்திருப்பவராக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவைக் குறிப்படலாம்.

அதுபோல ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விபரங்களை; தான் சமூகவலைத்தளங்களுக்கு ஊடகத் தான் அறிந்துகொண்டதாக கூறியிருந்த ஜனாதிபதி சிறிசேன; முதலில் செய்ததே சமூக வலைத்தளங்களின் மீதான தடையை ஏற்படுத்தியது தான்.

2015 தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோற்றதும் அவரின் வாசஸ் தளமாக பயன்படுத்தப்பட்டிருந்த அலரி மாளிகையின் கீழ்தளத்தில் ஒரு தனிப் பெரிய மண்டபம் நிறைய கணினிகள் வைத்து இயக்கப்பட்டிருந்ததை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன. மிகப் பெரிய அளவில் உள்ளூர் வெளியூர் வலைப்பின்னலுடன் அவை தொடர்புபடுத்தப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்திருந்தனர்.

கோத்தபாயவின் நுட்பம்
இப்போது ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கும் ராஜசபக்ச குடும்பத் தரப்பு வேட்பாளரான கோத்தபாய அணியினர் ஏற்கெனவே இப்படியான சமூக வலைத்தள உள்ளூர், வெளியூர் ஏஜென்சிகளை தீவிரமாக களமிறக்கியிருப்பதை பலராலும் இப்போதே உணர முடிகிறது.

Colombo Telegraph என்கிற இணையத்தளத்தை நடத்திவருபவர் உவிந்து குருகுலசூரிய. ராஜபக்ச ஆட்சி காலத்தில் ஊடகவியலாளர்களின் மீதான வேட்டையில் இருந்து நாட்டைவிட்டு தப்பியோடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களில் ஒருவர் உவிந்து. உவிந்துவின் இணையத்தளம் இலங்கையர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம். இலங்கையின் பல முக்கிய எழுத்தாளர்கள் பலரும் எழுதும் இணையத்தளம் அது. பல உரையாடல்களையும் நிகழ்த்திவருவது அதன் சிறப்பு.
கடந்த ஓகஸ்ட் 11ஆம் திகதி சுகததாச உள்ளரங்கில் நிகழ்த்தப்பட்ட கோலாகலமான நிகழ்வில் வைத்து ராஜபக்ஸ அணியின் வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டிருந்ததை அறிவோம். அந்த நிகழ்வில் பிரமாண்டமான மேடைப் பின்னணியாக ஒரு வீட்டின் செட் ஒன்றை போட்டிருந்தார்கள். அந்த வீடு அப்படியே ராஜபக்சவின் “மெதமூலன” வீட்டின் சாயலிலேயே செய்யப்பட்டிருந்ததை உவிந்து தனது முகநூலில் அந்தப் படத்துடன் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவைத் தொடர்ந்து அவரின் முகநூல் மூன்று நாட்களுக்கு முடக்கப்படுவதாக முகநூல் அறிவித்தது. இந்தப் பதிவின் கீழ் பின்னூட்டங்களைப் பதிவு செய்தவர்கள் சாமான்யர்கள் அல்லர். தயான் ஜயதிலக்க மற்றும் வேறு பல அரசியல் பிரமுகர்களும் கூட பதிவுகளை இட்டிருந்தார்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி குறித்து முகநூலில் தொடர்ச்சியாக வெளிவந்த அதிருப்திகளின் காரணமாக ஆத்திரமுற்றிருந்த ஜனாதிபதி; முகநூல் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை இலங்கைக்கு அழைத்து அழுத்தம் கொடுத்திருந்தார். முகநூலின் போக்கு இனங்களுக்கிடையிலான முறுகலை ஏற்படுத்தக் கூடியது என்றும் இந்த நிலை தொடர்ந்தால் முகநூலை இலங்கையில் தடை செய்வதாகவும் ஜனாதிபதியின் அதிகாரிகள் அவர்களுக்குத் தெரிவித்திருந்தனர். 

சிங்களம் தெரிந்தவர்களை தாம் பணிக்கு அமர்த்தி இந்த நிலைமையை சரி செய்வதாக முகநூல் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதன்படி அயர்லாந்தில் கற்று பெல்பாஸ்டில் இருந்த (Belfast) சிங்களக் குழுவொன்றை முகநூல் நிறுவனம் பணிக்கு அமர்த்தியது. அவ்வாறு அமர்த்தப்பட்டவர்கள் சிங்கள இனவாத போக்கு கொண்டோர் என்று அறியப்படுகிறது. கடந்த காலங்களில் முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களின் போது இந்தக் குழு இயங்கியவிதம் குறித்து ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

உவிந்துவின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டதற்கு முகநூலால் காட்டப்பட்ட காரணம் மேற்படி “ராஜபக்சவின் மெதமூலன வீடு” பற்றியதால் அல்ல. அம்பேத்கர்  எழுதிய “சாதியொழிப்பு” (Annihilation Of Caste) என்கிற நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு பற்றிய திறனாய்வு Colombo Telegraphஇல் 2017 ஏப்ரல் 21 இல் வெளியாகியிருந்தது. அந்த கட்டுரையை முகநூலிலும் அவர் பகிர்ந்திருந்தார். அந்நூலின் அட்டைப்படத்தில் மார்புகளை மறைக்காத இரு தலித் பெண்களின் புகைப்படம் இருந்தது. இதைத் தான் முகநூலுக்கு முறையிட்டிருகின்றனர். கோத்தபாயவின் மேற்படி நிகழ்வு தொடங்குவதற்கு சொற்ப நேரத்துக்கு முன் தான் உவிந்து “மெதமூலன வீடு” பற்றிய பதிவை வெளியிட்டிருக்கிறார். உவிந்துவின் வேறு பதிவுகள் மீதான வேறு எந்த முறைப்பாடும் செய்ய முடியாத நிலையில்; அம்பேத்கரின் நூல் அட்டைப்படத்தைப் பற்றிய முறைப்பாடு வேகமாக செய்யப்பட்டிருக்கிறது.

அந்தளவு விழிப்பாக பின் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள் ராஜபக்ச தரப்பு கூலிக்கு அமர்த்தியிருக்கும் நெட்டிசன்கள் (Netizens). இப்படி ஒரு முடக்கத்தை செய்ய நூற்றுக்கணக்கான  முறைப்பாடுகள் அவசியம். அப்படி என்றால் எத்தனை விழிப்பாகவும், வேகமாகவும், பரந்த பல வலைப்பின்னல்களுடனும், நுட்பமாகவும் திட்டமிட்டவகையில் இவர்கள் இயங்குமளவுக்கு வலிமையாக இருக்கவேண்டும்.

மக்கள் எதைத் தெரிந்துகொள்ள வேண்டும், எதைத் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் பலம் இப்பேர்பட்டவர்களிடமே இருக்கிறது.

பெயரை மாற்றிய ஞானசாரர்
இதற்கு இன்னொரு உதாரணத்தையும் குறிப்பிடவேண்டும். கடந்த யூலை 28 ஆம் திகதியன்று பொதுபலசேனாவின் செயலாளர் டிலந்த விதானகே ஒரு ஊடக சந்திப்பை நடத்தினார். அதில் அவர் இனிமேல் ஞானசார தேரரின் பெயரை மாற்றி அழைக்கப்படப்போவதாக அறிவித்தார். அதன்படி இனிமேல் “அப்பே ஹாமுதுருவோ” (எங்கள் ஹாமதுரு - Ape Hamduruwoo) என்றே அழைக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

இதற்கான காரணம் முகநூலில் ஞானசார தேரரின் பெயரில் வரும் அனைத்தையும் முடக்கியிருப்பதை அறியமுடிகிறது என்றும் இதனால் அவரின் செயற்திட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்தபோது
பொதுபல சேனாவின் முக்கிய பிரச்சார ஆயுதமாக கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக முகநூலே இருந்துவந்திருக்கிறது. இடையில் அவ்வியக்கத்தின் முகநூல் பக்கம் பல தடவைகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. ஆனாலும் புதுப்புது பெயர்களில் மீண்டும் மீண்டும் முகநூல் கணக்கை ஆரம்பித்து இயங்கி வந்தார்கள். முகநூலை அவர்கள் இழக்கத் தயாரில்லை. தொடர்ந்தும் தமது இனவாத வேலைத்திட்டத்திற்கு முகநூல் அவசியம். இப்போது முகநூல் மேற்கொண்டுள்ள முடக்கத்தை எதிர்கொள்ள இப்படியொரு உபாயத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அது மட்டுமன்றி ஞானசாரரின் படத்தைக் கூட பதிவுசெய்யப்பட்ட சில நொடிகளில் காணாமல் ஆக்குவதற்கும், அதிகப்படியானவர்களிடம் சேராத வகையிலும் முகநூலின் “படிமுறைத் தீர்வு” (Algorithm) என்கிற தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய தொழில்நுட்பம் சமூக நீதிக்கு ஆதரவாக பயன்படுத்துவது வரவேற்கத்தக்கதே. ஆனால் மாறாக பணம் கொடுப்பவருக்கு விலை போகின்ற, மக்கள் விரோத சக்திகளுக்கு இசைந்து கொடுக்கின்ற மக்கள் விரோத நிறுவனமாக ஆகியிருப்பது தான் மாபெரும் ஆபத்து. உலகை ஆட்டுவிப்பதில் முகநூலின் பங்கு குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

கயவர்களிடமும், பணக்காரர்களிடமும், ஆளும் வர்க்கத்திடமும், ஆதிக்க சக்திகளிடமுமே இவை இன்று  இருக்கிறது. இப்படி பலம் படைத்தவர்களிடம் இலகுவாக விலைபோகக்கூடிய; லாபத்தை மட்டுமே ஒற்றைக் குறியாகக் கொண்டிருக்கும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களால் இன்று சமூக நீதி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நன்றி - தமிழர் தளம்


அலட்சியப்படுத்தப்படும் தமிழ் கல்வி சமூகம் - குறிஞ்சி மகன்


தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் மத்திய மாகாணத்தில் தமிழ்க் கல்வி சமூகத்துக்கு நடக்கும் அவலங்களையும் அக்கிரமங்களையும் பற்றி பேசுவதற்கு நாதியில்லை எனும் போது இந்த பிரதேசங்களுக்கு தமிழ்ப் பிரதிநிதிகள் தேவைதானா என்ற கேள்வியும் அனைவரினதும் மனதில் எழுவதை தடுக்க முடியாதுள்ளது.

25 ஆண்டு காலமாக மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சை தக்க வைத்திருப்பது அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே என்பது இப்போது அனைவருக்கும் புரிந்துள்ளது.

இல்லாவிடின் தமிழ்க் கல்விக்கு காலங்காலமாக நேர்ந்து வரும் அவலங்கள் என்றோ தீர்க்கப்பட்டிருக்கும். தமிழ்க் கல்வி அமைச்சு என்பது பெயரளவில் மட்டுமே, அங்கு பெரும்பான்மையினரின் அதிகாரங்களே எடுபடும் என்பதற்கு மத்திய மாகாண கல்வித்திணைக்களத்தின் செயற்பாடுகளே சான்று பகிர்கின்றன.

மொழிபெயர்க்கப்பட்ட சிங்கள வினாத்தாள்கள்
இம்முறை இடம்பெற்ற தவணை பரீட்சை வினாத்தாள்களில் பல்வேறு குழப்பங்களும் தவறுகளும் இடம்பெற்றுள்ளமையானது சகல பாடசாலைகளுக்கும் வெற்றிகரமாக பரீட்சைகளை முன்னெடுப்பதில் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் தோற்றுவித்துள்ளது. சகல பாடசாலைகளிலும் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான வகுப்புகளுக்கு அனைத்து பாடங்களின் வினாத்தாள்களையும் தயாரிக்கும் முழுப் பொறுப்பினையும் வழமை போலவே இம்முறையும் மத்திய மாகாண கல்வித் திணைக்களம் ஏற்றுக்கொண்டிருந்தது. அதில் தமிழ் மற்றும் சைவசமய வினாத்தாள்கள் மாத்திரமே தமிழில் தயாரிக்கப்பட்டிருந்தன. ஆனால், ஏனைய பாடங்கள் அனைத்தும் சிங்கள மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்ட வினாத்தாள்களாக காணப்பட்டன.

அதன்படி தமிழுக்கான மொழிபெயர்ப்பின் போது பல்வேறு சொற்பிழைகள் காணப்பட்டன. அது மாத்திரமன்று சில பரீட்சை வினாத்தாள்கள் பகுதி ஒன்றில் ஒரு சில வினாக்கள் அச்சிடப்படாமலும் பல்தேர்வு வினாக்களுக்கான விடைகள் அச்சிடப்படாமலும் காணப்பட்டன. அத்தோடு தரம் 11 இற்கான புவியியல் பாடத்தில் வழங்கப்பட்டிருந்த தேசப்படங்களில் சிங்கள மொழி பயன்பாடு கூடுதலாக காணப்பட்டிருந்ததாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அதேவேளை தரம் 6 லிருந்து தரம் 10 வரையான குடியுரிமை கல்வி மற்றும் புவியியல் பாடங்களில் பல்வேறு பிழைகள் காணப்பட்டதன் காரணமாகவும் ஆசிரியர்களும் மாணவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு இம்முறை முகங்கொடுத்தனர்.

சிங்கள மொழியில் மாத்திரம்
இதேபோல் சித்திர பாடத்திற்காக வழங்கப்பட்டிருந்த விடைத்தாள்கள் அனைத்தும் சிங்கள மொழியிலேயே வழங்கப்பட்டிருந்ததாக குறித்த பாடத்திற்கு பொறுப்பான ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதேவேளை 10 ஆம் தரத்திற்கான தொடர்பாடலும் ஊடகமும் என்ற பாடத்திற்கான பகுதி 1 வினாத்தாள் எந்த ஒரு பாடசாலைகளுக்கும் அனுப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும் தரம் 8 கணித பாட வினாத்தாளில் பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து ஒரு வினா எடுக்கப்பட்டு இருந்தமையினால் மாணவர்கள் குறித்த வினாவிற்கான விடை அளிப்பதில் பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். அத்துடன் இப்பாடத்தில் பகுதி ஒன்றில் வழங்கப்பட்டிருந்த பல்தேர்வு வினாக்களில் ஒரு சில வினாக்களுக்கான விடைகளில் குழப்பங்கள் காணப்பட்டதோடு, வினாக்களிலும் தவறுகள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு தரம் 6 இற்கான ஆங்கில பாட வினாக்களுக்கு பொருத்தமற்ற விடைகளே வழங்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை, புவியியல் பாடத்திற்கான விடைத்தாளானது குறித்த தரத்திற்கு மட்டுமன்றி பாடத்திற்கும் பொருத்தமற்றதாகவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதே போன்றே உயர்தரப் பிரிவிற்கான வினாத்தாள்களை மதிப்பிடுவதற்கு தேவையான விடைத்தாள்கள் முறையாக அனுப்பிவைக்கப் பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு சகல பாடங்களுக்குமான விடைத்தாள்களும் புள்ளியிடும் வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு வலயக்கல்வி காரியாலயங்கள் ஊடாக பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டன. அதில் முதலாவதாக அனுப்பப்பட்ட இறுவட்டில் பெரும்பாலான விடைத்தாள்கள் சிங்கள மொழியில் மாத்திரம் காணப்பட்டதை சுட்டிக்காட்டியதையடுத்து, இரண்டாவதாக மேலும் ஒரு இறுவட்டு அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும் அதிலும் ஒரு சில பாடங்கள் சிங்கள மொழியிலேயே தயாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.. 

குறைவான எண்ணிக்கையில் வினாத்தாள்கள் மேலும் ஒவ்வொரு பாடசாலையும் தமக்கு தேவையான மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விண்ணப்பப்படிவங்களை மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் அனுப்பியிருந்த போதிலும் அங்கிருந்து பாடசாலைகளுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே ஒரு சில பாட வினாத்தாள்கள் அனுப்பப்பட்டிருந்தமையினால் தமக்குத் தேவையான வினாத்தாள்களை போட்டோ பிரதி எடுப்பதற்கான மேலதிகமான செலவுகளை பாடசாலை நிர்வாகங்கள் பொறுப்பேற்று நடத்தியமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு ஒவ்வொரு பாடசாலையும் தமது பாடசாலைக்கு தேவையான வினாத்தாள்களுக்கு ஏற்படும் மொத்த செலவினை ஏற்கனவே மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திற்கு செலுத்தி இருக்கும் நிலையில் பற்றாக்குறையான வினாத்தாள்களை போட்டோ பிரதி எடுப்பதற்காக மேலதிகமான செலவுகளை ஏற்கவேண்டிய நிலைக்கு பல பாடசாலைகள் இம்முறை தள்ளப்பட்டன. 

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் தமிழ் கல்வி அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் இருக்கின்ற நிலையில் சிங்கள மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட பிறகு குறித்த தமிழ் மொழியிலான வினாப் பத்திரங்களை அச்சிடுவதற்கு முன்னர் சரி பிழை பார்த்திருப்பார்களாயின் இவ்வாறான அவலநிலை தோன்றியிருக்காது என பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இது இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன இதற்கான நிரந்தரத் தீர்வினை இதுவரை எந்த ஒரு தரப்பினரும் முன்வைக்கவில்லை என்பது வேதனைக்குரிய விடயமே.

தமிழ்க் கல்வி அமைச்சு என்ன செய்தது?
தவணைப் பரீட்சை என்பது ஒருவகையில் மாணவர்களுக்கு இடையே போட்டித் தன்மையை உருவாக்கும் ஒரு வேலைத்திட்டமாகும். அந்த வகையில் பரீட்சை வினாத்தாள்கள் தரம் அற்ற நிலையில் இருக்கும் போது மாணவர்களும் பல்வேறு குழப்பநிலையிலேயே பரீட்சைக்கு முகம் கொடுத்திருப்பது உறுதி. இவ்வாறான நிலைமையில் வெற்றிகரமான பரீட்சைகளை எவ்வாறு நடத்த முடியும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளங்கிக் கொள்ள வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது. கடந்த 25 வருட காலமாக மத்திய மாகாணத்தில் தமிழ்க் கல்வி அமைச்சு ஒன்று இருந்து வந்துள்ளது. அப்போதிலிருந்தே இவ்வாறான நிலைமை நீடித்த வண்ணமே காணப்படுகின்றது. வெறுமனே தமிழ்க் கல்வி அமைச்சு வேண்டும் என குரல் கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கல்வி அதிகாரிகள் தமிழ்க் கல்வி சமூகம் முகங்கொடுக்கும் இவ்வாறான பாரதூரமான விவகாரங்கள் பற்றி கண்டு கொள்வதேயில்லை.
தமிழ்க் கல்வி அமைச்சுப்பதவியை தக்க வைத்துக்கொண்டு பாடசாலைகளில் தமது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைத்து மலையக கட்சிகளினதும் நோக்கமாக உள்ளது.
அத்தோடு மத்திய மாகாணத்தில் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் என்ற பதவி பெரும்பான்மை இனத்தவருக்கு இருக்கும் அதேநேரத்தில் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் தமிழ் பிரிவிற்கான செயலாளர் என பல்வேறு பதவிகளில் தமிழர்களே இருந்து வருகின்றனர். இவர்கள் வெறும் பொம்மைகளாகவே அங்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது தான் நிதர்சன உண்மை. இல்லாவிடின் ஒவ்வொரு வருடமும் இந்த பிரச்சினைகள் தொடருவதற்கு சந்தர்ப்பங்களே இல்லை.

 தனியார் கல்வி நிறுவனங்கள் , தனியார் அமைப்புகள் தவணைப் பரீட்சை வினாத்தாள்களை பொறுப்பேற்ற போது பொறுப்புணர்வுடன் மிகச் சிறப்பாக பரீட்சை வினாத்தாள்களை தயாரித்ததோடு புள்ளியிடும் மதிப்பீட்டு தாள்களை கூட மிக துல்லியமாக தயாரித்து விநியோகித்து வந்தன.

அவ்வாறான நிறுவனங்களுக்கு தடைவிதிக்கும் அதே வகையிலேயே தற்போது மத்திய மாகாண கல்வித் திணைக்களமானது இச்செயற்பாட்டினை முன்னெடுத்திருக்கின்றது. ஆனால் இப்போது நடப்பதே வேறு. இதேவேளை மத்திய மாகாணத்தில் உள்ள சகல வலயக் கல்விப்பணிப்பாளர்களும் தமது நிர்வாகத்தின் கீழ் வரும் சகல பாடசாலைகளுக்கும் உதவிக் கல்வி பணிப்பாளர்களையும் ஆசிரிய ஆலோசகர்களையும் தினமும் பரீட்சைக் கடமைகளில் மேற்பார்வையிடுவதற்காக அனுப்பியிருந்ததோடு சிறந்த முறையில் பரீட்சை கடமைகளை முன்னெடுப்பதற்கு ஒரு உந்துதலாக இருந்தனர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டல் அவசியம்.

 ஆனால் பதவிகளுக்கும் ஆசனங்களுக்கும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகளோ மலையக கல்வி விடயத்தில் எந்த வித அக்கறையுமின்றி செயற்படுகின்றனர் என்பது இவ்வாறான சம்பவங்களின் மூலம் நிரூபணமாகியுள்ளது. பொதுப் பரீட்சைகளின் போது மத்திய மாகாணம் பின்னடைவை கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது என்பதையும் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

நன்றி - வீரகேசரி

“கோட்டா” US குடியுரிமையை இழக்கவில்லை – இன்றைய அமெரிக்க ஆதாரம் - என்.சரவணன்


அமெரிக்கா தமது நாட்டில் குடியுரிமையை இழந்தவர்களின் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என வருடத்துக்கு நான்கு தடவைகள் வெளியிடுவது வழக்கம். இந்த வருடம் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்த பட்டியலில் கோட்டபாயவின் பெயர் இருக்கவில்லை. ஆனால் தனது குடியுரிமையை ரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை எப்போதே செய்துவிட்டதாகவும் தற்போது அமெரிக்க குடியுரிமையை இழந்துவிட்டதாகவும் கோட்டபாய கூறிவந்தார். எதிர்தரப்பினர் அவரின் அந்த அறிவிப்பை சவால் செய்தார்கள். முடிந்தால் அதனை வெளிப்படுத்துமாறு கேட்டிருந்தார்கள். ஆனால் அது தன்னிடம் இருப்பதாகவும் அதனைக் காட்டவேண்டிய அவசியம் இல்லையென்றும் கோட்டாபய கூறியிருந்தார்.

இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் அறிவிப்பதற்கு முன்னர் வெளிவரப்போகும் அமெரிக்க அறிக்கையில் கோட்டபாயவின் பெயர் வெளியிடப்படலாம் என்றே ராஜபக்ச தரப்பினர் நம்பியிருந்தனர். இந்த நிலையில் இன்று அதாவது 15.08.2019 வெளியிடப்பட்டிருக்கிற 17 பக்கங்களைக் கொண்ட இறுதிப் பட்டியலில் கோட்டபாயவின் பெயர் வெளியாகவில்லை.

இலங்கையின் அரிசயல் அமைப்பின் 19வது திருத்தச் சட்டத்துக்கு அமைய இலங்கை பிரஜை ஒருவர் மட்டுமே ஜனாதிபதி வேட்பாளராக ஆக முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட குடியுரிமை பெற்ற எவரும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தவராக கணிக்கப்படுவார்.

ராஜபச்க தரப்பைப் பொறுத்தளவில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளராக “நந்தசேன கோட்டபாய ராஜபக்ச”வைத் தான் நம்பியிருக்கின்றனர். அதற்கான ஆயத்தங்களை அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டபோதும்; கோட்டபாய அமெரிக்க குடியுரிமையையும் கொண்ட ஒருவராக இருப்பதால் அவரை முதலில் அக்குடியுரிமையை ரத்துசெய்துவிட்டு வரும்படி ராஜபக்ச அணியினர் தெரிவித்திருந்தனர்.



ஜனாதிபதித்தேர்தலில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைத் தான் களமிறக்க வேண்டும் என்பதே ராஜபக்ச தரப்பினரின் ஒரே லட்சியம். ஆனால் 19வது திருத்தச் சட்டம் அவர்களின் அந்தக் கனவைக் கலைத்திருந்தது

19வது திருத்தச்சட்டத்தில் முக்கிய மூன்று திருத்தங்கள் ராஜபக்ச குடும்பத்தின் எதிர்கால கனவை நாசமாக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டு உண்டு.
ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் தடவை ஜனாதிபதியாக ஆக முடியாது. அதாவது மகிந்தவால் மீண்டும் ஜனாதிபதியாக முடியாது.
இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது. அதாவது கோத்தபாய, பசில் ஆகிய மகிந்தவின் இரு சகோதர்களும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.
மகிந்தவின் மகனை ஜனாதிபதித் தேர்தலில் நிற்கவைக்கவும் முடியாது. ஏனென்றால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் 35 வயதைத் தாண்டியிருக்கவேண்டும் என்பது அரசியலமைப்பு விதி. 2015 வரை வயதெல்லை 30ஆக இருந்தது. 1986இல் பிறந்த நாமல் ராஜபக்ச 35 வயதைக் கடக்க 2021 ஆக வேண்டும். 2019 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் பங்குபெறமுடியாது. அதாவது 2024 ஆம் ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தான் பங்குபெறலாம். அல்லது 2021குப் பின்னர் ஜனாதிபதி பதவி வெற்றிடம் ஏற்படவேண்டும் வேண்டும். இந்த இடைக்காலத்துக்குள் “ராஜபக்சவாத”த்துக்கான மக்கள் மவுசுக்கு என்ன நிகழும் என்றும் தெரியாது.
அமெரிக்காவின் அறிக்கை வெளிவரும் வரை ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபயவின் பெயரை அறிவிப்பதை இழுத்தடித்தே வந்த ராஜபக்ச தரப்பு ஓகஸ்ட் 11 வேறு வழியின்றி கோட்டாபயவின் பெயரை அறிவித்தனர். வரப்போகும் அமெரிக்க அறிக்கையை அவர்கள் பெரிதும் நம்பியிருந்தனர். ஆனால் இன்றைய அறிக்கை அந்த கனவுகளுக்கு ஆப்பு வைத்து விட்டது.

அமெரிக்க உள்துறை வருமான சேவை (IRS - Internal Revenue Service) தான் இந்த அறிக்கையை வெளியிடும் அதிமாரபூர்வமான உரிமையைக் கொண்டது. 2019-17498 என்கிற இலக்கத்தைக் கொண்ட இன்றைய அதிகார பூர்வமான அறிக்கையை https://s3.amazonaws.com/public-inspection.federalregister.gov/2019-17498.pdf என்கிற இணைப்பில் நீங்கள் காணலாம்.


இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் இலங்கையின் எந்தவொரு பிரஜையும் அதை எதிர்த்து வழக்கு தொடர முடியும் என்று (PAFFREL - PEOPLE'S ACTION FOR FREE & FAIR ELECTIONS) இயக்கம் அறிவித்திருக்கிறது. வேட்புத் தாக்கல் இடம்பெற்றதும் அதனை எதிர்த்து முறைஈடு செய்ய கால அவகாசம் வழங்கப்படும். அது இயலாவிட்டால் நீதிமன்றத்துக்கு செல்லவும் பிரஜை ஒருவருக்கு உரிமை உண்டு என்றும் பெப்ரல் அமைப்பின் தலைவர் றோகன ஹெட்டிஆராச்சி நேற்று 14 அன்று தெரிவித்திருந்தார்.

19வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் வேட்பாளர் ஒருவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்யும் போது உண்மையான தவல்களை வழங்கவேண்டியது வேட்பாளரின் பொறுப்பாகும். என்பதையும் ஹெட்டிஆராச்சி குறிப்பிட்டிருந்தார்.

நன்றி - அரங்கம்

அமெரிக்க குடியுரிமையை இழந்தோர் பற்றி 15.08.2019 வெளியான அறிக்கை



மலை­யக அபி­வி­ருத்தி பற்றி சிந்­தித்த பேரா­சானின் மறைவு - எம்.வாமதேவன்

பேராசிரியர் மு.சின்னத்தம்பி
பேராசிரியர் மு.சின்னத்தம்பியின் திடீர் மறைவு கல்வி சமூகத்திற்கு மாத்திரமின்றி முழு மலையக சமூகத்திற்கும் ஒரு பேரிழப்பான நிகழ்வாகும். பேராசிரியர் சின்னத்தம்பி 1940ஆம் ஆண்டில் கண்டி ரங்கலையில் பிறந்து பின்னர் தலவாக்கலை கல்கந்தையில் வாழ்ந்து தமது ஆரம்பக் கல்வியை தலவாக்கலை சிரேஷ்ட கல்லூரியில் கற்றார். பின்னர் பல்கலைக்கழக புதுமுக வகுப்பை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் தொடர்ந்தார். அங்கிருந்து 1960ஆம் ஆண்டு இலங்கை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்ந்தார். 1965ஆம் ஆண்டு பொருளாதாரதுறையில் சிறப்புபட்டத்தை பெற்று அதே பீடத்தில் உதவி விரிவுரையாளராக பணியாற்ற தொடங்கினார். 1993 ஆம் ஆண்டு பேராசிரியராக பதவி உயர்வு பெற்று 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் மலையகத்தை சார்ந்த முதலாவது பேராசிரியர் பதவியை அலங்கரித்த பெருமை இவருக்குண்டு.

1960களில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் கற்பிக்க தீர்மானிக்கப்பட்டவேளை, உரிய விரிவுரையாளர்கள் இல்லாமை பிரதான ஒரு பிரச்சினையாக காணப்பட்டது. 1965 ஆம் ஆண்டளவில் பொருளியல் துறையில் தமிழிலே விரிவுரையாற்றுவதற்கு பேராசிரியர்கள் ஏ.ஜே.வில்சன் (அரசியல்) எஸ்.ராஜரட்ணம் (பொருளாதார வரலாறு) என். பாலகிருஸ்ணன் (வங்கியியல்) அமிர்அலி (பொருளாதார வரலாறு) எம். கிருஷ்ணமூர்த்தி (கணக்கியல்) போன்றோர் காணப்பட்டனர். 1966 இல் பாலகிருஷ்ணன் வெளிநாடு சென்றமையினால் வங்கியியல் கற்பிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டவரே உதவி விரிவுரையாளர் சின்னத்தம்பி ஆவார். இது இளம் உதவி விரிவுரையாளருக்கு ஒரு சவால் மிக்க பணியாகும். இரண்டு வருடங்கள் (1967/1968) வங்கியியல் பாடத்தை பிரதானமாக பயின்றவர்களுக்கு விரிவுரையாற்றி அக்கற்கை நெறியை முழுமையாக்கிய பெருமை மறைந்த பேராசிரியருக்கு உண்டு.

பின்னர் 1969 ஆம் ஆண்டு தன்னுடைய உயர் கல்விக்காக இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்திற்குச் சென்று எம்.ஏ பட்டத்தை பெற்றுக் கொண்டார். இவர் தன்னுடைய பணிகளை பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் பொருளாதாரம், சமூகம் குறித்த பல்வேறு ஆய்வு முயற்சிகளிலும் பயன்படுத்தினார்.

மலையகத்தில் இயங்கி வருகின்ற பல அரச சார்பற்ற நிறுவனங்களோடு இணைந்து இவ்வாய்வு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இத்துறை சார்ந்து நூற்றுக்கணக்கான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

இவரிடம் பொருளாதாரம் கற்ற பல நூறு மாணவர்களில் நானும் ஒருவன். 1968 /1969 ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்துறையை சிறப்பு பாடமாக பயின்ற எனக்கு “பணமும் வங்கியலும்” என்ற பாடத்தில் விரிவுரையாற்றினார். நான் தொடர்பு கொண்டிருந்த உதயம் நிறுவனம் 1993 இல் வெளியிட்ட இலங்கை மலையக தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும் என்ற ஆய்வு நூலை தமிழ்ப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியோடு இணைந்து வெளியிடுவதில் பாரிய பங்களிப்பினை செய்தார்.

அமரர். இர. சிவலிங்கம் ஞாபகார்த்த குழுவின் முதலாவது நினைவுப் பேருரையை “பெருந்தோட்டத்துறை தமிழ் இளைஞர் இன்றும் நாளையும்” என்ற தலைப்பில் 2000 ஆம் ஆண்டு நிகழ்த்திய பெருமை இவருக்குண்டு. இவருடைய சமூக ஈடுபாடு மிக ஆழமானதும் தொடர்ச்சியானதுமாகும். அவர் மலையக அரசியல் தலைமைகளுக்கு மலையக தோட்ட தொழிலாளர்களின் அபிவிருத்தி மற்றும் சம்பளம் போன்ற பிரச்சினைகளில் தொடர்ச்சியான ஆலோசனை வழங்கி வந்துள்ளார். தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் 2006 ஆம் ஆண்டு பத்தாண்டு திட்ட தயாரிப்பில் தொழில் கல்வி சம்பந்தமான குழுவிற்கு தலைமை தாங்கி பல்வேறு காத்திரமான பங்களிப்பை செய்தார். 2009 ஆம் ஆண்டு இந்த பத்தாண்டு திட்டத்தை நடைமுறையாக்குவதற்கான வழி தேசப்படம் உருவாக்குவதற்கு ஆலோசகராக என்னோடு இணைந்து செயற்பட்டார். பின்னர் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் ஐந்தாண்டு திட்ட தயாரிப்பில் பணிக்குழுவில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை நல்கினார்.

மலையகப் பல்கலைக்கழகம் என்ற கருத்து பல சிந்தனை குழாம்களில் பேசப்பட்டது. மறைந்த அமைச்சர் சந்திரசேகரன் காலத்தில் உருவாக்கப்பட்ட சிந்தனைகுழாமிலே இது பிரதானமாக பேசப்பட்டது. பின்னர் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழு ஒன்றிலே இது இறுதிவடிவம் பெற்றுள்ளது. இந்த செயன்முறையில் முக்கியமான பங்கினை வகித்தவர் பேராசிரியர் சின்னத்தம்பி என்பது பதிவுசெய்யப்படவேண்டிய ஒன்றாகும். இவருடனான எனக்கிருந்த தொடர்பு என்னுடைய பல்கலைக்கழக மாணவர் காலத்தில் இருந்து தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. ஆசிரியர், மாணவர் தொடர்புக்கு மேலதிகமாக ஒரு நண்பனாக, என்னுடைய ஆலோசகராக பல்வேறு நடவடிக்கைகளில் இருந்து வந்துள்ளார்.

இவர் எழுதி வெளியிட்ட அபிவிருத்தி போக்குகள் என்ற நூலிற்கு முன்னுரை எழுத சொல்லி என்னைக் கௌரவித்தார். ஒரு ஆசிரியரால் மாணவன் கௌரவிக்கப்படுவது ஒரு பெரிய பேறாகும். தேயிலையின் செழுமையும் தொழிலாளர்களின் ஏழ்மையும் என்ற அவரது ஆய்வு நூலிற்காக 2015 ஆம் ஆண்டில் சாகித்ய விருது இவருக்கு கிடைத்தமை இவருடைய ஆளுமையை மெருகேற்றியது. அபிவிருத்தி போக்குகள் என்ற பொருளாதார கட்டுரைகளின் தொகுப்பு நூலும் குறிப்பிடத்தக்கது.

ஜோசப்பைன் கொறிரா என்ற தனது மாணவியை காதல் திருமணம் செய்த இவருக்கு இரண்டு மகன்களும் மூன்று பேரப்பிள்ளைகளும் உள்ளனர். தன்னுடைய ஓய்வு காலத்தில் இவர் தனது பேரப்பிள்ளைகளோடு நேரத்தை செலவழிப்பதில் அதிக ஈடுபாடு காட்டினார்.

தொடர்ச்சியாக என்னோடு தொடர்பில் இருந்த இவர், எந்நேரமும் தன்னுடைய எழுத்து முயற்சிகள் பற்றியும் நூல் வெளியிடுதல் பற்றியும் கலந்துரையாடுவார்.

தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் அதிகளவு கட்டுரைகளை வெளியிட்டுள்ள இவர் தன்னுடைய கட்டுரைகளின் தொகுப்பை ஆங்கிலத்தில் வெளியிடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இவ்வேளையில் கடந்த ஜுன் மாதம் 28ஆம் திகதி கொழும்பிலே தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி உரிமை சம்பந்தமான கருத்தரங்கிலே இவரோடு கலந்துரையாடிய எனக்கு, இவரை ஜூலை மாதம் 22ஆம் திகதி திங்கட்கிழமை அன்று கொழும்பு வைத்தியசாலையில் நோயாளராகப் பார்த்த அதிர்ச்சி நீங்கும் முன் அவரது மறைவுசெய்தி பேரதிர்ச்சியை தந்துள்ளது. எந்தவித பதவி, புகழ் போன்றவற்றிற்கும் ஆசைப்படாமல் தன்னுடைய புத்திஜீவித பணியை தொடர்ந்து ஆற்றி இறுதிவரை மலையக அபிவிருத்தி பற்றி சிந்தித்த பேராசான், தன்னுடைய சிந்தனையை நிறுத்திக்கொண்டமை இந்த சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாகும். அவரை இழந்து நிற்கும் என்னுடைய சக பல்கலைக்கழக மாணவியும் அவருடைய துணைவியாருமான ஜோசப்பைனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் அவரிடம் கற்ற மாணவர்கள் சார்பான ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும். 

நன்றி - வீரகேசரி

அமைச்சரின் உணவுக்கும் நிதி ஒதுக்கப்படுகிறதா? - ச.பிரசன்னா


மலையக பெருந்தோட்ட மக்களின் மிக நீண்ட கனவுகளில் தனிவீட்டுத் திட்டமும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. அதன் அடிப்படையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் முதற்கட்டமாக 4000 தனி வீடுகள் நிர்மாணம் ஆரம்பிக்கப்பட்டு முடிவடையும் தறுவாயில் இருக்கின்ற நிலையில் இரண்டாம் கட்டமாக 10000 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஜுலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்படி அமைச்சின் மூலம் இந்திய வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றினை பெருவாரியாக பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியமே நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அவ்வாறு முன்னெடுக்கப்படும் தனிவீட்டுத் திட்டங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக பல முறை சுட்டிக் காட்டிய போதும், இதுவரையும் அவற்றை திருத்துவதற்கோ அல்லது அவை தொடர்பாக ஆராய்வதற்கோ எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 25 வீட்டுத் தொகுதிகளைக் கொண்ட பசும்பொன் வீடமைப்புத்திட்டம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதில் குறிப்பாக வீதி அபிவிருத்தி மற்றும் மின்சாரம் என்பவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை விடவும் மேலதிகமாக பல ஆயிரங்களை இங்கு வசிப்பவர்கள் சொந்தமாக செலவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மலையக பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது. மேலதிகமாக கட்டணங்கள் பயனாளிகளிடம் அறவிடப்படுவதில்லை.

பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் கட்டப்பட்ட 25 வீடுகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கோரப்பட்ட நிலையில் மின்சார விநியோகத்துக்காக 704, 086.20 ரூபா ஒதுக்கப்பட்டு செலவு செய்யப்பட்டிருந்த போதும் பயனாளிகளுக்கு ஒரு வருடம் கடந்தும் மின்சாரம் வழங்கப்படாமல் வீட்டுத்திட்ட பயனாளிகள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் 18,915.16 ரூபாவினை மின்சார சபைக்கு செலுத்தி (25து18,915.16 = 472,879.00) மின்சாரத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர். அதே போலவே பாதை அமைப்புக்காக ஒதுக்கப்பட்ட 604, 316.98 ரூபாவும் செலவளிக்கப்பட்டுள்ள நிலையில் பாதியளவிலேயே பாதைக்கும் கொங்றீட் இடப்பட்டிருக்கிறது.

இவ்வாறு வீட்டுத் திட்டத்தில் முறையற்ற வகையிலான செலவீனங்கள் காணப்படுவதைப் போல ஒரு வீட்டினை கட்டுவதற்கான செலவில், விளம்பரம், ஹெலிகொப்டர் பயணம், அமைச்சருக்கான உணவு செலவு, நொறுக்குத் தீனி என்பவற்றுக்கான செலவு செய்யப்படுவது ஆச்சரியத்தைத் தருவதாக அமைந்திருக்கின்றது. மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகின்ற பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரிய போது, MHNV/2/8/3/2/RTI (2019) கடிதத் தலைப்பின் மூலம் நிதியத்தினால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் (2014 - 2019) தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தது.

இதில் முக்கியமாக 2014 ஆம் ஆண்டு கணக்கு அறிக்கையில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பான கூட்டத்துக்கு (நீர்+ பகல் உணவு+ நொறுக்குத் தீனி+ அமைச்சரின் பகல் உணவு+ 600+ 20845+ 19575) என 164,733.94 ரூபாவும் ஏனைய செலவுகளாக (ப்ளக்ஸ்) 208, 000 ரூபாவும் வெளிக்கள பயணத்துக்கான பெற்றோல் செலவாக 32,635 ரூபாவும் ஹெலிகொப்டர் பயணத்துக்காக 759,126 ரூபாவும் என மொத்தமாக 1,164,494.94 ரூபா செலவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தொகையானது பசும்பொன் வீடமைப்புத் திட்டத்தில் ஒரு வீட்டுக்காக ஒதுக்கப்படும் தொகையில் இரு மடங்காகக் காணப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் வீணான நிதி விரயோகத்தையே வெளிப்படுத்துகின்றன.

பெருந்தோட்டங்களில் தற்போது பல இடங்களில் தனிவீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படுவதை மறுக்க முடியாது. அதேவேளை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் அவர்கள் பயன் பெறுகின்றார்களா என்பது சந்தேகத்துக்கிடமானதாகவே காணப்படுகின்றது. 2015/05/10 ஆம் திகதி அக்கரப்பத்தனை பிறேமோர் தோட்டத்தின் 7 ஆம் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் முற்றாக சேதமடைந்த 8 வீடுகளின் உரிமையாளர்களுக்கு இன்றுவரையும் மாற்று வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களிலேயே இன்றும் வசித்து வருகின்றனர். 29/12/2018 ஆம் திகதி போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று வரையும் வீடுகள் அமைக்க நடவடிக்கையெடுக்கப்படவில்லை.

ஆரம்பத்தில் மலையகப் பெருந்தோட்டங்களில் வீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் போது அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களை முதன்மைப்படுத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும், தற்போது ஆதரவாளர்களுக்கும், கட்சிக்கு செல்வாக்குள்ள பகுதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டே வீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அமைச்சுக் கூட்டங்களுக்கு மொத்த பரிவாரங்களும் கொழும்புக்கு வந்து விடுகின்றன. ஒரு வீட்டுத்திட்டம் தொடர்பான கூட்டத்துக்கு செலவாகும் தொகையில் இரு வீடுகளை கட்டமுடியும் என்ற நிலை இருக்கும் போது எதற்கு இந்த ஆரவாரம்.

தற்போதைய நிலையில் நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, காலி, கேகாலை, மொனராகலை, மாத்தளை, களுத்துறை, மாத்தறை மாவட்டங்களில் 943,390 பெருந்தோட்ட மக்கள் வசித்து வருவதுடன் இவர்களுக்கு மொத்தமாக 186,298 வீடுகள் தேவைப்படுவதாக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாற்று அறிக்கை - 2018 இல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே பெருந்தோட்ட மக்களின் தேவையைக் கருத்திற் கொண்டு, நிதி துஷ்பிரயோகம் இடம்பெறாத வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதே அனைவரினதும் கோரிக்கை.

நன்றி - தினக்குரல்

சாவு வரியிலிருந்து முலை வரி வரை - என்.சரவணன்

இலங்கையின் வரி வசூலிக்கும் வழிகள் பற்றிய பண்டைய கால விபரங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் தரவல்லவை.

அரசுகள் இயங்குவது மக்களின் மக்களின் வரியில் தான். அவரவர் கொண்டிருக்கும் வசதி, மேற்கொள்ளும் வணிகப் பணிகள், சொத்துக்கள், பெற்றுக் கொள்ளுகின்ற லாபம் என்பவற்றின் அடிப்படையில் ஒரு தனி நபரோ நிறுவனங்களோ அதற்கேற்ப திறையை செலுத்துவது என்பது பண்டைய காலத்தில் இருந்து வெவ்வேறு வடிவங்களில் இயங்கி வரும் ஒரு முறைமை தான்.

இலங்கைப் பொறுத்தளவில் கிறிஸ்துவுக்கு முன்னரான 3 ஆம் நூற்றாண்டிலிருந்த கல்வெட்டுப் பதிவுகள், விவசாய நோக்கங்களுக்கான நீர் நுகர்ச்சிக்காக செலுத்தப்பட்ட வரிகள் மற்றும் அதிகாரிகளினால் அரசாங்கத்தின் சார்பில் சேகரிக்கப்பட்ட வரிகள் (“தகபதி” “போஜகபதி") தொடர்பான தகவல்களை விபரிக்கின்றன.

நகரத்திற்கு வழங்குவதற்காக தானியங்களை ஏற்றிவரும் வண்டில்களுக்கு நகரத்தின் நுழைவாயிலில் வைத்து வரி அறவிடப்பட்டதுடன் அத்தகைய வரி சேகரிப்புக்கள் பௌத்த துறவிகளுக்கு தானம் வழங்கும் மண்டபத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ரொபர்ட் நொக்ஸ்ஸின் நூலில் ஆண்டொன்றுக்கு மூன்று முறை வரி வசூலிக்கும் வழமை இருந்ததையும் அரசனின் திறைசேரிக்கு எவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறித்தும் விபரமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆச்சரியம் தரும் சில வரி முறைகளைப் பார்ப்போம்.

மஹா பத்த (மகா வரி)
கருவா உற்பத்தித் தொழில் இலங்கையில் சலாகம சாதியினரிடம் தான் ஆரம்பத்தில் இருந்தது. போர்த்துகேயர் இலங்கையை ஆக்கிரமித்ததும் அதனை தம் வசப்படுத்திக்கொண்டனர். வாசனைத் திரவியங்களை அவர்களின் நாட்டுக்கு கொண்டு செல்லவும், உபரியை சந்தையில் விற்கவும் இவ்வுற்பத்தியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக அவர்கள் கருவா உற்பத்திக்கென தனியான வரியை அறிமுகப்படுத்தினார்கள். இந்தக் காலப்பகுதியில் கருவா செய்கையை தனியான ஒரு விவசாய உற்பத்தி நடவடிக்கையாக இருக்கவில்லை. காடுகளுக்குச் சென்று தான் கருவாவை சேகரித்து வருவார்கள். இந்த வரியின் மூலம் அதிகளவு கருவாவை தேடி தமக்கு எடுத்துவரச் செய்தார்கள். அதைத் தான் “மஹா பத்த” (Great tax / மகா வரி) என்று அழைத்தார்கள். பணமாகவோ, அல்லது குறிப்பிட்ட தொகை கருவாவை வரியாக செலுத்தினார்கள். இதற்காக முதலி, விதானை போன்றோர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டார்கள்.

போர்த்துகேயர் போய் ஒல்லாந்தர் வந்ததும் அவர்கள் மேலதிகமாக பல வரி முறைகளை அறிமுகப்படுத்தினார்கள். காணி வரி, சாவு வரி, மீன்பிடி வரி, தென்னை வரி, இஸ்தோப்பு வரி, செருப்பு வரி, போன்ற வரிகளை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். ஆங்கிலேயர்களும் அதனை அப்படியே தொடர்ந்தார்கள். அதேவேளை 1848 இல் அன்றைய தேசாதிபதி டொரிங்டன் மேலதிகமாக “உடல் வரி”, “நாய் வரி”, “சாவு வரி”, “வீதி வரி”, பீடி வரி”, “தோணி வரி”, “கடை வரி”, “கறத்தை வரி” போன்ற வரிகளை புதிதாக அறிமுகப்படுத்தினார்.

உடல் வரி
ஆண் சிறுவர்கள் வளர்ந்ததும் அவர்கள் மூன்று சிலிங்குகளை “உடல் வரி”யாக (எங்க பத்த) செலுத்தும் உத்தரவை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினார்கள். அவ்வாறு வரி செலுத்த இயலாதவர்கள் வெள்ளையர்களால் போடப்பட்டுக்கொண்டிருந்த புதிய வீதி வேலைகளில் வருடத்தில் 6 நாட்கள் கடும் உடலுழைப்பைக் கொடுக்க வேண்டும். இதுவே இன்னொரு வடிவத்தில் நிகழ்ந்தது. வீதிகளை செய்வதற்கு தமது உடல் உழைப்பை இனாமாக வழங்காதவர்கள் இந்த “உடல்வரி” யை செலுத்த வேண்டும். 1848 ஆம் ஆண்டு நிகழ்ந்த வரலாற்றில் முக்கிய கிளர்ச்சிகளில் ஒன்றாக அறியப்பட்ட “மாத்தளை” கிளர்ச்சிக்கான உடனடிக் காரணங்களில் இதுவும் ஒன்றாக அறியப்படுகிறது. இந்தக் கிளர்ச்சியில் தான் “வீர புரன் அப்பு” போன்றோர் அக்கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியதாக வரலாற்றில் பதிவு பெறுகிறார்கள். கோப்பி பயிர்ச்செய்கையில் ஆங்கிலேயர் கண்ட நட்டம் இத்தகைய வரிகளுக்கு உடனடிக் காரணமாக இருந்தது.
சாவு வரி
ஒருவர் இறந்து போனதன் பின்னர் அவர் உயிருடன் இருக்கும்போது பயன்படுத்திய சொத்துக்களுக்கும், சேமிப்புக்கும் சேர்த்து குறிப்பிட்ட அளவு வரியை செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இறந்தபின்னர் விதிக்கப்படும் வரியென்பதால் இதனை “மறால வரி”. இதனை தமிழில் சாவு வரி / மரண வரி என்று விளங்கிக்கொள்ளலாம். தனியானதொரு உத்தியோகத்தர் “மறாலைரோஸ்” (Maraleiros) இவ் வரிச் சேகரிப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தார். இத்தகைய வரிமுறை கண்டி இராச்சியத்திலும் இருந்ததாக ரொபர்ட் நொக்ஸின் குறிப்புகளில் உள்ளன. (1) அரசனுக்கு ஐந்து “சக்கராவோ”வை சாவுவரியாக வழங்கும்வரை பிரேதத்தை தகனம் செய்வதற்கான அனுமதி (Cremation licence) கிடையாது. கோட்டை ராஜ்ஜியத்தை போர்த்துக்கேயர் கைப்பற்றியபோது “சாவு வரி” முறையில் திருத்தங்களைக் கொண்டு வந்தார்கள்.

குறிப்பாக பிலிப்பே தி ஒலிவேரா (Phelipe de Oliveyra) போர்த்துக்கேய தளபதியாக இருந்த காலத்தில் ஒரு விதிவிலக்கைக் கொண்டுவந்தார். (2)  அதாவது இறந்து போனவரின் வாரிசுகள் நான்கு மாதங்களுக்குள் ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தழுவினால் அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. மத மாற்றத்தை ஊக்குவிப்பதற்காக அவர்கள் இப்படி செய்தார்கள். (3) இதனை இன்னொரு வகையில் விளக்குவதாயின் சுதேசிகள் மீது மட்டுமே காலனித்துவ காலத்தில் இந்த வரி திணிக்கப்பட்டது. அதாவது கத்தோலிக்கர்கள் அல்லாதவர்கள் இந்த வரிக்கு இலக்கானார்கள். வரியைக் கட்டு அல்லது கிரிஸ்தவனாகு என்கிற நிர்ப்பந்தமே இதன் உள்ளடக்கம். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் இத்தகைய மத மாற்றத்தால் பல சலுகைகளை பெற்றிருக்கிறார்கள். (4)  இந்த சலுகையால் பலர் மதமாற்றம் செய்திருக்கிறார்கள்.

பல சந்தர்பங்களில் பலர் தமது பொக்கிசங்களையும், விலையுயர்ந்தவற்றையும் புதைத்து மறைத்து வைத்திருக்கிறார்கள், சில சந்தர்ப்பங்களில் தமது வாரிசுகளுக்குக் கூட தெரியாதபடி மறைத்துவைத்திருக்கிறார்கள். (5)

யாழ்ப்பாணத்திலும் இந்த “மறால வரி” நடமுறையிலிருந்ததாகவும் இறந்தபின் அசையும் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை வரியாக செலுத்த வேண்டியிருந்தைப் பற்றியும் கொட்ரிங்டன் (H.W.Codrington) எழுதிய “இலங்கை பற்றிய சிறு வரலாறு” என்கிற நூலில் விபரிக்கிறார். (6)

சாவு வரி (maralla) பற்றிய விபரமான விளக்கம் 1685 இல் வெளியான கெப்டன் ஜொவாவோ ரிபைரோவின் “இலங்கைத் தீவின் வரலாற்றுத் துன்பியல் நாடகம்” (Fatalidade Histórica da Ilha de Ceilão) என்கிற நூலில் தனியொரு அத்தியாயமாக காணபடுகிறது. ஆனால் ரிபைரோவின் நூலின் படி இதற்கென நியமிக்கப்பட்ட “மறாலைரோஸ்” எனப்படுகிற உத்தியோகத்தர் கிராமங்களில் வேறு பல வழக்குகளை விசாரித்து நீதி வழங்கும் அதிகாரத்தையும் கொண்டிருந்திருக்கிறார். ரிபைரோ ஓரிடத்தில் இப்படி விளக்குகிறார்.

அவர்கள் மிகவும் உயர்ந்தபட்ச குற்றமாகக் கருதியது என்னவென்றால், ஒரு உயர் சாதியைச் சேர்ந்த ஒரு பெண் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவருடன் உடல் உடலுறவு கொண்டாரெனில் அது வழக்குக்கு வந்து விடுகிறது. திருமணமானவளாக இருக்கும் பட்சத்தில் கணவனாலும் தந்தை மற்றும் சகோதர்களாலும் கடுமையாக எதிர்கொள்ளப்படுவாள் இது அவர்களின் குடும்பத்தின் கௌரவத்தைப் பாதிக்கும் மிகப்பெரிய சோக நிகழ்வாக இருந்தது. இக்குற்றம் சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டால் அவளைக் கொல்ல முடியும். சாட்சியங்கள் இல்லாதுவிடின் அப்படி தான் செய்யவில்லையென “மறாலைரோஸ்” முன்னால் சத்தியப்பிரமாணம் செய்யவேண்டும். இதில் உள்ள கொடுமை என்னவென்றால் குற்றமற்றவள் என்பதை நிரூபிப்பதும் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் பொறுப்பு. அவள் ஒத்துக்கொள்ளும்பட்சத்தில் அவளின் கைகளை கொதிக்கும் எண்ணெய்க்குள் விட்டெடுக்க வேண்டும். அல்லது சூடான இரும்புக் கம்பியை பிடித்து தூக்கவேண்டும். அல்லது சத்தியப்பிரமாணத்தை சொல்லி முடிக்கும் வரை அதைப் பிடித்துக்கொண்டு இருக்கவேண்டும். சத்தியப்பிரமாணத்தில்...
“என் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நான் செய்திருந்தால் இந்த நெருப்பு என்னைக் கொல்லட்டும், அல்லது  என் குற்றமற்றதன்மையையும் என் வாழ்க்கையின் தூய்மையையும் கடவுள் நிரூபிக்கட்டும். " என்று கூற வேண்டும்.
சத்தியப்பிரமானத்தின் பின்னர் வீட்டுக்கு தகப்பனுடனோ அல்லது கணவனுடனோ சென்றுவிடலாம் ஒரு நாளுக்குப் பின் அந்த கை பெரிய காயங்களை உருவாக்காமல் இருந்தால் அவளின் தூய்மையும், குற்றமற்ற தன்மையும் நிரூபிக்கப்பட்டதன அடையாளமாக அவர்களின் உறவினர்கள் கருதிக்கொள்வார்கள். ஒருவேளை மறுதலையாக விளைவு ஏற்பட்டால், மரணதண்டனைக்கு உள்ளாக நேரிடும். (7)

ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அவரின் அயலவருக்கு விதிக்கப்பட்டுகின்ற வரியாகவும் சில இடங்களில் குறிப்பிடப்படுகின்றன. அயலவரின் சுகதுக்கங்களை சரியாக கவனிக்காததால் வந்த சாவு என்பதால் அந்த அயலவருக்கு வதிக்கப்பட்ட வரி இது என்கிற இன்னொரு விளக்கமும் கூறப்படுவதுண்டு.

டொயிலி தனது நாட்குறிப்பில் 1813ஆம் ஆண்டு “சாவு வரியை” விரிவுபடுத்தியமைக்கு எதிராக எஹெலபொல குரல்கொடுத்ததாக குறிப்பிட்டிருக்கிறார். (8)

மீன்பிடி வரி
மீன் பிடி மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை வரியாக செலுத்த வேண்டும்.

தென்னை வரி
குறிப்பிட்ட அளவுக்கு மேல் வைத்திருக்கும் தென்னை மரங்களில் ஒன்றுக்கு 6 வெள்ளிகள் வீதம் வரி. இந்த வரியால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இஸ்தோப்பு வரி
தான் வாழும் வீட்டின் கூரைக்கு ஓடு மாற்றுவதாயிருந்தாலும், சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பதாயிருந்தாலும் கிராமத் தலைவரின் அனுமதி பெற வேண்டியிருந்த காலமது. அந்த நபர் ஒரு விறாந்தை (இஸ்தோப்பு) ஒன்றை நீடிப்பதாக இருந்தால் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அல்லது அந்த விறாந்தை உடைக்கப்படும். இந்தக் காலப்பகுதியில் அப்படியான விறாந்தைகளைக் கொண்டிருந்தவர்கள் வசதி படைத்தவர்களே. எனவே அவர்களிடம் இருந்து பணம் பிடுங்குவதற்கான உத்தியாக இருந்திருக்கலாம்.

செருப்பு வரி
காலனித்துவ வெள்ளை இனத்தவர்களும், அரச பிரதானிகளும் மாத்திரமே காலணிகளை பயன்படுத்தி வந்த அந்தக் காலத்தில், சாமானியர்களும் செருப்பை கொள்வனவு செய்யக் கூடிய வகையில் சந்தையில்  கிடைத்தன. செருப்பை அணிவது மேனிலையின் அடையாளமாக இருந்ததால் செருப்பின் மீதான ஆர்வம் ஆரம்பமான காலமது. இதனைப் புரிந்துகொண்ட ஆங்கிலேயர் செருப்பு பயன்படுத்துபவர்களுக்கான வரியை அறிமுகப்படுத்தினார்கள்.

வீதிவரி
தமது வீட்டுக்கு அருகில் உள்ள புதிய பாதையைப் பயன்படுத்துவதற்கான வரி. அப்படி தனிப் பாதைகளை அமைத்துக்கொள்வதை கௌரவமாகக் கருதிய காலம் ஒன்று இருந்ததல்லவா. அதற்கு வரி.

நாய் வரி
வீட்டுச் செல்லப் பிராணியாக நாய்களை வளர்ப்பவர்கள் அதற்கான வரியை செலுத்தாவிட்டால் நாயை நீரில் மூழ்கடித்துக் கொள்ளும் குரூரமான நடைமுறை இருந்திருக்கிறது.

வரி முறையை எதிர்த்து நடந்த 1848கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய முக்கிய தலைவர் “வீர புரன் அப்பு”. அவனின் பெயரிலேயே ஒரு சிங்களத் திரைப்படம் 1978இல் வெளிவந்தது. அதில் வெளிவந்த ஒரு பாட்டில்
“நாய்க்குட்டிக்கேன் வரி...
முலையிலுள்ள சொற்பப் பாலுக்கும்
வரி கட்டும் காலம் வருமோ...”
என்றிருக்கும்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நடைமுறையிலிருந்த நெல் வரியானது 1882 இல் தான் நீக்கப்பட்டது.

“முலையை வெட்டியெறிந்த நாங்கிலி”
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் திருவிதாங்கூர் இராஜ்யத்தில் வாழ்ந்த ‘நாங்கிலி’ என்கிற முப்பது வயதுடைய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் தன்னுடைய மார்பகத்திற்கு விதிக்கப்பட்ட வரியைச் செலுத்துவதில்லை என முடிவெடுத்துக்கொண்டாள். திருவிதாங்கூர் இராஜ்யத்தின் உயர்ஜாதி ஆட்சியாளர்கள் விடுவதாக இல்லை.

தொடர்ந்து மார்பக வரி வசூலிப்பவர்களை நாங்கிலியின் வீட்டுக்கு அனுப்பி வரியைச் செலுத்தக் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், அழகி நாங்கிலி இந்த வரியைச் செலுத்துவதை மிகப் பெரிய அவமானமாகக் கருதினார். அதனால் மார்பக வரியை தருவதில்லை என்ற தனது உறுதியில் தளராமலிருந்தாள்.

தொடர்ந்து வரியைக் கட்டிட அவள் மறுத்து வந்ததால் வரி பாக்கி அதிகரித்துக் கொண்டே சென்றது. மார்பக அளவுக்கு தகுந்தாற்போல் அந்த வரி அறவிடப்பட்டது. நாங்கிலியின் மார்பகங்கள் பெரியவை. அதனால் விதித்த வரியும் அதிகம்.

‘முலைக்கர்ணம் பார்வத்தியார்’ அதாவது மார்பக வரியை வசூல் செய்யும், பார்வத்தியார் ஒரு நாள் நாங்கிலியைச் சென்றார். நாங்கிலி தன் வீட்டுக்கு வந்த அவரை, சற்றுப் பொறுங்கள் இதோ வரித் தொகையோடு வருகின்றேன் என்று வீட்டிற்குள் சென்றாள்.

ஓர் வாழை இலையை எடுத்து விரித்தாள். விளக்கொன்றை அருகில் ஏற்றி வைத்தாள். தன் மார்பகங்களை ஒவ்வொன்றாக அறுத்து வைத்தாள். அப்படியே சாய்ந்து இறந்தாள். வரியை வசூலிக்க வந்த பார்வத்தியார் அதிர்ச்சியடைந்தார். மார்பக வரிக்கு எதிராகத் திப்பு சுல்தானின் கடும் நடவடிக்கைகளுக்குப் பின், அது சமுதாயத்தில் ஒழிக்கப்பட்டது. மார்பக வரிக்கு எதிராக எழுந்த முதல் எதிர்ப்பலை மிகவும் குரூரமாக வெளிப்பட்டது. அவ்வரி தடை செய்யப்பட்டது.

பேரரசுகள் சிற்றரசுகளிடம் இருந்து வரிகளை வசூலிப்பதும் அந்த சிற்றரசுகள் அடுத்தடுத்த மட்டத்தில் உள்ளவர்கள் மீது வரியைத் திணிப்பதுமாக இறுதியில் சாதாரண மக்கள் மீது வந்து விழும் பேரிடியாக இந்த வரி வந்து விழுந்து விடுகின்றன. அடிமட்ட மக்களிடம் அந்த வரி பாயும்போது மிகவும் குரூரமாக பிரயோகிப்பட்டிருக்கின்றன. உலகம் முழுவதும் மக்கள் மீது சுமத்தப்பட்ட அநீதியான வரி முறைகள் தன்னியல்பாக நீக்கப்பட்டதில்லை. அவை உழைக்கும் மக்களின் பலத்த எதிர்ப்புகளாலும், போராட்டங்களாலுமே இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றன. அரசுகள் வரிகளிலேயே தங்கியிருக்கின்றன என்பது உண்மை. ஆனால் நவீன உலகில் வரிகள் என்பது முதலாளித்துவ வர்க்கத்தை திருப்திபடுத்தும் வரி முறைகளே. உழைக்கும் மக்களின் மீதான அரசே மேற்கொள்ளும் மறைமுக சுரண்டலுக்கு இன்னொரு பெயர் வரி.

உசாத்துணை:
  1. P.E. PIERIS - Ceylon and the Portuguese 1505-1658 –– American Ceylon mission Press – 1920
  2. P. E. Pieris - CEYLON THE PORTUGUESE ERA BEING A History of the Island for the Period 1505-1658 - Tisara Prakasakayo Ltd - 1983
  3. LORNA DEWARAJA - THE MUSLIMS OF SRI LANKA ONE THOUSAND YEARS OF ETHNIC HARMONY 900 – 1915 - THE LANKA ISLAMIC FOUNDATION - 1994
  4. MICHAEL ROBERTS - CASTE CONFLICT AND ELITE FORMATION - The Rise of a Karava Elite in Sri Lanka, 150~1931CAMBRIDGE UNIVERSITY PRESS - 1982
  5. FERNAO DE QUEYROZ - THE TEMPORAL AND SPIRITUAL CONQUEST OF CEYLON - TRANSLATED BY S.G. PERERA- IN THREE VOLUMES Vol. I Book 1-2 - ASIAN EDUCATIONAL SERVICES 1992
  6. H. W. CODRINGTON- A SHORT HISTORY OF CEYLON - MACMILLAN AND CO. LIMITED - 1926
  7. The Historic Tragedy of the Island of Ceilāo - By P.E. Pieris - Colombo 1948
  8. Diary of MR.John D'oyly - COLOMBO APOTHECARIES CO., LTD. PRINTERS. - 1917

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates