ஜனாதிபதி தேர்தல் குறித்த உரையாடல்களில் 13வது திருத்தச் சட்டம் பற்றி சிங்கள தரப்பு பல தளங்களில் கலந்துரையாடி வருகிறது. பெரும்பாலும் மாகாண சபை முறையை கலைப்பது குறித்தே அந்த கலந்துரையாடல்களின் சாரமாக இருக்கிறது. குறைந்தது அதன் அதிகாரத்தை படிப்படியாக இல்லாமல் செய்வதை முதல் படியாக மேற்கொள்ளவேண்டும் என்பதில் பேரினவாத தரப்பு விடாபிடியாகவே இருக்கிறது.
இந்த ஜனாதிபதித் தேர்தலை எந்த வகையில் 13வது திருத்தச் சட்டத்துடன் சம்பந்தப்படுத்துகிறார்கள் என்பதே நாம் கரிசனைக்கு உள்ளாக்க வேண்டிய விடயம்.
1957 இல் செய்துகொள்ளப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தத்திலேயே இனப்பிரச்சினைக்கு தீர்வாக கிழக்கில் உள்ள தமிழ் பிரதேசங்களை இணைத்த வட மாகாணம் என்கிற பிராந்திய சபை முறை உள்ளடக்கப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்தம் சிங்கள பௌத்த சக்திகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாக பண்டாரநாயகாவால் கிழித்தெறியப்பட்டது சரித்திரமானது. 1980இல் ஜே.ஆர் அரசாங்கத்தால் மாவட்ட அபிவிருத்தி சபை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இல்லாமல் போனது. 1987ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறையின் போதாமையைத் தொடர்ந்து 2ஆம் கட்ட ஈழப்போருக்குள் தள்ளப்பட்டது தமிழர் அரசியல். தமிழீழக் கோரிக்கைக்கு மாற்றாக, சுயாட்சி, சுயநிர்ணய உரிமை, சமஷ்டி இன்னும் பல அதிகாரப் பரவலாக்க வடிவங்கள் யுத்த காலத்தில் முன்மொழியப்பட்டது. அவை பேச்சுவார்த்தை நிகழ்ச்சிநிரலிலும் இருந்தது. அதற்கான அரசியலமைப்பு திருத்த “மாதிரி” கூட வெளியிடப்பட்டிருந்தது.
யுத்தத்துக்குப் பின்னர் பேரினவாத நிகழ்ச்சிநிரலில் உள்ள முதன்மை நோக்கங்களாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.
- மாகாண சபையை இல்லாதொழிப்பது / பலவீனப்படுத்துவது
- வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை நிறுவுவது
- வடக்கில் இராணுவ முகாம்களை விஸ்தரிப்பது, பலப்படுத்துவது,
- நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு மேலும் சட்டவலிமையை அதிகரிப்பது
- தமிழர் அரசியல் எழுச்சி மேலெலாதவகையில் அவர்களின் அரசியல் நிகழ்ச்சிநிரலை திசைதிருப்புவது
- தமிழர்களின் பேரம் பேசும் ஆற்றலை சிதைத்து அதற்குப் பதிலாக தம்மை அந்த இடத்துக்கு பிரதியீடு செய்து; அதிகார வர்க்கத்தை தம்மோடு பேரம் பேச நிர்ப்பந்திப்பது.
இவற்றில் கணிசமான வெற்றியையும் பேரினவாதம் கண்டிருக்கிறது. அது போல அதனை தொடர்ந்து முன்னெடுத்துவருகிறது. பேரினவாதத்துக்கு மிகப்பெரும் சவாலாக இருந்துவருவது மாகாண சபை. பிரதான கட்சிகள் மாகாண சபையை கைவிடுவதை பகிரங்கமாக அறிவிக்க முடியாத நிலையில் இருக்கின்றன. அதுபோல அதனை ஏற்றுக்கொள்வதையும் பகிரங்கமாக கூற முடியாத நிலையில் இருக்கின்றன. அடிப்படையில் இன்றைய தேர்தல் அரசியல் முறைமையின் காரணமாக எந்த வாக்கு வங்கியையும் நேரடியாக பகைத்துக்கொள்ளும் நிலையில் பிரதான கட்சிகள் இல்லை. அந்தளவு தேவை ஏனைய சிறுபான்மை, பெரும்பான்மைக் கட்சிகளுக்கு இல்லை.
நவ சமசமாஜ கட்சி, கொம்யுனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி போன்ற சில இடதுசாரிக்கட்சிகள் பகிரங்கமாக ஆதரித்தே வருவதுடன் மாகாண சபையை வலியுறுத்தியும் வருகின்றன. ஆனால் பலம்பொருந்திய இடதுசாரி” (???!!!) கட்சியாக கருதப்படும் ஜே.வி.பி கூட பகிரங்கமாக மாகாணசபை முறைக்கு எதிரான கட்சி தான். அதேவேளை 13வது திருத்த சட்டத்துக்கு எதிரான சக்திகள் இரு அணிகளிலும் கையோங்கிய நிலையில் இருக்கின்றன.
வட மாகாண சபை தேர்தலுக்கு எதிராக...
யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது 2008ஆம் ஆண்டு உலகுக்கு காட்டுவதற்காக தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை தருவது போல் தமக்கு சாதகமான வகையில் கிழக்கில் மாகாண சபை தேர்தலை நடத்தியது அரசு. ஆனால் அடுத்த ஆண்டே யுத்தம் முடிவுற்றதும் அந்த மாகாண சபைக்கும் இருந்த முக்கியத்துவம் இல்லாதுபோனது. எத்தனை போலியான ஒரு அதிகாரம் தமக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து அன்றைய முதலமைச்சர் பிள்ளையானே முறுகிக்கொண்டிருந்தது மறுப்பதற்கில்லை.
“புலிகளுக்கு யுத்தம், மக்களுக்கு அரசியல் தீர்வு” என்கிற அரசாங்கத்தின் முந்திய முழக்கத்தின் படியும், சர்வதேச நெருக்கடிக்கு பதில் சொல்லும் வகையிலும் அரசுக்கு கிடைத்த தவிர்க்க முடியாத சிறந்த ஆயுதம் வடமாகாண தேர்தலையும் நடத்துவதே. இந்தியாவின் அழுத்தத்தையும் இதன் மூலம் சமாளிக்கலாம் என்று நம்பியது அரசு.
ஹெல உறுமய மற்றும் விமல் வீரவங்சவின் கட்சி போன்றனவும் பௌத்த அமைப்புகளும் சேர்ந்து அந்தத் தேர்தலை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டன. இருக்கும் மாகாண சபையை இல்லாது செய்வதற்காக அவர்களால் கடும் முயற்சி செய்யப்பட்டுவரும் வேளையில் 2002இல் மீண்டும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருந்தது அரசு. இப்போது வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் மேலும் மாகாண சபை முறையை தளர்த்த முடியாத நிலைக்கு கொண்டு செல்லும் என்று அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்தன இனவாத தரப்பு. இதன் மூலம் மாகாண சபை முறை மேலும் பலப்படுத்தப்படுவதுடன் வடக்கில் தமிழ் தேசிய சக்திகளை (அவர்கள் அர்த்தத்தில் எஞ்சிய புலிகளை) மேலும் உயிரூட்டுவதாக அமையும் என்றார்கள்.
அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்காக சகல சிங்கள, பௌத்த அமைப்புகளையும் ஒன்று திரட்டி நாடளாவ கூட்டங்கள் நடத்தி, உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தி, சிங்கள மக்களிடம் மீண்டும் புலிப் பீதியை ஏற்படுத்துகின்ற பிரச்சார நடவடிக்கையை வெறித்தனமாக செய்தார்கள். சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச இன்றைய ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் ஒன்று சேர்ந்து அந்த தேர்தலை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்கள். 13வது திருத்த சட்டம் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் எனவே மாகாண சபையை இல்லாதொழிக்க வேண்டும் என்று அனுரகுமார “மவ்பிம” பேட்டியில் தெரிவித்தார். கடந்த ஜூன் 22 அன்று திவிய்ன பத்திரிகை பேட்டியில் ஜே.விபி செயலாளர் டில்வின் சில்வா மாகாண 13வது திருத்தசட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் கூறினார்.
மாகாண சபை முறையை ஒழிக்க நீண்டகாலமாக இலங்கையில் அதிக சிரத்தை எடுத்துவருபவர் சம்பிக்க ரணவக்க. அவர் சென்ற ஆண்டு மே 22 அன்று “The independent” சஞ்சிகைக்கு இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
“இந்த தேசத்துக்கு பலாத்காரமாக திணிக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதே ஈழ ஒழிப்புக்கான முன்நிபந்தனை.” என்கிறார். அதுமட்டுமன்றி இந்த அறிக்கையில் 13வது திருத்தச்சட்டம் எப்படி திருத்தப்பட வேண்டும் என்பது குறித்து விலாவரியாக தெளிவுபடுத்துகிறார். அரசியலமைப்பின் (XVIIஅ) அத்தியாயம் மாகாணசபை பற்றி குறிப்பிடுகிறது. மேலும் அரசியலமைப்பில் மாகாண சபை குறித்து எந்தெந்த இடங்களில் எல்லாம் திருத்தத்துக்குள்ளாகி இருக்கிறதோ அத்தனையும் பட்டியலிட்டு அத்தனைக்கும் மறு திருத்தங்களை முன்மொழிந்துள்ளார் அதில். சாராம்சத்தில் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் செயலிழக்கச் செய்வது, மற்றும் மொத்த பிடியையும் மத்திய அரசில் வைத்திருப்பது குறித்துமே அதில் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன 2013.06.27 அன்று “மாகாண சபையை இல்லாதொழி” என்கிற தலைப்பில் ஒரு கூட்டத்தை நடத்தி ஒரு கைநூலொன்றையும் வெளியிட்டார். மாகாண சபை முறையை நீண்ட காலமாக எதிர்த்து வருபவர் அவர்.
அரசோ போர்க்குற்றச்சாட்டிலிருந்து மீள்வதற்கும் சமாளிப்பதற்குமான ஆயுதமாக இந்த தேர்தலை பயன்படுத்தலாம் என்று நம்பியது. இறுதியில் சென்ற வருடம் ஜாதிக ஹெல உறுமய; குறைந்தபட்சம் தேர்தலுக்கு முன்னர் 19வது திருத்தச்சட்டத்தைக் கொணர்ந்து அதன் மூலம் மாகாண சபையின் அதிகாரத்தைக் குறைத்ததன் பின்னராவது தேர்தலை நடத்தும்படி கோரியதுடன் அந்த திருத்தசட்டத்தையும் தயாரித்து கொடுத்தது. ஆனால் அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை அதற்குப் பதிலாக வட மாகாண சபை அதிகாரமிழந்த சபையாகவே நடத்தப்படும் என்கிற ஒப்புதலை மட்டுமே கொடுத்தது. இறுதியில் இனவாத சக்திகளின் கடும் எதிர்ப்பின் மத்தியில் வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது. 13பிளஸ் போய் 13 மைனசுக்கு தள்ளப்பட்ட மாகாண சபையை இன்று நாம் நேரில் காண்கிறோம்.
தேர்தல் களத்தில் மாகாணசபை
இந்த பின்னணியில் இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் மாகாண சபை குறித்து சிங்கள தரப்பில் நிகழ்த்தப்படும் கதையாடல்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது.
ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து ஆளும்கட்சிக்கு தாவிய உதய கம்மன்பில தான் வெளியேறியதற்கான காரணத்தை இப்படி கூறுகிறார்.
"நிறைவேற்று அதிகார முறைமையும் 13வது திருத்தசட்டமும் ஒன்றோடு ஒன்று பிணைந்த ஒன்று. 13வது திருத்த சட்டத்தை வைத்துக்கொண்டு ஜனாதிபதிமுறையை ஒழித்தால் நாடு துண்டு துண்டாக பிளவுபடுவதை தடுக்க முடியாது என்பதை சட்ட வல்லுனர்களான எஸ்.எல்.குணசேகர போன்றோர் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். 15 வருடங்களாக இதனை ஒழிக்க பாடுபட்டுவருபவர்கள் நாங்கள். அப்படி இருக்கையில் எப்படி நாங்கள் மைத்திரிப்பாலவுக்கு ஆதரவளிக்க முடியும்.” (தினமின -12.12.2014)
தயான் ஜயதிலக்க தற்போது பல இடங்களில் கூறிவரும் ஒரு கருத்தும் கவனிக்கத்தக்கது. இறுதி யுத்தம் நடந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தூதுவராக கடமையாற்றி இன அழிப்பை நியாயப்படுத்தி இலங்கை அரசை போதிய அளவு காப்பாற்றியவர். அதுமட்டுமன்றி இலங்கையின் முதலாவது வட மாகாண சபையில் (1988-1989) திட்டமிடல், இளைஞர் விவகார அமைச்சராக இருந்தவர் அவர்.
“87இல் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாகாணசபை முறை ஒற்றையாட்சிக்கு கீழ் கட்டுப்பட்டிருப்பதற்கு நிறைவேற்று ஜனாதிபதிமுறை தவிர்க்கமுடியாத தேவை என்கிறது. இந்த ஜனாதிபதிமுறையை 100 நாட்களில் சின்னாபின்னபடுத்துவதன் மூலம் மாகாண சபையின் மீது இருக்கும் மத்திய அரசின் பிடியும் அதிகாரமும் முடிவுக்கு வந்துவிடும். அது பாரிய விளைவை ஏற்படுத்தும்.” (திவிய்ன பேட்டி – 14.12.2014)
இந்த கருத்தை மகிந்தவுக்கு ஆதரவான தரப்பு மட்டுமல்ல இனவாத அணிகளும் பல இடங்களில் பிரசாரப்படுத்தி வருகிறார்கள்.
“13வது திருத்தச் சட்டம் குறித்து மைத்திரிபாலாவின் உண்மையான நிலைப்பாடு என்ன? குறைந்தது பிரிவினைவாதத்துக்கு சாதகமான அம்சங்களையாவது நீக்குவாரா என்பது பற்றி தெளிவுறுத்த வேண்டும்”
என்று விமல் வீரவங்ச கூட்டங்களில் சவால் இடுகிறார். தமிழர் தரப்பும் இடவேண்டிய சவால் அது. விமல் வீரவங்ச சென்ற ஆண்டு ஜூன் மாதம் அமைச்சரவை கூட்டத்தில் 13வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக கடும்தொனியில் பேசியபோது ராஜித்த சேனாரத்ன, வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, ஹக்கீம் போன்றோர் கடும் வாக்குவாதப்பட்டு மோதல் நிலைக்கு கிட்டிய வேளை ஜனாதிபதி தலையிட்டு தடுத்த செய்தி ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
22ஆம் திகதி பத்திரிகையாளர் மாநாட்டைக்கூட்டிய ஐ.தே.க.விலிருந்து கட்சி தாவிய அதன் செயலாளர் ரணிலுக்கும் மைத்திரிபாலவுக்கும் இடையில் நாட்டை பிரிக்கும் ஒப்பந்தம் செய்துகொள்ளபட்டதாக ஒரு கடதாசியை காட்டுகிறார்.
22ஆம் திகதி பத்திரிகையாளர் மாநாட்டைக்கூட்டிய ஐ.தே.க.விலிருந்து கட்சி தாவிய அதன் செயலாளர் ரணிலுக்கும் மைத்திரிபாலவுக்கும் இடையில் நாட்டை பிரிக்கும் ஒப்பந்தம் செய்துகொள்ளபட்டதாக ஒரு கடதாசியை காட்டுகிறார்.
“வடக்கிலுள்ள இராணுவத்தை 50 வீதமாக குறைக்கபோகிறார்கலாம். அதிபாதுகாப்பு வலயங்களை நீக்கி அதன் உண்மையான உரிமையாளர்களுக்கு வழங்குவது, 13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அதிகார பரவலாக்குவது என உடன்படிக்கை செய்திருக்கிறார்கள்.” என்று பயமுறுத்துகிறார்.அதே பத்திரிகையாளர் சந்திப்பில் ஐ.தே.க விலிருந்து கட்சி தாவிய இன்னொருவரான தயாசிறி சிறிசேன
“இந்த நாட்டில் நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியையும், நீர் பரப்பில் பெருமளவு பகுதியையும் காட்டிகொடுத்த ஒப்பந்தத்தை இதற்கு முன்னரும் ரணில் செய்திருந்தார்.” என்றார்.தமது அரசியல் எதிரிகளை தாக்குவதற்கான இலகு ஆயுதமாக “தமிழர்களுக்கு உரிமைகளை கொடுக்கப்போகிறார்கள்” என்று குற்றம்சாட்டுவதன் மூலம் அடைந்து விடலாம் என்று நம்புகிறார்கள்.
சரி ஜனாதிபதி மகிந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி அதிவேக பாதை திறப்புவிழாவின் போது இப்படி குறிப்படுகிறார்.
“நிறைவேற்று அதிகாரமுறையை இல்லாதுசெய்தால் வெளிநாட்டிலிருந்தபடி பேயாட்டம் ஆடும் புலிகளையும், 13வது திருத்த சட்டத்தையும் என்ன செய்வது.” என்று சிங்கள மக்களிடம் பீதியை கிளப்புகிறார். (திவய்ன பேட்டி – 14.12.2014)
சென்ற வருடம் வட மாகாண சபைத் தேர்தல் நடந்து ஒரே மாதத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறும்போது “இவ்வாறான 13 வது திருத்தச்சட்டம் ஆளுநருக்கு கூடியளவு சலுகைகளையும் மக்களுக்கு குறைந்தளவு நன்மைகளையும் வழங்கியிருக்கிறது என்பது புலப்படும். அரசியல் யாப்பின் உறுப்புரிமை 154 LR இன் கீழ் ஆளுநரால் விடுக்கப்படும் பறைசாற்றல்கள் எந்த நீதிமன்றத்தாலும் கேள்விக்கிடமாக்கப்பட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. அங்கும் அவருக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.” என்றார்.
ஆனால் அதே 154 பிரிவின் கீழுள்ள பிரிவுகளில் பல ஒற்றையாட்சிக்கு பாதகமானவை என்று விலாவாரியாக சிங்கள தரப்பு பிரச்சாரப்படுத்திவருவதை சிங்கள ஊடகங்களிலிருந்து அறிய முடிகிறது.
தமிழ் மக்களுக்கு 13வது திருத்தச் சட்டம் சர்வரோக நிவாரணியுமில்லை, அது ஆட்கொல்லியுமில்லை. தற்காலிக இருப்புக்கான நிவாரணி மட்டுமே. அந்த வகையில் தமிழர்களுக்கு எந்தவித அதிகாரமும் வழங்கிவிடக்கூடாது என்பதில் காட்டும் தீவிரம் சிங்கள தரப்பில் எந்தளவு நிகழ்ந்து வருகிறது என்பதை தமிழ்த்தரப்பு கவனிக்கவேண்டும். தேர்தலின் பின் 13வது திருத்த சட்டத்திற்கு நிகழப்போவது என்ன என்பது பற்றிய கணிப்பு மிகவும் அவசியம்.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...