Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மலையகத் தேசியத்தை உயிர்ப்புடன் இயக்கும் மலையக கவிதைகள் - மல்லியப்புசந்தி திலகர்

மலையக ஆய்வரங்கம் - 13


மலையக கவிதை இலக்கிய செல்நெறியும் மலையக தேசியமும் எனும் தலைப்பில் மலையக கவிதை இலக்கிய செல்நெறியானது எவ்வாறு மலையக தேசிய கருத்துருவாக்கத்தில் பங்களிப்பு செய்துள்ளது என்பதாக மல்லியப்பு சந்தி திலகரின் ஆய்வுரை அமைந்திருந்தது. ஒவ்வொரு கால கட்டத்திற்குமான உதாரண கவிதைகளை மேற்கோள்காட்டி ஆற்றப்பட்ட உரையின் கட்டுரை வடிவம் நீட்சி கருதி கவிதைகள் நீங்களாக சாராம்சமாக இங்கே தரப்படுகின்றது.

மலையக இலக்கிய செல்நெறியை எடுத்துக்கொண்டால் பொதுவாக அது பயணித்த பாதை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சமூக பிரக்ஞையை வெளிப்படுத்தவதாக அமைந்துள்ளமையை அவதானிக்கலாம். மலையகக் கவிதை இலக்கியத்திலும் இதனை தரிசிக்க முடியும்.  மலையகக் கவிதை இலக்கிய செல்நெறி பற்றி உரையாடுகின்றபோது, அந்த சமூகத்தின் புலப்பெயர்வு, வாழ்வதார கட்டமைவு, அரசியல் பங்கேற்பு, குடியுரிமை பறிப்பு, நாடுகடத்தல், தம்மை மலையக மக்களாக நிறுவதல் முதலான படிநிலைகளைக் கருத்தில் கொண்டு,  ஆரம்பத்தில் ஐந்து தசாப்தங்களையும் பின்னர் மூன்று அல்லது இரண்டு தசாப்தங்களையும் கொண்டதான ஆறு காலகட்டங்களை வகுத்துக்கொண்டு நோக்கலாம். அந்தவகையில் மலையக இலக்கிய செல்நெறி காலகட்டத்தை பின்வருமாறு அமைத்துக்கொண்டு உரைக்குள் செல்வது பொருத்தப்பாடுடையது.

1850கள் முதல் 1920 வரையான காலம்
1920 லிருந்து -1948ல் இலங்கை சுதந்திரமடையும் வரையான காலம்
1948 சுதந்திரமடைந்தது முதல் 1960 களின் நடுப்பகுதிவரையான காலம்.
 1965 இன் நடுப்பகுதி முதல் 1985 வரையான காலம்
1985 முதல் 2005 வரையான காலம்
2005க்குப்பின் இன்றுவரை (2015)

1850கள் முதல் 1920 வரையான காலம்

1820களில் இருந்தே இந்தியாவின் தமிழகத்தின் தென் மவாட்டங்களில் இருந்து அந்நிய பெருந்தோட்ட முதலீடுகளுக்காகன உடல் உழைப்புக்காக அழைத்துவரப்பட்ட அல்லது வந்து சேர்ந்த மக்கள் கூட்டமே இன்று மலையக மக்களாக பரிணமித்திருக்கிறார்கள். தென்னிந்தியாவில் நிலவிய சாதிய மற்றும் பொருளாதார காரணிகள், பஞ்சம் பிழைப்பதற்காகவும் சாதிய ஒடுக்குமுறையில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்வதற்காகவும் இவர்களை இலங்கை நோக்கி புலப்பெயர்வதற்கு உந்துதல் அளித்துள்ளது. அந்த வகையில்முதலாவது புலப்பெயர்வுக்கு உள்ளான தமிழ்ச் சமூகமாக மலையக மக்களே அமைந்துவிடுகின்றனர்.

மலையகக் கவிதைப்பாரம்பரியத்தில் நாட்டார் பாடல்களின் சாயல் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்கின்ற குற்றச்சாட்டு அல்லது சிறப்புப்பண்புக்கு காரணம்  அதன் வேர் அதுவாகவே அமைந்துவிடுவதனாலாகும்;. முழுக்க முழுக்க உடலுழைப்பை விற்று வருவாய்தேடி வாழ்க்கையில் சுபீட்சம் காண நாடுகடந்து, கடல் கடந்து, காடுகடந்து அவர்கள் வந்து சேர்ந்த அந்த பயணத்தொடக்கத்திலேயே தமது தோள்களில் கனவுகளையும் மனதினில் தமது வாய் மொழிக்கலைகளையுமே சுமந்து வந்துள்ளனர். அந்த வகையில் முதலாவது புலம்பெயர் இலக்கியமாகவும் இந்த நாட்டார் பாடல்கள் அமைந்துவிடுகின்றன.

முதல் காலகட்டமான 1850கள் முதல் 1920 வரையான காலத்தில் மலையகக் கவிதை இலக்கியம்  அந்த மக்களின் வாய்மொழி இலக்கியமாகவும் அதேநேரம் அந்த மக்களின் கூலி நிலைமையை பாடும் பாடலாகவும்  சிறப்புற்று இருப்பதையும் அவர்கள் இந்திய வம்சாவளியாக அடையாளப் படுத்தப்படுவதையும்  அவதானிக்கலாம்.

1920 -1948ல் சுதந்திரமடையும் வரையான காலப்பகுதி:

1920களில் பின்னரே மலையகக் கவிதை முயற்சிகள் மலையக பிரதேசங்களில் இருந்தே பரவலாக வரத்தொடங்கின. அதுவும் இந்தியாவில் இருந்து வருகைதரும் இந்த மக்கள் சார்ந்த இன்னுமிரு செயற்பாட்டாளர்களோடு ஆரம்பிக்கிறது எனலாம். அவர்கள் நடேசய்யர் தம்பதிகள். வாய்மொழி இலக்கிய மரபாக இருந்த மலையகக் கவிதை இலக்கியமானது எழுத்து வடிவத்துக்கு மாறி வீறுபெற்றக் காலம் இது என கொள்ளலாம்.

கோ.நடேசய்யர் அவர்கள் ஒரு பத்திரிகையாளராக இலங்கைவந்து பின்னர் மலையக மக்களோடு தொழிற்சங்கம், இலக்கியம், அரசியல் என இரண்டரக் கலந்தவர். அன்றைய மலையக மக்களின் நிலை கண்டு இந்த தம்பதியர் பல சமூக விழிப்புணர்வு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அதில் பிரதானமானது துண்டு பிரசுரங்கள் மூலமாக மலையக மண்ணுக்கேயுரிய  பாடல்களை அச்சிட்டு,வெளஜயிட்டமை. தொழிலாளர்களாகவும் பாமரர்களாகவும் இருந்த இந்த மக்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த இவர்கள் இலக்கியத்தை கருவியாகக் கையாண்டுள்ளனர்.

நடேசய்யர்- மீனாட்சியம்மையினர் செயற்பட்ட இந்த காலம் கூலிகளாக வந்தவர்களின் அடையாளம் 'தொழிலாளர்கள்' என்ற நிலைக்கு மாறுகின்ற காலமாகவும் அதேநேரம் இந்திய வம்சாவளி வந்த இந்த தொழிலாளர் மக்கள் இலங்கை மண்ணுக்கு உரியவர்கள்என்பதை இலக்கிய ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பதிவு செய்துசென்ற காலம் எனக் கொள்ளலாம்.

(1948) சுதந்திரமடைந்தது முதல் 1960 களின் நடுப்பகுதிவரையான காலம்.

கல்விப் புலமையோடு இலக்கிய உலகுக்குள் பிரவேசித்த சி.வி.வேலுப்பிள்ளை மற்றும் கே.கணேஷ் ஆகியோர் இலங்கை சுதந்திமடைந்த காலப்பகுதியை ஊடறுத்து வந்தவர்கள். ஆதலால் வாய்மொழி பாரம்பரியத்தில் இருந்து  தாம் பெற்ற அனுபவத்தை நவீன இலக்கிய வடிவங்களில் உலாவவிட்டவர்கள். இவர்களது ஆங்கிலப்புலமை மலையக இலக்கிய சூழலை புதிய செல்நெறிக்கு இட்டுச்சென்றது. இக்காலகட்ட பாடுபொருள் எல்லாமே தொழிலாளர்களின் வேலைச்சுமைகளையும், அவர்களது வாழ்விட வசதியின்மைகளையும், அவர்கள் மீதான சுரண்டல்களையும் பாடும் அவலச்சுவை கொண்டவை என்பதனை மறுப்பதற்கில்லை. என்றாலும் எம்மக்கள் இந்த துயரங்களில் இருந்து மீண்டு எழுவர் எனும் நம்பிக்கை இந்த காலகட்ட படைப்புக்களில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கால கட்டத்தில் குடியுரிமை பறிக்கப்பட்ட மக்கள் தங்களை இனவாத மற்றும் ஒடுக்குமறை அரசியலுக்கு எதிராகவும் தங்களை மலை நாட்டவர்களாக, மலையக மக்களாக  நிலை நிறுத்திக்கொள்வதற்குமான கவிதைகளை படைத்துள்ளமையை அவதானிக்கலாம்.

1965 இன் நடுப்பகுதி முதல் 1985 வரையான காலப்பகுதி :

இன்னுமொரு சமூக அவலத்தைப் பிரதானப்படுத்தி மலையக கவிதைகள் படைக்கப்பட்ட காலம் இது . 1964ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் மலையக மக்கள் நாடு கடத்தப்பட்டமையும் அதனால் மலையக மக்களின் குடும்பங்கள் சிதறடிக்கப்பட்டு மலையக தேசிய மக்கள் குடும்ப மட்டத்திலேயெ கூறுபோட்ட சோக வரலாற்றை பதிவு செய்கிறது. 1990 களில் மீதமிருந்த மக்களுக்கு இலங்கைப் பிரஸாவரிமை வழங்கப்படும் வரை மலையக கவிதை இலக்கிய படைப்புக்களில் அதன் தாக்கத்தை தரிசக்கலாம். வெலிமடைக்குமரன், அல்அஸ10மத், அரு சிவானந்தன்  போன்ற கவிஞர்களின் படைப்புக்களில் இந்தியாவுக்கு (தாயகம்) திரும்பவதை மறுதலித்தும் இலங்கையையே நமது நாடாகவும். மலையகத்தையே தமது தேசமாகவும் கொள்ள வேண்டும் எனும் முனைப்பை எழுதிய கவிதைகளைத் தரிசிக்கலாம்.......

இந்த கால கட்டத்தை மலையகக் கவிதைகள் மரபில் இருந்து புதுக்கவிதைக்கு மாறிய காலமாகவும் தாம் நாடு கடத்தப்பட்ட அவலத்தையும் அதற்கு எதிராக குரல் கொடுத்த கவிதைப்படைப்புகளையும் இலங்கைiயையே மலையக மக்கள் தமது நாடாகொள்வதற்கு பிரயத்தனப்பட்ட கால கட்டமாகப் பார்க்கலாம்.

1985 முதல் 2005 வரையான காலம் :

1977க்குப்பின் மலையக அரசியலில் வெரூன்றத் தோன்றிய அரசியல் கலசாரம் (அமைச்சுப்பதவிசார் அரசியல் தந்திரொபாயம்) மற்றும் ஏற்கனவே இருந்தவந்த தொழிற்சங்க செயற்பாடுகள் அதன் அரசியல் என்பவற்றை விமர்சிக்கும் பொக்கு உக்கிரமடைந்த காலகட்டம் என கொள்ளலாம். இன்றுரையான காலம் வரை இந்த அரசியல் விமர்சனகவிதைப்பாங்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது. முன்வந்த காலகட்டங்களில் மலையக மக்களுக்கு எதிராக வெளியில் (அரச, இனத்துவ, முதலாளித்தவ) இருந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கவிதை எழுதிய அல்லது இலக்கியம் படைத்த நிலைமை மாறி மலையகச் சமூகம் தனக்கான எதிரியாக தன்னையே (தமது அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களை) அடையாளம் கண்டுகொண்டு பொது எதிரியை மறந்து தமக்குள் நாமே முட்டிமொதிக்கொள்ளும் ஒரு நிமையை மலையகத்திற்குள் தொற்றுவித்தஇலக்கியம் காலகட்டமாக இதனைக்கொள்ளலாம். இக்காலப்பகுதியில் மலையக மக்கிளிடம் இருந்து பறிக்கப்பட்ட குடியுரிமை வாக்குரிமை வடிவில் திருப்பி வழங்கப்படுகின்ற காலமாகவும் அமைகிறது.


2005க்குப்பின் இன்றுவரையான  (2015) காலம்

மலையகத்தில் வெளிப்படும் கவிதைகளிலும் முன்னைய காலப்பகுpயில் நிலவிய அதே தொழிற்சங்க அரசியல் தலைமைகளை விமர்சிக்கும் போக்கினைக்காணலாம். ஆனால் இந்தகாலப் பகுதிக்குரியவர்களின் கவிதை வீச்சு நவீன இலக்கியச் சூழலில் புதுக்கவிதை பெற்றுவரும் மாற்றத்தையும் கட்டமைப்பையும் சொல்லாட்சியையும் உள்வாங்கியதாக அமைவது மலையகக் கவிதை இயக்கத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்வதாக உள்ளது.

எவ்வாறெனினும்  மலையகத்தில் எண்ணிக்கையில் குறைந்த கவிஞர்கள் அதிக எண்ணிக்கையிலான கவிதைகளை எழுதிய காலம் போய் அதிக எண்ணிக்கையிலான  கவிஞர்கள் குறைந்த அளவான கவிதைகளை எழுதிவரும் ஒரு கவிதை இலக்கிய சூழலே தற்போது நிலவுவது உணரப்பட்டுள்ளது. இலக்கியமும் மாற்றங்களும் எப்பொதும் நிகழ்ந்து கொண்டிருப்பவை என்கிறதன் அடிப்படையில் மலையக கவிதை இலக்கியம் பல்வெறு காலகட்டங்களிலும் பல்வேறு பரிணாமங்களினதும் பதிவாக அமைந்துள்ளது. 

அந்தவகையில் மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் முறையே இந்திய வம்சாவளி கூலிகள், இலங்கை நாட்டுக்குரிய தோட்டத்தொழிலாளர்கள், குடியுரிமை பறிக்கப்படட்டபின் மலைநாட்டு  மக்கள், பின்னர் மலையக மக்கள் அந்த மலையகத்தை நிறுவுவதற்கான உயிர்த்தியாகங்கள் போராட்டங்கள், உள்ளக அரசியலாளர்களின் காட்டிக்கொடுப்புகள், இந்திய (தாயகப்) புறக்கணிப்பு, இலங்கையில் மலையகம் ஒரு தேசியம் என்பதற்கான பற்றுதல் என தனது படைப்புகள் ஊடாக தொடர்ச்சியாக மலையகக் கவிதை இலக்கியமானது மலையகத் தேசியத்தை  உயிர்ப்புடன்  இயக்கிக்கொண்டிருக்கிறது எனலாம்.  

நன்றி சூரியகாந்தி 


'கரிகாற்சோழன்' விருது பெறும் தெளிவத்தை ஜோசப் - ஜீவா சதாசிவம்



இலங்கையின் பதுளை மாவட்டத்தில் ஊவா கட்டவளை என்னும் தேயிலைத் தோட்ட கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றிய சந்தனசாமிக்கும் பரிபூரணம் அம்மையாருக்கும் 1934 ஆம் ஆண்டு பெப்ரவரி பதினான்காம் திகதி மகனாகப் பிறந்தவர்  ஜோசப். மூன்று சகோதரர்கள் ஒரு சகோதரி என கத்தோலிக்க குடும்ப சூழலில் வளர்ந்த இறைநம்பிக்கை கொண்ட ஜோசப் தன் தந்தையையே குருவாகக் கொண்டு ஊவா கட்டவளை தோட்டத்துப்பள்ளியில் தொடக்க கல்வியை ஆரம்பித்தார். 

இரண்டாம் நிலை கல்விக்காக பதுளை செல்லவேண்டிய நிலையில் பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் தனது தந்தையின் பிறந்த ஊரான தமிழ்நாடு கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர் நிலைப் பள்ளியில் சிறிது காலம் கற்று மீண்டும் இலங்கை திரும்பி பதுளை சென்.பீட்ஸ் கல்லூரியில் சாதாரண தரம் வரை கல்விகற்றார்.  

தனது தந்தையின் வழியில் தெளிவத்தை என்னும் தேயிலைத் தோட்டத்து பள்ளியின் ஆசிரியராகவும் தோட்டத்து இலிகிதராகவும் சமகாலத்தில் பதவியேற்ற ஜோசப் வாசிப்பிலும் எழுத்திலும் அக்கறை காட்டத் தொடங்கினார். குடும்பத்தினருக்கு தமிழ்நாட்டுத் தொடர்புகள் இருந்ததன் காரணமாக தமிழக சஞ்சிகைகளை வாசிக்க பழகியுதுடன் தமிழக சஞ்சிகைகளுக்கு எழுதவும் தொடங்கினார். 

அறுபதுகளில் தமிழகத்தில் வெளிவந்த உமா என்னும் சஞ்சிகைக்கு அவர் எழுதிய 'வாழைப்பழத்தோல்' என்னும் சிறுகதையே அவரது முதல் சிறுகதையாக பதிவாகியது. அதனைத்தொடர்ந்து இலங்கையின் முன்னணி தேசிய தமிழ் பத்திரிகையான வீரகேசரி நடத்திய மலையக சிறுகதைப் போட்டியில் 1962, 1963, 1964 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக சிறுகதைக்கான முதல்பரிசு பெற்று இலங்கையில் சிறுகதை படைப்பில் பிரபலமானார். அதுவரை ஜோசப் என்றிருந்த அவரது இயற்பெயருடன் அவர் தொழில் செய்து வாழ்ந்து வந்த தெளிவத்தை என்னும் பெயரும் ஒட்டிக்கொள்ள 'தெளிவத்தை ஜோசப்' என்னும் இலக்கிய பெயருக்கு சொந்தக்காரரானார். 

1974 ஆம் ஆண்டு வீரகேசரியில் தொடராக வெளிவந்த 'காலங்கள் சாவதில்லை' என்னும் புதினம் நூலாகவும் வெளிவந்து இலங்கை சாகித்ய மண்டல பரிசுக்கு பரிந்துரையானதுடன் நாவல் இலக்கியத்திலும் தன்னை அடையாளப்படுத்தினார். 1979 ஆம் ஆண்டு தெளிவத்தை ஜோசப்பின் முதலாவது சிறுகதை தொகுப்பான  'நாமிருக்கும் நாடே' (வைகறை வெளியீடு) வெளியானதுடன் அந்த ஆண்டு இலங்கை அரசின் தேசிய சாகித்ய விருதினையும் வென்றது. இதே சமகாலத்தில் தொழில் நிமித்தமாக பதுளை மாவட்டத்தில் இருந்து வெளியேறி இலங்கையின் தலைநகரமான கொழும்பில் குடியேறினார் தெளிவத்தை ஜோசப். 

மலையகத்தின் பதுளை மாவட்டத்தில் வசித்த போது மலையகத் தமிழ் மக்களின் வாழ்வியலை தன் படைப்புக்களால் அழகியல் உணர்வுடன் வழங்கிவந்த தெளிவத்தை ஜோசப் தலைநகரில் வாழத்தொடங்கிய பின்னர் மலையகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மானிடருக்காகவும் ஒடுக்கப்படும் மக்களுக்காகவும் தனது படைப்புகளை விரிவுபடுத்தினார். இனவாத தாண்டவம் எழுந்த கொழும்பு சூழலில் அவர் எழுதிய 'குடைநிழல்' (புதினம்) 'நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983' (புதினம்) போன்றவை இதற்கு சான்று. 

படைப்பு இலக்கியங்களில் மாத்திரமல்லாது இலக்கிய ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்ட தெளிவத்தை ஜோசப் மலையக சிறுகதை வரலாறு என்னும் தொடர் ஆய்வினை செய்து அதனை நூலாகவும் வெளிக்கொணர்ந்தார். இதற்காக 2000 ஆம் ஆண்டு இலங்கை அரச தேசிய சாகித்ய விருதினை ஆய்விலக்கியத்துக்காகப் பெற்றுக்கொண் டார். 

இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் இலக்கிய பயணம் மேற்கொண்ட தெளிவத்தை ஜோசப் கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் சிறப்புரைகளை வழங்கியிருக்கிறார். எழுத்துத் துறைக்கு அப்பால் ஒரு ஆவண சேகரிப்பாளராக பல்வேறு இலக்கிய ஆவணங்களை சேகரித்து வைத்திருப்பதுடன் அவ்வப்போது இலக்கிய தகவல்களாக பத்திரிகைகளுக்கு எழுதியும் வருகிறார். 

இலக்கிய உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அயராது உழைத்துவரும் தெளிவத்தை ஜோசப்பின்  இலக்கிய பங்களிப்புக்காக பல்வேறு பல்கலைக்கழகங்கள், இலக்கிய அமைப்புகள், பல விருதுகளை வழங்கி  கௌரவித்துள்ளன. 2013 ஆம் ஆண்டு தமிழகத்திலும் விஷ்ணுபுரம் விருது தெளிவத்தை ஜோசப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. கொடகே தேசிய சாகித்ய விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ள இவர் கலாசார அமைச்சின் 'தேச நேத்ரு' விருதுக்கும் உரியவரானார்.

தனது இரண்டாவது சிறுகதை தொகுப்பான 'தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்' (பாக்யா வெளியீடு) நூலுக்காக  2013 ஆம் ஆண்டு தேசிய சாகத்திய பரிசு பெற்றவர்.  மொத்தமாக மூன்றுமுறை சாகித்ய விருதினை வென்றுள்ளதுடன். இலங்கையின் அதியுயர் இலக்கிய விருதான சாகித்ய ரத்னா விருது (2014) வென்ற முதல் மலையகத் தமிழராகவும் விளங்குகின்றார்.
இலங்கையில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராகவும் தமிழ்–சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராகவும்செ யற்படும் தெளிவத்தை ஜோசப் எழுதிய 'நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983' (பாக்யா வெளியீடு) என்னும் நாவலுக்காக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து 2016 ஆம் ஆண்டுக்கான 'கரிகாற்சோழன் விருது' வழங்கி கௌரவிக்கின்றது.  

ஆரம்பத்தில் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளின் தமிழ் இலக்கிய படைப்புகளுக்கு மாத்திரம் வழங்கிவரப்பட்ட கரிகாற்சோழன் விருது கடந்த ஆண்டு முதல் புரவலர் சிங்கப்பூர் முஸ்தபா வினால் இலங்கைக்கும் விரிவுபடுத்தப்பட்டது. கடந்த ஆண்டு இந்த விருதினை இலங்கை மலையக எழுத்தாளர் மு.சிவலிங்கம் தனது 'பஞ்சம் பிழைக்க வந்த சீமை' நாவலுக்காக பெற்றுக் கொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு அயலகத்தில் வெளிவந்த நாவல், சிறுகதை, கட்டுரை ஆகிய நூல்கள் போட்டிக்காக தெரிவாகியிருந்தன. தேர்வாளர்களாக தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகத் தமிழியல் துறைத் தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் பா.மதிவாணன், சாகித்ய அகடமி மேனாள் உறுப்பினர் கவிஞர் தங்கமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழு மேற்படி நூல்களை மதிப்பிட்டு தெரிவுசெய்துள்ளது.

2016 ஆம் ஆண்டு வெளிவந்த அயலகத் தமிழ் படைப்புகளுக்கான விருதுகளில் தெளிவத்தை ஜோசப் எழுதிய 'நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983' என்னும் புதினத்துக்கான (நாவல்) சிறப்பு  விருதாகவே இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'கோ.சாரங்கபாணியின் தமிழ் முரசும் இன்றைய பார்வையும் என்னும் ஆய்வுநூலுக்காக சிங்கப்பூரைச் சேர்ந்த  தமிழாய்வாளர்  பாலபாஸ்கரனுக்கும், சை.பீர் முஹம்மது படைப்புகள் என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக மலேசிய எழுத்தாளர் சை.பீர்முஹம்மதுவுக்கும் மேற்படி விருதுகள் வழங்கப்படவுள்ளன. 

மேற்படி விருது வழங்கும் விழா இன்று 23.12.2017 சனிக்கிழமை சென்னை கவிக் கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.க.பாஸ்கரன் தலைமை யில் நடைபெறும் விழாவின் வரவேற்புரையை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க்கல்வி துறை தலைவர் இரா.குறிஞ் சிவேந்தன் வழங்க வாழ்த்து ரைகளை பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் வ.மகேஸ்வரன், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெ.ராசேந்திரன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் பொன்.சுந்தரராஜ் ஆகியோர் ஆற்றவுள்ளனர். 

பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தரின் சிறப்புரை இடம்பெறுவதுடன் தமிழ் பல்கலைக் கழக இணைவேந்தரும் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்ச ருமான க.பாண்டியராஜன் விருதுகளை வழங்கி வைப்பார். தகுதியுரைகளை தமிழ் கல் வித்துறை பேராசிரியர்களான முனைவர் உ.பிரபாகரன், முனைவர் ஞா.பழனிவேலு, முனை வர் தெ.வெற்றிச்செல்வன் ஆகியோர் வழங்கி வைப்பர். நன்றியுரையை முஸ்தபா தமிழ்அ றக்கட்டளை தலைவர் முஸ்தபா வழங்கி வைப்பார். 

நன்றி வீரகேசரி சங்கமம் (23.12.2017)




தமிழ் ஊடகங்களின் வீழ்ச்சி!? - என்.சரவணன்


தமிழ் பத்திரிகைகளின் விற்பனையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை இலங்கையின் மத்திய வங்கியின் பொருளாதார – சமூக ஆய்வறிக்கை  உறுதி செய்திருக்கிறது. இந்த அறிக்கை கடந்த ஜூலை கடந்த 9 ஆண்டுகால நிலவரத்தை ஆய்வு செய்திருக்கிற அந்த அறிக்கை (Central Bank’s Economic & Social Statistics 2017)  இவ்வருடம் யூலை மாதமே வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி சிங்கள – ஆங்கிலப் பத்திரிகைளுக்கு நேராத கதி தமிழ் அச்சு ஊடகங்களுக்கு நேர்ந்திருப்பதை காண முடிகிறது. அதனை எளிமையாக விளங்கிக்கொள்வதற்காக அந்த அட்டவணையையும் அதைக் கொண்டு நான் தயாரித்த வரைபடத்தையும் இங்கு இணைத்திருக்கிறேன்.

தினசரி பத்திரிகைகள் 2014 இல் 62,625 இருந்தது 2015ஆக ஆகும்போது 75,906 அதிகரித்தபோதும், 2016 இல் 60,969 ஆகக் குறைத்திருப்பத்தையும் அது 2014ஆம் ஆண்டை விட வீழ்ச்சியடைந்திருப்பதைக் காட்டுகிறது. (எண்ணிக்கைகளை ஆயிரங்களால் ‘000 பெருக்கவேண்டும்)


அதுவே வாராந்தப் பத்திரிகைகள் 2014 இல் 20,335 இருந்தது 2015ஆக ஆகும்போது 21,653 அதிகரித்தபோதும், 2016 இல் 19,324 ஆகக் குறைத்திருப்பத்தையும் அது 2014ஆம் ஆண்டை விட வீழ்ச்சியடைந்திருப்பதைக் காட்டுகிறது. (எண்ணிக்கைகளை ஆயிரங்களால் ‘000 பெருக்கவேண்டும்)

இந்த நிலைமைக்கான காரணத்தை பல கோணங்களில் இருந்து காணலாம் குறிகாட்டியாக, வாசிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, இலத்திரனியல் சாதனங்களின் மீதான நுகர்வின் அதிகரிப்பு, இலங்கையில் தமிழ் அரசியல் சமூக விடயங்களை அறிதலில் ஏற்பட்டிருக்கக் கூடிய சலிப்பு, வாசகர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தோல்வியடைந்திருக்கும் ஊடகப் போக்கு போன்ற இன்னோரன்ன காரணங்களை அடுக்கிக்கொண்டு செல்லலாம்.

ஆனால் அதேவேளை இத்தனையையும் மீறி புதிய பத்திரிகைகளைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளும் நடக்காமலில்லை. அடுத்த வருடம் இரு புதிய தேசிய பத்திரிகைகளின் வரவுக்கான சாத்தியங்கள் தெரிகின்றன. இந்தப் பத்திரிகைளின் வரவு என்பது ஏற்கெனவே இருக்கும் பத்திரிகைகளின் மீதான கொள்கை ரீதியான போட்டியல்ல. அவை சந்தையை மையமாகக் கொண்டவை. ஏன் அரசியல் உள்நோக்கங்களுக்காகக் கூட இருக்கலாம். ஆனால் அவை சந்தையில் வியாபார ரீதியில் நின்று பிடிக்க முடியும் என்கிற நம்பிக்கை எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.

ஏற்கெனவே வியாபார ரீதியில் பத்திரிகைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக அந்நிறுவனங்களில் ஆட்குறைப்பையும், ஊழியர்களின் மீதான வேலைப்பழு அதிகரிப்பையும் செய்து தான் சமாளித்து வருகின்றன. இப்படி வேலைப்பளு அதிகரிப்பின் காரணமாக தரத்தைப் பேணுவதில் பெரும் சிக்கலை எதிர்கொள்வதையும் காண முடிகிறது. சில பத்திரிகைகள் மூடிவிட்டு போய்விட்டன. சில பத்திரிகைகள் வேறு வர்த்தகர்களுக்கு விற்றுவிட்டு கிடைத்தது போதும் இத்தோடு தொலைந்தது என்று ஓடிவிட்டன.

இந்த நிலையில் புதிய பத்திரிகைகளின் வரவை ஆர்வக் கோளாராகக் கொள்வதா. அல்லது சில பெரும் புள்ளிகள் நட்டம் பற்றி தமக்கு பிரச்சினை இல்லை, ஆனால் தமது கருப்புப்பணத்தை வெள்ளையாக ஆக்கியாக வேண்டும் என்கிற முயற்சியா.

அரச விளம்பரங்களை ஏற்கெனவே பல பத்திரிகைகள் குத்தகைக்கு எடுத்துவிட்டன. இன்னும் தனியார் விளம்பரங்களும் கூட தற்போதைய உள்நாட்டுப் பொருளாதாரச் சூழலின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டே இருக்கின்றன. ஏற்கெனவே பல பத்திரிகைகள் தனியார் விளம்பரங்களைப் பெறுவதில் போட்டாபோட்டியை எதிர்கொண்டிருக்கின்றன.

இலங்கையில் தமிழ் ஊடகங்களின் வீழ்ச்சிக் காலம் ஆரம்பமாகிவிட்டது. வீழ்ச்சி என்பது விற்பனை, விநியோகத்தில் மாத்திரமல்ல தரத்திலும் தான். இத்தனையையும் மீறி புதுப்புதுப் பத்திரிகைகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன என்கிற செய்திகள் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன.

வேறு போட்டியாளர்களை உள்ளே நுழைய விட்டுவிடக்கூடாது என்பதற்காக தாமே அந்த இடத்தில் இன்னொரு நிறுவனத்தை நடத்துவது முதலாளித்து நாடுகளில் உள்ள கார்பபரெட் மூலதனங்களின் வியாபார உத்தி மேற்கு நாடுகளில் பிரபல்யம். ஏராளமான உதாரணங்களை இதற்கு காண்பிக்கலாம். அதே போக்கை இலங்கையில் கடைப்பிடிக்கும் தமிழ் ஊடக நிறுவனங்களும் உள்ளன. இவை ஊடகத்துறைக்கும், வாசகத்தனத்துகும், கருத்துருவாக்கச் செயற்பாட்டுக்கும் மிகப் பெரும் ஆபத்தே.

துரதிர்ஷ்டவசமாக இப்படியான நிறுவனங்களின் ஏகபோகத்தை தகர்த்து ஊடகத் தரத்தைக் காக்கவேண்டும் என்று கிளம்பியவர்களும் கூட சற்றும் அந்த ஏகபோகத்துக்கு சவாலாக நெருங்கவும் முடியவில்லை. ஆனால் அதற்கான இடைவெளி இருக்கவே செய்கிறது. மத்திய வங்கியின் அறிக்கை வெளியிட்டுள்ள முக்கிய தரவுகளை சகல ஊடகங்களும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

இலங்கையில் தமிழ் ஊடகங்களின் தரமான இருப்புக்கு புதிய திசைவழியையும், தந்திரோபாயத்தையும் வேலைத்திட்டத்தையும் வகுக்க வேண்டியிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

வெளிநாட்டு மோகமும் மலையகப் பெண்களும் - செ.பிரதா


இன்று நாட்டில் வாழும் மலையகப் பெண்கள் மத்தியில் வெளிநாட்டு மோகம் என்பது தீராத ஒரு தாகமாய் இருக்கின்றது. மலையகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பணிப் பெண்களாக செல்வோரின் எண்ணிக்கை இன்னும் குறைந்தபாடில்லை. இதனால் பாதகமான விளைவுகள் பலவும் மேலோங்குகின்றன என்பது உண்மை!

நமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாய் இருப்பவர்கள் மலையகத்தவர்கள். இதில் மலையகப் பெண்கள் முக்கிய பங்குதாரர்களாக இருக்கின்றார்கள். மலையகப் பெண்கள் பெரும்பாலும் தேயிலைத் தொழிற்சாலை, ஆடைத் தொழிற்சாலை, மட்டுமின்றி, ஏனைய தொழில்துறைகளிலும் பங்கேற்று நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். தன்னை உருக்கிக்கொண்டு நாட்டின் உயர்வுக்காக பாடுபடும் இவர்கள் கூடியநேரம் வேலைசெய்து மிகவும் குறைந்தளவிலான ஊதியத்தை பெறுவோர் என்பதே நிதர்சனம்.

அதிலும், குறிப்பாக மலையகப் பெண்களில் பலரும் ஆடைத் தொழிற்துறையில் தங்களை இணைத்துக்கொண்டவர்களாக இருக்கிறார்கள். தன்னுடைய குடும்பக் கஷ்டத்தின் காரணமாக நகர்புறங்களுக்கு வரும் இவர்கள் தொழில் ரீதியாக பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். வேலை நேர அதிகரிப்பு மற்றும் மேலதிகாரிகளால் ஏற்படும் தொல்லைகள் உட்பட சொல்லொணா துயரங்களுக்கும் பலவிதமான நோய் நொடிகளுக்கும் ஆளாகிறார்கள். அதிலும், குறிப்பாக ஊதிய ரீதியிலும் திருப்தி கொள்ள முடியாத ஒரு நிலைமையே வெளிப்படுகின்றது. பெண்கள் சராசரியாக 9முதல்10மணி நேர வேலை செய்வதானது, அவர்களுக்கு போதுமான அளவு ஓய்வின்மையும் போஷாக் கின்மையும் ஏற்படுத்துகின்றது.

வெளிநாட்டு வேலை மீது மோகம்
வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை என்பது இன்று எமது நாட்டிற்கு கூடுதலான வருமானத்தை ஈட்டித் தருகின்ற ஒரு துறையாக மாற்றமடைந்திருக்கின்றது. கூடுதலான நபர்கள் வெளிநாட்டு தொழிலில் மோகம் கொண்டு பலவித தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். வருடா வருடம் வெளிநாடுகளுக்கு செல்வோரின் தொகை அதிகரித்த நிலைமையையே காண முடிகின்றது.

அந்த வகையில் நோக்கும் போது 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளிலும் கணிச மான எண்ணிக்கையினர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கென்று எமது நாட்டில் இருந்தும் வெளியேறியுள்ளனர். உள்ளூரில் வருமானம் பற்றாக்குறையை காரணம் காட்டி பல பெண்கள் மத்திய கிழக்குநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் வெளிநாட்டுப் பணிகளுக்காக நான்கு இலட்சத்து 51 ஆயிரத்து 897 பேர் சென்றிருந்தனர்.

இவர்களில் இரண்டு இலட்சத்து 48 ஆயிரத்து 492 பேர் தாய்மார்களும் அடங்குவர். 2008ஆம் ஆண்டில் மாத்திரம் ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து 486 பேர் சென்றிருந்தனர். இவர்களில் 40 ஆயிரத்து 665 பேர் தாய்மார்கள். 2009 இல் பணிப்பெண்களாக வெளிநாடு சென்றிருந்த ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 508 பேரில் 60 ஆயிரத்து 448 பேர் தாய்மார்களாக இருந்திருக்கின்றனர். இவ்வாறான பயணங்களால் பல பாதகமான விடயங்களை எதிர்கொள்கின்றனர். இதில் மலையகப் பெண்களும் அடங்குகின்றனர்.

பாதக விளைவுகள்
தனது வாழ்வாதாரத்தை சிறிதளவாவது உயர்த்தும் நோக்கில் தன் குடும்பத்தை விட்டுவிட்டு, படிப்பையும் பாதியில் நிறுத்தி தனது தாய் தந்தையின் சுமையைக் குறைப்பதற்கு வெளிநாட்டை நோக்கி பணிப்பெண்ணாக விரைகின்றார்கள். வெளிநாடு என்பதில் அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக செல்லும் சிலரின் வாழ்க்கை திசைமாறிப்போய் இருக்கின்றது. உழைப்பின் மூலமாக பெரும் பணத்தை திரட்ட வேண்டும், குடும்பத்தின் வறுமையை சீர்செய்ய வேண்டும் என்று கனவு கண்ட சில பெண்களின் வாழ்க்கை கல்லறையில் முடிந்திருக்கின்றது. சூடு வைத்தல், கை, கால், உடம்புகளில் ஆணி அறைதல், சுடுநீரை ஊற்றி கொடுமைப்படுத்துதல், அடி, உதை மற்றும் பாலியல் ரீதியிலான பல்வேறான பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் உள்ளாகின்றார்கள். இப்பெண்களில் சிலர் எஜமான்களையோ அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களையோ எதிர்த்துப் பேசினால் அவ்வளவு தான். அவர்களை கொன்று, வீட்டாருக்கு தெரியாமலேயே புதைத்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் கொடுமைப்படுத்துபவர்களின் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் ஆயுள் கைதிகளாய் இருக்கிறார்கள்.

இவ்வாறாக வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புக் கருதி சென்ற சில பெண்கள் தொடர்பான தகவல்கள் இன்றி உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களைத் தேடிச் சென்று முறைப்பாடுகளை செய்து கொண்டே இருக்கிறார்கள். இன்னும் சிலர் தமது உறவுகளின் இறப்புகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் வெளிநாடு சென்ற தம்முடைய பெண் அல்லது மனைவியின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத பல குடும்பங்கள் கண்ணீரில் மிதப்பதை காணக் கூடியதாக உள்ளது.  அவர்களுடைய பிள்ளைகளின் கல்விநிலை பாதிப்பு சுகாதார பாதிப்பு, போஷாக்கு பாதிப்பு, சமூக வாழ்க்கை நிலை என அவர்களின் துயரங்கள் சொல்லில் அடங்காதவை.

இதில் குறிப்பாக சில பெண்களுடைய கணவன்மார், பிள்ளைகளுக்குரிய பாதுகாப்பையும் அன்பையும் வழங்காது நெறிதவறி போன சம்பவங்களும் அநேகமாக பதிவாகிய வண்ணமே இருக்கின்றன. இதனால் பிள்ளைகளின் நிலைமை மென்மேலும் சிக்கல்களுக்கு உள்ளாகின்றன. வெளிநாடு செல்லும் பெண்களுடைய குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் பலர் துஷ்பிரயோகங்களுக்குள்ளாகி வருகின்றமையையும் காணலாம். தந்தையால், சகோதரனால், உறவினர்களால், நண்பர்களால், அயலவரால் என்று பல நிலைகளிலும் பிள்ளைகள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றமையும், வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அதிகளவான சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு காரணம் அப்பிள்ளைகளின் தாய் வெளிநாடு சென்றுள்ளமையை காரணமாக சுட்டிக்காட்டுகின்றனர். சில நேரங்களில் தந்தையே அதற்கு காரணமாய் அமைந்துவிடுகின்றார் என்கிறது ஆய்வு. எனவே, மலையகப்பெண்கள் அது விடயத்தில் கவனம் கொண்டு செயல்பட வேண்டியது அவசியமானது ஆகும். இது குறித்து பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. சோபனாதேவி இராஜேந்திரன் குறிப்பிடும்போது, மலையகப் பெண்கள் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதன் காரணமாக நாட்டில் பொருளாதார அபிவிருத்தி ஏற்படுகின்றது. எனினும் அவர்களது குடும்ப நிலைமையை பொறுத்தவரையில் இன்னும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பல குடும்பங்களில் இடம்பெறவில்லை. குறுகிய கால சுகபோகங்களை சில குடும்பங்கள் அனுபவிக்கின்றன. காலப்போக்கில் இத்தகைய குடும்பங்களும் வறுமையில் சிக்கி அல்லல்படுகின்றன.

வெளிநாடு செல்லும் பெண்கள் உள்நாட்டு உழைப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். தோட்டப்பகுதிகளில் வளங்கள் பல அதிகமாக காணப்படுகின்றன. இவ்வளங்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலமாக உள்நாட்டில் உற்பத்தி மற்றும் வருமானத்துக்கான ஒரு களத்தை பெண்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். கோழி வளர்ப்பு, ஆடு, மாடு வளர்ப்பு போன்ற துறைகளில் கவனம் செலுத்துதல் வேண்டும். இன்று கிராமத்துப் பெண்களை எடுத்துக் கொண்டால் அப்பெண்கள் வருமானத்தை நோக்காகக் கொண்டு பல விதமான தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனை மலையகப் பெண்கள் ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளல் வேண்டும்.

அரசு இன்று பல்வேறு தொழில் முயற்சிகளை மேற்கொள்ள பயிற்சிகளையும் ஏனைய உதவிகளையும் வழங்கி வருகின்றது. மலையகப் பெண்களில் சிலர் இத்தகைய பயிற்சி நெறிகளில் பங்குக் கொண்டு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக் கொள்கின்ற போதும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயக்கம் காட்டியே வருகின்றனர். முழுமையான பயிற்சி நெறியில் ஈடுபடாது இடைநடுவில் பெண்கள் திரும்பி வருவதும் உண்டு. உடனடி வருமானத்தை எதிர்பார்க்கின்ற இப்பெண்கள் ஆலோசித்து நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

வெளிநாடு என்ற மாயையில் இருந்தும் பெண்கள் விடுபட வேண்டும். இப்பெண்களை சரியாக வழிநடத்த வேண்டும். மலையக அறிவியல் மற்றும் தொழிற் சங்கவாதிகள், தொழில் ரீதியான ஆலோசனையையும் வழிகாட்டல்களையும் உரியவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று தொழிலாளர்களுக்கு வழங்குதல் வேண்டும். இதிலிருந்தும் அவர்கள் பின்வாங்கி விடக்கூடாது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு ஆற்றல்கள் இருக்ளகின்றன. இத்தகைய ஆற்றல்களை ஒவ்வொரு பெண்ணும் சரியாக இனங்கண்டு செயற் பட்டால் வாழ்க்கையை சிறப்புடன் அமைத்துக் கொள்ள முடியும். இதனை விடுத்து, வெளிநாட்டு மோகத்தில் அலைந்து திரிவதால் எவ்விதமான சாதகமான விளைவுகளும் ஏற்படப்போவதில்லை என்பதை விளங்கிச் செயற்படுதல் வேண்டும். இக்கரையில் இருந்து பார்க்கும்போது அக்கரை பச்சையாகத் தான் தெரியும். அதை நம்பி எதிலும் விளைவுகளை அறியாமல் கால் வைத்துவிடக்கூடாது அவதானமாக இருக்கவேண்டும் என்கிறார்.

நன்றி - சுடரொளி

உங்கள் துரோகம்! எங்கள் ஒற்றுமை! - என்.சரவணன்


சர்வகட்சி மாநாடு குழப்பப்பட்ட பின்புலத்தைப் பற்றி கண்டோம். இணைப்பு “சி” என்கிற டெல்லி யோசனையை மாற்றி ஜே.ஆர். “இணைப்பு பி” (Annexure B) என்கிற 14 அம்சங்களைக் கொண்ட திட்டமே மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. (பார்க்க அட்டவணை)

இந்த சர்வகட்சி மாநாடு குழப்பப்பட்டதன் பின்னால் இருந்த இனவாத சக்திகளையும் இந்த இடத்தில் பதிவு செய்தாகவேண்டும்.

சர்வ கட்சி மாநாடு நடந்த 83-84 காலப்பகுதியில் வரலாற்றில் எப்போதும் போலவே சிங்களத் தரப்பு மிகவும் சூட்சுமமாகவும், பல முனைகளிலும், பல சக்திகளாக இயங்கின. இதனைத் தோற்கடிக்க போதிய அளவு தந்திரோபாயங்களைக் கையாண்டன. ஒரு புறம் சிறில் மெத்தியு, காமினி திசாநாயக்க போன்ற அரசுக்குள் இருக்கும் தீவிர இனவாத சக்திகள். மறுபுறம் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் முயற்சிகளை தோற்கடிப்பதற்காக எடுத்த முயற்சி இனவாத நிலைப்பாட்டை எடுக்கப்பண்ணின. பிரதமர் பிரேமதாச கூட இந்தியாவின் தலையீட்டை அதிருப்தியுடன் எதிர்கொண்டார். மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன மாநாட்டில் இருந்து பின்னர் விலகிக்கொண்டார். “வேறோர் இடத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தீர்மானத்திற்கு நாங்கள் இணங்கவில்லை. எமது கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் நாம் விளகிக்கொள்வதெனத் தீர்மானித்தோம்” என்றார் அவர்.

இவையெல்லாவற்றையும் விட பௌத்த மகா சங்கத்தினரின் தலைமையில் அணிதிரண்டது பிக்குமார்களின் அணி. இந்த இனவாத பிக்கு அணி சிங்கள மக்களை மாத்திரம் அணிதிரட்டவில்லை. பிரதான அரசியல் சக்திகளை இனவாத போக்கில் வழிநடத்தும் சக்திகளாக இருந்தன. இனவாத அழுத்தக் குழுக்களான இவை சிங்கள பௌத்த சித்தாந்தமயப்படுத்தும் கருத்துருவாக்கச் செயற்பாட்டில் அதிக பங்களிப்பை செலுத்தின. இவை அனைத்து சக்திகளதும் முயற்சியின் திரட்சி தான் சர்வ கட்சி மாநாட்டை தோற்கடித்தன.

சிங்களத் பௌத்த பேரினவாத தரப்பில் முக்கிய பாத்திரத்தை ஆற்றியவர் மடிகே பஞ்ஞாசீல தேரர். 90 வயதுக்கும் மேல் வாழ்ந்த அவரது வாழ் நாள் காலத்தில் பௌத்த மத விவகாரங்களில் மாத்திரமல்ல சிங்கள பௌத்தமயமாக்களில் பாரிய வகிபாகத்தை அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஆற்றிய பிக்கு என்று உறுதியாகக் கூறலாம். இலங்கையின் இனப்பிரச்சினை கூர்மை பெற்ற காலப்பகுதியில் அவர் வாழ்நாள் காலம் அமைந்திருந்ததால் அந்த முக்கிய காலப்பகுதியிலெல்லாம் அவரது வகிபாகம் என்னவென்று ஆராய்வது முக்கியம். அது தனியாக ஆராயப்படவேண்டியது.

மடிகே பஞ்ஞாசீல தேரர்

மடிகே பஞ்ஞாசீல தேரர் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அமரபுர நிகாயவின் அதிமாநாயக்க தேரராக அவர் இருந்தார். ஜே.ஆர். ஆட்சி காலத்தில் அவர் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் முக்கிய பிரமுகராக இருந்தார். 77 கலவரம் பற்றி சன்சோனி ஆணைக்குழுவிலும் சாட்சியம் வழங்கியவர். குறிப்பாக தமிழர்களின் உரிமைகளுக்கு எதிராக அவர் பல விடயங்களை ஆணைக்குழுவில் தெரிவித்துவிட்டு ஜே.ஆருக்கு ஒரு நீண்ட கடிதத்தையும் தமிழர்களை எப்படி ஒடுக்க வேண்டும் என்பது பற்றிய 5 யோசனைகளையும் முன்வைத்தார். வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும், ஆனையிறவிலும் சிங்களவர்களை குடியேற்ற வேண்டும் என்கிற பிரச்சாரத்தை கடுமையாக மேற்கொண்டவர்.

சர்வகட்சி மாநாட்டில் ஆரம்பத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமே கலந்துகொள்வது என்று கூறப்பட்டிருந்தாலும் பின்னர் நான்கு மதங்களையும் சேர்ந்த மதத் தலைவர்களும் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு இயல்பாகவே பௌத்த தரப்பின் கையோங்கியிருந்தது. அங்கு சிங்கள பௌத்த மகா சங்கத் தரப்பில் தலைமை தாங்கிய மடிகே பஞ்ஞாசீல தேரர், பலியான ஸ்ரீ சந்திரானந்த மகாநாயக்க தேரர், வல்பொல ராகுல தேரர் ஆகியோர் மிகவும் தயாரிப்புடனும், திட்டமிடலுடனும் பணியாற்றினார்கள். நாட்டின் பல பகுதிகளில் கூட்டங்களை நடத்தினார்கள். பல்வேறு கட்டுரைகளை எழுதி சிங்கள மக்களுக்கு உசாற்படுத்தினார்கள். அரசியல் தலைமைகளை பகிரங்கமாக எச்சரித்தார்கள். மடிகே பஞ்ஞாசீல தேரர் தமிழர்களுக்கு எதிராக பல பெரிய கட்டுரைகளை எழுதினார். அவரது ஆயிரக்கணக்கான கட்டுரைகளை நூல்களாக மட்டுமல்லாது இப்போது அவருக்கென்று உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளத்திலும் கிடைக்கிறன. உதாரணத்திற்காக சில இனவெறிக் கட்டுரைகளின் தலைப்புகளும், வெளிவந்த பத்திரிகைகளும், நாளும்.
  • "ஐயோ! சிங்களவர்களே! ஐக்கியப்படுங்கள்! ஐக்கியப்படுங்கள்!" 1982.12.26 “ரிவிரெச”
  • "ஐக்கிய தேசம் என்கிற ஒன்றிணைக்கப்பட்ட சிங்களத் தேசம்" - 1983
  • "கணம் ஜனாதிபதி அவர்களுக்கு ஓர் கடிதம் "- 1983
  • "சிங்களவர்கள் ஐக்கியபடாவிட்டால் எதிர்காலம் பயங்கரம்" - 1983.05.22 “ரிவிரெச”
  • "இலங்கை மனநோயாளிகளின் நாடாகின்றதா?' - 1983.12.04 “ரிவிரெச”
  • "அனுமதியற்ற குடியேற்றத் தடைகள் சிங்களவர்களுக்கு மட்டுமா?" - 1983.10.23 “ரிவிரெச”
  • "பயங்கரவாத முறியடிப்பை உறுதிசெய்யும் வழிகள்." - 1984.05.02 “தவச”
  • சிங்களவர் அற்றுப் போகும் காலத்தில் பௌத்தத்தின் கதி?" - 1984.05.14 “தவச”
  • "சிங்கள இனத்தை சுய அபாயத்திலிருந்து மீட்பது" - 1984.05.19 “தவச”
  • "புத்தர் கொண்டுவந்த பௌத்தத்தை பாதுகாக்க மகாசங்கத்தை முன்னோக்கி நகர்த்துதல்" - 1984.06.13 “தவச”
  • "ஈழத்தைக் கோரும் உரிமை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு கிடையாது" - 1984.09.15 “தவச”

இலங்கையின் இனமுரண்பாட்டு வரலாற்றில் முக்கிய திருப்புமுனைகளின் ஒன்றான 1956 அரசியல் நிலைமைகளின் போது தான் மடிகே பஞ்ஞாசீல தேரர் இனவாத அரசியல் களத்தில் முன்னிலைக்கு வந்து சேர்ந்தார். அன்றிலிருந்து இனப்பிரச்சினை சம்பந்தப்பட்ட சகல விடயங்களிலும் அவரது வகிபாகத்தை காண முடியும்.

1955ஆம் ஆண்டே அவர் அமரபுர நிகாயவின் (ஸ்ரீ தர்மரக்ஷித நிக்காய) தலைமை மகாநாயக்கராக தெரிவாகிறார். 1985 காலப்பகுதியில் அனைத்து நிக்காயக்களின் மகா சங்கசபையின் மகாநாயக்கராக ஆனார். சிங்களம் மட்டும் சட்டத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவராக இருந்தார். 1984சர்வ கட்சி மாநாட்டின் போது “இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை” என்றும், “தமிழர்களின் தாயகப் பிரதேச கருத்தாக்கம் புனைவு” என்றும், “அபிவிருத்தி தான் பிரச்சினைஎன்றால் அதனை கிராமிய மட்டங்களில் சில தீர்வு அலகுகளை உருவாக்கி தீர்த்துவைக்கலாம்” என்றும் எப்போதும் எழுதியும் பேசியும் வந்தார். இலங்கை இந்திய ஒப்பந்தம் காலத்தில் அதை எதிர்த்து இயங்கிய சக்திகளை ஐக்கியப்படுத்தி முன்னோக்கி நகர்த்தியதில் மடிகே பஞ்ஞாசீல தேரரின் பங்கு முக்கியமானது. 

இந்த சந்தர்ப்பத்தில் இன்னொரு வேடிக்கையும் நிகழ்ந்தது. அதாவது பிரபல இனவாதியாக அறியப்பட்ட அன்றைய தொழிற்துறை மற்றும் விஞ்ஞானதுத்துறை அமைச்சர் சிறில் மெத்தியுவை டிசம்பர் 27அன்று அமைச்சுப் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்குவதற்கான நடவடிக்கையை ஆளுங்கட்சி எடுத்தது. சர்வகட்சி மாநாட்டுக்கு எதிரான கடும் பிரச்சாரம் செய்து வந்ததற்காகவே அந்த நீக்குதல் நடந்தததாக அரசாங்கம் கூறியது. அதுவரை சிறில் மெத்தியுவின் இனவாத போக்குக்கு அனுசரணை செய்துவந்த அரசாங்கத்துக்கே பொறுக்கமுடியாத அளவுக்கு சிறில் மெத்தியுவின் நடவடிக்கைகள் எல்லை கடந்திருந்தன என்று தான் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆக இவர்களின் முயற்சிக்கு வலு சேர்ப்பதைப் போல இந்திரா காந்தியின் மீதான படுகொலை நிகழ்வும், அதைத் தொடர்ந்து சர்வகட்சி மாநாட்டை ஜே.ஆர். முடிவுக்கு கொண்டுவந்த நிகழ்வும் நிகழ்ந்தது. பௌத்த பிக்குகளும் கூட “பயங்கரவாதத்தை ஒழிக்கும்வரை எந்தத் தீர்வும் சிங்களவர்களுக்கு அவசியமில்லை” இரு கர்ஜித்தார்கள்.

தமிழர் தரப்புக்கு நிகழ்ந்த இந்தத் தோல்வி நம்பிக்கைத் துரோக வரலாற்றின் இன்னொரு அத்தியாயமாகத் தான் முடிந்தது.

தென்னிலங்கையின் இந்தப் போக்கு தமிழ் இயக்கங்களின் நிலைப்பாட்டுக்கு நியாயம் சேர்த்தன. இந்தியா உள்ளிட்ட இன்னும் பல நாடுகளின் ஆதரவு பெறுகிறது என்றே கூற வேண்டும். தமிழ் இயக்கங்கள் தமது போராட்டத்தை முன்னெடுப்பதற்கான உறுதியான சமிக்ஞை கிடைதத்தாகவே கொண்டார்கள்.

1985 தை மாதம் 14ஆம் திகதி வடக்கில் தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனத்தைச் செய்யப் போகிறார்கள் என்கிற வதந்தி தென்னிலங்கையில் பரப்பப்பட்டது. இதை முறியடிப்பதற்கு சிங்களவர்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஒன்றுபட்ட இயக்கங்கள்
பிளவுபட்டிருக்கும் இயக்ககங்கள் ஒன்றிணைய வேண்டும் என்கிற கோரிக்கையும், அவாவும் பரவலாக வெளிப்பட்டன. மக்கள் மத்தியில் இருந்தும், தமிழ் நாட்டு ஆதரவு சக்திகளிடமிருந்தும் வலுவாக இந்த விருப்பம் இருந்தது. அப்போது சிறியதும், பெரியதுமாக 37 ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்ததாக அரசு கணித்திருந்தது. ஆனாலும் முக்கிய பெரிய இயக்கங்களாக எல்.டி.டி.ஈ, டெலோ, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் ஆகிய இயக்கங்களே கருதப்பட்டன.

அருளர் என்று அழைக்கப்பட்ட அருட்பிரகாசம் 1982 ஓகஸ்ட் மாதமளவில் இந்த இயக்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த ஐந்து இயக்கங்களையும் சேர்த்து ஈழ விடுதலைக்கான குழு (CEL - Committee for Eelam Liberation) என்கிற பேரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி போது வேலைத்திட்டம் குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அந்த ஒற்றுமை முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அந்த ஈழ விடுதலைக்கான குழுவும் காணாமல் போனது.


அதன் பின்னர் பத்மநாபா அப்படியொரு ஒற்றுமைக்கான முயற்சியை மேற்கொண்டார். அதன் விளைவாக ஈழத் தேசிய முன்னணி (Eelam National Front - ENF) தோற்றம் பெற்றது. அதில் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய மூன்று இயக்கங்களும் இணைந்துகொண்டன. அவர்கள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் முன்னிலையில் தமது இணைவை உறுதிப்படுத்திக்கொண்டு போட்டக்களையும் எடுத்துக்கொண்டனர். இந்த ஒற்றுமை வலுப்பெறத் தொடங்கியது. 1985 ஏப்ரல் 10 விடுதலைப் புலிகளும் இணைந்து கொண்டனர். அதன் பின்னர் இந்த இந்த அமைப்பின் பெயர் ஈழத் தேசிய விடுதலை முன்னணி (Eelam National Liberation Front - ENLF) என்று பெயர் மாற்றம் பெற்றது.

அதே நாள் இந்த இயக்கங்கள் கூடி ஒரு அறிக்கையை வெளியிட்டன. “ஈழத் தமிழ் பேசும் மக்களின் தேசிய சுதந்திரப் போராட்டத்தை நடத்துவதில் ஒன்றுபட்டுச் செயல்பட ஈழத் தமிழ் தேசிய விடுதலை முன்னணி முடிவெடுத்திருக்கிறது “என்று அறிவிக்கப்பட்டது. அறிக்கைக்கு போடப்பட்ட தலைப்பு

“தமிழீழ போராட்டத்தில் புதிய திருப்பம்! விடுதலை அமைப்புகள் ஒன்றுபட்டன”

ஜே.ஆரால் திரிக்கப்பட்டு 10.01.1984 அன்று வெளியிடப்பட்ட இணைப்பு “B” ஆவணம்
அதுநாள்வரை "அனைத்துக் கட்சி மாநாடு என்று சொல்லப்பட்ட இந்த அமைவு 10.1.1984 அன்று கொழும்பில் தொடங்கியபோது, வட்டமேசை மாநாடு என்று பெயரிடப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி, இந்த 14 அம்சத் திட்ட வரைவின் கீழ் தான் விவாதம் நடைபெறும் என திடீர் என அறிவிக்கப்பட்டது.
1984-ல் அனைத்து கட்சி மாநாட்டில் கவனிப்பதற்கான நிகழ்ச்சி நிரலினை உருவாக்குவதற்காக பின்வரும் நகல் பிரேரணைகளை உபயோகிக்கலாம் என்ற தலைப்புடன் தயாரிக்கப்பட்ட 'ஆ' இணைப்பு  (Annexure-B) ஒரு 14 அம்சதிட்டம் ஆகும்.
1. "தனிநாடு” கோரிக்கையை கைவிடுதல்.
2. ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒரு சர்வஜன வாக்கெடுப்பிலும் ஊர்ஜிதம் செய்யப் பட்ட பிறகு (அந்த மாவட்டங்கள் கொண்டதாக) பிரதேச சபைகள் ஏற்படுத்துவது.
3. மேலே கூறியபடி அமைக்கப்ப டும் பிரதேச சபைகள் ஒவ்வொன் றிலும் பெரும்பான்மையை பெறு கிற கட்சியின் தலைவர், அந்த பிர தேசத்திற்கு முதலமைச்சராக, குடி யரசு தலைவரால் நியமிக்கப்படுதல் என்ற ஒரு மரபு ஏற்படுத்தப்படும். அப்படி நியமிக்கப்படும் முதல மைச்சர் சபை அங்கத்தவர் குழுவுடன் தமது பணிகளைச்செய்வது.
4. "பிரதேசங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்படாத" விடயங்கள் யாவற்றிலும் குடியரசு தலைவரும் பாராளுமன்றமும் தொடர்ச்சியாக தம் பொறுப்பினை வைத்துக் கொள்வதாக அமையும். தேசம் முழுவதையும் பற்றிய குடியரசின் இறைமை, தேசத்தின் ஐக்கியம், வளர்ச்சி, அபிவிருத்தி போன்றவை குடியரசு தலைவரது பொறுப்பி லும், பாராளுமன்ற தலைவரது பொறுப்பிலும் இருக்கும்.
5. பிரதேசங்களுக்கு அதிகாரம் மாற்றிக் கொடுத்து ஒதுக்கப்படு கின்ற விடயங்கள் அடங்கிய ஒரு பட்டியலில் விவர நுணுக்கங்கள் ஆராயப்படும். அந்த பட்டியலில் உள்ள விட யங்கள் சம்பந்தமாக சட்டம் இயற் றவும், நிர்வகிக்கவும் பிரதேச சபை களுக்கு அதிகாரம் தரப்படும். அந்த பட்டியலில் உள்ள விட யங்கள் சம்பந்தமாக சட்டம் இயற் றழும், நிர்வகிக்கவும் பிரதேச சபை களுக்கு அதிகாரம் தரப்படும். வரிகள் விதிக்கவும், தீர்வைகள், கட்டணங்கள் விதிக்கவும், கடன் பத்திர வெளியீடு மூலம் கடன் பெறவும், மத்திய அரசிடமிருந்து மானியம், நிதி ஒதுக்கீடுகள் பெற வும் சபைக்கு அதிகாரம் உண்டு.
6. திருகோணமலை துறைமுகத்தின் நிர்வாகம் மத்திய அரசிடமே இருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளுதல்.
7. ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு மேல் நீதிமன்றம் இருக்கும். தேசம் முழுவதுக்குமாக ஓர் உயர் நீதிமன்றம் இருக்கும். இந்த உயர் நீதிமன்றம் அரசியலமைப்பு பற்றிய வழக்குகளிலும் தீர்ப்பளிக்கும் அதி காரங்களுடன் வேறு சில சிறப்பு அதிகாரங்களும் கொண்டதாக இருக்கும்.
8. பிரதேச ஊழியர், உத்தியோக வர்க்கம் ஒன்று ஏற்படுத்தப்படும். அது அந்த பிரதேச அரசினால் நியமிக்கப்படுவோர் விடயத்திலும், அந்த பிரதேசத்திற்கு மத்திய அரசினால் அனுப்பப்படும் உத்தியோகத்தர் விடயத்திலும் அதிகாரம் உள்ளதாக இருக்கும்.
9. பிரதேச தேர்வாணைக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். ஊழியர்களை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கான ஒழுக்காற்று அதிகாரங் களை செயல்படுத்துவது போன்ற அதிகாரங்கள் அந்த தேர்வாணைக்
10. இலங்கையின் உத்தியோக வர்க்கத்திலும், பாதுகாப்பு படையிலும் ஒவ்வொரு இனமும் அதன் ஜனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் இடம்பெறும்.
11. உள்நாட்டு பாதுகாப்பிற்கான போலீஸ் படையில் அந்த பிரதேசத்து ஜனத்தொகையிலுள்ள விகிதாசாரத்தை பிரதிபலிப்பதாக இருக்கும்
12. புதிய குடியேற்றங்கள் ஏற்படுத்துவது நாடு தழுவிய ஒரு கொள்கை உருவாக்கப்படும்.
13. அரச கரும மொழியான சிங்கள மொழி, தேசிய மொழியான தமிழ் இரண்டையும் பற்றி அரசிய லமைப்பு ஷரத்துகளும் சட்டங்க ளும் ஒப்புக் கொள்ளப்படும், செயல்படுத்தப்படும். தேசிய கீதம், தேசியக் கொடி பற்றிய சட்டங்க ளும் அப்படியே.
14. அரசியல் லட்சியங்களுக்காக வன்செயல்கள், பயங்கரச் செயல்கள் கையாளப்படுவது எதிர்க்கப்ப டும் என்பதில் ஒற்றுமை காணப்படும்.

பிரதே சபைகள் - மலையகத்தை முன்னிறுத்திய ஒரு பார்வை - மல்லியப்புசந்தி திலகர்



அறிமுகம்
அண்மைக்காலமாக மலையகப் பெருந்தோட்டங்கள் தொடர்பில் கவனத்தைப் பெற்ற விடயமாக மாறியிருப்பது பிரதேச சபைகளின் அதிகரிப்பும் பிரதேச சபைகள் ஊடாக பெருந்தோட்ட பகுதிகளுக்கு சேவையாற்றுவதற்கான அதிகாரமும் பற்றியதான சட்ட ஏற்பாடுகளும் திருத்தங்களும் ஆகும். பிரதேச சபைகளின் அதிகரிப்பு என்பது இன்றைய நிலையில் நுவரெலியா  மாவட்டத்துடன் மாத்திரம் தொடர்பு பட்டதாக உள்ள நிலையில் பிரதேச சபைகளின் சட்ட திருத்தம் என்பது மலையகப் பெருந்தோட்டப்  பகுதிகளில் மக்கள் வாழும் 'தோட்டம்' என சொல்லப்படுகின்ற பகுதிகளுக்கு பிரதேச சபைகள் சேவையாற்றுவதில் உள்ள சட்ட சிக்கல்களை நீக்குவதற்கான ஏற்பாடுகளாகும்.

இது நுவரெலியா மாவட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட விடயமல்ல. எங்கெல்லாம் பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் தோட்டங்கள் நிர்வகிக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் பிரதேச சபைகளின் சட்ட திருத்தம் ஏற்புடையதாகும். இது ஒரு உரிமை சார்ந்த  பிரச்சினையாகும்.  அதாவது குறித்த ஒரு மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு வாக்களிக்கின்ற மக்கள் அந்த மக்கள் பிரதிநிதிகள் சபையில் இருந்து சேவையைப் பெற்றுக் கொள்வதை குறித்த மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான சட்டமே தடை செய்கின்றது என்பது ஜனநாயகத்தின் மீது விடுக்கப்படுகின்ற கேள்விக்குறியாகின்றது. மலையக மக்களின் நிலைமையில் இது பிரஜாவுரிமை விடயத்துடன் தொடர்புடையது.

மலையகப் பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களாகவும் தொழிலாளர் அல்லாதவர்களாகவும் வாழும் மக்கள் இலங்கையில் ஏனைய சமூகங்களோடு ஒப்பிட்டு நோக்கும் போது அபிவிருத்தி குன்றியவர்களாக காட்டப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோர் நாட்கூலி சம்பளத்திற்கு வேலை செய்யும் தொழிலாளர்களாக இருப்பதனால் அவர்கள் வாழும் வீடமைப்பு முறை ஏனைய சமூகங்களின் வீடமைப்பு முறைமைகளில் இருந்து மாறுபட்ட அடையாளத்துடன் பெயருடனும் (லயன்)  அழைக்கப்படுவதனால் அவர்கள் அபிவிருத்தியில் பின்னிற்பதாக காட்டப்படுகின்றது. அதே நேரம் கல்வியில் பின்தங்கியவர்களாகவும் காட்டுவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.

ஆனாலும், இந்த பின்னடைவு நிலைக்கு,  இவர்கள் வாழும் பிரதேசம் முழுமையாக அரச நிர்வாக விதிமுறைகளுக்கு அமைவானதாக இல்லை. அரச நிர்வாக பொறிமுறைகளில் இருந்து விலக்களிக்கப்பட்டவர்களாக வைக்கப்பட்டுள்ளனர் என்பது அபிவிருத்தியில் பின்தங்கி நிற்பதற்கு பிரதான காரணம் என்பது உணர்த்தப்பட வேண்டிய உண்மையாக உள்ளது. இதற்கு இந்த மக்கள் குடியமர்த்தப்பட்ட முறை மற்றும் அதில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த பின்புலம் ஒன்றையும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

பின்னணி
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழக்கூடிய  99 சதவீதமான மக்கள்  இந்தியாவில் இருந்து தேயிலை, இறப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்வதற்காக பிரித்தானியரால் அழைத்து வரப்பட்டவர்கள். அவர்களை அழைத்து வந்த பிரித்தானியர் அவர்களின் தொழில் நிர்வாக முறைமைக்கு கீழாகவே அந்த சமூகத்தின் நிர்வாகத்தையும் பேணி வந்தனர். 1817 முதல் 1972 வரை வரையான சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலான காலப்பகுதியில் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்கு கீழேயே இவர்கள் நிர்வகிக்கப்பட்டனர்.

1931இல் வாக்குரிமை கிடைக்கப் பெற்ற போதும் 1947 ஆம் ஆண்டு அதே வாக்குரிமை பறிக்கப்பட்ட பின்னரும் தோட்ட நிர்வாகங்களே சமூக நிர்வாகத்தையும் கவனித்து வந்தது. ஒரு கிராமத்தில் அல்லது நகரப் பகுதிகளில் குழந்தை ஒன்று பிறக்குமிடத்து அந்த குழந்தையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தை உறுதிப்படுத்தி வழங்குபவர் பிறப்பத்தாட்சி பதிவாளராக இருப்பார். ஆனால், தோட்டப் பகுதிகளில் தோட்ட முகாமையாளரே அதனை பதிவு செய்து பிறப்புச்சான்றிதழுக்கு (Birth Certificate) பதிலாக பிறப்பு அட்டை (Birth Card) என்ற ஒன்றை வழங்கியிருப்பார். இதனையே அத்தாட்சியாக வைத்திருப்போர் இன்னும் கூட உள்ளனர்.   

இந்த உதாரணம் மூலமாக புரிந்து கொள்ளப்பட வேண்டியது யாதெனில் பிறப்பை பதிவு செய்வதனை கூட அரச நிர்வாகம் பொறுப்பேற்றிருக்கவில்லை என்பது தான். இதற்கு இன்னுமொரு காரணமாக அமைந்தது வைத்திய முறைமை. அரச வைத்திய முறைமையாக அல்லாமல் தோட்ட வைத்தியசாலைகள் எனப்படும்  (Estate Hospitals) எனும் முறைமையே தோட்டப்பகுதிகளில் காணப்படுகின்றமை.

 இந்த தோட்ட வைத்தியசாலைகளின் அல்லது மருந்தகங்களின் முழு நிர்வாகமும் இன்று வரை தோட்ட நிர்வாகத்துக்கு கீழேயே உள்ளது. இலங்கையின் ஒட்டுமொத்த தோட்டப் பகுதியில் 10 வீதத்துக்கு  குறைவான அரசாங்க வைத்தியசாலைகளே உள்ளன. தோட்ட வைத்தியசாலையின் வைத்தியர் அல்லது மருந்தகர் தோட்ட முகாமைத்துவத்திடம் சம்பளம் பெறும் உத்தியோகத்தராகவே இன்னும் உள்ளார். 

எனவே தோட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் இந்த தோட்ட வைத்தியசாலைகளின் ஊடாக தோட்ட முகாமையாளரால் உறுதிப்படுத்தி செக்ரோல்  எனப்படும் தொழிலாளர் பதிவு புத்தகத்தில் தரவுகள் பேணப்பட்டு வரும். இதன் ஊடாக ஒரு கிராமத்தில் கிராமசேவகர் ஆற்றும் பணியையும் தோட்ட முகாமையாளரே மேற்கொள்வார்.

இதே குழந்தை மூன்று  வயதை அடையும் போது முன்பள்ளி செல்ல வேண்டுமெனில் அத்தகைய முன்பள்ளியானது நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதேச சபைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட தனியார் முன்பள்ளிகளாக அமைகின்ற போது பெருந்தோட்டப் பகுதிகளில் தோட்ட நிர்வாகத்தினால் நடத்தப்படும் Creche  எனப்படும் பிள்ளை மடுவங்களிலேயே சேர்க்கப்பட்டனர். இப்போது அவை சிறுவர் அபிவிருத்தி நிறுவனங்கள் (CDC) என அழைக்கப்பட்டாலும் பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதித்துவத்தைக்கொண்டு கூட்டிணைக்கப்பட்ட ட்ரஸ்ட் நிறுவனமே பராமரிக்கின்றது.

விதிவிலக்காக இப்போது ஆங்காங்கே தனியார் முன்பள்ளிகள் காணப்படுகின்ற போதும் பிள்ளை மடுவங்களின் நீட்சியாக வந்த பராமரிப்பு நிலையங்களின் வகிபாகமே அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு தொழிலாளிகளாக இருக்கும் தாய்மார் தங்களது குழந்தைகளை பராமரிக்கும் தேவை கருதி இந்த சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை நாடும் நிலைக்கு தள்ளப்படுகின்றமை பிரதான காரணமாகும்.

இதே சிறுவர்கள் பாடசாலைக்கு போகும் வயதினை அடையும் போது தோட்டங்களினாலேயே நிர்வகிக்கப்படுகின்ற பாடசாலைகளே அவர்களுக்கு வாய்த்தது. அதன் ஆசிரியர்களுக்கான சம்பளத்தையும் பாடத்திட்டத்தையும் கூட தோட்ட நிர்வாகமே தீர்மானித்தது. எனவே பிறப்புச் சான்றிதழ் இல்லாது பிறப்பு அட்டைகள் அங்கு அனுமதிக்க போதுமானதாக இருந்தது. மக்கள் அரச பதிவாளரின் பிறப்புச் சான்றிதழ் அவசியப்படாமலே வாழ்ந்து விட்டனர். தொழிலும் தோட்டத் தொழிலாளியாக தொடர்ந்துவிடுகின்ற பட்சத்தில் பிறப்புச் சான்றிதழுக்கான தேவை இல்லாமலேயே போய்விடுவதுமுண்டு.

மறுபுறத்தில் தோட்டப்பகுதி குடியிருப்புகளை அண்டிய பகுதிகளில் மலசலகூடம் சுத்தம் செய்வது, சுற்றுப்புறச் சூழலை கூட்டி சுத்தம் செய்வது, குப்பைகளை அகற்றுவது, குடிநீர் (குழாய் வழி )வழங்குவது, வீட்டிற்கு ஆண்டுக்கொரு முறை வெள்ளையடிக்க சுண்ணாம்பு வழங்குவது என இதர பகுதிகளும் தோட்ட நிர்வாகத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது.

 தோட்டப்பகுதி பாதைகளை பெருந்தோட்டக் கம்பனிகள் தங்களது தொழில் தேவைக்காக அதிகம் பயன்படுத்தியமை காரணமாக அவையனைத்தும் தோட்ட வீதிகள் என்ற கட்டமைப்புக்கு கீழாக அவர்களாலேயே  பராமரிக்கப்பட்டது. எனவே அவை வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்ற அரச நிறுவனங்களினால் உள்வாங்கப்படாது தோட்ட வீதிகளாகவே இன்று வரை உள்ளது.

1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசானதுடன் கொண்டுவரப்பட்ட காணி சீர்திருத்த கொள்கைகள் தனியார் (பிரித்தானியர்) வசம் இருந்த காணிகளை அரசுக்கு பொறுப்பேற்றதுடன் பிரித்தானியர் வசம் இருந்த நிர்வாகம் இலங்கை அரசாங்கத்தின் கைகளுக்கு மாறியது. 

எனினும் பெருந்தோட்டங்களை பொறுப்பேற்ற அரசாங்கம் சமூக நிர்வாகத்தை முன்பிருந்தவாறே தொடர்ந்தது. தோட்டங்களை நிர்வகிப்பதற்கு என உருவாக்கப்பட்ட மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, அரச பெருந்தோட்ட யாக்கம் போன்ற கூட்டுத்தாபனங்கள் நிர்வாகத்தை தொடர்ந்தன. இதன்போது இடம்பெற்றதாகக் கொள்ளக் கூடிய முக்கியமான ஒரே மாற்றம் தோட்டப் பாடசாலைகள் என இயங்கிய பாடசாலைகள் அனைத்தும் அரசாங்க பாடசாலைகள் ஆயின.

இது ஒரேடியாக இடம்பெறவில்லையாயினும் எண்பதுகளின் முற்பகுதி ஆகும் போது அத்தகைய நிலைமைகளை எட்டின. இன்னுமொரு வகையில் கூறுவதாயின் இலங்கை அரசாங்க கல்வி முறையும் பாடத்திட்டங்களும் தோட்டப் பாடசாலைகளுக்கு எண்பதுகளுக்கு பின்னரே கிடைத்தது.

'அரசாங்கத்தினால் இலவசக்கல்வி' எனும் புகழ்பெற்ற திட்டம் இலங்கை வாழ் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு சுமார் ஐம்பது வருடங்கள் பின்னரே கிடைக்கப் பெற்றது. இப்போது கூட கல்வி அமைச்சில் பெருந்தோட்டப் பாடசாலைகள் அலகு (Plantation School Unit) எனும் ஒரு தனி அலகு இயங்குகின்றமை பெருந்தோட்டப்பாடசாலைகள் எனும் ஒரு வகைப்படுத்தல் இருக்கின்றமை கண்கூடு.  இந்த பின்னணியில் பார்க்கும் போது பெருந்தோட்டப்பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சி என்பது பெரும் சாதனை தான்.

மேலே காட்டப்பட்ட எல்லா உதாரணங்களிலும் 'தோட்ட நிர்வாகமே' பொறுப்புக்களை ஏற்றிருந்தமையினால் 'அரச நிர்வாகம்' உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டது. ஏறக்குறைய இலங்கை நாட்டுக்குள்ளேயே இன்னுமொரு தேசத்தில் வாழ்பவர்களாக வைக்கப்பட்டனர்என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

உள்நாட்டு நிர்வாகம்
இலங்கை நாட்டின் உள்நாட்டு அரச நிர்வாகம் என்பது அமைச்சு, மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம், கிராம சேவகர் பிரிவுகள் என்பதாக மேலிருந்து கீழ் நோக்கி செல்லக் கூடியது. இதற்கு பொறுப்பாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு (Home Affairs) செயற்படும். அடிமட்ட அரச நிர்வாக கட்டமைப்பான கிராமசேவகர் முறைமை மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு மிக அரிதாகவே கிடைத்தது.

1972ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் அருகில் உள்ள கிராமத்தின் கிராமசேவகர் பிரிவின் கீழாக கொண்டுவரப்பட்டபோதும் ஏனைய கிராம சேவகர் பிரிவுகள் கொண்டிருக்கும் உரிமைகள் இவர்களுக்கு இல்லை. தொடர்ந்தும் தோட்ட நிர்வாகத்தின் அத்தாட்சிப்படுத்தல்கள் அரச சேவைகளை பெற்று கொள்வதில் இவர்களுக்கு அவசியம் எனும் நிலைமை காணப்படுகின்றது.

பெருந்தோட்டப் பகுதிகளை உள்வாங்கும் தோட்டப்பகுதிகளில் கிராம சேவகர் பிரிவுகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதோடு அதில் உள்வாங்கப்பட்டுள்ள சனத்தொகை எண்ணிக்கை மிக உயர்வாக காணப்படுகிறது. நாட்டின் ஏனைய பகுதிகளில் சுமார் ஆயிரம் சனத்தொகைக்கு ஒரு பிரதேச செயலகம் கூட காணப்படுகின்ற நிலையில் மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் 13 ஆயிரம் சனத்தொகையுடன் ஒரு கிராமவேசகர் பிரிவே காணப்படுகின்றமை இந்த பிரச்சினையின் உச்சத்தை காட்டுகின்றது.  இதற்கு காரணம் மிகவும் காலம் தாழ்த்தியே இவர்கள் வாழிடம் , கிராம சேவகர் நிர்வாகத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டது.

இன்றைய நிலையில் மலையக பெருந்தோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர்களான கிராம சேவகர்களின் எண்ணிக்கை இருநூறுக்கும் குறைவாகவே உள்ளது. இந்த நியமனங்களும் 90 களின் இறுதிப்பகுதியிலேயே கிடைக்கப் பெற்றது. கிராம சேவகர்கள் பொறுப்பு கூறக் கூடிய பிரதேச செயலகங்களும் அவ்வாறே. அவை பெருந்தோட்டப் பகுதிக்கு சேவையாற்றுவதில் தோட்ட நிர்வாகத்தின் ஒப்புதலை பெறுவதில் இன்னும அக்கறை காட்டி கொண்டிருக்கின்றன.

 பெருந்தோட்டப் பகுதிகளை உள்வாங்கியிருக்கக் கூடிய பிரதேச செயலகங்களில் சனத்தொகையின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றமையும் பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு இடம்பெறுகின்ற பட்சத்தில் பிரதேச சபைகளின் அதிகரிப்பும் இடம்பெறும் வாய்ப்புகள் இயல்பாகவே அமைந்து விடும். கடந்த அரசாங்கத்தின் போது பதுளை மாவட்டத்தின் பசறை, லுணுகலை ஆகிய பிரதேச செயலகங்கள் இவ்வாறு இரண்டாக பிரிக்கப்பட்டது உதாரணமாக கொள்ளலாம்.

இந்தப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக நிலவிய நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை பாராளுமன்றத்தில் பிரேரணையாக முன்வைக்கப்பட்டது. இப்போதைக்கு  ஏழு இலட்சத்து முப்பதாயிரம் சனத்தொகைக்கு ஐந்து பிரதேச செயலகங்களே காணப்படுகின்றன.

இதனை பதினைந்தாக உயர்த்துவதற்கு கோரிக்கை முன்வைக்கப் பட்டு பன்னிரண்டாக உயர்த்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. முதற் கட்டமாக பத்தாக அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அண்மையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

 பிரதேச செயலகங்கள் அதிகரிப்பின் ஊடாக பிரதேச சபைகள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முறைமை மாற்றம், காலம் தாழ்த்திய நிலைமைகள்  என்பன காரணமாக தற்போது நுவரெலியா மாவட்டத்தில் அதிக சனத்தொகையை கொண்ட  நுவரெலியா, அம்பகமுவ பிரதேச சபைகள் மாத்திரம் இரண்டு சபைகள் ஆறு சபைகளாக மாற்றம் பெற்றுள்ளன.

இப்போது இடம்பெற்றிருப்பது அரசியல் அதிகாரப் பகிர்வு மாத்திரமே. இதன் கீழ் நிர்வாகம் மேற்கொள்ள நிர்வாக அதிகாரப் பகிர்வு மேற்கொள்ள வேண்டும். அதற்கு பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படல் வேண்டும். இது நுவரெலியா மாவட்ட மட்டத்திலான நிலைமை. மலையகப் பெருந்தோட்ட மக்கள் வாழக்கூடிய ஏனைய மாவட்டங்களிலும் இந்த பிரச்சினை ஆழமாக ஆராயப்பட்டு இந்த நடவடிக்கைகள் மேலும் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

பிரதேச சபைகளின் அதிகாரம்

பிரதேச சபைகள் என்பது மக்களால்  தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட சபை. இந்தப் பிரதேச சபைகளின் அதிகரிப்பு விடயத்தை ஒரு புறம் வைத்துவிட்டு பிரதேச சபைகளின் நிர்வாகத்துக்கு கீழாக பெருந்தோட்டப் பகுதிகளை கொண்டு வருவது தொடர்பாக சிந்திக்கும் போது,  1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் சம்பந்தமாக உரையாட வேண்டியுள்ளது. 

உள்ளூராட்சி மன்றங்களின் அறிமுகத்துக்கு முன்னர் கம்சபா எனப்படுகின்ற கிராமிய சபை நிர்வாகத்தின்போது தோட்டங்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. அதே நேரம் அவை உருவாக்கப்பட்ட போது தோட்டங்களை அந்த தோட்ட நிர்வாகமே பராமரிக்க வேண்டும் அவற்றை பிரதேச சபைகள் பொறுப்பேற்காது என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 33 ஆவது பிரிவு இதனைத் தெளிவாக குறித்து நிற்கின்றது. 1948 ஆம் ஆண்டு வாக்குரிமை பறிக்கப்பட்ட மக்கள் மீளவும் வாக்குரிமை பெறும் காலம் எண்பதுகளின் பிற்கூறுகளிலேயே உருவானது. எனவே பிரதேச சபைகள் சட்டம் உருவான போது கூட அவர்களை உள்வாங்கியதாக அது உருவாக்கப்படவில்லை.

எனினும் 1990 களின் பின்னர் மலையகப் பெருந்தோட்ட மக்கள்  பிரதேச சபைத் தேர்தல்களில் பங்குபற்றி வாக்களித்து உறுப்பினர்களான போதும் மேற்படி சட்டத்தில் தோட்டப் பகுதிகளுக்கு  சேவையாற்றும் அதிகாரம் பிரதேச சபைகளுக்கு இல்லை. ஆங்காங்கே அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை பிரதேச சபை ஊடாக இடம்பெறுகின்றதே அன்றி பிரதேச சபைகளினால் மேற்கொள்ளப்படுவது இல்லை. பிரதேச சபையினால் அதன் நிதியைக் கொண்டு சேவையாற்றியதன் காரணமாக கண்டி மாவட்டத்தின் உடபலாத்த பிரதேச சபை சட்டத்தின் காரணங்களைக் காட்டி கலைக்கப் பட்ட வரலாறும் உண்டு.

இந்தப் பின்னணிகளைகொண்டு தான் பிரதேச சபைகள் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதனுள் அடங்குகின்ற குறிப்பிட்ட சரத்துகள் நீக்கப்பட வேண்டும் முதலான கோரிக்கைகள் பல காலமாக மலையக அரசியல், சிவில் சமூக மட்டத்தில் பேசப்பட்டு வந்தது. எனினும் முதன் முறையாக 2015 ஆண்டு டிசம்பரில் அது பாராளுமன்றத்தில் பிரேரணையாக முன்வைக்கப்பட்டது.

இப்போது இந்த விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர் பைஸர் முஸ்தபா அமைச்சரவைக்கு இந்த திருத்தங்களை சமர்ப்பித்து ஒப்புதல் பெற்று சட்டமா அதிபர் திணைக்களம்,  சட்டவரைஞர் திணைக்களம் ஆகியவற்றின் அனுமதியுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றார்.

பாராளுமன்றத்தில் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு குறிப்பிட்ட சரத்துக்கள் மாற்றப்படும் போதுதான் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு  பிரதேச சபைகளினால் முழுமையாக சேவையாற்ற முடியும். ஏற்கனவே இயங்குகின்ற பிரதேச சபைகளாயினும் சரி புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்ற பிரதேச சபைகளாயினும் சரி இதுதான் நிலைமை.விரைவில் இந்த சட்ட திருத்தம் பாராளுமன்றில் இடம்பெறும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் இருக்கின்றது.

மலையகப் பெருந்தோட்ட மக்களை அரச பொது நிர்வாகமும் அடிமட்ட அரசியல் அதிகாரப்பகிர்வான பிரதேச சபைகளும் சென்றடையாமை அந்த மக்களின் அபிவிருத்தி பின்னடைவுக்கு பிரதான காரணம் என்பதையே மேற்படி விளக்கங்கள் காட்டி நிற்கின்றன.


தேசிய நீரோட்டத்திற்குள் உள்வாங்கப்படாது பல தசாப்த காலமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள மலையகப் பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் பிரதேச சபைகளின் அதிகரிப்பும் பிரதேச சபை சட்ட திருத்தத்திற்கான முயற்சிகளும் நம்பிக்கை ஒளிக்கீற்றை தருகின்றன. இந்த ஒளிக்கீற்றின் வழி பயணிக்க வேண்டிய அடைய வேண்டிய இலக்குகள் இன்னும் ஏராளமாக உள்ளன.

நன்றி வீரகேசரி 16.12.2017

பாட நூல்களில் உள்வாங்கப்படாத மலையக வரலாறு- - சி.சிவகுமாரன்


மலையகம் எமது தேசியம், மலையகத்தின் தந்தை, மலையக கல்வியின் பிதாமகன், மலையகத்தின் காவலன்,தளபதி இன்னும் என்னென்னவோ பெயர்களை தமக்கு சூடிக்கொண்டும் மேடைகளில் முழங்கியும் தமது அருகில் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் எத்தனையோ அரசியல்வாதிகளை மலையகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதில் எத்தனைபெருக்கு மலையக வரலாறு தெரியும்? அது குறித்த எத்தனை ஆவணங்களை இவர்கள் சேகரித்து வைத்திருக்கிறார்கள்? அல்லது மலையக வரலாறு தொடர்பான ஆவணங்களை சேகரிக்க ஏதாவது முயற்சிகளை செய்ய முன்மொழிவுகளை கூற இவர்களில் எத்தனைப்பேர் முன்வந்திருக்கின்றனர்? தேடிப்பார்த்தால் பூஜ்யமே விடையாக கிடைக்கிறது. ஏனென்றால் இவர்களுக்கு அரசியல் செய்யவும் , அடிப்படை உரிமைகளின்றி இருக்கும் மக்களை சந்திக்கவுமே நேரமில்லாத போது வரலாறு பற்றி எங்ஙனம் தேடி அறிவர்? 

பேசப்படும் மலையக இலக்கியம்
இன்று தமிழ் இலக்கியங்களை உலகளாவிய ரீதியில் எடுத்துப்பார்த்தால் இந்திய இலக்கியங்களில் தமிழ் நாட்டு இலக்கியம், ஈழத்து இலக்கியம், மலையக இலக்கியம், மலேசிய தமிழ் இலக்கியம் என வரிசைப்படுத்தலாம். இலண்டனின் வதியும் மலையக எழுத்தாளரும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளருமான பதுளை மண்ணின் மைந்தன் மு.நித்தியானந்தன் கூலித்தமிழ் என்ற அற்புதமான மலையக இலக்கியம் தொடர்பான ஆய்வு நூலில் 1869 இல் ஆபிரகாம் ஜோசப் என்ற தோட்ட கண்டக்டரால் வெளியிடப்பட்ட கோப்பி காலத்து கும்பி பாடல் தொகுப்பான "
கோப்பி கிரிஷி கும்மி என்ற கோப்பி காலத்து கும்மி பாடல் தொகுதியே முதலாவது மலையக இலக்கியம் எனக்கொள்ளப்படுகின்றது.

அதற்குப்பிறகு 1930 களில் மஸ்கெலியாவைச் சேர்ந்த போல் என்பவரால் எழுதப்பட்ட சுந்தரமீனாள் என்ற நாவல் மலையக இலக்கியத்தின் முதலாவது நாவலாக அறியப்படுகிறது. அதற்கு பிற்பட்ட காலத்தில் சி.வி.வேலுப்பிள்ளையிலிருந்து ஆரம்பித்த இலக்கிய பாரம்பரியம் இன்று தமிழ் உலகம் மெச்சத்தக்க கவிதை.சிறுகதை.நாவல் இலக்கியங்களாக பரிணமித்து தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பேசப்படுகிறது.

ஆகவே முதலாவது இலக்கிய படைப்பிலிருந்து பார்க்கும் போது மலையக இலக்கியத்தின் வயது ஒன்றரை நூற்றாண்டுகளாகின்றது ஆனால் இதை வரலாற்று ரீதியான பதிவாக்கவும் எதிர்கால மாணவர் சமூகத்திற்கு மலையக இலக்கியம் தொடர்பில் ஆர்வத்தை விதைக்கவும் பாட புத்தகங்களில் மலையக இலக்கிய செல்நெறியை வளர்த்தெடுக்கவும் உரியோர் முன்வருவதில்லை. தேசிய கல்வி நிறுவனம் கூட புதுப்பாடத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களை மலையகப்பகுதிகளில் நடத்தினாலும் மலையக வரலாறு மற்றும் அது தொடர்பான இலக்கியங்களை பாடத்திட்டங்களில் புகுத்துவது குறித்து மூச்சு விடுவதே இல்லை.

பாட ஆலோசனை குழுவினரில் கூட மலையக சமூகத்தை சேர்ந்தவர்களை இணைப்பதிலும் அவர்களின் ஆலோசனைகளை பெறுவதிலும் மாற்றாந்தாய் மனப்பான்மையே உள்ளது. ஏனைய பிரதேச இலக்கியங்கள் தொடர்பில் தமிழ் பாட புத்தகங்களில் காட்டப்படும் அக்கறை ஏன் மலைய இலக்கியங்களில் புறந்தள்ளப்படுகிறது என்பது குறித்து கடந்த காலங்களில் எவருமே பாராளுமன்றத்தில் கூட பேசியதில்லை ஏனென்றால் பாராளுமன்றத்திற்கே வருகை தராத பிரதிநிதிகளையே கடந்த கால மலையகம் கண்டு வந்தது. இப்போது பிரதிநிதிகள் அதிகரித்துள்ளனர். இலக்கியம்,கல்வி தொடர்பான பின் புலத்தில் வந்த மலையக பிரதிநிதிகள் இன்று பாராளுமன்றில் மலையக சமூகம் தொடர்பில் அக்கறையாக செயற்பட்டு வருகின்றனர். உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ் மற்றும் வேலு குமார் ஆகியோரை இங்கு குறிப்பிடலாம். மட்டுமன்றி மத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணத்திலும் தமிழ் உறுப்பினர்கள் கணிசமாக இருக்கின்றனர். இது வரை இவ்விவகாரம் தொடர்பில் எவருமே கதைத்திருக்கவில்லை. தமிழ் பாடபுத்தகங்களில் காணப்படும் தவறுகள் பற்றி கூட எவரும் அக்கறை காட்டுவதில்லை. இந்நிலையில் ஒரு சமூகத்தின் இலக்கியம் தொடர்பில் கதைக்க எவர்தான் முன்வருவார்கள் என இவ்விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட முடியாது. மலையக இலக்கியமானது தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றும் பல விருதுகளுக்கும் உரித்தாகியுள்ளது. ஆனால் இன்னும் அது மாணவர்களுக்கு பாடமாக ஏன் அங்கீகாரம் பெறவில்லை என்பது தெரியவில்லை. 

1997 ஆம் ஆண்டிற்குப்பிறகு க.பொ.த சாதாரண தர உயர்தரத்திற்கு முதன் முதலாக 1997 ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இதுவரை சாதாரண மற்றும் உயர்தரத்திற்கு தமிழ் மொழி இலக்கியம் மாற்றத்திற்குள்ளானாலும் குறிப்பிடும்படியாக அதில் மலையக இலக்கியம் பற்றி எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை. 1997 ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தில் சி.வி.வேலுப்பிள்ளையின் தேயிலைத்தோட்டத்திலே என்ற கவிதை உள்ளடக்கப்பட்டிருந்தது. அதே போன்று 2007 ஆம் ஆண்டில் குறிஞ்சித்தென்னவனின் சம்பள நாள் என்ற கவிதையும் சிறுகதை எழுத்தாளர் என்.எஸ்.எம். ராமையாவின் ஒரு கூடை கொழுந்து என்ற சிறுகதையும் இடம்பெற்றிருந்தன இருப்பினும் சுமார் 200 வருட கால வாழ்வியல் வரலாற்றையும் ஒன்றரை வருட கால இலக்கிய வரலாற்றையும் கொண்டிருக்கும் மலையக சமூகத்திற்கு இந்த இடம் போதுமா என்ற கேள்வியெழுப்பத்தோன்றுகிறது. 

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் மலையகம் தொடர்பில் ஒன்றுமே இல்லை என்கின்ற போது சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது. 

மலையக பிரதிநிதிகள் இது குறித்து பாராளுமன்றிலும் மாகாணசபையிலும் உரிய தரப்போடு பேசுவார்களா?

நன்றி - சூரியகாந்தி

வேட்பாளர்களும் வேடிக்கைகளும் - அருள்கார்க்கி



உள்ளூராட்சி தேர்தல் காய்ச்சல் இன்று வேகமாகப்பரவி வருகிறது. மலையகத்தை­யும் ஆட்டிப்படைத்திருக்கும் இத் தேர்தல் காய்ச்சல் பிரதான பேசுபொருளாகக் காணப்படுகிறது. வாக்காளர் ஒரு புறமும் வேட்பாளர் மறுபுறமும் என்று தேர்தல் தொடர்பான மும்முரம் சூடுபிடித்துள்ளது.

மக்கள் சேவை செய்வதற்கு வரிசை­யில் நிற்கும் பேராளர்களைப் பற்றிய சமூகப்­புரிதல் எவ்வாறிருக்கும் என்பதை திட்டவட்டமாக வரையறுக்க முடியா­­துள்ளது. காரணம் சிறந்த நிலை வேட்பாளர் தெரிவு என விளம்பரப்படுத்­­தப்­­பட்டாலும், வழமையான நடை­முறையை போல அரசியல் வட்டாரங்­களில் செல்வாக்குள்ளோரையே இம்­முறை­யும் வேட்பாளர்களாகத் தெரிவு செய்திருக்கின்றனர்.

சாதாரண பிரஜைகளும், இளைஞர், யுவதிகளும் பங்குபற்ற முடியாத அளவிற்கு நடைமுறைச்சிக்கல்கள் காணப்படுகின்றன. அரசியலில் உள்ளவர்கள் வெளியார் வருகையை திட்டமிட்டு மழுங்கடிக்கின்றனர்.

மலையக அரசியல் வரலாற்றை எடுத்து நோக்குமிடத்து தொழிற்சங்க பலம், சாதி, சமூக அந்தஸ்து போன்ற காரணி­கள் முக்கிய செல்வாக்குச் செலுத்துகின்­றன. உதாரணமாக எந்த ஒரு அரசியல் கட்சியோ? தொழிற்சங்கமோ? இக்காரணிகளை அடிப்படையாக வைத்தே சிந்தனை செலுத்துகின்றமையை இன்றுவரை காணலாம். காலங்காலமாக உயர்மட்ட சமூகத்திற்குள் காணப்படும் அரசியல் பிரதிநிதித்துவம்- ஏனையோரை வாக்காளர்களாகவே பார்க்கும் அவலம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

சாதாரண சமூகங்களைச் சேர்ந்த கற்றவர்கள் அரசியலில் பங்குபற்று­வது குறைவாகவே காணப்படுவதால் இந்தக்கூட்டத்தினரின் கூச்சல் ஊடகங்களை நிரப்பி வெற்றியடைகின்­றனர். தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரையில் ஒற்றுமையின்மையும், பிற்போக்குச் சிந்தனை­வாத­மும் கணிசமான அளவுக்கு சமூகத்தைக் கூறுபோடும் முக்கிய கருத்தியல்­களாகும். இன்றுவரை மீளமுடியாத ஒரு சமூகமாக நாம் அதே இடத்தில் இருப்பதற்குக் காரணமும் இவ்வாறான சமூக சமத்துவமின்மையும் சுயலாப அரசியலும்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

வாக்காளர் சமூகம் காலங்காலமாகவே தேர்தல் தினத்தில் மட்டும் அரசியல் பேசிவிட்டு அடுத்தநாள் தன் வேலை­யைப் பார்க்கப் போய்விடும். இதைத்தான் எதிர்பார்க்கின்றனர் அதிகாரத்திலுள்ளவர்களும். மக்கள் சேவையென்று அதிகாரத்தில் அமர்ந்த­வுடன் சுயலாப ஆசையால் தன்னை சூழவுள்ளோரைப் பாதுகாத்து வளர்த்து­­விடும் நடைமுறையையே பின்பற்று­கின்றனர்.

மறுபுறம் அடாவடி அரசியலும், பழிவாங்­கும் படலமும் மலையகத்தில் அதி­கரித்து வருவதும் கவனிக்கத்தக்கது. அரசி­யல் எனப்படு­வது குறிப்பிட்ட ஒரு சாராருக்கு என தமக்குள்ளேயே வரையறை செய்துகொண்டு வெளியார் தாக்கத்தினை அதிகாரத்தாலும், அடக்குமுறையாலும் கட்டுப்படுத்தும் நிலையானது பாரதூரமானது. குறிப்பாக தமக்கு சார்பானவர்களை தம்முடன் வைத்துக்கொள்வதும் தம்மை விமர்சிப்பவர்களை ஒடுக்குவதும் இன்று மலையக அரசியலில் வாடிக்கையாகி விட்டது. இதன் காரணமாக படித்த இளைஞர்– யுவதிகள் தன்னிச்சையாக அரசியல் பேசுவதற்கும், அது சார்ந்து இயங்குவதற்கும் அச்சப்படு கின்றனர். இந்த உண்மை இம்முறை உள்ளூராட்சித் தேர்தலிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தோட்டப்புறங்களை மையப்படுத்தி தொழிற்சங்க கட்டமைப்பைக் கொண்டு நடத்துவதில் தோட்டத்தலைவர்களின் வகிபாகம் அளப்பரியது. மேல் மட்டத்தி­லிருந்து வரும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப தொழிற்சங்க கட்டமைப்பை ஸ்திரப்படுத்துவதும் கட்சி­களுக்கு உறுப்பினர்களைக் கொள்வனவு செய்வதும் இவர்களின் முக்கிய கடமை­கள். உள்ளூராட்சி மன்றங்களில் போட்டி­யிடு­பவர்கள் முதற்கட்டமாக இந்தத் தோட்டத்தலைவர்களின் ஆதரவைப்பெறவேண்டும். அடுத்த­தாக அவர்களின் சிபாரிசும் பெறப்­படவேண்டியது அவசியமாகும். பின்னர்­தான் கட்சிகளுக்கு ஊடாக தேர்தலில் போட்டி­யிடலாம். இவையெல்லாவற்றுக்கும் மேலதிக­மாக பொருளாதார ஸ்திரத்தன்மை காணப்பட வேண்டும். மத்திய வருமானம் அல்லது மாதாந்தச் சம்பளம் பெறும் நபர்களுக்கு இது ஏற்புடையதாகாது. காரணம் தமக்கு ஆதரவானவர்களைத் திரட்டுவதற்கு பெருமளவு பணத்தையும் செலவு செய்வதற்­கான இயலுமை உடை­யோரையே கட்சித் தலைமைகள் அங்கீகரிக்கின்ற நிலைமை காணப்­படுகின்றது. வர்த்தகர்க­ளும் கொந்த­ராத்துக்காரர்களும் இதற்குப் பொருத்த­மானவர்களாக இனங்காணப்­பட்டுள்ளனர்.

தத்தமது கட்சிக்காக உழைத்தவர்­களுக்கும் தமது கொந்தராத்துக்களைச் செய்து லாப­மீட்டித் தந்தவர்களுக்கும் தமக்கு நிதி­யுதவி வழங்கிய வள்ளல்களுக்கும் தம் துதி­பாடிய அரசஊழியர்­களுக்­கும் மற்றும் காலாவதியான ஆசிரியர், அதிபர்களுக்கும் குறிப்பாக ஏற்கனவே பிரதேச சபைகளை அலங்­கரித்த­­வர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்­பட்டுள்ளன.

புதியவர்கள், கற்றவர்கள், சமூகநோக்கம் கொண்ட முற்போக்கானவர்கள் இம்முறை­யும் வாக்காளர் பெயர்ப்பட்டியலில் மட்­டுமே உள்வாங்கப்பட்டுள்ளனர். குறிப்­பாக சுயேச்சையாகக் களமிறங்கி தேர்தலைச் சந்திப்­ப­தற்கான வாய்ப்பையும் அதிகார பலத்­தால் அரசியல்வாதிகள் அடக்கு­கின்ற­னர். மறுபுறம் சமூக மட்டத்தில் செல்வாக்குடையோரையும் பேரம்பேசி விலைக்கு வாங்கும் கைங்கரியத்தை அரசியல் கட்சிகள் மேற்கொண்­டுள்ளன. எவ்வாறாயினும் வேட்பாளர் தெரிவுகள் கணிசமான அளவுக்கு நான்கு சுவருக்­குள்ளேயே நடந்துமுடிந்திருக்கின்றன.

பாடசாலைகளில் மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் தன்னிறைவான சேவை­யைச் செய்துமுடித்து ஓய்வுபெற்ற அதிபர், ஆசிரியர்­கள் அடுத்த கட்ட சமூக சேவைக்­குத் தயாராகி விட்டனர். இவர்களும் ஏதாவதொரு அரசியல் கட்சியைப் பிடித்துக் கொண்டு வேட்பாளர் ஆவதற்­கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் இன்னும் பல சுவாரசியங்­களும் நிறைந்திருக்கின்றன. மக்கள் சார்ந்தும் தூரநோக்கோடும் இருக்கின்ற எந்த ஒரு நபருக்கும் வேட்பாளர் ஆவதற்கான வாய்ப்பு குறைவு. மாறாக அதிகாரத்தின் அடிவருடிகளுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த வேட்பாளர்கள் நாளை மக்கள் பிரதிநிதி­களாகி வேலையை ஆரம்பித்து விடுவர். இவ்வாறான வேட்பாளர் நெரிசலில் சராசரி மலையக இளைஞன் ஒதுங்கிநிற்கிறான்.

நன்றி - வீரகேசரி

இலங்கையில் "றோ, சீ.ஐ.ஏ, மொசாட், MI5, ISI" தலையீடு - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 40


1980 களில் ஒரு புறம் ஜே.ஆர் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு முயற்சி மேற்கொள்வதற்கு தள்ளப்பட்டிருந்து. இந்தியாவின் அழுத்தப் பிடியில் இருந்து விடுபட முடியாதபடி சிக்கியிருந்தது ஜே.ஆர்.அரசாங்கம். அதேவேளை ஜே.ஆரால் பட்டைத் தீட்டப்பட்ட இனவாத சக்திகள் எதிர்க்கட்சியுடன் சேர்ந்து ஜே.ஆருக்கு எதிராக ஐக்கியப் படத் தொடங்கின.

குறிப்பாக “மவ்பிமே சுரகீமே வியாபாரய” (தேசத்தைப் பாதுகாக்கும் இயக்கம்) தொடங்கப்பட்டது. அரசாங்கத்தின் தீர்வு முயற்சிகளை எதிர்த்து போராடுவது, சிங்கள மக்களை “தமிழ் பயங்கரவாதத்துக்கு” எதிராக அணிதிரட்டுவது என்பனவே அதன் பிரதான நோக்கமாக இருந்தது.

இதே நோக்கத்துக்காக அப்போது தலைமறைவாக இருந்த ஜே.வி.பி தமது முன்னணி அமைப்புகளில் ஒன்றாக “தேஷப்பிரேமி ஜனதா வியாபாரய” (தேசபக்த மக்கள் இயக்கம்) எனும் அமைப்பை இயக்கி வந்தது. ஆனால் மகா சங்கத்தைச் சேர்ந்த “சோபித்த தேரர்” போன்றோர் அவர்களின் கொள்கைகளுடன் சற்று வேறுபட்டு இருந்தனர். (ஆம் சாட்சாத் மைத்திரிபால தலைமையிலான “நல்லாட்சி அரசாங்கத்தை கொணர்வதில் பிரதான பாத்திரம் வகித்த அதே சோபித்த தேரர் தான்.)

ஆக “சிங்கள பல மண்டலய” (சிங்கள அதிகாரச் சபை), சிங்கள வீர விதான, தேசிய சங்க சபை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி மட்டுமன்றி ஐ.தே.க அரசாங்கத்திற்குள் இருந்த சிறில் மெத்தியு போன்றோரும் கூட ஒன்றிணைந்தனர்.

இந்த இயக்கம் மிகவும் வேகமாக தென்னிலங்கையில் பலமடைந்து வந்தது. ஓரளவு மத்தியஸ்த நிலைப்பாடு கொண்ட பிக்குகள் என்று அறியப்பட்டவர்கள் கூட இதில் தம்மை இணைத்துக் கொண்டனர்.  இவர்கள் அனைவரும் “இணைப்பு சி” திட்டத்தை தோல்வியடையச் செய்வதற்காக முழுமூச்சுடன் செயற்பட்டனர்.

ஜனாதிபதி ஜே.ஆரும், பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியும்
1984 ஜனவரியில் ஜே.ஆர். சர்வகட்சி மாநாட்டைக் கூட்டியபோது  டில்லியில் ஒப்புக்கொண்ட “இணைப்பு – சி” திட்டத்தை அல்ல முன்வைத்தார். தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஒவ்வாத திரிக்கப்பட்ட பல அம்சங்களை மாற்றியிருந்தார். இந்தியாவையும், இந்திராவையும் அப்படி அதிருப்திகொள்ளச் செய்வதற்கான உளப்பலம் ஜே.ஆருக்கு எங்கிருந்து வந்தது? இதன் விளைவுகளை அவர் அறிந்துதான் வைத்திருந்தாரா? சர்வகட்சி வட்டமேசை மாநாடு என்பதானது வெறும் கண்துடைப்புக்காகத்தான் நடத்தினாரா? இது போன்ற கேள்விகளுக்கு பதிலை அன்று நிலவிய சர்வதேச சதிவலைப்பின்னலையும், அதற்கான பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் சூழலையும் சேர்த்துத் தான் விளங்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது.

பிராந்திய அரசியலின் செல்வாக்கு

சோவியத் யூனியன், அமெரிக்கா ஆகிய முகாம்களுக்கு இடையில் நிகழ்ந்துகொண்டிருந்த பனிப்போரில் இந்தியா சோவியத் முகாமைச் சார்ந்திருந்தது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க தலையீட்டை கட்டுப்படுத்துவதற்கான சோவியத் யூனியனின் கருவியாக இந்தியா தொழிற்பட்டது. இந்தியாவின் நிலைப்பாடும் அமெரிக்க எதிர்ப்பாகத் தான் இருந்தது.

இந்த நிலையில் டில்லியில் செப்டம்பர் மாதம் அணிசேரா நாடுகளின் மாநாடு டில்லியில் நிகழ்ந்தது. அணிசேரா மாநாட்டின் தலைவியாக இந்திரா அப்போது இயங்கினார். அங்கு அமெரிக்காவுக்கு எதிரான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. செப்டம்பர் 28 அன்று இந்திரா காந்தி ஆற்றிய உரை மிகவும் முக்கியமானதொரு உரை. அந்த மாநாட்டுக்கு வந்திருந்த அமெரிக்க எதிர்ப்பாளர்களான பிடல் காஸ்ட்ரோ, யாசிர் அரபாத் போன்றோர் இந்திராவுக்கு நெருக்கமாகவும், ஆதரவாகவும் இருந்தார்கள்.

அது போல அதே ஆண்டு 1983 நவம்பர் 23-29  வரையான நாட்களில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு நடந்தது. இந்திரா காந்தி அதற்கு தலைமை வகித்தார். அந்த மாநாட்டில் அமெரிக்காவுக்கு எதிரான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கிரெனடா நாட்டின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புகெதிரான தீர்மானம் பிரதான தீர்மானங்களில் ஒன்று.

1984 செப்டம்பரில் நியுயோர்க்கில் நிகழ்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரின் போது இந்திரா காந்தி சந்தித்த இரு தமிழ் டொக்டர்களிடம் இலங்கையின் மீது படையெடுக்க இந்திய இராணுவத்தை தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் ஆனால் அங்கிருக்கும் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி தான் தயங்குவதாகவும் தெரிவித்திருக்கிறார். இது பற்றிய விபரங்களை “இலங்கை தமிழ் தேசியம்” (Sri Lankan Tamil Nationalism) என்கிற நூலில் ஏ.ஜே.வில்சன் குறிப்பிடுகிறார்.

அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக இந்தியாவின் அயல் நாடுகளை சரிகட்டி தம் பக்கம் ஈர்த்துவைத்திருந்தது. 1977 ஆம் ஆண்டு ஜே.ஆரின் ஆரசாங்கத்தின் திறந்த பொருளாதாரக் கொள்கை, அமெரிக்க சார்பு வெளியுறவுக் கொள்கை என்பன அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் நிகழ்ந்தவையே. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவை பகைத்துக் கொண்டு ஆட்சிசெய்ய முடியாத ஒரு நிலை அயல் நாடுகளுக்கு இருக்கவே செய்தது. ஆக இந்தியாவையும் அமெரிக்காவையும் ராஜதந்திர ரீதியில் கவனமாகக் கையாளும் நிலை இலங்கைக்கு இருந்தது.


அமெரிக்காவில் ஜே ஆர்.
இந்தியாவின் தலையீட்டை ராஜதந்திர ரீதியில் கட்டுப்படுத்த ஜே.ஆர் அமெரிக்காவுக்கு ஓடினார். 1984 யூன் மாதம் 18 ஜே.ஆரை அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகன் வெள்ளை மாளிகையில் பலமான வரவேற்பளித்து விருந்து கொடுத்தார்.

வெள்ளை மாளிகைக்கு வெளியில் ரோநால்ர் ரேகனின் உரைக்கு அடுத்ததாக ஜே.ஆரால் உரை நிகழ்த்தப்பட்டது. அவ்வுரையில் இலங்கையில் தலைதூக்கியுள்ள “தமிழ் பயங்கரவாதத்தையும்”, இந்தியாவின் தலையீடு பற்றியும் போட்டுக்கொடுக்க தவறவில்லை. ஜே.ஆரின் பேச்சின் மைய நோக்கமும் அதுதான்.
“இலங்கையின் வடக்குப் பகுதியில் பிழையாக வழிகாட்டப்படும் தமிழ் பயங்கரவாத குழுக்கள் ஐக்கிய இலங்கையை பிரிப்பதற்காக இயங்கிவருகிறார்கள். இந்த பயங்கரவாத குழுக்கள் மிகவும் சிறியவை. அவர்கள் கொள்ளைகளிலும், கொலைகளிலும் ஈடுபட்டுவருகிறார்கள். அவர்கள் மாக்ஸிய தேசமொன்றை உருவாக்குவதும் அவர்களின் இலக்கு. இலங்கையையும், இந்தியாவையும் சேர்த்துத் தான். தமிழ் நாட்டிலிருந்து அதனைத் தொடங்குகிறார்கள். இதுவரை 147 அப்பாவிகளைக் கொன்றுள்ளார்கள்.
ஜனாதிபதி அவர்களே உங்கள் நாடு பயங்கரவாதத்துக்கு எதிரத்து சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுத்து வருவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். ஐ.நாவும் தங்கள் நாடும் இணைந்து வளர்ந்துவரும் நாடுகளில் தலைதூக்கிவரும் பயங்கரவாதத்துக்கு எதிராக இயங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”
என்று அந்த உரையில் தெரிவித்தார்.

அமெரிக்காவின் பிடியில் இலங்கை

இந்தியாவின் தலையீடு அதிகரிக்கும் போதெல்லாம் இந்தியாவுக்கு எதிரான, அமெரிக்காவுக்கு சார்பான நாடுகளிடம் இலங்கை அரசு உதவிகோரி மண்டியிட்டது இந்த போக்கின் விளைவுகளால் தான்.

ஜெயவர்த்தனா 80களின் ஆரம்பத்தில் அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இஸ்ரேலுக்கும், பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் ஒட வைத்ததும் இந்தியாவைத் தாக்குபிடிப்பதற்கான பலத்தை அதிகரிப்பதற்காகத் தான். இதன் விளைவால் தான் இந்தியா தம்மீது படையெடுக்கப்போகிறது என்கிற பிரச்சாரம், பாதுகாப்பு அமைச்சின் உருவாக்கம், புதிய ஆயுதக் கொள்வனவு, படைப்பெருக்கம் அனைத்தையும் துரிதமாக மேற்கொண்டது. இந்த பயம் என்பது மனப்பிரமையால் வந்ததல்ல.

1985 டிசம்பரில் ஜே.ஆர் பாகிஸ்தான் சென்று அந்நாட்டுத் தலைவர் ஜெனெரல் சியாவை சந்தித்த போது நேரடியாகவே பல இராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்தார். அதற்கு முன்னர் அளித்துவந்த இராணுவப் பயிற்சியை மேலதிகமாக விஸ்தரிப்பதற்கு அவர் உடன்பட்டார். 

பாதுகாப்பு அமைச்சராக லலித் அத்துலத் முதலி பதவியேற்றதும் “பயிற்சியளிக்கப்பட்ட ஒவ்வொரு புலிக்கும் நூறு இராணுவத்தினர் இங்கே பயிற்சியளிக்கப்படுவார்கள் என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அதேவேளை தமிழகத்தில் ஈழ ஆதரவு சக்திகள் இலங்கைத் தமிழர்களுக்கு பலமான ஆதரவை வழங்கினார்கள். எதிர்க்கட்சிகளும், ஆளுங்ககட்சியும் கூட தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்தன. இலங்கை அரசுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகள் வழங்குவதைக் கண்டித்து 12.10.1983இல் நிகழ்ந்த பேரணியின் இறுதியில்  தமிழக முதல்வராக இருந்த எம்.ஜீ.ஆர். அமெரிக்க தூதுவர் கான்சல் ரோய் விட்டேக்கரிடம் மனுவையும் அளித்தார்.

வேர்ணன் வோல்ட்டர்

83இன் இறுதியில் அமெரிக்க தூதரகத்தில் இருந்துகொண்டு இயங்கிய சீ.ஐ.ஏ. உளவுப்பிரிவின் பிரதித் தலைவர் தான் வேர்ணன் வோல்டர் (Vernon A. Walters) கொழும்பிலேயே தங்கியிருந்து இலங்கை அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கி வந்தார். பிற்காலத்தில் அவர்  அமெரிக்காவுக்கான ஐ.நா பிரதிநிதியாகவும், ஜேர்மன் போன்ற நாடுகளுக்கான தூதுவராகவும் இருந்தவர். இஸ்ரேலிடமிருந்து இராணுவ உதவிகளைப் பெறும்படி ஆலோசனை வழங்கியதும் அவர் தான்.  அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவரான வேர்ணன் வோல்ட்டர் இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தத்தை வரைவதற்கு வழிகாட்டியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தான் இஸ்ரேல் இராணுவ நிபுணர்கள் இலங்கை வந்தடைந்தார்கள். இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவருக்குப் பதிலாக அவசர அவசரமாக புதிய ஒருவர் மாற்றப்பட்டார்.

இந்த நிலைமைகளால் மாதுறு ஓயா திட்டத்திற்கு சவூதி அரேபியா வழங்கவிருந்த நிதியுதவியை நிறுத்தியது. இலங்கையிடமிருந்து தேயிலையை கொள்வனவு செய்துவந்த முதன்மை நாடுகளில் ஒன்றான ஈராக் கொள்வனவை குறைத்துக்கொண்டது. எகிப்தும் தேயிலை ஏலச் சந்தையிலிருந்து விலக்கிக்கொண்டது. குவைத் இலங்கையிலிருந்து வரும் தொழிலாளர்களை மட்டுப்படுத்தியது. ஜோர்தான் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேலுடனான இலங்கை உறவைப் பற்றி பரிசீலிக்குமாறு எச்சரித்தது. ஈரான் புதிதாக அனுப்பியிருந்த இலங்கைக்கான தூதுவரை விலக்கி ஈரானுக்கு திருப்பி அழைத்துக்கொண்டது. சிரியா, பாலஸ்தீன் மற்றும் ஒபெக் நாடுகளின் அமைச்சர்கள் இலங்கைக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஆராயவேண்டும் என்றனர்.

ஆனால் இத்தனையையும் மீறி இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் வழிகாட்டளின் கீழ் இருப்பதே பாதுகாப்பானது என்று எண்ணியதால் இஸ்ரேலுடனான உறவை பகைத்துக் கொள்ளவில்லை. அதற்கு கொடுத்த விலை அரபு நாடுகளுடனான பகை. அதே வேளை இந்த சூழலைப் பயனடுத்தி ஜே.ஆருடன் “அமெரிக்காவின் குரல்” (Voice Of America) நிலையத்துக்கு 1000 ஏக்கர்களை வழங்கும் ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்துகொண்டது.

“இணைப்பு சி” திட்டத்தை றேகன்  நிர்வாகம் எதிர்த்ததும் கூட அத்திட்டத்தின் மீதான ஜே.ஆரின் உதாசீனத்துக்கு காரணங்களில் ஒன்று. திருகோணமலை தமிழர் கைகளுக்குப் போனால் அது இந்தியாவின் செல்வாக்குக்குள் சென்று விடும் என்கிற ஒரு அச்சமும் அதற்கான காரணம். இத்தனைக்கும் “இணைப்பு சி” திட்டத்தில் திருகோணமலை துறைமுகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வகையிலேயே தயாரிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை இந்தியாவின் இராணுவ ஆக்கிரமிப்புக்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஜே.ஆரை எச்சரித்ததும் அவர் தான். டெல்லிக்குச் சென்று அவ்வாறானதொரு இராணுவ ஆக்கிரமிப்பை செய்ய முற்படக்கூடாது என்று கேட்டுக்கொண்டதாக கே.எம்.டி.சில்வாவின் “பிராந்திய அதிகாரமும் சிறிய அரசுகளின் பாதுகாப்பும் – இந்தியா – இலங்கை 1977-1990” என்கிற நூலில் விளக்குகிறார்.  இந்தியாவில் தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்ட தளங்கள், முகாம்கள் பற்றிய புகைப்படங்களை இலங்கை அரசுக்கு கொடுத்து உறுதிப்படுத்தியவரும் வேர்ணன் வோல்டர் தான். வேர்ணன் வோல்டர் இலங்கையில் இருந்த போது திருகோணமலை படைத்தளத்தைப் பற்றி இந்திய அதிகாரிகளுடன் பேசி அவர்களை பீதிக்குள்ளாக்கிய சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

அமெரிக்கா திருகோணமலையில் தளத்தை அமைக்கக்கூடும் என்கிற பயம் இந்தியாவுக்கு இருந்தது. “வொய்ஸ் ஒப் அமெரிக்கா” என்கிற பெயரில் அமெரிக்கா திருமலையில் நிலைகொள்ள முயற்சித்ததும் உண்மை தான். இந்தியாவின் இந்த பயத்தை 1983 இணைப்பு சி, மற்றும் 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஆகியவற்றில் திருகோணமலை விவகாரம் தீர்வு யோசனைகளில் ஒன்றாக உள்ளிடப்பட்டிருந்தமை என்பவற்றின் மூலம் நாம் உணரலாம்.

இந்தக் காலப்பகுதியில் இலங்கை அமெரிக்க உளவுப்பிரிவான சீ.ஐ.ஏ (Central Intelligence Agency). பிரித்தானிய உளவுப் பிரிவான MI5 (Military Intelligence, Section 5), பாகிஸ்தானின் உளவுஸ்தாபனமான ISI (Inter-Services Intelligence) மற்றும் இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட் (Mossad) ஆகியவற்றின் தயவை நாடியிருந்தது. அவை “பயங்கரவாத எதிர்ப்பு”க்கான உதவி என்கிற பேரில் இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவின. ஆனால் லண்டனிலும், பிரித்தானியாவிலும் தமிழ் சமூகத்தின் பரப்புரை செல்வாக்கு பெற்றிந்ததன் காரணமாக அந்த உதவிகள் மட்டுப்படுத்தபட்டிருந்தன.

மொசாட்டின் மோசடி

இவற்றில் மொசாட்டின் பணி மிகப் பெரியது.

“By way of Deception” (ஏமாற்றுவதன் மூலம்) என்கிற நூல் 1990இல் வெளியானது. 1990இல் உலகில் அதிக விற்பனையான நூலாக அந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நூல் அது. இதை எழுதிய விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கி இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனத்தில் உளவாளியாக பணிபுரிந்த கனேடியர். அந்த நூல் உலகளவில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்திய நூல். 2004 இல் வெளியாகி உலகைக் கலக்கிய "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" (Confessions of an Economic Hit Man) நூலும் ஏகாதிபத்தியத்தின் சதி ஏஜென்டாக பணியாற்றிய 'ஜோன் பெர்க்கின்ஸ்' எழுதி ஒரு தசாப்தமாக தமிழுலும் பிரபலமாக பேசப்படுவதுப்படுவது தான். ஆனால் விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கி சொல்லும் கதை நேரடியாக இலங்கையுடன் தொடர்புபட்டது. (அது பற்றிய விரிவான கட்டுரையை இந்த இணைப்பில் பெறலாம்)

அந்த நூலில் இலங்கை பற்றி வெளிவந்த பகுதியின் மொழிபெயர்ப்பை சரிநிகர் பத்திரிகை 1991இல் வெளியிட்டிருந்தது. ஒஸ்ட்ரோவ்ஸ்கி ஆரம்பத்தில் இரகசிய கொலைகளை செய்வதற்கு நியமிக்கப்பட்ட்போதும் அதனை மறுத்து பின்னர் மொசாட்டின் பயிற்சியாளராகவும், களநிலை உத்தியோகத்தராகவும் 1982-1986 காலப்பகுதியில் பணியாற்றியாவர். ஆனால் 1986இல் மொசாட்டின் பணிகளை வெறுத்து வெளியேறி தப்பித்து வாழ்ந்தவர். 

அதில் பணியாற்றிய காலத்தில் இலங்கை அரசாங்கத்தை தம் வழிக்குக் கொணர செய்த பின்புலச் சதிகள், பின்னர் தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சியளித்த அதே இஸ்ரேல் இராணுவத் தளத்தில் (Kfar Sirkin) இலங்கைப் படையினருக்கும் அதே விதமான பயிற்சிகள் வழங்கப்பட்ட விதம், ஆளையாள் தெரியாதபடி பயிற்சிபெற்ற அவர்கள் நேரடியாக பரஸ்பரம் மோதிச் சாவதற்கான பயற்சி அளிக்கப்பட்ட அந்த களம் குறித்தெல்லாம் அந்த நூலில் விலாவாரியாக விளக்குகிறார். தமிழ் இளைஞர்களை கொமாண்டோ பயிற்சிக்காக அனுப்பிவைத்த இந்திய றோ (Research and Analysis Wing) உளவு நிறுவனத்திற்கோ அல்லது தமது இராணுவத்துக்கு கொமாண்டோ பயிற்சியளிப்பதற்காக அனுப்பிய இலங்கை அரசாங்கத்துக்கோ கூட இந்த விபரங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை.

இராணுவப் பயிற்சி மட்டுமன்றி, இலங்கையில் போர்பயிற்சி, போர்த் தளபாடங்களை விற்பது என பல பணிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து பணத்தைக் கறப்பதற்காக ஜே.ஆருக்கு வழங்கிய குறுக்கு வழி ஆலோசனையும் இங்கு முக்கியமானது. அதாவது உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கென பெற்ற கடன்களையும் உதவிகளையும் பெற்று அவர்களுக்கு கள்ள கணக்கு காட்டுவது, உத்தேச செலவை விட குறைந்த செலவில் முடிப்பதற்கான இஸ்ரேலிய திட்டம், இஸ்ரேலிய நிபுணர் வரவழைப்பு என அத்தனையும் புட்டுபுட்டு வைக்கிறார். அதுமட்டுமன்றி இலங்கையில் நுழையுமுன்னர் ஜனாதிபதி ஜே.ஆரின் மருமகளை திட்டமிட்டு நட்புகொள்வது தொடங்கி தமது வேளை கச்சிதமாக முடிக்கும் வரை அந்த நூலில் தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

ஜே.ஆரின் ஏற்பாட்டில் மாதுறு ஓயா பகுதியில் இருந்த முகாமில் மொசாட்டைச் சேர்ந்த 50 பேர் இலங்கை இராணுவத்தினருக்கு பகிரங்கமாக பயிற்சியளித்தார்கள். பிற்காலத்தில் ஏராளமான தகவல்கள் இது குறித்து வெளியாகியிருக்கின்றன. 

இலங்கையின் மீது இந்திய-அமெரிக்க இராஜதந்திர பலப்பரீட்சை தமிழ் மக்களின் அரசியல் நிகழ்ச்சிநிரலில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி இலங்கையின் மீது புறச் சக்திகளின் தலையீடு பிரச்சினையின் மையத்திலிருந்து வேறு திசைக்கு இழுத்துச் சென்றது. அந்தப் புறச்சக்திகளின் ஆடுகளமாக இலங்கையும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையும் ஆனது. தமிழ் மக்களின் தலைவிதி மட்டுமல்ல இலங்கையின் ஒட்டுமொத்த தலைவிதியும் இலங்கைக்கு வெளியில் தீர்மானிக்கப்படுகின்ற நிலை தலைதூக்கியது. அடுத்த மூன்று தசாப்தங்களுக்கும் இனப்பிரச்சினையின் திசைவழியை அவர்கள் தான் தீர்மானிக்கப் போகிறார்கள் என்பதை தமிழர் தரப்பும் எதிர்பார்க்கவில்லை. சிங்களத் தரப்பும் கணிக்கவில்லை.

துரோகங்கள் தொடரும்...

நன்றி - தினக்குரல்


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates