Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

கூட்டு ஒப்பந்தமும் மலையகத்தின் எதிர்காலமும்


மலையக வரலாற்றில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் மிக முக்கிய பிரச்சினையாக கருதப்படுவது சம்பள பிரச்சினையாகும். காலம் காலமாக தமது உடல், பொருள், ஆவியனைத்தையும் இந்நாட்டின் அபிவிருத்திக்காக கொடுத்துவிட்டு, இன்று ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது பொருளாதாரத்தில் கீழ்நிலையில் மலையக மக்கள் இருப்தற்கு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளமே காரணமாகும். தேயிலை செடிகளுக்கிடையில் தமது வாழ்வினை தொலைத்தவர்களாய் வாழும் இச்சமூகத்தின் வாழ்வில் திருப்புமனையை ஏற்படுத்தும் அரசியல் தலைமைத்துவம் இன்னும் உருவாகவில்லை.
இம்மக்களின் உழைப்பினை சுறண்டி அதில் வாழும் முதலாளித்துவ சமூகம் தமது இலாபத்திற்காக தொழிலாளர்களின் நலன்களை புதைத்து வருகின்றது. 

கடந்த காலத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனதிற்கும் இடையில் கைச்சாத்திடப்படும் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக போதிய சம்பள உயர்வு வழங்கப்பட்டிருக்கவில்லை.

அந்தவகையில் 2013 ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் நிறைவடையும் தருவாயில் அடுத்த கூட்டு ஒப்பந்தத்திற்கான முன்னெடுப்புகளில் பல தொழிற்சங்கங்கள் களமிறங்கியுள்ளன. 
அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்று தருவதற்கான காய்நகர்த்தல்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது.

மறுபுறம் வரவு செலவு திட்டத்தில் தனியார்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வினை மலையக தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்கள் மத்தியில் கூட்டொருமைப்பாடு காணப்படாமை பாரிய குறைபாடாகும். அத்தோடு இவ்வாறு கோசங்களை எழுப்புகின்றவர்கள் சம்பள உயர்வு மற்றும் கூட்டு ஒப்பந்தம் என்ற இரு வியூகங்களை வைத்துக்கொண்டு தமது எதிர்கால அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்ள எத்தனிப்பது கவலையளிக்கின்றது.

மக்கள் நலனில் அக்கறைக்கொண்ட மலையக தொழிற்சங்கங்கள் இவ்விடயத்தில் தம்முள் ஒரு ஒருமைப்பாட்டுக்கு வருதல் வேண்டும். இல்லையேல் கடந்த காலங்களில் பெரும்பான்மை அரசாங்கத்தினர் விரித்த வலையில் சிக்கி தமது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது போன துர்பாக்கிய நிலை மீண்டும் ஏற்படலாம்.

ஆகவே மலையகத்தில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் தமது அரசியலுக்காக அன்றி மலையக மக்களுக்காக ஒன்றிணைந்து பொதுவான தீர்மானத்தின் கீழ் அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும். அதே நேரம் எதிர்வரும் கூட்டு ஒப்பந்தத்தின் போது மலையக சமூகத்தில் காணப்படும் புத்தி ஜீவிகள், சிவில் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மதத்தலைமைகள்,சமூக நலன்விரும்பிகள் என பலதரப்பட்ட தரப்பினரும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

அத்தோடு கூட்டு ஒப்பந்தத்திற்கு முன்பு மக்களை சந்தித்து அவர்களின் மனவுணர்வுகளை ஆய்வு செய்ய வேண்டும். கூட்டு ஒப்பந்தம் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த இவ்வாரான மக்கள் சந்திப்புகள் துணைபுரியும். மேலும் கடந்த முறை இடப்பெற்றதை போல் அல்லாமல் இம்முறை அடிப்படை சம்பளமாக கோரப்படும் தொகையை தெளிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும். திரைமறைவில் மலையக மக்களை கூட்டு ஒப்பந்தத்தில் விற்கும் அற்பத்தனமான வியாபார நடவடிக்கையை அரசியல்வாதிகள் தவிர்த்துகொண்டு, எம் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான முன்னேற்பாடுகளை இவ்வொப்பந்தத்தின் கீழ் வென்றெடுக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.
நன்றி - கூக்குரல்

மக்களின் அதிகாரமே மலையகத்தில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் - விண்மணி


மலையகத்தில் சமூக மாற்றம் பற்றி பேசியும் எழுதியும் வருவதால் மாத்திரமே சமூக மாற்றம் ஏற்பட்டு விடாது, செயற்பாடு தேவை.

யாருக்கு சமூக மாற்றம் மிக அத்தியாவசியமாகத் தேவையோ, யார் சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியவர்களோ அந்த இளைஞர்களுக்கு அதற்கான வழிமுறைகளைக் கற்றுக் கொடுத்தல் வேண்டும். கருவிகளைக் கையளித்தல் வேண்டும்.

இயல்பாகவே எழுச்சியும் புரட்சிகர நோக்கமும் கொண்ட இளைஞர்களின் சமூக ரீதியான சிந்தனையை அவர்களை தனி மனித முன்னேற்றத்தின் பால் மாத்திரம் திசை திருப்பும் தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல், பின்னணியில் எழுந்த பின் நவீனத்துவம் எண்பதுகளின் பின்னர் வளர்ந்து வலிமை பெற்றது.

இது சமூக மாற்றம் குறித்த வளர்ச்சிப் போக்குகளைத் தடுத்தது. பின்தங்கிய சமூகப்பகுதியினரிடையே இயங்கி வந்த சமூக மறுமலர்ச்சிக்கான அமைப்புக்களை இல்லாதொழித்துவிட்டது. இந்த நிலைமையானது மலையகத்தை முற்றாக பின்னடைவு காணச் செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில் சமூக மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான சில கருவிகளை இளைய தலைமுறையினரிடம் கையளிக்க வேண்டியது நமது சமூகக்கடமையாகின்றது.

முதலில் மலையகத்தில் முறையான சமூக மாற்றம் ஏற்படாமைக்கு பிரதான காரணமாக அமைவது என்னவென்று பார்த்தோமானால், சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்களிடம் அதிகாரம் இல்லாததும், அதிகாரம் உள்ளவர்கள் சமூக மாற்றத்தை விரும்புவதில்லை என்பதும் தெளிவாகும்.

அதிகாரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
ஆகவே, சமூக மாற்றத்தில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் இந்த சமூக அமைப்பைப் பற்றியும் அதிகாரத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், இவைகள் புத்தகத்தில் படிக்கும் பாடங்கள் அல்ல. செயற்பாடுகள், நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களினூடாகவே இவைகளைக் கற்றுக் கொள்ளுதல் சாத்தியம்.

இதற்கு உங்களுக்கோர் தூண்டுகோல், ஒரு நோக்கம், ஒரு உத்தேச வேலைத்திட்டம் தேவை. இப்போது நெருக்கடி தந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையைக் கையாள்வதை சமூக மாற்றத்திற்கான ஒரு ஆரம்பப்படியாக எடுத்துக்கொள்ளலாம். அதன் மூலம் பயில ஆரம்பிக்கலாம்.

காணி உரிமையும் வீட்டுரிமை
இப்போது பார்த்தோமானால், இன்று மலையகத்தில் பெரிதாகப் பேசப்பட்டு வரும் மக்கள் அனைவரினதும் சம்பந்தப்பட்ட, மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ள விடயம் இந்தக் காணியுரிமை, வீட்டுரிமைப் பிரச்சினைதான். பல தசாப்தங்களாக பேசப்பட்டுவரும் இந்த விடயம் இன்றளவும் தீர்க்கப்பட்டதாயில்லை. இந்தப் பிரச்சினையை சமூக மாற்றத்தின் ஓர் ஆரம்பப் புள்ளியாக நாம் கையாண்டு பார்க்கலாம்.

இப்போது மலர்ந்துள்ள மைத்திரி ஆட்சியிலும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாகத்தான் வாக்குறுதியளித்துள்ளார்கள். மலையக மக்களும் நம்பித்தான் வாக்களித்திருக்கின்றார்கள்.

இந்த அணியினரை ஆதரித்த மலையகத் தலைவர்களும் பெற்றுத் தருவதாகத்தான் சொல்லியிருக்கின்றார்கள். நடக்குமா? நடக்கும் என்று நம்புவோமாக.

ஆனால், இந்த அரசிலும் இந்தப் பிரச்சினை போதுமானவு முன்னேற்றம் காணாவிட்டால் என்ன செய்வது என்பதற்கான வேலைத்திட்டம் எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த இடத்தில்தான் சமூக மாற்றத்திற்கான ஆரம்பப் பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆம், மக்கள் தம் அதிகாரத்தை பிரயோகித்து இந்த உரிமையை வென்றெடுக்க வேண்டும்.

இவ்வாறு தமது அதிகாரத்தைப் பிரயோகித்து தமது உரிமைகளை வென்றெடுக்கும் சக்தி ஏற்கனவே பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களிடம் இருந்து வந்ததுதான்.

தொழிற்சங்க நடவடிக்கைகளும் வேலை நிறுத்தம் என்ற ஆயுதமூலமே அந்த சக்தியாகும். ஆனால் கூட்டுப்பேரம் என்னும் நாசகார ஒப்பந்தத்தினால் தொழிலாளர்கள் இன்று அந்த சக்தியை இழந்து நிற்கின்றார்கள்.

அதிகாரம் குவிந்துள்ளதெங்கே?
காணி மற்றும் வீட்டுரிமைப் பிரச்சினை யில் அதிகாரம் குவிந்துள்ளது எங்கே என்பது பற்றிய பூரண விளக்கத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த விட யத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்துவோர் யார் இது சம்பந்தமான தீர்மானங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன? இத் தீர்மானங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் எவை இந்நிறுவனங்கள் யாருடைய அதிகாரத்தின் கீழ் உள்ளன? போன்றதகவல்களை நாம் பெற்றுக்கொள்ளுதல் அவசியமாகும்.

மறுபக்கத்தில் பாரம்பரியமாக அதிகாரம் செலுத்தி வருகிறவர்கள் யார்? அவ்வப்போது மாறிவரும் சூழ்நிலைகளுக்கேற்ப அதிகாரம் செலுத்தி வருபவர்கள் யார்? என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் விட இவ்வதிகாரங்கள் அவர்களுக்கு எவ்வாறு வந்து சேர்ந்தது? இப்போதிருக்கும் அதிகாரங்களை விட அதிக மாக மக்கள் பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? போன்ற விடயங்கள் பற்றியும் சிந்தித்தல் பயனுடையது.

அதிகாரத்தைப் பிரயோகியுங்கள்
இனி, உங்கள் காணி மற்றும் வீட்டுரிமையை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானியுங்கள் இப்போது உங்களிடமுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

இதற்கு மக்களை அமைப்பு ரீதியாக அணி திரட்டல் மிக அவசியமாகும். கருத்துக்களைப் பரப்பி மக்கள் மனதில் உத்வேகத்தை ஏற்படுத்த வேண்டும். இதுவே அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கான உறுதியான சக்தியாகும்.

நடவடிக்கைகள் மக்களிடையே எழுச்சியை எற்படுத்துவதாக மாத்திரம் அமையாது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்தி, தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.

நேச சக்திகளை இணைத்துக் கொள்ளுங்கள்
இந்தக் கட்டத்திலே வலிமையுடன் அதி காரத்தைப் பிரயோகிப்பதற்காக ஏனைய நேச சக்திகளை இணைத்துக் கொள்ளுங் கள்.

ஊடகங்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளுங்கள். இன்று முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் அரிய வாய்ப்புள்ளது. அவைகளூடாக அதிகபட்ச நலன்களைப் பெறவேண்டும்.

மக்களை அமைப்பு ரீதியாக திரட்டுவதில் வெற்றி காண்பதற்கு சரியானதும் பொருத்த மான புள்ளிவிபரங்களையும் தகவல்களை யும் முன்வைப்பதுடன் பிரச்சினை மற்றும் தீர்வுபற்றிய தெளிவான விளக்கத்தை ஏற் படுத்த வேண்டும்.

திரும்பத் திரும்ப பலவழிகளிலும் முய லுதல் அனுபவங்களை பதிவு செய்தலும் பகிர்ந்து கொள்ளலும் ஆகியவை வெற்றி க்கு வழிவகுக்கும்.

நன்றி - வீரகேசரி

கூலித் தமிழ் (கட்டுரைகள்) : 'கசக்கும் உண்மைகள்' - ஆ. சிவசுப்பிரமணியன்


மு. நித்தியானந்தன்
வெளியீடு: 
க்ரியா 
புதிய எண்: 2, பழைய எண்: 25, 
17ஆவது கிழக்குத் தெரு,
காமராஜர் நகர், திருவான்மியூர்,
சென்னை & 600 041.
பக்கம்: 179 விலை: 400

இலங்கையின் மத்தியப் பகுதியான மலைநாட்டுப் பகுதியில் வாழும் தமிழர்கள் ‘மலையகத் தமிழர்கள்’ என்ற பெயரைத் தாங்கி நிற்பவர்கள். இவர்களது பூர்வீகம் இந்தியாதான். இதன் காரணமாகவே இவ்விரு நாடுகளின் அனைத்து அரசியல் இயக்கங்களின் (தமிழ்த் தேசிய இயக்கங்கள் உட்பட) புறக்கணிப்புக்கு ஆளானவர்கள்.

ஆங்கிலக் காலனிய ஆட்சியின் வேளாண் கொள்கையினாலும் வறட்சியினாலும் கடன்பிடிக்குள்ளும் நிலவுடைமைக் கொடுமைக்குள்ளும் வறுமைக்குள்ளும் சிக்கித்தவித்த தமிழ்க் குடியானவர்களின் புகலிடமாக ஆங்கிலக் காலனியாட்சிக் காலத்தில் இம்மலைப் பகுதிகள் அமைந்தன. சாதிமீறித் திருமணம் செய்துகொண்டோர், காவல்துறையின் தேடுதல் வேட்டைக்கு ஆட்பட்டோர் ஆகியோரின் அடைக்கலப் பூமியாகவும் இப்பகுதி அமைந்தது.

இலங்கையின் மலையகப் பகுதிகளில் ஆங்கிலேயர்கள் காஃபி, தேயிலை, இரப்பர் தோட்டங்களை உருவாக்கத் தொடங்கினர். காட்டை அழித்துத் தோட்டங்களை உருவாக்கவும், இவற்றில் தேயிலை, காஃபி, இரப்பர் ஆகிய பணப் பயிர்களைப் பயிரிடவும் அவற்றைப் பராமரிக்கவும் அதிக அளவிலான மனித உழைப்பு தேவைப்பட்டது. இதை நிறைவுசெய்யும் வகையில், தமிழ்நாட்டின் கிராமப்புறக் குடியானவர்களை, வளமான வாழ்வளிப்பதாகக் கூறிப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, ‘ஒப்பந்தக் கூலி’ என்ற பெயரில் அழைத்து வந்தனர். இது ஒரு வகையான அடிமைமுறைதான்.

இதற்குள் சிக்கிய எந்தமிழர் தம் அடையாளம் இழந்து, உரிமையிழந்து, ‘கூலி’ என்ற பெயரைப் பெற்றனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் ‘கூலி’ என்றும், இவர்களது குடியிருப்பு ‘கூலி லயன்’ என்றும் சுட்டப்படலாயிற்று. இம்மக்களிடம் கிறித்தவத்தைப் பரப்ப உருவான கிறித்தவ மறைத்தளம்கூட தன்னைக் கூலி மிஷன் என்றே அடையாளப்படுத்திக் கொண்டது. யாழ்ப்பாணத் தமிழர்கள் தம் பங்கிற்கு ‘தோட்டக்காட்டான்’, ‘பறைத் தமிழன்’ என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். வாதாபிகொண்டானையும் கங்கைகொண்டானையும் கடாரம் கொண்டானையும் அறிமுகப்படுத்திய நம் வரலாற்றாசிரியர்கள் இம் மக்களைக் குறித்த பதிவு எதையும் நம்மிடம் காட்டவில்லை.

தோட்டத்துரைகளின் நாட்குறிப்புகளும், ஆங்கில அரசின் ஆவணங்களும் மட்டுமே இம்மக்களின் வரலாற்றாவணமாக விளங்கிய நிலையில் அவர்களின் அவல வாழ்க்கை குறித்த பதிவுகளை அம்மக்களின் வாய்மொழிப் பாடல்களில் இருந்து வெளிப்படுத்தும் பணியினை அறிஞர்கள் சிலர் மேற்கொண்டனர். சி.வி. வேலுப்பிள்ளை, சாரல்நாடன், நவஜோதி போன்றோர் வெளியிட்ட நாட்டார் பாடல்கள் இம்மக்களின் அவல வாழ்வை நாம் அறியச் செய்தன. ‘துன்பக்கேணி’ என்ற தலைப்பிலான நீண்ட சிறுகதையின்

வாயிலாக புதுமைப்பித்தன் மலையகத் தமிழரின் அவல வாழ்வைத் தமிழ்நாட்டினருக்கு அறிமுகம் செய்வித்தார். தமிழ்நாட்டின் நடேசைய்யர், சில்வியா பெடராம், பாசித்தியாம்பிள்ளை என்ற இலங்கை வரலாற்றறிஞர்களும் இம்முயற்சியில் ஈடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

தற்போது ஏழுகட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள மு. நித்தியானந்தன் எழுதிய ‘கூலித்தமிழ்’ என்ற நூல் மேற்கூறிய வரிசையில் குறிப்பிடத்தக்க ஒரு நூலாக இணைந்துள்ளது. இந்நூலில் இடம் பெற்றுள்ள முதல் மூன்று கட்டுரைகளும் காலனிய ஆட்சியின்போது வெளியான நான்கு நூல்களை மையமாகக்கொண்டு மலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலவாழ்வை நாம் அறியச் செய்கின்றன.

காஃபி தோட்டத்தில் கண்டக்டர் என்ற பதவி வகித்த ஆபிரகாம் ஜோசப் என்பவர் 1869ஆம் ஆண்டில் ‘கோப்பி கிருஷிக்கும்மி’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். காஃபி பயிரிடும் தொழில்நுட்பத்தைப் போதிப்பது என்பதைக் காட்டிலும், தோட்ட முதலாளிகளான வெள்ளைத் துரைகளைப் போற்றி வணங்குவதையே அடிப்படையான நோக்கமாக இந்நூல் கொண்டுள்ளது என்ற உண்மையை நூலின் ஆங்கில முன்னுரை உணர்த்தி நிற்கிறது. இம்முன்னுரையை ஆசிரியர் தமிழ் மொழியில் பெயர்த்துத் தந்துள்ளார். அதில் இருந்து சில பகுதிகள் வருமாறு:

“மாண்புமிகு கனவான்கள், கோப்பித் தோட்டத் துரைமார் சங்கத் தலைவர், அங்கத்தவர்கள் மற்றும் சகல கோப்பித் தோட்ட மனேஜர்கள் அனைவருக்கும் இந்நூல் சமர்ப்பணம்.’ ‘கனவான்களே! இதன் கீழே கையொப்பமிட்டிருப்பவன், இந்நூலை உங்கள் சன்னிதானத்தின் முன் சமர்ப்பணம் செய்வதற்கு இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்துக் கொள்வதற்கான வாய்ப்பை நல்குமாறு இறைஞ்சி நிற்கிறான். உடல் உழைப்பில் ஈடுபடும்போதும் ஓய்வின்போதும் அலுப்பை மறந்து உற்சாகம் பெற கோப்பித் தோட்டத் தொழிலாளிகள் தமக்குள் பாடித்திரியும் பல்வேறு விதமான ஆட்சேபகரமான பாடல்களுக்கு (Objectionable songs) புதிய மாற்றாக, நடைமுறையில் பிரயோசனமானதும் தார்மீகரீதியில் பூரணத்துவமும் கொண்ட மாற்றினைக் காண வேண்டும் என்பது அவனது நீண்டகால ஆவலாக இருந்தது. இம்முன்னுரையின் இறுதிப்பகுதி உங்களின் விசுவாசம் மிகுந்த ஊழியனாக இருக்க விரும்பும் ஆ.ஜோசப்” என்று முடிவடைகிறது.

நூலின் ஆங்கில முன்னுரையில் ஆட்சேபகரமான பாடல்கள் என்று ஜோசப் குறிப்பிடுவது, மலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் உருவாகி வழங்கிவந்த நாட்டார் பாடல்களைத்தான் என்பது இந்நூலாசிரியரின் பொருத்தமான முடிவாக உள்ளது. தம் கருத்துக்கு வலுசேர்க்க மலையக நாட்டார் பாடல்கள் சிலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

‘கசக்கும் உண்மைகள்’ என்ற உட்தலைப்பில் தோட்டத் தொழிலாளர்கள்மீது அரசின் துணையுடன் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளும் தோட்டத் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையும் இடம்பெற்றுள்ளன.

இக்கட்டுரையில் இடம்பெறும் முக்கிய செய்தி மலைத் தோட்டப் பகுதியில் செயல்பட்ட ‘தமிழ்க் கூலி மிஷன்’ என்ற பெயரிலான கிறித்தவ மறைபரப்பல் அமைப்பின் செயல்பாடுகள் குறித்ததாகும். “கிறிஸ்தவ மிஷனரிகள் தமது மதம் பரப்பும் பணியில் பிறசமயங்களைத் தாக்கி அவர்களின் விரோதத்தை வளர்த்துச் செயல்பட்ட ஆரம்பகாலப் போக்கையே கோப்பி கிருஷிக் கும்மியும் பின்பற்றிச் செல்கிறது” என்று கணிக்கும் ஆசிரியர் இது தொடர்பான எடுத்துக்காட்டுகள் சிலவற்றை இக்கும்மி நூலில் இருந்தும், ஏனைய நூல்களில் இருந்தும் கையாளுகிறார்.

வேலைத் தளத்தில் மரம் விழுந்து இறந்துபோன முனியாண்டி என்பவன் முனியாண்டி என்ற தெய்வ மாக்கப்பட்டதாக இக்கும்மிப்பாடல் தெரிவிக்கிறது. சங்ககால நடுகல் வழிபாட்டில் இருந்து, இறந்தோரை வணங்கும் மரபு தமிழர்களிடம் தொடர்ந்து நிலைபெற்ற ஒன்றாகும். கொலையுண்டும் விபத்தில் இறந்துபோனவர்களுமான மனிதர்களைத் தெய்வமாக்கி வணங்கும் தமிழக நாட்டார் சமயமரபு இங்கு பகடி செய்யப்படுகிறது. அத்துடன் இத் தெய்வவழிபாடுகளைக் கைவிட்டு ‘காதலாய் வேதம் வாசியுங்கள், காட்டிடும் போதனை கேட்டிடுங்க’ என்று சமயப் பரப்புரை செய்கிறது.

டபிள்யூ நைட்டன் என்பவர் எழுதிய ‘இலங்கையின் காட்டு வாழ்க்கை’ என்ற நூலில் இருந்து ஆசிரியர் காட்டும் மேற்கொள்கள், தோட்டங்களை நோக்கிய காட்டு வழிப்பயணத்தின்போது எதிர்கொண்ட கொடூரங்களை நாம் அறியச் செய்கின்றன.

‘கோப்பி கிருஷிக்கும்மி’ எழுதி மூன்றாண்டுகள் கழித்து 1872இல் ஆபிரஹாம் ஜோசப் ‘The Plantest Colloquial Tamil Guide’ என்ற நூலை வெளியிட்டார்.

‘ஜோசப்பின் ஆங்கில, தமிழ்ப்புலமையை மட்டுமல்ல, இலங்கையின் கோப்பியுகத்தின் தோட்ட துரைமாரது வாழ்க்கையின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும் நமக்குத் தருகிறது என்று இந்நூலை மதிப்பிடும் ஆசிரியர், இந்நூல் ‘இலங்கையின் தோட்டத் துரைமார்களுக்காகவும் ஆங்கில வர்த்தகர்களுக்காகவுமே எழுதப்பட்டிருக்கிறது’ என்ற உண்மையையும் குறிப்பிடுகிறார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ‘இந்நூலின் தமிழ்ப் போதனையைவிட கோப்பிக் காலத் துரைமார்களதும் அவர்களது நாளாந்த சுவராஷ்யமான விபரங்களைத் தருவதில் ஆ. ஜோசப்பின் இந்நூல் கோப்பிகால மலையகத் தமிழரின் வாழ்க்கைக் கோலத்தைச் சித்திரிக்கும் முக்கிய ஆவண அந்தஸ்தைப் பெறுகிறது’ என்றும், கோப்பித் தோட்டங்களில் இடம்பெறும் தொழில் நடவடிக்கைகளைவிட, தோட்டத் துரையைச் சார்ந்து இடம்பெறும் நாளார்ந்த நிகழ்வுகளும், தொழிலாளரின் எதிர்வினைகளும், துரைமாரின் கூர்மையான அவதானிப்புகளும் சேர்ந்து, ஜோசப்பின் இந்த நூலை சுவாராஸ்யமான வாசிப்பிற்குரியதாக்குகின்றன’ என்றும் மிகச் சரியாக அவதானித்துள்ள நூலாசிரியர், தம் அவதானிப்பிற்கு வலுசேர்க்கும்வகையில் நூலில் இருந்து சில உரையாடல் பகுதிகளை மேற்கோளாகக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோட்ட உரிமையாளர்களான வெள்ளையர்கள், தொழிலாளர்களுடன்
உரையாட உதவும்வகையில் தமிழ் கற்றுத்தரும் வகுப்புகள் ஸ்காட்லாந்தின் துறைமுக நகரமான ‘அபார்டின்’ நகரில் ஆரம்பிக்கப்பட்டன (பக்கம் 80 - 81). அத்துடன் தோட்டத் துரைமார்கள் தமிழ் படிப்பதற்கு அல்லது கூலிகளின் தமிழைப் புரிந்துகொள்வதற்கு ‘Inge vaa’, ‘Cooly tamil’ என்ற இரு முக்கிய நூல்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்று குறிப்பிடும் ஆசிரியர் (பக்கம் 82) இவ்விரு நூல்களையும் ‘துரைத்தன அடக்குமுறையும் கூலித்தமிழும்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் அறிமுகம் செய்வதுடன் ஆய்வையும் நிகழ்த்தியுள்ளார்.

கட்டுரையின் தொடக்கத்தில், தொழிலாளரின் அவலநிலை, தொழிற் சட்டங்கள் குறித்தும் தொழிலாளர்கள் மீதான வன்முறைத் தண்டனைகள் (சரீர தண்டனை) குறித்தும் ஆசிரியர் கூறும் செய்திகள் அதிர்ச்சியூட்டுவன (பக்கம் 68 - 78). இவற்றை வெளிப்படுத்த எழுத்தாவணங்களுடன் நாட்டார் பாடல்களையும் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கட்டுரையில் அவர் ஆராயும் இருநூல்களையும் ‘கூலித் தமிழ்ப் போதினிகள்’ என்று குறிப்பிடும் ஆசிரியர் இவற்றின் அமைப்பு குறித்தும் பேசுகிறார். “இந்நூல் கள் முழுவதும் ஆங்கிலத்திலேயே அமைந்தன. தமிழ் எழுத்துகள் எதுவுமே காணப்படமாட்டாது. முதலில் ஆங்கில வாக்கியத்தை எழுதி அதனை எவ்வாறு தொழிலாளர்கள் பேசுவார்களோ அந்தப் பேச்சு மொழியை அப்படியே ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் பேசுவதற்குத் துணைபுரிவதாகவே இவை அமைந்துள்ளன.

உதாரணம் :

Send her to the line - Layathukku Poha Sollu 
(லையனுக்கு போகச் சொல்லு)
Silent - Pesamal iru, Vay Modu (பேசாமல் இரு, வாய் மூடு)”

இந்நூல்கள் குறித்த தம் ஆய்வின் நோக்கம் மொழி சார்ந்த ஒன்றல்ல என்பதையும் “தோட்டத் துரைத்தனத்தின் ஒடுக்குமுறை, தொழிலாளர்களின் எதிர்ப்புணர்வு ஆகியவற்றை எவ்வளவு தூரம் வெளிப்படுத்துகின்றன” என்பதே தம் ஆய்வின் நோக்கம் என்றும் தெளிவாக வரையறுத்துக் கொண்டுள்ளார் ஆசிரியர்.

‘இங்கே வா’ என்ற நூலைக் குறித்து, “ஒரு கூலிக்கு ஆணையிடும் தன்மையை இந்நூலின் தலைப்பு பறையாற்றுகிறது” என்று அறிமுகம் செய்துவிட்டு நூலில் இடம்பெற்றுள்ள வாக்கியங்கள், ‘தப்பு அடி’, ‘வாய்பொத்து’, ‘பேசாமல் இரு’ என ஏவல் வாக்கியங்களாக அமைந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். இந்நூலின் உள்ளடக்கம் குறித்து ஆராயும் ஆசிரியர் (பக்கம் 84 - 89) உரையாடல் வழியாக அறியலாகும் தொழிலாளரின் அவலநிலையையும் எதிர்க்குரலையும் வெளிப்படுத்துகிறார்.

‘பேசாமல் இரு’, ‘வாய்மூடு’, ‘வாய்பொத்து’ என்று துரைமாருக்கு இந்தத் தமிழ்போதினி நிறைய உதவுகிறது என்று இந்நூலின் பயன்பாட்டை எள்ளல் தன்மையுடன் குறிப்பிடும் ஆசிரியர், யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு இந்நூலில் இடம்பெற்றுள்ளதையும் எடுத்துரைக்கிறார்.

1915ஆம் ஆண்டில் வெளியான ‘கூலித் தமிழ்’ என்ற நூலின் ஆசிரியரான டபிள்யூ.ஜி.பி. வெல்ஸ் தம் நூலின் ஆங்கில முன்னுரையில் ‘கூலிகளின் இலக்கணமில்லாத மொழியைக் கற்றுக் கொள்ளவும், கூலி சொல்வதைப் புரிந்துகொள்ளவும், தான் சொல்வதைக் கூலி புரிந்துகொள்ளவும் உதவக்கூடிய ஒரு நூலை சின்னத் துரைமாரின் கரங்களுக்கு வழங்குவதே எனது ஒரே நோக்கம், என்று குறிப்பிட்டுள்ளார் (பக்கம் 89). இந்நோக்கத்திற்கு அப்பால் ‘நூலில் உறைந்திருக்கும் துரைத்தன ஒடுக்குமுறையின் சொல்லாடல் பற்றியே’ இந்நூலாசிரியர் கவனம் செலுத்தியுள்ளார். இத்தமிழ்ப்போதினிகள் குறித்து துரைமார்கள் கட்டளை பிறப்பிப்பார்கள், அதனைத் தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுவே துரைமார் தயாரித்த தமிழ்போதினிகளின் அடிநாதமாக இருந்தது என்று மதிப்பிடுகிறார் நூலாசிரியர். தம் மதிப்பீட்டை நிறுவும்வகையில் நூலில் இருந்து சில பகுதிகளை எடுத்துக்காட்டாகக் காட்டியுள்ளார்.

இந்திய விடுதலைக்கு முன்னர் இக் கூலித்தமிழ்ப் புத்தகத்தைப் படித்தறிந்த ஏ.கே. செட்டியார் இந்நூல் குறித்து, “கூலித்தமிழ்ப் புத்தகம் தோட்டக்காரத் துரைகளுக்குக் கூலிகள் பேசும் தமிழை மட்டும் போதிக்கவில்லை, கூலிகளிடம் நடந்துகொள்ள வேண்டிய முறையையும் போதிக்கிறது” என்று பதிவு செய்துள்ளமையும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. இத்தமிழ் போதினிகளில் தொழிலாளர் மீதான துரைமார்களின் சுரண்டலையும் ஒடுக்குமுறைகளையும் மட்டுமின்றி தொழிலாளர்களின் எதிர்ப்புணர்வையும் பக்கத்திற்குப் பக்கம் நாம் பார்க்க முடிகிறது என்ற தமது அவதானிப்பை முன்வைக்கும் ஆசிரியர், தோட்டத் தொழிலாளர்களுக்காக நடேசையர் வெளியிட்ட ‘தொழிலாளர் சட்ட புஸ்தகம்’ என்ற நூல் ஏற்படுத்திய விழிப்புணர்வையும் குறிப்பிட்டுள்ளார். துரைமார்களுக்கான கூலிபோதினிகளுக்கு மாறாக, தோட்டத் தொழிலாளர்கள் துரைமார்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்பதை நடேசையரின் நூல் உணர்த்தி நின்றது.

ஆலை அதிபராகவும் கல்வி நிறுவனங்களின் நிறுவனராகவும், தமிழ்நாடு என்ற பெயரிலான நாளிதழை நிறுவி நடத்தியவராகவும் தமிழ்நாட்டில் அறிமுகமாகியுள்ள ஆளுமையாளர் கருமுத்து தியாகராசர், மலையகத் தமிழரின் அவலம் போக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளை நான்காவது கட்டுரை ஆராய்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை பரவலாக அறியப்படாத அவரது வாழ்வின் சிறப்பான மறுபக்கத்தை மிகத் துல்லியமாக இக்கட்டுரை ஆராய்கிறது.

இலங்கையின் தோட்டத் தொழிலாளர் நிலை குறித்து அவர் வெளியிட்ட குறுநூல்கள், தொழிலாளர் நலன் தொடர்பான ஆணையங்களின் முன்பாக அவர் அளித்த சாட்சியங்கள், அவர் அங்கம் வகித்த தொழிலாளர் நல அமைப்புகள் தொடர்பான பல செய்திகள் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

மண்டபம் முகாமில் கூலிகள் எதிர்கொள்ளும் அவமானங்கள், விலங்குகளைப்போல் கப்பலின் மூன்றாம் வகுப்பில் அவர்கள் அடைத்துச் செல்லப்படும் கொடுமை, சேங்கொட்டையால் நெஞ்சில் சூடுபோட்டு அடையாளப்படுத்தப்பட்ட கொடுமை, அவர்களுக்கு வழங்கப்பட்ட தரக்குறைவான உணவு, அவர்கள் விற்பனைப் பொருளாக ஆக்கப்பட்ட அவலம், கைதிகள்போல் தோட்டங்களுக்குள்ளேயே வாழ வேண்டிய கட்டாயம், உரிய ஊதியமின்மை, தோட்டத்தை விட்டுத் தப்பிச் சென்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படல், சிறைச்சாலையில் கடின வேலைக்கு உட்படுத்தப்படல், கங்காணிமார்கள் சவுக்கால் அடித்தல், உடல் நலக்குறைவால் வேலைக்குச் செல்லாதோருக்கு வாராந்திர அரிசியை நிறுத்திவைத்துப் பட்டினிபோடல், கொக்கிப்புழு நோயால் பாதிக்கப்படல், மருத்துவ வசதியின்மை எனப் பல்வேறு அநீதிகளுக்கு எதிராக இவர் குரல் கொடுத்துள்ளது, மலையகத் தொழிலாளரின் போராட்ட வரலாற்றில் தனி முக்கியத்துவம் வகிக்கிறது (பக்கம் 110)” என்று குறிப்பிடுகிறார்.

“இருண்ட மலைச் சிகரங்களுக்குள் - வனாந்தரப் பிரதேசத்தில் வீசியெறியப்பட்டு எவ்வித ஆதரவும் இல்லாத சூழலில் இந்தியத் தமிழர்கள் உழன்றபோது அவர்களின் ஈனநிலை கண்டு துயருற்று, கண்டனங்கள் எழுப்பிய முதல் பெருமகனாகக் கருமுத்து தியாகராசர் திகழ்கிறார்”. என்று கட்டுரையின் இறுதியில் இடம்பெற்றுள்ள மதிப்பீடு பொருத்தமானது என்பதற்கான சான்றுகள் இடம்பெற்றுள்ளன.

இறுதி மூன்று கட்டுரைகளும் மலையகத்தில் தோன்றிய, தொடக்கக் காலப் படைப்பிலக்கியங்கள் குறித்து ஆராய்கின்றன.

இலங்கையின் மலையகத் தமிழர் வரலாறானது ஆங்கிலக் காலனியத்தின் கொடூர முகத்தையும், சிங்கள அரசின் சிங்களப் பேரினவாதத்தையும், இந்திய அரசின் பொறுப்பற்ற தன்மையையும் உள்ளடக்கியது.

இம்மக்களை மையமாகக் கொண்ட ஆய்வென்பது இந்தியா - இலங்கை - இங்கிலாந்து என்ற மூன்று நாடுகளுக்குள்ளும் கிட்டும் தரவுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டியதாகும். “தோள்கண்டார் தோளே கண்டார்” என்பதுபோல் தோட்டத்துரைகளின் எழுத்துப்பதிவுகளையும், காலனிய அரசின் ஆவணங்களையும் மட்டுமே சான்றாகக் கொண்டு எழுதமுடியாத ஒன்று. நமது மரபு சார்ந்த வரலாற்று வரைவில் சான்றுகளாகச் சுட்டப்படுவனவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை வரையும்போக்கிலிருந்து நம்மில் பலர் விடுபடவில்லை. எவற்றைத் தரவுகளாகக் கொள்வது என்பதில் பழைய மரபே ஆதிக்கம் செலுத்துகிறது.

ஆனால் இந்நூல் இப்பழைய போக்குகளில் இருந்து விடுபட்டுப் புதிதாக இயற்றப்பட்ட நவீனக் கும்மிப்பாடலையும், மொழி போதினிகளையும், வாய் மொழிப் பாடல்களையும் அடிப்படைச் சான்றுகளாகக் கொண்டு மலையகத் தொழிலாளர்களின் கடந்த கால வரலாற்றைக் கட்டமைக்கிறது. அதே நேரத்தில் ஆவணக் காப்பக ஆவணங்களைப் புறக்கணித்து விடவுமில்லை. இவ்விருவகைச் சான்றுகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளது. இவ்வகையில் இந்நூல் ஒரு வழிகாட்டி யாக அமைகிறது.
நன்றி - காலச்சுவடு

915 இல் Wells எழுதிய Cooly Tamil முழுமையான நூல்

தோட்டத்தொழில் மூலம் தொழிலாளருக்கு கிடைக்கும் வருமானம் போதுமானதா? - கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ்


உலகில் தேயிலை உற்பத்தி செய்யப்படும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் உள்ள தொழிலாளர்களுக்கே அதிகமான சம்பளம் வழங்கப்படுவதாக பெருந்தோட்ட முகாமைத்துவத்தில் மிக நீண்டகால அனுபவமிக்கவரும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவருமான ரொசான் ராஜதுரை குறிப்பிட்டிருக்கின்றார். அதிக சம்பளம் வழங்கப்படுவதால் தேயிலையின் உற்பத்தி செலவும் அதிகரிக்கப்படுகிறது. இப்போதைய நிலையில் ஓவ்வொரு கிலோகிராம் தேயிலை உற்பத்தியின்போதும் 100 ரூபா நட்டம் ஏற்படுவதாகவும், இந்நிலையில் தொழிலாளர்களுக்கு எவ்வாறு சம்பள அதிகரிப்பு வழங்கப்படலாம் என்றும் வினவுகின்றார். உண்மையில் தேயிலை தொழிலின் புதிய பரிமாணங்கள் என்ன? பெருந்தோட்டங்களில் வாழ்பவர்கள் தமது வாழ்வாதாரத்தை எவ்வாறு தக்கவைத்துக் கொள்ளமுடியும் போன்ற சில விடயங்கள் இங்கு அவதானிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேயிலை தொழிலின் புதிய பரிமாணங்கள் : 
இன்று தேயிலை உற்பத்தி என்பது பெருந்தோட்டங்களிலேயே முழுமையாக தங்கியிருப்பதாகக் கூறுவதற்கில்லை. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த தேயிலை உற்பத்தியில் (320 மில்லியன் கிலோ கிராம் ) சுமார் 70 வீதமானவற்றை (ஏறத்தாழ 225 மில்லியன் கிலோகிராம்) காலி, மாத்தறை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் உள்ள சிறு தோட்டங்களே உற்பத்தி செய்கின்றன.

இரண்டாவதாக முதலாளிமார் சம்மேளத்தின் கீழ்வரும் தோட்டங்களில் உள்ள முழுமையான தேயிலை காணிகளும் தேயிலை உற்பத்திக்காக பயன்படுத்துவதில்லை. உதாரணமாக பெருந்தோட்ட கம்பனிகளிடம் சுமார் 1,18,000 ஹெக்டேயர் காணிகள் இருந்தாலும் அதில் சுமார் 85,000 ஹெக்டேயர் காணிகள் மட்டுமே முழுமையான தேயிலை பயிர்செய்கைக்காக பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமன்றி, சுமார் 60 வீதமான தேயிலைச் செடிகள் 100 – 150 வருடம் ப.ைழமையானவையாகும். தாவரவியல் விளக்கங்களின்படி ஒரு தேயிலைச் செடியின் சராசரி பயன்தரும் காலம் சுமார் 50 வருடங்களாகும். இந்நிலையில் கம்பனிகள் பராமரித்த தேயிலைச் செடியிலிருந்து உச்ச பயனைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்பது கேள்விக் குறியாகும்.

அதன் காரணமாக கம்பனி தோட்டங்களில் சராசரி உற்பத்தித் திறன் ஒரு ஹெக்டேயருக்கு ஒரு வருடத்தில் சுமார் 900 கிலோ கிராமாகவே காணப்படுகின்றது. அதேவேளை சிறு தோட்டங்கள் தமது உற்பத்தியில் சுமார் 90 வீதமானவற்றை அதிக விளைச்சல் தரக்கூடிய தேயிலைச் செடிகளிலிருந்தே பெறுகின்றன. இதனூடாக வருடாந்த உற்பத்தித் திறன் சுமார் 3000 கிலோகிராம் வரை ஒரு ஹெக்டெயரில் வருடாந்தம் பெற்றுக்கொள்பவர்களாக உள்ளனர்.

கம்பனிகளிடமுள்ள மொத்த நிலத்தில் பழமையான (60 வீதம் ) தேயிலையை முகாமைத்துவப்படுத்தும் கம்பனிகளில் அதிக விளைச்சல் தரும் தேயிலையை விஸ்தரிப்பதில் போதுமான முதலீடுகளை மேற்கொள்ளத் தவறியுள்ளனர். இந் நிலையில் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்ற அளவில் தேயிலைக் கொழுந்தை பறிப்பதில்லை என்று கூறுவது எந்தளவு பொருத்தமானது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பயிர்ச் செய்கையில் பெருமளவு முதலீடுகள் மீது கவனம் செலுத்த முடியாதுபோன கம்பனிகள் எப்படி ஒரு இலாபம் தரும் நிறுவனமாக எதிர்பார்க்கலாம் என்பதெல்லாம் கேள்விக்குரியதாகவே உள்ளது. வருமானமே இல்லாத நேரம் அல்லது நட்டத்தில் இயங்கும் கம்பனிகள் தொழிற்சங்க சட்ட விதியின்படி தொழிலாளர்களின் சேம நலன்கள் பிறப்பு முதல் இறப்பு வரை உச்சளவில் வழங்கப்பட வேண்டும் என்பதும் நடைமுறைக்கு பொருத்தமானதல்ல.

சிறு தோட்டங்களைப் பொருத்த வரையில் மொத்தமாக உள்ள சுமார் 1,00,000 ஹெக்டேயர்களில் 80 வீதமானவை 1/4 ஹெக்டேயர்களுக்கு குறைவான பரப்பளவினைக் கொண்ட சிறு உடைமைகளாகும். இச்சிறு தோட்டங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல காலி, மாத்தறை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 4,00,000 பேரிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் சிறு உடைமையாளர்களின் குடும்பத்தினரே தேயிலை பராமரிப்பில் ஈடுபட்டுள்ளனர். எனினும், தேயிலை சிற்றுடைமை அதிகார சபையினூடாக இச் சிறு தோட்டங்கள் அரசாங்கத்தின் அனுசரணையுடன் பராமரிக்கப்படுவதால் உற்பத்தி, சந்தைப்படுத்தல், ஆலோசனைகள் என்பன முறையாக செயற்படுத்தப்படுவதால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ச்சியடைந்து செல்கின்றன. சுருக்கமாகக் கூறினால் சிறு தோட்டங்கள் இலாபமிக்க துறையாகவும் தேயிலை தொழிலை நின்று நிலைத்திருக்க கூடிய தொழிலாகவும் மாற்றியுள்ளது. இந் நிலையில் பெருந் தோட்டங்கள் மந்த கதியிலேயே வளர்ந்துள்ளன. இதை தொழிலாளர்கள்தான் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறாகும்.

சம்பள அதிகரிப்பு :
கூட்டு ஒப்பந்தத்தின்படி வருடாந்தம் 300 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாகும். உண்மையில் கம்பனிகள் இதனை நடைமுறைப்படுத்து வதாகவே குறிப்பிடவேண்டும். நாளாந்த வேலைக்கு ரூபா 620 என்றவாறு 300 நாள் வேலை செய்தால் ஒரு தொழிலாளிக்கான வருட வருமானம் ரூ.1,86,000 ஆகும். அவ்வாறாயின் ஒரு தொழிலாளிக்கான மாத வருமானம் (ரூ.1,86,000 /12) ரூபா . 15,500 ஆகும். ஒரு குடும்பத்தில் இருவர் வேலை செய்வதாக எடுத்துக் கொண்டால் பெருந்தோட்ட தொழிலாளர்களில் குடும்ப வருமானம் (ரூ. 15,500 x 2) ரூ.31,000 இருக்கவேண்டும். இந்த அனுமானங்களை கணக்கிட்டே தொழிலாளர்கள் “அதிக வருமானம்” பெறுபவர்களாக உள்ளனர். எனினும் வருமானம் அதிகமாக கிடைப்பதால் இவர்கள் அதனை வீணாகக் குடித்து கும்மாளம் போடுவதற்கும், களியாட்டங்களுக்கும் பெருமளவு செலவு செய்து வருகின்றனர் என்று கூறுகின்றனர். உண்மையில் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை மேலே குறிப்பிட்டது போல கிடைக்கும் என்பது வெறும் அனுமானமேயாகும்.

அது தோட்டத்தில் வேலை செய்யும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் நன்கு தெரிந்த விடயமாகும். கிடைக்கப் பெறுகின்ற தகவல்களின்படி தோட்ட வேலைகளிலேயே முழுமையாக தங்கியுள்ள தொழிலாளிக்கு சராசரி குடும்ப வருமானமாக ரூபா 8000 – 10,000 மட்டுமே கிடைக்கிறது. வருடம் 300 நாட்கள் என்றால் மாதாந்தம் 25 நாட்கள் வேலை வழங்கவேண்டும். இருப்பினும் சகல வகையிலும் தொழிலாளர்கள் மாதாந்தம் 17 அல்லது 18 நாட்கள் வேலை செய்ய முடிகின்றது. அப்படியான சூழ்நிலையிலேயே தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படை சம்பளமாக ரூபா 450 நிர்ணயிக்கப்பட்டது. எதிர்வரும் மாதத்தில் இது பற்றிய பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படலாம். இதன் போது பின்வருவனவற்றை கருத்திற் கொள்ளல் அவசியமாகும்.

1. தொழிலாளர்கள் தொடர்ந்து தோட்டங்களில் வேலை செய்தற்கான ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற மேலதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ள கம்பனிகள் தேயிலை உற்பத்தியை பொருத்தமானளவு அதிகரிக்க முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் அடிப்படை சம்பளத்தில் மாற்றம் ஏற்படுத்தாது போனாலும் மேலதிக கொழுந்திற்கு ஒரு கிலோ பச்சை கொழுந்தின் உற்பத்தியாக இறுதி உற்பத்தியை சுமார் 125 ரூபா விற்கு விற்க முடியும். எனவே இறுதி விலையில் குறைந்த பட்சம் 40 வீதத்தை அதாவது ரூபா 50 க்கு வழங்குமாறு கோரலாம்.

2. கம்பனிகளின் தொழிலாளர்கள் வேலைக்கு தொடர்ச்சியாக வருகை தர வேண்டும் என்பதற்கு சில கட்டுப்பாடுகள் வழங்கியுள்ளன. அதாவது வேலை வழங்கும் நாட்களில் 75 வீதத்திற்கு அதிகமாக வேலைக்கு வருபவர்களுக்கு மேலதிக கொடுப்பனவு என்று மொத்தமாக ரூபா 620 வழங்குகின்றனர். இது எந்தளவு தொழிலாளர்களை கவர்ந்துள்ளது? இதனால் தோட்டக் கம்பனிகள் நினைத்தவாறு தொழிலாளர்களை வேலைக்கு கவர்ந்திழுத்துள்;ளனரா? தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் இது பொருத்தமான உபாயமாக தொடர்ந்தும் மேற்கொள்ளலாமா என்று ஆராய்வது அவசியமாகும்.

3. 1992 இல் கம்பனிகள் தோட்டத்தை பொறுப்பேற்றதில் இருந்தே வருடங்களுக்கு சராசரியாக சுமார் 16,500 பேர் தோட்ட வேலையில் இருந்து விலகிச் செல்கின்றனர். இப்போது சுமார் 2,32, 000 தொழிலாளர்கள் அங்குள்ள 1,18,000 ஹெக்டேயர் காணிகள் பராமரிப்பில் உள்ளனர். இந்நிலைமை தொடருமானால் அடுத்து வரும் 15 வருட காலத்தில் (வருடம் 16,500 பேர் விலகிச் செல்லல்) கம்பனி தோட்டங்களில் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை ப+ச்சியமாகிவிடும்.

இவை யாவற்றையும் கவனத்திற் கொண்டு பொருத்தமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். தேயிலையை இலாபமுள்ள பொருளாகக் கொண்டு நடத்த முடியாதுபோன கம்பனிகளிடம் இலாபத்தில் பங்கு கேற்பது நியாயமானதாக இல்லை.

உலகில் அதிகளவு சம்பளம் கொடுத்தால் மேலதிக சம்பளம் கேட்பது என்பது முழு பிரபஞ்சத்திலும் வேலை செய்யும் தொழிலாளர்களைக் காட்டிலும் அதிக சம்பளத்தை இலங்கையில் உள்ள தோட்டத்தொழிலாளருக்கு கேட்பது போன்ற விடயமாகும். இது சாத்தியப்படுமா? மற்றது தேயிலை உற்பத்தியில் தொழிலாளர்களின் செலவே அதிகமானது என்கின்றனர். இந் நிலையில் அவர்களிடம் சம்பளம் கேட்பது என்பது மொட்டை தலையில் முடிச்சு போடும் முயற்சியாகும்.

இவ்வாறான நிலவரங்களை புரிந்து கொண்ட தொழிலாளர்கள் பலர் (சுமார் 2,50,000 பேர்) ஏற்கனவே தோட்டத் தொழிலை நிரந்தர தொழிலாக கருதவில்லை. எஞ்சியுள்;ள 2,32,000 பேர் மட்டுமே கம்பனி தோட்டங்களில் நிரந்தர தொழிலாளர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கையானது சுமார் 1,15,000 குடும்பங்களுக்கு சமமானதாகும். இக் குடும்பங்கள் தோட்டத்தில் வேலைசெய்ய விரும்பலாம். ஆனால் தமது வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளத் தோட்ட வேலைகள் மூலம் கிடைக்கும் வருமானம் போதுமானதல்ல. அவ்வாறான நிலையில் அவர்கள் வேறு வருமானங்களை தேடிக்கொள்ளவேண்டும். அதற்கு பொருத்தமான உபாயங்களை தோட்டத்தில் ஏற்படுத்துவது அவசியமாகும்.

இதற்கு ஒரே வழி அவர்களுக்கு வாழும் இடம் மற்றும் வாழ்க்கையை கொண்டு நடத்த பொருத்தமான விவசாய நிலம் என்று சுமார் 20 பேர்ச் காணியில் வீடுகள் அமைத்து அதனை அவர்களுக்கு சொந்தமாக வழங்குவதேயாகும். இப்படியான நிலையில் இருக்கின்ற தொழிலாளர்கள் சொந்த வீடுகளில் அங்கேயே இருப்பர். அவர்களது வாழ்க்கையிழும் மறுமலர்ச்சி ஏற்படும். கம்பனிகளும் நிம்மதியாக பொருளாதார விதிகளின்படி மாற்று உபாயங்களை மேற் கொள்வர். யாவரும் நலமுடன் வாழலாம்.
நன்றி - வீரகேசரி

இரட்டை தனிவீட்டுத் தொகுதி மலையகத்துக்கு உகந்ததா? பெ.முத்துலிங்கம்

பெ.முத்துலிங்கம்
மலையக மக்களுக்கு எல்லா பிரதேசங்களிலும் தனிவீட்டுத் திட்டத்தையே ஊக்குவிப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆங்கிலப்பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றினை வழங்கியிருந்த தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் கூறியுள்ளார். அதேவேளை, இரு நுழைவாயில்களின் இருபக்கத்திலும் காணித்துண்டுகளை கொண்ட மாடி வீட்டுத்திட்டதையும் அமுல்படுத்துவதாகவும் கூறியுள்ளார். இவ்விரு நுழைவாயிலைக் கொண்ட மாடிவீட்டுத்திட்டம் நிலத்தை சுற்றிவரக் கொண்ட அயலவர்களின் தொந்தரவற்ற அழகான வீட்டுத்திட்டம் எனவும் கூறியுள்ளார்.
“ Every where we will be promoting the concept of single unit houses. That will be our first priority. There will also be upstairs houses but separately for each family with two entrances, with plots of land s on either side and not adjoined to another housing unit. It will be in a beautiful setting with lands surrounding and not disturbances from neighbours”
மலையகத்தில் பிறந்து வளர்ந்த அமைச்சர் கே. வேலாயுதம் மலையக தோட்ட மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்த தொழிற்சங்கவாதியாவார். தோட்டத்துறை மக்களின் அடிப்படை மனித உரிமை பிரச்சினையான காணியுரிமையுடனான வீட்டுப்பிரச்சினையை நன்கு அறிந்த அமைச்சர், இரு நுழைவாயிலைக் கொண்ட மாடிவீட்டுத்திட்டத்தை அறிமுகப்படுத்த முனைவது கவலைக்குரிய தொன்றாகும். இத்திட்டத்துடன் வேறு பல உகந்த திட்டங்களையும் அமுல்படுத்துவது பற்றி அரசாங்கம் கவனத்திற் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்கள் தொடர் வறுமை “ Porsistent Poverty” நிலையில் இருப்பதற்கு பிரதான காரணங்களில் ஒன்று அவர்களுக்கென சிறுநிலத்துடன் கூடிய தனி வீடு ஒன்று இன்மையேயாகும் என்று பல ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இலங்கையில் ஆட்சிபீடமேறிய அனைத்து அரசாங்கங்களும் சிறு துண்டுக் காணியையாவது தோட்ட மக்களுக்கு சொந்தமாக வழங்க ஒருபோதும் விரும்பியதில்லை. மாறாக, காலத்திற்கு காலம் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு குறிப்பாக 1972 முதல் இது நாள்வரை பல காரணிகளைக் காட்டி தோட்டக்காணிகளை பெரும்பான்மை மக்களுக்கு வழங்கி வந்துள்ளன. மஹிந்த ராஜப க் ஷ அரசாங்கமும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக 37 ஆயிரம் ஹெக்டயார் தோட்ட காணிகளை அடையாளம் கண்டு பெரும்பான்மை மக்களுக்கு வழங்கும் முயற்சியை மேற்கொண்டு இடையில் கைவிட்டது.

மலையக மக்களுக்கு காணிவழங்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைக்கையில் காணிகள் வழங்குவதற்கு இல்லை. அப்படியே வழங்க வேண்டுமாயின் மாடி லயன்கள் கட்டித்தருவோம், அல்லது இரட்டை மாடி வீடு கட்டித்தருவோம், இல்லையெனில் 7 பேர்ச் காணிதுண்டு மட்டுமே வழங்குவோம் என்ற கொள்கைகளையே அனைத்து அரசாங்கங்களும் முன்வைத்தன.

தோட்டத்தில் பயிரிடும் நிலங்களை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் மாடி வீட்டுத்திட்டமும், இரட்டை வீட்டுத் திட்டமும் பிரித்தானிய தோட்டக் கம்பனிகளினால் 1950களில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. வெள்ளையர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாடி மற்றும் இரட்டை வீட்டுத்திட்டங்களை ஹட்டன் மற்றும் பதுளை பகுதிகளின் ஒரு சில தோட்டங்களில் இன்றும் காணலாம்.

இப்பின்புலத்தில் அண்மைய மாடி மற்றும் இரட்டை வீட்டுத்திட்டங்களின் அறிமுகத்தை நோக்குவோமாயின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாராநாயக்க அரசாங்கத்தின் கீழ் அமைச்சராகவிருந்த ஆறுமுகன் தொண்டமான் அன்றைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாடிவீட்டுததிட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இத்திட்டமானது மலையக தோட்ட மக்களின் அடிப்படை மனித உரிமையான நிலவுரிமையுடன் கூடிய தனி வீட்டுரிமையை மறுதலித்ததுடன், மீண்டும் லயக் கலாசாரத்திற்கே வித்திடும் என அடையாளம் காணப்பட்டது.

இவ்வடிப்படை மனித உரிமை மீறலைப்பற்றி இக்கட்டுரையாளர் 2003 இல் வீரகேசரியில் எழுதிய கட்டுரையொன்றின் மூலம் வெளிக்கொணர்ந்தார். பின்னர் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம், பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றம் மற்றும் ஏனைய பல சிவில் அமைப்புகள் மாடிவீட்டுத்திற்கு எதிரான கூட்டுப் பரப்புரையை மேற்கொண்டதுடன் கொழும்ப, ஹட்டன், பதுளை உள்ளிட்ட மலையகத்தின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டன.

இதேவேளை, கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் இவ்வுரிமை மீறலை ஐக்கிய நாடுகளின் வாழ்வகப்பிரிவின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் வீட்டுரிமைக்கான ஐ.நா.சபையின் அதிகாரியான மிலோன் கோத்தாரியை 2003 ஆம் ஆண்டு ஹட்டனுக்கு வரவழைத்து அந்தப் பகுதியிலுள்ள சில தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட மாடி வீட்டுத்திட்டங்களை காட்டியதுடன் சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடல் ஒன்றினையும் நடத்தியது. இதன்பின் ஐ.நா. சபைக்கு திரும்பிய வதிவிட பிரதிநிதி மிலோன் கோத்தாரி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் மாடி வீட்டுத்திட்டத்திற்கு பதிலாக நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கு வழங்குவதுபோன்று இந்தநாட்டின் பிரஜைகளான தோட்ட மக்களுக்கும் காணியுடன் கூடிய தனிவீடு வழங்கவேண்டும் என்று விதந்துரைத்தார்.

இதேவேளை, 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்போது போட்டியிட்ட இருவேட்பாளர்களான முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் இன்றைய பிரதம மந்திரி ஆகியோரிடம் மலையக மக்களுக்கு காணியுரிமையுடன் கூடிய தனிவீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சிவில் அமைப்புகள் கூட்டாக முன்வைத்தன. இதன் ஒரு வெளிப்பாடகவே முன்னாள் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட மஹிந்த சிந்தனை பிரகடனத்தில் காணியுரிமையுடன் கூடிய 7 பேர்ச் காணியில் 50 ஆயிரம் தனி வீடுகள் கட்டித்தரப்படும் எனக்கூறப்பட்டது.

அத்துடன் 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி சபையின் அனுசரணையுடன், சிவில் சமூகத்தின் பங்களிப்புடன் தேசத்தை கட்டியெழுப்பல் மற்றும் தோட்ட உட்கட்ட அபிவிருத்தி அமைச்சினால் தோட்டத்துறைக்கான பத்தாண்டு செயற்றிட்டம் தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தில் மஹிந்த சிந்தனையில் குறிப்பிட்டது போல் தனிவீடும் காணியுரிமையும் தோட்டத் தொழிலாளருக்கு வழங்க வேண்டும் என விதந்துரைப்பு செய்யப்பட்டது.

இவ்விதந்துரைப்பு செய்தவேளை, தோட்ட உட்கட்டமைச்சின் அமைச்சராக சி.பி. இரத்நாயக்க இருந்தார். இத்திட்டம் ஏற்புரை செய்யப்பட்டவேளை, முன்னாள் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தோட்டஉட்கட்ட பிரதி அமைச்சராக்கப்பட்டதுடன் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளின் பேரில் தனிவீட்டுடன் இரட்டை வீடுகளும் (வுறin hழரளநள)கட்ட இணக்கம் காணப்பட்டது.

இரட்டை வீட்டை சிவில சமூகம் முழுமையாக எதிர்த்தது. (கட்டுரையாளர் இவ் ஏற்புரை நிகழ்வின்போது இதனை கடுமையாக எதிர்த்தார். முன்னாள்; தோட்ட உட்கட்டமைப்பின் செயலாளர் எம். வாமதேவன் இவ்வாய்ப்பினை கட்டுரையாளருக்கு பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.) எனினும் இத்திட்டம் சில தோட்டங்களில் அமுல் படுத்தப்பட்டது. இந்நிலையில் அண்மைய ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தங்கள் நடைபெற்றவேளை தென்பகுதி தோட்டங்களில் தனிவீட்டிற்கு பதிலாக இரட்டைமாடித் வீட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விரட்டை மாடித்தி;ட்டத்தையே மீரியாபெத்த மண்சரிவு பகுதியில் அமுல்படுத்த முன்னாள்; அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அடிக்கல் நாட்டினார்.
இரட்டை மாடிவீட்டுத்திட்டம் அல்லது இரட்டை ஃ தனி மாடி வீட்டுத்திட்;டத்தை ஆட்சியாளர்கள் அமுல்படுத்த முனைவதற்கான அடிப்படைக்காரணம் நிலப்பற்றாக்குறையோ அல்லது தோட்டத்துறை தொழிலாளர்களினால் சுயமாக வீடு கட்ட முடியாது என்ற அனுதாபத்தினாலல்ல. மாறாக 'தோட்டத் தொழிலாளர்களை தலைமுறை தலைமுறையாக தோட்டத் தொழிலுடன் பிணைத்து வைக்க வேண்டும்' என்ற நோக்கத்திற்காகவாகும் . இரட்டை மாடி வீடு அல்லது தனிமாடி வழங்கப்பட்டால் தோட்டத் தொழிலளார்கள் தமது வசதிக்கேற்ப நாளடைவில் அதனை பெருப்பித்துக்கொள்ளவோ அல்லது புதிதாக அமைத்துக் கொள்ளவோ வாய்ப்பு கிடைக்காது. தனிவீடாக இருப்பின் தமது குடும்பங்களின் விரிவாக்கத்திற்கேற்ப மற்றும் தமது பொருளாதார வசதிக்கேற்ப வீட்டை விரிவாக்கிக் கொள்ளலாம்

இந்நிலையில் இரட்டை அல்லது தனிமாடி வீட்டை ஆதரி;ப்போமாயின் முழு மலையகத்திலும் இரட்டை அல்லது தனி மாடி வீட்டுத்திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த முனையும். எனவே, அமைச்சர் கே.வேலாயுதம் இவ்வபாயத்தை அடையாளம் கண்டு இம்முயற்சியை கைவிட முன்வரவேண்டும்

இதேவேளை, அரசாங்கத்தின் இச்சூழ்ச்சி வலையில் தோட்டத்துறை மக்களை சிக்கவிடாது பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பனவற்றின் கையில் தங்கியுள்ளது. இன்று எழுந்துள்ள அரசியல் சூழ்நிலை மலையக மக்களின் பேரம் பேசும் சக்தியை அதிகரித்துள்ளது. எனவே மலையகத்தில் எந்தவொரு பகுதியில் வீடு அமைக்கப்பட்டாலும் அவை சிறு துண்டு காணியில் தனிவீடாகவே அமைக்கப்பட வேண்டும் என்பதே ஆட்சிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களின் கொள்கையாக இருக்கும் வகையில் நிரந்தரக் கொள்கை ஒன்றை வகுக்க சிவில் மற்றும் மலையக அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும.;

தோட்டங்களைப் பொறுத்தவரை தனிவீடு கட்டுவதற்குத் தேவையான நிலம் இருக்கின்றது. பத்தாண்டு திட்டத்தில் தனிவீட்டிற்கு 7 பேர்ச் காணியும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 30 வீத காணி ஒதுக்கப்படும.; அதாவது, சிறு நகரமயமாக்கலுக்கு காணி ஒதுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அமைச்சர் வேலாயுதம் இதனைக் கருத்திற் கொள்வதுடன், எங்காவது தோட்ட மக்களை ஏமாற்றி இரட்டை அல்லது தனிமாடி வீட்டுத் தொகுதி அமைக்கப்படுமாயின் அதனை நிராகரிக்க மக்கள் மத்தியில் சிவில் சமூகம் பரப்புரை மேற்கொண்டு அதனை முறியடிக்க வேண்டும். மலையக சிவில் சமூகம் இதனை செய்யத்தவறின் நாளைய மலையக சமூகம் இவர்களை பழிக்கும்.

1930கள் முதல் இன்றுவரையிலான காலப்பகுதியில் மலையக அரசியல் தலைமைகள் பல வலுவான பேரம் பேசும் சந்தர்ப்பங்களை தமது சொந்த நலன் கருதி தட்டிக்கழித்துள்ளன. இன்றைய புதிய அரசியல் சூழல் மலையக மக்களின் அனைத்து உரிமைகள் தொடர்பாகவும் பேரம் பேசி பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை வழங்கியுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்துள்ளதுடன், எதிர்வரும் ஏப்ரலில் பொதுத்தேர்தலுக்கு வாக்களிக்கவுள்ளனர். எனவே மலையக மக்களுக்கு காணியுடன் கூடிய தனி வீடுகளே கட்டப்படும் என்ற பொதுக்கொள்கையை கடைப்பிடிக்க அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க வேண்டும்.

நன்றி - வீரகேசரி

இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம்

எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதி காலை 10.00 மணிக்கு இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் சம்மேளனத்தின் தலைவர் லெனின் மதிவானம் தலைமையில் அட்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  இந்நிகழ்வில் சம்மேளனத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு. பீ. . ஜீ. சுரேந்திரன் வரவேற்புரையை நிகழ்த்துவார். பேராசிரியர் தை. தனராஜ், கலாநிதி . எஸ். சந்திரபோஸ் ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாளர்களாக கலந்து கொள்வார்கள். பொதுச்செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் சம்மேளனத்தின் யாப்பு விதிகள் பற்றி விளக்குவார். சம்மேளனத்தின் உபக்குழுத்தலைவர்களான திருவாளர்கள் எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, எம். சந்திரன், எஸ். சுரேஷ்காந்தன், எஸ். குமார், எம். எஸ். இங்கர்சால் ஆகியோர் உரையாற்றுவார்கள். நிருவாகச்செயலாளர் கே. கிருஸ்ணன் நன்றியுரை வழங்குவார்.

மதுபான விற்பனை நிலையங்களை அகற்ற மக்கள் போராட்டங்கள் - மலைநேசன்


மலையக மக்கள் கடுமையான உழைப்பாளிகள். அவர்களது உழைப்பின் செழுமையினாலேயே நாடு இன்று அபிவிருத்தியடைந்துள்ளது என்பதற்கு சாட்சியங்கள் அவசியமில்லை. நாடு தேசியரீதியில் அபிவிருத்தியடைய இந்த மக்கள் ஈட்டிக்கொடுத்த வருமானம் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது.

ஆனால், மலையக தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமை அவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும். இது ஒரு புறமிருக்க, அவர்களுக்கு கிடைத்த குறைந்த பட்ச ஊதியமும் குடும்பத்தை பராமரிப்பதற்குப் போதுமானதாக இருக்கவில்லை. இந்த நிலையில் அவர்களுக்குக் கிடைத்த அந்த குறைந்த பட்ச வருமானத்தின் பெரும்பகுதி மதுபாவனைக்காகவே விரயம் செய்யப்பட்டது. தொடர்ந்தும் விரயமாகிக் கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
தமக்குக் கிடைத்த வருமானத்தில் பெரும்பகுதியை மதுபான நுகர்வுக்கு செலவு செய்ததால், குடும்பப் பராமரிப்பு குறிப்பாக உணவு, உடை, பிள்ளைகளுக்கான கல்வியூட்டல் செயற்பாடுகளுக்கு பணமில்லாது திண்டாடும் நிலை ஏற்பட்டது. உணவு, உடை மட்டுமின்றி பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி கற்பிக்க முடியாத நிலைமை உருவானது.

இதனால்தான் கல்வி கற்காதோரின் எண்ணிக்கை அதிகரித்ததுடன் சிறுவயதிலேயே பிள்ளைகளை தொழிலுக்கு அனுப்பும் நிலைமையும் ஏற்பட்டது. சிறுவர் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் இதுவே காரணமாக இருந்தது. கொழும்பு போன்ற நகரப்பகுதிகளில் செல்வந்தர்களின் வீடுகளிலும் நிறுவனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் மலையக சிறுவர் சிறுமியரே பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

போதிய உணவு அல்லது போஷாக்கான உணவு உட்கொள்ளாத காரணத்தால் மந்தபோஷனம் நிறைந்த பிள்ளைகளாக மலையகத்தில் அதிகமானோர் காணப்பட்டனர். போஷாக்கு நிறைந்த உணவுகளையோ அல்லது மூன்று வேளை உணவையோ முழுமையாக பெறமுடியாத நிலைமை மலையகப் பிள்ளைகளுக்கு ஏற்பட்டது. இதற்கெல்லாம் காரணம் என்ன?

குடும்பத்தலைவன் தான் உழைத்துப் பெறும் சம்பளத்தில் பெருந்தொகையை மதுபானத்துக்கே செலவிட்டதுதான் காரணம் என்பதை எவராவது மறுத்துரைக்க முடியுமா?

தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் வறியவர்களாக அபிவிருத்தி காணாதவர்களாக கல்வியறிவற்றவர்களாக லயன் காம்பிரா என்ற சிறைக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டும் என்று முதலாளித்துவ சக்திகளும் ஆட்சியாளர்களும் சிந்தித்தனர். அதற்காக அவர்கள் பயன்படுத்தியது கத்தியோ, துப்பாக்கியோ அல்ல. மது என்ற ஆயுதந்தான். கத்தியும் துப்பாக்கியும் செய்யாதவற்றை இந்த மது என்ற சாராயம் செய்தது; செய்து கொண்டிருக்கிறது.

மது போதையில் உள்ள ஒரு மனிதன் தன்னை மறந்தவனாகவே இருப்பான். அவனுக்கு குடும்பமோ குழந்தையோ அவர்களுக்குரிய உணவு பற்றியோ அல்லது கல்வி பற்றியோ எந்தவித கவலையும் இல்லை. அது பற்றி சிந்திக்கவும் அவனால் முடியாது.

அவன் சமூக அந்தஸ்தோ, காணி, தனி வீடு, பிள்ளைகளுக்கு கல்வி, தொழில், செல்வம் என்று எதையுமே கேட்கமாட்டான். அவனது உலகமே முற்றிலும் வேறுபட்டதாகவே இருக்கும். இதன் காரணமாகவே முதலாளித்துவ சக்திகளும் ஏகாதிபத்திய அரசுகளும் தோட்டத் தொழிலாளர்கள் அதிகளவில் வாழ்ந்துவரும் இடங்களில் அதிகளவில் மதுபான நிலையங்களை ஆரம்பித்தன.

இந்தச் சக்திகளுக்கு தோள் கொடுத்தவை மலையக மக்களுக்கு சேவை செய்துவருவதாக கூறிக் கொண்டிருக்கும் தோட்டத் தொழிற்சங்கங்கள் தான்! தோட்டத் தொழிற்சங்கங்கள் எப்போது அரசியல் ரீதியாக செயற்பட ஆரம்பித்தனவோ அப்போதிருந்தே மதுபான நிலையங்கள் மலையகத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன.

கடந்த 25 வருடங்களாக மலையக நகரங்களில் மதுபான நிலையங்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து விட்டன. ஒரு நகரில் குறைந்த பட்சம் 6, 7 மதுபான நிலையங்களாவது செயற்படுகின்றன. மட்டுமன்றி நகரங்கள் இல்லாத தோட்டங்கள் மட்டுமே இருக்கும் இடங்களில்கூட மதுபான விற்பனை நிலையங்கள் இன்று இருக்கின்றன. இதற்கு உதாரணம் தேவை இல்லை.

இது மட்டுமல்ல, பிரதேச அரசியல் வாதிகளின் அனுசரணையுடன் தோட்டங்களில் மதுபானம் விற்பனை செய்யப்படுகின்றது அல்லது சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு சில அரசியல்வாதிகளே நேரடியாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மதுபானத்தினால் மலையக தோட்டத்தொழிலாளர்கள் படும் அவஸ்தைகளையும் வேதனைகளையும் எடுத்து கூறி அவற்றை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கடந்த காலங்களில் தொழிலாளர்கள் பல போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். பல சமூக அமைப்புக்கள், சமூக சேவை நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் என்பன மதுபான விற்பனை நிறுவனங்களை அகற்றவேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன.

மலையகக் கட்சிகள் பொதுத் தேர்தலில் தாம் கூட்டுச்சேரும் கட்சிகள் வெற்றி பெற்றதும் அந்தக் கட்சியிடம் முதலில் கேட்பது தமக்கு சாராய தவறணை நடத்துவதற்கான அனுமதி பத்திரம்தான். மக்கள் தேவைகள், பிரச்சினைகள் எல்லாம் இரண்டாம் பட்சந்தான். அவ்வாறு அரசுகளிடம் மலையக அரசியல்வாதிகள் பெற்றுக்கொண்ட மதுபான விற்பனை நிலையங்களே அதிகமாக இருக்கின்றன. தமது பெயரில் இல்லாவிட்டாலும் தமது உறவினர்கள், நண்பர்கள், வேண்டிய நபர்களின் பெயர்களில் இந்த நிலையங்கள் செயற்படுகின்றன.

ஏற்கனவே இந்த மதுபான நிலையங்களை தடைசெய்யவும் புதிய மதுபான நிலையங்கள் திறப்பதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கக்கூடாதெனவும் மலையகக் கட்சிகள் அரசை அல்லது சம்பந்தப்பட்ட திணைக்களத்தை வலியுறுத்தியிருக்குமானால் இன்று அவ்வளவு பெருந்தொகையான மதுபான விற்பனை நிலையங்கள் மலையகத்தில் தோன்றியிருக்காது.

இந்த நிலையில் ஹட்டன் செனன் பகுதியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்தை அகற்றுமாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை வீதி மறியல் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் குறிப்பாக பெண்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இது மிகவும் வரவேற்கக்கூடியது. மக்கள் எப்போதும் விழிப்புணர்வு பெற்று தங்களது உரிமைகளை வெல்வதற்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கும் சுயமாக வீதியில் இறங்குகின்றார்களோ அப்போதுதான் நியாயம் கிடைக்கும்.

செனன் ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் பிரதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் அங்கு சமுகமளித்திருந்தனர். அவர்களின் பங்களிப்பு மதுபான விற்பனை நிலையங்களை அகற்றுவதற்கு மிகமிக அவசியமாகும்.

இதுபற்றி அரசுடனோ அல்லது அனுமதிப் பத்திரம் வழங்கிய கலால் திணைக்களத்துடனோ பேச்சுவார்த்தை நடத்தி தோட்டங்களின் மத்தியிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மக்களை வீதியில் இறக்கி ஆர்ப்பாட்டம் செய்வதை விடுத்து இராஜதந்திர முறையில் இவற்றுக்கு தீர்வு காணலாம் என்பதே அநேகரின் வேண்டுகோளாகும்.

இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் பிரதேசங்களை இலக்கு வைத்து சாராயக்கடைகள் திறக்கப்படுவதை தடைசெய்வதற்கு குறிப்பாக, அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்வதற்கான பிரேரணையை மத்திய மாகாண சபையில் கொண்டு வரவுள்ளதாக இ.தொ.கா பிரமுகரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. இவ்வாறான ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு மலையக மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்குவர். எனவே, அவ்வாறானதொரு பிரேரணையை மாகாணசபையில் விரைவில் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.

மத்திய மாகாணசபையில் மட்டுமன்றி, இந்திய வம்சாவளி தமிழ் தோட்ட மக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ள சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாண சபைகளிலும் கொண்டுவர வேண்டும். இதனால் பெருந்தோட்ட மக்கள் பெரும் நன்மையடைவர்.

இப்போதெல்லாம் தேர்தல்கள் வந்துவிட்டால் தோட்டங்களிலுள்ள சிலருக்கு கொண்டாட்டம்தான். தேர்தலின்போது சில கட்சிகள் சாராய போத்தல்களை கொடுத்து வாக்குகளை அறுவடை செய்து கொள்கின்றன.
தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் மக்களுக்காக தாம் செய்த சேவைகளையும் பெற்றுக்கொடுத்த உரிமைகளை பற்றியும் எதிர்காலத்தில் பெற்றுக்கொடுக்கவுள்ள நன்மைகளைப் பற்றி சொல்லியுந்தான் மக்களிடம் வாக்குகளை கேட்பது வழக்கம். இதுதான் ஜனநாயக பண்பாடும் கூட. ஆனால், மலையகத்தைப் பொறுத்தவரையில் இவையெல்லாம் தேவையில்லை. சாராயமும் சாப்பாடு பார்சலும் கொடுத்தால் போதும் வாக்குகள் குவியும் என்றொரு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இது இனியும் வேண்டாம். எந்த கட்சியினரும் சாராயம் வழங்கக்கூடாது.

சில மலையக தமிழ் கட்சிகள் மட்டுமன்றி, வேற்று இன அரசியல்வாதிகளும் நீண்ட நாட்களாக சாராயத்தை வழங்கி இலகுவாக வாக்குகளை அறுவடை செய்து கொள்கின்றனர். எமது ஜனநாயக உரிமையில் மிகப்பெரியதுதான் வாக்களிக்கும் உரிமை. அந்த உரிமையைக்கூட சாராயத்துக்காக விற்பனை செய்துவிட்டு ஜனநாயக உரிமைகள் பற்றி எப்படி பேசுவது?
எனவே மது ஒழிப்பு, மதுபான விற்பனை நிலையங்களை அகற்றுவதை ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். சகல கட்சிகளும் அமைப்புக்களும் இதற்கு தமது தார்மீக ஆதரவை வழங்க வேண்டும். ஒன்றுபட்டு மதுபான ஒழிப்புக்கு செயற்பட வேண்டும். இதற்கு மலையக மக்கள் அனைவரும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

மதுவை ஒழிப்பதன் மூலமே மலையக சமூகத்தின் வறுமை, பிரச்சினைகள் ஒழிந்து, சிறந்த கற்ற சமூகமாக பரிணமிக்க முடியும்.

நன்றி - வீரகேசரி

சம்பளம் தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் - சட்டத்தரணி. இ.தம்பையா

பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும். 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் சம்பள ஏற்பாடுகள் இவ்வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் மக்கள் தொழிலாளர் சங்கம் 19ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு வழங்கப்பட என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா அவர்கள் அரச துறைக்கு பத்தாயிரம் சம்பள உயர்வு உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் துறையினருக்கு ஐயாயிரம் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுள்ளது. எனினும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் 2500 சம்பள உயர்வு பற்றி பேசப்படுகிறது. இது நியாயமற்றது. சம்பளம் எவ்வளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நேர்மையாக திறந்த கலந்துரையாடலை செய்ய வேணடும். அதன் பின்னர் எவ்வளவு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். பெருந்தோட்டக் கம்பனிகள் இலாபத்தில் தொடர்ந்து இயங்கி வருகின்ற நிலையில் வலமைப் போல் இம்முறையும் சம்பளம் அதிகரிக்கும் நிலையில் தாங்கள் இல்லை என்ற கருத்து அவர்களினால் இன்று ஊடகங்களில் பரப்;பப்டுகிறது. எனவே அதனை எதிர் கொள்ள தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தயாராக வேண்டும் என்றார். 

இவ்வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உடன்பாட்டு முடிவடைகின்ற நிலையில் 2003ஆம் ஆண்டு 13ம் இலக்க கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் மக்கள் தொழிலாளர் சங்கம் மகஜர் ஒன்றை தொழில் ஆணையாளர் நாயகத்திடம் சமர்ப்பித்த பின்னரே குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றிருந்தது. 

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இ. தம்பையா கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் அதில் கைச்சாத்திடும் தொழிற் சங்கங்கள், அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி கைச்சாத்திடுவதனால் ஏனைய தொழிற் சங்கங்களுடனும் கலந்துரையாடி சம்பள விடயம் தொடர்பில் பொது இணக்கப்பாட்டுடன் சம்பளப் பேச்சுவார்த்தைக்கு செல்வது பேரப் பேச்சை தொழிலாளர்களுக்கு சார்பாக மாற்றக்கூடியது என்றார். மேலும் பெருந்தோட்டக் கம்பனிகள் தொடர்ந்தும் இலாபத்தில் இயங்கி வருகின்றமையை அவர்களின் நிதி கூற்றுகளில் இருந்து காண முடிவதாக சுட்டிக்காட்டினார். அமெரிக்க டொலரின் பெறுமதியை அடிப்படையாக கொண்டு கென்னியா இந்தியா போன்ற நாடுகளின் தொழிலாளர்களுக்கு இலங்கையை விட குறைந்த சம்பளமே வழங்கப்படுவதாக சொலப்படும் கருத்துக்கு பதிலளிக்கையில் கென்னியாவில் அமெரிக்க டொலர் ஒன்று கென்னிய சிலிங் 91, இந்தியாவில் அமெரிக்க டொலர் ஒன்று இந்திய ரூபா 62, இலங்கையில் டொலர் ஒன்று இலங்கை ரூபா 133 என இருக்கும் நிலையில் அமெரிக்க டொலரை அடிப்படையாக கொண்டு இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் அதிகமாக பெறுகின்றார்கள் என்று கூறுவது அடிப்படையற்ற வாதமாகும் என்றார். 

தொழில் ஆணையாளர் நாயகத்துடன் நடந்த சந்திப்பின் போது 2015 மார்ச் மாதம் மேற்கொள்ளப்படவுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள திருத்த ஏற்பாட்டில் வாழ்கைச் செலவு புள்ளிக்கு ஏற்ற கொடுப்பனவு உறுதி செய்யப்பட வேண்மென மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா கேட்டுக் கொண்டார். ஏனைய தொழில் துறைகளில் செய்யப்படும் கூட்டு ஒப்பந்தங்களில் அடிப்படை கொடுப்பனவுகளுடன் வாழ்கைச் செலவு புள்ளிக்கு ஏற்ற மேலதிக கொடுப்பனவு இருக்கின்ற நிலையில் அது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்த சம்பள ஏற்பாட்டில் இல்லாதிருக்கின்றமையை இ.தம்பையா அவர்கள் சுட்டிக் காட்டினார். கூட்டு ஒப்பந்தம் நியதிச்சட்ட (பொதுவான தொழில் சட்ட) ஏற்பாடுகளை மீறியுள்ளமை, ஒப்பந்த நியதிகள் தோட்ட நிர்வாகங்களினால் மீறப்பட்டுள்ளமை, தொழிற் சங்க உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் விளக்கினார். 

இதன் போது கருத்து தெரிவித்த தொழில் ஆணையாளர் நாயகம் திரு. ஏரத் யாப்பா குறித்த விடயம் தொடர்பாக கூட்டு ஒப்பந்தத்தில் தரப்பினராக உள்ள தொழிற் சங்கங்களுக்கும் பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதியான இலங்கை முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கம்பனிகளுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார். 

மக்கள் தொழிலாளர் சங்கம் தொழில் ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்திருந்த மகஜர் பின்வருமாறு அமைந்து இருந்தது.

மக்கள் தொழிலாளர் சங்கம் தொழில் ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்திருந்த மகஜர் பின்வருமாறு அமைந்து இருந்தது. 

1. நியதிச்சட்டங்களை மீறி கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள ஏற்பாடுகள் 
ய. 2013 ஆம் ஆண்டு 10 இலக்க சம்பள கூட்டு ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அடிப்படைச் சட்டத்திற்கு மட்டுமே ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன வழங்கப்படுகின்றது. ஊ.சே.நிதி, ஊ.ந.நிதி சட்டங்களில் குறிப்பிட்டள்ளது போன்று முழு கொடுப்பனவுகளுக்கு (வழவயட நயசniபெ) அவை வழங்கப்படாதிருக்கின்றது. 

டி. 2003 ஆம் ஆண்டு 13 இலக்க சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் ஞாயிறு, பௌர்ணமி மற்றும் நியதிச்சட்ட விடுமுறை தினங்களில் வேலை செய்து பெறும் சம்பளத்தில் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை ஆகியன வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இல்லை. 

உ. ஒரு வாரத்திற்கு 1 ½ நாள் நியதிச்சட்ட விடுமுறை இருக்கின்ற போதும் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே (ஞாயிறு மட்டுமே) விடுமுறையாக வழங்கப்படுகின்றது. 

ன. நிதிச்சட்ட விடுமுறை நாட்களில் தொழிலாளர்கள் வேலை செய்யும் போது 1- 1ஃ2 நாள் சம்பளம் வழங்கப்படுவதாக 2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் உறுப்புரை 9 (ஐஐ) ல் குறிப்பிட்டுள்ள போதும் வருகை ஊக்குவிப்புக் கொடுப்பனவு சேர்க்கப்படாது அந்த 1 ½ நாள் சம்பளம் கணக்கிடப்படுகிறது.

2. கூட்டு ஒப்பந்த நிதியதிகள் மற்றும் நிபந்தனைகள் மீறல்கள். 
ய. கூட்டு ஒப்பந்தத்தம் மற்றும் நியதிச் சட்டங்களை மீறி தோட்ட முகாமைகளினால் கொடுக்கப்பட்ட வேலை அளவை (ழெசஅ) பூர்த்தி செய்யவில்லை என்பதற்காக தொழிலாளர்களுக்கு ½ நாள் சம்பளம் பிடிக்கப்படுகின்றது. 

டி. ஞாயிறு, பௌர்ணமி மற்றும் நியதிச்சட்ட விடுமுறை தினங்களில் தொழிலாளர்களிடம் இருந்து பணியை பெற்றுக் கொள்ளும் அடிப்படை சம்பளம் மற்றும் விலைக்கேற்ற கொடுப்பனவு என்பவற்றை அடிப்படையாக கொண்டு 1 ½ நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த கொடுப்பனவுக்கு வேலை அளவில் (ழெசஅ) அதிகரிப்பு ஏற்படக்கூடாது எனவும் 2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் உறுப்புரை 9 (ஐஐ) ஏற்பாடு செய்கின்ற போதும் அந்நாட்களில் கைகாசுக்கு பணியைப் பெற்றக் கொள்ளப்படுகிறது. அல்லது சாதாரண நாள் ஒன்றின் வேலை அளவை (ழெசஅ) அதிக வேலை அளவு நிர்ணயிக்கப்பட்டு அதனை பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டும் 1 ½ நாள் சம்பளம் வழங்கப்படுகிறது. 

உ. வேலை அளவு (ஒரு நாளுக்கு பறிக்க வேண்டிய தேயிலை கிலோ மற்றும் இறப்பர் கிலோ) என்பவைகள் தோட்ட முகாமைத்துவமும் தோட்டத் தலைவர்களைக் கொண்ட குழுவும் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும் என்ற 2003ஆம் ஆண்டு 13ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் 9(i) ஏற்பாட்டை மீறி தோட்ட நிர்வாகங்கள் தன்னிச்சையாக வேலை அளவை அதிகரிக்கின்றனர். 
ன. 2013ஆம் ஆண்டு 10 ஆம் இலக்க சம்பள கூட்டு ஒப்பந்தத்தின்படி வரவு ஊக்குவிப்பு கொடுப்பனவை பெற மாதமொன்றில் வழங்கப்பட்ட மொத்த வேலை நாட்களில், ஞாயிறு, மற்றும் பௌர்ணமி மற்றும் ஏனைய நியதிச்சட்ட விடுமுறைகளை சேர்க்காது 75 வீத வரவை பூர்த்தி செய்திருக்க வேண்டும். எனினும் சில தோட்டங்களில் 75 வீதத்திற்கு தேவைப்படும் நாட்களை விட ஒன்று தொடக்கம் நாலு நாட்கள் அதிகமாக தேவை என்ற ஒப்பந்தத்தை மீறும் நிபந்தனை விதிக்கப்படுகிறது. இது 2013ஆம் ஆண்டு 10ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் பிரிவு யு (i) மற்றும் டீ (i) ஆகியவற்றை மீறுவதாகும். 

ந. தொழிலாளி ஒருவர் சுகயீனம் காரணமாக இரு நாட்கள் அல்லது அதற்கு மேல் வேலைக்கு சமூகமளிக்காவிடினும் அவரிடம் வைத்திய சான்றிதழை தோட்ட நிர்வாகங்கள் கோருகின்றன. வைத்திய சான்றிதழ் வழங்கப்படும் வரை வேலையில் இருந்து நீக்கப்படுகின்றனர். இவ்வாறு நீக்கப்பட்டவர்களுக்கு வைத்தியசான்றிதழை வழங்கியப் பின்னர் புதிய தொழிலாளர்களாக பதியப்படுகின்றனர். சுகயீனம் தவிர வேறு காரணங்களுக்காக இரண்டு நாட்களுக்கு மேல் விடுமுறை எடுக்கும் தொழிலாளர்களுக்கும் இவ்வாறான நடைமுறையை தோட்ட நிர்வாகங்கள் பின்பற்றி வருகின்றன. இதனூடாக அமைவுவழி வேலை நீக்கத்தை தோட்ட நிர்வாகங்கள் செய்து வருகின்றன. 

க. புதிதாக சேர்த்துக் கொள்ளப்படும் தொழிலாளர்கள் சமயாசமய தொழிலாளர்களாக பல மாதங்களாக வேலை வாங்கப்படுகின்றனர். சில தோட்டங்களில் வருடக் கணக்கில் சமயாசமய தொழிலாளர்களாக வேலை வழங்கப்படுகிறது. இவ்வாறு சேர்க்கப்படும் தொழிலாளர்களிடம் இருந்து தோட்ட நிர்வாகம் வெற்று பத்திரத்தில் கையொப்பந்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. எவ்வித தொழில் ஒப்பந்த ஆவணமும் வழங்கப்படுவதில்லை. இத்தொழிலாளர்களிடம் இருந்து தொழிற்சட்டங்களை மீற வேலை வாங்கப்படுகிறது. 

ப. சில தோட்டங்களில் தோட்ட தொழிலுக்கு மேலதிகமாக குத்தகை முறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நாளாந்த தொழிலை வழங்க தோட்ட முகாமைகள் மறுத்து வருகின்றன. 

h. மகபேற்று விடுமுறை கற்பிணி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்களை வேலையில் இருந்து ஒதுக்கிவைக்கும் நடவடிக்கைகள் நிலவுவதுடன் கற்பிணி தொழிலாளர்கள் கற்ப காலத்தில் இல்லது குழந்தை பிறந்த பின்னரோ மேலதிகமாக சில நாட்கள் விடுமுறை எடுத்திருந்தால் அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுகின்றனர் அல்லது புதிய பதிவிலக்கத்தில் புதிய தொழிலாளராக பதிவு செய்ய ஒத்துக் கொண்டால் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படலாம் என நிபந்தனை விதித்து புதிய பதிவு இலக்கத்துடன் புதிய தொழிலாளியாக பதிவு செய்யப்படுகின்றனர். 

i. கைத்தொழில் பிணக்குச் சட்டத்தின் 10டீ பிரிவானது கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டப் பின்னர் அக்கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகளை மும்மொழியிலும் தொழில் இடங்களில் ஒட்டப்பட வேண்டும் என ஏற்பாடு செய்துள்ள போதும் இதனை தோட்ட நிர்வாகங்கள் இதுவரையில் மேற்கொண்டதில்லை. 

3. தொழிற்சங்க உரிமைகள் மீறல்கள் 
ய. 2003ஆம் ஆண்டு 13ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் 19ஆம் உறுப்புரையில் தொழிலாளர்களின் மனக்குறைகள் மற்றும் தொழில் பிணக்குகள் தோட்டக் குழுக்கள் ஊடாக தீர்ப்பதற்கு தொழிலாளர் குறிப்பு புத்தகம் பேணப்படுதல் பற்றிக் குறிப்பிட்டுள்ள போதும் இது பெரும்பாலான தோட்டங்களில் பின்பற்றப்படுவதில்லை. 

டி. 2003ஆம் ஆண்டு 13ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் உறுப்புரை 19 (i) யின் கீழ் வாரத்தில் ஒரு நாள் முகாமையாளர் அல்லது உதவி முகாமையாளரினால் தோட்டத் தொழிலாளர் தினம் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள போதும் சில தோட்டங்களில் இவ்வாறு நடாத்தப்படுவதில்லை. தொழிலாளர் தினம் என்ற ஒன்று பல தோட்டங்களில் இருக்கின்ற போதும் அத்தினம் முகாமையாளர்கள் சமூகமளிப்பதில்லை. எனவே பெயர் அளவிலேயே தொழிலாளர் தினம் என்பது காணப்படுகிறது. 

உ. தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான விடங்களில் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளும் போது அதற்கான பதில்கள் தோட்ட முகாமைகளிடம் இருந்து வருவதில்லை. இது தொழிற்சங்க செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கையாகும். அத்தோடு தொழிற்சங்கங்களையும் தொழிற்சட்டங்களையும் அலட்சியம் செய்யும் போக்காகும். 

ன. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சுகாதாரம், வீடமைப்பு, உட்கட்டுமானம் என்பவற்றுக்கு பொறுப்பாக உள்ள பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்திடம் (Pர்னுவு) தொழிலாளர்கள் சுகாதாரம், வீடமைப்பு, உட்கட்டமைப்பு பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் கடிதம் மூலம் வினவும் போதும் அதற்கான பதில் அனுப்பப்படுவதில்லை. 

4. பொதுவாக கூட்டு ஒப்பந்தங்களில் சம்பளம் அல்லது சம்பள உயர்வு வாழ்கை செலவிற்கான படியையும் உள்ளடக்கிய தொகுக்கப்படுவது பொதுவான தராதரமாக கொள்ளப்படுவதுண்டு. இந்த தராதரத்திற்கு மாறாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்திற்கு அல்லது சம்பள உயர்வில் வாழ்கைச் செலவிற்கான படி உள்ளடக்கப்படவில்லை. 

5. பெருந்தோட்ட கூட்டு ஒப்பந்தங்கள் ஆங்கில மொழியில் மட்டுமே வர்த்தமானப் பத்திரத்தில் வெளியிட்டுள்ளது. சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டாமை மொழி உரிமை மீறல் மீறலாகும்.

கோரிக்கைகள்
• நியதிச்சட்டத்தை மீறி கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள ஏற்பாடுகளை நீக்கவும் நியதிச்சட்ட ஏற்பாடுகளுக்கு உடன்பாடுடைய வகையில் அனைத்து ஏற்பாடுகளும் அமைவதனையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

• மேற்குறிப்பிட்டப்படி கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகளையும் நியதிச் சட்டங்களையும் தோட்ட நிர்வாகங்கள் மீறப்படாமல் இருப்பதையும் அவை நடைமுறைப்படுத்துவதையும் உறுதி செய்ய தோட்ட முகாமைகளுக்கும் உப தொழிற் திணைக்களங்கள் ஊடாக யதார்த்தபூர்மான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காக குறித்த உப தொழிற் திணைக்கள எல்லைக்குள் வருகின்ற தோட்ட முகாமையாளர்களை ஒரு மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகள், நியதிச்சட்டங்கள் ஆகியவற்றை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய குறித்த உப தொழிற் திணைக்கள எல்லைக்குள் பணியாற்றுகின்ற தொழிற்சங்க பிரதிநிதிகளையும் இணைத்து இதற்குகமைவாக ஏற்ற பொறிமுறையொன்றை பணிப்புரை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

• தொழிலாளர்களின் உரிமைகளை நிலை நிறுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் உத்தியோகபூர்வ முறையில் அனுப்பும் கடிதங்களுக்கு பொது நியமங்களுக்கு உட்பட்டு தோட்ட நிர்வாகங்கள் செயற்படுவதை உறுதி செய்ய தோட்ட முகாமைகளுக்கும், பெருந்தோட்ட கம்பனிகளுக்கும், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் மற்றும்; பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்திற்கும் அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

• எதிர்வரும் மார்ச் மாதம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படும் போது வாழ்கைச் செலவு படி உள்ளடக்கும்படி வழியுறுத்தப்பட வேண்டும். 

• பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மொழி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தங்களை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு மொழிபெயர்ப்புச் செய்யவும் எதிர்வரும் காலத்தில் பெருந்தோட்ட மக்களுடன் தொடர்பான கூட்டு ஒப்பந்தங்களை வர்த்தமானப் பத்திரத்தில் வெளியிடும் போது சிங்களம் மற்றும் தமிழ் மொழியிலும் வெளியடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மக்கள் தொழிலாளர் சங்கம்
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates