Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

சகோதரி லறீனாவுக்கு தார்மீக பதில். - என்.சரவணன்

 
"ஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்!" என்கிற கட்டுரைக்கு சகோதரி அப்துல் ஹக் லறீனா முன்வைத்த கருத்துக்காண பதில்
//“இஸ்லாத்துக்கும் இவர்களின் நடவடிக்கைகளுக்கும் எந்த தொடர்புமில்லை. நாம் இவர்களை கண்டிக்கிறோம்", என்பதெல்லாம் இந்த நிலைமையை மாற்றிவிடப்போவதில்லை. “முஸ்லிம்கள் தவிர்ந்தவர்கள் காபிர்கள், அவர்கள் கொல்லப்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது, அதுவே ஒவ்வொரு முஸ்லிமுடைய புனிதக் கடமை. சிறந்த மறுமையை அடைய அதுவே சிறந்த வழி” என்று அதே இஸ்லாத்திலிருந்து தான் "தேசிய தவ்ஹீத் ஜமாஅத்" தலைவர் சஹ்ரான் மேற்கோள் காட்டுகிறார் என்றால் அதனை ஏனைய முஸ்லிம்கள் மறுத்து, எதிர்த்து இயங்கியிருக்கவேண்டும். // என்கிறீர்கள் அண்ணா. 
அந்த நபரது தீவிரவாதக் கருத்துக்களை மறுத்தும் எதிர்த்தும் அவரது சொந்த ஊரைச் சேர்ந்த காத்தான்குடி முஸ்லிம் ஆண்களும் பெண்களும் தெருவுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். முஸ்லிம் கவுன்ஸில் உள்ளிட்டு முஸ்லிம் சமூகத்தில் இருந்து குறித்த நபருக்கு எதிராகப் பல முறைப்பாடுகளும் செய்து இருக்கிறார்கள். இருந்தும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டியவர்கள் அவற்றை எல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ள வில்லை. விஷக் கிருமி பரவும் வரை இடமளித்து வாளாவிருந்து விட்டார்கள். உண்மை நிலை இப்படி இருக்கையில், முஸ்லிம் சமூகம் அதைவிட வேறென்ன பெரிதாகச் செய்துவிட முடியும்? சட்டத்தைத் தன் கையில் எடுக்கவா முடியும்? 
தவிர, இஸ்லாம் தீவிரவாதத்தையோ பயங்கரவாதத்தையோ ஒரு போதும் ஆதரிக்கவில்லை என்பதை ஏனைய முஸ்லிம் மௌலவிமார் தொடர்ந்தும் உரையாற்றித் தான் வந்துள்ளார்கள். அவை தமிழில் இருப்பதனால் பெரும்பான்மை மக்களை அடையவில்லை என்பது எப்படி முஸ்லிம் மக்களின் பிழையாகும்? தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திற்குள் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த நான் உள்ளிட்ட பலரும் தொடர்ந்தும் இச்சமூகத்தின் குறைபாடுகளை விமர்சித்து எழுதித்தான் வருகிறோம். ஆனால், அவை அனைத்தும் பெரும்பாலும் தமிழில் அமைந்துள்ளன. யாருக்குப் பேசுகிறோமோ அவர்களின் மொழியில் - தமிழில் - நாம் பேசுவதுதான் இயல்பும் நியாயமும்கூட. ஆக, இது தமிழ் மொழி தெரியாத சிங்களப் பெரும்பான்மை யினருக்குத் தான் விளங்கவில்லை என்றால், உங்களுக்குமா விளங்கவில்லை Sarawanan Komathi Nadarasa அண்ணா? முஸ்லிம்கள் ஸஹ்ரானின் நிலைப்பாட்டுக்கு எதிராக எந்தக் கதையாடலையும் நிகழ்த்தவோ, மாற்றுத் தரப்புக் கருத்தை முன்னிறுத்தவோ இல்லை என்பதான தொனி உங்கள் மேற்போந்த வரிகளில் தொனிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது, அண்ணா?

அன்புக்குரிய சகோதரி லறீனா அவர்களுக்கு!

மேற்படி நீங்கள் பதிவிட்டிருந்த கருத்தைக் கவனித்தேன். இதை நீங்கள் கூறியதால் இந்த கேள்விக்கான பதிலை அளிக்கும் மேலதிக தார்மீக பொறுப்பை உணர்கிறேன். அதற்காகவே பதிலளிக்க கடமைபட்டுள்ளேன்.

 • நான் எழுதியவற்றிலிருந்து மேலே நீங்கள் காட்டிய எனது மேற்கோளில் அடுத்த வரிகளை வசதியாக நீங்கள் தவிர்த்து விட்டீர்களே; ஏன் என்று நான் உங்களைக் கேட்கப் போவதில்லை ஏனென்றால் உங்களைப் போன்றவர்களின் மீது எனக்கு நம்பிக்கை விட்டுப்போகவில்லை.
 • அந்த விடுபட்ட அந்த வரிகளை நானே குறிப்பிடுகிறேன் “...ஆனால் அப்படி அவர்களின் சித்தாந்தத்தை எதிர்த்து நிற்கும் பிரபல கருத்துநிலையோ, உரையாடலோ முஸ்லிம் சமூகத்திடம் இல்லாததே; ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீது பாய்வதற்கு ஏதுவான வழிகளை உருவாக்கியிருக்கிறது என்பதையும் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியிருக்கிறது.”
 • இங்கு நான் “பிரபல கருத்துநிலை” என்று அழுத்திக் கூறுவதே எதிர்ப்பு என்பது பெரும்போக்காக இருக்கவில்லை என்பதற்காகத் தான். கல்விப் புலமைத்துவம் உள்ள உங்களுக்குத் தெரியும் நாம் ஒரு கருத்தை வெளியிடும் போது தற்செயல்களை வைத்து முடிவுகளுக்கு வருவதில்லை. ஒரு முடிவுக்கு அவற்றின் போக்கு... தொடர்ச்சி... என்பனவே ஒரு முடிவாக எடுக்க வழிகளைத் தருகிறது. அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தில் இந்த சஹ்ரான் போன்றவர்களின் சித்தாந்தத்துக்கு எதிராக பலமான, பிரபலமான கருத்து பெரும்போக்காக இருக்கவில்லை என்பதையே நான் இங்கு குறிப்பிட்டேன். அப்படி ஒரு எதிர்ப்பு எங்கும் இருக்கவில்லை என்று எனது கட்டுரையில் நான் எங்கும் குறிப்பிடவில்லை.
 • நீங்கள் குறிப்பிட்டது போல “அந்த நபரின்” தீவிரவாத கருத்துக்களை எதிர்த்து காத்தான்குடியில் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் வீதியில் இறங்கி நடத்திய ஆர்ப்பாட்டத்தையும், அவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஊடகங்கள் அப்போதே பதிவு செய்திருந்தன. அதை மற்றவர்கள் போலவே நானும் அறிந்தே வைத்திருக்கிறேன். அவை எதையும் அறியாமல் எனது கருத்தை வெளியிடவில்லை. அந்த தற்செயல் சம்பவத்தைத் தவிர குறைந்தபட்சம் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்காவது எத்தனை எதிர்ப்பு நடவடிக்கைகளை நம்மால் கூறிவிடமுடியும்.
 • //நான் உள்ளிட்ட பலரும் தொடர்ந்தும் இச்சமூகத்தின் குறைபாடுகளை விமர்சித்து எழுதித்தான் வருகிறோம்.// உண்மை! உங்களைப் போல எனது நட்பு வட்டத்தில் உள்ள பல நண்பர்களை அப்படி நான் அறிவேன். ஆனால் உங்களைப் போன்ற வெகு சிலரை வைத்து “ஒரு பானைக்கு ஒரு சோற்றுப் பதம்” என்கிற முடிவுக்கு நான் எப்படி வருவது. உங்களைப் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்களை வைத்து அது தான் mainstream என்று நான் முடிவுக்கு வருவது சரி என்று நினைக்கிறீர்களா?
 • கடந்த 7 வருடங்களில் நான் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக ஞாயிறு தினக்குரலில் எழுதிய கட்டுரைகளில் பெரும்பாலானவை முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான பாசிச போக்கை எதிர்த்துத் தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதன் ஒரு அங்கமாகவே 1915: கண்டி கலவரம் நூலையும் வெளிக்கொணர்ந்தேன். முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை எதிர்த்து சமீபகாலமாக அதிகம் எழுதிய தமிழ் எழுத்தாளராக என்னைக் கருத முடியும் என்றே நம்புகிறேன்.
 • சிங்கள பேரினவாத போக்கை எப்படி பின்தொடர்ந்து அவதானித்தபடியே இருக்கிறேனோ அடிப்படைவாத முஸ்லிம் போக்கையும் அவதானித்தே வந்திருக்கிறேன். ஆனால் அந்தப் போக்கைப் பற்றி தமிழ் எழுத்தாளனாக நான் எழுதுவதை தவிரத்தே வந்திருக்கிறேன். அதை எதிர்த்து முஸ்லிம் சமூகத்திலிருந்து தான் கருத்துக்கள் பலமடைய வேண்டும் என்பதே எனது கருத்தாக இருந்து வந்தது. ஆனால் இன்றைய நெருக்கடி நம்மையும் சற்றென்றாலும் பேச வைத்திருகிறது.
 • என்னுடைய கட்டுரையில் மேலே குறிப்பிட்ட மேற்கோளத் தவிர மிகுதி எல்லாமே இனி இருக்கிற அச்சத்தைப் பற்றியதே. தமிழ் சமூகம் எதிர்கொண்டதை முஸ்லிம் சமூகமும் எதிர்கொள்ளப் போவதை பற்றி எச்சரிக்கை செய்யும் விபரங்களே என்பதை நீங்கள் அறிவீர்கள்.
 • இந்த சூழலில் முஸ்லிம் தவிர்ந்த சமூகங்களில் இருந்து இனவாத-காழ்ப்பு-துவேச கருத்துக்களை எங்கெங்கும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் அதிலிருந்து நேர்மையான – இதய சுத்தியான – ஆரோக்கியமான – நல்ல விளைவுக்கான கருத்துக்களை வடிகட்டி எடுத்து பரிசீலிப்பது முக்கியம். முஸ்லிம் அல்லாதவர் என்பதற்காக சகல கருத்துக்களையும் சந்தேகிக்க தேவையில்லை என்பதே எனது கருத்து. உங்களைக் குறிப்பிடவில்லை. எனது பொதுவான செய்தி தான்.
சமீபகாலமாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான பேரினவாத போக்குகள் குறித்த எனது கட்டுரைகளில் சிலவற்றையும் இங்கே பரிந்துரைக்காக இணைக்கிறேன்.

ஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்! - என்.சரவணன்

நான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு.

வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்கு தொலைதொடர்பு சாதனங்களும், சமூக வலைத்தளங்களும் வளர்ந்திருந்தும் கூட அது நிகழாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம் அத்தகைய நவீன தகவல் தொடர்பு சாதன நுகர்வோரில் பலர் பொதுப்புத்திக்குப் பின்னால் செல்லாமல் அறிவுபூர்வமாக சிந்தித்து பிழையான போக்குகளையும், சிந்தனைகளையும் கண்டித்து, தடுத்து நிறுத்தும் போக்கும் கூடவே வளர்ந்திருப்பது தான். முகநூல், ட்விட்டர், யுடியூப் போன்றவற்றில் கூட முன்னர் போல நினைத்ததை பகிர்ந்துவிட முடியாது. வேகமான முறைப்பாடுகள் அவற்றை கட்டுபடுத்தி விடுகின்றன. அதுமட்டுமன்றி சமூகவிரோத உள்ளடக்கங்களை (தகவல், கருத்து, படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை) தன்னியல்பாக கட்டுப்படுத்தும் அல்கோரிதம் (Algorithm) அந்நிறுவனங்களால் நன்றாகவே வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.

அடுத்தது இலங்கையில் நிகழ்ந்த கடந்தகால கலவரங்களின் போதெல்லாம் பெரும்பான்மை சமூகத்துக்கு அரச அனுசரணை நேரடியாகவோ மறைமுகமாகவோ கிடைத்தது. இன்று அது சர்வதேச அளவில் அம்பலப்பட்டிருக்கிறது. இலங்கை அரசை இந்த விடயத்தில் உலகம் முழுவதும் உற்றுக் கவனித்து கொண்டிருக்கிறது என்பதை அரசும் அறியும். எல்லாவற்றுக்கும் மேல் இலங்கை அரசு சர்வதேச மனித உரிமைகள் விசாரணைக்கு உட்படுத்துவதிலிருந்து கடந்த பத்தாண்டுகளாக தப்பி வருகிறது. இந்த நிலையில் தன்னை தற்காத்துக்கொள்ள அரச இயந்திரம் கணிசமான விலையைக் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. மேலதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருக்கிறது.

கலவரங்களுக்கு அரச அனுசரணை வழங்குவது என்பது முன்னர் போல எல்லாக் காலத்திலும் அரசியல் லாபமீட்டக்கூடியதல்ல என்பதை இன்றைய அரசியல் தலைவர்கள் பலர் உணர்ந்திருகிறார்கள்.

எங்கேயாவது குண்டுவெடிப்பு அல்லது கொலை, சண்டை போன்ற ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்ததும் உண்மை வெளிவருமுன்னரே ஊகங்களே அந்த இடைவெளியில் ஆக்கிரமித்து விடுகின்றன. அதுவே ஆரம்பநிலை கலவரங்களுக்கு காரணமாகி விடுகின்றன. இலங்கை வரலாறு நெடுகிலும் இதுவே நிகழ்ந்துள்ளது. 1883இல் சரியாக 136 வருடங்களுக்கு முன்னர் இப்படி ஒரு குருத்து ஞாயிறன்று தான் இலங்கையின் முதலாவது மதக் கலவரம் இதே கொட்டாஞ்சேனைப் பகுதியில் நிகழ்ந்தது. வதந்திகள், ஊகங்கள் எப்படி ஒரு கலவரத்தை உண்டுபண்ண வல்லவை என்பதற்கு அங்கிருந்தே உதாரணம் பெறலாம்.
இலங்கையில் நிகழ்ந்த அத்தனை கலவரங்களின் போதும் வதந்திகளே கலவரத்தை மேலதிக சூடேற்றி அழிவுகளை உண்டு பண்ணியுள்ளன. பல்லின, பல்மத நாடான இலங்கையின் வளர்ச்சியை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கித் தள்ளியதற்கு அடிப்படை காரணமே இந்த பல்லின சமூகங்களுக்கு இடையில் நிகழ்ந்துவந்த பாரபட்சங்களும், ஆண்டாண்டு காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட  பரஸ்பர வெறுப்புணர்ச்சியும் தான். எரியுற வீட்டில் பிடுங்குவது லாபம் என்பதைப் போல இந்த சந்தர்ப்பங்களை பல்வேறு சக்திகள் தத்தமது நலன்களுக்காக எரிகிற தீயில் எண்ணையையூற்றி லாபம் காண முற்பட்டிருக்கின்றன. 

உறைய வைக்கும் பீதி
யுத்தம் நடந்த காலப்பகுதியில் சாதாரண தமிழ் மக்கள் எப்படி பீதிக்குள் உறைய வைக்கப்பட்டிருந்தார்களோ அந்த நிலைமையை இனி முஸ்லிம்கள் எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதை தெளிவாக உணர முடிகிறது. கடந்த காலங்களில் தமிழ் மக்கள் எப்போதும் கண்காணிப்புக்கு உள்ளாகியிருத்தல், பொலிஸ் பதிவை எப்போதும் கூடவே வைத்திருத்தல், எப்போதும் சுற்றி வளைப்புக்கும், சோதனைக்கும், கைதுக்கும் உள்ளாதல், இதன் விளைவாக தமது இன அடையாளத்தை மறைத்து நடந்து கொள்ள முயற்சித்தல், சமூகத்தில் அதிக சமரசப் போக்கை வெளிக்காட்டுதல், பல இடங்களில் விட்டுக்கொடுத்தலை செய்தல். எந்த நேரத்திலும் தாம் வீணாக சந்தேகத்துக்குள்ளாகலாம் என்கிற பீதியுடனேயே எங்கும் பயணித்தல், எவர் தம்மை பார்த்தாலும் தம்மை சந்தேகிப்பதாக கருதிக் கொள்ளும் உளவியல், அரச, தனியார் நிறுவனங்களின் சேவையைப் பெறுவதிலும், தொழில்களைப் பெறுவதிலும் சந்தர்ப்பங்கள் பாதிப்படைதல் என இது தொடரப் போவதை கட்டியமாகவே கூறலாம்.

ஏனென்றால் அப்படி ஒரு சூழலில் கடந்த காலம் தமிழ் மக்கள் இருத்தப்பட்டார்கள். அரச இயந்திரம் இதைப் புரிவதற்கு ஏற்கெனவே பழகியிருக்கிறது. சிங்கள சிவில் சமூகமும் அத்தகைய நிறுவனமயப்பட்ட பாரபட்சத்தை நிகழ்த்தியிருக்கிறது. பாதுகாப்பு சார்ந்த அதிகாரம் பாதுகாப்புத் துறையினரிடம் இருந்து சிங்கள சிவில் சமூகத்துக்கும் பகிரப்பட்டிருந்தது சந்திரிகா காலத்தில் பொலிசாரோடும், படையினரோடும் சேர்ந்து பணியாற்றக்கூடிய “சிவில் பாதுகாப்பு அமைப்பு” என்கிற பேரில் அரசால் அமைக்கப்பட்ட சிறு சிறு அமைப்புகள் மூலை முடுக்கெல்லாம் பண்ணிய அட்டகாசத்தை நாம் மறந்திருக்கமாட்டோம்.

சிங்கள இனவாத சக்திகள் தமது கைகளில் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு அராஜகத்தையும், தனிப்பட்ட குரோதங்களையும் கூட தீர்த்துக்கொண்ட சந்தர்ப்பங்களை நாம் எப்படி மறப்பது. தெருவில் ஒரு சிங்களவர் இன்னொருவரைக் காட்டி “இதோ புலி” என்று ஒரு சவுண்டு விட்டால் போதும் குறித்த நபர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க எந்த சந்தர்ப்பமும் கிடைக்காமல் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக கொலன்னாவை எண்ணெய்க்குதங்கள் புலிகளால் தாக்கப்பட்ட வேளை தெமட்டகொட, கொலன்னாவ, தொட்டலங்க பகுதிகளில் அப்பாவி மலையக இளைஞர்கள் இந்த “சிவில் பாதுகாப்பின்” பேரில் குரூரமாக கொள்ளப்பட்ட சம்பவங்களை நேரில் சென்று விசாரித்து சரிநிகரில் கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். அதனைப் பதிவு செய்ய தொட்டலங்க என்கிற இடத்துக்கு போயிருந்தபோது என்னையும் அதே பாணியில் ஒரு கூட்டம் விரட்டிக்கொண்டு வந்தபோது அதே  பிரதேசத்தைச் சேர்ந்த என்னுடைய உறவினர் ஒருவரால் காப்பற்றப்பட்டதையும் சரிநிகரில் பதிவு செய்திருக்கிறேன். இந்த நிலையில் தற்போது அரசாங்கம் மீண்டும் அவசர கால சட்டத்தை இப்போது கையிலெடுக்கப்போவதாக அறிவித்திருப்பதையும் கவனத்திற்கொள்க.
அரச பயங்கரவாதத்துக்கு நியாயங்களை உருவாக்கியவர்கள்?
சகல இலக்குகளும் பொதுமக்களை நேரடியாக குறி வைத்த இலக்குகள். அதிகார வர்க்கமோ, அரச இயந்திரமோ குறி வைக்கப்படவில்லை.

குறைந்தபட்சம் கடந்த கால யுத்தத்தின் போது அரசுக்கு எதிரி யார் என்று தெரிந்திருந்து. அவர்களுக்கு என்று கட்டுப்பாட்டுப் பிரதேசம் ஒன்று இருந்தது. அவர்களுக்கு என்று நிபந்தனைகள், கோரிக்கைகள் இருந்தன. ஆனால் இங்கே சமரசம் பேச எவரும் கிடையாது. அவர்களுக்கென்று அரசிடம் கேட்க ஒரு கோரிக்கையும் இல்லை. இருக்கவும் முடியாது. இதுவே அரசுக்கும் மக்களும் ஏற்படுத்தியிருக்கிற மிகப் பெரும் அச்சமும், எச்சரிக்கையும். எங்கேயும்-எவராலும்-எப்போதும்-எதுவும்-நிகழலாம் என்பதே எந்த முஸ்லிம் நபர் மீதும் சந்தேகம் கொள்ள வாய்ப்பை விரித்துள்ளது.

ஈழப்பாராட்டம் ஓய்ந்ததன் பின். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம்கள் மீது திருப்பபட்டுவிட்டது என்பது பற்றி கடந்த ஐந்து வருடங்களாக பல கட்டுரைகளின் மூலம் பல கோணங்களில் இதற்கு முன்னர் விளக்கி எழுதியிருக்கிறேன். அந்த இலக்குக்கு மேலும் நியாயங்களை உருவாக்கியிருக்கிறது இந்தத் தாக்குதலும் நிலைமையும்.


கடந்த காலங்களில் படையினரின் இராணுவ தேடல், கைது கடத்தல், சித்திரவதை, காணாமல் போதல் என்பனவற்றை மேற்கொள்ள முன் ஒரு வதந்தியை அதற்கு முன் பிரபல ஊடகங்களின் மூலம் பரப்பிவிடுவார்கள். அந்த வதந்தியே அந்த அரச அட்டூழியங்களுக்கான முன் கூட்டிய நியாயங்களை உருவாக்கிவிடும். அதன் பின் நடக்கும் கொடுமைகளை தட்டிக்கேட்கவும் எவரும் வரமாட்டார்கள். இதை இராணுவம் மட்டுமல்ல பேரினவாதமயப்பட்ட மக்களும், சிங்கள பௌத்த சக்திகளும் கூட இப்படியான வதந்திகளை தூக்கிக்கொண்டு தமது அராஜக அட்டகாசங்களுக்கு கிளம்பிவிடுவார்கள். அதற்குரிய நியாயமும் முன் கூட்டியே உருவாக்கப்பட்டிருக்கும். இன்று அதே நிலை முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ள மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.
“இஸ்லாத்துக்கும் இவர்களின் நடவடிக்கைகளுக்கும் எந்த தொடர்புமில்லை. நாம் இவர்களை கண்டிக்கிறோம்", என்பதெல்லாம் இந்த நிலைமையை மாற்றிவிடப்போவதில்லை. “முஸ்லிம்கள் தவிர்ந்தவர்கள் காபிர்கள், அவர்கள் கொல்லப்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது, அதுவே ஒவ்வொரு முஸ்லிமுடைய புனிதக் கடமை. சிறந்த மறுமையை அடைய அதுவே சிறந்த வழி” என்று அதே இஸ்லாத்திலிருந்து தான் "தேசிய தவ்ஹீத் ஜமாஅத்" தலைவர் சஹ்ரான் மேற்கோள் காட்டுகிறார் என்றால் அதனை ஏனைய முஸ்லிம்கள் மறுத்து, எதிர்த்து இயங்கியிருக்கவேண்டும். ஆனால் அப்படி அவர்களின் சித்தாந்தத்தை எதிர்த்து நிற்கும் பிரபல கருத்துநிலையோ, உரையாடலோ முஸ்லிம் சமூகத்திடம் இல்லாததே; ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீது பாய்வதற்கு ஏதுவான வழிகளை உருவாக்கியிருக்கிறது என்பதையும் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியிருக்கிறது.

இதுவரை சிங்களப் பேரினவாத சக்திகள் முஸ்லிம்களை இலக்கு வைத்து பிரச்சாரங்களை செய்த போதெல்லாம். இதுவெல்லாம் Islamophobia என்றும், முஸ்லிம் வெறுப்புணர்ச்சி என்றும், மோசமான பாசிச பாய்ச்சல் என்று நாம் எல்லாம் எழுதிக் குவித்தோம். இப்போது அவர்கள் நாங்கள் எச்சரித்தபோதெல்லாம் எங்களை இனவாதிகள் என்றீர்களே. அவர்களைப் பாதுகாத்தீர்களே, ஆதரித்தீர்களே இப்போது இந்த அழிவுகளுக்கு நீங்களும் பங்காளிகள், பொறுப்பாளிகள் என்கிறார்கள். அவர்களின் தரப்புக்கு நியாயங்களை உருவாக்கியமைக்கு இதுவரை இதனை எதிர்த்து நிற்காத அனைவரும் பொறுப்பாளிகள் தான்.

இனி வரபோகும் நாட்களில் சிங்கள பேரினவாத சித்தாந்தமும், அதன் கட்டமைப்பும் தமக்கான புதிய நிகழ்ச்சிநிரலையும், தந்திரோபாயங்களையும் உருவாக்கப் போகிறது. அதனை எதிர்கொள்ள நாமும் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தயாராக வேண்டிருக்கிறது.
சொந்த அனுபவம்
இதே 90களில் சிங்களப் பொதுக்கூட்டமொன்றில் நான் ஆற்றிய உரை பின்னர் ஹிரு பத்திரிகையில் பிரதான கட்டுரையாக பிரசுரித்திருந்தார்கள். அதை இந்த இடத்தில் பகிர்வது பொருத்தமென நம்புகிறேன்.
“தாய்மார்களே... சகோதர்களே... நான் தினசரி எனது வீட்டில் இருந்து கிளம்பும் முன் என்னை சுய பரிசோதனை செய்துகொள்வேன். அடையாள அட்டை இருக்கிறதா? எனது உடைகள் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறதா? உருவ அமைப்பில், எனது நடை உடையை வைத்து சந்தேகம் கொள்ள வாய்ப்புண்டா? என்று உறுதி செய்துகொண்டதன் பின்னர்தான் வெளியேறுவேன். வீட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து கொட்டாஞ்சேனை பஸ் தரிப்பு நிலையம் செல்லும் வரை ஒவ்வொரு திருப்பத்திலும் என்னை எவரும் அவதானிக்கிறர்களா? சந்தேகப்படுப்படும்படி போலீசாரோ வேறெவரோ தெரிகிறார்களா? என்பதை பீதியுடன் பார்த்து திரும்புவேன். பஸ்ஸில் கண்டக்டருடன் வீண் உரையாடலைத் தவிர்ப்பதற்காக  எப்போதும் மாற்றிய சில்லறைகளை கொண்டுவந்திருப்பேன். சரியாக 4.50 சதத்தைக் கொடுத்துவிடுவேன். என்னிடம் பத்திரிகையில் எழுதுவதற்கான உசாத்துணை நூல்களோ ஆவணங்களோ இருக்கும். சரிநிகர் அலுவலகத்துக்குப் போக கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் ஆகும். அந்த இடைவேளையில்  தப்பித்தவறி கூட ஒரு நூலை எடுத்து வாசிப்பதை தவித்துவிடுவேன். எவர் கண்களுக்கும் எனது தமிழ் அடையாளம் வெளித்தெரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். இறங்கும் இடம் வந்ததும் முன் கூட்டியே வாசல் வரை சென்று அந்தக் கதையுமின்றி இறங்கிவிடுவேன். மீண்டும் அலுவலகத்துக்குள் நுழையும் வரை ஒவ்வொரு திருப்பத்திலும் அதே பீதியுடன், படபடப்புடன், சந்தேகத்துடன் தான் போய் சேர்வேன். இத்தனைக்கும் நான் கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட, சிங்களம் தெரிந்த, அரசாங்கம் கொடுத்த ஊடக அடையாள அட்டையையும் கொண்டிருக்கிற ஒரு இளைஞன். நிரபராதி...
இப்போது நான் கேட்கிறேன் தாய்மாரே... என் வயதையொத்த உங்கள் பிள்ளைகள் இப்படித்தான் வாழ்கிறார்களா? இது என் கதையல்ல என்னைபோன்ற லட்சகணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் நாளாந்தம் இத்தகைய பீதியில் தான் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். சராசரி சிங்கள இளைஞர்களின் நாளாந்த வாழ்வுக்கும் தமிழ் இளைஞர்களின் அனுபவித்துவரும் வாழ்வுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது...” 
என்றேன். இந்த உரை பலரின் உணர்வுகளைத் உலுக்கியிருந்தது என்று ஹிரு பத்திரிகையின் நண்பர்கள் அன்று என்னிடம் தெரிவித்தார்கள்.
யுத்தம் முடிந்ததும் சகல இன மக்கள் மத்தியிலும் பரஸ்பரம் இருந்த சந்தேகம் போய்; சரளமாக பழகும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. அந்த வாய்ப்பு இப்போது மீண்டும் பறிக்கப்படுகிறது. இப்போது அந்த நிலைமை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பப்படப் போகிறது.

புர்காவை தடை செய்யக் கோரிக்கைகளை இப்போதே தொடங்கி விட்டார்கள். பாராளுமன்றத்தில் பிரேரணையும் செய்யப்பட்டிருக்கிறது. புர்காவுடன் இந்தக் கடைக்குள் நுழையாதீர் என்கிற பதாகைகளை பகிரங்கமாக தொங்கவிடத் தொடங்கியுள்ளார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான  “பேரச்ச வெருண்ட உணர்வு” (islamicphobia) ஏற்கெனவே வளர்த்தெடுக்கப்பட்டு இருக்கிறது. ஈஸ்டர் படுகொலைகள் அந்த நிலைமையை உச்சகட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறது.

இப்போதைக்கு வன்முறை வடிவம் எடுக்காதது நிம்மதியே. ஆனால் இந்த அமைதி இப்படியே தொடரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

ஏனென்றால் இப்போது இலங்கை தேசம் “பயங்கரவாதத்தை ஒழித்த” கோட்டாபாயவையும், “முஸ்லிம்களுக்கு எதிரான சித்தாந்தத்தை சமீபகாலமாக கட்டியெழுப்பிய” பிதாமகனான ஞானசாரவையும் மீண்டும் களத்தில் இறக்கவேண்டும் என்கிற பிரச்சாரங்கள் வேகமாக சிங்கள பௌத்தர்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளதை சமூக வலைத்தளங்களின் மூலம் அவதானிக்க முடிகிறது. இத்தகைய சூழலானது சாதாரண முஸ்லிம்களும் சேர்ந்து பலியாக்குவதற்கான நுழைவாசலே.

நன்றி - அரங்கம்

கண்டும் காணாது விட்டதன் விளைவு! - பாத்திமா மஜீதா


நடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் அரசினை மட்டுமே நாங்கள் பொறுப்புக்கூறுவது ஒரு வித தப்பித்தல் முறை. ஒரு வித அச்சம் சார்ந்த முறை. தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல, அவர்கள் பயங்கரவாதிகள் , அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்று சப்பைக் கட்டுவதை நிறுத்துங்கள் கூட எங்களை நாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளாவிட்டால் எங்கேயோ போய் முட்டி மோதி விடுவோம்.

கிட்டத்தட்ட இரு சகாப்தத்தின் முன்னால் போய் நின்று பார்க்கின்றேன். என்னையும் என்னைச் சுற்றி இருந்தவர்களும் படித்த பாடசாலை, பல்கலைக்கழகங்கள், வேலை செய்த இடங்கள் எல்லாவற்றிலும் மனிதம் மட்டுமே இருந்தன. படிப்படியாக அரேபியக் கலாச்சாரம் தலைக்கு ஏறத் தொடங்கியது. முஸ்லிம் , காபிர் என்ற பிரிவினை வாதப் போக்கினை இந்த ஒற்றைக் கலாச்சாரம் ஏற்படுத்தி விட்டது . அன்று நாம் சாப்பிட்ட நாரிசாச் சோறு , பராத் ரொட்டி , போன்ற எல்லாவற்றினையும் ஹராம் என்ற ஒற்றைக் கதவு போட்டு அடைத்து விட்டார்கள்.

ஒவ்வொருவரும் அடுத்த சமூகத்திலிருந்து பிரித்து விடப்பட்டுள்ளோம். நான் ஐந்து வயதாக இருக்கின்ற பொழுது எனது ஆடையை பற்றி கேள்வி எழுப்பாத மத்ரஸாக்கள் இன்று எனது எட்டு வயது மகள் கருப்பு ஹபாயாவினை அணிந்து வந்தால் தான் ஓத முடியும் என்று சட்டம் வகுக்கின்றது. பாவாடை சட்டை தாவணி அணிந்து பாடசாலை சென்ற ராத்தா பல்கலைக்கழகம் செல்கின்ற அவளது மகளுக்கு கண்கள் இரண்டு மட்டும் தெரியும் விதமாக ஹபாயாவினை போர்த்தி அனுப்பி வைக்கின்ற சூழல். தெருவுக்குத் தெரு பள்ளிவாசல் , காபிர் . ஷைத்தான் என்று கதறுகின்ற ஒலி பெருக்கிகள். போதாக்குறைக்கு நோன்பு , பெருநாள் காலங்களில் பேரீச்சம் பழமும் குர்பான் இறைச்சியும் கொடுத்து இந்த அப்பாவிச்சனங்களை போட்டோ எடுக்கின்ற சகிப்புத் தன்மையற்ற வகாபிசத்தின் கொடூரங்கள். 

எல்லாவற்றினையும் நாங்கள் பார்த்தும் பார்க்காமலும் இருந்த இந்த நோயின் கடைசித் தருணம் தீவிரவாதமாக மாறி உயிர்களை பலியெடுக்கின்ற நிலைமை . இந்த குறிப்பிட்ட தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகளினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இக்கட்டான நிலையில் நிற்கின்றது. இனிமேலாவது சவுதியின் கைக்கூலிகளான இத்தீவிரவாதப் போக்கினை கண்டுகொள்ளாமல் விடுவது முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது.

ஆனால் இந்த நிலைமையை விளங்கிக்கொள்ளாது நம்மை நாமே தப்பித்துக் கொள்ளவதை விட்டு இந்த தீவிர வாத நோயிலிருந்து எமது தலைமுறைை காப்பாற்ற முனையுங்கள். எங்களைச் சுற்றி என்ன நடந்தது எப்படியெல்லாம் நாங்கள் மூலைச் சலவை செய்யப்பட்டோம் என்பதை உணருங்கள்.

(பாத்திமா மஜீதாவின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன்)

இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் தாக்குதல்களுக்கு ISIS இயக்கம் உரிமை கோரியிருக்கிறது (வீடியோ)


இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ISIS இயக்கம் இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு உரிமை கோரியிருக்கிறது. இந்தச் செய்தியை முதலில் சர்வதேச ரொய்ட்டர் செய்தி நிறுவனம் அமாக் AMAQ செய்தி நிறுவனத்தை ஆதாரம் காட்டி வெளியிட்டிருந்தது.

அமாக் (AMAQ NEWS AGENCY - IS) செய்தி நிறுவனமானது ISIS இயக்கத்தின் மறைமுக செய்தி நிறுவனமாக கருத்தப்படுகிறது. ISIS இயக்கம் பற்றிய செய்திகள், தகவல்களைப் பெறுவதற்கு  இந்த அமாக் செய்திச் சேவையையே சர்வதேசம் முழுவதும் உன்னிப்பாக கவனித்து வருவது வழமை. ஏறத்தாழ அச்செய்திகள் மறைமுக உத்தியோகபூர்வ செய்திகளாக நம்பப்படுகிறது.

அவர்கள் இன்று வெளியிட்டிருக்கிற செய்தியில் இலங்கையில் 310 பேருக்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்து 600பேருக்கும் மேற்பட்டவர்களை படுகாயமடையச்செய்த கோர வெடிகுண்டுப் படுகொலைகளை தாமே மேற்கொண்டதாக உரிமை கோரியிருக்கிறார்கள். இது ஒரு உடனடி அறிவிப்பு என்கிற விததத்தில் மேலதிக விபரங்கள் வெளியிடப்படாத போதும் விரைவில் மேலதிக விளக்கங்களை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தேவாலய குண்டு வெடிப்புகள்கொச்சிக்கடை - அபு ஹம்சா, நீர்கொழும்பு - அபி கலீல், மட்டக்களப்பு - அபு முஹம்மத்,
ஹோட்டல்கள்அபு உபாய்தா (சஹாறான் ஹசீம்), அபு அல் பாரா, அபு முக்தார் ஆகியோர் ஷங்க்ரிலா, சினமன் கிராண்ட், கிங்க்ஸ்பரி
தெமட்டகொட பொலிஸ் சோதனையின்போது வெடிக்கவைத்து இறந்த கொலையாளி அபு அப்துல்லா
இறுதியாக சிரியாவில் நடந்துகொண்டிருக்கும் போரில் சுருங்கிக்கொண்டிருந்த ISIS இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் அவர்களை பலவீனப்படுத்தியிருந்தாலும் அவர்களை முழுமையாக அழித்துவிட முடியாது என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் பலரும் ஒத்துக் கொள்கின்றனர். காரணம் அவர்கள் மரபு இராணுவத்தையோ, கட்டுப்பாட்டுப் பிரதேசத்தையோ நம்பியிருக்கும் இயக்கமல்ல. மாறாக சர்வதேச அளவில் சித்தாந்த ரீதியில் இஸ்லாமியர்கள் மத்தியில் மத அடிப்படைவாத கருத்துக்களை ஆழ ஊன்றவைத்திருக்கிறது. அவர்களின் sleeping cells உலகளாவிய ரீதியில் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு தயார் நிலையிலேயே இருக்கின்றன என்பதே சர்வதேச கணிப்பு.

இலங்கை அரசாங்கமும் எடுத்த எடுப்பில் இந்த சம்பவத்தை ISIS இயக்கத்தை குற்றம் சுமத்துவதை தவித்து வந்தததையும் உள்ளூரில் "தேசிய தவ்ஜீத் ஜமாஅத்" இயக்கத்தையே குற்றம்சாட்டி வந்த நிலையில் இப்போது நேரடியாக ISIS இயக்கத்தின் திட்டமிடலின் பேரிலேயே "தேசிய தவ்ஜீத் ஜமாஅத்" இயக்கமும் இதில் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது என்று தெரியவருகிறது.

மின்னூல்களின் சேகரிப்பு - பயன்பாடு: சுய அனுபவங்களும், விளக்கங்களும் - என்.சரவணன்


தோழர்களே!

டிஜிட்டல் நூல் சேகரிப்பு குறித்து பல நண்பர்கள் என்னுடன் உரையாடியிருக்கிறார்கள். பலர் தொடர்ச்சியாக கேட்கும் கேள்விகளுக்கு ஒரே தடவையில் பதில்களாக இங்கு சில விளக்கங்களைத் தருகிறேன்.
 • இதுவரை நான் சேகரித்திருக்கும் மின்னூல்கள் 30,000க்கும் அதிகமானவை.
 • எனது ஆய்வுத்தேவைகளோடு தொடர்புடைய இலங்கையின் அரசியல், வரலாறு சார்ந்த நூல்கள் தான் பெரும்பாலானவை.
 • ஆங்கிலம், தமிழ், சிங்களம் மேலும் சில ஐரோப்பிய நாட்டு மொழிகளிலானவை அவை.
 • ஏராளமான காலனித்தவ நூல்களில் இந்த சேகரிப்பில் அடங்கும்
 • இலகுவாக தேடக்கூடிய வகையில் தனித்தனி folder களில் தலைப்புகளிட்டு அவற்றை வகைப்படுத்தி வைத்திருக்கிறேன்.
 • மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையாவது 5TBகொண்ட external Harddisk குக்கு இன்னொரு பிரதியை Backup எடுத்து வைத்துக்கொள்வேன். எனவே கணினியில் அவற்றை தற்செயலாக இழந்தாலும் என்னிடம் அவை வேறு இடத்தில் தப்பித்து விடும்.
 • பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டு வரும் இந்த நூல்களில் குறைந்தது 600 நூல்களாவது ‘நூலகம்’ நிறுவனத்தின் இணையத்தளத்தில் இருந்து தரவிறக்கப்பட்டவையும். அவர்களிடம் கோரி பெறப்பட்டவையும்.
 • இந்த நூல்கள் ஓரிடத்தில் இருந்து பெறப்பட்டவை அல்ல. நூற்றுக்கணக்கான இடங்களில் இருந்து பெறப்பட்டவை.

என்னுடைய ஆய்வுகளின் போது குறிப்பட்ட நூலொன்றைப் பற்றிய விபரங்களை அறிக்கையில்; அதன் மூல நூல் இருந்தால் தான் எனது ஆய்வை முழுமையாக்கலாம் என்று சில பல மணிநேரங்களை ஒதுக்கி எப்படியும் தேடி பெற முயற்சிப்பது எனது வழக்கம். சில நூல்களைப் பட்டியலிட்டு வைத்து இலங்கையில் நூல் விற்பனை நிலையங்களில் இருந்து வாங்கி வைத்துவிடுவேன். சிலவற்றை அமேசன் போன்ற இணையத்தளங்களில் இருந்தும் வாங்கியிருக்கிறேன்.

சில சந்தர்ப்பங்களில் சில குறுக்குவழிகளைக் கையாள்வதற்கான மென்பொருட்களின் மூலமே சில அரிய நூல்களின் சேகரிப்பு சாத்தியமாகின்றன.

ஒரு நூல் கிடைத்ததும்
 1. ஆங்கிலமாயின் அந்நூலின் உள்ளே சில சொற்களைத் தேடக்கூடிய வகையில் Text searchable ஆக்கி வைத்து விடுவேன். இதற்காக Profesional Acrobat Reader (latest version) பயன்படுத்தி வருகிறேன். இதன் மூலம் பக்கங்களை ஒழுங்கமைப்பதையும் சில வேளை மேற்கொள்வேன்.
 1. குறிப்பாக தேவையற்ற/தரம்குறைந்த அட்டையை நீக்கிவிட்டு, இலகுவாக அடையாளம் காணக்கூடிய original அட்டையை இணையத்தளத்தில் கண்டுபிடித்து அதை போட்டோஷாப் மூலம் தரப்படுத்தி நூலின் முகப்பில் இடுவது வழக்கம். பெரும்பாலான நூல்களுக்கு இந்த தேவை ஏற்படுகிறது.
 1. சில பழைய நூல்களின் அட்டை கிடைக்கும் ஆனால் குறைந்த தரத்திலேயே (Bad resolution) சிறிய அளவில் கிடைக்கும் அதனை பல மடங்கு தரமுயர்த்த   Topaz A.I. Gigapixel என்கிற மென்பொருளை பயன்படுத்துகிறேன்.
 1. பதிவிறக்கிய சில நூல்களில் Acrobat pro மூலம் Searchable செய்வதற்கு விடாது. அவை கடவுச் சொல் (Password) வைத்து மேலதிக பாவனையை மேற்கொள்ள முடியாதவாறு பூட்டியிருப்பார்கள். அப்படியான கடவுச்சொல்லை நீக்க  Wondershare PDF Password Remover என்கிற மென்பொருளைப் பயன்படுத்துகிறேன்.
 1. சில அறிய நூல்கள் pdf வடிவில் கிடைக்காமல் epub வடிவில் மாத்திரம் கிடைக்கும். epub வடிவங்கலானது வாசிக்க மட்டும் வழிசெய்யும். அமேசன் போன்ற இன்னும் பல நூல்கள் இரவல் கொடுக்கும் தளங்கள் epub வடிவில் மட்டும் தான் வழங்கும். அதனை முதலில் pdf ஆக மாற்றி நாம் சொந்தமாக்கிக்கொள்வதற்கு சில தொடர்பணிகளை முடிக்கவேண்டியிருக்கும். அதற்காக முதலில் Adobe Digital Editions என்கிற மென்பொருளை பயன்படுத்தி epub வடிவில் தரவிறக்கி பின்னர் PDF ePub DRM Removal என்கிற மென்பொருளின் மூலம் pdf ஆக்கிவிடுவேன்.

இவற்றைத் தரவிறக்கிக்கொள்ள படாதபாடு படவேண்டியிருக்கும் ஆனால் இத்தகைய அறிய நூல்களின் சேகரிப்பில் நான் போதையாகியிருக்கிறேன். அவற்றைக் கொண்டு ஆய்வு வேலைகளை மேற்கொள்ள எனக்கென தனியான வழிமுறைகளை வைத்திருக்கிறேன். வாரத்துக்கு இரண்டு கட்டுரைகளையாவது ஆய்வுபூர்வமாக வெளியிடமுடிவதை பல நண்பர்கள் ஆச்சரியமாக பார்ப்பதற்கு எனக்கென நான் கையாளும் தனியான தொழில்நுட்ப வழிமுறைகள் அதற்கு முக்கிய காரணம்.

இவற்றை எப்படி என் மக்களுக்கு கொண்டு சேர்க்கிறேன்.
 1. வருமானமே இல்லாத எனது ஆய்வுக் கட்டுரைகள் மூலம் அவற்றை முக்கிய ஊடகங்களின் மூலம் கொண்டு சேர்க்கிறேன். எனது கட்டுரைகள் அனைத்துமே நூலாக்க இலக்கைக் கொண்டதால் அதில் அதிக சிரத்தை இருக்கும். குறிப்பிட்ட தலைப்புக்குத் தேவையான கட்டுரைகள் முழுமையடைந்ததும் நூலுருவம் கொடுத்து பதிப்புக்கு அனுப்பி விடுகிறேன். எனது நூல்களுக்கான வடிவமைப்பு, முகப்பு வடிவமைப்பு என்பவற்றை நானே செய்துகொள்கிறேன்.
 1. இலங்கை செலும் போதெல்லாம் கொழும்பிலும், யாழ் பல்கலைகளைக் கழகத்தில், மட்டு பல்கலைக்கழகத்தில் எனது ஆய்வு நுணுக்கங்களை கருத்தரங்குகள் மூலம் கற்றுக்கொண்டுக்கிறேன்.
 1. அவ்வப்போது ஆய்வாளர்கள், ஊடக நண்பர்கள் கேட்டுக்கொள்ளும் போதெல்லாம் நூல்களை அனுப்பிவிடுகிறேன்.
 1. நான் சேகரிக்கின்ற நூல்கள் அத்தனையும் நூலகம் நிறுவனத்துக்கு தேவைப்படுவதில்லை. ஆனால் என்னிடம் கேட்டுக்கொள்ளும் போதோ, அல்லது கேட்காமலோ கூட அவர்களுக்கு சமீபகாலமாக “நூல்வேட்டையில்” கிடைக்கிற நூல்களை கிடைக்கச் செய்கிறேன். அவர்களுக்கு அவசியமானவற்றை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.
 1. ஆய்வுப் பணிகளுக்கு உதவக் கூடிய வகையில் நுணுக்கங்களை தொடர்ச்சியாக வழிகாட்டக் கூடிய வகையில் Youtube மூலம் கற்றுக்கொடுக்க ஒரு சேனலை உருவாக்கும் யோசனை; சில வருடங்களாக வேலைப்பழுவின் காரணமாக ஒத்திப்போயிருக்கிறது. இப்போது அந்த சேனலை நடத்துவதற்குத்  தேவையான உபகரணங்கள் வந்து சேர்ந்துள்ளன. விரைவில் அதனை வெளியிட முடியும்.
சில நேரங்களில் சில நண்பர்கள் என்னிடம் உள்ளவற்றை தொகையாக பெற்றுக்கொள்ளக் கோருவார்கள். நான் அப்படி கொடுக்க விரும்புவதில்லை. என்னிடம் உள்ளவை மற்றவர்களுக்கு கிடைக்கச் செய்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது. ஆனால் இதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பின் பெறுமதியை உணரத் தவறிவிடுவார்கள். அவர்களாகவே இப்படி சேகரிக்கும் வழிமுறையை அறியாமல் இருந்துவிடுவார்கள்.

மீனைக் கொடுப்பதை விட தூண்டிலைக் கொடுக்கவே நான் விரும்புகிறேன்.  எனவே அவர்களுக்கு அப்போது என்ன தேவையோ எனக்கு நேரம் இருக்கும் போது அவற்றை தேடி எடுத்து கொடுத்து விடுவதோடு நின்று விடுகிறேன்.

நோர்வேயில் 17 வருடங்களாக கணினித்துறையில் கற்பித்து வருகிறேன். என்னிடம் கற்பவர்களுக்கு குறிப்பிட்ட விடயத்தை கற்றுக்கொடுப்பதை விட 'கற்றுக்கொள்வது எப்படி', 'தேடல் உள்ளவராக நம்மை ஆக்கிக்கொள்வது எப்படி' என்பது போன்ற விடயங்களைக் கற்பிப்பதில் தான் நான் அதிக முனைப்பு காட்டி வருகிறேன்.

25 வருடங்களுக்கு முன் நான் ஊடகத்துறைக்கு வந்த போது ஊடகத்துறையில் சகல நுணுக்கங்களையும் வேகமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை ஒரு தவமாக செய்தேன். ஊடகத்துறை நுட்பங்களில் சுய தன்னிறைவு எனக்கு இருக்கவேண்டும் என்பதில் சிரத்தையாகவே இருந்திருக்கிறேன். எந்த பணிகளுக்கும் எவரிடமும் தங்கியிருக்கக் கூடாது என்பதற்காக பலதையும் கற்றுக்கொண்டேன். சரிநிகர் பத்திரிகையில் இணைந்த குறுகிய காலத்தில் எனது கட்டுரைகளை நானே தட்டச்சு செய்து, நானே எனது எனது சேகரிப்பில் இருந்த படங்களைக் கொடுத்தும், சில நேரங்களில் வடிவமைப்பையும் செய்துகொள்வேன். இன்று வரை சஞ்சிகைகள் வடிவமைப்பு, இணையத்தள வடிவமைப்பு அதன் நுணுக்கங்கள் என்பவற்றால் தான் பலரிடம் தகவல்களையும், கருத்துக்களையும் வெற்றிகரமாக கொண்டு போய் சேர்க்க முடிந்திருக்கிறது. இன்று ஒரு படைப்பை உருவாக்கி வாசகரிடம் கொண்டு சேர்க்கும் வரையான A - Z வரை என்னால் மேற்கொள்ள முடிகிறது.

சரிநிகர் shreelipi எழுத்து வடிவத்திலிருந்து பாமினி எழுத்து வடிவத்துக்கு மாறவேண்டும் என்று முடிவெடுத்த காலத்தில் Bamini, Vithya போன்ற எழுத்து வடுவங்களுக்கு மாற்றாக ஒரு மெல்லிய எழுத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காக அப்போதே ஒரு எழுத்தை உருவாக்கி அதற்கு Mayaandi (மாயாண்டி) என்று பெயர் வைத்தேன். அப்போதெல்லாம் லதாங்கி, சரஸ்வதி, சண்முகப்பிரியா, கீதாஞ்சலி போன்ற பார்ப்பணப் பெயர்களாகவே இருக்கிறது என்று தான் ஒரு தலித் பெயரை அதற்கு வைக்க வேண்டும் என்று அப்படி வைத்தேன். அப்போதைய எழுத்து வடிவங்களுக்கு ராகங்களின் பெயர்களைத் தான் வைத்திருந்திருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய எனக்கு காலம் எடுத்தது.

இந்த சந்தர்ப்பத்தைத் தவிர இதையெல்லாம் வேறெங்கே பகிர்வது.

இதுவரை நூல்களைத் தரவிறக்க நான் பயன்படுத்திவந்த பிரதான இணையத்தளங்களை இங்கு பகிர்கிறேன். விரைவில் youtube சேனலை எதிபாருங்கள்.

https://archive.org
www.scribd.com
http://books.google.com
http://noolaham.net
https://asiaticsocietybooks3.wordpress.com/
https://www.forgottenbooks.com
https://scriptoq.com/page/resources/library_index
http://gen.lib.rus.ec/
http://repository.kln.ac.lk
https://www.pdfdrive.com/
https://www.jstor.org
https://www.academia.edu
http://www.thamizhagam.net/
http://budaedu.org/ebooks/6-EN.php
http://padippakam.com/
http://www.tamildigitallibrary.in/
https://openaccess.leidenuniv.nl/
https://www.historyofceylontea.com/
https://www.aisls.org/

காக்கைச் சிறகினிலே - "கி.பி.அரவிந்தன் தமிழ் இலக்கிய பரிசு - 2019"


காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழ்க் குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட நான்காவது ஆண்டு 

கிபி அரவிந்தன் நினைவு  இலக்கியப் பரிசு  2019  (வள்ளுவராண்டு 2050)

குறும்படத் திரைக் கதைப் போட்டி : ‘இலங்கைத் தமிழர் வாழ்க்கை’ : பூர்வீகம்  - இடப்பெயர்வு  – புலப்பெயர்வு - இதனோடான தொடர்ச்சியும் நீட்சியும்

முடிவுகள்

« குறும்படத் திரைக் கதைப் போட்டி »  தமிழ் இலக்கிய எழுத்துப் போட்டி வகையில் முதல் முறையாக நடாத்தப்படடிருக்கிறது. இந்த முதற் போட்டியின் கதைக் களம் : «இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கை» எனவாக அமைந்திருந்தது. 20வது நூற்றாண்டின் பிற்பகுதி முதல் தற்போது வரையில் உலகப் பெரு வெளியில் அளப்பெரிய அனுபவங்களைச் செறிவாகப் பெற்றுள்ள ஓர் இனக்குழுமாக இந்த இலங்கைத் தமிழர்களது வாழ்வு அமைந்ததாய் நீட்சியுறுகிறது. இந்தப் புதிய வாழ்வு அனுபவங்கள் இலக்கியங்களாகப் பதிவாகி வரலாற்றிடம் கையளிக்கப்பட வேண்டும்.
 • * முதலாவது பரிசு :  பொறி - த. இராஜ ராயேஸ்வரி (குப்பிழான் -இலங்கை) - 10000 ₹  சான்றிதழ்.
 • * இரண்டாவது பரிசு :  மறந்திட்டமா - வி. நிசாந்தன் (இலங்கை) - 7500 ₹  சான்றிதழ்.
 • * மூன்றாவது பரிசு : புலம்பெயர் பறவைகள் - கேஷாயினி எட்மண்ட்  (மட்டக்களப்பு - இலங்கை) - 5000 ₹  சான்றிதழ்.
*   ஜூரிப் பரிசு : அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் - பாஸ்கர் மகேந்திரன் (பாரிஸ் - பிரான்சு) - 4000 ₹  சான்றிதழ் காக்கை ஓராண்டுச் சந்தா.
* * *   ஆறுதல் பரிசுகள் - தலா 1500 ₹ மற்றும் சான்றிதழ் - காக்கை ஓராண்டு சந்தா.
ஆறுதல் பரிசுகள்
 • ஒடுக்கம் - த. செல்வகுமார் (குப்பிழான் - இலங்கை)
 • தசரதன் - சி. ஸ்ரீரகுராம் (பருத்தித்துறை - இலங்கை)
 • தொலை நிலம் - வனிதா சேனாதிராஜா (வவுனியா இலங்கை)

இப்போட்டி மதிப்புக்குரிய பத்மநாப ஐயர் (இங்கிலாந்து) நெறியாளுகையில் நடுவர்களாக மதிப்புக்குரிய திரைத்துறை ஆளுமையாளர்களான  பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் (அமெரிக்கா)  அம்ஷன் குமார் (இந்தியா) ஞானதாஸ் காசிநாதர் (இலங்கை) பங்கேற்றனர்.

பரிசுக்குரியவர்கள் தொடர்பு கொள்ள காக்கை குழுமம் அழைக்கிறது.
மின்னஞ்சல் : kaakkaicirakinile@gmail.com 
செல்பேசி : 00919841457503 (வாட்சப் - வைபர் உண்டு) / தொலைபேசி : 00914428471890
காக்கை, 288 டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.இந்தியா.

தமிழ் இலக்கியத் தேடலாய் அமைந்த மேற்படி போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் காக்கை இதழ்க் குழுமம் பாராட்டைத் தெரிவிக்கிறது.  பரிசுத் தரவரிசை தவிர்க்க முடியாத நிரல் வகைப்படுத்தலாகும். ஆனாலும் இப்போட்டியில் பரிசுக்குரியவர்களாககத் தெரிவானவர்களது ஆற்றலை காக்கை குழுமம் பெருமையுடன் வாழ்த்துகிறது. 

முதற்பரிசு பெற்ற  பொறி குறும்படம் திரைப்படமாக்கப்படும்போது ஊக்கப் பரிசாக 30000 ₹  A Gun & a Ring தயாரித்த Eyecatch Multimedia Inc நிறுவனரின் மகனது நினைவாக வழங்கப்படும்.

நினைவுப் பரிசுத் தொகையை வழங்கும் கிபி அரவிந்தனின் துணைவி சுமதி - சகோதரர் குடும்பத்தினர், சிறப்பு ஜூரி மற்றும் ஆறுதல் பரிசுத் தொகையை வழங்கும் இலண்டன் துளிர், முதற் பரிசாளரின் படமாக்கலை ஊக்குவிக்கும் Eyecatch Multimedia Inc நிறுவனர், தமிழ் எழுத்து வகையில் முதற்தடவையாக நடைபெற்ற இந்தப் போட்டியைப் பகிர்ந்த சமூகவலைத் தள நண்பர்கள், ஆர்வலர்கள் மற்றும் போட்டி அறிவித்தலைப் பரவலாக்கிய ஊடகங்கள். போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட போட்டியாளர்கள், முடிவைத் தொகுத்தளித்த மதிப்புக்குரிய நடுவர்கள் அனைவருக்கும் காக்கை குழுமம் நன்றியைத் தெரிவிக்கின்றது.

மகாவம்சத்தை மீட்ட வில்லெம் கைகர் - என்.சரவணன்


இலங்கையின் வரலாற்றில் வில்லெம் கைகர் (Wilhelm Ludwig Geiger 1856-1943) தவிர்க்கமுடியாத ஒரு பெயர். அவர் ஒரு கீழ்த்திசை நாடுகளின் மொழியறிஞர். குறிப்பாக இரானிய மற்றும் இந்திய மொழி குடும்பங்களின் பழமையான பண்பாடுகளை ஆய்வுநோக்கில் கற்றுச் சிறந்த இவர், பாளி மொழியிலும் சிறந்து விளங்கினார். அத்துடன் சிங்களம், மாலைத்தீவு மொழி போன்றவற்றிலும் சிறப்பாற்றல் கொண்டவர்.

கைகர் ஆரம்பத்தில் கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளைப் பற்றி கற்கத் தொடங்கியவர் அதனை இடையில் கைவிட்டுவிட்டு கலாசார கற்கையை முடிப்பதற்காக பிரபல மொழி அறிஞரான பேராசிரியர் பிரெடீக் வொன் ஸ்பீகலிடம் (Friedrich von Spiegel, 1820-1905) சேர்ந்தார். ஸ்பீகல்  எழுதிய “கம்மல்வாக்ய” (Kammavâkya Bonn, 1841) என்கிற நூலே ஐரோப்பாவில் வெளியான முதலாவது பாளி மொழி நூல். பாளியில் மேலும் பல நூல்களை எழுதியவர் அவர். ஐரோப்பிய மொழியை விட்டு தூரகிழக்கு நாடுகளின் கலாசாரத்திலும், மொழியிலும் கைகருக்கு ஈடுபாடு ஏற்பட்டது ஸ்பீகலால் தான் என்று அவரின் சுயசரிதத்தில் குறிப்பிடுகிறார். ஸ்பீகலுக்குப் பின்னர் அப்பல்கலைக்கழகத்தில் அவரின் இடத்தை நிரப்பியவர் கைகர். அதே எர்லங்கன் (Erlangen) பல்கலைக்கழகத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் அவர் உபவேந்தராகவும் கடமையாற்றினார்.

1895ம் ஆண்டு நவம்பர் 18 ஜெர்மனிலிருந்து கப்பலில் புறப்பட்ட கைகர் டிசம்பர் 6 அன்று இலங்கை வந்து சேர்ந்தார். அவரின் முதலாவது ஆராய்ச்சி ரொடி மக்களின் மொழி பற்றியதாக இருந்தது. ரொடி மக்கள் இலங்கையின் ஓடுக்கப்பட்ட சாதியினராக நாடோடிகளாக வாழ்ந்து வந்தார்கள். 1898 இல் அவரின் “இலங்கைப் பயணக் குறிப்புகள்” (Ceylon: Tagebuchblätter und Reiseerinnerungen) நூலில் இவை பற்றிய விபரங்கள் அடங்கியுள்ளன. இந்தப் பயணமே அவரை தொடர்ந்தும் இலங்கையின்பால் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொள்ள ஈர்த்தது.

ஆரம்பத்தில் தனது ஆய்வுகளுக்கான நூல்கள், ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் என்பவற்றை வஸ்கடுவே ஸ்ரீ சூபித்த தேரரரின் ஊடக பெற்றுக்கொண்டார். 01.11.1902 அன்று அவர் அத் தேரருக்கு பாளி மொழியை சிங்களத்தில் எழுதிய கடிதமொன்றில் மகாவம்சம் பற்றிய குழப்பங்கள் பலவற்றுக்கு பதில் அளிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அக்கடிதத்தில் தான் மகாவம்சத்தின் வெவ்வேறு வடிவங்களை சில நாடுகளில் இருந்து திரட்டிக்கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். குறிப்பாக "கம்போடிய மகாவம்சம்" இலங்கையின் மகாவம்சத்தை விட அதிகம் விரிவானது என்று குறிப்பிட்டு தனக்கு தூபவம்சத்தின் பிரதியை பெற்றுத்தருமாறு கோரியிருக்கிறார்.

மகாவம்சம் பற்றிய தனது ஆய்வுக்காக  அனுராதபுரம், பொலன்னறுவ, மகியங்கனை, முல்கிரிகல, திஸ்ஸமாராமய, மிகிந்தலை, வேஹெரபெந்திகல, ரிட்டிகல, சீகிரிய, யாபஹுவ, தம்பதெனிய, அருன்கெலே, ரத்னபுர, குருநாகலை, பெழ்மடுள்ள, அம்பலன்தொட்ட, அலுத்னுவர போன்ற வரலாற்று முக்கியத்துமில்ல இடங்களுக்கு சென்று அங்குள்ள தொல்பொருள்கள், ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் என்பவற்றை ஆராய்ந்திருக்கிறார். 1926 ஆம் ஆண்டு அவர் இலங்கை வந்த போது தனது மனைவியுடன் சேர்ந்து  பராக்கிரமபாகு காலத்தில் தனக்கெதிரான கிளர்ச்சியை அடக்குவதற்கு அவரது படைகள் பயணம் செய்த பாதையில் பயணம் செய்ததாக தனது நாட்குறிப்பில் தெரிவித்திருக்கிறார்.

1905இல் ஜேர்மன் மொழியில் (Die geschichtliche uberlieferung) “தீபவம்சம் மகாவம்சம்: இலங்கையின் வரலாற்றுப் பாரம்பரியம்” என்கிற நூலை வெளிக்கொணர்ந்தார் கைகர். அதை ஈ.எம்.குமாரஸ்வாமி (Ethel M. Coomaraswamy) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து (The Dipavamsa and Mahavamsa and their historical development in Ceylon) 1908ஆம் ஆண்டு  கொழும்பில் வெளியானது.

சூலவம்சத்தின் முதற்பாகம் 1925 இலும் இரண்டாம் பாகம் 1927இலும் லண்டனில் ஜேர்மன் மொழியில் வெளியானது. மாபெல் ரிக்நேர்ஸ் (Mabel Rickners) அவற்றை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார்.

மகாவம்ச மொழிபெயர்ப்பு 
இலங்கையின் வரலாற்றை அவர் ஆய்வுசெய்யத் தொடங்கியபோது இலங்கையின் வரலாற்றைக் கூறக்கூடிய பிரதான நூலாக கருதப்பட்ட மகாவம்சத்தை பாளி மொழியில் இருந்து ஜேர்மன் மொழிக்கு 1908ம் ஆண்டு காலவரிசைப்படுத்தி மொழிபெயர்த்தார். திருமதி மாபெல் ஹெய்னஸ் போத (Mabel haynes Bode) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பின்னர் அவரின் உதவியுடன் மீண்டும் மொழிபெயர்ப்பை சரிசெய்து அதன் பின்னர் 1912ம் ஆண்டு   லண்டனில் உள்ள பாளி வெளியீட்டு சங்கத்துக்கு (Pali text society) ஊடாக வெளிக்கொணர்ந்தார். ஒரு வகையில் இதனை “கைகர் மகாவம்சம்” என்று கூட பல நூல்களில் குறிப்பிடுவதை கவனித்திருப்போம்.

மகாவம்ச மொழிபெயர்ப்புக்கான ஆராய்ச்சியின் போது அவர் இலங்கையின் 6 மகாவம்ச பிரதிகளையும், பர்மிய மொழிமகாவம்ச பிரதிகள் இரண்டையும், கம்போடிய மொழி பிரதிகள் இரண்டையும் ஒப்பிட்டு ஆராய்ந்திருக்கிறார். இந்த ஒப்பீட்டு பணிகளுக்காக மட்டும் மூன்று வருடங்களை கைகர் செலவிட்டிருக்கிறார். இந்த ஆய்வுக்காக அவர் ஏராளமான ஆவணங்களை சேகரித்து ஒன்றுபடுத்தியிருக்கிறார். இத்தனை ஆராய்ச்சிக்குப் பிறகும் அவர் தனது நூலில் மகாவம்ச மொழிபெயர்ப்பில் தான் முழுமையான திருப்தியை அடையவில்லை என்று செருக்கில்லாத புலமையாளராக ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது அதனை மேலும் செப்பனிடலாம் என்கிற கருத்து அவரிடம் இருக்கவே செய்துள்ளது.

கைகரின் நூல் அதன் பின் இலங்கையின் வரலாறை ஆராய முற்பட்டவர்களுக்கான பிரதான திறவுகோலாக ஆகியது.

1883 இல் தொன் அன்திரிஸ் த சில்வா பட்டுவந்துடாவ (DON ANDRIS DE SILVA BATUWANTUDAWA)  என்பவரைக் கொண்டு ஆங்கிலேய அரசாங்கம் மொழிபெயர்த்த பிரதி வெளிவந்தது. அதன் பின் ஜோர்ஜ் டேனர் (George Turnour) என்பவர் முதலியார் எல்.சீ.விஜேசிங்கவுடன் இணைந்து 1889 இல் பாளியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். ஆனால் இவை இரண்டிலும் பல மொழிபெயர்ப்புப் பிழைகள் இருந்ததை விளக்கித் தான் கைகரின் மகாவம்சம் வெளியானது. அது மட்டுமன்றி கைகர் மட்டும் தான் மகாவம்சத்தை விஞ்ஞானபூர்வமான வரலாற்று நோக்கில் அதை அணுகினார். இன்றும் சகலரும் கைகரின் மொழிபெயர்ப்பைத் தான் ஏற்றுக்கொள்கிறார்கள். வெறும் மொழிபெயர்ப்பாளராக மட்டுமன்றி அவர் ஒரு வரலாற்று ஆசிரியராக அதனை விமர்சனபூர்வமாகவும் ஆய்வுபூர்வமாகவும் அணுகியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

370 பக்கங்களைக் கொண்ட அவரது நூலில் 70 பக்கங்களில் மகாவம்சத்துக்கு “அறிமுகம்” எழுதியிருக்கிறார். அதை மட்டுமே சிறு நூலாகவும் பின்னர் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு அந்த அறிமுகம் முக்கிய ஆய்வாக கருதப்படுகிறது. மொழிபெயர்ப்பு சிக்கல்கள் பற்றி மட்டுமல்ல மகாவம்சத்தில் காணப்படும் பல முரண்பாடுகளையும், குறைகளையும் கூட அதில் சுட்டிக்காட்டுகிறார்.

அவரது ஆய்வின் முடிவில் அவர் பௌத்த மதத்தின் மீது எப்பேர்பட்ட மதிப்பையும் பற்றையும் வைத்திருந்தார் என்பது அவரது எழுத்தில் இருந்து உணரமுடியும். சிங்களத்தை மட்டுமல்ல பௌத்தத்தின் தொன்மைகளையும் மீட்டதில் அவருக்கு பங்குண்டு என்றே கூறவேண்டும்.  இத்தனைக்கும் கைகரின் தகப்பனார் (Johannes Leonhard Geiger) ஜெர்மனில் ஒரு கிறிஸ்தவ பாதிரியார்.

“உண்மையைச் சொல்லப்போனால் இலங்கை வரலாற்றின் முக்கியத்துவத்தை ஐரோப்பியர்கள் இன்னமும் சரியாக புரியவில்லை. ஆனால் மனிதகுல வரலாற்றில் அது முக்கியமானதொரு பக்கம்.” என்று தனது “இலங்கைபயணக்குறிப்புகள்” நூலில் குறிப்பிடுகிறார்.

இலங்கைக்கு அவர் 1895 இல் முதற் தடவை வந்திறங்கியதை அவர் விளக்கும் போது
“கருநீல நிற சமுத்திரமும் அதற்குப் பொருந்துகிறபடி வெளிர்நிற கடற்கரையும் மனதைக் கொள்ளைக்கொள்பவை கரைக்கு அப்பால் கண்ணில் தெரிந்த பரந்த நிலம் தென்னையால் மூடியிருந்தது...”
கொழும்பிலிருந்து கல்கிஸ்ஸவுக்கு ரயில் பயணத்தை மேற்கொண்டபோது..
“... இதுவரை கனவுலகில் மட்டுமே என்னை ஆட்கொண்டிருந்த வர்ணநிறங்களில் இந்தப் பகுதியின் மரங்களைக் கண்டேன். சூழத் தெரிந்த அத்தனையும் கடும் பச்சை நிறத்தில் காணப்பட்டது....”
கைகரை மகாவம்சத்தை பாளி மொழியிலிருந்து வெளிக்கொணர்ந்தவர் என்று மட்டும் தான் பலர் அறிந்திருப்பார்கள். ஆனால் அது மட்டுமன்றி சூலவம்சம் (ஜெர்மன், ஆங்கிலம் இரு மொழிகளிலும்), ரசவாகினி, சங்யுக்த நிக்காய, சிங்கள அகராதி உட்பட இன்னும் பல மொழிபெயர்ப்புகளையும், நூல்களையும் கொண்டுவந்திருகிறார். வேடுவ மொழி, ரொடி உப மொழி, சிங்களம், பாளி மற்றும் சிங்கள கலாசாரம், இலக்கியம், அதன் இலக்கணம், வரலாறு, மொழி, கலை, பௌத்த இலக்கியங்கள், இந்திய தொல்பொருள், பூகோள சாஸ்திரம், அகராதியாக்கம் என பல்துறை அறிஞராக அவர் இருந்திருக்கிறார். 

சிங்கள மொழியானது திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது என்கிற ஒரு கருத்து பரவலாக இருந்துவந்த காலத்தில் அது அப்படி இல்லை என்று தனது ஆய்வுகளின் மூலம் உறுதிபடுத்தினார் கைகர். அப்படி அது நிரூபிக்காது போயிருந்தால் பிற் காலத்தில் ஈழப் போராளிகளுக்கு மொழி ரீதியாக சிங்களத்தை தன்னுள் இழுத்துக்கொள்ள வாய்ப்பிருந்திருக்கும் என்று சிங்களவர்கள் பிற்காலத்தில் கூறினார்கள். சிங்கள மொழியை ஐரோப்பியர்களுக்கு அறிமுகப்படுத்திவர்களில் முக்கியமானவராக கைகர் கருதப்படுகிறார். அவரது இறுதிக் காலத்தில் அவர் சிங்கள அகராதியை ஆக்குவது, இலக்கண நூலை எழுதுவது என்பவற்றில் செலவழித்தார்.

மகாவம்சத்தை அவர் நேர்த்தியாக ஒப்பேற்றிய வெற்றியின் காரணமாக அன்றைய ஆங்கிலேய அரசு சூலவம்சத்தை மொழிபெயர்ப்பதற்கும், தொகுப்பதற்கும் கைகரை இலங்கைக்கு அழைத்தது. 1926இல் மீண்டும் இலங்கை வந்து அதனை முடித்தார்.

மகாவம்சம் ஒரு வீரகாவியம் என்றார் கைகர். அது அந்தக் கலைப் படைப்பாளரின் பிரதியாகவும் பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அதே வேளை அவர் “அதில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பதைவிட என்ன சொல்லப்படாமல் மறைக்கப்பட்டிருக்கின்றது என்பதை ஆராய்வதே மிகவும் சிரமமான பணி.” என்பதை சொல்லத் தவறவில்லை.

கைகரைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் கவனிக்க வேண்டிய இன்னுமொரு முக்கிய பகுதி அவர் இலங்கை வந்த காலச் சூழலில் இருந்த இலங்கையின் அரசியல், சமூக நிலை.

இந்தக் காலப்பகுதியில் தான் பௌத்த மறுமலர்ச்சி காலப்பகுதி. ஒல்கொட் தலைமையில் பிரம்மஞான சங்கம் இலங்கையில் பௌத்த எழுச்சியில் பாரிய பங்காற்றிய காலம்., மிகெட்டுவத்த ஸ்ரீ குணானந்த தேரர், ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரர், அநகாரிக்க தர்மபால, வலிசிங்க ஹரிச்சந்திர, பியதாச சிறிசேன  போன்ற தீவிர சிங்கள பௌத்தத் தலைவர்கள் இயங்கிய காலம். ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், மிஷனரிகளுக்கு எதிராகவும் சுதேசிகள் எழுச்சி கொண்ட காலம். இப்பேர்பட்ட சூழலில் இலங்கையின் சிங்கள பௌத்தத்தின் தொன்மையை தூசு தட்டி வெளிப்படுத்த கைகருக்கு கிடைத்திருக்கக் கூடிய ஆதரவும், ஒத்தாசையும் கவனத்திற் கொள்ளலாம். அதுபோல இந்த சுதேசிய எழுச்சி கைகரின் கவனத்தையும் ஈர்க்கத் தவறவில்லை. அவரது “Unter Tropische Sonne” (சூரிய வெப்பத்தின் கீழ் 1930) என்கிற நூலில் இலங்கையின் அரசியல், சமூக, ஆன்மீக, சூழலியல் விடயங்களைப் பற்றி நிறைய பேசுகிறார். அப்போது அவர் 74வயதைக் கடந்திருந்தார்.

கைகரின் சகல நூல்கள் பல ஆங்கிலத்தில் மட்டுமல்ல சிங்கள மொழியிலும் இன்று கிடைக்கின்றன. ஆனால் தமிழில் மகாவம்சத்தைத் தவிர வேறெதுவும் வெளிவந்ததில்லை. கைகரின் பணிகள் பற்றிய ஆய்வுகளை இன்னும் பல்கலைக்கழகங்களில் செய்துகொண்டு தானிருக்கிறார்கள். 1943 இல் அவர் தனது 87வது வயதில் ஜெர்மனியில் இறந்தபோது மகத்தான சாதனைகளை விட்டுவிட்டுச் சென்றிருந்தார். குறிப்பாக இலங்கையின் வரலாற்றை மீள் கண்டுபிடிப்பு செய்ததில் அவரது பங்கு அளப்பரியது.


1989ம் ஆண்டுகளின் இலங்கை அரசு, கைகரின் உருவத்தைதைக் கொண்ட தபால்தலை வெளியிட்டு கௌரவப்படுத்தியது.  இலங்கை வரலாற்றில் இவரது வில்ஹெல்ம் கைகரின் அழியாதப் பெயராக நிலைத்து விட்ட ஒன்றாகும்.

கிட்டத்தட்ட அவர் எழுதிய 26 நூல்களை பட்டியலிட்டுள்ளது “தென்னாசியக் கற்கைக்கான இங்கிலாந்துப் பேரவை”

கைகர் எழுதிய நூற்றுக்கணக்கான நூல்களில் இலங்கை சார்ந்த நூல்களை இப்படி பட்டியலிடலாம்.

அவற்றில் இலங்கை சார்ந்து அவர் எழுதிய நூல்களே அதிகம்
 • “தீபவம்சம் மகாவம்சம்: இலங்கையின் வரலாற்றுப் பாரம்பரியம்” (1905)
 • மகாவம்சம் ஆங்கில மொழிபெயர்ப்பு (1908)
 • சிங்களத்தின் மகாவம்சக் கதை எனும் மகாவம்சம்  (1912)
 • ரசவாகினி மொழிபெயர்ப்பு (1918)
 • சங்யுக்த நிக்காய (1925)
 • சூலவம்சம் - ஜேர்மன் மொழிபெயர்ப்பு 1-2(1925-1927)
 • சூலவம்சம் ஆங்கில மொழிபெயர்ப்பு 1-2(1929-1930)
 • சிங்கள மொழி அகராதி (1930)
 • சிங்கள மொழி இலக்கணம் (1938)
 • சிங்கள மொழி உளவியல் கலைக்களஞ்சியம் (1941)
 • Ceylon. Tagebuchblätter und Reiseerinnerungen (இலங்கை டயரித் தாள்களும் பயண நினைவுகளும்) (1898) 
 • Unter Tropische Sonne (சூரிய வெப்பத்தின் கீழ்) (1930)
நன்றி - அரங்கம்

பாரிசில் முறிந்த முதுசம் - என்.சரவணன்


ஹூகோ எழுதிய இரண்டு பிரதான நூல்களையும், இது குறித்த திரைப்படங்கள் பற்றிய விபரங்களையும் இங்கே காணலாம்.
பாரிஸ் நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தின் முக்கிய பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன. கிட்டத்தட்ட 9 நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. பாரிசின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்பட்டு வந்தது. இதனைப் பாதுகாக்கவேண்டும் என்றும் மீள புனரமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை இன்று நேற்றல்ல இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே அழுத்தமாக எழுந்தது. இரண்டு உலக யுத்தங்களிலும் இருந்து இந்த தேவாலயம் தப்பியிருக்கிறது.

ஆனால் அதற்கு முன்னமே உள்நாட்டு போராட்டங்களால் பாதிப்பட்டிருக்கிறது. ஜெர்மனின் தாக்குதலுக்கு இலக்காகக் கூடும் என்கிற அச்சத்தில் மூலஸ்தானத்தில்  இருந்த நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட பழம்பெரும் கண்ணாடிகள் முன்னெச்சரிக்கையாக அங்கிருந்து அகற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு யுத்தம் முடிவடைந்ததும் மீண்டும் அவை இருந்த இடங்களில் பொருத்தப்பட்டன.

பிரான்சின் வரலாற்று நிகழ்வுகளோடு நெருங்கிய நேரடி தொடர்புடைய தேவாலயமாக இருந்து வந்த இந்த தேவாலயம் 1790 பிரெஞ்சு புரட்சி காலத்தில் புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. அரசுக்கும் தேவாலயத்துக்கும் இருந்த தொடர்புகளின் காரணமாக தேவாலயம் இலக்கு வைக்கப்பட்டது ஆச்சரியமில்லை. அங்கிருந்த 20க்கும் மேற்பட்டு முக்கிய பழமையான பெரிய சிலைகள் சிதைக்கப்பட்டன. 1977இல் அச்சிலைகளில் 21 தலைகள் மாத்திரம் கண்டெடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1792 செப்டம்பரில் நிகழ்ந்த படுகொலைகளின் போது பல பாதிரியார்கள் கொல்லப்பட்டும், சிறைகளில் அடைக்கப்பட்டுமிருந்தார்கள்.


பிரான்சில் புகழ்பெற்ற எழுத்தாளரான விக்டர் ஹூகோ 1831ம் ஆண்டு நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தைப் பற்றி விரிவாக பல விபரங்களுடன் The hunchback of Notre Dame (பிரெஞ்சு மொழியில்: Notre-Dame de Paris, "Our Lady of Paris") நாவல் வடிவில் ஒரு நூலை வெளியிட்டார். மிகவும் முக்கியமான வரலாற்றுச் சின்னமான அந்த தேவாலயத்தின் அன்றைய அவல நிலையைப் பற்றியும் அது பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியத்துவமும் அந்த நூலில் பொதிந்திருந்தது.

ஹூகோ இந்த நூலுக்கு முன்னரே பாரிசில் உள்ள புராதன சின்னங்களைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை “Guerre aux Démolisseurs” (War to the Demolishers) எழுதியிருந்தார்.  அதன் விரிவாக்கமாகத் தான் ஒரு பதிப்பாளருக்கு இந்த நூலை எழுதி முடிக்க ஒத்துக்கொண்டார். அதன்படி 6 மாதங்களில் அவர் அதனை முடித்துக்கொடுத்தார். மிகவும் பிரபல்யமான நூலாக அது கருதப்படுகிறது.


இந்த நூல் பாரிசின் தொல்பொருள், அதன் முதுசம் பற்றிய அக்கறையை பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்த தேவாலயத்தின் கட்டடக் கலை குறித்து நிறைய விபரங்களைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து அந்த தேவாலயம் 1844இல் மீண்டும் புனரமைக்கப்பட்டது.


ஹூகோவின் The hunchback of Notre Dame நாவல்...
(மேற்படி  இணைப்பை அழுத்தி  அவற்றைப் பார்வையிடலாம்)

கடந்த வாரம் 14ஆம் திகதி அதன் திருத்த வேலைகளின் போது 16 புனிதர்களின் வென்கலச்சிலைகள் வெளியில் இருந்து உள்ளே வைக்கும் நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கானோர் வந்திருருந்தனர். 100 மீட்டர் உயரத்துக்கு உயர்த்தி உள்ளே கொண்டுசென்று வைக்கப்பட்டதுஇதில் உள்ள அவலம் என்னவென்றால் இந்த தேவாலயத்தை நுணுக்கமாக சீர்திருத்தும் புனருத்தாபன பணிகளின் போது  ஏற்பட்ட தீயே இப்போது இருந்ததையும் அழித்து விட்டிருக்கிறது என்பது தான்.பிரெஞ்சு மொழியில் ஹூகோவின் நூல்

https://drive.google.com/open?id=14BZ0qMzcNBQ2sT7CsIgMg88D-xkbefJl

ஆங்கில மொழிபெயர்ப்பு
https://drive.google.com/open?id=1LW7dM-EVqrf-O-0kOUN3HUI9uv9IlxHM

சாதி வெறி கோலோச்சும் பௌத்த நிக்காயக்கள் - என்.சரவணன்


பௌத்த நிக்காயக்களுக்கு இடையிலான சாதிப் பிரச்சினை மீண்டும் சூடு பிடித்துள்ளது

தேரவாத திபிடகத்தை கடந்த ஜனவரி மாதம் இலங்கையின் மரபுரிமையாக பிரகடனப்படுத்திய நிகழ்வை நாம் அறிவோம். அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 16 தொடக்கம் 23 ஆம் திகதிவரையான காலத்தை திபிடக வாரமகாவும் பிரகடப்படுத்தப்பட்டு அந்த நாட்களில் திபிடகவைக் கொண்டாடும் நிகழ்வுகள் நாடெங்கிலும் சிங்கள பௌத்தர்களால் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. மார்ச் 23 அன்று கண்டி தலதா மாளிகையில் அந்த வாரத்தை நிறைவு செய்யும் நாளில் கண்டியில் நிகழ்ந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திபிடகவை உலக மரபுரிமையாக ஆக்கும் முன்மொழிவை செய்யும் நிகழ்வும் ஏற்பாடாகியிருந்தது.

இந்த நிகழ்வுக்கு இலங்கையின் அதியுயர் பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகா நாயக்கர்களும் ஆயிரக்கணக்கான பிக்குமார்களும் கலந்துகொண்டிருந்தனர். ஆனால் அங்கு கலந்து கொண்டிருந்த நிக்காயக்களின் தலைமைப் பிக்குமார்கள் சமமாக அங்கு நடத்தப்படவில்லை என்கிற சர்ச்சை இப்போது எழுத்துள்ளது. குறிப்பாக அவர்களுக்காக ஒழுங்கு செய்யபட்டிருந்த இருக்கைகளில் மல்வத்து, அஸ்கிரி ஆகிய நிக்காயக்களின் தலைமைப் பிக்குகளுக்கு மாத்திரம் இருக்கைகளை உயரமாகவும் அவர்களுக்கு அருகிலேயே  ராமக்ஞ, அமரபுர ஆகிய நிக்காயக்களின் தலைமைப் பிக்குகளுக்கு உயரம் குறைந்த இருக்கைகளை ஒழுங்கு செய்திருந்தமை பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

ஊடகங்கள் இதனை குறிப்பாக பதிவு செய்தன. சமூக வலைத்தளங்களில் இது பற்றி பெரும் விவாதங்களே நடந்து வருகின்றன. இதற்கிடையில் இந்த நிகழ்வு முடிந்து இரு நாட்களின் பின்னர் 27ஆம் திகதி ராமக்ஞ நிக்காய ஒரு முக்கிய எதிர்ப்பு அறிக்கையை வெளியிட்டது. ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டிருந்த கண்டன அறிக்கையில் “உபசம்பத்தா” (பௌத்த தீட்சை) பெற்ற அனுபவ முதிர்ச்சியின் அடிப்படையிலேயே பிக்குமார்களுக்கான ஆசன தரவரசை அமைக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும், அது மட்டுமன்றி மூத்த நிலை பௌத்த மதகுருக்கள் என்பதைக் கூட கவனத்திற்கொள்ளாது அவர்களை உயரம் குறைந்த ஆசனங்களில் இருத்த வைத்தது மரபு மீறிய செயல் என்று அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக 97 வயதையுடைய மூத்த மகாநாயக்கரை மதிக்காத செயல் என்றும் மோசமான அவமதிப்பு என்றும், அற மீறல் என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது.


இந்த பாரபட்சம் வேண்டுமென்றே சாதி அடிப்படையிலான தர வரிசைப்படியே இந்த ஆசனங்கள் அமைக்கப்பட்டிருப்பதையே இந்த அறிக்கையில் மறைமுக கண்டனமாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஊடக விவாதங்களில் காண முடிகிறது. நிக்காயக்களுக்கு இடையிலான சாதிச் சண்டைகள் நடைமுறையில் வலுவாக இருந்தாலும் வெளிப்படையாக சாதியைக் குறிப்பிட்டு அந்த பாரபட்சங்கள் நடப்பதில்லை.

மிகவும் சூட்சுமமாகவும், நுணுக்கமாகவும் அவை நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி செயலக ஊழியர்களை குறிப்பிட்ட அறிக்கையின் மூலம் கண்டித்திருந்தாலும் கூட நிருவனமமயப்பட்ட சாதியம் இப்படித் தான் மறைமுகமாக தனது பாரபட்சத்தை நிறைவேற்றிக்கொண்டே செல்வதை அவதானிக்க முடியும். ஜனாதிபதி செயலக ஊழியர்கள் மாத்திரம் விதிவிலக்கா என்ன?

அமரபுர, ராமக்ஞ நிக்காயக்கள் முறையே பிற்படுத்தப்பட்ட, தலித் நிக்காயக்களாக நடத்தப்படுபவை. இந்த வைபவத்தில் அவர்கள் வெளிப்படையாக தனித்து ஓரங்கட்டப்பட்டுள்ளதையே இனங்கான முடிகிறது. இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாதியத்தை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் அவர்கள் எந்த பாரபட்சத்தை இங்கு காட்ட விளைகிறார்கள் என்பது.

சாதிவாரி நிக்காயக்கள்
இலங்கையின் பௌத்த சங்க அமைப்புமுறையை நிகாய என்று அழைப்பார்கள். அது பிரதான மூன்று “நிகாய”க்களாக  இயங்கி வருகின்றது. சீயம் நிகாய, அமரபுர நிகாய, ரமாக்ஞ நிகாய என்கிற இந்த மூன்று நிகாயக்களும் சாதி ரீதியில் பிளவு பட்டு இயங்குபவை. யாழ்ப்பாண சாதிய கட்டமைப்போடு ஒப்பிட்டு கூறுவதானால் முறையே வெள்ளாளர், கரையார், தலித் சமூகங்களாக இந்த மூன்றும் பிளவுற்றிருப்பதாக கொள்ளலாம்.

இலங்கையில் பௌத்த தீட்சையளிக்கும் வழிமுறை (உபசம்பதா சடங்கு) இல்லாதொழிந்து போயிருந்த ஒரு காலத்தில் மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் ஆதரவில் வெலிவிட்ட சரணங்கர தேரரின் தலைமையில் பௌத்த சமயம் கண்டி ராஜ்ஜியத்தில் மீண்டும் புத்துயிர் பெற்றது. 

உபாலி என்கிற பிக்குவின் தலைமையில் சீயம் சென்று அங்கிருந்து பௌத்த தீட்சையளிப்பதற்கு தகுதியான பிக்குமார்களை அழைத்து வந்தனர். 1753இல் இருந்து தான் மீண்டும் பௌத்த தீட்சையளிக்கும் மரபு ஆரம்பிக்கப்பட்டது. அப்படி ஆரம்பிக்கப்பட்டது தான் சியம் நிக்காய. ஆனால் ஒரு தசாப்தம் கூட கடக்கும் முன் “கொவிகம” சாதியினருக்கு மாத்திரமே தீட்சயளிக்கும் வழிமுறையை பின்பற்றத் தொடங்கினர். “கொவிகம” சாதி தவிர்ந்தவர்கள் பிக்குவாக ஆக அரச அனுசரனையோ ஆதரவோ கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் 1779 இல் அம்பகஸ்பிட்டியே ஞானவிமல தேரர் பர்மாவுக்குச் சென்று அங்கிருந்து தீட்சை பெற்று வந்தார். 1803இல் அவர் ஆரம்பித்தது தான் அமரபுர நிக்காய. மியான்மாரின் பழைய தலைநகருக்குப் பெயர் தான் அமரபுர என்பது.

அமரபுர நிக்காயவின் தோற்றம்
கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (கண்டியை ஆண்ட மதுரை நாயக்க வம்சத்து தமிழ் மன்னன்) பௌத்த மதத்தை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் அளப்பரியது. அதுபோல கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் கொவிகம சாதிக்கு சார்பான தீர்மானங்களை எப்போதும் எடுத்துவந்தவர் என்பதும் வரலாற்றுக் குறிப்புகள் தெளிவுறுத்துகின்றன. கண்டி மல்வத்து, அஸ்கிரிய ஆகிய இரண்டு விகாரைகளை மையப்படுத்தி இரண்டு பிரதான பௌத்த நிகாயக்களை அமைத்து நாட்டிலுள்ள அனைத்து பௌத்த விகாரைகளும் இந்த நிகாயாக்களின் பரிபாலனத்துக்கு கீழ் கொண்டு வரப்பட்டன. இவை இரண்டிற்கும் கீழ் பௌத்த துறவிகளாக நியமிக்கப்படுபவர்கள் கொவிகம சாதியை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்கிற சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

சிங்கள பௌத்தர்களில் கொவிகம அல்லாதவர்கள் இதனால் பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக கராவ, சலாகம, துராவ சாதியினர் ஏமாற்றமுற்றதுடன் தமது எதிர்ப்பையும் வெளியிட்டனர். துறவறம் பூண்டிருந்த சில பிக்குமார்; நிலப்பிரபுக்கள், உயர் சாதியினர் இருக்குமிடங்களில் தமது பழக்கதோசத்தால் தமது சீருடையையும் கழற்றிவிட்டு பாதம் பணிந்து வணங்கியிருக்கிறார்கள். சில பிக்குமார் நடனம், பறையடித்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த செய்தி மன்னரின் காதுகளுக்கு எட்டியது. இந்த பின்னணியில் தான் குறித்த சட்டத்தை மன்னர் கொண்டு வந்தார் என்கின்றன குறிப்புகள். சாதி மேலாதிக்க கொவிகம சாதியினருக்கு இது வாய்ப்பாகப் போனது.

கொவிகம அல்லாதோர் அந்த சட்டம் குறித்து தமது கவலையை தெரிவித்ததுடன், அவர்களின் முறைப்பாடுகளும் மன்னரை சேர்ந்தன. ஒன்றும் நடக்கவில்லை. எனவே அந்த மூன்று சாதியினரும் சேர்ந்து 1772 இல் தாமே இரண்டு இடங்களில் துறவற நிகழ்வை ஏற்பாடு செய்தனர். ஆனால் அதனை மலைநாட்டு பௌத்த பெரியார்களிடமிருந்தோ, மக்கள் மத்தியிலோ எந்த மதிப்பும் கிடைக்கவில்லை.

துறவறத்துக்குள் நுழைந்த பிக்குகளுக்கு “உபசம்பதா சடங்கு” என்கிற துறவற நிகழ்வு மிக முக்கியம். அதன் பின்னர் தான் உத்தியோகபூர்வமான நிலைக்கு அவர்கள் உயர்த்தப்படுவார்கள். அதனை இரண்டு நிகாயக்களும் மறுத்த நிலையில் இந்த மூன்று சாதியினரும் பர்மாவுக்கும், தாய்லாந்துக்கும் (சீயம்) 1799-1813 காலப்பகுதியில் பல தடவைகள் சென்று அங்கு துறவற நிகழ்வை நடத்தி விட்டு வந்தார்கள். அதற்கான செலவுகளை சலாகம சாதியை சேர்ந்த வர்த்தகர்கள் ஒழுங்கு செய்து கொடுத்தார்கள்.

ஞானவிமலதிஸ்ஸ தேரர் “உபசம்பதா” செய்துகொண்டு அந்த பிக்கு பரம்பரையின் தலைமைப் பதவிக்கு பர்மா அரசர் நியமித்திருப்பதாக ஒரு கடிதத்தைக் கொண்டு வந்ததுடன் மல்வத்து பீடத்தின் சங்க நாயக்கருக்கும் ஆங்கில தேசாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டபோதும் அவை எதுவும் கணக்கில் எடுக்கப்படவில்லை. கண்டியைச் சேர்ந்த உயர்சாதி நிக்காயக்கள் இப்படி ஒரு புதிய நிக்காய தோற்றம் பெறுவதில் அதிருப்தியுற்றிருந்தனர். கண்டி கைப்பற்றப்படாத காலத்தில் கூட சங்க நாயக்கர்களுக்கும் ஆங்கில தேசாதிபதிக்குமிடையில் அன்று நட்பு இருந்தது என்று டொய்லியின் நாட்குறிப்பில் இருக்கிறது. எனவே அன்றைய தேசாதிபதி பிரவுன்றிக்கு ஊடாக புதிய நிக்காய  தோற்றம் பெற முடியாதவாறு தடை செய்தனர்.

தேசாதிபதியின் இந்த தடையை எதிர்த்து அப்போது களுத்துறை முதல் மாத்தறை வரையிலான கருவா தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் (சலாகம சாதியைச் சேர்ந்தவர்கள்) வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் விளைவாக அந்தத் தடையை தேசாதிபதி நீக்கியிருக்கிறார். இந்த விபரங்கள் விரிவாக மிகெட்டிவத்த குணானந்த தேரரின் சுயசரிதத்தில் (கொடகே வெளியீடு) விபரிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் வடக்கு பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு சைவக் கோவில்கள் தடைசெய்யப்பட்டு இருந்ததைப்போல பௌத்த விகாரைகளிலும் நிலைமை இருந்திருக்கிறது.

இந்த நிலமைகளைத் தொடர்ந்து கொவிகம சாதி அல்லாதோருக்கான நிக்காய "அமரபுர நிக்காய" என்கிற பெயரில் தொடங்கப்பட்டது. குறிப்பாக கராவ (மீன் பிடி சமூகம்), சலாகம (கருவா செய்கையில் ஈடுபடுவோர்), துராவ (கள் இறக்குவோர்) ஆகிய சாதியினரே அமரபுர நிக்காயவில் உள்ளடங்குபவர்கள்.


ராமக்ஞ நிக்காயவின் தோற்றம்
பிக்குகளின் "சங்க சபை"களுக்குள் இருக்கும் சாதியத்துக்கு எதிராக போராடிய பிக்குகளின் கதைகள் கூட ஏராளமாக இருக்கின்றன. 1810 இல் பாணந்துறையிலுள்ள கல்கொட பௌத்த விகாரையில் நடக்கும் நிகழ்வுகளில் கொவிகம சாதியினருக்கு ஒருபுறமும் ஏனைய சாதியினருக்கு மறுபுறமும் ஒதுக்கப்பட்ட நிலை காணப்பட்டது. இந்த நிலைமையை எதிர்த்து கராவ சாதியச் சேர்ந்த 18 பேர் வெளியேறி தமக்கான சொந்த விகாரையை அமைத்துக்கொண்டனர். அந்த விகாரை இன்றும் பாணந்துரையில் "ரன்கொத் விகாரை" என்கிற பெயரில் இருக்கிறது.

ரன்கொத் விகாரை - பாணந்துறை
கொவிகம அல்லாதோருக்கான நிக்காய ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கரையோரப்பகுதிகளில் கொவிகம சாதி அல்லாதோரால் புதிய விகாரைகள் தோற்றுவிக்கப்பட்டன. அவற்றுக்கு கராவ, சலாகம, துராவ சாதிகளைச் சேர்ந்த தனவந்தர்கள் உதவினார்கள். அந்த விகாரைகள் சாதிபேதமற்று இயங்கத்தொடங்கிற்று.

அதே பர்மாவில் ‘ராமக்ஞபுர’த்தில் இருந்த விகாரையில் தீட்சை பெற்று திரும்பிய பிக்குமார்களால் 1863 இல் ஆரம்பிக்கப்பட்டது தான் “ராமக்ஞ நிக்காய”.

அரசியல் அதிகாரத்தில் சீயம் நிக்காயவின் வகிபாகம்
உயர் சாதி “சீயம் நிக்காய”வின் கீழ் மாத்திரம் 8 பிரிவுகள் உண்டு. அஸ்கிரி, மல்வத்து என்பவை அவற்றில் பலமான பிரிவுகள். அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஓடிச்சென்று ஆசி பெற முனைவதும், அரசியல் விளக்கங்கள் அளித்து தமக்கு சாதகமாக இருக்கக் கோருவதும் இந்தப் பிரிவுகளிடம் தான். தேர்தல் காலங்களில் தமது கட்சி விஞ்ஞாபனத்தின் முதற் பிரதிகளை இந்த பீடத்தலைவர்களிடம் கொடுத்து, ஆசீர்வாதம் பெற்றுவிட்டு, அதனை ஊடகங்களில் பெரிதாக காட்டிவிட்டு பிரச்சாரங்களைத் தொடக்குவது ஒரு மரபாகவே இருக்கிறது.

தேர்தல்  விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது நோர்வே பிரதிநிதி எரிக் சுல்ஹைம் பல தடவைகள் சமாதான யோசனைகளை எடுத்துக் கொண்டு ஓடிப்போய் விளக்கம் கொடுத்து ஆசி பெற்று திரும்பியதும் இந்தத் தரப்புகளிடம் தான். கண்டி தலதா மாளிகையும், புத்தரின் புனித தாதுப்பல் என்பவையும் இந்த இரு தரப்பினரின் பொறுப்பில் தான் இருக்கின்றன.


சீயம் நிக்காயவின் கோட்டே பிரிவைச் சேர்ந்தவர் தான் பிரபல சிங்கள பௌத்த இனவாத பிக்குவாக அறியப்படும் ஞானசார தேரர். ஞானசார தேரரை விடுவிக்கச் சொல்லி இன்று சகல நிக்காயக்களும் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்பது தமது இனவாத தலைமைப் பிரதிநிதி என்பதால் மட்டுமல்ல; கூடவே அவர் சீயம் நிக்காயவைச் சேர்ந்த ஒருவர் என்பதாலும் தான். ஞானசார தேரர் மீது பௌத்த பீட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுவாக பிக்கு தரப்புகளில் யோசனை முன்வைக்கப்பட்ட வேளை அவர் பாதுகாக்கப்பட்டு வருவதும் அவரின் அதிகாரத்துவ சாதி நிக்காயவின் பலத்தால் தான்.

அமரபுர நிக்காயவும் தமக்குக் கீழ் 22 பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. ஆனால் ஓடுக்கப்பட்ட சாதியினரின் நிக்காய அது. இந்த பிரிவுகளுக்கென தனியான மகா நாயக்கர்கள் உள்ளார்கள்.

சிங்கள வெள்ளாளர்களான கொவிகம சாதியின் ஆதிக்கம் சிங்கள அரசியல் சூழலில் எத்தகையது என்பது பற்றி நிறையவே சமகால ஆய்வுகள் வெளியாகியிருக்கின்றன.

கண்டியிலுள்ள ராமக்ஞ நிக்காய, அமரபுர நிக்காய ஆகியவை சாதிய ரீதியில் பிளவுண்டிருந்தாலும் கூட அங்கே வெளிப்படையான நடைமுறை கிடையாது. அனால் சீயம் நிக்காய வெளிப்படையாக சாதியத்தைக் கைகொள்கிறது. பௌத்த பிக்குவாக மாறவிரும்புபவர்கள். அல்லது மாற்றப்படும் சிறுவர்கள் உயர் சாதி கொவிகம குலத்தைச் சேராதவருக்கு பௌத்த தீட்சை வழங்குவதில்லை. அதாவது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பௌத்த பிக்குவாக தமது நிக்காயவுக்குள் உள்வாங்குவதிலை. ஆனால் சீயம் நிக்காய போன்றவை உயர்சாதியற்ற பெரும் பணக்காரர்கள் வழங்கும் உதவிகளையும், வசதிகளையும் அனுபவிக்கவே செய்கின்றன.


கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய கெப்பட்டிபொல உள்ளிட்ட “வீரர்களை” துரோகியாக பிரகடனப்படுத்திய வர்த்தமானிப் பத்திரிகையை செல்லுபடியற்றதாக்கி அவர்களை தேசிய வீரர்களாக அறிவிக்கும் தேசிய நிகழ்வை ஜனாதிபதித் தலைமையில் கண்டி மகுல் மடுவவில் நிகழ்த்தப்பட்டது. அந்த நிகழ்வில் ராமக்ஞ நிக்காயவைச் சேர்ந்த மகாநாயக்கர்களுக்கு ஆசனங்களை வைப்பதற்கு சீயம் நிக்காய மகாநாயக்கர்கள் எதிர்த்திருந்த செய்திகளையும் இந்த இடத்தில் நினைவுகொள்ளவேண்டும்.

இன்னமும் இலங்கையின் நாளாந்த பத்திரிகைகளில் பௌத்த பிக்குவாக ஆவதற்கு கொவிகம சாதியைச் சேர்ந்தவர்கள் “இன்ன” விகாரைக்கு தேவை என்கிற நாளாந்த பத்திரிகை விளம்பரங்கள் வெளிவரவே செய்கின்றன. 

இலங்கையின் பௌத்த துறவிகள் நிக்காயக்களாக பிரிந்து இருந்தாலும் பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு தமது அனுசரணையை ஒன்று சேர்ந்து வழங்கத் தயங்குவதில்லை. அஸ்கிரிய, மல்வத்து, கோட்டே, அமரபுர போன்ற நிக்காயக்களுக்கு மகா நாயக்கர்கள் உள்ளனர். அதுவும் அமரபுர நிக்காயவுக்கு 20க்கும் மேற்பட்ட மகா நாயக்கர்கள் இருக்கின்றார்கள்.

கண்டியில் நிகழ்ந்த பாரபட்சம் பற்றி முகநூலில் நிகழ்ந்த விவாதமொன்றில் பிரபல சமூக செயற்பாட்டாளரும் “நீதியான சமூகத்துக்காக” என்கிற அமைப்பின் முன்னாள் தலைவரும் சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தென்மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டவருமான ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் சில கவனிக்கத்தக்க கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

சாராம்சத்தில் அவரின் கருத்தின் படி இதை சாதிய அடிப்படையில் பார்க்கத் தேவையில்லை என்றும் தேவையேற்பட்டால் யாரேனும் பிக்குவாக சீயம் நிக்காயவில் சேர்க்கவேண்டுமென்றால் தன்னை தொடர்பு கொள்ளும்படியும்; தான் அதை ஒழுங்கு செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். (மார்ச் 28 முகநூல் விவாதத்தில்) அதற்கு பதிலளித்த லொக்குலியன கீர்த்தி என்பவர்  “உங்களால் ‘மஹான’ செய்ய முடியும் (பிக்குவாக சேர்ப்பிப்பது) என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் உங்களால் அவர்களுக்கு அங்கே ‘உபசம்பதா’ (பௌத்த தீட்சை) செய்து வைக்க முடியுமா?” என்று சவாலிட்டிருந்தார். அந்த விவாதத்தில் பலவற்றுக்கும் பதிலளித்த ஆளுனர் இந்தக் கேள்விக்கு இறுதிவரை பதில் அளிக்கவில்லை.

பத்திரிகை விளம்பரம் : பிக்குவாக விரும்பும் கொவிகம சாதியைச் சேர்ந்த மூவர் தேவை.
சீயம் நிக்காய பன்சலை ஒன்றுக்கு தீட்சை கொடுத்து பன்சலையை பொறுப்பு வகிக்ககூடிய 20-65 இடைப்பட்ட வயதுடைய ஒருவரைக் கோரி விடுக்கப்பட்ட பத்திரிக்கை விளம்பரம் இது. "கே" என்று முடியும் பெயர்களில் இருக்காத பரம்பரைப் பெயரில் "லாகே" என்று முடியக் கூடியவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்கக் கோருகிறது. அதாவது நேரடியாக "கொவிகம" சாதியை மட்டும் விண்ணப்பிக்கும் படி கோருகிறது
இன்றும் பிக்குமாரை இணைந்து கொள்ளக் கோரும் பத்திரிகை விளம்பரங்களில் குறிப்பிட்ட சாதியை மட்டும் கோரும் விளம்பரங்களை காண முடிகிறது. அது போல திருமண விளம்பரங்களும் கூட சாதி கோருகின்ற சிங்கள விளம்பரங்கள் தொடரவே செய்கின்றன. அது மட்டுமன்றி தமது பரம்பரைப் பெயர்களை வைத்து சாதியை அடையாளம் காண்பதால் தமது பெயர்களை மாற்றிக்கொள்கிற விளம்பரங்களையும் கூட தேசிய நாளிதழ்களில் காண முடிகிறது.
“நஜஜ்ஜா வசலோ ஹோதி – நஜஜ்ஜா ஹோதி பிரஹ்மனோ கம்மனா வசலோ கோதி – கம்மனா ஹோதி பிரஹ்மனோ...” (வசல சூத்திரம்)
 “எந்தவொரு மனிதனும் பிறப்பால் தாழ்த்தப்பட்டவரோ, பிராமணரோ கிடையாது. ஒருவன் தனது நன்னடதையாலேயே உயர்ந்தவனாக போற்றப்படுகிறான்.” என்கிறார் புத்தர்.

இதனால் தான் சொல்கிறோம் இலங்கையின் தோல்விகளுக்குக் காரணம் “கௌதம பௌத்தம்” என்பது சிங்கள பௌத்தமாக மாற்றம் பெற்றதால் தான் என்பதை நாம் அடித்துச் சொல்ல முடியும். அந்த சிங்கள பௌத்தம் வெறும் மூடத்தனமான இனவாதத்தை மாத்திரம் தாங்கியிருக்கவில்லை மாறாக சொந்த சிங்கள பௌத்தர்களையே சாத்திய ரீதியில் பிளவுபடுத்தி அதிகாரதத்துவ படிநிலை அடுக்கையும் கொண்டு இயங்குகிறது.

நன்றி - தமிழர் தளம்.


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates