Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

தோழர் ஓ.ஏ.ராமையா நமக்கு முன்னுதாரணமனவர்- பழனி விஜயகுமார்


மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், அரசியல்வாதியும் கம்யூனிசவாதியுமான திரு.ஓ.ஏ.ராமையா அவர்கள் 19.05.2013 அன்று காலமானார். நீண்ட நாட்களாக சுகயீனமுற்றிருந்த அவர் சத்திரசிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார். 

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கூலித் தொழிலாளர்களாக மலையக தமிழர்கள் அழைத்துவரப்பட்டு அவர்கள் மீது ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட காலத்தில் கம்யூனிச அரசியல் செய்துகொண்டு செங்கொடிச் சங்கம் என்று ஒன்றை உருவாக்கி தொழிலாளர்களுக்காக போராடிய ஒரு உன்னத தலைவர் அமரர்.ராமையா அவர்கள். இவருடைய தலைமையில் மலையகத்தில் இடம்பெற்ற தொழிலாளர் போராட்டம் வரவாற்று பதிவாகும். மலையக தமிழர்கள் தொடர்பில் சர்வதேச மாநாடு கூட்டங்களில் இவர் பல கருத்துக்களை முன்வைத்து அம்மக்களின் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர பாடுபட்டார். 

பிற்காலத்தில் இவர்களது கம்யூனிச தொழிற்சங்க கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவு, இவருடைய செயற்திறமின்மை, மக்கள் செல்வாக்கை இழந்தமை என பல காரணங்களால் ஓ.ஏ.ராமையா என்ற ஒரு தொழிலாளர் வர்க்க புரட்சியாளர் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்விட்டார். 

மலையகத்தில் தொழிலாளர்கள் மீது அக்கறை என்ற போர்வையில் எழுந்த முதலாளித்துவ தொழிற்சங்கங்களின் பணவளர்ச்சி இவரது வீழ்ச்சிக்கு ஒரு காரணம் எனலாம். 

செங்கொடி சங்கத்தின் ஊடாக தொழிலாளர் போராட்டத்தை முன்னெடுத்து புரட்சியாளர் என்று போற்றப்படும் சிறந்த அறிவுடைய, சிந்தனையுடைய தகவல் களஞ்சியமான இவர், பின்னர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஒரு தரப்பாக மாறி முதலாளிமாருக்கு விலைபோனவர் என்ற அபகீர்த்தியையும் மூன்று தொழிற்சங்கங்களோடு இணைந்து பகிர்ந்து கொண்டார். 

அமரர். ஓ.ஏ.ராமையா அவர்களின் சமீபகால அரசியல், தொழிற்சங்க செயற்பாடுகளை முற்றிலும் விரும்பாதவன் என்றபோதும் ஆரம்ப காலத்தில் அவர் தொழிலாளர் வர்க்கத்திற்காக செய்த போராட்ட புரட்சியை ஒருகாலமும் மறக்க முடியாது. இவருடைய ஆரம்பகால புரட்சிகர செயற்பாடுகளால் நானும் ஈர்க்கப்பட்டுள்ளேன். அதேபோன்று இவருடைய வரலாறு எதிர்கால மலையக இளைஞர் சந்ததியினருக்கு நல்லதொரு முன்னுதாரணமாக அமையும் அமைய வேண்டும் என எண்ணுகிறேன். 

அமரர்.ஓ.ஏ.ராமையா அவர்களின் இறுதி அஞ்சலி கூட்ட நிகழ்வில் கலந்து கொண்டபோது அவருடன் நண்பர்களாக கடமையாற்றியவர்கள் அவரைப்பற்றி கூறியபோது மலையகம் ஒரு உண்மையான உணர்வுள்ள தலைவரை இழந்துவிட்டது என்று உணர்ந்தேன். 

செங்கொடி சங்கம் போன்ற அமைப்புக்கள் அன்று முன்னெடுத்த தொழிலாளர் போராட்டம், நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வெயில், மழை, குளவி, அட்டைக்கடிக்குள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நமது தொழிலாளர்களுக்காக மீண்டும் உணர்வுள்ள மலையக மைந்தர்கள் உருவில் விஸ்வரூபம் எடுக்குமா என்ற கேள்வியுடன் அமரர். ஓ.ஏ.ராமையா அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்...

பழனி விஜயகுமார் முகநூல் வழியாக

நாவலப்பிட்டி போஹில் தோட்ட மக்களின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது : மலையக சிவில் சமூகம்


நாவலப்பிட்டி போஹில் தோட்ட மக்களின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மக்களின் காணியுரிமையை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும்

nawalapitiyaநாவலப்பட்டி போஹில் தோட்டம் ஜனவசம அரசாங்க கூட்டுத்தாபனத்திடமிருந்து தனியார் கம்பனிக்கு கைமாற்றப்பட்டதின் விளைவாக அத்தோட்டத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும்; சுமார் 600 குடும்பங்களை அத்தோட்டத்திலிருந்து வெளிற்றுவதற்கான முனைப்பினை தனியார் கம்பனியும் அரசாங்க நிறுவனங்களும் மேற்கொள்வதையொட்டி மலையக சிவில் சமூகம் தனது கவனத்தினை செலுத்தியுள்ளதுடன் கவலையை வெளிப்படுத்துகின்றது.

காடாக இருந்த இலங்கையின் மலைப்பிரதேசத்தில் காடுகளை வெட்டி, மலைகளை சரித்து, பாறைகளை உடைத்து கோப்பி, கருவா, தேயிலை என பயிரிட்டு வீதிகள் புகையிரதப்பாதைகள் என அமைத்து ஓர் நாடாக மாற்றியது இம் மலையக சமூகமேயாகும். ஆங்கிலேயர் இலங்கைக்கு வரும் முன் மலையகத்திலே பெருந்தோட்ட பயிர்களோ, குடியிருப்புகளோ இல்லாத நிலையில் வெறும் காடாகவே காணப்பட்;டது. மலையக மக்களே இந்நாட்டினை பூரணமாக செப்பனிட்டு, செழிப்படையச் செய்தனர்.

1820ஆம் ஆண்டு காலம் தொட்டே படிப்படியாக இலங்கையில் குடியேறத் தொடங்கி குடியிருப்புகளையும் பெருந்தோட்டங்களையும் உருவாக்கி தலைமுறை தலைமுறையாக மலையக மக்கள் வாழும் நிலங்கள் இலங்கை சுதந்திரமடைந்ததும் அரசுடமையாக்கப்பட்டன. பின்னர் தனியார் கம்பனிகளுக்கு அந்நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டன இவை தனியார் கம்பனிக்கு சொந்தமானவையல்ல.

அரசு தனது நிலங்களில் தலைமுறை தலைமுறையாக சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக வாழும் மலையக மக்களின் வாழும் உரிமைகளையும் (சுiபாவ வழ டகைந யனெ சுiபாவ வழ ர்யடிவையவ) வாழ்வதற்கான இட உரிமையையும் வழங்க கடமைப்பட்டுள்ளது.

இலங்கை சனநாயக சோலிசக்குடியரசின் அரசியலமைப்பு இலங்கை பிரஜைகளுக்கு வாழும் உரிமைகளையும், வதிவிட உரிமையையும், நடமாடும் உரிமையையும், வழங்கியுள்ள நிலையில் மலையக மக்களும் இலங்கை பிரஜைகள் என்ற நிலையில் அவ்வுரிமைகளை அனுபவிக்க உரிமையுள்ளவர்கள், அவர்களும் அரசியலமைப்பின் 4ம் உறுப்புரையின்படி இறைமையுடையவர்களே என்ற அடிப்படையில் போஹில் தோட்ட மக்களை பலாத்காரமாக வெளியேற்றுவது அரசியலமைப்பினை மீறும் செயல்பாடு என்பதோடு அனைத்துலக மனித உரிமைகள் சாசனம் (Universal Declaration of Human Rights) சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கைகள் (International Convention on Civil and Political Rights) என்பவற்றுள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் மீறும் செயற்பாடு என்பதோடு இவை Genocide Convention  படி இனப்படுகொலையாகும் என்பதையும் மலையக சிவில் சமுகம் சுட்டி காட்டுகின்றது.

எனவே தனது நாட்டில் தனித்துவமான கலாசாரம், மொழி கொண்ட இனக்குழுவான மலையக மக்களின் வாழும் உரிமை, வதிவிட உரிமையை உறுதி செய்ய காணியுரிமை வழங்குமாறும், தோட்ட மக்கள் தனியார் கம்பனிகளினாலும், அரசாங்க அதிகாரிகளாலும் வெளியேற்றப்படுவதை தடுக்குமாறும் அதிமேதகு சனாதிபதி அவர்களிடமும் இலங்கை பாராளுமன்றத்திடமும் மலையக சிவில் சமுகம் வேண்டுகோள் விடுக்கின்றது.

மீண்டுமோர் யுத்தம் இடம்பெறாத வகையில் அனைத்து மக்களது சுய நிர்ணய உரிமை, தேசியம் மனசாட்சி, சிந்தனை, சலாசாரம், நம்பிக்கை என்பவற்றை மதித்தும் போற்றியும், காத்தும் அரசியலமைப்பில் உள்ளது போன்று அவற்றினை பின்பற்றி நாட்டு மக்களையும் நாட்டினையும் பேதமற்ற சுபிட்சமான நாடாக கட்டியெழுப்ப சிறுபான்மைக்கெதிரான ஒடுக்குமுறையை இல்லாதொழிக்க அரசாங்கம் உறுதி பூண வேண்டும் எனவும் அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றது.

நன்றி
இப்படிக்கு
செயலாளர்
எஸ்.மோகனராஜன் சட்டத்தரணி – மலையக சிவில் சமூகம்

தோட்ட காணிகளை பெறப்போகும் மலையக தமிழ் இளைஞர்கள் எத்தனை பேர்?: மனோ



பயன்படுத்தப்படாத காணிகள் என்று கூறி சொல்லி, 25,000 ஏக்கர் மலையக தோட்டப்புற காணிகளை தோட்ட நிறுவனங்களிடமிருந்து மீளப்பெற்று, அவற்றை தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளுக்கு இரண்டு ஏக்கர்களாக பிரித்து வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

காணிகளை பெறுகின்ற வேலையற்ற இந்த இளைஞர்களுக்கு, இந்த காணிகளில் விவசாயம் செய்வதற்காக கடன் வழங்கவும், காணிகளில் பயிரிட நாற்றுகளை,  விதைகளை வழங்கவும், உரவகைகளை வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக முதல்கட்டமாக 100 மில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கியுள்ளது.
    
'இந்த தோட்டப்புற காணிகளையும், கடன் உதவிகளையும் பெறுகின்ற 12,500 வேலையற்ற இளைஞர்கள் பட்டியலில், வேலையற்ற தோட்டப்புற மலையக தமிழ் இளைஞர்கள் எத்தனை பேரின் பெயர்கள் இடம்பெறுகின்றன என்பதை  அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக தமிழ் அரசியல்வாதிகள் அறிவார்களா?' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.             

'மலையகத்தில் உழைக்கும் மக்களின் இருப்பை இல்லாது ஒழிக்கும் இனவாத நோக்குடன் முன்னேடுக்கப்படும் எந்தவொரு காணி சுவீகரிப்பு நடவடிக்கையையும் ஜனநாயக மக்கள் முன்னணி, முற்போக்கு தோழமை கட்சிகளுடன் இணைந்து எதிர்த்து போராடும்' என்றும் அவர் தெரிவித்தார். 

இது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது, 

'இன்று நாவலப்பிட்டி பஸ்பாகே கோறளைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட போகில் பாரண்டா தோட்ட குடியிருப்பில் வாழ்ந்துவரும் தோட்ட தொழிலார்களை அப்புறப்படுத்தி அந்த தோட்ட காணிகளை தனியாருக்கு வழங்கும் முயற்சிக்கு எதிராக தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கி போராட தொடங்கிவிட்டார்கள். 

எனவே மலையக தோட்டப்புற காணிகளை மீளப்பெற்று அவற்றை, தெரிவு செய்யப்பட்ட  வேலையற்ற இளைஞர்களுக்கு பகிர்ந்து அளிக்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளன. 

1970 காலகட்டத்தில் மலையகத்தில் நடைபெற்ற காணி எதிர்ப்புக்கு எதிரான தோட்ட தொழிலாளர்களின் மாபெரும் போராட்டம்நடும்  மீண்டும் இன்று மலையகத்தில் நடைபெற அரசாங்கம் வழி ஏற்படுத்துகின்றதா? நிதி அமைச்சில் இம்மாத ஆரம்பத்தில் நடைபெற்ற இது சம்பந்தமான உயர்மட்ட கூட்டத்துக்கு அரசில் உள்ள மலையக தமிழ் அமைச்சர்கள் அழைக்கப்பட்டார்களா? 

தோட்டப்புறங்களிலும் காணியும், கடனும் பெறுவதற்கு தகுதிவாய்ந்த வேலையற்ற தமிழ் இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்பது அரசாங்க உயர்மட்டத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதா? இந்த காணிப்பகிர்வு - கடன் வழங்கல் தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக அரசியல் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உடன்பாடு நிலவுகின்றதா? 

இதுபற்றி தாம் அறிந்துகொண்டுள்ள விபரங்களையும்,  தமது நிலைப்பாடுகளையும்  அரசில் உள்ள மலையக கட்சிகள் மலையக இளைஞர்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க தயாரா? இந்த கேள்விகளுக்கான பதில்களை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக அரசியல்வாதிகள் மலையக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். 

இந்த தோட்ட  காணிகள், வேலையற்ற இளைஞர்களுக்கு  30 வருட நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட உள்ளன. இந்த திட்டம் தொடர்பாக, தமக்கு இதுவரை அரசாங்கம் எதுவும் அறிவிக்கவில்லை என தோட்ட முகாமை நிறுவன சங்கத்தின் தலைவர் லலித் ஒபயசேகர தெரிவித்துள்ளார். 

இந்த நடவடிக்கை, தோட்டங்களில் ஏற்கனவே தொழில் செய்து வாழும்  தோட்ட தொழிலாளர்களுக்கும், காணிகளை பெறும் புதியவர்களுக்கும் இடையில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கும் எனவும் நிறுவனங்கள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.  
  
அந்நிய செலவாணியை இந்நாட்டுக்கு  நூறு ஆண்டுகளுக்கு மேல் அள்ளி வழங்கி வரும் மலையக தோட்ட தொழிற்துறையை உருவாக்கிய, மலையக தமிழ் பாட்டாளிகளை புறக்கணித்துவிட்டு  இந்த திட்டம் நடைமுறையாக போகின்றதா? மலையக தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவ பலத்தை நுவரேலியா மாவட்டத்தில் வெட்டி குறைக்கும் முகமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றதா?

வடக்கில், கிழக்கில் நடைபெறும் காணி அபகரிப்புக்கு சமானமான மலையக காணி அபகரிப்பு இதுவா? 1970களில் இடம்பெற்ற அநீதியான மலையக காணி சுவீகரிப்புக்கு எதிராக போராடி உயிர் நீத்த தியாகி சிவனு லட்சுமணனின் போராட்டத்தை மீண்டும் மலையகம் காணப்போகின்றதா? என்ற கேள்விகள் இன்று மலையக சிந்தனையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன' என்று மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார். 

படைப்பு பதிவு பிரச்சாரம்- டானியலின் நாவல்களை முன்வத்து....! லெனின் மதிவானம்



“யாழ்ப்பாண தலித் மக்களின் வாழ்வியல்  அனுபவங்களைவெளிப்படுத்துகின்ற பண்பு டானியலில் மிக நுண்ணயத்துடன்வெளிப்பட்டுள்ளது எனலாம். அச்சமுதாய அமைப்பிலுள்ள பலவர்க்கங்களின் புறவியல்புகளையும், மனவியல்புகளையும்கணக்கிலெடுக்கும் பொழுது உள்ளார்த்தமான இயல்பின்வெளிப்பாடான கலகத்தையும், எதிர்ப்புணர்வுகளையும் அவரதுநாவல்கள் எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளன? அவற்றின் பலமானஅம்சம் என்ன பலவீனமான அம்சம் என்ன என்பவை குறித்துஆராய வேண்டியது காலத்தின் தேவையாகும்.”

இயந்திர சாதனங்களினாலும் கைத்தொழில் நாகரீகத்தின்வளர்ச்சியி னாலும் பழைய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின்தளங்களை உடைத்துக் கொண்டு வளர்ச்சியடைந்த முதலாளித்துவம் அன்றைய நியதி வழுவா வாழ்க்கை முறையைத் தகர்த்தது.ஆனால் ஸ்திரமான சமயத் தத்துவக் கோட்பாடுகளும் தகர்ந்தன.இன்னது இவ்வாறு இருக்க வேண்டும் என்ற கருத்துக்கள்வலுவிழந்தன. ஆகவே இதை இவ்வாறு கூறவேண்டும் என்றபழைய இலக்கிய மரபில் இருந்து, எதையும் எவ்வாறும் கூறலாம்என்ற புதிய கட்டுப்பாடற்ற இலக்கிய மரபு உதயமாகியது.இவ்வகையில் புதிய வாழ்க்கை முறையில் புதிய சமூதாயஉள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் பெரிய இலக்கிய வடிவமானநாவல் தோன்றி யது. தெய்வாம்சம் பெற்ற காவிய நாய கர்களும்,கற்பனை வாழ்வும் மறைந்து அன்றாட நடைமுறைவாழ்வும் அதில்நின்று உழலும் சாதாரண மனிதரும் இலக்கிய அரங்கில் இடம்பெற்றனர். சுருக்கமாக சொன்னால் கற்பனை உல கிற்கு பதிலாகயதார்த்த உலகு இலக்கி யத்தில் இடம்பெற்றது. யதார்த்தம் நாவலில் ஓர் அடிப்படை அம்சமாகியது. காவியத்தையும் நாவலையும்வேறு படுத்தும் பொருள் வேறுபாடு என்பது இதையே.(எம்.ஏ.நுஃமான், மார்க்சிய மும் இலக்கியத் திறனாய்வும், அன்னம் (பி ) லிமிட், சிவகங்கை, பக். 177, 178)

நிலமானிய சமூகவமைப்பின் சிதைவு டன் தோற்றம் பெற்றமுதலாளித்துவ சமூகவமைப்பும் அதனடியாக எழுந்தசமூகத்திற்கும் தனிமனிதனுக்குமிடை யிலான புடைப்பெயர்ப்பும்நாவல் இலக்கியம் தோன்றுவதற்கு சாதகமான சூழலைத்தோற்றுவித்தது. அவ்வடிவம் மேனாட்டார் தொடர்பில் தமிழுக்குவந்ததெனினும் பண்பாட்டுச் சூழலில் காணப்பட்ட அகவுலகத்தொடர்பும் சமுதாயச் சூழலில் உருவாகி வந்த சில சமூகசக்திகளும் சிந்தனைகளும் தமி ழில் நாவல் தோன்றிவளர்வதற்குரிய உந்துதலாக அமைந்தன. தமிழ் நாவல்வரலாறானது தமிழர் சமுதாயத்தின் தனித்துவங்களையும்சிறப்புகளையும் உள்வாங்கி தமிழ் நாவல் துறையாகவேவளர்ச்சியடைந்து வந்துள்ளது. அந்த வகையில் ஈழத்தில்தோன்றிய தலித் நாவல் இலக்கியம் தனித்துவத்துடன்விளங்குகிறது.இலங்கையின் வடபகுதி யில் நிலவிய சாதியஒடுக்குமுறை களையும் அதற்கு எதிரான போராட்டங் களையும்நாவ லாக்கியதில் அமரர் கே. டானியலுக்கு பெரும் பங்குண்டு.

சொத்துடமையை தமதாக்கிக் கொண்டு ஆதிக்கம்மிகுந்தவர்களாகக் காணப் பட்ட வேளாளர் சாதியினர் தமக்குத்தேவையான அடிமைகளைத் தென் னாட்டிலிருந்து விலைக்குவாங்கி தமது நிலங்களில் சிறுசிறு குடிசைகள் அமைத்துக்குடியற்றினர். அவர்களின் உடல் பொருள் ஆவி அனைத்தையும்தமதாக்கிக் கொண்ட னர். பெண்ணைத் மணம் செய்துகொடுக்கிறபோது சீதனப் பொருட்களுடன் சேர்த்துத் தம் அடிமைகளையும் தாரை வார்ப்பு செய்தனர். வேலைகளைச் செய்யத்தவறுமிடத்து பகிரங்கமாகக் கட்டிவைத்துத் தண்டிக்கவும்தமக்கெதிராக மக்கள் எழுகின்றபோது நிலங் களிலிருந்துவெளியேற்றவும் குடிசைகளுக்கு தீ மூட்டவும் செய்தனர். (ஓலையினால் அமைத்திருந்ததால் இலகுவாக தீ மூட்ட முடிந்தது.இதன் காரணமாகத் தான் தலித்துகள் கல் வீடு கட்டுவதற்குவேளாளர் எதிராக இருந்தனர்)

நிலவுடமையாளனுக்கும், உழைப்பை விற்பவர்களானதலித்களுக்கும் இடையில் நிலவுகின்ற உற்பத்தியுறவே,யாழ்ப்பாணச் சமூகத்து மனிதவூடாட்டத்தின் அடிப்படை யாகும்.இஃது பகை முரண்பாடுடைய ஓர் உறவாகும். வரலாற்றைபரிணாமமடையச் செய்யும் வர்க்கப் போராட்டம் சாதியத்திற்குஎதிரான போராட்ட வடிவிலே இங்கு காணப்படுவதனை அறியலாம்.

யாழ்ப்பாண சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரானப் போராட் டங்கள்காலத்துக்கு காலம் ஏதோவொரு வகையிலும் அளவி லும்முனைப்படைந்தே வந்துள்ளது. இருப்பினும் ஆரம்ப காலபோராட்டங்கள் அமைப்புரீதியாக முன்னெடுக்கப்பட வில்லை. 1910ம் ஆண்டளவில் தோற்றம் பெற்ற வட இலங்கை தொழிலாளர்சங்கம் இத்துறையில் முதற்கட்ட சாதனையாக அமைந்திருந்தது.இதன் உச்ச வளர்ச்சியை, நாம் 60களில் தோற்றம் பெற்றதீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்ட எழுச்சியில் காணமுடிந்தது. இலங்கையின் வடபகுதியில் வீறு கொண்டெழுந்த தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் மக்களை நோக்கி வேர் கொண்டுகிளை பரப்பி, புத்திஜீவிகள், மாணவர்கள், விவ சாயிகள்,தொழிலாளர்கள் என பல ஆளுமைகளை ஆகர்ஷித் திருந்தது.தீண்டாமைக்கு எதிரான போராட்டமானது சொத்துடையவர்களுக்கும் சாதிய வெறியர்கட்கும் எதிரானது என்ப திலும்எதிரி யார்? நண்பன் யார்? என்பதிலும் மிகத் தெளி வானபார்வையை இவ்வியக்கம் முன்வைத்தது. சகலஒடுக்குமுறைகளுக்கும் எதிரான வர்க்கப் போராட்டம் என்ற சமூகவிஞ்ஞானத்தளத்துடன் இணைக்கப்பட்டிருந்தமை அதன் பலமானஅம்சமாகும்.

ஈழத்து தமிழ் நாவல்களில் தலித் உணர்வுகளும் போராட்டங்களும்:இடைக்காட்டார் எழுதிய நீலக்கண்டன் ஒரு சாதி வேளாளன் (1925)என்பதே யாழ்ப்பாண தலித்துகள் பற்றி தோன்றிய முதல்நாவலாகும். ஓர் உயர்சாதி ஆணுக்கும், தாழ்ந்தசாதிப்பெண்ணுக்கும் பிறந்த நீலகண்டன் தனது தந்தையின்சொத்துக்களை அனுபவிக்க முடியாமல் இடறுவதையும், பின்னர்அவ்விடையூறுகளை வென்று சொத்துக்களைப் பெறுவதையும்இந்நாவல் சித்திரிக்கின்றது. இத்தகைய போக்கில் அழகவல்லி(1938), செல்வநாயகத்தின் சரோஜா அல்லது தீண்டாமைக்குச்சாவுமணி (1938) முதலிய நாவல் கள் காணப்படுகின்றன. இவற்றில்சாதிய முரண்பாட்டின் கொடுமைகளை நிராகரித்து சில மனிதாயகருத்துக்கள் கூறப் படுகிறபோதினும் முனைவர்.கோ.கேசவன்குறிப்பிடுவது போல இவை சாதிய முரண்பாட்டின் வெளிப்பரிணாமத் தையே சுட்டிக் காட்டின எனக் கூறுவதே பொருந்தும்.

டானியலின் சமகாலத்தில் தலித்துகள் பற்றிய நாவல்களில்முன்குறிப்பிட்ட பிரிவில் அடக்கக்கூடியதென செங்கையாழியானின் பிரளயம் (1975), சொக்கனின் சீதா (1963), தி.ஞானசேகரனின் புதிய சுவடுகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். கலப்புத்திருமணம், சமபந்தி போசனம், தேநீர் அருந்துதல் முதலியமனிதாபிமான நடத்தைகள் மூலம் சாதிய முரண் பாட்டைதீர்த்துவிடலாம் என நம்பினர்.சாதியமைப்பு முறையினையும்அதனுடன் தொடர்புபட்டுள்ள உற்பத்தி ய மைப்பினதும்தாற்பரியங்களை ஆராய்ந்து பார்க்கும் திராணி யற்றுகாணப்பட்டமையால், வெறுமனே முரண்பாட்டின் வெளித்தோற்றத்தினைக் கண்டு, அதனை மனமாற்றத்தி னால்தீர்த்துவிடலாம் எனக் கனவு கண்டனர். பண்டைக் காலம் தொட்டுசாதியம் தொடர்பாக ஆங்காங்கே கூறப் பட்ட மனிதாயக்கருத்துக்களை வைத்துச் சாந்தியும் சமாதான மும் பேசிய இவர்கள்தீண்டாமையை எதிர்த்துப் போரா டாதே என்று போதிப்பவர்களாகஇருந்தனர். மந்திரத்தால் மாங்காயே விழாது என்றிருக்கமனமாற்றத்தினால் சாதிய மைப்பினை மாற்றிவிடலாம் எனக்கனவு காண்பது வக்கற்ற புலம்பல்களுக்கே இட்டுச் செல்வதாகஅமைந்திருந்தது.

கலை இலக்கியத்தை சமுதாய விஞ்ஞானக் கண்ணோட்டத் துடன்பார்க்கத் தலைப்பட்ட புதியபோக்கு சுபைர் இளங்கீர னின்தென்றலும் புயலும் என்ற நாவலுடன் தொடங்குகி றது.செ.கணேசலிங்கனின் நீண்ட பயணம் (1965), சடங்கு (1966),போர்க்கோலம் (1969), செ.யோகநாதனின் காவியத் தின் மறுபக்கம்(1976) முதலியவையும் இப்பண்பிலா னவை. இவற்றினிடையேஅரசியல் வேகம், தெளிவு, கலை நயம் என்பவற்றில் வேறுபாடுகள்உண்டடெனினும், சாதி ரீதியாக தாழ்த்தப்பட்டு சுரண்டல்,வறுமைக்கு ஆட்பட்ட வர்களை- மனிதப் பிறவிகள் என்றவகையில் போர்க்குணம் வாய்ந்த பாத்திரங்களாக அணி திரண்டுஉரிமைக்குரல் எழுப்ப முனைவதை இப்பிரிவினர் நன்குசித்தரித்துள்ளனர். டானியலின் நாவல்களும் இத்தகைய மானுடஅணியிலேயே கால் பதித்து நிற்கின்றன. டானியலின் நாவல்களில் -சமூக அரசியல் உணர்நிலைகளும் போராட்டங்களும்:

டானியலின் பஞ்சமர் வரிசை நாவல்களில் பஞ்சமர், கோவிந்தன்,அடிமைகள், கானல், தண்ணீர் ஆகியவை குறிப் பிடத்தக்கவை.முருங்கையிலைக் கஞ்சி, மையக்குறி, இரு ளின் கதிர்கள் ஆகியகுறுநாவல்களும் குறிப்பிடத்தக்கவை. போராளிகள்காத்திருக்கின்றார்கள் என்ற அவரது பிறிதொரு நாவல் மீனவமக்களின் வாழ்க்கை முறைகளையும், சம்மாட்டியாரின் ஆதிக்கத்தன்மைகளையும் விபரிக்கிறது. அன்பை போதிக்க வந்த மதங்கள்பின் மக்களை ஒடுக்குவ தற்கு அதிகார வெறியர்களின்கைத்தடியாக எவ்வாறு பயன் படுகிறது என்பதையும் விளக்குகிறது.இந்நாவல் குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்தன.இனமுரண்பாடுகள் குறித்து எழுதப்பட்ட இந்நாவலின் போராளிகள்காத்திருக்கின் றார்கள் ( போராளிகள் காத்திருப்பதில்லை) என்றதலைப்பு பிழையானது என்ற விமர்சனம் ஏற்புடையதொன்றே.

டானியலின் நாவல்களில் கடதாசி விளையாட்டு, வானவிளையாட்டு, உயர்சாதி இளைஞர்களின் மேன்மையும் திமிரையும் காட்டும் இளந்தாரி திருவிழா, பஞ்சமர்க்கு தனியி டம்ஒதுக்கியிருத்தல், தாழ்த்தப்பட்டவர்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்என்ற அறிவிப்பு பலகையை மாட்டல், (பஞ்ச மர்) பந்தயம் என்றபெயரில் தேங்காய் உடைத்தல், கோழி கொக்கரி சண்டை, (அடிமைகள்) நாய் வளர்க்கும் முறை, வேட்டை, ஏராக்கள் குடித்துதாய்மை எய்தும் சந்தர்ப்பம் (கோவிந்தன்) பிள்ளை வயிற்றுடன்ஒருவர் இறந்தால் அவரை பிள்ளையுடன் புதைக்க முனைவதுதந்தைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற நம்பிக்கை (உயர்சாதியினர் மட்டுமே சுமை இறக்கும் வழக்கத்தினையும்உரிமையினை யும் பெற்றிருந்தனர்) தலித்துகளின் திருமணநடைமுறைகள் (தண்ணீர்) ஒருவரை ஒதுக்கிவிட அல்லதுஇறந்துவிட்டதாக நினைத்துக்கொள்வதற்கு முருங்கை இலைக்கஞ்சி வைத்துக் கொடுத்தல் (முருங்கையிலைக் கஞ்சி) சைவ,கிறிஸ்தவ மதப் பண்பாடுகளிலான சடங்குமுறைகள், தலித்துகள்தாவணி அணியக்கூடாது (கானல்) தலித்துகள் இறந்தால் பிணத்தைஎரிக்க முடியாது, பொதுக்கிணறுகளில் தண்ணீர் அள்ளல் கூடாது.உயர்சாதியினரின் கோயில்களுக்கு செல்ல முடியாது. உணவுவேறுபாடுகள், உணவுப் பரிமாறல் என்பது சாதிக்குரியபாத்திரங்களை கொண்டே கொடுத்தல், தலித்துகள் உயர்சாதியினருடன் உரையாடும்போது ஓமாக்கும் வந்தாக்கும் முதலியசொற்களை பயன்படுத்துதல் (பொதுவாக எல்லா நாவல்களிலும்)போன்ற விடயங்கள் யதார்த்த உணர்வுடன்படைக்கப்பட்டுள்ளன.அவ்வகையில் டானியல் சமூகஒடுக்குமுறையை மட்டுமன்றி பண்பாட்டு ஒடுக்குமுறையையும்நாவல்களில் வெளிக்கொணர்ந்தார்.

தலித்துகளின் உணர்வுகளையும் கலாச்சாரத் தளத்தினையும்அவை எவ்வாறு சாதியாதிக்கத்திற்குட்பட்டு செயல்படுகின் றனஎன்பதையும் முரண்பாடுகளையும் அதற்கு எதிரானகலகக்குரல்களையும் வெளிக்கொணர்ந்துள்ளமை டானிய லின்யதார்த்த நோக்கிற்கு தகுந்த எடுத்துக்காட்டாகும். உதார ணமாககானல் நாவலில் வரும் சின்னி தாவணி அணிந்தி ருந்தமையால்,உயர்சாதி பெண்களின் தாக்குதலுக்கு உட்படு வதையும்,அதற்கெதிராக தலித்துகள் ஒன்றிணைந்து கலகம் செய்வதையும்ஆர்ப்பாட்டமாக சின்னிக்கு தாவணி அணிந்துஉயர்சாதியினருக்கென ஒதுக்கப்பட்ட வீதியிலேயே ஊர்வலமாகசென்றமையும், அடிமைகள் நாவலில் தலித்துகள் கோயிலுக்குள்செல்லவிடாது கயிறு கட்டி வைத் தல், அந்த சூழலுடன்ஒத்துப்போகும் கந்தன் முதலிய பாத்தி ரங்களும் அதற்கு எதிராககிளர்ந்து போராட முனையும் சின்னப்பன் முதலானோரையும்,பஞ்சமரில் சித்தரிக்கப் படும் கோயில் பிரவேசம், போராட்டம், ஒருபிரேதத்தை எரிக்க முனைதல் முதலிய விடயங்களையும்குறிப்பிடலாம்.

ஒடுக்குமுறையாளர்களான வேலுப்பிள்ளை(பஞ்சமர்) தம்பாபிள்ளையார் (கானல்) இளையதம்பி நாயினார் (பஞ்ச கோணங்கள்)முதலிய காமக்காரர்களுக்கு எதிராக மக்கள் எழுச்சி பெறுவதையும்இயக்கமாக இணைந்து போராட முனைவதையும் டானியலின்நாவல்களில் காணமுடிகிறது. இப்போராட்டத்தை தனிநபர் அல்லதுசிறுகுழுவினருடைய தாக சித்தரிக்காமல், பரந்துபட்ட வெகுமக்களின் போராட் டங்களாக சித்தரித்தமை டானியலின் பலமானஅம்சமாகும்.

இக்காலச்சூழலில் சாதியடக்குமுறையினதும், தீண்டாமையினதும் பிரதான மையங்களாக ஆலயங்களும், தேனீர்க்கடைகளும் திகழ்ந்தன. எனவே அத்தகைய ஒடுக்குமுறை களுக்குஎதிரானப் போராட்டங்களை தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம்முன்வைத்தது. இதன் செல்வாக்கினை நாம் டானியலின்நாவல்களில் காணமுடியும்.

இவ்வாறாக வெளிப்பட்ட போராட்டமானது பரந்துபட்ட உழைக்கும்மக்களைக் களமாகக் கொண்டிருந்ததுடன், இவற்றுடன்இணையக்கூடிய தேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகளையும்தன்னுள் உள்ளடக்கியே முன்னெடுக்கப்பட் டது. சாதி விடுதலைப்போராட்டத்துடன் இணையக்கூடிய நல்லெண்ணங் கொண்டஉயர்சாதியினரையும் இப்போராட் டங்கள் தன்னகத்தேவரித்திருந்தன எனலாம். டானியலின் நாவல்களில் ஐயாண்ணர்,சுப்பையாவாத்தியார் முதலிய பாத்திரங்களை இவற்றுக்குஉதாரணங்கள். அவரது கோவிந் தன் நாவல்களில் வரும் பின்வரும்பந்தி முக்கியமானது.

"நானும் ஒரு விஷயம் சொல்லப் போறன். உள்ளதுகளை நாங்கள்மறைக்கப்படாது. எங்கடை ஆக்களுக்குள்ளேயும் சில பொடியள்அவங்கடை பக்கத்துக்கு நிக்குறாங்கள் எண்டு கேள்வி.தனித்தனியே ஆக்களின்ரை பேர்களை சொல் நான் விரும்பேல்ல.அதையும் நாங்கள் கணக்கெடுத்துக் கொள்ள வேணும்" என்றசண்முகம்பிள்ளையின் உணர்வுகளும், என்னடா கணவூதியன்உங்கடை பகுதியிக்கை ஏதும் புதி னமே? அப்படிஒண்டுமில்லையாக்கும், எங்கட பொடிய ளும் ஐயா அவையின்ரநயின்னாப் பொடியளும் சேர்ந்து ஒரு சங்கம் வெச்சவை.என்னடாப்பா சங்கமோ? காரியம் ஆரடாப்பா தலைவர்?. எங்கடைசங்கக்கடை மனேச் சற்றை நடுவிலுத்தம்பி தான் தலைவர். என்ரைஅண்ண மோன்தான் காரியதரிசி. என்னடா அவன்தான் ஊருப் பட்டபுத்தகமெல்லாம் படிச்சிக்கொண்டு திரிறான் ஏனென்று கேட்டாஏதோ எல்லாம் சொல்லுறான் எங்களுக்கு விளங்காமைக் கிடக்கு-என சண்முகம்பிள்ளைக்கும், பரியாரி கணவதிக்குமிடையில்நடைபெறுகிற உரையாடல் மூலமாக, காலமாற்றத்தினையும்,புதிய சிந்தனைகளின் வளர்ச்சியினையும் ஒடுக்கப்பட்ட மக்களின்போராட்டங் களில் அதன் நேசச்சக்திகளும் இணைந்துசெயல்படுவதனை யும் காணக் கூடியதாக உள்ளன.

தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் போக்கிலிருந்துடானியலின் நாவல்கள் விலகி நிற்பதனையும் இங்கு அவதா னிக்கமுடிகின்றது. சாதிய ஒடுக்குமுறைகளை வெளிப்படுத் தியிருந்தஅதேசமயம் சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டு ஒதுக்கி வைத்திருந்தபாலியல் தொழிலாளர், அரவாணிகள், பாலியல் தரகர் போன்றஉதிரிகள் பற்றிய டானியலின் பார்வை பதிவாகியுள்ளது. இருளின்கதிர்கள் என்ற குறு நாவல் இதை நுட்பமாக எடுத்துக்காட்டுகின்றது. பாலியல் தொழிலாளரின் கொடூரமான வாழ்வியல்களை யும்,சமூகம் அவர்கட்கு வழங்கியுள்ள ஸ்தாபனங்களையும், சுற்றிவாழ்வோரின் போலித்தனங்கள், இரக்கமின்மை, அவர்களைச்சுரண்டி வாழத் தூண்டும் உணர்வுகள், மனித உறவுகளிலும்சிந்தனைப் போக்குகளிலும் பணத்தின் ஆதிக்கம் எவ்வளவு தூரம்புரையோடிப் போயிருக்கின்றது என்பதையும் காட்டுகிறதுஇக்குறுநாவல்.

பெரும்பாலான கதையாசிரியர்களினால் இவ்வகையானபாத்திரங்கள் படைக்கப்பட்டாலும், அவை நடுத்தர வர்க்கத்திற்குரிய பார்வையில்- பெரும்பாலும் அம்மனிதர்கள் குறித்தநையாண்டி பான்மையில் படைக்கப்படுகின்றன. டானியல்அத்தன்மையிலிருந்து விலகி, அப்பெண்ணின் உணர்வுநிலைநின்றே நாவலை எழுதியிருந்தார். பொன்னம் மாளுக் காகஅனுதாபப்படும் நோஞ்சி மாமா (மாமா வேலை செய்பவர்) வர்க்க,குணாதிசயத்தை உணர்ந்து சித்தரிக்கப் பட்ட பாத்திரமாகும்.இவ்வகையில் டானியலின் இக்கதை பொன்னீலனின் இடம் மாறிவந்த வேர்கள் (1978) என்ற கதையுடன் ஒப்பிட்டுக்கூறத்தக்கதொன்றாகும்.
டானியலின் நாவல்களில் கானல் நாவல் முக்கியமானதா கும்.அவரது ஏனைய நாவல்கள் யாவும் கானல் எழுதுவதற் கானபயிற்சிகளமாகவே அமைந்திருந்தது எனக் கூறலாம்.

சமயப் போர்வையிலே இதுவரைகால சாதியப்பிரச்சனை கள்நோக்கப்பட்டு வந்தமையால் மிகச் சமீபகாலம் வரை அதாவதுநவீன காலப்பகுதிகளிலும் பலர் சமய அடிப்படை யில்இப்பிரச்சனைக்கு விடிவு காண எண்ணினார். கிறிஸ் தவம்,பௌத்தம் முதலிய சமயங்களை சேருவதால் சாதியப்பிரச்சனைக்கு (தம்மளவிலே) தீர்வுக் காண்பதாக பலர் கருதியிருக்கின்றனர். பிரச்சனை என்பது ஒரு முரண்பாட்டின்உருத்தோற்றமாகும். அம்முரண்பாட்டை இயக்கத்தினால் அதாவதுசெயலினால் போராட்டத்தினால் தீர்க்கலாமே யன்றி, அதிலிருந்துநழுவுவதனால் தீர்க்கவியலாது. அவ்வாறு வேறு மதங்களைசார்ந்த பின்னரும் வேறுவகையான ஏற்றத்தாழ்வுகளும்,முரண்பாடுகளும் தோன்றக் காண்கின் றோம். எனவே நிவாரணம்தவறாக இருக்கின்றது என்பதனை உணர்கின்றோம். (க.கைலாசபதி- 1969) கானல் நாவல் இப்போக்கினை மிகச் சிறப்பாக கையாள்கிறது. உலக சகோதரத்துவத்தை அடிப்படையாக கொண்ட கிறிஸ்தவமதத்தை பின்பற்றுவதன் மூலம் தங்கள் அவல நிலையை போக்கிக்கொள்ளலாம் என பல ஒடுக்கப்பட்ட மக்கள் கருதினர். நாவலில்வரும் ஞானமுத்து பாதிரியாரும் அப்படியே நம்பிசெயற்பட்டார். இறுதியில் பசி என்ற நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கும் மனிதர்களிடம் அவர் தோற்றுப்போகிறார் என்றுசித்தரித்துள்ளார் டானியல்.

ஞானமுத்து பாதிரியார் பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துபணிபுரிந்த சுவாமி ஞானப்பிரகாசரை நினைவுபடுத்துவதாகஉள்ளது. பாட்டாளி வர்க்க அடையாளத்துக்குள் சாதியம்கரைவதால் இழிவு நீங்காது என்ற வாதத்தை முன்வைக்கும்இராஜ்கௌதமன் போன்றோ ருக்கு, கானல் உயர்சாதி சார்புகொண்ட நாவலாக தென்படுவது தற்செயல் நிகழ்ச்சியல்ல. எதுஎவ்வாறாயினும் டானியலின் நாவல்கள் இயன்றவரைநடப்பியலை புரிந்துகொண்டு நியாயத்தின்பக்கம் நிற்பவை.யாழ்ப்பாண சமூகப் பின்புலத்தினையும், அவற்றினடியாக எழும்கருத்தோட்டங்களையும் வார்த்தை ஜாலமின்றிப் பொருளுக்கேற்றமொழிநடையில் உருவச்செறிவுடன் டானியல் தந்துள்ளார்.உணர்ச்சிகள், உறவுகளை கோட்பா டாக அல்லாதுமனிதவுறவுகளினடிப்படையில் விபரிக்கும் பாங்கு டானியலின்நாவல்களுக்கு உள்ளடக்கத்துக்கேற்ற கலைத்துவத்தை வழங்கிவளப்படுத்தியுள்ளது. டானியல் நாவல்களின் பலவீனங்கள் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டம் இடம் பெற்றவேளையில் தலித்துகள் மத்தியில் உத்தியோக பொரு ளாதார வசதிபடைத்த சிலர் ஒதுங்கி நின்று இவையெல் லாம் தேவையில்லாதவேலைகள் என்று பிரச்சாரம் செய்தார் கள். ஏன் அவர்களுடையகோவிலுக்குத்தான் போக வேண்டுமா?, கடையில் ஏன் தேநீர் குடிக்கவேண்டும், வீட்டில் குடிக்கலாம்தானே? என்றெல்லாம்இழிவுபடுத்தி போராட் டத்தில் இருந்து தூர விலகிக் கொண்டார்கள்.ஆனால் போராட்டங்கள் வெற்றி பெற்ற பின்பு மாவிட்ட புரத்தில்கடவுளுக்கருகில் நின்று அருள் பெற முன்நின்றவர் களும், தேநீர்கடைகளில் மிக ஆறுதலாக இருந்து களைப் பாறியவர் களும் அதேமனிதர்கள்தான் என்பதை இப்போது பார்க்கக் கூடியதாயுள்ளது(வெகுஜனன் - இராவணா89). தலித் என்ற பிரகடனத்தினூடாகவயிற்றுப்பிழைப்பிற்கு வழிதேடிக் கொண்ட பாராளுமன்றக்கனவானான திரு இராஜலிங்கம் போன்றோரும்இப்போராட்டத்திற்கு எதிராக நின்றனர். இம்மனிதர்கள் பற்றிடானியல் தமது பஞ்சமர் நாவலின் முன்னுரையில் பின்வருமாறுகுறிப்பிடுகின்றார்:

சாதியமுறைக்கு எதிரான அடிக்கருவையும், இழிசார் வழக்குமொழிவழியையும் விட்டுவிட்டால் இவர்களுக்கு வேறுகதியில்லை என்று என்னையும், என் போன்றோரை யும் நையாண்டிசெய்பவர்கள் நமது இலங்கைத் திருநாட்டில் நிறையவேஇருக்கின்றார்கள். கண்ணீரும் கம்பலையுமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் இந்த மக்களுக்காகவும், இவர்களொடுவொத்தபிரச்சினைகள் உள்ள வேறு மக்களுக் காகவும், பிறப்பின்அடிப்படையில் பேனை பிடித்து எழுத வேண்டிய கடமைப்பாடுடையஎழுத்தாளர் சிலரும் இந்த நையாண்டிக்காரர்களுடன் சேர்ந்துக்கொண்டிருப்பதனை என்னால் இன்று உணரக்கூடியதாக உள்ளது.
டானியல் கானல் நாவலின் முன்னுரையில் வர்க்கபேத மற்ற ஒருசமூகத்தை அடைவதற்கான மனித இன யுத்தத்தில்எடுத்தாளப்படும் ஆயுதங்களில் ஒன்றாக கலை இலக்கியங் களும்இருக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மேலும்வலியுறுத்துகின்றனர்.

டானியல் 50களில் எழுதிய சிறுகதைகள் யாவும், சாதியம் கடந்தவர்க்க ஐக்கியத்தையும், ஒடுக்குமுறைக்கு எதிரான தலித்துகளின்போர் குணாதிசயங்களையும் சித்தரித்தன. அவரது நாவல்களின்முன்னுரையில் வெளிப்பட்ட சமூக யாதார்த்தம் அவரதுசிறுகதைகளில் வெளிப்பட்டதனைப் போன்று நாவல்களில்வெளிப்படவில்லை என்பது டானியல் பொறுத்த முக்கியவிமர்சனங்களில் ஒன்றாகும்.

இவ்விடத்தில் டானியல் தன் சொந்தச் சாதியாகிய துரும்பர் பற்றிஅதிகம் எழுதவில்லை என்ற விமர்சனம் நினைவுக்கு வருவதுதவிர்க்கவியலாததாகும். அதுவும்கூட, இந்தத் தீண்டாமையொழிப்புப் போராட்ட அனுபவத்தின் வெளிப்பாடு தான்.டானியல் தன்னை ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட அனைத்துமக்களின் பிரதிநிதியாக உணர முடிந்தமை யாழ் சமூகம்வழங்கியிருந்த அந்தச் சாதக அம்சத்தினாலேயே. இன் னொருவிடயமும் இங்கு முக்கியம். டானியல் தானே ஒருசிறுமுதலாளியாக வளர்ந்து சாத்தியமான சுரண் டல் எல்லாம்செய்த ஒருவர்தான். ஆயினும் அவரது படைப்புகளில் தலித் துகள்பெற்ற இத்தகைய வர்க்கத்தள மாற்றம் பற்றி எங்கும் பேசவில்லை.ஒரேயொரு சந்தர்ப்பத் தில் விதானையாக ஒரு தலித் காட்டப்பட்டபோதிலும் அவரும் வஞ்சிக்கப்பட்டதே பேசப்பட்டிருக்கும்.திரிபுவாத நிலையெடுத்த தலித் காட்டப் பட்டாராயினும் வர்க்கஉயர்வினால் சமூக மாற்றத்துக்கு எதி ராகச் செயற்படும் தலித்சமூகத்தளம் ஒன்று உருவாகிவிட் டமை காட்டப்படவில்லை.

70களில் வர்க்கக் கண்ணோட்டத்தை விடவும் சாதியப்பார்வைவலுப்பெறுவதற்கு அவரது வாழ்முறை சிறு முதலாளிக்குரியதாகமாறியதும், தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுக்களுக்கான உணர்வைப்பேணிக் கொள்ளாதமையும் அடிப்படைக் காரணமாகும் என்பதைவிளங்கிக்கொள்ளச் சிரமம் இராது. தீண்டாமையொழிப்புப்போராட்டம் உச்சநிலையிலிருந்த 60களின் இறுதிக் கூறில் அவர்கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார். கட்சியுடன் தொடர்ந்துமுரண்பட்டுக் கடிதப்போர் செய்துள்ளார். ஆயி னும், கட்சியின் நட்புசக்தியாக இருந்துள்ளார். சண் தலைமை 1978ல் பிளவடைந்துஅவரது செயற்பாடு முடங்கிக் கிடந்த போது உதிரிகளாக இருந்தசிலருடன் தன்னையும் கட்சி யாளராகக் காட்டும் கடிதங்களை அவர்அ.மார்க்சுக்கு எழுதி யிருப்பது இவ்விடத்தில் கவனிக்கத்தக்கஒன்று. இது அவரது நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்ற ஒருஅம்சம் அதற் காக நேர்மையீனர் எனக் கருதவேண்டியதில்லை,பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் உறுதியுடன் செயற்படும்அரசியல் பலத்தை இழந்துவிட்டதன் ஒரு அம்சமாக இதுஅமைந்தது எனக் கருதலாம். இந்த அரசியல் பலவீனமே உயர்சாதிப்பெண் மீது பழிதீர்ப்பதற்கு அடிப்படைக் காரணமாகியுள் ளது. பெண்தொடர்பாக டானியல் மட்டுமே தவறாக எழுதி னார் என்பதற்குஇல்லை. வெறி என்னும் என்.கே. ரகு நாதனின் சிறுகதைபெண்மீதான ஒடுக்குமுறையை விடவும் சாதிய இழிவு எவ்வளவுவலுவானது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதனையும்இவ்விடத்தில் கவனத்திற் கொள்வது அவசியமாகும்.( ந.இரவீந்திரன் மே.கு.நூ. பக். 87)

சாதியமும் வர்க்கமும் ஒன்று எனக் கருதியதன் குளறுபடியினாலேயே அவரது நாவல்கள் இத்தகைய பலவீனங்களைவெளிப்படுத்தியது எனலாம். தலித் முதலாளியை அல்லது தலித்ஒருவர் முதலாளியானால் அவரை எந்த வர்க்கத்தினுள் சேர்ப்பார்என்பது போன்ற தெளிவீனங்கள் அவரது நாவல் களில்காணப்படுகின்றன. பஞ்சக்கோணங்கள் நாவலின் ஓர் இடத்தில்செல்லி என்ற தலித் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புகின்றசுப்பையா வாத்தியார் நானும் செல்லி யும் ஒரு வர்க்கம் தானேஎனக் கூறுவது வர்க்கம் பற்றிய அவரது குழப்பகரமானசிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். டானியல் சாதி மீறியபாலுணர்வை சமூக யதார்த்தமாக வெளிப்படுத்துகிற போதுஅதனை ஆணாதிக்க சிந்தனையுட னேயெ எழுதுகின்றார்.எடுத்துக்காட்டாக பஞ்சமரில் வரும் கமலாம்பிகை, விதானையார்மனைவி, கோவிந்தனின் அழகப்பை வாத்தி யார், தண்ணீரில் வரும்அன்னப்பிள்ளை நாச்சியார் என பட்டியலை நீட்டிக் கொண்டேபோகலாம். அடிமையில் வரும் கன்னம்மா பாத்திரத்தைவிதிவிலக்காக கொண்டால் அவரது நாவல்களில் வரும் உயர்சாதிப்பெண் பாத்திரங்கள் யாவும் சோரம் போவதாகவே சித்தரிக்கப்படுகின்றது. இவ்வாறான விடயங்கள் அவரது நாவல் களைப்பலவீனப்படுத்தியுள்ளன எனலாம்.

ஈழத்தில் 60களில் சாதிய எதிர்ப்புப் போராட்டம் போன்று 70 களில்தமிழ்த்தேசிய இனவிடுதலைப் போராட்டம் முனைப் புற்றது.இதனை தமிழ் முதலாளித்துவ சக்திகள் இன வாதத்தினுள்அழுத்திச் சென்றதன் காரணமாக தமிழ் ஜன நாயக சக்திகள்பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக இந்த அணியினைநாடவேண்டியிருந்தது. இடதுசாரிகள் சிங்கள மக்களுடன்ஐக்கியப்படுதல் என்ற கோசத்தின் அடுத்தப் பக்கமாய்பேரினவாதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற அம்சத்தையும்இணைத்திருப்பார்களாயின் இந்த ஜனநாயக சக்திகளின்ஒருபகுதியினரை வென்றெடுத்திருக்க முடியும்.

டானியலிலும் இந்த தவறு வெளிப்பட்டது. அவரது பஞ்சகோணங்கள் நாவலில் இந்த வாலிபர்கள் தாங்கள் தூக்கிய இந்தஆயுதங்களை உயர்த்திக் கொண்டு புரட்சியை நோக்கிச் செல்லும்வர்க்கங்களின் பின்னால் அணிவகுத்துச் செல்லும் காட்சியும்,இலங்கைத்தீவின் இனங்கள் யாவும் கை கோர்த்துக் கொண்டுகுதூகலித்துக் கொண்டாடும் காட்சியும் .. என்ற வரிகளும்போராளிகள் காத்திருக்கின்றார்கள் நாவ லில்இனவன்முறைகளால் காதறுக்கப்பட்ட சம்மாட்டியா ரின் மகன்அதற்கு பழிவாங்க சிங்களத்தாயின் பிள்ளையான அலெக்ஸின்காதினை அறுத்துவிடுவதையும், அவரைக் கொல்லமுனைவதனையும் நாவல் சித்திரிக்கிறது. இதற்கு எதிராகஅவனுடன் தொழில் புரியும் மீனவர்கள் கிளர்ந் தெழுவதையும்காணலாம். சிங்களவர்களுடன் ஐக்கியப்படு தலை படம் பிடித்தடானியலின் எழுத்துக்கள் அதன் மறு பக்கமான தமிழ் இனஒடுக்குமுறைக்கு எதிராகப் போரா டுதல் என்ற பார்வையைமுன்வைக்கத் தவறி விடுகின்றது.

இதுதொடர்பாக மற்றொரு டானியல் ஆய்வாளரான செ.திருநாவுக்கரசு கூறுவது கவனத்தை ஈர்க்கிறது: சிலவேளைக ளில்இன்னும் சிலஆண்டுகள் டானியல் உயிருடன் இருந்தி ருப்பின்அவரது யதார்த்தரீதியிலான அனுபவங்கள் அவரின் தமிழீழப்போராளிகள் பற்றிய அவநம்பிக்கையிலான கருத்துக்களைமாற்றமுறச் செய்திருக்கவும் கூடும். ஏனெ னில் அதுவரைகாலமும் இலங்கைத் தேசியத்தில் மிக வும் நம்பிக்கை வைத்துஎழுதியும் பேசியும் வந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி போன்றவர்கள்கூட, 1983ல் தமிழ் மக்களின் இருத்தல் நிலை இலங்கையில்கேள்விக்குரியதாக மாற்றங் கண்டபடியால்,தமிழ்த்தேசியவாதத்தின் பாலான அனுதா பம் அதிகரிக்கச்செய்துள்ளது எனக் கருத்துத் தெரிவித்து வரு வதுகுறிப்பிடத்தக்கதாகும் (செ.திருநாவுக்கரசர் சு.ப.181)

சிவத்தம்பி பாராளுமன்றத்தினூடாகச் சோஷலிஸத்தைவென்றெடுப்பதில் நம்பிக்கை கொண்டிருந்த அணியில் இருந்தவர்.ஆயுதத்தால் ஒடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் ஆயதமேந்திப்போராடும் புரட்சிகர மார்க்கத்தை வரித்துக் கொண்டவர் டானியல்.ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் வீறுடன்முன்னேறிய வேளையில் தமிழ்த் தேசியம் பேசியவர்கள்அதற்கெதிராகச் செயற்பட்டனர். ஆயுதமேந்திய தமிழ்த்தேசியஇயக்கத்தவர்களிடமிருந்து தலித் விடுதலை விரும்பிகள்அச்சுறுத்தப்பட்டதை அனுபவ ரீதியாக உணர்ந்தவர். சிவத்தம்பியைவிடவும் டானியலின் இலங்கைத் தேசியம் போர்க்குணம்மிக்கதலித் உணர்வு சார்ந்ததாக இருந்தது. அது தலித் தேசியமாக வடிவம்கொள் வது பண்ணையடிமைத்தனத்தைத் தகர்ப்பதாகிய தலித்தேசியம் .( ந.இரவீந்திரன் மே.கு.நூ. பக்.90, 91). டானியலின்இந்நிலைப்பாடு அக்காலச்சூழலில் வைத்து ஆராயத்தக்கவொன்றாகும்.

டானியலின் முக்கியத்துவமும், சாதனையும்
மனிதர்களை மாபெரும் சமுதாயப் பிரச்சினைகள் எதிர்கொள்கின்றன. மற்றவர்களைவிட யார் இந்தப் பிரச்சினை களைத்தீர்ப்பதற்கு உதவியாக அதிகம் பணிபுரிகின்றார் களோஅவர்களைத்தான் மகாபுருஷர்கள் என்று அழைக்கின்றோம்(பிளெக்னோவ்). அவ்வகையில் சாதிய ஒடுக்கு முறையைஎதிர்த்த வெகுசனப் போராட்டங்களை படைப் பாக்கிய டானியல்ஈழத்து தலித் இலக்கிய முன்னோடியா கவே தென்படுகின்றார்.அதேசமயம், தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப்பார்வையுடன்ஒப்பிடுகின்ற போது, சிற்சில இடங்களில் பலவீனராகவும்,காட்சியளிக்கின்றார். டானியலின் நாவல்களை மக்கள் இலக்கியக்கோட்பாட்டின் படி மூன்றுவகையாக்க முடியும். பாட்டாளி வர்க்கநோக்கில் புதிய சமூக அமைப்பை உருவாக்கும் வகையில்வரலாற்றை முன்னெடுத்துச் செல்ல உதவும் படைப்புகள் புதியபண் பாட்டு வகைப்பட்டன. பாட்டாளி வர்க்கக் கண்ணோட் டத்தைமுழுமையாகப் பெறாமல் சிறு உடைமையாளர் நிலைப்பாட்டின்அடிப்படையில் அதிகாரத்துவ எதிர்ப்பை மட்டும் கொண்டிருப்பனஎதிர்ப்பண்பாட்டிய வகைக்குரி யன. மரபுப் பண்பாட்டின்அக்கறையுடன் அல்லது சென்ற காலத்துக்காக ஏங்கும்பண்பாட்டியப் படைப்புகள்.. . (ந.இரவீந்திரன் மே. கு. நூ. பக்.92, 93)
அண்மையில் அன்பர் ஒருவர் துப்பாக்கி நிழலில் சாதிகள் மறைந்துகிடக்கின்றன. மரித்து விடவில்லை என்ற கருத் தினைமுன்வைத்துள்ளார். பல்லவர் காலத்தில் நிலவுடமை வர்க்கம்,வணிக வர்க்கத்திற்கு எதிராக அடிநிலை மக்களை தம்பக்கம்ஈர்க்கும் பொருட்டு சாதிய எதிர்ப்பை வெளிப் படுத்தினர்.நிலவுடமை வர்க்கம் வெற்றி பெற்று சோழ சாம் ராஜ்யத்தைஅமைத்தப்பின்னர் மீண்டும் சாதியம் மிகப் பலம் வாய்ந்தஒடுக்குமுறைக் கருவியாக மாற்றமடைந்து. இந்த வரலாற்றுநிகழ்வு மேற்குறித்தக் கூற்றின் வலிமையை எமக்குஉணர்த்துகின்றது. எனவே சாதிய விடுதலைப் போராட்டத்தினைஉழைக்கும் மக்கள் நலம் சார்ந்த போராட்டத்துடன் இணைத்துமுன்னெடுப்பதற்கு டானியல் பற்றிய ஆய்வுகள்அவசியமானவையாகும். டானியலை தனிமனிதகாழ்ப்புணர்வுகளால் நிராகரிக்க முற்படுவதும், அவரதுபலவீனங்களை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி வர்க்கப்பாதையைசிதைப்பதான சாதிய தீவிரவாதத்தில் அடையாளப்படுத்தமுனைவதும், அடிப்படையில் தலித் மக்களின் விடுதலைக்குஎதிரான குரலாகும்.
***
பெட்டிச்செய்திகள்

அ.
1.சாதியமைப்பின் வெளிப்பரிமாணத்தை எடுத்துக்காட்டி, அதனைமனமாற்றத்தினூடாக தீர்த்துவிடலாம். 2.சாதியத்தின் அக,புறபரிமாணங்களைக் கண்டு, அதன் மூலவேரான பொருளாதாரமாற்றத்திற்கான சமூக மாற்ற போராட்டத்தை முன் நிறுத்துதல்-ஆகிய இரு நிலைப்பாடுகளில் ஈழத்து தலித் நாவல்கள்இலக்கியமாக்கப்பட்டுள்ளன.

ஆ.
கிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே வாழ்ந்த எனக்குகிராமப்புறங்களையும், கிராமப்புற மக்களையும் சந்தித்துப் பேசிப்பழகிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் கிடைத்தன. அத்துடன் 20வயதளவில் நான் ஏற்றுக்கொண்ட அரசியல் வேலைகள் என்னைகிராமப்புறத்திற்கு இழுத்துச் சென்று எனது பெரும்பகுதிகவனத்தையெல்லாம் அதில் வைத்தி ருக்கச் செய்தன. இதுகிராமப்புறங்களில் நான் பல நண்பர்களைப் பெறத் துணைபுரிந்தது.
கிராமப்புற மக்களிடம் கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோஇருந்தன. இன்று இருப்பதுபோல் அல்லாமல் அன்று அரசியலைமக்களிடமிருந்தே கற்றுக் கொள்ளவும் அவர்களிடமே அவைகளைபரிசோதனை செய்து சரியானவைகளை ஏற்றுத் தவறானவைகளைநிராகரித்துத்தான் அரசியல் அனுபவங்களை பெறவேண்டும்...
- என்னைப் பற்றி நான் என்ற தலைப்பில் டானியல்

இ.
உயர்சாதி ஆடவர்கள் கீழ்ச்சாதி பெண்களைப் போகப்பொருளாகநினைக்கும் யதார்த்தப் போக்கிற்கு இலக்கிய பழிவாங்கல்களாகஉருமாறி ஒரு போலி மனநிறைவைத் தர முயல்கிறது. இத்தகையபோலி மனநிறைவுகள் புரட்சிகர இயக்கத்திற்கு பலம் சேர்க்காது.புதினத்தைக் கொண்டு செல்வதற்குரிய சுவாரசியமான கலையுத்திஎன்ற அளவில்கூட இதை பயன்படுத்துவதில் தவறு உண்டு. - (டானியலின் அடிமைகள் நாவலின் முன்னுரையில் கோ.கேசவன் )
நன்றி- புதுவிசை 2010 

மலையக தேசியம்: சவால்களும், தீர்வுகளும் சிவம் பிரபாகரன்



தேசியம் எனும்பொழுது தம்மை தாங்களே ஆளத்தகுதியுள்ளவர்களின் கூட்டுணர்வை குறிக்கின்றது. பொதுப் பிரதேசம், பொதுப் பொருளாதாரம், பொது மொழி, பொதுக் கலாசாரம் என்பன இந்த கூட்டுணர்வின் பிரதான அங்கங்களாகும். இவையே ஒரு இனத்தின் அடையாளங்களாகும்.
பொதுவாக மலையகத் தமிழரில் பெரும்பாலானோர் தோட்டத் தொழிலாளர்களாகவும், அவர்களை சார்ந்தவர்களாகவும் இருப்பதனால் தொழிற்சங்க அரசியலே கூடுதலாக வெளிப்பாட்டுத் தன்மைவுடையதாக காணப்படினும், தேசிய இன அரசியலின் கூறுகளுக்கு (பிரதேசம், பொருளாதாரம், மொழி, கலாசாரம்) அச்சுறுத்தல் ஏற்படுகின்றபோது தொழிற்சங்க அரசியலையும் மேவி தேசிய இன அரசியல் மேலெழும்புவதையும் அவதானிக்கலாம்.

தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் தொழில் நிலைமைகளை தொடர்ச்சியாக பேணுவதற்கும், முன்னேற்றுவதற்குமான தொழிலாளர்களின் அமைப்பாக தொழிற்சங்கங்கள் செயற்படுகின்ற பொழுதிலும் மலையகத் தமிழர்களை பொறுத்தவரை அவர்களின் ஆரம்பகால அரசியல் செயற்பாடுகள் கூட தொழிற்சங்கங்கள் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டது. ஒருபுறம் வர்க்க ஒடுக்குமுறை என்பது தோட்டத் தொழிலாளர்கள் “மலையகத் தமிழர்களாக” ஒரு தேசிய இனத்தின் பிரதான சக்தியாக விளங்குவதால் தான் இடம் பெறுகிறது. எனவே தொழிற்சங்க அரசியல் மலையகத் தமிழரின் ஒட்டுமொத்த தேசிய இன அரசியலின் ஒரு கூறாக கொள்ளலாம்.

மலையகத் தமிழரின் தேசிய இன அரசியல் முனைப்பு பெற்றுவரும் இன்றைய சூழலில் தமிழரின் தேசிய இன அரசியல் முனைப்பு பெற்று வரும் இன்றைய சூழலில் அதன் ஆரம்ப மற்றும் இன அரசியலின் ஒரு முக்கிய கூறாகிய தொழிற்சங்க அரசியலின் முக்கியத்துவம் பற்றியும் பார்ப்பது இன்றியமையாததாகும். வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராக அந்த தளத்திலிருந்துதான் போராட வேண்டும். இது சர்வதேச ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒரு விடயமாகும். இந்நிலையிலேயே மலையக தொழிற்சங்க அரசியலின் வளர்ச்சிப்படிகள் ஆராய்வதற்கு முன் சர்வதேச ரீதியில் தொழிற்சங்க செயற்பாடுகள் பற்றி சற்று பார்ப்பது சிறந்ததாகும்.

ஐரோப்பாவில் கைத்தொழில் புரட்சியுடன் எழுச்சி பெற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் படிப்படியாக ஏனைய நாடுகளுக்கும் பரவியது. தொழிலாளர்களுக்கான முதலாவது சர்வதேச அமைப்பு 1864 இல் லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. பிரித்தானியாவை சேர்ந்த ரொபர்ட் ஒவன் என்பவர் தனது தொழிற்சாலையில் வேலை நேரத்தை குறைந்ததுடன், 1819 இல் தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை குறைப்பதற்கான சட்டமூலம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும் பெரும் பங்களிப்பு செய்திருந்தார். அதே வேளை பிரான்சை சேர்ந்த டேனியல் லீ கிரான்ட் (1783 - 1859) என்பவரே ‘சர்வதேச தொழிலாளர் சாசனம்’ ஏற்படுவதற்கு ஆரம்ப கர்த்தாவாக இருந்துள்ளார்.

அமெரிக்காவில் 1790 களின் ஆரம்பத்தில் பல்துறைசார்ந்த தேர்ச்சிப்பெற்ற தொழிலாளர்கள் ஒன்றுகூடி ‘குறைந்த வேதனம்’ என்பதை முன் வைத்து தொழிற்சங்கத்தை தோற்றுவித்தனர். 1886 இல் அமெரிக்க தொழிலாளர் சம்மேளனம் தோற்றுவிக்கப்பட்டது. 1842 இல் நீதிமன்ற தீர்ப்பொன்றில் தொழிற்சங்கங்கள் சட்டவிரோதமற்றவை என அறிவிக்கப்பட்டது.

இவை இவ்வாறு இருக்கையில் கார்ல் மார்க்ஸ் தொழிற்சங்கங்களை வேறொரு விதமாக அணுகினார். தொழிற்சங்கம் என்பது முதலாளிக்கும் தொழிலாளிக்குமிடையில் இடம்பெறுகின்ற சமரசமாகவே கருதினார். அவரது பார்வையில் தொழிற்சங்கம் என்பது முதலாளித்துவத்தின் கூறாகவே இருந்தது. இதற்கு அப்பால் மலையக சமூக பின்புலத்தோடு நோக்குகின்றபோது யதார்த்தம் வேறுவிதமாக இருந்தது. மலையகத்திலே உருவான மிதவாத தொழிற்சங்கங்களாக இருந்தாலென்ன (இ.தொ.கா) அல்லது இடதுசாரி தொழிற்சங்கங்களாக இருந்தாலென்ன (சண்முகதாசன், நடேசன் தலைமையிலானவை), இவை அனைத்தும் ஒரு தொழிற்சங்க பாரம்பரியத்தினூடாகவே மலையக தேசிய அரசியலை அணுகின.

முதன்முதலில் இலங்கையில் தொழிற்சங்கம் பற்றிய சிந்தனையை விதைத்தவர்கள் அல்பிரட் ஏர்னெஸ்ட் பூல்ஜன்ஸ் (1865 - 1916) மற்றும் கலாநிதி பின்டோ ஆகியோர் ஆவர். 1893 இல் கேவ்ஸ் அச்சு நிறுவன தொழிலாளர் போராட்டமும், 1896 இல் புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் பேராட்டமும், போக்குவரத்து துறைசார்ந்த ஊழியர்களின் 1906 ஆம் ஆண்டு வேலை நிறுத்த போராட்டம் என தொடர்ச்சியான போராட்டங்களும் இலங்கையில் தொழிற்சங்க இயக்கத்திற்கு அத்திவாரமிட்டன.

இலங்கையில் தொழில் கட்சி மற்றும் அகில இலங்கை தொழிற்சங்க காங்கிரஸ் என்பன 1928 இல் தோற்றுவிக்கப்பட்டதோடு ஏ. ஈ. குணசிங்க அதன் முதலாவது தலைவராக தெரிவானார். இலங்கை முதலாளிமார் சம்மேளனம் 1928 இல் தோற்றுவிக்கப்பட்டதோடு, அதுவே இலங்கையில் பதிவு செய்யப்பட்ட முதலாவது (1935 இல்) தொழிற்சங்கமாகும்.

இந்நிலையிலேயே மலையகத் தோட்டப்புறங்களில் 1930 களில் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்தன. மலையக மக்களின் அரசியலும் தொழிற்சங்க அரசியலோடே ஆரம்பிக்கிறது. மலையகத் தோட்டங்களுக்கு இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு நூறு வருடங்களுக்கு பின்பே (முதல் பொருளாதார குடியேற்றம் 1828 இல் ஆரம்பம்) தொழிற்சங்க அரசியல் பணிகள் மெதுவாக வேரூன்றுகிறது.

சேர் பொன் அருணாசலம், பெரி சுந்தரம் ஆகியோரால் 1921 இல் இலங்கை தொழிலாளர் சேமா அபிவிருத்தி சங்கம் தோற்றுவிக்கப்பட்டதோடு, துண்டு முறைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தனர். 1931 இல் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனம், இலங்கை இந்திய தொழிலாளர் சம்மேளனம் கோ.நடேசய்யரினால் தோற்றுவிக்கப்பட்டது. இவர் இந்தியர் என்பதற்கு அப்பால் மலையகத் தோட்டத் தொழிலாளர்களை இலங்கை சமூகத்தின் ஒரு பிரிவாக வளர்த்தெடுக்க விரும்பினார். 1939 ஜுலை 25 ஆம் திகதி நேருவின் வருகையோடு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸானது பாரத் சேவா சங்கம், நாடார் மகாஜன சங்கம், பாண்டிய வேளாளர் சங்கம், ஹரிஜன சேவா சங்கம் என்பனவற்றின் இணைவே ஆகும். இவர்கள் ஆரம்பத்தில் தோட்டத் தொழிலாளர்களின் அங்கத்துவம் பற்றி சிந்தித்திருக்கவில்லை. இதன் முதலாவது தலைவராக இலட்சுமணச் செட்டியாரும் இணை செயலாளர்களாக ஏ.அஸிஸ்சும், எச்.எம்.தேசாயும் தெரிவு செய்யப்பட்டனர். இந்த அமைப்பு தோட்டத் தொழிலாளர்களிள் முக்கியத்துவத்தை உணர்ந்ததன் காரணத்தால் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் 1940 மேயில் ஹப்புத்தளை கதிரேசன் கோவிலில் வைத்து பெரி சுந்தரம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இடதுசாரி தேசிய சிந்தனை வளர்ச்சி பெற்று வந்த 1930 இற்கு பிற்பட்ட பெருந்தோட்டதுறை வரலாற்றில் லங்கா சமசமாஜ கட்சியின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் யூனியனால் முப்பதுகளில் இறுதி, நாப்பதுகளின் ஆரம்ப பகுதிகளில் பல வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

1954 இல் இலங்கை இந்திய காங்கிரஸின் பெயர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) என மாற்றப்பட்டது. இந்த பெயர் மாற்றம்கூட இந்தியா நிலையிலிருந்து இலங்கை மலையகத்தவர்கள் என்பதனை வெளிப்படுத்துவதற்கான மற்றுமொரு வளர்ச்சிப்படியாகவே கொள்ளலாம். 1954 இல் இ.தொ.காவிலிருந்து பிரிந்து சென்று அஸிஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸை தோற்றுவித்தார். 1965 மே மாத்தில் மற்றுமொரு பெரிய பிளவு ஏற்பட்டு வெள்ளையன் தலைமையிலே தொழிலாளர் தேசிய சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறே மலையக பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கங்களுக்கிடையில் பிளவுகளும், புதிய சங்கங்கள் உருவெடுத்தலும் இன்றுவரை தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இவ்வாறு தொழிற்சங்க அரசியலை மலையகப் பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கும்பொழுது பலர் தங்கள் உயிர்களையும் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

1. 1942 இல் முல்லோயா தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த கோவிந்தன்
2. 1942 இல் புப்புரஸ்ஸ கந்தா தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த வேலாயுதம், வீரசாமி ஆகியோர்
3. 1950 மார்ச் 02 ஆம் திகதி டெவன் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த வைத்திலிங்கம்
4. 1953 இல் என்சாவெல தெபுவான தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த எட்லின் நோனா
5. 1953 இல் நெபொட லேங்டேல் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த தேவன்
6. 1953 நவம்பரில் கல்தோணி தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த பீ.வெள்ளையன்
7. 1956 இல் மஸ்கெலியா நல்லதண்ணி தோட்ட போராட்டத்தில் உயிர் நீத்த காருமலை
8. 1956 மே 08 ஆம் திகதி டயகம தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த அல்விஸ் அப்புஹாமி ஆப்ரஹாம் சிங்கோ
9. 1957 ஜுலை 15 ஆம் திகதி உடபுஸ்ஸலாவை போராட்டத்தில் உயிர் நீத்த எனிக் தோட்டத்தை சேர்ந்த பொன்னையன் மற்றும் கொம்பாடி ஆகியோர்.
10. 1958 இல் இரத்தினபுரி ஹேய்ஸ் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த நடேசன்.
11. 1958 மார்ச் 30 ஆம் திகதி பொகவந்தலாவை பேராட்டத்தில் உயிர் நீத்த பிரான்சிஸ், ஐயாவு ஆகியோர்
12. எட்டியாந்தொட்ட வெற்றிலையூர் பம்பேசும தோட்ட போராட்டத்தில், உயிர் நீத்த மாமுண்டு
13. 1959 இல் மாத்தளை மாதென்ன தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த கே.முத்துசாமி
14. 1960 இல் ரக்வானை மூக்களாந்சேனை தோட்டப் போராட்டத்தில் உயிர்நீத்த தங்கவேலு
15. 1960 இல் நிட்டம்புவ மல்வான தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சிதம்பரம்
16. 1961 நவம்பரில் நாலப்பிட்டி மொண்டிசிரஸ்டோ (லெட்சுமி தோட்டம்) தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த ஆராயி, நடேசன், செல்லையா, மாரியப்பன் ஆகியோர்.
17. 1964 மே 28 ஆம் திகதி மாத்தளை கந்தநுவர தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த அழகர், ரெங்கசாமி ஆகியோர்
18. 1967 நவம்பர் 08 ஆம் திகதி மடுல்கெல சின்ன கிளாப்போக்கு தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சோனை
19. 1968 ஒக்டோபர் 27 ஆம் திகதி இரத்தினபுரி மயிலிட்டியா தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சின்னப்பன் அந்தோனிசாமி
20. 1970 செப்டெம்பரில் பதுளை சீனாகொல தோட்டப் போராட்டத்தில் உயிர்நீத்த அழகர்சாமி, ராமையா ஆகியோர்.
21. 1970 டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தளை கருங்காலி தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த பார்வதி, கந்தையா, ஆறுமுகம், ராமசாமி ஆகியோர்
22. 1977 மே 11 ஆம் திகதி தலவாக்கலை டெவன் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சிவனு லட்சுமணன்
23. 1980 இல் கண்டி பள்ளேகல தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த பழனிவேல்

என்று இந்த பட்டியல் நீண்டு செல்கின்றது.
பொதுவாக உயிர் நீத்த தியாகிகள் அனைவரும் தொழிற்சங்க போராட்டங்களிலேயே என பட்டியலிடப்பட்டாலும் பல இடங்களில் தேசிய இன அரசியலின் வெளிப்பாடாகவே இருந்துள்ளது. உதாரணமாக 1958 மார்ச் 30 ஆம் திகதி பொகவந்தலாவையில் உயிர் நீத்த பிரான்சிஸ், ஐயாவு ஆகியோர் முழு நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்ட சிங்கள ‘ஸ்ரீ’ எழுத்திற்கு எதிரான போராட்டத்தின் போதே பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள். மலையகத் தமிழரின் இன அடையாளத்தின் ஒரு கூறான தமிழ் மொழியை சிதைக்கின்ற விடயமாகவே இவர்கள் சிங்கள ‘ஸ்ரீ’ எழுத்தின் அறிமுகத்தை பார்த்தனர். இது போன்றே இன அரசியலின் மற்றுமொரு கூறாகிய பொதுப் பிரதேசம் (மண்ஃநிலம்) துண்டாடப்படுவதை எதிர்த்தே 1977 மே 11 ஆம் திகதி சிவனு லட்சுமணன் உயிர் நீத்தார். இவரது உயிரிழப்பினூடாகவே பத்தனை பிரதேச டெவன் தோட்டத்தில் ஏழாயிரம் ஏக்கர் காணி பாதுகாக்கப்பட்டது. 1980 இல் கண்டி பள்ளேகல தோட்டத்தில் உயிர் நீத்த பழனிவேலும் துரித மகாவலி திட்டத்தினூடாக தங்கள் இருப்பிற்கு (நிலம் ஃ பிரதேசம்) ஆபத்து வருவதை உணர்ந்து இடம்பெற்ற போராட்டத்திலேயே ஆகும்.

சுதந்திரத்திற்கு முன்னரான உருளைவள்ளித் தோட்ட காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டம், 1950 களில் குடியுரிமை பறிப்பதற்கு எதிரான எதிர்ப்பு போராட்டம் மற்றும், மலையகத்தில் தொடரும் இன வன்செயல்களுக்கு எதிரான போராட்டங்கள், தொன்னூறுகளின் இறுதியில் இரத்தினபுரி வேவல்வத்த சம்பவம், 2000 ஆம் ஆண்டில் பிந்துனுவெல சம்பவத்திற்கு எதிராக மலையகத்தில் எழுந்த எழுச்சி என்பனவும் தொழிற்சங்கங்களினால் தலைமை தாங்கப்பட்டபோதிலும் இவை இன அரசியலின் இருப்பிற்கான போராட்டங்களே! வரலாற்று ரீதியாக ஒட்டுமொத்த தொழிற்சங்க போராட்டங்களின் பின்னாலும் மலையக தேசியத்தின் இருப்பு முக்கிய பங்கு வகித்திருப்பதை அவதானிக்கலாம்.

இதுபோன்றே தோட்டத் தொழிலாளர்களை பெரும்பான்மையாக கொண்டு தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகளிடையே காலத்துக்கு காலம் மலையக தேசிய அரசியல் சிந்தனை எழுச்சியுற்றதை காணலாம். 1930 களிலேயே மலையகத் தமிழரின் அரசியல், தொழிற்சங்க பிதாமகன் கோ.நடேசய்யர் தோட்டத் தொழிலாளர்களின் இலங்கை பிரஜைகள், அவர்கள் இந்த நாட்டையே நேசிக்க வேண்டும், என்ற சிந்தனையை முன் நிறுத்தி செயற்பட்டார். இந்திய தலைவர்களுக்கு “ஜே“ போடுவதை கடுமையாக எதிர்த்தார். இலங்கைக்கு வந்த நேரு அவர்கள் நடேசய்யரை சந்திக்க விடுத்த அழைப்பையும் ஏற்ப மறுத்தார். ‘நாங்கள் இந்த மண்ணுக்கு உரித்துடையவர்கள், எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே தீர்மானிக்க வேண்டியவர்கள், நேருவோ, காந்தியோ எங்களுடைய தலைவர்கள் அல்ல’ என்று மலையகத் தமிழர்கள் இந்த மண்ணுக்கு உரித்துடையவர்கள் என்பதை தெளிவாக கூறினார்.

இந்த நிலையில் தான் பிற்காலத்தில் இந்தியாவுக்கு விசுவாசமான ஒரு தலைவரை இலங்கை வாழ் இந்தியர்களிடையே வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு ஏற்படுகின்றது. இந்த பின்னணியிலேயே சௌமிய மூர்த்தி தொண்டமான் வளர்த்தெடுக்கப்படுகின்றார். அஸிஸ் மேற்கு பாக்கிஸ்தானை சேர்ந்தவர் என்பதால் அவரைவிட தமிழ்நாட்டை சேர்ந்த தொண்டமான் இந்தியாவின் விசுவாசத்திற்குரியவரானார். இந்த விசுவாசத்தை அவர் இறுதிவரை காப்பாற்றினார்.

நடேசய்யரினால் விதைக்கப்பட்ட மலையக தேசிய சிந்தனையின் வளர்ச்சியாகவே 1954 இல் இலங்கை இந்திய காங்கிரஸ், தனது பெயரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என மாற்றியதை அவதானிக்கலாம். இதுவும்கூட மலையகத்தின் தேசியத்தின் வளர்ச்சி படியேயாகும். இந்தியாவிற்கு தனது விசுவாசத்தை காட்டும் அதேவேளை, மலையக மக்களின் இருப்பை பேணும் ஓர் அரசியல் சாணக்கியமாகவும் கொள்ளலாம். இதன் அடுத்த கட்டங்களில் அதாவது 1960 களின் ஆரம்பத்தில் இலங்கை திராவிட முன்னேற்ற கழக தலைவர் இளஞ்செழியன் இந்திய தமிழர் என்பதற்கு மாற்றீடாக ‘மலையகம்’ என்ற சொற் பிரயோகத்தை அறிமுகப்படுத்துவதை காணலாம்.

இதன் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிபடிகளாகவே 1967 இல் இர.சிவலிங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட மலையக இளைஞர் முன்னணி, 1968 இல் வி.எல்.பெரேரா, சக்தி பாலையா ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட மலையக இளைஞர் பேரவை, தொடர்ந்து எழுபதுகளின் நடுப்பகுதியில் எல்.சாந்திகுமார், எம்.எஸ்.கந்தையா ஆகியேரால் ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள் இயக்கம், பீ.ஏ.காதர், வீ.டீ.தர்மலிங்கம், ஏ.லோரன்ஸ், எஸ்.தேவசிகாமணி ஆகியோரின் முன்னெடுப்பில் உருவான மலையக வெகுசன இயக்கம், வீ.புத்திரசிகாமணி, திவ்யநாதன், நேருஜி இணைந்து ஏற்படுத்திய மலையக ஐக்கிய முன்னணி, 1989 பெப்ரவரியில் பீ.சந்திரசேகரன், பீ. ஏ. காதர், வீ. டி. தர்மலிங்கம், ஏ.லோரன்ஸ், சரத் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணி என இந்த தொடர்ச்சி ஓர் தேசிய இன அரசியல் பாதையில் பயணித்து வந்துள்ளதையும் சுட்டி காட்ட வேண்டும்.

இவை போன்றே இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், மலையக பாட்டாளிகள் கழகம், புதிய மலையகம், மலையக கல்வி அபிவிருத்தி மன்றம், மலையக சமூக ஆய்வு மையம் போன்றவையும் மலையகத்தின் இன அடையாளத்தை மையமாகக் கொண்டு இயங்குவதையும் அவதானிக்கலாம்.

இவற்றிற்கு மத்தியிலும் ‘மலையகத் தமிழர்’ என்ற இன அடையாளத்தை சிதைக்கின்ற முயற்சிகள் தீவிரமாக ‘இந்திய தமிழர்’ என்ற சொற்பிரயோகத்தை முன் நிறுத்துவோரால் மேற்கொள்ளப்படுகின்றது. பெரும்பாலும் இலங்கையில் உழைத்து இந்தியாவில் சேமிக்கும் வர்த்தகர்களாலும், அவர்களுடன் இணைந்து இயங்குபவர்களாலுமே இவ்வாறான முயற்சிகள் கூடுதலாக செய்யப்படுகின்றது. மலையகத் தமிழரை பல்வேறு வழிக@டாகவும் மூளைச்சலவை செய்து இந்திய தமிழராக ஏற்க செய்வது, சாதிய அமைப்புகளின் செயற்பாடுகளை மீள நிலைபெற செய்தல், மாற்று தெய்வ வழிபாட்டு முறைகளை வலு கட்டாயமாக இந்தியவிலிருந்து கொண்டு வந்து மலையகப் பிரதேசங்களில் நிலைபெற செய்தல், அதிகார வர்க்கம் தங்களுக்கு தேவையான அரசியல் - தொழிற்சங்க தலைமைகளை வளர்த்தலும், பாதுகாத்தலும், இந்தியா அல்லது இந்திய வம்சாவளி என்ற பெயரை கொண்டு புதிய புதிய அமைப்புக்களை தோற்றுவிப்பதனூடாகவும் மலையகத் தமிழர், ‘இந்திய தமிழர்’ அல்லது ‘இந்திய வம்சாவளியினர்’ என்ற சொற் பிரயோகத்தை அதிகம் விரும்புவதாக ஒரு மாயையே உருவாக்குதல் என்று இது ஒரு தொடர் கதையாகவே உள்ளது. இந்திய தமிழர்  என்ற பதப்பிரயோகதi;த வலியுறுத்தி வலுவற்ற காரணங்களை முன்வைத்து ‘மலையக சமூகத்தில் இருக்கக்கூடிய ஒரு சில இந்திய சார்புநிலை புத்திஜீவிகளை கொண்டு ஆக்கங்களை படைக்க செய்து, இந்நாட்டின் இந்திய பெரும் முதலாளிகளினால் நிர்வகிக்கப்படும் பெரும்பாலான தமிழ் ஊடகங்களில் அவற்றை வெளிவர செய்து செயற்கையான ஓர் ‘இந்திய தமிழர்’ சூழலை மலையகத் தமிழர் மத்தியில் தோற்றுவிக்கும் முயற்சிகளும் குறைவின்றி தொடர்ந்த வண்ணமே உள்ளன.
மலையகத்திற்கென வலிமையானதொரு தொழிற்சங்க வரலாறு உண்டு. இன்றைய நிலையில் மலையகத் தமிழரில் பெரும் எண்ணிக்கையானோர் இன்னும் பெருந்தோட்டத் தொழிற்துறை சார்ந்தே உள்ளனர். எனவே தொழிலாளரின் தொழில்சார் நலன்களை பேணுவதற்கும், தொழில் இருப்பிற்கும் தொழிற்சங்க அரசியல் இன்றியமையாதது. இதனை பாதுகாக்க வேண்டியது ஒட்டு மொத்த மலையக சமூகத்தினுடைய பொறுப்பாகும்.

அதேவேளை, இந்த தொழிற்சங்க அரசியலை தொழிலாளரின் சம்பள விடயத்துடன் மட்டும் மட்டுப்படுத்தாது, அவர்களின் ஏனைய விடயங்களையும் கையாளக்கூடிய விதத்தில் ஊழியர் நலன்சார் சர்வதேச தொழிற்சங்களின் தரத்திற்கு வளர்த்தெடுத்தல் வேண்டும். வெளிநாடுகளில் உள்ளது போன்ற ஒரு பங்கேற்பு பொருளாதார முறையை ஊக்குவித்தல் வேண்டும். இதன்மூலம் மலையகத் தொழிற்சங்கள் மீது இருக்ககூடிய நம்பிக்கையின்மையை அகற்றமுடிவதுடன், மலையகத் தமிழரின் பிரதான பொருளாதார வளமான பெருந்தோட்ட துறையையும் பாதுகாக்க முடியும். அத்துடன் இன்றைய தேக்க நிலையிலிருந்தும் மீள முடிவதுடன் ஆரோக்கியமான அரசியல் முயற்சிகளையும் முன்னெடுக்க முடியும்.

ஆனாலும் தொழிற்சங்க அரசியல் என்பது மலையகத் தேசிய இன அரசியலின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க முடியும். மலையக தேசிய இன அரசியலே என்றும் பிரதானமானதாக இருத்தல் வேண்டும்.

அந்தவகையில் பார்க்கையில் மலையகத் தமிழரின் தேசிய இன அரசியல் முக்கியத்துவம் பெற்றுவரும் இன்றைய காலகட்டத்தில் மலையகத்தமிழரின் தேசிய இன அரசியலின் அடையாளங்கள் பெரும் அச்சுறுத்தல்களை சந்தித்து வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. பல இழப்புகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் இன்றும் இலங்கையின் இரண்டாவது அதிகமான தமிழர் வாழும் மாவட்டமான நுவரெலியாவும், மலையகத் தமிழர் செறிந்து வாழும் மற்றுமொரு மாவட்டமான பதுளையும் உள்ளடங்களாக மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் மலையக மக்கள் செறிவாக வாழுகின்ற பிரதேசம் மலையகத் தமிழரின் பொது பிரதேசத்தின் பிரதான வகிபாகத்தை இன்றும் கொண்டுள்ளன.

திட்டமிட்ட குடியேற்றங்கள் மலையகத் தமிழரின் பொது பிரதேசத்தை வலுவிலக்கச் செய்கின்ற பிரதான ஊடகமாக உள்ளது. உசவசம, நட்சா திட்டங்கள் மூலம் மாத்தளை, இரத்தினபுரி மாவட்டங்களின் பெருமளவிலான தோட்டகாணி திட்டமிட்ட முறையில் சிங்களவர்களுக்கு பிரித்து கொடுத்தமை. மலையகத்தின் சிறு நகரங்களுக்கும் தோட்டங்களுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டமிட்ட குடியேற்ற கிராமங்கள், அட்டன் பிரதேசத்தில் தியகலைக்கும் மஸ்கெலியா – நல்லத்தண்ணிக்கும் இடையிலான மலைத்தொடரில் ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டமிட்ட குடியேற்றம் என்பன சிறந்த உதாரணங்களாகும்.

மேலும் சட்டவிரோதக் குடியேற்றம் (மலையகத்தின் பிரதான பாதைகளின் இரு மருங்கிலும் உருவாகி வருகின்ற குடியேற்றங்கள்), கைத்தொழில் குடியேற்றங்கள், அபிவிருத்தி குடியேற்றங்கள் குறிப்பாக  நீர் தேக்கங்களை அண்மித்து உருவாக்கப்பட்டுள்ள குடியேற்றங்கள் (கொத்மலை குடியேற்றம்) தோட்டங்களுக்கு அண்மித்த இடங்களில், சிறு சிறு பௌத்த விகாரைகளை ஏற்படுத்தி அதனை சூழ ஏற்படுத்தப்பட்டு வரும் குடியேற்றங்கள், சிங்கள விவசாய குடியேற்றங்கள் (நுவரெலியா மாவட்டம் போபத்தல பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாரிய மாட்டுப் பண்ணையும் அதனை சூழ சிங்களவர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள பாரிய விவசாய குடியேற்றம்) என திட்டமிட்ட முறையில் சிங்கள குடியேற்றத் திட்டங்கள் பல வழிகளிலும் தொடர்ந்தவாறே உள்ளன.

மலையகத் தமிழரின் பொருளாதாரத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை பிரதான பங்கினை வகிப்பதோடு சிறு விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறு வியாபாரம் மாணக்கக்கல் அகழ்வு, சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, அரசாங்க தொழில் வாய்ப்பு என்பனவும் பொதுப் பொருளாதாரத்தின் ஏனைய கூறுகளாக உள்ளன. இலங்கையில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையை ஆரம்பித்தவர்கள் மலையகத் தமிழரே. எனவே இது இம் மக்களுக்கு சொந்தமானது. மேலும் பெருந்தோட்டப் பொருளாதாரம் மலையகத் தமிழரின் பொதுப் பொருளாதாரத்தின் அடையாளமாக இருப்பதோடு, பேரம் பேசும் பலத்தின் பிரதான அம்சமாகவும் உள்ளது.

இன்று பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை பல வழிகளிலும் சிதைக்கப்படுகின்றது. தோட்டங்கள் பராமரிப்பின்மை, தரிசு நிலங்களாகவிடல், கல், மரம் போன்ற வளங்கள் அகற்றப்படல் போன்ற வழிமுறைகள் ஊடாக சிதைக்கப்படுகின்றது. வலப்பனை பிரதேசத்திலுள்ள எலமுள்ள, வத்துமுல்ல, கொச்சிக்காய் தோட்டம், கண்டி பள்ளேகல தோட்டம் என்பன அண்மைய சிறந்த உதாரணங்களாகும். மறு புறத்தில் மலையகத் தமிழரின் கைகளிலிருந்து இப்பொருளாதாரம் பறிக்கப்படுகின்றது. பெருந்தோட்டங்கள் சிறு, சிறு துண்டுகளாக துண்டாடப்பட்டு சிங்களவர்களின் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளன. இன்று இலங்கையின் மொத்த தேயிலை ஏற்றுமதியில் 70மூ மேல் சிறு தேயிலை உற்பத்தியாளர்களையே மேற்கொள்ளப்படுகின்றது இவர்களில் 90மூ மேற்பட்டோர் சிங்களவர்களாவர். இவர்களுக்கு பெருமளவிலான மாணியமும் வழங்கப்படுகின்றது.

மலையக நகரங்களில் ஏனைய இனத்தவர்களுக்கு பாரியளவில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படுவதோடு, சிறு விவசாய வாய்ப்புகளும் சிங்களவர்களுக்கே கூடுதலாக வழங்கப்படுகின்றது. உரம் மாணியத்தின் முழுமையான பயனும் மலையகத் தமிழருக்கு கிடைப்பதில்லை. இடை தரகர்கள் உற்பத்தியின் முழு பயனை அடைய விடாது தடுத்து விடுகின்றனர். மலையகம் இலங்கையின் பிரதான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக இருந்தபோதிலும் அதன் ஆதிக்கம் சிங்களவர்களின் கைகளிலேயே உள்ளது. அதேபோன்று மலையக பிரதேசத்திலேயே சிறந்த மாணிக்கக்கற்கள் அகழந்தெடுக்கப்பட்ட போதிலும், அகழ்வு தொழிலாளர்களாகவே பெரும்பாலான மலையகத் தமிழர் உள்ளனர்.

அரச வேலை வாய்ப்புக்களை பொறுத்தவரையில் ஆசிரியர் தொழிலை தவிர ஏனைய அனைத்து துறைகளிலும் மலையகத் தமிழர் மீதான பாராபட்சம் தொடரவே செய்கின்றது. மேலும் தொழிற்சங்க, அரசியல் கட்சிகளின் செல்வாக்கும் அளவுக்கதிகமாகவே உள்ளன.

மலையகத் தமிழரின் பொது மொழியாக தமிழ் மொழி உள்ளதோடு, அவர்களுக்கே உரித்தான பொது பண்பாட்டு, கலாசார விழுமியங்களையும் பேணி வருகின்றனர். இவர்களின் பண்பாடும், கலாசாரமும் மொழியில் தங்கியுள்ளதோடு, மலையக மக்களை இணைக்கும் ஊடகமாகவும் தமிழ்மொழி உள்ளது. திருமணச் சடங்கு, கோவில் சடங்கு, குடும்பச் சடங்குகள், மலையக கூத்துக்கள், மலையக கோவில்களும் வழிபாட்டு முறைகளும், விளையாட்டுக்கள், நாட்டார் இலக்கியம் போன்றவற்றை பொதுக் கலாசாரத்திற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம்.

நடைமுறையில் தமிழ்மொழி அமுலாக்கம் என்பது கேள்வி குறியாகவே உள்ளது. அரசியல் சட்ட பிரகாரம் குறித்த ஒரு பிரதேச செயலாகப் பிரிவில் 12மூ மக்கள் ஒரு மொழியை பேசுபவர்களாக இருப்பின், அந்த மொழியில் கருமங்கள் ஆற்றப்பட வேண்டும். ஆனால் மலையகத்திலோ அல்லது மலையகத்திற்கு வெளியில் (வடகிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த) தமிழர் 12மூ மேல் வசிக்கின்ற எந்த பிரதேச செயலகப்பிரிவிலும் தமிழ் மொழியில் கருமங்கள் ஆற்றப்படுவதில்லை. குறிப்பாக தனித்தமிழ் பிரதேச செயலகங்களான ஃ பிரதேச சபைகளான நுவரெலியா மற்றும் அம்பகமுவை சபைகள் இருந்தபோதிலும் அங்கு முழுமையான தமிழ் மொழி அமுலாகத்தை காணமுடிவதில்லை.

இலங்கையில் மலையகத் தமிழ் சமூகம் தவிர மற்றைய அனைத்து சமூகங்களுக்கும் தனியான பல்கலைக்கழங்கள் உள்ளன. ஆனால் மலையகத் தமிழர்கள் கல்வி கலாசார விழுமியங்களை பாதுகாத்து, முன்னெடுப்பதற்கும் உற்பத்தி முறைகளை விருத்தி செய்யகூடிய வசதியான தனியான பல்கலைக்கழகம் ஒன்று இல்லை. பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி ஜேர்மன் நாட்டு அரசாங்கத்தால் மலையக மக்களுக்காக உருவாக்கப்பட்டபோதிலும், அதன் முழு பயனையும் அடையும் வாய்ப்பு மலையக சமூகத்திற்கு மறுக்கப்பட்டுள்ளது. இதேவேளை மலையக பல்கலைக்கழகம் உருவாகும்வரை பல்கலைக்கழகத்தின் சமூகம் சார்ந்த பொறுப்புக்களை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியும், கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கல்லூரியும் பொறுப்பேற்க வேண்டும். இவற்றிலுள்ள ஆசிரியர்களுக்கு இதில் பெரும் பொறுப்பு உள்ளது. மலையகப் பாடசாலைகளில் பெரும் வளப்பற்றாக்குறை நிலவுவதுடன், மாணவர் இடை விலகலும் மலையகததிலேயே அதிகமாக உள்ளது.

படித்த மத்தியதர வர்க்கத்தினரின் இடப்பெயர்வு, இந்திய ஊடுருவல் (மாற்று தெய்வ வழிபாட்டு முறைகளை புகுத்துதல், ஒப்பந்தங்கள் மூலம் மலையகத் தமிழரின் எண்ணிக்கை குறைந்தமை), சாதிய அமைப்புக்களின் சடுதியான மீள் நிலையாக்கமும் தொடர்ச்சியான செயற்பாடுகளும் மலையக தேசத்தின் தேசிய அரசியல் உருவாக்கத்தை பாதிக்கின்றன.

திட்டமிட்ட குடும்ப கட்டுப்பாடு இன்று மலையக தேசியத்திற்கு விடுக்கப்படும் பெரும் சவாலாகும். திட்டமிட்ட முறையில் எவ்வாறு மலையகத் தமிழ் இனம் அழிக்கப்படுகின்றது என்பது 2012 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் மூலம் அறிய முடிகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் தேசிய ரீதியான சனத்தொகை அதிகரிப்பு 36.49மூ இருக்கும் அதேவேளை, மலையகத் தமிழரின் அதிகரிப்பு 2.8மூ ஆக மட்டுமே உள்ளது. இதுவே முஸ்லீம் சமூகத்தில் 78.6மூ மாகவும் சிங்கள சமூகத்தில் 38.2மூ மாகவும் இலங்கைத் தமிழரின் வளர்ச்சி 20.3மூ மாகவும் உள்ளன. ஏனைய சமூகங்களின் வளர்ச்சி 7.4மூ மாகவும் உள்ளன. இதேவேளை கடந்த பத்து ஆண்டுகளில் (2001 - 2011) ஆண்டுக்கான சராசரி சனத்தொகை வளர்ச்சி வீதம் தேசிய ரீதியில் 0.71மூ இருக்கையில் சிங்களவர் வாழும் அநுராதபுரம் மாவட்டத்தில் 1.33மூ மாகவும் அம்பாந்தொட்டை மாவட்டத்தில் 1.77மூ மாகவும் உள்ளன. மலையகத் தமிழர் மிகையாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் ஆகக்குறைந்த வளர்ச்சி வீதம் 0.05மூ மாகவும், பதுளை மாவட்டத்தில் 0.39மூ மாகவும் உள்ளன. இதிலிருந்து எவ்வாறு திட்டமிட்ட குடும்ப கட்டுபாட்டின் மூலம் மலையகத் தமிழரின் இன விதாசாரம் சிதைக்கப்படுகின்றது என்பது தெளிவாக புலனாகின்றது.

தொடர் இன வன் செயல்கள் மூலம் மலையகத் தமிழரை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விரட்டுகின்ற செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதையும் அவதானிக்கலாம். 1956, 1958,  1977, 1979, 1981, 1983 என தொடர்ந்து 1990 களில் இறுதியில் இரத்தினபுரி – வேவெல்வத்தை, 2000 இல் பண்டாரவளை பிந்துனுவௌ என்று தொடர்ந்த வண்ணமே உள்ளன. இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் தொடர்ச்சியாக மலையகத் தமிழர் மீது மேற்கொள்ளப்படும் இன வன்செயல்கள், 2011-2012 இல் இறக்கிவிடப்பட்ட அச்சுறுத்தும் கிறீஸ் மனிதன் என்று அச்சுறுத்தல்கள் தொடர்ந்தவாறே உள்ளன. இவ்வாறான அச்சுறுத்தல்கள் மூலம் மலையகத் தமிழரின் இடப்பெயர்வு கட்டாயப்படுத்தப்படுகின்றது.

இதுபோன்றே சுதந்திர இலங்கையில் தொடர்ச்சியாக கொண்டுவரப்பட்ட சட்டங்களும், ஒப்பந்தங்களும், கூட மலையகத் தமிழரின் இன செறிவை பெரிதும் பாதித்துள்ளது. 1948 ஆம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டம், 1949 ஆம் ஆண்டு இந்தியர் பாக்கிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம், 1949 ஆம் ஆண்டு தேர்தல்கள் திருத்தச் சட்டம், 1964 ஆம் ஆண்டு ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம், 1967 ஆம் ஆண்டு ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கல் சட்டம், 1974 ஆம் ஆண்டு ஸ்ரீமா - இந்திரா ஒப்பந்தம், 2012 ஆம் ஆண்டு தேர்தல்கள் திருத்தச் சட்டம் என்பன மலையகத் தமிழரின் தேசிய இருப்பை கடுமையாக பாதித்துள்ளன.

இந்நிலையில் இன்று மலையக தேசியத்தை பாதுகாக்க வேண்டியது இன்றியமையாததாகும். அதற்கு மலையக தேசிய இன அரசியலை முன் நகர்த்த வேண்டியது கட்டாயமாகும். மலையக தேசிய இன அரசியலை முன் நகர்த்துவதற்கு முதலில் மலையகத் தமிழரின் இருப்பை பாதுகாக்கக் கூடிய விதத்திலான இலக்கு அவசியம். அடுத்து இலக்கை அடைவதற்கான கொள்கைகளும், கொள்கைகளை மையப்படுத்தியதான வேலைத்திட்டங்களும் வேண்டும். இவ் வேளைத் திட்டங்களை நீண்டகால குறுகியகால என இருநிலையில் இருத்தல் வேண்டும். வேலைத் திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய அமைப்பு வடிவமும், அதற்கான ஊழியர்களின் தேவையும் அடுத்து தீர்மானித்தல் வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேல் அர்ப்பணம் உள்ள தலைமையின் அவசியம் மிகவும் முக்கியமானதாகும். இறுதியாக மலையக தேசிய இன அரசியலை நேர்த்தியான முறையில் முன்னெடுப்பதன் ஊடாக மட்டுமே இன்று மலையக தேசியம் எதிர் கொண்டுள்ள சவால்களுக்கு முகம் கொடுத்து, அதன் தேசியத்தை முன் நிறுத்த முடியும்.

காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்!

ஓ.ஏ.ராமையா

இலங்கையின் மலையகத்தில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர் நலனுக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் துடி துடித்த மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா நேற்றிரவு காற்றில் கலந்தார். கடந்த ஓராண்டாக உடல் நலிவுற்று இருந்த அவருக்கு அகவை 76!

''உலகத்தில் பசி... பட்டினி என்ற இருபெரும் பூதங்கள் தோன்றிய நாள் முதல் இன்று வரை உழைத்து உழைத்து ஓடாகி போன‌ பாட்டாளி வர்க்கத்தின் ரத்தம் கொடூரமாக உறிஞ்சப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. உலகமே கைக்குள் சுருங்கி விட்டதாக நாம் காலரை தூக்கி விட்டு கொண்டாலும், கால் வயிற்று கஞ்சிக்கு ஏங்கி தவிக்கும் வறண்ட நாவுகள் எத்தியோப்பியாவிலும், சோமாளியாவிலும், பாலைவனங்களிலும் மட்டுமின்றி பசும் போர்வைப் போர்த்தி செழுமையாக காட்சியளிக்கும் மலையகத்திலும் ஏராளமாக இருக்கின்றன.

இந்த அவல நிலை பொறுக்காமலே 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என சீறினான் பாரதி. மகாகவியும் மண்ணாகி போய் நூறாண்டு ஆகப்போகிறது. இன்னமும் மக்களின் வாழ்நிலை மாறலையே தம்பி!'' நான்கு மாதங்களுக்கு முன்பு ஓ.ஏ.ராமையாவை ஹட்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தபோது கடைசியாக உதிர்த்த உயிருள்ள வார்த்தைகள் இவை.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது, இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு பஞ்சம் பிழைக்க சென்ற பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்று தான் ராமையாவின் குடும்பமும். இலங்கையின் கண்டி மலை தொடரில் இருக்கும் நாவலபிட்டி, பூண்டுலோயாவில் உள்ள தோட்டமொன்றில் 1938ஆம் ஆண்டில் பிறந்தார். 'என்னுடைய தாய் நாடு இலங்கை என்றாலும், தமிழ் நாட்டுக்குள் கால் வைத்தாலே உடம்பெல்லாம் சிலிர்த்து விடும். என்னுடைய வேரும் வேரடி மண்ணும் இங்கே தானே இருக்கிறது. மறுத்தாலும், வெறுத்தாலும் இந்தியா என் தந்தை நாடு' என அடிக்கடி நினைவுகளை அசைப்போடுவார்.

இளம் வயது முதலே சமூக பிரச்னைக‌ளில் அக்கறை கொண்டிருந்த ஓ.ஏ.ராமையா 1950களின் இறுதியில் தனது வாழ்க்கையைத் தொழிற்சங்கத்தோடு இணைத்து கொண்டார். இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளராக இருந்த போது, தேயிலைக் கூடையில் தேசத்தை சுமக்கும் மலையகத் தமிழர்களுக்காக போராடி பல்வேறு உரிமைகளை பெற்று கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இலங்கை தி.மு.க. தலைவர் நாவலர் நெடுஞ்செழியன், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான‌ பெ.முத்துலிங்கம் ஆகியோருடன் இணைந்து சாதி, மத, பேதங்களுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறார். அதிலும் குறிப்பாக 'ராமையாவின் செங்கொடி சங்கமும், இளஞ்செழியனின் இலங்கை திராவிட இயக்கமும் இணைந்து தலவாக்கலையிலும், அப்புத்தளையிலும் தமிழர்களின் உரிமைகளுக்காக நடத்திய மாபெரும் போராட்டங்கள் மலையக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானவை' என 'எழுதாத வரலாறு' நூலில் குறிப்பிடுகிறார் பெ.முத்துலிங்கம்.

இலங்கை தீவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதால் அதனை தடுக்கும் விதமாக இலங்கை வாழ் மலையாளிகளையும், இலங்கை வாழ் தெலுங்கர்களையும் ஒன்றிணைத்து 1970ல் 'இந்திய வம்சாவளி மக்கள் கூட்டமைப்பு' என்ற புதிய அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம் இளஞ்செழியன் கொழும்பிலும், பெ.முத்துலிங்கம் கண்டியிலும், ராமையா ஹட்டனிலும் நடத்திய போராட்டங்கள் சிங்கள பேரினவாத அரசின் குரல் வளையை நெரித்தன. இதன் விளைவாக 1983ஆம் ஆண்டு நடந்த‌ இன கலவரத்தில் இந்திய வம்சாவளி மக்கள் கூட்டமைப்பினரை தேடித்தேடி காவு வாங்கியது சிங்கள பேரினவாதம்.

மலையக‌ அரசியலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களிப்புச் செய்த ஓ.ஏ.ராமையா, வடக்கில் எழுந்த தனி நாடு கோரிக்கையை ஆதரித்து தென்னிலங்கையில் தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்தார். அவரின் இழப்பு மலையக பாட்டாளி வர்க்கத்திற்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட தமிழினத்திற்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பு.

'காலம் முழுவதும் செங்கொடி சுமந்த என் மீது, இறப்பிலும் செங்கொடி போர்த்தியே அடக்கம் செய்ய வேண்டும். தப்பி தவறி கூட குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரால் இந்து மத சடங்குகளோ, சாதிய மூட நம்பிக்கைகளோ அரங்கேற்ற கூடாது' என இறுதியாக எழுதி விட்டு காற்றில் கலந்திருக்கிறது இந்த செங்கொடி!

-இரா.வினோத்

நன்றி - வீரகேசரி

மலையகத்தை மீட்டெடுத்த சிவனு லட்சுமணனை நினைவுக் கூரல் : லெனின் மதிவானம்

‘போராட்டமே வாழ்க்கை. ஆம், மனிதனும் மனித குலமும் இயற்கையின் மூலாதார சக்திகளை எதிர்த்து நடத்தும் போராட்டமாக அது இருக்க வேண்டும். இந்த தலை சிறந்த போராட்டத்தை வர்க்க அரசாங்கமானது, மனிதனை அடிமைப்படுத்துவதற்கான, மனிதனின் உழைப்பின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான அருவருக்கதக்க போராட்டமாக மாற்றிவிட்டன.’ சக மனிதர்களின் நன்மைக்காக, இருப்புக்காக தனது உயிரை தியாகம் செய்த சிவனு லட்சுமணன் பற்றி நினைக்கின்ற போது மார்க்ஸிம் கார்க்கியின் மேற்குறித்த வரிகள் நினைவுக்கு வருகின்றன.

மலையக மக்களின் வரலாறும் சமூகவுருவாக்கமும் மலர் தூவிய பாதையில் மென் நடைப்பயின்றதல்ல. ஒவ்வொரு அடியும் கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில், அதுவும் ஒரு ஜீவ மரண போராட்டத்தின் ஊடே வளர்ந்ததொன்றாகும். எனவே இவர்களின் சராசரி வெற்றிகள் கூட நீண்ட நெடிய போராட்டத்தின் மூலம் அடையப் பெற்றதாகும். இன்று புதிதாக தோன்றிவருகின்ற மத்தியதர வர்க்கத்தின் தாக்கம் மலையக சமூகவுருவாக்கத்தை நாலாம் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பது உண்மைதான். இந்நிலையில் மலையகம் பொறுத்த குறுந் தமிழ் தேசிய உணர்வும் பிராந்திய மேலாதிக்க உணர்வும் தலைக்காட்டுவது தவிர்க்க முடியாததொன்றாகின்றது. இருப்பினும் மலையக தேசியத்தின் முற்போக்கான பக்கத்தை விருத்தி செய்து முன்னெடுத்து செல்கின்ற வேளை, மலையக மக்களுக்காக உயிர் நீத்த தியாகிகள் பற்றிய தேடலும் பதிவுகளும் அவசியமாவையாகின்றன.

இவ்வாறானதோர் சுழலில் 1977 ஆம் ஆண்டு தோட்டக் காணியை (நுவரெலியா- டெவன் பகுதியில்) பறிப்பதற்கெதிரான பொலிஸாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு இறையாகிய சிவனு லட்சுமணன் போன்ற தியாகிகள் குறித்த நினைவுக் கூரல் அவசியமானதாகின்றது இந்நினைவுக் கூரல் என்பது கூட வெறும் சம்பிரதாய பூர்வமான நினைவுரைகளாகவோ பதிவுகளாகவோ அல்லாமல் மலையக சமூகத்தின் இருப்பை நிலைநிறுத்துவதற்கான முயற்சியாகவும் அமையும். அந்தவகையில் சிவனு லட்சுமணன் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான பின்னணி பற்றி நோக்குதல் அவசியமாதாகும்.

அன்று ஆட்சியிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அதன் தலைமையில் இயங்கிய ஐக்கிய முன்னணியும் தேசிய முதலாளித்துவ சக்தியாக விளங்கியது. வரலாற்று அரங்கில் பிரவேசிக்கின்ற போது அது ஏகாதிபத்திய எதிர்புணர்வைக் கொண்டிருந்ததுடன் மக்கள் சார்ந்த பண்புகளையும் அது தன்னகத்தே கொண்டிருந்தது என்பது முற்போக்கான அம்சமாகும். அதேசமயம் தமது வர்க்க நலன் காரணமாக சர்வதேச முதலாளித்துவத்திற்குள் சரணடைந்தனர். அவர்களது ஏகாதிப்பத்திய பண்பும் படிபடியான மழுங்கியதுடன், தனக்கு கையாளாக பயன்பட்ட தொழிலாள விவசாய வர்க்ககத்திற்கும் எதிராக மாறியது. திரு. பண்டாரநாயக்க இறந்த பின்னர் ஆட்சிக்கு வந்த திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் இந்த பண்பு முனைப்படைந்தது.

இவ்வாறான நசிவு தரும் அரசியலின் பின்னணியில் கண்டிய பௌத்த-சிங்கள நிலபிரபுத்துவ உணர்வு முன்னிலைப்படுத்தப்பட்டது. இந்தப் பின்னணியில் திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தமது ஒரே ஆண் வாரிசான திரு. அணுரா பண்டாரநாயக்காவை பாராளுமன்ற அரியணையேற்றுவதற்காக நுவரெலியா-மஸ்கெலியா என்ற தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டதுடன் கண்டிய பௌத்த-சிங்கள உணர்வுடன் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பில் மலையக சமூக ஆய்வாளரொருவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

‘அணுரா இதனை மிகவும் திறமையாகப் புரிந்து கொண்டு செயற்படுபவதாக நிரூபிக்கப் போய் தனது இனவாத சொரூபத்தை வெளிப்படையாக அம்பலப்படுத்திக் கொண்டார். தன்னை ஒரு கண்டிய சிங்கள வீரன் எனக் காட்டிக் கொள்வதற்காக மலையகத் தமிழர் மீது இனவெறியைக்கக்கினார். இவருக்கு ஆதரவாக அவரது மாமனார் மற்றொரு ‘கண்டிய சிங்கள வீரன்’ கொப்பேகடுவ ‘கண்டிய சிங்களவர்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுச் சிங்கள மக்களுக்கு பகிர்தளிப்பதற்குத் தடையாக தொண்டமான் குறுக்கே நின்றால் அவரையும் வெட்டிக் கூறுப்போட்டு பகிந்தளிப்பேன்’ என முழங்கினார். இங்கு தாக்கப்பட்;டது தொண்டமான் அல்ல மலையக தொழிலாளர்கள்’ மோகன்ராஜ்.க (பி.ஏ. காதர்), 1984, ஈழ ஆய்வு மையம், ஐக்கிய இராச்சியம். பக்.154,155.)

இத்தகைய பௌத்த-சிங்கள மேலாக்கச் சிந்தனையின் பின்புலத்தில் மலையக மக்கள் இந்நாட்டில் அந்நிய கூலிகலென்றும் அவர்கள் இங்கு வாழ்ந்த சிங்கள மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டவர்கள் என்ற கருத்து சிங்கள மக்களிடையே அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான அரசியல் நடவடிக்கைகளின் விளைவாக மலையக மக்களுக்கு சொந்தமான பல தோட்டக் காணிகளை பறிக்கும் நடவடிக்கைகள் பலாத்காரமான முறையில் மேற்கொள்ளப்பட்டன. பல தோட்டங்களுக்கு நில அளவையாளர்கள் சென்ற போது அதனை எதிர்த்து தோட்டத்தொழிலாளர்கள் மேற்கொண்ட கலகத்தினால் அவர்கள் பின்வாங்கினர். பல இடங்களில் தோட்டத்தொழிலாளர்கள் சிங்கள கடையர்களாலும் படையினராலும் தாக்கப்பட்டார்கள். சில தோட்டங்கள் தரிசு நிலங்களாக மாற்றப்பட்டதுடன் தொழிலாளர்கள் விரட்டியும் அடிக்கப்பட்டனர். 1976 ஆம் ஆண்டு டெல்டா சங்குவாரி தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் இதற்கு தக்க எடுத்துக் காட்டாகும்.

இத்தகைய காணிச் சுவிகரிப்பின் இன்னொரு பேரிவாத செயற்பாடாக அமைந்ததொரு நிகழ்வுதான் 1977 அம் ஆண்டு மலையகப் பகுதியில் 7000 ஏக்கர் தேயிலைக் காணியை பறித்து நிலமற்ற சிங்கள கிராமத்தவர்களுக்கு பகிர்தளிக்க வேண்டும் என்றடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடிவடிக்கையாகும். தமது உழைப்புக்கான தளம் பறிமுதலாவதால் தாம் பாதிப்படைவோம் என்ற உணர்வில் தொழிற்சங்கங்களை கடந்த போராட்டங்கள் மலையகமெங்கும் எழுந்தன. அவ்வாறு டெவன் தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் பொஸிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிவனு லட்சுமணனின் மரணம் (11.05.1977) விலை மதிப்பற்றது. இவர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர் என்பதை பீ.ஏ காதர், டி. அய்யாத்துரை ஆகியோர் பதிவாக்கியுள்ளனர். இப்போராட்டத்தின் மூலமாக மலையக மக்களின் காணி பறித்தெடுக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மேலும் சிவனு லட்சுமணனின் மரணத்தை தொடர்ந்து அவரது துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை எதிர்த்து மலையகத்தில் தொழிலாளர்கள் விவசாயிகள் புத்திஜீவிகள், மாணவர்கள் என பல தரப்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஹட்டனில் ஹைலன்ஸ், பொஸ்கோ கல்லூரி; மாணவர்கள் செய்த ஆர்ப்பாட்டம், அவ்வாறே நாவலப்பிட்டியில் மாணர்கள் செய்த போராட்டம் என்பன முக்கிய நிகழ்வுகளாகும். இதன் பின்னணியில் செயற்பட்ட சில ஆசிரியர்கள் அரசியல் பழிவாங்களாக 24 மணித்தியாலங்களில் இடமாற்றம் செய்யப்பட்டனர். எடுத்துக்காட்டாக நாவலப்பிட்டியில் ஆசிரியராக இருந்த தோழர் அழகலிங்கம் என்பவரின் இடமாற்றத்தைக் குறிப்பிடலாம். அந்தவகையில் இம்மண்ணை தமது உழைப்புக்கு களமாக அமைந்த நிலத்தை பாதுகாப்பதற்கான நடந்த போராட்டமும் அதில் உயிர் தியாகம் செய்த சிவணு லட்சுமணனின் இறப்பும் மலையக மக்களை விழிப்புக் கொள்ளச் செய்தது எனலாம்.

இதன் மறுப்புறத்தில் சிவனு லட்சுமணன் இறந்த காலப் பகுதி தேர்தல் காலமாக இருந்தமையினால் இந்த சம்பவத்தை தமது தேர்தல் வெற்றிக்கு சாதகமாக மலையக தொழிற்சங்க தலைவர்களும், யு.என், பி. கட்சியினரும்; பயன் படுத்தி;க் கொண்டனர். 1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில், முன்னர் பதவியிலிருந்த ஐக்கிய முன்னணி அரசு மேற் கொண்ட மக்கள் விரோதச் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி சுதேச விதேச பிற்போக்குச் சக்திகளின் ஆதரவுடன் ஆட்சி பீடமேறியது. இந்தச் சூழலில் உலகமயப் பொருளாதாரத்தை அமுலாக்கம் செய்வதற்கான முயற்சிகள் மிகத் திட்டமிடப்பட்டவகையில் முன்னெடுக்கப்பட்டன. விவசாய நிலங்கள் கைவிடப்பட்டு சுதந்திர வர்த்தக வலயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இம் முயற்சிகள் யாவும் வெளிநாட்டு, உள்நாட்டு உயர்வர்க்கத்தினரின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாக அமைந்திருந்தன.

இவ்வகையில் பார்க்கின்ற போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் மலையக மக்களின் உரிமைகள் தொடர்பில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்ததற்கு மாறாக நடைமுறையில் கண்டிய பௌத்த சிங்கள நிலபிரபுத்துவ சிந்தனைகளையே தமது அரசியல் நடவடிக்கைகளில் வெளிப்படுத்தினர். அவ்வாறே இந்நாட்டை விதேச மற்றும் உள்நாட்டு மேட்டுக்குடியினரின் சுகபோகத்திற்கும் செல்வ குவிப்பிற்காகவும் திறந்து விட்ட யு. என். பி அரசாங்கமும் மலையக மக்களுக்கு எதிராக அவர்களது இனத்தனித்துவத்தை தேசிய இனத்திற்குரிய அடையாளங்களை சிதைப்பதற்கான நடிவடிக்கைகளையே மேற்கொண்டது. இச்செயற்பாடுகளுக்கு எதிராக மலையக தொழிற்சங்க அரசியல் தலைவர்கள் உணர்வுக் கொண்டிருப்பினும் அதனை இவர்கள் துளியளவும் கவனத்pலெடுக்கவில்லை என்பதை கடந்த கால நிகழ்வுகள் எண்பித்திருக்கின்றது.

அன்று எமது உழைப்பிற்கு களமாக இருந்த மண் பறிபோவதற்கு எதிராகவும் தமது உரிமைகளுக்காகவும் மலையகத்தில் எழுந்த போராட்டங்கள் உயிர்த்தியாகங்கள் அதனை தற்காலிகமாக தடுத்து நிறுத்திய போதிலும் காலப்போக்கில் அவை எம்மிடமிருந்து பறிபோனதாகவே காணப்படுகின்றன. இன்று மலையகத்தில் என்றும் இல்லாதவாறு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல இயற்கை சூழலும் நீர்விழ்ச்சிகளும் உல்லாச பிரயாணிகளின் சுகபோகத்திற்கான இடமாக மாற்றப்பட்டு வருகின்றன. மலையக பகுதிகளில் விடுதிகளும், கபானாக்களும் உருவாக்கப்பட்டுவருகின்றன. அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மேல் கொத்மலை போன்ற நிகழ்ச்சித் திட்டங்களும் ஒரு விதத்தில் மலையக மக்களின் காணிகளை பறிப்பதற்கான செயற்பாடுகளாகவே அமைந்திருக்கின்றது. சிவனு லட்சுமணனின் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்ற டெவன் பிரதேசம் இன்று பறிமுதலாகி இருப்பது இதற்கு தக்க எடுத்துக் காட்டாகும். மேலும், இன்று பௌத்த சிங்கள பேரினவாத பண்பாட்டின் பின்னணியில் மலையக தமிழர் சிங்கள மக்களோடு ஐக்கியப்பட்டு வாழ்தல் என்பதற்கு பதிலாக அவர்களின் இன தனித்துவத்தையும், தன்னடையாளங்களையும் இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளே இன்று இடம்பெற்று வருகின்றன. ஆனால் இதுவரை சிவனு லட்சுமணனுக்கான நிவைவு சின்னமோ அல்லது கல்லறையோ கட்டப்படவில்லை என்பது துயரகரமான செய்தியாகும். இந்நினைவு சின்னங்கள் என்பது கூட சிவனு லட்சுமணனுக்கு வருடாவருடம் தெய்வம் (திவசம்) கொண்டாடவோ சூடம் போடுவதற்கோ அல்ல. இன்று உலகமயமாதல் சுழலில் தன் அடையாளங்களோ சுயசிந்தனையோ இல்லாதொழிக்கப்பட்டு- தனது காலையே வெட்டி சூப்பு வைக்க முனைகின்ற தலைமுறையினர் உணர்வு பெறவும் தமது முன்னோர் நமக்காக செய்த மகத்தான போராட்டங்கள் தியாகங்கள் பற்றி அறிந்துக் கொள்வதற்காகவும் சிவனு லட்சுமணன் நினைவுக் கூறப்படல் வேண்டும்.

இது இவ்வாறிருக்க, சிவனு லட்சுமணனின் உயிர் தியாகம் என்பது மக்களை உணர்வுக் கொள்ளச் செய்து தமது உரிமைகளுக்காக அவர்களை போராடத் தூண்டியது. ஏறத்தாழ எண்பதுகளின் தொடக்கம் வரை மலையகத்தில் ஒரு உழைக்கும் மக்கள் சார்ந்த அரசியல் உணர்வே முனைப்பு பெற்றிருந்தது. இதில் மிக முக்கியமான ஒன்று மலையக மக்களின் குடியுரிமை அங்கீகரிக்கப்பட்டமை ஆகும். சிவனு லட்சுமணன் போன்றோரின் உயிர் தியாகத்தினால் ஏற்பட்ட ஒரு அரசியல் உணர்வே இம்மக்களின் குடியுரிமையை அங்கீகரிப்பதற்கான அக காரணியாகும். இன்னொரு புறத்தில் இத்தகைய அரசியல் எழுச்சிகளினால் வட – கிழக்கில் தோன்றிய இயக்கங்கள்கூட மலையக மக்களின் குடியுரிமை தொடர்பில் கவனமெடுக்க தொடங்கி இருந்தன.

அந்தவகையில் திம்பு பேச்சுவார்த்தையில் மலையக மக்களின் குடியுரிமை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இதன் புற காரணியாக அமைகின்றது. அந்தவகையில் மலையக மக்கள் உழைக்கும் மந்தைகள் என்ற நிலையிருந்து மாறி அவர்கள் ஒரு சமூகமாக கட்டமைக்கப்பட்டதன் வளர்ச்சியை இவ்வம்சம் குறித்து நிற்கின்றது. மலையகத்தில் இத்தனியை சமூக உருவாக்கத்தினால் தோன்றிய புதிய மத்தியதர வர்க்கம் இரண்டு குணாதிசயங்களை கொண்டதாக காணப்படுகின்றது. ஒன்று உழைக்கும் மக்களிலிருந்து அந்தியப்பட்டு தனது நலனுக்காக எதனையும் செய்கின்ற அந்த உழைக்கும் மக்களையே காட்டி கொடுக்கின்ற துரோகச் செயலை செய்;கின்ற ஒரு வர்க்கமாக பரிணமித்துள்ளது. இன்னொரு புறத்தில் உழைக்கும் மக்களின் நலனோடு தம்மை இணைத்துக் கொண்டு மலையக சமூகத்தின் மாற்றத்திற்காக செயற்படுகின்ற பிரிதொரு அணியினரையும் இம்மத்திய தர வர்க்கத்தில் காணலாம். இவர்களுடைய அரசியல் சமூகு ஸ்தாபன சார்ந்த தத்துவார்த்த பின்னணியை உருவாக்குவதில் சிவனு லட்சுமணனுடைய உயிர் தியாகம் முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றது.

சிவனு லட்சுமணன் போன்றோரின் தியாகத்தால் கட்யெழுப்பட்ட மலையக மக்களின் உரிமைக்கான போராட்டமானது இன, மத மொழி, சாதி சார்ந்த போராட்டமாகவோ அல்லது குழு போராட்டமாகவோ முன்னெடுக்கப்படாமல் அது பரந்துப்பட்ட ஜனநாயக போராட்டமாக முன்னெடுக்கப்படல் வேண்டும். யாவற்றிற்கும் மேலாக மலையகத் தமிழர்களின் சுபிட்சத்திற்கான மக்கள் போராட்டமானது இலங்கையில் வாழ்ந்து வருகின்ற ஏனைய அடக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுடனும் முழு தேசிய விடுதலை போராட்டங்களுடனும் இணைக்கப்படல் அவசியமானதாகும். எனினும் இவர்களின் மானுட விடுதலைக்கான பயணத்தில் பல்வேறுப்பட்ட அடக்கு முறைகளும் தடைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. அதேவேளை அவற்றினை மீறி முன்னேறுவதற்கான சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன. இவற்றினை வீரியத்துடனும் நேர்மையுடனும் முன்னெடுக்கக் கூடிய மக்கள் இயக்கமொன்றினை கட்டியெழுப்புதல் அவசியமானதொன்றாகும். இந்த பின்னணியில் சிவனு லட்சுமணனின் வீர நினைவுகள் நினைவுக் கூறப்பட வேண்டும்.

நன்றி- இனியொரு.கொம்

மலையக மறுமலர்ச்சி தொடர்பில் செய்யக் கூடியவைகள்- செய்ய வேண்டியவைகள் எம். ஜெயகுமார்


மலையக தொழிற்சங்க அரசியல் வரலாற்றுப் பின்னணியினை எடுத்துக் கொண்டால் அதனை ஒரு சமூகவியல் நோக்குடன் மிக ஆழமாக சிந்தித்து அலசி ஆராய வேண்டியது மிக முக்கியமான விடயம் என்பது காலத்தின் தேவை. இதனை ஒரு பண்பாட்டு கலாசார பண்புடன் பின்னிபினைந்து தனக்கே உரித்தான பண்பினை சற்றும் சிதையாது, மாற்றியமைக்காது உள்ளதை உள்ளபடி, உண்மையினை சொல்லகூடிய ஒரு தனித்தகைமை நம்மிடம் வளர வேண்டும். 

அதுமட்டுமல்லாது மலையகத்தின் மறுமலர்ச்சியினை நாம் ஒருபுறம் அலசி ஆராய வேண்டிய தேவைப்பாட்டுடன் இன்று இருக்கின்றோம் என்பதினை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஒரு காலகட்டத்தின் அரசியல், சமூக கலாசார, பொருளாதார தகைமையுடன் கல்வி, சுகாதாரம், சிறந்த பொழுதுபோக்கு, உணவு, உடை, உரையுள் போன்ற அத்தியாவசிய தேவைகளில் இருந்து எவ்வாறு மேன்மை கண்டுள்ளோம் என்பதினை மிக நுணுக்கமாக உற்று நோக்குகின்றபொழுது கிடைக்கப்பெறும் நல்ல தீர்ப்பினை மறுமர்ச்சி என்று வியாக்கியானம் பேசுகின்றோம். அவ்வாறே மலையகத்தின் மறுமலர்ச்சியினை எடுத்துக் கொண்டால்; ஆரம்ப காலங்களில் (1960 களில்) தோட்ட சிறுவர்கள் தேயிலை செடிகளை பறித்துவிடுவார்கள் அதனை சேதப்படுத்தி விடுவார்கள். இதனால் தேயிலைதுறைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற எண்ணத்திலேயே தோட்டபுறங்களில் பிள்ளை மடுவங்களையும், ஆரம்ப பாடசாலைகளையும் அமைத்தார்கள். அதாவது ஐந்தாம் வகுப்புவரை மட்டும், இதனை தோட்ட நிருவாகத்திற்கு உட்பட்டவகையில் கொண்டு நடத்தினார்கள்.

அத்தோடு 1970 ஆம் ஆண்டு தொடக்கம் 1977 ஆம் ஆண்டு காலப்பகுதிகளுள் 24 பெருந்தோட்ட பாடசாலைகள் ஒரே நேரத்தில் அரசமயப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து படிப்படியாக சிறுக சிறுக 1977 ஆம் ஆண்டில் இருந்து ஏறத்தாழ 25 ஆண்டுகள் வரை நீடித்தது. அதாவது 1994 ஆம் வரை மட்டும். ஆதேநேரத்தில் மொத்தமாக 800 பாடசாலைகள் அரசமயப்படுத்தப்பட்டது. இது பல்வேறு மலையக தலைவர்களாலும் புத்திஜீவிகளாலும் வலியுத்தப்பட்டநிலையில்தான் நடைபெற்றது.

இதனை திரு தை.தனராஜ் அவர்கள் தனது ‘மலையகக்கல்வி ஓர் எதிர்கால நோக்கு’ என்ற கட்டுரையில் பின்வருமாறு விளக்கியுள்ளார். ‘1943 ல் தேசிய கல்வி முறைமைக்கான ஓர் உறுதியான அடித்தளம் திரு.கண்ணங்கரா அவர்களால் இடப்பட்டபோது தேசிய கல்வி முறைமையின் ஓர் அங்கமாக மலையகக் கல்வி சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இலங்கையின் தேசிய கல்வி முறைமையின் பிதாமகனான திரு.கண்ணங்கரா மலையகக் கல்வியை முற்று முழுதான நிராகரித்ததோடு “மலையகக் கல்வி என்பது இந்திய முகவரின் பொறுப்பு” எனவும் தட்டிக் கழித்தமை மலையக சிறார்களுக்கு அவர் செய்த வரலாற்றுத் துரோகமாகும். மலையகக் கல்வி முறைமையை தேசிய கல்வி முறைமையின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்த மாத்தளை பாராளுமன்ற உறுப்பினர் திரு அலுவிகாரைக்கும் அக்கோரிக்கையை நிராகரித்த திரு.கன்னங்கராவிற்கும் இடையில் நடைபெற்ற விவாதம் மலையகக் கல்வி வரலாற்றில் ஒரு கறைபடிந்த சம்பவமாகும்’ என்னும் கூற்று அவதானத்திற்குரியது.

இதனை இலவசக்கல்வியின் தந்தையாகிய சீ.டபிள்யூ கன்னங்கரா அவர்களின் ஆளுமையின் தவறான கண்ணோட்டத்தினை வெளிப்படையாக காணக்கூடியதாக இருக்கின்றது. ஒரு தலைவன் என்னும்போது அவன் தன் தாய்நாட்டின் ஒட்டுமொத்த நலனில் அக்கரைக் கொண்டவனாக இருக்க வேண்டும். மாறாக இவர் அதனை அறிந்திருக்கவில்லை என்பது உண்மைதான். மேலும் கூறுவது என்றால் அவர் தனது ஆளுமையினை விரிசலை  சுருக்கிக் கொண்டுள்ளார் என்று கூறலாம். மேலும் திரு ஊறுறு கன்னங்கராவுக்கு அப்பால் நமது மலையக சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்பு இன்றும்கூட மலையகத்தின் கல்வி முறையினை தேசிய கல்விமுறையில் ஓர் அங்கமாக அரசு ஏற்றுக் கொண்டபோதும் அவர்கள் அதனை தடுத்து நிறுத்தியதாக நமது இன்றைய ஜனாதிபதி ஒரு மின்னல் நிகழ்ச்சியில் பகிரங்கமாக தெரிவித்தார். உதாரணமாக ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி இன்னும்கூட தேசிய கல்லூரியாக தரமுயர்த்தப்ட வில்லை.

1970 க்கு பின் பெருந்தோட்ட பாடசாலைகள் படிப்படியாக அரசமயப்படுத்தப்பட்ட பின்னர், அக்காலத்தில் இருந்து மலையக மக்களில் கணிசமானவர்கள் கல்வி கற்க வேண்டும் என்ற மனநிலை மாற்றத்திற்கு உள்ளானார்கள். இதனை தொடர்ந்து 14 வயதிற்கும் குறைந்த எந்த ஒரு பிள்ளையும் தொழில் செய்வதற்கு அனுமதிக்ககூடாது என்ற சட்டம் உலகலாவிய ரீதியில் ஒரு வலுவான காரணமாக அமைந்தது.

அக்காலக்கட்டத்தில் இருந்தே அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ மலையக மாணவர்கள் பாடசாலைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. பின் ஐந்தாம் ஆறாம் வகுப்புக்கள் கற்றவுடன் தங்களை அறியாமலே பாடசாலை கல்வியினை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு அப்பால் 1980 களின் பிற்பட்ட பகுதியிலும் 1990களின் ஆரம்ப பகுதியிலும் கணிசமானவர்கள் கா.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதியவர்களாகவும், சித்தியடைந்தவர்களாகவும் அதனை தொடர்ந்து உயர்தரம் செல்லக்கூயவர்களாகவும் காணப்பட்டநிலையில் மலையகத்தின் ஒரு மாற்று நிலையினை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அதன்பின் மலையகத்தில் மட்டுமல்லாது முழு இலங்கையிலும் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் இல்லாப் பிரச்சினை புறையோடிக்கிடந்தது இதனை மிக சாணக்கியமாக அன்றைய மறைந்த ஜனாதிபதி ஆர்இபிரேமதாஸ அவர்களால் கையாளப்பட்டது. 1990 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் ஒரே நேரத்தில் 25000 ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் 15000 ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. இவற்றில் கணிசமான மலையக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்பினை பெறக்கூடியதாக இருந்தது.

அத்தோடு அன்று நமது நாட்டில் ஏற்பட்டிருந்த இனக்கலவரம் காரணமாக வடகிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு அரச உத்தியோகம் மறுக்கப்பட்டநிலையில், அரச அடக்குமுறையும் உக்கிரம் கண்டிருந்தது. அப்போது அவர்கள் ஆயுத புரட்சிக்கு தயாரான நிலையில், நாட்டில் பொலிஸ் பாதுகாப்புபடைகளில் பற்றாக்குறை நிலை ஏற்பட்டது. இதனை கருத்திற்கொண்டு மலையக இளைஞர்களுக்கு பொலிஸ் உத்தியோகம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றுவரை பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

உதாரணமாக மலையக மக்கள் முன்னணியின் மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரன் அவர்களின் ஆலோசனையின் பேரில் கிராம சேவகர்கள் நியமனம் மலையக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு 1999 ஆம் ஆண்டு முதன் முதலில் வழங்கப்பட்டது. மற்றும் 350 தபால் விநியோகத்தர்கள் தற்காலிக நியமனம் வழங்கப்பட்டு அவர்கள் தொழில் செய்துக் கொண்டு இருக்கின்றார்கள். மேலும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள், அதனைத் தொடர்ந்து பெருந்தோட்டதுரையில் கணக்கப்பிள்ளைமார்கள், எழுதுவினைஞர்கள், மேற்பார்வையாளர்கள், தேயிலை தொழிற்சாலையில் டீமெக்கர்கள் என்ற பல்வேறு தொழில்களில் மலையக இளைஞர் யுவதிகள் இருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாது ஆடை தொழில்சாலையில் (புயசஅநவெ கயஉவழசல) தொழில் செய்கின்றார்கள். அவற்றோடு கொழும்பு போன்ற நகரங்களில் வியாபார ஸ்தலங்களில் தொழில் செய்பவர்கள் வியாபாரம் செய்பவர்கள் இவர்களில் பலர் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். இருந்தாலும் இவர்களில் அனேகமானவர்கள் தனது சமூகத்தின் மேன்மைக்கு உதவுகின்றவர்களாகவும், மற்றும் சிலர் எதனையும் கண்டு கொள்ளாது தனது நனனை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற பிழையான எண்ணத்தில் தனது அடையாலத்தினையே மாற்றிக் கொண்டு வாழ்கின்றார்கள் என்பது மறக்கமுடியாத ஒன்று.

மேற்கூறிய தகவல்களுக்கு அப்பால் இன்று மலையக இளைஞர் யுவதிகள் வைத்தியத்துறை, சட்டத்துறை, சமூகவியல்துறை, நிருவாகத்துறை, என்று தொழில் புரிகின்றார்கள். இன்று இலங்கையில் கல்மானிகளுக்கு வழங்கக்கூடிய செயலாளர் மதவிகள், ஆணையாளர்கள், நிருவாக அதிகாரிகள், சமூக சயத்தலைவர்கள், இலக்கியவாதிகள், விமர்சகர்கள், அரசியல், தொழிற்சங்கவாதிகள், என்று பல்துறைகளில் உயர்வு கண்டுள்ள நிலையில் ஏனைய சமூகத்தினரோடு போட்டி இட்டுக் கொண்டு வளர்ச்சியினை கண்டுள்ளபோதும், மாறாக இதனையொரு மறுமலர்ச்சியின் அடிதளம் எனலாம். இருப்பினும் இவர்களிடத்தில் அடிப்படையில் ஒரு பாரதூரமான தவறு நிகழ்வதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இன்று மலையக சமூகத்தில் மிக முக்கியமான ஒருசாராரான ஆசிரியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமூகம் சார்ந்த முனைப்பான தொழில்களில் உள்ளவர்கள் பலர் மலையக பெருந்தோட்ட கட்டமைப்பினை சற்றேனும் உணராது அதை அறிந்துக் கொள்ளாததும் ஒரு மத்தித்தரவர்க்கத்தினை நோக்கி கணிசமானவர்கள் நகர்வதினை காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்கள் தோட்டக்குடியிருப்பில் இருந்து சற்று மாறுதலுக்காக அருகில் உள்ள நகர்புறத்தினை நோக்கி செல்கின்றார்கள், ‘அப்போதாவது மறுமலர்ச்சியினை கண்டு கொள்ளலாம் என்ற  எண்ணம் கூட அவர்களுக்கு இருக்கலாம். ஆக இவர்கள் நகரை நோக்கி சென்றாலும் அங்கு அவர்களுக்கு எந்தவிதமான சமூக அந்தஸ்த்தும் கிடைப்பத்தில்லை. மேலும் இவர்களுக்கு பொருளாதார நெருக்கடி அதிகரிப்பதோடு அந்த சமூகத்தினரிடத்தில் பின்தள்ளப்பட்டவர்களாக ஆகிவிடுகின்றார்கள். இந்நிலையில் மீண்டும் இவர்கள் தோட்டங்களை நாடியே வருவதினையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

மாறாக இவர்கள் ஏன் தான் வாழ்ந்த மண்ணைவிட்டு செல்ல வேண்டும்? கல்வி கற்றபின் தொழிலை பெற்றுக்கொண்டோம். தொழிலை பெற்றப்பின், தன் அடையாளத்தையே மாற்றிக்கொண்டோம் என்ற பரிமாண உணர்வு இவர்களிடத்தில், இதனை சற்று ஆழமாக எண்ணும்போது நமது இருப்பு எங்கே இருக்கிறதுஎன்ற கேள்விக்கு விடை கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். என்ன செய்வது? ஒரு இருக்கமான தோட்டக்கட்டமைப்புக்குள் பொருளாதார ரீதியாக எந்த ஒரு மறுமலர்ச்சியினையும் காணாத நிலையில் இத்தொழிலாளர்களை நீண்ட காலமாக ஒரு திட்டமிட்ட அடக்குமுறைக்குள் வைக்கப்பட்டுள்ளார்கள். இதனை கல்வி கற்ற சமூகம் என்ற அடிப்படையில் எதிர்நீச்சல் இட்டு அணுக தவறிவிட்டார்கள்.

கட்டமைப்பின் நிர்வாக முறையை உடைத்து சமூக, பொருளாதார, கல்வி, கலாசாரம், மொழிப்பண்பாட்டு மத ரீதியான மறுமலர்ச்சியினை காண வேண்டும். எவ்வாறென்றால் முதலில் பொருளாதார ரீதியில் ஏனைய சமூகங்களை போல் சரிநிகர் சமனாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எவ்வாறு என்றால் கிராமமயப்படுத்தல் ரீதியாக ஒட்டுமொத்த இலங்கை பெருந்தோட்ட கட்டமைப்பின் ஒரு மாற்று நிலையினை உருவாக்க வேண்டும். அதாவது குடியிருப்புகளை தோட்ட நிருவாகத்திடம் இருந்து வேறுபடுத்தி அதனை நேரடியாக பிரதேச சபை நிருவாக அலகுக்குள் கொண்டு வந்து குடியிப்புகளையும் வீட்டு தோட்டங்களையும் அவரவர்களுக்கு சொந்தமாக்க வேண்டும். (தொழிலாளர் குடும்பங்களுக்கு) சொந்தமாக்கப்பட வேண்டும்) அத்தோடு பெருந்தோட்ட துறையினை கூட்டுறவு முறையின் கீழ் நீண்டகால அடிப்படையில் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் அப்போது தான் ஒரு சமூக மறுமலர்ச்சியினை அடைய முடியும்.

மேலும் இந்த மண் இவர்களால் உருவாக்கப்பட்டது காடு வெட்டி பயணம் செய்து உருவாக்கப்பட்டது” எனவே இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் இவர்களே! என்பது யாராலும் மறுக்க முடியாது. ஆக கூட்டுறவு அமைப்பு முறையில் பகிர்ந்தளிப்பது என்பது சுலபதான விடயமே. அப்போதுதான் இவர்கள் உண்மையான ஒரு பொருளாதார மறுமலர்ச்சியை அடைய முடியும்.
மூலம்தான் இவர்களின் ஓர் உண்மையான பொருளாதார மறுமலர்ச்சியினை அடைய முடியும். “இது ஒரு பொது பொருளாதாரம்” இதனை சிதையாது பாதுகாக்க வேண்டியது நாம் ஒவ்வொருவரினதும் கடமை. இதனை கல்வி கற்ற சமூகம் என்ற அடிப்படையில் எவ்வாறு அணுகின்றது என்பது அவதானிப்புக்குரியது.

அதுமட்டுமல்லாது மலையக மக்கள் ஒரு “தேசிய இனம்” என்பது உண்மைதான், அதனை ஒரு அங்கீகாரத்திற்கு கொண்டுவர வேண்டிய பாரிய பொறுப்பினை தற்போது சுமந்துக் கொண்டு இருக்கின்றோம். மலையக மக்கள் தற்போது தனது சமூக அடையாளத்தினை பறிகொடுத்து கொண்டு இருக்கின்ற நிலையில் அதனை பாதுகாத்து தனது இனத்தின் அடையாளங்கள் என்றும் அழியாதவகையில் எனது சமூக செயற்பாடுகள் அமைய வேண்டும்.
அதாவது கல்வி துறையில் தனது சமூகம் சார்ந்த கல்வி முறைமையினை சேர்த்துக் கொள்ள வேண்டும (மாகாண முறையில்) அதாவது சமூக விழுமியங்கள் கல்வி, கலாசாரம், பண்பாடு சிதைவு காணாது பாதுகாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

மேலும் மொழி பழக்கவழக்கங்கள் (கோடி பக்கம், பயிப்புக்கரை, முச்சந்தி, மேட்டு லயம், பெரட்டுகளம்) நாடகம், கூத்துக்கள், நகைசுவை அம்சங்கள் கொண்ட பாடல்கள், நாட்டார் பாடல்கள், விளையாட்டுக்கள் (கிட்டி, கிளித்தட்டு, பிள்ளையார் பந்து போன்றவைகள்) கலாசார, பண்பாட்டுடன் பிண்ணி பிணைந்து காணப்படுகின்றன.

சமய மறுமலர்ச்சி என்னும்போதும் சிறு தெய்வ வழிபாட்டு முறைகள் அதாவது சிந்தாங்கட்டி கோயில், சோனக்கருப்பு கோயில், மருதவீரன் கோயில், மாடசாமி கோயில், வண்ணாத்திக் கோட்டை, முனி என்று பல சிறப்பான  தெய்வ வழிபாட்டு முறைகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம், ஏன் நாம் நமது வயித்தை கட்டி பெரிய ஆலயங்களை அமைத்து மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு வெளியில் நின்று அந்நியப்பட வேண்டும்? எனவே நாம் தமது வழிபாட்டு முறைமையினை சமூகம் பக்கம் திருப்ப வேண்டும். அதுமட்டுமல்லாது அரசியலும் தமது சமூகத்தின் நலனை பாதுகாக்கும் கவசமாக இருக்க வேண்டும், மாறாக அது தனது சமூகத்திற்கு துரோகம் விளைவிக்குமானால் அதை இல்லாது அழித்து ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றுதிறள வேண்டும்.

எனவே, மலையகத்தின் மறுமலர்ச்சி என்பது தனி மனிதரில் அல்லாது ஒட்டுமொத்த சமூக செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது.

நன்றி  - முச்சந்தி
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates