Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

நமதுமலையகம்.கொம், பெண்ணியம்.கொம், தலித்தியம்.கொம் இணைந்து நடத்தும் பயிற்சி பட்டறை

பெண்ணியம்.கொம்

நமதுமலையகம்.கொம்

தலித்தியம்.கொம்

இணைந்து நடத்தும்

பயிற்சிப் பட்டறை

 - ஆதிக்க சித்தாந்தங்களை உடைத்தெறிவதற்கான இணைய நுட்பங்கள்

 - இணையத்தளங்களை கிரமமாக நடத்துவதும், அதற்கான எளிய வழிவகைகளும்

கலந்துகொள்ள விரும்புபவர்கள் / எம்மோடு இணைந்து பணியாற்ற விரும்புபவர்கள் வருகையை முன்கூட்டி பதியுமாறு கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புகளுக்கு –

கேஷாயினி -

லெனின் மதிவாணன் –

என்.சரவணன் -


ஓகஸ்ட் 04

09:30 – 16:30

Centre for Society Religion, Maradana, Colombo 10

நமது மலையகம். கொம் அறிமுக நிகழ்வுநமதுமலையகம்.கொம்
அறிமுக நிகழ்வு

கொழும்புத்தமிழ்ச் சங்கம்
 28.07.2013 மாலை 4.30

தொடக்கவுரை
லெனின் மதிவானம் : மலையகம்.கொம் - ஓர் அறிமுகம்

தலைமையுரை
தௌ¤வத்தை ஜோசப்

என்.சரவணன் :
’மலையகத்தின் அரசியல் இருப்பில் இணையத்தின் வகிபாகம்’

பேராசிரியர். சோ சந்திரசேகரன் -
‘மலையக தகவல்தளம் இணைய வலைபின்னலுக்குள் உள்வாங்கப்படுவதன் அவசியம்’

ஏ.லோறன்ஸ்
மலையகத் தேசியத்தை கட்டியெழுப்பும் பணி

நன்றியுரை : 
எம்.ஜெயகுமார்

நிகழ்ச்சித் தொகுப்பு :
மல்லியப்புசந்தி திலகர்தமிழோவியன் கவிதைகள் : விளிம்புநிலை மக்களின் அனுபவத்தெறிப்பு - யமுனா ராஜேந்திரன்


அறியப்பட்ட தமிழ் இலக்கியத்தை மன்னராட்சி இலக்கியம் நிலப்பிரபுத்துவ இலக்கியம் மற்றும் சமகால இலக்கியமாக நடுத்தரவர்க்க இலக்கியம் என வரையறுக்கலாம். சமகாலத்தில்  நிறுவப்பட்ட உன்னத இலக்கியமாகக் கருதப்படுவது ஐரோப்பிய மத்தியதரவர்க்கத்தவரின் வாழ்நிலை நெருக்கடியையும் அவர்தம் பார்வையையும் உள்வாங்கிய இந்திய-தமிழக-ஈழ மத்திதரவர்க்கத்தவரின் இலக்கியம்தான். இலக்கியத்தில் தமிழக இலக்கிவாதிகள் வலியுறுத்திக் கொண்டிருக்கும் மதிப்பீடுகளும் ஐரோப்பிய மத்தியதரவர்க்கத்தவரின் மதிப்பீடுகள்தாம். இந்த மதிப்பீடுகள் இவர்களின் வாழ்க்கை அனுபவம் தோற்றுவிக்க இவர்கள் கண்டடைந்த அறவியல் மதிப்பீடுகளாகும். இந்த மதிப்பீடுகளுக்கு மாற்றாக நாடோடி மக்களின் கலை இலக்கிய வெளிப்பாடுகளையும் விளிம்புநிலை மக்களுடையதும் ஒடுக்கப்பட்ட மக்களுடையதுமான வெளிப்பாடுகளை ஐரோப்பிய மார்க்சீயர்களான ரேமான்ட் வில்லியம்சும்  டெர்ரி ஈகிள்டனும் தமது விமர்சன மதிப்பீடுகளில் முன்னிறுத்தி வந்திருக்கிறார்கள். தமிழகத்திலும் இவ்வகையில் தமிழக மார்க்சீயவாதியான நா.வானமாமலையும் அவர்களது மாணவர்களான நெல்லை ஆய்வு வட்டத்தினரும் இம்மதிப்பீடுகளை முன்னிலைப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

மொழி சார்ந்த கலை உணர்வென்பது அதிகமும் பயிற்சி சார்ந்ததும் பிரக்ஞைபூர்வமான சிந்தனை சார்ந்ததும்தான். நாடோடிப் பாடல் மரபுகளிலும் விளிம்புநிலை மக்களின் கலை இலக்கிய வெளிப்பாடுகளிலும் இந்த மொழி சார்ந்த பயிற்சி அல்லது பிரக்ஞை என்பது அவர்களின் வாழ்பனுபவங்களைப் பொறுத்து இரண்டாம் பட்சமானவையாகும். வுிளிம்பு நிலை மக்களின் கோபமும் துயரமும் சந்தோஷமும் கரையுடைத்த வெள்ளம் போல் பெருகி வருபவையாகும் அவர்களது கவிதைகள் என்பது தமது மரபில் வெகுமக்கள் பிரக்ஞையாகச் செயற்பட்ட நாட்டார்பாடல்களை தமது ஆதார ஊற்றாக எடுததுக் கொள்கிறது. இவ்வகையில் மலையகத்தைச் சேர்ந்த தமிழோவியனின் கவிதைகளும் நாட்டுப்பாடல்களின் சந்த லயத்தையும் எளிமையையும் நேரடித் தன்மையையும் தனது ஆதார ஊற்றாகக் கொள்கிறன.

தமிழோவியன் கவிதைகள் மலையக மக்களின் கூட்டு அரசியல் பிரக்ஞையின் அங்கமாக ஒலிக்கிறன. 'தமது கோபத்தையும் உரிமை வேட்கையையும் அரசியல் உணர்வுகளையும் பிரதிநிதித்தவப்படுத்த சரியான அரசியல் அமைப்புக்கள் கட்சிகள் நிறுவனங்கள் போன்றன இல்லாதபோது அல்லது அத்தகைய நிறுவனங்களின் தோற்றம் அடக்குமுறைக்கு ஆளாகியபோது அந்த அரசியல் பிரக்ஞையின் இடத்தைக் கலை இலக்கிய வெளிப்பாடுகள் எடுத்துக் கொள்கிறன ' எனும் ரேமான்ட் வில்லியம்சின் ஆய்வு நோக்கை மிகச் சரியாகவே மு.நித்தியானந்தன் தனது முன்னுரையில் மலையகத்துக்குப் பொருத்திக் காட்டுகிறார். மலையக மக்களின் எதிர்ப்புக் குரல்களின் இருமுனைக்கத்தியைப் போன்று திகழ்ந்தவை அவர்தம் தொழிற்சங்கங்களும் அவர்களது இளைஞர் சங்கங்களும் ஆகும். தொழிற்சங்கங்களின் வர்க்க சமரசம் சில வேளை கோபம் கொண்ட மலையக இளைஞர்களைச் சோர்வுறச் செய்தாலும் அவர்கள் அமைத்த இளைஞர் சங்கங்கள் படிப்பகங்கள் கலை இலக்கிய அமைப்புக்கள் அவர்களது ஆன்மாவை வெளியிடுவதில் அவர்களை ஏமாற்றவில்லை. அத்தகைய இளைஞர் அமைப்புக்களில் தோன்றி வளர்ந்தவர் தான் இப்போது தனது முதுமை நாட்களில் கரைந்து கொண்டிருக்கும் தமிழோவியன்.

தமிழோவியனின் கவிதைகளில் பெரும்பாலுமானவை 1983 ஆடிக்கலவரத்தில் மூண்ட சிங்களப் பேரினவாதத் தீயில் கருகிப்போன பின் எஞ்சிய கவிதைகளே தற்போது தொகுப்பாசிரியர் மு.நித்தியானந்தனின் முன்முயற்சியில் வெளியாகியிருக்கிறன. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளியான மலையகப் பரிசுக் கதைகள் தொகுப்பையடுத்து வெளிியாகியிருக்கும் குறிப்பிடத்தக்க கவிதைத்தொகுப்பு இந்நுால். மலையகப் பரிசுக் கதைகளின் அட்டைப்படம் மலையக மனிதனொருவனின் துயரத்தைச் சித்தரித்தது. டென்மார்க் செளந்தர் தீட்டிய 'தமிழோவியன் கவிதைகள் ' புத்தக அட்டைப்படத்தில் மலையக முதிர் மனிதனுக்கு உடல் தளர்ந்து போயினும் அவன் நெஞ்சில் மூண்ட வெஞ்சினம் தளர்ந்து போய்விடவில்லை எனும் படியில் ஓவியம் சித்தரிப்புப் பெறுகிறது.

தமிழோவியனின் கவிதைகளை இந்தத் தொகுப்பின் வழி ஒரு சேரப்பார்க்கிறபோது மூன்று வகையான பண்புகளைக் காணமுடிகிறது. முதலில் மலையக மக்களின் துயர் பற்றிய கவிதைகள்; இரண்டாவதாக, மலையகப் பெண்களின் தியாகமும் காதல் மனமும் குறித்த கவிதைகள்; மூன்றாவதாக, மலையக மக்களின் அரசியல் குரலாகவிருந்த அவர்தம் உணர்வுகளின் பிரதிநிதிகளாகவிருந்த தொழிற்சங்கவாதிகள் அரசியல் தலைவர்கள் போன்றவர்களுக்கான மனம் நெகிழ்ந்த அஞ்சலிகள். அஞ்சலிகள் கவிதைத் தன்மையைப் பெறுவது என்பது பெரும்பாலும் கடினம். மறைந்தவரின் பிறப்பு இறப்பு மற்றும் இடைநாள் குறிப்பு பற்றிய விதைந்துரைப்பு தவிரவும் அதில் தேர்ந்து கொள்ள எதுவுமிருப்பதில்லை என்பதால் சம்பந்தப்பட்ட  மக்களது விருப்புக்கே அதைவிட்டு நகர்வது நல்லது. தமிழோவியன் அன்றைய மலையக இளைஞர் பெரும்பாலுமானவர்கள் போலவே திராவிட இயக்க அரசியலுக்கும் அவர்தம் கலை இலக்கிய வெளிப்பாடுகளுக்கும் மனம் பறிகொடுத்தவர் . நாட்டுப்பாடல் மரபையடுத்து தமிழோவியனை பாரதிதாசனும் கண்ணதாசனும் அதிகம் பாதித்திருக்கிறார்கள். தமிழோவியனின் பல்வேறு கவிதைகளில் பாரதிதாசனின் கவிதைக்கதை சொல்லும் பாணியை நாம்  பார்க்கமுடியும். பெண்கள் குறித்த தமிழோவியனின் கவிதைகளில் பெயர்கள் கொண்ட காதலனும் காதலியும் தம் வாழ்வுத்துயரையும் சந்தோத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஜீவநாளங்கள் எனும் கவிதையொன்றில் மலையகப் பெண்களின் மீதாக அவரது காதல் உணர்ச்சிமீதுற வெளிப்படுகிறது :

கொழுந்து கிள்ளும் கோதையர்க்கே மாலைசூடுங்கள்-அவர்கள்

கோடி செல்வம் தேடித்தரும் திறனைப்பாடுங்கள்.

விழுந்தெழுந்து தளர்ந்திடாமல் மலைச்சரிவிலே-கொழுந்தை

விரைந்தெடுக்கும் விரலசைவின் அழகைக் கூறுங்கள்

மலையகப பெண்களின் துயர்சுமந்த வாழ்வுக்கான ஆராதனையாகத்ததான் அவரது காதல் கவிதைகள் வேர்கொள்கின்றன. தொடர்ந்து பெண்கள் படும் வேதனையை சிறிய வெளிச்சம் கவிதையில் இவ்வாறு சொல்லிச் செல்கிறார் :

பச்சிளங் குழந்தைகள்   பிள்ளைகள்

பாதுகாக்கு  மகத்தில் நிறுத்தி

உச்சிமலை முகடுகளில் கொழுந்தை

உடல் வியர்க்கப்பறித்து-நிறுத்தே:

ஓட்டமும் நடையுமாய் பிள்ளைகள்

உறங்கிடும் காப்பகம் வந்தே

ஊட்டுவார் பாலை! அரைவயிறாய்

ஓடுவார் மீண்டும் மலைக்கே

அரைவயிறு உண்டவர்கள் முழு வயிறு உண்ணும் கனவோடுதான் தமிழகத்திலிருந்து இலங்கை மலைக் காடுகளுக்குத் தமிழகத் தமிழர்கள் சென்றார்கள். தேயிலையும் காப்பியும் வளர்க்க அவர்களது இரத்தத்தை உறிஞ்சிய புிரிட்டாஷ் ஏகாதிபத்தியம் அவர்களைக் கூலிகள் என்றது. இலங்கையர் அவர்களை, 'கள்ளத் தோணிகள் ' என்றார்கள். மேட்டுக் குடித்தமிழர்கள் அவர்களை 'தோட்டக் காட்டான் ' என்றார்கள். அவர்களுக்கு பிரஜா உரிமையை மறுத்தது இலங்கை அரசு. இந்திய அரசு திரும்பிவர அவர்களை அனுமதித்தபோதும் அவர்கள் தமிழக கிராமங்களில்  நிராகரிக்கப்பட்டு ஒதுககப்பட்டு வாடும் தலித்மக்களோடு சேர்த்து புறக்கணிக்கப்பட்டார்கள்.. நாள் தோறும் லயன்களில் மிருகங்கள் போல் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட இம்மக்கள் தமது கடந்த கால தமிழக நினைவுகளில் நொடிதோறும் வாழ்ந்தார்கள். தமிழகத் தெய்வங்கள் அவர்களது காவல் தெய்வங்களாகத் தொடர்ந்தன. தமது துன்பங்களை அவர்கள் தெய்வங்களிடம் சொல்லித்தான் ஆறதல் தேடிக் கொண்டார்கள். கலைவாணியைப் பார்த்து தமிழோவியன் இவ்வாறாக இறைஞ்சுகிறார்.:

வறுமையும் கவலையும் நோயும்

வாட்டுமென் குடும்ப நிலையில்

பொறுமை நீ காட்டாது நல்ல

பொருள் வளஞ்சேர்த்து நீ

இனியன நிலைக்க வைத்து

இன்னலில் தவிக்கும் என்றன்

பணிகளும் வெல்ல நித்தம்

பக்க பலமாய நிற்பாயம்மா

வறுமையிலும் காதல் கனிந்தது மழலைகள் மலர்ந்தன. நம்பிக்கையும் அவர்களது வாழ்வின் சங்கல்பமாக தொடர்ந்து வந்தது. மனிதரெனும் பெருமிதம் உழைப்பவரெனும் பெருமிதம் திராவிட இயக்கம் ஊட்டிய சுயமரியாதை உணர்வு அவர்களது வாழ்வின் அங்கமாக ஆகியது. தமிழோவியனின் இரண்டு கவிதைகள் அவர்தம் அவநம்பிக்கையையும் உடனே அதைச் சாடி எழும் நம்பிக்கையையும் காட்டப் போதுமானதாகும். 'வெளியில் வந்து ' எனும் கவிதையில் இவ்வாறு சொல்கிறார் :

தொன்று தொட்டு இலங்கை நாட்டில்

வாழ்ந்த கூட்டம் நாம்

இன்றுமிங்கே குடியுரிமை

வாக்குரிமை இழந்து நிற்கிறோம்!

நன்றி கெட்டோர் நாடற்றவர்

என்று கெடுத்ததால்

குன்றுகளில் உழைப்பவராய்

தின்று பிழைக்கின்றோம்.

ஈனப்பிழைப்பு பற்றிய கோபத்தினின்று நம்பிக்கையும் காதலும் உழைப்பின் பயனாாய் விளைந்த சிருஷ்டிப் பொருளும் அதன் மீதான நேசமும் அடுத்த நொடியில் பீறிட்டு வருகிறது :

உழைக்கவே பிறந்த தமிழர்

உதிரத்தில் வளர்ந்து நன்கு

தழைக்கும் தேயிலையே! நாட்டை

தற்காக்கும் கற்பகத் தருவே!

புிழைக்கப்பாடுபடும் தமிழ்ப்

பாட்டாளி மக்கள் தினம்

செழிக்கவே நல்ல நிலையைச்

சேர்ந்திட வழியும் செய்வாய்!

தோட்டக்காட்டான்! ஏதும்

தெரியாத தொழிலாளி!-என்று

வாட்டியே வதைக்க நினைத்தோர்

வலிமையும் ஒடுங்க சட்டம்

ஆட்டிப் படைக்கும் நிலையால்

ஆதிக்கமடங்க நீதியை

நாட்டினாய் தேயிலையே!

உன்னை நாவாறப் போற்றி வாழ்வோம்.

வுிளிம்பு நிலை மக்களின் கவிதைகளிள் உயிராய் உறைந்திரக்கும் ஒரு அம்சம் அவர்களது இயற்கை சார்ந்த வாழ்வு. தேயிலையை நேசிக்கிற மாதிரித்தான் அவர்தம் குழந்தைகளையும் மனைவியரையும் காதலியரையும் அவர்கள் நேசிக்கிறார்கள். அகப்படாத நேசிக்கிற வாழ்வு கையகப்படாத போதுதான் அவர்களது துயரம் கோபமாக வெஞ்சினமாகப் பிறிடுகிறது.

மலையகத் தமிழர்தம் வாழ்வும் அரசியலும் அவர்தம் கலை இலக்கிய முயற்சியும் குறித்த வரலாற்று ஆவணங்களாக இரண்டு கட்டுரைகள் ந்நுாலில் டம் பெறகிறது. மலையகக் கல்வியாளரும் அறிஞருமான காலஞ்சென்ற ஆர் சிவலிங்கம் அவர்களின் அணிந்துரை ஒன்று. பிறிதொன்று மலையகக் கலாச்சார தளத்தில் ஒரு எதிர்ப்புக் குரல் எனும் இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தனின் மிக விரிவான ஒரு கோட்பாட்டுக் கட்டுரையாகும். இந்த நுாற்றாண்டு அக்டோபர் புரட்சியையும் காலனிய ஆதிக்க எதிர்ப்பு தேச விடுதலை யுத்தங்களையும். மட்டும் காணவில்லை. மக்களின் மாபெரும் இடப் பெயர்வுகளை எல்லைகள் துண்டாடப்பட்டதை தேசப்பிரிவினைகளை சோசலிச அமைப்பின் வீழ்ச்சியை அறிவுத்துறைக் காலனியாதிக்கப்பரவலைக் கண்ணுற்றது. இன்று பொருளியல் சுரண்டலின் நவீன ஏகாதிபத்திய வடிவமாக உலக மயமாதலையும் கண்டு வருகிறது. பல்வேறு நாடுகள் சுதந்திரம் பெற்றதாகத் தோன்றினாலும் கூட அது விளிம்பு நிலை மக்களுக்கு எந்தவிதமான சுதந்திரத்தையும் சுபிட்சத்தையும் கொண்டு தரவில்லை. ஐரோப்பாவிலே ஜிப்ஸி மக்கள், அமெரிக்காவில் ஆப்பிரிக்க மக்கள், இந்தியாவில் தலித் மக்கள் போன்று இலங்கையின் கடைக் கோடி விளிம்புநிலை மக்களாக இன்றும் கூட வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மலையகத் தமிழர்கள். இந்த மலையகத்தமிழர்களில் அறிவுஜீவிகளும் தோன்றினார்கள். அவர்களில் தலையாயவர்தான் ர.சிவலிங்கம். அதற்கடுத்த தலைமுறையைச் சார்ந்த மலையக அறிவாளிவர்க்கத்தைச் சார்ந்தவர் மு.நித்தியானந்தன். மலையக மக்களின் இலக்கிய முயற்சிகள் பற்றிப் பேசவரும் சிவலிங்கம் இம்முயற்சிகளை இவ்வாறாகக் காண்கிறார்:

  எல்லா ஒடுக்கப்பட்ட இனங்களும் மக்கள் சமுதாயங்களும் எழுத்தை ஒரு கருவியாகவே பயன்படுத்தியி ருக்கின்றன. அமெரிக்காவில் கறுப்பு மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படத்துவதற்கும் சமுதாய மறுமலர்ச்சிக்கும் எழுத்தைக் கருவியாக உபயோகித்துள்ளனர். தமிழகத்திலேயே கூட திராவிட யக்கங்கள் பாரப்பன சக்திகளை முறியடிக்க எழுத்தை ஓர் ஆயதமாகப் பயன்படுத்தியுள்ளன. இன்று கூட தலித் லக்கியம் ஓங்கிவரும் தலித் சக்திகளுக்கு வலிவூட்டும் ஒரு கருவியாக ஆகிவருகிறது. முக்கியமாக கவிதைகள் இந்த உணர்வுப்பிழம்புகளுக்கு உருவம் கொடுப்பதில் முதலிடத்தை வகிக்கின்றன. 

தமிழோவியன் கவிதைகளில் ஆரம்பத்தில் தோன்றிய அதே உணர்ச்சிபபாங்காண பண்புதான் இன்றைய கவிதைகள்வரை அவரிடம் தொடர்ந்து வருகிறது. பாரதிதாசன் பாணியும் சந்த லயமும் கவிதைக் கதைப் பண்பும் மலையாக நாட்டார் பாடல் மரபும் தான் தமிழோவியன் கவிதைகள். தமிழகத்தில் தோன்றிய வானம்பாடி வகை சமஸ்கிருதத்தமிழ் மணிப்பிரவாள மொழி அவரது கவிதைகளில் இல்லை. எழுத்து மரபில் தோன்றிய அகவிசாரணைக் கவிதைகளின் மொழிப்படிமங்கள் அவரது கவிதைகளில் இல்லை. அவரது கவிதைகளை மொழித்தேர்ச்சி, படிமங்கள், தத்துவதரிசனம் போன்ற நவீன மதிப்பீடுகளை வைத்துக் கொண்டு அணுகமுடியாது. அவரது கவிதைகள் செயல்படும் பிரதேசங்களாக இந்தத்தளங்கள் இல்லாததற்காண காரணம் அவரிடம் தேடல்களோ இயத்தனங்களோ இல்லை என்பதல்ல. மாறாக இத்தகைய கவிதைப் பாணிகளை முன் வைத்தவர்களின் சிந்தனைப் பிரதேசத்தக்குள்ளோ அவர்தம் வாழ்க்கைத் தேடல்களுக்குள்ளோ மலையகத் தமிழர்களும் அவர்தம் துயர வாழ்வும் இடம்பெறவில்லை என்பதுதான். யுாழ்ப்பாண அவலம் குறித்து அக்கறைப்பட்ட தமிழ்ப்படைப்பாளிகள் எவரும் மலையகத் தமிழர் குறித்த தீவிர அக்கறையைக் காட்டவில்லை. தம்மைப் புறக்கணித்த இடதுசாரிக் கவிதை மொழியையும் தமிழ் அகக் கவிதை மொழியையும் தமிழோவியன் நிராகரித்திருப்பது அவரது வாழ்வு அவர்முன் வைத்த தேர்வுதான்.

தமிழக லக்கிய உன்னதர்களின்  ஐரோப்பிய மத்தியதரவர்க்க இலக்கியமதிப்பீடுகளின் அடிப்படையில் தமிழோவியன் கவிதைகள் உணர்ச்சிவசமான பிரச்சாரக்கவிதைகள் தான். மாயக்காவ்ஸ்க்கியை கவிஞனாக ஒப்புக் கொள்ள- கார்க்கியை தீவிர இலக்கிவாதியாக ஒப்ப தர்மூ சிவராமுவுக்கு யலவில்லை. ஆனால் E=mc2 எழுதிய அதே சிவராமுவின் தமிழீழ தேசிய கீதத்தை எவரேனும் வாசித்துக் கவிதையாக ஒப்புக் கொள்ள முடியுமானால் அதைவிடவும் ஆயிரம் மடங்கு கவித்துவம் கொண்டவை மாயக்காவிஸ்க்கியின் கவிதைகள் என்பதை மிகச் சாதாரணமாக அறிந்து கொள்ளமுடியும். ஜெயகாந்தன் கூறுவதைப் போல் எல்லாக் கலைகளும் பிரச்சாரம் தான். ஆனால் எல்லாப் பிரச்சாரங்களும் கலையாகிவிடுவதில்லை. தமிழோவியன் கவிதைகளிள் அஞ்சலிகள் அரசியல் அறைகூவல்கள் போன்றவற்றையும் தாண்டி கலைத் தன்மை கொண்ட கவிதைகளாக அவரது மலையக வாழ்வு மற்றும் பெண்கள் பற்றிய கவிதைகளையும் மலையகத் தமிழர்தம் துயரம் பற்றிய கவிதைகளையும் அவரது நாட்டார்பாடல் மரபு வழிக் கவிதைகளையும் நிச்சயமாகக் குறிப்பிடமுடியும். சாட்சியமாகச் சில கவி வரிகள் :

நாட்டார்பாடலொன்றின் வரிகள்

பாதையிலே வீடிருக்க

பழனிச்சம்பா சோறிருக்க

எருமே தயிரிருக்க

ஏண்டி வந்தே கண்டிச்சீமை ?

தமிழோவியனின் கவிதையொன்று :

கூடை சுமந்து மலை மலையாய்

கொழுந்து எடுத்தே

பாடுபட்ட பெண்களது

பத்துவிரல் சுழற்சியினால்

நாடு செழிக்க வெளிநாட்டு

நாணயத்தைத் தேயிலையால்

கோடிக் கணக்கில் அன்று

தேடிக் கொடுத்த பரம்பரையும்

நாடற்ற மக்களாக இன்று

நாதியற்று நிக்கலாமோ ?

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழோவியன் கவிதைகள்.

டிசம்பர் 2000

வெளியீடு :

கலை ஒளி முத்தையா பிள்ளை நினைவுக்குழு

கொழும்பு : 13

100 இலங்கை ரூபாய்

இந்திய விநியோகம் :

குமரன் பதிப்பகம்

சென்னை: 600 026

40 இந்திய ருபாய்

நன்றி - திண்ணை

மலையக மக்கள் - வாழ்வும் இருப்பும் - திலகர்


மூன்று தசாப்த கால யுத்தத்துக்குப் பின்னான இலங்கையின் அரசியல் சூழல் பல மாற்றங்களைக் காண விழைகின்றது. இதில் உள் - புற நோக்கங்கள் பல இருக்கலாம். எது எவ்வாறெனினும் அவரவர் அவரவருக்கு இயன்ற முறைகளிலும்  வழிகளிலும் தமது இருப்பை உறுதி செய்வதற்கான முனைகளில் ஈடுபாடு காட்டவேண்டியது அவசியமாகின்றது.

இந்த யுத்தம் இலங்கையின் வடகிழக்குப் பிரதேசத்தையும் அங்கு வாழ்கின்ற தமிழ் மக்களையும் மையப்படுத்தியிருந்தாலும் அது சர்வதேசரீதியாக தமிழர், தமிழ் மொழி பேசுவோர், தமிழ்மொழி எனும் பரப்புகளுக்குள் தாக்கத்தை செலுத்தியுள்ளது. வடகிழக்கு வாழ் இலங்கைத் தமிழ் மக்களிலிருந்து தமிழ்த்தேசியத்துக்கான போர் தொடங்கியிருந்தாலும் வடகிழக்குக்கு உள்ளேயும் வெளியேயும் வாழ்ந்த- வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் அனைவரும் போருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களிப்பும் செய்துள்ளார்கள், பாதிக்கப்பட்டுமிருக்கிறார்கள். தமிழ்த்தேசியப் போராட்டத்தின் தாற்பரியங்களை தேடியறியாது அது தமக்கானதும்தானா என்பதையும் அறியாது அந்த களத்திலும் உணர்வுரீதியாகவும் பங்கேற்றவர்கள்  இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள். இதனால் போரினாலான பாதிப்புகளில் ஏனையோர் போன்றே மலையக மக்களும்  பெரும் துன்பப்பட்டுள்ளார்கள். 

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் தமிழ்த் தேசியப் போராட்டத் தரப்பினரால் வெளியேற்றப் பட்டதன் பின்னர் தமக்கும் தமிழ்த்தேசியத்துக்கான  விடுதலையில் பங்குண்டு என்கிற மனநிலை முஸ்லிம்களிடத்தில் மறைந்துவரத் தொடங்கியதையே அரசியல் சூழலில் அவதானிக்க முடிகின்றது. மறுபுறத்தில் மலையக அரசியல் செயற்பாட்டுத்தளத்தில் உள்ள தலைவர்கள் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தும், தன்னை தமிழ்த் தேசியவாதிகளாகக் காட்டிக் கொண்டும், தமிழ்த்தேசியப் போராட்ட அமைப்புகளுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தும் மலையக மக்களை தமிழ்த்தேசிய கருத்தியலில் மூழ்கடித்து வைத்திருந்தனர்.இதற்கு பல ஆதாரங்களைச் சொல்லலாம்.

ஞாபகமூட்டலுக்காக, ஈரோஸ் தமது 13 அங்கத்தவர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒன்றை மலையக மக்களுக்காக ஒதுக்கியமை (அமரர் இராமலிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் - ராகலை), திம்பு கோட்பாட்டில் மலையக மக்களின் பிரஜாவுரிமை பற்றிய ஒரு அத்தியாயம் உள்வாங்கப்பட்டமை, அமரர் சந்திரசேகரன் (மலையக மக்கள் முன்னணியின் தலைவர்) தமிழ்த்தேசிய வடகிழக்கு அமைப்புகளுடன் இணைந்து ஆரம்பகால அரசியல் நடவடிக்கைகளில் செயற்பட்டமை, பின்னாளில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நேரடியாக  தொடர்பு வைத்திருந்தமை, உதவி செய்தமை, சிறை சென்றமை, தவிரவும் அமரர் சந்திரசேகரன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் போன்றோர் பொங்குதமிழ் நிகழ்வின் பிரதானமானவர்களாக கலந்துகொண்டமை, 2002ல் போர்நிறுத்த உடன்பாடு நிலவிய காலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் படத்தையும் தனது படத்தையும் ஒரே சுவரொட்டியில் சேர்த்து மலையகம் உட்பட கொழும்பு நகரங்களில் ஒட்டியதோடு பொங்குதமிழுக்கு சமனான ஒரு நிகழ்வை நுவரெலியாவில் நடாத்தியமை போன்றவற்றை இப்போதைக்கு கூறிக்கொள்வோம்.

இத்தகைய உந்துதல்களினால் மலையக இளைஞர்கள் பலரும் தமிழ்த் தேசியப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு உயிரிழப்பு, சிறைவாசம், எவ்விதத் தொடர்புமில்லை எனினும் தன்னை உறுதிப்படுத்த அடையாள அட்டை இல்லாத காரணத்தால் வருடக்கணக்கில் சிறைவாசம் என  தமிழ்த் தேசியப் போராட்டத்தில் மலையக மக்கள் விரும்பியோ விரும்பாமலோ  பங்காளிகளாகிவிட்டனர்.

இவர்களின் அரசியல் தொழிற்சங்கத் தலைமைகள் தம்மையும் தமிழ்த்தேசிய ஆதரவாளர்களாக காட்டிக்கொண்டதன் மூலமும் தமிழ்த் தேசியப் போராட்டத்தலைமைகள் அந்த ஆதரவை ஏற்றுக்கொண்டதன் மூலமும் மலையக மக்கள் தமது உண்மையான பிரச்சினைகளைப்பற்றி அக்கறை கொள்ளாது போனார்கள். நாளை உருவாகப் போகும் தமிழருக்கான நாட்டில் தமக்கும் பங்குண்டு என்ற கனவிலேயே அவர்கள் வாழ்ந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அந்த அப்பாவி மக்களின் கனவுகளுக்கு அவர்களது தலைவர்களும் ஏட்டிக்குப்போட்டியாக தீனி போட்டிருப்பதை மேற்சொன்ன நிகழ்வுகளால் விளங்கிக் கொள்ளலாம்.  

இன்று தமிழ்த் தேசியத்துக்கான ஆயுதப்போராட்டம் அதன் முன்னெடுப்பாளர்களுக்குச் சாதகமாக அமையாத முடிவினை தந்திருக்கிற ஒரு சூழலில், ஆயுதப்போராட்டத்தின் பின்னான அரசியல் தலைமைகள் ஆளும் பெரும்பான்மை சிங்களத் தலைமைகளிடம் பேச்சுவார்த்தை நடாத்தித்தான் தீர்வுகளைக் காணவேண்டும் என்கிற நடைமுறை நிலவுகின்ற சூழலில் மலையக மக்களின் இருப்பு, வாழ்வு குறித்து யார் எத்தகைய முடிவை நோக்கி நகர்த்துவது என்பது இப்போது எழுந்திருக்கும் வினா.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மலை யக மக்களின் 250 ஆண்டுகால இலங்கை வாழ் வரலாற்றில் 70 வருடகால அரசியல் தொழிற்சங்க வரலாறும் அடங்குகின்றது.  1947களில் இவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் 7 அங்கத்தவர்களைக் கொண்டிருந்தனர். அது இனவாதிகளின் கண்களை உறுத்தவே மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. பின்னர் 1977 வரை நியமனத் தெரிவின் மூலம் அரசியல் காலம் தள்ளியமையும் 1977க்குப்பின் இன்றுவரை அவர்களின் அபிவிருத்திப் பணிகள் என்ற போர்வையில்  அரசாங்கத்துடனான கைகோர்ப்புடனும் அரசியல் நகர்ந்து செல்ல இன்னும் அடிப்படை பிரச்சினைகளில் இருந்து முழுமையாக விடுபடாத மக்கள் கூட்டமாகவே வாழ்ந்து வருகின்றனர். எவ்வகையிலேனும் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்திகளை புறந்தள்ளிப் பார்க்காது இவர்களது அடிப்படை பிரச்சினைகள் குறித்து பார்வையை செலுத்துவது பொருத்தமானது. இன்னும் மலையகத் தமிழர்களில் பலருக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லை அல்லது முறையாகப் பதியப்படுவதில்லை. இன்னும் மலையகத் தமிழர்களில்  பலருக்கு தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் தேசிய அடையாள அட்டை  இல்லை. தமது ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கும் வாக்குரிமை முழுமையாக இல்லை அல்லது வாக்காளர் இடாப்புகளில் அவர்களை பதிவு செய்துகொள்வதில் திட்டமிட்ட புறக்கணிப்பு இடம்பெறுகின்றது. ஏன் இவர்கள் இலங்கை நாட்டின் பிரஜைகள் என்றுகூட இன்னும் முழுமையாக பிரகடனப்படுத்தப்படவில்லை. இந்த நிலைமைக்கு காரணம் என்ன?

1948ல் குடியுரிமை பறிக்கப்பட்டதன் பின்னர் அதனை மீளப் பெறுவதில் ஏற்பட்ட அரசியல் புறப்படுகைகள் 1960களில் பெருவாரியாக இருந்ததும் 1977க்குப்பின் வாக்குரிமை சிறுகச்சிறுக கிடைக்கத் தொடங்கியதும் மந்தமானது. வாக்குரிமையைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அதனாலான அறுவடைகளை சிலர் தமது குடும்பம் சார்ந்த அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ள, மற்றையோர் அவர்களிடம் பிழைப்பு நடாத்தும் ஒரு போக்கு வளரத் தொடங்கியது. இந்தப்பட்டியலுக்குள் படித்தவர்கள் என சொல்லிக்கொள்ளும் பலர் அதிகாரி பதவிகளில் ஒட்டிக் கொண்டமை அரசியல் வறட்சிநிலைக்கு ஒரு காரணம் என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

1977க்குப் பின் தமிழ்த் தேசியப் போராட்டம் வெகுஜனமயப்பட்டதோடு, தாம் தெரிவு செய்த தலைவர்கள் அமைச்சர்களாவ தற்கே என்றும் தமது உரிமைக்கான போராட்டம் தமிழ்த் தேசியப் போராட்டத்துடன் இணைந்தது என்றும்  அது இறுதியில் கிடைக்கும் என்ற மனப்பாங்கிலும் மலையக மக்கள் இருந்துவிட்டனர் அல்லது அவ்வாறான மனப்பாங்கை தமிழ்த்தேசிய ஆதரவு ஊடகங்கள் தோற்றுவித்தன. எனவே தாம் வாக்களித்தவர்கள் அமைச்சுப் பதவிகளுடாக தமக்கு அபிவிருத்திப் பணிகளை பெற்றுக் கொடுப்பதையே அரசியல் உபாயமாக காட்டிக் கொள்ள மக்களும் அந்த கலாசாரத்திற்கு பழக்கப்பட்டுவிட்டனர். தமது அடிப்படை உரிமைகளான பிரஜாவுரிமை, பிறப்புப்பதிவு, தேசிய அடையாளம், வாக்குரிமை போன்ற விடயங்களை மானசீகமான தலைவர்கள் பெற்றுத்தரப் போகும் பெருந்தீர்வில் அடைந்துவிட முடியும் என வாளாவிருந்துவிட்டார்கள் அல்லது அது குறித்து சிந்திக்காமலேயே இருந்துவிட்டார்கள்.

ஒருபுறம் 1977 முதல் அமைச்சுப்பதவிசார் அரசியற்தலைமைகளுக்கு பழகிப்போன இந்த மலையக மக்களை மறுபுறம்  தமிழ்த் தேசியத்தலைமைகள் எவ்வாறு அணுகின என்பதும் ஆராயப்பட வேண்டியது. திம்பு கோட்பாட்டில் மலையக மக்களின் பிரஜாவுரிமை பிரச்னை முன்வைக்கப்பட்டமையை மறுப்பதற்கில்லை. எனினும் 2002ம் ஆண்டு போர்நிறுத்த உடன்பாடு அமுலிலிருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் நடாத்தப்பட்ட நேரடி பத்திரிகையாளர் மாநாட்டில் வே.பிரபாகரன் தெரிவித்த கருத்துகள் மலையக மக்கள் குறித்த தமிழ்த்தேசிய போராட்டத் தலைமையின் உண்மையான பக்கத்தைக் காட்டியது. மலையக மக்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் தமது  பிரச்சினைகளைத் தாமேதான் பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார். அந்த மக்கள் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்களிடம்தான் தமது  பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனும் தொனிப்பட கருத்துத் தெரிவித்தார். 

ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய விடுதலை என உயிர் கொடுக்க முன்வந்த, யுத்த சூழ்நிலையினால் தமிழர்கள் என்ற பொது அடையாளத்தில் வாழ்வைத் தொலைத்த மலையக மக்கள் தமது மானசீகமான தலைமை தம்மைப்பற்றி கொண்டிருக்கும் கருத்து குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டிய காலம் அப்போதே தோன்றியிருந்தது. ஒருவேளை யுத்த நிறுத்த உடன்பாடு தொடர்ந்து சமாதான உடன்பாடுகள் தமிழ்த் தேசியத்துக்கு சாதகமாக எட்டப்பட்டு வடகிழக்குவாழ் தமிழ் மக்களின் நிலைமை இன்றைய நிலைமையைப் போலல்லாது இருந்திருப்பினும்கூட மலையக மக்களின் நிலை இப்போதுள்ள நிலையிலிருந்து  மாற்றத்தையேனும் கண்டிருக்காது என்பதுதான் யதார்த்தம். எனவே தமிழ்த்தேசியப் போராட்டத் தலைமைகளாலும் அதனைப் போற்றிப் புகழ்ந்த தமது தலைமைகளாலும் பௌதீக அபிவிருத்திக்கு அப்பால் அரசியல் மட்டத்தில் கைவிடப்பட்டுள்ள மலையக மக்களின் அடிப்படை தேவைப்பாடுகள் குறித்த கவனம் செலுத்துதல் இப்போது இன்றிமையாததாகின்றது.

மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளான பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை, வாக்குரிமைப் பதிவு போன்றன யாரால் நிறைவேற்றப்படுதல் வேண்டும்? படித்தவர் முதல் பாமரர் வரை தேர்தல்களில் தெரிவு செய்யப்படும் அரசியல்வாதிகளிடம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை வேண்டி நிற்கின்றனர். அவர்களும் தமக்குப் போதுமான அதிகாரத்தை வழங்குவதன் மூலம் (தமக்கு அளிக்க வேண்டிய வாக்குகளைத்தான் அப்படி சொல்கிறார்கள்) இந்த உரிமைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதியளித்து தமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதுமே இடம் பெற்று வருகின்றது. மாறாக உண்மையாகக் கேட்டுப் பெறவேண்டிய தேவைப்பாடுகள் மறைக்கப்பட்டுள்ளன அல்லது தெரியாமலிருக்கின்றன. 

மேற்படி அடிப்படை விடயங்களை மக்கள் அடைந்து கொள்ளும் அரச நிர்வாக பீடம்  கிராமமட்ட அரச நிர்வாகியான கிராம உத்தியோகத்தர் எனும் கிராம நிலதாரி கையிலேயே உள்ளது. இவரே அரசாங்க நிர்வாகப் பொறிமுறையின் கடைசி நிலை அதிகாரி. மக்களுடன் நேரடியாக தொடர்புகளை  மேற்கொள்பவர். மலையகத்தமிழர் செறிந்து வாழும் நுவரெலியா, பதுளை மாவட்டங்களில்  மாத்திரமே இவர்களுக்காக இவர்களில் இருந்தே ஏறக்குறைய 100 பேர் கிராம உத்தியோகத்தர்களாக கடமையாற்றுகின்றனர். இந்த நியமனத்தைப் பெற்றுக் கொடுத்தது  யார் என வீராப்பு காட்டுவதிலேயே தலைவர்களின் காலம் கழிகின்றது. நுவரேலியா, பதுளை, மாத்தளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் கொழும்பிலுமாக சுமார் 15 லட்சம் மலையகத் தமிழர் வாழ்கின்றனர். ஆக 15 லட்சம் பேருக்கு 100 கிராம சேவகர்களைக் கொண்டதாக மாத்திரமே இந்த மக்கள் நிர்வாகக் கட்டமைப்பில் பங்கு பெறுகின்றனர் என்பதே உண்மை. மலையக மக்கள் செறிவாக உள்ள பிரதேசங்களில் 120 சிங்களர்களுக்கு ஒரு  கிராம அதிகாரி என்றிருக்கையில் 9000 மலையகத் தமிழர்களுக்கு ஒரு கிராம அதிகாரியே இருப்பதாக  புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இலங்கை அரசாங்கம் தற்போது நிர்வாக எல்லையை மீள் நிர்ணயம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இந்த மீள்நிர்ணயத்தில் அரசத் தரப்பு தமக்கே உரிய பாணியில் செயற்படும் என்பதில் எவ்வித மாற்றுநிலையும் இருக்கப்போவதில்லை. அதற்காக மலையக மக்கள் தமது தேவைகள் குறித்து கொடுத்ததைப் பெற்றுக்கொள்ளும் கையறு நிலையிலிருப்பதா அல்லது தமது தேவைப்பாடுகள் குறித்து காரணகாரியங்களுடன் வாதங்களை முன்வைத்து அதனை நிறைவேற்ற முயற்சிப்பதா? நிர்வாக எல்லை மீள்நிர்ணயம்தான் அதிகாரப்பகிர்வின் மறைமுகமான வடிவம். அரச நிர்வாகப் பொறிமுறையில் மலையக மக்கள் எவ்வாறு உள்வாங்கப்படப் போகிறார்கள்  என்பதில்தான் அவர்களது எதிர்கால இருப்பு குறித்த கேள்வி தங்கியுள்ளது.

மலையக மக்களின் பலம் அவர்கள் இலங்கையில் 15 லட்சம் பேர் வாழ்கின்றனர் என்பதாகும். ஆனால் இந்த 15 லட்சம் பேரும் நிலத்தொடர்பற்ற வகையில் தமது வாழ்விடங்களைக் கொண்டுள்ளது இவர்களின் பலவீனமாகும். வடகிழக்கு வாழ் இலங்கைத் தமிழர் போன்று இவர்கள் குறித்த ஒரு நிலத் தொடர்புள்ள பிரதேசத்தில் வாழவில்லை. பல்வேறு மாவட்டங்களில் சிங்கள மக்களுடன் இணைந்ததான பிரதேசங்களில் வாழ் கின்றனர். எனவே அரசநிர்வாக விடயங்களில் சிங்கள கிராம நிலதாரிகள் இவர்களை புறக்கணிப்பது இலகுவாகிவிடுகின்றது. இவர்கள் செறிவாக வாழும் நுவரெலியா பதுளை மாவட்டங்க ளிலேயே புறக்கணிப்பு பரவலாக இருக்கும்போது செறிவு குறைவாகவுள்ள மாவட்டங்களில் நிலை படுமோசமாகவே இருக்கும்.

பெருந்தோட்டங்களில் கூலித்தொழிலாளர்களாக  வேலை செய்யும் மலையகச் சமூகத்தின் பெரும்பகுதியினர் குடியிருப்பு அடிப்படையில் தோட்டங்களில் (மறுவடிவில் கிராமத்துக்குரிய சில பண்புகளுடன்) வாழ்கின்றனர். அந்த தோட்டப்பிரிவுகள் சில ஒன்றாக இணைக்கப்படுவதன் மூலம் ஒரு கிராமமாக கணிக்கப்பட்டு அதற்குரிய அதிகாரியாக மலையகத்தமிழர் ஒருவரை நியமிப்பது அவசியம். ஆகக் குறைந்தது மக்கள் தமது அரச நிர்வாகப் பொறிமுறைக்கு உட்பட்ட தேவைகளை நிறைவு செய்துகொள்ள வழிமுறை இதுவொன்றேயாகும்.

அதேபோல மலையக மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில்  அவர்களிலிருந்தே கிராம நிலதாரிகள்  நியமிக்கப்பட வேண்டும். அதுவே இப்போதைய அரசியல் கோரிக்கை. மலையக மக்களின் பாராளுமன்ற அங்கத்துவ எண்ணிக்கையின் குறைவு பற்றிக் கவலைப்படும் பலர் அந்த தெரிவுக்கு அடிப்படையான வாக்குரிமை விடயத்தை நிர்வாகரீதியாக செயலாற்றக்கூடிய அதி காரிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பாமை முட்டாள்தனமானது எனச் சொல்வது தவறில்லை. ஒரே தடவை 11  உறுப்பினர்கள் மலையக மக்களின் சார்பாக பாராளுமன்றத்தில் இருந்தபோதும்கூட இந்த அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. ஏனெனில் பாராளுமன்றம் அதில் பேச்சு என்பன உணர்ச்சிப்பூர்வமான செய்திகளை பத்திரிகைகளில் படிக்கத் தரலாமே தவிர உண்மையான பணியை ஆற்ற உதவப் போவதில்லை என்பதுதான் யதாரத்தம்.

மலையக மக்களுக்கு ஆகக்குறைந்தது அவர்கள் வாழ்கின்ற கிராமத்தின் அதிகாரியாக அவர்கள் சார்ந்த ஒருவரை  நியமிக்கக் கோரும் அரசியல் முன்னெடுப்பே இங்கு மிகமிக அவசியம். சில மேதாவிகளுக்கு இது அற்ப கோரிக்கையாகக்கூட தெரியலாம். ஆனால் இந்த அதிகாரி மட்டத்தில்தான் இந்த மக்களின் எதிர்கால இருப்பு இருக்கின்றது. இந்த அதிகாரிகள் இவர்களை புறக்கணிக்கின்றபோது தேசிய நீரோட்டத்தில் இருந்து இவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். அதன் தொடர்ச்சியாக இவர்கள்  வாழ்வு பண்பாட்டு மாற்றம் மொழிமாற்றம் என தமது இருப்பை இழந்து பின்னோக்கிச் செல்லும் பண்பை பல பிரதேசங்களில் அவதானிக்க முடிகின்றது. இது சில வருடங்களுக்குள்ளாகவே நிலத்தொடர்பற்ற வகையில் பரந்து வாழும் தமது  சகமக்களிடம் இருந்து சிறுகச்சிறுக இவர்களை துண்டித்து  இந்த மக்களின் செறிவு மிகமிக தாழ்ந்த நிலைக்கு தள்ளிவிடுவதற்கான வழியாகி விடும். இது இப்போதைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிற நிலை.

சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களில் வாழும் மலையக மக்கள் தமது மொழி அடையாளத்தை முதலாவதாக இழந்து வருகிறார்கள். அதேநேரம் இனரீதியாக தொடர்ந்தும்  தமிழர்களாகவே காட்டப்படுகின்றனர். இது இவர்களை தோட்டக்கம்பனிகளுக்கு அடிமைத் தொழிலாளியாக மட்டுமல் லாது உள்ளுர் மக்களுக்கே அடிமையாக்கும் நிலைக்குத் தள்ளிவிடும் அபாயத்தைக் கொண்டுவந்துள்ளது. தமிழ் பேசும் தமிழராகவே தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள சிரமப்படும் நிலையில் சிங்களம் பேசும் தமிழராக எந்தளவுக்கு இது சாத்தியப்படும் என சிந்திக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் நிலவுடமையாளரல்ல. இன்றும் கூலித்தொழிலாளர்களே. எனவே அடிமைப் போக்கு விரைவாக வளர்ந்துவிடும். சிலசமயம் இவர்கள் அழகாக உடுத்தக்கூடாது, தங்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றெல்லாம் சிங்கள கிராம இளைஞர்களினால் அசுசுறுத்தப்படும் நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.

நிலத்தொடர்பற்ற வகையில் வாழும் இம்மக்களுக்கு தனியான மாவட்டம், மாகாணம் அல்லது தனியான அலகு கேட்பது  ஒற்றையாட்சி உக்கிரமடைந்து வரும் இலங்கை அரசியலில் எந்தளவு சாத்தியமானது என்பது சிந்திக்க வேண்டியுள்ளது. அதேநேரம் மனப்பாங்கு ரீதியாகவும் குடியிருப்பு ரீதியாகவும் (10- 20 குடும்பங்களைக் கொண்ட ஒரு லயம். அவ்வாறு 10-15 லயங்களைக்கொண்ட ஒரு தோட்டம்) குழுமமாக வாழுவது மாத்திரமே இப்போதைக்கு மலையக மக்களின் பலம். இவ்வாறு குழுமமாக வாழும் இவர்கள் மொழி அடிப்படையில் ஓர் அடையாளத்தைப் பெறுகின்றனர். பல இடங்களில் சகோதர முஸ்லிம் மக்களுடன் இந்த அடையாளம் வலுப்பெறுகிறது. இதைவைத்து அந்த கிராமத்தின் அதிகாரியை தமதாக்கிக் கொண்டு தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வழியை காணுதல் வேண்டும்.

இது பின்னாளில் கிராமப்பிரிவுக்கு அடுத்ததான பிரதேச செயலகப்பிரிவுகளையும் இப்போதைக்கு இவர்களை உள்வாங்காத உள்ளூர் ஆட்சிமன்ற நிர்வாகத்தையும் இவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான அடிப்படையாக அமையும். அவ்வாறில்லாது அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம் போடுவது அத்திவாரமில்லாத கட்டிடத்தில் எத்தனை மாடிகள் கட்டுவது எனும் சிந்தனைக்கு ஒப்பானதாகவே அமையும். 

அரசாங்கம் இப்போதைக்கு வடகிழக்குக்கு வெளியே 28 பிரதேச செயலகங்களின் அரசப்பணிகளை இருமொழிகளிலும் (சிங்களம், தமிழ் )  ஆற்றவேண்டும் என உத்தியோகபூர்வ அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தியுள்ளது. இதில் 20 பிரதேச செயலகங்கள் மலையக மக்களின் செறிவு கூடியவை. இந்த திட்டத்திற்கான புள்ளிவிபர அடிப்படையில் இன்னும் 60 பிரதேச செயலகங்களை இவ்வாறு மாற்றிப் பெறமுடியும். அப்போது மலையக மக்கள் வாழும் பிரதேசம் அதிகம் உள்வாங்கப்படும். சிங்களப் பிரதேசத்தில் வாழ்கின்ற மலையக மக்கள் தமக்கான பணியை தமது மொழியில் ஆற்றும் வசதியை இது பெற்றுக் கொடுக்கும். அதேநேரம் அந்த பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு கீழாக வரக்கூடிய கிராம நிலதாரி பிரிவுகள் மலையக மக்களுக்கானதாக அமையும்போது இப்போதைய புள்ளிவிபரங்களின்படி 700 முதல் 800 கிராம சபை பிரிவுகள் மலையக மக்களுக்கானதாக அமையும் வாய்ப்புள்ளது. 

தமிழ்மொழியில் நிர்வாகச் செயலாற்றக்கூடியதான பிரதேச செயலகப்பிரிவுகளிலும் கிராமசபை பிரிவுகளிலும் அதிகாரிகளாக மலையகத்தமிழர்களே நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையே இப்போதைக்கு வலுவாக முன்வைக்கப்படுதல் வேண்டும். வடகிழக்கு வாழ் தமிழ் அரசியல் தலைமைகள் இந்த கோரிக்கையை முன்னெடுக்கப் போவதில்லை. ஏனெனில் இதெல்லாம் அங்கு ஏற்கனவே உண்டு. எனவே மலையக மக்களுக்கான கோரிக்கைகள் மலையகத்தில் இருந்தே எழும்ப வேண்டும். அதற்காக அரசியல்வாதிகள் தான் இந்த குரலை எழுப்ப வேண்டும் என்று மௌனித்து  இருப்பது தவறு. அவர்கள் அறியாததையெல்லாம் அவர்களிடம் எதிர்பார்த்து  நிற்பது மகா தவறு. மலையக மக்களுக்கான குரல் மலையக மக்கள்சார் அக்கறையுள்ள அனைத்துத்தரப்புக்களினாலும் எழுப்பப்படுதல் வேண்டும்.  இதுவே எதிர்கால மலையக மக்களின் இருப்பைத் தீர்மானிக்கும்.

”உறையும் பனிப்பெண்” சிறுகதைத் தொகுப்பு விமர்சனமும், கலந்துரையாடலும்

புகழிட எழுத்தானரான சுமதி ரூபனின் உறையும் பனிப்பெண்சிறுகதைத் தொகுப்பு விமர்சனமும், கலந்துரையாடலும் என்ற நிகழ்வு கடந்த ஞாயிறு கொழும்பு பெண்கள் கல்வி ஆய்நு நிறுவத்தின் கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கலாநிதி செல்வி திருச்சந்திரன் தலைமையுரை ஆற்றுவதனையும் அருகில் சுமதி ரூபன், லெனின் மதிவானம்,  மேமன்கவி ஆகியோர் அமர்ந்திருப்பதையும் படத்தில் அவதானிக்கலாம்.

வாழும் முத்த முற்போக்கு படைப்பாளிகளுக்கான பணிநலன் நினைவுக் கூறல் நிகழ்வு

கடந்த ஜுன் மாத இறுதியில் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய
மன்றம் வாழும் முத்த முற்போக்கு படைப்பாளிகளுக்கான பணிநலன் நினைவுக் கூறல் நிகழ்வொன்றினை ஒழுங்கமைத்திருந்தனர். இந்நிகழ்வு கலாநிதி செல்வி திருச்சந்திரன் தலைமையில் நடைப்பெற்றது. போராசிரியர்கள் தில்லைநாதன், சபா. ஜெயராசா, செ. யோகராசா, கலாநிதி ந. இரவீந்திரன், லெனின் மதிவானம் ஆகியோர் உரையாற்றுவதையும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கப்பட்ட நீர்வை பொன்னயன், சமீம், ஏ. இக்பால் மற்றும் கூட்டத்தில் கலந்துக் கொண்டோரையும் படங்களில் காணலாம்.
            
 


இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட சம்மேளனம்-2013

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட சம்மேளனம் அண்மையில் நுவரெலியா புனித சவேரியர் கல்லூரியில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வே. இந்திரசெல்வன் தலைமையில் நடைபெற்றது. மறைந்த சங்கத்தின் மூத்த உறுப்பினர்களை நினைவுபடுத்தும் முகமாக 1 நிமிட நேர மௌன அஞ்சலியுடன் சம்மேளனம் ஆரம்பமானது.
வரவேற்புரையினை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா வலயசெயலாளர் எஸ். ஜீவரட்னம் நிகழ்த்தினார். தொடர்ந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வே. இந்திரசெல்வன் தலைமை உரையின் போது சங்கத்தின் கடந்தகால படிப்பினைகளையும், மலையகத்தின் தற்போதைய கல்விபிரச்சினையில் ஆசிரியர்; அதிபர் மாணவர்கள் எதிர் நோக்கும் சவால்கள் பற்றியும், சங்கம் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றியும் கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து வலயங்களில் இருந்து வருகை தந்த  ஆசிரியர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
வலப்பனை கல்விவலயத்தில் ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்ற  பிரச்சனைகள் எதிர்காலத்தில் சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துக்களை வீ.. யோகேஸ்வரன் முன்வைத்தார்.
தொடர்ந்து ஹங்குரன்கெத்த வலயத்தைச்சேர்ந்த ஆசிரியை து. தாரணி கருத்து தெரிவிக்கின்ற போது இவ்வலயத்தில் 11 தமிழ்மொழி மூலமான பாடசாலைகள் காணப்படுகின்றபோதும் ஏனைய கல்விவலயங்களை போன்று  தமிழ்மொழி ஆசிரியர் ஆலோசகர்கள் இவ்வலயத்துக்கு நியமிக்கப்படவில்லை. எனவே ஆசிரியர்கள் எவ்விதமான ஆலோசனைகளையோ பயிற்சிகளையோ, தமிழ்மொழியில் பெறமுடியாத நிலை காணப்படுவதுடன் மாணவர்களும் கல்வியில் பின் தங்கிய நிலையிலேயே காணப்படுவதாகவும் கல்வித்திணைக்களத்தில் தமிழ் பிரிவுக்குபொறுப்பாக உதவிக்கல்விபணிப்பாளர் காணப்படுவதுடன் அவருக்கும் அதிகாரங்கள் குறைவாகவே காணப்படுவதுடன் கல்விதிணைகளங்களில் கோவைகளை பரணப்படுத்தமுடியாத நிலைமை காணப்படுவதுடன் ஆசிரியர் இடமாற்றங்களையும் இலகுவில் பெறமுடியாத நிலைமை காணப்படுவதாகவும் சம்மேளனத்தின் மூலமாக இவ் வலய ஆசிரியர்களுக்குமான தீர்வினைப் பெற்றுதருமாறு கேட்டுகொண்டார்.
தொடர்ந்து நுவரெலியா வலயத்தைச் சேர்ந்த மு. சுதாகுமார் கருத்துதெரிவிக்கின்றபொழுது 2007 ஆம் வருடம் பெருந்தோட்டபாடசாலைகளில் வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனங்களில் 10 வருடங்கள் ஓரே பாடசலையில் கடமையாற்ற வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தும், தற்போதும் வலப்பனை வலயத்தில் பெரும்தொகையான ஆசிரியர்களுக்கும் ஏனைய கல்வி வலயங்களில் ஓரு சில ஆசியர்களுககும் இடமாற்றங்களும்  வழங்கப்பட்டுள்ளன.  பின்தங்கிய பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு இடமாற்றஙகள் கிடைக்கவில்லை. அத்துடன் பின்தங்கிய பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு வசதியான பாடசாலைகளுக்கு இடமாற்றங்கள் கிடைப்பதில்லை. ஓரு சில ஆசிரியர்கள் நியமனம் பெற்றது முதல்      10-20வருடங்கள் ஒரே பாடசாலையில் கடமையாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து  எஸ். சிவபெருமான்; உரையாற்றுகின்ற போது மலையக ஆசிரியர் தொழிற்சங்கம் பற்றியும் எதிர்காலத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின்; செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
நுவரெலியா வலய குழு உறுப்பினர்கள் பின்வருவோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
ஏஸ். ஜீவரட்ணம், எம். போல்ராஜ,; ஆர்.பெரியநாயகம். எஸ். கலைச்செல்வம், என்.. தயாலெனின்இ ரி.. மீனாம்பிகை,  என்.  ஹரியதர்சனி, ரி. சதிஸ்;, வீ. வேல்முகநாதன, பி;. சிவகுமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனா.;
வலப்பனை கல்விவலய உறுப்பினர்காளாக வே. இந்திரசெல்வன், ச. பரமேஸ்வரன்இ வ. விஜயாநந்தன்,               வீ.யோகேஸ்வரன், ஏ. மைக்கல், எஸ்.  நவரட்ணம், ஏ. கனேஸ்வரி,  எஸ். உலகநாதன,; எஸ். ஜனார்த்தனன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
ஆசிரியர் சம்மேளனத்தில் பின்வரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
1. ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகளை உடன் நீக்கு
2. சமமான கல்வி வழங்கு
3. தேசிய இடமாற்ற கொள்கையை நடைமுறைபடுத்து
4. கல்வியை தனியாருக்கு விற்பதை நிறுத்து
5. ஆசிரியர் அதிபர்களின் கோவைகளின் பாதுகாப்பை கல்வி திணைகளங்களில் உறுதிசெய்
6. மலையக மாணவர்களுக்கும் தேசிய பாடசாலைகளின் வசதிகளை ஏற்படுத்திகொடு
7. மலையக மாணவர்களுக்கும் தனியான பல்கலைக்கழகம் அமைத்துகொடு;
8. தகுதிகேற்ற பதவி உயர்வுகளை வழங்கு
9. வழக்கு தீர்ப்புகளை உடனே நடைமுறைபடுத்து போன்ற பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றபட்டன.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுசெயலாளர்  ஜோசப் ஸ்டாலின் உரை நிகழ்த்துகின்ற போது எமது தொழிசங்கத்திற்கு ஒரு வரலாறு இருக்கின்றது. எனவே மலையக ஆசிரியர் அதிபர் மாணவர்கள்  எதிர்நோக்குகின்ற பிரசினைகளை வெற்றிகொள்வதற்கு எமது தொழிற்சங்கம் கடமைபட்டுள்ளது. மேலும் சங்கத்தின் கடந்த கால வெற்றி தோல்விகள் பற்றியும் எதிர்காலத்தின் செயற்பாடுகள் பற்றியும,; குறிப்பிட்டதுடன் இவ் சம்மேளனத்தில் நிறைவேற்றபட்டுள்ள கோரிகைகள் தொடர்பாகவும் இங்கு முன்வைக்கப்பட்ட  ஏனைய விடங்கள் தொடர்பாகவும் மத்தியமாகாண கல்வி செயலாளருடன் சந்தித்து கலந்துரையாட உள்ளதாகவும் தொடர்ந்து தொழிற் சங்க செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து அட்டன், கொத்மலை, நுவரெலியா, வலப்னை, ஹங்குரன்கெத்த கல்விவலயங்களை சேர்ந்த ஆசிரியர்கள் அங்கத்துவங்களையும் பெற்றுக்கொண்டனர். தயாலெனின் நன்றியுரையுடன் நிறைவடைந்தது.
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates