"இந்த வெற்றியைத் தரப்போகிறவர்கள் இந்தநாட்டின் பெரும்பான்மை சிங்களவர்களே என்பதை ஆரம்பத்திலேயே நாங்கள் அறிந்து வைத்திருந்தோம்!... "
கோட்டபாயவின் பதவிப் பிரமாணத்தின் போது ஆற்றிய உரையில் கோட்டா அப்படித் தான் தெரிவித்திருந்தார்.
சிறுபான்மையினரின் வாக்குகள் இன்றியே நாங்கள் யுத்தத்தில் வெற்றி பெறுவோம் என்று கோட்டாவுக்கு பின்னர் இருந்த சிங்கள சக்திகள் தேர்தல் காலத்தில் கர்ஜித்துக்கொண்டிருந்தார்கள்.
எல்லாளனைக் கொன்று யுத்தத்தை முடித்துவைத்ததாக கூறிய துட்டகைமுனு கட்டிய அனுராதபுர "ருவன்வெளிசேய"வை கோட்டபாய பதவிப் பிரமாணத்துக்கு தெரிவு செய்தது தற்செயல் அல்ல. துட்டகைமுனுவின் இடத்தில் இருந்து இதைச் செய்வதில் பெருமைகொள்வதாக பேச்சின் ஆரம்பத்தில் கோட்டா தெரிவித்திருந்தார். கோட்டபாய முதலில் துட்டகைமுனுவின் சிலைக்கு வணக்கம் செலுத்தி கூடியிருந்த சிங்கள பௌத்தர்களின் ஆரவாரமான ஆர்ப்பரிப்புகளுடன் தான் பதவிப் பிரமாணத்துக்கு வந்தார்.
அழிக்கவே முடியாது என்று கூறப்பட்ட விடுதலைப் புலிகளை அழித்துக் காட்டியதாக ஆரவாரமாக கொண்டாடியதற்கு கிட்டத்தட்ட நிகரானதே; சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபாதியொருவர தெரிவாக முடியாது என்கிற வாதத்தை உடைத்து சுக்குநூறாக்கியது என்கின்றனர் சிங்கள சக்திகள்.
இவை இரண்டுமே கனவு என்றும், கற்பனை மட்டுமே செய்ய முடியும் என்று கூறிக்கொண்டிருந்தவர்களுக்கு அது சாத்தியம் என்பதை சிங்கள பௌத்த பேரினவாதத் தரப்பு நிறுவியிருக்கிறது.
பேரம் தேவையில்லை இனி
ராஜபக்சக்களின் அமெரிக்க விசுவாசத்தை இன்னமும் குறைத்து மதிப்பிடுகின்றன இலங்கையின் மரபு இடதுசாரிகள். அமெரிக்க எதிர்ப்புவாதத்தை இடதுசாரிகளை விட அதிக அளவு தூக்கிப்பிடித்து வந்த சிங்கள பௌத்த தேசியவாதம் ஒரு அமெரிக்கரை தெரிவு செய்ய துணிந்திருக்கிறதென்றால் மறுபுறம் அது தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான உணர்வின் உச்ச வெளிப்பாடாகவே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
இதுவரையான தேர்தலிலேயே அதிகளவு வாக்களிப்பு வீதம் இத்தேர்தலில் நிகழ்ந்திருக்கிறது. சிங்கள தேசியவாதத்துக்கும் சிறுபான்மை இனங்களுக்கும் இடையிலான தெளிவான இடைவெளியை முடிவுகள் உறுதி செய்திருக்கிறது. சிங்களப் பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் குறைந்திருந்தும் தமிழ்ப் பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்தும் கூட இதுவரையான வாக்குவீத சமநிலையை பேண முடியவில்லை.
இனி சிறுபான்மை இனங்களோடு பேரம் பேசத் தேவையில்லை, அவர்களின் அபிலைஷகளை நிறைவேற்றாததால் பாதகமில்லை என்கிற நற்செய்தியை பேரினவாதத்துக்கு அறிவித்திருக்கிறது இத் தேர்தல். வரலாற்றில் சிறுபான்மை இனங்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதியாக கோட்டா ஆனார்.
இந்த வெற்றியில் பேரினவாத நிகழ்ச்சிநிரல் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. முழு பேரினவாத சக்திகளும் ஓரணியில் திரண்டிருந்தார்கள்.
தமிழ் முஸ்லிம் சக்திகள் அப்படி ஒரு சக்தியின் கீழோ, அல்லது தேசியவாதத்தின் கீழோ, அல்லது வேறொரு திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலின் கீழோ அணிதிரண்டிருக்கவில்லை. தன்னியல்பான அரசியல் அபிலாஷையையே சிறுபான்மை மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் சிங்கள பௌத்த சக்திகள் அமைப்புகளாக இன்றி சித்தாந்தமாக ஒன்றுபட்டு வென்றிருக்கிறார்கள். எகேனவே நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புமுறைக்கு தனித்தனியாக வழிகாட்டத் தேவையில்லை. அதன் சித்தாந்தம் வழிகாட்டிகொண்டே இருக்கும். இப்போது பகிரங்கமாகவே பல இனவாத சக்திகள் களத்தில் இறங்கத் தொடங்கியுள்ளன.
"கோட்டபாய 17ஆம் திகதி வென்றதுமே நாங்கள் "தம்பி"களுக்கும், தெமலாக்களுக்கும் சரியான பாடம் புகட்டுவோம்... சிங்களவர் யார் என்பதை 17ஆம் திகதிக்குப் பின் காட்டுவோம்..." இப்படி இரு நாட்களுக்கு முன் டான் பிரசாத் முகநூலில் அறிவித்திருந்த மிரட்டலை சாதாரணமாக எடுப்பதற்கில்லை. இனி வரும் காலம் அப்படித்தான் இருக்கப் போகிறது. டான் பிரசாத் ஒரு பேரினவாத காலச் சண்டியன். சமீபகால பல இனவாத வன்முறைகளுக்கும், சம்பவங்களுக்கும் தலைமை தாங்கிய ஆபத்தானவன்.
பொதுபல சேனா
கடந்த சில வருடங்களாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் களப் போராளிகளாக இருந்து வந்த பொதுபல சேனா, சிங்கள இராவணா போன்ற சக்திகள் தமது அமைப்புகளை கலைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இலங்கையின் வரலாற்றில் சிங்கள பௌத்த சக்திகள் கலைந்து போயிருக்கின்றனவே தவிர சிங்கள பேரினவாத நிகழ்ச்சிநிரலும், அதன் சித்தாந்தமும் கலைந்தது கிடையாது.
கோட்டாவின் வருகையுடன் புதிய வடிவத்தில் புதிய இனவாத சக்திகள் அந்த இடத்தை நிச்சயம் நிரப்பும். புதிய தலைமைகளும், புதிய நிகழ்ச்சிநிரலும் அமுலுக்கு வரும்.
27.09.2014 ஐந்து வருடங்களுக்கு முன்னர் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடத்திய மாபெரும் மாநாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மாநாடு. அந்த மாநாட்டில் உலகின் மோசமான பௌத்த பயங்கரவாதி என்று அழைக்கப்படும் விறாத்து தேரர் மியான்மாரில் இருந்து வருவிக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு தான் அளுத்கம கலவரமும் நடந்து முடிந்தது. அந்த மாநாட்டில் ஞானசாரரின் பேச்சின்போது
““சிங்கள தேசிய விடுதலை போராட்டம்”. அந்த போராட்டம் ஒரு சித்தாந்த போராட்டம். அந்த கருத்து போராட்டத்தில் நாம் முதலில் வெற்றியடைய வேண்டும்.” என்றார். கூடவே அனைத்து சிங்களவர்களும் ஒரே நிகழ்ச்சிநிரலின் கீழ் அணிதிரண்டு ஒரே சிங்கள பௌத்த தலைவரை நாட்டின் தலைமைக்கு கொண்டுவரவேண்டும். சிறுபான்மையினரின் தயவின்றி அது நிறைவேற வேண்டும் என்றார்.
அது இப்போது நிறைவேறியிருக்கிறது. பொதுபல சேனாவின் பிரதான இலக்கின் ஒரு அங்கம் நிறைவேறியிருக்கிறது என்று ஞானசாரர் இப்போது கூறியிருக்கிறார். உண்மை தான் இது அவர்கள் இதுவரை நிறைவேற்றிவந்த நிகழ்ச்சிநிரலின் வெற்றி தான்.
கூடவே ஞானசார தேரர் இன்னொன்றையும் கூறினார். இது எப்படி நிறைவேற்றப்படவேண்டும் என்பது குறித்தது அது. அதற்கு அவர் சொன்ன வழிகளில் ஒன்று. நாட்டின் பௌத்த பன்சலைகளை மையப்படுத்தி சிங்கள பௌத்தர்கள் அணிதிரப்பட்டப்பட்டால் அந்த இலக்கு சாத்தியம் என்றார். இம்முறை கோட்டபாயவின் வெற்றிக்காக பல பன்சலைகள் நாடளாவிய ரீதியில் பகிரங்கமாகவும் இரகசிமாகவும் கூட்டங்கள் நடத்தப்பட்டன என்பதைக் கவனிக்க வேண்டும்.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இயங்கு திசையும், பண்பும், அளவும், அடர்த்தியும் கோட்டபாய அதிகாரத்தின் கீழ் புதிய வடிவத்தை எடுக்கப் போகின்றன என்பதை தற்போதைய சூழல் வெளிப்படுத்தியிருக்கிறது.
இனவாத வழித்தடம்
90களில் சம்பிக்க ரணவக்க சிங்கள வீர விதான இயக்கத்தைத் தொடங்கிய போது நேரடியாக களப் பணிகளை மேற்கொள்ள முன்னணி அமைப்புகளை தொடங்கினார். அதேவேளை கூடவே பேரினவாதமயப்படுத்தலின் போது கட்டமைப்பு மாற்றங்களை செய்வதற்கும், சித்தாந்த மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் பல முக்கிய இனவாத கருத்துருவாக்க நபர்களை ஒன்றிணைத்து களத்தில் இறக்கினார். அவை நேரடியாகவும் மறைமுகவும் இயங்கின.
2000ங்களின் பின்னர் நேரடி பிரதிநிதித்துவ அரசியலில் சம்பிக்க தரப்பினர் இறங்கிய பிரதான அரசியல் களத்தில் முக்கிய அங்கமாக படிபடிப்படியாகவும், வேகமாகவும் ஆக்கிக்கொண்டனர். தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தும் சித்தாந்த வழிகாட்டிகளாக அவர்கள் தான் இயங்கினர். இன்னொரு வகையில் கூறப்போனால் அவர்களுக்குப் பின்னால் தான் அரசாங்கமும், ஜே.வி.பி மற்றும் ஏனைய சிங்கள தேசியவாத சக்திகள் அணிதிரண்டன எனலாம். அந்தளவு சித்தாந்தப் பலத்தை கட்டியெழுப்பியிருந்தார்கள்.
யுத்தத்துக்கான நியாயங்களை சிங்கள மக்கள் மத்தியில் பலப்படுத்திய அதே வேளை, அரசை இனவாத கருத்துக்களால் கட்டுப்படுத்தியும் அடிபணிய வைத்தும் இருந்தனர். யுத்தத்துக்கான வழிப்பாதையை ஏற்படுத்தியும் கொடுத்தனர்.
அதே சம்பிக்க மைத்திரி - ரணில் ஆட்சியில் ஒரு சிறந்த அமைச்சராக காணப்பட்டார். ஆனால் அமைச்சரவையில் பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்க காரணமாக இருந்தார். மறைமுகமாகவும், திரைமறைவிலும் இயங்குகிற பேரினவாத வடிவம் தான் பேராபத்தை விளைவிக்கக் கூடியவை. அப்பேர்பட்ட வடிவத்தின் அடுத்த கட்டத்தை கோட்டபாய அரசு இப்போது தொடக்கியிருக்கிறது. கோட்டபாய எதிரிகளை தாக்குவதற்கு தனது வாயைப் பயன்படுத்துவதில்லை.
“செயல் அதுவே சிறந்த சொல்” என்றார் ஹொசே மார்த்தி என்னும் கியூப தத்துவஞானி. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் போட்டியாளரை தனிப்பட குறைசொல்லி பிரச்சாரம் செய்யாத ஒரே ஒரு பிரதான போட்டியாளர் கோட்டபாய தான். கோட்டாவை குறை கண்டுபிடிப்பவர்கள் பலர் இப்போதும் கோட்டாவின் அன்றைய வாய் வார்த்தைகளைக் கொண்ட காணொளிகளையும், குரல் பதிவுகளையும் நிறையவே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். கோட்டா அவற்றில் இருந்தெல்லாம் பாடம் கற்றுக்கொண்டிருகிறார். கோட்டாவிடம் இருந்து அப்படியான ஆதாரங்களை இனி நீங்கள் பெற முடியாது.
இனவாத செயற்திட்டங்கள் செயலில் மட்டும் தான் நாம் காண முடியும். அந்தளவு அது தன்னை நவீனமயப்படுத்தியிருக்கிறது. வரலாற்றுப் பாடங்களில் இருந்து திறமையாக தகவமைத்துக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறது.
அமெரிக்க குடிமகன்
"பின்வரும் அறிக்கையை நான் உண்மையானது என்று அறிவிக்கிறேன். நான் வேறு நாட்டுடன் நான் கொண்டிருந்த பந்தம், உறவு, விசுவாசம் என்பவற்றை இத்தால் முற்றிலும் கைவிடுவதோடு அமெரிக்க அரசியலமைப்பை மேலும் ஆதரிப்பேன், அதன் விதிகளை மதிக்கிறேன். அவருக்கு எதிராக எழுந்து நின்று அமெரிக்காவைப் பாதுகாத்து அவ்விதிகளை மதித்து தேவைப்படும்போதும் அமெரிக்காவிலும் வெளியிலும் அமெரிக்காவுக்காக ஆயுதம் தாங்குவேன். படை நடவடிக்கைகலோடோ தொடர்பில்லாத இராணுவச் சேவைகளிலும் தேவையேற்படும் வேளை ஈடுபடுவேன் என்று உறுதியளிக்கிறேன். இதனை சுயவிருப்புடனும், எந்த மனக்குழப்பமுமின்றியும் அறிவித்துக்கொள்கிறேன். கடவுள் உதவுவாராக”
இப்படித்தான் தான் கோட்டபாய அமெரிக்க குடியுரிமை பெற்றபோது அங்கு அவர் செய்துகொடுத்த சத்தியப்பிரமானம். இதற்கு முன்னர் ஒரு இலங்கையனாக அவர் இராணுவத்தில் பல தடவைகள் இந்த நாட்டின் இறைமையையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்த பாடுபடுவதாக சத்தியப்பிரமாணம் செய்திருக்கிறார் கோட்டா. அதே கோட்டா 25 வருடங்களின் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்கும் போது அந்த விசுவாசங்களை கைவிட்டுவிட்டு மீண்டும் இப்படி சத்தியப்பிரமாணம் செய்கிறார்.
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு*ஏழாம் அட்டவணை157அ(7) உறுப்புரையும் 161 (ஈXiii) ஆம் உறுப்புரையும்“................. ஆகிய நான் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பை உறுதியாகப் போற்றிக் காப்பேன் என்றும், இலங்கையின் ஆட்புலத்துக்குள்ளாகத் தனி அரசொன்று தாபிக்கப்படுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ ஆதரவு அளிக்கவோ, ஆக்கமளிக்கவோ, ஊக்குவிப்பு அளிக்கவோ, நிதி உதவவோ, ஊக்குவிக்கவோ, பரிந்துரைக்கவோ மாட்டேன் என்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதிசெய்கிறேன் ; சத்தியஞ்செய்கின்றேன்.”
கோட்டபாய 1971 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து 1972 இல் லெப்டினென்ட் ஆக கடமையாற்றியவர். சிங்க ரெஜிமென்ட், ரஜரட்ட, கஜபா ரெஜிமன்ட் ஆகியவற்றில் பணிபுரிந்து பின்னர் 1992 இல் லெப்டினன்ட் கேர்னல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். வடக்கில் ஒப்பரேஷன் லிபரேஷன், ஸ்ட்ரைக் ஹார்ட், திரவிட பலய ஆகிய படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்.
2012 ஆம் ஆண்டு மாத்தளையில் கட்டுமானப் பணியொன்றின் போது கண்டு பிடிக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழி பற்றிய சர்ச்சை நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட 150 மனித உடல்களின் எலும்புக் கூடுகள் அங்கே கண்டு பிடிக்கப்பட்டன. இது 1986 – 1990 ஜே.வி.பியை நசுக்குவதற்குமேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது கொள்ளப்பட்ட சிங்கள இளைஞர்களின் சடலங்கள் என சந்தேகிக்கின்றனர். இந்தக் காலப்பகுதியில் மாத்தளையின் இராணுவ இணைப்பாளராக கடமையாற்றியவர் கோட்டபாய என்பது குறிப்பிடத்தக்கது.
1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அமைதி காக்கும்படை நாட்டை விட்டு வெளியேறியதும் இரண்டாம் ஈழ யுத்தம் தொடங்கியது. யுத்த நிலைமை தீவிரம் பெற்ற போது குடும்பத்தின் நெருக்குவாரம் காரணமாக இராணுவத்தை விட்டு விலகினார். 1991 நவம்பர் 1 கோட்டபாய இராஜினாமா செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன 1991 மார்ச் 2 அன்று கொழும்பில் புலிகளால் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதற்கு அவர் உளவியல் சிக்கலைக் காரணம் காட்டித்தான் இராஜினாமவைக் கொடுத்துவிட்டு இராணுவத்தை விட்டோடி அமெரிக்காவில் சரணடைந்தார் என்கிறார் பீல் மார்ஷல் சரத் பொன்சேகா.
2005 ஆம் ஆண்டு தனது சகோதரர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானவுடன் தான் அமெரிக்காவிலிருந்து வந்திறங்கினார் கோட்டபாய. அமெரிக்க குடியுரிமையைக் கைவிடாமலேயே அவர் இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக ஆக்கப்பட்டார். மகிந்த அரசாங்கத்தின் அதீத அதிகாரங்களைக் கொண்டவராக இருந்த இந்தக் காலத்தில் நிகழ்ந்த பல்வேறு காணாமல் போதல், ஊடகவியலார்கள் கொலை, வெள்ளை வேன் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு காரணமானார். கோட்டபாயவைப் பார்த்து நாடே நடுநடுங்கும் நிலை உருவானது.
கடந்த 35 ஆண்டுகளில் இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து விஞாபனங்களில் இடம்பெறாத, முக்கியத்துவம் பெறாத தேர்தல் இது. அதுபோல ஜனாதிபதியொருவரின் பதவிப்பிரமான உரையில் இனப்பிரச்சினை குறித்த எந்த குறிப்பும் இடம்பெறாத உரையும் இது தான்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வைக் கூறாமலேயே வென்ற ஜனாதிபதி. அதுபோல சத்தியப்பிரமானத்தன்று நிகழ்த்திய உரையில் தேசியப் பிரச்சினை குறித்து அலட்சியமாக எதுவும் சொல்லாமல் விட்ட ஜனாதிபதியும் இவர் தான். இலங்கையின் தேசிய உடையை இதுவரை தவிர்த்து வந்திருக்கிற முதல் அரச தலைவரும் இவர் தான்.
வெற்றிபெற்றதன் பின்னர் கூட சர்வ மத பிரார்த்தனைகளுக்கு இடம் கொடாமல் பௌத்த பிக்குமார்களின் ஆசீர்வாதங்களுடன் மட்டுமே பதவியேற்புகளை மேற்கொண்டார்கள். கடந்த அரசாங்கத்தில் குறைந்தபட்சம் சகல நிகழ்வுகளிலும் சர்வ மதத் தலைவர்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன போன்றோர் இந்த ஆட்சியில் முக்கிய இடம் பிடிக்கின்றனர்.
“இனப்பிரச்சினை தீர்வு என்கிற பேரில் புதிய அரசியலமைப்பை ஆதரிப்பவர்கள் தேசத்துரோகிகள். அவர்களுக்கு மரணதண்டனை அளிக்கவேண்டும். 6 அடி உயரத்தில் அத்தகைய தேசத்துரோகிகளின் பிணங்களை தூக்கிச்செல்லவும் விடக்கூடாது. அப்பிணங்களை கயிற்றால் கட்டி தரையில் இழுத்துச்செல்லவேண்டும்.”
என்று கோட்டாபயவை வெல்ல வைப்பதற்காக தொடங்கப்பட்டிருந்த “வியத்மக” இயக்கத்தின் கூட்டத்தில் சில மாதங்களுக்கு முன் அப்படி உரையாற்றியிருந்தார். இறுதியுத்தம் பற்றி “நந்திக் கடலுக்கான போர்ப்பாதை” என்கிற நூல் உள்ளிட்ட முக்கிய போர்க்கால நூல்களை எழுதியவர். பிரபாகரனின் மரணத்தை முதன் முதலில் அறிவித்தவர். இப்போது அவருக்கு பாதுகாப்பு செயலாளராக பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
இலங்கையின் தேசியவாதம் என்பது சிங்கள பௌத்த தேசியவாதமாகவும், பின்னர் இனவாதமாகவும், பேரினவாதமாகவும் வளர்ச்சியடைந்து ஈற்றில் பாசிசமாக அவ்வப்போது தலைதூக்கி வந்திருப்பதை நாமறிவோம். அப்பேர்பட்ட புதிய சிங்கள பௌத்த நவபாசிச போக்கின் நவநாயகனாக கோட்டா இன்று தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். எனவே தான் பாசிசத்துடனான பேரினவாதத்தின் சமரசத்துக்கு கிடைத்த வெற்றி என்கிறோம்.
இந்த வெற்றி சிங்கள - பௌத்த - வலதுசாரி - சாதியாதிக்க - ஆணாதிக்க கூட்டின் வெற்றி இது.
நன்றி - தினக்குரல்