Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மலையகமெங்கும் தொடர் போராட்டம்! வீதிகளை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நியாயமான சம்பளத்தை வழங்குமாறு கோரியும் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மலையகமெங்கும் நேற்று வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளாகவும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் மேற்கொண்டனர்.

இரண்டாம் நாள் ஆர்ப்பாட்டத்தில் ஒப்பாரி வைத்தது போன்றே நேற்று ஐந்தாம் நாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதும் அட்டன் நுவரெலியா பிரதான வீதியை மறித்து மறியல் போராட்டத்தை நடத்திய தொழிலாளர்கள் ஒப்பாரி தமது அவலத்தினை பறைசாற்றினர். 

அத்துடன் உருவ பொம்மையை எரித்து தமது எதிர்ப்பினை வெ ளியிட்ட தொழிலாளர்கள், வீதிகளிலும் ரயில் பாதைகளிலும் குறுக்காக படுத்தும் தமது எதிர்ப்பினை வெ ளிப்படுத்தினர். இதனால் பல இடங்களில் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டது.

கடந்த ஐந்து தினங்களாக இவ்வாறு வீதிகளில் இறங்கிய தோட்டத் தொழிலாளர்கள் தமது கடுமையான ஆட்சேபத்தையும் முதலாளிமார் சம்மேளனத்தின் மீதான வெறுப்பினையும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான ஆதங்கத்தினையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டி வருகின்றனர்.

நேற்றுக் காலை 9 மணியளவில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் மல்லியப்பூ சந்தியில் கூடிய 2000இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீதியை முற்றாக மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதானியொருவரது உருவபொம்மையை வீதியின் நடுவே நிறுத்தி தீ வைத்துக் கொழுத்தி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.

கொட்டகலை, பத்தனை ஆகிய பிரதேசங்களுக்குட்பட்ட 42 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே இவ்வாறு மல்லியப்பூ சந்தியில் ஒன்றுகூடினர். இதனால் இங்கு போக்குவரத்துமுற்றாக தடைப்பட்டதுடன் நெரிசலான நிலையும் ஏற்பட்டது. 

இதேபோன்று பூண்டுலோயா பகுதியிலும் தொழிலாளர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அதேவேளை ரம்பொடை, பெரட்டாசி தோட்டங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

அதேபோன்று நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் டேவோன் மற்றும் சென்ட் கிளேயர் வீதியையும் மறித்த தொழிலாளர்கள் போக்குவரத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் விதத்தில் தமது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை கினிகத்தேனையில் கெனில் வத்த தோட்ட மக்கள் தமக்கு நியாயமான சம்பளம் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இரத்தத்தை மண்ணிற்கு உரமாக சிந்தும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே என்று கோஷமிட்டவாறு தமது எதிர்ப்பினை அவர்கள் வெளியிட்டு பேரணியாக சென்றனர்.

இதேபோன்று ஹேவாஹெட்ட ஹோப் தோட்டத் தொழிலாளர்களும் ராஹாத்துங்கொட, முல்லோயா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் பதாகைகளை ஏந்தி எதிர்ப்புக் கோஷங்களை வெளியிட்டு பேரணியாக சென்று தமது எதிர்பினை வெளிக்காட்டும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்த கூட்டு ஒப்பந்தம் 17 மாதங்களாகியும் புதுப்பிக்கப்படவில்லை. அத்துடன் பத்து தடவைகள் இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் வெற்றியளிக்கவில்லை. இதனால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் சாதகமான தன்மை ஏற்படாததுடன் இழுத்தடிப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 இந்நிலையிலேயே தாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாக உணர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்த தொடங்கினர். கடந்த 26 ஆம் திகதி திங்கட்கிழமை அட்டனில் முதலாவதாக தொழிலாளர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதன் தொடர்ச்சியாக நேற்று வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளாகவும் வீதிகளை மறித்தும் டயர்களை எரித்தும் உருவ பொம்மைகளை எரித்தும் பேரணிகளை நடத்தியும் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டினர். 

அதுமாத்திரமின்றி கம்பனிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் தோட்டத் தொழிலாளர்கள் தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.

இதன்போது " முதலாளித்துவமே வேலைக்கேற்ற சரியான நிரந்தர ஊதியத்தை கொடு ", "தொண்டா எங்கே ஆயிரம் ரூபா" "கூட்டு ஒப்பந்தம் வேண்டாம்", "நெருப்புடா நெருங்குடா வைச்சிட்டாங்க ஆப்புடா"

 "1000 ரூபா சம்பளம் கொடு", "கம்பனி பொறுப்பாளர்களே சுகபோகம் அனுபவிப்பது நீங்கள், சுமை எம்மீதா?உடன் உயர்த்து சம்பளத்தை"

 "எங்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடு", "பதவியை மட்டும் பார்க்காது வாக்களித்தை மக்களையும் நிமிர்ந்து பாருங்கள்", "18 மாதம் கடந்தும் சம்பளம் ஏன் இன்னும் தாமதம்"

 "நாங்களும் இந் நாட்டு மக்களே நல்லாட்சி எங்கே", "அரசே நிம்மதி எப்போது மலையகத்துக்கு" "எங்களை பழிவாங்குவது கம்பனியா அரசா", "அடிமை என்று நினைத்தாயா அக்கினியாய் எழுந்திடுவோம்" 

"ஏழையின் இரத்தத்தை உறிஞ்சாதே", "முதலை தோல் போத்திய முதலாளியே எமக்கு 1000 ரூபா சம்பளம் கொடு," 

உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தி தமது எதிர்ப்பினை காட்டினர். 

நன்றி - வீரகேசரி

அன்று வாக்குரிமை இல்லை பிரதிநிதித்துவழும் இல்லை... இன்றோ இருந்தும் - முனுசாமி நேசமணி


சுதந்திரம் கிடைத்த பின்னர் இலங்கையில் மிக மோசமான தாக்குதலுக்கு உள்ளானது எமது இந்திய வம்சாவளி தமிழினம் தான் என்பது வேதனையான உண்மையாகும். பிரஜாவுரிமை சட்ட சீர்திருத்தம் காரணமாக வாக்குரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக ஆக்கப்பட்டோம். 68 ஆண்டுகளின் பின்னர் வாக்குரிமை பெற்றவர்களாக இருந்தாலும் புதிய உத்தேச அரசியல் யாப்பு திருத்தத்திலே மலையக மக்களுக்கு எதுவித அதிகார பரவலாக்கலும் வழங்கப்படுவதற்கான அறிகுறி தென்படவில்லை. இவற்றிற்கு சிகரம் வைத்தாற்போல் தற்போது அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் தேர்தல் திருத்தத்தில் மலையக பிரதிநிதித்துவம் முற்றாக இல்லாமல் செய்யப்படும் அபாயம் காணப்படுகிறது.

1948 இல் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டபோது எமது தலைமைகளோ வடகிழக்கு அரசியல்வாதிகளோ பாரிய எதிர்ப்பு போராட்டம் எதனையும் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் சுமத்தப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு அதன் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதோடு எமது நடவடிக்கை அமைந்திருந்தது. அன்றைய இலங்கையின் பொருளாதாரம் தேயிலையிலேயே முற்றுமுழுதாக தங்கி இருந்தது. ஒருநாள் கூடையை இறக்கி வைத்தாலே பாரிய இழப்பு என்ற நிலை இருந்தது. அன்றைய எதிர்ப்பு நடவடிக்கை கொழும்போடு முற்றுப்பெற்று விட்டது. மலையகத்துக்கு எடுத்துச் செல்லப்படவில்லை. முழு மலையகத்திலும் பாரிய பணி நிறுத்தம் மேற்கொண்டிருந்தால் அந்த சட்டத்தை வாபஸ் பெறும் நிலைமைக்கு அரசாங்கத்தைத் தள்ளி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்று இருப்பது போல் பிளவுபட்ட தலைமைகள் அப்போது இல்லை. வாய்ப்பைத் தவற விட்டுவிட்டோம்.

இன்று எமது சமூகம் அரசியல், கல்வி, பொருளாதார துறைகளில் வளர்ச்சி பெற்றிருப்பதாகக் கூறிக்கொள்கிறோம். ஆனால், வரப்போகும் ஆபத்தைப் பற்றி எந்த அளவு விழிப்புணர்வுடன் நாம் இருக்கிறோம் என்று பார்த்தால் திருப்தி கொள்ளும் வகையில் இல்லை. ஓரிரு தொண்டு நிறுவனங்களும் சில கட்சிகளும் அரசியல்வாதிகள் மட்டுமே அக்கறையுடன் தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இது போதுமானதல்ல. ஒட்டுமொத்த மலையகத்தையும் நேரப்போகும் பாரிய நெருக்கடியை நோக்கி கவனம் செலுத்த எம்மாலான அனைத்தையும் செய்திட வேண்டும்.

எமது நாட்டில் இதுவரை இருந்து வந்த அரசியல் யாப்புகள் அனைத்தும் பெரும்பான்மை இனத்தையும் மதத்தையும் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்டவைகளே. கொஞ்ச நஞ்சம் உள்ள சிறுபான்மையினருக்கான சலுகைகளையும் உரிமைகளையும் இல்லாமல் செய்வதற்கே இந்த யாப்புகள் உதவின. யாப்பிலே ஏதாவது சேர்க்கப்பட்டாலும் நடைமுறையில் அவை செயற்படுவதில்லை. தமிழ்மொழி அமுலாக்கலை உதாரணமாகக் கொள்ளலாம். நுவரெலியாவிலும் அம்பகமுவவிலும் தமிழ்மொழியும் அரசகரும மொழி என்று யாப்பில் கூறப்பட்டிருக்கிறது. நுவரெலியா வைத்தியசாலையில் சென்று அவதானித்தால் தமிழ் அமுலாகும் இலட்சணத்தைப் பார்க்கலாம். தினமும் ஆயிரக்கணக்கில் அங்கு வருகை தரும் எமது பெருந்தோட்ட நோயாளிகளுக்கும் கட்டாயம் சிங்களம் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் வைத்தியர்களும் கூட சிங்களத்திலேயே உரையாடுகின்றார்கள். தங்கள் நோய்களை எடுத்துக்கூற எம்மவர்கள் படும்பாடு வேதனை தரக்கூடியது. இத்தனைக்கும் எமது அரசியல் தலைமைகள் எல்லாமே நுவரெலியா மக்களின் வாக்குகளில் வந்தவர்கள் என்பதை இங்கு கூறத்தேவையில்லை.

புதிய அரசியலமைப்பு ஏன் எமக்கு அவசியம், அரசியல் அமைப்பு என்றால் என்ன, அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள், அரசியலமைப்பின் உருவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் எவ்வாறு கருத்து தெரிவிக்க வேண்டும், இலங்கைக்கு புதிய அரசியல் அமைப்பு ஏன் அவசியப்படுகிறது போன்ற பல்வேறு அம்சங்களைப் பற்றி ஊடகங்களிலும் வேறு வழிகளிலும் எடுத்துக்கூறப்பட்டு வருகின்றன. எனவே, இங்கு அது பற்றி நாம் விளக்கத் தேவையில்லை.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசியல் யாப்பு எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று கூறுவார்கள். தேர்தல் சீர்திருத்தம் அவராலேயே கொண்டு வரப்பட்டது. தொகுதிவாரியான பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட்டு விகிதாசார பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொகுதிவாரி பிரதிநிதித்துவத்தின் மூலம் யு.என்.பியும் ஸ்ரீல.சு.க வுமே மாறிமாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருந்தன. சில தேர்தல்களில் ஒற்றை இலக்கத்தில் இவை தொகுதிகளைப் பெற்று தோல்வியைத் தழுவி இருந்தன. எதிர்பாராத விதமாக தமிழரசுக்கட்சி அதிக ஆசனங்களைப் பெற்று ஸ்ரீல.சு.க. வை பின்தள்ளி எதிர்க்கட்சியாகி அமிர்தலிங்கம் தலைவரானார். விகிதாசார முறை அப்போது கடைப்பிடிக்கப்பட்டிருக்குமானால் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த எவரும் அப்பதவியைப் பிடித்திருக்க முடியாது. எனவே, பெரும்பான்மை அரசியல்கட்சிகளே ஆட்சியிலும் எதிர்க்கட்சியிலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அன்று தேர்தல் முறை பாற்பட்டது.

அவர்களது எதிர்ப்புகளுக்கு மாறாக அதே தமிழரசுக்கட்சி சம்பந்தன் இப்போது எதிர்க்கட்சித் தலைவராகி விட்டார். ஆனால், இந்த நியமனத்திற்குப் பின்னால் அரசியல் இருப்பதை எல்லோரும் உணர்வார்கள். இதுபோலவே சிறுபான்மைத் தமிழர்களும் முஸ்லிம்களும் குறிப்பிடத்தக்க அளவு பிரதிநிதித்துவத்தைப் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எமது பிரதிநிதிகள் இன்று பெருமளவு சபைகளில் இருப்பதற்குக் காரணம் விகிதாசார தேர்தல் முறையே.

புதிய தேர்தல் சீர்திருத்தம் மீண்டும் தொகுதிவாரியை முன்னிலைப்படுத்தப் போகிறது. இது அமுலானால் நுவரெலியாவில் கூட எம்மவர் ஒருவர் தானும் வர முடியுமா என்பது சந்தேகமே! யு.என்.பி.யுடன் இணைந்து நின்றாலே ஓரளவு வெற்றி வாய்ப்பு உளளதாகத் தெரிகிறது. 1977 தேர்தலில் நுவரெலியாவில் போட்டியிட்ட அமரர் தொண்டமான் மூன்றாவது அங்கத்தவராக நூலிழையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது மக்கள் அமரர் காமினி திசாநாயக்கவுக்கு வாக்களித்து அவரை முதலாவது அங்கத்தவராக்கினர். நுவரெலியா மாவட்டத்தின் வடகிழக்கு வாக்குகளே தொண்டமானை வெற்றி பெறச் செய்ததாக அப்போது பேசிக் கொண்டார்கள். மீண்டும் அதே நிலைமை வரக்கூடிய சாத்தியப்பாடுகளே புதிய அரசியலமைப்பின் நடைமுறையின் பின்னர் எழக்கூடும். பெரும்பான்மையின கட்சிகளின் தயவில்லாமல் பாராளுமன்றம் செல்வது இயலாத ஒன்றாகி விடும்.

இதனை கருத்திற்கொண்டு எமது அரசியல் தலைமைகள் தமக்குள் மோதிக்கொள்வதை விடுத்து வரப்போகும் துயரத்தைத் தடுக்கப் பார்க்க வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். 1948 இல் இருந்த நிலையில் எமது சமூகம் இன்று இல்லை என்பதை பார்த்தோம். எதையும் புரிந்து அறிந்து செயற்படக்கூடியவர்களாக நாம் மாறி இருக்கின்றோம். செயல்வடிவங்களே இன்றைய தேவையாகும்.

வீடு, காணியுரிமை பற்றி காலங்காலமாக பேசிக்கொண்டு இருக்கின்றோம். வீடுகள் குறிப்பிடத்தக்க அளவு உருவாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு உறுதிகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் உடனடி கவனம் செலுத்திட வேண்டும். காணிகள் பகிர்ந்தளிப்பிலும் எமது அவதானம் தீவிரமாக இருக்க வேண்டும். தேயிலைக்கு காலம் இன்னும் ஐந்து வருடங்களே என்று தலைமைகளே கூறிவருகின்றன. தேயிலை இல்லாமல் போனால் எமது குடியிருப்புகளே கேள்விக் குறியதாகி விடும். தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதால் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குத் தேயிலைச் செடிகளை பகிர்ந்தளித்து உபரித் தொழிலாளர்களாக மாற்றும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. பறிக்கும் கொழுந்துக்கேற்ப கொடுப்பனவு தீர்மானிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. ஊழியர் சேமலாப நிதி போன்ற எல்லா வித சலுகைகளும் நிறுத்தப்படுமாம். இதனால் மலையக மக்களின் இருப்பே கேள்விக்குறியாகி உள்ளது. இன்றைய அடிப்படைப் பிரச்சினை அவர்களது இருப்பை பாதுகாப்பதாகும். மிகவும் தந்திரமான முறையில் மலையக மக்களை நிர்மூலப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களையும் தடுத்து நிறுத்திவிட வேண்டும்.

வடகிழக்கு தமிழ்மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். அமைதி திரும்பும் போது அவர்கள் மீள வந்து குடியமர சொந்தமாகக் காணி இருக்கிறது. ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் புலம்பெயர்ந்த இலட்சக்கணக்கான தமிழர்கள் மீள வரமுடியாது. அது போலவே தோட்டங்கள் இழுத்து மூடப்பட்டால் வெளியே உள்ள இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் மீண்டும் வந்து குடியேற இங்கு எதுவித உரிமையும் இல்லை. தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டபோது வெளியேற்றப்பட்ட எம்மக்கள் இன்றும் அநாதைகளாகப் போக்கிடமற்று இருக்கின்றார்கள்.

எழுபதுகளில் வடகிழக்கு தலைவர்களின் அழைப்பை ஏற்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கிளிநொச்சி, வவுனியா, செங்கலடி போன்ற பிரதேசங்களில் குடியேறினர். காந்தீயம் போன்ற அமைப்புக்கள் இதற்கு உதவிகளைச் செய்தன. இப்போது இவர்களின் இலட்சக்கணக்கான வாக்குகளைக் கொண்டு அங்குள்ளவர்கள் அரசியல் செய்கிறார்கள். அந்தப் பகுதிகளில் உள்ள எம்மவர்களின் காணி மற்றும் பொருளாதார பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை.

இறுதிக்கட்ட போரில் அகதிகளாக புனர்வாழ்வு முகாம்களில் நூற்றுக்கணக்கில் தஞ்சமடைந்தவர்களும் இங்கிருந்து சென்றவர்கள் என தெரிகிறது. தோட்டங்கள், கிராமங்கள் ஆக்கப்பட்டு கிராம மக்களுக்கு வழங்கப்படும் சகல உரிமைகளும் சலுகைகளும் இவர்களுக்கும் கிடைக்கச் செய்வதே உடனடித் தேவையாகும். தலைமைகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய இறுதித் தருணம் இதுவாகும்.

1948 பிரஜாவுரிமை சட்டம், 1964 ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம், 1972 நிலச் சீர்திருத்தம், 1977 1983 தொடர் இனமோதல் என தொடர் மோதல்களுக்கு நாம் முகங்கொடுத்து வந்திருக்கிறோம். 2016 இலும் எமது இருப்பை இல்லாமல் ஆக்க எடுக்கப்படும் சதி முறியடிக்கப்பட வேண்டும் என்பதே எமது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி - வீரகேசரி

தோட்டங்கள் காடாக மாறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை - என்னென்ஸி


பெரும்பாலான தோட்டங்கள் போதிய பராமரிப்பின்றி காடுகளாக மாறிவரு-வதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக பெருந்தோட்டங்களுக்கான கொழுந்து அறுவடை குறைந்துள்ளதுடன் தொழிலாளர்-களால் தோட்டங்களில் பணிபுரிய முடியாததொரு நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

சில காலங்களுக்கு முன்புவரை பெருந்தோட்டக்கம்பனிகள் பெருந்தோட்டங்-களை நல்லமுறையில் பராமரித்து வந்தன. அதேநேரம் அரசாங்க நிறுவனங்-களினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்கள் கவனிப்பாரற்ற நிலையில் புல் வளர்ந்து காடுகளாகக் காட்சியளித்தன.

ஆனால், இன்று பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்-களும் ஒரே மாதிரியாக காடுகளாகக் காட்சியளிக்கின்றன. இது பெருந்தோட்டத் தொழிற்றுறை படிப்படியாக கைவிடப்படுகின்றதோ என்ற அச்சத்தை தொழிலா-ளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

முன்னொரு காலத்தில், அதாவது களைநாசினி (புற்களை அழிக்கும் இரசா-யனம்) அறிமுகமாவதற்கு முன்னர் முற்றுமுழுதாக தொழிலாளர்களைக் கொண்டே புற்கள் வெட்டி அகற்றப்பட்டன. தின சம்பளத்துக்காக மட்டுமன்றி கொந்தராத்து (கொந்தரப்பு) முறையிலும் புல்வெட்டுவதற்கு தொழிலாளர்கள் பயன்-படுத்தப்பட்டனர். அந்தக் காலத்தில் பெருந்தோட்டங்கள் சுத்தமாகவும் அழகாக மட்-டுமன்றி அதிகளவில் தேயிலைக் கொழுந்து அறுவடையைத் தரக்கூடியதாகவும் இருந்தன. அது வெள்ளைக்காரன் காலம் என்பர்.அத்துடன் கிருமிநாசினி பயன்படுத்-தப்படாத, இரசாயனம் கலக்காத தேயிலையை பெறக்கூடியதாக இருந்தது.

பின்னர் குறித்த காலப்பகுதியில் புற்களை அழிப்பதற்காகப் பல்வேறு வகை-யிலான இரசாயனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன. அதனால், பெருந்தோட்டங்கள் சுத்தமாக, புற்கள் வளராமல் இருந்தன. தொழிலா-ளர்கள் ஓரளவு பாதுகாப்புடன் வேலை செய்து வந்தனர்.

அத்துடன் பெருந்தோட்டப் பயிர்களுக்கு போடப்படும் உரங்கள் நேரடியாக பயிர்களுக்கே கிடைக்கக்கூடியனவாக இருந்தது. தேயிலை, இறப்பர், தென்னை போன்ற பயிர்களும் ஓரளவு செழிப்புடன் வளர்ந்தன.

இதனைத் தொடர்ந்து வந்த காலத்தில் பெருந்தோட்டங்களில் புற்களை ஒழிப்பதற்கு களைகொல்லி இரசாயனங்களை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்-பட்டது.

அதேவேளை, இரசாயனங்கள் பயன்படுத்தாத தேயிலைச் செய்கையும் சில தோட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில்தான் தேயிலை, இறப்பர், தென்னந்தோட்டங்களில் அதிக-ளவு புற்கள் பெருகி காடாக மாறத்தொடங்கின. இதேவேளை புற்களை அகற்றுவ-தற்கு அதிக தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டியநிலை ஏற்பட்டதுடன் பெருந்தொகை பணத்தையும் பெருந்தோட்டக் கம்பனிகள் செலவிடவேண்டிய நிலையும் ஏற்பட்டது. ஆனால், பெரும்பாலும் தோட்டக்கம்பனிகள் அவ்வாறு செய்-யவில்லை.

புற்களை அகற்றுவதற்கு அதிகளவிலான பணத்தை செலவு செய்ய முடி-யாத நிலையில் இருப்பதாகக்கூறி அப்படியே விட்டுவிட்டன.

இந்த நிலையில், புற்கள் அதிகளவில் வளர்ந்து, புதர்களாக மாறி, காடாகக் காட்சியளிக்கின்றன. அதுமட்டுமன்றி அவை தேயிலைச் செடிகளின் வளர்ச்சியை ஒடுக்கி தேயிலையையே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளன. பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, களுத்துறை, மாத்தறை மாவட்டங்களில் மட்டுமின்றி நுவரெலியா மாவட்டத்திலும் கூட இந்த மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. சில தோட்டங்களில் தேயிலையைவிட புற்களே உயரமாக வளர்ந்து காணப்படுகின்றன.

தேயிலை எது, புல் எதுவென்று கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுகி-றது.இதனால், தேயிலை, இறப்பர் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவே சுட்டிக்காட்டப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்டத் தொழிலையே நம்பியிருக்கும் இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வாதாரம் முற்-றாக அழிந்து போகும் அபாயம் தோன்றியுள்ளது.

இதனைப் பற்றி பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்கள் பெரும் விசனம் தெரி-வித்து வருகின்றனர்.

இதனிடையே சில பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கத் தலைவர்களும் அரசியல்வாதிகளில் இன்னும் ஐந்து வருடகாலத்தில் பெருந்தோட்டத்துறை குறிப்-பாக தேயிலைச் செய்கை முற்றாக அழிந்து போய்விடுமென்று பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான பேச்சுக்கள் தேயிலையை மட்டுமே நம்பி-யிருக்கும் தொழிலாளர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வரு-கின்றது.

தோட்டத் தொழிலாளர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகக் கூறிக்-கொண்டு அவர்களின் சந்தாப் பணத்தில் சுகபோகம் அனுபவித்து வந்ததுடன் வரு-வதுடன் மட்டுமல்லாமல் அவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்தில் அமர்ந்தி-ருக்கும் தலைவர்கள் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கு நடவ-டிக்கை எடுக்காமல் அச்சுறுத்தி வருவது மனிதாபிமான செயற்பாடாகத் தெரிய-வில்லை.

தோட்டங்களை சீர்செய்து தொழிலாளருக்கு நிரந்தர வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதுடன் தேயிலைத் தொழிற்துறையையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அதுபற்றி விமர்சனம் செய்து வரும் தலைவர்கள் தொழி-லாளருக்கு தலைமைத்துவத்தை கொடுக்க முடியாதென்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தேயிலைத் தொழிலை பாதுகாப்பதன் மூலமே அதனையே நம்பியிருக்கும் தொழிலாளர்கள் வாழமுடியும். வேறு தொழிலோ அல்லது பிற பயிர்ச்செய்கை-கான காணிவசதியோ இல்லாத நிலையில் தேயிலைத் தொழில் அழிவடைந்தால் தொழிலாளரின் நிலைமை என்னவாகும் என்பதை மனிதாபிமானத்துடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மறுபுறத்தில் தொழிற்சங்ப அரசியல் தலைவர்களை மட்டும் நம்பியிராமல் தொழிலாளர்கள் சுயமாக சிந்தித்துச் செயற்பட வேண்டியதொரு நிலைமையும் ஏற்பட்டுள்ளதையும் இது வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தேயிலைத் தொழிலைப் பாதுகாப்பதற்கு தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுசேர்வதுடன் தமது முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டிய காலமும் வந்துள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

தோட்டங்கள் சிறுத்தைகள், காட்டு எருமை மாடுகள், பாம்புகள், பன்றிகள் மற்றும் இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் வாழும் இடங்களாக மாறுவதிலிருந்து மீட்டு, இலாபமீட்டும் தொழில்துறையாக மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும்.

நன்றி - வீரகேசரி

புசல்லாவ இளைஞனின் மரணத்தில் தொடரும் மர்மம் - நேசமணி


புஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனின் திடீர் மரணமானது அப்பகுதியெங்கும் பெரும் பதற்றத்தையும் பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.

புஸல்லாவை ரொத்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நடராஜா ரவிச்சந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவர் பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 17 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் புஸல்லாவை பொலிஸ் சிறைக்கூண்டில் தடுத்துவைக்கப்பட்ட அன்று இரவு 7 மணியளவிலேயே இம்மரணச் சம்பவம் இடம்பெற்றமையால் அப்பகுதி மக்கள் மத்தியிலும் குறித்த இளைஞனது குடும்பத்தவர்கள் மத்தியிலும் இம்மரணம் தொடர்பில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

பொலிஸ் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த இளைஞன் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்த போதிலும் அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள், பொலிஸாரின் தாக்குதல் காரணமாகவே அவ்விளைஞன் உயிரிழந்திருக்க கூடுமெனக் கூறி தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென கடந்த ஞாயிறு புஸல்லாவ பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியெங்கும் பெரும் பதற்றம் நிலவியது. பெரும் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. இவ்வாறான நிலையில் அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையை அவதானித்து பொதுமக்களுடன் நிலைமை குறித்து உரையாடியதுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றுவதற்கும் உறுதியளித்தனர்.

அதற்கமைய புஸல்லாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்போது இடமாற்றப்பட்டுள்ள அதேவேளை, சம்பவ தினம் இரவு கடமைக்குப் பொறுப்பாக இருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்கள். சம்பவம் குறித்த சுயாதீன விசாரணைகளுக்காகவே குறித்த பொலிஸார் மீது இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

ரவிச்சந்திரன் என்ற இளைஞன் சில மாதங்களுக்கு முன்னர் குற்றச்செயலொன்றில் ஈடுபட்டமை இனங்காணப்பட்டு அவருக்கு நீதிமன்றத்தினால் தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இச்சந்தேக நபர் தண்டப்பணம் செலுத்த முடியாத நிலையில் சமூக சேவை செய்ய இணக்கம் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சமூக சேவை செய்வதாக ஏற்றுக் கொண்ட இவர் அதனை செய்யாமையினால் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையிலேயே 17 ஆம் திகதி மாலை புஸல்லாவைப் பொலிஸார் மேற்படி இளைஞனை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட போது குறித்த இளைஞன் மதுபோதையில் இருந்ததாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன. எனவே, கைது செய்யப்பட்ட அவ்விளைஞனிடம் வாக்கு மூலங்களைப் பதிவு செய்து கொண்டு அதன் பின்னரே பொலிஸார் அவரை சிறைக்கூண்டில் தடுத்து வைத்துள்ளனர்.

இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருந்த அவ்விளைஞன் தான் அணிந்திருந்த ரீ ஷேர்ட்டினால் சிறைக்கூண்டிற்குள் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் அதன் பின்னர் அவரை உடனடியாக புஸல்லாவை மாவட்ட வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட தினத்தன்று இரவு 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையிலேயே குறித்த இளைஞன் உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது. இவ்விளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்த போதிலும் அவ்விளைஞன் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருக்கவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் இந்த சம்பவம் குறித்து நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்த நடராஜா ரவிச்சந்திரனின் இறுதிக் கிரியைகள் 19ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களை நடத்த வேண்டாமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனடிப்படையில் அமைதியாக எவ்வித குழப்பமும் இன்றி இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.

சடலத்தை தகனம் செய்ய வேண்டாமெனவும் நல்லடக்கம் செய்யுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

அதற்கமைய உயிரிழந்த ரவிச்சந்திரனின் சடலம் புஸல்லாவ தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்த குறித்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்தாரா? என்ற சந்தேகம் தொடர்ந்தும் காணப்படுகின்றது. இவ்விளைஞனின் முக்கிய உடற் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அந்த இரசாயன பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னரே இந்த மரணம் குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.

எது எவ்வாறு இருப்பினும் இந்த இளைஞனது மரணம் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்பதே சகல தரப்பினரதும் வேண்டு கோளாக உள்ளது.

இதேவேளை, பொலிஸார் கடமையை மீறியிருப்பின் அவர்களுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுமென சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேபோன்று நாடு முழுவதிலும் உள்ள சிறைக்கூடங்களில் சீ.சீ.ரி.வி. கமராக்களை பொருத்துவது குறித்தும் கவனம் செலுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரணமாக சிறைச்சாலைகளில் இடப்படும் கைதிகளை அரை மணித்தியாலயத்திற்கு ஒரு தடவை பொலிஸார் சோதனைக்குட்படுத்த வேண்டும். அவ்வாறு புஸல்லாவை பொலிஸ் நிலைய சிறைச்சாலை சோதனைக்குட்படுத்தப்பட்டடிருக்கவில்லை என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதாவது குறித்த சந்தேக நபரான இளைஞனை மாலை 4.40 மணியளவில் புஸல்லாவையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன் பின்னர் பொலிஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்ட பொலிஸார் அவரை மாலை 5.15 மணியளவில் சிறைக்கூட்டில் அடைத்துள்ளனர். அதனடிப்படையில் மாலை 6.45 மணிக்குப் பின்னர் இந்த சிறைக்கூடம் சோதனைக்குட்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அதாவது இரவு 7.40 மணியளவில் சிறைக்குள் சத்தம் கேட்டதாகவும் அதன் பின்னர் சென்று பார்த்த போது சிறைக் கூடத்தில் ரி.ஷேர்ட்டால் சுருக்கிட்டு குறித்த இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அதனையடுத்தே தாம் அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே மாலை 6.45 மணிக்கு சிறைக்கூடம் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தால் இரவு 7.15 மணியளவில் மீண்டும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடந்திருக்கவில்லையென்று தெரியவருவதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எப்படியிருந்தாலும் இந்த மரணத்தின் உண்மையான பின்னணி என்னவென்பது கண்டறியப்பட வேண்டும். அதனடிப்படையிலே அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து அவதானம் செலுத்தலாம்.

இந்த கட்டுரை பிரசுரமாகும் வரை பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட குறித்த இஞைனது உடல் பாகங்களின் அறிக்கை கிடைக்கப் பெற்றிருக்க வில்லை.

நன்றி - வீரகேசரி

இலக்கியத்தின் புது எழுச்சி "நித்தியச் சோலை" - பெருமாள் மகாலிங்கம்


மலையகத்தில் கவிதை, சிறுகதை என வருடம் தோறும் பல நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன் மூலம் சமூகத்தின் நிலையை படைப்பாளிகள் படம் பிடித்து காட்டுகின்றனர்.

மலையகத்தின் நாவல் இலக்கியமானது அவ்வப்போது பேசும் இலக்கியங்களாகவே காணப்படுகிறது. தூரத்துப் பச்சை, காலங்கள் சாவதில்லை, மூட்டத்தின் உள்ளே போன்றே நாவல்கள் பதுளை மண்ணின் பெருமைக்குரிய படைப்புக்களாக காணப்படுகின்றன. கவிதை, நாவல், சிறுகதை என்ற சகல துறையிலும் பதுளை சிறந்த படைப்புக்களையும், படைப்பாளிகளையும் பெற்ற பூமியாக காணப்படுகிறது. கவிதைக்கு தமிழோவியன், சிறுகதைக்கு சேனாதிராஜா, நாவலுக்கு தெளிவத்தை ஜோசப் என்று குறிப்பிடமுடியும்.

பண்டாரவளை பூனாகலை பிரதேசத்தில் அதிபராக கடமையாற்றும் என்.நித்தியஜோதி கவிதை, சிறுகதை, கட்டுரையாக்கம், விமர்சனம் என பன்முக ஆளுமையுள்ள எழுத்தாளராகக் காணப்படுகிறார். இவரிடம் இலக்கிய துறைக்கான பங்களிப்பும் மிக அதிகமாக காணப்படுகிறது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கொழும்பு, கண்டி என பல பிரதேச இலக்கிய அமர்வுகளில் கலந்து கொண்ட அனுபவமும் விடயதான தேடலும் கொண்டவராகக் காணப்படுகிறார்.

இவர் வாழ்க்கைச் சோலை என்ற நவீன நூலின் முதலாம் பாகத்தை அண்மையில் வெளியிட்டுள்ளார். பதுளை மொழிவரதன், பிபிலை ஜெயபாலன், தெமோதரை வெங்கடேஸ்வரன் வரிசையில் நித்தியஜோதியும் இணைந்து கொண்டுள்ளார். இதே வேளை ஏனைய சமூக, பிரதேச படைப்பிலக்கியவாதிகளுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்கள் பதுளை எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே கல்வி கற்ற சமூகத்தையும் வர்த்தகப் பிரமுகர்களையும் நம்பியே நூல்களை வெளியிட வேண்டியுள்ளது.

நாட்டில் சில அமைப்புகள் சில இலக்கியவாதிகளின் கவிதை, சிறுகதைகள் போன்றவற்றை அச்சடித்து சந்தைப்படுத்துகின்றன. நூலின் பின் அட்டையிலோ அல்லது இடைநடுவிலேயோ சிரிக்கும் முகத்துடன் காணப்படும் எழுத்தாளன் பசை உள்ள கைகளிடம் சிக்கி தமது படைப்புரிமையை வேறு காவலருக்கு கையளித்துவிடும் நிலை காணப்படுகிறது. இது கொழும்பு, மலையகமென பேதம் கண்டு வருவதில்லை. வெளியீட்டு விழாவின் போது எழுத்தாளன் ஓரம் கட்டப்படுவதும், சில சுரண்டல் மனிதர்களால் கொச்சைப்படுத்தி விமர்சிக்கப்படுவதும் மேடையில் முன்வரிசை சபையோருக்கு பலமுறை கேட்டுதான் உள்ளது.

கவிஞர் நித்தியஜோதி தனது கவிதைகளிலும் சிறுகதைகளிலும், கட்டுரைகளிலும் சமூகம் சார்ந்த கருப்பொருளை வாசகரின் எண்ணவோட்டங்களுக்கு அமைய எழுத்துக் கோவையாக்கும் வல்லமை கொண்டவர். அவரின் கவிதைகளில் நகைச்சுவை இருக்கும். அவரின் சிறுகதைகளில் சமூக பிரஞ்ஞை இருக்கும். அவரின் கட்டுரைகளில் தகவல்களும், தரவுகளும் இருக்கும்.

வாழ்க்கைச் சோலை நூலானது பிரதேசம் கடந்த, பல மதங்களை சார்ந்த மக்களிடையே மனித விழுமியங்களை விதைத்து தேசங்களில் சமாதானம் விளைவதை காட்டுவதாகவும், அவ்வமைதி தேயிலைத் தோட்டங்களில் உருவாவதாகவும் காட்டுகிறார். விஞ்ஞானம் கற்ற கணினியுக இளைஞர்களால் மலையகத்தை நிமிர்த்திக் காட்ட முடியுமென நாவல் பாத்திரங்கள் மூலம் கூறும் கவிஞர், சிங்களம், ஆங்கில மொழிபெயர்ப்பு, வரிகள் மூலம் மலையக நாவல் படைப்பை புதியவெளிக்கு அழைத்துச் செல்கிறார். மதங்கள் மனிதரை தூய்மைப்படுத்துவதற்காகவே என சொல்லவரும் கவிஞர், மனிதர்களின் உயரிய செயற்பாடுகள் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள மதங்களையும் உயர்த்தி விடுகிறது என்கிறார்.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்ட நாவலானது நாட்டின் வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்துப் பிரதேச வாசகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் நாவலாக அமையும் என்று கூறலாம்.

நன்றி - வீரகேசரி

பிணைக்காக பிடிக்கப்பட்ட பெண்கள்! (1915 கண்டி கலகம் –50) - என்.சரவணன்


பின்வரிசையில் நிற்போர் :
பண்டாரநாயக்க (எப்.ஆர்.சேனநாயக்கவின் மைத்துனர்), டீ.எஸ்.சேனநாயக்க, எப்.ஆர்.சேனநாயக்க, டீ.சீ.சேனநாயக்க.
அமர்ந்திருப்போர் :
மேரி சேனநாயக்க (எப்.ஆர்.சேனநாயக்கவின் சகோதரி), டொன் ஸ்பட்டர் சேனநாயக்க, திருமதி ஸ்பட்டர் சேனநாயக்க.

லவரம் நிகழ்ந்து முடிந்து அமைதிக்குத் திரும்பிய பின்னர் தொடர்ச்சியாக பேணப்பட்ட இராணுவச் சட்டக் காலப்பகுதியில் நிகழ்ந்த அராஜகங்களில் இன்னொன்று பெண்கள் மீதான துஷ்பிரயோகங்களும், அவமரியாதைகளும். அவை குறித்து முறைப்பாடுகளும் ஆங்காங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓரளவு விபரம் தெரிந்த பெண்களாலேயே இந்த முறைப்பாடுகள் பீதியின் மத்தியில் பதிவு செய்யப்பட்டன. அவர்கள் நிரபராதிகளாக இருந்த போதும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நித்திரையில் இருந்தவர்கள் உடுத்திய இரவு உடையில் இழுத்துச் செல்லப்பட்டார்கள். பொதுச் சிறைகளில் வேறு குற்றவாளிகளுடன் அடைக்கப்பட்டார்கள். சரீர ரீதியில் இம்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள். அதிகாரிகளால் தேடிப்பிடிக்க முடியாத சந்தேக நபர்களுக்குப் பதிலாக அவர்களின் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இந்த நிலைக்கு உள்ளானார்கள். இவை குறித்த சத்திய  கடதாசிகளும் காலனித்துவ காரியதரிசி பொனார் லோவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பிணைக்காக பெண்கள்
இப்படி பண்டாரகம தொன் ஹெலேனா தேவரப்பெரும கன்னங்கர அனுப்பிய சத்தியக் கடதாசியில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

1915 ஜூன் மாதம் ஒரு சனிக்கிழமை நாளில் பஞ்சாப் படையினர் இருவருடன் போலீசார் இருவரும் ஒரு ஆங்கிலேயருடன் ஹொரண பொலிஸ் விசாரணையதிகாரி அதிகாலை நான்கு மணிக்கு இவரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள். ஹெலேனாவின் கணவரைத் தேடி வந்த போது கணவர் வீட்டில் இருக்கவில்லை. உடனேயே அவரது 16 வயது மகனுடன் அவரை வரச் சொல்லி ஆணையிட்டனர். ஹெலேனா இரவுநேரம் உடுக்கும் மெல்லிய இரவுடையில் இருந்ததால் உடையை மாற்றிக்கொண்டு ஒழுங்காக வருவதாக கெஞ்சியிருக்கிறார். ஆனால் அந்தப் படையினர் தம்முடன் உடனடியாக வராவிட்டால் மகனுடன் சேர்த்து அவரையும் சுட்டுகொல்வதாக மிரட்டியுள்ளனர். உடனடியாக தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அந்த வாகனத்தில் ஏற்கெனவே இரு பெண்களும் ஒரு ஆணும் இருந்திருக்கிறார். இவர்களை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று அடைத்தனர். அந்த சனிக்கிழமை இரவு வரை உணவு கூட கொடுக்காமல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு பாய் கூட இருக்கவில்லை. சோர்வில் அவர்கள் வெறும் நிலத்திலேயே சுருண்டு கிடந்தனர்.

ஹெலேனவின் கணவர் பொலிசில் சுயமாக வந்தடைந்தார். அதன் பின்னர் தான் ஹெலேனா விடுவிக்கப்பட்டார். ஹெலேனா கைது செயப்பப்படுவதற்கு முன்னரோ, அதற்குப் பின்னரோ கூட அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருக்கவில்லை.

டீ.எச்.விஜெகோன் என்பவரின் மனைவி ஹாமர் விஜேகோன் என்பவருக்கும் இதே போன்று நிகழ்ந்தது.  பண்டாரகம தோன லோரா பொன்சேகா என்று அந்த சத்தியக் கடதாசியில் கையெழுத்திட்டிருந்தார்.  அதே நாள் அதே அதிகாரிகள் அதிகாலை தனது வீட்டுக்கு வந்து தன்னை எழுப்பி வீட்டை சோதித்துவிட்டு தம்முடன் வரும்படி ஆணையிட்டனர். ஒழுங்கான மேலாடையை அணிந்துகொண்டு வரும்வரை சற்று பொறுக்கும்படி வேண்டினார் அவர். உடனடியாக தம்முடன் இப்படியே வராவிட்டால் சுட்டுக்கொன்றுவிடுவதாக எச்சரிக்கவே அவரும் அப்படியே சென்றுள்ளார். அவருக்கு 7 பிள்ளைகள். பால் குடிக்கும் ஒரு பேரப்பிள்ளையும் பராமரித்துவந்துள்ளார். அந்தக் கைக்குழந்தையை அருகில் இருந்த இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு போகவேண்டிய நிலை ஏற்பட்டது. பெருமழை பெய்துகொண்டிருந்த நிலையில் அவரை தூரத்தில் இருந்த வாகனத்துக்கு இழுத்துச் சென்றனர். அந்த வாகனத்தில் ஏற்கெனவே ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமாக நான்கு பேர் இருந்ததை அவர் கண்டார். பாணத்துறை பொலிசுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் உணவோ, நீரோ இன்றி இரவு உடையிலேயே அன்றைய நாள் முழுவதும் அவர்களின் கணவர்மார் வந்து சரணடையும் வரை சிறைப்படுத்தி வைத்திருந்தனர்.

எந்தக் குற்றமும் இழைக்காத, நிரபராதிகளான இந்தப் பெண்களை இரவு உடையில் அவர்களை இழுத்துச் சென்று சிறையிடும் குரூர, ஈனத்தனமான மனநிலையை நினைக்கவே அருவருக்கிறது என்று ஆர்மண்ட் டீ சூசா தனது நூலில் சாடுகிறார். இந்த சகலவித முறைப்பாடுகளையும் விசாரணை செய்வதனை நிராகரித்தார் பொனார் லோ. தமக்கு நேர்ந்தது குறித்து வழக்கு தொடர்ந்தவர்கள் சிலர் பொலிஸ் அதிகாரிகளால் மிரட்டப்பட்டு மீளப் பெறப்பட்ட சம்பவங்கள் குறித்தும், அத்தகைய முறைப்பாடுகள் தவறாக செய்யப்பட்டுவிட்டதாக கூறி வாபஸ் செய்தவர்களை நீதிமன்றம் “பொய்க்குற்றச்சாட்டு” சுமத்தி கடூழிய தண்டனை வழங்கிய சம்பவங்கள் குறித்தும் விளக்கமாக ஆர்மண்ட் டீ சூசா தனது நூலில் விளக்கியுள்ளார்.
ஹர்ரி க்ரீசி Harry Creasy
இலங்கை சட்ட சபையில் ஐரோப்பிய பிரதிநிதியாக இருந்த ஹர்ரி க்ரீசி (Harry Creasy) 1915 ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி சட்டசபையில் ஆற்றிய உரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“கௌரவ உறுப்பினர்களே பெருமளவு மக்கள் இந்த நாட்டின் சிறைச்சாலைகளுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எந்தவித குற்றச்சாட்டுக்களும் இல்லாத நிலையில் பலருக்கு தண்டனை அளித்து விடலாம் என்று  இந்த நாட்டின் அதிகாரிகள் நினைக்கிறார்கள். இப்படி அடைக்கப்பட்டவர்களில் பல கனவான்களும், பல காலமாக நான் அறிந்த மனிதர்களும், அரசாங்கத்துக்கும் கூட சார்பான பலரும் சிறை அனுபவிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இவர்களில் பலர் இந்த கலவரத்தைத தடுப்பதற்காக அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் என்பதை நான் தனிப்பட்ட ரீதியில் அறிவேன்.”
கிரீசி கூறுவதைப் போல பெரும்பாலானோர் அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்த வசதிபடைத்த, மக்கள் சேவைகளிலும், தேச நலனிலும் ஈடுபாடுகொண்டவர்கள்.

சேனநாயக்க சகோதரர்கள்
சிறைப்பிடிக்கப்பட்டவர்களில் எப்.ஆர்.சேனநாயக்க, டீ.எஸ்.சேனநாயக்க, டீ.சீ. சேனநாயக்க இளம் சகோதர்கள் மூவரும் உள்ளடங்குவர். படித்த “உயர் குழாமைச்” சேர்ந்த இவர்கள் மதுவொழிப்பு இயக்கத்தின் முக்கிய பாத்திரங்கள். மக்களால் போற்றப்பட்ட இவர்கள் எந்த குற்றச்சாட்டுக்க்களும் இன்றி இரு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிப்பட்டார்கள்.
அப்துல் ரஹ்மாn WM Abdul Rahman
எப்.ஆர்.சேனநாயக்க  கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழத்தில் பட்டம்பெற்றவர். ஒரு வழக்கறிஞர். கொழும்பு நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர். பெருமளவு தோட்டங்களுக்கு சொந்தக்காரர். கலவரம் நிகழ்ந்தபோது போலிஸ் தலைமையகத்துக்குச் சென்று தன்னால் எப்படி ஒத்துழைப்பு வழங்கமுடியும் என்று வினவியவர். ஒத்தாசைகளை வழங்கியவர். நகர மேயருடன் பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்று பார்வையிட்டு, குழுமிய மக்கள் கூட்டத்தை களைத்தத்துடன் நிலைமையை விளக்கி அமைதி காக்க பணியாற்றியவர். மேலும் திரும்பி வரும் வழியில் பெருமளவு முஸ்லிம் மக்கள் பயத்தில் காடுகளில் போய் மறைந்திருப்பத்தை அறிந்து அங்கு சென்று அவர்களை பாதுகாப்பாக உரிய இடங்களுக்கு அனுப்பியதுடன், எவருக்கும் பயமின்றி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலருக்கு சொந்த வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தவர். முஸ்லிம் சட்டசபை உறுப்பினரான அப்துல் ரஹ்மான் தனது மகளுக்கு என்ன நேர்ந்தது என்று தேடித்திரிந்த வேளை எப்.ஆர்.சேனநாயக்கவின் ஒத்துழைப்பை நாடியதுடன் நள்ளிரவில் அப்துல் ரஹ்மானுக்கு அவரது மகள் பத்திரமாக இருக்கும் செய்தியை அறிவித்தவர்.
எப்.ஆர்.சேனநாயக்க

அப்படிப்பட்ட அவரின் வீட்டுக்குள் புகுந்த படையினர் பல தஸ்தாவேஜூக்களை எடுத்துச் சென்று பின்னர் ஜூன் 21ஆம் திகதி கைது சென்று ஓகஸ்ட் 05 வரை அவரை சிறையில் அடைத்து வைத்திருந்தனர். எப்பேற்பட்டாவது தன்னை குற்றவாளியாக்கும் முயற்சியில் சாட்சிகளைத் தேடுவதற்காக அதிக பிரயத்தனம் எடுக்கின்றனர் என்று சிறையில் இருந்த போது சக கைதிகளிடம் கூறியிருக்கிறார். விடுதலையானதன் பின்னர் முன்னரை விட அதிகமாக தனது அரசியல் மற்றும் சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அவர். அவரைப் போலவே அவரது சகோதரர்கள் உட்பட கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த பலர் பின்னர் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் விடுவிப்பட்டனர். இவர்களில் சிலருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் கடுமையானவை. அவர்களின் மீது கடுமையான தீர்ப்பை வழங்குவதற்கு இராணுவ நீதிமன்றத்துக்கு சிறு ஆதாரம் கூட போதுமானவை. ஆனால் அப்பேற்பட்ட சிறு ஆதாரத்தைக் கூட அவர்களால் நிரூபிக்க முடியாத நிலையில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.

இந்தக் கைதுகள் குறித்து ஆளுநரைத் தவிர வேரெவராலும் காரணம் கூறப்படவில்லை. ஆளுநர் குடியேற்ற காரியதரிசிக்கு அனுப்பிய கடிதத்தில் இப்படி குறிப்படப்பட்டிருந்தது.

“29 வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்கள் (ஈ.டபிள்யு.பேரேரா வால் குடியேற்ற காரியதரிசிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இருந்து) பாதுகாப்பு காரணங்களாலேயே சிறைவைக்கப்பட்டனர். இவர்களுக்கு ரயில் ஊழியர்களை தூண்டிவிடுவதற்கான அவசியம் பல சந்தர்ப்பங்களில் வாய்ப்புகள் இருந்திருக்கின்றன.”

மறுபுறத்தில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கும் ரயில் ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் இடையில் எந்தவித சம்பந்தமும் இருக்கவில்லை.
கலவரத்தை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தந்தவர்கள் எப்படி “பாதுகாப்புக்கு இடைஞலானார்கள்”. “பாதுகாப்பு காரணங்களாலேயே” என்று ஆளுனரால் குறிப்பிடப்பட்டதானது எத்தனை பெரிய புரட்டுமிக்க காரணம் என்பதை பின்னர் வரலாறு மெய்ப்பித்தது.

ஏறத்தாழ 100 நாள் இராணுவ சட்ட கால கட்டத்தில் சிங்களவர்கள் பழி வாங்கப்பட்டவிதம் குறித்து ஆச்சரியமான தகவல்களே கிடைக்கின்றன. சிங்கள ஆவணங்கள் கட்டுரைகள், ஆய்வுகள், நூல்கள் என்பனதான் சிங்களவர்கல் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், முஸ்லிம்களே இத்தனைக்கும் காரணம் என்கிற புனைவையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் உண்மையில் அவற்றுக்கு வெளியில் தேடப்பட்ட பல ஆவணங்களில் இருந்து உண்மையில் சிங்களவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டமையை மறுக்க முடியாதபடி வரலாற்றுத் தகவல் மெய்ப்பித்திருகின்றன. முஸ்லிம் தரப்பு எதிர்கொண்ட பாதிப்புகளையும், சிங்கள சமூகம் எதிர்கொண்ட பாதிப்பு குறித்தும், அரசியல், பொருளாதார, சமூக, கலாசார காரணிகளைக் கொண்டு அளவீடு செய்ய வேண்டியிருக்கிறது. இதில் சற்று பிசகினாலும் இனத்துவ முரண்பாட்டு அரசியல் போக்கை விளக்குவதில் தவறு செய்தவர்கள் பட்டியலில் இணைந்துவிடுவோம். எனவே இது கரணம் தப்பினால் மரணம் நிலையையே உணர வேண்டியிருக்கிறது.

இலங்கையின் முதலாவது இனக்கலவரமாக கொள்ளப்படுவதால் வரலாற்று நூல்களில் இந்த நிகழ்வு பலமுறை சிறிதாக பதிவு செய்யப்பட்டதும் தவறவிடப்பட்ட தகவல்களையும், தரவுகளையும், போக்குகளையும், காரணிகளையும், காரணங்களையும் விளக்குவதே இந்த தொடரின் பணி.

தொடரும்..

நன்றி - தினக்குரல்


ஒப்பந்தக்காரர்களின் பிடிக்குள் மலையக அபிவிருத்திப் பணிகள் - கௌஷிக்


அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அவ்வாறு மலையகத்துக்கு ஒதுக்கப்படும் நிதி ஊழல் மோசடியின்றி முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்று பொதுமக்களால் குற்றம் சுமத்தப்படுகிறது.

உள்ளூராட்சி சபை அதிகாரிகளின் கண்காணிப்புடன் இத்தகைய நிதிகள் செலவிடப்படுகின்றன. பாதை சீரமைப்பு, குடியிருப்புகள் அமைத்தல், மின்னிணைப்புகள், நீர்வழங்கல்கள் போன்ற ஒட்டுமொத்த வேலைத்திட்டங்களை செய்து முடிக்க ஒப்பந்தக்காரர்கள் (காண்ட்ரக்டர்கள்) நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஒப்பந்தக்காரர்கள் சபைகளால் அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும். இவர்களின் அங்கீகாரத்தை மக்கள் பிரதிநிதிகள் முன்னின்று பெற்றுக்கொடுக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பினாமிகளாக உறவினர்களையும் நண்பர்களையும் நியமித்துக்கொள்வார்கள்.

சபை அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றுக்கொண்டுதான் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் நேரில் வந்து பணிகள் இடம்பெறும் இடங்களைப் பார்வையிட வேண்டும். அவர்களை ஸ்பொட்டுக்குக் கூட்டிக்கொண்டு வரவே ஒப்பந்தக்காரர்களின் ‘கவனிப்பு’ தேவைப்படும். இங்கே தொடங்கும் கையூட்டு விவகாரம் பணிமுடிந்து பணம் பெறும்வரை தொடர் போராட்டமாக இருக்கும். தமிழ்நாட்டின் வார இதழ் ஒன்று இதனை இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது. ‘அலுவலகத்தின் பியூன், உதவி கிளார்க், தலைமை கிளார்க், உதவி தாசில்தார் என அத்தனை பேருக்கும் லஞ்சம் கொடுத்தால்தான் குறிப்பிட்ட (ஃபைல்) கோப்பு மேசையைவிட்டு நகர்ந்து செல்லும். வேலையின் தன்மைக்கேற்ப ‘ரேட்’ நிர்ணயிக்கப்படுகிறது.’ இவ்வாறு அந்த வார இதழ் கருத்துக் கூறியிருந்தது. எல்லா வகையிலும் தமிழகத்தைப் பிரதிபலிக்கும் எமது உள்ளூர் அரசியல்வாதிகளும் அச்சொட்டாக இந்த நடைமுறைகளையே கைக்கொள்கின்றனர்.

உள்ளூராட்சிச் சபை அலுவலகங்களில் கடமையாற்றும் சிலர் இதுபற்றி விசனம் தெரிவிக்கின்றனர். மக்களின் வாக்குப் பலத்தால் வெற்றிபெற்றவர்கள் மக்களின் பணத்தை எவ்வாறு சூறையாடுகிறார்கள் என்பதை கவலையுடன் கூறுகின்றனர்.

வைகைப்புயல் வடிவேலு ஒரு திரைப்படத்தில் தோன்றியபோது, ‘தன்னுடைய கிணற்றை யாரோ களவாடிவிட்டார்கள்’ என காவல் துறையிடம் முறையிடுவார். கிணறு இருந்ததாகக் கூறப்படும் இடத்துக்கு வந்து பொலிஸார் தலைமுடியை பிய்த்துக்கொள்வார்கள். தலைமை அதிகாரி தனது பொலிஸ் உடைகளைக் கழற்றி வைத்துவிட்டு செல்வதாக அந்தக் காட்சி இருக்கும். அது ஒரு நகைச்சுவைக் காட்சியாக இருந்தாலும் ஊழல் எவ்வாறு எல்லா மட்டங்களிலும் தலைவிரித்தாடுகிறது என்பதை எடுத்துக் கூறுகிறது.

மலையகத்திலும் ‘கிணறு காணாமல் போன கதைகள்’ பல இருப்பது பற்றி அலுவலர் சிலர் கூறுகின்ற தகவல்களில் இருந்து தெரிகிறது. ஹட்டன் பகுதியில் ஒரு நீண்ட பாதை ‘கார்பெட்’ செய்யப்பட இருப்பதாகக் கூறி அடிக்கல் நாட்டப்பட்டது. தோட்டப் பகுதியூடாகச் செல்லும் பல கிலோ மீற்றர் பாதை இது. மக்கள் பெருமளவு கூடியிருந்து பூஜையோடு அடிக்கல் நாட்டப்பட்டது. அதே தினத்தில் மஸ்கெலியாவில் தோட்டப்பகுதி பாதை ஒன்றுக்கும் இவ்வாறு பூஜை போடப்பட்டது. அதன்பின் அந்த பணி ஆரம்பிக்கப்படவே இல்லை. குறிப்பிட்ட வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லையா? வந்த நிதிக்கு என்னவானது என்பதும் தெரியவில்லை. வழக்கம் போல் மக்களும் மறந்துவிட்டார்கள். அந்த அரசியல்வாதியும் காணாமல் போய்விட்டார்.

ஹட்டன் பகுதியில் இருந்து பதுளைக்கு சென்ற திட்ட அதிகாரி அவர். அங்கே கார்பெட் பாதை அமைப்பதற்கென கோலாகலமாக பூஜை போடப்பட்டது. வேலைத்திட்டம் பற்றிய பெயர்ப்பலகை ஒன்றும் நாட்டப்பட்டது. சிறிது காலத்தின்பின் அப்பெயர்ப் பலகை காணாமல் போய்விட்டது. உரிய நிதி அந்த அதிகாரியினால் பெறப்பட்டதாகக் கூறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் தனது ஓய்வுகால பணத்தில் அதனை மீளச் செலுத்தினார் என்பது ஊரறிந்த இரகசியமாகும்.

தலவாக்கலை பகுதியில் ஓரிடத்தில் கலாசார மண்டபம் அமைப்பதற்கான பூஜை போடப்பட்டு பெரிய பெயர்ப்பலகை ஒன்று நாட்டப்பட்டது. பல மாதங்கள் வெறும் பெயர்ப்பலகை மட்டுமே காட்சியளித்துக் கொண்டிருந்தது. பின்னர் ஒருநாள் இரவோடிரவாக அந்தப் பலகை அகற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. நிதி ஒதுக்கீடு இல்லாமலா அடிக்கல் நாட்டப்பட்டது என்ற கேள்வி இயன்றளவும் விடை தெரியாமல் உள்ளது.

இதே பகுதியில் தோட்டமொன்றில் விளையாட்டு மைதானம் அமைப்பதாகக் கூறி பூஜை போடப்பட்டது. ஹட்டன் நுவரெலியா வீதி புனரமைக்கப்பட்ட காலம் அது. வெட்டப்படும் மண்ணை இந்த மைதானத்தில் கொட்டி மட்டமாக்கிக் கொடுத்தது அந்தப் பாதை அபிவிருத்திக்குப் பொறுப்பான வெளிநாட்டு நிறுவனம். ஆனால், பூஜை போட்ட பிரதிநிதி தானே அதனைச் செய்து முடித்ததாக நிதியைப் பெற முயற்சித்துள்ளார். மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து அதனைத் தடுத்துவிட்டனர். பின்னர் மறந்துவிட்ட நேரத்தில் அந்நிதி கைமாறியதாகக் கூறப்படுகிறது.

எமது மக்கள் பிரதிநிதிகள் கோயில்களுக்கு நிதி ஒதுக்குவதில் அதீத அக்கறை காட்டுவார்கள். சிலைகள், சீமெந்து, கூரைத் தகடுகள், கட்டடப் பொருட்கள் என பெருவாரியான நிதி கோயில்களுக்குப் போய்ச் சேருவதாக கணக்கு காட்டப்படும். கோயில் கமிட்டித் தலைவர்கள் தங்கள் தேவைகளுக்குப்போக போனால் போகிறது என ஒரு சிறு தொகையைக் கணக்கு காட்டுவார்கள். வருடக் கணக்கில் கோயில் பணி இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும். கோயில் கமிட்டிகள் இந்த காலத்தில் பல தடவைகள் மாற்றம் பெற்றிருக்கும். எவரிடம் கணக்கு கேட்பதென்று தடுமாறுவார்கள். கோயில்களில் குடிகொண்டிருக்கும் சாமியா சாட்சி சொல்ல வரப்போகிறார். வழக்கம்போல் கொள்ளையர்களை ஆசீர்வாதம் செய்து கொண்டிருப்பார். வேறென்ன அவரால் செய்யமுடியும்?

சிலர் சாமி சாபம் போட்டுவிடக் கூடாது என்பதற்காக சாமி சிலையையே மாற்றிவிடுவார்கள். மக்கள் பிரதிநிதிகளும் சாமி சிலைகளாக வாங்கிக் குவித்து அதிலும் பணம் பார்த்துவிடுவார்கள். இலங்கையில் எங்காவது ஒரு மூலையில் அந்த சிலைகள் வடிக்கப்பட்டிருக்கும். குறைந்த விலையில் தயாராகும் இந்த சிலைகள் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டவை என கணக்குக் காட்டி இலாபம் பார்த்துவிடுவார்கள்.

முதல் இல்லாத வியாபார நிலையங்களாக பிரதேச சபைகள் மற்றும் மாகாண சபைகள் மாறிவிட்டனவோ என மக்கள் சந்தேகப்படுகிறார்கள். எப்படியாவது சபைகளில் உறுப்பினராகிவிட வேண்டும் என்பதே எமது அரசியல்வாதிகளின் குறிக்கோளாக உள்ளது. ஆரம்ப காலங்கள் பிரதேச மற்றும் மாகாண சபைகளில் சாதாரண தொழிலாளர்கள் பிரதிநிதிகளாக இருந்தனர். கட்சி பிரதானமாக இருந்தது. இன்று பிரதேச சபைத் தேர்தலில்கூட கோடிக்கணக்கில் செலவிட்டு போட்டியில் இறங்குகிறார்கள். போஸ்டர்கள், பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள், பத்திரிகை, வானொலி விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்கள்.

காண்ட்ரக்ட் மூலம் செலவழித்த பணத்தைத் தேடிக் கொள்ளலாம் என்ற நிலைமை இருப்பதாலேயே உயிரையும் பணயம் வைத்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தாங்கள் இருந்த கட்சி தோற்று தாங்கள் வெற்றி பெற்றுவிட்டால் எந்தவித கூச்சமும் இல்லாமல் ஆளும் கட்சிக்கு தாவி அரசியல் செய்வார்கள். வாக்களித்த மக்களும் கேட்க முடியாது. ஏனென்றால், ஓட்டுக்கு இவ்வளவு என்று அவர்களும் கைநீட்டி பணம் பெற்றுவிடுகிறார்கள். மக்களாவது மண்ணாங்கட்டியாவது என்பதே இவர்களைப் போன்றோரின் கொள்கைக் கோட்பாடுகளாக இருக்கிறது. சில பிரதிநிதிகள் மாவட்ட மற்றும் பிரதேச காரியாலயங்களிலும் நாள் தவறாமல் ஆஜராகிவிடுகிறார்கள். கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வாங்க வேண்டியதை வாங்குவதே இவர்களின் அன்றாட தொழில். சபைக் கூட்டங்கள் நடந்தாலும் போக மாட்டார்கள். தங்களது வவுச்சர்களை சேதாரம் எதுவும் இல்லாமல் பாஸாக்கிக் கொள்வதற்காகவே மக்கள் வாக்களித்துள்ளதாகவே இவர்கள் நினைக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பு இவர்களுடைய உடம்பு எப்படி இருந்தது. இப்போது எப்படி கொழுத்து ஊதி இருக்கிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாவம் அமைச்சர்கள். இவர்களை நம்பி அவர்கள் அரசியல் செய்கிறார்கள்.

எது எதற்கோ விசாரணைக் கமிஷன்கள் நியமிக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகள் அரசியலுக்கு வரும் முன் எப்படி இருந்தார்கள்? இப்போது எப்படி இருக்கிறார்கள்? இவர்களது நிதி நிலைமை எவ்வாறு இந்தளவு உயர்ந்து நிற்கிறது? என்பதை அறிய ஒரு விசாரணைக் கமிஷன் நியமித்தால் எப்படி இருக்கும்?

பெரும்பான்மையின நேர்மையான உயர் அதிகாரிகள் சிலர் இந்த கமிஷன்காரர்களை எண்ணி வேதனைப்படுவதாக அங்கே பணிபுரியும் எமது இளைஞர்கள் தெரிவித்தார்கள். மக்கள் விழிக்க வேண்டும்.

நன்றி - வீரகேசரி

காடுகளாக மாறியுள்ள களுத்துறை மாவட்டப் பெருந்தோட்டங்கள்


களுத்துறை மாவட்டத்தின் பெரும்பாலான தேயிலை, இறப்பர் தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படாது காடுகளாக மாறி, கைவிடப்பட்ட நிலையில் உள்ளமை குறித்து தோட்ட மக்கள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த மாவட்டத்திலுள்ள பல பிரதான தோட்டங்களே இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் காடாக மாறிக் கிடப்பதைக் காணமுடிகிறது.

இந்தத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் குளவிக்கொட்டு, பாம்புக் கடி மற்றும் விஷக்கடிக்கு இலக்காகிய வண்ணமே வேலை செய்ய வேண்டியுள்ளனர்.

ஆங்கிலேயர் காலத்தில் புல், பூண்டுகளை வெட்டிச் சுத்தம் செய்து தேயிலை, இறப்பர் பயிர்ச்செய்கைகளுக்கு பசளையிட்டு தேவையான இரசாயனங்கள் பிரயோகிக்கப்பட்டதைப் போன்று அல்லாமல் தேயிலைக் கொழுந்தையும் இறப்பர் பாலையும் பெற்றுக் கொள்வதில் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தற்போதைய தோட்ட நிர்வாகங்கள் செயற்பட்டு வருகின்றன.

சில தோட்டங்களில் இறப்பர் மரங்களுக்கு ஒரு வகை இரசாயன திரவத்தைச் செலுத்தி பாலை உறிஞ்சி எடுக்கும் முறை கையாளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தோட்டங்கள் காடுகளாக மாறியுள்ள போதிலும் தோட்டங்களின் பெயர்களைச் சுட்டிக் காட்டும் முகமாக ஆங்கில மொழியில் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகைகள் தோட்ட பிரதான நுழைவாயிலுக்கருகே காட்சிப்படுத்தப்பட்டும் தேயிலை, இறப்பர் பயிர்ச்செய்கை அழகாகவும் ரம்மியமாகவும் தெரியும் வகையில் இருப்பதையும் காண முடிகிறது.

ஆனால், தோட்டத்துக்குள்ளே நுழைந்து சற்றுதூரம் சென்று பார்த்தால் தேயிலை, இறப்பர் பயிர்ச்செய்கை முறையாகப் பராமரிக்கப்படாது காடு மண்டிய நிலையில் கிடப்பதையே காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறிருக்க, இன்று பெரும்பாலான தோட்டக்காணிகள் வெளியாரினால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளதுடன், சில தோட்டங்களில் தொழிலாளர்கள் வசித்து வரும் குடியிருப்புக்களின் வீட்டு முற்றம், வீட்டுத் தோட்டங்களையும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் குடியிருப்பாளர்கள் தமது வீடுகளில் சேரும் கழிவுகள் மற்றும் குப்பைக் கூளங்களைக் கொட்ட இடவசதியின்றியும் கழிவு நீர் வழிந்தோடக்கூடிய வடிகால் வசதியில்லாத நிலையிலும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இது போன்ற ஆக்கிரமிப்பு, ஊடுருவல் குறித்து தோட்ட நிர்வாகங்கள் தெரிந்திருந்த போதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்க முன்வராது, கண்டும் காணாதது போல் இருந்து விடுகின்றன. இதனால் இன்று தோட்டக் காணிகள் சிறுகச்சிறுக பகுதியாக பறிபோய்க் கொண்டிருக்கும் நிலையே இருந்து வருகின்றது.

இதேவேளையில் காலம் காலமாக தோட்டத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் தாம் குடியிருந்து வரும் குடியிருப்புகளுக்கு முன்னால் நாலடி நகர்த்தி ஓரளவு இடவசதியைச் செய்து கொள்ள முயலும் பட்சத்தில் தோட்ட நிர்வாகங்கள் அதற்கு இடமளிக்காது தடுத்து விடுகின்றன.

ஒருவாறு அமைத்துக் கொண்டாலும் தோட்ட நிர்வாகம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை உடைத்து தகர்த்தி விடுவது மட்டுமல்லாது, தொழிலாளரை வேலையிலிருந்து இடைநிறுத்தி, பொலிஸ் நிலையத்தில் புகார் செய்து நீதிமன்றம் வரையில் கொண்டு போய் நிறுத்தி விடுகின்றன. போதாக்குறைக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென்றும் தோட்டக் காணிகள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், தோட்டத் தொழிலாளர்கள் காலை நீட்டி நிம்மதியாக படுத்துறங்கி, எழும்பக் கூட சுதந்திரமற்றவர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக, இடிந்து விழும் நிலையிலுள்ள அந்த பழைமை வாய்ந்த லயன் குடியிருப்புக்களிலேயே தமது வாழ்க்கையை கடத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

நன்றி - வீரகேசரி

கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு அவசியம் - ஜோன்சன்


நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உயர்தர வகுப்புக்களை கொண்ட பாடசாலைகளில் கணித, விஞ்ஞான, பிரிவுகளில் கல்வி பயில ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள தோட்டப்புற மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதானது கணித, விஞ்ஞான பிரிவுகளில் உயர்தரம் கற்ற பல்கலைக்கழகம் செல்ல எத்தனித்துள்ள வெளிமாவட்ட மாணவர்களுக்கு பாரிய பின்னடைவாகும்.

நடந்து முடிந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் குறிப்பாக உயர்தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகளில் அதிகளவான வெளி மாவட்ட மணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளதை காண முடிகின்றது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் இவ்விடயத்தில் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டதை தொடர்ந்து குறித்த இப்பிரச்சினை தேசிய ரீதியாக பேசப்பட்டது. பரீட்சைக்காக மாத்திரம் அனுமதி வழங்கியதாக அடையாளங் காணப்பட்ட சில பாடசாலைகளின் அதிபர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இச் செயற்பாட்டின் மூலம் கல்வி இராஜாங்க அமைச்சர் மத்திய மாகாணத்தில் பரபரப்பான முடிவுகளை மேற்கொள்ளும் அரசியல் பிரபலமாக மாறிப் போயிருந்தார்.

உண்மையில் வெளிமாவட்ட மாணவர்கள் மத்திய மாகாணப் பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதானது அம் மாகாணத்திலே கல்வி பயிலும் மாணவர்களுக்கு அநீதியை பல்கலைக்கழக அனுமதியின் போது ஏற்படுத்தும் என்பது பெரும்பாலும் உண்மையாகும். எனினும் ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களிலும் உள்ள மாணவர்கள் பரீட்சைக்காக மாத்திரம் பாடசாலைகளில் அனுமதி பெற்றுள்ளனர் என்பதை அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே நுவரெலியா மாவட்டம், மொனரகலை மாவட்டம் போன்றவை கஷ்டப் பிரதேசங்களாக அடையாளங் காணப்பட்டு இப்பகுதியிலுள்ள மாணவர்களின் பல்கலைக்கழகத் தெரிவு நன்மை கருதி வெட்டுப் புள்ளிகளும் குறைக்கப்பட்டிருந்தன. இச்சலுகை மத்திய மாகாணத்திலுள்ள குறித்த மாவட்டத்திலுள்ள பிள்ளைகளின் நன்மை கருதி அரசாங்கத்தால் எடுக்கப்பட்டிருந்தது. எனினும் காலப்போக்கில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளுக்குத் தகுதியான ஆசிரியர்கள், மேலதிக வகுப்புகள் என்பவை நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் சிறப்பாக காணப்பட்டதால் வெளிமாவட்ட மாணவர்கள் இங்கு வந்து உயர்தரம் கற்க அதிக ஆர்வம் காட்டியிருந்தனர்.

குறிப்பாக பதுளை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களிலுள்ள மலையக மாணவர்களே, உயர்தர கற்றல் செயற்பாடுகளுக்காக இங்கு வருகை தந்திருந்தனர். இவர்களில் அதிகமானோர் பரீட்சையில் சித்தி பெற்று மருத்துவ, பொறியியல் துறைகளுக்கு பல்கலைக்கழக அனுமதியை பெற்றிருந்தனர். இவர்களில் பல்கலைக்கழகத் தெரிவு எந்தளவுக்கு மத்திய மாகாணத்திலுள்ள மாணவர்களுக்கான பல்கலைக்கழக வாய்ப்பைப் பாதித்துள்ளது என்பது குறித்து முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த 5 வருட காலப் பகுதியில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள உயர்தரப் பாடசாலைகளில் இருந்து கணித, விஞ்ஞான பிரிவுகளில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்களில் எத்தனை தமிழ் மாணவர்கள் உள்ளடங்கியுள்ளனர். அதில் நுவரெலியா மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் எத்தனை பேர், ஊவா, சப்ரகமுவ மகாணங்களின் தோட்டப்புற மாணவர்கள் எத்தனை பேர் ஏனைய வெளிமாவட்ட மாணவர்கள் எத்தனை பேர் என்ற தரவுகளை முறையாக பெறும்போது நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரசியல் தலைவர்களுக்கும் கல்வி உயரதிகாரிகளுக்கும் சில நடு நிலையான தீர்மானங்களை எதிர்காலத்தில் மேற்கொள்ள வாய்ப்புகள் ஏற்படும்.

பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் உயர்தர கணித, விஞ்ஞான வகுப்புகளுக்கு முறையான ஆசிரிய வளப் பகிர்வு இல்லாமை பாரிய குறைபாடாக உள்ளது. குறிப்பாக பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் கணித, விஞ்ஞான உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்களுக்கு மேலாகின்றன. எனினும் இதுவரை காலமும் குறித்த வகுப்புகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.

1 ஏபி தரத்திலான பாடசாலை அமைந்துள்ள பகுதிக்கு 3 கிலோ மீற்றருக்குள் உயர்தர வகுப்புக்களை கொண்ட தமிழ் மொழி மூல பாடசாலைகள் காலத்தின் தேவை கருதி அமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக ஆசிரிய வளங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிப் போயுள்ளன.

பதுளை மாவட்டத்தின் ஏனைய உயர்தர வகுப்புகளை கொண்ட பாடசாலைகளில் கணித, விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டாலும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக அவை வெற்றிகரமான செயற்பாட்டை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளன. ஊவா மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளுக்கும் மாகாண பாடசாலைகளுக்கும் ஆசிரிய வளங்களை பகிர்வதில் இன்னும் சிக்கல் நிலைமையே உள்ளது.

உயர்தர கணித, விஞ்ஞான வகுப்புகளில் கற்பிக்கக் கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் தரம் 5 வரையான வகுப்புக்களை கொண்ட ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். கணித, விஞ்ஞான பாடங்களுக்காக பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் இவ்வாறு ஆரம்பப் பிரிவு பாடசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர்.

உண்மையில் பதுளை, மொனராகலை மாவட்டங்களிலுள்ள தமிழ் மொழி மூல மாணவர்களின் நன்மை கருதி உயர்தர கணித, விஞ்ஞான, பிரிவுகள் பதுளை, பண்டாரவளை பகுதிகளை மையப்படுத்தி அங்க சம்பூரணமாக நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறான நிலை காணப்படாமையினாலேயே குறித்த பிரிவுகளில் கல்வி கற்க இங்குள்ள தோட்டப்புற மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளை நோக்கி படையெடுக்கின்றனர் என்பதை கல்வி இராஜாங்க அமைச்சர் கவனத்திலெடுக்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை தொடர்ந்து அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திலும் கல்வி இராஜாங்க அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணனே செயற்பட்டார். அவ்வரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊவா மாகாணத்திலுள்ள 8 தமிழ் மொழி பாடசாலைகள் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளை அங்க சம்பூர்ணமாக கொண்ட பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதற்கான கூட்டம் தற்போதைய பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தலைமையில் ஊவா மாகாண சபை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. அதிபர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு இவ்விடயம் தொடர்பாக செயற்பாடுகளை முன்னெடுக்க குழுக்களும் அமைக்கப்பட்டன. எனினும் என்ன காரணமோ தெரியவில்லை. பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பின்னர் இவ்விடயம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாகவும் கரிசனை காட்டப்படுமாயின் தற்போதைய பிரச்சினைக்கு சுமுக தீர்வை எட்ட முடியும்.
பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்து கல்வி அமைச்சின் தீர்மானங்களுக்கமைவாக மாகாணத்தில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளில் நிலவும் ஆசிரிய, பௌதீக வளப்பற்றாக்குறைகளை நிவர்த்திக்க முன்வர வேண்டும்.

தற்போதைய நிலையில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் 9 ஏ சித்திகளை பெறும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் அனுமதித்து அவர்களுக்கான கற்றல், சந்தர்ப்பத்தை வழங்க முன்வர வேண்டும். அவ்வாறு கல்வி கற்கும் மாணவர்கள் பரீட்சைக்கு தமது மாவட்ட பாடசாலைகளில் தோற்ற வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

இது மலையக தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பல்கலைக்கழக அனுமதிக்காக செய்யப்படும் வித்தியாதானமாக பார்க்கப்பட வேண்டும். பணம் படைத்த தனவந்தர்களின் சூழ்ச்சிகரமான செயற்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தெரிவித்து நுவரெலியா மாவட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அப்பாவித் தொழிலாளர்களின் பிள்ளைகளின் பல்கலைக்கழக கனவை சிதைத்து விடக்கூடாது. அது மலையக சமூகத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்ததை போன்று பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி, பசறை தமிழ்த்தேசிய பாடசாலை என்பவற்றில் அங்க சம்பூர்ணமான கணித, விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிப்பதோடு இப்பிரிவுகளுக்கு விடயம் சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டும். இது காலத்தின் அவசரத் தேவையாகும்.

நன்றி - வீரகேசரி

சமூக அபிவிருத்திக்குத் தடையாக மலையகத்தில் மது பாவனை


இலங்கை வரலாற்றை எடுத்துக்கொண்டால், மலையக பெருந்தோட்ட மக்கள் இனம், மொழி, தொழில்ரீதியாக மட்டும் ஒடுக்கப்படவோ, அடிமைப்படுத்தவோ இல்லை. அதையும் தாண்டி மதுபானம் என்ற கொடிய அரக்கனுக்கும் அடிமையாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மை.

இவ்வாறான நிலையில் மது அரக்கனிடமிருந்தும் மலையக கல்வி மக்களை விடுதலை பெற்ற ஒரு சமூகமாக மாற்ற வேண்டிய கடப்பாடு மலையக கல்வி ஆர்வலர்களுக்கும் சமூக மேம்பாட்டாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்கள் சமூக மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் பாரிய முயற்சிகள் அதன் நோக்கில் வெற்றிபெற முடியாமல் இருப்பதற்கு அவர்கள் மத்தியில் நிலவும் குடிப்பழக்கமும் ஒரு காரணம் என்றே சுட்டிக்காட்டப்படுகிறது.

ஏனைய நகர்ப்புற, கிராமப்புற மக்கள் மத்தியிலும் குடிப்பழக்கம் இல்லாமல் இல்லை. ஆனால், இவர்கள் எல்லோரையும் விட குடிப்பழக்கத்தால் பாரிய சீரழிவுகளுக்கும் சமூக, பொருளாதாரப் பின்னடைவுகளுக்கும் உள்ளானவர்கள் மலையக மக்கள்தான்.

மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான குடிநீர் விநியோகம், மருத்துவ வசதி, போக்குவரத்து, வாசிகசாலை போன்ற இன்னோரன்ன தேவைகள் எல்லாம் கிடைக்காத நிலையில் மதுபானக் கடைகளுக்கு மட்டும் மலையகத்தில் பஞ்சமில்லை.

ஹட்டன், டிக்கோயா, எல்லைக்குள் மாத்திரம் இன்று 18 மதுபானக் கடைகள் இயங்குகின்றன. மொத்தமாக கினிகத்தேன,வட்டவளை, ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், பொகவந்தலாவ, மஸ்கெலியா, சாமிமலை, கொட்டகலை, தலவாக்கலை, அக்கரகந்த,லிந்துல, ஹோல்புரூக், மன்றாசி, அக்கரபத்தன, டயகம, காசல்ரி, நோட்டன் போன்ற பகுதிகளில் மாத்திரம் மொத்தமாக 58 பார்கள், மதுபானக் கடைகள் இயங்குகின்றன. அதோடு மினி மதுபானக் கடைகள் பல இயங்குகின்றன.

மினி மதுபானக் கடைகள் இல்லாத தோட்டங்களே மலையகத்தில் இல்லை என்று துணிந்து சொல்லும் அளவிற்கு, இவற்றின் வளர்ச்சி மலையகத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. தோட்டங்களில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டுள்ள அநேகர் இதை தமது பகுதிநேரத் தொழிலாகவும் வேறு சிலர் தமது முழுநேரத் தொழிலாகவும் செய்து வருகின்றனர்.

தோட்டங்களில் முதியவர் ,இளையவர், ஆண்,பெண் என்ற வித்தியாசங்களை எல்லாம் கடந்து குடிப்பழக்கம், தோட்ட மக்கள் மத்தியில் நாளாந்தம் பெருகிவருகிறது. தோட்டங்களில் சம்பளம், முற்பணம் வழங்கும் நாட்கள் மற்றும் உற்சவங்கள், கொண்டாட்டங்கள் நடைபெறும் தினங்களில் குடிப்பழக்கத்துடன் அதிரடித் தாக்கங்களும் தாராளமாகவே இடம்பெறுகின்றன.

தோட்டங்களில் விற்கப்படும் சாரயம் நிச்சயமாக கலப்படமானதாகவே இருக்கும். சில சமயங்களில் சாரயத்தோடு யூரியா உரம், ஸ்பிரிட், புகையிலைச்சாறு, சிகரட்தூள், லேகியம், எம்பெம் பெளடர் போன்றவற்றையும் கலந்து விற்பதுண்டு. போதையை அதிகரிப்பதற்காக இப்படிச் செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. அக்காலத்தில் தோட்டங்கள் தோறும் இளைஞர் மன்றங்கள், இராப்பாடசாலைகள், முதியோர் கல்வி நிலையங்கள் என்பன சமூகப்பணியாற்றிவந்தன.

குடி, சூதாட்டம், திருட்டு முதலான குற்றச் செயல்களுக்கு எதிராக இந்த அமைப்புகள் தோட்ட மக்களிடையே காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.

ஆனால் இப்போதோ தோட்ட லயன்களில் இயங்கிவரும் மினி மதுபானக் கடைகள் இந்த சமூகநல அமைப்புகளின் பணிகளைப் பின்தள்ளும் அளவிற்கு மிஞ்சிவிட்டன.

அக்காலத்தில் தோட்டங்கள் தோறும் காலை 7.30 மணிக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர் மாலை 5.30 மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள்.

அக்கால இளைஞர்கள் மத்தியில் தோட்டங்கள் தோறும் நல்ல உடல் பயிற்சிக்கான விளையாட்டுக்கள் இருந்தன. பிள்ளையார் பந்து, கிளிதட்டு, மூடியடித்தல், கண்ணாடி போலை, திருடன் பொலிஸ், கரப்பந்தாட்டம், கால்பந்தாட்டம், நொண்டி விளையாடுதல், புளியங் கொட்டை அடித்தல் போன்ற விளையாட்டுக்கள் தோட்டங்கள் தோறும் காணப்பட்டன. அப்போது , உடல் நிலையும் மன நிலையும் இவ்விளையாட்டுக்களினால் ஊக்கமளித்தன. (மது என்ற நினைப்பு பண்டிகை காலங்களில் மாத்திரம் காணக்கூடியதாக இருந்தது). ஆனால், இன்று அந்நிலை மாறி எமது எதிர்கால சமூகத்தை சீரழிக்கும் கொடிய அரக்கனாக மலையக நகரங்களில் மட்டுமன்றி தோட்ட லயன்களுக்குள்ளேயும் மினி மதுபானக் கடைகள் சட்டவிரோதமாக தங்கு தடையின்றி தாரளமாக இயங்குகின்றன.

சில தோட்டங்களில் தொழிற்சங்கங்களுக்கு அங்கத்தவர்களை சேர்க்கும் போது சாராய போத்தல்கள் சங்கமிப்பது இன்றும் நிலவி வரும் ஒரு வழக்கமாக மாறிவிட்டது.

நான் கல்வி கற்ற ஹட்டன் நகர பாடசாலை ஒன்றில் 1975 ஆம் ஆண்டு ஆசிரியர் ஒருவர் ஒரு மாணவனை பார்த்து,வயலில் மேயும் எருமை மாட்டை திருத்தி விடலாம். ஆனால் மலையக தமிழனை ஒரு காலமும் திருத்த முடியாது. திருந்தவும் மாட்டான். என்று கூறிய அந்த வார்த்தைகள் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும்.

தோட்ட மக்களை குடிப்பழக்கத்திலிருந்து மீட்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை விட அவர்களை மதுவுக்கு மேலும் மேலும் அடிமைகளாக்கும் முயற்சிகளே மறைமுகமாகவும் பகிரங்கமாகவும் மேற்கொள்ளப்படுகின்றன. மலையக மக்களின் விடுதலையில் அக்கறையுடையவர்களாகக் காட்சிதரும் அவதாரத் தலைமைகள் சிலரின் அனுசரணையுடன் தான் மலையக நகரங்கள் பலவற்றில் அண்மைக்காலத்தில் பல மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன என்ற உண்மை இப்போது இருட்டறையில் உறங்கினாலும் அது விரைவில் வெளிச்சத்துக்கு வரும். மது மூளையிலுள்ள செல்களை அழித்து விடுகிறது. மனித மூளை கோடிக்கணக்கான செல்களால் ஆனது. உடலில் உரசல் ஏற்பட்டு தோல் போய் விடுமானால் ஒரு சில நாட்களில் அந்த இடத்தைப் புதிய தோல் மூடி விடுகிறது. அவ்வாறே நகம் வெட்டுண்டு போனால் இன்னொன்று அவ்விடத்தை நிரப்பிவிடுகிறது. ஆனால் மூளை ஒரு முறை இழந்த செல்களை மீண்டும் பெற்றுக் கொள்ள முடிவதில்லை.

மலையக மக்களின் நல்வாழ்வு சம் பந்தமான முயற்சிகள் காலத்தின் தேவையை உணர்ந்த அர்த்தமுள்ள முயற்சிகளாக அமைய வேண்டும். நாளைய சமுதாயம் மதுவற்ற சமுதாயமாக மலரவேண்டும்.

நன்றி - வீரகேசரி

தொழிலாளரின் சம்பளப் பிரச்சினை, தொழிற்சங்கங்களின் பிளவை கம்பனிகள் - அருண் அருணாசலம்


பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்வு காணப்படாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இந்த மாதம் சம்பள உயர்வு கிடைக்கும், அடுத்த மாதம் சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் சம்பள உயர்வு உள்ளிட்ட கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்வதில் ஏற்பட்டுள்ள இழுபறியால் தொழிலாளர்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

2015 மார்ச் 31 ஆம் திகதி 2013 2015 காலப் பகுதிக்கான கூட்டு ஒப்பந்தம் காலாவதியானது. எனவே 2015 2016 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு அது கடந்த 2015 ஏப்ரல் முதலாம் திகதியுடன் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அது பற்றிய எந்தவொரு முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது 18 மாதங்கள், அதாவது 1 ½ வருடமாகிவிட்ட நிலையில் புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் 8 தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துவிட்டன. எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை.

பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனரா என்ற சந்தேகம் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் பிரதான சங்கமான இ.தொ.கா. 1000 ரூபா நாட் சம்பள கோரிக்கையை முன்வைத்தது. அதேவேளை அந்தக் கோரிக்கையை நிராகரிப்பதாகவும் 1000 ரூபாவை நாட்சம்பளமாக வழங்க முடியா தெனவும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்து வருகிறது.

இந்த இழுபறி இன்னும் எத்தனை காலத்திற்கு தொடர வேண்டும்? ஒரு வழி இல்லாவிட்டால் இன்னொரு மாற்று வழி என்பதற்கமைய மாற்றுவழியை தேட வேண்டாமா? அதாவது, இரு தரப்பினரும் கலந்து பேசி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் என்ன?

இதற்கென நாள் ஒன்றுக்கு 500 ரூபா அடிப்படை சம்பளம் என்ற ரீதியிலும், 20 கிலோ கொழுந்து நாட் சம்பளத்துக்காக பறிக்க வேண்டும் என்பதும், மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோ கொழுந்துக்கு 23 ரூபா 50 சதம் கொடுப்பதாகக் கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தனியார் மரக்கறித் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளிக்கு காலை, பகல் உணவு மற்றும் தேநீர் வழங்கி, நாள் ஒன்றுக்கு 1000 முதல் 1500 ரூபா வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

அதேபோன்று வெளியிடங்களில் வேலை செய்வோருக்கும் 1000 ரூபா முதல் 1500 ரூபா வரை சம்பளம் வழங்கப்படுகிறது. நிலைமை இவ்வாறிருக்க தோட்டத் தொழிலாளருக்கு மட்டும் 500 ரூபா அடிப்படை சம்பளம் என்பதை ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.

தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் விலைவாசி ஏற்றத்தைப் பார்க்கும்போது 500 ரூபாவினால் என்ன செய்ய முடியும்? இரண்டு, மூன்று பிள்ளைகள் உள்ள குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும்வேலை செய்து கிடைக்கும் சம்பளத்தில் அனைவரும் வயிறார சாப்பிட முடியுமா? பிள்ளைகளை பராமரிக்க முடியுமா? அல்லது படிக்கவைக்க முடியுமா? மனிதாபிமானத்துடன் இந்தப் பிரச்சினையை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

500 ரூபா அடிப்படை சம்பளத்தைவிட தற்போது வழங்கப்படும் இதர கொடுப்பனவுகளுடனான 620 ரூபா சம்பளமே மேல். எவ்வாறெனினும் 1000 ரூபா அடிப்படை நாட் சம்பளமாகக் கேட்டதைக் கொடுக்காவிட்டாலும் குறைந்தபட்சம் 850 ரூபாவையாவது அடிப்படை நாட் சம்பளமாக வழங்கலாமல்லவா? இதைப் பற்றி ஏன் இவர்கள் சிந்திக்கவில்லை?

மாற்று வழி பற்றி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் சிந்திக்காமல் தொடர்ந்து மௌனத்தைக் கடைப்பிடிப்பதோ அல்லது காலம் கனிந்துவரும் என்று காத்திருப்பதாலோ தீர்வுகள் கிடைத்துவிடாது. தீர்வுகளை நாம் தான் தேடிப் போக வேண்டும்.
இதேவேளை, இந்தப் பிரச்சினைக்கு பொதுவானதொரு தீர்வைக் காண்பதற்கு சகல தொழிற்சங்கங்களும் முன்வர வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல மலையக தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.

தமது சுய விருப்பு, வெறுப்புக்கள், போட்டிகள் என்பவனற்றுக்கு அப்பால் தொழிலாளரின் நலனுக்காக சமூக ரீதியில் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். அரசாங்கம் வரவு செலவு திட்டத்தித் தனியார்த் துறையினருக்கு அறிவித்த 2500 ரூபா கொடுப்பனவை தோட்டத் தொழிலாளருக்கும் பெற்றுக் கொடுக்க தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் மேற்கொண்ட அயராத முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மறக்க முடியாது. அதுபோன்றே இந்த சம்பள விடயத்திலும் அக்கறை காட்ட வேண்டும்.

2500 ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொடுத்ததுடன் கடமை முடிந்துவிட்டது. 1000 ரூபா சம்பள உயர்வு கேட்டவர்களே அதனைப் பெற்றுக் கொடுக்கட்டும் என்று ஒதுங்கிக் கொள்ளக்கூடாது. தொழிலாளர் சமூகத்திற்காக இவ்விடயத்தில் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் எட்டு முறை முயற்சிகளை மேற்கொண்டும் தீர்வை எட்ட முடியாத நிலையில் உள்ளன. எனவே சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதனூடாக முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.

தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் உலகச் சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பெருந்தோட்டக் கம்பனிகள் தொடர்ந்து கடந்த 1 ½ வருடமாக கூறிக் கொண்டு வருகின்றன. உலகச் சந்தையில் தேயிலை விலை ஏறும், இறங்கும். இதுதான் இயல்பு. வருடக்கணக்கில் வீழ்ச்சியை மட்டும் சுட்டிக்காட்டாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். தவிர இது தொடர்பில் உள்ள உண்மைத் தன்மையும் ஆராயப்பட வேண்டும்.

தோட்டத் தொழிலாளரின் சம்பள விடயத்தில் இலங்கை தேயிலை வரலாற்றில் இதுவரை காணாத வகையில் இம்முறை மட்டும் பெருந்தோட்டக் கம்பனிகள் பிடிவாதம் பிடிப்பதற்கு தொழிற்சங்கங்களிடையே காணப்படும் பெரும் பிளவும் ஒரு காரணமாகும். தொழிற்சங்கங்களிடையே காணப்படும் பிளவை கம்பனிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதைத்தான் ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்று சொல்வார்கள். தொழிற்சங்கங்களிடையே காணப்படும் பிளவுகளை கம்பனிகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

தொழிற்சங்கங்கள் பிளவுபட்டு ஒன்றுக்கொன்று எதிராக செயற்படுவதால் தோட்டக் கம்பனிகளே இலாபமடைகின்றன. ஆனால் தொழிலாளர்களின் பாடு திண்டாட்டம்தான். எனவே சகல தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு தொழிலாளரின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண முன்வர வேண்டும்.

நன்றி - வீரகேசரி

அநியாயங்களுக்கு இராணுவ சட்டம் வழங்கிய லைசன்ஸ்! (1915 கண்டி கலகம் –49) - என்.சரவணன்


1915 கலவரத்தின் விளைவாக ஆங்கில அரசு மேற்கொண்ட மிலேச்சத்தனத்தையும், அராஜகத்தையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் நாம் இத்தொடரில் நிறைய கண்டோம். தமது அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்த பாலியல் வல்லுறவு சம்பவங்களும், கொள்ளைச் சம்பவங்களும் கூட பதிவாகியுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. அந்தச் சம்பவங்களுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. சிலவற்றுக்கு நியாயமான தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. சில வழக்குகள் இராணுவச் சட்டம் (martial law) இன் பேரால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு மறுக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இராணுவச் சட்டத்தின் கீழ் சுயாதீன தொண்டர்களாக சேவையில் ஈடுபட்ட சுதேசிகள் மூவரும் ஆங்கிலேயர் ஒருவருக்கும் எதிரான வழக்கு ஓகஸ்ட் 9 அன்று கொழும்பு இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் மூவரும் இராணுவச் சீருடையில் இருந்தபோது அவர்கள் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார்கள் என்கிற வழக்கில் முதல் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மூன்றாமவர் குரூரமாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் ஆங்கிலேய தோட்டத்துரைக்கு எதிரான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தபோதும் அவர் மீதான வழக்கு விசாரணைக்கு கூட எடுக்கப்படவில்லை. அவர் பொழுதுபோக்காக “சேவையில் ஈடுபட்டிருக்கக் கூடும்” என்றே எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஏனென்றால் இராணுவச் சட்டத்தின் கீழ் ஆங்கிலேயர்கள் கடமையில் இருக்கும் வேளையில் பெண்களோ, ஆண்களோ அவர்கள் கூறுவதை செய்யாவிட்டால், மறுத்தால் அவர்களை சுட்டுக் கொல்லும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்கள். இந்த அதிகாரம் ஆங்கிலேய தோட்ட துரைமார், உரிமையாளர்களுக்கும் இருந்தது.

களவு, கொள்ளை, பலாத்காரமாக சொத்துக்களை கொள்ளையடித்தல் போன்ற பல சம்பவங்களை ஆர்மண்ட் டீ சூசா தனது நூலில் விளக்குகிறார்.

அல்கொட கத்திரிக்காவத்தயைச் சேர்ந்த எல்.சொபியாஹாமி எனும் பெண் கொடுத்த சத்தியக்கடதாசியில்: தெஹியோவிட்ட நகர ஆராச்சி சில பஞ்சாப் படையினரையும், ஆங்கிலேயர் சிலருடனும் அவரது வீட்டுக்குள் புகுந்தார்கள். அவரின் கணவரை கைது செய்தார்கள். அவரை பின்னர் சுட்டுக் கொன்றார்கள். ஒரு படையினர் அவரது வீட்டுக்குள் இருந்த பெட்டியொன்றை உடைத்து 300 ரூபா (20 பவுண்ட் பெறுமதி) பெறுமதியான தங்க ஆபரணங்களையும் 100 ரூபா பணத்தையும் எடுத்துக் கொண்டு சென்றார்கள். இது குறித்து ஆராச்சியிடம் முறைப்பாடு செய்த போதும். அது குறித்து எதுவும் பேசவேண்டாம் என்றும் அல்லது நீயும் கொல்லப்படுவாய் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆளுனருக்கு செய்யப்பட்ட முறைப்பாடு குறித்தும் உதவி அரசாங்க அதிபர் ஒருவர் கிராமிய பொலிஸ் அதிகாரிக்கும் இதே எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன.

கங்கொடவில போலிஸ் முலாந்தெனி (கிராமிய போலிஸ் அதிகாரி) டீ.ஜேம்ஸ் மக்ஞநாயக்க ஆளுனருக்கு ஒரு முறைப்பாட்டைச் செய்தார். பஞ்சாப் படையினர் சிலரைக் கொண்டிருந்த ஆங்கிலேயர் ஒருவர் (அவரின் பெயரையும் குறிப்பிட்டு) 22ஆம் திகதி தன்னிடம் வரும்படி பணித்திருக்கிறார். படையினரின் உணவுக்காக , பால், கோழிக்கறி போன்றவற்றை ஏன் பரிமாறவில்லை என்று அவரிடம் கேட்டுள்ளார். மேலதிகாரிகளால் அப்படி ஒரு ஆணை தனக்கு பிறப்பிக்கப்படவில்லை என்று ஜேம்ஸ் கூறியுள்ளார். அந்த ஆங்கிலேயர் ஜேம்ஸின் கைகளைக் கட்டி, பலரின் முன்னிலையில் சாட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த மாவட்ட முதலியாரம், உதவி அரசாங்க அதிபரும் இது இராணுவ சட்டத்தின் இயல்பு எனவே இதெற்கெல்லாம் எதிராக ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியிருக்கின்றனர். தமது இச்சைகளுக்கு இணங்காவிட்டாலோ, தாம் கேட்கும் எதையும் தராவிட்டாலோ கடுமையாக தண்டிப்பதற்கு இராணுவச் சட்டம் இடமளித்திருப்பதை இப்படி பல சம்பவங்களின் மூலம் அறிய முடிகிறது. அரச அதிகாரிகளுக்கும், முலாந்தெனி போன்ற கிராமிய அதிகாரிகளுக்கும் இந்த கதியென்றால் சாதாரண பிரஜைகளின் நிலைமை இராணுவச் சட்டத்தின் கீழ் எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கலாம்.

ப்ரேடி டயஸ் பண்டாரநாயக்க என்பவர் இது போன்ற ஒரு முறைப்பாட்டை செய்திருக்கிறார். ஜூன் மாதம் 13 அன்று அவரை பஞ்சாப் படையினர் கைது செய்த வேளையில் அவரிடம் இருந்த 500 ரூபா பெறுமதியான தங்க மாலையையும், கைக்கடிகாரத்தையும் களவாடினார். அங்கிருந்த உயரதிகாரியிடம் முறைப்பாடு செய்ததன் விளைவாக அந்த பொருட்கள் பஞ்சாப் படையினனின் தலைப்பாகைக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது. “தேசத்துரோகச் செயலை அடக்குவதற்காக” என்கிற பேரில் மக்கள் விரோத செயல்கள் அரங்கேறியது இப்படித்தான்.

அல்கோட பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.டீ.புஞ்சிபண்டா அந்த ஊரில் கொடுத்த முறைப்பாட்டில் ஜூன் 10 அன்று ஆராச்சியும் மேலும் சில பஞ்சாப் படையினரும் தனது மைத்துனர் தெளினஸ் மற்றும் மேலும் சிலரையும் கைது செய்து வெளியில் கொண்டு சென்று அதில் இருவரை அங்கேயே சுட்டுக்கொன்றனர். ஐந்து நாட்களின் பின்னர் அதாவது 15ஆம் திகதியன்று ஆராச்சியும் சில முஸ்லிம் வியாபாரிகளுடன் வந்து  மேலும் தன்னுடன் மேலும் நால்வரைக் கைது செய்தனர். ஆராச்சிக்கும் முஸ்லிம் நபருக்கும் பணத்தைக் கொடுத்ததால் இருவர் விடுவிக்கப்பட்டார்கள். புஞ்சி பண்டாவின் முறை வந்தபோது 50 ரூபா பணத்தைத் தந்தாள் விடுவிக்கலாம் என்று கூறியுள்ளனர். அப்படி தராவிட்டால் சுட்டுக்கொல்ல வேண்டிவரும் என்று மிரட்டியுள்ளனர். எந்த விசாரணையுமின்றி அப்படி சுட்டுக்கொல்ல வாய்ப்புண்டு என்பதை அறிந்த புஞ்சிபண்டா பீதியிற்றார். சுற்றிலும் பார்த்துவிட்டு அங்கு தனக்கு அறிந்த ஒருவரை அழைத்து தன் வெள்ளி அருணாக் கயிறைக் கழற்றி 50 ரூபாவுக்கு அதனை அடகு வைத்துத் தரும்படி கேட்டுள்ளார். அங்கிருந்தவர் உடனேயே சென்று அடகு வைத்து கொண்டுவந்து தந்த 50 ரூபாவைக் கொடுத்து தன்னை விடுவித்துக்கொண்டார் புஞ்சிபண்டா.

பஞ்சாப் படையினர் அப்பாவி கிராமவாசிகளின் பசுக்களையும், தமது விவசாய உற்பத்திப் பொருட்களையும் பலாத்காரமாக கொள்ளயடித்துச்சென்ற சம்பவங்களையும் ஆர்மண்ட் டீ சூசா விளக்கியுள்ளார்.

சேர் பொன் இராமநாதன் தனது இராணுவச்சட்ட “1915 : இலங்கையில் கலவரமும் இராணுவச் சட்டமும்” என்கிற நூலில் ஒரு வேடிக்கையான ஆணை குறித்து இப்படி வெளிப்படுத்துகிறார். இந்த சம்பவத்தை அவர் ஒக்டோபர் 14 அன்று மக்களவையில் ஆற்றிய உரையின்போதும் குறிப்பிட்டுள்ளார்.

ஆணையாளரால் கூறப்பட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி கோறளை (மாவட்ட) முதலியார் ஒரு ஆணையை அனுப்புகிறார். அதில்
“ஆணையாளரால் 7900 ரூபா இழப்பீட்டுப்பணம் வழங்கும்படி அறிவிக்கப்பட்டது. அதன்படி குறிக்கப்பட்ட விதிப்பணத்தை விட இரு மடங்கு பெறுமதிமிக்க உரித்துப்பத்திரத்தை பிணையாக எடுத்துக்கொண்டு..... திகதி.... நேரத்துக்கு இங்கு சமூகமளிக்க வேண்டும். அதன்போது வேறெவரையும் கூட்டிக்கொண்டுவருவதற்கு அவசியமில்லை. ஆனால் நிலப்பெறுமதி குறித்த தஸ்தாவேஜ்ஜுக்களை ஒப்படைக்கவேண்டும்.
வரும்போது பஞ்சாப் படையினரின் தேவைக்காக ஒரு மாட்டைக் கொண்டுவரும்படியும், அப்படி கொண்டு வராவிட்டால் கொடுக்கப்படவேண்டிய தொகையுடன் மேலும் 2000 ரூபா அதிகரிக்கப்படும் என்பதையும் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டிருப்பதை இதன் மூலம் தெரியப்படுத்துகிறேன்”

இந்த விபரங்களைக் கூறிய சேர் பொன் இராமநாதன் “2000 ரூபாவுக்குப் பதிலாக மாடு! இந்த செயலை ஒரு குரூர செயலாகவே கவனமாக நோக்க வேண்டியிருக்கிறது.” என்றார். அரசாங்கம் இவை குறித்து விசாரிக்க மறுத்தது. காலனித்துவ நாடுகளுக்கான செயலாளரும் பிற்காலத்தில் பிரித்தானிய பிரதமராக ஆன போனார் லோவும் (Bonar Law) இதனை விசாரிப்பதை நிராகரித்தார். அதன் மூலம் இதுபோன்ற அத்தனை அராஜகங்களுக்கும் மறைமுகமாக ஆசீர்வாதம் வழங்கினார் என்றே கொள்ள முடிகிறது.

ஒரு கடையொன்றில் பணிபுரிந்துவந்த இந்தியாவம்சாவழித் கத்தோலிக்கத் தமிழரான எஸ்.பீ.பெர்னாண்டோ இப்படி குறிப்பிடுகிறார்.

பஞ்சாப் படையினருக்கு பால் விநியோகிக்கும்படி தனக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதுவும் தாங்களே பால் கறக்கக்கூடிய வகையில் பசுக்களை அனுப்பிவைக்கும்படி கட்டளையிடப்பட்டிருந்தது. ஒரு நாள் பஞ்சாப் படையினர் எவரையும் காணக் கிடைக்கவில்லை. அதற்கடுத்த நாள் பொலிசாரால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டு காலை 10 மணியிலிருந்து அடுத்த நாள் மதியம் 1 மணிவரை சிறை வைத்தனர். அவருக்கும் இந்த கலவரத்துக்கும் சம்பந்தமே இல்லை. எந்த தவறையும் கூட இழைக்கவில்லை. கைது செய்து தண்டனையளித்து அவரை அவமானப்படுத்தினர். அதுவரை அவர் வழங்கிவந்த பொருழுக்கும் எந்த கொடுப்பனவையும் வழங்கவுமில்லை.

இதற்கு இணையான ஒரு சம்பவத்தை இந்தக் கடிதத்தில் காணலாம்.
“மாத்தளை உதவி அரசாங்க அதிபரிடமிருந்து மாத்தளை திருகோணமலை வீதியைச் சேர்ந்த பீ.சி.எச்.டயஸ் அவர்களுக்கு.
1915 செப்டம்பர் 27 திகதியிடப்பட்ட பண ரசீது குறித்து. அதில் குறிப்பிடப்பட்ட பொருட்கள் அனைத்தும் இராணுவத தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது என்பதால் அதற்கான ரசீதை மீண்டும் அனுப்ப வேண்டாம் என்று இத்தால் எச்சரிக்கிறேன்”
எ.டபிள்யு சேமுவர்
உதவி அரசாங்க அதிபர்
இராணுவ நடவடிக்கைகளுக்காக சிவிலியன்களின் எந்த உடமையும், சேவையும் பலாத்காரமாகவும், எந்த கொடுப்பனவு இன்றியும் இரானுவச்சட்டதின் பேரில் பறிக்கப்படும் என்பதை இந்த நிகழ்வுகள் நிரூபித்தன.
இறைச்சிக்காக தமக்கு மாட்டைத் தரும்படி ஒரு ஆணை டபிள்யு ஜேம்ஸ் அப்புஹாமிக்கு பிரபிக்கப்பட்டது. பௌத்தரான அவர் கொள்வதற்காக மாட்டை விநியோகிப்பது சாபத்துக்குரிய பாவம் என்று எண்ணினார். அவர் அந்த மாட்டுக்கு உரிய பெறுமதியை அனுப்பி வைத்து தனது மாட்டை இறைச்சிக்கு அனுப்புவதை தவிர்ஹ்தார். இப்படிப்பட்ட சம்பவங்கள் அதிகமாக பதிவாகிய மாத்தளை பிரதேசத்திலேயே.

மாத்தளை திருகோணமலை வீதியில் 191 இலக்கத்தைச் சேர்ந்த எம்.டபிள்யு.பாபாசிங்கோ 99.79 ரூபாவுக்கான ரசீதை அனுப்பிவைத்தார். அதற்கு பதிலளித்த சேமுவர் “அந்தத் தொகையை வழங்க தீர்மானிக்கப்படவில்லை என்பதை இத்தால் அறிவிக்கிறேன்” என்று பதிலளித்தார். 

இந்தியவம்சாவளியைச் சேர்ந்த இந்து மதத்தவரான என்.என்.கருப்பன்செட்டியிடம் ஒரு பெரிய பட்டியலை அனுப்பி அவற்றை தமக்கு அனுப்பும் படி பணித்துள்ளனர். அதில் இறைச்சி எண்ணெய் மற்றும் சில மாமிச வகைகளும் உள்ளடங்கும் அவற்றை அவர் வேறு கடையில் கொள்வனவு செய்து அனுப்பியிருக்கிறார். இவர்களுக்கு எந்த கொடுப்பனவையும் அதிகாரிகள் வழங்கவில்லை. ஆனால் கருப்பன்செட்டி பின்னர் செய்த முறைப்பாட்டில் ஒரு சைவ இந்து பக்தனான தன்னிடம் இத்தகைய பொருட்களை தரும்படி ஆணையிட்டதனூடாக தான் அவமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். டி.ஆர்.எம்.வடுகுப்பிள்ளை எனும் இன்னொரு இந்து பக்தனிடம் மாட்டிறைச்சி உள்ளிட்ட இன்னும் பல பொருட்களை தரும்படி பணித்ததாகவும் உயிருக்கு அஞ்சி அவற்றை அனுப்பியதாகவும், அவற்றுக்கு எந்த கொடுப்பனவையும் வழங்கவில்லை என்றும் முறையிடப்பட்டது.

இத்தகைய சம்பவங்கள் அனைத்துக்கும் பதில் கூறும் பொறுப்பு எவரிடமும் இருக்கவில்லை. இராணுவச் சட்டத்தின் பேரால் இந்த அநியாயங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டிருந்தன.

தொடரும்..

நன்றி - தினக்குரல்

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates