Headlines News :
முகப்பு » » மலையக தேசியத்தை வரையறுப்பதில் ஏற்படும் பிரச்சனைகளும் சவால்களும்- I லெனின் மதிவானம்

மலையக தேசியத்தை வரையறுப்பதில் ஏற்படும் பிரச்சனைகளும் சவால்களும்- I லெனின் மதிவானம்

கடந்த சில காலமாக மலையக தேசியம் பற்றி பல சர்ச்சைகளும்; கருத்து மோதல்களும் காணப்படுகின்றன. இவை இயக்கத்தின் குறிக்காட்டிகள். வளர்ச்சியின் அறிகுறிகள் என அமைதி கொண்டாலும் இங்கு குழப்பங்கள் மலிந்துள்ளதையும் குறித்துக் காட்ட வேண்டியதாகின்றது. பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு பிடிச்ச கதை மாதிரியான ஆபத்து ஏற்படும் நிலையும் தோன்றியுள்ளது. இலங்கையில் பெருந்தோட்ட பயிர் செய்கைக்காக இந்நியாவிலிருந்து புலம் பெயர்ந்து இந்நாட்டில் குடியமர்த்தப்பட்ட மக்களின் அடையாளம் இந்திய வம்சாவழி தமிழர்களா? அல்லது மலையகத் தமிழர்களா? என்ற வாத பிரதிவாதங்கள் நடந்துள்ளன- நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பலர் இது தொடர்பில் உணர்ச்சி வசப்பட்டு வாய்க்கு வந்தபடியெல்லாம் ஏசியும் பேசியும் தமது கருத்துக்களை கொட்டுகின்றனர். பலரின் தனிப்பட்ட நன்றியுணர்ச்சி இந்தியா தொடர்பிலான கரிசனையை அதிகரித்துள்ளது. சிலர் மலையக மக்களின் இருப்பு பற்றி உண்மையின் பக்கம் நின்று தமது கருத்துக்ககளை கூறியுள்ளனர். இவ்விடயம் குறித்து நாம் ஆழமான தெளிவான பார்வையை உருவாக்கிக் கnhள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.

தற்போது இலங்கை எதிர்நோக்கும் அடிப்படையான பிரச்சனைகளில் முக்கியமானது தேசிய இனப் பிரச்சனையாகும். சிறுபான்மையினரின் இருப்பு மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான தீர்வு யாது என்பதில் தான் அப்பிரச்சனை முதன்மை பெற்றுள்ளது. தேசிய இனங்களில் தனித்துவத்தை சிதைக்கும் வகையிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற குடியேற்றங்கள் இந்நாட்டில் வாழும் சிறுப்பான்மையினர், தொடர்ச்சியாக ஒரு நிலத்தில் - பகுதியில் வாழும் உரிமையை சிதைப்பதாக அமைந்திருக்கின்றது. இவ்வாறான சூழலில் மலையக தேசியம் குறித்து நோக்குகின்ற போது, அதனை உழைக்கும் மக்களின் விடுதலை நோக்கில் அணுகும் போது தான் அவர்களுக்கான சரியான தீர்வை முன் வைக்க முடியும். இதற்கான  செயற்பாட்டுக்களம் விரிவாக்கி நடைமுறை சாத்தியமாக்கும் பணியில் தொடர்ந்து முன்னேற வேண்டியது தேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகளின் தலையாய கடமையாகும். அத்தகைய செயற்பாடுகளானது மலையக தேசியத்தின்  குறுகியவாதமாக அல்லாமல்; சர்வதேசப் பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் முன்னெடுக்க வேண்டியுள்ளது.


1. மலையக மக்களின் வருகையும் வர்க்க - இன முரண்பாடுகளும்:

இவ்விடத்தில், மலையக தேசியம் பற்றி நோக்குவதற்கு மலையக மக்களின் சமூகவுருவாக்கம் பற்றிய தெளிவுணர்வு அவசியமானதாகின்றது.

உலகின் பல பாகங்களிலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள்; வாழ்கின்றனர். பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறுபட்ட சமூக பொருளாதார நிர்பந்தங்களினால் அம் மக்கள்;; வௌ;வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இந்த புலம்பெயர்வை கூர்ந்து அவதானிக்கின்றபோது ஓர் உண்மை புலனாகாமல் போகாது. இம் மக்களின்  பாரம்பரியமான நாடாக இந்தியா விளங்குகின்றது. இதில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு நெருக்கமானதும் தனித்துவமானதும் கூட. இதற்கு பின்வரும் காரணிகள் ஏதுவானதாக அமைந்திருக்கலாம். இலங்கை தவிர்ந்த, ஏறத்தாள ஏனைய நாடுகளுக்கிடையிலான புலம்பெயர்வு என்பது 19 ஆம் நூற்றாண்டிற்கு பின்னரே இடம்பெற்றுள்ளது.  ஆனால் இலங்கையிலான புலம்பெயர்வானது கிறித்துக்கு முன்னரே தொடங்கிவிட்டது. இந்த பின்னணியில் இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களின் புலம் பெயர்வு பற்றி நோக்குகின்ற போது அவர்கள் ஒல்லாந்தர் காலத்திலே இங்கு வந்ததாக கூறப்படுகின்றது. இருப்பினும்;  ஒரு சமூகவுருவாக்கத்திற்கான எவ்வித சாத்தியக் கூறுகளும் இ;ப்புலம்பெயர்வில்  இருக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இம்மக்கள் தென்னிந்திய தமிழ் கிராம பின்னணியில் விவசாயிகளாகவே இருந்துள்ளனர். இம்மண்ணில் காலடி வைத்த போது தமக்கென நிலம் - சொத்து  ஏதுமற்ற பாட்டாளி வர்க்கமாகவே காணப்படுகின்றனர். மிக சிறுதொகையினர் தான் சிறு உடமையாளர்களாக இருந்தனர். மார்க்ஸ் கூறியது போல மலையக சமூகத்தில் பெரும்பாலானோர் “இழப்பதற்கு ஒன்றும் இல்லாதவர்கள்;”. மலையக நாட்டார் இலக்கியம் இதனை சிறப்பாக வெளிப்படுத்துகின்றது. அவற்றில் பின்வரும்  வரிகள் கவனத்திற்குரியது:

ஊரான ஊரிழந்தேன்
ஓத்தப்பனைத் தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாயை நான் மறந்தேன்.

அட்ட கடியும்
அரிய வழிநடையும்
கட்ட எடறுவதும்
காணலாம் கண்டியிலே

ஆளுக் கட்டும் நம்ப  சீமை
அரிசி போடும் கண்டிச் சீமை
சோறுபோடும் கண்டிச் சீமை
சொந்தமினு எண்ணாதிங்க

இவ்வரிகளை கூர்ந்து நோக்குகின்ற போது ஓர் உண்மை புலப்படாமல் போகாது. அதாவது ஆரம்ப காலங்களில் இம்மக்களிடையே மலையகம் பற்றிய உணர்வு இல்லாமலிருப்பதை அவதானிக்கலாம். இதற்கு பின்வரும் காரணிகள் இதற்கு ஏதுவாக இருந்திருக்கின்றன.

1. பிறந்த மண்ணைத் துறந்து புது வாழ்வு தேடி இங்கு வந்த போது ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலையில் அம் மக்கள்; அடிமைகளாக்கப்பட்டமையும்,  அதனடியாக தோன்றிய வாழ்க்கை பிரச்சனைகளும்.

2. இந்தியா இலங்கைக்கு அருகாமையில் இருந்தமையினால் தமது பூர்வீக       பூமி என்ற வகையில் இந்திய உணர்வின் தாக்கம் இங்கிருந்தமை.

3. ஆரம்ப காலங்களில் கோப்பிப் பயிர் செய்கையே பிரதான பெருந்தோட்ட பயிர் செய்கையாக (பருவ கால பயிர்ச் செய்கை) இருந்தமையினால் தொடர்ந்து இம்மக்கள் இங்கிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கவில்லை. பயிர்ச்செய்கை நடைபெறாத காலங்களில் அவர்கள் இந்தியாவிற்கு சென்று திரும்பி வந்தனர்.

4. இந்தியாவில் இருக்கின்ற தமது உறவினர்களுடனான தொடர்புகளும் அவை பற்றிய ஏக்கங்களும் இம் மக்களிடையே குறிப்பிட்ட காலம் வரையில் இருந்தன.

5. இந்திய வம்சாவாழி என்றழைக்க கூடிய வர்த்தகர்களுக்கு தமது நலன் தொடர்பில் இந்தியாவுடன் இருந்த உறவுகள். இலங்கையில் அவர்களுக்கு எதிரான பிரச்சனைகள் எழுந்த போது அதனை முழு மலையக மக்களுக்குமான பிரச்சனையாக திசை திருப்பியமை.



இது இவ்வாறிருக்க, மலையக மக்கள் இலங்கையில் வேர் கொண்ட போது பின்வரும் இரண்டு வித அடக்குமுறைகளை சந்திக்க நேர்ந்தன:

1. தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் இவர்களை வெறும் கூலிகளாக மட்டுமே பார்க்கின்ற நிலை. மலையக சமூகத்தில் இருந்த சிறுதொகையான மத்தியதர வர்;க்கம் கூட ஏனைய சமூகத்தினரால் அப்படித்தான் பார்க்கப்;பட்டார்கள்.

2. மலையக சமூகத்தில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்ற அடிப்படையில் இந்நாட்டில் குமிழிட்டு மேற் கிளம்பிய பேரினவாதம் இவர்களை ஒடுக்கியது.


மலையக மக்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்களாக காணப்பட்டமையினால் இவர்கள் அனைவரும் மிகவும் கீழ்மட்டத்திலுள்ள கூலிகளாக நோக்கப்பட்டார்கள். சுதந்திரத்திற்கு பின்னர் இந்நாட்டில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் பௌத்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் வாரிசுகளாகவே காணப்பட்டனர். காலப் போக்கில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை கூட கவனத்தில் கொள்ளாது பழைய பௌத்த நிலப்பிரபுத்துவ பாரம்பரியங்களை மீட்டெடுக்க முனைகின்ற பண்பே இவர்களில் முனைப்பு பெற்றிருந்தது. (இவ்விடத்தில் நேர்மை மிக்க இடதுசாரிகள் இதற்கு விதிவிலக்காக இருந்துள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டத் தக்கது). இந்த அடிப்படையில் தான் இவர்கள் மலையக மக்களை மிகவும் இழிவானவர்களாகவே நோக்கினார்கள். அநகாரிக தர்மபால மலையக தமிழர்கள் பற்றி “ஆங்கிலேயே நிர்வாகத்தில் தென்னிந்தியாவின் கீழ்சாதியினர் எமது தீவில் குடியேற அனுமதிக்கப்படுகின்றனர்”; (1920)1 எனக் குறிப்பிட்டுள்ளமை இதற்கு தக்க எடுத்துக் காட்டாகும். அவ்வக்காலங்களில் மலையக மக்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்களும் இதனை உறுதி செய்கின்றன. வட- கிழக்கு மேட்டுக்குடித் தமிழர்களும் மலையக மக்களை இவ்வாறு தான் நோக்கினார்கள்.

மேலும், சிங்கள மக்கள் மத்தியில் தென்னிந்தியா குறித்த அச்சம் நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது. வௌ;வேறு காலகட்டங்களில் இலங்கை மீதான தென்னிந்தியப் படையெடுப்புகள் இதற்கு முக்கிய காரணமாகும்;. இத்தகைய வரலாற்று நிகழ்வுகளை ஆதாரமாக கொண்டு இலங்கையில் நிலவிய சிங்கள இராஜ்சியங்களும் அவர்களது பண்பாடும் தமிழர்களால் அழிக்கப்பட்டன என்ற எண்ணகருவை தமிழ் மக்களுக்கு எதிராக திரிபுபடுத்தியே பேரினவாதிகளும் வரலாற்று ஆசிரியர்களும் சிங்கள மக்கள் மத்தியில் கூறி வந்துள்ளனர். மலையகத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் என்பது தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்த போது டி. எஸ் சேனநாயக்கா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

”சிங்களவர்  துரதிஸ்டம் பிடித்த சமூகத்தினர்... அவர்களுடைய தாராள மனப்பான்மை மறக்கப்பட்டு தவறாக விளக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் நன்மைக்காகத் தம்மை ஒறுப்பதற்குச் சம்மதிக்கும் சிங்களவர் போன்று வேறு ஒரு சமூகம் இருக்கும் என நான் எண்ணவில்லை.., இந்தியர்களுக்கு பெரிய நாடு உள்ளது. எங்களுக்கு இச்சிறு துண்டு நிலமே உள்ளது. இந்த நாடு எங்களுக்கு வேண்டும் 2”. இதற்கு மேலாக பிரான்சிஸ் மொலாமூர் இந்திய அச்சுறுத்தல் பற்றி பழைய காலத்தில் இலங்கையை லிப்டன் தோட்டம் என்றனர். எதிர்காலத்தில் இலங்கையை இந்திய ஆலமரத் தோட்டம் என்று குறிப்பிடக் கூடும் 3” எனக் குறிப்பிடுகின்றார்.


மலையக மக்கள் இலங்கையின் பெருந்தோட்டங்களில்; குடியேறிய ஆரம்ப கால முதல் சுதந்திரம் அடையும் காலப்பகுதி வரையிலாக இவர்கள் பிரித்தானியரின் உடைமையாகவே வாழ்ந்து வந்தனர். "1948 களின் பின்னர் பெருந்தோட்டங்கள் இலங்கையரின் உடைமையாக மாற்றப்பட்ட காலப்பகுதியிலும் 1972 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை அவை அரச கூட்டுத்தாபனங்கள் மூலம் நிருவகிக்கப்பட்ட காலகட்டத்திலும் 1992 ஆம் ஆண்டு தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்ட பின்னரும் தோட்டங்கள் தனியான நிர்வாக கட்டமைப்பை கொண்டவைகளாகவும், அரசின் பொது நிர்வாக கட்டமைப்பு மற்றும் உள்ளுராட்சி அமைப்புகளின் ஆட்சிப்புலத்தினின்று விலக்களிக்கப்பட்ட பிரதேசங்களாகவும் கருதப்பட்டு வந்துள்ளன.

1937 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கிராமியக் குழுக்கள் திருத்தச் சட்டத்தின் படி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குரிமை மலையக மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்தமையினால் கிராமிய சபைகள் மூலமாக இவர்களுக்கு கிடைக்கக் கூடிய சலுகைகளை அடைய முடியாத சூழலை உருவாக்கியது. இந்த திருத்தச் சட்டத்தின் பாதிப்பை பின்னாட்களில் மலையக மக்கள் தொடர்பில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தங்களிலும் காணலாம்.

இவ்வாறாக டொனமூர் ஆணைக்குழுவினர்  இந்நாட்டில் ஐந்து வருடங்களுக்கு குறையாத காலம் வாழுகின்ற சகல 21 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் 30 வயதுக் மேற்பட்ட பெண்களுக்கும் (பின் வந்த நாட்களில் பெண்களுக்கான வயதெல்லையும் 21 ஆகக் குறைக்கப்பட்டது)  வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைச் சிபாரிசு செய்தனர். இதற்கு முன் இந்நாட்டில் வாழ்ந்த சொத்துடையவர்களும் கல்வி கற்றவர்களுமே வாக்குரிமை பெற்றிருந்தனர். தமது வர்க்க நலன்- அதிகாரம் சார்ந்து  டொனமூர் ஆணைக்குழுவினரால் சிபார்சு செய்யப்பட்ட சர்வசன வாக்குரிமையை இந்த அறிவுஜீவிகளும் சொத்துடையோரும் எதிர்த்தார்கள். இவ்வர்க்கத்தினர்; வைத்த மிக முக்கியமான கோரிக்கை பெண்களுக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கும் வாக்குரிமை வழங்க கூடாது என்பதாகும். குறிப்பாக மலையகத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்குவது தொடர்ப்pல் பலத்த எதிர்ப்புகள் தோன்றியிருந்தன.

இத்தேர்தலில் மலையகத்திலிருந்து கூடுதலான மலையக பிரதநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருந்ததாலும், இத்தொகுதியில்; ஐக்கிய தேசிய கட்சி தோற்கடிக்கப்பட்டு  அதற்கு எதிரானவர்கள் வெற்றியீட்டியிருந்ததாலும் இம்மக்கள் மீதான வெறுப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது.  அதற்கு அப்பால் மலையக மக்கள் பரந்துபட்ட பாட்டாளி வர்க்க பண்பைக் கொண்ட சமூகமாக உருவாகக் கூடிய தன்மையிருந்ததாலும் ஆதிக்க சக்திகள் அம்மக்களுக்கு எதிராக செயற்படத் தொடங்கினார்கள். அதன் விளைவாகவே பிரஜா உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பில் 1940 ஒக்டோபர் 19 அன்று வெளியிடப்பட்;ட அறிக்கையில் மலையகத் தமிழர்களுக்கான வாக்குரிமை பற்றி முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் பின்வரும் கூற்று கவனத்தில் கொள்ளத்தக்கது.

இலங்கையில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 800,000 பேர் வரையில் இருக்கும் சிறிய தொகையினரான சிங்களவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனை. சிங்களவரின் சனத் தொகை மூன்றரை மில்லியன் மாத்திரமே. ... தோட்டத்தொழிலாளர்கள் 700, 000 பேர் வரையில் உள்ளனர். ... பிரதான பிரச்சனை வாக்குரிமை விடயமாகும். ... நாட்டில் நிலையான அக்கறையுள்ளவர்களுக்கு அல்லது நிரந்தர வதிவாளர்களாக கருதப்படுபவர்களுக்கே வாக்குரிமை இருத்தல் வேண்டும் 4.


இவ்வகையான கருத்துக்களை அன்றைய முன்னணி அரசியல் வாதிகளாக திகழ்ந்த டி. எஸ். சேனநாயக்க, பிரான்சிஸ் மொலாமூர், சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, வி.டி.எஸ். விக்கிரமநாயக்க, போன்றோர் எதிர் நிலையில் நின்றே மலையகத் தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்குவதை எதிர்த்தனர். அதே சமயம் ஏ.ஈ. குணசிங்கா, கோ. நடேசய்யர், ஏ. மகாதேவா, ரி.பி. ஜாயா போன்றோர் மலையகத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தனர் என்பதும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளத்தக்கது. மலையக மக்கள் எண்ணிக்கையளவில் இந்நாட்டின் இரண்டாவது தேசிய இனமாக இருந்தமையினால் இம்மக்கள் குறித்த அச்சம் சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமன்று இந்நாட்டில் வாழ்ந்த தமிழ் மேட்டுக் குடியினர் மத்தியிலும் காணப்பட்டது. மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டபோது அதற்கு சார்பாக ஜீ.ஜீ. பொன்னம்பலம் முதலானோர் வாக்களித்தமை இதற்கு தக்க எடுத்துக்காட்டாகும். பேரினவாதத்திற்கு எதிரான பார்வை கொண்டிருந்த தமிழரசுக் கட்சியினர்  இக்கொடூரத்தை எதிர்த்தனர்; - ஒருவகையில் மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பே தமிழரசுக் கட்சியின் தோற்றத்திற்கான உடனடி காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய எதிர்ப்புகளை மீறி வழங்கப்பட்ட வாக்குரிமை மலையக மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தது. மலையகத் தொகுதியிலிருந்து எட்டு பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் தெரிவானார்கள்;. அதற்கு அடுத்தாக மலையக மக்கள் இடது சாரிகளையே ஆதரித்திருந்தனர்.

1964 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஸ்ரீமா- சாஸ்திரி ஒப்பந்தம் இம் மக்களின் இயல்பான வாழ்க்கையைப் பாரதூரமாகப் பாதித்தது. இது குறித்து இந்நூலின் முன்னைய கட்டுரையில் (மு.சி கந்தையாவின் ~நிசங்களின் சத்தம்’ மலையக சமூகத்தின் நினைவுப் பதிவுகள்) குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து வந்த காலங்களில் மலையகத்தில் இடம்பெற்ற இனவன்முறைகளும் இம்மக்களை அதிகமாக பாதிக்க செய்தன. மலையகத் தமிழர் மீதான இனவொடுக்கு முறைகள் வட கிழக்கு தமிழர்களை பாதித்தளவு பாதிக்காத போதினும் இம்மக்களின் சமூக உருவாக்கத்தை சிதைப்பதில் முக்கிய காரணியாக அமைந்திருந்தது. 1977, 1983கள் தொடக்கம் இடம்பெற்ற காட்டுமிராண்டித் தனமான இனவன்முறைகள் போக   அண்மைக் காலத்தில் வேவல்வத்தை பகுதியில் இடம்பெற்ற இன வன்முறைகள் யாவும் இதற்கு சிறந்த உதாரணங்களாகும். இவை தவிர அண்மையில் மலையகப் பகுதிகளில் நடமாடிய கீறிஸ் மனிதர்கள் இவையெல்லாம் இம்மக்களை தொடர்ந்து அச்சத்தில் வைத்திருக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.

மலையக மக்கள் மீதான இன வன்முறைகள் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. உயிர் ஆபத்துகள் - ஈவிரக்கமற்ற நிலையில் இடம்பெற்ற கொலைகள், கற்பழிப்பு சம்பவங்கள் என பல வடிவங்களில் இடம்பெற்றன.  தமது உயிரைத் தாரை வார்த்து அவர்கள் சேர்த்து வைத்திருந்த பொருட்களை கொள்ளையடித்ததுடன் எஞ்சியவற்றை அழித்தும் நொருக்கியும் உள்ளனர். யாவற்றுக்கும் மேலாக  தாம் வாழ்ந்த மண்ணிலிருந்து அந்நியமாக்கப்பட்ட கொடுமைகள்- இன்னும் இது போன்ற கொடுமைகள் யாவும் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறையின் மாற்று வடிவங்களாகும். இவ்வாறானதோர் சூழலில் மலையக மக்கள் தமக்கான பாதுக்காப்பு தேடி  வடக்கு கிழக்கு பகுதிகளுக்கும் இந்தியாவிற்கும் சென்றனர். சிறு வியாபாரிகள் மற்றும் இதர மத்திய தர வர்க்கத்தினர் பெரும்பாலும் இந்தியாவிற்கே சென்றனர். ஒரு சமூகம் என்ற வகையில் இவர்களின் புலம்பெயர்வு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்தது.

இதனை விட  1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜூலைக் கலவரத்தைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில், குறிப்பாக 1986, 1989 ஆம் ஆண்டுகளில் மலையகத் தோட்டங்களில் இத்தகைய இன வன்முறைகளுக்கு எதிராகவும் அவற்றைக் நடத்திய காடையர்களுக்கு எதிராகவும் மலையக மக்கள் எதிர்த் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன் பின்னர் மலையகத்தில் புது விதமான இனவன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. வட கிழக்கில் தோன்றிய தீவிரவாத இயக்கங்களை சாதகமாகக் கொண்டு மலையகத்தில் குறிப்பாக தோட்டப்பகுதிகளில் பயங்கரவாதிகளை தேடிக் கண்டுபிடித்தல் என்ற போர்வையில்; பொலிஸ் படையினர் லயன்களில் நுழைவது சர்வசாதாரணமாகிவிட்டிருந்தது. அவ்வாறு நுழைகின்றவர்கள் சில சமயங்களில் இளைஞர்களை துன்புறுத்துவதும்; அவர்களது உடைமைகளை கொள்ளையடித்து செல்வதுமான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இன்று பெரும்பாலான  தோட்டங்கள் தரிசு நிலங்களாக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளன.  இப்பகுதியில் என்றும் இல்லாதவாறு கபானாக்களும் உல்லாச விடுதிகளும் தோன்றிய வண்ணம் உள்ளன. இதனால்;  மலையக மக்கள்; பாரதூரமான பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். தமக்கான தொழில் கிடைக்காத நிலையில் அவ்விடத்திலிருந்து தொழில் தேடி வேறு இடங்களுக்குச் செல்கின்றனர். அவ்வாறு செல்லாதவர்களை காடையர்களை வைத்து பலவந்தமாக வெளியேற்ற முயற்சிக்கின்றனர். மாத்தளை, கண்டி, கலகா, கம்பளை, கேகாலை, இரத்தினபுரி, பலாங்கொடை, பதுளை, மொனராகலை, பண்டாரவளை, வெலிமடை இன்னும் இது போன்ற பகுதிகளில் பல தோட்டங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர். தனியார் மயமாக்கம், அதன் விளைப் பொருளான மாற்றுப் பயிர் செய்கைள் இவர்களின் வேலையில்லாப் பிரச்சனையை அதிகரிக்கச் செய்திருக்கின்றன. இத்தகைய முயற்சிகள் யாவும் மலையக தமிழர்கள் ஒரு சமூகமாக கூடி வாழ்வதை சிதைத்து,  திட்டமிடப்பட்ட  குடியேற்றங்களை கொண்டு வருவதற்கான செயற்பாடுகளாகவே  அமைந்து காணப்படுகின்றன. இவ்விடத்தில், இந்நாட்டு இனவாத பிரச்சனையோடு மலையகத் தமிழர்களினது பிரச்சனைகளும் ஒன்றாகப் பின்னப்பட்டுள்ளதென்பதை நாம் புரிந்துகொள்ள வேண்யுள்ளது. இதற்கு எதிரான போராட்டங்கள் மலையகத்தில் தோன்றாமலுமில்லை. துரதிஸ்டவசமாக அவை பரந்துப்பட்ட வெகுசன போராட்டங்களாக முன்னெடுக்கப்படாமல் முடக்கப்பட்டுள்ளன.

தொடரும்......
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates