ஒரு புறம் கொழும்பு என்பது கொழும்பு மாநகர சபை வலயமாகவும், அதற்கு வெளியில் உள்ள நகர சபைகளுமாக பிரிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் கொழும்பானது நிர்வாக வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்றைய கொழும்பு நகரம் 15 அஞ்சல் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கொழும்பின் நகராக்கம் வலுவடைந்து மக்கள் செறிவும், உட்கட்டமைப்பின் விரிவாக்கமும் பறந்து விரிந்த போது இவ்வாறு அஞ்சல் பிரிவுகளாக பிரிக்கும் தேவை உருவானது.
கொழும்பு 1 - கொழும்பு கோட்டை
கொழும்பின் உருவாக்கமே அதன் துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி, பின்னர் வளர்ந்தது பற்றியும், விரிவாகி நாட்டின் தலைநகராக ஆனதன் பின்புலத்தை இதற்கு முன்னர் பார்த்தோம். இத்துறைமுகமானது இயற்கையின் விலைமதிப்பற்ற கொடையாகும், இது வெளிநாட்டு வர்த்தகர்களை மட்டுமல்ல, படையெடுப்பாளர்களையும் ஈர்த்தது. முதலில் போர்த்துகீசியர்கள் (1505-1656) கொழும்பு துறைமுகத்தைச் சுற்றி ஒரு கோட்டையைக் கட்டினார்கள், இரண்டாவதாக டச்சுக்காரர்கள் (1656-1796) மற்றும் மூன்றாவதாக ஆங்கிலேயர்கள் (1796-1948) அதை மேலும் மாற்றியமைத்து மேம்படுத்தினர். இந்த மூன்று காலனித்துவ சக்திகளிலேயே கோட்டையை பலமாக கட்டி அதனைப் பேணியவர்கள் டச்சுக் காரர்கள் தான். இந்த பண்டைய கொழும்பு நகர எல்லைகள் கொழும்பு கோட்டையிலிருந்து புறக்கோட்டை வரை மட்டுமே இருந்தது.
கொழும்பில் ஆங்கிலேயர் படையெடுப்பின் போது பதினொரு காவலரண்கள் (Bastians கொத்தளங்கள் அல்லது முன்னரண் முகப்பு என்றும் கூறலாம்) இருந்தன. அவற்றில் இரண்டு பீரங்கிகள் பொருத்தப்பட்ட கொத்தளங்கள். அதைவிட கோட்டைக்குள் நான்கு பிரதான வீதிகளும் இருந்தன. போர்த்துக்கேயரிடம் இருந்து கோட்டையைக் கைப்பற்றியதும் 1656இல் டச்சுக்காரர்கள் கோட்டையை பலமாகக் கட்டினார்கள். 11 கொத்தளக் காவலரண்களுக்கும் ஒல்லாந்திலுள்ள பிரசித்தி பெற்ற நகரங்களின் பெயர்களை அவற்றுக்கு சூட்டினார்கள். உதாரணத்துக்கு ஒல்லாந்து தலைநகரான ஆம்ஸ்டர்டாம், ரொட்டர்டாம், டெல்ப் போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். ஆம்ஸ்டர்டாம் என்று அன்று அவர்கள் பெயரிட்டிருந்த பகுதி என்பது இன்று கொழும்பு துறைமுகத்திற்குள் இருக்கிற சுங்கக் கட்டிடம் அமைந்திருக்கிற பகுதியைக் குறிக்கும்.
இன்றும் கொழும்பு இலங்கையின் வர்த்தக மற்றும் பொருளாதார மையமாகத் திகழும் பகுதிகளினூடே அலைந்து திரிந்தால் கொழும்பு கோட்டையின் சில எச்சங்களை இன்றும் காணலாம்.
கொழும்பு 2 - கொம்பனி வீதி
கடந்த காலத்தில் கொம்பனித் தெருவின் பிரபலமான பெயர் ஸ்லேவ் ஐலன்ட் எனப்பட்டது. அதாவது அடிமைத் தீவு. இன்றும் அந்த பகுதி ஆங்கிலத்தில் (Slave Island) என்று அழைக்கப்படுகிறது. மேற்படி பிரதேசமானது இன்றைய கொல்வின் ஆர். டி சில்வா மாவத்தை அல்லது யூனியன் பிளேஸ் பிரதான நிலப்பகுதியை இணைக்கிறது.
போர்த்துகீசியர்கள் கிட்டத்தட்ட 2000 மொசாம்பிக் காபிரி மக்களை (கிழக்கு ஆப்பிரிக்க கடற்கரையிலிருந்து) இந்த நாட்டிற்கு அழைத்து வந்தனர், பின்னர் டச்சுக்காரர்கள் காபிரி மக்களை கூலிப்படைகளாகவும், வேலைக்காரர்களாகவும், தொழிலாளர்களாகவும் பயன்படுத்தினர். அவர்கள் அடிமைகளாகவே கொண்டு வரப்பட்டு அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். அப்போது ஏற்பட்ட புகழ்பெற்ற 'காபிரி கிளர்ச்சி'யின் போது டச்சு அதிகாரி பேரன்ட் டி ஸ்வான் (Barent de Swan) கொல்லப்பட்டதால், டச்சுக்காரர்கள் காபிரி மக்களை கடுமையான பாதுகாப்பில் வைத்திருக்க சட்டங்களை அறிமுகப்படுத்தினார். அந்த கிளர்ச்சிமோசமாக ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அடிமைகள் பேரை வாவியின் நடுவில் உள்ள தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்களின் கைகள் கட்டப்பட்டு, அவர்கள் அங்குள்ள குடிசைகளிலும் அறைகளிலும் வைக்கப்பட்டனர். ஏரியில் உள்ள முதலைகள் அவை தப்பிக்காமல் இருப்பதை உறுதிசெய்தன, மேலும் எதிர்கால கலவரங்களை நடத்தும் அடிமைப்படுத்தப்பட்ட மக்களைக் கருத்தில் கொண்டு அங்கே தூக்கு மேடையும் நிரந்தரமாக அமைக்கப்பட்டது. அங்கே ரைபிள் ரெஜிமென்ட் (Rifle Regiment/Company) நிறுவப்பட்டதன் பின்னர் ஸ்லேவ் ஐலன்ட் (Slave Island) என்று அழைக்கப்பட்ட இடம் பின்னர் கம்பெனி தெரு என்று பெயர் மாற்றம் பெற்றது.
கொழும்பு 3 - கொள்ளுப்பிட்டி
1664 இல் உடுநுவர அம்பன்வெல அப்புஹாமியும், சத்கோரளே மன்ன அப்புஹாமியும், அட்டகலங்கோரளே சுந்தர அப்புஹாமி ஆகியோர் இரண்டாம் இராஜசிங்க மன்னருக்கு எதிராகக் சதிக்கிளர்ச்சி செய்தனர். இறுதியில் அது தோல்வியடைந்தது. அரச விரோதச் சதிகளுக்குத் தண்டனையாக மன்ன அப்புஹாமியும், சுந்தர அப்புஹாமியும் மரணதண்டனையின் மூலம் கொல்லப்பட்டனர். ஆனால் அன்று சக்திவாய்ந்த குடும்பப் பின்னணியையும் கொண்டிருந்த அம்பன்வெல அப்புஹாமி டச்சுக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கரையோரப் பிரதேசத்துக்கு நாடு கடத்தப்பட்டார்.
குறுகிய காலத்தில் டச்சுக்காரர்கள் அம்பன்வெல அப்புஹாமிக்கு (அம்பன்வெல ரால) கொழும்பிற்கு அருகிலுள்ள கடலோரப் பகுதியில் ஒரு பெரிய நிலத்தை வழங்கினார்கள். அதற்குப் பிரதியுபகாரமாக கண்டி இராச்சியத்தின் தகவல்களை வழங்குவதற்கும் உளவு பார்ப்பதற்கும் பயன்படுத்திக்கொண்டனர்.
அம்பன்வெல அப்புஹாமி அந்த நிலத்தில் தென்னை பயிரிட்டு, டச்சுக்காரர்களின் உதவியுடன் சுற்றுப்புறத்தில் இருந்த மக்களின் நிலங்களை கையகப்படுத்தி நிலச்சுவாந்தராகவும் பணக்காரராகவும் ஆனார். கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையையும் உருவாக்கிக் கொண்டார். வான் ரை-கோஃப் (Van Rycloff) என்கிற டச்சுப் பெயரை தனக்குச் சூட்டிக்கொண்டார்.
சுற்றுவட்டார ஏழைகளின் நிலத்தை பலவந்தமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ அபகரித்துக் கொண்டிருந்தார் அம்பன்வெல அப்புஹாமி, அவரது செயலை எதிர்க்கும் சக்தி இல்லாத கிராம மக்கள், அந்தப் பகுதி கொள்ளையடிக்கப்பட்ட நிலம் என்பதால் “கொள்ள கே பிட்டிய” என்று அழைக்கத் தொடங்கினர். அதுவே திரிந்து கொள்ளுப்பிட்டி பின்னர் ஆனது.
கொள்ளுப்பிட்டி புனித மைக்கேல் தேவாலயமும், கல்லூரியும் இந்தக் காணியின் ஒரு பகுதியைச் சேர்ந்தது. கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து லிபர்ட்டி சுற்றுவட்டம் வரை அந்நிலப்பகுதி பரந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இன்றும் புனித மைக்கேல் தேவாலயம் மற்றும் புனித மிக்கேல் கல்லூரி அமைந்துள்ள காணி பொல்வத்தை என்றும் புனித மைக்கேல் கல்லூரியின் முகவரி "பொல்வத்தை, கொழும்பு 03" எனவும் அழைக்கப்படுகின்றது.
கொழும்பு 4 - பம்பலப்பிட்டி
பம்பலப்பிட்டி என்ற பெயர் பிறந்ததற்கு அந்த பகுதியில் உள்ள மிகவும் வளமான ஜம்பு மரங்களே காரணமாகும். ஜம்போலா என்கிற சிங்களப் பெயரை சில இடங்களில் பம்பலொசி என்றும் அழைப்பார்கள். சிங்களப் பெயராக இருந்தாலும், இது தமிழில் 'பம்பலிமாசு' என்பதிலிருந்து திரிந்து போர்த்துகீச அல்லது டச்சுக் கலப்பு பெயராக திரிபடைந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஜம்போல, 'பாம்ப்லமூசஸ்' (பிரெஞ்சு) மற்றும் 'பொமலோ' என்றும் அறியப்படுகிற இந்த ‘ஜம்பு’ சிட்ரஸ் குடும்பத்தின் (citrus maxima) ஒரு பெரிய பழமாகும். பம்பலப்பிட்டி என்ற பெயர் இந்த வார்த்தைகளின் கலவையிலிருந்து பிறந்ததாக கொள்ளப்படுகிறது. காலி வீதியில் கொள்ளுப்பிட்டியின் முடிவெல்லையில் இருந்து பம்பலப்பிட்டி ஆரம்பிக்கிறது. தற்போது அதிக மக்கள் செறிவைக்கொண்ட இன்னொரு வணிக நகரமாக இருக்கிறது பம்பலப்பிட்டி.
கொழும்பு 5 - ஹெவ்லாக் டவுன்
ஆர்தர் எலிபேங்க் ஹெவ்லொக் (Arthur Elibank Havelock) 1890 முதல் 1895 வரை இலங்கையின் பிரித்தானிய ஆளுநராக இருந்தவர். ஐந்து ஆண்டுகள் தான் அவர் ஆட்சி செய்தாலும் அவரின் காலத்தில் தான் கொழும்பிலிருந்து குருநாகல், பண்டாரவளை போன்ற இடங்களுக்கான இரயில் பாதை விஸ்தரிக்கப்பட்டது. அது மட்டுமன்றி அப்போது விவசாயிகளின் மீது சுமத்தப்பட்டிருந்த “நெல்வரி” அவரின் காலத்தில் தான் இரத்து செய்யப்பட்டது. கொழும்பின் ஒரு நகரத்துக்கே பெயரிடப்பட்ட ஒரே ஒரு ஆங்கிலேய ஆளுநரின் பெயர் அவரது பெயர் தான். அதுமட்டுமல்லாமல் ஹெவ்லொக் வீதி, எலிபேங்க் வீதி, ஹேவ்லாக் பிளேஸ் ஆகிய மூன்று வீதிகளும் இவரது பெயரால் சூட்டப்பட்டன. ஹவ்லாக் வீதி இன்று மாற்றப்பட்டுவிட்டது. அதன் தற்போதைய பெயர் சம்புத்தத்வ ஜெயந்தி மாவத்தை.
கொழும்பு 6 - வெள்ளவத்தை
வெள்ளவத்தை என்பது வெலி உயன என்கிற சிங்களச் சொல்லுக்கு சமமானது அந்தக் காலத்தில், புதைமணலால் கட்டப்பட்ட, காட்டுச் செடிகளாலும், புதர்களாலும், கடற்பரப்பிற்குச் செல்லும் பாழ்நிலமாக இந்தப் பகுதி இருந்தது. ஆனால் இன்று காலி வீதியில் அமைந்துள்ள நகரங்களிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட வர்த்தக நகரமாக மாறியுள்ளது. பெருந்தொகையான நீர்வழிகள் மற்றும் கால்வாய்கள் வெள்ளவத்தை ஊடாக கடலைச் சென்றடைகின்றன. கொழும்பில் அதிகமான வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் வாழும் பகுதியாகவும் இது கொள்ளப்படுகிறது.
கொழும்பு 7 - கறுவாத்தோட்டம்
1765 முதல் 1785 வரை இலங்கையின் டச்சு ஆளுநராக இருந்த வில்லெம் இமாம் பால்க் (Willem Imam Falck), விவசாய நிலங்களில் கறுவாப்பட்டை பயிரிடுவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதற்கு முன், கறுவாப்பட்டை காட்டில் இயற்கையாக வளரும் ஒரு செடி என்று நம்பப்பட்டது. கொழும்பின் மீதான போர்த்துகேயரின் ஆக்கிரமிப்பு மோகத்துக்கு கறுவாப்பட்டை உற்பத்தி முக்கிய காரணியாக அமைந்ததை அறிவீர்கள். அன்று இந்தக் கறுவாத் பயிடப்பட்ட பகுதி; தற்பதைய கொழும்பு 7 வலயத்திற்கு உட்பட்ட பகுதி உட்பட மருதானையிலிருந்து ஹெவ்லொக் டவுன் வரை 12 மைல்களுக்குள் பரவியிருந்தது. கொழும்பு 7 சிங்களத்தில் “குறுந்து வத்த” என்றும் ஆங்கிலத்தில் Cinnamon Garden என்றும் அழைக்கப்படுவதற்கு இந்த கறுவாப்பட்டையே காரணம். கொழும்பின் வசதி படைத்தவர்களும், அதிகமான வெளிநாட்டு உயர்ஸ்தானிகராலயங்களும் உள்ள பகுதி இது.
கொழும்பு 8 - பொரளை
பொரளை என்பது சரளை (சிங்களத்தில் பொரளை) நிலத்திற்கு இணையான சொல்லாகும். சரளைக் மண், கற்கள் போன்றவற்றை அதிகமாகக் கொண்ட இடமாக அப்போது அறியப்பட்ட பிரதேசம் இது. போர்த்துகீசர்கள் இந்த இடத்தை Outeirinho das pedras (கற்களைக் கொண்ட குன்று) என்றும் அழைத்தனர். தற்போது, வார்ட் பிளேஸ், கலாநிதி டேனிஸ்டர் டி சில்வா மாவத்தை (பேஸ்லைன் வீதி), ஞானார்த்த பிரதீபா வீதி மற்றும் கலாநிதி என். எம். பெரேரா மாவத்தை (கொட்டா வீதி) என்பன ஒன்றினையும் ஐந்து வழிச் சந்திப்பின் காரணமாக பொரளை ஒரு பரபரப்பான வர்த்தக நகரமாகும். நாட்டில் உள்ள குழந்தைகளுக்கான பிரதான வைத்தியசாலையான லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) போன்றனவும் பொரளையில் அமைந்துள்ளது.
கொழும்பு 9 - தெமட்டகொட
ஒரு காலத்தில் நாகப்பாம்பு விஷக்கடிக்கு மருந்தாக “தெமட்ட பந்துரு” (Gmelina Asiatica அல்லது Asiatic bushbeech) என்கிற மருந்தை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். புதரில் இருந்து கீழே தொங்கும் மணி வடிவ மஞ்சள் பூக்கள் கொண்ட இந்த புதர்கள் பொதுவாக மூன்று மீட்டருக்கு மேல் உயரம் இருக்காது. ஒருவேளை தெமட்டகொட பிரதேசமானது கடந்த காலத்தில் ஆயிரக்கணக்கான தெமட்ட புதர்கள் செழிப்பாக வளர்ந்த கிராமமாக இருந்திருக்கலாம் என்றே ஊகிக்கப்படுகிறது.
அல்லது இரு மொழிகளின் இணைப்பால் இப்பெயர் பிறந்திருக்கலாம். போர்த்துகீச மொழியில், ‘De mata’ என்பது காடு/வனம் என்று அர்த்தம். சிங்களத்தில் 'கொட' என்பது 'Village' என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பயன்படுத்தப்படும் சொல். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, தெமட்டகொட என்பது 'காட்டில் உள்ள கிராமம்' என்றும் பொருள்படலாம். லியோனார்ட் வூல்ஃப்பின் 'பத்தேகம' இந்த இடத்தில் நமக்கு நினைவுக்கு வரும். அவர் எழுதிய நூலின் சிங்களத் தலைப்பு “பத்தேகம”. (பத்தேகம கிராமம் அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தது.)
இன்று தெமட்டகொட ஒரு கிராமப் பிரதேசம் அல்ல. அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறப் பகுதி. தேசிய இரயில்வே அருங்காட்சியகம் தெமட்டகொடாவில் அமைந்துள்ளது. மேலும் தெமட்டகொடாவில் பல்பாதை மேம்பாலமும் இப்போது உள்ளது.
கொழும்பு 10 - மருதானை
மருதானை தமிழ்ச் சொற்களின் சேர்க்கை என்றே கொள்ளப்படுகிறது. தமிழில் உள்ள மரமும், ஸ்தானமும் இணைந்து திரிந்து மருதானை ஆனதாக சிங்கள மொழிக் கட்டுரைகளிலும் குறிப்பிடப்படுகின்றன. அதாவது மருதானை 'மரங்களின் இடம்' ஆக இருக்கக் கூடுமோ?
க்ளோப் ஆதரின் (Clough’s definition) வரையறையின்படி, 'மரதான' என்பது 'மணல் பள்ளத்தாக்கு' என்பதன் பொருளில் இருந்து பிறந்தது. மருதானை பிரதேசத்தின் மணல்மேடுகளில் தான் முதன் முதலில் செயற்கையாக கறுவாப்பட்டை செய்கை மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து கிடைக்கும் அறுவடை இலங்கையின் சிறந்த கருவாப்பட்டையாகக் கருதப்பட்டது. இந்த மண்ணில் கறுவாப்பட்டை சிறந்த முதிர்ச்சி அடைய ஐந்து ஆண்டுகள் போதும், ஆனால் சாதாரண மண்ணில் ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.
மருதானையின் கறுவாப்பட்டை மிகவும் பெரியதாக இருந்தது. அதன் சிறப்புக்கு உதாரணமாகக் கூறுவதாயின் டச்சுக் காலத்தில் அங்கிருந்த கறுவாப்பட்டையை திருடினாலோ, அப்பயிர்செய்கைக்கு சேதமேற்படுத்தினாலோ மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் மற்ற பகுதிகளில், அத்தகைய குற்றம் விளைவித்தவர்களுக்கு சாட்டையடியால் மட்டுமே தண்டிக்கப்பட்டனர்.
இன்றைய மருதானை, இலங்கைத்தீவின் தெற்கில் இருந்து வரும் ரயில்களுக்கான சந்திப்பாக திகழ்கிறது. பிரதான கோட்டை ரயில் நிலையத்தின் பரபரப்பான வளாகத்துடன் இது இணைக்கபட்டிருக்கிறது. இலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
கொழும்பு 11 – புறக்கோட்டை
சிங்களத்தில் “பிட்டகொட்டுவ” என்பதன் தமிழ் அர்த்தம் புறக்கோட்டை என்று பொருள். ஆனால் ஆங்கிலத்தில் pettah என்று தான் அழைக்கப்படுகிறது. அந்த பெட்டா என்ற சொல் தமிழின் பேட்டை என்கிற சொல்லில் இருந்து வந்ததாகக் கொள்ளப்படுகிறது. Hobson-Jobson's ஆங்கில அகராதியின்படி, Pettah (தமிழ்ப் pettāi) என்பது ஒரு கோட்டையுடன் இணைக்கப்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும் அல்லது கோட்டையை ஒட்டிய நகரமாகும். முன்பெல்லாம் மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியாகவும், திறந்த வெளியில் கடைத் தெருவும், சந்தையும் இருந்தது. இன்று, புறக்கோட்டையில் குறுகிய முடுக்குத்தெருக்களும், குறுகிய பாதைகளும் சேரிகளின் ஒரு பிரமையைத் தருவதாக கூறப்படுவதுண்டு. இது இலங்கையின் மொத்த / சில்லறை வர்த்தகத்திற்கான முக்கிய மையமாக செயல்படுகிறது.
கொழும்பு 12 - அளுத்கடை
1656 இல் போர்த்துகீசியர்களுக்கு எதிரான கடைசி வெற்றிகரமான போரில் டச்சு ஜெனரல் ஜெரார்ட் ஹல்ஃப்ட் (Gerard Hulft) கொல்லப்பட்டார். 150 ஆண்டுகளுக்கும் மேலாக கொழும்பை ஆக்கிரமித்திருந்த போர்த்துகேயர்களை வெளியேற்ற அந்த நேரத்தில் கண்டியை ஆட்சி செய்த இரண்டாம் ராஜசிங்க மன்னனுடன் அவர் கூட்டணி வைத்தார். ஹல்ஃப்ட் இறப்பதற்கு முந்தைய நாள், அவர்கள் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் இரண்டாம் ராஜசிங்க மன்னர் ஜெனரல் ஹல்ஃப்ட்டின் கழுத்தில் ஒரு 'தங்க மாலையையும் தனது சொந்த மோதிரத்தை டின் விரலிலும் அணிவித்தார் இது அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பைக் குறிக்கிறது.
மறுநாள் ஜெனரல் இறுதிப் போரில் பயன்படுத்தக்கூடிய முன் வரிசை அகழிகளை ஆராய்ந்து கொண்டிருந்த வேளை போர்த்துக்கேயர்கள் டச்சு மண்டபத்திற்கு தீ மூட்டினர். ஹல்ஃப்ட் மும்முரமாக பணியில் இருந்த வேளை அவரின் இதயத்தில் வந்து பாய்ந்தது. அதே இடத்தில் அவர் இறந்தார். அவர் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொண்ட மேட்டுப் பகுதி பல நூற்றாண்டுகளாக ஹல்ஃப்ட்ஸ்டோர்ப் (Hulftsdorp) என்ற பெயருடன் தொடர்கிறது.
ஆங்கிலேயர்கள் புறக்கோட்டை சந்தையை இந்த மேட்டுப்பகுதியின் அடிவாரத்தில் கொண்டு வர முயற்சித்ததன் விளைவாக, அந்த இடத்திற்கு 'அழுத் கடே’ என்று பெயரானது. நியூ பஸார் என்றும் அழைக்கப்படுகிறது.
இன்றைய இலங்கையின் ஏறக்குறைய அனைத்து சட்ட நிறுவனங்களும் அளுத்கடையில் அமைந்துள்ளன. அவற்றில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், நீதி அமைச்சு ஆகியவை அடங்கும்.
கொழும்பு 13 - கொட்டாஞ்சேனை
ஒரு சிறிய மீன்பிடி கிராமமான கொட்டாஞ்சேனை, அங்குள்ள கொட்டாங்காய் மரங்கள் (Costus Speciosus) நிறைந்திருதந்தால் அதன் பெயரைப் பெற்றதாக நம்பப்படுகிறது. போர்த்துக்கேயர் காலத்தில் இந்த இடம் கொட்டாஞ்சினா (Kottanchina) என்று அழைக்கப்பட்டது. டச்சு மொழியில், 'Korteboam' என்றால் 'குட்டையான மரங்கள்' எனப்படும். இறுதியாக, ஆங்கிலேயர்கள் கொட்டன் சைனாவாக (Cotton China) மாற்றினர்.
1760 ஆம் ஆண்டு முதலே கொட்டாஞ்சேனையில் ஒரு தேவாலயம் இருந்தபோதிலும், இந்த சிறிய கிராமம் 1838 இல் புனித லூசியாஸ் கதீட்ரல் தேவாலயம் நிறுவப்பட்ட பின்னர் நகரமயமாக்கப்பட்டது.
கொழும்பு 14 - கிராண்ட்பாஸ்
போர்த்துக்கேயர் காலத்தில் களனி ஆற்றைக் கடந்து வடக்கே செல்ல இரண்டு படகுத்துறைகள் இருந்தன. போர்த்துகீசியர்கள் இதை 'பஸ்ஸோ' (Passo) என்று அழைத்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் அதை 'பாஸ்' என்று ஆங்கிலத்தில் அழைத்தனர். முதல் படகுத்துறை இன்றைய நாகலகம் வீதியின் முனையிலிருந்தது. இது போர்த்துகேயர் காலத்தில் 'பாஸோ கிராண்டே' (Passo Grande) என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் அது கிராண்ட் பாஸ் ஆனது. இரண்டாவது துறை வத்தளைக்கு அருகாமையில் இருந்தது. கிராண்ட்பாஸ் படகுச்சேவை மிகவும் பரபரப்பான இடமாகவும், அதற்கென்றே சந்தையும் வரி வசூலிப்பு நிலையமும் இருந்தது. 1822 இல் தான் படகுகளின் மேல் மிதக்கும் பாலம் (Pontoon Bridge) கட்டப்பட்டது. அதன் பின்னர் படகுச் சேவை குறைந்து பின்னர் அச்சேவை நிரந்தரமாக முடிவுக்கு வந்தது. இந்தப் பாலத்தை 21 படகுகள் தாங்கியிருந்தன. அதன் நீளம் 499 அடியைக் கொண்டிருந்தது. 1895 ஆம் ஆண்டில் 26 அடி அகலத்தில் விக்டோரியா பாலம் கட்டப்படும் வரை இப்படித்தான் அந்தப் பாலம் இயங்கியது. அதற்கு 30 வருடங்களுக்கு முன்னர் களனி ஆற்றின் குறுக்கே ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
கொழும்பு 15 – முகத்துவாரம்
கடலுடன் வந்து கலக்கும் ஆற்றின் முனையத்தை முகத்துவாரம் என்று அலைக்கபடுவது வழக்கம். அப்படி வந்தது தான் களனி கங்கை வந்து கலக்கும் இந்த முனையம். அதேவேளை போர்த்துக்கேயர், டச்சுக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட 'முத்வால்' என்ற சொல் இன்றும் பயன்படுத்தபாட்டில் இருக்கிறது. இன்றைய முகத்துவாரப் பிரதேசத்தில் வடகொழும்பைச் சேர்ந்த மட்டக்குளி, மோதர, கதிரான, காக்கைத் தீவு என்பவை அடங்குகின்றன.
கொழும்பின் வலயங்கள்
அஞ்சல் வலயம் உள்ளடங்கிய பகுதிகள்
கொழும்பு 1 கோட்டை
கொழும்பு 2 கொம்பனித் தெரு, யூனியன் பிளேஸ்
கொழும்பு 3 கொள்ளுப்பிட்டி
கொழும்பு 4 பம்பலப்பிட்டி
கொழும்பு 5 ஹெவ்லொக் நகரம், கிருலப்பனை
கொழும்பு 6 வெள்ளவத்தை, பாமன்கடை
கொழும்பு 7 கறுவாத் தோட்டம்
கொழும்பு 8 பொரல்லை
கொழும்பு 9 தெமட்டகொடை
கொழும்பு 10 மருதானை, மாளிகாவத்தை, பஞ்சிகாவத்தை
கொழும்பு 11 புறக்கோட்டை
கொழும்பு 12 புதுக்கடை, வாழைத் தோட்டம்
கொழும்பு 13 கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை
கொழும்பு 14 கிராண்ட்பாஸ்
கொழும்பு 15 முகத்துவாரம், மோதரை, மட்டக்குளி, மாதம்பிட்டி