மண்சரிவில் புதையுண்ட மீரியாபெத்தை தோட்ட மக்களின் பலரின் சடலங்கள் மீட்கப்படவே இல்லை. இலங்கையில் பதுளை மாவட்டத்தில் மீரியாபெத்தை தேயிலைத் தோட்டக் குடியிருப்புக்கள் மண்சரிவில் புதையுண்ட ஒருமாத நிறைவை ஒட்டி கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சலி நிகழ்வில் மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தி பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட நடவடிக்கை குழு வெளியிட்டுள்ள இந்த ‘மீரியாபெத்தை பிரகடனம்’ மலையக மக்களின் லயன் வாழ்க்கை முறையை மாற்றி அவர்கள் தனித்தனி வீடுகளில் வாழ்வதற்கான உரிமையை பிரகடனப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
பிரகடனம்:
1. மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களில் விடுபட்டு பாதுகாப்பாக வாழ்வதற்கான குடியிருப்புகளை அமைத்து கொள்வதன் அடிப்படை உரிமையை வெளியரங்கப்படுத்தி, இதுவரை காலம் தனி வீடில்லாது தொழிலாளர் (சிறை) முகாம்களாக இருக்கும் லயன் அறைகளிலிருந்து வெளியேறி தனி வீடுகளில் வாழ்வதற்கான எமது உரிமையை பிரகடனம் செய்கின்றோம்.
2. இயற்கை அனர்த்த ஆபத்தற்ற இடங்களில் தனி வீடுகளை அமைத்துக் கொள்வதற்கு குடும்பமொன்றுக்கு 20 பேர்ச்சஸ் காணியை சொந்தமாக பெற்றுக் கொள்ளவும், அதில் சொந்தமான வீடுகளை அமைத்துக் கொள்ள வசதிகள் பெற்றுக் கொள்ளவும் பொது உடன்பாட்டுடனான கூட்டு நடவடிக்கைகளை எடுப்போம் என பிரகடனம் செய்வதுடன் ஒக்டோபர் 29 ஆம் திகதியை மலையக மக்களின் காணி வீட்டு உரிமைக்கான தினமாக பிரகடனம் செய்கின்றோம்.
3. புதிதாக அமைக்கப்படவுள்ள குடியிருப்புகள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கிராம அல்லது நகர குடியிருப்புகளாக அங்கீகரிக்கப்பட்டு மத்திய, மாகாண, உள்ளூராட்சி, பிரதேச செயலக, கிராம உத்தியோகத்தர் பிரிவு போன்றவற்றின் கீழான நிர்வாகத்திற்குள்ளாக்கப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை, பொது வசதிகளை கொண்டதாக இருக்க வேண்டுமென பிரகடனம் செய்கின்றோம்.
4. மண்சரிவு அபாய பிரதேசங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்படவும் அவ்வாறு வெளியேற்றுகின்ற போது தோட்டத் தொழிலை இழப்பவர்களுக்கு வேறு தோட்டங்களில் அல்லது மாற்று தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கைகளை எடுப்போமென பிரகடனம் செய்கின்றோம்.
5. தோட்டத் தொழிலாளர்களின் தொழில் தருநர்கள்ஃதோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளுக்கும் பாதுகாப்பிற்கும் முழுமையாக பொறுப்பாக்கப்பட வேண்டுமென்றும் பெருந்தோட்ட சமூகத்தின் உயிர்வாழும் உரிமைகளை உறுதி செய்யும் அனைத்து விடயங்களுக்கும் அரசாங்கம் பொறுப்பாக வேண்டுமென்றும் பிரகடனம் செய்கின்றோம்.
அத்துடன் • மீரியபெத்த அனர்த்தத்தில் உயிர் உடைமை இழந்த குடும்பங்களுக்கு போதுமான இழப்பீடுகள் வழங்கப்படவும், • மீரியபெத்த மற்றும் மண்சரிவு அபாயமுள்ள இடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ள குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் நிரந்தரமாக குடியேற்றப்படுவதை அவர்களுக்கான வாழ்வாதார நிவாரணங்கள் கொடுப்பனவுகள் வழங்கப்படவும், • மீரியபெத்த அனர்த்தத்தினால் பெற்றோர்களை இழந்த சிறுவர்களின் வாழ்வையும், மேம்பாட்டையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவும், • மீரியபெத்த அனர்தத்தில் ஏற்பட்ட உயிர், சொத்து அழிவுகள் பற்றிய சரியான, நம்பகமான தகவல்களை பதிவு செய்யவும், • மீரியபெத்த அனர்த்தம் பற்றிய முன்னெச்சரிக்கையை கவனத்தில் எடுத்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தத் தவறிய நிறுவனங்கள், அதிகாரிகளையும் கண்டறிந்து சட்ட நடவடிக்கைக எடுப்பதற்காக நம்பகமான விசாரணையை நடத்தவும் வலியுறுத்தி கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம், என்றும் அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் மலையக சிவில், அரசியல் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...