ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான
வேட்பாளரில் பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை
வெளியிட்டு விட்டார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை
வெளியிட்டுள்ளார். மைத்திரி வெளியிட்டுள்ள விஞ்ஞாபனத்தில் 100 நாட்களில் 100 வேலைத் திட்டங்கள் என்ற அடிப்படையில் பிரதானமாக அரசியலமைப்பு மறுசீரமைப்பு,பொருளாதாரம்,பண்பாடுள்ள சமூகம் ,பாதுகாப்பான உணவு என்ற அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. மறந்தும் கூட இலங்கையின்
இனப்பிரச்சினை தீர்வு பற்றியோ அல்லது சிறுபான்மை சமூகங்கள் பற்றியோ ஒரு வசனமும்
இடம்பெறவில்லை. இது ஆச்சரியமளிக்கும் விடயமல்ல, காரணம் தென்னிலங்கையின் பேரினவாத சக்திகள் அதற்கு இடமளிக்கப்போவதில்லை.
பேரினவாதத்தின் வாக்குகளிலேயே மைத்திரியும் மகிந்தவும் தங்கியுள்ளனர் என்பது அனைவரும்
அறிந்த ஒரு விடயம்.
மகிந்தவும் அப்படியே
இதே வேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்
தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிறுபான்மை சமூகங்கள் பற்றிய எந்த வசனமும் இடம்பெற்றிருக்கவில்லை
என்பது கண்கூடு. என்னதான் நிறைவற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தாலும் கூட
அவர் தென்னிலங்கையின் பேரினவாதத்திற்கு பதில் அளிக்க வேண்டும். தேர்தல் மேடையில்
அவர் “ நான் பெந்தர
நதிக்கரைக்கு அப்பால் பிறந்தவன், கோழை போல எங்கும் ஓடிப்போய்விட மாட்டேன் “ என மைத்திரிக்கு சவால் விடலாம் ஆனால் சிறுபான்மை மக்களை அடக்கி
ஒடுக்கி ஆள நினைக்கும் மனோபாவத்தில் ஊறிப்போன பேரினவாத சக்திகளுக்கு முன் அவர்
பெட்டிப்பாம்பாகவே இருக்க வேண்டியுள்ளது. இதை பேரினவாத சக்திகளும் நன்கு பயன்படுத்திக்கொண்டு
வருகின்றன. அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாது மிகவும் பாரதூரமான
இனத்துவேஷங்களை அவிழ்த்து விட்டு வந்த ஹெல உறுமயவினர், தமது கொள்கைகளை மகிந்த ஏற்றுக்கொள்ள வில்லை என வெளியேறினாலும் கட்சியின்
முக்கியஸ்த்தரான உதய கம்மன்பில சில சகாக்களுடன் மீண்டும் ஆளுந்தரப்பில் இணைந்து
கொண்டார். இதற்கு பேரினவாத நிகழ்ச்சி நிரலே அரசாங்கத்திற்கு உதவியது. ஆகவே தென்னிலங்கையில் இந்த
பேரினவாதம் இருக்கும் வரை எந்த வேட்பாளர் ஜனாதிபதியானாலும் சிறுபான்மை மக்களின்
பிரச்சினைகள் தீரப்போவதில்லை அதை தீர்க்கும் வழிவகைகளை எவரும் சொல்லப்போவதுமில்லை.
வடக்கின் மயக்கம்
தென்னிலங்கையைப் பொறுத்த வரை தமிழ்
தேசிய கூட்டமைப்பினரை துப்பாக்கி ஏந்தாத புலிகள் என்ற அடிப்படையிலேயே எல்லோரும்
பார்க்கின்றனர். ஆனால் அதற்கு ஏற்றாற்போல் காய் நகர்த்தல்களை தான் அவர்களும்
செய்து வருகின்றனர். வடக்குவாழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக இருக்கும் கூட்டமைப்பினர்
இது வரை யாருக்கு ஆதரவு என்ற விடயத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் மக்கள் கட்டாயம்
வாக்களிக்க வேண்டும் என்று அறிவித்து விட்டார்கள். அப்படியானால் நீங்கள்
விரும்பும் ஒருவருக்கு வாக்களியுங்கள் என்று தான் அர்த்தம். வடக்கு வாழ் மக்களின்
பெரும்பான்மையான வாக்குகள் நிச்சியமாக மகிந்தவுக்கு கிடைக்காது என்பது நிதர்சன
உண்மை. ஆனால் பொது வேட்பாளர் மைத்திரிக்கு வாக்களியுங்கள் என வாய் திறந்து கூறும்
தைரியம் கூட்டமைப்பினருக்கு இல்லை. ஏனெனில் மைத்திரியும் சுதந்திர கட்சியை சேர்ந்தவர்
கூறப்போனால் யுத்த வெற்றியின் பங்குதாரர்.யுத்த காலகட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக
இருந்தவர். இறுதி யுத்தத்தின் நாயகனாக போற்றப்படும் சரத் பொன்சேக்காவை தற்போது
அருகில் வைத்திருக்கிறார். புலிகளின் இலக்காக இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும்
அவருக்கு ஆதரவாக இருக்கின்றார். ஏன் மைத்திரிபாலவும் ஐந்து தடவைகள் புலிகளின் தாக்குதலுக்கு
இலக்கானவர் தான். அதிகார பரவலாக்கம் குறித்து பேசி வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை
ஆரம்பத்திலேயே அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் மைத்திரி. ஆம் சமஷ்டிக்கு இடமில்லை ஒற்றையாட்சியே
ஒரே வழி என்று தேர்தல் மேடைகளில் கூறி விட்டார். மேலும் நாட்டை பிளவு படுத்த இடமளியேன்
புலிகளை தலைதூக்க விடமாட்டேன் என்றும் கூறிவிட்டார். இவ்வாறு இருக்கையில் மக்களிடம்
கிராமம் கிராமமாக சென்று அவர்களிடம் பேசியே முடிவு எடுப்போம் என கூட்டமைப்பினர்
தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால் இவர்கள் விரும்பாத
எதிர்ப்பார்க்காத ஒருவர் பொது வேட்பாளரானதுதான் நடந்த சம்பவம். இறுதி யுத்த காலகட்டத்தில்
யுத்த களத்தில் செயற்பட்ட சரத் பொன்சேக்கா பொது வேட்பாளராக போட்டியிட்ட போது அவருக்கே
ஆதரவு அளிக்க அவர்கள் முன்வந்ததற்குக்காரணம் மகிந்தவை தோற்கடிக்க வேண்டும் என்பதே.
ஆனால் தற்போதும் இவர்களுக்கு மகிந்தவை தோற்கடிக்க வேண்டும் என்ற அவா இருந்தாலும்
கூட மைத்திரிக்கு வெளிப்படையான ஆதரவு கொடுக்க தயங்குவதற்குக்காரணம் சில வேளைகளில்
மைத்திரி வெற்றி பெற்று தேசிய அரசாங்கம் ஒன்று அமையும் பட்சத்தில் இவர்களும் அதில்
பங்கெடுக்க வேண்டும். அப்படியான சந்தர்ப்பத்தில் இவர்கள் நினைத்தபடி அரசியல் செய்ய
முடியாது. ஆகவே இந்த குறுகிய தேசியவாத கொள்கைகளை இவர்கள் என்று விட்டொழிக்கின்றனரோ
அன்றுதான் வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் 16 இலட்சம் பேருக்கு விமோசனம் கிடைக்கும்.
மலையகத்தலைமைகளின் சுயநலம்
யார் எப்படி போனாலும் என்ன கிடைப்பதை
பிடித்துக்கொண்டு அரசியல் செய்வோம் இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன நாம்
தொழிலாளர்களை ஆள்வோம் அப்படி இல்லாவிட்டால் எங்களையே நாங்கள் ஆண்டுக்கொள்கிறோம்
என்ற சுயநல போக்கில்தான் இன்று மலையக அரசியல் இருந்து வருகிறது. இரண்டு வருடங்களுக்கு
முன்பு ஜனாதிபதி மகிந்தவால் வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட50 ஆயிரம் வீட்டுத்திட்டத்திற்கு இப்போது
தான் அவசர அவசரமாக அடிக்கல் நாட்டப்படுகிறது. அதுவும் வீடமைப்பு அமைச்சர் விமல்
வீரவன்ச இல்லாமலேயே இது முன்னெடுக்கப்படுகிறது. எல்லாவற்றையும் விட கொடுமை மலையகத்திற்கு
சற்றிலும் பொருந்தாத மாடி வீட்டுத்திட்டமாகவே இது முன்னெடுக்கப்படுகிறது. இது மாடி
லயங்கள் என்பதே உண்மை.ஆனால் 2005 ஆம் ஆண்டு மகிந்த சிந்தனையில் கூறப்பட்ட தொழிலாளர்களின் கௌரவமான
வாழ்க்கை குறித்த சரத்துக்கள் பற்றி எந்த மலையக அரசியல்வாதிகளுக்கும் தெரியாதுள்ளது.
தொழிலாளர்களின் காணி உரிமை பற்றி எவருமே வாய்திறக்கவில்லை. மீரியபெத்த அனர்த்தம்
பற்றி பேச விரும்பாத இந்த பிரதிநிதிகள் தேர்தல் கால காய் நகர்த்தல்களை கச்சிதமாக
செய்து வருகின்றனர். மலையகம் பற்றி அறிந்தும் தெரிந்தும் வைத்திராத பாதுகாப்பு செயலாளர்
கோத்தபாய வீட்டுத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட வருகிறார். தேயிலை செடிகளுக்கு
மத்தியில் நின்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார் அமைச்சர் ஆறுமுகன்.
மறுபக்கம் ஏழு பேர்ச் காணி விவகாரத்தை நாம்தான் ஆரம்பித்தோம். புதிய அரசாங்கத்தின்
ஆட்சியில் அது அமுல்படுத்தப்படும் என்று தெரிந்து இன்று அவசர அவசரமாக அடிக்கல்
நாட்டப்பட்டு வருகின்றது என முழங்குகிறார்கள் திகாம்பரமும் இராதா கிருஷ்ணனும். குடியிருப்பு
விவகாரத்திலும் கட்சி தாவல்விடயங்களிலும் தொழிலாளர்களின் அபிலாஷைகளை புறந்தள்ளி
ஒதுக்கி சுயநல அரசியல் செய்யும் இவ்வாறான பிரதிநிதிகள் இருக்கும் வரை மலையகம்
எவ்வாறு உருப்படும்? ஆக தென்னிலங்கையின் பேரினவாதமும் வடக்கின் குறுந்தேசியவாதமும்
மலையகத்தின் சுயநலவாத போக்கும் இருக்கும் வரை இந்த நாட்டில் தமிழர்களுக்கு விடிவு
என்பதே கிடையாது. இதில் யார் ஆட்சிக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன?
நன்றி - சூரியகாந்தி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...