Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

தொலமியின் வரைபடத்தில் கொழும்பு (கொழும்பின் கதை - 53) - என்.சரவணன்

கொழும்பு மாநகரம் இலங்கை வரலாற்றில் நீண்ட காலமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறப்பான இடத்தைப் பெற்ற ஒரு பிரதேசமாகும். கி.மு 2 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட "தப்ரபேன்" வரைபடமும் கொழும்பு எந்தளவு சர்வதேச அளவில் பிரபலமாக இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.

நவீன புவியியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் கிலேடியஸ் தொலமி (Claudius Ptolemaeus (Ptolemy). இலங்கையின் முதலாவது வரைபடத்தை வரைந்தவர் அவர் தான். இலங்கை முதன்முதலாக உலகுக்கு தப்ரபேன் (Taprobana) என்கிற பெயரில் அழைக்கப்பட்டது அவரின் இந்த வரைபடத்தின் பின்னர் தான். இந்த வரைபடத்தை அவர் வரைந்த காலத்தை அறிந்தால் நாம் வியப்புறுவோம். கிறிஸ்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டில் வரைந்த வரைபடம் அது.

தொலமி கி.மு.100ஆண்டில் பிறந்தவர் எனக் கணிக்கப்படுகிறது. 70வது வயது வரை வாழ்ந்தவர். எகிப்தை உள்ளடக்கிய ரோம சாம்ராஜ்ஜியத்தின் தலைநகர் அலெக்சாண்டிரியாவில் பிறந்தவர் தொலமி. அவரின் வரைபடங்களில் காணப்படுகிற குறிப்புகள் கிரேக்க மொழியிலேயே உள்ளன.

அதற்கு முன் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மகா அலெக்சாண்டரின் இந்தியா பயணத்தின் போதே தப்ரபேன் என இலங்கை அழைக்கப்பட்டிருந்தது. பண்டைய கிரேக்கர்கள் இந்தியாவை ஆண்ட மௌரியப் பேரரசுடனான கொண்டிருந்த தொடர்புகள் காரணமாக இந்தியக் கடற்கரையில் தாம்ரவர்ணி (தாமிரபரணி) என்கிற சமஸ்கிருதப் பெயரைக் கொண்ட பெரிய தீவு இருப்பதை அறிந்திருந்தனர். தாம்ரவர்ணியை அவர்கள்  தப்ரபேன் என்று உச்சரித்தார்கள். விஜயன் இலங்கையை வந்தடைந்த கடற்கரையாக தாமிரபரணி அறியப்படுகிறது. அந்த தப்ரபேனைத் தான் பின்னர் தொலமி வரைபடமாக வரைந்திருந்தார்.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட அரிஸ்டாட்டிலின் படைப்புகளில் ஒன்றான “பிரபஞ்சத்தில்” (On the Universe (Greek: Περὶ Κόσμου)) என்கிற நூலில் உலகப் பெருங்கடலில் உள்ள தீவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் “தப்ரபேன்” தீவும் இடம்பெற்றுள்ளது. அலெக்சாண்டரின் பயணத்தின் மூலம் தான் அவர் தப்ரபேனை அறிந்திருந்தார். (1)

இலங்கையைப் பற்றி மட்டுமல்ல இன்னும் உலக நாடுகள் பலவற்றின் முதல் வரைபடம் அவரால் வரையப்பட்டது தான்.

தொலமியின் வரைபடங்கள் பல நூற்றாண்டுகளாக தொலைந்து போன பிறகு இடைக்காலத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. மறுமலர்ச்சி காலத்தின் போது, பல உலக அறிஞர்களும் வரைபட நிபுணர்களாலும் பண்டைய கிரேக்க, ரோமானிய எழுத்தாளர்களின் படைப்புகளில் ஆர்வம் காட்டினார்கள். மேலும் அதுவரை கிடைக்காதிருந்த நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து மொழிபெயர்க்கத் தொடங்கினர். இந்த முயற்சியின் அங்கமாகத் தான் தொலமியின் "ஜியோகிராஃபியா" மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. கிரேக்க சொல்லான  "ஜியோகிராஃபி" (Geography) என்கிற சொல் புவியியலைக் குறிக்கும் சொல்லாக ஆனது அப்படித்தான். எனவே தான் அந்த தொலமி நவீன புவியியலின் தந்தை (The Father of Geography) என்று அழைக்கப்படுகிறார். அவரின் வரைபடங்களில் உள்ள முக்கியமான இன்னொரு அம்சம் என்னவெனில் அன்றே அவ்வரைபடங்களில் அட்ச, தீர்க்கரேகைகளை பயன்படுத்தி இருபது தான். அவற்றை உலகுக்கு முதலில் அறிமுகப்படுத்தியதும் அவர் தான்.

உலக அளவில்  மற்றும் அக்கால வரைபடத்தை உருவாக்குபவர்களுக்கு பெரும் உத்வேகமாக மாறியது "ஜியோகிராஃபியா". அது பரவலாக ஆய்வு செய்யப்பட்டு, அதன் மறுகண்டுபிடிப்புக்குப் பிறகு பல நூற்றாண்டுகளாக வரைபடங்கள் மற்றும் புவியியல் அறிவுக்கான ஆதாரக் குறிப்புகளாகப் பயன்படுத்தப்படத் தொடங்கியது. இந்த நூல் முதன்முதலில் 9ஆம் நூற்றாண்டில் கிரேக்க, அரேபிய மொழிகளில் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 1477 ஆம் ஆண்டு லத்தீன் மொழியில் அச்சிடப்பட்டு ஐரோப்பாவில் பரவலாக விநியோகிக்கப்பட்டது, இது தொலமியின் படைப்பின் அடிப்படையில் பல புதிய வரைபடங்களை உருவாக்க வழிவகுத்தது. அதன் பின்னர் "ஜியோகிராஃபியா" ஐரோப்பிய வரைபடக்கலையின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றும் உலகளவில் அந்த நூல் பல கோணங்களில் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. 

"ஜியோகிராஃபியா" நூல்கள் எட்டுத் தொகுதிகளைக் கொண்டவை. சுமார் 8000 க்கும் மேற்பட்ட இடங்கள் அவரின் அந்த நூல்களில் இடம்பெற்றுள்ளன என்பது முக்கியமாக கவனிக்க வேண்டியது. கி.மு இரண்டாம் நூற்றாண்டு காலத்தில். அதில் ஏழாவது தொகுதியில் தப்ரபேன் இடம்பெற்றுள்ளது. மூல வரைபடம் இன்றும் பிரிட்டிஷ் நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

தொலமியின் “தப்ரபேன்” என்கிற வரைபடமானது இலங்கையைத்தான் குறிப்பிடுகிறதா என்கிற சர்ச்சைக்குரிய விவாதம் இன்றும் தொடர்ந்து வருகிறது. ஆனால் அந்த வரைபடத்தை  அக்குவேறு ஆணிவேராக நுணுக்கமாக பிரித்து ஆராய்கிறவர்கள் அது இலங்கை தான் என்றும் இன்னும் சிலர் அது சுமாத்திரா தீவு என்றும் விபரங்களை வெளியிட்டு வருகின்றனர். அவரின் வரைபடத்தில் தப்ரபேன் அதன் உண்மை அளவை விட பதினான்கு மடங்கு அதிகமாக காட்டப்பட்டிருந்தமையும் பலரால் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்தியா கூட இலங்கையை விட சிறியதாகக் காட்டப்பட்டிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.(2) அன்றைய இலங்கை பற்றி மேற்கில் நிலவிய பெருங்கதைகளாலேயே அதனை முக்கிய பெரிய நாடாகக் கருதியிருக்கக் கூடும் என்கிற வாதங்களும் பரவலாக வைக்கப்படுகின்றன, அப்படியான அளவு வித்தியாசங்கள் அவரின் ஏனைய வரைபடங்களிலும் உள்ள குறைதான் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள முடியும்.


தொலமி இந்த வரைபடத்தை கி.பி 139 காலத்தில் வரைந்திருக்கிறார். மகாவம்சத்தின் படி, மஹாலுனா அல்லது இரண்டாவது பாத்திய திஸ்ஸ என்கிற மன்னன் அந்த நேரத்தில் நாட்டை ஆட்சி செய்தான். இக்காலத்தில் இந்நாட்டு அரசர் ரோமா, எகிப்து, எத்தியோப்பியா, கிரீஸ், அரபு நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையிலிருந்து மேற்கொண்டதாகத் பதிவுகள் உண்டு. அதன் காரணமாக, தப்ரோபேன் உலகம் முழுவதும் பிரபலமான நாடாக இருந்திருக்கலாம்.

மேலும், தொலமியின் வரைபடத்தில் அன்றைய நாட்டின் பிரபல இராச்சியமாக இருந்த அனுராதபுரம் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அனுரோகிராமன் என்று பதிவு செய்துள்ளார். அனுரோக்ரமன் என்று அதில் குறிப்பிடப்பட்டிருகிறது. கிரேக்கர்கள் அந்த உச்சரிப்பில் தான் அதை அறிந்து வைத்திருந்திருக்க வேண்டும். தெற்கில் ரோகன் (ருஹுன) என்கிற இடமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  தொலமி இலங்கை வரைபடத்தை வரைந்த காலத்தில், இலங்கையில் பயன்படுத்தப்பட்ட கிராமப் பெயர்கள் சமஸ்கிருத மூலத்தைக் கொண்டிருந்தன என்பதையும் இது காட்டுகிறது.

இதை விட அந்த வரைபடத்தில் மத்தியில் தொடர் மலைகளும் இடம்பெற்றிருக்கிறது. “Malea mone” (மலை மேடு) அவை குறிக்கப்பட்டுள்ளதையும் இங்கே குறிப்பிடவேண்டும். இன்று நாம் குறிப்பிடுகிற மலைநாடு என்பதை கிறிஸ்துவுக்கு முன்னரே “மலை” என்கிற அடைமொழியுடன் பயன்படுத்தப்பட்டிருகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.

தொலமி இலங்கைக்கு ஒருபோதும் வந்திராத போதும் பல நாடுகாண் பயணிகளிடமும், வர்த்தகர்களிடமும், கேட்டுத்தெரிந்த உருவத்தையும், பெயர்களையும், குறிப்புகளையும், பதிவுகளையும் வைத்து உண்மைக்கு நெருக்கமான இத்தகைய வரைபடங்களை அன்றே உருவாக்கியிருப்பதை வியக்காமல் இருக்க முடியுமா?

இலங்கை போர்த்துகேய காலனித்துவத்துக்குள் வீழ்ந்த காலமான பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை தப்ரபேன் என்கிற வரைபடம் தான் உலக அளவில் இலங்கையின் வரைபடமாக அறியப்பட்டிருந்தது. இந்த வரைபடத்தை ஆதாரமாக வைத்து அதே வடிவில் சில மாற்றங்களுடன்; செழுமைப்படுத்தபட்ட பல வரைபடங்கள் 16ஆம் நூற்றாண்டில் வெளியாகின.

இந்த வரைபடங்கள் அவ்வளவு காலமும் எத்தனை பேர்களின் கைகளுக்கு மாறி இறுதியில் 1406ஆம் ஆண்டு யாகோபுஸ் அன்ஜெலஸ் (Jacobus Angelus) என்பவரால்நூல் வடிவம் பெற்றது என்பதைப் பற்றியும் அவை கூட மீண்டும் கண்டு பிடிக்க இயலாதிருந்த நிலையில் டொக்டர் சார்ல்ஸ் பேர்னி என்பவரால் (Dr Charles Burney) பிரிட்டிஷ் நூலகத்துக்கு வழங்கப்பட்ட ஏராளமான சேகரிப்புகளில் இவை கண்டெடுக்கப்பட்டன. இன்றும் சார்ல்ஸ் பேர்னியின் சேகரிப்புகளில் இந்த வரைபடங்கள் தனியாக “Burney MS 111” என்கிற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

தொலமியின் வரைபடத்தில் “தப்ரபேன்” என்பதை இலங்கை தான் என்று குறிப்பிடுகிற இன்னொரு துல்லியமான ஆய்வு கிரேகர் ரீச் (Gregor Reisch) என்பவர் செய்த பட ஒப்பீட்டு ஆய்வு. (3) அந்த ஆய்வில் அன்றைய இடங்களின் பெயர்களில் உள்ள வரலாற்று சான்றாதாரங்களையும், புவியியல் நிலப்பரப்பில் அதன் தன்மைகளையும் இன்றைய நிலையோடு ஒப்பிடுகிறார்.

கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ள இடங்களின் பெயர்களின் உச்சரிப்புகளை ஆங்கிலப்படுத்தி அந்தக் கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது. அதன்படி “Boumasanoi” என்று குறிப்பிடப்படுகிற இடத்தை களனி பகுதி என்று குறிப்பிடுகிறார். இந்த சொல்லானது சமஸ்கிருதத்தில் பூமியைக் குறிக்கிற பூமா (bhūma) என்கிற சொல்லும் பழமையைக் குறிக்கிற “சனா” (sana) என்கிற சொல்லும் சேர்ந்து உருவாகியிருக்கலாம் என்றும் அன்றைய களனி இராஜ்ஜியம் தான் அதுவென்றும் குறிப்பிடுகிறார். கல்யாணி என்கிற அந்த களனிப் பிரதேசத்துக்கே கௌதம புத்தர் முதற்தடவை இலங்கைக்கு வந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. இதையே நிக்கலஸ்ஸின் ஆய்வுக் கட்டுரையிலும் இந்த சொல் பற்றி ஆராயப்பட்டிருக்கிறது. (4)

தொலமி தனது வரைபடங்களில் அந்தந்த பிரதேசங்களில் அன்று அழைக்கப்பட்ட பெயர்களாக தான் ஊகித்த பெயர்களை மாத்திரம் அவ்விடங்களுக்கு வழங்கவில்லை. மாறாக அவற்றின் காரணப் பெயர்களாக தான் கருதியதை கிரேக்க அர்த்தம் தரத்தக்க பெயர்களையும் இட்டிருக்கிறார். அப்படித்தான் அவர் “Dios Zeus” என்று குறிப்பிடப்படுவது கொழும்பைத்தான் என்று கிரேகர் ரீச் மட்டுமன்றி நிக்கலஸ், மெக்கிரிண்டில் (McCrindle) ஆகியோரும் கூட குறிப்பிடுகின்றனர். சீயஸ் (Zeus) என்பது அன்றைய முக்கிய கிரேக்க கடவுளர்களில் ஒருவரின் பெயர். அப்படிப்பட்ட ஒரு பெயரை வைத்ததன் மூலம் அது அந்த இடத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார் என்றே மேற்படி ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர்.  அன்றைய இராச்சியத்தின் முக்கிய இடமாக அது இருந்திருந்ததாலேயே அந்தப் பெயரை அவர் சூட்டியிருக்கக் கூடும் என்றே இவர்கள் கருதுகிறார்கள்.

தொலமியின் வரைபடம் இலங்கையில் பன்முகப் பார்வையில் ஆராயப்பட்டு வெளிவரவேண்டிய விரிவான ஆய்வுக்கான தேவை இன்றும் இருக்கிறது.

உசாத்துணை :
  1. Johan C. Thom, Cosmic Order and Divine PowerPseudo-Aristotle, On the Cosmos, Mohr Siebeck, Tübingen, Germany, 2014
  2. O. A. W. Dilke, The Culmination of Greek Cartography in Ptolemy, in B. Harley, D. Woodward (edS.), The History of Cartography. Volume one. Cartography in Prehistoric, Ancient and Medieval Europe and the Mediterranean, The University of Chicago Press, Chicago and London
  3. Reisch, Gregor, "The Accuracy of some Mediaeval Maps of the Taprobane Island", (5 March 2018).
  4. Nicholas, C. W.: Historical Topography of Ancient and Medieval Ceylon, Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, New Series, Vol. VI, Special number, Colombo 1963.

நன்றி - தினகரன் வாரமஞ்சரி 05.02.2023
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates