Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

கேகாலை படுகொலைகளும்! பித்தலாட்ட ஆணைக்குழுவும் (1915 கண்டி கலகம் –55) - என்.சரவணன்

Sir-Gualterus-Stewart-Schneider
1915 கலவரத்தின் போது நிகழ்ந்த மிக முக்கிய சம்பவங்களில் ஒன்றாக கேகாலை சூட்டுச் சம்பவம் கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த முறைப்பாடுகளும் விவாதஞளும் இங்கிலாந்து வரை பரவியிருந்தது. அதன் விளைவு தான் இந்த சம்பவத்தை விசாரிக்கவென ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

புதிய ஆளுநர் ஜோன் அண்டர்சன் பதவிக்கு வந்ததன் பின்னர் இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட ஆங்கிலேய படையினர் அனைவரும் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இது சுத்த பித்தலாட்டமே. வெறும் கண்துடைப்பே. அப்படி அழைக்கபடுவதாக அறிவிக்கப்பட்ட விசேட இராணுவ அதிகாரிகளின் பெயர்கள்.

  • மேஜர் பெலி
  • எப்.என்.சட்லோ,
  • டபிள்யு.எல்.எச்.கெண்டலோ
  • ஏ.டீ.ஸ்லய்
  • ஜே.சீ.மிச்சேல்,
  • ஏ.எல்.பென்ஸ்,
  • டபிள்யு.எஸ்கின் ஸ்மித்


இந்த அதிகாரிகளுடன் சில பஞ்சாப் படையினரும் சேர்ந்து 03.06.1915 அன்று கேகாலையில் அம்பே என்கிற கிராமத்துக்குள் நுழைந்தனர். அங்கு கடைகள் உடைக்கப்பட்டு, கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற பகுதியை பார்வியிடச் சென்றதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் இப்படி அவர்கள் அந்த இடத்துக்கு சென்றது சம்பவம் நிகழ்ந்து ஒருவாரத்தின் பின்னர் தான்.

இவர்களுடன் அந்த பிரதேசத்தின் கிராமத் தலைவரும் (ரட்டே மாத்தயா)வும் செல்ல நேரிட்டிருந்தது. அந்த கிராமத்துக்குள் புகுந்து சந்தேகத்தின் பேரின் சிலரை சேர்த்துக்கொண்டு அங்கிருக்கும் நேர் களஞ்சியம் ஒன்றுக்குள் அடைத்துள்ளனர். குறிப்பிட்ட சம்பவத்திற்கு தலைமை தாங்கினார் என்று கூறி ரொமானிஸ் பெரேரா என்பவரை அங்கேயே சுட்டுத் தள்ளினர். இவர்களுடன் இருந்த போலிஸ் அதிகாரியான லவர் என்பவர் அங்கிருக்கும் சிங்களவர்களை நோக்கி மிகவும் கூடாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்ததுடன் அங்கிருக்கும் பெண்களை முஸ்லிம்களுக்கு கூட்டிக்கொடுப்பதாக கூறி நிந்தித்திருக்கிறார். மேலும் அவர் 100 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்களவர்கள் இந்த நாட்டில் நாய்களைப் போலவும், வேடுவர்களாகவுமே இருந்ததாகவும் பிரித்தானியர்களுக்கு நன்றிக் கடன் பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். 

ஜூன் 9 அன்று சட்லோ உள்ளிட்ட குழு கொஹுபிடிய எனும் பகுதிக்குள் புகுந்துள்ளனர். அவர்கள் அங்கு நுழையும் போது கலவரம் அடங்கியிருந்தது. அந்த பிரதேசத்தின் ஆராச்சி இப்ராஹிம் லெப்பை என்பவரை அவர்கள் சந்தித்தார்கள். சட்லோவின் குழு பல சிங்கள வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை வெளியில் இழுத்து வந்தார்கள். அவர்களை சுடும்படி உத்தரவிட்டார்கள். பின்னர் அங்கு நிகழ்ந்த சில நிகழ்சிகளின் பின்னர் இழுத்து வரப்பட்ட ஆண்களில் சிலர் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு தாக்கப்பட்டனர். அர்னோலிஸ், ஜூவானிஸ் ஆகிய இரண்டு அப்பாவிகளை பகிரங்கமாக சுட்டுக்கொன்றனர்.

அதே தினம் பெளியின் தலைமையில் பஞ்சாப் படையினரின் தலைமையில் யட்டியந்தோட்ட பகுதிக்குள் புகுந்து அங்கு ஜூவான் அப்பு என்பவரை இழுத்து வந்து சுட்டுக்கொன்றனர். இத்தனைக்கும் இந்த பிரதேசத்தில் எந்தவித கலவர நிகழ்வுகளும் நடக்கவுமில்லை. அமைதியாக இருந்த அந்த இடத்தில இத்தகைய பகிரங்க மரணதண்டனையை நிறைவேற்றியது அங்குள்ளவர்களை மிரட்டுவதற்காகவே. தம்மீதான பீதியை உணரச் செய்து அதிகாரத் திமிரை நிலைநாட்டுவதற்காகவே.
பின்னர்  இதனை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணையின் போது சாட்சி கூறிய படையினர் ஜூவான் அப்பு என்பவர் அந்த பகுதியைச் சேர்ந்த சண்டியர் என்றும் அந்த கிராமத்துக்கே அபகீர்த்தியை உண்டுபண்ணி வந்த ஒருவர் என்றும் அவரை கைது செய்து ஹோட்டலுக்குள் கொண்டு வந்து வழக்கு விசாரணை செய்து ஏனையோருக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறினர்.

இதற்கு அடுத்த நாள் ஜூன் 10 அன்று தெஹியோவிட்ட எல்கொட கிராமத்துக்குச் சென்ற படையினர் தெள்னுஸ் அப்பு, போடி சிங்கே, ஜேம்ஸ் பாஸ் ஆகிய மூவரை பிடித்துச் சென்றனர். கிராமத்திலிருப்பவர்களில் மிகவும் மோசமானவர்கள் என்று கூறி அவர்களை பகிரங்கமாக அவர்களின் சிறு குழந்தைகளின் முன்னிலையில் சுட்டுக்கொன்றனர். 
ஜூன் 13 அன்று இலங்கை குதிரைப்படையைச் சேர்ந்த பெனிஸ் என்கிற சிப்பாய் தெரனியகல பகுதிக்கு சென்று சேரஹாமி  என்பவரை இழுத்துச் சென்று சுட்டுக்கொல்லும்படி ஆணையிடப்பட்டது. தனக்கு உயிர்பிச்சைத் தரும்படி கால்களில் விழுந்து மன்றாடி அழுது புரண்டபோதும் அங்கேயே சுட்டுக் கொல்லப்பட்டார் சேரஹாமி.

அன்று அதே தினம் நூதுறு என்கிற பிரதேசத்தில் பீட்டர் என்பவரை கைது செய்த படையினர் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியதன் ஒரே காரணம் அவரிடம் கத்தி இருந்தது என்பதற்காகவே.

ஜூன் 15 ஆம் திகதி ஸ்லைன் எனும் படையினன் டிங்கிரி பண்டா என்கிற உடுவே பிரதேசத்தைச் சேர்ந்த ஆராச்சியை சுட்டுக் கொன்றார். ஊரைச் சேர்ந்த ஆராச்சிமார் அரசாங்கத்தின் சேவகர்களாக கடமையாற்றியவர்கள். 12 சந்தேகநபர்களைக் கொண்ட பட்டியலொன்றை கொண்டுவந்து அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தரும்படி டிங்கிரி பண்டாவை முதல் நாள் ஸ்லைன் பணித்துள்ளார். 15 திகதி அந்த பட்டியலில் உள்ளவர்களில் மூன்று பேரை மாத்திரமே கண்டுபிடிக்க முடிந்திருந்தது. ஆத்திரமுற்ற ஸ்லைன் 15 நிமிடங்களுக்குள் ஏனையோரையும் பிடித்துத் தரும்படி ஆணையிட்டுள்ளார். 15 நிமிட முடிவில் ஆராச்சியை ஒரு மரத்தில் கட்டிவைத்து சுட்டுக் கொன்றுள்ளார் ஸ்லைன்.

நாடு முழுவதும் இப்படி படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவங்கள் குறித்து ஆரம்பத்தில் பொதுமக்கள் மத்தியில் போதிய விளக்கமின்றி இருந்தனர். குறிப்பாக இவர்கள் உண்மையில் குற்றவாளிகளா இல்லையா என்பது குறித்து கூட போதிய விளக்கமின்றி குழப்பத்துடன் இருந்தார்கள். ஆனால் சகலதும் அடங்கியதன் பின்னர் கொல்லப்பட்டவர்கள் பலர் சாதாரண அப்பாவிகள் என்றும் இந்த கலவரத்துடன் சம்பந்தமே இல்லாதவர்கள் என்றும் தெரியவந்தது.

கேகாலையில் நிகழ்ந்த இந்த அநியாயத்துக்கு எதிராக துணிச்சலாக எதிர்க்கத் துணிந்தவர் ஏ.ஏ.விக்கிரமசிங்க என்பவர். அவர் ஒரு பிரசித்தி பெற்ற வழக்கறிஞர். ஆரம்பத்தில் கொள்ளைச் சம்பவங்களை அடக்குவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைத்து வந்த விக்கிரமசிங்க அரசாகத்தின் நடவடிக்கைகளை நேரடியாகக் கண்டு விரக்தியுற்றார். அதன் பின்னர் இராணுவச் சட்டம் அமுலில் இருந்த மூன்று மாதங்களில் நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்று கோரி ஒரு கூட்டத்தை கொழும்பில் நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பல அரசியல் தலைவர்களும் பங்குபற்றினர். அதன் விளைவு இந்த விடயங்களை முன்னெடுக்கவென ஒரு குழு அமைக்கப்பட்டது அதில் டீ.எஸ்.சேனநாயக்க எப்.ஆர்.சேனநாயக்க, விக்கிரமசிங்க, ஆகியோரைக் கொண்ட ஒரு நிர்வாகக் குழுவைத் தெரிவு செய்தனர். ஒரு விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும்படி அவர்கள் காலனித்துவ செயலகத்திற்கு நிர்ப்பந்தித்தனர். இதன் பின்னர் தான் சேர் பொன் இராமநாதன், டீ.பீ.ஜயதிலக்க, ஈ.டபிள்யு பெரேரா போன்றோரின் இங்கிலாந்து விஜயம் நிகழ்ந்தது. இதன் போது தான் ஈ.டபிள்யு பெரேரா முக்கிய சாட்சியங்களை சப்பாத்துகடியில் வைத்து தைத்து எடுத்துக்கொண்டு சென்றார்.

அரசாங்க சபையில் பொன்னம்பலம் இராமநாதன் ஆளுநரின் முன்னிலையிலேயே பல பயங்கர சம்பவங்களை விபரித்தார். ஆனால் அதற்கு பதிலளித்த காலனித்துவ செயலாளர் அனைத்து தண்டைகளும் உரிய விசாரைகளின் பின்னரே நிகழ்ந்ததாக உண்மைக்குப் புறம்பான பதில் கூறப்பட்டது. அரசாங்க சபையில் எடுத்துரைப்பதன் மூலம் மாத்திரம் இதற்கு நியாயம் கிடைக்காது என்று விக்கிரமசிங்க கூட்டங்கள் நடத்தினார். சுட்டுக்கொல்லப்படவர்களில் ஒருவரான ஆராச்சியின் மனைவி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் விக்கிரமசிங்க விசாரணை செய்தார். அவருக்கு கேகாலை மாவட்டத்தில் நிகழ்ந்த மேலும் பல படுகொலைகள் குறித்து பல தகவல்கள் அங்கு அவருக்குக் கிடைத்தன. அந்த தகவல்களைக் கொண்டு அவர் தயாரித்த அறிக்கையை பொன்னம்பலம் இராமநாதன், பரங்கி இனத்தைச் சேர்ந்த அரசாங்க சபை உறுப்பினரான வேந்தர் வோல்ட் ஆகியோரிடம் கையளித்தார்.

இந்த முயற்சியின் விளைவாக 1916 ஒக்டோபர் 26 ஆம் திகதி கேகாலை துப்பாக்கிச் சூட்டுச சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை நியமித்தார் புதிய ஆளுநர் ஜோன் அண்டர்சன். அந்த ஆணைக்குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதிபதி சேர் அலக்சாண்டர் வூட் ரெண்டன் (Sir Alexander Wood Renton (1861-1933)) மற்றும் நீதிபதி கோல்டர்ஸ் ஸ்டுவர்ட் (Sir Gualterus Stewart Schneider (1864-1938)) நியமிக்கப்பட்டனர். இந்த ஆணைக்குழு விசாரணைக்கு மேலதிக விசாரணையாளராக நியமிக்கப்பட்டவர் சட்ட மா அதிபராக கடமையாற்றிய (பின்னர் பிரதம நீதியரசாகவும் நைட் பட்டம் பெற்றவருமான) எண்டன் பேட்ரம். அரச வழக்கறிஞரான பீ.டபிள்யு.பாவா, எப்,ஏ,ஹேலி போன்றோர் இந்த வழக்கு நடவைக்கைகளில் ஈடுபட்டார்கள். ஏ.ஏ.விக்கிரமசிங்கவின் ஆலோசனைப்படி வழக்கறிஞர் எச்.ஜே.சீ.பெரேரா, ஆர்.எல்.பெரேரா. ஈ.டபிள்யு ஜெயவர்தன. எப்.ஆர்.சேனநாயக்க. சீ.பட்டுவன்குடாவ, ஏ.மகாதேவா போன்றோர் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சார்பாக வாதாடினார்கள்.

இந்த வழக்கு பக்க சார்பாகவே நிகழ்ந்தது. பிரித்தானிய அரசாங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் அதன் போக்கு தொடர்ந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களை பாதுகாக்கும் நோக்கில் சட்ட மாதிபர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  கொல்லப்பட்டவர்களுக்கு சார்பாக வாதாடி வந்த வழக்கறிஞர்கள் அந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார்கள். இதனை ஜே.சீ.பெரேரா ஆணைக்குழுவிடம் அறிவித்தார். இந்த வழக்கில் அரசாங்கத் தரப்புக்கு சலுகைகளும், வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொல்லும் வகையில் ஆணையாளர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டிய அவர்கள். கொல்லப்பட்டவர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்வதற்கு தடுத்து வருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இதற்கிடையில் இந்த வழக்கில் கொல்லப்பட்டவர்கள் சார்பாக இயங்கிய விக்கிரமசிங்கவை சட்ட மா அதிபர் பொய்க்குற்றம் சுமத்தி ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பானை விடுத்தார். ஆனால் சட்ட மா அதிபரால் அதனை நிரூபிக்க முடியாது போனது. அதற்காக சட்ட மா அதிபர் வருத்தம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த விசாரணையில் சகல மரண தண்டனைகளும் உரிய விசாரணையின் பின்னரே வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. 1917 ஜனவரி 18 ஆம் திகதி இந்த ஆணைக்குழுவின் அறிக்கை ஆளுநர் ஜோன் அண்டர்சனிடம் கையளிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் தலைவரான சே அலெக்சாண்டர் வூட்ரெண்டன் அரசாங்க தரப்பை பாதுகாக்கவும், சகலத்தையும் நியாயப்படுத்தும் வகையிலேயே இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை தயாரித்தார் என்பதை இறுதியில் உணரக் கூடியதாக இருந்தது. ஒரு கலவரத்தை அடக்கி அமைதியை நிலைநாட்டுவதற்கான சட்டத்தின் ஆட்சி எப்படி நிகழ்ந்திருக்க முடியும் என்பதை நீண்ட விளக்கத்தின் மூலம் அவர் கூற முற்படுவதே அத்தனையும் நியாயம் என்பதைத் தான். இராணுவச் சட்டத்தை பற்றியும் அப்படித்தான் நீண்ட வியாக்கியானம் அதில் உள்ளடங்கியிருந்தது.
சேர் ஜோன் அண்டர்சன்
இந்த படுகொலைகள் அத்தனையும் கலவரம்ம் அடங்கிய சில நாட்களின் பின்னர் தான் மேற்கொள்ளப்பட்டவை என்பதை அரசாங்கமும் ஏற்றுகொண்டது. ஆனால் மக்களின் பாதுகாப்புக்காகவே இந்த தண்டனைகள் வழங்கப்பட்டன என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட படையினர் விடுவிக்கப்பட்டனர். ஆணையாளரின் இந்த அறிக்கை குறித்து எரிச்சலடைந்தார் புதிய ஆளுநர் ஜோன் அண்டர்சன். அவர் காலனித்து நாடுகளின் செயலாளருக்கு தனது அதிர்ப்தியை விளக்கி ஒரு கடிதம் எழுதினார். அப்படி குற்றமே செய்திருந்தாலும் இருந்தாலும் அந்த மக்களுக்கு மரண தண்டனை அளித்தது குறித்து தனது கவலையும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவங்களுக்கு அதிகமாக பொறுப்பு கூரப்படவேண்டியவர் சட்லோ என்று குற்றம்சாட்டினர். மேற்கத்தேய திரைப்படங்களிலும், சித்திரக் கதைகளிலும் வரும் வில்லன் குழுக்களின் தலைவர் பாணியில் சட்லோ செயற்பட்டிருக்கிறார் என்று ஆளுநர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அரச ஆணையின் பிரகாரம் இத்தகைய வழக்குகளின் மூலம் ஒருவரை நாடு கடத்த முடியாது. அதேவேளை கலவரத்தை அடக்குவது என்கிற பேரில் நாகரிகமுள்ள ஆங்கிலேயர்கள் நடந்துகொள்ளக்கூடாத முறை இது. என்னால் எனது இந்த மனக்கிலேசத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை என்று ஆளுநர் அண்டர்சன் வெளிப்படையாக தெரிவித்தார்.

1915 கேகாலையில் நிகழ்ந்த சம்பவங்களில் ஒன்று புளத்கொஹோபிட்டிய எனும் பிரதேசத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம். அந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து சிங்களத்தில் நாவலும் 2010இல் ஒரு தொலைகாட்சித் தொடரும் தயாரிக்கப்பட்டு இலங்கையில் ஒளிபரப்பட்டது. கேகாலை ஆணைக்குழு குறித்த சில மேலதிக விபரங்களை அடுத்த இதழில் காணலாம்.

தொடரும்..

நன்றி - தினக்குரல்

மலையகத்தில் தமிழில் நிர்வாகம் - சட்டத்தரணி ச. ஜேசுநேசன்


வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாவட்டம் நுவரெலிய மாவட்டமாகும்.இங்கு 59.76 விழுக்காட்டினர் தமிழர்களாவர்.நுவரெலியா மாவட்டத்தை அடுத்துள்ள பதுளை மாவட்டத்திலும் 27.59 விழுக்காட்டினர் தமிழர். கண்டி மாவட்டத்தில் 25.51 விழுக்காட்டினரும் தமிழர்களே.மாத்தளை மாவட்டத்தில் 19.48,கேகாலை மாவட்டத்தில் 14.30 மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 13.27 விழுக்காட்டினர் தமிழர்.முஸ்லிம் மக்களும் இத்தமிழ் பேசும் மக்களில் அடங்குவர்.இம்மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களில் 95 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்கள் இந்தியவம்சாவளித் தமிழர்களாவர்.அவர்கள் சமீபகாலம் வரை இந்தியத் தமிழர்கள் அல்லது இந்தியர்கள் என்று அழைக்கப்பட்டுவந்தனர்.அரசியல் அடிப்படையிலும் அவர்கள் இந்தியத் தமிழர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.

ஆனால் படித்த இளைஞர் சமூகம் அவர்கள் மத்தியில் இன்று பலம் பெற்று வருகின்றது.இந்தச் சமூகத்துக்கு இந்தியா பற்றிய அக்கறை இல்லை.அவர்கள் எல்லோரும் இலங்கையில் பிறந்தவர்களாகவும் இலங்கைக் குடியுரிமை உள்ளவர்களாகவும் இருப்பதால் தம்மை இந்தியத் தமிழர்கள் என்று அழைப்பதை அவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை.அவர்கள் தம்மை இலங்கைத் தமிழர் என்றே அழைக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஆனால் இலங்கைத் தமிழர் என்றொரு பிரிவு இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்துவருவதால் மத்திய மலை நாட்டில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களாக தம்மை "மலையகத் தமிழர்' என்று அழைக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.

அது நியாயமாகவேபடுகின்றது.தாம் வாழும் பிரதேசத்தை மையப்படுத்தி தம்மை அப்பிரதேசத்தின் மக்களாகவே பார்க்கின்றனர்.இது இயல்பானதே. இதனால் தாம் வாழும் பிரதேசத்திற்கு ஏற்ப தம்மை "மலையகத்தமிழர்'என்று அழைக்கின்றனர்.மலையகத்தில் கற்றோர்,கல்லாதோர் யாவருமே தம்மை மலையகத் தமிழர் என்றே கடந்த அரை நுற்றாண்டுக்கும் மேலாக அழைத்துவருகின்றனர்.சிங்களவரில் கண்டிச் சிங்களவர் என்ற பிரிவு இருக்கின்றது.அதுபோல தமிழரில் மலையகத் தமிழர் என்ற பிரிவு இருப்பதில் எந்தவித தவறும் பின்னடைவும் இருக்க முடியாது.

அதனை ஏற்றுக்கொள்வதில் அரசுக்கு எந்தத் தயக்கமும் ஏற்பட வேண்டியதில்லை.

மலையகத் தமிழரின் வரலாறு இங்கு 150 ஆண்டுகளுக்கு மேற்பட்டது.ஆனால் 1815 இல் ஆங்கிலேயரிடம் வீழ்ந்த கண்டி இராச்சியத்தில் தமிழரின் வரலாறு 300 ஆண்டுகளுக்கு மேற்பட்டது.

இவர்களின் வரலாறு இந்த இடத்தில் தேவைப்படாததால் அதனை இத்துடன் நிறுத்திவிடுவோம்.

அமெரிக்க, அவுஸ்திரேலியக் கண்டங்களில் புகுந்த ஐரோப்பியர் 200 ஆண்டுகளுக்கு அக்கண்டங்களையே தமதாக்கிக் கொண்டனர்.ஆனால் இலங்கையில் மலையகத்திற்கு வந்த தமிழர்கள் 150 ஆண்டுகளுக்கு மேலாகியும் தம்மை இங்கு நிலைநிறுத்திக்கொள்ளமுடியாமல் இருக்கின்றார்கள்.அதற்கு முக்கிய காரணம் அவர்கள் நாடுபிடிக்கும் எண்ணத்தோடு இங்கு வரவில்லை.பிழைப்புக்காகத்தான் வந்தார்கள் என்பதைவிட அழைத்து வரப்பட்டார்கள் அல்லது இழுத்து வரப்பட்டார்கள் என்பது தான் பொருத்தமாக இருக்கும். பிழைப்புக்காக வந்ததால் பிழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவும் மந்தைகளைப்போல நடத்தப்படுகின்றார்கள். குதிரைகளைக் கட்டிவைக்கும் இடம் குதிரைலாயம் எனப்படும்.இவை வரிசையாக இருக்கும். இதைப்போன்ற லயங்களில்தான்  மலையக மக்களும் வாழ்கிறார்கள்.

இந்த 150 ஆண்டு வரலாற்றில் அவர்களின் லயத்து(Lines)வாழ்க்கை முறை இன்னும் மாறாவிட்டாலும் பல வித முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை.1948 ஆம் ஆண்டு வரை இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சி நடைபெற்றதால் இலங்கையின் ஏனைய மக்களோடு பிரித்தானிய குடிமக்கள் (British Subjects) இருந்தார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை அரசினால் அவர்கள் குடியுரிமை மற்றும் வாக்குரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக்கப்பட்டனர்.அவர்களின் மரபுவழித் தாயகமான தமிழ் நாட்டினரும் அவர்களை நாடற்றவர்களாகக் கருதினர். அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. மிகப் பெரிய வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் முற்போக்கு வாதியும் என்று கருதப்பட்ட அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு கூட அவர்களை நாடற்றவர்களாகவே கருதினார்.அவர்கள் தமது மரபுவழித்தாயகமான தமிழ்நாட்டுக்குத் திரும்பி வருவதை தான் 1964 மே 27 இல் இறக்கும் வரை அவர் அனுமதிக்கவில்லை.அவர் அதற்குப் பல காரணங்களை முன்வைத்தார். அவற்றில் மனிதாபிமானம் உள்ளடக்கப்படவில்லை.எங்கோ 2000 மைல்களுக்கு அப்பால் உள்ள காஷ்மீரின் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு, தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்றோர் திரும்பிவருவதை அனுமதிக்காதிருந்ததும்,அவரைத் தட்டிக்கேட்கத் திராணியற்று தமிழகத் தலைமைகள் இருந்ததும் இன்றும் அது போலவே நடந்துகொள்வதும் தமிழரின் "விதி' என்றே கூறலாம்.

நேருவின் பரம்பரையினர் தான் இன்றும் இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கின்றனர்.அவர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள் என்பதை மலையகத் தமிழர்கள் என்றோ மறந்துவிட்டனர். ஆனால் என்ன புதுமை! இந்திய ஆட்சியாளர்கள் தம்மைக் காப்பாற்றுவார்கள் என்று வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். புதுமையான குருட்டு நம்பிக்கை!.

சரியோ தவறோ நேருவின் மறைவிற்குப் பிறகு இந்தியப் பிரதமராக வந்த லால்பகதுர் சாஸ்திரியினால் தான் இலங்கையில் நாடற்றவர்கள் எனப்பட்ட மக்களுக்கு விடிவு காலம் பிறந்தது.1964 டிசம்பரில் அவர்களை 7:4 (ஏழிற்கு நான்கு) என்ற விகிதத்தில் பங்கு போட்டுக்கொள்ள அவரோடு அன்றைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க ஒப்பந்தம் செய்தார்.

உண்மையில் அடிப்படை உரிமை,மனித உரிமை போன்ற அனைத்துலகக் கோட்பாடுகள் இவ் ஒப்பந்தத்தின் போது கவனிக்கப்படவில்லை.17ஆம் 18ஆம் நுற்றாண்டுகளில் ஆபிரிக்க மக்களைப் பொருட்களாகக் (பண்டம்) கணித்து அமெரிக்காவுக்கு பண்டமாற்றம் செய்தது போல சிறிமாவும் சாஸ்திரியும் மலையக மக்களைப் பண்டங்களாகக் கருதிதொகையை நிர்ணயித்துக்கொண்டனர்.எதுவாயினும் இவ்வொப்பந்தம் ஒரு முடிவின் ஆரம்பமாக அமைந்தது.

1948 இல் ஆரம்பமான நாடற்றவர் பிரச்சினை ஓரளவு திருப்தியுடன் முடிவடைய 40 ஆண்டுகள் சென்றன.எனவே மலையகத் தமிழ் மக்கள் நாட்டின் ஏனைய சமூகத்தினைவிட 40 ஆண்டுகள் பின்தங்கி நிற்கின்றனர்.(வடக்குகிழக்கில் ஏற்பட்டிருந்த விடுதலைப் போர் காரணமாக அவர்களுக்கு 30 ஆண்டுகள் பின்தங்கி நிற்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.)

இன்று மலையகத் தமிழ் மக்கள் பலவழிகளிலும் முன்னேறி வருகின்றனர். 1970 களில் விரல் விட்டு எண்ணக் கூடியதாக இருந்த அவர்கள் ஆசிரிய சமூகம் இன்று ஆயிரக்கணக்கானோராக வளர்ந்திருக்கின்றது. ஆசிரியத்துறை தவிர்ந்த வேறு அரசதுறைகளில் அவர்களில் விழுக்காடு மிக மிகக்குறைவு.

இதற்கான காரணம் மலையகத்தில் பெரும்பாலான பிரதேச சபைகளில் சிங்களத்தோடு தமிழும் சரிநிகரான நிர்வாக மொழியாக (Tamil is an equal language of administration with Sinhala அரசாங்க வர்த்தமானிகள் (Government Gazette) ப் பிரகடனப்படுத்தப்பட்டும் இன்று வரை அவற்றில் எதிலுமே தமிழிலும் நிர்வாகம் நடைபெறுவதில்லை.

இதில் அக்கறை கொள்ளவேண்டிய மலையகத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மலையகத் தொழிற்சங்கங்கள், அரசியற்கட்சிகள் அத்துடன் மலையக சமூகப் பணி நிறுவனங்கள் ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள், தலைவர்கள் ஆகியோரின் வசதிக்காக குறிப்பிட்ட அரசாங்க வர்த்தமானிகளின் விபரங்களைக் கீழே தருகின்றேன்.

1. அரசாங்க வர்த்தமானி இல.1105/25 திகதி 12.11.1999
டி) நுவரெலியா மாவட்டம் முழுதும்: அதாவது இம்மாவட்டத்தினுள் அடங்கும் அனைத்து அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் சகல நிர்வாக நடவடிக்கைகளும் தமிழிலும் இடம்பெறவேண்டும்.

அரச நிறுவனங்கள் எனும்போது மாவட்ட செயலகம், அதன் உபபிரிவுகள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், கிராம அலுவலர் பிரிவு என்பனவற்றையும் அரச சார்பு நிறுவனங்கள் என்னும் போது அரசு கூட்டுத்தாபனங்கள், அரசாங்க வங்கிகள் போன்றவற்றைக் குறிக்கும்.

டிடி) பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, எல்லை, அல்துமுல்லை, அப்புத்தளை, ஆலிஎலை, மீசாகியுள மற்றும் பசறைப் பிரதேச செயலகப் பிரிவுகள்.

2. அரசாங்க வர்த்தமானி இல.1283/3 திகதி 07.04.2003.

டி) பதுளை மாவட்டத்தில் பதுளை, லுணுகலை, வெலிமடை மற்றும் சொரணதோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகள்.

டிடி) கண்டி மாவட்டத்தில் அக்குறணை, தெல்தோட்டை, பன்விலை, பஸ்பாகே, கோராளை மற்றும் உடபலாத்த பிரதேச சபைப் பிரிவுகள்.

அத்துடன் அதே வர்த்தமானிக்கமைய காலி மாவட்டத்தில் நான்கு கிராவெட்ஸ் (ஊணிதணூ எணூச்திஞுtண்), களுத்துறை மாவட்டத்தில் பேருவளை, புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி, முந்தல், புத்தளம், வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேச சபைப் பிரிவுகளிலும் தமிழில் அரச நிர்வாகம் நடைபெறல்வேண்டும்.

14.02.2001 திகதி 1171/18 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானிப்படி கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச சபைப் பிரிவுகளிலும் தமிழில் அரச கருமங்கள் நடைபெறல் வேண்டும். ஆனால், என்ன பரிதாபம்! வடக்கு, கிழக்கிற்கு வெளியேயுள்ள இந்த 29 பிரதேச சபைப் பிரிவுகளில் ஒன்றிலாவது தமிழிலும் அரச நிர்வாகம் நடைபெறுவதில்லை. தமிழ் பேசும் மக்கள் என்ன பாவம் செய்தார்கள். தமிழில் நிர்வாகம் நடத்தாமல் இருப்பது சட்ட முரணானது என்று முறையிட்டு யாருமே இன்று வரை நீதிகேட்டு நீதிமன்றம் செல்லவில்லை. 1956 இற்குப் பிறகு இன்று வரை ஒரு "கோடீஸ்வரனாவது' பிறக்கவில்லை.

மேலே குறிப்பிட்ட பிரதேசச் செயலகங்களிலும் அவற்றினை உள்ளடக்கும் மாவட்டச் செயலகங்களிலும் சிங்களத்தோடு தமிழிலும் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இதற்கான நடவடிக்கையை மேலே குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதிகள் எடுக்கவேண்டும். ஏனெனில் இது "உரிமை' பற்றியது. இவ்வாறான உரிமைகளைக் காக்கவும் இவற்றுக்காகப் போராடவும், போராடிப் பெற்றவைகளை நடைமுறைப்படுத்தவுமே இவர்களை மக்கள் தெரிவு செய்கிறார்கள். அதனைவிடுத்து தமக்குக் கிடைக்கும் பன்முக வரவுசெலவுத்திட்ட நிதியிலிருந்து கலாசார மண்டபம், பாடசாலைக் கட்டிடம், நினைவுத்தூபிகள் கட்டுவதும் கோவில் மணிகள், வாத்தியக் கருவிகள், கூரைத்தகரங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை வழங்குவதும் தாம் தமது கடமையென்று மக்கள் பிரதிநிதிகள் திருப்தியடைந்து விடமுடியாது.

இவை அவர்களது இயலாமைக்கும் ஏமாற்றுத் தனத்துக்கும் சாட்சிகளாகவே அமைகின்றன.

மேலே குறிப்பிட்ட அலுவலகங்களில் தமிழிலும் நிர்வாகம் நடைபெறுமானால் ஆயிரக்கணக்கான படித்த மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் பிள்ளைகளுக்குத் தொழில்வாய்ப்பு கிடைக்கும்.

ஆசிரியத் தொழிலை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க முடியாது. அது எல்லோருக்கும் கிடைத்து விடவும் மாட்டாது.

கறுப்பு தீபாவளி ஏன்? - "எழுக மலையகம்"


தீபாவளி என்றால் அது மலையகம்தான். ஆனால், இம்முறை???
01. 1000 ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்து 19 மாதங்கள் காத்திருந்து – மாற்றத்தைக்காண வீதிக்கு இறங்கிப் போராடிய எம் மக்களுக்கு மாற்றமானது 730 ரூபா என்ற ஏமாற்றத்திலேயே முடிந்தது. அதனால்தான் கறுப்பு தீபாவளி.

02. மலையகத்தில் இன்று அடுப்பு எரியவில்லை. மக்களின் அடிவயிறே பற்றி எரிகிறது. தீபாவளிக்கு பலகாரம் சுட எண்ணெய்த்தாச்சி கொதிக்கவில்லை. ஏமாற்றத்தால் ஏற்பட்ட விரக்தியில் உள்ளம்தான் கொதிக்கிறது. அதனால்தான் கறுப்பு தீபாவளி.

03. பட்டாசு கொளுத்தி கொண்டாப்படவேண்டிய தீபாவளியானது, அரசியல்வாதிகள், தொழிற்சங்கத் தலைவர்கள், முதலாளிமார் சம்மேளனத்தினர் ஆகியோரால் கொளுத்திப்போட்ட துரோகம் என்ற குண்டால் புஸ்வானமாகியுள்ளது. அதனால்தான் கறுப்பு தீபாவளி.

04. பிள்ளைகளுக்கு புதிய உடுப்பில்லை. சுற்றத்தாருக்கும், உறவினருக்கும், சகோதர மொழி பேசுபவர்களுக்கும் பகிர்ந்தளித்து உண்டு மகிழ பலகாரங்கள் இல்லை. பார்க்கும் இடமெல்லாம் 1000 ரூபா என்ற அழுகுரலின் ஓசையே எதிரொலித்துக்கொண்டிருக்கின்றது. அதனால்தான் கறுப்பு தீபாவளி.

05. சம்பள அதிகரிப்பில் ஏமாற்றம் இருந்தாலும், வீட்டில் இருக்கும் பிஞ்சுக் குழந்தைகளுக்காகவும், சிறுவர்களுக்காகவும், சேமித்து வைத்திருக்கும் கொஞ்சநஞ்ச நகையை அடகு வைத்துவிட்டு பேருக்கு தீபாவளியைக் கொண்டாடுவோர் எண்ணிலடங்காதோர். அதனால்தான் கறுப்பு தீபாவளி.

"எழுக மலையகம்"

டீ.எஸ்.சேனநாயக்க: 40 நாள் சிறை வாழ்க்கை (1915 கண்டி கலகம் –54) - என்.சரவணன்


டீ.எஸ்.சேனநாயக்க
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் டீ.எஸ்.சேனநாயக்க. பிற்காலத்தில் சுதந்திர இலங்கையில் முதலாவது பிரதமராக தெரிவானவர். அவர் ஆங்கிலம் கற்ற நிலபிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்த செல்வந்தர். அரசியல் செயற்பாடுகளுக்கு பேர்போன குடும்பம். குறிப்பாக இந்த கலவரத்திரகு காரணமென குற்றம் சுமத்தப்பட்ட மதுவொழிப்பு இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய செயற்பாட்டாளர். அன்றைய பௌத்த மறுமலர்ச்சிக்கான செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தியவரும் கூட.

இதை எல்லாவற்றையும் விட அவர் கொழும்பு நகரப் பாதுகாப்பு சேனையின் ஒரு ஊக்குவிப்புக் குழுவின் உறுப்பினரும் கூட. அதுமட்டுமன்றி கலவரம் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அவர் இந்த நகரப்பாதுகாப்பு படையின் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கியவர். அவரது சேவையைப் பாராட்டி அவரது உயர் அதிகாரியால் ஒரு வர்த்தக விளம்பரத்தின் ஊடாக செய்தி கூட வெளியிடப்பட்டிருக்கிறது. ஜூன் மாதம் 21 ஆம் திகதி அவர் இன்னும் சிலருடன் சேர்த்து கைது செய்யப்பட்டிருந்தார். அவர் 40 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். அவர் மீது இறுதிவரை எதுவித குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாத நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

விடுதலையானதன் பின்னர் நகரப் பாதுகாப்பு படையுடன் தொடர்ந்து சேவையில் இருக்க வேண்டுமெனில் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அப்படையின் உயர் அதிகாரியால் ஆணையிடப்பட்டிருந்தது. இதே வகை நிபந்தனை டபிள்யு ஏ.டி.சில்வாவுக்கும் இதற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்தது. ஒரு சுயேட்சைத தொண்டராகவே அவர் அபடையின் சேவையில் அவர் இருந்ததாலும் எந்தவித குற்றத்தையும் செய்து கைது செய்யப்படாததாலும் அவர் அப்பேர்பட்ட ஒரு நிபந்தனைக் கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்கிற நிலைப்பாட்டில் அவர் இருந்தார். இது ஒரு இராணுவ ஆணையா அல்லது வெறும் அறிவித்தலா என்பதை தான் அறிய விரும்புவதாக அவர் தெரிவித்தார். அது வெறும் அறிவித்தலெ என்றும் ஆனால் டீ.எஸ் சேனநாயக்க ஆளுநரின் நற்சான்றிதழ் ஒன்றினை பெற்றுக்கொண்டு சமர்பித்தாலே ஒழிய தொடர்ந்தும் அந்த படையில் அவர் அங்கம் வகிக்க முடியாது என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது. அப்படி ஒரு அறிவித்தலை டீ.எஸ்.சேனநாயக்க எதிர்கொண்ட விதத்தைக் கண்டு அதிகாரிகள் குழப்பமடைந்தார்கள்.

டீ.எஸ்.சேனநாயக்க வெளிப்படையாகவே இதனை அறிவித்தார். அப்பேர்பட்ட ஒரு நற்சான்றிதழைப் பெறுவதை தான் நிராகரிப்பதாக உயர் அதிகாரிகளுக்கு அவர் அறிவித்தார். தனது நன்னடத்தையை புனருத்தாபனம் செய்ய வேண்டிய அளவுக்கு எதுவித அவசியமும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் தன்னைப் போன்ற மனிதர்களை சிறை செய்தவர்களின் கைகளால் தனது பெயரின் களங்கத்தைத் தீர்க்க முடியாது என்றும். தன்னை கைது செய்தவர்களிடம் அத்தகையவற்றை பெரும் படியும் அவர் துணிச்சலுடன் தெரிவித்தார். அப்படி செய்தால் தான் அதனுடன் பணிபுரிவற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கொள்ள இயலும் என்றும் அவர் எழுதினார். தனக்கான நற்சான்றிதழைப் பெறுவதற்கு ஆளுநர் ரொபர்ட் சார்மசிடம் தான் செல்வதற்கான அவசியம் எதுவுமில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். டீ.எஸ்.சேனநாயக்கவை கைது செய்வதற்கான அடிப்படைக் காரணம் எது என்பதை அறிவிக்க இயலாத நிலையில் அவரை எந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பது என்பதையும் கூட அறிவிக்க முடியாது திண்டாடியிருந்தனர் ஆங்கிலேயப் படையினர். இப்பேர்பட்ட நற்சான்றிதழை தன்னிடமிருந்து அல்ல, அதனை படையினரிடமிருந்தே பெற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்ன என்பதை தான் கூட அறியாத நிலையில் தன்னை ஒரு நிரபராதியாக வெளிப்படுத்துவது என்ன அடிப்படையில் என்கிற அவரது நியாயமான கேள்விக்கு அவர்களால் விடைபகர முடியவில்லை. இந்த வேடிக்கையான போக்கை கேலி செய்த அவர் இதற்கு மேல் தான் அதில் அங்கம் வகிக்கத் தான் வேண்டுமா என்று கேட்டார்.

இறுதியில் நிகழ்ந்த வேடிக்கையான பிரதிபலன் கவனிக்கத்தக்கது. சில நாட்களின் பின்னர் டீ.எஸ்.சேனநாயக்கவின் எந்த வித கடிதமோ, சான்றிதழோ இல்லாத நிலையில் கூட அவர் நகரப் பாதுகாப்பு படையின் சேவையில் ஈடுபடுவதை ஆளுநர் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட நிராகரிப்பைக் காரணம் காட்டி ஆளுனரால் அவர் கைது செய்யப்படவும் முடியும். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

நிரபராதிகளை காரணமே இன்றி ஒடுக்கியவர்களிடம் போய் நற்சான்றிதழ் பெறுவதை டீ.எஸ்.சேனநாயக்க போன்ற பலரும் ஒரு வெட்கத்துக்குரிய செயலாகவே கருதினார்கள். அவர்கள் அதனை வெளிப்படையாக துணிச்சலாக அறிவிக்கவும் செய்தார்கள்.

டபிள்யு.ஏ.டீ.சில்வா
டபிள்யு.ஏ.டீ.சில்வா இந்த விடயத்தில் சற்று மாறுபட்டு நடந்துகொண்டார். அவர் இந்த நற்சான்றிதழ் விடயத்தில் சிக்கவைக்கப்பட்டிருந்தார். அவர் 1915 ஜூன் 21 ஆம் திகதி இன்னும் சில சிங்களத் தலைவர்களுடன் கைது செய்யப்பட்டிருந்தார். இவர்கள் அனைவரும் ஏனையோரைப் போலவே வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்படிருந்தார்கள். அவர்கள் மீது எந்த வித குற்றச்சாட்டையும் முன் வைக்கவுமில்லை. அதுபோல அவர்கள் தாம் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறோம், குற்றச்சாட்டுக்கள் என்ன என்பது குறித்து அறிவதற்கு எந்த வித சந்தர்ப்பமும் இருக்கவில்லை. அவர்கள் படித்த, வசதி படைத்தவர்களாகவும் இருந்ததால் வேகமாக தமக்கான வழக்கறிஞர்களை அமர்த்த முடிந்தது. உயர் நீதிமன்ற நீதியரசராக அப்போது இருந்தவர் சேர்.ஏ.வூட் ரெண்டன் (Chief Justice Wood Renton). 1915 கலவர வழக்குகளில் முக்கிய வழக்கான கேகாலை படுகொலை சம்பவத்தை விசாரணை செய்த ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தவர் இவர். ஆனால் டீ சில்வா வழக்கில் ரெண்டன் நீதியாக நடந்துகொள்ளவில்லை.
டபிள்யு.ஏ.டீ.சில்வா
டபிள்யு.ஏ.டீ.சில்வா இதற்குமேல் தாமதிக்காது பிரிவுக் கவுன்சிலுக்கு முறையீடு செய்வதே சிறந்த வழி என்று தனது சட்ட ஆலோசகர் ஈ.டபிள்யு.பெரேராவை இங்கிலாந்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். தனது பயணத்தின் நோக்கத்தை விளக்கி ஈ.டபிள்யு.பெரேரா நீதிமன்றத்துக்கு விளக்கமளித்தார். ஈ.டபிள்யு.பெரேராவின் இங்கிலாந்து பயணத்தை ஆங்கில ஆட்சியாளர்களால் நிறுத்த முடியவில்லை. அவரது பயணத்துக்கு இடமளிக்க வேண்டியேற்பட்டது. அதே வேளை இவர்கள் மீதான கைதுகுறித்து மேலதிக விசாரணையை மேற்கொள்ள தள்ளப்பட்டனர். இங்கிலாந்துக்கு சென்ற ஈ.டபிள்யு.பெரேரா அங்கு மேலதிக விசாரணையை வலியுறுத்துவார் என்பதை இலங்கையில் இருந்த ஆங்கில ஆட்சியாளர்கள் அறிந்திருந்தனர். விசாரணைக்கான வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்த ஆளுநர் சார்மஸ் உடனடிப் பணிகளில் இறங்க தீர்மானித்தார். டபிள்யு.ஏ.டீ.சில்வா தன்னை விடுவிக்கும் வரை அவர் ஓயா மாட்டார் என்பதை அதிகாரிகள் அறிந்திருந்தனர். வேறு வழியின்றி இங்கிலாந்தில் இருந்து ஆணை வருவதற்கு முன்னரே அவரை விடுதலை செய்தனர்.

அவர் விடுதலையானதும் ஆங்கில உறுப்பினரான சேர் ஹெக்டர் வென்குய்லெம்பர்க் டபிள்யு.ஏ.டீ.சில்வாவை பார்பதற்காக சென்றிருந்தார். இந்த கலவரத்துக்கு பிரதான காரணமானவர்கள் இங்கிலாந்து சென்று கற்று திரும்பிய சிங்களவர்களே என்றும் அவர்களின் இறுதி லட்சியம் சிங்கள அரசை ஸ்தாபிப்பதே என்றும் அவர் அரசாங்க சபையில் ஒரு தடவை உரையாற்றியிருந்தார். டபிள்யு.ஏ.டீ.சில்வாவை சரி செய்வதற்காகவே ஹெக்டர் அனுப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தை ஆர்மண்ட் டீ சூசா தனது நூலில் எழுப்புகிறார். டபிள்யு.ஏ.டீ.சில்வாவுடன் ஹெக்டர் நடத்திய நீண்ட உரையாடலில்  சில்வாவுக்கு ஆளுநர் பெரும் அநீதி இழைத்திருப்பதை தான் அறிவதாகவும் அதனை வெளிப்படுத்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் சில்வாவின் பெயருக்கு எந்த வித களங்கமும் ஏற்படவில்லை, கவலைகொள்ளவேண்டாம் என்றும் அவரிடம் தெரிவித்திருக்கிறார்.

டபிள்யு.ஏ.டீ.சில்வா அமைதியான நபர். அவர் வாத விவாதங்களையோ, சர்ச்சைகளையோ தவிர்த்து வரும் நபர். அதே வேளை தனது சுய கௌரவத்தில் கறாராக இருப்பவர். அவர் தனக்கு ஏற்பட்ட களங்கத்தை சரி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். காலம்கடந்த விடுதலையாக இருந்தபோதும் ஆளுநர் இந்த விடயத்தில் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், தன் மீதுள்ள சுமத்தப்பட்ட பொய்க்காரணங்களை நீக்க வேண்டும் என்றும் என்றும் கேட்டுக்கொண்டார். தன்னை கைது செய்து, சிறையில் வைத்து, பின்னர் விடுதலை செய்தமை குறித்து விரிவாக விளக்கி ஆளுநருக்கு அவர் எழுதிய அந்த கடிதத்தில் தன் மீது சந்தேகம் கொள்வதற்கும், அவநம்பிக்கை ஏற்படுவதற்கும் அடிப்படை என்ன என்பதை தான் அறிய விரும்புவதாக ஆளுநரிடம் கேட்டுகொண்டார்.
ஈ.டபிள்யு.பெரேரா
இந்த கடித்தத்தை அவர் பகிரங்கப்படுத்தவில்லை. அது அந்தளவு முக்கியமில்லை என்று அவர் கருதியிருக்கலாம். இந்த கடிதம் குறித்து சேர் ஹெக்டர் அறிந்திருந்தார். எவ்வாறாயினும் இறுதியில் ஆளுநர் சார்மஸ் டபிள்யு.ஏ.டீ.சில்வாவுக்கு பதிலனுப்பினார். இதில் அவர் சிக்கவைக்கப்பட்டமை குறித்து தனது கவலையைத தெரிவித்ததுடன், சில்வாவின் பெயரில் சிறிதும் களங்கமில்லை என்பதையும் தெரிவித்தார். டபிள்யு.ஏ.டீ.சில்வா இந்தக் கடிதத்தை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினார். அவை பிரசுரிக்கப்பட்டன. இதன் மூலம் இங்கிலாந்து சென்ற ஈ.டபிள்யு. பெரேராவை திருப்பி அழைப்பதற்கு விரும்பினார். ஒரு தேசபக்தனான சில்வா பெரேராவை திருப்பி அழைக்கவோ, நாட்டு மக்களின் அன்றைய கோரிக்கையையும் அபிலாசையையும் காட்டிக்கொடுக்க விரும்பவில்லை.

ஈ.டபிள்யு.பெரேரா இங்கிலாந்தில் நடத்திய முயற்சியின் விளைவாக ஆளுநர் திருப்பி அழைக்கபட்டார். ஆளுநர் ரொபர்ட் சார்மஸ் பதவியை இழந்து இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்கப்பட்டதன் பின்னரும் கூட சில காலம் ஈ.டபிள்யு.பெரேரா இங்கிலாந்திலேயே தங்கியிருந்து மேலதிக பணிகளை முடிக்க வேண்டியிருந்தது. ஆளுநரிடம் இருந்து இப்பேர்பட்ட ஒரு வருத்தம் தெரிவிக்கும் கடித்தத்தை பெற்றது டபிள்யு.ஏ.டீ.சில்வா மட்டுமே.

ஆளுநரின் நோக்கம் நிறைவேறவில்லை, ஈ.டபிள்யு.பெரேரா இங்கிலாந்தில் செய்த முறைப்பாடுகள் ஆளுநருக்கு அங்கிருந்து அதிகாரிகளால் அனுப்பப்பட்டிருந்தது.

“பெரேரா போன்ற தகுதியில் இருப்பவர் ஒருவர் குறிப்பிடுபவற்றை ஆளுநரோ அல்லது காலனித்துவ செயலாளராலோ ஏற்றுக்கொள்ள தகுந்தவை அல்ல என்பதை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன்” என்று ஆளுநர் சார்மஸ் பதில் எழுதினார். ஆத்திரமடைந்த ஆளுநரின் கீழ்த்தரமான வெளிப்பாடு அது. பெரேராவின் “தகுதி” குறித்து அவர் குறிப்பிட்ட விடயம் விசனத்துக்கு உள்ளானது.

ஈ.டபிள்யு.பெரேரா ஒரு தேர்ந்த சட்ட வல்லுநர். வழக்கறிஞர். சிங்கள சமூகம் அறிந்த படித்த சமூகத் தொண்டர். அரசியல் தலைவர். அப்பேர்பட்ட ஒருவரின் முறைப்பாடுகளை ஏற்பதில் தகுதியை ஒரு காரணமாக குறிப்பிட்டு ஆளுநர் ஆத்திரத்தில் தனது தகுதியை கீழிறக்கிக் கொண்டார் என்கிறார் ஆர்மண்ட் டீ சூசா. தன்னால் சரியான விளக்கமளிக்க முடியாத பலவீனத்தின் விளைவே இத்தகைய பதில் என்பதை காலனித்துவ செயலகம் விளங்கியிருக்க வேண்டும். எனவே தான் இறுதியில் சார்மஸ் பதவி இழந்து திரும்பும் நிலை ஏற்பட்டது.

தொடரும்...




கூட்டு ஒப்பந்தம் மலையக தொழிற்சங்கங்களின் இயலாமையும்

"கூட்டு ஒப்பந்தம் மலையக தொழிற்சங்கங்களின் இயலாமையும் அரசியல் தலைமைகளின் ஆளும் வர்க்க சார்பையும் வெளிப்படுத்தியுள்ளது"
-மக்கள் தொழிலாளர் சங்கம்

தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா கோரி கடந்த காலங்களில் தமது போராட்டங்களை மேற்கொண்டிருந்த போதும் புதிய சம்பள கூட்டு ஒப்பந்தம் வெறும் 730 ரூபா என்று தீர்மானிக்கப்பட்டு கம்பனிகள் சார்பாக இலங்கை முதலாளிமார் சம்மேளனமும் தொழிலாளர்கள் சார்பாக இ.தொ.கா., இ.தே.தோ.தொ.ச., மற்றும் தொழிற்சங்க கூட்டு கமிட்டி என்பவும் கைச்சாத்திட்டுள்ளன. அடிப்படை சம்பளம் வெறும் 50 ரூபா அதிகரித்துள்ள புதிய சம்பள கூட்டு ஒப்பந்தத்தில், ஏற்கனவே வழங்கப்பட்ட விலைக்கேற்ற கொடுப்பனவு 30 ரூபா அப்படியே வழங்குவதற்கும், ஏற்கனவே 75சதவீத வரவுக்கு வழங்கப்பட்ட 140 ரூபாய் 60 ரூபாயாக குறைக்கப்பட்டும், இது வரை இல்லாத உற்பத்தித்திறன் கொடுப்பனவு என்ற புதியவகை கொடுப்பனவாக 140 ரூபாயும் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, அடிப்படை சம்பளத்தில் 50 ரூபாயும் ஏனைய கொடுப்பனவுகளாக 60 ரூபா சேர்த்து வெறும் 110 ரூபா சம்பள உயர்வு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு தொழிலாளர்களால் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள கூடியதல்ல. அத்தோடு இது வரை காலமும் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டு வந்த பாக்கி சம்பள நடைமுறை இல்லால் ஆக்கப்பட்டு 2015ஆம் ஏப்பிரல் மாதத்தில் இருந்து வழங்கப்பட வேண்டிய 18 மாத பாக்கி சம்பளம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாமை என்பன கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் இலாமையையே காட்டுகிறது. ஏற்கனவே 800 ரூபாவிற்கும் அதிக தொகை நாட் சம்பளமாக பெற வாய்பு இருந்த நிலையில் 730 நாட் சம்பளத்திற்கு கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு துரோகமிழைத்துள்ளனர். இது பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும், கம்பனிகள் நட்டத்தில் இயங்குகின்றன என்று கூறிய பிரிவாரங்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். இவ்வாறு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய சம்பள கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அச்சங்கத்தின் நிறைவேற்றுக் குழுசார்பாக வெளியிடப்பட்டுள்ள அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

ஒன்றாக இருந்து பேச்சுவார்த்தை நடத்தி, நிபந்தனைகளை ஏற்று கையொப்பமிட்டுப் பின்னர் ஒருவரையொருவர் குற்றம்சாட்டும் அசட்டுத்தனமான தொழிற்சங்க அரசியல் கலாசாரத்தை தொழிலாளர்கள் தொடர்ந்தும் சகிக்கக்கூடாது. இ.தொ.கா. தலைவர்கள் நிலுவை சம்பளம் பெற்றுக் கொடுக்க முடியாது என்றும் கூறும் கருத்துக்கள் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் அடிப்படை அறிவற்ற கருத்துக்களாக இருப்பதுடன் அச்சங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களை கொச்சைப்படுத்தும் நடவடிக்கையாகும். அத்தோடு தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகத்திற்கு இ.தே.தோ.தொ.ச. மற்றும் பெருந்தோட்டக் கூட்டு கமிட்டியும் சம அளவில் பொறுப்பு கூறவேண்டியவர்களாவர். கம்பனிகள் கூறுவது போல் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நு.P.கு மற்றும் நு.வு.கு. என்பவற்றை சேர்த்து சம்பளத் தெகையை கூறும் வங்குரோத்து நிலைக்கு இன்று தொழிற்சங்கங்கள் தள்ளப்பட்டுள்ளன. கம்பனிகள் அனைத்தும் இலாபமோ நட்டமோ ஒருமுகமாக இருந்து தங்கள் பக்க பேரப்பேச்சை முன்னெடுத்த போதும், தொழிலாளர்கள் சார்பாக ஒப்பமிடும் மூன்று சங்கங்களும் கம்பனிகளை பலப்படுத்தும் வகையில் பல முரண்பட்ட நிலைப்பாடுகளை பேச்சுவாத்தை மேசையிலும் அதற்கு வெளியிலும் வெளிப்படுத்தி அவர்களின் தொழிலாளர் விரோத நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியினரின் செயற்பாடுகள் அவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. ஆரம்பத்தில் தாங்கள் 1000 சம்பள உயர்விற்கு ஆதரவளிப்பதாக சத்தியாகிரகம் இருந்த அக் கூட்டணியினர், 730 இணங்கியதால் தாங்கள் நடத்த இருந்ததாக கூறிய போராட்டத்தை கைவிட்டனர். 1000 ரூபா பெற்றுக் கொடுத்தால் பதவி விலகுவேன் என்று கூறிய தலைவர்கள் 1000 ரூபா கேட்டவருக்கும் தனக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலவாக்கலையில் இடம்பெற்ற தோர்தல் பிரசாரக்கூட்டத்தில் தான் ஆட்சிக்கு வந்தால் 1000 பெற்று கொடுப்பேன் என்று கூறவில்லை என்று கூறும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தாங்கள் தும்மினாலும் பத்திரிக்கையில் வரவேண்டும் என்று துடிக்கும் சில அரசியல் தலைவர்களுக்கு தொழிலாளர்கள் சார்பான கருத்துக்கள் ஊடகங்களில் வருவது சகிக்க முடிவதில்லை. அத்துடன் சிலருக்கு மலையக அரசியலில் ஏகபோக உரிமை தேவைப்படுகிறது.

அடுத்த முறை கூட்டு ஒப்பந்தத்தில் நாட் சம்பளத்தையும் இல்லாமல் செய்து உற்பத்தி திறனை அடிப்படையாக கொண்;ட முறை என்ற பேரில் தொழிலாளர்களின் சட்ட ரீதியான உரிமைகளை பறித்து தொழிற்சங்க உரிமைகள் அற்ற உதிரிகளாக ஆக்கும் நிலைக்கு தள்ளுவதற்கே கம்பனிகள் திட்டமிட்டுள்ளனர். அதன் அங்கமாகவே உற்பத்தித்திறன் கொடுப்பனவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தே தற்போதைய கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்கள் கைச்சாத்திட்டப்பட்டுள்ளதாக அம்முறைக்கு முழு ஒத்துழைப்பை கம்பனிக்கு வழங்கி வரும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்தின போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கம் கூட்டு ஒப்பந்தத்தில் தான் மத்தியஸ்தர் என்று கூறிவந்த போதும் 730 ரூபாயை ஏற்று கையொப்பம் இட வேண்டும் என்று வற்புறுத்தியமை அவர்கள் வெளிப்படையாக கம்பனிகள் சார்பாக இருந்தமையை காட்டுகிறது.

தோட்டத் தொழிலாளர்கள், தொழிலாளர் வர்க்க குணமற்ற கம்பனிகளுக்கு அடிப்பணியும் தொழிற்சங்கங்களையும் ஆளும் வர்க்கத்தை சார்த்திருக்கும் பாராளுமன்ற தலைமைகளையும் கூட்டு ஒப்பந்த நேரத்தில் மாத்திரம் விமர்சித்து விட்டு பின் தேர்தலில் அவர்களை ஆதரித்து பின்னர் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்தின் போது விமர்சிக்கும் போக்கை மாற்றி தொழிலாளர் வர்க்க உணர்வுடன் மாற்று பாதையை பற்றி சிந்திக்க வேண்டும். அவ்வாறு மக்கள் செயற்படாவிட்டால் தோட்டத் தொழிலாளர்களின் வஞ்சிக்கப்பட்ட வரலாறு தொடர்வதையும் பெருந்தோட்டத் தொழிற்துறை அழிவடைவதையும் மலையக தேசிய இனத்தின் இருப்பு தகர்க்கப்படுவதையும் தடுக்க முடியாது போய்விடும் என்பதை வலியுத்துகின்றோம்.

பிராயச்சித்தம் தேடிய ஆளுநர் அண்டர்சன் (1915 கண்டி கலகம் –53) - என்.சரவணன்

Sir John Anderson
மகாபோதி சங்கம் குறித்து ஆளுநர் சார்மஸ் எடுத்த தவறான  முடிவுகளை சரி செய்ய அவருக்கு இருந்த அனைத்து சந்தர்ப்பங்களையும் புறக்கணித்தார். போதுமான விசாரணைகள் இன்றி தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தி அவ்வியக்கத்தின் செயற்ப்பாடுகளையும், செயற்பாட்டாளர்களையும் மோசமாக ஒடுக்கினார்.

இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை அரசாங்க சபையில் ஹெரி கிரீசி 9.06.1916 அதாவது கலவரம் நிகழ்ந்து ஒரு வருடத்தின் பின்னர் பிரேரனையைக் கொண்டு வந்தார். அந்த பிரேரணையில் அவர் அதிகமாக வலியுறுத்தியது தேசத்துரோகம் குறித்த வரைவிலக்கணத்துக்குள் இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையில் பொருந்துகின்றனவா என்பது குறித்தது. 

அன்டன் பேட்ரம்
ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட மோசமான அதிரடி முடிவுகளுக்கு அன்டன் பேட்ரமும் துணைபோனவர் தான். அன்டன் பேட்ரம் (Anton Bertram)  1911-18 காலப்பகுதியில் சட்ட மா அதிபராக கடமை வகித்தவர். அதன் பின்னர் 1918-25 வரை இலங்கையின் பிரதம நீதியரசராக கடமையாற்றியவர்.
Anton Bertram

“தேச நிந்தனை”, “தேசத்துரோகம்”, “திட்டமிட்ட சதி”, “நன்கு தயாரிக்கப்பட்ட வன்செயல்” போன்ற குற்றச்சாட்டுக்களை உருதிபடுத்தியத்தில் அவருக்கு முக்கிய பாத்திரம் உண்டு. அன்டன் பேட்ரத்தோடு விவாதித்த பல சம்பவங்களை சேர். பொன் இராமநாதன் தனது நூலில் பல இடங்களில் விளக்குகிறார். ஆனால் அன்டன் பேட்ரம் பின்னர் தனது கருத்துக்களை மாற்றிக்கொண்டு உண்மையை ஏற்றுக்கொண்டார் என்று பிளக்டோன் (Blackton, Charles) எழுதிய 1915 கலவரங்களில் அதிரடி கட்டம் (The Action Phase of the 1915 Riots) என்கிற ஆய்வில் விளக்குகின்றார்.

பலமுனை அழுத்தங்களின் விளைவாக அவர் பிழையான முடிவுகளுக்கு துணைபோனார் என்று அவரது நண்பர் மேசன் மூர் (Henry Monck-Mason Moore) பிற்காலத்தில் குறிப்பிடுகிறார்.  மேசன் மூர் பின்னர் இலங்கையின் ஆளுநராக கடமையாற்றியவர். இலங்கையில் இறுதி ஆங்கில ஆளுநர் (1944-1948)அவர் தான். இலங்கையின் சுதந்திர சாசனத்தில் டீ.எஸ்.சேனநாயக்கவுடன் சேர்ந்து கையெழுத்திட்டவரும் அவர் தான்.

அன்டன் பேட்ரம் பின்னர் தன்னை விளங்கிக் கொண்டதன் பின்னர் அரசாங்கம் குறித்து அதிகாரபூர்வமாக அரசாங்க சபையில் இப்படி குறிப்பிட்டார்.
Henry Monck-Mason Moore
“இந்தக் கலவரத்தை உருவாக்கிய பிரதேசவாசிகளும் ஏனையோரும் அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ, கிளர்ச்சியை உண்டு பண்ணும் நோக்கத்துடனோ, இந்த நாட்டில் அரசரின் அரசாங்கத்தை அழிக்கும் நோக்கத்துடனோ, அரசருக்கு எதிரான துரோகம் செய்யும் நோக்குடனோ மேற்கொண்டார்கள் என்று நாங்கள் கருதவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் இந்த நாட்டின் இன்னொரு இனத்தவர் மீது தாக்குதல் தொடுத்தார்கள் என்பது பற்றியது தான் இது. இப்போது சிறைகளில் இருக்கின்ற பலரை என்ன செய்வது என்பது பற்றிய இந்த விவாதத்தில் நீங்கள் குறிப்பட்டது போல சிங்கள மக்களின் அரச விசுவாசம் குறித்தும் கவனத்தில் எடுப்பதற்கு பின் வாங்கிவிடக் கூடாது.”
இந்த கருத்தை அவர் வெளியிட்ட வேளை சேர் சார்மர்ஸ் பதிவியிழந்து நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். சேர் அண்டர்சன் அவருக்குப் பதிலாக ஆளுநராக பதவியிலமர்ந்து இருந்தார். 

ஆளுநர் சார்மஸ் அனுப்பிய இறுதி அறிக்கையில் தன்னையும், அதிகாரிகளையும் தர்காத்துக்கொள்வதற்காக பல வசங்களைச் சேர்த்திருந்தார்.
“சட்டபூர்வமான சேவை குறித்த அனுபவமுள்ள சிவில் சேவையில் இருந்தவர்களில் தெரிவு செய்யப்பட இந்த ஆணையாளர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மிகவும் ஆழமாக விசாரித்து மதிப்பீடு செய்தார்கள்.”
ஈ.டபிள்யு.பெரேராவின் முறைப்பாட்டுக்கு பதிலளிக்கும்முகமாகவே நவம்பர் 4 அன்று அவர் இதனை எழுதியிருந்தார்.

ஆனால் அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதாவது செப்டம்பர் 17 ஆண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதன்படி
“முன்னர் மேற்கொண்டிருந்த மதிப்பீடு மிகவும் அதிகம் என்பது உறுதியாகியிருக்கிறது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு ஏறத்தாழ ஐந்தரை மில்லியன்கள் என்று இத்தால் அறிவித்துக்கொள்கிறேன். இவை மீள் திருத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிற போதும் அதில் பெரிய மாற்றம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.”
சேத மதிப்பீடுகளை சரியாகத்தான் மேற்கொள்ளப்பட்டிருப்பின் இது அதிகமானது என்று மீண்டும் முடிவுக்கு வர வேண்டிய அவசியம் என்ன. அதுவும் பலரிடம் இருந்து மிகவும் மோசமான மிரட்டல்களை விடுத்து அந்தத் தொகைகள் பெறப்பட்டன.

இந்த பிழையான முடிவுகளுக்கு சிறந்த முன்னுதாரணம் யாதெனில் கலவரம் நிகழ்ந்த முதல் வாரத்தில் மாத்திரம் பத்து மில்லியன்களுக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஆளுநர் காலனித்துவ செயலாளருக்கு அனுப்பிய அறிக்கையில் அனுப்பியிருக்கிறார். இந்தத் தொகை கிட்டத்தட்ட அரைவாசியாக குறைந்தது எப்படி என்கிற கேள்வி எழுகிறது.

ஆளுநர் சார்மஸ் ஆரம்பத்திலிருந்தே பொறுப்பற்ற முறையில் எதேச்சதிகாரமாக மேற்கொண்ட அத்தனையையும் அவர் பின்னர் நியாயப்படுத்த அதிக பிரயத்தனப்பட்டார் என்பதை அவரது பிந்திய நடவடிக்கைகள் பல நிரூபித்தன.

சார்மஸ் தனது அதிகாரிகளைப் பாதுகாப்பதற்காக “இந்த கனவான்களை பாதுகாப்பு காரணங்களுக்காகவே கைது செயப்பட்டார்கள்” என்றார். டபிள்யு ஏ.டீ.சில்வா குறித்து இப்படி குறிப்பட்டார்.

“கலாநிதி . டபிள்யு ஏ.டீ.சில்வா விடயத்தில் தவறு நிகழ்ந்திருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். அவருக்கு எதிரான எத்தனைப் பற்றியும் நான் அறிந்திருக்கவில்லை அவர் விடுதலையானதன் பின்னர் தெரிவித்தேன். டபிள்யு ஏ.டீ.சில்வா இந்த விடயத்திற்கு அதிக ஊடக பிரச்சாரம் செய்திருந்தார்.

ஆளுநர் சார்மஸ் இது போல கைது செய்யப்பட்ட பல அப்பாவிகள் குறித்தும் கருத்து வெளியிட்டிருக்கலாம். அது அவரால் இறுதிவரை முடியவில்லை.

ஆளுநர் அண்டர்சன்
புதிய ஆளுநர் அண்டர்சன் (Sir John Anderson) முந்திய ஆளுனரின் பிழைகளுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ள நேர்ந்தது. அவர் ஆளுனராக வந்ததும் முதலில் மொறட்டுவ பிரதேசத்தவர்கள் வழங்க வேண்டிய நட்டஈட்டை குறைத்தார். அதே பாணியில் ஏனைய பிரதேசங்களுக்கும் தொடர்ந்தார்.

தமது சுய விருப்பின் பேரில் பல பிரதேசத்தவர்கள் இழப்பீடு வழங்க முன்வந்தார்கள் என்று சார்மஸ் கூறிய போதும் அப்படி “சுயவிருப்பின் பேரில்” தருமாறு ஆணையாளர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பது பல முறைப்பாடுகளில் வெளியானது. அப்படி கையெழுத்திட்டு வாங்கப்பட்ட ரசீதுகள், சத்தியக்கடதாசிகள் அரசாங்க சபையில் காட்டப்பட்டு விவாதிக்கப்பட்டும் இருக்கிறது. அந்த நட்ட ஈடுகள் வழங்காவிட்டால் அவர்களை சிறையில் தள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டதும், இராணுவ சட்டத்தின் கீழ் அரச ஆணையை புறக்கணித்தால் மரண தண்டனை வழங்கப்படும் என்று மிரட்டப்பட்டதும் கூட பதிவாகியிருக்கிறது.

முறைப்பாடு செய்யப்பட்ட சகல சந்தர்ப்பங்களிலும் அவை சிவில் சேவையில் இருந்தவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்ட விசேட ஆணையாளர்களால் விசாரிக்கப்பட்டன. சில சிக்கலான வழக்குகளை அவர்கள் இராணுவ நீதிமன்றத்துக்கு அனுப்பினர். அதற்கு முன்னர் அப்படியான வழக்குகள் சட்ட மா அதிபரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. இந்த நடைமுறையின்படி மேற்கொள்ளப்பட்ட வழக்குகள் பலவற்றை புதிய ஆளுநர் பரிசீலனைக்கு எடுத்தார்.

அண்டர்சன் தலைமையில் வழக்குகள் பல மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு பலர் விடுதலையானார்கள். பலர் தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டார்கள். ஆளுநர் சார்மஸ் மீள திருப்பி அழைக்கப்பட்டதும் அவருக்குப் பதிலாக சேர் ஜோன் அண்டர்சன் 15.04.1916 இலிருந்து ஆளுனராக பதவி வகித்தார். சரியாக இரண்டு வருடங்களுக்கும் குறைவாகவே அவர் பதவி வகிக்க முடிந்தது. அதற்குள் அவர் தன்னை ஈடுபடுத்திய முக்கியமான பணியே இந்த கலவராம் குறித்த சிக்கல்களை நிவர்த்தி செய்வதே. நேரடியாக தனது தற்றுணிவின் பேரில் இந்த மாற்றங்களைச் செய்தார்.

அவர் நுவரெலியாவிலுள்ள இராணி விடுதியில் தங்கியிருந்த போது 24.03.1918 அன்று திடீரெண்டு விழுந்து மரணமானார். அவர் அப்படி அப்படி இறந்த வேளை அவரது அருகில் இருந்தவர் மகா முதலி சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க (SWRD.பண்டாரநாயக்கவின் தகப்பனார்). அவர் எழுதிய குறிப்பில் “தனது பதவிக் காலம் முடியுமுன்னரே இலங்கையில் இறந்துபோன முதல் ஆளுனர் சேர் ஜோன் அண்டர்சன் அவர்கள். ஒரு நேர்மையான மகத்தான மனிதனின் ஈடிணையற்ற இழப்பானது தனிப்பட்ட ரீதியிலும் எனக்கு பேரிழப்பு.” என்றார்.

தொடரும்...

நன்றி - தினக்குரல்

ஜூலை கைச்சாத்திடப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் என்ன சொல்கிறது?


இடைக்கால ஒப்பந்தம்
இந்த இடைக்கால ஒப்பந்தம் (இதற்கு பின்னர் 1யு கூறப்படும்) வகுக்கப்பட்டுள்ளது தொழில் மற்றும் தொழிற்சங்க தொடர்பாடல் பொருளாதார துறை மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் தோட்ட தொழில்துறைகளுக்கு பொருப்பான அமைச்சர்கள் (இதற்கு பின்னர் "அரசாங்கம்" என கூறப்படும்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை1 மற்றும் பிராந்தியத் தோட்ட தொழில் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழில் வழங்குனர் கூட்டு சங்கம் (இதற்குப் பின்னர் தொழில் வழங்குனர் எனக் கூறப்படும்) மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசியதோட்ட தொழிலாளர் சங்கம் மற்றும் ஒன்றிணைந்ததோட்ட தொழில் சங்கநிலையம் (இதற்குப் பின்னர் "கையொப்பமிடும் சங்கங்கள் எனக் கூறப்படும்) இணைந்து 2016 ஜூன் மற்றும் 2016 ஜுலை மாதங்களுக்காக மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட நாளொன்றுக்கு 100 விதமான இடைக்கால கொடுப்பனவு (இதனுடன் EFF,ETF,OT ஊழியர் சேமலாபநிதி ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் மேலதிக வேலை கொடுப்பனவு போன்றவற்றிற்கு உள்ளடங்காத) உற்பத்தி திறனை அடிப்படையாக கொண்ட திருத்தப்பட்ட கூட்டு ஒப்பந்தத்ததை கைச்சாத்திடுவதற்காகவே ஆகும்.

எவ்வாறாயினும் 2013ம் ஆண்டு 10ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின்படி கையொப்பமிட்டவர்கள் (தற்போது சகல தரப்பினர்களும் கட்டுப்பட்ட அதனுடன் தொடர்பான ஒப்பந்தத்தின் 6ஆம் பிரிவுடன் சார்ந்த பொது குறிக்கோள்களை திருத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையை பெறுவதை மதிப்பிடுவதுடன் குறித்த கூட்டு ஒப்பந்தத்ததை திருத்துவதற்கும் அதன் மூலம் உற்பத்தி திறனை வளர்ச்சி செய்து புதிய கூட்டு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவதற்கும் நாளொன்றுக்கு 100 வீதமான இடைக்கால கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கும் (இதனுடன் EPF,ET,FOT ஊழியர் சேமலாபநிதி ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் மேலதிக வேலை கொடுப்பனவு போன்னவற்றிற்கு உள்ளடங்காத) மற்றும் மேற்படி வகையில் 2 மாதத்திற்கான வரையறையை பின்பற்றி செயல்படுத்துவதற்கும் இணக்கம் கொண்டுள்ளது.

1 தொழில் வழங்குனர்கள் (இதன் 1ஆம் அட்டவணையில் குறிப்பிடப்படும்) இலங்கை அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் கிடைக்கப்பெறும் நிதியை பயன்படுத்தி 2016 ஜூன் மற்றும் 2016 ஜுலை மாதங்களுக்காக மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட நாளொன்றுக்கு 100 விதமான இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்கும் உறுதியளித்தனர்.

2 குறித்த கொடுப்பனவு 2016 ஜுன் மற்றும் 2016 ஜுலை மாதங்களுக்கு மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இருப்பதுடன் குறித்த கொடுப்பனவுகள் எவ்வித காரணமும் அடிப்படையாகக் கொண்டு அல்லது குறித்த 2 மாதங்களுக்கு மேல் செலுத்துவதற்கு தொழில் வழங்குனர்கள் எவ்வித கட்டுபாடும் கொள்ளப்பட மாட்டார்களென்றும் இவ்வொப்பந்தத்தில் தரப்பினர்களுக்கு மத்தியில் இணக்கப்பாடு ஒன்று ஏற்பட்டது.

3.2016ம் ஆகஸ்ட் 1ஆம் திகதியிலிருந்து திருத்தப்பட்ட கூட்டு ஒப்பந்தம் ஆக குறைந்த பட்ச காலமாக 2 வருட காலத்திற்கு கட்டுப்பட்டு அக்காலப்பகுதிக்கு முன்னர் (அதாவது கடந்த ஒப்பந்தம் காலாவதியான பகுதியில் இருந்து சம்பள உயர்வு வழங்கும் காலப்பகுதி வரையிலான நிலுவை சம்பளம் வழங்குதலுக்கான ஒப்பந்தம்) காலத்தை கவனிக்காமல் உற்பத்தி திறனுடன் சார்ந்த திருத்தப்பட்ட சம்பளப்படிவத்திற்கான திருத்தப்பட்ட சம்பள ஒப்பந்தத்திற்கு சார்வதற்காக பேச்சுவார்த்தைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தொழில் வழங்குனர்களும் 2013ஆம் ஆண்டு 10ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்களும் இணங்கியுள்ளனர்

4. இலங்கை அரசாங்கம் மேற்படி குறிப்பிட்ட தொழில் வழங்குனர் மற்றும் 2013 ஆம் ஆண்டு 10ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்களுக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்ட உறுதிப்படிதங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குவதுடன் அவவொத்துழைப்பு இவ்வொப்பந்தம்படி மேற்படி வகையிலான உறுதிக் கூற்றுக்கள் (01) aa (02) மற்றும் (03) உடன் சார்ந்த செயற்பாடுகளை செயற்படுத்துவதற்கு வசதி ஏற்படும். அதே போல் ஏதேனும் அல்லது விலை வீழ்ச்சி ஏற்பட்டால் காலத்தை நீடித்து பிராந்தியதோட்டத்துறை கம்பனிகளுக்கு உதவி வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தும்.

5. இந்த இடைக்ககால ஒப்பந்தம் அதே வகையில் குறித்த தரப்பினருக்கு அறிவித்த்ல இன்றி 2016 ஜூலை 31ஆம் திகதி முடிவுக்கு வருவதுடன் அதுபற்றிய விடயம் தொழில் வழங்குனர் கையொப்பமிட்ட தொழில் சங்கங்களுக்கிடையில் திருத்தப்பட்ட ஒப்பந்தம் ஒன்றிற்கு சார்வதற்கு இயலுமா அல்லது இயலாதா என்பது பற்றி கவனிக்காமல் ஏற்படுவதுடன் அதன் செல்லுபடியான காலம் 2016 ஜூலை 31ஆம் திகதியில் முடிவுக்கு வரும். இதற்கு சாட்சியாக மேற்படி தரப்பினர்கள் தங்களது கையொப்பங்களை 2016 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் திகதியான இன்று கொழும்பில் வைத்து இட்டனர்.

இலங்கை அரசு சார்பாக
கெளரவடபிள்யு ஜேசேனவிரத்ன
தொழில் மற்றும் தோட்டதொழிற்சங்க கூட்டமைப்பு
ஒப்பம்.

கெளரவ மலித்வமரவிக்ரம
பொருளாதார விவகார மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்
ஒப்பம்.

கெளரவ நவின் திசாநாயக்க
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்தருனர்கள் சார்பாக
கெளரவ எஸ்.ஆர்.எம்.எ தொண்டமான் பொதுச்செயலாளர்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
ஒப்பம்.

பொதுச்செயலாளர்
லங்கா தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம்
தலைவர்
கூட்டு பெருந்தோட்ட தொழில் சங்க சம்மேளனம்
ஒப்பம்

எஸ்.எஸ் போகோலியத்த
தலைவர் பெருந்தோட்டசேவைகள் குழு
இலங்கை தொழில் வழங்குனர்கள் சம்மேளனம்

டபிள்யுஎம்.கே.எல் விரசிங்க
பணிப்பாளர் நாயகம்
இலங்கை தொழில்வழங்குனர் சம்மேளனம்

ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட்ட தொழில்தருனர்கள்

  • அகலவத்தை பிளான்டேசன்ஸ்.பி.எல்.சி
  • அக்கரபத்தனை பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
  • பலாங்கொடை பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
  • பொகவந்தலாவை டி எஸ்டேட்ஸ் பி.எல.சி
  • எல்கடுவ பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
  • எல்பிட்டிய பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
  • அப்புகஸ்தன பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
  • ஒரன பிளான்டேசன்ஸ் பி.எல்.சி .
  • காவத்த பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
  • கெகோல் பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
  • கெளனிவெலி பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
  • கொட்டகல பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
  • மடுல்சீம பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
  • மல்வத்தவெலி பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
  • மஸ்கெலிய பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
  • மடுரட்ட பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
  • நமுனுகுல பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
  • புசல்லாவை பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
  • தலவாக்கலை டி எஸ்டேட் பிஎல் சி
  • உடபுசல்லாவை பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
  • வட்டவலபிளான்டேசன்ஸ் பி.எல்.சி


மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு உண்மையான தீர்வு எது? - தனுஷன் ஆறுமுகம்


போராட்டங்களில் அதிக நாட்டமும், அதற்கான நேரமும் வாய்க்காத மக்கள் பிரிவினராகவும் பலகாலமாக தமது அரசியல் தலைமைகளினால் தமது தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என நம்பிக்கொண்டிருந்தவர்களாகவும் மலையக மக்கள் காணப்பட்டு வந்தனர். அரசியல் பூச்சாண்டிகளின் அறிக்கைகளும் அலட்டல்களும் இந்த மக்களை ஏமாற்றிய காலம் கடந்து தமது அரசியல் தலைமைகளின் மீது நம்பிக்கையிழந்து தமக்கான கோரிக்கைகளுக்காக தாமே இன்று வீதிக்கு இறங்கியிருக்கின்றனர். சமீபத்தில் போராட்ட நிலைமைகளில் செய்தி சேகரிக்க சென்றோரிடம் “எங்கள் அரசியல்வாதிகளிடம் ஏன் பேட்டி எடுக்கின்றீர்கள், அவர்களால் இயலாது என்று தெரிந்துதானே நாங்கள் வீதிக்கு இறங்கியுள்ளோம்” என முழங்கிய அந்த கோசங்கள் இந்த நம்பிக்கை இழப்பிற்கு சான்று பகர்கின்றன.

உண்மையில் இந்த 1000 ரூபாய் என்ற நிர்ணயத்தை செய்தவர்கள் இந்த மக்களல்ல. இந்த மக்களிடம் கருத்துக்களை பெற்று தீர்மானிக்கப்பட்ட சம்பளமும் அல்ல. மாறாக அரசியல் மேடைகளில் ஒருவருக்கோரம் ஏலமாக சொல்லிய தொகையிலே உயர்ந்து ஒலித்த இறுதி பெருமானமேயிது. ஆமாம் உழைப்பவன் இருக்க சுரண்டுபவன் தீர்மானித்த விலையே இது. இதற்கிடையில் நிவாரணத் தொகை என்ற நாடகமும் அரங்கேற்றப்பட்டு முடிக்கப்பட்டு உழைத்த களைப்பில் ஓய்வில் இருக்கின்றார்கள் நாடகத்தை நடத்திய தரப்பினர்.

சரி 1000 ரூபாய் சம்பளம் சாத்தியப்படுமா? இல்லையா? அல்லது மாற்றுத் தீர்வுகள் ஏதேனும் உண்டா என்பன குறித்து நோக்க வேண்டிய அல்லது தெளிவுப்படுத்த வேண்டிய நிலையில் நாமும் தெளிய வேண்டிய கட்டத்தில் மக்களும் இருக்கின்றார்கள். 730 ரூபாய்களாக நின்றுக் கொண்டிருக்கும் தற்சமய பேச்சுவார்த்தை முடிவுகள் என்ன நிலையை எட்டும் என்பது இன்னும் முடிவில்லாதிருக்கின்றது.

இந்த 1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதில் முதலாளிமார் சொல்லும் பிரதான முட்டுக்கட்டை தோட்டங்களில் வருமானம் போதாது, தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றன என்பதேயாகும். இந்த கருத்து எந்தளவு நம்பும் படியாக இருக்கின்றது அப்படியே உண்மையெனின் காரணம் யார் என்ன என்பதும் ஆராயப்பட வேண்டிய விடயமே.

உண்மையில் இலங்கையில் தேயிலை ஏற்றுமதி குறித்த வருமானம் குறைந்துள்ளதை நாம் மத்திய வங்கி அறிக்கையூடாக அறிந்துக் கொள்ள முடிகின்றது. வருமானம் குறைந்தமையின் பின்னணியில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த நிகர எடையின் அளவு குறைந்துள்ளது ஒரு பிரதான காரணமே. (2014 – 338 KG mn : 2015– 329 Kg mn) இந்த காரணங்களின் பின்னணியில் இருப்பது யார்? காரணம் யார்? தோட்ட தொழிலாளிகளா? தோட்ட நிர்வாகமா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமல்ல. நிர்வாகமே பிரதான காரணம் என்பது இந்த பதிவின் பிற பகுதிகளைக் கொண்டு உணரக் கூடியதாக இருக்கும்.

இந்த உற்பத்தி குறைவிற்கு பிரதான காரணம் பெருந்தோட்டங்கள் உரியவாறு பராமரிக்கப்படாமையாகும். உண்மையில் இன்று மலையகம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் சிறு தோட்டங்களாக உற்பத்தி செய்யும் உரிமையாளர்கள் அதிகமாகவே உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். பெருந்தோட்டப்புறங்களிலே கடந்த காலங்களில் தேயிலை தோட்டங்கள் உரியவாறு பராமரிக்கப்பட்டன. தோட்டத்தில் ஒரு பகுதி வேலை நடந்துக் கொண்டிருக்கும் போதே ஏனைய பகுதிகள் பராமரிப்பிற்கான வேலைகளை உள்வாங்கிக் கொண்டிருந்தன. எனவே தொடர்ந்தேர்;ச்சியாக உற்பத்தி காணப்பட்டது. இது இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழவும் வழி சமைத்தது.

எனினும் தொடர்ந்து வந்த காலங்களில் தேயிலை தோட்டங்கள் உரியவாறு பராமரிக்கப்படாது அதிலிருந்து உச்ச இலாபத்தை மட்டும் பெற்றுக் கொள்ள அவை தொடர்ந்தேர்ச்சியான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டன. எனினும் பராமரிப்பு செயற்பாடுகள் மறக்கப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட செடிகள் அல்லது பகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவ்வாறு ஒதுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு பெரும்பகுதி காடாகியது என்ற உண்மை மறைக்கப்பட முடியாத ஒன்றே. இதற்கு மலையக பெருந்தோட்டங்களில் உற்பத்தி பரப்பானது குறைவடைந்திருக்கின்றமை சான்றாகும். எனவே உற்பத்தி பரப்பு குறையும் போது உற்பத்தியின் அளவு குறையும் என்பது தெளிவு. எனவே இந்த உற்பத்தி குறைவிற்கும், சீரான பராமரிப்பு இன்மைக்கும் காரணம் தோட்ட நிர்வாகமே.

அதே போலவே பராமரிப்பு இன்மையால் உற்பத்தியில் தொடர்ந்தேர்ச்சியாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் செடிகளிலும் உற்பத்தி குறைவது தடுக்கப்பட முடியாத ஒன்று. சம காலங்களில் மீள் நடுகை, புதிய கன்றுருவாக்கம் உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்தப்படாத நிலையில் பல பெருந்தோட்டப் பகுதிகள் காடாகி வருகின்றன. இது ஒரு புறமிருக்க சில தோட்ட நிருவாகங்கள் தங்களது வருமானத்தை கருத்திற் கொண்டு பராமரிப்பின்றி காடாகிய பகுதிகளில் உயரிய வகை மரக்கன்றுகளை நாட்டும் செயற்பாடும் அரங்கேரிக் கொண்டு இருக்கின்றது. இதற்கு தேயிலைக்கான மண் சரியில்லை என போலியான சான்றுகளும் தேயிலையை மாத்திரமே கண்டு வளர்ந்த மண்ணிற்கு கூட வழங்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேரியே உள்ளன. ஆக இன்று மூடப்பட்டு வரும் பெருந்தோட்டங்களின் பின்னணியில் இத்தகைய முறையற்ற நிர்வாக நடவடிக்கையே காரணமாக அமைகின்றது. 

பெருந்தோட்டங்களில் மக்கள் ஒன்றாக ஒரு தோட்டமாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். தோட்டங்கள் மூடப்படுவதால் பலர் இடம்பெயர்ந்து வேலைவாய்ப்புக்களை தேடி தலைநகரையும், பிரதான நகரங்களையும் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார். ஒன்றாக, பலமான சக்திகளாக தோட்டங்களில் இருக்கும் இந்த மக்களை பிரித்தாண்டு அவர்களை அரசியல் ரீதியாக மேலும் பின்னடைவிற்கு ஆக்க வேண்டும் என்ற நோக்கிலோ என்னவோ அரசாங்கம் உரிய கவனத்தை இந்த சம்பள பிரச்சினையின் மீது செலுத்தாது இருக்கின்றது.

இன்று 75 சதவீதத்திற்கு அதிக வரவைக் கொண்ட தோட்ட தொழிலாளி ஒருவரின் சம்பளமே நாளொன்றிற்கு 620 ரூபாய்களாக இருக்கின்றது. அடிப்படை சம்பளம் என்பது இன்னும் 450 ரூபாய்களாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் பெருந்தோட்டங்களிலே உச்ச வருமானங்களைப் அனுபவித்துக் கொண்டிருந்த காலத்தில் இந்த மக்களிடம் அந்த வருமானத்தின் வாசனையை கூட காட்டவில்லை. இன்று வருமானம் குறைவு என்பதைக் காரணம் காட்டி சம்பள உயர்வை புறக்கணிப்பது எந்தளவில் சாத்தியம். இந்த வருமானக் குறைவின் பின்னணியில் மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில் தோட்ட நிருவாகங்களே காணப்படுகின்றன.

முறையற்ற நிர்வாகமே காரணம் என நான் சொல்வதற்கு பலம் சேர்க்கும் இன்னுமொரு பிரதான விடயம் தான், தேயிலை, தேயிலை என நாம் சொல்லிக் கொண்டிருந்தாலும் செடிகளிலே வகைப்பாடுகள் பல இருக்கின்றன. சீனதேயிலை (சைனா டீ), மற்றும் வீபி எனப்படும் செடிகள் அவற்றில் பிரதானமானவை. ஆரம்ப காலங்களிலே உருவாக்கப்பட்ட சீன தேயிலை உயர் தரத்தைக் கொண்ட உற்பத்தியை தரவல்லது. எனினும் இன்றைய காலங்களில் அதிகம் காணப்படும் வீ.பி தேயிலைகளில் கிடைக்கும் தரம் அதனிலும் குறைந்தது. தரத்திற்கேற்ற விலையே கிடைக்கின்றது. எனவே உற்பத்தி தொடர்பில் புதிய நுட்பங்களை பாவிக்க தோட்ட நிருவாகங்கள் முன்வர வேண்டும், அதற்கான ஆய்வுகளும் பலப்படுத்தப்பட வேண்டும். மரபணு தொழிநுட்ப முறைகளில் புரட்சிகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் தரம் வாய்ந்த தேயிலை உற்பத்தி தொடர்பிலும், அவற்றைக் கொண்டு தோட்டங்களிலே மீள் நடுகை செயற்பாடுகளை முன்னெடுக்கவும் தோட்ட நிருவாகம் முன் வர வேண்டும். எனவே தேயிலையின் தரத்தின் குறைவால் ஏற்பட்டுள்ள விலைக் குறைவு எனும் பிரச்சினைக்கு இது தீர்வாக அமையும். 

இன்று இலாபமில்லை என சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் பல தோட்டங்களின் முகாமையாளர்கள் இலட்சங்களிலே சம்பளத்தைப் (நேரடியாக மற்றும் மறைமுகமாக) பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். தோட்ட தொழிலாளியை தவிர எவனுக்கும் இந்த வருமானம் குறைவு எனும் கதை பாதிப்பை ஏற்படுத்தாது காலம் காலமாக தொழிலாளிகள் மாத்திரம் தனித்து பாதிக்கப்படுவது எங்ஙனம் ஏற்பாகும். 
வருமானக் குறைவிற்கு தொழிலாளிகளின் போக்;கும் ஒரு காரணமாக அமைகின்றது என்பதை நாம் மறுக்கவில்லை. வேலை நேரத்தில் எதிர்பார்க்கப்படும் உழைப்பினை வழங்க தவறுகின்றமை காரணமாக சுட்டிக் காட்டப்படுகின்றது. எனினும் வழங்கப்படும் 450 ரூபாய் எனும் அடிப்படை சம்hளத்திற்கு அதுவும் அதிகமெனவே நான் கருதுகின்றேன். எனினும் இந்த தொழிலாளிகளின் தந்த கதியிலான செயற்பாடுகளும் தோட்ட நிருவாகத்தின் செயலால் சீர் செய்யப்படக் கூடியதே.

அதே போலவே அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ளவும் செலவுகளைக் குறைக்கவும் பல தோட்டங்களிலே தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டு அங்கே அரைக்கப்பட வேண்டிய தேயிலை ஒரு பிரத்தியேக இடத்திற்கு மாற்றப்படுகின்றது. அதாவது மூன்று தொழிற்சாலைகளிலே அரைக்கப்பட்ட தேயிலை ஒரு தொழிற்சாலையில் அரைக்கப்படும் நிலை உருவாக்கப்பட்டது. இதனால் அதிக தேயிலை உற்பத்தி நிகழும் காலப்பகுதியில் அரைக்கப்பட முடியாது கொழுந்துகள் வீசப்படும் நிலையும் காணப்படுகின்றது. இதுவும் நிருவாகத்தினரின் மட்டமான செயற்பாட்டால் ஏற்பட்டுள்ள உற்பத்தி குறைவின் ஒரு பக்க காரணமே. 

உப்பைத்; தின்றவன் ஒருவன் தண்ணீர் குடிப்பவன் ஒருவன் என்ற கதையாய் தோட்ட நிர்வாகத்தின் முறையற்ற செயற்பாட்டிற்கான பலனை மக்கள் மீது சார்த்துவது எந்தளவு நியாயம். இலாபமில்லை, வருமானமில்லை எனச் சொல்லிக் கொண்டு ஏன் தொடர்து தோட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே எனது கேள்வி. அங்ஙனம் இயலாத தோட்டங்களை அரசு பொறுப்பேற்று முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும். ஆனால் அரசு அவ்விடயம் தொடர்பில் முனைப்பு காட்டாது இருப்பது நான் மேலே சொன்னதை போல பிரித்தாலும் சூழ்ச்சியாகவே தென்படுகின்றது. அத்தோடு முறையற்ற நிருவாகத்தைக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம், இத்தகைய அரசின் மிகச் சிறந்த நிருவாகச் செயற்பாடுகளின் விளைவாக அரசு பொறுப்பேற்ற பல தோட்டங்கள் (மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை ஊடாக – Via JEDP) இன்று மூடப்பட்டுள்ளமையை குறிப்பிடலாம். அதாவது கம்பனிகளுக்கு நிகராகவே ஏன் அவற்றை விட பல மடங்கு அதிகமாக அரச பெருந்தோட்டங்கள் முறையற்ற பராமரிப்பிற்கும், சீரற்ற செயற்பாட்டிற்கும் உள்ளாகிக் கொண்டிருக்கின்றன என்பதாகும். எனவே இதனடிப்படையில் அரசு தோட்டங்களை பொறுப்பேற்பின் அது மக்களுக்கு எந்தளவு சாதகமாக அமையும் என்பது கேள்விக் குறியே. 

பராமரிப்பு தொடர்பான செயற்பாடுகள் சீராக இடம்பெற்றுக் கொண்டிருந்திருக்மேயானால் உற்பத்தி வீழ்ச்சியோ, வருமான தாழ்ச்சியோ ஏற்பட்டிருக்காது. தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவை விட அதிகமாகவே கோரியிருக்க முடியும். ஆனால் காலம் கடந்த நிலையில் இந்த சம்பளத்தை பெறுவது குதிரைக் கொம்பே. அவ்வாறே தற்போது பேசப்பட்டு வருகின்ற 730ரூபாய் என்கின்ற உத்தேச சம்பளமும் பல கட்டுப்பாடுகளை கொண்டு காணப்படுகின்றது, வேலை நாள், பறிக்கப்படும் தேயிலையின் அளவு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இச்சம்பளம் வழங்கப்பட இருக்கின்றது. ஆகவே முறையான பராமரிப்பற்ற, குறைந்த உற்பத்தியை வழங்கும் செடிகளிலிருந்து எத்தனை பேர் இந்த சம்பளத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கேள்விக்குறியே. எனினும் அரசாங்கம் உதவும் பட்சத்தில் 1000 ரூபாய் சம்பளம் என்பது சாத்தியமே. எனினும் உத்தரவாதமில்லை.

சரி, இலாபமில்லாது நட்டத்தில் இயங்கிக் கொண்டு தர்மசத்திரங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் தேயிலை தோட்டஙகளின் முதலாளிமார் தேயிலை தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்தாலென்ன? அரசாங்கம் முறையான நடவடிக்கையூடாக அதனை அத்தோட்ட தொழிலாளிகளுக்கே பிரித்து வழங்கினாலென்ன? “தோட்ட நிர்வாகமே முடியுமெனின் சம்பளத்தை கொடு, இல்லையெனில் தோட்டங்களை கையளித்து விட்டு வெளிவேறு” என முழக்கமிட்ட தற்போதைய தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டால்; என்ன என்பதே எனது வினாவாகும். ஆமாம், தொழிலாளிகளாக பார்த்தது போதும் என் மலையக மக்களை, இவர்களை தொழிலாளி சாயம் பூசி ஏமாற்றியதும் போதும், முதலாளிகளாக்கிப் பார்ப்போம், தோட்டங்களை பகிர்ந்தளிப்போம்.

ஆமாம் உரியவாறு முகாமை செய்யும் தோட்டங்களை பகிர்ந்தளிப்பது நாட்டிற்கும், தோட்ட மக்களுக்கும் நன்மைகளை கொண்டு சேர்க்கும். பகிர்ந்தளிக்கப்படின் உரியவாறு முகாமை செய்யப்படும் எப்படியென்றால் முகாமையாளரை விட, கம்பனிக்காரர்களை விட, மலையகம் பேசும் அரசியல்வாதிகளை விட, மலையக சித்தாந்திகளை விட, ஏன் எழுதிக் கொண்டிருக்கும் எம்மை விட தேயிலையை பற்றி நன்கு அறிந்த அந்த உழைப்பாளி என் தொழிலாளி. அந்த செடிக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்யக் கூடியவன், தோட்ட முகாமையின் ஆணைக்காக காத்திருக்க தேவையில்லை. அவன் வளர்த்த செடி, அவனுக்கு சொந்தமான செடி, தேவையானதை செய்வான். செடி செழிக்கும், தோட்டம் செழிக்கும், நாடும் செழிக்கும் சேர்ந்தே என் தொழிலாளியும் செழிப்பான் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. இன்று பெருந்தோட்டங்களை விட அதிகமாகவே சிறு தோட்ட உடமையாளர்களின் தோட்டங்களிலே தேயிலை உற்பத்தி செய்யப்படுவது இதற்கு நல்லதொரு சான்று. 

எனவே உடமையாக லயன் அறையை மட்டுமே கொண்டுள்ள மலையக தொழிலாளிக்கு இந்த தோட்டங்களை பகிர்ந்தளிப்பதே ஒரே தீர்வு. சொந்தமாக நிலமும் கிடைத்திருக்கும், உழைப்பும் செழித்திருக்கும். கூட்டு ஒப்பந்தத்திற்கும், அரசியல் அறிக்கைகளுக்கும் ஏமாற வேண்டிய தேவையிருக்காது அரசு நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில் தேயிலை விற்று இலாபமோ நட்டமோ நேரடியாக சந்திக்க கூடிய ஒரு நிலையானது எம் மக்களுக்கு கிட்டும். இதற்கு மேலதிகமாக காணியைப் பெற்று தருகின்றேன், வீட்டு திட்டத்தை அமைத்து தருகின்றோம் என்ற போலிகளின் பேச்சுக்களுக்கு ஏமாறவும் தேவையில்லை இந்த நில உரிமையாளர்கள். 

எனவே நாட்டினுடைய விலை நிலவரங்களைக் கருத்திற் கொள்ளாது, குறிப்பிட்ட காலத்திற்கு இதுதான் (இது மட்டும்தான்) சம்பளம் என தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் எனும் மாயைக்குள் சிக்காது, தொழிற்சங்கங்கள் குறித்து கவலைப்படாது எம்மக்கள் நிம்மதியாக வாழ்க்கை நடாத்த தோட்டக்காணிகளை தோட்ட தொழிலாளிகளுக்கு (தேயிலை செடிகளின் உரமானவர்களுக்கு) பகிர்ந்தளிப்பது ஒன்றே சிறந்த தீர்வு என்பதோடு தற்காலிக மாயை எனும் இந்த சம்பள நிர்ணயம் என்பது காலம் கடந்த ஒன்றே.

நன்றி - தினக்குரல்

ஆளுநரால் குறி வைக்கப்பட்ட “மகா போதி சங்கம்” (1915 கண்டி கலகம் –52) - என்.சரவணன்


கலவரத்துக்குப் பின் நாட்டில் நிகழ்ந்த பிரிட்டிஷ் அரச அட்டூழியங்களுக்கான பெரும்பொறுப்பு ஆளுநர் சார்மர்சையே சாரும். அதிகாரிகளின் மேலோட்டமான அறிக்கைகளை எந்த பரீசீலிப்பும் இல்லாமல் வேகமான முடிவுகளை எதேச்சதிகாரமாக எடுத்ததே பின் நிகழ்ந்த அநீதிகளுக்கெல்லாம் பிரதான காரணமாக இருந்தது. இராணுவச் சட்டத்தை பிறப்பிக்குமளவுக்கு தேவையேற்படாத நிலையில் அவர் அதனை மோசமாக அமுல்படுத்தியதன் பின்னணியில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அப்போது நிகழ்ந்த சோகமும் ஒரு காரணம் எனக் கண்டோம். முதலாவது உலக யுத்தத்தில் அவரது மகன்மார் வெவ்வேறு போர்க்களத்தில் ஒரே மாதத்தில் கொல்லப்பட்ட செய்தியால் விரக்திக்குள்ளாகியிருந்த தருணம் அது. அதுவும் இலங்கையில் கலவரம் நிகழ்ந்த அதே ஆண்டு. மகன்மார் கொல்லப்பட்டதும் கலவரம் நிகழ்ந்த அதே மே மாதம். ஆக அந்த இழப்பு நிகழ்ந்து ஒரு சில நாட்களில் இந்த கலவரம் நிகழ்ந்தது. கலவரம் நிகழ்ந்துகொண்டிருந்த முதல் மூன்று  நாளும் அவர் நுவரெலியாவில் உள்ள உத்தியோகபூர்வ இராணி இல்லத்தில் ஓய்வுபெற்றபடி இருந்தார். இலங்கையில் ஆளுநராக அவர் இருந்த காலம் இரண்டு வருடங்களும் இரண்டு மாதங்களும் தான். கலவரத்தின் விளைவாக அவர் இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்கப்பட்டது வரை டிசம்பர் 4 வரை அவர் ஆளுநராக கடமையாற்றினார்.

இந்த கலவரம் குறித்து பாராளுமன்றத்தின் “ப்ளு புக்” என்கிற உத்தியோகபூர்வ அறிக்கையில் உள்ள விபரங்களுக்களைத் தவிர ஆளுநர் சேர் ரொபர்ட் சார்மஸ்ஸின்  (Sir Robert Chalmers) ஏனைய அனைத்து ஆவணங்களிலும் எதிர்ப்புணர்ச்சி மிக்க மூர்க்கத்தனமான கலவரமாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது.

மே 31இல் அவரின் அறிக்கையில் “கண்டியைச் சூழ நடந்த அசம்பாவிதங்கள் கண்டியைச் சேர்ந்தவர்களால் நிகழ்ந்திருக்கிறது, கண்டியைச் சூழ மட்டும் தான் இவை நிகழ்ந்தன” என்று அறிக்கையிட்டிருக்கிறார்.

கொழும்பில் தொடங்கிய கலவரத்தை தொடக்கி தலைமை தாங்கியவர்கள் இரயில்வே தொழிலாளர்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிரான சிங்கள வியாபாரிகள் மத உணர்வுகளை பரப்பி இருந்தனர் என்றும் குறிப்பிட்ட அவர் கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்துக்கு எதிரான எத்தகைய உணர்வுகளைக் கொண்டிருந்தனர் என்று அவரது அறிக்கைகளில் தொடர்ச்சியாக விளக்கிவந்திருக்கிறார்.

முஸ்லிம் விரோதபோக்குக்கு துணை சேர்ப்பதற்காக அவர்கள் அரசாங்கத்தை பிழையாக திசைதிருப்பினர் என்று சூட்சுமமாக நியாயப்படுத்தினார் அவர்.

“பிரித்தானியாவுக்கும் துருக்கிக்கும் இடையில் போர் நிகழ்ந்துவந்ததால் உள்நாட்டில் உள்ள முஸ்லிம்களும் பிரித்தானியாவின் எதிரிகளாக கருதப்படுவார்கள் என்கிற எண்ணம் அவர்களிடத்தில் இருக்கிறது” என்று ஜூன் 7 அன்று அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். பின்னர் இரு மாதங்களுக்குப் பின்னர் ஓகஸ்ட் 11 அன்று காலனித்துவ செயலாளருக்கு இப்படி அறிவித்திருக்கிறார்.

“துருக்கி பிரித்தானியாவுக்கு எதிரான போரில் இறங்கியிருப்பதால், இங்கிருக்கும் முஸ்லிம்களுக்கும் துன்பம் கொடுத்து நாட்டிலிருந்து விரட்டிவிடுவதற்கான தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது என்கிற கதையை கெட்டித்தனமாக பல பிரதேசங்களுக்கு பரப்பியுள்ளனர்.” இப்படிச் சொல்வதன் மூலம், அரசாங்கம் அதகயவர்களைத் தான் ஒடுக்கவேண்டி ஏற்பட்டது என்றும் முஸ்லிம்களைப் பாதுகாக்க வேண்டி ஏற்பட்டதாகவும் கூற முனைகிறார்.

ஆளுநரின் ஆரம்ப அறிக்கைகளில் இந்த கலவரத்தை ஒரு சதி முயற்சியாக சித்திரிக்கவில்லை. ஜூன் 1ஆம் திகதி கடிதத்தில் அவர் “ஐரோப்பியர்களுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கமோ, இரயில்களுக்கு சேதம் விளைவிக்கவோ, முஸ்லிம் அல்லாதோரின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கமோ அவர்களிடத்தில் இருக்கவில்லை.”

ஆனால் அதன் பின்னர் நிகழ்ந்த ஆங்கிலேய அட்டூழியங்களை நியாயப்படுத்த உரிய காரணங்களை அவர் சமர்ப்பிக்க வேண்டியேற்பட்டது. எனவே இந்த கலவரம் ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான சதியென்று தொடர்ச்சியாக நிறுவும் தேவைக்கு தள்ளப்பட்டார் அவர். இவை பற்றிய உண்மைகளை வெளியுலகுக்கு வெளிவராத வண்ணம் ஊடக தணிக்கையை அமுல்படுத்தியிருந்தார். சிங்களத்தில் வெளியிடப்பட்ட பல வெளியீடுகள் கூட மக்கள் பார்வைக்கு 1916ஆண்டு பெப்ரவரி தான் கிடைத்தன. பத்திரிகை ஆசிரியர்களுக்குக் கூட சேர் ரொபர்ட் சார்மஸ் நாட்டை விட்டுச் சென்று இரண்டு மாதங்களின் பின்னர் தான் அந்த பதிப்புகளைக் காணக்கிடைத்தன. ஆனால் அவரது கண்களில் மண்ணைத்தூவி விட்டு  இலங்கையிலிருந்து இங்கிலாந்து சென்று உண்மைகளை வெளிக்கொணர்ந்தவர்கள் சேர்.பொன் இராமநாதன், ஈ.டபிள்யு.பெரேரா போன்றோர். ஆளுனர் எதிர்பாராதவை அவை.
சேர் ரொபர்ட் சார்மஸ்  (Sir Robert Chalmers)
இங்கிலாந்தில் உயர் மட்ட அதிகாரிகளையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்து அவர்களுக்கு நாட்டின் இக்கட்டான நிலைமையை விபரித்து, விசாரணைகுழு அமைக்க வேண்டினர். அநியாயமாக சிறையில் இருப்பவர்களுக்கு விடுதலை, தண்டிக்கப்பட்டவர்களுக்கும், இழப்புகளை எதிர்கொண்டவர்களுக்கும் நீதி என்கிற நோக்கங்களுக்காக இந்த விசாரணைக்  கொமிசன் நியமிக்கப்படவேண்டும் என்று வாதிட்டனர். இவை குறித்து ஆளுனருக்கு காலனித்துவ செயலாளரால் கடிதங்கள் அனுப்பட்டன. ஆத்திரமுற்ற ஆளுநர் இலங்கையர்களில அதிருப்தியாளர்கள் பலரம் உள்ளார்கள் என்று பதில் கொடுத்ததுடன் “அப்படிப்பட்ட ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட்டால் அது பெரும் விபரீதங்களை உண்டுபண்ணுவதுடன் எதிராளிகளை மேலும் பலப்படுத்தும்” என்று பதில் அனுப்பினார். மேலும் இதனால் தமது தரப்பு பிழைகளை விளங்கிக்கொண்ட அதிகாரிகள், இராணுவத்தினரை கூட இதனால் பீதியுறச்செய்யும் என்றும் எழுதினார்.

அவரது அறிக்கைகளில் தனது செய்கைகளை நியாயப்படுத்துவதற்காக நாட்டில் ஆங்கிலேய ஆட்சியை விமர்சித்து வந்த சக்திகளின் மீது பழிகளை அடுக்கிக்கொண்டுச் சென்றார். அப்படிப்பட்ட பழிகளுக்கு இலக்கான ஒரு அமைப்பு “மகாபோதி சங்கம்”

“மகா போதி சங்கம்”
மகாபோதி சங்கத்தை ஒரு ஆங்கிலேய விரோத அமைப்பாகவே சார்மஸ் முன்னிறுத்தினார். மகாபோதி சங்கம் அநகாரிக தர்மபாலவால் கல்கத்தாவிலுள்ள புத்தகயாவை ஹிந்துக்களிடம் மீட்பதற்காகவும், பௌத்த மறுமலர்ச்சி, பௌத்த புனருத்தாரணம், ஆங்கிலேய கத்தோலிக்க மிஷனரிமாரின் கத்தோலிக்கமயப்படுத்தளிலிருந்து பௌத்தத்தை மீட்பதற்காகவும் 17.07.1891 இல் உருவாக்கப்பட்டது. “Maha Bodhi society” என்கிற பேரில் ஒரு சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. அதைவிட முக்கியமாக “சிங்கள பௌத்தயா” என்கிற இனவாத பத்திரிகையும் கூட இந்த அமைப்பால் தான் வெளியிடப்பட்டது.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான உணர்வுநிலையை பரப்பியதில் அறைய காலப்பகுதியில் அநகாரிக்க தர்மபாலவுக்கும், மகாபோதி சங்கத்தின் கீழ் இயங்கிய வெளியீடுகள் திணை அமைப்புகளுக்கும் பெரும் பாத்திரமிருந்ததால் இவை அனைத்தும் ஆளுநரால் குறிவைக்கப்பட்டன. ஆளுநரின் பழிசுமத்தலுக்கு இலகுவாக இருந்தன. எனவே தான் அநகாரிக்க தர்மபால கல்கத்தாவில் பல வருடங்களுக்கு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதும், இலங்கையில் மகாபோதி சங்கத்தின் அலுவலகத்திற்கும், அச்சகத்திற்கும் புகுந்து ஆவணங்களையும், வெளியீடுகளையும் அள்ளிக்கொண்டு சென்றது மட்டுமன்றி “சிங்கள பௌத்தயா” பத்திரிகை தடை செய்யப்பட்டதும் இதன் தொடர்ச்சி தான்.

ஒருபுறம் இனவாத கருத்துக்களைக் கொண்டிருந்த இந்த மகாபோதி சங்கம் மறுபுறம் பௌத்த மறுமலர்ச்சிக்கு ஆற்றிய தொண்டும், புத்தகயா மீதப் பணியில் ஆற்றிய பாத்திரமும் ஆளுனருக்கு நன்கு தெரியும். ஆளுனர் சார்மஸ் இலங்கைக்கு ஆளுனராக வந்தவர்களிலேயே பௌத்தத்தைப் பற்றி நன்கு அறிந்த ஒருவர் என்றால் அது மிகையில்லை. அவர் பாலி மொழியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். பாலி மொழியில் பௌத்த இலக்கியங்களைக் கற்றறிந்தவர். அது மட்டுமன்றி ஆங்கிலத்தில் பௌத்த இலக்கியங்கள் குறித்து தர்க்கபூர்வமான ஆய்வுகளை வெளியிட்டிருக்கிறார். அப்பேர்பட்ட அவர் பௌத்த செயற்பாடுகளை 1915 கலவரத்துக்கு காரணமாக இலகுவில் குற்றம் சுமத்தவைத்தது எது என்கிற கேள்வி எழுகின்றது.

அவர் அன்று தனிப்பட்ட இழப்புகளால் கொண்டிருந்த மனநிலையில் எடுத்த உணர்ச்சிவயப்பட்ட அரசியல் முடிவுகளை நியாயப்படுத்தவே ஒன்றன்பின் ஒன்றாக சிங்கள பௌத்த சக்திகள் மீது இலகுவாக பழிகளை சுமத்தி இங்கிலாந்துக்கு அறிக்கை அனுப்பினார். சிங்கள பௌத்த சக்திகளின் அதுவரையான ஆங்கிலேய எதிர்ப்பு பரப்புரை சாதகமாக அமைந்தன. அவற்றின் செயற்பாடுகள் ஆங்கிலேய அரசை கவிழ்க்க சதிசெய்யும் அளவுக்கு பின்புலத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை ஆளுநர் அறிந்திருந்தும் கூட அந்த சக்திகளின் மீது இலகுவாக பழியைப் போட்டுவிட்டு தப்புவதற்கு எது தள்ளியது என்கிற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.

சிங்கள பௌத்த சக்திகள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மேற்கொண்ட சிங்கள பௌத்த இனவாத எழுச்சி அந்த காலப்பகுதியில் சிங்கள சாதாரணர்களின் இனவாத உணர்ச்சியத் தூண்டியிருந்தது உண்மை தான். அவை முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகலையும் ஊக்குவித்திருந்தன என்பதும் உண்மையே.

ஆனால், 1915 கலவரம் திட்டமிடப்பட்ட ஒரு கலவரம் அல்ல. கலவரத்தில் நேரடி பாத்திரத்தை இந்த சிங்கள பௌத்த சக்திகள் வகிக்கவும்வில்லை, ஆங்கிலேய ஆட்சிக் கவிழ்ப்புக்கான சதியும் இருக்கவில்லை என்பது உண்மையிலும் உண்மை. ஆனால் அது தான் நடந்தது என்று ஆளுநர் சார்மஸ் வெவ்வேறு கடிதங்களுக்கூடாக தெரிவித்திருந்தார். மேலும் சொல்லப்போனால் இந்த கலவரத்தை ஒரு பாரிய இனவாத கலவரமாக வரலாற்றில் பதியச் செய்ததும் சார்மஸ் தான் என்றால் அது மிகையாகாது. 

தொடரும்..

நன்றி - தினக்குரல்


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates