சமீப காலமாக சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக இயங்குபவர்கள், எழுதுபவர்கள், பேசுபவர்கள், ஆதரவளிப்பவர்கள் என்போருக்கு எதிராக சாதி ஆணவம் தலைதூக்கி வருகிறது.
அதாவது தலித்தியம் குறித்து பேசுபவர்களை பேசவிடாது அவர்களை வெவ்வேறு வடிவங்களில் தாக்கி புறமொதுக்கி, பயம்கொள்ள வைத்து, அவமானப்படுத்தி, தனிமைப்படுத்தி வைக்கும் கைங்கரியங்கள் ஒப்பேற்றப்பட்டு வருகின்றன.
அறியாமையின் காரணமாக இந்த ஆணவத்தை வெளியிடுபவர்களை எம்மால் விளங்கிக்கொள்ள முடியும், ஏன் அவர்களை ஓரளவு மன்னிக்கவும் முடியும். ஆனால் சாதியாதிக்க மனநிலையுடனும், சாதி ஆணவத்துடனும் எம்மைத் தாகுபவர்களில் பலர் சமூக செயற்பாட்டுத் தளத்தில் அறியப்பட்டவர்கள் என்பது தான் வேதனையையும், ஆத்திரத்தையும் தரும் செய்தி. பலர் தாமாகவே இந்த நாட்களில் அம்பலப்பட்டு வருகிறார்கள்.
ஒன்றை இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். தலித்தியம் பற்றி கதைப்பது எங்களுக்கு வசதியானது அல்ல. எமது அடையாளங்களை நாம் வெளிப்படையாகவே அறிவித்து இயங்குவதை எவர் கௌரவமாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். கொடிய அவமானங்களை தாங்கிக் கொண்டு தான் இந்த பணியை நாங்கள் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.
எமக்காக ஆதரவளிக்க முன்வரும் ஆதிக்க சாதிய பின்னணியைக் கொண்ட பலரும் கூட தம்மையும் தலித்தாகப் பார்த்து விடுவார்களோ என்கிற அச்சத்துக்கு உள்ளாகியிருகிறார்கள். சிலர் அதனாலேயே தூர நிற்கிறார்கள். அவர்களுக்கு அவர்களின் குடும்பங்களில் இருந்து சக சாதி சமூகத்தினரிடமிருந்தும் நிர்ப்பந்தங்களும் வந்திருக்கின்றன. சிலர் நேரடியாகவே நான் உயர் சாதியாக இருந்தாலும் தலித்திய ஆதரவாளன் தான் என்று அதற்குள்ளும் தப்பி தன்னைக் காப்பாற்றிக்கொள்கிறனர். விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தமது “உயர்” சாதியை எந்த விதத்திலும் வெளிப்படுத்தாது எம்மோடு கரம்கோர்த்து பணியாற்றியுமிருக்கின்றனர்.
இவர்கள் அனைவரையும் எம்மில் இருந்து பிரித்தாளும் பணி நுட்பமாக நிறைவேற்றப்பட்டு வருவதாகத் தோன்றுகிறது.
நாங்கள் தலித் மக்கள் எதிர்கொள்ளும் புது வடிவிலான பிரச்சினைகளை ஆராய்ந்துகொண்டு அதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கும் போது இவர்கள் மீண்டும் மீண்டும் “எங்கே இப்போது சாதி இருக்கிறது? தலித் என்றால் என்ன? ஏன் சாதிப் பிரசினையத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?” போன்ற பத்தாம்பசலித்தனமான கேள்விகளை திரும்பத் திரும்பக் கேட்டு எம்மை கடுபேத்திக்கொண்டிருக்கிரார்கள். அந்த கேள்விகளுக்கான பதிலை பொதுத்தளத்தில் வேறெங்கும் கிடைக்கவில்லையா என்ன. எம்மை நேரடியாக சீண்டும் நோக்கத்துடனும், எம்மை அந்த கேள்விகளுக்குள் மாத்திரம் சுழற வைத்துக்கொண்டும் இருப்பது அவர்களுக்கு வசதியானது. சாதியம் பற்றி நாங்கள் கதைப்பது சாதியத்தை ஒழிப்பதற்காகத் தான். சாதியத்தைப் பாதுகாப்பதற்காக அல்ல.
அதுமட்டுமன்றி இந்த கேள்விகள் அவர்களுக்கு “உடனடி – நேரடி பதிலாகவும்” வேண்டுமாம். இன்ஸ்டன்ட் நூடில்ஸ் போல. அப்படியும் மேலோட்டமாக விளங்கப் படுத்துவதற்கு எளிமையான விளக்கத்தை சராசரி மனிதர்களுக்கு விளங்கப்படுத்தினால் அதை சாதகமாக ஆக்கிக்கொண்டு இவ்வளவு தானா. இது தானா என்று அதற்குள் குற்றம் தேடிக் கண்டுபிடித்து இதோ இவர்களின் தலித்தியம் பற்றிய அறிவு என்று நகையாடுகின்றனர். எவ்வளவு எளிமையான வேலை இந்த சாதி ஆணவக்காரர்களுக்கு. சமீபத்தில் தோழர் முரளி அளித்த ஒரு விளக்கத்துக்கு இது தான் நேர்ந்தது. முரளியிடம் நான் கேட்டுக்கொண்டது என்னவென்றால் அவர்களின் சீண்டலுக்குள் விழுந்து விடவேண்டாம். சாதி வெறியர்களின் வம்பிழுத்தல் என்பது எமது நேரத்தையும், சக்தியையும், உழைப்பையும் பறிக்கும் நோக்கிலானது. எல்லாவற்றையும் விட நமது மனஉறுதியை (“மோரலை”) பறிக்கும் சதி உடையவை. அதற்குள் நாம் அகப்பட்டு சிக்கவேண்டாம். அவர்களுக்கு அந்த வெற்றியைக் கொடுத்து விடவேண்டாம். கடந்த சில நாட்களாக புஷ்பராணி அக்காவுக்கும் எதிராக மோசமான வசவுகள் வெளியிடப்பட்ட வண்ணம் இருக்கின்றன. அனுபவ முதிர்ச்சியுள்ள அவர் தைரியமாக எதிர்கொண்டு வருகிறார்.
சாதி ஆணவக்காரர்களுக்கு இது தமது சாதி மேதாவித்தனத்தை வெளிக்காட்டுவதற்கான வழி மட்டுமே. அவர்களுக்கு இது அவர்களின் அரசியல் / தனிப்பட்ட பழிவாங்கலை செய்வதற்கான ஒரு நுட்பமே. ஆனால் எமக்கோ இது அன்றாட வாழ்க்கை. எமது எதிர்கால சந்ததியை விடுவிப்பதற்கான அவமானம் நிறைந்த போராட்டம். இந்த அவமானங்களுக்கு நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம். இந்த அவமானங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் நாங்கள் எங்களை விலை கொடுக்க எப்போதோ உறுதியெடுத்துக் கொண்டு தான் இந்த பணியில் இறங்கியிருக்கிறோம். இந்த வசவுகளுக்கும், ஏளனத்துக்கும் எங்களை பலியாக்குவதாக என்றோ நாங்கள் முடிவெடுத்துக் கொண்டு தான் இந்த பணியில் இறங்கியிருக்கிறோம். இந்த பணி எங்களுக்கு வசதியானது இல்லை தோழர்களே.
ஆதிக்க சாதியினர் பெருமிதத்துடன் தமது சாதியை அறிவித்துக்கொண்டு பணியாற்றுவதைப் போல அல்ல எங்கள் பணி. ஒடுக்கும் சாதி தன்னை அறிவித்து பணியாற்றுவதும், ஒடுக்கப்படும் சாதி தன்னை அறிவித்து பணியாற்றுவதும் மிகப் பெரிய வேறுபாடு உடையவை. துருவமயமான சிக்கல் நிறைந்தவை.
***
கடந்த சனிக்கிழமை நோர்வே தமிழ் சங்கத்தின் 37வது ஆண்டு விழாவில் இம்முறை சிறப்பு விருந்தினாராக நான் அழைக்கப்பட்டிருந்தேன். மண்டபம் நிறைந்த அந்த மேடையிலிருந்து நான் உரையாற்றி வந்ததன் பின்னர் பலர் கை குலுக்கி, தோளில் தட்டி வரவேற்றார்கள். வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்களில் கணிசமான நண்பர்கள் என்னிடம் கூறினார்கள் எங்கே நான் சாதியம் குறித்து மேலும் விரிவாக கதைத்து அங்கே அவமானப்பட்டு விடுவேனோ என்று பதைபதைத்துக் கொண்டிருந்தார்களாம். ஆனால் நான் கவனமாகத்தான் கதைத்தேன் என்றார்கள். எனக்கு கிடைக்கும் மேடைகளை நான் உச்சபட்சம் சமூக ஒடுக்குமுறைகளை விளங்க வைப்பதும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமே எப்போதும் பயன்படுத்தி வந்திருக்கிறேன். கூடியிருந்தவர்கள் பல வகையினரையும் கொண்ட கூட்டம். வழங்கப்பட்ட 7 நிமிடத்திற்கும் நான் கூறவேண்டியதை எழுதித்தான் சுருக்கவேண்டியிருந்தது. உரையில் சாதிய சிக்கல்களையும் மிகவும் நுட்பமாகத்தான் முன்வைக்கவேண்டியிருந்தது. ஆனால் என்னை அறிந்தவர்கள் பலர் என்னுரையிலிருந்து நான் என்னைப் பாதுகாத்துவிடவேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்ததை அறிந்த போது சற்று கலங்கித்தான் போனேன்.
தளத்திலும், புலத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரே நேரடியாக இன்று “...எம்மை அடையாளம் காட்டிவிடாதீர்கள். நாங்கள் இப்படியே ஒளிந்து வாழ்ந்து கடந்து போய்விடுகிறோம். இவர்கள் எங்களையும் எமது சந்ததியனரையும் விட மாட்டார்கள்...” என்று எம்மிடம் கேட்கும் நிலை தோன்றியிருக்கிறது. ஒடுக்கப்படுவோர் தமது உரிமைக்காக குரல் கொடுக்காதீர்கள் என்று கோரும் நிலைக்கு அவர்களைத் தள்ளியதில் இந்த சாதி ஆணவக்காரர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்படி கோரும் எம்மக்கள் பெரும்பாலும் ஓரளவு மத்திய தர வர்க்க நிலையை எட்டியவர்கள். அதேவேளை அடிமட்ட வாழ்க்கையை வாழும் பலர் இன்றும் வெவ்வேறு வடிவிலான பிரச்சினைகளை எதிர்நோக்கியபடி தான் உள்ளனர். இந்த சூழலுக்குள் தான் நாங்கள் இயங்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் எமது பணி இரட்டிப்புச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எமது பணியானது வெறுமனே நடைமுறையில் அவர்களைத் தூக்கி நிலைநிறுத்துவது மட்டுமல்ல. சாதியாதிக்க சித்தாந்தத்தை ஒட்டுமொத்தமாக துடைத்தெறியும் பணியே முதன்மையானது. அது அனைத்து ஜனநாயக சக்திகளுடனான கைகோர்ப்பின் மூலம் தான் சாத்தியம்.
சமூகத்தில் நிலவும் அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராகவும் நாங்கள் முன்னிற்கிறோம். எதிர்த்து நிற்கின்றோம். எமக்கான தார்மீகத்தை நாம் பெற்றுக்கொண்டதும் அப்படித்தான். ஆனால் ஏனைய அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் பலர் தலித்தியம் என்று வந்தால் மாத்திரம் விலகி நிற்பது எதைக் காட்டுகிறது. அவர்கள் வேறு உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கான தார்மீக உரிமையை இழந்திருப்பது இதனால் தான். எமது அரசியல் நிகழ்ச்சிநிரலில் தலித் மக்களின் விடுதலையும் ஒன்று. ஆனால் உங்கள் நிகழ்ச்சி நிரலில் தலித் மக்கள் அரசியல் நீக்கம் செய்யப்படுவது ஏன்.
எம்மீது நிகழ்த்தப்படும் அவதூறுகள், காயப்படுத்தல்கள், அவமானப்படுத்தல்கள் அனைத்தும் அரசியல் உரையாடல் தளத்திலிருந்து எம்மை அரசியல் நீக்கம் செய்யும் ஒரு கைங்கரியமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. எம்மைப் பொறுத்தளவில் எமக்கும் எமது முன்னோர்களுக்கும் நடைமுறையில் கிடைக்கப்பெற்ற சாதிய வடுக்களை விட இது ஒன்றும் பெரிய காயங்கள் இல்லை. நீங்கள் தோற்றுப்போய்விடுவீர்கள். எங்களுக்கு இதுவும் கடந்து போகும். எமக்கு முன் இருக்கும் பணிகள் இவை எல்லாவற்றையும் விட பாரியது.