Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

இரத்தபுரியான இரத்தினபுரி! - என்.சரவணன்


சம்பவம் நடந்த இடம்:சம்பவத்துக்கு உடனடிக் காரணமாக இருந்த இரண்டு கொலைகள் இங்கு தான் நடந்துள்ளன. கொலை செய்ததாகக் கூறப்படும் முகுந்தன் இந்த லயனைச் சேர்ந்தவர். இந்த லயனை குட்டி யாழ்ப்பாணம் எனக் கூறுவார்களாம்.சேதங்கள்-இழப்புகள்:15 லயன்கள் பாதிக்கப்பட்டுள்ளது. (ஒவ்வொரு லயன்களிலும் ஏறத்தாழ 10 தொடக்கம் 20 காம்பராக்கள்-வீடுகள்) எல்லாமே பெரும்பாலானவை தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன.
மொத்தம் 226 லயன்களின் உடமைகள் அனைத்தும் உடைத்து நொருக்கப்பட்டு, கொளுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதியைப் பொறுத்தவரை பலர் சம்பவம் நடக்க முன்னமேயே பாதுகாப்பாக ஸ்டோரில் இருத்தப்பட்டதனால் உயிர்ச் சேதம் இல்லை. ஆனால், அவ்வாறு போய் பதுங்குவதற்கு முன்னர் அகப்பட்டுக் கொண்டவர்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் மீது பாலியல் சேட்டைகள் புரியப்பட்டிருக்கின்றன. 22 தமிழ் இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜேந்திரன் நிர்மலா எனும் 16 வயது அங்கவீனச் சிறுமி தலையிலும் மற்றும் ஐந்து இடங்களில் வாளால் வெட்டப்பட்டு இன்னமும் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகிறார்.உடுத்த உடுப்புகளைத் தவிர எதுவும் மிச்சமில்லை. ஏறத்தாழ 150 வருடங்களுக்கும் மேலாக சிறுகச், சிறுக சேமித்து பாதுகாத்த அத்தனையும் சில நிமிடங்களில் வேற்றோரால் அழிக்கப்பட்டு விட்டன. உடுதுணிகள், வீட்டுப் பொருட்கள், முக்கிய தஸ்தாவேஜூக்கள் (பிறப்பு அத்தாட்சி, வீட்டு ஆவணங்கள், பாடசாலைக் கடிதங்கள், தொழில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள்) என எல்லாமே அழிக்கப்பட்டுவிட்டன.
ஏறத்தாழ 250க்கும் மேற்பட்ட லயன் காம்பராக்கள் உள்ள இந்தத் தமிழ்க் குடியிருப்பில், ஒரேயொரு சிங்களக் கடையைத் தவிர அதனைச் சூழ்ந்துள்ள அத்தனையும் அழிக்கப்பட்டுள்ளன. சில காம்பராக்கள் தரைமட்டமாகாத நிலையில் இருக்கின்றன. அதுவும் அவற்றின் கூரைகள் இரும்பினால் அமைக்கப்பட்டிருந்ததால் அவ்வீடுகள் தரைமட்டமாகியிருக்கவில்லை

சம்பவத்துக்கான பின்னணிக் காரணம்:
காரணத்தைக் கூற தயங்குகின்றனர். கூறுவதிலிருந்து தவிர்த்துக் கொள்கின்றனர். வெல்ஹேனகே பந்துசேன (38), அப்பகுதி "பிரகத்தி தொழிற்சங்க"த்தின் தலைவர். கடந்த யூன் மாதம் 17ஆம் திகதி ஸ்டோரில் ஏற்பட்ட தகராறில் பந்துசேனவால் தொழிலாளர்கள் சிலர் தாக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து தோட்ட அதிகாரியால் திட்டப்பட்டுள்ளார். அதிலிருந்து பந்துசேன தொழிலுக்குச் செல்வதில்லை. அவர் முன்னர் சிறிய அளவில் செய்து வந்த கசிப்பு வியாபாரத்தைத் தொடர்ந்தும் சுதந்திரமாகச் செய்து வந்துள்ளார். அவரது அடாவடித்தனங்கள் கசிப்பு வாடிக்கை யாளர்களிடம் மாத்திரமன்றி, வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்கச் செல்லும் போது அவர்களின் வீட்டில் உள்ள பெண்களின் மீதும் காட்டப்படுவது வழக்கம். சம்பவ தினத்தன்றும் பழைய கோபத்தில் முகுந்தன் என்று அழைக்கப்படுபவரை தேடிச் சென்ற இடத்தில் பந்துசேனவும், அவரது சகாவான அசித்தகுமாரவும் (வயது24) முகுந்தனின் வீட்டிலுள்ள பெண்களை பலாத்காரம் புரிய முற்பட்டதன் விளைவாகத் தான் 8ஆம் திகதி இரவு அவர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். கொலை நடந்த தினத்துக்கு முன்னைய தினம் தொடக்கம் பந்துசேனவுக்கும் கொலை புரிந்த இளைஞருக்கும் இடையில் சண்டை நடந்துள்ளது. சில தொழிலாளர்கள் தெரிவித்த கருத்தின்படி பந்துசேன, முகுந்தனைக் கொல்லத் தான்போனான். ஆனால் அவனை முந்திக் கொண்டு விட்டனர் என்கின்றனர்.
இந்தக் கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர்களில் இருவர் திலிப்குமார், கருணாநிதி ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். நீலமேகம் உட்பட இன்னும் சிலர் இன்னமும் தலைமறைவாகியுள்ளனர்.சிங்களப் பிரதேசங்கள் சூழசிங்களப் பிரதேசங்கள் சூழ உள்ள தோட்டம் இது. சூழ உள்ள பிரதேசங்களில் சிங்களவர்கள் பலர் இங்கு குடியேறி அருகிலுள்ள காணிகளை ஆக்கிரமித்து அதில் தோட்டம் செய்து வருகின்றனர். இவர்களது தேயிலைத் தோட்டங்களுக்கு இந்த தமிழ்த் தொழிலாளர்களே பணிக்கமர்த்தப்படுகின்றனர்.
தோட்டத் தொழிலாளர்களும் இவர்களிடம் நாட் கூலிக்கு (கிட்டத்தட்ட நாளைக்கு 75 ரூபா தொடக்கம் 100 வரையான கூலி) வேலை செய்கின்றனர். வேல்வத்தை தமிழ் மகா வித்தியாலத்துக்கே இங்குள்ள மாணவர்கள் கல்வி கற்கச் செல்கின்றனர். இந்தப் பாடசாலை உட்பட ஏறத்தாழ 15 பாடசாலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்ப் பிரதேசங்களுக்கிடையில் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இரத்தினபுரி பகுதியில் பல தோட்டக் குடியிருப்புகள் தள்ளித் தள்ளியே உள்ளன. ஏறத்தாழ 10, 15 கிலோ மீற்றர் தொலைவிலேயே அடுத்தடுத்த தோட்டங்கள் உள்ளன. எனவே இவற்றுக்கிடையில் நிலத்தொடர்ச்சியோ அல்லது வலைப்பின்னலோ இல்லை.இவ்வாறு சிங்களமய சூழலில் வாழும் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் சிங்கள மயமாகி இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்த போதும் அவ்வாறு நடக்கவில்லை. தமிழ் பாடசாலைகள் அப்படியே இயங்கி வருகின்றன. தமிழ்க் கோயில்கள் அப்படியே இயங்குகின்றன. அவர்கள் பண்பாட்டளவில் அவ்வாறான மாற்றத்துக்குள்ளாகவில்லை. கலப்புகளும் நிகழ்ந்தில்லை. அதற்கான முக்கிய காரணம் அவர்களை அவர்களாக இருத்தி வைப்பதிலேயே கூடிய கவனம் செலுத்தப்பட்டு வந்திருப்பதே. இதனை மீறி கலப்பு ஏதேனும் நிகழ்ந்தால் அதன் விளைவு இன்னொரு கலவரமாக இருக்குமோ என்கின்ற அச்சத்தை இனங்காணக் கூடியதாக இருந்தது.

கொலை செய்யப்பட்டவர் -பின்னணி
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு பிரகத்தி தொழிற்சங்கத்தின் தலைவர். அப்பகுதியின் சண்டியர். தனது சகாக்களுடன் அப்பகுதி பெண்களின் மீது பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வருபவர். அரசாங்கத்தின் அமைச்சரவையிலுள்ள அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரின் முக்கிய ஆதரவாளர். இரத்தினபுரி பிரதேச சபைத் தலைவர் பந்துல கரவிட்டவின் வலது கரம். (இந்த பந்துல கரவிட்ட 1994 பொதுத் தேர்தலுக்கு முன்னர் தோட்டத்துக்கு அனுப்பப்படும் நீர் தாங்கிக்குள் விஷம் கலந்தவரென எல்லோராலும் பேசப்படுபவர். அந்த விஷம் கலந்த நீரை அருந்தியிருந்தால் அன்று பெரிய ஒரு விபரீதம் ஏற்பட்டிருக்கும். ஆனால் உடனே கண்டுபிடிக்கப்பட்டு அந் நீர் சுத்தப்படுத்தப்பட்ட கதை அங்கு சகலரும் அறிந்த விடயம்) இச் செல்வாக்கினைப் பயன்படுத்தி தடையின்றி கசிப்பு வியாபாரத்தை நடத்தி வருபவர்.

கொலைஞர்-
முகுந்தன் அப்பகுதியில் எந்தச் சண்டையென்றாலும் அதனை அடக்கச் செல்பவர். அப்பகுதி தமிழ் வீடுகளில் சண்டைகள் நடந்தால் தீர்க்கச் செல்பவர். வெளியிலிருந்து சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களால் இழைக்கப்படும் சண்டித்தனங்களை முறியடிப்பவர். வன்முறைக்குத் தயங்காதவர்.


சரிநிகர் - ஒக்டோபர் 1998 - இதழ் - 156
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates