குமாரசுவாமி பரம்பரையில் முற்போக்கான வரலாற்றுப் பாத்திரத்தை ஆற்றியவராக
கருதப்படுபவர் சேர் பொன் அருணாச்சலம். அவர் மீது சாதிய, வர்க்க, இனத்துவ சார்பு
குற்றச்சாட்டுகளை வைக்க முடிவதில்லை.
அவருக்கு எட்டு பிள்ளைகள். மூன்று மகன்களும், ஐந்து மகள்களும். இவர்களில்
மூத்தவர் தான் பத்மநாபா. அருணாச்சலம் மறைவதற்கு முன்னரே தனது இளம் வயதில்
இங்கிலாந்தில் மரணமானார் பத்மநாபா.
பத்மநாபாவின் இறப்பு இன்று வரை மர்மமாகவே இருக்கிறது. அது மட்டுமல்ல பத்மநாபா
பற்றிய விபரங்களும் மிகக் குறைவாகவே உள்ளன. அவரைப் பற்றித் தேடுவதில் பலரும்
களைத்து விட்டார்கள் என்பதை அறிய முடிகிறது. அவர் பற்றியும் அவருக்கு என்ன
நேர்ந்தது என்பது பற்றியும் திட்டமிட்டுத் தான் தகவல்கள் மறைக்கப்பட்டு
வருகின்றனவா என்கிற சந்தேகமும் கூட எழுகிறது.
ஒரு சிங்கள புலமையாளர் என்னோடு அவரைப் பற்றிய விபரங்களைப் பகிர்ந்தபோது தான்
அப்படிப்பட்ட ஆளுமை பற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள தூண்டிற்று. பத்மநாபா
இங்கிலாந்தில் அங்குள்ள பெண்ணொருவருடன் பொழுதைக் கழித்து வந்ததாகவும் இதனால்
கவலையடைந்த பத்மநாபாவின் தந்தை பொன்னம்பலம் அருணாசலம் தனது மகனை மீட்டு
இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இங்கிலாந்து சென்றதாகவும் ஆனால்,
துரதிர்ஷ்டவசமாக, அவர் தனது மகனின் உயிரற்ற பிரேதத்தைத் தான் அங்கே பார்க்க
முடிந்தது என்றும் தந்தையின் வருகை கிட்டிய வேளை அதற்குள் தற்கொலை செய்து
கொண்டார் என்றும் கதையுண்டு. அப்புலமையாளர் என்னிடம் இந்தத் தகவலைப் பகிர்ந்தபோது
இத் தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆராய பல மாதங்களாக முயன்றும் அம்முயற்சி
வெற்றிபெறவில்லை. ஆனாலும் அவரைப் பற்றி கிடைத்த சில முக்கிய விபரங்களை பதிவு
செய்ய வேண்டும் என்று தோன்றிற்று. தமிழில் பத்மநாபா பற்றி எங்கும் பதிவு
செய்யப்பட்டதாக அறிந்ததில்லை.
|
College House |
இலங்கையில் பல்கலைக்கழக உருவாக்கத்தின் பின்னணி
இலங்கையில் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து 1884ஆம் ஆண்டளவில் அரசாங்க சபையில்
பேசப்பட்ட போதும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அந்த உரையாடல் அடுத்த
கட்டத்துக்கு நகரவில்லை என்பது உண்மை.
1906 ஆம் ஆண்டில், சேர் பொன்னம்பலம் அருணாசலம் தலைமையில் உருவாக்கப்பட்ட இலங்கைப்
பல்கலைக்கழக சங்கம், இலங்கையில் உயர்கல்வி நிறுவனமான இலங்கைப் பல்கலைக்கழகக்
கல்லூரியை (Ceylon University Collage) நிறுவுவதற்கான முதன்மை அடித்தளமாக
விளங்கியது. 1921 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி கொழும்பு தர்ஸ்டன் வீதியில் உள்ள
(இன்றைய குமாரதுங்க முனிதாச மாவத்தையில்) "ரெஜினா வளவ்வ" எனப்படும் கட்டிடத்தில்
இந்தக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இது பின்னர் கொலேஜ் ஹவுஸ் (College House) எனப்
பெயரிடப்பட்டது. இந்த கொலேஜ் ஹவுஸ் லண்டன் பல்கலைக்கழகத்தின் உயர்கல்விக்கான
அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருந்தது. மேலும் லண்டன் பல்கலைக்கழகத்தின் வெளிப்புற
கலை, சட்டம் மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளைப் படிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு
வாய்த்தது. இந்த கல்வி நிறுவனத்தின் முதல் முதல்வர் டாக்டர் ராபர்ட் மார்ஸ்
(Professor Robert Mars) ஆவார்.
சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாச்சலம், சேர் ஜோன் கொத்தலாவல, டி. ஆர்.
விஜேவர்தன, டி. எஸ். சேனநாயக்க போன்றோர் பொருள் ரீதியிலும் பாரிய ஒத்துழைப்பை
வழங்கினார்கள். டி. ஆர். விஜய விஜேவர்தன தனக்குச் சொந்தமான ஒரு வீட்டிற்கு
சங்கவாசம் எனப் பெயரிட்டு அதனை இங்கு கல்வி கற்கும் துறவிகளுக்கு அர்ப்பணித்தார்.
1938 இல், சர் ஐவர் ஜென்னிங்ஸ் அதன் அதிபராக ஆனார். நிர்வாகத்தில் அதிபருக்கு
உதவுவதற்கென கொலேஜ் கவுன்சில் என்ற ஒரு சபை அமைக்கப்பட்டது.
புதிய பல்கலைக்கழகத்திற்கான யாப்பை பிரித்தானிய பல்கலைக்கழக மானியக் குழு
மற்றும் இலங்கைப் பல்கலைக்கழக ஆணைக்குழு என்பவற்றின் தலைவராக இருந்த சர் வோல்டர்
புக்கானன் ரிடெல் (Sir Walter Buchannan Riddell) உருவாக்கினார். இந்த யாப்பு
ஹொங்கொங் பல்கலைக்கழக யாப்பை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும்,
பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகங்களின் நிர்வாக
மாதிரியை ஒத்ததாகவும் கூறப்படுகிறது. 1930 இல் அரசாங்க சபையில் மீண்டும் இதற்கான
சட்டமூலம் கொண்டுவரப்பட்டு இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டபோதும் பின்னர்
இரண்டாம் உலகப் போர் மற்றும் மலேரியா தொற்றுநோயால் அதன் நிறைவேற்றம் தாமதமானது.
1942 ஆம் ஆண்டு இலங்கையின் யாப்பு விவகாரம், கல்விநிலை என்பவற்றை சீர்
செய்வதற்காக இங்கிலாந்திலிருந்து ஐவர் ஜென்னிங்க்ஸ் அனுப்பப்பட்டார். பின்னர் அது
1942 ஆம் ஆண்டின் பல்கலைக்கழக ஆணை இல 20 ஆக அரசாங்க சபையால்
நிறைவேற்றப்பட்டது.
இலங்கைப் பல்கலைக்கழகம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒரு பல்கலைக்கழகம்
அமைப்பதற்கான இடத்தைக் கண்டறிந்து அதைத் தொடங்க 1928 இல் மாநில கவுன்சிலால் ஒரு
குழு (பல்கலைக்கழக தளக் குழு) நியமிக்கப்பட்டது. நிறுவப்படும் பல்கலைக்கழகம்
சுயாதீனம் கொண்டதாகவும் குடியிருப்பு வசதிகளையும் கொண்டு இருக்க வேண்டும் என்றும்
அரசாங்க சபை ஏற்றுக்கொண்டது. இந்தப் பல்கலைக்கழகத்தை கொழும்பில் நிறுவுவதா அல்லது
கொழும்பிற்கு வெளியில் அமைப்பதா என்ற விவாதம் ஆரம்பமாகிய போதிலும் இறுதியில்
அப்பல்கலைக்கழகத்தை கொழும்புக்கு வெளியில் ஒரு இடத்தில் நிறுவுவது எனத்
தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கண்டியில் "பேரதெனிய" மற்றும் "அருப்பள" ஆகிய
இரண்டு இடங்களும் முன்மொழியப்பட்டு இறுதியில் பேராதனையில் அமைப்பது என்கிற முடிவு
எட்டப்பட்டது.
ஒரு பெரும் தேயிலைத் தோட்டம் பல்கலைக்கழகமாக மாறிக்கொண்டிருந்தது. ஆனால் உரிய
நேரத்தில் அது முடிக்க முடியாமல் போனமைக்கு இரு முக்கிய காரணங்கள் அமைந்தன.
முதலாவது அப்பகுதி பெரு வெள்ளத்தில் மூழ்கியது. இரண்டாவது காரணம் இரண்டாம் உலகப்
போர் நடந்து கொண்டிருந்தது.
டாக்டர். ஆண்ட்ரிஸ் நெல் மற்றும் டாக்டர். டி. சி. போல்; பல்கலைக்கழகத்திற்கு
பேராதனையில் காணி சுவீகரிப்புக்கான வேலைத்திட்டத்தை தயாரித்து சமர்ப்பித்தார்.
ஆரம்பத்தில் 700 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு பின்னர் 1700 ஏக்கர் நிலப்பரப்பு என
விஸ்தரிக்கப்பட்டு பின்னர் 2400 ஏக்கராக அது அதிகரிக்கப்பட்டது.
1942 ஜூலை 1ஆம் திகதி இலங்கை மருத்துவக் கல்லூரியும் சிலோன் யுனிவர்சிட்டி
கல்லூரி (University College) ஆகியவை இணைக்கப்பட்டு சிலோன் பல்கலைக்கழகம்
உருவாக்கப்பட்டது.
அருணாசலம் மண்டபம் 1950, ஜயதிலக மண்டபம், மாஸ் மண்டபம், ஜேம்ஸ் பீரிஸ் மண்டபம்
மற்றும் ஹில்டா ஒபேசேகர 1952, சங்கமித்தா மண்டபம் 1953 மற்றும் இராமநாதன் மண்டபம்
1954 ஜூன் மாதம் திறக்கப்பட்டன. சேர் ஐவர் ஜெனிங்ஸ் அதன் முதல் துணைவேந்தராக
இருந்தார்.
இந்த இலங்கைப் பல்கலைக்கழகம் 1942-1950 வரை கொழும்பில் இயங்கியது. 1950 இல்,
இலங்கை பல்கலைக்கழகமானது (University of Ceylon); பல்கலைக்கழக கட்டிடங்கள்,
விரிவுரை மண்டபங்கள், நூலகம், விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு
மைதானங்கள் இன்னும் பிற வசதிகளை நிறுவிய பின்னர் தான் 1952இல் இருந்து
பேராதனையில் அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியது.
1952 ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து பேராதனைக்கு கொண்டுவரப்பட்ட இலங்கைப்
பல்கலைக்கழகம் 1952 ஆம் ஆண்டு ஒக்டோபர் 6 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக
திறக்கப்படவிருந்த போதிலும், இங்கிலாந்து அரசர் ஆறாம் ஜோர்ஜ் காலமானதால், 1954
ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி இராணி எலிசபெத் மற்றும் எடின்பர்க் டியூக்
ஆகியோரால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
அன்றைய தினம் பல்கலைக்கழகத்தின் திறப்பு விழாவில் பேரவையில் உரையாற்றிய
எடின்பர்க் டியூக், "பல்கலைக்கழகமொன்றை தொடங்குவது எளிதானது அல்ல. அதைத்
தொடங்கிவிட்டால் அதனைத் எப்போதும் திறந்து வைத்திருத்தல் வேண்டும். உதாரணத்திற்கு
இரண்டாவது உலகப் போரின்போது லண்டனில் வான்வழித் தாக்குதல்கள், குண்டுகள்
வீழ்ந்தாலும் கடைகள் திறந்தே வைக்கப்பட்டன... அதைப் போலவே வழக்கத்தை விட
திறந்திருக்க வேண்டும் என்றார்.
1972 ஆம் ஆண்டு இலக்கம் 1 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் பின்னர்
இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இலங்கைப் பல்கலைக்கழகம் எனப்
பெயரிடப்பட்டு; அதன்பிரகாரம் இலங்கைப் பல்கலைக்கழகமானது பேராதனை வளாகமாகப்
பேணப்பட்டது. 1978ஆம் ஆண்டு 16ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின்படி, இலங்கையில்
அப்போது இருந்த பல்கலைக்கழகங்கள் மீண்டும் தனிப் பெயர்களைக் கொண்ட
பல்கலைக்கழகங்களாக நிறுவப்பட்டன. அதன்படி 1979ஆம் ஆண்டு முதல் பேராதனைப்
பல்கலைக்கழகம் எனப் பெயரிடப்பட்டு தற்போது வரை அப்பெயரே நீடிக்கப்பட்டு வருகிறது.
- 1942-1952 - University of Ceylon
- 1952-1972 - University of Ceylon, Peradeniya.
- 1972-1978 - Peradeniya Campus, University of Sri Lanka
- 1978... - University of Peradeniya
பேராதனை பல்கலைக்கழக கட்டிடங்கள், விரிவுரை அரங்குகள், தங்கும் விடுதிகள்,
வகுப்பறைகள், நூலகங்கள், தோட்டங்கள், நீர், குளங்கள், ஏரிகள் போன்றவற்றின்
ஒட்டுமொத்த வடிவமைப்பைப் பற்றி பல்கலைக்கழகத்தின் முதலாவது வேந்தரான கலாநிதி ஐவர்
ஜென்னிங்ஸ் கூறும் போது " உலகில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் இப்படி ஒரு
அமைப்பைக் கொண்டதாக இல்லை " No University in the world have a such a setting)
என்று குறிப்பிட்டார்.
இப்பல்கலைக்கழகத்தின் கட்டிடத்திற்கு பணம் வழங்கியவர்கள் புத்தகங்களை
வழங்கியவர்களின் பட்டியல் என்பனவற்றை ஏப்ரல் 20, 1954 இல் வெளியிடப்பட்ட நினைவு
நூலிலும், 1992 இல் "பல்கலைக்கழக திறப்பு விழா"வுக்காக வெளியிடப்பட்ட நூலிலும்
குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தை தொடங்க முன்னோடியாக இருந்தவர்கள் உச்ச
நீதிமன்ற நீதிபதி எம். டி. அக்பர், சேர் பொன்னம்பலம் அருணாசலம், சேர் மார்கஸ்
பெர்னாண்டோ, சேர் பரோன் ஜயதிலக்க, கலாநிதி ரொபர்ட் மார்ஸ், சேர் ஜேம்ஸ் பீரிஸ்,
சேர் பொன்னம்பலம் இராமநாதன், டி. எஸ். சேனநாயக்க, டி. ஆர். திரு.விஜயவர்தன
ஆகியோர் பிரதானமானவர்கள்.
இதைவிட இன்னொன்றையும் முக்கியமாக குறிப்பிட வேண்டும். பேராதனைப் பல்கலைக்கழகத்தைக் கட்டுவதற்கான நிதி வளம் மலையக மக்களின் பங்களிப்பால் ஆனது. அவர்களின் உழைப்பே இலங்கையின் பிரதான வருவாயாக இருந்தது. இலங்கை அரசு இப்பல்கலைக்கழக உருவாக்கத்துக்கு செலவிட்ட ஒவ்வொரு சதமும், இம்மக்களால் ஈட்டப்பட்ட வருவாய் என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும்.
இவர்கள் தங்களின் தனிப்பட்ட செல்வத்தை நன்கொடையாக அளித்தமை, இந்த பல்கலைக்கழகத்தை
இன, மத, வகுப்பு பேதமின்றி ஒற்றுமையுடன் உருவாக்கியமையாது அன்றைய இன
நல்லிணக்கத்தையும் பிரதிபலிக்கிறது. அதுவரை பட்டப்படிப்புக்காக வெளிநாடுகளையே
நம்பியிருந்த காலம் இதன் மூலம் முடிவுக்கு வந்தது.
பத்மநாபாவும் வில்லியம் டிக்பியும்
பேராதனைப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்காக பிரித்தானிய முடியிடம் கோரிக்கை
விடுத்தவர்களில் பொன்னம்பலம் அருணாச்சலம், பொன்னம்பலம் இராமநாதன், டி. ஆர்.
விஜேவர்தன, மார்கஸ் பெர்னாண்டோ, ஜேம்ஸ் பீரிஸ், டி. பி. ஜயதிலக்க போன்ற அறிஞர்கள்
முக்கியமானவர்கள்.
இந்த நூலகத்துக்கான முதல் ஆரம்ப நூல்களை வழங்கியவர் சேர் பொன் அருணாச்சலம். சேர்
பொன் அருணாச்சலம் 1924இல் மறைந்தார். அவருக்கு முன்னரே 1921 ஆம் ஆண்டு அவரது
மூத்த புதல்வன் பத்மநாபா இங்கிலாந்தில் மறைந்தார். பத்மநாபாவின் நூலகத்தில்
சேகரிக்கப்பட்டிருந்த நூல்களின் தொகுப்பே இலங்கைப் பல்கலைக்கழகத்துக்கான முதல்
நன்கொடையாக வழங்கப்பட்டது.(1) நன்கொடையாக வழங்கப்பட்ட மொத்த புத்தகங்களின்
எண்ணிக்கை 1421. இந்த நூலகம் இலங்கையின் மிகச் சிறந்த நூலகமாக பிற்காலத்தில்
அமைவதற்கு அடித்தளமாகவும் இந்த அதிர்ஷ்டகரமான நன்கொடை நூல்கள் அமைந்தன.
பத்மநாபாவின் Encyclopedia Britannica நூல்களில் இருந்து முதலாவது பதிவு
செய்யப்பட்ட நூலாக ஏப்ரல் 8, 1921 தேதியிட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. (2)
அந்த எண் ஒன்றிலிருந்து ஆயிரத்து நானூற்று இருபத்தொன்று வரையில் "பத்மநாபா"
தொகுப்பு என்கிற பதிவின் கீழ் இவை இன்றும் காணக் கிடைக்கின்றன. இன்று எட்டு
லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டு அது இயங்கி வருகிறது.
பத்மநாபாவுக்குப் பின்னர் இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்கள், புலமையாளர்கள்
கூட தமது இறுதிக் காலத்தில் தமது சேகரிப்பை இந்த நூலகத்துக்கு வழங்கி
வந்திருக்கிறார்கள். அவர்களின் பெயரிலேயே அந்த தொகுப்புகள் பாதுகாக்கப்பட்டு
வருகின்றன.
அருணாச்சலம் பத்மநாபாவின் இறப்பு ஆண்டை அறிய முடிகிற போதும் அவரின் பிறப்பாண்டை
அறிய முடியவில்லை. குறிப்பாக இறக்கும் போது அவரின் வயது என்ன என்பதை அறிய
முடியவில்லை. இங்கிலாந்தில் அவர் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர் என்கிற
பிம்பத்தைத் தான் சில பதிவுகள் தந்தன. ஆனால் அவர் அவ்வளவு சிறியவராக இருந்திருக்க
முடியாது என்கிற விபரங்களை அவரால் எழுதப்பட்ட மிகவும் ஆழமான அறிக்கைகள், நூல்கள்
வெளிச்சம் காட்டுகின்றன. இக்கட்டுரைக்காக தேடிக்கொண்டிருந்தபோது ஒரு முக்கிய
ஆவணம் கிடைத்தது.
1908 ஆம் ஆண்டு வெளியான Ceylon National Review சஞ்சிகையில், (no.6) அவர்
அரசாங்க சபையின் சீர்திருத்தம்” (Reform of the Ceylon legislative council) என்கிற
ஒரு விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார். வில்லியம் டிக்பி 1877 ஆம் ஆண்டு
இலங்கைக்கான அரசியல் சீர்திருத்தம் எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்து எழுதிய
கட்டுரையையும் (An Oriental Colony Ripe for Self-Government) அக்கட்டுரை பற்றிய
விரிவான அறிமுகத்தையும் பத்மநாபா செய்திருக்கிறார். ஆனால் வில்லியம் டிக்பி
(William Digby) 1904 ஆம் ஆண்டு மறைந்துவிட்டார்.(3)
அக் கட்டுரையானது 31 பக்கங்களுக்கு நீள்கிறது. அது ஒரு சிறு நூலாக அதே ஆண்டு
வெளியாகியிருக்கிறது.(4) அது துண்டுப்பிரசுரமாகவும் அக்காலத்தில்
வெளியிடபட்டிருக்கிறது என்பதை பத்மநாபாவின் கட்டுரையில் இருந்து அறிந்துகொள்ள
முடிகிறது. பத்மநாபா இக்கட்டுரையை வில்லியம் டிக்பி மறைந்த அதே 1904 ஆம் ஆண்டு
ஒரு துண்டுபிரசுரமாக வெளியிட்டிருக்கிறார்.(5) டிக்பியின் பரிந்துரையில்
கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்துகிறார். ஐரோப்பியர், பறங்கியர்,
தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள்/மலே சமூகத்தினர் ஆகியோருக்காக ஐந்து பிரதிநிதிகளை
அரசாங்க சபைக்கு பிரதிநிதித்துவப்படுத்தவேண்டும் என்கிறார் அவர். இதற்கு நாற்பது
ஆண்டுகளுக்குப் பின்னர் 1919இல் இலங்கை தேசிய காங்கிரஸ் (Ceylon National
Congress) அமைக்கப்பட்ட வேளை சேர் பொன் அருணாச்சலம் இதே (தமிழர் பிரதிநிதித்துவ)
கோரிக்கையை முன்வைத்து உடன்பாடு செய்து கொண்டதும். பின்னர் அவர் ஏமாற்றபட்டதும்,
இலங்கை தேசியகாங்கிரசிலிருந்து அவர் வெளியேறியதும் வரலாறு என்பதை அறிவீர்கள்.
டிக்பி இந்தக் கோரிக்கையை 1877 இலேயே வைத்துவிட்டார் என்பதையும் 1908 இலேயே
பத்மநாபா அதனை ஆதரித்து பணியாற்றியிருக்கிறார் என்பதையும் சுருக்கமாக இங்கே பதிவு
செய்ய வேண்டியிருக்கிறது.
அதுமட்டுமன்றி இங்கிலாந்தில் பத்மநாபா வசித்திருந்த காலத்தில் அங்கே அரச
செயலாளராக இருந்த மில்னர் பிரபுவை (Lord Milner) சந்தித்து இலங்கையின் அரசியல்
சீர்த்திருத்த நிலை குறித்து உரையாடும்படி இலங்கையில் இருந்து தந்தை
அருணாச்சலத்தால் வலியுருத்தப்பட்டிருக்கிறார். (6),(7)
இக்கட்டுரையில் உள்ள விரிவான விபரங்களைக் கொண்ட அரசியல் சீர்திருத்த
பரிந்துரைகளைப் பார்க்கும் போது பத்மநாபா இலங்கை அரசியலில் தீவிர ஈடுபாடும்,
ஆழமான அரசியல் சிந்தனையையும் கொண்ட ஒருவர் என்பதை உறுதி செய்துகொள்ள
முடிகிறது.
துரதிர்ஷ்டவசமாக பத்மநாபாவின் அரசியல் பாத்திரம் என்ன? மேலதிகமாக அவரின் அரசியல்
பங்கு என்பவற்றை அறிந்துகொள்ள இயலாமல் போயிருக்கிறது.
கேட் முதலியார் குமாரசுவாமியின் குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் அரசாங்க சபையில்
அங்கம் வகித்தார்கள். அவரின் மருமகன் எதிர்மன்னசிங்க முதலியார், மகன் சேர்
குமாரசுவாமி, பேரன்கள் பொன்.இராமநாதன், பொன் குமாரசுவாமி, பொன் அருணாச்சலம்
ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்கள் வழியில் பத்மநாபாவும் சமூக, அரசியல் ஈடுபாடு
கொண்டவராக ஆகியிருக்கிறார் என்று உணரலாம்.
பேராதனை பல்கலைக்கழக நூலகம்
இலங்கையில் 1886 கொண்டுவரப்பட்ட அச்சு, பதிப்பு பற்றிய சட்டம் 1952 ஆம் ஆண்டு
திருத்தப்பட்டது அதன் பிரகாரம் இலங்கையில் வெளியிடப்படும் பதிப்புகளின் நான்கு
பிரதிகள் தேசிய சுவடிகூடத் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நான்கு
பிரதிகளில் ஒன்று தேசிய நூலகத்திலும், இன்னொன்று தேசிய நூதன சாலையிலும், மற்றது
பேராதனை நூலகத்திலும், அடுத்தது ருகுணு பல்கலைக்கழகத்திடமும் ஒப்படைக்கப்பட்டு
பாதுகாக்கபடுகிறது. துரதிர்ஷ்டவசமாக இன்று பலர் அந்த சட்டத்தை மதிபதில்லை. எனவே
இலங்கையில் பதிப்பிக்கப்படும் நூல்கள், சஞ்சிகைகள் என்பன முழுமையாக தேசிய
ரீதியில் பாதுகாக்கபடுவதற்கான வாய்ப்பை இழக்கின்றனர். இதனை பேராதனை பல்கலைக்கழக
நூலகத்திற்கு என்னுடைய நூல்களை நேரடியாக வழங்கி விட்டு நூலகர்களுடன்
கலந்துரையாடியபோது அவர்கள் வெளியிட்ட விசனம்.
இலங்கையின் பல்கலைக்கழகத்தின் வரலாற்றைவிட இந்த நூலகத்தின் வரலாறு பழமையானது
என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
இன்று அந்த நூலகத்தின் பிரதான நூலகராக இருப்பவர் ஒரு தமிழர். கலாநிதி மகேஸ்வரன்
அவர்கள் ஒரு சிறந்த நூலகர் ஆவார். அந்த நூலகத்தில் மிக அரிதான; வேறெங்கும் இராத
இலங்கையின் முக்கிய பண்டைய ஓலைச்சுவடிகள் உள்ளன. மகாவம்சத்தின் முழுமையான பழைய
மூல ஓலைச்சுவடியும் இங்கே தான் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கடந்த யூன் மாதம் உலக
மரபுரிமையாக அங்கு இருக்கும் மகாவம்சப் பிரதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த
மகாவம்ச ஓலைச்சுவடிகள் இரும்புப்பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டு அதற்கென்று ஒரு தனி
அறையில் பாதுகாப்பு படையின் பந்தோபஸ்துடன் பேணப்பட்டு வருவதை அங்கு சென்றிருந்த
போது அறிந்து கொள்ள முடிந்தது.
துரதிர்ஷ்டவசமாக இந்த நூலகத்தில் சுமார் மூன்று வீதம் கூட தமிழ் நூல்கள்,
ஆவணங்கள் இருக்க வாய்ப்பு இல்லை என்பதை அங்கே சென்று பார்த்தபோது உணர முடிந்தது.
இந்த நிலைமை அங்கு மட்டுமல்ல இலங்கையின் தேசிய ஆவண நிறுவனங்களாக கருதப்படுகிற
பிரதான நிறுவனங்களான தேசிய சுவடிக்கூடம், கொழும்பு நூதனசாலை நூலகம், தேசிய நூலகம்
உட்பட இன்ன பிற நிறுவனங்களையும் குறிப்பிடலாம்.
அடிக்குறிப்புகள்:
- V.Muttu Cumaraswamy, Founders of Modern Ceylon (Sri Lanka), Eminent Tamils. Uma Siva Pathipakam, Jaffna, 1973
- Kanchana Dehigama, Centenary of a Library under the feet of giants: a retrospective, NewsletterUniversity Librarians Association of Sri LankaVolume 15, Issue 04, October-December 2021, https://lib.cmb.ac.lk/history-of-the-library/, http://www.lib.pdn.ac.lk/about_us/history.php,
- வில்லியம் டிக்பி ஒரு பிரபல பத்திரிகையாளர் என்பது மட்டுமல்ல அவர் ஒரு தீவிர சமூக சீர்திருத்தவாதி. அவர் இந்தியாவிலும் இலங்கையிலும் காலனித்துவ அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து இயங்கியவர். இந்தியத் தொழிலாளர்களுக்காக அப்போதே அதிகம் குரல் கொடுத்தவர். இலங்கையில் Ceylon Observer பத்திரிகையில் இணை ஆசிரியராக இயங்கிய அவர் அன்றைய மெட்ராஸின் “The Madras Times” பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் இயங்கியவர். சேர் பொன் அருணாச்சலம் அவரின் நெருங்கிய நண்பர் இந்த நட்பே அருணாச்சலத்தின் புதல்வர் பத்மனாபாவுடனான நெருக்கத்தையும் ஏற்படுத்தியிருந்திருக்க வேண்டும். மதுவொழிப்பு இயக்கத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் இராமநாதன், அருணாச்சலம் ஆகியோருடன் இணைந்து நெல் வரிக்கு எதிராக இயக்கத்தை தீவிரமாக முன்னெடுத்தவர் வில்லியம் டிக்பி.
- A. Padmanabha, Reform of the Ceylon Legislative Council', in Ceylon National Review Vol: 11, No. 6 1908
- James T.Rutnam, Sir Ponnambalam Arunachalam, 1853 – 1924, (2nd Edition) Colombo, 1988.
- M.Vythilingam, Ramanathan of Ceylon, The Life of Sir Ponnambalam Ramanathan, Vol II, 1977.
- H.A.J.Hulugale, The life and Times of D.R.Wijewardene, Lake House, Colombo, 1960
நன்றி - தாய்வீடு செப்டம்பர் 2013