(மகாவம்சத்தின் 6வது தொகுதி - 1978-2010 )
மகாவம்சம் என்றதும் நம்மில் பலர் இன்றும் மகாநாம தேரர் எழுதிய மகாவம்சத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றோம். கி.மு 5ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 4ஆம் நூற்றாண்டு வரையிலான கிட்டத்தட்ட 900ஆம் ஆண்டுகளுக்கிடையில் நிகழ்ந்த நிகழ்வின் தொகுப்பாக கி.பி 5ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் மகாவம்சத்தை எழுதியிருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட மகாநாம தேரர் அவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முந்தியகால வரலாற்றை எழுதியிருக்கிறார் என்கிற முடிவுக்கு வரலாம். அதுவரை வழிவழியாக எழுதப்பட்டு வந்த பல்வேறு ஓலைச்சுவடிகளையும், வாய்மொழிக் கதைகளையும் கொண்டே அவர் மகாவம்சத்தைப் புனைந்தார் எனலாம்.
மகாவம்சம் அத்தோடு முடிவடையவில்லை. இன்னும் சொல்லப்போனால் மகாவம்சம் இன்றும் எழுதப்படுகிறது. மகாவம்ச வரலாற்று நூலானது 2600 வருட காலப் பதிவுகளைக் கொண்டது. உலகில் ஒரு அரசே பொறுப்பேற்று இவ்வாறு நீண்ட கால வரலாற்றை உத்தியோகபூர்வமாக பதிவு செய்து வருகிற ஒரே நாடாக இலங்கைக் குறிப்பிடலாம். வேறெந்த நாட்டிலும் அப்படி இல்லை என்று இறுதியாக வெளிவந்த மகாவம்சத் தொகுதியின் முகவுரையில் குறிப்பிடப்படுகிறது.
இந்த வரிசையில் இறுதியாக வெளிவந்த தொகுதி 6வது தொகுதி. கடந்த 2018 ஆம் ஆண்டு அது இலங்கை அரசால் வெளியிடப்பட்டது. ஆம் மகாவம்சம் என்கிற வரலாற்றுக் குறிப்புகளை அரசே எழுதி வைத்து வருகிறது என்பதை இங்கே முதலில் விளங்கிக்கொள்வோம். கலாசார அமைச்சின் கீழ் அதற்கென ஒரு அரச நிறுவனம் உருவாக்கப்பட்டு தனிச்சிங்கள பௌத்த அணியொன்றின் தலைமையில் அந்தப் பணிகள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வருகிறது. பாளி மொழியிலும் சிங்கள மொழியிலும் அது வெளியிடப்பட்டு வருகிறது. தமிழில் வெளியிடப்படுவதுமில்லை. அதை எழுதும் அணியில் எந்த தமிழ் அறிஞர்களும் இதற்கு முன் இருந்ததுமில்லை. இவ்வாறு சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளதால் இதன் உள்ளடக்கம் பற்றிய விபரங்களும் கூட தமிழர்களால் வெளிவந்ததில்லை. வெளிக்கொணரப்பட்டதில்லை. அந்த வகையில் 6ஆம் தொகுப்பின் உள்ளடக்கத்தைப் பற்றி வெளியாகும் முதல் கட்டுரை இதுவாகத்தான் தான் இருக்கும்.
ஒரு வரலாற்றுப் புனித நூலாக கருதப்பட்டு வந்த மகாவம்சம் இன்றைய நிலையில் இலங்கை அரசின் உத்தியோகபூர்வ வரலாற்றுப் பதிவாக இது ஆக்கப்பட்டிருப்பதால் நாம் அதிக கவனத்துக்கு உள்ளாக்க வேண்டியிருக்கிறது.
திருத்திய "மகாவம்சம்" பதிப்பு 2016 ஜூன் மாதம் 14 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பேராசிரியர் சந்திர விக்கிரமகமகே உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கும் வைபவத்தில் ரணில் கூறினார் "மகாவம்சம் இன்றேல் இந்தியாவுக்கும் வரலாறு இல்லை. இந்தியக் கொடியில் அசோக சக்கரமும் இருந்திருக்காது, நமது மகாவம்சத் தகவல்களைக் கொண்டு தான் அசோக சக்கரவர்த்தியை யார் என்று அவர்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள். ஜோர்ஜ் டேர்னர் மகாவம்சத்தை மொழிபெயர்க்கும்வரை தர்மாசோகன் யார் என்பதை அவர்களால் அறிய முடியவில்லை." என்றார். அன்றைய தினம் பிக்குமார்களை அழைத்து பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த நிகழ்வை நடத்தியபோது மகாவசத்தின் பிந்திய அத்தனை தொகுதிகளும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதற்கான குழுவொன்றை ஏற்படுத்தும்படியும் அதற்கு நிதியொதுக்குவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் இதுவரை மகாவம்சம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறதா? என்பதைத் தேடிப்பார்த்ததும் இல்லை அதைச் செய்யச் சொல்லி கட்டளை இட்டதுமில்லை. அதில் அக்கறை காட்டியதுமில்லை.
அந்தப் பதிப்பில் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட தகவல் பிழைகள் திருத்தப்பட்டிருப்பதாகவும் அங்கு குறிப்பிடப்பட்டது. குறிப்பாக புதிய ஆராய்ச்சிகளின் படி “சிஹல தீப”, “சிஹலே” போன்ற பெயர்களில் இலங்கை அழைக்கப்பட்ட விடயங்கள் சேர்க்கப்பட்டிருப்பது பற்றியும் விபரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவ்வப்போது முன்னைய மகாவம்சப் பிரதிகளைத் திருத்தும் (திரிக்கும்) பணிகளும் கூட நிகழ்கிறது என்பதைத் தான் இதன் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
இலங்கையின் சிங்கள பௌத்த மேலாதிக்க உணர்வுக்கு “மகாவம்ச மனநிலை” முக்கிய வகிபாகத்தை கொண்டிருக்கிறது. அதனை விதைத்ததில் இலங்கையின் கல்வித்துறைக்கும் முக்கிய பாத்திரமுண்டு. மேற்படி கூட்டத்தில் வைத்து ரணிலைப் பாராட்டி பேராசிரியர் எஸ்.பீ.ஹெட்டி ஆராச்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இப்படி கூறினார்.
“மகாவம்சத்தைப் போற்றி பல இடங்களில் நீங்கள் கருத்து வெளியிட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதோ தெரியவில்லை 2001 ஆம் ஆண்டு நீங்கள் மத்திய கலாசார நிதியத்துக்கு தலைவராக இருந்த போது தான் மகாவம்சத்தின் சிங்கள, பாளி பிரதிகள் உடனடியாக தயாரிக்கப்படவேண்டும் என்கிற யோசனையைச் செய்தீர்கள். இப்போது இதோ நம்மிடம் அவை இருக்கின்றன.” என்றார்.
ரணில் இனவாதமற்ற ஒரு தலைவர் என்கிற பொது அப்பிராயம் இருக்கவே செய்கிறது. ஆனால் இந்த மகாவம்ச மனநிலையால் பீடிக்கப்பட்ட பலருக்கு அப்படி தாம் பீடிக்கப்பட்டதே தெரியாது இருப்பதும் அந்த நோயின் அறிகுறிகளில் ஒன்று தான். இல்லையென்றார் ரணில்; மகாவம்சத்துக்கும் இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கும் உள்ள உறவென்ன என்பதை அறிந்திருப்பார்.
வரலாற்று மூலத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டுவரும் தமிழர்கள்
2010ஆம் ஆண்டு மகாவம்சத்தின் ஐந்தாவது தொகுதி (1956 - 1978) முடிக்கப்பட்டு இலங்கையின் கலாசார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஆறாவது தொகுதிக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையின் உத்தியோகபூர்வ வரலாறு இது தான் என்று அரச ஆவணமாகவும், புனித நூலாகவும் கூறப்படும் மகாவம்சம் இலங்கையில் ஓரினத்துக்கு மட்டுமே இன்றுவரை மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம். வலுக்கட்டாயமாக இலங்கைத் தேசத்துக்குள் இணைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள்; தம்மைப் பற்றி “அரசு” எத்தகைய வரலாற்றுப் பார்வையைக் கொண்டிருக்கிறது என்பதை அறிய வாய்ப்பு கூட வழங்கியதில்லை. ஏனென்றால் அது தமிழ் மொழியில் இன்றளவிலும் இல்லை.
தமிழர்களின் வரலாற்றை சிங்கள மக்கள் மத்தியில் எத்தகைய கருத்து நிலையைப் பரப்பி வந்திருக்கிறது என்பது பற்றி அறிய தமிழர்களுக்கு எந்த வாய்ப்புமளிக்கப்பட்டதில்லை. இன்று வரை தமிழ் மொழியாக்கம் பற்றி தமிழர் தரப்பில் இருந்து கூட எவரும் நிர்ப்பந்தித்ததாகவோ, கோரியதாகக் கூட தகவல்கள் இல்லை.
தமிழில் இல்லை... ஆனால் ஜப்பானிய மொழியில்....
இன்றுவரை தமிழில் கிடைக்கப்படும் மகாவம்ச மொழிபெயர்ப்புகள் தனியாரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே. அதே வேளை அரச அனுசரணையுடன் மகாவம்சம் (தொகுதி 1,2), தீபவம்சம் உள்ளிட்ட ஐந்து பௌத்த இதிகாச நூல்கள் ஜப்பான் மொழியில் கடந்த 14 யூலை 2017 அன்று புத்த சாசன, நீதித்துறை அமைச்சரான விஜயதாச ராஜபக்சவினால் அவரது அமைச்சில் வெளியிடப்பட்டன. அம்பாறையிலுள்ள ஒரு விகாரையின் விகாராதிபதியாக இருந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜி.அசாமி என்கிற ஒரு பௌத்தத் துறவி தான் இவற்றை மொழிபெயர்த்து முடித்திருக்கிறார். மகாவம்சத்தை மேலும் 8 மொழிகளில் வெளியிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிங்கள மொழியில் மகாவம்சத்துக்கு பலர் உரை எழுதியிருக்கிறார்கள். சிங்கள நூல் விற்பனை நிலையங்களில் அத்தகைய பல நூல்கள் காணக் கிடைக்கின்றன. இலங்கையின் பல பௌத்த இலக்கியங்கள் (திபிடக உள்ளிட்ட) பாளி, சிங்களம், ஆங்கில, ஜப்பானிய இன்னும் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மேலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. பௌத்த நிறுவனங்கள் மட்டுமல்ல அரச நிறுவனங்களாலும் அப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதில்லை என்பதை இங்கே பதிவு செய்தாக வேண்டும்.
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசாக 08-09-1978 ஆம் ஆண்டு ஆனதும் ஜே.ஆர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆனார். ஜே.ஆரால் தான் முதலாவது தடவை கலாசார அமைச்சின் கீழ் 30.01-1978இல் மகாவம்சத்தை தொடர்ச்சியாக பாளி, சிங்கள மொழிகளில் ஆக்கும் பணிக்கான முதலாவது கூட்டம் அவ் அமைச்சின் காரியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
கி.பி.1935 வரை எழுதப்பட்ட மகாவம்சத்தின் மூன்று தொகுதிகளை விட 1935 -1956 வரையான காலப்பகுதியைக் கொண்ட நான்காவது தொகுதிவெளியிடப்பட்டது. அது போல 1956-1978 வரையான கால ஆட்சியை உள்ளடக்கி ஐந்தாம் தொகுதியை எழுதும் பணி 2008 இல் தான் ஆரம்பமானது.
மகாவம்சத்தை எழுதவதற்காகவே அரச கலாசார அமைச்சின் கீழ் ஒரு தனித்துறை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதற்கான வலுவான குழுவும் இதில் ஈடுபட்டு வருகிறது. ஐந்தாம் தொகுதியின் ஆக்கக் குழுவில் அங்கம் வகித்த 25 புலமையாளர்களைக் கொண்ட பட்டியலில் உள்ளவர்களைப் பற்றி தேடிப்பார்த்தபோது சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த எவரும் அந்தக் குழுவில் இல்லை என்பதை அறிய முடிகிறது. ஏன் சிங்கள கத்தோலிக்கர்கள் கூட கிடையாது. இலங்கையில் ஆட்சி செய்தவர்கள், அந்த ஆட்சிகாலங்களின் போது அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, கலை இலக்கிய, விஞ்ஞான, கல்வி, மத நிலைமைகளை பதிவு செய்வது அந்தக் குழுவின் பணி.
இதைத் தவிர மகாவம்சத்தை “மஹாவம்ச கீதய” என்கிற தலைப்பில் செய்யுள் வடிவிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. 1815 வரையான காலப்பகுதி வரை பாளி, சிங்களம் ஆகிய மொழிகளில் செய்யுளாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய தொகுதிகளுக்கான பணிகள் பேராசிரியர் மென்டிஸ் ரோஹனதீர என்பவரின் தலைமையில் தனியான குழு மேற்கொண்டு வருகிறது.
2015 ஜனவரி ரணில் – மைத்திரிபால அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மகாவம்ச உருவாக்கப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு கலாசார விவகார திணைக்களம் தமது புதிய திட்டத்ததை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் மகாவம்ச உருவாக்கத்தை துரிதப்படுத்தும் பரிந்துரைகள் காணப்படுகின்றன. அதன் விளைவாகவே பின்னர் 6வது தொகுதி வெளியிடப்பட்டது.
இதுவரை தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் குறித்து அரசாங்கங்களின் கருத்துக்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் “இலங்கை அரசின்” உத்தியோகபூர்வ விளக்கத்தை அறிந்துகொள்ள தற்போது வெளிவந்திருக்கும் 2010ஆம் ஆண்டு வரையிலான மகாவம்சத்தின் 6வது தொகுதியை நாம் கவனத்துக்கு எடுப்பது அவசியம்.
ஈழப்போராட்டம் பற்றி மகாவம்சம்?
சிங்கள பௌத்தர்களால் வரலாற்றைத் திரித்து, தமிழ் மக்களை புறமொதுக்கி, புனைவுகளை தொகுத்து சிங்கள மக்களுக்கு மட்டுமே ஊட்டிவரும் ஆபத்தான சிங்கள பௌத்த ஆயுதம் தான் மகாவம்சம். அது இலங்கையில் இதுவரை ஏற்படுத்திய நாசம் போதும். இதற்கு மேல் தாங்காது. தமிழ் அரசியல் சக்திகள் இதற்கு உரிய முறையில் வினையாற்றுவது முக்கியம்.
விடுதலைப் புலிகள் இயக்கம் ஆண்டு தோறும் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் போது தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர்களும், ஏன் உலகமே காத்திருப்பது பிரபாகரனின் மாவீரர் உரைக்காகத் தான். நோர்வே அரசின் மத்தியத்துவத்துடனான இறுதிப் பேச்சுவார்த்தைகள் எல்லாம் தோல்வியுற்றதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் பிரபாகரன் சிங்களப் பேரினவாதமயபட்ட மக்களின் மனநிலையை “மகாவம்ச மனநில” என்று குறிப்பிட்டார். அந்த உரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“சிங்களத் தேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில், அந்தப் புராணக் கருத்துலகிற் புதைந்துபோய்க் கிடக்கிறது. இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையிற் சிங்களமக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள். அடிமனதில் ஆழமாக உறைந்து, அசைவற்றதாக இறுகிப்போன இந்தப் புராணக் கருத்து நிலையிலிருந்து சிங்களத் தேசம் விடுபடப் போவதில்லை.
இந்தக் கருத்தியற் குருட்டுத்தனத்தால் இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாய மெய்நிலைகளையும் சிங்கள மக்களாலும் அவர்களது அரசியல், மதத் தலைமைகளாலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தைத் தாயகத் தேசமாகக் கொண்டு, தமிழீழ மக்கள் என்ற வரலாற்றுத் தொன்மைமிக்க ஓர் இனம் இருப்பதையும் அவர்கள் ஒரு தனித்துவத் தேசமாக வாழ்ந்து வருவதையும் அவர்களுக்கு அடிப்படையான அரசியல் உரிமைகள், சுதந்திரங்கள் உள்ளன என்பதையும் சிங்களவராற் புரிந்துகொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை.தமிழரது இருப்பு நிலைபற்றிய உண்மையைக் கிரகித்து, அவர்களது அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொள்ளச் சிங்களத்தேசம் மறுத்து வருவதாலேயே தமிழ்மக்களது தேசிய இனப்பிரச்சினை தீர்வின்றி, முடிவின்றிச் சிக்கலடைந்து இழுபட்டு வருகிறது.
சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள – பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்துபோகவில்லை....”
இலங்கையின் இனப்பிரச்சினையில் மகாவம்சத்தின் வகிபாகம் எத்தகையது என்பதை தனது உரையில் முக்கிய அங்கமாக ஆக்கிக்கொண்டார் பிரபாகரன்.
ஒன்றை புனித நிலைக்கு உயர்த்திவிட்டால் அது கேள்வி கேட்கப்பட முடியாத, விமர்சிக்க முடியாத இடத்தை பிடித்துவிடுகிறது. அப்பேர்பட்ட புனிதத்துவ இடத்தில் உள்ளவை புனிதத்துவ அந்தஸ்து வழங்கப்படாத அனைத்து விடயங்களின் மீதும் அதிகாரம் செலுத்தி கோலோச்சும் நிலையையும் எட்டி விடுகிறது. தம் “புனிதத்துக்கு” வெளியில் உள்ளவற்றையெல்லாம் அந்நியமாக ஆக்கிவிடுகிறது. ஈற்றில் அப்புனிதத்துக்குள் அடங்காத அத்தனையும் பாரபட்சத்துக்கும், நசுக்குதலுக்கும், அழிப்புக்கும் கூட உள்ளாக்கப்பட்டு விடுகிறது. இலங்கையின் இனப்பிரச்சினையில் மகாவம்சத்தின் வகிபாகம் அத்தகையது தான். அதன் மீது தொடுக்கப்படும் எந்தக் கேள்விகளையும் விமர்சனங்களையும் சிங்கள பௌத்த சக்திகள் பகை முரண்பாட்டுக் கருத்துக்களாகவே கருதிக்கொள்கின்றன. புனிதத்தின் மீது தொடுக்கும் போராகவே எடுத்துக்கொள்கின்றனர்.
மகாவம்சம் ஏற்படுத்திய இலங்கையின் முதல் தமிழ் - சிங்களக் கலவரம்
இலங்கையில் நிகழ்ந்த முதலாவது சிங்களத் – தமிழ் கலவரம் மகாவம்சத்தின் மீதான விமரசனத்தின் விளைவாக ஏற்பட்டதே என்பதையும் இங்கு நினைவு கூறுதல் பொருத்தமாக இருக்கும். 1939ஆம் ஆண்டு நிகழ்ந்த அந்தக் கலவரத்தில் இந்திய வம்சாவளி மக்களே அதிகம் பாதிகம் பாதிக்கப்பட்டனர்.
1939ம் ஆண்டு மே 30 ஆம் திகதி மலையகப் பகுதியான நாவலப்பிட்டி நகரில் 'முஸ்லீம் இளைஞர் சங்கம்' (Y.M.M.A) கூட்டம் நடைபெற்ற பொது சிறப்பு விருந்தினராக ஜீ.ஜீ.பொன்னம்பலம் அழைக்கப்பட்டிருந்தார். ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் கவர்ச்சிகரமான உரையில் "சிங்களவர்கள் எல்லோரும் இனக்கலப்பின் வழித்தோன்றல் என்றும் விஜயன், காசியப்பன், பராக்கிரமபாகு உட்பட பல அரசர்கள் தமிழர்களே என்றும் தமிழர்கள் நெடுங்காலமாக சிங்களவர்களை ஆண்டிருக்கிறார்கள் என்றும் அவர் அந்த உரையில் கூறியிருந்தார்.
மகாவம்சத்தை விமர்சித்து ஜி.ஜி.பொன்னம்பலம் பேசிவிட்டார் என்று சிங்களப் பகுதிகளில் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டதன் விளைவாக சிங்கள மக்கள் மத்தியில் ஆத்திரத்தையும், ஆவேசத்தையும் தூண்டிவிடப்பட்டது. அது இறுதியில் இனக்கலவரத்திற்கு இட்டுச் சென்றது. இதன் காரணமாக இந்திய மக்கள் செறிந்து வாழும் மலையகப் பகுதிகளான 'பசறை, நாவலப்பிட்டி, மஸ்கெலியா, நுவரெலியா பகுதிகளில் வாழும் அப்பாவி இந்திய வம்சாவளிகள் தாக்கப்பட்டார்கள். யாழ்ப்பாணம் வரை கலவரம் விஸ்தரிக்கப்பட்டிருந்தது.
ஜீ.ஜீ.பொன்னம்பலம் நாலவலப்பிட்டியில் மகாவம்சத்தை தாக்கிப் பேசிய உரையே அக்கலவரத்துக்கு காரணம் என்று இதுவரை பல வரலாற்று ஆய்வாளர்களும் பதிவு செய்து வந்திருக்கின்றனர். அவரது உரை குறித்த அந்த மூன்றாந்தரப்பு ஆதாரங்களையே பலரும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். பல ஆய்வாளர்களும் நாவலப்பிட்டி கூட்டம் நிகழ்ந்த இரண்டாவது நாளான 01.06.1939 அன்று வெளியான The Hindu Organ பத்திரிகையையே ஆதாரம் காட்டி வந்திருக்கின்றனர். இக்கட்டுரைக்காக அப் பத்திரிகையின் மூலப் பிரதியை எடுத்துப் பார்த்ததில் பொன்னம்பலம் சிங்கள வரலாற்று புனைவுகளை சாடுகிறார். ஆனால் மகாவம்சம் குறித்து அவர் எங்கும் தாக்கவில்லை என்று உறுதிசெய்துகொள்ள முடிகிறது.
ஆனால் மகாவம்சத்தின் மீது புரியப்பட்டதாக கூறப்படுகின்ற வெற்று வதந்திக்கே அத்தகைய பெரும் கலவரத்தை உண்டுபண்ண முடிந்தது என்பதை இங்கு கவனத்திற் கொள்வோம்.
6 வது தொகுதியின் தோற்றம்
மகாவம்சமானது குறிப்பிட்ட கால வரிசைப்படி, அக்காலத்தில் ஆட்சி செய்த அரசர்கள், அரசிகள், தேசாதிபதிகள், பிரதமர்கள், ஜனாதிபதிகள் என்போரின் ஆட்சிக்காலங்களை மையப்படுத்தி அக்காலப்பகுதியின் முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்யும் வடிவத்தையே கொண்டிருக்கிறது. அதன்படி 6வது தொகுதியானது 1978 இல் ஜே.ஆர் ஜெயவர்த்தன பதவியேற்றதிலிருந்து 2010ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் முதலாவது பதவிக்கால முடிவு வரையான காலப்பகுதியை உள்ளடக்கியிருக்கிறது. 1956 -1978 காலப்பகுதியைக் குறிக்கின்ற மகாவம்சத்தின் ஐந்தாம் தொகுதியானது 129 வது அத்தியாயத்துடன் நிறைவடைகிறது. 1977 ஆம் ஆண்டு தேர்தலில் ஜே ஆர் வெற்றி பெற்று 1977 யூலை 23 இலிருந்து 1978 பெப்ரவரி 04 வரை அவர் பிரதமராக குறுகிய காலம் பதவி வகித்தார். அவருக்கு இருந்த ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் அவர் அரசியலமைப்பை மாற்றி ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தினார். எனவே அவர் பிரதமராக பதவி வகித்த அந்த முதல் ஏழு மாதங்களை 129 வது அத்தியாயம் பேசுகிறது. கூடவே மிகச் சுருக்கமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர். 1978 இல் பதவியேற்றதையும் குறிப்பிடத் தவறவில்லை.
1978 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து மகாவம்சத்தின் 6 வது தொகுதி தொடங்குகிறது. அதாவது 130 வது அத்தியாயத்திலிருந்து அது தொடங்குகிறது. இன்னும் சொல்லப்போனால் மகாவம்சத்தின் 5ஆம் தொகுதியிலும், 6வது தொகுதியிலும் ஜே.ஆரின் ஆட்சி பற்றி இருக்கிறது.
இதுவரை சிங்களத்திலும் பாளி மொழியிலும் மட்டுமே அரசால் வெளியிடப்பட்டுள்ள மகாவம்ச தொகுதிகள்.
- தொகுதி 1 - இலங்கையின் பண்டைய இதிகாசம் கி.பி 301 வரை - மகாநாம தேரரால் எழுதப்பட்டது (37வது அத்தியாயம் வரை) மகாநாம தேரரால் எழுதப்பட்டது.
- தொகுதி 2 - கி.பி 301 முதல் கி.பி 1815 வரையான ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரை (100வது அத்தியாயம் வரை) இதை “சூளவம்சம்” என்றும் அழைப்பர். இதை எழுதியவர்கள்
- தர்மகீர்த்தி (I) தேரரால் 37-79 வது அத்தியாயம் வரை
- தர்மகீர்த்தி (II) தேரரால் 79-90 வது அத்தியாயம் வரை
- திப்பட்டுவாவே சுமங்கள தேரரால் 90-100 வது அத்தியாயம் வரை
- ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரர், பட்டுவந்துடாவே பண்டிதர் ஆகியோரால் 101 வது அத்தியாயம் எழுதப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது
- தொகுதி 3 - 1815 முதல் 1936 வரை (114 வரை வது அத்தியாயம் வரை) யகிரல பஞ்ஞானந்த தேரரால் எழுதப்பட்டது
- தொகுதி 4 - 1936 முதல் 1956 பண்டாரநாயக்க ஆட்சியேரும் வரை (124வது அத்தியாயம் வரை) கலாநிதி நந்ததேவ விஜேசேகர தலைமையிலான குழுவால் இயற்றப்பட்டது.
- தொகுதி 5 - 1956 முதல் 1978 ஜே ஆரின் இரண்டாவது குடியரசு ஆட்சி தொடங்கும் வரை (129 வது அத்தியாயம் வரை) பெல்லன ஸ்ரீ ஞானவிமல தேரரின் தலைமையிலான குழுவால் இயற்றப்பட்டது.
- 6) தொகுதி 6 – 1978 முதல் 2010 தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிந்து மகிந்த மீண்டும் ஆட்சியேரும் வரை (133 வது அத்தியாயம் வரை) அரசின் கீழ் அமைக்கப்பட்ட மகாவம்சக் குழுவால் பேராசிரியர் திருமதி மாலனி எந்தகம தலைமையில் இயற்றப்பட்டது.
- 130 வது அத்தியாயம் - ஜே, ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலப்பகுதி 1978 பெப்ரவரி 04 தொடக்கம் -02.02.1989 வரை
- 131 வது அத்தியாயம் - ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க ஆட்சிக் காலப்பகுதி 1989 பெப்ரவரி 02 தொடக்கம் - 12.11.1994 வரை
- 132 வது அத்தியாயம் -சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சி காலப்பகுதி 1994 நவம்பர் 12 தொடக்கம் - 19.11.2005 வரை
- 133 வது அத்தியாயம் - மகிந்த ராஜபக்ச ஆட்சிகாலப்பகுதி 2005 நவம்பர் 19 தொடக்கம் - 17.11.2010 வரை
மகாவம்சத்தின் முதலாவது தொகுதியில் ஒரே அத்தியாயத்தில் பல அரசர்களைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளன. உதாணத்துக்கு 10 அரசர்கள், 11 அரசர்கள், 12 அரசர்கள், 13 அரசர்கள் என முறையே 33-36 வது அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளன. அதுபோல ஒரே அரசரை பல அத்தியாயங்களிலும் எழுதப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு முதலாவது தொகுதியில் 37 அத்தியாயங்களில் பத்து அத்தியாயங்கள் துட்டகைமுனு காலத்தை பதிவு செய்துள்ளன. துட்டகைமுனு – எல்லாளன் போர் என்பது மகாவம்சத்தின் தலையாய முக்கியத்துவம் வாய்ந்த கதை என்பதை அறிவீர்கள். தமிழர்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியின் அச்சாணி அக்கதைகள். மகாவம்சத்தில் அதற்கு ஒதுக்கப்பட்ட அளவு இடம் வேறெந்த கதைகளுக்கும் – ஆட்சிகளுக்கும் – அரசருக்கும் கொடுக்கப்பட்டதில்லை. அதே வேளை இதை விட அதிக அத்தியாயங்கள் மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியில் 68 அத்தியாயங்களில் 18 அத்தியாயங்கள் மகா பராக்கிரபாகுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதே என எவரும் வாதிடலாம். ஆனால் அத்தியாயங்களாக அவை அதிகமாக இருந்தபோதும் உள்ளடக்கத்தில் துட்டகைமுனுவுக்கு கொடுக்கப்பட்டத்தை விட குறைவு தான். அந்தளவு விரிவான விபரங்களுடன் துட்டகைமுனு காலம் பதிவு செய்யப்பட்டிருகிறது
மகாவம்சத்தின் 6 வது தொகுதியைப் பொறுத்தளவில் தலா பத்து வருடங்கள் ஆட்சி புரிந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோருக்கும் ஒரு அத்தியாயம் தான், ஐந்தாண்டுகால ஆட்சியான பிரேமதாச + டிங்கிரிபண்டா விஜேதுங்க ஆட்சிக்கும் ஒரு அத்தியாயம் தான். இறுதியாக 2010 வரை ஐந்தாண்டுகள் ஆட்சிசெய்த மகிந்த ராஜபக்சவுக்கும் ஒரு அத்தியாயம் தான். ஆனால் அவ் அத்தியாயங்களின் உள்ளடக்கம் ஆட்சிபுரிந்தவர்களின் காலத்துக்கு ஏற்றாற்போல கூடிக்குறைய உள்ளது.
மகாவம்ச உருவாக்கக் குழுவில் உள்ளவர்களால் பல்வேறு துறைசார்ந்து வகுக்கப்பட்ட தலைப்புகளில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை; இறுதியில் ஐந்து பேரைக் கொண்ட குழு மீண்டும் ஒன்றாகத் தொகுத்து உருவாக்கியதாகவும், பின்னர் அந்த சிங்களப் பிரதியை பாளி மொழி அறிஞர் குழுவைக் கொண்டு மொழிபெயர்த்து வெளியிடப்பட்டதாகவும் அதன் முகவுரையில் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் 6 ஆம் தொகுதியானது இரண்டு பாகங்களைக் கொண்ட பெரிய தொகுதி. ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகமானது. ஆனால் இந்தளவு பக்கங்களைக் கொண்டிருந்தும் தமிழர்கள் பற்றிய பதிவுகள் வெகுகுறைவு. அதில் இருக்கிற பதிவுகளும் கூட தமிழர்களின் அபிலாசைகளை பயங்கரவாதமாக சித்திரிக்கின்ற பதிவுகளே. அன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மகாவம்சம் தமிழர்களுக்கு எதிரானதும் சிங்கள பௌத்தர்களை புனிதத்துவ இடத்துக்கு தூக்கி நிறுத்துவதுமான வரலாறை எழுதி வைத்துவிட்டுச் சென்றார்கள் என்றால் இன்று வரை மகாவசம் அதே இனவெறுப்பையும், பாரபட்ச பாணியையும் தான் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்கிற முடிவுக்கே நாம் வர முடிகிறது.
இத்தொகுதியின் முன்னுரையில் இப்படி ஒரு வாசகம் இருக்கிறது...
“மகாவம்சத்தை தொகுக்கும் பணியை மேற்கொள்ளும் குழுவில் உள்ளவர்கள் தமக்கென சொந்த அரசியல் சமூக கருத்துக்களைக் கொண்டிருக்கலாம் ஆனால் அவர்கள் எவரும் இதை எழுதும்போது எந்தவித பாரபட்சங்களையும் கொண்டிராதவர்களாக இருத்தல் அவசியம். இந்தியாவின் முதலாவது சரித்திர நூலாக கருதப்படும் “ராஜதரங்கனி”யை எழுதிய கல்ஹணர் தனது நூலின் ஆரம்பத்தில் “எந்தவித துர் எண்ணங்களையும் கொண்டிராமல் தூய சிந்தனையோடு உள்ளதை உள்ளபடி வெளிப்படுதுபவரே நன்மதிப்பைப் பெறுவார்” என்கிறார். அது போல மகாவம்சத்தின் 6 வது தொகுதியை எழுதுபவரும் தூய உள்ளத்தோடு எழுதவேண்டும் என்று இதற்கான முதலாவது மாநாட்டில் அறிவுறுத்தியிருந்தோம்.”
என்று மகாவம்ச உருவாக்கக் குழுவின் செயலாளர் பேராசிரியர் மாலனி எந்தகம குறிப்பிடுகிறார்.
ஆனால் அதன் உள்ளடக்கம் மிகவும் பாரபட்சமானவை. அந்த பாரபட்சம் அந்த குழுவில் உள்ள தனிநபர்களால் மேற்கொள்ளப்பட்டதன்று; மாறாக ஏற்கெனவே நிறுவனமயப்பட்ட பேரினவாத அரசின் பாரபட்ச நிகழ்ச்சிநிரலை அவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.
103 பேரைக் கொண்ட அந்தக் குழுவில் இருவரைத் தவிர அனைவரும் சிங்கள பௌத்தர்களே. அந்த இருவரும் கூட சமயம் பற்றிய விபரங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மட்டுமே இணைக்கப்பட்டவர்கள். ஏனைய சமூகத்தினரும் குழுவில் இருந்தார்கள் என்று காட்டுவதற்காக கண்துடைப்புக்கு பயன்படுத்தப்பட்டவர்களே. அந்த இருவரும் யாரென்றால் பேராசிரயர் எஸ்.பத்மநாதன் என்கிற சைவரும், ஒஸ்வல்ட் கோமிஸ் பாதிரியார் என்கிற ஒரு கத்தோலிக்கரும் தான்.
இவ்வாறு அமைக்கப்பட்ட குழுக்களில் ஒன்று தான் “பயங்கரவாதம், பிரிவினைவாதம்” என்பவற்றை எழுதுவதற்காகவே 7 பேரைக் கொண்ட குழு. இலங்கையின் இனப்பிரச்சினையை முன் கூட்டிய முடிவுடன் அதனை பயங்கரவாதப் பிரச்சினையாக அணுகுவதென்கிற முடிவிலேயே இப்பணிகள் தொடரப்பட்டிருப்பதை நாம் உணர முடியும். இந்தக் காலப்பகுதியின் தேசியப் பிரச்சினையாக தேசிய இனப்பிரச்சினை பிரதான பங்கை வகித்திருந்தும் அந்த நோக்கில் இதை ஆராய்வதற்குப் பதிலாக பயங்கரவாத/பிரிவினைவாத பிரச்சினையாகவே அணுகியிருக்கிறார்கள்.
அக்குழுவுக்கு நியமிக்கப்பட்டிருந்த எழுவரின் பின்னணி
லக்ஸ்மன் ஹுலுகல்ல
சிவில் சேவையில் நீண்டகாலமாக இருப்பவர். ராஜபக்ச குடும்பத்தினரின் விசுவாசி. 2006 – 2009 வரையான யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த காலத்தில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் என்கிற ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. (MCNS - Media Centre for National Security) விடுதலைப் புலிகளுக்கு எதிரான தகவல்களையும், பிரச்சாரங்களையும் தேசிய – சர்வதேசிய அளவில் மேற்கொள்வதற்கான தந்திரோபாய நிலையமாக இது செயற்பட்டிருந்தது. ஹுளுகல்லவை அதன் இயக்குனராக நியமித்தார் அன்றைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச. 2019இல் ஜனாதிபதியானதும் 2020 இல் அவுஸ்திரேலியாவுக்கான பிரதித் தூதுவர் பதவியை வழங்கினார் கோத்தபாய.
பேராசிரியர் காமினி சமரநாயக்க
பேராதனைப் பலகலகத்தின் அரசியல் துறை, சிரேஷ்ட பேராசிரியர். மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தவர். தற்போது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவராக இருந்தவர். விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்திரிக்கின்ற பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியிருப்பவர். “இலங்கையின் இனப்பிரச்சினையும் விடுதலைப் புலிகளின் கெரில்லா போர் முறையும்” என்கிற அவரின் நூல் பரவலாக பிரசித்திபெற்ற ஒரு நூல். 2015 ஆம் ஆண்டு மகிந்தவை வெல்ல வைப்பதற்காக ஒரு புத்திஜீவிகளின் குழுவொன்று நியமிக்கப்பட்டது. மகிந்தவின் (Think Tank) என்று அறியப்பட்டிருந்தது. அதன் பிரதான ஆலோசகர்களாக ஜி.எல்.பீரிசும் காமினி சமரநாயக்கவும் இயங்கினார்கள். w.m.amaradasa
பேராசிரியர் மாலனி எந்தகம
மகாவம்சம் 6 வது தொகுதியாக்கக் குழுவுக்கு செயலாளராக செயற்பட்டவர். அது போல மகாவம்சத்தின் 5ஆம் தொகுதியிலும் அங்கம் வகித்தவர். அதாவது மகாவம்ச ஆக்கக்குழுவை தலைமையேற்று வழிநடத்தியவர். அவர் ஒரு சிரேஷ்ட வரலாற்று அறிஞராக கருதப்படுவதால் அவரை பயங்கரவாதம் பற்றிய குழுவில் சேர்த்துக்கொண்டதாகத் தெரிகிறது. சிங்களத்தில் பல வரலாற்று நூல்களை எழுதியிருப்பவர். அவரின் நூல்கள் பாடப்புத்தகங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மகாவம்சம் தொடர்பிலான அறிஞராக கருதப்படுவதால் மகாவம்சம் பற்றிய பல்வேறு உரையாடல்களுக்கும் அழைக்கப்படுபவர். அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தினால் அமைக்கப்பட்ட பௌத்த உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளராக இயங்கியவர்.மேஜர் ஜெனரல் வசந்த பெரேரா
ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது வன்னி பாதுகாப்பு சேனையின் தலைமையக பிரதானியாக கடமையாற்றியவர். அதற்கு முன்னர் அவர் 53வது, 54வது படைப்பிரிவுகளின் தலைவராகவும் கடமையாற்றியவர். சந்திரிகா பண்டாரநாயக்க காலப்பகுதியில் வடக்கில் நிகழ்ந்த பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் முக்கிய வகிபாகத்தை ஆற்றியவர்களில் ஒருவர். அமெரிக்க இராணுவக் கல்லூரியில் விசெத் பயிற்சி பெற்று திரும்பியவர். எதிர்கால இராணுவத் தளபதியாக ஆகக்கூடியவராக அப்போது கருதப்பட்டவர். இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் இவரின் பாத்திரம் முக்கியமானது என்பதால் மகாவம்ச ஆக்கக் குழுவில் “பயங்கரவாத” தலைப்பிலான குழுவில் இவரை இடம்பெற வைத்தார்கள்.
டபிள்யு எம்.அமரதாச
இவர் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவராக பணியாற்றியவர். யுத்தத்தின் இறுதிக் காலத்தில் குறிப்பாக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இந்திய இராணுவப் புலனாய்வு பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த (Military Intelligence Training School and Depot (MITSD)) தூதுக்குழு இரகசியமாக இலங்கை வந்து மன்னார் வளைகுடாவில் புலிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக பயிற்சியளிக்கப்பட்ட மூவரில் அமரதாசவும் ஒருவர்.
திருமதி எஸ்.டீ.பி.கவிமல் சூரிய ஆராச்சி
இவர் ஒரு தேசிய அளவிலான விருதுகளைப் பெற்ற எழுத்தாளர், பதிப்பாளர். மேலதிக விபரங்களை அறிய முடியவில்லை.
ஷமீந்திர பேர்டினன்ட்
யுத்த காலத்தில் பிரபல இராணுவப் / புலனாய்வுக் கட்டுரையாளராக அறியப்பட்டவர். இவரது கட்டுரைகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்ததால் சரவதேச அளவில் கவனிப்புக்கு உள்ளாக்கப்பட்டன இவரது கட்டுரைகள். இந்தக் காலப்பகுதிகளில் மிகவும் மோசமான இனவாத ஊடகமாக இயங்கி வந்த தி ஐலன்ட்/ திவயின பத்திரிகைகளில் தான் இவரின் இராணுவ – புலனாய்வுக் கட்டுரைகள் வெளிவந்தன. பின்னர் தி ஐலன்ட் பத்திரிகையின் பிரதான செய்தி ஆசிரியராக இயங்கினார்.
ஆக இப்பேர்பட்டவர்களைக் கொண்டு தான் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பற்றியும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், அபிலாசைகள் பற்றியும் மகாவம்சத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதை அறிதல் வேண்டும்.
இந்த மகாவம்சத் தொகுதியில் அதிகமான பக்கங்களை இனப்பிரச்சினை குறித்த விடயங்களை பதிவு செய்வதற்காக ஒதுக்கியிருப்பது உண்மை. ஆனால் அவர்கள் இந்தப் பிரச்சினையை இனப் பிரச்சினையாக பார்க்கவில்லை. “பயங்கரவாத” பிரச்சினையாகவே இதனை அடையாளம் காட்டுவதை காண முடிகிறது. ஜே.ஆர்., பிரேமதாச / டி.பி.விஜேதுங்க, சந்திரிகா, மகிந்த ராஜபக்ச ஆகிய ஐவரின் ஆட்சி காலங்களின் கீழ் நான்கு தடவைகள் “பயங்கரவாதம் / பிரிவினைவாதம்” என்கிற தனித் தலைப்புகளில் ஆராயப்பட்டுள்ளது. இந்த மகாவம்சத்தின் அதிக பக்கங்களை ஆக்கிமித்துள்ள விடயதானமும் அது தான்.
130வது அத்தியாயம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தையும், 131 வது அத்தியாயம் பிரேமதாச, டி.பி விஜேதுங்க ஆட்சிக்காலத்தையும் சேர்த்து மகாவம்சத்தின் 6ஆம் தொகுதியின் முதலாவது பாகமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
132வது அத்தியாயம் சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தையும், 133 வது அத்தியாயம் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தையும் சேர்த்து 6ஆம் தொகுதியின் இரண்டாம் பாகமாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அந்நால்வரின் ஆட்சிக்காலத்தையும் எவ்வாறு நூலாக்கமாக்கப்பட்டிருக்கின்றன என்பதை இங்கே அட்டவணைப்படுத்தியிருக்கிறேன்.
இனி இந்த நால்வரின் ஆட்சிக் காலம் பற்றிய உள்ளடக்கத்தைப் பற்றி தனியாக அடுத்த இதழில் காண்போம். குறிப்பாக தமிழர் பிரச்சினையை எப்படி பயங்கரவாதப் பிரச்சினையாக பதிவுசெய்துகொண்டு போயிருக்கிறார்கள் என்பதை சற்று விரிவாகவே பார்க்கலாம்.
நன்றி - தாய்வீடு - ஓகஸ்ட் 2021