Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

கௌதமருக்கே பௌத்தம் போதித்தல்! - "வடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து..." -என்.சரவணன்

வடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து...


வடமாகாண சபையின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடந்த அன்று வடக்கிலிருந்து மாற்றப்பட்டு மத்திய மாகாணத்துக்கான ஆளுநராக தெரிவு செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் மீண்டும் வட கிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டதை அறிவோம்.

இலங்கையில் முதற்தடவையாக 24 மணிநேரத்திற்குள் இரண்டு தடவைகள் ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நபர் ரெஜினோல்ட் குரேவாகத் தான் இருப்பார். ஆனால் இங்கு அது முக்கியமான தகவலல்ல. இப்படி அவசர அவசரமாக மாற்றப்பட்டதன் பின்புலத்தில்  “சாதி” சார்ந்த காரணி தொழிற்பட்டிருக்கிறது என்பது அதிர்ச்சி மிக்கத் தகவல்.

ரெஜினோல்ட் குரே இனத்தால் சிங்களவர் தான். ஆனால் மதத்தால் கத்தோலிக்கர், சாதியால் கராவ சாதியச் சேர்ந்தவர்.


ஏற்கெனவே மத்திய மாகாண முதல்வராக 17.03.2016 அன்று நிலூகா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்ட போதும் மகா சங்கத்தின் அஸ்கிரிய தரப்பு தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. அதற்கான காரணம் அவர் ஒரு திருநங்கை என்பது தான். (இலங்கையில் ஒரு திருநங்கை முதற்தடவையாக அரசியல் அதிகாரத்துக்கு தெரிவான சந்தர்ப்பம் அது தான்.) நிலூகா ஏக்கநாயக்க கலந்துகொள்ளும் முக்கிய அரச நிகழ்வுகளில் தாமும் சேர்ந்து கலந்துகொள்ள முடியாது என்றும் வேறொருவரை அந்த இடத்துக்கு மாற்றும்படியும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கும்படி மகா சங்கத்தினரை சந்தித்த அமைச்சர்களான எஸ்.பீ.திசாநாயாக்க, மகிந்த அமரவீர ஆகியோர் ஆசி வாங்க வந்த வேளை கோரியிருந்தார்கள். ஆனாலும் அந்த சர்ச்சை நீடித்துக் கொண்டிருந்தது. இந்த இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக தெரிவானவர் தான் ரெஜினோல்ட் குரே. ஆனால் அதே மகா சங்கத்தினர் இப்போது ரெஜினோல்ட் குரே சிங்களவராக இருக்கலாம் ஆனால் ஒரு அவர் பௌத்தரும் இல்லை, கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இல்லை என்கின்றனர் மகாநாயக்கர்கள்.

தன்னை “மீண்டும் வடமாகாண முதல்வராக ஆக்கும்படி வடக்கிலுள்ள பல  தமிழர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதற்காகவே தான் மீண்டும் நியமிக்கப்பட்டதாகவும் வேறு காரணங்கள் இல்லை” என்று ஊடகங்கள் இது பற்றி கேள்வி எழுப்பியபோது ஆளுநர் ரெஜினோல்ட் குரே பூசி மெழுகினாலும் (பார்க்க - “ரெச” என்கிற சிங்களப் பத்திரிகைக்கு 19.04.2018 அன்று வழங்கிய பேட்டி) நிகழ்ந்தது என்னவென்பது இப்போது நாடே அறியும். அது மட்டுமன்றி கடந்த ஏப்ரல் 14 அன்று ரட்ணஜீவன் ஹூல் சண்டே லீடர் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் “அவர் ஒரு சிங்கள – கத்தோலிக்க - கொவிகம சாதியைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் கூட எற்றுக்கொண்டிருப்போம். ஆனால் அவர் கத்தோலிக்க - கராவ சாதியைச் சேர்ந்தவர் (கரையார்)” மகாநாயக்க தேரர் தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையின் சிங்கள அரசியல் செயன்முறைக்குள் சாதியம் எப்படியெல்லாம் இன்றும் செல்வாக்கு செலுத்தி வருகிறது என்பது பற்றி சிங்கள சாதியம் பற்றி ஆராய்ந்த முக்கிய நிபுணர்களாக கருதப்படும் பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட, விக்டர் ஐவன், கலாநிதி காலிங்க டியூடர் டீ சில்வா போன்றவர்கள் தொடர்ந்தும் எழுதி வருகிறார்கள்.


சாதியத்தின் கோட்டை கண்டி? 

மத்திய மாகாணமானது கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. மத்திய மாகாணத்தின் தலைநகராக கொள்ளப்படுவது கண்டி மாவட்டம். கண்டி மாவட்டம் இலங்கையின் சிங்கள, பௌத்த மரபின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது. சிங்கள சாதியமைப்பின் வீரியமாக இன்னமும் எச்சம் கொண்டுள்ள மாவட்டம் அது. மூன்று நூற்றாண்டுகளாக காலனித்துவத்திடம் பிடிகொடுக்காமல் தாக்குபிடித்து இறுதியாக வீழ்ந்த பிரதேசம் அது. ஆகவே அந்த மூன்று நூற்றாண்டுகளும் இலங்கையின் பாரம்பரிய மரபை இழக்காமல் தற்காத்த பின்னணி அதற்குண்டு. இலங்கையின் சுதேசிய கொடி; கடைசியாக காலனித்துவத்தால் இறக்கப்பட்ட இடம் கண்டி.

இலங்கையின் பாரம்பரிய மரபு எனும் போது அது சாதியத்தையும் உள்ளடக்கியது தான். சிங்கள சாதியமைப்பில் கண்டிய கொவிகம சாதியத்துக்கு இருக்கின்ற பலமும் பெருமிதமும் அது தான். அது மட்டுமன்றி புத்தரின் புனிதப் பல்லை தற்காத்து வைத்து இருக்கும் தலதா மாளிகையும், பௌத்த மத மகாசங்க தலைமைப் பீடங்களையும் கொண்டுள்ள மாவட்டமும் கண்டி தான். ஆக கண்டியை புனித நகராக அங்கீகரிக்கும்படி 1988 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை 1989 ஆம் ஆண்டு அங்கீகரித்த யுனெஸ்கோ நிறுவனம் பாரிசில் நடந்த மாநாட்டில் கண்டியை புனித நகராக ஏற்றுக்கொண்டது. இந்தப் பின்னணி கண்டியின் மரபுரிமைக்கு மேலும் பலம் சேர்த்தது.

இலங்கையின் மறைமுக சிங்கள பௌத்த ஆட்சியமைப்பு முறையை பேணிக்காப்பதை உறுதிபடுத்தும் பலமான அங்கமாக கண்டி திகழ்ந்து வருகிறது. சிங்கள ஆட்சியாளர்கள் பதவியேற்பதற்கும் அங்கே செல்வதை மரபாக கொண்டுள்ளனர். கண்டிய அரசர்கள் மக்கள் முன் தோன்றி பேசும் தலதா மாளிகையின் பத்திருப்பு பகுதியில் இன்றைய நவீன ஆட்சியாளர்களும் பதவியேற்புரையை செய்வதை சிங்கள பௌத்த பெருமிதமாகக் கொண்டுள்ளனர்.

பதவிகளையேற்கும் போதும், முக்கிய அரசியல் நிகழ்வுகளில் போதும் கண்டியிலுள்ள பௌத்த மகா பீடத்தினரை சந்தித்து ஆசீர்வாதம் பெறுவதையும், ஆலோசனைகளை பெறுவதையும் மரபாக இப்போது ஆக்கியுள்ளனர். அது மட்டுமன்றி முக்கிய அரசியல் சிக்கல்களின் போது ஆளுங்கட்சியும், எதிர்கட்சிகளும் தமது தரப்பு அரசியல் விளக்கமைப்பதற்கும், ஆதரவு தேடுவதற்கும் அங்கே செல்லுமளவுக்கு இலங்கையின் பலம் பொருந்திய “திரைமறைவு அதிகாரிகளாக” கண்டி மகாசங்கத் தேரர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களும் அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து கூறுவதும், கட்டளையிடுவதும், எச்சரிக்கையிடுவதையும் நாம் கண்டு வருகிறோம்.


1956 அரசியல் மாற்றமென்பது இலங்கையின் அரசியலில் மாத்திரமல்ல இலங்கையின் இனத்துவ அரசியலிலும் ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய மாற்றம்.   சிங்கள   அரச அமைப்புமுறையை “சிங்கள பௌத்த”த் தனத்துக்கு கட்டமைக்க  சிங்கள பௌத்த அரசியல் சக்திகளும், சிவில் அமைப்புகளும் ஒரு சேர செயற்பட்டு வெற்றிபெற்ற காலகட்டம் அது. சிங்கள மகாசபையின் பண்டாரநாயக்கவை முன்னிறுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பிக்கச் செய்ததே சிங்கள அதிகாரத்தை நிறுவுவதற்குத் தான். அந்த நிகழ்ச்சிநிரலில் சற்று சந்தேகம் வந்தாலும் பெரும் விலையைக் கொடுக்கக் கூட தயாராக இருந்தது அன்றைய சிங்கள பௌத்த சக்திகள். அதுபோலவே பண்டாரநாயக்கவின் உயிர் அதற்கு விலையாகக் கொடுக்கப்பட்டது. அன்றிலிருந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் முவைக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும், அரசியல் தீர்வுக்கான சகல முயற்சிகளின் போதும் முட்டுக்கட்டைபோட்டு அதனை மறுத்தும், எதிர்த்தும், தடுத்தும் வந்ததும், தலைமைதாங்கியதும் கண்டி பௌத்தத் தலைமை தான்.


1957 ஆம் ஆண்டு பண்டா - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர். தலைமையில் திரண்ட “கண்டி பாதயாத்திரை” வரலாறு மறக்காது. அதேபாணியில் நல்லாட்சி அரசாங்கத்தை எதிர்த்து 2016இல் மேற்கொண்ட பாதயாத்திரையும் கண்டி பாதயாத்திரை தான். பொது பல சேனா, இராவணா பலய, சிங்களே அமைப்பு போன்றவையும் அவ்வப்போது நடத்தும் ஊர்வலம், பாதயாத்திரை என்பன கண்டிக்கோ அல்லது கண்டியிலிருந்தோ தான் ஆரம்பித்ததை நாம் கண்டிருக்கிறோம். இனவாத சக்திகள் தமது கடும்போக்கு நடவடிக்கைகளையும், ஆர்ப்பாட்டங்களையும், வன்முறைகளையும் பிரயோகிப்பதற்கு பௌத்த சீருடை தரித்தவர்களை முன்னிறுத்தித் தான் காரியம் சாதித்து வருவதை நாம் நேரடியாக கண்டு வருகிறோம். அப்படியான சந்தர்ப்பங்களில் நீதியை நிலைநாட்ட வேண்டிய போலீசார் கூட அடிபணிந்து பின்வாங்குவதையும், கெஞ்சி சமரசம் பேசுவதையும் கூட நிதமும் கவனித்திருக்கிறோம்.

அது மட்டுமன்றி இலங்கையில் சமாதான முயற்சியின் போது நோர்வே தூதுவர்களும் ஏனைய இணை அனுசரணை நாட்டு பிரதிநிதிகளும் கூட பல தடவைகள் உத்தேச சமாதான யோசனைகளைக் காவிக்கொண்டு கண்டி மகாசங்கத்தினரை சந்தித்து அவர்களிடம் அரசியல் விளக்கம் அளித்தனர். அவர்களின் ஆதாரவைக் கோரி பகீரதப் பிரயத்தனம் கொண்டனர்.  ஏறத்தாள இலங்கையின் நிழல் அரசாகவே இந்த மகாசங்கத்தினர் இருந்து வருவதை இப்படி தொகுத்துப் பார்த்தால் தான் விளங்கிக் கொள்ள முடியும்.

அமைதியைப் போதித்த புத்தர் வழிவந்த பௌத்த பிக்குகள் யுத்த தளபதிகளுக்கு ஆசி வழங்கி போருக்கு அனுப்பி வைத்த காட்சிகளைக் கண்டிருக்கிறோம். அதுபோல யுத்தக் களத்துக்கே சென்று படையினருக்கு ஆசி வேண்டி மதச் சடங்குகளை சென்றதையும் பகிரங்கமாக ஊடகங்களில் கண்டிருக்கிறோம். சமாதான முயற்சிக்காக வந்த வெளிநாடுகளைக் கூட எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள், அடிதடிகள் வரைக்கும் பௌத்த பிக்குமார் தலைமையில் நிகழ்ந்ததையும் நாம் கண்டிருக்கிறோம். இலங்கைக்கு பௌத்த மதத்தைக் கொண்டு வர காரணமாக இருந்த அசோக சக்கரவர்த்தி கூட பேரழிவைத் தரும் யுத்தத்தை வெறுத்து பௌத்த வழிமுறையை ஏற்றுக்கொண்டவர். அந்த அமைதிவழி பௌத்த தத்துவத்தையே இலங்கைக்கும் இன்னும் பல தேசங்களுக்கும் அறிமுகப்படுத்தியவர் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும். ஆனால் இலங்கையிலோ பௌத்தமதம் தவிர்ந்தவர்களின் மீது வெறுப்பையும் வன்முறையையும் பிரயோகிக்கும் மதமாக பௌத்தம் ஆக்கப்பட்டிருக்கிறது.

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட படையினரையும், மேலும் கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வல்லுறவு, ஊழல் போன்ற பல்வேறு குற்றங்களை இழைத்த படையினரையும் விடுவிக்கக் கோரும் முயற்சிகளுக்கு இன்று தலைமை கொடுப்பதும் இந்த மகாசங்கத்தினர் தான். அது போல விசாரணயின்றி நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கூடாது என்கிற அழுத்தத்துக்கு தலைமை தாங்குவதும் அதே மகா சங்கத்தினர் தான்.

இலங்கை பௌத்தர்களிடம் மட்டும்?

இலங்கை, மியான்மார், தாய்லாந்து ஆகிய தேரவாத பௌத்தத்தைக் கடைபிடிக்கும் நாடுகள் மாத்திரம் மோசமான அந்நிய வெறுப்புணர்ச்சியையும், தீவிர வன்முறையைக் கைகொள்வதன் பின்னணி என்ன என்கிற ஆய்வுகள் சமீப காலமாக  கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது மேலதிக செய்தி. மென்போக்கும் கருணையும் நிறைந்த மஹாயான பௌத்தத்தை சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழும் பெரும்பான்மை மக்கள் பின்பற்றுகிறார்கள். இந்த மஹாயான நாடுகள் தான் செல்வந்த நாடுகளாகவும் உள்ளன. அதுபோல இலங்கைக்கும் நீண்டகாலமாக பொருளாதார ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளாகவும் திகழ்கின்றன.
வெசாக் தினத்திற்காக உலகத் தொழிலாளர் தினத்தை தள்ளிப்போடும்படி அரசாங்க வர்த்தமானியில் வெளிவந்த அரச ஆணை
இலங்கையின் சிங்கள பௌத்தத்தனத்தின் மூடத்தனமான போக்கின் சமகால இன்னொரு விவகாரம் வெசாக் தினத்துக்காக சர்வதேச தொழிலாளர் தினத்தை மே 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கும் அரச முடிவு. மகாசங்கத்தினரின் கோரிக்கையின் பேரிலேயே இந்த முடிவை எடுத்ததாக மார்ச் 27 அன்று ஜனாதிபதி மைத்திரிபால அறிவித்திருந்தார். வெசாக் தினத்தை கொண்டாடும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, திபெத், மியான்மார், கம்போடியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் அனைத்துமே இம்முறை வெசாக் தினத்தை மே 29 தான் அனுஷ்டிகின்றன. ஏன் வெசாக் பண்டிகை பற்றிய  ஐக்கிய நாடுகள் சபை 50 ஆண்டுகளுக்கு வெளியிட்டுள்ள பட்டியலிலும் கூட இவ்வருடம் மே. 29ஆம் திகதியைத் தான் பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்திருக்கிறது. இலங்கையின் மகா சங்கத்தினருக்கு மாத்திரம் இப்படி விபரீத விசித்திர எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்கிற கேள்வி எழுகின்றது.

பௌத்த சங்கங்களின் ஆசீர்வாதமும், அனுமதியுமின்றி எதையும் நிறைவேற்ற முடியாத அளவுக்கு அரச அமைப்புமுறை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.


கண்டியிலுள்ள ராமக்ஞ நிக்காய, அமரபுர நிக்காய ஆகியவை சாதிய ரீதியில் பிளவுண்டிருந்தாலும் கூட அங்கே வெளிப்படையான நடைமுறை கிடையாது. அனால் சீயம் நிக்காய வெளிப்படையாக சாதியத்தைக் கைகொள்கிறது. பௌத்த பிக்குவாக மாறவிரும்புபவர்கள். அல்லது மாற்றப்படும் சிறுவர்கள் உயர் சாதி கொவிகம குலத்தைச் சேராதவருக்கு பௌத்த தீட்சை வழங்குவதில்லை. அதாவது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பௌத்த பிக்குவாக தமது நிக்காயவுக்குள் உள்வாங்குவதிலை. ஆனால் சீயம் நிக்காய போன்றவை உயர்சாதியற்ற பெரும் பணக்காரர்கள் வழங்கும் உதவிகளையும், வசதிகளையும் அனுபவிக்கவே செய்கின்றன.

இன்னமும் இலங்கையின் நாளாந்த பத்திரிகைகளில் பௌத்த பிக்குவாக ஆவதற்கு கொவிகம சாதியைச் சேர்ந்தவர்கள் “இன்ன” விகாரைக்கு தேவை என்கிற நாளாந்த பத்திரிகை விளம்பரங்கள் வெளிவரவே செய்கின்றன.
"விகாரையொன்றுக்கு பிக்குவாக ஆக விரும்பும் மூன்று கோவிகம சாதியைச் சேர்ந்த 10-15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் தேவை. தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்..... (அடிக்கடி காணக்கூடிய பத்திரிகை விளம்பரம்)"

 “பௌத்த சாசனத்தை” பாதுகாப்பது என்கிற பாரம்பரிய சுலோகம் எத்தனை போலியானது என்பதையே இது தெளிவுபடுத்துகிறது. புத்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட வழிகாட்டலையே சாசனம் என்கிறோம். அப்படியென்றால் இந்த நிக்காயக்களை பாதுகாப்பது சாசனமா சாதியா என்கிற கேள்வியையும் நாம் எழுப்ப வேண்டியுள்ளது.

இலங்கையின் சாதியமைப்பை ஆராய்ந்த முக்கிய ஆய்வாளராக போற்றப்படும் பிரய்ஸ் ரயன் (Bryce F. Ryan) தனது “நவீன இலங்கையில் சாதியம்” (Caste in Modern Ceylon) என்கிற நூலில் உலகில் எந்தவொரு பௌத்த நாட்டிலும் கடைபிடிக்காத சாதி அமைப்புமுறை இலங்கை சிங்களவர்களிடம் மட்டும் தான் காணப்படுகிறது என்பதை அழுத்தமாக குறிப்பிடுகிறார். அது மட்டுமன்றி அவர் இன்னொன்றையும் குறிப்பிடுகிறார்.
“ஒருபுறம் பௌத்த தத்துவத்தையும், அதன் அறநெறியையும் கொண்டாடிக்கொண்டு மறுபுறம் அதற்கு நேரெதிரான திட்டவட்டமான கட்டமைப்பையும் பேணிக்கொண்டு மேலும் 2500 ஆண்டுகள் பௌத்தம் எப்படி தளைத்திருக்கும்” என்கிற முக்கிய கேள்வியை எழுப்புகிறார்.
சாதியத்துக்கு எதிராக பௌத்தம்

சாதியத்துக்கு எதிராக புத்தரை முன்னிறுத்துவோர் ஒரு கதையை தொடர்ச்சியாக ஆதாரம் காட்டுவது வழக்கம்.

தலையில் முடி மரம் வளர்ந்திருந்த அரசரொருவர் அதனால் பெரும் துன்பத்தை அனுபவித்து வந்தார். ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவருடன் ஒன்றாக ஆகாரம் உண்டால் தான் இதிலிருந்து மீட்சி பெறலாம் என்கிற அறிவுரையை யாரோ கூறி விடுகிறார்கள். அரசரும் மாறுவேடமணிந்து ஒரு தாழ்த்தப்பட்ட சாதியொருவரைக் கண்டுபிடித்து அப்படியே ஒன்றாக உணவுண்ட போதும் எதுவும் மாறவில்லை. அரசர் மீண்டும் மாளிகைக்குத் திரும்பும் வழியில் தற்செயலாக ஒரு மோசமான நடத்தையைக்கொண்ட உயர்சாதிக் குடும்பமொன்றை கடக்க நேரிடுகிறது. அவர்களின் குரூர நடத்தையை மோசமாக கண்டித்து திட்டுகிறார் அரசர். மாறுவேடத்தில் இருப்பவர அரசர் தான் என்று அறியாத அவர்களில் ஒருவர் தனது உணவை அரசரின் முகத்தை நோக்கி எறிகிறார். அதிலிருந்த சோற்றுப்பருக்கை முகத்தில் பட்டதும் அரசரின் தலையிலிருந்த குடி மரம் மறைந்து விடுகிறது. “எந்தவொரு மனிதனும் பிறப்பால் தாழ்த்தப்பட்டவரோ, பிராமணரோ கிடையாது. ஒருவன் தனது நன்னடதையாலேயே உயர்ந்தவனாக போற்றப்படுகிறான்.” என்கிற புத்தரின் போதனை அப்போது தான் அரசன் நினைவுகொள்கிறான்.
“நஜஜ்ஜா வசலோ ஹோதி – நஜஜ்ஜா ஹோதி பிரஹ்மனோ கம்மனா வசலோ கோதி – கம்மனா ஹோதி பிரஹ்மனோ...” (வசல சூத்திரம்)
இந்தக் கதை சிங்கள சமூகத்தில் மிகவும் பிரபலமான பௌத்த கதை.

இந்தியாவில் ஆதிக்க சாதியாக கொடுமை தாங்காது அண்ணல் அம்பேத்கர் ஐந்து லட்சம் தலித் மக்களுடன் சேர்ந்து பௌத்தத்துக்கு மாறினார். பௌத்தம் அந்தளவு சாதி மறுப்பு மார்க்கமாக கருதப்படுவதால் தான் அப்படி செய்ய அவர் முன்வந்தார். ஆனால் இலங்கையில் இந்துத்துவ சாதிக்கொள்கைகள் பௌத்த பண்பாட்டின் மீதும் தாக்கம் செலுத்தி சிங்கள பௌத்தத்துக்கென்று தனித்துவமான சாதியமைப்பை உருவாக்கிக்கொண்டது. சிங்களமும் பௌத்தமும் தான் மற்றவர்களுக்கு எதிராக ஒரு சித்தாந்த கட்டமைப்பைக் கொண்டு சமாந்தரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது என்று பார்த்தால் கூடவே சொந்த சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக சாதியமும் கூடவே சமாந்திரமாகத்தான் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்திய மற்றுமோர் சமகால சம்பவம் தான் ரெஜினோல்ட் குரே விவகாரம்.

அது சரி.... கண்டிக்கு ஒரு சிங்கள – பௌத்த – கொவிகம – ஆண்/பெண் (மூன்றாம் பாலினம் அல்லாத)  பின்னணியைக் கொண்ட ஒருவர் தான் ஆளுநராக ஆக வேண்டும் என்கிற கோரிக்கையை நிறைவேற்றுபவர்களால் ஏன் இன்னமும் வடக்குக்கு அல்லது கிழக்குக்கு ஆளுநராக ஒரு தமிழரை தெரிவுசெய்ய முடியாது இருக்கிறது. 

ரெஜினால்ட் குரே
12.11.1947இல் பிறந்த ரெஜினால்ட் குரே கத்தோலிக்க கராவ சாதி பின்னணியைக் கொண்டவர். இடதுசாரிப் பின்னணியுடைய அவர் ஆரம்பத்தில் ஜே.வி.பியில் தனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்தவர். 1977 பொதுத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தொல்வியடைந்தார். பின்னர் விஜயகுமாரதுங்கவின் இலங்கை மக்கள் கட்சியில் இணைந்துகொண்டார். 1988இல் இடதுசாரிக்கட்சிகள் கூட்டாக அமைத்த ஐக்கிய சோஷலிச முன்னணியின் மூலம் களுத்துறை மாவட்டத்திலிருந்து மேல்மாகாணசபைக்கு தெரிவானார்.
  ஐ.சோ.மு வும் சுதந்திரக் கட்சியும் இணைந்து பொதுஜன ஐக்கிய முன்னணியின் மூலம் 1994 இல் களுத்துறை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவானார். மீண்டும் 2000 ஆம் ஆண்டும் தெரிவானார். சந்திரிகா அரசில் இன விவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் சில மாதங்களிலேயே அவர் மேல் மாகாண முதலமைச்சராக தெரிவானார்.
2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி தகவல் தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு மேல் மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட்டு வென்றார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டார். ஆனால் 2005 ஆம் ஆண்டு அவர் மீண்டும் முதலமைச்சராக தெரிவானார். 2009 இல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டே 2010 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நீதித்துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் சிறு ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சராக நியமனமானார். 2015 ஆம் ஆண்டு புதிய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்ததும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். பொருளாதார காரணிகளால் அவர் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அவரை தேசிய பட்டியலில் சேர்த்துக் கொண்டிருந்தது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி. ஆட்சியமைத்ததன் பின்னர் அவரை தேசிய பட்டியல் உறுப்பினராக நியமிக்கவில்லை. ஆனால் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அவரை வட மாகாணத்தின் ஆளுனராக நியமித்தது அரசாங்கம்.
நன்றி - தினக்குரல்


கலப்புத் தேர்தல்முறை : காலத்தின் தேவைப்பாடா? எம். திலகராஜ்


 ஜனநாயக ஆட்சி முறையின் மிக முக்கிய அம்சமான தேர்தல் முறை தற்காலத்தில் பிரதான பேசு பொருளாகி இருக்கிறது. மிக நீண்டகாலமாக தொகுதி முறை தேர்தல் (First Past the Post) நடைமுறையில் இருந்து  வந்த நிலையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்  ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில்  விகிதாசார முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னும் கூட அமெரிக்கா, இந்தியா. இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் தொகுதிவாரியான  தேர்தல் (First Past the Post) முறைமையே நடைமுறையில் இருந்து வருகின்ற நிலையில்   இலங்கையில் விகிகதாசார தேர்தல் முறை கடந்த பல ஆண்டு  காலமாக நடைமுறையில் இருந்து வந்தது. 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தொகுதிவாரி முறையும், விகிதாசார முறையும் இணைந்த கலப்பு முறை பரீட்சார்தமாக அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல்கள் முடிவுற்றதன் பின்னர் இலங்கை அரசியல் சூழல் புதுவித அனுபவங்களைப் பெற்றுள்ள நிலையில் இந்த கலப்பு முறை குறித்த சாதகமானதும் பாதகமானதுமான பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மாகாண சபை தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டிய காலகட்டமும் நெருங்கி வருகின்ற நிலையில்,  அந்த தேர்தல்களை எந்த முறையில் நடாத்துவது என்பது தொடர்பாக நாட்டில் இப்போது பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. 

இந்த நிலையிலேயே இந்தத் தேர்தல் முறைமைகளை வடிவமைக்கும் அக்கறையுள்ள தரப்பினரின் கலந்தாய்வு கூட்டம் ஒன்று கடந்த புதனன்று பத்தரமுல்லவில் அமைந்துள்ள விருந்தகம் ஒன்றில்  நடைபெற்றது. 

நீதியான தேர்தல் முறைமைகளை கண்காணிக்கும் அமைப்புகளான பெபரல், தேர்தல் வன்முறைகைளக் கண்காணிக்கும் நிலையம் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தேர்தல்கள் திணைக்களம், எல்லை மீள்நிர்ணய குழுவினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்பினர், தேர்தல் முறைமை வடிவமைப்பு நிபுணர்கள் என பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.  தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் தேர்தல் முறைமைகள் உருவாக்கச் செயற்பாடுகளில் கடந்த மூன்று வருடங்களாக பங்கேற்று வருபவன் என்றவகையிலும் மேற்படி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை பொது வெளியில் பகிர்ந்து கொள்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகிறது. 

பெபரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியா ராச்சியின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஆரம்ப உரைகளை தேர்தல் முறைமைகளை வரையும் பணியில் தன்னார்வமாக ஈடுபட்டுவரும் ஆய்வாளரான கலாநிதி சுஜாதா கமகே, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞான பீட பேராசிரியர் சுதந்த லியனகே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, எல்லை மீள்நிர்ணய குழுவின் தலைவர் கலாநிதி தவலிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர். மேற்படி ஆளுமைகளான ஐவரும் பௌதீக விஞ்ஞான துறை பட்டதாரிகள் எனபதும் அமர்வின் சுவாரஸ்யமாக அமைந்ததோடு தேர்தல் முறைமைகள் என்பது விஞ்ஞான ரீதியானதாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் அமைந்தது. 

கலாநிதி சுஜாதா கமகே
கலாநிதி சுஜாதா கமகே தனதுரையில், வரலாற்று ரீதியான பார்வையோடு தற்கால தேர்தல் முறைமை தொடர்பாக தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.  தேர்தல் முறைமைகள் காலத்திற்கு காலம் மாற்றமடைந்து வருவது வழக்கம். அந்த வகையில்,  இலங்கையில் கலப்பு முறை தேர்தல் முறைமை ஒன்றின் அவசியம் ஏற்பட்டதனாலேயே அதனை நோக்கி நகர்ந்துள்ளது. 
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொகுதிவாரி முறைமை, இருபதாம் நூற்றாண்டில் விகிதாசார முறைமை, இருபத்தோராம் நூற்றாண்டில் இவை இரண்டும் கலந்த கலப்பு முறை ஆகியனவே இப்போதைக்கு செல்நெறியாக உள்ளது. எனினும் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இன்னும் தொகுதி முறை தேர்தல் நடைமுறைகளே இருந்து வருகின்றன. 

எனினும் நேபாளம், ஜப்பான், தாய்வான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் சமாந்திர  கலப்பு முறையும் பொலிவியா, ஜேர்மன், நியூஸிலாந்து, ஸகொட்லாந்து ஆகிய நாடுகளில் விகிதாசார கலப்புமுறையும் நடைமுறையில் உள்ளன. அதேநேரம் விகிதாசார தேர்தல் முறைமையானது ஒரு மூடிய முறைமையாக ஐரோப்பிய நாடுகளிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், ஆசியாவில் கம்போடியாவிலும் நடைமுறையில் உள்னன. இலங்கை, இந்தோனேசிய போன்ற நாடுகளில் திறந்த விகிதாசார முறை நடைமுறையில் உள்ளது.  

எனவே காலத்தின் தேவைக்கு ஏற்ப இலங்கை உலக  செல்நெறிக்கு ஏற்ப கலப்பு முறைக்குள் இப்போது காலடி எடுத்து வைத்துள்ளது. ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர் , பூட்டான், பங்களாதேஷ் போன்ற  நாடுகளில் தொகுதிவாரி முறையே நடைமுறையில் உள்ளது. தாய்லாந்து, கொரியா, பிலிப்பைன்ஸ், தாய்வான், ஜப்பான், நோபாளம் போன்ற நாடுகளில் சமாந்திர கலப்புமுறையும் கம்போடியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளில் விகிதாசார முறையும் நடைமுறையில் உள்ளது. இலங்கை 1978 ஆண்டு இந்த விகிதாசார முறைமைக்குள் கால்வைத்தது. 

இதற்கு முன்னதாக 1946 தொடக்கம் 1977 வரை தொகுதிவாரி தேர்தல் முறையே நடைமுறையில் இருந்தது. அதவாது இலங்கையை 160 தேர்தல் தொகுதிகளாகப் பிரித்து அந்த ஒவ்வொரு தொகுதிகளுக்கும் கட்சிகள் முன்னிறுத்தும் ஒரு வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்கும் முறை. இந்த காலத்தில் மத்திய கொழும்பு, நுவரெலியா மஸ்கெலியா, பேருவளை, ஹரிஸ்பத்துவ போன்ற சில தொகுதிகள் சிறுபான்மைச் சமூகங்களை உள்வாங்கும் வகையில் பலஅங்கத்தவர் தொகுதியாகவும்  அடையாளப்படுத்தப்பட்டன.

1978 ஆம் ஆண்டு கட்சிகள் தீர்மானிக்கும் வேட்பாளர்களை முன்னிறுத்திய விகிதாசார தேர்தல் முறையினை ஜே.ஆர் ஜயவர்தன அறிமுகம் செய்தார். இதன்போது, ஒரு கட்சி பெற்றுக்கொண்டிருக்க வேண்டிய குறைந்தபட்ச வாக்குகளாக 12.5%  என  ஒரு நிபந்தனை இருந்தது. இது சிறுகட்சிகள் தனது பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு தடையாக இருந்து வந்த நிலையில் இந்த வெட்டுப்புள்ளியை 5 சதவீதமாக குறைப்பதற்கு 1989 ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது. (இந்த திருத்தத்திற்கு முன்னின்று உழைத்தவர் என்றவர் என்ற வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் போற்றப்படுகின்றார்).

2003 ஆம்  ஆண்டு முதல் இலங்கையில் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கு தேவை ஏற்றபட்டுள்ளதாக கருத்துக்கள் பரிமாற்றப்பட அதற்காக பாராளுமன்றில் ஓர் உப குழு அமைக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு அந்த குழு கையளித்த அடைக்கால அறிக்கையில் கலப்பு முறை தேர்தல் முறை தொடர்பிலான பரிந்துரைப்பு செய்யப்பட்டது. அதுவே 2012ஆம், 22ஆம்  இலக்க உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டத்தின்படி 70:30 என்ற விகிதாசாரத்தின் அடிப்படையில் கலப்பு முறையாக அதாவது தொகுதி (வட்டார) ரீதியாக அது70 வீதமான உறுப்பினர்களையும் தெரிவின் அடிப்படையில் 30 சதவீதமான உறுப்பினர்களையும் தெரிவு செய்வது என்பதான சட்ட ஏற்பாடாகவும் மாறியது. எனினும் இந்த சட்டத்தின் அடிப்படையிலான எல்லை மீள்நிர்ணய குழுவின் அறிக்கை 2015 ஆம் ஆண்டு வெளிவந்தபோது அதன் பிரகாரம் அது அந்த விகிதாசாரத்தில் அமையாது 78க்கு 22 என்பதாகவே அமைந்தது. 

இந்த நிலைமையானது அந்த எல்லை மீள் நிர்ணய அறிக்கையை திருத்தியமைக்கவும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தை திருத்தி அமைக்கவுமான தேவையை உருவாக்கியது. இதற்கிடையில் உள்ளூராட்சி மன்றங்களில் 25சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கும் 2016ஆம் முதலாம் இலக்க சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஏற்கனவே 70:30 என தீர்மானிக்கப்பட்ட கலப்பு விகிதாசாரம் அவ்வாறு அமையாத நிலையில் 2017ஆம் ஆண்டு 16ஆம் இலக்க உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்தச் சட்டம் அதனை 60:40 என்ற கலப்பு விகிதாசாரமாக மாற்றியமைத்தது. (எனவே நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல்கள் என்பது திடீரென உருவான ஒரு சட்டத்தினால்  நடைபெற்ற ஒன்றல்ல. 2007ஆம் ஆண்டு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கையின் ஆரம்பத்தில் இருந்து பார்க்கின்றபோதும் கூட ஒரு 10 ஆண்டு கால செயற்பாடு இந்த கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கையில் செலவிடப்பட்டுள்ளது.)

எனவே , 60:40 என்ற கலப்பு முறை அடிப்படையிலான தேர்தல் முறையானது 25 வீதம் பெண்களின் பங்கேற்பையும் உறுதிப்படுத்துவதாக நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில்  அத்தகைய ஒரு தேர்தல நடைபெறுவதற்கு முன்பதாகவே மாகாண சபைத் தேர்தல்களையும் இந்த கலப்பு முறையில் நடாத்துவதற்கு பாராளுமன்றில் 2017ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாணசபைகள் திருத்தச் சட்டமாகக் கொண்டு வரப்பட்டது. 

இந்தச் சட்டத்தின் பிரகாரம் தொகுதியினதும் தெரிவினதும் விகிதாசாரம் 50:50 என மாற்றியமைக்கப்பட்டமையானது இப்போது இன்னுமொரு எல்லை மீள்நிர்ணய குழுவினது தேவையை ஏற்படுத்தியது. அதனடிப்படையில் நியமிக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணயக் குழு தமது அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள நிலையில் இந்த இடைக்காலத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவுகளானது நாட்டில் தேர்தல் முறைமைகள் குறித்த சாதகமானதும் பாதகமானதுமான பல்வேறு கதையாடல்களை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் அடிப்படையில் தேர்தல் முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தும்போது பிரதிநிதித்துவம் (Representative), ஆளுகைத்தத்துவம் (Governability) ஆகியவற்றோடு காத்திரமான கட்சிக்கட்டமைப்பு (uealthy of the Party System) ஆகிய மூன்றையும் உறுதி செய்கின்ற அடிப்படையில் அது அமைவதோடு பிரதிநிதிகளின் பொறுப்புடமை, ஊழலைத் தவிர்த்தல் என்பனவும் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும் எனவும் கலாநிதி சுஜாதா கமகே வலியுறுத் துகின்றார். அத்துடன் கலப்பு முறை தேர்தலை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள நமது நாட்டு தேர்தல் முறைமைக்குள் மீண்டும் பின்னோக்கிச் செல்லாது கலப்பு முறையில் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை சரி செய்வதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களை கலப்பு முறையிலேயே நடாத்த முடியும் என்பது அவரது வாதமாக அமைந்தது. 

அந்த வகையில் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துதல் வேண்டும் என்பதாகவும் அவர் கருத்துரைத்தார். 
சிறு கட்சிகளினதும் சிறுபான்மை கட்சிகளினதும் பெண்களினதும் பிரதிநித்துவத்தை உறுதி செய்வ தற்கான ஏற்பாடுகள் என்ன? 
பட்டியல் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு இன்னும் ஜனநாயகமான வழிமுறைகளை உறுதிப்படுத்தல் 
லஞ்சம் கொடுத்தல் அல்லது வாங்குதல் இன்றி சபைத் தலைவர் மற்றும் உபதலைவர்களை தெரிவு செய்வதற்கான முறையை கண்டடைதல்
கட்சிக்கட்மைப்பை உறுதி செய்யும் வகையிலும் சிறு கட்சிகளை பாதிக்கா வகையிலும் வெட்டுப்புள்ளி முறைமை ஒன்றை கொண்டுவருதல் சம்பந்தமாக சிந்தித்தல். (நடைபெற்று முடிந்த தேர்தலில் வெட்டுப்புள்ளி இல்லாமை காரணமாக மிகக்குறைந்த வாக்குகளைப் பெற்ற கட்சிகளுக்கு கூட ஆசனங்கள் கிடைக்கப்பெற்றதோடு அது தொங்கு உறுப்பினர்களின் எண்ணிக்கைகைய அதிகரிக்கச் செய்தது)
2018 ஆம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்கள் அதன் நோக்கத்தில் இருந்து  சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது. எதிர்பார்த்தவாறு வட்டாரத்திற்கான பிரதிநிதி ஒருவரை உறுதி செய்ததா? (சில வட்டாரங்கள் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும் கொண்டு மேலதிக பிரதிநித்துவத்தை சில வட்டாரங்களுக்கு வழங்கியுள்ளது)
உட்கட்சி முரண்பாடுகளை புதிய தேர்தல் முறை வழிகோலியுள்ளதா?
தேர்தல்களுக்கான செலவினங்கள் உண்மையில் குறைக்கப்பட்டுள்ளனவா? அப்படியாயின் அது எவ்வாறு?
தேர்தல் வன்முறைகள் உண்மையில் குறைந்துள்ளனவா?
எனவே மேற்படி கேள்விகளுக்கு பதில் தேடியவாறே புதிய தேர்தல் முறைமைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிந்திக்க வேண்டியுள்ளது. 
தேர்தல் முறைமைகளை உருவாக்குவதில் அக்கறை காட்டுபவரான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழக விஞ்ஞான பீட பேராசிரியர் சுதந்த லியனகே பின்வருமாறு கருத்துரைத்தார். 

 பேராசிரியர் சுதந்த லியனகே 
1947 ஆம் ஆண்டில்இருந்து நடை முறையில் இருந்த தொகுதிவாரி தேர்தல் முறையானது 'வாக்காளருக்கு இலகுவான' (Voter Friendly) தொகுதிக்கு ஒரு உறுப்பினரை தெரிவு செய்து கொள்ளும் இலகுவான வழிமுறையாக அமைந்தது. எனினும் அதன் பிரதான குறைபாடாக அமைந்தது. செல்லுபடியான எல்லா வாக்குகளுக்குமான பிரதிநிதித்துவத்தை அது உறுதி செய்யவில்லை. தோல்வியடைந்த வாக்களார்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளுக்கு எந்தப்பெறுமதியும் இருக்கவில்லை. 

1978ஆம் ஜே.ஆர் ஜயவர்தன அறிமுகப்படுத்திய விகிதாசார தேர்தல் முறையானது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை அறிமுகத்தோடு உருவானது.  எனவே விகிதாசார முறையின் பிரதான குறைபாடானது உறுதியற்ற அரசாங்கம் உருவாவதுடன் உறுப்பினர்களின் தெரிவு ஒரு பிரச்சினையானது. (இந்த கட்டத்தில் நிறைவேற்றதிகாரம் அதிக அதிகாரங்களைத் தன்னகத்தே எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுகின்றது. (தற்கால நிலைமையினை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்)

விகிதாசார முறைமை 'தலைவர்களுக்கு இலகுவான' (Leader Friendly) ஒரு முறைமையாகவே காணப்பட்டது.எனவே சிவில் சமூகங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அரசியலமைப்பின் 14ஆவது திருத்தத்தின் ஊடாக  'விருப்பு' (மனாப்ப) வாக்குமுறை ( Leader Friendly) உருவானது. இந்த முறைமையானது உட்கட்சி முறுகல்களுக்கு வித்திட்டது. இந்த முறைமையானது இனக்குழுமம், மதக்குழும், சாதியம் சார் குழுக்கள் என குழுமனப்பான்மை கொண்ட கட்சிகள் உருவாகவும் அவ்வாறு வாக்குகளை சேகரிக்கவும் வழிவகுத்தது. 

வேட்பாளர்கள் அசாதாரணமாக தேர்தல் செலவுகளை மேற்கொள்ள இந்த முறை இடமளித்தது. இவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தே 2003 ஆம் ஆண்டு தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமித்தது. மிக நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் 2007 ஆம் ஆண்டு குறித்த தெரிவுக்குழு இடைக்கால அறிக்கையை வெளியிட்டது. இதனடிப்படையிலேயே 2012ஆம் ஆண்டு தொகுதி வாரியும் விகிதாசாரமும் இணைந்த கலப்பு முறை அறிமுகம் செய்யப்படடது. 

இது கலப்பு முறை பிரதிநிதித்துவம் Mixed Member Representation (MMR) என்றே அழைக்கப்பட்டது. எனினும் 2015 ல் உருவான இணக்கப்பாட்டு அரசாங்கம் MMR என்ற முறைமையை MMP Mixed Member Propatinate  என முற்று முழுதான விகிதாசார முறையாக மாற்றயிமைத்து. அதாவது உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டு விருப்பு வாக்குக்கு பதிலாக தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் நேரடியாக தெரிவாக ஏனைய எண்ணிக்கையானோர் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்படுவதாக அமைந்தது. இது MMR முறைமையில் பிரேரிக்கப்பட்ட வெற்றியடைந் தவருக்கு அடுத்த அதிக வாக்குகளைப் பெற்றவரை  (Best Looser) பட்டியல் ஊடாக தெரிவு செய்யும் முறையை மாற்றயிமைத்தது. 

அத்துடன் வெட்டுப்புள்ளி முறையை மாற்றியமைத்ததன் காரணமாக தொங்கு உறுப்பினர்கள் உருவாகும் நிலைமையைத் தோற்றுவித்தது.  இது நிலையற்ற ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியிருப்பதுடன் 341 உள்ளூராட்சி சபைகளில் சுமார் 400 தொங்கு உறுப்பினர்களையும் தோற்றுவித்தது. எனவே 4631 என நிர்ணயிக்கப்பட்ட வட்டார உறுப்பினர்களின் எண்ணிக்கை 4500 யும் தாண்டியது. இது சிவில் சமூகத்தினர் மட்டத்தில் புதிய முறை தொடர்பான அதிருப்தியைத் தோற்றுவித்தது. 

அத்துடன் அரசியல் கட்சி மட்டத்திலும் தேர்தல்கள் ஆணைக்குழு மட்டத்திலும் கூட முன்னை விகிதாசார விருப்பு வாக்கு முறை சிறந்தது எனும் தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது. உண்மையில் விகிதாசார விருப்பு வாக்குமுறையில் நிச்சயமான உறுப்பினர் எண்ணிக்கையும் பெரும்பான்மை வாக்குகள் பெற்ற கட்சிக்கு இரண்டு மேலதிக ஆசனங்களும் வழங்கப்பட்டமையால் உறுதியான சபையை உருவாக்கவும் அது சாதகமாக அமைந்தது.

எவ்வாறாயினும் புதிய தேர்தல் முறைமையானது குறைந்தபட்சம் வட்டாரத்திற்கு ஒரு உறுப்பினர் என்ற உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொ டுத்துள்ளது. அத்துடன் உட்கட்சி முரண்பாடுகளை குறைத்துள்ளது.இன, குழு, சாதி அடிப்படையிலான வாக்களிப்பு ஓரளவுக்கு குறைவடைந்துள்ளது. வாக்களிப்பு முறை இலகுவானதாக அமைந்துள்ளதுடன் செல்லுபடியற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளது. எனவே இந்த முறைமையானது சிவில் சமூகத்தினர் மட்டத்தில் வரவேற்றைபப் பெற்றுள்ளது. எனவே மாகாணசபை பாராளுமன்றத்திற்கும் இந்த முறைமையை அறிமுகப்படுத்தலாம். இதற்கு முன்பதாக இந்த முறையின் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டு நிவர்த்திக்கப்படல் வேண்டும் என கருத்து தெரிவித்ததுடன் பேராசரியர் சுதந்த லியனகே பின்வரும் பிரேரணைகளையும் முன் வைக்கின்றார். 

வெட்டுப்புள்ளியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 2.5 வீதமும் மாகாணசபைத் தேர்தல்களுக்கு  5 வீதமும் பொதுத்தேர்தலுக்கு 10 வீதமும் அமைதல்  வேண்டும். அத்துடன் தொங்கு உறுப்பினர் முறை முற்றாக நிறுத்தப்படல் வேண்டும். முதல் சுற்றில் 40 வீத ஒதுக்கீடு செய்யப்படுவது போல இரண்டாவது வட்டமாக கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில 25 வீத பெண்களின் பங்கேற்பு என்பது கட்சிகளிடையே பகிரப்படல் வேண்டும். 

வெற்றிபெற்ற கட்சிகள் அதன் வாக்குகளின் வீதாசார அடிப்படையில் போனஸ் உறுப்பினர் வழங்கப்படல் வேண்டும் இது குழப்பமின்றி ஆட்சியதிகாரத்தை உறுதி செய்யும். மேற்படி மாற்றங்களை உறுதி செய்யும்போது அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு முறையானது இலங்கையில் நடைமுறைப்படுத்தக்கூடிய முறைமையொன்றாக அமையும். எது எவ்வாறாயினும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை நடைமுறையி லிருக்கும் வரை விகிதாசார தேர்தல் முறையே இலங்கைக்கு உரிய முறையாகும். அந்த முறை மாற்றப்பட்டால் தொகுதி அல்லது MMR முறைமையே குறைந்த அளவிலான விகிதாசர முறையுடன் ஏற்புடையதாக அமையும்.

இலங்கைக்கு விருப்பு வாக்கு முறை சிறந்த ஒன்றாக தான் கருதுவதாகவும் 12.5 வெட்டுப்புள்ளி முறை நீக்கப்பட்டமை தற்போதைய அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் என்பதும் தனது தனிப்பட்ட கருத்து என தெரிவித்த பேராசரியர் சுதந்த லியனகே வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தேர்தல் நடைமுறைகள் உள்ளபோதும் அவற்றை அப்படியே இறக்குமதி செய்யாது இலங்கை அரசியல் கலாசார சூழலுக்கு ஏற்ற உள்நாட்டு முறைமை ஒன்றே நமக்கு தேவையாக உள்ளது என்றும் தெரிவித்தார். ..

(அடுத்த வாரமும் வரும்...)

நன்றி ஞாயிறு தினக்குரல் (29/04/2018)


கடல் வேடுவர் : இறுதி ஆதிக்குடிகளின் அழிவு!? - என்.சரவணன்


“The Veddas “ நூலை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த சந்திரசிறி ரணசிங்க இலங்கையின் பௌத்த கலைக் களஞ்சியத் தொகுப்புக் குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமுடையவர். 19.04.2012 அன்று லண்டன் பி.பி.சி “சிங்கள சந்தேசய” தொகுத்த நிகழ்ச்சியில் இப்படிக் கூறுகிறார்.

இலங்கையின் வேடுவர் பற்றி இது வரை இப்படி விரிவான ஒரு நூல் வந்ததில்லை. மார்ட்டின் விக்கிரமசிங்க போன்றோர் மிகவும் போற்றிய நூல் இது. செலிக்மன் அன்று இந்த ஆய்வை செய்யாது போயிருந்தால் நாம் வேடுவர் பற்றிய எஞ்சிய விபரங்களைக் கூட பெறாது போயிருப்போம். சிங்கள மொழியில் நூற்றுக்கணக்கான நூல்களைக் காண முடிகின்றன. ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் காண முடிகிறது. தமிழில் கட்டுரைகளாகக் காண்பது கூட அரிது.

கடல் வேடுவரை “வெர்தாஸ்” (Verdas) என்றும் அழைக்கப்படுவதை செலிக்மன் குறிப்பிடுகிறார்.  வேடுவரின் மொழி, நடனம், இசை, மருத்துவம், வாழ்வு முறை, உணவு, தற்காப்பு, தன்னிறைவு, சூழலியல் பற்றிய அவர்களின் கையாளுகை என அனைத்து குறித்தும் செலிக்மன் குறிப்பிட்டுள்ளார். மிகவும் வேகமாக அழிந்துவரும் வேடர் வகை என கடல் வேடுவரைக் குறித்தார் செலிக்மன்.

செலிக்மனின் ஆய்வை பின்வந்த பல ஆய்வாளர்களும் கொண்டாடியபோதும் பிரபல மானுடவியலாளரான பேராசிரியர் கணநாத ஒபயசேகர “செலிக்மன் தனது ஆய்வுக்காக போதிய அளவு ’தூய வேடுவர்களை’ சந்திக்கவில்லை என்று விமர்சிக்கிறார்.

கடல் வேடுவர்கள் ஒரு காலத்தில் நாட்டின் உட்பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்று சில ஆய்வாளர்கள் எழுதிவைத்திருக்கிற போதும் அதில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று வேறு சில ஆய்வாளர்கள் மறுத்திருக்கிறார்கள்.

செலிக்மனின் ஆய்வில் அவர் இலங்கை வேடுவர்களை மூன்று பிரிவினராக வகைப்படுத்துகிறார். கிராமிய வேடுவர், கல் வேடுவர், கடல் வேடுவர் (கரையோர வேடுவர்) என வரையறுக்கிறார். கிராமிய வேடுவர் ஓரளவு வளர்ச்சியடைந்தவர்கள், காலபோக்கில் எல்லைப்புற கிராமங்களோடு ஓரளவு ஒன்று கலந்தவர்கள். கல் வேடுவர்களும், வேட்டை வேடுவர்களும் செறிவான காடுகளுக்குள் வாழ்பவர்கள். சற்று காட்டுமிராண்டித்தனமான குணமுடையவர்கள். கிராமிய மக்களிடம் இருந்து ஒதுங்கி தனித்து வாழ்ந்து வருபவர்கள் என்று சாராம்சத்தில் கூறுகிறார்.

மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். வட மத்திய மற்றும் சப்பிரகமுவ மாவட்டங்களில் ஆதிவாசிகளின் வாழ்விடங்கள் இன்றும் உள்ளன.

கிழக்குக் கரையோரப் பகுதிகளில் குறிப்பாக மாங்கேணி, பனிச்சங்கேணி, குஞ்சங்கல்குளம், முருத்தனி போன்ற பிரதேசங்களைச் சூழ வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இவர்களின் பாரம்பரிய ஆதிவாசி மொழி இப்போது சிங்களமும், தமிழும் கலந்ததாக ஆகியிருக்கிறது. எந்தா மொழி செல்வாக்குள்ள பகுதியை அண்டி வாழ்கிறார்களோ அந்த மொழி அவர்களின் மொழியுடன் கலந்துவிட்டதை யதார்த்தம் என்றே கொள்ளவேண்டியிருக்கிறது. அதுபோலத தான் அவர்களின் இன்றைய பெயர்களும் தமிழ் பிரதேசங்களில் தமிழ்ப பெயர்களாகவும், சிங்களப் பிரதேசங்களில் சிங்களமாகவும் இருக்கிறது. ஆனால் தமிழையே பெருமளவினர் கலந்து பேசுகின்றனர்.


“ஜேம்ஸ் ப்ரவ்” மேற்கொண்ட ஆய்வுகளின் படி செலிக்மனின் சில கருத்துக்களை மறுக்கிறார். வேடுவர் மத்தியிலும் சாதியத்துக்கு ஒப்பான கோத்திரங்கள் ரீதியான பிரிவுகள் (Waruge என்று அந்த முறையை அழைப்பார்கள்.) இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். (James Brow: Vedda villages of Anuradhapura: the historical anthropology of a community in Sri Lanka, xvii, 268 pp. Seattle and London: University of Washington Press, 1978.). ஆனால் ஜேம்ஸ் பிரவ் ஆதாரம் காட்டும் வேடுவப் பிரிவினர் சிங்கள சமூகத்தை அண்டியவர்களாக இருப்பவர்கள். கிழக்கில் உள்ள கடல் வேடுவர் மத்தியில் அப்படி இருப்பதை எவரும் உறுதி செய்ததில்லை.

யுத்தத்தின் காரணமாக தமது வாழ்விடங்களைவிட்டு தொடர்ச்சியான இடப்பெயர்வுக்கு உள்ளான இம்மக்களின் அடையாளம் மீண்டும் தொலைந்து, சாதாரண ஏழை கிராமத்தவர்களோடு கலந்துவிட்டதையும் காணமுடியும். அதிலும் குறிப்பாக தமது பிரதேசங்களை அண்டிய கிராமங்களில் வாழ்ந்த விளிம்பு நிலை சமூகத்தினரோடு (குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதியினரோடு) திருமணமாகி கலந்துவிட்டதையும் காண முடியும்.

1966 காலப்பகுதிகளில் காட்டு மரங்களை வெட்டுவதை அரசாங்கம் தடை செய்ததுடன் சில வேடுவர் வாழ்விடங்களில் வாழ்ந்த வேடுவக் குடும்பங்களை கிராமங்களில் கொண்டுவந்து குடியிருக்கச் செய்துள்ளனர். சமீபத்தில் roar இணையத்தளத்திற்காகான மட்டக்களப்பு கடல்வேடுவர் பற்றிய கட்டுரைக்காக இந்துனில் உஸ்கொடவத்த பல விபரங்களை சேகரித்து வந்திருக்கிறார். செலிக்மனின் நூலில் குறிப்பிட்ட பிரதேசங்கள் உட்பட பின்னர் அவர்கள் இடம்பெயர்ந்த இடங்களுக்கும் அவர் சென்று விபரங்கள் சேகரித்திருக்கிறார்.

அவர் தற்போதைய கடல்வேடுவர் தலைவராக அறியப்படும் நல்லதம்பி வேலாயுதம் அவர்களை மதுரங்குளம் பிரதேசத்தில் இருக்கும் குஞ்சன்குளம் கிராமத்திரகு சென்று சந்தித்து எடுத்த பேட்டியில் வேலாயுதம் ஓரிடத்தில் இப்படி குறிப்பிடுகிறார்.
“...சிறு குடிசைகளை அமைத்து இங்கு வாழ்ந்து வந்தோம் யுத்த காலத்தின் போது அடிக்கடி இங்கிருந்து ஓட நேரிடும். பின்னர் வந்து பார்த்தால் யானைகள் எமது இருப்பிடத்தை முற்றாக சிதைத்திருக்கும். இப்படி அடிக்கடி நேர்ந்த நிலையில் அரசாங்கள் எங்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்தது. இப்போது இந்த கிராமத்தில் “கலக்காத” (தூய) வேடுவ குடும்பங்கள் 64 உள்ளன. அருகில் உள்ள கிரிமிச்சை என்கிற கிராமத்தில் “கலக்காத வேடுவக் குடும்பங்கள் 95 உள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் வேடுவக் குடும்பங்களைக் கொண்ட 22 கிராமங்கள் உள்ளன.”
கல்விப் பொதுத் தராதரம் வரை கற்ற ஒருவரும் தமது கிராமத்தில் இல்லையென்றும் வேலாயுதம் தெரிவிக்கிறார். மாதமொருமுறை மட்டக்களப்பிலிருந்து வைத்தியர் வந்து விட்டு செல்வார் என்றும், அவரச தேவைகளுக்கு வாகரை அல்லது வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்கு செல்வதாகவும், தமது கிராமத்துக்கு தினசரி ஒரு தடவை மாத்திரமே பஸ் வந்து செல்கிறது என்கிற விபரத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அட்டவணை : கோரளைப்பற்றிலுள்ள வடக்கிலுள்ள 12 கிராம சேவைகள் பிரிவுகளில் வாழும் கடல் வேடுவர் பற்றி கோறளை பற்று வடக்கு கிராமசேவைப் பிரிவினால் 2015 வெளியிடப்பட்ட அறிக்கையிலிருந்து.
“இந்த கிராமத்தில் வாழும் சில ஆதிவாசிகள் சற்று வசதிகள் வந்ததும் அவர்கள் தம்மை ஆதிவாசிகளாக அடையாளம் காட்டுவதை தவிர்த்தே வருகிறார்கள். பதிலாக தமிழர்கள் என்றே அடையாளப்படுத்துகிறார்கள். முன்னெரெல்லாம் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் “இலங்கை வேடுவர்” என்றே பதிந்தவர்கள் இப்போது இலங்கைத் தமிழர் என்று பதிகின்றனர். இந்த சிக்கல் குறித்து கொழும்பிலும் நாங்கள் கதைத்திருக்கிறோம்” என்று வேலாயுதம் குறிப்பிட்டுள்ளார்.
மீன் பிடித்தல், தேன் சேகரித்து வருதல், சிறு பயிர்ச்செய்கை, நெற்பயிர்ச்செய்கை, சந்தைக்கு தேவையான சிலவற்றை தயாரித்தல் என்பவற்றை செய்து வந்தபோதும் கூலித் தோழிலில் இப்போது அதிகம் ஈடுபடுகிறார்கள்.

தமிழ் பெரும்போக்குக்குள் இவர்களை உள்ளிளுக்காத போக்கு தொடரவே செய்கிறது. ஒரு சாரார் தமிழ் மக்களுடன் கலந்து தமிழ் அடையாளத்துக்குள் இழுக்கப்பட்டுவிட்டபோதும் இன்னொரு சாரார் தமது சுய அடையாளங்களுடன் வாழ வழிவகுக்கும் செயற்திட்டம் தமிழ் அரசியல் சக்திகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

2014இல் வாகரையில் ஆதிவாசிகள் தினத்தின்போது கடல்வேடுவர்களும், சிங்கள பிரதேசங்களில் வாழும் “வன்னிய எத்தோ” எனப்படும் வேடுவரும் ஒன்றாக சந்தித்து கொண்டாடியிருந்தனர்.


தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு 2017 யூன் மாதம் “இலங்கையின் மக்கள்”  'People of Sri Lanka' என்கிற ஒரு நூலை வெளியிட்டிருந்தது. 381 பக்கங்களைக் கொண்ட அந்த பெரிய நூல் இலங்கையர்களின் மொழியில் வெளியிடப்படாதது துரதிர்ஷ்டவசமானது. ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டவேளை அது விரைவில் சிங்கள, தமிழ் மொழிகளில் கிடைக்கும் என்று அறிவிக்கபட்டிருந்தாலும் இன்று பத்து மாதங்கள் கடந்தும் அது நிறைவேற்றப்படவில்லை. அந்த நூலில் இலங்கையில் 19 இனக் குழுமங்களை அடையாளங்கண்டு அவர்களைப் பற்றிய சிறந்த கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. அதில் ஒன்று கடல் வேடுவர் பற்றியது. அந்த சிறந்த கட்டுரையை எழுதியிருப்பவர் இலங்கையில் விளிம்புநிலை மக்கள் பற்றிய ஆய்வுகளை தொடர்ச்சியாக செய்துவரும் பேராசிரியர் காலிங்க டியூடர் சில்வா.

செங்கலடி கிராமசேவைப் பிரிவுக்குட்பட்ட முருத்தனி கிராமத்தைச் சூழ 250 கடல் வேடுவக் குடும்பங்கள் வாழ்ந்துவருவதாக அங்கு 2016 இல் சென்று ஆய்வுகளை  பேராசிரியர் காலிங்க டியூடர் சில்வா குறிப்பிடுகிறார்.

அருகிவரும் வேடுவர் இனத்தின் மத்தியில் தமது சுய அடையாளப்பேணல் என்பது இனிவரும் காலங்களில் போதிய அளவு சாத்தியங்கள் இல்லை என்று உணரத் தொடங்கியிருக்கிறது. தமது “வேடுவ” அடையாளம் அவமானமாக பார்க்கும் ஒரு சந்ததியும் கூடவே தழைக்கத் தொடங்கியிருக்கிறது. அவர்களின் வாழ்வியல் முறைமைகள் முற்றிலும் வேகமாக மாறுபட்டு வருகிறது. தலித் மக்கள் தம்மீதான ஒடுக்குமுறையிலிருந்தும் அவமானத்திலிருந்தும் மீள்வதற்காக ஓடி ஒளிந்து தமது சுய அடையாளங்களை மறைத்து வாழத் தலைப்பட்டது போல ‘வேடுவ” சமூகத்துக்கு இல்லை. வேடுவ சமூகத்துக்கு தீண்டாமையும் இருந்ததில்லை.

ஆனால் அவர்கள் இன்று எதிர்கொள்ளும் பண்பாட்டு அடையாள நெருக்கடி நவீன வாழ்வாதாரத்தோடும் சம்பந்தப்பட்டது. அவர்கள் அவர்களாகவே சுமரியாதையுடன், இறைமையுடனும் வாழ வழிசெய்யும் கட்டமைப்பு இலங்கையில் இல்லை. அதற்கான சாத்தியங்களும் கேள்விக்குரியதே. இன்று அம்மக்களைத் தேடிச் செல்வது “உல்லாசப் பிரயாண” நிகழ்ச்சிநிரலின் அங்கமாக ஆகியிருக்கிறது. மிருகக் காட்சிச் சாலைக்கு சென்று மிருகங்களைக் கண்டு பூரிப்பதற்கு ஒப்பானது போல ஆகியிருக்கிறது. பல செலிக்மன்கள் அவர்களைத் தேடிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இலங்கையில் எஞ்சியுள்ள இறுதி ஆதிக்குடிகள் கண் முன்னால் தொலைந்துகொண்டிருக்கிறார்கள்.

நன்றி - அரங்கம்


"எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும் " - நோர்வேயில் "தமிழர் மூவர்" விருதைப் பெற்ற றீற்றா பரமலிங்கம்


தமிழ்3 வானொலியின் 2018 இற்கான தமிழ்3 இன் தமிழர் மூவர் விருது வழங்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒஸ்லோவில் மண்டம் நிறைந்த மக்களுடன் இடம்பெற்றது. பதின்ம வயதுச் சிறுமியொருவரின் சூழ்நிலைச் சிக்கல்களை எடுத்தியம்புகின்ற தனது முதாலாவது நோர்வே மொழியலமைந்த  நாவலைப் படைத்த றீற்றா பரமலிங்கம், "எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும், இல்லாவிட்டால் மற்றையவர்கள்தன் எமது கதைகளைக் கூறுவார்கள் என்றார். இவரின் நாவலாகிய "La meg bli med deg" -உன்னோடு வரவிடு, நோர்வேஜியப் பத்திரிகைகளில் நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்ததுடன், நோர்வேயில் அறியப்பட்ட ஆரம்ப எழுத்தாளர்களிற்கான பரிசுக்கும் இவர் பரிந்துரைக்கப் பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 

வழமையிலும்விட இவ்வாண்டு மதிப்பளிப்பாளர்கள் கூடியிருந்த மக்களின் கவனத்தினையும் கரவொலியினையும் பெற்றனர். மாற்றுத் திறனாளியும் ஓவியருமாகிய திவ்யா கைலாசபிள்ளை தனக்கு ஊக்குவிப்புத் தருகின்ற பெற்றோரையும் நல்ல நண்பர்களையும் நன்றி கூர்ந்தார். திவ்யா கைலாசபிள்ளைக்கான மதிப்பளிப்பு வழங்கப் பட்டபோது மண்டபமே எழுந்துநின்று கரவொலி செய்தது. திவ்யா கைலாசபிள்ளையின் விடாமுயற்சியினை நடுவர்குழு முன்னிலைபடுத்தியிருந்தது.

பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவமுள்ள ஹம்சிக பிரேம்குமார், தமிழ் இளைஞர்கள் தமது பின்னணியினை அறியவேண்டும் என்று குறிப்பிட்டார். போர் அவலம் நிறைந்ததொரு பின்னணியினை நாம் கொண்டிருக்கின்றபோது, அவ்வாறான நிலைமகளில் வாழும் ஏனையு சமூகங்களிற்கும் உதவக் கூடியதான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் நாம் இணைந்து செயற்படவேண்டுமென்றார். தமிழ் இளையோர் அமைப்பில் பணியாற்றிய அனுபவமுள்ள ஹம்சிகா 2001ம் ஆண்டில் 8 வயதுச் சிறுமியாக நோர்வேக்கு தனது தாயாருடன் புலம்பெயர்ந்தவர். தனது தந்தையாரை போரில் இழந்த ஹம்சிகா மருத்துவத் துறையில் இரண்டாவது ஆண்டு மாணவியாக இருக்கின்றபோதும் அபிவிருத்தி சார்ந்த மேற்படிப்பையும் தொடர்கின்றார். தற்போது ஓஸ்லோ ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மாணவர் அமைப்புத் தலைவியாகவுள்ளார் ஹம்சிகா பிரேம்குமார்.

சட்டத்துறையில் தனது மேற்படிப்பைத் தொடரும் இளைய எழுத்தாளர் றீற்ரா, எழுதுவதே தனக்கு ஒரு ஆத்மதிருப்தியினைத் தருவதாகத் தெரிவித்தார். தனது பெற்றோருக்குத் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்ட போதிலும் தமிழ் இளையோர்கள் பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்ற மட்டும் தமது துறைகளைத் தெரியக் கூடாது என்றார். தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்க உகந்த துறையினை அவர்களே திர்மானிக்கவல்லவர்களாக வளரவேண்டுமென்று பல இளையோர்யோர்களின் கைதட்டலுக்கு மத்தியில் கூறினார் அவர்.

தமிழ்3 இன் தமிழர் விருது நோர்வேயில் ஒரு அறியப்பட்ட விருது வழங்கும் வைபவமாக விளங்குகின்றது. ஒவ்வோராண்டும் நாடுமுழுவதிலுமிருந்து பரிந்துரைகள் கோரப்பட்டு, சுயாதீனமான தெரிவுக்குழு அமைக்கப்பட்டு விருதுக்கான தெரிவு இடம்பெற்று வருகின்றது. இம்முறை ஊடகவியலாளர் சரவணன் நடராசா தலைமையில் ஐவர் கொண்ட குழுவினர் இந்த ஆண்டுக்கான இளைய ஆளுமையாளர் மூவரைத் தெரிவுசெய்துள்ளனர்.

சரிநிகர் பத்திரிகை மூலமும் பல்வேறு நூல்கள் மூலமும் அறியப்பட்ட மூத்த பத்திரிகையாளரும் நூலாசிரியருமாகிய சரவணன் நடராசா மற்றும் 2017ம் ஆண்டிற்கான தமிழர் விருதினைப் பெற்றவர்களில் ஒருவரும் இசைவிற்பனருமாகிய மீரா திருச்செல்வம் ஆகியோர் இவ்வாண்டு விருது வழங்கும் வைபவத்தினைத் தலைமை தாங்கி நடாத்தியிருந்தனர்.

ரீற்றா பரமலிங்கத்திற்கான விருதினை சங்கமம் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட பேராசிரியர் ந.சிறிஸ்கந்தராஜாவும், ஹம்சிகா பிரேம்குமாருக்கான விருதினை மூத்த எழுத்தாளர் நிலக்கிளி பாலமனோகரன் அவர்களும்இ திவ்யா கைலாசபிள்ளைக்கான விருதினை தொழிலதிபர் மகா சிற்றம்பலம் அவர்களும் வழங்கி மதிப்பளித்தனர்.

இவ் விருது வழங்கும் வைபவம் பற்றி தமிழ்3 வானொலி ஒரு செய்திக் குறிப்பினை வழங்கியுள்ளது. நோர்வேயில் புலம்பெயர்ந்துள்ள முதற்தலைமுறை தமது பல்வேறு வாழ்க்கை அனுபங்களிற்கூடாக இளைய தலைமுறைக்குரிய வழியினைச் சமைத்துள்ளனர். இருந்தபோதும் பலதரப்பட்ட தளங்களில் நோர்வேயில் வாழும் இளைய சமூகம் தேடல் மிகுந்ததாகவுள்ளது. இந்தவகையில் அவர்களின் அனுபவங்களை ஏனைய இளையோருக்கு அறியவைப்பதுவும், அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளவைப்பதுவுமே தமிழ்3 வானொலியானது தமிழர் மூவர் விருதினை ஆண்டு தோறும் வழங்கி வருவதன் அடிப்படை நோக்கம் என அந்தச் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

நோர்வே தமிழ் இளையோர்கள் மத்தியில், முன்மாதிரியாகவும் (Role Models) உந்துதலாகவும் கொள்ளக்கூடிய இளையோர்களை அடையாளம் கண்டு மதிப்பளிக்கும் செயற்பாட்டினை 2015ஆம் ஆண்டிலிருந்து நோர்வே தமிழ் 3 வானொலி முன்னெடுத்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான இளைய ஆளுமையாளர்களுக்கான மதிப்பளிப்பு கடந்த ஞாயிறு (22.04.18) இடம்பெற்ற தமிழ் 3 இன் சங்கமம் நிகழ்வில் இடம்பெற்றது

-ராஜன் செல்லையா
படங்கள்: ரமேஸ் சிவராஜாநோர்வேயில் என்.சரவணனின் இரு நூல்களின் அறிமுகம்


என்.சரவணன் தினக்குரலில் தொடராக 1915 : கண்டி கலவரம், வீரகேசரியில் தொடர் பத்தியாக எழுதிய “அறிந்தவர்களும், அறியாதவையும்” ஆகியவை நூலுறுப் பெற்றது. அந்த நூல்களின் அறிமுக விழா நோர்வே – ஒஸ்லோவில் எதிர்வரும் ஏப்ரல் 29 ஞாயிறன்று மாலை 5 மணிக்கு Fossum Gård மண்டபத்தில் இடம்பெறவிருக்கிறது.

இந்த நிகழ்வில் கலாநிதி சர்வேந்திரா, பர்ஸான் பசீர், ஆகியோர் "1915 : கண்டி கலவரம்" நூலைப் பற்றி கருத்துரையாற்றவுள்ளனர்.

 ராஜன் செல்லையா, கவிதா லட்சுமி ஆகியோர் "அறிந்தவர்களும் அறியாதவையும்" நூலைப பற்றி கருத்துரையாற்றவுள்ளனர்.

இந்நிகழ்வை ரூபன் சிவராஜா அவர்கள் வழிநடத்துகிறார். இந்த நிகழ்வின் இறுதியில் இந்நூல்கள் குறித்த  உரையாடலும் இடம்பெறவிருக்கிறது.

குரலற்றவர்களின் குரலும் ஜனநாயகத்தின் நான்காவது தூணும்.... - சிவலிங்கம் சிவகுமார்

மலையக மக்களின் தனித்துவ குரலாக விளங்கும் சூரியகாந்தி 10 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது....

ஊடகத்துறை என்பது ஒரு தொழில் (Profession) என்பதை தாண்டி ஏன் பேசப்படுகின்றதென்றால் அது மக்களின் குரலாக ஒலிக்கின்ற காரணத்தினாலாகும். இன்று உலகில் ஏராளமான தொழில்கள் பரவிக்கிடக்கின்றன. அத்துறைகளில் தேர்ச்சி பெற்றோர் தமது திறமைகளை வௌிப்படுத்தி சாதனையாளர்களாக திகழ்கின்றனர். இவ்வாறான தொழில்களில் சமூக உணர்வுடன் செய்யப்படுவன பல இருந்தாலும் பல்லின சமூகங்கள் வாழ்ந்து வரும் தேசத்தையே வழிநடத்தும் சேவை சார்ந்த தொழிலாக ஊடகவியல் விளங்குகிறது. நாட்டை மக்களை வழிநடத்தும் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு இருந்தாலும் அதை அவர்கள் சரி வர செய்கின்றார்களா என கேள்வி எழுப்பி அவர்களையும் வழிநடத்தும் சமூக பொறுப்பும் அதிகாரமும் ஊடகங்களுக்கு இருக்கின்ற காரணத்தினாலேயே ஜனநாயகத்தின் நான்காவது தூணாக அது வர்ணிக்கப்படுகிறது. இது வேறு எந்த தொழிலுக்கும் இல்லாத உயர் கௌரவமாகும்.

ஊடகத்துறை செயற்பாடுகள் அரசின் உயர்மட்டத்திலிருந்து சாதாரண குடிமகன் வரைக்கும் நியாயமானதாகவே இடம்பெறவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகும். அந்த வகையில் இன்று உலகெங்கும் ஊடக வலைப்பின்னலானது இலத்திரனியல் மற்றும் அச்சு என்ற இரண்டு பிரதான பிரிவுகளின் கீழ் செயற்பட்டு வருகிறது. இதில் அச்சு ஊடகத்தோடு தொடர்புடைய செயற்பாடுகளை நாம் இதழியல் என்கிறோம். இதில் பத்திரிகைகள்,சஞ்சிகைகள், புத்தகங்கள்,புதினங்கள் என்ற பிரிவுகள் அடங்குகின்றன. மாறி வரும் உலக ஒழுங்கானது ஏனைய தொழிற்துறைகளில் எவ்வாறு தாக்கம் செலுத்தியதோ அதே போன்று இதழியலிலும் மாற்றத்தை உருவாக்கத்தலைப்பட்டது. ஆரம்பத்தில் தேசிய ரீதியான அரசியல் மற்றும் ஏனைய செய்திகளை தாங்கி வந்த தேசிய பத்திரிகைகள் , ஒரு நாட்டின் பல்லின மக்களின் தனித்துவத்தைப்பற்றி பேச வேண்டியும் அந்த சமூகங்களின் குரலாக விளங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன் சிந்தனையாக எழுந்ததே சமூக பத்திரிகைகளாகும். இதன் விளைவாகவே இலங்கையின் தமிழ் இதழியல்துறையில் பெரும்பங்காற்றி தமிழ் பேசும் மக்களின் குரலாக விளங்கும் வீரகேசரி நிறுவனம் மலையக சமூகத்துக்காக சூரியகாந்தி என்ற பத்திரிகையை ஆரம்பித்தது. மலையகத்தின் தனித்துவக்குரலாக விளங்கி வரும் இப்பத்திரிகை 10 வருடங்களை நிறைவு செய்துள்ளது. 

கடந்த பத்து வருடங்களாக மலையக சமூகத்தில் இப்பத்திரிகை ஏற்படுத்திய தாக்கம் என்ன என்ற கேள்விக்கு நேர்-,எதிர்மறை கருத்துக்கள் முன்வைக்கப்படலாம் ஆனால் குறித்த இச்சமூகத்திலிருந்து கணிசமானதொரு வாசகர் குழாமையும் சமூகம் பற்றிய எதிர்பார்ப்புக்களையும் இப்பத்திரிகை உருவாக்கியுள்ளது என்பது முக்கிய விடயம். மலையக சமூகத்தின் அவலங்கள் மட்டுமல்லாது அதற்கான மூலங்களை ஆராய்வதிலும் அதன் பின்னணியிலிருப்பவர்களை தோலுரித்து காட்டுவதற்கும் சூரியகாந்தி என்றும் பின்னின்றதில்லை. இதன் காரணமாகவே மலையக சமூகத்தின் தேசிய பத்திரிகையாக அது விளங்குகிறது. மட்டுமன்றி இதழியல் போக்கிற்கேற்ப ஊடக தொழில் என்ற அம்சத்திலிருந்து அதன் ஆசிரியபீட உறுப்பினர்கள் என்றும் விலகவில்லை. தற்போது ஊடகங்களின் போக்கு குறித்து சிலரால் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பக்கச்சார்பு, நடுவுநிலைமை போன்ற பதங்கள் பாவிக்கப்படுகின்றன. எந்த ஊடகமும் இரண்டு விடயங்களை முன்னிறுத்தியே இயங்க முடியும்

1) உண்மை 
2) திரிபு

இந்த இரண்டு விடயங்களில் நடுவுநிலைமை எப்படியானது என எவருக்கும் பதில் கூற முடியாது. அதாவது 50:50 உண்மையும் பொய்யும் கலந்து எழுத முடியாது. ஆகவே எந்த ஊடகங்களாலும் நடுவுநிலைமை பேண முடியாது என்பது இங்கு தௌிவாகிறது அடுத்ததாக பக்கச்சார்பு பற்றி பேசப்படுகிறது. எல்லா ஊடகங்களும் பக்கச்சார்பாகவே இயங்க வேண்டும் அதாவது உண்மையின் பக்கம் சார்ந்து என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறோம். இனி ஊடகங்களின் நடுவுநிலைமை ,பக்கச்சார்ப்பு பற்றி வாசகர்களுக்கு குழப்பம் ஏற்பாடது என நம்புவோமாக.

அடுத்ததாக இதழியல் துறை என்பது ஒரு தொழிலாகும் . இதை பலரும் விளங்கிக்கொள்ளல் அவசியம். உதாரணமாக காவல்துறை சார்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் கள்வனை பிடித்தால் அதற்கு கள்வன் அவர் மீது கோபித்துக்கொள்ள முடியாது அதே போன்று பொலிஸ் உத்தியோகத்தரும் தான் செய்த செயலை கொண்டாட முடியாது .அது அவரது கடமை. இந்த சம்பவத்தை செய்தியாக்குவது ஊடகங்களின் கடமை. இப்படியான சம்பவங்களோடு பின்னி பிணைந்திருப்பது தான் ஊடகங்கள். பத்திரிகையாளர்கள் அவர்களின் கடமையைத்தான் செய்கின்றார்கள் என்பதை ஒவ்வொருவரும் விளங்கிக்கொள்ளல் அவசியம்.அதை பொறுப்போடு செய்ய வேண்டும் என்பது இத்துறையில் இணைந்து கொள்ளவிருக்கும் இளையோருக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.கடந்த பத்துவருடங்களாக இப்பணியை சூரியகாந்தி செவ்வனே செய்து வந்துள்ளது என்பதை உறுதியாகக்கூறலாம். இனியும் அவ்வாறே அதன் பயணம் தொடரும் என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. மேலும் என் மீது நம்பிக்கை வைத்து இவ்வாறான ஒரு சமூக பத்திரிகையை ஆரம்பித்து மலையக வரலாற்றில் தடம் பதிக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தந்த எமது வீரகேசரி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருவாளர் குமார் நடேசன் அவர்களுக்கும் ஆதரவு நல்கிய அனைத்துத்தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்த்துக்கள்

நன்றி - சூரியகாந்தி

மலையகம் பற்றிய நந்தன வீரரட்னவின் ஆவணப்படம் பற்றி...


நந்தன வீரரட்ண என்ற ஒரு சிங்கள ஊடகவியலாளரின் பார்வையில் ஈழப்போராட்டம். இவர் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கும் சென்றவர். ஈழப்போராட்டத்தில் உயிரிழந்தவர்களில்  பெரும்பாலானவர்கள் மலையகத்தைச்சேர்ந்தவர்கள்  எனவும் கிழக்கிலங்கை இளைஞர்கள் எனவும் தெரிவிக்கும் அவர்,  மலையக மக்களை நாடற்றவர்களாக்கிய டி.எஸ். சேனாநாயக்காவின் அரசு பற்றிய விமர்சனத்தையும் முன்வைக்கிறார். அவர் சமர்ப்பித்திருக்கும் இந்த ஆவணப்படத்தின் பெயர்" நினைவுகள் மரணிக்கமுன்" முள்ளிவாய்க்கால் நினைவாக சில பெண்களின் சொல்ல முடியாத  கண்ணீர்க்கதைகள் இங்கு சொல்லப்படுகிறது.

'தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அருங்காட்சியகம்'


மலையகத்தோட்டத்தொழிலாளர்களை இன்றைய 21 ஆம் நூற்றாண்டிலும் வேற்றுக்கிரகவாசிகள்போல் பார்க்கும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். அதனால்தான், எம்மவர்களின் பிள்ளைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னேறி – வெற்றிநடைபோடக்கூடாது என்பதில் இந்த நயவஞ்சகர்கள் குறியாக இருக்கின்றனர்.

பாரத நாட்டிலிருந்து பஞ்சம்பிழைப்பதற்காக எம் பாட்டன், முப்பாட்டன் லங்காபுரிக்கு வந்து குடியேறினாலும், எவர் குடியையும் கெடுக்கவில்லை. கள்ளம், கபடமற்றவர்களாக வாழ்ந்து மடிந்தனர் என்பதை நினைக்கையில் நெஞ்சம் நிமிர்ந்து நிற்கின்றது.

கொட்டும் மழையையும், சுட்டெரிக்கும் வெயிலையும் கருதாது, காடு, மலைகள்ஏறி நாட்டை வளமாக்கினர். இப்படி அவர்கள் கடந்துவந்த வலிசுமந்த பயணத்தை வெறும் வார்த்தைகளால் மட்டும் எடுத்துரைக்கமுடியாது.

எம் மக்களுக்கென தனியானதொரு வாழ்க்கை முறைமையும், கலாசாரமும் இருக்கின்றது. நவீன யுகத்துக்கேற்ப வாழ்க்கை முறைமைமாறி வந்தாலும், கலை, கலாசாரம் என்பன அழிவின் விளிம்பில் இருக்கின்றன என்பது கசப்பான உண்மையாகும்.
அதுமட்டுமல்ல, எம்மவர்கள் எவ்வளவு கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்தனர் என்பது இன்றுள்ள எம் சந்ததித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. கும்பா, சிமிலி லாம்பு, ஆட்டுக்கல் என்வனவெல்லாம் மாயமான பொருட்களின் பட்டியலில்.

இருந்தும் எம்மவர்களின் வாழ்வியல் பற்றிய தகவல்களையும், பயன்படுத்திய பொருட்களையும், வாழ்வு முறைமையையும் ஆணவமாக சேமித்து வைத்துள்ளது சமூக அபிவிருத்தி நிறுவகம். இதன் ஸ்தாபகராக பி. முத்துலிங்கம் ஐயா திகழ்கின்றார். இதற்காக தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அருங்காட்சியகமொன்றே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்துக்குள் இருக்கும் படங்கள், பொருட்கள், வரலாற்று ஆவணங்கள் என்பன பச்சைத்தங்கம் என்றே கூறவேண்டும். 
மலையக தொழிற்சங்கவாதியான அமரர். நடேச அய்யர், அவரின் பாரியாரான மீனாட்சியம்மா உள்ளிட்ட சிலரையே நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பிருக்கின்றது. ஆனால், மேலும் பல முக்கிய தொழிற்சங்கவாதிகளின் விவரங்களும் இருக்கின்றன.அத்துடன், தோட்டத்தொழிலாளர்களுக்கான உரிமைப்போராட்டத்தில் உயர்நீத்த தியாகிகளின் விவரமும் பட்டியலிடப்பட்டுள்ளது.

( முல்லோயா கோவிந்தன் (1939) முதல் பழனிவேல் (1980) வரை)
அதேவேளை, தென்னிந்தியாவிலிருந்து வந்தது, மறுபடியும் சிலர் அங்கு இடம்பெயர்ந்தது, ஆண்டுரீதியாக தோட்டத்தொழிலாளர்களின் எண்ணிக்கையென மேலும் பல முக்கிய தகவல்கள் மேற்படி மலையக மாளிக்கைக்குள் இருக்கின்றன.

எனவே, கட்டாயும் சென்று பாருங்கள். ஒவ்வொருவரும் பார்த்து கற்றறிய வேண்டிய பல விடயங்கள் அங்கு இருக்கின்றன.
“ மண்வாசனை” எனும் தலைப்பின்கீழ் எம்மவர்களின் வாழ்க்கை முறைமை பற்றி நான் எழுதுகையில்தான் இந்த அருங்காட்சியகம் பற்றிய தகவலும் எனக்கு கிடைத்தது.

உள்ளே காட்சிப்படுத்தப்பட்டுள்ளவற்றை புகைப்படமெடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகளால் வழங்கப்படும் விதிமுறைகளுக்கமைய செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அங்குள்ள எந்தவொரு பொருளுக்கும் தேசம் விளைவிக்கவேண்டாம்.

சமூக அபிவிருத்தி நிறுவக ஊழியர்கள் மற்றும் எனது நண்பனான லோகேஸ் ஆகியோருக்கும் நன்றிகள். படங்கள் - சமூக அபிவிருத்தி நிறுவகம் இணையத்தளத்திருந்து பெறப்பட்டவையாகும்.

நன்றி - Sanath Sudar, Isd Kandy

"பெண்களுக்கு ஒன்றும் முடியாத என்ற சிந்தனை தகர்த்தெறியப்படல் வேண்டும்" - செண்பகவள்ளி


இன்று எல்லாத்துறைகளிலும் பெண்கள் கோலோச்சினாலும் அரசியலில் அவர்களுக்கான வாய்ப்புகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன. ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மட்டுமே சரியான சந்தர்ப்பங்கள் வரும் வரை காத்திருந்து பெண்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கும் ஒரே அமைப்பாக மலையகத்தில் விளங்குகிறது.
 இதன் மூலம் அரசியலிலும் அவர்களின் பங்களிப்பை வெற்றிகரமாக தொடர்வதற்கு வழியேற்பட்டுள்ளது என மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள திருமதி செண்பகவள்ளி தெரிவிக்கிறார். கொழும்பு மாநகரசபைக்கு அடுத்ததாக உள்ளூராட்சி சபை ஒன்றின் தலைமைத்துவத்துக்கு பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது மஸ்கெலியா பிரதேச சபைக்கு என்பது முக்கிய விடயம். இது தொடர்பில் திருமதி செண்பகவள்ளி கேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய நேர்காணல்.

கேள்வி: பிரதேச சபை ஒன்றின் தலைவராக தெரிவு செய்யப்படுவோம் என எதிர்பார்த்தீர்களா?
பதில்: நிச்சயமாக இல்லை ஏனென்றால் தேர்தலுக்கான பெயர்கள் தெரிவு செய்யப்படும் போதே எமது தலைவர் ஆறுமுகனிடம் எனக்கு போட்டியிட ஆர்வம் இல்லை என்றேன் ஆனாலும் கட்சியில் தொடர்ச்சியாக நான் வகித்த பொறுப்புகள், ஆற்றிய சேவைகளின் அடிப்படையில் என்னை மஸ்கெலியா மவுசாகலை வட்டாரத்தில் போட்டியிட வைத்தார். இறுதியில் வெற்றி பெற்று தற்போது என்னை சபையின் தலைவராக்கியிருக்கிறார்.

என்னிடம் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பை சரியான முறையில் முன்னெடுக்க வேண்டும் என்பதே இப்போது என் முன் நிற்கும் சவால். அதை தலைவரின் வழிகாட்டலில் வெற்றிகரமாக செய்வேன் என்பது எனது நம்பிக்கையாகும்.

கேள்வி: இ.தொ.காவில் உங்களது கடந்த கால பங்களிப்பு எப்படியானது?
பதில்: நான் தொடர்ச்சியாக 33 வருடங்கள் இ.தொ.காவின் மகளிர் அணியை பிரதிநிதித்துவம் செய்து வருகிறேன். 2002 ஆம் ஆண்டு அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன். மகளிர் பிரிவின் சிரேஷ்ட இணைப்பதிகாரியாக இருந்து வந்த எனக்கு தலைவர் ஆறுமுகன் கடந்த வருடம் கட்சியின் உபதலைவர் பதவியையும் வழங்கினார். தொழிற்சங்க அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் முகமாக கடந்த காலங்களில் ஜப்பான்,பாங்கொக், சீனா, சிங்கப்பூர், இந்தியா ,மலேசியா ஆகிய நாடுகளில் கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்கு கட்சியால் எனக்கு சந்தர்ப்பங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. இந்த அனுபவங்கள் எனது அரசியல் செயற்பாட்டுக்கு கைகொடுக்கும் என நினைக்கிறேன்.

கேள்வி: இம்முறை தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டமை குறித்து?
பதில்: வரவேற்கத்தக்க விடயம். இம்முறை தேர்தலில் இ.தொ.கா சார்பில் போட்டியிட்டவர்களில் அனைத்து பிரதேசங்களிலும் 22 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 6 பேர் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் அங்கம் வகிக்கின்றனர். எல்லாத்துறைகளிலும் காலூன்றி விட்ட பெண்களால் அரசியலில் பிரகாசிக்க முடியாது என்ற சிந்தனை மாறியுள்ளது. அந்த சந்தர்ப்பத்தை எமது கட்சி எமக்கு பெற்றுத்தந்திருக்கின்றது.மட்டுமன்றி சந்தர்ப்பத்தை வழங்கினால் பெண்களுக்கும் எதையும் சாதிக்க முடியும் என்ற உத்வேகம் அவர்களுக்கு பிறக்கிறது.

கேள்வி: மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர் தெரிவன்று இடம்பெற்ற சம்பவம் பற்றி?
பதில்: அந்த சம்பவத்திற்கு எவ்வகையிலும் இ.தொ.கா பொறுப்பில்லை என்பது அனைவருக்கும் தெரியுமே அதிகாரம் எமது கைகளுக்கு வரப்போகின்றது என்பதை அறிந்து அதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிரணியினர் சபையை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சபையின் கௌரவத்திற்கும் இழுக்கு ஏற்படுத்தி விட்டனர். மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசவும் அதற்கு தீர்வு காணவுமே அவர்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றனர். ஆனால் சபைகளில் சிலர் தமது பிரச்சினைகள் பற்றி பேசி குழப்பத்தை விளைவிக்கின்றனர். இதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கேள்வி: உங்கள் குடும்ப விபரம் பற்றி கூறுவீர்களா?
பதில்: எனது கணவர் நடராஜா வியாபாரம் செய்கிறார். மகன் ,மகள் என இரு பிள்ளைகள். மகள் பங்களாதேஷில் சூழலியல் விஞ்ஞானம் தொடர்பான கற்கை நெறி ஒன்றை தொடர்கிறார். மகன் உயர்தரம் முடித்து அடுத்த கட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்.

கேள்வி: மஸ்கெலியா பிரதேசத்தின் அபிவிருத்தியை எவ்வாறு முன்னெடுக்கப்போகின்றீர்கள்?
பதில்: இது புதிதாக உருவாக்கப்பட்ட சபையாகும். இப்பிரதேசத்தின் சீட்டன் மவுசாகலை பிரிவில் பிறந்து வளர்ந்தவள் நான் ஆகவே உட்கட்டமைப்பு பிரச்சினைகளை அறிவேன்.

மட்டுமன்றி இது சிவனொளி பாதமலை அமைந்துள்ள புனித பிரதேசமாகவும் உள்ளது. எம்மை நம்பி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும். எமது உறுப்பினர்களின் ஆதரவோடும் தலைவர் ஆறுமுகனின் வழிகாட்டலோடும் அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

நேர்காணல் - சி.சிவகுமாரன்

நன்றி - வீரகேசரி

இலங்கையின் யாப்பை பௌத்தமயப்படுத்தியது எப்படி? - என்.சரவணன்


1972 ஆம் ஆண்டு யாப்பை உருவாக்கிய அந்த மே 22ஆம் நாளை இலங்கையின் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம். உண்மையில் சிங்கள பௌத்த நாடாக அரசியலமைப்பின் மூலம் நிறுவிய நாள் அது. அது எப்படி நிகழ்ந்தது என்பதை இந்தக் கட்டுரை விபரிக்கிறது.

1970 ஆம் ஆண்டு சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி தேர்தலில் வெற்றி பெற்றது. அரசாங்கம் பதவிப் பிரமாணம் செய்வதற்கு முன்னர்; வெற்றிபெற்ற அரசாங்க உறுப்பினர்கள் அனைவரும் ஊர்வலமாக தலதா மாளிகைக்கு ஆசீர்வாதம் பெறப் புறப்பட்டனர். அங்கு தான் அவர்கள் சத்தியப்பிரமாணத்தையும் செய்துகொண்டார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியன சேர்ந்து கூட்டாக ஆட்சியமைத்த ஐக்கிய முன்னணி ஆட்சி; தமது தேர்தல் வாக்குறுதியின்படி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக “அரசியல் நிர்ணய சபை” ஒன்றை உருவாக்கியது. அரசியலமைப்பு உருவாக்கத்துக்கென ஒரு அமைச்சையும் உருவாக்கி கொல்வின் ஆர்.டி சில்வாவை அதற்கான அமைச்சராக நியமித்தது.

பௌத்த சங்கத்தினருக்கு அடிபணிதல்
நீண்டகாலமாக கல்வி அமைச்சின் கீழ் இருந்து வந்த கலாசார திணைக்களமும் தனியான கலாசார அமைச்சாக முதற்தடவை உருவாக்கப்பட்டது. ஆனால் அது பௌத்த கலாசார அமைச்சாகவே இயங்கத் தொடங்கியது. முன்னால் நீதிபதி எஸ்.எஸ்.குலதிலக்கவுக்கு அந்த அமைச்சு வழங்கப்பட்டது. அந்த அமைச்சின் செயலாளராக நிஸ்ஸங்க விஜயரத்ன நியமிக்கப்பட்டார். (பார்க்க பெட்டிச் செய்தி)

அரசியலமைப்பை உருவாக்கும் போது அஸ்கிரி, மல்வத்து, அமரபுர, ராமக்ஞ ஆகிய நிக்காயக்களின் மகாசங்கத்தினர் தமது கருத்துக்களை கூறும் உரிமை உள்ளதென்றும் அவர்களின் கருத்தை அறியும் படியும் அரசுக்கு அழுத்தம் கொடுத்தவர் அன்றைய அமைச்சர் கே.எம்.பி.ராஜரட்ன.

1970 செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் யாப்பு சீர்திருத்தம் பற்றி மகாசங்கத்தினர் தினமின பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைகளை ஆதாரம் காட்டி அவற்றை அமைச்சரவையில் சமர்ப்பித்தார் அவர். ஒக்டோபர் மாதம் அமைச்சரவை கூட்டம் பற்றிய 30வது தொகுதி அறிக்கையில் அதனை இன்றும் காணலாம். அந்த யோசனைகள் 20.09.1970 தினமின பத்திரிகையில் வெளியானது. (அந்த நிக்காயாக்களின் பரிந்துரைகளை சுருக்கி இங்கே தொகுத்திருக்கிறேன். இதே ஒழுங்கில் அவை இருக்கவில்லை.)

அந்த முன்மொழிவுகளில்:
  1. பௌத்த மதத்துக்கு நிகராக வேற்று மதங்களுக்கு இடமளித்தல் கூடாது. பௌத்த ராஜ்ஜியமாக உருவாக்கப்படல் வேண்டும்.
  2. மகா சங்கத்தையும், சங்கத்தினரையும், பாதிக்கும் எந்தவித சட்டங்களையும் நிறைவேற்றக்கூடாது.
  3. இலங்கையின் ஒரேயொரு அரச மொழியாக சிங்களத்தை மட்டும் யாப்பு ரீதியாக பிரகடனப்படுத்த வேண்டும்.
  4. இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சிங்கள பௌத்தர்களாக இருத்தல் வேண்டும். அத்துடன் ஒற்றையாட்சியை உறுதிபடுத்தவேண்டும்.
  5. 1815 கண்டி ஒப்பந்தத்தில் அமைந்தது போல பௌத்த சாசனத்தையும் பௌத்த கலாசாரத்தையும் பேணிப் பாதுகாப்பது அரசின் கடமையாதல் வேண்டும் என்பதை யாப்பு கூற வேண்டும்.
  6. அரச இலையுடன் கூடிய புராதன சிங்கக் கொடி குடியரசின் கொடியாதல் வேண்டும்.
  7. ராஜ உபதேச சபையொன்று உருவாக்கப்பட்டு, குடியரசின் கீழ் மத நடவடிக்கைகளை கையாளும் ஒரு பதவியை உருவாக்க வேண்டும்.
“பௌத்த மத” கமிட்டி
இப்படியான சூழலின் மத்தியில் அரசியல் நிர்ணய சபையின் கீழ் ஒவ்வொரு விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்கான விசேட குழுக்கள் பல உருவாக்கப்பட்டன. உதாரணத்திற்கு “மக்கள், அரசும் இறைமையும்”, “அரச மொழி”, “நீதிமன்ற மொழி”, “அரச கொள்கை” ஆகியனவற்றுடன் “பௌத்த மதம்” பற்றியும் குழுவும் உருவாக்கப்பட்டது.

“பௌத்த மதம்” பற்றிய குழுவில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த எவருக்கும் இடமிருக்கவில்லை. சிங்களத் தலைவர்கள் ஒன்று சேர்ந்து பௌத்த மதத்துக்கு சிறப்புரிமை கொடுக்கும் திட்டத்தை இப்படித்தான் நிறைவேற்றினார்கள்.

அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரைகள் பற்றிய மக்கள் அபிப்பிராயத்தைத் திரட்டி அவை அந்தந்த குழுக்களுக்கு அனுப்பப்பட்டன.  பௌத்த மதத்துக்கு யாப்பு ரீதியாக சிறப்பிடத்தை வழங்குவதை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட “பௌத்த மதம்” குழுவின் முதல் கூட்டம் 25.02.1972 இல் பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் கூடியது. அக்குழு 1972 மார்ச் மாதம் , 2, 9, 15 ஆகிய திகதிகளில் மீண்டும் பாராளுமன்றக் கட்டிடத்தில் கூடியது.

அரசியலமைப்பு உருவாக்க அமைச்சு “பௌத்த மதம்” பற்றி திரட்டிய கருத்துக்களை அதற்கான கமிட்டியிடம் ஒப்படைத்தது. அந்த குழு தமது பரிந்துரைகளை மேலும் உறுதிசெய்வதற்காக பௌத்த, சிங்கள அமைப்புகளை சந்திப்பதற்கு தீர்மானித்தது. (பார்க்க பேட்டி செய்தி)

மார்ச் 02, 09, 15 ஆகிய மூன்று நாட்கள் சாட்சியங்களைத் திரட்டியது. ஆனால் சிங்கள பௌத்த சக்திகளைத் தவிர வேறெவரிடமும் இருந்தும் கருத்தறியவில்லை. நான்காவது இறுதி நாள் அமர்வு 20.03.1972 – அலரி மாளிகையில் நிகழ்ந்தது. கமிட்டி உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த இறுதிக் கூட்டத்தில் சாட்சியங்கள் அனைத்தையும் முன் வைத்து கலந்துரையாடினர்.

பௌத்த மதம் என்கிற பதத்தை இடலாமா அது மட்டும் போதுமானதா என்கிற வாதம் அங்கு எழுப்பப்பட்டது. பௌத்தம் என்பதற்குப் பதிலாக “பௌத்த சாசனம்” என்கிற பதம் இன்னும் விரிவான தளத்துக்கு எடுத்துச் செல்லும் என்று வரைவிலக்கணம் செய்யப்பட்டது. “உரிய இடம்” என்பதா “பிரதான இடம் / முக்கிய இடம்” என்பதா போன்ற விடயங்களும் விவாதிக்கப்பட்டன.

பௌத்த மகாசங்கத்தினருடனான சந்திப்பின் போது அவர்கள் “பௌத்த மதம்” பற்றிய ஏற்பாடு; கண்டிய ஒப்பந்தத்தின் 5 வது பிரிவின் பிரகாரம் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்கள். மேலும் அவர்கள் மத நிறுவனங்கள் தொடர்பில் அரசுக்கோ, அரச நிறுவனங்களுக்கோ எந்தவித தொடர்புகளும் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரினார்கள். ஆனால் மத நிறுவனங்களுக்கு உரித்தான சொத்துக்கள், நிலங்கள் என்பவற்றை பாதுகாக்க அரச நிறுவனங்களின் நிர்வாகமின்றி மேற்கொள்ள முடியாது என்பது பற்றியும் அவர்களுக்கு சுட்டிக் காட்டப்பட்டது. எனவே பொதுச் சட்டத்தின் பிரகாரம் அவற்றைப் பேணலாம் என்று கமிட்டியினர் கருத்து வெளியிட்டார்கள்.

நீண்ட விவாதத்தின் பின்னர் “அரச மதம்” என்கிற ஒரு ஏற்பாட்டை யாப்பில் உள்ளிடுவதை தவிர்க்கும் யோசனைக்கு மல்வத்து – அஸ்கிரி தரப்பு மகாசங்கத்தினரும் ஒத்துக்கொண்டார்கள்.

மத ஸ்தளங்களின் சுயாதீனத்தை பாதுகாக்கும் ஏற்பாடு உரையாடப்பட்டபோது “கடமை ஆகும்” என்பதற்குப் பதிலாக “அரசின் பொறுப்பாகும்” அல்லது “அரசுக்குப் பொறுப்பாகும்” என்கிற சொற்களை இடுவது பற்றி உரையாடப்பட்டது. இறுதியில் அனைத்தையும் விவாதித்த பின்னர் கமிட்டி கீழ்வரும் வகையில் அதனை வரைவிலக்கணப்படுத்தியது.

“இலங்கை குடியரசு பௌத்த மதத்துக்கு முதன்மைத் தானம் வழங்குதல் வேண்டும் என்பதுடன் 18ஆம்  பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஈ) எனும் பந்தியினால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லாச் சமயங்களுக்கும் உறுதியளிக்கும் அதே நேரத்தில் பௌத்த மதத்தைப் பாதுகாத்தலும் பேணி வளத்தாலும் அரசின் கடமையாதலும் வேண்டும்”
இந்த யோசனையை கமிட்டி ஏகமானதாக முடிவு எடுத்து கமிட்டித் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கையெழுத்துடன் கமிட்டியின் செயலாளர் நிஸ்ஸங்க விஜயரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த தீர்மானத்தை எடுத்துக் கொண்டு கூட்டத்தின் முன்னால் வந்து இரு கரம் குவித்து கும்பிட்டு “நம் இருவருக்கும் சொர்க்கம் கிடைக்க இது போதும்” என்று உணர்ச்சியுடன் பிரதமரைப் பார்த்து அங்கு கூறினார்.

சிங்களக் கட்சிகளின் கூட்டுச் சதி
அந்தக் கூட்டத்திற்கு வந்தவர்களை வரவேற்று நன்றி பாராட்டி பிரதமர் சிறிமா ஆற்றிய உரையில் ஐ.தே.கவின் தலைவரும் முன்னால் பிரதமருமான டட்லி சேனநாயக்கவுக்கு தனது சிறப்பு நன்றியை தெரிவித்தார்.
“மதிப்புக்குரிய சேனநாயக்க அவர்களே இன்று நான் இந்தக் கதிரையில் இருக்கிறேன். நாளை நீங்கள் இந்தக் கதிரையில் அமரக்கூடும் நாம் இப்போது நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அரசியல் யாப்பைத் தயாரித்திருக்கிறோம். ஆகவே நாம் இந்தக் காரியத்தை அரசியல் பாரபட்சமின்றி நாட்டின் தேவை கருதி சிறப்பாக ஆக்கி முடிப்போம்.”
இந்த வேண்டுகோளை டட்லி சேனநாயக்க ஏற்றுக்கொண்டதுடன் யாப்பு குறித்த விவாதங்களில் ஈடுபாட்டுடன் கேள்விகளை கேட்டு, அபிப்பிராயங்களை முன்வைத்தார்.


“பௌத்தமதம் அரச மதமாக ஆக்கப்பட்டால் தலதா மாளிகை போன்ற புராதன ஸ்தலங்கள் அரசின் அதிகாரத்துக்குள் வரும் நிலையில் உங்களால் சங்கப் பிரகடம் செய்யும் நிலையும் வருமல்லவா?” என்று மகா சங்கத்தினரிடம் கேட்டார் டட்லி.

இப்படி ஜென்மப் பகைகொண்ட பிரதான கட்சிகள் அரசை யாப்பு ரீதியில் பௌத்தமயப்படுத்துவதற்காக ஒன்றிணைந்தார்கள்.

1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பானது பல்லின, பல்மத நாட்டில் தனியொரு மதத்தை அரச சலுகைக்குரிய மதமாக பிரகடனம் செய்தது மட்டுமன்றி ஏனைய மதங்களுக்கு அதன் மத உரிமைகளோடு மாத்திரம் மட்டுப்படுத்துகின்ற சதியை கச்சிதமாக முடித்தது.

1956 இல்
1951 இல் பண்டாரநாயக்க ஐ.தே.க வில் இருந்து விலகி எதிர்க்கட்சி வரிசையில் போய் அமர்ந்தார். சிங்கள பௌத்த சக்திகள் கொடுத்த அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் திணறினார் டீ.எஸ். சேனநாயக்க. 

சிங்கள மொழியை அரச மொழியாக ஆக்குவதற்கு எதிராக அவர் இப்படி ஒரு உதாரணத்தைக் கூறினார். “சிங்களத்தில் வைத்தியர்கள் மருந்து எழுதிக் கொடுக்கும் சிக்கலின் காரணமாக அப்பாவி நோயாளிகள் மரணமடைவார்கள்” என்றார். பௌத்தத்தை அரச மதமாக ஆக்கினால் மகாசங்கத்தினர் அரச ஊழியர்களாக ஆக்கப்பட்டுவிடுவார்கள் என்று எச்சரித்தார் டீ.எஸ்.சேனநாயக்க. (ஹரிஸ்சந்திர விஜேதுங்க – “புத்த ஜயந்தியில் சதியும் கொலையும்” நூலில்)

ஜே.ஆர்.
ஜே.ஆர்.1978இல் பதவியேற்று இரண்டாவது குடியரசு அரசியலமைப்பைக் கொண்டுவந்த போதும் பௌத்தத்துக்கு யாப்பின் மூலம் கொடுக்கப்பட்ட அந்தஸ்தில் கைவைக்கத் துணியவில்லை. அப்படியே பேணுவது தான் தனது ஆட்சிக்கு பாதுகாப்பானது என்று நம்பினார். அதேவேளை பௌத்தத்தை இலங்கை அரசின் உத்தியோகபூர்வமான மதமாக ஆக்கும்படி நிர்ப்பந்தங்கள் எழுந்தன. அப்படி செய்தால் அரசு மேற்கொள்ளும் மதம் தொடர்பான நடவடிக்கைகளின் போது அனாவசிய தலையீட்டுக்கு வழி வகுத்துவிடும் என்று ஜே.ஆர்.நம்பினார்.

இலங்கை சிங்கள நிறுவனம் (ஸ்ரீ லங்கா சிங்கள சங்விதான). சிங்கள இளைஞர் முன்னணி (சிங்கள தருன பெரமுன) போன்ற அமைப்புகள் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி ஒரு சிங்கள பௌத்தராக இருப்பதை யாப்பின் மூலம் உறுதி செய்யும்படி போராடின. (அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான தெரிவுக் குழுவின் அறிக்கை 1978, பக்கம். 272). ஆனால் ஜே.ஆர். வேறு வழியில் “சிங்கள பௌத்த” சக்திகளுக்குத் தனது பௌத்தத் தனத்தை வெளிக்காட்டினார். நிறைவேற்று ஜனாதிபதியின் கொடியாக “தர்மசக்கர”த்தை (அசோக சக்கரம்) பொறித்தார். தனது அரசாங்கமும் அசோகனின் “தர்மிஷ்ட” ஆட்சியைப் போன்றது என்று கூறி “தர்மிஷ்ட அரசாங்கம்” என்று பிரகடனம் செய்துகொண்டார்.

அன்று புகுத்திய பௌத்தத்தை இன்று  அவர்களே விரும்பினாலும் கூட நீக்க முடியாத அளவுக்கு அது நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையை மதச் சார்பற்ற நாடாக ஆக்குங்கள் என்று கூற சிறுபான்மை இனத் தலைவர்களுக்கு மாத்திரமல்ல பெரும்பான்மை இன நடுநிலைத் தலைவர்களுக்கும் கூட துணிச்சல் கிடையாது.

நிஸ்ஸங்க விஜயரத்ன (1924-2007)
ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேயாக இருந்தவர். இலங்கை சிவில் சேவையில் பணியாற்றியவர். அனுராதபுரம் நகரப் பாதுகாப்பு சபையின் தலைவர், அதனை புனித பூமியாக ஆக்கும் பணியை முடித்தவர். அனுராதபுர அரசாங்க அதிபராகவும் இருந்தவர். 1977இல் ஜே.ஆர் அரசாங்கத்தில் உயர்கல்வி மற்றும் நீதிமன்ற அமைச்சரானார். இன்றுள்ள கொழும்பு உயர்நீதிமன்ற பெருங்கட்டடத்தை சீனாவின் உதவியுடன் செய்துமுடித்த பெருமை அவருக்கு உரியது. அரசியலில் ஓய்வு பெற்றதன் பின்னர் சோவியத் யூனியனுக்கு இலங்கைத் தூதுவராக இயங்கினார். இவரின் தந்தை எட்வின் விஜயரத்ன; அவர் டீ.எஸ்.சேனநாயக்கவின் அமைச்சரவையில் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர்.

1972 ஆம் ஆண்டு இலங்கையின் தேசிய இலட்சினையையும், தேசியக் கொடியையும் உருவாக்குவதற்கான கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார் நிஸ்ஸங்க. இலங்கையின் தேசியக் கொடியின் நான் மூலைகளிலும் அரச மர இலையைப் புகுத்தி தேசியக் கோடிக்கு பௌத்த முகத்தைக் கொடுத்தவரும் இவர் தான்.

இவரின் வழிகாட்டுதலின் பேரில் தான் ‘மாபலகம விபுலசார தேரர்’ அரச இலட்சினையை வடிவமைத்தார். அது ஒரு சிங்கள பௌத்த இலட்சினையாகவே அமைக்கப்பட்டது. தேசியக் கொடி சிங்கள பௌத்த கொடியென விமர்சிப்போர் பலரின் கண்களுக்கு படாத ஒன்று அந்த அரச இலட்சினை. இன்று வரை அது தான் அரச இலட்சினை. கலாசார அமைச்சின் செயலாளராகவும் அப்போது அவர் இருந்தார்.

அரச இலட்சினையில் உள்ளவற்றின் அர்த்தம்: சிங்கம் (தேசியக் குறியீடு), சிங்கத்தின் வாள் (தேசிய இறைமை), சிகப்பு பின்னணி (சிங்கள இனம்),  தாமரை மொட்டு (புனிதம்), பூச்சாடி (தன்னிறைவு),  நெல்மணி (செழிப்பு), தர்ம சக்கரம் (பெரும்பான்மையினர் பின்பற்றும் பௌத்த தர்மம்), நடுவில் இருக்கும் பெரிய சக்கரம் (இலங்கை), சூரியன், சந்திரன் (இருப்பின் உறுதித்தன்மை), சந்திரனை இடது புறமாக வைத்திருத்தல் (மென்மை), இலட்சினையை சுற்றி இருக்கும் எல்லைக் கோடு (இவை அனைத்தும் ஒற்றையாட்சிக்குள் இருப்பதை உறுதி செய்வது).

1972: “பௌத்த மதம்” கமிட்டியில் இருந்த தனிச்சிங்கள உறுப்பினர்கள்.
1. பிரதமர் சிறிமாவொ பண்டாரநாயக்க (தலைவர்)
2. நிஸ்ஸங்க விஜயரத்ன
3. மைத்திரிபால சேனநாயக்க
4. டீ.பீ.இலங்கரத்ன
5. பீ.பீ.ஜீ.கலுகல்ல
6. எம்.பீ.த இசெட் சிறிவர்த்தன
7. ஹெக்டர் கொப்பேகடுவ
8. கலாநிதி கொல்வின் ஆர். டீ சில்வா
9. ஜோர்ஜ் ராஜபக்ஷ
10. எஸ்.எஸ்.குலதிலக்க
11. டட்லி சேனநாயக்க
12. என்.விமலசேன
13. சந்திர குணசேகர
14. மொண்டி கொபல்லாவ
15. நோயெல் தித்தவெல்ல
தனிச் சிங்கள சாட்சியம்
தனிச் சிங்கள அமைப்புகளிடம், பௌத்தத் தலைவர்களிடமும், நபர்களிடமும் மட்டுமே கருத்து திரட்டியது கமிட்டி.
முதலாவது அமர்வு 1972 மார்ச் 02 சாட்சியம்
அகில இலங்கை மூன்று நிக்காயக்களின் மகா சங்க சபையின் பிரதிநிதிகள்:
கோனபீனுவல புஞாசார ஹிமி, அக்குரட்டியே நந்தசார ஹிமி,பண்டித மாத்தளை சாசனதிலக்க ஹிமி, வெல்லேதொட்ட பஞ்ஞாதஸ்ஸி ஹிமி, படிகொட்டுவெவே சுமனசென ஹிமி 
அகில இலங்கை பௌத்த சம்மேளனம்:
கலாநிதி பீ.பீ.மலலசேகர, பீ.செனரத் குணவர்த்தன, டீ.எல்.எப்.பேதிரிஸ். தோமஸ் அமரசூரிய. லீலாலனந்த கல்தேறா, பீ.சீ.பெரேரா. பீ.டீ.எம்.டயஸ், பீ.டீ.எஸ்.பெர்னாண்டோ. 
கொழும்பு பௌத்த வாலிபர் சங்கம்:
ஈ.எஸ்.அமரசிங்க, என்.எஸ்.ஏ.குணதிலக்க, எஸ்.பஸ்நாயக்க, பீ.சீ.எப்.ஜயரத்ன 
இரண்டாவது அமர்வு 09.03.1972 இல் சாட்சியமளிப்பு
சியம் மஹாநிக்காயவின் மல்வத்து தரப்பு மகாநாயக்கர் அதிபூஜ்ய மடுகல்லே ஸ்ரீ சுமண சித்தார்த்த தம்மசித்தியாஹிதான ஹிமி, சியம் மஹாநிக்காயவின் அஸ்கிரி தரப்பு மஹாநாயக்கர் கொடமுன்னே ஸ்ரீ நாகசேன தாம்மானந்தஹிதான ஹிமி, சியம் மஹாநிக்காயவின் மல்வத்து தரப்பு அனுநாயக்க தேரர் சிரிமல்வத்தே ஆனந்தாஹிதான ஹிமி, சியம் மஹாநிக்காயவின் அஸ்கிரி தரப்பு அனுனாயக்கர் பலிபான சந்தானந்தாஹிதான ஹிமி.
கண்டிய விகாரை – தேவாலய பொறுப்பாளர் சங்கம்:
எச்.பீ.உடுராவன (தியவடன நிலமே), ஏ.ஜே.ரத்வத்த (பஸ்நாயக்க நிலமே), ஜே.என்.பரணகம (பஸ்நாயக்க நிலமே), எஸ்.பீ.தொலபிஹில்லே (பஸ்நாயக்க நிலமே), லக்ஷ்மன் போகவைத்த (பஸ்நாயக்க நிலமே), எச்.எம்.நவரத்ன (பஸ்நாயக்க நிலமே), எச்.எம்.கெ.நாரம்பனாவ (பஸ்நாயக்க நிலமே), எல்.பீ,கரலியத்த (பஸ்நாயக்க நிலமே), மகிந்த பீ.பீ.சேனநாயக்க (பஸ்நாயக்க நிலமே), டீ.பீ.வீரசேகர (பஸ்நாயக்க நிலமே), பீ.தொடன்வெல (பஸ்நாயக்க நிலமே).
சாசன ஊழியர் சங்கம்:
மடிகே பஞ்ஞாசீக மகாநாஹிமி, டீ.எல்.எப்.பேதிரிஸ், ஜே.எம்.கருணாரத்ன
லங்கா மகாபோதி சங்கம்:
ஹெடிகல்லே பஞ்ஞாதிஸ்ஸ நாஹிமி, எம்.எச்.பஸ்நாயக்க, டீ.டீ.எல்லேபொல, டீ.எல்.எப்.பேதிரிஸ், லலித் ஹெவாவிதாரன.
சிங்கள ஜனநாயக சங்கம்:
கலாநிதி தென்னகோன் விமலானந்த, ஸ்ரீ வல்கம்பாய, எல்லேபொல சோமரத்ன, டீ.பீ.நாரம்பனாவ, யூ.பீ.சமரகோன், ஜே.ஈ.செதராமன். 
மூன்றாவது அமர்வு 15.03.1972 சாட்சியமளிப்பு
மோராவத்தே ஸ்ரீ சொமரதன ஹிமி
அகில இலங்கை சங்கங்களின் கூட்டமைப்பு:
ஹேம பஸ்நாயக்க (அரச வழக்கறிஞர்), ஜீ.பீ.காரியவசம், ஞானசேகர சேனநாயக்க, பீ.ஆர்.விக்ரமசூரிய.
அசோக தர்மதூத சங்கம்:
அத்துடுவே ஞானோதய ஹிமி, பீ.எச்.த சொய்சா, ஆனந்த சேமகே, எச்.ஆர்.கோதாகொட
நன்றி - தினக்குரல் 

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates