Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

துட்டகைமுனுவின் அவதாரம் - என்.சரவணன்


சிங்களப் புனைகதை காவியங்களை திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர் நாடகங்களாகவும், மேடை நாடகங்களாகவும் உருவாக்கி ஜனரஞ்சகப்படுத்தி, இனவாத புனைவேற்றி, பரப்பி வரும் போக்கு சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது.

போர் முடிவுற்றதன் பின்னர் அதுவும் கடந்த 3 ஆண்டுகளுக்குள் இந்த போக்கு தீவிரம் பெற்றிருப்பதை பல உதாரணங்களின் மூலம் எடுத்துக் காட்டலாம்.

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடென்று மீள மீள புனைந்து நிறுவுவது என்பது பேரினவாத நிகழ்ச்சிநிரலின் தலையாய திட்டம். தவிர்க்கமுடியாத வேலைத்திட்டமும் கூட. ஆயுதப் போரின் மூலம் தோற்கடிக்கப்பட்ட ஒரு விடுதலைப் போராட்டத்தை கருத்தியல் ரீதியிலும் தோற்கடிக்கும் தேவை நெடுங்காலமாக இருக்கிறது. போரின் பின்னரும் அந்த தேவை பேரினவாதத்துக்கு எஞ்சியிருக்கிறது. அதை அரச கட்டமைப்பு நேரடியாக செய்ய வேண்டியதில்லை. நிறுவனமயப்பட்ட பேரினவாத அமைப்புமுறை அந்த காரியத்தை செவ்வனே நிறைவேற்றும் வலிமையும், வலிமையான அனுசரணையும் கொண்டிருக்கிறது. இதனை நுகர்வதற்காகவே செயற்கையான “பேரினவாத இரசனை” வேகுஜனமட்டதில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுவே சந்தையையும் உற்பத்தி செய்திருக்கிறது.

“அந்த சந்தை போதுமானதில்லை சிங்களவர்கள் ஆதரவளிக்க வேண்டும், இதனைக் காணவேண்டும், உதவி செய்யவேண்டும், பரப்பவேண்டும் அன்று இந்தியாவில் இருந்து சோழர்கள் படையெடுத்து வந்து நம்மை ஆக்கிரமித்து ஆட்சி செய்தார்கள் ஆனால் இன்றோ இந்தியாவில் இருந்து இந்தி தொலைகாட்சி நாடகங்கள் வாயிலாக நம்மை சுற்றிவளைத்து ஆக்கிரமித்திருக்கிறார்கள். எனவே அதனைக் கைவிடவேண்டும். நமது சொந்த சிங்கள நிகழ்சிகளை மட்டும் பாருங்கள்” என்றார் “கெமுனு மாரஜ” (துட்டகைமுனு மகாராஜா) தொலைக்காட்சித் தொடரின் இயக்குனர் சரித்த அபேசிங்க.

கடந்த சில வருடங்களாக மகாபாரதக் கதைகளும், இராமாயணக் கதைகளும் இந்தி மொழியில் இருந்து சிங்களத்துக்கு மொழிமாற்றப்பட்டு தொடராக காண்பிக்கப்பட்டு வருகிறது. இவற்றின் பாதிப்பே சிங்கள இதிகாசங்களையும் அதுபோன்றே தயாரிக்க எடுத்திருக்கும் முயற்சி.

பன்முக வழிகளில் மகாவம்சத்தையும், துட்டகைமுனு – எல்லாளன் போரையும் பரப்பும் பணிகள் சமீப காலமாக அதிகமாகவே காண முடிகிறது. துட்டகைமுனுவின் இந்த புத்துயிர்ப்பு இன்றைய புதிய அரசியல் அவதாரமாகவும், அஸ்திரமாகவும், வடிவமாகவுமே காண முடிகிறது.

தமிழர்கள் வந்தேறு குடிகள், அன்னியர்கள், கள்ளத் தோணிகள், ஆக்கிரமிப்பாளர்கள், பௌத்த மதத்தை அழித்து இந்து மதத்தை நிறுவியவர்கள். பௌத்த விகாரைகளை அழித்தொழித்தவர்கள் என்றெல்லாம் புனைவது சிங்கள பௌத்த பேரினவாத இருப்புக்கு மிகவும் அவசியமானது. அதனை திரும்பத் திரும்ப பல்வேறு வடிவங்களில் புனைவதும், நிறுவுவதும், நம்பவைப்பதும், வெறுப்புணர்வை ஏற்படுத்துவதும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்துக்கு பலம் சேர்ப்பவை.

அதுமட்டுமன்றி மாறாக இப்பேற்பட்ட தமிழர்களை எதிர்த்து நின்றவர்கள் சிங்களவர்கள், பௌத்தர்கள், தேச பக்தர்கள், மண்ணின் மைந்தர்கள், மா வீரர்கள், நல்லவர்கள், மனிதாபிமானமுள்ளவர்கள் என்றெல்லாம் இந்த கதைகளின் வாயிலாக புனைவதும், நிறுவுவதும் அவர்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது.

இலங்கையின் பேரினவாத வளர்ச்சிமுறையை நோக்கினால் அது தன்னை பலப்படுத்தவும் வளப்படுத்தவும், நெறிப்படுத்தவும், வியாபிக்கவும், உறுதியாக நிலைநிறுத்தவும் மேற்கொண்டு வந்த பல வழிகளைக் காண முடியும். இன்று அப்பேரினவாதத்துக்கு உறுதியான ஒரு அரசு இருக்கிறது. இன்று நன்றாக நிருவனமயப்பட்டிருக்கின்ற பேரினவாதத்துக்கு எந்த தனி மனிதரின் துணையோ, தனி அமைப்பின் துணையோ நிரந்தரமாக தேவையில்லை. இன்று நிலைபெற்றுள்ள பேரினவாத சித்தாந்தத்துக்கு மாறி மாறி, தலைவர்களும், அமைப்புகளும் வந்து போவார்கள். அது போல அந்தந்த காலத்துக்கு தேவையான நிகழ்ச்சிநிரலை அந்தந்த சக்திகள் தலைமையேற்று அடுத்த சக்திகளிடம் கைமாற்றி சென்று விடும். அல்லது புதிய சக்திகள் கையேற்றுக் கொள்ளும். அடுத்த நிலைக்கு அதைக் கொண்டு சேர்த்து விடும். 

அரச இயந்திரத்தின் சகல அங்கங்கள் மாத்திரமல்ல, சிவில் அமைப்புகள், சிவில் பண்பாட்டு முறை, நடத்தை என ஒன்றுவிடாமல் நிறுவனமயப்படுத்தியிருக்கிறது. அப்பேர்பட்ட சிங்கள பௌத்தத்தின் சித்தாந்த பலத்துக்கு துணையாக அது வைத்திருக்கும் முக்கிய ஆயுதம் தான் “மகாவம்சம்” என்கிற "புனித" சிங்கள வரலாற்று காவியம். எப்படி இந்தியாவில் இந்துத்துவ பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தும் ஆயுதமாக கற்பனாபூர்வமான புனைவுப் புனித காவியமான இராமாயணத்தை பயன்படுத்திவருகிறதோ, அது போல இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதமும் தமது உண்மையான வரலாறு என்பது புனைவுக் காவியமான “மகாவம்சம்” தான் என்று நம்புகிறது. தமிழின விரோதப் பிரசாரங்களுக்கு பூடகமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் வரலாற்று ஆவணம் மகாவம்சம்.

அதனை எழுதிய மகாநாம தேரர் கூட அவருக்கு முந்திய 6 நூற்றாண்டு கால வரலாற்றையும் சேர்த்து எழுதுகிறார் என்றால் அவருக்கு முன்னர் எழுதப்பட்ட தீபவம்சம் என்கிற வரலாற்று நூலைத் தழுவியே எழுதினாலும் கூட மக்களின் வாய்மொழி வரலாறுகளை கேட்டுணர்ந்தே தான் எழுதியதாகவே மகாவம்சத்தில் குறிப்பிடுகிறார். மகாநாம தேரர் இருந்த காலத்தில் வரலாற்றை ஆய்வு ரீதியாக எழுதும் புலமையும் அவருக்கு இருக்கவில்லை, அதற்கான வசதிகளும் அன்று இருக்கவில்லை. இல்லையென்றால்  சிங்கத்துக்குப் பிறந்தவர்களே சிங்களவர்கள் என்று சாரப்பட அவர் எழுதியிருக்கமாட்டார்.

இந்த பின்னணியில் வைத்தே மகாவம்சத்தை நாம் காணவேண்டியிருக்கிறது. இலங்கையின் சிங்கள பௌத்த பண்பாட்டு வரலாறு என்பது “மகாவம்ச” புனைவுகளால் கட்டப்பட்டது என்பதை எவரும் அறிவர்.

மகாவம்சத்துக்கு அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்துக்கு சிறந்த உதாரணம் 1939இல் நடந்த கலவரம். ஜீ. ஜீ.பொன்னம்பலம் மகாவம்சம் பற்றியும் அதில் உள்ள சிங்கள கதாநாயக பாத்திரங்கள் பல தமிழர்களே என்று கூறியதால் இலங்கையில் ஒரு கலவரமே ஏற்பட்டது. அதுவே இலங்கையில் முதலாவது இனக் கலவரமாகக் கொள்ளப்படுகிறது.

“காமினி அபய” துஷ்ட காமினி / துட்டகாமினி – துட்டுகெமுனு போன்ற பெயர்களால் அழைக்கப்படும் துட்டகைமுனு சிங்களவர்களின் தலையாய வரலாற்று நாயகன். பிரதான காவியத் தலைவன். தமிழர்களுக்கு எதிரான குறியீடாக ஆக்கப்பட்டிருப்பவன். புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் “கெமுனு பலகாய” என்கிற படைப்பிரிவு இலங்கையின் இராணுவத்தில் உருவாக்கப்பட்டதன் பின்னணி கவனிக்கத்தக்கது.  கெமுனு பலகாய (கெமுனு படை) என்கிற பெயரில் இனவாத அமைப்புகள் கூட இருக்கிறது. அதன் இணையத்தளத்தையும் முகநூல் பக்கத்தையும் கூட நீங்கள் காணலாம். 

Maharaja Gemunu by maukp on Scribd
“மகாரஜ கெமுனு”
ஜயந்த சந்திரசிறி “மகாரஜ கெமுனு” எனும் பெயரில் ஒரு நூலை வெளியிட்டிருந்தார். 2010ஆம் ஆண்டு திவய்ன பத்திரிகையில் தொடராக வெளியிடப்பட்ட இந்த கதை பின்னர் 277 பக்கங்களில் நூலாக வெளியிடப்பட்டு பின்னர் அதையே திரைப்படமாக அதே நூலாசிரியரால் உருவானது. ஜயந்த சந்திரசிறி ஏற்கெனவே பல பிரபல தொலைக்காட்சி நாடகங்களையும், திரைப்படங்களையும் இயக்கிய அனுபவமுள்ளவர். ஆனால் தற்போதைய இனவாத சந்தையை சரியாக இனங்கண்டு தருணம் பார்த்து இந்த திரைப்படத்தை இயக்கியிருகிறார் என்றே கூற வேண்டும். நூலுக்கான அணிந்துரையை எழுதியிருப்பவர் இலங்கையின் பேர்பெற்ற இனவாதியாக அறியப்பட்ட குணதாச அமரசேகர. பேராசிரியர் நளின் டி சில்வா இத் திரைப்படம் குறித்து தனது கட்டுரைகளுக்கு ஊடாகவும், விரிவுரை, தொலைகாட்சி உரைகளுக்கு ஊடாகவும் வழங்கியிருக்கிற சான்றிதழே போதும் இதன் இனவாத உள்ளடக்கத்தை அறிந்துகொள்ள.

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த நூலின் வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்கியவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ. குணதாச அமரசேகர, விமல் வீரவங்ச போன்றோர் பிரதம விருந்தினர்கள். அந்த நிகழ்வு குறித்து பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் வெளிவந்த படங்களும் செய்திகளும் இன்னமும் பார்வையிடலாம்.

இந்த நூலாசிரியர் அத்திரைப்படத்தை அப்படியே திரைப்படாமாக வெளிகொண்டர்ந்தார். பரபரப்பான விளம்பரங்களுடன் periya எதிர்பார்ப்புகளை உண்டுபண்ணி இந்த திரைப்படத்துக்கு பெரிய விளம்பரங்களுடடனும் எதிர்பார்ப்புடனும் வெளிவந்தது.


திரைப்படத்தில் தமிழர்களுடன் யுத்தம் செய்யக் கோரி எல்லாளன் தனது தகப்பனை கேட்டுக்கொண்ட போதும் அதை மறுத்த தகப்பன் காவந்திஸ்ஸவுக்கு பெண்களின் அலங்கராப் பொருட்களை அனுப்பி அவமானப்படுத்தி விட்டு வெளியேறுகிறான். ஆத்திரமுற்ற தந்தை காவந்திஸ்ஸ காமினிக்கு “துஷ்ட காமினி” (துட்டகைமுனு) என்று அழைக்கிறார்.  தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் சாதாரண விவசாய குடும்பத்தில் இணைந்து விவசாயம் செய்து கொடு அங்கேயே திருமணமும் முடித்துக் கொண்டு தன்னை யுத்தத்துக்கு தயார் படுத்திக் கொண்டிருக்கிறான். தருணம் வந்த போது எல்லாளனை அரச பதவியேற்கும் படி அரன்மனையிலிருந்து ஊர்வலமாக வந்தவர்கள் சாதாரண விவசாயி தொற்றத்திலிருந்த கெமுனுவை முட்டிபோட்டு கேட்டுக்கொள்ளும் காட்சி உணர்ச்சி பூர்வமாக இருக்கும்.


“கெமுனு மாரஜ”
“ஹிரு” தொலைக்காட்சிச் சேவையில் வார இறுதி நாட்களில் இரவு 7.30க்கு தொடராக தற்போது ஒளிபரப்பப்பட்டு வரும் தொடர்  “கெமுனு மாரஜ”. துட்டகைமுனுவின் உருவாக்கம், வளர்ச்சி, சேவை எல்லாளனின் கொடுங்கோன்மை எல்லாளனுடனான போர் என அத் தொடர் பரபரப்பாக தொடர்கிறது. பிரமாண்டமாக எடுக்கப்பட்சிறந்த தொழில்நுட்பங்களுடன் பிரமாண்டமாக காண்பிக்கப்படுகிறது. இரு வருடங்களுக்கு முன்னர் இதே உள்ளடக்கத்தோடு வெளியான “மகாராஜ கெமுனு” என்கிற திரைப்படத்தில் துட்டகைமுனுவின் தகப்பன் காவன்திஸ்ஸவாக நடித்த சிறியந்த மென்டிஸ் இந்த தொடரில் எல்லாளனாக நடித்துள்ளார். விபூதி, குங்குமப் பொட்டு வைத்து அரியாசனத்தில் வில்லத்தனமாக வீற்றிருப்பார்.


அதேவேளை துட்டகைமுனு வீரத்துடனும், சாந்தமான – ராஜதந்திரத்துடனும், மனிதாபிமானத்துடனும் இருப்பதாக காட்டப்படுகிறது. அதே மகாவம்சத்தில் எல்லாளன் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்ற நல்ல பக்கங்கள் கூட போதுமான அளவு காண்பிக்கப்படுவதில்லை. டெசம்பர் 25உடம் அது 20 அங்கங்களைத் தொட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் இயக்குனர் சரித்த அபேசிங்க வாரத்துக்கு பலமுறை முகநூலில் நேரடி வீடியோமூலம் வாரத்துக்கு பல முறை இந்த தொடர் குறித்த கருத்துக்களை ஆயிரக்கனக்காநோருடன் பரிமாறி வருகிறார். சிங்கள பௌத்த பூமி அந்நியரால் பறிபோகும் இந்த காலகட்டத்த்தில் நீங்கள் இந்த தொடரைக் காண்பது அவசியம் என்று திரும்பத் திரும்ப கூறி வருகிறார். 


“கஞ்சாயுத” விளையாட்டு
மகாவம்சத்தின் பாதிப்பின் விளைவாக சிங்கள இளம் தலைமுறையினர் சமீபத்தில் உருவாக்கிய ஒரு கணினி விளையாட்டு இரு உலக அளவில் விளம்பரபடுத்தப்பட்டு வருகிறது. முப்பரிமாண முறையில் மிகவும் அதி தொழில்நுட்ப கணினி அறிவுடன் தயாரிக்கப்பட்டுள்ள அந்த விளையாட்டுக்கு அவர்கள் வைத்திருக்கின்ற பெயர் “கஞ்சாயுத” (Kanchayudha). உலகில் பன்னாட்டு நிறுவனங்கள் பல வெவ்வேறு மொழிகளில் வெளியிடுவதற்கான ஒப்பந்தத்தை கோரியிருக்கின்றன என்று அதனைத் தயாரித்த அணியின் தலைவர் சமீரா பிரசாத் ஜயசிங்க அறிவித்திருந்தார். MacOS, Playstation 4, Xbox, Android போன்ற இயங்கு தளங்களில் இயனகக் கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டிருகிறது. கூடிய இன்னும் ஒரு சில வாரங்களில் அது முழுமையாக பாவனைக்கு வருகிறது. இலங்கை இளைஞர்களின் சாதனையாக இது ஊடகங்களிள் விளம்பரப்படுத்தப்பட்டாலும். அதன் அரசியல் சமூக விளைவு அவ்வளவு குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல.

இந்த வீடியோ கேமின் கதாநாயகன் நந்தமித்திர. அதாவது எல்லாளனுடனான சண்டையில் துட்டகைமுனுவுக்கு பக்கபலமாக இருந்த பிரதான தளபதிப் பாத்திரம். சிங்களத்தில் “யசமகா யோதயோ” என்பது எல்லாளனின் 10 இராட்சத தளபதிகளைக் குறிக்கிறது. அந்த இராட்சதர்களில் ஒருவன் தான் நந்தமித்திர. அவர்கள் பற்றி ஏராளமான சாகசக் கதைகள் மகாவம்சத்தில் குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக எல்லாளனின் படைகளை அழிப்பதில் அவர்கள் கொண்ட இராட்சத குரூரத்தனம் குறித்த தகவல்கள் கவனிக்கத்தக்கவை.

கேள்வி என்னவென்றால் இந்த விளையாட்டின் மூலம் கதாநாயகன் நந்தமித்திர இலக்கு வைத்து அழிப்பது யாரை. தமிழர்களையும், தமிழர் படையையும் அல்லவா. எல்லாளனின் படையில் உள்ள முக்கிய தளபதிகளைத் தேடிக் கொல்லும் கதையே இந்த கேமின் இலக்காக இருக்கிறது. எல்லானின் படையில் உள்ள பல மகாவம்ச பாத்திரங்கள் இதில் உள்ளன. இத்தனை காலம் எழுத்திலும், பேச்சிலும் பயன்படுத்திய தமிழர் விரோத மகாவம்ச உணர்சியூட்டுதல் இப்போது சிறுவர்களுக்கு நேரடியாக இந்த கேமின் மூலம் கொடுக்கப்படப்போகிறது. அவர்களின் கைகளில் கிடைக்கும் தொழில் நுட்ப சாதனங்களுக்கூடாக தமிழர் படையை ஆக்ரோஷமாக துவம்சம் செய்யும் மன நிலையைத் தான் இந்த கேம்கள் கொடுக்கப் போகின்றன.


“சீ ரஜ”
வாரம் தோறும் சனிக்கிழமைகளில் 8.30 க்கு "சீ ரஜ" (The Lion King) என்கிற பெயரின்  ஒரு தொலைகாட்சி தொடர் சுவர்ணவாகினி சானலில் ஒளிபரப்பட்டு வருகிறது. சிகிரிய காலத்துக் கதை. மன்னர் தாதுசேனனை  (பதவிக் காலம் கி.பி. 463 - 479) கொன்றுவிட்டு ஆட்சியேறினான் மகன் காசியப்பன். மன்னரின் இன்னொரு மனைவியின் மகனான பட்டத்து இளவரசன் முகலன் தப்பி தமிழ்நாடு சென்று மீண்டும் அங்கிருந்து தமிழ் அரசர்களின் துணையுடன் படையெடுத்து வந்ததும் தன்னை வாளால் வெட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டான். முகலனிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கட்டப்பட்டதே சிகிரிய மலையிலிருக்கும் கோட்டை. அதைக் கட்டியது தாதுசேனனா, காசியப்பனா என்கிற குழப்பம் இன்னமும் நீடிகிறது.

இந்தியாவிலிருந்து படையெடுத்த பாண்டு அரசரும் அவரது பிள்ளைகளும் ஆட்சிபுரிந்த போது அவர்களைத் தோற்கடித்த சிங்கள அரசனாக தாதுசேனனை முன்னிறுத்துகிறது மகாவம்சம். தாதுசேனனின் பிறப்பையறிந்த பாண்டு அரசன், அவனை அழித்தொழிப்பதற்காக பல கிராமங்களை துவம்சம் செய்கிறான். 

அரசனை “பாண்டு” என்று அழைப்பதால் அவர்கள் பாண்டிய நாட்டிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகின்ற போதும் சிங்கள வரலாற்று நூல்களான ராஜாவலிய, பூஜாவலிய போன்றவை அவர்களை சோழர்கள் என்றே குறிப்பிடுகின்றன. சோழர்களை சிங்களத்தில் “சொலின்” என்றே அழைப்பார்கள். மோசமான ஆக்கிரமிப்பாளர்களாக வரலாறு நெடுகிலும் அவர்களைப் பற்றி குரிப்பிடப்படுகின்றது. அப்பேர்பட்ட தமிழரை ஐந்தாம் நூற்றாண்டில் தோற்கடித்த அரசனாக தாதுசேனனை முன்னிறுத்துவதே இந்த தொலைக்காட்சித் தொடரின் மையம். டிசம்பர் மாதத்தோடு 40 அங்கங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது.

இதில் இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. சோழ மன்னனிடம் இருந்து தாதுசேனனை பாதுகாத்து, வளர்த்தவர் தான் மகாநாம தேரர் என்றும் மகாவம்சத்தை எழுதிய அதே மகாநாம தேரர் தான் அவர் என்றும் நிறுவ முயற்சிக்கிறார் இதன் திரைக்கதையாசிரியர் ஜெக்சன் அன்ரனி. இதன் இயக்குனரும் ஜெக்சன் அன்ரனி தான். அதுமட்டுமல்ல தாதுசேனனின் தாயாரின் சகோதரர் தான் மகாநாம தேரர் என்றும், ஆகவே தாதுசேனனின் மாமனார் அவர் என்கிறார் அவர்.

பிணத்தை எரிக்கும் முன் அதைச் சுற்றிச் சுற்றி சோழர்களை சபித்து ஒப்பாரிப் புலம்பும் ஆக்ரோஷமான பெண்ணின் பாத்திரம், அந்நிய சோழர்களை எதிர்த்து முரசறைகையில் காண்பிக்கப்படும் மக்கள் எதிர்ப்பு உணர்ச்சியும் அவர்களின் கோஷங்களும், சிங்களத்தனத்தின் வீரப் பெருமிதமாக காண்பிக்கப்படுகின்றன.
குருகே பார்க்
ஜா எல பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் “குருகே பார்க்” எனப்படும் பொழுதுபோக்குப் பூங்கா சிறுவர்களைக் கவரும் பல விளையாட்டுக்களைக் கொண்ட ஒரு மையம். ஏராளமான பாடசாலை சிறார்களைக் கவர்வதற்காக அவர்கள் மகாவம்சக் கதைகளில் குறிப்பான சிலவற்றை சிலைகளாகவும், ஓவியங்களாகவும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருகிறார்கள். துட்டகைமுனு – எல்லாளன் கதை அதில் முக்கியமானது. எப்போதும் போல அங்கும் எல்லாளனும், அவனது படையினரும் கருப்பாகவும் சிங்களவர்கள் வெள்ளையாகவும் காட்டப்பட்டிருக்கிறார்கள். பொதுவாக சிங்களவர்கள் மத்தியில் தமிழர்களை சித்திரிக்கும் குறியீடுகளாக நெற்றியில் விபூதி, மீசை ஆகியவற்றுடன் கறுப்புத் தோலைக் காண்பிக்கும் போக்கு நெடுங்காலமாக இருந்து வருவதை அவதானிக்கலாம்.


கண்டி மன்னன் வீரனில்லையா
இப்படித்தான் 2 வருடங்களுக்கு முன்னர் “எஹெலபொல குமாரிஹாமி” என்கிற ஒரு திரைப்படம் வெளியானது. கண்டி அரசவையில் அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை 1815 இல் ஆங்கிலேயர்களுக்கு காட்டிக்கொடுத்த எஹெலபொலவின் குடும்பத்தை பகிரங்கமாக மரண தண்டனை நிறைவேற்றுவதாக எடுக்கப்பட்ட திரைப்படம் அது. அத் திரைப்படத்தில் அரசன் ராஜசிங்கன் மோசமான பெண் பித்தனாகவும், குடி காரனாகவும், தோற்றத்தில் ஒரு வில்லனைப் போலவும் சித்திரிக்கப்பட்டிருக்கும். 

1818 ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சியை இலங்கை விடுதலைப் போராக புனைந்து வரும் சிங்கள வரலாறு அந்த கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய கெப்பட்டிபொல, எஹெலபொல ஆகியோர் ஆங்கிலேயர்களுக்கு கண்டி அரசனைக் காட்டிக்கொடுத்து பதவியாசைக்காக இலங்கையை ஆங்கிலேயர்களுக்கு விற்றவர்கள் என்பதை மறைத்தே வந்துள்ளது. ஆட்சியேறிய ஆங்கிலேயர்களால் தாம் ஏமாற்றப்பட்டதாலேயே ஆங்கிலேயர்களை எதிர்க்க கிளர்ச்சி தொடங்கியவர்கள் அவர்கள். 

அதுமட்டுமன்றி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் தொடுத்த உண்மை வீரன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தான். ஆனால் சிங்கள வரலாறு ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை வீரனாக போற்றுவதில்லை. அதேவேளை கெப்பட்டிபொல, எஹெலபொல ஆகியோரை தமது வரலாற்று வீரனாக மெச்சும் கோமாளித்தனம் நிகழ்வது தற்செயல் அல்ல. ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்கிற தமிழ் மன்னனை ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட இறுதி அரசன். அவன் தமிழன் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்வதில் உள்ள கஷ்டத்தை வேறென்னவென்று சொல்வது. இலங்கையில் தமிழ் அரசர்களின் வரலாறைச் சொல்லும் இத்தகைய சினிமாப் படைப்புகளைத் தான் தமிழர்கள் வெளிக்கொணரக் கூடிய அரசியல் சூழல் தான் இருக்கிறதா.


பேராசிரியர் சந்திர விக்கிரமகமகே திருத்திய "மகாவம்சம்" பதிப்பு கடந்த ஜூன் மாதம் 14 அன்று பிரதமர் ரணிலிடம் ஒப்படைக்கும் வைபவத்தில் ரணில் கூறினார் "மகாவம்சம் இன்றேல் இந்தியாவுக்கும் வரலாறு இல்லை" என்று.

மகாவம்ச மனோநிலையால் கோலோச்சப்படுவதே இலங்கை ஆட்சி என்றால் அது மிகையில்லை. மகாவம்ச சித்தாந்தம் என்பது இன்றைய இனப்பிரச்சினையின் கொதிநிலைக்கு முக்கிய காரணிகளில் ஒன்று.


நன்றி - தினக்குரல்

மேலதிக தகவல்களுக்காக...

மலையக மக்களிடம் ஐ. தே. க. மன்னிப்பு கேட்குமா? - என்னெஸ்லி‘யாழ்ப்பாண பொது நூலகம் எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்த மக்களிடம் மன்னிப்பு கோரியதைப்போன்று தோட்டப்புற மக்களின் இன்றைய நிலைக்காக அவர்களிடமும் மன்னிப்புக் கோரவேண்டும்’ என்று ஜே.வி.பி.தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும். எனினும் ஐ.தே.க மன்னிப்பு கேட்குமா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.

இது ஒட்டுமொத்த மலையக மக்களுடைய கடுமையான உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் அதேவேளை அவர்கள் காலங்காலமாக இந்த நாட்டில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் அவர்களை உதாசீனம் செய்து தொடர்ந்து அடிமைகளாகவும் உரிமைகளை வழங்காமல் வறிய நிலையில் வைத்திருப்பதற்கு கண்டனத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மலையக மக்களுக்காக பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. சரியான தகவல்களை புள்ளி விபரத்துடனும் தகுந்த ஆதாரங்களுடனும் வெளியிட்டு வருகின்றது. அந்தவகையில் அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட ஐந்து அமைச்சுகள் மீதான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் (09 ஆம் திகதி) கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்திருக்கிறார்.

தமது உரையில் அவர் 180 வருடங்களுக்கு மேலாக மலையக தோட்ட மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் பேரனர்த்தங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் இந்த நாட்டின் ஆட்சியாளர்களே பொறுப்புக் கூறவேண்டும். இந்த நாட்டுக்கான தேசிய வருமானத்திற்கு பெரும்பங்கினை இவர்கள் ஈட்டிக் கொடுத்துள்ளனர். ஆடைத் தொழிற்துறை முன்னேற்றமடைவதற்கு முன்னர் நாட்டின் ஏற்றுமதி துறையில் தேயிலைக் கைத்தொழில்துறையே பெரும்பங்கினை வகித்திருக்கின்றது.

அந்த மக்கள் எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆற்றியுள்ள சேவை கணக்கில் அளவிட முடியாததொன்றாகும். ஆனால் அந்த மக்களை இந்த நாட்டின் பிரஜைகளாக ஏற்று அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோமா? அந்த மக்களுக்கு குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தையேனும் வழங்கத் தவறியுள்ளோம்.

எனவே யாழ். நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு பிரமர் ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரியிருந்தார். ஆனால் தோட்டப்புற மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை குறித்தும் அந்த மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

தோட்டப்புற மக்களின் வாக்குகள் மூலம் எம்.பிக்களாகவும் அமைச்சர்களாகவும் பதவிகளைப் பெற்ற மலையகத் தலைவர்கள் தமது சமூகத்திற்குரிய நலன்களைப் பெற்றுக் கொடுக்காமல் சொந்த நலன்களுக்காகவே அதனைப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

1948 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இலங்கை குடியுரிமைச் சட்டத்துக்கு அமைவாக பெரும்பாலான இந்திய வம்சாவளி தோட்டத் தமிழர்கள் இந்த நாட்டு குடியுரிமையை இழந்து நாடற்றவர்களாகினர். இதன் காரணமாகவே வாக்களிக்கும் உரிமையும் இல்லாமல் போனது. அன்றைய தமிழ் தலைவர்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே அரசாங்கம் குடியுரிமையை பறித்தது. இது மலையகத் தமிழருக்குக் கிடைத்த முதலாவது அடியாகும்.

அதன் பின்னர் இலங்கை – இந்தியாவுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழர்களின் அரைப்பகுதியினரை இந்தியாவுக்கு திருப்பியனுப்பவும் ஏனையோருக்கு இலங்கை குடியரிமை வழங்கவும் இணக்கம் காணப்பட்டது. இந்த நாட்டுக்கு உழைத்துக் கொடுத்தவர்கள் மீண்டும் சொந்த மண்ணுக்கு அகதிகளாக திருப்பியனுப்பப்பட்டமை மற்றொரு அடியாகும்.

பின்னர் 1983 ஜுலை மாதத்தில் இடம்பெற்ற கலவரத்தில் இலட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இது இலங்கை வரலாற்றில் என்றும் மறக்க முடியாத சம்பவமாகும். இதுவும் ஐ.தே.க .ஆட்சியிலேயே இடம்பெற்றது. இதுபோன்று காலத்துக்கு காலம் இடம்பெற்ற தாக்குதல்களில் ஒன்றுமறியாத அப்பாவி தோட்ட மக்களே பாதிக்கப்பட்டனர்.

1979 ஆம் ஆண்டு புதிய அரசியல்யாப்பிற்கமைய சகல இந்திய வம்சாவளி தமிழருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது. எனினும் குடியுரிமையும் வாக்களிப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டதே தவிர நாட்டின் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் உரிமைகள் எதுவும் அதில் உள்ளடக்கப்படாத நடைமுறை சிக்கல்களைக் கொண்டுள்ளது.

காணியுரிமை, வீட்டுரிமை மட்டுமன்றி தோட்ட மக்கள் உள்ளூராட்சி சபைகளுக்குரிய உரிமைகளை பெறமுடியாத சிக்கல் நிலைமை தொடர்கிறது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சகல துறைகளிலிலும் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். உழைப்புக்கேற்ற சம்பளத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நீண்ட போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.

எனவே நீண்டகாலமாக பாகுபடுகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் உள்ளாகி வரும் மலையக தொழிலாளர் சமூகத்தின் இன்றைய நிலைமைக்கு இந்நாட்டில் மாறிமாறி ஆட்சி செய்யும் அரசாங்கங்களே காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது. அது எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் சரி அவை மலையக மக்கள் விடயத்தில் ஒரே கொள்கையையே கடைப்பிடித்து வந்துள்ளன – வருகின்றன.

இதேவேளை ஜே.வி.பி தலைவரின் கருத்துத் தொடர்பாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவருமான மனோ கணேசன் தமது அபிப்பிராயத்தை தெரிவித்திருக்கிறார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட குடியுரிமை பறிப்பு, வாக்குரிமை பறிப்பு என்பன மலையகத் தமிழரின் இருப்பையே அசைத்துவிட்டன என்பதில் மாற்றுக்கருத்து இல்லையெனவும் எனவே ஐ.தே.க மலையக மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியிருப்பது நியாயமானதுதான் என்றும் தெரிவித்திருக்கிறார். 

இதே கருத்தினை மலையக சமூக ஆர்வலர்கள், தலைவர்கள் என பலரும் கொண்டிருப்பார்கள் என்பது உண்மை. அதேவேளை கடந்த காலத்தில் மலையக மக்கள் தொடர்பில் ஜே.வி.பி. கொண்டிருந்த நிலைப்பாடு பற்றியும் அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியிருந்தார். அதனையும் மறுப்பதற்கில்லை. எனினும் காலம் கடந்தாவது புதிய தலைமையின் கீழ் செயற்படும் ஜே.வி.பி. யிடம் மலையக மக்கள் பற்றிய எண்ணக்கரு மாற்றம் பெற்றிருப்பதை வரவேற்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் ஜே.வி.பி. மலையக மக்களின் உரிமைகளுக்காகவும் நலன்புரி விடயங்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

நன்றி - வீரகேசரி

மலையக தேசிய பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவம் - அருள் கார்க்கி


இலங்கையின் சுமார் 15 தேசிய பல்கலைக்கழகங்கள் இன்று உயர் கல்வியில் பங்களிப்பு செய்துவருகின்றன. இந்நாட்டின் முதலாவது பல்கலைக்கழகமே மலையகத்தில் தான் அமைந்ததை நாம் கவனத்தில் கொள்ளத்தக்கது. எனினும் சுமார் 15 இலட்சம் மக்கள் தொகையினைக் கொண்ட மலையக இனத்தின் சார்பில் ஒரு தேசிய பல்கலைக்கழகம் இன்றுவரை அமையாதது எமது அரசியல் இயலாமையை பறைசாற்றும் உறுதியான ஆதாரமாகும்.

மலையகத்துக்கென தனியான ஒரு பல்கலைக்கழகம் அவசியம் என்று இன்று பரவலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் அதனை நடைமுறை சாத்தியமாக்கும் நகர்வுகள் பாராளுமன்றத்தின் மூலமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனினும் உதிரிகளாக ஆங்காங்கே சிலர் கூச்சலிட்டுக் கொண்டிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

சிறுபான்மை இனத்தின் சார்பில் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஈழத்து சமூகத்தின் மையப்புள்ளியாக விளங்குகின்றது. யாழ்ப்பாணச் சமூகத்தின் கலை, கலாசார அடையாளமாக மட்டுமின்றி முக்கிய சமூக நகர்வுகளை தீர்மானிக்கும் சக்தியாக யாழ். பல்கலைக்கழகம் விளங்குகின்றது. மலையக தேசியம் குறித்து விவாதிக்கப்படும் இக்காலச் சூழலில் எம்மக்களின் வாழ்வியல் ஆவணப்படுத்தலுக்கான ஒரு மத்திய நிலையமாக மலையக பல்கலைக்கழகம் அமையும் என்பதில் தவறில்லை. காரணம் பல்லின கலாசாரத் தன்மை கொண்ட இலங்கையை ஒத்த நாடுகளில் தேசிய கல்விக் கட்டமைப்பின் கீழ் செயற்படும் இனங்கள் சார்ந்த பல்கலைக்கழகங்கள் உண்டு. அந்தந்த இனங்கள் சார்ந்த ஆய்வுகள், ஆவணப்படுத்தல் சார்ந்த செயற்பாடுகளில் அப்பல்கலைக்கழகங்கள் காத்திரமான பங்களிப்பைச் செய்கின்றன. இவ்வாறான உதாரணங்களை ஆய்வு செய்தல் எமக்கு பயனுடையதாக இருக்கும்.

உலகிலேயே அதிகமான பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. அரச பல்கலைக்கழகங்களுக்கு அதிகமான தனியார் பல்கலைக்கழகங்களும் உயர் கல்வியில் பங்களிப்புச் செய்கின்றன. இவ்விடயத்தில் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் கல்வியில் பங்களிப்புச் செய்ய வேண்டிய கடமை அயல் நாட்டுக்கு உண்டு எனும் நிலையில் மலையகத்தில் ஒரு தேசிய பல்கலைக்கழகம் அமையும் சந்தர்ப்பத்தில் இந்திய பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். அது மட்டுமன்றி சர்வதேச தரம் வாய்ந்த கற்கை நெறிகளை அறிமுகம் செய்து எமது சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைத்துக் கொள்ளலாம்.

கியூபா நாட்டின் பல்கலைக்கழகங்கள் மிகத் தரமானவையாக இன்று காணப்படுகின்றன. எம்மைப் போன்ற இன அடக்கு முறையை எதிர்கொண்ட ஒரு நாட்டின் உயர்கல்வி இன்று விதந்துப் பாராட்டப்படுமானால் அதற்கான காரணங்களை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

சாத்தியமான உதாரணங்களை ஆய்வுசெய்து தரமான வெளியீடுகளை தரக்கூடிய ஒரு கல்வி நிலையமே இன்று எமக்கு தேவை. அதேபோல் ஆளணி விடயத்தை எடுத்துக் கொண்டால் உயர் கல்வியில் திறமையான விரிவுரையாளர்கள், நிர்வாகிகள் இன்று மலையகம் சார்ந்து உருவாகி வருகின்றனர். சமூக நோக்கோடு உழைக்கும் இவர்களின் அறிவையும் திறனையும் ஒரு புள்ளியில் குவிவடையச் செய்யும் ஒரு விடயமாக மலையக தேசிய பல்கலைக்கழகம் அமைய வேண்டும்.

மலையகம் சார்ந்த ஆய்வுகள் சர்வதேச மட்டத்துக்கு எடுத்துச் செல்ல இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு.

 மாணவர் அனுமதியிலும் மலையக சமூகத்துக்கான முக்கியத்துவமும் முன்னுரிமையும் இங்கு வழங்கப்பட வேண்டியதன் தேவைப்பாடு உள்ளது. காரணம் ஏனைய பல்கலைக்கழகங்களிலும் மலையக மாணவர்கள் அனுமதி இன்று கிடைக்கப் பெறினும் விசேட ஏற்பாடுகள் மூலம் அதிகமான உள்ளீர்ப்புகளை செய்வதற்கான வசதிகளை நாம் அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி இன்று மலையக சமூகத்தின் ஆசிரியர் தேவையை மாத்திரம் பூர்த்தி செய்யும் ஒரு உயர்கல்வி நிறுவனமாகும். எனினும் பாடசாலை கல்வி கட்டமைப்பு மாத்திரம் எமது சமூகத்தின் தேவை அல்ல. ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியானது சில வரையரைகளுக்கு உட்பட்டே செயற்பட வேண்டிய நிலை உள்ளது. எனினும் ஒரு மலையக பல்கலைக்கழகம் ஒன்று அமையும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான வரை முறைகளுக்கு அப்பாற்பட்டு எமக்குச் செயற்பட முடியும். குறிப்பாக இன்று தேசிய கல்வியற் கல்லூரிகள் பயிற்றப்பட்ட ஆசிரியர்களை சமூகத்துக்கு வழங்குகின்றது. எனினும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேவையை கல்வியியற் கல்லூரிகளால் நிரப்ப முடியாது. 

குறிப்பாக கணித, விஞ்ஞான தொழில்நுட்ப பிரிவுகளில் உயர்தரத்துக்கான ஆசிரியர் தேவை பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. ஊவா மாகாணத்தில் அண்மைக் காலமாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களை விண்ணப்பிக்கும் படி சமூக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்தன. இவ்வாறான சமூக அவலம் எம் சமூகத்துக்கு மாத்திரமே விதிக்கப்பட்டனவா? திட்டமிடப்பட்ட கல்விக் கட்டமைப்பின்றி 3000 ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனம் அண்மையில் வழங்கப்பட்டது. எனினும் அவர்களுக்கான பயிற்சிக் களமாக பாடசாலைகளை அவர்கள் பயன்படுத்தும் நிலையே இன்றும் காணப்படுகின்றது. மறுபக்கம் அவசியமான ஆளணிக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. ஒரு சமூகத்தின் முக்கிய மையப் புள்ளியாகவும் கல்விக் கொள்கைகளை உருவாக்கும் உயர் நிறுவனங்களாகவும் பல்கலைக்கழகங்கள் விளங்க வேண்டும். அதனை மலையக தேசிய பல்கலைக்கழகத்தின் மூலம் சாத்தியமாக்கிக் கொள்ளலாம்.

பெரும்பான்மை இனத்தைப் பொறுத்தவரை அனைத்து தேசிய பல்கலைக்கழகங்களிலும் அவர்களின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படும் நிலையில் நவீன பாடநெறிகளை உள்ளீடுச் செய்து உலகத்தரமான வெளியீடுகளை சமூகத்துக்கு வழங்குகின்றனர். அதற்கு சிறந்த உதாரணமாக அண்மையில் இலங்கையில் நிறுவப்பட்ட சமுத்திரப் பல்கலைக்கழகத்தை குறிப்பிடலாம்.

எம்மோடு வாழும் ஒரு சமூகம் கடல் அனர்த்த ஆய்வுகளை மேற்கொள்ள தயாரான நிலையில் நாம் கலாசார மதிப்பீடுகளை பாதுகாக்கவே நிறுவன மயப்படாத நிலையில் இருக்கின்றோமேயானால் எமது பின்னடைவுக்கு இதைவிட வேறு என்ன கேவலம் இருக்க முடியும். கட்சிகள் சார்ந்து செயற்படாமல் பொதுவான ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும். மலையகத்துக்கு தனியான பல்கலைக்கழகம் ஒன்று அமைப்பதற்கான அனைத்து சாத்தியமான விடயங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும். முழுமையான ஒரு அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு சட்ட மூலமாக கொண்டு வரப்பட வேண்டும். மலையகம் சார்ந்து பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ உறுப்பினர்கள் அனைவரும் இருக்கையை விட்டு எழுந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இது விடயத்தில் மலையக சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள், ஊடக ஒழுங்கமைப்புகள் அனைத்தும் தத்தமது மட்டத்திலிருந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். 

நன்றி - வீரகேசரி

சிவனொளி பாத மலை: மதங்களில் சங்கமிப்பா மதவாதத்தின் இன்றைய புகலிடமா! - என்.சரவணன்


இது ஸ்ரீ பாத பருவ காலம் (சீசன்). மார்கழிப் பௌர்ணமியிலிருந்து வைகாசி வரை யாத்திரிகர்கள் அங்கு செல்வார்கள். மிகவும் குளிரும், காற்றும் அதிகமுள்ள இந்த மாதங்களில் அதுவும் இரவு வேளைகளில் மலையேறத் தொடங்குவார்கள். உச்சிக்குப் போய் சேர 6-8 மணித்தியாலங்கள் ஆகும். அதிகாலை உதயசூரியனைக் காண்பது இலக்குகளில் ஒன்றாக இருக்கும். அழகு மிகுந்த சோலைகளைச் சூழ உள்ள மலை இது. மகாவலி, களனி, களு கங்கை போன்ற ஆறுகள் இங்கிருந்து தான் உற்பத்தியாகின்றன.

உலகில் நான்கு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தை சர்ச்சையின்றி வணங்கிச் செல்லும் ஒரே இடம் நம் இலங்கையில் தான் இருக்கிறது. பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் தத்தமது புனித மலையாக கருதி வருகிறார்கள். அந்த நம்பிக்கையின் பின்னணியில் அந்தந்த மதம் சார்ந்த புனிதக் கதைகளாக புனைகதைகள் பல இருக்கின்றன.

இன்றைய பேரினவாத நிகழ்ச்சிநிரலில் என்றுமில்லாதவாறு இந்த மலை இப்போது சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவரை காலம் அமைதியாக நான்கு மதத்தவர்களும் எந்த கெடுபிடியுமில்லாதவாறு சங்கமித்து வந்த மலை; சிங்கள பௌத்த இனவெறியாளர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது. இனவெறுப்பைத் தூண்டும் ஆயுதங்களில் ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கிறது “ஸ்ரீ பாத”. அந்த மலையின் பின்னணி பற்றியது தான் இந்தப் பதிவு.


நான்கு மதங்களும்
சிவனொளி பாத மலை என்று தமிழர்களாலும், ஸ்ரீ பாத என்று சிங்களத்திலும் அழைக்கப்படும் இந்த மலை சிங்களவர்களால் “சமனல கந்த” என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கடல் மட்டத்திலிருந்து 2243 மீற்றர் உயரத்தில் உள்ள இந்தத் தளம் இலங்கையில் மூன்றாவது உயரமான மலையாகும்.

உலகின் முதல் மனித படைப்பான ஆதம் (அலை) இலங்கையில் நூத் அல்லது றாஹூன் என்று அக்காலத்திலும் தற்காலத்தில் பாவா ஆதம் மலை எனவும் முஸ்லிம்களால் அழைக்கப்படும் மலையில் இறங்கினார்கள் என்று முஸ்லிம்களின் புனித குர் ஆன் கூறுகிறது. மலையின் உச்சியில் இருப்பது நபி ஆதம் அவர்களின் கால்சுவடே என்பாது முஸ்லிம்களின் நம்பிக்கை.

அதுபோன்றே கிறிஸ்தவர்கள் மத்தியிலும் உலகின் முதல் மனிதன் ஆதாமின் கால் சுவடு அது என்கிற நம்பிக்கையும் கணிசமாக இருக்கவும் செய்கிறது. ஆதாம் வாழ்ந்த ஏடன் தோட்டம், இன்றைய ஈராக்கில் உள்ளதென்றே கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். எனவே கிறிஸ்தவ போர்த்துக்கேயர்கள் அதனை ஆதாமின் காலடித் தடம் என்பதை நம்பவில்லை. அவர்கள் அதனை "புனித தோமஸின் மலை" என்று அழைத்தனர். (தோமஸ் இந்தியா வந்த இயேசுவின் சீடர்களில் ஒருவராவார்.) 19 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆதாமின் மலை என்கிற பெயர் கொண்டு அழைக்கத் தொடங்கினார்கள். அதுவே பல இடங்களிலும் பதிவு பெற்றது.

திருமாலும் பிரம்மாவும் தங்களுக்கிடையில் யார் பெரியவர் என்று போட்டியிட்டு அடியையும், முடியையும் தேடி கிடைக்காத நிலையில் சிவனிடம் பூசை செய்த வேளை சிவன் ஒளியாக எழுந்தருளி பாதம் பதித்த இடம் சிவனொளி பாதமலை என்கிற ஒரு நம்பிக்கை இந்துக்களிடம் இருக்கிறது. எனவே இதை “சிவனொளி பாதமலை” என்கின்றனர்.


புத்தரின் விஜயம்
புத்தர் மூன்று தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்ததாக மகாவம்சம் என்கிற சிங்கள புனித வரலாற்று நூல் கூறுகிறது. அரசர்களுக்கு இடையில் நிகழ்ந்த மோதலைத் தவிர்க்க மத்தியஸ்தம் வகிக்கும்படி புத்தரை மன்னர் மெனியக்கித்த வேண்டிக்கொண்டதாகவும் அதன் பிரகாரம் புத்தர் 500 பிக்குகள் சகிதம் களனிக்கு  (கி.மு 519/520 அளவில்) விஜயம்  செய்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இலங்கையில் பல பிரதேசங்களுக்கு அவர் சென்றார் என்றும் அதே வேளை (அன்று சுமனகூத (சமனல கந்த) என்று அழைக்கப்பட்ட இன்றைய) “ஸ்ரீ பாத” மலையில் புத்தர் தனது கால் தடத்தைப் பதித்துச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பௌத்த ஆண்டு 236 தொடக்கம் “ஸ்ரீ பாத” வணக்கத்துக்கு உரிய தளமாக இருந்து வருகிறது என்று பௌத்த நூல்கள் தெரிவிக்கின்றன.

முதலாவது விஜயபாகு (ஆட்சி 1055–1110) அரசாண்ட காலத்தில் “ஸ்ரீ பாத” மலைக்குச் செல்வதற்கான வழிகளை புனரமைத்தும், அப்பகுதிகளை சீரமைத்தது மட்டுமன்றி சுற்றியுள்ள பல கிராமங்களை இதனைப் பராமரிப்பதற்காக நன்கொடையாக எழுதிக் கொடுத்ததாகவும், எப்போதும் யாத்திரிகர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான வழிகளையும் செய்து கொடுத்ததாக கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன. 
அதேவேளை “ஸ்ரீ பாத”வில் சூத்திரர்கள் பூஜை செய்து வணங்குவதற்கு மன்னன் விஜயபாகு தடை விதித்ததாகவும் அவர்களுக்கென்று தூரத்தில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றன.

அதன் பின்னர் மகா பராக்கிரம பாகுவும் அங்கு சென்று வணங்கியதாகவும்பின்னர் நிஸ்ஸங்கமல்லன் போர் காலத்தில் தனது படையுடன் சென்று வணங்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது. கண்டியை ஆண்ட அனைத்து நாயக்கர் வம்சத்து தமிழ் மன்னர்கள் அனைவரும் வணங்கச் சென்றிருக்கிறார்கள். துட்டகைமுனு போன்றோர் வணங்கியதாக வரலாற்றுத் தகவல்கள் கிடையாது.

அதன் பின்னர் ஆண்ட பல மன்னர்கள் மலைக்குச் சென்று வணங்கியதாகவும் பல வசதிகளை செய்ததாகவும் கல்வெட்டுகள் இருக்கின்றன.

போர்த்துக்கேயர்களுடன் சேர்ந்து அரசைக் காட்டிக்கொடுத்த பிக்குமார்களை தண்டிப்பதற்காக “ஸ்ரீ பாத” வின் பொறுப்புகளை அரசர் சைவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் 150 வருடங்களின் பின்னர் அரசன் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747-1781) பிக்குகளின் வசம் மீண்டும் சேர்த்தார்.

போர்த்துக்கேயர்கள் தான் முதன் முதலில் இதனை “ஆதம்ஸ் பீக்” என்று அழைத்தனர் என்று கூறப்பட்டாலும் கூட அதற்கு முன்னரே முஸ்லிம் யாத்திரிகர்களால் அப்படி அழைக்கப்பட்டிருக்கிறது என்று அறியக் கிடைக்கிறது.

851 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த மொரோக்கோ நாட்டு யாத்திரிகர் சுலைமான் தாஜீர் (Sulaiman Tajir) இந்த மலைக்குச் சென்று அதனை “அல்லாவின் மலை” (Al-Rohun) என்று அழைத்தார். இப்னு பதுதா  (Ibn Battuta) என்கிற முஸ்லிம் யாத்திரிகர் 1344 இல் இலங்கை வந்தார். அப்போது மன்னர் உனக்கு என்ன வேண்டுமென்றாலும் கேள், என்று கூறவே தனக்கு ஆதாமின் பாதத்தை தரிசிக்கக் கேட்டதாகவும் மன்னன் ஒரு பல்லக்கையும், பல்லக்கு காவுவோர் நால்வரையும். பத்து பிரமுகர்களையும், வழித்துணைக்கு பதினைந்து பேரையும் (வீரரையும்) கூடவே அனுப்பி வைத்து அந்த வேண்டுகோளை நிறைவேற்றியதாவும் அவர் எழுதியுள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை பற்றி எழுதிய பல ஆங்கிலேயர்கள் இந்த மலை குறித்த பல செய்திகளை குறிப்பிட்டுள்ளனர்.  மார்க்கோ போலோ, டேவி, ரொபர்ட் நொக்ஸ், டென்னென்ட் போன்றோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

புத்தர் இலங்கைக்கு வந்ததற்கான எந்தவித தொல்பொருள் வரலாற்றுச் சான்றுகளும் கிடையாது, அது புனைகதை என சிங்களவர்களால் போற்றப்படும் வரலாற்று ஆசிரியர் செனரத் பரணவிதாண உள்ளிட்ட பலரும் கூறிவிட்டார்கள் என்பதையும் இந்த இடத்தில் கருத்திற் கொள்க.
உலகத்தவர் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்ற “ஸ்ரீ பாத” மலை யாத்திரிகர்கள் மட்டுமன்றி உல்லாசப் பயணிகளும் சென்று வரும் ஒரு தளமாக பல காலமாக இருந்து வருகிறது.


இனவாத நிகழ்ச்சி நிரலில்
சமீபகாலமாக ஸ்ரீ பாதவை முஸ்லிம்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்கிற வதந்தியைப் பரப்பி முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்தன இனவாத சக்திகள்.

எடிசலாத் (etisalat) என்கிற சவுதி நாட்டு தொலைபேசி நிறுவனம் “ஸ்ரீ பாத” மலையில் பெரும் ஓட்டலை கட்டி ஏராளமான  நிலங்களை சொந்தமாக்கியிருப்பதாக கடன சில மாதங்களாக ஒரு வதந்தியைக் கிளப்பி ஊடக பரபரப்புக்குரிய செய்தியாக ஆக்கியிருந்தது இனவாதத் தரப்பு. இனவாதத் தரப்பின் பிரச்சாரம் வெற்றிகரமாக மேலோங்கியிருந்ததை நாம் அனைவரும் கவனித்திருந்தோம். அது ஒரு இஸ்லாமிய ஆக்கிரமிப்பு என்றும் “ஸ்ரீ பாத” வை காக்க வேண்டும் என்றும் கிளப்பிய சர்ச்சையின் விளைவு அங்கே ஒரு பௌத்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நவம்பர் 5 அன்று கொழும்பிலிருந்து சிங்கக் கொடியையும், பௌத்த கொடியையும் தாங்கிய பல வாகனங்களில் ஒரு பெரும் குழு டொன் பிரியசத்  தலைமையில் சென்றது.

சிவனொளிபாத மலையின் அடிவாரத்தில் இதுவரை ஒரு பௌத்தச் சிலையும் கிடையாது என்றும். அங்கெல்லாம் பௌத்த சிலைகளை வைத்தால் தான் முஸ்லிம்கள் அங்கு நெருங்க மாட்டார்கள் என்றும் கூறி, அங்கு ஒரு பௌத்த சிலையை நிறுவி உடனடியாகவே சிறிய வணக்கஸ்தளத்தைக் கட்டிமுடித்தனர். 

இதன் போது தெரிவித்த கருத்துக்கள் கவனிக்கத்தக்கது. “முஸ்லிம்களுக்கு அந்நிய மதச் சின்னங்களும், சிலைகளும் ஹராம் (தவிர்க்கப்பட்டது) எனவே நாங்கள் இந்த இடத்தில் இந்த முஸ்லிம் சிலையை நிறுவினோம். அவர்களுக்கு “ஹராம்” ஆன இந்த இடம் அவர்களுக்கு இனி எப்படி புனிதமாக ஆகப் போகிறது பார்ப்போம்.” என்ரு ஒரு இனவாதி அங்கு உரையாற்றினார்.

இதுவரை காலம் சிவனொளி பாத மலைக்கு வழிகாட்டும் நூற்றுக்கணக்கான வழிகாட்டல் பதாகைகளில் சிங்களத்தில் ஸ்ரீ பாத என்றும், தமிழில் சிவனொளி பாதமலை என்றும், ஆங்கிலத்தில் “ஆடம்ஸ் பீக்” (Adam’s Peak) என்றும் தான் இருந்து வருகிறது. மேற்படி கும்பல் ஆங்கிலத்தில் “ஆடம்ஸ் பீக்” (Adam’s Peak) என் கருப்பு  சாயத்தைக் கொண்டு அழித்தார்கள். அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட இத்தகைய வழிகாட்டல் பதாகைகள் சிதைக்கப்பட்டதற்கு எதிராக எவரும் வழக்கு தொடர்ந்ததாக அறியப்படவில்லை. அவர்கள் அப்படி அழித்ததை வீரப் பெருமிதத்துடன் போட்டோ எடுத்து துணிச்சலாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரப் படுத்தியுமிருந்தனர். சிவனொளி பாத மலை என்று  தமிழில் எழுதியிருந்ததை எங்கும் அழிக்கவில்லை. தற்போதைய பிரதான இலக்கு முஸ்லிம்கள் என்பதால் இப்போதைக்கு தமிழை விட்டுவைத்துள்ளார்கள் என்றே கூறவேண்டும்.

கூகிளில் மாற்றினார்கள்
ஆனால் இந்த இனவாதக் கும்பல் அத்துடன் விடவில்லை பிரசித்திபெற்ற கூகிள் வரைபடத்தில் ஆங்கிலத்தில் உள்ள “adam’s peak” (ஆதம்ஸ் பீக்) என்கிற பெயரை “ஸ்ரீ பாத” என்று மாற்றும்படி கூகிள் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்தார்கள். கூகிளுக்கு எப்படி முறையிடுவது என்று வழிகாட்டுகின்ற வீடியோப் பதிவுகளையும் கூட வெளியிட்டார்கள். இறுதியில் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். கூகிள் ஒரு சில தினங்களுக்கு முன்னர் “sri pada” என்று வரைபடத்தில் மாற்றம் செய்தது. இதனை எதிர்த்து அவர்களுக்கு எதிராக ஏனையோரும் ஒரு சைபர் போரையே நடத்தினார்கள். “Adam’s peak” என்ரு முன்னர் இருந்ததே சரியானது என்று ஏனையோரும் கூகிளுக்கு முறைப்பாடு செய்தததைத் தொடர்ந்து கூகிள் “Adam’s peak” என்று ஆங்கிலத்தில் இட்ட அதேவளை  கூடவே சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் “ஸ்ரீ பாத” என்றும் இட்டிருப்பதை நீங்கள் காணலாம். தமிழில் இவை எதுவும் இல்லை என்பது வேறு கதை.


இந்தளவு அவர்கள் திட்டமிட்டும், பலமாகவும் இருக்கிறார்கள் என்பதும் ஒடுக்கப்படும் சமூகத்தினர் இதில் கூட பலவீனமாகவே இருக்கிறார்கள் என்றே உறுதியாகக் கூறலாம்.

“சிவனொளிபாதமலை” என்கிற பெயர் இலங்கைச் சூழலில் மாத்திரமல்ல தமிழர்கள் மத்தியில் இருந்தும் அழிந்துபோய் “ஸ்ரீ பாத” என்று அழைக்கிற நிலை நிலைபெற்றுள்ளதைக் காண முடிகிறது. முஸ்லிம்கள் கூட அதனை ஆதாமின் மலை என்று அழைத்ததாக அறிவோம். ஆனால் “ஸ்ரீ பாத” மட்டுமே அதன் பெயர் என்று நிலைநிறுத்தும் இனவெறிக் கூட்டத்தின் இலக்கு சாத்தியப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையாக பூஜிக்கப்பட்டு வந்த ஒரு ஸ்தலம் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மத ஒதுக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இது இன்றைய இனவாத போக்கின் உச்ச வளர்ச்சியையே எடுத்துக் கூறுகின்றது. உலா மத ஒற்றுமைக்கே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்துவந்த ஒரு பிரதேசம் ஒரு மதத்தவர் மாத்திரம் சொந்தம் கொண்டாடும் நிலை ஏற்பட்டதற்கு அரச இயந்திரம் வழங்கி வரும் ஆசீர் வாதமும், நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதமும்அடிப்படையான காரணங்கள். இந்த சக்திகளை எதிர்கொள்ளும் வலிமை ஏனையோருக்கு இல்லாமல் போனதும் அதே காரணங்கள் தான்.

இனிவரும் காலங்களில் “ஸ்ரீ பாத” மதவொற்றுமைக்கு சிறந்த ஸ்தளமாக இல்லாமல் போனாலும் பரவாயில்லை. ஆனால்  மத முரண்பாடுகளின் உலக முன்னுதாரணமாக மட்டும் ஆகிவிடாமல் பாதுகாப்பது முக்கியமாக அரசின் கடமை.

----------இப்னு பதூதா : சில குறிப்புகள் இப்னு பதூதா (Ibn Battuta-1304-1378) என்றழைக்கப்படும் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார். இவரது பயணங்களும் அவை குறித்த குறிப்புகளும் இன்றளவும் உலகளவு பிரசித்தமானவை. பல வரலாற்று ஆசிரியர்கள் அந்த குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு மேலதிக வரலாற்றை ஆராய பயன்படுத்தி வருகிறார்கள். இலங்கை பற்றி அவர் எழுதிய குறிப்புகள் கூட இலங்கை குறித்த பல விடயங்களை ஆராய உதவி வருகின்றன. இவரது பயணங்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்தது. 44 நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார்.
அவர் இலங்கையில் கரையிறங்கிய காலத்தில் யாழ்ப்பாண மன்னன் மார்த்தாண்ட சிங்கை பரராஜசிங்கம் (ஆரியச்சக்கரவர்த்தி) அவர்களின் விருந்தினராக ஆனது எப்படி என்பது பற்றிய குறிப்புகளும் காணக் கிடைக்க்ன்றன.
“ஆரியச்சக்கரவர்த்தி என்னை வரும்படி ஆளனுப்பினான். நான் அவனது தலைநகரான பத்தளத்தில் அவனிடம் சென்றேன். அந்த இடம் துப்பரவாகவும் சுற்றுமதிலையும் கொண்டிருந்தது. அண்மையான கரைப்பகுதியில் கறுவா அடிமரங்கள் நிறைந்திருந்தன. பட்டை உரிக்கப்பட்ட கறுவாக்கள். ஏற்றுமதிக்காக, கரையில் குவிக்கப்பட்டிருந்தன. கறுவா மரங்கள் நிறைந்திருந்ததால், வத்தளைப்பகுதியாக இருந்திருக்கலாம். உருவவழிபாட்டு மன்னனின் சமூகத்தில், நான் சென்றபோது. அவன் தன்னருகில் என்னை அமரச் செய்து, கனிவுடன் உரையாடினான். உமது நண்பர்களும் பாதுகாப்பாக கரையிறங்கட்டும். திரும்பிச்செல்லும்வரை அவர்கள் எனது விருந்தாளிகளாவர் என்றான்.
அதன்பின். எனக்குத்தங்குமிடவசதிசெய்து கொடுக்கும்படி மன்னன் கட்டளை இட்டான். அங்கு நான் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். எனக்குப் பெரும் முக்கியத்துவம் தரப்பட்டது. நாளுக்கு நாள் அது அதிகரித்தது. மன்னன் பாரசீகமொழியை அறிந்திருந்தான். நான் பிறநாடுகள். மன்னர்கள் பற்றிசொன்ன கதைகளை அதிக விருப்புடன் செவிமடுத்தான். ஒருநாள். மன்னன் கரங்களில் முத்துக்களை வைத்திருந்த சமயத்தில். அவன் முன்னிலையில் சென்றேன். அம்முத்துக்கள். அவனது ஆளுகைக்குட்பட்ட கடற் பிராந்தியத்தில். முத்துக் குளிப்பால் பெறப்பட்டவை. மன்னனின் பணியாட்கள் அங்கு முத்துக்களைத்தரம் பிரித்துக் கொண்டிருந்தனர்.
நீர் சென்று வந்த நாடுகளில், எங்கேனும் முத்துக்குளிப்பைப் பார்த்திருக்கிறீரா? என்று மன்னன் கேட்டான். ஆம். இபின் அஸ்லாமலிக்குச் சொந்தமான கொயிட்தீவில். முத்துக்குளிப்பு நடைபெறுவதைக் கண்டிருக்கிறேன் என்றேன் நான். மன்னன் தன் கையிலிருந்த முத்துக்களைக் காண்பித்து.
அத்தீவில் இத்தகைய முத்துக்களுக்கு ஈடிணையாக யாதாயினும் முத்துக்கள் கண்டிருக்கிறீரா? என்று கேட்டான். இப்படியான சிறந்த முத்துக்கள் ஒன்றைத் தானும் நான் பார்க்கவில்லை என்றேன். எனது பதிலால் மகிழ்ச்சியடைந்த மன்னன். இவை உம்முடையதே என்றான். அத்துடன் நீ விரும்பும் எதனையும் என்னிடம் கேட்கலாம். நாணமுற வேண்டாம் என்றும் மன்னன் கூறினான்.
அதற்கு நான் ஆதாமின் பாதத்தினை தரிசிப்பதை ஆவலாகக் கொண்டுள்ளேன் என்றேன். அது சுலபமானது என்று சொன்ன மன்னன். வழிகாட்டுவதற்கு ஆட்கள் அனுப்பி வைப்பதாக சொன்னான். மன்னன் ஒரு பல்லக்கையும், பல்லக்கு காவுவோர் நால்வரையும். பத்து பிரமுகர்களையும், வழித்துணைக்கு பதினைந்து பேரையும் (வீரரையும்) கூடவே அனுப்பி வைத்தான். .”
நன்றி - தினக்குரல்

கெப்பட்டிபொல மாவீரன்! ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் துரோகியா? - என்.சரவணன்


வரலாற்றில் தேசபக்தர்கள் துரோகிகளாக்கப்பட்டதும், துரோகிகள் தேசபக்தர்களாக ஆக்கப்பட்டதும் வரலாறு நெடுகிலும் வந்து போகின்ற  சம்பவங்களே. “வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படும் அதிபுனைவு” என்பார்கள். இந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஒரு முக்கிய பிரகடனம் அப்பேர்பட்ட ஒரு வெளிப்பாடு தான். அது பலரின் கவனத்தை ஈர்த்திருக்காது. முக்கியமாக தமிழ்ச் சூழலில் அந்தச் செய்தி கவனிப்புக்கு உட்பட்டிருக்காது.

1818 ஜனவரி 10 ம் திகதி 851 ஆம் இலக்க வர்த்தமானிப் பத்திரிகை
ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்ட கெப்பட்டிபொல உள்ளிட்ட 19 பேரின் பெயர்களை 1818 ஜனவரி 10 ம் திகதி 851 ஆம் இலக்க வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் தேசத்துரோகிகளாக அன்றைய ஆளுநர் பிரவுண்ரிக் நோர்த் அறிவித்தார். அந்த சம்பவம் நிகழ்ந்து இன்னும் இருவருடங்களில் 200 ஆண்டுகளாகப் போகிறது. ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டுப் போய் 68 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்றுவரை தேசத் துரோகிகளாகவே உத்தியோகபூர்வ ஆவணங்களின் மூலம் இருந்து வந்துள்ளார்கள்.
19 பேரை மாவீரர்களாக்கிய ஜனாதிபதியின் பிரகடனம்

கெப்பட்டிபொல திசாவ,
ஊவா
கொடகெதர ரடே அதிகாரம்,
ஊவா
கெட்டகால மொஹொட்டாலே,
ஊவா
மகாபெத்மே ரட்டேரால (கத்தரகம),
ஊவா
குடாபெத்மே ரட்டேரால (கத்தரகம),
ஊவா
பலங்கொல்ல மொஹொட்டாலே,
ஊவா
வத்தக்காலே மொஹொட்டாலே,
ஊவா
பொல்காகெதர ரெஹனராலே,
ஊவா
பொசேரேவத்தே விதானே,
ஊவா
கிவுலேகெதர மொஹொட்டாலே,
வலப்பனை
களுகமுவே மொஹொட்டாலே,
வலப்பனை
உடுமாதுர மொஹொட்டாலே,
வலப்பனை
கொஹுகும்ரே வளவ்வே ரட்டேரால,
வெல்லஸ்ஸ
கொஹுகும்ரே வளவ்வே மொஹொட்டாலே,
வெல்லஸ்ஸ
புட்டேவே ரட்டேரால,
வெல்லஸ்ஸ
பகினிஹாவெல ரட்டேரால,
வெல்லஸ்ஸ
மகாபதுள்ளே கம்மானே ரட்டேரால,
வெல்லஸ்ஸ
புலுபிடியே மொஹாட்டாலே,
வெல்லஸ்ஸ
பல்லேமல்ஹெயாயே கமதிராலே,
வெல்லஸ்ஸ

அந்த கரையை நீக்கும் படி சிங்கள தேசியவாத சக்திகள் சமீபத்தில் சமூக ஊடகங்களின் வாயிலாக ஒரு கோரிக்கையை பிரசாரப்படுத்தி வந்தன. அதன் விளைவாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அந்த பரிந்துரையை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு போகவே ஜனாதிபதி முன்னைய பிரகடனத்தை ரத்து செய்யும் புதிய விசேட பிரகடனத்தில் கையெழுத்திட்டு டிசம்பர் 8 ஆம் திகதி வெளியிட்டார். (அந்த பிரகடனமும் சிங்களத்தில் மட்டும் தான் வெளியானது என்பதையும் கவனியுங்கள்)

1818 ஜனவரி 10 ம் திகதியிட்ட மேற்படி ஆணையை ரத்து செய்வதுடன் அவர்கள் “அனைவரும் சுதந்திர இலங்கைக்காகப் போராடிய அந்த சிங்கள தலைவர்களும் மாவீரர்களாக பிரகடனப்படுத்தப்படுகிறேன்” என்று அறிவித்துள்ளார்.

கெப்பட்டிபொல தேசத்துரோகி இல்லை என்று விடுவிக்கப்பட்டது போல அதே காலனித்துவ காலத்தில் தண்டிக்கப்பட்ட ஏனைய தலைவர்களின் மீதான குற்றங்களிலிருந்தும், துரோகப் பட்டங்களிலிருந்தும் விடுவிக்கப்படுவார்களா. குறிப்பாக சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்கள் விடுவிக்கப்படுவார்களா.

நேரடியாக விடயத்துக்கு வந்தால் கண்டி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் இன்றும் என்றும் குற்றவாளி தானா, துரோகி தானா..

1739 தொடக்கம் ஸ்ரீ விஜய ராஜசிங்கன் (1739-1747), கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747-1781), ராஜாதி ராஜசிங்கன் (1781-1798), ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798-1815) ஆகிய நாயக்க வம்சத்து தமிழ் அரசர்கள் மொத்தம் 76 வருடங்கள் ஆண்டிருக்கிறார்கள். இந்த காலப்பகுதியில் பௌத்த மத வளர்ச்சிக்காக அவர்கள் ஆற்றிய பாத்திரம் அளப்பெரியது என்று சிங்கள வரலாற்று நூலான மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது. அதுமட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கையும் 1505 இல் இருந்து அன்னிய காலனித்துவத்துவத்தின் பிடியில் சிக்கியிருந்தும் 1815 வரை தம்மை எட்டவிடாமல் இலங்கையின் கடைசி அரசையும் பாதுகாத்து வந்தவர்கள் இந்த தமிழ் அரசர்கள். அவர்கள் மலபார்கார்கள், தமிழர்கள், வடுகர்கள், தெலுங்கர்கள், நாயக்கர்கள் என்றெல்லால் தூற்றப்பட்டாலும் அவர்கள் சிங்கள மன்னர்களாகவே இறுதி வரை ஆண்டார்கள். தமிழுக்கோ, தமிழர்களுக்கோ கூட எதுவும் செய்தது கூட கிடையாது. மாறாக சிங்கள ஆட்சியின் அரசர்களாக அவர்கள் சிங்கள பௌத்தத்துக்கே தலைமை தாங்கினார்கள் என்பதை சிங்கள வரலாறுகளே சாட்சியம் பகர்கின்றன. “கடைசியாக ஆண்ட சிங்கள மன்னன்” என்றே சிங்கள வரலாறு எங்கும் காணக் கிடைக்கின்றன.


அப்பேர்பட்ட மன்னரை அதிகார பேராசைகொண்ட பிரதானிகள், மந்திரிகள் “சிங்களத் தலைவரை” ஆட்சியிலிருத்த வேண்டும் என்கிற சதியின் ஊடாக தாமே அரசாள தமக்குள் போட்டியிட்டனர். அதன் விளைவு அரச கவிழ்ப்பு சதி செய்து ஆங்கிலேயர்களுக்கு மன்னரைக் காட்டிக் கொடுத்தனர். அதன் மூலம் ஆங்கிலேயர்களுடன் சமரசம் பேசி தாம் ஆட்சி செலுத்தலாம் ஒப்பந்தத்தையும் செய்து கொண்டனர். 

அதன்படி 02.03.1815 செய்துகொள்ளப்பட்ட கண்டி ஒப்பந்தத்தில் 12 விடயங்களில் முக்கிய உடன்பாடுகள் உள்ளடக்கப்பட்டன. அதில் முதல் மூன்று விதிகளும் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் உள்ளிட்ட அவர் இரத்தவழி உருவினர் எவரும் ஆட்சியில் அமரக்கூடாத வகையில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

மூன்றாவது விதியின்படி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் இரத்த உறவைச் சேர்ந்த அனைவருக்கும் அரச உரிமை இரத்துச் செய்யப்படுவதுடன், கண்டி ராஜ்ஜிய எல்லைக்குள் அவர்கள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டது. அதனை மீறுவோர் அரசாங்கத்தின் எதிரிகளாக கருதப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டது.
கண்டி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள்

ஊவா வெல்லஸ்ஸ பகுதிகளில் கிளர்ச்சி ஆரம்பித்ததன் காரணம் பிரித்தானியர் அந்த பகுதிகளுக்கு முஸ்லிம் முகாந்திரம் ஒருவரை பொறுப்பாக நியமித்ததன் விளைவு தான். இந்த நியமனத்தால் கண்டிப் பிரதானிகள் கடும் அதிருப்திக்குள்ளானார்கள்.

ஆக ஆங்கிலேயர்களிடம் தமை காத்து வந்த தமிழர் வேண்டாம் என்றவர்கள் அதற்குப் பதிலாக ஆட்சியை அந்நிய வெள்ளைக்காரர்களிடம் கொடுத்து விட்டு அவர்களிடம் பதவிக்காக மண்டியிட்டிருந்தனர். பதவிகள் பிரிக்கப்பட்ட போது முஸ்லிம் ஓருவருக்கு கொடுக்கப்பட்டதற்காக மீண்டும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கினர் என்பது தான் கதைச் சுருக்கம்.

ஆளுநர் பிரவுன்றிக் மேற்கொண்ட அடக்குறையின் விளைவாக அந்த கிளர்ச்சியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது. 

இப்போது கூறுங்கள் நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்கள், இனவாதிகள், சதி காரர்கள் என்போரல்லவா இன்று ஜனாதிபதியால் தேசிய மாவீரர்களாக அறிவிக்கப்பட்டிருப்பவர்கள். இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஹெலபொல உள்ளிட்ட 28 பேர் மொரிசியஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கேயே செத்தும் போனார்கள். அவர்கள் எவரும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படாதது ஏன்.

கண்டி ஒப்பந்தம் இன்று வரை இரத்து செய்யப்படவில்லை. அதுவும் சட்டப்படி எழுத்தில் இருப்பது தான். எந்த ஒப்பந்தத்தில் அன்றே கூறப்பட்ட படி பௌத்தத்திற்கு உரிய இடம் வழங்கப்படவேண்டும் என்று இன்றும் இனவாத தரப்பு கூறுவது வழக்கம். அதே ஒப்பந்தத்தின் மூலம் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு இல்லாது செய்யப்பட்ட மரியாதை இன்று சரி செய்யப்படாததேன். உரிய மன்னிப்பு கோரப்படாததேன். மீளவும் இறுதி மன்னராக உத்தியோகப்பூர்வமாக பிரகடனப் படுத்தாததேன். கண்டி ஒப்பந்ததின் மூலம் தாரை வார்த்த இறைமையும், அதிகாரங்களும் இரத்து செய்யப்படாததேன்.

கெப்பட்டிபொல உள்ளிட்ட பலர் 1818 நவம்பர் 26 அன்று கண்டி போகம்பர வாவிக்கருகில் தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றியதால் மட்டும் தான் மாவீரர்களாக ஆக்கப்பட்டார்களா?

இலங்கை முழுமையாக அந்நியர் கைகளுக்கு போய் சேர காரணமாக இருந்தவர்கள் தேச பக்தர்களாகவும், தேசிய மாவீரர்களாகவும் ஆக்குவர்களுக்கு, நான்கு பரம்பரைகளாக அந்நியர்களிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்து, சிங்கள பௌத்தத்துக்கு விசுவாசமாக இருந்த மன்னர் குற்றவாளியாக்கப்பட்டது மட்டும் கவனிப்புக்கு வராமல் போனதன் அரசியல் என்ன. இது வெறும் இன அரசியலன்றி வேறென்ன. மன்னரும் அவர் குடும்பத்தினரும் குற்றவாளிகளாகவே சிறையில் சாகும்வரை இருந்து செத்தே போனார்கள். சுதந்திரத்தின் பின்னர் எஞ்சியிருந்தவர்களும் வேலூரில் வறுமையில் வாடி அழிந்தே போனார்கள்.

ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்து, மன்னரைக் காட்டிக்கொடுத்து ஒப்பந்தம் செய்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலேயர்களாலேயே அழிக்கப்பட்டார்கள்.

சக சகோதர இனத்தவர்களுக்கு அரசாட்சி போய்விடக்கூடாது என்பதற்காக தாம் செய்த சதியில் தாமே விழுந்த கதை தான் 1815 இல் நிகழ்ந்தது. சொந்தச் செலவில் தமக்கே செய்த இந்த சூனியத்தில் நாடிழந்து, அதிகாரமிழந்து, இறைமை இழந்து இறுதியில் உயிரையும் இழந்தனர்.

சிங்களத் தலைவர்கள், சிங்கள ஆட்சியாளர்களால், சிங்கள மொழி மூலம் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கெப்பட்டிபொலவை விடுவித்தவர்களால் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை விடுவிக்க முடியாது போனது வெறும் தற்செயல் நிகழ்வல்ல.

அது மட்டுமல்ல கெப்பட்டிபொலவுக்கு மன்னிப்பு வழங்க வேண்டியவர்கள் இலங்கையர்கள் அல்ல. பிரித்தானிய மகாராணியே. ஏனென்றால் அது பிரித்தானிய ஆட்சியாளர்களின் முடிவே அது. முடிந்தால் அப்படி ஒரு தேசத்துரோக குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கும்படி இலங்கை ஜனாதிபதி மகாராணியிடம் வேண்டுகோள் விடுவிக்கட்டும் பார்ப்போம். ஆனால் மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் கதை அப்படியல்ல. அவரை கைது செய்து குற்றவாளியாக்கி, நாடு கடுத்தும் தேவை இலங்கையர் தரப்புக்கு தான் அதிகம் தேவைப்பட்டிருந்தது. இலங்கை தரப்பு தான் அது குறித்த ஒப்பந்தத்திலும் கைச்சாதிட்டிருந்தது.

இவர்களில் உண்மையான தேசபக்தன் கெப்பட்டிபொலவா, ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனா என்பதை வாசகர்களே தீர்மானிக்கட்டும். வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் மட்டும் எழுதப்படுவதில்லை என்பதை உறுதிசெய்வோம்.

11.03.1812
கண்டி ஆக்கிரமிப்பு போர்
01.10.1814
கண்டிக்கு எதிராக ஆங்கிலேயர் போர்ப் பிரகடனம்
10.01.1815
படைச் சேனாதிபதி வில்லியம் விலர்மான் மலைநாட்டுமக்களின் மனங்களை ஈர்ப்பதற்காக பிரகடனம் ஒன்றை வெளியிடல்

அரசரின், வாள், அரச இலட்சினை, கொடி, ஆவணங்கள் மற்றும் புனித தாதுப்பல் அனைத்தையும் கொண்டு கொண்டு சென்றார்கள்
02.02.1815
சிங்களவர்களின் சுதந்திரத்தை உறுதிசெய்வதாக பிரகடனம்
12.02.1815
பிரித்தானிய சேனைகள் கண்டிக்குள் நுழைந்தன. எரிந்துபோன நகரத்துக்குள் நுழைகையில் நகரத்தில் மனிதர்கள் எவரும் இருக்கவில்லை.
18.02.1815
தலைமறைவாக இருந்த மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் காட்டிக்கொடுக்கப்பட்டு குடும்பத்தினருடன் பிடிபட்டார்.
19.02.1815
மலபார்காரர்களை (தமிழ் - நாயக்கர் மன்னர் பரம்பரையினரை)பிடித்து சிறையிடும்படி கட்டளை
02.03.1815
மாலை 4க்கு கண்டி ஒப்பந்தம் நிகழ்வு கூட்டப்பட்டது.
அந்த ஒப்பந்தம் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் கண்டி பிரதானிகளுக்கு வாசித்து காட்டப்பட்டு விளக்கம் கொடுக்கப்பட்டது.
02.03.1815
இலங்கையில் இறுதியாக அரச கோடி இறக்கப்பட்டு பிரித்தானிய கொடி ஏற்றப்பட்டது. வாரியபொல சுமங்கல தேரர் கண்டியில் ஏற்றப்பட்ட அந்தக் கொடியை இழுத்து எறிந்தார். ஆனால் கைது செய்யப்பட்ட அவருக்கு எதிரான குற்றச்சாட்டு அவர் விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியதும், புனித தாதுப்பல்லை கொண்டு சென்றதும் தான். அவர் யாழ்ப்பான சிறையில் வைக்கப்பட்டு அவரது முதுமை காரணமாக விடுவிக்கப்பட்டார்.
10.03.1815
கண்டி ஒப்பந்தம் கையெழுத்தானது. பௌத்த மதத்தைப் பாதுகாப்பது தொடர்பான விதிகளை இணைப்பதற்காக அஸ்கிரி மகாநாயக்கரின் முடிவைப் பெற்றுக் கொண்டதன் பின்னரே 10 பேர் அதில் கையெழுத்திட்டார்கள்.
18.03.1815
எஹெலபொல, பிலிமத்தலாவ, கலகொட உள்ளிட்ட பலர் கையெழுத்திட்டார்கள்.
இரு தரப்பும் உடன்பட்ட விடயங்களுக்குப் புறம்பாக பல சட்டவிதிகளும் சேர்த்து பிரகடனமாக வெளியிடப்பட்டது.
டிச.1816
ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சி ஆரம்பம்
01.11.1817
கெப்பட்டிபொல கிளர்ச்சியாளர்களுடன் இணைவு
21.02.1818
இராணுவச் சட்டம் பிரகடனம்
01.09.1818
01-20 திகதிக்குள்சரணடைந்தால் போது மன்னிப்பு என அறிவிப்பு
28.10.1818
கெப்பட்டிபொல உள்ளிட்ட பலர் சுற்றிவளைத்து பிடிபடல்
21.11.1818
இராணுவ நீதிமன்றம் தேசத் துரோக குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை தீர்ப்பு
26.11.1818
கண்டி போகம்பரை வாவியருகில் கெப்பட்டிபொல உட்பட பலருக்கு தலையைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம். பின்னர் தலை மட்டும் இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
22.05.1819
கெப்பட்டிபொலவின் சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டது.
1948
கெப்பட்டிபொலவின் மண்டையோடு பிரித்தானிய அரசால் மீண்டும் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது
மேலதிக வாசிப்புக்கு சில பரிந்துரைகள்:
"நவம்பர் மாவீரர் மாதம்" கெப்பட்டிபொல - சங்கர் – விஜேவீர - (என்.சரவணன்)
இலங்கையின் இறுதி அரசன் காட்டிக்கொடுக்கப்பட்டு 200 வருடங்கள் - என்.சரவணன்
1815 கண்டி ஒப்பந்தம் : 200 ஆண்டுகள் - என்.சரவணன்
தேசியக் கொடியா? சிங்களக் கொடியா?: வரலாற்று சர்ச்சை! - என்.சரவணன்
சிங்கள சினிமாவும் எல்லாளனின் மறு உயிர்ப்பும் - என்.சரவணன்
நினைவுகளையும் ஆயுதங்களாக்கும் பேரினவாதம் - என்.சரவணன்

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates