Headlines News :
முகப்பு » , , » BBS - 969 – RSS கூட்டு: பாசிச கைகோர்ப்பு!!? - என்.சரவணன்

BBS - 969 – RSS கூட்டு: பாசிச கைகோர்ப்பு!!? - என்.சரவணன்


பொது பல சேனா (BBS) கடந்த 07ஆம் திகதியன்று கூட்டிய செய்தியாளர் மாநாட்டில் முக்கிய பிரகடனங்களாக இவற்றை அறிவித்துள்ளது. 
 • “சிங்களம்” என்பதே நாட்டின் மொழி.
 • தேசியக்கொடியில் சிறுபான்மை இனங்களை குறிக்கும் அனைத்தையும் நீக்கி நடுவில் உள்ள சிங்கம் மட்டும் இருக்கும் கொடியே தேசிய கொடியாக சிங்களத்தின் தேசிய கொடி அமைய வேண்டும்.
 • சிங்களம் மட்டும் தேசிய மொழியாக அறிவிக்கப்படவேண்டும்.
 • நிறைவேற்று ஜனாதிபதிமுறை ஒழிய வேண்டும். 
 • மாகாண சபைகள் முறை ஒழிக்கப்படவேண்டும். அதிகாரப் பகிர்வு அவசியம், ஆனால் கிராமிய மட்டங்களில் மட்டுமே. இன அடிப்படையில் இல்லை.
 • பல்லின கலாசாரம் என்பதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
 • மகாசங்கத்தினருக்குப் பதிலாக “சங்கராஜ ஹிமி” என்கிற பிக்குகளின் தலைமைப் பொறுப்பை உருவாக்கி பௌத்தம் சம்பந்தப்பட்ட சகல தீர்மானங்களிலும் அவரது அங்கீகாரத்துக்கு கீழ் கொணரப்படவேண்டும்.
 • BBS தலைமையில் புது அரசியல் கட்சியாக “சிங்கள கூட்டமைப்பு” எனும் பெயரில் கட்சி ஆரம்பிப்பு. 

BBS கடந்த செப்டம்பர் 28 அன்று நடத்தி முடித்த தமது சங்க மாநாட்டின் போது “நாட்டை கட்டியெழுப்பும் வழி” (தெய நகன மக) என்கிற கருப்பொருளில் கொள்கைத்திட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் பலரது
உரைகளில் உள்ளடங்கியிருந்தபோதும் எழுத்து வடிவில் முழு வேலைத்திட்டமாக வெளியிடப்படவில்லை. கூடியவிரைவில் அது உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்ற ஆண்டு பொதுபலசெனா “பொதுபல சேனா : உரையாடலுக்கான ஆரம்பம்” எனும் கைநூலில் சுருக்கமான கொள்கை பிரகடனம் வெளியிட்டிருந்தார்கள். BBSஇன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அதன் மின்னூல் வடிவத்தை தரவிறக்கிக் கொள்ளலாம். 56 பக்கங்களைக்கொண்ட அந்த கைநூலில் பல பகுதிகளை தமிழிலும் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

நடந்து முடிந்த மாநாட்டுக்குப் பின்னர் பொது பல சேனாவுக்கான ஆதரவும், பலமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டலும். மாநாட்டின் பின்னர் BBSஇற்கான ஆதரவு சற்று சரிந்துள்ளதை கவனிக்கக்கூடியதாக உள்ளது. இருக்கின்ற அதே பலத்தை பேணுவதாயின் பேரினவாதமொன்றே அதற்கான அஸ்திரம் என்பது அதற்க்கு தெரியும். அரசின் அனுசரணை எதிர்பார்த்த அளவு கிடைக்காததும், ஊடகங்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் மாநாடு குறித்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காததும் காரணம் என்று கூறலாம்.

எனவே திடீர் சாகசவாத அணுகுமுறையை அவ்வப்போது செய்வதற்கூடாகவே தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளலாம் என்று BBS தனது அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டுள்ளது என்றே கூறலாம். எனவே தமது அறிவித்தலை ஊடக மாநாடு கூட்டி உறுதியான, கடுமையான தொனியில் தமது சிங்கள பௌத்த ராஜ்ய பிரகடனத்தை அறிவித்துள்ளனர்.

BBS - RSS – 969 கூட்டின் சாத்தியம்
இந்தியாவின் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (RSS) அதாவது “தேசியத் தொண்டர் அணி” உடன் தாம் உயர் மட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பாக தென்னாசிய பிராந்தியத்தை இஸ்லாமிய தீவிரவாதத்தை முறியடிப்பதற்காக “பௌத்த-இந்து சமாதான வலயமாக” ஆக்குவதனை அடிப்படையாக வைத்தே இந்த கூட்டு அமையுமென BBS கடந்த 7ஆம் திகதி அறிவித்தது. மேலதிகமாக தாம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் பேச்சவார்த்தை நடத்தவிருப்பதாகவும் ஞானசார தேரர் அறிவித்தார்.

ஏற்கெனவே கடந்த 30 அன்று அஸின் விறாத்துவின் 969 அமைப்புடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமும் “அடிப்படைவாதமற்ற மண்டலத்தை உருவாக்குவது” என்கிற தலைப்பிலேயே செய்துகொள்ளப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

RSS கூட்டு பற்றி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே RSS அமைப்பின் பேச்சாளர் ராம் மாதவ் BBS உடனான கூட்டு குறித்து எந்தவொரு தகவலும் தமக்கு தெரியாது, அது தவறான பிரச்சாரம், சர்வதேச செயற்பாடுகளில் தாம் இல்லை என்றும் அறிவித்திருந்தார்.

ஆனால் ஏற்கெனவே RSS இந்துக்கள் வாழும் சில நாடுகளில் தமது அமைப்பின் பிரிவுகளை செயற்படுத்தி வருகிறது. ஏன் மியான்மாரில் கூட “சனாதன் தர்ம சுயம்சேவாக் சங்கம்” (எஸ்.டி.எஸ்.எஸ்) எனும் பெயரில் இயங்கி வருகிறது. மொரிசியஸிலும் கூட அதன் கிளைகள் உண்டு. ஏற்கெனவே மியான்மார் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த தீவிரவாதிகளுடன் கூட்டு உள்ளதென செய்திகளும் உண்டு.

BBS ஆரம்பித்திலிருந்தே தம்மைப் பற்றி; உள்ளதை விட ஊதிப்பெருப்பித்து காட்டுவதில் வல்லவர்களாகவே இருந்துவந்துள்ளனர். அப்படி நம்பவைப்பதில் கணிசமான வெற்றியையும் கண்டுள்ளனர். அந்த வகையில் RSS உடனான கூட்டை மிகைப்படுத்தி அவசரப்பட்டு அறிவித்து விட்டதாகவே தோன்றுகிறது. ஆனாலும் இந்த கூட்டுக்கான சாத்தியங்கள் இல்லாமல் இல்லை. RSS அமைப்பு நூற்றாண்டை நெருங்குகிற அளவுக்கு வரலாற்றைக்கொண்டது. இரகசிய தலைமறைவு வேலைகளில் பேர் பெற்றது.
காந்தியை கொன்ற கோட்சே RSS இன் உறுப்பினர். காந்தியின் கொலையில் RSS தான் உள்ளது என்று சட்டரீதியில் நிரூபிக்க கிடைக்கவில்லை அன்று. ஆனாலும் அன்று RSS தடை செய்யப்பட்டது.

தூய “இந்து ராஜ்யம்” என்கிற இலக்கில் அது இன்றும் செயற்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பல கலவரங்களுக்கு பின்னணியில் செயற்பட்டது RSS. இந்து பாசிச வலதுசாரி இயக்கமாக அறியப்பட்ட இயக்கம் அது. நேரடியாக அரசியல் கட்சியாக இயங்காவிட்டாலும் இந்துத்துவ கட்சியை ஆட்சியில் இருத்துவதற்காகவும், இந்துத்துவ கொள்கைகளை ஆட்சி அதிகாரத்தில் உறுதிபடுத்துவதற்காகவும் உறுதியுடன் இயங்கும் அமைப்பு. இன்றைய நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி ஆட்சிகூட RSS இன் தயவு தான்.

BBS – 969 - RSS ஆகியனவற்றுக்கு இடையில் நிறைய பொதுத்தன்மையை காணலாம். 
 • அந்நிய ஆதிக்க அச்சத்தையும், பீதியையும் கிளப்பி அதனை தக்கவைப்பது, “பிறருக்கு” எதிரான விஷ உணர்வை வளர்த்தெடுப்பது.
 • ‘கலாசார காவலர்களாக’ சகல இடங்களிலும் குழப்பம் விளைவிப்பது, போராட்டம் நடத்துவது.
 • “தேசபக்த”,  “மண்ணின் மைந்தர்” போன்ற சொல்லாடல்களால் கட்டிவைப்பது. தாமே அதிகாரத்துக்கு உரித்துடையவர்களாக புனைவது.
 • காவி உடையின் பேரில் சிவில் அமைப்புகளை மட்டுமன்றி அரசியல் சக்திகளையும், ஆட்சியையும் எச்சரிப்பது, மிரட்டுவது சவால் விடுவது.
 • தம்மை புனிதர்களாகவும், மீட்பர்களாகவும் கட்டமைப்பதும், பிரகடனப்படுத்திக்கொள்வதும்
 • காலப்போக்கில் அரசியலில் குதிப்பது அல்லது அரசியல் கட்சிகளை பின்னின்று இயக்குவது
 • இன, மத, குல தூய்மைவாதத்தை முன்னிறுத்தி “பிறரை” தள்ளிவைப்பதும், வெறுப்பதும், வெறுக்க சொல்லிக்கொடுப்பதும்.
 • வரலாற்றையும், கலாசாரத்தையும், சம்பவங்களையும் திரித்து புனைதல்
 • தாம் தவிர்ந்த “பிறரை” அரசியல் நீக்கம் செய்வது.
 • அந்த “பிறரை” நேரடியாகவும் மறைமுகமாகவும் உள, உடல், பொருள் இழப்புக்கு உள்ளாக்குதல்
 • ஆரிய வம்சமாக அறிவித்துக்கொள்வது.
 • குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரானது

எனவே தான் அடிப்படை நிகழ்ச்சி நிரலில் கருத்தொருமித்த இவற்றுக்கிடையே கூட்டுக்கான அகவாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன.
சென்ற வருடம் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அமைச்சர் விமல் வீரவன்ச BBS பிளவுபட்டுவிட்டது என அவதூறு கூறினார் என்று சென்ற 2013 மே 13 அன்று ஊடக மாநாட்டை கூட்டிஇருந்தது BBS. விமல் வீரவன்சவுக்கும் இந்து தீவிரவாத அமைப்பான சிவசேனாவுக்கும் தொடர்பிருப்பதாகவும். விமல் வீரவன்சவின் மனைவிக்கு சிவசேனாவிடமிருந்து பணம் கிடைப்பதாகவும் ஞானசார தேரர் அறிவித்திருந்தார். இது எந்தவித அடிப்படையுமற்ற, ஆதாரமில்லாத வெறும் அவதூறு குற்றச்சாட்டு என்று பின்னர் உறுதிபடுத்தப்பட்டது.

ஆனால் இந்திய இந்து தீவிரவாத கட்சியான ஆர்.எஸ்.எஸ். உடனான கூட்டுத்திட்டத்திற்கான எண்ணக்கரு சென்ற செப்டம்பர் மாதம் 24 பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் இலங்கை வந்திருந்தபோதே உறுதியானது. அவர்கள் கிருலபனையில் உள்ள BBS இன் தலைமையகத்தில் டிலந்த விதானகே உள்ளிட்ட தலைவர்களை சென்று சந்தித்தார்கள். இந்த சந்திப்பில் பி.ஜே.பியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், கட்சியின் வெளிவிவகார அமைப்பாளர் விஜய் ஜொலி ஆகியோர் கலந்துரையாடிய போது எதிர்காலத்தில் குறிப்பிட்ட விடயங்களில் கூட்டாக தொழிற்படுவது குறித்து கலந்துரையாடியிருந்தனர். 

எதிர்காலத்தில் பெளத்த, இந்து மக்களை அழிக்கும் இனவாத செயற்பாடுகளை தடுத்து தமிழ், சிங்கள மக்களைப் பாதுகாப்பதில் நாம் அக்கறை செலுத்துவோம் இந்த விடயங்களுக்கு இந்தியாவும் எமக்கு துணை நிற்கவேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பினர் பா.ஜ.க.வின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதில் வேடிக்கையான முரண்நகை ஒன்றும் உள்ளது. RSS ராமரை முதன்மைபடுத்திவருகிறது. BBS இராவணனை முன்னிறுத்தி வருகிறது.

பொது பல சேனாவின் அமைப்பாளர் திலந்த விதானகே, இலங்கையிலுள்ள இந்துக்களை சிங்கள இந்துக்கள் என்றும், கிறிஸ்தவர்களை சிங்கள கிறிஸ்தவர்கள் என்றும் முஸ்லிம்களை சிங்கள முஸ்லிம்கள் என்றும் அழைக்க வேண்டும் என்றும் பல இடங்களில் கூறிவருகிறார்.

இலங்கையிலுள்ள இந்துக்களை மற்ற மதங்களின் பிடியில் இருந்து காப்பாற்றப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் RSS ன் தலைவர் பகத்சிங் வெளியிட்ட இனவாத அறிக்கையை ஒத்ததான ஒரு அறிக்கையைத் தான் தற்போது பொது பல சேனாவின் அமைப்பாளரும் வெளியிட்டுள்ளார். “இந்தியாவில் இருக்கும் கிருஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் இந்துக்கள் என்றே அழைக்கப்பட வேண்டும், காரணம் இந்தியா என்பது இந்து நாடு” என்றார் பகத்சிங். ஆக அடிப்படை கொள்கையில் ஒத்தவர்களாகவே இரு சக்திகளும் உள்ளனர்.

எப்படியோ இந்த கூட்டு நிச்சயமாக பெரும் நாசத்தை விளைவிக்கும் கூட்டாகவே இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

சமீப காலமாக பொதுபல சேனா இந்துக்களுடன் அக்கறையாகவும், நெருக்கமாகவும் காட்டிக்கொள்ள முனைவதை கண்டிருக்கிறோம். தமது விஸ்தரிக்கப்பட்ட பலத்தை காட்டுவது மட்டுமல்ல அதன் நோக்கம் RSS போன்ற அமைப்புகளுடன் கைகோர்ப்பதற்கான ஒரு உத்தியுமே அது என்று இப்போது அறியமுடிகிறது.

இந்து சம்மேளன கூட்டு
இதன் ஆரம்பம் அளுத்கம சம்பவம் நடப்பதற்கு முதல் மாதம் மே 24 அன்று ஞானசாரஞா தேரர் தலைமையில் இந்து சம்மேளனம் எனும் அமைப்பு நடத்திய ஊர்வலம் கொட்டாஞ்சேனையில் முடிவடைந்து அங்கு ஒரு ஆர்ப்பாட்டமும் நடாத்தப்பட்டது. அதில் இந்து கோவில்களில் தலைமை குருக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மத மாற்றத்துக்கு எதிராக பௌத்தர்களும் இந்துக்களும் ஒன்றிணைந்து நடத்திய கூட்ட்டமாக அது அறிவிக்கப்பட்டது. வழமைபோல ஞானசார தேரரின் விஷ பிரச்சாரம் நடந்தது. இது BBS திட்டமிட்டு மேற்கொண்ட ஒரு நடவடிக்கை என்கிற சந்தேகத்தை உறுதிசெய்த்தது அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள்.

அதன் நீட்சியாகவே பொதுபல சேனாவின் மாநாட்டில் இந்து சம்மேளனத்துக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்.


அந்த மாநாட்டில் ஞானசாரரின் உரையில்
“கிறிஸ்தவ மத மாற்றத்துக்கு இரையாகி, முஸ்லிம்களின் அடாவடித்தனகளுக்கு பலியாகியுள்ள அப்பாவி இந்துக்களை மீட்கும் மீட்பர்களாக ஆக நாங்கள் தயார். நாங்கள் அவர்களுக்கு தலைமை கொடுக்க தயார். இன்று இந்து சம்மேளனம் எம்மோடு இணைந்துள்ளது..” என்றார்.
அங்கு உரையாற்றிய இந்து சம்மேளன தலைவர் அருன்காந்த் ஞானசார தேரர் எழுதி வாசிக்க கொடுத்ததைப் போல வாசித்தார்.
“..ஆரம்பத்தில் மொகலாரயர்களின் ஆக்கிரமிப்பால் லட்சக்கணக்கானவர்கள் முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்பட்டோம். அந்த நிலைமை இன்னும் மாறவில்லை. எனவே நாமும் மத மாற்ற போரில் வெல்ல பௌத்தர்களோடு இணையவேண்டும். எமது இந்து பெண்கள் லௌஜிகத் எனும் வழியில் வஞ்சகமாக காதல் வலையில் வீழ்த்தப்பட்டு மதமாற்றம் செய்பவர்களுக்கு தக்க அடி கொடுக்கவேண்டும். இந்துகோவில் மடுமாதா கோவிலாக மாற்றப்பட்டது. அதனை மீண்டும் இந்துக்களுக்கு அளிப்பாரா ராயப்பு ஜோசப் ஆண்டகை... நமது பிராந்தியத்தை இந்து பௌத்த பிராந்தியமாக மாற்ற வேண்டும்....” என்றார் அருன்காந்த்.
இது குறித்து அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன், இந்த அமைப்பு எங்கிருந்து வந்தது என்று தெரியாது. புதிதாக முளைத்த காளான்கள், அது போக தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்களை பிரித்தாளும் சூழ்ச்சிகள் நடந்துவருவதாக BBCக்கு கூறினார்.

பொதுபல சேனாவின் சிங்கள பௌத்த ராஜ்ய சித்தாந்தத்தின்படி இந்துத்துவமும் அதன் எதிரி தான். ஆனால் அதன் குறியில் உள்ள சமூகங்களின் படிநிலைவரிசையில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அடுத்தபடியாகத்தான் இந்துக்கள் இருக்கிறார்கள். மேலும் இந்துக்கள் தமக்கு ஒரு சவாலான சமூகமாக தற்போதைக்கு இல்லை என்றும் நம்புகிறார்கள். அவர்களின் படிநிலை வரிசையில் “சிங்கள கத்தோலிக்கர்களும்” எதிரிகள் தான்.

முஸ்லிம்களுக்கு எதிரான மன நிலையை உருவாக்குவதற்காக இலங்கையில் ISIS பீதியை கிளப்பி சிங்கள பௌத்தர்களை கிலிகொள்ள செய்யும் கைங்கரியத்தை மேற்கொள்கிறது BBS. ஆனால் “BBS ஐ கட்டுப்படுத்தாவிட்டால் இனிவரும் காலத்தில் இலங்கைக்கு ISIS ஆபத்துக்கு வழிவகுக்கும்” என்று  புதுடில்லியில் உள்ள Security Risk Asia அமைப்பின் தலைவர் பிரிகேடியர் ராகுல் போன்ஸ்லே Ceylon Todayக்கு கடந்த ஒக்டோபர் 5ஆம் திகதி நேர்காணலில் தெரிவித்திருந்தார். சிரியாவில் கொல்லப்பட்ட ISIS உறுப்பினர்களில் மாலைதீவை சேர்ந்த 4 பேரும் இந்தியாவை சேர்ந்த 100 பெரும் அடையாளம் காணப்பட்டுள்ளதை நினைவுபடுத்தியிருந்தார்.

இனவாதத்தையே முழு நேர வேலையாகக்கொண்டு, நாடு முழுதும் இனவாதத்தீயை பரப்பிக்கொண்டு, பலாத்காரமாக நிலங்களை கைப்பற்றி, பௌத்த தலைமைத்துவ பயிற்சி வழங்கிக்கொண்டு, சட்டத்தை மதிக்காது, நீதிமன்றத்தில் குற்றவாளியாக ஆகி, குடித்துவிட்டு வாகனம் ஓடி, வட்டறக்க விஜித தேரர் உள்ளிட்ட பிக்குமார்களிடம் சண்டித்தனம் செய்து, ஜனநாயக கூட்டங்களையெல்லாம் குழப்பி, பயங்கரவாதி விறாத்துவின் வழிகாட்டலை பெற்றுக்கொண்டு, 210 வீடுகளை அழுத்கமையில் உடைத்துவிட்டு, முஸ்லிம் இனத்து மூன்று பேரை கொன்றுவிட்டு, பௌத்த பிக்குகளை வன்முறையில் ஈடுபடுத்திக்கொண்டு, உலக பௌத்தத்துக்கே களங்கத்தை உண்டாக்கிக்கொண்டு போதாக்குறைக்கு இப்போது ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து பயங்கரவாதத்தோடும் கூட்டை ஏற்படுத்த முயலும் பயங்கரவாதப்போக்கை அலட்சியப்படுத்திவிட முடியாது.

BBS ஐ இத்தனை காலம் இந்திய RSS அமைப்போடும் சிவசேனாவோடும் மட்டுமே ஒப்பிட்டு கணித்து வந்தோம். இன்று அவை நேரடியாகவே பகிரங்க அல்லது மறைமுக வேலைத்திட்டத்துக்குள் நுழைய நிறையவே சாத்தியங்கள் உள்ளன என்பதே இன்றைய சமிக்ஞை.
(நன்றி தினக்குரல் -12.10.2014)
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates