உள்ளூராட்சித் தேர்தலின் பின்னரான இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலைமையானது நாட்டை ஆட்டம் காணச் செய்துள்ளது. எதுவும் எப்படியும் நடக்கலாம் என்று நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு மேலோங்கிக் காணப்படுகின்றது. மலையகக் கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் பலவும் திக்குமுக்காடிப்போயுள்ளன. எவ்வாறெனினும் அரசியல் கொந்தளிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அரசியல் அவதானிகள், சிறுபான்மையினரை பொறுத்தவரையில் இத்தேர்தல் ஒரு பாடமாக அமைந்திருப்பதாகவும், சிறுபான்மையினர் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலானது மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒரு தேர்தலாக விளங்குகின்றது. இத்தேர்தலானது பிரதேசசபைகளுக்கான தேர்தலாக இருந்தபோதும் நாட்டின் அரசியல் பரப்பில் பல்வேறு மாறுதல்களுக்கு வித்திட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்தாது உடனடியாக நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மிகப் பெரும் அழுத்தத்தினை கொடுத்துவந்த நிலையில் கடந்த பத்தாம் திகதி இத்தேர்தல் இடம்பெற்றிருந்தது. மலையகக் கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்காக தம்மை அதிகமாகவே தயார்படுத்திக் கொண்டிருந்தன.
வேட்பாளர்கள் இரவு, பகலாக வீடுகளுக்குச் சென்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
கூட்டங்கள், கலந்துரையாடல்கள் என்று மலையகம் களைகட்டியிருந்தது. மலையகக் கட்சிகள் ஒவ்வொன்றும் தமது வெற்றியினை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கில் பல்வேறு காய் நகர்த்தல்களையும் மேற்கொண்டிருந்தன. மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் இணைந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தேர்தல் களத்தில் பல வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.
இதுபோன்றே இலங்கை தொழிலாளர் காங்கிரஸும், இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியும் தேர்தல் களத்தில் பல வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. ஆசிரியர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், எழுதுவினைஞர்கள், சட்டத்தரணிகள், சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பினரும் இக்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்தல் களத்தில் குதித்திருந்தனர். இவர்களில் சிலரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேசிய பட்டியல் மூலமான தெரிவுகளும் இடம்பெற்றுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 65 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு நாடளாவிய ரீதியில் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக கண்டியில் 54 சதவீத வாக்குப் பதிவும், மாத்தளையில் 80 வீத வாக்குப்பதிவும், நுவரெலியாவில் 70 வீத வாக்குப்பதிவும், இரத்தினபுரியில் 74 வீத வாக்குப்பதிவும், பதுளையில் 64 வீத வாக்குப்பதிவும், கேகாலையில் 70 வீத வாக்குப்பதிவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கன.
தேர்தல் வெற்றி தொடர்பில் மலையகக் கட்சிகள் பலவிதமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இத்தேர்தலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகளவிலான வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளது. தமது கட்சியின் சார்பில் அதிகமான உறுப்பினர்கள் தெரிவாகி இருப்பதாகவும் இது இ.தொ.கா. வின் சேவைக்கு கிடைத்த வெற்றியென்றும் இக்கட்சி தெரிவித்துள்ளது.
மக்கள் இ.தொ.கா. வின் சேவைகளை புரிந்துகொண்டு வாக்களித்திருப்பதாகவும், மலையகத்தின் ஒரே தலைவன் ஆறுமுகன் தொண்டமானே என்பதனையும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் நிரூபித்திருப்பதாக மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இ.தொ.கா. கூட்டு சேர்வதன் மூலமாக பதினொரு உள்ளூராட்சி மன்றங்களை நுவரெலியா மாவட்டத்தில் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் இ.தொ.கா. வின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக இ.தொ.கா. வின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கத்துக்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதியமைச்சர் பதவியே இவருக்க வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக இ.தொ.கா. தமக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான உறவினை தக்கவைத்துக் கொண்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்திருப்பதும், உறுப்பினர்கள் பலர் தெரிவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கன. எனினும் உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுதல் மற்றும் உறுப்பினர்களின் தொகை என்பவற்றில் கூட்டணி எதிர்பார்த்த இலக்கினை அடைந்துகொள்ள முடியாமல் போயுள்ளது . தமிழ் முற்போக்கு கூட்டணி உரிமை சார்ந்த விடயங்களுக்கும், பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் மலையக அபிவிருத்தி அதிகார சபையினை ஏற்படுத்தல் போன்ற விடயங்களுக்குமே முன்னுரிமை அளித்து வந்தது. இவற்றோடு வீடமைப்பு, தொழில் வாய்ப்பு போன்ற விடயங்களிலும் தமிழ் முற்போக்கு கூட்டணி அதிக ஈடுபாடு காட்டி வந்தது.
இந்த நிலையில் மலையக மக்கள் சிலர் தமது உரிமைகளையும் கொள்கைகளையும் கருத்திற்கொள்ளாது வாக்களித்திருப்பதாகக் கூட்டணியின் முக்கியஸ்தர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார். அற்ப சலுகைகளுக்காக ஒரு கூட்டம் விலை போயுள்ளதாகவும், பிழையான பிரசார நடவடிக்கைளின் மூலம் அப்பாவி மக்களின் வாக்குகளை சிலர் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் கூட்டணியின் முக்கியஸ்தர் ஒருவர் குற்றம் சுமத்தியிருக்கின்றார். குறிப்பாக ஊழியர் சேமலாப நிதி மற்றும் கூட்டு ஒப்பந்தம் என்பன குறித்த பிழையான பிரசாரங்களை மலையகக் கட்சியொன்று முன்னெடுத்ததாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகளே தமிழ் முற்போக்கு கூட்டணியின் எதிர்பார்த்த வெற்றியினை தட்டிப் பறித்துள்ளதாக இவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டது. முன்னணி ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இத்தேர்தலில் உருவெடுக்கும் என்று அதன் பொதுச் செயலாளர் நாயகம் எஸ்.சதாசிவம் தெரிவித்திருந்தார். ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சுதந்திரக்கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி இவற்றின் அதிருப்தியாளர்கள் சதாசிவத்துடன் இணைந்துக் கொண்டிருந்தனர். இவர்களில் பலருக்கு வேட்பாளர் பட்டியலிலும் இடம் வழங்கப்பட்டிருந்தது.
இன, மத பேதமின்றி சகலருக்கும் வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்பட்டிருப்பதாகவும் சதாசிவம் கருத்து வெளியிட்டிருந்தார். எனினும் முன்னணியின் வெற்றியும் எதிர்பார்த்தவாறு அமையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.
மலையகத்தில் சுயேச்சைக் குழுக்கள் பலவும் தேர்தல் களத்தில் குதித்திருந்தன. மேலும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீல.சு.கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பவற்றின் ஊடாகவும் சிறுபான்மை வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்திருந்தமையும் தெரிந்த விடயமாகும்.
மலையக மக்களின் வாக்கு பலத்தினை சிதைக்கின்ற நடவடிக்கைகள் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் இடம்பெற்றிருந்தன. பல சுயேச்சைக் குழுக்கள் இதற்கெனவே களமிறக்கப்பட்டிருந்தன. அத்தோடு பெரும்பான்மைக் கட்சிகள் சில இடங்களில் வாக்குப் பலத்தினை சிதைக்கின்ற நோக்கில் சிறுபான்மை வேட்பாளர்களுக்கு இடமளித்திருந்தமையும் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.. மலையக மக்களின் வாக்கு பலத்தை மழுங்கடிக்கச் செய்து இம்மக்களை அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் ஓரம்கட்டும் முயற்சியாக இது அமைந்திருந்தது.
இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது இனவாத சக்திகளின் எழுச்சிக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளதாக பரவலான கருத்துகள் வெளியிடப்படுகின்றன. எனினும் இது ஒரு ஆரோக்கியமான செயலாகத் தென்படவில்லை. இனவாதத்தின் எழுச்சி நிலையானது பல்வேறு பாதகமான விளைவுகளுக்கும் இட்டுச் செல்லும் என்பது சொல்லித்தெரிய வேண்டிய விடயமல்ல. எமது நாட்டை பொறுத்தவரையில் இனவாதம் என்பது புதிய ஒரு விடயமல்ல. இனவாதத்தினால் எமது நாடு பல்வேறு இன்னல்களை ஏற்கனவே அனுபவத்திருக்கின்றது. இதன் தழும்புகள் இன்னும் இலங்கை தேசத்தின் தேகத்தில் இருந்துகொண்டே இருக்கின்றன. இதற்கிடையில் மீண்டும், மீண்டும் இனவாத நிலை நிறுத்துகையானது தழும்புகளை அதிகரிக்கச் செய்வதாகவே அமையும். இதற்கிடையில் மலையகக் கட்சிகள் இவ்விடயத்தில் விழிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசியலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும் எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவும் விரும்பத்தகாத கூட்டுகளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டிய ஒரு தேவைக் காணப்படுகின்றது.
மலையக மக்கள் இன்னும் பல்வேறு தேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இவர்கள் அடைய வேண்டிய உரிமைகள் இன்னுமின்னும் அதிகமாகவே காணப்படுகின்றன. தொழில் வாய்ப்பு, பொருளாதாரம், வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், சமூக வாழ்க்கை என்று பல மட்டங்களிலும் இம்மக்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மலையக அதிகார சபை மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த கவனமும் அவசியமாக உள்ளது. பேராசிரியர் சோ.சந்திரசேகரன் போன்றவர்கள் மலையகத்திற்கென்று தனியான ஒரு பல்கலைக்கழகத்தினை ஏற்படுத்த வேண்டியதன் அவசியப்பாடு தொடர்பில் தொடர்ச்சியாகவே வலியுறுத்தி வருகின்றனர். எமது பக்கம் மற்றும் மண்ணின் அடையாளத்துடன் கூடிய ஒரு பல்கலைக்கழகமாக இது அமைதல் வேண்டும் என்பது பேராசிரியர் சந்திரசேகரனின் விருப்பமாகும். எனவே தனியான பல்கலைக்கழகம் என்பது பேராசிரியர் சந்திரசேகரனின் வாழ்நாளிலேயே சாதகமாதல் வேண்டும் என்பது புத்திஜீவிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. மலையக மக்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்கும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் மலையக கட்சிகளிடையே இணக்கப்பாடு, புரிந்துணர்வு என்பன அவசியமாகும். விட்டுக்கொடுப்புகளும் இருத்தல் வேண்டும். இது சாத்தியப்படாதவிடத்து வெளியார் எம்மில் ஆதிக்கம் செலுத்துவதும் அடக்கியாள்வதும் தவிர்க்க முடியாததாகிவிடும்.
நன்றி - வீரகேசரி