இலங்கை அரசியலில் தற்போதைய நிலையில் சிறுபான்மைத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் முக்கிய பாத்திரம் வகிக்கின்ற தேவை இருக்கின்றதென்றால் யாரும் இக்கருத்துக்கு முரண்பட முடியாதவர்களாகத்தான் இருக்க முடியும்.
இந்த வகையில் மலையக மக்களும் இலங்கை அரசியலில் ஜனாதிபதியை தெரிவு செய்வதில் பிரதானமான பாத்திரம் வகிக்கின்ற நிலைமை தோன்றியுள்ளமை அண்மைய கால அரசியல் நகர்வுகள் தெளிவுபடுத்துவதனை காண முடிகின்றது.
செருப்பினை வைத்தாலும் மலையக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற ஒரு நகைப்புக்கிடமான எண்ணம் ஆரம்ப காலத்தில் அம் மக்கள் பற்றிய ஒரு தவறான கருத்து இருந்தமை வரலாற்றில் கறைபடிந்த ஒரு சான்றாகும்.
காலம் செல்லச் செல்ல அம் மக்கள் விழிப்புணர்வு பெற்று தற்போது தாங்களாகவே போராடுகின்ற முடிவுகள் எடுக்கின்ற நிலைக்கு வந்துள்ளமையானது அம்மக்களுடைய அரசியல் முதிர்ச்சியினையும் அவர்களின் சந்ததியினரின் எதிர்காலம் பற்றி சிந்திக்கின்ற தன்மையும் இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது. அண்மையில் கட்சி தாவிய இரண்டு முன்னாள் பிரதி அமைச்சர்களின் நிலைமை இதற்கு சான்று பகர்கின்றது.
இங்கு எதனை கோடிட்டு காட்டலாம் என்றால் மக்கள் தன்னிச்சையாக எடுத்த ஏகோபித்த முடிவானது அவர்களின் எதிர்கால அரசியலை சிந்திக்க வைத்துள்ளமையை குறிப்பிடலாம்.
மலையக மக்களை அடகு வைத்து அரசியல் செய்கின்ற காலம் செய்த காலம் இன்று மலையேறி விட்டது. பணத்திற்காக சோரம் போனவர்களையும் மலையக மக்கள் தண்டிக்கத்தான் செய்வார்கள். இதற்கு காலம் தொலைவில் இல்லை.
தெரிந்தோ தெரியாமலோ இன்று தொடர்பு சாதனங்களினூடாக தங்களுடைய அரசியல் இருப்பு தொடர்பாகவும் தங்களுடைய வாழ்வியல் தேவைகள் தொடர்பாகவும் உணரத் தலைப்பட்டுள்ளார்கள் என்பதை அண்மைய வெகுஜன போராட்டங்கள் நிரூபிக்கின்றன.
இன்று மலையக மக்கள் மத்தியில் தொடர்பு சாதனங்களின் பயன்பாடு அவர்களின் வாழ்க்கை மேம்பாடு தொடர்பாக சிந்திக்க வைத்துள்ளது என்றால் அதனை யாரும் மறுக்க முடியாது. பொருளாதாரத்தில் பின்னடைவுகளை சந்தித்தாலும் தம்முடைய எதிர்கால சந்ததியினரைப் பற்றி சிந்திக்கின்ற தார்மீக கடமையும் எண்ணமும் இன்று வீச்சுப் பெற்று வருகின்ற நிலைமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
எமது மக்களின் ஏமாந்த நிலையினை ஒரு பலவீனமாக கண்டு தலைவர்களாக நினைப்பவர்கள் அவர்களை இன்னும் ஏமாற்ற நினைக்கலாமா? மாடி லயன் குடிமனைத் திட்டம் என்பது மேலும் அவர்களை ஒரு இருண்ட யுகத்திற்கு அழைத்துச் செல்லும். 7 பேர்ச் காணியில் 7 குடும்பங்களுக்கு ஒரே தொடர் மாடியில் 7 மாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதனை நாம் காணலாம். அதன்படி ஒரு குடும்பத்திற்கு 1 பேர்ச் காணி அளவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக ஒரே தடவையில் 7 பேருக்கு 7 பேர்ச் காணியே 7 குடும்பங்களுக்கும் போதுமானதாக நினைத்து மாடி வீட்டு லயன் அமைக்கப்பட்டுள்ளமை புலனாகின்றது. தற்போதைய நிலையில் நினைவாலயம் கட்டுவதற்கு கூட 1 பேர்ச் பயன்படுத்துவதில்லை.
மலையக மக்களை ஏன் இவர்கள் இப்படி ஏமாற்ற வேண்டும்? இப்படி ஏமாற்றுவதன் நோக்கம் தான் என்ன? என்பது ஒரு புரியாத புதிராக இருக்கின்றது.
ஒவ்வொரு தோட்டத் தொழிலாளியும் ஒரு மாதத்திற்கு தமது வேதனத்தில் 150 ரூபாவை சந்தாப்பணமாக செலுத்துகின்றார். ஆக ஒரு தொழிலாளி ஒரு வருடத்திற்கு ரூபா 1800 ரூபா சந்தாவாக செலுத்துகின்றார். எனவே ஒரு தொழிற்சங்கத்தில் ஆக குறைந்தது 10000 பேர் இருந்தால் ஒரு வருடத்திற்கு 1 கோடியே 80 இலட்சம் ரூபா தொழிற்சங்கத்தின் வருமானம் ஆகும். எனவே தொழிற்சங்கங்கள் பிழைப்பு நடத்துவதற்கு இவர்களுடைய பங்கு எவ்வளவு அளப்பரியது என இந்த பணத்தொகை நிரூபிக்கின்றது அல்லவா.
மலையக வாழ் புத்திஜீவிகள் ஒரு சிவில் அமைப்பினை உருவாக்கி பாரம்பரிய அரசியலினை உடைத்தெறிந்து சிறந்த தலைமையினை வழங்குவதற்கு முன்வர வேண்டும். இன்றைய புத்திஜீவிகள் பலருக்கு மலையகம் பாரிய பங்களிப்புச் செய்துள்ளமையை அவர்கள் மறுக்க முடியாது. ஏனென்றால், மலையக மக்களுடைய வாழ்வியல் முறைமை பற்றிய ஆய்வுகள் தொடர்பான விடயங்கள் அவர்களை ஒரு உயரிய நிலைக்கு கொண்டு சென்றிருக்கலாம். புத்திஜீவிகளும் ஆய்வுகளுடன் கட்டுரைகளை எழுதி அவர்களின் அடை மட்டத்திற்கு அதனை ஒரு ஆதாரமாகவும் வரலாற்றில் அவர்களுடைய பெயர் பதிவிற்காக மட்டும் வாழ்ந்து விட்டுப்போகக் கூடாது.
இன்று மலையகத்தில் வெகுஜனப் போராட்டத்திற்கு அடித்தளமாக மீரியபெத்த மண் சரிவில் உயிர் நீத்தவர்கள் உயிரூட்டியுள்ளார்கள். அவர்களின் ஆத்ம சாந்திக்காக ஒவ்வொரு மலையக மைந்தனும் தனக்குள் ஒரு சபதம் எடுத்து மலையக மக்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியினை தோற்றுவிக்க பங்களிப்பு செலுத்த வேண்டும்.
எம்மைப் பயன்படுத்தி சுகபோக வாழ்க்கை வாழ்பவர்களுக்கு உரிய பாடம் படிப்பிக்க வேண்டும். எம் மக்களுடைய வரலாறு தெரியாத, பிரச்சினைகள் தெரியாத எம் சமூகத்திற்கு பொருத்தமில்லாத ஒருவர் எம்மை வைத்து பிழைப்பு நடத்துவதற்கு உடன்படுவது எம்மை நாமே தற்கொலை செய்து கொள்வதற்கு சமனாகும்.
நாம் ஒற்றுமைப்பட்டவர்களாக எதற்கும் விலை போகாதவர்களாக வாழ வேண்டும். எம்மை நாம் இன்னும் சரியாக அடையாளப்படுத்த முடியாத கையாலாகாத சமூகமாகவே இருக்கின்றோம். மலையக மக்களா? இந்திய வம்சாவளி மக்களா? இலங்கைத் தமிழர்களா? மலையக மக்கள் ஒரு தேசிய இனமா? என்று எதனைத் தெரிவு செய்து படிவங்களில் நிரப்புவது என்பது இன்னும் ஒரு கேள்வி குறியாகத்தான் இருக்கின்றது.
இன்னும் தகரத்திற்கும் கதிரைகளுக்கும் இசைக்கருவிகளுக்கும் கோயில் பொருட்களுக்குமே அதிகமான பாராளுமன்ற மாகாண சபை உறுப்பினர்களும் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதிகளிலிருந்து நிதியினை ஒதுக்குகின்றனர். இதுதான் மலையக அரசியலா? தேர்தல் காலம் என்றால் அப்பாவி இளைஞர்கள் கலர் கலர் கட்சி உடைகளுக்கு மயங்கி ஏமாந்து ஒரு உதவி (துணை) திரைப்பட நடிகர்களாக மாறி விடுகிறார்கள். அரசியல் தெளிவு முதிர்ச்சியில்லாத தலைமைத்துவமே இன்று மலையகத்தில் இருக்கின்றது. எனவே தலைமைத்துவம் வெற்றிடமாக இருக்கின்ற நிலைமையினையே இது புலப்படுத்துகின்றது.
படித்த சிவில் சமூகம் ஏன் பின்வாங்குகின்றது என்பது தெரியவில்லை. தான் உயர்ந்து வருவதற்கு அடித்தளமாக இருந்த மலையக மண்ணுக்கு சேவை செய்வதில் அரசியல் தீர்மானம் எடுப்பதற்கு ஏன் பின்வாங்க வேண்டும் ? எத்தனையோ தேவைகள் இன்று இருக்கின்றன என்பதனை மலையக மக்கள் உணர தலைப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு தலைமை கொடுப்பதற்கு தகுந்தவர்கள் இன்று இல்லாமையே ஒரு குறையாக இருக்கின்றது. எனவே காலத்தின் தேவை கருதி படித்தவர்களை நமது சமூகத்திலிருந்து பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.
அரசியல் மக்கள் பிரச்சினைகள் தெரிந்தவர்களை நாம் தெரிவு செய்ய வேண்டும். அப்போதுதான் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும். எம்மை வைத்து பேரம் பேசுபவர்களின் காலம் ஓய்ந்து போய் விட்டது. தன்னை தலைவர்களாக நினைப்பவர்களின் நிகழ்காலம் இன்று அவர்களின் எதிர்காலத்தின் அரசியலில் கேள்விக் குறியாகி விட்டிருப்பதனை அறிவார்கள். எனவே, மலையக மக்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் யாரைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற ஒரு முக்கியமான கால கட்டத்திற்கு வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு இப்போது எந்த தொழிற்சங்கமும் வழி காட்ட வேண்டிய தேவையில்லை. இந்த தேர்தல் கால நகர்வுகள் எல்லோருக்கும் நல்ல தெளிவினை ஏற்படுத்தியிருக்கின்றது. தங்களை யாரும் இனி சவாரிக்காக பயன்படுத்துவதற்கு தாங்கள் தயாரில்லை என்பதனை இந்த தற்துணிவு பதிலாக எல்லோருக்கும் கிடைத்திருக்கின்றது.
நன்றி - வீரகேசரி - 28.12.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...