நுவரெலியா பிரதேச சபையில் 2011 ஆண்டு தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்கு பெற்ற உறுப்பினர்களில் மூவர், கட்சி தாவியமையால் அவர்கள் தங்களுடைய உறுப்புரிமையை இழந்தனர்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா பிரதேச சபையில் மலையக மக்கள் முன்னணி பட்டியலில் போட்டியிட்டு விருப்பு வாக்கில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட ராமையா மலர்வாசகம் (4,082 விருப்பு வாக்குகள்) கதிர்வேல் கலியானகுமார் (2,436 விருப்பு வாக்குகள்) ராஜரட்ணம் ரவிக்குமார் (விருப்பு வாக்குகள் 1,913) ஆகிய மூவரின் உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து அந்த வெற்றிடங்களுக்கு மலையக மக்கள் முன்னணியின் பட்டியலில் போட்டியிட்டு 13ஆவது இடத்தை பெற்றுக் கொண்ட வேலு மயில்வாகனம் (விருப்பு வாக்குகள் 1,601) 14ஆவது இடத்தை பெற்றுக் கொண்ட அருணாசலம் நல்லமுத்து (1,583 விருப்பு வாக்குகள்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒரு உறுப்பினரை மிக விரைவில் நியமிக்கவுள்ளதாகவும் மலையக மக்கள் முன்னணியின் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உறுப்புரிமை இழந்த மூன்று உறுப்பினர்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு ஆதரவு வழங்கியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, நுவரெலியா பிரதேச சபையின் இன்னும் மூன்று உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பான தீர்ப்பு மிக விரைவில் கிடைக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அவர்கள் முறையே தொழிலாளர் தேசிய சங்கம் சார்பில் போட்டியிட்டவர்களான நுவரெலியா பிரதேச சபையின் உப தலைவர் பதவி வகித்த கதிர்வேல் சிவப்பிரகாசம் சச்சிதாநந்தன் (3277 விருப்பு வாக்கு) அம்பலதேவன் நாகராஜா (2039 விருப்பு வாக்குகள்) மலையக மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்டவர்களான ஜோன் லெமன் தோமஸ் சரத்குமார (2,449 விருப்பு வாக்குகள்) ஆகியோருக்கும்,
உடபலாத்த பிரதேச சபையில் மலையக மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரசாத் டி.சில்வா பதுளை மாவட்டத்தில் ஹாலி-எல பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.தியாகராஜாஇலுணுகலை பிரதேச சபையின் உறுப்பினர் பீ.சுப்பிரமணியம் (சந்திரன்) ஆகியோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு இவர்களின் வெற்றிடத்திற்கு மலையக மக்கள் முன்னணியின் பட்டியலில் போட்டியிட்ட உறுப்பினர்கள் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செயற்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் கட்சித்தாவ இருப்பவர்கள் தமது முடிவுகளை மாற்றிக் கொள்ள தீர்மானித்திருப்பதாகவும் மேலும் தெரியவருகின்றது. மலையக மக்கள் முன்னணியின் இந்த செயற்பாடானது தேசிய கட்சிகளுக்கும் ஒரு முன் உதாரணம் என முன்னால் ஊவா மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளருமான அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
நன்றி - IBC tamil
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...