Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

ஏன் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது? - சு. நிஷாந்தன்



கூட்டு ஒப்பந்தம்  தொடர்பில் பல்வேறு எதிர்ப்பலைகள் எழுந்துள்ளதால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது எனத் தனியார் கம்பனிகள் தொடர்ந்தும் இழுபறியான பதிலையே தெரிவித்து வருகின்றன.

2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி தற்போது ஒன்பது மாதங்கள் கடந்து விட்டன. கடந்த 11, 18ஆம் திகதிகளில் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தலைமையில் நடைபெற்ற 9, 10ஆம் சுற்றுப் பேச்சுகளும் இணக்கப்பாடு இன்றியே முடிவடைந்தன. தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்தும் இவ்வாறு இழுபறிநிலை தொடருமாயின் எதிர்காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை கேள்விக்குறியாகிவிடும். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ள 1,000 ரூபா சம்பளக் கோரிக்கையிலிருந்து ஒருபோதும் தாம் பின்வாங்கப் போவதில்லையென திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதனையே கடந்த பத்துச் சுற்றுப் பேச்சுகளிலும் வலியுறுத்தி வந்தது. தமிழ் முற்போக்குக் கூட்டணி தோட்டத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான சம்பளம் கிடைத்தால் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளமை அறிந்ததே. முதலாளிமார் சம்மேளனமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி வருகிறது, இ.தொ.காவும் பேசுகிறது, த.மு.கூட்டணியும் பேசுகிறது. ஆனால், இதுவரை தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்வுகாணப்படவில்லை. 

வரவு  செலவுத் திட்ட இறுதி நாடாளுமன்ற அமர்வின் போது இந்த விடயம் சூடு பிடித்திருந்தது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைத் தொடர்பில் தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனமும் இணக்கப்பாடு எட்டும்வரை அரசு சார்பில் நாளொன்றுக்குத் தொழிலாளர்களின் சம்பளத்துடன் ரூ.100 அதிகமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசு சம்பள விடயத்தில் ஆக்கப்பூர்வமாகச் செயற்படுமானால் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட்டிருக்கும், கூட்டு ஒப்பந்தமும் எப்போதோ கைச்சாத்திடப்பட்டிருக்கும். அண்மையில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை கம்பனிகள் அதிகரிக்கத் தயங்கினால் தோட்டங்களை அரசு பொறுப்பேற்கும் சூழல் உதயமாகுமென அறிவித்தார். உண்மையில் இது வரவேற்கத்தக்கதே. 

இந்த நாட்டில் அரசுடன் துளியளவேனும் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பந்தம் இல்லாமல் உள்ளமையால்தான் பெருந்தோட்ட மக்கள் அலட்சியப் போக்கில் புறந்தள்ளப்பட்டுள்ளனர். 1972 ஆம் ஆண்டுக்கும் 1992ஆம் ஆண்டுக்கும் இடையில் தோட்டங்கள் அரச பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட போது இங்கு அரச பொது நிர்வாகம் காணப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் அரசிடம் கேள்வியெழுப்பக் கூடியதாகவும் இருந்தது. ஆனால், தற்போது தொழிலாளர்களின் அனைத்து விடயங்களும் தனியார் துறையினரின் கீழ் காணப்படுகின்றமையால் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர்.

தோட்டங்களை அரச நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமென்ற பதம் தற்போது மேலோங்கி நிற்கின்றது. குறிப்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணி இதனை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றது. தோட்டங்களை அரசுடமையாக்குவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை வெளிட்டுள்ளது. தனியார் உடமையின் கீழ் இருக்கும் போதுதான் எமக்கான சம்பளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்ற வாதத்தை முன்வைக்கிறது.

ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் நிலப்பரப்பு ஐயாயிரம் ஹெக்டேயராகக் காணப்பட்டது. ஆனால், இன்று தனியார் கம்பனிகளின் கீழ் 20ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பு காணப்படுகிறது. பாரிய வருமானம் பெற்ற தோட்டங்களில் வருமானம் இல்லையென கம்பனிகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுதான் தேயிலை, இறப்பரின் விலை வீழ்ச்சியைக் கண்டது. தோட்டக் கம்பனிகள் வருமானத்தை மறைத்து வருவதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. 

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தற்போது குரல் எழுப்பும் தொழிற்சங்கங்கள் கடந்த காலங்களில் அலட்சியப் போக்கில் நடந்துகொண்டமைதான் இன்று தொழிலாளர்கள் பாரிய கஷ்டத்தை எதிர்நோக்க காணரமாக உள்ளது. 

குறிப்பாக, 1992க்கும் 2006ஆம் ஆண்டுக்கும் இடையில் பெருந்தோட்டத்துறை பாரிய வருமானம் ஈட்டிய துறையாகக் காணப்பட்டதை எவரும்  மறுக்க முடியாது. அப்போது தொழிற்சங்கங்கள் தற்போது போல் விடாப்பிடியாக  இருந்திருந்தால் மக்களின் வாழ்வாதாரம் பல மடங்கு உயர்ந்திருக்கும் என மலையக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். கூட்டு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு காலம் கடந்து ஞானம் பிறந்ததாகவே ஏனைய தொழிற்சங்கங்களும் வலியுறுத்துகின்றன.

 கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் ஒரு வேடிக்கையான விடயம் கூட நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கூட்டு ஒப்பந்தம் கடந்த 18ஆம் திகதிக்கு முன்னர் கைச்சாத்திடப்படாவிட்டால் தீக்குளிப்பதாக அறிவித்திருந்தார். இவரின் ஆவேசம் வரவேற்கத்தக்கதே. ஆனால், அவரின் உயிர் பிரிவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்துவிட முடியாது. அவர் தன்னுடைய செல்வாக்கை மக்கள் மத்தியில் நிலைநிறுத்தவே அவ்வாறு பொய் நாடகமொன்று அரங்கேற்றியுள்ளார். எனக் கூறப்படுகிறது. ஜனநாயக ரீதியில் வெவ்வேறு போராட்டங்கள் காணப்பட்டும் முட்டாள் தனமான இவரின் செயற்பாடுகள் மலையக மக்களை மேலும் பலவீனமானவர்களாக மாற்றும் என்பதை இவர் மறந்துவிடக்கூடாது.

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிய கம்பனிகள் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசும் இன்று உறுதியாக நம்புகிறது. எதிர்வரும் மாதங்களில் தனியார் துறையினரின் சம்பளம் அதிகரிக்கப்படும்போது கண்டிப்பாகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை தொழில் அமைச்சர் முன்வைத்துள்ளார். 

எனவே, முதலாளிமார் சம் மேளனம் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான சம்பளத்தை முன்வைத்து கூட்டு ஒப்பந்தத்தைக்  கைச்சாத்திட வேண்டும். இல்லாவிடின் மீண்டும் தோட்டங்கள் அரச நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற வாதமே தற்போது மேலோங்கி நிற்கின்றது. 

மலையக வரலாற்றில் முதன் முறையாக பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களுக்காக தன் இன்னுயிரை அர்ப்பணிக்க முற்பட்ட அந்த நபரின் நோக்கம் வரவேற்கத் தக்கதே ஆனால், அதற்காக அவர் மேற்கொண்ட செயற்பாடுகளும், முன்னெடுப்புகளும் ஒரு பம்மாத்து நாடகம் போன்று காட்டப்பட்டமைதான் வேதனைக்குரியது. மக்களும் இது ஒரு நாடகம் என்று புலம்புகின்றனர். 

வரலாற்றில் பாரம்பரியம் தொட்டு மலையக மக்களுக்குப் பாரியப் பிரச்சினைகள் இருக்கின்றமையை எவரும் மறுக்க முடியாது. குறிப்பாக பிரித்தானிய ஏகாதிப்பத்தியத்திலிருந்து விடுதலையடைந்தப் பின்னர் பெருந்தோட்ட மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகள் தலைத்தூக்கின. பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் பிரித்தானியரின் பொருளாதாரச் சுரண்டல்களுக்கு இவர்களின் உழைப்பு தேவைப்பட்டதன் காரணமாக ஓரளவு சலுகைகளுடன் மலையக மக்கள் கொண்டு நடத்தப்பட்டனர். 

அது வரலாறாயினும் இன்று உலகளாவிய ரீதியில் வெவ்வேறு சமூகங்கள் தங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பல்வேறு ஜனநாயகவழிப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. அதில் வெற்றியும் கண்டுள்ளன. அத்தகைய ஜனநாயகப் போராட்டங்களை எமது மலையக அரசியல் தலைமைகள் வரலாற்றில் பெருபாலும் முன்னெடுக்க வில்லை என்பதே உண்மை. ஜனநாயப் போராட்டங்களே தலைமைகளின் உண்மைத் தன்மைக்குக்குத் தீர்க்கமானதாக அமையும். அதுவே மக்கள் குரலாகவும் ஒலிக்கும்.

2013ஆம் ஆண்டு தோட்ட முகாமைத்து கம்பனிகளுடன் தொழிற்சங்கள் செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் காலாவதியாகியிருந்தமை அனைவரும் அறிந்ததே. கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஒன்பது மாதங்கள்  கடந்துவிட்ட நிலையில் இன்னமும் அதனைக் கைச்சாத்திடப்படாமல் உள்ளமை மலையக மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் பாரிய பொருளாதார அநீதியாகும். தாங்கள் முன்வைத்த 1,000 ரூபா சம்பளக் கோரிக்கையிலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை என ஆணித்தரமாகவுள்ள நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான சம்பளம் கிடைத்தால் போதும் எனும் நிலைப்பாட்டில் உள்ளது.

கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாகவுள்ள நிலையில் இப்பிரச்சினை பூகம்பம் போல் வெடித்துள்ளது.  இதில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரங்கேறிய ஒரு வேடிக்கையான விடயம்தான் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாவிடின் மக்களின் நலன் கருதிதான் பாராளுமன்றத்தில் தீக்குளிக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கடந்த 11ஆம் திகதி  அறிவித்திருந்தமை ஒட்டு மொத்த மலையக மக்களுக்கும் திகைப்பாக இருந்தது. 10 நாட்கள் அவகாசம் வழங்கி பத்து நாட்களில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாவிடின் மக்களுக்காகத் தீக்குளிப்பேன் எனத் தெரிவித்திருந்தமை பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இலங்கை வரலாற்றில் இவ்வாறு மக்களுக்காக ஒருவர் பாராளுமன்றத்தில் தீக்குளிப்பேன் என்று சொன்னதும்  அதுதான் முதன் முறையாக இருந்தது. 

மலையக மக்கள் மீது இவ்வளவு அக்கரைக் கொண்ட அரசியல் வாதிகள் உள்ளமையை நினைத்து புத்திஜீவிகளும் முக்கியமாக மக்களே திகைத்திருந்தனர். இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானும் சம்பளக் கோரிக்கையை முன்வைத்து நள்ளிரவு 12 மணிக்கு சத்தியாக்கிரப் போராட்டத்தை ஹட்டன் மல்லிக பூ சந்தியில் ஆரம்பித்திருந்தார். அவருடையப் போராட்டம் அடுத்த நாள் 12 மணிவரைக் கூட நிலைக்க வில்லை. 

இக்காலத்தில் மாத்திரமல்ல முன்னாள் ஜனாதிபதி சந்திராக்கா குமாரத்துங்கவின் ஆட்சிக்காலத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர் சந்திரசேகரனும் இவ்வாறு தொழிலாளர்களுக்காகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார். குறிப்பாக சந்திரசேகரர் மல்லிய பூ சந்தியில் கூடாரம் அமைத்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.  இவ்வாறு நடைபெற்றப் போராட்டங்களில் எவர் எவர் உண்மையாகச் செயற்பட்டனர் என்ற விடயம் அரசியல் வாதிகளைவிட மக்களுக்கு நன்குத் தெரியும். ஆனால், தீக்குளிக்கும் அளவுக்கு எவரும் சென்றதில்லை. மக்கள் ஏமாந்த காலங்கள் கடந்து விட்டதை அறியாதவர்களாக அரசியல் தலைமைகள் இன்றும் இருக்கின்றார்களா?

உண்மையில் வடிவேல் சுரேஷ் போன்ற தலைவர்கள் இவ்வாறு கூறுவது நகைப்புக்குரிய விடயம் என்று பலரும் கூறினர். அதனை அவரே நிஜமாக்கி விட்டார். கடந்த 18ஆம் திகதி 3 மணிக்குத் தீக்குளிப்பதாக இருந்த வடிவேல் சுரேஷ்  4 மணிக்குத்தான் இரண்டு எரிபொருள்(பெட்ரோல்) கேன்களுடன் பாராளுமன்ற வளாகத்திதை வந்தடைந்தார்.  பாராளுமன்ற வளாகத்திற்குள் எரிபொருளை விடுத்து குறிப்பாகக் கையடக்கத் தொலைபேசியைக் கூட எடுத்து செல்ல முடியாது என எந்தவொரு அமைச்சரும் அறிந்திராதவராக இருக்க முடியாது. 

அதனை அறிந்து வடிவேல் சுரேஷ் பாராளுமன்றத்தில் தீக்குளிக்கச் சென்றமை மக்களை ஏமாற்றும் செயலாகவே கருதப்படுகிறது. அவரை தீக்குளிக்கும் படி மலையக மக்களோ அல்லது வேறு எவரும் கேட்கவில்லை. மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை நிலைநிறுத்த அவர் கையாண்ட யுத்தியை மாற்றியிருக்க வேண்டும். 

ஊவா மாகாணத்தில் இவர் கல்வி அமைச்சராக இருக்கும் போது இணைத்துக்கொள்ளப்பட்ட உதவி ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளத்துடன் 10ஆயிரம் ரூபா பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிகரித்து வழங்கியிருந்தார். ஆனால், அது அவர்களுக்கு நிரந்தரமானதாக அமையவில்லை. பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கல்வி அமைச்சிடமிருந்து மேலதிகமாக உதவியாசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளப் பணத்தை ஊவா மாகாண சபைக்குப் பெற்றுத் தருவதாகவே அவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர் பாராளுமன்றம் தெரிவானப் பின்னர் அவ்விடயம் கைவிடப்பட்டதால் இன்று உதவியாசிரியர்களின் சம்பளத்தில் இரண்டாயிரம் ரூபா கழிக்கப்படுகிறது. இவர்களின் மொத்த சம்பளமே 6 ஆயிரம் ரூபாதான். தற்போது இரண்டாயிரம் ரூபா கழிக்கப்பட்டு 4 ஆயிரம் ரூபாதான் சம்பளப் பணமாக வழங்கப்படுகிறது. இத்தகைய பாரிய பிரச்சினைகள்  காணப்பட்டும் வடிவேல் சுரேஷ் அது தொடர்பில் கவனம் செலுத்த வில்லையென்பது முக்கிய குற்றச்சாட்டாகும். 

இவ்வாறு பல்வேறு சமூக ரீதியான பிரச்சினைகள் தீர்வுகாணமால் உள்ள நிலையில் மக்கள் மத்தியில் தன் செல்வாக்கை நிலைநிறுத்த வடிவேல் சுரேஷ் மேற்கொண்ட இந்த நாடகம் வெறுமனே மக்களை ஏமாற்றுவதற்கானப் பித்தலாட்டம் என்பதை சாதாரண பாமரனும் இன்று அறிந்துள்ளான்.

இங்கு குறிப்பிட முனைந்ததாவது, மலையக மக்களின் பல்வேறு சமூக, அரசியல், காலாசார, பொருளாதாரம் சார்ந்தப் பிரச்சினைகள்  தீர்வுகாணக் கூடியவையாக எம் கண் முன்னே உள்ளன. அவற்றை ஒருவர் தீக்குளிப்பதன் மூலம் வென்றெடுத்துவிட முடியாது மாறாக அகிம்சை வழியிலும்,  ஜனநாயக ரீதியிலும் உண்மையாக மக்களுக்காகப் போராடினால் வெற்றி என்பது நிச்சம். 

சமூகத்தை மடமை சமூகமாக மாற்றுவதை விடுத்து அறிவுடைய சமூகமாக மாற்ற எத்தனிக்க வேண்டும். வராலற்றில் மலையகத்தில் மறைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளை இன்று சில புதிய மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் வெளிகொண்டு வரப்படுகிறன. இத்தகைய செயற்பாடுகள் கடந்த காலங்களில் குறிப்பாக அமரர் சௌமிய மூர்த்தித் தொண்டமானுக்குப் பின்னர் அரங்கேறியதாக வரலாறு இல்லை. மலையக மக்களை வைத்து பேரம் பேசினார்களே தவிர அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் குரல் எழுப்பியமை குறைவாகவே இருந்தது.

எனவே, மலையக மக்களின் நலனை சிந்தித்து அவர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தாமல் சமூக அக்கரையுடன் முன்னோக்கிச் செல்ல முற்படும் தலைமைகளை மலையகம் வரவேற்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

மலையகத்தில் கூரைகளை ஆக்கிரமிக்கும் வட்டத்தகடுகள் பாரம்பரிய கலைகளை முன்னெடுக்கத்தடையாகவுள்ளன - திலகர் எம்பி


மலையகத் தோட்டங்களில் 'லயன்' குடியிருப்புகளில் கூரைத்தகடுகளுக்கான கோரிக்கை அதிகளவில் உள்ளது. அரசியல்வாதிகளிடம் முன்வைக்கப்படும் பிரதான கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. எனினும் யாரிடமும் எவ்வித கோரிக்கையும் முன்வைக்காது 'டிஷ் எண்டனா' எனப்படும் வட்டத்தகடுகள் லயன் கூரைகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இந்த கலாசாரமும் மலையக பாரம்பரிய கலைகளை முன்னெடுப்பதற்கு தடையாக அமைந்துள்ளது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார். 

லிந்துல, அகரகந்தை தோட்டத்தில் பாரதி மொழி மன்றத்தின் வருடாந்த பரிசளிப்பும் கலை கலாசார நிகழ்ச்சிகளும் அண்மையில் நடைபெற்றது. பாரதி மொழி மன்றத்தின் தலைவர் கு.மோகன்ராஜின் தலைமையில் இடம் பெற்ற இந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

மலையகத் தோட்டங்களில் பாரதி, வள்ளுவர், இளங்கோ என முன்னோர்கள் பெயரில் மன்றங்கள் அமைக்கப்பட்டு கலை கலாசார, நாடக முயற்சிகள் முன்பு மேற்கொள்ளப்படுவதுண்டு. திருவிழாக்காலங்களில் ஒரு நாள் ஒதுக்கி இத்தகைய மன்றங்கள் தமது கலைகளை நிகழ்த்துவர். நாடகம் அதில் பிரதானமாக அமைந்தது. ஆனால் தற்போது அத்தகைய மன்றங்கள் யங்ஸ்டார், சுப்பர்ஸடார் என மாற்றம் பெற்றுள்ளதோடு கூரைகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள வட்டத்தகடுகள் அழுமூஞ்சி தொலைக்காட்சித் தொடர்களை வீடுகளுக்குள் கொண்டுவந்து சேர்க்கின்றன. கூரைத்தகடுகளுக்காக அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுக்கும் மக்கள் இந்த வட்டத்தகடுகளை எவ்வித கோரிக்கையும் இல்லாமல் கூரைகளில் பல ஆயிரம் செலவில் பொறுத்த பழக்கப்படுத்தப்பட்டுள்ளார்கள். இது பாரம்பரியமாக மலையகத் தோட்டங்களில் இருந்த நிகழ்த்தும் கலைகள் அருகிச் செல்லவும் மேடை நாடகம் போன்ற செயற்பாடுகளில் இளைய தலைமுறையினர் ஈடுபட தடையாகவும் அமைந்துள்ளது. நாம் கவலைப்பட ஆயிரம் விடயங்கள் இருந்தும் .. நாடகத்தில் வரும் 'அபி' க்கு நாளை என்ன நடக்கப் போகிறது என்கிற கவலையே நம்மை ஆட்கொள்ள வைக்கும் நிலையை இந்த வட்டத்தகடுகள் ஏற்படுத்தி வருகின்றன. எனவே இந்த வட்டத்தகடுகள் குறித்த எச்சரிக்கை மலையக சமூகத்திற்கு அவசியமாகிறது.

இந்த கட்டத்திலேயே ஆகரகந்தை தோட்டத்தில் பாரதி பெயரில் மொழி சங்கமும் அதனையொட்டி கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. சமூகத்தின் விடுதலைக்காக குரல் கொடுத்த 'பாரதி' போன்ற ஆளுமைகளை வளரும் இளம் தலைமுறையினருக்கு நினைவுபடுத்த வேண்டியது நமது கடமை. பாரதியின் போராட்ட குணம் நமது அடுத்த தலைமுறைக்கு அவசியமானது. இங்கே பாரதி வேடமிட்டிருந்த சிறுவனின் தலைப்பாகை முறையாக கட்டப்படாததினால் உங்கள் முன்னிலையில் அதனைத் திருத்தி கட்டிவிட்டேன். இப்போது பாருங்கள் அந்த சிறுவன் கம்பீரமாக தெரிகிறான். பாரதியின் ஒவ்வொரு செயற்பாடுகளும் கம்பீரமானவை. அவை ஒவ்வொன்றையும் நாம் நினைவு கூரவேண்டும். அதே போல மலையக சமூகத்தின் நமது முன்னோடிகளையும் நாம் நினைவு கூரவேண்டும்.அதனாலையே மலையகத்தில் அமைக்கப்படும் புதிய கிராமங்களுக்கு நமது முன்னோடி செயற்பாட்டாளர்களது பெயர்களை சூட்டி வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

பாரதி மொழிச்சங்க உறுப்பினர்களின் கலை அரங்கேற்றமும், மேளக்கச்சேரியும் இடம்பெற்றதோடு பங்கு கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் நினைவுச் சிற்பங்களும் வழங்கிவைக்கப்பட்டன. நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக லிந்துல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செல்வகுமார், சமாதான நீதிவான் ஜோதிவேலு மற்றும் தோட்ட உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

(கேதீஸ் - தலவாக்கலை) 

பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றல்; படிப்பினைகள் மற்றும் ஆலோசனைகள் - கலாநிதி எ.எஸ்,சந்திரபோஸ்


'பெருந்தோட்டங்களில் உற்பத்தியை அதிகரிப்போம். அங்கு தொழிலாளர்களின் நலன்களையும் மேம்படுத்துவோம் என்ற கோஷங்களை பகிரங்கப்படுத்தி பெருந்தோட்டங்களை கையகப்படுத்திய (1992இல்) கம்பனிகள் தமது கோஷங்களில் எதையேனும் நிறைவு செய்யாத நிலையில் இப்போது தொழிலாளர்களின் அடித்தளத்தையே அதிர வைத்தது போல் நடந்து கொள்கின்றன. நாளாந்த வேதனமாக வழங்கப்படும் 450ரூபாவுக்கு மேல் ஒரு சதத்தையேனும் உயர்த்த முடியாது என்று கடும்போக்கை பின்பற்றி வருகின்றனர் தோட்டங்கள் நட்டத்தில்தான் இயங்குகிறதென்று கடந்த ஒரு தசாப்த காலமாக அறிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கம்பனிகளால் நடத்த முடியாத தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் யோசனைக்கு தள்ளப்பட்டு விட்டது. இவ்வாறான பின்னணியில் 1992 இல் கம்பனிகளிடம் கையளிக்கப்பட்ட தேயிலை பெருந்தோட்டங்கள் எவ்வாறு நடத்தப்பட்டன என்பது பற்றியும் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றல் தொடர்பான வரலாற்று அனுபவங்கள் என்ன என்பது பற்றி சில விடயங்களை பகிர்ந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கலாம். முதலாவது கம்பனிகள் கடந்த 22 வருடங்களாக பெருந்தோட்டங்களை நடத்தியுள்ளன. கிடைக்கப்பெறுகின்ற புள்ளி விபரங்களை அவதானிக்கும்போது தேயிலையை உற்பத்தி செய்து சர்வதேச சந்தையில் பெற்றுக்கொண்ட விலையில் ஏற்படுத்திக்கொண்ட அதிகரிப்பினை ஏனைய துறைகளில் காணக்கூடியதாக இல்லை. உதாரணமாக 1992 இல் கம்பனிகளிடம் சுமார் 100,000 ஹெக்டேயர் பராமரிப்பில் உள்ள தேயிலைக் காணிகள் வழங்கப்பட்டன. இதன் அளவு 2000ஆம் ஆண்டில் 99,500 ஹெக்டேயராகவுள்ளது.

ஆனால் 2013ஆம் ஆண்டில் இதன் அளவு சுமார் 85,400 ஹெக்டேயராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி கடந்த 22 வருடங்களில் சுமார் 15,000 ஹெக்டேயர் தேயிலைக்காணிகளை பெருந்தொட்ட கம்பனிகள் தமது பராமரிப்பில் இருந்து விலக்கி வைத்து விட்டன என்பது தெளிவாகிறது.

இங்கு இன்னுமொரு விடயத்தை கூற வேண்டியுள்ளது. தேயிலைக்காணிகளின் பரப்பளவு பற்றி திட்டவட்டமான புள்ளிவிபரங்கள் எளிதில் கிடைக்கக்கூடியதாக இல்லை. வருடா வருடம் பெருந்தோட்ட அமைச்சினால் வெளியிடப்படும் புள்ளி விபரங்களிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. மொத்தமாக தேயிலைப்பராமரிப்பின் பரப்பு 212, 000 ஹெக்டேயர் என்று குறிப்பிடும் அமைச்சின் புள்ளிவிபரவியல் தொகுப்பு, இதில் சிறு உரிமையானர்களிடம் 130,000 ஹெக்டேயர் காணிகள் உள்ளன என்று கூறும் அதேவேளை கம்பனிகளிடமிருந்து சுமார் 118,000 ஹெக்டேயர் பரப்பளவான காணி இருப்பதாகவும் அதில் 84,400 ஹெக்டேயர் மட்டுமே பயிர்ச்செய்கைக்காக பராமரிக்கப்படும் காணிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய முரண்பாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள உடனடியாக தேயிலை பயிரிடப்படும் நிலம் முழுமையாக மீளவும் அளவிடப்படவேண்டும். இத்தகைய முயற்சி 1994 இல் மேற்கொள்ளப்பட்டது. இப்புள்ளிவிபரப்படி இப்போதைய மதிப்பீட்டுக்கு பயனுள்ளதாக அமையாது.

இதுபோன்று கம்பனிகளின் உற்பத்தி மட்டத்தை எடுத்து நோக்குவோமாயின் 1992 இல் கம்பனிகள் சுமார் 148 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை உற்பத்தி செய்தன. இது 2000ஆம் ஆண்டில் 121 மில்லியன் கி.கிராமாக வீழ்ச்சியடைந்ததுடன் 2013 இல் 98 மில்லியன் கி.கிராமாக இருந்து கடந்த 22 வருடங்களில் தமது உற்பத்தியானது சுமார் 33 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் தமது உற்பத்தியை விற்பனை செய்யும்போது கம்பனிகள் 1992 இல் ஒரு கிலோ கிராமுக்கு 58 ரூபாவை உள்ளூர் ஏல விற்பனையின்போது பெற்றுக்கொண்ட அதேவேளை அதனை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஒரு கி.கிராமிற்கு 84 ரூபா பெற்றுக்கொண்டது.

தேயிலையின் விற்பனை விலை பல மடங்கு அதிகரித்தது. 2000ஆம் ஆண்டில் ஏல விற்பனையின்போது 128 ரூபாவாகும். இதன் விலை 2013இல் 341 ரூபாவாகவும் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் முறையே 184 ரூபா மற்றும் 500 ரூபாவாகவும் விலைகள் கிடைக்கப்பெற்றமையையும் காணலாம்.

தேயிலை உற்பத்தி செய்யப்படும் பரப்பளவிலும், உற்பத்தியிலும் வீழ்ச்சி காணப்பட்டாலும் கம்பனிகள் தாம் உற்பத்தி செய்த தேயிலையை நல்ல விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளமையை காணலாம்.

இருப்பினும் இவற்றினை உற்பத்தி செய்வதற்கான செலவும் அதிகரித்து வந்துள்ளமையையும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. உதாரணமாக 2000 ஆம் ஆண்டு 128 ரூபாவிற்கு ஒரு கிலோ தேயிலை ஏல விற்பனையின் போது பெற்றுக்கொள்ளப்பட்டது. அதன் உற்பத்தி செலவு 118 ரூபாவாக காணப்பட்டது. இதன்படி ஒரு கிலோ கிராமிற்கு சுமார் 10 ரூபா இலாபம் கிடைத்துள்ளதை காணலாம். அதேபோல் 2013 விபரப்படி பார்க்கும்போது உற்பத்தி செலவு ஒரு கிலோ கிராமுக்கு 374 ரூபாவாகும். ஆனால் ஏல விற்பனையின் போது விலை 341 ரூபாவாக ஒவ்வொரு கிலோவுக்கும் சுமார் 30ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறது அதேபோல் ஏற்றுமதியின் போது 500 ரூபாவாக விற்பனை செய்த கிலோ தேயிலையை சுமார் 125 ரூபா இலாபம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

இங்கு இன்னுமொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும். தேயிலைக்கான உற்பத்தி செலவு என்பதை கம்பனிகளே வெளிப்படுத்துகின்றன. இது பற்றி தனி நபர்கள் அல்லது ஏனைய ஏற்றுக்கொண்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டதாக இல்லை. இந்நிலையில் உற்பத்தி செலவு பற்றிய கணிப்பீட்டினை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த உற்பத்தி செலவில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வேதனம் மற்றும் சலுகைகள் என்பன 60வீதத்திற்கு அதிகமாக காணப்படுகிறது என்றும் திரும்ப திரும்ப கூறுகின்றனர். எனவே சுதந்திரமானதும் நம்பத்தகுந்ததுமான கணிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் வரையில் கம்பனிகள் தருகின்ற உற்பத்தி செலவுக்கான கணிப்பீடுகளை ஏற்றுக்கொள்வது பொருத்தமாக இருக்கமாட்டாது.

இதற்கு இன்னுமொரு கணிப்பீட்டையும் உற்பத்தி செலவு தொடர்பாக அறியத்தரலாம். சாதாரணமாக ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளி சுமார் 18 கிலோ கொழுந்து கொய்கின்றார். இதில் இருந்து ஏறக்குறைய 4 கிலோ தேயிலை விற்பனைக்காக தயார் செய்யலாம். இதனை (4x500= 2000) என்றவாறு சுமார் 2000 ரூபாவாக சந்தைப்படுத்தலாம். இக் கொழுந்து செய்பவர்களுக்கு அடிப்படை வேதனம் மற்றும் இதர கொடுப்பனவு என்று 1500 ரூபா செலவாகும். ஒவ்வொரு தொழிலாளியும் நாளாந்த உழைப்பில் 500 ரூபா மேலதிகமாக கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

1992 இல் கம்பனிகள் JEDS, SLSPC, மற்றும் ஏனைய கம்பனிகளின் கீழ் பொறுப்பேற்றுக்கொண்ட தோட்டங்கள் பரப்பளவு உற்பத்தி சந்தையில் பெற்றுக்கொள்ளப்பட்ட விலைகள் என்பவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை பின்வரும் அட்வணையில் காணலாம்.



இவை யாவும் ஒரு பக்கத்தில் இருக்கும் போது கம்பனிகள் தமது தோட்டங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் கடுமையாக குறைத்துக் காட்டலாம். 1992இல் தோட்டங்களை பொறுப்பேற்கும்போது தேயிலை தோட்டத்தில் பதிவு செய்து கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 400 000 ஆக காணப்பட்டது. அது இப்போது 2,32,000 சுமார் 42 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. தேயிலை பயரிடப்படும் 4 பரப்பளவு எவ்வளவு குறைத்துக் கொண்டார்களோ அதே வீதத்தில் பதிவு செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்துக் கொண்டனர்.

இந்நிலையில்தான் கம்பனிகள் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை அதிகரிக்க முடியாத நிலையில் உள்ளதாக கூறுகின்றன. ஏறக்குறைய இவ்வாறான இக்கட்டான நிலை 1978 முதல் 1992 வரையில் தோட்டங்களை நிர்வகித்த JEDS, SLSPC, க்கும் உருவாகியிருக்கின்றது. அக்காலத்தில் தோட்டங்களை புனரமைக்கவென ஆசிய அபிவிருத்தி வங்கியில் பெற்றுக்கொண்ட சுமார் 600 மில்லியன் ரூபாவையும் மேற்படி JEDS, SLSPC திருப்பி கொடுக்க முடியாத நிலை உருவாகியிருந்தது. இந்நிலையிலேயே 1992 இல் தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டன.

ஒரு கட்டத்தில் நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னர் தோட்டங்களை நிர்வகித்த STERLING மற்றும் RUPPEES கம்பனிகளை வெளியேற்ற வேண்டும் என்ற அரசாங்கத்தின் பிரயத்தனத்தின் போது தோட்டங்களை பராமரித்து மேற்படி பிரித்தானிய கம்பனிகள் தேயிலைச் செய்கையில் முதலீடு மேற்கொள்ள முடியாதவர்களாயினர். பெருந்தோட்டங்கள் பராமரிக்கப்படாத நிலையில் 1972  75 காலப்பகுதியில் அரசாங்கம் அதனை பிரித்தானிய கம்பனியிடம் இருந்து தேசியமயமாக்கல் திட்டத்தில் கீழ் அரசு உடமையாக்கியது. இந்த அரசு உடமையை நிர்வகிக்கவே மேற்குறிப்பிட்டது போல JEDS, SLSPC கையளிக்கப்படன. இந்நிறுவனங்களின் இயலாமையை கம்பனிகளிடம் இன்று மீண்டும் அரச உடமையாக்குவதாக அறிவிக்கப்படுகின்றது.

பல்வேறு நிலையில் பாராமரிக்கப்பட முடியாது போன பெருந்தோட்ட கம்பனிகளை அரசாங்கம் மீளவும் பொறுப்பேற்றல் தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆகவே அதனை முன்னர் ஏற்பாடு செய்தது போல JEDS, SLSPC,என்றவாறு இலங்கையில் தேயிலையை நல்ல முறையில் பராமரித்தால் தேயிலை சிற்றுமையாளர்களை உதாரணமாகக் கொண்ட அந்த ' மாதிரியை' மலையகத்திலும் விஸ்தரிப்பது பயனுள்ளதாக இருக்கும்.ஒப்படைக்காமல்

பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் தேயிலைத்தொழிலில் மூன்று நான்கு பரம்பரையினராகப் பக்குவப்பட்டவர்கள். தேயிலைச் செடி, தேயிலை தொடர்பான தொழில் அந்த தேயிலை வளரும் அந்த மண்ணை தம் உயிர் போல நேசிப்பவர்கள். 1983 இல் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் தேயினை தொழிலை கைவிடவில்லை. அதனை பாதுகாத்தனர். அந்த வருடம் என்றுமில்லாத அளவில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதுடன் உலக சந்தையில் நல்ல விலையும் கிடைத்தது. அதன் காரணமாகவே 1984 இல் அவர்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம் ஏற்பட்டது அடிப்படை சம்பளத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

எனவே அரசாங்கம் பொறுப்பேற்குமாயின் தேயிலைக்காணிகல் சிறுதோட்டங்களின் ' மாதிரியில்' உள்ளடக்கப்பட வேண்டும். அதற்கு தகுதியான மக்கள் இருக்கின்றார்கள். இம் முயற்சி இலங்கையில் வெற்றிகரமான முயற்சியாக இருப்பதால் இது பற்றிய கலந்துரையாடல்கள் அவசிய மானதாகும் இப்படி ஒரு நிலைமை வருமாயின் தோட்டத் தொழிலாளர்கள் வறுமை குறைந்த வருமானம் என்ற நிலையில் மாற்றம் காணப்பட்டு இவர்களின் சராசரியாக வருமானம் பெறும் சமூகமாக மாற்றம் அடைவர்.

நன்றி - வீரகேசரி

தீக்குளிக்க புறப்பட்ட வடிவேல் சுரேஷ் : சரியா? தவறா - என்.நெடுஞ்செழியன்



தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை நீண்ட இழுபறியில் உள்ளது. பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படாமையே இதற்குக் காரணமாகும்.

2013 – 2015 காலப்பகுதிக்கான கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் 31ஆம் திகதியுடன் காலாவதியாகி விட்டது. எனவே புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அது ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் 9 மாதங்களாகியும் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. சம்பள உயர்வு தொடர்பில் உடன்பாடு ஏற்படாமையே இதற்கு காரணமாகும்.

தொழிற்சங்கங்கள் நாட் சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் தம்மால் அந்தத் தொகையை வழங்க முடியாதென்று தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மறுதலித்து வருகின்றது.

சம்பளவுயர்வு தொடர்பில் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் 7 – 8 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று விட்டன. எனினும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், தொழிலாளருக்கு சம்பள உயர்வு வழங்கா விட்டால் சபையில் தீக்குளிக்கப் போவதாக கூறினார். அதன்படி கடந்த சனிக்கிழமை (26ஆம் திகதி) தீக்குளிப்பதற்காக பெற்றோல் கலன்களுடன் சபைக்கு வருகை தந்தார். எனினும் காவலர்கள் பாராளுமன்ற நுழைவாயிலிலேயே அவரை தடுத்து நிறுத்தி பெற்றோல் கலன்களைக் கைப்பற்றினர்.

வடிவேல் சுரேஷ் எம்.பி.யின் இந்த அணுகு முறை பல்வேறான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளன. இது பற்றி அரசியல்வாதிகள் தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலரிடம் வினவியபோது சாதக  பாதகமான கருத்துக்களை வெளியிட்டனர். அவை இங்கே தரப்படுகின்றன.

வே. இராதாகிருஷ்ணன்  கல்வி இராஜாங்க அமைச்சர்

தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணை வேளையின் போது பேசிய பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மிகவும் ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் பேசியதுடன் தீக்குளிக்கப்போவதாகவும் கூறினார். வார்த்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பெற்றோல், மண்ணெண்ணெயுடன் சபைக்கு வந்த போதும் சபைக் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சம்பவத்தின் பின்னர் அன்று சபை சுறுசுறுப்படைந்தது.

வடக்கு  கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், ம.வி.மு. மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் தோட்டத் தொழிலாளரின் சம்பளப் பிரச்சினைக்கு உடன் தீர்வு காண வேண்டுமென்று சபையில் பேசினர். இதன் மூலம் தொழிலாளரின் சம்பளப் பிரச்சினை தொடர்பிலுள்ள தீவிரத்தை நன்றாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. அதுமட்டுமின்றி எப்போதும் இல்லாத வகையில் மலையகப் பிரதி நிதிகளின் குரல்கள் தற்போது பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளமையும் ஒரு காரணமாகும். இதன் காரணமாகவே தனியார் துறையினருக்கு அரசினால் அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வு தோட்டத்தொழிலாளருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தொழிலமைச்சர் கூறுவதற்குக் காரணமாக அமைந்தது. எனவே பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் தூண்டுகோளே இதற்குக் காரணமாக அமைந்தது. தோட்டத்தொழிலாளரின் சம்பளப் பிரச்சினைக்காக அவர் மேற்கொண்ட செயற்பாட்டை எந்த வகையிலும் குறைவாக மதிப்பிட முடியாது.

முத்து சிவலிங்கம் (பா.உ) இ.தொ.கா.–தலைவர்

பாராளுமன்றத்தில் தீக்குளிப்பதாக தெரிவித்தமை ஒரு பெரும் கேலிக்கூத்தாகும். இதுவரை இது போன்று எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் நடந்து கொண்டது கிடையாது. இது பாராளுமன்றத்தையும் நாட்டு மக்களையும் ஏமாற்றுவதற்கு நடத்தப்பட்ட நாடகம் என்றே கூற வேண்டும். பாராளுமன்றத்துக்குள் பெற்றோல், மண்ணெண்ணெய், டீசல் மட்டுமின்றி தீப்பெட்டியும் கூட கொண்டு வரமுடியாது. அவ்வாறு கொண்டு வந்தால் அதனை பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததாகும். இதனையெல்லாம் அறிந்திருந்தும் பாராளுமன்றத்திற்குள் தீக்குளிக்கப்போவதாக கூறி பெற்றோல், மண்ணெண்ணெய், கொண்டு வந்தது வெறும் நாடகமாகும். அது மட்டுமல்ல பாராளுமன்றத்தின் சட்ட திட்டங்கள் நடைமுறைகள் பற்றி அறியாத செயற்பாடாகும்.

தோட்டத்தொழிலாளருக்கு மாதமொன்றுக்கு 2500 ரூபா வரை சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென்று ஏற்கனவே அரசாங்கத்துடன் பேச்சுவார்தை நடத்தி அரசின் இணக்கப்பாட்டை பெற்றுள்ளோம். இவ்வாறானதொரு நிலைமையில் தீக்குளிப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்டமை மக்களை ஏமாற்றுவதற்கானஒரு நாடகமாகும்.

எம். திலகராஜ் (பா.உ) ஐ.தே.க.

போராட்டங்கள் பல வடிவங்களைக் கொண்டது. அது அஹிம்சையாகவும் ஆர்ப்பாட்டமாகவும் அச்சுறுத்தலாகவும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் உரிய தரப்பினரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே முன்னெடுக்கப்படுகிறன.

அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தோட்டத்தொழிலாளரின் சம்பளப் பிரச்சினையை அனைவரது கவனத்துக்கும் கொண்டுவந்து அதன் மூலம் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

தீக்குளிக்க முற்படுவதென்பது உயிரை மாய்த்துக்கொள்வதல்ல. அவ்வாறு உயிரை மாய்த்துக் கொள்வதை அனுமதிக்கவும் முடியாது. ஆனால், அவர் தோட்டத்தொழிலாளரின் சம்பள உயர்வுக்காக மேற்கொண்ட தீக்குளிப்பு முயற்சி முழுப்பாராளுமன்றத்தின் கவனத்தையும் நாட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது.

ஊடகங்களும் கூட முக்கியத்துவம் கொடுத்தன. அந்த வகையில் தோட்டத் தொழிளாளரின் சம்பளப் பிரச்சினை அரசாங்கத்திடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் செயற்பாடு போற்றத்தக்கது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

எஸ். இராமநாதன் – (பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு)

தோட்டத் தொழிலாளரின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வைக் காணாமல் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அச்சுறுத்தல் விடுப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. பெருந்தோட்ட மக்களுடைய வாக்குகளினால் பாராளுமன்றம் சென்றவர் அவர்களுடைய பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசி தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர அவர் இவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல.

தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடமும் அமைச்சர் ஜோன் செனவிரத்தனவிடமும் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கிடைக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு எமது அழுத்தங்களே காரணமாகும்.

இந்த நிலையில் தன்னுடைய பெயரைப் போட்டுக்கொள்வதற்காக அவர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

மக்கள் பிரதிநிதியான ஒருவர் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது.

வீ. புத்திரசிகாமணி (முன்னாள் பிரதியமைச்சர்,

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் செய்தது சரியா பிழையா என்று விவாதிப்பதை விட அவரது தற்கொலை முயற்சி எவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது என்பதே முக்கியமானதாகும். ஒன்பது மாதங்களாக இழுபறி நிலையில் இருந்த தோட்டத்தொழிலாளரின் சம்பளப் பிரச்சினை வடிவேல் எம்.பி.யின் நடவடிக்கையினால் உலகமே அறியக் கூடிய பிரச்சினையாக மாறியுள்ளது.

தோட்டத் தொழிலாளரின் சம்பளம் கூட்டு ஒப்பந்தத்தின் மூலமே தீர்மானிக்கப்பட்டு வருகிறது. ஆனால் முதன்முறையாக தனியார் துறைக்கு அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வை தோட்டத் தொழிலாளருக்கும் வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தொழில் அமைச்சர் கூறியிருக்கிறாரென்றால் அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் வடிவேல் சுரேஷ் அவ்வாறு செய்ததை பிழை என்று கூற முடியாது.

வே.உருத்திரதீபன் நிர்வாகச் செயலாளர் – இ.தே.தோ.தொ.ச.

தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வுக்காக கடந்த ஒன்பது மாதங்களாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். அந்த வகையில் தொழிலாளருக்கு சம்பள உயர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு அஹிம்சை வழியில் அல்லது உண்ணாவிரதப் போராட்டம் போன்றவை மூலம் போராடியிருக்கலாம். அதைவிடுத்து பிழையான வழியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்துவது மற்றவர்களையும் ஊக்குவிப்பதாக அமைந்து விடும். மக்கள் பிரதிநிதி ஒருவரே இவ்வாறு வழிகாட்டுவதைப் பின்பற்றி இளைய சமூகத்தினரும் தற்கொலை வழியை பின்பற்றுவதற்கு முயற்சிக்கக்கூடும். இது சமூகத்தையே பிழையான வழியில் கொண்டு செல்லக் கூடும். நான் ஒரு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அஹிம்சை ரீதியில் அவர் செயற்படுவாரானால் அதற்கு ஆதரவளிப்பேன். ஆனால் பிழையான செயற்பாட்டுக்கு ஒரு போதும் ஆதரவு வழங்கமாட்டேன்.

இராமலிங்கம் சந்திரசேகர் (முன்னாள் பா.உ. ம.வி.மு)

மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்றாலோ அவர்களது உரிமைகளைப்பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றாலோ அதற்கு பல்வேறு வழிமுறைகள் அணுகு முறைகள், இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு பாராளுமன்றத்துக்குள் தீக்குளிக்கப் போவதாக கூறியது மக்களை ஏமாற்றும் நாடகமாகும். அது மட்டுமின்றி சுய புகழுக்காக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடாகவே கருத முடிகிறது. வடிவேல் சுரேஷ் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் நிலையில் அவர் சார்ந்துள்ள கட்சி  அரசாங்கத்தினூடாக தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்கக் கூடியதாக இருக்கும். அதனை விடுத்து தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டது நல்லதொரு செயற்படாக தெரியவில்லை.

ஆனந்தகுமார் (தொழிலாளர் கொட்டகலை) - (ஹட்டன் நிருபர்)

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தீக்குளிக்கப்போவதாக அறிவித்திருந்ததை நாங்கள் வரவேற்கின்றோம். அதேவேளை மலையக பிரதேசத்தில் இவர் இவ்வாறான தீக்குளிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு அம்சமாக இருந்திருக்கும். ஆனால் தன்னை காப்பாற்றி விடுவார்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு செய்யப்பட்ட ஒரு செயலாகவே இதை நாம் கருதுகின்றோம். எந்தெந்த வகையில் தொழிலாளர்களை ஏமாற்ற முடியுமோ அந்த வகையை கையாண்டு வருபவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ததையடுத்து நாம் வெட்கப்படுகின்றோம். உங்கள் சக்தியை வெளிப்படுத்த வேண்டுமானால் தொழிலாளர்களின் பலம் என்னவென்பதை எடுத்துக்காட்டி அதற்கு ஏற்றவாறு செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும். வெறுமனே தீக்குளிக்கின்றேன். உயிரை விடுகிறேன் என்ற கபட பேச்சு எல்லாம் தொழிலாளர்கள் இனிமேலும் நம்பப் போவதில்லை. தொழிலாளர்களின் சக்தியை ஏனையவர்கள் உணரும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுங்கள். ஒரே வாரத்தில் நாம் எட்டக்கூடிய சம்பளத்தை பெற்று விடலாம்.

நன்றி - வீரகேசரி

மலையகத்துக்கான இந்திய வீடமைப்புத்திட்டம் விரைவில் ஆரம்பம் - திலகர் எம்பி


மலையகத்துக்கான இந்திய வீடமைப்புத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்றுறுப்பினர் எம்திலகராஜ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய பிரதித்தூதுவருக்கும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி   அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் முதல்கட்டமாக 1134 வீடுகளுக்கான கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்திய அரசாங்கம் யுத்தத்திற்கு பின்னர் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு 50000 வீடுகளை நன்கொடை அடிப்படையில் வழங்கியது. அவற்றில் 90% க்கு மேற்பட்ட வேலைகள் முடிவுற்ற நிலையில் மலையக தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு என இந்திய அரசாங்கம் வழங்கிய 4000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் பல்வேறு சிக்கல்கள் காரணமாக ஆரம்பிக்கப்படாமல் இருந்தது.

தமிழ் முற்போக்கு கூட்டணி இது குறித்து தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்ததோடு, அமைச்சர் திகாம்பரம் பணிகளை ஆரம்பிப்பதற்கு  தடையாக இருந்த பல்வேறு விடயங்களையும் தனது அமைச்சின் பொறுப்பில் முன்னெடுப்பதற்கு முன்வந்ததை அடுத்து தற்போது 1134 வீடுகளை நிர்மாணிப்பதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இடத்தெரிவு மற்றும் நிலத்தயாரிப்பு மற்றும் உட்கட்டுமானப்  பணிகளை அமைச்சு நிதியீட்டத்தில் மேற்கொள்ளவுள்ள நிலையில் வீடமைப்பு  நிர்மாணப்பணிகளுக்கு தேவையான முழுமையான நிதியும் இந்திய அரசின் பூரண நன்கொடையாக அமையவுள்ளது. 7 பேர்ச் காணியில் 550 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்த வீடுகள் நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 5 தோட்டங்களில் 9 டிவிஷன்களில் அமையவுள்ளது.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகரத்தில் இடம்பெற்ற இச்ச்ந்திப்பில்  பிரதி உயர்ஸ்தாணிகர் மற்றும் அதிகாரிகளும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி   அமைச்சர் பழனி திகாம்பரம் சார்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் மற்றும் அமைச்சின் செயலாளர் திருமதி. ரஞ்சனி நடராஜபிள்ளை, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவன தலைவர் வீ. புத்திரசிகாமணி மற்றும் அமைச்சு அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

“சிங்க லே” அலையின் விபரீதம் - என்.சரவணன்


இப்போதெல்லாம் சிங்கள பேரினவாத சக்திகள் களத்தில் வெளிப்படையாக இயங்குவதைவிட அமைதியாக மிக சூட்சுமமாக சமூக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் மிக வீச்சுடன் இயங்கி வருகின்றன.

சிங்கள பௌத்த பேரினவாதம் காலத்துக்கு காலம் எடுக்கும் எடுக்கும் மறு வடிவமும், புது வடிவமும் அந்தந்த அரசியல் சமூக சூழலுக்கேற்றபடி தம்மை தகவமைத்துக்கொண்டே வெளிப்படுகின்றது. அதன் தந்திரோபாயங்களும்கூட அப்படித்தான் தேவையான இடங்களில் பின்வாங்கி தேவைப்படுகின்ற இடங்களில் காத்திரமாக இயங்குகிறது.

காலத்துக்கு காலம் பேரினவாதம் எடுக்கும் நவ வடிவங்களுக்கு அரச அனுசரணையுடன் அரசாங்கத்தின் அனுசரணையும் கிடைத்துவிடுகிறது. ஆனால் இன்றைய புதிய அரசியல் சூழல் அரசாங்கத்தின் நேரடி ஆதரவு அதற்கு இன்னமும் வந்து சேரவில்லை என்றே கூறவேண்டும்.

இந்த இடைவெளிக்குள் அதன் தந்திரோபாய நகர்வுகளை தீர்மானித்துக்கொள்கிறது. நிறுவனமயப்பட்ட பேரினவாத சித்தாந்தத்துக்கு நேரடி தலைமை தேவையில்லை. அது தன்னியல்பாக பல வடிவங்களில், பல முனைகளில், பல அளவுகளில், பல பண்புகளில் தொழிற்புரியும். இவ்வாறு நிறுவனமயப்பட்ட பேரினவாதத்துக்கு எவரையும் நேரடியாக பொறுப்பாளிகளாக (தலைமையாக) ஆக்கிவிட முடிவதில்லை. ஏனென்றால் அதற்கு தலை மை தாங்கும் சக்தி ஒன்றல்ல பல. இவற்றுக்கெல்லாம் தலைமை தாங்குவது உறுதியாக நிறுவனமயப்பட்டு நிலைபெற்றுவிட்ட பேரினவாத சித்தாந்தமே.

சமூக வெகுஜன ஊடகங்களை இன்று பேரினவாதத் தரப்பு பெருமளவு பயன்படுத்திவருகிறது. தமது சித்தாந்த பரப்புரைக்கு அவர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் ஆயுதமாக அவர்கள் இன்று சமூக ஊடகங்களையே நம்புகிறார்கள். இன்று பட்டிதொட்டியெல்லாம் சமூக ஊடகங்கள் வியாபித்துவிட்ட நிலையில் தமது இனவாத பிரசாரங்களுக்கு சிறந்த தளம் அது என்று திடமாக நம்பி இயங்கி வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான முகநூல் பக்கங்கள், வலைத்தளங்கள், அவற்றுக்கான லட்சக்கணக்கான ஆதரவாளர்களையும் அவர்கள் வென்றெடுத்திருக்கிறார்கள். அவர்கள் இந்த பிரசாரங்களை அடுத்த மட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள்.

இவர்களின் போக்கை எதிர்த்து எதிர்வினையாற்றும் சிங்கள தரப்பும் இல்லாமலில்லை. சிங்கள் முற்போக்கு - ஜனநாயக தரப்பு போதிய அளவு தமது எதிர்ப்புகளையும், பதிலடியையும் கொடுத்தே வருகிறார்கள். ஆனால் அது போதுமானதல்ல. மேலும் ஒவ்வொருமுறையும் சிங்கள பேரினவாதம் பௌத்த மதத்தையும் சேர்த்துக்கொண்டே தான் கிளம்புகிறது. பௌத்த காவியுடை தரித்த பிக்குமாரின் தலைமையிலேயோ அல்லது அவர்களை துணைக்கு அழைத்துக்கொண்டோ கிளம்புகிறார்கள். பொலிசாரும், அதிகாரிகளும், ஜனநாயக சக்திகளும் ஒரு கட்டத்திற்கு மேல் எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகிறார்கள். இந்த இனவாத குழுக்களும் இந்த பிக்குமார் மீது எப்போது இவர்கள் கைவைப்பார்கள் அதனை சாட்டாக வைத்து பிரச்சினையை கிளப்பி விடலாம் என்று காத்திருக்கிறார்கள். அந்த தைரியத்தில் பிக்குமார் சண்டியர்கள் போல நடந்துகொள்ளும் காட்சிகளை செய்திகளில் கவனித்தே வருகிறோம். ஏனையோர் கைகட்டி வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலை தொடர்கிறது.

சிங்கள ரத்தம்
இப்பேர் பட்ட நிலையில் தான் “சிங்க” “லே” என்கிற பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தொடங்கப்பட்ட முகநூல் கணக்கில் விருப்புக் குறியிட்டுக் கொண்டு போபவர்களின் எண்ணிக்கை லட்சத்தையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. நாடளாவிய ரீதியில் ஸ்டிக்கர்களை அச்சு செய்து விநியோகித்து வருகிறார்கள். கவரக் கூடிய வாசகங்களையும், வர்ணங்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்டிக்கர்கள் பல இடங்களில் இப்போது விற்பனை செய்யப்படுகிறன. இலவசமாகவும் விநியோகிக்கப்படுகின்றன. பாதையில் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டு பலாத்காரமாக ஒட்டப்படுகின்றன.

மேலோட்டமாக பார்த்தால் அதில் என்ன இருக்கிறது என்று தோன்றும். ஆனால் சிங்கள பௌத்த உணர்வை நிலைநாட்டுவதற்கான ஒரு உளவியல் உத்தி தான் இது. இவர்கள் உருவாக்கியுள்ள டீ சேர்ட் ஒன்றின் ரூபா 3500 வரைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. அதனை அணிந்தபடி செல்பி படம் எடுத்து போடுவது பேஷனாக ஆகிவருகிறது. அதே வடிவத்தை உடலில் பச்சை குத்துவது பேஷனாகிவருகிறது. இதனை எதிர்த்து கட்டுரைகள் கவிதைகள், செய்திகள் வெளிவரும் அதேவேளை இதனை ஆதரித்தும் பதிலடி கொடுத்தும் அதேயளவு வெளிவருகின்றன.

இலங்கையில் பல முஸ்லிம் கடைகளிலும், வாகனங்களிலும் அரபி எழுத்தில் ஒரு வாளுடன் “லாஹிலாஹா இல்லல்லா” குர் ஆன் வாசகம் உள்ள ஸ்டிக்கர்கள் ஓட்டியபோது நீங்கள் எங்கே போனீர்கள் என்று வாதிடுகிறார்கள் இவர்கள். சில மாதங்களுக்கு முன்னர் அந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட முஸ்லிம்களின் முச்சக்கர வண்டிகளை மறித்து பலாத்காரமாக அந்த ஸ்டிக்கர்களை கழற்றி வம்பிழுத்த சம்பவங்கள் ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன. சவூதியில் இந்த சிங்க லே ஸ்டிக்கரை தனது காரின் இலக்கத் தகட்ட்டில் ஒட்டி பெருமிதத்துடன் அந்த புகைப்படத்தை இணையங்களில் பதிந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. “சிங்க லே” என்பது அலை அல்ல புரட்சி என்கிறது ஒரு ஸ்டிக்கர்.

சிங்கள இனத்தின் தோற்றம், சிங்களம் என்பதன் அர்த்தம் குறித்து பல்வேறு வரலாற்றுக் கதைகளும், புனைகதைகளும் நிலவுகின்றன. ஆளுக்கொரு கதையையோ பல்வேறு கதைகளையோ காவித் திரிபவர்களை கண்டிருக்கிறோம். 10000 வருடத்திற்கு முந்திய பாரம்பரியத்தையும் கூறிக்கொள்கிறார்கள். சமீப காலமாக இராமாயணத்தையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறார்கள். இராமாயண உபகதைகளை தமது வரலாற்றோடு பொருத்தி பெருமளவு நூல்கள் சமீபகாலமாக வருவதை காண முடிகிறது. விஜயன் இலங்கை அடைந்தபோது யக்க்ஷ, நாக, ராக்க்ஷ, தேவ எனும் என்கிற நான்வகை ஆதிக்குடிகள் இருந்ததாகவும் விஜயன் இவர்கள் எல்லோரையும் இணைத்ததாகவும் அவர்களே சிங்களவர் என்றும் பெரும்பாலான சிங்கள வரலாற்று இலக்கியங்களில் முன்வைக்கப்படுகின்றன.

இப்படி பலதரப்பட்ட கதைகளில் வலுவானதாக கருதப்படுவது இலங்கையின் முதலாவது சிங்கள மன்னனாக ஆன விஜயனின் பூர்வீகக் கதை. விஜயனின் தகப்பன் சிங்கபாகுவும், விஜயனின் தாயார் சிங்கவல்லியும் சிங்கத்துக்கும் பிறந்த உடன்பிறப்புக்கள் என்கிறது மகாவம்சம். மகாவம்சம் சிங்கள பௌத்தர்களின் வரலாற்றுப் புனித நூல். இது புனைகதை என்று நிராகரிக்கும் சிங்கள பௌத்தர்கள் மகாவம்சம் வெளிப்படுத்தும் ஏனைய இனவாத கதைகளை நிராகரிப்பதில்லை. ஆக சிங்கத்தின் வழித்தோன்றல் என்பதை சுட்டும் பெயரே “சிங்க” “லே”. சிங்களத்தில் “லே’ என்பது இரத்தம். ஆக சிங்கள இரத்த வழிவந்தவர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் தேசியக் கொடியில் தமிழ் முஸ்லிம் இனங்களைக் குறிக்கின்ற செம்மஞ்சள், பச்சை கோடுகளை நீக்கிவிட்டு வாளை ஏந்திய சிங்கத்தை மட்டும் கொண்ட கொடியை சிங்கள இனவாதிகள் தமது கூட்டங்களில், ஊர்வலங்களில் பயன்படுத்தி சர்ச்சைக்குள்ளானது தெரிந்ததே. கோத்தபாய ராஜபக்ஷ விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது நடந்த ஊர்வலத்தில் அந்த கொடியை அமைச்சர்களும் இனவாதிகளும் ஏந்தியிருந்தனர். அது சர்ச்சைக்குள்ளானதும் சிலர் அதற்காக மன்னிப்பு கோரினர் பலர் அதனை நியாயப்படுத்தினர். அது தொடர்பில் பாடகர் மதுமாதவவுக்கு எதிரான வழக்கும் இன்னமும் தொடர்கிறது. தேசியக்கொடியை விகாரப்படுத்தினர் என்பதே அந்த குற்றச்சாட்டு. ராவண பலய இயக்கம் இன்னமும் பகிரங்கமாக அந்த தனிச்சிங்க கொடியைப் பயன்படுத்தி வருகிறது. சிதைக்கப்பட்ட தேசியக்கொடியின் இன்னொரு வடிவமே இப்போதைய “சிங்க லே” கொடியும். வாளேந்திய சிங்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு மிகுதி இடத்தில் “சிங்க லே” என்று பொறித்திருக்கிறார்கள். அதில் “லே” (இரத்தம்) என்பது மாத்திரம் தனித்து சிகப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சில சுவாரஷ்யமான பதிலடிகள் இவர்களுக்கு சிங்கள தரப்பிலிருந்தே கொடுக்கப்பட்டன. அதில் ஒன்று ஒன்று இப்படி கூறுகிறது.
“சைனீஸ் டெனிம் அணிந்துகொண்டு, பிரான்ஸ் நாட்டு “சன் கிளாஸ்” போட்டுக்கொண்டு KFC யில் மத்தியானம் சாப்பிட்டு விட்டு இந்திய வாகனத்தின் பின்பக்கத்தில் (முச்சக்கர வண்டி) “சிங்க லே” (சிங்க இரத்தம்) என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பெருமையுடன் ஒருவன் போகிறான் விமான நிலையத்திற்கு, மனைவியை சவூதிக்கு அனுப்ப...”
“இனவாதத்தை புதுப்பிக்கும் இந்த “சிங்க லே” சமூக வலைத்தள நடவடிக்கையை மேற்கொள்பவர்கள் சிறை செல்ல நேரிடும் காத்திருங்கள்” என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் 23 அன்று கடும்தொணியில் எச்சரித்திருந்தார்.

பின்னணியில் யார்?
இந்த “சிங்க லே” நடவைக்கையின் பின்னணியில் பொதுபல சேனா இருப்பது உறுதியாகியிருக்கிற போதும் அது பகிரங்கமாக தமது நடவடிக்கையாக அறிவித்துக்கொள்ளவில்லை. பொது பல சேனாவின் செயலாளர் டிலந்த பெரேரா சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் இப்படி குறிப்பிடுகிறார்.“கடந்த மூன்று வருடங்களுக்குள் நான் செய்தவை எவ்வாறிருந்த போதும், “சிங்கலே” தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நான் எடுத்த முயற்சிகள் வெற்றியளித்துள்ளன”.  கடந்த வருடம் செப்டம்பர் 27  பொது பல சேனா கொழும்பு சுகததாச உள்ளரங்கில் பிரமாண்டமாக நடத்தி முடித்த மாநாட்டில் உரையாற்றிய டிலந்த பெரேரா இப்படி கூறியிருந்தார்.
“இதுவரை ஆட்சி செய்த சிங்கள அரசியல் தலைவர்களால் இந்த நாட்டின் பெயரை மீண்டும் “சிங்களே” என்று மாற்ற முடியாமல் போயிருக்கிறது. நாமெல்லோரும் சேர்ந்து ஆதனை சாத்தியப்படுத்த வேண்டும்”
பொது பல சேனாவின் முகநூல் பக்கங்களில் ஒன்றான “சிங்க லே எகமுத்துவ - SinhaleUnity” (சிங்கள ஐக்கியம்) பக்கமும் தமது முகப்பு படமாக இதனையே வெளியிட்டுள்ளது. அந்த பக்கத்தில் இதனை ஒரு அரசியல் கட்சி என்றும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் “சிங்களவர்களே முதுகெலும்பிருந்தால் உங்கள் வாகனத்தில் இதனை ஒட்டுங்கள்” என்று வினவுகிறது. அதேவேளை அந்த டீ சேர்ட்டுகளை தாம் விற்கவில்லை என்றும் அப்படி அறிவித்தவர்களை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது பொது பல சேனா. அவர்கள் இந்த நாட்களில் மீண்டும் பழையபடி மாநாடுகளை நடத்தித் திரியும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இம்முறை இரண்டாம் மட்ட பௌத்த பிக்குகளை இலக்கு வைத்து தமது அணிதிரட்டலை தொடங்கியிருப்பதாக ஞானசார தேரர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

தமக்கு பேரினவாதமின்றி இருப்பில்லை என்கிற ஒரு கூட்டம் உருவாகியுள்ளது. தமக்கு தலைமை தந்த சக்திகள் பின்வாங்கினாலோ, பலவீனமுற்றாலோ கூட தாம் ஏதோ ஒருவகையில் இயங்கியே ஆவது என்கிற ஒரு கூட்டம் உருவாகியுள்ளது. வீதிகளில் பிச்சை எடுப்பவர்கள், வயோதிபர்கள் போன்றோரை சீண்டி உசுப்பேத்தி அதனை ரசிக்கும் மனம் பிறழ்ந்தவர்களை கண்டிருப்போம். இன்று சாதாரண சிங்கள மக்களை அப்படித்தான் இவர்கள் உசுப்பேத்தி வேடிக்கை பார்க்க கிளம்பியிருக்கிறார்கள். ஆனால் இதன் விளைவு விபரீதமானது.

இன்று தொடங்கப்பட்டுள்ள “சிங்க லே” பிரச்சாரம் அலட்சியபடுத்தக்கூடியதல்ல. அவதானமாக எதிர்கொள்ளவேண்டிய எச்சரிக்கை. சிங்கள பௌத்தர்களை பேரினவாதநோக்கில் அணிதிரட்டும் ஒரு கண்மூடித்தனமான நடவடிக்கை. சிங்கள நாடு, சிங்கள தேசம், சிங்களத்தனம், சிங்கள பூர்விகம், என்கின்ற சித்தாந்தங்களை பரப்பும் ஒரு உளவியல் நடவடிக்கை.

தூய சிங்கள பௌத்தம், சிங்கள பௌத்த புனிதம் போன்றவற்றுக்கூடாக ஏனைய சமூகங்களை புறமொதுக்கும் மனநிலையை உருவாக்கும் அலை. இந்த புதிய வடிவத்தில் தொடங்கப்பட்டிருக்கும் நடவடிக்கை சாதாரணர்களை மீண்டும் உசுப்பேத்தி, புதியவர்களை பேரினவாத சித்தாந்தத்துக்குள் இழுத்து அணிதிரட்டும் இன்னொரு கைங்கரியம். இந்த வடிவங்கள் நீளும். இன்று இது... நாளை எது.
















பௌத்தத்துக்கு மாறிய கிறிஸ்தவர்கள் செய்ததென்ன? (1915 கண்டி கலகம் –13) - என்.சரவணன்


19ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சியில் கேணல் ஒல்கொட் வெறும் சித்தாந்தவாதியாக இருக்கவில்லை. அவர் ஒரு செயல் வீரராக இருந்தார். அவரால் பலனடைந்த சிங்கள பௌத்த சக்திகள் அவர் தந்த ஏணியில் ஏறியபின் அவரையே எட்டியுதைத்து தள்ளியது என்றே வரலாற்று சான்றுகள் விளக்குகின்றன.

1915 கண்டிகலவரத்தின் போது சிங்கள பௌத்தரல்லாத பொன்னம்பலம் ராமநாதன் இங்கிலாந்து சென்று பேசி சிங்கள பௌத்தத் தலைவர்களை எப்படி விடுவித்தாரோ அதுபோல 1883 கலவரத்திலிருந்து சிங்கள பௌத்தர்களுக்கு நியாயம் கோரி அக்கோரிக்கைகளை பெற்றுக்கொடுக்கவும் அந்நிய அமெரிக்க ஆங்கிலேயரான ஒல்கொட் காரணமாக இருந்தார். பிற்காலத்தில் சிங்கள தலைவர்கள் ராமநாதனை எப்படி ஒரு துரோகியாக சித்திரித்தார்களோ அதுபோல ஒல்கொட்டும் அன்றே ஒரு துரோகியாக பிரசாரப்படுத்தப்பட்டார். சிங்கள பௌத்த மறுமலர்ச்சிக்கு தூணாகவும், ஒரு ஞானத்தந்தையாகவும் (God father) இருந்த ஒல்கொட் இந்த துரோகங்களின் காரணமாக நாட்டை விட்டே சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினார். அதன் பின்னர் அவர் இலங்கைக்கு வரவேயில்லை.

ஒல்கொட்டின் அத்தியாயம் முடிந்ததன் பின்னர் அநகாரிக்க தர்மபால வரும்வரும் வரையான இடைக்காலத்தில் பௌத்த மறுமலர்ச்சிக்கு பாரிய பங்கை ஆற்றியவர் ஏ.ஈ.புல்ஜன்ஸ் (A. E. Buultjens 1865 – 1916 ). இவர்களை விட எச்.எஸ்.பெரேரா, சீ.டபிள்யு.லெட்பீடர் ஆகியோரும் முக்கியமானவர்கள்.

ஏ.ஈ.புல்ஜன்ஸ்
புல்ஜன்ஸ் பிறப்பால் பறங்கி இனத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவர். அதனைக் கைவிட்டுவிட்டு பௌத்த மறுமலர்ச்சிக்கு உழைத்தவர். புல்ஜன்ஸ் குறித்து குமாரி ஜெயவர்த்தன எழுதிய “இலங்கை தொழிலாளர் இயக்கத்தின் ஆரம்பகால வரலாறு” நூலில் பெருமளவு தகவல்களைத் தருகிறார்.

புலமைப்பரிசின் மூலம் இங்கிலாந்து சென்று கற்று பட்டம் பெற்று 1887 இல் திரும்பிய புல்ஜன்ஸ் ஒரு கல்விமானாகவும் சிந்தனையாளனாக நாடு திரும்பினார். இங்கிலாந்தில் இருந்தபோது பொதுவுடைமை, ஜனநாயகம், தாராளவாதம் போன்ற அரசியல் கருத்துக்களால் கவரப்பட்டிருந்தார். அவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் கற்ற காலத்தில் கூட கிறிஸ்தவ மதத்தையே பின்பற்றினார். ஆனால் இலங்கை திரும்பிய அடுத்த வருடமே அவர் பௌத்த மதத்துக்கு மாறி பௌத்த மறுமலர்ச்சியில் பங்கெடுத்தார். தீவிர செயற்பாட்டாளருமானார். அவர் கல்விகற்ற கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரி இந்த மத மாற்றத்தினால் ஆத்திரமுற்று கௌரவம் வழங்கப்பட்டவர்கள் வரிசையில் இருந்த அவரின் பெயரையும் நீக்கியது. இது தொடர்பாக எழுத்திலேயே அவர் அக்கல்லூரி நிர்வாகத்திடம் வினவியபோது அதற்கு எழுத்திலேயே கிடைத்த பதிலின் படி “இந்த பாடசாலை கிறிஸ்த்தவத்தை பேணிப் பாதுகாத்து, வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. ஞானஸ்தானம் பெற்ற ஒருவர் எதிரியிடம் போய் சேர்ந்துள்ளார். துரோகிகளின் பெயரை இந்தப் பட்டியலில் இடப்போவதில்லை.” என்று பதிலளித்தனர்.

புல்ஜன்ஸ் 1888இல் “பௌத்தன்” (The Buddhist) எனும் பெயரில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். இதன் மூலம் ஆங்கில கிறிஸ்தவ மிஷனரிமார்களுடன் கருத்துப்போரைத் தொடர்ந்தார் என்றே கூறவேண்டும். அடுத்த ஆண்டு புறக்கோட்டையில் பௌத்த ஆண்கள் பாடசாலையின் அதிபராக அவர் நிமிக்கப்பட்டார். (பிற்காலத்தில் அது மருதானை ஆனந்தா கல்லூரியாக ஆனது). 1890இல் இந்த ஆனந்தா மகா வித்தியாலய திறப்புவிழாவின் போது கேணல் ஒல்கொட், புல்ஜன்ஸ், பொன்னம்பலம் ராமநாதன் போன்றோர் சிறப்புரை நிகழ்த்தியிருக்கிறார்கள்.  1890-1903 வரை பௌத்த பாடசாலைகளின் கல்வி முகாமையாளராக பணியாற்றினார்.

1892 இல் ஆங்கிலேய அரசு கால் மைலுக்குள் இயங்கும் பாடசாலைகளுக்கு அரச உதவிகள் கிடைக்காது என்று இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தீவிரமாக போராடினார். பௌத்த பாடசாலைகளே இதனால் அதிகம் பாதிக்கப்படும் என்று அவர் வாதிட்டார். புல்ஜன்ஸ் தொழிலாளர் உரிமைகளுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் அதிகம் குரல்கொடுத்தவர். செயற்பட்டவர். இவரது மதமாற்றத்தினால் கோபமுற்றிருந்த கிறிஸ்தவ தரப்பின் மோசமான எதிர்ப்புக்கு ஆளானவர் என்கிறார் விக்டர் ஐவன் தனது நூலில்.

கொழும்பு தொழிலாளர்கள் மத்தியில் அவர் பெரும் நன்மதிப்பை பெற்றிருந்தார். புல்ஜன்ஸ் 25.03.1899 அன்று பௌத்த தலைமையகத்தில் வைத்து ஆற்றிய “நான் ஏன் பௌத்தன் ஆனேன்?” (Why I became a Buddhist) எனும் தலைப்பிலான ஆங்கில உரை பிரசித்திபெற்ற உரை. அந்த உரை ஒரு சிறு கை நூலாகவும் வெளிவந்தது. “நான் ஏன் முஸ்லிம்மாகவோ, ஒரு ஹிந்துவாகவோ மாறாமல் பௌத்தத்துக்கு மாறினேன்” என்று அவர் அந்த விரிவுரையில் குறிப்பிடுகிறார்.
“...கிறிஸ்தவத்தை பின்பற்றும் இங்கிலாந்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், சமூக சீரழிவுகளை நேரில் கண்டேன்... நடைமுறை கிறிஸ்தவம் போலியானது. ஏனென்றால் மிஷனரிகளையும், பைபிளையும் நாடுநாடாக அனுப்பப்படுகின்றபோது அவர்களுடன் பெருமளவு மதுபான போத்தல்களும், துப்பாக்கி ரவைகளும் அனுப்படுகின்றன. மதுபானம் சிந்தனையை அழிப்பதற்காக, ரவைகள் கொல்வதற்காக...” என்கிறார்.
புல்ஜன்ஸ் கிறிஸ்தவ பாடசாலை கல்வி முறைமையையும், மிஷனரிகளையும் கடுமையாக தனது பிரசாரங்களின் மூலமும், எழுத்தின் மூலமும் தாக்கினார்.

டபிள்யு.லெட்பீடர் (1854 -1934)
இங்கிலாந்தைச் சேர்ந்த லெட்பீடர் ஒரு கிறிஸ்தவ பாதிரியார். கேணல் ஒல்கொட் 1886 இல் பௌத்த கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்தபோது அவரோடு தோளோடு தோளாக பணியாற்றியவர் சீ.டபிள்யு.லெட்பீடர். 1883 இல் எலேனா ப்லாவட்ஸ்கியின் வழிகாட்டலில் பிரம்மஞான சங்கத்தில் (தியோசொப்பிகல் சொசைட்டி)  இணைந்து பிற் காலத்தில் பிரம்மஞான சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளராக ஆனார். 1884 இல் சென்னை அடையாறுக்கு வந்து பிரம்மஞான சங்கத்தில் பணியாற்றியவர். 1885இல் இலங்கைக்கு அனுப்பப்பட்டு அங்கு கேணல் ஒல்கொட்டுடன் சேர்ந்து பிரசாரங்களில் ஈடுபட்டார். குறிப்பாக பௌத்த கல்வி அறக்கட்டளைக்கு பணம் திரட்டுவதில் முன்னின்றார். இவர்களுடன் சிறியவனான டேவிட்டும் (பிற்காலத்தில் அநகாரிக்க தர்மபால) சில சந்தர்ப்பங்களில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அதுமட்டுமன்றி ஆரம்பகாலங்களில் ஒல்கொட், லெட்பீடர், புல்ஜன்ஸ் ஆகியோருக்கு மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியவர் டேவிட்.

ஆனந்தா மகா வித்தியாலயத்தின் முதலாவது அதிபராக ஆக்கப்பட்டார் லெட்பீடர் (1886 - 1890). இன்றும் பிரதான கட்டடத்துக்கு அவரின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. பௌத்த மறுமலர்ச்சியில் பிரம்மஞான சங்கத்தின் பாத்திரம் முக்கியமானது என அறிந்தோம். அந்த பிரம்மஞான சங்கத்தின் தூண்களில் ஒருவர் லெட்பீடர். ஆனால் இறுதிக்காலத்தில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் அவர் இராஜினாமா செய்துகொண்டார். ஆனால் அப்படிப்பட்ட எந்த குற்றச்சாட்டும் இறுதிவரை நிரூபிக்கப்படவில்லை.

எச்.எஸ்.பெரேரா (1868-1914)
பிறப்பால் ஒரு கிறிஸ்தவரான கண்டியை சேர்ந்த ஹேமச்சந்திர சேபால பெரேரா பௌத்தராக மதமாற்றம் செய்துகொண்டவர். பின்னர் எச்.எஸ்.பெரேரா பிரம்மஞான சங்கத்தினால் வெளியிடப்பட்டுவந்த “சரசவி சந்தரெச” பத்திரிகைக்கு ஆக்கங்களை எழுதுவதற்கு ஊடாக அச் சங்கத்தின் பணிகளில் இணைந்து கொண்டவர். 1893 இல் அவர் அப்பத்திரிகையின் முகாமையாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவரின் கடும் உழைப்பின் காரணமாக அப்பத்திரிகையின் விநியோகம் பாரிய அளவு அதிகரித்ததன காரணமாக 1903 இல் அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அப்போது வெளிவந்த Independent பத்திரிகைக்கு பதிலடி கொடுக்குமுகமாக “இலங்கை பௌத்தர்களின் குரல்” (The Sarasavi Sadaresa – organ of the Buddhists of Ceylon) என்று அப்பத்திரிகையின் முகப்பில் ஆங்கிலத்தில் இட்டார்.

6 வருடங்கள் அப்பதவி வகித்த நிலையில் பிரம்மஞான சங்கத்துடன் ஏற்பட்ட சர்ச்சையின் விளைவாக அவர் 16.11.1906 அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனாலும ஒரே மாதத்தில் அவர் டீ.பீ.ஜயதிலக்கவின்  உதவியோடு டிசம்பர் 17 அன்று “தினமின” என்கிற தினசரி பத்திரிகையை ஆரம்பித்தார். சிங்கள பத்திரிகைத்துறை வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்த பத்திரிகை பிரம்மஞான சங்கம் முன்னெடுத்த சிங்கள பௌத்த சித்தாந்தத்தை அப்படியே தொடர்ந்தது.

சரசவி சந்தரெச
எச்.எஸ்.பெரேரா சில வருடங்களின் பின்னர் நோய்வாய்ப்பட்டுப் போனார்.  இதனை தொடர்ந்து நடத்தவும் முடியாத நிலை ஏற்பட்டது. இப்படி ஒரு பத்திரிகையின் இருப்பை உணர்ந்த டீ.பீ.ஜயதிலக்க இப்பத்திரிகையை கொள்வனவு செய்யும் படி டீ.ஆர்.விஜயவர்தனாவை கேட்டுகொண்டதைத் தொடர்ந்து எச்.எஸ்.பெரேராவிடமிருந்து அது வாங்கப்பட்டது. அதுவே இன்றும் லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் பத்திரிகையாக வெளிவந்துகொண்டிருக்கிறது.

இதே காலத்தில் வெளியான “சிங்கள பௌத்தயா” எனும் சிங்கள பௌத்த இனவாத பத்திரிகையின் ஆசிரியராக ஆரம்பத்தில் செயல்பட்டவர் எச்.எஸ்.பெரேராவின் சிஷ்யரான பியதாச சிறிசேன. அநகாரிக்க தர்மபால அதனை மேலும் செழுமைபடுத்தும் பொறுப்பை எச்.எஸ்.பெரேராவிடம் கொடுக்கும்படி கேட்டிருந்தார். பிற்காலத்தில் சிங்கள பௌத்தயா பத்திரிகையை தலைமை ஆசிரியராக நெடுங்காலமாக நடத்தியவர் அநகாரிக்க தர்மபால. அக்காலத்தில் அப்பத்திரிகையே மிக மோசமான இனவாத பத்திரிகையாக வெளிவந்தது. இப்பத்திரிகை 1915 கண்டி கலவரத்துக்கு காரணங்களில் ஒன்றாக ஆங்கில அரசினால் குற்றம்சாட்டப்பட்டு அநகாரிக்க தர்மபால வீட்டுச் சிறையில் சில வருடங்கள் வைக்கப்பட்டிருந்தது பற்றி பின்னர் முழுமையாக தெரிந்துகொள்வோம்.

 (தொடரும்)

நன்றி - தினக்குரல்

இக்கட்டுரையாக்கத்துக்கு உசாத்துணைக்கு பயன்பட்டவை
  1. ශ්‍රීමත් අනගාරික ධර්මපාල චරිතාපදානය : නත්ථි මේ සරණං අඤ්ඤං (මට අන් සරණක් නැත) - ආර්. ජේ.ද සිල්වා, (Dayawansa Jayakody & company - 2013)
  2. පන්සලේ විප්ලවය Victor ivan – (Ravaya publication – 2006)
  3. මොහොට්ටිවත්තේ ශ්‍රී ගුණානන්ද අපදානය -  විමල් අභයසුන්දර (Godage publication, 1994)
  4. මෛත‍්‍රීට වැරදුණේ කොතැනද? - වික්ටර් අයිවන් (Rawaya – 12.07.2015)
  5. The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
  6. In Defense of Dharma: Just-War Ideology in Buddhist Sri Lanka (Routledge Critical Studies in Buddhism) - Tessa J. Bartholomeusz - Psychology Press, 2002
  7. Olcott oration - The ideal of ananda, sanjiva senanayake 22.11.2014
  8. "Why I Became a Buddhist?" A Lecture Delivered by the Late Mr. A.E. Buultjens, BA (Cantab.) in 1899. Compiled, printed and published by CA. Wijesekera, 1984
  9. Theosophy and its students. By MBS. Besant. “Borderland:” a quarterly review and INDEX. Vol. I. JULY, 1893.
  10. ප්‍රබල බෞද්ධ මහජන මතයක් ගොඩනැඟූ “සරසවිසඳරැස” නන්දික බැද්දේගම , දිනමිණ, ලේක්හවුස්, 26.05.2014
  11. එච්. එස්. පෙරේරා සොයා යෑම - සී. දොඩාවත්ත, දිනමිණ, ලේක්හවුස්, 2013 Dec 11,18, 21, 24

உள்ளூராட்சி தேர்தல் எல்லை மீள்நிர்ணயம்; மலையக தலைமைகள் செய்யவேண்டியது என்ன? - அ.லோறன்ஸ்


பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு, பல வருடங்களாக உள்ளூராட்சி தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பொது மக்கள் அபிப்பிராயங்களைப் பெற்று இறுதியாக,உள்ளூராட்சி தேர்தல் 70% வட்டாரமுறையிலும், 30% விகிதாசார முறையிலும், நடத்தப்படவேண்டுமென்றும், அதனுடன் மேலும் பல உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான சிபாரிசுகளையும் முன்வைத்து அதனை முடிவுக்கு கொண்டுவந்தது. இதன்படி 2012ஆம் ஆண்டு உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் கட்டளைச் சட்டமாக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, அது ஒரு சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்று நடைமுறையில் உள்ளபடியால், இனி உள்ளளுராட்சித் தேர்தல் அதன் அடிப்படையிலேயே நடைபெறும்.

இந்த தேர்தல் சீர்திருத்தச் சட்டத்தில் வட்டாரங்கள் உருவாக்கப்பட்டமை, எல்லை மீள் நிர்ணயம் தொடர்பாக பல்வேறு எதிர்ப்புக்கள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்களிடமிருந்து 2000த்திற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதால், கடந்த 11 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உள்ளூராட்சி வட்டார எல்லைகளைத் தீர்மானிக்கும் அனைத்து கட்சிகளின்; மகாநாட்டில் உள்ளூராட்சி தேர்தலில் பெண்களின் பங்களிப்பு 25% த்திற்கு உத்தரவாதப்படுத்தப்படவேண்டுமென்றும், இன்னும் பல்வேறு திருத்தங்கள் முன்மொழியப்பட்டதன் அடிப்படையில், மேலும் கால அவகாசம் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.

தற்போது மீண்டுமொரு முறை உள்ளூ ராட்சி திருத்தங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதனை மலையக தலைமைகள் இறுதி சந்தர்ப்பமாக, பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மலையக மக்களுக்கு வட்டாரங்கள் உருவாக்கப்படுவதற்குமுன்பு மேலும் பல உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்படவேண்டிய தேவை உள்ளது. அதனால் உள்ளூராட்சி நிறுவனங்கள் கோரிக்கை மிக நீண்ட காலம் மலையக அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டதால், கடந்த டிசம்பர் 11ஆம் திகதி இது தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. மலையக தமிழ் மக்கள் மத்தியில் உள்ளூராட்சி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற திருத்தம் அல்லது உள்ளூராட்சி நிறுவனங்களை உருவாக்குவதற்கான அதிகாரம், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு உள்ளதால் இச்சந்தர்ப்பத்தில் மலையக தலைமைகள் ஒன்றுப்பட்டு குரல் கொடுத்து, உள்ளூராட்சி நிறுவனங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். மலையக மக்கள் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், மத்தியில் ஓன்றுப்பட்ட ஒரு கருத்துருவாக்கம், ஏற்பட வேண்டுமென்ற அடிப்படையிலேயே, மேற்படி கட்டுரை இச்சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்படுகின்றது.

மலையகத்தில் உள்ளூராட்சி தொடர்பான பின்னணி

1937ஆம் ஆண்டு இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கு,உள்ளூராட்சி வாக்குரிமை இல்லாதொழிக்கப்பட்ட போதும், 1948இல் வாக்குரிமை இல்லாதொழிக்கப்பட்ட போதும் எமக்கிருந்த கிடைக்க வேண்டிய உள்ளூராட்சி நிறுவனங்கள் கிடைக்கவில்லை. அதன் பிறகு இற்றைவரையிலும் மலையக மக்கள் மத்தியில் உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்படவில்லை. உள்ளூராட்சி தேர்தல் சீர்திருத்தம் முன்வைக்கப்பட்டபோது, இதனை சுட்டிக்காட்டி 15 இலட்சம் மலையக தமிழ் மக்கள் வாழும் நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தி;னபுரி, மாத்தளை, கேகாலை, களுத்துறை போன்ற மாவட்டங்களில், தேர்தல் சீர்திருத்தத்தில் வட்டாரங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்; உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான எல்லை நிர்ணயம், மிக அத்தியாவசியமாக மலையக மாவட்டங்களில் உருவாக்கப்படவேண்டும் என்று மலையக அமைப்புக்களால் வலியுறுத்தப்பட்டன.

தேர்தல் சீர்திருத்தம் என்பது வட்டார, எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது மாத்திரமல்ல, உள்ளூராட்சி நிறுவனங்கள் பற்றாக்குறையாக உள்ள சமூகங்களுக்கு அந்த உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளது. இலங்கையில் 2,02,66,363 மக்களுக்கு, 335 உள்ளூராட்சி நிறுவனங்கள் காணப்படுகின்றன. அதில் 271 பிரதேசசபைகளும், 41 நகரசபைகளும் 23 மாநகரசபைகளும் உள்ளன. 74% சனத்தொகையை கொண்ட சிங்கள மக்களுக்கு இரு நூற்றுக்கு மேற்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்கள் காணப்படுகின்றன. 11%சனத்தொகையை கொண்ட வடகிழக்கு மக்களுக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்கள் காணப்படுகின்றன். நுவரெலியா, பதுளை போன்ற மலையக தமிழ் மக்கள் செறிவாக வாழும் மாவட்டங்களில் அவர்களுக்கென ஜந்து உள்ளூராட்சி நிறுவனங்கள்கூட கிடையாது. 7,06,550 சனத்தொகையை கொண்ட, நுவரெலியா மாவட்டத்தில் கிட்டத்தட்ட 4 இலட்சம் மலையக தமிழ் மக்கள் வாழ்ந்த போதும் அம்பகமுவ, நுவரெலியா ஆகிய இரண்டு பிரதேச சபைகளும் தலவாக்கலை, ஹட்டன் என்ற இரு நகரசபைகளுமே அவர்கள் செறிவாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்றன.

இலங்கையில் 15 ஆயிரத்துக்கும் குறைந்த வாக்காளர்களை கொண்ட மிகச் சிறிய உள்ளூராட்சி நிறுவனங்கள் காணப்படுகின்ற அதேநேரத்தில், ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட, அம்பகமுவ, நுவரெலியா போன்ற பிரதேசசபைகளும் காணப்படுகின்றன. எனவேதான் வட்டாரங்களின் எல்லைகள் பிரிக்கப்படுவதற்கு முன் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான எல்லை நிர்ணயம் செய்யப்படவேண்டுமென்று மலையக அமைப்புக்களால் வலியுறுத்தப்பட்டன. உள்ளூராட்சித் தேர்தல் சீர்திருத்த அறிக்கையில், உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டுமென்றும், சிறுபான்மை மக்களுக்கு அவர்களின் அரசியல் பிரதி நிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டுமென்றும் கூறப்பட்டிருந்தாலும், இந்த தேர்தல் சீர்திருத்தத்தில் அது இடம்பெறாமை கவலைக்குரிய விடயமாகும்.

தற்போது அறிமுகப்படுத்தப்படும் உள்ளூராட்சி சீர்திருத்தத்தில் 2 கோடி இலங்கை மக்களுக்கு 5000 வட்டாரங்களும், 1,500 விகிதாசார உறுப்பினர்களுமாக சேர்த்து, 335 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும், முழுநாட்டிலும் 6,500 உள்ளூராட்சி உறுப்பினர்கள் வட்டார, விகிதாசார கலப்பு முறையில் தெரிவுச்செய்யப்படவுள்ளனர். இதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 45 வீத அதிகரிப்புடன் 2014 மேலதிக உறுப்பினர்கள் தெரிவுச்செய்யப்படவுள்ளனர். இந்த வட்டார முறையிலும்கூட, மலையக மக்களுக்கு வெறும் நூற்றுக்கணக்கான வட்டாரங்களே ஏற்படுத்தப்படும்.

ஆகவே, மலையக மக்கள் செறிவாக வாழும் மாவட்டங்களில் அவர்கள் வாழும் பகுதிகளில் வட்டாரங்களை உருவாக்குவதற்கு முன்பு வரலாற்று ரீதியாக, அவர்கள் பிரஜா உரிமை பறிக்கப்பட்டதால் இல்லாதுபோன உள்ளூராட்சி நிறுவனங்களான பிரதேசசபைகள், நகரசபைகள், மாநகரசபைகள் உருவாக்கப்பட வேண்டும்.
இனி உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பாக காணப்படும் பிரச்சினைகளை சுருக்கமாக பார்ப்போம்.

மலையக தமிழ் மக்கள் வாழும் மாவட்டங்களில் உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பாக காணப்படும் பிரச்சினைகள்.

இலங்கையில் 335 உள்ளூராட்சி நிறுவனங்களில் 4 உள்ளூராட்சி நிறுவனங்களே, மலையக மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்றமை. 1.நுவரெலியா பிரதேசசபை, 2. அம்பகமுவ பிரதேசசபை, 3. தலவாக்கலை நகரசபை, 4. அட்டன் நகரசபை.

இலங்கையில் 335 உள்ளூராட்சி நிறுவனங்களில் 60 வீதமானவை சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டது.

அம்பகமுவ, நுவரெலியா ஆகிய பிரதேச சபைகள் ஒவ்வொன்றும், இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனமொன்றின் சராசரி 30 ஆயிரம் வாக்காளர்கள் என்ற அடிப்படையில், 8 பிரதேச சபைகளாக பிரிக்கப்படகூடிய விசாலமான பிரதேசசபைகளாகும். இதில் நுவரெலியா, அம்பகமுவ ஆகிய பிரதேச சபைகள் தலா 1,50,000 வாக்காளர்களைக் கொண்டதும், 2½ இலட்சம் சனத்தொகையை கொண்டதுமாகும்.

மலையக தமிழ் மக்கள் மத்தியில் உள்ளூராட்சிநிறுவனங்கள் ஒப்பிட்டு ரீதியில் குறைவாக இருக்கின்றமை தொடர்பான வேண்டுகோள் மிக நீண்ட காலமாக காணப்படுகின்றமை. உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்க வேண்டிய நியாயத்தன்மை.

இந்த உள்ளூராட்சி நிறுவனங்களில், கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே இவ்வளவு கூடுதலான வாக்காளர்கள் நுவரெலியா, அம்பகமுவ பிரதேசசபைகளில்; காணப்படுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் பல இலட்சக்கணக்கான வாக்காளர் காணப்பட்டபோதும் சனத்தொகை செறிவு அடிப்படையில் அது நியாயப்படுத்தக்கூடியது.

இலங்கையில் 15 ஆயிரம் வாக்காளர்களுக்கு குறைந்த உள்ளூராட்சி நிறுவனங்கள் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக அம்பாறை, திருக்கோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் காணப்படுகின்றன. (உ-ம்) லகுகல - 5861, கோமரன்கடவல -5831, மொறவௌ - 3949, பதியத்தலாவ, பதவியா சிரிபுர - 6401, வெருகல ;- 5895 போன்றன குறிப்பிடதக்கவை. கதிர்காமம், 11649 லக்கல - 9388 டெல்ப்ட் -1908 போன்-றவை ஏனைய ஊவா, மத்திய, வட மாகாணங்களில் காணப்படுகின்றன.

நுவரெலியா மாவட்டத்தில் 7 இலட்சம் பேருக்கு 8 உள்ளூராட்சி நிறுவனங்-களே கானப்படுகின்றன. (நுவரெலியா, அம்பகமுவ உட்பட 5 பிரதேசசபைகள் 1 மாநகரசபை 2 நகரசபைகள்). இனி தற்போது வட்டாரம் பிரிக்கப்பட்டுள்ள முறைமை காணப்படும் பிரச்சினைகளை சுரக்கமாகப் பார்ப்போம்.

புதிய வட்டாரங்கள் உருவாக்குதல் தொடர்பாக காணப்படும் பிரச்சினைகள்

பாராளுமன்றம்போன்று 90 ஆயிரம் பேருக்கும் ஆயிரம் சதுர கிலோ மீற்ற-ருக்கும் ஒரு தேர்தல் தொகுதி, மாகாணசபையில் 40ஆயிரம் பேருக்கும,; ஆயிரம் சதுரகிலோ மீற்றருக்கும் ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில், ஒரு வரையரை காணப்படும்போது, உள்ளூராட்சி வட்டார முறைக்கு தெளிவான அளவுகோலோ வரையரையையோ கிடையாது.

உத்தேச 5000 வட்டாரங்களில் நூற்றுக்கணக்கான வட்டாரங்கள்கூட கிடைக்-காத வகையில், மலையக மாவட்டங்களில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் அவர்க-ளது இனச்செறிவை குறைக்கும் வகையில் வட்டாரம் உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சமூகங்கள் வாழும் பிரதேசங்களில், பல் அங்கத்தவர் வட்டாரம் ஏற்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டாலும், நுவரெலியா, அம்பகமுவ பிரதேச சபைகளில் அந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. நுவரெலியா பிரதேசச-பையில் மாத்திரம் ஒரு பல அங்கத்தவர் வட்டாரம் காணப்படுகின்றது. இல.15 சமர்செட் வட்டாரம்.

மலையக தமிழ் மக்களின் இனச்செறிவை குறைக்கும் வகையில், ஒரு சமூ-கத்தை பல வட்டாரங்களுக்குள் உள்ளடக்கும் உள்நோக்கம் கொண்ட நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

காலம் காலமாக ஒன்றாக பின்னிப் பிணைந்து வாழ்ந்த சில தோட்ட மக்கள்;தொகை பல வட்டாரங்களுக்குள் துண்டாடப்பட்டுள்ளது. உதாரணம் பன்மூர், வெலிஓயா.

உள்ளூராட்சி நிறுவனங்கள் மலையக மக்கள் மத்தியில் மிக, மிக குறைவாக இருக்கின்ற நிலையில,; வட்டாரங்களை 35க்குள் மட்டும், மட்டுப்படுத்தி இருப்பது தலா ஒன்றறை இலட்சம் வாக்காளர்களைக் கொண்ட அம்பகமுவ, நுவரெலியாவில் 5000 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களையும், 10,000 த்திற்கு மேற்பட்ட ஜனத்-தொகையை கொண்ட பெரிய வட்டாரங்களை உருவாக்கியுள்ளமை வட்டாரங்களை மலையக மக்கள் மத்தியில் குறைத்துள்ளது.

மலையக தலைமைகள் செய்ய வேண்டியது என்ன?

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக நாடு பரந்தளவில,; மிக நீண்ட காலம் கருத்துகள் பரிமாறப்பட்டன. அதே போன்று மலையகத்திலும்உள்ளூராட்சி தொடர்-பாக மிக நீண்ட காலம் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அதன் அடிப்படையில் உள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பாக பல கோரிக்ககைகள் முன்வைக்கப்பட்டு, அதில் மலையக மாவட்டங்களில் உள்ளூராட்சி நிறுவனங்கள் மிக மிக குறைந்த அளவில் காணப்படுகின்ற நிலைமையை கருத்திற் கொண்டு, உள்ளுராட்சி நிறுவன உருவாக்கம் தொடர்பாக மலையக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மத்-தியில் உள்ளுராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளமை வரலாற்றில் பதியப்பட வேண்டிய விடயமாகும்.

மலையகத்தில் தற்போது உருவாகியுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளான மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி என்று முன்னணி என்ற பெயரைக் கொண்டு முடியும் இந்த அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒவ்வொரு கட்சியும் உள்ளூராட்சி தேர்தல் சீர்திருத்தம், தொடர்பாக தனித்தனியான முன்மொழிவுக-ளையும், கூட்டான முன்மொழிவுகளையும் முன்வைத்து வலியுறுத்துவதோடு, அது தொடர்பாக உள்ளூராட்சி அமைச்சு உட்பட, அரசாங்கத்திற்கும் அழுத்தங்களை கொடுத்து வருகின்னறன. இதில் வரவேற்கப்பட வேண்டிய விடயம், மலையகத்தில் உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ}ம் முன்வந்தமையாகும். அரசியல் கட்சிகள் மாத்-திரமன்றி, மலையகத் தமிழ், சிவில் அமைப்புகளும் இதில் ஒருமித்த செயற்பாட்-டையும் கொண்டுள்ளமை முக்கியமானதாகும்.

மிக நீண்ட காலம் இழுபறிபட்டு வந்த இந்த உள்ளூராட்சி விடயம் தற்போது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் ஒன்றிணைந்த செயற்பாட்டினால் ஒருமுடிவுக்கு வரக்கூடிய நிலையில் நாட்டின் பிரதான இரு தலைவருகளும் கூட மலையக மக்-களின் உள்ளூராட்சி நிறுவன உருவாக்கம் தொடர்பாக கடந்த அரசாங்கத்தைவிட சற்று சாதகமான நிலையில் பார்க்கும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. அத்தோடு அர-சாங்க உயர்மட்ட உத்தியோகத்தர்களில் குறிப்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தலை-வரும், முன்னாள் தேர்தல் ஆணையாளருமான மஹிந்த தேசப்பிரிய, நுவரெலிய தற்போதைய மாவட்ட செயலாளர் திருமதி. மீகஸ்முல்ல போன்றவர்கள் மலையக மக்கள் மத்தியில் உள்ளூராட்சி நிறுவனங்களை உருவாக்க வேண்டும்மென்ற தேவையை உணர்ந்து அதற்கு ஆதரவு அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான மனோகணேசன் உள்ளூராட்சி தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான அமைச்சரவை உப குழுவில் அங்கம் வகிப்பதும், அண்-மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்குவது தொடர்பாக அமைச்சரவை பத்திரம் முன்வைத்-துள்ளமையும் தமிழ் மக்கள் வாழும் மாவட்டங்களில் உள்ளூராட்சி நிறுவன உரு-வாக்கத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

மலையக மாவட்டங்களில் உள்ளுராட்சி நிறுவனங்கள் உருவாக்கும் விட-யத்தில் சகலரினதும் கவனம் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, அம்பகமுவ பிரதேச சபைகள் மீது குவிந்துள்ளன. அதிகமானோர் அதன் நியாயத்தன்மையை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே இந்தச் சூழலில் நடைமுறை சாத்தியமானதும,; யதார்த்தமானதுமான விடயம் நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயல-கங்கள் உருவாக்குவது தொடர்பாக மீண்டும் கவனத்தில் எடுக்கும் வகையில், கடந்த 2015.06.17ம் திகதி நுவரெலியா மாவட்ட செயலாளர் மீகஸ்முல்ல நுவரெலிய மாவட்ட பிரதேச செயலக எல்லை மீள்நிர்ணய முன்மொழிவை சிபாரிசு செய்திருப்-பதாகும். இந்த சாதகமான சூழலைப் பயன்படுத்தி மலையக தமிழ் தலைமைகள் கட்சி, தொழிற்சங்க, சிவில் அமைப்புக்கள் என்ற பாகுபாடின்றி இந்த பணிகளை முன் நகர்த்துவதாகும். மேற்படி உள்ளுராட்சி சீர்திருத்தம் உள்ளூராட்சி நிறுவனம் உரு-வாக்கம் வட்டார உருவாக்கத்தில் அடையாளம் காணப்பட்ட பிரச்சினையின் அடிப்ப-டையில,; மலையக தமிழ் மக்கள் உள்ளூராட்சி தொடர்பாக முன்வைக்க வேண்டிய சிபாரிசுகளை சுருக்கமாக கீழே குறிப்பிடப்படுகின்றது.

மலையக மக்களின்; உள்ளூராட்சித் தொடர்பில் முன்வைக்க வேண்டிய சிபாரிசுகள்

30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு பிரதேச சபை என்ற அடிப்படையில் மலையக மக்கள் தொடர்ச்சியாக வாழும் மாவட்டங்களில், பிரதேச சபைகளுக்கு எல்லைகள் மீள் நிர்ணயம் செயற்பட்டு வர்த்தமானியில் பிரகடனப்படுத்த வேண்டும்.

இலங்கையில் வேறு எந்தப்பகுதிகளையும்விட பெருந்தோட்டப்பகுதி நகர மயமாக்கம் காரணமாக புதிய நகரசபைகளை உருவாக்ககலாம்.

நுவரெலியா மாவட்டம்

1.பொகவந்தலாவ, 2.மஸ்கெலியா, 3.அக்கரபத்தனை, 4.கந்தபொல, 5 இராகலை,

6.உடபுசல்லாவ, 7.பூண்டுலோயா, 8. புசல்லாவ

பதுளை மாவட்டம்

ஹாலி எல

கேகாலை மாவட்டம்

யட்டியாந்தொட்ட

அட்டன் நகரசபையை நகருக்கு அண்மித்த பகுதிகளை மாநகர சபையுடன் இணைத்து தரம் உயர்த்த வேண்டும்.

1500 தொடக்கம் 2500 வாக்காளர்களுக்கு ஒரு வட்டாரம் என வட்டாரங்களை வரையரை செய்ய வேண்டும்.

மலையக மக்கள் மத்தியில் உள்ளூராட்சி நிறுவனங்கள் குறைவான நிலையில் மலையக மாவட்டங்களில் 35 வட்டாரங்கள் என்ற வரையரையை மீள் பரிசீலளை செய்தல் வேண்டும்.

மலையக தோட்டப் பகுதிகளில் மக்களுக்கு சேவை வழங்குவதில், தடையாக இருக்கும் 1987ஆம் ஆண்டு 15 இல் பிரதேச சபைகள் சட்டம் 3ஆவது சரத்து மற்றும் அதுபோன்ற சட்டரீதியான தடைகள் நீக்கப்பட வேண்டும்.

நாட்டின் சனத்தொகை கணிப்பீடு முடிவடைந்துள்ள நிலையில,; மலையக தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரம் ஒப்பீட்டு ரீதியில் மிக மிக குறைவாக உள்ளூராட்சி நிறுவனங்கள் காணப்படுவதால் அதற்கான முயற்சிகள் நடக்கும் இவ்வேலை; உள்ளூராட்சித் தேர்தளுக்கு முன் உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

மலையக மாவட்டங்களில் வாக்காளர், அபிவிருத்தி, இன விகிதர்சாரப் ஆகியவற்றை கருத்தி;ல், கொண்டு புதிய உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும்

உள்ளூராட்சி நிறுவனங்களை பொறுத்தவரையில் அதனது சேவை மலையக மக்களை சரியாக சென்றடையவில்லை அதேநேரத்தில், மலையகத்தில் உளளூராட்சி நிறுவனங்கள் மிக குறைவாகவே காணப்படுகின்றது. 1948ஆம் ஆண்டுக்கு பிறகு இதனை சீர்செய்வதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆகவே உள்ளூராட்சி தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக சகலரினதும் கவனம் தற்போது ஏற்பட்டுள்ள நிலையில் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மலையக மக்களின் உள்ளூராட்சி பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவேண்டும்.

நன்றி - வீரகேசரி
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates